2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கம், அணு உலை விபத்து, அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் பாதுகாப்பு உளவுகள் -3

 

(ஜூலை 17, 2007)

 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

முன்னுரை:  யந்திர யுகத்திலே முப்பெரும் தீங்குகளால் உலகெங்கும் விபத்துக்கள் அடிக்கடி யந்திர சாதனங்களில் நேர்கின்றன ! முதலாவது மனிதத் தவறு, இரண்டாவது யந்திரக் கோளாறு, மூன்றாவது புயல், இடிமின்னல், வெள்ளம், சூறாவளி, சுனாமி, பேய்மழை, பூகம்பம், எரிமலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் ! குறையுள்ள மனிதரும், பழுதுள்ள சாதனங்களும் இருக்கும் வரை ஆகாய விமானத்திலும், அண்டவெளிக் கப்பலிலும், இரயில் பயணத்திலும், அணுமின்சக்தி நிலையத்திலும், ஏனைய தொழிற் சாலைகளிலும் “அபாய எதிர்பார்ப்புகளை”  [Risks] உலக மாந்தர் எதிர்நோக்கி இருக்க வேண்டும். செம்மையான பயிற்சி முறைகள் மனிதத் தவறுகளைக் குறைத்துவிடும். அதுபோல் சீரான சாதனங்களும், விபத்துகளைச் சிறிய எண்ணிக்கை ஆக்கிவிடும். ஆனால் கூடியவரை விபத்துக்கள் மனிதராலோ, யந்திரத்தாலோ, இயற்கைச் சீற்றத்தாலோ நேர்ந்தால் யந்திரங்கள் பாதுகாப்பான நிலைக்குச் சுயமாக மாறி, மனிதர் தப்பிக் கொள்ள வழிகள் இருக்க வேண்டும். அதுதான் 21 ஆம் நூற்றாண்டில் யந்திர உலகிலே விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் வல்லுநரின் குறிக்கோளாய் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

(கட்டுரை ஆசிரியர்)

விபத்து நேர்ந்த காஷிவசாக்கி அணு உலைகளை நிறுத்த வேண்டுகோள்

2008 பிப்ரவரி 24 ஆம் தேதி ஜப்பானின் விஞ்ஞானப் பொறியியல் எரிசக்தி கண்காணிப்புக் குழு (Group of Concerned Scientists & Engineers for Energy) உலகப் பெரும் காஷிவசாக்கி அணுமின் நிலையத்தை நிறுத்தி நிரந்தமாய் மூட வேண்டும் என்றோர் அறிக்கையை வெளியிட்டது.  அந்த அணுமின் உலை எதிர்ப்பு அறிக்கையில் “அடுத்தோர் நிலநடுக்க அபாயம் வரும் தருணம் உள்ளது” (“The Dangers of another Earthquake Remains”) என்று அழுத்தமாய்த் தெரிவிக்கப் பட்டது.  ஜப்பான் நிபுணர்கள் அறிவித்தபடி 2011 மார்ச் 11 ஆம் தேதி 9.0 ரிக்டர் அளவு அசுரப் பூகம்பம் உண்டாகி, 30 அடி உயரச் சுனாமி அடித்து யுத்தக் களம் போல் நாடு நகரம், வீடுகள் அழிந்து 14600 பேர் மடிந்து (2011 ஏப்ரல் 29 வரை) இன்னும் 10,000 பேர் காணப் படாமல் இருக்கிறார்.  மேலும் எழுந்த சுனாமியால் புகுஷிமாவின் நான்கு அணுமின் உலைகளில் மூன்று ஹைடிரஜன் வாயுச் சேமிப்பால் வெடித்து, சுயமாக நிறுத்தம் அடைந்த அணு உலைகளில் சூடேறிய எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரின்றி ஓரளவு உருகிக் கசிந்த நீரின் வழியாகவும் நீராவி & வாயுக்கள் மூலமாகவும் கதிரியக்க ஐயோடின்-131 & சீஸியம்-137 போன்ற நச்சுப் பொருட்கள் வெளியேறின.  புகுஷிமா அணுமின் உலைகள் இரண்டு நாற்பது ஆண்டுக் காலம் இயங்கி ஓய்வெடுக்க வேண்டியவை.  1960 ஆண்டுகளில் டிசைன் செய்யப் பட்டவை.  எதிர்பாராத பெரிய நிலநடுக்கம் 9 ரிக்டர் அளவுக்கும் 30 அடி உயரச் சுனாமிப் பேரலைக்கும் அணுமின் நிலையங்கள்  டிசைன் செய்யப் படாதவை.  பழைய 1978 விதிப்பாடுகளுக்கு உடன்பட்டு 7 – 7.5 ரிக்டர் அளவுக்கும் 20 அடிச் சுனாமிப் பேரலைக்கும் டிசைன் செய்யப்பட்டுச் சில அணுமின் நிலையங்கள் புகுஷிமாவில் கட்டப் பட்டவை.

இயங்கும் அணு உலைகளில் ஏற்படக் கூடிய அபாயங்கள்

அணு உலைகளில், அணுமின் உலைகளில், அணுக்கழிவு சுத்தீகரிப்புச் சாலைகளில் ஏற்படக் கூடிய மாபெரும் விபத்துக்கள் என்ன ? அணு உலை இயங்கும் போது மீறும் தொடரியக்கத்தில் [Super Critical Reaction] வெடிப்பது ! அடுத்து கதிரியக்கப் பிளவுத் துணுக்குகளும், [Fission Fragments] திரவக் கழிவுகளும், வாயுக் கழிவுகளும் கோட்டை அரணிலிருந்து [Containment Structure] எப்படியோ கசிந்து சூழ்வெளியில் பரவிக் கதிரியக்கத்தை மக்கள் மீதும், தளங்கள் மீதும் பொழிவது.

இதுவரையில் கோர விளைவுகளை இரண்டு அணுமின் உலைகள் நிகழ்த்தி இருக்கின்றன. முதலில் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் நிலைய விபத்து (1979). அடுத்தது சோவித் ரஷ்யாவின் செர்நோபில் அணுமின் நிலைய விபத்து (1986). அமெரிக்க அணுமின் உலையில் வெப்பத் தணிப்பு நீரிழப்பு விபத்து [Loss of Coolant Accident (LOCA)] நேர்ந்து அணு உலை எரிக்கோல்கள் உருகின. ஆனால் கதிரியக்கத் துணுக்குகளும், திரவ, வாயுக் கழிவுகளும் கோட்டை அரணில் சேமிப்பாகி வெளியே கசியவில்லை. ஆனால் செர்நோபில் அணு உலையில் வெப்ப ஆற்றல் மிகையாகி இருமுறை வெடிப்புக்கள் விளைந்து கோட்டை அரண் இல்லாததால் கதிரியக்கத் துணுக்குகள், திரவ, வாயுக் கசிவுகள் சூழ்வெளியில் பரவின. உலகெங்கும் பல நாடுகளில் மனிதத் தவறாலோ, யந்திரப் பழுதாலோ அணு உலைகளில் சிறிய, சிறிய விபத்துக்களும் நேர்ந்துள்ளன.

கடந்த 50 ஆண்டுகளாக 32 நாடுகளில் இயங்கி வரும் 435 அணுமின் நிலையங்களைப் பாதுகாப்பாக பராமரித்து வந்த அனுபவங்களை 12,700 அணு-உலை-ஆண்டுகள் [Reactor-years] என்னும் எண்ணிக்கையில் IAEA காட்டுகிறது. யந்திரப் புரட்சி (தொழிற் புரட்சி) ஏற்பட்ட பிறகு எந்த ஒரு தொழிற் துறையும் அணுவியல் துறை உலைகள் போல் உலகெங்கும் தொடர்ந்து கண்காணிக்கப் படவில்லை. அந்த சிறந்த கண்காணிப்பை 1957 இல் முதலில் துவங்கியது அகில நாட்டு அணுசக்திப் பேரவை எனப்படும் IAEA. அடுத்து அணுமின் நிலைய இயக்கங்கள், இயக்கத் திறன்கள், பராமரிப்புகள், திறனாய்வுகள், குழு ஆய்வுகள், அபாய விளைவுகள் போன்றவற்றை அடிக்கடி அணு உலை இயக்க உலகக் கூட்டுறவு [World Association of Nuclear Operations (WANO)] நிறுவகம் மேற்பார்வை செய்கிறது.

மூர்க்கர்கள் தாக்காதபடி மேலை நாடுகளில் அணுமின் உலைப் பாதுகாப்பு அமைப்புகள் மிகுதியாக உள்ளன. அப்படிச் சிலர் தாக்கினாலும் விளையும் அபாயங்கள் சிறிதளவுதான் என்று அறியப்படுகிறது. இயற்கை நிகழ்ச்சியில் பேரளவு ஆற்றல் கொண்ட பூகம்பத்தின் போது அணுமின் உலைக் கட்டுமானங்கள், சாதனங்கள் நிலநடுக்க ஆட்டத்தைத் தாங்கிக் கொள்ளும் உறுதி படைத்தவையாக அமைக்கப் படுகின்றன.

அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் கண்காணிப்பு

1957 இல் ஆஸ்டிரியா வியன்னாவில் தோன்றிய அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் சில விதி முறைகள்,

அணுக்கருவியல் பாதுக்காப்பின் கீழ் அணுக்கருப் பண்டப் பயன்பாடு, அணு ஆயுத எருக் கண்காணிப்பு ஆகிய இரண்டும் சேர்க்கப் பட்டுள்ளன.

அணுக்கருவியல் பாதுகாப்பு [Nuclear Safety]: அனுமதி பெற்ற அணு உலைக் கூடங்களிலிருந்து மனிதர் தூண்டாத விபத்துகளால் விளையும் கதிரியக்க வெளியேற்றத்தையும், அதன் தீங்குகளையும் பற்றியது.

அணுக்கருப் பண்டப் பயன்பாடு [Nuclear Materials Security]: அணுவியல் எரு மற்றும் ஏனைய கதிர்வீசும் பண்டங்களைப் பயன்படுத்துதல் பற்றியது. அன்னியர் அல்லது புறத்தே உள்ளவர் அணுவியல் பொருட்களை களவு செய்வதைக் கண்காணித்தல் பற்றியது.

அணு ஆயுத எருக் கண்காணிப்பு [Nuclear Safeguards]: உலக நாடுகளில் அணு ஆயுத ஆக்கத்தையும் பெருக்கத்தையும் தடுப்பது பற்றியது.

அகில நாட்டு அணுசக்திப் பேரவை உலக நாடுகளில் அணுக்கருப் பண்டங்கள் சேமிப்பு, பாதுகாப்பு, பயன்பாடு, தீய்ந்த எருக்கள் கைவச இருப்பு [Spent Fuel Storage], புதைப்பு பற்றிய வினைகளில் தணிக்கை ஆற்றல் உரிமை [Auditor of World Nuclear Safety] பெற்றது. ஒவ்வொரு நாட்டுக்கும் கண்காணிப்பு செய்ய அகில நாட்டு அணுசக்திப் பேரவைப் பிரதிநிதி ஒருவர் அமைக்கப் படுவார்.

ஜப்பானுக்கு அகில நாட்டு அணுசக்திப்  பேரவை அனுப்பிய உளவு உரைகள்

2007 ஆகஸ்டு 17 ஆம் தேதி அகில நாட்டு அணுசக்திப்  பேரவை (IAEA) அனுப்பிய உளவு உரைகளும், செம்மைப்பாடுகளும் கீழே உள்ளன :

  1. 2007 ஜூலை 16 ஆம் தேதி நேர்ந்த நிலநடுக்கம் டிசைன் அளவை மீறி விட்டாலும் அணுமின் நிலையக் கட்டமைப்பு முறியாமல் பாதுகாப்பாக நிலைத்து நின்றது.
  2. குறிப்பாக முழு ஆற்றலில் இயங்கிக் கொண்டிருந்த யூனிட்டு: 3, 4, & 7 அணு உலைகள் சுயமாய் நிறுத்தம் அடைந்தன.  துவக்க நிலையில் இருந்த யூனிட்: 2 தானாக நிறுத்த மானது.
  3. அணு உலைப் பாதுகாப்பு ஏற்பாடுகளின் கட்டமைப்பு, சாதனங்கள், வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் நிலநடுக்கத்தால் சீர்கேடாக வில்லை.
  4. ஆயினும் பாதுகாப்பு ஏற்பாட்டுக் கட்டமைப்பில் இல்லாத மற்ற மின்சாரச் சாதனங்கள் (மின்சார அழுத்த மாற்றிகள் -Transformers) பாதகங்கள் அடைந்தன.
  5. நிலநடுக்க எல்லைகள் புதுப்பிக்கப் பட்டுச் சாதனங்கள் கட்டமைப்புகள் செம்மைப் படுத்த வேண்டும்.

அணு உலை  இயக்கங்களால்  நேர்ந்த சில விபத்துகள், மரணங்கள்

செர்நோபில் கோர உயிரிழப்பு, மற்றும் அதன் கதிரியக்கப் பொழிவால் விளைந்த நோய், மரண விபத்தைத் தவிர உலக நாடுகளில் இயங்கும் வேறு எந்த அணுமின் நிலையங் களில் கதிரியக்கத்தால் மனிதர் யாரும் இறக்க வில்லை. அணு ஆராய்ச்சி உலைகளில் பணி புரியும் விஞ்ஞானிகள் தவறுதலாக யுரேனிய அல்லது புளுடோனிய எருக்களைக் கையாண்டதால் கதிரியக்கம் பெற்று ஒரு சிலர் சில தினங்களில் உயிரிழந்த தகவல் கிடைத்துள்ளது. ஜப்பானில் யுரேனியச் செறிவுச் சாலை ஒன்றில் ஏற்பட்ட கதிரியக்க விபத்தில் இருவர் மாண்டனர். மேலும் இரண்டு அணுமின் நிலையங்களில் [ஜெர்மனியில் குன்றிமிங்கன் அணுமின் உலை, ஜப்பானில் மிஹாமா அணுமின் உலை] பராமரிப்பு செய்யும் போது கதிரியக்கம் இல்லாத நீராவி பேரளவில் கசிந்து நான்கு பேர் மரித்தார் என்பது அறியப் படுகிறது.

முடிவுரை:

ஜப்பான் நிலநடுக்கத்தினாலும், சுனாமியாலும் நாடு, மக்கள், செல்வ வளம் பன்முறை பாதிக்கப் பட்டுள்ளன.  ஆயினும் மின்சக்தி பேரளவில் உற்பத்தி செய்து நாட்டு யந்திரங்களை இயக்கிப் பலருக்கு வேலை, ஊதியம் அளித்து வரும் அணுமின் நிலையங்கள் செம்மையாக்கப் பட்டு இன்னும் பல்லாண்டுகள் இயக்கப்படப் போகின்றன.  நேர்ந்திடும் அணு உலை விபத்துக்களால் ஜப்பானிய அணுமின்சக்தி ஆதரவு நிபுணர் பாடங்கள் கற்று அவற்றை மேம்படுத்தித் தொடர்ந்து இயக்கி வருவார் என்பது என் கருத்து.  வேறு முறையில் பேரளவு மின்சக்தி உற்பத்தி செய்யும் வழியின்றித் திடீரென்று அணுமின் உலைகளை எல்லாம் நிறுத்தி விட்டு ஜப்பானை இருட்டடித்து, யந்திர யுகத்தை முடக்கி, ஊழிய மில்லாத் திண்டாட்டத்தை எதிர்நோக்கப் போகிறார் என்று யாரும் தற்போது முடிவு கட்ட முடியாது !

(தொடரும்)

***********************

தகவல்:

Picture Credits:  Internet  Website

1. IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)

2. Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire

3. Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007)

4 Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo

5. Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill

6. Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)

7. Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)

8. Herald Tribune : Earthquake Stokes Fears Over Nuclear Safety in Japan By Martin Facker (July 24, 2007)

9. Earthquake Zone : Earthquakes & Nuclear Safety in Japan [Citizen Nuclear Information Center (CNIC)] By Philip White International Liaison Officer CNIC.

10. Four Categories of Buildings & Equipment for Earhtquake-resitant Design of Nuclear Power Plants

11. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

12. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

13.  IAEA Issues Report on Kashiwasaki-Kariwa Nuclear Plant   (August 17, 2007)

14.  Third IAEA Report on Kasiwasaki-Kariwa Nuclear Plant  (Jan 29, 2009)

15.  Efforts toward Enhansing Scismic Safety at Kasiwasaki-Kariwa Nuclear Power Station  (Nov 14, 2009)

16.  Backgrounder on Earthquakes & Nuclear Power in Japan   (March 11, 2011)

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 21, 2007

http://www.jayabarathan.wordpress.com/

2007 ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2

 

(ஜூலை 17, 2007)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 


பேரழிவுப் போராயுதம் உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து விழுதற்றுப் போக,
விதையும் பழுதாக
ஹிரோஷிமா நகரை நரகமாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
மட்ட மாக்கப் பட்டது !
திட்ட மின்றி
மூட நிபுணர்கள் அணு உலையைச்
சூடாக்கிச்
சோதனையில் வெடித்து
நிர்வாண மானது,
செர்நோபில் அணு உலை !
மாய்ந்தனர் மக்கள்,
மடிகிறார்,
மேலும் மரிப்பார், மரிப்பார் !
நாடு, நகரம்,
வீடு, வீதி, வயல்கள் எல்லாம்
மூடின கதிர் வீச்சுகள் !
கட்டாயமாய்ப் பல்லாயிரம் பேர்,
கைப்பையுடன்
புலம்கடத்தப் பட்டார் !
புற்று நோயும், இரத்த நோயும்
பற்றின பாலரை! படுகிறார் வேதனை!
மனிதத் தவறு !
மாபெரும் தவறு !
மன்னிக்க முடியாத தவறு !
ரஷ்ய நிபுணர் முதன்முதல்
அரங்கேற்றிய அணுயுகப்
பிரளயம் !

(செர்நோபில் விபத்தின் 20 ஆண்டுப்
பூர்த்தி நினைவாக எழுதப்பட்டது)

++++++

“காஷிவஸாகி-கரிவா அணுமின் நிலையம் ஒரு தீவிர நில அதிர்ச்சி தளத்தட்டின் மீது அமர்ந்திருப்பதை முதலில் கண்டுபிடிக்காமல் போனது எங்களுக்கு ஓர் இழப்புதான்.  ஆயினும் அந்த தவறு எந்த விதத்திலும் ஓர் அபாயப் பேரிழப்பாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதில்லை.”

டோஷியாகி ஸகாயி [Head Engineering Group Tokyo Electric’s Nuclear Plants]  

“காஷிவஸாகி-கரிவா அணுமின் நிலையம் நிலநடுக்கத்தின் போது பாதுகாப்பாக நிறுத்தமாகி, யந்திரச் சாதனங்களும், கட்டடங்களும் பெருத்த சிதைவுகள் அடையாது அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டன. ஆனால் அதன் கீழ் வெகு ஆழத்தில் ஒரு தீவிர நில அதிர்ச்சித் தட்டிருந்தது எப்படி நிபுணர்களுக்குத் தெரியாமல் போனது ?”

மிஸியோ இஷிகாவா [President Japan Nuclear Technology Institute] 

“நிலநடுக்க விளைவுகளை IAEA குழுவினர் உளவ ஜப்பானிய அணுவியற்துறை அதிகாரிகள் வெளிப்படையாக, முழு ஒத்துழைப்பளிப்பதை வரவேற்கிறேன்.  ஜப்பானிய நிபுணர்களின் நிலநடுக்க விளைவு ஆய்வுகளும் IAEA குழுவினர் புரியும் தனிப்பட்ட உளவுகளும் விபத்தால் நேர்ந்த நேர்முறை, எதிர்முறை விளைவுப் பாடங்களைக் [Positive & Negative Lessons] கற்றுக் கொள்ள உதவும்.  அந்த பாடங்கள் மற்ற உலக நாட்டு அணுமின் நிலையங்களின் இயக்கக் கட்டுப்பாடுகளுக்கும் பராமரிப்புக்கும் ஏற்றதாகும்.”

மொகமது எல்பராடி [Mohamed ElBaradei, IAEA Director General]

முன்னுரை:  ஜப்பானிலும் மற்ற உலக நாடுகளிலும் உள்ள அணு உலைகள் நிலநடுக்க அதிர்ச்சி ஆட்டங்களைத் தாங்கி நடுக்கம் மீறினால் அணு உலைகள் தானாகவே நிறுத்தம் அடையுமாறு டிசைன் செய்யப்படுகின்றன.  நிலநடுக்கம் எப்போது வருமோ என்று அஞ்சிய நிலையில் விழிப்பாக இருக்கும் ஜப்பானில் 55 அணுமின் நிலையங்கள் இப்போது இயங்கி வருகின்றன.  1995 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிகப் பெரும் (7.3 ரிக்டர்) கோப்-ஒஸாகா நிலநடுக்கத்தில் கூட [Kobe-Osaka Earthquake] அருகில் இருந்த அணுமின் நிலையங்களுக்குப் பாதிப்புகள் நேரவில்லை.  2004, 2005, 2007 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் “தளத்துடிப்பு வேக வீதம்” [Ground Acceleration] மிகையாக இருந்ததால், அணு உலைகள் தாமாக நிறுத்தம் அடைந்தன !  1999 இல் டெய்வான் நிலநடுக்கத்தில் அருகிலிருந்த மூன்று அணுமின் உலைகள் தாமாக நிறுத்தம் அடைந்தன.   2007 ஜூலை 17 ஆம் தேதி வடமேற்கு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நிலையம் பாதுகாப்பாக நிறுத்தமாகிப் பெரிய பாதிப்புகள் நேரா விட்டாலும், உலகப் பெரும் காஷிவஸாகி-கரிவா அணுமின் நிலையம் ஒரு தீவிர நில அதிர்ச்சித் தளத்தட்டின் (Active Seismic Fault) மீது அமர்ந்துள்ளது என்று முதன்முதல் நிபுணர்கள் கண்டுபிடித்தது குறிப்பிடத் தக்க ஓர் அதிசயமாகும் !

ஜப்பான் நிலநடுக்கமும் அதிர்ச்சி விளைவுகளும்

2007 ஜூலை 16 ஆம் தேதி ஜப்பானின் வடமேற்குப் பகுதியில், தலைநகர் டோக்கியோவிலிருந்து 250 கி.மீடர் [150 மைல்] தூரத்தில் உள்ள நைகாடா நகரத்தை நடுக்கமைய மாகக் [Epicentre] கொண்டு 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் காலை 10:13 மணிக்கு (01:13 GMT) உண்டாகியது.  அதன் விளைவால் இதுவரை 11 பேர் மரித்தார் என்றும், 1000 பேருக்கு மேல் காயமடந்தார் என்றும் 13,000 பேர் தமது வீட்டை விட்டு ஓடி 100 பாதுகாப்பு இல்லங்களில் தங்கினார் என்றும் அறியப்படுகிறது.  150 மைல் தூரத்தில் இருக்கும் டோக்கியோவின் மாட மாளிகைகள் கூட ஆடினவாம் !  நைகாடா நகரத்துக்கு அருகே உள்ள உலகப் பெரும் காஷிவாஸாகி அணுமின் நிலையத்தின் ஏழு தனிப்பட்ட அணு உலைகள் நில அதிர்ச்சியை உணர்ந்த கணமே தானாகப் பாதுகாப்பாக நிறுத்தம் அடைந்தன என்று அறியப்படுகின்றது !

யுரேனிய எரிக்கோல்கள் உள்ள அணு உலைக்கு எந்த இடருமின்றி, அருகில் இருந்த தீய்ந்த எரிக்கோள்கள் சேமித்து வைக்கப் பட்டுள்ள காங்கிரீட் நீர்த் தடாகத்தில் மட்டும் சில பிளவுகள் உண்டானதாகத் தெரிகிறது.  வெளியே உள்ள டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றில் தீப்பற்றி அது உடனே அணைக்கப் பட்டது. மேலும் வெளியே வைக்கப்பட்டுள்ள தணிவுக் கதிரியக்கத் திரவமுள்ள ஒரு இரும்புக் கலம் உடைந்து கழிவுநீர் கசிந்தோடிக் கடலில் கலந்தது என்பது பலரும் அலறும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி.  வியன்னாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency, (IAEA) Vienna Austria] ஜப்பானிய அதிகாரிகளின் வேண்டுகோள்படி ஆறு பேர் அடங்கிய ஆய்வுக் குழுவைச் சமீபத்தில் நிலநடுக்க விளைவுகளை நேரடியாக அறிந்துவர அனுப்பியுள்ளது.  அவரது முக்கியக் கண்டுபிடிப்பு: காஷிவாஸாகி அணுமின்சக்தி யூனிட்டுகள் செய்யப்பட்ட டிசைன் வரை அளவு (6.5 ரிக்டர்) விபத்து அளவைவிடக் (6.8 ரிக்டர்) குறைவானது.  ஆயுனும் தீவிரப் பழுதுகள், பிளவுகள் ஏற்படாததற்குக் காரணம், எல்லா டிசைன் வரைமுறைகளும் 10% மிகையாக வைக்கப்பட்டுள்ளன.  அதாவது மெய்யான டிசைன் நிலநடுக்க வரை அளவு: (6.3 +6.3 X 10/100 = 6.3+0.63 =6.93).  ஆய்வு அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும்.

அகில நாட்டு அணுசக்திப் பேரவைக் குழுவினர் செய்த உளவுகள்

அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் பேரதிபர் மொகமது எல்பராடி ஜப்பானிய அணுவியற் துறை அதிகாரிகளின் வெளிப்படையான ஒத்துழைப்பை வரவேற்று, “ஜப்பானியரின் உளவு ஆய்வுகளும் IAEA குழுவின் தனிப்பட்ட உளவுகளும் நேர்முறை, எதிர்முறை விளைவுப் பாடங்களைக் கற்றுக் கொள்ள உதவும்.  அந்த பாடங்கள் மற்ற உலக நாட்டு அணுமின் நிலையங்களுக்கும்  உகந்ததாகும், என்று எடுத்துக் கூறினார்.

பேரவைக் குழுவினர் மூன்று நாட்கள் தங்கி ஏழு அணுமின் நிலையங்களின் சிக்கலான கட்டட அமைப்புகளையும், ஏதுவான அணு உலைச் சாதனங்களையும் சோதித்துப் பிளவுகள், பழுதுகள் ஏற்பட்டுள்ளனவா என்று உளவு செய்தார்கள்.  விபத்து நேர்ந்த நாளன்று அணுமின் உலை ஆட்சி அறை அரங்கில் [Control Room Panels] பதிவான அனைத்து பதிவுக் கருவிகளின் பதிவுகளையும், அணுமின் உலைச் சாதனங்கள் இயக்கங்களையும் ஆழ்ந்து நோக்கினார்.  அவரது முதல் உளவு முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

நிலநடுக்கக் கட்டடச் சோதனை அமைப்பு

1.  அணுமின் நிலையக் கருவிகள், சாதனங்கள் நிலநடுக்கத்தின் போது, டிசைன் வரையறையை மீறாமல் திட்டமிட்டபடிப் பாதுகாப்பாய் இயங்கியுள்ளன.

2.  ஜப்பானிய நிலைய இயக்குநர் கைப் பதிவுகளின் அறிக்கைப்படி சிறிதளவுக் கதிரியக்க நீரே கசிந்து கடலில் கலந்தது என்பதற்குப் பேரவைக் குழுவினர் ஒப்புதல் அளித்துள்ளார்.  அச்சிறிய அளவுக் கசிவுக் கதிரியக்கத் திரவக் கழிவு பொதுநலச் சூழ்வெளிப் பாதுகாப்பு எல்லையைத் [Limits for Public Health & Environmental Safety] தாண்ட வில்லை என்பது உறுதியாக்கப் பட்டிருக்கிறது.  நிலநடுக்கத்தால் உண்டான கட்டடப் பிளவுகள் எதுவும் அணு உலைப் பாதுக்காப்புக்கு அரணுக்கோ அல்லது சாதன ஏற்பாடுகளுக்கோ நேரவில்லை என்பது தெளிவாகி இருக்கிறது.

3.  நிலநடுக்க சமயத்தில் நிறுத்தமான அணுமின் நிலையச் சாதனங்கள், பம்ப்புகள், கொதிகலன்கள் சிலவற்றில் பழுதுகள், பிளவுகள் ஏற்பட்டுள்ளனவா என்று கதிரியக்கத் தளங்களில் உடனே சோதிக்கப்பட முடியாது.  திட்டமிட்டுப் பணிபுரியும் அணுமின் நிலையப் பராமரிப்புத் தருணங்களில்தான் அவற்றை உளவு செய்ய முடியும்.  பேரவைக் குழுவினர் கூற்றுப்படி இன்னும் அணு உலைச் சாதனங்கள், அழுத்தக் கலன்கள், எரிக்கோல்கள் அடுத்த உலை நிறுத்த வேளைகளில்தான் உளவு செய்யப்பட வேண்டும்.

4.  நிலநடுக்க அதிர்ச்சியால் உண்டான உலைக்கலச் சாதன அழுத்தங்கள் [Physical Stresses of Pressure Vessel & other Components] சில நிலையங்களின் பாதுகாப்பான இயக்க ஆயுட் காலத்தைக் குறைக்கலாம்.  அதாவது அவ்வித அழுத்தமான சாதனங்கள், எதிர்பார்த்த காலத்துக்கு முன்பே மாற்றப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம்.

அழுத்த நீர் அணுமின் நிலைய அமைப்பு

5.  குறிப்பிடத் தக்க ஒரு கண்டுபிடிப்பு என்ன வென்றால் 2007 ஜூலை 17 ஆம் தேதி நேர்ந்த நிலநடுக்கம் (6.8 ரிக்டர்) பாதுகாப்புக்காக எஞ்சினியர்கள் முதலில் செய்த அணுமின் நிலைய டிசைன் அளவை விட (6.3 ரிக்டர்) 0.5 ரிக்டர் மிஞ்சி விட்டது !  ஆயினும் பெரும்பான்மையான அணுமின் உலைகளின் பாதுகாப்பு டிசைன் வரையறை எப்போதும் 10% மிகையாக வைத்துக் கட்டப்படுவதால் (6.3 + 0.63 = 6.93), நிலையத்தில் பேரளவுச் சிதைவுகளோ, பிளவுகளோ உண்டாக வில்லை என்று முடிவு செய்யப் பட்டிருக்கிறது.

6.  அணுமின் நிலையச் சொந்த நிறுவனமான டோக்கியோ மின்சார வாரியம் அதற்குச் சில மாதங்களுக்கு முன்பே “நிலநடுக்கத் தீங்கு மீளாய்வு” (Seismic Hazard Re-evaluation) செய்து 2006 செப்டம்பரில் அதன் அறிக்கையை ஜப்பான் அணுத்துறைப் பாதுகாப்பு தலையகத்துக்கு [Japan Nuclear Safety Commission (JNSC)] அனுப்பியுள்ளது.  2007 ஜூலையில் நேர்ந்த நிலநடுக்கத்தின் விளைவுகளும் எடுத்தாளப்பட்டு இப்போது டிசைன் மேம்பாடு செய்யப்படும்.

7.  ஜப்பான் நிலநடுக்க விளைவுகள் IAEA மூலமாக அனைத்துலக உறுப்பின நாடுகளுக்கும் பரப்பப் படுகின்றன.  அதுபோல் மற்ற நாடுகளின் அணு உலை விபத்துகள், இயக்க விபரங்களை ஜப்பான் அணுத்துறை நிறுவனங்களுக்கு IAEA அனுப்பி வருகிறது.

(தொடரும்)

***********************

தகவல்:

Picture Credits:

1.  IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)
2.  Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire
3.  Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007)
4  Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo
5.  Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill.
6.  Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)
7.  Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)
8.  Herald Tribune : Earthquake Stokes Fears Over Nuclear Safety in Japan By Martin Facker (July 24, 2007)
9. Earthquake Zone : Earthquakes & Nuclear Safety in Japan [Citizen Nuclear Information Center (CNIC)] By Philip White International Liaison Officer CNIC.
10. Four Categories of Buildings & Equipment for Earhtquake-resitant Design of Nuclear Power Plants.

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] April 22, 2007

2007 இல் நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் -1


fig-1-earthquake-near-nuclear-plant.jpg

(ஜூலை 16, 2007)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

அருகாது அகலாது தீக்காய்வார் போல
கருஅணுவில் மின்சக்தி ஆக்கு.

முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் முப்பெரும் பேரழிவு நிகழ்ச்சிகளில் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாக்கி அணுகுண்டுகள் வீழ்ச்சிக்குப் பிறகு அடுத்த இடத்தைப் பெறுவது, போபால் இராசயனக் கூடத்தில் 1984 ஆண்டு வெளியேறிய விஷ வாயுத் தாக்குதலின் கோர விளைவுகளே! நிகழ்ச்சிகளில் மூன்றவது நிலையைப் பெறுவது, சோவியத் ரஷ்யாவின் செர்நோபிள் அணு உலை வெடிப்பு! அணு யுதங்கள் வெடித்து, ஜப்பானில் இறந்தவர் எண்ணிக்கை 300,000 பேரைத் தாண்டி விட்டது! அங்கு காயம் உற்றோர், கதிரடி பெற்றோர், சந்ததி ஊனமுற்றோர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா!  செர்நோபிள் விபத்தில் உடனே இறந்தவர் 31 நபராயினும், மிகையானக் கதிரடியில் பாதிக்கப் பட்டவர் 600,000 மேல் என்றும் பின்னால் அவர்களில் மரணம் அடைந்தவர் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில் ஏறிக் கொண்டு போவதாயும் அறியப் படுகிறது!  அண்டை ஊர்களில் பொழிந்த கதிர்த் தீண்டலால், சுமார் 135,000 மக்கள் வேறு ஊர்களில் குடியேற ராணுவப் பஸ்களில் தூக்கிச் செல்லப் பட்டனர்! பல வருடங்கள் கழித்துக் கதிர் ஐயோடினில் [Radioiodine] பாதிக்கப்பட்ட 1800 குழந்தைகள் தைராய்டு புற்றுநோயில் தாக்கப் பட்டதாகவும், அந்தக் குழுவில் பத்துக் குழந்தைகள் இறந்து விட்டதாகவும் இப்போது அறியப் படுகிறது!

உலக வரலாற்றில் ஜப்பானிலிட்ட அணு ஆயுத வீச்சுகளுக்கு அடுத்தபடியாக, ஆனால் அவற்றை விட 400 மடங்கு பேரழிவு மிகையாக விளைவிக்கும் ஒரு கோர கதிரியக்கத் தீங்கு நிகழ்ச்சியாக, செர்நோபில் அணு உலை விபத்து கருதப் படுகிறது!  செர்நோபில் நிலையத்தில் சிதைந்து முறிந்த கட்டடங்களைத் தாண்டிக் கதிரியக்கத் துணுக்குகளும், தூசுகளும், மாசுகளும் காற்றில் பரவி கிழக்கே ஜப்பானிலும், மேற்கே கனடா வரையிலும் பயணம் செய்து கருவிகள் மூலம் பதிவாகின! செர்நோபில் அணு உலை வெடிப்பால் இதுவரை 65 பேர் உயிரிழந்தனர் என்று அறிய வருகிறது! கதிர்த் தீண்டலாகி 20 மைல் சுற்றளவில் வாழ்ந்த பிரிபயாட் நகர மக்கள் [45,000 பேர்] உள்பட மற்ற அண்டை ஊர்களிலும் வசித்த 116,000 நபர்கள் கட்டாயமாகப் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டனர். ஆனால் வெடித்துச் சிதறிய கதிர்வீச்சுத் துணுக்குகள் பல மைல் சுற்றளவில் பரவிப் படிந்துள்ளதால், அடுத்துச் சுமார் 9000 பேர் பல்லாண்டுகளில் மரணம் அடைவார் என்று ஐக்கிய நாடுகளின் அணுசக்திக் கண்காணிப்புப் பேரவை [UNESCO-IAEA] கணித்துள்ளது!

