பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள அடுக்கு வாயுக் கோளம்

fig-1a-the-earths-biosphere1

(கட்டுரை 46 பாகம் 2)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

சட்டியில் ஆப்பம் ஒன்றைச்
சுட்டுத் தின்ன
அண்டக்கோள் ஒன்றை முதலில்
உண்டாக்க வேண்டும் !
அண்டக்கோள் தோன்றப்
பிரபஞ்சத்தில் ஒரு
பெருவெடிப்பு நேர வேண்டும் !
வடிவங்கள் மலர
சக்தி விசையூட்ட வேண்டும் !
கோடான கோடி யுகங்களில்
உருவான பூமியும் ஓர்
நுணுக்க அமைப்பு !
தனித்துவப் படைப்பு !
அகிலாண் டத்தில்
நிகரில்லை அதற்கு !
நாமறிந்த பிரபஞ்சத்தில்
பூமியைப் போல்
நீர்க் கோள் ஒன்றை
வேறெங்கும் காணோம் !
நீர் ஆவியாய் நீங்காது
வைத்திருப்பது
வாயுக் குடை ! அஃதில்லையேல்
மாயும் உயிரினங்கள் !
மகத்துவமாய்
அகிலப் பிரமாண்டத்தை
நுணுகி நோக்க
மனிதப் பிறவி உதித்த
புனித பூமி,
நமது பூமி !

fig-1b-genome-of-the-species

“உயிரினம் எதுவுமே இல்லாமல் எளியதாய்ப் பிரபஞ்சம் வெறும் பௌதிகம், இரசாயனத்தோடு, கால வெளியைத் தோற்றுவித்த அகில வெடிப்புத் தூசியோடு (Dust of Cosmic Explosion) இருந்திருக்கலாம்.  உண்மையில் அப்படி நேரவில்லை ! பிரபஞ்சம் தோன்றி 10 பில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு வெறும் சூனியத்திலிருந்து உயிரினங்கள் உதித்தன என்று நான் நியாயப்  படுத்துவது பைத்தியகாரத்தனம்.  “உயிரினப் படிப்படி மலர்ச்சி” (Evolution) என்னும் இயற்கை நியதி நேர்ந்தது மட்டுமில்லை !  அந்த மகத்தான நிகழ்ச்சியை உளவி அறிந்து கொள்ளும் மனிதரை உண்டாக்கவும் செய்திருக்கிறது.”

ரிச்சர்டு டாக்கின்ஸ் உயிரியல் விஞ்ஞானி (Richard Dawkins)

“உயிரினம் எப்படி ஆரம்பமானது என்பதை நாம் அறிய முடியவில்லை என்று முதலில் ஒப்புக் கொள்வோம்.  பூர்வாங்க உலகில் எளிய ஆர்கானிக் மூலக்கூறுகள் தோன்ற பல்வேறு இயக்க முறைகள் ஒருங்கிணைந்து பாதை வகுத்தன என்று பொதுவாக நம்பப் படுகிறது !  அந்த மூலக்கூறுகள் இணைந்து மீண்டும் சிக்கலான இரசாயன அமைப்புக் கலவைகள் உண்டாகி, முடிவிலே உயிர் மூலவி என்று சொல்லப்படும் ஒரு பிறவி உருவானது !  இப்படி மேற்போக்கில் பொதுவாகச் சொல்லும் ஒரு விளக்கத்தில் எவரொவரும் திருப்தி அடைய முடியாது.”

மில்லர் & ஆர்ஜெல் (Miller & Orgel in their Book “The Origin of Life on Earth -1974)

the-origins-of-life

“கிரீன்ஹௌஸ் விளைவின் வெப்பச் சீற்றத்தில் கரியமில வாயுவின் தீவிரத்தை விட, மீதேன் வாயு  ஒவ்வொரு மூலக்கூறுக்கு ஒன்றாகப் பரிதியின் சூட்டை உறிஞ்சிச் சேமிக்கிறது!  சூழ்வெளியில் மென்மேலும் கிரீன்ஹௌஸ் வாயுக்கள் திணிக்கப்படுவதால், ஆர்க்டிக் வட்டாரத்தின் வெப்பம் மிகையாகிப் “பூகோளச் சூடேற்றப் புரட்சி” [Runaway Global Warming (RGW)] தூண்டப்படும் என்று விஞ்ஞானிகள் மிகவும் கவலைப் படுகின்றனர்!  அடுத்து வரும் 100 ஆண்டுகளில் பூகோளக் காலநிலை பெருத்த அளவில் மாறிச் சமூக, நிதிவளம், உயிர்ப்பயிரின விருத்திகள் பாதிக்கப்படும்.  அதன் துவக்க விளைவுகள் ஏற்கனவே ஆரம்பாகி விட்டன!”

ஆர்க்டிக் காலநிலைப் பாதிப்பு உளவு [Arctic Climate Impact Assessment (ACIA)]

1990 ஆண்டில் பிரென்ச், ரஷிய விஞ்ஞானிகள் அன்டார்க்டிகாவின் தென்துருவத்தில் 1.5 மைல் நீளமான பனித்தண்டைத் தோண்டி எடுத்து 400,000 ஆண்டுகளாக மீண்டும் மீண்டும் தோன்றி மாறிய நான்கு பனியுகங்களின் கரியமில வாயுவை [CO2 in Four Ice-Age Cycles] ஆய்ந்தனர்.  அந்தச் சோதனையில் உஷ்ணம் ஏற, ஏற கரியமில வாயுவின் கொள்ளளவு படிப்படியாகக் குறைந்து [மூன்றில் ஒரு பங்கு] வந்திருக்கிறது என்று அறியப்பட்டது.  காரணம் மற்ற கிரீன்ஹௌஸ் வாயுக்கள் CO2 உடன் மாறி யிருக்க முடியும் என்று எளிதாகக் கருத வழி யிருக்கிறது.  அந்த அரியக் கண்டுபிடிப்பு 1896 ஆண்டு விட்ட முன்னறிப்பை உறுதிப் படுத்தியுள்ளது.

பூகோளச் சூடேற்ற விளக்கமும் விவாதமும் [Global Warming Definitions & Debate]

fig-1c-the-miller-urey-experimentபூமியின் பூர்வீக உயிரினங்களின் மூலத் தோற்றங்கள்

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பூமியின் முதல் 700 மில்லியன் ஆண்டுகளாக வால்மீன்கள், விண்பாறைகள் போன்ற சூரிய மண்டலத்தின் அண்டத் துணுக்குகள் பூமியை மிகத் தீவிரமாய் தாக்கி வந்திருக்கின்றன.  அவற்றில் பேரடித் தாக்குதல்களால் வெளியான அதிர்வு சக்தி, கடல் வெள்ளத்தையும் ஆவியாக்கும் பேராற்றல் கொண்டிருந்தது. அப்போது தழைத்திருந்த உயிரினத் தோற்றங்களையும் பூமித் தளங்களில் அழிக்க வல்லது.  3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தடம் விட்டுச் சென்ற முதல் உயிரினத் தோற்றத்தின் புதைவடிவுப் பழஞ்சின்னச் சான்றுகள் (Fossil) இப்போது காணக் கிடைத்துள்ளன !

the-origins-of-life-on-earth

கலியுகத்தின் சிக்கலான உயிரனங்களின் அமைப்புகள் பூகோளத்தின் பௌதிக இரசாயனச் சூழ்வெளியில் (Environmental Globe) சீரான முறையில் படிப்படியாக பல கோடி ஆண்டுகளாகப் பரவி வந்துள்ளன.  பூமியின் ஆக்ஸிஜன் சொற்பமான “சிறுத்திடும் சூழ்வெளி அழுத்தத்தில்” (Reducing Atmosphere with Traces of Oxygen) உள்வெளி அல்லது விண்வெளி ஒளிமந்தைகளின் ஆர்கானிக் மானோமெர்கள், பாலிமர்கள் (Terrestrial Organic Polymers or Extra-Terrestrial Organic Monomers) நியமித்த நிபந்தனைகளில் வளர்ச்சிச் சூழகத்தை நிலைநிறுத்தி இருந்தன.  ஆகவே ஆக்ஸிஜன் வேண்டாத உயிரினங்கள் இரசாயனப் பந்தங்களைத் (Chemical Bonds) தாக்கும்.  ஆகவே பூர்வீகப் பூமியில் (Primitive Earth) ஏற்கனவே இருந்த ஆர்கானிக் மானோமெர்கள் அவற்றை விடச் சிக்கலான ஆர்கானிக் பாலிமர் உண்டாக வசதியான எரிசக்திச் சூழ்நிலைகள் உண்டாயின.  ஆர்கானிக் மானோமெர்கள் இருவிதச் சேமிப்புகள் மூலம் உருவாகின்றன :  1. உள்வெளி ஒளிமந்தை இணைப்பு முறைகள் (Terrestrial Synthetic Pathways).  2. விண்வெளி ஒளிமந்தையிலிருந்து (Extra-Terrestrial) சூரிய மண்டலம் பெற்ற மூலங்கள்

fig-1-the-beginning-of-life

பல்லாண்டு காலங்களாக எளிய மூலக்கூறுகள் மிகச் சிக்கலான உயிரியல் மூலக்கூறுகளாக விருத்தியாகி முடிவில் “உயிரணுக்கள்” (Cells) ஆயின !  அவை மீண்டும் பல்வேறு வடிவாக விருத்தியாகி “ஒளிச்சேர்க்கையில்” இரசாயன முறை மலர்ச்சி (Metabolically Capable of Photosynthesis) பெறும் உயிரணுக்களாக மாறின.  அதற்குப் பிறகு அடுத்தடுத்து உயிரியல் பூதள இரசாயனச் சுழல் இயக்கங்களால் பின்னிய மீளா நிகழ்ச்சிகள் (Cascade of Irreversible Events Interconnected by Bio-Geochemical Cycles) நேர்ந்தன.  அப்போது பூகோளத்தின் சூழ்வாயு அழுத்தம் ஆக்ஸிஜன் ஊட்டும் சூழ்வெளியாகி (Oxidizing Atmosphere) “ஓஸோன்” அடுக்கு (Ozone Layer) உண்டானது.  ஓஸோன் அரங்கமானது பாதிக்கும் சூரியனின் புறவூதாக் கதிர்களை வடிகட்டும்.  ஆக்ஸிஜன் ஊட்டும் சூழ்வெளி பூர்வீக நுண்ணுயிர் அணுக்களை (Early Micro-Organisms) உயிரியல் விருத்தி செய்யும் மூல வாயுவாக இருந்து வந்தது.  இவ்விதப் படிப்படி அரங்க மாறுதல்களால் பூமியானது தற்கால உயிரியல் கோளமாய்ப் (Present Day Biosphere) பின்னால் உருவானது.

fig-1e-albedo-of-the-earth

பூதளச் சூழ்வெளியில் உயிரியல் கோளத்தின் அடுக்கான அமைப்பாடுகள்

நாமறிந்த பிரபஞ்சத்திலே உயிரினங்கள் பல கோடி ஆண்டுகள் வசித்து விருத்தியடைந்த ஓர் அண்டக் கோள் பூமியைத் தவிர வேறொன்றை இதுவரை யாரும் அறிந்திலர்.  சூழ்நிலைக்குத் தக்கபடி மாறிக் கொள்ளும் உயிரினங்கள் பூமியில் மத்திய வேனல் தளங்கள் முதல், துருவக் கூதல் பிரதேசங்கள் வரை நீடித்து வாழ்ந்து வருகின்றன.  பூமியின் ஒவ்வொரு தளமும் நேரிடையாகவோ அன்றி மறைமுகமாகவோ உயிரின நீடிப்பு வளர்ச்சிக்கு வசதி செய்து வருகிறது.  கடல் மட்டத்துக்குக் கீழ் 10 கி.மீடர் ஆழத்திலும் (6 மைல்), கடல் மட்டத்துக்கு மேல் 20 கி.மீடர் உயரத்திலும் (12 மைல்) உயிரினங்கள் உலவி வருகின்றன. கடலிலும், வானிலும், பாலைவனத்திலும், வட தென் துருவங்களிலும் உயிரினங்கள் பிழைத்துத் தழைத்து வருகின்றன.  கனடாவின் ஆர்க்டிக் குளிர்ப் பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளாய் பனிக்குகைகளில் எஸ்கிமோ இனத்தார் குடிவாழ்வு நடத்தி வருகிறார்.  வேனற் பகுதிகளில் பேரளவு உயிரினங்கள் வாழ்ந்து வருகிறன.

fig-1f-amphiphilic-molecules

சூழ்வெளியின் அடுக்கடுக்கான வாயு அழுத்தம் குன்றிய அமைப்பாடு

1. பூதளத்திலிருந்து 8 முதல் 18 கி.மீடர் வரை: டோப்போ கோளம் (Toposphere)

2. பூதளத்திலிருந்து 18 முதல் 50 கி.மீடர் வரை: ஸ்டிராடோ கோளம் (Stratosphere)

3. பூதளத்திலிருந்து 50 முதல் 85 கி.மீடர் வரை: மெஸோ கோளம் (Mesosphere)

4. பூதளத்திலிருந்து 85 முதல் 450 கி.மீடர் வரை: தெர்மோ கோளம் (Thermosphere)

5. பூதளத்திலிருந்து 450 முதல் 10,000 கி.மீடர் வரை: எக்ஸோ கோளம் (Exosphere)

fig-4-earths-layers-of-atmosphere

சூழ்வெளியில் பேரளவுக் கரியமில வாயுவின் சேமிப்பு:

கிரீன்ஹவுஸ் வாயுக்கள் காற்றில் சேமிப்பாகிப் பூகோளத்தின் உஷ்ணம் ஏறுவது போன்ற காலநிலைக் கோளாறுகள் ஆமை வேகத்தில் நிகழ்ந்து மெதுவாக மாறி வருபவை.  அவற்றில் குறிப்பிடத் தக்க வாயு, மின்சாரம், நீராவி உற்பத்தி நிலையங்களுக்குப் பயன்படும் நிலக்கரி எரு எரிந்து உண்டாகும் கரிமிலவாயு [CO2].  மற்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்று மீதேன் வாயு [Methane Gas].  அது கழிவுப் பதப்படுப்பு சாலைகளிலும் [Waste Treatment Plants] தொழிற்சாலை வினைகள், வெப்பத் தணிப்பு முறைகள் வெளிவிடும் ஹாலோகார்பனிலும் [Halo-Carbons] உண்டாகுகிறது.  அனைத்து கிரீன்ஹவுஸ் வாயுக்களையும் CO2 வாயுச் சமனில் [CO2 Equivalence] கூறினால், 2003 ஆண்டில் மட்டும் அனைத்துலக CO2 வாயுச்சமன் எண்ணிக்கை: 2692.  அதாவது 2002 ஆம் ஆண்டு CO2 வாயுச்சமன் எண்ணிக்கையை விட 10.6% மிகையானது என்று ஒப்பிடப் படுகிறது!

fig-2-signs-of-extra-terrestrial-life1

உயிரின நீடிப்புக்கு வாயுச் சூழ்வெளியின் இயக்கப்பாடுகள்

பரிதியின் ஒளிக்கதிர்கள் எரிக்காதவாறு உயிரினங்களுக்குக் குடைபிடிக்கும் வாயு மண்டலத்தின் பயன்கள், இயக்கப்பாடுகள் என்னவென்று தெரிந்து கொள்வோமா ?  அந்த அரிய வாயுக் குடையை நீடித்துத் தன்னகத்தே இழுத்து வைத்துக் கொண்டிருப்பது பூமியின் பேராற்றல் கொண்ட ஈர்ப்பாற்றலே !  செவ்வாய்க் கோளில் இவ்வித வாயுக்குடை இல்லாமல் போனதற்கு முக்கிய காரணம் செவ்வாயின் ஈர்ப்பாற்றல் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிறுத்துப் போனதே !  வாயுக்குடை தங்காமல் போனதும் பரிதியின் கொடிய தீக்கனல் செவ்வாய்த் தளத்தின் நீர்வளத்தை ஆவியாக்கி நீர்வற்றிய பாலைவனமாக்கி விட்டது !

பூமியின் வாயுக்குடை உயிரனத்துக்கு என்ன செய்கிறது ?

1.  பரிதியின் கொடிய புறவூதா கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள், பாதிக்கும் கதிர்வீச்சு போன்றவற்றைப் பகற் பொழுதில் தடுத்து எல்லா உயிரினங்களையும் பாதுகாப்பது.

2.  பரிதியின் அவசியமான ஒளிச்சக்தியைக் கடல் மீதும் பூதளத்தின் மீதும் ஊடுருவிப் பாயும்படிச் செய்வது (எரிசக்தி மூலம்).

fig-3-vertical-structure-of-the-atmosphere-composition

3.  இராப் பொழுது துரிதக் குளிர்ச்சியில் பூதளத்தைக் கணப்புடன் வைத்திருப்பது.  பகற் பொழுது துரித வெப்பத்தில் பூமியை மிதமாய் வைத்து மிகையாக்குவது.  வாயு அழுத்தக் குடையால் புவியின் சராசரி தள உஷ்ணம் : +15 டிகிரி C. வாயுச் சூழ்வெளி இல்லையெனில் -18 டிகிரி C

4.  பூமத்திய ரேகைப் பகுதிகளிலிருந்து மிதப்பகுதி & உயர்ப்பகுதிகளுக்கு வெப்பக்கனல் சக்திக் கடப்பாடு (Transport of Energy from Equtorial Regions to mediuam & Higher Altitudes) நிகழ்வது.

5.  ஆவிநீர்க் கடப்பாடு (Transport of Water Vapour) கொந்தளிக்கும் பொதுநிலைக் காற்றோட்டத் தளங்கள் மூலமாய்ப் பரவி நீராகப் படிதல்.

6.  பூகோளத்தின் வாயு மண்டலத்தில் பேரளவு தாவரப் பயிர்களுக்குத் தேவையான நைடிரஜன் (78%) வாயு சேமிப்பு.  அத்துடன் ஆக்ஸிஜன் (21%), ஆவிநீர் (Moisture upto 4%) & கார்பன் டையாக்ஸைடு (0.036%) சேமிப்புக் களஞ்சியம்.

7.  உயிரினங்கள், பயிரினங்கள் நீடித்து உயிர்வாழத் தேவையான வாயுக்கள் சூழ்வெளி எங்கும் இருப்பது.

8.  இயற்கையாலும், மனிதச் செய்கையாலும் நிகழும் இரசாயன இயக்கங்களை (Oxidation, Reaction with Radicals & Photosynthesis) கடக்கச் செய்வது & பிரித்து விடுவது.

9.  விண்வெளியிலிருந்து பூமியின் சூழ்வெளியில் வீழும் விண்கற்களைக் கடும் உராய்வு வெப்பத்தால் எரித்துச் சாம்பலாக்கி உயிரினங்கள் மீது படாது பாதுகாப்பது.

fig-1g-greenhouse-emission

கரியமில வாயுவைக் கணிக்க நாசா ஏவப்போகும் துணைக்கோள்

2009 பிரவரியில் நாசா ஏவப்போகும் துணைக்கோள் “ஓகோ” என்னும் “புவி சுற்றும் கரி நோக்ககம்” [Orbiting Carbon Observatory (OCO)] சூழ்வெளியில் பூதளத்துக்கு அருகில் சேரும் கார்பன் டையாக்ஸைடையும், அந்தப் பகுதியையும் பதிவு செய்து வரும்.  அதைப் பின்பற்றி ஜப்பான் “கோஸாட்” என்னும் “கிரீன்ஹௌஸ் வாயுக்கள் நோக்கும் துணைக்கோளை” (GOSAT Greenhouse Gases Observing Satellite) அடுத்து ஏவப் போகிறது.  மூன்றாவதாக ஐரோப்பாவில் ஈசா “ஏ-ஸ்கோப்” [Advanced Space Carbon & Climate Observation of Planet Earth (A-Scope)] என்னும் துணைக்கோளை 2016 இல் அனுப்பும்.  பூமியின் சூழ்வெளியில் தாவர இனங்களுக்குத் தேவையான கார்பன் டையாக்ஸைடின் கொள்ளளவு இயற்கை நிகழ்வாலும், மனித வினையாலும் ஏறி இறங்குகிறது.  அதே சமயத்தில் அது பேரளவு சேமிப்பானால் பூகோளம் சூடேறித் துருவப் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்கிறது.  அத்துடன் கடல் நீரின் உஷ்ணமும் உயர்கிறது.  அதனால் பேய் மழைகளும், பயங்கச் சூறாவளிகளும், ஹர்ரிகேன்களும் எழுந்து உயிரினத்துக்கும், பயினத்துக்கும் பேரின்னல்களை விளைவிக்கின்றன.  அவற்றை வரும் முன் தடுக்கவும், வரும் போது எச்சரிக்கை செய்யவும் இந்தத் துணைக்கோள்கள் பேருதவி செய்யும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

fig-6-nasas-co2-hunter-satellite

(தொடரும்)

++++++++++++++++++++++++++

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]
24.  BBC News – Milky Ways’s Sweetness Throughout [Nov 25, 2008]
25. BBC News : Sugar in Space Sweetens Chances of Life By : Dr. David Whitehouse [June 16, 2000]
26 NASA’s Genesis Space Mission – Life from Space Dust ? [Aug 15, 2001]
27 BBC News : Life’s Origin Among the Stars – A Salt Inclusion in a Meteorite is Evidence for Water By : Dr. David Whitehouse [March 27, 2002]
28 The Beginning of Life & Amphiphilic Molecules By: Janet Woo [August 2004]
29. The Biological Universe – A Galaxy Insight [Nov 20, 2008]
30. The Daily Galaxy – Could Cold “Super Earths” Potentially Support Life ?  [Dec 16, 2008]
31. BBE News : NASA Set to Launch CO2 Hunter Satellite By : Jonathan Amos [Dec 18, 2008]

(தொடரும்)

******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) [December 18 2008]

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! உயிரினம் நீடிக்கப் பூமிக்குள்ள தகுதிகள் என்ன ?

cover-image-earth1

[கட்டுரை: 46 பாகம்-1]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

பிரபஞ்ச விண்வெளியிலே
பால்வீதி ஒளிமந்தையின்
பரிதி மண்ட லத்திலே
கோடான கோடி ஆண்டுகள்
உயிரினம் உதித்தது
ஒரு கோளிலே !
பெருங்கோள் ஒன்று மோதி
பூமியை உடைத்துத்
தெறித்தது நிலவு !
குழியில் நிரம்பும் கடல்நீர் !
பரிதியின் ஒளிக்கதிரில்
பகல் இரவு தூங்கி எழும் !
உயிரினம் தோன்றிப் பிழைத்ததும்
பயிரினம் வளர்ந்ததும்
மயிலினம் பறந்ததும்
புழுவினம் ஊர்ந்ததும்
ஒரே ஓர் அண்டத்திலே !
பூகம்பங்கள் கிளம்பிக் கரியின்
புகை மண்டலம்
சுற்றுலா புரியும் !

பனியுகம் தோன்றி
இனிப்பு நீர்ச் சேமிப் பாகும் !
சுனாமி படையெடுத்து
கரை யெல்லாம் உப்பாகும் !
பம்பரமாய்ச் சுற்றும் பூமியின்
துருவ அச்சு கோணிப் போய்
பருவங்கள் மாறிவிடும் !
வேனல், குளிர்காலம் வசந்தம்
தானாக மாறி விடும் !
புயல் அடிக்கும் ! மழை பெய்யும் !
பனிக் குன்றுகள் உருகி
ஆறுகள் அருவிகள்,
ஏரிகள் உருவாகும் !
குறையுள்ள மாந்தரைப் புவியில்
பிறப்பு வித்த
இறைவன் சலித்துப் போய்
வேறெங்கும் படைக் காதது
விந்தை அப்பா !

fig-1-our-earth

“பூதட்டு நகர்ச்சிகள்” (Plate Tectonics) ஏற்படுவது பூமியின் தனித்துவ சுற்று நிகழ்ச்சி.  இம்மாதிரி நிலவிலோ, செவ்வாய்க் கோளிலோ நிலநடுக்கம் நிகழ்வதில்லை.  பூமியின் 70% பங்கு நீர்மயமானது.  கடல்நீர் பூதட்டு நிகழ்ச்சிக்கு மசகுத் திரவமாய் (Lubricant) உதவி செய்கிறது.  இம்மாதிரி உட்கருவின் வெப்பமும், இடையடுக்கு (Mantle), மேலடுக்கு (Crust) அமைப்புகளும் பூமியில் இல்லாவிட்டால் பூதட்டு நகர்ச்சி எழவே எழாது !  பூமியில் உயிரினமும் நீடித்திருக்காது !”

ஜொநாதன் லூனின் (Jonathan Lunine) அரிஸோனா பல்கலைக் கழகத்தின் அண்டக்கோள் விஞ்ஞானி [டிசம்பர் 2008].

“உயிரினம் எப்படி ஆரம்பமானது என்பதை நாம் அறிய முடியவில்லை என்று முதலில் ஒப்புக் கொள்வோம்.  பூர்வாங்க உலகில் எளிய ஆர்கானிக் மூலக்கூறுகள் தோன்ற பல்வேறு இயக்க முறைகள் ஒருங்கிணைந்து பாதை வகுத்தன என்று பொதுவாக நம்பப் படுகிறது !  அந்த மூலக்கூறுகள் இணைந்து மீண்டும் சிக்கலான இரசாயன அமைப்புக் கலவைகள் உண்டாகி, முடிவிலே உயிர் மூலவி என்று சொல்லப்படும் ஒரு பிறவி உருவானது !  இப்படி மேற்போக்கில் பொதுவாகச் சொல்லும் ஒரு விளக்கத்தில் எவரொவரும் திருப்தி அடைய முடியாது.”

மில்லர் & ஆர்ஜெல் (Miller & Orgel in their Book “The Origin of Life on Earth -1974)

fig-1a-the-solar-planets

“கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விடத் தற்போது பூமண்டலம் சூடேறி விட்டதென்று, ஆழ்ந்து செய்த காலநிலை வரலாற்று ஆராய்ச்சிகள் எடுத்துக் கூறுகின்றன!  அதற்குக் காரணம் ஓரளவு இயற்கைச் சம்பவங்களே தவிர, மனிதரியக்கும் தொழிற்சாலை வெளியேற்றும் துர்வாயுக்கள் அல்ல என்று கூறும் மறுப்புவாதிகள் கொள்கைக்கு எதிர்ப்புத் தரும் முறையில் பறைசாற்றப் படுகிறது.”

