செவ்வாய்த் தளத்தின் முதல் சோதனைச் செம்மண்ணில் பனித்திரட்டைக் கண்ட ஃபீனிக்ஸ் தளவுளவி

[ஜூன் 5, 2008]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

செவ்வாய்த் தளத்திலே
செந்நிற மண்ணுக் கடியிலே
கண்ணுக்குத் தெரிகிறது வைரம் போல்
வெண்ணிறப் பனித்துண்டு !
“புனித பசுத்தளம்” என்னும்
பனித்தளம் மீது
ஃபீனிக்ஸ் முக்காலி
பரப்பி யுள்ளது பாதங்களை !
கோடான கோடி ஆண்டுக்கு முன்
ஓடிய ஆற்று வெள்ளத்தின்
ஆவி படிந்துள்ளதா ?
பனித்துண்டு குளிர்ந்த நீரா ? அன்றி
படர்ந்து திரியும்
வாயுவா ?
வட துருவப் பனிப்பாறையின்
தடமா ? தொடர்வா ?
தென் துருவத்திலே
தேங்கி உறைந்த தண்ணீரா ?
உயிர் நுண்ணணுக்களின்
பூர்வச் செல் சந்ததி
திரண்ட பனிக்கட்டி அடியிலே
உறங்கிக் கொண்டு
உள்ளதா ?
விழியைத் திறந்த வண்ணம்
பிழைத்துக் கொண்டு
உள்ளதா ?

“நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]

“இன்றுதான் ஃபீனிக்ஸ் தளவுளவி செவ்வாய்த் தளத்தின் முதல் செம்மண் மாதிரியை எடுத்துப் படம் அனுப்பிய தகவல் கிடைத்துள்ளது. அத்துடன் தளவுளவியின் ஒரு பாதம் 3 அடி விட்டமுள்ள ஒரு பனித்தளம் மீது அமர்ந்துள்ளது ! அப்பனித்தளம் 30, 40 அல்லது 50 செ.மீடர். ஆழம் வரைச் செல்லலாம். அதற்கு அநேகக் கடின வேலைகள் செய்ய வேண்டியதிருக்கும். இப்போது தளவுளவியின் கீழே உள்ள பனித்தட்டை இலகுவாக நெருங்க முடியும் என்பதை அறிந்து கொண்டோம்.”

பீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம். [ஜூன் 2, 2008]

“இரு கருத்து விளக்கம் எங்களிடம் உள்ளது. நாங்கள் பார்த்திருக்கும் (பனிக்கட்டி) ஒன்று செம்மண்ணைச் சேர்த்து ஒட்டிவிடும் மெக்னீஷியம் ஸல்ஃபேட் அல்லது பனித்தளம் மீதிருந்து வெட்டி எடுக்கப்பட்ட நீர்க்கட்டியாக இருக்க வேண்டும். இன்னும் வண்ணக் கணிப்பு (Colour Data) போன்ற விளைவு இலக்கத்தைச் (Data) சேர்த்து இரு கருத்துக்களை ஆராய்வோம். நாங்கள் ஆழ்ந்து கணித்துள்ளபடி அது நீர்ப்பனிக் கட்டியானால், சூழ்வெளி ஆவிநீர் பனியாகிப் படிந்து அது இன்னும் ஒளி வீசும் ! ஒரே தளத்தில் மூன்று மாதிரிகளை எடுத்து மூன்று விதக் கருவிகளால் சோதிக்கப் போகிறோம்.”

ரே அர்விடிட்ஸன் துணை ஆய்வாளர் வாஷிங்டன் பல்கலைக் கழகம் ஸெயின்ட் லூயிஸ்

“எடுக்கப்பட்டுள்ள பனித்துண்டு நீர்தான் என்று நிச்சயப்படுத்த இன்னும் சில வாரங்கள் ஆகலாம். சனிக்கிழமை [மே 31, 2008] அன்று எடுத்த நெருக்க வண்ணப் படங்கள் மூலம் அது நீர்தான் என்று ஒருவாறு கூறலாம்.”

ஹார்ஸ்ட் உவே கெல்லர் (Horst Uwe Keller, Robotic Arm Camera Scientist). [May 31 2008]

“ஃபீனிக்ஸ் தளவுளவியை அனுப்பியுள்ளதின் குறிநோக்கம் இதுதான் : நீருள்ளது என்று ஏறக்குறைய உறுதியில் அறிந்திருக்கும் செவ்வாய்க் கீழ்த் தளத்தைத் தோண்டி அறிவது. தற்போது செவ்வாய்க் கோளை சுற்றிவரும் விண்ணுளவிகள் மூலமாக இறங்க வேண்டிய தளத்தை நுணுக்கமாக, விளக்கமாகக் காட்டி பத்து செ.மீ. அல்லது அதற்கும் குறைந்த ஆழத்தில் பனிக்கட்டிகள் புதைந்துள்ளன என்பதற்குச் சமிக்கை வந்துள்ளது. ஏனெனில் உயிரனத் தோற்றத்துக்கும் குடியிருப்புக்கும் நீர்வள அமைப்பு மிக்க இன்றியமையாதது.”

டாக்டர் டாம் பைக் [Dr. Tom Pike] ஃபீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, [Imperial College, London, UK]

“செவ்வாய்க் கோள் மணற் படுகையில் [Sand Dunes] பனித்திரட்டு பரவிக் கிடக்கும் சான்று கிடைத்திருக்கின்றது. மணற் கட்டிகளைச் சேர்த்து வைத்திருப்பது நீர் என்பது எனது யூகம். எதிர்காலச் செவ்வாய்ப் பயண மாந்தர் பிழைப்பதற்கு அதை உதவவும், எரிசக்திக்குப் பயன்படுத்தவும் முடியுமென நினைக்கிறேன். அசுரக் குவியலான சில மணற் படுகையில் 50% நீர்மை இருப்பதாக செவ்வாய்த் தளப்பண்பியல் சான்றைக் [Topgraphical Evidence] காண்கிறேன். செவ்வாயில் பெருவாரியான நீர் வெள்ளம் கிடைக்கலாம் என்று நான் சொல்லவில்லை! முன்பு காணப்படாத ஓரிடத்தில் புதிதாக நீரிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறேன்.”

மேரி போர்க், அரிஸோனா அண்டக்கோள் விஞ்ஞான ஆய்வுக்கூடம் [Mary Bourke (Sep 2005)]

2007 மார்ச் 15 ஆம் தேதி செவ்வாய் எக்ஸ்பிரஸ் விண்கப்பலில் [Mars Express Spacecraft] உள்ள இத்தாலி ரேடார்க் கருவி மார்ஸிஸ் [MARSIS] தென் துருவத்தில் அளந்த அகண்ட ஆழமான பனிக்கட்டித் தளம் அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தை விடப் பெரியது! அதன் இருக்கை முன்பே அறியப்பட்டாலும் அந்த ரேடார் ஆழ்ந்து அளந்த அனுப்பிய பரிமாணப் பரப்பு பிரமிக்க வைக்கிறது!

ஜெஃப்ரி பிளௌட் நாசா ஜெ.பி.எல் விஞ்ஞானி [Jeffrey Plaut, NASA JPL Investigator]

“பூமியில் வாழும் நுண்ஜீவிகள் (Microbes) மட்டும் உயிரினத் திணிவில் (Biomass) மூன்றில் ஒரு பாகம்; அல்லது சற்று கூடியது என்று சொல்லலாம். மூன்று மில்லியன் நுண்ஜீவிகள் இருப்பதாக அனுமானிக்கப் படுவதில் 8000 எண்ணிக்கை நுண்ஜீவிகளே அறிவியல் விளக்கத்துக்கு வந்துள்ளன.

கிரீன்லாந்து பனிச்சிகரத்தில் சுமார் 2 மைல் ஆழத்தில் 120,000 ஆண்டுகள் பிழைத்திருந்த ஒரு பூர்வீக ப் புது நுண்ஜீவியை (Earthly Extremephile – A New Ultra-Small Species of Bacteria) அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலக்குழு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.”

கிரீன்லாந்து பனிச்சிகரத்தில் 2 மைல் ஆழத்தில் பூர்வீக பாக்டீரியா கண்டுபிடிப்பு : ஜென்னிஃபர் லவ்லாண்டு கர்ட்ஸே (Jennifer Loveland-Curtze, Astrobiologist, Penn. State, U.S.A) பென்சில்வேனியா மாநில வானியல் உயிரியல் விஞ்ஞானி [June 4, 2008]

செவ்வாய்த் தளத்தில் ஃபீனிக்ஸ் தளவுளவி கண்ட முதல் பனித்திரட்டு !

2008 மே மாதம் 30 ஆம் தேதி சமீபத்திலே செவ்வாய்க் கோளில் தடம்வைத்த ஃபீனிக்ஸ் தளவுளவி புதியதோர் விந்தைத் தகவலைப் பூமிக்கு அனுப்பியிள்ளது ! “செவ்வாய்த் தளத்தில் பனிக்கட்டியைக் காமிராவின் கண்கள் நேராகக் காண முடிகிறது” என்பதே அந்தச் செய்தி ! மெய்யாக ஃபீனிக்ஸின் 12 எதிர்த்தள்ளி உந்துகள் (12 Retro Thrusters) இயங்கித் தளம் சுத்தமாக்கப்பட்ட போது தளவுளவியின் கீழே வெண்ணிறத் தரைப் பளிச்செனக் காணப்பட்டது. அதாவது விஞ்ஞானிகள் திட்ட மிட்டபடி ஃபீனிக்ஸ் தளவுளவி பனித்தரை மீதுதான் தனது மூன்று பாதங்களைப் பரப்பியிள்ளது ! மேலும் மூன்று கால்களில் ஒரு பாதம் மூன்றடி விட்டமுள்ள ஒரு பனித்தட்டின் மீது அமர்ந்துள்ளது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அடுத்து ·பீனிக்ஸின் சுயமாய் இயங்கும் யந்திரக் கரம் (Robotic Arm) சோதிக்கப்பட்டு முதல் மாதிரிச் செம்மண் எடுக்கப்பட்டது. அந்த மண்ணில் வைரம் போல் பளிச்செனக் காமிராவின் கண்ணில் பட்டது ஒரு வெண்ணிறப் பனிக்கட்டி ! அதனுடைய வடிவத்தைக் கண்டு, அது காணப்பட்ட காலநேர உஷ்ண நிலையை [-300 C (-220 F)] ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த மாதிரிப் பனிக்கட்டி நீராக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்.

ஃபீனிக்ஸ் எதிர்த்தள்ளி உந்துகள் இயங்கிக் கீழே மெதுவாக இறங்கிய போது மேலாகக் கிடந்த செம்மண்ணை வெளியேற்றித் தோண்டிய 6 செ.மீ. (~2.5 அங்குலம்) ஆழப் பள்ளத்தில் பனிக்கட்டி மாதிரி எடுக்கப்பட்டது. அவ்விதம் தளவுளவியின் கரத்தில் எடுக்கப்பட்டு முதன்முதலில் கண்களில் தெரிந்த பனிக்கட்டி விஞ்ஞானிகளிடையே உற்சாகக் கொந்தளிப்பைத் தந்திருக்கிறது. புதிய உலகில் குளிர்ந்த சுத்தமான நீர்க் கண்டுபிடிப்பு மனிதப் பயணத்துக்கும், குடியேற்றத்துக்கும் மிகவும் உதவிடும் என்பது 21 ஆம் நூற்றாண்டின் அதிசயச் செய்தியாகும். திட்டமிட்டபடித் தளவுளவி பனித்தளத்தில் தடம் வைக்காது வேறு வேண்டாத பாறைத் தளத்தில் பாதம் பதித்து விட்டதோ என்றோர் ஐயப்பாடு முதலில் எழுந்தது ! அடுத்து அறிந்த தகவலில் தளத்தின் எதிரொளிப்புத் தன்மைகள் உளவப் பட்டு வெண்ணிறப் பனித்தளம் பளிச்செனத் தலைகாட்டி விஞ்ஞானிகளைப் பிரமிக்க வைத்தது. அந்தப் பனித்திரட்டு பனிநீர்க்கட்டியாக இருக்கக் கூடும் என்று தீர்மானிக்கப் பட்டது ! “இன்று என்ன சேதி” என்று கேட்டால் எந்த நாசா விஞ்ஞானியும் “செவ்வாயில் நீர்ப்பனிக் கட்டியைக் கண்டோம்” என்றுதான் சொல்கிறார். இந்த பனித்தள இடத்தைதான் நாசா விஞ்ஞானிகள் உன்னதப் படமெடுப்புக் காமிரா மூலம் [High Resolution Imaging Science Experiment (HiRISE Imager of Mars Orbiter)] முன்னால் விண்ணுளவிக் கப்பல் மூலம் தேர்ந்தெடுத்தனர்.

ஃபீனிக்ஸ் தளவுளவியில் தோண்டு கரத்தின் முதலியக்கம்

விஞ்ஞானிகள் பூமியிலிருந்து சமிக்கை அனுப்பி ஃபீனிக்ஸின் ஏழரை அடி நீளச் சுய நகர்ச்சிக் கரத்தை (Robotic Arm) இயக்கத் துவங்கினார். கரத்தின் அகப்பை (Robotic Arm’s Scoop) தளவுளவிக்கு அருகில் தோண்டி எடுத்த முதல் செம்மண் மாதிரியில் கலந்திருந்தது ஓர் வெண்ணிறப் பனித்துண்டு ! அந்தப் பனித்துண்டு ஒன்று நீர்க்கட்டியாக இருக்கலாம் ! அல்லது மெக்னீஷியம் ஸல்ஃபேட் உப்பாகக் கருதலாம் ! ஒரே தளப்பரப்பில் மூன்று மாதிரிகளை எடுத்து மூன்று விதக் கருவிகளால் சோதிப்பார்கள் என்று துணை ஆய்வாளர் வாஷிங்டன் பல்கலைக் கழகம் ஸெயின்ட் லூயிஸ், ரே அர்விடிட்ஸன் (Ray Arvidson) கூறினார். புதன் கிழமை [ஜூன் 4, 2008] எடுத்த மாதிரியின் சோதனை விளைவு இன்னும் அறிவிக்கப்பட வில்லை !

அடுத்த மாதிரிச் செம்மண் “வெளி வாயு வெப்ப ஆய்வுக் கருவி” (Thermal & Evolved-Gas Analyzer) மூலம் செம்மண்ணின் இரசாயனக் கூட்டுப் பொருட்களை (Chemical Composition of Soil) அறிவர். இனி எடுக்கப்படும் மாதிரிகள் “நுண்ணோக்கிக் கருவி, மின் இரசாயனக் கருவி, மின்கடத்தி அறியும் கருவிகளில் (Microscopy, Electro-Chemistry, Conductivity Analyser) ஆய்ந்து சோதிக்கப்படும். முதலிரண்டு கருவிகளில் சோதிக்கப் படும் போது மாதிரிகள் (1800 டிகிரி பாரன்ஹீட்) சூடாக்கப்பட்டு நீர்மை ஆவி யாக்கப்படும்.

ஃபீனிக்ஸ் தளவுளவி பனித்தட்டு மீது பாதம் வைத்துள்ளதாக கருதப் படுவதால், அந்த இடம்: “கோலி கௌவ்” (Holy Cow) அதாவது “புனிதப் பசுத்தளம்” என்று அழைக்கப் படுகிறது. “புனிதப் பசுத்தளம்” ஓர் பனித்தளம் என்பது உறுதியாக்கப்பட்டு விட்டது !

“எடுக்கப்பட்டுள்ள பனித்துண்டு நீர்தான் என்று நிச்சயப் படுத்தச் சில வாரங்கள் ஆகலாம். சனிக்கிழமை [மே 31, 2008] அன்று எடுத்த நெருக்க வண்ணப் படங்கள் மூலம் அது உறுதியாக நீர்தான் என்று கூறலாம்.” என்று ஹார்ஸ்ட் உவே கெல்லர் (Horst Uwe Keller, Robotic Arm Camera Scientist) கூறினார்.

செவ்வாய்க் கோளின் தென்துருவத்தில் அகண்ட பனித்தளக் கண்டுபிடிப்பு

செவ்வாய்க் கோளைச் சுற்றிக் கொண்டிருக்கும் விண்வெளிக் கப்பல் செவ்வாய் எக்ஸ்பிரஸ் [Mars Express] 2007 மார்ச் 15 ஆம் நாள் தென் துருவத்தில் ஓர் அகண்ட ஆழமான பனித்தளத்தின் பரிமாணத்தை அளந்து பூமிக்குத் தகவல் அனுப்பி யுள்ளது! செவ்வாய் எக்ஸ்பிரஸ் விண்கப்பலில் [Mars Express Spacecraft] உள்ள இத்தாலி ரேடார்க் கருவி மார்ஸிஸ் [MARSIS] தென் துருவத்தில் அளந்த அகண்ட ஆழமான பனிக்கட்டித் தளம் அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தை விடப் பெரியது! அதன் இருக்கை முன்பே அறியப்பட்டாலும் அந்த ரேடார் ஆழ்ந்து அளந்த அனுப்பிய பரிமாணப் பரப்பு பிரமிக்க வைக்கிறது.

அந்தப் பனித்தளம் உறைந்து போன நீர்த்தளம் என்பதும் தெளிவாக இத்தாலிய ரேடார் கருவி மூலம் காணப்பட்டு முடிவு செய்யப் பட்டுள்ளது. அதன் நீர்க் கொள்ளளவை செவ்வாய்க் கோள் முழுவதும் பரப்பினால் 36 அடி [11 மீடர்] ஆழமுள்ள ஏரியை உண்டாக்கலாம். செவ்வாய் எக்ஸ்பிரஸின் ரேடார் கருவி செவ்வாய்க் கோளைச் சுற்றி வந்து, தென் துருவத்தில் 300 துண்டங்களை நோக்கிப் பனிக்கட்டித் தளங்களை ஆய்ந்து படமெடுத்துப் பரிமாணத்துடன் அனுப்பியுள்ளது. ரேடாரின் கூரிய கதிர் வீச்சுகள் செவ்வாய்த் தளத்தின் கீழ் கூடுமான அளவில் 2.3 மைல் [3.7 கி.மீ] வரை சென்று உறைந்த நீர்க்கட்டியின் ஆழத்தை ஒப்பிய பரிமாண அளவில் கணித்து அனுப்பியுள்ளது.

செவ்வாய்க் கோளின் துருவங்களே நீர்க்கட்டி சேமிப்புகளின் பெருங் களஞ்சியங்களாகக் கருதப்படுகின்றன. துருவப் பகுதிகளின் நீர்மை சேமிப்பு வரலாற்றை அறிந்தால், செவ்வாய்க் கோளில் உயிரின வளர்ச்சிக்கு ஒரு காலத்தில் வசதியும், சூழ்நிலையும் இருந்தனவா என்பதைத் தெளிவாக ஆராய முடியும். நீர்ப்பனிப் பாறைகளும், கார்பன் டையாஸைடு குளிர்க்கட்டிகளும் உள்ள துருவ அடுக்குப் படுகைகள் [Polar Layered Deposits] துருவப் பகுதிகளைத் தாண்டியும், துருவ முனைப் பரப்பின் [Polar Cap] ஆழத்திலும் உள்ளது அறியப் படுகிறது. ரேடார் எதிரொலிப் பதிவுகள் பாறைப் பகுதிகள் போல் காட்டுவது 90% நீர்த் தன்மையால் என்று கருதப் படுகிறது. துருவப் பிரதேசங்களில் மிக்க குளிராக இருப்பதால், உருகிப் போன திரவ நீரைக் காண்பது அரிது.

பனிப் பாறைக்குக் கீழே உள்ள தளத்தையும் அறியும் போது செவ்வாய்க் கோளின் ஆழ்த்தள அமைப்பு தெரிய வருகிறது. “பனிப் பகுதிகளின் அடித்தளத்தைப் பற்றி எங்களால் அறிய முடியவில்லை. பூமியில் உள்ளது போல் பனித்தட்டுகள் அவற்றின் மேல் தட்டுகளால் அழுத்தப் படாமல் உள்ளதை அறிந்தோம். செவ்வாய்க் கோளின் அடித்தட்டும், மேற்தட்டும் [Crust & Upper Mantle] பூமியை விடக் மிகக் கடினமாக உள்ளது காணப் படுகிறது. அதற்குக் காரணம் செவ்வாய்க் கோளின் மையப் பகுதி பூமியை விடக் குளிர்ச்சியாக உள்ளதே!

செவ்வாய்க் கோளின் துருவப் பனிப் பாறைகள்

செவ்வாயில் சிறிதளவு நீர் பனிப் பாறைகளாக இறுகிப் போய் உறைந்துள்ளது! துருவப் பிரதேசங்களில் நிலையாக உறைந்து பனிப் பாறையான படங்களை, மாரினர்-9 எடுத்துக் காட்டியுள்ளது. வட துருவத்தில் 625 மைல் விட்டமுள்ள பனிப் பாறையும், தென் துருவத்தில் 185 மைல் அகண்ட பனிப் பாறையும் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது! மாரினர்-9 இல் இருந்த உட்செந்நிற கதிரலை மானி [Infrared Radiometer], செவ்வாயின் மத்திம ரேகை [Equator] அருகே பகலில் 17 C உச்ச உஷ்ணம், இரவில் -120 C தணிவு உஷ்ணம் இருப்பதைக் காட்டியது. கோடை காலங்களில் வட துருவத் தென் துருவத் தளங்களில் குளிர்ந்து பனியான கார்பைன்டையாக்ஸைடு வரட்சிப் பனி [Dry Ice], வெப்பத்தில் உருகி ஆவியாக நீங்குகிறது.

அமெரிக்கா அனுப்பிய விண்ணாய்வுக் கருவிகள் [Space Probe Instruments] துருவப் பிரதேசங்களில் எடுத்த உஷ்ண அளவுகள், பனிப் பாறைகளில் இருப்பது பெரும்பான்மையாக நீர்க்கட்டி [Frozen Water] என்று காட்டி யுள்ளன. கோடை காலத்தில் வடதுருவச் சூழ்வெளியில் நீர்மை ஆவியின் [Water Vapour] அளவுகளை அதிகமாகக் கருவிகள் காட்டி இருப்பது, பனிப் பாறைகளில் இருப்பவை பெரும் நீர்க்கட்டிகள், வரட்சிப்பனி [Dry Ice or Frozen Carbondioxide] இல்லை என்பதை மெய்ப்பிக்கின்றன.

நீர்மைச் சேமிப்புள்ள துருவப்பனிப் பொழிவுகள்

செவ்வாய்க் கோளின் வடதென் துருவங்களில் நீரும், கார்பன் டையாக்ஸைடும் கட்டிகளாய்த் திரண்டு போன பனித்தொப்பியாய்க் குவிந்துள்ளது! இரண்டு விதமான பனித்தொப்பிகள் செவ்வாயில் உள்ளன. ஒன்று காலநிலை ஒட்டிய பனித்திரட்டு, அடுத்தது நிரந்தர அல்லது எஞ்சிடும் பனித்திரட்டு. காலநிலைப் பனித்திரட்டு என்பது செவ்வாய்க் கோளில் குளிர்கால வேளையில் சேமிப்பாகி, வேனிற்கால வேளையில் உருகி ஆவியாகச் சூழ்வெளியில் போய் விடுவது! எஞ்சிடும் பனித்திரட்டு என்பது வருடம் முழுவதும் நிரந்தரமாய் துருவங்களில் நிலைத்திருப்பது!

செவ்வாய்க் கோளின் காலநிலைப் பனித்திரட்டு முழுவதும் சுமார் 1 மீடர் தடிப்பில் காய்ந்த பனித்திணிவு [Dry Ice] வடிவத்தில் படிவது. தென்துருவ காலநிலைப் பனித் திரட்டு உச்சக் குளிர் காலத்தில் சுமார் 4000 கி.மீடர் [2400 மைல்] தூரம் படர்ந்து படிகிறது! குளிர் காலத்தில் வடதுருவ காலநிலைப் பனித்திரட்டு சுமார் 3000 கி.மீடர் [1800 மைல்] தூரம் பரவிப் படிகிறது! வேனிற் காலத்தில் வெப்பம் மிகுந்து 120 C [150 Kelvin] உஷ்ணம் ஏறும் போது காலநிலைப் பனித்திரட்டுகள், திரவ இடைநிலைக்கு மாறாமல் திடவ நிலை யிலிருந்து நேரே ஆவியாகிச் சென்று சூழ்வெளியில் தப்பிப் போய்விடுகிறது! அவ்விதம் மாறும் சமயங்களில் கார்பன் டையாக்ஸைடு வாயுவின் கொள்ளளவு மிகுதியாகி, செவ்வாய் மண்டல அழுத்தம் 30% மிகையாகிறது!

(தொடரும்)

***********************

தகவல்:

Picture Credits: NASA, JPL, ESA & Wikipedia

1. Mars Global Surveyor [Nov 7, 1996], Mars Path Finder [Dec 1996].
2. Destination to Mars, Space flight Now By: William Harwood [July 8, 2003]
3. Twin Roving Geologists Bound for Surface of Mars By: William Harwood [May 29, 2003]
4 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
5. Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
6 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602101&format=html
[Author’s Article on Mars Missions]
7 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
8 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
9 Arctic Microbes Raise Cope for Life on Mars By: Associated Press [Oct 25, 2005]
10 http://www.Space.com/missions/ Phoenix Mars Lader (Several Articles) [Aug 31, 2005]
11 Mars Reconnaissance Orbiter on the Approach By: JPL [Feb 8, 2006]
12 Mars South Pole Ice Found to be Deep & Wide -NASA JPL Release [March 15, 2007]
13 Dirt Digger (Phoenix) Rocketing toward Mars By: Marcia Dunn AP Aerospace Writer [Aug 5, 2007]
14 BBC News Lift off for NASA’s Mars Probe (Phoenix) [August 4, 2007]
15 Phoenix Mission Control Team Poised for Epic Landing on Mars Planet – The Dailey Galaxy (www.dailygalaxy.com/) [May 23, 2008]
16 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40708091&format=html (Phoenix Launch Aug 7, 2007)
17 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703221&format=html (Mars Express Radar Finds Water Source in Mars South Pole)
18. BBC News – Mars Lander is in Good Health [May 27, 2008]
19 The New York Times – Mars Lander Transmits Photos of Arctic Terrain [May 27, 2008]
20 RedOrbit News – Phoenix Lander Spotted from Mars Orbiter (www.redorbit.com) [May 28, 2008]
21 Future Mission to Mars – Follow on Mars Missions / Mars Sample Return [May 28, 2008] (www.vectorsite.net/tampl_08.html)
22 CNN News : Pictures Boost Hopes for Mars Ice Discovery [May 31, 2008]
23 NASA Watch : Has Phoenix (Probe) Seen Ice ? [May 30, 2008]
24 New Species of Ancient Bacteria Discovered 2 Miles Deep in Greenland Galcier [June 4, 2008]
25 Scientists Ask : How will a Manned Mars Mission Effect the Human Psyche ? (www.dailygalaxy.com/) [June 5, 2008]
26 NASA’s Phoenix Lander Robotic Arm Camera Sees Possible Ice [May 30, 2008]
27 Twittering from Mars – The Phoenix (Mars Lander Probe) on Ice [June 3, 2008]
28 Phoenix Lander’s Robotic Arm Grabs a Scoop of Mars (Soil) [June 2, 2008]

******************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] June 5, 2008

செவ்வாய்க் கோளில் சீராக இறங்கித் தடம்வைத்த ஃபீனிக்ஸ் தளவுளவி

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

நீல் ஆர்ம்ஸ்டிராங்
நிலவில் தடம் வைத்தது
அந்தக் காலம் !
வால்மீனின்
வயிற்றில் அடித்தது
அந்தக் காலம் !
சனிக் கோளின்
பனி வளை யங்கள்
ஊடே நுழைந் தோடியது
அந்தக் காலம் !
தள வாகனம் செவ்வாயில்
உலவி வருகிறது
தற்போது !
தளம் தோண்டி
நீர்வளம் ஆய்ந்திட
காலநிலை அறிய
ஃபீனிக்ஸ் தளவுளவிப்
பீடுடன்
வட துருவத்தில் தடம் வைத்தது
நேற்றைய பொழுது !

“நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]

“நீரைத் தேடிச் செல்” என்பது கடந்த பத்தாண்டுகளாய் சொல்லப்படும் நாசாவின் செவ்வாய் மந்திரம் ! செவ்வாய்க் கோளின் எதிர்காலத் தேடல் திட்டங்களுக்கு ·பீனிக்ஸ் பயணம் முதற்படித் தடவைப்பு.

“ஃபீனிக்ஸ் திட்டக் குறிப்பணியில் தளவுளவி செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனித் தளத்தில் புதியதோர் பகுதியை ஆராயத் தேர்தெடுத்து இறங்கியுள்ளது. உண்மையாக நாங்கள் கண்டறியப் போவது அந்த பனித்தள நீர் உருகிய சமயம், மண்ணில் கலந்து அந்தக் கலவையில் உயிர் ஜந்துகள் வளரத் தகுதி இருக்கிறதா என்று கண்டறிவது. ஏனெனில் உயிரின விருத்திக்குத் தேவை திரவ நீர், நமது உடம்பில் உள்ள புரோடீன் அமினோ அமிலம் போன்ற சிக்கலான கார்பன் அடிப்படை ஆர்கானிக் மூலக்கூறுகளே,”

பீட்டர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

“1970 இல் நாசா அனுப்பிய வைக்கிங் விண்ணூர்தி ஏன் செவ்வாய்த் தளத்தில் ஆர்கானிக் மூலக்கூறுகளைக் காணவில்லை என்ற வினா எழுந்துள்ளது. ஆர்கானிக் மூலக்கூறுகளைச் சிதைக்கும் ஓர் இயக்கப்பாடுச் செவ்வாய்க் கோளில் உள்ளது என்று நாங்கள் எண்ணுகிறோம். ஆனால் அந்த இயக்கப்பாடு துருவப் பகுதியில் இருக்காது என்பது எங்கள் யூகம். ஏனெனில் நீரும் பனிக்கட்டியும் ஆர்கானி மூலக்கூறுகளைச் சிதைக்கும் “பிரிப்பான்களைத்” (Oxidants) துண்டித்துவிடும். செவ்வாய்த் தள மண்ணில் உயிர் ஜந்துகள் இருந்தன என்று அறிவது கடினம். ஆனால் அந்த மண்ணில் உயிரினம் வாழ முடியுமா என்று விஞ்ஞானிகள் ஆய்ந்தறியலாம்.”