ஆனால் சமீபத்தில் 2007 ஜூலை 16 ஆம் தேதி நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அதனால் தூண்டப்பட்ட காஷிவாஸாகி-கரிவா அணுமின்சக்தி நிலையத் [Kashiwazaki- Kariwa Nuclear Power Plant] தீவிபத்தும், கதிரியக்கக் கழிவுநீர்க் கசிந்து கடலில் சேர்ந்ததும், மற்ற விபத்துக் களோடு ஓப்பு நோக்கினால் மிகச் சிறிய விளைவு என்றுதான் அகில உலக அணுசக்திப் பேரவை (IAEA) முடிவு செய்கிறது !

ஜப்பான் நிலநடுக்கமும் அதிர்ச்சி விளைவுகளும்

2007 ஜலை 16 ம் தேதி ஜப்பானின் வடமேற்குப் பகுதியில், தலைநகர் டோக்கியோவி லிருந்து 250 கி.மீடர் [150 மைல்] தூரத்தில் உள்ள நைகாடா நகரத்தை நடுக்க மையமாகக் [Epicentre] கொண்டு 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் காலை 10:13 மணிக்கு (01:13 GMT) உண்டாகியது.  அதன் விளைவால் இதுவரை 9 பேர் மரித்தார் என்றும், 1000 பேருக்கு மேல் காயமடந்தார் என்றும் 13,000 பேர் தமது வீட்டை விட்டு ஓடி 100 பாதுகாப்பு இல்லங் களில் தங்கினார் என்றும் அறியப் படுகிறது.  150 மைல் தூரத்தில் இருக்கும் டோக்கியோ வின் மாட மாளிகைகள் கூட ஆடினவாம் !  நைகாடா நகரத்துக்கு அருகே உள்ள உலகப் பெரும் காஷிவாஸாகி அணுமின் நிலையத்தின் ஏழு தனிப்பட்ட அணு உலைகள் நில அதிர்ச்சியை உணர்ந்த கணமே தானாகப் பாதுகாப்பாக நிறுத்தம் அடைந்தன என்று அறியப்படுகின்றது !

யுரேனிய எரிக்கோல்கள் உள்ள அணு உலைக்கு எந்த இடருமின்றி, அருகில் இருந்த தீய்ந்த எரிக்கோள்கள் சேமித்து வைக்கப் பட்டுள்ள காங்கிரீட் நீர்த் தடாகத்தில் மட்டும் சில பிளவுகள் உண்டானதாகத் தெரிகிறது.  வெளியே உள்ள டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றில் தீப்பற்றி அது உடனே அணைக்கப் பட்டது. மேலும் வெளியே வைக்கப்பட்டுள்ள தணிவுக் கதிரியக்கத் திரவமுள்ள ஓர் இரும்புக் கலம் உடைந்து கழிவுநீர் கசிந்தோடிக் கடலில் கலந்தது என்பது பலரும் அலறும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி.  வியன்னாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency, (IAEA) Vienna Austria] ஜப்பானிய அதிகாரிகளின் வேண்டுகோள்படி ஆறு பேர் அடங்கிய ஆய்வுக் குழுவைச் சமீபத்தில் நிலநடுக்க விளைவுகளை நேரடியாக அறிந்துவர அனுப்பியுள்ளது.  அவரது ஆய்வு அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும்.  அந்த அறிக்கை அகில வலைகளில் வெளியானதும் நான் எனது தொடர்க் கட்டுரையில் எழுதுகிறேன்.

நிலநடுக்கங்கள் அடிக்கடி குலுக்கும் ஜப்பான் தேசம்

உலக நாடுகளிலே ஜப்பான் தேசம் ஒன்றுதான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நிலையற்ற கடற்தளம் மீது ஒட்டியும் ஒட்டாத தீவுகளாய்ப் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து வருகிறது.  ஒவ்வொரு ஐந்து நிமிடமும் எழும் நிலநடுக்க நாட்டில் ஜப்பானியர் மிக விரைவாய்ச் செல்லும் இரயிலில் அனுதினம் பயணம் செய்து கொண்டு, நிலநடுக்கச் சிதைவுகளைச் சகித்திக் கொண்டு வாழ்கிறார்.  புல்லெட் டிரெயின் எனப்படும் வேக வாகனங்கள் நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் தானே நின்று விடுகின்றன.  ஜப்பானில் 30% பங்கு மின்சார ற்றல் பரிமாறிவரும் 55 அணுமின் நிலையங்கள் நில நடுக்கத்தால் பேரழிவுகள் நேராதவாறு பாதுகாப்பாக நிறுத்தமாகி, நிலைமை சரியான பிறகு இயங்கின்றன.  அதே நைகாடா பகுதியில் 2004 ஆம் ஆண்டு அக்டோபரில் உண்டான 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் 65 பேர் மரித்தனர்.  இதுவரை நிகழ்ந்த நிலநடுக்கத்திலே மிகப் பெரும் நடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் 1995 ண்டில் கோப் நகரப் பகுதியில் [Kobe City] நேர்ந்தது.  அந்தக் கோர நடுக்கத்தில் 6400 பேர் உயிரிழந்தனர் !

காஷிவாஸாகி அணுமின் நிலையத்தில் நேர்ந்த விளைவுகள்:

டோகியோ மின்சார வாரியம் [Tokyo Electric Power Company (TEPCO)] மேற்பார்வை செய்து நடத்தி வரும் காஷிவாஸாகி அணுமின் நிலையம் ஏழு தனி உலைகளைக் கொண்ட உலகத்திலே மிகப் பெரிய நிலையம் அது !  அது ஜப்பானின் வடமேற்குப் பகுதியில் நைகாடா நகருக்கு அருகில் 4.2 சதுர கி.மீடர் பரப்பில் அமைக்கப் பட்டுள்ளது. அந்த ஏழு அணுமின் யூனிட்டுகளும் கொதிநீர் அணு உலைகள் [Boiling Water Reactors] ஆகும்.  அவை அனைத்தும் இயங்கினால் மொத்தம் 8212 MWe மின்சார ஆற்றல் பரிமாறத் தகுதியுள்ளது.  அந்த தளத்தில் ஏழு அணு உலைகள் உள்ளதோடு ஓர் அணுவியல் பயிற்சிக் கூடம், பொதுநபர் அணுசக்தித் தகவல் கூடம் மற்றும் தணிவு நிலை கதிரியக்கக் கழிவுச் சேமிப்புக் கிடங்கு [Low Level Radioactive Waste Storage Facility] ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளன.  மேலும் சிறப்பாக கொதிநீர் உலை இயக்குநர் பயிற்சிக்காக இரண்டு போலி அணுமின் உலை அரங்குகள் [Simulators in BWR Operator Training Centre] அங்கே நிறுவகமாகி யுள்ளன.

நிலநடுக்கமான அன்றைய தினத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அணுமின் உலைகள் யாவும் சுய இயக்கு நிலநடுக்க உணர்வுக் கருவிகள் மூலம் [Seismic Sensors] நுகரப்பட்டு உடனே நிறுத்தம் ஆயின.  அதாவது அந்த நிலையத்திலிருந்து வெளியாகும் மின்சாரப் பரிமாற்றம் துண்டிக்கப்பட்டு நிலையங்கள் யாவும் பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டன.  ஆனால் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உலோக உராய்வால் ஒரு மின்னழுத்த மாற்றியில் [Electric Transformer] தீப்பற்றியது.  அதன் மூலம் மின்சாரப் பரிமாற்றம் முன்பே நிறுத்தமானதால் தீங்குகள் எதுவும் நிகழாமல் புகை மட்டும் மூண்டு பரபரப்பான டெலிவிஷன் காட்சியாக உலகைக் கவர்ந்தது.  ஜப்பான் தீயணைப்புப் படையினர் உடனே தீயை அணைத்துப் பரவாமல் தடுத்தனர்.

ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணு ஆயுதங்களால் ஆயிரக் கணக்கான மாந்தர் மாண்டு, கதிர்க்காயங்களால் துன்புற்று வரும் ஜப்பான் பூகம்ப சுனாமித் தீவுகளில் தற்போது 50 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி 40,000 MWe ஆற்றல் மின்சாரத்தைப் (30%) பரிமாறி வருகின்றன.  அவற்றுள் கூடங்குள அணு உலைகள் போல் ஆற்றல் கொண்ட (> 1100 MWe) 14 அசுர அணுமின்சக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன. அனைத்து நிலையங் களும் கடல்நீரைத் வெப்பத் தணிப்பு நீராகவும், சில நிலையங்கள் கடல்நீரைச் சுத்தீகரித்து உப்பு நீக்கிய நீரையும் பயன்படுத்தி வருகின்றன.

1950 ஆம் ஆண்டுமுதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன.

அதற்கு அடுத்தபடி அணுசக்தி இயக்கும் 220 கப்பல்களும், கடலடிக் கப்பல்களும் (Submarines) கடல் மீதும், கீழும் உலாவி வருகின்றன.  ஈழத்தீவில் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய் போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் 39% ஆற்றலைத் தயாரித்து மின்சாரம் அனுப்பி வருகின்றன.  இந்தியாவின் அணு மின்சக்திப் பரிமாற்றப் பங்கு 3%  இயங்கி வருபவை 20 அணுமின் நிலையங்கள்.  இந்தியாவில் அனைத்து அணுசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள, துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்.

அணுமின்சக்தி  தேவையான தீங்கு  என்று உலக நாடுகள் தெரிந்தே பயன்படுத்தி  வருகின்றன. அதன் பயன்பாட்டை இப்போது முழுவதும் நீக்க முடியாத, மீள  இயலாத நிலைக்கு நாம் வந்து விட்டோம்.   அணு உலை விபத்துக்களில் கற்கும் பாடங்களைக்  கையாண்டு அவற்றைப் பாதுகாப்பாக இயக்க முடியும் என்பது என் கருத்து.   வேறு மின்சக்தி உற்பத்திச் சாதனங்கள் எதிர்காலத்தில் வரும்வரைப் பேரளவு பயன்தரும் அணுமின்  சக்தி நிலையங்கள் உலகில் பாதுகாப்பாய் இயங்கிவரும்.

(தொடரும்)

***********************
தகவல்:

Picture Credits:

1.  IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)
2.  Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire
3.  Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007)
4  Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo
5.  Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill.
6.  Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)
7.  Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 16, 2007


அகில உலக வேகப் பெருக்கி அணு உலைகளின் அகால முடிவுகள்


[Fast Breeder Reactors]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


இந்திய வேகப் பெருக்கி அணு உலைகளுக்கு எதிர்ப்பு !

2001 ஏப்ரல் 25 ஆம் தேதி ‘ஹிந்து ‘ நாளிதழில், அமெரிக்க மேரிலாந்து சூழ் மண்டலச் சக்தி நிலை ஆராய்ச்சிக் கூடத்தின் அதிபதி, அர்ஜுன் மக்கிஜானி [Arjun Makhijani] என்பவர் பாரதத்தில் தலைதூக்கி வளர்ந்து வரும் அணுசக்தித் துறையகத்தின் இரண்டாவது கட்ட ‘வேகப் பெருக்கி அணு உலைத் ‘ திட்டங்களை வலுவாகத் தாக்கி எழுதி யிருந்தார்! சமீபத்தில் அங்கீகரிக்கப் பட்டு டிசைன் வேலைகள் நிகழ்ந்து வரும் 500 மெகாவாட் வேகப் பெருக்கி மின்சார அணு உலை, இந்தியா செய்யும் மாபெரும் தவறு என்றும் அழுத்தமாக அறிவித்தி ருந்தார்! வேகப் பெருக்கி அணு உலைகளை எதிர்த்துப் பறை சாற்றியவர் அர்ஜுன் ஒருவர் மட்டும் அல்லர் ! பாரதத்தின் பாதுகாப்பு அமைச்சருக்கு முன்னாள் விஞ்ஞான ஆலோசகராகப் [Science Adviser to the Defence Minister] பணி ஆற்றிய டி.எஸ். சுப்ரமணியன், வி.எஸ். அருணாசலம் ஆகியோர் இருவரும், ஏராளமான நிதியையும் காலத்தையும் விழுங்கும் மாபெரும் வேகப் பெருக்கி அணு உலைகளை நிறுவ முயல்வது இமாலயத் தவறாகும் என்று மொம்பை அணுசக்தித் துறையகத்துக்கு [Dept of Atomic Energy] இருவரும் ஆணித்தரமாக எழுதினார்கள்!

அந்த வீண் முயற்சிகளைக் கைவிட்டுப் பாரதத்தில் கிடைக்கும் அணுஎருவையும் [Indigenous Uranium], இறக்குமதி அணுஎருவையும் [Imported Enriched Uranium] பயன்படுத்தி அநேக அழுத்தக் கனநீர் அணு உலைகள் [Pressurised Heavy Water Reactors (PHWR)], அழுத்த எளிய நீர் அணு உலைகள் [Pressurised Light Water Reactors (PWR)] பலவற்றை நிறுவனம் செய்யும்படி வற்புறுத்தி யிருந்தார்கள்!

உலக வேகப் பெருக்கி அணு உலைகளுக்கு நேர்ந்த கதி!

உலக நாடுகள் கடந்த 50 ஆண்டுகளாக 20 பில்லியன் டாலரைச் [2000 நாணய மதிப்பு] செய்து, 100 மெகாவாட் [100 MWt] ஆற்றலுக்கு மேலான 11 வேகப் பெருக்கி அணு நிலையங்களை நிறுவி ஆராய்ந்து வந்துள்ளன! அவற்றில் ஏறக் குறைய எல்லா நாடுகளும் அணு உலையில் அபாயங்களும், பிரச்சனைகளும் மிகுந்து ஒவ்வொன்றாய் அவற்றை நிறுத்தி மூடி வருகின்றன!  1985 இல் ஜெர்மனி கட்டிய SNR-300 என்னும் 300 MWe வேகப் பெருக்கியைச் செம்மைப் படுத்த நிதி இல்லாமையால் 1991 இல் நிறுத்தப் பட்டு மூடப்பட்து! அடுத்துக் கட்டிய ஜெர்மன் வேகப் பெருக்கி KNK-II வெடித்து விடும் என்ற அச்சம் ஆரம்பித்திலே எழுந்ததால், அதுவும் இயங்காமலே மூடப் பட்டது! அணு உலை வெப்பத்தைக் கடத்தும் நீரைப் போல் இல்லாது, சோடியத் திரவ வேகப் பெருக்கி அணு உலைகளில் ‘பூரணத் தொடரியக்கம் ‘ [Accidental Criticality] திடீரென நேர்ந்து, எதிர்பாராது வெடிப்பு விபத்து விளைய வாய்ப்புக்கள் உள்ளன! எஞ்சிய பத்து அணு உலைகளில் மற்றும் ஆறு வேகப் பெருக்கிகள் நிறுத்தம் ஆகிவிட்டன!

ஜப்பானில் 1994 இல் பூரணத் தொடரியக்கம் துவங்கிய 300 MWe மஞ்சு [Monju] வேகப் பெருக்கி அணு உலையில், துவிதத் தணிப்புச் சோடிய திரவத்தில் [Secondary Loop Sodium Coolant] தீப்பற்றி, செப்பணிட முடியாது, அதுவும் 1995 டிசம்பரில் மூடப் பட்டது! ரஷ்யாவின் காஸக்ஸ்தானில் நிறுவப்பட்ட 350 MWe ஆற்றல் கொண்ட BN-350 வேகப் பெருக்கியும் நிறுத்தப் பட்டுச் சாதனங்கள் யாவும் நீக்கப் பட்டன! 1985 இல் கட்டப் பட்ட பிரான்ஸின் பிரசித்துப் பெற்ற, 1200 MWe ஆற்றல் மிகுந்த உலகிலே மிகப் பெரிய ஃபீனிக்ஸ் [Super Phenix] வேகப் பெருக்கி அணு உலையும் 1998 இல் மூடப் பட்டது! 1974 இல் கட்டிய பிரிட்டனின் PFR வேகப் பெருக்கியின் நீராவி ஜனனியில் பிரச்சனை நேர்ந்து, 1980 முடிவில் மூடப்பட்டது! மிச்சிகன் டெட்ராய்டில் 1963 இல் இயங்கத் துவங்கிய 300 MWt ஆற்றல் கொண்ட அமெரிக்கா வின் வாணிபத்துறை வேகப் பெருக்கி அணு உலை [Commercial Fast Reactor] ‘என்ரிகோ ஃபெர்மி ‘, பிரச்சனைகள் மிகுந்து, நிதி செலவாகி லாப மில்லாது 1972 இல் மூடப்பட்டது! இவ்விதம் உலகெங்கும் பேரளவு வேகப் பெருக்கி அணு உலைகள் ஏறக்குறைய எல்லாம் மூடப் பட்டபின், ஆராய்ச்சி நடத்த மட்டும் சிற்றளவு வெப்ப ஆற்றல் கொண்ட [20-60 MWt] வேகப் பெருக்கிகள் இயங்கி வருகின்றன!

பாரத வேகப் பெருக்கி அணு உலையிலிருந்து மின்சக்தி!

1997 ஜலை 11 ஆம் தேதி சென்னைக் கல்பாக்கத்தில் உள்ள முதல் சோதனை வேகப் பெருக்கி அணு உலை [Fast Breeder Test Reactor, FBTR] புளுடோனியம்239 எருவைப் பயன்படுத்தி மின்சக்தியைப் பரிமாறிப் பாரதம் டாக்டர் ஹோமி பாபாவின் இரண்டாம் கட்ட அணுசக்தி உற்பத்தித் திட்டத்தை நிலைநாட்டியது! 1985 ஆம் ஆண்டு முதல் சோதனை வேகப் பெருக்கி அணு உலைப் ‘பூரணத் தொடரியக்கம் ‘ [Criticality] அடைந்து ஆரம்ப மானது ஏற்கனவே உலகுக்கு அறிவிக்கப் பட்டது. உலகத்திலே மூன்றில் ஒரு பங்கு ஏராளமான தோரியம்232 பாரத நாட்டிலே கிடைப்பது ஒரு வரப் பிரசாதம். இயற்கை யுரேனியச் சேமிப்புத் தீர்ந்தவுடன் பாரதம் தோரியத்தை, யுரேனியம்233 பிளவு அணு எருவாக மாற்றி, மூன்றாம் கட்ட அணுசக்தி உற்பத்திக்குப் பாதை விரித்தது!

பாரதத்தின் அணுவியல் துறையின் பிதா எனப்படும் ஹோமி பாபா அணுமின் சக்தி ஆக்கத் திற்குத் தனது ‘மூவரங்கு முனைவுத் திட்டத்தை ‘ [Three-stage Approach Program] வகுத்து முதல் அரங்குக்கு அடித்தள மிட்டவர். அத்திட்டப்படி இந்தியாவில் முதற் கட்டத்தில் இயற்கை யுரேனியம், அழுத்த கனநீர் அணு உலைகள் [CANDU Pressurized Heavy Water Reactor (PHWR)] அமைக்கப்படும். இரண்டாம் கட்டத்தில் முதற்படி அணு உலைகளில் கிடைக்கும் கிளை விளைவான புளுடோனியம்239 பிளவு எருவையும், இயற்கை யுரேனியம்238 செழிப்பு உலோகத்தையும் உபயோகித்து, வேகப் பெருக்கி அணு உலைகள் அமைக்கப்படும். அவை ஈன்றும் புதிய புளுடோனியம்239 பிளவு எருவையும், தோரியம்232 செழிப்பு உலோகத் தையும்  வேகப் பெருக்கிகளில் வைத்து, புதிய எரு யுரேனியம்233 தயாரிக்கப் படும்! மூன்றாம் கட்டத்தில் யுரேனியம்233, தோரியம்232 இரண்டும் பயன்பட்டு அணு மின்சக்தியும், தொடர்ந்து யுரேனியம்233 அணு எருவும் உற்பத்தியாகும்!

சோதனை அணு உலை 40 MWt [Mega Watt thermal] வெப்ப சக்தித் திறம் கொண்டது. ‘ஊருணி ‘ போன்ற அணு உலையின் [Pool Type Reactor] வெப்ப சக்தியைக் கடத்த பிரதம தணிப்புத் திரவமும், துவித தணிப்புத் திரவமும் சோடியம் [Primary & Secondary Coolant, Sodium] பயன் படுகிறது. அதற்கு எருவாக புளுடோனியம்239 (15%-20%) + யுரேனிய238 (85%-80%) ஆக்ஸைடு உபயோகமாகி, செழிப்பு உலோகம் [Fertile Material] தோரியம்232, அணு உலையைச் சுற்றிலும் கவசமாக வைக்கப் பட்டு, பிளவு உலோகம் [Fissile Material] யுரேனியம்-233 ஆக மாற்றலாம். அது உற்பத்தி செய்த மின்சக்தி 13 MWe [Mega Watt electrical] 1997 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மின்சாரம் பரிமாறும் கம்பிகளில் [Grid Lines] அனுப்பப் பட்டது.

முதல் வேகப் பெருக்கி அணு உலை வெற்றி அடைந்ததும், அடுத்து அதை விட 30 மடங்கு பெரிய 500 MWe முன்னோடி வேகப் பெருக்கி அணு உலையைக் [Prototype Fast Breeder Reactor] கல்பாக்கத்தில் 2001 இல் அமைக்கப் பச்சைக் கொடி காட்டப் பட்டது! 2800 கோடி ரூபாய்ச் செலவில் உருவாகப் போகும் முதல் மாபெரும் முன்னாய்வு வேகப் பெருக்கி அணு உலைக்குப் பொறி நுணுக்க அறிஞர்கள் சிலர் பெரும் எதிர்ப்பைக் காட்டி யிருக்கிறார்கள்!

வெப்ப அணு உலைகள் எவை ? வேகப் பெருக்கி அணு உலைகள் எவை ?

இயற்கையாகக் கிடைக்கும் தாதுவில் 99.3% யுரேனியம்238, 0.7% யுரேனியம்235 ஆகிய இரண்டும் உள்ளன. அடுத்து யுரேனியத்தை விட இந்தியாவில் ஏராளமாக இயற்கையில் தோரியம்232 தாதுவாகக் கிடைக்கிறது. இம்மூன்றிலும் யுரேனியம்235 உலோகம் ஒன்றுதான் தானாகவோ, அன்றி நியூட்ரான் கணைகள் தாக்கியோ இரண்டாகப் பிளந்து வெப்ப சக்தியை வெளியேற்றுகிறது. பிளக்க முடியாத யுரேனியம்238, தோரியம்232 ஆகிய செழிப்பு உலோகங்களை [Fertile Materials], இயங்கும் அணு உலைகளின் மையத்தில் உள்ள எருக்கருவைச் [Fuel Core] சுற்றிலும் வேக நியூட்ரான் தாக்கும் கவச அரண்களாக வைத்து [Blankets], அவற்றைப் பிளவு உலோகங்களாக [Fissile Material] மாற்றலாம். அவ்விதம் புரியும் நியூட்ரான் கதிரூட்டில், அணுக்கருத் தேய்வுகளுக்குப் பின் யுரேனியம்238 பிளவு படும் புளுடோனியம்239 ஆகவும், தோரியம்232 பிளவு படும் யுரேனியம்233 ஆகவும் மாறுகின்றன. அதாவது யுரேனியம்235, புளுடோனியம்239, யுரேனியம்233 ஆகிய மூன்று பிளவு உலோகங் களே, அணு உலைகள் இயக்கத்துக்கு எருக்களாய்ப் பயன்படுத்தத் தேவைப் படுகின்றன. இந்த எருக்களைப் பிளக்க, சில அணு உலைகளில் நியூட்ரான்களின் வேகம் ‘மிதவாக்கியால் ‘ [Moderator: Water, Heavy Water or Graphite] குறைக்கப்பட வேண்டும். மிதவாக்கி யில்லாத சில அணு உலைகளில் வேக நியூட்ரான்கள் அணுஎருக்களில் பிளவுகள் புரியும்.

எவ்வித முறைகளில் யுரேனியம்235, புளுடோனியம்239, யுரேனியம்233 ஆகியவற்றைத் தயாரிக்கலாம் என்பதுதான் உலக நாடுகளின் தலையாய பிரச்சனை! இயற்கைத் தாதுவில் உள்ள 0.7% யுரேனியம்235 எருவைப் பிரித்தெடுக்க, அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சைனா போன்ற வல்லரசுகள் ‘வாயுப் பிரிப்பு முறையைக் ‘ [Gaseous Diffusion Process] கையாண்டு,  யுரேனியம்235 எருவின் திரட்சியைச் [U235 Concentration] சேமிக்கின்றன. அமெரிக்க, ஐரோப்பிய டிசைன்களான ‘கொதிநீர் அணு உலைகள் ‘ [Boiling Water Reactors (BWR)], ‘அழுத்தநீர் அணு உலைகள் ‘ [Pressurised Water Reactors (PWR)] ஆகியவற்றில் [3%-4%] திரட்சி யுள்ள யுரேனியம்235 [3%-4% Enriched U235] எரிபொருள் உபயோக மாகிறது.

கனடாவின் டிசைன் ‘காண்டு ‘ அணுமின் சக்தி [Canadian Deuterium Uranium (CANDU)] நிலையங்களில் இயற்கை யுரேனியமும் [99.3% U238+0.7% U235], வெப்பத்தைத் தணிக்க, நியூட்ரான்களை மிதமாக்கக் கனநீரும் [Heavy Water (Deuterium Oxide)] பயன் படுகின்றன. காண்டு அழுத்தக் கனநீர் அணு உலைகள் [Pressurised Heavy Water Reactors (PHWR)] கனடா, இந்தியா, பாகிஸ்தான், அர்ஜென்டைனா, கொரியா, ருமேனியா, சைனா ஆகிய நாடுகளில் இயங்கி வருகின்றன. மிதமாக்கப் பட்ட வெப்ப நியூட்ரான்கள் பயன்படும் அணு உலைகள் ‘வெப்ப அணு உலைகள் ‘ [Thermal Reactors] என்று அழைக்கப் படுகின்றன.

BWR, PWR, PHWR ஆகியவை மூன்றும் வெப்ப அணு உலை இனத்தைச் சேர்ந்தவை. வெப்ப அணு உலைகளில், நியூட்ரான் மிதவாக்கியும், வெப்பத்தைக் கடத்தும் திரவமும் [Water or Heavy Water] ஒன்றாகவோ அல்லது தனித்தனி யாகவோ இருக்கலாம். பிரிட்டனில் உள்ள சில அணு உலைகளில், மிதவாக்கித் திரள்கரியாகவும் [Graphite], வெப்பக் கடத்தி கரியமில வாயுவாகவும் [Carbon dioxide Gas] பயன்படுகிறது.

செழிப்பு உலோகங்களான யுரேனியம்238, தோரியம்232 ஆகியவற்றை அணு உலைகளில் வேக நியூட்ரான்கள் தாக்கினால்தான் பிளவு உலோகங்களான புளுடோனியம்239, யுரேனியம்-233 ஆகியவை உண்டாகும். ஆதலால் அவற்றை மிகையாக உற்பத்தி செய்ய, மிதவாக்கி யில்லாத ஓர் தனிப்பட்ட அணு உலை தேவைப்படுகிறது. மிதவாக்கி யில்லாத அணு உலைகளே வேக அணு உலை [Fast Reactor] என்று அழைக்கப் படுகின்றன. பாரதத்தின் [FBTR, PFR], பிரான்ஸின் [Rapsodie, Phenix, Super Phenix] ஆகியவை யாவும் வேக அணு உலை ரகத்தைச் சேர்ந்தவை!

வேக அணு உலைகளை முதலில் இயக்க முக்கிய பிளவு எரு திரட்சியான யுரேனியம்235 [Greater than 30% Enriched U235] அல்லது புளுடோனியம்239 தேவைப் படுகிறது. மைய எரிக்கோல்களைச் சுற்றிலும் யுரேனியம்238, அல்லது தோரியம்232 உலோகத்தைக் கவச அரணாக வைத்தால், அணு உலையில் உண்டாகி வெளியேறும் வேக நியூட்ரான்கள் அவற்றைத் தாக்கும். தேய்வுத் தொடர்ச்சியில் யுரேனியம்238, புளுடோனியம்239 ஆகவும் தோரியம்232, யுரேனியம்233 ஆகவும் மாறுகின்றன. அதாவது வேக அணு உலை இயங்கும் போது மூல அணு எரு குறைந்து, புதிய அணு எரு தொடர்ந்து கவச அரணில் கூடுகிறது. அதாவது முதலில் இட்ட எருவைவிட, விளைந்த எரு மிஞ்சியாதாகக் காணப் படுகிறது! அவ்விதம் எரிபொருள் பெருகும் அமைப்பே ‘வேக எருப்பெருக்கி அணு உலை ‘ [Fast Breeder Reactor] என்று குறிப்பிடப் படுகிறது. மையத்தில் உள்ள அணுஎரு கரைந்து சிறுக்கும் போது, அரணில் அணுஎரு கூடிப் பெருகுகிறது! சராசரி ‘எருப் பெருக்கும் விகிதம் ‘ [Fuel Breeding Ratio] 1.2! அதாவது ஒரு டன் எருவில் ஆரம்பமாகும் அணு உலை, குறிப்பிட்ட காலத்தில் 20% மிகையாக 1.2 டன் புதிய அணு எருவை ஈன்றுகிறது! அவ்வழியில் புதிய எருவின் அளவு ‘இரட்டையாகும் காலம் ‘ [Doubling Time] 10-15 ஆண்டுகள் என்று கணக்கிடப் பட்டுள்ளது!

அணு உலை இயக்கத்தில் வேக நியூட்ரான் தாக்கும் போது, எரிக்கோல்கள் சிதைவதாலும், வெப்பத்தில் உப்பித் திரிபு அடைவதாலும், கதிர்வீசும் பிளவுக் கழிவுகள் தொடர்ந்து சேருவதாலும், அணு உலை நிறுத்தப் பட்டு எரிக்கோல்கள் மாற்றப் பட வேண்டும். அதே சமயம் கவச அரணில் தேங்கிய யுரேனியம்238 அல்லது தோரியம்232 கூட்டுகள், புதிதாய் உண்டான புளுடோனியம்239, யுரேனியம்233 ஆகிய எருக்களைத் தனியாகப் பிரிக்கவும், கதிரியக்கக் கழிவுகளைச் சுத்திகரிக்கவும் அவை அணு உலையிலிருந்து நீக்கப் பட்டு எருச் சுத்திகரிப்புத் தொழிற்கூடத்திற்கு [Spent Fuel Reprocessing Plant] அனுப்பப்பட வேண்டும்.

வேகப் பெருக்கி அணு உலைகளின் சிறப்பு மேம்பாடுகள்

இந்தியாவில் ஏராளமாகப் புதைந்து கிடக்கும் 360,000 டன் தோரியம்232 செழிப்பு உலோகத்தை வேகப் பெருக்கி அணு உலைகள் மூலம் யுரேனியம்233 ஆக மாற்றி, அடுத்து 400 ஆண்டுகளுக்கு 400,000 MWe மின்சக்தியை உற்பத்தி செய்யலாம் என்று இந்தியப் பொறியியல் துறைஞர்கள் கணக்கில் அனுமானிக்கிறார்கள்!

மிகத் துணிவான அம்முயற்சி இமய மலையில் பல முறை ஏறி, மாந்தர் அங்கேயே தங்கி உயிர் வாழ்வதை ஒத்தது! உலகில் வேறு எந்த நாடும் பாரத நாட்டைப் போல் தோரியத்தைப் பயன்படுத்தி வேகப் பெருக்கி அணு உலையை அமைக்க முயன்ற தில்லை!

இப்போது இயங்கி வரும் 13 வெப்ப அணு உலைகள் மூலம் இயற்கை யுரேனியத்தில் 1%-2% அணுசக்தியைத்தான் பிழிந்தெடுக்க முடிகிறது! அந்த முதற் கட்ட அணுசக்தி உற்பத்தியில் 12,000 MWe ஆற்றலை 30 ஆண்டுகளுக்கு உண்டாக்கலாம்! இரண்டாம் கட்டத்தில் புளுடோனி யத்தைப் பிரதம எருவாகவும், இயற்கை யுரேனியத்தைக் கவச அரணாகவும் பயன்படுத்தி வேகப் பெருக்கிகளை இயக்கினால், யுரேனியம்238 புளுடோனியம்239 ஆக மாறி எருவின் அளவு மிகையாகிறது. அம்முறையில் ஒவ்வொரு தரமும் புளுடோனியம்239 சேர்வதால் வேகப் பெருக்கிகளால் யுரேனியத்திலிருந்து 75% அணுசக்தியைப் கறக்க முடியும் என்று பொறியியல் துறைஞர் கணிக்கிறார்கள்! அவ்வழியில் இன்னும் 250,000 MWe ஆற்றல் சக்தி சில நூற்றாண்டுகளுக்கு உண்டாக்கலாம் என்று கணித்துள்ளார்கள்!

அவ்விதம் சேகரித்த புளுடோனியத்தை எருவாகவும் அடுத்து தோரியம்232 செழிப்பு உலோகத்தைக் கவச அரணாக வைத்து, வேகப் பெருக்கிகளில் புதிய எரு யுரேனியம்233 உண்டாக்கலாம்! அம்முறையில் சேகரித்த யுரேனியம்233 பிரதம எருவாகப் பயன்படுத்தி, தோரியத்தைக் கவச அரணாக வைத்துத் தொடர்ந்து அணுசக்தியையும், புதிய எருவையும் ஒரே சமயத்தில் உண்டாக்கலாம்! அவ்விதம் ஆக்கும் மூன்றாம் கட்ட அணுசக்திதான் 400,000 MWe 400 ஆண்டுகளுக்கு தொடர்ந்து உற்பத்தி செய்யலாம் என்று அனுமானிக்கப் படுகிறது! தாளில் கணக்கிட்டுக் காட்டுவது ஒன்று! மெய்யாக அந்த மூன்றாம் கட்ட நிலைக்கு முழு முயற்சியில் மூழ்கி வெற்றி பெறுவது வேறோன்று!

அதாவது யுரேனியம் [U238+U235] + நியூட்ரான் -> அணுசக்தி + புளுடோனியம்239 + கழிவுகள் -> புளுடோனியம்239 + தோரியம்232 + நியூட்ரான் ->அணுசக்தி + யுரேனியம்233 + கழிவுகள் -> யுரேனியம்233 + தோரியம்232 + நியூட்ரான் ->அணுசக்தி + யுரேனியம்233 + கழிவுகள் என்று நடப்பில் கூடுமான சங்கிலித் தொடர் சீராகத் தடம் புரளாமல் தண்ட வாளத்தில் ஓடுமா என்பதுதான் உறுதியாகச் சொல்ல முடியாது!

வெப்ப அணு உலை மின்சக்தி ஆக்கத்தில் 30% வெப்பத்திற வீதம் [Thermal Efficiency] கிடைக்கும் போது, வேகப் பெருக்கி மின்சக்தி உற்பத்தியில், 40% வெப்பத்திற வீதம் அடையலாம் என்று தெரிகிறது! பாரத அணுத்துறை விஞ்ஞானிகளுக்கும், எஞ்சினியர் களுக்கும் 1956 முதல் 2002 ஆண்டு வரைக் கடந்த 46 ஆண்டுகள் அணுவியல் நுணுக்கத்தில் 200 Rys [200 Reactor Years] மேற்பட்ட அனுபவம் கிடைத் துள்ளது. அந்த மாபெரும் அனுபவத் திறமையால், வேகப் பெருக்கியில் விளையும் சிரமமான, சிக்கலானப் பிரச்சனைகளைத் தீர்க்க வழிகள் உள்ளன!

