முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ


Galileo Galilei

(1564-1642)


சி. ஜெயபாரதன்,B.E (Hons), P.Eng (Nuclear) Canada


“கடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன்”

காலிலியோ

“பிரபஞ்சத்தை அது எழுதப்பட்ட பண்பாட்டுப் பங்களிப்புகளில் பழக்கமாகி அதன் மொழியைக் கற்பதுவரை நாம் வாசிக்க முடியாது. அது கணித மொழியில் எழுதப் பட்டுள்ளது. அதன் எழுத்துக்கள் எவையென்றால் கோணங்கள், வட்டங்கள் அவை போன்ற மற்ற வரைவியல் வடிவங்கள் (Geometrical Figures). அவை இல்லாமல் பிரபஞ்சத்தின் ஒரு சொல்லைக் கூட மனிதர் புரிந்து கொள்வது இயலாது.”

காலிலியோ

விசாரணை மண்டபத்தில் விஞ்ஞான மேதை காலிலியோ!

1600 ஆம் ஆண்டில் புருனோ [Giodarno Bruno] உயிரோடு கம்பத்தில் எரிக்கப் பட்டு முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்து, 69 வயது விஞ்ஞானக் கிழவர் காலிலியோ ரோமாபுரி மதாதிபதிகளால் குற்றம் சாற்றப் பட்டு விசாரணைக்கு இழுத்துவரப் பட்டார்! அவர் செய்த குற்றம், மதத் துரோகம்! போப்பாண்டவர் எச்சரிக்கையை மீறிப் ‘பூமியே மையமாகிச் சூரியன் உள்பட ஏனைய கோளங்களும் அதைச் சுற்றுகின்றன ‘ என்னும் டாலமியின் நியதி [Ptolemy ‘s Theory] பிழையானது என்று வெளிப்படையாகப் பறைசாற்றியது, காலிலியோ புரிந்த குற்றம்! காபர்னிகஸ் [Copernicus] கூறிய பரிதி மைய நியதியே மெய்யானது என்று பகிரங்கமாக வலியுறுத்தியது, காலிலியோ செய்த குற்றம்! அதற்குத் தண்டனை, சாகும்வரை காலிலியோ பிளாரென்ஸ் நகர்க்கருகில் அர்செற்றி [Arcetri] என்னு மிடத்தில் இல்லக் கைதியாய் [House Arrest] அடைபட்டார்! ஒன்பது ஆண்டுகள் சிறையில் தனியே வாடி வதங்கி, கண்கள் குருடாகி, காலிலியோ 1642 இல் காலமானார்! அந்தக் காலத்தில் எழுந்த புது விஞ்ஞானக் கருத்துக்களை ரோமாபுரி மடாதிபதிகள் புறக்கணித்து, விஞ்ஞான மேதைகளைச் சிறையிலிட்டுச் சித்திரவதை செய்தது, உலக வரலாற்றில் வருந்தத் தக்க, அழிக்க முடியாத கறையாகும்!

‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue on the Two Chief World Systems] என்ற காலிலியோவின் நூலைத் தீயிட்டுக் கொளுத்தும்படி ரோமாபுரி மடாதிபதிகள் கட்டளை யிட்டனர்! காலிலியோவின் சிறைத் தண்டனைச் செய்தி எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் வாசிக்கப் பட வேண்டும் என்றும் கட்டளையில் எழுதி இருந்தது! ஆனால் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும் ‘ என்னும் முதுமொழிக் கேற்ப, கால வெள்ளத்தில் காபர்னிகஸின் மெய்யான பரிதி மைய நியதியை எவரும் தடைபோட்டு நிறுத்த முடியவில்லை!

Fig 2 The Trials of Galileo-1

விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்த விஞ்ஞானி!

‘கடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன் ‘ என்று இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ இறுதியில் ஆனந்தப் படுகிறார்! ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வரிசையில் முன்னணியில் நிற்கும் உன்னத மேதையாகக் கருதப் படுபவர், காலிலியோ! முதன் முதலில் தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்தவர், காலிலியோ! பிறை வெள்ளியைக் கண்டு, அது சூரியனைச் சுற்றி வருவதைத் தொடர்ந்து நோக்கி, காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதி ‘ மெய்யான தென்று நிரூபித்துக் காட்டியவர், காலிலியோ! அடுத்து நிலவை நோக்கி அதன் குழிகளையும் மலைகளையும் காட்டினார்! பரிதியின் தேமல்களை [Sun Spots] முதன் முதலில் கண்டு பிடித்தவரும் காலிலியோவே! பூதக்கோள் வியாழனை சுற்றும் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ! சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான ‘நெப்டியூனை ‘ [Neptune] முதலில் கண்டு, அதன் ஆமைவேக நகர்ச்சியைக் குறித்து வைத்து, தான் ஒரு புதுக்கோளைக் கண்டதைக் கூட அறியாமல் போனவர், காலிலியோ!

ஊசல் ஆட்டத்தில் [Pendulum Swing] ஓர் ஒழுங்கைக் கண்டு பிடித்துக் கடிகார நகர்ச்சிக்கு முதலில் அடிகோலியவர், காலிலியோ! உலகப் புகழ் பெற்ற பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து மாறான எடையுள்ள குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் வந்து விழுவதை எடுத்துக் காட்டினார்! கண்ணோக்குகள், சோதனைகள் ஈன்ற முடிவுகளை [Observations & Experiments] விளக்கிப் படிப்படியாகப் பின்னிய விதிகளைக் கணித்த முதல் பெளதிக விஞ்ஞானி, காலிலியோ! உலக விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காலிலியோவை ‘நவீன பெளதிகத்தின் பிதா ‘ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூடியிருக்கிறார்!

காலிலியோவின் ஏழ்மை வாழ்க்கை வரலாறு

காலிலியோ காலிலி [Galileo Galilei] 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி இத்தாலியில் பைஸா [Pisa] நகர்க்கருகில் ஓரிடத்தில் பிறந்தார்! தந்தையார் வின்ஸென்ஸொ [Vincenzo Galilei] இசைக் கலையின் கோட்பாடு, பயிற்சி முறைகளில் திறமை பெற்றுப் பல படைப்புகளை ஆக்கிய, ஒர் இசை ஞானி. மற்றும் அவர் ஒரு கணித நிபுணர். வலம்பிராஸா [Vallombrosa] மதப் பள்ளியில் காலிலியோவுக்குக் கல்வி புகட்டியவர், கிறிஸ்துவப் பாதிரிமார் [Monks]! 1575 இல் காலிலி குடும்பம் இடம்மாறிப் பிளாரென்ஸில் போய்க் குடி புகுந்தது. பள்ளிப் படிப்பை முடித்து விட்டுக் காலிலியோ 1581 இல் பைஸா பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயிலச் சேர்ந்தார். ஆனால் கல்லூரியில் காலிலியோ மருத்துவத்தில் கவனம் செலுத்தாது, கணிதக் கல்வியில் கவர்ச்சியாகி அதில் ஈடுபட்டார்! தந்தையின் சொல்மீறி அவர் சினத்துக்கு ஆளாகி, காலிலியோ கணிதம், வேதாந்தம் ஆகிய பாடங்களைக் கற்றார்! அடுத்து பெளதிகத்திலும் அவரது கவனம் தாவியது! 1583 இல் பைஸா கோயிலில் தொங்கிய ஸாண்டிலியர் விளக்கு ஊசல் வீச்சு [Chandelier Amplitute of Swing] ஆட்டத்தின் காலத்தைத் தன் நாடித் துடிப்புடன் கணக்கிட்டு ஓர் விந்தையைக் கண்டார்! ஊஞ்சல் வீச்சின் அகற்சி [Width] கூடினாலும், குறைந்தாலும் ஊசல் வீச்சின் காலம் மாறாமல் ஒரே எண்ணிக்கையில் இருந்தது!

Fig 3 Confession to the Church

அரிஸ்டாடிலின் [Aristotle] வேதாந்தம் படித்தார். கணிதம் சொல்லிக் கொடுக்கும் அளவுக்குக் கற்றுக் கொண்டு, பட்டம் பெறாமலே பல்கலைக் கழகத்தை விட்டு 1585 இல் வெளியேறினார்! கிரேக்க மேதைகளான யூகிளிட் [Euclid (300 B.C)], ஆர்கிமீடிஸ் [Archemedes (287-212 B.C)] ஆகியோரின் கணிதம், விஞ்ஞானப் படைப்புகளைப் பயின்றார்! அத்துடன் தனியார் புகட்டும் கணிதக் கல்வியையும் பிளாரென்ஸ், ஸியனா நகரங்களில் கற்றார்! 1586 இல் ஆர்கிமீடிஸின் தத்துவத்தை உபயோகித்துக் காலிலியோ சிறிய எடையைக் காண உதவும் புதிதான ஒரு ‘நீரழுத்தத் தராசைச் ‘ [Hydrostatic Balance] செய்து, ‘சிறிய தராசு ‘ [Little Balance] என்னும் கட்டுரையை எழுதினார். 1588-1589 ஆண்டுகளில் தந்தையும் மகனும் சேர்ந்து, இசைக் கருவியின் தொனிப்புக்கும் [Pitch], நாண்களின் இழுப்புக்கும் [Tension of Strings] உள்ள தொடர்பை ஆராய்ச்சி செய்தனர்! அடுத்து இருபது ஆண்டுகள் காலிலியோ ‘அண்டங்களின் நகர்ச்சியைப் ‘ [Motion of Bodies] பற்றி ஆய்வுகள் செய்தார்.

1589 இல் காலிலியோ பைஸா பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகச் சேர்ந்தார். 1590 இல் காலிலியோ ‘நகர்ச்சியைப் ‘ பற்றிய [On Motion] தனது முன்னோட்டக் கருத்துக்களை எழுதி நூலாக வெளியிட்டார். 1591 இல் அவரது தந்தை காலமாகி, பெருத்த பணமுடை ஏற்பட்டது! ‘விழும் பண்டங்களின் எடைக்கு ஏற்றபடி, பூமியைத் தொடும் காலம் மாறும் ‘ என்று கூறிய அரிஸ்டாடிலின் கோட்பாடைத் தாக்கி, சாய்ந்த பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து சமமற்ற எடைகளுள்ள [Unequal Weights] இரண்டு பீரங்கிக் குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் விழுவதை எடுத்துக் காட்டினார்! ஆனால் அரிஸ்டாடிலைக் காலிலியோ தாக்கியது அவரது சகபாடிகளுக்குக் கோபத்தை உண்டாக்கியது! அத்துடன் கல்லூரிப் பணி உடன்பாடு [Job Contract] மீண்டும் புதுப்பிக்கப் படாது, பல்கலைக் கழகத்தில் 1592 இல் அவரது வேலையும் நிறுத்த மானது! காலிலியோவின் அன்பர்கள் பாடுவா பல்கலைக் கழகத்தில் [University of Padua] கணிதப் பேராசிரியர் பதவியை அளித்தார்கள். 1592 முதல் 1610 வரை காலிலியோ பதினெட்டு ஆண்டுகள் அங்கே கல்வி புகட்டினார்.

பல்கலைக் கழகச் சம்பளப் பணம் போதாமல் காலிலியோ, தன் இல்லத்தில் செல்வந்த மாணவரை வாடகைக்கு வைத்துக் கொண்டும், அவருக்குத் தனிக்கல்வி புகட்டியும் பணம் சம்பாதிக்க வேண்டியதாயிற்று! அவ்வாறு பணமுடை ஏற்பட்டதால், அவர் காதலித்த வெனிஸ் பேரழகி மரினா கம்பாவைத் [Marina Gamba] திருமணம் செய்து கொள்ள முடியாது, கூட்டுக் குடும்பம் நடத்த வேண்டிய தாயிற்று! காலிலியோவுக்கு இரு பெண்டிரும் ஓர் ஆணும் பிறந்தனர். ஏழ்மை நெருக்கத்திலும் காலிலியோ தனது ‘நகர்ச்சி ‘ [On Motion] கணிதப் படைப்புகளைத் தடையின்றி வளர்த்துக் கொண்டு வந்தார்!

1612 இல் நீரழுத்தவியல் [Hydrostatics] துறையை விருத்தி செய்யும் போது, காலிலியோ அரிஸ்டாடிலைத் தாக்கி ஆர்க்கிமீடியஸைத் தூக்கிப் பேசினார்! அதற்கு அடுத்த ஆண்டு கிறிஸ்துவ மதாதிபதிகளின் சினத்திற்கு அஞ்சாது, காபர்னிகஸின் [Copernicus (1473-1543)] பரிதி மைய நியதியைப் பகிரங்கமாக உயர்த்திப் பேசினார்! அதனால் அவர் மதப் பகையாளி [Heresy] என்று மதாதிபதிகளின் வெறுப்புக்கும், சினத்துக்கும் ஆளாகி, காபர்னிகஸ் கோட்பாடைப் புறக்கணிக்கும்படிக் கிறிஸ்துவ மதக்கோயில் 1616 இல் எச்சரித்தது! எட்டாண்டுகள் காலிலியோ ஆணைக்கு அடங்கி வெளிப்படையாக எதுவும் சொல்லாது, ஆனால் மனத்துக்குள் ஆதரித்து வானியலையும், யந்திரவியலையும் [Astronomy, Mechanics] தொடர்ந்தார்.

Fig 4 The Trials of Galileo-2

‘பூமைய அமைப்பையும் ‘ [Geo-centric System] அதற்கு எதிரான ‘பரிதி மைய அமைப்பையும் ‘ [Sun-centric System] கண்ணோட்ட மின்றி [Impartial Way] எடுத்து விளக்க, 1624 இல் போப்பாண்டவரிடம் [Pope Urban VIII] அனுமதி பெற்றார்! அவர் அனுமதியில் புகழ் பெற்ற நூல் ‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue of The Two Chief World Systems] 1632 இல் படைக்கப் பட்டது! ஆனால் காலிலியோ மெய்யாக அந்நூலில் பாரபட்ச மின்றி விவாதிக்க வில்லை! தனது புதிய தொலை நோக்கி மூலம் அவர் அண்டக் கோள் நகர்ச்சிகளைக் கண்டதையும், சோதித்தையும் எடுத்துக் காட்டி, காபர்னிகஸின் பரிதி மைய நியதியே மெய்யானதாக விளக்கி யிருந்தார்! மறுபடியும் அது கிறிஸ்துவக் கோயில் மடாதிபதிகளின் கோபத்தைக் கிளரி விட்டது! உடனே அவரது நூல் தடை செய்யப் பட்டது! காலிலியோ கைதியாகி, ரோமா புரிக்குக் கொண்டு செல்லப் பட்டு, நீதி மன்றத்தில் விசாரணை செய்யப் பட்டார்! விசாரணையின் முடிவில், காலிலியோ தான் கொண்டிருந்த கொள்கைக்கு மாறாக, மனச்சாட்சியை மீறி, ‘பூமி நிலையானது! சூரியன் பூமியைச் சுற்றுவதுதான் உண்மை ‘ என்று வாக்குமூலம் செய்ய வேண்டிய தாயுற்று! ‘ஆயினும் பூமிதான் சுற்றுகிறது ‘ என்று காலிலியோ வாயுக்குள் முணுமுணுத்தாகக் கூறப் படுகிறது!

1614 ஆம் ஆண்டு பிளாரென்ஸ் பாதிரி ஒருவர், ‘பூமி நகர்கிறது, பூமி சுற்றுகிறது என்று காலிலியோக் கூட்டம் புலம்புவது மதத் துரோகம் ‘ என்று அனைவரையும் தூற்றினார்! அதற்கு காலிலியோ ஒரு நீண்ட கடிதம் எழுதினார்! பைபிளில் எங்கெங்கு விஞ்ஞானக் கருத்துக்களுக்கு முரணான கூற்றுகள் உள்ளன என்று அக்கடிதத்தில் எடுத்துக் காட்டி, அறிவு வளர்ச்சி அடைந்து வரும்போது பைபிளில் உள்ள முரண்பாடுகள் திருத்தப்பட வேண்டும் என்றும், ரோமன் காதிலிக் நம்பிக்கையை எந்த விஞ்ஞான மெய்ப்பாடுக்கும் மேற்கோளாக வாதிக்கக் கூடாது என்றும் சுடச் சுடப் பதில் கொடுத்தார்!

காலிலியோ கண்டுபிடித்த கருவிகள், விஞ்ஞான விந்தைகள்

விஞ்ஞான உலகில் பெளதிக [Physics] யுகத்தின் வாசற் கதவை முதன் முதல் திறந்து வைத்தவர் காலிலியோ! அதற்கு விதை யூன்றி, அது ஆல விழுதாகப் பெருக வழி காட்டியவர், காலிலியோ! துல்லிய கருவிகளைக் கையாண்டு அளந்து, தொடர்ச் சோதனைகள் புரிந்து நிரூபித்து, அதுவரை வெறும் பெளதிகச் சித்தாந்தமாக [Metaphysical Principle] இருந்ததைப் பெளதிக விஞ்ஞான [Physical Science] மாக்கிய பெருமை காலிலியோ ஒருவரையே சாரும்! ‘பூர்வீக யந்திரவியல் ‘ [Classical Mechanics] துறைக்கு முதலில் பல அடிப்படைத் தத்துவங்களை ஆக்கி அதைப் பிறப்பித்த விஞ்ஞானத் தந்தை அவரே! காலிலியோதான் தனது தொலை நோக்கியில் அண்டக் கோள்களின் நகர்ச்சியை தொடர்ந்து நோக்கி முதன் முதல் ‘நோக்காய்வு வானியலை [Observational Astronomy] ஆரம்பித்து வைத்தவர்! அவர் எழுதிய ‘விண்மீன்களின் தூதர் ‘ [The Starry Messenger] என்னும் நூல் வானியல் விஞ்ஞானத் துறை வளர வழி வகுத்தது

Fig 5 Galileo Looking at Planets

பைஸா கோபுரத்தின் மேலிருந்து வேறுபட்ட எடைக் குண்டுகள் இரண்டை விழச் செய்து, ஒரே நேரத்தில் அவை தரையில் விழுந்ததைக் காலிலியோ காட்டினார்! அதன்பின் 1604 இல் ‘விழும் அண்டங்களின் விதியை ‘ ஆக்கினார். ‘விழும் அண்டத்தின் உயரம், அது கடக்கும் நேரத்தின் ஈரடுக்கிற்கு நேர் விகிதத்தில் உள்ளது ‘ [The falling height by a body is proportional to the square of the elapsed time] என்பதே அந்த விதி! எறியப்படும் கணைகள் [Projectiles] சீர்வளைவு பாதையில் [Parabolic Path] செல்வதை கணித முறையில் காட்டினார்! காலிலியோ மேலும் கூறியது: ஏவப்படும் ஓர் எறிகணை வேகத்திற்கு இரு திசைப் பிரிவுகள் [Two Components] உள்ளன. ஒன்று மட்டத்தில் செல்லும் சீரான வேகம் [Uniform Horizontal Motion]! மற்றது செங்குத்தில் போகும் வேகம் [Vertical Motion (Acceleration or Deceleration) due to Gravity]! கணை மேல்நோக்கிச் செல்லும் போது, செங்குத்து வேகம் தளர்கிறது! கணை தரை நோக்கி மீளும் போது, செங்குத்து வேகம் வளர்கிறது! அவரது சோதனை மூலம் விளைந்த ‘விழும் அண்டங்களின் விதி ‘ [Law of Falling Bodies], ஸர் ஐஸக் நியூட்டன் ‘நகர்ச்சி விதிகளைப் ‘ [Newton ‘s Laws of Motion] படைக்க வழி காட்டியது!

அடுத்து காலிலியோ ஒப்பியல் வேகத்தைப் [Relative Velocity] பற்றி விளக்கினார்! ‘நகரும் பூமி அல்லது சுழலும் பூமி, தன்னோடு சேர்ந்து மேகத்தையும், பறவை இனத்தையும் தூக்கிச் செல்லாது ‘ என்று காபர்னிகஸ் கூறி யிருந்தார்! ஆனால் காலிலியோ அதை மறுத்துக் கூறி, ‘பூமியின் நகர்ச்சியில் பிரிபடும் மட்ட வேகம் [Horizontal Component of Earth ‘s Motion], பூமியோடு ஒட்டாத மேகம், பறவைகள் அனைத்தையும் எப்போதும் தன்னோடு இழுத்துச் செல்லும் ‘ என்று விளக்கினார்!

1609 இல் ஹாலந்தில் ‘உளவு நோக்கி ‘ [Spyglass] ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளதைக் காலிலியோ கேள்விப் பட்டார். முதன் முதலாக 20 மடங்கு உருப்பெருக்கம் [Magnification] கொண்ட தொலை நோக்கியைத் தன் கையாலே ஆடிகளைத் தேய்த்துத் தயாரித்தார்! அத்தொலை நோக்கி கப்பல் ஓட்டுநருக்கும், கடற்படை ஒற்றரருக்கும் உறுதுணை யானது! காலிலியோ தனது தொலை நோக்கியில் முதலில் நிலவின் மலைகளையும், குழிகளையும் கண்டார்! பால்மய வீதிகள் [Milky Way] கோடான கோடி விண்மீன்கள் கொண்டுள்ளதைக் கண்டார்! பூதக்கோள் வியாழனைச் சுற்றி வரும் நான்கு பெரிய சந்திரன்களைக் கண்டார்! 1610 ஆம் ஆண்டில் சுடரொளி வீசும் வெள்ளியின் வளர்பிறை, தேய்பிறையைக் கண்டு, ‘வெள்ளி சூரியனைச் சுற்றி வருகிறது ‘ என்று முதன் முதலில் சோதனை மூலம் காட்டி, டாலமியின் ‘பூமைய நியதி ‘ பிழையான தென்றும், காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதியே ‘ மெய்யான தென்றும் நிரூபித்தார்! அதுபோல் புதன் கோளின் பிறைகளையும் கண்டார். இத்தாலிய வேதாந்தப் பேராசிரியர்கள் பிறை வெள்ளி இருப்பதை நம்பாமல் காலிலியோவைத் திட்டி, அரிஸ்டாடில் கூற்றுப்படி முழுக் கோளங்களைத் தவிர குறைக் கோள்கள் விண்வெளியில் இருக்க முடியாதென வாதித்தார்கள்!

Fig 6 Galileo's Refractor

விண்வெளியில் தொலை நோக்கி மூலம் தான் கண்ட, வான அற்புதங்கள் யாவற்றையும் ‘விண்மீன் தூதன் ‘ [The Starry Messenger] என்னும் தனது அரிய நூலில் வெளியிட்டுள்ளார்! 1612 ஆம் ஆண்டில் காலிலியோ ஆர்கிமிடிஸ் தத்துவத்தைப் பயன்படுத்தி, ‘மிதக்கும் கலங்கள் ‘ [Floating Bodies] என்னும் நூலை எழுதினார். உடனே அதைப் புறக்கணித்து நான்கு எதிர்ப்பு நூல்கள் பின்வந்தன! சனிக்கோளை முதன் முதலில் தொலை நோக்கியில் பார்த்து, அது முட்டை வடிவத்தில் இருப்பதாகக் கருதினார். ஆனால் அவருக்குப் பின் வந்த கிரிஸ்டியான் ஹூஜென்ஸ் [Christiaan Huygens], அக்கருத்தை திருத்திச் சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதாக விளக்கினார்! 1613 இல் காலிலியோ தன் தொலை நோக்கியில் பரிதியின் தேமல்களைக் [Sunspots] முதன் முதல் கண்டு பிடித்து ஒரு கட்டுரையை வெளியிட்டார்! சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான நெப்டியூனின் [Planet Neptune] நகர்ச்சியைத் தொடர்ந்து [1612-1613] குறித்த காலிலியோ, தான் ஒரு புதுக்கோளைக் கண்டு பிடித்ததை அறியாமலே போய்விட்டார்! பிறகு 230 ஆண்டுகள் தாண்டி நெப்டியூன் 1846 இல் ஜொஹான் கல்லே [Johann Galle] என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டது!

1641 இல் காலிலியோவின் மகன் வின்சென்ஸியோ [Vincenzio] தந்தையின் ஊஞ்சல் கடிகார டிசைனை வரைந்து அதன் முதல் வடிவத்தை உருவாக்கினார். அடுத்து 1655 இல் டச் விஞ்ஞானி கிரிஸ்டியான் ஹியூஜன் அதற்கு முழு வடிவத்தைக் கொடுத்து, ஊசல் கடிகாரத்தை ஆக்கினார்! 1589 இல் உஷ்ணமானி [Thermometer] ஒன்றை ஆக்கினார். அதுவே முதலில் செய்யப் பட்ட சோதனைக் கருவி! 1592 இல் கணிதத் துறையில் கணக்கிட உதவும் கணக்கீடு மானி [Calculating Compass] ஒன்றை அமைத்தார். காலிலியோக்குப் புதிராய் இருந்த பெளதிகப் பிரச்சனைகள் இரண்டு! வால்மீன்களின் [Comets] விபரீதமான போக்கைக் கண்டு, அவை யாவும் ‘ஒளி மாயை ‘ [Optical Illusion] என்று கருதினார்! அடுத்து கடல் அலைகளின் உச்ச, நீச்ச எழுச்சிகள் [High, Low Tides] நிலவின் போக்கால் ஏற்படுகின்றன என்று அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை!

Fig 7 Galileo's 400th Birthday

திருமணம் ஆகாமல் 1600 இல் தனக்குப் பிறந்த மூத்த புதல்வி வெர்ஜீனியாவைப் [Viginia Galilei] பதிமூன்றாம் வயதில் காலிலியோ, பிளாரென்ஸ் நகருக்கு அருகே இருந்த கிறிஸ்துவக் கன்னிமாடத்தில் [Christian Convent] கன்னியாக விட்டுவிட நேர்ந்தது! வெர்ஜீனியா தந்தையைப் போல் நுணுக்கமான சிந்தையும், கூரிய அறிவும் படைத்தவள். கன்னிமாடத்தில் வெர்ஜீனியாவின் ஞானப் பெயர் மரியா ஸெலஸ்டி [Maria Celeste] என்று மாற்றல் ஆனது! தந்தையுடன் சேர்ந்து தொலை நோக்கியில் அண்டக் கோள்களைக் கண்டு மகிழ்ந்தவள், வெர்ஜீனியா! உன்னத மதிப்பில் வைத்துத் தந்தையை அவள் கடவுளுக்கு இணையாகப் போற்றி வந்திருக்கிறாள்! காலிலியோ தான் கண்ட விஞ்ஞான விந்தைகளைத் தன் புதல்வியிடம் கூறி யிருப்பதைக் கன்னிமாடத்திலிருந்து தந்தைக்கு வெர்ஜீனியா எழுதிய கடிதங்களில் காணலாம்!

அவள் 21 ஆண்டுகளாகக் காலிலியோவுக்கு 124 கடிதங்கள் எழுதி யிருக்கிறாள்! அவளது அரிய கடிதங்களில், காலிலியோவின் பல பெளதிகக் கண்டு பிடிப்புகள் காணப் பட்டு, அத்தொகுப்பு அவரது சரிதைக் காவியமாக இப்போதும் பாதுகாக்கப் பட்டு வருகிறது! ஆனால் மகள் பாதுகாப்பாய் வைத்திருந்த காலிலியோவின் கடிதங்கள் அனைத்தும், வெர்ஜனியா காலமான பின்பு ரோமாபுரிக் கோயிலுக்குப் பயந்து, கன்னிமாடத்தில் எரிக்கப் பட்டதாய் அறியப் படுகிறது! புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளி ‘தேவா ஸோபெல் ‘ [Dava Sobel] எழுதிய ‘காலிலியோவின் புதல்வி ‘ [Galileo ‘s Daughter (1999)] என்னும் அற்புதப் புத்தகம் காலிலியோவின் வரலாற்றை அழகாகக் காட்டுகிறது!

மெய்யான பிரபஞ்ச அமைப்பை பறைசாற்றிய குற்றத்திற்கு காலிலியோ ஒன்பது ஆண்டுகள் இல்லச் சிறைவாச தண்டனையை அனுபவித்தார்! 1634 இல் கன்னிமாடத்தில் தனித்து வாழும் அவரது அருமை மூத்த மகள் மரியா ஸெலஸ்டி மரண மடைந்த செய்தி, தீராக் கவலையைத் தந்தது! அப்போது அந்த நிலையிலும் காலிலியோ பெளதிகப் படைப்புகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். சிறையில் கிடந்த காலிலியோவைக் காண, பிரிட்டிஷ் கவியோகி ஜான் மில்டன் [John Milton], பிரிட்டிஷ் வேதாந்தி தாமஸ் ஹாப்பில் [Thomas Hobbes], காலிலியோவின் மாணவர் டாரிசெல்லி [Toricelli] ஆகியோர் வந்தனர்! அவரது பெளதிகப் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ‘இரட்டைப் புதிய விஞ்ஞானங்களின் உரையாடல்கள் ‘ [Discourses on Two New Sciences] என்னும் நூல் தயாரானது! அந்நூல் இத்தாலியை விட்டு ஹாலந்துக்கு மறைவாகக் கடத்தப் பட்டு, 1638 இல் அச்சாகி வெளியானது!

Fig 8 Galileo's Tomb

சிறையில் காலிலியோ தனது 74 ஆம் வயதில் கண்கள் குருடாகிப் போனாலும், தொடர்ந்து ஊஞ்சல் கடிகாரத்தை டிசைன் செய்தார். அதுவே அவரது இறுதியான படைப்பு! 1642 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி உலகின் முதல் பெளதிக விஞ்ஞானியாகக் கருதப் பட்ட காலிலியோ மண்ணுலகை விட்டு உயிர் நீத்தார்!

340 ஆண்டுகளுக்குப் பிறகு 1979 இல் இரண்டாம் போபாண்டவர் ஜான் பால் [Pope John Paul II] மதவாதிகள், அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள் ஆகியோரைத் தூண்டிக் காலிலியோவிற்கு நீதி மன்றம் அளித்த தண்டனை ஏற்றதா என்று மறுபடியும் ஆராய ஆணையிட்டார்! 1982 இல் காலிலியோ தண்டனை ஆய்வுக் குழுக்கள் நான்கு நியமிக்கப் பட்டன! கிறிஸ்துவ விஞ்ஞான நிறுவனம் [Pontifical Academy of Science] 1992 இல் வெளிப்படையாகப் ‘பரிதி மைய நியதிக்கு ‘ ஒப்புதல் தெரிவித்து, இரண்டாம் போப்பாண்டவர் ஜான் பால் மூலம் மாமேதை காலிலியோவைச் சிறையிட்டதற்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டது!

‘பெளதிக விஞ்ஞானத்தின் பிதா ‘ என்று போற்றிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், அவரது முன்னோடி ஐஸக் நியூட்டன் ஆகியோர் இருவருக்கும் விஞ்ஞான குருவாய், காலிலியோ விளங்குகிறார்! நியூட்டனின் பூர்வீக யந்திரவியல் [Classical Mechanics], ஈர்ப்பியல் நியதி [Theory of Gravitation], ஆகிய பெளதிகப் படைப்புக் களுக்கு அடிப்படைக் கணித ஆக்கங்களை, அளித்தவர் காலிலியோ ஒருவரே!

1971 இல் அபொல்லோ விண்சிமிழில் [Apollo-15 Spacecraft] பறந்து, சூன்ய மண்டலமான சந்திரனில் நடந்த டேவிட் ஸ்காட் [David Scott] பறவையின் சிறகையும், இரும்பு சுத்தியலையும் மேலிருந்து கீழே விழவிட்டார்! இரண்டும் ஒரே சமயத்தில் தரைத் தொட்டவுடன், ‘இது காலிலியோவின் கருத்தை மெய்யாக்குகிறது ‘ என்று மகிழ்ச்சி அடைந்தார்! நாசா [NASA] 1989 இல் வியாழனை நோக்கிக் ‘காலிலியோ விண்சிமிழை ‘ [Galileo Spacecraft] அனுப்பியது! அது 1995 இல் வியாழனை நெருங்கிக் காலிலியோ தொலை நோக்கியில் 385 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட, அதன் துணைக் கோள்களைப் [Jupiter ‘s Satellites] படமெடுத்தது!

************************

S. Jayabarathan (jayabarat@tnt21.com) October 8, 2009 (R-2)

இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி

டாக்டர் அப்துல் கலாம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

“உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்;  விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது.  நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை.  ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது.  நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது.  ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு.  உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல்.  உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்!  கடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்”.

சுவாமி சிவானந்தா (ரிஷிகேஷில் டாக்டர் அப்துல் கலாமுக்குக் கூறியது)

“கனவு காண், கனவு காண், கனவு காண்,  பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு.  சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும்.  நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி.  ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும்.  அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.”

டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி (இளைஞருக்குக் கூறியது )

அக்கினி இடித் தாக்கம்!
அசுர வல்லமை ஊக்கம்!
அப்படிப்
பொறுமை யற்ற புயலிலே
புதுநெறி படைக்க
புறப்படும் எமது கனவுகள்!

டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி

“இந்தியா உலகத்தின் முன் நிமிர்ந்து நின்றால் ஒழிய, எவரும் நம்மை மதிக்கப் போவதில்லை!  இந்த உலகிலே அச்சத்துக்கு இடமில்லை!  வல்லமைதான் வல்லரசுகளின் மதிப்பைப் பெறுகிறது. படைப்பல வல்லமையும், பொருளாதார ஆற்றலும் நாம் பெற வேண்டும். அவை இரண்டும் ஒன்றை ஒன்றை சார்ந்தவை.”

டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி

“3000 ஆண்டுகளாய் இந்திய வரலாற்றில் உலக முழுவதிலுமிருந்து அன்னியர் படையெடுத்து, எங்கள் நாட்டையும், எங்கள் மனத்தையும் பறித்துக் கொண்டது ஏனென்று கூறுவாயா?  அலெக்ஸாண்டர் முதலாக கிரேக்கர், போர்ச்சுகீஸ், பிரிட்டீஷ், பிரெஞ்ச், டச் ஆகிய அன்னியர் உள்ளே புகுந்து கொள்ளை அடித்து எங்களுக்கு உரிமையானவற்றைக் கைப்பற்றினார்.  நாங்கள் அதுபோல் யார் மீதும் படையெடுக்க வில்லை.  எந்த நாட்டையும் கைபற்ற வில்லை.  யாருடைய நாட்டையும், கலாச்சாரத்தையும், வரலாற்றையும் மாற்றி எங்கள் வாழ்க்கை முறைகளை அங்கே திணிக்க வில்லை.”

டாக்டர் அப்துல் கலாம், பாரத ஜனாதிபதி

“முன்னேறிவரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்! இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை!  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்!  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம்!”

டாக்டர் விக்ரம் சாராபாய், பாரத விண்வெளிப் பயணப் பிதா (1919-1971).

ஆயுதம் செய்வோம்! நல்ல காயுதம் செய்வோம்!
ஆலைகள் வைப்போம்! கல்விச் சாலைகள் வைப்போம்! ……
வானை அளப்போம்! கடல் மீனை அளப்போம்!
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்!

மகாகவி பாரதியார் (பாரத தேசம்)

இந்திய விண்வெளி ராக்கெட்களைப் படைத்த விஞ்ஞான மேதை

டாக்டர் அப்துல் கலாம் ராணுவ ராக்கெட்டுகளை விடுதலைப் பாரதத்தில் விருத்தி செய்த முன்னோடி விஞ்ஞானி.  இரண்டாம் உலகப் போரில் ஜெர்மெனிக்கும், போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் ராணுவ ராக்கெட்டுகளை விருத்தி செய்த முதல் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் வெர்னெர் ஃபான் பிரௌன் [Wernher Von Braun].  அமெரிக்காவின் அண்டவெளிப் பயண ராக்கெட் விருத்தியிலும் அவர் முழுமையாக ஈடுபட்டார்.  பாரத நாட்டில் டாக்டர் ஃபான் பிரௌனுக்கு இணையாகக் கருதப்படும் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம்.  அவரே பாரதத்தின் ராணுவ ராக்கெட் படைப்புக் பிதாவாகாப் போற்றப்படுகிறார்.  இந்திய ராணுவ ஏவுகணைகள் அக்கினி, பிருத்வி போன்றவை மூச்சு விட்டுப் பாய்ந்து செல்ல விதையிட்டு விருத்தி செய்தவர் அப்துல் கலாம்.  அவற்றை வெற்றிகரமாக ஏவச் செய்து பாகிஸ்தான், சைனா போன்ற பக்கத்து நாடுகளின் கவனத்தைப் பாரதம் கவர்ந்துள்ளது!  1980 ஆண்டுகளில் ஹைதிராபாத் ராணுவ ஆராய்ச்சி விருத்திக் கூடத்தை [Defence Research & Development Laboratory] தன்னூக்கத்துடன் இயங்கும் ஓர் உன்னதக் கூட்டுப்பணிக் குழுவாக மாற்றி அதை ஒரு பொறிநுணுக்கத் தொழிற்சாலையாக ஆக்கினார்.  உன்னத பாதுகாப்புப் பணி புரிந்த டாக்டர் அப்துல் கலாமுக்கு 1990 ஆம் ஆண்டில்  பாரதம் மதிப்பு மிக்க “பாரத் ரத்னா” பட்ட வெகுமதி அளிக்கப் பட்டது.

1931 அக்டோபர் 15 ஆம் தேதி அப்துல் கலாம் தமிழ்நாட்டின் இராம பூமியான இராமேஷ்வரத்தில் பிறந்தார்.  அங்குள்ள ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர்.  திருச்சி ஸெயின்ட் ஜோஸ·ப் கல்லூரியில் விஞ்ஞான அடிப்படைக் கல்வியைக் கற்றவர்.  தனது சிறப்புப் பொறிநுணுக்க டாக்டர் பட்டப் படிப்புச் சென்னை பொறியியல் துறைக் கல்லூரியில் [Madars Institute of Technology] சேர்ந்து (1954-1957) விமானவியல் எஞ்சினியரிங் துறையை [Aeronautical Engineering] எடுத்துக் கொண்டார்.  பட்டப் படிப்பின் போதே பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் [Hindustan Aeronautics Ltd] பயிற்சிக்குச் சேர்ந்தார்.  அங்கே விமானங்களை இயக்கும் பிஸ்டன் எஞ்சின், டர்பைன் எஞ்சின், ஆர அமைப்பு எஞ்சின் [Piston, Turbine & Radial Engines] ஆகியவற்றில் அனுபவம் பெற்றார்.

1958 இல் ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் பட்டம் வாங்கிய பிறகு, தன் நெடுநாட் கனவான விமானப் பறப்பியலில் ஈடுபட நினைத்தார்.  அவருக்கு இரண்டு வித வேலை வாய்ப்புகள் கிடைக்க வழி பிறந்தன.  முதலாவது வேலை இராணுவ அமைச்சகத்தின் தொழில் நுணுக்க விருத்தி & உற்பத்தித் துறைக் கூடத்தில் {Directorate of Technical Development & Production, (DTD&P) Ministry of Defence].  அடுத்தது இந்திய விமானப் படையில் ஊழியம் [Indian Air Force].  இரண்டுக்கும் விண்ணப்பித்து அவருக்கு நேர்காணல் தேர்வும் கிடைத்தது.  முதலில் கூறிய இராணுவப் பணி அவரது திறமைக்குச் சவாலாக இருக்க வில்லை.  அடுத்து தேரா தூன் விமானப் படைத் தேர்வில் அவர் வெற்றி பெறவில்லை.

தோல்வி மனதுடன் திரும்பி வரும் வழியில் ரிஷிகேஷில் தங்கிப் புனித கங்கா நதியில் நீராடிய போதுதான், அவருக்குப் புத்தரைப் போல் தோன்றிய சுவாமி சிவானந்தாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது!  தன்னை யாரென்று அறிமுகப் படுத்திக் கொண்டதும், சுவாமி சிவானந்தா அவரோர் இஸ்லாமியர் என்று மனதில் கருதவில்லை!  கவலைப் படுவது ஏனென்று சிவானந்தா கேட்டபோது, அப்துல் கலாம் தனது பறக்கும் கனவுகளை இந்திய விமானப் படை நேர்காணல் ஏமாற்றி விட்டெதெனக் கூறி வருந்தினார்.  அப்போது சிவானந்தா கூறினார், ” உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்;  விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது.  நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை.  ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது.  நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது.  ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு.  உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல்.  உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்!  கடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்”.

