சாக்ரடிஸின் மரணம்

Cover Image Socrates -4

(கி. மு. 469–399)

மூவங்க நாடகம்
காட்சி -1 பாகம் -1

ஆங்கில மூலம் : லிஸ்டர் ஸின்கிளேர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா


“நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய சீடர்) பிளாடோ உலகத்திலே உன்னத உள்ளமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர்.  பிளாடோவைச் சிறந்த வேதாந்த ஞானியாக ஊக்கியது அவரது குருநாதர் சாக்ரடிஸின் சிந்தனா சக்தியே,”

பெர்டிராண்டு ரஸ்ஸல். (1872 – 1970)

“ஒரு நேர்மையான மனிதன் சிறு குழந்தையைப் போன்றவன்.”

“அனைத்து மனிதரின் ஆத்மாக்களும் அழியாத் தன்மை (Immortal) படைத்தவை.  ஆனால் அவற்றில் நன்னெறியோடு வாழும் ஆத்மாக்கள் தெய்வீகத்தனம் பெற்றவை.”

“என்னைப் பொருத்த வரை எனக்குத் தெரிந்தது இதுதான் : ‘எனக்கு ஒன்றும் தெரியாது.’ என்பது.”

“அழகு என்பது அற்ப ஆயுளுடைய ஒரு கொடுங்கோல் ஆட்சி.”

“எப்படி முயன்றாயினும் திருமணத்தைச் செய்து கொள் !  நற்குண மனைவி ஒருத்தி அமைந்தால் நீ மகிழ்ச்சி அடைவாய் !  துர்க்குண மனைவி கிடைத்தால் நீ வேதாந்தி ஆவாய் !”

சாக்ரடிஸ்

Fig 3 Socrates & Plato -1

முன்னுரை:

உன்னத சித்தாந்த மேதை சாக்ரடிஸை வழக்கு மன்றத்தில் கி. மு 399 இல் விசாரணை செய்து மரண தண்டனை விதிக்கப்பட்ட போது அவருக்கு வயது எழுபது !  அந்த கிரேக்க ஞானி சாக்ரடிஸ் ஏதென்ஸ் நகரில் வாழ்ந்து வந்த ஒரு சிற்பக் கலைஞர்.  அப்போது நிகழ்ந்த 25 ஆண்டு காலப் போரில் ஸ்பார்டா ஏதென்ஸை கி. மு. 404 இல் தோற்கடித்தது !  அதைத் தொடர்ந்த புரட்சியில் பின்னர் குடியரசு நிலைநாட்டப் பட்டது.  சாக்ரடிஸ் மேற்திசை நாடுகளின் முதற் சித்தாந்த ஞானியாக மதிக்கப் படுகிறார்.  அவர் வேதாந்தச் சிந்தனையாளர்.  உரையாடல் மூலம் மெய்யான ஞானத்தை அறிந்திட வினாக்களைக் கேட்பவர்.  மேற்திசை வேதாந்த அடிப்படைக்கு வித்திட்டு விருத்தி செய்தவர் இருவர்.  சாக்ரடிசும் அவரது சீடர் பிளாடோவும் மெய்ப்பாடுகளைத் தேடும் சிந்தனா முறைகளுக்கு வழிகாட்டியவர்.  சாக்ரடிஸ் போரில் பங்கெடுத்த ஒரு தீரர்.  போருக்குப் பின் நேர்ந்த அரசாங்கத் கொந்தளிப்பில் ஏதென்ஸ் நகரத்தில் இடையூறுகள் நிரம்பின. சாக்ரடிஸ் ஓய்வெடுத்துக் கல் கொத்தனாராய் உழைத்துத் தன் குழந்தைகளையும், மனைவியையும் காப்பாற்றி வந்தார்.  மனைவியின் பெயர் : ஷான்திப்பி (Xanthippe).

சாக்ரடிஸ் வாலிப மாணவரிடம் வினாக்களைக் கேட்பதைத் தவிர தன் கைப்பட வேறெந்த நூலையும் எழுதவில்லை.  அவரது பிரதானச் சீடர் பிளாடோவின் உரையாடல்கள் மூலம் குருவின் பண்பாடுகளும் கோட்பாடுகளும் வரலாற்றில் பதிவாகியுள்ளன.  சாக்ரடிஸ் தன் பிற்கால வாழ்வை ஏதென்ஸ் நகர இளைஞருடன் வேதாந்த நெறிப்பாடுகளை உரையாடிக் கழித்தார்.  உலோகாயுதச் செல்வீக வெற்றி (Material Success) பெற்ற அந்த இளைஞர் அனைவரும் சாக்ரடிஸிடம் பெரு மதிப்பு வைத்திருந்தார்.  இளைஞர் பலரைக் கவர்ந்த சாக்ரடிஸ் மீது இளைஞரின் பெற்றோருக்குப் பெரு வெறுப்பு உண்டானது !  இறுதியில் சாக்ரடிஸ் குற்றம் சாற்றப்பட்டு விசாரணைக்கு இழுத்து வரப்பட்டு ஏதென்ஸ் இளைஞர் மனதைக் கெடுத்தார் என்று கிரேக்க ஜூரர்களால் பழி சுமத்தப்பட்டார்.  அதன் பயங்கர விளைவு : அவருக்கு மரண தண்டனை ! சாக்ரடிஸ் குற்றத்தை ஏற்றுக் கொண்டு இறுதியாகச் சிறையில் ஹெம்லாக் நஞ்சைக் (Hemlock Poison Plant) குடித்துத் தன்னுயிரைப் போக்கிக் கொண்டார்.