வில்லியம் பாயின்டன், [William Boynton] ஃபீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, பேராசிரியர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

“ஃபீனிக்ஸ் தளவுளவியை அனுப்பியுள்ளதின் குறிநோக்கம் இதுதான் : நீருள்ளது என்று ஏறக்குறைய உறுதியில் அறிந்திருக்கும் செவ்வாய்க் கீழ்த் தளத்தைத் தோண்டி அறிவது. தற்போது செவ்வாய்க் கோளை சுற்றிவரும் விண்ணுளவிகள் மூலமாக இறங்க வேண்டிய தளத்தை நுணுக்கமாக, விளக்கமாகக் காட்டி பத்து செ.மீ. அல்லது அதற்கும் குறைந்த ஆழத்தில் பனிக்கட்டிகள் புதைந்துள்ளன என்பதற்குச் சமிக்கை வந்துள்ளது. ஏனெனில் உயிரனத் தோற்றத்துக்கும் குடியிருப்புக்கும் நீர்வள அமைப்பு மிக்க இன்றியமையாதது என்பது பலரது கருத்து.”

டாக்டர் டாம் பைக் [Dr. Tom Pike] ·பீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, [Imperial College, London, UK]

“செவ்வாய்க் கோள் மணற் படுகையில் [Sand Dunes] பனித்திரட்டு பரவிக் கிடக்கும் சான்று கிடைத்திருக்கின்றது. மணற் கட்டிகளைச் சேர்த்து வைத்திருப்பது நீர் என்பது எனது யூகம். எதிர்காலச் செவ்வாய்ப் பயண மாந்தர் பிழைப்பதற்கு அதை உதவவும், எரிசக்திக்குப் பயன்படுத்தவும் முடியுமென நினைக்கிறேன். அசுரக் குவியலான சில மணற் படுகையில் 50% நீர்மை இருப்பதாக செவ்வாய்த் தளப்பண்பியல் சான்றைக் [Topgraphical Evidence] காண்கிறேன். செவ்வாயில் பெருவாரியான நீர் வெள்ளம் கிடைக்கலாம் என்று நான் சொல்லவில்லை! முன்பு காணப்படாத ஓரிடத்தில் புதிதாக நீரிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறேன்.”

மேரி போர்க், அரிஸோனா அண்டக்கோள் விஞ்ஞான ஆய்வுக்கூடம் [Mary Bourke (Sep 2005)]

செவ்வாய்த் தளத்தில் தடம் வைத்த ஃபீனிக்ஸ் தளவுளவி

423 மில்லியன் மைல்கள் (680 மில்லியன் கி.மீ) கடந்து சுமார் பத்து மாதம் பயணம் செய்து 2008 மே மாதம் 25 ஆம் தேதி செவ்வாய்க் கோள் நோக்கிச் சென்ற விண்வெளிக் கப்பல் வேகம் கட்டுப்பாடாகி செவ்வாய் ஈர்ப்பு மண்டலத்தில் இழுக்கப்பட்டு திட்டமிட்ட வட துருவப் பனித்தளத்தில் தான் சுமந்து வந்த ·பீனிக்ஸ் தளவுளவியைப் பாதுகாப்பாக மெதுவாக இறக்கியது. இதற்கு முன்பு இறங்கிய வாகனத் தளவுலவிகள் பலூன் மூலமாகச் செவ்வாய்த் தளத்தில் தவ்வித் தவ்வி உருண்டு வெளிவந்தவை ! சமீபத்தில் இறங்கிய ·பீனிக்ஸ் தளவுளவிதான் முதன்முதல் “எதிர்ப்பு உந்து எஞ்சின்களை” (Retro-Rockets or Pulsed Thrusters) இயக்கி மெதுவாகச் செவ்வாய்த் தளத்தில் தடம் வைத்தது ! விண்வெளியில் செய்த பத்து மாதப் பயணத்தில் செவ்வாய்க் கோள் ஈர்ப்பு மண்டலத்தில் வந்திறங்கிய இறுதிப் பத்து நிமிடங்களே நாசா விஞ்ஞானிகளின் இதயத்தில் பெருங் கொந்தளிப்பை உண்டாக்கின ! அசுர வேகத்திலே செவ்வாய்க் கோளின் மெல்லழுத்த வாயு மண்டலத்தில் பாய்ந்து விழும் ·பீனிக்ஸ் தளவுளவியை (13,000 mph /21000 km/h) முதலில் ஓரளவு மெதுவாக்கியது அது விரித்த பாராசூட் குடை ! இறுதிப் பத்து நிமிடங்களில் தளவுளவியின் 12 எதிர்த்துடிப்பு உந்துகணைகள் (12 Pulsed Thrusters) வெடித்தியங்கி வேகத்தை நடக்கும் அளவுக்குக் குறைத்து (5 mph) மெதுவாக வந்திறங்கியது !

ஃபீனிக்ஸ் தளவுளவிப் பயணத்தின் நிதிச் செலவு & கண்காணிப்பு

நாசாவின் ·பீனிக்ஸ் திட்ட நிதிச் செலவு : 420 மில்லியன் டாலர். (தளவுளவிச் சோதனைகள், ராக்கெட், விண்கப்பல் உறுப்புக்கள் இணைப்பு, கருவிகள் பிணைப்பு, ராக்கெட் எஞ்சின் சுடப்பட்டு ஏவுதல், பயணப் பணி இயக்கம், கண்காணிப்பு). கனடா விண்வெளித் துறையகம் தனது காலநிலைக் கருவிகளுக்காக 37 மில்லியன் டாலர் கொடுத்துள்ளது. அத்துடன் விண்ணுளவி விண்கப்பல் 2001 கட்டமைப்பு, விருத்தி மேம்பாடு : (Mars Surveyor 2001 Spacecraft Design, Construction & Development) 100 மில்லியன் டாலர்.

நாசாவின் ஃபீனிக்ஸ் திட்டத்தில் உலக நாடுகளின் கூட்டுழைப்பு காணப்படுகிறது. கனடா விண்வெளி ஆணையகம், பிரிட்டனின் இம்பீரியல் கல்லூரி, நியூசெடல் பல்கலைக் கழகம் சுவிட்ஸர் லாந்து, கோபன்ஹேகன் பல்கலைக் கழகம் டென்மார்க், மாக்ஸ் பிளாங்க் விஞ்ஞானக் கூடம் ஜெர்மனி, பின்லாந்தின் காலநிலைக் கூடம் ஆகியற்றின் கூட்டிணைப்பு உள்ளது.

செவ்வாய்க் கோளைப் பல மாதங்களாகச் சுற்றிக் கொண்டிருக்கும் “ஆடிஸ்ஸி விண்கப்பல்” (Mars Odyssey Spaceship) மூலமாக நாசா விஞ்ஞானிகள் வினாடிக்கு வினாடி ·பீனிக்ஸ் போக்கைக் கண்காணித்தும் படம் பிடித்தும் வருகிறார் ! நாசா விஞ்ஞானிகள் மே 27 இல் சமிக்கை அனுப்பி செவ்வாய்க் கண்காணிப்பு விண்கப்பல் (Mars Reconnaissance Orbiter) மூலம் ஃபீனிக்ஸ் தளவுளவியின் இயங்கும் கரத்தை நகர்ந்து செல்ல ஆணை யிட்டார் !

ஃபீனிக்ஸ் செவ்வாய்ப் பயணம் ஒரு மீளெழுச்சி திட்டம் !

செவ்வாய்க் கோளில் விண்ணுளவிகளை நுணுக்கமாக இறக்குவது என்பது இமாலயச் சிரமம் அளிப்பது ! இதற்கு முன்பு அனுப்பிய பல செவ்வாய் விண்ணுளவிகள் பயணத்தின் இடையிலே பழுதாகித் திட்டங்கள் நாசாவுக்கு பெருத்த நிதி விரையத்தை ஏற்படுத்தின ! 1960 இல் ரஷ்யா முதன்முதல் துவக்கி மற்றும் நாசா தொடர்ந்த செவ்வாய்க் கோள் பயணங்கள் 50% தோல்வி முறிவில் (50% Failure Rate) பாதிக்கப் பட்டிருக்கின்றன. துல்லியமாகச் சொன்னால் 15 செவ்வாய்க் கோள் பயணத் திட்டங்களில் 5 திட்டங்களே இதுவரை வெற்றி அடைந்துள்ளன ! தற்போதைய வெற்றிகரமான ·பீனிக்ஸ் தளவுளவித் திட்டம் இதற்கு முன்பு ஏற்பட்ட இரண்டு தோல்விகளிலிருந்து மீண்டெழுந்து புத்துயிர் பெற்ற பழைய திட்டமே ! 1999 ஆம் ஆண்டில் அடியெடுத்த “செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி” (Mars Climate Orbiter) பொறியியக்குநர் ஆங்கில/மெட்ரிக் அளவைகளில் குழப்பமாகி விண்கப்பல் நகர்ச்சி ஏற்பாட்டுப் பிழையால் (Spaceship Navigational Error due to British-Metric Units Mix up) செவ்வாய்க் கோளில் மோதி முறிந்து போனது ! அடுத்துச் சில மாதங்களில் அனுப்பிய “செவ்வாய்த் துருவ உளவி” (Mars Polar Lander) செவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் காணாமல் போனது ! அடுத்த அனுப்பத் தயாராக இருந்த “செவ்வாய் 2001 தளவுளவித்” (Mars Surveyor 2001 Lander) திட்டம் முன்பு ஏற்பட்ட முறிவுகளால் கைவிடப் பட்டது ! இப்போது செவ்வாய்க் கோளில் தடம் வைத்துள்ள ·பீனிக்ஸ் தளவுளவி முன்பு இழந்து போன செவ்வாய்த் துருவ உளவியை ஒத்த இரட்டை விண்ணுளவியின் சாதனங்களையும், நிறுத்தப்பட்ட செவ்வாய் 2001 தளவுளவிச் சாதனங்களையும் பயன்படுத்தி இப்போது இயங்குகிறது. அவ்விதம் முந்தி முடக்கிய சாதனங்களை மீண்டும் அமைத்து உண்டாக்கப் பட்டத்தால் “·பீனிக்ஸ்” (Phoenix) என்று இத்திட்டம் பெயரிடப்பட்டது !

ஃபீனிக்ஸ் தளவுளவியின் பத்து மாத விண்வெளிப் பயணம்

2007 ஆகஸ்டு 4 ஆம் தேதி நாசா விண்வெளி ஆய்வகம் (120-423) மில்லியன் மைல் தூரத்தில் பயணம் செய்யும் செவ்வாய்க் கோளை நோக்கி, ·பீனிக்ஸ் தளவுளவியை டெல்டா-2 ராக்கெட்டில் பிளாரிடா கென்னடி விண்வெளி மையத்தின் கெனவரல் முனையிலிருந்து ஏவியுள்ளது ! விண்ணூர்தியில் அமைந்துள்ள தளவுளவி 2008 மே மாதம் 25 ஆம் தேதியன்று செவ்வாய்த் தளத்தில் இறங்கி ஓரிடத்தில் நிலையாக நின்று தள ஆய்வுகள் செய்யத் திட்டமிடப் பட்டது.. தளவுளவி மூன்று மாதங்கள் தளத்தைத் தோண்டி இரசாயன, உயிரியல் ஆராய்ச்சிகள் நடத்தும். தளவுளவி தடம் வைக்கும் தளம் செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனிப்பகுதி. அப்பகுதி பூமியின் வடதுருவப் பரப்பிலுள்ள பனித்தளம் அலாஸ்காவைப் போன்றது. 420 மில்லியன் டாலர் தொகையில் (2007 நாணய மதிப்பு) எளிய செலவில் திட்டமிடப் பட்ட நாசா விண்வெளித் தேடல் இது. இதற்கு முன்பு செவ்வாயில் இறங்கிய தள ஆய்வு வாகனங்கள் போல் ·பீனிக்ஸ் தளவுளவி சக்கரங்களில் நகர்ந்து செல்லாது. நிரந்தரமாக ஓரிடத்தில் நின்று தளவியல் ஆராய்ச்சிகள் நடத்தித் தகவலைப் பூமிக்கு அனுப்பி வரும்.

முதன்முதல் செவ்வாய்க் கோளின் காலநிலை அறிவிப்பு !

ஃபீனிக்ஸ் தளவுளவியில் அமைக்கப்பட்டுள்ள கனடாவின் காலநிலை அறிவிக்கும் சாதனம் தனது முதல் அறிவிப்பை வெளியிட்டது. தளவுளவி தடம்வைத்த ஒரு மணி நேரத்திற்குள் அந்த உபகரணங்கள் இயங்க பூமியின் விண்கப்பல் ஆட்சி அரங்கிலிருந்து ஆணை அனுப்பப்பட்டது. தற்போது தொடர்ந்து காலநிலை அறிவிப்புகள் பதிவாகி வருகின்றன. முதல் 18 மணி நேரக் காலத்தின் அறிவிப்பில் :

. . . வானம் வெறுமையாக இருந்தது. அடுத்துக் காற்று நீர்மை (Humidity) சோதிக்கபடும்.

. . . குறைந்த நிலை உஷ்ணம் : -80 டிகிரி செல்ஸியஸ் (-112 F)

. . . பகல் தாண்டி உச்ச நிலை உஷ்ணம் : -30 டிகிரி செல்ஸியஸ் (-22 F)

. . . சராசரி வாயு அழுத்தம் 8.55 மில்லிபார். (பூமியின் கடற்தள அழுத்தத்தில் 100 இல் 1 பாகம்)

. . . காற்று வேகம் : 13 mph (20 km/h) வட மேற்குத் திசைநோக்கி.

ஃபீனிக்ஸ் தளவுளவியை அனுப்பியதின் குறிக்கோள் என்ன ?

ஃபீனிக்ஸ் திட்டக் குறிப்பணியில் தளவுளவி செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனிப்பாறைத் தளத்தில் புதியதோர் பகுதியை ஆராயத் தேர்தெடுத்து இறங்கியது” என்று அரிஸோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ·பீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், பீடர் ஸ்மித் கூறினார். செவ்வாய் வடதுருவ ஆர்க்டிக் பகுதியில் உள்ள பனிப்பாறைகளில் ·பீனிக்ஸ் பெற்றுள்ள யந்திரக் கரம் (Robotic Arm) துளையிட்டு மூன்று மாதங்கள் மாதிரிகளைச் சோதிக்கும். 2002 ஆம் ஆண்டில் செவ்வாய் ஆடிஸ்ஸி கோள் சுற்றி விண்ணூர்தி [Mars Orbiter Odyssey] செவ்வாய் ஆர்க்டிக் பகுதியில் கண்டுபிடித்த பனிச்செழிப்புத் தளங்களே ·பீனிக்ஸ் தளவுளவியை அனுப்பக் காரணமாயின. மேலும் செந்நிறக் கோளில் உள்ள பனிப்பாறைகளில் நுண்ணுயிர்ப் பிறவிகள் ஒருகாலத்தில் வளர்ந்தனவா என்று கண்டறிய பூர்வீக நீரியல் வரலாற்றை அறியலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். ஏழரை அடி [2.4 மீடர்] ஆழம் வரைத் தரையைத் தோண்டி மாதிரிகள் எடுக்க வல்லமையுள்ள யந்திரக் கரம் ஒன்று தªவுளவியில் அமைக்கப் பட்டுள்ளது. செவ்வாய்த் துருவப் பகுதிகளில் மேற்தளத்திலிருந்து ஒரு சில செ.மீடர் ஆழத்திலே நீர்ப்பனி உள்ளது என்று உறுதியாக நம்பப்படுகிறது. மேலும் துருவப் பகுதிகளில் முதல் ஒரு மீடர் ஆழத்தில் 50%-70% கொள்ளளவில் பனிபாறைகள் இருக்கின்றன என்றும் கருதப் படுகிறது. குறிப்பணியின் முக்கிய ஆய்வு அப்பனிப் பகுதி மண்களில் நுண்ணியல் ஜந்துக்கள் வாழ கார்பன் அடிப்படை இரசாயனப் பொருட்கள் (Organics) உள்ளனவா என்று கண்டுபிடிப்பது.

ஃபீனிக்ஸ் தளவுளவியில் அமைந்துள்ள கருவிகள்

2008 மே மாதத்தில் செவ்வாய்த் தளத்தில் தடம் வைத்து நிலையாய் மூன்று மாதங்களுக்குப் பூமிக்குத் தகவல் அனுப்பப் போகும் ·பீனிக்ஸ் தளவுளவியில் அமைக்கப் பட்டுள்ள முக்கிய கருவிகள்:

தளவுளவியின் எடை 772 பவுண்டு (386 கி.கி). சூரியத் தட்டுக்களைச் சேர்த்து 18 அடி அகலம். காலநிலைக் கம்பம் 7 அடி உயரம் நீள்வது.

1. சுயமாய் இயங்கிச் செவ்வாய்த் தளம் தோண்டும் ஏழரை அடி யந்திரக் கரம் (Robotic Arm). மாதிரிகளைப் படமெடுக்க காமிரா இணைக்கப்பட்டுள்ளது. குழி தோண்டி மாதிரி எடுத்துச் சோதிக்கும் கருவியில் இடும் திறமை உள்ளது.

ஏழரை அடி ஆழம் வரைச் செவ்வாய்த் தளத்தில் குழி தோண்டும் வலிமை பெற்றது. சோதனைக் கருவிகளை எடுத்துத் தகுந்த இடத்தில் வைக்கும். மண் மாதிரிகளை ஆய்வு செய்ய மற்ற கருவிகளுக்கு மாற்றம் செய்யும்.

2. இருபுறத் தளக்காட்சிக் காமிரா (Surface Stereoscopic Imager)

தளவுளவியில் ஓங்கி நிற்கும் கம்பத்தில் அமைந்திருக்கும் காமிரா செவ்வாய்ச் சூழ்வெளியின் கண்கொள்ளாக் காட்சியைப் படமெடுக்கும். மற்ற காமிரா தளமண் வண்ணத்தைப் படமெடுக்கும்.

3. காலநிலைக் கண்காணிப்பு நிலையம் (Meteorological Station)

செவ்வாய்த் தளத்தின் உஷ்ணம், அழுத்தம், வாயு வேகம் ஆகியவற்றைக் குறித்து இரவு பகல் வேளைகளில் காலநிலைகளைப் பதிவு செய்யும் கருவிகள் ஏற்பாடு.

4. மாதிரியைச் சோதிக்கும் சாதனம். நுண்ணியல் அளவி, மின்னியல் இரசாயன உளவி, வெப்பக் கடத்தி உளவி (Microscopy, Electrochemistry & Conductivity Analysers)

செவ்வாய்க் கீழ்த்தள மண் மாதிரிகளைச் சோதிக்கும் நான்கு இரசாயனக் கருவிகள்.

5. செவ்வாய்க் கீழ்த்தளக் காட்சிக் காமிரா (Mars Descent Imager)

விண்ணூர்தியிலிருந்து தளவுளவி பிரிந்து, செவ்வாய்த் தளத்தின் ஈர்ப்பாற்றலில் இறங்கும் போது, எப்படி இயங்கித் தடம் வைக்கிறது என்பதைப் படம் பிடிக்கும் சாதனம்.

6. வெப்பம், வாயு வெளிவீச்சு உளவி (Thermal & Evolved Gas Analysers)

கார்பன் அடிப்படை மாதிரிகளைக் (Organic Samples) கண்டுபிடித்து, இரசாயனப் பண்புகளைச் சோதிக்கும் சாதனம்.

“முதன்முதல் நாங்கள் பயன்படுத்தும் மிக நுட்பக் காமிரா செவ்வாய்த் தள மண்ணின் தூசிகளைக் கூடப் பெரிதாய்ப் படமெடுக்கும். தூசிப் புயல் அடித்துக் காமிராக் கண்ணும், மின்சக்தி தரும் சூரியத் தட்டுகளும் மூடிக் குறிப்பணிகள் தடுக்கப் படுவதாலும், செவ்வாய்க் கோளில் தூசிப் பெயர்ச்சியால் அதன் காலநிலைகள், சூழ்வெளி பாதிக்கப் படுவதாலும், தூசிப் படப்பிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. தற்போது செவ்வாய்த் தளத்தில் உளவு செய்து வரும் இரண்டு வாகனங்களும் தூசிப் புயல் அடிப்பால் பரிதியொளித் தட்டுகளில் தூசி படிந்து மின்சக்தி ஆற்றல் குன்றங் கருவிகளின் பணிகள் பாதிக்கப் பட்டுள்ளன.” என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த டாக்டர் டாம் பைக் [Dr. Tom Pike] ·பீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி கூறியிருக்கிறார்,

நீர்மை வாயு திரண்டுள்ள செவ்வாய்த் துருவப்பனிப் பொழிவுகள்

செவ்வாய்க் கோளின் வடதென் துருவங்களில் நீரும், கார்பன் டையாக்ஸைடும் கட்டிகளாய்த் திரண்டு போன பனித்தொப்பியாய்க் குவிந்துள்ளது! இரண்டு விதமான பனித்தொப்பிகள் செவ்வாயில் உள்ளன. ஒன்று காலநிலை ஒட்டிய பனித்திரட்டு, அடுத்தது நிரந்தர அல்லது எஞ்சிடும் பனித்திரட்டு. காலநிலைப் பனித்திரட்டு என்பது செவ்வாய்க் கோளில் குளிர்கால வேளையில் சேமிப்பாகி, வேனிற்கால வேளையில் உருகி ஆவியாகச் சூழ்வெளியில் போய் விடுவது! எஞ்சிடும் பனித்திரட்டு என்பது வருடம் முழுவதும் நிரந்தரமாய் துருவங்களில் நிலைத்திருப்பது!

செவ்வாய்க் கோளின் காலநிலைப் பனித்திரட்டு முழுவதும் சுமார் 1 மீடர் தடிப்பில் காய்ந்த பனித்திணிவு [Dry Ice] வடிவத்தில் படிவது. தென்துருவ காலநிலைப் பனித்திரட்டு உச்சக் குளிர் காலத்தில் சுமார் 4000 கி.மீடர் [2400 மைல்] தூரம் படர்ந்து படிகிறது! குளிர்காலத்தில் வடதுருவ காலநிலைப் பனித்திரட்டு சுமார் 3000 கி.மீடர் [1800 மைல்] தூரம் பரவிப் படிகிறது! வேனிற் காலத்தில் வெப்பம் மிகுந்து 120 C [150 Kelvin] உஷ்ணம் ஏறும் போது காலநிலைப் பனித்திரட்டுகள், திரவ இடைநிலைக்கு மாறாமல் திடவ நிலையிலிருந்து நேரே ஆவியாகிச் சென்று சூழ்வெளியில் தப்பிப் போய்விடுகிறது! அவ்விதம் மாறும் சமயங்களில் கார்பன் டையாக்ஸைடு வாயுவின் கொள்ளளவு மிகுதியாகி, செவ்வாய் மண்டல அழுத்தம் 30% மிகையாகிறது!

துருவப் பனிப் பாறைகள், தேய்ந்து வற்றிய நீர்த் துறைகள்

1971 இல் மாரினர்-9 விண்ணாய்வுச் சிமிழ் செவ்வாயில் நீரோட்டம் இருந்த ஆற்றுப் பாதைகளைக் காட்டின! ஐயமின்றி அவற்றில் நீரோடித்தான் அத்தடங்கள் ஏற்பட்டிருக்க முடியும். சிற்றோடைகள் பல ஓடி, அவை யாவும் சேர்ந்து, பெரிய ஆறுகளின் பின்னல்களாய்ச் செவ்வாயில் தோன்றின! ஆறுகளின் அதிவேக நீரோட்டம் அடித்துச் செதுக்கிய பாறைகள் சிற்ப மலைகளாய்க் காட்சி அளித்தன! அவை யாவும் தற்போது வரண்டு வெறும் சுவடுகள் மட்டும் தெரிகின்றன! பூமியின் அழுத்தத்தில் [14.5 psi] ஒரு சதவீதம் [0.1 psi] சூழ்ந்திருக்கும் செவ்வாய்க் கோளில் நீர்வளம் நிலைத்திருக்க வழியே இல்லை! காரணம் அச்சிறிய அழுத்தத்தில், சீக்கிரம் நீர் கொதித்து ஆவியாகி, வாயு மண்டலம் இல்லாததால் அகன்று மறைந்து விடும்! ஈர்ப்பாற்றல் பூமியின் ஈர்ப்பாற்றலில் மூன்றில் ஒரு பங்கு இருப்பதால், மெலிந்த ஈர்ப்பு விசையால் நீர்மை [Moisture], மற்றும் பிற வாயுக்களையும் செவ்வாய் தன்வசம் இழுத்து வைத்துக் கொள்ள இயலவில்லை! ஆயினும் செவ்வாய்ச் சூழ்மண்டலத்தில் மிக மிகச் சிறிதளவு நீர்மை ஆவி [Water Vapour] கலந்துள்ளது.

செவ்வாயில் சிறிதளவு நீர் பனிப் பாறைகளாக இறுகிப் போய் உறைந்துள்ளது! துருவப் பிரதேசங்களில் நிலையாக உறைந்து பனிப் பாறையான படங்களை, மாரினர்-9 எடுத்துக் காட்டியுள்ளது. வட துருவத்தில் 625 மைல் விட்டமுள்ள பனிப் பாறையும், தென் துருவத்தில் 185 மைல் அகண்ட பனிப் பாறையும் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது! மாரினர்-9 இல் இருந்த உட்செந்நிற கதிரலை மானி [Infrared Radiometer], செவ்வாயின் மத்திம ரேகை [Equator] அருகே பகலில் 17 C உச்ச உஷ்ணம், இரவில் -120 C தணிவு உஷ்ணம் இருப்பதைக் காட்டியது. கோடை காலங்களில் வட துருவத் தென் துருவத் தளங்களில் குளிர்ந்து பனியான கார்பைன்டையாக்ஸைடு வரட்சிப் பனி [Dry Ice], வெப்பத்தில் உருகி ஆவியாக நீங்குகிறது. அமெரிக்கா அனுப்பிய விண்ணாய்வுக் கருவிகள் [Space Probe Instruments] துருவப் பிரதேசங்களில் எடுத்த உஷ்ண அளவுகள், பனிப் பாறைகளில் இருப்பது பெரும்பான்மையாக நீர்க்கட்டி [Frozen Water] என்று காட்டி யுள்ளன. கோடை காலத்தில் வடதுருவச் சூழ்வெளியில் நீர்மை ஆவியின் [Water Vapour] அªவுகளை அதிகமாகக் கருவிகள் காட்டி இருப்பது, பனிப் பாறைகளில் இருப்பவை பெரும் நீர்க்கட்டிகள், வரட்சிப்பனி [Dry Ice or Frozen Carbondioxide] இல்லை என்பதை மெய்ப்பிக்கின்றன.

(தொடரும்)

***********************

தகவல்:

Picture Credits: NASA, JPL, ESA & Wikipedia

1. Mars Global Surveyor [Nov 7, 1996], Mars Path Finder [Dec 1996].
2. Destination to Mars, Space flight Now By: William Harwood [July 8, 2003]
3. Twin Roving Geologists Bound for Surface of Mars By: William Harwood [May 29, 2003]
4 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2 [Aug 26, 2003]
5. Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
6 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602101&format=html
[Author’s Article on Mars Missions]
7 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
8 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
9 Arctic Microbes Raise Cope for Life on Mars By: Associated Press [Oct 25, 2005]
10 http://www.Space.com/missions/ Phoenix Mars Lader (Several Articles) [Aug 31, 2005]
11 Mars Reconnaissance Orbiter on the Approach By: JPL [Feb 8, 2006]
12 Mars South Pole Ice Found to be Deep & Wide -NASA JPL Release [March 15, 2007]
13 Dirt Digger (Phoenix) Rocketing toward Mars By: Marcia Dunn AP Aerospace Writer [Aug 5, 2007]
14 BBC News Lift off for NASA’s Mars Probe (Phoenix) [August 4, 2007]
15 Phoenix Mission Control Team Poised for Epic Landing on Mars Planet – The Dailey Galaxy (www.dailygalaxy.com/) [May 23, 2008]
16 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40708091&format=html (Phoenix Launch Aug 7, 2007)
17 BBC News – Historic Pictures Sent From Mars Phoenix Lander [May 26, 2008]
18. BBC News – Mars Lander is in Good Health [May 27, 2008]
19 The New York Times – Mars Lander Transmits Photos of Arctic Terrain [May 27, 2008]
20 RedOrbit News – Phoenix Lander Spotted from Mars Orbiter (www.redorbit.com) [May 28, 2008]
21 Future Mission to Mars – Follow on Mars Missions / Mars Sample Return [May 28, 2008] (www.vectorsite.net/tampl_08.html)

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] May 29, 2008

பிரான்சில் அமைக்கும் முதல் அகில நாட்டு அணுப்பிணைவு ஆய்வு நிலையம்

fusion-reaction

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா



பிண்டமும் சக்தியும் ஒன்றே
என்று கணித்தார் ஐன்ஸ்டைன்
நூறாண்டுக்கு முன்னே !
சக்தி அழியாதது !
பிண்டம் நிலையானது !
சக்தி நிலை மாறுவது !
பிண்டமும் சக்திபோல் உருமாறும் !
இயல்பாகவே
தேய்ந்து மெலியும் ரேடியம்
ஈயமாய் மாறும் !
யுரேனியம் சுயப் பிளவில்
ஈராகப் பிரிந்து
வெப்பசக்தி உண்டாகும் !
பேரளவு உஷ்ணத்தில்
பரிதி வாயுக் கோளத்தில்
எரியும் உலை போல்
எளிய அணுக்களின் உட்கருக்கள்
இணைந்து
பிணைவுச் சக்தி
பேரளவு வெளியேறும்
கதிரியக்கம் குன்றி !

பிண்டம் ! சக்தி !

அணுப்பிணைவுச் சக்தி !

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்காவில் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்தில் நூற்றுக் கணக்கான ஈரோப்பிய, வட அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு அணுப்பிளவுச் சக்தியைத் தொடரியக்கத்தில் உண்டாக்கிப் பேரழிவுப் போராயுதத்தைத் தயாரித்தனர் !  அதுபோல், அமைதிக் காலத்திலே பன்னாட்டு விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் பிரான்ஸில் கூடி முதன்முதல் அணுப்பிணைவு எரிசக்தியில் பேரளவு மின்சக்தியை உற்பத்தி செய்யப் போகிறார்கள்.

கட்டுரை ஆசிரியர்

“அணுசக்தி ஆற்றல் உற்பத்தியில் அணுப்பிணைவு (Nuclear Fusion) முறைப்பாடு சூழ்வெளிப் பசுமைப் பண்பாடு மின்சாரமாகக் கருதப்படுகிறது. அது அணுப்பிளவு (Nuclear Fission) முறைப்பாடை விட சூழ்வெளித் துர்மாசுக்கள் மிகவும் குறைவானது.”

ஜாப் வாண்டர் லான் – நெதர்லாந்து எரிசக்தி ஆய்வு மையம். (June 28, 2005)

“சூழ்வெளிக் காலநிலை மாற்றாமல் பேரளவு மின்சக்தி ஆக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு முயற்சியில் அணுப்பிணைவுச் சக்தி விருத்தி அடையப் பிரான்சில் விரைவாகக் கட்டப் போகும் அகில நாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலை (ITER) ஒரு பெரும் வரலாற்று மைல் கல்லாகக் கருதப்படுகிறது.”

