இருபது ஆண்டுகளில் ஹப்பிள் தொலைநோக்கி புரிந்த அரும்பெரும் சாதனைகள் !

(கட்டுரை -1)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா


நாசாவின் முதல் விண்ணோக்கி
ஹப்பிள் தொலைநோக்கி !
இருபது ஆண்டுகளாய்
முப்பதி னாயிரம் பிம்பங்கள்
நோக்கி யுள்ளது !
விண்வெளியில்
அகிலக் கோள்கள் எழுபதின்
நகர்ச்சியைக் கண்டது !
பிரபஞ்ச விரிவை உண்டாக்கும்
விலக்கு விசையான
கருஞ் சக்தியின் மறைந்த
இருப்பைக் கண்டது !
விரிவு வீதத்தைக் கணித்திடத்
திரிந்திடும் விண் கழுகு !
காலக்ஸிகளின்
ஒளிமந்தை தோற்ற வளர்ச்சியைத்
தெளிவாகக் காட்டும் !
ஒளியற்று ஈர்ப்பாற்றல் கொண்ட
கரும்பிண்டத்தின்
இருப்பை மெய்ப்பிக்கும் !
ஹப்பிள் தொலை நோக்கியை
இப்போது மிஞ்சுவது
கெப்ளர் விண்ணோக்கி !
புதிய பரிதி மண்டலக்
குடும்பங்கள் காண
உதவி செய்யும் !

“ஹப்பிள் தொலைநோக்கி ஐயமின்றி எல்லோருக்கும் தெரிந்த, வரலாற்றில் வெற்றி பெற்ற மகத்தான திட்டங்களில் ஒன்று. சென்ற ஆண்டு (2009) விண்வெளி மீள்கப்பல் குறிப்பணி (Space Shuttle Service Mission) மூலம் நோக்ககத்தை மேம்படுத்தியதில் அது சீராகி உன்னத முறையில் மனித சமூகத்துக்குப் புதிய விஞ்ஞானச் சாதனைகள் புரிந்து வருகிறது.”

எட்வேர்டு வெய்லர் (Science Mission, NASA Headquarters, Washington D.C.)

“பேராற்றல் படைத்த இந்த அகற்சி நோக்குக் காமிராவால், ஹப்பிள் தொலைநோக்கி புத்துயிர் அடைந்து மிக்க சூடான அல்லது குளிர்ந்த அண்டக் கோள்களைக் கூர்ந்து நோக்கும் திறமை பெற்றுள்ளது. அதில் அகிலத் தோற்ற மூலத்தை ஆராயும் ஒளிப்பட்டை வரைக் கருவியும் (Cosmic Origin Spectrograph) இணைக்கப் பட்டுள்ளது ! அந்தக் கருவி பிரபஞ்சத்தில் 99% சதவீதம் உள்ள காலக்ஸிகளின் இடைவெளியை ஆய்வு செய்யும்.”

பேராசிரியர் மைக்கேல் டிஸ்னி (Emeritus Professor Astrophysics Cardiff University)


“நமது பால்வீதி காலக்ஸி விளிம்பில் நாம் எல்லை அறியாத வேலிகளைக் கெப்ளர் விண்ணோக்கித் தள்ளி வைக்கும் ! கெப்ளர் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள் மனிதன் தன்னைப் பற்றி அறிந்த அடிப்படைக் கருத்துக்களை முற்றிலும் மாற்றிவிடலாம்.”

ஜான் மோர்ஸ் (Jon Morse, Director NASA’s Astrophysics Division) (Feb 19 2009)

“திரவ நீர் இருக்க வாய்ப்புள்ள கோள்களின் சுற்றுவீதியில் “உயிரினத் தகுதி அரங்கம்” (The Habitable Zone) என அழைக்கப்படும் பகுதியில் விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியைப் போன்ற அண்டக்கோள்கள் இருந்தால் அவற்றைக் கண்டுபிடிப்பது எமது குறிக்கோள். அப்படி யானால் அந்த அரங்கில் உயிரினம் விருத்தி பெறப் பற்பல பகுதிகள் உள்ளன என்று அர்த்தமாகிறது ! கெப்ளர் தொலைநோக்கி அப்படி நூற்றுக் கணக்கில் இருக்கும் அண்டக் கோள்கள் சுற்றுவதைக் கண்டுபிடிக்க டிசைன் செய்யப் பட்டுள்ளது.”

வில்லியம் பொரூக்கி (Bill Borucki, Kepler Pricipal Scientist) (March 6, 2009)


“ஹப்பிள் புரிவது வரலாற்று முக்கியக் குறிப்பணியாகும் ! வெறும் விஞ்ஞானக் குறிப்பணி மட்டுமில்லை ! நமது “பிறப்புக் குறியீடுக்கு” (Genetic Code) அடிப்படையாக மனிதரை அசைத்து விடும் கேள்வி : முதல் ஆணோ அல்லது முதல் பெண்ணோ வானத்தை நோக்கி நாங்கள் தனிப்பட்டவரா என்று கேட்கும் வினா !

டாக்டர் எட்வெர்டு வெய்லர் (Dr. Edward Weiler Associate Administrator NASA Science Mission Directorate) (March 7, 2009)

“இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், அவற்றில் உயிரினச் சின்னங்கள் இருப்பதையும் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.”

ரே ஜெயவர்த்தனா (Ray Jayawardhana, Associate Professor of Astronomy, University of Toronto) (2007)

பரிதியைப் போல் தெரியும் விண்மீனான எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் (Epsilon Eridani) வாயுத் தூசித் தட்டு ஒரு கோள் என்பது நிச்சயம். ஹப்பிள் தொலைநோக்கி மூலம் கண்டதால் அது தோல்வியான விண்மீனில்லை, ஓர் அண்டக்கோள் என்பது உறுதி ! அது பெரிதளவில் இருந்தால், கோளுக்கும் விண்மீன் தூசிக்கும் தொடர்பில்லாத பழுப்புக் குள்ளி (Brown Dwarf) என்று சொல்லி விடலாம்.

பார்பரா மெக் ஆர்தர் (Barbara McArthur, Project Leader, University of Texas)


“அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம். இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”

டாக்டர் சார்லஸ் பீச்மென் [Dr. Charles Beichman, Director Caltech’s Michelson Science Center]

“பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம். ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா? அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன? அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா? அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா? நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”

டாக்டர் விக்டோரியா மீடோஸ் [Member, Terrestrial Planet Finder, NASA]


“தற்போது ஒரு சில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது ! சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) எனப்படும் விண்மீனைச் சுற்றி வருகிறது ! மிக்க மகத்தானது ! ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது ! எல்லாவற்றுக்கும் உன்னதமான ஒரு கோள் இனிமேல்தான் தெரியப் போகிறது !”

மிசியோ காக்கு (Michio Kakau, Professor Theoretical Physicist, City College of New York) (2007)


ஹப்பிள் விண்ணோக்கி புரிந்துள்ள அரும்பெரும் சாதனைகள்

1990 முதல் 2010 வரை இருபது ஆண்டுகளாக ஹப்பிள் தொலைநோக்கி விண்வெளியில் பல்வேறு அகிலப் பிம்பங்களைப் படமெடுத்து அரிய விஞ்ஞான விளைவுகளை தெளிவாகக் காட்டி வருகிறது. அண்டவெளிப் பயணங்களுக்கு அதன் விளைவுகள் அடிப்படையாக இருந்து வருகின்றன. 380 ஆண்டுகளுக்கு முன்பு காலிலியோ முதன்முதல் தனது சிறு தொலைநோக்கியில் விண்ணோக்கிப் பூதக்கோள் வியாழனையும், சனிக் கோளையும் அவற்றின் துணைக்கோளையும், சூரிய வடுக்களையும் கண்டு அவற்றின் பண்பாடுகளைக் குறிப்பிட்டார். இப்போது அந்த வானியல் ஆராய்ச்சியை 20 -21 நூற்றாண்டுகளில் தொடர்ந்து விண்வெளியில் பன்மடங்கு நுணுக்கத்தில் ஆய்வு செய்து வருகிறது ஹப்பில் தொலைநோக்கி. பூமிக்கு மேல் 350 மைல் உயரத்தில் சுற்றிவரும் ஹப்பில் தொலைநோக்கி பலமுறை பழுதாகி விண்வெளி மீள்கப்பல் விமானிகள் பழுதுகளைப் பன்முறைச் செம்மைப் படுத்தியுள்ளார்.

1977 இல் அமெரிக்க அரசு அங்கீகரித்து 1979 இல் 2.4 மீடர் (8 அடி) பிரதமக் குவியாடி தயாரிப்பு ஆரம்பமாகி 1985 இல் விண்ணோக்கி அமைப்பு முடிந்து விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் பெயரைப் பெற்றது. 1986 இல் செலஞ்சர் விண்வெளி மீள்கப்பல் (Challenger Space Shuttle)) வானில் வெடித்து விமானிகள் அனைவரும் மாண்டதால் ஹப்பிள் தொலைநோக்கி ஏவல் தாமதமானது. பிறகு 1990 ஏப்ரல் 24 இல் டிஸ்கவரி விண்வெளி மீள்கப்பல் (Space Shuttle Discovery) மூலம் ஏவப்பட்டது. இதுவரை ஹப்பிள் தொலைநோக்கி நமது பால்வீதி ஒளிமந்தை மையத்தில் 180,000 விண்மீன்களை நோக்கியுள்ளது ! 1991 இல் ஹப்பிள் தொலைநோக்கி முதன்முதல் சனிக் கோளில் நேர்ந்த ஒரு பெரும் புயலைப் பதிவு செய்தது. 1992 இல் காலக்ஸி ஒன்றைச் (NGC 4261) சுற்றியுள்ள தட்டு பேரளவு நிறையுள்ள கருந்துளைக்குத் தீனி ஊட்டிக் கொண்டிருந்தது ! 1993 இல் விண்வெளி மீள்கப்பல் செப்பணிடும் பயணத்தில்தான் பழுதான பிரதமக் குவியாடி மாற்றப் பட்டது.

1994 இல் வால்மீன் சூமேக்கர்-லெவி 9 பூதக்கோள் வியாழன் மீது விழுந்ததைப் (Comet Shoemaker-Levy 9 falling on Jupitar) படமெடுத்தது. கழுகு நிபுளாவை (Eagle Nebula) 1995 இல் கண்டது. 1996 இல் குவேசார் உள்ள காலக்ஸிகளைப் பற்றித் தீர்வு செய்தது (Resolves Quasar Host Galaxies). 1997 இல் விண்வெளியின் ஆழத்தில் வெகு தொலைவில் உள்ள ஒரு காலாக்ஸியைக் கண்டுபிடித்தது !

1998 இல் முதன்முதலாக விரைவாக விரியும் பிரபஞ்சத்தைக் கண்டு விலக்கு விசையான “கருஞ்சக்தி” (Dark Energy) இருப்பது நிரூபிக்கப் பட்டது. 1999 இல் விண்வெளி மீள்கப்பல் செம்மைப் பணியில் ஹப்பிள் தொலைநோக்கியின் 6 நேர் நிலைப் படுத்தும் மிதப்பிகள் (Six Gyros) மாற்றப் பட்டன. 2000 இல் வால்மீன் லீனியர் (Comet Linear) சிதைந்து போவதைப் படமெடுத்தது !

2001 இல் ஹப்பிள் வெகு தூரத்தில் உபோரு சூப்பர்நோவாவைக் கண்டது. 2003 இல் செவ்வாய்க் கோள் பூமிக்கு நேர் எதிராய் நெருங்கும் போது தெளிவாகப் படமெடுத்தது. 2005 இல் புளுடோ கோளின் இதுவரை அறியாத இரண்டு சந்திரன்களைக் கண்டுபிடித்தது. 2006 இல் ஹப்பிள் மூலம் கரும்பிண்டத்தைப் (Dark Matter) பற்றிய விளக்கம் கிடைத்தது. 2007 இல் கரும்பிண்டக் குவியலின் முப்புறப் படங்கள் ஹப்பிள் மூலம் கிடைத்தன. அதே ஆண்டில் ஹப்பிள் தொலைநோக்கி தனது 100,000 முறைப் புவிச் சுற்றை முடித்தது ! 2009 இல் பேராற்றல் படைத்த காமிரா (Camera WFPC2) பழைய காமிரா நீக்கிய இடத்தில் அமைக்கப் பட்டு ஹப்பிள் தொலைநோக்கி 100 மடங்கு கூர்மை நோக்குப் பெற்றது. அப்போது அது பூதக்கோள் வியாழனில் நிகழ்ந்த ஓர் அண்டத் தாக்குதலைப் படமெடுத்தது. 2010 இல் புளுடோவின் வியக்கத் தக்க மேற்தள மாறுதலைத் தெளிவாகப் பட மெடுத்தது காலக்ஸிகளின் செந்நிற நகர்ச்சி எண்ணிக்கை எட்டுக்கு மேற்பட்டது (Redshifts of Galaxies Out Higher than 8) என்று காட்டியது. ஹப்பில் தொலைநோக்கியின் 20 ஆம் ஆண்டுப் பூர்த்தி விழா 2010 ஏப்ரல் 25 ஆம் தேதி நாசா, ஈசாவால் கொண்டாடப் பட்டது.

ஹப்பிள் தொலைநோக்கி கண்டுபிடித்த பத்து வியப்பான விண்வெளிக் காட்சிகள்

இருபது, இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டுகளில் வானியல் ஆராய்ச்சிகளுக்குப் பேரளவு உதவிய ஒரு விஞ்ஞானப் பயணச் சாதனம் ஐயமின்றி ஹப்பிள் தொலைநோக்கியே. 2010 மார்ச் மாதம் வரை 20 ஆண்டுகளில் ஹப்பிள் தொலைநோக்கி 30,000 மேற்பட்ட தனித்துவக் குறியிலக்குப் பிம்பங்களைக் (Unique Space Targets) விண்வெளியில் கண்டு படமெடுத்துள்ளது. அவற்றின் கண்டுபிடிப்புகளால் இதுவரை 8700 மேற்பட்ட விஞ்ஞான வெளியீடுகள் வெளிவந்துள்ளன.

1. 1994 இல் வால்மீன் சூமேக்கர்-லெவி 9 வியாழக் கோள் மீது மோதி விழுந்ததைத் தெளிவாகப் படமெடுத்துள்ளது. அடுத்து 2009 ஜூலையில் வியாழக் கோளில் விழுந்த ஓர் அண்டத்தின் கரும்புகை மூட்டத்தைப் படமெடுத்துக் காட்டியது.

2. புளுடோவின் இரண்டு சந்திரன்களைக் கண்டுபிடித்து புளுடோவின் மிகத் தெளிவான மேற்தளத்தின் படங்களைப் பூமிக்கு அனுப்பியது.

3. சூரிய மண்டலத்தின் விளிம்பில் உள்ள கியூப்பர் வளையத்தில் (Kuiper Belt) திரியும் ஒரு கிலோ மீடர் அகலமுள்ள ஓர் அண்டத்தைக் கண்டுபிடித்தது.

4. இளைய விண்மீன்கள் அனைத்திலும் பூர்வக் கோள் தட்டுகள் (Protoplanetary Disks of Younger Stars) சுற்றி இருப்பது ஒரு பொது நிகழ்ச்சியே என்பதை ஹப்பிள் தெளிவுபடுத்தியது.

5. இளைய விண்மீன்களிலிருந்து பாய்ந்தெழும் ஒளிக்கணைகள் (Jets of Younger Stars) சுற்றுத் தட்டின் மையத்தை விட்டுத்தான் வெளியேறுபவை என்று ஹப்பிள் எடுத்துக் காட்டியது.

6. ஹப்பிள் தொலைநோக்கி விண்மீன்களின் மரணத்தைத் தெளிவான படங்களில் எடுத்துக் காட்டியது. அவற்றுள் ஒன்று முப்பெரும் வளையம் சூழ்ந்த சூப்பர்நோவா (1987A). அடுத்து பல்வேறு நிபுளாக்களைச் சுற்றியுள்ள, யாராலும் விளக்கப்படாத ஒருமையத்து வளையங்கள் (Unexplained Concentric Rings around Nibula).

7. காலக்ஸிகளின் அருகே உள்ள விண்மீன் ஒளிமந்தைகளை வகைப்படுத்தி, உருவாகும் வரலாற்றை எடுத்துக் காட்டல், அவற்றின் மூலம் காலாக்ஸிகள் கட்டமைக்கப் படுவதை விளக்க உதவுதல்.

8. அண்டைப் பிரபஞ்சத்திலிருந்து அகிலப் பின்னல் காலக்ஸிகளாய் (Cosmic Web into Galaxies) உருவாக்கும் வாயு முகில் நகர்ச்சியையும், பரவுதலையும் வரைதல்.

9. காலாக்ஸிகள் சிலவற்றிலிருந்து எழும் காமாக் கதிர் வெடிப்புகளைப் (Gamma Ray Bursts) படமெடுத்துள்ளது. அந்தக் கதிர் வெடிப்புகள் உலோகம் குன்றிய காலாக்ஸிகளில் திணிவு நிறை மிகுந்த விண்மீன்கள் நிரம்பிய பகுதிகளிலிருந்து எழுபவை. இக்கருத்து நீண்ட காலக் காமாக் கதிர் வெடிப்புகள் திணிவு நிறைந்த விண்மீன்களிலிருந்து வருகின்றன என்னும் கோட்பாட்டை மெய்ப்படுத்துகிறது. அத்தகைய விண்மீன்களே பிறகு கருந்துளைகளாக முறிந்து சுருங்குகின்றன.

10. குவசார் விருந்தாளிகள் (Quasar Hosts) காலக்ஸிகள்தான் என்பதை உறுதிப் படுத்தல். அந்த காலாக்ஸிகள் பொதுவாகப் பேரொளியுள்ள நீள்வட்ட வடிவில் தோன்றுகின்றன. அல்லது அடுத்த காலாக்ஸியுடன் பிணையும் ஈடுபாடு கொண்டவை.

(தொடரும்)

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Many Planets Surround Other Star Systems ? & Are There Other Planets Like Earth ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition -Exploring the Early Universe By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
20 https://jayabarathan.wordpress.com/2007/04/27/earth-like-planet/ [Earth Like Planets-1]
21 https://jayabarathan.wordpress.com/2008/08/01/katturai37/ [Earth Like Planets-2]
22 Space.com Other Earths : Are they out There By John G. Watson (Jan 23, 2001)
23 Spaceflight Now -Did the Phoenix Spacecraft Find Water on Mars ? By Craig Covault (Mar 8, 2009)
24 The Growing Habitable Zone : Location for Life Abound By Ker Than (Feb 7, 2006)
25 National Geographic Magazine -Searching the Stars for New Earths By : Tim Appenzeller (Dec 2004)
26 Astromart Website NASA’s Kepler Mission to Find Earth-Sized Exo-Planets Set to Launch [July 20, 2008]
27 OrlandoSentinel.com Kepler Begins Mission to Find Other Earths By Marcia Dunn, AP Aerospace Writer (Mar 6, 2009)
28 The Kepler Mission Design Overview By : David Koch, William Borucki & Jack Lissauer NSA Ames Research Center, CA [June 2008]
29 Science News : NASA Spacecraft to Seek out Earth-like Planets, Posted By : William Dunham (Feb 19, 2009)
30 BBC News NASA Launches Earth Hunter Probe (Mar 7, 2009)
31 Kepler Space Mission From Wikipedia Encyclopedia (Mar 10, 2009)
31 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40208121&format=html (ஹப்பிள் தொலைநோக்கி)
31 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40903121&format=html (கெப்ளர் தொலைநோக்கி)
32 BBC News – Hubble Mission is Wonderful News By : Gavin Thomas (Oct 31, 2006)
33 Astronomy Magazine – Hubble Service Mission : 4 – A New Day Dawns for Hubble (After Upgrading) (September 2009)
34 NASA News Release – Hubble Site NASA’s Starryieyed Hubble Telescope Celebrates 20 Years Discovery (April 22, 2010)
35 BBC News Hubble Telescope (May 24, 2010 & June 11, 2010) By Katia Moskvitch
36 Sky & Telescope Magazine : Hubble’s 20 Years in Space – Hubble’s Greatest Scientific Achievements By : Mario Livio (June 2010)

(தொடரும்)

++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) October 14, 2010

சந்திரனை நோக்கிச் சைனாவின் இரண்டாம் விண்ணுளவி !

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


 

சைனாவின் இரண்டாம்
விண்ணுளவி
சந்திரனைச் சுற்றுகிறது !
சில மாதங்கள்
நிலவைச் சுற்றி வந்து
தளத்தில் வீழ்ந்தது
முதல் விண் கப்பல் !
ஆசிய முன்னோடி களாய்ச்
சைனாவின் தீரர் இருவர்
அண்டவெளிப் பயணம் செய்து
விண்வெளியில் நீந்தி
வெற்றி மாலை சூடி
மண்மீது கால் வைத்தார்
மறுபடியும் !
அமெரிக்காவின்
விண்வெளி வீரர்கள் போல்
விண்சிமிழில் ஏறி
வெண்ணிலவைச் சுற்றி வர
முன்னோடிப் பயிற்சிகள் இவை !
நிலவைச் சுற்றி வர
மனிதரிலா விண்ணுளவி இரண்டை
அனுப்பியது சைனா !
இன்னும்
பனிரெண்டு ஆண்டுகளில்
சைனா
பாதம் பதித்திடும்
நிலவின் களத்திலே
நீல் ஆர்ம்ஸ் டிராங் போல !

“சைனாவின் சாங்கி -2 துணைக்கோள் சந்திர தளத்தில் மெதுவாய் இறங்கும் பொறி நுணுக்கத்தையும், சந்திரனுக்கு அப்பால் செல்லும் பயண அனுபவத்தையும் பெற முனையும்,   விண்ணுளவி விரைவாய்ச் செல்லும் ! நிலவை மிகவும் நெருங்கி தணிவுப் பாதையில் சுற்றிவந்து தெளிவாக ஆராயும்.”

உவு வைரன், சைனாவின் சந்திரச் சுற்றியின் பிரதம டிசைன் திட்ட அதிகாரி (Wu Weiren, Chief Designer, China’s Lunar Orbiter Project)

“சைனா தேசத்தின் நிலவுத் தேடல் திட்டங்கள் ரஷ்ய, அமெரிக்கச் சாதனைகளுக்கு 40 ஆண்டுகள் பிந்தி இருப்பினும், மனித இனத்தின் விண்வெளித் தேடலில் அந்த முயற்சிகள் தேசப் பொறுப்புக்கு தேவையானவை.”

கியான் வைபிங் (சைனாவின் இரண்டாம் விண்ணுளவி பிரதம டிசைனர்)

“பூமியில் உள்ள எரிசக்தி ஹீலியம் -3 இன் கொள்ளளவு 15 டன் என்று மதிப்பிடும் போது, நிலவில் இருக்கும் ஹீலியம் -3 இன் மொத்த அளவு 1 முதல் 5 மில்லியன் டன் என்று கணக்கிடப் படுகிறது.  இதை பூமிக்கு எடுத்து வந்து மின்சக்தி ஆக்கினால், சைனாவுக்கு ஓராண்டுத் தேவை 10 டன் ஹீலியம் -3.  உலகத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 டன் போதும்.”

ஔயாங் ஸியுவான் (Ouyang Ziyuan) Head of First Phase of Lunar Exploration

“(விண்சிமிழ் சுற்றுவீதியைத் தொட்டதும்) சூரியத் தட்டுகள் (Solar Panels) விரிந்தன.  நாங்கள் பூரிப்படைகிறோம் !  தூரத்தில் உளவும் கருவிகள் அனுப்பிய சமிக்கைகள் (Remote-Measuring Singnals) விமானிகளின் இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் போன்ற உடலியக்க அளவுகளை உடனே அறிவித்தன !”

செங்சோவ் -7 விண்சிமிழ்த் தளக் கண்காணிப்பாளர் [செப்டம்பர் 27, 2008]


“பரந்த விண்வெளியில் நமது தாய்நாட்டை நினைத்து நான் பெருமைப் படுகிறேன். . . . தேசத்தின் எல்லா மக்களுக்கும், உலகத்தின் எல்லா மாந்தருக்கும் எனது இனிய வாழ்த்துக்கள் !”

ஸை ஸிகாங் – முதல் சைனா விண்வெளி நீச்சல் விமானி (Zhai Zhigang, Chinese Taikonaut)

“அண்டவெளி நீச்சல் இன்று புரிந்தது சைனாவின் விஞ்ஞானத் துறைகளை வலுவாக்கும்.  எங்கள் மக்கள் தொகை பெரியது !  எங்கள் விஞ்ஞானிகள் நியதிகளில் மேன்மை பெற்றுச் செயற்பாட்டில் குறைந்தவர் (Theoretical not Practical) !  நாங்கள் இன்னும் அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா நாடுகளுக்குப் பின்னால்தான் இருக்கிறோம் !  அந்த நாடுகளை எட்டிப் பிடிப்பது எங்களால் இயலாது !”

கவோ கியான் – தகவல் பொறியியல் பட்டதாரி (Cao Qian, Electronics & IT Graduate)

“ராக்கெட் என்ன ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவிட முடியாது.”

மா சேதுங் (1957) – சைனாவின் விடுதலைப் பிதா (Mao Tse-Tung, China Liberator) (1893-1976)

“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன் தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் வேண்டும்.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு ஏராளமாய்க் கிடைக்கிறது.”

டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை [ஜனவரி 26, 2008] (International Conference on Aerospace Science & Technologies)


சந்திரனை நோக்கிச் சைனா ஏவும் இரண்டாவது விண்ணுளவி

2010 அக்டோபர் முதல் தேதி ஸிசாங் துணைக்கோள் ஏவு தளத்திலிருந்து (Xichang Satellite Launch Centre – XSLC) சைனாவின் “சாங்கி -2” (Chang’e -2) என்னும் தனது இரண்டாவது விண்ணுளவியைச் சந்திரனை நோக்கி “நீண்ட மார்ச் CZ-3C” (Long-March CZ-3C) ராக்கெட்டில் ஏவியுள்ளது. சாங்கி -2 மிகத் தணிவாக 9 மைல் (15 கி.மீ) உயரத்தில் 6 மாதங்கள் நிலவைச் சுற்றிவந்து தள ஆராய்ச்சிகள் நடத்தும்.  முதலில் ஏவிய சந்திர விண்ணுளவி “சாங்கி -1” 2007 அக்டோபரில் பயணத்தைத் துவக்கி 16 மாதங்கள் நிலவைச் சுற்றி முடிவில் தளத்தில் விழுந்து நொறுங்கியது.  வடிவத்தில் சாங்கி-2 முதலில் பயணம் செய்த சாங்கி -1 விண்ணுளவியைப் போன்றதே !  சாங்கி -1 நிலவை 120 மைல் (200 கி..மீ) உயரத்தில் சுற்றி வந்தது.  சாங்கி -2 இன் முக்கியப் பணி : நிலவிலும் நிலவுக்கு அப்பாலும் சென்று புதிய விண்வெளிப் பயண நுணுக்கங்களைச் சோதிப்பது.  அடுத்து வரப் போகும் சாங்கி -3 & சாங்கி -4 விண்ணுளவிகள் இறக்கும் தளவூர்திகள் ஊர்ந்து நகரும் இடங்களைத் தீர்மானிப்பது.  தளங்களின் படங்களை புதிய காமிராக்கள் மூலம் கூர்ந்து விளக்கமாகக் காண்பது.  தற்போது சாங்கி-2 சந்திரனை நெருங்கி 60 மைல் (100 கி.மீ.) உயரத்தில் அதனைச் சுற்ற ஆரம்பிக்கும்.  குறிப்பணித் திட்டப்படி சில தினங்களில் விண்ணுளவி மிகத் தணிவான 9 மைல் (15 கி.மீ) உயரத்தில் சுற்றத் துவங்கிச் சந்திர தளத்தைக் கூர்ந்து உளவு செய்யும்.

இந்தியாவும், சைனாவும் 21 ஆம் நூற்றாண்டில் நிலவை நோக்கித் தேடிப் போவதின் உள் நோக்கம் ஹீலியம் -3 எரிசக்தியே. “பூமியில் உள்ள ஹீலியம் -3 இன் கொள்ளளவு 15 டன் என்று மதிப்பிடும் போது, நிலவில் இருக்கும் ஹீலியம் -3 இன் மொத்த அளவு 1 முதல் 5 மில்லியன் டன் என்று கணக்கிடப் படுகிறது.  இதை பூமிக்கு எடுத்து வந்து மின்சக்தி ஆக்கினால், சைனாவுக்கு ஓராண்டுத் தேவை 10 டன் ஹீலியம் -3.  உலகத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு 100 டன் போதும்.” என்று ஔயாங் ஸியுவான் (Ouyang Ziyuan) (Head of First Phase of Lunar Exploration) கூறுகிறார்.  அணுப் பிணைவு முறையில் மின்சக்தி உண்டாக்கினால் அமெரிக்காவுக்கு ஓராண்டுத் தேவை 25 டன் ஹீலியம் -3 !  அதாவது பல்லாயிரம் ஆண்டு உலக எரிசக்தி தேவையை நிலவின் ஹீலியம் -3 வாயு பூர்த்தி செய்ய முடியும்.