டெல்லிக்கு மீண்டதும் DTD&P இல் சீனியர் சையன்டி·பிக் அஸ்ஸிஸ்டென்ட் வேலை கிடைத்தது.  அப்போது அவர் தன்னோடு பணி செய்த குழுவுடன் முன்னோடி ஹோவர்கிரா·ப்டு [Prototype Hovercraft] ஒன்றைத் தயாரித்தார்.  அவர் முதன்முதல் அமர்ந்து இயக்கிய இந்திய ஹோவர்கிரா·ப்டில் முன்னாள் இராணுவ மந்திரி கிருஷ்ண மேனன் பயணம் செய்தார்.  அதற்குப் பிறகு 1962 இல் டாக்டர் அப்துல் கலாம் இந்திய விண்வெளித் திட்டத்தில் வேலை கிடைத்துச் சேர்ந்தார்.  சுமார் இருபதாண்டுகள் (1963-1982) அவர் இந்திய வெண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் [Indian Space Research Organization (ISRO)] பல பதவிகளில் பணியாற்றினார்.  பிறகு அவர் தும்பாவில் [திருவனந்தபுரம், கேரளா] துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் [Satellite Launch Vehicle Team (SLV)] சேர்ந்து, SLV-3 ராக்கெட் படைப்புத் திட்டத்தின் டைரக்டர் ஆக நியமிக்கப் பட்டார்..  SLV-3 ராக்கெட்டின் 44 துணைச் சாதனங்களை டிசைன் செய்து, பயிற்சி செய்து, மேன்மையாய் விருத்தி செய்து வெற்றிகரமாக ஏவிடப் பணிபுரிந்தார்.  1980 ஜூலையில் இல் ரோகினி என்னும் முதல் விஞ்ஞானத் துணைக்கோளைத் தூக்கிக் கொண்டு SLV-3 ராக்கெட் விண்வெளியில் ஏவப்பட்டு, ரோகினி பூமியைச் சுற்றிவரும் சுழல்வீதியில் இடப் பட்டது.  அவ்வரிய பணிக்குப் பாரத அரசாங்கம் 1981 இல் டாக்டர் அப்துல் கலாமுக்கு பாரதத்தின் மாபெரும் “பத்ம பூஷண்” பாராட்டு மதிப்பை அளித்தது.

ஓர் ஆன்மீக முஸ்லீமாக அப்துல் கலாம் தினமும் இருமுறை இறைவனைத் துதிக்கிறார்.  அவர் அறையில் தஞ்சை நடராஜர் வெண்கலச் சிலை காணப்படுகிறது. மேலும் அவர் ஓர் இராம பக்தர்.  வீணை வாசிக்கிறார்.  ஸ்ரீராகத்தை ரசிக்கிறார்.  தமிழில் கவிதை புனைகிறார்.  தானோர் இந்தியன்ரென்று பெருமைப் படுகிறார். 1999 ஆண்டில் பொக்ரானில் சோதித்த அடித்தள அணு ஆய்த வெடிப்புகளில் பங்கெடுத்தைப் பற்றி மகிழ்ச்சி அடைகிறார். விடுதலை பெற்ற பிறகு இதுவரைச் சாதித்த விஞ்ஞானப் பொறியியற் துறைகளை எடுத்துக் காட்டி முன்னேறும் நாடாகக் கருதப்படும் பாரதம் விருத்தி அடைந்து 2020 ஆண்டுக்குள் முன்னேறிய நாடாக மாறப் போகிறது என்றோர் எதிர்காலவாதியாக [Forecasting Futurist] ஒளிமயமான எதிர்காலத்தைச் சுட்டிக் காட்டுகிறார்.  டாக்டர் அப்துல் கலாம் மெய்யாக ஒரு ராக்கெட் விஞ்ஞானி, படைப்பாளர், எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு தேச நேசர்.  அவரே பாரதத்தின் ராணுவ ஏவுகணைப் பிதாவாகப் போற்றப் படுகிறார்.

(தொடரும்)

தகவல்:

1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
3. Indian Space Program By: Subhajit Ghosh
4  Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html [Dr. Vikram Sarabhai Space Pioneer]
9. Indian Space Program By: Wikipedia
10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]
12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp
13 Dr. Abdul Kalam : India’s Missile Program www.geocities.com/siafdu/kalam.html
14 India’s 2005 Republic Day Parade Archive – Military Photos [www.militaryphotos.net/forums/archive]
15 Increasing Indian Missile Reach, Opinion & Editorials By: The Hindu Editorial [April 14, 2007]
16 Missile Test By India [February 5, 2007]
17 Defence Update, International Online Defence Magazine [Posted Nov 30, 2006]
18 Defense Update, New Pissile Program at Aero India (2007)
19 BrahMOs, Missiles, Weapon Systems, India Defense
20 Indo-Russian Bilateral Equation Including Military [2001 ?]

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (May 10, 2007)

ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிசன்

Edison Electric Bulb

 

 

(1847–1931)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


“படைப்புக்கு வேண்டியது ஆக்கும் உள்ளெழுச்சி ஒரு சதவீதம்.  வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம்.”

தாமஸ் ஆல்வா எடிசன்

“அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம்.”

தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]


படிக்காத மேதை ! பட்டம் பெறாத மேதை !

‘எப்படி நூற்றுக் கணக்கான புது யந்திரச் சாதனங்களைக் கண்டு பிடித்தீர்கள் ‘ என்று ஒருவர் கேட்டதும், ‘படைப்புக்கு வேண்டியது, ஆக்கும் உள்ளெழுச்சி 1 சதவீதம், வேர்க்கும் உழைப்பு 99 சதவீதம் [1% Inspiration & 99% Prespiration] ‘ என்று தாமஸ் ஆல்வா எடிசன் பதில் அளித்தாராம். எடிசன் தனியாகவோ, இணைந்தோ படைத்த அரும்பெரும் சாதனங்கள், ஆயிரத்துக்கும் மேலானவை! நவீன மின்சார யந்திர யுகத்தை அமெரிக்காவில் உருவாக்கியவர், எடிசன்! உலகின் முதல் தொழிற்துறை ஆய்வுக் கூடத்தை [Industrial Research Center] அமெரிக்காவில் தோற்றுவித்தவர், எடிசன்! 18-19 நூற்றாண்டுகளில் அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் மின்சக்தி யந்திர யுகம் தோன்ற அடிகோலியவர்களுள் முக்கியமானவர், எடிசன்! அவரது உயர்ந்த படைப்புகள்: முதல் மின்சாரக் குமிழி [Electric Bulb], மின்சார ஜனனி & மோட்டார் [Electric Generator & Motor], மின்சார இருப்புப் பாதை, [Electric Railroad], மின்சக்தி வர்த்தகத் துறை, தொலைபேசி வாய்க்கருவி [Telephone Speaker], ஒலிபெருக்கி [Microphone], கிராமஃபோன் [Phonograph], மூவிக் காமிரா [Movie Camera] போன்றவை. முதலில் மின் விளக்கை உருவாக்கிடும் போது, எடிசனுக்கு அதற்கு அடிப்படையான ‘ஓம்ஸ் நியதி ‘ [Ohm ‘s Law] பற்றி எதுவும் தெரியாது! எடிசன் ஒழுங்கான பள்ளிப் படிப்போ, உயர்ந்த பட்டப் படிப்போ எதுவும் அற்றவர்! கடின உழைப்பாலும், ஞான நுட்பத்தாலும் பலவிதச் சாதனங்களைப் படைத்து ஏழ்மையிலிருந்து செல்வந்தரான ஒரு மேதை, எடிசன்! அவர் படிக்காத மேதை! அவர் கற்றது கடுகளவு! கண்டு பிடித்தது கால் பந்தளவு!

Edison -4

‘நான் ஒரு கணிதத் துறை அறிவு இல்லாதவன். ஆனால் கலைத்துவத் துறையில் சோதிக்கப் பட்டால், முதல் பத்து சதவீதத் தகுதியில் நான் உயர்வு பெற முடியும். கணித வல்லுநர்களை நான் வேலை செய்ய வைத்துக் கொள்ளலாம். ஆனால் என்னை யாரும் வேலைக்கு அமர்த்த மாட்டார்கள் ‘ என்று ஒருமுறை எடிசன் வேடிக்கையாகக் கூறி யிருக்கிறார். ‘நான் ஒரு விஞ்ஞானி அல்லன்! டாலர் வெள்ளி நாணயம் சம்பாதிக்க உழைக்கும் ஒரு வாணிபப் படைப்பாளி ‘ என்று தன்னைப் பற்றி அடுத்து ஒரு சமயம் சொல்லி யிருக்கிறார்!

மந்த புத்தியோடு, செவிடான சிறுவன்

தாமஸ் ஆல்வா எடிசன் 1847 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் நாள் ஓஹையோவில் உள்ள மிலான் என்னும் ஊரில் பிறந்தார். எடிசன் எழாவது பிறந்த கடைசிப் புதல்வன். தந்தையார் சாமுவெல் எடிசன் ஓர் அமெரிக்கன்; தாயார் நான்சி எடிசன் ஸ்காட்டிஷ் பரம்பரையில் வந்த கனடா மாது. அவள் ஒரு பள்ளிக்கூட ஆசிரியை. தாமஸ் எடிசனுக்கு, சிறு வயதிலேயே காது செவிடாய்ப் போனது! அப்பிறவிப் பெருங் குறை அவரது பிற்கால நடையுடைப் பழக்கங்களை மிகவும் பாதித்ததோடு, அநேகப் புதுப் படைப்புக்குக் காரணமாகவும் இருந்தது! தாத்தா ஜான் எடிசன், 1776 அமெரிக்கச் சுதந்திரப் போரில் [War of Independence] பிரிட்டாஷ் பக்கம் சேர்ந்து, நாட்டை விட்டோடிக் கனடாவில் உள்ள நோவாஸ் கோசியாவில் [Nova Scotia] சரண் புகுந்தார். பிறகு மேற்திசை நோக்கிச் சென்று, கனடாவின் அண்டரியோ மாநிலத்தில் ஈரி ஏரிக் கரையில் உள்ள பாங்கம் [Bangham on Lake Erie] என்னும் ஊரில் குடியேறினார். 1837 இல் கனடாவிலும் உள்நாட்டுக் கலகம் எழவே, ஜான் குடும்பத்தோடு மறுபடியும் அமெரிக்கா நோக்கி ஓடினார்! அங்கு ஓஹையோவில் ஈரி ஏரிக் கரையின் தென் பகுதியில் மிலான் என்னும் ஊரில் குடியேறினர்.

Edison-2

1840 இல் தந்தை சாமுவெல் எடிசன் மிலானில் ஒரு சாதாரண மர வியாபாரத்தைத் தொடங்கினார். அது மென்மேலும் பெருகி விருத்தி யடைந்தது. பின்பு மிஸ்சிகன் போர்ட் ஹூரனில் [Port Huron, MI] கலங்கரைத் தீபக் காப்பாளராகவும் [Lighthouse Keeper], கிராடியட் கோட்டை ராணுவத் தளத்தில் [Fort Gratiot Military Post] மரச் செதுக்கு ஊழியராகவும் சாமுவெல் வேலை பார்த்தார். தாமஸ் எடிசன், சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலில் [Scarlet Fever] கஷ்டப்பட்டுத் தாமதமாக, எட்டரை வயதில்தான் போர்ட் ஹூரன் பள்ளிக்குச் சென்றார். மூன்று மாதங்களுக்குப் பின் ஒரு நாள் தாமஸ் கண்களில் கண்ணீர் சொரிய வீட்டுக்குத் திரும்பினார். ‘மூளைக் கோளாறு உள்ளவன் ‘ என்று ஆசிரியர் திட்டியதாகத் தாயிடம் புகார் செய்தார், எடிசன்! அத்துடன் அவரது பள்ளிப் படிப்பும் முடிந்தது! பள்ளிக்கூட ஆசிரியை யான தாயிடம் மூன்று ஆண்டுகள் வீட்டிலேயே, எடிசன் கல்வி கற்றார். இதைக் கேட்டுப் பலர் ஆச்சரியப் படலாம்! புகழ் பெற்ற இத்தாலியக் கலைஞர், லியனார்டோ டவின்ஸி, அணுக்கரு அமைப்பை விளக்கிய, டேனிஷ் விஞ்ஞானி நீல்ஸ் போஹ்ர் [Niels Bohr], கணித விஞ்ஞான நிபுணர், ஸர் ஐஸக் நியூட்டன் ஆகியோரும் சிறு வயதில் மூளைத் தளர்ச்சி [Isaac Newton] உள்ளவராகப் பள்ளியில் கருதப் பட்டார்கள்! ‘எதிலும் இனி நீ உருப்படப் போவதில்லை ‘ என்று பள்ளித் தலைமை ஆசிரியர், சிறுவன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனை நோக்கி எச்சரிக்கை செய்தாராம்! மேதை எடிசனும், அகில விஞ்ஞானி, ஐன்ஸ்டைனைப் போல் மந்த புத்திச் சிறுவனாகத்தான் பள்ளிக் கூடத்தில் காட்சி அளித்திருக்கிறார்.

ஏழு வயதில் திடீரென எடிசனின் சிந்தனா சக்தி விரிந்து தூண்டப் பட்டது! சூழ்நிலைச் சாதனங்களின் மேல் ஆர்வம் மிகுந்து அடிப்படை ஆய்வுக் கேள்விகள் எழுந்தன. ஒன்பது வயதில் ரிச்சர்டு பார்க்கர் [Richard Parker] எழுதிய ‘இயற்கைச் சோதனை வேதம் ‘ [Natural & Experimental Philosophy] என்ற நூலைப் படித்து முடித்தார். பதிமூன்றாம் வயதில் தாமஸ் பெயின் [Thomas Paine] எழுதிய ஆக்க நூல்களையும், சிரமத்துடன் ஐஸக் நியூட்டன் இயற்றிய ‘கோட்பாடு ‘ [Principia] என்னும் நூலையும் ஆழ்ந்து படித்தார். தனது 21 ஆம் வயதில், மைகேல் ஃபாரடேயின் [Micheal Faraday] செய்தித்தாளில் இருந்த ‘மின்சக்தியின் பயிற்சி ஆராய்ச்சிகள் ‘ [Experimental Researches in Electricity] பகுதியை ஒருவரி விடாது ஆழ்ந்து படித்து முடித்தார். அந்த ஞானம் அவரது வாழ்க்கையில் ஒரு பெருத்த மாறுதலை உண்டாக்கியது! செய்கை முறையில், சோதனைகள் புரிந்து படைக்கும் திறனை எடிசனுக்கு அவை அடிப்படை ஆக்கின. கணிதப் படிப்பில் லாத எடிசன், விஞ்ஞான இயற்பாடு [Theory] எதுவும் முறையாகக் கற்காத எடிசன், சோதனைகள் மூலம் மட்டிலுமே திரும்பத் திரும்ப முயன்று, ஞான யுக்தியால் பல அரிய நூதனச் சாதனங்களைப் படைத்து உலகப் புகழ் பெற்றார்.

Edison -3

 

தானாக இயங்கும் தந்திக்குறிப் பதிவுக் கருவி

1859 இல் எடிசன் தன் பன்னிரண்டாம் வயதில் பள்ளிப் படிப்புக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு, டெட்ராய்ட்-போர்ட் ஹூரன் [Detriot-Port Huron], ரயில் பாதையில் செய்தித் தாள் விற்கும் பையனாக வேலையில் சேர்ந்தார். அப்போது டெட்ராய்ட் சென்ட்ரல் நிலையம், தந்திப் பதிவு ஏற்பாடு மூலம், ரயில் போக்கு வரத்தைக் கண்காணிக்க முயன்று கொண்டிருந்தது. அந்த வாய்ப்பைப் பற்றிக் கொண்டு, வேலைக்கு மனுப் போட்டு, 1863 இல் டெலகிராஃப் பயிற்சியில் நுழைந்தார். தந்திச் செய்திகள் புள்ளிக் கோடுகளாகப் [Dots & Dashes] பதிவானதால், அவரது செவிட்டுத் தன்மை வேலையை எந்த விதத்திலேயும் பாதிக்கவில்லை! பதிவானப் புள்ளிக் கோடுகளை அந்த காலத்தில் ஒருவர் படித்துப் புரிந்துதான், ஆங்கி லத்தில் மாற்றிக் கையால் எழுத வேண்டும். அதே பணியை ஆறு வருடங்கள் எடிசன் அமெரிக்காவில் தெற்கு, நடுமேற்குப் பகுதிகளில், நியூ இங்கிலாந்தில், மற்றும் கனடாவில் செய்து வந்தார். அப்போது தான் வேலையைச் சீக்கிரம் செய்ய, தந்திக் கருவியைச் செப்பனிட்டு தன் முதல் ஆக்கத் திறமைக் காட்டினார், எடிசன். 1869 இல் தன் 22 ஆம் வயதில் ‘இரட்டைத் தந்தி அடிப்புச் சாதனத்தைப் ‘ [Duplex Telegraph with Printer] பதிவுக் கருவியுடன் இணைத்து, இரண்டு செய்திகளை ஒரே சமயத்தில், ஒரே கம்பியில் அனுப்பிக் காட்டினார், எடிசன். அத்துடன் தந்தியின் மின்குறிகளைச் சுயமாக மாற்றிச் சொற்களாய்ப் பதிவு செய்யவும் அமைத்துக் காட்டினார் .

எடிசன் தந்தி வேலையை விட்டுவிட்டு, முழு நேர ஆக்கப் பணிக்கு, நியூ யார்க் நகருக்குச் சென்றார். அங்கு ஃபிராங்க் போப்புடன் [Frank Pope] கூட்டாகச் சேர்ந்து, ‘எடிசன் அகிலப் பதிப்பி ‘ [Edison Universal Stock Printer], மற்றும் வேறு பதிக்கும் சாதனங்களையும் படைத்தார். 1870-1875 ஆண்டுகளில் நியூ ஜெர்ஸி நியூ ஆர்க், வெஸ்ட்டர்ன் யூனியனில் [Western Union] சுயமாய் இயங்கும் தந்தி [Automatic Telegraph] ஏற்பாட்டைச் செப்பனிட்டார். ரசாயன இயக்கத்தில் ஓடிய அந்தக் கருவி ஏற்பாடு, மின்குறி அனுப்புதலை [Electrical Transmission] மிகவும் விபத்துக்குள் ளாக்கியது. அதைச் சீர்ப்படுத்த முற்பட்ட எடிசன் தன், ரசாயன ஞானத்தை உயர்த்த வேண்டிய தாயிற்று. அந்த ஆராய்ச்சி விளைவில், மின்சாரப் பேனா [Electric Pen], பிரதி எடுப்பி [Mimeograph] போன்ற சாதனங்கள் உருவாகின. மேலும் அந்த அனுபவம், எடிசன் எதிர்பாரதவாறு கிராமஃபோனைக் [Phonograph] கண்டுபிடிக்கவும் ஏதுவாயிற்று.

Edison -1

 

முதல் கிராமஃபோன் கண்டுபிடிப்பு

புதிய சாதனங்களைக் கண்டு பிடிக்கும் போது, வேறு பல அரிய உபசாதனங்களும் இடையில் தோன்றின. அவற்றுள் ஒன்று ‘கரி அனுப்பி ‘ [Carbon Transmitter] என்னும் சாதனம். 1877 இல் எதிர்பாரதவாறு, எடிசன் கண்டு பிடித்தவற்றிலே, மிக நூதன முன்னோடிச் சாதனம், கிராமஃபோன். பிரான்சின் ஆக்க மேதை, லியான் ஸ்காட் [Leon Scott] ‘ஒவ்வொரு ஒலியையும் ஒரு தகடு மீது பதிவு செய்ய முடிந்தால், அவை சுருக்கெழுத்து போல் தனித்துவ உருவில் அமையும் ‘ என்ற கோட்பாடை ஒரு நூலில் எழுதி யிருந்தார். அதுதான் ஒலி மின்வடிவாய் எழுதும், ஒலிவரைவு [Phonography] எனப்படுவது. அக் கோட்பாடை நிரூபித்துக் காட்ட, எடிசன் ஓர் ஊசியைத் தன் கரியனுப்பியுடன் சேர்த்து, ஒலிச் சுவடுகள் பாரஃபின் [Paraffin] தாளில் பதியுமாறு செய்தார். அவர் வியக்கும்படி, ஒலிச் சுவடுகள் கண்ணுக்குத் தெரியாத வடிவில், தலை எழுத்துப் போல் கிறுக்கப் பட்டு நுணுக்க மாகத் தாளில் வரையப் பட்டிருந்தன. பிறகு ஊசியை ஒலிச் சுவடின் மீது உரசி, அதைப் ஒலிபெருக்கி மூலம் கேட்டதில், பதியப் பட்ட ஓசை மீண்டும் காதில் ஒலித்தது!

எடிசன் அடுத்து ஓர் உருளை [Cylinder] மீது தகரத் தாளைச் [Tin Foil] சுற்றி ஒலிச் சுவடைப் பதிவு செய்து காட்டினார். 1877 டிசம்பரில் அதற்கு எடிசன், தகரத்தாள் கிராமஃபோன் [Tinfoil Phonograph] என்னும் பெயரிட்டார். ஆனால் கிராமஃபோன் ஆய்வுக் கூடத்திலிருந்து வர்த்தகத் துறைக்கு வர இன்னும் பத்தாண்டுகள் ஆயின.

மின்குமிழி [Electric Bulb] மின்சக்தி ஜனனி [Generator] கண்டுபிடிப்பு

எடிசன் காலத்தில் வாயு விளக்குகள்தான் [Gas Light] வீதிக் கம்பங்களில் பயன் படுத்தப்பட்டன. ஐம்பது ஆண்டுகளாக ‘மின்சார விளக்கு ‘ பலருக்குக் கனவாகவும், முயலும் படைப்பாளி எஞ்சினியர்களுக்குப் படு தோல்வியாகவும் இருந்து வந்தது! அப்போதுதான் விஞ்ஞானிகள் ‘மின்வீச்சு விளக்கு ‘ [Electric Arc Lighting] சம்பந்தமாக பலவித ஆய்வுகள் செய்து வந்த காலம். 1878 ஜூலை மாதம் 29 ஆம் தேதி சூரிய கிரகணத்தின் போது, ராக்கி மலைத்தொடர் மீது சில ஆராய்ச்சிகள் செய்ய பல அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றிருந்தனர். கிரகணத்தின் போது ‘சூரிய வெளிக்கனல் ‘ [Sun ‘s Corona] எழுப்பிய வெப்ப உஷ்ண வேறுபாட்டை அளக்க, அவர்களுக்கு ஒரு கருவி தேவையானது. எடிசன் ஒரு கரிப் பொட்டுச் [Carbon Button] சாதனத்தைப் பயன் படுத்தி ‘நுண்ணுனர் மானி ‘ [Microtasi Meter] என்னும் கருவியைச் செய்து கொடுத்தார். அக்கருவி மூலம் கம்பியில் ஓடும் மின்னோட்டத்தைக் கட்டுப் படுத்தலாம். அம்முறையைப் பயன் படுத்தி மின்சார விளக்கு ஒன்றைத் தயாரிக்க அப்போது எடிசனுக்கு ஓர் ஆர்வம் உண்டானது.

எடிசன் மின்விளக்கு ஆராய்ச்சிக்கு, ‘எடிசன் மின்சார விளக்குக் கம்பெனியை ‘ [Edison Electric Light Company] துவங்கிய ஜெ.பி. மார்கன் குழுவினர் முன் பணமாக $ 30,000 தொகையை அளித்தார்கள். 1878 டிசம்பரில், பிரின்ஸ்டன் பல்கலைக் கழக எம்.ஏ. விஞ்ஞானப் பட்டதாரி, 26 வயதான ஃபிரான்சிஸ் அப்டன் [Francis Upton] எடிசன் ஆய்வுக் குழுவில் சேர்ந்தார். எடிசனுக்குத் தெரியாத கணித, பெளதிக அறிவியல் நுணுக்கங்கள் யாவும், இளைஞர் ஃபிரான்சிஸ் மூலம் கிடைத்தது. மின்தடை [Resistance] மிகுதியாய் உள்ள உலோகக் கம்பி ஒன்றை மின்விளக்கிற்கு எடிசன் முதலில் உபயோகித்தார். மின்சார அணிச் சுற்றில் [Series Circuit] செல்லும் மின்னோட்டம் [Electric Current] மிகுதியாக இருந்ததால், மின் வீச்சு விளக்கு [Electric Arc Light] ஒன்றில் பழுது ஏற்பட்டால், எல்லா விளக்கு களும் அணைந்து போயின. எடிசன் மின் விளக்குகளை இணைச் சுற்றில் [Parallel Circuit] பிணைத்து, மின்னோட்ட அளவைக் குறைத்ததால், ஒரு விளக்கில் ஏற்படும் பழுது மற்ற விளக்குகளைப் பாதிக்க வில்லை. எடிசன் குழுவினர், பிளாடினம் கம்பியைச் சுருளைச் [Platinum Filament] சூன்யக் குமிழி [Vacuum Bulb] ஒன்றில் உபயோகித்துக், கட்டுப் படுத்திய மின்னோட்டத்தில் ஒளிர வைத்து, முதல் மின்விளக்கை உண்டாக்கிக் காட்டினார்கள்.

இதற்கு இடையில் 1879 இல் எடிசன், அப்டன் இருவரும் முதல் மின்சார ஜனனியை உண்டாக்க போதிய சோதனைகள் செய்து முடித்தார்கள். யந்திர சக்தியில் ஓட்டினால் ஜனனியில் மின்னழுத்தம் [Voltage] உண்டாகி, கம்ப்ி முனையில் மின்திறம் [Electric Power] கிடைக்கிறது. எதிர்மறையாக ஜனனியின் முனைகளில், மின்னழுத்தம் செலுத்தினால், அதே சாதனம் யந்திர சக்தியைத் தரும் மின்சார மோட்டார் [Electric Motor] ஆனதை எடிசன் நிரூபித்துக் காட்டினார். இதுவும் அவரது முதல் சாதனையே!

1881 ஜனவரியில் முதல் ‘விளக்கொளி மின்சார அமைப்பு ‘ [Incandescent Electric Power System] வர்த்தகத் துறை ஏற்பாடு, நியூ யார்க் ‘ஹிந்த் & கெட்சம் ‘ [Hind & Ketcham] அச்சக மாளிகையில் நிர்மாணிக்குப் பட்டது. நியூ யார்க் கீழ் மன்ஹாட்டனில் அமைந்த, உலகின் முதல் வர்த்தக ‘மத்திய மின்சார ஏற்பாடு ‘ [Central Power System], எடிசன் நேரடிப் பார்வையில் நிறுவப் பட்டது! அது 1882 செப்டம்பர் முதல் இயங்க ஆரம்ப்ித்தது. அந்த மின்விளக்கு அமைப்பு வளர்ச்சி அடைந்து, பின் பெரிய ஹோட்டல்கள், அரங்க மேடைகள், வாணிபத் துறைகள், வர்த்தகக் கடைகள் யாவற்றிலும் மின்குமிழி ஒளி வீச, ஆக்க மேதை எடிசனின் புகழ் உலகெங்கும் பரவியது.

விளக்கு எரியும் போது, சூனியமான மின்குமிழிச் [Vacuum Bulb] சுருள் கம்பியின் நேர்முனையில் [Positive Pole] ஒருவித நீல நிறவொளி [Blue Glow] சூழ்ந்து கொண்டிருந்தது. 1883 இல் எடிசன் மின்குமிழியைப் பதிவு செய்த போது, அந் நிகழ்ச்சிக்கு ‘எடிசன் விளைவு ‘ [Edison Effect] என்று பெயர் கொடுத்தனர். பதினைந்து ஆண்டுகள் கழித்து 1998 இல் ஜே. ஜே. தாம்ஸன் [J.J. Thomson] முதன் முதல் ‘எதிர்த்துகள் ‘ [Electron] பரமாணுவைக் கண்டுபிடித்தார். விஞ்ஞானிகள் பின்னால் எடிசன் விளைவுக்கு விளக்கம் தந்தனர். அதாவது எதிர்த்துகள் [Electrons] சூடான முனையிலிருந்து தண்மையான முனைக்கு [Cold Electrode], வெப்பவியல் வீச்சால் [Thermionic Emission] பயணமாகும் போது, நேர்முனையில் அப்படி ஒரு நீல நிறவொளி எழுகிறது! அதுவே பின்னால் ‘எதிர்த்துகள் குமிழி ‘ [Electron Tube] தோன்ற வழி வகுத்து ‘மின்னியல் தொழிற் துறைக்கு ‘ [Electronics Industry] அடிகோலியது.

திரைப்படக் காமிரா [Movie Camera] கண்டுபிடிப்பு

போனோகிராஃபில் வெற்றி பெற்ற எடிசன், அடுத்து மூவிக் காமிரா வளர்ச்சியில் ஆழ்ந்து வேலை செய்தார். அதைப் பற்றி ஒரு சமயம் எடிசன் கூறியது: ‘கற்பனையில் எனக்கு இது முன்பே உதயமானதுதான். போனோகிராஃப் எப்படிக் காதுக்கு இசை விருந்தளிக்கிறதோ, அது போல் ‘நகரும் படம் ‘ [Movie] மனிதர் கண்ணுக்கு விருந்தளிக்கச் செய்ய முடியும். போனோகிராஃப் ஒலி நுணுக்கத்தை மூவிக் காமிரா யந்திரத்துடன் இணைத்துப் ‘பேசும் படம் ‘ [Talkies] என்னால் தயாரிக்க முடியும் ‘ இந்த சிந்தனா யுக்தி எடிசனுக்கு பத்தாண்டுகளாக இருந்திருக்கிறது. 1880 இல் முதல் நகரும் படம் வெளிவரப் பொறுப்பாக இருந்தவர், எடிசனுக்கு உதவியாளராகச் சேர்ந்த, W.K.L. டிக்ஸன் [W.K.L. Dickson]. எடிசன் நகரும் படக் காமிராவை விருத்தி செய்ய, பலரது படைப்பு களைக் களவு செய்தார். தன் கீழ் பணியாற்றும் நிபுணர்களின் ஆக்கங்களையும் பயன் படுத்திக் கொண்டார்.

1888 இல் எடிசன் முதலில் படைத்த மூவிக் காமிரா, கினெட்டாஸ்கோப் [Kinetoscope].  ஆனால் படம் யாவும் அதில் சற்று மங்கலாகத்தான் தெரிந்தன. 1889 இல் பிரிட்டனில் வாழ்ந்த ஃபிரீஸ்-கிரீன் [Friese-Green] ஒருவிதப் பதிவு நாடாவைப் [Sensitized Ribbon] பயன் படுத்தி உருவப் படங்களைப் பதித்தார். அதே நாடாவை சில வருடங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் ஜார்ஜ் ஈஸ்ட்மன் [George Eastman] உபயோகித்து ஓளிப் படங்களை அந்த நாடாவிலே எடுக்கும்படி செய்தார். முதல் முறையாக, எடிசன் கினெடாஸ்கோப் காமிராவை விருத்தி செய்து, ஐம்பது அடி நீளமுள்ள படச் சுருளை, மின்சார மோட்டார் மூலம் சுற்ற வைத்து, உருப்பெருக்கியின் [Magnifying Glass] வழியாகப் பேசும் படங்களை வெள்ளித் திரையில் காட்டிக் களிக்கச் செய்தார். அந்த மூவிக் காமிராவை எடிசன் 1891 இல் அமெரிக்காவில் பதிவு செய்தார்.

‘ஒளியையும், ஒலியையும் இணைத்துப் பேசும் படத்தைத் திரையில் காட்டிச் சிறுவர், சிறுமிகளுக்குச் சிறந்த முறையில் பாடம் சொல்லிக் கொடுக்கலாம் ‘, என்னும் கருத்தில் உறுதியான நம்பிக்கை காட்டினார் எடிசன். ‘கல்வி புகட்டுவதில் எந்த அங்கம் முக்கிய மானது ? கண்களா ? அன்றி காதுகளா ? ‘ என்று ஒருவர் கேட்ட போது, எடிசன் கூறினார்: ‘கண்கள்தான்! ஓலியை விட, ஒளி அதி வேகம் உடையது. காதுகளை விடக் கண்கள் விரைவாகக் கற்பவை! நகரும் படங்கள் மூலம், கண்கள் கற்றுக் கொள்வது நேரடி வழி! விரைவுப் பாதை! தெளிவாய் விளக்கும் பாதை! புத்தகத்தில் சொற்களைப் படித்து அறிவதை விட, பார்வை மூலம் படிப்பது எளியது! ‘ ‘ஒரு படம் ஆயிரம் சொற்க ளுக்குச் சமம் ‘ என்பதை எடிசன் எத்தனை அழகாகச் சொல்லி விட்டார்! ஒரு நிலைப் படம் ஆயிரம் சொற்களுக்குச் சமம் என்றால், ஓடும் படம் எத்தனை ஆயிரம் சொற்களுக்கு இணையாகும், என்பதைக் கணக்கிட முடியுமா ?

Cover image

 

அமெரிக்க ஒளி விளக்கு அணைந்தது !

ஆக்க மேதை எடிசன் தன் 84 ஆம் வயதில், 1931 அக்டோபர் 18 ஆம் தேதி நியூ ஜெர்சி வெஸ்ட் ஆரஞ்ச் நகரில் காலமானார். அமெரிக்க ஜனாதிபதி ஹெர்பர்ட் ஹூவர் [President Herbert Hoover] எடிசன் உடல் அடக்கத்தின் போது அமெரிக்கா வெங்கும் தேவையான விளக்குகளைத் தவிர, மற்ற மின்விளக்குகளை, ஒரு நிமிடம் அணைக்கும்படி ஆணையிட்டிருந்தார். அக்டோபர் 21 ஆம் தேதி மாலை 9:59 [EST] மணிக்கு அவரது புகழுடல் அடக்க மானது. நியூ யார்க்கில் மாலை 9:59 [EST] மணிக்கு ‘விடுதலை விக்கிரகத்தின் ‘ [Statue of Liberty] கையில் இருந்த தீப்பந்தம் ஒளி இழந்தது! பிராட்வே விளக்குகள் ஒளி மங்கின! வீதியில் பயணப் போக்கு [Traffic Signals] விளக்குகளைத் தவிர மற்ற எல்லா விளக்குகளும் கண்ணை மூடின! சிகாகோவில் சரியாக 8:59 மணிக்கு வீதியில் மின்சார வண்டிகள் [Street Cars] ஒரு நிமிடம் நின்றன! மின்விளக்குகள் அணைந்தன! டென்வரில் 7:59 P.M மலை நேரத்தில் விளக்குகள் ஒரு நிமிடம் கண்ணை மூடி அஞ்சலி செய்தன! கிழக்கே எடிசன் உடல் அடக்கமான சமயத்தில், மேற்கே காலிஃபோர்னியாவில் பசிஃபிக் நேரம் 6:59 P.M. மணிக்கு, சூரியனும் செவ்வானில் தன் ஒளியைக் குறைத்து இருட்கடலில் மூழ்கியது! விளக்குகளும் ஒரு நிமிடம் இமை மூடின! ஆனால் எடிசன் ஆத்மா வாகிய மின்விளக்கு இன்னும் பல்லாயிரம் ஆண்டுகள் சுடர் விட்டு, அகில உலகுக்கும் ஒளி பாய்ச்சிக் கொண்டே இருக்கும்!

***********************

S. Jayabarathan (jayabarat@tnt21.com) September 15, 2009

ரேடியம் கண்டு பிடித்த விஞ்ஞானி மேடம் கியூரி

Cover Image Marie

 

http://www.biography.com/people/marie-curie-9263538/videos  [Biography]

http://www.youtube.com/watch?v=3KmJsKuJws4 [Biography]

http://www.youtube.com/watch?v=P9MxLAvzEAg  [Marie Curie Movie]

 

Madame Curie

(1867 – 1934)

 

சி. ஜெயபாரதன்,B.E.(Hons), P.Eng.(Nuclear) Canada

+++++++++++++

“வைர நெஞ்சம், ஒருநோக்குக் குறிக்கோள், மெய்வருத்தம் மீறிய விடாமுயற்சி, அழுத்தமான கருத்து, அசைக்க முடியாத தீர்ப்பு இவை யாவும் ஒருங்கிணைந்த தனித்துவ மாது, மேரி கியூரி ! அவரது வாழ்வின் அசுர விஞ்ஞான சாதனை, கதிரியக்க மூலகங்களின் இருப்பை நிரூபித்து, அவற்றைப் பிரித்துக் காட்டியது ! மேரியின் விஞ்ஞான ஆராய்ச்சி, வரலாறு இதுவரைக் கண்டறியாத அச்சமற்ற யுக்தியோடு, கடுமையான இடையூறுகள் தடுப்பினும், அவற்றைத் தாண்டிச் செய்த ஓர் அரிய சாதனை !”

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

புரட்சி செய்த புது யுகக் கதிர்கள்!

நோபெல் பரிசு பெற்ற ஜெர்மன் விஞ்ஞானி, வில்ஹெம் ராஞ்சன் [Wilhem Roentgen] 1895 இல் முதன் முதல் கண்டு பிடித்த எக்ஸ்ரே கதிர்கள் [X Rays], மனிதன் உட்புற அங்கத்தைப் படமெடுக்கும் ஓர் அற்புத ஆய்வுக் கருவியாய், மருத்துவப் பணிக்கு பயன்படுவது போல், கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய அணுவின் அமைப்பை அறியவும் அவை அடிப்படையாய் இருந்தன. அவரைப் பின் தொடர்ந்து பிரென்ச் விஞ்ஞானி, ஹென்ரி பெக்குவரல் [Henri Becquerel] 1896 இல் ஒளிவீசும் உலோகம் அவ்வாறு எக்ஸ்ரே கதிர்களை எழுப்புகிறதா என்று ஆராய்ச்சி செய்யும் போது பிட்ச்பிளன்டி தாதுவில் [Pitchblende Ore] யுரேனிய உப்புக்கள் [Uranium Salts] ஒருவிதக் கதிர்களை வெளியாக்கு வதைக் கண்டார். அப்புதிய கதிர்கள் எக்ஸ்ரே கதிர்களை விடப் பன்மடங்கு ஊடுருவுத் திறனைக் கொண்டிருந்தன.

பெக்குவரலைப் பின்பற்றிப் பிரென்ச் மாது மேரி கியூரி, அவரது கணவர், பியரிக் கியூரி [Marie & Pierre Curie] இருவரும் யுரேனியத்தைப் போல் வேறு உலோகமும் கதிர் வீசுகிறதா என்று பிட்ச்பிளன்டி தாதுவைத் தொடர்ந்து சோதித்தார்கள். அப்போதுதான் யுரேனியத்தை விடப் பல மடங்கு உக்கிரம் கொண்ட கதிர்களை வெளியாக்கும் பொலோனியம் [Polonium], ரேடியம் [Radium] என்னும் புதிய இரு மூலகங்களைக் [Elements] கண்டு பிடித்தார்கள். யுரேனியம், தோரியம், ரேடியம், பொலோனியம் இவற்றில் எழும் கதிர்கள், எக்ஸ்ரே போல் மின்சக்தி துணையின்றித் தாமாகவே உலோகத்திலிருந்து தொடர்ந்து எப்போதும் வெளி வந்து கொண்டி ருந்தன. மேரி கியூரி அந்த இயற்கை நிகழ்ச்சிக்குக் கதிரியக்கம் [Radioactivity] என்று பெயரிட்டார். இவ்வரிய கண்டு பிடிப்புக்காக, மேரி கியூரி, பியரி கியூரி, ஹென்ரி பெக்குவரல் மூவருக்கும் பெளதிக விஞ்ஞானத்திற்கு 1903 இல் நோபல் பரிசு அளிக்கப் பட்டது. அடுத்து மேரி கியூரி ரேடியம் கண்டு பிடித்ததற்குத், தனியாக இரசாயன விஞ்ஞானத்திற்கு 1911 இல் நோபல் பரிசு பெற்றார். இதுவரை இரண்டு நோபெல் பரிசு பெற்ற முதல் விஞ்ஞானப் பெண் மேதை, மேரி கியூரி ஒருவரே.

