விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி

Periodic Table of Elements & Ionic Bonding - Mrs. Zeringue's 7th Grade ...

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

விஞ்ஞானம், பொறியியல் துறைகள் மட்டுமே உலக நாடுகளில் செல்வம் கொழித்து முன்னேற ஆக்க வினைகள் புரிந்துள்ளன! அந்த நாடுகளைப் போல் விஞ்ஞானம், பொறித்துறை ஆகியவற்றை விருத்தி செய்தே, இந்தியாவும் செல்வீக நாடாக முன்னேற வேண்டும்.

முதல் பிரதம மந்திரி, ஜவஹர்லால் நேரு

முன்னுரை: கடந்த ஐநூறு ஆண்டுகளாக இலக்கியங்கள் வளர்ந்து காவியங்கள் பெருகினாலும், தமிழகத்தில் விஞ்ஞானத் துறைகள் தலை தூக்கியதாகவோ, தமிழ்மொழியில் சிறப்பான விஞ்ஞான நூல்கள் படைக்கப் பட்டதாகவோ அறிகுறிகள் எவையும் காணப்பட வில்லை. அதே சமயம் ஐரோப்பாவில் விஞ்ஞானத் துறைகள் செழித்தோங்கி, தொழிற் புரட்சி ஏற்பட்டு, ஐரோப்பிய மொழிகளும் அவற்றை நூல்களில் வடித்து எதிரொலித்தன. வானியல், கணிதத்தில் முன்னோடியான இந்தியா, பனிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து 500 ஆண்டுகள் மொகாலாயர் கைவசப்பட்டு, அடுத்து பிரிட்டன் பதினேழாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டின் பாதி வரை ஆதிக்கம் செலுத்தி, அடிமைத் தேசமாக அகப்பட்டுக் கொண்டதால், தமிழ்மொழி உள்பட மற்ற அனைத்து இந்திய மொழிகளும் விஞ்ஞான வளர்ச்சிகளை நூல் வடிவில் காட்ட முடியாமல் போயின. ஆங்கில மொழியைப் பிரிட்டன் முதன்மை மொழியாக்கி, முறையான கல்வித்துறை நிறுவகங்களை நாடெங்கும் நிறுவினாலும், தேசம் விடுதலை அடைந்த பிறகுதான் இந்தியாவில் மூலாதார விஞ்ஞானத் துறைகள் பெருகவும், விஞ்ஞான நூல்கள் தோன்றவும் வாசற் கதவுகள் திறக்கப்பட்டன.

இந்திய விஞ்ஞானத் தொழிற்துறையின் பொற்காலச் சிற்பி

பாரத கண்டத்தைச் சாணி யுகத்திலிருந்து [Cow Dung Age] அணுசக்தி யுகத்திற்கும், அண்டவெளி யுகத்திற்கும் இழுத்து வந்து, தொழிற் துறைகளைத் திறந்து வைத்த அரசியல் மேதை, பண்டித ஜவாஹர்லால் நேரு. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் விஞ்ஞானப் பொறித்துறைப் பாதையில், மேலை நாடுகள் போல் முன்னேறத் தொழிற் சாலைகள், மின்சக்தி நிலையங்கள், அணுசக்தி ஆராய்ச்சி, அண்டவெளித் தேர்வு போன்ற துறைகள் தோன்ற அடிகோலியவர் நேரு. டாக்டர் ஹோமி ஜெஹாங்கீர் பாபாவைக் [Dr. Homi Jehangir Bhabha] கண்டு பிடித்து, நேரு 1954 இல் பம்பாயில் அணுசக்தி நிலைப்பகத்தைத் [Atomic Energy Establishment, Trombay] துவக்கச் செய்தார். விண்வெளி ஆராய்ச்சியைத் துவங்க, விஞ்ஞானி டாக்டர் விக்ரம் சாராபாயைக் [Dr Vikram Sarabai] கண்டு பிடித்து, தும்பா ஏவுகணை மையத்தை [Thumba Rocket Launching Centre] நிறுவி, அவரைத் தலைவர் ஆக்கினார். இப்போது இந்தியா ஆசியாவிலே அணுவியல் ஆராய்ச்சியிலும், அண்டவெளி ஏவுகணை விடுவதிலும் முன்னணியில் நிற்கிறது. அப்பெரும் விஞ்ஞானச் சாதனைகளை மற்ற நாடுகளுடன் ஒப்பு நோக்கினால், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைப் இந்திய விஞ்ஞானத் தொழிற் துறையின் பொற்காலம் என்று வரலாற்றில் அழுத்தமாகச் செதுக்கி வைக்கலாம்! பண்டித ஜவஹர்லால் நேரு பாரதத்தின் பொற்காலச் சிற்பி எனப் போற்றப்படும் முற்போக்குச் சிந்தனையாளர்.

1946 இல் வெளிவந்த தனது ‘இந்தியக் கண்டுபிடிப்பு ‘ [Discovery of India] என்னும் நூலில் பண்டித நேரு பண்டைக் கால இந்திய வல்லுநர்களின் கணிதச் சாதனைகளை மெச்சுகிறார். கிரேக்க கணித மேதை பித்தகோரஸ் [Pythagorus] எழுதியதற்கும் முன்பே [500 BC] ஜியாமெற்றித் தேற்றங்களை [Geometric Theorems] இந்திய கணித ஞானிகள் படைத்திருந்ததாக அறியப்படுகிறது. கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் பத்து இலக்கக் கணிதத் தொகுப்புகளைக் கையாண்டு, ஏழாம் நூற்றாண்டில் பூஜியத்தை [Zero] ஓரிலக்கமாகப் படைத்தனராம். ‘இக்கணித முன்னோடிகள் மனித சிந்தனையை விடுதலை செய்து, கணித இலக்கங்களை முக்கியமாக்கிச் சுடரொளி பாய்ச்சினர் ‘ என்று அந்நூலில் நேரு கூறுகிறார். சதுரம், நீண்ட சதுரம், வட்டம், கோணம், பின்னம், பத்தின் பன்னிரெண்டாம் அடுக்கு [Ten to the power 12], அல்ஜீப்ரா சமன்பாடுகள் [Algebriac Formulae], வானியல் [Astronomy] போன்றவை 3500 ஆண்டுகளுக்கு முன்பே இந்து வேத நூல்களில் காணப்படுகின்றன. இந்தியா மற்ற கிரேக்க, எகிப்து, ஐரோப்பிய நாடுகள் போல் ஜோதிடக் கணிதத்திலும் நுணுக்கமான தேர்ச்சி அடைந்திருந்தது. ஆனால் முகலாயர் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி ஆட்கொண்ட பிறகு, கணித, விஞ்ஞான வளர்ச்சிகள் முற்றிலும் முடங்கித் தடைபட்டு, ஐரோப்பாவை ஒப்பு நோக்கினால், இந்தியா ஐநூறு ஆண்டுகள் பின்தங்கிப் போனது!

அன்னியரின் ஆதிக்கத்தில் அடிமைப் பட்ட இந்திய மொழிகள்

ஏசுக் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னும் பின்னும் அரிஸ்டாடில் (384-322 BC), டாலமி (367-283) போன்ற கிரேக்க ஞானிகளின் வேதாந்த விஞ்ஞானக் கருத்துகள் தலை ஓங்கி, ரோமாபுரி போப்பாண்டவர் ஆணையின் கீழ் ஐரோப்பிய நாடுகளின் கலாச்சாரம், நாகரீகம் விருத்தி யடைந்தது. அரிஸ்டாட்டில் இந்தியாவுக்குப் பயணம் செய்ய வரைந்து கொடுத்த வழியைப் பின்பற்றி, முதன் முதலில் படையெடுத்து இந்திய மண்ணில் கால்வைத்த கிரேக்க மன்னன், மகா வீர அலெக்ஸாண்டர் (356-323 BC). அடுத்து அன்னியப் பயணி மார்கோ போலோ [Marco Polo (1288-1293)] ஆண்டுகளில், தென்னிந்தியாவுக்கு விஜயம் செய்தார். 15 ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானப் புரட்சியும் அதைத் தொடர்ந்து தொழிற் புரட்சியும் ஐரோப்பாவில் ஏற்பட்டு இணையாக ஐரோப்பிய மொழிகளும் மலர்ச்சி யடைந்தன.

துருக்கியின் தலைநகர் கான்ஸ்டான்டிநோபிளின் [Constantinople, Turkey] தரைவழிப் பாதை மூடப்பட்ட பின்பு, ஐரோப்பிய வர்த்தகர்கள் இந்தியாவுக்கு வர முடியாது போகவே, மகாதீரக் கப்பல் மாலுமிகள் புதிய கடல் மார்க்கங்களில் இந்தியாவுக்கு பாதை கண்டுபிடிக்கக் கிளம்பினர். கிரிஸ்டபர் கொலம்பஸ் (1451-1506) இந்தியாவுக்குப் புதுக் கப்பல் மார்க்கம் தேடி, இறுதியில் புதிய அமெரிக்க நாடுகளுக்குக் கடல்பாதை அமைத்தார். அவரைப் பின்பற்றி ஃபெர்டினென்டு மாஜெல்லன் (1480-1521) உலகை முதன் முதல் ஒருமுறை சுற்றி வந்து, பூமி தட்டையானது அன்று, அது ஒரு பொரி உருண்டை என்று நிரூபித்துக் காட்டினார். அடுத்து வாஸ்கோட காமா [Vasco da Gama (1460-1524)] இந்தியாவிக்குப் புதிய கப்பல் மார்க்கத்தைக் கண்டு பிடித்து 1498 இல் இந்தியாவுடன் வர்த்தகம் நிலைநாட்டப் பட்டது. இவ்வாறு ஐரோப்பாவிலிருந்து அன்னிய தேசத்தவர் [அலெக்ஸாண்டர், மார்க்கப் போலோ, வாஸ்கோட காமா] கிரேக்கர், ரோமானியர், போர்ச்சுகீஸியர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் பாரதத்தில் காலூன்றிய பின், இந்தியக் கலாசாரம், நாகரீகம், கல்வி அறிவு, மொழிகள் யாவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டன!

1192 ஆண்டில் முகமது கோரி ராஜபுத்திர்களைச் சரித்திரப் புகழ் பெற்ற குருச்சேத்திராவில் தோற்கடித்து, அடுத்து 14 வருடங்கள் கழித்து வடநாட்டில் சுல்தான்களின் ஆட்சி ஆரம்பமானது. 1206 முதல் 1526 வரை 27 துருக்கியின் சுல்தான்கள் டெல்லி ஆசனத்தில் ஆட்சி செய்தனர்! 1526 இல் பாபர் கடேசி சுல்தானைப் பானிபட் என்னும் இடத்தில் தோற்கடித்து, முகலாய சாம்ராஜியத்தை டெல்லியில் நிலைநாட்டினார்! முகலாயர் ஆட்சியில் அவரது உருது மொழி உன்னத நிலை அடைந்து, ஓரளவு வான சாஸ்திரம் உயர்நிலை அடைந்தது. பதினேழாம் நூற்றாண்டில் பிரிட்டன் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டாது இருந்திருந்தால், இந்தியா ஒரு முஸ்லீம் நாடாக ஈரான், ஈராக், ஆஃப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தான் போல் ஆகியிருக்கும்!

ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இந்தியக் கல்வித் துறைகள் அமைப்பு

1520 ஆம் ஆண்டிலே போர்ச்சுகீஸியக் குடியினர் தடம் சென்னையில் படிந்து விட்டது. தமிழில் அல்மேரா போன்ற போர்ச்சுகீஸியச் சொற்கள் கூடிக் கலந்தன! அடுத்து இந்தியாவில் 1600 ஆண்டு பிரிட்டனின் கிழக்கிந்தியக் கம்பெனி [East India Company] துவங்கி, 1639 ஆம் ஆண்டு சென்னையிலும், 1668 ஆம் ஆண்டு பாம்பேயிலும், 1699 ஆம் ஆண்டு கல்கத்தாவிலும் வர்த்தகத் துறைகள் ஆரம்பமாயின. பிறகு 1765 இல் ராபர்ட் கிளைவ் பிரிட்டிஷ் சாம்ராஜியத்துக்கு இந்தியாவில் அடிக்கல் நாட்டியதை நாம் அறிவோம். தென்னகத்தில் 1746-1760 ஆண்டுகளில் பிரென்ச் ஆதிக்கம், தமிழகத்தின் சில பகுதிகளில் மேலோங்கி யிருந்தது! பிறகு ஆங்கிலேயர் அவர்களைத் தோற்கடித்து அவ்விடங்களைக் கைப்பற்றினர்! ஆயினும் பாண்டிச்சேரி பிரெஞ்ச் கைவசம் இருந்தது! (1757-1858) ஆண்டுகளில் பிரிட்டன் சிறிது சிறிதாக முழு இந்தியாவையும் கைப்பற்றித் தன்னாதிக்கத்தில் கொண்டு வந்தது.

துண்டு துண்டான இந்தியா 15 ஆம் நூற்றாண்டில் எப்படி இருந்தது ? தனித்தனி அரசர்களின் ஆட்சியில் சிக்கி, பிராந்திய மொழிகள் ஏதோ ஓரளவு வளர்ச்சி பெற்றன. இந்தியா மொகலாய மன்னர்களின் போர்க்களமாகி இந்தியக் கலாசாரமும், நாகரீகமும் நசுக்கப்பட்டு, மொழிகளின் வளர்ச்சியைக் கண்காணிப்போர் குறைந்து போயினர். ஐரோப்பிய நாடுகள் விஞ்ஞானத்திலும், தொழில் நுணுக்கத்திலும் முன்னேறி, அவற்றின் மொழிகள் வளர்ச்சி யடைந்து வரும் போது, இந்திய மொழிகள் புறக்கணிக்கப் பட்டு தளர்ச்சி யடைந்து வந்தன. பிறகு பிரிட்டன் இந்தியா வெங்கும் இரயில் பாதைகள் அமைத்து, பல இடங்களில் அஞ்சல் நிலையங்கள் கட்டி, கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் நிறுவகம் செய்து, ஆங்கிலத்தை முதன் மொழியாக்கி, இந்தியாவை இணைத்து முழு தேசமாக்கியது! பத்தாண்டுகளில் (1833-1843) முறையான கல்வித்துறை நிறுவகங்கள் இந்தியாவில் துவங்கக் காரணமான பிரிட்டனின் முக்கிய அறிவாளிகள்: மெக்காலே, எல்ஃபின்ஸ்டோன், திரிவேலியன் [Macaulay, Elphinstone, Charles Trevelyan] ஆகியோர்.

தமிழகத்தில் விஞ்ஞானத் துறைகளின் வளர்ச்சி

பாரத அரசாங்கம் சென்னைக் கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தை நிறுவி, அணுவியல் ஆய்வுகளை நடத்தியும், அணுமின் சக்தியைப் பரிமாறியும் வருகிறது. தென்கோடியில் ரஷ்ய உதவியால் இரட்டை அணுமின் நிலையம் கூடங்குளத்தில் உருவாகி, இப்போது முழுத்திறனில் இயங்கி வருகிறது. ஆனால் விஞ்ஞானத் துறைகளை வளர்த்து, இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கத் தனியாகச் சென்னை மாநில அரசு என்ன முயற்சிகளைக் கையாள்கிறது என்பது தெரியவில்லை ? கலைக்காட்சி மாளிகைகள் [Art Museums] சில சென்னையில் உள்ளன. ஆனால் எத்தனை விஞ்ஞானக் காட்சி மாளிகைகளை [Science Museums] மாநிலத்தில் நிறுவி, ஆர்வமுள்ள தமிழரின் விஞ்ஞானச் சிந்தனைகளைத் தூண்டி விடுகிறது, தமிழரசு ? சினிமா இதழ்கள் நிறைந்த சென்னை மாநிலத்தில் எத்தனை விஞ்ஞான இதழ்கள் வாரவாரம் வெளியாகின்றன ? எத்தனைத் தமிழ்வார இதழ்கள், மாத இதழ்கள் விஞ்ஞானத்திற்குச் சில பக்கங்களை ஒதுக்கி, விஞ்ஞானச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன ?

இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் அடிமை நாடாக உழன்ற போது, விஞ்ஞான மேதை சி.வி. இராமனும், வேதாந்த மேதை இரவீந்திரநாத் தாகூரும் தனித்துவ நோபெல் பரிசைப் பெற்றார்கள். பாரதம் விடுதலை அடைந்து ஐம்பது ஆண்டுகள் கடந்த பின்னும், பாரதத்திலோ, தமிழகத்திலோ தனித்துவ நோபெல் பரிசு பெற, எத்தனை விஞ்ஞான வல்லுநர்கள் தலைதூக்கி நிற்கிறார்கள் ? இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி மாந்தரிடம் அறிவும் திறமையும் இருந்தாலும், விஞ்ஞானத்தில் ஆழ்ந்து ஆராய்ச்சிகள் செய்து நோபெல் பரிசு பெறத் தனித்துவத் தகுதியும், வேட்கையும், கடும் உழைப்பும் இல்லை என்று தீர்மானம் செய்வதா ? குறிப்பாகத் தமிழகத்தில் மற்ற கலைகளில் வல்லுநர் முன்னேறி இருந்தாலும், விஞ்ஞானத் துறைகளில் ஏதாவது ஒன்றில் மேன்மை மிக்க ஒருவர் கூட தற்போது இல்லை என்பது வெட்கப்பட வேண்டிய தகவல்!

