அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள் -4

(கட்டுரை: 4)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


பேரழிவுப் போராயுதம்
உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து
விழுதுகள் அற்றுப் போக,
விதைகளும் பழுதாக
ஹிரோஷிமா நகரைத் தாக்கி
நரக மாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
நாச மாக்கப் பட்டது !
இப்போது தோன்றின
புதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !
கதிரியக்கம் பொழியும்
புழுதிக் குண்டுகள் !
புத்தர் பிறந்த நாட்டிலே
புனிதர் காந்தி வீட்டிலே
புது யுகச் சூட்டிலே
மனித நேயம்
வரண்டு போன
வல்லரசுகள் பின் சென்று
பாரத அன்னைக்குப்
பேரழிவுப்
போரா யுதத்தை
ஆரமாய்
அணிவிக்க லாமா ?

உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !

கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)


“ஒருவருக்குப் பின்னால் ஒருவராக யாரெனக் காண முடியாத தோற்றத்தில் மக்கள் பலர் ஓடினர் !  அவரது தோலுரிந்து கைகளிலிருந்தும், கன்னங்களிலிருந்தும் தொங்கிக் கொண்டிருந்தன !  முகமெல்லாம் சிவந்து உப்பிப் போய் எங்கே கண்கள் உள்ளன, எங்கே வாய் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாதவாறு கடினமாக இருந்தது.”

ஹிரோஷிமா அணு ஆயுதப் பிழைப்பாளி

“நான் கதிர்வீச்சு நோய்களால் திரும்பத் திரும்ப பத்துத் தடவைகள் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டேன்.  மூன்று தடவைகள் (சாகக் கிடந்து) என் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு என் படுக்கை அருகிலே இருந்தனர்.  மரணத்தோடு போராடிப் போராடி நான் மெய்வருந்திக் களைத்துப் போய் விட்டேன்.”

ஹிரோஷிமா அணு ஆயுதப் பிழைப்பாளி ஸனாவோ சுபாய் (Sanao Tsuboi)

“முஸ்லீம்களாகிய நாம் வல்லவராகவும், நம் நாடு மற்ற நாடுகளுக்கு இணையாகவும் இருக்க வேண்டும்.  அதனால்தான் சில நாடுகள் வல்லமையோடு இருக்க நான் உதவி செய்ய விரும்புகிறேன்,”

அப்துல் காதீர் கான் (Abdul Qadeer Khan, Maker of Pakistan Atomic Bomb)

“இந்தியா ஓர் அணு ஆயுதத்தைத் தயாரித்தால் பாகிஸ்தான் புல்லைத் தின்றோ இலைகளைத் தின்றோ பட்டினி கிடந்து அதைத் தானும் பின்பற்றிச் செய்யும்.”

ஸுல்ஃபிகார் அலி புட்டு (Zulifikhar Ali Bhuttu) பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர்.

“அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா அணு ஆயுத வெடிப்பு) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்.”

டாக்டர் ஹோமி ஜெ. பாபா (அணுசக்திப் பேரவை முதல் அதிபர்) (1964)


உலக நாடுகளின் அணு ஆயுதக் கையிருப்பு ஆற்றல்கள்

இப்போது உலக அணு ஆயுத வல்லமை கொண்ட நாடுகள் கைவசமுள்ள அணு ஆயுத வெடிக் குண்டுகளின் எண்ணிக்கையை அறிந்தோமானால் இன்னும் அத்தனை ஆயுதங்கள் உயிரனத்தை அழிக்க விழித்துள்ளன என்பதை நாம் கண்டு வியப்புறுவோம்.  அமெரிக்காவின் அணு ஆயுதக் குண்டுகளை ஏந்தியுள்ள கட்டளை ஏவுகணைகள் ரஷ்யாவையோ மற்ற பகை நாடுகளையோ குறிவைத்துப் பல திசைகளில் பல்வேறுச் சாதன முறைகள் மூலம் தாக்கப் பதுக்கி வைக்கப் பட்டுள்ளன.  1991 இல் சோவியத் யூனியன் கவிழ்ந்து வல்லரசுக்களுக்கு இடையே இருந்த ஊமைப் போர் மறைந்த பிறகும் உச்ச வல்லமை படைத்த அமெரிக்கா இன்னும் 10,000 (2007 ஆண்டு வரை) அணு ஆயுதப் பேரழிவுக் குண்டுகளை வைத்துக் கொண்டு கண்காணித்து வருகிறது !  ரஷ்யா தன் கைவசம் 15,000 (2007 ஆண்டு வரை) அணு ஆயுதக் குண்டுகளைப் பதுக்கி வைத்துள்ளது.  பிரான்ஸ் 350, பிரிட்டன் 200, சைனா 200, இஸ்ரேல் 80, பாகிஸ்தான் 60, இந்தியா 50, வட கொரியா பத்துக்குக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் (2007 மதிப்பீடுகள்) அணு ஆயுதக் குண்டுகள்.

தற்போதைய அச்சம் ஏற்கனவே நாமறிந்த அணு ஆயுதக் குண்டுகள் அல்ல. தொல்லை தரவல்ல மூர்க்க வர்க்கம் களவாடி அவரது கைவசம் அகப்படும் “புழுதிக் குண்டுகள்” எனப்படும் கதிர்வீச்சுக் குண்டுகளே (Radioactive Dirty Bombs) OR (Radiological Dispersion Bombs) !  இவ்வகை அணுவியல் குண்டுகள் சாதாரண ரசாயன வெடிகளைப் பயன்படுத்திக் கதிரியக்கப் பொழிவுகளைச் சிறிதளவு தரைமீது (200 சதுர மைல்) பரப்பச் செய்யும்.  புழுதிக் குண்டுகளில் பொதுவாக இருப்பவை : ஸ்டிரான்சியம்-90 (Strontium-90), கோபால்ட்-60 (Cobalt-60) அல்லது சீஸியம்-137 (Cesium-137).  புழுதிக் குண்டுகள் வீரிய கதிரியக்கமுள்ள காமாக் கதிர்வீச்சைத் தளமெங்கும் பரப்பும்.  இந்தப் புழுதிக் குண்டுகளை எளிதாக யாரும் தயாரிக்க முடியும்.  தேவையானவை :  சாதாரண வெடி மருந்து அடுத்து கதிரியக்க உலோகம் ஏதாவது ஒன்று : ஸ்டிரான்சியம்-90 (Strontium-90), கோபால்ட்-60 (Cobalt-60) அல்லது சீஸியம்-137 (Cesium-137).  இவற்றைக் காமாக் கதிர்ப் படங்கள் எடுக்கும் (Radio-graphy) தொழிற் கூடங்களில் அல்லது அணு உலைக் கூடங்களில் களவாட வேண்டும்.

இப்போது அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒருவருக் கொருவர் பணிந்து தணிந்து மாஸ்கோ அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தப்படி [Moscow Treaty – Strategic Offensive Reductions Treaty (SORT)] தமது அசுர வல்லமையுள்ள அணு ஆயுதச் சேமிப்புகளை முதன் முதலாகக் குறைத்துக் கொள்ள உடன்பட்டிருக்கின்றன.  அந்த அமெரிக்க-ரஷ்ய உடன்படிக்கைப்படி 2012 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்காவும், ரஷ்யாவும் தமது இயக்க அணுவெடி ஆயுதங்களை (1700 -2200) எண்ணிக்கைக்கு இடையில் குறைத்துக் கொள்ள வேண்டும்.  (Each Party shall reduce and limit strategic nuclear warheads, as stated by the President of the United States of America on November 13, 2001 and as stated by the President of the Russian Federation on November 13, 2001 and December 13, 2001 respectively, so that by December 31, 2012 the aggregate number of such warheads does not exceed 1700-2200 for each Party. Each Party shall determine for itself the composition and structure of its strategic offensive arms, based on the established aggregate limit for the number of such warheads.)  அமெரிக்காவின் அணு ஆயுதங்களில் சில மாடல்கள் (W-76 Model Warheads -100 kiloton TNT Capacity) தமது 30 ஆண்டு ஆயுட் காலத்தைக் கடந்து விட்டதால் அவற்றை ஏனோ புதுப்பிக்க அமெரிக்கா இப்போது ஈடுபட்டுள்ளது.

அணு ஆயுத வணிகம் செய்த அப்துல் காதீர் கான்

2008 மே மாதம் அளித்த நேர்முக உரையாடலில் டாக்டர் அப்துல் காதீர் கான் தனது முந்தைய குற்ற ஏற்பில் கூறியவற்றை மாற்றி ஈரான், வட கொரியா நாடுகளுக்கு அணு ஆயுத உற்பத்திக்கு உதவி புரிந்ததாக ஒப்புக் கொண்டார்.  மேலும் அப்போதைய பாகிஸ்தான் ஜனாதிபதி பெர்வெஸ் முஷாரஃப் தேசீய நலனுக்காகத் தன்னை ஒருப் பலி ஆடாக இருக்கக் கட்டாயப் படுத்தியதாகவும் கூறினார் !  அத்துடன் உலக நாடுகள் சில அணு ஆயுதப் பெருக்கத்தில் ஈடுபடக் காரணமானவர் ஜனாதிபதி முஷாரஃப்தான் என்றும் குறிப்பிட்டார்.  அணு ஆயுத யுரேனிய எருவைச் சேமித்துத் திரட்டும் சுழல்வீச்சு வடிகட்டிச் சாதனங்கள் (Centrifuge Equipment to Prepare Weapon Grade Uranium -235) பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்பார்வையில் பாகிஸ்தானி லிருந்துதான் ஒரு விமானத்தின் மூலம் வட கொரியாவுக்கு அனுப்பப் பட்டன என்றும் வெளிப்படையாகக் கூறினார்.  மேலும் 1999 ஆம் ஆண்டில் தான் ஒரு பாகிஸ்தான் இராணுவ ஜெனரலோடு வட கொரியாவுக்குச் சென்று தோள் மீதிருந்து ஏவும் ஏவுகணைகளை (Shoulder-Launched Missiles) வாங்கச் சென்றதாகவும் ஒப்புக் கொண்டார்.  அவரது குற்ற ஏற்புகளால் வெகுண்ட அமெரிக்க அரசாங்கம் தூண்டி டாக்டர் கான் பாகிஸ்தான் அணுசக்தி ஆணையகத்திலிருந்து நீக்கப் பட்டு “இல்லச்சிறைக் கைதியாய்” அடைக்கப் பட்டார்.  பிப்ரவரி 6, 2009 இல் இஸ்லாமாபாத் உயர்நீதி மன்றம் ஆணையிட்டபடி டாக்டர் கானை இல்லச் சிறையிலிருந்து விடுதலை யானார்.

Fig 1C House Arrest & Release of A Q Khan

பாகிஸ்தானின் அணுக்குண்டு பிதா எனப்படும் அப்துல் காதீர் கான் ஏப்ரல் 27, 1936 தேதி (பிரிட்டிஷ் இந்தியாவில்) போபால் நகரில் பிறந்தார்.  1947  இல் பிரிவினைக்குப் பிறகு கான் குடும்பம் இந்தியாவி லிருந்து பாகிஸ்தானுக்குப் புலம்பெயர்ந்தது.  கராச்சி பல்கலைக் கழகத்தில் 1960 இல் B.Sc பட்டம் பெற்றார்.  1961 இல் உலோகவியல் படிக்க மேற்கு ஜெர்மனிக்குச் சென்று 1967 இல் பொறியியல் பட்டத்தைப் பெற்றார்.  அடுத்து நெதர்லாந்தில் உள்ள டெல்ஃப்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து உலோகவியல் பொறியியலில் Ph. D. (Metallurgical Engineering) பட்டத்தையும் பெற்றார்.

1972 இல் டாக்டர் கான் நெதர்லாந்து பௌதிக ஆய்வுக் கூடத்தில் (Physical Dynamics Research Laboratory, Amsterdam, Netherlands) சேர்ந்து யுரேனியம் செழிப்பூட்டும் அணுவியல் கூடத்தில்  (Uraniuam Enrichment Facility at Almelo, Netherlands) பணி செய்தார்.  அணுமின் சக்தி நிலையங்களுக்கு செழிப்பு யுரேனியத்தைத் தயாரிக்க அந்த ஆய்வுக்கூடத்தை 1970 இல் கட்டி முடித்தவை மூன்று நாடுகள் : பிரிட்டன், மேற்கு ஜெர்மனி & நெதர்லாந்து. யுரேனியம் ஹெக்ஸா ஃபுளூரைடு வாயுவிலிருந்து (Uranium Hexafluoride Gas) அணு ஆயுதத் தரமான யுரேனியம் -235 எருவைத் தயாரிக்க 1500 சுழல்வீச்சு வடிகட்டிகள் (Centrifuges) தேவைப்படும்.  அவற்றில் யுரேனியம் -238 & யுரேனியம் -235 ஆகிய இரண்டு ஏகமூலங்களும் (Isotopes of Uranium) 100,000 rpm (Revolutions per minute) வேகத்தில் சுற்றப்பட்டு யுரேனியம் -235 படிப்படியாக சேமிப்பாகிப் பிரித்தெடுக்கப் படும்.  அணு ஆயுதத் தரமான யுரேனியம் -235 தயாரிப்பு முறைகள், மற்றும் யந்திர சாதனங்கள் யாவும் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் வைத்திருக்கப் படுபவை !

1974 மே மாதம் 18 ஆம் தேதியில் இந்தியா “புத்தர் புன்னகை புரிகிறார்” (Bhuddha Smiling) என்னும் இராணுவக் குறிச்சொல் கொண்ட தனது முதல் அணு ஆயுதச் சோதனையைச் செய்து உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது !  பாகிஸ்தானைப் பைத்திய நாடாக்கியது ! டாக்டர் கான் “புத்தர் புன்னகை புரிந்தது பாகிஸ்தானின் மரணத்தை எதிர்நோக்கித்தான்” என்று கொதித்தெழுந்தார் !  1975 டிசம்பரில் டாக்டர் கான் வாயுச் சுழல்வீச்சு வடிகட்டிப் படங்களையும் (Gas Centrifuge Blueprints) மற்றும் தயாரிப்பு முறைகளையும் களவாடிக் கொண்டு நெதர்லாந்தை விட்டுப் பாகிஸ்தானுக்கு பறந்து வந்தார் !  டச் அரசாங்க ஒற்றர் பின்னர் செய்த ஒற்றில் மிகவும் இரகசியாமான யுரேனியம் -235 சேமிப்புத் தகவல் பாகிஸ்தானி வலைக் குழு ஒற்றர் மூலமாகக் களவாடப் பட்டது என்று தெரிய வந்தது !

டாக்டர் கான் அப்போதைய முதன் மந்திரி ஸுல்ஃபிகார் அலி புட்டுவுடன் நட்புறவு கொண்டிருந்தார்.  1974 இல் இந்தியா தனது முதல் அணு ஆயுதத்தைச் சோதித்த பிறகு, டாக்டர் கான் பாகிஸ்தான் அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அதன் அணு ஆயுத முயற்சிக்குத் தான் உதவுதாக முன்வந்தார்.  1998 மே மாதம் 11 இல் இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுதச் சோதனைகள் பொரொன் பாலை நிலத்தில் நிகழ்ந்த பிறகு பாகிஸ்தானின் முதல் அணு ஆயுதச் சோனைகள் 1998 மே மாதம் 28 (யுரேனியம் -235 அணுக்குண்டு) & 30 (புளுடோனியக் குண்டு) தேதிகளில் இரண்டு முறைச் சோதனைகள் செய்து காட்டப் பட்டன.

பாகிஸ்தான் அணு ஆயுதங்களுக்கு அன்னிய நாடுகளின் ஒத்துழைப்பு

பாகிஸ்தான் அணுவியல் விஞ்ஞானிகள் திடீரெனச் செய்து காட்டிய செழிப்பு யுரேனிய அணுக்குண்டு, புளுடோனிய அணுக்குண்டு வெடிப்புகள் இரண்டும் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தி ஐயமுறச் செய்தன.  அத்தகைய விரைவான அணு ஆயுதத் தயாரிப்புகள் சில அன்னிய நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பின்றி நிகழ முடியாதென்று சந்தேகங்கள் உண்டாயின !  1980 ஆண்டுகளில் சைனாவின் தொழில் நிபுணர்கள் பாகிஸ்தான் அணுவியல் ஆய்வுக் கூடங்களில் உலவியதாகத் தெரிகிறது !  1983 இல் டச் அரசாங்கம் யுரேனியச் செழிப்பு முறைப்பாடுச் சாதனங்களைக் களவாடி ஓடிப்போன டாக்டர் கான் மீது வழக்குத் தொடர்ந்து ஆம்ஸ்டர்டாம் சிறையில் நாலாண்டுகள் தள்ள ஆணை இட்டது !  ஆனால் அப்போது பாகிஸ்தானில் இருந்த குற்றவாளி கானை டச் அரசாங்கம் கைது செய்ய முடியாமல் போனது !

1987 இல் பிரிட்டீஷ் தின இதழ், ‘பாகிஸ்தான் அணு ஆயுதத் தயாரிப்பு நிபுணத்தை டாக்டர் கான் வெளியே இருந்து எடுத்து வந்ததாய்’, ஒப்புக் கொண்டதாக அறிவித்தது.  ஆனால் 1990 இல் டாக்டர் கான் பாகிஸ்தானி தகவல் அறிவிப்பாளருடன் உரையாடும் போது “நாங்கள் அன்னிய நாடுகளிலிருந்து எந்த மூலத் தகவலை அறியவில்லை” என்றும், “அணுவியல் நூல்கள், மாத இதழ்கள், ஆராய்ச்சி வெளியீடுகளைப் பயன்படுத்தினோம்,” என்றும் வெளிப்படையாகக் கூறினார் !  1991 இல் பாகிஸ்தான் தினச்செய்தி இதழ் ‘டான்’ (Dawn) டாக்டர் கான் தான்தான் அணு ஆயுதத் தயாரிப்புக்குக் காரண கர்த்தா வென்று பெருமைப் பட்டுக் கொண்டதாக அறிவித்தது.

அணு ஆயுதச் சாதனங்களைப் பாகிஸ்தான் தயாரிக்க பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தெரிந்தோ தெரியாமலோ உதவி செய்ய முன்வந்ததாக அறியப்படுகிறது.  நெதர்லாந்தில் டாக்டர் கான் 1970 ஆண்டுகளில் சுழல்வீச்சு வடிகட்டிகள் டிசைன், அமைப்பு முறைகளை முதலில் களவாடிப் பாகிஸ்தானுக்குக் கொண்டு வந்தார்.  அந்த நிபுணத்தை முதலில் பாகிஸ்தானுக்கும், பிறகு ஈரான், லிபியா, வட கொரியா நாடுகளுக்கும் அவர் பயன்படுத்தியாக அறிய வருகிறது.  நெதர்லாந்தில் செழிப்பு யுரேனிய ஆய்வுக்கூடம் கட்டிக் கொடுத்த பிரிட்டன் டாக்டர் கானுக்கு இருபதாண்டுகள் உபரிச் சாதனங்கள் (Centrifuge Parts & Spare Parts) அனுப்ப ஒப்பி வந்திருக்கிறது.

பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிக்க செழுப்பு யுரேனியம் சேமிக்கத் தேவையான நுணுக்க சூனியமாக்கும் பம்ப்புகளை (Vacuum Pumps) ஜெர்மன் வர்த்தகக் கம்பேனி ஒன்று செய்து அனுப்பி இருக்கிறது.  ஸ்பெய்னில் உள்ள ஒரு தொழிற்சாலை இடைத் தரகர் மூலமாக லேத் யந்திரங்களைப் (Lathe Machines for Enrichment Plant) பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது.  மொராக்கோவில்தான் டாக்டர் கான் வெளிநாட்டு நிபுணர்களைச் (ஈரான், லிபியா, வட கொரியா மற்றும் சாதனம் தயாரிப்பாளரை) சந்தித்து கூட்டுழைப்புப் பணிகளைச் செய்திருக்கிறார்.  மலேசியாவில் உள்ள ஸ்கோமி நுணுக்கத் தொழிற்சாலையில்தான் (Scomi Precision Engineering Company) எல்லா நாடுகளுக்கும் வேண்டிய 25,000 சுழல்வீச்சு வடிகட்டிகள் (Centrifuges) தயாரிக்கப் பட்டுள்ளன !  வட கொரியா நாட்டுக்கு மட்டும் டாக்டர் கான் குறைந்தது 12 தடவைகள் அணு ஆயுதத் தயாரிப்பு சம்பந்தமாக நேரிடைப் பிரயாணம் செய்திருப்பதாகத் தெரிகிறது !  அதன் பிரதிபலனாக வட கொரியா தனது கட்டளை ஏவுகணைகளைப் பாகிஸ்தானுக்குக் கொடுத்திருப்பதாகவும் பின்னால் அறிய வருகிறது.

1980 -1990 ஆண்டுகளில் அணு ஆயுதத் தயாரிப்பு மற்றும் கட்டளை ஏவுகணைத் தயாரிப்பு சம்பந்தமாக ‘பாகிஸ்தான் சைனா வட கொரியா’ நாடுகளுக்குள் கூட்டுழைப்பு நிகழ்ந்து வருவதாக மேற்திசை நாடுகளுக்குள் ஓர் உறுதியான எண்ணம் வலுத்தது !  அமெரிக்க நாளிதழ் ‘வாஷிங்டன் போஸ்ட்’ (Washington Post) 1980 ஆரம்ப ஆண்டுகளில் அமெரிக்க ஒற்றர் டாக்டர் கானின் விமானப் பயணப் பெட்டியை உளவிச் சோதித்து சைனா பேஜிங்கிலிருந்து ஹிரோஷிமா மாடல் அணு ஆயுதம் போன்ற சில வரைப்பட விபரங்கள் இருந்ததைக் கண்டுபிடித்து அணு ஆயுதத் தயாரிப்புக்குச் சைனாவின் கூட்டுழைப்பு உள்ளதை முதன்முறை உறுதியாக அறிந்ததாக வெளியிட்டது !

இத்தகைய பயங்கர அணு ஆயுதக் குண்டுகளைப் பலநாடுகள் தயாரிக்கக் காரணமாக இருந்த டாக்டர் கான் இப்போது பாகிஸ்தானில் ஒரு கோடிஸ்வரன் என்பதைச் சொல்லத் தேவையில்லை ! அவருக்கு உதவியாகப் பணி செய்த பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் பலரும் பணம் திரட்ட பயங்கர வேலைகள் செய்து வந்திருக்கிறார்.  இந்த இரகசிய வேலைகளில் முன்னாள் ஜனாதிபதி முஷாரஃப் அனுமதி இல்லாமல் பல்லாயிரம் டாலர் நிதித் திணிப்பின்றி ஈரான், வட கொரியா நாடுகளில் அணு ஆயுதப் பெருக்கம் பரவி இருக்குமா ?  ஆனால் பாகிஸ்தான் அணு ஆயுதத் தயாரிப்புக்கும், வட கொரியா கட்டளை ஏவுகணைகளைக் கொடுத்ததற்கும் தேவைப்படும் மில்லியன் கணக்கான டாலர்களை வருடா வருடம் யார் கொடுத்து வந்திருக்கிறார் என்று நினைக்கிறீர்கள் ?  அணு ஆயுதம் தயாரிக்கும் ஈரானையும், வட கொரியாவையும் தடுத்து வசைபாடிக் கொண்டு பாகிஸ்தானுடன் ஆழ்ந்த தோழமை பேணி வரும் உலக வல்லரசுகளில் உச்ச வல்லரசான அமெரிக்க நாடுதான் !

கதிர்வீச்சடி அளவுகளும் அதனால் விளையும் உயிரினப் பாதிப்புகளும்


Ionizing Radiation Dose Level Examples

Recognized effects of acute radiation exposure are described in the article on radiation poisoning. The exact units of measurement vary, but light radiation sickness begins at about 50–100 rad (0.5–1 gray (Gy), 0.5–1 Sv, 50–100 rem, 50,000–100,000 mrem).

Although the SI unit of radiation dose equivalent is the sievert, chronic radiation levels and standards are still often given in millirems, 1/1000th of a rem (1 mrem = 0.01 mSv)


Level (mSv ) Duration Description
0.001-0.01 Hourly Cosmic ray dose on high-altitude flight, depends on position and solar sunspot phase.
0.01 Annual USA dose from nuclear fuel and nuclear power plants
0.01 Daily Natural background radiation, including radon
0.1 Annual Average USA dose from consumer products
0.15 Annual USA EPA cleanup standard
0.25 Annual USA NRC cleanup standard for individual sites/sources
0.27 Annual
0.28 Annual USA dose from natural terrestrial sources
0.39 Annual Global level of human internal radiation due to radioactive potassium
0.46 Acute Estimated largest off-site dose possible from March 28, 1979 Three Mile Island accident
0.48 Day USA NRC public area exposure limit
0.66 Annual Average USA dose from human-made sources
1 Annual Limit of dose from all DOE facilities to a member of the public who is not a radiation worker
1.1 Annual 1980 average USA radiation worker occupational dose
2 Annual USA average medical and natural background [5] Human internal radiation due to radon, varies with radon levels
2.2 Acute Average dose from upper gastrointestinal diagnostic X-ray series
3 Annual USA average dose from all natural sources
3.66 Annual USA average from all sources, including medical diagnostic radiation doses
few Annual Estimate of cobalt-60 contamination within about 0.5 mile of dirty bomb
5 Annual USA NRC occupational limit for minors (10% of adult limit) USA NRC limit for visitors Orvieto town, Italy, natural [6]
5 Pregnancy USA NRC occupational limit for pregnant women
6.4 Annual High Background Radiation Area (HBRA) of Yangjiang, China
7.6 Annual Fountainhead Rock Place, Santa Fe, NM natural
10-50 Acute USA EPA nuclear accident emergency action level >
50 Annual USA NRC occupational limit (10 CFR 20)
100 Acute USA EPA acute dose level estimated to increase cancer risk 0.8%
120 30 years Exposure, long duration, Ural mountains , lower limit, lower cancer mortality rate[8]
150 Annual USA NRC occupational eye lens exposure limit
175 Annual Guarapari, Brazil natural radiation sources
250 Acute USA EPA voluntary maximum dose for emergency non-life-saving work
250 2 hours Whole body dose exclusion zone criteria for US nuclear reactor siting[12] (converted from 25 rem)
260 Annual Ramsar, Iran, natural background peak dose [9
500 Annual USA NRC occupational whole skin, limb skin, or single organ exposure limit
500 30 years Exposure, long duration, Ural mountains upper limit
750 Acute USA EPA voluntary maximum dose for emergency life-saving work [11
500-1000 Acute Low-level radiation sickness due to short-term exposure
500-1000 Detonation World War II nuclear bomb victims
3000 Acute Thyroid dose (due to iodine absorption) exclusion zone criteria for US nuclear reactor siting  (converted from 300 rem)
4500-5000 Acute LD50 in humans (from radiation poisoning with medical treatment.[13

உலக விஞ்ஞானிகளுக்கும், அரசுகளுக்கும் ஓர் வேண்டுகோள்!

1945 ஜூன் 11 ஆம் தேதி மன்ஹாட்டன் முதல் அணுகுண்டு திட்டத்தில் பணி செய்த நோபெல் பரிசு விஞ்ஞானி, ஜேம்ஸ் பிராங்க் (James Frank) தலைமையில் சிகாகோவின் பல விஞ்ஞானிகள் ஜப்பான் மீது போட விருக்கும் அணுகுண்டால் நேரப் போகும் கோர விளவுகளை முதலிலே தடுக்க முயற்சி செய்தனர்.  அணுகுண்டுக்குப் பதிலாக வேறு ஒரு குண்டைத் தயாரித்துப் போட, அந்த விஞ்ஞானிகள் அமெரிக்க யுத்தச் செயலாளருக்குக் (Secretary of War) கடிதம் எழுதினார்கள் !  இறுதியில் ஜப்பானில் அமெரிக்கா என்ன செய்தது என்று நாமெல்லாம் அறிவோம் !

1945 ஜூலை 17 ஆம் தேதி டாக்டர் லியோ ஸிலார்டு (Dr. Leo Szilard) தலைமையில் 63 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட ஓர் விண்ணப்பத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் (President Truman) அவர்களுக்கு அனுப்பினர்.  ஜப்பான் மீது அமெரிக்கப் போர்ப்படை போட விருக்கும் அணு ஆயுதங்களால் விளையப் போகும் கதிரியக்கப் பொழிவுகளின் கோர அழிவுகள் போர் ஒழுக்கத்திற்கு முற்றிலும் எதிரானவை என்று அழுத்தமாய் எழுதி யிருந்தார்கள் !  லியோ ஸிலார்டுதான் முதன் முதலில் அணுகுண்டு ஆக்க, அமெரிக்க ஜனாதிபதிக்குக் கடிதம் எழுத, ஐன்ஸ்டைனைத் தூண்டியவர் !

1955 ஆகஸ்டு 25 ஆம் தேதி பிரிட்டிஷ் விஞ்ஞானி, டாக்டர் ஜெ. பிரனோஸ்கி (Dr. J. Bronowski) அகில நாடுகளின் அமைதி நிலைநாட்டுப் பேரவையில் பேசும் போது, “எனது ஆணித்தரமான கொள்கை இது!  ஒவ்வொரு விஞ்ஞானியும் தனது தனித்துவ மனச்சாட்சியைப் பின்பற்ற வேண்டும். அது அவரது கடமை.  இதில் அரசாங்கத்தின் கடமை என்ன?  ஒரு விஞ்ஞானி தன் மனச்சாட்சிக்கு எதிராகப் பணி செய்ய மறுத்தால், அவரை அரசாங்கம் தண்டிக்கக் கூடாது!  விஞ்ஞானிகள் தமக்கு விருப்பம் இல்லா ஆராய்ச்சில் இறங்க மாட்டோம் என்று மறுத்தால் விட்டுவிடும் ஒரு சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் !” என்று பறை சாற்றினார்.

(கட்டுரை தொடரும்)

*****************************

தகவல் :

Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007)  2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)

1.  Scientific American Magazine :  India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)

2 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210273&format=html  (Robert Oppenheimer)

3 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40203245&format=html (First Atomic Bombs Dropped on Japan)

3. (a) https://jayabarathan.wordpress.com/2009/08/06/dr-raja-ramanna-2/ (ராஜா ராமண்ணா இந்திய அணு ஆயுதச் சோதனை)

4. The Making of the Atomic Bomb, By: Richard Rhodes

5. Oppenheimer, By: James Kunetka

6. Hand Book of World War II, Abbeydale Press

7. The Deadly Element, By: Lennard Bickel

8. Canadian Nuclear Society Bulletin, June 1997

9.  Grolier Online :  Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)

10.  Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)

11.  National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)

12.  Scientific American Magazine :  Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads, By : David Biello (November 2007)

13.  The Dirty Bombs (Radiological Dispersion Bombs) MSN Broadcasting -Dirty Bombs Biggest Hazard : Panic Experts Say Radiation Would Play on Public Fears (June 10, 2002)

14.  Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)

15.  Neutron Bombs – Wikipedia Report (December 15, 2009)

16 Wikipedia Report on Dr. Abdus Salam – http://en.wikipedia.org/wiki/Abdus_Salam (Dec 18, 2009)

17. Wikipedia Report on Abdul Qadeer Khan – http://en.wikipedia.org/wiki/Abdul_Qadeer_Khan (December 26, 2009)

18. Wikipedia Report on http://www.armscontrol.org/documents/sort Strategic Offensive Reductions Treaty (SORT) (May 24, 2002)

******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 31, 2009

அணு ஆயுதப் போரில் விளையும் கோரப் பேரழிவுகள் -3

(கட்டுரை: 3)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


பேரழிவுப் போராயுதம்
உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து
விழுதுகள் அற்றுப் போக,
விதைகளும் பழுதாக
ஹிரோஷிமா நகரைத் தாக்கி
நரக மாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
நாச மாக்கப் பட்டது !
இப்போது தோன்றின
புதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !
கதிரியக்கம் பொழியும்
புழுதிக் குண்டுகள் !
புத்தர் பிறந்த நாட்டிலே
புனிதர் காந்தி வீட்டிலே
மனித நேயம்
வரண்டு போன
வல்லரசுகள் பின் சென்று
பாரத அன்னைக்குப்
பேரழிவுப்
போரா யுதத்தை
ஆரமாய்
அணிவிக்க லாமா ?

உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !

கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)

“முஸ்லீம்களாகிய நாம் வல்லவராகவும், நம் நாடு மற்ற நாடுகளுக்கு இணையாகவும் இருக்க வேண்டும்.  அதனால்தான் சில நாடுகள் வல்லமையோடு இருக்க நான் உதவி செய்ய விரும்புகிறேன்,”

அப்துல் காதீர் கான் (Abdul Qadeer Khan, Maker of Pakistan Atomic Bomb)

“இந்தியா ஓர் அணு ஆயுதத்தைத் தயாரித்தால் பாகிஸ்தான் புல்லைத் தின்றோ, இலைகளைத் தின்றோ, பட்டினி கிடந்து அதைத் தானும் பின்பற்றிச் செய்யும்.”

ஸுல்ஃபிகார் அலி புட்டு (Zulifikhar Ali Bhuttu) முன்னாள் பாகிஸ்தான் வெளிநாட்டு /பிரதம  அமைச்சர்.

“இப்போது நிகழ்ந்தது போல் (1945 இரண்டாம் உலகப் போர்) நீண்ட காலம் உலக நாடுகள் போரிடுமே யானால், ஒவ்வொரு தேசமும் தன்னைக் காத்துக் கொள்ளவே நவீன விஞ்ஞான ஆயுதங்களைப் படைக்கவோ அன்றிப் பயன்படுத்தவோ செய்யும் !  இந்தியா தனது விஞ்ஞான ஆராய்ச்சிகளை ஆரம்பித்து விருத்தி செய்ய முற்படும் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயம் இல்லை !  அணுசக்தியை இந்திய விஞ்ஞானிகள் ஆக்க வினைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.  ஆனால் இந்தியப் பாதுகாப்புக்குப் பங்கம் நேரும்படி, அது பயமுறுத்தப் பட்டால், தன்னிடம் இருக்கும் எல்லா விதமான ஆயுதங்களையும் இந்தியா தயங்காமல் பயன்படுத்தி எதிர்த்துப் போராடும் !”

பண்டிட் ஜவஹர்லால் நேரு (முதல் பிரதமர்) (1946 ஜூன் 26)

“அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா அணு ஆயுத வெடிப்பு) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்.”