இயான் ஸாம்பிள் [Ian Sample, “Not Just Warmer: It’s the Hottest for 2000 Years” Guardian Unlimited *(Sep 1, 2003)]

“3000 ஆண்டுகளாகக் கனடாவின் வடகோடி ஆர்க்டிக் பகுதியில் துருத்திக் கொண்டிருந்த ஒரு பூதகரமான பனிக்குன்று, கடந்த ஈராண்டுகளாகப் பூகோளச் சூடேற்றத்துக்குப் புதிய சான்றாக உடைந்து கடலில் சரிந்து கரைந்து விட்டது.  ஆர்க்டிக் பகுதியின் மிகப் பெரும் பனியுடைப்பு எனக் கருதப்படும் அந்த புராதன பனிமதில் சிதைவுக்கு, நூறாண்டு காலமாகப் படிப்படியாய் ஏறிய வெப்ப மிகுதியும், 1960 ஆண்டு முதல் விரைவாக எழுந்த வெப்பப் பெருக்கமுமே முக்கிய காரணங்கள் என்று ஆய்வாளர் கூறுகிறார்!”

ஆன்டிரூ ரெவ்கின் [Andrew Revkin, The New York Times (23 September 2003)]

fig-1b-greenhouse-effect

“வெப்பச் சீற்றத்தால் விளையப் போகும் பிரளயச் சீர்கேடுகள் தீர்க்க தரிசிகளின் முன்மொழி எச்சரிக்கை யில்லை!  மாந்தரை மெய்யாகத் தாக்கப் போகும் இயற்கையின் கோர நிகழ்ச்சிகள்.”

ஆஸ்டிரிட் ஹைபெர்க் [அகில நாட்டுச் செஞ்சிலுவைச் சங்க அதிபதி (23 ஜூன் 1999)]

நமது பூமியில் உயிரின நீடிப்புக்கு உகந்த மகத்தான படைப்புகள்

நமக்கு இதுவரைத் தெரிந்த பிரபஞ்சத்திலே பரிதி மண்டலத்தின் ஓர் அண்டக் கோளான பூமியைப் போன்று உயிரினம், பயிரினம் தோன்றவும், விருத்தி அடையவும், நீடித்து நிலைக்கவும் ஏற்றவொரு புனிதக் கோளம் வேறு எதுவும் கிடையாது.  பரிதியின் உட்புறக் கோளான பூமியின் தளவியல் வடிவ, பௌதிக, உயிரியல் ஏற்பாடுகளில் (Geological, Geophysical & Geobiological Systems) மிகவும் சிக்கலானது.  கோடான கோடி ஆண்டுகளாய்ப் பூமி படிப்படியாகச் சீராகிச்,  மாறி மாறிச் செம்மையாகி இன்னும் மாறுபட்டு வருகிறது.  4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய பரிதியின் ஒளிக்கதிர்களில் மிதமான, சுகமான, தட்ப-வெப்பச் சூழ்வெளியில் இயங்க பூமியானது போதிய சக்திகளால் ஊட்டப்பட்டு வருகிறது.

fig-1c-photo-chemistry

பால்வீதி ஒளிமந்தையின் விளிம்பில் சுற்றும் எளிய, சிறிய விண்மீனான பரிதியை வலம்வரும் எட்டுப் பெருங் கோள்களில் மூன்றாவது கோளாகப் பூமி சுற்றி வருகிறது.  பரிதியின் கோள்களில் ஒன்றான பூமியில் மட்டும் ஏன் உயிரினங்கள் வசித்து வருகின்றன என்ற வினா எழுகிறது.  திரவ நிலையில் நீர் வெள்ளம் பேரளவில் கொட்டிக் கிடக்கும் ஒரே ஓர் அண்டமாக பூமி மட்டும் எட்டுக் கோள்களில் ஒன்றாக இருப்பது ஏன் என்பதும் புதிராக இருந்து வருகிறது.  உயிரனங்கள் விருத்திக்கு நீர்மயச் சூழ்நிலை மிக முக்கியமானதாகக் கருதப்பட்டாலும், உயிரினங்களின் நீடிப்புக்கு நீர் மட்டும் பூமியில் இருப்பது போதாது.  அல்லது பரிதிக்கு உகந்த தூரத்தில் மிதமான தட்ப-வெப்ப நிலையில் பூமி நகர்ந்து வருவது மட்டும் உயிரினங்கள் நீடித்து வாழ உதவி செய்கிறதா ?

fig-1d-inside-the-earth

பூகோளத்தில் ஆக்ஸிஜென் வாயு செழித்த சூழ்வெளியே பரந்து கிடக்கும் உயிரியல் கோளத்தில் (Biosphere) வாழும் பெரும்பான்மை உயிரினங்களைப் பூமியில் நீடித்து விருத்தி செய்யத் துணை புரிகிறது.  பரிதியின் ஒளிச்சேர்க்கையால் (Photo-Synthesis) பயிரினங்கள் தொடர்ந்து ஆக்ஸிஜெனை உற்பத்தி செய்து தீர்வதைத் தொடர்ந்து நிரப்பி வருகின்றன.  கடலான நீர் வெள்ளத்தைப் பூமியின் கவர்ச்சி இழுத்துத் தன்னுடன் வைத்துள்ளது,  அதுபோல் பூமியைச் சுற்றிப் பேரளவு வாயு மண்டலத்தைப் பாதுகாப்புக் குடையாக அதன் ஈர்ப்பாற்றல் சக்தி பிடித்துக் கொண்டிருக்கிறது.  ஆதலால் பூகோளத்தின் தீராத நீர்வளம், ஆக்ஸிஜென் உள்ள வாயு மண்டலம், பரிதியின் ஒளிச்சக்தி, பூதளத்தின் புதிரான உயிரியல் அமைப்புகள் ஆகிய முக்கிய இயற்கைப் படைப்புகளே உயிரினம், பயிரினம், விலங்கினம், மீனினம் நீடித்து வாழ வசதிகள் செய்கின்றன.

fig-1e-worlds-tectonic-plates

பிரபஞ்சத்தில் பூகோளம் புதிரான ஓர் தனித்துவப் படைப்பு

பூகோளத்தைத் தனித்துவ முறையில் படைத்த கடவுள் இனி வேறோர் உலகை அதுபோல் ஆக்கியுள்ளதா வென்று விஞ்ஞானிகள் தொடர்ந்து பிரபஞ்சத்தில் ஆழ்ந்து உளவி வருகிறார்கள்.   இதுவரை பூமியை ஒத்த வேறோர் கோளை விஞ்ஞானிகள் தொலை நோக்கிகள் மூலம் காண வில்லை.  உயிரினங்கள், பயிரினங்கள் தொடர்வதற்கும், விருத்தி அடைவதற்கும் பூகோளத்தில் வாழ்வுக்கேற்ற பருவக் காலநிலை பல பில்லியன் ஆண்டுகள் நீடித்தது ஒரு காரணம்.  அடுத்து பூகோளத்தின் தளவியல் ஏற்பாடுகள் (Global Geological Processes) காரணங்களாகும்.  சூரிய மண்டலத்தின் பெரும்பான்மைக் கோள்களை ஒன்றுக்கு மேற்பட்ட துணைக்கோள்கள் ஈசல்கள் போல் சுற்றிக் கொண்டு வருகின்றன.  பரிதி மண்டலத்தின் 169 துணைக்கோளில் (2008 எண்ணிக்கை) பூமியைச் சுற்றும் துணைக்கோள் நிலவு ஒன்றுதான்.  கடல் அலைகளின் உயர்ச்சி, தாழ்ச்சியைக் கட்டுப்படுத்தும் ஒற்றை நிலவும் பூமிக்கு ஒரு தனித்துவ அமைப்பே !  சூரிய மண்டலத்தில் பூமியின் தனித்துவ அமைப்பைக் காட்டுவது என்னவென்றால் உயிரினங்கள் தொடர்ந்து வாழும் நிலமைப் பல பில்லியன் ஆண்டுகளாய் நீடித்து வந்திருப்பதே !  65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மீது விண்பாறை ஒன்று வீழ்ந்து ஏற்பட்ட பூகோளக் கொந்தளிப்பில் டைனோசார்ஸ் விலங்குகள் அனைத்தும் ஒருமுறை அழிந்து போயின என்பது குறிப்பிடத் தக்கது.

fig-2-global-warming-cooling

திட உட்கருக் கனல் உலோகங்கள் திரண்ட பூமி

பூமியில் ஏற்படும் எரிமலை எழுச்சிகள், பூகம்ப ஆட்டங்கள், மலைத்தொடர்ப் படைப்புகள், சமவெளிப் பள்ளங்கள் உண்டாவது அனைத்தும் பூகோளத்தின் உட்கருவில் பரவிக் கிடக்கும் வெப்பக் களஞ்சியம் கசிந்து வெளியாவதால் ஏற்படுபவை.  அதில் ஒரு பகுதி வெப்பம் பூமி தோன்றிய போதே பூமிக்குள்ளே சேமிப்பானது.  ஒருசில பகுதி வெப்பம் பாறையில் கிடக்கும் யுரேனியம் போன்ற கன மூலக உலோகங்கள் கதிரியக்கத் தேய்வால் (Radioactive Decay of Heavier Elements) உண்டானது.  உட்கருவின் வெப்பம் பூமியின் அடித்தட்டுகளில் “பூதட்டு நகர்ச்சியை” (Plate Tectonics) உண்டாக்கிப் பூகம்பமாய் மேல்தளத்தில் கொந்தளிப்பை எழ வைக்கிறது.  அந்த அதிர்ச்சி நிகழ்ச்சியே அடுத்து பூகோளத் தட்ப-வெப்பநிலைக் கட்டுப்பாட்டை நிலைநாட்டிப் (Global Thermostat) பருவக் காலநிலைச் சுழற்சியைத் தூண்டி வருகிறது.  பூமியில் உயிரினம் பயிரினம் இன்னும் நீடித்துள்ளதற்கு பூதட்டு நகர்ச்சி ஒரு காரணம்.

fig-3-the-water-cycle

பூகம்ப நிகழ்ச்சிக்கு மூல இயக்கமான பூதட்டு நகர்ச்சி எவ்விதம் உயிரின நீடிப்பைத் தூண்டுகிறது என்பது ஒரு புதிரான கோட்பாடு.  ஆரம்ப காலத் தோற்றத்தின் போது உட்தள வெப்பம் உட்கருவைச் சூடாக்கி இரும்பு உலோகம் மையத்தில் சேமிப்பானது.  எளிய மூலகங்கள் (Light Elements) ஆழங் குன்றிய பகுதிகளில் தங்கி பூமியின் “இடையடுக்கு” (Mantle) அமைப்பானது. பிறகு இடையடுக்கு மெதுவாக நழுவி ஈர்ப்பாற்றலில் இறங்குகிறது.  எளிய பளுவுள்ள “மேல்தட்டு” (The Crust) இடையடுக்கு மீது மிதக்கிறது.  மேல்தட்டுப் பாறை கோழி முட்டையின் கூடுபோல் எளிதில் நொறுங்கி முறியும் உறுதி கொண்டது (Regid & Brittle like an egg shell).  அடித்தட்டில் கொந்தளிப்பாகி அது பூகம்பமாகி அந்த உந்துசக்தி அதற்கு மேலுள்ள இடையடுக்கையும், அதற்கும் மேலே இருக்கும் மேற்தட்டையும் நகர்த்திப் பேரளவு பாதிப்பை உண்டாக்கும்.  அதுவே “பூதட்டு நகர்ச்சி” என்று சொல்லப்படுகிறது.

fig-4-earths-climate-thermostat

கடற்தட்டு (Ocean Plate) கண்டத் தட்டைச் (Continental Plate) சந்திக்கும் போது, முந்தைய தட்டுப் பிந்தைய தட்டுக் கீழாக நுழைந்து, பல்லாயிரம் மைல் ஆழத்தில் வீழ்ந்து “அடிதணியும் அரங்கு” (Subduction Zone) உருவாகும்.  இறுதியில் அது முழுவதும் உருகி இடையடுக்கின் ஒரு பகுதியாகிறது.  இந்த மேலெழுச்சி நழுவிக் கீழே நுழையும் நிகழ்ச்சி சுழல் இயக்கமாக மீளுகிறது.  “பூதட்டு நகர்ச்சிகள்” (Plate Tectonics) ஏற்படுவது பூமியின் தனித்துவ சுற்று நிகழ்ச்சி.  இம்மாதிரி நிலவிலோ, செவ்வாய்க் கோளிலோ நிலநடுக்கம் நிகழ்வதில்லை.  பூமியின் 70% பங்கு நீர்மயமானது.  கடல்நீர் பூதட்டு நிகழ்ச்சிக்கு மசகுத் திரவமாய் (Lubricant) உதவி செய்கிறது.  இம்மாதிரி உட்கருவின் வெப்பமும், இடையடுக்கு (Mantle), மேலடுக்கு (Crust) போன்றஅமைப்புக்கள் பூமியில் இல்லா விட்டால் பூதட்டு நகர்ச்சி எழவே எழாது !  பூமியில் உயிரினமும் நீடித்திருக்காது !” என்று அரிஸோனா பல்கலைக் கழகத்தின் பௌதிகரும், அண்டக்கோள் விஞ்ஞானியுமான ஜொநாதன் லூனின் (Jonathan Lunine) கூறுகிறார்.

fig-5-where-is-earths-water

பூகோளக் காலநிலை யந்திரத்தை இயக்கும் பரிதி

பரிதியின் வெப்பநிலைச் சீராகச் சுற்றிலும் நிலைபெறப் பிரம்மாண்டமான ஒரு வாயுக் கோளம், எப்போதும் பூமிக்குக் குடைபிடித்து வருகிறது!  வாயுக் குடையில் வாயுக்களின் கொள்ளளவுக் [Volume] கூடிக் குறையும் போது, பூமியில் படும் பரிதியின் உஷ்ணமும் ஏறி, இறங்குகிறது!  அந்த வாயு மண்டலத்தில் இயற்கை ஊட்டியுள்ள வாயுக்களைத் தவிர, புதிதாகப் பூமியிலிருந்து கரியமில வாயு [Carbon Dioxide] போல் வேறு வாயுக்களும் சேர்ந்தால் வாயுக்களின் திணிவு [Density] மிகையாகிறது!  வாயுக்களின் திணிவு அதிகமாகும் போது, பரிதியின் வெப்ப சேமிப்பும் மிகுந்து, அதன் உஷ்ணமும் கூடுகிறது. அந்தச் சீர்கேடுதான் “கிரீன்ஹௌஸ் விளைவு” அல்லது “கண்ணாடி மாளிகை விளைவு” [Greenhouse Effect] என்று குறிப்பிடப் படுகிறது.  அந்த உஷ்ணப் பெருக்கால் கடல் நீரின் வெப்பம் அதிகரிக்கிறது!  அந்த வெப்ப எழுச்சியால் துருவப் பகுதியில் உறைந்திருக்கும் பனிப்பாறைகள் உருகிக் கடல் மட்டம் உயர்ந்து, கடற்கரைப் பகுதிகள் உப்பு நீரில் மூழ்கி நிலவளம் பாழ்படும்.  அல்லது சி.எ·ப்.சி [Chloro Fluoro Carbons (CFC)] போன்ற பூமி வாயுக்கள் மேலே பரவிப் பாதுகாப்பாய் உள்ள ஓஸோன் பந்தலில் துளைகளைப் போட்டால், பரிதியின் தீய புறவூதாக் கதிர்கள் பூமியில் பாய்ந்து சேதம் விளைவிக்கின்றன.

fig-6-distribution-of-water

பூகோளத்தின் வாயு மண்டலம் பரிதியின் வெப்பச் சக்தியாலும், பூமியின் சுழற்சியாலும் தொடர்ந்து குலுக்கப் பட்டு மாறி வருகிறது!  பரிதியின் வெப்பம் வேனிற் பரப்பு அரங்குகளில் ஏறித் துருவப் பகுதிகளை நோக்கித் தணிந்து செல்கிறது.  அப்போது குளிர்ந்த துருவக் காற்று கீழ்ப்படிந்து பூமத்திய ரேகை நோக்கி அடிக்கிறது.  பூதளப் பரப்பின் நீர்மயம் ஆவியாகி மேலே பரவிப் பல மைல் தூரம் பயணம் செய்து, உஷ்ணம் குன்றும் போது மழையாகப் பெய்கிறது அல்லது பனிக்கட்டியாக உறைகிறது.  நாளுக்கு நாள் ஒரே விதியில் மாறிவரும் சீரான காலநிலை மாற்றத்தை நாம் புரிந்து கொண்டாலும், மெல்ல மெல்ல மிகையாகும் காலநிலை வேறுபாடுகள் விந்தையான புதிராய் உள்ளன. 1940 ஆம் ஆண்டில் ஐஸ்லாந்தில் உஷ்ணம் தணிந்து பனிக்குன்றுகள் 1972 ஆண்டு வரை பெருகிக் கொண்டு விரிந்தன!  பிரிட்டனில் அதே காலங்களில் சில வருடங்கள் சூடாக ஆரம்பித்தாலும் உஷ்ணக் குறைவால், பயிர் வளர்ச்சிக் கால நீடிப்பில் இரண்டு வாரங்கள் குன்றி விட்டன!  அவ்விதமாக காலநிலை யந்திரமானது விந்தையாகப் பூகோளத்தில் விளையாடிக் கொண்டிருந்தது!

fig-7-primary-dust-from-the-sun

பனி யுக, வெப்ப யுக விளைவுகள்

சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு கடைசிப் பனியுகம் உலகைத் தொட்டுக் கடந்து போனது.  நமது பூமியின் காலநிலை வரலாறு கடும் பனிப்பாறைப் படுகையிலும், பிறகு சுடும் வெப்பப் பாலை வனங்களிலும் எழுதப் பட்டுள்ளன!  மனித நாகரீகத் தொடக்கமே 10,000 ஆண்டுகளுக்குப் பின்னால்தால் வளர்ச்சி அடைந்து வந்திருப்பதாக அறியப்படுகிறது! ஒவ்வொரு காலநிலை யுகமும் தனது வரலாற்றுத் தடங்களைக் கடற்படுகை ஆழத் தட்டுகளில் பதிவு செய்திருப்பதைத் தற்போது மாதிரிகள் எடுத்து ஆராயப் பட்டுள்ளது.  பனிப்பாறையில் பதுங்கிக் கிடக்கும் ஆக்சிஜென் வாயுவின் அளவு, பனிப்பாறை உருவான காலத்து உஷ்ணத்தைக் காட்டுகிறது.  பனிபடிந்து பாறையாகும் சமயத்தில் உஷ்ண ஏற்றத் தணிவுக்கு ஏற்ப ஆக்ஸிஜென் அளவு பாறையில் சேமிக்கப் படுகிறது.  கீரின்லாந்தின் பூர்வீகப் பனிப்பாறைகளைத் துளையிட்டு மாதிரிகளை எடுத்து, உயரப் பகுதித் துண்டுகளில் உள்ள ஆக்ஸிஜென் அளவைக் கணக்கிட்டு கடந்த 100,000 ஆண்டுகளாகப் பூமியில் காலநிலை வேறுபாடு வரலாறுகளை எழுதி யுள்ளார்கள்!

(தொடரும்)

++++++++++++++++++++++++++

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.  Earth Science & the Environmental Book.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
21. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
22. Hutchinson Encyclopedia of the Earth Edited By : Peter Smith [1985]
22 Earth Science & The Environment By : Graham Thompson, Ph.D. & Jonathan Turk, Ph.D.
23. Astronomy Magazine : The Solar System -What Makes Earth Right for Life ? By : Jonathan Lunine [Dec 2008]

(பாகம் -2 தொடரும்)

******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) [December 11, 2008]

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வியாழன், சனிக் கோள்களின் துணைக் கோளில் அடித்தள திரவக் கடல்

cover-image-europa-titan1

[கட்டுரை: 45]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

அப்படி எழுதப் பட்டுள்ளது !
ஓராயிரம் பாதைகளில்
ஏதோ
ஒரு வழியில்
வாய்ப்புள்ள தென்றால்
உயிரின உதயம்
எப்படி ஆயினும்
எழுந்திடும் !
உயிரின வளர்ச்சிக்கு ஏற்ற
உலகங்களில்
உயிர்கள் தோன்றி விடும் !
உயிருக்கு நஞ்சான உலகங்கள்
ஆக்கிர மிப்பாகிக்
காலனி யாகும் !
விரிந்த ஒளிமந்தையில்
திரியும் விண்மீன் அரங்குகள்
உயிர்க் குஞ்சுகள்
பொரிக்கும் குருவிக் கூடுகள் !
உயிரின நீடிப்புக் கொடைக்
களஞ்சியம் !
குவலயக் கொடை இது !
கொடுத்தோன்
எவனெனத் தெரியாது !
எப்படியோ இந்தப் பிரபஞ்சம்
இயங்கும்
அப்படி எழுதப் பட்டுள்ளது !

ஜேம்ஸ் பிலிஸ் – அமெரிக்க எழுத்தாள மேதை (James Blish)

“நாம் மட்டும்தான் தனியாக (பிரபஞ்சத்தில்) உள்ளோமா ? என்று கேட்டால் அதற்கு எனது எளிய, சிறிய பதில் ‘இல்லை’ என்பதே !  எனது சிந்தனை நோக்குகள் மூன்று : முதலாவது விண்வெளிப் புறக் கோள்களில் வேறு உயிரினங்கள் இல்லை என்பது.  இரண்டாவது ஓரளவு நிச்சமின்றி ஏதோ இருக்கலாம் என்பது.  ஆனால் அங்கிருந்து விண்வெளியில் நமக்குச் சமிக்கை அனுப்புகிறது என்று நம்பாத நிலை.  நான் விரும்பும் மூன்றாவது கருத்து : பூர்வாங்க உயிரினம் (Primitive Life) பொதுவாகப் பரவி இருக்கிறது.  ஆனால் அறிவு விருத்தியடைந்த ஓர் உயிர்ப்பிறவி (Intelligent Life) வசிப்பது என்பது அபூர்வம்.”

ஸ்டீஃபன் ஹாக்கிங் (நாசாவின் 50 ஆண்டு நிறைவு விழா உரை)

“உயிரினம் எப்படி ஆரம்பமானது என்பதை நாம் அறிய முடியவில்லை என்று முதலில் ஒப்புக் கொள்வோம்.  பூர்வாங்க உலகில் எளிய ஆர்கானிக் மூலக்கூறுகள் தோன்ற பல்வேறு இயக்க முறைகள் ஒருங்கிணைந்து பாதை வகுத்தன என்று பொதுவாக நம்பப் படுகிறது !  அந்த மூலக்கூறுகள் இணைந்து மீண்டும் சிக்கலான இரசாயன அமைப்புக் கலவைகள் உண்டாகி, முடிவிலே உயிர் மூலவி என்று சொல்லப்படும் ஒரு பிறவி உருவானது !  இப்படி மேற்போக்கில் பொதுவாகச் சொல்லும் ஒரு விளக்கத்தில் எவரொவரும் திருப்தி அடைய முடியாது.”

மில்லர் & ஆர்ஜெல் (Miller & Orgel in their Book “The Origin of Life on Earth -1974)

fig-1-genesis-space-probe
“ஐரோப்பியக் கடற்பயணத் தீரர்கள் கடந்த காலத்தில் பயணத்தைத் துவக்குவதற்கு முன்பு கடல் தாண்டிச் சென்றால் என்ன காணப் போகிறோம் என்று அறியாமல்தான் புறப்பட்டார்.  அண்டவெளியில் பயணம் செய்யும் போது நாமும் என்ன காண்போம் என்பதை அறிய மாட்டோம்.  அந்தச் அறியாமைதான் நம் பயணத்துக்கு மகத்துவம் அளிக்கிறது.  நான் நிச்சயம் நம்புகிறேன். ஒருநாள் நாம் காணப் போகிறோம், நமக்குப் புரியாத ஒன்றை !”

– டாமினிக் கோரி எண்டவர் குழுத் தளபதி

“வேறு அண்டவெளிக் கோள் உயிரினத்துடன் (Extraterrestrial Life) புவி மனிதர் தொடர்பு கொள்ள வெகுகாலம் ஆகலாம் !  துரதிட்டவசமாக நமது விண்வெளிப் பயணங்கள் எல்லாம் இன்னும் குழந்தை நடைப் பயிற்சியில்தான் உள்ளன!”

– ரிச்சர்டு லின்னென்.

[டாமினிக், லின்னென் இருவரும் நாசா எண்டவர் விண்வெளி மீள்கப்பல் விமானிகள் (மார்ச் 2008)]

fig-1c-genesis-probe-objectivesசூரிய மண்டலத்தின் துணைக்கோள்களில் நீர்க் கடல், வாயுத் திரவம்

சூரிய மண்டலத்தில் பூமிக்கு அடுத்தபடிப் பேரளவுக் கொள்ளளவு அடித்தளத் திரவக் கடல் உடையவை சூரிய புறக்கோள்களின் இரண்டு துணைக்கோள்கள் : ஈரோப்பா & டிடான் (Europa & Titan).  பூதக்கோள் வியாழனின் சிறிய துணைக் கோள் ஈரோப்பா. சனிக்கோளின் மிகப் பெரும் துணைக்கோள் டிடான்.  டிடான் புதன் கோளை விடப் பெரியது.  பூமியின் நிலவை விடச் சிறியது.  சூரிய மண்டலத்திலே பூமியைப் போல் சுமார் ஒன்றரை மடங்கு (1.6 மடங்கு 60% மிகுதி) வாயு அழுத்தம் கொண்டது டிடான் துணைக்கோள் ஒன்றுதான் !  டிடானின் அடர்த்தியான வாயு அழுத்தத்தை அளிப்பவை ஆர்கானிக் கூட்டுக் கலவைகள் (Organic Compounds).  அதன் வாயு மண்டலத்தில் எல்லாவற்றையும் விட நைட்டிரஜன் வாயு மிகுதியாகவும், அடுத்தபடி மீதேன் வாயு (Methane) அதிக அளவிலும் உள்ளன.

fig-1c-europa-internal-structure

பூமியின் சூழ்வெளியில் மீதேன் வாயு உயிரினக் கிளைவிளைவு வாயுவாய்ச் (Byproduct of Living Organisms) சேர்கிறது.  ஆனால் டிடான் துணைக்கோள் மிக்கக் குளிர்ந்த கோளமாய் (94 டிகிரி கெல்வின்) உயிரினப் பிறவிகள் வாழ முடியாத நச்சு மண்டலமாய்ப் போய்விட்டது.  நீரும் திரவமாய் மேல் தளத்தில் நிலைக்க முடியாது.  ஒரு காலத்தில் பெருத்த மாறுதல் ஏற்பட்டு வெப்ப மிகுதியில் பனிக்கட்டி உருகி நீராகி பூர்வ யுக உயிரினங்கள் (Primitive Life) விருத்தியாகி இருக்கலாம் என்று எண்ண இடமிருக்கிறது.  ஆனால் இப்போது டிடானில் எந்த உயிரினமும் வாழ முடியா தென்று வானியல் விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.  ஆயினும் பேரளவு மீதேன் வாயுள்ள டிடான் அழுத்த வாயு மண்டலத்தை ஆழ்ந்து ஆராய்ந்து வருகிறார்கள்.

fig-1d-genesis-probe-crash-landing

பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவில் மேல்தளப் பனித்தரை வழுவழுப்பாய் உள்ளது ஒரு வேறுபாடு.  அத்துடன் அடித்தளத்தில் கிடக்கும் நீர்க்கடல் விஞ்ஞானிகளின் சிந்தையைத் தூண்டி விட்டிருக்கிறது.  1996 இல் பயணம் செய்த காலிலியோ விண்கப்பல் வியாழனின் பேரளவு காந்த தளத்தை அறிந்த போது, ஈரோப்பாவின் மெலிந்த காந்த தளத்தையும் பதிவு செய்தது.  அதாவது ஈரோப்பா துணைக்கோள் அடித்தள நீர்மய உப்புக் கடல் ஒன்றைக் கொண்டிருக்கிறது என்று யூகிக்க இடமிருக்கிறது.  அண்டக்கோள் விஞ்ஞானிகள் (Planetary Scientists) ஈரோப்பாவின் நீர்க்கடலில் பூமிக்கடல் போல் நுண்ணிய உயிர் ஜந்துகள் (Microbes) இருக்கலாம் என்று நம்புகிறார்கள்.  இனி அனுப்பப் போகும் நாசா விண்ணுளவிகள் ஈரோப்பா உப்புக் கடலை ஆழ்ந்து ஆராயும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

fig-1e-casssini-huygens-mission

அகிலாண்டத்தில் திரவம் இல்லையேல் உயிரினத் தோற்றமில்லை !