இரண்டாம் நிலவுப் பயணத் திட்டத்தின் வேறுபாடுகள்

துணைக்கோளைத் தூக்கிச் சென்ற ராக்கெட், விண்ணுளவியை “நிலவைச் சுற்றும் மாற்றுப் பாதையில்” (Trans-Lunar Orbit) விட்டதும் அதன் சூரியத் தட்டுகள் விரிந்து மின்சக்தியை அளித்தன.  பூமியைச் சுற்றும் அப்பாதையின் மிகை நீளம் (Apogee) : 230,000 மைல் (380,000 கி.மீ.)  குறு நீளம் (Perigee) 120 மைல் (200 கி.மீ.)  இந்தப் பாதையில் விண்ணுளவி சென்று 5 நாட்களில் நிலவை அண்டிச் சுற்ற முடியும்.  முதலில் நிலவுக்குப் பயணம் செய்த சாங்கி -1 நிலவை நெருங்க 12 நாட்கள் எடுத்தன.  சாங்கி -2 காமிராவின் கூர்மை நோக்குத் திறன் : 33 அடி (10 மீடர்).  சாங்கி -1 கூர்மை நோக்குத் திறன் : 400 அடி (120 மீடர்).  180 அடி (54 மீடர்) உயரமுள்ள ராக்கெட் 345 டன் தூக்கு எடைத் தகுதி உள்ளது.  ராக்கெட் சுற்றுப் பாதையில் இடும் எடைத் தகுதி : 4 டன். விண்ணுளவியின் எடை : 2.5 டன்.  விண்ணுளவிக்கு இட்ட பெயரான “சாங்கி” என்பது சைனாவின் இதிகாச நிலவுக் கடவுள் !

சைனாவின் இரண்டாம் விண்ணுளவி வெண்ணிலவை 6 மாதங்கள் சுற்றி 2013 இல் ஏவப் போகும் சாங்கி -3 ஒரு தளவுளவியோடு இறங்கப் போவதற்கு வேண்டிய தகவலைச் சேமிக்கும்.  “சைனாவின் சாங்கி -2 துணைக்கோள் சந்திர தளத்தில் மெதுவாய் இறங்கும் பொறி நுணுக்கத்தையும், சந்திரனுக்கு அப்பால் செல்லும் பயண அனுபவத்தையும் பெற முனையும்,  விண்ணுளவி விரைவாய்ச் செல்லும் ! நிலவை மிகவும் நெருங்கி தணிவுப் பாதையில் சுற்றிவந்து தெளிவாக ஆராயும்.” என்று சைனாவின் சந்திரச் சுற்றியின் பிரதம டிசைன் அதிபர், உவு வைரன் (Wu Weiren, Chief Designer, China’s Lunar Orbiter Project) கூறினார்.  இந்த இரண்டாம் சாங்கி நிலவுத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கு சுமார் 134 மில்லியன் டாலர் (2010 சைன நாணய மதிப்பு 900 மில்லியன் யுவான்).

இதுவரைச் சைனா சாதித்த விண்வெளிச் சாதனைகள்

1957 ஆம் ஆண்டு ரஷ்யா தனது ஸ்புட்னிக் விண்சிமிழை அண்டவெளியில் முதன்முதல் ஏவி உலகத்தாரைப் பெரு வியப்பில் ஆழ்த்தியது.  அது முதல் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவும் விண்வெளிச் சாதனைப் போட்டிகள் அடுத்தடுத்துத் தொடுத்தன.  அமெரிக்காவின் முதல் துணைக்கோள் 1958 இல் விண்வெளியில் ஏவப்பட்டது !  இரண்டு வல்லரசுகளும் தமது விஞ்ஞானப் பொறியியற் சாதனைகளைக் காட்டி விண்வெளித் தேடலில் வரலாற்று முக்கியத்துவம் பெற்றுள்ளன !  1969 ஆண்டு ஜூலை 20 இல் அமெரிக்க விண்வெளித் தீரர் நீல் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதல் வெண்ணிலவில் தடம் வைத்து 20 ஆம் நூற்றாண்டின் அற்புதச் சாதனையாகச் செய்து காட்டினார். அதற்குப் பிறகு 1972 வரை 5 முறை சென்று அமெரிக்க விண்வெளி வீரர் நிலவில் நடந்து தளவூர்தியிலும் சென்று தகவல் சேமித்தார்.

அண்டவெளித் தேடலில் ரஷ்ய, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பங்கீட்டுக்குப் பிறகுச் சைனா வெகு தாமதமாக முனைந்து விண்வெளிப் பயணங்களைத் துவங்கியது.  1958 ஆம் ஆண்டில் சைனா தனது விண்வெளி ஏவுகணைத் தளத்தைக் கோபி பாலைவனத்தில் நிறுவியது.  சைனா முதல் துணைக்கோளை அண்டவெளியில் வெற்றிகரமாக 1970 இல் ஏவியது.  1990-2002 ஆண்டுகளில் சைனா “சாங்கி I, II, III & IV” (Chang’e -1, 2, 3, & 4) விண்சிமிழ் பொறித்துறை நுணுக்க விருத்தியை (Shenzhou I to IV Spacecraft Developments) மேற்கொண்டிருந்தது.

2003 அக்டோபரில் சைனா முதல் மனித விண்சிமிழ்ப் பயணக் குறிப்பணியை (Manned Space Mission) மேற்கொண்டு செங்சோவ் -5 மூலம் (Shenzhou V) வெற்றிகரமாகச் செய்து உலகை வியக்க வைத்தது !  இரண்டு ஆண்டுகள் கழித்து 2005 அக்டோபரில் செங்சோவ் -6 மூலம் இரட்டை விமானிகள் ஓட்டும் விண்சிமிழ் ஏவப்பட்டு பூமியைச் சுற்றி வந்தது. அடுத்து 2007 அக்டோபரில் நிலவை நோக்கி சாங்கி-1 மனிதரற்ற விண்ணூர்தி ஒன்று அனுப்பப் பட்டது !  2008 செப்டம்பரில் மூவர் அமர்ந்த விண்சிமிழை முதன்முதல் ஏவி சைன விண்வெளி விமானி அண்டவெளியில் 20 நிமிடங்கள் நீச்சல் புரிந்தது ஆசியாவின் முதல் விண்வெளி மைல் கல்லாக ஓங்கி நிற்கிறது.

விண்வெளி நிலையம் அமைக்கச் சைனாவின் திட்டம்

1998 இல் அமெரிக்காவும் ரஷ்யாவும் இணைந்து கண்காணித்துப் பராமரித்து வரும் அகில நாட்டு விண்வெளி நிலையத்தை (International Space Station) அமைத்துப் பூஜிய ஈர்ப்பு விசையில் புரளும் விண்வெளி விமானிகளை நீண்டகாலப் பயிற்சியில் ஈடுபடுத்தி வருகின்றன.  அதன் முக்கிய நோக்கம் 2020 ஆண்டுகளில் விண்வெளி விமானிகள் செவ்வாய்க் கோளுக்குப் பயணம் செய்யும் திட்டங்கள் உருவாகி வருகின்றன.  அதற்கு விண்வெளி விமானிகள் போய் மீளக் குறைந்தது 12 அல்லது 16 மாதங்கள் நீடிக்கலாம்.  சைனா தனது நீண்டகால விண்வெளிப் பயிற்சிக்குத் தனியாகவே ஒரு விண்வெளி நிலையத்தை (China Space Station) அமைக்கத் திட்டமிட்டுள்ளது.  அதன் “டியான்காங் -1 (Tiangong -1 Space Module) முதலரங்குச் சட்டத்தைச் சைனா 2011 ஆண்டில் ஏவ முடிவு செய்திருக்கிறது. டியான்காங் என்றால் “தெய்வீக அரண்மனை” (Tiangong = Heavenly Palace) என்று அர்த்தம்.  அதன் எடை 8.5 டன் இருக்கும்.  அந்த சுற்றும் அரண்மனையில் விவெளி விமானிகள் பூஜிய ஈர்ப்பு விசையில் நீண்ட காலப் பயிற்சியில் ஈடுபடுவார்.  சைன விண்வெளி நிலையம் பூமியைச் சுற்றி வரும் போது அதன் செங்சோவ் -8 (Shenzhov -8) விண்கப்பல் இணைப்பு / அவிழ்ப்புப் (Docking) பணிகளில் பயிற்சி செய்யும். செங்சோவ் என்றால் “தெய்வீகக் கப்பல்” (Divine Vessel) என்று பொருள் ! செங்சோவ் -9 & -10 விண்கப்பலில் இரண்டு அல்லது மூன்று விமானிகள் பயணம் செய்து புதுப் பயணிகள் நுழையவும், பழைய பயணிகள் மீளவும் திட்டங்கள் தயாராகி யுள்ளன.

ஆசிய நாடுகள் மறைமுகமாகச் செய்யும் அண்டவெளிப் பந்தயம் !

இந்தியா ஏவிய முதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 இல் 300 மைல் உயரத்தில் பூமியை 90 நிமிடங்களுக்கு ஒருமுறைச் சுற்றியது.  சந்திரனைச் சுற்றப் போகும் இந்தியாவின் முதல் பேரிச்சைத் திட்டம் 2008 அக்டோபர் 19 ஆம் தேதி நிறைவேற சந்திராயன் -1 விண்சிமிழ்ச் (Chandrayaan-1) சோதனைகள் நடைபெற்றன.  அப்பயணத்தில் சந்திராயன் -1 விண்சிமிழ் நிலவுக்கு வெகு அருகில் நீள்வட்டச் சுற்றுவீதியில் சுற்றி வந்து உளவுகள் செய்தது !  அதே சமயம் இந்தியா தன் மூவர்ணக்கொடி வரைந்த சதுரப் பேழை ஒன்றை  சந்திர தளத்தில் இறக்கியது !  அந்த விண்வெளிப் பயணத்துக்கு இந்தியாவுக்கு ஆகும் செலவு 91 மில்லியன் டாலர் (4 பில்லியன் ரூபாய்) (2008 நாணய மதிப்பு) என்று தெரிகிறது !  2016 இல் இந்தியா மனிதர் ஓட்டிப் புவிச் சுற்றும் விண்வெளிப் பயிற்சிக்கு ஜப்பான் திரவ எரிசக்தி ராக்கெட்டை விருத்தி செய்து அதன் முதல் விண்வெளித் திட்டம் 1970 இல் ஆரம்பமானது.  2003 இல் செய்த விண்வெளித் தேடல் முயற்சியில் ராக்கெட் ஏவுதல் பழுதாகித் தோல்வி அடைந்தது !  இறுதியில் 2005 இல் ஜப்பான் அனுப்பிய முதல் துணைக்கோள் வெற்றிகரமாகப் பூமியைச் சுற்றியது.

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் ஒருபுறம் மேம்பட்ட விண்வெளித் தேடல்களில் போட்டி இட்டுக் கொண்டுள்ள போது ஆசியாவில் சைனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகள் அண்டவெளிப் பந்தயங்களை மேற்கொண்டிருக்கின்றன.  இப்போது சைனா முதல் விண்வெளி நீச்சலைப் புரிந்து ஆசியாவில் தனது முற்போக்கு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் வல்லமையைக் காட்டியுள்ளது !

2017 ஆண்டுக்குள் சைனா நிலவுத் தள மண் மாதிரியை எடுத்து பூமிக்கு மீளும் திட்டத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறது.  இறுதியாக 2020 ஆம் ஆண்டில் சைனா தனது பேரிச்சைத் திட்டமான நிலவுத் தளத்தைத் தொடும் மனிதப் பயணத்தை அமெரிக்காவைப் போல் நிறைவேற்ற முற்பட்டுள்ளது.  அதே காலத்தில் அமெரிக்காவின் விண்வெளித் தீரர்கள் செவ்வாய்த் தளத்தில் தடம்வைக்கப் பயணம் செய்து அதைச் சுற்றி வருவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது !  ஆசியாவின் மகத்தான விண்வெளி வெற்றியின் போது முரண்பட்ட வாசகம் என்ன வென்றால் சைனாவின் விடுதலைப் பிதா மா சேதுங், “ஓர் உருளைக் கிழங்கைக் கூடச் சைனா விண்வெளியில் ஏவ முடியாது” என்று இகழ்ச்சியாகக் கூறியது !

சைனாவின் விண்வெளி ராக்கெட் நுணுக்கத் தேர்ச்சி

1956 இல் சைனா தனது முதல் ராக்கெட் ஏவுகணை ஆய்வுக் கூடத்தை நிறுவியது.  அடுத்து ரஷ்ய உதவியில் சாங்செங் [Changzheng (CZ)] முதல் ராக்கெட்டைச் செய்து முடித்தது.  1970 இல் சைனா தனது முதல் துணைக்கோளை அனுப்பிப் பூமியைச் சுற்ற வைத்து, அவ்விதம் செய்த ஐந்தாம் உலக நாடாகப் போற்றப் பட்டது.  1992 இல் மனிதன் இயக்கும் துணைக்கோளை ஏவி ரகசியமாய்ச் செய்தது.  1995 இல் ஏவும் போது CZ–2E ராக்கெட் ஒன்று வெடித்து 6 பேர் உயிழந்தனர்.  1999 நவம்பர் 20 இல் செங்ஸோவ் துணைக்கோள் ஒன்று ஏவப்பட்டு 14 தடவை சுற்றி வந்து பிரச்சனையில் பூமிக்கு மீண்டது !  2002 ஆம் ஆண்டில் செங்சோவ் -3 ஏவப் பட்டு 108 சுற்றுகள் செய்த பிறகு பூமிக்கு மீண்டது.  அதே ஆண்டு டிசம்பர் 29 இல் செங்ஸோவ் -4 ஏவப்பட்டு 2003 ஜனவரி 4 இல் திரும்பியது.  2003 அக்டோபர் 15 இல் செங்ஸோவ் -5 மனிதனோடு முதன்முதல் அனுப்பப் பட்டு 14 முறை பூமியை சுற்றி மீண்டது.  அடுத்து 2007 இல் சாங்கி-1 முதன்முதல் நிலவுக்குப் பயணம் செய்து சந்திர தளத்தின் தெளிவான படங்களை அனுப்பியது.  2008 இல் சைனாவின் விண்வெளி விமானிகள் அண்ட வெளி நீச்சலைப் புரிந்தனர்.  2010 அக்டோர் முதல் தேதி சாங்கி -2 சந்திரனை நோக்கிச் சென்று அதன் புவியீர்ப்பில் நுழைந்தது.  ஆசிய நாடுகள் சைனா, ஜப்பான், இந்தியா மூன்றுக்குள்ளும் விண்வெளித் தேடலில் ஓர் மறைமுகப் பந்தயம் உருவாகி வருவதில் பயன் அடையப் போவது ஆசிய மக்களே !

(தொடரும்)

தகவல்:

Picture Credits:  Boston Globe, Christiamn Monitor, Xinhua News Agency & China Daily Reporter, BBC News, The Hindu.

1. BBC News – Chinese Astronaut Walks in Space [Sep 27, 2008]
2. BBC News – China Puts its First Man in Space [Sep 27, 2008]
3. BBC News – China Astronauts Blast into Space [Sep 27, 2008]
4. BBC News – Timeline Space Flights of the World Countries (2005)
5. BBC News What’s Driving China Space Efforts By : Paul Rincon [Sep 27, 2008]
6. BBC News – China Could Reach Moon By 2020 By : Paul Rincon [Sep 27, 2008]
7. BBC News – China Spacecraft Returns to Earth [Sep 27, 2008]
8. Boston Globe : China Stokes National Pride with Celebrated First Spacewalk – Maneuver Tests Nation’s Mastry of Technology, By : Barbara Demick  [Sep 28, 2008]
9. Christian Monitors – China First Spacewalk : No Cold-War Race This Time By : Peter Spootts [Sep 25, 2008]
10. The Times of India – India Space Program Will Put Rover on Moon [Sep 19, 2008]
11. Christian Monitor – India Launched its First Satelite (Jan 11, 2007)
12 The Economic Times – Chandrayaan All Set for Moon Mission (Sep 26, 2008]
13. Asiaone – Singapore Firm Offers – Chinese Astronaut Completes Nation’s First Space Walk
[Oct 1, 2008]
14. China Daily Reporter – Shenzhou VII Spacecraft Lauched fir First Spacewalk By : Hu Yinan [Oct 1, 2008]
14 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40810021&format=html
அண்டவெளியில் நீந்திய சைனாவின் முதல் விண்வெளித் தீரர் !
14 (b) https://jayabarathan.wordpress.com/2010/09/10/chandrayaan-2/ (இந்தியாவின் இரண்டாம் நிலவுப் பயணம்)
15 Xinhua News Agency – Lunar Orbiter a Milestone for Space Agency (October 2007)
16 The Hindu -Facts & Figures about China’s Second Lunar Probe Chang’e -2 (Oct 1, 2010)
17 China Launches Second Lunar Probe – Xinhua News Agency (Oct 2, 2010)
18 Daily Galaxy : China Launches Second Moon Mission (October 3, 2010)
19 Four Chinese Lunar Launders Mooted – By : Morris Jones, Australia (Oct 6, 2010)
20 China’s Chang’e-2 Heads for Moon – Xinhua News Agency (October 4, 2010)
21 Beijing Chinese Space Centre- Xinhua News Agency – Lunar Probe & Space Exploration is Chaina’s Duty to Mankind (October 7, 2010)

******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) [October 9, 2010]
https://jayabarathan.wordpress.com/

சனிக்கோளின் மகத்தான ஒளிவளையங்கள் நோக்கிய கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ்

(1629-1695)

சி. ஜெயபாரதன், கனடா

ஒவ்வொன்றும் ஒருவேளை இருக்கலாம் என்று எழுதுவதைத் தவிர நமக்கு எதுவும் உறுதியாகத் தெரியவில்லை என்பதே என் நிலைப்பாடு.

கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ்

நியூட்டன் கூறும் பிரபஞ்சவியல் ஈர்ப்பு நியதியை (The Theory of Universal Gravitation) நான் நம்பவில்லை. அது ஒரு பிதற்றலாய்த் தெரிகிறது எனக்கு.

கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ்

“பிரபஞ்சத்தை அது எழுதப்பட்ட பண்பாட்டுப் பங்களிப்புகளில் பழக்கமாகி அதன் மொழியைக் கற்பதுவரை நாமதை வாசிக்க முடியாது. அது கணித மொழியில் எழுதப் பட்டுள்ளது. அதன் எழுத்துக்கள் எவையென்றால் கோணங்கள், வட்டங்கள் அவை போன்ற மற்ற வரைவியல் வடிவங்கள் (Geometrical Figures). அவை இல்லாமல் பிரபஞ்சத்தின் ஒரு சொல்லைக் கூட மனிதர் புரிந்து கொள்ள இயலாது.”

காலிலியோ

துணிச்சலான ஓர் ஊகிப்பில்லாது பெரிய கண்டுபிடிப்பு எதுவும் உருவாக வில்லை.

நாம் பல்வேறு சுவர்கள் எழுப்புவதைத் தவிர போதிய பாலங்களைக் கட்டுவதில்லை.

இந்த உன்னத எழில் அமைப்பாடு (பிரபஞ்சம்) ஞானப் பேராற்றல் படைத்த ஓர் உயிர் இறைமையின் ஆட்சியால்தான் உருவாகி இருக்க முடியும்.

ஐஸக் நியூட்டன்

நாமறிந்தவை எல்லைக்கு உட்பட்டவை! நாமறியாதவை அளவில் எண்ணற்றவை! புரிந்து கொள்ள முடியாத கரையற்ற கடல் நடுவே, ஒரு சிறு தீவில் அறிவு படைத்த நாம் அடைபட்டுள்ளோம்! நமக்குத் தொழில் ஒவ்வொரு பிறவிக் காலத்திலும் மேலும் சிறிது நிலத்தைக் கைப்பற்றுவதுதான்!

தாமஸ் ஹக்ஸ்லி (1825-1895)

காலிலியோ, நியூட்டன் காலத்தில் வாழ்ந்த வானியல் விஞ்ஞானி

இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ (1564-1642) இறக்கும் போது, அதே ஆண்டில் பிரிட்டிஷ் விஞ்ஞான மேதை ஐஸக் நியூட்டன் (1642-1727) பிறக்கும் போது, வாழ்ந்து வந்த டச் பெளதிக ஞானி கிரிஸ்டியான் ஹியூஜென்ஸின் வயது பதிமூன்று! ஐரோப்பாவின் இரு உன்னத முன்னோடி விஞ்ஞானிகள் படைத்த பல பெளதிகக் [Physics] கோட்பாடுகளைச் செம்மைப் படுத்தியும், மேன்மைப் படுத்தியும் பெரும் புகழ் பெற்றவர், ஹியூஜென்ஸ்! காலிலியோ ஆக்கிய தொலை நோக்கியை விருத்தி செய்தவர், முற்போக்கான தொலை நோக்கியின் மூலம் முதலில், சனி வளையத்தைக் கண்டவர், காலிலியோவின் ஊசல் கோட்பாடை [Pendulum Theory] விருத்தி செய்து முதல் ஊசல் கடிகாரத்தை [Pendulum Clock] உண்டாக்கியர் யாரென்று வினாவினால், அவர் ஹியூஜென்ஸ் ஒருவரே! ஐஸக் நியூட்டன் எழுதிய முதல் நகர்ச்சி விதியை [First Law of Motion] காலிலியோ, டெஸ்கார்டிஸ் [Descartes], அடுத்து ஹியூஜென்ஸ் மூவருமே அவருக்கு முன்பாக அறிந்திருந்தனர்! அடுத்து இரண்டாம் நகர்ச்சி விதிக்கு [Second Law of Motion] விஞ்ஞானக் கருத்தை உதவி, நியூட்டனது நன்றிக்கும் நட்புக்கும் உரியவர் ஆனவர், ஹியூஜென்ஸ்!

நியூட்டனின் ‘ஒளியியல் நியதி’ [Thery of Light] சுயவொளி எழுப்பும் ஓர் அண்டத்தின் ஒளி, ‘துகள்களின் ஓடை’ [Stream of Corpuscles] என்று கூறிடும் போது, அதை மறுத்து ஒளி அலை அலையாகப் பாய்கிறது என்னும் ‘ஒளியின் அலை மயமான நியதியை’ [Wave Theory of Light] முதன் முதல் அறிவித்தவர், கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ்!

பிரென்ச் விஞ்ஞானக் கணித மேதை ரேனி டெஸ்கார்டிஸ் [Rene Descartes (1596-1650)] ஹியூஜென்ஸ் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பர். டெஸ்கார்டிஸ் தந்த ஊக்கத்தால், ஹியூஜென்ஸ் சிறு வயதிலிருந்தே கணிதத்தில் வல்லவராக முன்னேற முடிந்தது! மற்றும் ஐரோப்பிய மாமேதைகள் லைப்னிட்ஸ் [Leibnitz], பாஸ்கல் [Pascal], ராபர்ட் பாயில் [Robert Boyle], நியூட்டன், எட்மன்ட் ஹாலி [Edmond Halley], ராபர்ட் ஹுக் [Robert Hooke] ஆகியோரது பழக்கமும், நட்பும் ஹியூஜென்ஸ் பெளதிகத்தில் மகத்தான சாதனைகளைச் சாதிக்க ஏதுவாயின !

ஹியூஜென்ஸ் படைத்த விஞ்ஞானப் பொறியியல் சாதனைகள்

1680 ஆண்டுகளில் ஹியூஜென்ஸ் தனது துணையாளி டெனிஸ் பாப்பினுடன் [Denis Papin] சேர்ந்து, புற வெப்பத்தில் இயங்கும் ‘நீராவி எஞ்சின் ‘ [Steam Engine] போலின்றி உள் வெப்பத்தில் எரிந்து இயங்கும் ‘அகத்தணல் எஞ்சினை ‘ [Internal Combustion Engine] உண்டாக்க முதலில் முயன்றதாக அறியப் படுகிறது! பீரங்கிக் குழல்களில் பயன்படும் வெடித்தூளை [Gun Powder] உபயோகித்து, வெப்ப சக்தியை யந்திர சக்தியாக மாற்ற இருவரும் முற்பட்டனர்! அதனால் அவரது முயற்சிகள் எதிர்பார்த்தவாறு முன்னேற வில்லை! நூற்றி எண்பது ஆண்டுகள் கழித்து, 1862 இல் பிரென்ச் எஞ்சினியர் ரோச்சாஸ் [Beau de Rochas] சிந்தித்த ‘வெப்பயியக்கச் சுற்றியல் ‘[Thermodynamic Cycle] கோட்பாடை அறிந்த ஜெர்மன் எஞ்சினியர் ஆட்டோ, 1876 இல் எரிவாயுவைப் பயன்படுத்தித் தனது ‘ஆட்டோ சுற்றியலைப்’ [Otto Cycle] பின்பற்றி முதன் முதலில் ‘நாலுதைப்பு ஆட்டோ எஞ்சினைத்’ [Four Stroke Otto Engine] தோற்றிவித்தார்!

1656 இல் அவர் தயாரித்த முற்போக்கான தொலை நோக்கியில் முதலாக ஓரியன் நிபுளாவைக் [Orion Nebula] கண்டு பிடித்தார்! அடுத்து 50 மடங்கு பெருக்கம் தரும் மாபெரும் தொலை நோக்கியைத் தயாரித்துச் சனிக்கோளைச் சுற்றி வரும் ஒரு பெரிய துணைக் கோளைக் [Satellite] கண்டு பிடித்தார்! அது சனியைச் சுற்றி வரும் காலம் 16 நாட்கள் என்றும் கணக்கிட்டார்! அது டிடான் [Titan] என்னும் கிரேக்க இதிகாசப் பூதத்தின் குடும்பப் [Family of Giants] பெயரைப் பெற்றது! அடுத்து சனிக் கோளின் ஒளி பொருந்திய கவின்மிகு வளையத்தைக் கண்டு பிடித்தார்! தொலை நோக்கி மூலம் செவ்வாய்க் கோளின் [Mars] தளத்தில் முதல் முதலாக மேடு பள்ளங்கள் இருக்கக் கண்டார்! காலிலியோ கூறிய ‘ஊசலின் ஏகக்கால ‘[Isochronicity of Pendulum] ஒழுங்கைப் பின்பற்றி, கனப்பளுக்கள் கொண்ட துல்லிய மான கடிகாரத்தைப் படைத்தார்! நேரத்தைச் சரியாகக் காட்டும் இத்தகைய அரிய கடிகாரத்துக்கு உலகம் பல நூற்றாண்டுகள் காத்துக் கொண்டிருந்தது!

ஹியூஜென்ஸின் முன்யூகக் கருத்து ‘சக்தியின் அழிவின்மை நியதியை’ [Law of Conservation of Energy] உருவாக்க உதவியது! 150 ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மன் விஞ்ஞானி ஹெல்மோல்ட்ஸ் [Helmholtz Hermann (1821-1894)] சக்தியின் அழிவின்மையை விரிவாக்க வழி வகுத்தது! நியூட்டனின் ‘ஒளித்துகள் நியதியை ‘ஒப்பாது அவர் வெளியிட்ட ‘ஒளியலை நியதி ‘ முதலில் புறக்கணிக்கப் பட்டாலும், பிற்காலத்தில் உலகிலே அது பெரும் வரவேற்பைப் பெற்றது! அண்டங்கள் மீது விசைகள் புரியும் வினைகளை விளக்கும் ‘இயக்கவியல்’ [Dynamics] விஞ்ஞானத்திற்கு ஹியூஜென்ஸ் ஆக்கங் களை அளித்துள்ளார்.

‘பிண்டத் துகள்கள் [Particles of matter] சூன்யத்தில் கடக்கின்றன ‘ என்று டெஸ்கார்டிஸ் கூறிய பிரபஞ்சத்தை, ஹியூஜென்ஸ் ஒப்புக் கொள்ள வில்லை! ‘துகள்களைப் பிளக்க முடியா தென்றும், அவை மோதிக் கொள்ளும் போது, முழுவதும் ‘இழுப்பியல்பு’ [Elastic] பண்பைக் கொண்டவை என்றும் நம்பினார்! கிரேக்க மேதை டெமாகிரிடஸ் [Democritus (460-370 B.C.)] கூறியவாறு, பண்டங்கள் கொண்டுள்ள பல்வேறு அமைப்புக்களில் இருக்கும் பல்லினத் துகள்களை, ஹியூஜென்ஸ் ஒப்புக் கொண்டார். யந்திரவியல் முறைகள் மீது அவருக்கிருந்த உறுதிப்பாட்டில், நியூட்டனின் ‘பிரின்ஸிபியா’ [Principia] நூல் கூறும், ‘ஈரண்டங்கள் எந்த வித யந்திரவியல் தொடர்பு இல்லாமலே, ஒன்றை ஒன்று கவர்ந்து கொள்கின்றன’ என்னும் கருத்தை, ஹியூஜென்ஸ் ஏற்றுக் கொள்ள வில்லை!