வேகப் பெருக்கி அணு உலைத் திட்டத்தில் எழும் குறைபாடுகள்

1985 இல் முதன் முதல் பூரணத் தொடரியக்கம் புரிந்த வேகப் பெருக்கி ஆய்வு அணு உலை FBTR ஏதோ சில பிரச்சனைகளால் 40 MWt முழு ஆற்றலிலிருந்து குறைக்கப் பட்டு, சிறிய எருக்கருவாக [Smaller Fuel Core] மாற்றப்பட்டு 10 MWt [25% Capacity] ஆற்றலில் இப்போது இயங்கி வருகிறது! ஆய்வு அணு உலையில் ஏற்பட்டுள்ள பிரச்சனை, டிசைன் போதாமையா, அல்லது அணு உலைக் பாதுக்காப்பில் பிசகா, எதனால் குறைந்த ஆற்றலில் இயங்கி வருகிறது என்னும் காரணம் அறிவிக்கப் படவில்லை!

அடுத்து 40 MWt ஆற்றல் சோதனை அணு உலை அனுபவம் முழுவதுமாக அடையும் முன்பே, அதை விட 30 மடங்கு பெரிய 1200 MWt முன்னாய்வு வேகப் பெருக்கி அணு உலைக்குப் [Prototype Fast Breeder Reactor] பாய்வது, மாபெரும் பகடை ஆடும் துணிச்சலாகத் தெரிகிறது! அவ்விதம் துணிந்து 500 MWt மேல் ஆற்றல் கொண்ட வேகப் பெருக்கிகளைக் கட்டி பகடை ஆடிய பல உலக நாடுகள், அணு உலைகளில் பாதுகாப்புச் சிக்கல்கள் மிகுந்து தொடர்ந்து இயக்க முடியாது, செம்மைப் படுத்த நிதியின்றி, அவற்றை நிரந்தரமாக நிறுத்தி மூடிவிட்டன!

சோடியத் திரவம் வெப்பம் கடத்தும் வேகப் பெருக்கி அணு உலைகளில் எதிர்பாராது பூரணத் தொடரியக்கம் துவங்கி [Accidental Criticality] வெடிப்பு விபத்துகள் நேர்ந்திட வாய்ப்புக்கள் இருந்ததால், பல அணு உலைகள் மூடப்பட்டதாய் அறியப் படுகிறது! ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கியில் நீராவி ஜனனிக்குள் புகும் துவித சோடியத் திரவத்தில் [Secondary Sodium Loop] தீப்பற்றி, அணு உலை மூடுவதற்கு ஒரு காரண மானது! வேகப் பெருக்கியில் வேக நியூட்ரான் தாக்குதலால் எரு வீக்கம் [Fuel Swelling] அடைந்து, அதனால் சோடிய ஓட்டமும் குறைந்து, எரிக்கோல் ஆக்கும் வெப்பம் கடத்தப் படாமல் சூடேரிச் சிதைந்து, கதிரியக்கக் கழிவுகள் வெளியேறி, அணு உலை எங்கும் தீவிரக் கதிர்த் தீண்டலாகிப் [Severe Radioactive Contamination] பெரும் சிக்கலைத் தூண்ட வாய்ப்புள்ளது!

இயங்கும் வெப்ப அணு உலைகள் 20, கட்டப்படும் அணு உலைகள் அளிக்கும் >4800 MWe ஆற்றலில் ஈன்றும் புளுட்டோனியம்-239 வேகப் பெருக்கி அணு உலைகளின் பசியைத் தீர்க்குமா என்பது சரிவரத் தெரியவில்லை! 1 MWt வெப்ப அணு உலை [1 g Plutonium for 1 MWD(th) operation] ஒரு நாள் இயங்கினால், சுமார் 1 கிராம் புளுடோனியம் கிடைக்கும்!

சோதனை வேகப் பெருக்கியில் அனுபவம் பெற்ற கார்பைடு எருவில் [70% Pu239 Carbide + 30% Nat.U238 Carbide] பிரச்சனைகள் இருந்ததால், அடுத்து ஆக்ஸைடு எரு [30% Pu239 Oxide + 70% Nat.U238 Oxide] புதிய முன்னாய்வு வேகப் பெருக்கியில் முதன் முதலாகப் பயன்படுத்தி இனிமேல்தான் அனுபவம் பெற வேண்டும். அப்புதிய முற்பாடு ஏராளமான நிதியையும், காலத்தையும் விழுங்கிக் கொள்ளப் போகிறது! கார்பைடு எருவை எரிக்கோலாக அமைப்பது கடினம்! அது தானாகத் தீப்பற்றும் [Pyrophoric] தன்மை உடையது! நீரரிப்பும் ஆக்ஸிஜனால் பாதிப்பும் [Hydrolysis & Oxidation] அடையும் குண முடையது! ஆனால் எருப்பெருக்கும் விகிதம் [Breeding Ratio] ஆக்ஸைடு எருவுக்கு மிகவும் குறைவானதால் [1.1], எரு இரட்டிக்கும் [Fuel Doubling Time] காலம் நெடுங் காலமாய் 15-20 ஆண்டுகள் கூடப் போகலாம்!

கதிரியக்கக் கழிவுகளை ரசாயன முறையில் நீக்கி புளுடோனியம்239 அல்லது யுரேனியம் -233 எரு உள்ள விளைவுகளைத் தனித்தெடுக்கும் மூன்று எருச் சுத்திகரிப்புத் தொழிற் சாலைகள் [Capacity: 30 Ton/year at Trombay; 100 Ton/year at Tarapur; 120 Ton/yearat Kalpakkam] தொடர்ந்து அணு எருக்கோல்களைத் தயாரிக்க அனுப்ப முடியுமா என்பதும் சரிவரத் தீர்மானிக்க முடியாது!

சுத்திகரிப்புத் தொழிற்சாலைகளில் டன் கணக்கில் ஏராளமாகச் சேரும் தீவிரக் கதிர்வீச்சுக் கழிவுகளைக் கவசக்கலன்களில் [Shielded Containers] அடைத்து நூற்றுக் கணக்கான மைல் தூரங்களுக்குப் போக்குவரத்து வாகனங்களில் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதும், சுத்திகரிக்கக் கொண்டு வருவதும் மிக மிகச் சிரமமான வேலைகள்! கதிரியக்க சுத்திகரிப்புத் தொழிற்சாலைகளில் ஏராளமான கதிர்வீசும் கழிவுகளைக் கையாள்வதும், மிக மிகக் கடினமான வேலைகள்! அடிக்கடி நேரும் மானிடத் தவறுகளால், தீவிரக் கதிர்வீச்சு, கதிர்த் தீண்டல் [Radiation & Radioactive Contamination] பிரச்சனைகள் மாந்தரையோ அல்லது சூழ்நிலைக் காற்றையோ அடிக்கடிப் பாதிக்க வாய்ப்புகள் உண்டாகலாம்!

உலகில் இதுவரை இயங்கிய வேகப் பெருக்கிகளில் எதிர்பாராத வெடிப்பு விபத்து நேர்ந்திடும் அச்சம் இருந்ததால், அவை யாவும் இடைநிலை அல்லது குறைந்த ஆற்றல் தகுதியில்தான் [Medium or Low Capacity Factor] மின்சக்தி பரிமாறி வந்துள்ளன! அநேக வேகப் பெருக்கிகள் முழு ஆற்றலில் மின்சக்தியைத் தொடர்ந்து அளித்ததாக இதுவரை அறியப் படவில்லை!

வேகப் பெருக்கி அணு உலைகளில் டிசைன், இயக்கம், பராமரிப்புச் சிக்கல்கள்

1.   வேகப் பெருக்கி அணு உலைகளில் நியூட்ரான் மிதவாக்கி (Moderator) இல்லை.  அந்த அணுமின்  உலைகளில் வேக நியூட்ரான்களால் அணுப்பிளவு நேர்வதால் (Fast Fission) அணு உலை ஆற்றல்  கட்டுப்பாடு, நிறுத்தம், வெப்பத் தணிப்பு முறைகளைக் கையாள் வது வெகு சிரமம் தருபவை.   மிதவாக்கி உள்ள சாதாரண  மித நியூட்ரான் இயக்கும் (Thermal Fission) அணு உலைகள் போல் வேக நியூட்ரான் அணுப்பிளவு இயக்கம் எளிதான தில்லை.   தணிப்புத் திரவம் சோடிய  ஓட்டத்தில் இடைவெளியோ, தடைப் பட்டாலோ  (Loss of Coolant or Interruption of Sodium Flow) மீறும் தொடரியக்கம் (Prompt Critical or Runaway Nuclear Reactions)  ஏற்பட்டு வெப்ப மிகுதியால் அணு உலை வெடிப்பு நேர்ந்திட வாய்ப்புக்கள் எழலாம்.

2.  தணிப்புத் திரவமான சோடியம் மிகச் சிறந்த தணிப்பு இரசாயனம்.  ஆனால் அது கசிந்தால், நீர், வாயு அல்லது ஆக்ஸிஜன் சூழ்நிலையில் தீவிர வெடிப்பை உண்டாக்குகிறது.

3.   புளுடோனியம் -239 எருக்கோல்கள் சில வேகப் பெருக்கி அணு உலைகளில் பயன்படுத்தப் படுகின்றன.   யுரேனிய -235 / -233 எருக் கோல்களை விட புளுடோனியம் தீவிர கதிரியக்கத் தீங்கு விளைவிப்பது.

4.  வேகப் பெருக்கி அணு உலை இயக்கத்தால் யுரேனியம் / புளுடோனியப் பிளவுக் கழிவுகள் மிகுதியாகச் சேமிப்பாகின்றன.    அதனால் இயக்குநருக்குக் கதிரியக்கத் தீங்குச் சூழ்நிலை / வாய்ப்புக்கள்  மிக மிக அதிகம்.

வேகப் பெருக்கி அணு மின்சக்தியின் விலை மதிப்பு

இந்திய அணுசக்தித் துறையகம் ஒதுக்கியுள்ள 3000 கோடி ரூபாயிக்கும் மேலாக 500 மெகா வாட் வேகப் பெருக்கியை அமைக்க நிதி செலவாகும் என்று கருதப் படுகிறது! உற்பத்தி யாகும் மின்சக்தி யூனிட் ரூ 5 முதல் ரூ 10 வரை ஏறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது! அமெரிக்கா, ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணு உலைகள் கட்டி முடிந்தபின் அவற்றின் செலவு செங்குத் தாய் ஏறியதைப் பார்த்தால், கல்பாக்கம் வேகப் பெருக்கியின் இறுதி நிதி மதிப்பும் ரூ 22,000 கோடி முதல் ரூ 46,000 கோடி வரை நீண்டு விடலாம் என்று அஞ்சப் படுகிறது! அவ்விதம் கணக்கிட்டால், மின்சக்தி நிலையத்தின் இயக்க நடப்பின்படி [Plant Performance] மின்சார யூனிட் ரூ 9 முதல் ரூ 50 வரை கூடப் போய்விடலாம்!

முதலில் சோதனை வேகப் பெருக்கி அணு உலை டிசைன் ஆனபோது, ‘எருத் தீரும் வீதம் ‘ [Fuel Burn-up] 25,000 MWDay/Ton என்று அனுமானிக்கப் பட்டு, மின்சக்தி விலை ரூ 3.20/யூனிட் என்று கணக்கிடப் பட்டது! ஆனால் மெய்யாகச் சோதனை வேகப் பெருக்கி அணு உலையில் [FBTR] புளுடோனியம் கார்பைடு எருவைப் பிளந்து 88,000 மெகா.வாட்.நாள்/டன் [MWDay/Ton] ஆற்றல் அளித்ததைக் குறியாகக் கொண்டு மின்சக்தியின் விலை இன்னும் மலிவாகலாம் என்று கருத வழி யிருக்கிறது!

மூன்றாவது முடிவுக் கட்டத்தில் யுரேனியம்233 + தோரியம்232 சுற்று முறையில் உற்பத்தி யாகும் மின்சக்தியில் எரு இரட்டிப்புக் காலம் [Fuel Doubling Time] நீண்டும், கழிவுச் சுத்திகரிப்பு முறையில் [Spent Fuel Reprocessing] சிரமும் மிகுந்து ஆதாய மில்லாமல் இருக்கிறது. அதே சமயத்தில் இரண்டாம் கட்டத்தில் புளுடோனியம்239 + யுரேனியம்238 சுற்றியக்கத்தில் உலோகப் பயன்பட்டால், எரு இரட்டிப்புக் காலம் குறுகியும், கழிவுச் சுத்திகரிப்பு முறை எளிதாகவும் லாபம் ஈன்றுகிறது! அதுவும் Pu239+U238 ஆக்ஸைடு எரு உபயோக மானால், எருப் பெருக்கம் [Breeding Ratio] 1.1 விகிதத்தில் புதிய எரு சிறிது சிறிதாய்ச் சேர்கிறது! ஆகவே எரு இரட்டிப்புக் காலம் 15 -20 ஆண்டுகள் கூட நீண்டு போகலாம்!

மேலும் இப்போது இயங்கி வரும் 13 இந்திய அணு உலைகளில் உள்ள ஆற்றல் தகுதி விகிதம் [Plant Load Factor (PLF)] 60%-70%, அணு உலைகள் வயதாகி முதுமை அடையும் காலத்தில் இன்னும் சராசரி குன்றிப் புளுடோனிய மூல உற்பத்தி குறைந்து போகும்! முடிவாகக் கூறப் போனால் வேகப் பெருக்கிகளின் மின்சாரத் திட்டம் மெதுவாக முன்னேறும் ஒரு முறைபாடு! மலிவான மின்சக்தியை நாம் எதிர்பார்க்க முடியாத ஓர் வினைப்பாடு!

வாணிபத்துறை உற்பத்திக்கு வேகப் பெருக்கி தகுதி பெறுமா ?

1996 அக்டோபரில் பாபா அணு ஆய்வு மையத்தில் 30 கிலோவாட் ஆற்றல் கொண்ட ‘காமினி ஆராய்ச்சி அணு உலை ‘ [Kamini Research Reactor (30 Kwt)] முதலில் தோரியம்232 ஈன்ற யுரேனியம்233 எருவை பயன்படுத்திச் சிறிய அளவில் வெற்றி அடைந்தது! அடுத்து 40 MWt சோதனை வேகப் பெருக்கி அணு உலை [FBTR] 1985 இல் பூரணத் தொடரியக்கம் துவங்கி, மின்சக்தியைப் பரிமாற [1997] பனிரெண்டு ஆண்டுகள் ஆயின! ஆனால் அந்த அணு உலை ஏதோ சில பாதுகாப்புச் சிக்கலால், எருக்கரு சிறிதாக்கப் பட்டு [Smaller Fuel Core] 10 MWt வெப்ப சக்தியில் 25% ஆற்றல் தகுதியில்தான் இயங்கி வருகிறது!

40 MWt சோதனைக் கட்ட அணு உலை முடங்கிய நிலையில் இருக்கும் போது, முப்பது மடங்கு பெரிய 1250 MWt முன்னோடி வேகப் பெருக்கி அணு உலைக்கு [PFBR] ஒரே மூச்சில் தாவியது முறையான முடிவா என்பதுதான் தெரியவில்லை! 40 MWt ஆற்றல் உள்ள ராப்ஸோடி [Rapsodie] சோதனை வேகப் பெருக்கியில் 1967 இல் துவங்கி, 625 MWt [250 MWe] ஆற்றல் கொண்ட ஃபீனிக்ஸ் [Phenix] முன்னோடி வேகப் பெருக்கியில் மகத்தான வெற்றி கண்ட பிரான்ஸ், தனது வாணிபத்துறை 2900 MWt பூத ஃபீனிக்ஸ் [Super Phenix] வேகப் பெருக்கியை அமைத்து 1984 இல் அதை இயக்க ஆரம்பித்தது!

ஆனால் பூத ஃபீனிக்ஸ் அடுத்து அடுத்துப் பெரும் விபத்துக் குள்ளாகி, எதிர்பார்ப்புக்கும் கீழாக இயங்கி [1985 முதல் 1994 வரை] ஒன்பது ஆண்டுகளில் முழு ஆற்றலில் [1200 MWe (2900 MWt)] ஓடிய நாட்கள் 174 என்று அறியப் படுகிறது! 344 பில்லியன் பிராங்ஸ் (56.5 பில்லியன் டாலர் US) [1994 நாணய மதிப்பு] செலவில் கட்டப் பட்ட பூத ஃபீனிக்ஸ் [1985-1998] 13 ஆண்டுகளாக சராசரி இயக்கத் தகுதி விகிதம்: 6.3% [Average Availability Factor]! 2000 டிசம்பர் 31 வரை 7 பில்லியன் பிராங்ஸ் (1.15 பில்லியன் டாலர் US) செம்மைப் படுத்தவும், செப்பணி டவும் செலவாகி, பொது மக்களின் பலத்த எதிர்ப்புக்கு வலுவற்று 1998 பிப்ரவரி 3 ஆம் தேதி நிரந்தரமாக நிறுத்தப் பட்டு மூடப் பட்டது! அதே ஆண்டு முன்பு மூடப்பட்ட 250 MWe ஆற்றலில் சிறப்பாக இயங்கிய சிறிய ஃபீனிக்ஸ் மீண்டும் துவக்கப் பட்டது!

பிரான்ஸின் வேகப் பெருக்கி அணு உலைகளின் அனுபவம் பாரத நாட்டுக் கூறும் அறிவுரை கள்  என்ன ? 250 MWe ஆற்றலுக்கும் மேற்பட்ட வேகப் பெருக்கிகளால் தொடர்ந்து மின்சக்தி பரமாறுவதில் அடிக்கடி பிரச்சனைகள் நேர்வதாலும், அணு உலைக் கட்டுப்பாடில் அபாயங்கள் நேர வாய்ப்புகள் உள்ளதாலும், முன்னோடி ஆய்வுக்குச் சிறிய அணு உலைகளே வாணிபத் துறை வளர்ச்சிக்குத் தகுதி பெற்றவை என்று தெளிவாகக் கூறுகிறது!

பாரத அணுசக்தித் துறையகம் 2020 ஆண்டுக்குள் இன்னும் நான்கு 500 MWe ஆற்றல் வேகப் பெருக்கிகளையும், அப்புறம் 1000 MWe பூத வேகப் பெருக்கி ஒன்றை நிறுவவும் முற்படுவது, முறையான நிதிமுறைத் திட்டங்களா என்பது இன்றைய உலக அனுபவங் களைக் கொண்டு உறுதியாகக் கூற முடியாது !  மேலும் தற்போது ஜப்பானில் புகுஷிமாவில் ஏற்பட்ட நான்கு அணுமின் உலைகளில் ஏற்பட்ட வெடி விபத்துக்களும், கதிரியக்க வெளியேற்றங்களும் உலக மாந்தருக்குக் பேரதிர்ச்சியும் வெறுப்பும் அளித்துள்ள போது இந்தியா எண்ணற்ற அணுமின் உலைகளைக் கட்டுவது சிந்தனை யற்ற துணிச்சல் திட்ட மாகத் தெரிகிறது.   இதுவரை அனுபவம் பெறாத எண்ணற்ற அந்நிய அணுமின் உலைகளில் பல்லாண்டுகள் பணி செய்ய தற்போது பயிற்சி பெற்ற விஞ்ஞானப் பொறியியல் நிபுணரும் இந்தியாவில் கிடையாது.

****************

தகவல்

1. Nuclear News [June 1995]

2. Nuclear Issues by T. S. Subramanian [Former Scientific Advisor to Indian Defence Minister]

3. India ‘s Nuclear Breeders, Technology & Viability by: Rahul Tongia & V.S. Arunachalam, Dept of Engg & Public Policy, Carnegie-Mellon University, Pittsburgh, PA [V.S. Arunachalam Former Scientific Advisor to Indian Defence Minister ] [Current Science, September,25 1998]

4. Nuclear Power Policy by: Dr. R. Chidambaram [Former Chairman Atomic Energy Commission]

5. Nuclear Power, India Set to Make it Big by: Radhakrishna Rao [June 2001]

6. Dept of Atomic Energy Article: Fast Breeder Reactors

7. Scrap Plans for Fast Reactors by: Arjun Makhijani, President, Institute of Energy & Environmental Research, Takoma Park, Maryland, U.S.A. [Hindu April 25, 2001]

8. Prototype Fast Breeder Reactor, International Journal of Nuclear Power by: S.B. Bhoje, Director IGCAR, Kalpakkam [2002]

9. India’s Fast Breeder Nuclear Reactors & Australian Uranium By : Marko Beljac (August 17, 2007)

10 Nuke Free South Asia – The Safety Inadequacies of India’s Fast Breeder Reactor By : Ashwin Kumar & M. V. Ramana (July 21, 2009)

11 Fast Breeder Reactor are the least Safe By : S.A. Iyer (March 27, 2011)

12.  Wikipedia Fast Breeder Reactors (April 4, 2011)

**************************

S. Jayabarathan (jayabarat@tnt21.com) April 9, 2011

தமிழில் முதல் அணுசக்தி நூல்

 

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

அன்புள்ள நண்பர்களே,

“அணுசக்தி” என்னும் எனது இரண்டாம் நூலைத் தமிழினி பதிப்பகம் சமீபத்தில் வெளி யிட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் கூறிக் கொள்கிறேன். கடந்த ஆறு ஆண்டுகளாக [2000-2006] திண்ணை வலை இதழில் வண்ணப் படங்களுடன் வந்த 41 கட்டுரைகள் அதில் தொகுக்கப் பட்டுள்ளன. 1964 இல் வெளிவந்த “ஆக்க வினைகளுக்கு அணுசக்தி” என்னும் எனது முதல் நூல் சென்னை பல்கலைக் கழகத்தின் மாநில முதற்பரிசு பெற்றது.

“யுத்தம் என்பது அழிவியல் விஞ்ஞானம்”, என்றோர் அறிஞர் கூறிச் சென்றுள்ளார். இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த 1940 ஆண்டுகளில் ஐரோப்பிய, அமெரிக்க விஞ்ஞானி களால் படைக்கப் பட்டப் பேரழிவு அசுர ஆயுதமே அணுப்பிளவு அணுகுண்டும் [Fission Bomb], அதற்குப் பின்னால் ஆக்கப்பட்ட அணுப்பிணைவு ஹைடிரஜன் குண்டும் [Fusion Bomb]. பேரழிவுப் போராயுதங்கள் விரிவாகி அவற்றின் பெருக்கமே தற்போது போருக்குக் காரணமாகி உலக நாடுகளைப் பயமுறுத்தி அமைதியைக் கொந்தளிக்க வைக்கிறது! ஆனால் திசை திருப்பி அணுசக்தியைக் கட்டுப்படுத்தி மனிதருக்கு ஆக்கசக்தி யாகவும் மாற்ற முடியும். உலகெங்கும் தற்போது நூற்றுக் கணக்கான அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி மின்சாரம் பரிமாறி வருகின்றன. பெரும்பான்மையான அணுசக்தி நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி வந்தாலும், தவிர்க்க முடியாத பயங்கர அணு உலை விபத்துகள் அமெரிக்காவின் திரிமைல் தீவு நிலையத்திலும், பழைய சோவித் ரஷ்யாவின் செர்நோபில் நிலையத் திலும், ஜப்பானில் புகுஷிமா அணுமின் உலைகளிலும் நேர்ந்து ஆயிரக் கணக்கான மக்கள் தீராத இன்னல்களில் இன்னும் வருந்தி வருகிறார்கள்.

அணுசக்தியின் மேற்கூறிய ஆக்க வினைகளையும், அணு ஆயுதங்களின்  தீரா அழிவுத் தன்மையும், அணுமின் உலைகளில் நேர்ந்த விபத்துக்கள் பற்றியும் இந்த நூல் தயக்கமின்றி, தணிப்பின்றி, தடுப்பின்றி விளக்கமாய் எடுத்துக் காட்டுகிறது. சென்ற நூற்றாண்டில் ஐம்பது ஆண்டுகளாக அணுசக்தியை விருத்தி செய்த விஞ்ஞானிகளைப் பற்றிய விபரங்கள் உள்ளன. எக்ஸ்-ரே கண்டுபிடித்த ராஞ்சன் முதல், கதிரியக்கம் கண்டுபிடித்த மேரி கியூரி, ஐரீன் கியூரி, லிஸ் மைட்னர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், நீல்ஸ் போஹ்ர், எட்வெர்டு டெல்லர் மற்றும் அணுப்பிளவில் [Nuclear Fission] அணுக்கருத் தொடரியக்கம் உண்டாக்கிய என்ரிகோ ஃபெர்மி வரை அனைவரது வரலாறுகளும் அந்நூலில் இடம் பெற்றுள்ளன. ஆய்வுச் சோதனைகளில் முன்னேறிக் கொண்டிருக்கும் கதிரியக்க மில்லாத அணுப்பிணைவு [Nuclear Fusion] ஆராய்ச்சி பற்றியும் விபரங்களும் உள்ளன. உலக அணுமின் உலைகளைப் பற்றி மட்டுமின்றி பாரத அணுமின் நிலையங்களின் வெற்றிகரமான இயக்கங்களும், முன்னேற்றங்களும், அவற்றில் நிகழ்ந்த விபத்துகளும் கூறப் பட்டுள்ளன.

நாற்பத்தி ஒன்று அணுசக்திக் கட்டுரைகளை வாரந் தோறும் தளராது வலைப் பதிப்பில் பொறுமையாக வண்ணப் படங்களுடன் ஏற்றிய மதிப்புக்குரிய திண்ணை அதிபர்கள் ராஜாராம், துக்காராம் எனது பாராட்டுக்கும், நன்றிக்கும் உரியவர்கள். மேலும் நூலை வெளியிட என்னை ஊக்குவித்த மதிப்புக்குரிய நண்பர் ஜெயமோகனும், அவர் தூண்டிச் சிறப்பாக வெளியிட்ட தமிழினி பதிப்பகத்தின் அதிபர் வசந்த குமாரும் என் நன்றிக்கு உரியவர்கள்.

ஆசிரியரைப்  பற்றி :

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணி யாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.

அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளி வந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 500 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன.

எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.

எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.

அன்புடன்,
சி. ஜெயபாரதன், கனடா

+++++++++++++

அணுசக்தி நூல் விலை : ரூ 270
(415 பக்கங்கள்)

நூல் கிடைக்குமிடம்
தமிழினி பதிப்பகம்
63. பீட்டர்ஸ் சாலை,
ராயப்பேட்டை,
சென்னை: 600014, தமிழ் நாடு
இந்தியா

    ************************

தமிழினி பதிப்பகம் அதிபர் வசந்த குமார்

ஈமெயில் : “vasantha kumar”  tamizhininool@yahoo.co.in

செல் ஃபோன் : 98841-96552
ஆஃபீஸ் போன் : 2835-1410

நூல் வாங்க வசந்த குமாரிடம் நேராகத் தொலை பேசியில் தொடர்பு கொள்ளுங்கள்.

25 ஆண்டுகள் கடந்தும் சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் கதிரியக்கக் கசிவுகள் -1

 

 

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

பேரழிவுப் போராயுதம்
இரகசியமாய்த் திட்ட மிட்டு
உருவாக்கி
ஹிரோஷிமா மீது வீசி
நிர்வாண மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும் அணுக் குண்டால்
நாசமாக்கப் பட்டது !
திட்ட மின்றி
தென்னாலி ராமன் போல்
மூடர் அணு உலையைச்
சூடாக்கி
வெடிப்பு சோதனை அரங்கேறி
நிர்வாண மானது,
செர்நோபில் அணு உலை !
மரித்தனர் மாந்தர்,
மடிகிறார் மாந்தர், மரிப்பார் மாந்தர்!
புற்று நோயும், இரத்த நோயும்
பற்றின பாலரை! படுகிறார் வேதனை !
மன்னிக்க முடியா
மனிதத் தவறால் நேர்ந்த முதல்
அணுயுகப் பிரளயம்!

“25 ஆண்டுகள் கடந்தும் சிதைந்து புதைபட்ட செர்நோபில் கதிரியக்கக் கழிவுகளும், எரிக் கோல்களும் நிரம்பி யுக்ரேன் நாடு உட்பட மற்ற உலக நாடுகளையும் பயமுறுத்தி வருகிறது.  இப்போது அந்த அணு உலைச் சமாதியைச் சுற்றி மாபெரும் ஓர் இரும்புக் கவசக் கோட்டைக் கட்டப்பட்டு வருகிறது.  செர்நோபில் விபத்து நூதன நிகழ்ச்சி. ஆனால் அத்தகைய விபத்து மீண்டும் நிகழ்வது அபூர்வம்.”

இகோர் கிரமாட்கின் [Igor Gramatkin, Manager Chernobyl Nuclear Power Plant, Ukraine (April 1, 2011)

“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும். அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்குமானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதைக் கட்ட ஆரம்பிக்க வேண்டும்.

தாமஸ் ஹார்டி [Thomas Hardy 1840–1928]

மனிதக் கரங்கள் மூளைக்கு முந்திச் செய்த அவசரத் தவறை அறிந்த வுடனே விரைவாய்த் திருத்தச் செல்கையில் மீண்டும் ஒரு தவறைப் புரிகின்றன ! பிறகு இரண்டு தவறுகள் நான்கு பழுதுகளை உண்டாக்கும் ! அப்படியே தவறுச் சங்கிலித் தொடரியக்கம் விரிந்து கண்ணிமைப் பொழுதில், மீள முடியாத ஒரு கோர விபத்து கண்முன்னே அரங்கேறுகிறது !

கட்டுரையாளர்



“25 ஆண்டுகளுக்கு முன்னே நேர்ந்த செர்நோபில் அணு உலை விபத்தில் விளைந்த  கதிரியக்க மூலங்களின் தீவிரம் அருகிலிருக்கும் பிரிபயாட் நகரில் தேய்ந்து குறைய 900  ஆண்டுகள் ஆகலாம்.”

“பேராற்றல் படைத்த அமெரிக்கா ஒவ்வோர் ஆண்டும், அணு ஆயுதங்களுக்கும்,  அவற்றைச் சார்ந்த திட்டங்களுக்கும் 27 பில்லியன் டாலர் செலவழித்து வருகிறது.”

“அணு ஆயுதங்கள் தயாரிக்கும் விஞ்ஞானப் பொறியியற் திறமையுடைய தேசங்கள்  எகிப்து, தென் கொரியா உள்பட உலகில் நாற்பது நாடுகள் இருப்பதாக ஊகிக்கப் படுகிறது.”

இஸ்ரேல் நாடு வைத்திருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 200  என்பதாக  மதிப்பிடப் படுகிறது.”

“தி இண்டிபென்டன்ட்” யுத்தமும், பேரழிவுகளும் (The Independent Aug 5, 2005)


முன்னுரை: 1945 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப் போரின் முடிவு காலத்தில்  ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்களில் திட்டமிட்டு அமெரிக்கா அணு ஆயுதங்களை வீசி  லட்சக் கணக்கான மாந்தர் மரித்ததுடன், எண்ணற்ற ஜப்பானியர் கதிரியக்கத்தால்  பாதிக்கப்பட்டு இன்றைய நாளிலும் துயர்க் கடலில் தத்தளித்து வருகிறார்கள். ஆயினும்  மனித இனம் அணு ஆயுதங் களின் கோர விளைவுகளைப் பற்றி இன்னும் கற்றுக்  கொள்ளவில்லை! அந்த தாக்குதலுக்குப் பிறகு 1979 இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு  அணுமின் நிலையத்தில் மனிதத் தவறு களால் அணு உலையில் பேரளவு வெப்பசக்தி  உண்டாகி, வெப்பம் நீக்க மடையாது, நல்ல வேளை வெடிப்பு ஏற்படாது அணுவியல்  எரிக் கோல்கள் மட்டும் உருகின! அணு உலை உருக்கு அழுத்தக் கலனும் சிதைந்து,  கதிரியக்கம் சூழ்வெளி மண்டலத்தில் பரவாது பாதுகாப்பு அரணுக்குள் அடங்கிச் சீர்ப்படுத்த  பெரும் நிதிச் செலவை உண்டாக்கியது. அடுத்து சோவியத் ரஷ்யாவில் யுக்ரேன் நாட்டின்  கீவ் [Kiev] நகருக்கு அருகே 1986 ஏப்ரல் 26 ஆம் நேர்ந்த செர்நோபில் அணு உலை  விபத்தில் அடுத்தடுத்து இரண்டு வெடிப்புகள் உண்டாகி எரியும் அணுவியல் எரிக்கோல்கள்  உடைந்துருகி, கதிரியக்கம் பெருகி சூழ் மண்டலத்தில் வீசி எறியப் பட்டன!

சிதைந்து முறிந்த கட்டடங்களைத் தாண்டி கதிரியக்கத் துணுக்குகளும், தூசுகளும்,  மாசுகளும் காற்றில் பரவி கிழக்கே ஜப்பானிலும், மேற்கே கனடா வரையிலும் பயணம்  செய்து கருவிகள் மூலம் பதிவாகின! செர்நோபில் அணு உலை வெடிப்பால் இதுவரை 65  பேர் உயிரிழந்தனர்! கதிர்த் தீண்டலாகி 20 மைல் சுற்றளவில் வாழ்ந்த பிரிபயாட் நகர  மக்கள் [45,000 பேர்] உள்பட மற்ற அண்டை ஊர்களிலும் வசித்த 116,000 நபர்கள்  கட்டாய மாகப் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டனர். ஆனால் வெடித்துச் சிதறிய கதிர்வீச்சுத்  துணுக்குகள் பல மைல் சுற்றளவில் பரவிப் படிந்துள்ளதால், அடுத்துச் சுமார் 9000 பேர்  பல்லாண்டுகளில் மரணம் அடைவார் என்று ஐக்கிய நாடுகளின் அணுசக்திக் கண்காணிப்புப்  பேரவை [UNESCO-IAEA] கணித்துள்ளது! உலக வரலாற்றில் ஜப்பானிலிட்ட அணு ஆயுத  வீச்சுகளுக்கு அடுத்தபடியாக, ஆனால் அவற்றை விட 400 மடங்கு பேரழிவுகள்  விளைக்கும் ஒரு கோர கதிரியக்கத் தீங்கு நிகழ்ச்சியாக, செர்நோபில் அணு உலை  விபத்து கருதப் படுகிறது!

செர்நோபில் அணு உலையில் (யூனிட் -4) என்ன நேர்ந்தது?

செர்நோபில் அணுமின்சக்தி நிலையம் பழைய சோவித் ரஷ்யாவைச் சேர்ந்த யுக்ரேன்  நாட்டின் தலைநகரான கீவ் [Kiev] நகருக்குச் சுமார் 80 மைல் [130 கி.மீடர்] தூரத்தில்  உள்ளது. 1986 ஏப்ரல் 26 ஆம் தேதி அதிகாலையில் செர்நோபில் நிலையத்தின் நான்காவது  அணு உலையில் அடுத்தடுத்து இரண்டு வெடிப்புகள் ஏற்பட்டு இடி முழக்கின. அணு உலை  இயக்குநர்கள் சோதனைக்காக பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தற்காலியமாக முடக்கி  ஆய்வுகளைத் தொடர்ந்த போதுதான் அணு உலையில் வெப்பம் பேரளவில் பெருகி,  வெப்பம் தணிக்கப் படாமலும், வெப்பசக்தி பெருக்கும் நியூட்ரான் எண்ணிக்கைக்  கட்டுப்படுத்தப் படாமலும் தாறுமாறாக அணு உலை யியக்கம் அலங்கோலமான  வேளையில் வெடிப்புகள் நிகழ்ந்தன. வெப்பம் மிகுந்து நீராவியின் அழுத்தம் பன்மடங்கு  ஏறியதால், முதல் வெடிப்பு நேர்ந்து அணு உலையின் கனக் கவசமான உருக்கு மூடியை  தூக்கி எறிந்தது. அடுத்து அணு உலைக் கவசக் காங்கிரீட் அரணும் பிளக்கப்பட்டு,  கதிரியக்கத் துணுக்குகள், தூசிகள் சூழ்மண்டலத்தில் பரவின.