உயிரினங்கள் தோன்றவும், வளரவும், நீடித்து வாழவும் தேவையான இரசாயன இயக்கங்களை நிகழ்த்த ஒருவித இடையீட்டுத் திரவம் அவசியம் என்று உயிரியல் விஞ்ஞானிகள் உறுதியாக நம்புகிறார். பூமியில் அது நீராக நிலவிப் பூர்வக் காலம் முதல் உயிரனத்தை உண்டாக்கி வளர்க்கும் மூலத் திரவமாக இருந்து வருகிறது.  நீரின் இரசாயனப் பண்பாடு உயிரின வளர்ச்சிக்கும் நீடிப்புக்கும் ஏற்றதைப் போல் வேறு சில ஆர்கானிக் திரவங்களும் பிற அண்டங்களில் இருக்கலாம் என்றும் கருதுகிறார்.  அவ்விதம் திரவங்கள் இருப்பது அவசியம் என்று நம்பும் போது சூரிய மண்டலத்தில் திரவங்கள் நிலவிய அண்டங்கள் மிகவும் சொற்பம்.  செவ்வாய்க் கோளில் அடித்தள நீர்மைப் பனிக்கட்டிகள் இருப்பதைச் சமீபத்தில் நாசாவின் ·பீனிக்ஸ் தளவுளவி தோண்டி எடுத்து நிரூபித்துள்ளது.  மேலும் அதற்கு முன்னால் 1996 இல் விண்வெளியில் பயணம் செய்த நாசாவின் காலிலியோ விண்கப்பல் பூதக்கோள் வியாழனின் சிறு துணைக்கோள் ஈரோப்பாவில் (Europa) 25 மைல் அகலத்தில் சீர்குலைந்த “பனித் தாங்கிகள்” (Ice Rafts) இருப்பதைத் தெளிவாகக் காட்டியுள்ளது.  அடுத்து நாசா விஞ்ஞானிகள் 1997 இல் ஈரோப்பா துணைக்கோளில் மாபெரும் அடித்தளக் கடல் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாக வெளியிட்டார்கள்.

fig-2-signs-of-extra-terrestrial-life

வியாழக் கோளின் துணைக்கோள் ஈரோப்பாவின் பனித்தட்டின் கீழ் அடித்தள மசகு நீர்க்கடல் (Slushy Liquid Ocean) இருப்பது அறியப் பட்டிருக்கிறது.  அந்த நீர்மய அரணுக்குள்ளே நுண்ணிய உயிரின மூலவிகள் (Micro-organisms) இருக்கின்றவா என்னும் வினா இப்போது விஞ்ஞானிகளிடம் எழுந்திருக்கிறது.

சனிக்கோளின் துணைக்கோள் டிடானில் இரசாயனத் திரவங்கள்

சனிக்கோளின் மிகப் பெரிய துணைக்கோள் டிடான் (Titan).  பூமியைப் போல் ஒன்றரை மடங்கு அழுத்தமுள்ள, 10 மடங்கு உயர வாயு மண்டலம் கொண்டது டிடான்.  மங்கலாக மூடியிருக்கும் மீதேன் வாயு முகில் போர்த்திய துணைக் கோள் டிடான்.  சூரிய மண்டலத்தின் துணைக்கோள்களில் டிடான் ஒன்று மட்டுமே பூமியைப் போல் ஒப்பற்ற வாயு அழுத்தச் சூழ்வெளி அமைப்பைக் கொண்டது.  வாயுச் சூழ்வெளியில் பூமியைப் போல் பிரதானமாகப் பேரளவு நைட்டிரஜன் வாயு உள்ளது !  அடுத்த அதிக அளவு வாயு மீதேன்.  மேலும் ஆர்கான் வாயும் இருக்கலாம்.  சிறிதளவு ஹைடிரஜன் வாயு,  பிறகு அநேக வித ஆர்கானிக் கூட்டுக் கலவைகளும் உள்ளன.  இத்தகைய கூட்டுக் கலவைகளில் சில பொருட்களே டிடான் தோற்றத்தை மங்கல் முகிலாகக் காட்டுகின்றன.  அந்த மங்கல் காட்சியை ஊடுருவி டிடான் தளத்தைத் தொலைநோக்கிகள் மூலம் காண்பது அரிது.

fig-3-greenland-ice-cold-land

சூரியனின் புறவூதா ஒளிக்கதிர் (Ultraviolet Radiation of the Sun) டிடானில் உள்ள மீதேன் மூலக்கூறுகளைப் பிரித்துக் கிளம்பும் ஹைடிரஜன் வாயு விண்வெளியில் தப்பிச் செல்கிறது.  மீதேன் ஆர்கானிக் கூட்டுக் கலவையில் மிச்சம் எஞ்சிய கன வாயுக்கள் சேர்ந்து ஈதேன் அல்லது அசிடிலீன் வாயு ஆகலாம்.  டிடானின் மிகத் தணிந்த உஷ்ணத்தில் (94 டிகிரி கெல்வின்) ஈதேன் ஒரு திரவமாகவே உள்ளது.  அவ்விதம் சேமிப்பாகி மாபெரும் கடலாக டிடானில் கூடலாம்.  சூரிய மண்டலத்தில் பல பில்லியன் ஆண்டுகளாக டிடானில் மீதேன் கலந்து பல நூறு மீடர் ஆழத்தில் ஈதேன் கடல் உண்டாகி இருக்கலாம்.  ஹப்பிள் தொலைநோக்கியும், ரேடார் அலைநோக்கியும் டிடானில் பெருங்கடல் இருப்பதைக் காட்டியுள்ளன.  2004 ஜூலை மாதம் சனிக்கோளைச் சுற்றிய காஸ்ஸினி-ஹியூஜென்ஸ் விண்ணுளவி ஹியூஜென்ஸ் தளவுளவியை டிடானில் இறக்கி அந்த வாயுக்கள் இருப்பதை நிரூபித்துள்ளன.  நாசா விஞ்ஞானிகள் 2007 ஜனவரியில் டிடான் அடித்தள ஏரியில் மீதேன் திரவக் கடல் இருப்பதை உறுதியாக அறிவித்துள்ளனர்.

fig-4-earth-titan-atmosphere

பிரபஞ்சத்தில் பூர்வாங்க உயிரினச் செல்கள் எப்படித் தோன்றின ?

பூர்வாங்க பூமியிலே எப்படி உயிரினம் ஆரம்பமானது என்றோ அல்லது பிரபஞ்சத்தில் வேறு எங்காவது உயிரினம் தோன்றியிருக்க வாய்ப்புள்ளது என்றோ உறுதியாக நாம் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம் !  எங்கே முதலில் உயிரின மூலாதார உற்பத்தி ஆரம்பமானது என்பதற்குப் பல்வேறு கோட்பாடுகள் இருக்கின்றன.  வான உயிரியல் (Astrobiology) விஞ்ஞானம் என்பது பிரபஞ்சத்தில் உயிரினத்தைப் பற்றிய கல்வி.  அந்தப் பல்துறை அடிப்படைப் புது விஞ்ஞானம் உயிரினத்தின் மூலாதாரம், தோற்றம், பங்களிப்பு, முடிவு ஆகியவற்றையும் எங்கே அந்த உயிரினம் இருக்கலாம் என்றும் புகட்டுகிறது.  பூமியிலே எப்படி உயிரினங்கள் ஆரம்பத்தில் உருவாயின என்று உளவிட விஞ்ஞானத்தின் பல்வேறு பகுதிகளில் ஒருவர் ஆழ்ந்து ஈடுபட வேண்டும்.  அந்த சிக்கலான கேள்விக்கு விடைகாணப் பௌதிகம், இரசாயனம், உயிரியல், வானியல் (Physics, Organic & Inorganic Chemistry, Biology & Astronomy) ஆகிய விஞ்ஞானப் பிரிவுகள் தேவைப்படுகின்றன.

fig-5-relative-size-of-titan-europa

கடந்த 50 ஆண்டுகளில் விஞ்ஞானிகள் புரிந்த மூலாதார விண்வெளிக் கண்டுபிடிப்புக்கள் மூலம் பூமி உண்டான போது ஆரம்ப காலங்களில் “தன்னினம் பெருக்கும் சிக்கலான செல்கள்” (Self-Replicating Complex Cells) உதித்த போக்கு முறைகள் தெளிவாகின்றன !  உயிரின மூலாதாரக் குறிப்புக்கு அண்டக்கோளின் ஆரம்பகாலச் சூழ்வெளி அறியப் படவேண்டும்.  துரதட்டவசமாக பூகோளத்தின் துவக்கத்தில் உயிரினத் தோற்றத்துக்கு உதவும் சூழ்வெளியின் வாயுக்கள், தள உஷ்ணம், வாயு அழுத்தம், தள இரசாயனம், காற்றில் நீர்மை (Moisture), கடல்நீரின் pH அளவு (pH —> 0-14 Scale Measurement of Water Acidity/Alkalinity) போன்ற சான்றுகள் எவையும் உறுதியாக அறியப்பட வில்லை.  உயிரினத் தோற்ற முதலில் உளவுகள் பூர்வப் பாறைகளில் உள்ள கார்பன், ஆக்ஸிஜன் கலவையைக் காட்டினாலும் தர்க்கத்தில் சிக்கி அவை நிச்சயம் ஆகவில்லை.  ஆயினும் பூமி தோன்றிய முதல் பில்லியன் ஆண்டுகளில் உயிரினம் உதிக்க ஆரம்பித்தது என்பதில் விஞ்ஞானிகளிடையே உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது.

fig-7-primordial-dust-from-the-sun

உயிரின இரசாயனத்தின் (Biochemistry) இரு மகத்தான மைல்கற்கள்

உயிரினம் என்பது இரசாயன இயக்க விளைவு (Chemical Phenomenon) என்பதை நாம் அறிவோம்.  பூமியின் உயிரின முளைப்பு அடிப்படைக்குப் “பிறவித் தாதுக்களான டியென்னே & ஆரென்னே” (Genetic Materials DNA & RNA) ஆகிய இரண்டும் மற்றும் புரோட்டின், (Protein & Membrane Components) (Biological Membrane -A Continuous Layer of Fat Molecules that encloses a Cell] ஆகியவையும் காரணமானவை.  டியென்னே என்பது மூன்று மூலக்கூட்டுகள் (Nucleic Acid Bases +Sugars +Phosphates) கொண்ட “இரட்டை நெளிவு” (Double Helix).  புரோட்டின் அமினோ அமிலத்தில் ஆனது.

1950 ஆண்டுகளில் அமெரிக்க இரசாயன விஞ்ஞானிகள் ஹரால்டு யுரே & ஸ்டான்லி மில்லர் [Harold Urey (1893-1981) & Stanley Miller (1930-)] ஆகியோர் இருவரும் எப்படி உயிரின அமைப்பு மூலக்கூறு அமினோ அமிலம் (Amino Acid —> Water-soluble Organic Molecule with Carbon, Oxygen, Hydrogen & Nitrogen containing both Amino Group NH2 & COOH) பூர்வாங்கப் பூமியின் புழுதிக் கடலில் முதலில் தோன்றியிருக்கும் என்னும் முக்கியமான சோதனையை ஆய்வுக் கூடத்தில் செய்து காட்டினார்கள் !

fig-6-nasas-kepler-probe-mission

நாசாவின் எதிர்காலக் கெப்ளர் அண்டவெளிக் கோளாய்வுப் பயணம்

2009 மார்ச் 4 ஆம் தேதி நாசா அனுப்பவிருக்கும் கெப்ளர் விண்வெளிக் கோள் தேடும் திட்டப் பயணம் சூரிய மண்டலத்தைத் தாண்டி அப்பால் செல்லும்.  அந்த ஆழ்வெளி ஆராய்ச்சியைச் செய்யும் போது சூரிய மண்டலத்துக்குள் செவ்வாய்த் தளத்திலும், பூமியில் வீழும் விண்கற்களிலும் “ஒற்றைச் செல் ஜந்துக்கள்” (Unicellular Life Organisms) உள்ளனவா என்பதற்குச் சான்றுகளைக் கண்டறியும்.  அடுத்து நாசா பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பாவுக்கு விண்ணுளவி ஒன்றை ஏவி அடித்தளத்தில் உள்ள நீர்க்கடலை ஆராயவும், அக்கடலில் உயிரின வளர்ச்சிக்குச் சான்றுகள் உள்ளனவா என்றும் அறியவும் திட்டமிட்டுள்ளது.

(தொடரும்)

++++++++++++++++++++++++++

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – Is There Life on Mars, Titan or Europa ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
20. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40805151&format=html (வால்மீனிருந்து உயிரின மூலங்கள் பூமிக்கு வந்தனவா ?
21. BBC News – Milky Way’s Sweetness Throughout [Nov 25, 2008]
22 BBC News – Genesis Faulty Battery Probed
23. Sky & Telescope Magazine – Genesis Finding- Earth Has a Problem (Sep 8, 2004)
24. BBC News – (Genesis) Crashed Probe  Yields Sun’s Secrets (Mar 15, 2006)
25 New Scientist – Crashed Genesis Probe Delivers Solar Wind Dust – Genesis Space Probe Mission (Mar 15, 2006).
26. Wikipedea – Genesis Spacecraft [Dec 2, 2008]
27 Science Magazine – Genesis Search for Origin -The Sun Under Lock & Key By : Bob Silberg
[Updated Nov 14, 2008]
28. The Daily Galaxy Website -The Biological Universe -A Galaxy Insight Posted By : Casey Kazan [Nov 20, 2008]
29 The Daily Galaxy – Geysers on Saturn’s Moon Enceladus May Singnal Underground Water & Microbial Life [Nov 29, 2008]
30 The Daily Galaxy on Biological Universe – “Super Cells” that Eat Radiation, Generate Electricity & Cure Cancer -A Galaxy Classic [Nov 14, 2008]
31 BBC News – Earth Could Seed Titan with Life By : Paul Rincon
33 Wikipedia – Extra-terrestrial Life
34 Space Science Reference Guide : Europa & Titan : Oceans in the Outer Solar System By :
Walter S. Kiefer Lunar & Planetary Institute, Houston, Texas. [2003]
35 The Daily Galaxy -Non-Carbon Species : Will We Fail to Detect Extra-terresstrial Life ? [Dec 3, 2008]
36 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40407085&format=html (Cassini-Huygens Space Probe Mission) (July 8, 2004)

******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) [December 4, 2008]

மீண்டும் நிலவுக்குச் செல்லும் நாசாவின் ஓரியன் விண்வெளிக் கப்பல் !

fig-2-orion-spaceship-near-space-station1

(கட்டுரை : 4)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

நிலவில் தடம் வைத்த நாசா
மீண்டும் அங்கே
உலவிடச் செல்கிறது !
ஓரியன் விண்வெளிக் கப்பல்
சீறிக் கொண்டு
செவ்வாய் நோக்கிப் போகும் !
அகில நாட்டு விண்வெளி
நிலையத்தில் சற்று
இளைப்பாறிக் கொள்ளும் !
நிலவில் இறங்கித்
தங்குமிடத்தில் களைப்பாறும் !
அங்கிருந்து கிளம்பி
செந்நிறக் கோளில் இறங்கி
சந்ததி பெருக்கும் !
சந்திரனில் இறங்கி விட்டது
இந்தியத் தளவுளவி !
செந்நிறக் கோளில் வணிகச்
சந்தை வைத்திட
சைனாவும் ஜப்பானும்
பாரதமும் ஒருநாள்
ஈரடி வைக்கும் ! நாசாவின்
ஓரியன் விண்கப்பல்
சூரிய மண்டலக் கோள்களைச்
சுற்றப் போகுது
மானிடர் இயக்கி !

முறிவு ராக்கெட் சோதனை வெற்றி ஓரியன் விண்வெளி ஒளிமந்தைத் தேடல் திட்டத்தின் (Abort Motor Testing in Orion Constellation Program) ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது.  அந்த வெற்றி ஓரியன் விண்வெளி விமானிகள் 2015 இல் அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சென்று அங்கே தங்கி, நிலவில் ஓய்வெடுத்து அடுத்து 2020 இல் செவ்வாயை அடைந்து மனிதர் பூமிக்குத் திரும்ப வசதி உண்டாக்கும்.  உந்துகணை ஏவுதல் முறிவு ஏற்பாடு ராக்கெட்டில் எந்த விதப் பழுதுகள் நேரினும் விண்சிமிழைத் துண்டித்துப் பாதுகாப்பாக விமானிகளை நிலத்தில் இறக்கி விடும்.”

மார்க் கேயர் (Mark Geyer, Orion Project Manager NASA Johnson Space Center, Houstan) [Nov 20, 2008]

fig-3-ares-5-carrying-the-service-module

21 ஆம் நூற்றாண்டில் சந்திரனுக்கு மீண்டுப் பயணம் போகும் நாசா !

1969 ஆம் ஆண்டில் விண்வெளித் தீரர் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதலில் நிலவில் பாதம் வைத்துப் பாதுகாப்பாய்ப் பூமிக்குத் திரும்பிய பிறகு அமெரிக்கா மேலும் ஐந்து தடவைகள் சந்திரனில் தடம் வைத்தது.  240,000 மைல் தூரத்தில் பூமிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் இயற்கைத் துணைக்கோள் நிலவு ஒன்றுதான்.  அநேக முறை 20 ஆம் நூற்றாண்டில் சந்திரனை வெற்றிகரமாய்ச் சுற்றிய நாசா மீண்டும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் நிலவுப் பயணத்தை மீண்டும் துவக்கப் போகிறது என்பது வியப்பாக இருக்கிறதல்லவா ?  பல மில்லியன் டாலர் செலவில் பழைய சாதனங்களைப் புதுப்பித்துக் கொண்டு மறுபடியும் நாசா சந்திரனுக்குப் போவதின் காரணம் என்ன ?  சோவியத் ரஷ்யாவின் சந்திரத் தளவுளவி இறங்கி நிலவின் மாதிரி மண்ணை அள்ளி வந்தாலும், ரஷ்ய அகிலவெளித் தீரர்கள் நிலவின் தளத்தில் இதுவரைத் தடம் வைக்க வில்லை.  ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியக் குழுவின் ஈசா, ஜப்பான், சைனா, இந்தியா ஆகிய ஆறு நாடுகள் சந்திரனைத் தேடிச் சென்று தகவலைச் சேமித்தாலும், அமெரிக்கா ஏன் மறுபடியும்  ஏராளமான நிதியைச் செலவழித்து மனிதப் பயணத்தை துவங்குகிறது என்ற கேள்வி எல்லாருக்கும் எழுகிறது !

fig-1-orion-going-to-the-moon

நாசாவின் அப்பொல்லோ-16 பயணத்தில் மட்டும் விண்வெளித் தீரர்கள் 96 கி.கிராம் எடையுள்ள 731 பாறை மாதிரிகள் சந்திரனில் எடுத்துப் பூமிக்குக் கொண்டு வந்தனர்.  இறுதியில் செய்த அப்பொல்லோ-17 பயணத்தில் 110 கி.கிராம் மாதிரிகள் எடுத்து வந்தனர்.  அடுத்து 2009 ஏப்ரல் 24 ஆம் தேதித் திட்டமிட்டுள்ள “நிலவுத் தள ஆய்வுச் சுற்றி” (Lunar Reconnaissance Orbiter) தயாரிப்பாகி வருகிறது.  அதன் முக்கிய குறிக்கோள் “சுய இயக்க விண் எந்திரம்” (A Robotic Spacecraft) ஒன்றைச் சந்திரனில் இறக்கி மனிதருக்குத் தங்குமிடம் அமைக்க ஏற்ற தளத்தைக் கண்டுபிடிப்பது.  மேலும் அந்த எந்திரம் சந்திரனில் உள்ள எரிசக்திப் பொருள்களைத் (Lunar Resources) தேடி அறியும்.  ஆகவே சந்திரனில் இப்போது மாதிரி எடுத்துச் சோதிக்க நாசா நிதியைச் செலவழித்து புதிய விண்கப்பல் ஓரியனைத் தயாரிக்க வில்லை.  பிறகு எதற்காக ஓரியன் திட்டத்தை நாசா தயாரித்து வருகிறது ?

fig-1a-nasa-ready-for-lunar-revisit

நாசா சந்திரனை மீண்டும் தேடிச் செல்லக் காரணம் என்ன ?

முதல் மனிதன் நிலவில் கால் வைத்து 40 ஆண்டுகள் கடந்த பிறகு நாசா மறுபடியும் அங்கே போவதற்குக் காரணம் செவ்வாய்க் கோளுக்கு 2020 இல் தடமிடப் பயணம் செய்யும் போது இடையே ஓய்வெடுக்கத் தற்போது தங்கு நிலையம் ஒன்றைச் சந்திரனில் அமைப்பதற்கே !  அத்துடன் பூமிக்கும் நிலவுக்கும் இடையே விமானிகள் ஓய்வெடுக்கத் தற்போது புவியைச் சுற்றிக் கொண்டிருக்கும் “அகில நாட்டு விண்வெளி நிலையமும்” (International Space Station) தயாராகப் போகிறது.  ஏற்கனவே பன்னாட்டு விமானிகள் செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் நீண்ட காலப் பயணத்துக்குப் பயிற்சி பெற்று வருகிறார்கள்.  அவர்களுக்குத் தேவையான பொருட்களை ரஷ்யாவும் அமெரிக்காவும் தமது விண்வெளி வாகனங்களில் அனுப்பி அளித்து வருகின்றன.  குறிப்பாக 2010 ஆண்டில் நாசா பயன்படுத்தும் “விண்வெளி மீள்கப்பல்கள்” (Space Shuttles) நிரந்தர ஓய்வு எடுக்கும் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது.

fig-1b-ares-v-ares-i-rockets

ஆதலால் நாசாவின் முதல்பணி விண்வெளி மீள்கப்பலுக்கு இணையான விண்கப்பல் ஒன்றைத் தயாரித்து அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சாதனங்களை அனுப்பிப் பயிற்சிகளைத் தொடர்வது.  இரண்டாவது சந்திரனில் விமானிகள் ஓய்வெடுக்கத் தக்க தளத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே தங்குமிடம் ஒன்றை அமைப்பது.  மூன்றாவது செவ்வாய்க் கோளுக்கு மனிதர் பயணம் செய்யத் தகுந்த விண்கப்பல் ஒன்றைத் தயாரிப்பது.  இம்மூன்று முக்கியப் பணிகளை நிறைவேற்றத்தான் நாசாவின் “ஓரியன் விண்வெளித் திட்டம்” இப்போது மும்முரமாய்த் தயாராகி வருகிறது.

fig-1d-various-spaceships

செவ்வாய் நோக்கி ஓரியன் ஒளிமந்தை விண்கப்பல் திட்டம்

21 ஆம் நூற்றாண்டில் நாசா புது நுணுக்க விண்வெளி தேடும் நூதனக் கப்பலைப் படைத்து வருகிறது.  “ஓரியன் ஒளிமந்தைத் திட்டம்” (Orion Constellation Program) எனப்படும் இது முதலில் செந்நிறக் கோள் செவ்வாயிக்கு 2020 ஆண்டுகளில் நான்கு விண்வெளி விமானிகளை ஏற்றிச் செல்லும் வசதி உள்ளது.  முதன்முதல் 1969 இல் சந்திரனில் தடம் வைத்த அப்போல்லோ-11 விண்கப்பலில் மூவர்தான் அமர்ந்து செல்ல முடிந்தது.  அடுத்தடுத்து ஓரியன் விண்கப்பல் எதிர்காலத்தில் சூரிய மண்டலத்தின் மற்ற கோள்களுக்கு மனிதப் பயணம் செய்யத் தயாரிக்கப்படும்.

fig-1h-relative-sizes-of-rockets

2010 ஆம் ஆண்டில் விண்வெளி மீள்கப்பல் ஓய்வெடுத்ததும் ஓரியன் விண்கப்பல் உணவுப் பண்டங்களையும், உதவும் சாதனங்களையும் விண்வெளி நிலையப் பயிற்சி விமானிகளுக்கு நிரந்தரப் பணிசெய்ய ஆரம்பிக்கும்.  அதற்காக விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட (Spaceship Docking or Rendezvous) ஓரியன் விண்கப்பலில் சாதனங்கள் அமைக்கப்படும்.  மேலும் சந்திர தளத்தில் இறங்கும் இரதத்தை (Lunar Landing Module) ஏந்திச் செல்லும் தூக்குச் சாதனங்களும் இணைக்கப்படும்.  ஒருநாள் செவ்வாய்த் தளத்தில் இறங்கும் விண்ணுளவிகளைக் கொண்டு போகும் எந்திர அமைப்புகளும் கட்டப்படும்.  இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால்  ஓரியன் விண்கப்பல் விமானிகள் நிலவுக்குப் போய் வரவோ அல்லது செவ்வாயிக்குப் போய் வரவோ அவற்றுக்கு ஏதுவான இரட்டை வசதி உள்ளது.  அத்துடன் ஓரியன் விண்கப்பல் 21 ஆம் நூற்றாண்டு ராக்கெட், பொறியியல், மின்னியல், மின்கணினி, பாதுகாப்பு, கவச முற்போக்குச் சாதனங்களை உடையது.

fig-1f-orion-launch-by-ares-rocket

ஓரியன் விண்வெளிக் கப்பலின் அமைப்புகள்

20 ஆம் நூற்றாண்டு அப்பொல்லோ விண்சிமிழ்கள் போல் வடிவம் இருப்பினும், ஓரியன் விண்கப்பல் பெரியது.  ஓரியன் அடித்தட்டு 16 அட் 6 அங்குலம் விட்டமும், 11 அடி உயரமும் கொண்டது.  அதன் எடை 25 டன்.  ஓரியன் விண்கப்பல் கொள்ளளவு அப்பொல்லோ சிமிழ் போல் இரண்டரை மடங்கு உள்ளது.  ஓரியனில் நிலவுக்குச் செல்லும் போது நால்வர் இருக்கலாம்.  விண்வெளி நிலையத்துக்கோ அல்லது செவ்வாயிக்கோ போகும் போது ஆறு பேர் அமர்ந்து செல்லலாம்.  ஓரியன் கப்பலின் முதல் பயணம் விண்வெளி நிலையத்துக்கு 2010 ஆண்டிலும், நிலவை நோக்கி 2014 ஆண்டிலும், செவ்வாய்க் கோளுக்கு 2020 ஆண்டிலும் இருக்கும் என்று திட்டமிடப் பட்டுள்ளன.

fig-1d-lunar-reconnaissance-orbiter

ஓரியன் விண்கப்பலை சுமார் 350 அடி உயரமுள்ள ஏரிஸ்-1 (Ares-1) ராக்கெட் ஏந்திச் செல்லப் போகிறது.  ஏதாவது பழுதுகள் ஏற்பட்டுப் பாதகம் விளையும் முன்பே அதைத் தடுத்து விமானிகளைப் பாதுகாக்க விண்சிமிழின் மேல் “ஏவுகணைத் தடுப்பு ஏற்பாடு” (Launch Abort System) ஒன்று அமைக்கப் பட்டுள்ளது.  ஓரியன் உந்துகணை அமைப்புச் சாதனங்கள் விண்சிமிழின் கீழ் “பணித் தேரில்” (Service Module) உள்ளன.  விண்வெளி நிலையத்துடன் பிணைக்கப் பட்டுள்ள போது ஓரியன் விண்கப்பல் ஆறு மாதங்கள் இணைந்திருக்க முடியும்.  எப்போது வேண்டுமாலும் ஓரியன் மீண்டு பூமிக்கு இறங்கலாம்.  அதுபோல் நிலவில் உள்ள போதும் அது ஆறு மாதங்கள் தங்கியிருக்க முடியும்.

fig-1c-orion-details-testing

ஓரியன் விண்கப்பல் எப்படி நிலவுக்குச் செல்லும் ?