கிரிஸ்டியான் ஹியூஜென்ஸின் வாழ்க்கை வரலாறு

1629 ஏப்ரல் 14 ஆம் தேதி, நெதர்லாந்தில் உள்ள ஹேக் [Hague] நகரில் கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் ஓர் செல்வந்த குடும்பத்தில் பிறந்தார். தந்தையார் கவிஞர், இசை ஞானி, அரசியல் வாதி. அடிக்கடி இங்கிலாந்து, மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்குப் பயணம் செய்பவர். இரு நாடுகளின் மேதைகள், காவியக் கலைஞர்களின் தொடர்பு, நட்பைக் கொண்டவர்! குறிப்பாக பிரென்ச் கணித, விஞ்ஞான, வேதாந்த மேதை ரேனி டெஸ்கார்டிஸ் [Rene Descartes], ஆங்கிலக் கவி ஜான் டன் [John Donne] இருவரும் தந்தையாரின் நெருங்கிய நண்பர்கள்!

கிரிஸ்டியான் சிறுவனாக இருந்த போதே, யந்திரத் துறையில் நுணுக்கமான அறிவுடன், கணிதத்தில் வல்லமையோடு வரையும் கைத்திறமும் பெற்றிருந்தான். வீட்டுக்கு விஜயம் செய்த டெஸ்கார்டிஸ், கிரிஸ்டியானின் ஜியாமெட்ரி ஞானத்தை மெச்சி, மேற்கல்வி பயில ஊக்கம் அளித்தார். 1645 இல் கிரிஸ்டியான் லைடன் பல்கலைக் கழகத்தில் [University of Leiden] சேர்ந்தார்.

 

அங்கே கணிதமும், சட்டக் கல்வியும் கற்றார். அப்போதே தூய கணிதம், பயன்பாட்டுக் கணிதம், யந்திரவியல், ஒளியியல், வானியல் ஆகிய துறைகளில் சிறப்பான மேதமையைக் காட்டினார்! கல்லூரியில் கற்கும் போது விஞ்ஞானக் கல்விப் போதிப்பில், யந்திரவியல் விளக்கங்கள் எவ்வளவு முக்கிய மானவை என்று நன்கு அறிந்து கொண்டார். அந்த விளக்கங்கள் பின்னால் அவருக்கு ஈர்ப்பியல், ஒளியியல் நியதிகளுக்கு மிகவும் பயன்பட்டன.

துல்லிய நேரத்தைக் காட்டும் முதல் ஊசல் கடிகாரத்தைப் [Pendulum Clock] படைத்து, கப்பல் போக்கிற்கு [Navigation] குறுக்கு ரேகையைக் [Longitude] கணக்கிட அது பயன்படுத்தப் பட்டு, ஐரோப்பாவில் புகழ் பெற்றார்! ஊசல் கோட்பாடில் பொதுவாகச் ‘சீரொழுங்கு ஆட்டத்தை’ [Harmonic Oscillation] ஹியூஜென்ஸ் விருத்தி செய்தார். நீரழுத்த வியலில் [Hydrostatics] கணித ஆய்வுகளுடன் 1650 இல் ஓர் அரிய கட்டுரையை வெளியிட்டார். விஞ்ஞான நண்பர், டெஸ்கார்டிஸ் எழுதிய ‘மோதல் விதிகளை ‘ [Laws of Impact] நம்பாமல், மோதும் பளு அண்டங்களின் ‘பளுவேக அழிவின்மை விதியைக் ‘ [Law of Conservation of Momentum] கண்டு பிடித்தார். அவ்விதிப்படி ‘மோதும் இரு அண்டங்கள் மோதுவதற்கு முன்னுள்ள மொத்த பளுவேகம் [Momentum], மோதிய பின்பு விளையும் அவற்றின் மொத்த பளுவேகத்துக்குச் சமமானது’ என்று அறியப் படுகிறது.

 

1657 இல் ஊசல் கட்டுப் படுத்தும் முதல் கடிகாரத்தை, ஹியூஜென்ஸ் தயாரித்த பின்பு, ஓராண்டுக்குள் ஹாலந்தின் பெரிய ஊர்களில் பல இடங்களில் ‘ஊசல் கோபுரக் கடிகாரங்கள்’ [Pendulum Tower Clocks] காணப் பட்டன! 1658 இல் அவரைப் பின்பற்றி, பிரிட்டிஷ் விஞ்ஞானி ராபர்ட் ஹுக் [Robert Hooke (1635-1703)], சுருள் கம்பியை [Spiral Spring] முதலாகப் பயன்படுத்திக் கைக் கடிகாரத்தைத் [Watch] தயாரித்தார்! ஹியூஜென்ஸ் பொறியியல் துறையில் முன்னேற்றம் காட்டி, கணித வடிவில் ஊசல் ஆட்டத்தின் ‘ஒழுங்குக் காலத்துக்கும் ‘ [Period of Pendulum], ஊசல் நீளத்துக்கும் உள்ள, கீழ்க் காணும் ஓர் உறவுப் பாடைக் கணித்தார். அப்போது முதன் முதல் g இன் [32 feet/sec per sec] மதிப்பைக் கண்டு பிடித்தார்.

1654 இல் கணித நூல் [De Circli Magnitudine Inventa] ஒன்றை எழுதி, ஹியூஜென்ஸ் ஐரோப்பாவில் புகழ் பெற்றவர். 1660 இல் பாரிஸுக்குச் சென்ற போது பிரென்ச் கணித விஞ்ஞானி, பாஸ்கலைச் [Blaise Pascal (1623-1662)] முதன் முதல் சந்தித்தார்! அதற்கு முன்பே அவர் கணிதப் பிரச்சனைகளைப் பற்றிக் கேட்டுப் பல தடவைக் கடிதங்கள் எழுதிப் பாஸ்கலுடன் பழகி யிருக்கிறார்.

அடுத்துத் தானே கைகளால் அரைத்த குவி ஆடிகளைக் [Lens] கொண்டு, 50 மடங்கு பெருக்கும் சக்தி வாய்ந்த தொலை நோக்கியைச் செய்து, 1655 இல் சனிக் கோளின் ஒரு துணைக் கோளையும் [Satellite Titan], 1656 இல் ஓரியன் நிபுளாவையும் [Orion Nepula], 1659 இல் சனியின் நூதன வளையத்தையும் அதன் அமைப்பையும் கண்டு உலகுக்கு அறிவித்து விஞ்ஞான வரலாற்றில் பெரும் மைல் கல்லை நாட்டியவர்! விண்வெளியில் அண்டக் கோள்களின் நிகழ்ச்சிகளைத் துல்லியமாகக் கணித்திட, அவரது ஊசல் கடிகாரத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

1666 முதல் 1681 வரை ஹியூஜென்ஸ் பாரிஸில் வாழ்ந்தார். அப்போது முக்கியமாக அவர் ஜெர்மன் கணித மேதை லைப்னிட்ஸுடன் [Leibnitz] தொடர்பு கொண்டார். அவர்களது நட்பு வாழ்நாள் முழுதும் நீடித்தது! பாரிஸில் வாழ்ந்த போது 1673 இல் ஊசல் கோட்பாடு [Oscillation of Pendulum] பற்றி ஹியூஜென்ஸ் எழுதிய நூல் வெளியானது. அந்நூலில் ‘வளைவின் கணிதக் கோட்பாடு ‘ [Theory on Mathematics of Curvature], ஊசல் ஆட்டத்தின் காலத்தைக் காணும் கூறுபாடு [Formula for the Time of Oscillation of Pendulum], அசைப்பியல் பிரச்சனைகள் [Problems of Dynamics], சீரான வட்ட நகர்ச்சிக்குச் சுழலீர்ப்பு விதிகள் [Laws of Centrifugal Force for Uniform Circular Motion] ஆகியவை இருந்தன.

பெயர் பெற்ற மேதைகளைக் கெளரவிக்கும், பிரிட்டனின் பேரவையான ராஜீயக் குழுவகம் [Royal Society] போன்று, பிரான்ஸிலும் அமைக்க வேண்டுமெனத் திட்டமிட்டு 1666 இல் பிரென்ச் விஞ்ஞானப் பேரவையை [French Academy Science] நிறுவனம் செய்து அதை ஆரம்பித்து வைத்தார். கிரிஸ்டியான் ஹியூஜென்ஸின் உடல் நலமற்று, அடிக்கடி நோயில் துன்புற்றார். 1670, 1681 ஆண்டு களில் மிகத் தீவிர நோயுற்று, சாகக் கிடந்து மீண்டும் உயிர் பெற்றார். கடைசி ஐந்து ஆண்டுகள் உடல் நிலைச் செம்மையாகாது, தனிமை யிலும் மனக் கவலையிலும் உழன்று 1695 ஆம் ஆண்டில் கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் காலமானார்!

ஒளி நுண்ணிய துகள்களின் ஓடையா ? அதிர்வு அலைகளின் நீச்சலா!

பண்டை காலம் தொட்டே ஒளியின் நேர்முகப் போக்கைப் பற்றிக் [Linear Propagation of Light] கிரேக்க ஞானிகளுடன், பூர்வீக மாந்தரும் அறிந்திருந்ததாகக் காணப் படுகிறது! ஐஸக் நியூட்டன் பழைய வேதாந்தக் கருத்தை எடுத்தாண்டு, ஒளி நுண்ணிய துகள்களின் ஓட்டம் என்று கூறினார்! ஆனால் ஹியூஜென்ஸ் ஓரண்டத்தின் கனலும், அது எழுப்பும் ஒளியும் ஒரு வித அதிர்வு [Vibration] என்று நம்பினார். வெப்பம் ஒளியைப் போல் நேர் திக்கில் செல்வதில்லை! நியூட்டனின் ஒளித்துகள் நியதியை மறுத்து விளக்க முயன்று, இறுதியில் தனது புதிய ஒளியலை நியதியை அவர் எழுத நேரிட்டது! குவி ஆடிகளைச் [Lens] செய்யும் திறமை மிக்க ஹியூஜென்ஸ், காற்றிலிருந்து ஒளி நீரைக் கடக்கும் போது, அல்லது பளிங்கு ஊடகம் வழியாகச் செல்லும் போது, ஒளி திரிபுறும் விதியை [Refraction of Light] நன்கு அறிந்தவராக இருந்தார். அவரது ஒளியலை நியதி, எதிரொளிப்பு [Reflection], திரிபு [Refraction] ஆகிய முறைகளை எடுத்துக் காட்டி, ஒளியின் முக்கியக் கோட்பாடை நிரூபிக்கிறது!

1678 இல் எழுதத் தொடங்கி 1690 இல் முடித்த ‘ஒளியைப் பற்றிய தொகுப்பிலும்’ [Treatise on Light] ஒளியியற் பண்பின் யந்திரவியல் விளக்கம் காணப் பட்டது. அந்நூலில் ‘எதிரொளி’ [Reflection], ‘திரிபொளி ‘ [Refraction] பற்றி அவர் எழுதியுள்ள மகத்தான கருத்துக்கள், நியூட்டன் ஒளியைப் பற்றி ஆக்கிய விளக்கங்களை விடப் பலபடி உயர்ந்தவை யாக இருந்தன! ஆனால் யந்திரவியல் விளக்கம் இல்லாமலே, ‘ஒளியின் துவித அலை முற்றம் என்னும் ஹியூஜென்ஸின் கொள்கை’ [Huygens ‘ Principle of Secondary Wave Fronts] தெளிவாகக் காணப் பட்டது.

ஒளியானது, நுண்ணிய துகள்கள் மண்டிய ஈதர் ஊடகத்தின் [Ether Medium] மீது கடக்கிறது என்று ஹியூஜென்ஸ் நம்பினார்! ஒளியில் பிண்டம் [Matter] எதுவும் கிடையாது! ஈதர் துகள்களின் நகர்ச்சி மூலம் ஒளி கடந்து செல்கிறது என்று கூறினார், ஹியூஜென்ஸ். ஆனால் ஈதர் துகள்களின் நகர்ச்சியைக் கண்டு பிடிக்க முடியாது! ஈதர் துகள்கள் ஒன்றை ஒன்று மோதிக் கொண்டு, தொடர்ந்து அலை எழுப்பிக் கண்களில் தெரியும் ஒளியாகப் பரவுகிறது என்று கூறினார், ஹியூஜென்ஸ்.

அவரது பெயரில் நிலவும் ‘ஹியூஜென்ஸ் கொள்கை ‘ [Huygens ‘ Principle] என்பது என்ன ? ‘ஒளியின் அலை முற்றத்தில் உள்ள ஒவ்வொரு புள்ளியும், மூலத்தைப் போல ஒரே அதிர்வு வீதம், வேகம், அலை நீளம் கொண்ட துவித அலைகளை மையத்தி லிருந்து எழுப்பும் சுரபியாகக் கருதப் படுகிறது ‘ [Every point on a wave front of light may be considered to be the source of secondary waves that radiate from their centers with the same frequency, velocity & wavelength as their parent]. மேற்கண்ட கருத்துக்கள் யாவும், ஹியூஜென்ஸ் எழுதிய ‘ஒளியைப் பற்றிய தொகுப்பு’ [Treatise of Light] என்னும் நூலிலிருந்து எடுக்கப் பட்டவை.

முதன் முதல் சனிக்கோளின் சந்திரன்கள், வளையங்கள் கண்டுபிடிப்பு

பண்டைக் காலம் தொட்டே மாந்தர் வெறும் கண்களால் பார்த்தே சனிக் கோளைச் சூரிய மண்டலக் கோள்களில் ஒன்றாய்க் கருதி வந்துள்ளார்கள்! பரிதிக்குத் வெகு தொலைவில் மெதுவாகச் செல்வது, சனிக்கோள்! 1610 ஆம் ஆண்டில் காலிலியோ தனது பிற்போக்கான தொலை நோக்கியில் கண்ட சனிக்கோளின் வளையம் தெளிவாகத் தெரியாது, அதன் வரைவடிவம் [Geometry] புரியாது, முதலில் சனி முக்கோள் அண்டம் [Triple Planet] என்றும், அடுத்து 1612 இல் நோக்கியதில் அது நீள்வட்ட வடிவ முள்ளது [Elliptical Planet] என்றும் தவறாகக் கருதினார்! சாய்ந்த வளையம் கொண்ட சனி, சூரியனைச் சுற்றும் போது, சனியின் தோற்றம் மாறுவதால், காலிலியோ அவ்வாறு கண்டதற்குக் காரணமானது!

காலிலியோவின் தொலை நோக்கி காட்டாத சனியின் வளையத்தை, 50 மடங்கு பெரிது படுத்தும் முற்போக்கான தொலை நோக்கியைத் தயாரித்து, 45 ஆண்டுகள் கழித்து 1655 இல், கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் முதன் முதலில் கண்டு பிடித்தார்! வளையம் மெலிந்தது என்றும், சனி சுற்றி வரும் தளத்துக்கு 20 டிகிரி சாய்ந்த ‘திடவத் தட்டு’ [Solid Plate] என்றும், சனிக்கோளைத் தொடாமல் சுற்றி யிருக்கும், ‘துளைத் தட்டு’ என்றும் கூறினார்! பின்னால் 1669 ஆம் ஆண்டில் சனியின் உட்புற, வெளிப்புற வளையங்கள் [Inner & Outer Rings], வளைங்களின் இடைவெளிகள், சனியின் நான்கு துணைக் கோள்கள் ஆகியவற்றை இத்தாலிய பிரென்ச் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸீனி [Giovanni Cassini (1625-1712)] கண்டு பிடித்தார்.

அதன் பின் சனியின் வளையம் ‘திடவத் தட்டு’ என்னும் கருத்து மாறி, இடைவெளிகள் கொண்ட வளையங்களாக எடுத்துக் கொள்ளப் பட்டன!

1789 இல் பிரென்ச் விஞ்ஞானி பியர் ஸைமன் லாப்பிளாஸ் [Pierre Simon Laplace (1749-1827)] சனிக்கோளின் வளையங்கள் மிகச் சிறிய துணுக்குகள் கொண்டவை என்றும், அவையே சூரிய ஒளியைப் பிரதிபலித்துச் சுடரொளி வீசுகின்றன என்று விளக்கினார்! பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் மாக்ஸ்வெல் [James Maxwell (1831-1879] 1857 ஆம் ஆண்டில், பேரளவு எண்ணிக்கை யுள்ள துணுக்குகள் தூரத்துக்கு ஏற்ப வெவ்வேறு வேகங்களில் சுற்றிக் கொண்டிருப் பதால்தான் வளையங்கள் நீடித்துச் சனிக் கோளைச் சுற்றி நிலை பெற முடியும் என்று கணித மூலம் நிரூபித்துக் காட்டினார்! சனியைச் சுற்றி திடவ வளையமோ [Solid Ring], திரவ, வாயு வளையமோ [Fluid Ring] இருந்தால் அவை சனியின் பூதக் கவர்ச்சி விசையால் நொறுங்கிப் போய்விடலாம் என்றும் மாக்ஸ்வெல் கூறினார்!

சூரிய கும்பத்தில் பூதக்கோள் வியாழனுக்கு அடுத்தபடி இரண்டாவது பெரிய கிரகம், சனி! பூமியைப் போல் சனி 95 மடங்கு பெரியது! தன்னைத் தானே 10.5 மணி நேரத்திலும், பரிதியை ஒரு முறை 29.5 ஆண்டுகளிலும் சனி சுற்றி வருகிறது! சனிக்கோளின் மத்திய விட்டம் 75,000 மைல்! துருவங்கள் தட்டையாகி, துருவ விட்டம் 7000 மைல் குன்றி 68,000 மைல் அகண்டது! சனியின் வெளிப்புற வளையத்தின் விட்டம் 169,000 மைல் நீட்சி யுடைய தென்று அறியப் படுகிறது!

மேலும் தனியாக 100,000 வளையல்கள் [Ringlets] சனியைச் சுற்றுகின்றன என்றும் கணக்கிடப் பட்டுள்ளது! வளையத்தின் தடிமன் 10 மைல் முதல் சிறுத்தும் 50 மைல் வரை பெருத்தும் இருப்பதாய்ச் என்று சொல்லப் படுகிறது!

சனியின் 18 துணைக் கோள்களில் பெரியது, டைடான் [Titan]. சூரிய மண்டலத்தின் துணைக் கோள்களில் அது இரண்டாது பெரிய சந்திரனாகக் கருதப்படுகிறது! பூதக்கோள் வியாழனின் சந்திரன், 3270 மைல் விட்ட முள்ள கானிமேடு [Ganymede] யாவற்றிலும் பெரியது! கோள வடிவான டைடானின் விட்டம் 3200 மைல். 3100 மைல் விட்ட முள்ள புதன் டைடானை விடச் சிறியது! மேலும் 2160 மைல் விட்ட முள்ள நமது பூமியின் நிலா டைடானை விடச் சிறியது! சனிக் கோளின் மத்திய ரேகைக்கு [Equator] இணையாக டைடான் 750,000 மைலுக்கு அப்பால், வட்டச் சுழல் வீதியில் [Circular Orbit] 16 பூகோள நாட்களுக்கு ஒருமுறைச் சனியைச் சுற்றி வருகிறது. டைடான் சூழ் மண்டலத்தில் மீதேன் வாயு [Methane Gas] மண்டி யுள்ளதாக விஞ்ஞானி கியூப்பர் [Kuiper] 1944 இல் கூறியிருக்கிறார்.

நியூட்டனுடன் தொடர்பு கொண்டிருந்த டச் விஞ்ஞானி

1689 இல் ஹியூஜென்ஸ் லண்டனுக்கு விஜயம் செய்து ஐஸக் நியூட்டனைச் சந்தித்தார். அங்கே ராஜீயக் குழுவினர் முன்பாக, ஹியூஜென்ஸ் தனது ‘ஈர்ப்பியல் நியதியைப் ‘ [Theory of Gravitation] பற்றி சொற்பொழிவு நிகழ்த்தினார். மகத்தான கணிதப் படைப்பான ‘பிரின்ஸிபியாவை ‘ [Principia] வியந்து, நியூட்டனின் மீது பெருமதிப்புக் கொண்டிருந்தார், ஹியூஜென்ஸ்! வெளிப்படை யாக நியூட்டனின் ஈர்ப்பியல் நியதியைத் தாக்காமல் இருந்தாலும், அவரது கருத்துக்களை ஒப்புக் கொள்ளாது கடிதங்கள் மூலம், ஹியூஜென்ஸ் தனது மறுப்புக்களைத் தெரிவித்திருந்தார்! அடிப்படையாக எவ்வித யந்திரவியல் விளக்கமும் இல்லாத நியூட்டனின் ஈர்ப்பியல் நியதியை ஒப்புக் கொள்ள முடியாது என்று ஹியூஜென்ஸ் எழுதி யிருந்தார்!

1690 இல் ஹியூஜென்ஸ் தனது, ‘ஈர்ப்பியல் ஏற்பாடின் உரையாடலை’ [Discourse on the Cause of Gravity] வெளியிட்டார். அவரது ஈர்ப்பியல் கோட்பாடில் வளர்வேகம், தளர்வேகம் பற்றி எழுதப் படவில்லை! அந்நூலில் தனது ஈர்ப்பியல் நியதிக்குக் ‘கார்டிஸியன் சுழற்சியைக்’ [Cartesian Vortices] காட்டிப் போதிய யந்திரவியல் விளக்கங்களை ஹியூஜென்ஸ் எழுதி யிருந்தார்! ஆனால் நியூட்டன் கார்டிஸியன் சுழற்சிக் கோட்பாடை ஒப்புக் கொள்ள வில்லை! பூமியின் ஈர்ப்பியல் தன்மையே, சுழலீர்ப்பு விசையை [Centripetal Force] உண்டாக்கி, நிலவை இழுத்துப் பூமியைச் சுற்றிவரச் செய்கிறது என்று நியூட்டன் விளக்கம் தந்தார்! அதே போல், பரிதியின் ஈர்ப்பியல் பண்பே சுழலீர்ப்பு விசையை எழுப்பி, பூமி போன்று மற்ற அண்ட கோளங்களையும் தன்வசம் இழுத்துச் சுற்ற வைக்கிறது என்பது நியூட்டனின் கோட்பாடு!

நாசாவின் நான்கு விண்சிமிழ்கள் சனிக்கோளுக்குப் பயணம்!

ஹியூஜென்ஸ் ஓர் கணித நிபுணர். அவர் மேதைகள் வரிசையில் நிலைபெற ஏனோ தகுதி பெறவில்லை! லைப்னிட்ஸ் போன்ற மேதைகளின் படைப்புகளைப் புரிந்து கொள்ள, அவர் சற்று சிரமப் பட்டார்! தனது ஈர்ப்பியல் நியதியை முழுமையாக ஒப்புக் கொள்ளா விட்டாலும், பூர்வீகத் தொகுப்பு முறைகளைக் கையாண்ட [Old Synthetic Methods] கிரிஸ்டியான் ஹியூஜென்ஸை, நியூட்டன் மிகவும் நேசித்தார்! ‘விஞ்ஞானக் கருத்துக்களை விளக்குவதில், கைதேர்ந்த ஓர் சிறந்த எழுத்தாளர்’ என்று நியூட்டன் அவருக்குப் புகழ் மாலை சூடினார்! ஏறக்குறைய பதினெட்டாம் நூற்றாண்டு முழுவதும் அவரது அசைப்பியல், ஒளியியல் கோட்பாடுகள், மகத்தான நியூட்டன் நியதிகள் முன் மறைந்து போயின! ஆனால் அவரது ‘அலை மயமான ஒளியியல் நியதி ‘ [Wave Theory of Light], மற்றும் ‘சுற்றும் அண்டங் களின் அசைப்பியல் ‘[Dynamics of Rotationg Bodies] மகத்தான மூல விஞ்ஞானப் படைப்புகளாய்க் கருதப் பட்டு, அவரது பெயரில் ‘ஹியூஜென்ஸ் நியதி ‘[Huygens’ Principle] என்று பத்தொன்பதாம் நூற்றாண்டில் முன்னணியில் நிற்கின்றன!

இருபதாம் நூற்றாண்டில் நாசா [National Aeronautic & Space Adminitration (NASA)] சனிக்கோளைச் சுற்றி ஆராய்ச்சி செய்ய நான்கு விண்வெளிச் சிமிழ்களை ஏவியது! விண்சிமிழ் பயனீயர் 11 [Pioneer-11 (1973)], வாயேஜர் 1, 2 [Voyager-1,-2 (1977)], வெற்றிகரமாக விண்வெளியில் சனிக்கோளை நெருங்கி அரிய தகவல்களையும், அழகிய படங்களையும் அனுப்பி யுள்ளன! மனிதன் அனுப்பிய பயனீயர் 1979 இல் சனிக்கோளின் வளையத்தினுள் நுழைந்து, சனிக்கருகே 12000 மைலுக்கு அப்பால் பறந்து சென்று, மகத்தான விஞ்ஞான நிகழ்ச்சி யாக வரலாற்றில் இடம் பெற்றது! வாயேஜர்-1,-2 முறையே 1980, 1981 ஆண்டுகளில் சனிக்கோளை அருகி, உயர்ந்த படங்களைப் பூமிக்கு அனுப்பி யுள்ளன! அண்ட வெளியில் பூமியைச் சுற்றி வரும், ஹப்பிள் விண்வெளித் தொலை நோக்கி [Hubble Space Telescope] 1990 இல் சனிக் கோளில் மாபெரும் வெண்ணிறத் தளத்தைப் [Great White Spot] படம் எடுத்துள்ளது!

1998 ஆம் ஆண்டில் ஈசா எனப்படும் ‘ஈரோப்பியன் விண்வெளி ஆணையகம் ‘ [European Space Agency (ESA)] அனுப்பிய ‘உட்சிவப்பு அண்டவெளி நோக்காய்வுத் ‘ [Infrared Space Observatory (ISO)] துணைக்கோள், டைடான் சூழ் மண்டலத்தில் நீர்மய ஆவி [Water Vapour] இருப்பதற்குச் சான்றுகளைக் கண்டுள்ளது! 1997 அக்டோபரில் நாசா ஏவி அண்ட வெளியில் பயணம் செய்யும் ‘காஸ்ஸீனி விண்சிமிழ் ‘ [Cassini Spacecraft] 2004 ஆம் ஆண்டில் சனிக் கோளை அடைந்து, புதிய விஞ்ஞானத் தகவல்களை அனுப்பும் என்று எதிர்பார்க்கப் படுகிறது! விண்சிமிழில் இணைந்துள்ள ‘ஹியூஜென்ஸ் உளவி ‘ [Huygens Probe] சனிக்கோளின் துணைக் கோளான டைடானின் [Titan] சூழ்ப்புறத்தில் இறங்கி ஆராயத் திட்ட மிடப் பட்டுள்ளது !

+++++++++++++++++++++++++++++++

S. Jayabarathan (jayabarathans@gmail.com) [September 29, 2010]

https://jayabarathan.wordpress.com

2011 ஆண்டு இறுதியில் செவ்வாய்க் கோளுக்குத் தளவூர்தியுடன் போகும் நாசாவின் ராக்கெட் வானிறக்கி (Rocket Sky Crane)


சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


செந்நிறக் கோளுக்கு மீண்டும்
உந்தப் போகுது நாசா
தள ஊர்தி யோடு !
தானாக ஊர்தியை இறக்க
தலைகீழ் ஏவுகணைகள்
ஈர்ப்பு விசை எதிர்த்து
கீழிறக்கும் வானிறக்கியால் !
தாறுமா றான களத்தில்
ஆறு சக்கரத் தேர் உலவும் !
நீள மானது தளவூர்தி !
கனமானது !
நூதன மானது
சாதனை வாகனம் !
இதுவரை ஏவப் படாத
புதுமைத் தள விஞ்ஞான ஆய்வகம் !
கதிரியக்க மின்சக்தியும்
பரிதி வெப்ப மின்கலமும்
கருவிகளை இயக்கும் !
செந்நிறக் கோள் தகவல் யாவும்
முந்தைய விண்சுற்றி மூலம்
வந்தடையும் நமது
வையகத்தை !

“உச்சத் தரமான தொலை அளப்பு மூலம் (High Quality Telemetry) தளவூர்தி (செவ்வாய் ஈர்ப்பில்) புகுவது, இறங்குவது, தடம் வைப்பது ஆகிய நிகழ்ச்சிகளை தெளிவாக அறிவது அவசியமானது.  செவ்வாய்க் கோள் விண்வெளித் திட்டத்தில் அதுவே மிக்க சவாலான தீரச்செயல் நுணுக்கம் !  நாங்கள் தேர்ந்தெடுத் திருக்கும் இறங்கு பாதை பிரச்சனைகள் குறைந்த முறையில் தகவலை அனுப்பும் பெரும் தகுதி யுள்ளது.”

ஃபியூக் லி (Mission Mars Exploration Program at JPL)

“செவ்வாய்த் தளத்தைத் தொடும் தருணத்துக்கு முன்னும், பின்னும் நேரும் முக்கிய நிகழ்ச்சிகளைத் தகவல் மூலம் அனுப்பும் பல்வேறு தகுதிப்பாடுகளை ஒப்பு நோக்கியே தேர்வு முறைகள் தீர்மானிக்கப் பட்டன.  குறுகிய பாதையில் இறக்கினால் இரண்டு விண்வெளிக் கப்பல்கள் (NASA’s Mars Odyssey & Mars Reconnaissance Orbiter) தொடர்ந்து தளவூர்தியைக் கண்காணிக்க வேண்டும். மாறாக நெடிய பாதையில் இறக்கும் போது தகவல் அனுப்புப் பூமிக்கு நேரடித் தொடர்பு கிடைக்கிறது.”