டாக்டர் ஹோமி ஜெ. பாபா (அணுசக்திப் பேரவை முதல் அதிபர்) (1964)

பாகிஸ்தானின் முதல் அணு ஆயுதத் தயாரிப்புக்கு ஏற்பாடு

1948 இல் பண்டித நேரு அணுசக்தி ஆராய்ச்சிக்கு அடிகோலி, டாக்டர் ஹோமி பாபா அணுசக்திப் பேரவையின் தலைவராகி, மொம்பையில் அணு ஆராய்ச்சிக் கூடத்தை நிறுவி 1954 ஆம் ஆண்டில் முதல் ஆராய்ச்சி அணு உலை சைரஸ் (CIRUS Research Reactor) கட்ட ஆரம்ப வேலைகள் நிகழ்ந்த போது, பாகிஸ்தான் தனது அணுசக்தி ஆணையகத்தை நிறுவியது.  அதன் தலைவர் நாஸீர் அஹமத் (Nazir Ahmad).  அவர் அதற்கு முன்பு நூலிழைத் தொழிற்குழு (Textile Committee) அதிபராகப் பணியாற்றியவர்.  1960 ஆண்டுகளில் பாகிஸ்தான் அணுவியல் ஆணையகத்தின் விஞ்ஞான ஆலோசகராக முக்கியப் பங்கேற்று டாக்டர் அப்துஸ் ஸலாம் (Dr. Abdus Salam) (1926 -1996) (Pakistani Theoretical Physicist, Astrophysicist and Nobel Laureate in Physics for his work in Electro-Weak Theory.) பணியாற்றினார்.  பின்னால் அவரது “வலுவிலா மின்னியல் நியதிக்கு” அவர் நோபெல் பரிசு (1979) அளிக்கப்பட்டார்.  டாக்டர் அப்துஸ் ஸலாமின் மாணவரான ரியாஸுத்தீன் (Riazuddin) என்பவரே 1977 ஆண்டில் முதல் அணு ஆயுதச் சாதனத்தின் அமைப்பு டிசைனைத் தயாரித்தவர்.  பாகிஸ்தானின் முதல் ஆராய்ச்சி அணு உலை 1965 ஆண்டில் இயங்க ஆரம்பித்தது.  பாகிஸ்தானின் முதல் அணுமின் சக்தி நிலையம் 1970 இல் பூரணம் அடைந்தது.

1965 பாகிஸ்தான் பாரதத்தோடு புரிந்த போரில் தோற்ற பிறகு பல பாகிஸ்தானி அரசியல்வாதிகளும், விஞ்ஞானிகளும் அரசாங்கம் அணு ஆயுதத் தயாரிப்பில் முழுமையாக இறங்க வேண்டும் என்று அழுத்தமாக வற்புறுத்தல் செய்தனர்.  அப்போது வெளிநாட்டு அமைச்சராக இருந்த ஸுல்ஃபிகார் அலி புட்டு (Zulifikhar Ali Bhuttu) “இந்தியா ஓர் அணு ஆயுதத்தைத் தயாரித்தால் பாகிஸ்தான் புல்லைத் தின்றோ, இலைகளைத் தின்றோ, பட்டினி கிடந்து அதைத் தானும் பின்பற்றிச் செய்யும்.” என்று கூக்குரலிட்டார்.  1971 டிசம்பரில் இந்தியாவோடு நடந்த போரில் பெற்ற அடுத்த தோல்விக்குப் பிறகு புட்டு பாகிஸ்தான் பிரதம மந்திரியாக ஆக்கப் பட்டார்.  அந்த ஆதிக்க ஆணையில் ஜனவரி 1972 பிரதமர் புட்டு பாகிஸ்தான் விஞ்ஞானிகள் குழுவைக் கூட்டி அவருடன் உரையாடி அணு ஆயுதத் தயாரிப்புக்கு முதன்முதலாக விதையிட்டார்.

அணு ஆயுதத் தரமுள்ள அணுவியல் எருக்கள் தயாரிப்பு

முதல் பிரச்சனை. அணு ஆயுதத்துக்கு வேண்டிய மூல வெடி உலோகம் புளுடோனியம் -239 அல்லது அணு ஆயுதத் தரமுள்ள யுரேனியம்-235 (Weapon Grade Uranium -235) தயாரிப்பு.  புளுடோனியம் -239 என்பது யுரேனியம் -238 போல் இயற்கையாகக் கிடைக்கும் சாதாரண உலோகமில்லை.  இயல் யுரேனியத்தை (Natural Uranium) எரி உலோகமாய்ப் பயன்படுத்தும் அணு உலைகளைப் பல மாதங்கள் இயக்கிக் கிடைக்கும் கதிரியக்கக் கழிவு மிச்சத்தில் புளுடோனியம் -239 இரசாயன முறையில் பிரித்தெடுக்கப் பட வேண்டும்.  அது நீண்ட கால அணு உலை இயக்கம்.  முக்கியமாக புளுடோனியம் -239 எரி உலோகத்தை ஆக்க இயங்கும் அணு உலையும், கதிரியக்கக் கழிவுகளைக் கையாண்டு கடின முறையில் சிறிதளவு புளுடோனியத்தைப் பிரிக்கும் சிக்கலான ஓர் இரசாயனத் தொழிற்சாலையும் அமைக்க வேண்டும்.  நாளொன்றுக்கு ஒரு மெகா-வாட் சக்தியை ஓர் அணு உலை உற்பத்தி செய்தால் ஒரு கிராம் புளுடோனியம் -239 கிடைக்கும்.  அணு ஆயுதத் தரமுள்ள (> 93%) புளுடோனியம் -239 தயாரிக்கப் அணு உலையின் ஆற்றலைப் பொருத்துப் பல மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகலாம்.  இந்தியா ஆரம்பத்திலேயே கதிரியக்கக் கழிவுகளைச் சுத்தீகரித்துப் புளுடோனியத்தைப் பிரித்தெடுக்கும் அணுவியல் துறை நுணுக்கத்தில் பயிற்சிகள் செய்து பல்லாண்டு அனுபவம் பெற்றது.  ஆனால் பாகிஸ்தானில் அவ்விதம் புளுடோனியம் -239 எருவை அணுப்பிளவுக் கழிவுகளில் (Fission Product Wastes) சேகரித்துப் பயிற்சி பெறச் சில ஆண்டுகள் பிடித்தன.

அடுத்த கடினமான முறை அணு ஆயுதத் தரமுள்ள யுரேனியம் -235 உலோகத்தைச் சேகரிப்பது.  பூமியில் கிடைக்கும் இயல் யுரேனியத்தில் பெருமளவு யுரேனியம் -238 உலோகமும் மிகச் சிறிதளவு (0.714%) யுரேனியம் -235 உலோகமும் கலந்துள்ளன.  அணு ஆயுதத் தரமுள்ள எருவுக்கு (Weapon Grade Nuclear Fuel) சுத்தீகரித்துச் சேமிப்பான (> 90%) யுரேனியம் -235 தேவைப்படுகிறது !  அதாவது இயல் யுரேனியத்தைச் சுத்தீகரித்துப் பொடியாக்கிச் (Yellow Cake Powder UF6 ) சூடாக்கி வாயுவாக்க (UF6 Gas) வேண்டும்.  அந்த வாயு யுரேனியக் கலவைத் (Mixure of U-238 + U-235) திரும்பத் திரும்ப 1500 “சுழல்வீச்சு வடிகட்டி” யந்திரங்களில் (Separation By 1500 Centrifuge Machines) புகுத்தப்பட்டுப் படிப்படியாய் யுரேனியம் -235 திரட்டிச் சேமிக்கப் பட வேண்டும்.  முடிவில் யுரேனியம் ஆக்ஸைடாகி (UO2 Powder) அணு ஆயுதத் தரமுள்ள யுரேனியம் -235 உலோகமாகத் தயாரிக்கும் இந்த முறையும் அத்தனை எளிதில்லை.

பாகிஸ்தான் எப்படி அணு ஆயுதத் தரமுள்ள எருக்களைப் பெற்றது ?

பாகிஸ்தான் விஞ்ஞானிகள் முதலில் புளுடோனியம் -239 உலோகத்தைப் பிரான்ஸ் அடுத்து பெல்ஜியம் நாடுகளிடமிருந்து வாங்க முயற்சி செய்தார்கள்.  முதலில் விற்க ஒப்புக் கொண்ட பிரான்ஸ் அமெரிக்காவின் தூண்டுதலால் மனம் மாறிப் பின்வாங்கி விற்க மறுத்து விட்டது.  ஆனால் பெல்ஜியத்தில் மீள் சுத்தீகரிப்புத் தொழில் நுணுக்கப் (Fuel Reprocessing Technology) பயிற்சி பெறச் சில பாகிஸ்தான் பொறி நுணுக்க நிபுணர் சென்றனர். 1980 ஆண்டுகளில் அந்த அனுபவத்தை வைத்துப் பாகிஸ்தானில் புளுடோனியம் மீள் சுத்தீகரிப்பு முன்னோடித் தொழிற்கூடம் ஒன்றை நிறுவிட ஆரம்பித்தார்.  அந்தத் தொழிற்கூடம் 1998 இல் இயங்கத் தொடங்கி புளுடோனியம் பிரித்தெடுக்கப் பட்டு இரண்டு அல்லது நான்கு அணுக்குண்டுகள் தயாரிக்கும் ஆற்றல் பெற்றது.

நெதர்லாந்தில் அடுத்து ஒரு விஞ்ஞானக் குழு யுரேனியம் -235 செழிப்பாக்கும் தொழிற்துறை நுணுக்கத்தைப் (Uranium Enrichment Plant) பயில முயன்றது.  1975 இல் நெதர்லாந்து யுரேனியச் செழிப்புத் தொழிற்சாலையில் அப்போது வேலை பார்த்த வந்த பாகிஸ்தான் உலோகத் துறையியல் நிபுணர் (Metallurgist) அப்துல் காதீர் கான் (Abdul Qadeer Khan) பாகிஸ்தான் பயிற்சிக் குழுவோடு சேர்ந்தார்.  அவரே வெகு சாமர்த்தியமாக நெதர்லாந்தின் யுரேனியச் செழிப்பூட்டும் தொழிற்துறையகத்தின் இரகசிய டிசைன், கட்டமைப்பு விளக்கத் தகவல், யந்திர சாதனக் குறிப்புகள், வரை படங்கள், யந்திரங்கள் தயாரிக்கும் நாடுகளின் பெயர்கள் அனைத்தையும் களவாடி பாகிஸ்தானுக்குக் கொண்டு வந்து விட்டார்.  1979 ஆண்டு பாகிஸ்தானில் வெற்றிகரமாக நிறுவப் பட்டு இயங்கிய யுரேனியம் -235 செழிப்பூட்டும் தொழிற்கூடம் ஒன்று முதன்முதல் சிறிதளவு தயாரித்தது.  அந்த ஆண்டுமுதல் அத்தொழிற்சாலை 20 முதல் 40 அணுக்குண்டுகள் தயாரிக்கும் தகுதியைப் பெற்றது.

இந்திய அணு ஆயுதச் சோதனையில் புத்தர் புன்னகை செய்தாரா ?

“உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான்!” என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் பார்த்திபனுக்கு ஓதிய ஒரு வேத மொழியை, நியூ மெக்ஸிகோ டிரினிடி (Trinity) பாலை வனத்தில் சரித்திரப் புகழ் பெற்ற முதல் சோதனை அணுகுண்டை 1945 ஜூலை 16 ஆம் தேதி வெடித்த போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் (Robert Oppenheimer) உதாரணம் காட்டினார் !  அவர்தான் “ஓப்பி” (Oppie) என்று அழைக்கப்பட்டு அணுகுண்டு ஆக்கத் திட்டதுக்குத் தலைமை வகித்த ஒப்பற்ற விஞ்ஞான மேதை !  1964 அக்டோபர் 21 இல் சைனாவின் முதல் அணு ஆயுதச் சோதனைக்குப் பிறகு, இந்திய அணுவியல்துறை அதிபர் டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா அணு ஆயுத வெடிப்பு) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்” என்று வெளிப்படையாகவே அறிவித்தார்!

1974 மே மாதம் 18 ஆம் தேதி இந்தியாவில் மாபெரும் ரயில்வே வேலை நிறுத்தம் உச்ச நிலையில் நாட்டை அமர்க்களப் படுத்திக் கொண்டிருந்த போது, விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா இந்தியப் பிரதம மந்திரி இந்திரா காந்திக்கு, “புத்தர் புன்னகை செய்கிறார்” (The Buddha is Smiling) என்னும் குறிமொழியில் (Code Language) ஓர் அவசரத் தந்தியை அனுப்பினார்!  அதன் உட்பொருள், பாரதம் தனது முதல் அணு ஆயுதச் சோதனையை ராஜஸ்தானின் பொக்ரான் பாலை வனத்தில் அடித்தள வெடிப்பாகச் செய்து வெற்றிகரமாக முடித்துள்ளது !  அந்த இனிய சொற்றொடர் அதன் பின் வந்த பல வெளியீடுகளின் தலைப்பாக எழுதப் பட்டு புகழ் பெற்றது !  இந்திய முதல் அணுகுண்டு சுமார் 8-12 கிலோ டன் டியென்டி (TNT) வெடிப்பு ஆற்றல் பெற்று, ஜப்பான் ஹிரோஷிமாவில் போட்ட முதல் அணு குண்டை விடச் சிறிதளவு ஆற்றல் குன்றியதாக இருந்தது !  அந்த அணு ஆயுதச் சோதனையை வெறும் “சாமாதான அணுகுண்டு வெடிப்பு” (Peaceful Nuclear Explosion) என்று இந்தியா பறை சாற்றினாலும், உலகில் எந்த நாடும் அதை ஏற்றுக் கொள்ள வில்லை ! அழிவு சக்தியின் தீவிரத்தைச் சோதிக்கப் பயன்படும் அணுகுண்டு எங்கே, எப்படி அமைதியைப் பரப்பிட முடியும் ?

இந்திய அணுகுண்டை ஆக்கிய அணுக்கரு ஆய்வுக் குழுவின் தலைமை விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா !  இரண்டாம் உலகப் போரின் சமயம் அணு ஆயுத மன்ஹாட்டன் திட்டத்தின் (Manhattan Project) விஞ்ஞான அதிபதியாய்ப் பணிசெய்து முதல் அணுகுண்டு படைத்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் (Robert Oppenheimer), ரஷ்யாவின் முதல் அணு ஆயுதங்களைத் தோற்றுவித்த பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] ஆகியோர் வரிசையில், பாரதத்தின் அணுவியல் விஞ்ஞானி ராஜா ராமண்ணாவையும் அணு ஆயுதப் படைப்பு மேதையாய் நிற்க வைக்கலாம் !

இந்தியா அணு ஆயுத ஆக்கத்தில் இறங்கக் காரணங்கள் என்ன?

ஐந்து காரணங்களைக் கூறலாம்!  முதல் காரணம், 1962 இல் சைனா இந்தியாவுடன் போரிட்டு வடகிழக்குப் பகுதியில் சில பரப்பு மலைப் பிரதேசங்களைப் பிடுங்கிக் கொண்டு போனது!  இரண்டாவது, பிரதமர் நேரு 1964 மே 27 இல் காலமானது !  நேரு ஆக்க வினைகளுக்கு அணுசக்தி வளர வாய்ப்புக்களை ஏற்படுத்தினாலும், பாரதம் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதை அறவே எதிர்த்தார்.  மூன்றாவது காரணம், சைரஸ் அணு ஆராய்ச்சி உலை (CIRUS Research Reactor) 1960 முதல் இயங்க ஆரம்பித்து, அணு ஆயுத எரு புளுடோனியம் அணுப்பிளவுக் கழிவு விளைவுகளில் உண்டானது !  அடுத்து பிளவு விளைவுகளில் புளுடோனியத்தைப் (Plutonium in Fission Products) பிரித்தெடுக்கும் தொழிற்சாலை (Nuclear Spent Fuel Reprocessing Plant) ஓட ஆரம்பித்து, அணுகுண்டுக்கு வேண்டிய புளுடோனியம் திரளாகச் சேகரித்தது !  நான்காவது காரணம், சைனா 1964 அக்டோபர் 21 இல் தனது முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனையைச் செய்து, அண்டை நாடான இந்தியாவின் நெஞ்சைத் துடிக்க வைத்தது !  ஐந்தாவது காரணம், அப்போது டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது போன்று (சைனா அணு ஆயுத வெடிப்பு) அணு ஆயுத சோதனை செய்ய முடியும்” என்று வெளிப்படையாகவே அறிவித்தது !

ஐந்து காரணங்களிலும் முக்கியமானது, ஐந்தாவது காரணம் !  டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால், இந்தியாவும் 18 மாதங்களில் இது போன்று அணு ஆயுத சோதனைச் செய்ய முடியும்” என்று அரசாங்கத்தைத் தூண்டியது !  நேருவுக்குப் பின் வந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அணு ஆயுதத் தயாரிப்பை அவ்வளவாக வரவேற்க வில்லை.  1966 ஜனவரியில் அடுத்துப் பிரதமராய் வந்த இந்திரா காந்தி காலத்தில் ஹோமி பாபாவின் எண்ணம் தொடரப் பட்டிருக்கலாம்!  அதே சமயம் டாக்டர் ஹோமி பாபா அகால மரணம் அடைந்து, அடுத்து டாக்டர் விக்ரம் சாராபாய் அணுசக்தித் துறையின் அதிபர் ஆனார்.  சாராபாயும் அணு ஆயுத ஆக்கத்தை ஆதரிக்க வில்லை !  இறுதியில் அவரது மர்ம மரணத்திற்குப் (1971 டிசம்பர் 30) பின், ஹோமி சேத்னா அணுசக்தி ஆணையகத்துக்கு அதிபரானார்.  இந்திரா காந்தி, ஹோமி சேத்னா கண்காணிப்பின் கீழ், திறமை மிக்க அணுக்கரு பௌதிக (Nuclear Physicist) விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணாவின் நேரடிப் படைப்பில் இந்திய அணு ஆயுதங்கள் உருவாகின!

அணுக்குண்டு ஆக்குவதற்கு வேண்டிய புளுடோனியம், வேக நியூட்ரான் இயக்க (Fast Neutron Reactions) விளக்கங்களை அறிந்து கொள்வதற்குப் பூர்ணிமா-I (Purnima-I) ஆராய்ச்சி அணு உலை நிறுவப் பட்டு 1972 மே மாதம் 18 இல் இயங்க ஆரம்பித்தது !  இந்த அணு உலையின் எரு 43 பவுண்டு புளுடோனியம் -239 !  வெளிவரும் வெப்ப சக்தி 1 வாட் (watt).  ஸைரஸ் ஆராய்ச்சி அணு உலை [CIRUS] 40 மெகா வாட் & துருவா ஆய்வு அணு உலை [Duruva] 100 மெகா வாட் வெப்ப சக்தியும் உண்டாக்கி அணு ஆயுத எரு புளுடோனியத்தைத் தொடர்ந்து உற்பத்தி செய்கின்றன !  துருவா 1985 ஆகஸ்டு 8 இல் இயங்கத் துவங்கியது !  ஆய்வு அணு உலை நாளன்றுக்கு 1 மெகா வாட் (One Mega Watt for One Day) வெப்ப சக்தி ஈன்று இயங்கினால், பிளவு விளைவுகளில் (Fission Products) 1 கிராம் புளுடோனியம் -239 சேரும் !  100 மெகாவாட் ஆற்றல் உடைய துருவ அணு உலை ஒரு நாள் இயங்கினால் (100 mwd), 100 கிராம் புளுடோனியம் கிடைக்கும் !

அணு ஆயுதச் சோதனைகளைப் பற்றி ராமண்ணாவின் கருத்துக்கள்

“பொக்ரான் பாலை வனத்தில் 1998 மே மாதம் பாரதம் இரண்டாம் தடவை செய்த, ஐந்து அடித்தள அணு ஆயுதச் சோதனைகள் இந்திய துணைக் கண்டத்தின் பொருளாதாரம், சூழ்வெளி, பாதுகாப்பு, அரசியல், பொறியல் துறை போன்றவற்றை, ஏன் வாழ்க்கையைப் பற்றிய நமது எண்ணத்தைக் கூட மிகவும் பாதித்துள்ளது !  பல நாடுகள் இதற்கு முன் பல தடவைச் சோதனைகள் செய்து, உலகப் பெரு நகரங்கள் யாவற்றையும் அழிக்க வல்ல பேரளவில் அணு ஆயுதங்களைச் சேமித்து வைத்துள்ளன !

இந்த ஐந்து சோதனைகளால் உலக வல்லரசுகள் அதிர்ச்சி அடைந்து, அவை இந்தியாவுக்கு தீவிர எச்சரிக்கை விடுத்து, பயமுறுத்தியும் இருக்கின்றன !  இந்தியா நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்பு எழுந்து நிற்கும் தனிச் சுதந்திர நாடு.  இந்த நாள்வரை இந்தியா எந்த விதியையும் மீறியதும் இல்லை !  அகில நாட்டு உடன்படிக்கை எதையும் முறித்ததும் இல்லை !  உலக நாடுகள் தயாரித்த அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு உடன்படிக்கை (Non-Proliferation Treaty NPT), அணு ஆயுதத் தகர்ப்பு (Nuclear Disarmament) ஆகியவற்றில் இந்தியாவுக்கு நம்பிக்கை இருக்கிறது.

இந்த உடன்படிக்கையைத் தயாரித்த நாடுகள்தான் தமக்குச் சாதகமாகத், தமக்குப் பாதுகாப்பாக அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டும், அவற்றைச் சோதித்துக் கொண்டும் அதன் விதி முறைகளை முறித்துள்ளன!  இந்தியா ஒரு நாடு மட்டுந்தான் அம்மாதிரிச் செயல்களை எதிர்த்து நிமிர்ந்து நிற்கிறது !

பழைய வரலாற்றை நினைவில் வைத்திருப்பவர்கள், இப்போது ஐக்கிய நாடுகளின் பேரவை (United Nations Organization) ஒரு பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதை நன்கு அறிவர் !  அதை ஐம்பெரும் வல்லரசுகள் ஆட்டி படைத்து, ஆக்கிரமித்துக் கைப்பிடிக்குள் வைத்துள்ளன!  நல்வினைகள் புரிந்துள்ள அகில நாடுகளின் அணுசக்திப் பேரவையும் (International Atomic Energy Agency) இப்போது உலக நாடுகளின் அணுஉலை எருக்கள் உளவுகளைச் (Fissile Material Inspections) செய்வதிலும், அணுப்பிளவு எருக்கள் (Fissile Material Safeguards) பாதுகாப்பிலும் சிரமப் பட்டு வருகிறது !”

அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் ஏவுகணைத் திட்டம்

1983 இல் ஒருங்கிணைந்த கட்டளை ஏவுகணை வளர்ச்சித் திட்டம் (Integrated Guided Missile Development Program) உருவாகி, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் கட்டளை ஏவுகணைகள் விருத்தி செய்யப் பட்டன !  அத்திட்டப்படி, ஐந்து வித ஏவுகணைகள் இந்தியாவில் அமைக்கப் பட்டன!  சிறு தூர பிருதிவி (Short Range Prithvi), இடைத் தூர அக்னி (Intermediate Range Agni), தளத்திலிருந்து வானுக்குத் தாவும் ஆகாஷ் & திரிசூல் (Surface to Air Missiles, Akash & Trishul), கட்டளைப் பணியில் டாங்க்கைத் தாக்கும் நாகம் (The Guided Anti-Tank Nag).  முதல் ஏவுகணை பிருதிவி, அணு ஆயுத மாடல் குண்டைச் சுமந்து 1988 பிப்ரவரி 25 இல் ஏவப்பட்டு, சோதனை வெற்றி கரமாக முடிந்தது !

இந்திய ஏவுகணைத் திட்டத்தின் அமைப்பாளி (Architect of the Indian Missile Program) டாக்டர் அப்துல் கலாம் (2002 இல் இந்திய ஜனாதிபதி),  இந்தியப் பாதுகாப்பு, ஆய்வு வளர்ச்சி நிறுவகத்தின் (Indian Defence & Research Development Organization) தலைவர்.  அவர் கூறியது: “கட்டளை ஏவுகணை ஆயுத மயமாக்கல் (Weaponization) முழுமையாக முடிக்கப் பட்டது.  பிருதிவி, அக்னி ஆகிய ஏவுகணைகள் தூக்கிச் செல்ல இருக்கும் அணு ஆயுதப் போர்க் குண்டுகளின் (Nuclear Warheads) அளவு, எடை, தூண்டும் முறை, இயங்கும் ஒழுங்கு, அதிர்வுகள் (Performance, Vibrations) யாவும் சோதிக்கப் பட்டு விட்டன!”

1998 மே மாதம் பிரதமர் பாஜ்பாயி வெளிப்படையாகப் பறை சாற்றினார்: “இந்தியா இப்போது ஓர் அணு ஆயுத நாடு (Nuclear Weapon State) ! மனித இனத்தின் ஆறில் ஒரு பங்கான பாரத மக்களின் உரிமைக்குரிய ஆயுதங்கள்!  இவை யாவும் சுயப் பாதுகாப்புக்கு (Self Defence) மட்டுமே பயன்படும் ஆயுதங்களே தவிர முன்னடியாக யாரையும் தாக்குவதற்குப் பயன்படுத்தப் பட மாட்டா !”

இந்தியா பன்முகக் கலாச்சார நாடாக, பல்வேறு மதச் சார்பான தேசமாக, எண்ணற்ற இனங்களின் சங்கமமாக இருந்து, வகுப்புக் கலவரங்கள் அடிக்கடி எழும்போது கட்டுப்படுத்த இயலாத கூட்டரசினர் கைவசம் இருப்பதாலும், பாகிஸ்தான், சைனா போன்ற பகை நாடுகளுக்கு இடையே பாரதம் நெருக்கப் படுவதாலும் என்றாவது ஒருநாள், யாராவது ஒரு பிரதமர், எந்த நாட்டின் மீதாவது அணு ஆயுதத்தை வீசிக் கதிரியக்கப் பொழிவுகளை உலகில் பரப்பப் போகும் பயங்கரக் காலம் ஒருவேளை வரலாம் ! அந்த காட்டுப் பாதைக்குப் பாரதத்தில் சிவப்புக் கம்பளம் விரித்த விஞ்ஞானி, டாக்டர் ராஜா ராமண்ணா என்னும் ஓர் வன்மொழி வாசகம் கால வெள்ளம் அழிக்க முடியாதபடி, உலக வரலாற்றில் கல்வெட்டு போல் எழுதப்பட்டு விட்டது !

உலக விஞ்ஞானிகளுக்கும், அரசுகளுக்கும் ஓர் வேண்டுகோள்!

1955 ஆகஸ்டு 25 ஆம் தேதி பிரிட்டிஷ் விஞ்ஞானி, டாக்டர் ஜெ. பிரனோஸ்கி (Dr. J. Bronowski) அகில நாடுகளின் அமைதி நிலைநாட்டுப் பேரவையில் பேசும் போது, “எனது ஆணித்தரமான கொள்கை இது !  ஒவ்வொரு விஞ்ஞானியும் தனது தனித்துவ மனச்சாட்சியைப் பின்பற்ற வேண்டும். அது அவரது கடமை.  இதில் அரசாங்கத்தின் கடமை என்ன?  ஒரு விஞ்ஞானி தன் மனச்சாட்சிக்கு எதிராகப் பணி செய்ய மறுத்தால், அவரை அரசாங்கம் தண்டிக்கக் கூடாது!  விஞ்ஞானிகள் தமக்கு விருப்பம் இல்லா ஆராய்ச்சில் இறங்க மாட்டோம் என்று மறுத்தால் விட்டுவிடும் ஒரு சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் !” என்று பறை சாற்றினார்.

1957 மே மாதம் நோபெல் பரிசு விஞ்ஞானி லினஸ் பாலிங் (Linus Pauling) அமெரிக்க விஞ்ஞானிகளின் ஒரு கோரிக்கையில் உலக அரசுகளையும், நாட்டு மக்களையும் வலியுறுத்தி ஓர் உடன்படிக்கை மூலம், எல்லா அணு ஆயுதச் சோதனைகளையும் உடனே நிறுத்தும்படி விரைவு படுத்தினார். 1957 ஜூன் மாதத்திற்குள் 2000 அமெரிக்க விஞ்ஞானிகள் சேர்ந்து கையெழுத்திட்டு ஓர் விண்ணப்பத்தை ஜனாதிபதி ஐஸன்ஹோவருக்கு அனுப்பினார்கள்! “ஒவ்வோர் அணுகுண்டுச் சோதனையும் உலகின் எல்லா மூலை முடுக்கிலும் கதிரியக்கப் பொழிவுகளை அடுக்கிக் கொண்டே போகிறது!  அதிமாகும் ஒவ்வோர் அளவு கதிர்வீச்சும் மனித இனத்திற்கு ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்கிக் கொண்டே போகிறது!  முடிவில் அங்க ஈனமான குழந்தைகள் எதிர்காலத்தில் பிறந்து, அவர்களின் எண்ணிக்கை பெருகப் போகிறது!”

அத்தனைக் கூக்குரல் அறிவிப்புகள் உலக விஞ்ஞானிகளுக்கும், அரசாங்கத்திற்கும் முறையிடுவது என்ன ?  அழுத்தமான இந்த உபதேசம்தான் !  போதும் நிறுத்துவீர், அணு ஆயுதச் சோதனைகளை!  போதும் நிறுத்துவீர், அணு ஆயுத உற்பத்திகளை!  போதும் தகர்த்து ஒழிப்பீர், கைவசமுள்ள அணு ஆயுதக் குண்டுகளை !  உலக ஒலிம்பிக்கில் அணு ஆயுதப் பெருக்குப் பந்தயப் போட்டி இனிமேல் தொடரக் கூடாது.

(கட்டுரை தொடரும்)

*****************************

தகவல் :

Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007)  2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)

1.  Scientific American Magazine :  India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)

2 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210273&format=html  (Robert Oppenheimer)

3 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40203245&format=html (First Atomic Bombs Dropped on Japan)

3. (a) https://jayabarathan.wordpress.com/2009/08/06/dr-raja-ramanna-2/ (ராஜா ராமண்ணா இந்திய அணு ஆயுதச் சோதனை)

4. The Making of the Atomic Bomb, By: Richard Rhodes

5. Oppenheimer, By: James Kunetka

6. Hand Book of World War II, Abbeydale Press

7. The Deadly Element, By: Lennard Bickel

8. Canadian Nuclear Society Bulletin, June 1997

9.  Grolier Online :  Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)

10.  Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)

11.  National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)

12.  Scientific American Magazine :  Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads (November 2007)

13.  The Dirty Bombs (Radiological Dispersion Bombs) MSN Broadcasting -Dirty Bombs Biggest Hazard : Panic Experts Say Radiation Would Play on Public Fears (June 10, 2002)

14.  Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)

15.  Neutron Bombs – Wikipedia Report (December 15, 2009)

16 Wikipedia Report on Dr. Abdus Salam -http://en.wikipedia.org/wiki/Abdus_Salam (Dec 18, 2009)

******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 24, 2009

அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள் -2

(கட்டுரை: 2)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


பேரழிவுப் போராயுதம்
உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து
விழுதுகள் அற்றுப் போக,
விதைகளும் பழுதாக
ஹிரோஷிமா நகரைத் தாக்கி
நரக மாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
நாச மாக்கப் பட்டது !
இப்போது தோன்றின
புதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !
கதிரியக்கம் பொழியும்
புழுதிக் குண்டுகள் !
புத்தர் பிறந்த நாட்டிலே
புனிதர் காந்தி வீட்டிலே
மனித நேயம்
வரண்டு போன
வல்லரசுகள் பின் சென்று
பாரத அன்னைக்குப்
பேரழிவுப்
போரா யுதத்தை
ஆரமாய்
அணிவிக்க லாமா ?

உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !

கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)

“ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம் !”

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

“எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது !  அதை அகில நாடுகள் உணர வேண்டும் !  அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் !  உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம்.  நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை !  உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.

பெர்டிரண்டு ரஸ்ஸல் (ஏப்ரல் 16, 1955)


நியூட்ரான் கணைகள் தாக்கும் புதுயுக அணுக்குண்டுகள்

நியூட்ரான் குண்டு (Neutron Bomb) என்பது “மிகைப்பட்டக் கதிர்வீச்சுக் குண்டு” (Enhanced Radiation Weapon -ERW) என்று அழைக்கப்படுவது.  இந்த அணுவியல் குண்டு பெரும்பான்மையான எரிசக்தியை வெடிப்புச் சக்தியாக வெளிப்படுத்தாமல் சக்தி ஊட்டப் பட்ட நியூட்ரான் கணைகளாக ஏவுகிறது.  இம்முறையில் நியூட்ரான் குண்டு சாதாரண அணுக்குண்டு ஆற்றலில் பத்தில் ஒரு பங்கு வல்லமையே கொண்டுள்ளது.  வெடிப்பும், வெப்ப சக்தியும் முழுமையாகத் தவிர்க்கப் படாமல் மிகையான நியூட்ரான்களின் தீவிரம் உயிரினத் தாக்குதலாய் விளைந்து வீடுகள், மாட மாளிகைகள், பாலங்கங்கள், வாகனங்கள், கட்டடங்கள் எதுவும் தகர்க்கப்படா.  மேலும் நகரின் தொழில்வளத் துறைகள் (Infrastructure) எவையும் அழிக்கப்படா !

1958 இல் முதன்முதலாக அமெரிக்காதான் நியூட்ரான் குண்டுகளைத் தயாரித்தது !  நியூட்ரான் குண்டுகளின் பிதாவாகக் கருதப்படுபவர் :  லாரென்ஸ் லிவர்மோர் தேசீயச் சோதனைக் கூடத்தின் சாமுவேல் கோஹென் (Samuel Cohen – Lawrence Livermore National Laboratory) என்பவர்.  முதல் சோதனை நெவேடா பாலைவன அடித்தளத்தில் 1963 இல் நடத்தப்பட்டது.  1978 இல் ஜனாதிபதி ஜிம்மி கார்டருக்கு ஏற்பட்ட எதிர்ப்புகளால் மேற்கொண்டு நியூட்ரான் குண்டுகள் விருத்தியும் பெருக்கமும் நிறுத்தமாகி, பிறகு ஜனாதிபதி ரோனால்டு ரேகன் காலத்தில் மீண்டும் 1981 இல் தொடரப் பட்டன.

மூன்று விதமான ERW நியூட்ரான் குண்டுகளை அமெரிக்கா விருத்தி செய்தது.  அவை W66, W70 & W79 (Nuclear Warheads) என்னும் இராணுவக் குறி ஆயுதங்களாக அழைக்கப் பட்டன.  W66 ஆயுதங்கள் 1970 ஆண்டுகளின் மத்தியில் தயாரிக்கப்பட்டுப் பின்னர் ஓய்வாகி விட்டன.  W70 ஆயுதங்கள் சிறு தூரக் கட்டளை ஏவுகணைகளிலும் (Short-Range Missile System) W79 பீரங்கிக் குண்டுகளாகவும் (Artillary Shells) உபயோகமாயின.  அவை இரண்டும் ஜனாதிபதி மூத்த ஜார்ஜ் புஷ் காலத்தில் ரஷ்ய அமெரிக்க “ஊமைப் போர்” (Cold War) முடிவில் (1992) ஓய்வாகின.   இறுதி W70 ஆயுதம் 1996 ஆண்டிலும் & W79 ஆயுதம் 2003 ஆண்டிலும் முழுமையாக நீக்கம் அடைந்தன.