சந்திரனுக்குப் பயணம் போக இரண்டு ஏவுகணை ராக்கெட்டுகள் ஏரிஸ்-1 & ஏரிஸ்-5 அடுத்து அடுத்துப் பயன்படுத்தப்படும்.  ஓரியன் விண்கப்பலைத் தூக்கிச் செல்வது ஏரிஸ்-1 ராக்கெட் தொடுப்பு.  அது அனுப்பப் படுவதற்கு முன்பு பளு சுமக்கும் ஏரிஸ்-5 ராக்கெட் (Ares-5 Cargo Launch) ஏவப்படும்.  ஏரிஸ்-5 ராக்கெட் பூமியைச் சுற்றும் கீழ்ச் சுற்று வீதிக்கு முதற்கட்ட புவிநீக்கு ராக்கெட் பளுவையும், சந்திர தள இரதத்தையும் (Earth Departure Stage & Lunar Module) தூக்கிச் செல்லும்.  சந்திர தள இரதத்தில் இறுதியில் நிலவுக்குச் செல்லும் விமானிகள் பயணம் செய்வார்.  ஏரிஸ்-1 இருக்கும் ஓரியன் விண்கப்பல் புவிச்சுற்று வீதியில் சுற்றிக் கொண்டு சந்திர தள இரதத்துடன் பிணைத்துக் கொள்ளும்.  பிறகு புவிநீக்கு ராக்கெட் இரண்டையும் சேர்த்துக் கொண்டு நிலவுக்குச் செல்லும்.

fig-1g-orion-with-lunar-module2

நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் சந்திரனைச் சுற்ற ஆரம்பித்தவுடன், ஓரியன் விண்கப்பலில் ஒரு விமானி சுற்றிக் கொண்டிருக்க நிலவுத் தளம் இறங்கும் இரதம் அதிலிருந்து பிரிந்து இரண்டு அல்லது மூன்று விமானிகளுடன் தளத்தை வந்தடையும்.  பிறகு மீண்டும் ஓரியன் விண்கப்பலுடன் சேர்ந்து கொள்ள விமானிகள் நிலவித் தள இரதத்தைப் பயன்படுத்திக் கொள்வார்.  விமானிகள் நால்வரும் பூமிக்கு மீள வேண்டுமானால், பணித்தேரின் முக்கிய உந்துகணை எஞ்சினை (Service Module Main Rocket Engine) உபயோகித்துக் கொள்வார்.

fig-4-orion-carrying-lunar-lander

சந்திரனைச் சுற்றிவரும் முதல் இந்திய துணைக்கோள் !

2008 நவம்பர் 12 ஆம் தேதி சந்தரயான் -1 துணைக்கோள் திட்டமிட்ட 100 கி.மீடர் (60 மைல் உயரம்) துருவ வட்டவீதியில் (Polar Orbit) நிலவைச் சுற்றிவரத் துவங்கியது.  பூமியைக் கடப்புச் சுற்றுவீதியில் சுற்றிவந்த சந்திரயான் நவம்பர் 8 ஆம் தேதியன்று, நிலவை நெருங்கும் போது 440 நியூட்டன் திரவ எஞ்சின் இயங்கி வேகம் குறைக்கப்பட்டு (367 metre/Sec) நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் கவரப்பட்டு முதன்முதல் நிலவைச் சுற்ற ஆரம்பித்தது.  சந்திர விண்வெளி யாத்திரையில் பூமியிலிருந்து மனிதர் மின் சமிக்கைகள் அனுப்பி விண்சிமிழைத் திசை திருப்பி வேகத்தைக் குறைத்து நிலவைச் சுற்ற வைப்பது மிகச் சிரமமான பொறியியல் நுணுக்க முயற்சி.  முதன்முதலில் அவ்விதம் செய்ய முயன்ற ரஷ்யா அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் துணைக்கோள்கள் சந்திரனைச் சுற்றாது சூரியனைச் சுற்றி வர நழுவிச் சென்றன.

fig-5-orion-orbiting-the-moon1இந்தியா முதல் முயற்சியிலேயே நிலவைச் சுற்ற வைத்தது பாராட்டத் தக்க ஒரு நிபுணத்துவம்.  இதற்கு முன்பு பன்முறைத் துணைக் கோள்களைப் “புவியிணைப்புச் சுற்றுவீதியில்” (Geosynchronous Orbit) இறக்கிப் பூமியைச் சுற்ற வைத்த கைப்பயிற்சியே அதற்கு உதவி செய்திருக்கிறது !  இந்த மகத்தான சிக்கலான விண்வெளி இயக்க நுணுக்கத்தைச் செய்து காட்டி இந்தியா தன்னை ஐந்தாவது சாதனை நாடாக உயர்த்தி இருக்கிறது.  ஏற்கனவே இவ்விதம் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சைனா தேசங்கள் செய்து காட்டியுள்ளன.  ஈசா எனப்படும் ஐரோப்பாவின் பதினேழு கூட்டு நாடுகளின் விண்வெளி ஆய்வகமும் [European Space Agency (ESA)]இந்த விந்தையைப் புரிந்துள்ளது.

fig-1j-orion-lunar-lander-altair

இந்திய விண்வெளித் தேடலின் எதிர்காலத் திட்டங்கள்

இந்திய விண்வெளி ஆய்வகத்தின் (ISRO) இரண்டாவது சந்திராயன் (Chandrayaan -2) விண்ணுளவி 2011-2012 இல் ஏவிச் செல்ல அடுத்து தயாராகி வருகிறது.  அது சந்திரயான் -1 விட சற்று வேறுபட்டது.  விண்சிமிழ் தன்னுடன் ஒரு தளவுளவியையும், வாகனத்தையும் (A Lander & Rover) சுமந்து சென்று பாதுகாப்பாகச் சந்திர தளத்தில் இறக்கும்.  தளவுளவி நிலவின் தளத்தை ஆராயும் போது வாகனம் நிலவின் பரப்பில் ஊர்ந்து சென்று தகவல் தயாரிக்கும்.  தளவுளவி, வாகன அமைப்புகளுக்கு இந்தியா ரஷ்யாவின் கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.  அதற்காகும் நிதித்தொகை 4.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கூறுகிறார்.

fig-6-parachute-landing-on-the-earth

அடுத்து இந்தியா செவ்வாய்க் கோள் பயணத்துக்கும், மனிதர் இயக்கும் விண்ணுளவியை நிலவுக்கு ஏவும் யாத்திரைக்கும் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.  “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது,” என்று ராக்கெட் விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம், ஜனவரி 26, 2008 இல் நடந்த அகில நாட்டு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் பொதுக் கருத்தரங்கில் (International Conference on Aerospace Science & Technologies) கூறியிருக்கிறார்.

fig-1e-nasas-apollo-15-landing

NASA Apollo Lunar Landings

(1969 – 1972)

Apollo
Mission

Launch
Date

Landing
Date

Landing Site

EVA time
(hours)

Traverse
(km)

Sample
Return (kg)

11

16 Jul 1969

20 Jul 1969

Mare Tranquilitatis

2.53

0.25

21.55

12

14 Nov 1969

19 Nov 1969

Oceanus Procellarum

7.75

1.35

34.35

14

31 Jan 1971

05 Feb 1971

Fra Mauro

9.38

3.45

42.28

15

26 Jul 1971

30 Jul 1971

Hadley Rille

19.13

27.9

77.31

16

16 Apr 1972

20 Apr 1972

Descartes

20.23

27.

95.71

17

07 Dec 1972

11 Dec 1972

Taurus-Littrow

22.07

35.

110.52

+++++++++++++++

(தொடரும்)

*******************

தகவல்:

Picture Credits :  ISRO Indian Website & http://www.Tamilhindu.com

1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
3. Indian Space Program By: Subhajit Ghosh
4  Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html  [Dr. Vikram Sarabhai Space Pioneer]
9. Indian Space Program By: Wikipedia
10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]
12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp
13 Dr. Abdul Kalam : India’s Missile Program http://www.geocities.com/siafdu/kalam.html
14 http://www.tamilhindu.com/2008/10/launch-of-chandrayaan/ (Article & Pictures)
15 http://www.tamilhindu.com/wp-content/uploads/isro_tamilhindu.jpg (Pictures)
16. http://www.tamilhindu.com/wp-content/uploads/isro_tamilhindu2.jpg (Pictures)
17. Indian Space Research Organization (ISRO) – Scientific Objectives, Spacecraft, of Chandryaan -1
18. BBC News – India in Multi-satellite Launch
19. Times Now – India’s First Unmanned Mission on Moon [Oct 22, 2008]
20. BBC News : India Launches First Moon Mission [Oct 22, 2008]
21. Cosmos Magazine – The Science of Everything – India Counts Down to Lunar Mission [Oct 21, 2008]
22..  Space Expolaration – Chembers Encyclopedic Guides (1992)
23. The Times of India – After Mood Odyssey, It’s “Mission to Sun” for ISRO [2008]
24.  National Geographic -50 Years Exploring Space [November, 2008]
24.  Chandrayaan-1 Enters Lunar Orbit – Makes History [Nov 8, 2008]
25.  Latest News – Chandrayaan Descends into Lower Orbit [Nov 11, 2008]
26.  Chandrayaan-1 Successfully Reaches its Operational Lunar Orbit ISRO Repot [Nov 12, 2008]
27. Chrayaan -1 Reaches Final Lunar Orbit [Nov 13, 2008]
28. Press Trust of India : Chandrayaan -1 Reaches Final Orbital Home [Nov 13, 2008]
29. Science Annual Volume Library -The Moon Revisited By : Dennis Mammana (1995)
30. Readers’ Digest Publication -Why in the World ? -Uncovering Moon’s Secrets (1994)
31. Time Great Discoveries – An Amazing Journey through Space & Time – Man on the Moon – Science or Show ? (2001)
32. India Abroad Magazine : “Pie in the Sky” By Supriya Kurane [Nov 21, 2008]
33. Time Magazine : “Back to the Moon” By Jeffrey Kluger & Houstan [Nov 24, 2008]
34.. http://en.wikipedia.org/wiki/Orion_(spacecraft) (NASA’s Orion Voyage to the Moon) [Nov 26, 2008]
35. BBC Science News – ESA Europe’s 10 Billion Euro Space Vision By Jonathan Amos
36. http://en.wikipedia.org/wiki/Lunar_Reconnaissance_Orbiter – NASA’s Lunar Reconnaissance Orbiter [November 27, 2008]

******************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 27, 2008)]

முடிவை நோக்கி !

atomic-explosion

சி. ஜெயபாரதன், கனடா

டெலிபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  யார் இந்த நடுநிசியில் ஃபோன் பண்ணுவது ? தான் லாஸ் அலமாஸ் ரகசிய ஆய்வுக் களத்திற்கு வந்திருப்பது யாருக்குத் தெரிந்தது ? இந்த யுத்த சமயத்தில் ஏதாவது அபாய முன்னறிவிப்பா ? பேசியவள் லாரா ஃபெர்மி தான் ! பேச்சில் நடுக்கமும், தடுமாற்றமும், கலக்கமும் எதிரொலித்தன !

“ஆல்பர்ட் ! ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சியாளர் ஹாரி டக்லியானுக்குப் பெரிய விபத்தாம். ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திக்குக் கொண்டு செல்கிறார்கள். வருகிறீர்களா பார்ப்பதற்கு ? நண்பர் ஜேம்ஸ் ஃபிராங்க்கும் உடன் வருவதாய்ச் சொல்கிறார்”. அவள் விடும் பெரு மூச்சு ஃபோனிலேயே தெளிவாய்க் கேட்டது.

“அப்படியா லாரா? வீட்டு வாசலின் முன் காத்திரு. பத்து நிமிஷத்தில் தயாராகிக் காரில் வருகிறேன்”, என்று ஃபோனை வைத்தார், ஐன்ஸ்டைன்.

இரண்டாம் உலக மகா யுத்தம் முடியும் தருவாய். அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டைப் போட்டு ஹிரோஷிமாவைத் தரை மட்டமாக்கி அன்றோடு பதினைந்தாம் நாள்!  அந்த நாளைத் தனது “இருண்ட நாள்” என்று நொந்த ஐன்ஸ்டைனின் இதயம், இன்னும் துடிப்பு அடங்காமல் ஆலய மணிபோல் அடித்துக் கொண்டிருந்தது !  முதன் முதலாக அணுக் கதிரியக்கம் லட்சக் கணக்கான அப்பாவி மக்களைத் தாக்கி அழித்திருந்தது.  உயிர் பிழைத்தோரையும் வாதிக்கும் !  பிறக்கப் போகும் பிந்தைய சந்ததிகளையும் பாதிக்கும் !  விபரீதமான, வேதனையான அந்த அழிவுச் சக்தியை ஆக்கிய மூல கர்த்தாக்கள் யார் ? அணுக்கருவினுள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் அந்த அபார சக்தியைக் கணித்தவர் யார் ? தன்னைப் போன்ற விஞ்ஞானிகள் ! அவர்களது விஞ்ஞான அறிவு மனித இனத்தை நொடிப் பொழுதில் அழிக்கத்தான் பயன்பட வேண்டுமா ?

அணுப்பிளவுச் சோதனையில் ஆய்வகத்தில் என்ரிகோ ஃபெர்மிக்கு உதவியாய் இருந்த பெளதிக விஞ்ஞானி, ஹாரி டக்லியானுக்கு என்னதான் நேர்ந்திருக்க முடியும் ?

ஐன்ஸ்டைனின் கார் பத்து நிமிஷத்தில் லாராவின் வீட்டருகில் வந்து நின்றது.  லாராவும், ஜேம்ஸ் ஃபிராங்க்கும் ஏறிக்கொள்ள, கார் லாஸ் அலமாஸ் ரகசியக் கோட்டத்தின் மருத்துவ மனையை நோக்கிப் பாய்ந்து சென்றது.

யுத்த காலமாகியதால், அந்த மயானப் பாதையில் மின்சார விளக்குகள் எதுவும் எரிய வில்லை. கார் விளக்குகளுக்கும் நிறம் பூசி மங்கலான வெளிச்சம்தான் தெரியும்.  வீட்டு மின் விளக்குகளும் மறைக்கப் பட்டிருந்தன.  அந்த பயங்கரக் பாலை வனத்தில் காட்டு ஜந்துக்களின் கூட்டு ஓலங்கள் பயத்தை அதிகமாக்கின !

“பாவம் ஹாரி ! அவரது மனைவி ஊரில் இல்லாத நேரம் பார்த்தா இந்த பயங்கர விபத்து நிகழ வேண்டும் ? அவள் கேட்டால் துடித்துப் போய்விடுவாள். என் கணவருக்குத் (என்ரிக்கோ ஃபெர்மி) தெரிந்தால் இதயமே நின்றுவிடும்.  ஹாரி என் கணவரின் வலதுகை அல்லவா!” என்று கவலைப் பட்டாள் லாரா.

“உன் கணவர் எங்கே போயிருக்கிறார், லாரா ?” என்று கேட்டார், ஐன்ஸ்டைன்.

“வாஷிங்டன் போயிருக்கிறார். ஜனாதிபதி ட்ருமன் வெள்ளை மாளிகைக்கு ராபர்ட் ஓப்பன்ஹைமரையும், என் கணவரையும் உடனே வரும்படி அழைத்திருந்தார்.  ஹிரோஷிமா, நாகசாக்கியில் போட்ட அணுகுண்டுகளின் அழிவுக் காட்சிகளைக் கண்டு ஆராய வேண்டுமாம்.  விமானத்திலிருந்து எடுத்த போட்டோ படங்களைக் கொண்டு போயிருக்கிறார்கள். நாளைதான் திரும்புவார்” என்றாள் லாரா.

“இந்தக் கோரச் சம்பவத்திற்கு மூல காரணமே, உன் கணவர்தான், லாரா!  என்ரிக்கோ ஃபெர்மி முதன்முதல் அணுக்கருத் தொடரியக்கத்தைச் சிகாகோவில் வெற்றிகரமாக நடத்திக் காட்டாதிருந்தால், இந்த அணுசக்தி யுகமே விழித்து எழுந்திருக்காது ! அணுகுண்டே இன்று பிறந்திருக்காது ! ஹிரோஷிமாவும், நாகசாகியும் நாசமாகி யிருக்காது ! ஹாரிக்கும் இப்படி விபத்து நேர்ந்திருக்காது !” என்று வெடித்துப் பேசினார் ஜேம்ஸ் ஃபிராங்க்.

ஃபெர்மியின் மீது மட்டும் பழியைப் போடாதே, ஃபிராங்க். முதலில் இந்த அழிவுச்சக்திக்கு விதை போட்டவனே நான்தான் ! முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் !  யுத்தம் சீக்கிரம் முடிவடைய அணு ஆயுதம் தேவை, என்று காலம் சென்ற ஜனாதிபதி ரூஸ்வெல்டுக்குக் கடிதம் எழுதினேன் அன்று ! ஏன் அப்படி எழுதினேன் என்று கவலைப் படுகிறேன் இன்று !” என்று கண் கலங்கினார் ஐன்ஸ்டைன்.  லாரா இருவரையும் பார்த்து திகைப் படைந்தாள். அவளுக்குத் தலை சுற்றியது!

“என்ன, ஆல்பர்ட் ! நீங்களா இந்த நாசகுண்டு தயாரிக்கத் தூண்டியவர் ? நம்ப முடிய வில்லையே ! விபரீதமான விஷப் பரீட்சை ! உலக சரித்திரத்தில் யாரும் உங்களை மன்னிக்க முடியாது ! மறக்கவும் முடியாது! ” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார், ஜேம்ஸ் ஃபிராங்க்.

கார் லாஸ் அலமாஸ் ரகசியத் தளத்தின் சோதிப்பு வாயிலை வந்தடைந்தது. துப்பாக்கியுடன் ராணுவக் காவலர் இருவர் சூழ்ந்து, காரையும், மூவரின் அடையாளத் தகடைச் சோதித்தபின், கார் நுழைய அனுமதி கிடைத்தது.  ஐந்து நிமிடத்தில் ஆஸ்பத்திரி வரவே, மூவரும் இறங்கி உள்ளே நுழைந்தனர்.  ஹாரி இருந்த அறையிலிருந்து டாக்டர் வில்ஸன் வெளியே வந்தார்.

“ஹாரி எப்படி இருக்கிறார், டாக்டர்?” என்று ஒருங்கே கேட்டார்கள் மூவரும்.

“மிகவும் மோசமான நிலை ஜேம்ஸ் ! ஹாரிக்கு விபத்து நேர்ந்த போது அவருடன் வேறு யாரும் இருந்தார்களா ?” என்று வினாவினார் டாக்டர் வில்ஸன்.

“இல்லை டாக்டர் ! ஹாரி தனியாகத்தான் ஆய்வுக் கூடத்தில் இருந்திருக்கிறார். நல்ல வேளை ! வேறு யாரும் அருகில் இல்லை !” என்று பதில் அளித்தார், ஜேம்ஸ்.

“அணுக்கருத் தொடரியக்கம் அங்கே எப்படி ஏற்பட்டது ?  எந்த அணுக்கரு உலோகத்தால் உண்டானது ?  இருந்த எரிபொருள் யுரேனியமா? அல்லது புளுடோனியமா ?” பதட்டத்துடன் கேட்டார், டாக்டர் வில்ஸன்.

“புளுடோனியம் என்பது என் நினைவு !” என்று பதில் அளித்தார், ஜேம்ஸ்.

“கெட்ட வேளைதான் ! அது புளுட்டோனியமாக இருந்ததால் ஹாரி உயிர் பிழைப்பது கடினம்.  அதி உக்கிரக் கதிரியக்கம் அவரைச் சுட்டெரித்துத் துன்புறுத்தும் !” என்றார் வில்ஸன்.

“ஹாரி பிழைக்க மாட்டாரா ?” என்று கண்ணீர் பொங்க வினாவினாள், லாரா ஃபெர்மி.

டாக்டர் வில்ஸன் தலை குனிந்த வண்ணம், “என்னால் எதுவும் சொல்ல முடியாது இப்போது !” என்றார்.

“இந்த நிலையில் ஹாரியை நாங்கள் பார்க்கலாமா ?” என்று கேட்டார், ஐன்ஸ்டைன்.

“பயங்கர அதிர்ச்சி யடைந்து மிகவும் மனமுடைந்து போயிருக்கிறார், ஹாரி.  ஆயினும் இப்போது நீங்கள் பார்க்கலாம்” என்று அவருடன் நடந்து சென்றார், டாக்டர் வில்ஸன்.

பெரு மூச்சோடு அறைக்குள் நுழைந்தார்கள் மூவரும். பேயரைந்ததுபோல் படுக்கையில் துவண்டு கண்மூடிக் கிடந்த ஹாரியைக் கண்டதும் லாராவின் மூச்சே நின்று போயிற்று ! கண்களில் கண்ணீர் பொங்கிப் பெருகியது !

எத்தகைய நுட்ப ஆய்வு விஞ்ஞானி இந்த ஹாரி ! எத்தனை மகத்தான ஆராய்ச்சிகளை அணுத் துறையில் கண்டு பிடித்திருப்பவன் இந்த ஹாரி !  இவனுக்கா விபத்து நேர வேண்டும் ? இனி யார் வரப் போகிறார், இவனுக்கு ஈடாக ?

“எப்படி இருக்கிறாய் ஹாரி ?” என்ற கேட்டாள் லாரா, அருகில் அமர்ந்து கொண்டே. ஹாரி சற்று நேரம் பேசாமல் லாராவையே உற்று நோக்கினான். தனது கைகளைத் தூக்கி, “லாரா பார்த்தாயா ? இந்த விரல்களிலே எந்த வித உணர்ச்சியும் இல்லை இப்போது ! யானை மிதித்துப் போட்டது போல் நொய்ந்து கிடக்கிறேன்!. இதுபோல் தானே அந்த அப்பாவி ஜப்பானியர்களின் கை, கால், எலும்பு, சதை, தோல் எல்லாம் படாத பாடு பட்டிருக்கும் ?” என்று வருத்தப்பட்டான் ஹாரி.

விபத்து நேர்ந்த அரைமணி நேரத்தில் உணர்ச்சியே இழந்து விட்டனவா விரல்கள் ? அப்படி என்றால் ஹாரியைத் தாக்கிய கதிரியக்கத்தின் உக்கிரம்தான் என்ன! ஜேம்ஸ் ஃபிராங்க் தன் மனதில் கணக்குப் போட்டுப் பார்க்கலானார்.

“ஆல்பர்ட் ! ஆயிரமாயிரம் ஊசிகள் இப்போது என்னுடம்பைக் குத்தித் துளைகள் போடுகின்றன !” என்றான் ஹாரி.  அணு குண்டின் கோடான கோடி கதிரியக்க ஊசிகள் இப்படித்தானே ஜப்பானிய மக்களைச் சித்திரவதை செய்திருக்க வேண்டும் ! அவர்களின் மரண ஓலங்கள் வானையே பிளந்திருக்கும் அல்லவா !”

‘ஆவென’ அலறினான் ஹாரி.  அந்த ஓசை மலைச் சிகரத்தில் அடித்தது போல் எதிரொலித்தது ! நர்ஸ் சைகை செய்யவே மூவரும் அறையை விட்டு அகன்றார்கள்.

வெளியே பிரமாண்டமான காரிருட் போர்வை !  இரகசிய லாஸ் அலமாஸ் வானத்தின் மீது கோடான கோடி விண்மீன்கள் கண் சிமிட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன ! சக்தி இழந்து போய் தடுமாற்றமுடன் மூவரும் வெளியே மருத்துவ மனை நாற்காலில் அமர்ந்தனர்.

“எப்படி நேர்ந்தது இந்த கோர விபத்து ?  கொஞ்சம் விளங்கும்படி சொல்வீர்களா, ஜேம்ஸ்” என்று கன்னத்தில் கைவைத்துக் கொண்டு பரிவாகக் கேட்டாள், லாரா.

ஜேம்ஸ் சொல்லத் தயங்கினார். இது ரகசியச் சம்பவமல்லவா ? எப்படிச் சொல்வது ?