கலப்பற்ற தூயமொழிகள் உலகில் எங்கே உள்ளன ?

கலப்பற்ற ‘தூயமொழி ‘ என்று பலர் பேசும் ஒரு வழக்கியல் மொழி, எங்காவது உலகில் தற்போது இருக்கிறதா என்னும் கேள்விக்குப் பதில் கிடைப்பது சிரமம்! வடதுருவத்துக்கு அருகில் எங்காவது நாகரீகக் காற்றுப் படாமல் வாழும் எஸ்கிமோ இனத்தவர், அல்லது நீலகிரி மலை உச்சியில் தனித்து வாழும் காட்டினத்தவர் பேசும் எழுத்தற்ற சில மொழிகள் கலப்பற்றுச் சுத்தமாக இருக்கலாம்! அவர்களில் பலரது மொழிகளுக்கு எழுத்துக்கள் கூட இல்லாமல் இருப்பதால், கலப்பதற்கு மூல வடிவங்களே இல்லாத அந்த வாய் மொழிகளைப் பற்றி இங்கே நான் குறிப்பிட வில்லை! எழுத்து வடிவங்கள் கொண்டு பல்லாண்டு காலம் பெரும்பான்மை இனத்தவர் பயன்படுத்தும், மொழிகளின் கலப்பற்ற தூய்மையைப் பற்றியே என் வினா எழுகிறது.

மனித இனங்கள் உலகெங்கும் தோன்றிய போதே அவற்றின் பேச்சு மொழிகளும் வளர்ச்சி யடைந்து, சிறுகச் சிறுக எழுத்து வடிவங்கள் பெற்றிருக்க வேண்டும். சமூகங்கள் நல்லாட்சி நிழலில் வளர்ந்து, நாகரீகம் அடைந்து, தொழில் வாணிபங்களால் செல்வம் பெருகிய பொற்காலத்தில், மொழிகள் ‘இலக்கணக் கட்டுப்பாடுகள்’ விதிக்கப்பட்டு இலக்கியங்களும், காவியங்களும் பிறந்திருக்க வேண்டும். தனித்தனி இனங்களின் இடப்பெயர்ச்சியாலும், அன்னிய இனத்தவர் படையெடுப்பாலும், வேறின மக்கள் கலந்து பிணைந்த போது, நாட்டு மொழிகளிலும் கலப்புச் சொற்கள் நாளடைவில் சேர்ந்தன! இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக வேதியர்கள் கையாண்ட சமஸ்கிருதத்தின் பிணைப்புத் தமிழ்மொழியில் சேர்ந்துள்ளதை நாம் ஏற்றுக் கொண்டு, அச்சொற்களையும் தமிழில் பயன்படுத்திக் கொள்வதுதான் அறிவுடமையாகும்.

கலப்பற்ற தனித்தமிழ் நடையில் இலக்கியச் சொற்போர் நடத்தலாம். இலக்கியப் பாக்கள், நூல்கள், காவியங்கள் படைக்கலாம். ஆனால் நாளுக்கு நாள் வேகமாய் முன்னேறிச் செல்லும் விஞ்ஞான முற்போக்கு அறிவுக் களஞ்சியங்களைத் தனித்தமிழில் ஆக்க முடியுமா என்பதில்  ஐயப்பாடு உள்ளது! ஆங்கிலம் உள்பட ஐரோப்பிய மொழிகள் எல்லாம் புது விஞ்ஞானச் சொற்களை அப்படியே ஏற்றுக் கொண்டு, படைப்புகளைப் புத்தக வடிவில் ஆக்கிக் கொள்ளுகின்றன. ஆனால் தமிழ் உள்பட பாரத மொழிகள் பல, அவ்விதம் விஞ்ஞான வளர்ச்சிகளைப் பின்பற்றி, அவ்வப்போது நூல் வடிவில் எழுதிக் கொண்டு வருகின்றனவா என்பது தெரியவில்லை! அதே சமயம், விஞ்ஞானச் சொற்களை எல்லாம் தனித்தமிழில் வடித்து விடலாம் என்று கனவு காண்போர் கனவை நான் கலைக்க விரும்ப வில்லை!

ஆங்கிலம் விஞ்ஞான வளர்ச்சியைக் காட்டும் அகிலத்தின் பலகணி

ஏறக்குறைய 500 ஆண்டுகள் தமிழ்மொழி உள்பட எல்லா இந்திய மொழிகளும், ஆங்கிலம் போல் பூரண வளர்ச்சி யின்றி அடிமை மொழிகளாகப் புறக்கணிக்கப் பட்டுக் கீழ் நிலையில் கிடந்தன. 1947 இல் பாரதம் சுதந்திரம் அடைந்ததும், இந்திய மொழிகளும் விடுதலை பெற்றன. பாரதத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்து, மாநில அரசுகள் அரசாளத் துவங்கிய பிறகுதான், பிராந்திய மொழிகளுக்கு நல்ல காலம் பிறந்தது. கண்ணொளி பெற்ற பாரத மொழிகள், ஆங்கிலத்தின் உதவியால் வளர்ச்சி யடைந்தன! ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் சரித்திரம், பூகோளம், சமூகவியல், விஞ்ஞானம், கணக்கு ஆகிய போதிப்பு நூல்கள் முதன் முதல் பிராந்திய மொழிகளில் எழுதப்பட்டன. ஆங்கில நூல்கள் பாரத மொழிகளுக்கு வழிகாட்டியாய் பாதை காட்டின! அவற்றில் பல பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டன! இந்திய மொழிகள் அனைத்திற்கும் விஞ்ஞான வளர்ச்சிகளைக் காட்டும் உலகப் பலகணியாய் விளங்குவது, ஐயமின்றி ஆங்கில மொழியே!

கல்லூரிப் போதனை நூல்கள் யாவும் ஆங்கிலத்திலே அமைந்து, தொடர்ந்து ஆங்கிலத்திலே பயிற்பிக்கப் பட்டன. விஞ்ஞானம், கணிதம், மருத்துவம், சட்டப் படிப்பு போன்றவற்றைத் தெளிவாகக் கற்றுக் கொள்ள ஆங்கில மொழிக்குள்ள தகுதிபோல் பிராந்திய மொழிகளுக்குத் திறமை வர குறைந்தது 50 முதல் 100 ஆண்டுகள் கூட ஆகலாம். ஆயினும் முழுக்க முழுக்க தமிழ் மொழியிலோ அல்லது மற்ற பிராந்திய மொழிகளிலோ கல்லூரியின் தரத்திற்குப் பட்டக் கல்வி புகட்ட முடியுமா என்பதில் ஐயப்பாடுள்ளது! தமிழ் மொழியிலும், மற்ற பிராந்திய மொழிகளிலும் பட்டப் படிப்புக்குத் தகுதியுள்ள நூல்கள், தற்போது அறிஞர்களால் எழுதப்படாமையே அதற்குக் காரணம் என்று உறுதியாகச் சொல்லலாம்!

பன்மொழிகள் கலந்த கூட்டு மொழியே தற்கால ஆங்கிலம்

ஆங்கில மொழி பல நூற்றாண்டுகளாக புதுச் சொற்களை ஏற்று மாறிக் கொண்டே வந்துள்ளது. அதில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள் எண்ணற்றவை. ஆங்கிலம், பிரென்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தலி போன்ற ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும், சமஸ்கிருதம் போல் பூர்வீக மொழியான கிரேக்க, லத்தீன் மொழிச் சொற்கள் அநேகம் கலந்துள்ளன. இந்திய மொழிகளிலிருந்து குரு, யோகா, பறையா, நிர்வனா, கர்மா, மந்திரம், மாயா கட்டுமரான் [கட்டுமரம்], பண்டிட், பஜார், கர்ரி [Curry-Spice] போன்ற சொற்கள் இணைந்து, ஆங்கில அகராதியிலும் இடம் பெற்றுள்ளன! உலக நாடுகளில் பல இடங்களில் சைனாவின் கராத்தே பள்ளிகள் அமைக்கப் பட்டுள்ளது போல், யோகா பயிற்சிக் கூடங்கள் தோன்றி, மேலை நாட்டவருக்கு யோகாவைச் சொல்லிக் கொடுக்கின்றன! நமது நகரங்களில் ராக் சங்கீதம் இறக்குமதி ஆனதுபோல், யோகா பயிற்சி மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது!

இவற்றை இங்கே நான் குறிப்பிடுவதின் நோக்கம், வேதாந்தம் விஞ்ஞானம் இடப்பெயர்ச்சி யாவது போல், கலாச்சாரமும் நாகரீகமும் இடம் பெயர்கின்றன! அப்போது அந்நாட்டு மொழிகளிலும் அவை இடம்பெற்று புதுச் சொற்கள் கடன்வாங்கப் படுகின்றன! இருபதாம் நூற்றாண்டின் நடுவில் அணுயுகம், அண்டவெளி யுகம் உதயமாகி விஞ்ஞானம் விரைவாக முன்னேறிப் புதுச் சொற்கள் ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளில் நுழைந்த போது, தமிழ்மொழியில் சொற்கள் அப்படி எழுதபட்டுச் சேர்க்கப் படவில்லை! பாரதம் சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழக அரசாங்கத்தில் யாரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு முதன்மை இடம் அளிக்கவில்லை!

விஞ்ஞானப் படைப்புக் களஞ்சியத்தை நூலாக்கும் புதுத்தமிழ்

‘விஞ்ஞானப் புதுத்தமிழ் ‘ என்று நான் குறிப்பிடுவது, விரிந்து பெருகும் விஞ்ஞானப் புதுமைகளை, அவ்வப்போது எழுதும் ஆற்றலுள்ள கலப்புத்தமிழ்! அந்த கலப்புத்தமிழில் ஐயமின்றி கூடியவரைப் பெரும்பானமைத் தமிழ்ச் சொற்களே [60%-80%] கையாளப்பட வேண்டும். அடுத்து வேண்டிய விஞ்ஞானக் கலைச் சொற்களில் சிலவற்றை முடிந்தால் தமிழ்ப்படுத்தலாம்; அல்லது சமமான வடமொழிச் சொற்கள் இருந்தால் எடுத்தாளலாம்; அல்லது வடமொழியில் உண்டாக்க முயலலாம்; அல்லது ஆங்கிலச் சொற்களையோ, பிறமொழிச் சொற்களையோ அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக அணுவியல் துறைகளில் அணு, பரமாணு, அணுக்கரு போன்ற பண்டைச் சொற்களை Atom, Sub-atomic Particles, Nucleus ஆகிய ஆங்கிலச் சொற்களுக்குச் சமமாகப் பயன்படுத்தி வருகிறோம்.

கதிரியக்கம் [Radioactivity], தொடரியக்கம் [Chain Reaction], பூரணநிலை [Criticality], ஆறும் தொடரியக்கம் [Sub-critical Chain Reaction], மீறும் தொடரியக்கம் [Super-critical Chain Reaction], கதிர் ஏகமூலங்கள் [Radio-Isotopes], துகள் விரைவாக்கி யந்திரங்கள் [Particle Accelerators] போன்ற தமிழாக்கச் சொற்கள் போல், நாமே படைத்துக் கொள்ளலாம். கருத்துக்களைத் தமிழ்ப்படுத்த முடியாமல் போனால், ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதிக் கொள்ளலாம். உதாரணமாக சில பரமாணுக்களின் பெயரைத் தமிழில் நியூட்ரான் [Neutron], புரோட்டான் [Proton], எலக்டிரான் [Electron], பாஸிடிரான் [Positron], நியூட்ரினோ [Neutrino] என்று எழுதலாம். டெலிவிஷன் காட்சிப் பெட்டியைத் தொலைக்காட்சி என்று பலர் குறிப்பிடுவதும் சரியே. Rocket என்பதை ராக்கெட் என்று எழுதினால் எல்லாருக்கும் புரிகிறது. எடுத்தாளும் சொற்கள் எளிதாகவும், புரியும் படியும், புரியா விட்டால் விளக்கக் கூடியதாகவும் எழுதப்பட வேண்டும்.

ஆங்கில எழுத்துக்களுக்குச் சமமான தமிழ் எழுத்துக்கள் இல்லை என்று வருந்த வேண்டிய தில்லை. உதாரணம்: (B, D, G) போன்றவை. டாக்டர் ஹோமி ஜெ. பாபா [Dr. Homi J. Bhabha] என்னும் பெயரைத் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதிக் காட்டலாம். டாக்டர் ஷிவாகோ [Dr. Zhivago] என்று தமிழில் எழுதி ஆங்கிலத்தில் சமப் பெயரையும் அடைப்பில் குறிப்பிடலாம். அதுபோல் சில தமிழ் எழுத்துகளுக்குச் சமமான ஆங்கில எழுத்துக்களும் இல்லை! உதாரணம்: (ழகரம், ளகரம், றகரம், ணகரம், ஞகரம்). ‘தமிழ் ‘ என்பதை ஆங்கிலத்தில் Tamil, அல்லது Thamil என்றுதானே எழுத முடியும்! TamiZ என்று யார் குறிப்பிட்டு எழுதுகிறார் ? பார்க்கப் போனால் ஒவ்வொரு மொழியிலும் சில குறைகள் இருப்பதைத் தவிர்க்க முடியாது. அதற்காக விஞ்ஞானச் சொற்களைத் தமிழில் எழுதிக் காட்ட முடியாது என்று முயலாமல் இருப்பதும், தேவைப்படும் போது கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தாமல் ஒதுக்குவதும் மடமையோடு, விஞ்ஞானத் தமிழை வளர விடாமல் தடுக்கும் பிற்போக்குப் பண்பாகும்!

விஞ்ஞானப் புதுத்தமிழ் (கலப்புத்தமிழ்) = தமிழ்ச்சொற்கள் (80%-90%) +வடமொழிச் சொற்கள் அல்லது +ஆங்கிலச் சொற்கள் அல்லது +திசைச்சொற்கள் (10%-20%) திசைச்சொற்கள் என்று இங்கு நான் குறிப்பிடுபவை: வடமொழி (சமஸ்கிருதம்), ஆங்கிலம் தவிர்த்த பிறமொழிச் சொற்கள் [தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராட்டி, வங்காளம், உருது, போர்ச்சிகீஸ் போன்றவை].

வேட்கை மிகுந்து விஞ்ஞானத்தை வளர்த்த இந்திய மேதைகள்:

விஞ்ஞானம் இந்தியாவில் வளர நமக்கு வழிகாட்டிகள் துருவ விண்மீன் போல் பலர் உள்ளார்கள். டாக்டர் ஸர்.சி.வி. இராமன் (1888-1970), ஜகதீஷ் சந்தர போஸ் (1858-1937), சத்யேந்திர நாத் போஸ் (1894-1974), கணித மேதை இராமானுஜன் (1887-1920), மேகநாத் ஸாகா, சுப்ரமணியன் சந்திரசேகர் (1910-1995), டாக்டர் ஹோமி பாபா (1909-1966), டாக்டர் விக்ரம் சாராபாய் (1919-1971), டாக்டர் அப்துல் கலாம், ஜெயந்த் நர்லிகர், டாக்டர் ராஜா ராமண்ணா ஆகியோர். ஆயினும் நூறு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் விரல்விட்டுக் கணக்கிடும் எண்ணிக்கையில் விஞ்ஞான மேதைகள் தோன்றி யிருப்பது வருந்தத் தக்க வரலாறுதான்! தமிழகத்தில் குறிப்பிடத் தக்க விஞ்ஞான நிபுணர்கள் தற்சமயத்தில் யாருமிருப்பதாகத் தெரியவில்லை! இந்தியாவில் அணுத்துறை, அண்ட வெளித் துறைகளில் விஞ்ஞானப் பொறியியல் வளர்ச்சிக்கு நிதித் தொகை ஒதுக்கி ஆராய்ச்சிகள் நடத்தி வருவதுபோல், தமிழக மாநில அரசு தற்கால விஞ்ஞான நிபுணர்களையோ, எதிர்கால வல்லுநர்களையோ ஊக்குவிப்பதாக எந்த அறிகுறிகளும் தென்படவில்லை! அதுபோல் தமிழகத்தில் விஞ்ஞானமோ, தமிழ்மொழியில் விஞ்ஞான நூல்களோ வித்திடப் பட்டு விருத்தி யடையும் திட்டங்களை வகுக்க தமிழ் நாட்டரசு எம்முயற்சியும் எடுத்துள்ளதாக அறியப்பட வில்லை!