 

இருளில் கதிர் ஒளி கண்ட வைர மங்கை.

மேரி கியூரி இருளில் ஒளியைக் கண்டவர்! அவரது சரிதை வறுமையில் உயர்ச்சி! அபார சிந்தனையும், அளவற்ற பொறுமையும், அசுர சக்தியும் கொண்டு, விஞ்ஞானம் ஒன்றுக்காகவே தன் வாழ் நாட்களை அர்ப்பணித்த ஒரு பெண் மேதையின் வரலாறு! 1867 நவம்பர் 7 ஆம் தேதி போலந்திலுள்ள வார்சா நகரில் வறுமையில் வாழும் பிரென்ச் பெற்றோருக்கு மேரி கடேசிப் புதல்வியாய்ப் பிறந்தார். தந்தையார் பெளதிகம் கற்பிக்கும் ஒரு பள்ளி ஆசிரியர். தாயார் ஒரு பள்ளிக் கூடத்தின் தலைமை ஆசிரியை. கூடப் பிறந்தவர், நான்கு சகோதரிகள்; ஒரு சகோதரன். மூத்தவள் பெயர், பிரானியா. எல்லாப் பிள்ளைகளை விடவும், சிறு வயதிலேயே மேரி மிக்க அறிவோடு காணப் பட்டாள்.

அப்போது போலாந்து ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில், அடிமை நாடாக இருந்தது! போலந்து பல்கலைக் கழகத்தில் பெண்கள் கற்க அனுமதிக்கப் படாததால் மேரி, பிரானியா இருவரும் மேற் படிப்புக்காகப் பாரிஸ் நகருக்குச் செல்ல விரும்பினார்கள். ஆனால் அந்த ஆசை நிறைவேற அவர்களிடம் போதிய பணத்தொகை கைவசம் இல்லை. உயர்நிலைப் பள்ளியை 15 வயதில் முடித்தபின், மேரி ஆறு ஆண்டுகள் [1885-1891] ஓர் இல்லத்தில் தணிக்கை மாதாக [Governess] வேலை செய்து பணம் சேர்த்து, முதலில் பிரானியா பல்கலைக் கழகத்தில் மருத்துவப் பட்டம் பெற உதவ வேண்டிய தாயிற்று. பிறகு பிரானியா வேலையில் சம்பாதித்து, மேரியின் மேற்படிப்பை முடிக்க உதவி செய்தாள். மேரியின் முன் ஆலோசனைப் படி, அத்திட்டம் வெற்றி யடைந்து, தன் 24 ஆம் வயதில் மேரி முதன் முதல் 1891 ஆண்டு பாரிஸூக்குப் பயணம் செய்தாள்.

Fig 4 Radioactivity

பாரிஸ் கடுங்குளிரில் சரியான உணவு, உடை இல்லாமல், பாழடைந்த தங்குமிடத்தில் மேரி சிரமத்தோடு படித்து வந்தாள். மாதம் 100 பிராங்க் நிதித் திட்டத்தில் [கல்லூரித் தவணை உட்பட], பணம் பற்றாமல் பல நாட்கள் வெறும் ரொட்டி, சாக்லெட், சிறு பழத்தைத் தின்று காலம் தள்ள வேண்டிய தாயிற்று. சில சமயம் பசியில் மயக்கமாகிக் கிடந்திருக்கிறாள். அவற்றை எல்லாம் பொருட் படுத்தாது, மேரி ஆழ்ந்து படித்துக் கல்லூரியில் 1893 இல் முதல் மாணவியாக M.Sc. பெளதிக விஞ்ஞானத்திலும், அடுத்த ஆண்டு M.Sc. கணிதத்திலும் பட்டம் பெற்றார். அதன்பின் லிப்மன் ஆய்வுக் கூடத்தில் வேலையில் சேர்ந்து பணியாற்றும் போது தான், அங்கு ஏற்கனவே வேலை பார்த்துக் கொண்டிருக்கும் தன் எதிர்காலக் கணவர், பியரி கியூரியைச் சந்தித்தார். பியரி ஓர் உன்னத பெளதிக விஞ்ஞானி. இருவரும் காதல் வயப்பட்டு, 1895 இல் திருமணம் செய்து, அவர்களுக்கு ஐரீன், ஈவ் [Irene & Eve] என்ற இரு பெண் பிள்ளைகள் பிறந்தனர். மேரியும், பியரியும் அடுத்த பத்தாண்டுகள் ஒன்றாக ஆராய்ச்சிகள் நடத்தி, நோபல் பரிசு பெற்று ரேடியம், பொலோனியம் போன்ற மகத்தான கதிர் ஒளிவீசும் உலோகங்களைக் கண்டு பிடித்து உலகை வியப்புள் ஆழ்த்தினார்கள்!

தீவிரக் கதிர்வீசும் ரேடியம், பொலோனியம் கண்டுபிடிப்பு

ஹென்ரி பெக்குவரல் சோதித்த போது, யுரேனிய உலோகம் உமிழ்ந்த புதுவிதக் கதிர்கள், அவர் வைத்த வெள்ளி நாணயத்தைச் சுற்றிலும் கருமை நிறங்காட்டிப் படமெடுத் திருந்தது. 1898 இல் அதைப் படித்தறிந்த மேரி கியூரி தானும் சோதித்த போது, யுரேனியத்தைப் போன்று, தோரியமும் [Thorium] கதிர் வீசுவதைக் கண்டார். இதுவே அவரது முதற் கண்டு பிடிப்பு. யுரேனியத்திலும், தோரியத்திலும் ஒளிச்சக்தி எவ்வாறு எழுகிறது ? எக்ஸ்ரே போன்று புறத் தூண்டுதல் எதுவும் இல்லாது, உலோகங்களில் கதிர்கள் எப்படி எழுகின்றன ?

விந்தையான அந்தக் கதிர்கள் என்னவாக இருக்க முடியும் ? என்று மேரி ஆழ்ந்து சிந்தித்தார். ‘தங்க இதழ் மின்காட்டிக் ‘ [Gold Leaf Electroscope] கருவியில் யுரேனியத்தை வைத்து மேரி சோதித்ததில், இதழ்கள் மின்கொடை [Electrically Charged] இழந்து, கதிர்கள் காற்றை மின்கடத்தி யாக [Conductor] மாற்றுவதைக் கண்டார்.

தெள்ளத் தெளிய அறிந்திட, பிட்ச்பிளன்டி தாதுவதைச் [Pitchblende Ore] சிறிது எடுத்து, அதிலுள்ள யுரேனியம் முழுவதையும் பிரித்தெடுத்து, தங்க இதழ் மின்காட்டியில் மறுபடியும் சோதித்தார். என்ன ஆச்சரியம்! எஞ்சிய பிட்ச்பிளன்டி, எடுத்த யுரேனியத்தை விட அதி விரைவாய் இதழ்களின் மின்கொடையை இழக்கச் செய்தன! அதாவது கரடு முரடான பிட்ச்பிளன்டி வீசும் கதிர்கள், சுத்தமான யுரேனியக் கதிர்களை விட தீவிரம் வாய்ந்தன, என்று அறிந்தார்! அப் புதிருக்கு முடிவான தீர்ப்பு ஒன்றே ஒன்று தான். ஏதோ ஓர் அதிசய, யாரும் அறியாத உலோகம், பிட்ச்பிளன்டி தாதுக் குள்ளே ஒளிந்து கொண்டு, யுரேனியத்தை விட அதி உக்கிரக் கதிர்களை உண்டாக்கி வருகிறது! மேரி வேறு ஒரு யுரேனியத் தாது சால்கொலைட்டைச் [Chalcolite] சோதித்த போது, அதே கதிர் எழுச்சி விளைவுகளைக் கண்டார். அந்த சமயத்தில்தான் கணவரும் மனைவியும் சேர்ந்து உழைத்தார்கள். அடுத்த மூன்று மாதங்கள் மேரியும், பியரியும் இராப் பகலாக உழைத்து, பிட்ச்பிளன்டியை சுத்தீகரித்துச் சோதித்ததில், யுரேனியத்தை விட 400 மடங்கு அதிகக் கதிர்வீசும் முதல் புதிய மூலகம் [Element] ஒன்றைக் கண்டு பிடித்தார்கள். அதற்கு மேரி தன் பிறந்த நாட்டு நினைவாக, ‘பொலோனியம் ‘ [Polonium] என்று பெயரிட்டார். அத்துடன் அவரது ஆராய்ச்சிப் பணி முடியவில்லை.

பொலோனியத்தைப் பிரித்தெடுத்த பின்னும் உக்கிரக் கதிர்வீச்சு, முன்னை விட மிக்க அளவில், அதிசயமாக மிஞ்சிய பிட்ச்பிளன்டியில் வந்து கொண்டிருந்தது! அந்த உலோகத்தின் கதிர் எழுச்சி யுரேனிய இயக்கத்தை விட 900 மடங்கு அதிகமாக இருந்தது. 1898 இல் இம்மியளவு [மில்லியனில் ஓர் பங்கு] உள்ள அந்த அபூர்வ ஒளி உலோகத்தைப் பிரித்து அதற்கு ரேடியம் என்று மேரி பெயரிட்டார்.

 

ஆனால் மிகச்சிறு நுண்ணளவில் பிரிக்கப் பட்ட ரேடியம், பொலோனியம் இரசாயனக் குணங்களை அறியப் போதாது. அவற்றின் அணுப்பளுவைக் [Atomic Mass] கணக்கிடாமல், கண்டு பிடிப்பை அகில நாடுகளுக்கும் வெளிப் படுத்த முடியாது. மில்லியனில் ஒரு துகளாய் இருக்கும் புதிய உலோகத்தைக் கடைந் தெடுத்து, சிறிதளவு திரட்டக் குறைந்தது ஒரு டன் பிட்ச்பிளன்டி தேவைப்படும்! அந்த அளவுத் தாது எங்கே கிடைக்கும் ? கிடைத்தாலும் எங்கே இறக்கி வைப்பது ? பிறகு இரசாயன முறையில் எப்படிச் சுருக்கம் செய்து புதிர்ப் பொருளைப் பிரித்து எடுப்பது ? இந்த இமாலய முயற்சியில் மேரியும், பியரியும் போதிய நிதியின்றி, நிலமின்றி, ஆய்வகம் இன்றி, துணிந்து ஆழம் தெரியாமல் காலை வைத்தார்கள்!

எதிர்பாராத விதமாக, பொஹீமியா சுரங்கத்தில் யுரேனியம் மீட்கப் பட்டு எஞ்சிய பிட்ச்பிளன்டி கழிவுச் சாம்பல் ஒரு டன், அவர்களுக்கு நன்கொடையாகக் கிடைத்தது. ஒருவரும் நாடாத, கூரை ஒழுகும், இடிந்து போன ஒரு மரப் பட்டறையில், 45 மாதங்கள் குளிரில் நடுங்கி, வேனல் காலத்தில் வேர்வை சிந்தி, ஒரு டன் தாதுச் சாம்பலைச் சிறுகச் சிறுக, மேரி இராப் பகலாய்ச் சலித்தும், ரசாயன முறையில் வடி கட்டியும், கடேசியில் அவர்களுக்கு வேண்டிய 0.1 கிராம் தூய ரேடியம் 1902 இல் வெற்றி கரமாய்க் கிடைத்தது! 1903 ஆம் ஆண்டில் ரேடியத்தைப் பற்றியும், கதிரியக்கம் பற்றியும் தயாரித்த அற்புத வெளியீட்டுக்கு, மேரி கியூரி டாக்டர் பட்டம் பெற்றார்.

 

ரேடியத்தின் குணாதிசயங்களும் கதிர்வீச்சின் பயன்பாடுகளும்

ரேடியம் இருட்டில் சுடர் விட்டு மிளிர்ந்தது. பியரி கியூரி ரேடியத்தின் ‘ஒளிர்வு ‘ [Luminosity] ‘காந்தத் தளத்தில் நடப்பு ‘ [Behaviour in Magnetic Field] போன்ற கதிர்களின் பெளதிகக் குணங்களைச் சோதித்தார். வெளிவரும் கதிர்கள் நேர், எதிர், நடு மின்னியல் [Positive, Negative & Neutral Charge] கொண்டிருப்பதைப் பியரி கண்டறிந்தார். மேரி கியூரி அந்தக் கதிர்வீச்சு நிகழ்ச்சிக்குக் ‘கதிரியக்கம் ‘ [Radioactivity] என்று பெயரிட்டார். இரண்டு ஆங்கில விஞ்ஞானிகள் வில்லியம் ராம்சே, பிரடரிக் சாடி [Ramsay & Soddy] 1903 இல் யுரேனியம், ரேடியம் ஒரு வித வாயுவை உண்டாக்குகின்றன எனக் கண்டு, அதற்கு ஹீலியம் [Helium] என்று பெயரிட்டனர். ரேடிய உலோகம் தானே ஹீலிய வாயுவாக மாறி ரசவாதம் [Alchemy] புரிவதாக நினைத்தார்கள்! ஏர்னெஸ்ட் ரூதர்போர்டு [Ernest Rutherford] பின்னால் அவற்றுக்கு ஆல்பா, பீட்டா, காமாக் கதிர்கள் [Alpha, Beta, Gamma Rays] எனப் பெயர் அளித்தார். ஆல்பாத் துகளே ஹீலிய வாயு என்று நிரூபிக்கப் பட்டது.

 

Fig 6 Mother & Daughters

 

வெள்ளிபோல் தோன்றும் ரேடியம் இருளில் சுடர் வீசி ஒளிர்கிறது. யுரேனியத்தை விட இரண்டு மில்லியன் மடங்கு ஒளிச்சுடரை, ரேடியம் வீசுகிறது. கண்ணாடிக் கூஜாவில் வைத்தால் கண்ணாடி வயலட் நிறத்தில் மாறுகிறது. ரேடியம் அருகில் உள்ள எல்லாப் பொருட்களை யும் தாக்கி, அவைகளும் கதிரியக்கம் உண்டாக்கத் தூண்டுகிறது. ஒரு காலத்தில் ரேடியக் கலவைக் கடிகார முட்களிலும், கருவி எண்களின் முகப்பிலும் இருட்டில் தெரியப் பூசப் பட்டது. 1930 இல் ரேடிய மையைத் தொட்டுத் தடவிய தொழிலாளிகள் எல்லோரும் தீவிரக் கதிர்த் தீங்குகளால் [Radiation Injury] தாக்கப் பட்டு அனிமியா [Anemia], எலும்புப் புற்றுநோயில் [Bone Cancer] மாண்டதால் அம்முறை நிரந்தரமாக நிறுத்தப் பட்டது. முதலில் புற்றுநோய் சிகிட்சைக்கு ரேடியத்தின் கதிர்வீச்சு [Radiation Therapy] பயன் படுத்தப் பட்டது. இப்போது அதை விட மலிவாய்க் கிடைக்கும் கோபால்ட்60 [Cobalt60], சீஸியம்137 [Cesium137] போன்ற கதிர் ஏகமூலங்கள் [Radio Isotopes] மருத்துவக் கூடங்களில் உபயோக மாகின்றன. அணு ஆய்வுக் கூடங்களில் ‘ரேடியம் * பெரில்லியம் ‘ [Radium Beryillium] சேர்க்கை, ‘நியூட்ரான் சுரப்பி ‘ [Neutron Source] யாகப் பயன் பட்டு வருகிறது.

 

 

ரேடியம் நீரில் வீரியமாய் இயங்கி ஹைடிரஜன் வாயுவை வெளியாக்குகிறது. வெள்ளி உலோகத்தின் பாதி அளவு திணிவு [Density] கொண்டது, ரேடியம். நடத்தையில் பேரியம் மூலகத்தைப் போன்றது, ரேடியம். பெரில்லியம், மக்னீஸியம், கால்சியம், பேரியம், ஸ்டிரான்சியம், ரேடியம் யாவும் இராசயனக் குணங்கள் ஒன்றிய ஓரின மூலகக் குழுவைச் சேர்ந்தவை. ரேடியத்தின் வீரியக் கதிர்கள் ஈயத்தைத் தவிர மற்றும் எல்லா உலோகங்களையும் ஊடுறுவிப் பாய்கின்றன. ஆதலால் ரேடியக் கதிர்ச் சுரப்பிக் [Radium Source] கலன்களில் கதிர்க் கவசமாக [Shielding] ஈயம் உபயோக மாகிறது.

தீவிர ரேடியத்தின் தேய்வு! தாய்மூலகம்! சேய்மூலகம்! அரை ஆயுள்!

ரேடியம் மற்ற உலோகங்கள் போல் தனியாய் பூமியில் இயற்கையாகக் கிடைப்ப தில்லை. மேலும் யுரேனியம், தோரியம், ரேடியம், பொலோனியம் யாவும் சிறுகச் சிறுகத் தேய்கின்றன! பூமி தாதுக்களில் கிடைக்கும் இயற்கை யுரேனியம் [Natural Uranium] கதிரியக்கத்தால் சிதைந்து [Disintegration], ‘தேய்வு விளைவு ‘ [Decay Product] உலோகமாய்ப் பிட்ச்பிளன்டியில் இருப்பது போல் யுரேனியத்துடன் சேர்ந்தே, ரேடியம் காணப் படுகிறது. அதாவது ‘யுரேனியத் தேய்வுச் சீரணியில் ‘ [Uranium Decay Series] ஆல்பாத் துகள்கள் வெளியேறி, யுரேனியத்தின் பளு குன்றித் தேய்ந்து உண்டாவது, ரேடியம்226. அதுவே மிகுந்த காலம் இருக்கும் ரேடிய ஏகமூலம் [Most Stable Isotpe]. கதிரியக்கத்தால் ரேடியம் தொடர்ந்து சிதைந்து போய், அதன் பளுவும் [Mass] குறைந்து கொண்டு வருகிறது. ரேடியம் போல் சிதையும் அணுக்களின் பளு பாதி பாதியாய் ஆகும் காலம், ஒரு நிலை இலக்கம் [Constant]. அந்தக் கால நிலை இலக்கம், ‘அரை ஆயுள் ‘ [Half Life] எனப் பெயர் பெறும்.

 

மிகுந்த காலம் நிலைக்கும் ரேடியம்226 அரை ஆயுள் 1620 ஆண்டுகள். அது போன்று பொலோனியம்210 இன் அரை ஆயுள் 200 ஆண்டுகள். ரேடியம்226 இன் தாய்மூலகம் [Parent Element] தோரியம்230! ரேடியம்226 இன் சேய்மூலகம் [Daughter Element] ரேடான்222 [Radon222]. பின்னால் செய்த ஆராய்ச்சிகளில் ஆல்பாத் துகள் ஹீலிய அணுவாக அறிய

ப் பட்டது. தாய்மூலகமான யுரேனிய238 அணுச் சிதைவில் பளுவிழந்து, சுய ரசவாதம் புரிந்து, சேய் மூலகங்கள் தோரியம், ரேடியம், ரேடான், பொலோனியம் இவற்றைப் பெற்று, இறுதியில் நிலையான ஈயமாக மாறுகிறது. அந்த உலோகங்கள் அனைத்தும் வெவ்வேறு அரை ஆயுட்கள் கொண்டுள்ளதால், யுரேனியத் தாதுவில் அம் மூலகங்கள் யாவும் ஒரே சமயத்தில் தென்படுகின்றன.

பிட்ச்பிளன்டியில் தானாய்ச் சிதையும் மூலகங்கள் [யுரேனியத் தேய்வுச் சீரணி]

பிட்ச்பிளன்டியில் மேரி கியூரி கண்ட யுரேனியம், தோரியம், ரேடியம், பொலோனிய ஏகமூலங்கள் எல்லாவற்றையும் யுரேனியத் தேய்வுச் சீரணியில் காணலாம். தேய்வு மூலகங்கள் யாவும் முடிவில் ஈயம்206 அணுப்பளு கொண்ட நிலைமூலகம் [Stable Isotope] ஆகின்றன!

 

அணு யுகத்திற்கு அடிகோலிய கியூரி குடும்ப விஞ்ஞானிகள்

ஐரீன் கியூரியும், அவரது கணவர், பெரடெரிக் ஜோலியட்டும் [Irene Curie Joliot & Frederic Joliot] சேர்ந்து, 1932 இல் ஆல்பா துகளைக் கணையாக ஏவி, குறியாக போரான், அலுமினியம், மெக்னீஸியம் போன்ற மூலகங்களை வைத்து அடித்ததில், செயற்கை முறையில் நைட்ரஜன், பாஸ்பரஸ், அலுமினியம் மூலகங்களில் கதிரியக் கத்தை முதன் முதல் உண்டாக்கி விஞ்ஞானத்தில் விந்தைகள் புரிந்தார்கள். செயற்கை கதிரியக்கத்தை [Artificial Radioactivity] மூலகங்களில் [Elements] உண்டாக்கி, அத்தோடு விஞ்ஞான இரசவாதத்தைச் [Alchemy] செய்து காட்டி, இருவரும் 1935 இல் இணைந்து நோபல் பரிசு பெற்றார்கள். 19-20 நூற்றாண்டு விஞ்ஞானச் சரித்திரத்தில் கியூரி குடும்பத்தில் மட்டும் நால்வர் “இயற்கை செயற்கைக் கதிரியக்கத்திற்கு” மூன்று நோபல் பரிசைத் தட்டிக் கொண்டு போய் விட்டார்கள்!

முதல் அணுப் பிளவைத் தூண்ட அடிகோலியது, ஜோலியட்-கியூரி செய்து காட்டிய செயற்கைக் கதிரியக்கமே. ஜோலியட்-கியூரியைப் பின் தொடர்ந்து, இத்தாலிய விஞ்ஞான மேதை, என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi] 1934 இல் நியூட்ரான் கணைகளை யுரேனிய235 உலோகம் மீது ஏவி, முதன் முதல் அணுவைப் பிளந்து [Nuclear Fission] அணுக்கருவினுள் அடங்கிக் கிடக்கும் பிரம்மாண்டமான சக்தியை வெளியேற்ற ஏதுவாயிற்று! ஆனால் ஃபெர்மிக்குத் தான் அணுவை பிளந்தது அப்போது தெரியாமல் போய் விட்டது! 1939 இல் ஜெர்மன் விஞ்ஞானிகள், ஆட்டோ ஹான், ஃபிரிஷ் ஸ்ட்ராஸ்மனும் நியூட்ரான் கணைகளை ஏவி யுரேனிய அணுவைப் பிளந்து, உலகுக்கு முதலில் அறிவித்தார்கள். எக்ஸ்ரேயில் ஆரம்பித்த ‘கதிர் யுகம் ‘ கியூரி தம்பதிகள் ரேடியத்தைக் கண்டு பிடிக்க வைத்து, கதிரியக்கத்தை விளக்கச் செய்து 50 ஆண்டுகளுக்குள் உலகை அணு யுகத்திற்குத் திருப்பியது, இருபதாம் நூற்றாண்டில் ஒரு மாபெரும் நிகழ்ச்சி!

 

ரேடியத்தாலே புகழடைந்து, ரேடியத்தாலே மரணம்!

வளர்த்த கடா மார்பிலே பாயும், என்னும் பழமொழியின் கூற்றுப்படி, கியூரி தம்பதிகள் இருவரும், தாங்கள் இராப் பகலாய் உழைத்துக் கண்டெடுத்த ரேடியக் கதிர்களின் கூரிய தீ அம்புகளுக்கு இரையாகினர்! ரேடியத்தை அடிக்கடிக் கையாண்ட பியரி கியூரியின் கைகளைத் தீக்கதிர்கள் சுட்டுப் புண்ணாக்கித் தோலை உரித்து விட்டன! எதிர்பாராத விதமாக 1906 ஏப்ரல் 19 இல் தனது 46 ஆம் வயதில் வீதியில் நடந்து செல்லும் போது, திடீரென அவர் மேல் குதிரை வண்டி ஏறி, விபத்தில் மாண்டார் பியரி. அந்தக் கோர மரணச் சம்பவம் மேரியை மிகவும் பாதித்து விட்டது. பத்தாண்டு காலம் மேரியுடன் இணைந்து ஆராய்ச்சிகள் செய்து ரேடியம், பொலோனியம் இரண்டையும் கண்டு பிடித்து, இணையாக நோபல் பரிசு பெற்ற ஒப்பில்லா விஞ்ஞான மேதை! கணவர் இறந்தபின் தனியாக ஆறு வயது ஐரினையும், இரண்டு வயது ஈவையும் வளர்த்து, எஞ்சிய நேரத்தை விஞ்ஞான ஆய்வுக்கு அர்ப்பணித்து, மேரி கியூரி மேலும் 28 ஆண்டுகள் வாழ்ந்து, மற்றும் சில அரிய ஆக்கப் பணிகளைச் செய்து முடித்தார்.

 

முதல் உலக மகா யுத்தத்தின் போது [1914-1918] மேரியும், ஐரீனும் இணைந்து எக்ஸ்ரே கதிர்ப்பட வரைவைச் [X-rays Radiography] சீர்ப்படுத்தி, காயம் அடைந்தோர்க்கு நோய் ஆய்வுக் கருவியாய் [Medical Diagnosis] ஏற்பாடு செய்தார்கள். 1921 இல் தன் புதல்வியரை அழைத்துக் கொண்டு, மேரி கியூரி அமெரிக்காவுக்குச் சென்ற போது, ஜனாதிபதி வாரன் ஹார்டிங் [Warren Harding] அவரை வரவேற்று, உபசரித்து அமெரிக்க மாதர் நிதி திரட்டி வாங்கிய ஒரு கிராம் ரேடியத்தைப் பரிசாக அளித்தார். வார்சாவில் 1932 இல் ரேடிய ஆய்வகத்தை நிறுவி, தன் தமக்கை பிரானியாவை ஆணையாளராய் [Director] நியமித்தார். இறுதியில் பரிதாபகரமாக ரேடியக் கதிர்களுக்குப் பலியாகி, லுக்கிமியாவில் [Leukemia] நோய் வாய்ப்பட்டு 1934 ஜூலை 4 ஆம் தேதி விண்ணுலகு எய்தினார்.

 

Fig 13 Marie & Einstein

ரேடியம் கண்டு பிடிக்கவே பிறந்து, ரேடியக் கதிரியக்கம் தாக்கியே இறந்த மாதருள் மாணிக்கம், மேரி கியூரிக்கு இரங்கல் அஞ்சலி செய்த, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் கூறியது: “வைர நெஞ்சம், ஒருநோக்குக் குறிக்கோள், மெய்வருத்தம் மீறிய விடாமுயற்சி, அழுத்தமான கருத்து, அசைக்க முடியாத தீர்ப்பு இவை யாவும் ஒருங்கிணைந்த தனித்துவ மாது, மேரி கியூரி! அவரது வாழ்வின் அசுர விஞ்ஞான சாதனை, கதிரியக்க மூலகங்களின் இருப்பை நிரூபித்து, அவற்றைப் பிரித்துக் காட்டியது! விஞ்ஞான ஆராய்ச்சி வரலாறு இதுவரைக் கண்டறியாத அச்சமற்ற யுக்தியோடு, கடுமையான இடையூறுகள் தடுப்பினும், அவற்றைத் தாண்டிச் செய்த ஓர் அரிய சாதனை!”

 

*******************************

Information :

1. http://nobelprize.org/nobel_prizes/physics/laureates/1903/marie-curie-bio.html

2.  http://en.wikipedia.org/wiki/Marie_Curie

3.  http://en.wikipedia.org/wiki/Pierre_Curie

4.  http://www.ocrwm.doe.gov/curriculum/unit2/lesson2reading.shtml

5.  http://en.wikipedia.org/wiki/Marie_Curie  [November 16, 2012]

6. The Biographical Dictionary of Scientists , Chemists By : David Abbott, Ph D. [1984]

7.  http://en.wikipedia.org/wiki/Marie_Curie  [March 26, 2013]

8.  http://www.biography.com/people/marie-curie-9263538

+++++++++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com)   [ March 27, 2013]  (R-3)

செயற்கைக் கதிரியக்கம் ஆக்கிய ஐரீன் & ஜோலியட் கியூரி

(1897-1956)

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear) Canada

 

புகழ் பெற்ற மேரி கியூரியின் ஒப்பற்ற புதல்வி

1903 இல் விஞ்ஞான மேதைகள் தாய் மேரி கியூரி, தந்தையார் பியர் கியூரி இருவரும் ரேடியத்தில் இயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டு பிடித்ததற்கு, நோபெல் பரிசை பிரென்ச் விஞ்ஞானி ஹென்ரி பெக்குவரலுடன் பகிர்ந்து கொண்டனர்! அப்போது அவர்களின் புதல்வி ஐரீன் கியூரி ஆறு வயதுச் சிறுமியாக, அம்மாவின் அருகில் அமர்ந்திருந்தாள்! முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு பின்பு 1935 ஆம் ஆண்டு அதே இடத்தில் ஐரீன் கியூரி, அவரது கணவர் பிரடெரிக் ஜோலியட் இருவருக்கும் செயற்கைக் கதிரியக்கம் ஆக்கியதற்கு நோபெல் பரிசு அளிக்கப் பட்டது. அப்போது ஐரீன் அருகில் அவரது புகழ் பெற்ற தாய் மேரி கியூரி அமர்ந்திருக்க வில்லை! அவர் ரேடியத்தின் வீரியக் கதிரியக்கம் பல்லாண்டுகள் தாக்கி ஓராண்டுக்கு முன் இரத்த நோயில் இறந்து போனார்! பெளதிக விஞ்ஞானத்திற்கு நோபெல் பரிசு பெற்ற முதற் பெண்மணி, மேரி கியூரி! இரண்டாவது பெண்மணி புதல்வி ஐரீன் கியூரி! தாய் உயிரோடு இருந்திருந்தால், நோபெல் பரிசு கிடைத்த புதல்வியைப் பெற்றதற்கு எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார் ?

சில விஞ்ஞானிகள் வெறும் தத்துவ வாதிகள்! சில விஞ்ஞானிகள் சோதனைகளைத் திறம்படச் செய்யும் திறமைசாலிகள்! சில விஞ்ஞானிகள் மேம்பட இயக்கும் நிர்வாகிகள்! ஐரீன் ஜோலியட் கியூரி மேற்கூறிய முத்திறமும் படைத்தவர்! ஐரீன் பாரிஸ் கியூரி ஆராய்ச்சிக் கூடத்தின் ஆணையாளர். அங்கே தனியாக ஐரீன் கணவருடன் ஆய்வுகள் செய்தும் வந்தார்! பிரென்ச் அணுசக்திப் பேரவையில் ஓர் உறுப்பினர். அத்துடன் பாரிஸ் பல்கலைக் கழகத்தின் ரசாயனத் துறைப் பேராசிரியர்! ஆய்வுக் கூடத்தில் ஐரீன் ஓர் யதேட்சை அதிகாரி! எதுவும் துப்புரவாகத், தூய்மையாகத், துல்லியதாக [Meticulous] இருக்க வேண்டுமென அவரது பதவி அதிகாரத்தைக் காட்டுவார்!

கதிரியக்கம் கண்டு பிடித்து, உலகப் பெயர் பெற்ற மேரி கியூரி, பியரிக் கியூரி ஆகிய விஞ்ஞானத் தம்பதிகளுக்குப் பிறந்த மூத்த புதல்வி ஐரீன் கியூரி! இதுவரை யாரும் அடையாத இரண்டு நோபெல் பரிசுகளைப் பெற்று, நவீன விஞ்ஞானத்துக்கு அடிகோலிய மேரி கியூரியின் அருமைப் புதல்வி, ஐரீன் கியூரி! ‘தாயைப் போல பிள்ளை’ என்ற முதுமொழியை மெய்ப்பித்து, முதன் முதல் செயற்கைக் கதிரியக்கத்தைச் [Artificial Radioactivity] செய்து காட்டி தாயைப் போல் தானும் தன் கணவருடன் 1935 இல் நோபெல் பரிசு பெற்றவர்! மூலக மாற்றத்தைப் [Transmutation of Elements] புரிந்து ஏராளமான கதிரியக்க ஏகமூலங்களைப் படைத்து [Radioactive Isotopes], மூலகங்களின் அணி அட்டவணையைப் [Periodic Table of Elements] பெரிது படுத்திய விஞ்ஞானப் பெண் மேதை, ஐரீன் ஜோலியட் கியூரி!

தாய் மேரி கியூரியைத் தெரிந்த அளவுக்கு, தாயைப் போல் வாழ்வு முழுவதையும் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கே அர்ப்பபணித்த ஐரீன் கியூரியைப் பற்றி, பலர் அறிய மாட்டார்கள்! புகழ் பெற்ற விஞ்ஞானப் பெற்றோர்களால் புதல்வி ஐரீன் மறைக்கப் பட்டாள்! அவளுடன் நோபெல் பரிசைப் பகிர்ந்து கொண்ட அவளது விஞ்ஞானக் கணவன், பிரடெரிக் ஜோலியட்டால் அவள் பெயர் மறைந்து போனது! விஞ்ஞானி யில்லாத அவரது தங்கை ஈவ் கியூரி 1937 இல் தாயின் சரிதையைப் புத்தகமாக எழுதி, பலரைக் கவர்ந்ததால் ஐரீன் புகழ் சிறிது மறைவு பட்டுப் போனது! கதிரியக்கத்தை விளக்கி, நவீன விஞ்ஞானத்திற்கு பாதை வகுத்த மேரி கியூரியின் கால் தடத்தைப் பின்பற்றிச், செயற்கைக் கதிரியக்கத்திற்கு வழி வகுத்துப், புதிய கதிரியக்க மூலகங்களை [Radioactive Elements] உண்டாக்கி, அணுவைப் பிளக்க அடிகோலிய ஐரீன் கியூரிக்கு நோபெல் பரிசு கிடைத்தாலும், மேரி கியூரியின் புகழ் பன்மடங்கு பெருகியதே தவிர, புதல்வியின் புகழ் உலகில் மறைந்தே கிடந்தது!

ஐரீன் பிரடெரிக் தம்பதிகளின் விஞ்ஞான வாழ்க்கை வரலாறு

1897 செப்டம்பர் 12 ஆம் தேதி பாரிஸில் மேரி கியூரி, பியரி கியூரி விஞ்ஞானத் தம்பதிகளுக்கு ஐரீன் மூத்த புதல்வியாய்ப் பிறந்தார். இரண்டாம் புதல்வி பெயர் ஈவ் கியூரி. தாய்மைப் பணிகளை ஒருபுறம் கவனித்துக் கொண்டே, மறுபுறம் விஞ்ஞான ஆராய்ச்சிகளைக் கைவிடாது கண்காணித்து வந்தார், தாய் மேரி கியூரி. மேரியின் முக்கியப் பணி புதல்விகள் இருவருக்கும் உயர்ந்த கல்வியைப் புகட்ட ஆவன செய்வது.

சிறிய வயதிலிருந்தே, ஐரீன் எதிலும் மிகத் திறமைசாலியாக மிளிர்ந்தாள்! கணிதத்தில் அவள் மித மிஞ்சிய சாமர்த்தியசாலி! பத்து வயதிலேயே ஐரீன் கணக்கில் கொண்டிருந்த வலிமை பளிச்செனத் தெரிந்தது! வல்லுநர்களின் பிள்ளைகள் பத்துப் பேருடன் ஒருத்தியாக, தனியார் நடத்தும் சிறப்புப் பள்ளியில் ஐரீன் படிக்கத் தொடங்கினாள். அப்பள்ளியின் ஆசிரியர்கள்: மேரி கியூரி, பெளதிக விஞ்ஞானி பால் லாங்கிவின் [Paul Langevin], ஜீன் பெர்ரின் [Jean Perrin] ஆகியோர்.

செவைன் கல்லூரியில் [College of Sevigne] உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து விட்டு, ஐரீன் சார்போன் பல்கலைக் கழகத்தில் [Sorbonne, Now University of Paris] 1914 இல் கணிதமும், பெளதிகமும் பயின்றார். ஐரோப்பாவில் முதல் உலகப் போர் 1916 இல் துவங்கவே, ஐரீன் கல்லூரிப் படிப்புத் தடையுற்றது! அப்போது ஐரீன் தாய் மேரி கியூரியுடன் சேர்ந்து, போரில் காயப் பட்டவர்களுக்குப் பணி செய்ய, எக்ஸ்ரே சாதன வாகனத்தில் பயணம் செய்து முதல் உதவி செய்தாள். மேலும் ஐரீன் அப்பணியைப் பிரான்ஸ், பெல்ஜியம் ராணுவ மருத்துவக் கூடங்களில் நீடித்து, எக்ஸ்ரே ஆய்வுச் சாதனங்களை நிறுவ ஏற்பாடு செய்தாள். அவ்வரிய சமூக சேவை யானது பாராட்டப் பட்டு, ஐரீன் ராணுவப் பதக்கத்தைப் பெற்றாள்.

பிரடெரிக் ஜோலியட் 1900 ஆம் ஆண்டில் பாரிஸில் பிறந்தவர். சிறு வயதில் விளையாட்டுப் பிள்ளையாய்த் திரிந்து குடும்பத்தின் சொத்து, சுகங்கள் கரைந்து போகவே, பிரடெரிக் படிப்பில் அக்கறை காட்ட வேண்டிய தாயிற்று! பெளதிகத் தொழிற்துறைக் கல்லூரியில் பொறியியல் பயின்று, பட்டம் பெற்று முதல்வராகத் தேர்ச்சி அடைந்தார். ராணுவச் சேவை செய்த பிறகு, ஆராய்ச்சி செய்ய அவருக்கு உபகார நிதி வெகுமதி யாகக் கிடைத்தது.

1918 இல் 21 வயதாகும் போது, ஐரீன் பாரிஸ் பல்கலைக் கழகத்தின் கியூரி ரேடிய ஆய்வுக் கூடத்தில் [Curie Radium Institute], தாயின் துணையாளி ஆகப் பணிபுரியச் சென்றாள். அங்கே நடக்கும் ஆராய்ச்சியில் பங்கெடுத்து ‘போலோனியத்தின் ஆல்ஃபாக் கதிர்கள் ‘ [Alpha Rays of Polonium] என்னும் விஞ்ஞானக் கோட்பாடை எழுதி, 1925 இல் டாக்டர் [Doctor of Science] பட்டத்தைப் பெற்றார். அதே ஆண்டு பெளதிக விஞ்ஞானி பால் லாங்ஜிவின் சிபாரிசின் பேரில் மேரி கியூரியிடம், உதவி விஞ்ஞானியாய் ஆராய்ச்சி புரிய வந்தார், பிரடெரிக் ஜோலியட் [Frederick Joliot]. ஆய்வுக் கூடத்தில் கதிரியக்கச் சூழ்நிலையில் பணி செய்ய, அவருக்கு முன்னறிவிப்பாய் சோதன முறைகளைச் சொல்லிக் கொடுக்கும் முதல் வேலை ஐரீனுக்குத் தரப்பட்டது! ஐரீன், பிரடெரிக் இருவரும் விஞ்ஞானம், கலைத்துவம், மனிதத்துவம், விளையாட்டு, பொழுது போக்கு ஆகியவற்றில் ஒரே மாதிரி ஆர்வத்தைக் கொண்டிருந்ததால், அவர்கள் காதல் வயப்பட்டு 1926 அக்டோபர் 28 இல் மணம் புரிந்து, தாய் தந்தையரைப் போன்று விஞ்ஞானத் தம்பதிகள் ஆயினர்! 1928 முதல் ஐரீன், பிரடெரிக் இருவரும் ஒன்றாய் இணைந்து நீண்ட நேரம் விஞ்ஞான ஆராய்ச்சிகள் புரிந்தனர்! 1930 இல் பிரடெரிக் ஜோலியட் எழுதியக் கதிர் மூலகங்களின் மின்னியல் ரசாயனக் [Electrochemistry of Radio Elements] கோட்பாடுக்கு டாக்டர் [Doctor of Science] பட்டத்தைப் பெற்றார். ஐரீன் பிரடெரிக் தம்பதிகளுக்கு ஹெலென் [1927] என்ற புதல்வியும், பியர் [1932] என்ற புதல்வனும் பிறந்தனர்.