“பயப்படாதீர்கள் ஜேம்ஸ் ! யாரிடமும் நான் இதைச் சொல்லப் போவதில்லை ! கடந்த ஐந்து ஆண்டுகளாக, லாஸ் அலமாஸின் பல ரகசியங்களை, இதுவரை நான் என் மனப் பெட்டிக்குள் பூட்டி வைத்திருக்கிறேன். இது எனக்குப் பழக்கப்பட்டதுதான் ! என் கணவர் சொல்லாத ரகசியங்களா ? சும்மா சொல்லுங்கள், ஜேம்ஸ்” என்று வற்புறுத்திக் கேட்டாள் லாரா ·பெர்மி.

அக்கம் பக்கம் பார்த்து, மெல்லிய குரலில் பேசினார், ஜேம்ஸ். “வளர்த்த கடா மார்பிலே பாயும் என்று கேள்விப் பட்டிருப்பாயே, லாரா.  அதுதான் இந்தக் கதை ! இதுவரை நிகழாத சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது, இன்று ! பேரதிர்ச்சி அடைந்தோம் எல்லோரும் ! இன்று ஹாரிக்கு ! நாளை நமக்கு !  அணுகுண்டு வெடிக்குமுன் என்ன மாதிரித் தொடரியக்கம் நிகழுமோ, அது போல் அனைத்தும் நடந்துள்ளது, லாரா.  யாரும் இதை எதிர்பார்க்க வழியே இல்லை ! பூரணத் தொடரியக்கம் பளிச்செனத் துவங்கி, பல்லாயிரக் கணக்கான ராஞ்சன் கதிரியக்கம் உண்டாகிக், கண்ணிமைப் பொழுதில் ஹாரியைத் தாக்கி யிருக்கின்றன !”

சற்று மூச்செடுத்துக் கொண்டு தொடர்ந்தார், ஜேம்ஸ். “இது எப்படி ஆரம்பித்தது தெரியுமா ? அடுத்த நாள் ஆராய்ச்சிக்கு முந்தைய இரவில் தயார்செய்து கொண்டிருந்த ஹாரி, ஒரே ஒரு சிறு தவறு செய்தான் ! அவன் தெரியாமல் செய்தது !  அணு ஆய்வுச் சிற்றுலையில் புளுடோனிய கோள உலோகத்தை இட்டு, நியூட்ரான் நழுவாது காத்திடச் சுற்றிலும் மிதவாக்கியாகக் கட்டிகளை அமைத்து வந்த ஹாரி, கை தவறிக் கட்டி ஒன்றை நழுவ விட்டான். உடனே, சீறி எழுந்தது, பூரணத் தொடரியக்கம் ! திடீரென நியூட்ரான்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி,  புளுடோனிய  அணுக்கருவைத் தாக்கி, ‘நீல ஒளிக் கோளம்’ சுடர்விட்டுப் பிரகாசித்தது !  அருகில் இருந்த எச்சரிக்கை அறிவிப்பு மணி அலறியது !  கதிர்வீச்சைக் காட்டும் கருவிகள் எல்லை மீறிய அளவைக் காட்டின ! பொங்கி எழுந்த கதிரியக்கம் உந்துகணை ஊசிகளாய் எல்லாத் திசைகளையும் எல்லாப் பொருட்களையும் தாக்கின. ஹாரியையும் தாக்கின !”

“நீல ஒளியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான் ஹாரி,  நடந்து விட்ட அபாயத்தை உடனே அறிந்தான் ஹாரி !  சமத்தாக கரிக்கட்டி ஒன்றை நீக்கிச் சரிசெய்யவே தொடரியக்கம் உடனே அடங்கி நின்றது !  ஆனால் என்ன பயன் ? ஒரு நொடிப் பொழுதில் எல்லாம் நிகழ்ந்து விட்டது !  பல்லாயிரம் ராஞ்சன் வீரிய முடைய தீக்கதிர்களை ஹாரி சில வினாடிக்குள் ஏற்றுக் கொண்டு விட்டான்.  அது அவனுக்குத் தெரியும் !  அதன் விளைவுகளும் அவனுக்குத் தெரியும் !”

“நல்ல வேளை! அணுகுண்டு போல் அது வெடிப்பதற்குள் நியூட்ரான் பெருக்கத்தை விரைவில் நிறுத்தி விட்டான், ஹாரி.  இல்லாவிட்டால் லாஸ் அலமாஸிலும் ஓர் அணுகுண்டு வெடித்து நீயும், நானும், ஏன் இந்த இரகசியத் தளமே எரிந்து சாம்பலாகி யிருக்கும் !”

“அமெரிக்க ஆய்வுக் கூடத்தில் மூன்றாவது அணுகுண்டு ! எதிர்பாராத விதமாக வெடித்தது என்று எல்லா உலகப் பத்திரிக்கையிலும் உடனே வெளியாகும் !”

“லாரா!  அமெரிக்கா துவக்கி வைத்த இந்த அணு ஆயுத யுகத்திற்கு, நாம் அளிக்கும் முதல் உயிர்ப்பலி, இந்த அப்பாவி ஹாரி !” என்று ஆவேசத்துடன் வார்த்தைகளைக் கொட்டினார்,  ஜேம்ஸ் ·பிராங்க்.

“அப்படிச் சொல்லாதீர்கள், ஜேம்ஸ். கதிரியக்க மருத்துவ நிபுணர்களை அழைத்து வந்து எப்படி யாவது ஹாரியைக் காப்பாற்றியாக வேண்டும்.  வாஷிங்டன் ராணுவ மருத்துக் கூடத்திற்கு
·போன் பண்ணி அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கெஞ்சினாள் லாரா.

நெற்றியில் கைவைத்த வண்ணம் மெளனத்தில் எழுந்தார், ஜேம்ஸ்.  மூவரும் வீட்டுக்குக் கிளம்பினார்கள். “கடவுளே ! ஹாரியைக் காப்பாற்று ! எங்கள் ஹாரியைக் காப்பாற்று !” என்று மனதில் பிரார்த்தனை செய்து கொண்டே நடந்தாள், லாரா.

கார்ச் சாவியைத் திருக்கிக் காரை இயக்கினார், ஐன்ஸ்டைன். அவர் மனம் அங்கில்லை ! பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் ஹாரி டக்லியான்களைப் பற்றி நொந்து, அது அசைபோட்டுக் கொண்டிருந்தது!

மறுநாள் ஜேம்ஸ் ஃபிராங்க் லாஸ் அலமாஸ் ஆய்வுக் கூடத்தில் ஹாரியின் அறையில் நிகழ்ந்த விபத்தின் கதிரியக்க விளைவுகளையும், கருவிகளில் பதிவான குறிப்புக்களையும் எழுதிக் கொண்டு, வாஷிங்டன் ராணுவ மருத்துவ மனைக்குப் போன் செய்தார்.  விபரங்களுக்கு ஏற்ப சிகிட்சை சாதனங்களை ஏற்றிக் கொண்டு, கதிரியக்க மருத்துவ நிபுணர்கள் விமானத்தில் லாஸ் அலமாஸ் நோக்கிப் புறப்பட்டார்கள். ·போன் மூலம் ஹாரியின் நிலையை அவ்வப் போது தெரிந்து கொண்டார்.

நாலைந்து நாட்கள் கழித்து ஹாரியைப் பார்க்க ஜேம்ஸ் ஆஸ்பத்திரிக்குச் சென்றார்.  அறையில் ஹாரியைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்து அப்படியே நின்றுவிட்டார்.

“யார் ஹாரிக்கு இப்படி மொட்டை அடித்தது ?” என்று நர்ஸ்களைப் பார்த்துக் கேட்டார், ஜேம்ஸ். நர்ஸ் யாரும் அதற்குப் பதில் கூறவில்லை.

ஹாரி புத்த தேவன் போல் காட்சி அளித்தான் ! தலை மயிர் எல்லாம் உதிர்ந்து போயின ! முகம் வீங்கிக் கண்களை மூடிவிட்டது ! உடம்பெல்லாம் வீங்கி, தோலுரிந்து மேனி யெல்லாம் சிவந்து விட்டது ! அவை யாவும் தீக்கதிர்கள் வரைந்த கோலங்கள்! கோரங்கள் !! குஷ்ட ரோகி போல் காணப் பட்டான் ஹாரி !

“தலை மயிர் யாவும் தாமாகவே உதிர்ந்து விட்டன” என்றார் ஒரு கதிரியக்க நிபுணர். அருகில் ஹாரியின் மனைவி, லாரா, லாராவின் கணவர் என்ரிக்கோ ஃபெர்மி, ஐன்ஸ்டைன், லியோ ஸிலார்டு யாவரும் கூடி யிருந்தனர்.  வெளியே ஓப்பன்ஹைமர், லெஸ்லி குருவ்ஸ் இருவரும் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

ஹாரி கை அசைத்து லாராவைக் கூப்பிட்டான். “நான் ஆசிய ஜோதியாகி விட்டேன், லாரா ! பார் ! இப்போது நானொரு புத்த பிச்சு ! போர், இம்சை, பழி, பாபம், நாசம், அழிவு இவைகளை எதிர்த்து நிற்கும் போதி சத்துவன் !  உயிர்களின் துணைவன் ! அணு ஆயுத எதிரி ! அணு ஆயுதப் பலிகடா !

அப்போது ஓப்பன்ஹைமர், லெஸ்லி குரூவ்ஸ் இருவரும் வெளியே ஒரு மூலையில் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.  லெஸ்லி முணுமுணுத்தார், “இன்னும் பத்து அணு குண்டுகளைத் தயாரிக்கக் கட்டளை வந்திருக்கிறது, ஓப்பி ! நேற்றுதான் பிரஸிடெண்ட் ட்ரூமன் என்னிடம் நேரில் பேசினார்.  அடுத்து ஹைடிரஜன் குண்டு ஆக்கும் திட்டத்திற்குப் பச்சைக் கொடி ! எட்வர்ட் டெல்லரை இன்று பார்க்கப் போகிறேன்.” லெஸ்லி குரூவ்ஸ்தான் மன்ஹாட்டன் அணு குண்டுத் திட்டத்தை மேற்பார்க்கும் ராணுவத் தளபதி !  இரண்டாம் உலக மகா யுத்த முடிவில், திட்டப்படி அணு குண்டுகள் இரண்டைத் தயாரித்து ஹிரோஷிமா, நாகசாகியில் போட்டுப் புகழ் பெற்ற போர் ஹீரோ!

ஓப்பன்ஹைமர் உதட்டில் ஒரு புன்சிரிப்பு மின்னியது ! “எல்லாம் தயார்! அதற்கு வேண்டிய அளவு யுரேனியமும், புளுடோனியமும் நம் கைவசம் உள்ளது ! ஆனால் ஹைடிரஜன் குண்டுக்கு அதிகக் கன அளவு ஹைடிரஜன் ஐசோடோப் டியூடிரியம் தேவை !  அது நம்மிடம் இல்லை !  கனடாவை அணுக வேண்டும்.  அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு அழிவுசக்தி கொண்ட தல்லவா ஹைடிரஜன் குண்டு !” எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் பதில் அளித்தார், ஓப்பன்ஹைமர் ! அவர்தான் அணுகுண்டின் பிதா ! இருபதாம் நூற்றாண்டில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பல நாட்டு விஞ்ஞான நிபுணர்களைத் தன்கீழ் இணைத்து, ஆணை யிட்டு, ஆட்டிப் படைத்து, முதன் முதல் அணு யுதங்களை ஆக்கிய தலைமை அதிபதி ! ஒப்பற்ற விஞ்ஞான மேதை ஓப்பி !

இந்த இரகசியப் பேச்சை ஒட்டுக் கேட்ட ஜேம்ஸ் ஃபிராங்க் சீறினார். “இன்னும் பத்து அணு குண்டுகளா ?  அடுத்து ஹைடிரஜன் குண்டு வேறா ? எந்த அப்பாவி மக்கள் தலையில் போடவாம் ? யுத்த விஞ்ஞான அறிவு உலகின் முடிவை நோக்கித்தான் போக வேண்டுமா ? யுத்தம் என்பது அழிவியல் விஞ்ஞானமா ?” என்று கடிந்தார், ஜேம்ஸ் !

ஓப்பி, குருவ்ஸ் இருவரும் பதில் பேசாமல் அங்கிருந்து அகன்றார்கள். அமைதி சூழ்ந்தது.  அந்த பயங்கர அமைதியைக் கலைத்தாற் போல் ‘ஓ வென’ ஓர் அலறல் சப்தம் ஹாரி அறையிலிருந்து எழுந்தது ! எல்லா விஞ்ஞானிகளும் ஓடிப்போய் பார்த்தார்கள்.

ஹாரி பைத்தியம் பிடித்தவன் போல் படுக்கையிலிருந்து எழுந்து, கண்களை உருட்டிக் கொண்டு ஓலமிட்டு கத்தினான் !  டாக்டர் வில்ஸனும், நர்ஸ்களும் ஓடா வண்ணம் அவரைப் பிடித்துக் கொண்டார்கள்.

“டாம் ஓப்பி ! லிட்டில்பாய் ஓப்பி ! டாம் குருவ்ஸ் ! ஃபாட்மான் குருவ்ஸ் ! யு போத் கெட் அவுட் ! கெட் அவுட் !” என்று ஆர்ப்பாட்டமுடன் கத்தினான், ஹாரி !

ஓப்பன்ஹைமர், குருவ்ஸ் இருவரும் உடனே வெளியேறினர். லாராவுக்கு எதுவும் புரியவில்லை.

“என்ன இது ? லிட்டில்பாய் ! ஃபாட்மான் !” என்று ஜேம்ஸைக் கூர்ந்து நோக்கினாள், லாரா.

“லிட்டில்பாய் (Little Boy) என்பது ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டு ! ஃபாட்மான் (Fatman) என்பது நாகசாகியில் போட்ட அணுகுண்டு ! இரண்டும் மன்ஹாட்டன் அணு ஆயுதத் திட்டத்தின் (Manhatten Project) ராணுவ ரகசியக் குறிச்சொற்கள் ” என்று லாராவின் காதுக்குள் குசுகுசுத்தார், ஜேம்ஸ்.

மறுபடியும் புலம்பினான் ஹாரி. “அதோ ! குடைக் காளான் ! ஓராயிரம் சூரியனைவிட ஒளிமயமான முஷ்ரூம் கிளவ்டு ! அதில் நான் மிதக்கிறேன் ! அதோ ! அணுக் கோளம் ! அனல் கோளம் ! கதிர்க் கோளம் ! கனல் கோளம் ! ஒளிக் கோளம் ! வெடிக் கோளம் ! விஷக் கோளம் ! அழிவுக் கோளம் ! அவற்றின் அசுரப் பிடியில் நசுங்கும் ஜப்பானிய மக்கள் ! முடிவில் எல்லாருக்கும் மரணக் கோலம் !”

பிதற்றல்களை நிறுத்த ஹாரிக்கு ஓர் ஊசியைக் குத்தினார், டாக்டர் வில்ஸன். மெய் மறந்து தூங்குகினான் ஹாரி.

ஹாரியின் முடிவு நேரம் நெருங்கியது.  விபத்து நடந்து இன்றோட இருபத்தி நான்காம் நாள் ! வெள்ளை ஆடை அணிந்த கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர், மெள்ள அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.  வெளியே செய்யும் வேலையை அப்படியே நிறுத்தி விட்டுப் பலர் மெளனமாகக் கூடி நின்றார்கள்.  லாரா கண்ணீர் சொரிய ஹாரி அருகி நின்றாள். படுக்கையின் இருபுறமும் ஏற்றி வைக்கப்பட்ட மெழுகு வர்த்திகள் சூடான திரவத்தைச் சிந்தி அழுது கொண்டிருந்தன !

ஹாரிக்கு மூச்சு மேலும் கீழும் ஏறி இறங்கியது. மெதுவாக பைபிள் நூலைத் திறந்து பாதிரியார் பிரார்த்தனை செய்தார். “பேரண்ட பிரபஞ்சத்தின் பிதாவே !  இங்கே துடித்துக் கொண்டிருக்கும், அணு போன்ற இந்த ஆத்மாவின் பாபங்களை மன்னித்து, இனிமேலும் வதைக்காமல், நீர் ஏற்றுக் கொண்டு ஆசீர்வதியும் !”

கண்களைத் திறக்க முடியாமல், ஹாரி கையை அசைத்து, “ஆல்பர்ட் !” என்று தடுமாறி அழைத்தான்.  பின்புறம் மறைந்து கொண்டிருந்த ஐன்ஸ்டைன் முன்புறம் வந்து நின்றார்.  அணையப் போகும் மெழுகுவர்த்திகள் இரண்டும் சுடர் விட்டுப் பிரகாசித்தன !

உயிர் பிரியும் தருணத்தில் ஹாரி தடுமாறிக் கொண்டு பேசினான்.  “ஆல்பர்ட் ! எனது இறுதி வேண்டுகோள் இது ! முதலில் எட்வெர்ட் டெல்லரை அணுகி, அவரது மனத்தை மாற்றி, அடுத்து பேய் உருவெடுக்கும் ஹைடிரஜன் குண்டுத் திட்டத்தை நிறுத்த உடனே முயற்சி செய்யுங்கள் ! உலக வல்லரசுகள் தொடரப் போகும் அணு ஆயுதப் போட்டியை நிறுத்த விஞ்ஞானிகளை ஒன்று திரட்டுங்கள் ! ஏன் ?  ஐரோப்பிய ஆசிய நாடுகளும் கூட இனி அணு ஆயுதம் ஆக்க முற்படலாம் !  அதற்கு விஞ்ஞானிகள் இனிமேல் ஒத்துழைக்கக் கூடாது ! அணு ஆயுத முடிவை நோக்கிப் போராடுங்கள் ! அணுசக்தியை மனித இனத்தின் ஆக்க வழிகளுக்குப் பயன்பட உழைப்பீர்களா ?  உங்கள் ‘இருண்ட நாள்’ மீண்டும் உதயமாக வேண்டாம் !” என்று கூறினான்.  ஹாரி கண்களில் நீர் பொங்கி எழுந்தது.  சிறிது நேரத்திற்குள் ஹாரியின் ஆத்மா பிரிந்தது.

ஐன்ஸ்டைன் கண்களில் நீர் திரளச் சிலையாய் நின்றார்.  ஜேம்ஸ் ஃபிரங்க்கின் இதயத்தில் சிறிது நிறைவு ஊறியது.  லாரா சிரம் தாழ்த்தி ஒரு மலர் வளையத்தை ஹாரியின் காலடியில் வைத்தாள்.  லாஸ் அலமாஸ் விஞ்ஞானிகள் யாவரும் தலை கவிழ்ந்து ஹாரிக்கு அஞ்சலி செய்தார்கள்.

***********************

[ஜப்பானில் அணுகுண்டு வீச்சுக்குப்பின், லாஸ் அலமாஸில் ஆய்வக உதவி விஞ்ஞானி ஹாரி டக்லியானுக்கு (Harry Daghlian) நேர்ந்த ஓர் உண்மை சோக விபத்தை (ஆகஸ்டு 21, 1945) அடிப்படையாகக் கொண்டு எழுதிய புனைக்கதை. ராபர்ட் ஓப்பன்ஹைமர், என்ரிகோ ஃபெர்மி, ஜேம்ஸ் ஃபிராங்க், எட்வேர்டு டெல்லர் (Robert Oppenheimer, Enrico Fermi & James Frank, Edward Teller) ஆகியோர் லாஸ் அலமாஸ் அணுவியல் ஆய்வு விஞ்ஞானிகள்.  எட்வேர்டு டெல்லர் ஹைடிரஜன் குண்டின் பிதா.  லெஸ்லி குருவ்ஸ் (Leslie Groves) மன்ஹாட்டன் திட்ட இராணுவ அதிபதி.  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்துக்கு விஜயம் செய்ததாகக் காட்டியது புனைக்கதை]

(1980 ஆம் ஆண்டில் ஆனந்த விகடன் வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் புறக்கணிக்கப்பட்டது.)

Harry Dughlian's Expt

தகவல்:

http://en.wikipedia.org/wiki/Harry_K._Daghlian,_Jr.

S. Jayabarathan <jayabarat@tnt21.com> November 22, 2008

இந்திய தேசியக் கொடி சந்திரனில் தடமிட்டு இடம் பிடித்தது !

moon-impact-probe-with-indian-flag

(கட்டுரை : 3)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

சந்திரனில் இறங்கியது
இந்தியக் கொடி ! மூவர்ணச்
சுதந்திரக் கொடி
தடம் வைத்து
இடம் பிடித்தது பாரீர் !
யந்திரத் திறமை காட்டும்
பந்தயம் !
போரில்லை !
போட்டி யில்லை
யாரும்
உயிரிழக்க வில்லை !
உதிரம் சிந்த வில்லை !
மதியால்
விதியை வென்ற யுக்தி !
மூன்றாண்டில் இறங்கும் தளவுளவி,
ஊர்ந்திடும் வாகனம்
உலாவரும் கருநிலவில் !
செவ்வாய்ப் பயணம் அடுத்து !
இந்த யுகத்தில் புத்துயிர் பெற்ற
விந்தை யுக்தி ! பலர்
நிந்தனை புரியினும்
வந்தனை செய்வோம்
இந்தியர் நாமெலாம் !
வந்தே மாதரம்.
வந்தே மாதரம்

வானை அளப்போம் ! கடல் மீனை அளப்போம் ! . . . .
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் !

மகாகவி பாரதியார் (பாரத தேசம்)

“ஜவஹர்லால் நேருவின் 119 ஆம் பிறந்த தினத்திலே விண்வெளி விஞ்ஞானிகள் கோடிக் கணக்கான இந்தியக் குழந்தைகளுக்குச் சந்திரனைக் கொடையாக அளித்துள்ளார்கள் !  இந்தச் சாதனை தேசத்துக்கு புத்துணர்ச்சி அளித்துப் புவியின் பேராற்றல் களஞ்சியமான இளமை உள்ளங்களில் தீப்பொறி எழுந்திட வைத்திருக்கிறது !  இந்திய விண்வெளி விஞ்ஞானிகளின் பொறியியல் உயர்வையும், ஆக்க பூர்வமான தலைமையையும் நான் பாராட்டுகிறேன்.  சந்திரனிலும் செந்நிறக் கோளிலும் விண்வெளித் தீரர்கள் தடம் வைக்க வேண்டும் என்பது என் கனவு.  இன்னும் 15 ஆண்டுகளில் வாலிப விண்வெளித் தீரர்கள் நிலவின் தளத்தில் நடப்பார் என்று நான் நம்புகிறேன். ”

டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை [நவம்பர் 15, 2008]

fig-1e-a-gift-to-abdul-kalam

“சந்திரயான் -1 படைப்புக் குழு நிலவின் தளத்திலே இறங்கியுள்ளது !  சந்திரனை மற்றவர் காண்பதை விட நாங்கள் சற்று வேறு முறைப்படிச் சீராக நோக்கப் போகிறோம்.  நிலவின் முழுப்பகுதியைப் படமெடுத்து அவற்றில் இருக்கும் பொருள்களையும் ஆய்ந்து கணக்கெடுத்துப் பதிவுக் களஞ்சியம் ஒன்று தயாரிக்கப் போகிறோம்.”

மயில்சாமி அண்ணாத்துரை, சந்திரயான் திட்ட இயக்குநர் (நிலவில் விடப்படும் உளவி தளத்தில் விழுந்த பிறகு) [நவம்பர் 15, 2008]

“நிலவைச் சந்திரயான் -1 நெருங்கியவுடன் பூமியிலிருந்து சமிக்கைகள் அனுப்பி, அதன் வேகம் குறைப்பாகி, எதிர்த் திசையில் திருப்பாகி (Retro-firing) சந்திர மண்டலத்தின் ஈர்ப்பில் இறங்கிப் பாதுகாப்புடன் நிலவுச் சுற்றுவீதியில் வலம் வந்தது.  அந்த நிகழ்ச்சி மகத்தானதோர் உணர்ச்சியை எமக்கு உண்டாக்கியது.”

எஸ். கே. சிவக்குமார், துணைக்கோள் கட்டுப்பாடு இயக்குநர் (Director, ISRO Telemetry, Tracking & Command Network) [நவம்பர் 9, 2008]

“நாங்கள் உறுதிமொழி அளித்தபடி இந்தியாவுக்குச் சந்திரனைத் தந்து விட்டோம்.  ஜவஹர்லால் நேரு பிறந்த தினத்தன்று நிலவில் விடப்படும் உளவி வெற்றிகரமாக விழுந்தது.  அவர் பாரதப் பிரதமராய் இருந்த காலத்தில்தான் இந்தியாவின் விண்வெளித் திட்டமே ஆரம்பமானது.  குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படும் நேருவின் பிறந்த நாள் தேர்ந்தெடுப்பு மிகவும் பொருத்தமாய் அமைந்துவிட்டது.  இன்னும் ஏழு ஆண்டுகளில் இந்திய விண்வெளித் தீரர்கள் அண்டவெளியில் பயணம் செய்வார்.”

டாக்டர் மாதவன் நாயர், தலைவர் இந்திய விண்வெளித் திட்ட நிறுவகம் [Chief Indian Space Research Organization (ISRO)] [நவம்பர் 14, 2008]


“முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை !  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் !  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம் !”

டாக்டர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆய்வுப் பிதா (1919-1971).

நிலவில் விடப்படும் உளவி இந்தியக் கொடியுடன் விழுந்தது

ஜவஹர்லால் நேருவின் பிறந்த தினத்தன்று (நவம்பர் 14 ஆம் தேதி) திட்டமிட்டபடி நிலவை 60 மைல் உயரத்தில் வட்டமிடும் சந்திரயான் -1 துணைக்கோளிலிருந்து 75 பவுண்டு (34 கி.கிராம்) எடையுள்ள “நிலவில் விடப்படும் உளவி” [Moon Impact Probe (MIP)] அவிழ்த்து விடப்பட்டு 25 நிமிடத்தில் நிலவீர்ப்பு ஆற்றலில் தென்துருவ அரங்கில் “ஷாகில்டன்” குழியில் (Shackleton Crater) வந்து விழுந்தது.  அந்த விண்வெளிப் பேழையின் நான்கு பக்கத்திலும் இந்தியக் கொடி வரையப் பட்டிருந்தது.  சதுரப் பேழை ஒரு தேன்கூடு அமைப்பில் விக்ரம் சாராபாய் விண்வெளி மைய (Vikram Sarabhai Space Centre) விஞ்ஞானிகளால் டிசைன் செய்து தயாரிக்கப்பட்டது,  அதன் வடிவம் (375 மி,மீடர் நீளம் X 375 மி.மீடர் அகலம் X 470 மி.மீடர் உயரம்).  பேழையில் இருந்த ஆய்வுக் கருவிகள் மூன்று : படமெடுக்கும் ஏற்பாடு, ரேடார் உயரமானி, நிறைப் பட்டைமானி. (Video Imaging System, Radar Altimeter & Mass Spectrometer)  விஞ்ஞானிகள் பெங்களூர் பீனியா துணைக்கோள் மையத்திலிருந்து (ISRO Satellite Centre, Peenya, Bangalore) சமிக்கை அனுப்பிப் பேழையை அவிழ்த்து விட்டனர்.  பண்டித நேரு இந்தியப் பிரதமராய் 1962 ஆம் ஆண்டில் இருந்த போதுதான் டாக்டர் சாராபாய் நியமிக்கப்பட்டு பாரத விண்வெளி ஆய்வு மையம் பணி செய்ய ஆரம்பித்தது என்பது குறிப்பிடத் தக்கது.