பேராசிரியர் கிரிஸ் லிவெல்லின் ஸ்மித் (UK Atomic Energy Agency) (June 28, 2005)

“அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைக் (ITER) கட்டுமான வேலைகள் 2005 ஆண்டு இறுதியில் துவங்கும். திட்டத்தின் பொறித்துறை நுணுக்க விளக்கங்கள் யாவும் இப்போது முடிவாகி விட்டன. அகில நாடுகளின் முழுக் கூட்டுழைப்பில் (ஈரோப்பியன் யூனியன், ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான்) பூரணமாகி இத்திட்டம் முன்னடி வைப்பதில் நாங்கள் பூரிப்படைகிறோம்.”

பையா ஆரன்கில்டே ஹான்ஸன் (European Commission) (June 28, 2005)

“கடந்த 15 ஆண்டுகளாக அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைத் (ITER) திட்ட அமைப்பில் பங்களித்து அது நிறுவனமாகச் சிக்கலான உடன்பாடுகளில் உதவி செய்தது குறித்து, அணுசக்திப் பேரவை (IAEA) பெருமகிழ்ச்சி அடைகிறது. மேலும் பரிதியை இயக்கும் மூலச்சக்தியான அணுப்பிணைவுச் சக்தியை விஞ்ஞானப் பொறியியல் சாதனங்களால் பூமியில் உற்பத்தி செய்யக் கூடுமா என்று ஆராயும் அத்திட்டத்துக்கும் அணுசக்தி பேரவை தொடர்ந்து உதவி புரியும்.”

வெர்னர் புர்கார்ட் (Deputy Director General & Haed IAEA Nuclear Science and Applications) (June 28, 2005)

“அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலை (ITER) கூடிய விரைவில் இயங்க ஆரம்பித்து உலக மாந்தர் அனைவருக்கும் எதிர்காலத்தில் மின்சக்தி அளிக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.”

நரியாக்கி நகயாமா (ஜப்பான் விஞ்ஞான அமைச்சர்) (June 28, 2005)

பிரான்சில் புது அணுப்பிணைவு மின்சக்திச் சோதனை நிலையம்

முதல் அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைக் (ITER) கட்டுமானத் திட்டத்தில் ஜப்பான் தேசம் கடுமையாகப் போட்டியிட்டாலும் இறுதியில் வெற்றி பெற்றது பிரான்ஸ். அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்கு (International Space Station) அடுத்தபடி வெப்ப அணுக்கருச் சோதனை நிலைய அமைப்பே நிதிச் செலவு மிக்க (12 பில்லியன் டாலர் திட்டம்) ஓர் திட்டமாகக் கருதப் படுகிறது ! வெப்ப அணுக்கருச் சக்தி எனப்படுவது பரிதி ஆக்கும் அணுப்பிணைவுச் சக்தியைக் குறிப்பிடுகிறது. இதுவரைச் சூழ்வெளியை மாசுபடுத்திய அணுப்பிளவு, நிலக்கரி போன்ற பூதள எருக்கள் (Fission & Fossil Fuels) போலின்றி ஒப்புநோக்கினால் பேரளவு தூயதானது அணுப்பிணைவுச் சக்தியே (Fusion Energy) !

பதினெட்டு மாதங்கள் தர்க்கத்துக்கு உள்ளாகி முடிவாக ஜூன் 28 2005 ஆம் தேதி மாஸ்கோவில் ஆறு உறுப்பினர் (ஈரோப்பியன் யூனியன், ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான்) உடன்பட்டு அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலையைக் [International Thermonuclear Experimental Reactor (ITER)] கட்டுமிடம் பிரான்ஸாக ஒப்புக் கொள்ளப் பட்டது. ITER திட்டத்தின் முக்கிய பங்காளர்கள் ஈரோப்பியன் யூனியன் (இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஹங்கேரி, டென்மார்க், ஆஸ்டியா, நெதர்லாந்து, போலந்து, ஸ்வீடன். . . ), ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா). நிதிப் பங்களிப்பில் ஈரோப்பியன் யூனியன் 50% தொகை அளிப்பை மேற்கொண்டது. பிரான்ஸில் இடத்தேர்வு : மார்சேல்ஸ் நகருக்கு 60 கி.மீ. (37 மைல்) தூரத்தில் இருக்கும் “கடராச்சே அணுவியல் ஆராய்ச்சி மையம்” (Cadarache in France).

அகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையத்தின் விபரங்கள்

வியன்னாவில் இருக்கும் அகில நாட்டு அணுசக்திப் பேரவை தலைமை அகத்தில் நீண்ட காலக் குறிக்கோள் திட்டமான அணுப்பிணைவுச் சக்தி ஆக்கத்தின் முன்னடி வைப்பு 2005 ஜூன் 28 ஆம் தேதியில் ஒரு பெரும் விஞ்ஞானச் சாதனையாக வெற்றிவிழாக் கொண்டாடப் பட்டது ! அன்றுதான் உலகத்திலே மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சக்தி சோதனை நிலையம் பிரான்சில் கட்டி இயக்கத் திட்டம் துவங்கியது ! அதை டிசைன் செய்து கட்டி இயக்கப் போகிறவர் ஒரு நாட்டை மட்டும் சேர்ந்த சில விஞ்ஞானிகள், பொறியியல் நிபுணர்கள் அல்லர். பன்னாட்டு விஞ்ஞானிகள் ! பன்னாட்டுப் பொறித்துறை வல்லுநர்கள் ! இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்காவில் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்தில் நூற்றுக் கணக்கான ஈரோப்பிய, வட அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு அணுப்பிளவுச் சக்தியைத் தொடரியக்கத்தில் உண்டாக்கிப் பேரழிவுப் போராயுதத்தைத் தயாரித்தனர் ! அதுபோல், அமைதி காலத்திலே பன்னாட்டு விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் பிரான்ஸில் கூடி முதன்முதல் அணுப்பிணைவு எரிசக்தியில் பேரளவு மின்சக்தி உற்பத்தி செய்யப் போகிறார்கள் !

அணுப்பிணைவுச் சோதனை நிலையம் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்.

— நிலைய மின்சார உற்பத்தி : 500 MW
— நியூட்ரான் சக்தி : 14 MeV (Million Electron Volt).
— காந்த மதில் ஆற்றல் தகுதி : 0.57 MW/Square meter
— பிளாஸ்மா (கனல் பிழம்பு) பெரு ஆரம் : 6.2 மீடர்.
— பிளாஸ்மா (கனல் பிழம்பு) குறு ஆரம் : 2.0 மீடர்
— பிளாஸ்மா மின்னோட்டம் : 15 MA (Million Amps)
— பிளாஸ்மா கொள்ளளவு : 837 கியூபிக் மீடர்.
— வளையத்தின் காந்த தளம் 6.2 மீடரில் 5.3 T (Toroidal Field)
— நிலைய யந்திரங்கள் இயக்கத் தேவை : 78 MW
— நிலையத் திட்டச் செலவு : 12 பில்லியன் டாலர் (2005 நாணய மதிப்பு)

அணுப்பிணைவுச் சக்தி எப்படி உண்டாகிறது ?

சூரியனிலும் சுயவொளி விண்மீன்களிலும் ஹைடிரஜன் வாயுவை மிகையான ஈர்ப்பு விசை அழுத்தத்தில் 10 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் பிளாஸ்மா நிலையில் (கனல் பிழம்பு) இணைத்து அணுப்பிணைவுத் தொடரியக்கத்தில் ஹீலிய வாயும் வெப்பச் சக்தியும் வெளியாகின்றன. அந்த வெப்ப மோதலின் விளைவில் உயர்சக்தி நியூட்ரான்களும் (High Energy Neutrons) எழுகின்றன ! ஹைடிரன் ஏகமூலங்களான (Isotopes of Hydrogen) டியூடிரியம் & டிரிடியம் (50% Deuterium & 50% Tritium) அணுப்பிணைவு எருக்களாகப் பயன்படுகின்றன. ஹைடிஜன், டியூடிரியம், டிரிடியம் மூன்று வாயுக்களின் அணுக்கருவிலும் ஒரே ஒரு புரோட்டான் உள்ளது. ஆனால் டியூடிரியத்தில் ஒரு புரோட்டான், ஒரு நியூட்ரான் உள்ளன. டிரிடியத்தில் ஒரு புரோட்டானும், இரண்டு நியூட்ரான்களும் இருக்கின்றன. அவை பேரளவு உஷ்ணத்தில் (100 மில்லியன் டிகிரி செல்சியஸ்) பிளாஸ்மாவாகி ஒன்றுடன் ஒன்று இணைந்து ஹீலியமாகின்றன. அந்த உஷ்ணம் பரிதியின் உட்கரு உஷ்ணத்தை விட 10 மடங்கி மிகையானது !

அணுப்பிணைவுக்கு அத்தகைய மிகையான உஷ்ணம் ஏன் தேவைப் படுகிறது ? பரிதியின் வாயுக் கோளத்தில் 10 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணம் உண்டாவதற்கு அதன் அசுர ஈர்ப்புச் சக்தி அழுத்தம் கொடுக்கிறது. அந்த உஷ்ணத்தில் அணுக்கருக்கள் ஒன்றை ஒன்று இழுத்துச் சேர்த்துக் கொள்கின்றன. ஆனால் மனிதர் உண்டாக்கும் அணுப்பிணைவு உலையில் அத்தகைய அழுத்தம் ஏற்படுத்த முடியாததால் அணுப்பிணைவை உண்டாக்கப் பத்து மடங்கு உஷ்ண நிலை தேவைப்படுகிறது. அந்த அழுத்தத்தை எப்படி உண்டாக்குவது ?

1. வாகன எஞ்சின் போல் பிஸ்டன் மூலம் வாயுக்களில் அழுத்தம் உண்டாக்கி வாயுக்களில் உஷ்ணத்தை அதிகமாக்கலாம்.

2. மின்சார ஓட்டத்தை ஏற்படுத்தி வாயுக்களில் உஷ்ணப் படுத்தலாம்.

3. வாயுக்களை ஓர் அரணுக்குள் உயர்சக்தி நியூட்ரான்களால் தாக்கி உஷ்ணத்தை மிகையாக்கலாம்.

4. நுண்ணலைகள் (Microwaves) மூலம் அல்லது லேஸர் கதிர்களால் (Laser Beams) வாயுக்களில் உஷ்ணத்தை மிகைப்படுத்தலாம்.

மூன்று முறைகளில் பிளாஸ்மா கனல் பிழம்பை உண்டாக்கலாம்:

1. பிளாஸ்மா அரண் (Plasma Confinement) (பரிதி, விண்மீன்களில் உள்ளதுபோல்)

2. முடத்துவ முறை (Inertial Method).

3. காந்தத் தளமுறை (Magnetic Method).

சூரியன் ஓர் அணுப் பிணைவுத் தீப்பந்து!

சூரியன் பிணைவுச் சக்தியை [Fusion Energy] உற்பத்தி செய்யும், பிரம்மாண்டமான ஓர் அணுக்கருப் பிழம்பு உலை [Plasma Reactor]! அண்ட வெளியில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள், சுய ஒளி விண்மீன்கள் அணுப் பிணைவுச் சக்தியைத் தான், பிரபஞ்சம் தோன்றியது முதல் வாரி இறைத்து வருகின்றன! 4000 மில்லியன் ஆண்டுகளாக, சூரியன் வினாடிக்கு 40 கோடி பில்லியன் MW வெப்ப சக்தியைத் தொடர்ந்து வெளியாக்கிக் கொண்டிருக்கிறது! தீக்கோளத்தின் நடுப் பகுதி உஷ்ணம் 20 மில்லியன் டிகிரி K! சூரியவாயு அழுத்தம், பூவாயு [Earth ‘s Atmosphere] அழுத்ததை விட 400 மில்லியன் மடங்கு மிகையானது! சூரிய கோள அமைப்பு, வெங்காயத் தோல்கள் போல் அடுக்கடுக்காக இருக்கிறது. வாயுக்களின் அடர்த்தி [Density] ஈயத்தைப் போல் 12 மடங்கு. சூரியன் பேரளவு உஷ்ணத்தில், தன் ஈர்ப்புப் [Gravitation] பேரழுத்தத்தில், வினாடிக்கு 4 மில்லியன் டன்வாயு அணுக்கருத் துகள்களைப் பிணைத்து, அளக்க முடியாத பிணைவு சக்தியை உண்டாக்குகிறது. ஒரு தம்ளர் நீரில் உள்ள ஹைடிஜன் வாயுவைப் பிரித்துப் பிணைக்க முடிந்தால், அதிலிருந்து வெளியாகும் சக்தி 600 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் எரிந்து தரும் சக்திக்குச் சமமாகும்! ஆனால் பூமியில் பிணைவுச் சக்தியைத் தூண்டி வெளிப்படுத்த, உலைகளில் சூரியவாயு போல் பேரழுத்தமும், பெருமளவு உஷ்ணமும், விஞ்ஞானிகளால் உண்டாக்க முடியுமா ?

1952 நவம்பர் முதல் தேதியில் அமெரிக்காவும், 1953 ஆகஸ்டு 20 இல் ரஷ்யாவும் வெப்ப அணுக்கரு ஆயுதமான [Thermo-Nuclear Weapon] ஹைடிரஜன் குண்டைத் [H-Bomb] தயாரித்து முதன் முதல் ஒரு குட்டிச் சூரியனை உண்டாக்கி வெடிக்க வைத்து வெற்றி பெற்றன. ஆனால் அணுப்பிணைவுப் பிழம்பை ஓர் உலை அரணுக்குள் அடக்கி நீடிக்கச் செய்ய எந்த நாட்டு விஞ்ஞானியாலும் இதுவரை முடியவில்லை! அப்பெரும் முயற்சிதான் அகில உலகில் இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கு மிகச் சிக்கலான பொறிநுணக்கப் பிரச்சனையாகவும் திறமைக்குச் சவாலாகவும் ஆகியிருக்கிறது! ஆயினும் உலகில் பெருமளவு மின்சக்தியை இன்னும் பழைய அணுமின் நிலையங்கள்தான் பரிமாறிக் கொண்டிருக்கின்றன. எதிர் காலத்தில் மின்சக்திப் பற்றாக் குறை வினாவுக்கு முடிவான விடை, பெருமளவில் மின்திறம் வெளியாக்கும் பிணைவுச் சக்தி ஒன்றே ஒன்றுதான்! ஆனால் அந்த நிலையத்தை வர்த்தக முறையில் உருவாக்கி இயக்குவதுதான் உலக எஞ்சினியர்களுக்கு மாபெரும் போராட்டமாகவும், திறமையைச் சோதிப்பதாகவும் இருந்து வருகிறது!

அணுப்பிணைவை ஆய்வுக் கூடத்தில் எவ்வாறு ஆக்குவது ?

ஹைடிரஜன் வாயுவுக்கு இரண்டு ‘ஏகமூலங்கள்’ [Isotopes] உள்ளன. ஒன்று டியூட்டிரியம் [Deuterium], மற்றொன்று டிரிடியம் [Tritium]. ஏகமூலங்கள் என்பவை, ஒரே புரோட்டான் [Proton] எண்ணிக்கை கொண்டு, வெவ்வேறு நியூட்ரான் [Neutrons] எண்ணிக்கை யுள்ள மூலகங்கள் [Elements]. ஏகமூலங்கள் ஒரே மின்னீர்ப்பு [Electric Charge] மேவி, வெவ்வேறு அணுப்பளுவைக் [Atomic Mass] கொண்டவை. மூலகங்களின் அணிப் பட்டியலில் [Periodic Tables of Elements], ஏகமூலங்கள் யாவும் ஒரே இல்லத்தில் இடம் பெறுபவை. டியூட்டிரியம் மூலஅணு [Molecule] நீரில் 7000 இல் ஒன்றாக இயற்கையில் இருப்பதை, ரசாயன முறையில் பிரித்து எடுக்க வேண்டும். டிரிடியம் கனநீர் யுரேனிய அணு உலைகள் [Heavy Water Uranium Reactors] இயங்கும் போது, கனநீரில் உண்டாகிறது. கனடாவில் இயங்கும் காண்டு [CANDU] அணு உலைகளில் நிறைய கனநீரும், டிரிடியமும் இருப்பதால், பிணைவுச் சக்தி ஆய்வுக்குத் தேவையான எளிய வாயு மூலகங்கள் [Light Elements] கனடாவில் எப்போதும் கிடைக்கின்றன. ஆராய்ச்சி முறையில் பயன் படுத்திய போது, எளிய மூலகங்களான ஹைடிரஜன், டியூட்டிரியம், டிரிடியம், லிதியம் ஆகியவற்றில், [டியூட்டிரியம் + டிரிடியம்] வாயு இணைப்பே அதிக வெப்ப சக்தியை ஈன்றதால், உலகில் பல நாடுகள் அணுப் பிணைவு உலையில், அவ்விரண்டு வாயுக்களையே எரிப் பண்டங்களாய் உபயோகித்து வருகின்றன. இந்த இயக்கம் தூண்டுவதற்கு வேண்டிய உஷ்ணம், 80 மில்லியன் டிகிரி C.

டியூட்டிரியம் +டிரிடியம் –> ஹீலியம் +நியூட்ரான் +17.6 MeV சக்தி

Deuterium +Tritium –> Helium +Neutron +17.6 MeV Energy

இருபதாம் நூற்றாண்டில் உருவான மிக மேம்பட்ட ஆய்வுப் பிணைவு உலை [Fusion Reactor] ‘டோகாமாக்’ [Tokamak] என்பது, காந்தக் கம்பிகள் சுற்றப் பட்டு டோனட் [Donut] வளையத்தில் அமைந்த ஒரு பிரம்மாண்டமான மின்யந்திரம். ‘டோகாமாக் ‘ என்பது ரஷ்யச் சுருக்குப் பெயர். அதன் பொருள்: வளை காந்தக் கலம் [Toroidal Magnetic Chamber]. அதனுள்ளே பேரளவு காந்தத் தளத்தைக் கிளப்பி பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் மின்னியல் வாயுப் பிழம்பை [Plasma] உண்டாக்கி வளையச்சுவர் கடும் வெப்பத்தில் உருகிப் போகாமல் உள்ளடக்க வேண்டும்! இத் தேவைக்கு உகந்த உலோகம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை!

பிண்டம் நான்கு வித வடிவுகள் [Four States of Matter] கொண்டது. திடவம், திரவம், வாயு, பிழம்பு [Solid, Liquid, Gas & Plasma]. வாயு அதிக உஷ்ணத்தில் நேர், எதிர் மின்னிகளாய்ப் [Positive, Negative Ions] பிரிந்து பிழம்பு வடிவாக மாறி மின்கடத்தி [Electrical Conductor] யாகிறது. பிணைவுச் சக்தியை மூலமாகக் கொண்டு இயங்கும் மின்சக்தி நிலையத்தில், ஹீலிய வாயு பிழம்பின் வெப்பப் போர்வையாகவும், கடத்தியாகவும் [Helium Blanket for Plasma & Heat Transport Medium] பயன் ஆகலாம். சூடேரிய ஹீலிய வாயு வெப்ப மாற்றியில் [Heat Exchanger] நீராவியை உண்டாக்கி டர்பைன் ஜனனியை [Turbine Generator] ஓட்டச் செய்யலாம். அமெரிக்காவின் மிகப் பெரும் ஆய்வு டோகாமாக், நியூ ஜெர்ஸி பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு இயங்கி வருகிறது.

மூன்று வித முறைகளில் அனல் பிழம்பை அரணிட்டு [Plasma Confinement] அணுப்பிணைவு இயக்கம் நிகழ்த்தலாம். முதலாவது முறை ‘ஈர்ப்பியல் அரண் பிணைப்பு ‘ [Gravitational Confinement Fusion]. இம்முறைக்கு சூரிய, சுடரொளி விண்மீன்களில் இயங்கும் பேரளவு உஷ்ணம், வாயுப் பேரழுத்தம் தேவைப் படுகிறது. மனிதனால் இவற்றைப் பூமியில் சாதிக்க முடியாது!

அடுத்தது, ‘காந்தவியல் அரண் பிணைப்பு’ [Magnetic Confinement Fusion]. ஆய்வுக் கூடத்தில் இது சாத்திய மானது. 1950 ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி முறைக்கு உலகெங்கும் பயன் படுகிறது. இம்முறையில் உருவானதுதான் டோகாமாக் [Tokamak] யந்திரம். அனல் பிழம்பு நீடிக்க, மூன்று முக்கிய நிபந்தனைத் தொடர்புகள் பொருந்த வேண்டும்: உஷ்ணம், காலம், அடர்த்தி [Temperature, Time & Density]. 200 மில்லியன் டிகிரி உஷ்ணப் பிழம்பு சில வினாடிகள் நீடிக்க, வாயு அடர்த்தி ஓரளவு தேவை. இந்த உறவை ‘லாசன் நியதி ‘ [Lawson Criterion] என்று கூறுவர்.

மூன்றாவது முறை: ‘முடவியல் அரண் பிணைப்பு’ [Inertial Confinement Fusion]. இதில் லேசர் வீச்சுக் கதிர்களைப் [Laser Beams] பாய்ச்சி உள்வெடிப்பு [Implosion] நிகழ்த்தி அனல் பிழம்பு உண்டு பண்ணிப் பிணைப்பு சக்தி ஏற்படுத்துவது. இம்முறை பெரும்பாலும் அணு ஆயுதம் [Nuclear Weapons] தயார் செய்ய, யுத்த விஞ்ஞானிகளுக்குப் பயன் படுகிறது.

அணுப்பிணைவுச் சக்தியின் நிறைபாடுகள்! குறைபாடுகள்!

பிணைவுச் சக்தி பிளவுச் சக்தியை விட பல முறைகளில் மேன்மை யுற்றது. அணுப்பிணைவு சக்தியில், அணுப் பிளவு சக்திபோல் உயிர் இனங்களைத் தாக்கி வதைக்கும் பயங்கரக் கதிரியக்கம் [Radioactivity] அதிக அளவு இல்லை! பிணைவுச் சக்தியால் எழும் கதிரியக்கம் மிகச் சிறிதளவே! அமெரிக்காவின் திரீமைல் தீவு, ரஷ்யாவின் செர்நோபிள் அணுப்பிளவுச் சக்தி நிலையங்களில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் போது, உலையின் எரிக்கோல்கள் பல உருகிப் பெரும் சிக்கலை உண்டாக்கியது! பிணைவு உலைகளில் எரிக்கோல் உருகிப் போகும் அபாயம் எதுவும் இல்லை! அணுப் பிணைவு நிலையங்களிலிருந்து தினம் வெளியேறும் கழிவு வாயுக்கள் மனிதர் மற்றும் இதர உயிரினங்களுக்குத் தீங்கு தருவன அல்ல! அவைச் சூழ்வெளியைச் [Environment] சுத்தமாக வைத்திருக்க உதவி புரிபவை! பிணைவு இயக்கம் ரசாயனத் தீயின் கடும் விளைவுகளை உண்டாக்காது! மேலும் பிணைவு உலைகளில் பயன்படும் எரி வாயுக்கள் ஹைடிரஜன், டியூட்டிரியம் உலகெங்கும் நீரில் அளவற்ற கன அளவு கிடைக்கிறது. எதிர் காலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு வேண்டிய, வாயு எரி பொருளுக்குப் பஞ்சமே இருக்காது!

ஆராய்ச்சி அணுப்பிணைவு உலைகளுக்கு இதுவரை உலக நாடுகள் 2 பில்லியன் டாலர்கள் செலவழித் துள்ளன! கால தாமதம் ஆவதால், இன்னும் 50 பில்லியன் டாலர் தொகை செலவாகலாம் என்று ஊகிக்கப்படுகிறது. மேலும் மிகச் சக்தி வாய்ந்த மின்காந்தத் தளம், அணுப்பிணைவு நிலையத்தில் இயங்குவதால், அதை ஆட்சி செய்யும் மனிதருக்கு அதனால் விளையும் தீங்குகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது! அடுத்து உலையில் பயன்படும் லிதிய [Lithium] திரவம் ரசாயன இயக்க உக்கிரம் உடையது! அதன் விளைவுகளையும் அறிய வேண்டும். அனல் பிழம்புக்கு அதி உன்னத சூன்ய நிலை [High Vacuum] உலை வளையத்தில் நீடிக்கப்பட வேண்டும்! விசை மிக்க மின்காந்த அமுக்கமும், வேறுபாடு மிக்க கடும் உஷ்ண ஏற்ற இறக்கத்தால் நேரும் வெப்ப அழுத்தமும், அதி உக்கிர நியூட்டிரான் கணைத் தாக்குதலால் நிகழும் அடியும், தாங்கிக் கொண்டு நீண்ட காலம் உறுதியாக இயங்கும், நிலையச் சாதனங்களைக் கண்டு பிடிப்பது சிரமான முயற்சி.

அணுப்பிணைவு சக்தி உற்பத்தியின் மேம்பாடுகள்!

அணுப்பிணைவு உலைகளுக்கு வேண்டிய எரு உலக நீர்வளத்தில் எண்ணிக்கை யற்ற அளவு உள்ளது. பேரளவு ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு சக்தி நிலையங்களை அமைப்பது சாத்திய மாகும். மாபெரும் ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு நிலையத்துக்கும் தேவையானது சிறிதளவு எருதான்! உதாரணமாக 1000 MWe நிலையத்துக்கு ஓராண்டு வேண்டிய எரு 0.6 மெட்ரிக் டன் [1320 பவுண்டு] டிரிடியம்!

பிணைவு சக்தியின் தீப்பிழம்பு மின்கொடைத் துகள்களின் வேகங்களைத் தணித்து, நேரடியாக அவற்றை மிகையான மின்சக்தி அழுத்தமாக [High Voltage Electricity] மாற்றிவிடலாம்! அம்முறையில் நீராவி உண்டாக்க கொதிகலம், வெப்பசக்தியை யந்திர சக்தியாக மாற்ற டர்பைன், தணிகலம் யந்திர சக்தியை மின்சக்தியாக மாற்ற மின்சார ஜனனி போன்ற பொது வெப்பச் சாதனங்கள் தேவைப்படா! பிணைவு உலைப் பாதுக்காப்பு அத்துடனேஇணைந்துள்ளது. இயக்கத்தின் போது சிக்கல் நேர்ந்தால், அணு உலைத் தானாக விரைவில் நன்றுவிடும்.பிளவு அணு உலைகளைப் போன்று, கதிரியக்கமோ, கதிர்வீச்சுக் கழிவுகளோ விளைவதில்லை! பிணைவு அணு உலையில் எழும் நியூட்ரான்கள் விரைவில் தீவிரத்தை இழப்பதால் பாதகம் மிகக் குறைவு. உலையின் மற்ற பாகங்களை நியூட்ரான் தாக்குவதால் எழும் இரண்டாம் தர கதிர்வீச்சுகளைக் கவசங்களால் பாதுகாப்பது எளிது. கதிர்ப் பொழிவுகளால் சூழ்மண்டல நாசம், நுகரும் காற்றில் மாசுகள் விளைவு போன்றவை ஏற்படுவதில்லை!

வெப்ப அணுக்கரு நிலையத்தை எதிர்த்து கிரீன்பீஸ் வாதிகள் கூக்குரல் !

ஒரு கிலோ கிராம் அணுப்பிணைவு எருக்கள் (Fusion Fuel Deuterium +Tritium) 10,000 டன் நிலக்கரிக்குச் (Fossil Fuel) சமமான எரிசக்தி அளிக்கும் ! இத்தகைய பேரளவுப் பயன்பாடு இருப்பதாலும், சிறிதளவு கதிரியக்கம் உள்ளதாலும் அணுப்பிணைவு எரிசக்தி அகில நாட்டு பொறித்துறை நிபுணரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது ! அணுப்பிளவு மின்சக்தி நிலையங்கள் போன்று அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்களில் நீண்ட கால உயர்நிலைக் கதிரியக்கப் பிளவுக் கழிவுகள் (Long Term High Level Fission Product Wastes) கிடையா ! சில பசுமைக் குழுவாதிகள் 2005 ஜூன் மாத ITER கட்டட அமைப்புத் திட்டத்தை பண விரயத் திட்டமென்று குறை கூறினர் ! அணுப்பிணைவு மின்சக்தி உற்பத்தி செயல் முறைக்கு ஒவ்வாதது என்று தமது நம்பிக்கை இல்லாமையை அவர் தெரிவித்தார். “12 பில்லியன் டாலரில் 10,000 மெகாவாட் கடற்கரைக் காற்றாடிகள் மூலம் தயாரித்து 7.5 மில்லியன் ஐரோப்பிய மக்களுக்கு மின்சாரம் பரிமாறலாம்,” என்று அகில நாட்டு கிரீன்பீஸ் பேரவையைச் சேர்ந்த ஜான் வந்தே புட்டி (Jan Vande Putte) கூறினார். “உலக நாடுகளின் அரசுகள் பணத்தை வீணாக விஞ்ஞான விளையாட்டுச் சாதனங்களில் விரையமாக்கக் கூடாதென்றும், அவை ஒருபோதும் மின்சக்தி அனுப்பப் போவதில்லை என்றும், 2080 ஆம் ஆண்டில் குவிந்து கிடக்கும் “மீள் பிறப்பு எரிசக்தியைப்” (Renewable Energy) பயன்படுத்தாமல் இப்போதே ஆரம்பிக்க வேண்டும் என்றும் பறைசாற்றினர்.

++++++++++++++++++++++++++++++
தகவல்

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 The Origin of Earth (www.moorlandschool.co.uk/earth/earthorigin.htm)
20 IAEA Report – France to Host ITER International Nuclear Fusion Project (June 28, 2005)
21 IAEA Report Focus on Fusion By : IAEA Staff
22 IAEA Report – Fusion : Energy of the Future By : Ursula Schneider IAEA Physics Section
World Atom Staff Report.
23 BBC News : France Gets Nuclear Fusion (Experimental) Plant.
24 World : France Chosen to Host Experimental Fusion Reactor Project By : Breffni O’Rourke(June 28, 2005).
25 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40203101&format=html (அணுப்பிணைவுச் சக்தி அவனியின் எதிர்கால மின்சக்தி)
26 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40303172&format=html (இருபது ஆண்டுகளில் அணுப்பிணைவுச் சக்தி ஆக்கத்தில் வளர்ச்சி)
27 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40508052&format=html (21 ஆவது நூற்றாண்டின் அணுப்பிணைவுச் சக்தி ஆற்றலுக்கு லேஸர் கதிர்கள்)
28 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40709271&format=html (கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப்பிணைவு மின்சக்தி நிலையம்)

+++++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) May 22, 2008

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! வால்மீன்களிலிருந்து உயிரின மூலங்கள் பூமியில் வீழ்ந்தனவா ?