சூடான எரிக்கோல்கள் யாவும் உடைந்து, வெளிக்காற்று உலைக்கலன் உள்ளே நுழைந்து  தீப்பிடித்தன. இரண்டாவது வெடிப்பு உலைக் கலனில் சேமிப்பான ஹைடிரஜன், ஆக்ஸிஜன்  தீவிரப் பிணைப்பால் ஏற்பட்டு உடைந்து போன கதிரியக்கக் கோல்களை மீண்டும்  தூளாக்கித் தூக்கி விளியே எறிந்தது. எரிக்கோல்களில் பற்றிய தீமூட்டம், டன் கணக்கில்  அடுக்கப்பட்டு மிதவாக்கியாகப் பயன்படும் திரட்கரியில் [Moderator Graphite Bricks] பிடித்துக்  கொண்டு 10 நாட்களாய் அணைக்க முடியாமல் எரிந்தது. அணு உலை 1800 டிகிரி C  உஷ்ணம் அடைந்து யுரேனியக் கோல்கள் உருகிப் பாறையாகின! 200 டன் கதிரியக்க  எரிக் கோல்களும், முறிந்து போன பிற உருக்குச் சாதனங்களும் காங்கிரீட் கவசத்தால் மூட  வாகனங்களும், சாதனங் களும் தயாரிக்கப் பட்டன. அவசர அவசரமாக சுமார் 700,000 டன்  உருக்கு உத்தரங்களும், இரும்புத் தட்டுகளும் சுற்றி அமைக்கப்பட்டு, 400,000 டன் காங்கிரீட்  ஹெலிகாப்டர் மூலமாக ஊற்றப்பட்டது.

சிதைந்து போன செர்நோபில் அணு உலையில் தீயணைக்கச் சென்றவரும், இயக்குநர்  சிலரும் ஆக 31 நபர் ஒருசில நாட்களில் உயிரிழந்தனர். மற்றும் செம்மைப் படுத்தப்  புகுந்து, திடீர் வீரியக் கதிரடி பட்ட [Acute Radiation Dose] 209 நபர்களில், 19 பேர் மரித்தனர்.  மற்றும் மிகையானக் கதிரடி பெற்ற 134 நபர்கள் தப்பிப் பிழைத்துக் கொண்டார்கள்.  செர்நோபிலைச் சுற்றி யிருந்த பெலரஸ், யுக்ரேன், ரஷ்யா நாடுகளின் நகர்ப்புறத்தில்  வாழ்ந்த மாந்தர் மில்லியன் கணக்கில் சிறிதளவுக் கதிரடி வாங்கினர். 2006 ஏப்ரல் மாதம்  வரைச் செர்நோபில் விபத்தில் இறந்தவர் எண்ணிக்கை 65 என்று சமீபத்தில் ஐக்கிய  நாடுகளின் உடல்நல நிபுணர் 600 பேர் [UN World Health Organization & Govts of Russia, Ukraine,  Belarus] வெளிவிட்ட ஓர் நம்பத் தகுந்த அறிக்கை கூறுகிறது. மரணமடைந்த அந்த 65  பேர்களில் 50 நபர் தீயணைப்புக் குழுவினர்; மற்றும் தைராய்டு புற்றுநோய் தாக்கப்பட்ட 14  குழந்தைகள். மேலும் வரும் ஆண்டுகளில் புற்று நோயில் மடிந்து போவோர் எண்ணிக்கை  9000 ஆக ஏறலாம் என்று அந்த நிபுணர்கள் மதிப்பீடு செய்கிறார்கள்! ஆனால் அந்த  எண்ணிக்கையை ஒப்புக் கொள்ளாத கிரீன்பீஸ் வாதிகள் [Greenpeace Activists] அதை விட  பத்து மடங்கு நபர்கள் [93,000 பேர்] மரணம் அடைவார் என்று வெளியிட்டிருக்கிறார்கள்!

25 ஆண்டுகளுக்குப் பிறகு செர்நோபில் சமாதியில் கதிரியக்கக் கசிவுகள் !

சீர்குலைந்த நான்காவது யூனிட் செர்நோபில் அணு உலை 1986 இல் நிரந்தரக் காங்கிரீட்  சமாதியில் அடக்கம் ஆயினும் தற்போது சுற்றுச் சுவர்களில் பிளவுகள் ஏற்பட்டுக்  கதிரியக்கக் கசிவுகள் வெளியாவதாக அறியப் படுகிறது. ஆரம்பத்திலேயே மேற்தளக்  கூரைப் பகுதி சரிவரக் கட்டுமானமாகி மூடப் படவில்லை. அவசர அவசரமாய் வேலை  செய்வோர் தீவிரக் கதிரடிகளைப் பெற்றுக் கொண்டு தரப்பாடில்லாமல் கட்டிய காங்கிரீட்  சுவர்கள், தற்போது சிதைவதால் புதிய கவசக் கட்டடம் கட்டும் திட்டங்கள் தயாராக  உள்ளன. அந்த அகில நாட்டுக் கவசச் சுவர் திட்டம் [Internatioanal Shelter Implementation Plan]  நிறைவேற 715 மில்லியன் டாலர் நிதி தேவைப்படும். அத்திட்டத்தில் சமாதிக்குள்  உடைந்து கதிர்வீசிக் கொண்டிருக்கும் யுரேனிய எரிக்கோல்களை நீக்கும் பணியும் சேர்க்கப்  பட்டிருக்கிறது. மேற்தளம் ஏற்கனவே மீண்டும் செம்மை ஆக்கப் பட்டுள்ளது. 2001  மார்ச்சில் 36 மில்லியன் டாலர் செலவில் கதிரியக்கக் கழிவுச் சுத்தீகரிப்பு ஏற்பாடுகள்,  புதைப்புக் குழிகள் கட்டும் திட்டம் தயாராயின.

1990 ஆண்டுகளில் 400 மில்லியன் டாலர் செலவு செய்து, எஞ்சியுள்ள செர்நோபில் மாடல்  அணு உலைகளின் பாதுகாப்பு, கட்டுப்பாடு ஏற்பாடுகள் பெருமளவில் செம்மையாகி  மேம்படுத்தப் பட்டன. சுமார் 6000 பேர் ஒவ்வொரு நாளும் வேலை செய்து, நிலையத்தின்  கதிர்வீச்சளவுகள் அகில நாட்டு நடப்புக்கு ஒப்பும்படி சுத்த மாக்கப் பட்டு ஒழுங்கு  நிலைக்கு மீட்சி அடைந்தன. செர்நோபிள் சமாதிக்கு அருகிலிருந்த அறையில் ஒரு சிறு  விஞ்ஞானப் பொறியியல் குழு ஒன்றும் சீர்ப்படுத்தும் பணிகளில் வேலை செய்தது. தளப்  பெயர்ச்சியான பணியாட்களும் அவரது குடும்பத்தினரும் தற்போது 20 மைல் தூரத்தில்  உள்ள “ஸ்லாவுட்ச்” [Slavutich] என்னும் நகரில் வாழ்கிறார்கள். இயங்கிக் கொண்டிருந்த  மற்ற செர்நோபில் அணுமின் உலைகள் 2000 ஆம் ஆண்டில் நிரந்தரமாய் நிறுத்தம்  அடைந்தன! 1.1 பில்லியன் டாலர் செலவில் பாதி வட்ட வளைவுக் கவசக் கட்டடம்  ஒன்று சமாதியைச் சுற்றிலும் அமைக்கும் திட்டம் தயாராக்கப் படுகிறது. அது அடுத்து 100  ஆண்டுகள் வரை செர்நோபில் அணு உலைக் கசிவுகளிலிருந்து பாதுகாக்கும் என்று  எதிர்பார்க்கப் படுகிறது.

கதிரியக்க நோய்வாய்ப் பட்ட செர்நோபில் சிறுவர்கள்

“செர்நோபில் சிறுவர்கள்” என்று புற்றுநோயில் பாதிக்கப்பட்ட பரிதாபக் குழந்தைகள்  அழைக்கப்பட்டனர்! எண்ணற்ற சிறுவர், சிறுமியர் 20 ஆண்டுகள் கடந்தும் துன்பத்தில்  செத்தும் சாகாமலும் மருத்து மனைகளில் தனியாகக் காலம் தள்ளி வருகிறார்கள். பலர்  தைராய்டு புற்றுநோயிலும், இரத்த நோயிலும், இதரப் புற்று நோயிலும் இன்னலுற்று  தலை மயிரிழந்து, எடை யிழந்து கவலை முகத்தோடு காண்பது மறக்க முடியாத  காட்சியாகும்! பெலரஸ் தைராய்டு புற்றுநோய் மையத்தில் 20 ஆண்டுகள் கழித்தும்  தற்போது தாக்கப்பட்ட சிறுவரும், வாலிபரும் அநேகர் காணப்படுகிறார். செர்நோபில்  விபத்துக்குப் பிறகு அண்டை பகுதிகளில் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 50  மடங்கு பெருகி உள்ளது என்று அறியப் படுகிறது! விபத்து நடப்பதற்கு முன்பு பெலரஸில்  எட்டுப் பேர்தான் தைராய்டு புற்று நோயில் துன்புற்றனர். ஆனால் 13 ஆண்டுகள் கழிந்து  அந்த எண்ணிக்கை 90 மடங்காகப் பெருகி எண்ணிக்கை 726 ஆனதாய்த் தெரிகிறது!

செர்நோபில் நகர்ப் புறங்களில் நீடிக்கும் கதிரியக்கத் தீங்குகள்

செர்நோபில் விபத்தால் பரவி மக்களைப் பாதிக்கும் கதிரியக்கத் தீங்குகள், ஜப்பானில்  போட்ட ஹிரோஷிமா அணுகுண்டின் வீரியத்தை விட 400 மடங்கு மிகையானவை என்று  சொல்லப் படுகிறது. மனிதருக்கும், மாட மாளிகைகளுக்கும் விரைவாக நேர்ந்த  விளைவுகள் அணு ஆயுதத்தைப் போல் அத்தனைக் கோரமாக இல்லா விட்டாலும்,  செர்நோபில் விபத்தின் கதிர்வீச்சு நோய்கள் மக்களுக்குப் பல்லாண்டுகள் நீடித்து, கதிர்த்  தீண்டல் நிலவளம், நீர்வளத்தை நெடுங்காலம் பாதிக்கும் என்று அறியப் படுகிறது.  அணுகுண்டு வெடிப்பில் நொடிப் பொழுதில் 140,000 பேர் வெப்பத்தாலும், அதிர்ச்சியாலும்,  வெடிப்பாற்றலாலும் மரணம் அடைந்தனர். வெளிப்பட்ட அணு ஆயுதக் கதிரியக்கத்தில்  மாந்தர் சிலர் உடனே மடிந்தாலும், செர்நோபில் கதிரியக்கத் துணுக்குகளின் வீரியமும்,  அளவும், பரவிய நிலப் பகுதிகளும், அவற்றால் விளையும் பாதிப்புகள், விளையப் போகும்  பாதிப்புகள் மிக மிக அதிகமானவை. ஹிரோஷிமாவில் விழுந்த அணுகுண்டால் 90% நகர்ப்  பகுதி சில நிமிடங்களில் தகர்க்கப் பட்டுத் தரை மட்டமாயின. ஆனால் செர்நோபில்  விபத்தால் அணு உலைக் கருகில் உள்ள பிரிபயாட் நகரக் கட்டிடங்களில் கதிர்த் தீண்டல்  படிந்தாலும் அவை எதுவும் தகர்க்கப் படவில்லை.

செர்நோபில் மற்றும் சுற்றுப்புறச் சீரமைப்பில் பங்கேற்ற 600,000 இராணுவப் படையினரும்  கதிர்த் தாக்குதலில் பாடுபட்டனர். அவரில் ஒருவரான ஓய்வு பெற்ற கர்னல் எகினி  கிர்யூஸின் வயிற்றுப் புற்று நோய் தாக்கப் பட்டு பாதி வயிறு நீக்கப்பட்டு விட்டது. அவரது  உயிர் நண்பர் கதிரியக்கத்தால் உயிரிழக்க நேர்ந்தது. ரஷ்ய விஞ்ஞானக் கழகத்தின்  தனியார் சூழ்வெளிக் கண்காணிப்பு மையக் குழுவினர் வெளியிட்ட ஓர் அறிக்கையில்,  கடந்த 15 ஆண்டுகளாக மேற்கு ரஷ்யாவில் செர்நோபில் விபத்தின் விளைவால் மரிப்போர் எண்ணிக்கை திடீரென்று ஏறி யிருப்பதாகக் கூறுகிறது. மேலும் கதிரியக்கம்  உடம்பின் நோய்த்தடுப்பு ஏற்பாடுகளைச் [Immune Systems] சிதைக்கிறது என்றும், மக்கள்  மனநோயில் வேதனைப் படுகிறார் என்றும், மனிதரின் வயதேற்றம் விரைவாகிறது  என்றும் கருவுக் குள்ளிருக்கும் சிசுக்கள் சிதைவாகின்றன என்றும் இருதயக் குருதிக்  கோளாறு நோய்கள் பெருகியுள்ளன [Cardiovascular & Blood illness] என்றும் அந்த அறிக்கை  மூலம் அறிய வருகிறது. யுக்ரேன் கதிர்வீச்சு மருத்துவ மையத்தின் பேராசிரியர்  வொலாடிமைர் பெபஸ்கோ, “செர்நோபில் விபத்தால் சுற்றுப் புறத்தில் தைராய்டு  புற்றுநோய், முலைப் புற்றுநோய், இரத்த நோய், மற்ற குருதிக் கோளாறு நோய்கள்  மிகையாகிப் பரவியுள்ளன,” என்று சொல்கிறார்.

[தொடரும்]

தகவல்:

1. Chernobyl 20 Years On: UN Finds Impact of Reactor Disaster Much Less Than Feared, But Few are  Reassured. By: Mara D. Bellaby Associated Press [Sep 5, 2005 & Apr 23, 2006]

2. A Trip to Chernobyl By Awake Writer in Ukraine “Awake” [April 2006]

3. Remember Chernobyl Day (April 26, 1986) – 20 Years After

4. Chernobyl Day Action: Wednes day (26 April 1986) By: Fang Bot [April 24, 2006] From:  [http://www.chernobyl-children.com/, http://perth.indymedia.org%5D

5. Chernobyl Accident, Nuclear Issues Briefing Paper 22 [March 2006]

6. Children of Chernobyl Belarus “Two Decades After the Disaster, Chernobyl’s Children Struggle to Live  By: Anatol Klascuk [http://indexline.org/en/news/articles/2006/belarus-childern-of-chernoby.shtml]

7. Chernobyl Radiation Still Lingering, Experts Say By: Associated Press [Nov 15, 2004]

8. Officials Worry About Chernobyl Reactor Cracking Seal By: Associated Press [April 23, 2006]

9. Chernobyl Debate Still Rages On 20th Anniversary By: Alec Gazdic CTV.ca News [Apr 24, 2006]

10 Chernobyl Death Toll Will Top 90,000: Greenpeace Reprt By: Associated Press [Apr 18, 2006]

11 The Truth About Chernobyl By : Grigori Medvedev, Soviet Nuclear Physicist (1991)

12 The Aftermath of Chernobyl By : Grigori Medvedev Soviet Nuclear Physicist (1993)

13 The Independent World (Independent.co.uk) – 25 years on, what Chernobyl tells us about Japan’s crisis (April 1, 2011)

14 The World – Remembering Chernobyl after 25 years  (March 21, 2011)

******************

jayabarat@tnt21.com [April 2, 2011]

அமெரிக்காவின் திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் கற்றுக் கொண்ட பாடங்கள்

(Lessons Learned in Three Mile Island Accident)

(1979)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

“மனித இனத்துக்கு அணுமின்சக்தி மிகவும் தேவைப் படுகிறது என்பது என் தனிப்பட்ட கருத்து. அவை விருத்தி செய்யப்பட்டு மக்களுக்கு முழுமையான பாதுகாப்பு அளிப்பவை என்று உறுதிப்பாடாக வேண்டும். அதாவது அணு உலைகள் யாவும் பூமிக்கடியில் நிறுவப்பட வேண்டும். அகில நாடுகளின் அணுசக்திப் பேரவை (IAEA) தாமதமின்றி அணு உலைகள் எல்லாம் அடித்தளங்களில் நிறுவப்பட சட்டமியற்ற வேண்டும்.”

ஆன்டிரே ஸெக்காரோவ் [Andrei Sakharov, Russian Nobel Laureate (May 1989)]

மேம்பட்ட படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்குமானால், அதனால் விளையப் போகும் பாதிப்புகளின் முழுத் தோற்றத்தை முதலில் ஆழ்ந்து அறிந்த பிறகுதான் அதைக் கட்ட ஆரம்பிக்க வேண்டும்.

தாமஸ் ஹார்டி [Thomas Hardy 1840–1928]

மனிதக் கரங்கள் மூளைக்கு முந்திச் செய்த அவசரத் தவறை அறிந்த வுடனே விரைவாய்த் திருத்தச் செல்கையில் மீண்டும் ஒரு தவறைப் புரிகின்றன ! பிறகு இரண்டு தவறுகள் நான்கு பழுதுகளை உண்டாக்கும் ! அப்படியே தவறுச் சங்கிலித் தொடரியக்கம் விரிந்து கண்ணிமைப் பொழுதில், மீள முடியாத ஒரு கோர விபத்து கண்முன்னே அரங்கேறுகிறது !

கட்டுரையாளர்



முன்னுரை: 1979 ஆண்டு அமெரிக்காவில் முதன்முதலில் நேர்ந்த திரிமைல் தீவு (TMI-2) அணுமின் நிலைய  விபத்து, உலகில் வாணிப அணுமின் சக்தி வளர்ச்சியின் வரலாற்றையே முற்றிலும் மாற்றி  விட்டது! இந்தியாவில் 1983 ஆண்டு நிகழ்ந்த போபால் விஷ வாயு விபத்தையும், TMI-2  அணு உலை விபத்தையும் ஒப்பிட்டால், அபாய வேளையில் பணி செய்த இயக்குநர் கையாட்சிப்  பண்பாட்டில் பல ஒற்றுமைகள் காணப் படுகின்றன! அவ்விரண்டு நுணுக்கக் கூடங்களை  உருவாக்கிய உரிமை நிறுவகங்கள் அமெரிக்காவின் யூனியன் கார்பைடு [UCC] & ஜெனரல் பப்ளிக் யுடிலிடாஸ் [GPU]! அதே சமயம் டெல்லிக் கருகே நரோரா அணுமின் நிலையத்தில்  1993 ஆண்டு நேர்ந்த வெடிப் போடு ஒப்பிட்டால், பாரத இயக்குநர்கள் அணு உலையைக்  கண்காணித்து, வெப்பத் தணிப்பு நீரிழப்பு நிகழாது, எரிக்கோல்கள் சூடாகாமல்  காப்பாற்றியது, பாராட்டத் தக்க ஓர் தீரச் செயலாகும்!

1959 ஆண்டுக்குப் பிறகு இருபது வருடங்களாக இயங்கிக் கொண்டிருந்த முதல் பிறப்பு  பழைய அணுமின் உலைகள் [First Generation Power Reactors] அனைத்தின் தலை விதிகளை  TMI-2 மாற்றி விட்டது! 1979 ஆண்டுக்குப் பிறகு இருபது ஆண்டுகளில் உருவாகப் போன  இரண்டாம் பிறப்பு [Second Generation Power Reactors] அணுமின் உலைகளின் டிசைன்,  பாதுகாப்பு, இயக்க நெறிகள், பராமரிப்பு, இயக்குநர் தேர்ந்தெடுப்பு, பயிற்சி, தேர்ச்சி  முறைகள், அபாய காலப் பயிற்சிகள், அபாய எதிர்பார்ப்பு உளவுகள், அபாய நேரத்  தொடர்புகள் அனைத்தும் பல கோணங்களில் ஆராயப் பட்டு முற்றிலும் மாற்றப் பட்டன!

செர்நோபிள் அணு உலை வெடிப்பைப் போன்று, திரி மைல் தீவு பேரழிவைப் பென்ஸில்வேனியா  ஹாரிஸ்பர்கில் உண்டாக்க வில்லை! அணு உலையும், அதைச் சுற்றி யுள்ள  சாதனங்களும் வெடித்துத் தகர்க்கப் பட்டது போல், திரிமைல் தீவில் நிகழ வில்லை! சுமார்  1700 டன் மிதவாக்கிக் கரித்திரள் கட்டிகள் [Moderator Graphite Blocks] எரிந்து கதிரியக்கத்  துணுக்குகள் சூழ்மண்டலத்தில் தூவப் பட்டது போல் அமெரிக் காவின்  பென்ஸில்வேனியாவில் நேர  வில்லை!  செர்நோபிள் விபத்தின் போது சில தினங்களில் பலியானவர்கள்: வெடிப்பில்  இயக்குநர் இருவர், பெருங் கதிரடியில் தீயணைப்புப் படையினர் 29 பேர் மற்றும்  கதிர்வீச்சுக் காய்ச்சலில் 13 பேர்; ஆக மொத்தம் உயிரிழந்தவர் 44 மாந்தர்!

ஆனால் திரி மைல் தீவு விபத்தில் யாரும் மரணம் அடைய வில்லை! எவரும் பேரளவுக்  கதிரடி பட்டுத் துன்புற வில்லை! செர்நோபிள் விபத்தில் கதிர்வீச்சாலும், கதிரியக்கத்  தீண்டலாலும், மானிடருக்கு நீண்ட கால இன்னல்கள் விளைந்தன! இன்னும் 50  ஆண்டுகளுக்கு புற்று நோய் மரண அதிகரிப்பு உண்டாகும் என்று கதிரியல்  விஞ்ஞானி களால் யூகிக்கப் படுகிறது! ஆனால் திரி மைல் தீவு விபத்தில், கதிர்வீச்சால்  அவ்விதம் நீண்ட கால விளைவுகள் எதுவும் நிகழ வில்லை!  ஆனால் அமெரிக்காவில் அடுத்துக் கட்டப் போகும் புதிய அணுமின் நிலையங்கள் நிறுத்த மாயின.  கட்டப் பட்டுவரும் அணுமின் உலைகளும், இயங்கி வரும் அணுமின் உலைகளும் மென்மேலும் ஆராயப் பட்டுப் பேரளவில் மேம்படுத்தப் பட்டன !

திரிமைல் தீவு விபத்துக்கும் ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகள் விபத்துக்கும் உள்ள ஒற்றுமை, வேற்றுமைகள்

திரிமைல் தீவு அணுமின் உலை விபத்து 1979 இல் யந்திரத் தவறோடு மனிதத் தவறால் தூண்டப் பட்டு வெப்பத் தணிப்பு நீரிழப்பால் (Loss of Coolant Accident -LOCA) பேரளவு எரிக்கோல்கள் அணு உலையில் முறிந்து, உருகிப் போயின.  அதனால் வெளிப்பட்ட கதிரியக்கத் துணுக்குகள், திரவக் கழிவுகள் எவையும் வெளியேறாமல் அணு உலைக் காங்கிரீட் கோட்டைக்குள் தங்கின !  ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளில் 9.0 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தாலும், 30 அடி உயரத்தில் தாக்கிய சுனாமியாலும் விபத்து தூண்டப்பட்டு எரிக்கோல்கள் வெப்பத் தணிப்பு நீரிழப்பால் ஓரளவு முறிந்தோ அல்லது உருகியோ சிதைந்து போயின.  ஆனால் தொடர்ந்து சிறிதளவு & பேரளவுக் கதிரியக்கம் மாறி மாறி, நீர் வழியாகவும், வாயு வழியாகவும் அணுமின் உலைகளை விட்டு விட்டு வெளியேறியது. திரிமைல் தீவில் விபத்து ஓர் அணுமின் உலையில் மட்டும் நேர்ந்தது.  புகுஷிமாவில் நான்கு அணுமின் உலைகளில் விபத்துக்கள் நேர்ந்தன.  பதினாறு நாட்கள் (மார்ச் 26, 2011) ஆயினும் இன்னும் சில அணுமின் உலைகளில் தொடர்ந்து ஜப்பான் இயக்குநரால் வெப்பத் தணிப்பு நீர் எரிக்கோல்களுக்குச் செலுத்த முடியவில்லை.

ஓர் அணுமின் உலையில் இணைக்கப் பட்ட நீர்த் தடாகத்தில் சேமிப்பான எரிக் கோல்கள் (Spent Fuel Storage Pool) நீர் மட்டம் கீழாகிச் சூடேறத் துவங்கின.  நீர்க் கவசமின்றி தடாகத்தில் கதிரியக்கம் மிகையானது.  செலுத்தப்பட்ட கதிர்வீச்சுத் தணிப்பு நீர் தங்கும் வளையம் நிரம்பி தரையில் சேரத் தொடங்கியது.  அந்த நீர் பணியாளர் காலணிகளில் புகுந்து பீட்டா கதிர்வீச்சால் கால் எரிப்புண்கள் (Beta Ray Burns) உண்டாயின.  வெப்பத் தணிப்பு நீரிழப்பால் முறிந்த / உருகிய எரிக்கோல்கள் புகுஷிமாவில் திரிமைல் தீவைப் போல் சுமார் நான்கு மடங்கு எண்ணிக்கை !  புகுஷிமா அணுமின் உலைகளின் சீர்கேட்டையும், கதிரியக்கப் பேரிடரையும் அனுதினம் தொலைக் காட்சியில் கண்டவர் இன்னும் கவனித்து வேதனை அடைந்து வருபவர் உலகில் பல பில்லியன் மாந்தர்.  செர்நோபிள் பேரிடர் நிலை இலக்கம் 7 என்றும், திரிமைல் தீவு விபத்து நிலை இலக்கம் 5 என்றும் புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்துக்கள் நிலை இலக்கம் 6 என்றும் IAEA ஆல் எடை போடப் படுகின்றன.

அமெரிக்க அணுமின் உலைத் திட்டங்களை நிறுத்திய விபத்து !

TMI-2 அணு உலையில் எதிர்பாராமல் துவங்கியது சிறிய நிகழ்ச்சி யாயினும், பிறகு அது  அசுர வடிவெடுத்து அணு உலை எரிக் கோல்களுக்குப் பெருமளவில், வெப்பத் தணிப்பு  நீரை இழக்கச் செய்து விட்டது! பிரதம வெப்பத் தணிப்பு நீரிழப்பு [LOCA, Loss of Coolant  Accident] அணு உலைக்குப் பேரழிவு விளைவிப்பதைத் தடுக்கப் பலவித அபாயத் துணை  ஏற்பாடுகள் சுயமாக இயங்கக் காத்துக் கொண்டிருக்கின்றன! அவ்விதம் தவிர்ப்பு முறைகள்  TMI-2 இல் இருந்தாலும், அறிவற்ற இயக்குநரின் கையாட்சியால் பேரளவுச் சேதம் அணு  உலையில் உண்டானது! அவரது மூடத் தனத்தால் இரண்டு மணி நேரத்திற்குள் நான்கு  வித அபாய விபத்துகள் கட்டுப் படுத்த முடியாமல் பூத உருவில் எழுந்தன!

1. எரிக்கோல்களின் உஷ்ணம் 2800 டிகிரி C ஏறி, 50 டன் [50%] யுரேனியம் ஆக்ஸைடு  கோல்கள் உலைக் கலனில் உருகிக் கட்டிகளாய்ச் சேர்ந்தன!

2. வீரிய கதிரியக்க முள்ள, யுரேனியப் பிளவுக் கழிவுகள் சேர்ந்த 600,000 காலன் வெப்பத்  தணிப்பு நீர், அணு உலையிலிருந்து கசிந்து வெளியேறி, கோட்டைத் தளத்தில்  தடாகமாய்ப் பெருகியது!

3. அணு உலையில் 2800 டிகிரி C உஷ்ண நீராவி அருகில் உள்ள ஸிர்கோனிய [Zirconium]  உலோகத்துடன் இணைந்து பேரளவு ஹைடிரஜன் வாயு முகிலாகி, மூர்க்கமுடன்  ஆக்ஸிஜனுடன் பிணைந்து பெரு வெடிப்பை [Hydrogen Explosion] உண்டாக்கப்  பயமுறுத்தியது! செர்நோபிள் அணுமின் உலையில் எழுந்த இரண்டாவது வெடிப்பு  இவ்விதம்தான் ஏற்பட்டது!

4. உருகித் திரண்ட யுரேனியக் கட்டிகள் அணு உலை நீரில் ‘விரைவுப் பூரண வெடிப்பைத் ‘  [Prompt Criticality Explosion] தூண்டி விடுமோ என்ற பேரச்சத்தை வேறு உண்டாக்கியது!

நல்ல வேளையாக கடைசி இரண்டு கோர நிகழ்ச்சிகளும் நேரவில்லை!

1983 இல் உலகெங்கும் இயங்கி வந்த அணு உலைகளின் எண்ணிக்கை 284! உலகில்  அப்போது கட்டப் பட்டு உருவாகி வந்தவை 192! அதே சமயத்தில் அமெரிக்காவில் மட்டும்  ஓடிக் கொண்டிருந்தவை 79! நிறுவன நிலையில் வளர்ந்து கொண்டு வந்தவை 55! TMI-2  விபத்துக்குப் பிறகு உலகில் ஓடிக் கொண்டிருந்த அணுமின் உலைகளும், கட்டப்படும்  அணுமின் உலைகளும் தீர்க்கமாய் ஆய்வு செய்யப் பட்டு மேபடுத்தப் பட்டன!  அமெரிக்காவில் அணுமின் உலைகளின் மீது நம்பிக்கை குன்றி கட்டப்படும் 55 அணு  உலைகளில் 30 நிலையங்கள் முழுவதும் கட்டப் படாமலே பாதியில் நின்று போயின!  காரணம் NRC [Nuclear Regulatory Commission] எதிர்கால அணுமின் உலைகளுக்குக் கடும்  நிபந்தனைகளிட்டுப் பாதுகாப்பு நெறிகளையும், முறைகளையும் மிகையாக்கியதால்,  கட்டுமான நிதித் தொகை மிக மிக ஏறிவிட்டது!

திரி மைல் தீவு அணுமின் உலை விபத்தில் என்ன நிகழ்ந்தது ?

1979 மார்ச் 28 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு அமெரிக்காவின் மாபெரும் அணுமின்  நிலைய விபத்து, இரட்டை உலைகளில் ஒன்றான யூனிட்-2 நிலையத்தில்தான் நேர்ந்தது!  TMI-2 [Three Mile Island Unit-2] அணுமின் நிலையம் நியூ யார்க், நியூ ஜெர்ஸி மாநிலங்களுக்கு  அண்டையில் உள்ள பென்ஸில்வேனியா மாநிலத்தில் ஓடும் ஸஸ்குவான ஆற்றின்  கரையில் உள்ள மிடில்டன் நகரில் [Middletown near Harrisburg on the Susquehanna River]  அமைந்துள்ளது. 1978 டிசம்பர் முதல் வாணிப ரீதியாக இயங்கி வரும் TMI-2 அணுமின்  உலை விபத்தன்று 97% [870 Mwe] மின்னாற்றலில் ஓடிக் கொண்டிருந்தது.

பராமரிப்புக்குப் பிறகு எதிர்பாராத விதமாக மூடப்பட்ட ஒரு வால்வால் [Valve] நீராவி  ஜனனிகளுக்குத் தொடர்ந்து நிரப்பும் தூய நீர் தடைபட்டது! அதன்பின் பிரதம நிரப்பு நீர்ப்  பம்பும் [Main Feedwater Pump], ஓடிக் கொண்டிருந்த பிரதம டர்பைனும் [Main Turbine] நிறுத்தம்  அடைந்து, 870 MWe மின்னாற்றல் இழப்பானது! உடனே அபாய நிரப்புப் பம்ப் தானாக  இயங்க ஆரம்பித்தாலும், நீராவி ஜனனிகளுக்கு நீரனுப்ப முடியாது போயிற்று!  ஏனென்றால் கடந்த வாரத்தில் மூடப் பட்ட சில வால்வுகள், சோதனை முடித்ததற்குப்  பிறகு திறக்கப் படாமல் கிடந்தன! ஆட்சி அறை அரங்கில் [Control Roon Panels] காணப்படும்  மூடிய அந்த வால்வுகளின் மினி விளக்கு, அருகில் தொங்கும் பராமரிப்பு எச்சரிக்கை  அட்டை எதுவும், இயக்குநர் கண்களுக்குத் தெரியாமல் போனது, ஓர் விந்தை நிகழ்ச்சி!

அணு உலையில் தொடர்ந்து உண்டாகும் 2700 MWt வெப்பசக்தி [870 MWe] ஜனனிகளில் நீர்  இருந்தால்தான் நீராவி யாக்கப்பட்டு டர்பைனை ஓட்டுகிறது. அவ்வழியில் அணு உலைக்கு  நீராவி ஜனனிகளே பிரதம ‘வெப்ப விழுங்கிகள் ‘ [Steam Generators are the Main Heat Sinks for  the Reactor]! வெப்ப விழுங்கிகள் நீரற்று முடமானதால், அணு உலையின் வெப்பமும்,  தணிப்புநீர் அழுத்தமும் அளவு மீறி, அணு உலைத் தானாக நிறுத்த மானது! நீர் அழுத்தம்  ஏறியதும் தானாய் இயங்கும் தணிவு வால்வு [Power Operated Relief Valve (PORV)] ஒன்று  திறந்து அணு உலைப் பிரமத வெப்பத் தணிப்பு நீரை [Primary Coolant] வெளியேற்றியது!  திறந்த PORV அழுத்தம் குன்றியதும் மூடாமல் துரதிஷ்ட வசமாகச் சிக்கிக் கொண்டதால்,  நீர் வற்றிப் போய்க் கனலான எரிக்கோல்கள் நீர் மட்டம் குன்றி வரட்சியில் உஷ்ணம் ஏறி  எரியத் தொடங்க ஆரம்பித்தன! அதாவது வெப்ப எரிக்கோல்கள் ‘தணிப்பு நீர் இழப்பு விபத்தில் ‘ [Loss of Coolant Accident (LOCA)] மாட்டிக் கொண்டது!

வெப்ப எரிக்கோல்கள் தணிப்பு நீர் இழப்பு விபத்தில் உருகின!

PORV இல் ஒழுகும் கதிர்வீச்சு நீர் சேமிப்புத் தகழி [Contaminated Water Storage Tank]  நிரம்பியதும் அதனுடைய காப்புத் தகடு [Rupture Disc] உடைந்து, தீவிரமான கதிரியக்க  திரவம் கோட்டைத் தளத்தில் கொட்ட ஆரம்பித்தது! வெப்பத் தணிப்பு நீரழுத்தம்  குன்றியதும், சுயமாகவே அபாய எருக்கருத் தணிப்பு நீர் ஏற்பாடு [Emergency Core Cooling  System] துவங்கியது! அணு உலையின் மீது பட்ட நீர் உடனே ஆவியான போது, அழுத்தக்  கலனில் [Pressurizer] நீர் நிரம்பிப் பொங்குவதாக எண்ணித் தப்பாகப் புரிந்து கொண்ட ஆட்சி  அறை இயக்குநர், அபாயப் பணிப் பம்பை மூடத்தனமாக நிறுத்தினர்! அத்துடன் நில்லாது,  மேலும் தணிப்பு நீரை நீக்க சில வால்வுகளைச் சிந்திக்காமல் திறந்து விட்டார்கள்!  அவசரத்திலும், அச்சத்திலும் செய்யும் பல அபாயத் தடுப்பு வேலைகள் அனைத்தும்  அடுத்தடுத்த தவறுகளாகி அணு உலையின் கனலான எரிகோல்கள் நீரற்று உஷ்ணத்தில்  உருகி உலைக் கலனின் அடியில் ஓடித் தங்கின!

