அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா ? அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா ?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
 

முன்னுரை:  “சில வாரங்களுக்குமுன் செல்வி அவர்கள் எழுதியதைப் போல, “மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு பெயர்போன ஜப்பானில் இப்படி யென்றால்” என்றே நானும் பலகாலம் நினைத்துக் கொண்டிருந்தேன். சமீபகாலமாக இங்கு பத்திரிக்கைகள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வெளிவந்து உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளையும் உறுதிப்படுத்தபடாத ஊகங்களையும் பார்க்கும் போதும் படிக்கும்போதும், இது ஒரு பாதுகாப்பற்ற தொழில்நுட்பம் என்ற உணர்வே மேலோங்குகிறது.

அணுமின் தொழில்நுட்பம் குறித்து திரு சி. ஜெயபாரதன் அவர்கள் எழுதிய பல்வேறு கட்டுரைகளையும், அசுரன் போன்றோருக்கு பதிலிறுத்து எழுதிய கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். அணு ஆற்றல் தொழில் நுட்பம் என்பது முதிர்ச்சியானதா என்ற கேள்வி ஒருபுறமிருக்கட்டும், அதனை நடைமுறைப் படுத்தும் நம்நாட்டின் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இன்னபிற சம்பந்தப் பட்டவர்களும் இந்த தருணத்தில் முதிர்ச்சியானவர்களா என்ற கோணத்தையும் கவனத்தில் கொண்டு கட்டுரை எழுத வேண்டுகிறேன்.

மாற்று எரிபொருளுக்கான முயற்சிகள் உடனடியாக தேவையென்று எல்லோரும் ஒப்புக்கொள்ளும் அதேவேளையில், கடினமான தொழில்நுட்ப விஷயங்களையும் புள்ளிவிபரங்களையும் கொண்டு மட்டுமல்லாது இன்றய இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடுகளையும் கவனித்தில் கொண்டு எழுதிய உங்கள் கட்டுரையைக்காண ஆவலுடன்.” என்று ஆகஸ்டு 9, 2007 திண்ணைக் கடிதம் ஒன்றில் நண்பர் R. பாலா குறிப்பிட்டிருந்தார். 

அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா ?  அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா ?  என்ற அவரது இரண்டு கேள்விகளுக்கும் பதில் கூறவே இந்தக் கட்டுரையை நான் எழுதுகிறேன்.  அணு ஆயுத சம்பந்தமான அணுக்கருப் பிளவு எருக்களைத் [Nuclear Fissile Materials Uranium-235, Uraniuam-233 & Plutonium-239] தயாரிக்கும் அணு உலைகளின் கண்காணிப்புகளை இராணுவமும், அரசாங்கமும் தேசீயப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இரகசியமாக நடத்தி வருவதால் அவற்றைப் பற்றி இந்தக் கட்டுரையில் எதுவும் நான் குறிப்பிட விரும்பவில்லை.   

fig-iaea-safeguard-program.jpg

யந்திர யுகத்திலே மனிதரின் பயிற்சியும் சாதனங்களின் செம்மைப்பாடும்

யந்திர யுகத்திலே முப்பெரும் தீங்குகளால் விபத்துக்கள் உலகெங்கும் அடிக்கடி யந்திர சாதனங்களில் நேர்கின்றன !  முதலாவது மனிதத் தவறு, இரண்டாவது யந்திரக் கோளாறு, மூன்றாவது புயல், இடிமின்னல், வெள்ளம், சூறாவளி, சுனாமி, பேய்மழை, பூகம்பம், எரிமலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் ! குறையுள்ள மனிதரும், பழுதுள்ள சாதனங்களும் இருக்கும் வரை ஆகாய விமானத்திலும், அண்டவெளிக் கப்பலிலும், இரயில் பயணத்திலும், அணுமின்சக்தி நிலையத்திலும், ஏனைய தொழிற் சாலைகளிலும் “அபாய எதிர்பார்ப்புகளை”  [Risks] உலக மாந்தர் எதிர்நோக்கி இருக்க வேண்டும்.  செம்மையான பயிற்சி முறைகள் மனிதத் தவறுகளைக் குறைத்துவிடும்.  அதுபோல் சீரான சாதனங்களும் விபத்துகளைச் சிறிய எண்ணிக்கை ஆக்கிவிடும்.  ஆனால் கூடியவரை விபத்துக்கள் மனிதராலோ, யந்திரத்தாலோ, இயற்கைச் சீற்றத்தாலோ நேர்ந்தால் யந்திரங்கள் பாதுகாப்பான நிலைக்குச் சுயமாக மாறி, மனிதர் தப்பிக் கொள்ள வழிகள் இருக்க வேண்டும். அதுதான் 21 ஆம் நூற்றாண்டில் யந்திர உலகிலே விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் வல்லுநரின் குறிக்கோளாய் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். 

யந்திர யுகத்திலே தம்மைப் பிணைத்துக் கொண்ட உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டிலே தனித்தியங்க முடியாத நிலையில் ஏதோ ஒரு தொப்புள் கொடி இணைப்பால் மாட்டிக் கொண்டுள்ளன !  செர்நோபில் விபத்தை ரஷ்யா விரும்பியும் ஒளித்து வைக்க முடியவில்லை !  அந்த விபத்தால் வெளியாகிப் பரவிய கதிரியக்கப் பொழிகள் கிழக்கே ஜப்பான் வரையிலும், மேற்கே கனடா வரையிலும் படிந்து விட்டன.  ஆ·பிரிக்காவில் தோன்றிய எயிட்ஸ் காமநோய் பரவிச் சென்று உலகில் தாக்காத நாடெதுவும் இல்லை !  2001 செப்டம்பர் 11 இல் அமெரிக்காவில் மூர்க்கர் பட்டாளம் வாஷிங்டன், நியூ யார்க் நகரங்களைத் தாக்கியதின் எதிரொலி இப்போது உலக நாடுகள் அனைத்தையும் பயத்துள்ளே தள்ளி விட்டிருக்கிறது.  பறக்கும் ஜம்போ ஜெட் விமானம் 737 ஒன்றில் பழுது நேர்ந்து விபத்து ஏற்பட்டு அனைவரும் மரித்தால் அதை வாங்கிப் பயன்படுத்தும் எல்லா உலக நாடுகளும் அதிர்ச்சி அடைகின்றன.  யந்திர யுகம் ஒரு போக்கில், ஒரு திசையில் செல்வது.  அதற்குப் பின்னோக்கிச் செல்லும் உந்து சக்தி கிடையாது !       

தொழிற்புரட்சிக்குப் (1780-1850) பிறகு மின்சக்தி நிலையங்கள் பெருகி அதன் ஆற்றலில் இயங்கும் யந்திரங்கள் ஆயிரக் கணக்கில் ஈசல்கள் போல் தோன்றின.  அவற்றில் முக்கியமாக எரி ஆயிலில் இயங்கும் வாகனங்கள், விமானங்கள், ஏவுகணைகள், அண்ட வெளிக் கப்பல்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை..  கடந்த நூறாண்டுகளாக செம்மையாக இயங்கி வரும் கார் வாகனங்களின் தொழில் நுட்பம் சீராக்கப்பட்டு முதிர்ச்சி நிலை அடைந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது.  அவற்றைப் போல் கோடிக்கணக்கான பேர் அனுதினமும் பயணம் செய்யும் ஆகாய விமானங்களும் சீராக்கப்பட்டு அவற்றின் தொழில் நுட்பமும் முதிர்ச்சி நிலை பெற்றுள்ளதை யாரும் எதிர்த்துச் சொல்ல முடியாது.  அந்த வழிமுறையில் உலக நாடுகள் கடந்த 50 ஆண்டுகளாக 900 மேற்பட்ட அணு உலைகள், அணு ஆய்வு உலைகள், அணுமின் உலைகள் ஆகியவற்றை நிறுவி அனுபவம் அடைந்து, தற்போது 400 மேற்பட்ட அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக அனுதினமும் மின்சாரத்தை பரிமாறி வருகின்றன. அவற்றின் இயக்கங்களைக் கண்காணிப்பதோடு, அவற்றில் விளையும் அபாய நிகழ்ச்சிகளையும் நேராக உளவிப் பதிவு செய்து மற்ற நாடுகளுக்கும் 1957 ஆண்டு முதல் பகிர்ந்து வருவது, ஆஸ்டிரியாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency (IAEA)].  

1986 இல் நேர்ந்த செர்நோபில் அணுமின் உலை வெடிப்பு உலக நாடுகளைப் பேரளவில் அதிர்ச்சியில் தள்ளியது.  அதனால் உலகெலாம் பரவிய கதிரியக்கப் பொழிகளால் பல நாடுகள் பாதகம் அடைந்தன.  அவ்விதம் கவலைப்பட்ட நாடுகள் ரஷ்யாவின் செர்நோபில் விபத்தைத் தீவிர உளவுகள் செய்து தங்கள் அணுமின் உலைகளிலும் பெருத்த மாற்றத்தையும், பயிற்சி முறைகளையும் செம்மைப்படுத்தின.  அதன் விளைவாக 1989 இல் உலக அணு உலை இயக்குநர்கள் அனைவரும் ஒன்று கூடி “உலக அணுமின் உலை இயக்குநர் ஐக்கியப் பேரவையை” WANO [World Association of Nuclear Operation] நிறுவகத்தை ஏற்படுத்தி அணு உலை இயக்கங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.  அத்துடன் உலக நாடுகளின் WANO குழுவினர் ஓரிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அணுமின் உலைகளுக்கு விஜயம் செய்து, அதன் பாதுகாப்பான இயக்கங்களை உளவிக் கண்காணிப்பும் செய்து தரப்படுத்தியும் வருகிறார்கள்.

அணுமின் உலைப் பாதுகாப்புகள் எப்படிக் கடைப்பிடிக்கப் படுகின்றன ?       

அணுமின் நிலையப் பாதுகாப்பு நியதி எங்கிருந்து ஆரம்பிக்கிறது ?  முதலில் விஞ்ஞானப் பொறியியற் துறை நிபுணர்கள் பயிற்சியிலிருந்து துவங்குகிறது.  அணு உலைக்கெனத் தனித்தனி டிசைன், கட்டுமானம், இயக்கம், பராமரிப்பு நிபுணர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறார்.  1957 ஆகஸ்டில் பாம்பே அணுவியல் துறைக்குச் சேர்ந்த என்னைப் போல் 250 விஞ்ஞானி, பொறியியல் பட்டதாரிகளுக்கு ஓராண்டு அணுவியற் பயிற்சி அளிக்கப்பட்டது.  அணு உலை இயக்கத்துக்குச் சேர்க்கப் பட்ட எனக்கு பெங்களூர் இந்திய விஞ்ஞான கழகத்தில் [Indian Institute of Science, Bangalore] ஆறு மாதங்களும், பாம்பே அணுவியற் பயிற்சிப் பள்ளியில் ஆறு மாதங்களும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.  அவ்விதம் ஒவ்வோர் ஆண்டும் 200-250 பட்டதாரிகள் மொம்பை அணுவியல் பள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்டு பௌதிகம்., இரசாயனம், மேம்பாட்டுக் கணிதம், மற்றும் அணு உலைகளின் பண்பாடு, இயக்கம், பராமரிப்பு, கதிரியக்கம், அணுக்கழிவுகள் பற்றிக் கல்வி புகட்டப் படுகிறது.  இந்தியாவிலே அணுவியல் சம்பந்தப்பட்ட எந்தப் பணிக்கும் பயிற்சி இல்லாத பட்டதாரிகளோ, அல்லது பணியாட்களோ வேலையில் புகுத்தப் படுவதில்லை !

அணுமின் உலைகள் நிறுவனமாகத் தகுதியுள்ள பல இடங்கள் முதலில் உளவாய்வு செய்யப்பட்டு அவற்றில் தகுதி மிக்கத் தளமே தேர்வாகி முடிவு செய்யப்படுகிறது.  அத்தகைய தேர்வு ஆய்வுகளில் நீர் வசதி, நில அமைப்பு, ஜன நெருக்கம், காலநிலை, மழைப் பொழிவு, சூழ்வெளி, வேளாண்மை விருத்தி, நிலநடுக்கம், வாகனப் போக்குவரது வசதி, கப்பல் வரத் துறைமுக வசதி போன்றவை குறிப்பிடத் தக்கவை.  இந்திய அணுசக்தித் துறையகம் [Indian Dept of Atomic Energy (DAE)], இந்திய அணுசக்தி கார்பொரேஷன் [Nuclear Power Corporation India Ltd (NPCIL)] ஆகிய துறையகங்களில் அனுபவமும், பயிற்சியும் பெற்ற டிசைன், கட்டுமான, இயக்கக் குழுவினர் பலர் இருக்கிறார்கள்.    

அணுசக்தி உலைகள் இயக்கத்துக்குத் தேவையான ஏற்பாடுகள்

அணுமின் நிலையத்தில் இயங்கும் முக்கிய ஏற்பாடுகள் [Plant Operating Systems] எவை ?  அனல் மின்சார நிலையத்தைப் [Thermal Power Station] பல முறைகளில் ஒத்ததே அணுமின் நிலையமும்..  அனல்மின் நிலையத்தில் நிலக்கரி எரிசக்தியாகப் பயன்படுகிறது.  அதன் கனல் நீராவியை உண்டாக்க ஒரு கொதிகலன் [Boiler] உள்ளது.  ஆனால் அணுமின் நிலையத்தில் எரிபொருள் யுரேனியம்.  அதிலிருந்து வரும் வெப்பத்தால் நீராவி உண்டாக்க அணு உலை அமைக்கப் பட்டுள்ளது !  நீராவி அணு உலையில் நேராக உண்டாக்கப் படலாம்.  அல்லது ஒரு வெப்ப மாற்றிக் கொதிகலன் மூலம் [Heat Exchanger & Boiler] நீராவி உற்பத்தி செய்யலாம்.  அவ்விதம் உண்டான அழுத்தமடைந்த நீராவி டர்பைன் சுழலிகளை ஓட வைத்து மின்சார ஜனனி மின்சக்தியை உற்பத்தி செய்து பரிமாறப் படுகிறது.

அணுமின் நிலையத்தின் முக்கிய பாகங்கள், சாதனங்கள்: 

1. வெப்பசக்தியை உண்டாக்கும் யுரேனியக் கோல்கள் நீரில் மூழ்கிய அணு உலை

2. வெப்பத்தைக் கடத்தும் வெப்பமாற்றி நீராவிக் கொதிகலன்.

3. அணு உலை, கொதிகலன் அடங்கிய கோட்டை அரண் (Containment).

4. மின்சாரம் உற்பத்தி செய்யும் டர்பைன் ஜனனி. 

5. மின்சார அழுத்த மாற்றி & பரிமாறும் மின்சக்திக் கோபுர வடங்கள். [Transmission Tower Cables]    


 
அணுசக்தி உலைகள் இயக்கத்துக்குத் தேவையான பாதுகாப்புகள்

1.  அணு உலை இயக்கச் சாதனங்களுக்கு வேண்டிய காப்பு முறைகள்

அணு உலையில் முக்கியமாக யுரேனியக் கோல்கள் நீர் நிரம்பிய அழுத்த உலைக்கலனில் (Pressure Vessel) புகுத்தப்பட்டுள்ளன.  யுரேனியம் அணுக்கருவை ஒரு நியூட்ரான் பிளக்கும் போது, வெப்பசக்தியும் புதிதாக இரண்டு அல்லது மூன்று நியூட்ரான்களும் எழுகின்றன.  பிறகு அவ்விரண்டு நியூட்ரான்கள் யுரேனியத்தைப் பிளந்து அதிக வெப்பமுடன் நான்கு நியூட்ரான்கள் தோன்றுகின்றன.  புதிதாக உண்டான நியூட்ரான்களின் வேகத்தைக் குறைத்தால்தான் அணுக்கருப் பிளவு தொடர்ந்து ஏற்பட வசதி பிறக்கும்.  உலைக்கலனில் உள்ள நீர் நியூட்ரான்களின் வேகத்தை மிதமாக்கும் (Water Moderater]. அவ்விதம் தொடரிக்கம் நிகழ்ந்து வெப்பசக்தி மிகுதியாகவும் நியூட்ரான் எண்ணிக்கை கோடிக்கணக்கில் உலைக்கலனில் பெருக்கம் அடையும்.  நியூட்ரான் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தா விட்டால் அணு உலை வெடித்து விடும்.  யுரேனியத்தில் எழுகின்ற நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த “ஆட்சிக் கோல்கள்” (Control Rods) தேவைப் படுகின்றன.  அணு உலை நியூட்ரான்கள் பெருகாமல், வெப்பசக்தி ஆக்கத்தை நிறுத்த வேண்டுமானால், “நியூட்ரான் விழுங்கிகள்” [Neutron Absorbers] அல்லது “தடுப்புக் கோல்கள்” (Shut-off Rods) உலைக்கலனில் நுழைக்கப்பட வேண்டும்.  மிதமிஞ்சி நியூட்ரான் எண்ணிக்கை பெருகி வெப்பசக்தி வேகமாக ஏறும் போது அணு உலையை உடனே நிறுத்த “அபாயப் பாதுகாப்பு ஏற்பாடு” [Emergency Shutdown System] ஒன்று தேவைப்படுகிறது.  அதை நிறைவேற்ற இரண்டு விதமான முறைகள் உள்ளன.  நியூட்ரான் மலை விழுங்கி எனப்படும் “கடோலினியம்” திரவ மூலமாக அணு உலை நீரில் பாய்ச்சப்பட வேண்டும் [Gadolenium Poison Injection System].  அல்லது அதிகமான நியூட்ரான் விழுங்கிக் கோல்கள் உலைக்கலனில் புகுத்தப்பட வேண்டும்.     

 (தொடரும்)

***********************

தகவல்:

Picture Credits: 

1.  IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)
2.  Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire
3.  Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007) 
4  Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo 
5.  Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill.
6.  Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)
7.  Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)
8.  Herald Tribune : Earthquake Stokes Fears Over Nuclear Safety in Japan By Martin Facker (July 24, 2007)
9. Earthquake Zone : Earthquakes & Nuclear Safety in Japan [Citizen Nuclear Information Center (CNIC)] By Philip White International Liaison Officer CNIC.
10. Four Categories of Buildings & Equipment for Earhtquake-resitant Design of Nuclear Power Plants. 
11. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)
12. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)
13. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html  Letter By R. Bala (August 9, 2007)
14. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp  [World Association of Nuclear Operation Website]
15. 
16. IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)
 

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] September 6, 2007
 

ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பும் -3

 

 

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
 

நெருங்காது நீங்காது தீக்காய்வார் போல
கருஅணுவில் மின்சக்தி ஆக்கு !