நிலவுத் தளத்தில் எப்படிப் பேழை விடப்பட்டது ?

சந்திரயான் -1 தன் முதுகில் சுமந்திருந்த நிலவு உளவுப் பேழை அவிழ்த்து விடப்பட்டு இரண்டுக்கும் உள்ள இடைவெளி அகலமானதும், சுழற்சி உந்து கணைகள் (Spin up Rockets) சுடப்பட்டு முதலில் பேழை பிரிந்து கீழே விழ ஆரம்பித்தது.  அடுத்து பேழையின் எதிரியங்கு உந்து கணைகள் (Retro-Rockets) இயக்கப்பட்டு பேழை மெதுவாக நிலவின் தளம் நோக்கி இறங்கிப் பிறகு நிமிடத்துக்கு 4 முதல் 5 கி.மீடர் வேகத்தில் விரைவாக விழத் துவங்கி 25 நிமிடத்தில் நிலவின் தளத்தில் வீழ்ந்து முறிந்தது.  சந்திரயான்-1 துணைக்கோள் பேழை எடுத்த எல்லாப் படங்களையும் சேமித்துத் தனது 2 மணிநேர வட்டவீதியில் நிலவைச் சுற்றத் தொடர்ந்தது.  விழும் பேழை அனுப்பிய தகவலைச் சந்திரயான் துணைக்கோள் வாங்கித் தனது நினைவு யூனிட்டுகளில் சேமித்து வைத்துள்ளது.  பிறகு அவை யாவும் பூமியின் துணைக்கோள் கட்டுப்பாடு அரங்கத்திற்குப் பின்னால் அனுப்பப்படும்.

chandrayaan-1

பேழை நிலவின் தளத்தில் விழுந்ததும் கருநிலவில் படிந்திருந்த கருந்தூசி மண்டலம் புகைபோல் கிளம்பியது.  அந்தத் தூசி மண்டலத்தின் உட்பொருட்களைப் பேழைக் கருவி ஆய்வு செய்தது.   குன்றுப் பகுதியான அந்த தென்துருவப் பகுதியில் நீர்மைப் பனித் துகள்கள் இருக்கின்றனவா என்று நிறைப் பட்டைமானி தீர்மானிக்கும்.  நிலவின் மூலப் பொருட்களையும் அந்தக் கருவி ஆராயும்.  சந்திரனின் துருவப் பகுதிகளில் குளிர்ந்து போன நீர்ப்பனித் துண்டுகள் இருக்கலாம் என்றொரு கருத்து நிலவுகிறது.  அணுக்கருப் பிணைவு சக்தியை உண்டாக்க உதவும் ஹீலியம்-3 ஏகமூலம் (Helium-3 is an Isotope of Regular Helium) உள்ளதா என்று பட்டைமானி ஆய்ந்தறியும்.    மேலும் அவற்றின் மூலம் நிலவின் வயதைக் காணும் வாய்ப்புக்களும் உள்ளன.  சந்திரனில் தடம் வைக்கும் இந்தியா, அவ்விதம் செய்த நான்காவது தேசமாக ஆகியுள்ளது.  முதன்முதல் மனிதன் சந்திரனில் தடம் வைத்து நடந்து 50 ஆண்டுகளுக்கு பிறகு சாதித்திருக்கிறது.  அமெரிக்காவை போல் சோவியத் ரஷ்யா, ஜப்பான், சைனா தனது விண்ணுளவிகளைச் சந்திரனில் இறக்கியுள்ளன.

பேழையில் வரைந்திருந்த இந்தியக் கொடிக்கு என்ன நேர்ந்திருக்கும் என்று நினைக்க முடியாது. பேழை நெளிந்து போயிருந்தாலும் நான்கு பக்கத்தில் இருக்கும் வரைபடத்தில் ஏதாவது ஒன்று எதிர்காலப் பயணிகளுக்குத் தென்படலாம் !  இந்தியாவின் நிலவுத் திட்டம் 1999 இல் ஆரம்பமாகி ஒன்பது ஆண்டுகள் நிறைவாகியுள்ளன.  1959 இல் முதன்முதல் சோவித் ரஷ்யா அனுப்பிய லூனா-2 துணைக்கோள் நிலவில் விட்ட உளவி இறங்கி 50 ஆண்டுகள் கடந்த பிறகு, இந்தியாவின் பேழை சந்திரனில் விழுந்திருக்கிறது.  இப்போது இந்தியத் துணைக்கோள் சந்திரயான் -1 ஜப்பான், சைனா துணைக் கோள்களுடன் நிலவைச் சுற்றி வருகிறது.

சந்திரனைச் சுற்றிவரும் இந்தியத் துணைக்கோள் !

2008 நவம்பர் 12 ஆம் தேதி சந்தரயான் -1 துணைக்கோள் திட்டமிட்ட 100 கி.மீடர் (60 மைல் உயரம்) துருவ வட்டவீதியில் (Polar Orbit) நிலவைச் சுற்றிவரத் துவங்கியது.  பூமியைக் கடப்புச் சுற்றுவீதியில் சுற்றிவந்த சந்திரயான் நவம்பர் 8 ஆம் தேதியன்று, நிலவை நெருங்கும் போது 440 நியூட்டன் திரவ எஞ்சின் இயங்கி வேகம் குறைக்கப்பட்டு (367 metre/Sec) நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் கவரப்பட்டு முதன்முதல் நிலவைச் சுற்ற ஆரம்பித்தது.  சந்திர விண்வெளி யாத்திரையில் பூமியிலிருந்து மனிதர் மின் சமிக்கைகள் அனுப்பி விண்சிமிழைத் திசை திருப்பி வேகத்தைக் குறைத்து நிலவைச் சுற்ற வைப்பது மிகச் சிரமமான பொறியியல் நுணுக்க முயற்சி.  முதன்முதலில் அவ்விதம் செய்ய முயன்ற ரஷ்யா அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் துணைக்கோள்கள் சந்திரனைச் சுற்றாது சூரியநைச் சுற்றி வர நழுவிச் சென்றன.  இந்தியா முதல் முயற்சியிலேயே நிலவைச் சுற்ற வைத்தது பாராட்டத் தக்க ஒரு நிபுணத்துவம்.  இதற்கு முன்பு பன்முறைத் துணைக்கோள்களைப் “புவியிணைப்புச் சுற்றுவீதியில்” (Geosynchronous Orbit) இறக்கிப் பூமியைச் சுற்ற வைத்த கைப்பயிற்சியே அதற்கு உதவி செய்திருக்கிறது !  இந்த மகத்தான சிக்கலான விண்வெளி இயக்க நுணுக்கத்தைச் செய்து காட்டி இந்தியா தன்னை ஐந்தாவது சாதனை நாடாக உயர்த்தி இருக்கிறது.  ஏற்கனவே இவ்விதம் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சைனா தேசங்கள் செய்து காட்டியுள்ளன.  ஈசா எனப்படும் ஐரோப்பாவின் பதினேழு கூட்டு நாடுகளின் விண்வெளி ஆய்வகமும் [European Space Agency (ESA)]) இந்த விந்தையைப் புரிந்துள்ளது.

சென்னைக்கு 100 கி.மீ தூரத்தில் ஆந்திரப் பிரதேசத் தீவான ஸ்ரீஹரிக்கோட்டா (Sriharikota, Andhra Predesh) ஸ்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் அக்டோபர் 22, 2008 ஆம் தேதி காலை 06:20 மணிக்கு இந்தியாவில் ஆக்கிய ஏவுகணையில் ஒன்றரை டன் எடையுடைய சந்திரயான் -1 விண்ணுளவி (துணைக்கோள்) ஏவப்பட்டு பாரதத்தின் முதல் மனிதரற்ற நிலவுப் பயணம் துவங்கி விண்வெளி வரலாற்றில் இந்தியா ஒரு மைல் கல்லை நாட்டியது.  அது பூமியை நீள்வட்ட வீதியில் ஆறுதரம் சுற்றி ஆறாவது நீள்வட்ட வீச்சில் புவி யீர்ப்பாற்றலைத் தாண்டி நிலவு ஈர்ப்பு மண்டலத்தில் இறங்கி 400,000 கி.மீடர் (240,000 மைல்) தூரத்தை 17 நாள் பயணத்தில் கடந்து சென்றது..  ஆறுமுறை நீட்டப்பட்ட பாதையில் துணைக்கோள் நகர்ந்து செல்ல 440 நியூட்டன் திரவ எஞ்சின் உந்து சக்தி பயன்படுத்தப் பட்டது.  440 நியூட்டன் திரவ எஞ்சினில் பயன்படும் எரிசக்தித் திரவம் சிறப்பாகப் பன்முறை உபயோகமான கலவைத் (N2O4 & UDMH) திரவமே.

துணைக்கோள் நிலவைச் சுற்றத் துவங்கிய முதல் நீள்வட்ட வீதி 7502 கி.மீடர் நீள் ஆரமும் (Apogee or Aposelene), 225 கி.மீடர் குறு ஆரமும் (Perigee or Periselene) கொண்டது.  இரண்டாவது சுருக்கப்பட்ட நீள்வட்ட வீதி : 200 கி.மீடர் நீள் ஆரம், 182 கி.மீடர் குறு ஆரம்.  இறுதியாக கட்டுப்பாடு செய்யப் பட்ட வட்டவீதி 100 கி.மீடர் ஆரம் (60 மைல் உயரம்).  இந்த 100 கி.மீடர் வட்ட வீதியில்தான் சந்திரயான்-1 துணைக்கோள் இரண்டு ஆண்டுகளுக்கு நிலவின் தளத்தை உளவித் தொடர்ந்து பூமிக்குத் தகவல் அனுப்பும்.  இனிமேல் துணைக்கோள் புரிய வேண்டிய விஞ்ஞானக் குறிப்பணிகளை ஒவ்வொன்றாக ஆரம்பிக்கும்.

இந்திய விண்வெளித் தேடலின் எதிர்காலத் திட்டங்கள்

இந்திய விண்வெளி ஆய்வகத்தின் (ISRO) இரண்டாவது சந்திராயன் (Chandrayaan -2) விண்ணுளவி 2011-2012 இல் ஏவிச் செல்ல அடுத்து தயாராகி வருகிறது.  அது சந்திரயான் -1 விட சற்று வேறுபட்டது.  விண்சிமிழ் தன்னுடன் ஒரு தளவுளவியையும், வாகனத்தையும் (A Lander & Rover) சுமந்து சென்று பாதுகாப்பாகச் சந்திர தளத்தில் இறக்கும்.  தளவுளவி நிலவின் தளத்தை ஆராயும் போது வாகனம் நிலவின் பரப்பில் ஊர்ந்து சென்று தகவல் தயாரிக்கும்.  தளவுளவி, வாகன அமைப்புகளுக்கு இந்தியா ரஷ்யாவின் கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.  அதற்காகும் நிதித்தொகை 4.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கூறுகிறார்.

அடுத்து இந்தியா செவ்வாய்க் கோள் பயணத்துக்கும், மனிதர் இயக்கும் விண்ணுளவியை நிலவுக்கு ஏவும் யாத்திரைக்கும் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.  “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது,” என்று ராக்கெட் விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம், ஜனவரி 26, 2008 இல் நடந்த அகில நாட்டு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் பொதுக் கருத்தரங்கில் (International Conference on Aerospace Science & Technologies) கூறியிருக்கிறார். “கடந்த 50 ஆண்டுகளாய் விண்வெளி ஆராய்ச்சி, படைப்பல மேன்மை, அணுசக்தி ஆய்வுப் பங்கெடுப்பில் மூழ்கிய இந்தியா முதன்முதல் ஒரு வெற்றிகரமான சந்திரயான் -1 நிலவுப் பயணத்தைச் செய்து காட்டியுள்ளது,” என்று அந்தக் கருத்தரங்கில் டாக்டர் அப்துல் கலாம் பாரத நாட்டைப் பாராட்டினார்.

+++++++++++++++++++++++++++++

நிலவுப் பயணம் பற்றி தமிழ்-இந்து வலைத்தளப் படங்கள்
சிறப்புக் கட்டுரையை படிக்க :

1.  http://www.tamilhindu.com/2008/10/launch-of-chandrayaan/ [தமிழ் இந்து இணைய தளம்]

2.  http://www.tamilhindu.com/wp-content/uploads/isro_tamilhindu.jpg [படங்கள் -1]

3.  http://www.tamilhindu.com/wp-content/uploads/isro_tamilhindu2.jpg [படங்கள் -2]

நன்றி : அரவிந்தன் நீலகண்டன்

++++++++++++++++++++++++++++++

(தொடரும்)

*******************

தகவல்:

Picture Credits :  ISRO Indian Website & http://www.Tamilhindu.com

1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
1A Stars & Planets By : Duncan John [2006]
1B. Astronomy Facts on File Dictionary (1986)
2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
3. Indian Space Program By: Subhajit Ghosh
4  Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html  [Dr. Vikram Sarabhai Space Pioneer]
9. Indian Space Program By: Wikipedia
10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]
12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp
13 Dr. Abdul Kalam : India’s Missile Program http://www.geocities.com/siafdu/kalam.html
14 http://www.tamilhindu.com/2008/10/launch-of-chandrayaan/ (Article & Pictures)
15 http://www.tamilhindu.com/wp-content/uploads/isro_tamilhindu.jpg (Pictures)
16. http://www.tamilhindu.com/wp-content/uploads/isro_tamilhindu2.jpg (Pictures)
17. Indian Space Research Organization (ISRO) – Scientific Objectives, Spacecraft, of Chandryaan -1
18. BBC News – India in Multi-satellite Launch
19. Times Now – India’s First Unmanned Mission on Moon [Oct 22, 2008]
20. BBC News : India Launches First Moon Mission [Oct 22, 2008]
21. Cosmos Magazine – The Science of Everything – India Counts Down to Lunar Mission [Oct 21, 2008]
22..  Space Expolaration – Chembers Encyclopedic Guides (1992)
23. The Times of India – After Mood Odyssey, It’s “Mission to Sun” for ISRO [2008]
24.  National Geographic -50 Years Exploring Space [November, 2008]
24.  Chandrayaan-1 Enters Lunar Orbit – Makes History [Nov 8, 2008]
25.  Latest News – Chandrayaan Descends into Lower Orbit [Nov 11, 2008]
26.  Chandrayaan-1 Successfully Reaches its Operational Lunar Orbit ISRO Repot [Nov 12, 2008]
27. Chrayaan -1 Reaches Final Lunar Orbit [Nov 13, 2008]
28. Press Trust of India : Chandrayaan -1 Reaches Final Orbital Home [Nov 13, 2008]
29. Science Annual Volume Library -The Moon Revisited By : Dennis Mammana (1995)
30. Readers’ Digest Publication -Why in the World ? -Uncovering Moon’s Secrets (1994)
31.  Time Great Discoveries – An Amazing Journey through Space & Time – Man on the Moon – Science or Show ? (2001)
32.. Laser Instrument on Chandrayaan -1 Successfully Turned On [Nov 16, 2008]
33. BBC News – India Sends (Moon Impact) Probe onto the Moon [Nov 14, 2008]
34 Mangalorean News – Indian Tricolour on Destination Moon [Nov 15, 2008]
35 Space Flight Now – Lunar Impactor Dispatched from Indian Spacecraft [Nov 15, 2008]
36. Time Magazine – Back to the Moon By :Jeffrey Kluger and Houstan [Nov 24, 2008]
37 The Hindu – Chandrayaan Team over the Moon By : Divya Gandhi [Nov 15, 2008]
38 Kalam Hails ISRO for Fulfilling His Moon Dream [Nov 15, 2008]

******************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 20, 2008)]

சந்திரனைச் சுற்றிவரும் முதல் இந்தியத் துணைக் கோள்

fig-2-chandrayaan-1-orbits-the-moon

(கட்டுரை : 2)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

சந்திரனைச் சுற்றுது
இந்தியத் துணைக் கோள் !
மந்திர மாய மில்லை !
தந்திர உபாய மில்லை !
சொந்தமான
இந்திய சக்தி !
பிந்திப் போயினும்
முந்தைய சக்தி ! யுக யுமாய்ச்
சிந்தையில் செழித்த
எந்தையும் தாயும்
தந்திடும் சக்தி ! ஆதி
அந்த மில்லாத சக்தி !
இந்த யுகத்தில் புத்துயிர் பெறும்
விந்தை யுக்தி ! பலர்
நிந்தனை புரியினும்
வந்தனை செய்வோம்
இந்தியர் நாமெலாம் !
செந்நிறக்கோள் அடுத்த பயணம் !
நந்தேயத்தினர் நாள்தொறும் உயர்க !
வந்தே மாதரம்.
வந்தே மாதரம்

வானை அளப்போம் ! கடல் மீனை அளப்போம் ! . . . .
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் !

மகாகவி பாரதியார் (பாரத தேசம்)

fig-1-chandrayaan-1-in-lunar-final-orbit

“சந்திரயான் -1 துணைக்கோளைத் திட்டமிட்ட வட்டவீதியில் வெற்றிகரமாய்ப் புகுத்திச் சந்திரனுக்குச் செல்லும் பயணம் இப்போது முடிந்தது.  அடுத்துத் தொடங்கப் போகும் ஆய்வுச் சோதனைகளை ஆரம்பிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”

மயில்சாமி அண்ணாத்துரை, சந்திரயான் திட்ட இயக்குநர் (Chandrayaan Project Director) [நவம்பர் 13, 2008]

“நிலவைச் சந்திரயான் -1 நெருங்கியவுடன் பூமியிலிருந்து சமிக்கைகள் அனுப்பி, அதன் வேகம் குறைப்பாகி, எதிர்த் திசையில் திருப்பாகி (Retro-firing) சந்திர மண்டலத்தின் ஈர்ப்பில் இறங்கிப் பாதுகாப்புடன் நிலவுச் சுற்றுவீதியில் வலம் வந்தது.  அந்த நிகழ்ச்சி மகத்தானதோர் உணர்ச்சியை எமக்கு உண்டாக்கியது.”

எஸ். கே. சிவக்குமார், துணைக்கோள் கட்டுப்பாடு இயக்குநர் (Director, ISRO Telemetry, Tracking & Command Network) [நவம்பர் 9, 2008]

fig-6-succesful-launching

“சந்திராயன் -1 நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டு சந்திரனைச் சுற்றுவீதியில் நிபுணர் புகுத்தியது மகத்தானதோர் நிகழ்ச்சி.  அந்த இயக்கத்தில் ஏதேனும் ஒரு சிறு பிழை ஏற்பட்டிருந்தால் துணைக்கோள் நிலவை விட்டு வழிதவறி விண்வெளியில் எங்கோ போயிருக்கும்.”

எஸ், ராமகிருஷ்ணன், திட்ட இயக்குநர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம் [நவம்பர் 9, 2008]

சிரமமான “நிலவுச் சுற்றுவீதி நுழைப்புக் கட்டுப்பாடு” [Lunor Orbit Insertion (LOI) Manoeuvre] பூரணமாக நிறைவேறியது.  முதன்முதல் நாங்கள் இதைச் செய்து காட்டிப் புதிய விண்வெளி வரலாற்றை ஆக்கியிருக்கிறோம்.  இது எங்கள் திட்டத்தின் நுட்பத்தையும், இயக்கக் கணிப்புகளின் துல்லிய நுணுக்கத்தையும் எடுத்துக் காட்டுகின்றன. விண்சிமிழை நிலவுச் சுற்றுவீதியில் புகுத்தும் இயக்கங்கள் முடிந்து விட்டன.  புவித்தள நிலையங்களில் உள்ள அனைத்து ஏற்பாடுகளும் சீராக இயங்குவதை நிரூபித்து விட்டன.  இன்னும் 5 நாட்களில் இயக்கங்கள் செம்மை நிலையாக்கப் பட்ட பிறகு (நவம்பர் 14 இல்) நிலவுக்கு விழும் சாதனக் கருவி விடுவிக்கப்படும்.  அப்போது இந்தியாவின் மூவர்ணக் கொடி நிலவில் முதன்முதல் ஊன்றப்படும்.

டாக்டர் மாதவன் நாயர், தலைவர் இந்திய விண்வெளித் திட்ட நிறுவகம் [Chief Indian Space Research Organization (ISRO)] [நவம்பர் 8, 2008]

fig-5-chadrayaan-sent-images-of-earth-moon

“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை [ஜனவரி 26, 2008] (International Conference on Aerospace Science & Technologies)

“முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை !  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் !  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம் !”

டாக்டர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆய்வுப் பிதா (1919-1971).


fig-1b-launch

சந்திரனைச் சுற்றிவரும் முதல் இந்திய துணைக்கோள் !

2008 நவம்பர் 12 ஆம் தேதி சந்தரயான் -1 துணைக்கோள் திட்டமிட்ட 100 கி.மீடர் (60 மைல் உயரம்) துருவ வட்டவீதியில் (Polar Orbit) நிலவைச் சுற்றிவரத் துவங்கியது.  பூமியைக் கடப்புச் சுற்றுவீதியில் சுற்றிவந்த சந்திரயான் நவம்பர் 8 ஆம் தேதியன்று, நிலவை நெருங்கும் போது 440 நியூட்டன் திரவ எஞ்சின் இயங்கி வேகம் குறைக்கப்பட்டு (367 metre/Sec) நிலவின் ஈர்ப்பு மண்டலத்தில் கவரப்பட்டு முதன்முதல் நிலவைச் சுற்ற ஆரம்பித்தது.  சந்திர விண்வெளி யாத்திரையில் பூமியிலிருந்து மனிதர் மின் சமிக்கைகள் அனுப்பி விண்சிமிழைத் திசை திருப்பி வேகத்தைக் குறைத்து நிலவைச் சுற்ற வைப்பது மிகச் சிரமமான பொறியியல் நுணுக்க முயற்சி.  முதன்முதலில் அவ்விதம் செய்ய முயன்ற ரஷ்யா அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளின் துணைக்கோள்கள் சந்திரனைச் சுற்றாது சூரியநைச் சுற்றி வர நழுவிச் சென்றன.  இந்தியா முதல் முயற்சியிலேயே நிலவைச் சுற்ற வைத்தது பாராட்டத் தக்க ஒரு நிபுணத்துவம்.  இதற்கு முன்பு பன்முறைத் துணைக்கோள்களைப் “புவியிணைப்புச் சுற்றுவீதியில்” (Geosynchronous Orbit) இறக்கிப் பூமியைச் சுற்ற வைத்த கைப்பயிற்சியே அதற்கு உதவி செய்திருக்கிறது !  இந்த மகத்தான சிக்கலான விண்வெளி இயக்க நுணுக்கத்தைச் செய்து காட்டி இந்தியா தன்னை ஐந்தாவது சாதனை நாடாக உயர்த்தி இருக்கிறது.  ஏற்கனவே இவ்விதம் ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான், சைனா தேசங்கள் செய்து காட்டியுள்ளன.  ஈசா எனப்படும் ஐரோப்பாவின் பதினேழு கூட்டு நாடுகளின் விண்வெளி ஆய்வகமும் [European Space Agency (ESA)]) இந்த விந்தையைப் புரிந்துள்ளது. fig-1c-final-lunar-orbit சென்னைக்கு 100 கி.மீ தூரத்தில் ஆந்திரப் பிரதேசத் தீவான ஸ்ரீஹரிக்கோட்டா (Sriharikota, Andhra Predesh) ஸ்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் அக்டோபர் 22, 2008 ஆம் தேதி காலை 06:20 மணிக்கு இந்தியாவில் ஆக்கிய ஏவுகணையில் ஒன்றரை டன் எடையுடைய சந்திரயான் -1 விண்ணுளவி (துணைக்கோள்) ஏவப்பட்டு பாரதத்தின் முதல் மனிதரற்ற நிலவுப் பயணம் துவங்கி விண்வெளி வரலாற்றில் இந்தியா ஒரு மைல் கல்லை நாட்டியது.  அது பூமியை நீள்வட்ட வீதியில் ஆறுதரம் சுற்றி ஆறாவது நீள்வட்ட வீச்சில் புவி யீர்ப்பாற்றலைத் தாண்டி நிலவு ஈர்ப்பு மண்டலத்தில் இறங்கி 400,000 கி.மீடர் (240,000 மைல்) தூரத்தை 17 நாள் பயணத்தில் கடந்து சென்றது..  ஆறுமுறை நீட்டப்பட்ட பாதையில் துணைக்கோள் நகர்ந்து செல்ல 440 நியூட்டன் திரவ எஞ்சின் உந்து சக்தி பயன்படுத்தப் பட்டது.  440 நியூட்டன் திரவ எஞ்சினில் பயன்படும் எரிசக்தித் திரவம் சிறப்பாகப் பன்முறை உபயோகமான கலவைத் (N2O4 & UDMH) திரவமே. துணைக்கோள் நிலவைச் சுற்றத் துவங்கிய முதல் நீள்வட்ட வீதி 7502 கி.மீடர் நீள் ஆரமும் (Apogee or Aposelene), 225 கி.மீடர் குறு ஆரமும் (Perigee or Periselene) கொண்டது.  இரண்டாவது சுருக்கப்பட்ட நீள்வட்ட வீதி : 200 கி.மீடர் நீள் ஆரம், 182 கி.மீடர் குறு ஆரம்.