(கட்டுரை: 29)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

வால்மீனின் வண்டுத் தலையில்
பூர்வக் களஞ்சியம் !
பரிதிக்கு அருகில் வாலும்
அனுமார் வாலைப் போல் நீளும் !
கூந்தல் கோணிப் போகும் !
சூரியனைச் சுற்றி வரும்போது
முகம் காட்டி வணங்கும்
வாலைப் பின்னே தள்ளி !
வயிற்றுக்குள்
உயிரினப் பண்டங்கள் !
வாயு வைரக்கல்
வானம் முழுதுக்கும் ஒளிகாட்டும் !
உயிர்க் குஞ்சுகள் உதிக்க
வையகத்தின் மீது
வாரி வாரிப்
பெய்யும்
மூலக் கூறுகளை !

வால்மீனின் சுற்றும் வீதிகளில்
வண்டித்தொடர் போல்
பிரம்மாண்ட வால் நீட்சியில்
வாயுத் தூள்கள்
நீராவி மின்னிகள் வெளியேறும் !
மங்கும் பரிதிகட்குப்
புது எரிசக்தி அளித்து
ஒளியூட்டும்
உலகங்களுக் கெல்லாம் !

ஜேம்ஸ் தாம்ஸன் “The Seasons” (1730)

“உயிரினம் எப்படி ஆரம்பமானது என்பதை நாம் அறிய முடிய வில்லை என்று முதலில் ஒப்புக் கொள்வோம்.  பூர்வாங்க உலகில் எளிய ஆர்கானிக் மூலக்கூறுகள் தோன்ற பல்வேறு இயக்க முறைகள் ஒருங்கிணைந்து பாதை வகுத்தன என்று பொதுவாக நம்பப் படுகிறது !  அந்த மூலக்கூறுகள் இணைந்து மீண்டும் சிக்கலான இரசாயன அமைப்புக் கலவைகள் உண்டாகி, முடிவிலே உயிர் மூலவி என்று சொல்லப்படும் ஒரு பிறவி உருவானது !  இப்படி மேற்போக்கில் பொதுவாகச் சொல்லும் ஒரு விளக்கத்தில் எவரொவரும் திருப்தி அடைய முடியாது.”

மில்லர் & ஆர்ஜெல் (Miller & Orgel in their Book “The Origin of Life on Earth -1974)

“நாம் மட்டும்தான் தனியாக (பிரபஞ்சத்தில்) உள்ளோமா ? என்று கேட்டால் அதற்கு எனது எளிய, சிறிய பதில் ‘இல்லை’ என்பதே !  எனது சிந்தனை நோக்குகள் மூன்று : முதலாவது விண்வெளிப் புறக்கோள்களில் வேறு உயிரினங்கள் இல்லை என்பது.  இரண்டாவது ஓரளவு நிச்சமின்றி ஏதோ இருக்கலாம் என்பது.  ஆனால் அங்கிருந்து விண்வெளியில் நமக்குச் சமிக்கை அனுப்புகிறது என்று நம்பாத நிலை.  நான் விரும்பும் மூன்றாவது பூர்வாங்க உயிரினம் (Primitive Life) பொதுவாகப் பரவி இருக்கிறது.  ஆனால் அறிவு விருத்தியடைந்த ஓர் உயிர்ப்பிறவி (Intelligent Life) வசிப்பது என்பது அபூர்வம்.”

ஸ்டீஃபன் ஹாக்கிங் (நாசாவின் 50 ஆண்டு நிறைவு விழா உரை)

“விண்வெளி வேலி விளிம்பைத் தள்ளி அப்பால் ஆராய்ந்தால் நாம் அவற்றைக் (உயிரினத்தைக்) காண முடியும் !  நம்மைப் போல் அவை இல்லாமல் போகலாம்.”  – மைக்கேல் ஃபோர்மன்

“ஆனால் பிரம்மாண்டமான பிரபஞ்சத்தில் பிற கோள்களில் உயிரினம் இருக்காது என்பதை நம்புவது எனக்குக் கடினமாக உள்ளது.  நம்மைப் போன்ற உயிரினம் வேறு கோள்களில் நிச்சயம் வசிக்க வேண்டும்” – டகோவா டோய், ஜப்பானிய விமானி.

“நான் உறுதியாக நம்புகிறேன், நாம் (உயிரினத்தை) காணப் போகிறோம்,  என்ன வென்று விளக்க முடியாத ஒன்றை.”  – கிரிகரி ஜான்ஸன்.

“ஐரோப்பியக் கடற்பயணத் தீரர்கள் கடந்த காலத்தில் பயணத்தைத் துவக்குவதற்கு முன்பு கடல் தாண்டிச் சென்றால் என்ன காணப் போகிறோம் என்று அறியாமல்தான் புறப்பட்டார்.  அண்டவெளியில் பயணம் செய்யும் போது நாமும் என்ன காண்போம் என்பதை அறிய மாட்டோம்.  அந்தச் அறியாமைதான் நம் பயணத்துக்கு மகத்துவம் அளிக்கிறது.  நான் நிச்சயம் நம்புகிறேன். ஒருநாள் நாம் காணப் போகிறோம், நமக்குப் புரியாத ஒன்றை !” – டாமினிக் கோரி, எண்டவர் குழுத் தளபதி

“வேறு அண்டவெளிக் கோள் உயிரினத்துடன் (Extraterrestrial Life) புவி மனிதர் தொடர்பு கொள்ள வெகுகாலம் ஆகலாம் !  துரதிட்டவசமாக நமது விண்வெளிப் பயணங்கள் எல்லாம் இன்னும் குழந்தை நடைப் பயிற்சியில்தான் உள்ளன!” – ரிச்சர்டு லின்னென்.

நாசா எண்டவர் விண்வெளி மீள்கப்பல் விமானிகள் [மார்ச் 2008]

 


பிரபஞ்சத்தில் பூர்வாங்க உயிரினச் செல்கள் எப்படித் தோன்றின ?

பூர்வாங்க பூமியிலே எப்படி உயிரினம் ஆரம்பமானது என்றோ அல்லது பிரபஞ்சத்தில் வேறு எங்காவது உயிரினம் தோன்றியிருக்க வாய்ப்புள்ளது என்றோ உறுதியாக நாம் சொல்ல முடியாத நிலையில் இருக்கிறோம் !  எங்கே முதலில் உயிரின மூலாதார உற்பத்தி ஆரம்பமானது என்பதற்குப் பல்வேறு கோட்பாடுகள் இருக்கின்றன.  வான உயிரியல் (Astrobiology) விஞ்ஞானம் என்பது பிரபஞ்சத்தில் உயிரினத்தைப் பற்றிய கல்வி.  அந்தப் பல்துறை அடைப்படைப் புது விஞ்ஞானம் உயிரினத்தின் மூலாதாரம், தோற்றம், பங்களிப்பு, முடிவு ஆகியவற்றையும் எங்கே அந்த உயிரினம் இருக்கலாம் என்றும் புகட்டுகிறது.  பூமியிலே எப்படி உயிரினங்கள் ஆரம்பத்தில் உருவாயின என்று உளவிட விஞ்ஞானத்தின் பல்வேறு பகுதிகளில் ஒருவர் ஆழ்ந்து ஈடுபட வேண்டும்.  அந்த சிக்கலான கேள்விக்கு விடைகாணப் பௌதிகம், இரசாயனம், உயிரியல், வானியல் (Physics, Organic & Inorganic Chemistry, Biology & Astronomy) ஆகிய விஞ்ஞானப் பிரிவுகள் தேவைப்படுகின்றன.

கடந்த 50 ஆண்டுகளில் விஞ்ஞானிகள் புரிந்த மூலாதார விண்வெளிக் கண்டுபிடிப்புக்கள் மூலம் பூமி உண்டான போது ஆரம்ப காலங்களில் “தன்னினம் பெருக்கும் சிக்கலான செல்கள்” (Self-Replicating Complex Cells) உதித்த போக்கு முறைகள் தெளிவாகின்றன !  உயிரின மூலாதாரக் குறிப்புக்கு அண்டக்கோளின் ஆரம்பகாலச் சூழ்வெளி அறியப் படவேண்டும்.  துரதட்டவசமாக பூகோளத்தின் துவக்கத்தில் உயிரினத் தோற்றத்துக்கு உதவும் சூழ்வெளியின் வாயுக்கள், தள உஷ்ணம், வாயு அழுத்தம், தள இரசாயனம், காற்றில் நீர்மை (Moisture), கடல்நீரின் pH அளவு (pH —> 0-14 Scale Measurement of Water Acidity/Alkalinity) போன்ற சான்றுகள் எவையும் உறுதியாக அறியப்பட வில்லை.  உயிரினத் தோற்ற முதலில் உளவுகள் பூர்வப் பாறைகளில் உள்ள கார்பன், ஆக்ஸிஜன் கலவையைக் காட்டினாலும் தர்க்கத்தில் சிக்கி அவை நிச்சயம் ஆகவில்லை.  ஆயினும் பூமி தோன்றிய முதல் பில்லியன் ஆண்டுகளில் உயிரினம் உதிக்க ஆரம்பித்தது என்பதில் விஞ்ஞானிகளிடையே உடன்பாடு ஏற்பட்டிருக்கிறது.

உயிரின இரசாயனத்தின் (Biochemistry) இரு மகத்தான மைல்கற்கள்

உயிரினம் என்பது இரசாயன இயக்க விளைவு (Chemical Phenomenon) என்பதை நாம் அறிவோம்.  பூமியின் உயிரின முளைப்பு அடிப்படைக்குப் “பிறவித் தாதுக்களான டியென்னே & ஆரென்னே”  (Genetic Materials DNA & RNA) ஆகிய இரண்டும் மற்றும் புரோட்டின், (Protein & Membrane Components) (Biological Membrane -A Continuous Layer of Fat Molecules that encloses a Cell] ஆகியவையும் காரணமானவை.  டியென்னே என்பது மூன்று மூலக்கூட்டுகள் (Nucleic Acid Bases +Sugars +Phosphates) கொண்ட “இரட்டை நெளிவு” (Double Helix).  புரோட்டின் அமினோ அமிலத்தில் ஆனது.

1950 ஆண்டுகளில் அமெரிக்க இரசாயன விஞ்ஞானிகள் ஹரால்டு யுரே & ஸ்டான்லி மில்லர் [Harold Urey (1893-1981) & Stanley Miller (1930-)] ஆகியோர் இருவரும் எப்படி உயிரின அமைப்பு மூலக்கூறு அமினோ அமிலம் (Amino Acid —> Water-soluble Organic Molecule with Carbon, Oxygen, Hydrogen & Nitrogen containing both Amino Group NH2 & COOH) பூர்வாங்கப் பூமியின் புழுதிக் கடலில் முதலில் தோன்றியிருக்கும் என்னும் முக்கியமான சோதனையை ஆய்வுக் கூடத்தில் செய்து காட்டினார்கள் !

விஞ்ஞான உளவுக்கு வால்மீன்கள் ஏன் முக்கியமானவை ?

சிக்கலான ஆர்கானிக் மூலக்கூறுகள் விண்பாறைகளிலும், வால்மீன்களிலும் (Asteroids & Comets) இருப்பதை விஞ்ஞானிகள் பல சோதனைகள் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.  சில விஞ்ஞானிகள் பரிதியைச் சுற்றிவந்த ஆரம்பகால வால்மீன்கள் வழி தவறிப் பூமியின் சுற்று வீதியில் புகுந்து வீழ்ந்திருக்கலாம் என்றும் அப்போது அவற்றிலிருந்து ஏராளமான ஆர்கானிக் இரசாயனக் கலவைகள் பூமியில் பொழிந்திருக்கலாம் என்றும் கருதுகிறார்.  அத்துடன் பூமி உருவான பிறகு அதன் மீது ஏராளமான விண்கற்கள், வால்மீன்களின் தாக்குதல் இருந்ததாகச் சான்றுகள் மூலம் அறிய வருகிறது.  அப்போதுதான் வெளிக்கோள் ஒன்று பூமியைத் தாக்கி நிலவு உருவானது.  வால்மீன்கள் பேரளவு நீர் வெள்ளத்தைப் பூமியில் கொட்டியதுடன், அதன் ஆர்கானிக் கூட்டுகளையும் இறக்கின !  விண்கற்களிலும் வால்மீன்களிலும் சிக்கலான “அமினோ அமிலம்” போன்ற இரசாயன மூலக்கூறுகள் இருக்கின்றன.  1969 இல் ஆஸ்திரேலியாவில் விழுந்த மர்சிஸன் விண்கல்லில் (Murchison Meteorite)  கார்பன் கூட்டுப் பொருளும் இரண்டுவித அமினோ அமிலமும் (A Carbonaceous Chondrite & Two Types of Amino Acids) இருந்தது தெரியவந்தன.  அப்படி விண்கற்களும், வால்மீன் சிதைவுகளும் விழுந்து பூமியில் சிந்திய அமிலோ அமிலம் போன்ற உயிராக்கப் புரோட்டின் மூலக்கூறுகள் பூதளத்திலும் கடல் நீரிலும் விழுந்து உயிரினச் செல்களை உற்பத்தி செய்திருக்க வேண்டும் என்று ஊகிக்கப் படுகிறது.  மேலும் சிக்கலான ஆர்கானிக் மூலக்கூறுகள் கனத்த மோதுதலில் சிதைந்து போக மாட்டா என்றும் பூமியில் செய்த சோதனைகளில் நிரூபிக்கப் பட்டிருக்கின்றன !

4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு சூரிய மண்டலம் உண்டான அதே ஆரம்ப காலங்களில் வால்மீன்களும் தோன்றி யிருக்கலாம் என்று வைத்துக் கொள்ளலாம்.  ஆனால் பரிதியும் அதன் கோள்களும் பன்முறை மாறியது போல் வால்மீன்கள் அடுத்தடுத்து மாற வில்லை !  காரணம் வால்மீன்கள் சிறிய வடிவம் கொண்டவை.  கோள்களில் ஏற்பட்ட பேரளவு பூகம்பங்கள் போல் வால்மீனில் நிகழ்ந்து கொந்தளிப்புகள் நேர வாய்ப்புக்கள் இல்லை !  அவற்றில் கதிரியக்க உலோகங்கள் எவையும் தங்கி வெப்பம் ஊட்டி மாற்றியதாகவும் தெரியவில்லை.

பிற அண்டங்கள் பொழிந்து பூகோளத்தில் உயிரினத் தோற்றம்

உயிரனப் பிறப்புக்கும் விருத்திக்கும் வேண்டிய மூலாதாரங்கள்:

1.  ஏராளமான, நிலையான நீர் வளம்

2. கூடாமலும் குன்றாமலும் மிதமான தொடர்ந்து கட்டுப்பாடாகும் எரிசக்தி (வெப்பம்)

3. இரசாயன மூலக்கூறுகள் /ஆர்கானிக் மூலக்கூட்டுகள்

4. உயிரனப் பெருக்கத்திற்கு ஏற்ற வினையூட்டி. (A Reproductive Mechanism)

உயிரின இயக்க வாழ்வுக்கு முக்கியமான முறைகள் 

1.  வளர்ச்சிக்கும் இயக்கத்துக்கும் வேண்டிய உயிரினத்தின் இரசாயன வினையியல் (Metabolism)

2.  சந்ததி விருத்திக்கு வேண்டிய உயிரினப் புணரியல் (Reproductive Life Process)

3.  உஷ்ணம், அழுத்தம், வெப்பக் கட்டுப்பாடு போன்ற சூழ்வெளி வாயு இயக்கவியல் (Evolution through Interaction with the Environment)
[தொடரும்]

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – Did Comets Bring Life to Earth ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? (April 2008)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 The Origin of Earth (www.moorlandschool.co.uk/earth/earthorigin.htm)
20 Structure & Composition of Earth’s Atmosphere (http//:ess.geology.ufl.edu/)
21 History of Earth (www.mansfield.ohio-state.edu/) (March 31 2007)
22 Life in the Universe -What is Astrobiology ? By : Oratie P. Ehrenfreund.
23 The Beginning of Life & Amphiphilic Molecules By Janet Woo (August 2004)
24 NASA Endeavour Astronauts Debate Extraterrestrial Life By : Josh Hill, Rebecca Sato & Casey Kazan (www.dailygalaxy.com/) (May 14, 2008)
25  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40207071&format=html
26  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40301043&format=html
27  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507071&format=html
28  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40507151&format=html
29  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40601202&format=html
30  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40601272&format=html
31  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703011&format=html
32  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703083&format=html
33  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703151&format=html

******************

jayabarat@tnt21.com [May 15, 2008]

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியின் சிக்கலான உள்ளமைப்பு எப்படித் தோன்றியது ?

கட்டுரை:28

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

அண்டவெளிக் களிமண்ணில்
ஆப்பமாய்ச் சுடப்பட்டுத்
துண்டான சட்டி ! குயவன்
முடுக்கி விட்ட பம்பரக் கோளம் !
உடுக்க டித்துக் குலுக்கும் மேளம் !
தொங்கிடும் பூமியில்
எங்கெங்கு வாழினும் இன்னல்தான் !
ஏழு பிறப்பிலும் தொல்லைதான் !
எப்புறம் நோக்கினும்
இயற்கை யின்  சீற்றம்தான்
அசுரப் பேய் ஆட்டந்தான் !
துளையிட்டு நோக்கப் பூமிக்குள்
நுழைய வழியில்லை !
கடற்தட்டு துடித்தால்
சுனாமி !
புவித் தட்டுகள் மோதினால்
பூகம்பம் !
குடற் தட்டு நெளிந்தால்
நில நடுக்கம் !
சூழ்வெளி மட்டும் மாசாக வில்லை !
ஆழ்ந்த வயிற்றுக் குள்ளும்
ஆறாத காயங்கள் !

++++++++++++

“ஹோரேசியோ ! கற்பனையில் தோன்றிய உனது வேதாந்தக் கருத்துக்களை விட மேம்பட்ட தகவல் பூமியிலும் விண்ணுலகிலும் நிரம்ப உள்ளன !”

வில்லியம் ஷேக்ஸ்பியர் (ஹாம்லட் நாடகம்) (1564-1616)

‘எனக்கு முன்பு அண்ட வெளியில் மனிதர் தேடிய இடத்தைத் தாண்டி, அதற்கும் அப்பால் என் கண்கள் பிரபஞ்சத்தை ஆழமாய் நோக்கிச் சென்றன.’ வில்லியம் ஹெர்ச்செல் (1738-1822) உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது. கடற்கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது. ஆனால் கண்டு பிடிக்க முடியாதபடி மாபெரும் உண்மைக் கடல் என் கண்முன்னே பரந்து கிடக்கிறது.

ஸர் ஐஸக் நியூட்டன் (1642-1727)

அகிலத் தூசி சேர்ந்து துகளாகி, துகள்கள் மண்ணாகி, மண் கட்டியாகி உருண்டு சிறு கோளாகி முடிவாக ஓர் பெரும் அண்டகோள் ஆனது ! இந்த “ஈர்ப்புத் திரட்சி முறையில்” (Accretion Process) 6 மைல் (10 கி.மீ.) விட்ட அளவுள்ள ஒரு சிறு பூமி உண்டாகச் சுமார் 100 மில்லியன் ஆண்டுகள் ஆகலாம் !

ஆட்டோ ஸ்மித் (Otto Schmidt) (1944) அண்டக்கோள் (Planet) என்பது என்ன ?

ஈர்ப்புத் திரட்சியால் (Accretion Process) சூப்பர்நோவாவின் வாயுப் பிண்டத்தை இழுத்துக் கோள வடிவமாகும் ஓர் அண்டம். ஒரு கோள் தன்னச்சில் சுழன்று முக்கியமாக ஒரு சுயவொளி விண்மீனை வட்ட வீதிலோ அல்லது நீள்வட்ட வீதிலோ சுற்றும். தனது சுற்றுவீதியில் குறுக்கிட்ட விண்கற்கள், வால்மீன்கள், எரி விண்மீன்கள், விண்தூசிகள் ஆகியவற்றைப் பற்றிக் கொள்ளும் திறமுடையது. அண்டக்கோள் ஓர் ஈர்ப்புக் கிணறு (Gravity Well). சுயவொளி விண்மீன் உண்டாக்கும் பிணைப்புச் சக்தியால் உற்பத்தியான மூலகங்களை இழுத்துக் கொள்ளும். பொதுவாக ஒரு காந்த மண்டலமும் கொண்டது.

பூகோளத்தின் புதிரான மேற்தட்டு, நடுத்தட்டு, உட்கரு

விஞ்ஞானிகளுக்கு இன்றும் விடுவிக்க முடியாத ஒரு பெரும் புதிராக இருந்து வருவது பூகோளத்தின் கொந்தளிக்கும் விந்தையான உட்புற அமைப்பு ! ஆழமாய்த் துளையிட்டுப் பூமியின் மையத்தைக் கண்ணாலும், கருவியாலும் நோக்க முடியாது ! பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி சேயாகப் பிறந்த காலம் முதல் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. முதல் பில்லியன் ஆண்டுகளில் உருவான அதன் மேற்தட்டு, நடுத்தட்டு, உட்கரு (Crust, Mantle & Core) மூன்றும் மென்மேலும் விருத்தி அடைந்துள்ளதாக ஊகிக்கப்படுகிறது. ஆனால் அவை எப்படி உருவாயின என்பதற்கு உள்ள விஞ்ஞான ஆதாரங்கள் மிகச் சொற்பம். ஒருவேளை ஆரம்பித்திலே ஓரினச் சீர்மைத் திணிவு நிறை (Homogeneous Mass) ஓரளவு அல்லது பூராவும் உருகி ஈர்ப்புச் சக்தி கனமான பிண்டத்தில் பகுதியைத் திரவமாகவும், பகுதியைத் திடவமாகவும் (Partly Liquid & Partly Solid) திரட்டி யிருக்கலாம் ! திடவப் பிண்டம் (Solid Matter) உட்கருவாகவும், அதைப் போர்த்தும் சூடான திரவப் பிண்டம் (Liquid Hot Matter) நடுத்தட்டாகவும் அமைந்து விட்டன என்று கருதலாம் ! நடுத்தட்டுக்கு மேல் மெல்லியதான மேற்தட்டு பரவி 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே நிலையாகப் போனது ! அதற்குப் பிறகும் நீண்ட காலமாக மாறுபாடாகி சிக்கலான முறையில் மேற்தட்டு வடிவாகியுள்ளது.

4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நமது சூரிய குடும்பம் தோன்றியது என்று கணிக்கப் படுகிறது ! சுமார் 7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியின் பெரும்பான்மையான திணிவுப் பிண்டம் (Matter) சூபர்நோவா (Supernova) மூலமும் விண்மீன்களின் கொடையாலும் சேர்ந்தது என்றும் அறியப்படுகிறது. அதனால் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே பூமியின் முழு வடிவம் உருவாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப் படுகிறது. அதிலிருந்து பூகோளம் பல்வேறு முறைகளில் மாறியுள்ளது. ஆரம்பத்தில் பூமி உருவாகும் போது வெப்பத்தாலும், ஈர்ப்புச் சக்தியாலும் கொந்தளிப்புச் சேமிப்புடன் திரண்ட வடிவம் கரடுமுரடாக உருவானது. பரிதி மண்டலத்தின் மற்ற கோள்கள் உண்டான அதே சம காலத்தில்தான் பூகோளமும் சூரியனை மையமாக வைத்துச் சுற்றிக் கொண்டு உருவானது. அனுமானிக்கப் பட்ட கோள வடிவான சூப்பர்நோவா போன்ற ஒரு பேரண்டம் (Large Body Like Supernova) ஆப்பம் போல் சுற்றிக் கோள்கள் தோன்றின என்னும் கோட்பாடு ஒப்புக்கொள்ளப் பட்டிருக்கிறது. முதலில் குளிர்ந்த சேய் பூமி (Proto Baby Earth) விரைவாகச் சூடாகி 100 மில்லியன் ஆண்டுகளில் அதன் உலோக உட்கரு (Metallic Core) உருவாகி யிருக்கலாம். ஆரம்ப காலத்தில் சேய் பூமியை அடுத்துத் தொடர்ந்து ஏராளமான விண்கற்கள், வால்மீன்கள், எரியும் விண்மீன்கள் (Asteroids, Comets & Meteorites) தாக்கின ! பேபி பூமியின் மேல் புறத்தில் கொந்தளிக்கும் திரவம் (Exterior Molten Skin) இருந்திருக்கலாம், அந்த கனல் திரவம் உஷ்ணம் தணிந்து பிறகு மேல்தட்டு (Crest) உண்டாகி இருக்கலாம்.

பூகோள வரலாற்றின் ஆரம்பத்திலே புற அண்டம் ஒன்று பூமியைத் தாக்கி அதன் துணைக்கோள் நிலவு தோன்றியது என்று கருதப்படுகிறது. இரண்டாம் முறைத் தாக்குதலில் பூமியின் மேற்தட்டு (Crest) அழிந்து போனது. 3.8 பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு தற்காலம் வரைப் பிழைத்த பாறைகள் பஸால்ட் மூடிய ஸிலிகா பாறை மேற்தட்டாக (Crest of Silicic Rocks Embedded in Basaltic layer) உலகம் பூராவும் படிந்துள்ளன ! அப்போதுதான் “மேலெழுச்சி பூதட்டு நகர்ச்சி” (Convection-Driven Plate Tectonics) உந்தப்பட்டு பேபிக் கண்டங்கள் (Proto-Continents) நகரத் தொடங்கி இருக்க வேண்டும். ஆரம்ப காலத்துப் பூகோளத்தில் தோன்றிய வாயுச் சூழ்வெளியில் பெரும்பான்மையாக நைடிரஜன், கார்பன் டையாக்ஸைடு அம்மோனியா, மீதேன், சிறிதளவு நீரும் இருந்தன. இவை யாவும் இரசாயனச் சேர்க்கையில் பின்னால் ஆர்கானிக் மூலக்கூறுகள் ஆயின. 3.85 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அவற்றிலிருந்துதான் பூர்வீக ஒற்றைச் செல் பாக்டீரியா (Primitive One-Celled Bacteria) உற்பத்தியானது. அதன் பின் உயிரின ஜந்துகள் பெருகி சூரிய ஒளிச்சேர்ப்பு முறையால் பேரளவு ஆக்ஸிஜன் சூழ்வெளியில் பெருக ஆரம்பித்தது.

பூமியின் உள்ளமைப்புத் தோற்றம் !

பூமியின் சிக்கலான உள்ளமைப்பைப் பொதுவாக மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம். மற்றும் சில உட்பிரிவுகளோடு ஐந்து பகுதிகளாக வகுக்கலாம். மேற்தட்டு, மேல் நடுத்தட்டு, கீழ் நடுத்தெட்டு, உட்கரு, புறக்கரு. (Crust, Upper Mantle, Lower Mantle, Outer Core & Inner Core) என்று ஐந்து பகுதிகளாகப் பாகம்படும்.

1. மேற்தட்டின் தடிப்பு மெல்லியது. பூமியில் 20 மைல் (32 கி.மீ) ஆழத்திலிருந்து ஆரம்பித்து இமயமலை உச்சி வரை உயர்ந்து மேடு பள்ளமாய் இடத்துக்கு இடம் மிகவும் மாறுபடுகிறது. காண்டங்களில் 5 மைல் (8 கி.மீ.) ஆழத்தில் பாறையாயும் (Granite), கடலுக்குக் கீழ் பஸால்டாகவும் (Basaltic) உள்ளன. மேற்தட்டு பலதடவை வெப்பத்தால் அழிந்து மீண்டும் உருவானது என்று கருதப்படுகிறது. கடுமையான சூரிய உஷ்ணத்தால் மேற்தட்டு உருகிச் சிதைந்தால் அதன் மீது வாழும் உயிரினங்கள் அனைத்தும் மாண்டு போகலாம். பூமியின் வாயுச் சூழ்வெளி குடை பிடித்து சூரியனின் உக்கிரக் கனல் மேற்தட்டைப் பாதிக்காமல் பாதுகாக்கிறது !

2. மேற்தட்டுக்குக் கீழாக 375 மைல் (600 கி.மீ) ஆழம் வரை இருப்பதை மேல் நடுத்தட்டு என்ற பெயரில் குறிப்பிட்டு அதை மேலரங்கம், கீழரங்கம் (Upper Zone & Lower Zone) என்று இரண்டாக வெவ்வேறு P-அலை வேகத்தில் பிரிவு செய்யப்படுகிறது.

3. கீழ் நடுத்தட்டு பூமியிலிருந்து 1800 மைல் (2900 கி.மீ) ஆழத்தில் செல்கிறது. மேல் நடுத்தட்டு, கீழ் நடுத்தட்டு இரண்டிலும் தாது மூலகப் பாறை (Peridotite – Mineral Rock) நிரம்பியுள்ளது.

4. புறக்கரு பெரும்பான்மையாக திரவ இரும்பு, நிக்கல் உலோகத்தைக் கொண்டது. இந்த திரவ அரங்கம் 3200 மைல் (5120 கி.மீ.) ஆழம் வரைச் செல்வது. இந்த அரங்கத்தில் மேலெழுச்சிக் கொந்தளிப் போட்டம் (Dynamo Action of Convection Currents) உள்ளதால் பூமியின் காந்த மண்டல (Earth’s Magnetic Field) விரிப்புக்கு ஏற்புடையதாகிறது.

5. உட்கரு 800 மைல் (1300 கி.மீ) விட்டமுள்ள ஓர் உலோகத் திடக் கோளம் (Solid Metal Globe) ! ஈர்ப்புச் சக்தியால் அங்குள்ள அழுத்தம் : பூதளத்தில் உள்ள அழுத்தத்தைப் போல் மூன்றரை மில்லியன் மடங்கு (35000 kg/mm^2) மிகையானது !

ஓய்வில்லாமல் உப்பிடும் இன்றைய பூகோளம் !

பல மில்லியன் ஆண்டுகளாக படிப்படியாக மிக மெதுவாகப் பூகோளத்தின் பூத வடிவம் மாறி வருகிறது ! 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆரம்ப காலத்து விட்டம் 4000 மைல் (6600 கி.மீ.). 3.5 பில்லியன் ஆண்டில் அதன் விட்டம் 4800 மைலாக (8000 கி.மீ.) விரிந்தது. 2.8 பில்லியன் ஆண்டில் 5280 மைல் (8800 கி.மீ) விட்டமும், 600 மில்லியன் ஆண்டுகளில் 7200 மைல் (12000 கி,.மீ.) விட்டமும் இருந்து, இப்போது 7850 மைல் (12750 கி.மீ.) விட்டம் கொண்டுள்ளது. பூமியின் பூமத்திய விட்டம் 100 ஆண்டுகளுக்கு 5 அங்குலம் வீதம் நீள்கிறது ! பூதள உள்ளமைப்பில் உள்ள உலோகக் கனல் திரவம் கொந்தளிப்பதால் மேலெழுச்சி ஓட்டங்கள் (Convection Currents) நிகழ்கின்றன ! அந்த ஓட்டமே பூகோளத்தின் உந்துசக்தியாக (Driving Force) மலை மேடுகளை உண்டாக்கியும், கண்ட நகர்ச்சியைத் (Continentel Movement) தூண்டியும் வருகிறது !