 

முன்னுரை:        யந்திர யுகத்திலே முப்பெரும் தீங்குகளால் விபத்துக்கள் உலகெங்கும் அடிக்கடி யந்திர சாதனங்களில் நேர்கின்றன !  முதலாவது மனிதத் தவறு, இரண்டாவது யந்திரக் கோளாறு, மூன்றாவது புயல், இடிமின்னல், வெள்ளம், சூறாவளி, சுனாமி, பேய்மழை, பூகம்பம், எரிமலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் ! குறையுள்ள மனிதரும், பழுதுள்ள சாதனங்களும் இருக்கும் வரை ஆகாய விமானத்திலும், அண்டவெளிக் கப்பலிலும், இரயில் பயணத்திலும், அணுமின்சக்தி நிலையத்திலும், ஏனைய தொழிற் சாலைகளிலும் “அபாய எதிர்பார்ப்புகளை” [Risks] உலக மாந்தர் எதிர்நோக்கி இருக்க வேண்டும்.  செம்மையான பயிற்சி முறைகள் மனிதத் தவறுகளைக் குறைத்துவிடும்.  அதுபோல் சீரான சாதனங்களும் விபத்துகளைச் சிறிய எண்ணிக்கை ஆக்கிவிடும்.  ஆனால் கூடியவரை விபத்துக்கள் மனிதராலோ, யந்திரத்தாலோ, இயற்கைச் சீற்றத்தாலோ நேர்ந்தால் யந்திரங்கள் பாதுகாப்பான நிலைக்குச் சுயமாக மாறி, மனிதர் தப்பிக் கொள்ள வழிகள் இருக்க வேண்டும். அதுதான் 21 ஆம் நூற்றாண்டில் யந்திர உலகிலே விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் வல்லுநரின் குறிக்கோளாய் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.    

(கட்டுரை ஆசிரியர்)

அணு உலைகளில் ஏற்படக் கூடிய அபாயங்கள்

அணு உலைகளில், அணுமின் உலைகளில், அணுக்கழிவு சுத்தீகரிப்புச் சாலைகளில் ஏற்படக் கூடிய மாபெரும் விபத்துக்கள் என்ன ?  அணு உலை இயங்கும் போது மீறும் தொடரியக்கத்தில் [Super Critical Reaction] வெடிப்பது !  அடுத்து கதிரியக்கப் பிளவுத் துணுக்குகளும், [Fission Fragments] திரவக் கழிவுகளும், வாயுக் கழிவுகளும் கோட்டை அரணிலிருந்து [Containment Structure] எப்படியோ கசிந்து சூழ்வெளியில் பரவிக் கதிரியக்கத்தை மக்கள் மீதும், தளங்கள் மீதும் பொழிவது. 

இதுவரையில் கோர விளைவுகளை இரண்டு அணுமின் உலைகள் நிகழ்த்தி இருக்கின்றன.  முதலில் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் நிலைய விபத்து (1979).  அடுத்தது சோவித் ரஷ்யாவின் செர்நோபில் அணுமின் நிலைய விபத்து (1986).  அமெரிக்க அணுமின் உலையில் வெப்பத் தணிப்பு நீரிழப்பு விபத்து [Loss of Coolant Accident (LOCA)] நேர்ந்து அணு உலை எரிக்கோல்கள் உருகின.  ஆனால் கதிரியக்கத் துணுக்குகளும், திரவ, வாயுக் கழிவுகளும் கோட்டை அரணில் சேமிப்பாகி வெளியே கசியவில்லை.  ஆனால் செர்நோபில் அணு உலையில் வெப்ப ஆற்றல் மிகையாகி இருமுறை வெடிப்புக்கள் விளைந்து கோட்டை அரண் இல்லாததால் கதிரியக்கத் துணுக்குகள், திரவ, வாயுக் கசிவுகள் சூழ்வெளியில் பரவின.  உலகெங்கும் பல நாடுகளில் மனிதத் தவறாலோ, யந்திரப் பழுதாலோ அணு உலைகளில் சிறிய, சிறிய விபத்துக்களும் நேர்ந்துள்ளன.  

 

கடந்த 50 ஆண்டுகளாக 32 நாடுகளில் இயங்கி வரும் 435 அணுமின் நிலையங்களைப் பாதுகாப்பாக பராமரித்து வந்த அனுபவங்களை 12,700 அணு-உலை-ஆண்டுகள் [Reactor-years] என்னும் எண்ணிக்கையில் IAEA காட்டுகிறது.  யந்திரப் புரட்சி (தொழிற் புரட்சி) ஏற்பட்ட பிறகு எந்த ஒரு தொழிற் துறையும் அணுவியல் துறை உலைகள் போல் உலகெங்கும் தொடர்ந்து கண்காணிக்கப் படவில்லை.  அந்த சிறந்த கண்காணிப்பை 1957 இல் முதலில் துவங்கியது அகில நாட்டு அணுசக்திப் பேரவை எனப்படும் IAEA.  அடுத்து அணுமின் நிலைய இயக்கங்கள், இயக்கத் திறன்கள், பராமரிப்புகள், திறனாய்வுகள், குழு ஆய்வுகள், அபாய விளைவுகள் போன்றவற்றை அடிக்கடி அணு உலை இயக்க உலகக் கூட்டுறவு [World Association of Nuclear Operations (WANO)] நிறுவகம் மேற்பார்வை செய்கிறது.

மூர்க்கர்கள் தாக்காதபடி மேலை நாடுகளில் அணுமின் உலைப் பாதுகாப்பு அமைப்புகள் மிகுதியாக உள்ளன.  அப்படிச் சிலர் தாக்கினாலும் விளையும் அபாயங்கள் சிறிதளவுதான் என்று அறியப்படுகிறது.  இயற்கை நிகழ்ச்சியில் பேரளவு ஆற்றல் கொண்ட பூகம்பத்தின் போது அணுமின் உலைக் கட்டுமானங்கள், சாதனங்கள் நிலநடுக்க ஆட்டத்தைத் தாங்கிக் கொள்ளும் உறுதி படைத்தவையாக அமைக்கப் படுகின்றன. 

அணு உலை இயக்கங்களால் நேர்ந்த மரண விபத்துகள்

செர்நோபில் கோர உயிரிழப்பு, மற்றும் அதன் கதிரியக்கப் பொழிவால் விளைந்த நோய், மரண விபத்தைத் தவிர உலக நாடுகளில் இயங்கும் வேறு எந்த அணுமின் நிலையங்களில் கதிரியக்கத்தால் மனிதர் யாரும் இறக்க வில்லை.  அணு ஆராய்ச்சி உலைகளில் பணிபுரியும் விஞ்ஞானிகள் தவறுதலாக யுரேனிய அல்லது புளுடோனிய எருக்களைக் கையாண்டதால் கதிரியக்கம் பெற்று ஒரு சிலர் சில தினங்களில் உயிரிழந்த தகவல் கிடைத்துள்ளது. ஜப்பானில் யுரேனியச் செறிவுச் சாலை ஒன்றில் ஏற்பட்ட கதிரியக்க விபத்தில் இருவர் மாண்டனர். மேலும் இரண்டு அணுமின் நிலையங்களில் [ஜெர்மனியில் குன்றிமிங்கன் அணுமின் உலை, ஜப்பானில் மிஹாமா அணுமின் உலை] பராமரிப்பு செய்யும் போது கதிரியக்கம் இல்லாத நீராவி பேரளவில் கசிந்து நான்கு பேர் மரித்தார் என்பது அறியப் படுகிறது.       

அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் கண்காணிப்பு   

1957 இல் ஆஸ்டிரியா வியன்னாவில் தோன்றிய அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் சில விதி முறைகள்,

அணுக்கருவியல் பாதுக்காப்பின் கீழ் அணுக்கருப் பண்டப் பயன்பாடு, அணு ஆயுத எருக் கண்காணிப்பு ஆகிய இரண்டும் சேர்க்கப் பட்டுள்ளன.    

அணுக்கருவியல் பாதுகாப்பு [Nuclear Safety]:  அனுமதி பெற்ற அணு உலைக் கூடங்களிலிருந்து மனிதர் தூண்டாத விபத்துகளால் விளையும் கதிரியக்க வெளியேற்றத்தையும், அதன் தீங்குகளையும் பற்றியது. 

அணுக்கருப் பண்டப் பயன்பாடு [Nuclear Security]:  அணுவியல் எரு மற்றும் ஏனைய கதிர்வீசும் பண்டங்களைப் பயன்படுத்துதல் பற்றியது.  அன்னியர் அல்லது புறத்தே உள்ளவர் அணுவியல் பொருட்களை களவு செய்வதைக் கண்காணித்தல் பற்றியது. 

அணு ஆயுத எருக் கண்காணிப்பு [Nuclear Safeguards]:  உலக நாடுகளில் அணு ஆயுத ஆக்கத்தையும் பெருக்கத்தையும் தடுப்பது பற்றியது.  

அகில நாட்டு அணுசக்திப் பேரவை உலக நாடுகளில் அணுக்கருப் பண்டங்கள் சேமிப்பு, பாதுகாப்பு, பயன்பாடு, தீய்ந்த எருக்கள் கைவச இருப்பு [Spent Fuel Storage], புதைப்பு பற்றிய வினைகளில் தணிக்கை ஆற்றல் உரிமை [Auditor of World Nuclear Safety] பெற்றது.  ஒவ்வொரு நாட்டுக்கும் கண்காணிப்பு செய்ய அகில நாட்டு அணுசக்திப் பேரவைப் பிரதிநிதி ஒருவர் அமைக்கப் படுவார். 
 

(தொடரும்)

***********************

தகவல்:

Picture Credits: 

1.  IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)
2.  Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire
3.  Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007) 
4  Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo 
5.  Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill.
6.  Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)
7.  Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)
8.  Herald Tribune : Earthquake Stokes Fears Over Nuclear Safety in Japan By Martin Facker (July 24, 2007)
9. Earthquake Zone : Earthquakes & Nuclear Safety in Japan [Citizen Nuclear Information Center (CNIC)] By Philip White International Liaison Officer CNIC.
10. Four Categories of Buildings & Equipment for Earhtquake-resitant Design of Nuclear Power Plants. 
11. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)
12. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 30, 2007

 

ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2

 

(ஜூலை 17, 2007)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 

 

பேரழிவுப் போராயுதம் உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து விழுதற்றுப் போக,
விதையும் பழுதாக
ஹிரோஷிமா நகரை நரகமாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
மட்ட மாக்கப் பட்டது !
திட்ட மின்றி
மூட நிபுணர்கள் அணு உலையைச்
சூடாக்கிச்
சோதனையில் வெடித்து
நிர்வாண மானது,
செர்நோபில் அணு உலை !
மாய்ந்தனர் மக்கள்,
மடிகிறார்,
மேலும் மரிப்பார், மரிப்பார் !
நாடு, நகரம்,
வீடு, வீதி, வயல்கள் எல்லாம்
மூடின கதிர் வீச்சுகள் !
கட்டாயமாய்ப் பல்லாயிரம் பேர்,
கைப்பையுடன்
புலம்கடத்தப் பட்டார் !
புற்று நோயும், இரத்த நோயும்
பற்றின பாலரை! படுகிறார் வேதனை!
மனிதத் தவறு !
மாபெரும் தவறு !
மன்னிக்க முடியாத தவறு !
ரஷ்யக் கரடிகள் முதன்முதல் 
அரங்கேற்றிய அணுயுகப்
பிரளயம் !

(செர்நோபில் விபத்தின் 20 ஆண்டுப்
பூர்த்தி நினைவாக எழுதப்பட்டது)

++++++

“காஷிவஸாகி-கரிவா அணுமின் நிலையம் ஒரு தீவிர நில அதிர்ச்சி தளத்தட்டின் மீது அமர்ந்திருப்பதை முதலில் கண்டுபிடிக்காமல் போனது எங்களுக்கு ஓர் இழப்புதான்.  ஆயினும் அந்த தவறு எந்த விதத்திலும் ஓர் அபாயப் பேரிழப்பாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதில்லை.”

டோஷியாகி ஸகாயி [Head Engineering Group Tokyo Electric’s Nuclear Plants]  

“காஷிவஸாகி-கரிவா அணுமின் நிலையம் நிலநடுக்கத்தின் போது பாதுகாப்பாக நிறுத்தமாகி, யந்திரச் சாதனங்களும், கட்டடங்களும் பெருத்த சிதைவுகள் அடையாது அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டன. ஆனால் அதன் கீழ் வெகு ஆழத்தில் ஒரு தீவிர நில அதிர்ச்சித் தட்டிருந்தது எப்படி நிபுணர்களுக்குத் தெரியாமல் போனது ?”  

மிஸியோ இஷிகாவா [President Japan Nuclear Technology Institute] 

“நிலநடுக்க விளைவுகளை IAEA குழுவினர் உளவ ஜப்பானிய அணுவியற்துறை அதிகாரிகள் வெளிப்படையாக, முழு ஒத்துழைப்பளிப்பதை வரவேற்கிறேன்.  ஜப்பானிய நிபுணர்களின் நிலநடுக்க விளைவு ஆய்வுகளும் IAEA குழுவினர் புரியும் தனிப்பட்ட உளவுகளும் விபத்தால் நேர்ந்த நேர்முறை, எதிர்முறை விளைவுப் பாடங்களைக் [Positive & Negative Lessons] கற்றுக் கொள்ள உதவும்.  அந்த பாடங்கள் மற்ற உலக நாட்டு அணுமின் நிலையங்களின் இயக்கக் கட்டுப்பாடுகளுக்கும் பராமரிப்புக்கும் ஏற்றதாகும்.”
 
மொகமது எல்பராடி [Mohamed ElBaradei, IAEA Director General]

முன்னுரை:  ஜப்பானிலும் மற்ற உலக நாடுகளிலும் உள்ள அணு உலைகள் நிலநடுக்க அதிர்ச்சி ஆட்டங்களைத் தாங்கி நடுக்கம் மீறினால் அணு உலைகள் தானாகவே நிறுத்தம் அடையுமாறு டிசைன் செய்யப்படுகின்றன.  நிலநடுக்கம் எப்போது வருமோ என்று அஞ்சிய நிலையில் விழிப்பாக இருக்கும் ஜப்பானில் 55 அணுமின் நிலையங்கள் இப்போது இயங்கி வருகின்றன.  1995 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிகப் பெரும் (7.3 ரிக்டர்) கோப்-ஒஸாகா நிலநடுக்கத்தில் கூட [Kobe-Osaka Earthquake] அருகில் இருந்த அணுமின் நிலையங்களுக்குப் பாதிப்புகள் நேரவில்லை.  2004, 2005, 2007 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் “தளத்துடிப்பு வேக வீதம்” [Ground Acceleration] மிகையாக இருந்ததால், அணு உலைகள் தாமாக நிறுத்தம் அடைந்தன !  1999 இல் டெய்வான் நிலநடுக்கத்தில் அருகிலிருந்த மூன்று அணுமின் உலைகள் தாமாக நிறுத்தம் அடைந்தன.   2007 ஜூலை 17 ஆம் தேதி வடமேற்கு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நிலையம் பாதுகாப்பாக நிறுத்தமாகிப் பெரிய பாதிப்புகள் நேரா விட்டாலும், உலகப் பெரும் காஷிவஸாகி-கரிவா அணுமின் நிலையம் ஒரு தீவிர நில அதிர்ச்சித் தளத்தட்டின் (Active Seismic Fault) மீது அமர்ந்துள்ளது என்று முதன்முதல் நிபுணர்கள் கண்டுபிடித்தது குறிப்பிடத் தக்க ஓர் அதிசயமாகும் !

ஜப்பான் நிலநடுக்கமும் அதிர்ச்சி விளைவுகளும்

2007 ஜூலை 16 ஆம் தேதி ஜப்பானின் வடமேற்குப் பகுதியில், தலைநகர் டோக்கியோவிலிருந்து 250 கி.மீடர் [150 மைல்] தூரத்தில் உள்ள நைகாடா நகரத்தை நடுக்கமைய மாகக் [Epicentre] கொண்டு 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் காலை 10:13 மணிக்கு (01:13 GMT) உண்டாகியது.  அதன் விளைவால் இதுவரை 11 பேர் மரித்தார் என்றும், 1000 பேருக்கு மேல் காயமடந்தார் என்றும் 13,000 பேர் தமது வீட்டை விட்டு ஓடி 100 பாதுகாப்பு இல்லங்களில் தங்கினார் என்றும் அறியப்படுகிறது.  150 மைல் தூரத்தில் இருக்கும் டோக்கியோவின் மாட மாளிகைகள் கூட ஆடினவாம் !  நைகாடா நகரத்துக்கு அருகே உள்ள உலகப் பெரும் காஷிவாஸாகி அணுமின் நிலையத்தின் ஏழு தனிப்பட்ட அணு உலைகள் நில அதிர்ச்சியை உணர்ந்த கணமே தானாகப் பாதுகாப்பாக நிறுத்தம் அடைந்தன என்று அறியப்படுகின்றது ! 

யுரேனிய எரிக்கோல்கள் உள்ள அணு உலைக்கு எந்த இடருமின்றி, அருகில் இருந்த தீய்ந்த எரிக்கோள்கள் சேமித்து வைக்கப் பட்டுள்ள காங்கிரீட் நீர்த் தடாகத்தில் மட்டும் சில பிளவுகள் உண்டானதாகத் தெரிகிறது.  வெளியே உள்ள டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றில் தீப்பற்றி அது உடனே அணைக்கப் பட்டது. மேலும் வெளியே வைக்கப்பட்டுள்ள தணிவுக் கதிரியக்கத் திரவமுள்ள ஒரு இரும்புக் கலம் உடைந்து கழிவுநீர் கசிந்தோடிக் கடலில் கலந்தது என்பது பலரும் அலறும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி.  வியன்னாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency, (IAEA) Vienna Austria] ஜப்பானிய அதிகாரிகளின் வேண்டுகோள்படி ஆறு பேர் அடங்கிய ஆய்வுக் குழுவைச் சமீபத்தில் நிலநடுக்க விளைவுகளை நேரடியாக அறிந்துவர அனுப்பியுள்ளது.  அவரது முக்கியக் கண்டுபிடிப்பு: காஷிவாஸாகி அணுமின்சக்தி யூனிட்டுகள் செய்யப்பட்ட டிசைன் வரை அளவு (6.5 ரிக்டர்) விபத்து அளவைவிடக் (6.8 ரிக்டர்) குறைவானது.  ஆயுனும் தீவிரப் பழுதுகள், பிளவுகள் ஏற்படாததற்குக் காரணம், எல்லா டிசைன் வரைமுறைகளும் 10% மிகையாக வைக்கப்பட்டுள்ளன.  அதாவது மெய்யான டிசைன் நிலநடுக்க வரை அளவு: (6.3 +6.3 X 10/100 = 6.3+0.63 =6.93).  ஆய்வு அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும். 