இறுதியாக கட்டுப்பாடு செய்யப் பட்ட வட்டவீதி 100 கி.மீடர் ஆரம் (60 மைல் உயரம்).  இந்த 100 கி.மீடர் வட்ட வீதியில்தான் சந்திரயான்-1 துணைக்கோள் இரண்டு ஆண்டுகளுக்கு நிலவின் தளத்தை உளவித் தொடர்ந்து பூமிக்குத் தகவல் அனுப்பும்.  அடுத்து இதே உயரத்தி லிருத்து நிலவில் விடப்படும் உளவி (Moon Impact Probe MIP) துணைக்கோளிலிருந்து நவம்பர் 14 ஆம் தேதி விடுவிக்கப்படும்.  அத்துடன் இந்திய மூவர்ணக் கொடியும் இறங்கி இந்திய முதல் சாதிப்பை எடுத்துக் காட்டும்.  பிறகு துணைக்கோள் புரிய வேண்டிய விஞ்ஞானக் குறிப்பணிகளை ஒவ்வொன்றாக ஆரம்பிக்கும்.  இப்போது இந்தியத் துணைக்கோள் ஜப்பான், சைனா துணைக் கோள்களுடன் நிலவைச் சுற்றி வருகிறது. fig-1d-first-indian-moon-mission-teamஉலக நாடுகள் சந்திரனுக்கு ஏவிய முந்தைய விண்சிமிழ்கள்

2008 நவம்பரில் முதன்முதல் முயன்ற நிலவுப் பயணத்தில் இந்தியா நிபுணர்கள் தவறுகள், பழுதுகள் ஏதுவும் நிகழாமல் விண்சிமிழைச் சந்திர ஈர்ப்பு மண்டலத்தில் இறக்கியது மகத்தான ஓர் பொறியியல் சாதனையாக உலக நாடுகளால் எண்ணப்படுகிறது.  இந்தியா பன்முறை பூமியைச் சுற்றும் துணைக்கோள்களை வெற்றிகரமாக ஏவியதும், அவற்றில் சிலவற்றைப் “புவி இணைப்புச் சுற்று வீதியில்” (Geosynchronous Orbit) (பூமியிலிருந்து 35784 கி.மீடர் அல்லது 21470 மைல் உயரம்) தொடர்புக்கோ அல்லது வாகன நகர்ச்சிக் கண்காணிப்புக்கோ (Communication & Navigation Purpose) இறக்க வேண்டி இருந்தது.  புவி இணைப்புச் சுற்று வீதிக்குப் பூமியிலிருந்து சமிக்கை அனுப்பி ஒரு துணைக்கோளை இறக்குவது மிக நுட்பமான கட்டுப்பாடு.  அதற்கு உந்து சக்தி தர முதலில் பேராற்றல் கொண்ட எரிசக்தி உந்து கணைகள் தேவை.  இரண்டாவது நுணுக்கமான ரேடார் மின்னலைத் தொடர்புக் கட்டுப்பாடுகள் அவசியம். 1957 ஆண்டு முதல் சோவியத் ரஷ்யா 45 முறைகள் தனது மனிதரற்ற ஏவுகணைத் திட்டங்களான லூனா நிலவுப் பயணங்களை (Luna Moon Missions) முயன்றதில் 17 தடவைதான் வெற்றியடைந்தது !

moon-mission-1

லூனா-1 முதன்முதல் நிலவு உதையீர்ப்பு உந்து சக்தியில் (Flyby Swing) வீசப்பட்டுப் பரிதியின் சுற்று வீதியைப் பற்றி வலம் வந்தது !  1959 இல் அமெரிக்கப் பயனீர் நிலவுத் திட்டங்களில் (Pioneer Moon Missions) பயனீர்-4 மட்டும்தான் முதன்முதல் சந்திரனைச் சுற்றிவர முடிந்தது !  முதன்முதல் உலக வல்லரசுகள் சந்திர யாத்திரைக்கு முயன்ற 20 பயணங்களில் 12 முறைகள் தோல்வியடைந்தன !  2007 ஆண்டு வரை உலக நாடுகள் முயன்ற 122 நிலவுப் பயணங்களில் 59 யாத்திரைகள்தான் வெற்றி ஈந்துள்ளன ! பிறகு ஆசியாவில் 1990 ஆம் ஆண்டில் ஜப்பான் அனுப்பிய முதல் ஹைடன் விண்ணுளவி (Hiten Spacecraft) நிலவை 10 முறைச் சுற்றிவந்து பழுதுகள் உண்டாகிச் சந்திர தளத்தில் வேண்டு மென்றே வீழ்த்தப் பட்டது !  அதன் பின் சைனா 1997 இல் பூமியைச் சுற்றிவர ஏவியத் தனது ஆசீயசாட் (AsiaSat) விண்ணுளவியில் பழுதுகள் ஏற்பட்டு அது சந்திரனுக்கு அனுப்பப் பட்டது !  அதுவே புதுப் பெயருடன் (HGS-1) சைனாவின் முதல் நிலவுப் பயணமாகக் கருதப்படுகிறது.  இத்தகைய முன்னோடி முயற்சிகள் எல்லாம் என்ன சொல்கின்றன ? நிலவைச் சுற்ற அனுப்பும் முதற் பயணம் யாவும் சவாலான சாதனை என்பதே !

fig-7-satellite-tracking-toolsபூமியிலிருந்து நுணுக்கமான துணைக்கோள் கட்டுப்பாடு

2008 அக்டோபர் 22 ஆம் தேதி சந்திரயான் -1 விண்வெளியில் ஏவப்பட்டு அது பூமியை ஆறுமுறைச் சுற்றிய போதும், பிறகு நிலவுக்கு நழுவி மும்முறைச் சுற்றிய போதும் அதன் போக்கையும், நலத்தையும் கண்காணித்து வந்த கட்டுப்பாடு அரங்கம் [Spacecraft Control Centre of ISRO Telemetry & Command Network (ISTRAC)] பெங்களூரில் அமைக்கப் பட்டிருக்கிறது.  அதற்கு மின்னலைச் சமிக்கைகள் அளிப்பவை 40 கி.மீடர் தூரத்தில் உள்ள பயாலலுவின் [Indian Deep Space Network (IDSN) at Byalalu] இரண்டு ரேடார் தட்டு ஏரியல்கள் 18 மீடர், 32 மீடர் விட்டமுள்ளவை.  பெங்களூர் கண்காணிப்பு & கட்டுப்பாடு அரங்கத்துடன் உலகின் பிற பகுதிகளில் உள்ள (இந்தோனேஸியா, அமெரிக்க & ரஷ்ய) விண்வெளித் தொடர்பு நிலையங்களின் உதவிகளும் தேவைப் பட்டன என்று பெங்களூரில் இருக்கும் துணைக்கோள் கட்டுப்பாடு இயக்குநர் எஸ். கே. சிவக்குமார் கூறினார்.

fig-1g-moon-impact-probe1

சந்திரயான் விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள்கள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவகம் படைத்த [Indian Space Research Organization (ISRO)] சந்திரயான்-1 விண்ணுளவி ஏழு விதமான உபகரணங்களை ஏந்திச் செல்கிறது.  அதனில் இந்திய நிபுணர் ஆக்கிய 5 இந்தியக் கருவிகளும் அன்னிய நாடுகள் செய்த ஆறு கருவிகளும் அமைக்கப் பட்டுள்ளன.  உபகரணங்களில் முக்கியமானவை இரண்டு :  700 வாட்ஸ் மின்சக்தி அளிக்கும் பரிதித் தட்டும் (Solar Panel) நிலவில் தள்ளபடும் உளவியும் (Moon Impact Probe).

1.  முதற் கருவி [Chandrayaan Energetic Neutral Analyser (CENA)]

2.  30 கிலோ கிராம் எடையுள்ள நிலவில் வீழும் உளவி [Moon Impact Probe (MIP)].  சந்திரனை 100 கி.மீடர் மைல் உயரத்தில் தாய்க் கப்பல் சுற்றி வரும் போது தளத்தில் தள்ளப்படும் உபகரணம் இது.  தளத்தில் விழும் போது உளவி நிலா மண்டலத்தில் பரவிய நலிந்த வாயுக்களின் அளவைப் பதிவு செய்யும்.

fig-1f-spacecraft-going-around-the-moon2

3.  கதிரியக்கத் தாக்கமானி [Radiation Dose Monitor (RADOM)]

4.  நிலவுத் தளப் பதிப்புக் காமிரா [Terrain Mapping Camera (TMC)]

5.  நிலவுத் தாதுக்கள் பதிப்புமானி [Moon Mineralogy Mapper (M3)]

6.  மெக்னீஸியம், இரும்பு போன்ற பல்வேறு மூலகங்களின் செழிப்பைக் காணும் எக்ஸ்-ரே ஒளிப்பட்டை மானி [Chandrayaan -1 X-Ray Spectrometer (C1XS)].  இதன் மூலம் நிலவின் மூலத்தையும், தோற்றத்தையும் பற்றி எழும் வினாக்களுக்கு விடை கிடைக்கும்.  ஒரு காலத்தில் உருகிய தாதுக் கடல் நிலவில் இருந்ததா என்று அறிய உதவலாம்.  மெக்னீஸியம் இரும்பு இருப்பு வீதம் எத்தனை அளவு நிலவு உருகிய நிலையில் இருந்தது என்று விபரம் கூறும்.  மேலும் டிடேனியம் போன்ற அரிய உலோகம் கொண்ட பாறைகள் உள்ளனவா என்றும் அந்தக் கருவி சோதனை செய்யும்.

7.  700 வாட்ஸ் மின்சக்தி அளிக்கும் பரிதித் தட்டு [700 Watts Solar Panel]

cover-image-lunar-orbit-2

சந்திரயான் விண்ணுளவி புரியும் விஞ்ஞான ஆய்வுகள்

1.  பூமியிலிருந்து நோக்குவோர் கண்ணுக்குப் புலப்படாத நிலவின் இருண்ட பின்புறத்தைச் சந்திரயான் விண்ணுளவி சுற்றிவரும் போது ஆராயும்.  சந்திரனின் பின்புறத்தில் உள்ள குழிகளின் எண்ணிக்கை அதிகம்.  முன்புறத்தில் இருப்பதை விட வேறான தளப்பண்பாடு கொண்டது பின்புறம்.

2.  இருபுறத்திலும் உள்ள நிலவுச் சூழ்வெளியில் ஓர் முப்புற முகப்படத்தைத் (3D Atlas with Spatial & Altitude Resolusion of both side Moon) தயார் செய்யும்.

3.  மாக்னீஷியம், அலுமினியம், ஸிலிகான், கால்சியம், இரும்பு, டிடானியம் போன்ற சிற்றளவு அணு எண் கொண்ட மூலகங்களையும், ரேடான், யுரேனியம், தோரியம் போன்ற உயர் அணு எண் கொண்ட கன மூலகங்களையும் தேடிப் பதிவு செய்யும்.

4.  சந்திரனின் தோற்ற வரலாற்றை அறியவும் மேற்தள தட்டு இரசாயனப் பண்பாடுகளை உளவவும் தகவலைச் சேகரிக்கும்.

fig-3-chandrayaan-2-mission

இந்திய விண்வெளித் தேடலின் எதிர்காலத் திட்டங்கள்

இந்திய விண்வெளி ஆய்வகத்தின் (ISRO) இரண்டாவது சந்திராயன் (Chandrayaan -2) விண்ணுளவி 2011-2012 இல் ஏவிச் செல்ல அடுத்து தயாராகி வருகிறது.  அது சந்திரயான் -1 விட சற்று வேறுபட்டது.  விண்சிமிழ் தன்னுடன் ஒரு தளவுளவியையும், வாகனத்தையும் (A Lander & Rover) சுமந்து சென்று பாதுகாப்பாகச் சந்திர தளத்தில் இறக்கும்.  தளவுளவி நிலவின் தளத்தை ஆராயும் போது வாகனம் நிலவின் பரப்பில் ஊர்ந்து சென்று தகவல் தயாரிக்கும்.  தளவுளவி, வாகன அமைப்புகளுக்கு இந்தியா ரஷ்யாவின் கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.  அதற்காகும் நிதித்தொகை 4.25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கூறுகிறார். அடுத்து இந்தியா செவ்வாய்க் கோள் பயணத்துக்கும், மனிதர் இயக்கும் விண்ணுளவியை நிலவுக்கு ஏவும் யாத்திரைக்கும் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டிருக்கிறது.

fig-8-mylswamy-annadurai

“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது,” என்று ராக்கெட் விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம், ஜனவரி 26, 2008 இல் நடந்த அகில நாட்டு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் பொதுக் கருத்தரங்கில் (International Conference on Aerospace Science & Technologies) கூறியிருக்கிறார். “கடந்த 50 ஆண்டுகளாய் விண்வெளி ஆராய்ச்சி, படைப்பல மேன்மை, அணுசக்தி ஆய்வுப் பங்கெடுப்பில் மூழ்கிய இந்தியா முதன்முதல் ஒரு வெற்றிகரமான சந்திரயான் -1 நிலவுப் பயணத்தைச் செய்து காட்டியுள்ளது,” என்று அந்தக் கருத்தரங்கில் டாக்டர் அப்துல் கலாம் பாரத நாட்டைப் பாராட்டினார்.

dr-vikram-sarabhai-1

+++++++++++++++++++++++++++++

நிலவுப் பயணம் பற்றி தமிழ்-இந்து வலைத்தளப் படங்கள் சிறப்புக் கட்டுரையை படிக்க :

1.  http://www.tamilhindu.com/2008/10/launch-of-chandrayaan/ [தமிழ் இந்து இணைய தளம்]

2.  http://www.tamilhindu.com/wp-content/uploads/isro_tamilhindu.jpg [படங்கள் -1]

3.  http://www.tamilhindu.com/wp-content/uploads/isro_tamilhindu2.jpg [படங்கள் -2]

நன்றி : அரவிந்தன் நீலகண்டன்

++++++++++++++++++++++++++++++

(தொடரும்)

*******************

தகவல்: Picture Credits :

ISRO Indian Website & http://www.Tamilhindu.com

1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]

1A Stars & Planets By : Duncan John [2006]

1B. Astronomy Facts on File Dictionary (1986)

2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad

3. Indian Space Program By: Subhajit Ghosh

4  Chennai Online News Service About Insat

4B Orbiting Satellite [March 14, 2007]

5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]

6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]

7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]

8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html  [Dr. Vikram Sarabhai Space Pioneer]

9. Indian Space Program By: Wikipedia

10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]

11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]

12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp

13 Dr. Abdul Kalam : India’s Missile Program http://www.geocities.com/siafdu/kalam.html

14 http://www.tamilhindu.com/2008/10/launch-of-chandrayaan/ (Article & Pictures)

15 http://www.tamilhindu.com/wp-content/uploads/isro_tamilhindu.jpg (Pictures)

16. http://www.tamilhindu.com/wp-content/uploads/isro_tamilhindu2.jpg (Pictures)

17. BBC News : India Moon Probe Ready for Launch [Oct 21, 2008]

18. BBC News : India Sets its Sights on the Moon [Oct 21, 2008]

19. BBC News : Date Set for Indian Moon Mission By Sunil Raman [2003]

20. BBC News : India’ Growing Strides in Space [Oct 21, 2008]

21. Indian Space Research Organization (ISRO) – Scientific Objectives, Spacecraft, of Chandryaan -1

23. BBC News – India in Multi-satellite Launch

24. Times Now – India’s First Unmanned Mission on Moon [Oct 22, 2008]

25. BBC News : India Launches First Moon Mission [Oct 22, 2008]

26 Cosmos Magazine – The Science of Everything – India Counts Down to Lunar Mission [Oct 21, 2008]

27.  https://jayabarathan.wordpress.com/2008/05/24/fusion5/ [Fusion Power -1]

28.  https://jayabarathan.wordpress.com/2007/09/29/nuclear-fusion-power/ [Fusion Power -2]

29.  Space Expolaration – Chembers Encyclopedic Guides (1992)

30 The Times of India – After Mood Odyssey, It’s “Mission to Sun” for ISRO [2008]

31.  National Geographic -50 Years Exploring Space [November, 2008]

32.  Chandrayaan-1 Enters Lunar Orbit – Makes History [Nov 8, 2008]

33.  Latest News – Chandrayaan Descends into Lower Orbit [Nov 11, 2008]

34  Chandrayaan-1 Successfully Reaches its Operational Lunar Orbit ISRO Repot [Nov 12, 2008]

35. Chandrayaan -1 Reaches Final Lunar Orbit [Nov 13, 2008] 36. Press Trust of India : Chandrayaan -1 Reaches Final Orbital Home [Nov 13, 2008]

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (November 13, 2008)]

சந்திரனைச் சுற்றும் இந்தியா !

cover-lunar-orbit-1

சி. ஜெயபாரதன், கனடா

சந்திரனைச் சுற்றுது
இந்தியத் துணைக் கோள் !
மந்திர மாய மில்லை !
தந்திர உபாய மில்லை !
சொந்தமான
இந்தியர் சக்தி !
பிந்திப் போயினும்
முந்தைய சக்தி ! யுக யுமாய்ச்
சிந்தையில் செழித்த
எந்தையும் தாயும்
தந்திடும் சக்தி ! ஆதி
அந்த மில்லாத சக்தி !
இந்த யுகத்தில் புத்துயிர் பெறும்
விந்தை யுக்தி ! பலர்
நிந்தனை புரியினும்
வந்தனை செய்வோம்
இந்தியர் நாமெலாம் !
செந்நிறக்கோள் அடுத்த பயணம் !
நந்தேயத்தினர் நாள்தொறும் உயர்க !
வந்தே மாதரம்.
வந்தே மாதரம்

++++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) November 13, 2008

இந்தியா ஏவிய ஏவுகணைத் துணைக்கோள் சந்திரயான் -1 நிலவை நோக்கி முதற் பயணம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

வானை அளப்போம் ! கடல் மீனை அளப்போம் ! . . . .
சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம் !

மகாகவி பாரதியார் (பாரத தேசம்)

“முன்னேறி வரும் ஒரு நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினாவை எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரண்டு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்கப்பல் பயணத்திற்கோ முற்படும் செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை !  ஆனால் சமூக மனிதப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம் !  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஒரு பணியை மேற்கொள்கிறோம் என்னும் அழுத்தமான உறுதியுடன் இருக்கிறோம் !”

டாக்டர் விக்ரம் சாராபாய். இந்திய விண்வெளி ஆய்வுப் பிதா (1919-1971).

 

அக்கினி இடித் தாக்கம்!
அசுர வல்லமை ஊக்கம்!
அவ்விதம்
பொறுமை யற்ற புயலிலே
புது நெறி படைக்கப்
புறப்படும் எமது கனவுகள்!

டாக்டர் அப்துல் கலாம், பாரத ராக்கெட் விஞ்ஞானி

“தேச விண்வெளித் திட்டத்தில் வரலாற்று மைல் கல்லான முதல் எட்டுவைப்பு என்று இதைப் பாராட்டுகிறேன்.  எங்கள் விஞ்ஞானக் குழுவினர் மீண்டும் ஒருமுறைச் சாதித்துத் தேசப் பெருமையை நிலைநாட்டினர்.  இந்த தேசமே அவருக்குத் தலை வணங்குகிறது.”

மேன்மை தங்கிய இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங்.

“நிலவின் களத்தில் விஞ்ஞானச் செல்வக் களஞ்சியம் குவிந்துள்ளது.  மேலும் சில வினாக்களுக்கு இன்னும் விடை தேட வேண்டியுள்ளது. உதாரணமாகப் பூமியிலிருந்து நேராக 41% பகுதி நிலவைக் காண முடியாது.  சந்திரயான் துணைக்கோள் செய்யப் போகும் சோதனைகள் நிலவின் விஞ்ஞானத் தகவலை மேம்படச் செய்யும்.”

எம். வொய். எஸ். பிரஸாத் (துணை ஆளுநர் ஸதிஷ் தவன் விண்வெளி மையம்)

“இது தேசத்தின் ஒரு வரலாற்றுப் படைப்புத் தருணம்.  இன்று ஓர் இந்திய விண்ணுளவி சந்திரனுக்குப் பயணம் செய்ய நாங்கள் ஒரு மகத்தான பாதை வகுத்து விட்டோம்.  அது பூமிக்கு நெருங்கிய அண்டக் கோளும் ஒரே ஓர் இயற்கைத் துணைக் கோளுமான நிலவில் ஒளிந்திருக்கும் இரகசியங்களை வெளியே கொண்டு வர முயற்சி செய்யும்.”

டாக்டர் மாதவன் நாயர், தலைவர் இந்திய விண்வெளித் திட்ட நிறுவகம் [Chief Indian Space Research Organization (ISRO)]

“கனவு காண், கனவு காண், கனவு காண்,  கனவுகளைப் பிறகு எண்ணங்கள் ஆக்கிச் செயலில் வடிவாக்கு.  சிந்தனை செய்பவை பேரளவில் இருக்க வேண்டும்.  நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி.  ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும்.  அப்படி முனைந்தால்தான் பெருமளவில் நாம் முன்னேற முடியும்.”

டாக்டர் அப்துல் கலாம், (இளைஞருக்குக் கூறியது )

நிலவை நோக்கி இந்தியாவின் முதல் விண்வெளிப் பயணம்

சென்னைக்கு 100 கி.மீ தூரத்தில் ஆந்திரப் பிரதேசத் தீவான ஸ்ரீஹரிக்கோட்டா (Sriharikota, Andhra Predesh) ஸ்தீஷ் தவான் விண்வெளி மையத்தில் அக்டோபர் 22, 2008 ஆம் தேதி காலை 06:20 மணிக்கு இந்தியாவில் ஆக்கிய ஏவுகணையில் ஒன்றரை டன் எடையுடைய சந்திரயான் -1 விண்ணுளவி (துணைக்கோள்) ஏவப்பட்டு பாரதத்தின் முதல் மனிதரற்ற நிலவுப் பயணம் துவங்கி விண்வெளி வரலாற்றில் இந்தியா ஒரு மைல் கல்லை நாட்டியது.  அது பூமியை நீள்வட்ட வீதியில் இருதரம் சுற்றி புவி யீர்ப்பாற்றலைத் தாண்டி நிலவை நோக்கி 400,000 கி.மீடர் (240,000 மைல்) தூரத்தை 5 நாள் பயணத்தில் கடந்து செல்லும்.  அதன் பிறகு விண்ணுளவி வேகம் தளர்ந்து நிலவின் ஈர்ப்பாற்றலில் இறங்கி வட்ட வீதியில் சுற்ற ஆரம்பிக்கும்.  நிலவை 100 கி.மீடர் வட்ட வீதி உயரத்தில் விண்ணுளவி இரண்டு ஆண்டுகள் சுற்றித் தகவலைப் பூமிக்கு அனுப்பி வரும்.

விண்ணுளவியின் முக்கிய குறிப்பணி வெண்ணிலவின் மேற்தளத்தை ஆராய்வது.  நிலவின் துருவப் பரப்பில் அடித்தள நீர்ப்பனி உள்ளதா என்று அறிவது.  பூமியில் அரிதாக இருக்கும் ஹீலியம்-3 ஏகமூல வாயு (Helium-3 -An Isotope of Helium-4 Gas) இருப்பைக் கண்டறிவது.  எதிர்கால அணுப்பிணைவுச் சக்தி உற்பத்திக்கு ஹீலியம்-3 வாயு எரிசக்தியாகப் பயன்படும் என்று நம்பப் படுகிறது.  இந்தப் பேரிச்சை விண்வெளித் திட்டத்துக்கு இந்தியா 78 மில்லியன் டாலர் (3800 மில்லியன் ரூபாய்) (2008 ஆகஸ்டு நாணய மதிப்பு) செலவு செய்கிறது !

உலக நாடுகள் நிலவுக்கு ஏவிய முந்தைய விண்ணுளவிகள்

1957 ஆண்டு முதல் சோவியத் ரஷ்யா 45 முறைகள் தனது மனிதரற்ற ஏவுகணைத் திட்டங்களான லூனா நிலவுப் பயணங்களை (Luna Moon Missions) முயன்றதில் 17 தடவைதான் வெற்றியடைந்தது !  லூனா-1 முதன்முதல் நிலவு உதையீர்ப்பு உந்து சக்தியில் (Flyby Swing) வீசப்பட்டுப் பரிதியின் சுற்று வீதியைப் பற்றி வலம் வந்தது !  1959 இல் அமெரிக்கப் பயனீர் நிலவுத் திட்டங்களில் (Pioneer Moon Missions) பயனீர்-4 மட்டும்தான் முதன்முதல் சந்திரனைச் சுற்றிவர முடிந்தது !

பிறகு ஆசியாவில் 1990 ஆம் ஆண்டில் ஜப்பான் அனுப்பிய முதல் ஹைடன் விண்ணுளவி (Hiten Spacecraft) நிலவை 10 முறைச் சுற்றிவந்து பழுதுகள் உண்டாகிச் சந்திர தளத்தில் வேண்டுமென்றே வீழ்த்தப் பட்டது !  அதன் பின் சைனா 1997 இல் பூமியைச் சுற்றிவர ஏவியத் தனது ஆசீயசாட் (AsiaSat) விண்ணுளவியில் பழுதுகள் ஏற்பட்டு அது சந்திரனுக்கு அனுப்பப் பட்டது !  அதுவே புதுப் பெயருடன் (HGS-1) சைனாவின் முதல் நிலவுப் பயணமாகக் கருதப்படுகிறது.  இத்தகைய முன்னோடி முயற்சிகள் எல்லாம் என்ன சொல்கின்றன ?  நிலவைச் சுற்ற அனுப்பும் முதற் பயணம் யாவும் சவாலான சாதனை என்பதே !  இந்தியாவின் முதற்படி முயற்சியான சந்திரயான் -1 விண்ணுளவி இன்னும் ஐந்து நாட்களில் (அக்டோபர் 27-28, 2008 தேதியில்) சந்திர ஈர்ப்பு மண்டலத்தில் இறங்கி வெற்றிகரமாகச் சுற்றி வரும் ஓர் வரலாற்று அற்புதத்தை ஆவலுடன் நாம் எதிர்பார்ப்போம் !

PSLV ஏவுகணை & விண்ணுளவி பயண விபரங்கள்

சுமார் ஒன்றரை மீடர் சதுரப் பக்க வடிவான சந்திரயான் பூமியில் 1300 கிலோ கிராம் எடையும், நிலவில் வீதியில் சுற்றும் போது சுமார் பாதி எடையும் (590 கி.கிராம்) கொள்வது.  அதைத் தூக்கிச் செல்லும் ராக்கெட் PSLV (Polar Satellite Launch Vehicle) 1995-2005 ஆண்டுகளில் 8 தடவைத் துணைக் கோள்களைப் பூமியைச் சுற்ற அனுப்பி அனுபவம் பெற்றது.  அது 45 மீடர் (150 அடி) உயரம் உள்ளது.  மேம்படுத்தப் பட்ட PSLV ராக்கெட் 316 டன் எடை கொண்டது.  அது தூக்கிச் செல்லும் விண்ணுளவியை முதலில் பூமியைச் சுற்ற வைக்கும் போது (240 கி.மீடர் X 24000 கி.மீடர்) நீள்வட்ட வீதியில் சுற்றி வரும்.  முதலில் 1300 கிலோ கிராம் இருந்த துணைக்கோள் இப்போது 590 கி. கிரோம் எடையாகப் பாதியாகி விடும்.  காரணம் பூமியின் ஈர்ப்பாற்றல் உயரே போகப் போகக் குன்றுகிறது.