1980 இல் பிரான்ஸ் தனது முதல் நியூட்ரான் குண்டை பசிபிக் கடலில் உள்ள முரோரா அடோல் (Mururoa Atoll) தீவில் சோதித்தது !  1980 ஆண்டுகளில் பிரான்ஸ் மேலும் சில நியூட்ரான் குண்டுகளை ஆக்கியதாக அறியப் படுகிறது.  அதற்குப் பிறகு அவற்றை எல்லாம் பிரான்ஸ் முடக்கி முறித்ததாக கூறப்பட்டுள்ளது.  1999 இல் சைனா நியூட்ரான் குண்டுகள் ஆக்கும் திறனைப் பெற்றதாகத் தெரிகிறது.  1997 ஆம் ஆண்டில் நடந்த நேர்முக உரையாடலில் சாமுவேல் கோஹென் “ரஷ்யா, சைனா & இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஏராளமாக நியூட்ரான் குண்டுகள் அடுக்கை (Stockpile of Neutron Bombs) வைத்திருக்க வாய்ப்புள்ளன,” என்று கூறியிருக்கிறார்.

நியூட்ரான் குண்டு ஒருவித பிளவு-பிணைவுக் குண்டுதான் (Fission-Fusion Bomb).  அது ஒரு வெப்ப அணுக்கரு யுத்த ஆயுதமே (Thermonuclear Weapon) !  அதில் வெடித்து மிகையாகி மீறிப் பெருகும் நியூட்ரான்கள் வெளியேறித் தாக்கும்படி ஏவப்படுகின்றன.  நியூட்ரான் குண்டுக்கு ஏராளமான கொள்ளளவு (Volume) டிரிடியம் (ஹைடிரஜன் வாயுவின் ஏகமூலம்) (Tritium – An Isotope of Hydrogen Gas) தேவை.  டிரிடியத்தின் “அரை ஆயுள்” சுமார் 12 ஆண்டுகள் (Half-Life).  அதாவது டிரிடியத்தின் நிறை (Mass) 12 ஆண்டிகளில் பாதியாகத் தேயும்.  அதாவது அடிக்கடி நியூட்ரான் குண்டுகளில் மறையும் டிரிடியம் வாயு நிரப்பப் படவேண்டும்.

கதிரியக்கப் பொழிவுக் குண்டுகள் (புழுதிக் குண்டுகள்)

கதிரியக்கப் பொழிவுகளை வீசும் அணுவியல் குண்டுகள் புழுதிக் குண்டுகள் (Radioactive Dirty Bombs) OR (Radiological Dispersion Bombs) என்று பெயரிடப் பட்டுள்ளன.  இவ்வகை அணுவியல் குண்டுகள் சாதாரண ரசாயன வெடிகளைப் பயன்படுத்திக் கதிரியக்கப் பொழிவுகளைச் சிறிதளவு தரைமீது (200 சதுர மைல்) பரப்பச் செய்யும்.  புழுதிக் குண்டுகளில் பொதுவாக இருப்பவை : ஸ்டிரான்சியம்-90 (Strontium-90), கோபால்ட்-60 (Cobalt-60) அல்லது சீஸியம்-137 (Cesium-137).  புழுதிக் குண்டுகள் வீரிய கதிரியக்கமுள்ள காமாக் கதிர்வீச்சைத் தளமெங்கும் பரப்பும்.  இந்தப் புழுதிக் குண்டுகளை எளிதாக யாரும் தயாரிக்க முடியும்.  தேவையானவை :  சாதாரண வெடி மருந்து அடுத்து கதிரியக்க உலோகம் ஏதாவது ஒன்று : ஸ்டிரான்சியம்-90 (Strontium-90), கோபால்ட்-60 (Cobalt-60) அல்லது சீஸியம்-137 (Cesium-137).  இவற்றைக் காமாக் கதிர்ப் படங்கள் எடுக்கும் (Radio-graphy) தொழிற் கூடங்களில் அல்லது அணு உலைக் கூடங்களில் களவாட வேண்டும்.

2002 மே மாத அறிக்கை ஒன்றில் அகில நாட்டு அணுசக்தி ஆணையகம் (International Atomic Energy Agency -IAEA) வெளியிட்ட புகார்த் தகவல் இது :  ஆண்டுக்கு சராசரி 300 முறை கதிரியக்க உலோகங்கள் கணாமல் போன புகார்கள் ஆணையகத்துக்கு அனுப்பப் படுகின்றனவாம்.  மேலும் 1993 முதல் 2002 வரை IAEA பெற்ற புகார்கள் : 10 ஆண்டுகளில் காணாமல் போனக் கதிரியக்க உலோகங்கள் எண்ணிக்கை சுமார் 400 !  அமெரிக்காவில் மட்டும் 1986 முதல் 2002 வரை 15 ஆண்டுகளாக கதிரியக்க உலோகங்கள் காணாமல் போன 1700 நிகழ்ச்சிகள் நேர்ந்துள்ளன !  இவ்விதம் உலகில் பல நாடுகளில் கதிரியக்கக் களவுப் புகார்கள் குவிந்துள்ளன.

1.  1995 இல் ரஷ்யாவில் செச்சென் தீவிரவாதிகள் களவாடிய 30 பவுண்டு சீஸியம்-137 & டைனமைட் வெடி மருந்து.

2.  1987 இல் ஈராக் ஒரு டன் புழுதிக் குண்டை வெடித்துச் சோதனை செய்தது.

3.  1987 இல் பிரேஸில் 20 கிராம் சீஸியம்-137 யைக் களவாடி வெடிப்பு ஆற்றலைக் காட்டியது.  அந்த சோதனையில் நால்வர் மரித்தனர்.  249 நபர் கதிர்த்தீட்டை (Radioactive Contamination) அடைந்தனர்.

அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம் !

“உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான் !” என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத மொழியை, நியூ மெக்ஸிகோ சோதனைத் தளமான டிரினிடியில் [Trinity], 1945 ஜூலை 16 நாள் சரித்திரப் புகழ் பெற்ற முதல் ஆய்வு அணுகுண்டு, பயங்கர வெடிப்பை உண்டாக்கிய போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Oppenheimer] கூறினார்.  அவர்தான் அணுகுண்டின் பிதா ! யுத்த சமயத்தில் பல நாட்டு விஞ்ஞான நிபுணர்களைத் தன்கீழ்  இணைத்து, ஆணையிட்டு, ஆட்டிப் படைத்து, முதன் முதல் அணு ஆயுதங்களை ஆக்கிய தலைமை அதிபதி! ஒப்பற்ற விஞ்ஞான வல்லுநர், ஓப்பன்ஹைமர்! அணுகுண்டு புதுயுக மரண யந்திரம் ! வெடிக்  கோளம் ! விஷக் கோளம்! கதிர்க் கோளம் ! கனல் கோளம் ! ஒளிக் கோளம் ! அழிவுக் கோளம் ! அவற்றின் அசுரப் பிடியில் நசுங்கி மடிவது பாமர மக்கள்! அணுகுண்டு வெடிப்பின் விளைவு, முடிவற்றுத் தொடரும் மரணக் கோலம் !’

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் இறுதியில் 1945 ஆகஸ்டு 6, அடுத்து 9 ஆம் தேதிகளில் ஜப்பானில்  உள்ள ஹிரோஷிமா, நாகசாகியில் முதன் முதல் அமெரிக்கா தீவிரச் சக்தி பெற்ற அணு ஆயுதக் குண்டுகளைப் போட்டு, யுத்த அழிவுச் சரித்திரத்தில் ஒரு மாபெரும் புரட்சியை உண்டாக்கியது! ‘எநோலா  கே’ [Enola Gay] என்னும் B-29 வெடி விமானத்திலிருந்து, காலை 9:14 மணிக்கு ‘லிட்டில் பாய்’ [Little  Boy] என்னும் யுரேனியக் குண்டு [Uranium -235] ஹிரோஷிமாவை நோக்கி விழுந்தது. பத்தரை அடி  நீளமும், இரண்டரை அடி விட்டமுடன், 9700 பவுண்டு எடையுள்ள 15 கிலோ டன் TNT வெடிச்சக்தி கொண்ட அணுக்குண்டு 2000 அடி உயரத்தில் ஹிரோஷிமா நகரின் மையத்திலே வெடித்தது! சில  நிமிடங்கள் கழித்து, பரிதிபோல் ஒரு பேரொளிச் சிவப்புக் கோளம் பொங்கி எழுந்தது! அதைத் தொடர்ந்து  பயங்கர வெடிச் சத்தம் வானைப் பிளந்து, ஒரு பிரளயமே உண்டானது! பதினொன்று மைல் தூரத்தில்  திரும்பிச் சென்ற எநோலா கே வால் புறத்தை வெடி அதிர்ச்சி அலைகள் தாக்கி விமானத்தை  ஆட்டியதாம்! நூறு மைல் தூரம் சென்ற பின்னும், கோள முகில் விமானியின் கண்களுக்குத்  தெரிந்ததாம்! பிரம்மாண்டமான முகில் காளான் [Mushroom Cloud] தோற்றத்தில் பொங்கிக் குமுறி எழும்  புகை மண்டலம்! நடுவே சிவப்பு நிறக் கோளம்! கோளத்தின் உட்கருவில் பொருட்கள் எரியும் கோரமான  அனல் பிழம்பு! எங்கெங்கு பார்க்கினும், குவியல் குவியலாய்த் தீப்பற்றி அழிக்கும் கோரக் காட்சிகள்!

ஹிரோஷிமாவில் மட்டும் 160,000 பேர் உயிர் இழந்தனர்! அதில் 60,000 பேர் பயங்கரமாகத் தீப்பற்றி  எரிந்து கரிந்து போயினர். 130,000 பேர் காய முற்றனர். இதில் 43,500 பேர் படு காயப் பட்டனர். குண்டு  வெடிப்புக்குப் பிறகு ஐந்து வருட மரண எண்ணிக்கை மொத்தம் 200,000 ஆக ஏறியது. மரணக்  கணக்குப்படி, இரண்டு நகரிலும் 20%-30% அனல் வீச்சில் மாண்டனர். 50%-60% மற்ற அபாயத்தால்  செத்தனர். 15%-20% கதிரியக்க நோயால் காலமானார்கள். நான்கு சதுர மைல் பரப்பில் 68% நகரக்  கட்டிடங்கள் மற்றும் 24% பகுதிகள் சில நிமிடங்களில் தூள் தூளாகித் தரை மட்டமாயின!  எண்ணிக்கையில் 70,000 கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன! நகர மாளிகை, தீயணைப்பு நிலையம்,  போலீஸ் நிலையம், தபால் நிலையம், ரயில்வே நிலையம், பள்ளிக் கூடங்கள், மருத்துவக் கூடங்கள்,  தெரு மின்சார வண்டிகள், மின்சக்தி நிலையங்கள் முழுவதும் தரை மட்டமாயின! 13,000 அடித்  தொலைவில் இருந்த தொலை பேசிக் கம்பங்கள் கரிந்து போயின! நகரின் மருத்துவ டாக்டர்கள் 200  பேர் [90%] செத்து மாண்டனர்; அல்லது முடமாகிப் போயினர்! நகரில் இருந்த 1780 நர்ஸ்களில் 1654  பேர் கொல்லப் பட்டார்கள்: அல்லது காய மடைந்தார்கள். இருந்த 45 ஆஸ்பத்திரிகளில் 44  முழுமையாகவோ, அன்றிப் பகுதியாகவோ தகர்க்கப் பட்டன.

‘ஃபாட் மான்’ [Fat Man] என்னும் 22 கிலோ டன் TNT அழிவுச் சக்தி கொண்ட புளுட்டோனியக் குண்டு [Plutonium239] நாகசக்கியில் விழுந்து, 1945 ஆண்டு முடிவு எண்ணிக்கைப்படி 70,000 பேர் செத்து  மடிந்தார்கள்! 33% நகரப் பகுதி தரை மட்டமானது!  வெடி அதிர்விலும், வெடிப்பு அலையிலும், வெப்பக் கனலிலும் அழிந்தவர் போக, மற்றும் ஊடுருவிப் பாய்ந்த அணுக் கதிரியக்கம் தாக்கிப் பல்லாயிரம் பேர் பட்ட தொடர் வேதனைதான் எல்லாவற்றிலும்  மிக முக்கியமானது! மூர்க்கமானது! முடிவில்லாதது! ஹிரோஷிமா, நாகசாகி நகர்களில் வெடியும், வெப்பக் கனலும் தாக்காமல் கடவுள் புண்ணியத்தில் தப்பியவர்கள், கடைசியில் கதிரியக்கம்  தாக்கப்பட்டு, ‘கதிர் எமன்’ கையில் மெதுவாகச் செத்து மடிந்தார்கள்!

ஜப்பானுக்குச் சென்று ‘அமெரிக்க வெடிவீச்சுத் திட்டப் பதிவுக்குழு’ [The United States Strategic Bombing Survey Team] 1946 ஜூன் 30 இல் வெளியிட்ட, ‘ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணுகுண்டுகளின் விளைவுகள்’ [The Effects of Atomic Bombs on Hiroshima & Nagasaki] என்னும் தகவல் கூறுகிறது:  முக்கியமான விளைவு ஒரே சமயத்தில் நிகழும் மித மிஞ்சிய மரண எண்ணிக்கை! அடுத்து மூன்று வித உருவில் அணு ஆயுதம் பேரழிவுச் சக்தியாய் கோரக் கொலை புரிகிறது! முதலில் அளவற்ற வெப்பம்! இரண்டாவது பயங்கர வெடிப்பு அல்லது வாயு அழுத்தம்! மூன்றாவது தீவிரக் கதிரியக்கம்! பாதிக்கப் பட்டவர்களில் (20-30)% தீக்காய மரணங்கள்! அதிர்ச்சி, வெடிப்பு, வேறு விதங்களில் (50-60)% மரணங்கள்! மற்றும் (15-20)% கதிரியக்கக் காய்ச்சலில் பாதிப்பு [Radiation Sickness]! மூன்றிலும் மிக மிகக் கொடியது, கதிரியக்கத் தாக்குதல்! கதிரியக்கம் நொடிப் பொழுதில் சித்திரவதை செய்து மக்களைக் கொல்வதோடு, தொடர்ந்து உயிர் பிழைத்தோரையும், அவரது சந்ததிகளையும் வாழையடி வாழையாகப் பல்லாண்டுகள் [Acute (Lethal) & Long Term Effects] பாதித்துக் கொண்டே இருக்கும்! பிறக்கும் குழந்தைகள் கண்கள் குருடாகி, கால்கள் முடமாகி, கைகள் சிறிதாகி அங்க ஈனமாய் பிறக்கும்! மேலும் பலவிதப் புற்று நோய்கள் தாக்கி மக்கள் மரண எண்ணிக்கை அதிகமாகும்!

மாபெரும் நகரம், நிமிடத்தில் மானிட நரகம் ஆனது !

குண்டு வெடித்தபின் உஷ்ணம் 1 மில்லியன் ஏறும் என்றும், ஒளித் தீக்கோளம் 800 அடி விட்டம்  விரியும் என்றும், ‘முகில் காளான்’ [Mushroom Cloud] 9 மைல் மேலே உயரும் என்றும், பின்பு  உஷ்ணம் 15,000 F ஆகக் குறையும் என்றும், அணுகுண்டு விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.  வெடிமையத்தைச் [Hypocenter] சுற்றி 2 மைல் ஆரச் சுற்றளவில் உஷ்ணம் 5400 F ஆகித் தீயில்  எரிந்து கூடான மனிதரும், தீப்புண்களில் கரிந்து போனவர்களும் பலர்! வெடி அலைகள் வினாடிக்கு 2 மைல் வேகத்தில் அடித்து மனிதர்களைக் குப்புறத் தள்ளியது! மானிடரின் முகம் தீய்ந்து கருத்து, தலை மயிர் யாவும் எரிந்து பலர் புத்த பிச்சுக்கள் போல் காணப் பட்டனர்! அவர்கள் மேனியில் தோலுரிந்து,  கரும் பிசாசுகள் நகர்ந்து செல்வது போல் நடமாடி, பாதையில் செத்துக் கிடந்தார்கள்!

பாடிப் பறந்து கொண்டிருந்த பறவை இனங்கள் அந்தரத்திலே எரிந்து சாம்பலாயின! ஓடிய அணில்கள்,  வீட்டுப் பூனைகள், நாய்கள் மாயமாய் மறைந்து போயின! நகர் முழுவதும் ஒளி மயத்தில் பளிச் சென்று  ஒளிர்ந்து, தீக்கோளம் எழுப்பி அணு ஆயுத மரண யந்திரம் வினை விதைத்தது போல் தோன்றியது!  மரங்கள் யாவும் எரிந்து பாலை வனக் கரும் நிழற் படங்களாய் நின்றன! தொலைபேசி, மின்சாரக்  கம்பங்கள் யாவும் கரிந்து வளைந்து போயின! காணும் இடமெல்லாம் மயானக் காடுகள் போல் எரியும்,  மாண்டு மடிந்த மனிதச் சடலங்கள் கணக்கில் அடங்கா!

விமானத்தையும், ஒளிக் கோளத்தையும் உற்று நோக்கியோர் கண்கள் அவிந்து போய்க் குருடாயின!  ஒரு குமரிப் பெண் கூறினாள், ‘ஒரு பெரும் சுத்தியலால் அடிபட்டு, அதிர்ச்சி அடைந்து, கொதிக்கும்  எண்ணையில் தள்ளப் பட்டது போல் உணர்ந்தேன்! எங்கேயோ தூக்கி எறியப்பட்டு திசை யெல்லாம் மாறிப் போனதாய்த் திக்கு முக்காடினேன்!’ ஒரு இளம் பெண்ணின் அவலக் குரல் கேட்டது. அவள்  முதுகு பூராவும் எரிந்து, கூனிப் போய்க் கதறிக் கொண்டிருந்தாள். உதவி ஆட்கள் அவளுடைய தாயைத் தூக்கிக் கொண்டு வந்தனர். தாயின் முகமும், உதடுகளும் வீங்கிப் போய், கண்கள் மூடியபடி இருந்தன!  இரு கைகளிலும் தோல்கள் உரிந்து, ரப்பர் கையுறை போல் தொங்கின! அவள் இடுப்புக்கு மேல் உடம்பில் எல்லா இடங்களும் கோரமாய் எரிந்து போயிருந்தன!

மனிதர்களின் உடம்பு பூதம்போல் பயங்கரமாய் வீங்கிப் போயிருந்தது! ஒரு மனிதன் கண்ணில் ஈட்டி போல் ஏதோ குத்தி, உதிரம் கொட்டி அலறிய வண்ணம் குருடனாய் அங்கு மிங்கும் ஓடிக்  கொண்டிருந்தான்! எரியும் உடம்போடு ஓடி வந்து, ஒருவன் குளத்தில் குதித்தான்! குளத்தின் நீர் சூடாக  இருந்தது. ஏற்கனவே, அந்தக் குளத்தில் எரிந்து போன சடலங்கள் பல மிதந்து கொண்டிருந்தன!  அனலில் கரிந்த மாது ஒருத்தி,  எரிந்த கைப் பிள்ளையை இறுகக் கட்டிய வண்ணம் சாய்ந்து செத்துக் கிடந்தாள்!  ஒரு மின்சார வண்டி எரிந்து போய் வெறும் கூடாரம் போல் நின்று கொண்டிருந்தது! உள்ளிருந்த  மாந்தர் அத்தனை பேரும் உருவம் தெரியாமல் கரிக் கூடுகளாய் உயிரற்றுக் கிடந்தனர்! ஓரிடத்தில்,  கரிந்து போன தாய் முலைக் காம்பிலிருந்து, பால் பருகக் குழந்தை வாய் வைத்துக் கொண்டிருந்தது!  அணு ஆயுதம் ஹிரோஷிமாவில் நடத்திய அவல நாடகக் காட்சிகள் எல்லாவற்றையும் எழுத இங்கே  இடம் போதாது!

வெடி விளைவை நேரில் கண்ட இரு ஜப்பானியரின் நிஜக் கதை!

Dr. மிச்சிஹிகோ ஹசியா [Dr. Michihiko Hachiya]: ‘பொழுது புலர்ந்து எழிலுடன் இலைகள் சலசலக்க,  காலை இளம் பரிதி முகிலற்ற கீழ் வானில் மெதுவாய் எழுந்தது. மருத்துவக் கூடத்திற்குப் போக உடை அணிந்து கொண்டு புறப்படும் சமயம், யுத்த அபாயச் சங்கு ஊதியது! பறக்கும் விமானச் சத்தம்  கேட்டது. திடாரென மாபெரும் மின்னல் ஒளிமயம் வெட்டிக் கண்ணொளியைப் பறித்தது! அடுத்து ஓர்  பேரொளி! தோட்டத்தில் இருந்த லாந்தல் உலோக விளக்கு என்று மில்லாத பிரகாசத்தில் ஓளிர்ந்தது!  வெளிச்ச மயமாய் இருந்த வானத்தில் விரைவில் இருள் கவ்வியது. சட்டென அருகில் நின்ற தூண்  ஒன்று சாய்ந்து, வீட்டுக் கூரை சரிந்து அபாய நிலையில் தொய்ந்தது! வீட்டிலிருந்து தப்பி ஓட முயலும்  போது, மரக் கம்பங்களும், இடிந்த கட்டிடக் குப்பைகளும் வீதியில் நிறைந்து, பாதையில் தடையாயின!  எப்படியோ தாண்டிப் போய் தோட்டத்தினுள் நுழைந்தேன். ஏதோ தாங்க முடியாத ஓர் பெருங் களைப்பு  என்னை ஆட்கொண்டது! திடீரென நான் அமணமாய்ப் போனது எனக்குத் தெரிந்தது! என் கோட்டும்,  சூட்டும் என்ன வாயின ? என்ன நடந்து கொண்டிருக்கிறது ? என்னுடலின் வலது புறம் யாவும் வெட்டுப் பட்டு, உதிரம் பீரிட்டது! கூரிய ஒரு நீண்ட இரும்பு ஆணி என் தொடையைக் குத்தி வலியை உண்டாக்கியது! என் கன்னம் கிழிந்து வாயில் இரத்தக் குளமானது! கழுத்தில் குத்திய ஓர் உடைந்த  கண்ணாடி பீங்கானைக் கையால் எடுக்க, மேனி முழுதும் இரத்தக் குளிப்பில் நான் நடுங்கினேன்! முதல் அணு குண்டால் தாக்கப் பட்ட இந்த டாக்டர்தான், தன் காயத்துடன் காயம் பட்ட நூற்றுக் கணக்கான ஜப்பானியர்களுக்குச் சிகிட்சை செய்திருக்கிறார்!

சுடோமு யமகூச்சி [Tsutomu Yamaguchi]: திடாரென மெக்னீஷியம் தீப்பிழம்பு போல் ஓர் ஒளிமயமான மின்னல் வெட்டியது! தொடர்ந்தது ஒரு பேரிடிச் சத்தம்! பூமிக்கு மேல் 2 அடி தூக்கப் பட்டேன்! அடுத்து  பயங்கரக் காற்று என் மீது வீசிச் சென்றது. பேயடித்தது போல் வீதியில் எவ்வளவு நேரம் கிடந்தேன்  என்று எனக்கே தெரியாது! எழுந்த போது, இருள் சூழ்ந்து, கண்ணுக்கு எதுவும் தென் படவில்லை.  வெக்கை யுள்ள பட்டப் பகல் திடாரென நள்ளிராப் பொழுது போல் ஆனது. என் கண்கள் இருட்டுக்கு  இணங்கிப் போனபின், தூசிக் குப்பைகள் தொடர்ந்து வேகமாய் வீசின! தூசி குறைந்த பின், சூழ்வெளி  தெரிந்தது. எங்கெங்கு நோக்கினும், உடைந்த பொருட்களின் குவியல்! எரியும் தீமயம்! நகர்ப் புறம்  பார்த்தால், பிரம்மாண்டமான ஒரு ராட்சதக் காளான் [Mushroom] தோற்றத்தில் வானுயர்ந்த முகில் பூதம்! அந்த முகில் கோளம் பார்ப்பதற்கு பயமூட்டும் ஒரு பேயுருத் தூணாகத் தோன்றியது! அது சுற்றியுள்ள எல்லா பொருட்களின் நிறத்தையும் மாற்றிக் கொண்டே இருந்தது. மிக்க வலுவில்லாமல், முகத்திலும் கையிலும் பற்றிய நெருப்புடன், தீராத வேதனையோடு அருகே இருந்த உருளைக் கிழங்கு  வயலை நோக்கித் தடுமாறிக் கொண்டு சென்றேன். சில சமயம் என்னால் ஊர்ந்து செல்லத்தான்  முடிந்தது! பிறகு எனக்குப் பயங்கரத் தாகம் உண்டானது. எதிரே ஐந்து வாலிபப் பையன்கள்  அமணமாகக் கிழிந்த துணிகளுடன் இருந்தனர். அருகில் வந்ததும் அவர்கள் யாவரும் வெளுத்துப்  போய், நடுங்கிக் கொண்டிருந்தார்கள். நான் இத்தகையக் கோரக் காட்சியை இதுவரைக் கண்டதில்லை!  மேனி எங்கும் வெட்டுக் காயத்தால் உதிரம் ஆறாக ஓடிக் கொண்டி ருந்தது! கொதிக்கும் எண்ணெயில் வெந்தது போல் சிவந்து, தோலுரிந்து வேர்வை சொட்டச் சொட்ட வேதனையில் துடித்துக்  கொண்டிருந்தார்கள்! வெடி அதிர்வால் தீய்ந்த புண்களில் பச்சைப் புல் கொத்தாய் ஒட்டிக்  கொண்டிருந்தது. முதுகில் எல்லா இடங்களிலும் சாட்டையால் அடித்தபோல் காயங்கள்!

உயிர் பிழைத்தோர் பெற்ற கதிரியக்க நோய்கள்

உயிர் தப்பியவர்கள் பலர் புதுவிதக் கதிர் நோய்கள் [Radiation Sickness] தம்மைத் தாக்குவதை  உணர்ந்தார்கள். தலைச்சுற்று, மயக்கம், வயிற்று வலி, வாந்தி, பசியில்லாமை, வயிற்றாலை, மலத்தில்  இரத்தம், கடுஞ் சுரம், வலுவின்மை, தோலில் சிவப்புப் பொட்டுகள், மேனியில் வீக்கம், வாய் கழுத்து பல்லணை [Gum] இவற்றில் அல்ஸர், இரத்தக் கசிவு, மலத் துவாரம், சிறுநீர்த் துவரங்களில் இரத்தக் கசிவு, தலை மயிர் உதிர்ப்பு போன்ற உடற் பழுது அறிகுறிகள் தோன்றி, நோய் வருகையை முன்னறி  வித்தன! மிகையான கதிரடி [Radiation Dose] வாங்கியோர் உதிரத்தில், வெள்ளை செல் [White Blood  Cells] எண்ணிக்கை, மிகக் கீழாக குறைந்தது! அதிகமான ‘மரண அடிக்’ [Lethal Dose] கதிரியக்கம் தாக்கப் பட்டோர் சில மணி நேரத்தில், அல்லது சில நாட்களுக்குள் செத்து மடிந்தனர். மரண அடிக்கும் குறைந்த அளவு கதிரடி பட்டோர், சிறுகச் சிறுகச் சாவை அண்டி வந்தனர்.

வெடிப்பிளவின் நேரடிக் காமாக் கதிரடி [Direct Gamma Radiation] பட்டோர், பட்ட இடத்தில் தசைகள்  சமைக்கப்பட்டு ஆறாத கதிர்ப் புண்களாகி வேதனையில் துடித்தனர். இவ்விதத் தாக்குதலால், இறுதியில்  ஆழமான தசை அழிவு ஏற்பட்டு, மாபெரும் இரத்தக் கசிவு [Hemorrhage] தொடர்ந்து, அவர்கள் யாவரும் மரணத்தைப் போய்த் தழுவிக் கொண்டார்கள்!  போர் முடிந்த பின்பு, ஹிரோஷிமா, நாகசாகியில் தப்பினோர்களின் மார்பு எக்ஸ்ரேயைச் சோதித்த போது, ஆயிரக் கணக்கான பேர் புற்றுநோயிலும் [Cancer], லுக்கீமியாவிலும் [Leukemia], முலைப்  புற்றுநோயிலும் சாகப் போகி றார்கள் என்று அறியப் பட்டது. டாக்டர் நார்மன் கென்ட்நர் [Dr. Norman  Gentner, Senior Scientist, Health and Environmental Sciences, Atomic Energy of Canada Ltd] விஞ்ஞானி  வெளியிட்ட 1997 கணக்கிதழ் அறிக்கைப்படி, இரண்டு நகரிலும் மொத்தம் 15405 பேர் [1950-1990] புற்றுநோயில் செத்திருக்கிறார்கள். லுக்கீமியாவில் இறந்தவர் எண்ணிகை இதுவரை 249 பேர்.  புற்றுநோய் மரணங்கள் இன்னும் பல்லாண்டுகள் தொடரும்!

கதிரடிக் காயம் [Radiation Injury] பெறும் கர்ப்பிணிப் பெண்களின் கருவைக் காமாக் கதிர்கள் பாதித்துப்  பெருமளவில் முரண்பாடுகளை உண்டு பண்ணுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணு ஆயுதக் கதிரியக்கம் தாக்கிய கர்ப்பிணிப் பெண்கள் பெற்ற பிள்ளைகள், நரம்பு அமைப்பாட்டில் பழுதுகள் ஏற்பட்டு, சிறிய தலைவுடன் மூளை சிறுத்துப் போய், கண்கள் குறுகி வளர்ச்சி அடையாது, அங்க ஈனமுடன், மனக் கோளாறுகள் [Mental Retardation] நிரம்பிப் பிறந்ததாக அறியப்படுகிறது!



உலக அணு ஆயுத வல்லரசுகளுக்கு ஓர் வேண்டுகோள்!

அணுகுண்டு ஆயிரம், ஆயிரம் உயிர் இனங்களைத் தாக்கிச் சித்திரவதை செய்து அழிக்கும் ஓர் அபாய ஆயுதம்!  அதன் கோரக் கொடுமைகள் தப்பியோரையும், தப்பினோர் சந்ததிகளையும் விடாது பற்றிக் கொண்டு, பல்லாண்டு காலம் நிழல் போலத் தொடர்ந்து பாதிப்பவை! ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, 1955 ஏப்ரல் மாதம் பிரிட்டிஷ் மேதை, பெர்டிரண்டு ரஸ்ஸல்  [Bertrand Russell] தயாரித்த ‘அணு ஆயுதப் போர்த் தடுப்பு’ விண்ணப்பத்தில் தானும் கையெழுத்திட்டு மற்ற உலக விஞ்ஞானிகளோடு சேர்ந்து கொண்டு ஒன்றாகக் குரல் எழுப்பினார்! ‘எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ  முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகிறது !  அதை அகில நாடுகள் உணர  வேண்டும் !  பிறகு அபாயங்களை அனைவரும் அறிய வெளிப்படுத்த வேண்டும்! அப்பணியை உடனே  செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை விரைவு படுத்துகிறோம். நாடுகளின் தீராச் சச்சரவுகள் உலகப்  போர்களால் ஒருபோதும் தீரப் போவதில்லை! தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள,  வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்’. அணு ஆயுத வல்லரசுகளே ! உங்கள் அறிவுக் கண்கள் திறக்கட்டும் ! ஜப்பானில் முதன் முதல் போட்ட  அணுகுண்டுகளே, உலகின் இறுதியான அணுகுண்டுகளாக இருக்கட்டும்!

(கட்டுரை தொடரும்)

*****************************

தகவல் :

Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007)  2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)

1.  Scientific American Magazine :  India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)

2 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210273&format=html  (Robert Oppenheimer)

3 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40203245&format=html (First Atomic Bombs Dropped on Japan)

4. The Making of the Atomic Bomb, By: Richard Rhodes

5. Oppenheimer, By: James Kunetka

6. Hand Book of World War II, Abbeydale Press

7. The Deadly Element, By: Lennard Bickel

8. Canadian Nuclear Society Bulletin, June 1997

9.  Grolier Online :  Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)

10.  Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)

11.  National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)

12.  Scientific American Magazine :  Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads (November 2007)

13.  The Dirty Bombs (Radiological Dispersion Bombs) MSN Broadcasting -Dirty Bombs Biggest Hazard : Panic Experts Say Radiation Would Play on Public Fears (June 10, 2002)

14.  Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)

15.  Neutron Bombs – Wikipedia Report (December 15, 2009)

******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 16, 2009

அணு ஆயுதப் போரில் விளையும் கோரப் பேரழிவுகள் -1

(கட்டுரை: 1)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


பேரழிவுப் போராயுதம்
உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து
விழுதுகள் அற்றுப் போக,
விதைகளும் பழுதாக
ஹிரோஷிமா நகரைத் தாக்கி
நரக மாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
நாச மாக்கப் பட்டது !
புத்தர் பிறந்த நாட்டிலே
புனிதர் காந்தி வீட்டிலே
மனித நேயம்
வரண்டு போன
வல்லரசுகள் பின் சென்று
பாரத அன்னைக்குப்
பேரழிவுப்
போரா யுதத்தை
ஆரமாய்
அணிவிக்க லாமா ?

++++++++++++++

உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !

கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)

“ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம் !”

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

“எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது !  அதை அகில நாடுகள் உணர வேண்டும் !  அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் !  உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம்.  நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை !  உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.

பெர்டிரண்டு ரஸ்ஸல் (ஏப்ரல் 16, 1955)

அணு ஆயுதப் பெருக்கத்தை ஆரம்பித்த உலக விஞ்ஞானிகள் !

அணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது ஆண்டுகளாக நேரிடையாகவோ அன்றி மறைமுக மாகவோ வழி வகுத்தவர்கள், முக்கியமாக ஐந்து விஞ்ஞான மேதைகள்! முதலில் கதிரியக்கம் [Radioactivity] கண்டு பிடித்த மேரி கியூரி! அடுத்து செயற்கைக் கதிரியக்கம் [Artificial Radioactivity] உண்டாக்கிய அவரது புதல்வி ஐரீன் கியூரி! அதன்பின் அணுவைப் பிளந்து, முதல் தொடரியக்கம் [Nuclear Chain Reaction] புரிந்த என்ரிகோ ஃபெரிமி! இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் தயாரிக்கும் முன்னே, அமெரிக்க ஜனாதிபதியை அணு ஆயுதம் ஆக்கத் தூண்டிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்! முடிவில் போர் முடியும் தறுவாயில் பன்னாட்டு விஞ்ஞானிகளைப் பணி செய்ய வைத்து வெற்றிகரமாய் அணுகுண்டை உருவாக்கிச் சோதனை செய்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் !