அகில நாட்டு அணுசக்திப் பேரவைக் குழிவினர் செய்த உளவுகள்   

அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் பேரதிபர் மொகமது எல்பராடி ஜப்பானிய அணுவியற் துறை அதிகாரிகளின் வெளிப்படையான ஒத்துழைப்பை வரவேற்று, “ஜப்பானியரின் உளவு ஆய்வுகளும் IAEA குழுவின் தனிப்பட்ட உளவுகளும் நேர்முறை, எதிர்முறை விளைவுப் பாடங்களைக் கற்றுக் கொள்ள உதவும்.  அந்த பாடங்கள் மற்ற உலக நாட்டு அணுமின் நிலையங்களுக்கும்  உகந்ததாகும், என்று எடுத்துக் கூறினார்.     

பேரவைக் குழுவினர் மூன்று நாட்கள் தங்கி ஏழு அணுமின் நிலையங்களின் சிக்கலான கட்டட அமைப்புகளையும், ஏதுவான அணு உலைச் சாதனங்களையும் சோதித்துப் பிளவுகள், பழுதுகள் ஏற்பட்டுள்ளனவா என்று உளவு செய்தார்கள்.  விபத்து நேர்ந்த நாளன்று அணுமின் உலை ஆட்சி அறை அரங்கில் [Control Room Panels] பதிவான அனைத்து பதிவுக் கருவிகளின் பதிவுகளையும், அணுமின் உலைச் சாதனங்கள் இயக்கங்களையும் ஆழ்ந்து நோக்கினார்.  அவரது முதல் உளவு முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

நிலநடுக்கக் கட்டடச் சோதனை அமைப்பு

1.  அணுமின் நிலையக் கருவிகள், சாதனங்கள் நிலநடுக்கத்தின் போது, டிசைன் வரையறையை மீறாமல் திட்டமிட்டபடிப் பாதுகாப்பாய் இயங்கியுள்ளன.  

2.  ஜப்பானிய நிலைய இயக்குநர் கைப் பதிவுகளின் அறிக்கைப்படி சிறிதளவுக் கதிரியக்க நீரே கசிந்து கடலில் கலந்தது என்பதற்குப் பேரவைக் குழுவினர் ஒப்புதல் அளித்துள்ளார்.  அச்சிறிய அளவுக் கசிவுக் கதிரியக்கத் திரவக் கழிவு பொதுநலச் சூழ்வெளிப் பாதுகாப்பு எல்லையைத் [Limits for Public Health & Environmental Safety] தாண்ட வில்லை என்பது உறுதியாக்கப் பட்டிருக்கிறது.  நிலநடுக்கத்தால் உண்டான கட்டடப் பிளவுகள் எதுவும் அணு உலைப் பாதுக்காப்புக்கு அரணுக்கோ அல்லது சாதன ஏற்பாடுகளுக்கோ நேரவில்லை என்பது தெளிவாகி இருக்கிறது.    

3.  நிலநடுக்க சமயத்தில் நிறுத்தமான அணுமின் நிலையச் சாதனங்கள், பம்ப்புகள், கொதிகலன்கள் சிலவற்றில் பழுதுகள், பிளவுகள் ஏற்பட்டுள்ளனவா என்று கதிரியக்கத் தளங்களில் உடனே சோதிக்கப்பட முடியாது.  திட்டமிட்டுப் பணிபுரியும் அணுமின் நிலையப் பராமரிப்புத் தருணங்களில்தான் அவற்றை உளவு செய்ய முடியும்.  பேரவைக் குழுவினர் கூற்றுப்படி இன்னும் அணு உலைச் சாதனங்கள், அழுத்தக் கலன்கள், எரிக்கோல்கள் அடுத்த உலை நிறுத்த வேளைகளில்தான் உளவு செய்யப்பட வேண்டும்.

4.  நிலநடுக்க அதிர்ச்சியால் உண்டான உலைக்கலச் சாதன அழுத்தங்கள் [Physical Stresses of Pressure Vessel & other Components] சில நிலையங்களின் பாதுகாப்பான இயக்க ஆயுட் காலத்தைக் குறைக்கலாம்.  அதாவது அவ்வித அழுத்தமான சாதனங்கள், எதிர்பார்த்த காலத்துக்கு முன்பே மாற்றப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம்.    

அழுத்த நீர் அணுமின் நிலைய அமைப்பு

5.  குறிப்பிடத் தக்க ஒரு கண்டுபிடிப்பு என்ன வென்றால் 2007 ஜூலை 17 ஆம் தேதி நேர்ந்த நிலநடுக்கம் (6.8 ரிக்டர்) பாதுகாப்புக்காக எஞ்சினியர்கள் முதலில் செய்த அணுமின் நிலைய டிசைன் அளவை விட (6.3 ரிக்டர்) 0.5 ரிக்டர் மிஞ்சி விட்டது !  ஆயினும் பெரும்பான்மையான அணுமின் உலைகளின் பாதுகாப்பு டிசைன் வரையறை எப்போதும் 10% மிகையாக வைத்துக் கட்டப்படுவதால் (6.3 + 0.63 = 6.93), நிலையத்தில் பேரளவுச் சிதைவுகளோ, பிளவுகளோ உண்டாக வில்லை என்று முடிவு செய்யப் பட்டிருக்கிறது.  

6.  அணுமின் நிலையச் சொந்த நிறுவனமான டோக்கியோ மின்சார வாரியம் அதற்குச் சில மாதங்களுக்கு முன்பே “நிலநடுக்கத் தீங்கு மீளாய்வு” (Seismic Hazard Re-evaluation) செய்து 2006 செப்டம்பரில் அதன் அறிக்கையை ஜப்பான் அணுத்துறைப் பாதுகாப்பு தலையகத்துக்கு [Japan Nuclear Safety Commission (JNSC)] அனுப்பியுள்ளது.  2007 ஜூலையில் நேர்ந்த நிலநடுக்கத்தின் விளைவுகளும் எடுத்தாளப்பட்டு இப்போது டிசைன் மேம்பாடு செய்யப்படும். 

7.  ஜப்பான் நிலநடுக்க விளைவுகள் IAEA மூலமாக அனைத்துலக உறுப்பின நாடுகளுக்கும் பரப்பப் படுகின்றன.  அதுபோல் மற்ற நாடுகளின் அணு உலை விபத்துகள், இயக்க விபரங்களை ஜப்பான் அணுத்துறை நிறுவனங்களுக்கு IAEA அனுப்பி வருகிறது.

(தொடரும்)

***********************

தகவல்:

Picture Credits: 

1.  IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)
2.  Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire
3.  Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007) 
4  Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo 
5.  Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill.
6.  Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)
7.  Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)
8.  Herald Tribune : Earthquake Stokes Fears Over Nuclear Safety in Japan By Martin Facker (July 24, 2007)
9. Earthquake Zone : Earthquakes & Nuclear Safety in Japan [Citizen Nuclear Information Center (CNIC)] By Philip White International Liaison Officer CNIC.
10. Four Categories of Buildings & Equipment for Earhtquake-resitant Design of Nuclear Power Plants. 
  
******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 21, 2007

 


 

ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் !

fig-1-earthquake-near-nuclear-plant.jpg

(ஜூலை 16, 2007)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

அருகாது அகலாது தீக்காய்வார் போல
கருஅணுவில் மின்சக்தி ஆக்கு
 

முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் முப்பெரும் பேரழிவு நிகழ்ச்சிகளில் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாக்கி அணுகுண்டுகள் வீழ்ச்சிக்குப் பிறகு அடுத்த இடத்தைப் பெறுவது, போபால் இராசயனக் கூடத்தில் 1984 ஆண்டு வெளியேறிய விஷ வாயுத் தாக்குதலின் கோர விளைவுகளே! நிகழ்ச்சிகளில் மூன்றவது நிலையைப் பெறுவது, சோவியத் ரஷ்யாவின் செர்நோபிள் அணு உலை வெடிப்பு! அணு யுதங்கள் வெடித்து, ஜப்பானில் இறந்தவர் எண்ணிக்கை 300,000 பேரைத் தாண்டி விட்டது! அங்கு காயம் உற்றோர், கதிரடி பெற்றோர், சந்ததி ஊனமுற்றோர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா!  செர்நோபிள் விபத்தில் உடனே இறந்தவர் 31 நபராயினும், மிகையானக் கதிரடியில் பாதிக்கப் பட்டவர் 600,000 மேல் என்றும் பின்னால் அவர்களில் மரணம் அடைந்தவர் எண்ணிக்கை யிரக் கணக்கில் ஏறிக்கொண்டு போவதாயும் அறியப் படுகிறது!  அண்டை ஊர்களில் பொழிந்த கதிர்த் தீண்டலால், சுமார் 135,000 மக்கள் வேறு ஊர்களில் குடியேற ராணுவப் பஸ்களில் தூக்கிச் செல்லப் பட்டனர்! பல வருடங்கள் கழித்துக் கதிர் ஐயோடினில் [Radioiodine] பாதிக்கப்பட்ட 1800 குழந்தைகள் தைராய்டு புற்றுநோயில் தாக்கப் பட்டதாகவும், அந்தக் குழுவில் பத்துக் குழந்தைகள் இறந்து விட்டதாகவும் இப்போது அறியப் படுகிறது!

உலக வரலாற்றில் ஜப்பானிலிட்ட அணு ஆயுத வீச்சுகளுக்கு அடுத்தபடியாக, ஆனால் அவற்றை விட 400 மடங்கு பேரழிவு மிகையாக விளைவிக்கும் ஒரு கோர கதிரியக்கத் தீங்கு நிகழ்ச்சியாக, செர்நோபில் அணு உலை விபத்து கருதப் படுகிறது!  செர்நோபில் நிலையத்தில் சிதைந்து முறிந்த கட்டடங்களைத் தாண்டிக் கதிரியக்கத் துணுக்குகளும், தூசுகளும், மாசுகளும் காற்றில் பரவி கிழக்கே ஜப்பானிலும், மேற்கே கனடா வரையிலும் பயணம் செய்து கருவிகள் மூலம் பதிவாகின! செர்நோபில் அணு உலை வெடிப்பால் இதுவரை 65 பேர் உயிரிழந்தனர் என்று அறிய வருகிறது! கதிர்த் தீண்டலாகி 20 மைல் சுற்றளவில் வாழ்ந்த பிரிபயாட் நகர மக்கள் [45,000 பேர்] உள்பட மற்ற அண்டை ஊர்களிலும் வசித்த 116,000 நபர்கள் கட்டாயமாகப் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டனர். னால் வெடித்துச் சிதறிய கதிர்வீச்சுத் துணுக்குகள் பல மைல் சுற்றளவில் பரவிப் படிந்துள்ளதால், அடுத்துச் சுமார் 9000 பேர் பல்லாண்டுகளில் மரணம் அடைவார் என்று ஐக்கிய நாடுகளின் அணுசக்திக் கண்காணிப்புப் பேரவை [UNESCO-IAEA] கணித்துள்ளது!

ஆனால் சமீபத்தில் 2007 ஜூலை 16 ஆம் தேதி நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அதனால் தூண்டப்பட்ட காஷிவாஸாகி-கரிவா அணுமின்சக்தி நிலையத் [Kashiwazaki- Kariwa Nuclear Power Plant] தீவிபத்தும், கதிரியக்கக் கழிவுநீர்க் கசிந்து கடலில் சேர்ந்ததும், மற்ற விபத்துக்களோடு ஓப்பு நோக்கினால் மிகச் சிறிய விளைவு என்றுதான் அகில உலக அணுசக்திப் பேரவை (IAEA) முடிவு செய்கிறது !   

ஜப்பான் நிலநடுக்கமும் அதிர்ச்சி விளைவுகளும்

2007 ஜலை 16 ம் தேதி ஜப்பானின் வடமேற்குப் பகுதியில், தலைநகர் டோக்கியோவிலிருந்து 250 கி.மீடர் [150 மைல்] தூரத்தில் உள்ள நைகாடா நகரத்தை நடுக்க மையமாகக் [Epicentre] கொண்டு 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் காலை 10:13 மணிக்கு (01:13 GMT) உண்டாகியது.  அதன் விளைவால் இதுவரை 9 பேர் மரித்தார் என்றும், 1000 பேருக்கு மேல் காயமடந்தார் என்றும் 13,000 பேர் தமது வீட்டை விட்டு ஓடி 100 பாதுகாப்பு இல்லங்களில் தங்கினார் என்றும் அறியப்படுகிறது.  150 மைல் தூரத்தில் இருக்கும் டோக்கியோவின் மாட மாளிகைகள் கூட டினவாம் !  நைகாடா நகரத்துக்கு அருகே உள்ள உலகப் பெரும் காஷிவாஸாகி அணுமின் நிலையத்தின் ஏழு தனிப்பட்ட அணு உலைகள் நில அதிர்ச்சியை உணர்ந்த கணமே தானாகப் பாதுகாப்பாக நிறுத்தம் அடைந்தன என்று அறியப்படுகின்றது ! 

யுரேனிய எரிக்கோல்கள் உள்ள அணு உலைக்கு எந்த இடருமின்றி, அருகில் இருந்த தீய்ந்த எரிக்கோள்கள் சேமித்து வைக்கப் பட்டுள்ள காங்கிரீட் நீர்த் தடாகத்தில் மட்டும் சில பிளவுகள் உண்டானதாகத் தெரிகிறது.  வெளியே உள்ள டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றில் தீப்பற்றி அது உடனே அணைக்கப் பட்டது. மேலும் வெளியே வைக்கப்பட்டுள்ள தணிவுக் கதிரியக்கத் திரவமுள்ள ஓர் இரும்புக் கலம் உடைந்து கழிவுநீர் கசிந்தோடிக் கடலில் கலந்தது என்பது பலரும் அலறும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி.  வியன்னாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency, (IAEA) Vienna Austria] ஜப்பானிய அதிகாரிகளின் வேண்டுகோள்படி ஆறு பேர் அடங்கிய ஆய்வுக் குழுவைச் சமீபத்தில் நிலநடுக்க விளைவுகளை நேரடியாக அறிந்துவர அனுப்பியுள்ளது.  அவரது ஆய்வு அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும்.  அந்த அறிக்கை அகில வலைகளில் வெளியானதும் நான் எனது தொடர்க் கட்டுரையில் எழுதுகிறேன்.      

நிலநடுக்கங்கள் அடிக்கடி குலுக்கும் ஜப்பான் தேசம்

உலக நாடுகளிலே ஜப்பான் தேசம் ஒன்றுதான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நிலையற்ற கடற்தளம் மீது ஒட்டியும் ஒட்டாத தீவுகளாய்ப் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து வருகிறது.  ஒவ்வொரு ஐந்து நிமிடமும் எழும் நிலநடுக்க நாட்டில் ஜப்பானியர் மிக விரைவாய்ச் செல்லும் இரயிலில் அனுதினம் பயணம் செய்து கொண்டு, நிலநடுக்கச் சிதைவுகளைச் சகித்திக் கொண்டு வாழ்கிறார்.  புல்லெட் டிரெயின் எனப்படும் வேக வாகனங்கள் நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் தானே நின்று விடுகின்றன.  ஜப்பானில் 30% பங்கு மின்சார ற்றல் பரிமாறிவரும் 55 அணுமின் நிலையங்கள் நிலநடுக்கத்தால் பேரழிவுகள் நேராதவாறு பாதுகாப்பாக நிறுத்தமாகி, நிலைமை சரியான பிறகு இயங்கின்றன.  அதே நைகாடா பகுதியில் 2004 ஆம் ஆண்டு அக்டோபரில் உண்டான 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் 65 பேர் மரித்தனர்.  இதுவரை நிகழ்ந்த நிலநடுக்கத்திலே மிகப் பெரும் நடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் 1995 ண்டில் கோப் நகரப் பகுதியில் [Kobe City] நேர்ந்தது.  அந்தக் கோர நடுக்கத்தில் 6400 பேர் உயிரிழந்தனர் !

காஷிவாஸாகி அணுமின் நிலையத்தில் நேர்ந்த விளைவுகள்:

டோகியோ மின்சார வாரியம் [Tokyo Electric Power Company (TEPCO)] மேற்பார்வை செய்து நடத்தி வரும் காஷிவாஸாகி அணுமின் நிலையம் ஏழு தனி உலைகளைக் கொண்ட உலகத்திலே மிகப் பெரிய நிலையம் அது !  அது ஜப்பானின் வடமேற்குப் பகுதியில் நைகாடா நகருக்கு அருகில் 4.2 சதுர கி.மீடர் பரப்பில் அமைக்கப் பட்டுள்ளது. அந்த ஏழு அணுமின் யூனிட்டுகளும் கொதிநீர் அணு உலைகள் [Boiling Water Reactors] ஆகும்.  அவை அனைத்தும் இயங்கினால் மொத்தம் 8212 MWe மின்சார ஆற்றல் பரிமாறத் தகுதியுள்ளது.  அந்த தளத்தில் ஏழு அணு உலைகள் உள்ளதோடு ஓர் அணுவியல் பயிற்சிக் கூடம், பொதுநபர் அணுசக்தித் தகவல் கூடம் மற்றும் தணிவு நிலை கதிரியக்கக் கழிவுச் சேமிப்புக் கிடங்கு [Low Level Radioactive Waste Storage Facility] ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளன.  மேலும் சிறப்பாக கொதிநீர் உலை இயக்குநர் பயிற்சிக்காக இரண்டு போலி அணுமின் உலை அரங்குகள் [Simulators in BWR Operator Training Centre] அங்கே நிறுவகமாகி யுள்ளன.

 

 

நிலநடுக்கமான அன்றைய தினத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அணுமின் உலைகள் யாவும் சுய இயக்கு நிலநடுக்க உணர்வுக் கருவிகள் மூலம் [Seismic Sensors] நுகரப்பட்டு உடனே நிறுத்தம் யின.  அதாவது அந்த நிலையத்திலிருந்து வெளியாகும் மின்சாரப் பரிமாற்றம் துண்டிக்கப்பட்டு நிலையங்கள் யாவும் பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டன.  ஆனால் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உலோக உராய்வால் ஒரு மின்னழுத்த மாற்றியில் [Electric Transformer] தீப்பற்றியது.  அதன் மூலம் மின்சாரப் பரிமாற்றம் முன்பே நிறுத்தமானதால் தீங்குகள் எதுவும் நிகழாமல் புகை மட்டும் மூண்டு பரபரப்பான டெலிவிஷன் காட்சியாக உலகைக் கவர்ந்தது.  ஜப்பான் தீயணைப்புப் படையினர் உடனே தீயை அணைத்துப் பரவாமல் தடுத்தனர்.    