மைக்கேல் வாட்கின்ஸ் (Mission Manager, NASA Jet Propulsion Lab).


“நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]

“மனிதன் இதுவரை நுழையாத இடத்துக்கு நாமினித் தைரியமாகப் போக வேண்டும். வால்மீன்கள் ஈர்ப்பு வீச்சைப் பயன்படுத்துவது, வக்கிரக் கோள்களை நெருங்குவது, செவ்வாயின் துணைக்கோளை ஆராய்வது போன்றவை அந்த முயற்சிகள்.  அங்கே ஓரினத்துவம் உள்ள பாறை உள்ளது.  உருளைக் கிழங்கு போல் தாறுமாறாக உள்ள ஃபோபாஸ் துணைக்கோள் செவ்வாய்க் கோளை 7 மணி நேரத்துக்கு ஒருமுறைச் சுற்றுகிறது.  மக்கள் ·போபாஸைக் காணும் போது ‘யார் அதை அங்கு வைத்தவர்’ என்று கேட்டால் பிரபஞ்சம் அதை அங்கே விட்டு வைத்தது என்று சொல்லலாம், விரும்பினால் கடவுள் அமைத்து விட்டார் என்றும் கூறலாம்.”

அமெரிக்க விண்வெளி விமானி பஸ் ஆல்டிரின் (Buzz Aldrin)


“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன் தரும் ஒத்தமைப்பு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்புத் தங்குதளம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை [ஜனவரி 26, 2008] (International Conference on Aerospace Science & Technologies)

“1970 இல் நாசா அனுப்பிய வைக்கிங் விண்ணூர்தி ஏன் செவ்வாய்த் தளத்தில் ஆர்கானிக் மூலக்கூறுகளைக் காணவில்லை என்ற வினா இப்போது எழுந்துள்ளது.  ஆர்கானிக் மூலக்கூறுகளைச் சிதைக்கும் ஓர் இயக்கப்பாடு செவ்வாய்க் கோளில் உள்ளது என்று நாங்கள் எண்ணுகிறோம்.  ஆனால் அந்த இயக்கப்பாடு துருவப் பகுதியில் இருக்காது என்பது எங்கள் யூகம்.  ஏனெனில் நீரும் பனிக்கட்டியும் ஆர்கானி மூலக்கூறுகளைச் சிதைக்கும் “பிரிப்பான்களைத்” (Oxidants) துண்டித்து விடும்.  செவ்வாய்த் தள மண்ணில் உயிர் ஜந்துகள் இருந்தன என்று அறிவது கடினம்.  ஆனால் அந்த மண்ணில் உயிரினம் வாழ முடியுமா என்று விஞ்ஞானிகள் அறியலாம்.”

வில்லியம் பாயின்டன், [William Boynton] ஃபீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, பேராசிரியர், அரிஸோனா பல்கலைக் கழகம்.


2011 ஆண்டின் இறுதியில் நாசா அனுப்பும் அடுத்தோர் செவ்வாய்த் தளவூர்தி !

2.3 பில்லியன் டாலர் நிதிச் செலவில் (2010 நாணய மதிப்பு) நாசா 2011 நவம்பர் அல்லது டிசம்பரில் மீண்டும் செவ்வாய்க் கோளுக்குப் பயணம் செய்து நவீன தளவூர்தி ஒன்றைப் புதிய முறையில் இறக்கப் போவதாகத் தீர்மானித்துள்ளது.  2009 ஆம் ஆண்டில் முடிவு செய்யப் பட்ட அத்திட்டம் விண்வெளி மீள்கப்பல் நிறுத்த நீடிப்பாலும், தளவூர்திப் பயிற்சிக் காலம் போதான்மையாலும் தாமதமாகித் தற்போது 2011 ஆண்டு இறுதியில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.  நாசா இதற்கு முன்பு வெற்றிகரமாகச் செவ்வாய்த் தளத்தில் இறக்கிய மூன்று தள வுளவிகளின் (Spirit, Opportunity & Phoenix Lander) அனுபவத்தில் இப்போது அவற்றை விட முற்போக்கான “செவ்வாய் விஞ்ஞான ஆய்வு வாகனம்” (Mars Science Laboratory, Curiosity) எனப்படும் தளவூர்தி ஒன்றை அனுப்பத் திட்டமிட்டிருக்கிறது.  அந்த தளவூர்தி செவ்வாய்க் களத்தில் நீண்ட காலம் ஆய்வுகள் நடத்தப் போகிறது.  அந்த செந்நிறக் கோள் பயணத் திட்டம் 2011 ஆண்டு நவம்பர் அல்லது டிசம்ரில் பிளாரிடா கனாவரல் முனையிலிருந்து (Cape Canaveral, Florida) ஏவப்பட்டு ஆரம்ப மாகும்.  செவ்வாய்க் கோளை அந்த விண்சிமிழ் 2012 ஆகஸ்ட்டில் நெருங்கிச் சுற்ற ஆரம்பிக்கும்.

2011 நவம்பர் அல்லது டிசம்பரில் ஏவப்படும் செவ்வாய் விண்சிமிழ் 2012 ஆகஸ்டு மாதம் செந்நிறக் கோளை நெருங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  விண்சிமிழின் எடை 900 கி.கிராம் (1980 பவுண்டு). திட்டப்பணி செவ்வாயில் 686 பூமி நாட்கள் நீடிக்கும்.  தளவூர்தியின் முக்கிய ஆய்வு செவ்வாய்ச் சூழ்வெளியானது நுண்ணுயிர் ஜீவன்களை வளர்ப்பிக்கும் தகுதி உடையதா, அவற்றைப் பாதுகாக்கும் தன்மை உள்ளதா என்பதைக் காண்பதே.  அதாவது செவ்வாய்க் கோள் தோன்றிய காலத்தில் வாயுச் சூழ்வெளியும், நீர்மை வளங்களும் வசதி செய்து உயிரினங்கள் வசித்தனவா என்பதை நிரூபித்துக் காட்டுவதே ஆகும்.  முக்கியமாக இந்தச் செவ்வாய்க் கோள் திட்டத்தில் நான்கு குறிப்பணிகள் நிறைவேற்றப்படும்.

1. உயிரினம் எப்போதாவது செவ்வாய்த் தளத்தில் உதித்துள்ளதா ?

2. செவ்வாய் பருவ நிலைப் (Climate) பண்பாடு எவ்விதம் இருந்து பிறகு மாறி யுள்ளது.

3. செவ்வாய்க் கோளின் தளவியல் (Geology) பண்பாடுகளை உளவி அறிவது.

4. செவ்வாய்க் கோள் தேடலில் அடுத்து வரப் போகும் மனிதப் பயணத்துக்குத் தயார் செய்வது.

நாசா திட்டமிட்டிருக்கும் ஐந்து விண்வெளிக் குறிப்பணிகள்.

2011 நவம்பர் அல்லது டிசம்பரில் நாசா செவ்வாய் விஞ்ஞான ஆய்வகத்தை அட்லாஸ் V- 541 ராக்கெட்டில் பிளாரிடா கனாவரல் ஏவுகணை முனையில் அனுப்புவதாகத் திட்டமிட்டுள்ளது.  இந்த முறை ராக்கெட்டில் செவ்வாயைச் சுற்றும் விண்கப்பல் எதுவும் அமைக்கப் படாமல் வெறும் தளவூர்தியைத் தாங்கிச் செல்லும் விண்ணூர்தி மட்டும் ஏற்றிச் செல்லப்படும்.  தளவூர்தி செவ்வாய்த் தளத்தில் இறங்குவதை, ஏற்கனவே பல மாதங்கள் சுற்றிவரும் செவ்வாய்க் கண்காணிப்பு விண்சுற்றி (NASA’s Mars Reconnaissance Orbiter) கவனித்துத் தளவுளவி சேமிக்கும் தகவலைப் பூமிக்கு அனுப்பும்.

1.  செவ்வாய்த் தளவூர்தி எவ்வளவு பெரியது ?

புதிய தளவூர்தி பழைய நான்கு விதமான தளவுளவிகளை (Spirit, Opportunity, Sojouner, Phoenix Lander) விடப் பெரியது, நீளமானது, கனமானது, நூதனமானது.  அதன் நீளம் : 10 அடி (3 மீடர்).  வாகனம் செவ்வாய்த் தளத்தில் எதிர்ப்படும் 2.5 அடி உயரக் கற்களைக் கடந்து செல்லும் திறன் உடையது.  தளத்தில் 600 அடி (200 மீடர்) நீளம் நகரும் ஆற்றல் உள்ளது.  விஞ்ஞான உளவுக் கருவிகள் எடை : 80 கி.கிராம் (176 பவுண்டு). வாகனத்தின் உச்ச வேகம் : மணிக்கு 90 மீடர் (300 அடி) தூரம்.  சராசரி சாதாரண வேகம் : மணிக்கு 30 மீடர் (100 அடி) தூரம்.  2 வருடத்தில் தளவூர்தி சுமார் 20 கி.மீடர் (12 மைல்) தூரம் பயணம் செய்யும் என்று சுமாராகக் கணிக்கப் படுகிறது.

2.  நூதனத் தளவூர்தி எவ்விதம் இறங்கப் போகிறது ?

இதுவரை செவ்வாய்க் கோளில் இறங்கிய தள வாகனங்கள் அனைத்தும் காற்றடைத்த பந்துக் கொத்தில் (Airbag Cushion Balls) அமைக்கப் பட்டு பாராசூட் இறக்கிக் கீழே விடுவிக்கப் பட்டன.  தரையில் விழுந்த பந்துக் கொத்து தவ்வித் தவ்வி இறுதியில் நின்று வாகனம் வெளிவந்தது.  புதிய நூதனத் தளவூர்தி ஹெலிகாப்டரில் சாதனம் இறக்கும் “வானிறக்கு முறையில்” (Sky Crane Lowering) செவ்வாய்த் தளத்தில் தடம் வைக்கும்.  இந்த முறைக்கு பாராசூட், “எதிரியக்கு ராக்கெட்” (Retro-Rocket), வானிறக்கு வடங்கள் தேவைப்படும்.  வாகனத்தை இறக்கும் விண்சிமிழை முதலில் பாராசூட் சுமந்து கீழிறக்குகிறது.  பிறகு விண்சிமிழின் எதிரியக்கு ராக்கெட்டுகள் இயங்கி செவ்வாய்க் கோள் ஈர்ப்பு விசைக்கு எதிராக மெதுவாக்கி அதன் இழுப்பைக் குறைக்கின்றன. அதன்பின் “வான் கீழிறக்கி” (Sky Crane) வடங்களில் கட்டப்பட்ட தளவூர்தி வாகனம் இறங்கித் தளத்தில் ஆறு சக்கரங்கள் படிய ஏதுவாகிறது.

3. தளவூர்தியில் உள்ள சாதனக் கருவிகள்

செவ்வாய்த் தளவூர்தியில் 10 கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன.  அவை மண், பாறை, சூழ்வெளியைச் சோதிக்கும் திறமுடையவை.  தொலைவிலிருந்து பாறைப் படிவை வாயுவாக்கும் வல்லமை உடைய ஒரு லேஸர் சாதனம் உள்ளது.  அடுத்தோர் கருவி ஆர்கானிக் கூட்டுகள் உள்ளனவா என்று சோதிக்கும்.  பிறகு தொலைவில் உள்ளவற்றைக் காணவும், படமெடுக்கவும் தேவையான புதுவிதக் காமிராக்கள்,  தளத்தைத் தோண்டும் கருவியும், அள்ளும் ஓர் அகப்பையும் உள்ளன.  எடுத்துப் பொடி செய்த பாறைகளின் உட்பொருளைப் ஆய்வு செய்திட இரசாயனக் கருவிகள்.  உயிரினத்தை வளர்ப்பிக்கும் ஆர்கானிக் கார்பன் கூட்டுகள் (Organic Carbon Compounds – Carbon, Hydrogen, Nitrogen, Oxygen, Sulfur & Phosphorus) இருப்பைக் காணும்,.  உயிரியல் பண்பாடுகளை (Biological Processes) நோக்கும் தளக் கலவைகளை  (Chemical, Isotopic, Minerological Composition of the Martian Surface) தனித்து அறிவது.  4 பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் செவ்வாய்ச் சூழ்வெளி வளர்ச்சி/தளர்ச்சிக் கால நீட்சி வரிசையைக் காண்பது.  செவ்வாய் நீரோட்டத்தின் தற்போதைய நிலை, பரவல் வரலாறு, நீர், கார்பன் டையாக்ஸைடு சுழற்சிப் போக்கை அறிவது. செவ்வாய்த் தளத்தில் தளக் கதிர்வீச்சு, காலாக்ஸி கதிர்வீச்சு, அகிலக் கதிர்வீச்சு, பரிதி புரோட்டான் நிகழ்ச்சிகள், இரண்டாம் பிறப்பு நியூட்ரான்கள் (Surface Radiation, Galactic Radiation, Cosmic Radiation, Solar Proton Events & Secondary Neutrons) ஆகிவற்றின் பண்பாடுகளை அறிவது.

4. தளவூர்தி செவ்வாயில் செய்யப் போகும் சாதனைகள்

செவ்வாய்த் தளத்தில் உலவும் வாகனத்தின் சக்கரங்கள் பெரியவை. ஒவ்வொரு சக்கரமும் தனித்தியங்க வெவ்வேறு மோட்டர் உள்ளது.  முன்னிரண்டு, பின்னிரண்டு சக்கரங்கள் திரும்ப தனித்தனித் “திருப்பி மோட்டார்” (Steering Motor) உள்ளது.  இம்மாதிரி திருப்பிகள் இருப்பதால் தளவூர்தி நின்ற இடத்திலே 360 டிகிரி கோணத்தில் திரும்ப முடியும்.

5. தளவூர்தியை இயக்கும் மின்சக்தி ஆற்றல்

பல்துறைப் பயண கதிரியக்க உலோகத்தின் மின்கலம் (Plutonium-238 Radioactive Decay) (Multi-Mission Radioisotope Thero-electric Generator -MMRTG) ஆண்டு முழுவதும், இராப் பகலாய் 125 வாட்ஸ் (உச்ச அளவு) மின்னாற்றல் தர வல்லது.  செவ்வாய்க் கோளின் மத்திய ரேகையைத் தாண்டி வாகனம் சென்றாலும் தொடர்ந்து மின்சக்தி கருவிகளுக்குக் கிடைக்கும்.  பரிதியின் எரிசக்தி வாகனம் மத்திய ரேகைப் பகுதிகளில் நடமிடும் போது மின்னாற்றல் அளிக்கும்.  தளவூர்தியின் பரிதி மின்கலம் தினம் 2.5 kwh (Kilo Watt Hour)  வரை உற்பத்தி செய்யும்.  MMRTG கதிரியக்க மின்கலம் 2 ஆண்டுகள் வரைத் தேவைப் பட்டாலும் அதன் ஆயுள் 14 ஆண்டுகள் நீடிக்கும்.

2011 நவம்பரில் செவ்வாய் நோக்கிச் செல்லும் மூன்று வல்லரசுகள்

நாசாவின் நூதனச் செவ்வாய்த் தளவுளவியும், ரஷ்யாவின் ·போபாஸ்-கிரண்ட் செவ்வாய் விண்ணுளவியும் ஏறக் குறைய ஒரே தருணத்தில் செந்நிறக் கோளுக்குப் பயணம் செய்யப் போகின்றன.  ரஷ்யா ஏவுகணைச் சைனாவின் செவ்வாய் விண்ணுளவியையும் ஏந்திச் செல்லப் போகிறது.  அதாவது ஒரே சமயத்தில் மூன்று பெரும் வல்லரசுகள் செந்நிறக் கோளைச் சுற்றி ஆராயப் போகின்றன ! செவ்வாய்த் துணைக்கோள் ·போபாஸில் இறங்கி மாதிரி மண்ணெடுத்து முதன்முதல் பூமிக்கு மீளும் பொறிநுணுக்கத் திறனைக் காட்டப் போகிறது ரஷ்யா !  அமெரிக்கா முதன்முதல் பெருவூர்தி ஒன்றை வானிறக்கு முறையில் (Sky Crane Descent) செவ்வாயில் இறக்கித் தன் பொறிநுணுக்கத்தை நிரூபிக்கப் போகிறது.  அடுத்து முதன்முதல் சைனாவின் செந்நிறக் கோள் விண்ணுளவி செவ்வாயைச் சுற்றுப் போகிறது.  விந்தையான மூன்று முதல் முயற்சிகளில் எது நிறைவேறும் எது ஏமாற்றம் கொடுக்கும் என்பது 2012 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில்தான் நமக்கெல்லாம் தெரியும் !

தகவல்:

Picture Credits: NASA, JPL, ESA, Russian Space Exploration & Chinese Websites

1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2  [Aug 26, 2003]
4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
5 http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]
6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)
11 The Tech Harold – NASA The Nuclear-Powered Mars Science Lab – Curiosity
12 NASA Mars Rover (Mars Science Lab – Curiosity) is Halfway to Next Destination (September 9, 2010)
13 Mars Daily – NASA’s Next Mars Rover Rolls Over Ramps (September 14, 2010)
14 Mars Smart Lander Mission -A Roving Mobile Science Lab (2009-2011)
15 NASA Mars Rover Halfway to Next Destination (September 9, 2010)
16 Press Trust of India – Chain’s Space Programme Gears Up to Moon & Mars (September 21, 2010)
16 (a) Science Daily : Geometry Drives Selection Date for 2011 Mars Launch (May 24, 2010)
17 Tech Herald – NASA Roving Surface Probe towards Mars (2009-2011)
18 Mars Daily – NASA’s Next Mars Rover Rolls Over Ramps (During Testing) (September 14, 2010)
19 NASA – Mars Science Laboratory (Curiosity Rover) (Jet Propulsion Lab JPL) (September 2010)
20 NASA Report : Five things About NASA’s Mars Curiosity Rover (September 16, 2010)
21 Wikipedia – Mars Science Laboratory (Rover Curiosity) (September 21, 2010)

(தொடரும்)
++++++++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) (September 24, 2010)
https://jayabarathan.wordpress.com/

செவ்வாயின் துணைக்கோள் ஃபோபாஸில் தளவுளவி இறங்கி மாதிரி எடுத்துப் பூமிக்கு மீளப் போகும் ரஷ்ய விண்ணுளவி


சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


சந்திரனில் தடம் வைத்தார்
விண்வெளித் தீரர் !
வால்மீன் வயிற்றில் அடித்தார் !
வால்மீன் தள்ளும்
தூளான நீர்மைத் தூசிகளைப்
பிடித்து வந்தார் பூமிக்கு
வடிகட்டியில் !
முரண்கோள் மாதிரியை
எடுத்து மீண்டது
ஜப்பான் !
புத்துயிர் பெற்ற ரஷ்யா
விண்வெளி வித்தைகள்
புரியப் போகிறது மீண்டும் !
செந்நிறக் கோளைச் சுற்றி
முதன் முதலாய்த்
தளவுளவி
வக்கிரத் துணைக் கோள்
·போபாஸில் இறங்கி
புவிக்கு மீளும்
மாதிரி மண் எடுத்து !
சீனா விண் கப்பலையும்
செவ்வாயிக்கு
ஏந்திச் செல்லும் ராக்கெட் !
ரஷ்யக் கரடி
ஒரு பாய்ச்சலில் பிடிக்கும்
இரு மீன்கள் !

“நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]

“மனிதன் இதுவரை நுழையாத இடத்துக்கு நாமினித் தைரியமாகப் போக வேண்டும். வால்மீன்கள் ஈர்ப்பு வீச்சைப் பயன்படுத்துவது, வக்கிரக் கோள்களை நெருங்குவது, செவ்வாயின் துணைக்கோளை ஆராய்வது போன்றவை அந்த முயற்சிகள்.  அங்கே ஓரினத்துவம் உள்ள பாறை உள்ளது.  உருளைக் கிழங்கு போல் தாறுமாறாக உள்ள ·போபாஸ் துணைக்கோள் செவ்வாய்க் கோளை 7 மணி நேரத்துக்கு ஒருமுறைச் சுற்றுகிறது.  மக்கள் ·போபாஸைக் காணும் போது ‘யார் அதை அங்கு வைத்தவர்’ என்று கேட்டால் பிரபஞ்சம் அதை அங்கே விட்டு வைத்தது என்று சொல்லலாம், விரும்பினால் கடவுள் அமைத்து விட்டார் என்றும் கூறலாம்.”

அமெரிக்க விண்வெளி விமானி பஸ் ஆல்டிரின் (Buzz Aldrin)


“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன் தரும் ஒத்தமைப்பு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்புத் தங்குதளம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை [ஜனவரி 26, 2008] (International Conference on Aerospace Science & Technologies)

“1970 இல் நாசா அனுப்பிய வைக்கிங் விண்ணூர்தி ஏன் செவ்வாய்த் தளத்தில் ஆர்கானிக் மூலக்கூறுகளைக் காணவில்லை என்ற வினா இப்போது எழுந்துள்ளது.  ஆர்கானிக் மூலக்கூறுகளைச் சிதைக்கும் ஓர் இயக்கப்பாடு செவ்வாய்க் கோளில் உள்ளது என்று நாங்கள் எண்ணுகிறோம்.  ஆனால் அந்த இயக்கப்பாடு துருவப் பகுதியில் இருக்காது என்பது எங்கள் யூகம்.  ஏனெனில் நீரும் பனிக்கட்டியும் ஆர்கானி மூலக்கூறுகளைச் சிதைக்கும் “பிரிப்பான்களைத்” (Oxidants) துண்டித்துவிடும்.  செவ்வாய்த் தள மண்ணில் உயிர் ஜந்துகள் இருந்தன என்று அறிவது கடினம்.  ஆனால் அந்த மண்ணில் உயிரினம் வாழ முடியுமா என்று விஞ்ஞானிகள் அறியலாம்.”

வில்லியம் பாயின்டன், [William Boynton] ·பீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, பேராசிரியர், அரிஸோனா பல்கலைக் கழகம்.



21 ஆம் நூற்றாண்டில் ரஷ்யா மீண்டும் விண்வெளிப் பயணத்தைத் தொடர்கிறது.

1957 இல் முதன்முதல் ஸ்புட்னிக் -1 பூமியைச் சுற்றிவர அனுப்பி விண்வெளிப் புரட்சியைத் துவக்கிய ரஷ்யா 1984 ஆண்டு வரை வெற்றிகரமாக ஆழ்வெளியை ஆராய்ந்து சோவியத் யூனியன் கவிழ்ந்த பிறகு முடங்கிப் போனது.  இப்போது 1974 ஆண்டில் ஒத்திப் போட்ட செவ்வாய்க் கோள் தளவுளவித் திட்டத்தைப் புதுப்பித்து ரஷ்யா மீண்டும் விண்வெளிப் பயணத்தைத் தொடரச் சோதனைகளை இப்போது நடத்தி வருகிறது.  அந்தத் திட்டத்தின்படி ரஷ்யா செவ்வாயிக்கு விண்வெளிக் கப்பலை அனுப்பி அத்துடன் துணைக்கோள் ·போபோஸில் இறங்கும் தளவுளவி ஒன்றையும் அனுப்பி 2011 நவம்பரில் செய்து காட்ட முடிவு செய்துள்ளது.  இந்தத் திட்டத்தின் தனித்துவச் சிறப்பு என்ன வென்றால் தளவுளவி துணைக்கோளில் இறங்கி மாதிரி மண்ணை எடுத்து முதன்முதலாகப் புவிக்கு மீளும்.  இந்தச் செவ்வாய்க் கோள், துணைக்கோள் ஆய்வுகள் 2011 நவம்பரில் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 330 நாட்கள் நீடிக்கும்.

ரஷ்யா செவ்வாய்த் துணைக்கோளில் இறங்கி மாதிரி எடுத்து மீளும்

2011 ஆண்டு இறுதியில் மனிதரற்ற ஓர் விண்ணுளவி செவ்வாய்க் கோளைச் சுற்றிவந்து, அதன் பெரிய துணைக்கோளான ஃபோபாஸில் (Phobos) இறங்கி மாதிரி மண்ணை அள்ளிக் கொண்டு முதன்முதலாய்ப் பூமிக்கு மீளும் என்று ரஷ்ய விஞ்ஞானிகள் செப்டம்பரில் அறிவித்துள்ளார்.  அந்த ரஷ்ய விண்ணுளவியின் பெயர் “ஃபோபாஸ்-கிரண்ட்” (Phobos-Grunt) என்பது.  செவ்வாய்க் கோளைச் சுற்றும் கோள்சுற்றி (Mars Orbiter) செவ்வாயின் சூழ்வெளியையும், தூசிப்புயல் அடிப்பையும், சூரிய ஒளிப்பிழம்பு, கதிர்வீச்சுகளை (Mars Atmosphere, Dust Storms, Plasma & Radiation) ஆராயும்.  இந்த ரஷ்ய ஏவுகணைத் திட்டத்தில் அடுத்தோர் நூதனம் : சைனாவின் செவ்வாய்க் கோள்சுற்றி “இங்குவோ-1” (Chinese Mars Orbiter Yinghuo-1) ஒன்றும் முதன்முதல் ஏற்றிச் செல்லப்படும்.   இந்தப் பயணம் வெற்றி பெற்றால் நிலவைப் போல் செவ்வாய்த் துணைக்கோள் மாதிரியை முதலில் பூமிக்குக் கொண்டு வந்த வரலாற்று முதன்மை அடையும் ரஷ்யா !  தானாய் வீழ்ந்த விண்பாறை மாதிரிகள் தவிர செவ்வாயின் துணைக்கோள் ஃபோபாஸின் மாதிரி மண்ணை முதன்முதலில் அள்ளி வரப் போகிறது ரஷ்யா !

செவ்வாய்க் கோள் ஃபோபாஸ்-கிரண்ட் திட்டத்தின் குறிக்கோள் என்ன ?

1. தளவுளவி துணைக்கோள் ·போபாஸில் மண் மாதிரியைச் சேமித்துப் புவிக்குக் கொண்டு வந்து சேர்ப்பது, ஆராய்வது.  விண்கப்பல் செவ்வாய்க் கோளையும், அதன் சூழ்வெளியையும் சோதிப்பது.

2, ஃபோபாஸ் தளத்திலும், பூமிக்கு அப்பால் உள்ள செவ்வாய் மாதிரிகளைச் சோதிப்பது.

3. செவ்வாய்க் கோளில் சூழ்வெளியைக் கண்காணிப்பது.  தூசிப் புயல் அடிப்புகளையும், அதன் பாதிப்புகளையும் நோக்குவது, பதிவு செய்வது.

4. சூரியனின் கதிர்வீச்சுக் கடுமை, ஒளிப்பிழம்புப் பிளாஸ்மா, வாயுத் தூசி மண்டலம் போன்ற செவ்வாய்க் கோளின் சுற்றுப்புறத்தை ஆராய்வது.

5. செவ்வாய்க் கோளின் இரண்டு வக்கிரத் துணைக்கோள்களின் (ஃபோபாஸ், டைமாஸ்) (Phobos & Deimos) பூர்வீகத்தையும், அவை செவ்வாயுடன் கொண்டுள்ள உறவுகளையும் அறிதல்.

6. பூமியை ஒத்த அண்டக்கோள்களை உண்டாக்குவதில் தாக்கிய முரண் கோள்களின் (Asteroids Impact) பங்கு என்ன என்பதை ஆராய்வது.

7. செவ்வாய்க் கோள், அதன் துணைக்கோள்களின் பூர்வீகத்தையும், எதிர்காலத்தையும் அறிதல்.

8. ஒரு மூடிய அடைப்புச் சிமிழில் மீறிய நிலைகளில் பிழைத்திருக்கும் நுட்பக் கிருமிகளை இட்டு (Extremophile microorganisms) மூன்றாண்டு செவ்வாய்க் கோள் மீள் பயணத்தில் சோதிப்பது.

ஃபோபாஸ்-கிரண்ட் திட்டத்தின் பயண விளக்கம் & கருவிகள்

ரஷ்யாவின் இந்தச் செவ்வாய்க் கோள் பயணத்துக்குச் சுமார் 10 மாதங்கள் எடுக்கும்.  ரஷ்ய விண்ணுளவி ஃபோபாஸில் இறங்குவதற்கு முன்பு செவ்வாய்க் கோளையும் அதன் துணைக்கோளையும் பல மாதங்கள் விண்கப்பல் சுற்றிவர வேண்டிய திருக்கும்.  ஃபோபாஸ் தளத்தைத் தொட்டதும் தளவுளவி புவிக்கு மீளும் ராக்கெட்டில் (Return Rocket) மாதிரி மண்ணைச் சேமிக்கும்.  தொடர்பு இணைப்பில் ஏதாவது பழுது ஏற்படுமாயின், அபாய முறைப்பாடு இயங்கி மாதிரியை மட்டும் எடுத்துக் கொண்டு, மற்ற ஆய்வுகளை நிறுத்தி, மீளும் ஏவுகணை பூமிக்குத் திரும்பும்.  திட்டமிட்ட வழிப்படி மாதிரிச் சேமிப்புக்கு 2 நாட்கள் முதல் 7 நாட்கள் ஆகலாம்.  துணைக்கோளின் தளத்தில் மண்ணை அள்ளும் சுய இயங்குக் கரம் (Robotic Arm) அரை அங்குலக் கற்கள் வரை எடுத்து ஒரு குழலில் நிரப்ப முடியும். மாதிரியைக் குழலில் திணிப்பதற்கு ஒரு “புகுத்தியும்” (Piston) மாதிரி நிரம்பி விட்டால் நிறுத்த ஓர் “ஒளிநோக்குத் தடுப்புச் சாதனமும் (A Light Sensitive Photo-Diode) தளவுளவியில் இணைக்கப் பட்டுள்ளன.  சுய இயங்கு கரம் 15 அல்லது 20 அள்ளும் முறைகளில் சுமார் 85 -160 கிராம் மாதிரி மண் சேமிக்க முடியும்.