பிறகு விண்ணுளவி பன்முறை தள்ளப்பட்டு 386000 கி.மீடர் நீண்ட ஆரமுள்ள வட்ட வீதிக்கு நகர்த்தப் படுகிறது.  அதுவே சந்திரனை நெருங்கும் “கடப்புச் சுற்று வீதி” (Tranfer Orbit) என்று அழைக்கப் படுகிறது.  அந்த வீதியின் நீள் ஆரத்தில் செல்லும் போது அது சந்திரனை நெருங்கிறது.  அப்போது விண்ணுளவியின் எதிர் உந்து கணைகள் (Spacecrafts Retro-Jet Engines) இயங்கி அதன் வேகத்தைக் குறைக்கும்.  விண்ணுளவியின் வேகம் தளர்ந்தவுடன் நிலவின் ஈர்ப்பாற்றல் அதைத் தன் மண்டலத்தைச் சுற்ற இழுத்துக் கொள்கிறது.  இந்த இயக்கங்கள் சரியான கால நேரத்தில் பூமியின் ஆட்சி அரங்கிலிருந்து தூண்டப் பட்டு நிகழ வேண்டும்.

விண்ணுளவி நிலவைச் சுற்றி வரும் முதல் வட்ட வீதி 1000 கி.மீடர் இருக்கும்.  பிறகு விண்ணுளவியின் எதிர் உந்துகணைகள் வேகத்தைத் தளர்த்தி முடிவான வட்ட வீதி 100 கி.மீடர் (60 மைல்) உயரத்தில் இருக்குமாறு கட்டுப் படுத்தப்படும்.  விண்ணுளவி இரண்டு வருட காலம் அந்த வட்ட வீதியில் நிலவைச் சுற்றி வர உந்து கணைகளில் எரிசக்தித் திரவம் நிரப்பி வைக்கப் பட்டுள்ளது.

சந்திரயான் விண்ணுளவித் திட்டத்தின் குறிக்கோள்கள்

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவகம் படைத்த [Indian Space Research Organization (ISRO)] சந்திரயான்-1 விண்ணுளவி ஏழு விதமான உபகரணங்களை ஏந்திச் செல்கிறது.  அதனில் இந்திய நிபுணர் ஆக்கிய 5 இந்தியக் கருவிகளும் அன்னிய நாடுகள் செய்த ஆறு கருவிகளும் அமைக்கப் பட்டுள்ளன.  உபகரணங்களில் முக்கியமானவை இரண்டு :  700 வாட்ஸ் மின்சக்தி அளிக்கும் பரிதித் தட்டும் (Solar Panel) நிலவில் தள்ளபடும் உளவியும் (Moon Impact Probe).

1.  முதற் கருவி [Chandrayaan Energetic Neutral Analyser (CENA)]

2.  30 கிலோ கிராம் எடையுள்ள நிலவில் வீழும் உளவி [Moon Impact Probe (MIP)].  சந்திரனை 100 கி.மீடர் மைல் உயரத்தில் தாய்க் கப்பல் சுற்றி வரும் போது தளத்தில் தள்ளப்படும் உபகரணம் இது.  தளத்தில் விழும் போது உளவி நிலா மண்டலத்தில் பரவிய நலிந்த வாயுக்களின் அளவைப் பதிவு செய்யும்.

3.  கதிரியக்கத் தாக்கமானி [Radiation Dose Monitor (RADOM)]

4.  நிலவுத் தளப் பதிப்புக் காமிரா [Terrain Mapping Camera (TMC)]

5.  நிலவுத் தாதுக்கள் பதிப்புமானி [Moon Mineralogy Mapper (M3)]

6.  மெக்னீஸியம், இரும்பு போன்ற பல்வேறு மூலகங்களின் செழிப்பைக் காணும் எக்ஸ்-ரே ஒளிப்பட்டை மானி [Chandrayaan -1 X-Ray Spectrometer (C1XS)].  இதன் மூலம் நிலவின் மூலத்தையும், தோற்றத்தையும் பற்றி எழும் வினாக்களுக்கு விடை கிடைக்கும்.  ஒரு காலத்தில் உருகிய தாதுக் கடல் நிலவில் இருந்ததா என்று அறிய உதவலாம்.  மெக்னீஸியம் இரும்பு இருப்பு வீதம் எத்தனை அளவு நிலவு உருகிய நிலையில் இருந்தது என்று விபரம் கூறும்.  மேலும் டிடேனியம் போன்ற அரிய உலோகம் கொண்ட பாறைகள் உள்ளனவா என்றும் அந்தக் கருவி சோதனை செய்யும்.

7.  700 வாட்ஸ் மின்சக்தி அளிக்கும் பரிதித் தட்டு [700 Watts Solar Panel]

சந்திர மண்டலத்தில் எரிசக்திக்குப் பயன்படும் ஹீலிய வாயு !

பூமியைப் போல் ஈர்ப்பாற்றல் மிகையாக இல்லாத நிலவுக்கு வாயுச் சூழ்வெளி இல்லை என்று விஞ்ஞானிகள் ஒரு சமயம் நம்பினார்கள்.  ஆனால் நிலவை ஆழ்ந்து உளவியதில் மிக நலிந்த வாயுச் சூழ்நிலை உள்ளது என்று அறியப் பட்டிருக்கிறது.  சந்திரனுக்கு வாயுச் சூழ்வெளி இரண்டு வித மூலாதாரச் சேமிப்புகளிலிருந்து உண்டாகலாம்.  ஒரு சேமிப்பு : நிலவின் உட்கருப் பாதாளத் தளத்திலிருந்து கசியும் அரிய ரேடான் வாயு (Rare Gas Radon) !  பேரளவில் ரேடான் வாயுவுடன் வெளியாகும் நைடிரஜன், கார்பன் டையாக்ஸைடு, கார்பன் மானாக்ஸைடு வாயுக்கள்.

அடுத்த சேமிப்பு :  விண்வெளியிலிருந்து வாயு மூலக்கூறுகள் நிலவுத் தளத்தைத் தாக்கித் தளர்ந்து வெளியாகும் வாயுக்கள் !  இவை குளிர்ந்த உஷ்ணத்தில் நகர்ந்து நிலவின் குளிர்ப் பகுதியில் படிந்தவை.  பிறகு வெப்பமாகி ஆவியாகி விண்வெளியில் நீங்கலாம்.  அந்த வழியில் படிந்தவைதான் துருவப் பகுதியின் நீர்ப்பனியும் பரிதிப் புயலில் தப்பி விழுந்த ஹீலியம்-3 ஏகமூலமும் ஆகும்.  ஹீலியம்-3 நிலையான ஹீலியம்-4 இன் ஏகமூலம்.  ஏகமூலங்கள் என்பவை அணுக்கருவில் ஒரே எண்ணிக்கை புரோட்டான்களும் மாறான எண்ணிக்கை நியூட்ரான்களும் கொண்டவை.  (Isotope : Atoms having same number of Protons but different number of Neutrons in the Nucleus)

சந்திரனின் மெலிந்த ஈர்ப்பாற்றல் பூமியின் அசுர ஈர்ப்பாற்றலில் ஆறில் ஒரு பங்காக இருப்பதால், நிலவுக்குக் குடைபிடிக்கும் வாயு மண்டலம் கிடையாது.  ஆயினும் சந்திரனில் ஹீலியம்-3 வாயு தொத்திக் கொண்டிருப்பதை சந்திரயான்-1 விண்ணுளவி கண்டுபிடிக்க முனையும்.  ஹீலியம்-3 வாயு அணுப்பிணைவு சக்தி (Fusion Power) உற்பத்தி செய்ய உதவும் சேர்க்கை வாயுவாகும்.  இந்தியாவில் கிடைக்கும் கனநீரில் உள்ள டியூடிரியம் (Deuterium) மூலக்கூறும் ஹீலியம்-3 ஏகமூலமும் அணுப்பிணைவு உலையில் இணையும் போது உண்டாகும் பேரளவு வெப்பசக்தியில் மின்சாரம் உண்டாக்கலாம்.  அணுப்பிணைவு உலைகளில் கதிரியக்க மில்லை.  சூழ்வெளி மாசுக்கள் வெளியாகா !  சிறிதளவு எரிசக்தி வாயுக்களுடன் மலிவாக எதிர்காலத்தில் பிரம்மாண்டமான மின்சக்தி நிலையங்கள் கட்டலாம்.  அணுப்பிணைவு நிலையங்களுக்கு வேண்டிய எரிசக்தி மூலப் பொருட்களுக்குப் பஞ்சமே இல்லை !

சந்திரயான் விண்ணுளவி புரியும் விஞ்ஞான ஆய்வுகள்

1.  பூமியிலிருந்து நோக்குவோர் கண்ணுக்குப் புலப்படாத நிலவின் இருண்ட பின்புறத்தைச் சந்திரயான் விண்ணுளவி சுற்றிவரும் போது ஆராயும்.  சந்திரனின் பின்புறத்தில் உள்ள குழிகளின் எண்ணிக்கை அதிகம்.  முன்புறத்தில் இருப்பதை விட வேறான தளப்பண்பாடு கொண்டது பின்புறம்.

2.  இருபுறத்திலும் உள்ள நிலவுச் சூழ்வெளியில் ஓர் முப்புற முகப்படத்தைத் (3D Atlas with Spatial & Altitude Resolusion of both side Moon) தயார் செய்யும்.

3.  மாக்னீஷியம், அலுமினியம், ஸிலிகான், கால்சியம், இரும்பு, டிடானியம் போன்ற சிற்றளவு அணு எண் கொண்ட மூலகங்களையும், ரேடான், யுரேனியம், தோரியம் போன்ற உயர் அணு எண் கொண்ட கன மூலகங்களையும் தேடிப் பதிவு செய்யும்.

4.  சந்திரனின் தோற்ற வரலாற்றை அறியவும் மேற்தள தட்டு இரசாயனப் பண்பாடுகளை உளவவும் தகவலைச் சேகரிக்கும்.

இந்திய விண்வெளி ராக்கெட்களைப் படைத்த விஞ்ஞான மேதை

டாக்டர் அப்துல் கலாம் ராணுவ ராக்கெட்டுகளை விடுதலைப் பாரதத்தில் விருத்தி செய்த முன்னோடி விஞ்ஞானி.  இரண்டாம் உலகப் போரில் ஜெர்மெனிக்கும், போருக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் ராணுவ ராக்கெட்டுகளை விருத்தி செய்த ஜெர்மன் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் வெர்னெர் ஃபான் பிரௌன் [Wernher Von Braun].  அமெரிக்காவின் அண்டவெளிப் பயண ராக்கெட் விருத்தியிலும் ஃபான் பிரௌன் முழுமையாக ஈடுபட்டார்.  பாரத நாட்டில் டாக்டர் ஃபான் பிரௌனுக்கு இணையாகக் கருதப்படும் ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம்.  அவரே பாரதத்தின் ராணுவ ராக்கெட் படைப்புப் பிதாவாகாப் போற்றப்படுகிறார்.  இந்திய ராணுவ ஏவுகணைகள் அக்கினி, பிருத்வி போன்றவை மூச்சு விட்டுப் பாய்ந்து செல்ல விதையிட்டு விருத்தி செய்தவர் அப்துல் கலாம்.  அவற்றை வெற்றிகரமாக ஏவச் செய்து பாகிஸ்தான், சைனா போன்ற பக்கத்து நாடுகளின் கவனத்தைப் பாரதம் கவர்ந்துள்ளது !  1980 ஆண்டுகளில் ஹைதிராபாத் ராணுவ ஆராய்ச்சி விருத்திக் கூடத்தை [Defence Research & Development Laboratory] தன்னூக்கத்துடன் இயங்கும் ஓர் உன்னதக் கூட்டுப்பணிக் குழுவாக மாற்றி அதை ஒரு பொறிநுணுக்கத் தொழிற்சாலையாக ஆக்கினார்.  உன்னத பாதுகாப்புப் பணி புரிந்த டாக்டர் அப்துல் கலாமுக்கு 1990 ஆம் ஆண்டில் பாரதம் மதிப்பு மிக்க “பாரத் ரத்னா” பட்ட வெகுமதி அளிக்கப் பட்டது.

புதிய பாரதத்தைச் செதுக்கிய பொற்காலச் சிற்பி

சுதந்திர சூரியன் பாரத தேசத்திலே உதித்ததும், மேதைகளிடம் அடங்கிக் கிடந்த ஆக்க வெள்ளத்தை மடைதிறந்து விட்டவர், பிரதமர் ஜவஹர்லால் நேரு!  விண்வெளி ஆராய்ச்சியைத் துவங்க, விக்ரம் சாராபாயைக் கண்டு பிடித்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சிப் பேரவையை [Indian National Committee for Space Research] நிறுவி, அவரை அதிபர் ஆக்கியவர், நேரு.  இப்போது இந்தியா ஆசியாவிலே அண்டவெளி ஏவுகணை விடுவதில் முன்னணியில் நிற்கிறது.  அண்டவெளி ஏவுகணைகள், துணைக் கோள்கள் முழுக்க முழுக்க இந்தியப் படைப்பு.  அப்பெரும் விஞ்ஞானச் சாதனைகள் நிகழ்ந்த, இருபதாம் நூற்றாண்டின் ஒளிமயமானப் பிற்பகுதியைப் இந்திய விஞ்ஞானத் தொழிற்துறையின் பொற்காலம் என்று பாரத வரலாற்றில் அழுத்தமாக எழுதி வைக்கலாம்!

சந்திரயான் விண்வெளிப் பயணம் இந்தியாவுக்குத் தேவையா ?

பாரத நாட்டுக்கு ராணுவ வல்லமை அளிக்க வேண்டும் என்று ராக்கெட் மேதை டாக்டர் அப்துல் கலாம் ஏவுகணைத் திட்டங்களை நிறைவேற்றி உலக மையத்தில் இந்தியா உயர்ந்த பீடத்தில் நிமிர்ந்து நிற்கிறது !  மகாத்மா காந்தி பிறந்த பாரத நாட்டுக்குக் கைப்பலம், ஆயுதப் பலம், படைப்பலம் தேவையில்லை என்று தர்க்கமிடுவோரும் இருக்கிறார்.  சந்திரயான் விண்வெளிப் பயணத்துக்கு ஆகும் 78 மில்லியன் டாலர் (3800 மில்லியன் ரூபாய்) செலவை வறுமை ஒழிப்புக்குப் பயன்படுத்தலாம் என்று குற்றம் கூறுவோர் பலர் இருக்கிறார்.  இந்தியாவுக்கு அணுசக்தி ஆராய்ச்சி, அண்டவெளித் தேடல் பயணம் எல்லாம் அவசியமில்லை என்பாரும் இருக்கிறார்.

அதே போல் வான ஊர்திகள் வளர்ச்சி அடையும் போது விமானப் பயணம் எதற்கு என்று வினாவியோரும் இருந்திருப்பார் !  கணினிகள் எனப்படும் கம்பியூட்டர்கள் எதற்கு என்றும் சிலர் வாதிடலாம் !  இவர்கள் யாவரும் காலக் குயவன் கடிகார முட்களைப் பின்னோக்கிச் செல்ல முனைபவர்.  கால வெள்ளம் முன்னேறுமே தவிரப் பின்னோக்கிச் செல்லாது !  விமானங்கள் பழுதாகி விழுந்தாலும் மனிதர் அவற்றை ஒதுக்கிவிட்டு ரயில் பயணத்திலும் கப்பல் யாத்திரையிலும் போவதில்லை !  இத்தகைய விஞ்ஞானப் பொறியியல் தேடல்களால் இந்தியருக்கு ஏற்படும் பலாபலன்கள் என்ன ?  இந்தியரின் விஞ்ஞான அறிவு வளர்ச்சி.  தொழிற்துறை நுணுக்க வளர்ச்சி. ஆயிரக் கணக்கான இந்தியருக்குத் தொடர்ந்த வேலை விருத்தி.  உலக அரங்கிலே இந்தியருக்கு பெருமதிப்பு.

மனிதருக்கு வயிற்றுப் பசி, உடற்பசி, மூளைப் பசி என்று முப்பெரும் பசிகளைக் கடவுள் அளித்திருக்கிறார்.  மூன்றிலும் வயிற்றுப் பசியே முதன்மையானது.  வறுமைக் கொடுமை உடற்பசியையும், ஞானப் பசியையும் வளர விடாது என்பது யாவரும் அறிந்த உண்மை.  ஏழ்மையை ஒழிக்க அரசாங்கமும், செல்வந்தச் சீமான்களும், பொது மக்களும் ஒன்று கூடித் தொடர்ந்து செய்ய வேண்டிய கடமைகள் பல.  பணம் மட்டும் போதாது.  அப்பணிகள் ஒருபுறம் நிகழ்ந்து வரும் போது, ஓரளவு நிதி வளத்தை ஒதுக்கி மறுபுறம் விஞ்ஞானத்தை விருத்தி செய்யாவிட்டால் “ஞானப் பசி” மூளையை அரித்து மனிதரைக் கோளாறாக்கி விடும் !  இந்தியாவும் ஒரு பிற்போக்கு நாடாகி விடும் !

திருவள்ளுவர் “செவிக்குணவு இல்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்” என்று இசைக் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்.  அதைச் சிறிது மாற்றி “ஞானப் பசி இல்லாத போது மனிதர் ஊனப் பசிக்கு இடப்படும்” என்று சொல்லிக் கொள்ளலாம் !

ஊனப் பசியடங்கும் மானிடர்க்கு விண்தேடல்
ஞானப் பசியிலாத போது !

கட்டுரை ஆசிரியர்

+++++++++++++++++++++++++++++

நிலவுப் பயணம் பற்றி தமிழ்-இந்து வலைத்தளப் படங்கள்
சிறப்புக் கட்டுரையை படிக்க :

1.  http://www.tamilhindu.com/2008/10/launch-of-chandrayaan/ [தமிழ் இந்து இணைய தளம்]

2.  http://www.tamilhindu.com/wp-content/uploads/isro_tamilhindu.jpg [படங்கள் -1]

3.  http://www.tamilhindu.com/wp-content/uploads/isro_tamilhindu2.jpg [படங்கள் -2]

நன்றி : அரவிந்தன் நீலகண்டன்

++++++++++++++++++++++++++++++

(தொடரும்)

*******************

தகவல்:

Picture Credits :  ISRO Indian Website & http://www.Tamilhindu.com

1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
1A Stars & Planets By : Duncan John [2006]
2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
3. Indian Space Program By: Subhajit Ghosh
4  Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html  [Dr. Vikram Sarabhai Space Pioneer]
9. Indian Space Program By: Wikipedia
10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]
12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp
13 Dr. Abdul Kalam : India’s Missile Program http://www.geocities.com/siafdu/kalam.html
14 http://www.tamilhindu.com/2008/10/launch-of-chandrayaan/ (Article & Pictures)
15 http://www.tamilhindu.com/wp-content/uploads/isro_tamilhindu.jpg (Pictures)
16. http://www.tamilhindu.com/wp-content/uploads/isro_tamilhindu2.jpg (Pictures)
17. BBC News : India Moon Probe Ready for Launch [Oct 21, 2008]
18. BBC News : India Sets its Sights on the Moon [Oct 21, 2008]
19. BBC News : Date Set for Indian Moon Mission By Sunil Raman [2003]
20. BBC News : India’ Growing Strides in Space [Oct 21, 2008]
21. Indian Space Research Organization (ISRO) – Scientific Objectives, Spacecraft, of Chandryaan -1
23. BBC News – India in Multi-satellite Launch
24. Times Now – India’s First Unmanned Mission on Moon [Oct 22, 2008]
25. BBC News : India Launches First Moon Mission [Oct 22, 2008]
26 Cosmos Magazine – The Science of Everything – India Counts Down to Lunar Mission [Oct 21, 2008]
27.  https://jayabarathan.wordpress.com/2008/05/24/fusion5/ [Fusion Power -1]
28.  https://jayabarathan.wordpress.com/2007/09/29/nuclear-fusion-power/ [Fusion Power -2]

******************
S. Jayabarathan [jayabarathans@gmail.com]  (October 23, 2008)

வானியல் விஞ்ஞானிகள் நூல்

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

அன்புள்ள நண்பர்களே,

“வானியல் விஞ்ஞானிகள்” என்னும் எனது இரண்டாம் நூலைத் தமிழினி பதிப்பகம் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். கடந்த ஏழு ஆண்டுகளாக [2001-2008] திண்ணை வலை இதழில் வண்ணப் படங்களுடன் வந்த விஞ்ஞானிகளைப் பற்றிய பல கட்டுரைகள் அதில் தொகுக்கப் பட்டுள்ளன.

“வானியல் விஞ்ஞானிகள்” நூலைப் பற்றி :

இது அண்டவெளி யுகம் ! 1957 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் முதல் ஸ்புட்னிக் துணைக்கோள் பூமியைச் சுற்றத் துவங்கிய போது அண்டவெளிப் படையெடுப்பு ஆரம்பமானது ! கடந்த 500 ஆண்டுகளாக விண்வெளி விஞ்ஞானிகள் கனவு கண்டவை அது முதல் மெய்யாக நிகழத் துவங்கின ! 1969 ஆம் ஆண்டில் முதல்முதல் நீல் ஆர்ஸ்டிராங் நிலவில் தடம் வைத்து விண்வெளி வரலாற்றில் மகத்தான ஒரு பொன் கல்லை நிலைநாட்டினார். அடுத்து விண்வெளிக் கப்பல்கள் அனுப்பப்பட்டு பரிதி மண்டலக் கோள்கள் அனைத்தும் உளவப்பட்டன. விண்வெளியில் பிரபஞ்சத்தை ஆழமாய் நோக்கும் ஹப்பிள் தொலைநோக்கி இன்னும் பூமியைச் சுற்றி வருகிறது. செவ்வாய்க் கோள் ஆழமாக ஆராயப்பட்டு 2020 ஆண்டுகளில் மனித விண்வெளிக் கப்பல் அனுப்பி செவ்வாய்த் தளத்தை உளவ நாசா முயற்சிகள் புரிந்து வருகிறது. பூதக்கோள் வியாழனும் அதன் துணைக்கோள்களும் விண்ணுளவிகளால் ஆராயப் பட்டன, அதுபோல் சனிக்கோளும், அதன் துணைக்கோள்களும், வால்மீன்களும் உளவப் பட்டன.

இந்தச் சிறு விஞ்ஞான நூலில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காப்பர்னிகஸ், கலிலியோ, கெப்ளர், காஸ்ஸினி, ஹியூஜென்ஸ், வில்லியம் ஹெர்ச்செல், அவரது புதல்வர் ஜான் ஹெர்ச்செல், ஐஸக் நியூட்டன், எட்மண்ட் ஹாலி, ரைட் சகோதரர்கள், ராபர்ட் கோடார்டு, எட்வின் ஹப்பிள், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஃபிரெட் ஹாயில், ஜார்ஜ் காமாவ், கார்ல் சேகன், சந்திர சேகர், ஸ்டீஃபன் ஹாக்கிங், ஜெயந்த் நர்லிகர் ஆகியோரது விஞ்ஞான வரலாறுகள் இடம்பெறுகின்றன. இவரைத் தவிர வேறு சில விண்வெளி விஞ்ஞானிகள் வரலாறுகளும் இருக்கின்றன. திண்ணை வார வலையிதழில் நான் பல ஆண்டுகள் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளே இவை.

என் விஞ்ஞான நூலுக்கு அணிந்துரைகள் எழுதிய திரு கி. வ. வண்ணன், முனைவர் ஐயம்பெருமாள் ஆகியோர் என் மதிப்பிற்கும், அன்புக்கும், நன்றிக்கும் உரியவர். நூலைப் படித்துச் சரிபார்த்து அரிய கருத்துகளை இருவரும் கூறிப் பிழைகள் திருத்தப்பட்டன. அரைநூற்றாண்டு குடும்ப நண்பர் திரு. கி. வ. வண்ணன் என்னுடன் பாரத அணுசக்தி ஆய்வு உலை ஸைரஸிலும் [CIRUS Research Reactor], கல்பாக்கம் சென்னை அணுமின் நிலையத்திலும் பணி புரிந்தவர். முனைவர் ஐயம்பெருமாளை எனக்கு அறிமுகப் படுத்திய கவிஞர் வைகைச் செல்வி [ஆனி ஜோஸஃபின்] அவர்களுக்கும் எனது அன்பார்ந்த நன்றி. இந்நூலைப் பொறுமையுடன் சீர்ப்படுத்திப் படங்களுடன் பின்னிச் சிறந்த விஞ்ஞான பதிப்பாக வெளியிட்ட தமிழினி அதிபர் வசந்த குமார், மணிகண்டன் அவர்கள் இருவருக்கும் எனது உளங்கனிந்த நன்றி. எனது விஞ்ஞானக் கட்டுரைகளைத் தொடர்ந்து வெளியிட்ட திண்ணை வலையிதழ் அதிபர்கள் திரு ராஜாராம், திரு துக்காராம், பதிவுகள் ஆசிரியர் வ.ந. கிரிதரன் ஆகியோர் மூவருக்கும் எனது நன்றி. படங்கள் உதவிய அமெரிக்காவின் நாசா (NASA), ஐரோப்பனின் ஈசா (ESA) மற்றும் பல்வேறு அகிலவலை விண்வெளித் துறைகளுக்கு என் நன்றி உரியதாகுக.

சி. ஜெயபாரதன்,
கிங்கார்டின், அண்டாரியோ
கனடா.
அக்டோபர் 20, 2008

++++++++++

நூலாசியரைப் பற்றி :

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றவர். பாம்பே பாபா அணுவியல் ய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தவர். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டவர். பயிற்சி முடிந்த பின்பு 8 ண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றியவர். அவரது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறார்.

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் கடந்த 45 ண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கிய விஞ்ஞானப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறார். 1960 ஆண்டு முதல் அவரது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. 1964 இல் வெளிவந்த “ஆக்க வினைகளுக்கு அணுசக்தி” என்னும் முதல் நூல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது. கணினித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ண்டுகளாக 500 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. அவரது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன.

+++++++++++++++++

வானியல் விஞ்ஞானிகள்
நூல் விலை : ரூ 75
(176 பக்கங்கள்)

நூல் கிடைக்குமிடம்
தமிழினி பதிப்பகம்
63. பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை: 600014, தமிழ் நாடு
இந்தியா

+++++++++++++++++

தமிழினி பதிப்பக அதிபர் : வசந்த குமார்

ஈமெயில் : “vasantha kumar” tamizhininool@yahoo.co.in
செல் ஃபோன் : 98841-96552
பதிப்பக ஃபோன் : 2835-1410

நூல் வாங்க வசந்த குமாரிடம் நேராகத் தொலை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.

அல்லது http://anyindian.com/ (தமிழினி பதிப்பகம்) மின் முகவரில் காணலாம்.

++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) October 20, 2008