பூமியின் உள்ளமைப்பை மெய்யாக நமக்கு அறிவிப்பவை நேரிடைக் கணிப்பு ஆராய்ச்சிகள் இல்லை ! மாறாக பூமிக்குள் எப்போதாவது ஏற்படும் பூகம்ப நடுக்கத்தின் அதிர்ச்சி அலைகளே (Earthquake Shock Waves) பூமியின் உள்ளமைப்பை மறைமுகமாக நமக்கு அறிவிக்கின்றன ! மனிதரின் நேரிடை அறிவு பூமியின் மேற்தட்டை 5 மைல் (8 கி.மீ.) ஆழத் துளையிட்டுக் கண்டறிந்தவையே ! நிலவையும், செவ்வாய்க் கோளையும் தெரிந்துள்ள அளவு மனிதன் பூமிக்குக் கீழ் 20 மைல் (33 கி.மீ) ஆழத்தில் உள்ள அமைப்பை அறியக் கூடிய நேரிடைக் கருவிகளை இதுவரைப் படைக்க வில்லை !

சூரியனைக் கோண வட்டத்தில் சுற்றும் பூமியும் நிலவும்

பூமியின் கடல் அலைகளில் உயர்ச்சி நிலை, தாழ்ச்சி நிலை (High Tide & Low Tide) எனப்படும் இரண்டையும் நிலவும், பரிதியும் தனியாகவும், நேர்கோட்டில் அமைந்தும் உண்டாக்கும். அப்போது கடல் வெள்ளம் பூமியின் ஒருபுறம் நீளமாகும் போது மறுபுறம் குறுகும். பூமி சூரியனைச் சற்று முட்டை வடிவான வீதியில் சுற்றுகிறது. அதனால் ஒரு சமயம் பூமி தன் சராசரி தூரத்தை விட 1,500,000 மைல் (2,500,000 கி.மீ) விலகிச் செல்கிறது. ஆயினும் பூமி பாதுகாப்பான “உயிர்ச்சாதகக் கோளத்தில்” (Ecosphere) இயங்க முடிகிறது. இந்தப் பாதுகாப்பு வெப்ப அரங்கம் சுக்கிரன் சுற்றுவீதி முதல் செவ்வாய்ச் சுற்றுவீதி வரை நீடிக்கிறது. ஏதாவது இயற்கை விதி மீறி பூமியின் சுற்றுவீதி மாறிப் போய் சூரியனுக்கு அருகில் சென்றாலோ அல்லது விலகிச் சென்றாலோ பேரளவு வெப்ப மாறுதல் உண்டாகி உயிரினமும், பயிரினமும் பேரளவில் பாதிக்கப்படும். விலகிச் சென்றால் பூமியின் கடல் பூராவும் உறைந்து பனிக்கோள் ஆகிவிடும். நெருங்கிச் சென்றால் சுக்கிரனைப் போல் பூமியும் சுடுபாலையாய் ஆகிவிடும் !

பூமியின் சாய்ந்த அச்சுக் கோணம் (23.45 டிகிரி)

பூமி தோன்றிய காலத்தில் புற அண்டம் ஏதோ ஒன்று தாக்கி அதன் சுழல் அச்சு 23.45 டிகிரி சாய்ந்து போனது. அந்த சாய்ந்த அச்சால் பூமிக்குக் காலநிலை (வசந்த காலம், கோடை காலம், இலையுதிர் காலம், குளிர் காலம்) மாறுகிறது. இந்த சாய்ந்த அச்சின் கோணம் சுமார் 23.5 டிகிரியில் இம்மியளவு கோணம் கூடியோ அல்லது குன்றியோ பூமி சுற்றினால் காலநிலைக் கோளாறுகள் பேரளவு நேர்ந்து பூமியின் உயிர்னங்களும், பயிரினங்களும் பாதிக்கப்படும். சூடேறும் பூகோளமாய் ஒருபுறத்தில் ஆகும் போது, மறுபுறத்தில் குளிர் நடுங்கும் பனிக் கோளாய் ஆகிவிடும். பூமியின் பூத காந்த மண்டலம் ! சூரியனின் அசுரத்தனமான கதிர்ப்புயலைப் பாதுகாக்கும் ஒரு கவசமாகப் பூமியின் காந்த மண்டலம் உதவுகிறது. சூரியப் புயலில் அபாயகரமான மரண மின்னியல் கதிர்கள் பூமியை நோக்கி வீசுகின்றன. அவை யாவும் பூமியின் “வான் ஆலன் இரட்டை வளையங் களால்” (Van Allen Belts – Two Bands) தடுக்கப் படுகின்றன. பூமியின் பூர்வீக ஏகக் கண்டம் பாங்கியா (Super-Continent Pangaea) ஆரம்ப காலத்துப் பூகோளத்தில் சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இப்போதுள்ள தனித்தனிக் கண்டங்கள் (ஆசியா, ஆ·பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென்னமெரிக்கா, அண்டார்க்டிகா) எல்லாம் நெருங்கி ஒட்டிக் கொண்டு இருந்தன ! அந்த ஒற்றைப் பெருங் கண்டம் “பாங்கியா பூதக்கண்டம்” (Super-Continent Pangaea) என்று குறிப்பிடப் படுகிறது. 135 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அவை மெதுவாகப் பிரியத் தொடங்கின ! முதலில் பூதக்கண்டம் வடகோளம் (Laurasia), தென்கோளமாக இரண்டாய்ப் (Gondwana) பிரிந்தது. 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு பாதிகள் மேலும் பிரிந்து தற்போதுள்ள இடத்திற்கு நகர்ந்துள்ளன !

[தொடரும்]

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)

3. Astronomy Facts File Dictionary (1986)

4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? (April 2008)

6. Cosmos By Carl Sagan (1980)

7. Dictionary of Science – Webster’s New world (1998)

8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)

10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)

11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)

12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)

14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)

15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)

16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)

17 The Geographical Atlas of the World, University of London (1993).

18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)

19 The Origin of Earth (www.moorlandschool.co.uk/earth/earthorigin.htm)

20 Structure & Composition of Earth’s Atmosphere (http//:ess.geology.ufl.edu/)

21 History of Earth (www.mansfield.ohio-state.edu/) (March 31 2007)

******************

jayabarat@tnt21.com [May 8, 2008]

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! பூமியில் வாயுச் சூழ்வெளி எப்படி ஏற்பட்டது ?

(கட்டுரை: 27)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

கோடான கோடி ஆண்டுகளாய்
உயிர்களுக்கும், பயிர்களுக்கும்
ஓடும் நதிகளுக்கும்
ஓயாத அலைகளுக்கும்
வாயுக் குடை பிடிக்கும்
மாயத் தலைவன் யாரப்பா ?
அளப்பரிய இடி மின்னல்
சுழற்றி வீசும் சூறாவளி
அடுத்தடுத்து ஏவிடும்
அசுரனும் யாரப்பா ?
அகிலக்கதிர் பொழிவுகள்
பூமியின்
அடித்தளம் நுழையும்
அக்கினிப் பூக்கள் !
மண்டையில் விழாமல்
அண்டக் கற்கள் சாம்பலாய்
எரிந்து போகும் !
பரிதியின் கொடுங்கதிர் நம்மேல்
படாமல் பாதுகாத்து
காலநிலை மாறி மாறி
ஆழியாய்ச் சுற்ற வைக்கும்
ஊழ்நெறி முதல்வனின்
ஒரு புதிர் இதுவன்றோ ?

“பூமியில் எப்போது உயிரங்கள் தோன்றின என்பது எங்களுக்குத் தெரியாது.  ஆனால் அவை 4.3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உதித்திருக்கக் கூடும் என்று கருத ஆதாரம் உள்ளது.  ஏனெனில் உயிரின வளர்ச்சிக்கு ஏற்ற மூன்று முக்கிய மூலாதாரங்கள் அப்போதிருந்தன !  முதலாவது வெப்ப ஒளிச்சக்தி உடைய சூரியன் !  இரண்டாவது அடிப்படை இரசாயன மூலகங்கள், மூலக்கூறுகள், (ஹைடிரஜன், ஆக்ஸிஜென், நைடிரஜன், கார்பன் போன்றவை) வால்மீனிருந்து சிக்கலான ஆர்கானிக் கூட்டுகள் ! மூன்றாவது பூமியில் நீர்வளம் சேமிப்பு !  பூகோளம் தோன்றி 200 மில்லியன் ஆண்டுகளுக்குள் உயிரின விருத்திக்கு வேண்டிய மூலாதாரங்கள் அனைத்தும் உண்டாகி விட்டன !”

மார்க் ஹாரிஸன் பேராசியர் பூதள இரசாயனம் (UCLA Geochemistry) (2001)

“பூமியில் உயிரினம் ஆரம்பமாக வால்மீன்கள் மோதிக் கொட்டிய நீர் வெள்ளம் சிறிதளவாகத்தான் இருக்க முடியும் !  தோற்ற காலத்திலிருந்தே பூமியில் ஏராளமான நீர் வெள்ளம் உண்டாகி இருக்க  வேண்டும் !  பூமியின் விந்தையான வாயு மண்டல அமைப்பும் புதிராக இருக்கிறது ! நிலைப்பு மாறாத “உத்தம வாயுக்கள்” எனப்படும் கிரிப்டான், ஸெனான் (Extremely Stable Noble Gases – Krypton & Xenon) ஆகியவற்றின் கலப்பு பின்னம் பூமியில் உள்ளதைப் போலவே சூரியனிலும் இருக்கிறது.  அதாவது பரிதி, பூமி இரண்டின் வாயு மண்டலக் கூட்டு மூலக்கூறுகள் ஒரே மூலத்திலிருந்து உதித்தவை.  நீர் வெள்ளமும், வாயு மண்டலமும் பூமிக்கோள் உண்டான போதே தோன்றி உயிரினம் உதிக்க ஏதுவான சூழ்வெளியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.”

நிகோலஸ் தௌஃபாஸ் (Nicolas Dauphas, University of Chicago, Illinois)

வாயுச் சூழ்வெளியின் மூலாதாரமும் உள்ளமைப்பும்

பூகோளத்தின் சூழ்வெளி அமைப்பு எப்படித் தோன்றியது என்பது இன்னும் தர்க்க முறையில்தான் இருந்து வருகிறது !  ஓரளவு உறுதிப்பாட்டில் விஞ்ஞானிகள் நம்பும் கோட்பாடு இதுதான் :  4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி உண்டான போது மிகவும் சூடாக இருந்ததால், சூழ்வெளி வாயுக்கள் தங்கி நிலவ வாய்ப்பில்லாது போயிற்று !  முதலில் தோன்றிய வாயு மண்டலத்தில் முக்கியமாகப் பேரளவில் ஹைடிரஜன், சிறிதளவில் அம்மோனியா, மீதேன் போன்ற வாயுக்கள் இருந்ததாக அறியப்படுகிறது. !  இரண்டாவது உண்டான சூழ்வெளியில் கொதித்தெழுந்த எரிமலைகள் கக்கிய துணுக்குகள் மூலம் நீராவி, கார்பன் டையாக்ஸைடு, நைடிரஜன் வெளிப்பட்டதாகத் தெரிகிறது.  “வாயு வெளிப்பாடு” முறையில் (Volcanic Outgassing Process) உட்புறப் பூமி வாயுக்கள் வெளியே தள்ளிப்பட்டன என்று அறியப் படுகிறது.  எரிமலைகள் மூலம் ஏராளமான நீராவி வெளியேறி மேக மூட்டம் உண்டாகி மழை பெய்து குழிகளில் நீர் வெள்ளம் நிரம்பியது.  4.3 பில்லியன் வருடங்களுக்கு முன்பு எரிமலைகளின் நீராவி வெளியேறி ஆயிரக் கணக்கான ஆண்டுகளாய் அவ்விதம் மழை வெள்ளம் சேமிப்பாகி ஏரிகளும், கடலும் நீர் நிரம்பின.  நீர்த் தேக்கங்கள் இரசாயன, உயிரியல் முறைகள் மூலமாய்த் (Chemical & Biological Process) தற்போது நிகழ்வது போல் பேரளவில் கார்பன் டையாக்ஸைடு வாயுவை விழுங்கும் “முடக்கிகள்” (CO2 Gas Sinks) ஆக இருந்தன.

நைடிரஜன் வாயு சாதாரணமாக எவற்றுடனும் சேராததால் சூழ்வெளியில் பேரளவு (78%) சேமிப்பாயின !  ஆரம்பத்தில் சிறிதளவு ஆக்ஸிஜன் வாயுதான் உண்டானது.  கடலில் வாழும் ஒற்றை மூலவி பாக்டீரியா (Single-Celled Bacterium in Ocean) உயிர்வாழ ஆக்ஸிஜன் தேவையில்லை !  3.85 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்ப காலத்தில் தோன்றிய பாக்டீரியா (Cyano-Bacteria) சூரிய ஒளிச்சேர்க்கை மூலம் (Photo Synthesis) நீர் மூலக்கூறைப் பிரித்து ஆக்ஸிஜனை ஏராளமாக (21%) வெளியாக்கியது.  பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாய் ஒளிச் சேர்க்கை முறையில் இவ்விதம் ஆக்ஸிஜன் வாயு வெளியாகிச் சேமிப்பாகியுள்ளது.  சூரியனின் “புறவூதா பிரிப்பு” (Photo-Chemical Dissociation) மூலம் நீர் மூலக்கூறு பிரிக்கப்பட்டு ஆக்ஸிஜன் 1%-2% அளவு சேர்ந்தது என்றும் அறியப்படுகின்றது.

பூமியில் வியப்பான பாதுகாப்பு வாயுக்குடை மண்டலம் !

பிரபஞ்சத்தின் தீராத புதிர்களில் ஒன்று பூமியைப் போன்ற அண்டைக்கோள் செவ்வாயில் நிலைபெறாமல் போன வாயுச் சூழ்வெளி !  அடுத்த புதிர் பூமியில் மட்டும் சீரான ஒரு வாயுச் சூழ்வெளி எப்படி நிரந்தரமானது என்பது !  பரிதியின் அகக்கோள்கள் எதிலும் உயிரின வளர்ச்சிக்கும் விருத்திக்கும் பூமியைப் போல் சூரிய வெப்பத்தையும், ஒளிக்கதிரையும் கட்டுப்படுத்தும், மித உஷ்ண வாயு மண்டலம் கிடையாது !  பாதுகாப்பு வாயுக் குடை பூகோளத்தைச் சுற்றிலும் போர்த்தி இருப்பதை ஒப்புமையாகக் கூறினால் அது ஓர் ஆப்பிள் பழத்தின் மெல்லிய தோலைப் போன்றதே !  கோடான கோடி ஆண்டுகளாய்ப் பூகோளத்தின் பூத ஈர்ப்புச் சக்தி வாயு மண்டலத்தை அழுத்தி இழுத்து வைத்திருப்பதோடு அதனைப் பிறக்கோள்கள் களவாட முடியாதவாறும் கண்காணித்து வருகிறது !  பூதளக் கவர்ச்சி காற்று மண்டலத்தின் பாதி எடையைத் தரை மட்டத்திலிருந்து மூன்றரை மைல் (6 கி.மீ.) உயரம் வரை அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறது.  காற்றால் மாறுபடும் காலநிலை வேறுபாடுகள் சுமார் 12 மைல் (20 கி.மீ.) உயரம் வரை நிகழ்ந்து வருகின்றன !

சூரிய வெப்பக் கதிர்களை வாயு மண்டலம் பாதுகாப்பது எப்படி ?

பரிதியை நீள்வட்டத்தில் சுற்றி வரும் பூமி குளிர்ந்து போன சூனிய மண்டலத்தில்தான் பயணம் செய்கிறது.  அந்த சூனிய வெளியில் மிகச் சிறிதளவு வெப்பம் இருந்தாலும், சிதறிக் கிடக்கும் வாயு மூலக்கூறுகள் (Gas Molecules) சூரியனால் சூடாகி 2000 டிகிரி C உஷ்ணம் அடைகிறது.  அதே சமயத்தில் பரிதியின் கடுமையான மேற்தள உஷ்ணம் சராசரி 6000 டிகிரி C.  அந்த அசுர உஷ்ணம் வாயு மண்டலத்தால் மிதமாக்கப் படாது நேராகத் தாக்கினால் பூமியில் உள்ள எந்தப் பண்டத்தையும் உருக்கித் திரவ மாக்கிவிடும் !  ஆனால் ஹைடிரஜன் வாயுப் பிழம்புள்ள சூரியனின் “வண்ணத் தீக்கோளம்” (Chromosphere) ஒரு மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் பேரளவு சூடேறி உள்ளது !  அந்த வண்ணத் தீக்கோளத்திலிருந்தும் கோடிக் கணக்கான மற்ற சுயவொளி விண்மீன்களிலிருந்தும், அண்டவெளி வடிவுகளிலிருந்தும் (Heavenly Bodies) ரேடியோ அலைகள் தொடர்ந்து வருகின்றன.  பரிதி மண்டலத்துக்கு அப்பால் விண்வெளியிலிருந்து ஊடுருவிச் செல்லும் “அகிலக்கதிர்கள்” (Cosmic Rays) பூமி நோக்கிப் பொழிகின்றன !  மேலும் பூகோளத்தைக் காமாக் கதிர்கள், எக்ஸ்ரே கதிர்கள், புறவூதாக் கதிர்கள் (Ultra-Violet Rays) போன்றையும் தொடர்ந்து தாக்கி வருகின்றன !  அத்துடன் சூரிய மண்டல விண்கற்கள் இடுப்பணியிலிருந்து (Solar System Asteroid Belt) பொடிப்பொடி விண்கற்கள் (Micro Meteorites) பூமியை நோக்கி எப்போதும் பொழிந்த வண்ணம் உள்ளன !

பூகோளத்தைத் தாக்கும் இந்த பயங்கரப் பொழிவுகள் பொதுமக்களைப் பாதிக்காமல் பாதுகாத்து வருவது எது ?  பரிதியின் வெப்பக்கதிர்கள் மனிதர் மீது படாதபடி வாயு மண்டலம்தான் மிதமாக்குகிறது !  விண்கற்கள் தலையில் விழுவதற்கு முன்பே வாயு மண்டலம் அவற்றை எரித்துச் சாம்பலாக்குகிறது !  பரிதியின் கொடூர புறவூதாக் கதிர்களை (Ultra-Violet Rays) பூமியின் வாயுக்குடை பல மைல் உயரத்திலே தடுத்து அயான் மின்னிகளாய்ப் பிரித்து (Ionized as Ions in Layers) அயான்கோளத்தில் (Ionosphere) தங்கச் செய்கிறது !  அதுபோல் “உட்சிவப்பு” வெப்பக் கதிர்கள் (Infra-Red Heat Radiation) கீழுள்ள வாயுச் சூழ்வெளியில் விழுங்கப் படுகின்றன.  அகிலக் கதிர்வீச்சு (Cosmic Radiation) வாயு மண்டலத்தில் மோதிப் பல்வேறு மேஸான் துகள்களாய் (Various Meson Particles) மாறுகின்றன !

பூகோள ஈர்ப்புச் சக்தியின் வாயுக்கோளக் கட்டுப்பாடு

வாயு மண்டலத்தை பூதளம் முழுவதும் இழுத்து அழுத்தமாய் வைத்திருப்பது அதன் பூத ஈர்ப்புச் சக்தியே !  வாயு மண்டலத்தின் வாயு மூலக்கூறுகளையும், வாயு அணுக்களையும் பிற அண்டங்கள் கவர்ந்து வெளியேறாதவாறுத் தடுப்பதும் பூமியின் ஈர்ப்புச் சக்தியே !  அதனால் அடுக்கடுக்காய் அமைந்து மேலிருந்து கீழாகப் பூமியில் வாயு அழுத்தம் படிப்படியாய்ப் பெருகிப் போர்வைபோல் மூடியுள்ளது.  முக்கால் பங்கு காற்று மண்டலம் தரையிலிருந்து 29,000 அடி உயரம் வரை (8840 மீடர்) (மௌண்ட் எவரெஸ்ட் உயரம்) பரவியுள்ளது.  பேரளவு உச்சத்தில் பறக்கும் விமானம் சுமார் 22 மைல் (35 கி.மீ) உயரத்தில் மெல்லிய வாயுச் சூழ்வெளியில் பறக்கிறது.  பூகோளச் சூழ்வெளி வாயுக்களின் எடை சுமார் 5000 மில்லியன் மில்லியன் டன் ! (50 X 10^14 Tons) என்று கணிக்கப் படுகிறது.  கீழே பூதளத்துக்கு அருகில் 17 மில்லியன் மில்லியன் டன் “ஆவி நீர்” (Water Vapour) வாயுக்களோடு ஒன்றாய்க் கலந்துள்ளது.  சூழ்வெளி மண்டலத்தில் பரவிய வாயுக்கள் : நைடிரஜன் 78%, ஆக்ஸிஜன் 21% மற்ற வாயுக்கள் 1%.  அத்துடன் ஓரளவு ஆக்ஸிஜன் மூலக்கூறு ஆக்ஸிஜன் அணுவோடு சேர்ந்து ஓஸோன் வாயுவாக (Ozone Gas) மாறியுள்ளது.  ஆக்ஸிஜன் வாயு உயிரினங்கள் வாழ்வதற்கு அவசியமான ஒரு மூச்சு வாயு.

சூழ்வெளி மண்டலத்தில் கலந்துள்ள வாயுக்கள்

பூமியின் சூழ்வெளியில் பரவியுள்ள வாயுக்கள் முக்கியமாக நைடிரஜன் 78%, ஆக்ஸிஜன் 21% மற்றவை ஆர்கான், கார்பன் டையாக்ஸைடு.  விபரமாகச் சொன்னால் :

நைடிரஜன்  : 78.08 %
ஆக்ஸிஜன்  : 20.95 %
ஆர்கான்    : 0.934 %
நியான்     : 0.0018 %
ஹீலியம்   : 0.0005 %
கிரிப்டான்  : 0.0001 %
ஸீனான் : 0.000009 %
கார்பன் டையாக்ஸைடு : 0.035 %
கார்பன் மானாக்ஸைடு  : 0.00002 %
மீதேன் : 0.00017 %
ஹைடிரஜன் : 0.00005 %
ஆவி நீர் : 4% கொள்ளளவு

பூதள மட்டத்திலிருந்து சுமார் 12 மைல் வரை (20 கி.மீ.) ஆவி நீர் வாயு மண்டலத்தில் கலந்திருக்கிறது.  அவற்றிலும் 10,000 அடி உயரத்தில் (3000 மீடர்) பூமியின் 80% ஆவி நீர் அடங்கி யுள்ளது.  மேலும் அவற்றுடன் மிகச் சிறிதளவு ஸல்·பர் டையாக்ஸைடு, நைடிரஜன் மானாக்ஸைடு, நைடிரஜன் டையாக்ஸைடு, அம்மோனியா, ஓஸோன், ஆர்கானிக் ஹாலோஜன் கூட்டுகள் (Organic Halogen Compounds) உள்ளன.

பூகோளத்தின் ஐந்து வித வாயுச் சூழ்வெளி அடுக்குகள்

பூமியின் மேல் பரவியுள்ள வாயுக் கோளத்தின் வாயு அடர்த்தி பூதளத்தில் உச்ச அழுத்தத்திலும் [(14.7 p.s.i) or (101 kilopascals) or (1013 millibar) or (760 mmHg)] மேலே போகப் போக அழுத்தம் குறைந்தும் அமைந்துள்ளது.  பூமியைப் போர்த்தியுள்ள வாயுக் கோளம் உயரத்தின் உஷ்ணத்திற்கு ஏற்ப ஐந்து அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது !  அடர்த்தியான வாயு பூதளம் மீதிலும் மெல்லியத் திணிவு மேல் உயரத்திலும் சிறுகச் சிறுகக் குறைந்து இறுதியில் சூனிய வெளியுடன் ஒன்றிப் போய் விடுகிறது.  பெரும்பான்மையான காலநிலை மாறுபாடுகள் முதலடுக்கு வாயுக் கோளத்தில்தான் நிகழ்கிறது.

1.  முதலாம் அடுக்கு (Troposphere) வெக்கைக் கோளம் அல்லது கீழ்த்தளக் கோளம் :  இது பூமிச் சூடால் வெப்பம் அடைகிறது. சூரிய ஒளி வெப்பத்தாலும் கண்ணில்படும் சிறிதளவு உட்சிவப்புக் கதிர்வீச்சாலும் பூமி சூடேறுகிறது !  உயரம் மேலே ஏற ஏற உஷ்ணம் குறைகிறது.  சூடாகிய வாயு மேலேறிக் காலநிலை மாறுபட்டுக் குளிர்ந்து மழையாகப் பெய்கிறது. மேக மூட்டங்கள் சேர்வது இந்த தளத்தில்தான். குறுகிய அலைநீள புறவூதாக் கதிர்வீச்சுகள் இவ்வடுக்கு மண்டலத்தில் வடிகட்டப் படுகின்றன !  30 மைலுக்கு (50 கி.மீ.) மேல் தாக்கும் புறவூதாக் கதிர்வீச்சுகள் வாயு அணுக்களை நேரியல் & எதிரியல் அயான் மின்னிகளாகப் (Plasma of Electrons & Positively Charged Ions) பிரிக்கின்றன.  அந்த வாயுக் கோளம் “அயான் கோளம்” (Ionosphere) என்று அழைக்கப்  படுகிறது.  அயான் கோளம் எதிர்ப்படும் ரேடியோ அலைகளை எதிரனுப்பும் தளமாக உள்ளது.

2.  இரண்டாம் அடுக்கு (Stratosphere) :  முதலடுக்குக்கு எதிராக இத்தளத்தில் உயரம் மேலே போகப் போக உஷ்ணம் ஏறுகிறது.  பல ஜெட் விமானங்கள் இந்தச் சூழ்வெளியில்தான் பறக்கின்றன.  காரணம் இங்கே மாறுபாடுகளின்றிச் சீரான நிலை பரவியுள்ளது.  ஓஸோன் வாயு இங்கேதான் சேமிப்பாகி பரிதியின் தீங்கிழைக்கும் கதிர்களைத் தடுத்து விழுங்குகிறது.

3.  மூன்றாம் அடுக்கு (Mesosphere) : இங்குதான் விண்கற்கள் எல்லாம் விழும்போது எரிந்து சாம்பலாகின்றன. உயரம் மேலே செல்லச் செல்ல உஷ்ணம் குறைகிறது ! நீச்ச உஷ்ண அளவு : -90 டிகிரி C.

4.  நான்காம் அடுக்கு (Thermosphere) வெப்பக் கோளம் : இங்குதான் விண்வெளி மீள்கப்பல் (Space Shuttle) பூமியைச் சுற்றி வருகிறது.  துருவப் பகுதிகளில் தெரியும் பன்னிறத் தோரணங்கள் (Aurora -Northern Colour Lights) இங்கேதான் காணப்படுகின்றன !  இப்பகுதிதான் முதன்முதலில் சூரியக் கதிர்களால் சூடாக்கப் படுகின்றன.  இங்கு வாயுவின் அடர்த்தி மிக மிக மெல்லியது.  ஆதலால் சிறிது சூரிய வெப்பசக்தியும் உஷ்ணத்தை உடனே மிகையாக்குகிறது.  இங்கு உச்சநிலை உஷ்ணம் : 1500 டிகிரி C. மேற்பட்டது !

4A.  நான்காம் அடுக்குத் தொடர்ச்சி (Ionosphere) அயனிகள் கோளம் :  இது தனியாகக் கருதப்படாமல் நான்காம் அடுக்கின் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளப் படுகிறது.  உயர அளவு : 150-200 கி.மீடர்.

5  ஐந்தாம் அடுக்கு (Exosphere) வெளிப்புறக் கோளம் :  இதுவே வாயுக் கோளத்தின் மேற்தள எல்லை.  வாயுக்கள் மிக மிக மெல்லிய அடர்த்தியில் இருக்கும் தளம்.

[தொடரும்]

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? (April 2008)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 The Structure & Composition of Earth’s Atmosphere (www.ess.geology.ufl.edu/HTMLpages)
19 The Earth as a Planet (www.fas.org/irp/imint/docs)
20 Origin of Earth’s Atmosphere (www.windows.ucar.edu/) & (www.kowoma.de/en/gps/additional/atmosphere.htm)
21 Space Probe for Earth’s Gravity & Atmosphere “GRACE” Gravity Recovery & Climate Experiment) (www.csr.utexas.edu/grace/overview.html)
******************

jayabarat@tnt21.com [May 1, 2008]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூகோளத்தில் பேரளவு கடல்நீர் வெள்ளம் எப்படிச் சேர்ந்தது ?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

+++++++++++++++++++

 

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=EnJwCOw8O3g

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=HWOxJYlQKQU

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=DcqJvYF1ewA

https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=3TTswKT9J9g

++++++++++++++++

கல்தோன்றி மண் வளமான போது
புல்தோன்றிப் பூ மலர
புழுக்கள் நெளிய நீர்வளம்
செழித்த தெப்படி ?
நானூறு கோடி ஆண்டுக்கு முன்
தானாக நீர் வெள்ளம்
தேனாகப் பாய்ந்த தெப்படி ?
வெப்பத்தில் அழுத்த வாயுக்கள்
வெடித் தெரிந்து
நீர்த் திரவம் சேர்ந்ததா ?
சூரியக் கதிரொளி மின்னலில்
வாயுக்கள் சேர்த்தனவா ?
வால்மீன்கள் மோதி நீர் வெள்ளம்
வாரி இறைத்ததா ?
விண்கற்கள் வீழ்ந்து பனிப்பாறைகள்
தண்ணீர் ஆனதா ?
சுவைநீர் உப்புநீர் ஆன தெப்படி ?
கடல்நீர் கொட்டிக் கிடந்தாலும்
குடிநீர் குவளை தான் !
நீர்மயம் எப்புறம் இருப்பினும் தாகம்
தீர்ந்திடத் தூய
நீர்வளம் குறைவே குறைவே !
மண்டினி ஞாலத்தில்
உண்டி உயிர் கொடுத் தாலும்
குடிநீர் இல்லையேல்
குவலயம் நரகம் !

++++++++++++++++++++++++++

வால்மீன்களின் டியூடிரியம், ஹைடிரஜன் பின்னத்தையும் [Deuterium Hydrogen Ratio (D/H)] அடுத்து ஆர்கான் நீராவி விகிதத்தையும் [Argon Water Ratio (Ar/H2O)] விண்ணுளவி மூலம் அறிந்ததில் பூமியில் மோதிப் பொழிந்த நீர் வெள்ளம் 15% என்று கணக்கிடப் பட்டுள்ளது.  ஆதி காலத்தில் சூரிய வாயுக்கள் குளிர்ந்து உண்டான கரிக்கற்கள் (Carbonaceous Chondritic Material – Condensed from Solar Hot Gases) எரிந்து 10% நீர் வெள்ளம் பூமியில் சேர்ந்தது.