ஐரீன், பிரடெரிக் தம்பதிகள் ஆக்கிய செயற்கை மூலகங்கள்

பிரென்ச் விஞ்ஞானி ஹென்ரி பெக்குவரல் 1896 இல் யுரேனிய உப்பு எக்ஸ்ரே போல் கதிர்வீசுவதை முதலில் ஆராய்ச்சியின் போது கண்டார். அதைத் தொடர்ந்து மற்ற தாதுக்களை ஆய்வு செய்த மேரி, பியர் கியூரித் தம்பதிகள் 1898 இல் ஆல்ஃபாத் துகள், பீட்டாத் துகள், காமாக் கதிர்கள் வீசும் [Alpha Particle, Beta Particle, Gamma Rays] ரேடியம், போலோனியம் ஆகிய இரண்டு கதிரியக்க மூலகங்களை முதலில் கண்டு பிடித்தார்கள். ஆல்ஃபாத் துகள் ஓர் ஹீலிய அணு. பீட்டாத் துகள் எதிர்மின் கொடை [Negative Charge] உள்ள ஓர் எலக்டிரான். காமாக் கதிர்களுக்கு எக்ஸ்ரே [X-Rays] போன்று எந்த வித மின்கொடையும் கிடையாது. அடுத்து 1932 இல் பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் சாட்விக் [James Chadwick] அணுக்கருவுள் இருக்கும் நியூட்ரான் என்னும் புதிய துகளைக் கண்டு பிடித்தார். நியூட்ரான் துகளுக்கும் எந்த வித மின் கொடையும் இல்லை! அதே ஆண்டில் அமெரிக்க விஞ்ஞானி கார்ல் டேவிட் ஆன்டர்ஸன் நேர்மின் கொடை யுடைய பாஸிட்ரான் துகளைக் [Positron] கண்டு பிடித்தார். அதன் இருக்கையை ஐரீன் பிரடெரிக் தம்பதிகளும் சோதனை மூலம் நிரூபித்து உறுதிப் படுத்தினர்.

இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் காவென்டிஷ் ஆய்வுக் கூடத்தில் அணுவியல் மேதை ஏர்னஸ்ட் ரூதர்ஃபோர்டு [Ernest Rutherford (1871-1937)] மூலக மாற்றம் புரிய ஆராய்ச்சிகள் செய்தார். அப்பணியில் அவருக்கு 1929 இல் உதவி செய்த ரஷ்ய விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் [George Gamow], விரைவாக்கிய புரோட்டான் கணைகளைப் [Accelerated Protons] பயன்படுத்தி அணுவைப் பிளக்க எவ்வளவு சக்தி தேவைப்படும் என்று கணித்தார். அப்போதுதான் முதன் முதலாக காமாவ் மூலகங்களின் ரசவாதம் அல்லது மூலக மாற்ற முறைகளுக்கு [Artificial Transmutation of Elements] அடிப்படைக் கோட்பாடுகளை அமைத்தார். 1932 இல் அவற்றைப் பயன்படுத்திப் பின்னால் ஜான் காக்கிராஃப்ட் [John Cockcroft (1897-1967)] தனது நேரடி விரைவாக்கியில் [Linear Accelerator], போரான், லிதியம் [Boron & Lithium] ஆகிய இரண்டையும் புரோட்டான் கணைகளால் தாக்கி ஹீலியத்தை வெற்றிகரமாய் உண்டாக்கினார்! அதுவே முதன் முதல் செய்யப் பட்ட மூலக மாற்றம் அல்லது ரசவாதம் [Artificial Transmutation].

அணுவின் மையமான அணுக்கருவில் புரோட்டான், நியூட்ரான் உள்ளன. சூரியனை மையமாகக் கொண்டு, அண்ட கோளங்கள் சுற்றி வருவதைப் போல், அணுக்கரு நடுவை எலக்டிரான்கள் சுழல்வீதியில் [Orbits] சுற்றி வருகின்றன. புரோட்டான் நேர்மின் கொடையும் [Positive Charge], எலக்டிரான் எதிர்மின் கொடையும் [Negative Charge] கொண்டவை.

நியூட்ரானுக்கு எவ்வித மின் கொடையும் [Neutral Charge] இல்லை! ஓர் மூலகத்தின் புரோட்டான் எண்ணிக்கை அணு எண் [Atomic Number] என்றும், புரோட்டான் நியூட்ரான் ஆகியவற்றின் கூட்டு எண்ணிக்கை நிறை எண் அல்லது பளு எண் [Mass Numer] என்றும் குறிப்பிடப் படுகின்றன. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட மூலகங்களின் அணுக்கருவில் புரோட்டான்களின் எண்ணிக்கை ஒன்றாக இருந்து, நியூட்ரான்களின் எண்ணிக்கை வேறுபட்டிருந்தால், அவற்றை ஏகமூலங்கள் [Isotopes] என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது ஒரே அணு எண்ணைக் கொண்டு வேறுபட்ட நிறை எண்களைப் பெற்ற மூலகங்களை நிலையான மூலகத்தின் ஏகமூலங்கள் என்று சொல்கிறார்கள்.

ஐரீன் கியூரியும் பிரடெரிக் ஜோலியட்டும் மூலக மாற்றத்தில் [Transmutation of Elements] புரிந்த அரும் பெரும் விஞ்ஞானச் சாதனைகள் என்ன ? அவர்கள் இருவரும் மேரி கியூரி, பியர் கியூரித் தம்பதிகள் போல் நோபெல் பரிசு பெறும் அளவுக்கு, ரசாயனத்தில் ஆக்கிய தென்ன ? ஐரீனுடைய பெற்றோர்கள் தனித்தெடுத்த ரேடியம், போலோனியம் என்னும் இரண்டு சுயமாய்த் தேயும் மூலகங்களில் [Spontaneous Decay of Elements], ரேடியத்தை விடப் போலோனியம் பதினாறு மடங்கு மித மிஞ்சி நிலையற்று [Highly Unstable], அதன் அணுக்கரு வேகமாய்த் தேய்வடைகிறது! அதாவது ஒரே அளவு எடை எடுத்துக் கொண்டால் போலோனியம், ரேடியத்தை விட அதி வேக முள்ள ஆல்ஃபாத் துகளை அதிக எண்ணிக்கையில் வெளியாக்குகிறது! ஆல்ஃபாத் துகள் என்பது ஹீலிய அணுவைத் தவிர வேறு ஒன்றும் இல்லை!

1934 ஆம் ஆண்டில் ஐரீன், பிரடெரிக் இருவரும் செய்து காட்டிய ‘செயற்கைக் கதிரியக்கம் ‘ [Artificial Radioactivity] என்பது என்ன ? தம்பதிகள் தமது ஆராய்ச்சியின் போது போரான், அலுமினியம், மக்னீஷியம் ஆகியவற்றைத் தனித் தனியாக [Boron, Aluminium, Magnesium], அதி வேக ஆல்ஃபாத் துகளைக் கணையாகக் கொண்டு தாக்கிய போது இதுவரை யாரும் அறியாத விந்தை விளைவுகளைக் கண்டார்கள்! முதல் இயக்க முடிவில் கதிர்வீசும் புதிதான நைட்ரஜன் மூலகம் [Radioactive Nitrogen] உண்டானது! அதாவது போரான் மூலகம் நைட்ரஜனாக மாறி விட்டது! இது ஓர் மூலக மாற்றம்[Transmutation of Element], அல்லது ரசவாதம் [Alchemy] என்று சொல்லப் படுகிறது. இந்த அணுக்கரு இயக்கத்தின் சிறப்பு என்ன வென்றால், நைட்ரஜன் கதிரியக்கம் கொண்டிருந்தது! ரேடியம், போலோனியம் போல் அணுக்கருச் சிதைவு அடைந்து தேய்ந்தது! அதன் அரை ஆயுள் [Half Life], அதாவது பாதி நிறை யாகும் காலம் சுமார் 10 நிமிடம்! மேலும் அக்கதிரியக்கம் செயற்கை முறையில் ஆக்கப் பட்டது! முதல் இயக்க விளைவில் உண்டான நைட்ரஜன்13, நிலையற்றுத் தேய்ந்து கதிர் வீசியது! நிலையற்ற நைட்ரஜன்13 நிலையான நைட்ரஜன்14 மூலகத்தின் ஓர் ஏகமூலம் [Unstable Nitrogen13 is an isotope of the stable Nitrogen14].

[போரான்10] + [ஹீலியம்4] –>[நைட்ரஜன்13]* + [நியூட்ரான்1]

[அலுமினியம்27] + [ஹீலியம்4] –>[ஃபாஸ்ஃபரஸ்30]* + [நியூட்ரான்1]

[மக்னீஷியம்24] + [ஹீலியம்4] –>[சிலிகான்27]* + [நியூட்ரான்1]

[எண்கள் நிறை எண்ணைக் (Mass Number) குறிப்பன. (*) குறியிட்டவை கதிர் வீசும் மூலகங்கள்]

அடுத்து அலுமினியம், மக்னீஷியம் ஆகிய உலோகங்களைத் தனியே வைத்து ஆல்ஃபா கணைகளைக் கொண்டு தாக்கியதில், அவையும் மாற்றப்பட்டு புதிய செயற்கை மூலகங்கள் அணுக்கரு இயக்கங்களில் விளைந்தன! அவை முறையே ஃபாஸ்ஃபரஸ்31, சிலிகான்28 நிலையான மூலகங்களின் ஏகமூலங்கள். அத்துடன் ஃபாஸ்ஃபரஸ்30, சிலிகான்27 ஆகிய இரண்டு புது மூலகங்களும் கதிரியக்கம் உள்ளவை! ஜோலியட் தம்பதிகள் ஆக்கிய அவ்வரிய மூலக மாற்றங்களைப் பின் தொடர்ந்து, சுமார் 700 மேற்பட்ட கதிர் ஏகமூலகங்கள் [Radio Isotopes] உண்டாக்கப் பட்டு, மூலகங்களின் அணி அட்டவணையில் [Periodic Table of Elements] பின்னால் சேர்க்கப் பட்டன!

செயற்கை மூலக மாற்றக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவம்

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரசவாதிகள் [Alchemists] தாமிரம், பித்தளை போன்ற அடித்தள உலோகங்களை மாய மந்திரம், போலி ரசாயன முறைகளைக் கையாண்டு, அவற்றைத் தங்கமாக மாற்றப் பல முறை முயற்சி செய்தார்கள்! ஐரீன், பிரடெரிக் பழைய ரசவாத முயற்சிகளுக்குப் புத்துயிர் அளித்து, செயற்கை விஞ்ஞான முறையில், மூலக மாற்றத்தைச் [Transmutation of Elements] செய்து காட்டினர்! ரேடியம், போலோனியம், யுரேனியம், தோரியம் போன்ற கன உலோகங்கள் இயற்கையில் தாமாகவே சிதைந்து தேய்ந்து கதிர்களைக் கக்கி, வேறுவித உலோகங்களை விளைவித்தன! அந்த அணுக்கரு இயக்கங்களை விஞ்ஞான மேதைகள் பெக்குவரல், மேரி கியூரி, பியர் கியூரி ஆகியோர் ஆராய்ச்சியின் போது கண்டு பிடித்தனர்! இப்போது ஐரீன், பிரடெரிக் இருவரும் செயற்கை முறையிலும் புது மூலகத்தை, கதிர்வீசும் மூலகத்தை உண்டாக்கலாம் என்று நிரூபித்துக் காட்டினர்! அவ்வரியச் செயற்கைக் கதிரியக்கத்திற்கு ரசாயன விஞ்ஞானத்தின் நோபெல் பரிசையும் 1935 இல் பெற்றார்கள்.

Carbon Isotopes

அடுத்து நேர்மின் கொடையுள்ள புரோட்டான்களை [Positively Charged Protons] மின்காந்தத் தளங்களில் கணைகளாய்த் துகள் விரைவாக்கிகளில் [Particle Accelerators] வேகப் படுத்தி, குறியாக மற்ற உலோகங்களை வைத்துப் புது மூலகங்களை விஞ்ஞானிகள் உண்டாக்க ஆரம்பித்தனர். அப்பணியில் கணைகளை வேகப் படுத்த ‘நேரடி விரைவாக்கிகள் ‘ [Linear Accelerators], ‘சுழல் விரைவாக்கிகள் ‘ [Cyclotrons] என்னும் பூத மின் யந்திரங்கள் அமைக்கப் பட்டன. உதாரணமாக கீழே காணப்படும், விரைவாக்கிய புரோட்டான் லிதிய மூலகத்தைத் தாக்கும் போது, அணுக்கரு இயக்கத்தில் புதிய மூலகம் பெரிலியம் விளைகிறது.

புரோட்டான் கணை, லிதியம் குறி மூலக அணுக்கரு இயக்கம்:-

லிதியம்7 + புரோட்டான்1 –>பெரிலியம்7 + நியூட்ரான்1

ஐரீன், பிரடெரிக் தம்பதிகளின் படைப்பான ‘செயற்கைக் கதிரியக்கம் ‘ நவீன அணுக்கரு விஞ்ஞானத்தை [Modern Nuclear Physics] வளர்த்தது! மேலும் மேலும் விருத்தி செய்தது! முதன் முதல் அணுவைப் பிளக்க வழி வகுத்து, அதன் உள்ளிருந்த அளவற்ற சக்தியை வெளியேற்றத் தூண்டியது! மனித இனத்தை அழிக்க உலகில் ராட்சத அணு ஆயுதங்கள் உண்டாக்கப் பாதை இட்டது! ஆக்க வினையாய் மின்சக்தி நிலையங்கள் தோன்ற உதவியது! புதுப்புது மூலகங்கள் ஆக்கிட வழி திறந்தது! விஞ்ஞானிகள் ஆய்வு அணு உலைகளை [Atomic Reactors] அமைத்து, மின்கொடை யற்ற நியூட்ரான் [Neutrons] கணைகளைப் பயன்படுத்தி யுரேனியம், தோரியம் போன்ற கன உலோகங்களைத் தாக்கும்படி செய்து ஆராய்ச்சிகள் செய்தனர்! நீர் அல்லது கனநீர் மிதவாக்கித் திரவம் [Heavy Water Moderator], அல்லது கரித்திரள் மிதவாக்கி [Graphite Moderator] ஆகியவற்றால் நியூட்ரான்கள் வேகத்தைக் கட்டுப் படுத்தி அணு உலைகளில் ஆய்வுகள் செய்தனர். மித வேக நியூட்ரான்கள், சிலவற்றை யுரேனியம் [Uranium238] விழுங்கியது! சில மித வேக நியூட்ரான்கள் யுரேனிய அணுவை இரு கூறாய்ப் பிளந்தன! அதி வேக நியூட்ரன்கள் சில சமயம் யுரேனியம்238 தாக்கிப் புது மூலகம் புளுடோனியத்தை [Plutonium239] முதன் முதலாகப் படைத்தன! பிளவுப் பிண்டமான [Fissile Material] புளுடோனியம்239 அணு ஆயுதங்களுக்குப் பயன் பட்டது!

மித வேக நியூட்ரான், யுரேனியம்235 அணுப்பிளவு இயக்கம்:-

யுரேனியம்235 + நியூட்ரான்1 –>யுரேனியம்236* (தேய்ந்து) –>

–>மாலிப்டினம்95* + லாந்தனம்139* + 2 புது நியூட்ரான்1 + 200 MeV சக்தி

மாலிப்டினம், லாந்தனம் இரு பிளவான சிறு துணுக்குகள்!

ஒவ்வோர் அணுப்பிளவிலும் புது நியூட்ரான்கள் இரண்டு விளையும்!

அளவற்ற சக்தி அணு ஆயுதத்தில் வெடிக்கிறது! அல்லது

மின்சக்தி யாக மாற்றி மின்சாரம் பரிமாறுகிறது!

அதிவேக நியூட்ரான், யுரேனியம்238 அணுக்கரு இயக்கம்:-

புது மூலகம் புளுடோனியம்239 விளைவு.

யுரேனியம்238 + நியூட்ரான்1 –>யுரேனியம்239*

யுரேனியம்239* (தேய்ந்து) –>நெப்டினியம்239* + பீட்டாத் துகள்

நெப்டினியம்239* (தேய்ந்து) –>புளுடோனியம்239* + பீட்டாத் துகள்

[(*) குறியிட்டவை கதிர் வீசும் மூலகங்கள் (Radioactive Elements)]

பிரான்ஸில் முதல் அணுக்கருத் தொடரியக்கம் ஆக்கிய தம்பதிகள்

1934 ஆம் ஆண்டு முதன் முதலில் இத்தாலிய விஞ்ஞான மேதை என்ரிகோ ஃபெர்மி நியூட்ரான் கணைகளால் யுரேனிய அணுவைத் தாக்கி, அணுக்கருவை இருகூறாகப் பிளந்தார்! ஆனால் அவ்வரிய விஞ்ஞான சாதனை அவருக்கு அப்போது தெரியாமலே போயிற்று! அணுக்கருவைப் பிளக்க முதலில் ஆலோசனை கூறியவர் ஐரீன் கியூரி! அதன் விளைவைப் புரிந்து கொண்டு ‘அணுப்பிளவு ‘ என்று விளக்கம் தந்த பெண் மேதை, ஆஸ்டிரியப் பெண் விஞ்ஞானி லிஸ் மெயிட்னர்! ஜெர்மன் விஞ்ஞானி ஆட்டோ ஹானிடம் [Otto Hahn] முப்பது ஆண்டுகள் துணையாளி ஆகப் பணி ஆற்றியவர், லிஸ் மெயிட்னர்!

ஐரீன் கியூரி செயற்கைக் கதிர் ஊட்டம் [Irradiation] சம்பந்தமாக உரையாற்றிய சமயம், நியூட்ரான்களை கணையாய் ஏவி, யுரேனிய அணுவைப் பிளக்க முடியும் என்று கூறியதைப் பின்பற்றி, ஜெர்மனியில் ஆட்டோ ஹான், அவரது தோழர் ஸ்டிராஸ்மன் இருவரும் 1938 இல் யுரேனிய நியூட்ரான் அணுக்கரு இயக்கத்தை உண்டாக்கினார்கள்! ஆனால் அந்த இயக்க விளைவில் உண்டான சிறு கதிர்த் துணுக்குகளைக் கண்டு வியந்ததைத் தவிர, அதன் முக்கியத்துவத்தை அவர்களால் விளக்க முடியவில்லை!

அந்த ஆண்டு செப்டம்பரில் ஐரீன் கியூரியும், அவரது துணையாளி ஸாவிட்ச்சும் [P. Savitch] ஆட்டோ ஹான், ஸ்டிராஸ்மன் செய்த யுரேனிய நியூட்ரான் அணுக்கரு இயக்கத்தைத் திருப்பிச் செய்தார்கள். அப்போது அணுப்பிளவின் ஒரு சிறு துணுக்கான லாந்தனம் [Lanthanam] மூலகத்தின் கதிர்வீச்சைக் கண்டார்கள். ஆனால் லிஸ் மெயிட்னர் அவரது நண்பர் ஆட்டோ பிரிஷ் [Otto Frisch] இருவரும்தான் ஆட்டோ ஹான், ஸ்டிராஸ்மன் புரிந்த அணுக்கரு இயக்க நிகழ்ச்சியை, ‘அணுப்பிளவு ‘ [Fission] என்று முதன் முதலில் விளக்கப் படுத்தி விஞ்ஞான வெளியீட்டில் உலகுக்குப் பறைசாற்றினர்.

அவ்வெளியீட்டைப் படித்தபின் உடனே பிரடெரிக் ஜோலியட், அணுப்பிளவைப் பற்றி ஆராய்ச்சி செய்து, ஒவ்வொரு பிளவும் வெளியாக்கும் பிளவு சக்தி 200 MeV என்றும், பிளவு விளைவுத் துணுக்குகள் புரோமின் [Bromine, Atomic Number 35] முதல் சீரியம் [Cerium, Atomic Number 58] வரையுள்ள மூலகங்களுக்கு இடைப்பட்டவை என்றும் முதலில் அறிவித்தார்! அத்துடன் நிகழும் ஒவ்வொரு யுரேனிய, நியூட்ரான் அணுக்கரு இயக்கத்தின் விளைவில் புதிதாக இரண்டு அல்லது மூன்று நியூட்ரான்கள் உண்டாகின்றன என்றும், அவற்றைக் கட்டுப்படுத்தி அணுக்கருத் தொடரியக்கம் [Nuclear Chain Reaction] ஏற்படுத்தி, அளவற்ற சக்தியை வெளிப்படுத்தலாம் என்றும் முதன் முதல் உலக விஞ்ஞானிகளுக்கு முன்னறிவித்தார்!

1940 இல் ஹிட்லர் பிரான்ஸை கைப்பற்றவே ஐரீன், பிரடெரிக் இருவரது அணுப்பிளவு ஆராய்ச்சிகள் மூடப் பட்டன! ஐரீன் தன்னிரு பிள்ளைகளைத் தூக்கிக் கொண்டு சுவிட்ஜர்லாந்துக்கு ஓடி அங்கே சரண் புகுந்தார்! பெயரை மாற்றிக் கொண்டு, தனியாக பிரடெரிக் மட்டும் பாரிஸில் காலம் தள்ளினார்! 1944 இல் நேச நாடுகள் போரிட்டுப் பிரான்ஸை விடுவித்ததும், பிரசிடென்ட் சார்ல்ஸ் டிகாலே [Charles de Gaulle] நாட்டைச் சீர்ப்படுத்தினார். பிரடெரிக் பிரான்ஸின் அணு ஆராய்ச்சித் துறைகளை ஒழுங்கு படுத்தி, பிரான்ஸில் அணுசக்திப் பேரவை [French Atomic Energy Commission] நிறுவ ஏற்பாடுகள் செய்தார்! 1946 இல் டிகாலே பிரான்ஸ் அணுசக்திப் பேரவையைத் திறந்து வைத்து, பிரடெரிக் ஜோலியட் அதிபதியாக நியமிக்கப் பட்டார்!

1942 இல் இத்தாலிய அமெரிக்க விஞ்ஞான மேதை என்ரிகோ ஃபெர்மி, அணு ஆயுதத்தைப் படைக்கச் சிகாகோவில் முதன் முதல் அணுக்கருத் தொடரியக் கத்தைச் செய்து காட்டி, அணுயுகத்தின் பிரம்மாண்டமான நுழை வாயிலைத் திறந்து வைத்தார்! 1948 பிரான்ஸின் முதல் ஆராய்ச்சி அணு உலை பிரடெரிக் மேற்பார்வையில் சான்டில்லன் கோட்டையில் [Fort de Chantillon] இயங்க ஆரம்பித்தது! பிரான்ஸில் 1948 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி ஐரீன் கியூரியும், அவரது கணவர் பிரடெரிக் ஜோலியட்டும் அணுக்கருத் தொடரியக்கம் செய்து காட்டி, அணுசக்தி ஆக்க வரலாற்றில் முதல்வர் வரிசையில் அவர்களும் நின்று உலகப் புகழ் பெற்றார்கள்! 1960 பிப்ரவரி 13 இல் பிரான்ஸ் தனது முதல் அணுகுண்டை ஸகாரா பாலை வனத்தில் வெடித்துச் சோதனை செய்து அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன் ஆகிய அணு ஆயுத வல்லரசு நாடுகளுடன் சேர்ந்து கொண்டது!

Natural Isotopic Abundances of light stable isotopes.

Hydrogen                Carbon                 Nitrogen                     Oxygen

1H – 99.984%     12C – 98.89%      14N – 99.64%        16O – 99.763%

2D – 0.0156%      13C – 1.11%         15N – 0.36%           17O – 0.0375%

+++++++             ++++++               ++++++              18O – 0.1995%

மனித இனத்திற்குப் பயன்படும் கதிரியக்க ஏகமூலங்கள்

கதிரியக்க ஏகமூலங்கள் [Radioactive Isotopes] மனித இனத்துக்குப் பயன் படாத துறையே இல்லை! உலகெங்கும் மருத்துவம், தொழிற்துறை, பொறியியல், வேளாண்மை, விஞ்ஞானம் மற்றும் பல ஆராய்ச்சிகள் செய்ய நூற்றுக் கணக்கான கதிர் மூலகங்கள் உபயோகம் ஆகின்றன! நேரடி, சுழல் விரைவாக்கி யந்திரங்கள் [Linear, Cyclotron Accelerators], அணு உலைகள் ஆகியவற்றில் கதிர் ஏகமூலங்கள் தயாரிக்கப் படுகின்றன. இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏகமூலங்கள் விஞ்ஞானிகளால் குறிப்பிடப் பட்டுள்ளன! அவற்றில் இயற்கையாகக் கிடைப்பவை 276. கதிரியக்கம் கொண்டவை 740.

அமெரிக்காவில் டென்னஸி மாநிலத்தின் ஓக் ரிட்ஜ் அணு உலைகளில் [Oak Ridge Atomic Reactors] நூற்றுக் கணக்கான கதிர் ஏகமூலங்கள் உற்பத்தியாகி, உலகம் எங்கும் அனுப்பப் படுகின்றன. அவற்றில் 78% மருத்துவ ஆய்வுகளுக்கும் [Medical Diagnosis], புற்று நோய் குணப்பாடுக்கும் [Cancer Treatment] பயன் படுகின்றன! 12% ஏகமூலங்கள் விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கும், 6% தொழிற்துறைப் பணிகளுக்கும், 4% வேளாண்மை விருத்திக்கும் உபயோக மாகின்றன. மருத்துவ, உயிரியல் பணிகளுக்கு ஹைடிரஜன், கரி, ஸல்ஃபர், ஃபாஸ்ஃபரஸ், குளோாரின், கால்ஸியம், ஆர்செனிக், ஐயோடின், வெள்ளி, தங்கம் ஆகியவற்றின் ஏகமூலங்கள் தயாரிக்கப் படுகின்றன. இப்போது அகில நாடுகளும் தமது அணு உலைகளில் எண்ணற்ற கதிர் ஏகமூலங்களை ஆக்கி வருகின்றன.

ஐரீன் பிரடெரிக் தம்பதிகளின் இறுதிக் காலம்

முதல் உலகப் போரின் சமயத்தில் காயப் பட்டோர்களுக்குச் சிகிட்சை செய்ய எக்ஸ்ரே கதிர்ப்பட [Nurse Radiographer] பணிப் பெண்ணாக ஐரீன் கியூரி, தாயுடன் சேர்ந்து சேவை செய்தார். பிரென்ச் விஞ்ஞானக் கழகம், [French Academy of Science] பிரென்ச் மருத்துவப் பேரவை இரண்டும் நோபெல் பரிசு பெற்ற பிரடெரிக் ஜோலியட்டுக்குச் சிறப்புநர் தகுதியை அளித்தது. ஆனால் நோபெல் பரிசு பெற்ற பெண்மணி ஐரீன் கியூரிக்கு பிரென்ச் விஞ்ஞானக் கழகம் சிறப்புநர் மதிப்பைத் தர, பிரென்ச் ஆடவர் குழு மறுத்தது! அதே போல் இரட்டை நோபெல் பரிசு பெற்ற மேரி கியூரிக்கும் பிரென்ச் விஞ்ஞானக் கழகம் அங்கத்தினர் பதவி கூடத் தர எதிர்த்தது! ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ‘ [Liberty, Equality & Fraternity] என்று பிரென்ச் புரட்சியின் போது முழக்கிய பிரான்ஸ், விஞ்ஞானக் கழகத்தில் சமத்துவத்தைப் பெண்ணினத்திற்கு அளிக்காமல் அவர்களை இரண்டாம் தரக் குடியினராகத் தாழ்த்தியது, வருந்தத்தக்க செய்தி!

1956 ஆம் ஆண்டு மார்ச் 17 ஆம் நாள் ஐரீன் ஜோலியட் கியூரி கதிரியக்கச் சூழ்நிலையில் நீண்ட காலம் பாதிக்கப் பட்டு, இரத்த நோயில் [Leukemia] தாய் மேரி கியூரி போல் தானும் அவதியுற்று, பாரிஸில் 59 ஆவது வயதில் காலமானார்! பிரிட்டானியில் [Brittany] ஓய்வெடுக்கச் சென்ற போது விபத்தில் காயமுற்று, சில நாட்கள் கழித்துப், பிரடெரிக் 1958 ஆகஸ்டு 14 ஆம் தேதி தனது 58 ஆவது வயதில் காலமானார். தாய் ஐரீன் கியூரி, தந்தை பிரடெரிக் ஜோலியட் இருவரும் விட்டுச் சென்ற விஞ்ஞான ஆராய்ச்சிகளைப் புதல்வி ஹெலனும், புதல்வன் பியரும், தன் பெற்றோர் கடைப்பிடித்தது போலப் பரம்பரையான குல வித்தையைப் பின்தொடர்ந்தனர்!

***************

Information :

http://www.answers.com/topic/irene-joliot-curie (Biography: Irene Joliot-Curie)

S. Jayabarathan (jayabarat@tnt21.com) February 21, 2010

அணுக்கருத் தொடரியக்கம் தூண்டி முதன்முதல் அணுசக்தி கட்டுப்படுத்திய இத்தாலிய விஞ்ஞானி என்ரிக்கோ ஃபெர்மி

என்ரிக்கோ ஃபெர்மி

(1901-1954)

ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng., (Nuclear) கனடா.

 

அணுவைப் பிளந்த அசுர விஞ்ஞானிகள்

1934 ஆம் ஆண்டு ஜனவரியில் நோபல் பரிசு பெற்ற இத்தாலிய விஞ்ஞான  மேதை, என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi] முதன் முதல் யுரேனியத்தை நியூட்ரான்  கணைகளால் உடைத்து, அதை இரு கூறாக்கினார். ஆனால் சரித்திரப் புகழ் பெற்ற,  அந்த முதல் அணுப்பிளவு அவருக்குத் தெரியாமலே போனது! காரணம் அணுக்கரு  இயக்கத்தின் விளைவுகள் யாவும் புதிராக இருந்தன. புதுக் கதிர் உலோகத்துடன்  சிறிய துணுக்குகளும் தோன்றின! தான் ஒரு புது மூலகத்தை உண்டாக்கி  விட்டதாகப் ஃபெர்மி தவறாக நம்பினார். சோதனையில் யுரேனியம் கதிரியக்கப்  பட்டு, எதிர்பாராத புதிய ரசாயனக் குணாதிசயங்களை ஏற்று, ஒரு புதிய மூலகமாக  உருமாற்றம் [Transmutation] கொண்டது!  அடுத்த நான்கு ஆண்டுகள் பல தடவை  பாரிஸ், பெர்லின், இத்தாலியில் யுரேனியம் நியூட்ரன் கணைகளால் பிளக்கப்  பட்டாலும், என்ன விந்தை விளைந்துள்ளது, என்று விஞ்ஞானிகளுக்கு அப்போது  புரியவில்லை.

ஜெர்மன் வெளியீடு ‘பயன்பாட்டு இரசாயனம்’ [Applied Chemistry] இதழில் ஐடா &  வால்டர் நோடாக் [Ida & Walter Noddack] விஞ்ஞானத் தம்பதிகள், ஃபெர்மியின்  பிழையான கருத்தை எடுத்துக் கூறி, ‘கன உலோகம் யுரேனியம், நியூட்ரான்  தாக்கும் போது, பிளவு பட்டுப் பல துணுக்குகளாய்ப் பிரிகிறது’ என்று எழுதி  யிருந்தார்கள்.  மெய்யான இந்த விளக்கத்தை, ஃபெர்மி உள்படப் பலர் அன்று  ஒப்புக் கொள்ள வில்லை!  சாதாரண ஆய்வகச் சாதனம் அணுவைப் பிளக்க  முடியாது. விஞ்ஞான விதிகளின்படி, மாபெரும் சக்தியைக் கொண்டுதான்  அணுவை உடைக்க முடியும், என்பது ஃபெர்மியின் அசைக்க முடியாத கருத்து.   பெரும்பான்மையான பெளதிகவாதிகள் [Physicists] யுரேனியம் நியூட்ரானை  விழுங்கி, எதிர்பார்த்தபடி ஒரு புது மூலகத்தை உண்டாக்கி யுள்ளது என்றே  நம்பினார்கள். அப்போது ஐன்ஸ்டைன் உள்படப் பல விஞ்ஞானிகள் அணுவைப்  பிளப்பது அத்துணை எளிதன்று என்ற ஆழ்ந்த கருத்தைக் கொண்டிருந்தனர்.

அணுக்கருப் பிளவை முதலில் விளக்கிய லிஸ் மெயிட்னர்

நியூட்ரான்களை ஏவி அணுக்கரு உடைப்பு [Nuclear Bombardments] ஆராய்ச்சியில்  பங்கேற்ற விஞ்ஞானப் பெண் மேதைகள், இருவர் குறிப்பிடத் தக்கவர். முதலாவது  இயற்கைக் கதிரியக்கம் பற்றி விளக்கி நோபல் பரிசு பெற்ற மேரி கியூரியின் மூத்த  புதல்வி, தாயைப் பின்பற்றிச் செயற்கைக் கதிரியக்கம் கண்டு பிடித்து நோபல் பரிசு  பெற்ற ஐரீன் கியூரி. அடுத்து ஜெர்மன் விஞ்ஞானி ஆட்டோ ஹான் [Otto Hahn]  அவருடன் 30 ஆண்டு காலம் ஆய்வு உதவியாளியாகப் பணியாற்றிய, லிஸ்  மெயிட்னர் [Lise Meitner]. ஹானும், மெயிட்னரும் பலமுறை யுரேனியத் தேய்வு  அணுக்கரு இயக்கங்கள் நிகழ்த்தி ஆராய்ச்சி செய்து, ‘புரொட்டோ ஆக்டானியம் ‘  [Protoactinium] என்னும் புது மூலகம் கண்டு பித்தவர்கள். மெயிட்னர் யூதரானதால்,  ஹிட்லருக்குப் பயந்து 1938 இல் சுவீடனுக்கு ஓடி, ஸ்டாக்ஹோம் நோபல்  ஆய்வகத்தில் [Nobel Institute, Stockholm] சேர்ந்து தன் ஆராய்ச்சிகளைத்  தொடர்ந்தார்.

ஐரீன் கியூரி செயற்கைக் ‘கதிர் ஊட்டம்’ [Irradiation] சம்பந்தமாகப் பேசிய சமயம்,  நியூட்ரானைக் கொண்டு யுரேனிய அணுவைத் துண்டிக்க முடியும் என்று  கூறியதைப் பின்பற்றி, யுரேனிய நியூட்ரான் இயக்கத்தை உண்டாக்கி, முதன்  முதலில் அணுவை உடைத்ததாக ஜெர்மனியில் ஆட்டோ ஹான், அவரது தோழர்,  ஃபிரிட்ஷ் ஸ்டிராஸ்மன் [Fritz Strassman] இருவரும் 1938 இல் பறை  சாற்றினார்கள். இவ்வரிய புதுக் கண்டு பிடிப்பைக் கடிதம் மூலம் ஆட்டோ ஹான்,  சுவீடனில் இருந்த தனது பழைய துணையாளி, லிஸ் மெயிட்னருக்குத்  தெரிவித்தார். தகவலைப் படித்த மெயிட்னர் அவரது உறவினர், ஆட்டோ ராபர்ட்  ஃபிரிஷ் [Otto Robert Frisch] இருவரும் புதிய அணுக்கரு இயக்கத்தைப் பற்றி  விவாதித்து, ‘இயற்கை’ [Nature] ஃபிரிஷ் வெளியீட்டுக்கு உடனே இதைப் பற்றி  விபரமாக எழுதி, அதில் ‘அணுக்கருப் பிளவு இயக்கம்’ [Nuclear Fission]  நிகழ்ந்துள்ளது என்ற பதத்தைப் பயன்படுத்தி யிருந்தார்கள். அணுவைப் பிளந்தவர்  பலராயினும் மெயிட்னர், ஃபிரிஷ் இருவர்தான் முதலில் அணுக்கருப் பிளவைப்  புரிந்து உலகத்திற்கு விளக்கிய, ஐரோப்பிய விஞ்ஞானிகள். இதே ஆட்டோ ராபர்ட்  ஃபிரிஷ் பிறகு அமெரிக்காவுக்குச் சென்று, நியூ மெக்ஸிகோ லாஸ் அலமாஸில்  அணுகுண்டு விஞ்ஞானிகளோடு சேர்ந்து அணுகுண்டுக்குத் தேவையான யுரேனியம்,  புளுடோனியம் உலோக அளவைக் கணித்து, முதல் அணுகுண்டு செய்ய  உதவியவர்.

அணு ஆயுதப் பெருக்கத்தை ஆரம்பித்த அமெரிக்க விஞ்ஞானி!

அணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது ஆண்டுகளாக நேரிடை யாகவோ அன்றி  மறைமுக மாகவோ வழி வகுத்தவர்கள், முக்கியமாக ஆறு விஞ்ஞான மேதைகள்!  முதலில் கதிரியக்கம் [Radioactivity] கண்டு பிடித்த மேரி கியூரி! அடுத்து செயற்கைக்  கதிரியக்கம் [Artificial Radioactivity] உண்டாக்கிய அவரது புதல்வி ஐரீன் கியூரி!  முதன்முதல் அணுப்பிளவு நேர்ந்துள்ளதை அறிவித்த ஆஸ்டிரிய விஞ்ஞான மாது லிஸ் மெயிட்நர். அதன்பின் அணுவைப் பிளந்து, முதல் தொடரியக்கம் [Nuclear Chain Reaction]  புரிந்த என்ரிகோ ஃபெரிமி! இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் தயாரிக்கும்  முன்னே, அமெரிக்க ஜனாதிபதியை அணு ஆயுதம் ஆக்கத் தூண்டிய ஆல்பர்ட்  ஐன்ஸ்டைன்! முடிவில் போர் முடியும் தறுவாயில் பன்னாட்டு விஞ்ஞானிகளைப்  பணி செய்ய வைத்து வெற்றிகரமாய் அணுகுண்டை உருவாக்கிச் சோதனை செய்த  ராபர்ட் ஓப்பன்ஹைமர்!   அவருடன் ஜப்பானில் இரு அணு குண்டுகளைப் போட்ட  அமெரிக்க இராணுவத் தளபதி லெஸ்லி குரூஸ் ஒருவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.  முதல் அணு ஆயுதத்தைத் தயாரிக்கும்  பொறுப்பை அமெரிக்க அரசு யுத்த சமயத்தில் லெஸ்லி குரூஸ்  ஒருவருக்கே  இரகசியமாக அளித்தது

ஜப்பான் ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டுகள் விழுந்து கோர விளைவுகள்  நிகழ்ந்த பின் உலகின் வல்லரசுகளும், மெல்லரசுகளும் உடனே அணு  ஆயுதங்களை ரகசியமாய் உற்பத்தி செய்ய முற்பட்டன! 1945 இல் அமெரிக்கா  ஆக்கியதை, ஒற்று மூலம் பிரதி அடித்து, 1949 இல் ரஷ்யா தனது முதல்  அணுகுண்டைச் சோதித்தது! அதன் பிறகு 1952 இல் பிரிட்டன், 1960 இல்  பிரான்ஸ், 1964 இல் சைனா, 1974 இல் இந்தியா, 1998 இல் பாகிஸ்தான் போன்ற  நாடுகள் அணு ஆயுதப் பந்தயத்தில் பின் தொடர்ந்தன! உலக நாடுகளில் 115  தேசங்கள் முன்வந்து அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு [Non Proliferation Treaty,  NPT] உடன்படிக்கையை மதித்துக் கையெழுத்துப் போட்டுள்ளன! ஆனால்  அர்ஜென்டைனா, பிரேஸில், சைனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான்,  தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய பல நாடுகள் அணு ஆயுதப் பெருக்கத்  தடுப்பில் கையெழுத்திட ஒருங்கே மறுத்து விட்டன!