விஞ்ஞானத் தமிழ் எழுத்தாளர்களின் கடமைப்பணி

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், மின்கணணி யுகம் தோன்றி, தனியார் மின்கணணிகள் [Personal Computers] ஒவ்வொரு வீட்டிலும் கைக் கருவியாகவும், பன்னாட்டுப் பிணைப்புக் கருவியாகவும் பயன்பட்டு வருகின்றன. அகிலவலை தோன்றி அனைத்து நாடுகளும் இணைந்து, உலகம் சுருங்கி மக்கள் தொடர்பு கொள்வது மிக எளிதாகப் போனதால், இப்போது தமிழ்மொழிக்குப் புத்துயிரும், சக்தியும் மிகுந்து புதிய இலக்கியங்கள், காவியங்கள், கட்டுரைகள் [அரசியல், சமூகம், விஞ்ஞானம்] நூற்றுக் கணக்கில் தமிழ் அகிலவலைகளில் படைக்கப் படுகின்றன. திண்ணையில் குறிப்பாகத் தரமுள்ள விஞ்ஞானக் கட்டுரைகளை வே. வெங்கட ரமணன், டாக்டர். சரஸ்வதி, கோ. ஜோதி, டாக்டர் ஊர்மிளா பாபு (சிங்கப்பூர்), மா. பரமேஸ்வரன், சி. குமாரபாரதி, வ.ந. கிரிதரன், இ. பரமசிவம், டாக்டர் இரா. விஜயராகவன், அரவிந்தன் நீலகண்டன், சி. ஜெயபாரதன் ஆகியோர் எழுதி வருவது வரவேற்கத் தக்கதே.

ரஷ்யாவில் பொதுடமை ஆதிக்கம் வலுத்திருந்த காலங்களில் (1950-1990), மாஸ்கோவின் மாபெரும் நூலகம் ஒன்றில், மகத்தான விஞ்ஞானப் பணி ஒன்று அரசாங்க ஆதரவில் சிறப்பாக, ஒழுங்காக நடந்து கொண்டு வந்தது! ஆங்கிலத்தில் வெளியான புது நூல்களை ரஷ்ய மொழிபெயர்ப்புச் செய்வது. அதுபோல் ரஷ்ய விஞ்ஞானப் படைப்புகளை ஆங்கிலம், மற்றும் ஏனைய ஐரோப்பிய, ஆசிய மொழிகளில் பெயர்ப்பது. விஞ்ஞான நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கும் அவ்வரிய விஞ்ஞானப் பணி தமிழ் நாட்டிலும், தமிழரசின் கண்காணிப்பில் ஒரு கடமை நெறியாகத் தொடர்ந்து நிறைவேற்றப்பட வேண்டும். தமிழக அரசு நிதி ஒதுக்கி, விஞ்ஞானத் தமிழ்ச் சங்கங்களை நிறுவி, வல்லுநர்களை உறுப்பினராக்கி விஞ்ஞான நூல்களை வடிக்க வழி வகுக்க வேண்டும்.

விஞ்ஞானத் துறையின் பிரிவுகளான உயிரியல் [Biology], உடலுறுப்பியல் [Physiology], இரசாயனம் [Chemistry], பெளதிகம் [Physics], மருத்துவம் [Medical Sciences], பொறியியல் [Engineering Sciences], உலோகவியல் [Metallurgy] போன்றவை வெகு விரைவாக உலகில் முன்னேறி வருகின்றன. அவை முன்னேறும் வேகத்திற்கு ஒப்பாக விஞ்ஞானத் தமிழ் நூல்களையும் எழுதுவது, தமிழ் அறிஞர்களின் ஒரு கடமைப் பணியாக இருக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் அடிப்படை நோக்கம்.

**************************

S. Jayabarathan (jayabarathans@gmail.com) April 14, 2008

https://jayabarathan.wordpress.com/ (எனது விஞ்ஞானப் படைப்புகள்)

சீதாயணம் (முன்னுரை)

seetha-jumps-to-her-death.jpg

~ சீதாயணம் ~

(ஓரங்க நாடகம்)

சி. ஜெயபாரதன், கனடா

முகவுரை:   வாசகர்களே! இதை ஒரு கற்பனை நாடகமெனக் கருத வேண்டாம். இராமகதையில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது. நாடகத் தொடுப்புக்காக நிகழ்ச்சிகள் முன்னும் பின்னும் மாற்றப்பட்டு வசனங்கள் புதியதாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன. மனிதர் நெஞ்சைக் கீறும் சீதையின் இறுதிக் காலப் பேரவலத்தைக் கூறுகிறது எனது சீதாயணம். இராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால், பலரால், பலமுறை மாற்றப்பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க் கதையாய் மங்கிப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச்செருகல் நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் [Corrupted Manuscript] என்று அரசியல் ஆன்மீக மேதை இராஜ கோபாலாச் சாரியார் கூறுகிறார். வால்மீகி இராமாயணத்தை ஒன்பதாம் நூற்றாண்டிலே இந்திய மொழிகளில் முதன்முதலாகத் தமிழில் எழுதிப் பெருமை தந்தவர் கவிச்சக்ரவர்த்தி கம்பன்.

கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று மாற்றியுள்ளதாக இராஜாஜி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் தன் நூலில் இராஜாஜி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன் இராமனின் அவதாரப் பணி முடிந்துவிட்டது என்று சொல்கிறார். அயோத்திய புரியில் பட்டம் சூடிய இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுகிறார். சீதா பெற்ற துயர்களைப் போல இன்றும் நம் நாட்டுப் பெண்டிரில் பலர் இன்னல் அடைந்து வருகிறார்கள்.

உத்தரகாண்டத்தில் நளின மிருந்தாலும், சீதாவின் புனிதத்தை இராமனுக்கு நிரூபிக்க, இராமகதையில் வால்மீகி அக்கினிப் பரீட்சை வைப்பதாகக் காட்டுகிறார். ஆனால் அதுவும் இராமனின் பண்பு நெறிக்கு உடன்பாடாக வில்லை. உத்தர காண்டத்தைப் படிக்கும் போது மனம் மிகவும் வேதனைப் பட்டது என்று பின்னுரையில் [Epilogue] இராஜாஜி மனமுடைகிறார் (1). சீதையை இராமன் காட்டுக்கு அனுப்பும் உத்திர காண்ட அதிர்ச்சிக் காட்சியை நான் இராம கதையின் உச்சக் கட்டமாகக் கருதுகிறேன். தனித்து விடப்பட்ட சீதை குழந்தைகள் பிறந்த பிறகு மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு மரணம் அடைவது இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் உன்னத துன்பியல் வரலாறு என்பது என் கருத்து! இலங்காபுரியில் போரிட்டு சீதாவை மீட்ட காட்சியை நான் இராமகதையின் உச்சக் கட்டமாக எடுத்துக் கொள்ளவில்லை!

உண்மைக் கதையைத் திரித்து ஒருவனை இறைவன் அவதாரம் என்பதும், மற்றொருவனுக்குப் பத்துத் தலைகளை மாட்டி வைப்பதும், தென்னாட்டு மாந்தரில் சிலரை வானரங்களாகச் சித்தரிப்பதும் 21 ஆம் நூற்றாண்டில் கற்பனைக் கதையாகக் கூட கருதப்படாது! சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்குக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாயிரம் பாடி வணங்கி வருகிறது. காட்டுக்குத் துரத்தப்பட்ட கர்ப்பவதி சீதா, இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்று, வால்மீகி ஆசிரமத்தில் வாழ்ந்து இறுதியில் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் பாரத நாடு இராமனும் சீதாவும் இல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத தம்பதிகளாய்க் காட்டித் தொழுது வருகிறது! தெய்வ அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிடனாக மன்னனாக மீண்டும் மாற்றி என் சீதாயணம் எழுதப்படுகிறது! இது வால்மீகி இராமாயணம் அன்று! இதில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மாய மந்திர வித்தைகள் கிடையா! இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான் யாவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப்படுகிறார்கள்! விஷ்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை! பத்துத் தலை கொண்ட இராட்சதனாக இராவணன் இங்கே கூறப்பட வில்லை! தென்னாட்டுப் பிறவிகளான அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோர் குரங்கு முகமும், வாலும் கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மானிடர்களாக உலவி வருகிறார்கள்.

அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் கருத்து. பின்னால் அவரது சீடர்களோ அல்லது வேறு முனிவர்களோ மூலக் கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் வருடத்துக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்றுப் பேசும் குரங்குகள் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் எந்தச் சான்றுகளும் இல்லை! இராமன் காலத்தில் வாழ்ந்த அசுரர், இராட்சதர் போல் இன்றும் நாம் பயங்கரக் கொலைகாரரைக் காண்கிறோம். ஆறு மில்லியன் யூதர்களைக் கொன்று புதைத்த அடால்ஃப் கிட்லர், விஷ வாயுவிலும் மற்ற வழிகளிலும் பல்லாயிரம் பேரைக் கொன்று குழியில் மூடிய சடாம் ஹுசேன் போன்ற அரக்க வர்க்கத்தினர் உலகில் ஒவ்வொரு யுகத்திலும் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அரக்கர் அனைவரும் முழுக்க முழுக்க மனித உருக் கொண்டவரே! யாருக்கும் பத்துத் தலைகளோ, கொடிய தோற்றமோ, வெளியில் நீட்டிய பற்களோ கிடையா! வால்மீகி இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி வித்தைகள், மாய மந்திரங்கள், பத்துத் தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர வால்கள் ஆகியவற்றை வடிகட்டி, முக்கிய கதா நபர்களை மனிதராக கருதிக் கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சிகளாக மாற்றினால் இராம கதை இனியதாய் சுவைக்கக் கூடிய, நம்பக்கூடிய ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று எழுகிறது.

உயிரின மலர்ச்சி விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் நியதியைப் பின்பற்றி, இராமர் காலத்தில் வாழ்ந்திருந்தோரை மனிதப் பிறவிகளாகக் காட்டிச் சீதாவின் இரண்டாம் வனவாச சோக வரலாற்றை ஒரு நாடகமாகத் தமிழ் உலகுக்குக் காட்ட விழைகிறேன். இந்நாடகத்தில் வரும் முக்கிய நிகழ்ச்சிகள் வால்மீகி இராமாயணத்தில் காணப்பட்ட மெய்யான சம்பவங்களே! ஆனால் இந்த நாடகத்தின் கதாநாயகி சீதா! சீதாவின் மரணத்துக்கு முக்கிய காரணமான அவள் கணவன் இராமன் இங்கு கதாநாயகனாகக் கருதப் படவில்லை. வாழையடி வாழையாக இராமனைக் கடவுளாக வழிபட்டு வருபவரைப் புண்படுத்துவது இந்நாடகத்தின் குறிக்கோள் அன்று! இராமனை மனிதனாகக் காட்டியதற்கு, இராம பக்தர்கள் என்னை மன்னிக்க வேண்டும். இராமகதையில் அவதாரக் கடவுளாக இராமனை மாற்றியது சரியா அல்லது தவறா என்னும் வாதப் போருக்கு நான் வரப் போவதில்லை! மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமைபோல், அவனைக் கீழிறக்கி மீண்டும் மனிதனாய்க் கொண்டுவர எனக்கும் உரிமை உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுத ஆரம்பித்தேன்.

லவா, குசா சீதைக்குப் பிறந்து இளஞர்களாய் ஆனபின் அரண்மனைக்கு விஜயம் செய்து இராமனுடன் உரையாடியதாக ஒரு வரலாறு உள்ளது! வேறொன்றில் அசுவமேத யாகத்தின் போது லவா, குசா இருவரும் குதிரையைப் பிடித்து இலட்சுமனன், சத்துருகனன், பரதன் ஆகியோரோடு வில் போரிட்டதாக கூறப்படுகிறது. இரண்டு சம்பவங்களும் மெய்யாக நடந்தனவா அல்லது இவற்றில் ஒன்று மட்டும் நிகழ்ந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரண்டு நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நேர்ந்திருந்தால், எது முதலில் நடந்தது, எது பின்னால் நடந்தது என்பதும் இராம கதையில் அறிய முடியவில்லை. அதனால் லவா, குசா முதன்முதலில் இராமனைச் சந்தித்தது அரண்மனையிலா அல்லது அசுமமேதப் போரிலா என்னும் குழப்பம் பல வெளியீடுகளைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்டது. இந்த நாடகத்துக்காக அசுவமேத யாகத்தை எடுத்துக் கொண்டு, அரண்மனையில் லவா, குசா இராமனைச் சந்தித்த சம்பவத்தை நான் விட்டுவிட வேண்டியதாயிற்று.

ஆசிரமத்தில் இருந்த சீதா தன் கதையை நேராகச் சொல்லியதாலும், வால்மீகி லவா, குசா காண்டத்தில் தானே ஒரு கதா நபராக இருந்ததாலும், இராமகதைச் சம்பவங்கள் எல்லாம் குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும் தெளிவாகவும் உள்ளன. வாலியை இராமன் மறைந்து கொன்றது, மானைப் பிடிக்கப்போய் இராமன் மனைவியை இழந்தது, இலங்காபுரி செல்லப் பாலம் அமைத்தது, சீதாவைப் பற்றி வண்ணான் அவதூறு கூறியது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளாகத் தோன்றுகின்றன. கண்ணகி சேரநாட்டு மலையிலிருந்து குதித்து உயிர்விட்டதைத் தெரிந்து, இளவரசர் இளங்கோவடிகள் தகவல் திரட்டிச் சிலப்பத்திகாரக் காவியத்தை எழுதியதை நாமறிவோம். இராம கதையில் சீதாவும் இறுதியில் மலைமேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதுபோல் தெரிகிறது. கண்ணகி ஆருயிர்க் கணவனை இழந்தாள்! சீதா ஆருயிர்க் கணவனால் புறக்கணிக்கப் பட்டாள்! இருவரது கோர மரணங்களும் படிப்போர் கண்களைக் குளமாக்கும் கணவரால் நேர்ந்த துன்பியல் காவிய முடிவுகளே!

தகவல்

1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit to Kishan Lal Verma

3.  Mahabharatha By: Rosetta William [2000]

4. The Wonder that was India By: A.L. Basham [1959]

************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 11, 2005)]

 

மகாத்மா காந்தியின் மரணம்

cover-gandhi.jpg

(1869-1948)

சி. ஜெயபாரதன், கனடா

அறப்போர் புரிய மாந்தர் உனக்கு
ஆதரவு தரவில்லை யெனின்
தனியே நடந்துசெல்! நீ
தனியே நடந்துசெல்!

இரவீந்திரநாத் தாகூர்


பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.

மகாத்மா காந்தி

முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்!

கி.மு.399 இல் கிரேக்க வேதாந்த ஞானி சாக்ரெடிஸ் [Socrates] எழுபதாவது வயதில் விஷம் ஊட்டப் பட்டுத் தன் இனத்தாரால் கொல்லப் பட்டார்! இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஏசு நாதர் தன் இனத்தாரால் காட்டிக் கொடுக்கப் பட்டு, ரோமானியரால் சிலுவையில் அறையப்பட்டு செத்து மடிந்தார்! அடிமை வாழ்வு ஒழித்த ஆப்ரகாம் லிங்கன் 1865 ஆண்டில் அமெரிக்கன், ஜான் வில்கிஸ் பூத் என்பவனால் சுடப்பட்டு உயிர் இழந்தார்! அமெரிக்க ஆஃப்ரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங் வெள்ளைக்காரன் ஒருவனால் 1968 இல் சுடப்பட்டு மாண்டார்! மகாத்மா காந்தி 1948 ஜனவரி 30 ஆம் நாள் மாலை 5 மணிக்குப் பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் இந்து மத வெறியன் ஒருவனால் கண்முன் நேரே சுடப்பட்டு ‘ஹே ராம் ‘ என்று முனங்கிய வண்ணம் மடிந்தார்!

உலக வரலாறு மீண்டும் மீண்டும் மீள்கிறது [History repeats again & again]! பல நூற்றாண்டுகளுக் கிடையே அந்த நான்கு பேர் வாழ்ந்த போதிலும், மனிதரால் கொல்லப்பட்ட அவர்களிடம் ஒளிர்ந்த ஓர் அரிய ஒற்றுமை என்ன ? அனைவரும் மனிதப் பணிபுரிந்த உயர்ந்த மனிதாபிமானிகள்! ஆயுள் உள்ள போது சாதித்ததை விட, அவர்கள் மரணத்தின் பின் உலகுக்குப் போதித்தவை, பிரமிக்கத் தக்கவை!