அமெரிக்கன் வானவியல் குழு (American Astronomical Society) (Nov 2001)

“3.8 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நீர்மயம் நிரம்பிய விண்கற்களும், வால்மீன்களும் பிள்ளைப் பிராயப் பூமியில் மோதி நீர் வளமாக்கின என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் !  அடர்த்தியாகப் போர்த்திய ஹைடிரஜன் வாயுப் படுகை எரிமலை ஆக்ஸைடுகளுடன் (Oxides from Earth’s Mantle) இணைந்து பேரளவு கடல் நீர் வெள்ளம் பூமியின் சுய உற்பத்தியில்தான் உண்டாகியிருக்க வேண்டும் !

ஸ்டீஃபன் அனிதெய் (Stefan Anitei -Japanese Science Editor)

“பூமியில் எப்போது உயிரங்கள் தோன்றின என்பது எங்களுக்குத் தெரியாது.  ஆனால் அவை 4.3 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உதித்திருக்கக் கூடும் என்று கருத ஆதாரம் உள்ளது.  ஏனெனில் உயிரின வளர்ச்சிக்கு ஏற்ற மூன்று முக்கிய மூலாதாரங்கள் அப்போதிருந்தன !  முதலாவது வெப்ப ஒளிச்சக்தி உடைய சூரியன் !  இரண்டாவது அடிப்படை இரசாயன மூலகங்கள், மூலக்கூறுகள், (ஹைடிரஜன், ஆக்ஸிஜென், நைடிரஜன், கார்பன் போன்றவை) வால்மீனிருந்து சிக்கலான ஆர்கானிக் கூட்டுகள் ! மூன்றாவது பூமியில் நீர்வளம் சேமிப்பு !  பூகோளம் தோன்றி 200 மில்லியன் ஆண்டுகளுக்குள் உயிரின விருத்திக்கு வேண்டிய மூலாதாரங்கள் அனைத்தும் உண்டாகி விட்டன !”

மார்க் ஹாரிஸன் பேராசியர் பூதள இரசாயனம் (UCLA Geochemistry) (2001)

“பூமியில் உயிரினம் ஆரம்பமாக வால்மீன்கள் மோதிக் கொட்டிய நீர் வெள்ளம் சிறிதளவாகத்தான் இருக்க முடியும் !  தோற்ற காலத்தி லிருந்தே பூமியில் ஏராளமான நீர் வெள்ளம் உண்டாகி இருக்க  வேண்டும் !  பூமியின் விந்தையான வாயு மண்டல அமைப்பும் புதிராக இருக்கிறது ! நிலைப்பு மாறாத “உத்தம வாயுக்கள்” எனப்படும் கிரிப்டான், ஸெனான் (Extremely Stable Noble Gases – Krypton & Xenon) ஆகிய வற்றின் கலப்பு பின்னம் பூமியில் உள்ளதைப் போலவே சூரியனிலும் இருக்கிறது.  அதாவது பரிதி, பூமி இரண்டின் வாயு மண்டலக் கூட்டு மூலக்கூறுகள் ஒரே மூலத்திலிருந்து உதித்தவை.  நீர் வெள்ளமும், வாயு மண்டலமும் பூமிக்கோள் உண்டான போதே தோன்றி உயிரினம் உதிக்க ஏதுவான சூழ்வெளியை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.”

நிகோலஸ் தௌஃபாஸ் (Nicolas Dauphas, University of Chicago, Illinois) 

நீர் வெள்ளம் பூமியில் தோன்றியது எப்போது ?

பிரபஞ்சம் தோன்றி 13.7 பில்லியன் ஆண்டுகள் ஓடி விட்டன !  சூரிய குடும்பம் தோன்றிச் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகள் கடந்து விட்டன !  விஞ்ஞானிகள் பூமியிலே நீர் வெள்ளம் தோன்றி 4.3 பில்லியன் ஆண்டுகள் ஆகிவிட்டன என்று உறுதியான சான்றுகளுடன் இப்போது கூறுகிறார்கள் !  அந்த வியப்பான தகவலை 2001 ஜனவரி 11 காலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தையும், ஆஸ்திரேலியா கர்டன் தொழிநுணுக்கப் பல்கலைக் கழகத்தையும் சேர்ந்த விஞ்ஞானக் குழுவினர் “இயற்கை” இதழில் (Nature Journal) வெளியிட்டார் !  ஆனால் தற்போதைய ஆராய்ச்சி ஒன்று மாறாக 400 மில்லியன் ஆண்டுக்கு முன்புதான் நீர்வளம் பூமியில் உண்டானது என்று சொல்லி இருக்கிறது !

பூமி தோன்றிய 200 மில்லியன் ஆண்டுகளுக்குள் சூழ்வெளி வாயு மண்டமும், நீர் வெள்ளக் கடலும், நிலையான பூதளத் தட்டும் [(Crust) பூமிக்குக் கீழ் 10 கி.மீ. (6 மைல்) ஆழத்தட்டு] ஆகிய முன்றும் உண்டாகி விட்டன என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.  4.3 பில்லியன் ஆண்டுக்கு முன்பே பூகோளத்தில் உயிரினத் தோற்றத்துக்கு உகந்த மூலாதார வசதிகள் உதித்து விட்டன என்று விண்ணுயிரியல் (Astro-Biology) வளர்ச்சிக்கு நாசா நிதிக்கொடை அளிக்கும் கொலராடோ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி மோஜிஸிஸ் (Mojzsis) கூறுகிறார் !

மேற்கூறிய மூன்று பூகோள வசதிகளில் நீர்வளத்தை நீண்ட காலம் நிலையாக வைத்திருப்பதே மிகக் கடினமானது என்று பல பூதள இரசாயனவாதிகள் (Geo-Chemists) கருதுகிறார்கள் ! பூமியில் நீர்வளம் உண்டான சமயத்தில் வெள்ளி, செவ்வாய்க் கோள்களிலும் வேறு சில துணைக் கோள்களிலும் தோன்றி உயிரின வளர்ச்சிக்குத் தூண்டி யிருக்கலாம் என்றும் ஊகிக்கிறார்கள்.

பூகோளத்தில் நீர் வெள்ளம் எப்படித் தோன்றியது ?  

சூரிய குடும்பத்தில் மட்டும் ஒன்பது கோள்களும், பனிரெண்டு துணைக் கோள்களும் ஆராய்ச்சிக்கு உதவிட உள்ளன. அவற்றில் பூமி ஒன்றில் மட்டுமே உயிரின விருத்திக்கு வேண்டிய வசதிகள் அனைத்தும் உண்டாகி நிலை பெற்று விட்டன.  ஒருசில கோள்களிலும், மற்றும் சில துணைக் கோள்களிலும் ஒரு யுகத்தில் நீர்வளம் இருந்ததற்குச் சான்றுகள் காணப் படுகின்றன.  ஆனாலும் பூமி மட்டும்தான் பேரளவு நீர் வெள்ளத்தை பல மில்லியன் ஆண்டுகளாய் நிலையாகப் பற்றிக் கொண்டிருக்கிறது.  வியாழக் கோளின் துணைக் கோளான ஈரோப்பாவில் (Jupiter’s Satellite Europa) நீர்க்கடல் இருந்ததாக சமீபத்தில் விண்ணுளவி ஆராய்ந்து தகவல் அனுப்பியுள்ளது.  அதனால் அங்கும் உயிரின வாழ்வுக்குத் தகுதி இருந்திருக்கிறது என்று விஞ்ஞானிகளின் கவனத்தைக் கவர்ந்துள்ளது !

பூமியில் மட்டும் நீர் வெள்ளம் ஏன் தோன்றியது, நீர்மயம் எப்படி நிலையானது மற்றும் உயிரினம் ஏன் உதித்தது என்பதற்கு உறுதியான பதில்கள் கிடையா !  பிரபஞ்சத்தின் மகத்தான பல புதிர்களில் அந்தக் கேள்விகளும் உள்ளன.  பூமியில் நீர் எப்படி உண்டானது ?  ஆரம்ப காலத்தில் பூமியில் ஏற்பட்ட பல எரிமலை வெடிப்புகளில் பேரளவு நீராவி வெளியேறி நீராய்க் குளிர்ந்து சேமிப்பானதா ?  ஹைடிரஜன் ஆக்ஸிஜென் ஆகிய இரண்டு முக்கிய வாயுக்கள் சேர்ந்து இரசாயன முறையில் பல மில்லியன் ஆண்டுகளாய் உற்பத்தியானதா ?  அல்லது ஆயில் எஞ்சின் பிஸ்டன்களில் எரிவாயு அழுத்தமாகி எரிந்து புறப்போக்கு குழலில் வெளியாகும் நீர் அல்லது நீராவி போல் உற்பத்தியானதா ?  அல்லது சூரிய வெப்ப மின்னொளி அல்லது பூகாந்த மின்சாரத்தால் வாயுக்கள் இணைந்து நீர் வெள்ளம் உண்டானதா ?  பூதகர மான நீர்க்கடல் பூமியில் தோன்றியதற்குச் பல விளக்கங்களை விஞ்ஞானிகள் கூறி வருகிறார்கள் !

வால்மீன்கள் மோதிப் பூமியில் நீர் வெள்ளப் பொழிவு நேர்ந்திருக்கலாம் !  

ஏறக்குறைய சூரிய குடும்பத்தின் எல்லாக் கோள்களும் சம காலத்தில்தான் தோன்றின என்று கருதப்படுகிறது  புதன், வெள்ளி, செவ்வாய் ஆகிய அகக்கோள்களைப் போல பூமியும் பாறைகள் கொண்ட அண்டமாக வடிவானது.  அக்கோள்கள் “பளுச் சேமிப்பு” இயக்கத்தில் (Accretion Process – அண்டையிலுள்ள பிண்டத்தை ஈர்ப்பாற்றலில் இழுத்து ஒருகோள் தன்னுடன் சேர்த்துக் கொண்டு பளு நிறையும் ஈர்ப்பும் மிகையாக்கிக் கொள்வது) சூடாகிச் சிறிதளவு நீருடன் கலந்து தூசி, துணுக்குகளைத் திரட்டிக் கொண்டு பெருக்கின்றன.  எரிமலை வெடிப்புகள் நேர்ந்த போது அந்த நீர் வெள்ளம் ஆவியாகி வெளியாகி இருக்க வேண்டும்.  அந்த நீரும் சூரியனின் புறவூதா ஒளிப்பிரிவு முறையால் (Photo-Dissociation By Sun’s Ultra-Violet Light) பிறகு ஆக்ஸிஜனாகவும், ஹைடிரஜனாகவும் பிரிவாக்கப் பட்டிருக்க வேண்டும்.

சூரிய மண்டலக் கோள்களில் தோன்றியுள்ள நீர்ப் பகுதிகள் எல்லாம் கோள்களின் வெளிப்புற மேற்தளங் களில் மேவியுள்ள துருவப் பனிப்பாறைகள் முலமாக அறிப்படுகின்றன.  துருவப் பனிப் பாறைகள் கொண்ட செவ்வாய்க் கோள், பூமி இரண்டும் அதற்குச் சான்றுகள்.  விண்வெளியில் சூரிய மண்டலத்துக்கு அப்பால் திரியும் வால்மீன்கள் ஏராளமான நீர் வெள்ளத்தைப் பனிப்பாறை வடிவத்தில் கொண்டிருப்பது அறியப் பட்டுள்ளது.  வால்மீன்கள் பின்பற்றும் சுற்றுப் பாதை நீண்ட நீள்வட்டம் என்பதும் அறியப் படுகிறது.  அவ்விதம் அவை நீண்ட பாதையில் வரும் போது பூமி போன்ற அகக் கோள்களின் அருகில் வர வாய்ப்புள்ளது.  நீள்வட்டப் பாதைகளில் செல்லும் வால்மீன்கள் சில சமயங்களில் பூமி நகர்ச்சியுடன் மோதி விடுகின்றன.  வால்மீனின் மேற்புறம் ஒட்டி இருப்பவை தூசி, துணுக்குகளின் பனித்திரட்சிகள்.

நமக்குத் தெரிந்த மூன்று வால்மீன்களான : ஹாலி, ஹயாகுடேக், ஹாலி-பாப் (Comets : Halley, Hyakutake & Hale-Bopp) மூன்றிலும் ஓர் ஒற்றுமை காணப்படுகிறது.  கடல் நீரில் காணப்படும் டியூடிரியம் போல் (Deuterium – கன ஹைடிரஜன்) இரு மடங்கு அளவு அம்மூன்று வால்மீன்களில் உள்ளன !  அதாவது நீரில் பேரளவு சாதா ஹைடிரஜனும் சிறிதளவு அதன் ஏகமூலமான கன ஹைடிரஜனும் (6500 : 1) ஒப்பமைப்பில் கலந்துள்ளது.  (Heavy Hydrogen called Deuterium is an Isotope of Light Hydrogen) சாதா ஹைடிரஜன் அணுக் கருவில் ஒரு புரோட்டான் உள்ளது.  டியூடிரியம் அல்லது கன ஹைடிரஜன் அணுக்கருவில் ஒரு புரோட்டானுடன் ஒரு நியூட்ரானும் சேர்ந்துள்ளது.  அந்த மூன்று வால்மீன்களின் நீர் வெள்ளம் பூமியில் சேரவில்லை என்று கருதும் விஞ்ஞானிகளும் உள்ளார்கள் !  கன ஹைடிரஜன் (6500 : 1) கலந்துள்ள நீர் வெள்ளம் கொண்ட வேறு வால்மீன்கள் பூமியில் விழுந்து நீர்வளம் பெருகியிருக்க வேண்டும் என்று கருதுவோரும் உள்ளார்கள் !  முரணாக அதிக சதவீத டியூடிரிய நீர் வெள்ளம் கொண்ட வால்மீன்கள் பூமிமீது நீரைப் பொழிந்திருந்தாலும் ஏற்புடையதே !  ஏனெனில் சூரியனின் புறவூதா ஒளிப்பிரிவு (ultra-Violet Photo-Dissociation ) மூலம் கன ஹைடிரஜன் பின்னால் இழப்பாகிப் பூமியில் குறைந்திருக்க வாய்ப்பு உண்டு.  கடல் நீரின் சராசரி டியூடிரியம் கொள்ளளவு அடிப்படையில் கருதினால் பூமியின் நீரளவில் (15% – 30%) பங்கு வால்மீன்கள் மோதி வந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்கிறார்கள்.

விண்கற்கள் விழுந்து பூமியில் நீர் வெள்ள நிரப்பு நேர்ந்திருக்கலாம் !

வால்மீன்களைப் போன்று சில எறிகற்களும், விண்கற்களும் (Meteorites & Asteroids) விண்வெளியில் “நீர் தாங்கியாக” (Water Bearer) கருதப்படுபவை !  அவையும் பூமி உண்டான ஆரம்ப காலத்தில் பூமிமேல் ஏராளமாக விழுந்துள்ளன.  அவற்றில் பனிப்பாறைகளாய்த் தொத்திக் கொண்டிருக்கும் பகுதியில் 20% நீர் வெள்ளம் இருப்பதாக ஊகிக்கப் படுகிறது.  விண்கற்கள் பரிதிக்கு அப்பால் எத்தனை மைல் தூரத்தில் உள்ளனவோ அதைப் பொருத்தது அவற்றின் நீர் கொள்ளளவு.  அவற்றின் நீர்க் கொள்ளளவை உறுதியாக அறிவது சிரமமானதால், விண்கற்கள் பூமியில் கொட்டிய நீரளவை ஊகிப்பது இயலாது !  பிரபஞ்சத்தில் தீர்வு செய்ய முடியாத பல புதிர்கள் இருப்பது போல் பூகோளத்தில் நீர் வெள்ளம் எப்படிப் பெருகியது என்பதற்கும் உறுதியான விளக்கத்தை விஞ்ஞானிகள் இதுவரைச் சொல்ல முடியவில்லை !

 

++++++++++++++++++++++

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)

3. Astronomy Facts File Dictionary (1986)

4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? April 2008

6. Cosmos By Carl Sagan (1980)

7. Dictionary of Science – Webster’s New world 1998

8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)

10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)

11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)

12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)

14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)

15 Nature of Comets Reconsidered By: Dr. Alan Stern, Southwest Research Institute (Aug 8, 2003)

16. Liquid Water at Earth’s Surface 4.3 Billion Years Ago, Scientists Discover (Jan 2001)

17. Origin of Water on Earth (www.thelivingcosmos.co/TheoriginofLifeonEarth/OriginofWateronEarth)

18 A Dying Comet’s Kin may have nourished Life on Earth (www.gsfc.nasa.gov/gsfc/spacesci/origins/linearwater/linearwater.htm)

19 Oceans – Made in Earth Not a Product of Asteroids – A New Theory concerning the Water’s Origin on Earth.

20 American Astronomical Society – What is the Earth made of ? (http//:adsabs.harward.edu/abs/)

21 Earth’s Early Years – Differentiation, Water & Early Atmosphere

22 Earlier Water on Earth ? Oldest Rock Suggests Hospitable Young Planet Science Daily (www.sciencedaily.com/releases/) (Jan 15, 2001)

23 New Scientist Magazine – Water Came to Earth www.newscientist.com/ (October 11, 2003)

24 http://www.smithsonianmag.com/science-nature/how-did-water-come-to-earth-72037248/?no-ist  [May, 2013]

25 http://news.nationalgeographic.com/news/2014/10/141030-starstruck-earth-water-origin-vesta-science/  [October 30, 2014]

26  http://neo.jpl.nasa.gov/news/news008.html  [NASA Report]

27  http://www.sciencedaily.com/releases/2014/09/140925141226.htm  [September 25, 2014]

28  http://www.haaretz.com/life/science-medicine/1.618280  [September 29, 2014]

29  http://news.sciencemag.org/earth/2014/09/half-earths-water-formed-sun-was-born  [September 25, 2014]

30  http://en.wikipedia.org/wiki/Origin_of_water_on_Earth  [December 2, 2014]

******************

S. Jayabarathan [jayabarathans@gmail.com [December 2, 2014] [R-1]

தமிழ் விடுதலை ஆகட்டும்!

சி. ஜெயபாரதன், கனடா

புத்தம் புதிய கலைகள், பஞ்சப்
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே, அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை! …

சொல்லவும் கூடுவ தில்லை! அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை! ….

என்றந்தப் பேதை உரைத்தான், ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்
செல்வங்கள் யாவும் கொண்ர்ந் திங்கு சேர்ப்பீர்!

மகாகவி பாரதியார் (தமிழ்த் தாய்)

தலைமுறை ஒரு கோடி கண்ட, என்
தமிழ் விடுதலை ஆகட்டும்! ….
தேனால் செய்த என் செந்தமிழ்தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!

பாரதிதாசன் (தமிழ் விடுதலை ஆகட்டும்)

மின்னல் வேகத்தில் மாறும் விஞ்ஞானத் துறைகள்

உலகிலே தற்போது தூய ஆங்கிலம் மொழி, தூய பிரெஞ்ச் மொழி, தூய ஜெர்மன் மொழி என்பவை இல்லாதது போல், தூய தமிழ்மொழி உலகில் எங்கும் நிலவி வருவதாக எனக்குத் தெரியவில்லை! 5000 ஆண்டுகளாகக் கால வெள்ளம் அடித்து, அடித்துத் தமிழ் உள்பட அனைத்து மொழிகளும் வடிவமும் கூர்மையும் மழுங்கிப் போய், கூழாங் கற்களாய் உருண்டு திரண்டு மாறிக் கொண்டிருக்கின்றன. இருபதாம் நூற்றாண்டு முதல் மின்னல் அடிப்பது போல் விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், கணிதம் ஆகியவை விரைவாக முன்னேறிச் சமூக நாகரீகம், கலாச்சாரம் எல்லாம் மாறிவந்த சமயத்தில், அவற்றை வரலாறாய் ஏந்திச் செல்லும் மொழி வாகனங்களும் வடிவம் வேறுபடுதை யாராலும் தடுக்க முடியாது. மாறுபாடுகளுக்கு ஏற்றபடித் தமிழ்மொழி வளைந்து கொடுத்து மாந்தருக்குப் புரியும்படி உடனுக்குடன் அந்த விஞ்ஞானப் பொறியில், மருத்துவ முன்னேற்றங்களைத் தெரிவிக்க வேண்டும்.

தமிழ் மொழி ஒரு கருவி.  கருத்துக்களை ஏந்திச் சென்று பரிமாறும் ஒரு வாகனம்.  மாறும் உலகத்துக்கு ஏற்ப, படைக்கும் விஞ்ஞானத்துக்கு உகந்தபடித் தமிழ் மாற வேண்டுமே தவிர, தமிழுக்கு ஏற்றபடி கருத்தோ, விஞ்ஞானமோ மாற முடியாது ! அப்பணிகளுக்குப் பயன்படுத்தத் தமிழ்மொழியில் தகுதியான மாற்றங்கள் தமிழ் வல்லுநர் செய்ய முயல வேண்டும். அவ்விதம் ஏற்படும் மாறுபாடுகளைத் தமிழ் உலக மக்கள் உவப்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்! அவற்றைத் தமிழ் நிபுணர்கள் தமிழர் புரியும்படி அறிவிக்க வில்லை யானால், தமிழில் விஞ்ஞான வளர்ச்சி குன்றிப் போய், நாளடைவில் தமிழ் பிற்போக்கு மொழியாகிவிடும். உலக மொழிகளைப் போல, மற்ற இந்திய மொழிகளைப் போல தமிழில் Sa(ஸ), Sha(ஷ), Ja(ஜ), Ha(ஹ), Ga( ?), Da( ?), Ba( ?), Dha( ?) போன்ற மெல்லோசை எழுத்துக்களைத் தமிழ்மொழியில் தமிழர் எழுதும் உரிமையை அனுமதித்துப் புதிய சொற்களை ஆக்கும் முறைகளுக்கு வழி வகுக்க வேண்டும். அந்த மாற்றத்தைத் தூய தமிழர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தூய தமிழரும், தூய தமிழும்

ஹ, ஸ, ஷ, ஜ போன்ற கிரந்த எழுத்துக்கள் கொண்ட சொற்கள் கலப்படம் இல்லாத தூய தமிழில் விஞ்ஞானப் பொறியியற் துறைகளை விளக்குவது மிகக் கடினமானது. அந்த கிரந்த எழுத்துக்களைக் கலந்து எழுதினால் ‘தூய தமிழர் ‘ எனப்படும் ஒரு சாரார் அதை வெறுக்கிறார். அவற்றைப் புறக்கணிக்கிறார். ‘தூய தமிழர் ‘ என்று குறிப்பிடப் படுவோர் யார் என்பதை நான் முதலில் விளக்கியாக வேண்டும். கட்டுரையில் நான் சுட்டிக் காட்டும் ‘தூய தமிழர் ‘ என்பவர், நூறு சதவீதத் தூய தமிழை உரையாடியும், அனுதினம் எழுதியும், படைப்புக் காவிங்களில் அவற்றைத் துருவிக் கண்டுபிடித்து ஆதரித்தும் வருபவர்! கலப்படமற்ற தூய தமிழைக் கவிதை, கட்டுரை, கதை ஆகியவற்றில் பயன்படுத்தி வருபவர். தூய தமிழில் எழுதுவது தவறு என்பது எனது வாதமன்று! தூய தமிழில் மட்டும்தான் எழுத வேண்டும் என்பது தவறு! அதாவது திசை எழுத்துக்களான ஹ, ஸ, ஷ, ஜ, ஸ்ரீ ஆகியவற்றை அறவே புறக்கணிப்பது தமிழின் திறமையைக் குன்றச் செய்துவிடும். கலப்படமற்ற தூய தமிழைப் பேசுவோர் எங்கே வாழ்கிறார் ? கலப்படமற்ற தூய தமிழில் அனைத்தையும் எழுதி வருபவர் எத்துறையில் பணி செய்து வருகிறார் ?

அன்னியர் படையெடுப்புக்கு முன்பு தமிழ் பிறந்த மண்ணிலே ஒரு காலத்தில் தூய தமிழர் வாழ்ந்ததை நாம் நம்பலாம். அதுபோல எழுத்து வடிவங்கள் உண்டான ஆதி காலத்தில் தூய தமிழ்ச் சொற்களைத் தூய தமிழர் பேசி யிருக்கலாம்! திசைச் சொற்கள் எதுவும் கலப்படம் ஆகாத தூய தமிழ்ச் சொற்கள் ஒரு காலத்தில் வழக்கில் நடமாடி வந்திருக்கலாம். ஆனால் ஆரியர் புகுந்த பிறகு, மற்ற பாரத மொழிகளில் பின்னிக் கொண்ட ஆரியம் தமிழிலும் கலந்ததை நாம் யாரும் தடுக்க முடிய வில்லை. முகலாயர் படையெடுப்புக்குப் பிறகு உருதுச் சொற்கள் பாரத மொழிகளில் கலந்தன. அதுபோல் ஆங்கிலேயர் புகுந்த பிறகு ஆங்கிலச் சொற்கள் அநேகம், தமிழ் உள்பட பாரத மொழிகளில் பின்னிக் கொண்டன.

2500 ( ?) ஆண்டுகளுக்கு முன்பு தலைச் சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று முச்சங்கம் வைத்துத் தமிழ் மன்னர்கள் சங்கப் புலவர்கள் ஆதரவில் தமிழ்மொழி வளர்த்ததை நாம் அறிவோம். சங்கம் என்பதே தமிழ்ச் சொல்லன்று! அப்படி யென்றால் சங்க காலத்திலிருந்தே தமிழ்மொழியில் கலப்படம் சேர்ந்து விட்டது என்று வைத்துக் கொள்ளலாம்! நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள், வாகனங்கள், உரையாடிப் பழகும் மாந்தர்கள், புரியும் பணிகள், வணிகத் துறைகள், படிக்கும் பள்ளிக் கல்லூரி நூல்கள் அனைத்திலும் எத்தனை தூய தமிழ்ச் சொற்கள் உள்ளன என்று சற்று சிந்தித்துப் பாருங்கள், தூய தமிழர்களே! பிரெட், பட்டர், ஜாம், பவுடர், பஸ், ரயில், டிரெயின், காலேஜ், அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி, கால்குலஸ், ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஷா, சூரியன், சந்திரன், பூமி, ஆகாயம், அக்கினி, சக்தி, இதயம், முகம் போன்ற அனுதினச் சொற்கள் எல்லாம் தூய தமிழ்ச் சொற்கள் அல்ல!

தூய தமிழில் என் பெயரை எழுதிய தூய தமிழர்!

நண்பர் கிரிதரன் நடத்திவரும் பதிவுகள் (Pathivukal.com)[2] என்னும் அகிலவலை மின்னிதழில் நண்பர் திரு நாக. இளங்கோவன் எழுதிய தனது எதிர்மறைக் கட்டுரையில் என் பெயரைச் செயபாரதன் என்று தூய தமிழில் எழுதினார்! என் பெயரைச் சிதைவு செய்து தூய தமிழில் எழுதியதாக இளங்கோவன் நினைத்துக் கொண்டார்! அது அவரது எழுத்துரிமை என்று கருதி அவரோடு வழக்காடாது அவரை விட்டு விடுகிறேன்! வங்காளிகள் வகரத்தைப் பகரமாக எழுதுவார்கள்! வங்காள நாடு, பெங்கால் என்று அழைக்கப் படுகிறது. வங்காள தேசம், பங்களா தேசமாகியது. வங்காளி ஒருவர் திரு இளங்கோவன் பெயரை ‘இளங்கோபன் ‘ என்று எழுதினால், அவருக்குக் கோபம் வருமா அல்லது சிரிப்பு வருமா என்பது எனக்குத் தெரியாது. அவரது பெயரை இலங்கோவன் என்று நான் எழுதினால் அவர் சகித்துக் கொள்வாரா ? நண்பர் இளங்கோவன் போன்ற தூய தமிழர்கள் காஷ்மீர், ஆஸ்திரேலியா, ஆஸ்டிரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, யுகோஸ்லாவியா, ஹங்கேரி, கிரீஸ், ஹாங்ஹாங், மிஸ்ஸிஸிப்பி, மிஸ்ஸெளரி, பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், ராஜஸ்தான், ஹிந்துகுஷ், பலுஜிஸ்தான், ஸ்காட்லாந்து, ஜப்பான், இஸ்லாம், பாஸ்கரன், புஷ்பா, குஷ்பூ, ஷைலஜா, கஸ்தூரி, சரஸ்வதி, ஸ்டாலின், ஸ்டிரான்சியம், ஸ்புட்னிக், ஸ்டீஃபென் ஹாக்கிங், ஃபாஸ்ஃபரஸ், ஜியார்ஜ் புஷ், ஷேக்ஸ்பியர் போன்ற பெயர்களை எப்படித் தனித் தமிழில் எழுதுவார் என்று காட்டினால், நானும் கற்றுக் கொள்வேன். அதுவரை என் பெயரை என் தந்தை எனக்கு வைத்தபடி ஜெயபாரதன் என்று தூய தமிழர் எழுதினால் பூரிப்படைவேன். விடுதலை இந்தியாவில் அல்லது வெளி நாடுகளில் பிறந்த தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்தான் வைக்க வேண்டுமென்று யாரும் கட்டளையிட உரிமையில்லை.

தமிழில் ஸ, ஷ, ஹ, ஜ, ஸ்ரீ போன்ற வடமொழிக் கிரந்த எழுத்துக்குகளை தமிழ்மொழி சுவீகாரம் எடுத்துக் கொள்வதால், தமிழின் ஆற்றல் பன்மடங்கு மிகையாகி வலுக்குமே தவிர, தமிழின் செழுமை சிறிதும் பழுதுபடாது! மேலும் க,ச,ட,த,ப போன்ற வல்லின எழுத்துக்களின் மெல்லோசை எழுத்துக்கள் தமிழ்மொழி தவிர பிற இந்திய மொழிகளிலும், உலக மொழியிலும் உள்ள போது, ஏன் தமிழும் அவற்றைச் சுவீகாரம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்பது என் கேள்வி. உலகெங்கும் மின்னல் வேகத்தில் விஞ்ஞானமும், அதை ஒட்டிச் சமூகமும், கலாச்சாரமும், நாகரீகமும் இணைந்து முன்னேறுகின்றன. தூய தமிழர்களே! நீங்கள் தமிழ் அன்னைக்குக் கைவிலங்கு, கால்விலங்கு, வாய்விலங்கு போட்டு, கொலுப் பொம்மையாக கண்ணாடிப் பேழையில் வைத்துப் பூட்டிப் பின்னோக்கிக் போக வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்! தமிழ்மொழி விடுதலை ஆகட்டும்!

பாரதியார் இருபதாம் நூற்றாண்டில் வளர்ச்சி அடைந்த நுட்ப விஞ்ஞானப் பொறியியற் திறங்களையும், புத்தம் புதிய கலைகளையும் தமிழ்மொழியில் படைத்திடப் பின்வரும் பாடலில் நமக்கெல்லாம் கட்டளை யிட்டுச் சென்றிருக்கிறார்.