(தொடரும்)

***********************
தகவல்:

Picture Credits: 

1.  IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)
2.  Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire
3.  Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007) 
4  Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo 
5.  Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill.
6.  Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)
7.  Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)
  
******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 16, 2007

செவ்வாய்க் கோளை நோக்கிச் செல்லும் ஃபீனிக்ஸ் விண்கப்பல் தளவுளவி

 

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
 

“நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுறுவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]

“ஃபீனிக்ஸ் திட்டக் குறிப்பணியில் தளவுளவி செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனிப்பாறைத் தளத்தில் புதியதோர் பகுதியை ஆராயத் தேர்தெடுத்து இறங்கும்.  உண்மையாக நாங்கள் கண்டறியப் போவது அந்த பனித்தள நீர் உருகிய சமயம், மண்ணில் கலந்து அந்தக் கலவையில் உயிர் ஜந்துகள் வளரத் தகுதி உள்ளதா என்பது.  ஏனெனில் உயிரின விருத்திக்குத் தேவை திரவ நீர், நமது உடலில் உள்ள புரோடீன் அமினோ அமிலம் போன்ற சிக்கலான கார்பன் அடைப்படை ஆர்கானிக் மூலக்கூறுகள்,”

பீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

“1970 இல் நாசா அனுப்பிய வைக்கிங் விண்ணூர்தி ஏன் செவ்வாய்த் தளத்தில் ஆர்கானிக் மூலக்கூறுகளைக் காணவில்லை என்ற வினா எழுந்துள்ளது.  ஆர்கானிக் மூலக்கூறுகளைச் சிதைக்கும் ஓர் இயக்கப்பாடு செவ்வாய்க் கோளில் உள்ளது என்று நாங்கள் எண்ணுகிறோம்.  ஆனால் அந்த இயக்கப்பாடு துருவப் பகுதியில் இருக்காது என்பது எங்கள் யூகம்.  ஏனெனில் நீரும் பனிக்கட்டியும் ஆர்கானி மூலக்கூறுகளைச் சிதைக்கும் “பிரிப்பான்களைத்” (Oxidants) துண்டித்துவிடும்.  செவ்வாய்த் தள மண்ணில் உயிர் ஜந்துகள் இருந்தன என்று அறிவது கடினம்.  ஆனால் அந்த மண்ணில் உயிரினம் வாழ முடியுமா என்று விஞ்ஞானிகள் அறியலாம்.”

வில்லியம் பாயின்டன், [William Boynton] ஃபீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, பேராசிரியர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

“முதன்முதல் நாங்கள் பயன்படுத்தும் மிக நுட்பக் காமிரா செவ்வாய்த் தள மண்ணின் தூசிகளைக் கூடப் பெரிதாய்ப் படமெடுக்கும்.  தூசிப் புயல் அடித்துக் காமிராக் கண்ணும், மின்சக்தி தரும் சூரியத் தட்டுகளும் மூடிக் குறிப்பணிகள் தடுக்கப் படுவதாலும், செவ்வாய்க் கோளில் தூசிப் பெயர்ச்சியால் அதன் காலநிலைகள், சூழ்வெளி பாதிக்கப் படுவதாலும், தூசிப் படப்பிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.  தற்போது செவ்வாய்த் தளத்தில் உளவு செய்து வரும் இரண்டு வாகனங்களும் தூசிப் புயல் அடிப்பால் பரிதியொளித் தட்டுகளில் தூசி படிந்து மின்சக்தி ஆற்றல் குன்றங் கருவிகளின் பணிகள் பாதிக்கப் பட்டுள்ளன.”  

டாக்டர் டாம் பைக் [Dr. Tom Pike] ஃபீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, [Imperial College, London]

2007 மார்ச் 15 ஆம் தேதி செவ்வாய் எக்ஸ்பிரஸ் விண்கப்பலில் [Mars Express Spacecraft] உள்ள இத்தாலி ரேடார்க் கருவி மார்ஸிஸ் [MARSIS] தென் துருவத்தில் அளந்த அகண்ட ஆழமான பனிக்கட்டித் தளம் அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தை விடப் பெரியது!  அதன் இருக்கை முன்பே அறியப்பட்டாலும் அந்த ரேடார் ஆழ்ந்து அளந்த அனுப்பிய பரிமாணப் பரப்பு பிரமிக்க வைக்கிறது!  

ஜெ·ப்ரி பிளௌட் நாசா ஜெ.பி.எல் விஞ்ஞானி [Jeffrey Plaut, NASA JPL Investigator]

“செவ்வாய்க் கோள் மணற் படுகையில் [Sand Dunes] பனித்திரட்டு பரவிக் கிடக்கும் சான்று கிடைத்திருக்கின்றது. மணற் கட்டிகளைச் சேர்த்து வைத்திருப்பது நீர் என்பது எனது யூகம்.  எதிர்காலச் செவ்வாய்ப் பயண மாந்தர் பிழைப்பதற்கு அதை உதவவும், எரிசக்திக்குப் பயன்படுத்தவும் முடியுமென நினைக்கிறேன்.  அசுரக் குவியலான சில மணற் படுகையில் 50% நீர்மை இருப்பதாக செவ்வாய்த் தளப்பண்பியல் சான்றைக் [Topgraphical Evidence] காண்கிறேன்.  செவ்வாயில் பெருவாரியான நீர் வெள்ளம் கிடைக்கலாம் என்று நான் சொல்லவில்லை!  முன்பு காணப்படாத ஓரிடத்தில் புதிதாக நீரிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறேன்.”

மேரி போர்க், அரிஸோனா அண்டக்கோள் விஞ்ஞான ஆய்வுக்கூடம் [Mary Bourke (Sep 2005)]  

முன்னுரை:     2007 ஆகஸ்டு 4 ஆம் தேதி நாசா விண்வெளி ஆய்வகம் (120-312) மில்லியன் மைல் தூரத்தில் பயணம் செய்யும் செவ்வாய்க் கோளை நோக்கி, ·பீனிக்ஸ் தளவுளவியை டெல்டா-2 ராக்கெட்டில் பிளாரிடா கென்னடி விண்வெளி மையத்தின் கெனவரல் முனையிலிருந்து ஏவியுள்ளது !  விண்ணூர்தியில் அமைந்துள்ள தளவுளவி 2008 மே மாதம் 25 ஆம் தேதியன்று செவ்வாய்த் தளத்தில் இறங்கி ஓரிடத்தில் நிலையாக நின்று தள ஆய்வுகள் செய்யு மென்று எதிர்பார்க்கப் படுகிறது..  தளவுளவி மூன்று மாதங்கள் தளத்தைத் தோண்டி இரசாயன, உயிரியல் ஆராய்ச்சிகள் நடத்தும்.  தளவுளவி தடம் வைக்கும் தளம் செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனிப்பகுதி.  அப்பகுதி பூமியின் வடதுருவப் பரப்பிலுள்ள பனித்தளம் அலாஸ்காவைப் போன்றது.  420 மில்லியன் டாலர் எளிய செலவில் (2007 நாணய மதிப்பு) திட்டமிடப் பட்ட நாசா விண்வெளித் தேடல் இது.  இதற்கு முன்பு செவ்வாயில் இறங்கிய தள ஆய்வு வாகனங்கள் போல் ·பீனிக்ஸ் தளவுளவி சக்கரங்களில் நகர்ந்து செல்லாது.  நிரந்தரமாக ஓரிடத்தில் நின்று தளவியல் ஆராய்ச்சிகள் நடத்தித் தகவலைப் பூமிக்கு அனுப்பிவரும்.   

ஃபீனிக்ஸ் தளவுளவியை அனுப்பியதின் குறிக்கோள் என்ன ? 

ஃபீனிக்ஸ் திட்டக் குறிப்பணியில் தளவுளவி செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனிப்பாறைத் தளத்தில் புதியதோர் பகுதியை ஆராயத் தேர்தெடுத்து இறங்கும்” என்று அரிஸோனா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ·பீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், பீடர் ஸ்மித் கூறினார்.  செவ்வாய் வடதுருவ ஆர்க்டிக் பகுதியில் உள்ள பனிப்பாறைகளில் ·பீனிக்ஸ் பெற்றுள்ள யந்திரக் கரம் (Robotic Arm) துளையிட்டு மூன்று மாதங்கள் மாதிரிகளைச் சோதிக்கும்.  2002 ஆம் ஆண்டில் செவ்வாய் ஆடிஸ்ஸி கோள் சுற்றி விண்ணூர்தி [Mars Orbiter Odyssey] செவ்வாய் ஆர்க்டிக் பகுதியில் கண்டுபிடித்த பனிச்செழிப்புத் தளங்களே ஃபீனிக்ஸ் தளவுளவியை அனுப்பக் காரணமாயின.  மேலும் செந்நிறக் கோளில் உள்ள பனிப்பாறைகளில் நுண்ணுயிர்ப் பிறவிகள் ஒருகாலத்தில் வளர்ந்தனவா என்று கண்டறிய பூர்வீக நீரியல் வரலாற்றை அறியலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.  ஏழரை அடி [2.4 மீடர்] ஆழம் வரைத் தரையைத் தோண்டி மாதிரிகள் எடுக்க வல்லமையுள்ள யந்திரக் கரம் ஒன்று தªவுளவியில் அமைக்கப் பட்டுள்ளது.  செவ்வாய்த் துருவப் பகுதிகளில் மேற்தளத்திலிருந்து ஒரு சில செ.மீடர் ஆழத்திலே நீர்ப்பனி உள்ளது என்று உறுதியாக நம்பப்படுகிறது.  மேலும் துருவப் பகுதிகளில் முதல் ஒரு மீடர் ஆழத்தில் 50%-70% கொள்ளளவில் பனிபாறைகள் இருக்கின்றன என்றும் கருதப் படுகிறது.  குறிப்பணியின் முக்கிய ஆய்வு அப்பனிப் பகுதி மண்களில் நுண்ணியல் ஜந்துக்கள் வாழ கார்பன் அடைப்படை இரசாயனப் பொருட்கள் (Organics) உள்ளனவா என்று கண்டுபிடிப்பது.

ஃபீனிக்ஸ் தளவுளவியில் அமைந்துள்ள கருவிகள்
 
2008 மே மாதக் கடைசியில் செவ்வாய்த் தளத்தில் இறங்கித் தடம் வைத்து நிலையாய் பூமிக்குத் தகவல் அனுப்பப் போகும் ஃபீனிக்ஸ் விண்ணுளவியில் அமைக்கப் பட்டுள்ள முக்கிய கருவிகள்:

1.  சுயமாய் இயங்கும் யந்திரக் கரம் (Robotic Arm)

ஏழரை அடி ஆழம் வரைச் செவ்வாய்த் தளத்தில் குழி தோண்டும் வலிமை பெற்றது.  சோதனைக் கருவிகளை எடுத்துத் தகுந்த இடத்தில் வைக்கும்.  மண் மாதிரிகளை ஆய்வு செய்ய மற்ற கருவிகளுக்கு மாற்றம் செய்யும். 

2.  இருபுறத் தளக்காட்சிக் காமிரா (Surface Stereoscopic Imager) 

தளவுளவியில் ஓங்கி நிற்கும் கம்பத்தில் அமைந்திருக்கும் காமிரா செவ்வாய்ச் சூழ்வெளியின் கண்கொள்ளாக் காட்சியைப் படமெடுக்கும்.  மற்ற காமிரா தளமண் வண்ணத்தைப் படமெடுக்கும்.

3.  காலநிலைக் கண்காணிப்பு நிலையம் (Meteorological Station)  

செவ்வாய்த் தளத்தின் உஷ்ணம், அழுத்தம், வாயு வேகம் ஆகியவற்றைக் குறித்து இரவு பகல் வேளைகளில் காலநிலைகளைப் பதிவு செய்யும் ஏற்பாடு.    

4.  நுண்ணியல் அளவி, மின்னியல் இரசாயன உளவி, வெப்பக் கடத்தி உளவி (Microscopy, Electrochemistry & Conductivity Analysers) 

செவ்வாய் மண் மாதிரிகளைச் சோதிக்கும் நான்கு இரசாயனக் கருவிகள்.

5.  செவ்வாய்க் கீழ்த்தளக் காட்சிக் காமிரா (Mars Descent Imager)

விண்ணூர்தியிலிருந்து தளவுளவி பிரிந்து, செவ்வாய்த் தளத்தின் ஈர்ப்பாற்றலில் இறங்கும் போது, எப்படி இயங்கித் தடம் வைக்கிறது என்பதைப் படம் பிடிக்கும் சாதனம்.

6.  வெப்பம், வாயு வெளிவீச்சு உளவி (Thermal & Evolved Gas Analysers)

கார்பன் அடிப்படை மாதிரிகளைக் (Organic Samples) கண்டுபிடித்து, இரசாயனப் பண்புகளைச் சோதிக்கும் சாதனம்.

நீர்மை வாயு திரண்டுள்ள செவ்வாய்த் துருவப்பனிப் பொழிவுகள்

செவ்வாய்க் கோளின் வடதென் துருவங்களில் நீரும், கார்பன் டையாக்ஸைடும் கட்டிகளாய்த் திரண்டு போன பனித்தொப்பியாய்க் குவிந்துள்ளது!  இரண்டு விதமான பனித்தொப்பிகள் செவ்வாயில் உள்ளன.  ஒன்று காலநிலை ஒட்டிய பனித்திரட்டு, அடுத்தது நிரந்தர அல்லது எஞ்சிடும் பனித்திரட்டு.  காலநிலைப் பனித்திரட்டு என்பது செவ்வாய்க் கோளில் குளிர்கால வேளையில் சேமிப்பாகி, வேனிற்கால வேளையில் உருகி ஆவியாகச் சூழ்வெளியில் போய் விடுவது!  எஞ்சிடும் பனித்திரட்டு என்பது வருடம் முழுவதும் நிரந்தரமாய் துருவங்களில் நிலைத்திருப்பது! 

செவ்வாய்க் கோளின் காலநிலைப் பனித்திரட்டு முழுவதும் சுமார் 1 மீடர் தடிப்பில் காய்ந்த பனித்திணிவு [Dry Ice] வடிவத்தில் படிவது. தென்துருவ காலநிலைப் பனித்திரட்டு உச்சக் குளிர் காலத்தில் சுமார் 4000 கி.மீடர் [2400 மைல்] தூரம் படர்ந்து படிகிறது!  குளிர்காலத்தில் வடதுருவ காலநிலைப் பனித்திரட்டு சுமார் 3000 கி.மீடர் [1800 மைல்] தூரம் பரவிப் படிகிறது!  வேனிற் காலத்தில் வெப்பம் மிகுந்து 120 C [150 Kelvin] உஷ்ணம் ஏறும் போது காலநிலைப் பனித்திரட்டுகள், திரவ இடைநிலைக்கு மாறாமல் திடவ நிலையிலிருந்து நேரே ஆவியாகிச் சென்று சூழ்வெளியில் தப்பிப் போய்விடுகிறது! அவ்விதம் மாறும் சமயங்களில் கார்பன் டையாக்ஸைடு வாயுவின் கொள்ளளவு மிகுதியாகி, செவ்வாய் மண்டல அழுத்தம் 30% மிகையாகிறது!   

துருவப் பனிப் பாறைகள், தேய்ந்து வற்றிய நீர்த் துறைகள்
 
1971 இல் மாரினர்-9 விண்ணாய்வுச் சிமிழ் செவ்வாயில் நீரோட்டம் இருந்த ஆற்றுப் பாதைகளைக் காட்டின!  ஐயமின்றி அவற்றில் நீரோடித்தான் அத்தடங்கள் ஏற்பட்டிருக்க முடியும்.  சிற்றோடைகள் பல ஓடி, அவை யாவும் சேர்ந்து, பெரிய ஆறுகளின் பின்னல்களாய்ச் செவ்வாயில் தோன்றின!  ஆறுகளின் அதிவேக நீரோட்டம் அடித்துச் செதுக்கிய பாறைகள் சிற்ப மலைகளாய்க் காட்சி அளித்தன!  அவை யாவும் தற்போது வரண்டு வெறும் சுவடுகள் மட்டும் தெரிகின்றன!  பூமியின் அழுத்தத்தில் [14.5 psi] ஒரு சதவீதம் [0.1 psi] சூழ்ந்திருக்கும் செவ்வாய்க் கோளில் நீர்வளம் நிலைத்திருக்க வழியே இல்லை!  காரணம் அச்சிறிய அழுத்தத்தில், சீக்கிரம் நீர் கொதித்து ஆவியாகி, வாயு மண்டலம் இல்லாததால் அகன்று மறைந்து விடும்!  ஈர்ப்பாற்றல் பூமியின் ஈர்ப்பாற்றலில் மூன்றில் ஒரு பங்கு இருப்பதால், மெலிந்த ஈர்ப்பு விசையால் நீர்மை [Moisture], மற்றும் பிற வாயுக்களையும் செவ்வாய் தன்வசம் இழுத்து வைத்துக் கொள்ள இயலவில்லை!  ஆயினும் செவ்வாய்ச் சூழ்மண்டலத்தில் மிக மிகச் சிறிதளவு நீர்மை ஆவி [Water Vapour] கலந்துள்ளது.   