ஏசு மகான் சிலுவைச் சின்னம் இமயத்தளவு ஓங்கி வளர்ந்து, உலகிலே மாபெரும் கிறிஸ்துவ மதம் பரவ ஆணிவேரானது. மார்டின் லூதர் கிங் அமெரிக்காவின் மகாத்மா வானார்! மகாத்மா காந்தியைப் பற்றி, ‘முடிவிலாக் கீர்த்தி பெற்றாய்! புவிக்குள்ளே முதன்மை யுற்றாய்! ‘ என்று மகாகவி பாரதியார், காந்தி உயிரோடுள்ள போதே போற்றிப் புகழ்ந்தார். அவரது அமர வாக்கு காந்தியின் மரணத்துக்குப் பின், எத்தகைய மெய்மொழியாய் ஆகி விட்டது! ஆனால் கொலை மரணத்தில் இறந்தவர் எல்லோரும் முடிவில்லாக் கீர்த்தியும், புவிக்குள் முதன்மையும் அடைவ தில்லை! அந்தக் கோணத்தில் பார்க்கும் போது, கொலை செய்யப் பட்ட இந்திரா காந்தியும், அவரது மகன் ராஜீவ் காந்தியும், மகாத்மா காந்தியின் உன்னத மகிமையைப் பெற வில்லை!

அகால மரணத்திற்கு அபூர்வ அறிவிப்புகள்!

மகாத்மாவின் மரணச் செய்தியைக் கேட்டு 1948 ஜனவரியில், ‘அகில உலகும் இந்தியாவுடன் சேர்ந்து வருந்துகிறது ‘ என்று அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் அவலச் செய்தி அனுப்பி யிருந்தார். காந்தியின் முதற்போர்க் களமாகிய தென் ஆப்பிரிக்காவி லிருந்து, அவரை வெறுத்த தளபதி ஜான் ஸ்மட் ‘நம்முடன் இருந்த ஓர் இளவரசர் பிரிந்து விட்டார் ‘ என்று ஒரு புகழுரையை அனுப்பினார். இத்தாலியில் வாட்டிகன் போப் பாண்டவர் பையஸ் XII தனது இரங்கல் மொழியில், ‘கிறிஸ்துவ மதத்தின் நண்பர், சமாதானத்தின் சீடர் ஒருவர் மறைந்தார் ‘ என்று எழுதி யிருந்தார். சைனாவும் இந்தோனேசியாவும், ‘ஆசிய விடுதலையின் முதல் மூல கர்த்தா மாண்டார் ‘ என்று கூறி அதிர்ச்சி அடைந்தன.

ஒன்றான பாரதத்தைத் துண்டு படுத்திய அரசியல் போட்டியாளர் மகமதலி ஜின்னா, தன் இரங்கல் உரையில், ‘இந்து இனம் உண்டாக்கிய உன்னத மனிதருள் ஒருவர், காந்தி ‘ என்றார். மரணச் செய்தி கேட்டு, இங்கிலாந்தில் லண்டன் மக்கள் கண்ணீர் விட்டனர். காந்தியைப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு லண்டனில் அவர்கள் நேராகப் பார்த்ததை நெஞ்சம் மறக்க வில்லை! உலக மகா யுத்தம் முடிந்த தறுவாயில் பல சம்பவங்களைக் கேட்ட பிறகு அவர்களை நிலைகுலையச் செய்த நிகழ்ச்சி காந்தியின் கோர மரணம்! காந்தியை வெறுத்த வின்ஸ்டன் சர்ச்சில், வருந்தற் கடிதம் அனுப்பி யிருந்தார். எல்லாருக்கும் மேலாக, நாடக மேதை பெர்னாட் ஷா கூறியது, சிந்திக்க வைப்பது! ‘நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்று காட்டுகிறது, காந்தியின் மரணம் ‘. ஜவஹர்லால் நேருவின் சகோதரி விஜய லட்சுமி பண்டிட், மாஸ்கோவில் புதிதாகத் திறக்கப் பட்ட இந்திய எம்பஸியில் வருந்தல் பதிவுப் புத்தகத்தை எடுத்து வைத்தார். ஆனால் ஸ்டாலின் வெளித்துறை உறுப்பினர் ஒருவர் கூடத் தன் பெயரை எழுதிக் காந்தியின் மரணத்துக்கு வருத்தம் தெரிவிக்க வில்லை!

நேர்வழி எதுவெனத் தெரிந்தபின் செய்யாமல் நழுவுவது கோழைத்தனம்

இந்தியா, பாகிஸ்தான் பிரிவினை சமயத்தில், மனைவிமார் காமப் பலாத்காரத்திற்கு இரையாகும் போது, குழந்தைகள் கண்முன் கொலை செய்யப்படும் போது, உறவினர் தலைகள் சீவப்படும் போது, பழிவாங்க ஆய்தமோடு ஓடும் இந்துக்களைத் தடுத்துப் பொறுக்குமாறு, காந்தி அகிம்சா வேதம் போதித்தார். ‘அகிம்சா வழித் தூதரே! சொல்லுங்கள்! எப்படி இந்த நரகத்தில் வாழ்வது ? பஞ்சாபில் இந்துக்களைக் கண்டதும் முஸ்லீம் ஆட்கள் கொலை செய்யும் போது, ஆயுதத்தைக் கைவிட நீங்கள் எப்படிச் சொல்லலாம் ? கசாப்புக் கடை ஆடுகளைப் போல எங்கள் தலைகள் அறுபட்டுக் கூறுபட வேண்டுமா ? ‘ என்று புலம்பெயர்ந்த கூட்டத்தார் யாவரும் கத்தினார்கள்! ‘காந்தி சாகட்டும் ‘ என்று கூச்சலிட்டார்கள்!

டெல்லியில் வாழும் காந்தியின் முஸ்லீம் நண்பர்கள், ‘உயிருக்கு ஆபத்து என அறிந்தும் இந்தியாவிலே தங்குவதா ? அன்றி எல்லாவற்றையும் விட்டுவிட்டுப் பாகிஸ்தானுக்கு ஓடுவதா ? ‘ என்று கேட்டால், ‘ஓடிப் போகாமல் தங்கி மரண ஆபத்தை ஏற்றுக் கொள்ளுங்கள் ‘ என்பது காந்தியின் பதிலாக இருந்தது! போகப் போக, காந்தியின் அறிவுரை, அவரைப் பின்பற்றியவருக்கும் பிடிக்க வில்லை! எப்போதும் இஸ்லாமியருக்குப் பரிந்து, அவர் பேசுவது பலருக்கு வெறுப்பூட்டின!

‘முஸ்லீம்களுக்குப் பகைவன் எவனோ, அவன் இந்தியாவுக்கும் பகைவன். இந்தியா, பாகிஸ்தான் இரண்டிலும் ஒருங்கே அமைதி நிலவட்டும். நாம் ஒருவரை ஒருவர் பகைவராக எண்ணக் கூடாது. இந்துக்கள் குர்ரானைப் படிக்க வேண்டும். முஸ்லீம் பகவத் கீதையின் உட்பொருளை அறிய வேண்டும். நமது மதத்தை நாம் மதிப்பதுபோல், மற்றவர் மதங்களையும் மதிக்க வேண்டும். உயர்ந்த கருத்துக்கள் உருது மொழியில் இருந்தாலென்ன ? சமஸ்கிருதத்தில் இருந்தா லென்ன ? பார்ஸி மொழியில் இருந்தா லென்ன ? அவை எல்லாமே மெய்யான மொழிகள் தான்! நமக்கும் உலகுக்கும் கடவுள் நல்லறிவைத் தரவேண்டும் ‘. இவை காந்தியின் அழுத்தமான வார்த்தைகள்.

காந்தியைக் கொல்ல பலவிதச் சதிகள்

காந்தி இஸ்லமியருக்குப் பரிந்து பேசுவது, சிலருக்கு வேப்பங் காய்போல் கசந்தது! மகாராஷ்ட்ராவில் ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க [R.S.S.S] உறுப்பினர் பலருக்கு எட்டிக் காயாய் இருந்தது. அவர்கள் தூய இந்துக்கள்; மத வெறியர்கள். குறிப்பாக பூனாவைச் சேர்ந்த நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே ஆகிய இரு வாலிபருக்கு காந்தி பகைவ ரானார்! தென் ஆப்பிரிக்காவில் வேலை முடிந்து 1915 இல் பாரதம் திரும்பிய காந்தியை, விடுதலைப் போராட்டத்திற்கு இழுத்து வந்தவரும், ஒரு மராட்டியரே; அவர்தான் கோபால கிருஷ்ண கோகலே! 1948 இல் சதி செய்து அவரைக் கொன்றவனும் ஒரு மராட்டியனே! அவன்தான் நாதுராம் விநாயகக் கோட்சே! முதலில் கோட்சே முழுக்க முழுக்க காந்தியை பின்பற்றினான்! 1937 இல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டு, கைதி செய்யப் பட்டுச் சிறைக்குச் சென்றவன், கோட்சே! பிறகு கொள்கை பிடிக்காமல் அவரை விட்டுவிட்டு ராஷ்ட்ரிய சுவய சேவா சங்க இந்து போராட்டத் தளபதி வீர சாவர்க்கரைப் பின் பற்றினான். வீர சாவர்க்கர் இந்து மதத்தைக் காக்க வந்த கடவுளின் தூதராகப் போற்றப்படும் ஒரு பட்டாளிய இந்து [Messiah of Militant Hindu]. சாவர்க்கர் காந்தியின் கொள்கை எல்லாவற்றையும் எதிர்க்கும் ஓர் எதேச்சை அதிகாரி! மெளண்ட் பாட்டன் தனது இந்தியப் பிரிவினைத் திட்டத்தை, 1947 ஜூலை 3 இல் வெளியிட்ட போது, அதைப் ‘பாரதத்தின் இருண்ட நாள் ‘ என்று பறை சாற்றி, வீர சாவர்க்கர் தனது பூரண எதிர்ப்புத் தெரிவித்தார்!

40 கோடி [1948] இந்திய மக்களின் விதி, அப்போது காந்தியின் கையில் இருந்தது! பாரதக் கண்டம் இரு துண்டமாக வெட்டுப்படப் போவதை காந்தி எப்போதும் எதிர்த்தார்! ‘என் இறந்த உடம்பு மீதுதான், இந்தியா பிரிவுபட வேண்டும் ‘ என்று வெகுண்டார். ‘இந்தியா பிளவு பட்டால் ஒழிய, இந்து முஸ்லீீம் தனித் தனியே சமரசமாய் வாழ முடியாது ‘, என்பது வைஸ்ராய் மெளண்ட் பாட்டனின் உறுதியான எண்ணம். நேரு, வல்லபாய்ப் படேல், ராஜாஜி ஆகியோர் மூவரும் இந்தியா இரண்டாய்ப் பிரிவதைத் தவிர வேறு வழியில்லை என்று காந்தியுடன் வாதாடினர்.

காந்தி பாரதப் பிரிவினைப் போராட்டத்தில் தோல்வி அடைந்தார்! ‘இந்தியா இரண்டாகப் பிளக்கப் பட்டது. ஆனால் காந்தி உயிரைப் போக்கிக் கொள்ள வில்லையே ‘ என்று கோட்சே ஆங்காரம் அடைந்தான். ‘காந்தியின் அகிம்சா வேதம், இந்து மக்களைக் கோழையாக்கி, எதிர்க்கும் சக்தியை இழக்க வைத்து, எதிரிகள் முன் மண்டியிடச் செய்து விட்டது! மானத்தைக் காக்க இந்து மாதர்கள், காம பலாத்கார வேதனையிலிருந்து தப்பிக் கொள்ள, கிணற்றில் குதித்துத் தம் உயிரை மாய்த்துக் கொள்கிறார்கள்! பலியானப் பெண்களுக்கு அது ஒரு வெற்றி, என்று காந்தி அவர்களது சாவைப் பாராட்டுகிறார்! அப்படிப் பலியாகும் மாதர்களில் ஒருத்தி, அடுத்து என் தாயாக இருக்கலாம் ‘ என்று கொதித்தான் கோட்சே! ‘பாரத மாதாவின் சதையைப் பசிக் கழுகுகள் உயிரோடு கிழிக்கின்றன! நம் பெண்டிர் நடுத் தெருவில் கற்பழிக்கப் படுவதை, காங்கிரஸ் அலிகள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன! எத்தனை காலம் பொறுப்பது ? இதற்கு ஒரே முடிவு, காந்தியைக் கொல்ல வேண்டும் ‘ என்று கொதித் தெழுந்தான் கோட்சே. இந்து மகா சபையில் காந்தியைக் கொல்ல பலவித சதித் திட்டங்கள், வீர சாவர்க்கர் தலைமையில் உருவாகின! குழுச் சதியாளர்கள்: நாதுராம் கோட்சே, நாராயண் ஆப்தே, கோபால் கோட்சே, விஷ்ணு கார்காரே, மதன்லால் பாவா, இன்னும் சிலர்.

மகாத்மா காந்தியின் இறுதி உண்ணா விரதம்

பாரதப் பிரிவினை ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு ஈடாகத் தர வேண்டிய 55 கோடி ரூபாயை, பாரத அரசாங்கம் பிடித்து வைத்துக் கொள்ளப் போவதை, காந்தி அறவே வெறுத்தார். அவரது எதிர்ப்புத் தர்க்கம் நேருவையும், படேலையும் உடன்பட வைக்க முடியவில்லை! இறப்பதற்கு 17 நாட்களுக்கு முன், 1948 ஜனவரி 13 ஆம் தேதி காந்தி, அதற்காகத் தான் உண்ணா விரதத்தைத் தொடங்கப் போவதாக, பிர்லா மாளிகையிலிருந்து அறிவித்தார். ஓராண்டுக்கு முன்பு இந்து முஸ்லீம் படுகொலைக் கலகத்தை நிறுத்த, காந்தி நெளகாலி நோக்கித் தனியாகத் தைரியமாகப் பாத யாத்திரை செய்தார். அப்போது ரவீந்திர நாத் தாகூரின் ஒரு பாடலைப் [தலைப்பில் உள்ளது] பாடிக் கொண்டு தன் உண்ணா விரதத்தைத் துவங்கினார்.

சில நாட்கள் கழித்து இந்தியாவின் எல்லை மாநிலத்திலிருந்து, பாரதப் பிரிவினைக் கலகத்தில் பாடுபட்ட சில இந்துகளும், சீக்கியர்களும் கூக்குரலுடன் காந்தியைக் காண வந்தனர். ஆறுதல் மொழி கூறு வந்த காந்தியை, அவர்கள் யாவரும் உடனே திட்ட ஆரம்பித்தனர்! ‘இதுவரை எங்களைக் கொடுமைப் படுத்தியது போதும். முற்றிலும் எங்களை நாச மாக்கி விட்டார்! எங்களைத் தனியே வாழ விடு! இமயத்தில் போய் ஓய்வெடு! ‘ என்று காந்தியை நோக்கிக் கூச்சல் போட்டனர். இக்கடுஞ் சொற்கள் காந்தியின் நெஞ்சை ஊடுருவித் தாக்கின! அவற்றைக் கேட்டு கற்சிலையாய் நின்று விட்டார், காந்தி! அவரது மெலிந்த மேனி மீது ஒரு பெரிய பாறாங்கல் விழுந்து எலும்பு நொருங்கியது போல் உணர்ந்தார்! பிறகு சில நாட்கள் சென்றபின் வேறு ஒரு கூட்டம் வந்து, உண்ணா விரதத்தை நிறுத்துமாறுக் காந்தியைக் கெஞ்சியது. அந்தக் கூட்டத்தில் இஸ்லாமியர், சீக்கியர், இந்துக்கள் எல்லா இனத்தவரும் இருந்தனர்.

‘இந்தியாவுக்கு அகிம்சா வழி இனி தேவை இல்லை என்றால், நான் இங்கு உயிர் வாழ்வதிலும் பயனில்லை! பாரதத்தின் தலைவர்கள் ஒருநாள், இந்தக் கிழவனால் நாம் பட்டது போதும்! நம்மை விட்டு அவன் ஒழிந்து போக மாட்டானா ? என்று கூறினால் கூட நான் ஆச்சரியப் படமாட்டேன் ‘ என்று காந்தி ஒருதரம் சொல்லி யிருக்கிறார்.

மெளண்ட் பாட்டன் தம்பதியர் உண்ணா விரதத்தில் கிடந்த காந்தியைக் காண வந்தனர். ‘மலையை மகமதிடம் கொண்டு வர, நான் ஓர் உண்ணா விரதம் எடுக்க வேண்டி யிருக்கிறது! ‘ என்று காந்தி நகைப்பூட்டி அவர்களை வரவேற்றார். காந்தியின் மெலிந்து போன உடலைக் கண்டு, எட்வீனா பாட்டன் கண்களில் நீர் பெருகியது! ‘வருத்தப் படாதே, எட்வீனா, காந்தி எதைச் செய்ய விரும்புகிறாரோ, அதைச் செய்து கொண்டிருக்கிறார். அவர் மிகுந்த மனத்திட முடைய மெலிந்த மனிதர் ‘, என்று மனைவியைத் தேற்றினார் மெளண்ட் பாட்டன்.