நீராவி ஜனனிகளின் மூடிய அபாயப் பணி நீரனுப்பி வால்வுகளைக் கண்டு இறுதியில்  திறந்து, ஜனனிகளுக்கு நீரைத் திறந்து விட்டார்கள்! ஆனால் திறந்து மூடாமல் சிக்கிக்  கொண்ட PORV நீரை வீணாகக் வெளியேற்றுவதை இயக்குநர் இன்னும் கண்டு  கொள்ள வில்லை! அணு உலையில் தங்கிய நீர் ஆவியாகி, அதன் உஷ்ணம் மிகையாகி, உலையின் உலோகத்துடன் பிணந்து ஏராளமான ஹைடிரஜன் வாயுக் குமிழ் [Hydrogen Gas  Bubble] உண்டாகி வெடித்து விடப் பயமுறுத்தியது! செர்நோபிள் அணு உலையில் நிகழ்ந்த  இரண்டாவது பயங்கர வெடிப்பு, ஹைடிரஜன் வாயுக்குமிழ் மூர்க்கமாக ஆக்ஸிஜனுடன்  இணைந்ததால் ஏற்பட்டதே!

தீவிரமாய்க் கதிர்வீசும் கழிவுகளைத் தாங்கிய நீர் தொடர்ந்து கொட்டிக், கோட்டை  அரணின் தளத்தில் நிரம்பத் துவங்கியது! விபத்து நிகழ்ந்து 2 மணி 18 நிமிடங்கள் கழித்து  PORV திறந்து தணிப்பு நீரை வெளியாக்குவது தெரிய வந்து அது மூடப் பட்டது! உடனே  தணிப்பு பம்புகளை இயக்க ஆரம்பித்து, எரிகோல்களின் கனல் வெப்பம் தணிக்க நீரனுப்பி,  அணு உலை நிரப்பப் பட்டு அணு உலை கட்டு படுத்தப் பட்டது! ஆனால் அதற்குள் பல எரிக்கோல்கள் உருகி விபத்தின் மீளா விளைவுகள் ஏற்பட்டு விட்டன!

வெப்பத் தணிப்பு நீரிழப்பால் அணு உலைக்கு நேர்ந்த சிதைவுகள்

PORV திறந்து 600,000 காலன் வெப்பத் தணிப்பு நீரைக் கோட்டை அரணில் கொட்டி  வெளியாக்கியது! TMI-2 அணு உலையில் 37,170 தனி யுரேனியம் டையாக்ஸைடு  எரிக்கோல்கள் கொண்ட 177 கட்டுகள் [177×210 =37170] நீரில் மூழ்கும்படி முதலில்  நுழைக்கப் பட்டிருந்தன. எரிக்கோல்களின் மேற்புறம் நீரில் மூழ்காமல், 315 டிகிரி C  உஷ்ணத்தில் இயங்கியவை, தணிப்பு நீர் குன்றி உஷ்ணம் 2800 டிகிரிக்கும் மேல்  ஏறியதால், 50 டன் [50%] எரிக்கோல்கள் எரிந்துருகிச் சிதைவடைந்தன! அணு உலையில்  எரிக்கோல்கள் மேற்புறம் பிளந்து, தீவிரக் கதிரியக்க துணுக்குகளைக் [Cesium134, Cesium135,  Strontium90] கக்கியதால், அவற்றைச் சுமந்து கொண்டு வெளியேறிய தணிப்பு நீர் பெரிய  தடாகம் போல், கோட்டைத் தளத்தில் சேர்ந்தது! 100 டன் மொத்த எரிக்கோல்களில் 16-20  டன் அணு உலையில் காணப் படவில்லை! அப்பகுதி தணிப்பு நீரில் கசிந்து கோட்டைத்  தளத்தில் கிடந்தது! மேலும் 50 டன் உட்கருச் சாதனங்களும் சிதைந்து, ஆக மொத்தம் 150  டன் கதிர்வீச்சுக் குப்பைகள் உலைக்குள் சேர்ந்து விட்டன!

தீவிரக் கதிர்வீச்சுள்ள நீரை இரசாயன, மற்றும் யந்திர வடிகட்டு வழிகளில் சுத்திகரித்துப்  பல டன் அணுப்பிளவுத் துணுக்குகளைக் கவசக் கலன்களில் பாதுகாப்பாகச் சேமிப்பது ஓர்  இமாலயச் சாதனை! அதை விட 150 டன் கதிரியக்கக் குப்பைகளைக் கவசம் அணிந்து,  அணு உலையிலிருந்து சிறுகச் சிறுக அறுத்தெடுத்து கவசக் கலன்களில் மூடி,  வாகனங்களில் அனுப்பிப் புதைப்பது, அதைவிடப் பெரிய சாதனை!

அணு உலையின் 20-30 அடி ஆழத்தில் மண்டியான நீரில், 150 டன் கதிரியக்கக்  குப்பைகளை, பதினெட்டு அங்குள விட்டமுள்ள துளை வழியாக உறிஞ்சி எடுக்கப் பலவித  சுய இயக்கத் தூரக் கருவிகள் பயன்படுத்தப் பட்டன! 1000 பவுண்டுக்கும் மேலான  யுரேனியக் கழிவுகள் வெப்பத் தணிப்பு பைப்புகள், பம்புகள், மற்ற சாதனங்களிலும்  நீரோடத்தால் பரவி விட்டன!

யுரேனியம் உருகித் திரண்டு பலவித வடிவங்களில் நீருக்குள் அணு உலையின்  அடித்தளத்தில் சேர்ந்து, ‘விரைவுப் பூரண வெடிப்பு ‘ [Prompt Criticality Explosion] நேர்ந்து  விடுமோ என்ற பேரச்சம் உண்டானதால், மித மிஞ்சிய நியூட்ரான் விழுங்கியான ‘போரான்  திரவத்தை ‘ [Boron Liquid 5000 parts per million] அணு உலைக்குள் செலுத்தினார்கள்!

TMI-2 அணு உலைத் திருத்தத்தில் பணிநபர் பட்டக் கதிரடிகள்

(1 Sv = 100 Rem) (1 mSv = 0.1 Rem)

கதிர்வீச்சு அளவுகள் அணு உலையின் உள்ளே பல தளங்களில், பல திசைகளில் உளவு  செய்து குறிக்கப் பட்டன. பணியாளிகள் வேலை செய்யும் அணு உலையின் மேற்தளத்தில்  கவச மற்ற அளவுகள்: 40-600 Rem/hr. அணு உலையின் மூடியின் உள்ளே 700-800 Rem/hr.  ஈயத்தால் ஆன கவசம் அணிந்து வேலை புரிவதால் பணியாளருக்குப் படும் கதிரடி மிக  மிகக் குன்றிய அளவிலே [50-250 milliRem/hr] இருக்கும்!

TMI-2 அணு உலைச் சுத்திகரிப்புக்குக் கதிரடி மதிப்பீடு சுமார் 8000 man-Rem. கதிரடி  வரையறை உலைப் பணியாளிக்கும் (0.5 Rem/yr, Max 5 Rem/yr), வெளிப் பணியாளிக்கும் (0.2  Rem/yr) [Administrative Control 0.5 Rem/yr (Max 5 Rem/yr) for Radiation Worker & 0.2 Rem/yr for Non- Radiation Worker] என்று அழுத்தமாகக் கட்டுப் படுத்தப் பட்டன. அம்முறையில் உதாரணமாக  உலைப் பணியாளிகள் 500 பேர் என்றும், வெளிப் பணியாளிகள் 3000 நபர் என்றும்  வைத்துக் கொண்டால் ஓராண்டில் 500×0.5 +3000×0.2 =850 man-Rem. அந்த வீதத்தில் வேலை  முடியக் குறைந்தது 9.5 ஆண்டுகள் [8000/850] ஆகும்!

கோட்டை அரண் தளங்களில் கதிர்வீச்சு 35 R/hr! அரணின் அடித்தளத்தில் மட்டும்  கதிர்வீச்சு 1000 R/hr! 1986-1988 ஆண்டுகளில் பணியாளிகளின் கதிரடி 900-1000 man-Rem! 1989  இல் அணு உலைப் பணியில் பங்கு கொண்டவர்கள் சுமார் 500 நபர்கள். அவர்களின்  அவ்வாண்டுக் கதிரடி மட்டும் 615 man-Rem! TMI-2 அணு உலைச் சுத்திகரிப் புக்கு இறுதியில்  மதிப்பீடுக்கும் [8000 man-Rem] குறைவாகவே செலவானது: 6000 man-Rem!

கோட்டை அரணுள் அடைபட்ட கதிரியக்க நோபிள் வாயுக்களை [Noble Gases] வெளியே  அனுப்பும் போது, வரையறைக் குட்பட்டு 1% அளவே அனுமதி பெற்று புகைபோக்கி  வழியாகச் சென்றது! மிஞ்சியவை சிறிது சிறிதாக வடிகட்டப் பட்டுக் கோட்டையி லிருந்து  1% அளவை மீறாமல் வெளியாக்கப் பட்டது!

கதிரியக்க விளைவுகளால் பொது நபருக்கு ஏற்பட்ட பாதிப்புகள்

விபத்து நேர்ந்து இரண்டு நாட்களில் NRC [Nuclear Regulatory Commission] TMI-2 அணு உலைக்கு  5 மைல் வட்டாரத்தில் வாழும் கர்ப்பவதிகளையும், சிசுக்களையும் வீடுகளை விட்டு வேறு  இடங்களுக்குப் புகும்படி, பென்ஸில்வேனியா ஆளுநர் [Governor] மூல மாக ஆணை  பிறப்பித்தது! ஐந்து மைல் சுற்றளவில் குடியிருந்த 60% நபர்கள், 15 மைல் வட்டாரத்தில்  வாழ்ந்த 39% மக்கள் ஆணைக்குக் கீழ்படிந்து வெளியேறினர்! பிறகு அபாய வேளை  கடந்ததும் ஏப்ரல் 2 ஆம் தேதி அனைவரும் தம் வீடுகளுக்கு மீள அழைக்கப் பட்டனர்!  1999 மார்ச்சில் வெளியான TMI-2 ‘இருபது ஆண்டு கடப்பு நிகழ்ச்சி ‘ [Twentieth Anniversary]  அறிக்கையில் ஜாக் ராஸோ கூறியது:

1. கோட்டை அரணிலிருந்து வெளிவந்த கதிர்வீச்சு வாயுக்கள், திரவத்தின் கசிவால் பொது  நபருக்கு விளையும் மிகுதியான அபாய எதிர்பார்ப்புகள் [Extra Health Risks] மிகக் குறைந்த  அளவே!

2. TMI-2 அருகில் 50 மைல் வட்டாரத்தில் வாழும் மாந்தருக்கு அவரது வாழ்நாளில்  எதிர்பார்க்கப்படும், மதிப்பீடு செய்யப் பட்ட மிகுதிப் புற்று நோய் மரணம் [Extra Terminal  Cancer] ஒன்று! மற்றும் வேறு மரண நோய்கள், மரண மற்ற நோய்கள் இரண்டு!

1996 இல் பென்ஸில்வேனியா அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தின் [US District Court of  Pennsylvania] நீதிபதி ஸில்வியா ராம்போ [Sylvia Rambo] TMI-2 விபத்தால் சமர்ப்பிக்கப் பட்ட  2100 உடல்நலக் கேடு வழக்குகளை மெய்யில்லை என்று நிராகரித்துத் தள்ளினார்!

30 ஆண்டுகளுக்குப் பிறகு TMI-2 அணு உலையின் தற்போதைய நிலை!

1986 ஜூலை முதல் ரயில், மோட்டார் வாகனங்களில் கதிர்வீச்சுக் குப்பைக் கலன்களின்  பயணங்கள் தொடங்கின! 1990 ஜனவரி மாதம் TMI-2 அணு உலையில் உருகி கடும்  உலோகப் பாறையாய்ப் போன யுரேனியப் பிளவுக் கட்டிகள் யாவும் நீக்கப் பட்டன!  ஆயிரக் கணக்கான ராஞ்சன் கதிரியக்கம் கொண்ட பிளவுக் கழிவுகள் கவசக் கலன்களில்  ஏற்றப் பட்டு அமெரிக்க எரிசக்தித் துறையகத்தின் இதாஹோ தேசீயப் பொறியியல்  ஆய்வுக் கூடத்திற்குச் [U.S. Dept of Energy, Idhaho National Engineering Laboratory] சோதிக்கவும்,  அதன் பின் புதைக்கவும் அனுப்பப் பட்டன! பென்ஸில் வேனியாவிலிருந்து பத்து  மாநிலங்களைத் தாண்டி இதாஹோ இடுகாடுப் புதை பூமியில் கலன்களை இறக்கி விட்டு,  ஒரு முறை மீள 90,000 டாலர் [1989 நாணய மதிப்பீடு] செலவானது!

கதிர்த்தளக் கட்டுப்பாட்டு மேல் நிர்வாகி, டேல் மெர்ச்சென்ட் [Dale Merchant,Radiological Control  Field Operations] கூறியது: ‘TMI-2 அணு உலையின் பத்தாண்டு பராமரிப்பு முடிந்ததாகப்  பெருமை அடைகிறேன்! இதுவரைத் தொழிற் துறையில் யாரும் மேற்கொள்ளாத ஒரு  மாபெரும் சாதனை இது! தூரத்தில் தானாய்ச் செய்யும் ‘சுயப்பணி யந்திரங்கள், தொலை  இயக்குக் கருவிகள், பேரறுவை, உறிஞ்சல் பொறி நுணுக் கங்கள்,  [Robotics, Remote Toolings,  Cutting-Edge & Vacuum Technology, Handling Hot Radioactive Particles] யாவும் புதியதாய் வடிக்கப்  பட்டுப் பயன்படுத்தப் பட்டன!

1990-1993 ஆண்டுகளில் மிஞ்சிய அற்பப் பணிகள் யாவும் தீர்க்கப்பட்டு, முடிவாகச் சுத்தம்  செய்யப்பட்டு, 1993 டிசம்பரில் TMI-2 அணு உலை நிரந்தரக் கண்காணிப்பு நிலையில்  [Monitored Storage Condition] ஓய்வெடுத்தது! அதன் இரட்டைப் பிறவியான TMI-1 முற்றிலும்  செம்மைப் படுத்தப்பட்டு 1989 ஆண்டு முதல் 100% ஆற்றலில் [900 MWe] சிறப்பாக இயங்கி  வருகிறது!

திரி மைல் தீவு அணு உலையைச் சுத்தம் செய்ய நிதிச் செலவு

1979 TMI-2 அணுமின் உலை விபத்து நிகழும் போது, அமெரிக்க அதிபதியாக இருந்தவர்,  அணுவியல் துறையில் வல்லமை பெற்ற எஞ்சினியரான, ஜிம்மி கார்டர் [Jimmi Carter]!  விபத்து நேர்ந்த சில தினங்களில் கார்டர் நேராகச் சென்று TMI-2 விளைவுகளைக்  கண்ட றிந்தார்! அணுமின் உலைகளின் மீதுள்ள பொதுநபர் மதிப்பை மேற்படுத்த அமெரிக்க  அரசு திரி மைல் தீவின் கோர விளைவுகளுக்குப் பொறுப்பேற்று, விபத்தின் காரணத்தை  ஆய்ந்து, நிலையத்தைச் சுத்தம் செய்யும் இமாலயப் பணியையும் மேற்கொண்டது!  அமெரிக்க அணுமின் உலைகளைக் கண்காணிக்கும் ‘அணுக்கருக் கட்டுப்பாடு பேரவை ‘  [Nuclear Regulatory Commission] அனைத்து பராமரிப்புப் பணிகளையும் ஆணை யிட்டு  மேற்பார்வை செய்தது! TMI-2 அணுமின் நிலைய உரிமையாளி G.P.U. [General Public Utilities  Corp. Parsipanny, N.J.].

900 MWe ஆற்றல் கொண்ட TMI-2 அணு உலை இயக்குநர் மூடத்தனத்தால் விபத்தில்  சிக்கிச் சிதைந்த பிறகு, பத்தாண்டுகளுக்கு மேல் நிறுத்தம் ஆகி பராமரிப்பில் கால  தாமதமானதால், பல பில்லியன் டாலர் பணம் விரையமானது! 1987 ஆண்டு மதிப்பீடு  நிதியில் வெளியே வாங்க வேண்டிய ஆற்றலுக்கு மேற்கொள்ளும் பணத்தின் ஏற்ற  இறக்கத்துக்குத் தக்கவாறு [Replacement Cost of Power], நாளொன்றுக்கு $500,000 -$1000,000  டாலர் முடங்கிய நிலையத்தின் நஷ்டச் செலவுத் தொகையாகும்!

TMI-2 அணு உலைச் சுத்திகரிப்புச் செலவு ஒரு பில்லியன் டாலர் என்று [1983 நாணய  மதிப்பு] மதிப்பீடு செய்யப் பட்டது! 1979-1983 நான்கு ஆண்டுகளில் மட்டும் 60 மில்லியன்  டாலர் செலவாகி விட்டது! GPU உரிமையாளிக்கு இன்ஸூரன்ஸ் கம்பேனி அளித்த  தொகை 300 மில்லியன் டாலர்! அமெரிக்காவின் தொழிற் துறை நிறுவகங்கள் 100  மில்லியன் டாலர் அளிக்க முன்வந்தன! மற்றும் அமெரிக்க மின்னாற்றல் உற்பத்தி  நிறுவகங்கள் [Power Utilities] 64.6 மில்லியன் டாலர் உதவி செய்ய உறுதி கூறின! அமெரிக்க  அரசு [Dept of Energy] 159 மில்லியன் டாலர் அளித்தது! ஜப்பான் மின்னாற்றல் கூட்டகம்  [Japan Federation of Electric Power] தனது 22 எஞ்சினியர்களைப் பங்கு கெள்ள அனுப்பி, 18  மில்லியன் டாலர் நிதி அளித்து அணு உலைச் சுத்திகரிப்பில் துணை புரிய முன்வந்தது!

இறுதியில் TMI-2 சுத்திகரிப்புக்கு மெய்யாகச் செலவான தொகை 973 மில்லியன் டாலர்  [March 1999 Report]!

விபத்தில் முறையாக இயங்கிப் பாதுகாத்த சாதனங்கள்

TMI-2 விபத்து மூலம் அமெரிக்காவின் அழுத்த அணுமின் உலை [PWR, Pressurized Water  Reactor] டிசைன் ஆக்கநெறி வெற்றியை ஒரு வகையில் நிரூபித்துக் காட்டியது!

1. அபாய விளைகளால் சேர்ந்த 600,000 கதிர்வீச்சுத் திரவத்தையும், யுரேனியக்  கழிவுகளையும், கதிரியக்க வாயுக்களையும் 3 அடித் தடிப்புக் கோட்டை அரண் [Containment]  உள்ளடக்கி, பொது நபர்களைத் தாக்காதவாறு காப்பாற்றி யுள்ளது!

2. கதிரியக்கம் பொங்கும் சிதைந்து போன 50 டன் உருகிய யுரேனியம், 50 டன் உருகாத  யுரேனியம், தகர்ந்து போன 50 டன் உலைச் சாதனங்களை 2800 டிகிரி C உஷ்ணத்தில், 2175  psi அழுத்தத்தில் [15 MPa] தாங்கிக் கொண்டு, ஒருவிதப் பிளவோ, கீரலோ இல்லாமல் அணு  உலைக்கலன் [Reactor Vessel] கட்டுப் படுத்தியது, சிறப்பான டிசைனைக் காட்டுகிறது!

3. மில்லியன் கியூரிக் கணக்கில் கதிரியக்கத் திரவம் கோட்டைக்குள் சேர்ந்தாலும், மிகக்  குன்றிய அளவே [Radioactive Emission] அரணை விட்டு வெளியேறியது!

4. அணு உலைக் கலனில் எங்கெல்லாம் நீர் [Core Cooling] இருந்ததோ, அங்கெல்லாம்  எரிக்கோல்கள் [50 டன் (50%)] சேதமடைய வில்லை!

5. எதிர்பார்த்த அளவுக்கு அணுப்பிளவுத் துணுக்குகளால் [Fission Product Behaviour]  இன்னலோ அல்லது இடைஞ்சலோ பணியாளிகளுக்கு ஏற்பட வில்லை!

TMI-2 விபத்தில் அமெரிக்கா கற்றுக் கொண்ட பாடங்கள்

TMI-2 அணுமின் உலை விபத்திற்கு மூல காரணமான இயக்குநர்கள் யாவரும்  வேலையிலிருந்து வெளியே தள்ளப் பட்டனர்! ஆனால் யந்திரத் தவறுகளும், சாதனப்  பழுதுகளும், இயக்கப் பராமரிப்புச் சீர்கேடு களும் பின்னக் கொண்டு, பில்லியன் டாலர்  விபத்து நேர்ந்த போது, ஒருதிசைக் கண்ணோட்டத்தில் அவர்களை மட்டும் தண்டித்தது  நியாயம் அற்ற கொடுஞ் செயல்! அணு உலை டிசைநர், கட்டுநர், இயக்குநர், பயிற்சி  அளிப்போர் ஆகிய அனைவரும் குற்றக் கூண்டில் ஏற்றப்பட்டு விசாரணைக் குள்ளாகித்  தண்டிக்கப் பட்டிருக்க வேண்டும்!

பணி புரிந்த இயக்குநர்களுக்கு, அணு உலை இயக்க நுணுக்கங்களில் போதிய பயிற்சிகள்  அளிக்காதது GPU உரிமையாளி செய்த முதற் தவறு! மிகவும் சிக்கலான அணு உலை  இயக்க ஏற்பாடுகளில் முரண்பாடுகள் நிகழ்ந்து அபாயம் விளையப் போகும் வேளைகளில்,  இயக்குநர் விரைவாகச் சிந்தித்துச் செயல்படாதது, அணுக்கரு விஞ்ஞானம், பொறியியல்,  வெப்ப யியக்கவியல் [Nuclear Physics, Nuclear Engineering & Thermodynamics] ஆகியவற்றில்  படிப்பில்லாமல் போனதையும், மின்சார நிலையத்தில் போதிய பயிற்சிகள் [Power Station  Operation Training] யில்லாமல் இயக்குநர் ஆனதையும் காட்டுகிறது!

1979 இல் அமெரிக்கா TMI-2 அணுமின் உலை விபத்திற்கும், இந்தியாவில் போபால் நகரில் 1983 இல் நேர்ந்த விஷ வாயு விபத்துக்கும் பல ஒற்றுமைகள் காணப் படுகின்றன!  இரண்டும் அமெரிக்க உரிமையாளிகளால் நிர்வாகம் செய்யப் பட்டன! இரண்டு  விபத்துகளும் தூண்டப் பட்டு பேரழிவும், பெருஞ் செலவும் ஏற்பட மூல காரணமானவர்  போதிய படிப்பற்ற, பயிற்சியற்ற, சிந்தனை குன்றிய இயக்குநர்களே! அவ்வாறு தரமற்ற  இயக்குநர்களை நுணுக்கமான பணிகளைச் செய்ய அனுமதித்த நிர்வாகிகளே முதற்  குற்றவாளிகளாக கருதப் பட்டு ஏனோ விசாரிக்கப் படவில்லை!

அணுமின் நிலைய ஆக்க நெறிகளில் நான்கு துறைகளில் செய்முறைகள் முற்றிலும்  திருத்த மாகி NRC தனது புதிய Nureg-0737 அறிக்கையை 1980 அக்டோபரில் வெளியிட்டது!

1. அணு உலை இயக்கப் பாதுகாப்பு [Reactor Operational Safety]

2. அணு உலைத் தள அமைப்பு & அணு உலை டிசைன் [Reactor Siting & Design]

3. பிரதம வெப்பத் தணிப்பு நீரிழப்பு, நீராவி ஜனனி நிரப்பு நீரிழப்பு ஆகிய அபாயங்களைக்  கட்டுப்படுத்தல் [Handling Loss of Primary Coolant & Loss of Secondary Coolant (Feedwater) Accidents]

4. அபாய நிகழ்ச்சிகளை எதிர்கொள்ள தயாரிப்பு முறைகள், கதிர்வீச்சுத் தாக்குதல் களைக் கட்டுப்படுத்தல் [Emergency Preparedness & Radiation Effects], அபாய காலத்தில் பொதுநபர்  பின்பற்றும் பாதுகாப்புப் பயிற்சிகள்.


அமெரிக்காவின் எதிர்கால அணுமின் உலைகளின் நிலை

TMI-2 விபத்துக்குப் பிறகு NRC எதிர்கால அணுமின் திட்டங்களுக்குக் கடும் விதிகளையும், பெரும் தேவைகளையும், நெடும் உளவு முறைகளையும் புகுத்தி முன்னறிவித்துப் பல புதிய லைஸென்ஸ் நெறி முறைகளை வகுத்தது! அவற்றில் நீடித்த இயக்குநர் பயிற்சிகள், உயர்தரத் தேர்ச்சி முறைகள் அழுத்தமாகக் கூறப் பட்டுள்ளன! அடுத்து புதிய நிலையங்கள் உருவாகும் முன்பே அவற்றின் ‘போலி அணுமின் உலை ஆட்சி அரங்குகள்’ [Reactor Simulator Panels] அமைப்பாகி, நிலைய இயக்குநருக்கு அணுமின் உலையின் அபாய வேளைப் பயிற்சிகள் அனைத்தும் முன்பாகவே கற்பிக்கப்பட்டு இயக்குநர் சோதிக்கப் பட வேண்டும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது!

அமெரிக்காவில் இப்போது 104 அணுமின் உலைகள் இயங்கிக் கொண்டு 97,400 MWe [20%] மின்னாற்றலைப் பாதுகாப்பாகப் பரிமாறி வருகின்றன! 1979 ஆண்டில் நேர்ந்த TMI-2 விபத்திற்குப் பிறகு மூடப்பட்ட நிலையங்கள் பல புத்துயிர் பெறப் போகின்றன!  அடுத்து பழையதாய்ப் போய் மூடப்பட்ட நிலையங்கள் பல புதுப்பிக்கப் படப்  போகின்றன!  அணுமின் சக்திக்கு அமெரிக்காவில் மீண்டும் பச்சைக் கொடி காட்டப் பட்டுள்ளது ஓர் நல்ல திருப்பமே ஆயினும், இப்போது ஜப்பானிய புகுஷிமா விபத்து (மார்ச் 11, 2011) அணுமின் உலைகளின் தலை விதியை நேர் மாறாக முற்றிலும் மாற்றி விடலாம்.  கடற்கரை ஓரங்களில் நிறுவப் பட்டு இயங்கி வரும் அணுமின் உலைகள் மீளாய்வு செய்யப் பட்டு மீண்டும் சீராக்கப் படலாம்.  காரணம் பல மாநிலங்களில் இப்போது அடிக்கடி இருளாட்சியும் [Blackouts (Complete Shutdown)], பழுப்பாட்சியும் [Brownouts (Partial Shutdown)] இடையிடையே உண்டாகி மின்சக்தியின் தேவையும், தொடர்ந்த சேவையும் உலகில் மிகையாகி வருகிறது!

++++++++++++++++++++++++

Timeline Date Event (Three Mile Island Unit -1 & Unit -2)

1968–1970 Construction

April 1974 Reactor-1 online

Feb 1978 Reactor-2 online

March 1979 TMI-2 accident occurred. Containment coolant and unknown amounts of radioactive  contamination released into environment.

April 1979 Containment steam vented to the atmosphere in order to stabilize the core.

July 1980 Approximately 1591 TBq (43,000 curies) of krypton were vented from the reactor building.

July 1980 The first manned entry into the reactor building took place.

Nov. 1980 An Advisory Panel for the Decontamination of TMI-2, composed of citizens, scientists, and State  and local officials, held its first meeting in Harrisburg, PA.

July 1984 The reactor vessel head (top) was removed.

Oct. 1985 Defueling began.

July 1986 The off-site shipment of reactor core debris began.

Aug. 1988 GPU submitted a request for a proposal to amend the TMI-2 license to a “possession-only”  license and to allow the facility to enter long-term monitoring storage.

Jan. 1990 Defueling was completed.

July 1990 GPU submitted its funding plan for placing $229 million in escrow for radiological  decommissioning of the plant.

Jan. 1991 The evaporation of accident-generated water began.

April 1991 NRC published a notice of opportunity for a hearing on GPU’s request for a license  amendment.

Feb. 1992 NRC issued a safety evaluation report and granted the license amendment.

Aug. 1993 The processing of accident-generated water was completed involving 2.23 million gallons.

Sept. 1993 NRC issued a possession-only license.

Sept. 1993 The Advisory Panel for Decontamination of TMI-2 held its last meeting.

Dec. 1993 Post-Defueling Monitoring Storage began.

Oct. 2009 TMI-1 license extended from April 2014 until 2034.

++++++++++++++++

தகவல்:

1. What Happened at Harrisburg ? And Can it happen here ? By David Post [1979]

2. The Spectrum, Institute of Electrical & Electronics Engineers Inc [April 1984]

3. Nuclear Power, A Rational Approach By Robert Deutsch [1987]

4. TMI Decontamination Activities, Nine Years Later By: Gordon Tomb, GPU Nuclear Power Corporation [Sep  1988]

5. TMI Reactor Materials Behaviour & Plant Recovery, TMI Topical Meeting [Jan 1989]

6. The Journal of the National Academy for Nuclear Training, Twenty Years Later in TMI [Jan-Apr 1999]

7. Three Mile Island, A 20th Anniversary Remembrance By: Jack Raso M.S., R.D. [March 1999]

8. Staffs Report to The Presidents Commission on the Accident at Three Mile Island [Sep 2002]

9. Backgrounder on the Three Mile Island Accident  (US NRC Report) (August 2009)

10. http://en.wikipedia.org/wiki/Nuclear_meltdown (Nuclear Meltdown) (March 26, 2011)

11. http://en.wikipedia.org/wiki/Three_Mile_Island_accident (March 25, 2011)

**************************

இந்தியாவில் நேர்ந்த நரோரா அணுமின் நிலைய வெடி விபத்து

 


 

[Narora Atomic Power Station]

சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா


 

தவறுகளைப் புரிவது மானுடம்! ஆனால் தவறுகளைக் குறைப்பது தெய்வீகம்!

[To err is human! But erring less is Divine!]

 

முன்னுரை: 1979 இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல்கள் உருகிய விபத்தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த செர்நோபிள் அணுமின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்சமூட்டி அதிர்ச்சிக்குள் தள்ளி விட்டுள்ளன.  பயங்கரச் செர்நோபிள் விபத்துக்குப் பிறகு 25 ஆண்டுகள் கடந்து ஜப்பானில் 2011 மார்ச் மாதம் 11 ஆம் தேதி 9.0 ரிக்டர் பேரழிவுப் பூகம்பமும் 30 அடி உயரப் பிரளயச் சுனாமியும் தூண்டிப் புகுஷிமாவில் அமைந்துள்ள நான்கு அணுமின் உலைகள் நிறுத்தமாகி அவற்றின் எரிக்கோல்கள் தணிப்பு நீரின்றி நீராவியில் ஹைடிரஜன் வாயு சேர்ந்து வெடிப்புண்டாக்கி அணு உலையின் இரண்டாம் கவசக் கட்டிடத்தின் மேற்தளங்கள் தூளாயின.  அதனால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிக் கதிரியக்கமும் வெளியேறிப் பணியாட்களும் சில பொதுநபரும் கதிரடி பெற்றார்கள்.  செர்நோபிள் விபத்து நிலை 7 (உச்சம்) என்றும் திரிமைல் தீவு விபத்து நிலை 5 என்றும் அகில உலக அணுசக்தி ஆணையகம் (IAEA – International Atomic Energy Agency) மதிப்பீடு செய்தது.  அந்த ஒப்பு நோக்கில் இப்போது ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்து நிலை 4 லிருந்து 5 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.

இந்தியாவில் இப்போது 20 அணுமின் நிலையங்கள் (2011 மார்ச் வரை) இயங்கி 4780 MWe மின்சார ஆற்றலை மின்வடங்களில் பரிமாறி வருகின்றன.  அவற்றில் ஜப்பான் புகுஷிமா மாடல் அணுமின் உலைகள் போல் (BWR – Boiling Water Reactor) மேற்குக் கடற்கரை தாராப்பூரில் (மகாராஷ்டிரா) இரண்டு அணுமின் உலைகள், சுமார் 40 ஆண்டுகள் இயங்கி அவை ஓய்வெடுக்கும் காலம் நெருங்கி விட்டது.  தமிழ் நாட்டின் கிழக்குக் கடற்கரை ஓரம் இரண்டு கனநீர் அழுத்த அணுமின் உலைகள் 27 ஆண்டு களாய் மின்சாரம் பரிமாறி வருகின்றன. தமிழகத்தின் தென்கோடி முனையில் கட்டுமானம் ஆகிவரும் கூடங்குளம் ரஷ்ய அணுமின் அணுமின் உலைகள் (VVER -1000) இரண்டில் ஒன்று ஓரிரு மாதங்களில் யுரேனிய எரிக்கோல்கள் இடப்பட்டு இயங்க ஏற்பாடுகள் துரிதமாய் நிகழ்ந்து வருகின்றன.

ஜப்பான் வடகிழக்குக் கடற்கரையில் புகுஷிமாவில் நேர்ந்த அணு உலைகள் விபத்தி லிருந்து இந்திய அணுசக்தித் துறையினர் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல இருக்கின்றன.  திரிமைல் தீவு, செர்நோபிள் விபத்துகளுக்குப் பிறகு இந்திய அணுமின் உலைகள் செம்மை ஆக்கப்பட்டன. அதைப் போல் முதலில் கடற்கரை அணுமின் நிலையங்களில் அபாயப் பாதுகாப்பு வெப்பத் தணிப்பு நீர் வசதிகள் இரட்டிப்பு அல்லது முப்புற முறைகளில் மேம்படுத்தப்பட வேண்டும்.  எல்லாவற்றுக்கும் மேலாக அணுமின் உலைகளைப் பற்றியும் கதிரியக்கப் பாதுகாப்பு பற்றியும் நகரங்கள் அனைத்திலும் பொதுமக்களுக்கு அறிவு புகட்டும் காட்சியகங்கள் அமைக்கப்பட வேண்டும்.  அணுமின் உலைக்கு 25 மைல் அருகில் வாழ்வோருக்கு அபாய காலப் பாதுகாப்புப் பயிற்சிகள் ஒவ்வோர் ஆண்டும் அளிக்கப் படவேண்டும்.

ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளில் வெடிப்பு நேர்ந்தது போல் இந்தியாவின் நரோரா அணுமின் நிலையத்தில் 1993 ஆம் ஆண்டில் ஒரு வெடி விபத்து நிகழ்ந்தது.  ஆனால் அந்த வெடிப்பு அணு உலையால் ஏற்பட வில்லை.  மின்சாரம் உண்டாக்க நீராவியால் சுழலும் டர்பைன் வளைத் தட்டுக்கள் முறிந்து, தீப்பொறிகள் கிளம்பி கசியும் ஹைடிரஜன் வாயு எரிந்ததால் மூண்ட வெடிப்பு.  அவ்வெடி டர்பைன் கட்டடத்தைத் தூளாக்கியது.  அணு உலை பாதுகாப்பாக நிறுத்தமாகி எரிக்கோல் களுக்கு வெப்பத் தணிப்பு நீரை டீசல் ஜனனிகள் ஓடிச் சீராக அளித்தன.  ஆனால் ஆட்சி அரங்கு (Control Room) புகை மூட்டத்தில் நிரம்பி நிலைய இயக்குநரை வெளியே செல்ல வைத்தது.  நிலைய மின்சாரப் பரிமாற்ற வடங்கள் சேதமாகிப் பல சாதனங்கள் மின்னாற்றல் இழந்தன.