புத்தம் புதிய கலைகள், பஞ்சப்
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்;
மெத்த வளருது மேற்கே, அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவ தில்லை! அவை
சொல்லும் திறமை தமிழ்மொழிக் கில்லை!
மெல்லத் தமிழினிச் சாகும், அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும்!

என்றந்தப் பேதை உரைத்தான், ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும், கலைச்
செல்வங்கள் யாவும் கொண்ர்ந் திங்கு சேர்ப்பீர்!

ராஜஸ்தான் அணுமின் நிலையத்தில் எட்டாண்டுகள் பணியாற்றிய பிறகு மாற்றலாகி 1978 ஆம் ஆண்டு கல்பாக்கம் சென்னை அணுமின் நிலையத்தில் வேலை செய்ய வந்தேன். ராஜஸ்தான் பள்ளிகளில் எல்லாவற்றையும் ஹிந்தியில் படித்த என் பெண் புதல்விகள் இருவரையும், கல்பாக்கத்தில் இருக்கும் கேந்திரியா வித்தியாலய உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தேன். இதுவரை வீட்டிலே தமிழ் கற்ற புதல்வியர், இனியாவது சென்னையில் தமிழ்மொழியைக் கற்கலாம் என்று எதிர்பார்த்த எனக்குப் பெருத்த ஏமாற்றம் காத்துக் கொண்டிருந்தது! தமிழ் நாட்டிலே பணம் கொடுத்துப் படிக்கும் கல்பாக்கம் கேந்திரியா வித்தியாலயத்தில் எந்த வகுப்பிலும் சுத்தமாகத் தமிழ் கிடையாது! ஆங்கிலத்தைத் தவிர முழுக்க முழுக்க அனைத்துப் பாடங்களும் ஹிந்தியில் சொல்லித்தரப் படுகின்றன! இதே போல் எத்தனையோ தமிழகத்தின் பள்ளிக்கூடங்களில் சிறுவர், சிறுமிகளுக்குத் தமிழ்மொழி கட்டாயப் பாடமாக வைக்கப்பட்டுப் பயிலப் படுவதில்லை! புகாரி கவிதை வெளியீட்டு விழாவில், தமிழுக்குக் கிடைத்துள்ள இப்பெரும் அவமான நிலையைத் திரைப்படப் பெயரைத் தமிழாக்கப் போராடும் தூய தமிழ்த் தொண்டர் அனைவர் காதிலும் படும்படி நான் ஓங்கிப் பறைசாற்றினேன்! திரு இளங்கோவன் சாமர்த்தியமாக அதை மட்டும் ஒதுக்கிவிட்டு, அவரது தூய நண்பர்கள் மீது தூசி படாமல் பார்த்துக் கொண்டார்!

இதைக் குறிப்பிட்டுத்தான் அடிப்படைப் பிரச்சனைகளை விட்டு, திரைப்படப் பெயர் மாற்றம் போன்ற வெளிமுலாம் பூசும் பணிகளில் தமிழ்த் தொண்டர் முனைவது முறையா என்று கேட்டிருந்தேன். அரைகுறையாய்க் கட்டிய ஆடைகளில் அந்தரங்க உறுப்புகளைக் காட்டிக் கொண்டு ஆடவரும், பெண்டிரும் தப்புத் தாளங்கள் போட்டுப் பணம் சுரண்டும் தரங்கெட்ட நூறு திரைப்படங்களின் பெயரைத் தூய தமிழில் மாற்றினால், அது தமிழுக்குத்தான் அவமானம்! ஆயினும் அது ஒற்றைப் பணிதான்! நூறு பணிகள் அல்ல! அகஸ்திய முனிவர் தமிழுக்கு ஓர் உன்னத இலக்கண நூலை ஆக்கித் தந்தார்! இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் என்னும் காவியத்தைப் படைத்துத் தமிழ் அன்னைக்கு ஆரமாக அணிவித்தார். கவிஞர் கண்ணதாசன் ஏசுநாதர் திருப்பணியைக் கவிதை நூலாகப் படைத்தார்! ஆனால் தமிழ்த் தொண்டர்கள் தமிழை வளர விடாமல் முடக்கிச் சிறையில் வைக்க முற்படுகிறார்கள்! தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்!

போலித் தமிழர்கள் !  தாய்மொழி தமிழ் !  வாய்மொழி ஆங்கிலம் !

தமிழ் நாட்டில் பிறந்து, தாய்மொழி தமிழாக இருந்தும், தமிழ் படிக்க வாய்ப்பிருந்தும், தமிழே படிக்காமல், சமஸ்கிருதத்தையும், ஆங்கிலத்தையும் மட்டும் கல்லுரியில் படித்துப் பட்டம் பெற்று உத்தியோகம் பார்க்கும் நபர்கள், நாரீமணிகள் தமிழ் நாட்டைத் தவிர, வேறு உலகில் எங்கும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.  அவர்களுக்குத் தாய்மொழி தமிழ் !  வாய்மொழி ஆங்கிலம் !

தமிழ் நாட்டில் சட்டப்படி தாய்மொழி தமிழ் படிக்க வேண்டும் என்று கட்டாயம் கிடையாது! வெளி நாடுகளில் வாழும் தமிழர்க்குத் தமிழை முறையாகக் கற்க அதிக வசதி இல்லை. “எங்க பெண்ணுக்குத் தமிழ் புரியும். ஆனால் எழுதப் படிக்க பேசச் சரியாகத் தெரியாது!” என்று தமிழ்த்தாய் ஒருத்தி சொன்னதாக, கனடாவிலிருந்து சென்ற வருடம் சென்னையில் தன் மகனுக்குப் பெண் பார்க்கப் போன என் நண்பர் ஒருவர் கூறினார். வீட்டில் தமிழ் கற்ற கனடா மாப்பிள்ளை தமிழில் உரையாடிக் கேள்வி கேட்கும் போது, சென்னையில் பிறந்து வளர்ந்த தமிழ்ப் பெண் ஆங்கிலத்திலே பதில் கூறி இருக்கிறாள். இது வெட்கப் பட வேண்டிய கூத்து! இப்படி ஆங்கிலத் தோல் போர்த்திய, போலித் தமிழர்கள் பலர் தமிழ் நாட்டில் இன்று இருக்கிறார்கள்! தமிழே பாடத் திட்டத்தில் இல்லாது ஆங்கிலம், சம்ஸ்கிருதம், ஹிந்தி மட்டும் சொல்லிக் கொடுக்கும் ‘கேந்திரிய வித்தியாலங்கள்’ பல இன்னும் தமிழகத்தில் உள்ளன!  இது போன்று வங்காளத்தில் உண்டா ? பஞ்சாப்பில் உண்டா ?  மகாராஷ்டிராவில் உண்டா ?  தமிழ் நாட்டில் ஹிந்தியை வெறுக்கும் ஒரு சிலரைப் போல், தமிழை ஒதுக்கும் தமிழர்களும் உண்டு! அவர்கள்தான் போலித் தமிழர்கள்!

ரவீந்திரநாத் தாகூர் ஒரு சமயம் சென்னைக்கு வருகை தந்த போது தமிழர் ஒருவர் அவரை வரவேற்றுக் கூட்டத்தில் உரை நிகழ்த்தினார். ஆங்கிலத்தில் ஆரம்பித்ததும், தாகூர் அவரைத் தடுத்து, “தயவு செய்து ஆங்கிலத்தில் வேண்டாம்;  உங்கள் தாய்மொழியில் பேசுங்கள்; எனக்காகப் பேசாமல், அதோ ஆங்கு அமர்ந்து கேட்கும் பொது மக்களுக்குப் புரியும்படியாகப் பேசுங்கள்” என்றாராம்.

சலுகை போனால் போகட்டும்! என்
அலுவல் போனால் போகட்டும்!
தலைமுறை ஒருகோடி கண்ட, என்
தமிழ் விடுதலை ஆகட்டும்!

என் உயிர் போனால் போகட்டும்!
என் புகழ் உடல் மட்டும் நிலைக்கட்டும்!
தேனால் செய்த என் செந்தமிழ்தான்
திக்கெட்டுமே தொழ நிற்கட்டும்!

என்று பாரதிதாசன் திக்கெட்டும் வளரும் தமிழைத் தடுக்காதே என்று ‘தமிழ் விடுதலை ஆகட்டும் ‘, என்னும் கவிதையில் தமிழை முடக்கிப் பெட்டிக்குள் மூடும் தூய தமிழ் மேதாவிகளுக்குக் கூறுகிறார்.

***********

தகவல்:

1. http://www.geotamil.com/pathivukal/jeyabarathan_on_buhari_oct2005.html

2. http://www.geotamil.com/pathivukal/response2_on_jeyabarathan.html

3. http://www.geotamil.com/pathivukal/response3_by_jeyabarathan.html

4.http://www.geotamil.com/pathivukal/response6_jeyabarathan_barathithasan.html

********

S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 14, 2008)]

விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி

Periodic Table of Elements & Ionic Bonding - Mrs. Zeringue's 7th Grade ...

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

விஞ்ஞானம், பொறியியல் துறைகள் மட்டுமே உலக நாடுகளில் செல்வம் கொழித்து முன்னேற ஆக்க வினைகள் புரிந்துள்ளன! அந்த நாடுகளைப் போல் விஞ்ஞானம், பொறித்துறை ஆகியவற்றை விருத்தி செய்தே, இந்தியாவும் செல்வீக நாடாக முன்னேற வேண்டும்.

முதல் பிரதம மந்திரி, ஜவஹர்லால் நேரு

முன்னுரை: கடந்த ஐநூறு ஆண்டுகளாக இலக்கியங்கள் வளர்ந்து காவியங்கள் பெருகினாலும், தமிழகத்தில் விஞ்ஞானத் துறைகள் தலை தூக்கியதாகவோ, தமிழ்மொழியில் சிறப்பான விஞ்ஞான நூல்கள் படைக்கப் பட்டதாகவோ அறிகுறிகள் எவையும் காணப்பட வில்லை. அதே சமயம் ஐரோப்பாவில் விஞ்ஞானத் துறைகள் செழித்தோங்கி, தொழிற் புரட்சி ஏற்பட்டு, ஐரோப்பிய மொழிகளும் அவற்றை நூல்களில் வடித்து எதிரொலித்தன. வானியல், கணிதத்தில் முன்னோடியான இந்தியா, பனிரெண்டாம் நூற்றாண்டிலிருந்து 500 ஆண்டுகள் மொகாலாயர் கைவசப்பட்டு, அடுத்து பிரிட்டன் பதினேழாம் நூற்றாண்டு முதல் இருபதாம் நூற்றாண்டின் பாதி வரை ஆதிக்கம் செலுத்தி, அடிமைத் தேசமாக அகப்பட்டுக் கொண்டதால், தமிழ்மொழி உள்பட மற்ற அனைத்து இந்திய மொழிகளும் விஞ்ஞான வளர்ச்சிகளை நூல் வடிவில் காட்ட முடியாமல் போயின. ஆங்கில மொழியைப் பிரிட்டன் முதன்மை மொழியாக்கி, முறையான கல்வித்துறை நிறுவகங்களை நாடெங்கும் நிறுவினாலும், தேசம் விடுதலை அடைந்த பிறகுதான் இந்தியாவில் மூலாதார விஞ்ஞானத் துறைகள் பெருகவும், விஞ்ஞான நூல்கள் தோன்றவும் வாசற் கதவுகள் திறக்கப்பட்டன.

இந்திய விஞ்ஞானத் தொழிற்துறையின் பொற்காலச் சிற்பி

பாரத கண்டத்தைச் சாணி யுகத்திலிருந்து [Cow Dung Age] அணுசக்தி யுகத்திற்கும், அண்டவெளி யுகத்திற்கும் இழுத்து வந்து, தொழிற் துறைகளைத் திறந்து வைத்த அரசியல் மேதை, பண்டித ஜவாஹர்லால் நேரு. இந்தியா சுதந்திரம் அடைந்த பின் விஞ்ஞானப் பொறித்துறைப் பாதையில், மேலை நாடுகள் போல் முன்னேறத் தொழிற் சாலைகள், மின்சக்தி நிலையங்கள், அணுசக்தி ஆராய்ச்சி, அண்டவெளித் தேர்வு போன்ற துறைகள் தோன்ற அடிகோலியவர் நேரு. டாக்டர் ஹோமி ஜெஹாங்கீர் பாபாவைக் [Dr. Homi Jehangir Bhabha] கண்டு பிடித்து, நேரு 1954 இல் பம்பாயில் அணுசக்தி நிலைப்பகத்தைத் [Atomic Energy Establishment, Trombay] துவக்கச் செய்தார். விண்வெளி ஆராய்ச்சியைத் துவங்க, விஞ்ஞானி டாக்டர் விக்ரம் சாராபாயைக் [Dr Vikram Sarabai] கண்டு பிடித்து, தும்பா ஏவுகணை மையத்தை [Thumba Rocket Launching Centre] நிறுவி, அவரைத் தலைவர் ஆக்கினார். இப்போது இந்தியா ஆசியாவிலே அணுவியல் ஆராய்ச்சியிலும், அண்டவெளி ஏவுகணை விடுவதிலும் முன்னணியில் நிற்கிறது. அப்பெரும் விஞ்ஞானச் சாதனைகளை மற்ற நாடுகளுடன் ஒப்பு நோக்கினால், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைப் இந்திய விஞ்ஞானத் தொழிற் துறையின் பொற்காலம் என்று வரலாற்றில் அழுத்தமாகச் செதுக்கி வைக்கலாம்! பண்டித ஜவஹர்லால் நேரு பாரதத்தின் பொற்காலச் சிற்பி எனப் போற்றப்படும் முற்போக்குச் சிந்தனையாளர்.

1946 இல் வெளிவந்த தனது ‘இந்தியக் கண்டுபிடிப்பு ‘ [Discovery of India] என்னும் நூலில் பண்டித நேரு பண்டைக் கால இந்திய வல்லுநர்களின் கணிதச் சாதனைகளை மெச்சுகிறார். கிரேக்க கணித மேதை பித்தகோரஸ் [Pythagorus] எழுதியதற்கும் முன்பே [500 BC] ஜியாமெற்றித் தேற்றங்களை [Geometric Theorems] இந்திய கணித ஞானிகள் படைத்திருந்ததாக அறியப்படுகிறது. கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் பத்து இலக்கக் கணிதத் தொகுப்புகளைக் கையாண்டு, ஏழாம் நூற்றாண்டில் பூஜியத்தை [Zero] ஓரிலக்கமாகப் படைத்தனராம். ‘இக்கணித முன்னோடிகள் மனித சிந்தனையை விடுதலை செய்து, கணித இலக்கங்களை முக்கியமாக்கிச் சுடரொளி பாய்ச்சினர் ‘ என்று அந்நூலில் நேரு கூறுகிறார். சதுரம், நீண்ட சதுரம், வட்டம், கோணம், பின்னம், பத்தின் பன்னிரெண்டாம் அடுக்கு [Ten to the power 12], அல்ஜீப்ரா சமன்பாடுகள் [Algebriac Formulae], வானியல் [Astronomy] போன்றவை 3500 ஆண்டுகளுக்கு முன்பே இந்து வேத நூல்களில் காணப்படுகின்றன. இந்தியா மற்ற கிரேக்க, எகிப்து, ஐரோப்பிய நாடுகள் போல் ஜோதிடக் கணிதத்திலும் நுணுக்கமான தேர்ச்சி அடைந்திருந்தது. ஆனால் முகலாயர் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி ஆட்கொண்ட பிறகு, கணித, விஞ்ஞான வளர்ச்சிகள் முற்றிலும் முடங்கித் தடைபட்டு, ஐரோப்பாவை ஒப்பு நோக்கினால், இந்தியா ஐநூறு ஆண்டுகள் பின்தங்கிப் போனது!

அன்னியரின் ஆதிக்கத்தில் அடிமைப் பட்ட இந்திய மொழிகள்

ஏசுக் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னும் பின்னும் அரிஸ்டாடில் (384-322 BC), டாலமி (367-283) போன்ற கிரேக்க ஞானிகளின் வேதாந்த விஞ்ஞானக் கருத்துகள் தலை ஓங்கி, ரோமாபுரி போப்பாண்டவர் ஆணையின் கீழ் ஐரோப்பிய நாடுகளின் கலாச்சாரம், நாகரீகம் விருத்தி யடைந்தது. அரிஸ்டாட்டில் இந்தியாவுக்குப் பயணம் செய்ய வரைந்து கொடுத்த வழியைப் பின்பற்றி, முதன் முதலில் படையெடுத்து இந்திய மண்ணில் கால்வைத்த கிரேக்க மன்னன், மகா வீர அலெக்ஸாண்டர் (356-323 BC). அடுத்து அன்னியப் பயணி மார்கோ போலோ [Marco Polo (1288-1293)] ஆண்டுகளில், தென்னிந்தியாவுக்கு விஜயம் செய்தார். 15 ஆம் நூற்றாண்டில் விஞ்ஞானப் புரட்சியும் அதைத் தொடர்ந்து தொழிற் புரட்சியும் ஐரோப்பாவில் ஏற்பட்டு இணையாக ஐரோப்பிய மொழிகளும் மலர்ச்சி யடைந்தன.

துருக்கியின் தலைநகர் கான்ஸ்டான்டிநோபிளின் [Constantinople, Turkey] தரைவழிப் பாதை மூடப்பட்ட பின்பு, ஐரோப்பிய வர்த்தகர்கள் இந்தியாவுக்கு வர முடியாது போகவே, மகாதீரக் கப்பல் மாலுமிகள் புதிய கடல் மார்க்கங்களில் இந்தியாவுக்கு பாதை கண்டுபிடிக்கக் கிளம்பினர். கிரிஸ்டபர் கொலம்பஸ் (1451-1506) இந்தியாவுக்குப் புதுக் கப்பல் மார்க்கம் தேடி, இறுதியில் புதிய அமெரிக்க நாடுகளுக்குக் கடல்பாதை அமைத்தார். அவரைப் பின்பற்றி ஃபெர்டினென்டு மாஜெல்லன் (1480-1521) உலகை முதன் முதல் ஒருமுறை சுற்றி வந்து, பூமி தட்டையானது அன்று, அது ஒரு பொரி உருண்டை என்று நிரூபித்துக் காட்டினார். அடுத்து வாஸ்கோட காமா [Vasco da Gama (1460-1524)] இந்தியாவிக்குப் புதிய கப்பல் மார்க்கத்தைக் கண்டு பிடித்து 1498 இல் இந்தியாவுடன் வர்த்தகம் நிலைநாட்டப் பட்டது. இவ்வாறு ஐரோப்பாவிலிருந்து அன்னிய தேசத்தவர் [அலெக்ஸாண்டர், மார்க்கப் போலோ, வாஸ்கோட காமா] கிரேக்கர், ரோமானியர், போர்ச்சுகீஸியர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் பாரதத்தில் காலூன்றிய பின், இந்தியக் கலாசாரம், நாகரீகம், கல்வி அறிவு, மொழிகள் யாவற்றிலும் மாற்றங்கள் ஏற்பட்டன!

1192 ஆண்டில் முகமது கோரி ராஜபுத்திர்களைச் சரித்திரப் புகழ் பெற்ற குருச்சேத்திராவில் தோற்கடித்து, அடுத்து 14 வருடங்கள் கழித்து வடநாட்டில் சுல்தான்களின் ஆட்சி ஆரம்பமானது. 1206 முதல் 1526 வரை 27 துருக்கியின் சுல்தான்கள் டெல்லி ஆசனத்தில் ஆட்சி செய்தனர்! 1526 இல் பாபர் கடேசி சுல்தானைப் பானிபட் என்னும் இடத்தில் தோற்கடித்து, முகலாய சாம்ராஜியத்தை டெல்லியில் நிலைநாட்டினார்! முகலாயர் ஆட்சியில் அவரது உருது மொழி உன்னத நிலை அடைந்து, ஓரளவு வான சாஸ்திரம் உயர்நிலை அடைந்தது. பதினேழாம் நூற்றாண்டில் பிரிட்டன் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டாது இருந்திருந்தால், இந்தியா ஒரு முஸ்லீம் நாடாக ஈரான், ஈராக், ஆஃப்கானிஸ்தான் அல்லது பாகிஸ்தான் போல் ஆகியிருக்கும்!

ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இந்தியக் கல்வித் துறைகள் அமைப்பு

1520 ஆம் ஆண்டிலே போர்ச்சுகீஸியக் குடியினர் தடம் சென்னையில் படிந்து விட்டது. தமிழில் அல்மேரா போன்ற போர்ச்சுகீஸியச் சொற்கள் கூடிக் கலந்தன! அடுத்து இந்தியாவில் 1600 ஆண்டு பிரிட்டனின் கிழக்கிந்தியக் கம்பெனி [East India Company] துவங்கி, 1639 ஆம் ஆண்டு சென்னையிலும், 1668 ஆம் ஆண்டு பாம்பேயிலும், 1699 ஆம் ஆண்டு கல்கத்தாவிலும் வர்த்தகத் துறைகள் ஆரம்பமாயின. பிறகு 1765 இல் ராபர்ட் கிளைவ் பிரிட்டிஷ் சாம்ராஜியத்துக்கு இந்தியாவில் அடிக்கல் நாட்டியதை நாம் அறிவோம். தென்னகத்தில் 1746-1760 ஆண்டுகளில் பிரென்ச் ஆதிக்கம், தமிழகத்தின் சில பகுதிகளில் மேலோங்கி யிருந்தது! பிறகு ஆங்கிலேயர் அவர்களைத் தோற்கடித்து அவ்விடங்களைக் கைப்பற்றினர்! ஆயினும் பாண்டிச்சேரி பிரெஞ்ச் கைவசம் இருந்தது! (1757-1858) ஆண்டுகளில் பிரிட்டன் சிறிது சிறிதாக முழு இந்தியாவையும் கைப்பற்றித் தன்னாதிக்கத்தில் கொண்டு வந்தது.

துண்டு துண்டான இந்தியா 15 ஆம் நூற்றாண்டில் எப்படி இருந்தது ? தனித்தனி அரசர்களின் ஆட்சியில் சிக்கி, பிராந்திய மொழிகள் ஏதோ ஓரளவு வளர்ச்சி பெற்றன. இந்தியா மொகலாய மன்னர்களின் போர்க்களமாகி இந்தியக் கலாசாரமும், நாகரீகமும் நசுக்கப்பட்டு, மொழிகளின் வளர்ச்சியைக் கண்காணிப்போர் குறைந்து போயினர். ஐரோப்பிய நாடுகள் விஞ்ஞானத்திலும், தொழில் நுணுக்கத்திலும் முன்னேறி, அவற்றின் மொழிகள் வளர்ச்சி யடைந்து வரும் போது, இந்திய மொழிகள் புறக்கணிக்கப் பட்டு தளர்ச்சி யடைந்து வந்தன. பிறகு பிரிட்டன் இந்தியா வெங்கும் இரயில் பாதைகள் அமைத்து, பல இடங்களில் அஞ்சல் நிலையங்கள் கட்டி, கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் நிறுவகம் செய்து, ஆங்கிலத்தை முதன் மொழியாக்கி, இந்தியாவை இணைத்து முழு தேசமாக்கியது! பத்தாண்டுகளில் (1833-1843) முறையான கல்வித்துறை நிறுவகங்கள் இந்தியாவில் துவங்கக் காரணமான பிரிட்டனின் முக்கிய அறிவாளிகள்: மெக்காலே, எல்ஃபின்ஸ்டோன், திரிவேலியன் [Macaulay, Elphinstone, Charles Trevelyan] ஆகியோர்.

தமிழகத்தில் விஞ்ஞானத் துறைகளின் வளர்ச்சி

பாரத அரசாங்கம் சென்னைக் கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தை நிறுவி, அணுவியல் ஆய்வுகளை நடத்தியும், அணுமின் சக்தியைப் பரிமாறியும் வருகிறது. தென்கோடியில் ரஷ்ய உதவியால் இரட்டை அணுமின் நிலையம் கூடங்குளத்தில் உருவாகி, இப்போது முழுத்திறனில் இயங்கி வருகிறது. ஆனால் விஞ்ஞானத் துறைகளை வளர்த்து, இளம் விஞ்ஞானிகளை ஊக்குவிக்கத் தனியாகச் சென்னை மாநில அரசு என்ன முயற்சிகளைக் கையாள்கிறது என்பது தெரியவில்லை ? கலைக்காட்சி மாளிகைகள் [Art Museums] சில சென்னையில் உள்ளன. ஆனால் எத்தனை விஞ்ஞானக் காட்சி மாளிகைகளை [Science Museums] மாநிலத்தில் நிறுவி, ஆர்வமுள்ள தமிழரின் விஞ்ஞானச் சிந்தனைகளைத் தூண்டி விடுகிறது, தமிழரசு ? சினிமா இதழ்கள் நிறைந்த சென்னை மாநிலத்தில் எத்தனை விஞ்ஞான இதழ்கள் வாரவாரம் வெளியாகின்றன ? எத்தனைத் தமிழ்வார இதழ்கள், மாத இதழ்கள் விஞ்ஞானத்திற்குச் சில பக்கங்களை ஒதுக்கி, விஞ்ஞானச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன ?

இந்தியா ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் அடிமை நாடாக உழன்ற போது, விஞ்ஞான மேதை சி.வி. இராமனும், வேதாந்த மேதை இரவீந்திரநாத் தாகூரும் தனித்துவ நோபெல் பரிசைப் பெற்றார்கள். பாரதம் விடுதலை அடைந்து ஐம்பது ஆண்டுகள் கடந்த பின்னும், பாரதத்திலோ, தமிழகத்திலோ தனித்துவ நோபெல் பரிசு பெற, எத்தனை விஞ்ஞான வல்லுநர்கள் தலைதூக்கி நிற்கிறார்கள் ? இந்தியாவிலும் சரி, தமிழகத்திலும் சரி மாந்தரிடம் அறிவும் திறமையும் இருந்தாலும், விஞ்ஞானத்தில் ஆழ்ந்து ஆராய்ச்சிகள் செய்து நோபெல் பரிசு பெறத் தனித்துவத் தகுதியும், வேட்கையும், கடும் உழைப்பும் இல்லை என்று தீர்மானம் செய்வதா ? குறிப்பாகத் தமிழகத்தில் மற்ற கலைகளில் வல்லுநர் முன்னேறி இருந்தாலும், விஞ்ஞானத் துறைகளில் ஏதாவது ஒன்றில் மேன்மை மிக்க ஒருவர் கூட தற்போது இல்லை என்பது வெட்கப்பட வேண்டிய தகவல்!

கலப்பற்ற தூயமொழிகள் உலகில் எங்கே உள்ளன ?

கலப்பற்ற ‘தூயமொழி ‘ என்று பலர் பேசும் ஒரு வழக்கியல் மொழி, எங்காவது உலகில் தற்போது இருக்கிறதா என்னும் கேள்விக்குப் பதில் கிடைப்பது சிரமம்! வடதுருவத்துக்கு அருகில் எங்காவது நாகரீகக் காற்றுப் படாமல் வாழும் எஸ்கிமோ இனத்தவர், அல்லது நீலகிரி மலை உச்சியில் தனித்து வாழும் காட்டினத்தவர் பேசும் எழுத்தற்ற சில மொழிகள் கலப்பற்றுச் சுத்தமாக இருக்கலாம்! அவர்களில் பலரது மொழிகளுக்கு எழுத்துக்கள் கூட இல்லாமல் இருப்பதால், கலப்பதற்கு மூல வடிவங்களே இல்லாத அந்த வாய் மொழிகளைப் பற்றி இங்கே நான் குறிப்பிட வில்லை! எழுத்து வடிவங்கள் கொண்டு பல்லாண்டு காலம் பெரும்பான்மை இனத்தவர் பயன்படுத்தும், மொழிகளின் கலப்பற்ற தூய்மையைப் பற்றியே என் வினா எழுகிறது.

மனித இனங்கள் உலகெங்கும் தோன்றிய போதே அவற்றின் பேச்சு மொழிகளும் வளர்ச்சி யடைந்து, சிறுகச் சிறுக எழுத்து வடிவங்கள் பெற்றிருக்க வேண்டும். சமூகங்கள் நல்லாட்சி நிழலில் வளர்ந்து, நாகரீகம் அடைந்து, தொழில் வாணிபங்களால் செல்வம் பெருகிய பொற்காலத்தில், மொழிகள் ‘இலக்கணக் கட்டுப்பாடுகள்’ விதிக்கப்பட்டு இலக்கியங்களும், காவியங்களும் பிறந்திருக்க வேண்டும். தனித்தனி இனங்களின் இடப்பெயர்ச்சியாலும், அன்னிய இனத்தவர் படையெடுப்பாலும், வேறின மக்கள் கலந்து பிணைந்த போது, நாட்டு மொழிகளிலும் கலப்புச் சொற்கள் நாளடைவில் சேர்ந்தன! இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக வேதியர்கள் கையாண்ட சமஸ்கிருதத்தின் பிணைப்புத் தமிழ்மொழியில் சேர்ந்துள்ளதை நாம் ஏற்றுக் கொண்டு, அச்சொற்களையும் தமிழில் பயன்படுத்திக் கொள்வதுதான் அறிவுடமையாகும்.

கலப்பற்ற தனித்தமிழ் நடையில் இலக்கியச் சொற்போர் நடத்தலாம். இலக்கியப் பாக்கள், நூல்கள், காவியங்கள் படைக்கலாம். ஆனால் நாளுக்கு நாள் வேகமாய் முன்னேறிச் செல்லும் விஞ்ஞான முற்போக்கு அறிவுக் களஞ்சியங்களைத் தனித்தமிழில் ஆக்க முடியுமா என்பதில்  ஐயப்பாடு உள்ளது! ஆங்கிலம் உள்பட ஐரோப்பிய மொழிகள் எல்லாம் புது விஞ்ஞானச் சொற்களை அப்படியே ஏற்றுக் கொண்டு, படைப்புகளைப் புத்தக வடிவில் ஆக்கிக் கொள்ளுகின்றன. ஆனால் தமிழ் உள்பட பாரத மொழிகள் பல, அவ்விதம் விஞ்ஞான வளர்ச்சிகளைப் பின்பற்றி, அவ்வப்போது நூல் வடிவில் எழுதிக் கொண்டு வருகின்றனவா என்பது தெரியவில்லை! அதே சமயம், விஞ்ஞானச் சொற்களை எல்லாம் தனித்தமிழில் வடித்து விடலாம் என்று கனவு காண்போர் கனவை நான் கலைக்க விரும்ப வில்லை!