ஜப்பான் ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டுகள் விழுந்து கோர விளைவுகள் நிகழ்ந்த பின் உலகின் வல்லரசுகளும், மெல்லரசுகளும் உடனே அணு ஆயுதங்களை ரகசியமாய் உற்பத்தி செய்ய முற்பட்டன ! 1945 இல் அமெரிக்கா ஆக்கியதை, ஒற்று மூலம் பிரதி அடித்து, 1949 இல் ரஷ்யா தனது முதல் அணுகுண்டைச் சோதித்தது ! அதன் பிறகு 1952 இல் பிரிட்டன், 1960 இல் பிரான்ஸ், 1964 இல் சைனா, 1974 இல் இந்தியா, 1998 இல் பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதப் பந்தயத்தில் பின் தொடர்ந்தன !  இப்போது இஸ்ரேல், வட கொரியா ஈரான் ஆகிய நாடுகளும் அணு ஆயுத வல்லமை பெற்றுக் கொண்டு உலகைப் பயமுறுத்தி வருகின்றன ! உலக நாடுகளில் 115 தேசங்கள் முன்வந்து அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு [Non Proliferation Treaty, NPT] உடன்படிக்கையை மதித்துக் கையெழுத்துப் போட்டுள்ளன! ஆனால் அர்ஜென்டைனா, பிரேஸில், சைனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய பல நாடுகள் அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பில் கையெழுத்திட ஒருங்கே மறுத்து விட்டன !

Image result for albert einstein

அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஐன்ஸ்டைன்

இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த அணு ஆயுதத்தை உருவாக்கும்படி 1939 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்கலின் ரூஸவெல்ட்டுக்கு ஆலோசனைக் கடிதம் எழுதி அனுப்பியவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்!  அதுமுதல் அணு ஆயுத அரக்கன் உலகில் தோன்றி அவன் வமிசாவளி பெருகிக் கொண்டே போகிறது!  அணுசக்தி யுகத்தைத் துவக்கி, உலக சரித்திரத்தில் ஒப்பிலாப் பெயர் பெற்ற ஐன்ஸ்டைன் அணுகுண்டுகளின் பெருக்கத்தையும், அணு ஆயுத வெடிப்புச் சோதனைகளின் அபாயத்தையும், தடுக்க முடியாமல் கடைசிக் காலத்தில் மனப் போராட்டத்தில் தவித்தார்.

ஐன்ஸ்டைன் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 1955 ஏப்ரல் 16 இல் வேதாந்த மேதை, பெர்டிரண்டு ரஸ்ஸல் (Bertrand Russell) தயாரித்த “அணு ஆயுதப் போர்த் தடுப்பு” விண்ணப்பத்தில் ஒன்பது விஞ்ஞானிகளுடன் தானும் கையெழுத்திட்டு ஒன்றாகக் கூக்குரல் எழுப்பினார்!  “எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது!  அதை அகில நாடுகள் உணர வேண்டும் !  அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும்!  உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம்.  நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை !  உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு விஞ்ஞானிகளில் அமைதி மயவாதிகள் ஒருபுறம் அணு ஆயுதங்களை நிறுத்தம் செய்ய முற்படுகையில், அழிவு மயவாதிகள் மறுபுறம் ரகசியமாய் அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டு வந்தார்கள் !

ஆக்கப் போவது அணு குண்டா ? அல்லது ஹைடிரஜன் குண்டா ?

1942 ஆம் ஆண்டு அமெரிக்க மன்ஹாட்டன் திட்டத்தில் மறைமுகமாகப் பணிசெய்த விஞ்ஞானிகள் முதலில் அணுப்பிளவுக் குண்டை [Fission Bomb] ஆக்குவதற்கு முயன்ற சமயத்தில் அணுப்பிணைவுக் குண்டையும் [Fusion Bomb] உண்டாக்க ஒரு சிலருக்கு ஆர்வம் எழுந்தது! அந்தப் பயங்கரப் படைப்பை மிக்க வெறியோடு நிறைவேற்றப் பல்லாண்டுகள் காத்துக் கொண்டிருந்த விஞ்ஞான மேதை, எட்வர்டு டெல்லர் [Edward Teller]! தீவிர அந்த வேட்கையை எட்வெர்டு டெல்லருக்கு முதலில் தூண்டி விட்டவர், என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi]! சிகாகோப் பல்கலைக் கழகத்தில் முதல் ஆராய்ச்சி அணு உலையை அமைத்து அணுக்கருத் தொடரியக்கம் புரிய ஃபெர்மியின் கீழ் டெல்லர் பணி செய்யும் போது அவர்களுக்கு ஹைடிரஜன் குண்டைப் பற்றி ஓர் எண்ணம் உதயமானது! ஆனால் ஆரம்பத்திலேயிருந்து எட்வெர்டு டெல்லரை அதைரியப் படுத்தி, முதலில் ஆக்கப் போவது அணுப்பிளவுக் குண்டு, வெப்ப அணுக்கருக் குண்டு [Thermo Nuclear Bomb] அல்ல என்று அதிருப்தி உண்டாக்கியவர், மன்ஹாட்டன் திட்ட அதிபதி ராபர்ட் ஓப்பன்ஹைமர்!  ஹைடிரஜன் குண்டுக்கு மறு பெயர் வெப்ப அணுக்கருக் குண்டு! சூப்பர் பாம் [Super Bomb], ஹெச் பாம் [H Bomb] எல்லாம் ஒன்றுதான்! அடுத்து 1947-1952 ஆண்டுகளில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் அமெரிக்க அணுசக்திப் பேரவைக்கு அதிபதியாக [Chairman, Atomic Energy Commission] இருந்த சமயத்திலும் டெல்லர் மறுமுறை உயிர்ப்பித்த ஹைடிரஜன் குண்டு திட்டத்தை அங்கீகரிக்காது ஒதுக்கித் தள்ளினார்!

இரண்டாம் உலகப் போர் முடிந்தபின் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையே ஊமைப் போர் [Cold War] மூண்டு பெரும் அளவில் வலுத்தது ! 1949 செப்டம்பரில் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டைச் சோதனை செய்ததைக் கேட்டு, அதை எதிர்பாராத அமெரிக்கா அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தது! அமெரிக்காவின் மித மிஞ்சிய அணு ஆயுதப் பேராற்றல் சமமாகிப் போனதால், உடனே ஜனாதிபதி ட்ரூமன் மறைமுகமாய் வெப்ப அணுக்கரு ஆயுதம் உருவாக, எட்வெர்டு டெல்லருக்குப் பச்சைக் கொடி காட்டினார்! அதற்காகக் காத்துக் கொண்டிருந்த எட்வெர்டு டெல்லர், ரஷ்யாவுக்குப் பயம் உண்டாக்க ஓர் ராட்சத குண்டை உருவாக்கி, அமெரிக்காவை உலக நாடுகளில் உச்ச வலுத் தேசமாக ஆக்க உறுதி எடுத்துக் கொண்டார்! அந்த முயற்சியில் வெற்றி பெற்று 1952 நவம்பர் முதல் நாள் பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் அடோல் [Enewetak Atoll] என்னும் தீவில் முதல் ஹைடிரஜன் குண்டு வெடித்துச் சோதிக்கப் பட்டது! ஏட்டிக்குப் போட்டியாக அடுத்து சோவித் ரஷ்யாவும் எட்டு மாதங்களுக்குள், 1953 ஆகஸ்டு 12 ஆம் தேதி ரஷ்ய விஞ்ஞானி பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] மூலம் உருவாக்கி, முதல் வெப்ப அணுக்கரு ஆயுத வெடிப்பச் சோதனையை வெற்றிகரமாகச் செய்து காட்டியது ! அந்த அணு ஆயுதப் பந்தயத்தைத் தொடர்ந்து 1957 இல் பிரிட்டன், 1967 இல் சைனா, 1968 இல் பிரான்ஸ் தமது முதல் ஹைடிரஜன் குண்டுகளைச் சோதனை செய்து, அமெரிக்கா, ரஷ்யாவுடன் சேர்ந்து ஐம்பெரும் வல்லரசுகள் என்று பெயர் பெற்றன !  இப்போது அமெரிக்கா, ரஷ்யா, (யுக்ரேய்ன்), பிரிட்டன், பிரான்ஸ், சைனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய ஏழு நாடுகளும் சோதனைகளை நடத்தி உலகத்துக்கு அணு ஆயுத நாடுகளாய்த் தம்மை உறுதிப்படுத்தி உள்ளன.


அணு ஆயுதப் போர் மூன்றாவது உலகப் போராய் நிகழுமா ?

1945 இல் அமெரிக்கா ஜப்பானில் முதன்முதலாகப் போட்ட இரண்டு அணுக்குண்டுகளை ஒருபோக்குத் தாக்குதலாகத்தான் கருத வேண்டும்.  பதிலுக்குத் தாக்க ஜப்பானிடம் அப்போது அணு ஆயுதங்கள் கிடையா.  இதுவரை உலகம் இருதரப்பு அணு ஆயுத யுத்தத்தைக் கண்டதில்லை ! ஆனால் இப்போது அணு ஆயுதமுள்ள ஏழு நாடுகள் இரண்டுக்குள் நட்புறவு குன்றி அப்படி ஓர் இருபுற யுத்தம் நிகழ்ந்து அணு ஆயுதங்கள் பயன்பட்டால் பயங்கரச் சிதைவுகள், அழிவுகள், கதிரியக்கப் பொழிவுகள் ஏற்படும்.  அவ்விரு நாடுகளுக்குச் சேதங்கள் நேருவதோடு அண்டை நாடுகளும் பாதிப்படையும்.  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டால் இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டா என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து.  காரணம் இரண்டு நாடுகள் வேறானாலும் எலும்பும் சதையும் போல் நிலத்தாலும், நீராலும், இனத்தாலும், மதத்தாலும் ஒன்றாகச் சேர்ந்துள்ளன.  போர் மூண்டாலும் இரண்டு நாடுகளும் அணுவியல் தொழிற்கூடங்களை ஒன்றை ஒன்று தாக்கக் கூடாதென்று வாக்கு மொழிகள் எழுத்து மூலம் கூறியுள்ளன !  ஆனால் பாகிஸ்தானில் தற்போதுள்ள கொந்தளிப்பு நிலையில் எந்த மூர்க்கர் குழு நாட்டைப் பிடித்து ஆட்டப் போகிறது என்பது பெரும் ஐயப்பாட்டில் இருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்று யூகிப்பது கடினம்.

எத்தனை விதமான அணு ஆயுதங்கள் உள்ளன ?

இரண்டு விதமான அணு ஆயுதங்கள் இதுவரைச் சோதனைக்குள்ளாகி ஆக்கப் பட்டுள்ளன.  நியூட்ரான் குண்டுகள் (Neutron Bombs) ஒருவித அணு ஆயுதமாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.  அணுப்பிளவு ஆயுதங்கள் (Fission Weapons), அணுப்பிணைவு ஆயுதங்கள் (Fusion Weapons) என்று இருபெரும் பிரிவில் பல்வேறு ஆற்றலைக் கொண்ட அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பட்டு பதுக்கி வைக்கப் பட்டுள்ளன !  கடந்த அறுபது ஆண்டுகளாக உருவான அணு ஆயுதங்கள் யாவும் ஓய்வாகத் தூங்கிக் கொண்டிருப்பதால் துருப்பிடித்து இப்போது முடக்கத்தில் தளர்ந்து போய்க் கிடக்கின்றன !  அவை யாவும் தூசி துடைக்கப் பட்டுப் புதுப்பிக்கப் படவேண்டும் !  அல்லது தற்போதைய கணினி யுகத் தொழில்நுட்பம் புகுத்துப்பட்டு புது விதமாக மாற்றப் பட வேண்டும்.
பல பில்லியன் டாலர் மதிப்பில் படைப்பான பழைய அணு ஆயுதங்களை இப்போது ஏவினால் அவை பகைவரை நோக்கித் தாக்குமா அல்லது சண்டி மாடுபோல் படுத்துக் கொள்ளுமா என்று எழுப்பி விட்டால்தான் தெரியும் !

அணுப்பிளவு ஆயுதங்களில் (அணுக்குண்டு) எரிசக்தியாக யுரேனியம் -235, புளுடோனியம் -239 ஆகிய கன உலோகங்கள் பயன்படுகின்றன.  மாறாக அணுப்பிணைவு ஆயுதங்களில் (ஹைடிரஜன் குண்டு) எளிய வாயுக்களான டியூடிரியம், டிரிடியம் (ஹைடிரஜன் ஏகமூலங்கள் ) (Deuterium & Tritium -Hydrogen Isotopes) உபயோகம் ஆகின்றன.  டியூடிரியமும் டிரிடியமும் பிணைந்து சக்தி உண்டாக்குவதற்குச் சூரியன் போல் பல மில்லியன் டிகிரி உஷ்ணம் தேவைப் படுகிறது.  அந்த உஷ்ணத்தை உண்டாக்க ஒரு சிறு அணுப்பிளவு இயக்கம் முதலில் ஹைடிரஜன் குண்டில் தூண்டப் படுகிறது.  அவ்விதம் முதல் உந்து யுரேனிய வெடிப்பில் உண்டாகும் பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் டியூடிரியமும் டிரிடியமும் பிணைந்து வெடிப்பு சக்தியை வெளியேற்றுகிறது.  பொதுவாக அணுப்பிணைவு ஆயுதம் அணு ஆயுதத்தை விட சுமார் ஆயிரம் மடங்கு அழிவு சக்தியை வெளியாக்கும் !  நியூட்ரான் குண்டு அணுக்குண்டு ஆற்றலில் பத்தில் ஒரு பங்கு பாதகம் விளைவிக்க வல்லது.

பல்வேறு டன் டியென்டி ஆற்றல் கொண்ட அணு ஆயுதங்கள்.

அமெரிக்கா ஹிரோஷிமாவில் போட்ட யுரேனியம் அணுக்குண்டு 15 கிலோ டன் டியென்டி ஆற்றலும், நாகசாக்கியில் போட்ட புளுடோனியம் அணுக்குண்டு 21 கிலோ டன் டியென்டி ஆற்றலும் கொண்டவை.  அணு ஆயுதங்களின் வெடிப்புப் பரிமாணம் டியென்டி அளவீட்டில் [(TNT) -Trinitrotoluene -CH3C6H2(NO2)3  (A Powerful High Explosive)] கிலோ டன் அல்லது மெகா டன் எண்ணிக்கையில் குறிப்பிடப் படுகிறது !  கிலோ டன், மெகா டன் டியென்டி என்று அளவீடு செய்யும் போது அணு ஆயுதங்களின் எடையைக் குறிப்பிடாது அவற்றின் வெடி ஆற்றலை ஒரு டியென்டி இராசயன வெடிக்கு ஒப்பிடப் படுகிறது.  ஒரு கிலோ டன் அணு ஆயுதம் 1000 டன் டியென்டி ஆற்றல் வெடிக்குச் சமம்.  ஒரு மெகா டன் அணு ஆயுதம் ஒரு மில்லியன் டன் டியென்டி ஆற்றல் வெடிக்கு இணையாகும்.  தற்போது வெப்ப அணுக்கரு ஆயுதம் (Thermonuclear Weapon OR Hydrogen Bomb) ஒன்று 25 மெகா டன் டியென்டி வெடி ஆற்றல் கொண்டதாக உள்ளது.  மேலும் இப்போது 50 மெகா டன் டியென்டி வெடியாற்றல் உள்ள அணு ஆயுதங்கள் தயாரிக்கப் படுகின்றன.  தற்போது பாதி உலகைக் கடந்து செல்லும் கட்டளை ஏவு கணைகளில் (Guided Missiles) அணுத்தாக்கு ஆயுதங்களை (Nuclear Strategic Weapons) ஏந்திக் கொண்டோ அல்லது ஆகாய விமானங்களிலிருந்து விடுவித்தோ நகரங்கள், தொழிற்துறை மையங்கள், இராணுவத் தளங்கள் ஆகியவை தகர்க்கப்படத் திட்டமிடப் படுகின்றன.

Target Hiroshima Nagasaki Tokyo Fire Raid Average of 93
Attacks on Cities
Dead/Missing 70,000-80,000 35,000-40,000 83,000 1,850
Wounded 70,000 40,000 102,000 1,830
Population Density 35,000 per sq mile 65,000 per sq mile 130,000 per sq mile ?
Total Casualties 140,000-150,000 75,000-80,000 185,000 3,680
Area Destroyed 4.7 sq mile 1.8 sq mile 15.8 sq mile 1.8 sq mile
Attacking Platform 1 B-29 1 B-29 334 B-29s B-29s
Weapon(s) ‘Little Boy’ 15 kT

(15,000 tons of TNT)’Fat Man’ 21 kT

(21,000 tons of TNT)1,667 tons1,129 tons

அணு ஆயுத வெடிப்புகளில் நேரும் அகோர விளைவுகள்

1945 இல் அமெரிக்க போட்ட “லிட்டில் பாய்” அணுக்குண்டு ஹிரோஷிமா நகரை முற்றிலும் தகர்த்தது.  அடுத்துப் போட்ட “·பாட் மான்” அணுக்குண்டில் நாகசாக்கி நகரம் தரைமட்டம் ஆனது.  இவ்விரு நகரங்களில் ஏற்பட்ட விளைவுகளும், கதிர்வீச்சுக் காயங்கள், மரணங்கள், கதிரியக்க பொழிவுகளின் தீவிரம், நீண்ட கால விளைவுகள் அனைத்தும் மாதிரிப் பாடங்களாய் உலக நாடுகளுக்கு அறிவைப் புகட்டுகின்றன.  ஆயுதங்களின் கிலோ டன் டியென்டி, மெகா டன் டியென்டி வெடிப்பு ஆற்றலுக்கு ஏற்ப விளைவுகளின் தீவிரம் குறையவோ கூடவோ செய்கிறது.

1.  அணுக்குண்டு வெடிப்பு அலைகள் (Bomb Blast):

அணு ஆயுத வெடிப்பின் போது வெளியேறும் ஏராளமான வெப்ப அலைச்சக்தி சூழ்வெளிக் காற்றை அதிவிரைவில் சூடாக்குகிறது.  வெப்ப வாயு விரைவாக விரிவாகிப் பாய்ந்து பரவும் அதிர்ச்சி அலையாகத் தாக்குகிறது.  இவ்விதம் வெளியாவது பாதி அளவு வெடிப்புச் சக்தி.  அந்த விளைவில் குண்டு வீழ்ந்த இடத்துக்கு நெருங்கிய கட்டடங்கள் தரை மட்டமாக்கப் பட்டுப் பல மைல் தூரம் வீடுகள் தகர்ந்து பொடியாகும் !  அத்துடன் போட்ட இடத்தில் பெருங்குழி ஒன்றுதோண்டப்படும்.

2.  வெப்ப சக்தி வெளியேற்றம் (Heat Wave Spread):

அணு ஆயுத வெடிப்பால் ஒரு மில்லியன் டிகிரி உஷ்ணமுடைய ஒரு பெரும் தீக்கோளம் உண்டாகும்.  அந்தத் தீப்பிழம்பில் தகர்க்கப் படாத வீடுகள், கட்டங்கள் பற்றிக் கொண்டெரியும்.  வெப்ப வெளியேற்றம் முழு ஆற்றலில் மூன்றில் ஒரு பங்காக கணிக்கப் படுகிறது.  இந்த பயங்கரத் தீப்பிழம்பே ஒரு பெரு குடைக் காளான் முகில்போல் (Huge Mushroom Cloud) உயரே விரிந்து செல்கிறது.

3.  கதிர்வீச்சு & கதிரடிப்பு (Direct Radiation Dose):

வெப்ப வெடிப்போடு அதிதீவிரக் கதிர்வீச்சு எல்லாத் திசைகளிலும் பாய்ந்து உயிரனங்களைத் தாக்குகிறது.  அதில் முதலாக மோதும் நியூட்ரான்கள், காமாக் கதிர்களைத் “துரிதக் கதிர்வீச்சு”  (Prompt Radiation – Mostly Neutrons & Gamma Rays) என்று குறிப்பிடப் படுகிறது.  அதிதீவிரக் கதிரடிகள் (High Amount of Radiation Dose)  மனிதரையும், விலங்குகளையும் உடனே அல்லது சில தினங்களில் கொன்றுவிடும் !  குறைந்த அளவு கதிரடிப்புகள் கதிர் நோய்களை உண்டாக்கி மெதுவாகக் கொல்லும்.  பேரளவு கதிர்வீச்சுக் கதிரடி புற்றுநோய்களை (Cancer) உண்டாக்கும்.

4.  தாமதக் கதிரெழுச்சி விளைவுகள் (Delayed Radiation Effects) :

அணுப்பிளவு விளைவுகளால் பின்னெழும் கதிரியக்கப் பாதிப்புகள் மாந்தருக்கு நீண்ட காலம் கேடு தருபவை.  அக்கொடிய பாதிப்புகள் அணுப்பிளவு மூலகங்களின் “அரை ஆயுளைப்” (Half Life) பொருத்தவை.  அரை ஆயுள் என்பது கதிரியக்கத் தேய்வு முறையில் நிலையற்ற மூலகம் (Unstable Elements due to Radioactive Decay) படிப்படியாகத் தேய்ந்து நிறை பாதியாகும் காலத்தைக் குறிப்பது.  சீக்கிரமாகத் தேயும் நிலையற்ற மூலகம் சிறிது காலம் உயிரினத்தைப் பாதிக்கும்.  மெதுவாகத் தேயும் நிலையற்ற மூலகந்தான் நீண்ட காலம் உயிரினத்துக்குத் தொல்லை கொடுப்பது.  இந்த கதிர்வீச்சு வாயு மூலகங்கள் சூழ்வெளிக் காற்றில் பல நாடுகளுக்கு பயணம் செய்து மக்களைப் பாதிக்கின்றன.

5.  கதிரியக்கப் பொழிவுகள் (Radioactive Fallouts):

இறுதியாக நூற்றுக் கணக்கான மைல் காற்றில் கொண்டு செல்லப்பட்டு இந்த கதிரியக்கத் துணுக்குகள்தான் பொழிவுகளாகப் பூமியில் நிரந்தரமாகப் படிந்து விடுகின்றன.  நீண்ட அரை ஆயுள் உடைய மூலகத் துணுக்குகள் பூமியில் தங்கி நெடுங்காலம் மனித இனத்துக்குத் தொல்லைகள் அளிக்கின்றன.  அவையே நிலவளம், நீர்வளம், சூழ்வெளியைத் தீண்டி பல ஆண்டுகளுக்கு நாசம் புரிகின்றன.

6.  விண்வெளிப் பாதிப்புகள் (Effects in Space):

அணு ஆயுதச் சூழ்வெளிப் பாதிப்புகள் குண்டு போடும் போது எந்த உயரத்தில் வெடிக்கிறது என்னும் மேல்மட்டத்தைப் பொருத்தது.  அதிர்ச்சி அலைகளைப் பரப்பப் போதிய வாயு இல்லாமல் வெறும் கதிர்வீச்சுத் தாக்குதலே பெரும்பான்மையாக விளைந்திடும்.  வெப்ப சக்தி பரவிச் சென்று தீ மூட்டும் நிகழ்ச்சிகள் குன்றும்.  பொதுவாக நியூட்ரான், காமாக் கதிர்களின் தீங்கு மிகைப்படும்.

7.  மின்காந்த அதிர்வு விளைவுகள் (Electromagnetic Pulse Burst):

அணு ஆயுத வெடிப்பிலே மிகவும் விந்தையான விளைவு :  ஒரு பெரும் மின்காந்தத் துடிப்பு (Production of an Electromagnetic Pulse – A Powerful Burst of Electric Current) உண்டாவது !  கதிர்வீச்சில் பாய்ந்து செல்லும் காமாக் கதிர்கள் சூழ்வெளி வாயுவோடுச் சேரும் போது அவ்வித மின்காந்தத் துடிப்பு ஏற்படுகிறது !  அந்த மின்னோட்டம் மின்சார, மின்னியல் சாதனங்களை – கணினிகள், மின்சக்தி நிலையங்கள், தொலைக் கட்சி நிலையங்கள், ரேடியோ தொடர்புகள் போன்றவற்றைப் பெரும் அளவில் பாதிக்கும்.

(கட்டுரை தொடரும்)

*****************************

தகவல் :

Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007)  2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)

1.  Scientific American Magazine :  India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)

2.  Grolier Online :  Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)

3.  Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)

4.  National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)

5.  Scientific American Magazine :  Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads (November 2007)

6.  Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)

7.  Neutron Bombs – Wikipedia Report (December 9, 2009)

******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 10, 2009

ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : கனடாவின் முதல் விமானப் பயணம் -4

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்
(1847-1922)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


‘எனக்கு இரண்டு வெற்றிகள் இன்று! இரண்டும் (என் மனைவி) மேபெல் சொல்லிய ஆலோசனைகளின் விளைவே! முதல் ஆலோசனை: காற்றுக்காகக் காத்துக் கிடக்காமல், ஓடும் குதிரையுடன் அல்லது வாகனத்துடன் பட்டத்தை இணைத்துப் பறக்க விடுவது! நேற்று சிறிய பட்டங்களை அவ்விதம் பறக்க விட்டுப் பயின்று கொண்டோம். நாங்கள் பெரிய பட்டங்களை அப்படிப் பறக்க விட்டதில் எங்களுக்கு மாபெரும் வெற்றி! பறப்பியல் யந்திர நுணுக்கத்தை சூழ்வெளிக் காற்றில் கற்க முடிந்தது போல், செயற்கையாகக் காற்றை ஏற்படுத்திப் பயிலவும் முடிந்தது! முக்கியமாக செயற்கைக் காற்று முறையில் பட்டங்கள் கீழே விழுகின்ற நிகழ்ச்சியை நன்கு ஆய்வு செய்ய முடிந்தது! மேபெல்லின் இரண்டாவது ஆலோசனை: முக்கோணப் பட்டங்களை இணைப்பதற்கு அடைப்பு மெழுகையும், கூந்தல் பின்களையும் (Sealing Wax, Hairpins) பயன்படுத்துவது! மேபெல்லின் கருத்துரைகள் மிகப் பொருத்தமாக அமைந்து பேருதவி புரிந்தன! ‘

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (பெல்லின் நாட்குறிப்பு நவம்பர் 18, 1902)

‘பேரறிஞர் ஜோஸஃப் ஹென்றி ‘படித்து அறிந்துகொள் ‘ என்று அன்போடு உரைத்த அவ்விரண்டு சொற்கள் எப்படி மனதில் ஆழமாய்ப் பதிந்து என்னை ஊக்குவித்தன என்பதை என்னால் விவரிக்க முடியாது! விஞ்ஞானத் தேடலில் ஊக்குவிப்பார் யாருமற்ற சூழ்நிலையில் நான் ஆழ்ந்து ஆய்வுகள் செய்து வந்தேன். மின்சாரக் கம்பி மூலமாக வாய்ச் சொற்களை அனுப்பலாம் என்னும் நம்பத் தகுதியற்ற ஆக்க முயற்சிக்கு ஊக்கம் அளித்து, உடன் உழைத்த ஜோஸஃப் ஹென்றிக்கு என் மனமார்ந்த நன்றி! ‘

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்

 

 

முன்னுரை: 1783 ஆம் ஆண்டு அக்டோபர் 15 இல் பிரெஞ்ச் மகாதீரர் பிராங்காய்ஸ் பிலேடர் தி ரோஸியர் [Froncois Pilatre De Rozier] என்பவர் வெப்பக் காற்றுப் பலூனில் [Hot Air Balloon] 84 அடி (26 மீடர்) உயரத்தில் முதன்முதலாக வானில் பறந்து காட்டினார்! அதை முதலில் ஆக்கிய பிரெஞ்ச் பொறி நுணுக்கப் படைப்பாளிகள் இருவர்: ஜோஸஃப் & ஜேக்ஸ் எட்டின் மாண்கல்ஃபியர் [Joseph & Jacques Etinne Montgolfier]. ஆனால் அதற்கும் முந்திய 1709 ஆண்டு வெப்பக் காற்றுப் பலூன் போர்ச்சுகல் நாட்டில் [Casa da India, Terreiro do Poco] சோதனை மாளிகைக்கு உள்ளேதான் பறந்தது! அதைப் படைத்த நிபுணர் பார்டோலொமியூ தி குஸ்மா [Bartolomeu de Gusmao] ‘பறக்கும் பலூனின் தந்தை ‘ என்று போற்றப் படுகிறார்.

 

 

1848 இல் பிரிட்டீஷ் நிபுணர் ஜான் ஸ்டிரிங்ஃபெல்லோ [John Stringfellow (1799-1883)] என்பவர்தான் முதன்முதல் நீராவி எஞ்சினைப் பயன்படுத்தி யந்திர சக்தியின் மூலம் வானத்தில் பறக்கலாம் என்று நிரூபித்துக் காட்டினார். ஆனால் அவரால் அப்போது பறந்து காட்ட முடிய வில்லை! முதன்முதல் யந்திர சக்தியில் வான ஊர்தி அமைத்துப் பறந்து காட்டியவர் அமெரிக்காவின் சைக்கிள் நிபுணர்களான ரைட் சகோதரர்களே! 1903 டிசம்பர் 17 ஆம் தேதி அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் உள்ள கிட்டி ஹாக்கில் [Kitty Hawk, North Carolina] ஆர்வில் ரைட் (1871-1948) 12 H.P. (Horse Power) ஆற்றல் கொண்ட பெட்ரோல் எஞ்சின் இயக்கும், முதல் மனிதர் அமர்ந்து ஓட்டும் வான ஊர்தியை விண்ணில் பறக்கவிட்டு விமானப் பறப்பியில் யுகத்தை ஆரம்பித்து வைத்தார். வரலாற்றுப் புகழ் பெற்ற அந்த வான ஊர்தி மணிக்கு 7 மைல் வேகத்தில், பூமிக்கு மேல் 12 அடி உயரத்தில், 120 அடி தூரம் பயணம் செய்தது!

 

1908 ஆண்டில் பிரெஞ்ச் எஞ்சினியர் லூயிஸ் பிளேரியட் [Louis Bleriot (1872-1936)] ஒற்றை விமானி ஊர்தியைச் [Monoplane] செம்மையாக்கித் தற்கால விமான மாதிரிக்கு வடிவம் அமைத்துத் தந்தார். 1909 ஜூலை 25 ஆம் தேதி முதன் முதலில் இங்கிலீஷ் கால்வாயைத் தன் ஒற்றை ஓட்டுநர் விமானத்தில் கடந்து தீரச் செயல் புரிந்தார்! அந்த மாடலில் அமைக்கப் பட்ட விமானங்களே பின்னால் முதல் உலகப் போரில் (1914-1917) குண்டு வீசப் பயன்படுத்தப் பட்டன! ஜெட் எஞ்சினை 1939 இல் முதலில் இணைத்த விமானத்தைப் படைத்தவர், ஜெர்மன் நிபுணர் ஹான்ஸ் ஃபான் ஓஹைன் [Hans Von Ohain].

ரைட் சகோதரர்கள் பறக்கும் ஊர்தியைப் படைப்பதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பாக, 1877 ஆம் ஆண்டிலேயே அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் தன் குழுவினருடன் பறக்கும் ஊர்தியை ஆக்குவதில் தீவிரமாகப் பயிற்சிகள் செய்ய முற்பட்டார். ரைட் சகோதர்கள் தமது பறப்பியல் ஊர்திச் சோதனைகளைக் காற்று

வீசும் மணற் பாங்கான கிட்டி ஹாக்கில் செய்தனர். பெல் குழுவினர் தமது பறப்பியல் பயிற்சிகளை கனடாவின் நோவாஸ் கோஷியாவில் பெடாக் (Baddeck, Nova Scotia, Canada) அருகில் உள்ள ஏரிக் கரையில் செய்தனர். இக்கட்டுரை பறப்பியல் பொறி நுணுக்கத்தை விருத்தி செய்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் குழுவினரின் யந்திரத் துறைச் சாதனைகளையும், சோதனைகளையும் எடுத்துக் காட்டுகிறது.

 

 

வான ஊர்தியைப் படைக்கும் முன்னோடி முயற்சிகள்

ரைட் சகோதரர்கள் பறக்கும் ஊர்தியைப் படைப்பதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பாக, 1877 ஆம் ஆண்டிலேயே பெல் பறக்கும் ஊர்தியை ஆக்குவதில் தீவிரமாக முற்பட்டார். ‘வாயு மண்டல வான் பறப்பு ‘ [Aerial Aviation] என்று தன் கையேட்டில் குறிப்பிட்டு ஒரு சீரற்ற பறக்கும் யந்திர டிசைனை [Crude Design of a Flying Machine] கைப் படத்துடன் காட்டி யிருக்கிறார். பறக்கும் பட்டங்களைக் காற்றை விடக் கனமில்லா யந்திரங்கள் என்று பெல் அழைப்பார்! முதலில் மனிதரற்ற பலவிதப் பட்டங்களைக் காற்றில் பறக்க விட்டு பறப்பியல் நுணுக்கத்தையும் அதன் கட்டுப்பாடுகளையும் நன்கு கற்றுக் கொண்டார்.

1892 இல் நிபுணர் ஹார்கிரேவ் என்பவர் தயாரித்த பெட்டி வடிவப் பட்டத்தையே [Hargrave ‘s Box Kite] தன் முதல் மாடலாக எடுத்துக் கொண்டார். பெல் குழுவினர் சட்டத்தால் கட்டிய பட்டங்கள் பெரிதான நூதன வடிவம் கொண்டவை. 1898 இல் பெல் தயாரித்த 15 அடி நீளம், 11 அடி அகலம், 5 அடி உயரம் கொண்ட ஜம்போ பட்டம் ஏனோ முதலில் பறக்க வில்லை! 1902 இல் பெல் அமைத்தது 64 கூடுகள் இணைந்த நான்முகப் பட்டம் [64 Cell Tetrahedral Kite]. டெட்ராஹீடிரன் என்றால் நான்கு முகச்சம முக்கோணம் அமைந்துள்ள ஒரு முக்கோணப் பிரமிட் [Triangular Pyramid]. நான்கு முகம் உள்ள முக்கோணப் பிரமிட் பட்டம் பன்முகம் கொண்டுள்ளதால் பட்டத்தைக் காற்று தூக்கிவிட எளிதாகிறது என்று பெல் சோதனையில் அறிந்து கொண்டார்.