கோபால் கோட்சே, தன் அண்ணன் நாதுராம் கோட்சேயிக்குக் கொடுத்த வாக்குப்படி, ஜனவரி 17 ஆம் தேதி காந்தியைக் கொல்ல .32 காலிபர் கைத் துப்பாக்கியுடன், டெல்லிக்கு வந்தான். ஆனால் அன்று அதை நிறைவேற்ற அவனால் முடியவில்லை!

கடேசியில் பெற்ற காந்தியின் வெற்றி!

இறுதியில் பாரத அரசாங்கம் 55 கோடி ரூபாயைப் பாகிஸ்தானுக்குக் கொடுக்க முன் வந்தது! காந்தி ஜனவரி 18 ஆம் தேதி உண்ணா விரதத்தை நிறுத்தினார். அன்றைய பிரார்த்தனை சொற்பொழிவில் நேரு பேசினார், ‘இந்திய விடுதலை நான் கண்ட ஓர் ஒளிக்காட்சி! ஆசியாவின் எதிர்காலத்தை என் மனதில் வரைந்து வைத்தேன். ஆனால் அந்த ஒளிக்காட்சியை அளித்தவர் ஓர் அரிய, எளிய மனிதர்! அவரைக் காப்பாற்றச் செய்யும் எந்தத் தியாகமும் அத்தனை பெரியதல்ல! அவர் ஒருவர்தான் நம்மை மெய்யானக் குறிக்கோளை நோக்கி நடத்திச் செல்ல முடியும். நம் குருட்டு நம்பிக்கை அல்ல! ‘

அன்று கூட்டத்தில் காந்தி பேசினார், ‘பாரத நாடு இந்துக்களுக்கு மட்டுமே! அதுபோல் பாகிஸ்தான் இஸ்லாமியருக்கு மட்டுமே! என்று கூறுவது போல் முட்டாள்தனமான எண்ணம் எதுவும் இருக்க முடியாது! இந்தியா, பாகிஸ்தான் இரண்டையும் ஒருங்கே சீர்திருத்துவது என்பது மிகவும் கடின மானது! ஆனால் நாம் மனம் வைத்து செய்தால், எதுவும் நிச்சயமாக முடியும்! ‘

1947 ஜனவரி 20 ஆம் நாள் மிகப் பலவீனமுள்ள காந்தியை, பிர்லா மாளிகைப் பிரார்த்தனை மேடையில் ஒரு நாற்காலியில் வைத்துக் கொண்டு போய் அமர்த்தினர்! அப்போது இந்து மகா சபைச் சதியினர் கொலை ஆயுதங்களோடு கூட்டத்தினுள் நுழைந்தனர். மதன்லால் பாவா பற்ற வைத்த கைவெடி எதிர் பாராதவாறு கூட்டத்தில் வெடித்தது. ஆனால் காந்தி உயிர் தப்பினார். போலீஸ் பாவாவைத் தேடிப் பிடித்துக் கைதி செய்தனர்.

காந்தி இறப்பதற்கு முந்திய நாள் [ஜனவரி 29, 1948] வியாழக்கிழமை, அவர் அணு ஆயுதங்களைப் பற்றி இந்திரா காந்தியிடம் கூறியது: ‘அணுகுண்டை ஒருங்கே அமெரிக்கா தவிர்க்க வேண்டும். அகிம்சா வழிப் போராட்டம் ஒன்றை மட்டும் அணு குண்டுகள் அழிக்க முடியாது! அணுகுண்டு நம்மைத் தாக்கும் போது, அச்சமின்றி நிமிர்ந்து நின்று மேல் நோக்கிப் பார்த்து, விமானிக்காகப் பிரார்த்திக்க வேண்டு மென்று, என்னைப் பின்பற்றுவோரிடம் நான் கட்டாயப் படுத்துவேன் ‘. மற்றும் ஒரு சமயம், ‘அகிம்சா இயக்கம் ஒன்றுதான் மனித இனத்தின் கைவசமுள்ள மகாச் சக்தி பெற்ற ஓர் ஆயுதம். பேரழிவுச் சக்தியுடைய எந்த யுத்த ஆயுதத்தையும் விட பெரியது, அது! ‘ என்று சொல்லியிருக்கிறார்.

இரண்டாம் தடவை ஜனவரி 30 ஆம் தேதி மாலை ஆப்தே, கோட்சே இருவரும் கைத் துப்பாக்கியை மறைத்துக் கொண்டு, காந்தியின் பிரார்த்தனை மைதானத்தில் நடமாடிக் கொண்டிருந்தனர். அன்று கோட்சே வெற்றி அடைந்தான்! காந்தியைக் கொன்ற சதிகாரனாய்ச் சரித்திரத்தில் இடம் பெற்றான்! 1948 மே மாதம் 27 ஆம் தேதி நாதுராம் கோட்சே, ஆப்தே, கோபால் கோட்சே, சாவர்க்கர் உள்பட எட்டுப் பேர் கைதி செய்யப் பட்டு சதி வழக்குப் பல மாதங்கள் நடந்தது. முடிவில் நாதுராம் கோட்சே, ஆப்தே இருவரும் கொலைக் குற்றம் சாட்டப் பட்டு, நவம்பர் 15 ஆம் தேதி தூக்கிலிடப் பட்டனர்! கோபால் கோட்சே, கார்காரே, பாவா மூவருக்கும் 12 வருட சிறைத் தண்டனை கொடுக்கப் பட்டது! போதிய சாட்சி இல்லாது போனதால், சாவர்க்கர் உள்பட மற்றோர் விடுவிக்கப் பட்டனர்!

ஜாதி மதங்களைப் பார்ப்போம்! மதிப்போம்! பகைத்திடோம்!

பாரத அரசியல் நிர்ணயச் சட்டப்படி, இந்தியா ‘மதச் சார்பற்ற [Secular] ‘ ஒரு குடியரசு. மகாத்மா காந்தி மதச் சார்பற்ற ஒரு பாரத நாட்டை உருவாக்கும் பணிக்கே உயிர் வாழ்ந்தார்; அதை இந்தியாவில் நிலைநாட்டப் போராடியதில் அவர் தோல்வியுற்று மாண்டார்! பாரதச் சட்டங்கள் வழக்கறிஞர்களுக்கும் நீதி மன்ற நீதிபதிகளுக்கும் மட்டுமே பயன்படும் கருவிகள்! பாமர மக்கள், அரசியல் வாதிகள், மதவாதிகள், மடாதிபதிகள் ஆகியோருக்கு, எழுதப் பட்டாலும் அவர்கள் சட்டத்தைப் பின்பற்றுவ தில்லை! இஸ்லாமிய மதம், கிறிஸ்துவ மதம், சீக்கிய மதம், புத்த மதம், ஜெயின மதம் இந்திய நாட்டில் பல நூற்றாண்டுகள் வேரூன்றி, இந்து மதத்துடன் இணைந்து உலவி வருகின்றன. ஆயிரக் கணக்கில் நம்மிடையே ஜாதிகள் உள்ளன! பல்லாயிரம் ஆண்டுக் காலம் வளர்ந்து வேரூன்றி விட்ட ஜாதிப் புற்றுநோயை எந்த அறுவை முறையிலும், எத்தனை ஆண்டுகள் முயன்றாலும், அவற்றைப் பாரத மண்ணிலிருந்து களை எடுக்க முடியாது! ‘எம்மதமும் சம்மதமே ‘ என்று காந்தியின் மரணம், நமக்கு அறிவுரை சொல்லட்டும்! பாரத நாடு இம்மதங்கள் ஒருங்கே தனித்து வாழப் பல நூற்றாண்டுகள் இடம் கொடுத்தது. எல்லோருக்கும் இணையான சமரச வாழ்வைத் தொடர்ந்து, ஏன் பாரதம் அளிக்கக் கூடாது ?

வட இந்தியாவில் இந்து மத வெறியர்கள், அடிக்கடிக் கிறிஸ்துவக் கோயில்களைத் தீயிட்டுக் கொளுத்தியும், அங்குள்ள பாதிரியார்களைக் கொலை செய்தும் வருகிறார்கள்! தாழ்த்தப் பட்ட ஏழை மக்களை, மேலினத்தார் வட நாட்டிலும், தென் நாட்டிலும் படாத பாடு படுத்தி வருகிறார்கள். பாரத்திலே பிறந்து வளர்ந்த புத்த மதத்தினரை, இந்து மதவாதிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நசுக்கி பாரத நாட்டிலிருந்து விரட்டி விட்டதால், மிஞ்சிய சிறுபான்மையினர் இருக்குமிடம் தெரியாமல் முடங்கிக் கிடக்கிறார்கள்! சீக்கியர் தனி நாடு கோரிப் போராடித் தொல்லை கொடுத்துத் துன்புற்று, அவர்கள் கொட்டம் அடக்கப் பட்டு இப்போது சற்று அமைதி நிலவி வருகிறது.

காந்தி ஏசு நாதரை மிகவும் நேசித்தார். ‘ஏசு நாதரின் ‘மலைப் பிரசங்கம் ‘, [Sermon on the Mount] காந்தியைக் கவர்ந்த ஓர் அரிய வாக்குரை! இந்து வேதங்கள் மட்டுமே தேவ வாக்குகள் என்பதைக் காந்தி ஒருபோதும் ஒப்புக் கொண்ட தில்லை! அவை ஏன் பைபிளாகவும், கொரானாகவும் இருக்கக் கூடாது ? என்று கேள்வி எழுப்பினார். ‘நீங்கள் கிறிஸ்துவர் இல்லை ‘, என்று ஒருவர் குறிப்பிட்ட போது, காந்தி சொன்னார், ‘நான் ஒரு கிறிஸ்டியன்! நான் ஒரு இந்து! நான் ஒரு முஸ்லீம்! நான் ஒரு யூதன்! ‘ அந்த ரீதியில் அவர் மற்றவர்களை விடத் தான் ஒரு தகுந்த இந்தியன், என்று காட்டிக் கொண்டார்.

‘எனது ஆழ்ந்த நம்பிக்கை இதுதான்: இந்துக்கள், சீக்கியர், இஸ்லாமியர், கிறித்துவர் யாவரும் ஒரே பாரத மாதாவின் புத்திரர், புத்திரிகள். பாரதத்திலோ, பாகிஸ்தானிலோ நடக்கும் எந்த விதப் படு கொலையும் கண்டு பலிவாங்க முற்பட்டு, நம் மக்கள் கடமையிலிருந்து பிறழக் கூடாது! பாகிஸ்தானில் உள்ள எல்லா இந்துக்களும், சீக்கியரும் கொல்லப் பட்டாலும், இந்தியாவில் உள்ள ஓர் இஸ்லாமியச் சிறு பிள்ளையைக் காப்பாற்ற நாம் முற்படவேண்டும்! ‘ என்பது காந்தியின் வாக்கு!

இந்தியருக்குத் தேசப் பற்று குன்றி வருவதைக், காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி முதல் பயணம் செய்யும் எவரும் கண்டு பிடித்து விடலாம்! தேசப் பற்று என்றால், நாட்டு மக்கள், நாட்டு மொழிகள், நாட்டுப் பண்புகள், பழக்க வழக்கங்கள், நடை யுடை பாவனைகள் மீதுள்ள மதிப்பையும், நம்பிக்கையும் காட்டும் மனிதத் தன்மை! அதற்கு மக்களிடம் மதச் சகிப்பு, இனச் சகிப்பு, ஜாதிச் சகிப்பு, மொழிச் சகிப்பு மிக மிகத் தேவை! மதச் சார்பில்லாமை என்றாலும் இதுதான் அர்த்தம்! பாரதத்தின் பல பிரச்சனைகளுக்கு மூல காரணம், இந்தியரிடம் குறைந்து வரும், இந்தச் சகிப்பற்ற தன்மையே!

‘ஜாதிகள் இல்லயடி பாப்பா! ஜாதி மதங்களைப் பாரோம்! மற்றும் செப்பும் மொழி பதினெட் டுடையாள், ஆயின் சிந்தை ஒன்றுடையாள் ‘ என்று பாரத மாதாவைப் பற்றிப் பாரதியார் பாடியதற்கும் இதுதான் அர்த்தம்! ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கின் அனைவர்க்கும் தாழ்வு ‘ என்றும் நமக்குக் கூறினார்! நாற்பது ஆண்டுகள் ஒன்றாக எல்லா ஜாதியினரும், எல்லா இனத்தவரும், எல்லா மதத்தினரும் பிரிட்டாஷ் சாம்ராஜியத்தோடு போராடி இந்தியா மகத்தான விடுதலை அடைய வில்லையா ?

ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!

பிரிட்டாஷ் அரசாங்கம் பாரத நாட்டை அடிமைப் படுத்தினாலும், அது செய்த நல்ல காரியங்களும் உண்டு. துண்டு பட்டுப் போன பரத கண்டத்தை ஒன்றாக்கியது பிரிட்டாஷ் அரசு! ஆங்கில மொழி நம்மிடையே பரவி யிருந்ததால், பாரத நாடு கல்வி, தொழில், வாணிபம், விஞ்ஞானம், வேளாண்மை போன்ற எல்லாத் துறைகளிலும் முன்னேறி இருக்கிறது. இந்தியாவின் பதினெட்டு மொழிகள் வளர்ச்சி பெற, ஆங்கில மொழி உதவியாக இருந்திருக்கிறது. இந்திய நகரங்கள், பெரும்பான்மையான ஊர்கள் ரயில் பாதைகளில் இணைக்கப் பட்டு, ரயில்தொடர் வாகனங்கள் ஜாதி மதம் பாராது எல்லா இனத்தாரையும் ஒருங்கே ஏற்றிச் செல்கின்றன. இந்தியத் தபால், தந்தி நிலையங்கள் ஜாதி மதம் பாராது, எல்லா ஊர்களுக்கும் நமது கடிதங்களைப் பரிமாறி வருகின்றன. இந்திய ரயில்தொடர் வாகனங்கள், ஆகாய விமானங்கள் போன்ற சாதனங்களில் நாம் பயணம் செய்யும் போது, ஜாதி, மதம், இனம் எதையும் பார்க்காமல், ஒரு தேச மக்களாய் நடந்து வருகிறோம்! பன்மொழி பேசும் பல்வேறு இந்திய மக்களைப் பிணைக்கும் ஓர் இணைப்பு மொழியாய் ஆங்கில மொழியும் பாரதத்தில் பணி செய்து வருகிறது!

இப்போது இந்துக்கள் மதப் போர்வைக்குள் புகுந்து கொண்டு, இஸ்லாமியர், கிறிஸ்துவர் ஆகியோர்க்குத் தொல்லை கொடுத்து வருகிறார்கள். 16 ஆம் நூற்றாண்டில் பாபர் கட்டிய பாப்ரி மசூதியை அயோத்தியாவில் 1992 ஆம் ஆண்டில் இடித்துத் தரைமட்ட மாக்கிய பிறகு, அங்கே சில இந்துக்கள் ராமர் கோயில் கட்டப் புகுவது ஒரு மாபெரும் பிரச்சனைக் குரிய மதச் சம்பவம்! ராமர் பிறந்த புண்ணிய பூமியாகக் கருதப்படும் அந்தத் தளத்தில் இந்துக்களுக்கும் இஸ்லாமியருக்கும் நிரந்தர மதப்போரை உண்டாக்கிப் பலரது குருதி வெள்ளம் ஓடி விட்டது! இதைப் பற்றி மத்திய அரசியல் மந்திரி, உமா பாரதி அழுத்தமாகச் சொன்னாராம், ‘பாப்ரி மசூதி தேசீய அவமானச் சின்னம்! ஓர் அடிமைச் சின்னம்! அது நமது தேசப் பற்றைப் பாதிக்கிறது! முகலாய சாம்ராஜியத்தைப் பாரத தேசத்தில் நிலை நாட்டிய ஓர் ஆக்கிரமிப்பாளன் பாபர், பெயரைத் தாங்கி நிற்கிறது! மசூதி இடிப்பில் எந்த விதச் சதித் திட்டமும் இல்லை! அது ஓர் அடிமைச் சின்னம், என்பது எனது உறுதியான நம்பிக்கை ‘ என்று முழக்கினாராம்!