++++++++++

 

ரஷ்யாவின் செர்நொபில் அணு உலை வெடிப்பு, அமெரிக்காவின் திரிமைல் தீவு அணு உலை விபத்து ஆகியவற்றைப் போலின்றி, 1993 ஆம் ஆண்டு யந்திரப் பழுதுகளால் டர்பைன் ஜனனியில் தீ வெடிப்பு உண்டாக்கி, அணுமின் உலைப் பாதுகாப்பு ஏற்பாடு களை முடமாக்கியது, நரோராவில் நேர்ந்த விபத்து! அபாயத்தின் போது அணு உலை பாதுகாக்கப் பட்டதால், சூழ்வெளியில் கதிரியக்கம் கசிந்து வெளியே பரவ வில்லை! தீ விபத்தால் பெருஞ்சேதம் விளைந்ததே தவிர, நல்ல வேளை மாந்தருக்கு எவ்விதக் காயமோ, அபாயமோ, கதிரடியோ அன்றி மரணமோ எதுவும் நேரவில்லை! ஆனால் கதிரியக்க அணு உலை வெப்பம் அதிர்ஷ்ட வசமாகத் தணிக்கப் பட்டாலும், கடும் புகை மூட்டத்தால் இயக்குநர்கள் கண்காணிக்கும் ஆட்சி அறையில் நின்று, அபாயத்தைக் கட்டுப் படுத்த முடியாமல் புறக்கணித்து ஓட வேண்டிய தாயிற்று!


இந்திய அணுமின் நிலையத்தில் நிகழ்ந்த முதல் விபத்து!

முப்பது ஆண்டுகளுக்கு மேலாகச் சிக்கலான பல அணு ஆராய்ச்சி உலைகளையும், மின்சக்தி பரிமாறும் அணுமின் நிலையங்களையும், பாதுகாப்பாகப் பாரதம் இயக்கிப் பராமரித்து வரும் சமயத்தில் திடாரென 1993 மார்ச் 31 ஆம் தேதி டெல்லிக்கு அருகே இயங்கிக் கொண்டிருந்த நரோரா அணுமின் நிலையத்தில் தீப்பற்றி ஒரு பெரும் வெடி விபத்து நிகழ்ந்து உலகெங்கும் ஓர் அதிர்ச்சியை உண்டாக்கியது! அணுமின் நிலைய இயக்கத்தில் சிறப்பான அனுபவம் பெற்ற இந்திய நிபுணர்கள் கண்முன்பாக, இத்தகைய கோரச் சம்பவம் நேர்ந்தது மன்னிக்க முடியாத ஓர் நிகழ்ச்சி யாகும்! பொதுத்துறை டர்பைன் ஜனனிகளைத் தகர்த்து, டர்பைன் கட்டடத்தில் பல பகுதிகளை எரித்து, மின்சார வயர்களை கரித்துச் சாம்பலாக்கி, அணு உலைப் பாதுகாப்பு ஏற்பாடுகளை முடமாக்கிய அந்த விபத்து விளையாமல், இயக்குநர்கள் முன்னறிவுடன் கண் காணித்து நிறுத்தி யிருக்க முடியும் என்பது கட்டுரை ஆசிரியரின் ஆழ்ந்த கருத்து.

அழுத்தக் கனநீர் இரட்டை நிலையத்தின் முதல் யூனிட்டில்தான் விபத்து நேர்ந்தது! அணு உலையிலோ அன்றி அணு உலைத் துணை உறுப்புகளிலோ எவ்விதப் பழுதும் உண்டாகித் தீ தூண்டப் பட வில்லை! நீராவி ஓட்டும் பொதுத்துறைச் சாதனமான [Conventional Equipment] டர்பைன் கீழ் நிலைச் சுழற் தட்டுக்கள் [Low Pressure Turbine Blades] ‘தளர்ச்சி முறிவுகளால் ‘ [Fatigue Failures] அநேகம் உடைந்து தீப்பொறி எழுப்பி, ஜனனியின் கசிவில் வெளியேறிய ஹைடிரஜன் வாயுவுடன் மூர்க்கமாய்த் தீப்பற்றி வெடிப்புப் சத்தம் உண்டானது! இந்தியா, பாகிஸ்தான், அர்ஜென்டைனா, கொரியா, ருமேனியா, சைனா ஆகிய உலக நாடுகளில் ஓடும் கனநீர் அணுமின் நிலையங்களில், டர்பைன் தட்டுகள் உடைந்து தீப்பற்றி ஹைடிரஜன் வாயுவுடன் எரிந்து வெடிப்பது, அதுவே முதல் தடவை!

யந்திரப் பழுதும், அடுத்து மனிதத் தவறும் சேர்ந்து உண்டாக்கிய மாபெரும் விபத்துத் தரத்தில் அது மூன்றாவது மட்டத்தில் [Level:3] மதிப்பிடப் படுகிறது! யந்திரப் பழுது முதலில் ஆரம்ப மானது! அதன் எச்சரிக்கை அளவை இயக்குபவர் கவனமாகக் கண்காணித்துச் செப்பணிடாததால் அடுத்துப் பயங்கர விபத்து நிகழ்ந்தது! நல்ல வேளையாக அணு உலை நிறுத்தப் பட்டு, தொடர்ந்து நியூட்ரான் பெருக்கம் தடைபட்டு, வெப்ப சக்தித் தணிக்கப் பட்டது! விபத்தின் போது சாதனங்களும், மின்சாரக் கேபிள்களும் தீப்பற்றிப் பெரும் சேதம் விளைந்து, அணு உலைப் பாதுகாப்புக்குப் பல இடையூறுகள் ஏற்பட்டாலும், மாந்தருக்குக் காயமோ, மரணமோ, கதிர்வீச்சுத் தாக்குதலோ எதுவும் உண்டாக வில்லை!

ஆனால் நிலைய இருட்டடிப்பில் ஒரு பெரும் வெடிப்பு விபத்தைக் கையாண்டு, அணு உலையில் தவறுகள் எதுவும் நிகழாதவாறு, பாரத இயக்குநர் பலர் அதைப் பாதுகாத்த சாமர்த்தியம் போற்றத் தகுந்த ஒரு சாதனையாகும்!

நரோரா அணுமின் நிலையத்தின் அமைப்பு

நரோரா அணுமின் நிலையம் டெல்லிக்கு அருகே கங்கை நதிக் கரை ஓரம், உத்திரப் பிரதேச மாநிலத்தில் அமைக்கப் பட்டுள்ளது. 235 MWe ஆற்றல் கொண்ட இரட்டை அணு உலைகள், கனடாவின் ‘காண்டு ‘ அழுத்தக் கனநீர் அணு உலை [CANDU-220 MWe Pressurized Heavy Water Reactor] இனத்தைச் சார்ந்தவை. முதலில் நிறுவப் பட்ட ராஜஸ்தான் முன்னோடி அணு உலையைப் [Rajasthan Prototype Atomic Power Reactor] பல முறைகளில் மாற்றம் செய்து, இரண்டாம் பிறப்பு முற்போக்கு அணு உலைகளாக [Second Generation Advanced Candu Reactors] அமைக்கப் பட்டது, நரோரா! முதலாவது யூனிட் 1989 ஆம் ஆண்டில் இயங்க ஆரம்பித்து, 1991 ஆண்டிலிருந்து வணிக ரீதியாக இயங்குவதாய் அறிவிக்கப் பட்டது! 1989-1993 ஆண்டுகளில் அந்த யூனிட் 50 MWe முதல் 220 MWe மின்னாற்றல் அனுப்பி வந்தது! இரண்டாம் யூனிட் 1991 ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இரண்டு நிலையங்களின் 90% உறுப்புகள் உள்நாட்டுத் தொழிற் சாலைகளைக் கொண்டு உருவாக்கப் பட்டவை.

நரோரா நிலையங்கள் கட்டுவதற்கு 12 வருடங்களுக்கும் மேல் ஆகி விட்டது! காரணம் அணு உலை உறுப்புகளின் டிசைன் வினைகளும், அவற்றைத் தயாரித்து அமைக்கும் கட்டட வேலைகளும் ஒன்றாகச் செய்யப் பட்டு வந்தன! சில சமயங்களில் டிசைன் பணிகள் தாமதப் படவே, கட்டமைப்பு வேலையாளிகள் காத்திருக்க வேண்டிய தாயிற்று! பாரதத்தில் முதன் முதலாகத் தயாரிக்கப் பட்ட நீராவி ஜனனிகள் [Steam Generators] வருவதற்கு மிகவும் தாமத மானதால், அதைச் சார்ந்த பல பணிகளும் தடைப் பட்டன!

அணு உலை, அணு உலைத் துணைச் சாதனங்கள் யாவும் இரட்டைக் கான்கிரீட் கோட்டை அரண்களின் உள்ளே அமைக்கப் பட்டுள்ளன. இயற்கை யுரேனியம் எருவாகவும், கனநீர் மிதவாக்கியாகவும், கனநீர் பிரதம வெப்பக் கடத்தியாகவும் அணு உலையில் பயன்படுகின்றன. நீராவி ஜனனியில் சாதாரண நீர் உபயோக மாகிறது. காலாண்டிரியா அணு உலைக் கலனில் [Calandria Reactor Vessel] 306 அழுத்தக் குழல்கள் [306 Pressure Tubes] நுழைக்கப் பட்டு, ஒவ்வொரு குழலிலும் 12 எரிக்கட்டுகள்  [12 Fuel Bundles in each Tube] உள்ளன. ‘காளான் ‘ வடிவ முடைய நீராவி ஜனனிகள் [Mushroom type Steam Generators] நான்கும், வெப்பக் கடத்திக் கனநீரை அணு உலை, கொதி உலை ஆகியவற்றின் ஊடே சுற்றி அனுப்ப நான்கு பூதப் பம்புகளும் [Giant Pumps] அணு உலைக்கு மேல் தளத்தில் அமைக்கப் பட்டுள்ளன!

பொதுத்துறை நீராவிச் சாதனங்கள் டர்பைன், தணிப்புக் கலன், கொதி உலை அனுப்பு நீர் ஏற்பாடுகள் [Boiler Feed Water], மற்றும் மின்சாரம் உற்பத்திச் சாதனங்கள் ஜனனி, மின்காந்த எழுப்பி [Electric Generator & Exciter] போன்றவை டர்பைன் கட்டத்தில் நிறுவப் பட்டுள்ளன. டர்பைன் தணிப்புக்கலனில் உள்ள [Turbine Condensers] தளர் நீராவியைக் குளிர்விக்க மாபெரும் இரட்டைக் ‘குளிர்ச்சிக் கோபுரங்கள் ‘ [Cooling Towers] நிலையத்தின் பரந்த வெளியில் அமைக்கப் பட்டுள்ளன!

பூகம்பம் தாக்கும் பாதுகாப்பற்ற தளத்தில் [Seismically unsafe Area] நரோரா அணுமின் நிலையம் அமைக்கப் பட்டுள்ளது என்று பல எதிர்ப்புக் கிளர்ச்சிகள் ஆரம்பத்தில் எழுந்தன! ஆனால் அணுசக்தி துறையகம் தனித் துறைஞர் ஆய்வுரைகளையும் மற்றும் தமது ஆராய்ச்சிகளையும் எடுத்துக் கொண்டு, பூகம்ப விளைவுகளால் தகர்க்கப் படாத முறையில் அணு உலை உறுதியாகக் கட்டப் பட்டுள்ளது என்று அறிவிக்கிறது!

கனநீர் அணு உலைகளைக் கட்டுப்படுத்தும் பாதுகாப்பு ஏற்பாடுகள்

அபாயப் பாதுகாப்புக்கு அணு உலையை நிறுத்த ராஜஸ்தான், கல்பாக்கம் நிலையங்களில், மிதவேக நியூட்ரான் பெருக்கத்தை முற்றிலும் தடுக்க, மிதவாக்கிக் கனநீரை உலைக் கலனிலிருந்து ஈர்ப்பியல்பில் கொட்டிவிடும் ஏற்பாடு [Dumping System by Gravity] உள்ளது. அவற்றைப் போலின்றி முற்போக்காக நரோரா அணு உலைகளில் விரைவாக நிறுத்தும் வேறுபாடான, தனிப்பட்ட தடுப்பு ஏற்பாடுகள் இரண்டும் [Two Independent Fast-acting Shutdown Systems], மெதுவாக நிறுத்தும் தடுப்பு ஏற்பாடு ஒன்றும் [One Slow-acting Shutdown System] அமைக்கப் பட்டுள்ளன. அபாய கால மின்சாரம் [Emergency Power Supply] இல்லாத ‘நிலைய இருட்டடிப்பு ‘ [Station Blackout] சமையத்தில், சுயமாய் இயங்கும் தடுப்பு முறைகள் பணி புரியா! அப்போது கையாட்சி முறையில் மிதவாக்கிக் கனநீரில் நியூட்ரான் நஞ்சைச் செலுத்தும் [Neutron Poison Injection System] நான்காவது ஏற்பாடும் உள்ளது.


‘காட்மியம் கோல்கள் ‘ கொண்ட பிரதமத் தடுப்பு ஏற்பாடு ஈர்ப்பியல் விசையால் [Primary Shutdown System with Cadmium Rods, dropping under gravity] அணு உலைக்குள் விழுபவை! துவிதத் தடுப்பு ஏற்பாடு [Secondary Shutdown System] ‘லிதியம் பென்டாபோரேட் ‘ திரவத்தை 12 செங்குத்துக் குழல்களில் [Lithium Pentaborate Solution in 12 Vertical Tubes] கொண்டது. மெதுவாய்ப் பாதுகாக்கும் மூன்றாவது முறைப்பாடு: போரிக் ஆஸிட் நஞ்சை கனநீர் மிதவாக்கியில் செலுத்திக் கலக்கும் ஏற்பாடு! காட்மியம், லிதியம் பென்டாபோரேட், போரிக் ஆஸிட் ஆகிய அனைத்தும் அணுப்பிளவு வினைகளில் உண்டாகும் நியூட்ரான்களை விழுங்கி, அவற்றின் பெருக்கத்தைத் தடுப்பவை!

விபத்தின் போது அணு உலை வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள்

அணுமின் நிலையங்களில் எதிர்பார்க்கப்படும் நான்கு வித விபத்துக் காட்சிகள் [Four Accident Scenarios] ஆய்வுக்கு எடுத்துக் கொள்ள முக்கியமானவை:

1. அணு உலையில் ‘வெப்பக் கடத்தித் திரவ இழப்பு விபத்து ‘ [Loss of Coolant Accident (LOCA)]

2. நிலைய இருட்டடிப்பு (அபாய கால அனைத்து மின்சார வினியோக இழப்பு) [(Station Blackout) Loss of Emergecy Power with Both Class I & II Supply].

3. அணு உலை நியூட்ரான் பெருக்கக் கட்டுப்பாடு இழப்பு (வெப்ப சக்தி மீறல்) [Loss of Regulation (LOR)]

4. நிலையத்தின் முக்கிய நீராவிப் பெருங் குழல் முறிவு [Main Steam Line Break].

முதல் விபத்தைக் கையாள நான்கு வித பாதுகாப்பு முறைபாடுகள் உள்ளன:

1. மேல் அழுத்த கனநீர் செலுத்தும் ஏற்பாடு [High Pressure Heavy Water Injection System].
2. இடை அழுத்த நீர் செலுத்தும் ஏற்பாடு [Intermediate Pressure Light Water Injection System].

3. கீழ் அழுத்த நீர் செலுத்தும் ஏற்பாடு [Low Pressure Light Water Injection System].

4. நீண்ட கால கீழ் அழுத்த நீர் சுற்றும் ஏற்பாடு [Long Term Low Pressure Light Water Recirculation System].

இவற்றில் பல ஏற்பாடுகள் மூன்றில் இரட்டை உடன்பாடு [Two out of three Coincidence Logic] விதியைப் பின்பற்றுபவை!

நரோரா வெடிப்பில் விளைந்த எதிர்பாராத விளைவுகள்

விபத்து நேர்ந்த அன்றைய நாளில் [1993 மார்ச் 31] முதல் யூனிட் 185 MWe ஆற்றலில் இயங்கி வந்தது. அந்தச் சமயத்தில் இரண்டாவது யூனிட் நிறுத்தமாகிச் செப்பணிடும் பணிகள் செய்யப் பட்டு வந்தன. காலைப் பொழுது புலர்வதற்கு முன்பு 3:31 A.M. மணிக்கு ஓடிக் கொண்டிருந்த டர்பைன் உச்ச அதிர்வுகளால் திடாரென நிறுத்தம் [Tripped due to High Vibrations] ஆனது! ஆட்சி அறையில் டர்பைன் ஜனனி துணை உறுப்புக்களின் காட்சி முகப்பில் [Control Room Turbo-Generator Auxiliary Panels] பல எச்சரிக்கைச் சிவப்பு விளக்குகள் பளிச்சிட்டு கீச்சொலி எழுப்பின! அதே சமயம் உண்டான ஓர் பேரிடிச் சத்தம் ஆட்சி அறை, டர்பைன் கட்டடத்தின் உள்ளும் புறமும் பணி புரிந்த இயக்குநர் காதுகளைப் பிளந்தது! அத்துடன் பேரதிர்ச்சியில் ஆட்சி அறைத் தளமே ஆட்டம் கண்டது! குப்பென்று வெப்பக் காற்று தூசிகளைக் கிளப்பிக் கொண்டு வீசியது!

டர்பைன் மாளிகையில் ஜனனியின் உராய்வு வளையங்கள் முனையில் [Slip Rings End of Generator] பெருந்தீப் பற்றக் காணப் பட்டது! இரண்டாவது யூனிட் ஓரம் ஓய்வில் வைக்கப் பட்ட யந்திரத் தூக்கியில் இருந்த வேலையாளி [Turbine Building Crane Operator], முதலாவது யூனிட் டர்பைன் தொகுப்பிலும் [Tubine Set] பெருந் தீப்பற்றி நீல நிறத்தில் எரியக் கண்டார்! டர்பைன் மசிவு ஆயில் [Turbine Lubricating Oil] எல்லா இடத்திலும் சிந்தி அவற்றிலும் தீப் பற்றிப் பெருகியது! அத்துடன் வெடித்த பாகங்களிலிருந்து குப்பெனக் கசிந்து வெளியேறும் வெப்ப நீராவியின் வெண் முகில் மண்டலம்! தீ அணைப்புப் படையினர் உடனே அழைக்கப் பட்டனர்! அபாயச் செய்தியைக் கேட்டு, அணு உலையைச் சேர்ந்த 50 பேர்கள் உதவி செய்ய நிலையத்துக்கு விரைந்தனர்.

மில்லி வினாடி நேரத்தில் நிலையத்தின் மின்சாரம் அனுப்பும் யூனிட் டிரான்ஸ்ஃபார்மர் [Unit Transformer], ஜனனியின் டிரான்ஸ்ஃபார்மர் [Generator Transformer], ஜனனிக்கு மின்காந்தம் ஊட்டும் தொடர்பு [Generator Field Breaker], 6.6 KV மின்சார வினியோகத் தொடர்பு [6.6 KV Station Breaker] யாவும் துண்டிக்கப் பட்டு அணுமின் நிலையம் மின்சாரம் இன்றி தனிப்பட்டுப் போனது! 600 மெகா வாட் வெப்ப சக்தியைக் கடத்தி நீரனுப்பும் நான்கு பூதப் பம்புகளும் நின்று போயின! கொதி உலையில் 600 மெகா வாட் வெப்ப சக்தியை மாற்றும் டர்பைன் யந்திரம் உடைந்து நின்று போனதால், நீராவி கசிந்து டர்பைன் மாளிகை எங்கும் பரவியது!

தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்த அணு உலை 39 வினாடிக்குப் பின் ஆட்சி அறை இயக்குநரால் நிறுத்தப் பட்டது! ஆட்சி அறையின் காட்சி முகப்பில் [Control Room Indicating Panels] அநேக எச்சரிக்கைச் சிவப்பு விளக்குகள் சிமிட்டிச் சிமிட்டிக் கூச்சலிட்டன! காரணம் ஆட்சி அறைக் காட்சி அரங்கு உபரிகளுக்கு மின்சார அனுப்பும் வயர்களில் [Control Component Power Supply] தீப் பற்றி அவை யாவும் துண்டிக்கப் பட்டன! உடனே அபாய கால மின்சாரம் அளிக்கும், இரண்டாம் வகுப்பு ஆற்றல் பரிமாறும் [Class II Power Supply] மோட்டர் ஜனனி தொகுப்பும் [Motor Generator Set] அற்று விடப் பட்டது! அதற்குத் துணையாய் மிதந்து கொண்டிருக்கும் முதல் வகுப்பு மின்கலன்களின் ஆற்றலும் [Poised Class I Battery Power] கேபிள்கள் எரிந்ததால் துண்டிப் பானது! அதாவது நிலையத்தின் எந்தப் பணிக்கும் உதவ முடியாமல் அனைத்து மின்சார ஆற்றல்கள் இருந்தும், இல்லாமல் போயின!

அணுமின் நிலையத்தில் டர்பைன் ஓடாது நீராவியின் அழுத்தம் அதிகமானதால், விபத்து நிகழ்ந்து ஐந்தாவது நிமிடத்தில் ‘அபாய கால நீராவி நீக்கிகள் ‘ [Atmospheric Steam Discharge Valves] கையாட்சியில் திறக்கப்பட்டு அணு உலைத் ‘தீவிரத் தணிப்பு ‘ [Reactor Crash Cooldown] ஆரம்ப மானது! அணு உலைக் கோட்டை அரண் தனித்து விடப்பட்டு, வாயுப் போக்கு வரத்து யாவும் அடைக்கப் பட்டன

அணுமின் நிலைய அபாய நிலை அறிவிப்பு!

வெடிப்பு ஏற்பட்ட எட்டாவது நிமிடத்தில் ‘அணுமின் நிலைய அபாய நிலை அறிவிப்பு ‘ [Plant Emergency Declaration] வெளியாக்கப் பட்டது! அதே சமயம் புகை மூட்டம் பெருகிக் கண்காணிக்க முடியாமல் ஆட்சி அறையிலிருந்து எல்லா இயக்குநர்களும் ஓட வேண்டிய தாயிற்று! பத்து நிமிடம் கடந்து வெளியே உள்ள டாசல் ஜனனி ஓட்டும் இரண்டு தீ அணைப்பு பம்புகளை ஓட்டினார்கள்! டர்பைன் கட்டடத் தீயை அணைக்க மட்டும் ஒன்றரை மணி நேரமானது! இரண்டு மணி நேரம் கடந்து, போரிக் ஆஸிடை கனநீர் மிதவாக்கியில் செலுத்தும் [Boric Acid Injection System] அணு உலையின் இரண்டாவது தடுப்பு ஏற்பாடு, மின்சாரம் இல்லாததால் கையாட்சியில் திறக்கப் பட்டது!

நான்கு மணி நேரம் கடந்து, இயக்குநர் அணு உலைக் கோட்டை அரணுக்குள் சென்று சோதித்ததில், கதிரியக்கம் எப்போதும் உள்ளபடிக் குன்றிய அளவிலே இருந்தது. ஐந்தரை மணி நேரம் கழித்து தீயணைப்பு நீர் கொதி உலைக் கலன்களில் நிரப்பப் பட்டது! அணு உலையின் இரு முனையிலும் கதிர்வீச்சுத் தடுப்பாக அமைக்கப் பட்டுள்ள ‘முனைக் கவசச் சாதனத்தின் ‘ வெப்பத்தைத் தணிக்க [Endshields Cooling System] தீயணைப்பு நீரே பயன் பட்டது! புகை மண்டலம் கரைந்துபோய், ஆட்சி அறைக்குள் மறுபடியும் புகுந்து செல்ல 13 மணி நேரம் கடந்தது! பதினைந்து மணி நேரம் கடந்து நிலையத்தின் புறத்தே சூழ்வெளியைச் சோதித்ததில், கதிரியக்கப் பொழிவுகள் எதுவும் காணப்பட வில்லை! வெடி விபத்து நேர்ந்து 19 மணி நேரங் கழிந்து, இரவு (11:45 P.M) ‘அபாய நிலை அறிவிப்பு ‘ நீக்கப் பட்டது!

விபத்திற்குப் பிறகு மாற்றப்பட்ட யந்திர மின்சார சாதனங்கள்

விபத்தின் விளைவுகளை நீக்கி யாவற்றையும் புதுப்பிக்க இரண்டு ஆண்டுகளும், பல கோடி ரூபாய்களும் செலவாகின!

1. நிறுத்தப்பட்ட அணு உலையின் பாதுகாப்பைக் கண்காணிக்கும் உளவு அமைப்புகள், ஏற்பாடுகள் ஆகியவை ஒழுங்கு முறையில் இயங்க முதலில் சீராக்கப் பட்டன.

2. கட்டத்தில் எரிந்து சிதைந்து போன சாதனங்கள், கரிந்து போன வயர்கள், கேபிள்கள் மாற்றப் பட்டன. அவற்றுக்குச் சிறப்பான ‘தீக் கவச, புகை குன்றிய கேபிள்கள் ‘ [Fire Resistant Low Smoke Cables & Wire] உபயோக மாயின. தீப்பிழம்பில் வெந்த கான்கிரீட் தளங்கள், சுவர்கள் ஆகியவற்றில் தளர்ச்சியால் உறுதி இழப்பு நேர்ந்துள்ளதா வென்று சோதிக்கப் பட்டுச் செப்பணிடப் பட்டன!

3. முழு டர்பைன் ஜனனியும், அவற்றுக்கு உகந்த உபரிச் சாதனங்களும் மாற்றலாகின!

4. ஒவ்வோர் தள மட்டத்திலும் ‘தீத் தடுப்பு அரண்கள் ‘ [Fire Barriers], ‘தீத் துண்டிப்புகள் ‘ [Fire Breakers] அமைக்கப் பட்டன!

5. இரண்டாவது யூனிட்டின் டர்பைன் சுழற் தட்டு உருளை [Turbine Blades Rotor] நீக்கப் பட்டு, புதிதாக மேம்படுத்தப் பட்ட டர்பைன் உருளை இணைக்கப் பட்டது!
6. முதல் யூனிட் தளத்தில் முன்பு அமைக்கப் பட்ட, இரண்டாம் யூனிட்டின் சாதனங்கள் நீக்கப் பட்டு அவற்றுக்கு உரிய இடத்தில் மாற்றப் பட்டன.

7. அபாய மின்சார வினியோகம் துண்டிக்கப் பட்டு [Class III Emergency Power], நிலைய இருட்டடிப்பு [Station Blackout] நேரும் சமயத்தில், முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மின்சார வினியோகமும் [Class I, Class II Electric Supply] முடமாகிப் போனால், அணு உலைப் பாதுகாப்பை எப்படிக் கையாளுவது என்பதற்கு வரைமுறைகள் எழுதப் பட்டு, பயிற்சிகளும் இயக்குநர்களுக்கு அளிக்கப் பட்டது.

8. நரோரா மாடல் டர்பைன் சென்னைக் கல்பாக்கம் அணுமின் நிலையத்திலும் பயன் படுவதால், அவையும் மாற்றப்பட்டு, புதுப்பிக்கப் பட்ட டர்பைன் சுழற் தட்டு உருளைகள் இணைக்கப் பட்டன.

டர்பைன் ஜனனி வெடி விபத்தின் காரணங்கள்! கற்ற பாடங்கள்!

யந்திர சாதனங்கள் யாவும் முறிவதற்கு முன்பு, தமது தனி ஊமை மொழியில் குறி சொல்லும்! பழுதான டர்பைன் சுழற் தட்டுகளின் அதிர்வுகளைக் கண்காணிக்கப் பல உளவிகள் [Vibration Probes] உள்ளன! சுழற் தட்டுகள் முறிந்த நரோரா டர்பைன் மாடல், முந்தைய கல்பாக்க அணுமின் நிலையங்களிலும் நிறுவன மானது! ஏற்கனவே கல்பாக்கத்தில் அந்த மாடல் டர்பைன் இயங்கும் போது, அதிர்வுப் பிரச்சனைகள் [Vibration Problems] இருந்ததாக அறியப் படுகிறது! நரோரா கீழ் அழுத்த டர்பைனில் எதிர்பார்க்கப் பட்ட, அதே பிரச்சனைகள் சரிவரக் கண்கணிக்கப் படாது போனால், அநேக சுழற் தட்டுகள் ஒரே சமயத்தில் முறிந்து போகும் வரை முற்ற விட்டதாக அறியப் படுகிறது!

விபத்துக்கு முன்பு நரோரா ஆட்சி அறையில் எச்சரிக்கை செய்த டர்பைன் அதிர்வு மானிகளை [Vibration Monitors], இயக்குநர் புறக்கணித்ததாக அறியப் படுகிறது! ஜனனியில் வெப்பம் தணிக்கும் ஹைடிரஜன் வாயு கசிவதைக் கண்காணிக்கும் உளவிகளும், எச்சரிக்கை ஏற்பாடுகளும் அமைக்கப் பட்டுள்ளன! ஆகவே மின்சார ஜனனியில் ஹைடிரஜன் வாயுக் கசிவின் [Hydrogen Gas Leakage] எச்சரிக்கைகள், டர்பைன் இயக்குநர் கவனத்தைக் கவராதது ஆச்சரியமாக உள்ளது! இவ்விரண்டு எச்சரிக்கைகளை இயக்குநர் கவனமாகக் கையாண்டிருந்தால், டர்பைன் வெடி விபத்து நேர்ந்திருக்காது! நிலையம் முடமாகி மின்சக்திப் பரிமாறாமல், செப்பணிடுவதில் இரண்டாண்டு காலம் வீணாகிப் போயிருக்காது! பல கோடி ரூபாய்ச் செலவை இழுத்து விட்ட நரோராவின் கோர விபத்துக்கு மனிதத் தவறுகளும் யந்திரப் பழுதுகளுமே காரணம்!

1. ‘சாதனத் தரக் கட்டுப்பாடுத் திட்டம் ‘ [Equipment Quality Assurance Program] அணுமின் நிலைய அமைப்புக் கலாச்சாரமாக [Quality Culture] டிசைன், உற்பத்தி, நிறுவகம், சோதிப்பு, இயக்கம், பராமரிப்பு [Design, Manufacturing, Construction, Commissioning, Operation & Maintenance] ஆகிய அனைத்து நிலைகளிலும் புகுத்தப் பட்டது!

2. இரட்டை அணுமின் நிலைய அமைப்புகளில் தீப்பற்றி அழிக்காதவாறு, மின்சாரம் பரிமாறும் வயர்களும், கேபிள்களும் பிரிக்கப் பட்டுத் தீக் கவசக் குகைகளில் அமைக்கப் பட்டன! அணுமின் சாதனங்களுக்குத் தனித் தனியாக இரட்டை மின்சார வினியோகக் கேபிள்களைப் பதித்து, ஒன்றில் பழுது ஏற்பட்டால், அடுத்த வழியில் மின்சக்தி கிடைக்குமாறு பிரிக்கப் பட்டது.

3. அபாய காலத்தில் ஆட்சி அறையில் இயக்குநர் பணி புரியமாறு மாற்றங்கள் செய்யப் பட்டன.

4. முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு மின்சாரப் பரிமாறலும் துண்டிக்கப் பட்டு, நீடித்த நிலைய இருட்டடிப்பு [Extended Station Blackout] சமயத்தில், அணு உலைப் பாதுகாப்பு, கொதி உலைக்கு நீரனுப்பல் போன்ற பிரச்சனைகளைத் தீர்க்க ஆய்வு முறை வழிகள் தயாரிக்கப் பட்டன.

5. இயக்கத்திற்கு முன்பும், பின்பும் செய்ய வேண்டிய டர்பைன், ஜனனிகளின் கண்காணிப்பு, செப்பணிடும் சோதனைகள் [Pre-Service, In-Service Inspections] எதுவும் புறக்கணிக்கப் படாமல் சரியான சமயத்தில் முடிப்பதற்குக் கட்டாய விதிகள் நிலைநாட்டப் பட்டன.

6. அணு உலை நீராவி ஆக்கும் ஏற்பாடுகளைத் தவிர்த்து [Outside the Nuclear Steam Supply Systems] பொதுத்துறைச் சாதன ஏற்பாடுகள் [Conventional Systems] எவை யெல்லாம் அணு உலைப் பாதுகாப்பைப் பாதிக்கலாம் என்பது ஆராயப் பட்டது.

7. தீ அணைப்பு நீர், தீயை அணைக்கப் பயன்படும் போது, அதே சமயத்தில் அணு உலை வெப்ப நீக்கப் பாதுகாப்புக்கும், கொதி உலைக்கு அபாய கால நீர் அனுப்பவும், மற்றும் பாதுகாப்புக்கு உடந்தையான ஏற்பாடுகளுக்கும் வேண்டிய நீர் செலுத்தவும், தீ அணைப்பு நீர் ஏற்பாடு [Fire Figting System] உதவுமா வென்று ஆராயப் பட்டது.

நரோரா விபத்தைப் போல் மீண்டும் பாரத அணுமின் நிலையங்களில் நிகழுமா ?

அணு உலைப் பாதுகப்புக்குச் சுயக் கட்டுப்பாடு முறைகள் எத்தனை இருந்தாலும், இயக்கத்தின் போது மனிதக் குறுக்கீடுகள் எழுவதைத் தடுக்க முடியாது! மனிதர் அறிந்தோ, அறியாமலோ செய்யும் கைத் தவறுகளையோ [Physical Errors], அல்லது சீர் தூக்கிப் பார்த்துச் சிந்திக்கும் மூளைத் தவறுகளையோ [Judgemental Errors] யாராலும் கட்டுப் படுத்த முடியாது! கைத் தவறுகளைக் கண்காணிப்புகள் மூலம் குறைக்கலாம்! ஆனால் ஆட்சி அறை எச்சரிக்கைக் காட்சிகளை உடனே ஆராய்ந்து, சீக்கிரம் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்கும் மூளைத் தவறுகளை எவராலும் தடுக்க முடியாது!

நரோராவில் ஏற்பட்ட தீ விபத்து போல், பாரதத்தின் புதிய அணு உலைகளில் மீண்டும் நேர்ந்திட வழியில்லை! ஆனால் வேறுவித விபத்துகள், மானிடத் தவறுகளால் தூண்டப் பட்டு அணு உலைகளில் நேரலாம்! மனிதத் தவறுகளைப் பயிற்சி முறைகள் மூலமும், தொடர்ந்த கண்காணிப்புகள் மூலமும் குறைக்க முயற்சி செய்ய வேண்டும்! அடிக்கடி நினைவூட்டும் இயக்குநர் பயிற்சிகளும், அனுபவ இயக்குநரின் கண்காணிப்பும் அணு உலைகளில் அபாயங்கள் நிகழப் போவதை நிச்சயமாகத் தடுக்க முடியும்! அடுத்து யந்திரச் சாதனங்கள் தயாரிப்பின் போது புரியும் முக்கிய பணியான ‘தரக் கட்டுப்பாடுகள் ‘ [Quality Controls] பழுதுகள் முதலிலே ஏற்படாமல் தடை செய்யும்! ஆரம்ப நிலை யந்திரத் தரக் கட்டுப்பாடும், மனிதத் தவறுகளைக் குறைக்கும் குறிக்கோளுடன் நடத்தும் முற்போக்குப் பயிற்சி முறைகளும், அனுபவ இயக்குநர் கண்காணிப்பும் கடைப்பிடிக்கப் பட்டால், விபத்துக்கள் நேராமல் பாரதத்தில் அணுமின் உலைகளில் மின்சக்தி உற்பத்தி செய்ய முடியும்!

*****************

தகவல்கள்:

1. Nuclear News: The New Indian Nuclear Plants, Narora and Beyond By: Gregg Taylor [April 1990].

2. Candu Owners Symposium: Narora Turbine Failure Event (March 31, 1993) By: Y.S.R. Prasad, Executive Director [Operations], Nuclear Power Corporation India Ltd.

3. Nuclear Europe Worldscan: Progress of India ‘s Nuclear Power Program [Feb. 2001].
4. World Atlas of Seismic Zones & Nuclear Power Plants [Nov. 1982].