செவ்வாயில் சிறிதளவு நீர் பனிப் பாறைகளாக இறுகிப் போய் உறைந்துள்ளது!  துருவப் பிரதேசங்களில் நிலையாக உறைந்து பனிப் பாறையான படங்களை, மாரினர்-9 எடுத்துக் காட்டியுள்ளது.  வட துருவத்தில் 625 மைல் விட்டமுள்ள பனிப் பாறையும், தென் துருவத்தில் 185 மைல் அகண்ட பனிப் பாறையும் இருப்பதாகக் கணிக்கப் பட்டுள்ளது!  மாரினர்-9 இல் இருந்த உட்செந்நிற கதிரலை மானி [Infrared Radiometer], செவ்வாயின் மத்திம ரேகை [Equator] அருகே பகலில் 17 C உச்ச உஷ்ணம், இரவில் -120 C தணிவு உஷ்ணம் இருப்பதைக் காட்டியது.  கோடை காலங்களில் வட துருவத் தென் துருவத் தளங்களில் குளிர்ந்து பனியான கார்பைன்டையாக்ஸைடு வரட்சிப் பனி [Dry Ice], வெப்பத்தில் உருகி ஆவியாக நீங்குகிறது. அமெரிக்கா அனுப்பிய விண்ணாய்வுக் கருவிகள் [Space Probe Instruments] துருவப் பிரதேசங்களில் எடுத்த உஷ்ண அளவுகள், பனிப் பாறைகளில் இருப்பது பெரும்பான்மையாக நீர்க்கட்டி [Frozen Water] என்று காட்டி யுள்ளன.  கோடை காலத்தில் வடதுருவச் சூழ்வெளியில் நீர்மை ஆவியின் [Water Vapour] அªவுகளை அதிகமாகக் கருவிகள் காட்டி இருப்பது, பனிப் பாறைகளில் இருப்பவை பெரும் நீர்க்கட்டிகள், வரட்சிப்பனி [Dry Ice or Frozen Carbondioxide] இல்லை என்பதை மெய்ப்பிக்கின்றன.  

(தொடரும்)

***********************

தகவல்:

Picture Credits:  NASA, JPL, & Wikipedia

1. Mars Global Surveyor [Nov 7, 1996], Mars Path Finder [Dec 1996].
2. Destination to Mars, Space flight Now By: William Harwood [July 8, 2003]
3. Twin Roving Geologists Bound for Surface of Mars By: William Harwood [May 29, 2003]
4  Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2  [Aug 26, 2003]
5. Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602101&format=html
   [Author’s Article on Mars Missions]
7  Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
8  NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
9  Arctic Microbes Raise Cope for Life on Mars By: Associated Press [Oct 25, 2005]
10 www.Space.com/missions/ Phoenix Mars Lader (Several Articles)  [Aug 31, 2005]
11 Mars Reconnaissance Orbiter on the Approach By: JPL [Feb 8, 2006]
12 Mars South Pole Ice Found to be Deep & Wide -NASA JPL Release [March 15, 2007] 
13 Dirt Digger (Phoenix) Rocketing toward Mars By: Marcia Dunn AP Aerospace Writer [Aug 5, 2007]
14 BBC News Lift off for NASA’s Mars Probe (Phoenix) [August 4, 2007] 
 
******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 9, 2007

சூட்டு யுகப் பிரளயம் ! ஓஸோன் வாயுவால் விளையும் தீங்குகள் -6

 

மனிதர் படைக்கும்
நச்சு வாயுக்கள் சேர்ந்து
ஓஸோன் துளைகள் உண்டாகும் !
மென்மையில் திண்மை யாகும்
வாயுக் கோளத்தின் உள்ளே மிதக்குது
வண்ண நீர்க்கோளம் !
தூயச் சூழ்வெளியில்
பூமியின்
ஆயுள் நீடிக்க வேண்டும் !
ஓஸோன்
ஓட்டைகள் ஊடே
புற ஊதாக் கதிர்கள் நுழைந்து
சூட்டு யுகப் புரட்சி
நாடு நகரங்களில்
நர்த்தனம் ஆடும் !
நீரின்றி,
நித்திரை யின்றி
நிம்மதி யின்றி
நீண்ட காலம் தவிப்பர்
நில மாந்தர் !

“ஓஸோன் இழப்பால் ஏற்படும் தீவிர விளைவுகளைத் தவறான சூழ்வெளிப் பகுதிகளில் தேடிக் கொண்டிருந்தோம். ஓஸோன் பூகோளக் காலநிலை மாற்றத் தூண்டுதலுக்கு ஒரு காரணம் என்பது முன்பு கருதியதை விட இருமடங்கு முக்கியத்துவம் இப்போது பெற்றுள்ளது.”

பீடர் காக்ஸ் [Peter Cox University of Exeter, U.K.]

பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது! ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது! அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது. அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர்

 ஓஸோன் வாயுவின் தீவிரப் பண்புகள்!ஓஸோன் வாயு நாம் சுவாசிக்கும் பிராண வாயுவின் மூலக்கூறு [Oxygen Molecule] வேறுபட்ட மற்றொரு தோற்றம். ஆங்கிலத்தில் அல்லோடிரோபி [Allotropy] என்று அழைக்கப்படும் அம்மாறுதலில் ஆக்ஸிஜென் மூலக்கூறு O2, ஓஸோன் மூலக்கூறாக O3 வேறு வடிவம் பெறுகிறது. மின்னலடி போன்று மின்னியல் வெடிப்புகள் ஆக்ஸிஜென் மூலக்கூறுகளின் ஊடே புகும் போது, ஓஸோன் வாயு உண்டாகிறது. பேரிடி மின்னல் காலங்களில் வெள்ளைப் பூண்டு போல் மூக்கைத் துளைக்கும் வாயு சில சமயங்களில் நுகரப்படும். அது காற்றில் மின்னல் தாக்கி உண்டான ஓஸோன் வாயுவே! மின்சார யந்திரங்களின் அருகே நுகரப்படும் காரமான வாயுவும் ஓஸோன் வாயுதான். ஓஸோன் வாயு சிறிதளவு கொள்ளளவில் காற்றில் கலந்திருந்தாலும், அது விஷ வாயு போல் தீங்கை அளிக்க வல்லமை உடையது!

பூமிக்குக் குடை பிடிக்கும் ஓஸோனில் விழும் துளைகள்பூமியின் தட்ப வெப்ப நிலையைக் கட்டுப்படுத்திச் சீராக்கி மனித இனமும், உயிரினமும் பிழைத்துக் கொள்ள உதவுவது, புவியைப் போர்வைபோல் சுற்றி இருக்கும் வாயுக் கோளம். ஒன்பது முதல் பதினைந்து மைல் உயரத்தில் பரிதியிலிருந்து பொழியும் புறயூதா கதிர்வீச்சுகளை [Ultraviolet Radiation] ஆக்ஸிஜென் வாயு விழுங்கி ஓஸோன் பெருத்த அளவில் உற்பத்தியாகி அங்கே சேமிக்கப் படுகிறது. அப்போது வான மண்டலத்தில் ஓஸோனின் பளு 27% பகுதி அளவை நெருங்கி, ஓஸோன் படிவு (Ozone Layer) கோளமாக பூமியைச் சுற்றிலும் உருவாகிறது.

 

பூமியைப் போர்வை போல் போர்த்தி யிருக்கும் ஓஸோன் வாயு, பாதிப்புகள் விளைவிக்கும் பரிதியின் தீவிரமான புறவூதாக் கதிர்களை [Ultraviolet Rays] 95%-99% வடிகட்டி பூமியில் உயிரினங்களைப் பாதுகாக்கிறது. ஓஸோன் படிவு அமைப்பில் ஓட்டைகள் விழுந்தால், வடிகட்டப் படாது செல்லும் புறவூதா கதிர்கள் உயிரினத்தின் [மனிதர், விலங்குகள்] செல்களை [Cells] முறிப்பதுடன், தோல் புற்றுநோய், கண்படல நோய் [Eye Cataract] போன்றவை உண்டாகக் காரண மாகிறது. மேலும் தாவர இனங்களும் பாதிக்கப்பட்டு, அவற்றின் இனவிருத்தி விதைகள் உண்டாவதைக் குன்றச் செய்கின்றன.

 

சிஎஃப்சி எனப்படும் [Chloro Fluro Carbons (CFC)] சில ஆர்கானிக் இரசாயனக் கலவைப் பண்டங்கள் ஆவியாகி, பூமிக்கு அதிக உயரத்தில் போய் சேர்ந்து கொண்டு, பரிதியின் ஒளியால் முறிக்கப்பட்டு, குளோரின் அணுவாகவும், ஃபுளுரின் அணுவாகவும் பிரிகின்றன. அந்த அணுக்கள் ஓஸோன் மூலக்கூறுகளை உடைத்து வெறும் ஆக்ஸிஜென் மூலக்கூறுகளாக மாற்றி ஓஸோன் திணிவைக் குன்றச் செய்கின்றன. தொழிற்சாலைகள் வெளிவிடும் கழிவு வாயுக்களிலும், இரசாயன ஆவித்திரவ வீச்சுகளிலும் [Aerosol Sprays] CFC வெளியாகி மேலே சென்று வான மண்டலத்தில் உள்ள ஓஸோன் பந்தலில் ஓட்டைகளைப் போடுகின்றன. 2003 செப்டம்பரில் அண்டார்க்டிகா பகுதியில் விண்வெளித் துணைக்கோள்கள் [Sattelite] மாபெரும் ஓஸோன் துவாரத்தைப் படமெடுத்தது. அமெரிக்கா, கனடா, மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குளோரின், புரோமின், ஃபுளூரின் [Chlorine, Bromine, Fluorine] வெளியாக்கும் இரசாயனப் பண்டங்கள் கட்டுப்பாட்டு விதியில் பாதுகாக்கப் பட்டுள்ளன. அவ்விதம் ஆசியக் கண்டங்கள் கட்டுப்பாடு செய்துள்ளனவா என்பது சரிவரத் தெரியவில்லை.

பூமிக்கு 15 மைல் உயரத்தில் இருக்கும் ஸ்டிராடோஸ்பியர் [Stratosphere] வாயு மண்டத்தில் ஓஸோன் சேமிப்பு ஏன் குறைந்து வருகிறது என்பதன் காரணம் இன்னும் பூரணமாக அறியப்பட வில்லை! உலக ரீதியில் கடந்த 20 ஆண்டுகளாக ஓஸோன் திணிவு 3% குறைந்துள்ளதாக அறியப்படுகிறது. கடந்த 40 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகர்ப் பரப்பில் 8% சுருங்கி யுள்ளதாகக் காணப்படுகிறது. அண்டார்க்டிகா பகுதியில் கடந்த 25 ஆண்டுகளில் உலகின் எல்லாப் பகுதிகளையும் விட மிகுதியாக 50% குன்றி யுள்ளதாகக் கணக்கிடப் பட்டுள்ளது. பூகோளம் சூடேற வாயுப் புகைமூட்டம் காரணமாவது போல், உயிரினச் செல்கள் சிதைவுக்கும், தாவரங்களின் தளர்ச்சிக்கும் ஓஸோன் வாயுக் குறைவு உதவுகிறது என்பதை அறிந்து, அதைத் தடுக்க முயல்வதில் உலக மாந்தர் அனைவரும் பங்கேற்க வேண்டும்.

பூகோளச் சூடேற்றத்தில் ஓஸோன் வாயுவின் உடன்பாடுசூழ்வெளி வாயு மண்டலத்தின் உஷ்ணக் கட்டுப்பாடுக்கு ஓஸோன் வாயு (Ozone Gas -Oxygen3 – O3) ஒரு முக்கிய பங்கேற்கிறது. ஸ்டிராடோஸ்·பியர் வாயு மண்டலத்தில் 90% சேமிப்பாகியுள்ள ஓஸோன் வாயு, தீங்கு புரியும் பரிதியின் புறஊதா கதிர்களுக்குக் கவசமாக பூமியைப் பாதுகாத்து வருகிறது. ஆனால் பூமியில் மனிதர் உண்டாக்கும் இராசயனக் கூட்டான சியெ·ப்சி [Chloro Fluoro Carbons (CFC)] வாயுக்கள் துருவப் பிரதேசங்களின் குளிர்ச்சிப் பகுதியில் உள்ள ஓஸோனுடன் கலந்து அதைச் சிதைக்கின்றன. அப்போது அப்பகுதிகளில் ஓஸோன் துளைகள் உண்டாகிப் பரிதியின் புற ஊதாக் கதிர்கள் சூழ்வெளியில் பூமியை நோக்கி நுழைகின்றன. அவ்விதம் ஏற்படும் ஓஸோன் துளைகளால் பூகோளச் சூடேற்றம் மிகையாகும். அதே சமயத்தில் மனிதர் உண்டாக்கும் சியெ·ப்சி வாயும் உஷ்ணத்தை ஏற்றும் கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

பூகோளச் சூடேற்றத்தில் ஓஸோன் வாயுவின் தீவிரப் பங்குமுன்பு விஞ்ஞானிகள் எண்ணியது போலின்றி ஓஸோன் வாயு பூகோளக் காலநிலை மாற்றத்தைத் தூண்டும் காரணிகளில் ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது என்று விஞ்ஞான இதழ் இயற்கையில் (Nature) வந்துள்ள ஓர் ஆய்வு அறிக்கை கூறுகிறது. கிரீன்ஹவுஸ் வாயுக்களில் ஒன்றாய்க் கருதப்படும் ஓஸோன் வாயுவின் முக்கிய விளைவுகள் முதலில் கவனமாக எடுத்தாளப் படவில்லை ! பூதளத்தில் உள்ள கிரீன்ஹவுஸ் வாயுக்களான நைட்டிரஜன் ஆக்ஸைடுகள், மீதேன், கார்பன் மனாக்ஸைடு மீது சூரிய ஒளிபட்டு தளத்தில் ஓஸோன் உண்டாகிறது. பூதளப் பகுதிகளில் பரவிய ஓஸோன் வாயுவால் பயிரினங்கள் சூழ்வெளியில் உள்ள கார்பன் டையாக்ஸைடை விழுங்காதபடிச் சிதைவாகி விடுகின்றன. அதனால் கிரீன்ஹவுஸ் வாயுவான கார்பன் டையாக்ஸைடு மென்மேலும் பெருக ஏதுவாகிறது. மனிதத் தூண்டுகோளால் உண்டாகும் CFC போன்ற கிரீன்ஹவுஸ் வாயுக்களால் பூகோளத்தின் உயரத்தில் உள்ள ஓஸோன் சிதைவடைகிறது சொல்லப் போனால் ஓஸோனின் பொறுப்பு பூகோளச் சூடேற்றத்தில் தற்போது இருமடங்கு மதிப்பைப் பெறுகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சூழ்வெளியின் உயரத்தில் பரவியுள்ள நேரடி ஓஸோன், பரிதியின் புற ஊதாக் கதிர் உஷ்ணத்தை உட்கொண்டுள்ளது என்பதை விஞ்ஞானிகள் ஏற்கனவே அறிவார். சூழ்வெளியின் அடிப்பகுதிகளில் ஓஸோன் மறைமுகமாகப் பேரளவுக் கெடுதிகள் விளைவிக்கும் என்று அந்த ஆய்வறிக்கை மேலும் சொல்கிறது. தளப் பகுதிகளில் உள்ள ஓஸோனால் மனிதரின் சுவாச உறுப்புக்களுக்குப் பங்கம் விளையும். மிகையாக உண்டாகும் ஓஸோன் வாயுவால் பயிரினங்களுக்கு ஏற்படும் தீங்குகளைக் கணிப்பது சிக்கலான முயற்சி. CO2 & O3 வாயுக்களை வைத்து ஆய்வாளர்கள் அமைத்த நூறாண்டுக் (1900- 2100) கணினி மாடலில் (Computer Models) விளைவுகள் மதிப்பிடப் பட்டன ! அந்த மதிப்பீடுகளில் உச்ச, தணிவு விளைவுகளாக அறிந்தது: உச்ச மதிப்பு ஓஸோனால் பயிரின விருத்தி 23% குறைத்துக் காணப்பட்டது. ஓஸோனால் தணிவு மதிப்பு பயிரின விருத்தி 14% குறைத்துக் காணப்பட்டது.

பூகோளச் சூடேற்றத்தைக் குறைக்க நாமென்ன செய்ய முடியும் ?கீழ்க் காணும் பத்து முறைகளில் உலகப் பொதுநபர்கள் சூடேறும் பூகோளத்தின் உஷ்ணத்தைக் குறைக்க வழிகள் உள்ளன. ஒவ்வொரு நிவிர்த்தி வழியிலும் எவ்வளவு கார்பன் டையாக்ஸைடு வாயு உற்பத்தியைத் தவிர்க்கலாம் என்று காட்டப் பட்டுள்ளது.

1. மின்சார வெளிச்சக் குமிழிக்குப் பதிலாக ஒர் ஒளிவீச்சு மின்குமிழியைப் பயன்படுத்துவதால் (Use Compact Fluorescent Bulb instead of the Regular Light Bulb) ஓராண்டுக்கு 150 பவுண்டு கார்பன் டையாக்ஸைடு (CO2) வாயு உற்பத்தியைக் குறைக்கலாம்.

2. கார் வாகன ஓட்டத்தை ஒருவர் அனுதினமும் குறைப்பதால், ஒவ்வொரு மைல் தூரத் தவிர்ப்புக்கும் ஒரு பவுண்டு CO2 வாயு உற்பத்தி குறையும்.

3. ஒரு வீட்டுப் பழக்கப் பொருட்களால் விளையும் கழிவுகளில் பாதியை மீள்பயன்பாட்டுக்கு (Recycle) அனுப்பிப் புதுப்பித்தால் ஆண்டுக்கு 2400 பவுண்டு CO2 வாயு உற்பத்தி குறையும்.

 

 

சூட்டு யுகப் பிரளயம் ! ஈரோப்பில் வேனிற் புயல் ! இங்கிலாந்தில் பேய்மழை !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

ஈரோப்பில் சூட்டுப் பிரளயம் எழுந்தது !
பேரளவு பேய்மழைப் பொழிவு
ஓரிடத்தில் !
வீரிய வேனிற் காலப்புயல்
வேறிடங்களில் !
மீறிய வெப்பக் கனலால்
தானாகக்
கானகத் தீக்கள் பற்றின !
வன விலங்குகள்,
மனிதர் புலப்பெயர்ச்சி !
விரைவாகக் கடல் மட்டம்
ஏறும் போக்கைக்
கூறும் துணைக்கோள் !
சூட்டு யுகப் புரட்சியில் உலகெலாம்
மாட்டிக் கொண்டு வாடுது !
நாட்டு மாந்தர் வயிற்றைக் கலக்கி
வீட்டை விட்டு விரட்டுது !
நீரின்றி, நிலமின்றி
நித்திரை யின்றி
நிம்மதி யின்றி
நீண்ட காலத் தவிப்பு !