ஃபோபாஸ் துணைக்கோள் மாதிரியைச் சுமந்து கொண்டு பூமிக்குத் திரும்பும் மீட்சிச் சிமிழை இணைத்து வரும் செவ்வாய் மீள் விண்கப்பல் 8 அடி உயரம், 10 அடி அகலம் கொண்டது.  மீளும் ஏவுகணைச் சிமிழ் விண்ணுளவியின் தலைமேல் இணைப்பாகி யுள்ளது.  சிறியதான ஃபோபாஸின் ஈர்ப்பு விசை மிகவும் குன்றியது. அதனால்தான் ரஷ்யா மீளும் ஏவு கணைக்கு ஏற்ற நலிந்த ஈர்ப்பு விசையுள்ள ஃபோபாஸ் தேர்ந்தெடுக்கப்  பட்டுள்ளது.  மீளும் ஏவுகணை 35 km/hr (22 mph) வேகத்தில் மேல் எழுந்தால் ஃபோபாஸ் ஈர்ப்பு விசையைத் தாண்டி புவிநோக்கித் திரும்பமுடியும்.  ஒரு பாதுகாப்பான உயரத்துக்கு மீளும் ஏவுகணை போன பிறகு, அதன் ராக்கெட் எஞ்சின்கள் இயங்க ஆரம்பித்து, புவி நோக்கி மீளும் பாதையில் பயணம் செய்யப் பூமியிலிருந்து சமிக்கை அனுப்பப்பட்டு அது நகர்த்தப் படுகிறது.  இறங்கிய ஃபோபாஸ் தளவுளவி அதன் தளத்தின் மீது ஓராண்டுக்குச் சோதனைகள் செய்யும்.  தளவுளவிக்கு மின்சக்தி அளிப்பது சூரிய சக்தியோடு கதிரியக்க ஏகமூல மின்கலமும் (Radioactive Isotope Battery) உள்ளது.   ரஷ்யாவின்  ஃபோபாஸ்-கிரண்ட் செவ்வாய்த் திட்டப் பணிக்கு (2009-2012) நிதி ஒதுக்கு  104 மில்லியன் டாலர்  (2.4 பில்லியன் ரூபிள்) (2009 நாணய மதிப்பு)



ஃபோபாஸ்-கிரண்ட் திட்டத்தில் ரஷ்யப் பயணக் கருவிகள்

1.  தளக் கட்டுப்பாடு & வழிநடத்து அரங்க ஏற்பாடு (TV System for Navigation & Guidance)

2.  காமாக் கதிர் ஒளிப்பட்டை மானி (Gamma Ray Spectrometer)

3.  நியூட்ரான் ஒளிப்பட்டை மானி (Neutron Spectrometer)

4.  ஆல்·பா எக்ஸ் ஒளிப்பட்டை மானி (Alpha X Spectrometer)

5.  திணிவு நிறை ஒளிப்பட்டை மானி (Mass Spectrometer)

6.  செவ்வாய்க் கோள் தள நடுக்க மானி (Seismometer)

7.  நீள் அலை ரேடார் (Long Wave Radar)

8.  கண்ணோக்கு நெருக்க உட்சிவப்பு ஒளிப்பட்டை மானி (Visual & Near-Infrared Spectrometer)

9.  செவ்வாய்த் தளப்புயல் தூசி அளப்பி (Dust Counter)

10.  சூரியக் கதிர்வீச்சு ஒளிப்பட்டை மானி (Ion Spectrometer)

11  சூரிய நோக்கு உளவுக் கருவி (Optical Solar Sensor)


2005 ஆண்டில் செவ்வாய்க் கோளுக்கு மீண்டுமோர் விண்கப்பல்

நாசா [NASA -National Aeronautics & Space Admistration] 2003 இல் செவ்வாய்க் கோளுக்கு சர்வேயர் [Surveyor], ஆடிஸ்ஸி [Mars Odyssey] விண்கப்பல்களை ஏவியது.  பிறகு ஈரோப்பில் ஈசா [ESA -European Space Agency] செவ்வாய் எக்ஸ்பிரஸ்ஸை [Mars Express] அதே சமயத்தில் அனுப்பியது.  ரோவர் ஊர்திகள் இரண்டும் 2004 ஜனவரியில் அடுத்தடுத்துச் செவ்வாய்த் தளத்தில் தடம் வைத்து நடமாட ஆரம்பித்தன. அதன் பிறகு நாசா 2005 ஆகஸ்டு 12 இல் செவ்வாய் விண்சுற்றிக் கப்பலைச் [Mars Reconnaisdsance Orbiter] செவ்வாய்க் கோளுக்கு ஏவியது.  விண்சுற்றி 2006 மார்ச்சில் செவ்வாயைச் சுற்ற ஆரம்பித்து, அடுத்து ஆறு ஆண்டு காலங்கள் (2012 வரை) வலம் வரும் !  அப்பயணத்திற்கு நிதித்தொகை ஒதுக்கம்: 720 மில்லியன் டாலர்!  முதலிரண்டு காலம் அது செவ்வாய்க் கோளின் துருவப் பனித் தொப்பியின் [Polar Ice Cap] வரலாற்றை அறிய முனைந்தது.

2025 ஆண்டுக்குள் மனிதர் தடம் வைக்கும் முதல் செவ்வாய்ப் பயணம்

இன்னும் இருபது ஆண்டுகளுக்குள் [2025] நாசாவும், ஈசாவும் மனிதர் இயக்கும் விண்வெளிக் கப்பல்களைத் [Manned Spacecraft] தயாரித்து, செவ்வாய்க் கோளில் தமது தடத்தை வைக்கத் திட்டங்களைத் தயாரித்துக் கொண்டு வருகின்றன!  அப்பொல்லோ திட்டத்தில் மனிதர் நிலவைத் தொட 250,000 மைல் தூரம் பயணம் செய்ய வேண்டி யிருந்தது!  ஆனால் பூமியிலிருந்து செவ்வாயின் தூரம் 34 மில்லியன் மைல் முதல் 63 மில்லியன் மைல் வரை வேறுபடுகிறது.  திட்டமிடும் விஞ்ஞானிகள் புறப்படும் தேதியைக் கணித்துப் பயண நாட்களைக் குறைக்க நிர்ணயம் செய்ய வேண்டும்!  மேலும் செவ்வாய்க் கோளை நெருங்க மனிதர் பல மாதங்கள் பூஜிய ஈர்ப்பில் [Zero Gravity] பயணம் செய்ய வேண்டிய திருக்கும் ! பரிதியின் தீக்கதிர்கள் தாக்குவதைப் பல மாதங்கள் தாங்கிக் கொள்ள வேண்டியதிருக்கும்.  அப்பணியை மேற்கொள்ள விஞ்ஞானிகள் தீர்வு செய்ய வேண்டிய பிரச்சனைகள், அனுபவச் சிரமங்கள் அநேகம் ! அநேகம் ! அநேகம் !  பாதுகாப்பாக அந்த நீண்ட பயணத்தைத் துவங்கி நிறைவேற்றத் துணியும் விஞ்ஞானிகளின் மன உறுதியை நாம் மிகவும் மெச்ச வேண்டும்.  நாசா அல்லது ஈசா செவ்வாய்க் கோளுக்கு மனிதர்களைப் பாதுகாப்பாக அனுப்பி, செவ்வாய்த் தளத்தில் தடமிட்ட பிறகு பாதுகாப்பாகப் பூமிக்கு மீட்சி செய்தால், அது நிச்சயம் 21 ஆம் நூற்றாண்டு விண்வெளி வரலாற்றில் ஓர் மகத்தான விஞ்ஞானச் சாதனையாக முதன்மை பெற்றுப் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும்.

தகவல்:

Picture Credits: NASA, JPL, ESA, Russian Space Exploration & Chinese Websites

1. Mars Exploration Rover Mission [http://marsrovers.jpl.nasa.gov./mission/status.html] (Jan 27, 2006)
2. Space Today Online – Exploring the Red Planet, Future Mars Probes from Earth
3 Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2  [Aug 26, 2003]
4 Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
5 http://www.thinnai.com/science/sc0925031.html [Author’s Article on Mars Missions]
6 Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
7 NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
8 From Wikipedia : Phobos (Mars Moon) (June 2, 2010)
9 Daily Galaxy : The Mystery of Mars’ Moon Phobos Deepens By : Casey Kazan via ESA (June 7, 2010)
10 From Wikipedia : Moons of Mars (June 9, 2010)
11 The Tech Harold – NASA The Nuclear-Powered Mars Science Lab – Curiosity
12 NASA Mars Rover (Mars Science Lab – Curiosity) is Halfway to Next Destination (September 9, 2010)
13 Mars Daily – NASA’s Next Mars Rover Rolls Over Ramps (September 14, 2010)
14 Space Flight Now – Russian Lunar & Mars Lander Missions Face Delays By Craig Covault (April 25, 2009)
15 Space Fellowship – Russia to test Unmanned Lander for Mars Moon Mission (September 10, 2010)
16 Science News – Russia to Test Mars Lander for 2011 November Flight (September 11, 2010)
17. Aerospace – World Aeronautical Space Agency (WASA) – Russian Mars Lander Flight Tests in 2011 (September 15, 2010)
18 Wikipedia http://en.wikipedia.org/wiki/Space_exploration (Russian Space Travels) (
19 http://smsc.cnes.fr/PHOBOS/GP_satellite.htm (Phobos-Grunt Parts) (Aug 23, 2010)
20. Wikipedia http://en.wikipedia.org/wiki/Fobos-Grunt (Fobos-Grunt) (September 12, 2010)

++++++++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) (September 18, 2010)
https://jayabarathan.wordpress.com/

சந்திரனைச் சுற்றித் தளத்தில் இறங்கப் போகும் இரண்டாவது இந்தியத் துணைக்கோள் சந்திரயான் -2

(கட்டுரை : 5)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


சந்திரனில் இறங்கியது
இந்தியக் கொடி !
யந்திரத் திறமை காட்டும்
விந்தை ! எவரும்
உயிரிழக்க வில்லை !
உதிரம் சிந்த வில்லை !
மதியால்
மதியை வென்ற யுக்தி !
இப்போது
இந்தியத் துணைக்கோள்
சந்திரயான் இரண்டு
நிலவைச் சுற்றப் போகுது !
தளவுளவி இறங்கி
ஊர்ந்து
ஆராயும் கரு நிலவை !
நிந்தனை யின்றி
வந்தனை செய்வோம் ! அடுத்துச்
சந்திரனில் தடம் வைப்பார்
இந்தியர் !
செந்நிறக்கோள் அடுத்த பயணம் !
நந்தேயத்தினர்
நாள் தோறும் உயர்க !
வந்தே மாதரம் !
வந்தே மாதரம் !

வானை அளப்போம் ! கடல் மீனை அளப்போம் ! . . . .
சந்திர மண்டலத் தியல் கண்டு தெளிவோம் !

மகாகவி பாரதியார் (பாரத தேசம்)

“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன் தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் வேண்டும்.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு ஏராளமாய்க் கிடைக்கிறது.”

டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை [ஜனவரி 26, 2008] (International Conference on Aerospace Science & Technologies)

சந்திரயான் -2 விண்ணுளவி முன்பு சென்ற சந்திரயான் -1 அனுப்பிய தகவலை எடுத்துக் கொண்டு ஆய்வுகளைத் தொடரும்.  தேவையான சோதனைகளை நிலவில் செய்யும்.  புதிய நுணுக்கங்களையும், இயக்க முறைகளையும் கையாள முயலும்.  முக்கியமாக நிலவுத் தேரை தளத்தில் இறக்கி (Lunar Lander & Rover) உலவச் செய்து ஆய்வுகள் நடத்தும்.

பேராசிரியர் யூ. ஆர். ராவ் (ISRO Centre R & D Lab)


“ஜவஹர்லால் நேருவின் 119 ஆம் பிறந்த தினத்திலே விண்வெளி விஞ்ஞானிகள் கோடிக் கணக்கான இந்தியக் குழந்தைகளுக்குச் சந்திரனைக் கொடையாக (2008 இல்) அளித்துள்ளார்கள் !  இந்தச் சாதனை தேசத்துக்குப் புத்துணர்ச்சி அளித்துப் புவியின் பேராற்றல் களஞ்சியமான இளமை உள்ளங்களில் தீப்பொறி எழுந்திட வைத்திருக் கிறது !  இந்திய விண்வெளி விஞ்ஞானிகளின் பொறியியல் உயர்வையும், ஆக்க பூர்வமான தலைமையையும் நான் பாராட்டுகிறேன். சந்திரனிலும் செந்நிறக் கோளிலும் விண்வெளித் தீரர்கள் தடம் வைக்க வேண்டும் என்பது என் கனவு.  இன்னும் 15 ஆண்டுகளில் நமது வாலிப விண்வெளித் தீரர்கள் நிலவின் தளத்தில் நடப்பார் என்று நான் நம்புகிறேன். ”

டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை [நவம்பர் 15, 2008]


“சந்திரயான் -1 துணைக்கோளைத் திட்டமிட்ட வட்டவீதியில் வெற்றிகரமாய்ப் புகுத்திச் சந்திரனுக்குச் செல்லும் பயணம் இப்போது முடிந்தது.  அடுத்துத் தொடங்கப் போகும் ஆய்வுச் சோதனைகளை ஆரம்பிக்க நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்.”

மயில்சாமி அண்ணாத்துரை, சந்திரயான் திட்ட இயக்குநர் (Chandrayaan Project Director) [நவம்பர் 13, 2008]

“நிலவைச் சந்திரயான் -1 நெருங்கியவுடன் பூமியிலிருந்து சமிக்கைகள் அனுப்பி, அதன் வேகம் குறைப்பாகி, எதிர்த் திசையில் திருப்பாகி (Retro-firing) சந்திர மண்டலத்தின் ஈர்ப்பில் இறங்கிப் பாதுகாப்புடன் நிலவுச் சுற்றுவீதியில் வலம் வந்தது.  அந்த நிகழ்ச்சி மகத்தானதோர் உணர்ச்சியை எமக்கு உண்டாக்கியது.”

எஸ். கே. சிவக்குமார், துணைக்கோள் கட்டுப்பாடு இயக்குநர் (Director, ISRO Telemetry, Tracking & Command Network) [நவம்பர் 9, 2008]


“சந்திராயன் -1 நுணுக்கமாகக் கட்டுப்படுத்தப்பட்டு சந்திரனைச் சுற்றுவீதியில் நிபுணர் புகுத்தியது மகத்தானதோர் நிகழ்ச்சி.  அந்த இயக்கத்தில் ஏதேனும் ஒரு சிறு பிழை ஏற்பட்டிருந்தால் துணைக்கோள் நிலவை விட்டு வழிதவறி விண்வெளியில் எங்கோ போயிருக்கும்.”

எஸ், ராமகிருஷ்ணன், திட்ட இயக்குநர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், திருவனந்தபுரம் [நவம்பர் 9, 2008]

சிரமமான “நிலவுச் சுற்றுவீதி நுழைப்புக் கட்டுப்பாடு” [Lunor Orbit Insertion (LOI) Manoeuvre] பூரணமாக நிறைவேறியது.  முதன்முதல் நாங்கள் இதைச் செய்து காட்டிப் புதிய விண்வெளி வரலாற்றை ஆக்கியிருக்கிறோம்.  இது எங்கள் திட்டத்தின் நுட்பத்தையும், இயக்கக் கணிப்புகளின் துல்லிய நுணுக்கத்தையும் எடுத்துக் காட்டுகின்றன.

டாக்டர் மாதவன் நாயர், தலைவர் இந்திய விண்வெளித் திட்ட நிறுவகம் [Chief Indian Space Research Organization (ISRO)] [நவம்பர் 8, 2008]


இரண்டாம் சந்திரயான் துணைக்கோள் தயாராகிறது

இந்திய விண்வெளி ஆய்வகத்தின் (Indian Space Research Organization) (ISRO) இரண்டாவது சந்திராயன் (Chandrayaan -2) விண்ணுளவி 2013 இல் நிலவுக்குச் செல்ல அடுத்து தயாராகி வருகிறது.  அது நிலவை முதலில் சுற்றிய சந்திரயானை (Chandrayaan -1) விடச் சற்று வேறு பட்டது. அது சுமந்து செல்லும் முக்கிய ஆய்வுக் கருவிகள் இப்போது முடிவு செய்யப் பட்டுள்ளன.  இந்தத் திட்டப் பணியில் உள்ள வேறுபாடு என்னவென்றால் நிலவைச் சுற்றும் துணைக்கோளுடன் ஒரு தள இறக்கியும், நகர்ந்திடும் வாகனமும் (Orbiter with a Lander & Rover) இணைக்கப்படும்.  விண்சிமிழ் தன்னுடன் ஒரு தள இறக்கியையும், வாகனத்தையும் (A Lander & Rover) சுமந்து சென்று பாதுகாப்பாகச் சந்திர தளத்தில் இறக்கும்.  தளவுளவி நிலவின் தளத்தை ஆராயும் போது வாகனம் நிலவின் பரப்பில் ஊர்ந்து சென்று தகவல் தயாரித்துச் சுற்றும் விண்சிமிழ் மூலம் பூமிக்கு அனுப்பும்.  தள இறக்கி, வாகன அமைப்புகளுக்கு இந்தியா ரஷ்யாவின் கூட்டுறவை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.  தள இறக்கியும், வாகனமும் ரஷ்ய-இந்தியக் கூட்டுச் சாதனமாயினும் அவற்றைக் கண்காணித்து இயக்கும் பெரும் பொறுப்பு ரஷ்யாவைச் சார்ந்தது.  அந்த திட்டத்திற்காகும் நிதித்தொகை 425 கோடி ரூபாய் (2009 நாணய மதிப்பு) ஒதுக்கப் பட்டுள்ளது என்று திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை கூறினார்.

சந்திரயான் -2 விண்ணுளவியைத் தயாரிப்பது இந்திய விண்வெளி நிபுணர்கள் பொறுப்பு.  2700 கி.கிராம் எடையுள்ளது சந்திரயான் -2;  1400 கி.கி. எடையுள்ளது விண்ணுளவி, 1200 கி.கி. எடையுள்ளது தள இறக்கி, 30 கி.கி. எடையுள்ளது வாகனம்.  கருவிகளின் பளு 40 கி.கி. அளவை மிஞ்சக் கூடாது.  அவற்றை தூக்கிக் கொண்டு போகும் அசுர வல்லமை யுள்ள ராக்கெட் புவிச் சுற்றிணைப்புத் துணைக்கோள் ஏவுகணை, வகுப்பு III (Geosynchronous Satellite Launch Vehicle Mark III) (GSLV MK III). அது கனமானது.  பெரும் பளுவைத் தூக்க வல்லது,  42.4 மீடர் (141 அடி) உயரமுள்ள ராக்கெட் !  ராக்கெட் ஏவும் போது எடை 630 டன்.  சந்திரயான் -2 சுமந்து செல்லும் கருவிகள் ஏழு.  ஒரு வருடம் தாமதமாகி இப்போது சந்திராயன் -2 துணைக்கோள் 2013 ஆம் ஆண்டில் ஸ்ரீரிக் கோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து (Satish Dhawan Space Centre, Sriharikota) ஏவப்படும் என்று திட்டமிடப் பட்டுள்ளது.

சந்திரயான் -2 சுமந்து செல்லும் விண்ணுளவுக் கருவிகள்

இஸ்ரோ மையத்தின் ஆய்வகப் (ISRO Centre R & D Lab) பேராசிரியர் யூ. ஆர். ராவ் சிபாரிசு செய்த இரண்டு கருவிகளோடு மற்றும் ஐந்து பளுக் கருவிகள் (Payloads) இணைக்கப்படும் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது.  அதாவது விண்ணுளவியில் ஐந்து கருவிகள், தளவுளவியில் இரண்டு கருவிகள் ஆக மொத்தம் ஏழு விண்ணாய்வுக் கருவிகள் இணைக்கப்படும்.

சந்திரயான் -2 விண்ணுளவியின் ஐம்பெரும் கருவிகள் :

1. பெரும் பரப்பு மென்மை எக்ஸ்ரே ஒளிப்பட்டைமானி (Large Area Soft X-Ray Spectrometer) நிலவின் தளத்தில் பெருமளவு இருக்கும் தனிமங்களைப் பதிவு செய்யும் கருவி.

2. நிலவின் தளத்தில் சில செ.மீ. ஊடுருவிப் பனியோடு மற்ற உட்பொருட்களை அறியும் கருவி. (L & S Band Synthetic Aperture Radar (SAR).  நிலவின் நிழற் பகுதிகளில் உள்ள நீர்ப்பனிப் பாறைகளையும் கண்டுபிடிக்கும்.

3. நிலவின் தளைத்தில் உள்ள தாதுக் கனிமங்கள், நீர் மூலக்கூறுகள், நீர்மைத் துணுக்குகள் (OH -Hydroxyl) காணும் கருவி (Imaging IR Spectrometer) (IIRS)

4. நிலவின் புறக்கோளத்தை (Exosphere) ஆராயும் கருவி. (Neutral Mass Spectrometer)

5. நிலவின் தளவியல், உலோகவியல் (Geology & Mineralogy) ஆய்வுக் கருவி (Terrain Mapping Camera-2 (TMC-2)


சந்திரயான் -2 தளவுளவியின் இருபெரும் கருவிகள் :

1.  (Laser Induced Breakdown Spectroscope) (LIBS)

2.  Alpha Particle Induced X-Ray Spectroscope (APIXS)

இரண்டு கருவிகளும் வாகனம் இறங்கும் நிலவின் தளத்தில் இருக்கும் தனிமங்களைச் சோதிக்கும்.

இந்திய விண்வெளித் தேடலின் எதிர்காலத் திட்டங்கள்

2020 அல்லது 2025 ஆண்டுகளில் இந்திய விண்வெளி ஆய்வகம் விண்வெளிக் கப்பலில் மனிதரை ஏற்றிச் சென்று நிலவில் தடம் வைக்கத் திட்டமிட்டுள்ளது !  மனிதர் இயக்கும் விண்ணுளவியைச் செம்மையாக்கி நிலவுக்குப் போகும் யாத்திரைக்கும், அங்கிருந்து செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் திட்டத்தையும் இந்தியா தயாரித்துக் கொண்டிருக்கிறது.  “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள் களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப் படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது,” என்று ராக்கெட் விஞ்ஞான மேதை டாக்டர் அப்துல் கலாம், ஜனவரி 26, 2008 இல் நடந்த அகில நாட்டு விண்வெளி விஞ்ஞானப் பொறியியல் பொதுக் கருத்தரங்கில் (International Conference on Aerospace Science & Technologies) கூறியிருக்கிறார். “கடந்த 50 ஆண்டுகளாய் விண்வெளி ஆராய்ச்சி, படைப்பல மேன்மை, அணுசக்தி ஆய்வுப் பங்கெடுப்பில் மூழ்கிய இந்தியா முதன்முதல் ஒரு வெற்றிகரமான சந்திரயான் -1 நிலவுப் பயணத்தைச் செய்து காட்டியுள்ளது,” என்று அந்தக் கருத்தரங்கில் டாக்டர் அப்துல் கலாம் பாரத நாட்டைப் பாராட்டியுள்ளார்.



தகவல்:

Picture Credits :  ISRO Indian Website & http://www.Tamilhindu.com, The Hindu, Satnews.

1. British & Indian Satellites Fly to Space on Ariane-5 Rocket By: Stephan Clark [March 11, 2007]
1A Stars & Planets By : Duncan John [2006]
1B. Astronomy Facts on File Dictionary (1986)
2. India to Develop Interconntinental Ballistic Missile By: Madhuprasad
3. Indian Space Program By: Subhajit Ghosh
4  Chennai Online News Service About Insat 4B Orbiting Satellite [March 14, 2007]
5. The Perfect Launch of Ariane-5 Rocket with Insat 4B Satellite By The Hindu [March 12, 2007]
6. Geostationary Satellite System [www.isro.org/rep20004/geostationary.htm]
7. Indian Space Program: Accomplishments & Perspective [www.isro.org/space_science]
8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210013&format=html  [Dr. Vikram Sarabhai Space Pioneer]
9. Indian Space Program By: Wikipedia
10 Indian Space Research Organization (ISRO) [www.geocities.com/indian_space_story/isro.html]
11 Interview Dr. Abdul Kalam, Indian Airforce [www.geocities.com/siafdu/kalam1.html?200717]
12 President of India : President’s Profile [http://presidentofindia.nic.in/scripts/presidentprofile.jsp
13 Dr. Abdul Kalam : India’s Missile Program http://www.geocities.com/siafdu/kalam.html
14 http://www.tamilhindu.com/2008/10/launch-of-chandrayaan/ (Article & Pictures)
15 http://www.tamilhindu.com/wp-content/uploads/isro_tamilhindu.jpg (Pictures)
16. http://www.tamilhindu.com/wp-content/uploads/isro_tamilhindu2.jpg (Pictures)
17. BBC News : India Moon Probe Ready for Launch [Oct 21, 2008]
18. BBC News : India Sets its Sights on the Moon [Oct 21, 2008]
19. BBC News : Date Set for Indian Moon Mission By Sunil Raman [2003]
20. BBC News : India’ Growing Strides in Space [Oct 21, 2008]
21. Indian Space Research Organization (ISRO) – Scientific Objectives, Spacecraft, of Chandryaan -1
22 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40810231&format=html (Chandryaan -1, Article 1)
23 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811131&format=html (Chandryaan -1, Article 2)
24. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40811201&format=html (Chandrayan -1 Article 3)
25 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40908281&format=html (Chandrayan -1 Article 5)
26 The Hindu – Chandrayaan -1 Finds Traces of Water on the Moon By : N. Gopal Raj (Sep 25, 2009)
27. Satnews Daily : India’s Chandrayaan -2 Preparations for Second Lunar Trip (Jan 18, 2009)
28 Satnews Daily : ISRO Chandrayaan-2 Concentration is on the Moon Launch (Aug 30, 2010)
29 Moon Daily : Press Trust of India ISRO Finalises Chandrayaan -2 Payload (September 2, 2010)
30 Moon Daily : Press Trust of India, Chandrayaan -2 Will Try Out New Ideas & Technologies (September 8, 2010)

******************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 10, 2010)]

https://jayabarathan.wordpress.com/

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! பூமியின் துணைக்கோள் நிலவின் வடிவம் மெதுவாய் குறுகிக் கொண்டு வருகிறது !

(கட்டுரை: 69)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

நிலவின் இடுப்பு
சிறுகச் சிறுகச் சுருங்குது !
மங்கிய நிலவுக்கு முகத்தில்
தங்க முலாம் பூசுவது
பரிதி !
வளர்பிறை தேய்பிறை
வருவது வானில்
ஒரு  மாயக் காட்சி !
அடித்தட்டு முறிவால்
மடிப்புப் பீடம் உண்டாகி
இடுப்பு
சுருங்கிப் போவது
நிலவின் தலைவிதி !
ஒரு பில்லியன் ஆண்டுகளில்
அறு நூறடி விட்டம்
குறுகியது !
அச்சின்றி நகர்வது நிலவு !
ஒருமுகம் காட்டி
மறுமுகம் மறைக்கும் !
குறுகும் நிலவால்
குவலய அலைகள் ஓய்ந்திடலாம் !
கடல் வெள்ளம் குலுங்காமல்
போய்விடலாம் !
காற்றோட்டம் குன்றி விடலாம் !
அலை அணிவகுப்பு தப்புத் தாளமாகி,
ஏற்றம் இறக்கம் மாற்ற மாகும்
ஏழுகடல் அலைகளில் !

**************************

“இந்த செங்குத்துப் பீடங்கள்தான் (Tectonic Cliffs) ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் உண்டான “ஆழ்ச் சரிவுத் தடங்கள்” (Lobate Scarps) என்று நாங்கள் குறிப்பிடுகிறோம். அவை நூறு மில்லியன் ஆண்டுகளில் உருவானதாக இருக்கலாம்.  ஆழ்ச் சரிவுகள் வடிவத்தின் அடிப்படையில் மதிப்பிட்ட போது நிலவின் விட்டம் 600 அடி குறுகி விட்டது என்று கணித்தோம்.”

தாமஸ் வாட்டர்ஸ் (Smithsonian Institution, Washington, D.C.)

“நிலவுச் சுருக்கத்தின் விளைவுகள் பூகோள இயக்கத்தைப் புரிந்து கொள்ள பூகோளத்தின் முக்கியத்தைக் காட்டுகிறது.  நிலவு விண்ணுளவியின் (Lunar Reconnaisannce Orbiter) குறிப்பணிகள் இப்போது நிலவின் தளவியல் இயல்புகளை அறியப் புதிய விஞ்ஞானப் பாதையில் செல்வதால் பரிதி, நிலவு ஆகியவற்றின் வரலாற்றைப் புரிந்து கொள்ள அது ஒரு பெருங் கருவியாய் உள்ளது.”