5. http://en.wikipedia.org/wiki/CANDU_reactor (Canadian CANDU Nuclear Power) (March 19, 2011)

+++++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com)  March 19, 2011

கூடங்குளத்தின் ரஷ்ய அணுமின் நிலையம் பற்றிய சில பாதுகாப்பு ஆய்வுரைகள்


சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா

 

முன்னுரை:  1979 இல் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் உலையில் நேர்ந்த யுரேனிய எரிக்கோல்கள் உருகிய விபத்தும், 1986 இல் சோவியத் ரஷ்யாவில் நேர்ந்த செர்நோபிள் அணுமின் உலை வெடிப்பும் உலக மக்களுக்கு அச்சமூட்டி அதிர்ச்சிக்குள் தள்ளி விட்டுள்ளன.  பயங்கரச் செர்நோபிள் விபத்துக்குப் பிறகு 25 ஆண்டுகள் கடந்து ஜப்பானில் 2011 மார்ச் மாதம் 11 ஆம் தேதி 9.0 ரிக்டர் பேரழிவுப் பூகம்பமும் 30 அடி உயரப் பிரளயச் சுனாமியும் தூண்டி புகுஷிமாவில் அமைந்துள்ள நான்கு அணுமின் உலைகள் நிறுத்தமாகி அவற்றின் எரிக்கோல்கள் தணிப்பு நீரின்றி நீராவியில் ஹைடிரஜன் வாயு சேர்ந்து வெடிப்புண்டாக்கி அணு உலையின் இரண்டாம் கவசக் கட்டிடத்தின் மேற்தளங்கள் தூளாயின.  அதனால் ஓரளவு எரிக்கோல்கள் உருகிக் கதிரியக்கமும் வெளியேறிப் பணியாட்களும் சில பொதுநபரும் கதிரடி பெற்றர்கள்.  செர்நோபிள் விபத்து நிலை 7 (உச்சம்) என்றும் திரிமைல் தீவு விபத்து நிலை 5 என்றும் அகில உலக அணுசக்தி ஆணையகம் (IAEA – International Atomic Energy Agency) மதிப்பீடு செய்தது.  அந்த ஒப்பு நோக்கில் இப்போது ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்து நிலை 4 லிருந்து 5 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.

இந்தியாவில் இப்போது 20 அணுமின் நிலையங்கள் (2011 மார்ச் வரை) இயங்கி 4780 MWe மின்சார ஆற்றலை மின்வடங்களில் பரிமாறி வருகின்றன.  அவற்றில் ஜப்பான் புகுஷிமா மாடல் அணுமின் உலைகள் போல் (BWR – Boiling Water Reactor) மேற்குக் கடற்கரை தாராப்பூரில் (மகாராஷ்டிரா) இரண்டு அணுமின் உலைகள், சுமார் 40 ஆண்டுகள் இயங்கி அவை ஓய்வெடுக்கும் காலம் நெருங்கி விட்டது.  தமிழ் நாட்டின் கிழக்குக் கடற்கரை ஓரம் இரண்டு கனநீர் அழுத்த அணுமின் உலைகள் 27 ஆண்டுகளாய் மின்சாரம் பரிமாறி வருகின்றன. தமிழகத்தின் தென்கோடி முனையில் கட்டுமானம் ஆகிவரும் கூடங்குளம் ரஷ்ய அணுமின் அணுமின் உலைகள் (VVER -1000) இரண்டில் ஒன்று ஓரிரு மாதங்களில் யுரேனிய எரிக்கோல்கள் இடப்பட்டு இயங்க ஏற்பாடுகள் துரிதமாய் நிகழ்ந்து வருகின்றன.

ஜப்பான் வடகிழக்குக் கடற்கரையில் புகுஷிமாவில் நேர்ந்த அணு உலைகள் விபத்திலிருந்து இந்திய அணுசக்தித் துறையினர் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் பல இருக்கின்றன.  திரிமைல் தீவு, செர்நோபிள் விபத்துகளுக்குப் பிறகு இந்திய அணுமின் உலைகள் செம்மை ஆக்கப்பட்டன. அதைப் போல் முதலில் கடற்கரை அணுமின் நிலையங்களில் அபாயப் பாதுகாப்பு வெப்பத் தணிப்பு நீர் வசதிகள் இரட்டிப்பு அல்லது முப்புற முறைகளில் மேம்படுத்தப்பட வேண்டும்.  எல்லாவற்றுக்கும் மேலாக அணுமின் உலைகளைப் பற்றியும் கதிரியக்கப் பாதுகாப்பு பற்றியும் நகரங்கள் அனைத்திலும் பொதுமக்களுக்கு அறிவு புகட்டும் காட்சியகங்கள் அமைக்கப்பட வேண்டும்.  அணுமின் உலைக்கு 25 மைல் அருகில் வாழ்வோருக்கு அபாய காலப் பாதுகாப்புப் பயிற்சிகள் ஒவ்வோர் ஆண்டும் அளிக்கப் படவேண்டும்.

அந்த கருத்தோட்டத்தில் முதன்முதல் கூடங்குளம் அணுமின் உலைகள் பாதுகாப்பு பற்றி எனது தனிப்பட்ட ஆய்வுக் கட்டுரை மீண்டும் வெளியாகிறது.

+++++++++++++++++++++++++++++++

1986 ஆம் ஆண்டு செர்நோபிள் அணுமின் உலை வெடித்துச் சீர்குலைந்த இரண்டு ஆண்டுக்குள் தேர்ந் தெடுக்கப் பட்ட ரஷ்யப் பூத அணுமின் உலை இது! சோவியத் யூனியன் கவிழ்ந்த பிறகு பனிரெண்டு ஆண்டுகள் நிதிவளம் வற்றி மறந்து போன மாடல் இது! மீண்டும் உயிர்த் தெழுந்து நெல்லை மாவட்ட நிலப் பிரச்சனைப் போராட்டத்தில் பிழைத்து, 2001 மார்ச் 31 இல் அடித்தள மிட்டுக் கூடங்குளத்தில் உருவாகப் போகும் 2000 MWe ஆற்றல் கொண்ட இரட்டை அணுமின் உலையில் புதிய முற்போக்குப் பாதுகாப்பு முறைகள் எவை எல்லாம் இணைக்கப் பட்டுள்ளன ? 45 ஆண்டுகள் அணு உலை இயக்கம், பராமரிப்பு, பயிற்சி, பாதுகாப்பு ஆகிய துறைகளில் பாரதத்திலும், கனடாவிலும் பணி ஆற்றிய எனது அனுபவத்தில் கூறிய தனிப்பட்ட ஆய்வுக் கருத்துக்கள் இவை.

பாரதத்தின் மூன்றாவது அன்னிய அணுமின் நிலையம்!

தமிழ்நாட்டின் தென் கோடியில் உள்ள கூடங்குளத்தில் ரஷ்யாவின் VVER-1000 என்னும் 1000 MWe ஆற்றலுள்ள இரட்டை அழுத்தநீர் அணு மின்சக்தி நிலையம் [Pressurised Light Water Reactor] உருவாகி வருகிறது! அழுத்த நீர் வெப்பக் கடத்தியாகவும், மிதவாக்கியாகவும் [Light Water Coolant & Moderator], செறிவு யுரேனியம் [(2%-4%) U235 Enriched Uranium] அணு எருவாகவும் பயன் படுத்தி  இயங்கும் இந்த வெப்ப அணு உலை [Thermal Reactor] பாரதம் வாங்கும் மூன்றாவது அன்னிய மாடல் அணுமின் உலையாகும்! தாராப்பூரில் முதல் மாடல் அமெரிக்க டிசைனிலும், ராஜஸ்தானில் இரண்டாவது மாடல் கனடா டிசைனிலும் அமைக்கப் பட்டன. இந்தியாவில் கட்டப் பட்ட அணுமின் உலைகள் யாவற்றிலும் மிகப் பெரும் ஆற்றல் கொண்டது VVER-1000 அணுமின் உலை! 1988 ஏப்ரலில் அங்கீகரிக்கப் பட்ட அத்திட்டம், சோவித் யூனியன் கவிழ்ந்த பிறகு போதிய நிதி உதவியின்றி ஒதுக்கி வைக்கப் பட்டது! மறுபடியும் அது உயிர்ப்பிக்கப் பட்டு, 2001 மார்ச் மாதம் 31 ஆம் தேதி கூடங்குளத்தில் அடித்தள வேலைப்பாடுகள் தொடங்கின! அதன் நிறுவக இயக்கப் பணிகள் யாவும் முடிந்து, 2007 ஆம் ஆண்டில் முதல் யூனிட்டும், 2008 இல் இரண்டாம் யூனிட்டும் மின்சக்தி பரிமாறும் என்று எதிர்பார்க்கப் படுகிறது!

1986 ஏப்ரல் மாதம் சோவியத் ரஷ்யாவில் வெடித்துப் பேரதிர்ச்சி உண்டாக்கிய செர்நோபிள் அணுமின் உலை [1000 MWe, RMBK Model Unit.4] வேறொரு மாடல் ஆயினும், அதன் அணு மையக்கருவில் 1661 எரிக்கோல்கள் சூடேறி எரிந்துருகி, 80 மில்லியன் கியூரி கதிரியக்கம் சூழ்வெளி யெங்கும் வெளியேறிச் சுமார் 400,000 மாந்தர் பாதிக்கப் பட்டு அடுத்த பத்தாண்டுகளில் 15,000 பேர் மாண்டதாக அறியப்படுகிறது! அணுயுகத்தின் 60 ஆண்டு வரலாற்றிலே அணுமின் உலை விபத்தில் அழிவுப் புரட்சியை உண்டாக்கிய கடும் இதயப் புண்கள் ஆறுவதற்குள், 1988 ஆம் ஆண்டிலே ரஷ்யாவின் மேறொரு மாடல் [VVER-1000 Model] அணுமின் உலையை, இந்தியா தமிழ் நாட்டுக்குத் தேர்ந்தெடுத்தது மாபெரும் ஐயத்தையும் அச்சத்தையும் உண்டாக்குகிறது!

இந்திய அரசு ரஷ்ய அணுமின் உலையை ஏன் தேர்ந்தெடுத்தது ?

தொழிற் துறைகள் பன்மடங்கு பெருகி வரும் பாரதத்தின் மின்சக்தித் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதைப் பூர்த்தி செய்யும் முயற்சியில் அணுமின் சக்தி உற்பத்திப் பங்கை மிகையாக்க பாரதம், தற்போது இரண்டு 500 MWe அழுத்தக் கனநீர் அணுமின் உலைகளைத் தாராப்பூரில் கட்டி அவை இரண்டும் இயங்கி மின்சாரம் பரிமாறி வருகின்றன.  2020 ஆண்டுக்குள் 20,000 MWe ஆற்றல் அணுமின் சக்திப் பெருக்கத்தை உற்பத்தி செய்யும் எதிர்நோக்கத்தின் முதற்படியாக, 1000 MWe பூத அணு உலைகளை அமைக்கத் திட்டமிட்டு, அதை நிறைவேற்றி வருகிறது.

1974 இல் பொக்ரான் அடித்தள அணு ஆயுத வெடிப்புக்குப் பிறகு அமெரிக்கா, கனடா, மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் இந்தியாவுக்கு அணுவியல் துறை விருத்திக்கு எந்த விதத் துணையும் புரிவதில்லை என்று வெளிப்படையாகவே அறிவித்து விட்டன! 220 MWe ஆற்றலுள்ள அழுத்தக் கனநீர் அணுமின் நிலையங்களை அடுத்தடுத்துக் கட்டிவரும் பாரதம் அலுப்படைந்து, மற்ற உலக நாடுகளைப் போல் தானும் அவற்றை விடப் பெரிய 500 MWe, 1000 MWe ஆற்றல் கொண்ட மின்சக்தி நிலையங்களை, நிறுவ வேண்டுமென வேட்கை கொண்டது! அந்த முயற்சியில் பேராற்றல் கொண்ட அணுமின் நிலையங்களுக்கு அன்னியக் கூட்டுறவு முறையில் டிசைன், நிறுவகம், இயக்கம் & பராமரிப்பு, நிதிப்பணம் [Design, Construction, Operation & Maintenance & Finance] ஆகிய நான்கு துறைகளில் கைகொடுக்கும் ஓர் அன்னிய நாட்டைப் பாரதம் பல்லாண்டுகளாகத் தேடிக் கொண்டிருந்தது!

முன்வந்த பிரான்ஸ், சோவியத் யூனியன் ஆகிய இரண்டு தேசங்களில், முடிவாகச் சோவியத் ரஷ்யாவின் கூட்டு உடன்படிக்கை 1988 இல் வெற்றி பெற்றது! ஆனால் அத்திட்டம் முளைத்து எழுவதற்குள், சோவியத் யூனியன் கவிழ்ந்து சிதறிப் போனதால், எஞ்சிய ரஷ்யா பணமுடையில் தனியாய்த் தவித்தது! அமெரிக்க, ஐரோப்பிய உதவியில் மீண்டும் தலைதூக்கிய ரஷ்யா, 2001 ஆண்டில் தனது 1000 MWe ஆற்றலுடைய, புதுப்பிக்கப் பட்ட VVER-1000 மாடல் இரட்டை அணு மின் நிலையத்திற்கு நிதி யளித்துப் பாரதத்தில் கட்டி முடிக்க மறுபடியும் முன்வந்தது!

அன்னிய உதவியில் அணு உலை, அணு உலைச் சாதனங்கள், முதல் முறை ஊட்ட எரிக்கோல்கள், நீராவி ஜனனிகள், அணு உலை ஆட்சிக் கருவிகள் போன்றவை ரஷ்யாவிலிருந்து வந்தாலும், பொதுத்துறை நீராவிச் சாதனங்கள், மின்சார ஜனனி, டிரான்ஸ்பார்மர்கள், [Conventional Power Equipment] முறுக்கப்பட்டு உறுதியான இரட்டைக் கான்கிரீட் அரண்கள் [Prestressed, Reinforced Concrete Double Containment] மற்றக் கட்டிட வேலைகள் யாவும் உள்நாட்டுத் தொழிற் துறை நிர்வாகங்கள் மூலம் அமைக்கப்படும்.

பூத அணுமின் நிலையம் நிறுவக் கூடங்குளம் ஏன் தேர்ந்தெடுக்கப் பட்டது ?

பாரதத்தின் தென்கோடி எல்லையான கன்னியா குமரி முனைக்கருகில் 15 மைல் வடகிழக்கே, திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகாவில் உள்ளது, கூடங்குளம். அருகில் உள்ள பெரு நகரம் நாகர்கோயில் 21 மைல் தூரத்தில் அதற்கு மேற்கே இருக்கிறது. அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency, IAEA] வகுத்த வரையறைகளைப் பின்பற்றி இந்திய அணுசக்தித் துறையகம், 13 கடல்கரைத் தளங்கள், 5 உள்நாட்டுத் தளங்கள் ஆகியவற்றைத் தமிழ் நாட்டில் உளவுகள் செய்ததில், 2000 MWe ஆற்றல் அணுமின் நிலையத்தை அமைக்கக் கூடங்குளமே பலவகை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தது! அணு உலைப் பாதுகாப்பு, சூழ்நிலைப் பராமரிப்பு, நிதிச் சிக்கனம், பொறி நுணுக்கம், சமூக வரவேற்பு போன்ற பிரச்சனைகளை முன்னோக்கி உளவுகள் செய்ததில், கூடங்குளம் மிக்க மதிப்பு பெற்றதாக அறியப் படுகிறது! ஏராளமானக் கொள்ளளவு நீர் கொண்ட கடலும், மக்கள் தொகை குன்றிய ஒதுக்குப் புற இட அமைப்பும், கூடங்குளத்தின் சிறப்பு அம்சங்கள்.

கீழ்க்காணும் ஒப்புறவுப் பண்புகளில் கூடங்குளம் மிக்கத் தகுதியுள்ள தளமாகக் கருதப்படுகிறது:

1. தேவைக்குரிய ஆழத்தில் கடும்பாறை கொண்ட தளம், உறுதியான அணு உலைக் கான்கிரீட் அரண் [Concrete Containment] அடித்தளத்திற்கு உகந்தது.

2. பூகம்ப எழுச்சி எதிர்பார்ப்பில் குறைவாக எதிர்பார்க்கப் படும் பூகம்பக் களம்-2 [Seismic Zone II] வகுப்பைப் சார்ந்தது, கூடங்குளம். பூகம்பதைத் தூண்டி விடும் மாபெரும் ஏரிகள், நீரணைகள் போன்ற எந்தப் பழுதுத் தொல்லைகளும் அருகே இ ல்லை.

3. சூறாவளி மழை யடிப்பு, கடல் பொங்கித் தாக்கல், கடல் அலைகளின் ஏற்ற இறக்கம் ஆகிய பிரச்சனை அங்கே யில்லை. கடல் வெள்ளம் 20 அடி உச்சத்தில் எழலாம் என்று எதிர்பார்க்கப் படுவதால், அணு உலைக் கட்டிடம் அந்த அளவுக்கு மேலாகவே அமைக்கப்படும்.

4. கடல் நீரே டர்பைன் நீராவித் தணிப்பு நீராகப் பயன்படும். ரசாயனக் கழிவு நீர்களும், கதிர்வீசும் திரவங்களும் வடிகட்டப் பட்டு, கனிச அளவில் நலிந்து வெளியேற்றப் படத் [Dilution of Effluents] தேவைப் படும் ஏராளமான கொள்ளளவு நீரை அளிக்கக் கடல் அருகே உள்ளது.

5. அணு உலைப் புறக்கணிப்புக் களத்திலிருந்து [Exclusion Zone] 1.2 மைல் ஆரத்தில் மாந்தர் நடமாட்டம் எதுவும் இல்லை. வேளாண்மைக்குத் தகுதியற்ற பொட்டல் காடான அந்த நிலங்களில், எந்த விதப் பயிர் விளைச்சலும் கிடையாது! 18 மைல் ஆரத்தில் மக்கள் தொகை நெருக்கமான எந்த ஊரும் அருகே இல்லை!

6. கூடங்குளத்தை எப்போதும் அணுக நல்ல வீதி, ரயில் பாதை, கடல் மார்க்கம் அமைந்து இருப்பது சிறந்த அம்சங்கள். அகல் பாதை ரயில் நிலையம் கொண்ட கன்னியா குமரி 16 மைல் தூரம். அடுத்துக் கப்பல் துறைமுகம் உள்ள தூத்துக்குடி 60 மைல் தூரம்.

7. மனிதர் ஏற்படுத்தும் விமான விபத்துகள், ரசாயன நஞ்சுகளால் ஏற்படும் விளைவுகள், ரசாயன ராணுவ அபாயங்கள் போன்றவை எவையும் நேர்ந்திட எந்த வித அமைப்புகளும் அருகே கிடையாது.

ரஷ்ய அணுமின் நிலையத்தில் செய்த புதிய பாதுகாப்பு மாறுதல்கள்

முற்போக்கான புதிய VVER-1000 அணு உலைகள் IAEA தயாரித்த பாதுகாப்புத் தத்துவங்களைப் பின்பற்றி, அகில நாட்டு அழுத்த நீர் அணு உலைகளின் [International Pressurised Water Reactors (PWR)] மேம்பாடுகளுக்கு இணையானவை என்று ரஷ்ய டிசைன் பதிப்பிதழ்களில் அறியப் படுகிறது. 2001 ஆண்டு வரை ரஷ்யா தனது புதிய VVER அணு உலை இயக்கத்தில் 1000 உலை ஆண்டு [1000 reactor years Operating Experience] அனுபவம் பெற்று இருப்பதாக இறுமாப்புக் கொள்கிறது! 1996 டிசம்பர் வரை இருபது VVER-1000 அணுமின் உலைகள் [ரஷ்யாவில் 7, பல்கேரியாவில் 2, யுக்ரேயனில் 11] இயங்கி வருவதாக அறியப் படுகிறது!

VVER-1000 அணுமின் உலையில் ‘செறிவு யுரேனியம் ‘ [Enriched Uranium, (2%-4%)U235 rest U238] எருவாகவும், அதில் எழும் வெப்பத்தைத் தணிக்கும் முதல் கடத்தி நீராகவும் [Primary Coolant], நியூட்ரான் மிதவாக்கி [Neutron Moderator] நீராகவும், கொதிகலனில் வெப்பக் கடத்தி [Secondary Coolant] நீராகவும் தனித் தனியாக மூன்று பணிகளில் நீர் பயன்படுகிறது. VVER-1000 அணு உலைகளில் மாடல் 320, மாடல் 392 என்று இரண்டு விதம் உள்ளன. இரண்டில் VVER-1000 மாடல் 320 மிகவும் பிற்போக்கானது! அது செர்நோபிள் RMBK-1000 அணு உலை போல் கான்கிரீட் ஸ்டால் அரண் இல்லாதது! அபாய வெடி விபத்து எதுவும் நேர்ந்தால், மாடல் 320 அணு உலைக் கதிரியக்கப் பொழிவுகள் வெளியேறிச் சூழ்மண்டலக் காற்றில் பரவும் வாய்ப்புள்ளது!

VVER-1000 மாடல் 392 இல் இருக்கும் ஒரே ஒரு வேறுபாடு, அது இரட்டைக் கான்கிரீட் அரண்களை உடையது. வெளி அரண் ஒன்றும் அடுத்துக் கதிரியக்கக் கசிவை முற்றிலும் தடுக்க ஓர் ஸ்டால் கவசமும், ஒரு மீட்டர் தடிமன் கொண்ட உள் அரணுடன் இணைக்கப் பட்டுள்ளது! இரண்டு அரண்களுக்கும் நடுவே உள்ள இடைவெளி சூன்ய மாக்கப் பட்டுக் கீழ் அழுத்தத்தில் [Negative Pressure (Partial Vacuum)] பராமரிக்கப் பட்டு வருகிறது! அவ்வித அமைப்பில் கதிர்வீச்சு வெளியேற்றம் முற்றிலும் தடுக்கப் படும்; அல்லது மிக மிகக் குறைந்த அளவு வெளியேறும்.

முற்போக்கு VVER-1000 அணு உலையில் அடுத்த ஓர் மாறுபாடு, தீவிர அபாய விபத்து நேரும் சமயத்தில், அதைத் தடுத்துக் கையாளும் பராமரிப்பு ஏற்பாடுகள், அணு உலையோடு இணைக்கப் பட்டிருப்பது.

விபத்து நேர்ந்த முதல் 24 மணி நேரம், நின்ற அணு உலைச் சூட்டைத் தணிக்க, இயக்குநர் குறுக்கீடு இல்லாமல் தானே நிகழும் ‘சுய இயக்க வெப்ப நீக்கும் முறைப்பாடு ‘ [Passive Heat Removal System] சேர்க்கப்பட்டுள்ளது.

முற்றிலும் அணு உலையை நிறுத்த முதற் தடுப்பு செய்யும் தடைக் கோல்கள் யாவும் தானாக இயங்குபவை! [Automatic First Shutdown System]. ஆறும் பூரணத் தொடரிக்க விளிம்பை [Sub-criticality Margins] நிலைநாட்ட மிகையான அணு உலை ஆட்சிக் கோல்கள் அமைக்கப் பட்டுள்ளன. அடுத்து போரான் நஞ்சை உட்செலுத்தி [Boron Poison Injection] அணு உலை மீறலைத் நிறுத்த இரண்டாவது விரைவுத் தடுப்பு ஏற்பாடு [Second Quick acting Shutdown System] ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளது!

அணு உலையில் மிஞ்சிச் சேமிக்கப் படும் ஹைடிரஜன் வாயு தீப்பிடிக்க வாய்ப்பில்லாமல், ‘மீள் இணைப்பிகள் ‘ [Hydrogen Recombiners] மூலம் ஆக்ஸிஜனுடன் சேர்க்க வைத்து, நீராக மாற்றப் படுகிறது!

அணு உலையின் கதிர்வீசும் மையக்கருவில் [Radioactive Fuel Core] உலை இயங்கினாலும், அன்றி நிறுத்தப் பட்டாலும் தொடர்ந்து உண்டாகும் வெப்பம் எப்போதும் தணிக்கப்பட வேண்டும்! அபாயத் தடுப்பு மின்சாரம் பரிமாறாத [Emergency Power Supply] சமயத்தில் ‘வெப்பக் கடத்தி இழப்பு விபத்து ‘ [Loss of Coolant Accident (LOCA)] நேர்ந்தால், எரிக்கோல்களின் கனலை விரைவில் தணிக்க, ‘அணு உலை மையக்கரு நீர் வீழ்ச்சி ஏற்பாடு ‘ [Reactor Core Flooding System] இணைக்கப் பட்டுள்ளது!

ஆரம்பத்தில் கட்டிய அன்னிய அணுமின் நிலையங்கள்

முதல் அன்னியக் கொதிநீர் இரட்டை அணுமின் உலைகள் [160 MWe Boiling Water Reactor by General Electric Co. USA], பம்பாயிக்கு அருகே தாராப்பூரில் அமைக்கப் பட்டன. இரண்டாவது கனடாவின் ‘காண்டு ‘ அழுத்தக் கனநீர் இரட்டை அணு உலைகள் [200 MWe CANDU, Pressurized Heavy Water Reactor] ராஜஸ்தான் ராவட்பாட்டாவில் உருவானது. அவை நான்கும் இயங்கி வரும் போது, அடுத்து சென்னைக் கல்பாக்கத்தில் இந்திய வல்லுநரால் சிறிது மாற்றம் செய்யப் பட்ட இரட்டைக் ‘காண்டு ‘ கனநீர் அணு உலைகள் [170 MWe] நிறுவன மாயின.

1974 மே மாதம் பொக்ரானில் பாரதம் செய்த அடித்தள அணு ஆயுத வெடிப்புப் பிறகு, அணுமின் நிலையங்களை இந்தியாவில் கட்டிய அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாடுகளும் தமது அணுவியல் தொடர்பை முறித்துக் கொண்டதோடு, மற்ற உலக நாடுகளும் பாரதத்திற்கு அணுவியல் சாதனங்களை விற்கா வண்ணம் வலுவாகத் தடை செய்தன!

அழுத்தக் கனநீர் அணு உலைகளுக்கு வேண்டிய இயற்கை யுரேனியம், அதைச் சுத்திகரித்து எரிக்கோல் ஆக்கும் தொழிற் சாலைகள் [Rare Earth, Fuel Fabrication Plants] பாரதத்தில் அமைக்கப் பட்டதால், காண்டு அணுமின் உலைகள் தொடர்ந்து ஓடுவதில் எந்தப் பிரச்சனைகளும் இல்லை! ஆனால் கொதிநீர் அணுமின் உலைகளுக்குத் தேவையான, செறிவு யுரேனியத்தை அமெரிக்கா அனுப்ப மறுத்ததால், அவற்றின் இயக்கம் ஓரளவு பாதிக்கப் பட்டது! பாரதம் தனது பொறி நுணுக்கத்தால், செறிவு புளுடோனியத்தை [(2%-3%) Pu239 Enriched Fuel (PuO2)] எருவாய்ப் பயன்படுத்த விருத்தி செய்து, கொதிநீர் அணு உலைகளை இயக்கியது! அடுத்துச் சைனா இந்தியாவுக்குச் செறிவு யுரேனியத்தை விற்க முன் வந்தது!

1974 ஆண்டு முதல் தனியே விடப்பட்ட பாரதம், ஏறக் குறைய எல்லாவித அணுவியல் சாதனங்களையும், அன்னிய நாடுகளின் உதவி யின்றி உள்நாட்டிலே உற்பத்தி செய்வதில் மகத்தான வெற்றியைக் கண்டுள்ளது! முன்னேறி வரும் நாடுகளில், பாரதமே முதலாக அணுமின் சக்தி உற்பத்தித் துறையில் டிசைன், தயாரிப்பு, நிறுவகம், இயக்கம், பராமரிப்பு, பாதுகாப்புக் கட்டுப்பாடு, பயிற்சி ஆகிய அனைத்திலும் திறமை பெற்றுத் தன் கால்களிலே நிற்கிறது! இந்தியப் பொறி நுணுக்கத் தொழிற் சாலைகள் பலவற்றின் பேரளவுப் பங்கெடுப்பால், அடுத்து பத்துக் [ஐந்து இரட்டை] கனநீர் அணுமின் நிலையங்கள், கல்பாக்கம் [சென்னை, 2X170 MWe], நரோரா [உத்திரப் பிரதேசம் 2X220 MWe], கக்ரப்பார் [குஜராத் 2X220 MWe], கைகா [கர்நாடகா 2X220 MWe], ராவட்பாட்டா [ராஜஸ்தான் 2X220 MWe] ஆகியவை நிறுவனமாகி, 1984 ஆண்டு முதல் அவை யாவும் இயங்கி வருகின்றன!

பாரதம் 220 MWe கனநீர் அணுமின் நிலையங்களை அமைத்தபின், அடுத்து இந்தியாவின் முதல் 500 MWe இரட்டைக் கனநீர் அணுமின் நிலையங்களை டிசைன் செய்து, தாராப்பூரில் 1998 இல் கட்டத் துவங்கி 2002 டிசம்பர் வரை 60% வேலைப்பாடுகள் முடிந்துள்ளன.

புதிய அணுமின் உலை டிசைனில் பாதுகாப்பு உறுதிப்பாடுகள்

VVER-1000 அணு உலையை அபாய வெடிப்பிலிருந்து காக்கும் ‘உள்ளடங்கிய பாதுகாப்புத் திறமைப்பாடுகள் ‘ [Inherent Safety Features] முக்கியமாக இரண்டு:

1. கீழ் நோக்கிக் குன்றிவிடும் மின்னாற்றல் பண்பு [Negative Power Coefficient]. இம்முறைப்படி, அணு மையக்கரு வெப்ப உயர்ச்சி எந்த முறையிலும் மீறிவிடாமல் தானாகத் தணிந்து அடங்கிவிடும் தன்மை கொண்டது! [Any abnormal increase in reactor power is self-terminating]. விளக்கமாகச் சொன்னால் ஏதாவது ஒரு சம்பவம் தூண்டி, மிகையான வெப்ப சக்தி கிளம்பி விபத்துக்கள் நேர்வதும், அதனால் அணு மையக்கரு [Reactor Core] உடைந்து போவதும் அபூர்வ நிகழ்ச்சிகள்!

2. கீழ் நோக்கிக் குன்றிவிடும் வெற்றிடப் பண்பு [Negative Void Coefficient]. இம்முறைப்படி, அணு மையக்கருவுக்குப் பிரதம வெப்பக் கடத்தி நீரில்லாது போனால், மித வேக நியூட்ரான்கள் குன்றிப்போய், அணு உலைத் தானாக நின்றுவிடும். [Loss of Primary Coolant to the Fuel Core causes the Reactor to shutdown by itself due to lack of thermal neutron production]

3. அபாய மின்சக்தி [Emergency Power Supply] இல்லாத சமயத்தில், நிறுத்தமான அணு உலையில் எழும் மிஞ்சிய வெப்பத்தைக் குறைக்க, அழுத்தவிசையில் 24 மணி நேரம் நீர் வெள்ளம் கொட்டும் பாதுகாப்பு ஏற்பாடு தானாக இயங்க அமைக்கப் பட்டுள்ளது.

4. கதிரியக்க வெளியேற்றத்தை அடக்கிக் கொள்ளும், கசிவற்ற இரட்டைக் கான்கிரீட் அரண்கள் உள்ளன. [Prestressed Concrete Containment]. உள்ளரண் மட்டுமே 1 மீட்டர் [40 அங்குலம்] தடிமன் கொண்டது! அத்துடன் கதிர்வீச்சுக் கசிவுகளை முற்றிலும் தடுக்க அதன் உட்புறம் 8 mm தடிமன் ஸ்டால் கவசம் பூண்டது.

செர்நோபில் விபத்துபோல் VVER அணுமின் உலையில் அபாயம் நிகழுமா ?

சீர்குலைந்த செர்நோபிள் RMBK-1000 அணு உலை VVER-1000 அணு உலையைப் போலின்றி முற்றிலும் வேறுபட்டது! செர்நோபிள் அணு உலையில் நியூட்ரான் மிதவாக்கியாகப் பயன்பட்டது திரள்கரி [Graphite Moderator]. நிகழ்ந்த இரண்டு வெடிப்புகளில் ஒன்று சூடான திரள்கரியால் தூண்டப் பட்டது! திரள்கரிக்குச் சீர் கேடான ஓர் பண்பு உள்ளது. அணு உலைத் தொடர்ந்து இயங்கும் போது நியூட்ரான்கள் திரள்கரியைத் தாக்கி, ‘விக்னர் சக்தி ‘ விளைவால் [Wigner Energy Effect] அதன் உள் உஷ்ணம் ஏறிக் கொண்டே போகிறது. அணு உலை நிறுத்தப் பட்டாலும், திரள்கரியின் உஷ்ணம் குன்றுவதில்லை! ஆகவே அணு உலை விபத்தின் போது நீரிலிருந்து பிரிவு படும் ஹைடிரஜன் வாயு தீவிரத் தீப்பற்றி வெடிக்க ஏதுவாகிறது! ஆனால் VVER-1000 அணு உலையில் நீர் மிதவாக்கியாகப் பயன்படுவதால், அத்தகைய அபாயம் இல்லை!

அடுத்துச் செர்நோபிள் அணு உலைக்கு கான்கிரீட் அரண் [Concrete Containment] இல்லாததால், வெடி விபத்தின் போது கதிரியக்கப் பொழிவுகள் எளிதாக வெளியே சூழ்மண்டலத்தில் பரவ வழி திறந்தது! VVER-1000 இல் இரட்டை அரண் உள்ளதால், கதிரியக்க விளைவுகள் வெளிக் காற்றில் கலப்பது அறவே தடுக்கப் படுகிறது!

செர்நோபிள் வெடி விபத்து மனிதர் செய்த பல தவறுகளால் ஆரம்ப மானது! RMBK-1000 அணு உலை முதலிலே புறக்கணிக்கப் பட்ட பல டிசைன் பழுதுகளால் ஏற்பட்டது! சுய இயக்கப் பாதுகாப்பு முறைப்பாடுகள் சோதனை செய்யும் போது நீக்கப் பட்டு, விரைவாக மீறும் அணு உலையைக் கட்டுப்படுத்த மாந்தர் தாமாகக் கையாள முயன்றதால் நிகழ்ந்தது! அபாயத் தடுப்பு வெப்ப நீக்க ஏற்பாடுகளும் சோதனைக்காக ஒதுக்கப் பட்டதால் விபத்து நேர்ந்தது! நிச்சயமாக அந்தக் கோர விபத்து, பாரதத்தில் உருவாகும் ரஷ்யாவின் புதிய VVER-1000 அணுமின் உலையில் ஒருபோதும் நிகழவே நிகழாது!

பூகம்ப அதிர்வால் எதிர்பார்க்கும் விபத்துகளும் அணு மையக்கருப் பாதுகாப்பும்

2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ‘திண்ணை ‘ அகிலவலை வார முகப்பில் டாக்டர் இரா. இரமேஷ் எம்.பி.பி.எஸ் ‘நிலவியல் பிரச்சனைகள் நிறைந்த நெல்லை மாவட்டமும், கூடங்குளம் அணுமின் நிலையமும் ‘ என்னும் அழுத்தமான ஓர் கட்டுரையை வெளியிட்டுள்ளார்! அவர் எழுதிய ‘கூடங்குளம் அணுமின் நிலையமும், தென் தமிழகத்தின் பூகம்பவியலும் ‘ என்ற நூலின் சுருக்கமே அந்தக் கட்டுரை. கூடங்குள அணுமின் உலை சம்பந்தமாக அணுவியல் துறையகம் செய்ய வேண்டிய பணிகளை அவர் சுட்டிக் காட்டியது யாவும் வரவேற்கத் தக்கதே! அவற்றில் VVER-1000 அணுமின் உலைப் பாதுகாப்பு பற்றிய பெரும்பான்மையான உளவுப் பதிப்பீடுகள் அணுசக்தி துறையகத்தில் உள்ளன என்பது ஆசிரியரின் கருத்து.

பூகம்பத்தின் போது பிரதம வெப்பக் கடத்திக் குழாய்கள் உடைந்து போனால், அணு உலையின் கதி என்ன ஆகும் என்றொரு கேள்வி அதில் எழுந்துள்ளது! அதனால் அணு மையக்கருவின் வெப்பம் தணியாது, சூடேறி ஒரு கட்டத்தில் உருக ஆரம்பித்து ஒரு பெரு விபத்து ஏற்படச் சூழல் உருவாகுமே என்று டாக்டர் இரமேஷ் கேட்கிறார்.