 

 

பெல்லின் பறப்பியல் துறைப் பயிற்சிகள்

பெல் பல விதமான முக்கோணப் பிரமிட் பட்டங்களைச் செய்து பறப்பியல் அடிப்படைப் பண்புகளைக் கற்றுக் கொண்டார். அவருக்குப் பிடித்த ஒரு பிரமிட் பட்டத்துக்கு ‘ஓயோநாஸ் ‘ [Oionos] என்று அழைக்கப்படும் உயரத்தில் பறக்கும் கிரேக்கப் பறவையின் பெயரை இட்டார். ஊர்தியின் நிலைப்பாடுக்கும், எழுச்சி ஆற்றலுக்கும் [Stability & Lifting Power] உறுதிப்பாடைக் கொடுத்ததால், பெல் குழுவினர் ஒயோநாஸ் பட்டத்தின் சாய்ந்த பக்கத்துடன், மட்டநிலைத் தட்டுகளை (Oblique & Horizontal Surfaces) 1903 இல் இணைத்தனர். மிகச் சிறப்பாகப் பறந்த பெல்லின் ஒரு வட்ட வளையப் பட்டம், பக்கவாட்டில் சரிந்து கீழே விழுந்து நொறுங்கிப் போனது! அவரது பறப்பியல் பயிற்சிகள் திருத்தமாகி, விருத்தியாகி வெற்றிகரமாக இயங்கிய தால், அடுத்து எடுத்துக் கொள்ளப்பட்ட பெல் குழுவினரின் பட்டங்கள் மாபெரும் பூத வடிவங்களில் அமைக்கப் பட்டன.

 

 

பெல் பறப்பியல் கூட்டாளிகளின் ‘வான் பறப்பியல் பயிற்சிக் குழுவகம் ‘ [Aerial Experiment Association] 1907 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது. அவற்றின் முக்கிய கூட்டாளிகள்: டக்லஸ் மெக்கார்டி, கேசி பால்டுவின், பெல், கிலென் கர்டிஸ், தாமஸ் செல்ஃபிரிட்ஜ் [Douglas McCurdy, Casey Baldwin, Alexander G. Bell, Glenn H. Curtiss, Thomas E. Selfridge] ஆகியோர். டக்லஸ் மெக்கார்டி தான் 1909 இல் முதன் முதலில் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் குழுவினர் தயாரித்த, ‘சில்வர் டார்ட் ‘ (Silver Dart) அல்லது ‘பறக்கும் வெள்ளி அம்பு ‘ எனப்படும் வான ஊர்தியை மணிக்கு 40 மைல் வேகத்தில், அரை மைல் தூரம் விண்ணில் பறந்து காட்டியவர். அமெரிக்காவில் ரைட் சகோதரர்கள் 1903 டிசம்பர் 17 ஆம் தேதி கிட்டி ஹாக் மணற் திடல் மேலாக 12 அடி உயரத்தில், 12 வினாடிகள், 120 தூரம், மணிக்கு 7 மைல் வேகத்தில் பறந்து காட்டினார்.

 

 

ஐரோப்பாவில் முதன்முதல் பிரேஸில் விமான நிபுணர், அல்பர்டோ சாண்டாஸ் துமான்ட் [Alberto Santos Dumont] 1906 நவம்பரில் 725 அடி உயரத்தில் 21 வினாடிகள் பறந்து காட்டினார். துமான்ட் ஏற்கனவே 1897 இல் வெற்றிகரமாக வாயுப் பலூனில் பறந்து காட்டியவர். 1901 இல் ஹைடிரஜன் நிரம்பிய வாயுக் கப்பலில் [Hydrogen-filled Airship] பறந்து, முதன்முதல் பாரிஸில் ஐஃபெல் கோபுரத்தைச் சுற்றி வந்தவர். 1902 இல் வாயுக் கப்பலில் பயணம் செய்து மத்தியதரைக் கடலைக் கடக்க முயற்சி செய்யும் போது, வாயுக் கப்பல் கடலில் திடார் வீழ்ச்சி அடைந்தது!

கனடாவில் பெல் குழுவினர் தயாரித்த முதல் வான ஊர்தி

‘சில்வர் டார்ட் ‘ அலெக்ஸாண்டர் குழுவினரால் [Aerial Experiment Association] முதலில் தயாரிக்கப்பட்ட வான ஊர்தி. கனடாவின் முதல் விமானப் பறப்பை 1909 பிப்ரவரி 8 ஆம் தேதி நோவாஸ் கோஷியாவின் பெடாக் பனித்தளத்தில் ஓடி விண்ணில் பறந்து காட்டியவர் ஜான் மெக்கார்டி. மெக்கார்டி சில்வர் டார்ட் ஊர்தியை டிசைன் செய்து தயாரித்தவரில் ஒருவர். குழுவைச் சேர்ந்த ஜான் மெக்கார்டியும், ஃபிரடெரிக் பால்டுவினும் கனடாவின் டொரான்டோ பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற எஞ்சினியர்கள். கோடை விடுமுறையைக் கழிக்க நோவாஸ் கோஷியாவுக்கு வந்த இருவரும், பெல் குடும்பத்தினரைச் சந்திக்க ஒரு பெரும் வாய்ப்புக் கிடைத்தது. மெக்கார்டியின் தந்தை பெல்லின் தனிச் செயலாளராகப் பணி ஆற்றினார். அவர்கள் மூவரும் பெல்லின் பெடாக் மாளிகையில் ஒருநாள் பறப்பியல் துறைப் பிரச்சனைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்த போது, பெல்லின் திறமை மிக்க மனைவி, மேபெல் ஓர் சிறந்த ஆலோசனையைக் கூறினார்: பெல், மெக்கார்டி, பால்டுவின் ஆகிய மூவரும் இணைந்து, ஒரு பறப்பியல் குழுவகத்தை அமைத்துத் தமது படைப்புக் கருத்துக் களைப் பரிமாறிக் கொள்ள வேண்டும். தனிப்பட்ட முறையில் செல்வச் செழிப்புள்ள மேபெல், விமானப் படைப்புத் திட்டங்களுக்கு நிதி உதவி அளிப்பதாக வாக்களித்தாள். துடிப்புள்ள எஞ்சி னியர்களின் கூட்டு உழைப்பும், மேபெல்லின் நிதிக் கொடையும் ஒருங்கே கிடைத்தது, விமானப் பறப்பியலை விருத்தி செய்ய பெல்லின் பொற்கால வாய்ப்பு நிகழ்ச்சியாகக் கருதப் படுகிறது!

 

 

அடுத்து இரண்டு நிபுணரின் கூட்டு உதவியும் பெல்லுக்கு கிடைத்தது. அமெரிக்காவின் மோட்டர் சைக்கிள் டிசைனரும், உற்பத்தியாளரும், பெட்ரோல் எஞ்சின் இயக்க நிபுணருமான கெலென் கர்டிஸ் [Glenn H. Curtiss] அழைக்கப் பட்டு, பறப்பியல் குழுவகத்தில் சேர்க்கப் பட்டார். அமெரிக்க அரசாங்கம் பெல் கனடாவில் செய்து வரும் பரபரப்பான பறப்பியல் ஆராய்ச்சிகளைப் பற்றிக் கேள்விப் பட்டு, தனது பிரதிநிதியாக லெஃப்டினன்ட் தாமஸ் செல்ஃபிரிட்ஜை [Lt Thomas Selfridge] குழுவகத்துடன் சேர்த்திட வேண்டிக் கொண்டது.

1908 இல் பெல் குழுவினர் தயாரித்த சில்வர் டார்ட் நான்காவது வான ஊர்தி! அதன் முன்னோடியான ‘ஜூன் வண்டு விமானம் ‘ [June Bug Plane] ஏற்கனவே வட அமெரிக்காவில் 1 கிலோ மீடர் பயணம் செய்த ஒரு பறப்பு முத்திரையை நிலைநாட்டி, சையன்டிஃபிக் அமெரிக்கன் பரிசைப் [Scientific American Trophy] பெற்றிருந்தது! அதனைப் பின் தொடர்ந்த சிலவர் டார்ட் விமானத்தை 1909 இல் ஜான் மெக்கார்டி ஓர் வட்ட வீதியில் சுற்றி 20 மைலுக்கும் மேலாகப் பறந்து காட்டிப் புதியதோர் பறப்புப் பதிவை நிலைநாட்டினார். 1909 ஆகஸ்டு 2 ஆம் தேதி கனடாவில் முதன்முதல் விமானப் பயணிகளை சில்வர் டார்ட் விமானத்தில் ஏற்றிச் சென்றதாக அறியப்படுகின்றது.

 

 

சில்வர் டார்ட் ஊர்தியின் நீளம்: 39 அடி, உயரம்: சுமார் 10 அடி, இறக்கையின் நீட்சி: 49 அடி. மொத்த எடை: 860 பவுண்டு (390 கி.கிராம்). உச்ச வேகம்: மணிக்கு 43 மைல். பறக்கும் தூரம்: 2100 அடி (640 மீடர்). ஆற்றல் தரும் எஞ்சின்: 65 H.P. (Continental A-65). முதல் பறப்புப் பயிற்சி: 1908 ஆம் ஆண்டில். சில்வர் டார்ட் இரும்புக் குழல், மூங்கில் கம்புகளால் அமைக்கப் பட்டது. விமானச் சட்டங்கள் பிறகு ரப்பர் திரவத்தில் மூழ்க்கிய பட்டு பலூன் துணியால் மூடப் பட்டவை. விமானத்துக்கு ஆற்றல் தரும் எஞ்சின் சுழலி [Propeller] திட மரக் கட்டையில் செதுக்கப் பட்டது. அதனுடைய வால்புறம் விமானத்தின் பின்புறம் இல்லாது, முன்புறம் இணைக்கப் பட்டுள்ளது. அந்தக் காலத்து விமானங்களைப் போன்றே, சில்வர் டார்ட்டும் போதிய ஆட்சிக் கட்டுப்பாடு இன்றியே [Poor Control Characteristics] இயங்கி வந்தது!

 

 

விமானப் பறப்பியல் துறை முன்னோடிகளில் ஒருவர் பெல்

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் ஓர் உன்னதப் படைப்பாளி, விஞ்ஞானி, பொறிநுணுக்க நிபுணர், பெல் தொலைபேசி நிறுவகத்தை உருவாக்கியவர். தொலைத்தகவல் தொடர்புத் துறைக்குப் பணியாற்றியவர். அமெரிக்காவில் இருக்கும் ஊமை மாந்தர் பலர் பேசக் கற்றுக் கொள்ளும், வடிவப் பேச்சு ஏற்பாடுகளைப் பெல் செய்திருக்கிறார் என்பது பாராட்டுதற்கு உரியது. மேலும் விமானப் போக்குவரத்துத் துறை, நீர் ஊர்தி வாகனங்கள் [Aviation & Hydrofoil Technology] விருத்திகளுக்கும் உழைத்தவர். பார்க்கப் போனால், அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் எடிஸனின் திறமைகள் பலவற்றையும், ரைட் சகோதரர்களின் பறப்பியல் நிபுணத்தையும் ஒருங்கே பெற்றவராகக் காணப்படுகிறார்.

 

 

யந்திர ஆற்றல் விமானப் படைப்பாளிகளில் ரைட் சகோதரருக்கு இணையாக வருபவர் பெல் குழுவினர் என்பதில் வாக்கு வாதங்கள் இருப்பினும், விமானப் பறப்பு விருத்திக்கு பெல் குழுவினர் சீராக முற்பட்டு செம்மைப்படுத்தி இருப்பதை யாரும் மறுக்க முடியாது. எடிஸனும், பெல்லும் வட அமெரிக்காவில் தமது வல்லமையைக் காட்டி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிய, புதிய படைப்புகளை உருவாக்கி, மனிதர் நாகரீக வாழ்வைச் செழிக்க வைத்தவர்கள்! விஞ்ஞானப் பறப்பியல் முயற்சிகளையும், மற்ற கண்டுபிடுப்பு களையும் நிழற்படங்கள் எடுத்தும், நாட்குறிப்பில் பதிவு செய்தும் பெல் ஒழுங்காகச் செய்து வந்தது, எதிர்காலச் சந்ததிகளுக்குப் பாடமாகவும், பயிற்சியாகவும் இருந்து வருகிறது.

 

சில்வர் டார்ட்டின் மாடலை கனடாவின் விமானப்படைத் துறையினர் [Royal Canadian Airforce (RCAF)] (1956-1958) ஆண்டுகளில் மீண்டும் தயாரித்து பெடாக், நோவாஸ் கோஷியாவில் விமானம் முதலில் பறந்த 50 ஆம் ஆண்டு பூர்த்தி விழாவில் பறந்து காட்டினர்! ஆனால் பெடாக்கில் அன்று அடித்த பேய்க் காற்றில், விமானம் திடார் வீழ்ச்சியாகிச் சேதம் அடைந்தது! அது பின்னால் செம்மை யாக்கப்பட்டு, கனடாவின் விமானக் காட்சி மாளிகையில் கண்காட்சி ஊர்தியாக வைக்கப் பட்டுள்ளது. இரண்டாம் யந்திரப் புரட்சி உண்டான இருபதாம் நூற்றாண்டின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவராக அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் திகழ்கிறார் என்று விஞ்ஞான யுகம் பாராட்டுகிறது!

[முற்றும்]

*****************

தகவல்:

1. Alexander Graham Bell, The Life & Times of the Man Who Invented the Telephone By: Grosvener & Wesson (1997)

2. Working at Inventing, Thomas A. Edison & Menlo Park Experience By: William S. Pretzer (1993)

3. The History of the Telephone, Electronic Text Center, University of Virginia Library

4. The New Book of Knowledge By: Grolier Incorporated (1984)

5. Encyclopaedia of Britannica (1978)

6. The Children ‘s Encyclopedia of Science (1985)

7. Science & Technology The Marshall Cavendish Illustrated Encyclopedia (1979)

8. The Living World of Science in Colour (1966)

9 Britannica Concise Encyclopedia [2003]

10 Alexander Graham Bell & the Hydrofoils By: Robert V. Bruce (1973)

11 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: அமெரிக்க ஆக்கமேதை தாமஸ் ஆல்வா எடிஸன் (http://www.thinnai.com/science/sc0302023.html) [மார்ச் 2, 2002]

12 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: மார்க்கோனியின் கம்பியில்லாத் தகவல் தொடர்பு (http://www.thinnai.com/science/sc0203022.html) [பிப்ரவரி 2, 2002]

13 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: ரைட் சகோதரர்கள் விமானக் கண்டுபிடிப்பு (http://www.thinnai.com/science/sc0330021.html) [மார்ச் 30, 2002]

14 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: ரைட் சகோதரர்கள் (நூறாண்டுப் பூர்த்தி விழா) (http://www.thinnai.com/science/sc1218031.html) [டிசம்பர் 18, 2003]

15 The Penguin Desk Encyclopedia of Science & Mathematics [2000]

16. Guinness World Records (2005) Special 50th Anniversary Edition.

17. Minipedia -World History Events That Have Shaped The World (2005)

**********

jayabarat@tnt21.com [S. Jayabarathan (December 6, 2009]

ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் – வான ஊர்திக்கு முன்னோடிச் சோதனைகள் -3

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்

(1847-1922)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

‘என் அன்புக்குரிய மேபெல்,

என்னை எழுதுமாறு தூண்டு. என் படைப்புகள் வரவேற்கப்பட்டு வெகுமதி பெறவும், நான் இன்னும் உயிருடன் வாழ்ந்து, சிந்தித்து, ஆக்கவினைகளுக்கு ஊக்கமுடன் உழைப்பதை மாந்தருக்கு உணர்விக்கவும் வழி செய்திடு. எனது எண்ணங்கள் நிறைவேற, எனது கனவுகள் மெய்யாக என்னைத் தூண்டு. ஏதோ முதலில் பெல் ஒன்றைக் கண்டுபிடித்தார், இப்போது மேற்கொண்டு படைக்க எதுவுமின்றி சும்மா இருக்கிறார் என்று எனது நண்பர்கள் குறை கூறுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது ‘.

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் [தன் மனைவி மேபெலுக்கு எழுதிய கடிதம்]

‘ஒரு கதவு நமக்கு மூடும் போது, அடுத்த கதவு திறக்கிறது! நீண்ட காலம் மீண்டும், மீண்டும் மூடிய கதவுப் புறத்தை நோக்கியே முன்னேற முயற்சி செய்கிறோம்! நமக்காகப் பின்புறம் கதவு திறந்திருப்பது நமது கண்களுக்குத் தெரிவதில்லை!

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்

‘நீ எடுத்துக் கொண்டிருக்கும் கைவச வேலையில் உன் கவனம் முழுவதையும் செலுத்து! பரிதியின் கதிர் ஒளியைக் குவியாடியில் ஒருங்கே குவியச் செய்யா விட்டால், கனல் சக்தியில் எதையும் எரிக்க முடியாது ‘.

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்

முன்னுரை: ஆயிரத்துக்கும் மேற்பட்ட அற்புதச் சாதனங்களைப் படைத்த அமெரிக்க ஆக்கமேதை தாமல் ஆல்வா எடிஸனை அறிந்து கொண்ட அளவுக்கு, உலக மாந்தர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லை அறிய மாட்டார்கள்! விந்தை நிகழ்ச்சியாக அவ்விரு மேதைகளும் ஒரே ஆண்டில் அடுத்தடுத்துப் பிறந்தவர்கள்! இருவரும் வட அமெரிக்காவில் தமது வல்லமைகளைக் காட்டி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிய, புதிய படைப்புகளை உருவாக்கி, மனிதர் நாகரீக வாழ்வைச் செழிக்க வைத்தவர்கள்! ரைட் சகோதரர்கள் பறக்கும் ஊர்தியைப் படைப்பதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பாக, 1877 ஆம் ஆண்டிலேயே பெல் பறக்கும் ஊர்தியை ஆக்குவதில் தீவிரமாக முற்பட்டவர். தொலைபேசி, ஒளிநார்த் தகவல் [Telephone, Photophone] ஆகியவற்றைப் படைத்ததில் காப்புரிமை பெற்ற பெல், அடுத்து மருத்துவத் துறை, இனவிருத்தி, இனவிருத்திச் சீர்பாடு, வான்வீதிப் பறப்பியல், கடற்துறைப் போக்குவரத்து [Medicine, Genetics, Eugenics, Aviation, Marine Navigation] ஆகிய துறைகளில் படைப்புக் கருத்துக்களை வழங்கினார்.

மேலும் அவரது ஆக்கவினைகள் தொலைக்காட்சி, நாடாப் பதிவுச் சாதனம், பரிதிக் கனல் பயன்பாடு, வாயு வெப்ப ஈர வளப்பாடு, எரிசக்திச் சிக்கனப் பயன்பாடு, கருத்தடை [Television, Tape Recorder, Solar Heat, Air Conditioning, Energy Conservation, Birth Control] ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உதவியன. 1881 இல் அமெரிக்காவின் 20 ஆவது ஜனாதிபதி ஜேம்ஸ் கார்ஃபீல்டு [James Garfield] துப்பாக்கியால் சுடப் பட்டதும், வயிற்றில் தங்கிய ரவையைக் கண்டுபிடிக்க ஓர் உலோக உளவியைப் [Metal Detector] பெல் தயாரித்தார். இயற்கையாகக் கதிரியக்க முள்ள ரேடியத்தின் [Radioactive Radium] கதிர்வீச்சைப் பயன்படுத்தி, உடலுக்குள் பரவும் புற்றுநோயைக் குணப்படுத்தலாம் என்று புதிய மருத்துவ ஆலோசனையை 1903 ஆம் ஆண்டில் முதன்முதலாக வெளியிட்டவர், பெல்.

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லின் பிற்கால வாழ்க்கை

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் வாடிப் போகும் வெற்றி மாலைகளைச் சூடிக் கொண்டு மயங்கிக் கிடக்கும் ஒரு மனிதர் அல்லர்! டெலிஃப்போனைக் கண்டுபிடித்தற்குப் பிறகு, பெல் ‘ஒளிநார்ப்பேசி ‘ [Photophone] தயாரிக்க முற்பட்டார். அம்முறையில் பரிதி ஒளிமூலம் வாய்ச் சொற்களை அனுப்பிக் கேட்கும் ஒரு சாதனம் விருத்தியானது. ஒளிநார்த் தகவல் நியதிக்குப் [Fibre Optics Principle] பயன்படும் அப்படைப்பை ஒரு மூலகரமான ஆக்கமாகக் கருதினார், பெல். அந்தச் சாதனம் பூரணமாக வேலை செய்யும் என்று எவரும் நம்பிலர். பரிதி எப்போதும் ஒளியுடன் வானில் தென்படாததால், ‘ஒளிநார்ப்பேசி ‘ நடமுறைக்கு ஒவ்வாத ஒரு படைப்பு என்று பலர் புறக்கணித்தனர்.

ஒளிநார்ப்பேசி [Photophone] ஒளிக் கற்றை மூலம் வாய்ப் பேச்சை அனுப்பும் முறை. அந்த முறையே இப்போது ஒளிநார்த் தகவல் [Fibre Optics] ஏற்பாட்டில் கையாளப் படுகிறது. அந்த முறையை விருத்தி செய்ய அவருடன் கூட்டாகப் பணி ஆற்றியவர், சார்லஸ் சம்னர் டெயின்டர் [Charles Sumner Tainter]. அதற்குப் பயன்படும் படிகம், ஒளி நுகர்ச்சி உள்ள ஸெலினியப் படிகச் செல் [Light-Sensitive Cells of Crystalline Selenium]. அப்படிகத்தின் சிறப்பான ஒரு பண்பு: ஒளிச்சக்தியின் தீவிரத்துக்கு ஒப்பாக, அதன் மின்தடைத் தலைகீழாக மாறுகிறது [Electrical Resistance varies inversely with the Illumination Intensity]. அதாவது ஒரு பண்டம் இருட்டில் இருந்தால் அதன் ஒளித்தீவிரம் குன்றி, படிக மின்தடை மிகையாகிறது. அப்பண்டம் வெளிச்சத்தில் இருக்கும் போது அதன் ஒளித்தீவிரம் மிகுந்து, படிக மின்தடை குறைவாகிறது. ஒளிநார்ப்பேசியில் இவ்விதம் நிகழ்கிறது: தொலைபேசி அனுப்பி [Transmitter] முன்பாக அதிரும் ஓர் ஆடியை வைத்தோ அல்லது சுற்றும் சுழலியை வைத்தோ குரல் தொனி ஒளியை மாறுபடுத்தும் போது, ஸெலினியப் படிகம் உள்ள ஓர் ஒளிவாங்கியில் [Receiver] அது விழும்படிச் செய்ய வேண்டும். அப்போது குரல் தொனிக்கு ஒப்பாக, ஒளிக்கற்றை மூலம் ஒளியின் தீவிரம் மிகுந்தோ அல்லது குறைந்தோ அனுப்பப் படுகிறது. பெல்லின் ஒளிநார்ப்பேசிக்கு 1881 இல் காப்புரிமை அளிக்கப்பட்டது. 1911 இல் பெல் முதன்முதலாக வட்டச் சுழற்றித் தொலைபேசியைப் [Dial Telephone] படைத்தார்.

1957 இல் சார்லஸ் டெளனஸ், ஆர்தர் சாவ்லோ ஆகியோர் [Charles Townes & Arthur Schawlow] இருவரும் பெல் ஆய்வுக் கூடத்துக்காக லேஸர் ஒளிச் சாதனத்தை [Laser (Light amplification by Simulated Emission of Radiation)] விருத்தி செய்தனர். 1977 இல் பெல் நிறுவகம் லேஸர் ஒளிபெருக்கியுடன், ஒளிநார்த் தகவல் அனுப்பு [Fibre Optics] முறையைப் பயன்படுத்தி, முதன்முதலாக சிகாகோ நகர்த் வீதிகளில் வாய்ப் பேச்சுகள், வீடியோ சமிக்கைகள், மின்கணனி விளக்கக் குறிப்புகள் ஒளித்தீவிர அதிர்வில் [Phone Calls, Video Signals, Computer Data on Light Pulses] அனுப்பப் பட்டன. அடுத்து பெல் குழுவினர் மெழுகுச் சொற்பதிவுத் தட்டு [Wax Phonograph Record] தயாரிப்பதில் இறங்கினார்கள்.

1881 இல் அமெரிக்காவின் 20 ஆவது ஜனாதிபதி ஜேம்ஸ் கார்ஃபீல்டு [James Garfield] வாழ்க்கையில் கசப்புள்ள ஓர் வழக்கறிஞரால் சுடப்பட்டு மரணக் காயம் அடைந்தார். அவரது வயிற்றில் தங்கிய ரவையின் இருப்பிடத்தைக் காண ‘உலோக உளவி ‘ [Metal Detector] ஒன்றைப் பெல் கண்டுபிடித்தார். பெல் தயாரித்த அந்த உலோக உளவி ஒரு மின்சாரத் தூண்டு-சமப்பாடுச் சாதனம் [Induction-Balance Electrical Device]. அச்சாதனம் ஜனாதிபதி உடம்பில் ரவையைக் காணத் தவறினும், பின்வந்தவர் அதைச் சீர்ப்படுத்த ஏதுவானது. அடுத்து பெல் அமைத்த ‘தொலை ஒலி உளவி ‘ [Telephonic Probe] வெற்றிகரமாகப் பல்லாண்டுகள் உலோகக் கண்டுபிடிப்பு உளவியாக உபயோகமாகி வந்தது. தொலை ஒலி உளவி தயாரிக்கப் பட்டு 20 ஆண்டுகளுக்குப் பிறகு, எக்ஸ்ரே கருவி ஒன்று செம்மை யாக்கப்பட்டு உலோக உளவியாகப் பயன்படுத்தப் பட்டது. பெல்லின் இரண்டாவது புதல்வன் சுவாச உறுப்பு நோயில் இறந்து போனபின், பெல் சூனியக் கவசத்தைக் [Vacuum Jacket] கண்டுபிடித்தார். அதுவே பிற்காலத்தில் செயற்கை முறையில் இயங்கும் உலோகப் புப்புசத்தின் [Iron Lung] முன்னோடி மாதிரி யானது. இயற்கையாகக் கதிரியக்க முள்ள ரேடியத்தைப் [Radioactive Radium] பயன்படுத்தி, உடலுக்குள் பரவும் புற்றுநோயைக் குணப்படுத்தலாம் என்று 1903 ஆம் ஆண்டில் முதன்முதலாக வெளியிட்டவர், பெல்.

பெல் குடும்பத்தாரின் கோடை வாழ்தளம் கனடாவில் நோவாஸ் கோஷியா மாநிலத்தில், கேப் பிரிடன் தீவில் இருக்கும் பெடாக் சிற்றூர் [Baddack in Cape Breton Island, Nova Scotia, Canada]. பெடாக் சிற்றூர் ஓர் பெரிய ஏரியின் கரையில் அமைந்துள்ளது. பெல்லின் நீண்டகால நீர் சம்பந்தப்பட்ட படைப்புத் திட்டங்கள் அனைத்தும் கனடாவின் பெடாக் ஏரிக் கரையிலே செய்யப்பட்டவை. குறிப்பாக பெல்லின் நீர் ஊர்திகள், வான ஊர்திகள் யாவும் அங்குதான் விருத்தி செய்யப் பட்டன. அடுத்தபடியாக கடல்நீரில் உப்பு நீக்கு முறை [Desalination of Seawater], சூழ்வெளி நீர்ப் பிழிவு முறை [Condensation of Atmospheric Water] ஆகிய இரண்டு முறைகளை நிலைப்படுத்தச் சோதனைகள் புரிந்தார். அமெரிக்காவில் ‘நேஷனல் ஜியோகிராஃபிக் மாத வெளியீடு ‘ [National Geographic Magazine] அமைப்பாளர்களில் ஒருவராகி, அதன் முதல் அதிபராக அவரது மருமகன் டாக்டர் கில்பர்ட் கிரோஸ்வெனர் [Dr. Gilbert Grosvenor] நியமிக்கப் பட்டார். தற்போதைய நேஷனல் ஜியோகிராஃபிக் மாத வெளியீட்டின் மகத்தான அமைப்புக்கு அவரே காரண கர்த்தா!

ஹெலென் கெல்லருக்கு பலகணி திறந்த பெல்

யாராவது உங்கள் தொழில் என்ன வென்று பெல்லைக் கேட்டால், ‘ நான் காது கேளாதவரின் ஆசிரியன் ‘ என்பதாக அவரது பதில் இருக்கும்! அமெரிக்க மேதை ஹெலென் கெல்லர் [Helen Keller (1880-1968)] பிறந்து 19 மாதங்கள் கழித்து நோய்வாய்ப் பட்டதில், அவரது பார்வை போனது! காது செவிடானது! அத்துடன் வாயும் ஊமை யானது! மனிதர் வாழத் தேவையான ஐம்பொறிகளில் மூன்று முக்கியப் பொறிகள் முடங்கிப் போயின. பெல்லின் தந்தையார் கண்களில் ஒளியற்ற, காதுகள் கேளாத, வாய் பேசாத ஹெலென் கெல்லரை ஆறு வயதாகும் போது பெல்லிடம் அழைத்து வந்தார். மற்றோரிடம் தொடர்பு கொள்ள இயலாமல் ஹெலென் குழம்பிப் போய், இரங்கத் தக்க முறையில் ஆரவாரமுடன் காணப்பட்டார். பெல்தான் சிறப்பு மிக்க பயிற்சியாளி அன்னி ஸல்லிவனைக் [Teacher Anne Sullivan] 1887 இல் கண்டுபிடித்து, ஹெலனுக்கு பிரெயில் ஏற்பாடு [Braille System] மூலம் கல்வியும், பிறரிடம் தொடர்பு கொள்ளும் பயிற்சியும் அளித்தவர். ஹெலன் கெல்லருக்குப் பலகணியைத் திறந்து, இருளை விட்டு ஒளி பெறப் பயிற்சி அளித்தவர் பெல்! காது கேட்காத ஊமை ஹெலெனைப் பேச வைத்தவர் பெல்! தனிமையில் தவித்த ஹெலென் கெல்லரை நட்பு உலகுக்கு அழைத்து வந்தவர் பெல்!

இளமங்கை ஹெலென் கெல்லர் கனடாவில் இருக்கும் பெல்லின் வேனிற் கால மாளிகையான பெயின் பிராஃக்குக்கு [Beinn Bhreagh, Baddack] வருகை தந்து அடிக்கடி பெல் குடும்பத்தாருடன் பழகி வருவது வழக்கம். பெல் பட்டம் அமைத்து பறக்க விட்டுச் சோதிக்கும் சோதனைகளில் ஹெலென் பங்கெடுத்து மகிழ்வதுண்டு. எழுதப் பேச வாசிக்கக் கற்றுக் கொண்டு ஹெலென் கெல்லர் 1904 இல் மாஸ்ஸசுஸெட்ஸ் மாநிலத்தின் கேம்பிரிட்ஜில் உள்ள ராட்கிளிஃப் கல்லூரியில் படித்துச் சிறப்பு மதிப்புடன் பட்டம் பெற்றார். 1902 இல் ஹெலென் கெல்லர் எழுதி வெளியிட்ட சுயவரலாற்று நூலை [The Story of My Life], ‘செவிடருக்குப் பேசச் சொல்லிக் கொடுத்த அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லுக்கு ‘ அர்ப்பணம் செய்தார்.

வான ஊர்தியைப் படைக்கும் முன்னோடி முயற்சிகள்

தொலைபேசியைக் கண்டுபிடித்து அதனால் கிடைத்த உலகப் புகழோ, பாராட்டுகளோ பெல்லுக்குப் போதிய மனத் திருப்தி அளிக்க வில்லை! திருமணமான காலத்தில் அவருடைய மனைவிக்கு பெல் ஒரு கடிதத்தில் இவ்விதம் எழுதினார்: ‘என் அன்புக்குரிய மேபெல், என்னை எழுதுமாறு தூண்டு. என் படைப்புகள் வரவேற்கப் பட்டு வெகுமதி பெறவும், நான் இன்னும் உயிருடன் வாழ்ந்து, சிந்தித்து, ஆக்கவினைகளுக்கு ஊக்கமுடன் உழைப்பதை மாந்தருக்கு உணர்விக்கவும் வழி செய்திடு. எனது எண்ணங்கள் நிறைவேற, எனது கனவுகள் மெய்யாக என்னைத் தூண்டு. ஏதோ முதலில் பெல் ஒன்றைக் கண்டுபிடித்தார், இப்போது மேற்கொண்டு படைக்க எதுவுமின்றி சும்மா இருக்கிறார் என்று எனது நண்பர்கள் குறை கூறுவதை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது ‘.

ரைட் சகோதரர்கள் பறக்கும் ஊர்தியைப் படைப்பதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பாக, 1877 ஆம் ஆண்டிலேயே பெல் பறக்கும் ஊர்தியை ஆக்குவதில் தீவிரமாக முற்பட்டார். ‘வாயு மண்டல வான் பறப்பு ‘ [Aerial Aviation] என்று தன் கையேட்டில் குறிப்பிட்டு ஒரு சீரற்ற பறக்கும் யந்திர டிசைனை [Crude Design of a Flying Machine] கைப் படத்துடன் காட்டி யிருக்கிறார். பறக்கும் பட்டங்களைக் காற்றை விடக் கனமில்லா யந்திரங்கள் என்று பெல் அழைப்பார்! முதலில் மனிதரற்ற பலவிதப் பட்டங்களைக் காற்றில் பறக்க விட்டு பறப்பியல் நுணுக்கத்தையும் அதன் கட்டுப்பாடுகளையும் நன்கு கற்றுக் கொண்டார்.

1892 இல் நிபுணர் ஹார்கிரேவ் என்பவர் தயாரித்த பெட்டி வடிவப் பட்டத்தையே [Hargrave ‘s Box Kite] தன் முதல் மாடலாக எடுத்துக் கொண்டார். பெல் குழுவினர் சட்டத்தால் கட்டிய பட்டங்கள் பெரிய நூதன வடிவம் கொண்டவை. 1898 இல் பெல் தயாரித்த 15 அடி நீளம், 11 அடி அகலம், 5 அடி உயரம் கொண்ட ஜம்போ பட்டம் ஏனோ முதலில் பறக்க வில்லை! 1902 இல் பெல் அமைத்தது 64 கூடு இணைந்த நான்முகப் பட்டம் [64 Cell Tetrahedral Kite]. டெட்ராஹீடிரன் என்றால் நான்கு முகச்சம முக்கோணம் அமைந்துள்ள ஒரு முக்கோணப் பிரமிட் [Triangular Pyramid]. நான்கு முகம் உள்ள முக்கோணப் பிரமிட் பட்டம் பன்முகம் கொண்டுள்ளதால், பட்டத்தைக் காற்று தூக்கி விட எளிதாகிறது என்று பெல் சோதனையில் அறிந்து கொண்டார்.