டாக்டர் ஜான் கெல்லர் (NASA Deputy Project Scientist Lunar Reconnaissance Orbiter -LRO)


“நிலவு குளிர்ந்து, சுருங்கிய போது தளத்தில் மடிப்புகள் (Wrinkles) உருவாகி இருக்கலாம்.  ஆனால் அவை யாவும் ஒரு பில்லியன் ஆண்டுகளுக்குள் உண்டாகி இருக்க வேண்டும்.  அதற்குப் பிறகும் நிலவு தளவியல், அடித்தட்டு நகர்ச்சி ரீதியாக உயிர்ப்புடன் இயங்கி (Geologically & Tectonically Active) இப்போதும் சுருங்கிக் கொண்டு வருகிறது.  அப்படியாயின் அந்த மடிப்புகள் இன்றும் வளர்ச்சி அடைந்து நிலவில் நில நடுக்கம் நிகழ்ந்திருக்க வேண்டும்.  1970 ஆண்டுகளில் நாசாவின் அப்பொல்லோ விண்வெளி விமானிகள் தமது நில நடுக்கமானிகளில் (Seimometers) அவற்றைப் பதிவு செய்திருக்க வேண்டும்.”

தாமஸ் வாட்டர்ஸ் (Smithsonian Institution, Washington, D.C.)


“பிண்டங்கள் பிளந்து விழுகின்றன, நடுமையம் தாங்க முடியாமல்.”

வில்லியம் பட்லர் ஈட்ஸ், ஐரிஸ் கவிஞர் (1865-1939)

நம்மால் எட்டிப் பிடிக்க இயலாதபடி அல்லது நாம் கண்டுபிடிக்க முடியாதபடி எந்த ஒரு பொருளும் நம்மிடமிருந்து நீக்கப்பட வில்லை.

டெஸ்கார்டிஸ், பிரெஞ்ச் கணித மேதை (1596-1650)

 

நாசாவின் நிலவு விண்ணுளவி நிலவு சுருங்குவதைக் கண்டது

நாசாவின் நிலவு விண்ணுளவி (Lunar Reconnaissance Orbiter LRO) சமீபத்தில் கண்டுபிடித்த நிலவின் புதிய செங்குத்துப் பீடங்கள் (Lobate Cliffs), நிலா சுருங்கிக் கொண்டு வருவதைக் காட்டுகிறது.  அந்தப் பீடங்கள் நிலவின் தளப்பரப்பு முன்பு குறுகியதையும், இப்போது சுருங்கிக் கொண்டு வருவதையும் விண்ணுளவி பதிவு செய்துள்ளாக ஆய்வு நடத்தும் நாசா LRO விஞ்ஞானக் குழுவினர் கூறினார்.  இந்த அரிய விளைவுகள் நிலவின் தளவியல், அடித்தட்டு நடுக்கவியல் விருத்தியை (Lunar Geologic & Tectonic Evolution) விளக்க முக்கிய தடக்குறிகள் (Clues) தரும்.

தோற்றக் காலத்தில் கொடும் கொந்தளிப்பான சூழ்நிலையில் நிலவு தோன்றியது.  அதன் பிறகு அது முரண் கோள்களாலும், விண்கற்களாலும் (Asteroids & Meteors) தீவிரமாகக் தாக்கப்பட்டது !  எண்ணற்ற இந்த மோதல்களும், கன மூலகங்களின் கதிரியக்கமும் நிலவைப் பேரளவு சூடாக்கின !  வயதாக வயதாக நிலவின் சூட்டு வெப்பம் தணிந்து நிலா குளிர்ந்து சுருங்க ஆரம்பித்தது.  முன்பு விஞ்ஞானிகள் நிலவு ஆரம்ப காலங்களில் மெதுவாகக் குளிர்ந்து சிறுகச் சிறுகச் சுருங்கி வந்தது என்று கருதினார். விஞ்ஞானிகளின் புதிய நிலவு ஆராய்ச்சி சொல்வது என்ன வென்றால் சமீபத்தில் நிகழ்ந்த அடித்தட்டு நில நடுக்கம் (Tectonic Activity) உட்புறத்தின் நீண்ட காலக் குளிர்ச்சிச் சுருக்கத் தோடு சேர்ந்து கொண்டது என்பதுதான்.

“தோற்ற காலத்திற்குப் பிறகு “நிலவு குளிர்ந்து, சுருங்கிய போது தளத்தில் மடிப்புகள் (Wrinkles) உருவாகி இருக்கலாம்.  ஆனால் அவை யாவும் ஒரு பில்லியன் ஆண்டு களுக்குள் உண்டாகி இருக்க வேண்டும்.  அதற்குப் பிறகும் நிலவு தளவியல், அடித்தட்டு நகர்ச்சி ரீதியாக உயிர்ப்புடன் இயங்கி (Geologically & Tectonically Active) இப்போதும் சுருங்கிக் கொண்டு வருகிறது.  அப்படியாயின் அந்த மடிப்புகள் இன்றும் வளர்ச்சி அடைந்து நிலவில் நில நடுக்கம் நிகழ்ந்திருக்க வேண்டும்.  1970 ஆண்டு களில் நாசாவின் அப்பொல்லோ விண்வெளி விமானிகள் தமது நில நடுக்கமானிகளில் (Seimometers) அவற்றைப் பதிவு செய்திருக்க வேண்டும்.,” என்று தாமஸ் வாட்டர்ஸ் (Smithsonian Institution, Washington, D.C.) கூறுகிறார்.

நிலவின் தள நடுக்கத்தை விளக்கும் நிலவின் சுருக்கம்

கடந்த ஒரு பில்லியன் ஆண்டில் நமது சந்திரனின் விட்டம் சுமார் 200 மீடர் (660 அடி) சுருங்கிக் கொண்டு வந்திருக்கிறது ! நிலவு இப்போதும் சுருங்கிக் கொண்டு நிலவுத் தள நடுக்கத்தை உண்டாக்கி வருகிறது !  அதன் மூலம் முன்பு கருதியபடி நிலவு செத்த கோளமாய் இல்லாது ஓர் உயிர்ப்பு அண்டமாய் இருப்பது அறியப்பட்டுள்ளது.  நிலவில் உண்டான சுருக்கம் அதன் தளப் பரப்பில் பல மடிப்புகளாக (Wrinkles), முந்திரிப் பழ வற்றல் போல் (Raisin) காட்சி அளிக்கிறது. நிலவைக் கிள்ளி விட்டது போல் தெரியும் அந்த மடிப்புகளைச் “செங்குத்துச் சரிவுத் தடங்கள்” (Lobate Scarps) என்று விஞ்ஞானிகள்  குறிப்பிடுகிறார்.  நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் கால் வைத்து ஆராய்ந்த அமெரிக்க விண்வெளி விமானிகள் நிலவின் மத்திய ரேகைக்கு அருகில் சில நில மடிப்புகளைக் கண்டனர்.  நிலவுக்குச் சென்ற நாசாவின் அப்பொல்லோ 15, 16, 17 பயணங்கள் அப்போது அவற்றை அவ்விடத்து நிகழ்ச்சி என்று ஒதுக்கி விட்டன !

நாசா 2009 ஜூனில் அனுப்பிய நிலவு விண்ணுளவி (Lunar Reconnaissance Orbiter) இப்போது புதிதாக 14 செங்குத்துச் சரிவுகளைக் காட்டியுள்ளது.  அவற்றின் உச்ச உயரம் : 130 மீடர் (430 அடி), நீளம் : பத்துப் பதினைந்து கி.மீ. (6 அல்லது 9 மைல்).  நிலவுக் கோளம் முழுவதும் தெரியும் இந்த செங்குத்துச் சரிவுகள் நிலவு சுருங்கி வருவதை உறுதிப் படுத்துகின்றன.  அடித்தட்டு முறிவு நகர்ச்சியால் (Tectonic Fault Activity) நிலவில் நேர்ந்த சுருக்கங்கள் இதுவரை அதன் 3500 கி.மீ. விட்டத்தை 200 மீடர் அளவு (2160 மைல் விட்டத்தில் 660 அடி) குறைத்து விட்டன.  நிலவைப் போல் நிகழ்ந்த இவ்விதச் சுருக்க விளைவுகளால் எழுந்த செங்குத்துச் சரிவுகள் (Lobate Scarps) புதன் கோளிலிலும் காணப் படுகின்றன.  புதன் கோளில் பீடங்கள் 2 கி.மீ உயரம், 600 கி.மீ. (1 மைல் உயரம், 360 மைல்) நீளத்தில் தெரிகின்றன.

உறுதி செய்யப்பட்ட முடிவான நிலவுத் தோற்ற நியதி

1970 ஆண்டுக் காலங்களில் நிலவுத் தோற்றத்தை விளக்க வானியல் விஞ்ஞானிகள் முடிவான பூதத் தாக்கு நியதியை (The Giant Impact Theory) அரங்கேற்றினார்கள்.  பூமி மீது மோதிய சிறிய கோள் முட்டிய போது, “கோண-மையத் தாக்குதலில்” (Off-center Impact) மோதியதாக அனுமானிக்கப் படுகிறது.  அத்தகைய மோதல் இளமைப் பருவப் பூமிக்கு விரைவான துவக்கச் சுழற்சியை (Fast Inititial Spin) அளித்திருக்க முடியும் என்றும், எறியப்பட்ட துண்டம் நிலவாக வடிவம் பெற்றுச் சுற்றியிருக்க வேண்டும் என்றும் கருதப்படுகிறது.  அத்துடன் மோதலில் விளைந்த வெப்பசக்தி நிலவின் பாறைப் பொருட்களைச் சூடேற்ற ஏதுவாக உதவியிருக்கும் என்று நம்பச் செய்கிறது. ஏறக்குறைய அடுத்த பத்தாண்டுகளாக “பூதத் தாக்கு நியதியை” விஞ்ஞானிகள் நம்பாமல் இருந்தனர். 1984 இல் நடந்த ஒரு கூட்டுக் கருத்தரங்கில் எல்லா நியதிகளும் விவாதிக்கப்பட்டு, முடிவில் பெரும்பான்மையான எண்ணிக்கையில் பூதத் தாக்கு நியதி பலரால் ஒப்புக்கொள்ளப் பட்டது.

50 மில்லியன் ஆண்டு வயதாகிப் பூமி தவழ்ந்து வளரும் பருவத்தில் உடல் முறுக்கேறாது கனிந்த நிலையில் உள்ள போது அத்தகைய பூதகரமான மோதல் நிகழ்ந்திருக்க முடியு மென்று நம்ப இடமிருக்கிறது !  அதை நிரூபித்துக் காட்ட அமெரிக்காவில் போல்டர், கொலராடோ தென்மேற்கு ஆய்வுக் கூடத்தில் ராபின் கானூப் (Robin Canup, Southwest Research Institute), என்பவரும் காலி·போர்னியா பல்கலைக் கழகத்தின் எரிக் ஆஸ்ஃபாக் (Erik Asphaug) என்பவரும் ஒரு புதிய “கணினி போலிப் படைப்பை” (Computer Simulation) வெற்றிகரமாகச் செய்தார்கள்.



நிலவுச் சுருக்கத்தால் பூமியில் நேரக் கூடிய விளைவுகள்

“இந்த செங்குத்துப் பீடங்கள்தான் (Tectonic Cliffs) ஒரு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிலவில் உண்டான “ஆழ்ச் சரிவுத் தடங்கள்” (Lobate Scarps) என்று நாங்கள் குறிப்பிடுகிறோம். அவை நூறு மில்லியன் ஆண்டுகளில் உருவானதாக இருக்கலாம்.  ஆழ்ச் சரிவுகள் வடிவத்தின் அடிப்படையில் மதிப்பிட்ட போது நிலவின் விட்டம் 600 அடி குறுகி விட்டது என்று கணித்தோம்.” என்றும் தாமஸ் வாட்டர்ஸ் கூறுகிறார்.  நிலவின் வடிவம் சுருங்கிக் கொண்டு வருவதால் என்ன என்ன மாறுதல்கள் படிப்படியாக நிகழும் என்பதை விஞ்ஞானிகள் இதுவரை வெளியிடவில்லை.  மேலும் ஆண்டுக்கு (3.8 செ.மீ.) (1.5 அங்குலம்) நிலவு பூமிக்கு அப்பால் நகர்கிறது என்று விஞ்ஞானிகள் கணக்கீடு செய்துள்ளார். நிலவில் ஏற்படும் இந்தத் திரிபுகளால் பூமியில் விளையும் சிறு சிறு வேறுபாடுகளை யூகிப்பது சிரமம்.  ஆனால் வேறுபாடுகள் நிச்சயம் நேர்ந்திடும்.  பூமியின் அலை உயர ஏற்ற இறக்கங்கள் (Tides) மாறலாம் ! அலையடிப்பு ஓட்டத்தில் (Waves) படிப்படியாக மாறுபாடுகள் தோன்றலாம்.  அத்தகைய மாறுபாடுகள் காற்றோட்டம், மழைப் பொழிவு ஆற்றலை சிறுகச் சிறுகப் பாதிக்கலாம் !

(தொடரும்)

*******************

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. Physics for Poets By :  Robert March (1983)
9. Atlas of the Skies (2005)
10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
11 Wikipedia – Inner Structure of the Moon (January 31, 2008)
11 (a) Natural World .com – Earth-Moon Dynamics Page (August 3, 2004)
12 Daily Galaxy : Venus & Moon – New NASA Observations Show The Moon is Shrinking (August 20, 2010)
13 Moon Daily : Lunar Reconnaissance Orbiter (LRO) Reveals Incredible Shrinking Moon (August 20, 2010)
14 NASA’s Lunar Reconnaissance Orbiter (LRO) Reveals Incredible Shrinking Moon (August 19, 2010)
15 National Geographic – Why the Moon is Shrinking (August 20, 2010)
16 The Hindu – Shrinking Moon (August 28, 2010)
17 Shrinking Moon May Explain Lunar Quakes By : Antoine (September 1, 2010)

******************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (September 3, 2010)]
https://jayabarathan.wordpress.com/

காலக்ஸி குவியீர்ப்பு நோக்கு முறையில் கருஞ்சக்தி திணிவு ஆய்வு

(ஆகஸ்டு 19, 2010)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


பிரபஞ்சத்தின் தலைவிதியை
நிர்ணயம் செய்யும்
மர்மக் கருஞ்சக்தி —
விழிக்குப் புலப் படாத ஒன்றை
தொலைநோக்கி
அளந்தது முதன்முதலாய் !
பிரபஞ்சச் சிற்பியின் அசுரக்
குதிரைச் சக்தி !
விதிச் சக்தி !
கவர்ச்சி விசைக்கு எதிராய்க்
கலகம் செய்யும் மாபெரும்
விலக்கு விசை !
கருஞ்சக்தி அடர்த்தியைப்
பரிமாணத்தில் காணும்
காலாக்ஸி குவியீர்ப்பு முறை
புதிய போக்கு !
முதல் நோக்கு ஆய்வு !
ஒளிமந்தையைத் தள்ளுவது
கருஞ்சக்தி !
விரிந்து செல்லும் பிரபஞ்சம்
வேலி தாண்டி
ஒருநாள் குளிர்ந்து
உஷ்ணம் பூஜிய மாகி
உடல் முறிந்து விடும் !

“அமைப்பரங்கு, உட்பொருள், பிரபஞ்சத்தின் தலைவிதி (Geometry, Content & Fate of the Universe) ஆகிய மூன்றும் சிக்கலாகப் பின்னியவை.  மூன்றில் இரண்டை அறிந்தால் மூன்றாவதைக் கணக்கிட்டு விடலாம். ஏற்கனவே பிரபஞ்சத்தில் எத்துணை அளவு பிண்ட சக்தி உள்ளதென நாம் அறிவோம்.  அதன் அமைப்பரங்கை எப்படியோ அறிந்தால் நாம் பிரபஞ்சத்தின் தலைவிதி எப்படி இருக்கும் என்று துல்லியமாகச் சொல்லி விடலாம்.

பேராசிரியை பிரியா நடராஜன் (Cosmologist, Yale University, USA)

1998 ஆண்டுக்கு முன்னால் “கருஞ்சக்தி” என்னும் ஓர் விஞ்ஞானக் கருத்தை யாரும் கேள்விப்பட்ட தில்லை ! கருஞ்சக்தி என்பது அண்டங்களின் ஈர்ப்பு விசையைப் (Gravity) போல ஒருவித விலக்கு விசையே (Anti-Gravity) ! அது முக்கியமாகக் காலாக்ஸிகளின் நகர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது.  அத்துடன் காலாக்ஸிகளின் வடிவங்களைச் சிற்பியைப் போல் செதுக்கி, அவை ஒன்றையொன்று மோதிக் கொள்ளாதவாது அவற்றுள் இடை வெளிகளை ஏற்படுத்திக் கொண்டும் வருகிறது.

கிரிஸ்டொஃபர் கன்ஸிலிஸ் (வானோக்காளர், நாட்டிங்ஹாம் பல்கலைக் கழகம்)


“கருஞ்சக்தியின் இயல்பாடு அதன் அழுத்தம் மற்றும் திணிவு ஆகிய இரண்டோடு (Related to its Pressure & Density) சம்பந்தப் பட்டது.  அதுவே அதன் சமன்பாட்டு நிலைப்பு (Equation of State) என்று சொல்லப்படுவது.  எமது குறிக்கோள் அவற்றின் தொடர்பைக் கணக்கீடு (Quantify their Relationship) செய்வதே.  கருஞ்சக்தியின் பண்பாடுகளை அந்தச் சமன்பாடு நமக்குக் கற்பிக்கிறது.  மேலும் பிரபஞ்சத்தின் விருத்தியைக் கருஞ்சக்தி எப்படிப் பாதிக்கிறது என்றும் காட்டுகிறது.”

எரிக் ஜூல்லோ (Eric Jullo, Astronomer, NASA Jet Propulsion Lab)

“குவியீர்ப்பு முறையின் (Gravity Lensing Method) துல்லிம விளைவுகள் காலக்ஸிக் கொத்தின் பளுநிறை (Mass of the Galaxy Cluster) அடுத்து கால வெளியின் அமைப்பையும், நோக்குவோருக்கும் காலாக்ஸி, மற்றதன் பின்னுள்ள அண்டத்துக்கும் இடைப்பட்ட தூரத்தையும் பொருத்தவை.  குவியீர்ப்பு முறை உருவைப் பெரிதாக்கும் ஒரு பூதக் கண்ணாடி போன்றது.  அதில் தெரியும் உருவம் உருப்பெருக்கி ஆடியின் வடிவத்தையும் எத்தனை அளவு தூரத்தில் குறி உள்ளது என்பதையும் பொருத்தது.. அந்த உருப் பெருக்கி ஆடியின் பரிமாணத்தையும் குறிப்படத்தின் அளவையும் அறிய முடிந்தால் கண்ணுக்கும் குறிக்கும் இடையே சென்ற ஒளியின் பாதையைக் கணக்கிடலாம்.”

பேராசிரியை பிரியா நடராஜன் (Cosmologist, Yale University, USA)


“எல்லாக் கோணங்களிலிருந்தும் சிக்கலான கருஞ்சக்தி மர்மத்தை நாம் நோக்க வேண்டும்.  அதற்குப் பல்வேறு முறைகள் கைவசம் இருப்பது அவசியம்.  இப்போது எம்மிடம் உள்ளது (Cosmic Lensing) புதியதாய் ஒன்று, அது பேராற்றல் கொண்டது.”

எரிக் ஜூல்லோ (Eric Jullo, Astronomer, NASA Jet Propulsion Lab)

“நாங்கள் இப்போது இதே ஆய்வு நுணுக்கத்தை மற்ற ஈர்ப்புவிசைக் குவியீர்ப்புக்குப் (Gravitational Lenses) பயன்படுத்தலாம்.  நமது பிரபஞ்சத்தில் கருஞ்சக்தி புரியும் விந்தைகளைக் கற்றுக் கொள்ள நமக்கு இயற்கையாக அமைந்துள்ள ஓர் எழினான ஆய்வு முறையைத் துருவி எடுக்கிறோம்,”

பேராசிரியை பிரியா நடராஜன்

“எமது தனிச்சிறப்புத் தொலைநோக்கு முறையால், மற்றவர் வழிகளிலோடு இணைந்து இதுவரை சாதிக்காத பேரளவு துல்லிமத்தில் கருஞ்சக்திப் பரிமாண முடிவுகளை நாம் அளவிட முடியும்.”

ஜான் பால் நெய்ப் (Jean Paul Kneib, Astrophysics Lab, Marseille, France)

நமது பூகோளத்திலும், விண்மீன்களிலும் பிரபஞ்ச வெப்பத் தேய்வு (Entropy) தீவிரமாய் மிகையாகிக் கொண்டு வருகிறது.  அதாவது சிறுகச் சிறுக முடிவிலே விண்மீன்களில் அணுக்கரு எரிசக்தி தீர்ந்துபோய் அவை செத்து வெறும் கனலற்ற பிண்டமாகி விடும்.  விண்மீன்கள் அவ்விதம் ஒவ்வொன்றாய்ச் சுடரொளி மங்கிப் பிரபஞ்சமானது ஒருகாலத்தில் இருண்ட கண்டமாகிவிடும்.

டாக்டர் மிசியோ காக்கு  (அகிலவியல் விஞ்ஞான மேதை)


முதன்முதல் காலாக்ஸி குவியீர்ப்பு நோக்கில் கருஞ்சக்தி ஆய்வு

1998 இல் முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட மாபெரும் மர்ம விலக்கு விசையான கருஞ் சக்தியை (Dark Energy) ஆழ்ந்து ஆய்வு செய்து அளக்க அகிலவியல் விஞ்ஞானிகள் (Cosmologists) ஒரு புதிய முறையை இப்போது பயன்படுத்தியுள்ளார்.  அந்த மாய சக்தி காலாக்ஸிகளை விரட்டிக் கொண்டு விரியும் பிரபஞ்சத்தின் எதிர்காலத் தலைவிதியை நிர்ணயம் செய்யப் போகும் அசுர சக்தியாக ஒளிந்து கொண்டு உள்ளது !  2010 ஆகஸ்டு 19 ஆம் தேதி நாசா / ஈசாவின் ஆலி உஸ்ஸர், ஜேபியெல் ஜூல்லோ, யேல் பல்கலைக் கழகத்தின் பிரியா நடராஜன், பிரான்சில் ஜான் பால் நெய்ப் ஆகியோர் இணைந்து வெளியிட்ட விஞ்ஞான ஆய்வுரையில் (Science Journal) முதன்முதலாக மாபெரும் ஒளிமந்தைக் கொத்தின் குவியீர்ப்பை நோக்கு முறையைப் [A Massive Cluster of Galaxies (Abell 1689) or Galactic Lensing] பயன்படுத்திக் கருஞ்சக்தி இயல்பாட்டை ஆராய்ந்ததாகக் குறிப்பிட் டுள்ளார்கள்.  அவரது புதிய கணக்கீடுகள் மற்றவர் கைவசமுள்ள முந்தைய முறைப்பாடு இலக்கமுடன் (Data from Other Methods) சேரும்போது கருஞ்சக்தி பரிமாணத்தின் துல்லிமை அதிகரிக்கிறது.  மேலும் கண்ணுக்குப் புலப்படாத இந்தப் புதிரான கருஞ்சக்தி மெய்யாக என்ன வென்பதை விளங்கிக் கொள்ளவும் வழி வகுக்குகிறது.

குவியீர்ப்பு முறையை (Gravitational Lensing) முதலில் உலகுக்கு அறிவித்தது ஐன்ஸ்டைனின் பொது ஒப்பியல் நியதி (General Theory of Relativity).  கருஞ்சக்தி பிரபஞ்சத்தைப் பெரிதாக விரியத் தள்ளிச் செல்லும் போது ஒளிக்கற்றைகள் அதைப் பின்பற்றிப் பயணம் செய்து குவியீர்ப்பால் வளைக்கப் பட்டு மாறுகின்றன.  அதாவது குவியீர்ப்பால் திரிபு பெற்ற படக் காட்சிகள் (Distorted Images) உட்பட்ட அகிலவியல் (Underlying Cosmology) தன்மையை வெளிப்படுத்தும் “கருஞ்சக்தியின் இயல்பாடு அதன் அழுத்தம் மற்றும் திணிவு ஆகிய இரண்டோடு (Related to its Pressure & Density) சம்பந்தப் பட்டது.  அதுவே அதன் சமன்பாட்டு நிலைப்பு (Equation of State) என்று சொல்லப்படுவது.  எமது குறிக்கோள் அவற்றின் தொடர்பைக் கணக்கீடு (Quantify their Relationship) செய்வதே.  கருஞ்சக்தியின் பண்பாடுகளை அந்தச் சமன்பாடு நமக்குக் கற்பிக்கிறது.  மேலும் பிரபஞ்சத்தின் விருத்தியைக் கருஞ்சக்தி எப்படிப் பாதிக்கிறது என்றும் காட்டுகிறது.” என்று விஞ்ஞான வெளியீட்டு கூட்டாசிரியர் எரிக் ஜூல்லோ (Eric Jullo, Astronomer, NASA Jet Propulsion Lab) கூறுகிறார்.

இந்த அகிலவியல் குவியீர்ப்பில் (Cosmic Lensing) ஒளியின் போக்குத் திரிபு அடைவது மூன்று காரணங்களால் நிகழ்கிறது :

1.  எவ்வளவு தூரத்தில் நோக்கும் குறி அண்டம் உள்ளது ?

2.  எவ்வளவு பளுநிறை கொண்டது காலக்ஸிக் கொத்து (Galaxy Cluster Mass) ?

3.  கருஞ்சக்தி அடர்த்தி அல்லது பரவியுள்ள நிலைப்பாடு (Distribution of Dark Energy)

முதலிரண்டு விபரங்கள் தெரிந்தால் மூன்றாவது புதிரான கருஞ்சக்தி அடர்த்தியைக் கணக்கிட்டு விடலாம்.  அதாவது பிரபஞ்ச விரிவின் வேகத்தை அறியலாம்.  நமது பிரபஞ்சம் இப்படியே விரித்து பெருத்துக் கொண்டு போய் பல பில்லியன் ஆண்டுகள் கடந்து ஒரு யுகத்தில் குளிர்ந்து போய் பூரண பூஜிய உஷ்ணத்தில் முறிந்து போய்ச் செத்துவிடும் (Absolute Temperature Zero) என்று விஞ்ஞானிகள் கருதுகிறார் !

ஹப்பிள் தொலைநோக்கி மூலம் செய்த விண்வெளி ஆராய்ச்சி

விஞ்ஞானிகளுக்குக் கருஞ்சக்தி என்றால் என்ன வென்று இன்னும் தெளிவாய்ப் புலப்பட வில்லை.  ஆனால் கருஞ்சக்தி பிரபஞ்சத்தில் ஏராளமான பகுதியில் (72%) நிரம்பி உள்ளது என்றும் தெளிவாக அறிவர்.  அடுத்து 24% பகுதியை மற்றோர் புதிரான ஆனால் ஆய்ந்திட எளிதான கரும் பிண்டம் (Dark Matter) நிறைத்துள்ளது என்றும் அறிந்துள்ளார். அருகிய அண்டத்தின் மீதுள்ள கரும் பிண்டத்தின் ஈர்ப்பாற்றல் பாதிப்பை இப்போது நாம் அறிய முடியும். பிரபஞ்சத்தின் மற்ற பொருட்கள்: (கோள்கள், பரிதிகள், அண்டங்கள், அணுக்கள், மூலக்கூறுகளால் ஆனவை) ஆகியவற்றின் விகிதம் 4%.

உலக அகிலவியல் விஞ்ஞானிகள் (Cosmologist) சிலர் கூடி ஹப்பிள் தொலைநோக்கி மூலம் இதுவரைக் கண்ட காட்சிப் படங்களைப் பயன்படுத்தி அவற்றுள் இருந்த மாபெரும் ஒளிமந்தைக் கொத்து ஒன்றை (A Massive Cluster of Galaxies : Name Abel 1689) குவியீர்ப்பு ஆடியாக (Gravitational Lens) எடுத்துக் கொண்டார்.  ஒளிமந்தைக் கொத்தின் ஈர்ப்பு பின்னிருக்கும் ஒளிமந்தையின் பிம்பத்தைத் திரித்துப் (சூரிய ஒளியை ஒரு கண்ணாடி பல வெட்டுத் துண்டுகளை முகத்தில் பிரதிபலிப்பது போல்) பல்வேறு படங்களாய் காட்டும்.  சிதறிய இந்த பிம்பங்களைப் பயன்படுத்தி எப்படி ஒளியானது ஈர்ப்பு மண்டத்தில் வளைந்து செல்கிறது என்பதைக் கணிக்கிறார்.  அந்த ஒளிப் பாதை வளைவு கருஞ்சக்தியின் இயல்பாட்டைப் பொருத்ததால் கருஞ் சக்தி  பற்றி இப்போது துல்லியமாக அறிய முடிகிறது.  அவரது குவியீர்ப்பு முறை, பூமி லிருந்து அளக்கும் நமது தூரம், ஒளிமந்தைகள் தள்ளப்படும் வேகம் இரண்டையும் சார்ந்தது.  விஞ்ஞானக் குழுவினர் அந்தக் கணிப்பு இலக்கத்தை உபயோகித்துப் பிரபஞ்சத்தை விரிந்து செல்ல வைக்கும் கருஞ்சக்தியின் திணிவு வலுவைப் பரிமாணத்தில் கணக்கிட்டுக் காட்டுகிறார்.