அப்படிப் பார்க்கப் போனால், ஆக்ராவில் உள்ள ‘தாஜ் மஹால் ‘ ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? டெல்லியில் உள்ள ‘குதுப்மினார் ‘ கம்பம் ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? பம்பாயில் பிரிட்டாஷ் அரசாங்கம் கட்டிய, ‘இந்தியத் தலை வாசல் ‘ [Gateway of India] ஓர் அடிமைச் சின்னம் இல்லையா ? சையத் அகமத் புகாரி உமா பாரதியைத் தாக்கி, ‘பாப்ரி மசூதியை ஓர் அடிமைச் சின்னம் என்பது இஸ்லாமியரை அவமானப் படுத்துவதாகும்! இஸ்லாம் மதத்தை எடுத்துக் காட்டும், ஓர் தனித்துவச் சின்னம் அது ‘ என்று சீறினார். ராமர் பிறந்த பூமிக்காக தீராத இந்து முஸ்லீம் சண்டை!

மீண்டும் வட நாட்டில் 2002 ஆம் ஆண்டில் ‘ராம் ஆலயப் போர் ‘ தலை தூக்கி யிருக்கிறது! இந்து முஸ்லீம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக், கொலை செய்து பலிவாங்கிக் கொண்டனர்! இறந்தவர்களில் முஸ்லீம் மக்கள் எண்ணிக்கை மிக அதிகம்! பெரும்பான்மை யான இந்து மத வெறியர்கள், தீங்கிழைக்காத சிறுபான்மை முஸ்லீம் மக்கள் இல்லங்களைத் தீயிட்டு, அவர்களை உயிரோடு கொளுத்தி யிருக்கிறார்கள்! காந்தி எந்த மதச் சண்டைகள் நிகழக் கூடா தென்று தன் ஆருயிரைக் கொடுத்தாரோ, அந்த மதச் சண்டைகள் பாரதத்தில் இன்னும் ஓயவில்லை! இனியும் ஓயப் போவதில்லை!

கிறிஸ்துவக் கோயில்களைத் தீயிட்டுக் கொளுத்திப் பாதிரியாரைக் கொன்ற போதோ, பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்ட மாக்கிய போதோ, சங்கராச்சாரியார் போன்ற இந்து மதாதிபதிகள், இந்து மத வெறியர்களைக் கண்டிக்கவும் இல்லை! தண்டிக்கவும் இல்லை! ராம ராஜியத்தை ஆதரித்த மகாத்மா இருந்திருந்தால், ராம பூமிக்காக மசூதி தகர்க்கப் பட்டதைத் தடுத்து நிறுத்தி அதைக் காப்பாற்றி யிருப்பார்! கிறிஸ்துவர் புனிதக் கோயில் எரிப்புகளையும், அருட் பாதிரியார் கொலைகளையும் தடுக்க அறப்போர் நடத்தி யிருப்பார்! ஆனால் காந்தி சீடர்கள் என்று சொல்லிக் கொள்பவரும், மதச் சார்பற்ற பாரத அரசின் ஆட்சியாளர்களும் கோரக் கொலைகளை, இன்னும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது அநாகரீகம், அவமானம், அறிவீனம்!

வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்!

மகாத்மா காந்தி இன்னும் மாண்டு போகவில்லை! அவர் ஓர் உலக மனிதாபிமானி! ‘மகாத்மா ‘ என்னும் பட்டத்தை காந்திக்கு அளித்தவர், கவியோகி ரவீந்திர நாத் தாகூர். ‘உலக சரித்திரத்தில் மகாத்மா காந்தி புத்தர், ஏசுக் கிறிஸ்து ஆகியோருக்கு இணையான இடத்தைப் பெறுவார் ‘, என்று இந்தியாவின் கடைசி வைஸ்ராய் மெளண்ட் பாட்டன் கூறி யிருக்கிறார். அமெரிக்க ஆஃப்ரிக்கர் விடுதலைப் பிதா, மார்டின் லூதர் கிங், காந்தியின் அகிம்சாப் போராட்ட முறையைப் பின்பற்றினார். ‘வாழ்க நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம் ‘ என்று பாரதியார் பாடியுள்ளது போல், மகாத்மா காந்தி பிற நாடுகளில் ‘மாதிரி மனிதராய் ‘, மாந்தருக்கு வழிகாட்டியாய் பணி செய்து கொண்டிருக்கிறார்! ஆனால் இந்தியாவை விட்டு, அவரது ஆத்மா என்றோ போய் விட்டது! பாழ்பட்டு போகும் பாரத தேசந் தன்னை, இனி வாழ்விப்பது எப்படி என்று விண்ணுலகில் கவலைபட்டுக் கொண்டிருக்கிறார், காந்தி!

***************************

தகவல்:

1.  Gandhi’s Truth By : Erik H. Erikson (1969)

2.  Gandhi His Life & Message for the World By:  Louis Fischer (1954)

3.  The Life of Mahatma Gandhi By : Louis Fischer  (1950/1983)

jayabarat@tnt21.com

திண்ணையில் சி. ஜெயபாரதன், கனடா

புகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழா

cover-buhari.jpg

கவிஞர் புகாரியின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் ஆற்ற வந்த எனது கருத்துரை (அக்டோபர்: 1, 2005)

சி. ஜெயபாரதன், கனடா

கவிஞர் திலகம் புகாரியின் புத்தக வெளியீட்டு விழா கனடாவின் பெருநகர் டொரொன்டோவில் ஸ்கார்பொரோ நகராட்சி அரங்கில் இலக்கியத் தோட்டம் அளித்த பீடத்தில் துவங்கியது. வெளிவரும் நூல்கள் இரண்டு: பச்சை மிளகாய் இளவரசி, சரணமென்றேன். விழாவில் பங்கெடுத்த சுமார் 170 பேரில் பல பெண்டிரும், கவிஞர்களும், எழுத்தாளர்களும் பெரும்பான்மை யாக இருந்தனர். பல்கலைக் கழகப் பேராசியர்கள் கவிஞர் டாக்டர் ஆனந்த், டாக்டர் பசுபதி மற்றும் இலங்கைப் புலவர் கந்தவனம் ஆகியோர் வந்திருந்தனர். இந்தியாவி லிருந்து சிறப்புப் பேச்சாளராக இசைக்கவிஞர் ரமணன் [டி.ஏ. வெங்கடேஸ்வரன்] கனடாவுக்கு வந்திருந்தார். விழாத் தலைவர்: சிவதாசன் அவர்கள். இலக்கியத் தோட்டத்தின் பிரதிநிதியாக எனது நண்பர், எழுத்தாளர் அ. முத்துலிங்கம் முன்னமர்ந்து விழாவைச் சிறப்பாக்கினார்.

கவிஞர் புகாரியும், புகாரி குடும்பத்தாரும் விழாப் பணிகளிலும் பங்கேற்று விழாவுக்கு நிறைவை ஊட்டினர். ஆனால் மெய்யாக அரங்குக்கு ஒளியேற்றிய மங்கையர்க்கரசி கவிஞர் புகாரியின் அருந்தவப் புதல்வி, ‘நூல் தலைப்பு இளவரசி ‘ தந்தையைப் பின்பற்றி இரண்டாம் ஆண்டு மின்கணனி விஞ்ஞானம் படிக்கும் ரிஸ்வானா புகாரி. விழாவில் உரை ஆற்றியோர்: இசைக்கவிஞர் ரமணன், குவியம் இதழ் பொன் குலேந்திரன், சி. ஜெயபாரதன், பொன். கனகசபாபதி, பல்கலைச் செல்வர் ஆர்.எஸ். மணி, உதயம் ஆசிரியர் லோக லிங்கம் ஆகியோர். இக்கட்டுரை நான் பேசத் திட்டமிட்ட என்னுரையை மட்டும் காட்டுகிறது. சொற்பொழிவு நேரம் 15 நிமிடமாக எனக்குக் குறுக்கப் பட்டதால், சில கட்டுரைக் கருத்துக்கள் சுருக்கப்பட்டு நான் முழுவதும் பேச முடியாமல் போயின.

விற்பனர்க்கும் அற்புதமே! முற்றுமுதற் கற்பகமே!

சிற்றருவிச் சொற்பதமே! சுற்றுலக முற்றுகையே!

வெற்றிநிறைக் கற்றறிவே! நெற்றிவளர் பொற்றழலே!

உற்றதுணை பெற்றுயரப் பற்றுகிறேன் நற்றமிழே!

கவிஞர் புகாரி எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்தை மிக்க இனிமையாகப் பல்கலைச் செல்வர் ஆர்.எஸ். மணி இசை அமைத்துப் பாடி விழாவில் அனைவரையும் மெழுகாக உருக்கினார். தமிழன்னையின் செவிகளில் அந்த இன்னிசைக் கீதம் விழுந்திருந்தால், அவளே உயிரோடு எழுந்து வந்து ஆர். எஸ். மணிக்கு ஒரு மாலையும், புகாரிக்கு ஒரு மாலையும் சூடிப் பூரித்துப் போயிருப்பாள்! அரங்கத்தில் தலைவர் என்னை அறிமுகப் படுத்திய பின்பு, எழுந்து சென்று நான் ஆக்கிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் என்னுரையைத் துவங்கினேன்.

நெஞ்சில் நீ! நிழலில் நீ!

நியதி நீ! நினைவெல்லாம் நீயே!

தஞ்சம் நீ! தவப்பயன் நீ!

தரணியில் நீ! சக்தி எல்லாம் நீயே!

என்னுயிர் நீ! என்னுதிரம் நீ!

என்னுடல் நீ! என் ஆத்மாவும் நீயே!

கண்கள் நீ! கற்பனையில் நீ!

கலையில் நீ! கவினெல்லாம் நீயே!

கவிதை நீ! காவியத்தில் நீ!

கதையில் நீ! களஞ்சியம் நீயே!

புவியில் நீ இல்லை யெனில் எனக்குப்

பூமியே ஒளியற்றுப் போகும் தாயே!

உயர்நிலைப் பள்ளியில் நான் படித்த காலத்தில் எங்கள் தலைமை ஆசிரியர் அனுதினமும் காலைப் பிரார்த்தனைக் கூட்டத்தில் மாணவர்கள் முன்பு ஆங்கிலத்தில் இந்தக் கவிதையை வாசிப்பார். அப்போது எனக்கு அது இரவீந்தநாத் தாகூரின் நோபெல் பரிசு பெற்ற கீதாஞ்சலிப் பாடல் என்று தெரியாது. பிறகு தெரிந்ததும் அதைத் தமிழ்ப்படுத்திப் பாடிப்பாடி பூரித்தேன். அப்பாடல் முதலில் 1980 ஆண்டு இதயம் பேசுகிறது, விஞ்ஞான வெளியீட்டில் வந்தது. பிறகு சிறிது மாறுதலுடன் திண்ணையிலும் [1], பதிவுகளிலும் வெளியானது. நாட்டு வணக்கமாய்ப் பல்லாண்டுகள் என்னைக் கவர்ந்த ‘விழித்தெழுக என் தேசம் ‘, என்னும் தாகூரின் கீதாஞ்சலிக் கானத்தை அடுத்து வாசித்தேன். அதனைச் சுருக்கி இங்கே எழுதுகிறேன். முழுக் கீதத்தை கீழ்க் குறிப்பிட்ட [1] தொடுப்பில் காணலாம்.

இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,

எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, ….

அறிவு வளர்ச்சிக்கு

எங்கே பூரண விடுதலை உள்ளதோ, ….

வாய்ச் சொற்கள் எங்கே

மெய்நெறிகளின் அடிப்படையிலிருந்து

எழுகின்றனவோ,

விடாமுயற்சி எங்கே தளர்ச்சி யின்றி

பூரணத்துவம் நோக்கித் தனது

கரங்களை நீட்டுகின்றதோ, ….

நோக்கங்கள் விரியவும்,

ஆக்கப்பணி புரியவும்,

இதயத்தை எங்கே

வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த

விடுதலைச் சுவர்க்க பூமியில்

எந்தன் பிதாவே!

விழித்தெழுக

என் தேசம்!

தாகூர் கூறும் உன்னத மனிதரின் அரிய பண்புகளை, உயர்ந்த எண்ணங்களை நான் இறுதியில் காட்டப் போகும் கவிஞர் புகாரியின் கவிதைகளில் நீங்கள் காணப் போகிறீர்கள். இப்போது வேறு சில கவிதைகளைக் காட்டிப் புகாரியின் கவிதைகள் இவற்றைப் போன்றவை அல்ல வென்றும் எடுத்துக் காட்டப் போகிறேன்.

பதினொன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு கம்பர், ஒட்டக்கூத்தர் போன்ற புலமை மிக்க கவிவாணர்கள் வாழ்ந்து வந்ததை நாம் அறிவோம். ஒருசமயம் அரசவைப் புலவர் கம்பருக்கு இணையான ஒட்டக்கூத்தர் பாட்டுப் போட்டி ஒன்றை வைத்து, நாட்டில் தனக்கு யாரும் நிகரில்லை என்று காட்ட கவி அரங்கைத் திறந்து விட்டார். அவருக்கு அஞ்சி யாருமே வராமல் இறுதியில் ஒரு குயவன் மட்டும் தலை நீட்டினான். ஒட்டக்கூத்தருக்கு மிக்க அவமானமாகப் போய்விட்டது. போயும், போயும் ஒரு குயவன் கூடவா தான் போட்டி போட வேண்டி வந்தது என்று ஆங்காரம் மேலிட்டு, ‘நீ என்னை மிஞ்சிப் பாட்டு எழுதி விடாலாம் என்று கனவு காணாதே! ஓடிப் போய்விடு! அல்லது பாட்டரங்கில் தோற்றுப் போய் அவமானப்பட்டுக் காயப்படுவாய், ‘ என்று கர்ச்சித்தார். குயவன் சற்று நடுங்கினாலும், தலை நிமிர்ந்து நின்றான். ஒட்டக்கூத்தர் தன் பாடலை முழக்கினார். ‘நான் எடுத்து விடும் இரண்டடி விருத்தப் பாடலை நீ முடித்திடு பார்க்கலாம் ‘ என்று அதட்டினார். ஒட்டக்கூத்தர் முதல் இரண்டடிகளை ஓதினார்:

மோனை முத்தமிழ் மும்மதமும் பொழி

யானை முன்வந் தெதிர்த்தவன் யாரடா ?

குயவன் அஞ்சினான், விழித்தான், தடுமாறினான். வாயிக்குள் பாட்டை முணுமுணுத்துக் கொண்டு சரி பார்த்துக் கொண்டான். ஒட்டக்கூத்தர் பாட்டை சிறிது விநாடியில் முடித்துக் காட்டினான்:

கூனையும், குடமும், குண்டு சட்டியும்,

பானையும் பண்ணும் அங்குசப் பயல் யான்!

யானை என்று தன்னை உயர்த்திப் பாடிய ஒட்டக்கூத்தருக்கு வெட்கமாய்ப் போனது! குயவன் யானையை அடக்கும் ஓர் அங்குசமாக தன்னைக் காட்டி, ஒட்டக்கூத்தர் அகந்தையை ஒடுக்கினான்.

அடுத்த பாடல் தற்காலத்தைச் சேர்ந்தது! இப்பாட்டைப் பாடியவர் ஒரு சுயமரியாதை வாதி. ஈ.வே.ரா பெரியாரின் சீடர்களில் ஒருவர். ஒரு காலத்தில் பிள்ளையார் சிலைகளை உடைக்கப் பெரியார் கிளம்பிய போது, இந்த சீர்திருத்தவாதி வேறு சில தெய்வச் சிலைகளைத் தகர்க்கத் திட்டமிட்டார். அவரது பாடல் இதுதான்.

சீரங்க நாதனையும், தில்லை நடராசனையும்,

பீரங்கி கொண்டு பிளப்பதுவும் எக்காலம் ?

தெய்வீகம் பொருந்திய இந்தச் சிறிய சிலைகளைத் தகர்க்க பீரங்கிகளைத் தயார் செய்தார் இந்த தீவிரவாதி! சிலைகளைச் சிதைத்து விட்டால், மாந்தரின் கடவுள் நம்பிக்கையை அழித்து விடாலாம் என்பது இந்த சுயமரியாதை வாதியின் நியதி! முதற் பாடல் ஒட்டக்கூத்தரின் அகந்தை விருத்தம். இரண்டாவது பாடல் சுயமரியாதைவாதியின் தெய்வ அவமரியாதை விருத்தம். ஆனால் நமது கனடா கவிஞர் புகாரியின் கவிதைகள் இந்த இரண்டு தரங்களைப் போன்றவை அல்ல! அவரது ஆக்கப் படைப்புகள் எப்படிப் பட்டவை என்பதை உங்களுக்கு விளக்குகிறேன்.