[தொடரும்]

****

தகவல்:

1. Alexander Graham Bell, The Life & Times of the Man Who Invented the Telephone By: Grosvener & Wesson (1997)

2. Working at Inventing, Thomas A. Edison & Menlo Park Experience By: William S. Pretzer (1993)

3. The History of the Telephone, Electronic Text Center, University of Virginia Library

4. The New Book of Knowledge By: Grolier Incorporated (1984)

5. Encyclopaedia of Britannica (1978)

6. The Children ‘s Encyclopedia of Science (1985)

7. Science & Technology The Marshall Cavendish Illustrated Encyclopedia (1979)

8. The Living World of Science in Colour (1966)

9 Britannica Concise Encyclopedia [2003]

10 Alexander Graham Bell & the Hydrofoils By: Robert V. Bruce (1973)

11 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: அமெரிக்க ஆக்கமேதை தாமஸ் ஆல்வா எடிஸன் (http://www.thinnai.com/science/sc0302023.html) [மார்ச் 2, 2002]

12 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: மார்க்கோனியின் கம்பியில்லாத் தகவல் தொடர்பு (http://www.thinnai.com/science/sc0203022.html) [பிப்ரவரி 2, 2002]

13 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: ரைட் சகோதரர்கள் விமானக் கண்டுபிடிப்பு (http://www.thinnai.com/science/sc0330021.html) [மார்ச் 30, 2002]

14 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: ரைட் சகோதரர்கள் (நூறாண்டுப் பூர்த்தி விழா) (http://www.thinnai.com/science/sc1218031.html) [டிசம்பர் 18, 2003]

15 The Penguin Desk Encyclopedia of Science & Mathematics [2000]

*************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (December 6, 2009)]

ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் – நீர் ஊர்தி விருத்தி செய்தல் -2

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


“இந்த சக்தியை என்ன வென்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆனால் அது எங்கும் நிலவுகிறது என்பதை நான் அறிவேன். தனக்கு என்ன வேண்டும் என்பதை ஆழ்ந்து தெளிவாக அறிந்து, அதைக் கண்டுபிடிக்கும் வரை ஈடுபட்டு, இடையே தளர விடாமல் விடா முயற்சியில் தேடும் ஒரு மனிதனுக்கு மட்டுமே அச்சக்தி கிடைக்கிறது!”

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்

“மகத்தான கண்டுபிடிப்புகள், மேன்மைப்பாடுகள் யாவும் பலரது பங்கெடுப்பு, கூட்டுப் பணிகளால்தான் ஏறக்குறைய பூர்த்தியாகி வருகின்றன. இருட்டடித்த ஒரு பாதைக்கு நான் ஒளிகாட்டியவனாக பெருமைப் படுத்தப் படலாம். ஆனால் மேற்கொண்டு அவை செம்மை ஆவதை நோக்கும் போது, மெய்யாகப் பெருமை பிறர்க்கு உரியது, எனக்கில்லை என்பதை நான் உணர்கிறேன்.”

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்

‘படைப்பு வேலைக்கு,
ஆக்க உணர்வு ஒரு சதவீதம்!
வேர்க்கும் விடா முயற்சி,
தொன்னூற்றி ஒன்பது சதவீதம்!’

தாமஸ் ஆல்வா எடிஸன் (1847-1931)

‘நீராவி எஞ்சினையும், மின்சாரத் தந்தியையும் நன்றாகப் புரிந்த நிபுணர், அவற்றை விட மேம்பட்ட சாதனங்களை அடுத்துப் படைக்க வேண்டும் என்று முற்படுவதில் தமது வாழ்வைக் கழிப்பார் ‘.

ஜார்ஜ் பெர்னாட்ஷா [‘மனிதனும், உயர்மனிதனும்’ நாடகம் (1903)]


முன்னுரை: ஆயிரத்துக்கும் மேற்பட்ட அற்புதச் சாதனங்களைப் படைத்த அமெரிக்க ஆக்கமேதை தாமல் ஆல்வா எடிஸனை அறிந்து கொண்ட அளவுக்கு, உலக மாந்தர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லை அறிய மாட்டார்கள்! விந்தை நிகழ்ச்சியாக அவ்விரு மேதைகளும் ஒரே ஆண்டில் அடுத்தடுத்துப் பிறந்தவர்கள்! இருவரும் வட அமெரிக்காவில் தமது வல்லமைகளைக் காட்டி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அரிய, புதிய படைப்புகளை உருவாக்கி, மனிதர் நாகரீக வாழ்வைச் செழிக்க வைத்தவர்கள்! எடிஸன் பிறந்த நாள்: பிப்ரவரி 11, 1847. பெல் பிறந்த நாள்: மார்ச் 3, 1847. எடிஸன் பெல்லை விட இருபது நாட்கள் முன்பு பிறந்தவர். எடிஸன் கண்டுபிடித்துக் காப்புரிமைப் பதிவு செய்தவை, 1000 சாதனங்களுக்கு மேற்பட்டவை! பெல் கண்டுபிடித்துக் காப்புரிமை பதிந்தவை, 30 சாதனங்களே ஆயினும் இருவரும் ஒரு சதவீத ஆக்க உணர்வு கொண்டு, மீதி தொன்னூற்றி ஒன்பது சதவீதம் விடா முயற்சியில் வேர்வை சிந்தி உழைத்தவர்கள். அவர்கள் கண்டுபிடித்த சாதனங்கள் யாவும் நுணுக்க மானவை. மகத்தானவை. உலக மாந்தரால் மதிக்கப்படுபவை. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் மின்சக்திப் பயன்பாட்டுச் சாதனங்களைப் படைத்து, மின்சார யந்திர யுகத்துக்கு அடித்தள மிட்டவர்கள்! இருவரும் சமகால நிபுணரானாலும், ஒருவருக் கொருவர் பகைமை பாராட்டாது ஒருவர் மீது ஒருவர் மதிப்பும், நட்பும் கொண்டிருந்தனர் என்பது பாராட்டுதற்குரியது.

இருவரிலும் எடிஸன் கண்டுபிடித்தவை எண்ணிக்கையில் மிகையானது. முக்கியமாக மின்சாரக் குமிழி, மின்சார ஜனனி, மின்சார் மோட்டர், மின்சார இருப்புப் பாதைத் தொடர்வண்டி, தொலைபேசி வாய்க்கருவி, ஒலிபெருக்கி, கிராமஃபோன், மூவி காமிரா ஆகியவை. பெல் கண்டுபிடித்தவை: பதினெட்டுக் காப்புரிமைப் பதிவுகள் அவரது தனிப் பெயரில். பிறகு அடுத்த பனிரெண்டு பதிவுகளில் அவர் ஒரு கூட்டாளி. அவற்றில் 14 பதிவுகள் தொலைபேசி, தந்தி ஏற்பாடுகளைச் சேர்ந்தவை. நான்கு ஒளிநார்ப்பேசி [Photophone], ஒன்று கிராமஃபோன் [Phonograph], ஐந்து வான ஊர்திகள் [Aerial Vehicles], நான்கு நீர்வாயு விமானங்கள் [Hydroair Planes], இரண்டு ஸெலினியம் மின் கலங்கள் [Selenium Cells]. 1888 இல் நேஷனல் ஜியோகிராஃபிக் இதழின் [National Geographic Magazine] ஆரம்பக் குழுவின் அமைப்பாளர்களில் ஒருவராக இருந்தார். ரைட் சகோதரர்கள் பறக்கும் ஊர்தியைப் படைப்பதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பாக, 1877 ஆம் ஆண்டிலேயே பெல் பறக்கும் ஊர்தியை ஆக்குவதில் தீவிரமாக முற்பட்டார்.


அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்லின் வாலிப வாழ்க்கை

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் ஓர் உன்னதப் படைப்பாளி, விஞ்ஞானி, பொறிநுணுக்க நிபுணர், பெல் தொலைபேசி நிறுவகத்தை உருவாக்கியவர். தொலைத்தகவல் தொடர்புத் துறைக்குப் பணியாற்றியவர். மேலும் விமானப் போக்குவரத்துத் துறை, நீர் ஊர்தி வாகனங்கள் [Aviation & Hydrofoil Technology] விருத்திகளுக்கும் உழைத்தவர். பார்க்கப் போனால், அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் எடிஸனின் திறமைகள் பலவற்றையும், ரைட் சகோதரர்களின் பறப்பியல் நிபுணத்தையும் ஒருங்கே பெற்றவராகக் காணப்பட்டார். 2004 ஆம் ஆண்டுத் தேர்ந்தெடுப்பில் கனடாவின் பத்து மகத்தான மனிதர்களில் ஒருவராகப் பாராட்டப் பட்டார். பெல் ஸ்காட்டிஷ் மண்ணில் பிறந்தவர் ஆயினும், அமெரிக்கக் குடிமகனாகிக் கனடாவில் குடியேறித் தனது நீர் விமானங்களையும், ஆகாய விமானங்களையும் சோதனை செய்தவர். கனடாவில் அவர் வாழ்ந்த நோவாஸ் கோஷியாவின் கேப் பிரிடன் தீவில் இருக்கும் பெடாக்கில் [Baddeck, Nova Scotia, Canada] அவரது நினைவுக் காட்சி சாலை நிறுவகம் செய்யப்பட்டுள்ளது.

1847 ஆம் ஆண்டு மார்ச் 3 இல் பெல் ஸ்காட்லந்தில் இருக்கும் எடின்பர்க் நகரில் பிறந்தார். தந்தையார் பெயர், அலெக்ஸாண்டர் மெல்வில் பெல். அவரது பாட்டனார் லண்டனிலும், தந்தையுடன் பிறந்தவர் டப்ளினிலும், தந்தையார் எடின்பர்கிலும் நாவன்மை, பேச்சுக்கலை வல்லுநராகப் [Professed Elocutionists] பணியாற்றி வந்தனர். தந்தையார் பேச்சுக்கலை நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்டுள்ளார். இளைஞர் பெல் எடின்பர்க் ராயல் உயர்நிலைப் பள்ளியில் படித்து, ஓராண்டு எடின்பர்க் பல்கலைக் கழகத்தில் பயின்று, ஓராண்டு இங்கிலாந்தின் பாத்தில் உள்ள ஸோமர்செட்ஷயர் கல்லூரியில் உரையாளராகப் பணி செய்தார். ஸ்காட்லந்தில் இருக்கும் போதே தன் தாயின் செவிடு நிலையைச் சீர்ப்படுத்த, இளைஞர் பெல் ஒலித்துறை விஞ்ஞானத்தில் [Science of Acoustics] தன் கருத்தைச் செலுத்தினார். அப்போதே வாலிபர் பெல் தொலைபேசி அமைப்பிலும் ஈடுபாடு கொண்டிருந்தார்.

1870 இல் பெல்லுக்கு 23 வயதாகும் போது, பெல் குடும்பத்தினர் கனடாவுக்கு புலப்பெயர்ச்சியாகி, அண்டாரியோ மாநிலத்தின் பிரான்ட்ஃபோர்டு நகரில் [Brantford, Ontario, Canada] குடியேறினர். கனடாவில் வாழ்ந்த போது தொலைத் தகவல் யந்திரங்களில் கவனத்தைச் செலுத்தித் தொடர்ந்து ஆய்வுகள் செய்து வந்தார். மின்சார முறையில் இசை ஒலியை நெடுந்தூரம் அனுப்பும், ஒரு புதிய பியானோவைப் படைத்தார். 1873 இல் தந்தையுடன் மாண்டிரியால் சென்ற போது, ஊமைகளுக்குப் பயன்படும் ‘வடிவப் பேச்சு முறையைச் ‘ [Visible Speech System] சொல்லிக் கொடுக்கும் வாய்ப்புக் கிடைத்தது! அமெரிக்காவின் பாஸ்டனில் உள்ள ஊமைப் பள்ளியில் சொல்லிக் கொடுக்கும் வாய்ப்பும் வாலிபர் பெல்லுக்குக் காத்திருந்தது. அமெரிக்காவில் இருக்கும் ஊமை மாந்தர் பலர் பேசக் கற்றுக் கொள்ளும், வடிவப் பேச்சு ஏற்பாடுகளைப் பெல் செய்திருக்கிறார் என்பது பாராட்டுதற்கு உரியது.

பாஸ்டனில் அவரது தொலைபேசி ஆய்வுகளைத் தொடர்ந்து, 1876 மார்ச் 7 ஆம் தேதி தனது முன்னோடித் தொலைபேசியைப் படைத்தார். அது இசைத் தொனியைக் கம்பிகளில் அனுப்பியதுபோல், குரல் பேச்சையும் தொலைவில் அனுப்பிக் கேட்க உதவியது. அதற்கு நிதி உதவி செய்தவர், அவரது வருங்கால அமெரிக்க மாமனார். அமெரிக்கா பெல்லின் முதல் தொலைபேசிக்கு அளித்த காப்புரிமை எண்: 174,465. பெல்லின் அடுத்த படைப்பு: ஒளிநார்ப்பேசி [Photophone]. ஒளிக் கற்றை மூலம் வாய்ப் பேச்சை அனுப்பும் முறை அது. அந்த முறையே இப்போது ஒளிநார்த் தகவலில் [Fibre Optics] கையாளப் படுகிறது. அந்த முறையை விருத்தி செய்ய அவருடன் கூட்டாகப் பணி ஆற்றியவர், சார்லஸ் சம்னர் டெயின்டர் [Charles Sumner Tainter]. அதற்குப் பயன்படும் படிகம், ஒளி நுகர்ச்சி பெற்ற செலினியப் படிகச் செல் [Light-Sensitive Cells of Crystalline Selenium]. அப்படிகத்தின் சிறப்பான பண்பு: ஒளிச்சக்தியின் சார்புக்கு ஒப்பாக, அதன் மின்தடைத் தலைகீழாக மாறுகிறது [Electrical Resistance varies inversely with the Illumination Intensity]. அதாவது ஒரு பண்டம் இருட்டில் இருந்தால், படிக மின்தடை மிகையாகிறது. அது வெளிச்சத்தில் இருக்கும் போது, படிக மின்தடை குறைவாகிறது. அடிப்படை நியதி என்ன வென்றால், தொலைபேசி முன்பாக அதிரும் ஓர் ஆடியை வைத்தோ அல்லது சுற்றும் சுழலியை வைத்தோ குரல் தொனியை மாறுபடுத்தும் போது, செலினியப் படிகம் உள்ள ஓர் ஒளிவாங்கியில் அது விழும்படிச் செய்ய வேண்டும். அப்போது குரல் தொனி ஒளிக்கற்றை மூலம் அனுப்பப்படுகிறது. பெல்லின் ஒளிநார்ப்பேசி 1881 இல் காப்புரிமை அளிக்கப்பட்டது.

நீரில் எழும்பி விரையும் நீர் ஊர்திகள்

பலருக்கு ஏர்ஃபாயில்ஸ் அல்லது வாயு வழுக்கி [Airfoils] என்றால் என்ன வென்று தெரிந்திருக்கலாம். ஆகாய விமானம் வானோக்கி எழுந்திடவும், இறங்கிடவும் உதவும் ‘வாயு வழுக்கி ‘ இறக்கைகள் ஒருவித ஏர்ஃபாயில்கள் தான். ‘வாயு வழுக்கிகள் ‘ ‘வாயு இயக்கிப் ‘ பண்புகளைக் [Aerodynamic Properties] கொண்டவை. ஆகாய விமானத்தில் இருபுறமும் உள்ள இறக்கைகள் வாயு வழுக்கி வடிவில் அமைக்கப் பட்டவை. வேகமாய்த் தரையில் ஏகிடும் போது மூக்கைத் தூக்கி விமானத்தை மேலே எழச் செய்பவை, இறக்கைகளில் அமைக்கப் பட்டுள்ள வாயு வழுக்கிகள். வாயு வழுக்கிகள் விமானத்தை உயரத்தில் ஏற்றவும், உயரத்திலிருந்து இறக்கவும் பயன்படுகின்றன. அதே போன்று ‘நீர் வழுக்கிகள் ‘ [Hydrofoils] நீரில் படகு செல்லும் போது படகின் உடம்பை [Hull] மேலே தூக்கவும், கீழே இறக்கவும் செய்பவை. நீர் வழுக்கிக் கால்களைப் பெற்றுள்ள படகு [Hydrofoil Boat] இரு முறைகளில் இயங்குகின்றன. 1. சாதாரணப் படகுபோல் இயற்கையான தன்மையில் நீரில் படகு உடம்பு ஓரளவு இறங்கி மிதந்து செல்வது. 2. நீர் வழுக்கிகள் மட்டும் மூழ்கிப் படகு உடம்பு முழுவதும் நீருக்கு மேல் எழுந்து விரைவது.


சாதாரணம் படகின் பெருத்த உடம்பு நீரில் ஓரளவு மூழ்கி யிருப்பதால், நீர் நகர்ச்சிக்காக ஆற்றல் விரைய மாகிறது. ஆதலால் அது மெதுவாகச் செல்கிறது. ஆனால் நீர் வழுக்கிகள் தூக்கியுள்ள படகு நீருக்கு மேலாக இருப்பதால், உராய்வு குன்றிப் படகு வேகமாகச் செல்கிறது. அதாவது குறைந்த குதிரைச் சக்தி யுள்ள மின்சார மோட்டார் [Lower Horse Power (H.P.) Motor] நீர் வழுக்கிப் படகை [Hydrofoil Boat] வெகு வேகமாகத் தள்ளுகிறது. நீர் வழுக்கிப் படகு, நீர் வாகனம் அல்லது நீர் ஊர்தி [Watercraft or Waterplane] என்றும் அழைக்கப் படுகிறது.

படகின் கால்கள் போல் உள்ள நீர் வழுக்கிகள், விமானத்தின் இறக்கைகளில் உள்ள வாயு வழுக்கிகளை விட மிகவும் சிறியவை. காரணம் நீரானது வாயுவைப் போல் 1000 மடங்கு திணிவு [Density] உள்ளது! நீர் திண்மை யானதால், விமானம் போன்று அதி விரைவில் ஓடாமல், சிறிதளவு வேகத்திலே படகை நீரின் மேலே தூக்கி விடலாம்! நீரில் படகும் செல்லும் போது, நீர் வழுக்கிகள் நீரில் மூழ்கிய நிலையில் மட்டுமே படகை மேலே தூக்கி வேகமாய்த் தள்ள முடியும். நீரை விட்டு நீர் வழுக்கிகள் பிரியும் போது, தொப்பென படகின் உடம்பு நீரில் விழுந்து சேதமாகி விடலாம்! படகு உடையா திருப்பின், நீர் வழுக்கிகள் நீரில் மூழ்கி, சீரான வேகம் அடையும் போது, மீண்டும் படகின் உடம்பு நீரை விட்டு மேலே தூக்கப்படும்!

விமானத்துக்கு முப்புறக் கட்டுப்பாடு [Thrust, Lift, Rudder (Pitch, Roll, Yaw)] உள்ளது போல், நீர் வழுக்கியும் முப்பக்கங்களில் ஆட்சி செய்யப்பட வசதிகள் தேவைப் படுகின்றன. மேலும் விமானத்தைப் போலின்றி, நீர் வழுக்கிப் படகு நீரில் ஓரளவு குறிப்பிட்ட ஆழத்தைத் தொடர்ந்து நிலைப் படுத்த வேண்டும்! தற்கால ஜெட் விமானங்களுக்கு சுமார் 40,000 அடி எல்லை வரை உயர வீச்சு [Altitude Range] உள்ளது போல், நீர் வழுக்கிப் படகைத் தாங்கும் தூண் அல்லது கால் [Strut] உயர அளவே வரையறையாக இருக்கிறது.

நவீன வர்த்தகத் துறை நீர் வழுக்கிப் படகுகள் ஏணி வழுக்கிகளைக் [Ladder Foils] கொண்டவை. படகின் பின்னுள்ள ஏணி அமைப்பில் வழுக்கிகள் மற்றும் திசைதிருப்பிகள் [Rudders] இணைக்கப் பட்டுள்ளன. படகுக்கு உந்து விசை [Thrust] கொடுக்க இரண்டு சுழலிகள் [Twin Rotors or Propellers] பிணைக்கப் பட்டிருக்கின்றன. மேல் எழுச்சியைத் தருபவை, நீர் வழுக்கிகள். படகு நீரில் முன்னோக்கி விரையும் போது, நீர் வழுக்கிகள் நீரோட்டத்தில் எழுச்சியை உண்டாக்கிப் படகைத் தூக்குகின்றன. நீர் ஊர்திகள் [Watercrafts (Hydrofoil Boats)] வேறு, வாயு மெத்தை ஊர்திகள் [Hovercrafts] வேறு. இரண்டு ஊர்திகளிலும் படகு உடம்பு [Hull] நீருக்கு மேலே தூக்கப்படினும், அவை எழும்பும் பொறி நுணுக்க முறைகள் முற்றிலும் மாறுபட்டவை! நீர் ஊர்தியில் நீர் வழுக்கிகள் படகுக்கு எழுச்சியை ஏற்படுத்தும் போது, வாயு மெத்தை ஊர்தியில், வாயு அடுக்கு [Layer of Air] எழுச்சியைக் கொடுக்கும்.

பெல் குழுவினரும் மற்றோரும் அமைத்த நீர் ஊர்திகள்

1861 ஆம் ஆண்டிலேயே நீர் வழுக்கித் தட்டுகள் இங்கிலீஷ் கால்வாயில் வெற்றிகரமாகச் சோதிக்கப் பட்டன என்று அறியப்படுகின்றது. 1906 மார்ச்சில் பெல், சையன்டிபிக் அமெரிக்கன் இதழில் நீர் வழுக்கி முன்னோடி நிபுணர் வில்லியம் மீச்சம் [William Meacham] எழுதிய கட்டுரையைப் படித்ததாகத் தெரிகிறது. பெல்லும் அவரது கூட்டாளி கேசி பால்டுவினும் [Casey Baldwin] 1908 ஆம் ஆண்du வேனிற் காலத்தில் நீர் வழுக்கிச் சோதனைகளில் முற்பட்டதாக அறியப்படுகிறது. அவரது குறிக்கோள் விமானம் நீரில் ஓடி நீரிலிருந்தே மேலேற முடியுமா என்பதற்கு ஆய்வுகள் நடத்தியதாகத் தெரிகிறது. அவர்கள் மேலும் இத்தாலியப் படைப்பாளி என்ரிகோ ஃபார்லனினியின் பணிகளைப் பற்றியும் படித்தார்கள்.

1906 இத்தாலிய நிபுணர் என்ரிகோ ஃபார்லனினி [Enrico Forlanini] முதன்முதலில் ஏணிப்படி வழுக்கிகள் [Ladder System Foils] கொண்ட 60 H.P. ஆற்றலுள்ள எஞ்சின் ஓட்டும் இரண்டு உந்துசக்தி சுழலிகளைப் பூட்டிய ஒரு நீர் ஊர்தியை படைத்தார். சோதனையின் போது அவ்வாகனம் மணிக்கு 42.5 மைல் வேகத்தில் சென்றது. 1909 இல் பெல் குழுவினர் தமது புதுவித நீர் வழுக்கிப் படகைத் தயாரித்து ஆராய்ந்தனர். 1910-1911 ஆண்டில் ஐரோப்பிய சுற்றுப் பிரயாணம் செய்த பெல் குடும்பத்தினரும், பால்டுவினும் இத்தாலிக்குச் சென்று, என்ரிகோ ஃபார்லனினி தயாரித்த நீர் ஊர்தியில் பயணம் செய்தனர். துரித இரயில் பயணம் போல் சுகமாக இருந்தது என்று பெல்லின் மனைவி மேபெல் [Mabel] தனது புதல்வி எல்ஸியுக்கு [Elsie] எழுதி யிருக்கிறார். வாகனத்தின் வேகம்: 45 mph. நீரில் ஊர்தி போகும் போது, அன்னம் நீந்தியது போல் நீர் கலங்காமல் இருந்திருக்கிறது.


1911 கோடையில் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் தனது HD1 நீர் ஊர்தியை அமைத்துச் சோதனை செய்தார். அவர் வாகனத்தில் பயன்படுத்தியது வாயுச் சுழலிகள் [Air Propellers]. கிடைத்த வேகம்: மணிக்கு 50 மைல் (50 mph). அட்லாண்டிக் பெருங்கடலில் எஞ்சின் இல்லாமலே, மாபெரும் நீர் வழுக்கிகள் கொண்ட பயணப் படகை ஒழுங்காக ஓட்டிவர முடியும் என்று பெல் கருதினார். அடுத்து 1912 அக்டோபரில் HD2 நீர் ஊர்தியை பெல் குழுவினர் தயாரித்தனர். அதன் கட்டமைப்புத் தளவாடங்களில் [Equipment] ஒன்று முறிந்து, வாகனம் முடமானது. 1913 இல் தயாரிக்கப் பட்ட HD3 வாகனம் விமானத்தைப் போன்று காணப் பட்டது. அது சரியாக இயங்காமல் பெல்லுக்குப் பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. அமெரிக்கக் கடற்படை துறைக்கு [United States Navy Dept] HD3 வாகன இயக்க முறைகள் திருப்பி அளிக்க வில்லை. 1919 இல் 400 H.P. ஆற்றலுடைய லிபர்டி எஞ்சின் [Liberty Engine] பூட்டியுள்ள HD4 நீர் ஊர்தியைப் பெல் குழுவினர் அமைத்தார்கள். ரெனால்டு எஞ்சின்கள் மாட்டிய போது வேகம் 54 mph கிடைத்தது. இரண்டு 350 H.P. லிபர்டி எஞ்சின் பூட்டிய போது, கிடைத்த வேகம் 70.86 mph; அடுத்த 10 ஆண்டுகளாக யாரும் அந்த வேகத்தை மிஞ்ச வில்லை. அந்த நீர் ஊர்தி கனடாவின் கேப் பிரிடன் தீவில் உள்ள பெடாக்கில் பெல் குடும்பத்தினர் வாழ்ந்த போது [Lakes near Baddeck] சோதிக்கப்பட்டதாக அறியப்படுகிறது.

1950 இல் தயாரிக்கப் பட்ட XCH4 கார்ல் படகு [XCH4 Carl Boat] கடல் விமானம் [Seaplane] என்று அழைக்கப் பட்டது. அது பயன்படுத்தியது 250 H.P. ஆற்றல் கொண்ட இரட்டை எஞ்சின்கள். போயிங் கம்பெனி 1960 மத்திம ஆண்டு காலங்களில் 425 H.P. ஆற்றல் உள்ள போயிங் வெப்ப வாயு டர்பைனைப் [Boeing Gas Turbine Engine] பயன்படுத்தி சுமார் 52 mph வேகத்தை எட்டியது.

(பறக்கும் வான ஊர்தி கண்டுபிடிப்புப் பற்றி அடுத்த கட்டுரையில் காண்போம்)

[கட்டுரை தொடரும்]


*************

தகவல்:

1. Alexander Graham Bell, The Life & Times of the Man Who Invented the Telephone By: Grosvener & Wesson (1997)

2. Working at Inventing, Thomas A. Edison & Menlo Park Experience By: William S. Pretzer (1993)

3. The History of the Telephone, Electronic Text Center, University of Virginia Library

4. The New Book of Knowledge By: Grolier Incorporated (1984)

5. Encyclopaedia of Britannica (1978)

6. The Children ‘s Encyclopedia of Science (1985)

7. Science & Technology The Marshall Cavendish Illustrated Encyclopedia (1979)

8. The Living World of Science in Colour (1966)

9. Britannica Concise Encyclopedia [2003]

10 Alexander Graham Bell & the Hydrofoils By: Robert V. Bruce (1973)

11 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: அமெரிக்க ஆக்கமேதை தாமஸ் ஆல்வா எடிஸன் (http://www.thinnai.com/science/sc0302023.html) [மார்ச் 2, 2002]

12 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: மார்க்கோனியின் கம்பியில்லாத் தகவல் தொடர்பு (http://www.thinnai.com/science/sc0203022.html) [பிப்ரவரி 2, 2002]

13 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: ரைட் சகோதரர்கள் விமானக் கண்டுபிடிப்பு

(http://www.thinnai.com/science/sc0330021.html) [மார்ச் 30, 2002]

14 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: ரைட் சகோதரர்கள் (நூறாண்டுப் பூர்த்தி விழா) (http://www.thinnai.com/science/sc1218031.html) [டிசம்பர் 18, 2003]

*******************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (December 6, 2009)]

ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் : தொலைபேசி கண்டுபிடிப்பு -1

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்
(1847-1922)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


‘இயற்கை அன்னை ஒரு பணியைப் புரிய வேண்டி இருந்தால், அதைச் செய்து முடிக்க ஓர் ஆக்க மேதையைப் படைக்கிறாள்!’

ரால்ஃப் வால்டோ எமர்ஸன் (1803-1882)

‘மிஸ்டர் வாட்ஸன், இங்கே வாருங்கள், உங்களைப் பார்க்க விரும்புகிறேன்.”

அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் படைத்த முதல் டெலிஃபோனில் நடந்த உரையாடல் (மார்ச் 10, 1876)

‘படைப்பு மேதைக்கு ஆக்க உணர்வு ஒரு சதவீதம்! வேர்க்கும் உழைப்பு தொன்னூற்றி ஒன்பது சதவீதம்!’ தாமஸ் ஆல்வா எடிஸன் (1847-1931)

முன்னுரை: பத்தொன்பதாம் நூற்றாண்டில் இரண்டாம் தொழிற் புரட்சி மலர்ந்த போது, தகவல் தொடர்பு [Communication] வளர்ச்சி அடைய முப்பெரும் ஆக்க மேதைகள் மின்சாரம், மின்காந்த அலைகள் (Radio Waves) ஆகியவற்றைப் பயன்படுத்தி மெய்வருந்தி உழைத்தார்கள்! கம்பியின் மூலம் தகவல் தந்தி [Telegraph] அனுப்பும் முறையைச் செம்மைப் படுத்திப் பிறகு பெல் தயாரித்த தொலைபேசி அனுப்பியைச் சீர்ப்படுத்திய அமெரிக்க மேதை, தாமஸ் ஆல்வா எடிஸன். கம்பி வழியாக வாய்ப் பேச்சை அனுப்பி, பதிலையும் கேட்கும் தகுதியுள்ள தொலைபேசியை [Telephone] முதலில் படைத்த அடுத்த அமெரிக்க மேதை, அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல். மூன்றாவது கம்பியில்லா தொடர்பைப் [Wireless Communication] படைத்த இத்தாலிய விஞ்ஞானி மார்க்கோனி. இருபதாம் நூற்றாண்டில் தொலைபேசித் தொடர்பும், கம்பியில்லாத் தொடர்பும், தொலைகாட்சித் தொடர்பும் பன்மடங்கு விருத்தியாகி, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் எல்லாவிதத் தொடர்புகளும் கம்பியில்லா தொடர்புகளாய் மாறிக் கொண்டு வருகின்றன! பத்தொன்பதாம் நூற்றாண்டில் கடவுள் படைத்த உன்னத ஆக்கவினை யந்திர நிபுணர்களாய்க் கருதப் படுபவர்கள்: எடிஸன், பெல், மார்க்கோனி, ரைட் சகோதர்கள். அவர்கள் அனைவரும் வடஅமெரிக்க மண்ணில் ஆய்வுகள் நடத்தி, யந்திர யுகத்தை உலகத்தில் ஆலமர விழுதுகளாய்ப் பெருக்கியவர் என்று போற்றப்படுவர்கள். தந்தித் தகவல் தளவாடங்களை தாமஸ் எடிஸன் செம்மைப் படுத்தி வரும் போது, பெல் வாய்ச் சொற்களை நேரடியாக எவ்விதம் மின் சமிக்கையாக மாற்றிக் கம்பி வழியாக அனுப்பி அப்பால் காதில் கேட்பது என்ற ஆய்வுச் சோதனைகளில் மூழ்கி இருந்தார். 1861 இல் ஃபிலிப் ரெய்ஸ் ஜெர்மனியில் முதலில் பாதரஸ திரவத்தைத் [Mercury Liquid] தொடர்பு அனுப்பியில் [Transmitter] பயன்படுத்தி ஒரு தொலைபேசிச் சாதனத்தைப் படைத்தார். தாமஸ் எடிஸன் 1875 இல் தனது உதவிப் பொறியாளர் ஜேம்ஸ் ஆடம்ஸை ஜெர்மன் நிபுணரின் மாடலைப் பின்பற்றி ஒரு தொலைபேசியைத் தயாரிக்க ஏற்பாடு செய்தார்.

முதல் தொலைபேசிக்கு அடித்தளமிட்ட நிபுணர்கள்

1832 இல் அமெரிக்க மேதை சாமுவேல் மோர்ஸின் [Samuel Morse] புள்ளிக் குறியைப் [Morse Code (Dot & Dash)] பயன்படுத்தி விருத்தி செய்த தந்தித் தகவல் அனுப்பு முறை உலக நாடுகளில் 1844 ஆண்டு முதல் தொடர்ந்து உபயோகப் பட்டது. நேர்திசை மின்னோட்டத்தைப் [Direct Current] பயன்படுத்தி மின்காந்தச் சுற்றுக் கலன்களைக் [Electrical Solenoids] கொண்டு தந்தி அனுப்பு முறை ஏற்பாடுகள் தயாராயின. அதற்குப் பின்பு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதிக் காலத்தில், மின்கம்பி மூலமாக நேரடிப் பேச்சில் தொடர்பு கொள்ளும் தொலைபேசி முறையைப் படைக்க நிபுணர்கள் போட்டி யிட்டனர். ஒலி அலைகளை எப்படி ஒப்பான மின்சாரத் துடிப்புகளாய் [Electric Pulses] மாற்றிக் கம்பியில் அனுப்பி, மீண்டும் ஒலி அலைகளாய்க் கேட்பது என்பதே அக்காலத்தில் சவாலாக இருந்தது!

முதன்முதலில் 1861 இல் ஜெர்மன் மேதை ஃபிலிப் ரெய்ஸ் [Philips Gray] ஒலி அனுப்பிச் சாதனம் ஒன்றை அமைத்தார். ஒரு பெட்டிக்குள் இருக்கும் துளை ஒன்றின் மீது, இழுத்து மூடப்பட்ட தகடு ஒன்று வைக்கப் பட்டது. தகடின் பின்புறத்தில் பிளாட்டினத் தட்டு இணைப்பாகி யிருந்தது. பிளாட்டினத் தட்டு முன் புறத்தில் ஒரு பிளாட்டினக் கம்பியைத் தொடும்படி அல்லது நெருங்கும்படிப் பக்கத்தில் அமைப்பாகி யிருந்தது. ஒலிச்சக்தி அசைவுக் கேற்ப மெல்லிய தகடு அசையும் போது, பிளாட்டினத் தட்டு கம்பியைத் தொட்டும், தொடாமலும் மின்னோட்டத்தைக் கூட்டிக் குறைத்து மூலக் குரலுக்கு ஒப்பான ஒலியைக் கேட்கும்படி அனுப்புகிறது. பார்க்கப் போனால் ஃபிலிப்ஸ் ரெய்ஸின் சாதனம் மிக எளிதானது. இசை நாதங்களை அது அனுப்ப முடிந்தாலும், மனிதரின் சிக்கலான அதிர்வுகள் கொண்ட வாக்கு மொழிகளைச் செம்மையாக அனுப்புவதற்குத் தகுதி அற்றது. காரணம் அவர் அனுப்பியில் பயன்படுத்திய திரவம் அடர்த்தியான, ஒலி அதிர்வுகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்காத பாதரஸம்!