ஆங்கிலம் விஞ்ஞான வளர்ச்சியைக் காட்டும் அகிலத்தின் பலகணி

ஏறக்குறைய 500 ஆண்டுகள் தமிழ்மொழி உள்பட எல்லா இந்திய மொழிகளும், ஆங்கிலம் போல் பூரண வளர்ச்சி யின்றி அடிமை மொழிகளாகப் புறக்கணிக்கப் பட்டுக் கீழ் நிலையில் கிடந்தன. 1947 இல் பாரதம் சுதந்திரம் அடைந்ததும், இந்திய மொழிகளும் விடுதலை பெற்றன. பாரதத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு மொழிவாரியாக மாநிலங்களைப் பிரித்து, மாநில அரசுகள் அரசாளத் துவங்கிய பிறகுதான், பிராந்திய மொழிகளுக்கு நல்ல காலம் பிறந்தது. கண்ணொளி பெற்ற பாரத மொழிகள், ஆங்கிலத்தின் உதவியால் வளர்ச்சி யடைந்தன! ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் சரித்திரம், பூகோளம், சமூகவியல், விஞ்ஞானம், கணக்கு ஆகிய போதிப்பு நூல்கள் முதன் முதல் பிராந்திய மொழிகளில் எழுதப்பட்டன. ஆங்கில நூல்கள் பாரத மொழிகளுக்கு வழிகாட்டியாய் பாதை காட்டின! அவற்றில் பல பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டன! இந்திய மொழிகள் அனைத்திற்கும் விஞ்ஞான வளர்ச்சிகளைக் காட்டும் உலகப் பலகணியாய் விளங்குவது, ஐயமின்றி ஆங்கில மொழியே!

கல்லூரிப் போதனை நூல்கள் யாவும் ஆங்கிலத்திலே அமைந்து, தொடர்ந்து ஆங்கிலத்திலே பயிற்பிக்கப் பட்டன. விஞ்ஞானம், கணிதம், மருத்துவம், சட்டப் படிப்பு போன்றவற்றைத் தெளிவாகக் கற்றுக் கொள்ள ஆங்கில மொழிக்குள்ள தகுதிபோல் பிராந்திய மொழிகளுக்குத் திறமை வர குறைந்தது 50 முதல் 100 ஆண்டுகள் கூட ஆகலாம். ஆயினும் முழுக்க முழுக்க தமிழ் மொழியிலோ அல்லது மற்ற பிராந்திய மொழிகளிலோ கல்லூரியின் தரத்திற்குப் பட்டக் கல்வி புகட்ட முடியுமா என்பதில் ஐயப்பாடுள்ளது! தமிழ் மொழியிலும், மற்ற பிராந்திய மொழிகளிலும் பட்டப் படிப்புக்குத் தகுதியுள்ள நூல்கள், தற்போது அறிஞர்களால் எழுதப்படாமையே அதற்குக் காரணம் என்று உறுதியாகச் சொல்லலாம்!

பன்மொழிகள் கலந்த கூட்டு மொழியே தற்கால ஆங்கிலம்

ஆங்கில மொழி பல நூற்றாண்டுகளாக புதுச் சொற்களை ஏற்று மாறிக் கொண்டே வந்துள்ளது. அதில் கலந்துள்ள பிறமொழிச் சொற்கள் எண்ணற்றவை. ஆங்கிலம், பிரென்ச், ஸ்பானிஷ், ஜெர்மன், இத்தலி போன்ற ஐரோப்பிய மொழிகள் அனைத்திலும், சமஸ்கிருதம் போல் பூர்வீக மொழியான கிரேக்க, லத்தீன் மொழிச் சொற்கள் அநேகம் கலந்துள்ளன. இந்திய மொழிகளிலிருந்து குரு, யோகா, பறையா, நிர்வனா, கர்மா, மந்திரம், மாயா கட்டுமரான் [கட்டுமரம்], பண்டிட், பஜார், கர்ரி [Curry-Spice] போன்ற சொற்கள் இணைந்து, ஆங்கில அகராதியிலும் இடம் பெற்றுள்ளன! உலக நாடுகளில் பல இடங்களில் சைனாவின் கராத்தே பள்ளிகள் அமைக்கப் பட்டுள்ளது போல், யோகா பயிற்சிக் கூடங்கள் தோன்றி, மேலை நாட்டவருக்கு யோகாவைச் சொல்லிக் கொடுக்கின்றன! நமது நகரங்களில் ராக் சங்கீதம் இறக்குமதி ஆனதுபோல், யோகா பயிற்சி மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது!

இவற்றை இங்கே நான் குறிப்பிடுவதின் நோக்கம், வேதாந்தம் விஞ்ஞானம் இடப்பெயர்ச்சி யாவது போல், கலாச்சாரமும் நாகரீகமும் இடம் பெயர்கின்றன! அப்போது அந்நாட்டு மொழிகளிலும் அவை இடம்பெற்று புதுச் சொற்கள் கடன்வாங்கப் படுகின்றன! இருபதாம் நூற்றாண்டின் நடுவில் அணுயுகம், அண்டவெளி யுகம் உதயமாகி விஞ்ஞானம் விரைவாக முன்னேறிப் புதுச் சொற்கள் ஆங்கிலம் போன்ற ஐரோப்பிய மொழிகளில் நுழைந்த போது, தமிழ்மொழியில் சொற்கள் அப்படி எழுதபட்டுச் சேர்க்கப் படவில்லை! பாரதம் சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழக அரசாங்கத்தில் யாரும் விஞ்ஞான வளர்ச்சிக்கு முதன்மை இடம் அளிக்கவில்லை!

விஞ்ஞானப் படைப்புக் களஞ்சியத்தை நூலாக்கும் புதுத்தமிழ்

‘விஞ்ஞானப் புதுத்தமிழ் ‘ என்று நான் குறிப்பிடுவது, விரிந்து பெருகும் விஞ்ஞானப் புதுமைகளை, அவ்வப்போது எழுதும் ஆற்றலுள்ள கலப்புத்தமிழ்! அந்த கலப்புத்தமிழில் ஐயமின்றி கூடியவரைப் பெரும்பானமைத் தமிழ்ச் சொற்களே [60%-80%] கையாளப்பட வேண்டும். அடுத்து வேண்டிய விஞ்ஞானக் கலைச் சொற்களில் சிலவற்றை முடிந்தால் தமிழ்ப்படுத்தலாம்; அல்லது சமமான வடமொழிச் சொற்கள் இருந்தால் எடுத்தாளலாம்; அல்லது வடமொழியில் உண்டாக்க முயலலாம்; அல்லது ஆங்கிலச் சொற்களையோ, பிறமொழிச் சொற்களையோ அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக அணுவியல் துறைகளில் அணு, பரமாணு, அணுக்கரு போன்ற பண்டைச் சொற்களை Atom, Sub-atomic Particles, Nucleus ஆகிய ஆங்கிலச் சொற்களுக்குச் சமமாகப் பயன்படுத்தி வருகிறோம்.

கதிரியக்கம் [Radioactivity], தொடரியக்கம் [Chain Reaction], பூரணநிலை [Criticality], ஆறும் தொடரியக்கம் [Sub-critical Chain Reaction], மீறும் தொடரியக்கம் [Super-critical Chain Reaction], கதிர் ஏகமூலங்கள் [Radio-Isotopes], துகள் விரைவாக்கி யந்திரங்கள் [Particle Accelerators] போன்ற தமிழாக்கச் சொற்கள் போல், நாமே படைத்துக் கொள்ளலாம். கருத்துக்களைத் தமிழ்ப்படுத்த முடியாமல் போனால், ஆங்கிலச் சொற்களை அப்படியே தமிழில் எழுதிக் கொள்ளலாம். உதாரணமாக சில பரமாணுக்களின் பெயரைத் தமிழில் நியூட்ரான் [Neutron], புரோட்டான் [Proton], எலக்டிரான் [Electron], பாஸிடிரான் [Positron], நியூட்ரினோ [Neutrino] என்று எழுதலாம். டெலிவிஷன் காட்சிப் பெட்டியைத் தொலைக்காட்சி என்று பலர் குறிப்பிடுவதும் சரியே. Rocket என்பதை ராக்கெட் என்று எழுதினால் எல்லாருக்கும் புரிகிறது. எடுத்தாளும் சொற்கள் எளிதாகவும், புரியும் படியும், புரியா விட்டால் விளக்கக் கூடியதாகவும் எழுதப்பட வேண்டும்.

ஆங்கில எழுத்துக்களுக்குச் சமமான தமிழ் எழுத்துக்கள் இல்லை என்று வருந்த வேண்டிய தில்லை. உதாரணம்: (B, D, G) போன்றவை. டாக்டர் ஹோமி ஜெ. பாபா [Dr. Homi J. Bhabha] என்னும் பெயரைத் தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் எழுதிக் காட்டலாம். டாக்டர் ஷிவாகோ [Dr. Zhivago] என்று தமிழில் எழுதி ஆங்கிலத்தில் சமப் பெயரையும் அடைப்பில் குறிப்பிடலாம். அதுபோல் சில தமிழ் எழுத்துகளுக்குச் சமமான ஆங்கில எழுத்துக்களும் இல்லை! உதாரணம்: (ழகரம், ளகரம், றகரம், ணகரம், ஞகரம்). ‘தமிழ் ‘ என்பதை ஆங்கிலத்தில் Tamil, அல்லது Thamil என்றுதானே எழுத முடியும்! TamiZ என்று யார் குறிப்பிட்டு எழுதுகிறார் ? பார்க்கப் போனால் ஒவ்வொரு மொழியிலும் சில குறைகள் இருப்பதைத் தவிர்க்க முடியாது. அதற்காக விஞ்ஞானச் சொற்களைத் தமிழில் எழுதிக் காட்ட முடியாது என்று முயலாமல் இருப்பதும், தேவைப்படும் போது கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்தாமல் ஒதுக்குவதும் மடமையோடு, விஞ்ஞானத் தமிழை வளர விடாமல் தடுக்கும் பிற்போக்குப் பண்பாகும்!

விஞ்ஞானப் புதுத்தமிழ் (கலப்புத்தமிழ்) = தமிழ்ச்சொற்கள் (80%-90%) +வடமொழிச் சொற்கள் அல்லது +ஆங்கிலச் சொற்கள் அல்லது +திசைச்சொற்கள் (10%-20%) திசைச்சொற்கள் என்று இங்கு நான் குறிப்பிடுபவை: வடமொழி (சமஸ்கிருதம்), ஆங்கிலம் தவிர்த்த பிறமொழிச் சொற்கள் [தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராட்டி, வங்காளம், உருது, போர்ச்சிகீஸ் போன்றவை].

வேட்கை மிகுந்து விஞ்ஞானத்தை வளர்த்த இந்திய மேதைகள்:

விஞ்ஞானம் இந்தியாவில் வளர நமக்கு வழிகாட்டிகள் துருவ விண்மீன் போல் பலர் உள்ளார்கள். டாக்டர் ஸர்.சி.வி. இராமன் (1888-1970), ஜகதீஷ் சந்தர போஸ் (1858-1937), சத்யேந்திர நாத் போஸ் (1894-1974), கணித மேதை இராமானுஜன் (1887-1920), மேகநாத் ஸாகா, சுப்ரமணியன் சந்திரசேகர் (1910-1995), டாக்டர் ஹோமி பாபா (1909-1966), டாக்டர் விக்ரம் சாராபாய் (1919-1971), டாக்டர் அப்துல் கலாம், ஜெயந்த் நர்லிகர், டாக்டர் ராஜா ராமண்ணா ஆகியோர். ஆயினும் நூறு கோடி மக்கள் வாழும் இந்தியாவில் விரல்விட்டுக் கணக்கிடும் எண்ணிக்கையில் விஞ்ஞான மேதைகள் தோன்றி யிருப்பது வருந்தத் தக்க வரலாறுதான்! தமிழகத்தில் குறிப்பிடத் தக்க விஞ்ஞான நிபுணர்கள் தற்சமயத்தில் யாருமிருப்பதாகத் தெரியவில்லை! இந்தியாவில் அணுத்துறை, அண்ட வெளித் துறைகளில் விஞ்ஞானப் பொறியியல் வளர்ச்சிக்கு நிதித் தொகை ஒதுக்கி ஆராய்ச்சிகள் நடத்தி வருவதுபோல், தமிழக மாநில அரசு தற்கால விஞ்ஞான நிபுணர்களையோ, எதிர்கால வல்லுநர்களையோ ஊக்குவிப்பதாக எந்த அறிகுறிகளும் தென்படவில்லை! அதுபோல் தமிழகத்தில் விஞ்ஞானமோ, தமிழ்மொழியில் விஞ்ஞான நூல்களோ வித்திடப் பட்டு விருத்தி யடையும் திட்டங்களை வகுக்க தமிழ் நாட்டரசு எம்முயற்சியும் எடுத்துள்ளதாக அறியப்பட வில்லை!

விஞ்ஞானத் தமிழ் எழுத்தாளர்களின் கடமைப்பணி

இருபதாம் நூற்றாண்டின் இறுதியில், மின்கணணி யுகம் தோன்றி, தனியார் மின்கணணிகள் [Personal Computers] ஒவ்வொரு வீட்டிலும் கைக் கருவியாகவும், பன்னாட்டுப் பிணைப்புக் கருவியாகவும் பயன்பட்டு வருகின்றன. அகிலவலை தோன்றி அனைத்து நாடுகளும் இணைந்து, உலகம் சுருங்கி மக்கள் தொடர்பு கொள்வது மிக எளிதாகப் போனதால், இப்போது தமிழ்மொழிக்குப் புத்துயிரும், சக்தியும் மிகுந்து புதிய இலக்கியங்கள், காவியங்கள், கட்டுரைகள் [அரசியல், சமூகம், விஞ்ஞானம்] நூற்றுக் கணக்கில் தமிழ் அகிலவலைகளில் படைக்கப் படுகின்றன. திண்ணையில் குறிப்பாகத் தரமுள்ள விஞ்ஞானக் கட்டுரைகளை வே. வெங்கட ரமணன், டாக்டர். சரஸ்வதி, கோ. ஜோதி, டாக்டர் ஊர்மிளா பாபு (சிங்கப்பூர்), மா. பரமேஸ்வரன், சி. குமாரபாரதி, வ.ந. கிரிதரன், இ. பரமசிவம், டாக்டர் இரா. விஜயராகவன், அரவிந்தன் நீலகண்டன், சி. ஜெயபாரதன் ஆகியோர் எழுதி வருவது வரவேற்கத் தக்கதே.

ரஷ்யாவில் பொதுடமை ஆதிக்கம் வலுத்திருந்த காலங்களில் (1950-1990), மாஸ்கோவின் மாபெரும் நூலகம் ஒன்றில், மகத்தான விஞ்ஞானப் பணி ஒன்று அரசாங்க ஆதரவில் சிறப்பாக, ஒழுங்காக நடந்து கொண்டு வந்தது! ஆங்கிலத்தில் வெளியான புது நூல்களை ரஷ்ய மொழிபெயர்ப்புச் செய்வது. அதுபோல் ரஷ்ய விஞ்ஞானப் படைப்புகளை ஆங்கிலம், மற்றும் ஏனைய ஐரோப்பிய, ஆசிய மொழிகளில் பெயர்ப்பது. விஞ்ஞான நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கும் அவ்வரிய விஞ்ஞானப் பணி தமிழ் நாட்டிலும், தமிழரசின் கண்காணிப்பில் ஒரு கடமை நெறியாகத் தொடர்ந்து நிறைவேற்றப்பட வேண்டும். தமிழக அரசு நிதி ஒதுக்கி, விஞ்ஞானத் தமிழ்ச் சங்கங்களை நிறுவி, வல்லுநர்களை உறுப்பினராக்கி விஞ்ஞான நூல்களை வடிக்க வழி வகுக்க வேண்டும்.

விஞ்ஞானத் துறையின் பிரிவுகளான உயிரியல் [Biology], உடலுறுப்பியல் [Physiology], இரசாயனம் [Chemistry], பெளதிகம் [Physics], மருத்துவம் [Medical Sciences], பொறியியல் [Engineering Sciences], உலோகவியல் [Metallurgy] போன்றவை வெகு விரைவாக உலகில் முன்னேறி வருகின்றன. அவை முன்னேறும் வேகத்திற்கு ஒப்பாக விஞ்ஞானத் தமிழ் நூல்களையும் எழுதுவது, தமிழ் அறிஞர்களின் ஒரு கடமைப் பணியாக இருக்க வேண்டும் என்பதே இக்கட்டுரையின் அடிப்படை நோக்கம்.

**************************

S. Jayabarathan (jayabarathans@gmail.com) April 14, 2008

https://jayabarathan.wordpress.com/ (எனது விஞ்ஞானப் படைப்புகள்)

பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! சூரிய குடும்பம் எப்படி உண்டானது ?

(கட்டுரை: 25)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

சூரிய குடும்பத்தின் பிணைப்பில்
சுழல் பந்துகள்
சுற்றிடும் விந்தை யென்ன ?
பிண்டங்கள்
கோளமான மர்மம் என்ன ?
நீள் வட்ட வீதியில் அண்டங்கள்
மீளும் நியதி என்ன ?
கோள்கள் அனைத்தும்
சீராக
ஒரே திசை நோக்கிச்
சுற்றுவ தென்ன ?
ஒரே தள மட்டத்தில் அண்டங்கள்
பரிதி இடுப்பைச் சுற்றி
வருவ தென்ன ?
யுரேனஸ் அச்சும்
சரிந்து போய்ச் சாய்ந்த தென்ன ?
பரிதி மண்டலத்தில்
வக்கிரமாய்ச் சுழன்று
சுக்கிரன் மட்டும்
திக்குமாறிப்
போன தென்ன ?
தன்னச்சில் சுழாமல் வெண்ணிலா
முன்னழகைக் காட்டிப்
பின்னழகை
மறைப்ப தென்ன ?

யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் கருவிகள் இன்னும் சீராகப் பணியாற்றிச் சூரியப் புயல், அகிலக் கதிர்கள், சக்தி வாய்ந்த துகள்கள், சூரிய காந்த அரங்கம் பற்றிய தகவலைத் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. . . . ஏவிய நாளிலிருந்து (அக்டோபர் 1990) எந்தக் கருவியும் இதுவரைப் பழுதாகவில்லை !

ரிச்சர்டு மார்ஸ்டன், யுலிஸிஸ் சூரிய விண்ணுளவித் திட்ட மேற்பார்வை விஞ்ஞானி (European Space Agensy)  [ஏப்ரல் 15, 2008]

சூரிய மண்டலம் எப்போது தோன்றியது ?

வானியல் விஞ்ஞானிகளும், பூதளவாதிகளும் (Astronomers & Geologists) பூமியின் வயதைக் கணித்து அதிலிருந்து பரிதி மண்டலத்தின் தோற்ற வயதை அறியப் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார்.  நாமறிந்த பூமிப் பாறைகளின் கதிரியக்கத் தேய்வு வீதங்களைப் “பாறைக் கதிரளப்புக் காலக் கணிப்பு” மூலம் (Radiometric Dating of Rocks) கணக்கிட்டுச் சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.  பூமியின் பூர்வீகப் பாறை வயது கதிரியக்கத் தேய்வு வீதக் கணிப்பில் 3.9 பில்லியன் ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது !  பூதளத் தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) தூண்டி பூமியில் எழும் பூகம்ப எரிமலை நிகழ்ச்சிகளால் பூர்வீகப் பாறைகள் நிலைமாறி அவற்றைக் காண முடியாமல் சிதைத்து விடுகின்றன !

பூமியின் பூர்வீகப் பாறைகளைத் தவிர விண்வெளிக் கற்கள், எரிகற்கள், நிலவிலிருந்து அல்லது செவ்வாய்க் கோளிலிருந்து வீழும் விண்கற்கள் மிகத் துல்லியமாகப் பரிதி மண்டல வயதுக் காலத்தை நிர்ணயம் செய்ய உதவுகின்றன.  அந்த மாதிரிகளின் கதிரியக்கத் தேய்வு வீதத்தைக் கணித்ததில் அவை 4.6 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டவை என்று அறியப்பட்டு, பரிதி மண்டலம் அந்த வயதை ஒட்டி உண்டாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

சூரிய மண்டலம் எப்படி உண்டானது ?

விஞ்ஞான வரலாற்றில் எத்தனையோ கருத்துக்கள் மாறிப் போனாலும், பரிதி மண்டலம் எப்படி உண்டானது என்னும் கருத்து கடந்த 250 ஆண்டு காலமாக மாறவில்லை.  1755 ஆம் ஆண்டில் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவெல் கென்ட் (Immanuel Kant) (1724-1804) முதன்முதலில் தனது நிபுளா கோட்பாடைக் (Nebular Hypothesis) கூறினார்:  அதன்படி பேரளவு வாயு முகில் கொண்ட ஆதிச்சூரிய நிபுளா, பரிதி மண்டலத்தின் சூரியனாகவும், மற்ற அண்டக் கோள்களாகவும் உண்டாக மூலாதாரப் பொருளானது !  1796 இல் பிரெஞ்ச வானியல் நிபுணர் பியர் சைமன் லாப்பிலாஸ் (Pierre Simon Laplace) (1749-1827) அதே மாதிரிக் கோட்பாடை எடுத்துக் கூறினார்.  ஆனால் ஆழ்ந்த விண்வெளியை நோக்கி அவரால் அதற்குச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியவில்லை !

இம்மானுவெல் கென்ட் விளக்கிய நிபுளா கோட்பாடில் இருப்பது இதுதான் : பேரளவுக் கொள்ளளவு வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு (Mass Gravity) விசையால் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தன.  திணிவு நிறை பெருகப் பெருக ஈர்ப்பு சக்தி மிகையாகி வாயுத் திணிவை இறுக்கிச் சுருக்கி (Gravitational Contraction) வாயுக் கோள்களாகவும், திடக்கோள்களாகவும் உருவாயின.

இப்போது வானியல் விஞ்ஞானிகள் அவற்றை விபரமாகச் சொல்ல முடிகிறது.  அதாவது முதலில் சூரிய மண்டலத்தின் வாயு முகில் மூலக்கூறு (Molecular Gas Cloud) முறிந்த போது அதன் விரிவு 100 AU (Astronomical Unit) [1 AU = Average distance between Sun & Earth (93 மில்லியன் மைல் /150 மில்லியன் கி.மீ.)] ஆகவும், திணிவு நிறை பரிதியைப் போல் 2 அல்லது 3 மடங்கு இருந்ததாகவும் யூகிக்கிறார்கள்.  அத்தகைய வாயு முகில் ஈர்ப்பு முறிவைத் (Cloud’s Gravitational Collapse) தூண்டி விட்டிருப்பது அருகில் இருந்த சூப்பர்நோவாவின் (Supernova) மின்னல் வெடிப்பில் நேர்ந்த அழுத்த அலையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.  வாயு முகில் குவிந்து விழுந்த பிறகு பலமுறைகளில் திணிவு சேர்ப்பு விரைவானது.  முகில் திணிவின் உஷ்ணம் அதிகரித்து அது சுழலத் தொடங்கியது.  வாயுப் பிண்டம் தங்கி அது வட்டத் தட்டு வடிவாக மட்டமானது.  மிகையான ஈர்ப்பு சேமிப்புச் சக்தி (Gravitational Potential Energy) வெப்பமாக மாறி வாயு முகில் அடர்த்தி (Density) அதிகமானது.  அதுவே கோள்களின் உட்கரு உலோகமாகப் பின்னால் திரட்சி யானது.

அண்டக் கோள்கள் உண்டான தெப்படி ?

வட்டவியல் திணிவு நெம்பு நிலைப்புப்படி (Conservation of Angular Momentum) வடிவம் சிறுகச் சிறுகச் சுழலும் மட்டமான தட்டின் வேகம் மிகையானது.  மென்மேலும் விழுந்து சேரும் வாயுவும், தூசி துணுக்குகளும் சேர்ந்து கொண்டு முன்னோடிக் கோள் தட்டு (Proto-Planetary Disk) மையம் தடித்து ஓரம் மெலிவாகித் தமிழகத்தின் “ஆப்பம்” போல் (Pancake) உருவாகியது.  நடுவில் மகா ஈர்ப்புச்சக்தி வாய்ந்த உட்கரு எழுவதும் அப்பால் விளிம்பு நோக்கிச் செல்லச்செல்ல வலுகுன்றிய கோள்கள் உருவாவதும் எப்படி என்று விளக்கிச் சொல்லலாம் ?  பேரளவு வாயுப் பிண்டம் செழித்த நிபுளாவைச் சுற்றிலும் அதன் பூத ஈர்ப்பு மண்டலம் காந்த சக்தியால் சூடாக உள்ளது !  அந்த ஈர்ப்பு வாயுத் துணுக்குகளுக்கு சுழற்சியை உண்டாக்கித் தன் பூத ஈர்ப்புக் குழியில் சுற்றத் தூண்டுகிறது.  அவ்விதம் சிறுகச் சிறுக்கச் சேர்ந்துதான் சுழலும் கிருஷ்ணச் சக்கிரம் போல் அசுர வடிவாகி வட அமெரிக்க வேனிற்தள ஹர்ரிக்கேன் (Tropical Hurricanes) சூறாவளிகள் உருவாகின்றன !

பேரளவு இயக்கம் மையத்தில் உண்டாகி முன்னோடிச் சேய் விண்மீன் (Infant Proto-Star) விரைவாக வாயுத் திணிவைத் திரட்டி சூரியனாகியது.  அதன் பிறகு 50 மில்லியன் ஆண்டுகளாக பரிதி போதுமான வாயு நிறையைச் சுருட்டிப் பூரண எரிநிலை அடைந்து பிணைவு சக்தி தூண்டப் பட்டு சுயவொளி விண்மீனாக மாறியது.  தட்டின் விளிம்புகளில் மேலும் வாயுத் துணுக்குகள் சேமிப்பாகி அங்குமிங்கும் கண்ட இடங்களில் சிறிதும் பெரிதுமாக வாயுவிலும் திடப் பிண்டத்திலும் கோள்கள் உண்டாயின.

பரிதி வெப்ப அணுக்கரு சக்தியால் தூண்டப் பட்டதும் அது அசுரப் புயலை எழுப்பித் தூசிகளையும் துணுக்குகளையும் தட்டிலிருந்து வெளியேற்றியது.  அப்போது பூத வாயுக் கோள்கள் மென்மேலும் பெருக்க இயலாது போயின.  தட்டில் தங்கிய மீத வாயுக்கள் பேரளவு வெப்பத்தாலும், ஈர்ப்பு விசையாலும் மூலகமாற்றம் நிகழ்ந்து குளிர்ந்து திரண்டு சிலிகேட்களும், உலோகங்களும் (Silicates & Metals) உண்டாயின.  துணுக்குகளும், தூசிப் பனிகளும் மற்ற கோள்களின் முன்னோடிகளைக் கட்டி மென்மேலும் பெருக்க வைத்துப் பேரளவு அண்டங்களாக்கின.

பரிதி மண்டலத்தின் புறக் கோள்கள் பனி அண்டங்களாய்க் கட்டுமான மாகின.  வாயுக் கோள்களின் உட்கரு அடர்த்தியாகி வாயு முகில்கள் அவற்றை இறுகிப் போர்த்திக் கொண்டன.  புறக்கோள்களைச் சுற்றிலும் பல துணைக்கோள்கள் உண்டாகிச் சுற்றத் தொடங்கின.  வாயு முகில்கள் வீசி எறியப்பட்டு வால்மீன்களாக “ஓர்ட் முகில்” மந்தையில் (Oort Cloud of Comets) சிக்கின.  ஓர் அசுரப் பிண்டம் பூமியை மோதி நிலவு உண்டானது.  செவ்வாய்க் கோளுக்குச் சந்திரன்கள் ஏற்பட்டுச் சுற்ற ஆரம்பித்தன.  இவை அனைத்தும் இம்மானுவெல் கான்ட் 250 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய நிபுளாக் கோட்பாடைத்தான் முற்றிலும் மெய்ப்பிக்கின்றன.

பரிதி மண்டலப் படைப்பில் காணும் சில புதிர்கள் !

அண்டக் கோள்கள் ஏன் பரிதியை ஒரே தளமட்டத்தில் நீள்வட்ட வீதிகளில் சுற்றுகின்றன ?  அவற்றின் சீரொழுக்க இயக்க முறைக்கு என்ன காரணம் உள்ளது ?  அகக்கோள்களும், புறக்கோள்களும் சூரியனை ஏன் எதிர்க் கடிகார முறையில் சுற்றி வருகின்றன ? சூரியனையும் மற்ற கோள்கள் போலின்றித் தன்னச்சில் சுக்கிரன் மட்டும் ஏன் நேர்க் கடிகார வக்கிர திசையில் சுற்றி வருகிறது ? பூமியின் நிலவு தன்னச்சில் சுழாது ஏன் ஒரே முகத்தைக் காட்டிக் கொண்டு புது மாதிரிச் சுற்றி வருகிறது ? தன்னச்சில் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுழல்வது ஓர் விந்தைதான்.  கோள்களின் துணைக் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுற்றுவதும் ஒரு விந்தைதான்.  இந்த விந்தைகள் அனைத்தும் நிபுளாக் கோட்பாடு கூறும் “சுழற்தட்டு அமைப்பு” விதியைப் பெரும்பாலும் நிரூபிக்கின்றன.

யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் பணி தொடர்கிறது !

ஏப்ரல் 15, 2008 ஆம் தேதி அண்டவெளித் தேடல் விஞ்ஞானிகள் 1990 ஆண்டு முதல் பதினேழு ஆண்டுகளாய்ப் பரிதியைச் சுற்றி ஆராய்ந்து வரும் “யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியைப்” (Ulysses Solar Probe) பூமி ஆட்சி அரங்கிலிருந்து தளர்த்தி ஓய்வாக இருக்கவிட்டு 2013 ஆண்டில் மீண்டும் ஆய்வு செய்ய மாற்றியுள்ளார் !  அப்போதுதான் மறுபடியும் பரிதியின் அடுத்த உச்சநிலைக் கதிராட்டம் தொடங்கும் !  அதுவரை விண்ணுளவியின் ராக்கெட் உந்தல் எரிசக்தியை வீணாக்காமல் சேமித்து வைத்து சில இயக்கங்களையும் முடக்கி உளவி ஓய்வெடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது !  பரிதியிலிருந்து 125 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றிவரும் நீள் வட்ட வீதியில் (Helio Centric Orbit) உறங்கி வரும் கருவிகளைச் சூரிய கனல் வெப்பமே எழுப்பிவிடும் தகுதி பெற்றது.  இப்போது ஓய்வெடுக்கும் உளவி பரிதியை விட்டு அப்பால் நகன்று 250 மில்லியன் தொலைவை 2010 ஆண்டில் அடைந்து விடும்.

[தொடரும்]

தகவல்கள்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206291&format=html [சூரியன்]
16 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40804101&format=html (What will Happen to the Sun ?)
17 Solar System Formation By Jeff Scott (October 16, 2005)
18. Spaceflight Now -Breaking News. Controllers Working to Keep “Ulysses Sun Orbiter Alive” By :Stephen Clark (www.spaceflightnow.com/news/n0804/15ulysses) [April 18, 2008]

******************

jayabarat@tnt21.com [April 18, 2008]