++++++++++++++++

உலகெங்கும் சூட்டுப் பிரளய அதிர்ச்சிகள் (ஜூலை 2007)

இங்கிலாந்தில் 60 ஆண்டுகளாகக் காணாத பேய்மழை 2007 ஜூலையில் பொழிந்தது ! ஒரு மாத மழை ஒரே நாளில் பெய்தது ! இரண்டு மணிநேரத்தில் கொட்டியது ! பெரு வெள்ளத்தால் மக்கள் புலம்பெயர நேரிட்டது. 350,000 வீடுகளின் குடிநீர் பரிமாற்றம் தடைப்பட்டது ! இருபதாம் நூற்றாண்டில் மனிதர் தூண்டிய சூடேற்றத்தால் உலகில் பூகோளப் மழைப் பொழிவின் போக்கு மாறிவிட்டது என்று ஓர் ஆய்வு அறிக்கை கூறுகிறது. அதே சமயத்தில் சமீபத்தில் இங்கிலாந்தில் பெய்த பேய்மழைக்கு மனிதர் விளைவித்த பூகோளச் சூடேற்றமே காரணம் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது என்னும் கருத்தும் நிலவி வருகிறது.கடந்த வாரம் தாக்கிய அசுர வேனற்புயல் அடிப்பில் [Heat Wave] ஹங்கேரியில் சுமார் 500 பேர் மாண்டதாக ஹங்கேரிய மருத்துவக் குழுவினர் கூறியுள்ளார்கள் ! ருமேனியாவில் 35 பேர் மரணம்.

கிரீஸில் ஒருவர் மரிப்பு. இத்தாலியின் தென்பகுதியில் வெக்கை மிகுந்து கானகத் தீக்கள் தானாகப் பற்றி இருவர் மரணம். ருமேனியாவில் உஷ்ணம் 46 C (115 F) ஏறியது. கிரீஸில் உஷ்ணம் 45 C (113 F). செர்பியாவில் [Serbia, Near Bosnia] உஷ்ணம் 43 C (109 F) ஏறி 50 காட்டுப் பகுதிகளில் தீப்பற்றி 30 பேர் மாண்டனர் ! வெப்பக் கொதிப்புத் தாங்காது செர்பியாவில் 19,000 பேர் மருத்துவ மனைகளுக்குக் கொண்டுவரப் பட்டனர். அதுபோல் 2003 ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் அடித்த வேனிற் கனல்வீச்சில் சுமார் 15,000 முதியோர் மாண்டதாக அறியப்படுகிறது.

பூகோளச் சூடேற்றத்தால் உலகில் நேர்ந்த விளைவுகள்

1870 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் வட கரோலினா ஹாட்டெரஸ் முனையில் [Cape Hatteras, North Carolina] கட்டிய கலங்கரை விளக்கு [Light House] கடலிலிருந்து 1500 அடி கரை தூரத்தில் இருந்தது. நூறாண்டுக்குப் பிறகு (1980) கடல் வெள்ளம் பெருகிக் கலங்கரை விளக்கின் அருகே 160 அடிக்குள் வந்து விட்டது. தற்போது அது விழக்கூடா தென்று புதிய இடத்துக்கு மாற்றலாகிக் கட்டப் பட்டிருக்கிறது.

1000 அடிக்கு உட்பட்டிருந்த பிளாரிடா மாநிலத்தின் வேளாண்மைப் பகுதிகளைக் கடல்நீர் தாக்கி நிலவளம் உப்புக் கலவையால் நஞ்சாகி நாசமாக்கப் பட்டிருக்கிறது.

1915-1950 ஆண்டுகளில் ஏறிய கடல் மட்ட உயரத்தால் தென் அமெரிக்காவில் பிரேஸின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகள் [Region of Recife] ஆண்டுக்கு 6 அடி வீதம் குறைந்து கொண்டு வந்தன. 20 ஆம் நூற்றாண்டின் இறுதியில் (1985-1995) கடல் மட்ட உயர்ச்சி விரைவாகி ஆண்டுக்கு 8 அடி வீதம் கடற்கரைப் பகுதிகள் சிறுத்து வருகின்றன.

1997 இல் அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தின் ஓஹையோ நதியில் வெள்ளம் பெருகி 30 பேர் இறந்து, 500 மில்லியன் டாலர் மதிப்பளவுக் கட்டடச் சொத்துக்கள் சேதாரம் அடைந்தன.

1998 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவின் 50 ஆண்டுக் கோரமான நிகழ்ச்சியாக வேனிற்கால வெப்பக்கனல் அடிப்பில் 2500 பேருக்கு மேலாக மாண்டு போயினர் !

1998 இல் அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தில் தொடர்ந்து 29 நாட்கள் அடித்த 38.5 C (100 F) உஷ்ணக் கனலில் பயிர் வளர்ச்சி அனைத்தும் வரட்சியால் நாசமாயின.

1999 செப்டம்பர் மாதத்தில் ஹர்ரிக்கேன் ·பிளாய்டு [Hurricane Floyd] தாக்கி பேய்மழையும், மணிக்கு 130 மைல் வேகத்தில் பெரும் புயலும் அடித்து அமெரிக்காவின் அட்லாண்டிக் கடற்கரைப் பகுதிகள் பாதிக்கப் பட்டு 77 பேர் மடிந்தார். ஆயிரக் கணக்கான நபர் வீடிழந்தனர்.

அண்டார்க்டிகா பனித்தளப் பகுதிகள் சூடாகிக் கொண்டு வருகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக வேனிற்காலப் பனியுருக்க நாட்கள் ஓர் ஆண்டில் மூன்று வாரங்கள் கூடி யிருக்கின்றன.

American CNN.Com News Message (July 24, 2007)

பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது! ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது! அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது. அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

அமெரிக்கன் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர்

 

தகவல்:

(Picture Credits: Time Magazine April 9, 2007)1. Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference](April 9, 2007)

2. An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

3. The Assault on Reason By Al Gore (2007)

4. BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

5. BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

6. BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

7. The Big Thaw, Ice on the Run, Seas on the Rise << National Geographic >> By Tim Appenzeller (June 2007)

8. Climate Change A Guide for the Perplexed << New Scientist >> (May 19 2007)

9. Historic Global Warming Linked to Methane Release, Environmental News Network By: John Roach (Nov 19 1999)

10 The Shrinking Glaciers of Kilimajoro, East Africa (2006)

11. Global Warming Speed : “Earth is on Fast Track to Global Warming.” (2006)

12. Good News For A Change – Hope for A Troubled Planet By: David Suzuki & Holly Dressel [2002]

13. The End of Nature By: Bill McKibben [2006]

14. ‘No Sun Link’ to Climate Change By: Richard Black, BBC Environment Correspondent.

15. BBC News – Climate Change Around the World.

16. BBC News – Billions Face Climate Change Risk

17. Through the Climate Window – Analysis By: Richard Black BBC Environment Correspondent

18. Deadly Heat Wave Grips in Europe [CNN.Com#cnnSTCPhoto]

19. Europeans Struggle to Keep Cool in Heat Wave By Cesar G. Soriano (USATODAY.com)

20. Humans “Affect Global Rainfall ” BBC News

21. Britains Battle Worst Floods in 60 Years By Tewkesbury, England (July 23, 2007)

22. BBC News – Prince Sees Boscastle, (England) Devastation (July 24, 2007)

++++++++++++++++++++

சூட்டு யுகப் பிரளயம்! உலகளாவிய காலநிலை மாறுதல்கள் – 4

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

தாரணி சூடேறித் தணல் சட்டியாகக்
காரணி யில்லை
சூரியக் கதிர்வீச்சு !
கடந்த இருபது ஆண்டுகளாய்
வெப்ப யுகப் பிரளயம்
காசினியில் அரங்கேற
விஞ்ஞானம் கூறும் விந்தை
கண்ணாடி மாளிகை
விளைவு !

பனிச்சிகரம் பரட்டைத் தலையாய்க்
கரும் பாறையாக
ஜீவ நதிகளில்
நீரோட்டம் தளரும் !
உயிர்வளப்
பயிரினச் செழிப்புகள் சிதைந்து
புலம்பெயரும் பறவை இனம்
தளமாறிப் போகும் !
வரலாறு
தடமாறிப் போகும் !  

“எங்கே நாம் போக வேண்டும் என்று ஏற்புடைய தெளிவானச் சிந்தனையைப் பெறுவது வரை, நாம் அந்த இடத்தை அடையப் போவது என்பது நிச்சய மில்லை.”

டேவிட் கோர்டென் [David Korten]

“கடந்த 20 – 40 ஆண்டுகளாக ஏறிக்கொண்டு வரும் பூகோளச் சூடேற்றத்துக்கு சூரியக் கதிர்வீச்சுகள் காரணமல்ல என்பது விஞ்ஞானக் கணிப்பு மூலமாக உறுதியாக்கக் பட்டிருக்கிறது.”

டாக்டர் பியர்ஸ் ·பார்ஸ்டர் [Dr. Piers Forster, School of Earth & Environment]

“வெற்றி பெறுவதே நமது முடிவான குறிக்கோள் என்னும் வாடிக்கை மாறி மக்களுக்குப் பணி புரிவதே முக்கிய குறிக்கோள் என்று நாம் வழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்.”  

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 

நமது திட்டங்களின் இறுதி விளைவுகள் என்ன ? மக்களுக்குக் கிடைக்கும் வேலைகள்.  நிதிவளச் செழிப்புக்கு ஏற்ப, வணிகத் தளங்களின் அமைப்புக்கு ஏற்ப, சூழ்வெளியை மாசுபடுத்தாத, குடிமக்களுக்கு இடரளிக்காத தொழிற்துறைப் பொறிநுணுக்கப் படைப்புகளை நிர்மாணிக்க முனைந்திருக்கிறோம்.  இந்த குறிப்பணித் திட்டங்களில் நாம் எப்போதும் அப்படி வெற்றி அடைவ தில்லை.  ஆனால் தொழிற்துறைகளில் மெய்யாக நடைபெறும் உதாரணக் குறைகளே பேரளவாக நமக்குத் தெரிகின்றன.”   

அசோக் கோசலா [Ashok Khosala, Founder of Development Alternatives]

 

“ஒரு கருத்தைப் பற்றி நான் உறுதியாக இருக்கிறேன்.  நாமறிந்த தொழிற்துறை வாணிபங்கள் நமது நாகரீகக் கலாச்சாரம், உயிரின வளர்ச்சிகள் உட்படப் பூகோளத்தை நாசமாக்கி வருகின்றன.  உலகெல்லாம் பரவிச் சீராக இயக்கப்படும் அத்தகையப் பேரழிவு வணிக ஏற்பாடுகள் போல் இதற்கு முன்பு இருந்ததில்லை.”

பால் ஹாக்கென், சூழ்வெளிக் காப்பாளர் [Paul Hawken, Environmentalist]

“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் [Al Gore, American Former Vice President (June 5, 2005)]

பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது!  ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது!  அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.  அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

அமெரிக்க முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர்

பூகோளச் சூடேற்றத்தால் விளையும் காலநிலை மாறுதல்கள்

(முன்வாரத் தொடர்ச்சி)

8.  உலக நாடுகளைச் சார்ந்த காலநிலை மாறுதல் அரங்கம் [Intergovernmental Panel on Climate Change (IPCC)] கூடி 130 உலக நாடுகளின் விஞ்ஞானிகள் செய்த முடிவுகள்: 

1988 இல் உலக நாடுகளின் சூழ்வெளித் திட்டக்குழு [United Nations Environment Program (UNEP)] உலகக் காலநிலை அரங்கு [World Meteorological Organization (WMO)] ஆகிய இரண்டு உலகப் பேரவைகளும் கூடி IPCC அரங்கை நிறுவின.  அதன் குறிக்கோள் என்ன ?  உலக நாடுகளில் ஏற்படும் காலநிலை மாறுதல்களின் பல்வேறு பண்பாடுகளை உளவி அறிவதும், அவற்றால் விளையும் சூழ்வெளிச் சமூகப் பாதிப்புகள், பிரதிபலிப்புகள் ஆகியவற்றை ஆய்வதுமே. 

a) 2100 ஆண்டுக்குள் பூகோளத்தின் உச்ச உஷ்ண ஏற்றம்:  1.8 முதல் 4 டிகிரி C  இடைநிலைக் கணிப்பு அளவு: 1.1 முதல் 6.4 டிகிரி C. 

b) முக்கிய கிரீன்ஹௌஸ் வாயுவாகக் கருதப்படுவது : CO2 [கார்பன் டையாக்ஸைடு], தொழிற்சாலைகளில் நிலக்கரி எரிப்பு, ஆயில் எரிப்பு, கானக அழிப்பு ஆகியவற்றால் சூழ்வெளியில் கார்பன் டையாக்ஸைடு மிகையாகச் சேமிக்கப் படுகிறது.

c)  அடுத்த இரண்டு கிரீன்ஹௌஸ் வாயுக்கள் : மீதேன், நைட்டிரஸ் ஆக்ஸைடு ஆகியவை.  அவற்றின் சேமிப்பளவு கார்பன் டையாக்ஸோடு ஒப்பிடும் போது சிறிதாயினும் அவை விளைவிக்கும் பாதிப்புகள் மிகுதியானவை.  சூடேற்ற வீரியத்தில் மீதேன் CO2 விட 20 மடங்கும், நைட்டிரஸ் ஆக்ஸைடு CO2 விட 300 மடங்கும் உக்கிரமானவை.

9.  பூதளச் சராசரி உஷ்ணத்தின் ஏற்றப் போக்கு:

19 ஆம் நூற்றாண்டில் இருந்த பூதளச் சராசரி உஷ்ணம் (0.3 to 0.6) டிகிரி C ஏறி, 20 ஆம் நூற்றாண்டில் (0.8 to 0.9) டிகிரி C ஆக மாறி விட்டது. 

10.  1900 முதல் 1994 வரை பூதளம் மீது படிவுப்பனி (Precipitation Change Trend over Land) 

குளிர் காலத்தில் வடப் பூகோள உச்ச சிகரங்களின் தளத்தில் படிவுப்பனி வீழ்ச்சி மிகையாகி உள்ளது.  1960 ஆண்டுகளில் பூமத்திய ரேகைப் பகுதிகளிலும் அவற்றை அண்டிய பரப்புகளிலும் படிவுப்பனி வீழ்ச்சிகள் குறைந்துள்ளன.

11.  சூடேறும் பூகோளத்தால் கடல்நீர் மட்ட உயர்ச்சி

கடந்த 100 ஆண்டுகளாய் உலகெங்கும் கடல்நீர் மட்டம் 10 முதல் 25 செ.மீடர் (சுமார் 4 முதல் 10)  அங்குல உயரம் அதிகரித்துள்ளது.  இனி அடுத்த 100 ஆண்டுக்குள் (2100) கடல்நீர் மட்டம் (13 முதல் 94) செ.மீ (5 முதல் 36) அங்குலம் உயரும் என்று மதிப்பீடு செய்யப் படுகிறது.

12. காலநிலை மாற்றத்தால் ஏற்பட வாய்ப்புள்ள தாக்குதல்கள்:

கிரீன்ஹௌஸ் வாயுக்கள் சேமிப்பு மிகையாகிப் போனால், காலநிலையில் பெருத்த மாறுதல்கள் நேரலாம்.  அதனால் சூழ்வெளியிலும், சமூகப் பொருளாதரப் பாதிப்புகள் உண்டாகும்.

13.  பூகோள உஷ்ண மாற்றங்களின் தீர்க்க மதிப்பீடு [Global Temperature Projected changes]:

கணினி மாடல்கள் மூலம் தீர்க்கமாய்க் கணித்ததில் [Computer Model Projections] 2100 ஆண்டுக்குள் பூகோளச் சராசரி உஷ்ணம் 1 முதல் 4.5 டிகிரி C ஏறிவிடும் என்று அறியப் படுகிறது.

பூகோளம் சூடேற பரிதியின் கதிர்வீச்சுகள் காரணமல்ல !

நவீன காலத்து வெப்ப மாறுதலுக்கு, சூரியனின் வெப்பசக்தி வெளியேற்றம் காரணமில்லை என்று ஒரு புதிய விஞ்ஞான ஆராய்ச்சி அழுத்தமாகக் கூறுகிறது. அந்த ஆய்வின்படிக் கடந்த 20 ஆண்டுகளில் பரிதியின் வெப்ப வெளியேற்றம் குறைவாக இருந்தாலும், பூகோளம் சூடேறி உள்ளது என்பது அறியப்படுகிறது.  ராயல் சொஸைட்டி அறிக்கை சொன்னதுபோல் தற்போதைய நவீன உஷ்ண ஏற்றத்துக்குச் சூரியனின் அகிலக் கதிர்கள் [Cosmic Rays] பொறுப்பானவை என்பது பிழையென்று நிரூபிக்க பட்டுள்ளது. 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிதி வெப்பசக்தி மேலும், கீழும் ஏறி இறங்குகிறது.  அந்த சுற்றியக்கத்தின்படி 1985 ஆண்டு முதல் சூரிய வெப்பம் தணிந்து வருகிறது.  அந்த வருடங்களில் பூமியின் உஷ்ணம் மிகையானது போல் முந்தைய 100 ஆண்டுகளில் கூட நிகழ்ந்தது இல்லை.  IPCC விஞ்ஞானக் குழுவினர் பூகோள சூடேற்றத்துக்கு கிரீன்ஹவுஸ் வாயுக்கள் சூரிய வெப்பத்தை விட 13 மடங்கு ஆற்றல் வாய்ந்தது என்பதைக் காட்டியுள்ளார் !

 

IPCC விஞ்ஞானிகள் 2007 அறிக்கைகளில் வெளியிட்ட தகவலில் முக்கியமானவை பின்வருமாறு:

1.  ஆ·ப்ரிக்கா கண்டத்தில் 2020 ஆண்டுக்குள் 75 முதல் 250 மில்லியன் மக்கள் நீர் பற்றாக்குறைப் பாதிப்பில் இன்னல் அடைவார்கள்.

2.  கிழக்கு, தென் கிழக்காசிய நாடுகளில் தானிய விளைச்சல் 20% அதிகமாகும்.  அதே சமயத்தில் மத்திய, தெற்காசியாவில் தானிய விளைச்சல் 30% குன்றிவிடும்.

3.  சில ஆ·பிரிக்க நாடுகளில் மழை பெய்து வளமாகும் வேளாண்மை விளைச்சல்கள் 50% குறைந்து போய்விடும்.

4.  பூகோளத்தின் உஷ்ணம் 1.5 முதல் 2.5 வரை ஏறினால் 20% முதல் 30% வரையான பயிரினங்கள், விலங்கினங்கள் மரித்திடும் வாய்ப்புகள் உள்ளன.  

5.  கடல்நீர் மட்டம் ஏறும்போது கடற்கரை நகரங்கள் உப்புநீரால் அடைபட்டு நீர்வளம், நிலவளம், மீன்வளம் ஆகியவற்றில் பெருஞ் சேதம் உண்டாக்கும். 