அமெரிக்காவில் ஏறக்குறைய ஒரே காலத்தில் மூன்று படைப்பாளிகள் தொலைபேசியை ஆக்க முற்பட்டனர். 1871 ஆண்டு அமெரிக்காவில் வாழ்ந்த இத்தாலிய நிபுணர் அண்டோனியோ மியூச்சி [Antonio Meucci] ஒருவர். ஐந்தாண்டுகளுக்குப் பிறகு முயன்றவர் இருவர்: ஸ்காட்லண்டில் பிறந்து அமெரிக்கரான அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல், அடுத்த அமெரிக்கர் எலிஸா கிரே [Elisha Gray (1835-1901)]. ஆனால் அவர்களில் வாய்ப் பேச்சை அனுப்பவும், காதில் கேட்கவும் பழக்கத்திற்குப் பயன்படும் தொலைபேசிச் சாதனத்தை முதலில் ஆக்கிப் பதிவு செய்தவர் அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் மட்டுமே! சிறப்பாக வேலை செய்த எலிஸா கிரேயின் சாதனம் ஒரே சமயத்தில் தயாரானாலும், யார் முதலில் படைத்தவர் என்ற வழக்குப் போட்டியில் பெல் ஒருவரே வெற்றி பெற்றார். அவரே தொலைபேசியின் முதல் படைப்பாளர் என்றும் உலகத்தில் கருதப் படுகிறார். தனது புதிய கருவியைப் பெல் விரைவில் வர்த்தகத் தொழிற்துறை உற்பத்திக்குப் பயன்படப் பதிவு உரிமை பெற்றார். ஆயினும் அவரது தொலைபேசிச் சாதனத்தில் ‘தகவல் வாங்கி ‘ [Receiver] மட்டுமே முறையாகப் பணியாற்றியது! பெல் ஆக்கிய தொலைபேசியில் செம்மையாக வாக்குச் சமிக்கைகளைத் ‘தகவல் அனுப்பி ‘ மூலம் [Transmitter] சரிவர அனுப்ப முடியவில்லை!

தாமஸ் எடிஸன் செம்மைப் படுத்திய தகவல் அனுப்பி

முதலில் படைக்கப் பட்ட தொலைபேசியில் சாதனப் பழுதுகள் மிகையாக இருந்தன.

மென்மையான குரல் ஒலி அதிர்வுகள் சரிவரக் காதில் படாமலே மாய்ந்து போயின. பெல் தயாரித்த முதல் சாதனம் வெளிவந்த ஓராண்டுக்குப் பிறகு, 1878 இல் தாமஸ் ஆல்வா எடிஸனும், ஹென்றி ஹன்னிங்ஸ் [Henry Hunnings] என்பவரும் ‘கரித்துகள் தகவல் அனுப்பி ‘ [Carbon Granule Transmitter] என்னும் சிறப்பான ஒரு புதுவிதத் தகவல் அனுப்பியைத் தயாரித்தனர். ஒலிச்சக்தியின் அழுத்தப் பண்பைப் பயன்படுத்தி, கரித்துகள்களின் அடர்த்தியைக் கூட்டிக் குறைத்து, எடிஸன் ஒலி சமிக்கையின் தன்மையை மின்கம்பியில் அடுத்த முனைக்குத் தெளிவாக அனுப்ப முடிந்தது. கரி ஒரு சிறப்பான மின்சாரக் கடத்தி [Electrical Conductor] என்பது குறிப்பிடத் தக்கது. கரித்துகள்களை ஒரு கலனில் இட்டு அதன் அடர்த்தியை மிகையாக்கினால், மின்தடை குன்றிக் கம்பியில் மிகையான மின்னோட்டம் உண்டாகும். மாறாக கலனில் கரித்துகள்களின் அடர்த்தி தளர்ந்தால், மின்தடை கம்பியில் மிகுந்து, மின்னோட்டம் குறைகிறது. இந்த நியதியையே ஒலிச்சக்தி அனுப்புதற்கு எடிஸன் தனது அனுப்புச் சாதனத்தில் பயன்படுத்தினார்.

நவீனத் தொடர்பு தகவல் அனுப்பியின் அமைப்பு

தற்போதுள்ள தகவல் அனுப்பியில் அலுமினிய உலோகக் கலவைத் தகடு [Aluminium Alloy Diaphragm] ஒன்று குமிழ் வடிவான கரிக்கட்டியுடன் இணைக்கப் பட்டிருக்கிறது. இந்த குமிழ்க் கரிக்கட்டி கரித்துகள் நிரம்பி இருக்கும் குழிந்த கரிக்கலன் ஒன்றின் உள்ளே அமைந்துள்ளது. இவ்விருக் கரி முனைகளும் (குமிழ்க் கரிக்கட்டி ஒரு முனை, குழிந்த கரிக்கலன் மறு முனை) மின்சாரக் கம்பியால் மற்ற மின்சாரச் சாதனங்களோடு இணைக்கப் பட்டுள்ளன. குரல் ஒலி உச்சரிப்புக்கு ஏற்ப எழும் காற்று அழுத்தத்தால் கரித்துகள்கள் நெருக்கப் பட்டோ அல்லது விடுவிக்கப் பட்டோ மின்தடையை [Electrical Resistance] குறைத்துக் கூட்டுகிறது. அப்போது சுற்றில் மின்னோட்டம் ஒலி உச்சரிப்புக்கு ஏற்ப ஒப்புநிலையில் ஏறி, இறங்கி ஒரு முனையில் வாங்கும் வாக்கு ஒலி மறு முனையில் அதே முறையில் அனுப்பப் படுகிறது. பெல் முதலில் தயாரித்த காதுமுனைச் சாதனம் [Earpiece] ஒரு நிரந்தரக் காந்த சாதனமும் [Permanent Magnet], மின்காந்தச் சாதனம் [Electro Magnet] ஒன்றின் மீது இயங்கும் மற்றோர் இரும்புத் தகடும் கொண்டிருந்தது. தற்போதுள்ள நவீனத் தொடர்பு தகவல் வாங்கிகளில் அவ்வித அமைப்பே பயன்பட்டு வருகிறது.

அடுத்த கட்டுரையில் தொலைபேசியைப் படைக்க அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் செய்த முயற்சிகளையும், அவரது வாழ்க்கை வரலாற்றையும், மற்ற படைப்புகளையும் காண்போம்.

[கட்டுரை தொடரும்]

தகவல்:

1. Alexander Graham Bell, The Life & Times of the Man Who Invented the Telephone By: Grosvener & Wesson (1997)

2. Working at Inventing, Thomas A. Edison & Menlo Park Experience By: William S. Pretzer (1993)

3. The History of the Telephone, Electronic Text Center, University of Virginia Library

4. The New Book of Knowledge By: Grolier Incorporated (1984)

5. Encyclopaedia of Britannica (1978)

6. The Children ‘s Encyclopedia of Science (1985)

7. Science & Technology The Marshall Cavendish Illustrated Encyclopedia (1979)

8. The Living World of Science in Colour (1966)

9. Britannica Concise Encyclopedia [2003]

10 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: அமெரிக்க ஆக்கமேதை தாமஸ் ஆல்வா எடிஸன் (http://www.thinnai.com/science/sc0302023.html) [மார்ச் 2, 2002]

11 திண்ணை விஞ்ஞானக் கட்டுரை: மார்க்கோனி (http://www.thinnai.com/science/sc0203022.html)  [பிப்ரவரி 2, 2002]

*****************

S. Jayabarathan (jayabarat@tnt21.com)  December 5, 2009

பிரபஞ்சத்தின் மகத்தான எழுபது புதிர்கள் ! கரும்பிண்டம் வடித்த பேரளவு பெரிதான ஒளிமந்தைக் கொத்துகள்

(Galaxy Superclusters)

(கட்டுரை: 67)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பில்
பிறந்த பேரளவு
ஒளிமந்தைக் கொத்துகள்
ஆயிரம் ஆயிரம் ஆயிரம் !
அவற்றில்
மையக் கருந்துளைச் சுற்றி
வட்டமிடும்
விண்மீன்கள் கோடான கோடி !
கண்ணுக்குப் புலப்படா
கரும்பிண்டம் ஈன்ற
ஒளி விண்மீன்கள்
ஒருமைப்பட்டு
ஐக்கியமாகி உள்ளன !
கரும்பிண்டம், வெப்ப முகில்
உருவாக்கிய
பூதக் காலக்ஸி சந்தைகள்
ஈர்ப்பு விசையால்
கவர்ந்து கொள்ளும்
தருணத்தில்
கருஞ்சக்தி விரைவாக்கி
பிரபஞ்சக் கூண்டை எப்படி
விரிய வைக்கும் ?

“M-87 காலக்ஸியிலிருந்து 130,000 ஒளியாண்டு தூரத்திற்குள் நாங்கள் கோளச் சந்தைகளைக் (Globular Clusters) காணவில்லை.  பூதக் காலக்ஸி சிறிய காலக்ஸிகளிலிருந்து விண்மீன் கொத்துக்களை (Star Clusters) நீக்கியதை இது காட்டுகிறது.  இந்தச் சிறிய காலக்ஸிகளே M-87 உருவாகப் பங்கெடுத்துள்ளன.  நமது பால்வீதி காலக்ஸியில் விண்மீன்களைத் தவிர்த்து மங்கலாக உள்ள கோளச் சந்தைகளைப் படம் பிடித்துக் காட்டிய ஹப்பிள் தொலைநோக்கியின் விழிகள் மிக நுட்பமானவை.”

எரிக் பெங்க் (Eric Peng, Peking University, Beijing, China)

இந்த பௌதீக உலகத்திலே மர்மத்தைத் தாண்டிச் சென்று குறிப்பிடாத ஒரு மர்மம் இல்லை ! அனைத்து அறிவு வீதிகளும், நியதிகளின் தனி வழிகளும், சிந்தனை யூகிப்புகளும் முடிவிலே, மனித மகத்துவம் தொட முடியாத ஒரு பிரதமக் கொந்தளிப்பை (Primal Chaos) நோக்கிச் செல்கின்றன.”

லிங்கன் பார்னெட் (பிரபஞ்சம் & டாக்டர் ஐன்ஸ்டைன்)

விண்வெளி வானியல் தொலைநோக்குகள் எப்போதும் நியதிகளை ஈடுபடுத்துபவை. பிரபஞ்சம் உப்பி விரியும் போது, காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்கின்றன! அதை வேறு விதமாகக் கூறினால், காலக்ஸிகள் நம்மை விட்டு விலகிச் செல்வதால், பிரபஞ்சம் உப்பி விரிகிறது என்பது தெளிவாகிறது! அதாவது பிரபஞ்சம் நிலையாக முடங்கிக் கிடக்கும் ஒரு கூண்டு என்று கருதக் கூடாது! அது சோப்புக் குமிழிபோல் உப்பிக் கொண்டே போகும் ஒரு பெருங்கோளம் !

வானியல் நிபுணர் எட்வின் ஹப்பிள்

ஒளிமந்தைக் (காலாக்ஸி) கொத்துகள் எப்படித் தோன்றின ?

பிரபஞ்சத் தோற்றத்தின் கட்டமைப்பு விளைவுகளில் காலக்ஸித் தீவுகளின் கூட்டங்கள்தான் (Galaxy Groups, Clusters) ஈர்ப்பு விசைக்குள் அடங்கிய மிகப் பெரும் வடிவம் கொண்ட விண்வெளிக் கண்டங்கள் (Gravitationally Bound Largest Space Objects) !  அவைதான் பிரபஞ்சத்திலே மிக்க திணிவு அடர்ந்த (Densest Part of the Universe) தளம் அகண்ட கண்டங்கள் !  குளிர்ந்த கரும்பிண்டம் சேர்ந்து ஈர்ப்பு விசைக்குள் அடங்கும் கட்டமைப்புகள் (Gravitational Bound Structures) உருவாகும் போது, சிறிய கட்டமைப்புகள் முதலில் சிதைந்து படிப்படியாக முடிவில் மாபெரும் வடிவாகி காலக்ஸி சந்தைகள் (Galaxy Clusters) தோன்றியுள்ளன !

ஒளிமந்தைச் சந்தைகள் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றத் துவங்கியிருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் யூகிக்கிறார்.  சாதாரணமாக ஒளிமந்தைச் சந்தையில் சுமார் 10 முதல் 1000 கணக்கான காலக்ஸிகள் இருக்கலாம் !  சந்தைகள் பொதுவாக மிகப் பெரும் குழுக்களோடு (Superclusters) நெருங்கியே இருக்கும்.

ஒளிமந்தைக் குழுக்கள் (Groups of Galaxies) என்பவை மிகச் சிறிய காலாக்ஸிகளைக் கொண்டவை.  அந்தக் குழுக்கள் ஒவ்வொன்றிலும் 50 குன்றிய எண்ணிக்கைக் காலாக்ஸிகள் இருக்கும்.  அவற்றின் அகலம் (விட்டம்) 1 முதல் 2 மெகா பார்செக் (Mega-Parsec) (1 parsec = 3.26 Light Year = 10^22 meter Distance).  குழு ஒன்றின் நிறை சுமார் 10^13 மடங்கு பரிதி நிறை .!  குழுக்களில் இயங்கும் காலக்ஸியின் நகர்ச்சி வேகம் சுமார் 150 km/sec (90 mps).  நமது பரிதி மண்டலம் நகரும் பால்வீதி காலக்ஸியானது 40 ஒளிமந்தைகள் உள்ள “உள்ளகக் குழுவில்” (Local Group) ஒன்றாக இயங்கி வருகிறது.

ஒளிமந்தைக் கொத்துகள் உள்ள பெரும் பகுதிக் கரும்பிண்டம்

வகுப்பு வரைக் கோடு இரண்டுக்கும் துல்லியமாய் இல்லா விட்டாலும் “காலக்ஸி குழுக்களை” விடப் பெரியவை “ஒளிமந்தைச் சந்தைகள்”.  விண்ணோக்கிகள் மூலம் காணும் போது பல்வேறு காலக்ஸிகளை கவர்ச்சி விசையால் பிணைத்துக் கொண்ட கொத்துக்கள் தென்படுகின்றன.  ஆயினும் அவற்றில் வேகம் (150 km/sec) (324,000 mph) மிகையானதால் ஈர்ப்பு விசையைப் பிணைப்பை தகர்த்து மீறும் வேறோர் கவர்ச்சி ஆற்றல் அருகில் காணப்படாமல் இருப்பது அறியப் படுகிறது.  எக்ஸ்-ரே மூலம் ஆராயப் பட்டதில் “உட்புறக் கொத்து வெளிப்பாடு” (Intra-cluster Medium) என்னும் பேரளவு வெப்பம் மிகுந்த “அகில ஒளிமந்தை வாயு” (Hot Inter-galatic Gas) இருப்பது தெரிந்தது. பிழம்பு வாயுவான (Plasma) அந்த வாயுவின் உஷ்ணம் (10^7 – 10^8) கெல்வின் (K).  அதனால்தான் “பிரம்ஸ்-ஸ்டிராலுங், அணுக்கோடு வீச்சு” (Brems-strahlung & Atomic Line Emission) மூலமாக எக்ஸ்-ரே கதிர்கள் அவற்றில் எழுகின்றன.

விந்தையாகச் சந்தையில் உள்ள ஒளிபிழம்பு வாயுவின் நிறை காலக்ஸிகளின் நிறையை விடச் சுமார் இரண்டு மடங்கு !  ஆயினும் இந்த நிறை கூட காலக்ஸிகளை சந்தைக்குள் வைத்திடப் போதுமானதாக இருப்பதில்லை !  அத்துடன் அந்த வாயு முழுமையாக சந்தையின் ஈர்ப்பு விசைக்கு “திரவ-நிலைப்புச் சமநிலையில்” (Hydro-static Equilibrium) இருப்பதால், மொத்தம் நிறைப் பரிமாற்றத்தைக் கணிக்க முடிகிறது.  அந்த நிறையானது காலக்ஸிகளின் நிறையைப் போல் அல்லது ஒளிப்பிழம்பு வாயுவின் நிறையைப் போல் சுமார் 6 மடங்கு என்று தெரிகிறது.  அவ்விதம் காணத் தவறிய பகுதிதான் கரும்பிண்டம்.  குறிப்பிட்ட ஒரு சந்தையில் உள்ள காலக்ஸிகள் நிறை : 5%, ஒளிப் பிழம்பு வாயு : 10%, மீதம் 85% கரும்பிண்டம் என்று கருதப்படுகின்றன.

ஒளிமந்தைக் கொத்துகளின் வானியல் பண்பாடுகள்

1.  காலக்ஸி சந்தைகளில் 50 முதல் 1000 ஒளிமந்தைகள் இருக்கலாம்.  மேலும் அவற்றின் எக்ஸ்-ரே கதிர்கள் உமிழும் மிக்க உஷ்ணமான வாயுப் பிழம்பும், பேரளவு கரும்பிண்டமும் கொண்டவை.

2.  சந்தைகளின் மேற்கூறிய மூன்று உட்பகுப்புகளும் (Components) சம நிலையில் பரவியுள்ளதாக அறியப்படுகிறது.

3.  ஒளிமந்தைச் சந்தைகளின் மொத்த நிறை : (10^14 – 10^15) அல்லது (100 பில்லியன்–1000 பில்லியன்) மடங்கு பரிதியின் நிறை.

4.  சந்தைகளின் அகலம் அல்லது விட்டம் (2 –10 Mpc) (Mega-Parsec) (1 parsec = 3.26 Light Year = 10^22 meter Distance).

5.  சந்தைகளில் நகரும் காலக்ஸி ஒவ்வொன்றின் வேகம் சுமார் : (800 –1000) km/sec. (480 — 600) miles/sec.

பிரபஞ்சத்தில் குறிப்பிட்ட சில ஒளிமந்தைக் கொத்துகள்

அருகில் தெரியும் பிரபஞ்ச காலக்ஸி சந்தைகள் :  விர்கோ சந்தை (Virgo Cluster), ஹெர்குலிஸ் சந்தை (Hercules Cluster), கோமா சந்தை (Coma Cluster),  நார்மா சந்தை (Norma Cluster) தலை தூக்கிய “மாபெரும் கவர்ச்சியாளி” (Great Attractor) எனப்படும் காலக்ஸிகளின் கூட்டம்.  மாபெரும் கவர்ச்சியாளி பிரபஞ்ச விரிவையே பாதிக்கச் செய்வது !

ஒளிமந்தைச் சந்தைகளை விண்மீன் கொத்துக்களோடு (Star Clusters) குழப்பிக் கொள்ளக் கூடாது.  அதுபோல் காலக்ஸிக் கொத்துக்கள், திறந்த கொத்துக்கள், கோளக் கொத்துக்களோடும்  (Galactic Clusters, Open Clusters, Gobular Clusters) குழப்பம் அடைவதும் சரியல்ல.  விண்மீன் கொத்துக்கள், காலக்ஸிக் கொத்துக்கள், திறந்த கொத்துக்கள், கோளக் கொத்துக்கள் ஆகிய நான்கும் காலக்ஸியின் உள்ளே காலக்ஸிகளைச் சுற்றி வருபவை !

காலக்ஸி சந்தைகளைக் காணும் முறைகள்

1.  தொலைநோக்கு அல்லது உட்சிவப்பு முறை (Optical or Infrared Method) :

தனிப்பட்டிருக்கும் காலக்ஸி மந்தைகளை தொலைநோக்கு, உட்சிவப்பு, ஒளிப்பட்டை (Spectroscopy) முறைகள் மூலம் உளவி அறியலாம்.  பிரபஞ்ச விண்வெளியில் திணிவு மிகைப்பாடுகளைத் (Over-densities) தேடிக் கண்டு ஒரே உட்சிவப்பு நகர்ச்சியில் (Redshift) உள்ள பற்பல காலக்ஸிகளைப் பார்த்து உறுதிப் படுத்தலாம்.

2.  எக்ஸ்-ரே தொலைநோக்கி முறை (X-Ray Telescope Method) :

வெப்பம் மிகையான ஒளிப்பிழம்பு வாயு (Hot Plasma Gas) உமிழும் எக்ஸ்-ரே கதிர்களை எக்ஸ்-ரே தொலைநோக்கி அல்லது எக்ஸ்-ரே ஒளிப்பட்டை மூலம் கண்டு விடலாம்.

3.  ரேடியோ வானலை முறை (Radio Wave Method) :

ஒளிமந்தைச் சந்தைகளில் பல்வேறு கட்டமைப்புச் சிதறல்கள் (Diffuse Structures) ரேடியோ வானலை அதிர்வுகளை (Radio Frequencies) வெளி வீசுகின்றன.  அந்தக் கதிரலை வீச்சுகளை உளவித் தேடி உருவாகும் பிள்ளைப் பிராய காலக்ஸி சந்தைகளை (Proto-clusters) அறிய முடியும்.

4.  சன்னியாவ்-ஸெல்டோவிச் விளைவு முறை (Sunyaev-Zel’dovich Effect) :

வெப்பசக்தி மிகுதியான எலெக்டிரான்கள் “உட்புறக் கொத்து வெளிப்பாடு” (Intra-cluster Medium) அகிலவெளி நுண்ணலைப் பின்புலத்தில் (Cosmic Microwave Background) (CMB) சிதறிய
கதிர்வீச்சு CMB இல் ஒருசில ரேடியோ அதிர்வுகளில் ஒரு நிழலை உண்டாக்குகிறது.  அந்த விளவுகளை உளவி ஒளிமந்தைச் சந்தையைக் காண முடியும்.

5.  ஈர்ப்பு விசை குவியாடி முறை (Gravitational Lesing Method) :

ஈர்ப்பு விசை குவியாடி முறைப்பாட்டில் பின்னால் இருக்கும் காலக்ஸிகளின் இடத்தைத் திரித்துக் காட்ட ஒளிமந்தை சந்தைகளில் போதிய அளவுப் பிண்டம் உள்ளது.  அந்தத் திரிபுகள் மூலமாக சந்தைகளில் கரும்பிண்டம் பரவியிருப்பதையும் தெரிந்து கொள்ள இயலும்.

பிரபஞ்ச காலாக்ஸிகள் எப்படித் தோன்றின ?

அகிலவியல் தத்துவங்களின் (Cosmology) விளக்கங்கள் வானியல் தொலைநோக்குகளின் தேடல் மூலமாக விரைவாக விருத்தியாகும் போது, பிள்ளைப் பிராந்தியத்தில் பிரபஞ்சத்தின் (Infant Universe) பிண்டமானது எவ்வித யந்திரவியல் நியதியில் ஒன்றாய்ச் சேர்ந்தன என்பதை விஞ்ஞானிகள் இப்போது கூர்ந்து ஆராய்ந்து வருகிறார்கள்.  நமக்கு எழும் கேள்வி இதுதான் : எவை முதன்முதலில் தோன்றியன ?  காலாக்ஸிகளா ?  விண்மீன்களா ?  அல்லது கருந்துளைகளா ?  பிள்ளைப் பிரபஞ்சம் ஆதியில் பல்லாயிரக் கணக்கான டிகிரி உஷ்ணமுள்ள வாயுக்களும், கருமைப் பிண்டமும் (Dark Matter) சீராகக் கலந்திருந்த கடலாக இருந்துள்ளது.

கண்ணுக்குப் புலப்படாத, மர்மான, பிரதானமான பெரும்பிண்டம் இருந்ததற்குக் காலாக்ஸிகளின் மீது உண்டான பூத ஈர்ப்பியல் பாதிப்பே மறைமுக நிரூபணங்களாய் எடுத்துக் கொள்ளப் பட்டன.  ஆயினும் காலாக்ஸிகள், விண்மீன்கள், கருந்துளைகள் எப்படி ஒருங்கே சேர்ந்திருந்தன என்பதுதான் விஞ்ஞானிகளைச் சிந்திக்க வைக்கும் பிரபஞ்சத்தின் புதிர்களாகவும், மர்மமாகவும் இருக்கின்றன !

பிரபஞ்சத்தின் நுண்ணலைப் பின்புலத்து விளைவுகளின் (Microwave Background Effects) மூலம் ஆராய்ந்ததில், பிரபஞ்சம் குளிர்ந்திருந்த போது, பிண்டம் ஒன்றாய்த் திரண்டு, பெரு வெடிப்புக்குப் பிறகு 380,000 ஆண்டுகள் கழிந்து “பளிங்குபோல்” (Transparent) இருந்தது என்று கருதுகிறார்கள் !  பெரு வெடிப்புக்குப் பின் 1 பில்லியன் ஆண்டுகள் கடந்து, பிரபஞ்சத்தின் கட்டமைப்புகளான விண்மீன்களும், காலாக்ஸிகளும் உருவாயின என்று கருதப்படுகிறது.

1950 ஆண்டுகளில் கலி·போர்னியா மௌண்ட் வில்ஸன் வானேக்ககத்தில் பணிபுரிந்த முன்னோடிகளில் ஒருவரான, ஜெர்மென் வானியல் வல்லுநர் வில்ஹெம் வால்டர் பாடே (Wilhem Walter Baade) காலாக்ஸிகளில் உள்ள விண்மீன்களை ஆராய்ந்து, காலாக்ஸிகள் எப்படித் தோன்றின என்று அறிந்தார்.  நமது பால்மய வீதியைச் சுற்றியுள்ள ஒரு குழு விண்மீன்களில் ஹைடிரஜன், ஹீலியத்தை விடக் கனமான உலோகங்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார் ! 11 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியவை, அந்தப் பூர்வீக விண்மீன்கள் !  சூப்பர்நோவா வெடிப்பு அல்லது மற்ற விண்மீன் சிதைவு இயக்கங்களால் விண்வெளியில் வீசி எறியப்பட்ட உலோகங்கள், நமது காலாக்ஸியின் இளைய தலைமுறை விண்மீன்களில் விழுந்துள்ளன !

ஹப்பிள் கண்டு பிடித்த அகில வெளி மெய்ப்பாடுகள்

அமெரிக்க வானியல் நிபுணர், எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] 1929 ஆம் ஆண்டில் கண்டு பிடித்த விண்வெளி விந்தை பெரு வெடிப்பு நியதிக்கு ஆணித்தரமான சான்றாக ஆனது! வெகு தொலைவு காலக்ஸிகள் [Galaxies] விடும் ஒளிநிறப் பட்டையை [Light Spectrum], சக்தி வாய்ந்த பூதத் தொலை நோக்கி மூலம் ஆராய்ந்த போது, அது செந்நிற விளிம்பை நோக்கிப் பெயர்வதைக் [Redshift, செந்நிறப் பெயர்ச்சி] கண்டார்! ‘டாப்பிளர் விளைவு’ [Doppler Effect] கூற்றுப்படி செந்நிறப் பெயர்ச்சிக் காலக்ஸிகள் ஒன்றை விட்டு ஒன்று விலகி அப்பால் போகின்றன என்று தெளிவாக நிரூபிக்கிறது! மேலும் காலக்ஸிகளின் தூரம் அதிகமாக அதிகமாக, அவற்றின் வேகமும் மிகையாகிறது, என்றும் எட்வின் ஹப்பிள் கண்டுபிடித்தார்.

1920 ஆண்டுகளின் துவக்கத்தில் ஹப்பிள் காலக்ஸிகள் யாவை என்று ஆய்வுகள் செய்தார். சில சுருள் நிபுளாக்கள் [Spiral Nepulae] தமக்குள்ளே தனித்தனி விண்மீன்களைக் கொண்டதாக எண்ணிய கருத்து, உறுதிப்படுத்தப் படாமலே இருந்தது! அவ்விண்மீன் கூட்டம் நமது காலக்ஸியைச் சேர்ந்ததா அல்லது தனிப் பட்ட ‘பிரபஞ்சத் தீவைச்’ [Island of Universe] சார்ந்ததா வென்று ஐயம் எழுந்தது!

1924 இல் ஹப்பிள் 100 அங்குல தொலைநோக்கி மூலம் ‘ஆன்ரோமேடா நிபுளாவின் ‘ [Andromeda Nebula] தூரத்தை அளந்து, அது நமக்கு அருகில் உள்ள விண்மீன் கூட்டத்திற்கும் அப்பால் நூறாயிரம் மடங்கு தொலைவில் இருப்பதாகக் காட்டினார்! நமது பால்மய வீதிக்கு [Milky Way] ஒப்பான வடிவில், ஆனால் அப்பால் வெகு தூரத்தில் உள்ள ஓர் தனிக் காலக்ஸி [Separate Galaxy] என்றும் கூறினார்!

ஹப்பிள் காலக்ஸிகளின் தூரத்தைக் மட்ட அச்சிலும் [X axis], அவற்றின் செந்நிறப் பெயர்ச்சிகளை நேர் அச்சிலும் [Y axis] குறித்து வரைந்த போது, எதிர்பாராத விதமாக ஒரு நேர் கோடு உருவாகியது! அதாவது காலக்ஸிகளின் தூரங்கள், அவை அப்பால் விலகிச் செல்லும் வேகங்களுக்கு நேர் விகிதத்தில் உள்ளன [Redshifts or speeds of the Galaxies are directly proportional to their distances] என்ற விந்தையான ஓர் உடன்பாட்டைக் கண்டு பிடித்தார்! காலக்ஸியின் தூரத்துக்கும், செல்லும் வேகத்துக்கும் உள்ள இந்த அரிய உடன்பாடே, ‘ஹப்பிளின் விதி’ [Hubble ‘s Law] என்று கூறப்படுகிறது. காலக்ஸிகளின் செந்நிறப் பெயர்ச்சியைக் [Red-Shift] கண்டால், அவை நம்மை விட்டு அப்பால் ஏகுகின்றன என்பது அர்த்தம்!

(தொடரும்)

*********************

தகவல் :

Picture Credit : 1. Astronomy (August 21, 2007) & (January 2010) 2.  Universe 6th Edition (2002)  3. National Geographic Encyclopedia of Space (2005) 5. 50 Years of Space (2004) & Hubble Site Nes Center

1.  Astronomy Magazine : 50 Greatest Mysteries of the Universe (Aug 21, 2007)

2.  Universe By Roger Freedman & William Kaufmann III (2002)

3.  National Geographic Encyclopedia of Space By Linda Glover.

4.  The World Book Atlas By World Book Encyclopedia Inc (1984)

5.  Scientific Impact of WMAP Space Probe Results (May 15, 2007)

6.  BBC News – Hubble Obtains Deepest Space View By Dr. David Whitehouse, Science Editor (Jan 16, 2004)

7.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40301192&format=html (பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள்)
8.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310231&format=html (ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நெபுளாக்கள்!
9.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40211102&format=html (பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் [George Gamow (1904-1968)]
10. Cosmic Collision Sheds Light on Mystery on Dark Matter [www.dailygalaxy.com/my_weblog/2007/05/dark_matter_hub.html  (May 16, 2007)
11. “Beyond Einstein” Search for Dark Energy of the Universe
[www.dailygalaxy.com/my_weblog/2007/07/beyond-einstein.html  (July 10, 2007)
12.  Dark Matter & Dark Energy: Are they one & the Same ? Senior Science Writer [www.space.com/scienceastronomy/mystery_monday_040712.html  (April 12, 2007)
13 Dark Energy By LSST Observatory – The New Sky (www.lsst.org/Science/darkenergy.shtml)
14. Stephen Hawking’s Universe By John Boslough (1985)
15. The Hyperspace By: Michio Kaku (1994)
16. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40712131&format=html
17. The New York Public Library S (cience Desk Reference (1995)
18. Scientific American “The Cosmic Grip of Dark Energy” By Christopher Conselice (Feb 2007)
19. Astronomy “The Secret Lives of Black Holes” (Nov 2007)
20. The Handy Space Answer Book By Phillis Engelbert & Diane Dupuis (1998)
21. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210223&format=html  (பிரபஞ்ச விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீ·பென் ஹாக்கிங்)
22. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40301192&format=html  [பிரபஞ்ச விரிவை நோக்கிய வானியல் நிபுணர் எட்வின் ஹப்பிள் [Edwin Hubble] (1889-1953)]
23 Globular Clusters Tell Tale of Star Formation in Nearby Galaxy Metropolis [August 5, 2008]
24 Wikipedia – Galaxy Clusters (November 7, 2009)
25 Astronomy Magazine -Galaxy Superclusters -What They Reveal about Cosmic Expansion By :Bruce Dorminey (January 2010)

******************

S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 3, 2009

அணு ஆயுதப் புளுடோனியம் ஆக்கிய அமெரிக்க விஞ்ஞானி கெலென் ஸீபோர்க்

Glenn Seaborg  (1912-1999)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

**************

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3iJAet5p450

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ooM_zduS9Lo

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=hSFBByH9uTI

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2RpMnNg90Zk

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=2uX1Twr9gkk

++++++++++++++++++

பூமண்டலத்தைச் சிதைத்துவிடப் போர்கள் மூண்டு விடுமா, அல்லது மனித இனத்தை உயர்நிலைக்கு மேம்படுத்த அமைதி நிலவி விடுமா என்று மாந்தருக்கு அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் உண்டாக்கும் ஒரு பெரும் இக்கட்டான நிலை நாம் தவிர்க்க முடியாத ஒரு காலப் போக்காகும்!

கெலென் ஸீபோர்க்

இதுவரை மனித ஆற்றலால் படைக்க முடிந்த ஒரு பேரழிவு மூலச் சாதனத்தை [புளுடோனியம்] உண்டாக்க நான் உதவி செய்தேன் என்றாலும், அணுவிலே அதை விட இன்னும் பேரளவு அமைதி வழி ஆக்க சக்தியும் மறைந்துள்ள தென்று நான் உறுதி யூட்டுகிறேன்.