கனடா கவிஞர் புகாரின் தனித்துவப் பண்புகள் என்ன ? அவரது கவிதைகள் யாவும் பொரி உருண்டை போல் சிறியவை. கற்கண்டு போல் இனிப்பவை சில! பாகற்காய் போன்று கசப்பவை சில! ஆனால் அவை யாவும் சிறு சிறு கவளத் துண்டுகள். பச்சிளம் குழந்தைகள் கூட தமது பிஞ்சுக் கரங்களில் அள்ளித் தின்ன வசதியானவை! கவிதைகள் எல்லாம் ஆத்மாவின் கருவிலிருந்து உருவானவை! வெறும் வெளி உதடுகளில் பிறந்தவை அல்ல! அவரது கவிதைகள் தெய்வங்களைப் பற்றியோ, வேத விற்பன்னங்களைப் பற்றியோ விளக்குபவை அல்ல! மனித வாழ்க்கையைப் படமெடுத்து, உலக மரபுகளை, மெய்ப்பாடுகளை கவளம், கவளமாக பவள மாலையாகக் கோர்த்துத் தமிழன்னையின் கழுத்தில் ஆரமாக அணிவிக்கிறார்.

தமிழ்க் கடவுள் முருகனுக்கு ஆறுமுகங்கள் இருப்பதாக நமது புராண இதிகாசங்கள் கூறுகின்றன. அதுபோல் நமது கனடா கவிஞருக்கு ஆறு அம்சங்கள் உள்ளன:

முதலாவது அம்சம்: ஆக்க உணர்ச்சி, கவிதைகளைப் படைக்க வேண்டும் என்னும் ஆத்மீகத் துடிப்பு. தொடர்ந்து கவிதைகள் ஆக்க வேண்டும் என்னும் உந்தல் உணர்ச்சி. உருவமின்றி உள்ளக் கருவில் களஞ்சியமாகத் தேங்கிப் பின்னால் கவிதையாகப் பிறக்கும் திணிவு சக்தி அது. பூமிக்குள்ளே இப்படி இருக்கும் திணிவுச் சக்திதான் வெடிப்பாக, எரிமலையாகப் பீறிட்டு எழுகிறது!

இரண்டாவது அம்சம்: ஆத்ம உணர்ச்சி அல்லது ஞான உணர்ச்சி. நமது கவிஞருக்கு மூன்றாவது கண்ணான ஞானக்கண் ஒன்று இருக்கிறது. அதன் மூலம் அவருக்குத் தீர்க்க தெரிசனம் கிடைக்கிறது! வரப் போகும் புதுயுகம் அவரது ஞானத் திரையில் தோன்றுகிறது! அவர் தேவையான வேளைகளில் அதை நெற்றிக்கண்ணாகப் பயன்படுத்தி நாட்டுத் துரோகிகளைச் சுட்டெரிக்கிறார். ‘சுட்ட வீரப்பன் வேண்டுமா, அல்லது சுடாத வீரப்பன் வேண்டுமா, ‘ என்ற கேள்வியைக் கேட்டு, இரண்டு பேரும் வேண்டா மென்று தன் நெற்றிக் கண்ணால் துரோகியைச் சுட்டுத் தள்ளுகிறார்.

மூன்றாவது அம்சம்: அன்புணர்ச்சி. கவிஞர் மனித நேயம் உடையவர். அவர் ஒரு மனிதாபிமானி. எல்லாம் அன்புமயம் என்று நினைப்பவர். பெண்மைக்குத் தலை வணங்குபவர். தினமும் பிளாஸ்டிக் வெடிகளில் தற்கொலை புரிந்து மற்றவரைக் கொல்லத் துணியும் மூர்க்க வர்க்கத்தாரை அறவே வெறுப்பவர்.

நான்காவது அம்சம்: அழகுணர்ச்சி. கவிஞனுக்கு அழகுணர்ச்சி இல்லாவிடில் ஒளியற்ற கண்களைக் கொண்டவனாகக் கருதப் படுவான். எல்லாம் வனப்பு மயம்! இயற்கை அழகு அவனை ஈர்க்கிறது! பொங்கி வரும் பெருநிலவு போன்ற பெண்ணின் முகப் பொலிவு, கண்களின் காந்தசக்தி, கொடி உடல் வனப்பு, நடை அழகு, இடை நளினம் ஆகியவைக் கவிஞனைக் கவர்கின்றன. ஓவியம், காவியம், நாட்டியம் அனைத்திலும் கவிஞன் மனதைப் பறிகொடுத்து அங்கே அழகின் நடனத்தைக் காண்கிறான். பிறகு அவற்றைக் கவிதைகளாய் வடிக்கிறான்.

ஐந்தாவது உணர்ச்சி: ஆவல் உணர்ச்சி. படைப்புக்கு வேண்டிய தூண்டுகோல் அல்லது உளவு சக்தி அது. அதாவது தேடல் உணர்ச்சி, ஆக்க உணர்ச்சிக்கு வேண்டிய தாகம், வேட்கை, ஆர்வம் அவை! ஆய்வு உணர்ச்சி, உளவி உண்மை காணும் பண்பு.

ஆறாவது உணர்ச்சி: விடுதலை உணர்ச்சி. நாட்டு வேலிக்குள், இல்லத்தின் நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு அடிமையாய்க் கிடக்கும் மனிதருக்கு விடுவிப்பு! இதைத்தான் பாரதி, ‘சுதந்திர தேவி! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே, ‘ என்று பாடிப் பாரதத் தாயின் அடிமை விலங்கை உடைக்க வீறுகொண்டு எழுந்தான். ஆனால் பாரதிதாசன் பாரதியின் பெயரில் புகழ் பெற்றாலும், பாரத விடுதலையில் அவருக்கு நம்பிக்கை இல்லை. நாட்டுக்கு விடுதலை கிடைக்கும் என்று உறுதியாய் நம்பிய பாரதியாருக்கு இருந்த தீர்க்க தெரிசனம் பாரதிதாசனுக்கு இல்லாமல் போனது எனது நெஞ்சில் ஒரு முள்ளாய்க் குத்துகிறது!

கோவை அரசினர் பொறியியல் கல்லூரியில் படித்து வரும் போது, 1952 ஆண்டுக் கவிதைப் போட்டியில், எனது கவிதை முதற் பரிசு பெற்று, வெகுமதியாக பாரதிதாசனின் ‘அழகின் சிரிப்பு ‘ நூல் கிடைத்தது. பாரதியாரின் தேசீய, பக்திக் கவிதைகளை ஐந்து வயது முதலே காலைப் பிரார்த்தனையின் போது அனுதினமும் எனக்கு ஊட்டியவர் என்னருமைத் தந்தையார். அழகின் சிரிப்பு நூலை விரித்துக் கவிதைகளை ஊன்றிப் படித்தேன். பாரதிக்குத் தாசர் அல்லவா ? பாரதியாரைப் போல் இருக்கிறாரா என்று ஆய்ந்தேன். பாரதியைப் படித்த எனக்குப் பாரதிதாசனின் சில கவிதைகளைப் படித்த பின், அவர் மீது ஏனோ பிடிப்பு ஏற்பட வில்லை! அழகின் சிரிப்பு நூலில் இறைவனைப் பற்றி ஒருவரி கூட இல்லை! அது போகட்டும், அவர் சுயமரியாதைவாதி! ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாரதியார் 25 ஆண்டுகளுக்கு முன்பாகவே கொட்டு முழக்கிய விடுதலைக் கீதங்களைப் போல் ஒரு கானத்தைக் கூடக் காணோம்!

எங்கெங்கு காணிணும் சக்தியடா!

ஏழுகடல் அவள் வண்ணமடா!

இந்த இரண்டு வரிகளைத் தவிர சக்தியைப் பற்றி பாரதிதாசன் சக்தியின் பக்கமே குளிர்காயக் கூட போகவில்லை. பாரதம் விடுதலை அடையப் போவதில் சிறிது கூட நம்பிக்கையற்ற பாரதிதாசன், கூண்டுக் கிளியைப் பற்றி ஓரிடத்தில் பாடுகிறார்:

அக்கா! அக்கா! என்றாய்,

அக்கா வந்து கொடுக்க,

சுக்கா, மிளகா சுதந்திரம் கிளியே!

தீர்க்க தெரிசனம் இல்லாத கவிஞர் பாரதிதாசன் மெய்யாக பாரதியாரின் தாசனா என்பது ஒருபுறம் என்னை வருத்தி வருவது உண்டு! அதுபோல் நாட்டு விடுதலை வீரர்களைப் பற்றியோ அல்லது மகாத்மா காந்தியைப் பற்றியோ பாரதிதாசன் ஒரு கவிதை கூட எழுதியது கிடையாது! பாரதியாரின் கவிதைகளில் பாரத விடுதலைப் போரின் வரலாற்றைக் காணலாம். அதே காலத்தில் வாழ்ந்த பாரதிதாசன் பாரதம் விடுதலை பெற்ற பின்பு கூட ஒரு வரி இந்தியாவைப் பற்றி எழுதியதில்லை. பாரத விடுதலை மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், பாரதிதாசன் ஒரு சிறந்த தமிழ்க் கவிஞர் என்பதில் எனக்கு ஐயமில்லை.

இப்போது நமது கனடா கவிஞர் எப்படித் தன் கவிதைகளைப் படைத்திருக்கிறார் என்பதற்குச் சில மாதிரிகளை உங்கள் முன் பங்கு கொள்ள விழைகிறேன். இதுவரைக் கவிஞர் புகாரி [அக்டோபர் 2005] நான்கு காவிய நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் என்னைக் கவர்ந்த சில அற்புத வரிகளை மட்டும் நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

பெண்மையைப் பற்றிச் சொல்லித் தலை வணங்குகிறார், ஒரு கவிதையில்:

கயிறிழுக்கும் போட்டி யுள்ளே நடக்குதடி! – என்

கர்வ மெல்லாம் பெண்மையிடம் தோற்குதடி!

பெண்மையின் அழகிலும், கனிவிலும் மனதைப் பறிகொடுக்கிறார் கவிஞர், இங்கே. பெண்மையிடம் தன் மனதை இழக்காத உலகக் கவிஞரைக் காண்பது மிக மிக அபூர்வம். இதைத்தான் பாரதியார்,

காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம்!

காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே!

என்று ஆனந்தமாகப் பாடினார்.

அகத்தினைப் பற்றி விளக்கும் போது, விண்கோள்களின் கவர்ச்சியைச் சான்றாக எடுத்துக் கொள்கிறார்:

அகங் கண்டு இணைகின்ற உள்ளம், அது

அண்டவெளி ஈர்ப்பினையும் வெல்லும்!

மனித இனம் நம்பிக்கை ஒன்றால்தான் உயிர் பிழைத்து வருகிறது என்பதை அழகாக ஓரிடத்தில் இசைக்கிறார்:

உள்ளத்தின் உயர்வின் படி,

உண்மையின் உறவைப் படி!

நரகத்தை தள்ளிப் பிடி,

நம்பிக்கையே வாழ்வின் பிடி!

காதலைப் பற்றிப் பாடாத கவிஞர் எங்காவது உண்டா ? காதல் தவிப்புகளில் நெஞ்சுருகாத கவிஞர் எங்காவது உண்டா ? மனித வாழ்வுக்குக் காதல் எவ்விதமான நெருக்கத் தொடர்பு கொண்டுள்ளது என்று காட்டுகிறார் ஒரு கவிதையில்.

தாவிடும் ஆசைகள் கூத்தாடும்! இன்பத்

தவிப்புகள் சிக்கியே நாளோடும்!

மானிடம் பூத்தது, காதலுக்காய்! அந்த

மன்மத ராகங்கள் வாழ்வதற்காய்!

அடடா! இந்த வரிகளும், வார்த்தைகளும் நடனமாடி எப்படித் தாளங்கள் போடுகின்றன ? இந்த சந்த நடைக் கவிதையை இசையுடன் பாடிச் சுவைக்கலாம்.

பிரிவாற்றாமையில் தனிமையில் தவிக்கும் மனைவிமார் சங்க காலத்தில் மட்டுமல்லர், சந்திரனில் காலவைத்த இந்த யுகத்திலும் உள்ளார்கள். எங்கெங்கு நோக்கினும் ‘உங்க முகம் உசுப்புது ‘ என்று மங்கை ஒருத்தி மனமுடைந்து போகிறாள், பின்வரும் கவிதையில்!

காலையிலே எழுந்திருச்சா,

கண்மூடப் பாய் விரிச்சா,

மாலையிட்ட உங்க முகம்

மனசை வந்து உசுப்புதுங்க!

மனைவி தாய் நாட்டில் தவிக்க, செல்வம் தேடிப் புலம்பெயர்ந்து சென்று, தனிமையில் வாடும் கணவனைக் காண வேண்டுமா ? இதோ!

கண்ணுக்குள் விரியாத,

கனவும் ஓர் கனவல்ல!

உன்னருகில் இல்லாத

உயிரும் ஓர் உயிரல்ல!

விடா முயற்சியைப் பற்றி இவ்வளவு எளிதாகத், தெளிவாக, இனிதாக யாராவது சொல்லி யிருக்கிறாரா ?

அடிக்கும் போதெல்லாம்,

மாங்காய் விழுந்து விட்டால்

ஆவல் செத்து விடும்!

நாம் எதிர்பார்த்த பலாபலன்களையும், எதிர்பாராத பலாபலன்களையும் எண்ணிப் பார்ப்பதுண்டா ?

நீ விளைத்த பழங்கள் எல்லாம்,

நீ உண்ண மாட்டாய்!

நீ உண்ணும் கனிகளை எல்லாம்,

நீ விளைவித்திருக்க மாட்டாய்!

இது ஒரு சிறு வேத ஞானம் போல் எனக்குப் பளிச்சிடுகிறது!

முள்ளும், மலரும் இணைந்த இந்த வாழ்க்கை எப்படிப் போற்றப்பட வேண்டியது ? நாம் வாழப் பிறந்தோமா அல்லது சாகப் பிறந்தோமா ? சாவது உறுதியாயினும், உயிர் உள்ளவரை இக்கணத்தில் வாழ வேண்டும் என்று வழிகாட்டுகிறார் நமக்கு. பிறந்த பின் இங்கு நீடித்து வாழ்வதுதான் நமக்குக் குறிக்கோளாக வேண்டுமா ? அல்லது பிறந்த பின் சீக்கிரம் சாவதுதான் நமக்குக் குறிக்கோளாக இருக்க வேண்டுமா ? இக்கேள்விக்கு இதோ புகாரியின் பதில்:

இந்த வாழ்க்கைதான்

எத்தனை இனிமை யானது!

இதை வாழக் கிடைத்த பாக்கியந்தான்

என்றும் புனித மானது!

எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா என்று எண்ணும் இதயம், எத்தனை கோடி இன்னல் வைத்தாய் இறைவா என்றும் துன்பத்தை எதிர்பார்க்க வேண்டும். ஆனால் வாழ முயல்வது புனித மானது என்று சொல்கிறார் புகாரி. எல்லாம் இன்பமயம் என்று வாழ்வை அணைப்பதும், எல்லாம் துன்பமயம் என்று வாழ்வைத் துறப்பதும் வேறுபட்ட இரு துருவ முனை நியதிகள்! இவற்றுக்கு இடையே வாழக் கிடைத்த பாக்கியத்தைப் புனித மென்று புகாரி கருதுவது ஓர் ஆக்க உணர்ச்சியே. அதைக் கவிஞருடன் நாமும் சேர்ந்து வரவேற்போம். விவேகானந்தர் ஏன் நாம் பிறந்திருக்கிறோம் என்பதற்கு வெகு அழகாக, உன்னத முறையில் காரணத்தை எடுத்துச் சொல்கிறார்: ‘மனிதா! நீ மகத்தான செயல்களைப் புரிய இங்கே பிறந்திருக்கிறாய். ‘ மகத்தான ஆக்கவினைகள் செய்யும் புகாரி போன்ற மனிதருக்குத்தான் வாழ்வு புனிதமாகத் தெரிகிறது.

தான் பிறந்த மண்ணான தஞ்சாவூரைப் பற்றிப் சந்தமுடன் பாடுகிறார்:

வானூறி மழை பொழியும்!

வயலூறிக் கதிர் வளையும்!

தேனூறிப் பூவசையும்!

தினம்பாடி வண்டாடும்!

சுட்ட வீரப்பன் வேண்டுமா ? சுடாத வீரப்பன் வேண்டுமா ? என்ற ஒரு கவிதையில் இரண்டு பேருமே நமக்கு வேண்டாம் என்று நெற்றிக் கண்ணால் எரித்து விட்டுத் தீர்க்க தெரிசியாய் எதிர்காலத்தை நோக்கி நட என்று நமக்குக் கட்டளை யிடுகிறார்:

ஐயா அப்துல் கலாமோடு, அவசரக் கதியில்

ஈராயிரத்து இருபது நோக்கி, நிறைய

நடக்க வேண்டி இருக்கிறது,

இந்தியா!

பூகம்பத்தைப் பற்றி எழுதும் போது புகாரி சொல்கிறார்.

அறிந்தவனுக்கு அப்போதுதான் சாவு!

அறியாதவனுக்கு எப்போதும் சாவு!