முதலில் பிரதம வெப்பக் கடத்தி நீர் இழப்பால் [Loss of Coolant Accident (LOCA)], அணு உலைத் தானாக நின்று, வெப்ப வளர்ச்சி குன்றுகிறது. இரண்டாவது உடனே ஆறும் மையக்கருவின் எஞ்சிய தொடர் வெப்பத்தைத் தணிக்க, 24 மணி நேர அழுத்த நீர் வெள்ளம் பாய்ச்சும் ஏற்பாடுகள், ஈர்ப்பியல் முறையில் [Gravity Flooding] இயங்க அரணுக்குள் அமைக்கப் பட்டுள்ளன. பூகம்ப ஆட்டத்தின் போது எவை உடையும், எப்படி உடையும், எங்கே உடையும் என்பதை உறுதியாக நிர்ணயம் செய்ய முடியாது. அபாயப் பாதுகாப்புக்கு அருகிலே கடல் வெள்ளம் கொட்டிக் கிடப்பதை நாம் மறக்கக் கூடாது! எந்த வித விபத்து நேர்ந்தாலும், அணு உலை வெப்பத்தைத் தணிக்க, கடல் வெள்ளம் கடைசியாகக் கை உதவிக்குக் கண் எதிரே நமக்காகக் காத்துக் கிடக்கிறது!

செர்நோபிள் அணு உலை வெடித்து எரியும் போது, ஹெலிகாப்டரில் பறந்து கொண்டு டன் கணக்கில் கான் கிரீட்டைக் கொட்டித் தீயை அணைத்து கதிர்வீச்சைக் குறைத்தார்கள்! கூடங்குளத்தில் கடல் வெள்ளம்தான் கடைசி உதவி! பூத அணுமின் உலை இயங்க ஆரம்பிக்கும் முன்பு, பொது மக்களுக்கு அபாய விளைவுப் பயிற்சி முறைபாடுகள் [Emergency Preparedness] அறிவிக்கப் படும் என்றும், அதற்காகப் பயிற்சி அளிக்கப் படும் என்பது ஆசிரியரின் கருத்து.

ரஷ்ய அணுமின் நிலையப் பராமரிப்பில் ஏற்படும் சில ஐயப்பாடுகள்

இந்தியாவில் உள்ள அமெரிக்காவின் கொதிநீர் அணு உலை, கனடாவின் அழுத்தக் கனநீர் உலை, ரஷ்யாவின் அழுத்தநீர் அணு உலை ஆகிய மூன்று அன்னிய அணுமின் நிலையங்களில் எது சிறப்பாக, பாதுகாப்பாக இயங்கும் என்பது ஒரு முக்கிமான கேள்வி! எல்லாவற்றிலும் பிற்போக்கான, நிதி மிகச் செலவாகும், பழைய அணு உலை சந்தேக மின்றி, அமெரிக்காவின் கொதிநீர் அணு உலையே! எல்லாவற்றிலும் கதிரிக்கச் சிக்கல்களும், கதிர்த் தீண்டல் பிரச்சனைகளும் [Severe Radioactive Contamination] மிகையானது கொதிநீர் அணு உலையே! காரணம் நீராவி, ஜனனியில் [Steam Generator] உற்பத்தி யாகாமல், நேரடியாக அணு உலைக்கலனிலே [Reactor Vessel] உண்டாகிறது! அணு எரிபொருளில் ஒட்டிக் கொண்டுள்ள கதிரியக்கம் நீரில் கலந்து அணுக்கரு ஏற்பாடுகளிலும் [Nuclear Systems] டர்பைன், குளிர்கலம் போன்ற பொதுத்துறை அமைப்புகளையும் [Conventional Systems] கதிரியக்க சாதனங்களாகத் தீண்டி விடுகிறது. ஆகவே எரி பொருள் மாற்றும் பராமரிப்பு [Refueling Outage Maintenance] சமயத்தில் பணிகளை முடிக்க ஏராளமான நபர்களை வேலைக்கு அமர்த்த வேண்டிய தாகிறது! பாரதம் தாராப்பூர் கொதிநீர் அணு உலைகளில் பல ஆண்டுகளாக கதிரியக்க விளவுகளில் பட்ட சிரமத்திற்குப் பிறகு, அவற்றைக் கைவிட்டுக் கனடாவின் காண்டு அணுமின் உலைகளையே தற்போது அதிகரித்து வருகிறது!

இயக்கம், பராமரிப்பு, பாதுகாப்பு, நிதிச் செலவு ஆகிய பண்புகளை ஒப்பிட்டால், எவ்வித ஐயமின்றிக் கனடாவின் காண்டு கனநீர் அணு உலைகளே எல்லாவற்றிலும் உயர்ந்தவை! இந்தியா, பத்து 200 MWe காண்டு நிலையங்களை நிறுவகம் செய்தபின், இப்போது தாராப்பூரில் இரட்டை 500 MWe காண்டு அணு உலைகளை முதல் முறை யாகக் கட்டி அவை இரண்டும் இயங்கி மின்சாரம் பரிமாறி வருகின்றன.

பாரதம் முதன் முதல் 1000 MWe ஆற்றல் கொண்ட பூத அணுமின் நிலை ஆட்சி, பராமரிப்பு அனுபவம் பெறப் போகிறது! ரஷ்யாவின் அழுத்தநீர் அணு உலைகள் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் அழுத்தநீர் அணு உலைகளைச் சித்தாந்த முறையில் ஒத்தவை ஆயினும், VVER-1000 மாடல் 392 உலைகள் அமைப்பில் வேறானவை! எல்லாவித டிசைன் விளக்கங்கள், வரை படங்கள், இயக்கப் பராமரிப்பு, பாதுகாப்பு முறைகள், பயிற்சி அளிக்கும் வகைகள், விபத்துகளின் விளைவுகள் யாவும் ரஷ்ய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் எழுதப்பட வேண்டும்! அவற்றை மொழி பெயர்த்து, ஆங்கிலத்தில் அறிந்து கொள்வதில் சிரமங்கள் ஏற்படும்! ரஷ்ய நிபுணர்கள் கொச்சை ஆங்கிலத்தில் அளிக்கும் பயிற்சி முறைகளைப் பாரத வல்லுநர்கள் பின்பற்றுவதில் பிரச்சனைகள் உண்டாகும்!

பயிற்சி பெறும் ரஷ்யாவின் VVER-1000 அணு மின் உலைகள் ரஷ்யாவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் உள்ளதால், பாரத எஞ்சினியர்களும், விஞ்ஞானிகளும் மொழிச் சிக்கலால், முழுப் பயிற்சி பெற முடியாது! மேலும் உலகில் உள்ள VVER-1000 அணு உலைகளில் இதுவரை நேர்ந்த விபத்துக்களும், அபாய நிகழ்ச்சிகளும் ஆங்கிலத்தில் எழுதப் பட்டிருப்பதாகத் தெரியவில்லை! VVER-1000 அணு உலைகளில் என்ன என்ன சிக்கல்கள் இயக்கத்தின் போது விளையப் போகின்றன ? என்ன என்ன சிரமங்கள் பராமரிப்பின் போது தாக்கப் போகின்றன ? புதிய, புரியாத, பூத அணு உலைகளில் என்ன என்ன மனிதத் தவறுகள் எதிர்பாராமல் நிகழப் போகின்றன ? பதில் கிடைக்காத இவை போன்ற வினாக்கள் இப்போது நம்மிடையே எழுகின்றன! பாதுகாப்பு அணு உலையாக மாற்றப் பட்ட ரஷ்யாவின் மர்ம அணு உலையை முதலில் தாமாக ஆட்சி செய்து பார்த்துத்தான், பாரத வல்லுநர்கள் தமது புதிய அனுபவங்களைக் கற்றுக் கொள்ள போகிறார்கள்!

தகவல்:

Picture Credits : NPCIL, India, The Hindu, Russian VVER-1000 Websites

1. Nuclear News, The Russian Advanced VVER Reactor Designs [June 2002].

2. Nuclear Europe Worldscan [Jan-Feb. 2001].

3. Advance Light Water Reactors in Kudankulam by: S.K. Jain Chief Engineer, Kudankulam Project.

4. Development of Improved Reactor Plant Safety with VVER by: Novak Valery, P.Alexander, Rogov Mikhail, Moscow.

5. Chernobyl Accident Ten Years After. [Nov. 1995]

6. Towards an Energy Independent India [1997] by: Dr.R. Chidambaram, Chairman Atomic Energy Commission.

7. CMD ‘s Page by: V. K. Chaturvedi, Chairman & Managing Director, Nuclear Power Corporation of India Ltd. [2000]

8. Nuclear Power Stations in Russia.

9. VVER-1000 Plant Design & Safety Assessments.

10.  https://jayabarathan.wordpress.com/kudankulam-vver-reactor/  (Opposition to Build VVER -1000)

11.  http://en.wikipedia.org/wiki/VVER  (Russian VVER-1000 Reactor)

12.  http://www.barc.ernet.in/publications/eb/golden/reactor/toc/chapter6/6_1.pdf  (Kudungulam VVER-1000 Reactor Analysis)

***************************

பூர்வீகக் கண்டங்களின் புலப்பெயர்ச்சி

(Supercontinent Split & Drift -1)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


நாமிருக்கும் கண்டங்கள்,
பூமி என்னும்
நர்த்தகத் தடாகத்தில்
ஆமைபோல் நகர்ந்து செல்லும்,
தாமரை இலைகள்!
சுளைகள் அடுக்காய்ச் சுற்றிய
எலுமிச்சங் கனி!
துகிலுரிக்க முடியா தோலுடுத்திய
வெங்காயக் கோளம்!
கடல் வயிற்றில் கனலை மூட்டி
எரிமலை சமைக்கும்
கரிச்சட்டி வடைகள் போல்
உருவாகும் தீவுகள்!
பூகம்பம் உடல் குலுக்கிப்
பூதளம் பிரித்து
தீக்குழம்பில் படகுகள் போல்
தீவுகளை ஏதோ ஓர் சக்தி
துடுப்பு நெம்பு கோல்
முடுக்கித் தள்ளும்!

+++++++++++++++

 

 

“பூமியின் நிலப்பரப்புப் பகுதிகள் அனைத்தும் பல்லாண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மாபெரும் ஒற்றைக் கண்டமாக இருந்தது!  பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, எப்படியோ அப்பெருங் கண்டம் உடைபட்டு, வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து மெதுவாக நகர்ந்து, தற்போதுள்ள இடங்களுக்கு அவை நிலப்பெயர்ச்சி ஆகியுள்ளன!”

பூகோளத்தின் அடித்தட்டு [Crust] உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] மெதுவாகப் பெயர்ச்சி அடைகிறது!  கண்டங்களின் நிலப்பெயர்ச்சி நியதிக்கும், அடித்தட்டுப் பிறழ்ச்சி நிகழ்ச்சிக்கும் [Continental Drift & Plate Tectonics] பூர்வப்படிவப் பதிவுகள் [Fossil Records] சான்றுகளும் உறுதியும் அளிக்கின்றன”.

டாக்டர் ஆல்ஃபிரெட் வெஜினர், ஜெர்மன் பூதளவாதி [Dr. Alfred Wegener (1880-1930)]

“பூகோளப் பிறழ்ச்சித் தட்டு நியதி [Thory of Plate Tectonics] என்பது வெறும் கோட்பாடாக மட்டும் குறிப்பிடப்படாது!  டார்வின் உயிர் மலர்ச்சிக் கோட்பாடு [Evolutionary Theory], ஐன்ஸ்டைன் ஒப்பியல் நியதி [Theory of Relativity] ஆகியவற்றைப் போல் விஞ்ஞான மகத்துவமும், முக்கியத்துவமும் பெற்றது!”

டாக்டர்மௌரிஸ்யூவிங், அதிபர், அமெரிக்கன் கடற்தளவியல் கூடம் [Dr. Maurice Ewing, Dean of American Oceanographers (1906-1974)]



“இதுவரைச் சுற்றி வந்துள்ள பூகோளம் இன்றும் ஓடிக் கொண்டு வருவதுடன், இனியும் தொடர்ந்து சுற்றப் போகும் ஒரு பூத யந்திரம்!  உலகக் கண்டங்கள் படிப்படியாக நில அரிப்பில் சரிக்கப்பட்டு, அவற்றின் கழிவுத் தளங்கள் நீரால் வழித்துக் கடலுள் தள்ளப்பட்டு, கடல்மடியில் அடுக்குப் புழுதியாய் படிகின்றன.  கழிவுப் புழுதிகள் கடினமாகி, பூமியின் உட்கரு வெப்பத்தால் அவை மீண்டும் உயர்த்தப்பட்டுப் பிறழ்கின்றன!  இம்மாதிரி பூமியில் நிலஅரிப்பும், நிலப்புடைப்பும் [Erosion & Uplift] மாறி மாறிச் மீள்சுற்றில் நிகழ்கின்றன”.

ஜேம்ஸ்ஹட்டன், நவீனப் பூதளவியல் அமைப்பாளி, எடின்பரோ [The Founder of Modern Geology (1785)]

 


“பூகோளத்தின் வெவ்வேறு ஆழத்திலிருந்தும், மேல் பரப்பிலிருந்தும் எடுக்கும் மாதிரிப் பாறைகளில் மிகச் சிறிதளவு காணப்படும் யுரேனியம், தோரியம் ஆகிய இயற்கை உலோகங்களின் மூலம், பூமியின் வயது காலத்தைக் கணக்கிட முடிகிறது!  சுயமாகத் தேயும் இந்த மூலகங்கள் முடிவில் நிலையாக மிஞ்சும் ஈயத்தின் எடையைக் கண்டு, அப்பாறை தோன்றிய காலத்தை அறிந்து கொள்ளலாம்.  சமீபத்தில் நுணுக்கமான முறைகளைக் கையாண்டு, பாறை மாதிரிகளில் எஞ்சிய ஈயத்தின் அளவைக் கணக்கிட்டு, நமக்குக் கிடைத்த பூர்வீகப் பாறையின் உச்சகாலத் தோற்றம் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளாக அறியப்படுகிறது !”

ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் (1904-1968)

 


 

பூகோளக் கண்டங்கள் புலப்பெயர்ச்சி அடைந்து வருபவை

பிரபஞ்சத்தில் ஆடாமல், அசையால், ஓடாமல், நகராமல், சுழாமல் முடத்துவ நிலையில் உள்ள அண்டங்களோ அல்லது அகிலக் கோள்களோ எவையும் இருப்பதாகத் தெரியவில்லை.  பரிதியைச் சுற்றி வந்து, தன்னைத் தானே தன்னச்சில் சுழலும் நமது பூகோளத்தின் தளப்பரப்பு இயக்கமற்று நிலையாக இருப்பது போல் தோன்றுவது மெய்யான தோற்றமில்லை! 1950 இல் ஆக்கப்பட்ட பூகோள பிறழ்ச்சித் தட்டு நியதி [Global Plate Tectonics], பூமியின் தளப்பகுதி நிலையானது என்னும் பூர்வீகக் கொள்கைக்குச் சவால் விட்டு, விஞ்ஞான உலகில் ஒருபெரும் புரட்சியை உண்டாக்கி யிருக்கிறது!  பூதள வரலாற்றின் 4.6 பில்லியன் ஆண்டுகளில் ஊதுலை இசைக்கருவி ஏறி இறங்குவது போல் [Accordion] கடல்கள் திறந்து நிரம்புவதும், மூடி அடங்குவதும் தெரியப்பட்டன!  கொந்தளிக்கும் கடலில் மூழ்கிய படகைத் தள்ளுவதுபோல் கண்டங்கள் நகர்த்தப் பட்டன என்னும் புதிய கருத்துகள் நிலவ ஆரம்பித்தன!  உலகக் கண்டங்கள், கடல்கள், குன்றுகள், தீவுகள் எப்படி உண்டாயின?  எரிமலைகள், நில அதிர்வுகள் ஏன் ஏற்படுகின்றன?  கடலடியே மலர்ந்து வரும் பூர்வப் படிவங்கள் [Marine Fossils] எப்படி இமயமலைச் சிகரத்தில் காணப் படுகின்றன?  இவை போன்ற குழப்பமான, விடை தெரியாத புதிர் வினாக்களுக்குப் பதிலளிக்கப் புரட்சிகரமான கருத்துகளைப் பூதளத்தட்டு புதுநியதி விளக்குகிறது!

 

 

பூதளவியல் விஞ்ஞானத்தில் புரட்சிகரமான கண்டுபிடிப்புகள்

ஒருகாலத்தில் மாறாமல் நிலையாக இருப்பதாகக் கருதிய உலகக் கண்டங்கள் உண்மையில் மிக மெதுவாக நகர்கின்றன என்பது இருபதாம் நூற்றாண்டில் சமீபத்தில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது!  பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே உலகம் உண்டான காலத்தில் ஒரு பெருங் கண்டமாக இருந்து, பல பில்லியன் ஆண்டுகளாக மிக மெதுவாகப் பெயர்ச்சி அடைந்து பல கண்டங்களாகப் பிரிந்து போயின என்னும் கோட்பாடை முதலில் விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்ளவில்லை!  கி.பி. 1620 இல் இங்கிலாந்தில் விஞ்ஞான ஆராய்ச்சி ஆர்வத்தை முதலில் தூண்டிய பிரிட்டிஷ் வேதாந்த ஞானி பிரான்சிஸ் பேகன் (1561-1626) ஆ·ப்பிரிக்காவின் மேற்குக் கடற்கரைப் பகுதியும், தென் அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியும் ஒன்றுடன் ஒன்று பொருந்தி அமையும் வடிவத்தில் உள்ளன வென்று கண்டறிந்தார்!  முன்னூறு ஆண்டுகளுக்குப் பிறகு, அக்கருத்தை வலியுறுத்தி 1912 இல் ஜெர்மன் பூதளவாதி ஆல்ஃபிரெட் வெஜினர் பூமி ஒரு காலத்தில் மாபெரும் ஒற்றைக் கண்டமாக இருந்தது என்பதற்குப் பூர்வப்படிவ ஆதாரங்கள் [Fossil Examples] காட்டி ஒரு புதுக் கோட்பாடை உருவாக்கி நிலைநாட்டினார்.

 

சிறிய கண்டமாகத் தோன்றினாலும், ஆசியாவின் பரந்த தளப்பகுதியில் ஒரு கண்டமான இந்தியா தனித்துத் தலைதூக்கிய ஓர் பிறழ்ச்சித் தட்டாகக் [Tectonic Plate] கருதப்படுகிறது!  அத்தட்டு இந்திய-ஆஸ்திரேலியத் தட்டென்று பெயரிடப்பட்டது.  இந்திய ஆஸ்திரேலியத் தட்டின் முனை, யுரேசியத் தட்டை நெருக்கி, இரண்டு தட்டுகளின் இடைப்பட்ட அழுத்தம், பல மில்லியன் ஆண்டு களாகப் படிப்படியாக உலகச் சிகரத்தில் உயர்ந்ததைக் கொண்ட இமய மலைத் தொடரை வளர வைத்து இன்னும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு உயர்த்திக் கொண்டே போகும்!  பூகோளக் கண்டங்களின் நிலத்தட்டுகள் இடப்பெயர்ச்சி ஆவதைத் தற்போது அண்டவெளியில் சுற்றிவரும் விண்சிமிழ்கள் [Satellites] துல்லியமாகத் தொடர்ந்து கணக்கெடுத்து வருகின்றன! ஒரு கண்டத்தின் நிலத்தட்டு திருப்பி விடும் ஒளிக்கதிரின் காலத்துக்கும், அடுத்த கண்டத்தின் நிலத்தட்டு திருப்பி விடும் ஒளிக்கதிர் காலத்துக்கும் உள்ள வேறுபாடு ஒரு குறிப்பிட்ட கால வரையறையில் பதிவு செய்யப்படுகிறது!  அந்த கால வேறுபாடு மிகை யானாலும் அல்லது குறைந்து போனாலும், நிலப்பெயர்ச்சியின் அளவையும், வேகத்தைக் கணக்கிட முடியும்.

 

 

பூகோளக் கண்டங்களின் பூர்வீக நிலப்பெயர்ச்சி

1885 ஆம் ஆண்டில் ஆஸ்டிரியன் பூதளவாதி எட்வெர்டு சூயஸ் [Eduard Suess (1831-1914)] கூறிய மகத்தான கருத்து இதுதான்:  ஒரு காலத்தில் தென் கோளத்தின் கண்டங்களான தென் அமெரிக்கா, ஆ·ப்பிரிகா, இந்தியா, ஆஸ்திரேலியா, அன்டார்டிகா ஆகிய அனைத்தையும் இணைக்கும் நிலப்பாலம் ஒன்று இருந்திருக்க வேண்டும்.  அந்த நாடுகளில் எல்லாம் அவர் பொதுவாகக் கண்ட பூர்வப்படிவச் செடி [Fossil Fern Glossopteris (Plant)] ஒன்றின் உறுதிப்பாட்டில் அவ்விதம் கூறினார்.  அந்தப் பெருங் கண்டத்திற்கு “கோந்துவானா” [Gondwana, a district in India] என்று பெயரிட்டார்.  இந்தியாவில் கோந்துவானா என்னும் மாநிலத்தில் எட்வெர்டு சூயஸ் அந்த பூர்வச் செடியை முதலில் கண்டதால், அவை காணப்படும் அனைத்துக் கூட்டுக் கண்டங்களுக்கும் ஓர் இந்தியப் பெயரை இட்டார்.  தென்பகுதியான கோந்துவான கண்டமும் வடபகுதியான லௌரேசியா கண்டமும் [Lauresia] சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே ஒற்றைப் பெருங்கண்டமான பங்கயாவிலிருந்து [Pangaea] பிரிந்ததாகப் பின்னால் ஜெர்மன் விஞ்ஞானி ஆல்·பிரெட் வெஜினர் கூறினார்.  வட பகுதியான லௌரேசியா கண்டத்தில் வட அமெரிக்கா, யுரேசியா [ஐரோப்பா +ஆசியா  (இந்தியா தவிர)] இரண்டும் ஒன்றாக இருந்தன என்பது வெஜினர் கருத்து.  முதலில் தோன்றிய ஒற்றைப் பெருங் கண்டத்துக்கு “பங்கயா” என்று பெயரிட்டவர், ஆல்ஃபிரெட் வெஜினர்.  கிரேக்க மொழியில் பங்கயா என்றால் “அனைத்து நிலம்” என்று அர்த்தம்.

 

 

கண்டங்களின் பூர்வீக நிலப்பெயர்ச்சிக்குச் சான்றுகள்

1912 இல் ஆல்·பிரெட் வெஜினர் ஒருகாலத்தில் கண்டங்கள் யாவும் மெய்யாகச் சேர்ந்திருந்தன என்னும் கோட்பாடைக் கூறினார்.  தென் அமெரிக்காவில் கிழக்கே பெருத்துள்ள பிரேஸில் பகுதியும், ஆ·ப்பிரிக்காவின் மேற்கில் உள்ள கினியா வளைகுடாவும் ஒத்த வயதையும், ஒரே வளைவைக் கொண்டதாகக் காணப்படுகின்றன என்று வெஜினர் சுட்டிக் காட்டினர்!  அவை இரண்டும் ஒரே பூதளவியல் துணியில் வெட்டப் பட்ட தளம் போலத் தோன்றுகின்றன.  ஒரே வித பூர்வப்படிவச் செடிகளும், குடிநீர் விலங்குகளும் [Fossil Plants & Fresh-Water Animals] தென் அமெரிக்கா, ஆ·ப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வெகு தூரத்தில் உள்ள இந்தியா ஆகிய அனைத்துக் கண்டங்களிலும் இருப்பதைக் காட்டினார்.  சேர்ந்திருந்த கண்டங்களில்தான் அந்த விலங்குகள் வாழ்ந்திருக்க முடியுமே தவிர, ஆயிரக்கணக்கான மைல் தூரம் கொந்தளிக்கும் உப்புக் கடலின் வழியே தப்பிப் பிழைத்துப் பயணம் செய்திருக்க முடியாது என்று காரணம் கூறினார்.  மெஸேசாரஸ் என்னும் ஊர்ந்து செல்லும் சிறிய விலங்கின் பூர்வப்படிவம் [Fossil of Reptile Mesosaurus] தென் அமெரிக்காவின் பிரேஸிலும், ஆஃப்பிரிக்காவிலும் இருந்ததாக வெஜினர் சான்றுகள் காட்டினார்.

 

 

வெஜினரின் இந்த கண்டிபிடிப்பை ஏற்றுக் கொள்ளாது விஞ்ஞானிகள் பலர் அவரை எள்ளி நகையாடினர்!  காரணம் அப்போது பிறழ்ச்சித் தட்டு நியதி [Theory of Plate Tectonics] எழுதப்பட வில்லை.  மாபெரும் கனத்த கண்டங்களை, கடற்தட்டு மீது எந்த வித பூத யந்திரசக்தி உந்த வைத்து நகர்த்திப் பிரிக்க முடியும் என்பது விஞ்ஞான முறைப்படி விளக்கப் படவில்லை.  அவ்விதம் நிலப்பெயர்ச்சி ஆகியிருந்தால், கடலடியில் நீண்ட முறிவுப் பகுதிகள் விடப் பட்டிருக்க வேண்டும். அவற்றை யாராவது கடலடியில் இதுவரைக் கண்டிருக்கிறார்களா?  1850 ஆம் ஆண்டில் தந்தி வடங்களை அட்லாண்டிக் கடலடியில் [Trans-Atlantic Telegraph Cables] அமைத்த போது, முதன்முதலில் கடல் நடுவே புதைந்துள்ள நீண்ட மலைகளைக் கண்டனர்.  அதற்குப் பிறகு பசிபிக் கடலரங்கிலும் அவ்வித நீளக் குன்றுகள் காணப்பட்டதும் அறியப்பட்டன.

 

 

நூறாண்டுகளுக்குப் பிறகு 1950 இல் ஆழ்கடல் ஆராய்ச்சி நடத்தும் போது, கடலாய்வு நிபுணர்கள் [Oceanographers] டென்னிஸ் பந்தில் காணப்படும் வளைவு ஒட்டுபோல் தெரியும் 40,000 மைல் தூரம் நெளிந்து செல்லும் நீளச் சங்கிலி குன்றுத் தொடரைக் கண்டு பிடித்தார்கள்!  மலைப்பாம்பு போன்ற அந்த பூத மலைத்தொடர் நடுவே, ஆழமான குழிகளும், வெப்பமான குன்றுகளும், கசிந்து வெளிவரும் எரிமலைக் குழம்புகளும் [Lava] காணப்பட்டன!  எங்கே கடற்தளம் துண்டாக்கப் பட்டுப் பிளவுகள் காணப்பட்டனவோ அங்கே எரிமலைக் குழம்பு பீறிட்டு எழுந்து, கடினமாகிப் பிறகு புதுப் பீடபூமி உண்டானது தெரிந்தது!  விஞ்ஞானிகள் அந்த ஆதாரங்களைக் கண்டதும், கடற்தளம் குன்றுப் பகுதிகளை விட்டு ஊர்ந்து செல்லலாம் என்றும், அதனால் அடுத்து ஆழமான பெருங்குழியை நிலத்தட்டு முனையில் அகழி போல் ஆக்கி விடலாம் என்றும் ஊகித்தார்கள்!

 

 

பூதளப் பிறழ்ச்சித் தட்டுகளின் நிலப்புரட்டு நியதி

1950 இல் பூதளவாதிகள் “பிறழ்ச்சித் தட்டு நியதியை” [Theory of Plate Tectonics] விஞ்ஞான முறையில் விருத்தி செய்தார்கள்.  அந்த புதிய கோட்பாடு கண்டங்களின் நிலப்பெயர்ச்சி, கடல்-நிலத் தட்டுகளின் புணர்ச்சி, மலர்ச்சி, மலைத் தொடர்களின் வளர்ச்சி, எரிமலை களின் கிளர்ச்சி, நிலநடுக்கங்களின் எழுச்சி ஆகிய பூகோளப் புதிர்களுக்குத் தெளிவாக முதன்முதல் விளக்கங்கள் அளித்தது.  பிறழ்ச்சித் தட்டு நியதி மெய்யாக என்ன கூறுகிறது?  பூமியின் கடினமான மேலடுக்கு பனிரெண்டுக்கு மேற்பட்ட மாபெரும் தட்டரங்குகளையும், அதே எண்ணிக்கையில் உள்ள சிற்றரங்குகளையும் கொண்டது.  அவை கடற்தள மையப் பீடத்தொடராக நீண்டுள்ளன [Mid-Oceanic Ridges].  குவிந்திருக்கும் அந்த குன்றில் பாறைகள் மேலும் மேலும் கூடிச் சேர்கின்றன!  சேமித்த பாறைகள் பிறகு குன்றிலிருந்து பெயர்ச்சி யாகி விலகுகின்றன!  அவை மற்ற தட்டுகளை நெருங்கும் போது, கீழ்த்திணிப்பு விதிப்படி [Subduction Process] ஒரு தட்டு பூமிக்கடியே தள்ளப்படலாம். தட்டுகள் நெளிந்து மலைகள் உண்டாகலாம்.  பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இமயமலையும் அவ்விதம் சிறிது சிறிதாய் வளர்ந்து எழுந்ததாக விளக்கம் தரப்படுகிறது.  தட்டுகளின் புணர்ச்சியில் எச்சங்கள் பழுதுக் குழியில் சரிந்து போகலாம்.  காலி·போர்னியா மாநிலத்தின் நிலநடுக்கப் பகுதியில் உள்ள ஸான் ஆன்டிரியா பழுது [San Andrea Fault] இம்மாதிரி உண்டான ஒரு தட்டுப் பழுதே!

 

 

மௌரிஸ் யூவிங் கூறிய பூதள நகர்ச்சி விளக்கங்கள்

அமெரிக்க பூதளவியல் நிபுணர் டாக்டர் மௌரிஸ் யூவிங் ஆல்பிரெட் வெஜினர் ஒற்றைக் கண்ட நியதியைப் பல ஆதாரங்களுடன் மேலும் உறுதிப்படுத்தினார்.  அவர் கூறியவை பின்வருமாறு:

1. பூதளவாதிகளின் பூர்வீக யூகத்தின்படி பூமியின் அடித்தட்டு கடினமான திடத்தட்டோ அல்லது தகர்க்க முடியாத வலுத்தட்டோ அன்று!  பூமிதளத்தின் கீழ்த்தட்டுப் பாறைகள் தனிப்பட்ட அளவுகளுடன் [(40-60) மைல் தடிப்பு] பல்வேறு உபப்பிரிவுகள் கொண்ட பத்து பெருந்தட்டுகளாக அவற்றின் அடியே கொந்தளிக்கும் கவசக் கனல் திரவத்தில் [Hot Viscous Mantle] மிதக்கின்றன!

2. இந்த அடித்தட்டுகள் மீது அமர்ந்துள்ள உலகின் நிலப்பரப்புகள், கடற்தளங்கள் ஆகியவை எல்லாம் ஒருகாலத்தில் ஒன்றாய் பிணைக்கப்பட்டு ஒற்றைப் பெருங்கண்டமாய் இருந்தன.  சுமார் 200 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அசுரக் கண்டம் பிளக்க ஆரம்பித்தது!  அதன் விளைவால்தான் நாம் வாழும் ஏழு சிறு கண்டங்களும் [வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆ·ப்பிரிகா, ஆஸ்திரேலியா, ஆசியா, ஐரோப்பா, அன்டார்டிகா] மற்ற பிற தீவுகளும் உருவாகின! அச்சிறு கண்டங்கள் பல மில்லியன் ஆண்டுகளாக மிக மெதுவாக நிலப்பெயர்ச்சியாகி தற்போதுள்ள நிலையத்தில் இருக்கை கொண்டுள்ளன!

 

3. பூதள அடித்தட்டுகள் கடல் நடுவே ஆழப் பிளவுகளிலிருந்து [Deep Fissures in Mid-Ocean] பொங்கி எழும் திரவப் பாறைகளின் முனைப் பகுதிகளில் அமைக்கப் பட்டுள்ளன!  அதே சமயத்தில் பூமியின் உட்கருவில் பல திசைகளில் உண்டாகும் அசுர ஆற்றலில் ஆண்டுக்கு அரை அங்குலம் முதல் ஆறு அங்குலங்கள் வரை அடித்தட்டுகள் உந்தித் தள்ளப்படுகின்றன!

4. இடநெருக்கடியில் ஒடுங்கிக் கொள்ள முறியும் அடுத்தட்டுகள் உந்தும் போது, கண்களுக்குப் புலப்படும் விந்தை விளைவுகள் நிகழ்கின்றன.

a) கருங்கல் [Granite] படிந்த நிலத்தட்டுத் திணிவான, நீரில் மிதக்காத பஸால்ட் [Basalt] தாது கலந்த கடற்தட்டைச் சந்திக்கும் போது, நிலத்தட்டு கடற்தட்டு மீது பூதத்தகர்ப்பு யந்திரம் போல [Titanic Bulldozer] அமுக்கி ஏறுகிறது!  அப்போது கீழ்த்தட்டுப் பாறைகளைத் தேங்காய் திருகிபோல் சீவி, விழும் செதுக்குத் துணுக்குகள் நசுக்கப்பட்டுக் கடலடியில் பல மில்லியன் ஆண்டுகளாகச் சேமிப்பாகின்றன!  அந்த பாறைச் சீவல்கள், நிலத்தட்டு முனைகளில் குவிந்து, குவிந்து பின்னால் தொடர்மலையாக எழுகின்றன!

 


b) கடற்தளத் தட்டு கடலடியே செங்குத்தாக ஊடுறுவி, நிலத்தட்டின் முனையில் நீண்டதோர் கடற்குழியை [Ocean-Floor Tench] உண்டாக்குகிறது!  கடற்தட்டு உராய்வு வெப்பத்தால் உருகி, பூமியின் உட்கருவில் வெந்நிறத் தீப்பிழம்புக் குட்டையாக மாறுகிறது.  உள்ளே சிக்கிக் கொண்ட இந்த தீக்குழம்பு [Lava] பூமியில் துளைகளை உண்டாக்கிப் பிறகு எரிமலையாகக் குமுறி வெளியாகிறது!

c) நிலத்தட்டு, கடற்தட்டு ஆகிய இரண்டின் மோதல், கீழ்த்திணிப்பு, நேர் அறுப்பு, துண்டாக்கல் போன்ற [Collision, Subduction, Shearing, Separation] தட்டுப் பிறழ்ச்சிகள் பூகம்ப அதிர்வுகளை [Seismic Disturbances] உண்டு பண்ணும் வல்லமை படைத்தவை.

(தொடரும்)


தகவல்கள்:

1. The Continental Mosaic -Reader’s Digest Atlas of the World [1987]

2. Hutchinson Encyclopedia of the Earth By Peter Smith [1985]

3. Earth’s Restless Crust -ABC’s of Nature, Reader’s Digest [1984]

4. The Long Journey of Continents By: Ronald Schiller -The Marvels & Mysteries of The World Around US, Reader’s Digest Publication [1972]

5. Continental Drift & Plate Tectonics [www.zephryus.co.uk/geography/home.html] (Mar 20, 2003)

6. Pangaea, Gondwana, Laurasia, Plate Tectonics, Alfred Wegener From: Wikipedia Encyclopedia

7. Theory of Continental Drift By: Jim Cornish, Newfoundland, Canada (Sep 2001)

8. Continental Frift, Geology & Oceanography. [Several Internet Articles]

9. Everyday Geography By: Kevin McKinney (1993)

10 Eduard Suess, Austrian Scientist From: Wikipedia Encyclopedia

11 Geology Today (1974)

12 Physical Geology By : Brian Skinner & Stephen Porter (1987)

13 Webster’s New World Dictionary of Science (1998)

14 The Kingfisher Science Encyclopedia (2007)

********************

S. Jayabarathan (jayabarat@tnt21.com) March 11, 2011