இரண்டாம் உலகப் போர் நடந்த போது, இந்திய அமெரிக்க விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகர் அணுகுண்டு ஆக்கத் திட்டத்தில் சிகாகோவில் அணுக்கருத் தொடரியக்கம் முதலில் புரிந்த என்ரிகோ ஃபெர்மியோடு [Enrico Fermi] பணி யாற்றியதை இங்கே அவசியம் குறிப்பிட வேண்டும் !

அணுவின் அமைப்பு. பிண்ட சக்தி அழிவின்மை.

2500 ஆண்டுகளுக்கு முன்பே, கிரேக்க ஞானிகள் அணுவை பற்றிச் சிந்தித்து  விளக்கியதைத்தான் பிற்கால விஞ்ஞானிகள் அடிப்படையாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். கிரேக்க மொழியில் ‘Atomos’ என்றால் பிரிக்க இயலாதது என்று அர்த்தம்.  அதிலிருந்து Atom என்ற பதம் வந்தது. கி.மு.460-370 ஆண்டுகளில் கிரேக்க  வேதாந்த ஞானி டெமாகிரிடஸ் [Democritus] எழுதி வைத்த அணுவியல் நியதி,  [Atomic Theory] “தூய பிண்டம் [Matter] அனைத்தும் நுண்ணிய, கண்ணுக்குத்  தெரியாத, கடினமான, திணிக்க முடியாத, அழிக்க முடியாத மூலச்சிறு தூள்களைக்  [Particle] கொண்டவை. அவைதான் அணுக்கள். அணுவுக்கும் சிறிய தூள் எதுவும்  அகிலத்தில் இல்லை. அணுக்களே பிண்டத்தின் மூலத் துகள். அணுக்கள்  எண்ணற்றவை. பல வடிவம் உடையவை. எல்லையற்ற அண்ட வெளியில்  அணுக்கள் ஓயாமல் எப்போதும் அசைந்து கொண்டே இருப்பவை. அணுக்களின்  அளவு, வடிவம், நிறை வேறு பட்டாலும், அவை யாவும் ஒரே மூலப் பொருளால்  ஆனவை. அணுக்களின் தனிச் சிறப்புப் பிறழ்ச்சிகள் தான் பொருட்களில்  மாறுபாடு களை உண்டாக்குகின்றன. இயற்கை நிகழ்ச்சியால், அணுக்களின்  முடிவற்ற இயக்கத்தில், அகிலம் உருவானது. அணுக்கள் மோதுவதாலும், தாமே  சுழல்வதாலும் பிண்டத்தின் மாபெரும் வடிவங்கள் தோன்றின”. டெமாகிரிடஸின்  அணுவியல் நியதியே, நவீனத் தத்துவமான ‘பிண்ட சக்தி அழிவின்மை’  [Conservation of Energy & Matter] கோட்பாடுக்கு அடிகோலியது.

இந்து வேதாந்த ஞானிகள் கிரேக்க ஞானிகளுக்கு முன்பே, அணுவைப் பற்றியும்,  அவற்றின் கருவில் இருக்கும் அடிப்படைப் பரமாணுக்களைப் [Sub Atomic Particles]  பற்றியும் கூறி இருக்கிறார்கள் என்று சாமுவெல் கிளாஸ்டன் [Samuel Glasston]  தான் எழுதிய ‘அணுசக்தியின் மூலப் புத்தகத்தில்’ [Source Book on Atomic Energy]  முதல் பக்கத்திலே கூறியிருக்கிறார். அகிலத்தின் தோற்றம் பற்றியும், அண்ட  கோளங்களின் சுழற்சி பற்றியும், சக்தி பொருள் இவற்றின் அழிவின்மை பற்றியும்  இந்து வேதங்கள் பக்கம் பக்கமாய் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே  இயற்றியுள்ளன.

அங்கிங்கு எனாதபடி எங்கும் அணுமயம்! ஆனால் அணுவை எவரும் இதுவரைப்  பார்த்ததில்லை! நமது புறக் கண்களுக்கு அணுக்களைக் காணும் திறமை இல்லை.  துளை நுண்ணோக்கிக் [Tunneling MicroScope] கருவி மூலம் தளவுளாவி [Scanning]  மின்கணணிப் பிம்பத்தில் [Computerized Image] நாம் அணுவின் அமைப்பைக்  கண்டறிய முடியும்! எட்டு மில்லி கிராம் எடையுள்ள ஒரு குண்டூசியின் நுனியில் 1  கூபிக் மில்லி மீடரில் [cubic mm] 100 பில்லியன் பில்லியன் [10 அடுத்து 17  பூஜியங்கள்] அணுக்கள் உள்ளன! ஒரு நீர்த் துளியைப் பெரிது படுத்திப் பூமி  வடிவில் நோக்கினால், நீர் மூலத்திரளில் [Molecule] உள்ள அணு, ஓர் எழுமிச்சைப்  பழம் அளவாகக் கருதலாம்.

நூற்றுக்கும் மேற்பட்ட அணு வகைகள் உலகில் உள்ளன. நமக்குத் தெரிந்த தங்கம்,  வெள்ளி, இரும்பு, தாமிரம் [Copper], ஈயம், அலுமினியம் போன்ற பழைய  உலோகங்கள் நிலையானவை [Stable]. பின்னால் புதிதாகக் கண்டு பிடிக்கப் பட்ட  யுரேனியம், தோரியம், புளுடோனியம், ரேடியம், பொலோனியம் ஆகியவை  கதிரியக் கத்தால் சுயமாய்த் தேயும், நிலையற்ற [Unstable] கன மூலகங்கள் [Heavy  Elements]. இது வரை கண்டு பிடிக்கப்பட்ட 106 மூலகங்களில் 88 இயற்கையில்  தோன்றுபவை. மற்ற 18 அணுக்கருச் சிதைவிலோ, அன்றி அணு உலைகளிலோ  உண்டானவை. அணு எண் 92 மேல் மூலகங்கள் பூமியில் இயற்கையாகக் கிடைப்ப  தில்லை. அணுக்கள் தனியாகவோ, அன்றி கூட்டாகவோ இயற்கையில்  தோன்றுகின்றன. உதாரணமாக நீரில் ஈரணு ஹைடிரஜனும் [H2], ஓரணுப் பிராண  வாயுவும் [Oxygen] இணைந்தே [H2+O–>H2O] தென்படுகின்றன. ஈரணு, மூவணு  அன்றிப் பலவணு சேர்ந்து இயங்கும் மூலகக் கூறுகளை ‘மூலத்திரள்’ [Molecules]  என்று இரசாயனத்தில் கூறுவார்கள்.

ஜான் டால்டன், ஹென்ரி பெக்குவரல், ஏர்னஸ்ட் ரூதர் ஃபோர்டு, நீல்ஸ் போஹ்ர்  ஆகிய விஞ்ஞானிகளின் புது அணுவியல் நியதியின்படி, அணுவின் அமைப்பு ஓர்  குட்டிச் சூரிய மண்டலம் போன்றது. சூரியன் போல, அணுவின் நடுவே சக்தி  அடங்கிய அணுக்கரு உள்ளது. அண்ட கோளங்கள் போல கருவைச் சதா  எலக்டிரான்கள் [Electrons] நீள்வட்ட [Elliptical] வீதியில் சுற்றி வருகின்றன. நடுக்  கருவில் நியூகிளியான் [Nucleons] எனப்படும் புரோட்டான் தனியாகவோ, அல்லது  நியூட்ரான் கூடச் சேர்ந்தோ இருக்கிறது. அண்ட வெளி போன்று அணுவின்  உள்ளும் பெரும் சூன்ய வெளி சூழ்ந்திருக்கிறது. புரோட்டான் நேர்மின் [Positive],  எலக்டிரான் எதிர்மின் [Negative], நியூட்ரான் நடுமின் [Neutral] கொடையும் [Electrical  Charge] கொண்டவை. எலக்டிரான், புரோட்டான், நியூட்ரான் ஆகியவைகள்  பரமாணுக்கள் [Sub atomic Particles] எனப்படுபவை. ஓர் அங்குள நூலில்  முத்துக்களைப் போல் வரிசை யாகக் கோர்த்தால், 10 பில்லியன் பில்லியன் [10  அடுத்து 17 பூஜியங்கள்] நியூகிளியான்களை அமைத்து விடலாம்!

இரண்டாம் உலகப் போர் நடந்த போது, இந்திய அமெரிக்க விஞ்ஞானி சுப்ரமணியன் சந்திரசேகர் அணுகுண்டு ஆக்கத் திட்டத்தில் சிகாகோவில் அணுக்கருத் தொடரியக்கம் முதலில் புரிந்த என்ரிகோ ஃபெர்மியோடு [Enrico Fermi] பணி யாற்றியதை இங்கே அவசியம் குறிப்பிட வேண்டும் !

அணு எண், அணுப் பளுஎண், அணுநிறை, ஏகமூலங்கள்

மூலகத்தின் அணு எண் [Atomic Number] என்பது, அணுக் கருவுக்குள் இருக்கும்  புரோட்டான்களின் எண்ணிக்கையைக் குறிக்கும். ஓர் மூலகத்தின் இரசாயனக்  குணங்கள் அதனுடைய அணு எண்ணைப் பொருத்தது. மூலகங்கள் அணு எண்  வரிசையில்தான் அணி அட்டவணையில் [Periodic Tables of Elemets] இடம்  பெறுகின்றன. அணுப் பளு எண் [Atomic Mass Number] எனப்படுவது, கருவில்  இருக்கும் நியூட்ரான் புரோட்டான் கூட்டு எண்ணிக்கை யைக் காட்டும். அது  ‘நியூக்கிளியான்’ தொகை. அணு நிறை [Atomic Weight] என்பது மூலகக் கருவில்  புரோட்டான் நியூட்ரான் ஆகியவற்றின் கூட்டு நிறை. அணு நிறை என்புது ஓர் ஒப்பு  நிறை [Relative Mass]. கரியின் [Carbon12] அணுக்கருவில் 6 புரோட்டான், 6  நியூட்டான் உள்ளன. கரியின் அணு எண் 6, பளு எண் 12, அணு நிறை  12.00000000. கரியின் அணு நிறை 8 தசமத் துள்ளியமாக இருப்பதால், மற்ற  மூலகங்களின் அணு நிறை யாவும், கரி நிறைக்கு ஒப்பாகக் கணக்கிடப் படுகிறது.  உதாரணமாக, முதல் எளிய மூலகமான ஹைடிரஜன் ஒரே ஒரு புரோட்டானைக்  கொண்டுள்ளது. அதன் அணு எண் 1. பளு எண் 1. நிறை 1.0078.

சில மூலகங்களுக்கு ஒன்று அல்லது பல ஏகமூலங்கள் [Isotopes] இயற்கையிலோ  அன்றி செயற்கையிலோ ஆக்கப் பட்டுள்ளன. ஏகமூலங்கள் என்றால்,  அணுக்கருவில் ஒரே புரோட்டான் எண்ணிக்கை கொண்டு, வெவ்வேறு நியூட்ரான்  எண்ணிக்கை கொண்ட மூலகங்கள். உதாரணமாக ஹைடிரஜன் மூலகத்திற்கு  இரண்டு ஏகமூலங்கள் உள்ளன. டியுடிரியம் [Deuterium] புரோட்டான் 1, நியூட்ரான் 1.  டிரிடியம் [Tritium] புரோட்டான் 1, நியூட்ரான் 2.

கரி12, கரி13, கரி14 மூன்றும் கரியின் ஏகமூலங்கள். அது போல், யுரேனியம்238  இன் ஏகமூலம் யுரேனியம்235. யுரேனியம்238 இன் அணு எண்: 92 [92  புரோட்டான், 146 நியூட்ரான்], பளு எண்: 238. அணு நிறை: 238.03. யுரேனியம்235  இன் அணு எண்: 92 [92 புரோட்டான், 143 நியூட்ரான்], பளு எண்: 235.  இயற்கையில் கிடைக்கும் யுரேனியத்தில் U238 விகிதம்: 99.286% U235 விகிதம்:  0.714% யுரேனியம் U235 தானாகப் பிளந்து [Spontaneous Fission] உடையும் தன்மை  யுடையது. யுரேனியம் U235 போன்று, புளுடோனியம் Pu239, தோரியம் Th233  இரண்டும் சுயமாய்ப் பிளக்கும் தன்மை யுடையவை. ஆதலால் அணுசக்தி  நிலையங்களிலும், அணு ஆயுதங்களிலும் U235, அல்லது Pu239, அல்லது Th233  முழுமையாக [100%] அல்லது செழுமையாக [Small% Enriched] எரிக்கோலாய்ப் [Fuel  Rods] பயன் படுகின்றன.

நிலையற்ற கன மூலகங்களான யுரேனியம், தோரியம், புளுடோனியம், ரேடியம்,  பொலோனியம் சிதைந்து தேய்வதற்குக் காரணம் என்ன ? கன உலோகங்களின்  அணுக்கருவில் உள்ள நியூகிளியான் [புரோட்டான் நியூட்ரான்] எண்ணிகையைப்  பார்த்தால் இதற்குப் பதில் அறிந்து விடலாம். நிலையான உலோகங்களில் ஏறக்  குறைய நியூட்ரான், புரோட்டான் சம எண்ணிக்கையில் உள்ளன. அதாவது  நியூட்ரான் / புரோட்டான் பின்னம் [Neutron Proton Ratio] = 1 [அருகில்]. யுரேனியம்  [U235] இல் நியூட்ரான்145 / புரோட்டான்92 பின்னம் = 1.55 அதாவது  அணுக்கருவில் அதிகமான, அளவுக்கு மீறிய நியூட்ரான்கள் அடங்கி நிலை யற்ற  தன்மையை உண்டாக்குகின்றன.

மீறும் தொடரியக்கம், ஆறும் தொடரியக்கம், பூரணத் தொடரியக்கம்

அணு உலைகளில் U235 மீது, ஒரு நியூட்ரான் கணையை ஏவிடும் போது,  அணுக்கருவில் நியூட்ரான் எண்ணிக்கை இன்னும் அதிகமாகி, U236 இரு  துண்டங்களாகப் பிரிந்து, இணைவு சக்தி [Binding Energy] வெளியாகி, அடுத்து 2  அல்லது 3 நியூட்ரான்கள் இயக்கத்தில் உண்டாகும். ஓர் இயக்கத்தில் தோன்றிய 2  நியூட்ரான்கள் அடுத்துள்ள U235 அணுக்களைத் தாக்கிப் பிளவுத் துணுக்குகளும்  [Fission Products] 4 நியூட்ரான்கள் வெளியேறும். இவ்வாறு நியூட்ரான் எண்ணிக்கை  2, 4, 8, 16, 32, 64 என்ற தொடர்ப் பெருக்கத்தில் [Geometric Progression] மீறிப்  போய் அபார சக்தி பொங்கி அணுகுண்டாக வெடிக்கிறது. அளவு கடந்த நியூட்ரான்  பெருக்க இயக்கத்திற்கு ‘மீறும் தொடரியக்கம்’ [Super Critical Reaction] என்று  சொல்லப்படுகிறது.

அணு உலையில் நியூட்ரான் விழுங்கிகளைத் [Neutron  Absorbers] தக்க சமயத்தில் நுழைவித்து, எண்ணிக்கையைக் குறைத்தால் இயக்கம்  சிறிது நேரத்தில் நின்று விடும். இக்கட்டுபாடு ‘ஆறும் தொடரியக்கம்’ [Sub Critical  Reaction] எனப்படும். நடு நிலமையில் நியூட்ரான் விழுங்கிகளை ஏற்றியும்,  இறக்கியும் ஆட்சி செய்து, சம நிலை நியூட்ரான்களை நிலவச் செய்வதைப்,  ‘பூரணத் தொடரியக்கம்’ [Critical Reaction] என்பார்கள். மீறும் தொடரியக்கம்  பொதுவாக அணு ஆயுதங்களில் பயன்படும். அணு உலை ஆட்சியில் [Reactor  Control] பூரணத் தொடரியக்கமும், ஆறும் தொடரியக்கம் உபயோக மாகிறது.  எதிர்பாராத அபாய நிலை [Prompt Critical] இயக்கங்களைத் தடுக்க தடைக் கோல்  [Shut Down Rods] அல்லது தடுப்பு ஏற்பாடுகள் அமைக்கப்பட்டு உள்ளன. பூரணத்  தொடரியத்தில் வெப்பசக்தி ஒரே நிலையில் சீராகக் கட்டுப் பாடாகிறது. தடுப்பு,  ஆறும் இயக்கங்களில் முறையே வெப்பசக்தி உடனே அல்லது மெதுவாகக்  குறைக்கப் படுகிறது.

அணுஉலையில் கோடான கோடி இயக்கங்கள் ஒரு நொடிக்குள் நிகழ்கின்றன.  ஓரணுப் பிளவில் மட்டும் 200 MeV வெப்பசக்தி வெளியாகிறது. U235 சுயமாகவே  பிளவுபடுவதால், அதைச் சுற்றி நியூட்ரான்கள் வெளிப்பட்டு மறைகின்றன.  நியூட்ரான் பெருக்க இலக்கம் [Muliplication Factor] K=1 என்றால் பிறக்கும்  நியூட்ரான்கள் யாவும் இயக்கத்தில் பயன்படுகின்றன என்று அர்த்தம். K=0.5  என்றால் நியூட்ரான் எண்ணிக்கை குன்றி உலை நிறுத்தப் படுகிறது. K=1.006  என்றால் நியூட்ரான் அணு உலையில் சக்தி அதிகமாவதைக் காட்டுகிறது. K>1.5  என்றால் அபாயம்! நியூட்ரான்கள் அளவுக்கு மிஞ்சுகின்றன! தடை ஏற்பாடுகள்  உடனே இயங்கி உலையைப் பாதுகாக்க வேண்டும். K>3 என்றால் அங்கே ஓர்  அணுகுண்டு வெடிக்கப் போகிறது!

அணுயுகம் பிறந்தது, அமெரிக்காவின் ஆய்வு அணு உலையிலே!

இரண்டாம் உலக மகா யுத்த சமயத்தில், ஐரோப்பிய விஞ்ஞானிகள் பலர்  அமெரிக்காவுக்கு விரைந்தார்கள். குறிப்பாக ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்ஸ்  போஹ்ர் [Niels Bohr, Denmark], லியோ ஸிலார்டு, எட்வெர்டு டெல்லர், யுஜீன்  விஞ்னர் [Leo Szilard, Edward Teller, Eugene Wigner, Hungery], என்ரிகோ ஃபெர்மி  [Enrico Fermi, Italy], ஹான்ஸ் பெதே [Hans Bethe, Germany], ஆட்டோ ஃபிரிஷ் [Otto  Frisch, Vienna] ஆகியோரும், மற்றும் அமெரிக்காவில் பல ஆய்வுக் கூடங்களில்  பணியாற்றிய விஞ்ஞானிகள் ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Oppenheimer]  தலைமையில், லெஸ்லி குரூஸ் [Leslie Groves] ராணுவ அதிகாரியின் கீழ் நியூ  மெக்ஸிகோ, லாஸ் அலமாசில் மன்ஹாட்டன் திட்டத்தில் [Manhattan Project]  அணுகுண்டு தயாரிக்க ஆழ்ந்தார்கள்.

சிகாகோ பல்கலைக் கழகத்தின் உலோகவியல் ஆய்வகத்தில் [Metallurgical  Laboratory] 1942 நவம்பர் 7 ஆம் தேதி அணுவியல் விஞ்ஞானிகள் கூடி, முதல்  அணுஉலையைக் கட்டத் துவங்கினார்கள். CP1 [Chicago Pile-1] என்று பெயர்  பெறும், இந்த அணுஉலையை டிசைன் செய்த இத்தாலிய விஞ்ஞானி, என்ரிகோ  ஃபெர்மி நிறுவன மேற்பார்வையாளர். மற்றும் ஆர்தர் காம்ப்டன் [Arthur Compton],  லியோ ஸிலார்டு, யுஜீன் விஞ்னர், வால்டர் ஸின் [Walter Zinn] குறிப்பாக  அணுஉலை ஏற்பாட்டில் நேரடிப் பங்கேற்றவர்கள். இந்த அணு உலைக் கவசமற்ற  [Unshielded], வெப்பம் தணிக்கப் படாத [Uncooled] உலை. ஃபெர்மியின் திட்டப்படி  5.5 டன் யுரேனியம், 36 டன் யுரேனியம் ஆக்ஸைடு இரண்டும் திணித்த  கரித்திரட்டுக் [Graphite] கோளங்கள் சீரணியில் அமைக்கப் பட்ட ‘சதுரப் பெட்டகம்’  [Cubic Lattice] ஒன்று கட்ட வேண்டும். அணுப் பிளவில் முதலில் எழும்  நியூட்ரான்களின் வேகத்தைக் குன்றச் செய்து மிதமாக்கிட 344 டன் கரித்திரட்டுக்  கட்டிகள் பயன் பட்டன. இதை அமைக்க, சாதனங்கள் உள்பட மொத்தச் செலவு 1  மில்லியன் டாலர். ஒரு சில வாட்ஸ் [Watts] வெப்ப சக்தி உண்டாக்கும் எளிய  ஆய்வு உலை, அணுவியல் பெளதிகச் சோதனைகளுக்கும், அணுக்கருத்  தொடரியக்கம் ஏற்படுத்தவும் டிசைன் செய்யப் பட்டது. ஃபெர்மி 17 நாட்கள்  நியூட்ரான் ‘பெருக்க இலக்கம்’ [Muliplication Factor] K=1 ஆகக் கொண்டு, பூரண  இயக்கத்தில் ஆட்சி செய்து, தன் டிசைன் முடிவுகளைச் சரிபார்த்துக் கொண்டார்.

மித நியூட்ரான்தான் யுரேனியம்235 [U235] இல் கலந்து, அணுக்கருப் பிளவை  உண்டாக்க முடியும். வேக நியூட்ரான் U235 இல் அணுப் பிளவு ஏற்படுத்துவது  இல்லை. ஆனால் நியூட்ரான் யுரேனியம்238 [U238] அணுக்கருவுடன் சேரும் போது,  புளுடோனியம்239 [Pu239] ஆக மாறுகிறது. அடுத்து மித நியூட்ரான் Pu239 தாக்கி  அணுக்கருப் பிளவு உண்டாக்கிச் சக்தி எழுகிறது.

கரித்திரட்டு செங்கல் போல் வெட்டப் பட்டு மரச் சட்டங்களில் அமைக்கப் பட்டு,  எரிப் பண்டமான யுரேனியக் கோளங்கள், கரிக்கட்டி மூலையில் அடுத்தடுத்து  வைக்கப் பட்டன. அணுஉலைப் பாதுகாப்புக்கு நியூட்ரான் விழுங்கியான 7  ‘காட்மியம் கோல்கள்’ [Cadmium Rods] இடையே செங்குத்துத் துளைகளில்  நுழைக்கப் பட்டன. மீறும் தொடரியக்கம் எழாது தடுக்க, எப்போதும் நியூட்ரான்  தடைக் கோல்கள் அணு உலையில் தயாராக இருக்க வேண்டும். மூன்று  துளைகளில் நியூட்ரான் மிதக் கட்டுப் பாட்டுக்குப் ‘போரான் இரும்புக்’ கோல்கள்  [Boron Steel] தொங்க விடப்பட்டன. மட்டத் துளைகளில் போரான் டிரைபுளுரைடு  [Boron Trifluoride] உள்ள ‘நியூட்ரான் மானிகள்’ [Neutron Monitors] நியூட்ரான்  திணிவைக் [Neutron Flux] கண்காணிக்க அமைக்கப் பட்டன.

1942 டிசம்பர் 2 ஆம் தேதி 3:25 P.M. சரியாக, ஃபெர்மி பச்சைக் கொடி காட்ட,  உதவியாளர் ஜார்ஜ் வீல் [George Weil] இறுதி மித ஆட்சிக் கோலை மேலே  நீக்கிடும் போது, பெருக்கு இலக்கம் K=1.0006 ஆகக் கூடி நியூட்ரான் எண்ணிக்கை  விரிந்து முதன் முதல் அணுக்கருத் தொடரியக்கம் [Nuclear Chain Reaction]  சிகாகோ ஆய்வு அணுஉலையில் காட்டப் பட்டு ‘அணு யுகம்’ [Atomic Age]  பிறந்தது. மாபெரும் இந்த அரிய சரித்திர சாதனையை நேரில் கண்ட விஞ்ஞான  மேதைகள் பெர்மி, காம்ப்டன், ஸிலார்டு, விஞ்னர், வால்டர் ஸின் ஆகியோர் தவிர  மற்றும் 42 பேர்கள் பால்கனியில் நின்று, இந் நிகழ்ச்சியைக் கண்டு பெரு மகிழ்ச்சி  அடைந்தனர். உலகின் முதல் அணுஉலை 28 நிமிடங்களுக்கு இயங்கி அதன் பின்  ஆட்சிக் கோல்கள் மறுபடியும் நுழைக்கப் பட்டு உலை நிறுத்தப் பட்டது. இவ்வரிய  வெற்றியை, ஆர்தர் காம்ப்டன் உடனே குறி மொழியில் [Code Language]  ஹார்வர்டு பல்கலைக் கழகத்தின் வேந்தராய் இருந்த ஜேம்ஸ் பிரையன்ட்  கொனாட் [James Bryant Conant] அவருக்குப் தொலை பேசியில், ‘இத்தாலிய  மாலுமி புதிய உலகில் கால் வைத்தார் ‘ என்று செய்தி கொடுத்தார்.

அணு உலை, அணுசக்தியின் பிதா, என்ரிகோ ஃபெர்மி

என்ரிகோ ஃபெர்மி 1901 இல் செப்டம்பர் 29 ஆம் தேதி இத்தாலியில் ரோம் நகரில்  பிறந்தார். ஆக்கத் திறமையும், கணித வல்லமையும், ஆய்வுச் சாதுரியமும்,  சோதனை யுக்தியும் ஒருங்கே பெற்றவர். சிறு வயதிலேயே பெளதிகத்தில் மிகுந்த  ஆர்வம் காட்டினார். பைசா நகரப் பல்கலைக் கழகத்திலும், ஐரோப்பாவில் வேறு  இடங்களிலும் படித்துப் பெளதிகத்தில் பட்டம் பெற்று, ரோம் பல்கலைக் கழகத்தில்  பேராசிரியராகப் பணியாற்றி யவர். 1934 முதல் கதிரியக்க ஆய்வில் பீட்டாக்கதிர்  தேய்வு நியதியைத் [Theory of Beta Decay] தோற்றுவித்தவர். இயல் யுரேனியத்தை  [Natural Uranium] நியூட்ரான் கணைகளால் தாக்கி, செயற்கைக் கதிரியக்கத்தை  உண்டு பண்ணி, புது யுரேனியச் சீரணி மூலகங்களை [Trans Uranium Elements]  உருவாக்கியவர். அந்த பெளதிகச் சாதனைக்கு 1938 இல் ஃபெர்மி நோபல் பரிசு  பெற்றார்.

அவரது மனைவி யூதரானதால், மதச் சீண்டலைத் தாங்க முடியாமல், யுத்த  சமயத்தில் அமெரிக்காவுக்கு விரைந்தார். ஆங்கு கொலம்பியா பல்கலைக்  கழகத்தில் பெளதிகப் பேராசியராகச் சேர்ந்தார். தான் முன்பே துவங்கிய யுரேனிய  நியூட்ரான் அணுக்கரு இயக்கங்கள் 1939 இல் பிரபலமாகி, ‘அணுக்கருப் பிளவு’  விளக்கமாகி ஐரோப்பாவில் வெளியான போது, ஃபெர்மி நியூ மெக்ஸிகோ லாஸ்  அலமாஸில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் அடியில் அணுகுண்டு ஆக்கும் முயற்சியில்  இறங்கிய மற்ற விஞ்ஞானிகளுடன் சேர்ந்து பணியாற்றினார்.

சிகாகோ பல்கலைக் கழகத்தில் 1942 டிசம்பரில் சரித்திரப் புகழ் பெற்ற முதல்  அணுஉலையில், முதல் ‘அணுக்கருத் தொடரியக்கத்தை’ [Nuclear Chain Reaction]  நிகழ்த்திக் காட்டி, முதல் அணுகுண்டு அழிவுக்கும், முதல் அணு மின்சக்தி  ஆக்கத்திற்கும் காரண கர்த்தாவாக விஞ்ஞான வானில் ஒளி வீசினார்.  யுத்தத்திற்குப் பிறகு 1946 இல் சிகாகோ பல்கலைக் கழகப் பெளதிகப்  பேராசிரியராகப் பணியாற்றி, 1954 நவம்பர் 28 ஆம் தேதி தன் 53 ஆம் வயதில்  எதிர்பாராத விதமாகப் புற்று நோயில் காலமானார். அமெரிக்கா அவரது பெயரில்  50,000 டாலர் ‘என்ரிகோ ஃபெர்மி பரிசு’ [Enrico Fermi Award] ஒன்றை ஏற்படுத்தி  உள்ளது. அவரைக் கெளரவிக்க அமெரிக்கா முதலில் அவரது சாதனைக்கு அப்பரிசை என்ரிகோ ஃபெர்மிக்கே அளித்தது!

Enrico Fermi’s grave in Chicago

************

  1. https://en.wikipedia.org/wiki/Enrico_Fermi
  2. https://www.biography.com/scientist/enrico-fermi
  3. தகவல் :-

    1.http://www.pbs.org/wgbh/amex/bomb/peopleevents/pandeAMEX52.html   [Enrico Fermi]

    2.   http://www.britannica.com/EBchecked/topic/204747/Enrico-Fermi

    3.   http://www.atomicarchive.com/Bios/Fermi.shtml

    4.  http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/1938/fermi-bio.html

    5.  http://www.biography.com/people/enrico-fermi-9293405

    6.  http://www.glogster.com/lilwayne4100/enrico-fermi-/g-6lip748esmk4potl8o059a0

    7.   http://www.docstoc.com/docs/6068878/Enrico-Fermi

S. Jayabarathan (jayabarathans@gmail.com)  February 23, 2022 [R-1]

************

பேரழிவுப் போராயுதம் ஹைடிரஜன் குண்டு ஆக்கிய விஞ்ஞானி எட்வர்டு டெல்லர்

(1908–2003)


சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

“ஒருவர் அமைதி நிலைநாட்ட விரும்பினால் அவர் போருக்குத் தயார் செய்ய வேண்டும்.”

ரோமானியப் பொன்மொழி

“சமாதானத்தை விழைவோர் கையில் ஆயுதப் பலம் இருந்தால்தான், உலகில் அமைதி நிலவும்.”

எட்வர்டு டெல்லர்

ஆக்கப்போவது அணு குண்டா ? அல்லது ஹைடிரஜன் குண்டா ?

1942 ஆம் ஆண்டு அமெரிக்க மன்ஹாட்டன் திட்டத்தில் மறைமுகமாகப் பணிசெய்த விஞ்ஞானிகள் முதலில் அணுப்பிளவுக் குண்டை [Fission Bomb] ஆக்குவதற்கு முயன்ற சமயத்தில் அணுப்பிணைவுக் குண்டையும் [Fusion Bomb] உண்டாக்க ஒரு சிலருக்கு ஆர்வம் எழுந்தது! அந்தப் பயங்கரப் படைப்பை மிக்க வெறியோடு நிறைவேற்றப் பல்லாண்டுகள் காத்துக் கொண்டிருந்த விஞ்ஞான மேதை, எட்வர்டு டெல்லர் [Edward Teller]! தீவிர அந்த வேட்கையை எட்வெர்டு டெல்லருக்கு முதலில் தூண்டி விட்டவர், என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi]! சிகாகோப் பல்கலைக் கழகத்தில் முதல் ஆராய்ச்சி அணு உலையை அமைத்து அணுக்கருத் தொடரியக்கம் புரிய ஃபெர்மியின் கீழ் டெல்லர் பணி செய்யும் போது அவர்களுக்கு ஹைடிரஜன் குண்டைப் பற்றி ஓர் எண்ணம் உதயமானது! ஆனால் ஆரம்பத்திலே யிருந்து எட்வெர்டு டெல்லரை அதைரியப் படுத்தி, முதலில் ஆக்கப் போவது அணுப்பிளவுக் குண்டு, வெப்ப அணுக்கருக் குண்டு [Thermo Nuclear Bomb] அல்ல என்று அதிருப்தி உண்டாக்கியவர், மன்ஹாட்டன் திட்ட அதிபதி ராபர்ட் ஓப்பன்ஹைமர்! ஹைடிரஜன் குண்டுக்கு மறு பெயர் வெப்ப அணுக்கருக் குண்டு! சூப்பர் பாம் [Super Bomb], ஹெச் பாம் [H Bomb] எல்லாம் ஒன்றுதான்! அடுத்து 1947-1952 ஆண்டுகளில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் அமெரிக்க அணுசக்திப் பேரவைக்கு அதிபதியாக [Chairman, Atomic Energy Commission] இருந்த சமயத்திலும் டெல்லர் மறுமுறை உயிர்ப்பித்த ஹைடிரஜன் குண்டு திட்டத்தை அங்கீகரிக்காது ஒதுக்கித் தள்ளினார்!

இரண்டாம் உலகப் போர் முடிந்தபின் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையே ஊமைப் போர் [Cold War] மூண்டு பெரும் அளவில் வலுத்தது! 1949 செப்டம்பரில் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டைச் சோதனை செய்ததைக் கேட்டு, அதை எதிர்பாராத அமெரிக்கா அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தது! அமெரிக்காவின் மித மிஞ்சிய அணு ஆயுதப் பேராற்றல் சமமாகிப் போனதால், உடனே ஜனாதிபதி ட்ரூமன் மறைமுகமாய் வெப்ப அணுக்கரு ஆயுதம் உருவாக, எட்வெர்டு டெல்லருக்குப் பச்சைக் கொடி காட்டினார்! அதற்காகக் காத்துக் கொண்டிருந்த எட்வெர்டு டெல்லர், ரஷ்யாவுக்குப் பயம் உண்டாக்க ஓர் ராட்சத குண்டை உருவாக்கி, அமெரிக்காவை உலக நாடுகளில் உச்ச வலுத் தேசமாக ஆக்க உறுதி எடுத்துக் கொண்டார்! அந்த முயற்சியில் வெற்றி பெற்று 1952 நவம்பர் முதல் நாள் பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் அடோல் [Enewetak Atoll] என்னும் தீவில் முதல் ஹைடிரஜன் குண்டு வெடித்துச் சோதிக்கப் பட்டது! ஏட்டிக்குப் போட்டியாக அடுத்து சோவித் ரஷ்யாவும் எட்டு மாதங்களுக்குள், 1953 ஆகஸ்டு 12 ஆம் தேதி பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] உருவாக்கிய, முதல் வெப்ப அணுக்கரு ஆயுதத்தை வெற்றிகரமாகச் சோதனை செய்து காட்டியது! அந்த அணு ஆயுதப் பந்தயத்தைத் தொடர்ந்து 1957 இல் பிரிட்டன், 1967 இல் சைனா, 1968 இல் பிரான்ஸ் தமது முதல் ஹைடிரஜன் குண்டுகளைச் சோதனை செய்து, அமெரிக்கா, ரஷ்யாவுடன் சேர்ந்து ஐம்பெரும் வல்லரசுகள் என்று பெயர் பெற்றன!

எட்வெர்டு டெல்லரின் இடருற்ற வாழ்க்கை வரலாறு!

எட்வெர்டு டெல்லர் 1908 ஜனவரி 15 ஆம் தேதி ஐரோப்பாவின் ஹங்கேரி நாட்டில் உள்ள புடாபெஸ்ட் நகரில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்தார். ஹங்கேரியில் அரசியல், சமூகக் கொந்தளிப்புக்கள் உச்ச நிலையில் நாட்டை ஆட்டிக் கொண்டிருந்ததால், டெல்லர் தன் இளமை வாழ்க்கையில் மிகவும் அவதி யுற்றார்! அப்போது ஹங்கேரியை ஆட்சி செய்தவர், மிஞ்சிய வலது சாரிக் கொடுங்கோல் தளபதி [Fascist Dictator] நிக்கலஸ் ஹார்த்தி [Nicholas Horthy]! அவரும் ஹிட்லரைப் போல் ஓர் யூத வெறுப்பாளி! முதல் உலகப் போரும் [1919] இரண்டாம் உலகப் போரும் [1936] அடுத்தடுத்து ஹங்கேரி நாட்டைக் கலக்கி அடித்த காலங்கள் அவை! ரஷ்யச் செங்கரடி ஒருபுறமும், நாஸிக் ஜெர்மனியின் ஹிட்லர் மறுபுறமும் ஹங்கேரியை நசுக்கியதால், பல அரிய விஞ்ஞான மேதைகள் அமெரிக்காவுக்கு அகதிகளாய் ஓட வேண்டிய தாயிற்று! அவர்களில் குறிப்பிடத் தக்க அணுவியல் வல்லுநர்கள் மூவர்: லியோ ஸிலார்டு [Leo Szilard], யூஜீன் விஞ்னர் [Eugene Wigner], எட்வெர்டு டெல்லர் [Edward Teller]! அவர்கள் மூவருந்தான் ஹிட்லர் அணு ஆயுதத்தை ஆக்கி உலகை அழிப்பதற்கு முன், அமெரிக்கா அணு குண்டைத் தயாரித்து, இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த முற்பட வேண்டும், என்று ஓர் விண்ணப்பத்தில் எழுதி, ஐன்ஸ்டைனைக் கையெழுத்திட வைத்து, அமெரிக்க ஜனாதிபதி ரூஸவெல்டுக்கு அனுப்பியவர்கள்! பிறகு மன்ஹாட்டன் அணுகுண்டு திட்டத்திலேயும் பணி புரிந்தவர்கள்! மூவரிலும் கடுமையானவர், போராயுதக் கழுகு என வெறுக்கப்படும் எட்வெர்டு டெல்லர்தான் பின்னால் ராட்சத ஹைடிரஜன் குண்டைப் படைத்தவர்! பிற்காலத்தில் ஜெர்மனியின் ஹிட்லரையும், சோவியத் யூனியன் ஸ்டாலினையும் டெல்லர் மிகவும் வெறுத்ததற்கு அவரது வாலிபக் காலக் கொடும் போர்களே காரணம்!

முதலில் டெல்லர் தாய்நாட்டில் பள்ளிப் படிப்பை முடித்து விட்டுப் பிறகு ஜெர்மனிக்குச் சென்று கார்ல்ஸ்ரூ பொறியியல் கூடத்தில் [Karlsruhe Institute of Technology] பயின்று, கெமிகல் எஞ்சினியரிங் பட்டம் பெற்றார்! அதன்பின் மியூனிச்சில் [Munich] சிறிது காலம் படித்து, லைப்ஸிக் பல்கலைக் கழகத்தில் [University of Leipzig] பேராசிரியர் வெர்னர் ஹைசென்பெர்கின் [Werner Heisenberg] கீழ் பெளதிகம் பயின்று, கதிர்த்துகள் நியதி [Quantum Theory], மூலக்கூறு விஞ்ஞானம் [Molecular Physics], வானியல் பெளதிகம் [Astrophysics] ஆகியவற்றை விருத்தி செய்தார். 1930 ஆம் ஆண்டு தனது 22 ஆம் வயதில் பெளதகத்தில் Ph.D. பட்டம் பெற்றார்! மியூனிச்சில் மாணவனாக இருந்த போது, ஓடும் மின்சார வண்டியின் அடியில் விழுந்து, அவரது வலது கால் வெட்டப் பட்டுப் பிறகு பொய்க்காலில் வாழ்க்கை முழுவதும் நடக்க வேண்டிய தாயிற்று!