தமிழை மறப்பதோ என்னும் கவிதையில் தமிழ் நாட்டில் பிறந்து, தமிழ் தாய் மொழியாக இருந்து, தமிழைப் பிழையறக் கற்காது பிறமொழிகள் மீது மோகம் கொள்ளும் தமிழ் அன்னியர் தலையில் ஓங்கி அடிக்கிறார்:

தாய்மொழி இழந்தவன்,

தன்முகம் இழந்தவன்!

தமிழற்றுப் போனவன்,

தலையற்றுப் போனவன்!

தமிழை மறந்தவன், தமிழை இழந்தவன், தமிழைப் பேசுதல் தாழ்வானது என்று கருதும் அறிவாளிகள் அனைவரும் தலையில்லா முண்டங்கள் என்று மண்டையில் அடிக்கிறார், புகாரி! விடுதலை இந்தியாவில் தமிழ் நாடு ஒன்றில்தான் தாய்மொழியான தமிழ், கட்டாயக் கல்வியாக இல்லாத முறையில் அன்னிய மொழிபோல் நிலவி வருகிறது! இது முற்றிலும் வருந்தத் தக்கது! தமிழர் அனைவரும் நெறியற்ற இந்நிலைக்குத் தலைகுனிந்து வெட்கப்பட வேண்டியது! ஐயாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சங்கம் வைத்து அரசாண்ட தமிழ்மொழி, தமிழ் நாட்டில் இப்போது கட்டாயக் கல்வி மொழியன்று! அன்னிய மொழிகளான ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்று தமிழ் வெறும் விருப்ப பாடமாக இருந்து வருவதற்கு, அரசாங்கமும் தமிழர் அனைவரும் பொறுப்பாளிகள்! அடுக்குமொழி அண்ணாக்களும், கலைஞர் போன்ற தூயதமிழ்க் கருணாநிதிகளும் இக்குறையைத் தீர்க்க முடியவில்லை! தமிழிலே திரைப்படம் எல்லாம் பெயர் சூடப்பட வேண்டும் என்று புரட்சி செய்யும் புதிதாக முளைத்துள்ள டாக்டர் ராமதாஸ், திருமாவளவன், பழ. நெடுமாறன், டாக்டர் சேதுராமன் போன்ற தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத் தமிழர்களும் அடிப்படையில் உள்ள பிரச்சனைகளைத் தீர்க்காமல், வெளிப்புற முகத்துக்குத் தமிழ் முலாம் பூசிக் கொண்டு நாடகமாடிக் கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு இன்று [அக்டோபர் 2005] நான் சவால் விடுகிறேன்! இந்தப் புது ஈசல் கூட்டத்துக்குத் தமிழ் நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயக் கல்வியாக புகுத்தச் சட்டம் கொண்டு வர ஆற்றல் உள்ளதா என்று நான் கேட்க விரும்புறேன்!

கொலம்பியா விண்கப்பல் விபத்தில் பாரத நாரீமணி கல்பனா செளலா உள்பட ஏழு அண்டவெளி விமானிகள் மாண்டனர். அவர்களைப் பற்றி இரத்தினச் சுருக்கமாக இருவரிகள்:

திரும்பிய பயணத்தில்

திரும்பாத பட்டங்கள்!

கவிதைகளின் படைப்பைப் பற்றி கற்பனை செய்கிறார் நமது கவிஞர்! எப்படி ? கவிதைகள் கருவில் புழுவாகிக் கூடுவிட்டுக் கூடு பாய்ந்து பிறகு பட்டாம் பூச்சிகள் போன்று மாறி வானில் பறக்கின்றனவாம்!

உச்சரிக்கும் ஒவ்வொரு முறையுமே

உள்ளக் கிளைகளிலிருந்து,

ஆயிரம், ஆயிரம்

பட்டாம் பூச்சிகள் சிறகடித்துப்

பறக்கின்றன!

நான் முன்பு கூறியது போல் எல்லாம் இன்பமயம் அல்ல! இன்பமும், துன்பமும் பின்னிய இந்த வாழ்வில் நமது ஆணி வேரிலிருந்து நம்மைக் கவ்விப் பிடித்துக் குலுக்குவது எது ? இன்பமா ? அல்லது இன்னலா ?

வாழ்வின் அமுதங்களை, நாம்

எல்லாருடனும்

பங்கிட்டுக் கொள்ளலாம்! ஆனால்

நம் சோகத்தை

நாம் மட்டுமே விழுங்க வேண்டும்!

‘கோரிக்கை யற்றுக் கிடக்கு தங்கே, வேரிற் பழுத்த பலா ‘ என்று பாரதிதாசன் விதவைப் பெண்களைக் கண்டு கண்ணீர் வடிக்கிறார்! ஆன்மீகம் செழித்து வழியும் பாரத நாட்டில், மனிதத் தன்மை என்னும் பண்பு பல்லாயிரம் ஆண்டு காலமாய் முறிந்து போயுள்ளது. கணவன் இறந்தால், கட்டிய மனைவி வாழக் கூடாது என்று அவன் எரியும் கட்டையிலே அவளைத் தள்ளி உயிரோடு எரித்தார்! மொட்டை அடித்து வெள்ளைப் புடவையைக் கட்டி, பெண்ணழகைக் கெடுத்து விதவைக் கோலமிட்டுச் சமூகத்திலிருந்து தீண்டப் படாமல் மூலையில் நிரந்தரமாய் ஒதுக்கி வைத்தார்! நாமெல்லாம் கீதை ஓதினாலும், ராம கதை தினம் பாடினாலும் ஆடவர், பெண்டிர் இருவருமே விதவைகளைத் தீண்டப் படாத, கண்ணில் காணக் கூடாத தொழுநோய்ப் பிறவிகளாக இன்னமும் நடத்தி வருகிறோம். கவிஞர் புகாரி விதவைகளைப் பற்றி வெகுண்டு சொல்கிறார்:

வெள்ளை வேலிக்குள், வாழ்வை

முடக்கிக் கொள்ளச்

சாபம் இடப்பட்ட

பாபிகள் ….

உலகத்தில் பிளாஸ்டிக் வெடிகளை மார்பில் மறைத்துக் கொண்டு வேட்டு வைத்து பிறரைக் கொன்று மோட்சம் அடையப் போவதாய்க் கனவு காணும், மூர்க்க வர்க்கத்தினரைச் சாடுகிறார்:

கீதை அழுகிறது!

குரான் தேம்புகிறது!

பைபிள் கண்ணீர் வடிக்கிறது!

என்று கூறி நெஞ்சு பொறுக்குதில்லையே என்று துடிக்கிறார். புனித வேத நூல்களான கீதை, குரான், பைபிள் ஆகிய மூன்றையும் இங்கு கூறக் காரணம் என்ன ? இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்கள் எவருமே இந்த கோரக் கொலைகளை நிறுத்தவும் முடியவில்லை! தடுக்கவும் முடியாமல் மக்களைப் பலிகொடுத்து வேதனையில் விழிநீரை வடித்துக் கொண்டு நிற்கிறார்கள்!

கடைசியாக விடுதலை நாட்டில் பாமர மக்களைச் சுரண்டியே வாழும் நாட்டுத் துரோகிகளைத் தன் நெற்றிக் கண்ணால் சுட்டுத் தள்ளுகிறார்!

‘விடியாத குடியரசு, ‘ ‘வெட்கப்படு இந்தியனே, ‘ என்னும் கவிதைகளில் பின்வருமாறு சொல்கிறார்:

சுதந்திர மரத்தின்

வேர்களுக்கு நீரூற்ற வந்த,

ஒவ்வொரு வருமா, அதன்

கிளைகளைத் திருடுவது ?

வெட்கப்படு இந்தியனே!

வெட்கப்படு! நீ

வெட்கப் படாததால் தான், இந்தியா

துக்கப் பட்டுக் கொண்டிருக்கிறது!

இறுதியில் கவிஞர் புகாரியைப் பற்றி நான் எழுதிய இரு பாடல்களைக் கூறிக் கொண்டு, என்னுரையை முடித்துக் கொள்கிறேன்.

கையில் அள்ளி, அள்ளிக் கொடுப்பவர்,

வள்ளல் பாரி!

கவிதையை மழை அருவியாய்ப் பொழிபவர்,

கனடா புகாரி!

எனது அருமை நண்பர் புகாரிக்கு என் அன்பு வேண்டுகோள் இது:

காவியக் கலைஞர் புகாரியே!

காலக் கரையான் தின்னாத

ஓவியக் கவிதை தீட்டுவீர்!

உன்னத நெறியைக் காட்டுவீர்!

மேவிடும் அமைதியை நாட்டி,

மேதினி நட்பை ஊட்டுவீர்!

பாவிலே தமிழரை மூழ்க்கிப்

பாரிலே தமிழை நாட்டுவீர்!

நன்றி,

யாவருக்கும் எனது வணக்கம்.

****

புகாரியின் கவிதை நூல்கள்:

1. சரணமென்றேன் [2004]

பக்கம் : 69,  விலை : 50 ரூ

காவ்யா பதிப்பகம்,

சென்ன்னை : 600024

+++++++++++++

2. வெளிச்ச அழைப்புகள் [2002]

பக்கம் : 112,  விலை  ; 40 ரூ

மணிமேகலைப் பிரசுரம்,

சென்னை : 600017

++++++++++++

3. பச்சை மிளகாய் இளவரசி [2005]

பக்கம் : 128, விலை : 50 ரூ

மணிமேகலை பிரசுரம்

சென்னை : 600017

++++++++

4. அன்புடன் இதயம் [2003]

பக்கம்: 112, விலை : 38 ரூ

சபரி பதிப்பகம்

சென்னை : 600034

++++++++++++

திண்ணை அகிலவலை வார இதழ் வெளியீடு:

http://www.thinnai.com/pm01270517.html [தாகூரின் கீதாஞ்சலி: விழித்தெழுக என் தேசம்]

S. Jayabarathan [jayabarathans@gmail.com] March 16, 2014 [R-2]

+++++++++++++

எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன்?

cover-image-russell-r-1.jpg

சில புத்தகங்களை பற்றி கேள்விப்படும்போதே நமக்கு அப்புத்தகம் பிடித்து போய்விடும், அதை படிக்க ஆர்வமும் வளர்ந்துவிடும். இதற்கு முக்கிய காரணம் அப்புத்தகத்தை பற்றி நமக்கு கிடைத்த தகவலும் அத்தகவல் தரப்பட்ட விதமும்தான். அப்படி என்னை கவர்ந்த சில புத்தகங்களில் ‘What I have Lived For (Bertrand Russell)’ என்ற புத்தகமும் ஒன்று. இப்புத்தகத்தை நான் இன்னும் வாங்கவுமில்லை படிக்கவுமில்லை. ஆனால் இது எனக்கு மிகவும் பிடித்த புத்தகங்களின் பட்டியலில் இருக்கிறதென்றால் அதற்கு காரணம் திரு.ஜெயபாரதன் எழுதிய ஒரு கட்டுரைதான். அக்கட்டுரை உங்கள் பார்வைக்கும்.

– நதியலை

எதற்காக நான் வாழ்ந்திருக்கிறேன்?

மூலம்: பெர்ட்ரெண்டு ரஸ்ஸல்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா 

[பிரிட்டீஷ் மேதை பெர்ட்ரெண்டு ரஸ்ஸல் [Bertrand Russel (1872-1970)] எழுதிய சுய சரிதையிலிருந்து இக்கட்டுரை எடுக்கப் பட்டது. அவர் ஈடுபட்ட துறைகள் கணிதம், வேதாந்தம், விஞ்ஞானம், மதம், அரசியல், சமூகவியல், கல்வி, வரலாறு, தர்க்கம் ஆகியவை. அவர் போர் எதிர்ப்பாளி. சமூக நியாயக்காப்பாளி. இரண்டாம் உலகப் போருக்குப் பின் அணு ஆயுத ஒழிப்புக்கு மக்களைச் சத்தியாகிரகம் செய்யத் தூண்டினார். அணு ஆயுதச் சோதனை, அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பாளி. 1960 ஆண்டுகளில் வியட்நாம் போரில் பல்லாண்டுகள் ஈடுபட்ட அமெரிக்காவை எதிர்த்துப் பேசிவந்தார். 1963 இல் பெர்ட்ரெண்டு ரஸ்ஸல் அமைதி நிறுவனத்தை ஏற்படுத்தி உலக சமாதானத்துக்குப் பாடுபட்டார். 1950 இல் இலக்கிய நோபெல் பரிசு ரஸ்ஸலுக்கு அளிக்கப் பட்டது.]

****************

மூன்று இச்சைகள் என் வாழ்வை ஆட்கொண்டு என்னை வழிநடத்திச் சென்றன: அவை எளியவை. ஆனால் தீவிரமாய்ப் பொங்கி எழுந்தவை. அன்புக்கு ஏங்கும் பிணைப்பு உணர்ச்சி, மெய்யறிவை தேடும் தாக உணர்ச்சி, இடர்ப்படும் மாந்தர் மீது அடங்காத இரக்க உணர்ச்சி. சூறாவளிப் புயல் போன்று, இந்த மூன்றும் என்னை இங்குமங்கும் அலைத்து ஆழ்ந்த மனக்கசப்புத் துயர்க்கடலின் எல்லையைத் தொடும்படி தள்ளி விட்டன!

காதலை முதலில் தேடிச் சென்றதின் காரணம், மெய்மறந்த இன்பத்தை எனக்கு அது அளித்தது! பேருவகையில் விளைந்த அச்சிறு நேர இன்பத்திற்காக வாழ்வின் மற்றைய காலத்தை எல்லாம் தியாகம் செய்யத் துணிந்தேன். பயங்கரத் தனிமைத் தவிப்பிலிருந்து காதற் பிணைப்பு என்னை விடுவித்தது! நடுங்கும் மனித உணர்ச்சி உலகின் விளிம்பிலிருந்து ஆழங் காண முடியாத, உயிரற்ற பாதாளத்தை நோக்கும் தனிமையிலிருந்து விடுவிப்புக் கிடைத்தது. முடிவாக அதைத் தேடி அடைந்தேன். கருதொருமித்த காதல் இணைப்பில் சித்தர்களும், கவிஞர்களும் மாயச் சிற்றுலகில் சொர்க்கத்தைக் கற்பனித்த காட்சியைக் கண்டேன்! அதைத்தான் தேடினேன்! மனித இனத்திற்கு கிட்டிய பெரும் பேறாகத் தோன்றிய அதனை, இறுதியில் நான் தேடி அடைய முடிந்தது.

முதல் இச்சைக்குச் சமமான வெறியில் அடுத்து மெய்ஞானத்தையும் தேடிச் சென்றேன். மனிதர் இதயத்தைப் புரிந்து கொள்ள விரும்பினேன். அண்டவெளியில் விண்மீன்கள் ஏன் ஒளிவீசுகின்றன வென்று அறிய விழைந்தேன். எண்களின் ஆட்டம் கணிதத் திணிவுக்கு (Numbers holds sway above the flux) மீறிய தென்னும் பித்தகோரஸின் ஆற்றலைப் புரிந்து கொள்ள முயற்சி செய்தேன். எல்லாம் சொற்பந்தான், பெருகிய அளவில் அதைப் பெற்றுக் கொள்ள வில்லை.

காதற் பிணைப்பு, மெய்யறிவு இரண்டும் பெற்றுக் கொள்ள முடிந்தவை. அவை என்னைச் சொர்க்கத்துக்கு ஏற்றிச் சென்றன. ஆனால் மனித இரக்கம் என்னை மீண்டும் பூமிக்கு இழுத்து வந்தது. மனிதர் படும் இடர்ப்பாடுக் கூக்குரல்களின் எதிரொலிகள் நெஞ்சில் அலைமோதி என்னைத் துடிக்க வைத்தன! பஞ்சத்தில் நோகும் பச்சிளம் குழந்தைகள், கொடுமை வர்க்கத்துக்குப் பலியாகும் வலுவற்ற எளிய மக்கள், புத்திரருக்குப் பாரமாகப் போன வயோதிகப் பெற்றோர், தனிமையில் நோகும் ஏழ்மை உலக நாடுகள், வறுமை, வேதனை ஆகியவை எல்லாம் மானிட வாழ்க்கையை ஏளனம் செய்கின்றன! அந்தச் சீர்கேடுகளை நீக்க எனக்குப் பேராவல் உள்ளது. ஆனால் முடிய வில்லையே என்னால்! மனத்துயரில் அதனால் நானும் தவிக்கிறேன்.

இதுவே என் வாழ்க்கை. இந்த வாழ்க்கை வாழத் தகுதியானது எனக் கண்டேன். எனக்கொரு வாய்ப்பு இன்னும் கிடைக்குமாயின், அவ்வாழ்வில் மீண்டும் மகிழ்ச்சியோடு பங்கெடுக்க விருப்பம் உள்ளது.

தகவல்:
“What I have Lived For” By Bertrand Russell [From His Autobiography]

– ஜெயபாரதன் (jayabarat@tnt21.com)