உலக நாடுகளில் காலநிலை மாற்றத்தால் நேரும் பாதக விளைவுகள்

1.  ஆசிய நாடுகள்

ஆசியாவில் இந்தியா, சைனா, பாகிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளின் உயிர் நதிகளுக்கு ஆண்டுதோறும் நீரோட்டம் அளித்து வருபவை உலகிலே உயர்ந்த இமாலய பனிச்சிகரங்கள் என்பதை அனைவரும் அறிவோம்.  பூகோளச் சூடேற்றத்தால் அடுத்து 20-30 ஆண்டுகளில் நீரோட்டம் பாதிக்கப்படும் என்பது உறுதியாக நம்பப் படுகிறது.  அதே சமயத்தில் வெள்ளம் அதிகரித்து கரைப் பகுதிகளில் உள்ள நகரங்களில் நீர் புகுந்து இன்னல் விளைவிக்கலாம் என்றும் அறியப் படுகிறது.  அத்தகைய வெள்ள அடிப்புகளால் மக்களை நோய் நொடிகள் பீடிக்கும், மக்கள் மரணம் அடைவார்.

2.  ஐரோப்பிய நாடுகள்

ஏறக்குறைய அனைத்து ஐரோப்பிய நாடுகளும் பூகோளச் சூடேற்றத்தால் ஓரளவு பாதகம் அடையும்.  2020 ஆண்டுக்குள் வட ஐரோப்பியப் பகுதிகளில் தானிய விளைச்சல் பெருகும்,  ஆனால் பல பகுதிகளில் நீர் வெள்ளப் பாதிப்புகள் உண்டாகும்.  தென் ஐரோப்பிய நாடுகளில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனைகள் எழுந்திடும்.  தானிய விளைச்சல்கள் குன்றும்.  மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் வேனிற் கால மழைப் பொழிவுகள் குறையும்.  நீர்த் தட்டுப்பாடு நேரும்.  வெப்பப் புயல்கள் அடித்து மக்களைத் துன்புறுத்தும்.  கானகத் தீக்கள் பற்றும். 

3.  வட அமெரிக்க நாடுகள்

குளிர் காலத்தில் வெப்பம் மிகையானால் மேற்கு மலைப் பனிச்சிகரங்கள் உருகி நதிகளில் வெள்ளம் எழுந்து கரைப்பகுதி நகரங்களில் நதி வீடுகளை மூழ்க்கி விடும்.  வேனிற் காலத்தில் பனிச் சிகரங்கள் கரைந்து போய் நீர்த் தட்டுப்படு உண்டாகும்.,  வேனிற் காலத்தில் மின்னல் அடித்துக் கானகத் தீக்கள் பற்றிக் கொள்ளும்.  வெப்பப் புயல் அடிப்புகள் நேரும்.  கடல் மட்டம் உயர்வதாலும், கடல் நீர் சூடாவதாலும் சூறாவளிகள், ஹரிக்கேன்கள் தோன்றி மெக்ஸிகோ வளைகுடாப் பகுதிகளில் பேரளவு இடர்கள் உண்டாகும்.

4.  லத்தின் அமெரிக்க நாடுகள் (தென் அமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகள்)

மண்தள நீர்வளத்தில் வெப்ப ஏற்ற மாயினும் சரி, அல்லது இறக்க மாயினும் சரி, கிழக்கே அமேஸான் நதிப் பகுதிகளில் பூமத்திய ரேகைக் கானகங்கள் மறைந்து, வெற்றுப் பீடப் பகுதிகளாகி [Savannah] விடும்.  நிலவளம், நீர்வளம் வரட்சியாகி பாலைப் பரப்புகளாய் மாறி தானிய விளைச்சல்கள் தடைப்படும்.  சோயாபீன் விளைச்சல் வெப்பப் பகுதிகளில் அதிகரிக்கும்.  கடல் மட்டம் உயரும் போது, தணிவுப் பகுதிகளில் [கயானா, எல் ஸல்வடார், ரியோடி ஜெனிரோ கரைப் பகுதிகள்] கடல் வெள்ளம் பரவி சுவைநீர் நிலங்கள் உப்புநீர் நிலங்களாய்ப் பாதிப்பாகும்.  பனிச் சிகரங்களில் பனிச் சேமிப்புகள் குறைந்து போய் ஆறுகளில் நீரோட்டம் குன்றி நீர்ப் பற்றாக்குறை உண்டாகும்.   

5.  ஆர்க்டிக், அண்டார்க்டிக் துருவப் பகுதிகள்.

பனிக்குன்றுகளின் பனித்தட்டுகள் நீர் உருகி மெலிந்து போகும்.  கடல் மிதப்பு பனி முகடுகள் கரைந்து போகும்.  இயற்கையான உயிர்வளப் பயிரினச் செழுமைப்பாடுகள் [Ecosystems] முறிந்து, புலம்பெயரும் பறவை இனங்கள் பாதகம் அடையும்.    

++++++++++++++++++

(தொடரும்)

தகவல்:

1.  Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference]
(April 9, 2007)

2.  An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

3.  The Assault on Reason By Al Gore (2007)

4.  BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

5.  BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

6.  BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

7.  The Big Thaw, Ice on the Run, Seas on the Rise << National Geographic >> By Tim Appenzeller (June 2007)

8.  Climate Change A Guide for the Perplexed << New Scientist >> (May 19 2007)

9. Historic Global Warming Linked to Methane Release, Environmental News Network By: John Roach (Nov 19 1999)

10 The Shrinking Glaciers of Kilimajoro, East Africa (2006)

11. Global Warming Speed : “Earth is on Fast Track to Global Warming.” (2006)

12. Good News For A Change – Hope for A Troubled Planet By: David Suzuki & Holly Dressel [2002]

13. The End of Nature By: Bill McKibben [2006] 

14. ‘No Sun Link’ to Climate Change By: Richard Black, BBC Environment Correspondent.

15. BBC News – Climate Change Around the World.

16. BBC News – Billions Face Climate Change Risk

++++++++++++++++++++

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 12 2007)

 

 

சூட்டு யுகப் பிரளயம்! உருகி மறையும் கிலிமாஞ்சாரோ பனிச்சிகரங்கள் -3

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

சூட்டு யுகப் பிரளயம் !
காட்டுத் தீ போல் பரவுது !
ராக்கெட் மீது வருகுது !
வானைத் தொடும் பனிமலைகள்
கூனிக் குறுகிப் போயின !
யுக யுகமாய் வழக்கமான
இயற்கை அன்னையின்
சூழ்வெளிச் சுற்றியக்கம் யாவும்
சுதி மாறிப் போயின !
பழைய பனிச்சிகரம் தேய்ந்து
நழுவி அவ்விடத்தில்
புதுப் பனிமலை வளர வில்லை !

பருவக் காலக் கோலங்கள்
வயது வரும் முன்பே
நடமாடி
தடம் மாறிப் போயின !
மனித நாகரீகம் மங்கிப்போய்
புனித வாழ்வைப் புழுதி யாக்க
துரித மாக வருகுது !
பூத வடிவில்
பாதகம் செய்ய
வெப்ப யுகப் பிரளயம் !

“கடந்த பூகோளச் சூடேற்ற நிகழ்ச்சியை உண்டாக்கிய கிரீன்ஹவுஸ் வாயுக்களின் வெளியேற்றம் 10,000 ஆண்டுகளாக நீடித்தது !  அடுத்த முன்னூறு ஆண்டுகளில் தொடர்ந்து புதைவு எரிசக்தி எருக்களை [Fossil Fuels] நாம் பயன்படுத்தி வந்தால் அதே பரிமாண அளவு வாயுக்களை உற்பத்தி செய்ய முடியும்.  புதைவு எருக்களை முற்றிலும் தவிர்த்துத் தற்போதுள்ள கார்பன் டையாக்ஸைடு கொள்ளளவைத் தொழிற்புரட்சிக்கு முந்தைய கொள்ளளவுக்குக் கொண்டு வர இன்னும் 10 அல்லது 15 ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம்,”

ஜேம்ஸ் ஸகோஸ் பேராசிரியர் பூவியல் விஞ்ஞானம், கலி·போர்னியா பல்கலைக் கழகம்

“கிழக்கு ஆ·பிரிக்காவில் உள்ள கிலிமாஞ்சாரோ மலையின் பனிச்சிகரம் சூடேறும் பூகோளத்தால் 2015-2020 ஆண்டுகளுக்கு இடையில் முற்றிலும் உருகி மறைந்து விடும் என்று கணிக்கப்படுகிறது.  மாபெரும் அந்த புரட்சிகரமான மாறுதல் மலைப் பகுதிகளை நேராகவும், விமானம் மீதிருந்தும் காணலாம் ! 1912-2000 ஆண்டுகளுக்கு இடையில் கிலிமாஞ்சாரோவில் 82% பனிக் குன்றுகள் உருகிப் போய்விட்டன.”

லோனி தாம்ஸன், பேராசிரியர் பூதளவியல் விஞ்ஞானம் (2006)

“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

அமெரிக்கன் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் [Al Gore, American Former Vice President (June 5, 2005)]

பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது!  ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது!  அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.  அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

அமெரிக்கன் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர்
உருகி மறைந்து போகும் கிலிமாஞ்சாரோ பனிச்சிகரங்கள்

கிழக்கு ஆ·பிரிக்காவில் கென்யா எல்லையில் உள்ள கிலிமாஞ்சாரோ பனிச் சிகரங்கள் சூடேறும் பூகோளத்தால் 2015-2020 ஆண்டுகளுக்கு இடையில் முற்றிலும் உருகி மறைந்து விடும் என்று கணிக்கிறார் பூதளவியல் பேராசிரியர் லோனி தாம்ஸன்.  2002 ஆம் ஆண்டில் அவரும் அவரது விஞ்ஞான சகாக்களும் கிலிமாஞ்சாரோ பனிமலைகளை நேராக உளவி அறிவித்த அதிர்ச்சிச் செய்தி அது !  1962 இல் எடுத்த படங்களையும், 2000 இல் எடுத்த படங்களையும் ஒப்பிட்டுதான் தாம்ஸன் அவ்விதம் கூறி இருக்கிறார். ஏறக் குறைய அந்த நாற்பது வருடங்களில் பனித்தளங்களின் உயரம் சுமார் 56 அடி [17 மீடர்] தணிந்து போயுள்ளது.  மாபெரும் அந்த புரட்சிகரமான மாறுதல் பகுதிகளை நேராகவும், விமானம் மீதிருந்தும் காணலாம் !  1912-2000 ஆண்டுகளுக்கு இடையில் ஏற்பட்ட பனித்தேய்வுகளை ஒப்பிட்டால் 82% பனிக் குன்றுகள் உருகிப் போய்விட்டன என்று லோனி தாம்ஸன் குறிப்பிடுகிறார் !  கடந்த நான்கு ஆண்டுகளில் (2002-2006) மட்டும் பனித்தேய்வு மிகையாகி உள்ளது.  அந்த ஆண்டுகளில் குறிப்பிட்ட மூன்று வடபுறப் பனிப் பகுதிகளில் பனித்தேய்வுகள் 164 அடி [50 மீடர்] உயரத்திலிருந்து சுமார் 16 அடிக்குத் [5 மீடர்] தணிந்து விட்டன,  மலையின் அடிப்பீடம் தெரியும் விந்தையான ஒரு பெரும் செங்குத்துக் குழி பனித்தளம் நடுவே ஏற்பட்டிருக்கிறது !  இன்னும் ஆறு மாதங்களில் அது ஒரு பெரும் பிளவை உண்டாக்கிப் பனிக்குன்றை இரண்டாக்கி விடும் என்ற அச்சத்தைக் கிளப்பி உள்ளது.

கிலிமாஞ்சாரோ பனிச் சிகரத்தில் புதிதாக பனிபரப்புகள் எதுவும் குளிர்காலத்தில் எழவில்லை என்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.  இயற்கையின் விந்தையான சுதி மாறிப்போன சுற்றியக்கம் அது !  பழையன கழிதலும், புதியன புகுதலும் என்னும் பழமொழி பனித்தேய்வு மலைச் சிகரகங்களில் சில சமயங்களில் ஏனோ நிகழ்வதில்லை ! கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்ட  பூகோளச் சூடேற்றத்தால் மட்டும் கிலிமாஞ்சாரோ மலைகளில் கரைந்து போன பனிப்பகுதிகள் ஏராளமானவை.  விமானப் படமெடுப்பு மூலமாக இப்போது பனிச் சிகரகங்களின் பரப்பையும், இழந்து போன நீர் வெள்ளத்தின் பரிமாணத்தையும் ஓரளவு கணித்து விடலாம் என்று லோனி தாம்ஸன் குறிப்பிடுகிறார்.

கிலிமாஞ்சாரோ பனிச்சிகர நீரிழப்பால் நேர்ந்த மனித இன்னல்கள் என்ன வென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.  முதலாவது டான்ஸானியா [Tanzania] நாட்டின் நிதிவளம் ஓரளவு ஆண்டு தோறும் வருகையை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையைச் சார்ந்து உள்ளது.  உள் நாட்டு நகரங்களில் குடிநீர்க் குறைவு மக்களைப் பேரளவு பாதிக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. கிலிமாஞ்சாரோ மலைப் பகுதிகளின் அண்டைப் புறங்களில் வாழ்வோருக்குப் பனிக்குன்றுகளின் நீரோட்டமே நில விளைச்சலுக்கும் பயன்படுகிறது.  நீரோட்டக் குறைவால் நிலவளமும் சீர்கேடாகும்.

20 ஆம் நூற்றாண்டில் விரைவாகச் சூடேறிய பூகோளம்

கலி·போர்னியா பல்கலைக் கழகத்தின் பூவியல் விஞ்ஞானப் பேராசிரியர் ஜேம்ஸ் ஸகோஸ் அமெரிக்க மேம்பாட்டு விஞ்ஞானக் குழுவகத்தில் [American Association of Advanced Science, St Louis (AAAS)] வெப்ப யுகத்தைப் பற்றித் தனது கண்டுபிடிப்புகளை அறிவித்தார்.  ஜேம்ஸ் ஸ்கோஸ் “பாலியோசீன்-ஈயோசீன் உச்ச வெப்பம்” [Paleocene-Eocene Thermal Maximum (PETM)] எனப்படும் வெப்ப யுகத்தின் சிறப்பியல் அறிவு நிபுணர். “கடந்த பூகோளச் சூடேற்ற நிகழ்ச்சியை உண்டாக்கிய கிரீன்ஹவுஸ் வாயுக்களின் எழுச்சி 10,000 ஆண்டுகளாக நீடித்தது !  அடுத்த முன்னூறு ஆண்டுகளில் புதைவு எரிசக்தி எருக்களை [Fossil Fuels] நாம் அனுதினமும் பயன்படுத்தி வந்தால் அதே பரிமாண அளவு வாயுக்களை உற்பத்தி செய்ய முடியும்.” என்று கூறுகிறார். பூகோளச் சூடேற்றம் 5 டிகிரி செல்சியஸ் [9F] விரைவேற்றமானது 55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பாலியோசீன்-எபாக் [Paleocene-Epoch] முடிவில் திடீரென்று பேரளவு கிரீன்ஹவுஸ் வாயுக்கள் மீதேன், கார்பன் டையாக்ஸைடு வெளியேற்றத்தால் நிகழ்ந்தது.  முந்தைய மதிப்பீடு 2 டிரில்லியன் டன் கரி என்றுள்ள போது ஜேம்ஸ் ஸ்கோஸ் அதைவிட இரண்டு மடங்கும் மேல் [4.5 டிரில்லியன் டன் கரி] 10,000 ஆண்டுகளாய் சூழ்வெளியில் சேமிப்பானது என்று எடுத்துக் காட்டினார்.  [One Trillion –> 10^12 (1 with 12 Zeros)].  21 ஆம் நூற்றாண்டில் உலக நாடுகள் இதே அளவு மீதேன், கார்பன் டையாக்ஸைடு வாயுக்களை உற்பத்தி செய்தால் இன்னும் 300 ஆண்டுகளில் 10,000 ஆண்டுகளின் பரிமாணத்துக்கு வந்துவிடும் என்று கூறினார்.

ஒருதரம் பேரளவில் கரி வெளியேறினால், கடல் வெள்ளம், கடற்தள படிமானம் போன்ற இயற்கை நிகழ்ச்சிகளில் சூழ்வெளி வாயுவில் எஞ்சிய கரி விழுங்கப்பட 500 முதல் 1000 ஆண்டுகள் கூட ஆகலாம். “பாலியோசீன்-ஈயோசீன் உச்ச வெப்பம்” வழியாக மிஞ்சிய கரியின் அளவு கடல் வெள்ளம் விழுங்கும் ஆற்றல் தகுதிக்கு மீறியது.  அதனால் சூழ்வெளியில் கரியின் கொள்ளளவு சேமிப்பாகிறது.  மேலும் மனிதர் தொழிற்சாலைகள் மூலமாகக் கரியைச் சேர்ப்பது அதைவிட மிகையானது.  10,000 ஆண்டுகளில் பிரம்மாண்டமான கடல் வெள்ளம் 20 சுற்றியக்கத்தில் [1 cycle in 500 years] சூழ்வெளிக் கரியை கவர்ந்து விழுங்கி வந்துள்ளது.  அடுத்து கடல் உஷ்ணம் அதிகமானால் தற்போது பனிக்கட்டியான கடல்வளப் படிவங்களில் [Frozen Marine Deposits] உள்ள மீதேன் வாயுப் பேரளவில் வெளியேறி கார்பன் டையாக்ஸைடு வாயுவை விட 20 மடங்கு தீவிர பூகோளச் சூடேற்றத்தை உண்டாக்குகிறது ! “புதை எருக்களை [Fossil Fuels] முற்றிலும் தவிர்த்துத் தற்போதுள்ள கார்பன் டையாக்ஸைடு வாயுக் கொள்ளளவை தொழிற்புரட்சிக்கு முந்தைய கொள்ளளவுக்குக் கொண்டு வர, இன்னும் 10 அல்லது 15 ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம்,” என்று ஜேம்ஸ் ஸ்கோஸ் அழுத்தமாகக் கூறிகிறார்.