டெல்லர் அடுத்து டென்மார்க் சென்று அணுவியல் நியதிக்கு நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞான மேதை நீல்ஸ் போஹ்ரிடம் [Neils Bohr], படித்து அணுவியல் பெளதிகத்தில் ஆழ்ந்த திறமை பெற்றார். பிறகு 1931-1933 இ ல் ஜெர்மனியின் காட்டிங்கன் பல்கலைக் கழகத்தில் [University of Gottingen] ஆசிரியராகப் பணி யாற்றினார். அங்கே புகழ் பெற்ற ரஷ்ய விஞ்ஞானி ஜார்ஜ் காமாவுடன் [George Gamow (1904-1968)] பழகும் வாய்ப்பு டெல்லருக்குக் கிடைத்தது. அப்போது ஜெர்மனியில் ஹிட்லர் அதிபதி யானதும், அங்கே விஞ்ஞானக் கல்வி புகட்டிப் பிழைக்கலாம் என்ற டெல்லரின் ஆசை நாசமானது!

புத்துலகம் அமெரிக்கா நோக்கி டெல்லர் புறப்பாடு

1935 இல் அவரும் அவரது மனைவி அகஸ்டா ஹார்க்கனி [Augusta Harkanyi] இருவரும் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்து சென்றார்கள். அமெரிக்காவில் ஜார்ஜ் வாஸிங்டன் பல்கலைக் கழகத்தில் [Washington D.C.] சேர்ந்து டெல்லர் ஆசிரியராகப் பணி ஏற்றார். அங்கே பணிபுரிந்த விஞ்ஞான மேதை ஜார்ஜ் காமாவை [George Gamow] மறுபடியும் சந்தித்தார்! அவருடன் கூட்டாளியாகச் சேர்ந்து, டெல்லர் அணுக்கரு பெளதிகத்தில் ஆராய்ச்சிகள் செய்தார்! கன உலோகங்கள் கதிரியக்கத் தேய்வின் [Radiactive Decay of Heavier Elements] போது பீட்டா பரமாணுக்கள் [Beta Particles] வெளியேறும் முறைகளைச் சீராக வகுத்துப் புதியக் கோட்பாடுகளை எழுதினர்கள். அவற்றில் ஒன்று காமா-டெல்லர் பீட்டா தேய்வு நியதி [Gamow-Teller Theory of Beta Decay]. மேலும் விண்மீன்களின் தோற்ற ஆரம்பத்தில் எழும் வெப்ப அணுக்கரு இயக்கங்களைப் [Thermo Nuclear Reactions] பற்றியும் இருவரும் ஆராய்ச்சிகள் செய்தனர்.

1939 இல் இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்த சமயத்தில் ஜெர்மன் விஞ்ஞானிகள் ஆட்டோ ஹான், ஸ்டிராஸ்மன் [Otto Hahn & Strassmann] ஆகிய இருவரும் யுரேனிய அணுவைப் பிளந்ததாக நீல்ஸ் போஹ்ர் கொண்டு வந்த செய்தியைக் கேட்டு டெல்லர் பிரமிப்பும், அதிர்ச்சியும் அடைந்தார்! அப்போது அமெரிக்க ஜனாதிபதி பிராங்கலின் ரூஸவெல்ட் அமெரிக்க விஞ்ஞானிகளை நோக்கி, நாஸிக் ஜெர்மனியை எதிர்த்து அமெரிக்காவைப் பாதுகாக்க உதவும்படி ஆணையிட்ட போது, எட்வெர்டு டெல்லர் ஆயுத ஆக்கத்திற்குத் திட்ட மிட்டுத் தன் வாழ்வை அர்ப்பணிக்கத் துணிந்தார்!

1941 இல் டெல்லர் அமெரிக்கக் குடியினன் [U.S. Citizen] ஆகி, மன்ஹாட்டன் மறைமுக அணு ஆயுத ஆக்கத் திட்டத்தில் [Top Secret Manhattan Project] ராபர்ட் ஓப்பன்ஹைமர் தலைமையின் கீழ்ப் பணி புரியப் புகுந்தார்! சிகாகோப் பல்கலைக் கழகத்தில் என்ரிகோ ஃபெர்மியின் குழுவில் சேர்ந்து, முதல் அணுக்கருத் தொடரியக்கத்தைத் [Nuclear Chain Reaction] தூண்டும் அமைப்பாடு வேலைகளில் ஈடுபட்டார்! செப்டம்பர் 1941 இல் முதல் அணு குண்டு ஆக்கப்படும் முன்பே, என்ரிகோ ஃபெர்மிதான் டெல்லருக்கு ஹைடிரஜன் குண்டு பைத்திகார வேட்கையை எழுப்பி விட்டவர்! அணு குண்டு உண்டாக்கும் பேரளவுத் தீப்பிழம்பைப் [Hot Plasma] பயன்படுத்தி ஹைடிரஜன் மூலகத்தின் [Hydrogen Element] ஏகமூலமான, டிட்டிரியம், டிரிடியம் [Deuterium & Tritium, Isotopes of Hydrogen] பளுவைக் கொளுத்தி, வெப்ப அணுக்கரு இயக்கத்தை ஏற்படுத்தி ஒரு குட்டிச் சூரியனைப் படைத்து விடலாம் என்று ஓர் ஆலோசனையைக் கூறினார்! 1942 ஆண்டு கோடை காலத்தில் எல்லா விஞ்ஞானிகளும் அணுப்பிளவு குண்டு [Fission Bomb] ஆக்கத்தைப் பற்றி விவாதிக்கும் போது, டெல்லர் அவர் அனைவரையும் வற்புறுத்தி அணுப்பிணைவுக் [Fusion Bomb] குண்டைப் படைக்கத் தனக்குப் பின்னால் திருப்பினார்! மேலும் டெல்லருக்கு அணுகுண்டு ஆக்கத்தில் எந்த வித ஈடுபாடும் இல்லாமல், இட்ட பணி எதுவும் புரியாமல் மற்ற விஞ்ஞானிகளுடன் வேலை செய்ய மறுத்து எல்லாருக்கும் இடையூறாய் இருந்தார்! அநேக விஞ்ஞானிகளுக்கு டெல்லரின் பைத்தியகாரப் போக்கு சிறிது கூடப் பிடிக்க வில்லை!

முதல் ஹைடிரஜன் குண்டு தயாரிப்பில் எட்வெர்டு டெல்லர்

இரண்டாம் உலகப்போர் முடிந்ததும், எட்வெர்டு டெல்லர் லாஸ் அலமாஸ் நியூ மெக்ஸிகோவை விட்டு விட்டு, சிகாகோ பல்கலைக் கழகத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்து பேராசிரியர் பதவி பெற்றார். 1949 ஆகஸ்டில் சோவியத் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டை வெடித்ததும், டெல்லர் அந்த நிகழ்ச்சியைப் பயன்படுத்தி அவரது ஒரே குறிக்கோள் ஆயுதமான வெப்ப அணுக்கருக் குண்டை அதி விரைவில் தயாரித்து, அமெரிக்காவைப் பாதுகாக்க வேண்டு மென்று அரசாங்க அதிகாரிகளுடன் வாதித்தார்! ஊமைப் போர் ஊழலில் [Cold War Politics], ரஷ்யா அமெரிக்காவுக்கு முன்பே ராட்சத குண்டை ஆக்கி விட்டால், அமெரிக்காவின் கதி என்ன ஆவது என்று டெல்லர் கவலை அடைந்தார்! அவரது எச்சரிக்கைக்கு அடி பணிந்து, அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் 1950 ஜனவரி இறுதியில் ஹைடிரஜன் குண்டு திட்டத்திற்கு ஒப்புதல் தந்து அங்கீகாரமும் அளித்தார்!

லாஸ் அலமாஸ் மறைமுகத் தளத்திற்கு எதிர்மறையாக, லாரென்ஸ் லிவர்மோர் ஆய்வுக் கூடம் [Lawrence Livermore Laboratory] புதியதாகக் கலிஃபோர்னியாவில் அமைக்கப் பட்டது. அதற்கு எட்வெர்டு டெல்லர் அதிபதியாக ஆக்கப் பட்டார்! டெல்லருக்கு வெப்ப அணுக்கரு ஆய்தப் பணியில் உதவியவர் முக்கியமாக இருவர்: விஞ்ஞான மேதைகள், டாக்டர் ரிச்சர்டு கர்வின் [Richard Garwin], டாக்டர் ஸ்டனிசியா உலாம் [Stanisiaw Ulam]. அணுப்பிளவு குண்டில் எருவாகப் [Fission Bomb Fuel] பயன்படுபவை, கன உலோகம் யுரேனியம்235 அல்லது புளுடோனியம்239. நியூட்ரான் கணைகளைக் கொண்டு யுரேனிய அல்லது புளுடோனிய அணுக்கருவைப் பிளந்தால் அளப்பரிய வெப்ப சக்தி, கதிர்ச் சக்தி வெடிப்பில் வெளியாகின்றன! அணுப்பிணைவு குண்டின் எரு [Fusion Bomb Fuel] எளிய மூலகம் ஹைடிரஜனின் ஏகமூலங்கள் டியூடிரியம், டிரிடியம் அல்லது லிதிய மூலகம் போன்றவை [Isotopes of Hydrogen, Deuterium, Tritium or Lithium] பேரளவு அழுத்தம், உஷ்ணத்தில் இணைந்து அபார சக்தியை உண்டாக்குகின்றன! அணுப்பிளவு, அணுப்பிணைவு இ ரண்டு இ யக்கங்களிலும் முடிவில் நிகழும் பளு இழப்பு அல்லது பளுக் குறைபாடு [Mass Defect] இணைப்பு சக்தியாக [Binding Energy] வெளியேறுகிறது! அவ்வாறு எழும் பளு இழப்பு எவ்வளவு சக்தியை உண்டாக்கும் என்பதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய ‘பளு சக்திச் சமன்பாடு ‘ [Mass Energy Equation] மூலம் கணக்கிட்டு அறியலாம்!

ஹைடிரஜன் குண்டு மெய்யாக ஓர் ‘பிளவுப் பிணைவுக் குண்டு ‘ [A Fission Fusion Bomb]. அதனுள்ளே இரு ஆயுதங்கள் அமைப்பட்டுள்ளன. முதலாவது தூண்டும் அணுப்பிளவுக் குண்டு [Fission Bomb]. இரண்டாவது முடிவில் வெடிக்கும் ணுப்பிணைவுக் [Fusion Bomb] குண்டு. அணுப்பிளவு இயக்கம் முதலில் வெடித்து, அளப்பரிய அழுத்தமும், வெப்பமும் உண்டாகி அணுப்பிணைவு எருவை எரித்துப் பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில், சூரியன் போன்று வெப்ப அணுக்கரு இயக்கத்தைத் தூண்டி, தொடரியக்கம் நிகழ்கிறது! அப்போது பன்மடங்கு வெப்ப சக்தி உண்டாகிப் பயங்கர வெடிப்பும், தீவிரக் கதிர்வீச்சும் எழுகின்றன! அணுகுண்டு தரும் அதிர்ச்சியில் [Shockwave] இரண்டாவது அணுப்பிணைவு மூலகங்கள் அழுத்தப் பட்டு, வெடிப்பால் விளையும் பேரளவுத் திணிவும், உஷ்ணமும் [High density & Temperature] வெப்ப அணுக்கரு எருவைப் [Thermo Nuclear Fuel] பிணைவு செய்து, பிரம்மாண்டமான சக்தியை வெளியாக்கும்! இந்த முறையைப் படைத்தவர், டாக்டர் உலாம்! டெல்லர் அதைச் சற்று மாற்றி, அதிர்ச்சிக்குப் பதிலாக, அணுகுண்டு வீசும் பேரளவு கதிர்வீச்சைப் [Radiation] பயன் படுத்தி, வெப்ப அணுக்கரு எருவை அழுத்தவும், பெருங்கனல் எழுப்ப வேண்டும் என்று முடிவான அமைப்பைச் செய்தார்! முடிவான அந்த வெப்ப அணுக்கரு முறை ‘டெல்லர்-உலாம் அமைப்பு ‘ [Teller-Ulam Configuration] என அழைக்கப் படுகிறது.

1952 நவம்பர் முதல் தேதி டெல்லர்-உலாம் அமைப்பில் தயாரான 10 மெகா டன் TNT வெடிப்பாற்றல் உள்ள முதல் ஹைடிரஜன் குண்டு, பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் அடோல் [Enewetak Atoll] என்னும் தீவில் வெற்றி கரமாக வெடிக்கப் பட்டுச் சோதிக்கப் பட்டது! அந்த ராட்சத குண்டு ஹிரோஷிமாவில் போட்ட முதல் குண்டை விட 700 மடங்கு பேரழிவாற்றல் கொண்டது! ஹைடிரஜன் குண்டுகளின் அழிவுச் சக்திக்கு ஓர் எல்லையே இல்லை! பொதுவாக அவற்றின் அழிவாற்றல் அணுகுண்டை விட 100 முதல் 1000 மடங்கு அதிகமானது! ஹைடிரஜன் குண்டில் பயன்படும் அணுக்கரு எரிப்பண்டம் மலிவானது! எரிப்பண்டத்தின் அளவுக்குத் தக்கவாறு அழிவாற்றலைக் கூட்டிக் குறைக்கலாம்! முரட்டுப் பிடிவாதத்தில் இறுதியாக ராட்சத அழிவு ஆயுதத்தைத் தயாரித்து வெற்றி பெற்ற எட்வெர்டு டெல்லர், ஆயுதச் சோதிப்புக்குப் பின்பு பல உலக விஞ்ஞான மேதைகளின் வெறுப்புக்கும், பகைமைக்கும் ஆளானார்!

உலக நாடுகளின் அணு ஆயுதப் பந்தயம்! ஆயுதக் கட்டுப்பாடு!

அணுகுண்டுகளின் வெடிப்பாற்றலை கிலோ டன் டியென்டியில் [Kiloton TNT] குறிப்பிடும் போது, குறைந்தது 1000 மடங்கு அதிக அழிவு சக்தியுடைய, ஹைடிரஜன் குண்டுகளை மெகா டன் டியென்டியில் [Megaton TNT] கணக்கிடுகிறார்கள்! 50 மெகா டன்னுக்கும் மேற்பட்ட அபார அழிவாற்றல் உடைய வெப்ப அணுக்கரு குண்டுகள் இதுவரை வெடிக்கப் பட்டுள்ளன! ஆனால் நாட்டிடையே ஏவப்படும் கட்டளை ஏவுகணைகளில் [Intercontinental Ballistic Missiles, ICBM] 100 கிலோ டன் முதல் 1500 கிலோ டன் வெடிப்பாற்றல் உடைய குட்டி ஹைடிரஜன் குண்டுகளே பயன் படுகின்றன! மின்கணனி மூலம் செலுத்தப்படும் கட்டளை ஏவுகணைகள் பூகோளத்தின் பாதி தூரத்தை 20 அல்லது 25 நிமிடங்களில் பயணம் செய்து, துள்ளியமாக சில ஆயிரம் அடிகளுக் கருகில் குறியிட்ட இடத்தைத் தாக்குகின்றன! 1980-1990 ஆண்டுகளில் மட்டும் 40,000 பேரளவு அழிவியற்றும் வெப்ப அணுக்கரு ஆயுதங்கள் [Weapons of Mass Destruction] தயாரிக்கப் பட்டு, மனித இனத்தை அழித்துவிடப் பயமுறுத்திக் கொண்டிருந்ததாக அறியப் படுகின்றது!

35 ஆண்டுகள் அமெரிக்கா ரஷ்யா இரு நாடுகளும் ஏட்டிக்குப் போட்டியாய் அணு ஆயுதங்களையும், அவற்றை ஏந்திச் செல்லும் கட்டளை ஏவுகணை களையும் அதிகரித்து அடுக்கிக் கொண்டே போயுள்ளன! 1980 ஆம் ஆண்டுக்கு முன்பு அமெரிக்காவிடம் 4300 மெகாடன் அழிவாற்றல் உள்ள 4000 போராயுதக் குண்டுகள் [Warheads] இருந்தன! அப்போது சோவியத் ரஷ்யாவிடம் 3100 மெகாடன் அழிவாற்றல் கொண்ட 1800 போராயுதக் குண்டுகள் தயாராயின! ‘திட்ட மிட்ட போராயுதக் கட்டுப்பாடு உரையாடல் ‘ [Strategic Arms Limitation Talks, SALT I (1972-1977) & SALT II (1981-1985)] இருமுறை இரு நாடுகளுக்கும் இடையே நிகழ்ந்துள்ளன! ஆயினும் முடிவில் நடந்த தென்ன ? இரு நாடுகளும் 1980 ஆண்டுக்குப் பிறகு பேரளவில் போராயுதங்களைப் பெருக்கிக் கொண்டன! அமெரிக்கா மட்டும் 10,000 போராயுதக் குண்டுகளை உற்பத்தி செய்துள்ளது!

1990 ஆண்டுக்குப் பிறகு சோவியத் யூனியனின் ஆதிக்கம் குடை சாய்ந்து, அமெரிக்க ரஷ்ய நாடுகளுக்கு இடையே ஊமைப் போரின் உக்கிரம் குறைந்து போனதும், அந்த அழிவு ஆயுதங்களின் எண்ணிக்கைக் குறைந்து கொண்டே வருகிறது!

வாள்முனையை ஏர்முனையாய் உலக நாடுகள் மாற்றுமா ?

அணுகுண்டு உற்பத்தி, அணு ஆயுதச் சோதனைகளை உடனே நிறுத்தும்படி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், லியோ ஸிலார்டு, லினஸ் பாலிங், ஜேம்ஸ் பிராங்க், பெர்டிரான்டு ரஸ்ஸல் போன்ற உலக மேதைகள் கூக்குரல் எழுப்பினர்! ஆனால் 1963 இல் ‘அணுகுண்டு சோதனைத் தடுப்பு உடன்படிக்கையை ‘ [Nuclear Test Ban Treaty] முதன் முதல் எதிர்த்து நின்று, அதை நீக்கும்படி வற்புறுத்திய முதல் விஞ்ஞானி எட்வெர்டு டெல்லர்! அணு ஆயுதங்களை பூமிக்கு மேலே சோதித்துத் தீவிரக் கதிரியக்கப் பொழிவுகளை உண்டாக்கக் கூடாது என்பதே உடன்படிக்கையின் விதி! ஆனால் அமெரிக்கா கொண்டு வந்த ‘அணுவியல் வெடிப்பின் அமைதிப் பயன்பாடுகள் ‘ [Peaceful Uses for the Atomic Explosions] என்னும் கொள்கையை டெல்லர் கடைப்பிடித்து, ‘ஏர்முனைத் திட்டத்தின் தீரன் ‘ [Champian of Project Plowshare] என்ற பெயரைப் பெற்றார்! ‘உலக நாடுகள் வாள்முனையை ஏர்முனையாக மாற்ற வேண்டும்! ‘ என்று பைபிள் வேதநூலில் ஏசுவின் சீடர், இ சையா [Isaiah] கூறி யிருக்கிறார். ஆனால் உலக அரங்கில் ஏர்முனைத் திட்டம் [Project Plowshare] பின்பற்றப் படாது படுதோல்வி யுற்றது! ஆக்க வினைகளுக்கும், அமைதியைப் பரப்புவதற்கும் அணு ஆயுதங்கள் ஒருபோதும் பயன் படுத்தப்பட வில்லை! உலக நாடுகள் இப்போது தமது வாள்களின் முனைகளைக் கூர்மையாகத் தீட்டுவதோடு, புதுப் புது ஆயுதங்களை உற்பத்தி செய்து பலத்தைப் பெருக்கிக் கொண்டிருக்கின்றன!

அமெரிக்காவின் பாதுகாப்புக் கொள்கையில், முற்பட்ட அணு ஆயுதங்களின் விருத்திக்கும், அவற்றைச் சோதிப்பதற்கும் எப்போதும் சலிப்படையாமல் டெல்லர் பேராதரவு அளித்தார்! வியட்நாம் போரின் சமயத்தில் அவர் அளித்த பயங்கர ஆலோசனைகளைக் கேட்டு, கண்டனர் செய்தவர் பலர், டெல்லரைப் ‘போர்க் குற்றவாளி ‘ [War Criminal] என்று இகழ்ந்தனர்! 1980 ஆண்டுகளில் ஜனாதிபதி ரேகனுக்கு ‘வானவெளிப் போர்கள் ‘ [Star Wars] என்ற திட்டமிட்டப் பாதுகாப்பு ஏற்பாட்டுக்கு [Strategic Defense Initiative] எட்வெர்டு டெல்லர் ஆயுத ஆலோசனைகள் பலவற்றை அளித்திருக்கிறார்!

எட்வெர்டு டெல்லரின் முரண்பாடான பேச்சுகள்!

அமெரிக்க அணு ஆயுத வினைகளில் வேலை செய்த விஞ்ஞானிகள் எல்லோரைக் காட்டிலும் கடுமை, முரண்பாடு மிகுந்து பலரது எதிர்ப்புக்களையும் மீறி, வெப்ப அணுக்கரு ஆயுதத்தை ஆக்கியே ரஷ்யாவை மிஞ்ச வேண்டும் என்று ஒற்றைக் குறிக்கோளில் வெற்றி பெற்றக் கர்மவாதி, எட்வெர்டு டெல்லர்! படைப்புத் திறமை மிக்க உன்னத விஞ்ஞானி என்று பாராட்டுபவர் சிலர்! பயங்கரப் போக்குடைய விஞ்ஞானி என்று அவரைப் பழித்தவர்களும் உளர்! 1954 இல் நடந்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் மீது தொடரப் பட்ட பாதுகாப்பு ஐயப்பாடு விசாரணையில், எட்வெர்டு டெல்லர் ஓப்பன்ஹைமருக்கு எதிராகச் சாட்சி சொல்லி விஞ்ஞானிகளின் வெறுப்பைத் தேடிக் கொண்டார்! ஓப்பன்ஹைமர் பொதுடமைத் தோழர்களின் அனுதாபியாக இருந்ததாலும், தான் ஹைடிரஜன் குண்டு தயாரிக்க முற்படும் போதெல்லாம், அவர் பல முறைத் தடுத்ததாலும், மனக் கசப்பில் டெல்லர் ஓப்பன்ஹைமருக்கு ஆதரவாகப் பேசவில்லை! அவரது வயது முதிர்ந்த காலத்தில், தான் ஓப்பன்ஹைமருக்கு எதிராகச் சாட்சி சொல்லியது தவறு என்று ஒப்புக் கொள்கிறார்! ‘அப்போதும் சரி, இப்பவும் ஓப்பன்ஹைமர் அமெரிக்காவின் மேல் கொண்டிருந்த தேசப் பற்றின் மீது எனக்கு ஐயப்பாடு இல்லை ‘ என்று டெல்லர் தன் நூல் ஒன்றில் குறிப்பிட் டுள்ளார்!

நோபெல் பரிசைப் பற்றி ஒருவர் டெல்லரைக் கேட்ட போது அவர் கூறியது: “எனக்கு நோபெல் பரிசு கிடைத் திருந்தால், எதற்காக உனக்குக் கொடுத்துத் தொலைத்தார்கள், என்று கடிவார்கள் பொது நபர்கள்! அதே சமயம் எனக்கு நோபெல் பரிசு கிடைக்கா விட்டால், ஏனப்பா உனக்குக் கொடுக்காமல் போனார்கள், என்றும் குறையாடுவார்கள்! முதலில் கடிந்ததை விட, இரண்டாவது குறைபாடு எனக்குச் சரியாகத் தோன்றுகிறது!”  “மன்ஹாட்டன் திட்டத்தில் சேர்ந்து முதல் அணுகுண்டு ஆக்கியதைப் பற்றியும், அடுத்து ராட்சத வெப்ப அணுக்கரு ஆயுதத் தயாரிப்பு செய்ததைப் பற்றியும் நான் குற்ற உணர்வில் வருந்துகிறேனா, என்று பலர் என்னைக் கேட்டிருக்கிறார்கள்! அதற்கு எனது பதில், இல்லை! இல்லை! இல்லை! அணுகுண்டில் மாண்டு போனவருக்காக, காயம் அடைந்தோருக்காக நான் மிகவும் வருந்துகிறேன்! ஆனால் அணு ஆயுத திட்டங்களில் நான் பங்கெடுத்த தற்கு எனக்கு எந்த வருத்தமும் வில்லை! ‘இரண்டாம் உலகப் போரின் சமயத்தில், அணு ஆயுதப் பணியில் நாங்கள் யாவரும் ஈடுபடாமல் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் ? ‘ என்று நம்மைப் பார்த்துப் பதில் கேள்வி கேட்கிறார்! அவரது ஒரே ஓர் அந்தரங்க பயம், ஹிட்லர் அணு ஆயுத உற்பத்தியில் முந்திக் கொண்டிருந்தால், உலகின் கதி என்ன வாயிருக்கும் என்பதே!

எட்வெர்டு டெல்லர் பெற்ற மதிப்புகள், பரிசுகள்!

டெல்லர் எழுதிய நூல்கள்: விஞ்ஞான ரகசியங்களைப் பற்றிய உரையாடல்கள் [Conversations on the Dark Secrets of Physics (1991)], கத்தியை விடக் கவசமே மேல் [Better a Shield Than a Sword (1987)], எளிமையை நோக்கி முற்பாடு [Pursuit of Simplicity (1980)], விண்ணிலிருந்தும், மண்ணிலிருந்தும் சக்தி [Energy from Heaven & Earth (1979)]. எட்வெர்டு டெல்லர் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பரிசு, அடுத்து 1962 இல் அமெரிக்காவின் மதிப்புள்ள என்ரிகோ ஃபெர்மி பதக்கத்தையும் பெற்றார். ஸ்ரேல் பொறியியல் கூடத்தின் ஹார்விப் பரிசு, மற்றும் தேசிய விஞ்ஞானப் பதக்கத்தையும் பெற்றார்.

டெல்லர் 1956 முதல் 1958 வரை அமெரிக்க அணுசக்திப் பேரவையின் [U.S. Atomic Energy Commission] ஆலோசகராக இருந்திருக்கிறார். அவர் அமெரிக்க ஜனாதிபதியின் வெண்ணிற மாளிகை விஞ்ஞானக் குழுவினரின் [White House Science Council] அங்கத்தினராகவும், அமெரிக்க விமானப்படை விஞ்ஞான ஆலோசகராகவும் [Scientific Advisory Board of the U.S. Air Force] இருந்திருக்கிறார்! மேலும் அவர் அமெரிக்க அணுவியல் கழகம் [American Nuclear Society], அமெரிக்க விஞ்ஞானக் கழகம் [American Academy of Science] ஆகியவற்றின் சிறப்புநராக ஆக்கப் பட்டார்.

எட்வெர்டு டெல்லர் 2003 இல் காலமானார்.  95 வயதில் கண்கள் ஒளி மங்கி, காதுகள் கேட்கும் திறனற்று அவர் தள்ளாடிக் கொண்டிருந்தாலும் அவரது மூளை கூர்மை மழுங்காமல் சீராக இயங்கிக் கொண்டிருந்தது! அவரது அருமை மனைவி 2000 ஆம் ஆண்டு காலமானார்.  அடிக்கடி அவர் கூறும் ரோமானியப் பொன்மொழி, ‘ஒருவர் நாட்டில் அமைதி நிலைநாட்ட விரும்பினால் அவர் போருக்குத் தயார் செய்ய வேண்டும் ‘ என்பது. ‘சமாதானத்தை விழைவோர் கையில் உன்னத ஆயுதப் பலம் இருந்தால் தான், உலகில் அமைதி நிலவும்’ என்று அழுத்தமாகக் கருதியவர்.

******************

Information:
1.  http://en.wikipedia.org/wiki/Edward_Teller (January 10, 2009)

2. Creams & Dreams.org Bomb Pioneer Edward Teller Dies (September 10, 2003)

++++++++++

S. Jayabarathan (jayabarathans@gmail.com)  March 21, 2014

நாசாவின் விண்வெளிப் பயணங்களில் பங்கெடுத்த விஞ்ஞானி கார்ல் சேகன்

கார்ல் சேகன்

(1934-1996)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

++++++++++++++++

 

“பிரபஞ்சத்தை நம்மைப்போல் வேறு உயிரினங்களும் பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டுபிடித்ததின் முக்கியத்துவம் மிகவும் மகத்தானது!   அது மனித வரலாற்றில் பதிக்க வேண்டிய விண்வெளி யுகத்தின் ஓர் சிகரமான நிகழ்ச்சி ஆகும்”

கார்ல் சேகன்

அண்ட கோள ஆராய்ச்சியில் பங்கெடுத்த அமெரிக்க விஞ்ஞானி

1957 ஆம் ஆண்டு கொலராடோ பல்கலைக் கழகத்தில் அணுக்கருப் பெளதிகம் [Nuclear Physics] படித்துக் கொண்டிருந்த ஒரு வானியல் பெளதிக [Astrophysics] மாணவர், அமெரிக்கா 1970 ஆம் ஆண்டுக்குள் சந்திர மண்டலத்தில் இறங்கி விடும் என்று சித்தாந்த ஞானிபோல் முன்னறிவித்தார்! அவ்வாக்கு மொழி மெய்யாக நிகழ்ந்தது! அதைக் கூறிய தீர்க்க தரிசி வேறு யாரு மில்லை! அவர்தான் வானியல் மேதை டாக்டர் கார்ல் சேகன்!

அமெரிக்காவின் ஐநூறு ஆண்டு வரலாற்றில், விஞ்ஞானத்தைக் கற்றுப் பட்டமேதை ஆகி, அண்டவெளிப் பயணங்களில் பங்கெடுத்து, கோடான கோடி மைல்களுக்கு அப்பால் பரிதியைச் சுற்றி நகர்ந்து செல்லும் பிற அண்டங்களில் பூமியைப் போல், வேறு உயிரினங்கள் உள்ளனவா என்ற ஆராய்ச்சி செய்யப் புகுந்தவர்களில் முதல் விஞ்ஞானி கார்ல் சேகர்! பொது நபர்கள் எளிதில் புரியும்படி, விஞ்ஞானக் கருத்துக்களைப் புத்தகங்கள் மூலம், கட்டுரைகள் வாயிலாய், சொற்பொழிவுகள் நிகழ்த்தி அமெரிக்காவில் புகழ் பெற்றவர், கார்ல் சேகன்! கசப்பான விஞ்ஞானப் படைப்புகளை, இனிப்பான நிகழ்ச்சிகளாய் இதிகாசக் கதைகள் மூலம் எளிதாக விளக்கிக் கேட்போரைக் கவர்ந்தவர், கார்ல் சேகன்!

Mars Exploration

கார்ல் சேகன் வானியல் [Astronomy] விஞ்ஞானத்தின் பல கிளைகளில் பயிற்சி பெற்ற அறிவாளி. பிரபஞ்சவியல் [Cosmology] விஞ்ஞானத்தில் பாண்டித்தியம் உடையவர். சித்தாந்த விஞ்ஞானக் கோட்பாடுகளில் [Philosophy of Science] வேட்கை மிகுந்தவர். எல்லாவற்றையும் விட கார்ல் சேகனுக்குப் பூமியில் தோன்றிய உயிரினங்களின் மூலத்தைப் [Origin of Life on Earth] பற்றி ஆழ்ந்து அறியவும், அதேபோல் பிரபஞ்சத்தின் வேறு அண்டங்களிலும் உயிரினங்கள் [Exobiology] இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை உறுதியாக எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஆராய்ச்சிகள் செய்யவும் விரும்பினார்! அந்த வேட்கையை நிறைவேற்ற நாசாவின் [NASA, National Aeronautics & Space Administration] அண்டவெளிப் படையெடுப்புத் திட்டங்களில் நேரடியாகப் பங்கேற்று ஆய்வுகளில் நேரடியாக ஈடுபட்டார்! 1960-1990 ஆண்டுகளில் அமெரிக்காவின் மாரினர் [Mariner], வைக்கிங் [Viking 1, 2], பயனீயர் [Pioneer], வாயேஜர் [Voyager], காலிலியோ [Galileo] ஆகிய மனிதரற்ற விண்வெளிக் கப்பல்களின் [Unmanned Spaceships] பயணங்களில் பங்கெடுத்து வெள்ளி, செவ்வாய், வியாழன் ஆகிய அண்ட கோளங்களில் நுண்ணுயிர் ஜந்துக்கள் [Micro-Organisms] உள்ளனவா என்ற சோதனைகளில் கலந்திருக்கிறார்.

வானியல் வல்லுநர் கார்ல் சேகனின் வாழ்க்கை வரலாறு

‘பிரபஞ்சத்தை நம்மைப்போல் வேறு உயிரினங்களும் பகிர்ந்து கொள்கின்றன என்று கண்டுபிடிப்பதின் முக்கியத்துவம் மிகவும் மகத்தானது! அது மனித வரலாற்றில் பதிக்க வேண்டிய விண்வெளி யுகத்தின் ஓர் சிகரமான நிகழ்ச்சி ஆகும் ‘, என்று ஒரு சொற்பொழிவில் கார்ல் சேகன் கூறி யிருக்கிறார்!

1934 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் நாள், கார்ல் சேகன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் புலம் பெயர்ந்த ஓர் யூத குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் சாமுவெல் சேகன் [Samuel Sagan] மெலிந்த உருவம், சிறப்பு அம்சம் எதுவும் அற்ற உருவம், செந்நிறத் தலைமயிர் மட்டும் பளிச்செனத் தெரியும் தோற்றம்! தாயார் ரேச்சல் குரூபர் சேகன் [Rachel Gruber Sagan] எடுப்பான தோற்றம், மிடுக்கான சொல்லாட்சி கொண்டவள். பூர்வீகத் தாய்வழிப் பாட்டனார், லைப் குரூபர் [Leib Gruber] ஐரோப்பாவில் ஆஸ்டிரிய ஹங்கேரி இனத்தவர்! அவர் பிறந்த இடம் யுக்ரேயினில் உள்ள கலிஸியா [Galicia in Ukraine]. ஹீஃப்ரூ மொழியில் ‘சேகன் ‘ என்றால் ‘தளபதி ‘ என்று அர்த்தம்!

தந்தையார் சாமுவெல் சேகன் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் பயின்று மருந்தியல் பட்டம் [Pharmacy Degree] பெற்றவர். மகனைச் சிறு வயதிலிருந்தே சிறந்த முறையில் பெற்றோர்கள் வளர்த்தார்கள். மன்ஹாட்டனில் இயற்கை வரலாறு பொருட் காட்சி மாளிகை [Museum of Natural History], ஹேடன் விண்வெளிக் கோள மாளிகை [Hayden Planetarium] ஆகியவற்றுக்கு மகனை அழைத்துச் செல்வார்கள். காரிருள் வானில் கண்சிமிட்டும் விண்மீன்கள் கார்ல் சேகனுக்குப் புதிராகக் காட்சி அளித்தன! ‘செவ்வாயின் பணிமாது ‘ [Maid of Mars], ‘செவ்வாய்ச் சதுரங்கன் ‘ [Chessman of Mars], ‘செவ்வாய் யுத்தப் பிரபுக்கள் ‘ [The Warlords of Mars], போன்ற விஞ்ஞானப் புதினங்களைச் சிறுவன் சேகன் படித்தான்! 1940 இல் ஆறு வயதுச் சிறுவன் வால்ட் டிஸ்னியின் ஃபென்டாஸியா [Fantasia] திரைப் படத்தில் பூர்வீக விலங்கினங்களைக் [Prehistoric Animals] கண்டு பூரித்துப் போனான்! தனியார் உயர்நிலைப் பள்ளியில் சிறப்பாக கிரேக்க ரோமானிய இதிகாசங்களை எடுத்துப் படித்தான்! பனிரெண்டு வயதில் பறக்கும் தட்டுகளைப் [Flying Saucers] பற்றிக் கேள்விப் பட்டு, அவை பிற அண்டங்களி லிருந்து பூமிக்கு வருகின்றன என்று உறுதியாக நம்பினான்!

Fig 4 Earth & Mars

புகழ் பெற்ற எழுத்தாளர், ஆர்தர் கிளார்க் [Arthur C. Clarke] எழுதிய ‘விண்வெளி அண்டங்களுக் கிடையே பயணம் ‘ [Interplanetary Flight] என்னும் நூலைப் படித்த பிறகு கார்ல் சேகனின் வாழ்க்கையில் ஒரு பெரும் திருப்பம் ஏற்பட்டது! அதைத் தொடர்ந்து அண்டவெளி விஞ்ஞான மேதைகளான ரஷ்ய விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் [George Gamov], பிரிட்டிஷ் விஞ்ஞானி ஆர்தர் எட்டிங்டன் [Arthur Eddington], உயிரியல் விஞ்ஞானி ஜூலியன் ஹக்ஸ்லி [Julian Huxley] ஆகியோரின் நூல்களில் ஈடுபாடு கொண்டார்!

அமெரிக்க வானியல் விஞ்ஞானி சைமன் நியூகோம் [Simon Newcomb] எழுதிய ‘எல்லோருக்கும் வானியல் விஞ்ஞானம் ‘ [Astronomy for Everybody] என்னும் புத்தகத்தில், ‘செவ்வாய் மண்டலத்தில் உயிரினங்கள் வாழ்வதுபோல் தோன்றுகிறது! அச்செய்தி ஒரு காலத்தில் மெய்யானதா என்று கேட்கப் பட்டது! இப்போது பொதுவாக ஒப்புக் கொள்ளப் பட்டச் செய்தி, அது! ‘ என்று எழுதி யிருந்தது! அவ்வாசகம் கார்ல் சேகன் அண்ட கோளங்களில் உயிரினங்கள் வாழலாம் என்ற கருத்தை மேலும் வலியுறுத்தியது!

Fig 5 Chandrasekar & Kuiper

உயர்நிலைப் படிப்பை முடித்த கார்ல் சேகன், மேற்படிப்புக்குச் சிகாகோ பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அப்போது அங்கு பெளதிகப் பேராசிரியராக இருந்த விஞ்ஞான மேதைகள், நோபெல் பரிசு பெற்ற என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi], சுப்ரமணியன் சந்திரசேகர் [S. Chandrasekhar], மற்றும் எட்வெர்டு டெல்லர் [E. Teller], ஜெரால்டு குயிபர் [Gerald Kuiper]! கார்ல் சேகனின் முதல் பெளதிகக் குரு வானியல் வல்லுநர், சந்திரசேகர்! கணிதத்தில் வலுவற்ற கார்ல் சேகன், கணிதப் புலியான சந்திரசேகரை எதிரே சந்திக்க விரும்பாது, சுற்றி போய்விடுவார் என்று அறியப் படுகிறது! 1955 இல் கார்ல் சேகன் பெளதிகத்தில் B.A. பட்டம் பெற்றார். பிறகு வானியல், விண்வெளிப் பெளதிகம் [Astronomy, Astrophysics] இரண்டையும் பயின்று, ‘அண்ட கோளங்களின் பெளதிக ஆய்வுகள் ‘ [Physical Studies of Planets] என்னும் கோட்பாடை எழுதி 1960 இல் டாக்டர் பட்டத்தையும் பெற்றார். அந்தக் கோட்பாட்டில் முதன் முதலாகக் கார்ல் சேகன் ‘சுக்கிரனில் கண்ணாடி இல்ல விளைவு ‘ [Greenhouse Effect on Venus] என்னும் தலைப்பில் அங்கே உள்ள அடர்த்தியான வாயுக்கோளச் சூழ்மண்டலத்தில் சுற்றிச் சுற்றி நிகழும் கொதிப்பு வெப்பத்தைப் பற்றி எழுதிள்ளார்!