கெலென் ஸீபோர்க்

 

Periodic Table of Elements

நாகசாகில் போட்ட இரண்டாம் அமெரிக்க அணுகுண்டு [Fatman]

1945 ஆகஸ்டு 9 ஆம் தேதி இரண்டாம் உலகப் போர் முடியும் தறுவாயில், ஜப்பான் நாகாசாகியின் மீது அமெரிக்கா ‘ஃபாட் மான்’ [Fat Man, Code Name] என்னும் அணுகுண்டை வீசி பெரும் உயிர்ச் சேதத்தையும், பொருட் சேதத்தையும் உண்டாக்கியது! அதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு, முதல் அணுகுண்டு ‘லிட்டில் பாய்’ [Little Boy, Code Name] ஹிரோஷிமாவில் வெடித்து பெரும் சேதத்தை விளைவித்தது! அவை இரண்டும் வெவ்வேறான அணுப்பிளவு உலோகத்தைக் கொண்டவை. முதல் அணுகுண்டில் பயன்பட்ட அணுஎரு, யுரேனியம் 235 ! இரண்டாவது அணுகுண்டில் வைத்திருந்தது, புளுடோனியம் 239 ! புளுடோனியத்தை முதன் முதல் தயாரித்துப் பிளவுப் பிண்டமாய்ப் [Fissile Material] பயன்படுத்த உதவிய ரசாயன விஞ்ஞானி, டாக்டர் கெலென் ஸீபோர்க்! 1940 ஆம் ஆண்டில் பெர்கெலி, காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் ‘சுழல் விரைவாக்கியில்’ [Cyclotron] யுரேனியம் 238 மூலகத்தை நியூட்டிரான் கணைகளால் தாக்கிப் புதிய மூலகம் ஒன்றைப் படைத்தவர், ஸீபோர்க்! அதற்குப் ‘புளுடோனியம்’ என்று முதலில் பெயர் வைத்தவரும், ஸீபோர்க்!

 

Plutonium Bomb [Fatman]

ஸீபோர்க் கண்டு பிடித்த போது, அந்த உலோகம் அதி விரைவில் தீவிர அணு ஆயுதத்துக்குப் பயன்படப் போவதையோ அல்லது ஆக்க வினைகளில் எதிர் காலத்தில் அணுமின்சாரம் தயாரிக்கப் பயன்படப் போவதையோ அவர் எள்ளளவும் அறிய மாட்டார்! அணுப்பிளவு எருக்கள் அனைத்தையும் [யுரேனியம் 235, யுரேனியம் 233, புளுடோனியம் 239], ஒப்பு நோக்கினால் புளுடோனியம் 239 உலோகத்தைத் தயாரிப்பது, தனித் தெடுப்பது யாவும் மற்றவற்றை விட எளியது! சிக்கனச் செலவில் ஆக்க வல்லது! சிறிய அளவே பூரணத் தொடரியக்கத்தைத் [Ciritical Chain Reaction] தூண்ட வல்லது! அரிய அணுசக்தி மூலகம் ‘புளுடோனியம்’ கண்டு பிடித்த தற்கு 1951 ஆம் ஆண்டு டாக்டர் கெலென் ஸீபோர்க் அவரது துணையாளி டாக்டர் எட்வின் மெக்மில்லன் [Edwin McMillan] ஆகியோர் இருவரும் ரசாயன விஞ்ஞானத்துக்கு மகத்தான நோபெல் பரிசைப் பெற்றார்கள்!

 

Glenn Seaborg

 

விஞ்ஞான உலகில் கிலென் ஸீபோர்க் சாதித்தவை என்ன ?

மேரி கியூரி 1898 ஆம் ஆண்டில் பிட்ச்பிளண்டி [Pitchblende] தாதுக் கற்களில் ரசாயன முறையில் சுத்திகரித்து இயற்கையான போலொனியம், ரேடியம் [Polonium, Radium] ஆகிய புதிய கதிரியக்க மூலகங்களைக் [Radioactive Elements] கண்டு பிடித்து அவற்றைப் பிரித்தெடுத்தார். மேரி கியூரியின் புதல்வி ஐரீன் கியூரி ஆல்ஃபாக் கணைகளை ஏவி மூலகங்களைத் தாக்கி, 1934 இல் புதிதாகச் செயற்கைக் கதிரியக்க மூலகங்களை உண்டாக்கினார்! பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் சாட்விக் [James Chadwick] 1932 இல் அணுக்கருவினுள் இருந்த நியூட்டிரான் பரமாணுவைக் கண்டு பிடித்து அணுயுகத்தில் ஓர் புரட்சியைத் தூண்டினார்! நியூட்டிரான் கணைக்கு ஆஃல்பா, பீட்டா கணைகள் போன்று மின்கொடை [Electrical Charge] எதுவும் இல்லை! இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ஃபெர்மி, ஐரீன் கியூரியைப் பின்பற்றி 1934 இல் யுரேனியத்தை முதன் முதலாக நியூட்டிரான் கணைகளால் தாக்கிப், புதிய கதிரியக்க மூலகங்கள் விளைவதைக் கண்டார்! அப்போது நேர்ந்த அணுப்பிளவை [Nuclear Fission] அறியாமல் போனதுடன், விளைந்த புது மூலகங்கள் யாவற்றையும் பிரித்து விபரம் தெரியாமல் போனார், என்ரிகோ ஃபெர்மி! அப்பணி ஜெர்மன் விஞ்ஞானி ஆட்டோ ஹானுக்கும் [Otto Hahn], அமெரிக்க விஞ்ஞானி கெலென் ஸீபோர்க்கும் ஒரு பெரும் வாய்ப்பாக அமைந்து, இருவருக்கும் நோபெல் பரிசையும் வாங்கித் தந்தது!

சுழல்விரைவாக்கி யந்திரம்

1940 ஆம் ஆண்டில் பெர்கெலி, காலிஃபோர்னியா பலகலைக் கழகத்தில் ஸீபோர்க் ‘சுழல் விரைவாக்கியில்’ [Cyclotron] யுரேனியம்238 மூலகத்தை நியூட்டிரான் கணைகளால் தாக்கி ஓர் புதிய மூலகத்தைப் படைத்தார்! அது ரேடியத்தைப் போன்று தீவிர ஆல்ஃபாக் கதிர்வீச்சை [Alpha particle emitter] எழுப்பியது! அது யுரேனியத்தைப் போல் மிகக் கனமானது! மேலும் யுரேனியம் 235 மூலகத்தைப் போல் புது உலோகம் எளிதில் நியூட்டிரான்களால் பிளக்கப்பட்டு [Fissionable] அளவற்ற வெப்பசக்தியை உண்டாக்க வல்லது! அவர் 1940-1955 ஆண்டுகளில் மூலகங்களின் அணி அட்டவணையில் [Periodic Table of Elements] யுரேனியத்திற்குப் பின் அமையும் பத்து புதிய கன மூலகங்களையும் [Heavy Elements], அவற்றைச் சார்ந்த நூற்றுக் கணக்கான செயற்கைக் கதிர் ஏகமூலங்களையும் [Radio Isotpoes] சுழல்வீச்சு யந்திரங்களிலும், அணு உலைகளிலும் ஆக்கி யிருக்கிறார்!

அணு எண்கள் [Atomic Numbers (Proton Numbers in Nucleus)] 94 முதல் 102 வரை மற்றும் 106 உட்பட அப்பத்து மூலகங்கள் செயற்கையான முறையில் ஆக்கப் பட்டன! அவற்றில் தனித்துவம் கொண்ட புளுடோனியம் 239 பெரும் பான்மையாக அணு ஆயுத வெடிப்புக்கும், சிறு பான்மையாக அணு மின்சக்தி ஆக்கத்திற்கும் உலக நாடுகளில் உபயோக மாகிறது. ஸீபோர்க் இரண்டாம் உலகப் போரின் சமயம் சிகாகோ பல்கலைக் கழகத்தின் உலோகவியல் ஆய்வுக்கூடத்தின் [Metallurgical  Laboratory] ஒரு பகுதிக்கு அதிபராய்ப் பணி செய்து, புதிய அணு ஆராய்ச்சி, உலையில்

Cyclotron Princple

[Atomic Research Reactor] புளுடோனியத்தை உண்டாக்கி, அதைக் கதிரியக்க பிளவு விளைவுத் துணுக்குகளி லிருந்து [Radioactive Fission Products] பிரித்தெடுத்து, ஆயுதத் தரமான புளுடோனி யத்தைத் [Weapon grade Plutonium] தயாரித்தார். அந்தப் புளுடோனியம் பின்னால் நியூ மெக்ஸிகோ லாஸ் அலமாஸில், 1945 ஜூலை 16 இல் சோதித்த முதல் அணு குண்டாகவும், அடுத்து நாகசாக்கியில் போட்ட ஆகஸ்டு 9 இல் ‘ஃபாட் மான்’ அணுகுண்டாகவும் வெடித்தது!

ஸீபோர்க் குழுவினர் ஆக்கிய மற்ற புதிய கன மூலகங்கள்: அமெரிக்கியம், கியூரியம், பெர்கெலியம், காலிஃபோர்னியம், ஐன்ஸ்டைனியம், ஃபெர்மியம், மெண்டெலிவியம், நொபெலியம், உன்னில்ஹெக்ஸியம் [Americium (95), Curium (96), Berkelium (97), Californium (98), Einsteinium (99), Fermium (100), Mendelevium (101), Nobelium (102), Unnilhexium (106)]. 1944 இல் ஸீபோர்க் அறிவித்த ‘ஆக்டினைடு கோட்பாடு’ [Actinide Concept] மூலக அணி அட்டவணையில் [Periodic Table of Elements] இறுதியில் அமையும் அப்புதிய கன மூலகங்களின் பண்புகள், இடங்கள் [Properties, Places] ஆகியவற்றைச் சீராக இணைத்து ஒழுங்கு படுத்தியது! அக்கோட்பாடின் முறைப்படி ஆக்டினியத்தை [Actinium] விடக் கனமான 14 கதிரியக்க மூலகங்கள், அணி அட்டவணையில் தனிக் குழுவைச் சேர்ந்தவை யாகக் கருதப் படுகின்றன.

 

புதிய யுரேனியச் சந்ததி மூலகங்கள் :

Transuranium Elements  [First Made]

 

கெலென் ஸீபோர்க்கின் மகத்தான வாழ்க்கை வரலாறு

அமெரிக்காவில் மிச்சிகன் மாநிலத்தின் இஸ்பெமிங் [Ishpeming, Michigan] என்னும் சிற்றூரில் 1912 ஏப்ரல் 19 ஆம் தேதி கெலென் ஸீபெர்க் பிறந்தார். சிறுவன் கெலென் பத்து வயதாகும் போது, குடும்பம் காலிஃபோர்னியாவுக்கு மாறியது. 1929 இல் லாஸ் ஏஞ்செலஸ் டேவிட் ஸ்டார் ஜார்டன் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார். 1934 இல் லாஸ் ஏஞ்செலஸ் காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் B.A. பட்டம் பெற்றுப் பிறகு, 1937 இல் ரசாயனத்தில் Ph.D. பட்டத்தைப் பெர்கெலி காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் பெற்றார். அங்கே பயிற்சி ஆசிரியராகச் சேர்ந்து, 1941 இல் உதவிப் பேராசிரியராகி, அதன் பின் 1945 இல் ரசாயனப் பேராசிரியராக உயர்பதவி அடைந்தார். அதே சமயத்தில் லாரென்ஸ் கதிர்வீச்சுக் கூடத்தில் [Lawrence Radiation Laboratory] அணுக்கரு ரசாயன ஆராய்ச்சிப் [Nuclear Chemical Research] பிரிவகத்தின் ஆணை யாளராகவும் பணி யாற்றினார். 1942 இல் கெலென் ஸீபோர்க் ஹெலென் கிரிக்ஸ் [Helen Criggs] என்னும் மாதை மணந்து கொண்டார். அவர்களுக்கு நான்கு ஆண், இரண்டு பெண் ஆக ஆறு குழந்தைகள்!

 

Periodic Table of Elements -1

1942-1946 வரை இரண்டாம் உலகப் போரின் தறுவாயில், ‘மறைமுக மன்ஹாட்டன் திட்டத்தில்’ [Secret Manhattan Project] அணு ஆயுதத் தயாரிப்புக்குப் புளுடோனிய உலோக உற்பத்திப் பிரிவில் சேர்ந்தார். 1946 இல் ஜனாதிபதி ட்ரூமன் ஸீபோர்க்கை அணுசக்திப் பேரவையின் [Atomic Energy Commission] ஆலோசக ராக நியமித்தார். ஜனாதிபதி ஜான் கென்னடி 1961 இல் பதவி ஏற்றதும், ஸீபோர்க்கை அணுசக்திப் பேரவையின் அதிபதி யாக்கினார். அப்போது ஜனாதிபதியின் விஞ்ஞான ஆலோசனைக் குழுவினருள் ஒருவராகவும் பணி செய்தார்.

கெலென் ஸீபோர்க் ஏறக்குறைய 200 விஞ்ஞான வெளியீடுகளை வெளியிட்டிருக்கிறார். ரசாயனத்தை பற்றியும், மூலகங்களைப் பற்றியும் [Chemistry & Elemets] அநேக புத்தகங்கள் எழுதி யிருக்கிறார். கெலென் ஸீபோர்க் தனது 87 ஆவது வயதில் காலிஃபோர்னியா லாஃபாயட் [Lafayette, Calif] நகரில் காலமானார்.

 

Plutonium Produced Cyclotron

முதல் செயற்கைப் புளுடோனிய உலோகம் கண்டுபிடிப்பு

அணு ஆயுத உற்பத்திக்கு உதவியா யிருக்கும் புளுடோனியம் பூமியில் இயற்கையாகக் கிடைப்ப தில்லை! யுரேனியத்தை [U238] நியூட்ரான்களால் தாக்கி அதை அணு உலைகளிலோ அல்லது விரைவாக்கி யந்திரங்களிலோ செயற்கை முறையில் உண்டாக்கிப் பிரிக்க வேண்டும்! அம்முயற்சியில் வெற்றி பெற்ற விஞ்ஞானிகள் இருவர்! பெர்கெலி காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய ரசாயன விஞ்ஞானிகள் கெலென் ஸீபோர்க், எட்வின் மெக்மில்லன் [Edwin McMillan] இருவரும் இணைந்தே யுரேனியத் தொடர் மூலகங்களை [Transuranium Elements] ‘சுழல் விரை வாக்கியில்’ [Cyclotron] ஆராய்ந்து வந்தனர். மெக்மில்லன் முதலில் யுரேனியம்238 மூலகக் குறியை நியூட்ரான் கணைகளால் தாக்கிய போது, ஒரு புதிய சேய்மூலகம் [Daughter Element] உண்டானது. அணு எண் 93 [Atomic Number 93] கொண்ட அப்புதிய மூலகத்திற்கு ‘நெப்டியூனியம்’ [Neptunium (Np)] பெயரிட்டார், மெக்மில்லன். சூரிய மண்டலத்தில் ‘யுரானஸ்’ கோளுக்கு அப்பால் சுற்றும் ‘நெப்டியூன்’ கோளின் பெயரை அதற்குத் தேர்ந்தெடுத்தார், மெக்மில்லன்!

92[யுரேனியம்]238 + 0[நியூட்ரான்]1 —> 92[யுரேனியம்]239 + காமாக் கதிர்கள்

92[யுரேனியம்]239 – 1[பீட்டா துகள்]0 —-> 93[நெப்டியூனியம்]239

 

ஸீபோர்க் குழுவினர் [Glenn Seaborg, Joseph Kennedy, Arthur Wahl] 1940 இல் தொடர்ந்து நெப்டியூனியத்தை ஆராய்ந்தனர். அது அடுத்து ஒரு பீட்டாத் துகளை வெளியேற்றி மற்றுமொரு புதிய சேய்மூலகத்தை ஈன்றது! மேலும் பெர்கெலியில் உள்ள 60 அங்குல ‘சுழல் விரைவாக்கி’ யந்திரத்தில், யுரேனியம்238 மூலகத்தைக் குறியாக வைத்து, டியூட்ரான்களால் [Deuterons] தாக்கிய போது, அப்புதிய மூலகத்தின் ஏகமூலம் [Isotope] உண்டானது! டியூட்ரான் என்பது கன ஹைடிரஜன் [Heavy Hydrogen-Deuterium]. ஏகமூலங்கள் [Isotopes] என்றால் ஒரே புரோட்டான் எண்ணிக்கை கொண்டு [Atomic Numbers] வெவ்வேறு பளு எண்ணிக்கை [Mass Numbers] யுள்ள மூலகங்கள். ஒரு மூலகத்தின் ஏகமூலங்கள் அனைத்தும் மூலக அணி அட்டவணையில் ஒரே இடத்தைப் பெறுபவை. [‘Iso’ ‘tope’ means Same Place].

93[நெப்டியூனியம்]239  -1[பீட்டா துகள்]0 –>94[புளுடோனியம்]239

92[யுரேனியம்]238 + 1[கன ஹைடிரஜன்]2 –>93[நெப்டியூனியம்]238 + 0நியூட்ரான்]2

 

Plutonium production

 

Properties of Plutonium Isotopes

93[நெப்டியூனியம்]238 – 1[பீட்டா]0 —>  94[புளுடோனியம்]238

94[புளுடோனியம்]239 இன் ஏகமூலம், 94[புளுடோனியம்]238.

ஸீபோர்க் புது மூலகத்துக்கு நெப்டியூனுக்கு அப்பால் சூரிய மண்டலத்தில் சுற்றும் கோள் ‘புளுடோவின்’ பெயரைத் தீர்மானித்து, ‘புளுடோனியம்’ [Plutonium (Pu)] என்று பெயர் வைத்தார்! அதைப் பின் தொடர்ந்து, 1944 இல் ஸீபோர்க் குழுவினர் புளுடோனியத்தை ஆல்ஃபா கணைகளால் தாக்கி, அணு எண் 95 உடைய அடுத்த புது மூலகத்தை ஆக்கினர். அதற்கு ‘அமெரிகியம் ‘ [Americium (Am)] என்று பெயரிட்டனர். அணு எண் 96 உடைய புது உலோகம் ‘கியூரியம்’ [Curium (Cm)] என்று மேரி கியூரி நினைவாகப் பெயரிடப் பட்டது. 1950 இல் ஆல்ஃபா கணைகளை அமெரிக்கியம் மீது ஏவி, அணு எண் 97 கொண்ட புது உலோகம் ‘பெர்கெலியம்’ [Berkelium (Bk)] உண்டாக்கப் பட்டது. சுழல்வீச்சு யந்திரத்தில் கியூரியத்தை ஆல்ஃபா கணைகளால் தாக்கி, அணு எண் 98 பெற்ற ‘காலிஃபோரினியம்’ [Californium (Cf)] உண்டானது.

 

1952 இல் பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் [Eniwetok] தீவில் அமெரிக்கா சோதனை செய்த முதல் வெப்ப அணுக்கரு ஆயுத [Thermo Nuclear Weapon ‘ஹைடிரஜன் குண்டு’] வெடிப்பில் சிதறிய கதிரியக்க பிளவுத் துணுக்குகளில் [Fission Products], அணு எண்கள் 99, 100 கொண்ட மூலகங்கள் காணப் பட்டன! ஸீபோர்க் குழுவினர் அவற்றைப் பெர்கெலியில் தனியாகச் செய்து காட்டினர்! அணு எண் 99 உடைய மூலகம் ஐன்ஸ்டைன் நினைவாக ‘ஐன்ஸ்டைனியம்’ [Einsteinium (Es)] எனப் பெயரிடப் பட்டது! முதல் அணுக்கருத் தொடரியக்கம் நிகழ்த்திய என்ரிகோ ஃபெர்மி நினைவாக, அணு எண் 100 உள்ள உலோகம் ‘ஃபெர்மியம்’ [Fermium (Fm)] என்று அழைக்கப் பட்டது.

அடுத்து ஆல்ஃபா துகள்களை ஐன்ஸ்டைனியம் மீது தாக்கி அணு எண் 101 கொண்ட புது உலோகம் 1955 இல் படைக்கப் பட்டது. ரஷ்ய ரசாயன விஞ்ஞானி மென்டிலீஃப் [Mendeleef (1834-1907)] நினைவாக, அது ‘மென்டிலிவியம்’ [Mendelevium (Md)] என்று பெயரிடப் பட்டது! மென்டிலீஃப் மூலக அணிக் கோட்பாடை [Periodic Law] உருவாக்கி, ஒழுங்கு படுத்தி அணி அட்டவணையை 1869 இல் [Periodic Table] அமைத்தவர். 1958 இல் ‘நேர்போக்கு விரைவாக்கியில்’ [Linear Accerator] கியூரியத்தைக் கரி அயனி களால் [Cabon Ions] தாக்கி அணு எண் 102 உள்ள மூலகம், ஆல்ஃபிரட் நோபெல் நினைவாக ‘நொபெலியம்’ [Nobelium (No)] என்று பெயர் வைக்கப் பட்டது!

 

60 inch Cyclotron

ஸீபோர்க் யுரேனியத்தொடர் உலோகங்களின் [Transuranium Metals] ‘அரை ஆயுட்கள்’ [Half Lives] ஓர் ஒழுங்குச் சீர் முறையில் குறைவதைக் [Progressively Shorter] கண்டார்! ‘அரை ஆயுள் ‘ என்பது கதிரியக்க மூலகம் ஒன்று கதிர்வீசித் தேயும் போது பாதி எடையாக மாறும் காலத்தைக் குறிக்கிறது. புளுடோனியம் 239 இன் அரை ஆயுள் 24,360 ஆண்டுகள். அமெரிகியத்தின் அரை ஆயுள் 7370 ஆண்டுகள்! காலிஃபோர்னியத்தின் அரை ஆயுள் 800 ஆண்டுகள்! கியூரியத்தின் அரை ஆயுள் 18 ஆண்டுகள்! மென்டிலிவியம் மூலகத்தின் அரை ஆயுள் 60 நாட்கள்! ஃபெர்மியத்தின் அரை ஆயுள் 3 மணி நேரங்கள்! நொபெலியத்தின் அரை ஆயுள் 3 விநாடிகள்! ஸீபோர்கியம் என்று பெயரிடப் பட்ட அணு எண் 106 கொண்ட உன்னில்ஹெக்ஸியத்தின் அரை ஆயுள் 1 விநாடிக்கும் குறைந்தது!

அணு ஆயுதத் தயாரிப்பில் ஸீபோர்க்கின் முக்கிய பங்கு

இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த சமயத்தில் கெலென் ஸீபோர்க், சிகாகோ பல்கலைக் கழகத்தின் உலோக ஆராய்ச்சிக் கூடத்தில் 1942 முதல் 1946 வரை, மன்ஹாட்டன் அணு ஆயுதத் தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டார். ரசாயனக் கூடத்தில் 1941 இல் புளுடோ னியத்தைக் கண்டு பிடித்த போது, மிக மிகச் சிறிய அளவைத்தான் அவர் கையாண்டார். ஆனால் அணு ஆயுதத்திற்கு கிலோ கிராம் கணக்கில் புளுடோனியம் தேவைப் பட்டதால், தனி அணு உலை ஒன்று அமைக்கப் பட்டுப் புளுடோனியம் தயாரிக்கப் பட்டது!

 

Relative Energy Requirement of Fissile Materials

 

ஹெலென் ஸீபோர்க்கின் ரசாயனக் குரு நோபெல் பரிசு பெற்ற ஜெர்மன் விஞ்ஞானி ஆட்டோ ஹான் [Otto Hahn]! ஆட்டோ ஹான் யுரேனிய அணுவைப் பிளந்ததாக முதலில் உலகுக்கு அறிமுக மானவர்! அவரே இருபதாம் நூற்றாண்டில் ‘கதிர்வீச்சு ரசாயனப் பிதா’ [Father of Radiochemistry] வென்று போற்றப் படுபவர்! யுரேனியத்தொடர் மூலகங்களின் [Transuranium Elements] இயக்கங்களில் விளைந்த சிக்கலான கதிரியக்க மூலக்கூறுகளைப் [Molecules] பிரித்தெடுப்பதில் அவர் மிகவும் சாமர்த்திய மானவர்! ஆட்டோ ஹானின் ரசாயன முறைகளைப் பின்பற்றிதான், ஸீபோர்க் தூய்மையான புளுடோனியத்தைப் பிரித்தெடுத்தார்!

யுரேனியத்தின் திணிவு [Density] 18.7 gm/c.c., புளுடோனியத்தின் திணிவு 19.8 gm/c.c. [ஒப்பு நோக்க இரும்பின் திணிவு 7.9 gm/c.c]. யுரேனியம் 235 மூலகத்தைப் ‘பரவும் வாயு முறையில்’ [Gaseous Diffusion Process] தனித்தெடுப்பதை விட, ரசாயன முறையில் புளுடோனியம் 239 மூலகத்தைப் பிரிப்பது எளியது! சம எடையுள்ள புளுடோனியம் 239, யுரேனியம்235 இரண்டையும் நியூட்ரான் கணைகளால் பிளந்தால், புளுடோனியமே அதிக அளவு வெப்ப சக்தியை வெளியிடுகிறது! காரணம், புளுடோனியம் 239 மூலகத்தின் பிளவு முகப்பரப்பு [Fission Cross Section], யுரேனியம் 235 இன் முகப்பரப்பை விட 28% மிகையானது!

 

பிளவு முகப்பரப்பு என்றால் நியூட்டிரான் கணைகள் குறிமூலகம் ஒன்றைத் [யுரேனியம் 235 அல்லது புளுடோனியம் 239] தாக்கி அணுப்பிளவு நிகழ்த்தும் ஓர் எதிர்பார்ப்பு அளவைக் [Prabability of Fission] குறிக்கிறது. யுரேனியம் 235 மூலகத்திற்குப் பிளவு முகப்பரப்பு 580 பார்ன்ஸ் [580 barns] என்றால், புளுடோனிய [Pu239] உலோகத்துக்கு 740 பார்ன்ஸ் [740 barns]! அதாவது சிறிதளவு புளுடோனிய உலோகத்தால் பூரணத் தொடரியக்கம் [Critical Chain Reaction] நிகழ்த்த முடியும்!

சிகாகோ பலகலைக் கழகத்திற்கு ஸீபோர்க் அவரது 30 ஆவது பிறந்த நாளன்று [1942 ஏப்ரல் 19] வந்து சேர்ந்தார். டிசம்பர் 2 ஆம் தேதியில் என்ரிகோ ஃபெர்மி முதல் யுரேனிய அணு உலையில் அணுக்கருத் தொடரியக்கத்தை [Nuclear Chain Reaction] நிகழ்த்திக்குக் காட்டிய பின், பிளவுப் பண்டங்களைப் பிரித்துப் புளுடோனியத்தைத் தனித்தெடுப்பது, ஸீபோர்க்கின் பொறுப் பானது! அணு உலைகளிலும், சுழல்வீச்சு யந்திரங்களிலும், இராப் பகலாய் யுரேனியத்தை நியூட்ரான் களால் தாக்கித் தேவையான புளுடோனியம் ‘ஃபாட் மான்’ அணுகுண்டுத் தயாரானது!

 Seaborg & McMillan

நியூமெக்ஸிகோ லாஸ் அலமாஸில் 1945 ஜூன் 11 ஆம் தேதி அணு ஆயுதங்கள் தயாராக இருந்த தறுவாயில் உடன் பணி செய்த விஞ்ஞானி ஜேம்ஸ் ஃபிராங்க் [James Franck (1882-1964)] குழுவினருடன் தானும் சேர்ந்து, ஜப்பானில் அணுகுண்டு போடப் போவதைத் தடுக்க ஸீபோர்க் முயன்றார்! 1925 இல் நோபெல் பெற்ற ஜேம்ஸ் ஃபிராங்க், பயங்கர அணுகுண்டைப் பற்றி ஜப்பானி யருக்கு முன்னறிவிப்பாக எச்சரிக்கை விடாமல், அவர்கள் மீது வீசக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தார்! அக்கருத்தை வலுயுறுத்த ‘ஃபிராங்க் விண்ணப்பம்’ என்ற வேண்டுகோள் ஒன்றை எழுதி, ஸீபோர்க் உட்பட பலரது கையெழுத்துக்களுடன் அமெரிக்க யுத்தச் செயலாளர், ஸ்டைமனுக்குப் [Secretary of War, Stimon] போர்க் காலத்தில் அனுப்பினார்!  ஆனால் அது நிறைவேறவில்லை.

 

Plutonium Produced Cyclotron

 

விண்ணப்பத்தின் அறிவிப்பு இதுதான்: ‘முன்னெச்சரிக்கை எதுவு மின்றி ஜப்பான் மீது அணு ஆயுதங்களைப் போடுவது, நியாய மற்றது என்று நாங்கள் நம்புகிறோம்! மனித இனத்தின் மீது கருணை எதுவுமின்றி கண்மூடித்தன மாக அமெரிக்கா முதன் முதலாக அணுகுண்டை வீசினால், உலக மாந்தரின் ஆதரவை இழக்க நேரிடும்!  அப்புறம் அணு ஆயுதப் பெருக்கத்துக்கு அது வழி வகுக்கும்!  அடுத்து அகில நாடுகளின் அணு ஆயுதக் கட்டுப்பாடுக்கு அமெரிக்கா உடன்பட வேண்டிய திருக்கும்! மனிதரற்ற ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, அங்கே அணுகுண்டை வெடித்துக் காட்டி ஜப்பானுக்கு முன்பாகவே எச்சரிக்கை செய்தால், பலனுள்ள சேதார மற்ற, வெற்றிகரமான சமாதானத்தைச் சாதிக்க முடியும்’

 

யுத்தச் செயலாளரோ, அல்லது ஜனாதிபதி ட்ரூமனோ அந்த முக்கிய விண்ணப்பத்தைப் படித்ததாக அறியப் படவில்லை! அவ்வாண்டு ஜூலை முதல் தேதியே, ஜப்பானில் அணுகுண்டு வீச்சு முடிவும், போடப் போகும் இடங்களும் தீர்மானமாகி விட்டன என்பது பின்னால் தெரிய வந்தது! ஜேம்ஸ் ஃபிராங்க், கெலென் ஸீபோர்க் குழுவினர் பெரும் ஏமாற்றம் அடைந்தாலும், ஜப்பானில் அணு ஆயுதங்கள் விளைவிக்கப் போகும் கோரச் சேதங்களைத் தடுக்க முற்பட்டோம் என்று மன ஆறுதல் அடைந்தனர்!

கெலென் ஸீபோர்க் பெற்ற பெரும் வெகுமதிகள்

அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி ஸீபோர்க்கை 1961 இல் அமெரிக்க அணுசக்திப் பேரவைக்கு அதிபதி [Chairman, Atomic Energy Commission] ஆக்கினார்! ஸீபோர்க் அப்பதவியில் பத்து வருடங்கள் [1961-1971] பணி யாற்றினார். அவர் காலத்தில்தான் ஆக்க வினைகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்த அமெரிக்காவில் அணு மின்சக்தித் தொழிற் திட்டங்கள் பல முளைத்தெழுந்து, நூற்றுக் கணக்கான அமெரிக்க அணுசக்தி நிலையங்கள் அமெரிக்காவிலும், அகில நாடுகளிலும் நிறுவனம் ஆகி வேரூன்றின!

 

ஸீபோர்க் 1951 இல் ரசாயனத்துக்கு நோபெல் பரிசு பெற்றார். 1959 இல் அமெரிக்காவின் மதிப்புயர்ந்த ‘என்ரிகோ ஃபெர்மிப் பரிசு’ [Enrico Fermi Award] ஸீபோர்க்கு அளிக்கப் பட்டது. மற்றும் ஸீபோர்க் 1948 இல் அமெரிக்க சுவீடிஷ் எஞ்சினியர்கள் அளித்த ‘ஜான் எரிக்ஸன் தங்கப் பதக்கம்’, அமெரிக்க ரசாயனக் குழுவினரின் ‘நிகோலஸ் பதக்கம்’, 1957 இல் அமெரிக்க ரசாயனத் தொழிற்துறை களின் ‘பெர்கின் பதக்கம்’ 1963 இல் ஃபிலடல்ஃபியா ஃபிராங்கலின் ஆய்வுக்கூடம் அளித்த ‘ஃபிராங்கலின் பதக்கம்’ ஆகியவற்றையும் பெற்றார்!

1994 ஆம் ஆண்டில் ஸீபோர்க் முன்பு [1940-1955] செயற்கை முறையில் ஆக்கிய உன்னில் ஹெக்ஸியம் [Unnilhexium(106)] மூலகம் அவரது பெயரில் ‘ஸீபோர்கியம்’ [Seaborgium (SG)] என்று பெயரிடப் பட்டது !

 

Examples of the types of variation in plutonium composition

produced from different sources1

Reactor type Mean fuel burn-up
(MW d/t)
Percentage of Pu isotopes at discharge Fissile content
%
Pu-238 Pu-239 Pu-240 Pu-241 Pu-242
               
PWR 33000 1.3 56.6 23.2 13.9 4.7 70.5
43000 2.0 52.5 24.1 14.7 6.2 67.2
53000 2.7 50.4 24.1 15.2 7.1 65.6
BWR 27500 2.6 59.8 23.7 10.6 3.3 70.4
30400 N/A 56.8 23.8 14.3 5.1 71.1
CANDU 7500 N/A 66.6 26.6 5.3 1.5 71.9
AGR 18000 0.6 53.7 30.8 9.9 5.0 63.6
Magnox 3000 0.1 80 16.9 2.7 0.3 82.7
5000 N/A 68.5 25.0 5.3 1.2 73.8

 ****************

தகவல்:

1.  http://en.wikipedia.org/wiki/Glenn_T._Seaborg  [December 10, 2014]

2. http://www.britannica.com/EBchecked/topic/530808/Glenn-T-Seaborg  [September 9, 2014] 

3. http://en.wikipedia.org/wiki/Ernest_Lawrence  [October 29, 20124]

4.  http://www.ltcconline.net/stevenson/2008chm101fall/chm101lecturenotes20081124.htm

5.  http://en.wikipedia.org/wiki/Plutonium  [December 4, 2014]

6.  http://www.world-nuclear.org/info/nuclear-fuel-cycle/fuel-recycling/plutonium/  [September, 2014]

7.  http://www.laradioactivite.com/en/site/pages/Plutonium_Properties.htm

+++++++++++++++++++

S. Jayabarathan (jayabarathans@gmail.com) December 20, 2014  (R-3)

Attachments area
Preview YouTube video Glenn Seaborg: Shaking Up the Periodic Table

Glenn Seaborg: Shaking Up the Periodic Table

Preview YouTube video Glenn Seaborg 1 Remembering Plutonium 238 1997

Glenn Seaborg 1 Remembering Plutonium 238 1997

Preview YouTube video Glenn Seaborg Discoverer of TEN Elements Biography LANL Pt1

Glenn Seaborg Discoverer of TEN Elements Biography LANL Pt1

Preview YouTube video Glenn Seaborg Ten Elements Plutonium discovered Berkeley Labs LANL Pt2

Glenn Seaborg Ten Elements Plutonium discovered Berkeley Labs LANL Pt2

Preview YouTube video Bogdan Maglich – 50 Years with Nuclear Fission @ TEAC3

Bogdan Maglich – 50 Years with Nuclear Fission @ TEAC3