“இந்த முறையின் விளைவை நேராகக் கண்களால் நோக்கலாம் என்பது குறிப்பிடத் தக்கது.  பின்னிருக்கும் காலக்ஸியை மெய்யாக ஈர்ப்பாற்றலும், கருஞ்சக்தியும் வளைத்துக் காட்டும் ஒளிப்படத்தைக் காணலாம்,” என்று எரிக் ஜூல்லோ கூறுகிறார்.  இம்முறையக் கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் கடந்த ஏழு ஆண்டுகள் சிறப்பான கணித மாடல்களை அமைத்து முயற்சி செய்ததாக அறியப்படுகின்றது.  “நாங்கள் இப்போது இதே ஆய்வு நுணுக்கத்தை மற்ற ஈர்ப்புவிசைக் குவியீர்ப்புக்குப் (Gravitational Lenses) பயன்படுத்தலாம்.  நமது பிரபஞ்சத்தில் கருஞ்சக்தி புரியும் விந்தைகளைக் கற்றுக் கொள்ள நமக்கு இயற்கை யாக அமைந்துள்ள ஓர் எழினான ஆய்வு முறையைத் துருவி எடுக்கிறோம்,” என்று யேல் பல்கலைக் கழகத்தின் பேராசிரியை பிரியா நடராஜன் (Cosmologist, Yale University, Conn, USA) கூறுகிறார்.

இம்முறையைப் பயன்படுத்தி “இயற்கை” விஞ்ஞான வெளியீட்டில் ஆய்வுக் கட்டுரை எழுதியவர்கள் :

1. ஏரிக் ஜூல்லோ (Eric Jullo NASA Jet Propulsion Lab – JPL )

2. ஜான் பால் நெய்ப் (Jean Paul Kneib, Astrophysics Lab, Marseille, France)

3. பேராசிரியை பிரியம்வதா நடராஜன் (Yale University, Conn, USA)

4. ஆலி உஸ்ஸர் (Oli Usher, ESA Hubble Public Information Officer)

கருமைப் பிண்டம் செய்வதென்ன ? கருஞ் சக்தி செய்வ தென்ன ?

சூரியனைப் போன்று கோடான கோடி விண்மீன்களைக் கொண்ட நமது பால்மய வீதியின் விண்மீன் எதுவும் அந்த காலாக்ஸியை விட்டு வெளியே ஓடி விடாதபடி ஏதோ ஒன்று கட்டுப்படுத்தி வருகிறது.  அதாவது அத்தனை விண்மீன்களின் அசுரத்தனமான ஈர்ப்பு ஆற்றல்களை அடக்கிக் கட்டுப்படுத்த ஏதோ பேரளவு ஆற்றல் உள்ள ஒன்று அல்லது பல பிண்டம் பிண்டங்கள் (Matter) இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் ஊகித்தனர்.  நமது பால்மய காலாக்ஸியில் அவை எங்கே மறைந்துள்ளன என்று ஆழ்ந்து சிந்தித்த போதுதான் காலாஸியில் கண்ணுக்குப் புலப்படாத கருமைப் பிண்டத்தின் இருப்பு (The Existance of Dark Matter) பற்றி அறிய முடிந்தது.

1930 இல் டச் வானியல் மேதை ஜான் ஓர்ட் (Jan Oort) சூரியனுக்கருகில் விண்மீன்களின் நகர்ச்சிகளை ஆராயும் போது,  முதன்முதல் கரும் பிண்டத்தின் அடிப்படை பற்றிய தன்மையை அறிந்தார்.  அவரது அதிசய யூகம் இதுதான்.  நமது பால்மய வீதி போன்று, பல்லாயிர ஒளிமய மந்தைகள், (Galaxies) மந்தை ஆடுகள் போல் அடைபட்ட ஒரே தீவுகளாய் சிதைவில்லாமல் தொடர்ந்து நகர்கின்றன.  அதாவது அந்த மந்தை அண்டங்கள் வெளியேறாதபடி ஒன்றாய் குவிந்திருக்க மகாப் பெரும் கனமுள்ள பொருட்கள் அவற்றில் நிச்சயம் பேரளவில் இருக்க வேண்டும் என்று நம்பினார்.  கனமான அந்த பொருட்களே விண்மீன்கள் தப்பி ஓடாதபடி, காலாக்ஸின் மையத்தை நோக்கிக் கவர்ச்சி விசையால் இழுத்து வைக்கின்றன என்று திட்டமாகக் கண்டறிந்தார்.

1998 ஆண்டுக்கு முன்னால் “கருஞ் சக்தி” என்னும் ஓர் விஞ்ஞானக் கருத்தை யாரும் கேள்விப்பட்ட தில்லை !  கருஞ் சக்தி அண்டங்களின் ஈர்ப்பு விசையைப் (Gravity) போல ஒருவித விலக்கு விசையே (Anti-Gravity) ! அது முக்கியமாகக் காலாக்ஸிகளின் நகர்ச்சியைக் கட்டுப் படுத்துகிறது.  அத்துடன் காலாக்ஸிகளின் வடிவங்களைச் சிற்பி போல் செதுக்கி, அவை ஒன்றையொன்று மோதிக் கொள்ளாதவாது அவற்றுள் இடைவெளிகளை ஏற்படுத்தியும் வருகிறது என்று கூறுகிறார், பிரிட்டன் நாட்டிங்ஹாம் பல்கலைக் கழகத்தின் பேருரையாளரும், வானோக்காளரும் ஆகிய கிரிஸ்டொஃபர் கன்ஸிலிஸ் (Christopher Conselice)

கருமைப் பிண்டமும், கருஞ் சக்தியும் (Dark Matter & Dark Energy) பிரபஞ்சப் படைப்பின் கண்ணுக்குத் தெரியாத மர்மக் கருவிகள்.  கண்ணுக்குத் தெரியாத படைப்பு மூலத்தின் பிரபஞ்ச இயக்கக் கருவிகள் அவை இரண்டும் !  நியூட்டன் கண்டுபிடித்த ஈர்ப்பு விசை விண்மீனையும் அண்டங்களையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டு ஓர் குறிப்பிட்ட விண்வெளிச் சூழலில் இயக்கிய வண்ணம் உள்ளது.

அதுபோல கருமைப் பிண்டத்தின் அசுரக் கவர்ச்சி விசை காலாக்ஸியில் உள்ள விண்மீன்கள் தமக்குரிய இருக்கையில் இயங்கி எங்கும் ஓடிவிடாதபடி இறுக்கிப் பிடித்துக் கொண்டு வருகிறது.

கருஞ் சக்தி பிரபஞ்சத்தில் என்ன செய்கிறது ?  பிரபஞ்சப் பெரு வெடிப்பில் சிதறிச் சென்று உண்டான காலாக்ஸிகள் நியூட்டனின் நியதிப்படி நகரும் தீவுகளாய் மிதந்து செல்கின்றன !  ஆற்றல் மிக்க மிகப் பெரும் தொலைநோக்கிகள் மூலமாக நோக்கும் போது, பிரபஞ்ச விளிம்புகளில் நகரும் தொலைத்தூர காலாக்ஸியின் வேகம் மிகுந்து விரைவாகுவதை (Acceleration of Galaxies) விஞ்ஞானிகள் கண்டனர் !  நியூட்டனின் அடுத்தொரு நியதிப்படி தனிப்பட்ட தொரு விசையின்றி காலாக்ஸிகளின் வேகம் மிகுதியாக முடியாது.  அந்த காரண-காரிய யூகத்தில்தான் காலாக்ஸிகளைத் தள்ளும் கருமைச் சக்தியின் இருப்பை விஞ்ஞானிகள் உறுதியாகச் சிந்தித்துக் கூறினர் !

பெண் விஞ்ஞானி பிரியா நடராஜனின் வாழ்க்கை வரலாறு

பிரியம்வதா என்னும் பிரியா நடராஜன்  வானியல் பௌதிக விஞ்ஞானம் கற்ற ஓர் அகிலவியல் விஞ்ஞானி (Cosmologist). அவர் டெல்லியில் பிறந்து டெல்லியில் வளர்ந்தவர். அவரது தந்தையார் வெங்கடேச நடராஜன் ஓர் எஞ்சினியர். தாயார் லலிதா நடராஜன் ஒரு சமூகவியல் பட்டதாரி. இரு சகோதரருடன் பிறந்த பிரியா எல்லாருக்கும் மூத்தவர். டெல்லியில் பௌதிகத்தில் கீழ்நிலை விஞ்ஞானப் பட்டதாரியாகிப் பௌதிகம், கணிதத் துறைகளை மேலாக விரும்பி மேற்படிப்புக்கு M.I.T (Massachusetts Institute of Technology, Cambridge, Mass, USA) ஆராய்ச்சிப் பல்கலைக் கழகத்துக்கு வந்து சேர்ந்தார். பிறகு கோட்பாடு வானியல் பௌதிகத்தில் (Ph.D. in Theoretical Astrophysics) டாக்டர் வெகுமதி பெற இங்கிலாந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும், டிரினிடி கல்லூரியிலும் (1997 முதல் 2003 வரை) பெரும் புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் ஸர் மார்டின் ரீஸ் (Dr. Martin Rees) மேற்பார்வையில் பயின்றார்.

வானியல் பௌதிக விஞ்ஞானியான பிரியாவுக்கு விருப்பப் பிரிவுகள் : பிரபஞ்சவியல், ஈர்ப்பாற்றல் ஒளிக்குவிப்பு, கருந்துளைப் பௌதிகம் (Cosmology, Gravitational Lensing & Black Hole Physics). “என்னுடைய ஆய்வுக் கட்டுரைக்கு (Thesis) பிரபஞ்சத்தில் கருமைப்  பிண்டம், கருந்துளைகள் தோற்றம், வளர்ச்சி ஆகிய பல்வேறு பிரச்சனை களில் ஆழ்ந்து ஈடுபட்டேன். ஸ்டீஃபென் ஹாக்கிங் பிரபஞ்சத்தின் புனைவு (Episode) ஒன்றில் கருமைப் பிண்டத்தின் உள்மணல் (Granularity of Dark Matter) பற்றி நான் ஆராய்ச்சி செய்தேன்.” என்று பிரியா நடராஜன் கூறுகிறார். Ph.D. ஆய்வுப் பயிற்சி முடிவதற்குள் டிரினிடி கல்லூரி ஐஸக் நியூட்டன் ஸ்டூடன்ஷிப் ஆராய்ச்சி -வானியல் பௌதிக  ஃபெல்லோஷிப்பில் பங்கெடுத்து முதல் இந்தியப் பெண்  ஃபெல்லோஷிப் ஆய்வாராளாகத் தேர்ச்சி பெற்றார்.

இப்போது யேல் பல்கலைக் கழகத்தின் வானியல் பௌதிகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அங்கு வருவதற்கு முன்பு டொரான்டோ கனடாவில் (Canadian Institute for Theoretical Astrophysics, Toronto) சில மாதங்கள் டாக்டர் முன்னோடிப் பயிற்சிக்கு விஜயம் (Postdoctoral Fellow Visits) செய்தார். ஓராண்டு யேல் பல்கலைக் கழக விடுமுறை எடுத்து 2008-2009 தவணை ஆண்டுப் பங்கெடுப்பில் ஹார்வேர்டு ராட்கிளிஃப் மேம்பாட்டுக் கல்விக் கூடத்தில் (Radcliffe Institute for Advanced Study at Harvard) ஓர் ஆராய்ச்சி ஃபெல்லோஷிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும் பிரியா “கருமை அகிலவியல் மையத்தின்” இணைப்பாளராய் டென்மார்க் நீல்ஸ் போஹ்ர் கருமை அகிலவியல் மையத்தில் (Associate of the Dark Cosmology Centre, Niels Bohr Institute, University of Copenhagen, Denmark) இருந்து வருகிறார்.

பிரியா நடராஜன் தனது வானியல் பௌதிகத் துறை ஆய்வுகளை ஆராய்ச்சி இதழ்களில் அடிக்கடி எழுதியும், மேடைகளில் உரையாற்றியும், கருத்தருங்குகளை ஏற்படுத்தி விவாதித்தும் பங்கெடுத்து வருகிறார். 2008 அக்டோபர் 25 ஆம் தேதி விஞ்ஞான வெளியீட்டில் (Science News) அசுரப் பெருநிறை கருந்துளைகள் (Ultra-massive Black Holes) பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரை அட்டைக் கட்டுரையாய் வரப் போகிறது. அவற்றின் அரிய உட்கருத்துக்கள் மேலும் ஏற்கனவே டிஸ்கவர் இதழ், இயற்கை, வெளிநாட்டு இந்தியா வார இதழ், ஹானலூலூ டைம்ஸ், டச் பாப்புளர் சையன்ஸ், ஹார்டேர்டு காஸெட், யேல் தினத் தகவல் (Discover Magazine, Nature, India Abroad, Honolulu Times, Dutch Popular Science, Harvard Gezette, Yale Daily News) ஆகியவற்றிலும் வந்துள்ளன.

விஞ்ஞானப் பெண்மணி பிரியம்வதா நடராஜன் நோபெல் பரிசு பெற்ற ஸர் சி.வி. இராமன், சுப்ரமணியன் சந்திரசேகர், கணித மேதை இராமானுஜன் போன்ற இந்திய விஞ்ஞான மேதைகளின் வரிசையில் ஓர் உன்னத ஆராய்ச்சியாளாராய் அடியெடுத்து வைக்கிறார். நோபெல் பரிசு பெற்ற பெண் விஞ்ஞானிகளான மேரி கியூரி, புதல்வி ஐரீன் கியூரி, (Marie Curie, Irene Curie) அணுப்பிளவை விளக்கிய லிஸ் மெய்ட்னர் (Lise Meitner) ஆகியோர் அணியில் பிரியா தடம் வைக்கிறார். அவர் முதன்முதல் கண்டு பிடித்து உலக விஞ்ஞானிகளுக்கு அறிவித்த “கருந்துளைப் பெருநிறை வரம்பு” உலக அரங்கில் பிரமிப்பை உண்டாக்கி உள்ளது ! “இராமன் விளைவு” (Raman Effect), “சந்திரசேகர் வரையறை” (Chandrasekhar Limit) போன்று “பிரியா வரம்பும்” (Black Hole Ultra-Mass Limit) விஞ்ஞான வரலாற்றில் சுடரொளி வீசும் மைல் கல்லாக விளங்கப் போகிறது. ஒளிமயமான எதிர்காலத்தில் பிரியாவுக்கு வெகுமதியாக வானியல் பௌதிக விஞ்ஞானத்துக்கு நோபெல் பரிசும் கிடைக்கவும் பெரியதோர் வாய்ப்புள்ளது.

******************************

தகவல் :

Picture Credit : 1. Astronomy (August 21, 2007) 2.  Universe 6th Edition (2002)  3. National Geographic Encyclopedia of Space (2005) 4. 50 Years of Space (2004) 5. NASA & ESA Websites.

1.  Astronomy Magazine : 50 Greatest Mysteries of the Universe (Aug 21, 2007)

2.  Universe By Roger Freedman & William Kaufmann III (2002)

3.  National Geographic Encyclopedia of Space By Linda Glover.

4.  The World Book Atlas By World Book Encyclopedia Inc (1984)

5.  Scientific Impact of WMAP Space Probe Results (May 15, 2007)

6.  BBC News – Hubble Obtains Deepest Space View By Dr. David Whitehouse, Science Editor (Jan 16, 2004)

7.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40301192&format=html (பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள்)

8.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310231&format=html (ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நெபுளாக்கள்!
9.  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40211102&format=html (பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் [George Gamow (1904-1968)]
10. Cosmic Collision Sheds Light on Mystery on Dark Matter [www.dailygalaxy.com/my_weblog/2007/05/dark_matter_hub.html  (May 16, 2007)
11. “Beyond Einstein” Search for Dark Energy of the Universe
[www.dailygalaxy.com/my_weblog/2007/07/beyond-einstein.html  (July 10, 2007)
12.  Dark Matter & Dark Energy: Are they one & the Same ? Senior Science Writer [www.space.com/scienceastronomy/mystery_monday_040712.html  (April 12, 2007)
13 Dark Energy By LSST Observatory – The New Sky (www.lsst.org/Science/darkenergy.shtml)
13 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40711291&format=html (Dark Energy Article -1)

13 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40901221&format=html (Dark Energy Article -2)
14. Stephen Hawking’s Universe By John Boslough (1985)

15. The Hyperspace By: Michio Kaku (1994)

16. The New York Public Library Science Desk Reference (1995)
17. Scientific American “The Cosmic Grip of Dark Energy” By Christopher Conselice (Feb 2007)
18 Spacetelescope.org : Astronomers Take a Step Towards Revealing the Universe’s Biggest Mystery (The Dark Energy) (August 19, 2010)
19 BBC News Science & Environment : Fate of Universe Revealed by Galactic Lens – By : Howard Falcon-Lang (August 19, 2010)
20 Yale University – Astronomers Use Galactic Magnifying Lens to Probe Elusive Dark Energy (August 19, 2010)
21 NASA Report (www.jpl.nasa.gov/news) Cosmic Lens Used to Probe Dark Energy for the First Time (August 19, 2010)
22 Science & Technology – First Use of Cosmic Lens to Probe Dark Energy (August 23, 2010)

23 https://jayabarathan.wordpress.com/first-indian-tamil-woman-scientist/

******************

S. Jayabarathan (jayabarat@tnt21.com) August 27, 2010
https://jayabarathan.wordpress.com/

சிறுகச் சிறுகச் சூரிய சக்தி சுருங்கி வருகிறா ?

[கட்டுரை: 2]

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


கதிரவனின் சினம் எல்லை மீறி
கனல் நாக்குகள் நீளும் !
கூர்ந்து நோக்கின் பரிதியும்
ஓர் தீக்கனல்
போர்க் கோளம் !
நெற்றிக் கண்கள் திறந்து
கற்றைச் சுடரொளி பாயும் !
பொல்லாச் சிறகை விரித்து
மில்லியன் மைல் தாவும் !
வீரியம் மிக்க தீக்கதிர்கள் !
பீறிட்டெழும் ஒளிப் பிழம்பு !
மீறி வெளிப்படும்
மின்காந்தப் புயல்கள் !
குதித் தெழும்பும் தீப்பொறிகள்
வட துருவ வான் திரையில்
வண்ணக் கோலமிடும்
வையகத்தில் !
வடுக்களே முகத் தேமல்கள்
சுடுங் கொப்புளம் !
சிறுகச் சிறுகச் சக்தி குன்றி
சுருங்கி வருகுது பரிதி !
புவியைச் சூடாக்குவதும்
குளிராக் குவதும்
கதிரவன் நெற்றிக் கண்ணே !

“சூரிய சக்தி வெளியேற்றம் குன்றிப் போகிறதென்றால் பரிதி சுருங்கி வருகிறது என்பது தெளிவாகிறது.  பரிதியின் விண்ணுளவிகள் அனுப்பிய தகவல் அதை உறுதிப் படுத்தினாலும் அந்த முடிவில் இன்னும் முரண்பாடு காணப்படுகிறது.”

ஜெரார்டு துயில்லியர் (Pierre & Marie Curie University, Paris)

“பரிதியின் தீ வீச்சுகள் (Solar Flares) விண்வெளிப் புயலாய் எப்போதாவது ஒருமுறைப் பூமியைத் தாக்கினால் நெடுங்காலம், துணைக் கோள்களின் தொலைத் தொடர்பு சமிக்கைகள் யாவும் தடைப்படும் !  பூமியில் மின்சக்திப் பரிமாற்றம் நிறுத்தமாகி நகரங்களில் இருட்டடிப்பு உண்டாகி மக்களுக்குப் பேரிடர்கள் நேர்ந்திடும்.”

ரிச்சர்டு ஃபிஸ்ஸர் (Director NASA’s Heliophysics Division)


“பிரபஞ்சத்தின் நுட்பங்களைப் புரிந்து கொள்ளும் திறமை மனித உள்ளத்துக் கில்லை !  பெரிய நூலகத்தில் நுழையும் சிறு பிள்ளை போன்றுதான் நாமிருக்கிறோம்.  யாராவது ஒருவர் அந்த நூல்களை எழுதியிருக்க வேண்டும் என்று சிறு பிள்ளைக்குத் தெரிகிறது.  ஆனால் யார் அதை எழுதியவர், எப்படி அது எழுதப் பட்டுள்ளது என்று அதற்குத் தெரிய வில்லை.”

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் (1879-1955)

“கடவுள் படைக்கும் போது நான் இருந்திருந்தால், பிரபஞ்சத்திற்கு மிகச் செம்மையான ஒழுங்கமைப்பு பற்றிப் பயன்படும் சில குறிப்புகளைக் கூறி இருப்பேன்.

மேதை அல்ஃபான்ஸோ (Alfonso The Wise)

“பிரபஞ்சம் புதிரான தென்று மட்டும் நான் ஐயப்பட வில்லை.  அது புதிருக்குள் புதிரானது என்று நான் கருதுகிறேன். மேலும் விண்வெளியிலும் பூமியிலும் கனவில் கண்டவற்றை விட இன்னும் மிகையான தகவல் இருப்பதாக நான் ஐயப்படுகிறேன்.”

ஜே.பி.எஸ். ஹால்தேன் (J.B.S. Haldane, British-born Indian Geneticist & Evolutionary Biologist) (1892-1964)


1859 இல் நேர்ந்த பரிதிச் சூறாவளியில் அநேக சம்பவங்கள் சேர்ந்து ஒரே சமயத்தில் நிகழ்ந்தன !  அவை தனித்தனியாக விளைந்திருந்தால் அவற்றைக் கண்டுபிடித்து விளக்கியிருக்க முடியும்.  ஆனால் அவை அனைத்தும் ஒன்றாய்ப் பின்னி வரலாற்றிலே குறிப்பிடத் தக்க முறையில் பேரளவுத் தீவிரச் சிதைவுகளைப் பூமியின் மின்னணுக் கோளத்தில் (Ionosphere) உண்டாக்கி விட்டன !  அந்த அதிர்ச்சி நிகழ்ச்சிகள் எல்லாம் சேர்ந்து ஒரு பூரணச் சூறாவளியை உருவாக்கின !

புரூஸ் சுருடானி (Bruce Tsurutani, NASA Plasma Physicist, JET Propulsion Lab)

“சூரியப் புயல் உண்டான சமயத்தில் தீவிர காந்த சக்தி ஏறிய ஒளிப்பிழம்பு (Magnetically-charged Plasma called Coronal Mass Ejections) கொண்ட பேரளவு முகில் வெளியேறியது,.  எல்லா தீவீச்சுகளும் பூமியை நோக்கிச் செல்வதில்லை.  தீவீச்சுகள் பூமியை வந்தடைய மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுக்கும்.  ஒரே ஒரு தீவிர தீவீச்சு மட்டும் 17 மணி 40 நிமிடத்தில் விரைவாகப் பூமியைத் தாக்கி விட்டது.”

புரூஸ் சுருடானி (NASA Plasma Physicist)


“சூரியன் எரிவாயு தீர்ந்து ஒளிமங்கி உடல் பெருக்கும் போது, அகக் கோள்களை சுட்டுப் பொசுக்கி பனிப்பகுதிகளை நீர்மயமாக்கிக் கடல் மேவும் நூற்றுக் கணக்கான அண்டக் கோள்களை உண்டாக்கும் ! புளுடோ கோளின் நடுங்கும் குளிர்வெளி சூடேறிப் பிளாரிடாவின் உஷ்ணத்தைப் பெறும்.”

ஆலன் ஸ்டெர்ன் வானியல் விஞ்ஞானி, (Southwest Research Institute, Boulder, Colarado, USA)


சிறுகச் சிறுகப் பரிதியின் சக்தி சுருங்கி வருகிறதா ?

நாசாவின் “சோகோ” (SOHO -Solar & Heliospheric Observatory) என்னும் பரிதிக் கோள விண்ணுளவி இரண்டு பரிதி வடுக்கள் சுழற்சிகளைப் (Sun Spots Cycles) பதிவு செய்தது. 1996 இல் தன் விர்கோ (Virgo) கருவியால் “பரிதியின் மொத்தக் கதிரூட்டம்” (Total Solar Irradiance -TSI) அதாவது சூரியன் வெளியேற்றிய சக்தியை அளந்தது.  30 வருடப் பதிவுகளை எடுத்துக் கொண்டால் சூரியனின் தணிவுச் சுழற்சி சமயத்தில் (Solar Minimum Cycle) அதன் சக்தி வெளியேற்றம் முந்தய தணிவுச் சுழற்சி சமயத்தை விட 0.015 % குன்றி இருந்ததாக அறியப்பட்டது.

பின்னத்தின் அளவு சின்னதாகத் தோன்றினும் சக்திக் குறைவு மொத்தத்தில் பேரளவானது.  நாமெல்லாம் பரிதியின் சக்தி வெளியேற்றம் மாறாது என்று நினைப்போம்.  1980 இல் நாசாவின் பரிதி உச்சத் திட்டவுளவி (Solar Maximum Mission) ஏவிய பிறகு அந்தக் கருத்து மாறியது.  அதன் தகவல்படி ஒருசில நாட்களில் அல்லது ஒரு சுழற்சி சமய வாரங்களில் பரிதியின் சக்திப் படைப்பு 0.1 % அளவு மாறுபடும் என்று விஞ்ஞானிகள் கண்டுள்ளார்.

சக்தி வெளியேற்றத்தில் மாறுபாடுகள் இருந்தாலும் மூன்றாண்டு காலம் சூரிய நீச்ச சமயத்தில் (Solar Minima) பரிதியின் மொத்தக் கதிரூட்ட (Total Solar Irradiance -TSI) வெளியேற்றம் அதே அளவு (0.015 %) குறைந்தது.  ஆனால் தற்போதைய நீண்ட சூரிய நீச்ச நிலையில் அவ்விதம் நேரவில்லை.  குன்றிய அளவு மிகச் சிறிதாயினும் அந்தக் குறைவு பரிதியில் நிகழ்ந்தது என்பது உறுதி செய்யப் பட்டது.  பரிதியின் சக்தி வெளியேற்றம் மாறினால், அதன் உஷ்ணமும் ஏறி இறங்கும் ! பரிதியின் மேற்தளம் எத்துணை அளவு குளிர்ந்து போகிறதோ அத்துணை அளவு சக்தி வெளியேற்றமும் குன்றும்.  சூரியனின் வெப்ப வீச்சுப் பரிமாணத்தில் குழி விழும்போது, பரிதி சுருங்கி வருகிறது என்பது அறியப் படுகிறது.

பரிதி முக வடுக்கள் மிகையாகும், குறைவாகும் விந்தைகள்

நாமிந்த பூகோளத்தில் ஒவ்வொரு விநாடியும் உயிர்வாழப் பரிதி ஒளியுடன் கதிர்கள் வீச விநாடிக்கு 600 மில்லியன் டன் ஹைடிரஜன் வாயுப் பிழம்பைப் (Plasma) பிணைத்து ஹீலியமாக்க வேண்டும்.  இந்த வெப்ப சக்தி இழப்பு வீதத்தில் பரிதி இன்னும் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகள் நீடித்திருக்க அதனிடம் எரிவாயு உள்ளது என்று கணிக்கப் படுகிறது.  பரிதியில் முகத் தேமல்கள் (Sun Spots) தெரியும், மறையும். கூடும், குறையும்.  இது இயற்கை விதி.  சமீபத்தில் முக வடுக்கள் பெரும்பான்மையானவை பரிதியில் மறைந்து போயின.  பல நூற்றாண்டுகளாக விஞ்ஞானிகள் பரிதியின் மீது கருந் தேமல்கள் எப்போது தோன்றும், சில நாட்களிலா, சில வாரங்களிலா அல்லது சில மாதங்களுக்குப் பிறகா எப்போது மறையும் என்று தொடர்ந்து கண்காணித்துப் பதிவு செய்திருக்கிறார்.  இப்போது விஞ்ஞானிகள் பரிதியின் முக வடுக்களின் எண்ணிக்கை ஏறி இறங்கும் ஒவ்வோர் பதினோர் ஆண்டு கால நீடிப்புக்கும் பதிவு செய்திருக்கிறார்.  சூரியனின் மின்காந்த சக்தி ஏற்ற இறக்கச் சுழற்சி (Magnetic Energy Cycle) 22 ஆண்டுக்கு ஒருமுறை உச்சமடையும்.