Fig 6 Three Professors

1960-1962 ஆண்டுகளில் கார்ல் சேகன் பெர்கெலி, கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தில் [University of California, Berkeley] ஆராய்ச்சி நபராகப் [Research Fellow] புகுந்தார். அடுத்து ஹார்வேர்டு பல்கலைக் கழகத்தில் 1962-1968 ஆண்டுகளில் ஆசிரியர் பணியில் இருந்து கொண்டே, சுமித்ஸோனியன் வானியல் பெளதிக ஆய்வுக் கூடத்தில் [Smithsonian Astrophysical Laboratory] ஆராய்ச்சிகளும் செய்தார். 1968 இல் கார்ல் சேகன் நியூ யார்க் சென்று இதாகாவில் கார்நெல் பல்கலைக் கழகத்தின் [Cornell University, Ithaca], விண்வெளிக் கோள ஆய்வுக் கூடத்தின் ஆணையாளராகப் [Director, Laboratory for Planetary Studies] பதவி ஏற்றார். 1970 இல் விண்வெளி விஞ்ஞானம், வானியல் துறைகளுக்குக் கார்நெல் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஆகிக் காலமாகும் வரை [1996] அப்பதவியில் அங்கே இருந்தார்.

Clipboard02

கல்லூரியில் அவர் படித்த காலத்தில் கார்ல் சேகனைக் கவர்ந்த விஞ்ஞான மேதைகள், அணுவைப் பற்றி விளக்கிய கிரேக்க ஞானி டெமாகிரிடஸ் [Democritus (460-370 B.C)], சூரிய குடும்பக் கோளங்களின் நகர்ச்சி நியதிகளை ஆக்கிய ஜெர்மன் விஞ்ஞானி, ஜொஹானஸ் கெப்பளர் [Johannes Kepler (1571-1630)], அண்ட கோளங்களின் ஈர்ப்பியல்களைக் கண்டு பிடித்த ஆங்கில விஞ்ஞானி, ஐஸக் நியூட்டன் [Isaac Newton (1642-1727)], பூமியில் உயிரினங்களின் தோற்ற மூல வளர்ச்சியைத் தொகுத்த பிரிட்டிஷ் விஞ்ஞானி, சார்லஸ் டார்வின் [Charles Darwin (1809-1882)], ஒப்பியல் நியதியைப் படைத்த ஜெர்மன் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் [Albert Einstein (1879-1955)] ஆகியோர்.

Fig 7 Jet Propulsion Laboratory

அண்டங்களில் உயிரினங்கள் தோன்றலாம் என்பதற்கு ஆதரங்கள்

வானியல் [Astronomy] இதுவரைத் தூய விஞ்ஞானமாகப் பெளதிகம், ரசாயனம் என்னும் இரு பிரிவுகளாய் மட்டுமே வளர்ந்து வந்தது. இத் தூய விஞ்ஞானத்தில் வெறும் யூகிப்புக் கோட்பாடுகளை விளக்கும் மனிதவியல் துறையை [Anthropology] முதன் முதலில் இணைத்தவர், கார்ல் சேகன்! மனிதவியல் துறை பூமியின் மூலத்தோற்றம், உயிரினங்களின் எழுச்சி, அவற்றின் வளர்ச்சிக்காக அமைந்த சூழ்மண்டலம் ஆகியவற்றை ஆராய்கிறது! இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வானியல் [Astronomy], உயிரினங்களின் மூல வளர்ச்சியான பரிணாமம் [Evolution], உயிரியல் [Biology], சூழ்நிலை [Environment] ஆகிய முப்பெரும் துறைகளை ஒருங்கிணைத்து, அண்டவெளி ஆய்வுக் கப்பல்களின் பயணத்தில் பங்கேற்றுச் சோதனை செய்தவர் கார்ல் சேகன்!

Our Earth

அவர் கல்லூரியில் பயிலும் போது, அவரது உயிரியல் மூலச் சிந்தனைக் கிளரி விட்ட விஞ்ஞான மேதைகள், ஹெர்மன் முல்லர் [Hermann Muller], ஹெரால்டு யுரே [Herold Urey], ஜோஸுவா லெடெர்பர்க் [Joshua Lederberg] ஆகியோடுடன் ஆராய்ச்சி செய்து பயிற்சி பெற்றார். மூவரும் நோபெல் பரிசு பெற்றவர்கள்! மூவரும் விண்வெளி அண்டங்களில் உயிரின வாழ்வில் [Extra Terrestrial Life] நம்பிக்கை உள்ளவர்கள். கார்ல் சேகனின் குருவான ஹெர்மன் முல்லர் 1926 இல், ‘கதிர்வீச்சுகள் [Radiations] உயிரின மூலவிகளைத் துண்டித்து [Gene Mutation], உயிரினத் தோற்ற பரிணாமத்திற்கு [Evolution] அடிப்படைக் காரணமாகின்றன ‘ என்று முதலில் அறிவித்தார்! அடுத்து பிரிட்டிஷ் உயிர் மூலவி விஞ்ஞானி ஜான் ஹால்டேன் [Genetist, John Haldane], ரஷ்ய உயிரியல் ரசாயன விஞ்ஞானி அலெக்ஸாண்டர் ஓபரின் [Alexander Oparin] இருவரும், ‘புறவூதா ஒளி [Ultraviolet Light], மின்னல், பூமியின் ஏனைய சக்தி மூலங்கள் [Sources of Energy] எளிய ரசாயன மூலக்கூட்டுகளை [Simple Compounds] சிக்கலான ஆர்கானிக் மூலக்கூட்டுகளாக [Complex Organic Compounds] மாற்றுகின்றன ‘, என்று கண்டு பிடித்தார்கள்!

Fig 8 Mariner Space Probe

நாசா அண்டவெளிப் பயணங்களில் பங்கெடுத்த கார்ல் சேகன்.

1960 ஆம் ஆண்டில் டாக்டர் கார்ல் சேகன் சந்திரனில் இறங்கும் அபொல்லோ [Lunar Landing, Apollo] திட்டத்திற்கும், சுடர் ஒளி வீசும் சுக்கிர கோளை ஆய்வு செய்யும் மாரினர் [Venus Probe, Mariner] திட்டத்திற்கும் பணி செய்ய அழைக்கப் பட்டார். கார்ல் சேகன் கலிஃபோர்னியா பொறியியல் கூடத்தின் [California Institute of Technology] ஜெட் உந்தப்படும் ஆய்வுச்சாலைக்கு [Jet Propulsion Laboratory] அடிக்கடி விஜயம் செய்யும் விஞ்ஞானி. 1961 இல் கார்ல் சேகனும், வில்லியம் கெல்லாக் [William Kellogg] இருவரும் ‘செவ்வாய், வெள்ளி அண்டங்களின் சூழ்வெளி ‘ [The Atmosphere of Mars & Venus] என்னும் வெளியீட்டின் தொகுப்பாளர் ஆகப் பணி செய்கையில், அவர்கள் அந்நூலில் குறிப்பிட்டது: ‘இதுவரைக் கிடைத்த சான்றுகளைக் கொண்டு முழுமையாகப் பார்த்தால் செவ்வாயில் உயிரினங்கள் வாழ்வதாக யூகிக்கலாம்! அதற்கு முதற் தேவை ஈரம், நீர் ஆவி [Moisture, Water Vapour] போன்றவை. ஒரு காலத்தில் செவ்வாய்த் தளம்மீது நீர் இருந்திருக்கலாம். நமக்குத் தெரிந்த குன்றிய அளவு சான்றில் நாம் அறிவது, நுண்ணிய ஜந்துகள் [Micro-Organisms] அங்கே இருக்கலாம் என்பதே! பெரும் ஜந்துக்கள், மாபெரும் விலங்கினங்கள் அங்கே உள்ளன என்பதற்கு ஆதரமோ அன்றி எதிர்ப்போ எதுவும் இல்லை! செவ்வாய்க் கோளில் உயிரினங்கள் வாழ்கின்றனவா என்ற பண்டை காலத்திய கேள்விக்குப் பதில் கிடைப்பது, அடுத்த பத்தாண்டுகளில்தான்! ‘

Fig 9 Viking Mission to Mars

அமெரிக்கா மனிதரற்ற அண்டவெளிக் கப்பல்களை சூரிய மண்டலத்தின் உட்கோள்களான வெள்ளி, செவ்வாய், புதன் ஆகியவற்றை முதலில் ஆராய மாரினர் [Mariner], வைக்கிங் [Viking], பயனீயர் [Pioneer] போன்ற விண்வெளி ஆய்வுச் சிமிழ்களை 1970-1980 ஆண்டுகளில் தொடர்ந்து ஏவியது. கார்ல் சேகன் தனது Ph.D. கோட்பாடிலே, வெள்ளி அண்டமானது ஓர் கண்ணாடி இல்லம்போல் [Greenhouse Effect] பரிதியின் வெப்பத்தை உள்ளே சுற்றிச் சுற்றிக் கொப்பரைபோல் [Boiler] கொதிக்கும் நரக கோளமாக [Hellish Planet] மாறி, எந்த வித உயிரினமும் தோன்றாதவாறு ஆகிவிட்டது என்று 1960 ஆம் ஆண்டிலே முடிவு செய்தவர்! ஆனால் செவ்வாய்க் கோளம் கொதிகலமாக இல்லாது, குளிர்ந்து அதன் மத்திய ரேகைப் பகுதிகளில் பகலில் [20 C/70 F] வெப்பமும், இரவில் [-100 C/-150 F] குளிர்ச்சியும் உள்ளதால், உயிரினங்கள் தோன்ற வாய்ப்பு இருக்கிறது, என்று அவரது அந்தராத்மா பல்லாண்டுகள் சொல்லிக் கொண்டிருந்தது!

1960-1970 ஆண்டுகளின் இறுதிக் காலங்களில் கார்ல் சேகன், செவ்வாய்க் கோளின் பச்சைப் பழுப்புக் கால நிற மாறுதல்கள், உயிரினங்கள் உள்ளதையோ அல்லது தாவர வளர்ச்சி இருப்பதையோ காட்டவில்லை என்றார்! செவ்வாய்க் கோளில் தெரியும் பழுப்புக் கறுப்பு நிறங்கள் அதன் மலைப் பிரதேசங்களைக் காட்டுகின்றன. கடும் புயல் காற்றுகள் அடிப்பதால், செவ்வாய்த் தளத்தின் தூசிகள் இங்கும் அங்கும் பரவிப் பள்ளங்களை நிரப்பி, நிறம் மாறுவது போல் தெரிகிறது என்று விளக்கினார்! மாரினர்-9 செவ்வாய்க் கோளை 1971 இல் சுற்றிய போது, கார்ல் சேகனின் கூற்று மெய்யாக நிரூபிக்கப் பட்டது. 1965 இல் முதலில் சுற்றிய மாரினர்-4, பின்னால் சென்ற மாரினர்-6,7 ஆகியவைச் செவ்வாய்க் கோளின் தள விபரங்களை விளக்கமாகக் காண முடியவில்லை!

Fig 10 Sagan with Viking Lander Model

சந்திரனில் தோன்றுவது போல் மாபெரும் தடக் குழிகளைப் [Impact Craters] படம் எடுத்தனுப்பின! செவ்வாய் சூழ்மண்டலத்தில் வெறும் கரிவாயு [Carbon Dioxide] நலிந்த அளவில் நூறில் ஒரு பங்கு பூவாயு அழுத்தத்தில் இருப்பதைக் கண்டு பிடித்தன! 1971 இல் செவ்வாய்க் கோளை ஏறக்குறைய ஓராண்டு காலம் சுற்றிய மாரினர்-9 நிறைய விபரங்களை அனுப்பியது. 400 மைல் அகண்ட, 15 மைல் உயர்ந்த, சூரிய குடும்பத்திலே பெரிய ஓர் எரிமலையைக் கண்டது! அது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் எரிந்து, ஆறுகளாய் கக்கிய எரிமலைக் குழம்பு [Lava] நிரம்பிய 950 மைல் அகண்ட தடக் குழியைக் கண்டது! 2800 மைல் நீண்ட பள்ளத்தாக்கைக் [Valley] கண்டது!

முக்கியமான காட்சி, கண்டு பிடிப்பு இதுதான், செவ்வாயில் வற்றிக் காய்ந்து போன நதிகள் நெளிந்து நாட்டியம் ஆடிய பாதங்களின் தடங்கள்! செவ்வாய்க் கோளில் ஒரு காலத்தில் நீர் ஆறுகள் ஓடிக் காலநிலை வேறுபட்டால் காய்ந்து கருகிப் போனக் கதையைச் சொல்லும் காலச் சுவடுகள்! ஒரு காலத்தில் எரிமலைப் பொழிவுகளில் பலவித வாயுக்களும், நீராவியும் எழுந்து, செவ்வாய் மண்டலச் சூழ்நிலை அடர்த்தியாகி, தட்ப வெப்ப நிலைகள், காற்றழுத்தம் சீராக அமைந்து, அளவற்ற நீராறுகள் ஓடிக் கடலாகியதை, யூகித்துக் கொள்ள உதவியது அக் கண்டு பிடிப்பு! ஆனால் அக்கடல் நீரைச் செவ்வாய்ப் பாலை நிலம் உரிஞ்சிக் குடித்திருக்கலாம்! அல்லது செவ்வாயில் அடர்ந்த வாயுச் சூழகம் மெலிந்து, அதன் நலிந்த ஈர்ப்பியல் சக்தியால் கவர்ந்து வைத்துக் கொள்ள இயலாது, பரிதியின் வெப்பாத்தால் ஆவியான நீர், பறந்து அண்ட வெளியில் மறைந்து போயிருக்கலாம்! அதன் பின் கால ஓட்டத்தில், துருவங்களில் சிக்கிய நீரும், கரிவாயும் [CO2] குளிர்ந்து தணிக்கட்டியாக [Dry Ice] [பனிக்கட்டி], உறைந்து பாறையாகி இறுகி விட்டது! ஆனால் உயிரினங்கள் தோன்றி யதற்குச் சான்று எதுவும் கிடைக்க வில்லை! நீர்த் திரவம் ஓடியதற்கு உள்ள சான்றுகளை வைத்து, உயிர் ஜந்துக்கள் செவ்வாயில் இருந்திருக்கலாம் என்று நம்பிக்கை கொண்டாலும், விந்தையான செவ்வாய் மனிதர்களோ, அல்லது செவ்வாய் விலங்குகளோ அங்கே காணப்பட வில்லை! அவற்றைக் கண்டு பிடிக்க செவ்வாய்த் தளத்தில் இறங்கி ஆய்வுகள் செய்ய வைக்கிங்-1, வைக்கிங்-2 இரண்டு ஆய்வுச் சிமிழ்கள் 1975 இல் பின்னால் அனுப்பப் பட்டன!

Fig 11 Viking Space Probe Details

இரட்டை வைக்கிங் திட்டம் அரை டிரில்லியன் [Half Trillion] டாலர் செலவில் செவ்வாய்க் கோளில் போய் இறங்க உருவானது. நூற்றுக் கணக்கான விஞ்ஞானப், பொறியியல் துறைஞர்களில் கார்ல் சேகன் ஒருவர்! அவரது விஞ்ஞானக் குரு நோபெல் பரிசு பெற்ற ஹெரால்டு யுரே, ஜோஸுவா லெடெர்பெர்க் இருவரும் அதில் பணி செய்தனர். கார்ல் சேகன் வைக்கிங்-1, வைக்கிங்-2 விண்ணாய்வுச் சிமிழ்கள் [Viking-1, Viking-2 Space Probes], செவ்வாய்த் தளத்தில் போய் இறங்கும் இடங்கள் ஆறைத் தேர்ந்தெடுத்தார். அவை இரண்டும் செவ்வாயில் 1976 இல் இறங்கிக் கண்டவை என்ன ? செவ்வாய்க் கோள் பெரும் குழிகளும், ஆறிப் போன எரிமலைகளும் இடைப்பட்டு பாறைகள் நிறைந்த ஒரு பாலைப் புழுதி நிலம்! அவற்றின் மேல் பழுப்பு நிறத்தில் தூசிகள் மண்டிய வானம்! இரும்பு வாயுவில் உள்ள ஆக்ஸிஜனோடு கலந்து செந்நிற ஆக்ஸைடாகி, அங்கெங்கு எனாதபடி எங்கும் சிவப்பு நிறம்! வைக்கிங் கொண்டு சென்ற உயிரியல் ஆய்வுக்கூடம் [Biology Laboratory], செவ்வாய் மண்ணைத் தோண்டி, அதில் எந்த வித நுண்ணுயிர் ஜந்தும் [Micro organism] தோன்றுமா என்று மூன்று வித முறைகளில் ஆய்ந்தது! விளைவு தோல்வியே! அடுத்த சோதனை, செவ்வாயில் செத்துப் போன ஜந்துக்கள் அல்லது உயிரோடுள்ள ஜந்துக்கள் ஆகியவற்றின் ரசாயனச் சான்றாக, அவ்வுடம்புகளின் மூலக்கூறுகளை [Molecules of Organisms, Alive or Dead] மண்ணில் ஆய்வு செய்தது! அதன் விளைவும் எதிர்மறையே! அந்த ஆராய்ச்சிகளைத் திட்ட மிட்டவர் கார் சேகன்! அம்முயற்சிகளில் தோல்வி யுற்றாலும் முயற்சி செய்தோம் என்று மகிழ்ச்சி அடைந்தார், கார்ல் சேகன்!

Lecture

செவ்வாய் மண்டலத்தில் வாயு மண்டல அழுத்தம் மிக மெலிந்தது! ஊடுறுவும் பரிதியின் கடும் புறவூதாக் கதிர்வீச்சு [Ultraviolet Radiation] மரணம் விளைவிக்கக் கூடிய அளவு வீரிய முள்ளது! பல விதத் தோற்றத்தில் சந்திரனை ஒத்த செவ்வாய்க் கோளில் கால்வைக்கும் எதிர்கால மனிதர், அடித்தளத்திற்குக் கீழேதான் வாழ வேண்டிய திருக்கும்! கதிர்வீச்சுத் தாக்குதல், விண்கற்களின் வீழ்ச்சி, 200 மைல் வேகத்தில் அடிக்கும் தூசிப் புயல் ஆகியவற்ற லிருந்து மனிதன் தப்பிப் பிழைக்க வேண்டு மென்றால் அதைத் தவிர வேறு வழி யில்லை!

அணு ஆயுத வெடிப்புப் போர்களால் விளையும் புகைமூட்டக்குளிர்ச்சி!

கார்ல் சேகன் அணு ஆயுத ஆக்கத்தையும், அவற்றின் மேற்தள வெடிப்பையும் அறவே எதிர்ப்பவர்! 1980 ஆண்டுகளில் ‘அணுக்கருக் குளிர்காலம் ‘ [Nuclear Winter] என்னும் புதிய ‘அணு ஆயுதப் பொழிவு ‘ எச்சரிக்கையை முதன் முதலில் உலகெங்கும் பறைசாற்றியவர், கார்ல் சேகன்!

அதன் விளக்கம் என்ன வென்றால், அணு ஆயுத வெடிப்புகளில் கிளம்பும் புகையும், தூசியும், கரிவாயுக் கோளமும் பூமியின் சூழ்நிலையைப் பேரளவில் பாதித்துப் பரிதியின் தட்ப வெப்ப அளவுகளைக் கூட்டிக் குறைத்துக் கால நிலையைக் கரைப் படுத்திப் பூமியைப் பல நாட்களுக்கு ஒரு குளிர்க்கோளமாய் ஆக்கிவிடும் என்று ஆரவாரம் செய்தார்!

அணு ஆயுதக் குளிர்காலம் வேளாண்மைத் தானியங்களைச் சரிவர வளர விடாமல் பாதித்து மனிதர் மற்றும் விலங்கினங்கள் ஆகாரம் இல்லாமல் பஞ்சம், பட்டினியில் துன்பப்படும் என்று உலக வல்லரசுகளையும், அணு ஆயுதப் போர்வைக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் மெல்லரசுகளையும் கார்ல் சேகன் எச்சரிக்கை செய்தார்! ஹைடிரஜன் குண்டு ஆயுதப் பிதா, டாக்டர் எட்வெர்டு டெல்லர் போன்ற விஞ்ஞானிகள் கார்ல் சேகனின் அணு ஆயுதக் குளிர்கால கொள்கையை ஒப்புக் கொள்ளாது ஒதுக்கித் தள்ளினார்கள்!

Carl Sagan -7

விஞ்ஞான உலகில் கார்ல் சேகன் பெற்ற வெகுமதிகள்

கார்ல் சேகன் உயிரியல், மனிதவியல், பரிணாமம் ஆகிய விஞ்ஞானத் துறைகளில் முன்னோடி ஆராய்ச்சிகள் செய்தவர். விண்வெளி வரலாற்றை ஆழ்ந்து பயின்று, பூமியின் மூலத் தோற்றம், மனித இனத்தின் ஆரம்ப வளர்ச்சி ஆகியவற்றைப் பற்றி 600 மேற்பட்ட விஞ்ஞான வெளியீடுகளை பிரசுரம் செய்துள்ளார். விஞ்ஞான நூல்கள் இருபதுக்கும் மேற்பட்டுத் தனியாகவோ, அல்லது கூட்டாளியாகவோ அவற்றை இயற்றி யுள்ளார்! அவர் அமெரிக்க வானியல் குழுவகத்தின் [American Astronomical Society] அதிபராகவும், அமெரிக்க பூபெளதிகக் கூட்டகத்தின் [American Geophysical Union] அண்டவெளித் துறைப் பகுதிக்குத் தலைவராகவும் பணியாற்றினார். அவர் உலகின் விண்வெளி வேட்கையாளர் 100,000 நபர்கள் உறுப்பினராய் இணைந்த, அண்டவெளிக் குழுவகத்தின் [The Planetary Society] அதிபராக இருந்தார்.

Carl Sagan -10

கார்ல் சேகன், நாசாவின் [NASA] அண்ட வெளிப் பயணப் பணிகளில் முதல்வராய் முன்னின்று புதன், வெள்ளி, செவ்வாய் ஆகிய அகக்கோள்களின் [Inner Planets] ஆராய்ச்சிக்கு, விண்வெளிக் கப்பல்கள் மாரினர் [Mariner], வைக்கிங் [Viking] திட்டங்களைச் சிறப்பாக நிறைவேற்றியவர். வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய புறக்கோள்கள் ஆராய்ச்சிக்கு, விண்வெளிக் கப்பல்கள் வாயேஜர் 1 &2 [Voyager-1 & 2] ஆகிய திட்டங்களின் மகத்தான வெற்றிக்குக் காரண கர்த்தா. அவரது ஒப்பற்ற அரிய விஞ்ஞானப் பணிகளுக்கு, மூன்று முறை நாசாவின் தங்கப் பதக்கத்தைப் பெற்றார். அடுத்து அகில நாட்டு விண்வெளித் துறை, காலபெர்ட் பரிசு [International Astronautics Prize, Galabert], ஜான் எஃப் கென்னடியின் அண்டவெளிப் பணிப் பரிசு ஆகியவையும் அவருக்கு அளிக்கப்பட்டன.

Carl Sagan -3

பிரபஞ்சம் [Cosmos] பற்றி கார்ல் சேகன் எழுதிப் பேராதரவு பெற்ற நூலை தொலைக் காட்சித் திரைப் படமாக எடுத்து, 250 மில்லியனுக்கு மேற்பட்ட உலக மக்கள் கண்டு களித்தனர். அதற்கு எம்மியின் பரிசும் [Emmy Award] கிடைத்தது. சிறந்த அந்தப் புத்தகத்திற்காக அவர் புலிட்ஸர் பரிசும் [Pulitzer Prize] பெற்றார். அவரது நூலான ‘டிராகன்ஸ் ஆஃப் ஈடன் ‘ [Dragons of Eden] 200,000 பிரதிகள் விற்பனையாகி அவரது எழுத்துத் திறமை பாராட்டப் பட்டது! மேலும் அமெரிக்கப் பெளதிகக் குழுவகத்தின் [American Physical Society], அணுவியல் விஞ்ஞானி லியோ ஸிலார்டு நினைவுப் பரிசும் [Leo Szilard Award] கார்ல் சேகனுக்கு அளிக்கப் பட்டது. அவர் எழுதிய ‘தொடர்பு ‘ [Contact] என்னும் விஞ்ஞானப் புதினம் திரைப்படமாக 1997 இல் எடுக்கப் பட்டது! 1986 இல் கார்ல் சேகன், அவரது மனைவி ஆன் டுருயன் [Ann Druyan] இருவரும் இணைந்து எழுதிய நூல், ‘வால்மீன் ‘ [Comet], கார்ல் சேகன் தனியாக எழுதிய ‘பிரபஞ்சம் ‘ [Cosmos] இரண்டும் மிகச் சிறந்த விஞ்ஞானப் படைப்புக்கள்.

கடும் நோயில் விஞ்ஞான மேதை கார்ல் சேகன் மரணம்.

விண்வெளி மேதை கார்ல் சேகன் தனது 62 ஆவது வயதில், 1996 டிசம்பர் 20 ஆம் தேதி ஸியாட்டல், வாஷிங்டனில் [Seattle, Washington State] ஹட்சின்ஸன் புற்று நோய் ஆய்வு மருத்துவக் கூடத்தில்[Hutchinson Cancer Research Center] கடும் இரத்த நோயில் இரண்டு ஆண்டுகள் போராடிக் காப்பாற்ற முடியாமல் காலமானார். அங்கே அவருக்கு அவரது அருமைத் தங்கை கேரியின் [Cari Sagan Greene] போன் மாரோ 1995 இல் உடல் மாற்றம் [Bone Morrow Transplant] செய்யப் பட்டது! அவரைத் தாக்கிய நோய் பயங்கர மானது! [A form of Anemia, called Pre-leukemia or Myelodysplasia Syndrome, MDS]. அந் நோயை 1994 இல் கண்டு பிடித்தவுடன், கார்ல் சேகன் ஆறு மாதத்திற்குள் காலமாகி விடுவார் என்று டாக்டர்கள் யாவருக்கும் கவலையை உண்டாக்கினர்!

கார்ல் சேகன் நண்பர்களுக்கு உயிர் நண்பர். அவருடன் வைக்கிங் விண்வெளிப் பணியில் கூட்டுழைத்த பூவியல் நிபுணர் உல்ஃப் விஷ்னியாக் [Geologist, Wolf Vishniac] திட்டப் பணிக்காக தென் துருவ அண்டார்டிக்காவுக்குச் சென்று ஆராய்ச்சியின் போது 500 அடிப் பாதாளத்தில் விழுந்து உயிரிழந்தார்! துக்கம் தாங்காமல், அவரது நினைவாக வைக்கிங் திட்டத்தின் போது, ‘விஷ்னியாக் ‘ பெயரை செவ்வாய்த் தளத்தின் ஒரு பகுதிக்கு நிரந்தரமாக வைத்தார்!

 

கார்ல் சேகன் மரணத்தைப் பற்றி கார்நெல் பல்கலைக் கழக வானியல் துறையின் அதிபதி ஏர்வந்த் டெர்ஸியன் [Yervant Terzian] கூறியது:- ‘இருளில் ஏற்றி வைத்த ஓர் எரியும் மெழுகு வர்த்தி, கார்ல் சேகன்! பலரது மனதைத் தொட்டுத் ‘தான் பெற்ற பேறு பெறுக இவ் வையகம் ‘ என்று விஞ்ஞான உலகில் பலருக்கு விழிப்புணர்ச்சி ஏற்படுத்தினார்! பல்துறை வல்லுநரான கார்ல் சேகன், பாரில் பல இனத்தவரைக் கவர்ந்து பலருக்கு நண்பர் ஆனார்! நவீன விஞ்ஞானக் கண்டு பிடிப்பு, அதனைப் பிறரிடம் பகிர்ந்து கொள்வது, பலருக்குப் புகட்டி அவரது கண்களைத் திறப்பது இவைதான் கார்ல் சேகனின் சிறப்புக் குணப் பாடுகள்! அவரது அகால மரணம் கார்நெல் பல்கலைக் கழக நண்பர்களுக்கும், உலக நபர்களுக்கும் ஈடு செய்ய முடியாத ஓர் பெரும் இழப்பாகும்! எல்லாவற்றுக்கும் மேலாக அவர் விட்டுச் சென்ற அவரது அன்பு மனைவி ஆன் டுருயன், அவரது அருமைத் தங்கை கேரி கிரீன், ஐந்து பிள்ளைகள், ஒரு பேரப் பிள்ளை ஆகியோரின் இழப்புக்கு இணையாகச் சொல்லத் தமிழில் எந்தச் சொற்களும் இல்லை! பூமியைச் சுற்றிவரும் பெரும் விண்கல் [Astroid] ஒன்றுக்குச் ‘சேகன் ‘ என்று பெயரிடப் பட்டுள்ளது!

 

 

 

ஆதாரங்கள்:-

1. Carl Sagan By: William Poundstone [1999]

2. Cosmos By: Carl Sagan [1980]

3. Comets By: Carl Sagan & Ann Druyan Sagan [1985]

4. Planet Guides ‘Mars ‘ By: Duncan Brewer [1993]

5. Frontiers of Science By: National Geographic Society [1982]

6. Book of the Universe By: Ian Ridpath [1991]

7. Carl Sagan Wikipedia (http://en.wikipedia.org/wiki/Carl_Sagan)  (January 8, 2010)

************

அணு ஆயுதப் போரில் விளையும் கோரப் பேரழிவுகள் -5

(கட்டுரை: 5)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


பேரழிவுப் போராயுதம்
உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து
விழுதுகள் அற்றுப் போக,
விதைகளும் பழுதாக
ஹிரோஷிமா நகரைத் தாக்கி
நரக மாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
நாச மாக்கப் பட்டது !
இப்போது தோன்றின
புதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !
கதிரியக்கம் பொழியும்
புழுதிக் குண்டுகள் !
அணு ஆயுத வெடிப்பில்
புகை மண்டலம்
சூழ்வெளியில் பரவிப்
பரிதி ஒளியை மறைத்து
குளிர் உலகம் உண்டாகும் !
புத்தர் பிறந்த நாட்டிலே
புனிதர் காந்தி வீட்டிலே
புது யுகச் சூட்டிலே
மனித நேயம்
வரண்டு போன
வல்லரசுகள் பின் சென்று
பாரத அன்னைக்குப்
பேரழிவுப்
போரா யுதத்தை
ஆரமாய்
அணிவிக்க லாமா ?

உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !

கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)

விஞ்ஞானிகள் உலகத் தேச நலனை முன்வைத்து அதிர்ச்சியான இந்தக் கோரப் பிரச்சனையில் (அணு ஆயுத வெடிப்பு) தெளிந்த சிந்தனையோடு நடந்து கொண்டனரா என்று ஒருவர் கேட்க வரலாம் !  உண்மையாக அப்படி ஒரு விருப்பத் தேர்வுக்கு (Choice) இடமில்லை !  அடிப்படை ஆய்வறிவு கிடைத்ததும் அது கனியாகப் பழுப்பதை நிறுத்த எந்த ஓர் எதிர்ப்புத் தடையும் வந்தால் பரிதியைச் சுற்றிவரும் பூமியை நிறுத்த முனைவது போல் முறிந்து போகும் !

சிகாகோவில் முதல் அணுப்பிளவு தொடரியக்கம் நிகழ்த்திய என்ரிக்கோ ஃபெர்மி,

விஞ்ஞானம் அணுசக்தி மூலம் பயனடைய நமக்குக் கல்வி புகட்டியுள்ளது.  மனிதத் தீங்குகளுக்குப் பதிலாக மானிட நலத்துக்கு அணுசக்தியைப் பயன்படுத்த முயல்வது மனிதக் கடமை நெறியில் பின்னியுள்ளது.  இப்போது நாம் எதிர்நோக்கும் பிரச்சனை பௌதிக விஞ்ஞானம் அல்ல;  மனித ஒழுக்க நெறி !

பெர்னார்டு மான்னஸ் பரூச் (Bernard Mannes Baruch)


“முஸ்லீம்களாகிய நாம் வல்லவராகவும், நம் நாடு மற்ற நாடுகளுக்கு இணையாகவும் இருக்க வேண்டும்.  அதனால்தான் சில நாடுகள் வல்லமையோடு இருக்க நான் உதவி செய்ய விரும்புகிறேன்,”

அப்துல் காதீர் கான் (Abdul Qadeer Khan, Maker of Pakistan Atomic Bomb)

“இந்தியா ஓர் அணு ஆயுதத்தைத் தயாரித்தால் பாகிஸ்தான் புல்லைத் தின்றோ இலைகளைத் தின்றோ பட்டினி கிடந்து அதைத் தானும் பின்பற்றிச் செய்யும்.”

ஸுல்ஃபிகார் அலி புட்டு (Zulifikhar Ali Bhuttu) பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர்.

“அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா அணு ஆயுத வெடிப்பு) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்.”

டாக்டர் ஹோமி ஜெ. பாபா (அணுசக்திப் பேரவை முதல் அதிபர்) (1964)


அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி நியதி !

ஜப்பான் ஹிரோஷிமா நாகசாக்கி நகரங்களில் போட்ட அணு ஆயுத வெடிப்புகள் போல மூன்றாம் உலகப் போர் நிகழ்ந்தாலும் சரி, அல்லது ஆயிரம் ஆண்டுப் போர் மூட்டிவரும் பாகிஸ்தானும் பாரதமும் தமது அணு ஆயுதங்களை ஏவி இரு நாடுகளும் மனித இனத்தை அழித்துக் கதிரியக்கப் பொழிவுகளைப் பரிமாறிக் கொண்டாலும் சரி, இறுதியில் கோடான கோடி டன் புகை மூட்டம் சூழ்வெளி மண்டலத்தில் சேர்ந்து இருள் மண்டிப் பரிதியின் ஒளி குன்றிப் பூமியில் பெருங்குளிர்ச்சி ஏற்பட்டு விடும் என்று ஒரு கோட்பாடு கூறப்பட்டு வருகிறது !  இந்த கோர விளைவைத்தான் 1983 இல் அணுவியல் /வானியல் பௌதிக விஞ்ஞானி கார்ல் சேகன் (1934 -1999) “அணு ஆயுத வெடிக் குளிர்ச்சி” (Nuclear Winter) என்று முதன்முதல் ஓர் எதிர்பார்ப்புக் கோட்பாடாக அறிவித்தார்.  போரில் பல்லாயிரம் கிலோ டன் டியென்டி ஆற்றல் கொண்ட பல்வேறு அணு ஆயுதக் குண்டுகள் வெடிப்பதால் ஏற்பாடும் பேரளவு புகை மண்டலம் பூமியின் மேல் நிலைச் சூழ்வெளி வாயு மண்டலத்தைச் (Earth’s Upper Atmosphere) சேர்ந்து சூரிய ஒளி விழுங்கப் பட்டுத் தட்ப வெப்ப நிலையைச் சீர்குலைக்கும் என்பதுதான் கார்ல் சேகன் கோட்பாடு !

அணு ஆயுத வெடிப்புத் தூசி மண்டலம் பரிதி வெளிச்சத்தை மறைத்துக் கொண்டு பூமியை ஓர் இருண்ட கண்டமாக்கி வரண்டு போகும் குளிர்க் கோளமாய் மாற்றிப் பல்லாண்டுகள் தங்கியிருக்கும் என்று சொல்லப் படுகிறது !  அதனால் பெருமளவு வேளாண்மைப் பயிர்கள் சேதம் அடைந்து பல நாடுகளில் பட்டினியும் பஞ்சமும் படிப்படியாகப் பரவும் என்று எதிர்பார்க்கப் படுகிறது !  அமெரிக்க ரஷ்ய நாடுகள் அல்லது பாகிஸ்தான் பாரத தேசத்துக்கு இடையே எதிர்காலத்தில் நேரக் கூடிய அணு ஆயுதப் போர்களால் “பூகோளக் குளிர்ச்சி” (Global Cooling) ஏற்படும் என்று சில விஞ்ஞானிகள் இப்போது கருதுகிறார்.  அந்த விஞ்ஞானிகளின் பௌதிகக் குரு காலஞ் சென்ற அணுவியல் / வானியல் நிபுணர் கார்ல் சேகன் (1934 -1999).  கார்ல் சேகனின் முக்கியச் சீடர்கள் இருவர் : அலன் ரோபோக் & ஓவன் பிரையன் டூன் (Alan Robock & Owen Brian Toon).

அலன் ரோபோக், ஓவன் பிரையன் டூன் இருவரது அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சிக் கோட்பாடு பூகோளக் குளிர்ச்சிக் காட்சிகளைக் (Global Cooling Scenerios) கணினி மாடல்கள் மூலமாகக் (Computer Models) கண்டு முடிவு செய்தவை.  கடந்த காலங்களில் பூமியில் நேர்ந்த எரிமலைப் புகை மூட்டங்கள், கானகத் தீயெரிப்புகள், மற்ற பூதள வெளியேற்றங்கள் ஆகியவை அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சிக்கு ஆதாரமாகச் சான்றுகள் கூறுகின்றன.  அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சிக் கோட்பாடு என்ன சொல்கிறது ?  அணு ஆயுதப் போரில் அணுக்குண்டுகள் வெடித்த பிறகு கதிரியக்கப் பொழிவுகள் பூமியில் படிகின்றன.  அதே சமயத்தில் எழும் புகை மண்டலம், கரித்தூள்கள், மற்ற பூமியின் சேதாரத் தூசிகள் யாவும் மேலேறிச் சூழ்வெளியில் கலக்கின்றன.  அவை பரிதியின் ஒளியை மங்க வைத்து வான் வெளியை இருளடையச் செய்கின்றன.  இறுதியாகச் சில மாதங்களில் பூமியின் உஷ்ணம் 1 முதல் 5 டிகிரி சென்டிகிரேட் வரைக் குறைந்து போகலாம்.  கணினி மாடல்கள் இந்த உளவு ஆராய்ச்சிகளில் கண்ட முடிவு என்ன வென்றால் ஒரு டிகிரி சென்டிகிரேட் உஷ்ண மிகையால் கூட “உயிரின ஏற்பு அமைப்பில் நிலைகேடு” (Ecosystem Unbalance) விளைந்து பூமியில் உயிரினப் பயிரினப் பாதிப்புகள் ஏற்படும் என்று அறியப்படுகிறது.

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஓர் அசுர அணுக்குண்டு பூமியில் விழுந்தது போல், மெக்ஸிகோ அருகில் விழுந்த ஒரு பெரும் முரண் கோளால் (Asteroid) நேர்ந்த அதிர்ச்சியும் தூசி மண்டல எழுச்சியும் பரிதி ஒளியை விழுங்கி உஷ்ணம் தணிந்து போனதால் அக்காலத்தில் வாழ்ந்த டைனோஸார்ஸ் அனைத்தும் மாண்டு போனது இதற்கோர் தகுந்த உதாரணம்.

அணு ஆயுத வெடிப்புப் போர்களால் விளையும் புகை மூட்டக் குளிர்ச்சி!

கார்ல் சேகன் அணு ஆயுத ஆக்கத்தையும், அவற்றின் மேற்தள வெடிப்பையும் அறவே எதிர்த்தவர் ! 1980 ஆண்டுகளில் ‘அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி’ [Nuclear Winter] என்னும் புதிய ‘அணு ஆயுதப் புகை மூட்ட’ எச்சரிக்கையை முதன் முதலில் உலகெங்கும் பறைசாற்றியவர், விஞ்ஞானி கார்ல் சேகன் (1934 -1999) ! அதன் விளக்கம் என்ன வென்றால், அணு ஆயுத வெடிப்புகளில் கிளம்பும் புகையும், தூசியும், கரிவாயுக் கோளமும் பூமியின் சூழ்வெளி மண்டலத்தைப் பேரளவில் பாதித்துப் பரிதியின் தட்ப வெப்ப அளவுகளைக் கூட்டிக் குறைத்துக் கால நிலையைக் கரைப்படுத்திப் பூமியைப் பல நாட்களுக்கு ஒரு குளிர்க்கோளமாய் ஆக்கிவிடும் என்று கூக்குரல் இட்டார் !

அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி வேளாண்மைத் தானியங்களைச் சரிவர வளர விடாமல் பாதித்து மனிதர் மற்றும் விலங்கினங்கள் ஆகாரம் இல்லாமல் பஞ்சம், பட்டினியில் துன்பப்படும் என்று உலக வல்லரசுகளையும், அணு ஆயுதப் போர்வைக்குள் ஒளிந்து பின்புறமாய் தயாரித்துக் கொண்டிருக்கும் மெல்லரசுகளையும் கார்ல் சேகன் எச்சரிக்கை செய்தார் ! ஹைடிரஜன் குண்டு ஆயுதப் பிதா, டாக்டர் எட்வெர்டு டெல்லர் போன்ற தீவிரவாத விஞ்ஞானிகள் கார்ல் சேகனின் அணு ஆயுதக் குளிர்ச்சிக் கோட்பாடை ஒப்புக் கொள்ளாது தப்பென ஒதுக்கித் தள்ளினார்கள்!

அணு ஆயுதப் போர் வெடிப்புக் குளிர்ச்சியால் நேரும் சீர்கேடுகள்

2000 இல் சோவியத் தலைவர் மிக்கேல் கார்பச்செவ் (Mikhail Gorbachev) ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானிகள் செய்த கணினி மாடல்கள் எதிர்காலத்தில் அணு ஆயுத யுத்தம் ஒன்று வருமானால் அணு ஆயுத வெடிப்புக் குளிர்ச்சி (Nuclear Winter) உண்டாகும் என்றும் அதனால் பூமியில் அனைத்து உயிரினங்களுக்கும் அழிவு நேரும் என்றும் எச்சரிக்கை செய்தார்.  அந்த அறிவுரை புத்துணர்ச்சி ஊட்டும் போதனையாக நன்னெறியைப் பின்பற்றும் நபருக்கு விழிப்புணர்ச்சி தரும் என்றும் குறிப்பிட்டார்.  அதனால் அணு ஆயுத வெடிக் குளிர்ச்சிப் பயமானது உலக நாடுகளின் அணு ஆயுதப் பெருக்கப் பந்தயத்தை நிறுத்த அது ஒரு முக்கிய காரணமாக வலியுறுத்தப்பட வேண்டும்.

உலக வல்லரசுகளுக்கு இடையே ஊர்ந்து வந்த ஊமைப்போர் (Cold War) 1990 ஆண்டுகளில் முடிந்த பிறகும் நாம் ஏன் அணு ஆயுத அடுக்குகளுக்கு அஞ்ச வேண்டும் என்ற ஒரு கேள்வி எழலாம்.  காரணம் மெல்லரசுகள் பல இப்போது தம் கைவசம் அணு ஆயுதங்களை இரகசியமாய்த் தயாரித்து ஒளித்து வைத்திருப்பதுதான் !  உதாரணமாக இப்போது பாகிஸ்தான் மூர்க்கப் படைத் தாக்குதலை நிறுத்த, பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்து போரில் பல அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டு நூற்றுக் கணக்கான அணுக்குண்டுகள் இருபுறமும் வீசப்பட்டால் அதன் கோர முடிவு பூகோள வேளாண்மை விளைச்சலைப் பேரளவில் முடக்கி விடும்.  ஒரு பிராந்தியப் போரால் உலகளாவியச் சேதாரங்களும் உயிரின இழப்புகளும் நேரிடும் !  நீண்ட கால அணு ஆயுதப்போரில் உள்நாட்டு மக்கள் பேரளவில் மடிவதோடு உலக நாட்டு மாந்தரும் பாதிப்படைவார்.  நேரடித் தாக்குதலிலும், தீக்காயங்களிலும் பின்னர் கதிரியக்கத்திலும் பாதிக்கப் பட்டு உள்நாட்டு மக்கள் சுமார் 20 மில்லியன் பேர் மரிப்பார் !  இரு நாடுகளைக் கடந்து அப்பால் உலக நாடுகளிலும் சூழ்வெளி பாழ்பட்டு வேளாண்மை சீர்கேடாவதால் ஒரு பில்லியன் மக்கள் உணவுப் பற்றாக்குறையிலும் பட்டினியாலும் சாகலாம்டென்று யூகிக்கப் படுகிறது !

உலக மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய பாடம் !

அணு ஆயுத யுகம் ஒளிமறைவாக உதயமானது.  ஹிரோஷிமா, நாகசாக்கியில் ஈரணுக் குண்டுகளைப் போட்ட பிறகு இருபதாண்டுகளாக அணு ஆயுத ஏகாதிபதிகள் கதிரியக்கத்தால் நேரக்கூடிய மனித உடற் கேடுகளைக் கூறாமல் மறைத்து வைத்திருந்தனர்.  பிடிவாதத்துடன் மருத்துவ ஆராய்ச்சி செய்யும் டாக்டர் அலிஸ் ஸ்டீவர்ட் (Dr. (Mrs) Alice Stewart) என்னும் பெண்மணிதான் முதன்முதலில் தணிவு நிலைக் கதிர்வீச்சால் (Low Level Radiation) விளையும் உடற் பாதிப்புக்களைக் கூறி உலகுக்கு அணு ஆயுதங்களைப் பற்றி எச்சரிக்கைகள் செய்தார்.

இன்னும் இரண்டு பிறப்பாண்டுகளில் (Generations) மனித இனத்தின் எதிர்கால விதி தீர்மானிக்கப்படப் போகிறது !  அதற்கு இரு மிக முக்கியத் தேவைப்பாடுகள் என்ன ?  மனித இனவிருத்திக் கட்டுப்பாட்டுக்குள் நாம் ஒரு நிலையான சமூக வளர்ச்சிக்குக் குறிவைக்க வேண்டும்.  அடுத்து உலகிலுள்ள அணு ஆயுத அடுக்குகளை முடக்கி அனைத்தையும் முறிக்க வேண்டும்.  இல்லாவிட்டால் நாம் 2050 ஆண்டுக்கு மேல் எப்படி உயிர் பிழைத்து வாழ முடியும் என்பது எனக்குத் தெரியாது என்று ஜேக்ஸ் மோனாடு 1971 இல் கூறினார்.

(கட்டுரை தொடரும்)

*****************************

தகவல் :

Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007)  2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)

1.  Scientific American Magazine :  India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)

2 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210273&format=html  (Robert Oppenheimer)

3 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40203245&format=html (First Atomic Bombs Dropped on Japan)

3. (a) https://jayabarathan.wordpress.com/2009/08/06/dr-raja-ramanna-2/ (ராஜா ராமண்ணா இந்திய அணு ஆயுதச் சோதனை)

4. The Making of the Atomic Bomb, By: Richard Rhodes

5. Oppenheimer, By: James Kunetka

6. Hand Book of World War II, Abbeydale Press

7. The Deadly Element, By: Lennard Bickel

8. Canadian Nuclear Society Bulletin, June 1997

9.  Grolier Online :  Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)

10.  Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)

11.  National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)

12.  Scientific American Magazine :  Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads, By : David Biello (November 2007)

13.  The Dirty Bombs (Radiological Dispersion Bombs) MSN Broadcasting -Dirty Bombs Biggest Hazard : Panic Experts Say Radiation Would Play on Public Fears (June 10, 2002)

14.  Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)

15.  Neutron Bombs – Wikipedia Report (December 15, 2009)

16 Wikipedia Report on Dr. Abdus Salam – http://en.wikipedia.org/wiki/Abdus_Salam (Dec 18, 2009)

17. Wikipedia Report on Abdul Qadeer Khan – http://en.wikipedia.org/wiki/Abdul_Qadeer_Khan (December 26, 2009)

18. Wikipedia Report on http://www.armscontrol.org/documents/sort Strategic Offensive Reductions Treaty (SORT) (May 24, 2002)
19 https://jayabarathan.wordpress.com/2008/05/02/katturai27/  (பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது ?) (May 1, 2008)
20 What is NuclearWinter ? By : Charles Mallery Dept of Biology, University of Miami, Florida, USA (May 16, 2006)
21 Nuclear Winter By : Carl Sagan
22 Scientific American : Local Nuclear War, Global Suffering By: Alan Robak & Owen Brian Toon (January 2010)

******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) January 7, 2010

அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள் -4

(கட்டுரை: 4)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


பேரழிவுப் போராயுதம்
உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து
விழுதுகள் அற்றுப் போக,
விதைகளும் பழுதாக
ஹிரோஷிமா நகரைத் தாக்கி
நரக மாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
நாச மாக்கப் பட்டது !
இப்போது தோன்றின
புதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !
கதிரியக்கம் பொழியும்
புழுதிக் குண்டுகள் !
புத்தர் பிறந்த நாட்டிலே
புனிதர் காந்தி வீட்டிலே
புது யுகச் சூட்டிலே
மனித நேயம்
வரண்டு போன
வல்லரசுகள் பின் சென்று
பாரத அன்னைக்குப்
பேரழிவுப்
போரா யுதத்தை
ஆரமாய்
அணிவிக்க லாமா ?

உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !

கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)


“ஒருவருக்குப் பின்னால் ஒருவராக யாரெனக் காண முடியாத தோற்றத்தில் மக்கள் பலர் ஓடினர் !  அவரது தோலுரிந்து கைகளிலிருந்தும், கன்னங்களிலிருந்தும் தொங்கிக் கொண்டிருந்தன !  முகமெல்லாம் சிவந்து உப்பிப் போய் எங்கே கண்கள் உள்ளன, எங்கே வாய் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாதவாறு கடினமாக இருந்தது.”

ஹிரோஷிமா அணு ஆயுதப் பிழைப்பாளி

“நான் கதிர்வீச்சு நோய்களால் திரும்பத் திரும்ப பத்துத் தடவைகள் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டேன்.  மூன்று தடவைகள் (சாகக் கிடந்து) என் குடும்பத்தினர் அழைக்கப்பட்டு என் படுக்கை அருகிலே இருந்தனர்.  மரணத்தோடு போராடிப் போராடி நான் மெய்வருந்திக் களைத்துப் போய் விட்டேன்.”

ஹிரோஷிமா அணு ஆயுதப் பிழைப்பாளி ஸனாவோ சுபாய் (Sanao Tsuboi)

“முஸ்லீம்களாகிய நாம் வல்லவராகவும், நம் நாடு மற்ற நாடுகளுக்கு இணையாகவும் இருக்க வேண்டும்.  அதனால்தான் சில நாடுகள் வல்லமையோடு இருக்க நான் உதவி செய்ய விரும்புகிறேன்,”

அப்துல் காதீர் கான் (Abdul Qadeer Khan, Maker of Pakistan Atomic Bomb)

“இந்தியா ஓர் அணு ஆயுதத்தைத் தயாரித்தால் பாகிஸ்தான் புல்லைத் தின்றோ இலைகளைத் தின்றோ பட்டினி கிடந்து அதைத் தானும் பின்பற்றிச் செய்யும்.”

ஸுல்ஃபிகார் அலி புட்டு (Zulifikhar Ali Bhuttu) பாகிஸ்தான் வெளிநாட்டு அமைச்சர்.

“அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா அணு ஆயுத வெடிப்பு) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்.”

டாக்டர் ஹோமி ஜெ. பாபா (அணுசக்திப் பேரவை முதல் அதிபர்) (1964)


உலக நாடுகளின் அணு ஆயுதக் கையிருப்பு ஆற்றல்கள்

இப்போது உலக அணு ஆயுத வல்லமை கொண்ட நாடுகள் கைவசமுள்ள அணு ஆயுத வெடிக் குண்டுகளின் எண்ணிக்கையை அறிந்தோமானால் இன்னும் அத்தனை ஆயுதங்கள் உயிரனத்தை அழிக்க விழித்துள்ளன என்பதை நாம் கண்டு வியப்புறுவோம்.  அமெரிக்காவின் அணு ஆயுதக் குண்டுகளை ஏந்தியுள்ள கட்டளை ஏவுகணைகள் ரஷ்யாவையோ மற்ற பகை நாடுகளையோ குறிவைத்துப் பல திசைகளில் பல்வேறுச் சாதன முறைகள் மூலம் தாக்கப் பதுக்கி வைக்கப் பட்டுள்ளன.  1991 இல் சோவியத் யூனியன் கவிழ்ந்து வல்லரசுக்களுக்கு இடையே இருந்த ஊமைப் போர் மறைந்த பிறகும் உச்ச வல்லமை படைத்த அமெரிக்கா இன்னும் 10,000 (2007 ஆண்டு வரை) அணு ஆயுதப் பேரழிவுக் குண்டுகளை வைத்துக் கொண்டு கண்காணித்து வருகிறது !  ரஷ்யா தன் கைவசம் 15,000 (2007 ஆண்டு வரை) அணு ஆயுதக் குண்டுகளைப் பதுக்கி வைத்துள்ளது.  பிரான்ஸ் 350, பிரிட்டன் 200, சைனா 200, இஸ்ரேல் 80, பாகிஸ்தான் 60, இந்தியா 50, வட கொரியா பத்துக்குக் குறைந்த எண்ணிக்கையில் இருக்கும் (2007 மதிப்பீடுகள்) அணு ஆயுதக் குண்டுகள்.

தற்போதைய அச்சம் ஏற்கனவே நாமறிந்த அணு ஆயுதக் குண்டுகள் அல்ல. தொல்லை தரவல்ல மூர்க்க வர்க்கம் களவாடி அவரது கைவசம் அகப்படும் “புழுதிக் குண்டுகள்” எனப்படும் கதிர்வீச்சுக் குண்டுகளே (Radioactive Dirty Bombs) OR (Radiological Dispersion Bombs) !  இவ்வகை அணுவியல் குண்டுகள் சாதாரண ரசாயன வெடிகளைப் பயன்படுத்திக் கதிரியக்கப் பொழிவுகளைச் சிறிதளவு தரைமீது (200 சதுர மைல்) பரப்பச் செய்யும்.  புழுதிக் குண்டுகளில் பொதுவாக இருப்பவை : ஸ்டிரான்சியம்-90 (Strontium-90), கோபால்ட்-60 (Cobalt-60) அல்லது சீஸியம்-137 (Cesium-137).  புழுதிக் குண்டுகள் வீரிய கதிரியக்கமுள்ள காமாக் கதிர்வீச்சைத் தளமெங்கும் பரப்பும்.  இந்தப் புழுதிக் குண்டுகளை எளிதாக யாரும் தயாரிக்க முடியும்.  தேவையானவை :  சாதாரண வெடி மருந்து அடுத்து கதிரியக்க உலோகம் ஏதாவது ஒன்று : ஸ்டிரான்சியம்-90 (Strontium-90), கோபால்ட்-60 (Cobalt-60) அல்லது சீஸியம்-137 (Cesium-137).  இவற்றைக் காமாக் கதிர்ப் படங்கள் எடுக்கும் (Radio-graphy) தொழிற் கூடங்களில் அல்லது அணு உலைக் கூடங்களில் களவாட வேண்டும்.

இப்போது அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒருவருக் கொருவர் பணிந்து தணிந்து மாஸ்கோ அணு ஆயுதக் குறைப்பு ஒப்பந்தப்படி [Moscow Treaty – Strategic Offensive Reductions Treaty (SORT)] தமது அசுர வல்லமையுள்ள அணு ஆயுதச் சேமிப்புகளை முதன் முதலாகக் குறைத்துக் கொள்ள உடன்பட்டிருக்கின்றன.  அந்த அமெரிக்க-ரஷ்ய உடன்படிக்கைப்படி 2012 டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்காவும், ரஷ்யாவும் தமது இயக்க அணுவெடி ஆயுதங்களை (1700 -2200) எண்ணிக்கைக்கு இடையில் குறைத்துக் கொள்ள வேண்டும்.  (Each Party shall reduce and limit strategic nuclear warheads, as stated by the President of the United States of America on November 13, 2001 and as stated by the President of the Russian Federation on November 13, 2001 and December 13, 2001 respectively, so that by December 31, 2012 the aggregate number of such warheads does not exceed 1700-2200 for each Party. Each Party shall determine for itself the composition and structure of its strategic offensive arms, based on the established aggregate limit for the number of such warheads.)  அமெரிக்காவின் அணு ஆயுதங்களில் சில மாடல்கள் (W-76 Model Warheads -100 kiloton TNT Capacity) தமது 30 ஆண்டு ஆயுட் காலத்தைக் கடந்து விட்டதால் அவற்றை ஏனோ புதுப்பிக்க அமெரிக்கா இப்போது ஈடுபட்டுள்ளது.

அணு ஆயுத வணிகம் செய்த அப்துல் காதீர் கான்

2008 மே மாதம் அளித்த நேர்முக உரையாடலில் டாக்டர் அப்துல் காதீர் கான் தனது முந்தைய குற்ற ஏற்பில் கூறியவற்றை மாற்றி ஈரான், வட கொரியா நாடுகளுக்கு அணு ஆயுத உற்பத்திக்கு உதவி புரிந்ததாக ஒப்புக் கொண்டார்.  மேலும் அப்போதைய பாகிஸ்தான் ஜனாதிபதி பெர்வெஸ் முஷாரஃப் தேசீய நலனுக்காகத் தன்னை ஒருப் பலி ஆடாக இருக்கக் கட்டாயப் படுத்தியதாகவும் கூறினார் !  அத்துடன் உலக நாடுகள் சில அணு ஆயுதப் பெருக்கத்தில் ஈடுபடக் காரணமானவர் ஜனாதிபதி முஷாரஃப்தான் என்றும் குறிப்பிட்டார்.  அணு ஆயுத யுரேனிய எருவைச் சேமித்துத் திரட்டும் சுழல்வீச்சு வடிகட்டிச் சாதனங்கள் (Centrifuge Equipment to Prepare Weapon Grade Uranium -235) பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் மேற்பார்வையில் பாகிஸ்தானி லிருந்துதான் ஒரு விமானத்தின் மூலம் வட கொரியாவுக்கு அனுப்பப் பட்டன என்றும் வெளிப்படையாகக் கூறினார்.  மேலும் 1999 ஆம் ஆண்டில் தான் ஒரு பாகிஸ்தான் இராணுவ ஜெனரலோடு வட கொரியாவுக்குச் சென்று தோள் மீதிருந்து ஏவும் ஏவுகணைகளை (Shoulder-Launched Missiles) வாங்கச் சென்றதாகவும் ஒப்புக் கொண்டார்.  அவரது குற்ற ஏற்புகளால் வெகுண்ட அமெரிக்க அரசாங்கம் தூண்டி டாக்டர் கான் பாகிஸ்தான் அணுசக்தி ஆணையகத்திலிருந்து நீக்கப் பட்டு “இல்லச்சிறைக் கைதியாய்” அடைக்கப் பட்டார்.  பிப்ரவரி 6, 2009 இல் இஸ்லாமாபாத் உயர்நீதி மன்றம் ஆணையிட்டபடி டாக்டர் கானை இல்லச் சிறையிலிருந்து விடுதலை யானார்.

Fig 1C House Arrest & Release of A Q Khan

பாகிஸ்தானின் அணுக்குண்டு பிதா எனப்படும் அப்துல் காதீர் கான் ஏப்ரல் 27, 1936 தேதி (பிரிட்டிஷ் இந்தியாவில்) போபால் நகரில் பிறந்தார்.  1947  இல் பிரிவினைக்குப் பிறகு கான் குடும்பம் இந்தியாவி லிருந்து பாகிஸ்தானுக்குப் புலம்பெயர்ந்தது.  கராச்சி பல்கலைக் கழகத்தில் 1960 இல் B.Sc பட்டம் பெற்றார்.  1961 இல் உலோகவியல் படிக்க மேற்கு ஜெர்மனிக்குச் சென்று 1967 இல் பொறியியல் பட்டத்தைப் பெற்றார்.  அடுத்து நெதர்லாந்தில் உள்ள டெல்ஃப்ட் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து உலோகவியல் பொறியியலில் Ph. D. (Metallurgical Engineering) பட்டத்தையும் பெற்றார்.

1972 இல் டாக்டர் கான் நெதர்லாந்து பௌதிக ஆய்வுக் கூடத்தில் (Physical Dynamics Research Laboratory, Amsterdam, Netherlands) சேர்ந்து யுரேனியம் செழிப்பூட்டும் அணுவியல் கூடத்தில்  (Uraniuam Enrichment Facility at Almelo, Netherlands) பணி செய்தார்.  அணுமின் சக்தி நிலையங்களுக்கு செழிப்பு யுரேனியத்தைத் தயாரிக்க அந்த ஆய்வுக்கூடத்தை 1970 இல் கட்டி முடித்தவை மூன்று நாடுகள் : பிரிட்டன், மேற்கு ஜெர்மனி & நெதர்லாந்து. யுரேனியம் ஹெக்ஸா ஃபுளூரைடு வாயுவிலிருந்து (Uranium Hexafluoride Gas) அணு ஆயுதத் தரமான யுரேனியம் -235 எருவைத் தயாரிக்க 1500 சுழல்வீச்சு வடிகட்டிகள் (Centrifuges) தேவைப்படும்.  அவற்றில் யுரேனியம் -238 & யுரேனியம் -235 ஆகிய இரண்டு ஏகமூலங்களும் (Isotopes of Uranium) 100,000 rpm (Revolutions per minute) வேகத்தில் சுற்றப்பட்டு யுரேனியம் -235 படிப்படியாக சேமிப்பாகிப் பிரித்தெடுக்கப் படும்.  அணு ஆயுதத் தரமான யுரேனியம் -235 தயாரிப்பு முறைகள், மற்றும் யந்திர சாதனங்கள் யாவும் ஐரோப்பிய நாடுகளில் மிகவும் பாதுகாப்பாகவும் இரகசியமாகவும் வைத்திருக்கப் படுபவை !

1974 மே மாதம் 18 ஆம் தேதியில் இந்தியா “புத்தர் புன்னகை புரிகிறார்” (Bhuddha Smiling) என்னும் இராணுவக் குறிச்சொல் கொண்ட தனது முதல் அணு ஆயுதச் சோதனையைச் செய்து உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியது !  பாகிஸ்தானைப் பைத்திய நாடாக்கியது ! டாக்டர் கான் “புத்தர் புன்னகை புரிந்தது பாகிஸ்தானின் மரணத்தை எதிர்நோக்கித்தான்” என்று கொதித்தெழுந்தார் !  1975 டிசம்பரில் டாக்டர் கான் வாயுச் சுழல்வீச்சு வடிகட்டிப் படங்களையும் (Gas Centrifuge Blueprints) மற்றும் தயாரிப்பு முறைகளையும் களவாடிக் கொண்டு நெதர்லாந்தை விட்டுப் பாகிஸ்தானுக்கு பறந்து வந்தார் !  டச் அரசாங்க ஒற்றர் பின்னர் செய்த ஒற்றில் மிகவும் இரகசியாமான யுரேனியம் -235 சேமிப்புத் தகவல் பாகிஸ்தானி வலைக் குழு ஒற்றர் மூலமாகக் களவாடப் பட்டது என்று தெரிய வந்தது !

டாக்டர் கான் அப்போதைய முதன் மந்திரி ஸுல்ஃபிகார் அலி புட்டுவுடன் நட்புறவு கொண்டிருந்தார்.  1974 இல் இந்தியா தனது முதல் அணு ஆயுதத்தைச் சோதித்த பிறகு, டாக்டர் கான் பாகிஸ்தான் அரசாங்க அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு அதன் அணு ஆயுத முயற்சிக்குத் தான் உதவுதாக முன்வந்தார்.  1998 மே மாதம் 11 இல் இந்தியாவின் இரண்டாவது அணு ஆயுதச் சோதனைகள் பொரொன் பாலை நிலத்தில் நிகழ்ந்த பிறகு பாகிஸ்தானின் முதல் அணு ஆயுதச் சோனைகள் 1998 மே மாதம் 28 (யுரேனியம் -235 அணுக்குண்டு) & 30 (புளுடோனியக் குண்டு) தேதிகளில் இரண்டு முறைச் சோதனைகள் செய்து காட்டப் பட்டன.

பாகிஸ்தான் அணு ஆயுதங்களுக்கு அன்னிய நாடுகளின் ஒத்துழைப்பு

பாகிஸ்தான் அணுவியல் விஞ்ஞானிகள் திடீரெனச் செய்து காட்டிய செழிப்பு யுரேனிய அணுக்குண்டு, புளுடோனிய அணுக்குண்டு வெடிப்புகள் இரண்டும் உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தி ஐயமுறச் செய்தன.  அத்தகைய விரைவான அணு ஆயுதத் தயாரிப்புகள் சில அன்னிய நாடுகளின் கூட்டு ஒத்துழைப்பின்றி நிகழ முடியாதென்று சந்தேகங்கள் உண்டாயின !  1980 ஆண்டுகளில் சைனாவின் தொழில் நிபுணர்கள் பாகிஸ்தான் அணுவியல் ஆய்வுக் கூடங்களில் உலவியதாகத் தெரிகிறது !  1983 இல் டச் அரசாங்கம் யுரேனியச் செழிப்பு முறைப்பாடுச் சாதனங்களைக் களவாடி ஓடிப்போன டாக்டர் கான் மீது வழக்குத் தொடர்ந்து ஆம்ஸ்டர்டாம் சிறையில் நாலாண்டுகள் தள்ள ஆணை இட்டது !  ஆனால் அப்போது பாகிஸ்தானில் இருந்த குற்றவாளி கானை டச் அரசாங்கம் கைது செய்ய முடியாமல் போனது !

1987 இல் பிரிட்டீஷ் தின இதழ், ‘பாகிஸ்தான் அணு ஆயுதத் தயாரிப்பு நிபுணத்தை டாக்டர் கான் வெளியே இருந்து எடுத்து வந்ததாய்’, ஒப்புக் கொண்டதாக அறிவித்தது.  ஆனால் 1990 இல் டாக்டர் கான் பாகிஸ்தானி தகவல் அறிவிப்பாளருடன் உரையாடும் போது “நாங்கள் அன்னிய நாடுகளிலிருந்து எந்த மூலத் தகவலை அறியவில்லை” என்றும், “அணுவியல் நூல்கள், மாத இதழ்கள், ஆராய்ச்சி வெளியீடுகளைப் பயன்படுத்தினோம்,” என்றும் வெளிப்படையாகக் கூறினார் !  1991 இல் பாகிஸ்தான் தினச்செய்தி இதழ் ‘டான்’ (Dawn) டாக்டர் கான் தான்தான் அணு ஆயுதத் தயாரிப்புக்குக் காரண கர்த்தா வென்று பெருமைப் பட்டுக் கொண்டதாக அறிவித்தது.

அணு ஆயுதச் சாதனங்களைப் பாகிஸ்தான் தயாரிக்க பல்வேறு ஐரோப்பிய நாடுகள் தெரிந்தோ தெரியாமலோ உதவி செய்ய முன்வந்ததாக அறியப்படுகிறது.  நெதர்லாந்தில் டாக்டர் கான் 1970 ஆண்டுகளில் சுழல்வீச்சு வடிகட்டிகள் டிசைன், அமைப்பு முறைகளை முதலில் களவாடிப் பாகிஸ்தானுக்குக் கொண்டு வந்தார்.  அந்த நிபுணத்தை முதலில் பாகிஸ்தானுக்கும், பிறகு ஈரான், லிபியா, வட கொரியா நாடுகளுக்கும் அவர் பயன்படுத்தியாக அறிய வருகிறது.  நெதர்லாந்தில் செழிப்பு யுரேனிய ஆய்வுக்கூடம் கட்டிக் கொடுத்த பிரிட்டன் டாக்டர் கானுக்கு இருபதாண்டுகள் உபரிச் சாதனங்கள் (Centrifuge Parts & Spare Parts) அனுப்ப ஒப்பி வந்திருக்கிறது.

பாகிஸ்தான் அணு ஆயுதம் தயாரிக்க செழுப்பு யுரேனியம் சேமிக்கத் தேவையான நுணுக்க சூனியமாக்கும் பம்ப்புகளை (Vacuum Pumps) ஜெர்மன் வர்த்தகக் கம்பேனி ஒன்று செய்து அனுப்பி இருக்கிறது.  ஸ்பெய்னில் உள்ள ஒரு தொழிற்சாலை இடைத் தரகர் மூலமாக லேத் யந்திரங்களைப் (Lathe Machines for Enrichment Plant) பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது.  மொராக்கோவில்தான் டாக்டர் கான் வெளிநாட்டு நிபுணர்களைச் (ஈரான், லிபியா, வட கொரியா மற்றும் சாதனம் தயாரிப்பாளரை) சந்தித்து கூட்டுழைப்புப் பணிகளைச் செய்திருக்கிறார்.  மலேசியாவில் உள்ள ஸ்கோமி நுணுக்கத் தொழிற்சாலையில்தான் (Scomi Precision Engineering Company) எல்லா நாடுகளுக்கும் வேண்டிய 25,000 சுழல்வீச்சு வடிகட்டிகள் (Centrifuges) தயாரிக்கப் பட்டுள்ளன !  வட கொரியா நாட்டுக்கு மட்டும் டாக்டர் கான் குறைந்தது 12 தடவைகள் அணு ஆயுதத் தயாரிப்பு சம்பந்தமாக நேரிடைப் பிரயாணம் செய்திருப்பதாகத் தெரிகிறது !  அதன் பிரதிபலனாக வட கொரியா தனது கட்டளை ஏவுகணைகளைப் பாகிஸ்தானுக்குக் கொடுத்திருப்பதாகவும் பின்னால் அறிய வருகிறது.

1980 -1990 ஆண்டுகளில் அணு ஆயுதத் தயாரிப்பு மற்றும் கட்டளை ஏவுகணைத் தயாரிப்பு சம்பந்தமாக ‘பாகிஸ்தான் சைனா வட கொரியா’ நாடுகளுக்குள் கூட்டுழைப்பு நிகழ்ந்து வருவதாக மேற்திசை நாடுகளுக்குள் ஓர் உறுதியான எண்ணம் வலுத்தது !  அமெரிக்க நாளிதழ் ‘வாஷிங்டன் போஸ்ட்’ (Washington Post) 1980 ஆரம்ப ஆண்டுகளில் அமெரிக்க ஒற்றர் டாக்டர் கானின் விமானப் பயணப் பெட்டியை உளவிச் சோதித்து சைனா பேஜிங்கிலிருந்து ஹிரோஷிமா மாடல் அணு ஆயுதம் போன்ற சில வரைப்பட விபரங்கள் இருந்ததைக் கண்டுபிடித்து அணு ஆயுதத் தயாரிப்புக்குச் சைனாவின் கூட்டுழைப்பு உள்ளதை முதன்முறை உறுதியாக அறிந்ததாக வெளியிட்டது !

இத்தகைய பயங்கர அணு ஆயுதக் குண்டுகளைப் பலநாடுகள் தயாரிக்கக் காரணமாக இருந்த டாக்டர் கான் இப்போது பாகிஸ்தானில் ஒரு கோடிஸ்வரன் என்பதைச் சொல்லத் தேவையில்லை ! அவருக்கு உதவியாகப் பணி செய்த பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் பலரும் பணம் திரட்ட பயங்கர வேலைகள் செய்து வந்திருக்கிறார்.  இந்த இரகசிய வேலைகளில் முன்னாள் ஜனாதிபதி முஷாரஃப் அனுமதி இல்லாமல் பல்லாயிரம் டாலர் நிதித் திணிப்பின்றி ஈரான், வட கொரியா நாடுகளில் அணு ஆயுதப் பெருக்கம் பரவி இருக்குமா ?  ஆனால் பாகிஸ்தான் அணு ஆயுதத் தயாரிப்புக்கும், வட கொரியா கட்டளை ஏவுகணைகளைக் கொடுத்ததற்கும் தேவைப்படும் மில்லியன் கணக்கான டாலர்களை வருடா வருடம் யார் கொடுத்து வந்திருக்கிறார் என்று நினைக்கிறீர்கள் ?  அணு ஆயுதம் தயாரிக்கும் ஈரானையும், வட கொரியாவையும் தடுத்து வசைபாடிக் கொண்டு பாகிஸ்தானுடன் ஆழ்ந்த தோழமை பேணி வரும் உலக வல்லரசுகளில் உச்ச வல்லரசான அமெரிக்க நாடுதான் !

கதிர்வீச்சடி அளவுகளும் அதனால் விளையும் உயிரினப் பாதிப்புகளும்


Ionizing Radiation Dose Level Examples

Recognized effects of acute radiation exposure are described in the article on radiation poisoning. The exact units of measurement vary, but light radiation sickness begins at about 50–100 rad (0.5–1 gray (Gy), 0.5–1 Sv, 50–100 rem, 50,000–100,000 mrem).

Although the SI unit of radiation dose equivalent is the sievert, chronic radiation levels and standards are still often given in millirems, 1/1000th of a rem (1 mrem = 0.01 mSv)


Level (mSv ) Duration Description
0.001-0.01 Hourly Cosmic ray dose on high-altitude flight, depends on position and solar sunspot phase.
0.01 Annual USA dose from nuclear fuel and nuclear power plants
0.01 Daily Natural background radiation, including radon
0.1 Annual Average USA dose from consumer products
0.15 Annual USA EPA cleanup standard
0.25 Annual USA NRC cleanup standard for individual sites/sources
0.27 Annual
0.28 Annual USA dose from natural terrestrial sources
0.39 Annual Global level of human internal radiation due to radioactive potassium
0.46 Acute Estimated largest off-site dose possible from March 28, 1979 Three Mile Island accident
0.48 Day USA NRC public area exposure limit
0.66 Annual Average USA dose from human-made sources
1 Annual Limit of dose from all DOE facilities to a member of the public who is not a radiation worker
1.1 Annual 1980 average USA radiation worker occupational dose
2 Annual USA average medical and natural background [5] Human internal radiation due to radon, varies with radon levels
2.2 Acute Average dose from upper gastrointestinal diagnostic X-ray series
3 Annual USA average dose from all natural sources
3.66 Annual USA average from all sources, including medical diagnostic radiation doses
few Annual Estimate of cobalt-60 contamination within about 0.5 mile of dirty bomb
5 Annual USA NRC occupational limit for minors (10% of adult limit) USA NRC limit for visitors Orvieto town, Italy, natural [6]
5 Pregnancy USA NRC occupational limit for pregnant women
6.4 Annual High Background Radiation Area (HBRA) of Yangjiang, China
7.6 Annual Fountainhead Rock Place, Santa Fe, NM natural
10-50 Acute USA EPA nuclear accident emergency action level >
50 Annual USA NRC occupational limit (10 CFR 20)
100 Acute USA EPA acute dose level estimated to increase cancer risk 0.8%
120 30 years Exposure, long duration, Ural mountains , lower limit, lower cancer mortality rate[8]
150 Annual USA NRC occupational eye lens exposure limit
175 Annual Guarapari, Brazil natural radiation sources
250 Acute USA EPA voluntary maximum dose for emergency non-life-saving work
250 2 hours Whole body dose exclusion zone criteria for US nuclear reactor siting[12] (converted from 25 rem)
260 Annual Ramsar, Iran, natural background peak dose [9
500 Annual USA NRC occupational whole skin, limb skin, or single organ exposure limit
500 30 years Exposure, long duration, Ural mountains upper limit
750 Acute USA EPA voluntary maximum dose for emergency life-saving work [11
500-1000 Acute Low-level radiation sickness due to short-term exposure
500-1000 Detonation World War II nuclear bomb victims
3000 Acute Thyroid dose (due to iodine absorption) exclusion zone criteria for US nuclear reactor siting  (converted from 300 rem)
4500-5000 Acute LD50 in humans (from radiation poisoning with medical treatment.[13

உலக விஞ்ஞானிகளுக்கும், அரசுகளுக்கும் ஓர் வேண்டுகோள்!

1945 ஜூன் 11 ஆம் தேதி மன்ஹாட்டன் முதல் அணுகுண்டு திட்டத்தில் பணி செய்த நோபெல் பரிசு விஞ்ஞானி, ஜேம்ஸ் பிராங்க் (James Frank) தலைமையில் சிகாகோவின் பல விஞ்ஞானிகள் ஜப்பான் மீது போட விருக்கும் அணுகுண்டால் நேரப் போகும் கோர விளவுகளை முதலிலே தடுக்க முயற்சி செய்தனர்.  அணுகுண்டுக்குப் பதிலாக வேறு ஒரு குண்டைத் தயாரித்துப் போட, அந்த விஞ்ஞானிகள் அமெரிக்க யுத்தச் செயலாளருக்குக் (Secretary of War) கடிதம் எழுதினார்கள் !  இறுதியில் ஜப்பானில் அமெரிக்கா என்ன செய்தது என்று நாமெல்லாம் அறிவோம் !

1945 ஜூலை 17 ஆம் தேதி டாக்டர் லியோ ஸிலார்டு (Dr. Leo Szilard) தலைமையில் 63 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட ஓர் விண்ணப்பத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் (President Truman) அவர்களுக்கு அனுப்பினர்.  ஜப்பான் மீது அமெரிக்கப் போர்ப்படை போட விருக்கும் அணு ஆயுதங்களால் விளையப் போகும் கதிரியக்கப் பொழிவுகளின் கோர அழிவுகள் போர் ஒழுக்கத்திற்கு முற்றிலும் எதிரானவை என்று அழுத்தமாய் எழுதி யிருந்தார்கள் !  லியோ ஸிலார்டுதான் முதன் முதலில் அணுகுண்டு ஆக்க, அமெரிக்க ஜனாதிபதிக்குக் கடிதம் எழுத, ஐன்ஸ்டைனைத் தூண்டியவர் !

1955 ஆகஸ்டு 25 ஆம் தேதி பிரிட்டிஷ் விஞ்ஞானி, டாக்டர் ஜெ. பிரனோஸ்கி (Dr. J. Bronowski) அகில நாடுகளின் அமைதி நிலைநாட்டுப் பேரவையில் பேசும் போது, “எனது ஆணித்தரமான கொள்கை இது!  ஒவ்வொரு விஞ்ஞானியும் தனது தனித்துவ மனச்சாட்சியைப் பின்பற்ற வேண்டும். அது அவரது கடமை.  இதில் அரசாங்கத்தின் கடமை என்ன?  ஒரு விஞ்ஞானி தன் மனச்சாட்சிக்கு எதிராகப் பணி செய்ய மறுத்தால், அவரை அரசாங்கம் தண்டிக்கக் கூடாது!  விஞ்ஞானிகள் தமக்கு விருப்பம் இல்லா ஆராய்ச்சில் இறங்க மாட்டோம் என்று மறுத்தால் விட்டுவிடும் ஒரு சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் !” என்று பறை சாற்றினார்.

(கட்டுரை தொடரும்)

*****************************

தகவல் :

Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007)  2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)

1.  Scientific American Magazine :  India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)

2 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210273&format=html  (Robert Oppenheimer)

3 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40203245&format=html (First Atomic Bombs Dropped on Japan)

3. (a) https://jayabarathan.wordpress.com/2009/08/06/dr-raja-ramanna-2/ (ராஜா ராமண்ணா இந்திய அணு ஆயுதச் சோதனை)

4. The Making of the Atomic Bomb, By: Richard Rhodes

5. Oppenheimer, By: James Kunetka

6. Hand Book of World War II, Abbeydale Press

7. The Deadly Element, By: Lennard Bickel

8. Canadian Nuclear Society Bulletin, June 1997

9.  Grolier Online :  Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)

10.  Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)

11.  National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)

12.  Scientific American Magazine :  Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads, By : David Biello (November 2007)

13.  The Dirty Bombs (Radiological Dispersion Bombs) MSN Broadcasting -Dirty Bombs Biggest Hazard : Panic Experts Say Radiation Would Play on Public Fears (June 10, 2002)

14.  Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)

15.  Neutron Bombs – Wikipedia Report (December 15, 2009)

16 Wikipedia Report on Dr. Abdus Salam – http://en.wikipedia.org/wiki/Abdus_Salam (Dec 18, 2009)

17. Wikipedia Report on Abdul Qadeer Khan – http://en.wikipedia.org/wiki/Abdul_Qadeer_Khan (December 26, 2009)

18. Wikipedia Report on http://www.armscontrol.org/documents/sort Strategic Offensive Reductions Treaty (SORT) (May 24, 2002)

******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 31, 2009