பூகோளச் சூடேற்றத்தால் விளையும் காலநிலை மாறுதல்கள்

1.  பூமி, செவ்வாய்க் கோள்களும் அவற்றின் சூழ்வெளிகளும் :

பூகோளக் காலநிலையை நிர்ணயம் செய்பவை நான்கு அமைப்புகள்:  (1) பரிதிக்கும் கோளுக்கும் உள்ள இடைத் தூரம் [Distance], (2) அண்டக்கோளின் நிறை [Mass],  (3) சூழ்வெளியில் கலந்துள்ள வாயுக்கள் [Atmospheric Composition].  (4) கோளின் ஈர்ப்பாற்றல்.  செவ்வாய்க் கோளின் நிறை சிறியது.  ஈர்ப்பாற்றலும் [Gravitational Force] சிறிதானதால் அதன் சூழ்வெளி வாயுத் திணிவு மிகவும் மென்மையானது.  செவ்வாய்ச் சூழ்வெளியின் மெல்லிய திணிவில், நீர்மை வரண்டுபோய் கார்பன் டையாக்ஸைடு வாயு பெரும்பான்மையாகப் [95%] பரவி உள்ளது.  அதே சமயத்தில் செவ்வாய்க் கோளை விடக் கனமானதும், ஈர்ப்பாற்றல் மிகுதியாகவும் உள்ள பூமிக்குச் சீரிய சூழ்வெளி அமைந்துள்ளது.  அதனால் செவ்வாயை விட மிதமான வெப்பமும், குளிரும் ஓரளவு உஷ்ண நீட்சியில் [Temperature Range] நிலைப்பாகி பல மில்லியன் ஆண்டுகளாக உயிரினப் பயிரின வளர்ச்சிக்கு ஆதரவாக, ஏதுவாகப் பூமியில் உள்ளன.

2.  சூழ்வெளி உஷ்ணம், கரி வாயுத் திணிவு

கடந்த 400,000 ஆண்டுகளாக பூமியின் காலநிலை நிலையின்றி உஷ்ண வேறுபாட்டில் வெப்பக் குளிர்ச்சி யுகங்களாக மாறுபட்டு வருகிறது.  இந்த வேறுபாடுகள் காட்டுவது என்ன ? காலநிலையானது பூமியின் உட்புற மற்றும் வெளிப்புற மாறுதல்களால் பாதிக்கப் படுகின்றது என்பதே.

3.  கண்ணாடி மாளிகை விளைவு [கிரீன்ஹவுஸ் விளைவு]

பூகோளமானது ஓர் இயற்கையான உஷ்ணக் கட்டுப்பாடு ஏற்பாடைக் கொண்டது.  குடை போன்றுள்ள சூழ்வெளி வாயுக் கோளத்தில் சில குறிப்பிட்ட கிரீன்ஹவுஸ் வாயுக்களே அத்தகைய அரிய உஷ்ணக் கட்டுப்பாட்டை இயக்கி வருகின்றன.

4.  சூரியக் கதிர்வீச்சுத் தாக்கம் (Radiative Forcing)

பூகோளத்தில் விழுகின்ற சூரியக் கதிர்வீச்சும், விழுங்கப்படும் கதிர்வீச்சும், வெளியேறும் கதிர்வீச்சும் சமமாகி
உஷ்ணம் சீராவது அல்லது மாறுபடுவது.

5.  பூமிக்கு மேல் 4000 மீடர் (13000 அடி) உயரத்தில் கார்பன் டையாக்ஸைடு வாயுத் திணிவளவுகள் [Concentrations] ஹவாயித் தீவிலுள்ள மௌனா லோவா மலை உச்சியில் ஆண்டு தோறும் பதிவாகி வருகின்றன.

6.  பூகோளச் சூழ்வெளியில் சேமிப்பாகும் கார்பன் டையாக்ஸைடு வாயு தொழிற்புரட்சிக்கு முன்னிருந்த அளவு: 280 ppmv.  தற்போது இருக்கும் அளவு (2006): 367 ppmv. [ppmv : parts per millian by Volume]

7.  கிரீன்ஹவுஸ் வாயுக்களை வெளியாக்கும் செல்வந்த நாடுகள்: (1995)

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் [1700-1800] தொழிற்புரட்சி உண்டாகிச் செல்வம் செழித்த நாடுகளே பேரளவில் வெப்ப யுக வாயுக்களைச் சூழ்வெளியில் வெளியேற்றி வருகின்றன.

++++++++++++++++++

(தொடரும்)

தகவல்:

1.  Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference]
(April 9, 2007)

2.  An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)

3.  The Assault on Reason By Al Gore (2007)

4.  BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

5.  BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

6.  BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

7.  The Big Thaw, Ice on the Run, Seas on the Rise << National Geographic >> By Tim Appenzeller (June 2007)

8.  Climate Change A Guide for the Perplexed << New Scientist >> (May 19 2007)

9. Historic Global Warming Linked to Methane Release, Environmental News Network By: John Roach (Nov 19 1999)

10 The Shrinking Glaciers of Kilimajoro, East Africa (2006)

11. Global Warming Speed : “Earth is on Fast Track to Global Warming.” (2006)

++++++++++++++++++++

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (July 5 2007)

சூட்டு யுகப் பிரளயம் ! மாந்தர் பிழைப்ப தெப்படி – 2

 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

பூகோளம் மின்வலை யுகத்தில்
பொரி உருண்டை ஆனது !
ஓகோ வென்றிருந்த உலகமின்று
உருவம் மாறிப் போனது !
பூகோள மஸ்லீன் போர்வை
பூச்சரித்துக் கந்தை ஆகுது !  
மூச்சடைத்து விழி பிதுக்க
வெப்ப யுகப்போர் தொடுக்குது !
நோய் பற்றும் பூமியைக்
குணமாக்க மருத்துவம் தேவை !
காலநிலை மாறுத லுக்குக்
காரணங்கள் வேறு வேறு !
கரங் கோத்துக் காப்பாற்ற
வருவீ ரெனக் கூறு கூறு !
ஓரிடத்தில் எரிமலை கக்கி    
உலகெலாம் பரவும்
கரும்புகைச் சாம்பல் !
துருவப் பனிமலைகள்
உருகி
உப்பு நீர்க் கடல் உயரும்!
பருவக் கால நிலை
தாளம் தடுமாறிப்
வேளை தவறி நாளை இன்றாகும்,
கோடை காலம் நீடிக்கும்,
குளிர்காலப் பனிமலைகள்
வளராமல்
சிறுத்துப் போகும்
துருவ முனைகளில் !
நிலப்பகுதி நீர்மய மாகும் !
நீர்ப்பகுதி நிலமாகிப் போகும் !
உணவுப் பயிர்கள் சேத மாகும் !
மனித நாகரீகம் நாசமடைந்து 
புனித வாழ்வு வாசமிழந்து
வெறிபிடித் தாடும்
வெப்ப யுகப் பிரளயம் !

 

“கடந்த பனியுகத்துக்கும் முன்பு உலகெங்கும் கடல் மட்டம் இன்றைக்கு உள்ளதை விட 20 அடி உயரத்தில் இருந்தது.  சூடேறும் பூகோளம் மெல்ல மெல்லச் சூடேறி 129,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த அந்தக் கடல் மட்ட நிலைக்கு அடுத்த நூற்றாண்டிலே மீண்டும் கொண்டு வந்துவிடும்.”   

ரிச்சேர்டு ஹாரிஸ் [Richard Harris National Public Radio (March 26, 2006)]

“கிரீன்லாந்தின் பனிமலைகள் உருகிச் சரிந்தால் சில சமயம் பூகம்பங்களை உண்டாக்கிவிடும்.  கடந்த 5 ஆண்டுகளாக பூகம்ப எண்ணிக்கை உலகில் இரட்டித்திருக்கிறது.  அவ்விதம் விரைவாக ஆர்க்டிக் பகுதிகள் சேமித்து வைத்துள்ள நீர் வெள்ளம் வெளியேறுவது பூகோளச் சூடேற்றத்தைக் காட்டும் மற்றுமோர் அடையாளம் என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார் !  எதிர்பார்த்தை விட பனிமலைகள் உருகி வேகமாக நகர்ந்து வருகின்றன.”
 
கிரிஸ்டொ·பர் ஜாய்ஸ் [Christopher Joyce, National Public Radio (March 24, 2006)]

“55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூகோளத்தில் தீவிரச் சூடேற்றம் உண்டாகி மீதேன் வாயு பேரளவில் வெளியேறி பல ஆழ்கடல் உயிரினம் அழிந்து போயின என்றும், அதே சமயத்தில் தளவியல் விலங்கினங்கள் பெருகி வளர்ச்சி அடைந்தன என்றும் இன்றைய (நவம்பர் 19, 1999) விஞ்ஞான இதழ் ஒன்று கூறுகிறது.  அந்த மாதிரி வெப்ப யுகம் “சமீபத்திய பாலியோசீன் உச்ச வெப்பம்” (Latest Paleocene Thermal Maximum) என்று குறிக்கப்படுகிறது.  அது 10,000 – 20,000 ஆண்டுகளுக்கு இடையே ஒருமுறை வருகிறது.”

ஜான் ரோச் [John Roach, Environmental News Network (Nov 19, 1999)]

“மீதேன் வாயு வெளியேற்றத்துக்கும், வெப்பச் சூடு ஏற்றத்துக்கும் உள்ள உறவு கடற்தளப் படிகைகளை [Ocean Floor Sediments] ஆராய்ந்து கண்ட விளைவுகளை வைத்துத் தீர்மானிக்கப் பட்டது.  அதுவே வெப்ப ஏற்ற விதிக்கு முதல்தர ஆதாரச் சான்று.  வெப்ப ஏற்றம் கடற்படிகையைச் சூடாக்கி திட மீதேனை நீர்த்திடச் செய்து [Hydrated Soild Methane (CH4)] வாயுக் குமிழ்களாய்க் கொப்பளிக்க வைக்கிறது.  மீதேன் வாயு நீரில் கலந்துள்ள ஆக்ஸிஜெனுடன் சேர்ந்து ஏரிகளில் கரிமம் [Carbon] பிரிந்து கரிமச் சுற்றியக்கம் [ Global Exogenic Carbon Cycle] தொடர்கிறது.”

டோரோதி பாக், ஆய்வாளர், கலி·போர்னியா பல்கலைக் கழகம்

“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது!  அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன.  15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்!  அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும்.  சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன!  அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின!  அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன!  நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது!  வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்?  அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”

அமெரிக்கன் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் [Al Gore, American Former Vice President (June 5, 2005)]

பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது!  ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது!  அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது.  அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]

சூடேறும் பூகோளம் பற்றி அல் கோர்

 

பூகோளம் சூடேறும் என்றால் எதைக் குறிப்பிடுகிறோம் ?

பூகோளம் என்று நாம் சொல்லும் போது, மண் தளத்துடன் பூமியைச் சுற்றி ஐந்து அல்லது பத்துமைல் உயரத்தில் வாயுக்கோளக் குடையாக நிலவி பூமியின் தட்ப, வெப்பம் நிலையாகப் பருவ காலங்களில் குறிப்பிட்ட உஷ்ண நீட்சியில் [Temperature Range] வைத்துக் கொள்ளும் வாயு மண்டலத்தையும் சேர்த்துக் கொள்கிறோம்.  அந்த மெல்லிய வாயு மண்டலத்தில் நச்சு வாயுக்கள் கலந்து நாசமாக்கினாலும், ஓஸோன் துளைகள் ஏற்பட்டுக் கந்தையானாலும், பூமியின் ஈர்ப்பாற்றல் மாறி வாயுக்கள் மறைந்து போனாலும் பூமியின் காலநிலை மாறி சூட்டுப் பிரளயம் நேர்ந்துவிடும்.  வாயு மண்டலம் மறைந்து போனால் நீர்வளம், நிலவளம், உயிர்வளம் யாவும் சிதைந்து, சீர்குலைந்து பூகோளம் செவ்வாய்க் கோள்போல் நீர்மை, ஆக்ஸிஜென், ஹைடிரஜன் இல்லாமல் பாலைவனமாய் வரண்டு போய்விடும் !  சூழ்வெளியில் சேமிப்பாகும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (கார்பன் டையாக்ஸைடு, மீதேன் போன்ற வாயுக்கள்) பரிதியின் வெப்பத்தை விழுங்கிப் பூகோளத்தின் உஷ்ணத்தை மிகையாக்குகின்றன.  ஓரளவு வெப்ப ஏற்றம் உயிரன வளர்ச்சிக்குத் தேவையே.  ஆயினும் நிலக்கரி, இயற்கை வாயு, ஆயில் போன்ற “புதைவு எருக்கள்” [Fossil Fuel] வன மரங்கள் எரிப்புகளால் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பேரளவில் சேமிப்பாகிப் பூகோள உஷ்ணம் விரைவாக ஏறுகிறது.     

சமீபத்தில் வெளியான ஒரு விஞ்ஞான அறிக்கையில் மண்ணிலிருந்தும், 40,000 ஆண்டுகளாய்ச் சேமிப்பான பனிக்குவிப்பிலிருந்தும் மீதேன் வாயு பேரளவுக் கொள்ளளவில் வெளியேறுவதாகச் சூடேறும் பூகோள எச்சரிப்பாளர் எடுத்துக் கூறியுள்ளார்.  மீதேன் வாயுக் கசிவுகள் நிலக்கரி எரிசக்திப் புகைகளை விட 100 மடங்கு மிகையானவை என்று அறியப்படுகிறது.  பூகோளச் சூடேற்ற விளைவுகளை ஒப்பிட்டால் மீதேன் வாயுவின் தீமை கார்பன் டையாக்ஸைடை விட 23 மடங்கு பெரியது.  உலகில் பெரும்பான்மையான விஞ்ஞானிகள் சூடேறும் பூகோளத்தை மெய்யாகக் கருதி ஏற்றுக் கொண்டாலும், அம்மாறுதலை ஒப்புக்கொள்ளாத அறிஞரும், நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன.  ஆனால் சூடேறிய பூகோளத்தால் மாறிப் போகும் காலநிலைகளும், அதனால் ஏற்படும் திடீர் விளைவுகளும் மெய்யாக உலக மக்களைப் பாதித்துக் கொண்டு வருவதை நாம் அடிக்கடிக் கேட்டு வருகிறோம்.

சூடேறும் பூகோள எச்சரிக்கைகள், மாறுதல்கள், இன்னல்கள் !

பூகோளம் சூடேறுவதால் ஒவ்வோர் ஆண்டும் காலநிலைக் கோர விளைவுகள் மாறி மாறி விளைந்து வியப்புக்குள் நம்மை ஆழ்த்துகின்றன.  துருவப் பனிமலைகள் உருகிக் கடல் மட்டம் ஏறுவதைக் காண்கிறோம்.  கடல் வெள்ளம் சூடேறி சூறாவளிகளும், சைக்குலோன்களும், ஹரிக்கேன்களும் எண்ணிக்கையில் அதிகமாகி, பலத்தில் அசுரத்தனமாகிக் கோடான கோடி உலக மக்களுக்குப் பேரின்னல்களை விளைவித்து வருகின்றன.  நீர்வளப் பகுதிகளின் நிலவளங்கள் தேய்ந்து வரட்சியாகிப் பாலையாகிப் போய்விடுமா என்னும் பயம் வந்துவிட்டது.  மேலும் கீழ்க்காணும் நூதனக் காலநிலைக் கோர விளைவுகள் உலக மக்களைத் துன்புறுத்தி வருகின்றன !

1.  கடந்த 30 ஆண்டுகளாய் உச்சக் கணிப்பு நிலை 4 & 5 ஹரிக்கேன்களின் [Hurricane Category: 4 & 5]   எண்ணிக்கை இரட்டித்துள்ளது.

2.  கடந்த 10 ஆண்டுகளில் கிரீன்லாந்து பனிப்பாறைகள் உருகிச் சரியும் நிகழ்ச்சிகள் இரட்டிப்பாக மாறி இருக்கின்றன.  

3.  குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன.

4.  7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.     

மேலும் தொடர்ந்து சூடேற்றம் மிகையாகச் ஏறிச் சென்றால், கீழ்க்காணும் பெருங் கேடுகள் பரவ வாய்ப்புகள் உண்டாகும்.

1.  அடுத்த 25 ஆண்டுகளில் பூகோளச் சூடேற்றத்தால் விளையும் மக்களின் மரண எண்ணிக்கை இரட்டிப்பாகி ஆண்டுக்கு 300,000 நபராக விரிவடையும்.

2.  கிரீன்லாந்து, அண்டார்க்டிகாவின் பனிக்குன்றுகள் உருகி பூகோளக் கடல் மட்டம் 20 அடிக்கும் மேலாக உயர்ந்து, கடற்கரை நிலப்பகுதிகள் உலகெங்கும் பேரளவில் பாதகம் அடையலாம்.

3.  2050 ஆண்டு வேனிற் காலத்தில் வடதுருவத்தின் ஆர்க்டிக் கடல் பனித்தளம் இல்லாமல் நீர்த்தளமாகி விடலாம்.

4.  2050 ஆண்டுக்குள் உலகெங்கும் வாழும் மில்லியன் கணக்கான உயிர் ஜீவிகள் [Species] பரம்பரையின்றி முற்றிலும் மரித்துப் போய்விடலாம்.   

5.  வெப்பக்கனற் புயலடிப்புகள் [Intensive Heat Waves] உக்கிரமுடன் மிக்க அளவில் அடிக்கடித் தாக்கலாம்.

6.  நீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, நிலவளம் சீர்குலைந்து வரட்சிகளும், காட்டுத் தீக்களும் அடிக்கடி உண்டாகலாம். 

சூடேறும் பூகோளத்தில் எழுகின்ற இந்த பிரச்சனைகளை ஐயமின்றி நாம் ஒன்று கூடித் தீர்க்க முடியும்.  அவற்றைத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கோர் கடமை நெறியாக உள்ளது.  நாம் தடுத்திடச் செய்யும் தனிப் பணிகள் சிறிதாயினும், மொத்தமாக ஒத்துழைத்து முடிக்கும் சாதனைகள் முடிவில் மிகப் பெரும் ஆக்க வினைகள் ஆகும்.  அவ்விதம் அனைவரும் ஒருங்கு கூடிப் பூகோளச் சூடேற்றத்தைத் தடுக்க முனையும் தருணம் எப்போது என்று நினைக்கிறீர்கள் ? இப்போதுதான் !  

(தொடரும்)

தகவல்:

1.  Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference]  (April 9, 2007)

2.  An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it”   By Al Core (2006)

2(a)  The Assault on Reason  By Al Gore  (July 2007)

3.  BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)

4.  BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)

5.  BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)

6.  The Big Thaw, Ice on the Run, Seas on the Rise << National Geographic >> By Tim Appenzeller (June 2007)
7.  Climate Change A Guide for the Perplexed << New Scientist >> (May 19 2007)

8. Historic Global Warming Linked to Methane Release, Environmental News Network By: John Roach (Nov 19 1999)

++++++++++++++++++++

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (June 28 2007)