விரிந்து போகும் இந்தப் பிரபஞ்சம் ஒருபோதும் முறிந்து போகாது.  அதனுள் இருக்கும் கோடான கோடி காலாக்ஸிகள் தமது ஈர்ப்பாற்றலைப் பயன்படுத்திப் பிரபஞ்ச விரிவைத் தடுக்க முடியாது.  விண்வெளியே விரிவை விரைவாக்கும் ஒருவித விலக்கு விசையுடன் (Repulsive Force) இணைந்து கொண்டுள்ளது.  பிரபஞ்சம் எப்போதும் விரிவதோடு விரைவாக்கம் மிகுதியாகி குளிர்ந்து போன இருட்டை நோக்கிச் செல்கிறது.  அதன் விளைவு வானியல் விஞ்ஞானிகளின் சூனிய எதிர்காலம் !  அடுத்த 150 பில்லியன் ஆண்டுகளில் 99.9999 சதவீத காலாக்ஸிகள் பிரபஞ்சத்தில் காட்சியிலிருந்து நழுவிப் போய்விடும் !

சூரியனைப் பற்றிச் சில வானியல் பண்பாடுகள்

சூரிய குடும்பத்தில் பரிதியே ஏறக்குறைய 98.8% பரிமாண நிறையைக் கொண்டுள்ளது. 4.6 பில்லியன் ஆண்டுகட்கு முன்னே வாயு முகிலிலிருந்து சூரிய நிபுலாவாக (Solar Nebula) பேரளவுக் கோளமாய் வடிவான பரிதி அசுர ஈர்ப்பு விசை பெற்று பல பில்லியன் மைல் தூரத்தில் உள்ள அனைத்து அண்டங்களையும், பிண்டங்களையும் தன்வசம் இழுத்துக் கொண்டது ! உருண்டு திரண்ட ஒழுங்குக் கோள்களும், ஒழுங்கற்ற முரண் கோள்களும், உடைந்த பாறைகளும், சிதறிய துணுக்குகளும் பரிதியைச் சுற்றிவரத் துவங்கின.  வியப்பாகச் சூரிய குடும்பத்தின் “தொகுப்பு மையம்” (Barycenter) புறத்தே விழாமல் பரிதியின் சூழ்வெளியிலே அடங்குகிறது.

பரிதி பேரளவு உஷ்ணமுள்ள ஓர் அசுர பிளாஸ்மா பந்து (Ball of Plasma).  மின்னூட்டம் ஏறிய பேரளவு ஹைடிரஜன், சிறிதளவு ஹீலிய வாயுக்கள் நிரம்பிய கோளம். பரிதியின் விட்டம் 864,000 மைல் (1391,000 கி.மீ).  பூமியைப் போல் 333,000 மடங்கு பெரியது பரிதி.  ஒரு மில்லியன் பூமியைத் தன்னுள் அடக்கும் பூதப் பரிமாணம் கொண்டது பரிதி.  பூமியில் 100 பவுண்டு (45 கி.கி.) கனமுள்ள ஒரு மனிதன், பரிதியில் நிற்க முடிந்தால் 2800 பவுண்டு (1270 கி.கி) பளுவில் இருப்பான்.  பூமியிலிருந்து பரிதியின் தூரம் : 93 மில்லியன் மைல் (150 மில்லியன் கி.மீ).  நமது சூரியன் ஒரு நடுத்தர விண்மீன்.  அதன் எரிவாயு சுமார் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு நீடிக்கும் அளவுக்குப் பெரிய விண்மீன்.  இதுவரை வானியல் விஞ்ஞானிகள் நமது பரிதி போல் 3500 மடங்கு பெரிய ஒரு விண்மீனைக் கண்டு பிடித்துள்ளார்.

அணுப்பிணைவு சக்தியே சூரியனை ஒரு பெரும் அசுரத் தீக்கோளமாய் ஆக்கி மின்காந்த சக்தியை உற்பத்தி செய்து வருகிறது.  அதன் உட்கரு உலையில் விநாடிக்கு அரை பில்லியன் டன் ஹைடிரஜன் அணுக்கரு பிணைந்து ஹீலியமாக மாறி வருகிறது.  உட்கரு உலையின் உஷ்ணம் : 15.7 மில்லியன் டிகிரி கெல்வின் (28 மில்லியன் டிகிரி ·பாரன்ஹீட்).  பரிதியின் மேற்தள உஷ்ணம் : 5800 டிகிரி கெல்வின் (10,000 டிகிரி ·பாரன்ஹீட்).  சூரியனின் ஈர்ப்பு விசை பரிதி மண்டலத்தைத் தாண்டி 200,000 AU (1 AU = Sun – Earth Distance) (1 Astronomical Unit) தூரத்தில் உள்ள வால்மீன் ஓர்ட் முகில் வரை (Oort Cloud of Comets) நீடிக்கிறது.

பரிதியால் பூமிக்கு ஒளிமயமான எதிர்காலம் !

4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய சூரியன் நியதிக்கு உட்பட்டுப் பூமிக்குத் தொடர்ந்து ஒளியும் வெப்பமும் அளித்து வருகிறது.  பரிதியின் மையமே ஹைடிரஜன் எரிவாயுவை ஹீலியமாக்கும் அணுப்பிணைவு இயக்கத்தில் இந்த அசுர சக்தியை உண்டாக்கி வருகிறது.  புதிதாக இருக்கும் பரிதியில் பெரும்பான்மையாக ஹைடிரஜன் வாயும், அணுப்பிணைவில் விளைந்த சிறுபான்மை ஹீலியமும் சேர்ந்துள்ளன.  ஆனால் மையத்தில் எரிவாயு எரிந்து தணிவதால், சூரிய ஒளி மெதுவாக மிகை யாகிறது !  இப்போது பரிதியின் ஒளிமயம் 40% அளவு தோன்றிய காலத்து ஒளியை விட அதிகரித்துள்ளது.  இது ஒரு பெரும் வியப்பே !

பரிதிக்கு வயதாக வயதாக ஒளிகுன்றாமல் மிகையாகிறது !  இவ்விதம் இடைத்தர விண்மீனான நமது சூரியனின் சுடரொளி மிகுவது தொடரும்.  இன்னும் ஒரு பில்லியன் ஆண்டுகளில் நமது பரிதியின் ஒளித்திரட்சி தற்போதைய ஒளிவீச்சை விட 10% அளவு மிகைப்படும் !  அத்தகைய ஒளிச் சூடேற்றம் மெதுவாகப் பூமியில் கடல் வெப்பத்தை அதிகமாக்கி முடிவில் கடல் வெள்ளம் கொதிக்க ஆரம்பிக்கலாம்.  அவ்விதமே வெள்ளிக் கோளின் தள உஷ்ணம் 860 டிகிரி F (460 C) வரை ஏறிச் சென்று நீர் வற்றி அது ஒரு பாலை வெளியானது.  பூமியில் உயிரினத்துக்கு உயிரூட்டும் ஒளி வெப்பமே இறுதியில் அவற்றை முற்றிலும் அழிக்கிறது !

6 பில்லியன் ஆண்டுகள் கழித்து நமது பரிதி மிகப் பெரும் மாறுதல்களில் சிதை வடையும்.  கடல் வெள்ளக் கொதிப்போடு மானிட வசிப்புக்கே நிரந்தமாய்ப் பெருங் கேடு உண்டாகும்.  சூரிய மையக் கருவில் உள்ள எரிவாயு ஹைடிரஜன் தீர்ந்து போய்க் கருவுக்குக் கவசமாய் உள்ள எரிவாயு அடுத்து எரியத் துவங்கும் ! அதன் விளைவு : சூரியன் உடல் உப்பிடும் ! ஒளி பெருகிடும் ! ஆனால் உஷ்ணம் குளிர்ந்திடும் !  முடிவில் ஒரு செம்பூத விண்மீனாய் (Swelling into a Red Ginat Star) உடல் பெருக்கும் !  விரியும் செம்மீன் 100 மடங்கு ஒளிமயத்தில் அருகில் சுற்றிவரும் புதன் கோளைத் தின்றுவிடும் ! ஏன் சுக்கிரனையும் விழுங்கலாம்.  அப்போது பூமிக்கு என்ன நேரும் என்று நினைத்துப் பார்க்க முடியாது !  கொதிக்கும் பரிதி பூமியை எரித்துக் கரித்துச் சாம்பலாக்கி விடும் !  பூமியின் உயிரினங்கள் பிழைத்துக் கொள்ள வேண்டுமென்றால் பூமி சனிக் கோள் இருக்கும் சுற்றுப் பாதைக்குத் தள்ளப்பட வேண்டும் !

சூரியனுக்கு அடுத்து என்ன நேரிடும் என்பதை விஞ்ஞானிகள் ஊகிக்க முடியாது !  பெரும்பான்மையான விஞ்ஞானிகள் 19 ஆம் நூற்றாண்டில் நேர்ந்தது போல் பரிதித் தேமல் ஏற்ற இறக்க சுழற்சியைத் (Sun Spots Cycles) தொடரும் என்று சொல்கிறார்.  மேலும் சூரியன் தேமல்கள் உண்டாக்கும் சக்தியின்றிப் போகிறது என்பதற்குச் சான்றுகள் தோன்றியுள்ளன !  2015 ஆண்டுக்குள் எல்லாத் தேமல் வடுக்களும் மறைந்து புதிய “மாண்டர் வடுக்கள் நீச்சம்” (Maunder Sun Spots Minimum) உண்டாகி ஏன் புதிய சிறு பனியுகம் பூமியிலே தோன்றலாம் !

*********************

தகவல் & படங்கள் :

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American, The New Scientist & Astronomy Magazines.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – What will Happen to the Sun ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
20 Astronomy Magazine – What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007)
21 National Geographic Magazine – Dicovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003)
22 Astronomy Magazine Cosmos – The First Planet By : Ray Villard & Adolf Schaller & Searching for Other Earths By : Ray Jayawardhana [Jan 2007]
23 Discover Magazine – Unseen Universe Solar System Confidential [Jan 2007]
24 National Geographic Magazine : Sun Bursts – Hot News from Our Stormy Star (July 2004)
25 Scientific American Magazine : The Paradox of the Sun’s Hot Corona By : Bhola N. Dwivedi & Kenneth Philips (June 2001)
26 Scientific American Magazine : The Steller Dynamo By Elizab eth Nesme-Ribes (2004)
27 Solar Superstorm – A NASA Report (Oct 23, 2003)
28 Scientists Worry About Solar Superstorm By : Leonard David (www.Space.com) (May 2, 2006)
29 Solar Storms Strip Water in Mars – Planetary Geology – Geotimes By : Sara Pratt
30 The Science Behind Solar Storms By : Noelle Paredes\
31 Bracing for a Solar Storm – http://www.unexpected-mysteries.com/
32 What Causes Irradiance Variations ? (http://sdo.gsfc.nasa.gov/missiom/irradiance.php)
33 The Solar Spectral Irradiance & Its Vaiations.
34 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40804101&format=html (திண்ணைக் கட்டுரை – சூரியனுக்கு என்ன நேரிடும் இறுதியில் ?
35 http://www.thinnai.com/?module=displaystory&story_id=41006272&format=html ((திண்ணைக் கட்டுரை – சூழ்வெளிச் சூடேற்றத்தில் சூரிய வடுக்களின் (Solarspots) பங்கு என்ன ?
36 New Scientist : Exodus on the Exploding Earth (April 17, 2010)
37 Astronomy Magazine : Is the Sun an Oddball Star ? (June 2010)
38 New Scientist Magazine – What is up Sunshine ? By : Stuart Clark (June 12, 2010)
39 Daily Galaxy (The Daily Telegraph, UK) : Huge Solar Storms to Impact Earth NASA Warns By : Casey Kazan (June 17, 2010)
40 Reader’s Digest – The Universe & How to see it By : Giles Sparrow (2001)
41 The Universe at Midnight – Observations Illuminating the Cosmos By : Ken Croswell (2001)
42. The National Geographic – The New Universe Here, Now & Beyond (August – November Issue 2010)

******************
jayabarat@tnt21.com [August 22, 2008]
https://jayabarathan.wordpress.com/

நாசாவும் ஈசாவும் கூட்டிணைந்து செவ்வாய்க் கோள் ஆராயும் விண்ணுளவி

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


நாசாவும் ஈசாவும் இணைந்து
நேசமாய்
விண்வெளித் தேடலில் முனைந்து
செந்நிறக் கோளில்
சேர்ந்தே தடம் வைக்கும்
இருபது இருபது ஆண்டுகளில் (2020) !
சந்திரனில்
முதற்தடம் வைத்தது அமெரிக்கா !
செந்நிறக் கோளில்
முதற்தடம் வைப்பவர்
பல கண்டத்து விண்வெளித் தீரர் !
பந்தயங்கள் ஓய்ந்து கூட்டுப்
பயணங்களில்
புத்துணர்ச்சி எழுந்திடும் !
இத்தரணியில்
வித்தகர் ஒன்று கூடி
செந்நிறக் கோளை யாவர்க்கும்
சொந்த மாக்குவர்.
யாதும் உலகே ! யாவரும் கேளிர் !
நிதி பெருக்கி, மதி பெருக்கிக்
கைகோர்த்துப்
புது உலகுக்குப் பாதை போடப்
புறப்பட்டு விட்டார்
புது யுக நிபுணர் !

“செவ்வாய்க் கோளை முழுமையாக உளவி ஆய்வு செய்ய உலகத்தில் உள்ள அனைத்து ஆற்றல்களையும் இணைத்துச் செல்ல வேண்டும்.  இப்போது நாசாவும், ஈசாவும் கைகோர்த்துத் தமது நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி ‘எக்ஸோ-மார்ஸ் வாயுச் சுவடு விண்ணுளவிப் பயணத் திட்டத்தை’ (ExoMars Trace Gas Orbiter Mission) நிறைவேற்ற இணைகின்றன.  இருவரின் குறிக்கோள் : செவ்வாய்க் கோளின் சூழ்வெளியில் முக்கியமாக மீதேன் வாயுவைத் தேடுவது.  செவ்வாய் ஓர் உயிரினக் கோளா ?  இல்லா விட்டால் உயிரினம் வசிக்கக் கூடிய கோளா என்பதை அறிவது.”
டேவிட் சௌத்வுட் (ESA Director, Science & Robotic Exploration)

“நாசாவும், ஈசாவும் தனித்தனியாய் விண்வெளியில் மகத்தான கண்டுபிடிப்புகளை இதுவரைச் செய்துள்ளன.  இணைந்து புரியும் விண்வெளித் தேடலில் ஒரே கண்டுபிடிப்பு இரட்டிப்பு செய்யப்பட்டு நிதி விரையம் ஆகாது.  கூட்டுப் பணியில் பல்வேறு உலக நிபுணர் உழைப்பும், உன்னதக் கண்டுபிடிப்புகளும் நிகழ வாய்ப்புள்ளது.”

எட்வேர்டு வைலர் (NASA Science Mission Directorate, Washington. D.C.)


“நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுறுவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]

“எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும்.  செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம்.  அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது.  நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான†ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.”

டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) (ஜனவரி 26, 2008)


2007 மார்ச் 15 ஆம் தேதி செவ்வாய் எக்ஸ்பிரஸ் விண்கப்பலில் [Mars Express Spacecraft] உள்ள இத்தாலி ரேடார்க் கருவி மார்ஸிஸ் [MARSIS] தென் துருவத்தில் அளந்த அகண்ட ஆழமான பனிக்கட்டித் தளம் அமெரிக்காவின் டெக்ஸஸ் மாநிலத்தை விடப் பெரியது!  அதன் இருக்கை முன்பே அறியப்பட்டாலும் அந்த ரேடார் ஆழ்ந்து அளந்த அனுப்பிய பரிமாணப் பரப்பு பிரமிக்க வைக்கிறது!

ஜெஃப்ரி பிளௌட் நாசா ஜெ.பி.எல் விஞ்ஞானி [Jeffrey Plaut, NASA JPL Investigator]

மார்ஸிஸ் ரேடார் கருவி செவ்வாய்க் கோளின் ஆழ்த்தள ஆய்வுக்கு உகந்த ஆற்றல் மிக்கச் சாதனம்;  செவ்வாய்த் துருவப் பிரதேசப் பகுதிகளில் அடுக்கடுக்கான தட்டுகளை ஆராயும் முக்கிய குறிக்கோளை செம்மையாக நிறைவேற்றி வருகிறது. தளத்தட்டுகளின் ஆழத்தையும், தட்டுகளின் வேறுபாட்டுப் பண்பாடுகளையும் தனித்துக் காட்டுவதில் பேரளவு வெற்றி அடைந்துள்ளது.

கியோவன்னி பிக்கார்டி, ரோம் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் [Gionanni Picardi]


“ரோவர் தளவூர்திகளின் ஆயுட் காலம் நீடிப்பாகி ஈராண்டுகளாய்ச் செவ்வாய்த் தளத்தை உளவி வருகின்றன. ஒவ்வொரு நாளாய் அவை பூமியிலிருந்து தூண்டப் பட்டு, செப்பணிடப் பட்டு மகத்தான பணிகளைப் புரிந்து வருகின்றன!”

ஸ்டீவன் ஸ்குயர்ஸ், செவ்வாய்க் குறிப்பணி பிரதம ஆய்வாளி, கார்நெல் பல்கலைக் கழகம்.


இருபெரும் விண்வெளி ஆய்வுக் குழுவினர் செவ்வாய்க் கோள் தேடலில் இணைப்பு :

அமெரிக்காவின் நாசா (NASA -National Space & Aeronautical Administration) விண்ணாய்வுக் குழுவும், ஐரோப்பாவின் ஈசா (ESA – European Space Administration) விண்ணுளவுக் குழுவும் ஒன்று சேர்ந்து செந்நிறக் கோளில் தடம் வைக்கும் எதிர்காலத் தேடலில் ஒன்றாக ஆராய்ச்சி செய்ய முன்வந்துள்ளார்.  2010 ஆகஸ்டு 2 ஆம் தேதி ஈசாவும், நாசாவும் தாம் இணைந்து திட்ட மிட்ட 2016 ஆண்டு செவ்வாய்ச் சூழ்வெளி ஆய்வுகளுக்குத் தேவையான உளவுக் கருவிகளைத் தேர்ந்தெடுத்து விட்டதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றன.  அந்தத் தேர்வுக்கு உலக வானியல் விஞ்ஞானிகள் பங்கேற்க அழைக்கப் பட்டனர்.  2010 ஜனவரில் முடிவான 19 தீர்மானங்களில் 5 வின்ணுளவுக் கருவிகள் தேர்ந்தெடுக்கப் பட்டன.

அந்தக் குறிப்பணியில் முக்கியமாகச் செவ்வாய்ச் சூழ்வெளியில் மீதேன் வாயுச் சுவடு இருப்பு உளவப்படும்.  அவ்வித வாயு மீதேன் சூழ்வெளியில் இருப்பது பூர்வீகச் செவ்வாயில் வாழ்ந்த உயிரின வசிப்பைக் காட்டும். அடுத்து 2020 ஆண்டுகளில் இணைந்து அனுப்பப்படும் திட்டப் பயணத்தில் தளவூர்தி செவ்வாய்த் தளத்தில் இறங்கி மாதிரி மண்ணைத் தோண்டி எடுத்து பூமிக்கு மீளும்.

கருவிகள் தேர்ந்தெடுப்பில் விஞ்ஞானத் தகுதி மிகுதியாய்த் தருபவையும், குறைந்த ஆயுள் /பழுதில்லா வாய்ப்பு உள்ளவையும் (Scientific Value & Low Risk Instruments) எடுத்துக் கொள்ளப் பட்டன.  அந்தக் கருவிகளை அகில உலக வானியல் வல்லுநர் விருத்தி செய்தார் என்பது குறிப்பிடத் தக்கது.  நாசாவும், ஈசாவும் தனித்தனியாய் விண்வெளியில் இதுவரை மகத்தான கண்டுபிடிப்புகளைப் பதிவு செய்துள்ளன.  ஒரு முக்கிய நலப்பாடு : இணைந்து புரியும் விண்வெளித் தேடலில் ஒரே கண்டுபிடிப்பு இரட்டிப்பு செய்யப்பட்டு நிதி விரையம் ஆகாது.  கூட்டுப் பணியில் பல்வேறு உலக நிபுணர் உழைப்பும், உன்னதக் கண்டுபிடிப்புகளும் நிகழ வாய்ப்புள்ளது.



ஈசா, நாசா படைத்து வரும் செவ்வாய் விண்ணுளவிக் கருவிகள்

நாசா, ஈசா அமைத்து வரும் “செவ்வாய்ச் சூழ்வெளி வாயுச் சுவடு விண்ணுளவியில்” (ExoMars Trace Gas Orbiter) கீழ்க் காணும் ஆய்வுக் கருவிகள் 2010 ஆகஸ்டு 2 இல் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.

1.  2016 இல் பயணம் செய்யத் தயாராகும் நாசா ஈசா விண்ணுளவியில் ஈசா தயாரிக்கும் சுற்றும் விண்கப்பல், இறங்கும், ஏறும், தங்கும் ரதங்கள் அமைக்கப்படும்.  இவற்றைப் பூமியிலிருந்து முதலில் தூக்கிச் செல்வது நாசாவின் வலுவான ராக்கெட்டுகளாக இருக்கும்.

2.  அடுத்து 2018 இல் ஏவப்படும் எக்ஸோ-மார்ஸ் திட்டப் பயணத்தில் ஈசாவின் செவ்வாய்த் “தளத் தோண்டி,” ரோவர் வாகனமோடு (Rover Vehicle with a Driller) செவ்வாய்த் தளத்தில் இறங்கும்.  நாசாவின் ரோவர் வாகனம் செவ்வாய் மண் மாதிரியை சேமித்துக் காத்திருக்கும் பிற்காலப் பயணத்தில் மாதிரி மண் மீட்சியாகும் வரை (Mars Sample Return).

3.  2020 ஆண்டுகளில் நாசா, ஈசா இரண்டும் கூட்டுழைப்புத் திட்டங்கள் மூலம் 2 ஆவது கட்டத்தில் சேமித்த செவ்வாய்த் தள மாதிரிகளைப் பூமிக்கு மீட்டு வருவது.

4.  செவ்வாய்ச் சூழ்வெளி வாயு மூலக்கூறு மறைப்பு ஒளிப்படை மானி (Mars Atmospheric Trace Molecule Occultation Spectrometer) (MATMOS).  உட்சிவப்பு ஒளிப் பட்டை மானி (Infra-Red Spectrometer) செவ்வாய்த் தளவெளியில் தணிவு நிலையில் உள்ள மூலக்கூறு வாயுக்களைக் கண்டுபிடிக்கலாம்.  இது அமெரிக்காவில் தயாராகும் ஒரு கருவி.

5.  உயர்க் கூர்மை பரிதி மறைப்பு & நாதிர் ஒளிப்பட்டை மானி (High Resolution Solar Occultation & Nadir Spectrometer) (SOIR /NOMAD)  உட்சிவப்பு ஒளிப் பட்டை மானி (Infra-Red Spectrometer) செவ்வாய்ச் சூழ்வெளியில் வாயு உட்கலப்புகளைக் (Constituents in the Atmosphere) காண்பது.  இது பெல்ஜியம் செய்யும் கருவி.  இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன், அமெரிக்கா, கனடா நாடுகளின் ஆய்வு ஈடுபாடு, பங்களிப்பு இதில் உள்ளன.

6.  செவ்வாய்ச் சூழ்வெளிக் காலநிலை அறிவிப்பி (ExoMars Climate Sounder) (EMCS) : இது ஓர் உட்சிவப்புக் கதிர்மானி (An Infrared Radiometer) :  அனுதினம் சூழ்வெளியில் இருக்கும் நீர்மை, தூசி, ரசயான மூலக்கூறுகள் ஆகியவற்றை ஆய்வு செய்து சமிக்கை ஆக்கி ஒளிப்பட்டை மானி உளவுக்குத் இணைப்பிலக்கம் (Input Data) அளிப்பது.  அமெரிக்கக் கருவி.

7.  நான்கு நிறத்தில் இருமுகப் படங்கள் எடுக்கும் சாதனம் (High Resolution Stereo Color Imager) (HiSCI).  அமெரிக்கச் சாதனம்.

8.  பற்பல ஒளிக்கற்றை விரிநோக்குக் காமிரா (A Wide Angle Multi-Spectral Camera) (Mars Atmospheric Global Imaging Experiment) (MAGIE)  அமெரிக்கச் சாதனம்.



ஈசா & நாசா விஞ்ஞானிகளின் எதிர்காலத் கூட்டுழைப்புத் திட்டங்கள்

2009 பிப்ரவரி 18 இல் நாசாவும், ஈசாவும் ஒன்று கூடி 2026 இல் வியாழன், சனி போன்ற புறக்கோள்களுக்குப் பயணம் செய்து மூன்றாண்டுகள் ஆராயத் திட்டமிட்டுள்ளன.  அந்தத் தீர்மானத்தின்படி வியாழக் கோளையும் அதன் முக்கிய நான்கு சந்திரன்களையும் (லோ, யூரோப்பா, கானிமீட், காலிஸ்டோ), சனிக் கோளையும் சனியின் இரு பெரும் சந்திரன்களையும் (டிடான், என்சிலாடஸ்) விண்ணுளவிகளை ஏவி ஆராயப் போவதாக முடிவு செய்துள்ளன.  1990 இல் நாசாவும் ஈசாவும் இணைந்து ஏவிய யுலிஸிஸ் விண்ணுளவி (Ulysses Solar Probe) சூரியனின் துருவப் பகுதிகளை ஆராயச் சுற்றி வந்தது !  அது விண்வெளி மீள் கப்பலிலிருந்து (Space Shuttle) ஏவப்பட்டு 17 வருடங்கள் வெற்றிகரமாகப் பரிதியின் ஒளிக்கதிர்ச் சூழ்வெளியை ஆராய்ந்து 2008 இல் ஓய்வடைந்தது.

நாசா, ஈசா ஆகிய இரண்டுக்கும் செந்நிறக் கோள் தளங்களில் “சுய இயக்குத் திட்டங்களை” (Robotic Missions) நிறைவேற்றுவதில் பொதுவாக விருப்பம் உள்ளது.  அவை வானியல் விஞ்ஞான வேட்கையைப் பூர்த்தி செய்யவும், எதிர்கால மனிதப் பயணங்களை நிறைவேற்றத் தயார் செய்யவும் தேவைப்படும்.  2009 ஜூலை மாதத்தில் செய்த தீர்மானத்தின்படி 1 பில்லியன் டாலர் (850 மில்லியன் ஈரோ) செலவில் இரண்டு செவ்வாய்க் கோள் பயணங்களுக்கு (2016 & 2018) நாசாவும், ஈசாவும் ஐந்து முக்கிய உளவுக் கருவிகளைத் தேர்தெடுத்துள்ளன.  இந்த ஆய்வுகளின் முடிவுகள் 2020 ஆண்டில் விண்வெளி விமானிகள் செந்நிறக் கோளில் முதன்முதல் தடம் வைக்க வழி வகுக்கும்.  விண்வெளித் தேடலில் பந்தயமின்றி இரட்டிப்புச் செலவின்றி விஞ்ஞானிகள் தமது ஆழ்ந்த ஆற்றல்களை இணைத்து ஆராய்ச்சியில் பகிர்ந்து கொள்வது பாராட்டுவதற்குரிய ஆக்கவினை ஆகும்.

+++++++++++++++++++++++++

தகவல்:

Picture Credits : NASA & ESA Websites,

1. Mars Global Surveyor [Nov 7, 1996], Mars Path Finder [Dec 1996].
2. Destination to Mars, Space flight Now By: William Harwood [July 8, 2003]
3. Twin Roving Geologists Bound for Surface of Mars By: William Harwood [May 29, 2003]
4  Science & Technology: ESA’s Mars Express with Lander Beagle-2  [Aug 26, 2003]
5. Future Space Missions to Mars By: European Space Agency [ESA]
http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602101&format=html
[Author’s Article on Mars Missions]
6 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40904161&format=html
6 (b)  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602032&format=html (Mars Probe Spacecrafts)
6 (c) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40803131&format=html (செவ்வாய்க் கோளில் நீர் வரண்டது எப்போது ?)
6 (d) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602032&format=html (செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)
6 (e) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602101&format=html (செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)
6 (f) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703221&format=html (செவ்வாய்த் துருவப் பனித் தொப்பிகள்)
6 (g) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40708091&format=html (செவ்வாய்க் கோளுக்கு ·பீனிக்ஸ் தளவுளவி)
6 (h) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40903261&format=html (செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு, பெர்குலரேட் உப்பு கண்டுபிடிப்பு)
7  Spacecraft Blasts off to Gather Mars Data By: Associated Press [Aug 12, 2005]
8  NASA Facts, Mars Exploration Rover By: NASA & JPL [Sep 2004]
9  Arctic Microbes Raise Cope for Life on Mars By: Associated Press [Oct 25, 2005]
10 Mars Reconnaissance Orbiter on the Approach By: JPL [Feb 8, 2006]
11 Mars South Pole Ice Found to be Deep & Wide -NASA JPL Release [March 15, 2007]
12 Astronomy Now – Destination : Mars for ESA & NASA (Dec 23, 2009)
13 NASA JET Propulsion – News & Features : To Outer Planets (Feb 18, 2009)
14 NASA -Mars Exploration Rover -A “Spirit” (MER-A) Mission Patch (July 30, 2010)
15 Mars Daily Site : NASA & ESA Joint Mission to Mars Selects Instruments (August 2, 2010)
16 ESA -Instruments Selected for Mars, ESA / NASA ExoMars Mission (August 2, 2010)

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 15,  2010