Fig 1A Socrates & Plato -2

சாக்ரடிஸ் கி. மு. 470 இல் கிரேக்க நாட்டின் கூட்டாட்சி (Greek Confideracy) பெர்ஸியன் படையெடுப்பைத் தடுத்து விரட்டிய பிறகு ஏதென்ஸ் நகரில் பிறந்தார்.  அவரது தந்தையார் ஒரு சிற்பக்கலை வல்லுநர்.  தாயார் கர்ப்பவதிகளுக்குப் பேறு காலம் பார்க்கும் மருத்துவச்சி.  சாக்ரடிஸ் காலத்தில் கிரேக்க நகரங்களுக்குள் குறிப்பாக ஏதென்சுக்கும் ஸ்பார்டாவுக்கும் பல சமயங்கள் கசப்பான போர்கள் நிகழ்ந்தன.  சாக்ரடிஸ் இராணுவத்தில் சேர்ந்து மூன்று போர் அரங்குகளில் தீவிரமாகப் போராடித் தனது அபார உடலின் சகிப்புத் தன்மையை எடுத்துக் காட்டினார்.

சாக்ரடிஸ் தன்னைப் பற்றி நூல் எதுவும் எழுதாததால் நான்கு முறைகளில் அவரைப் பற்றி அறிய முடிகிறது.  முதலாவது சாக்ரடிஸ் காலத்தில் வெளியான பிற நூல்களிலிருந்து தெரிந்தவை.  இரண்டாவது சாக்ரடிஸ் மரணத்துக்குப் பிறகு அவரைப் பற்றி அறிந்தோர் வெளியிட்ட நூல்கள் மூலம் அறிந்தது.  மூன்றாவது பற்பல பதிவுகளில் பரம்பரையாய்க் காணப்படுபவை.  நான்காவது சாக்ரடிஸின் தனிப்பட்ட மனிதத் தூண்டல்கள் (Personal Influence).  இந்த நான்கு மூலங்களும் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளதால் அவற்றில் கூறப்படுபவை எல்லாம் ஒருவரைக் குறிப்பிடுவனவா என்னும் பெருத்த ஐயப்பாடு உண்டாகிறது !  ஆயினும் சாக்ரடிஸின் வரலாறுக் கூற்றுக்களை இரண்டு மூலாதார நூல்கள் அழுத்தமாக எடுத்துக் காட்டுகின்றன.  அவை இரண்டும் சாக்ரடிஸ் இறந்த பிறகு அவரைப் பற்றி நன்கு அறிந்தோர் எழுதிய நூல்கள்.  1.  பிளாடோவின் உரையாடல்கள் (The Dialogues of Plato)  2.  “ஸெனோ·பன் என்பவரின் நினைவுப் பதிவு” (The Memorabilia of Xenophon).  எழுபது வயது சாக்ரடிசுக்கு ஏதென்ஸ் விசாரணையில் தீர்வு கூறப்படும் போது பிளாடோவுக்கு வயது இருபத்தியெட்டு !  குருவுக்கு விசாரணை நடக்கும் போது பிளாடோ அதை நேரடியாகக் கண்டிருக்கிறார்.  மேலும் சாக்ரடிஸிடம் பிளாடோ எட்டு வருடமாகப் படித்துக் கொண்டு வந்திருக்கிறார்.

Wife Dousing Socrates

பிளாடோவின் உரையாடல்களில் (The Dialogues of Plato) சாக்ரடிஸ்

பிளாடோவின் உரையாடல் நூல்கள் பற்பல பதிவாகியுள்ளன.  ஏறக் குறைய அவற்றில் வரும் பிரதான மனிதர் அவரது குருநாதர் சாக்ரடிஸ்தான்.  இதில் உள்ள ஒரு பிரச்சனை என்ன வென்றால் மெய்யான வரலாற்றுச் சாக்ரடிஸ் யார் என்று அறிந்து கொள்ள முடியாமல் போவது !  பிளாடோ கலைத்துவ முறையில் எடுத்துக் காட்டிய சாக்ரடிஸ் மெய்யான சாக்ரடிஸா என்பதை நிர்ணயம் செய்வது கடினம்.  நாடக நிபுணர் பிளாடோ தனது குருநாதர் பண்பாட்டை மிகைப் படுத்திக் கூறக் கூடிய திறமை உள்ளவர்.  சாக்ரடிஸ் ஒரு பெரும் சிந்தனாவாதி என்றால் அவரது சீடர் பிளாடோ உன்னத வேதாந்தியாகக் கருதப் படுகிறார்.  பிளாடோவின் உரையாடலில் இருவித வேறுபாட்டுப் பண்பாடுகள் உடைய சாக்ரடிஸ் காட்டப் படுகிறார்.  ஒன்று தனக்கென ஒரு தனித்துவக் கொள்கை இல்லாத ஓர் அப்பாவி வயோதிக மனிதர்.  இரண்டாவது தனித்துவக் கோட்பாடு கொண்டு வினாக்களைக் கேட்டு மாணவரின் மனக்கருத்தைத் தெரிந்து கொள்ளும் சாக்ரடிஸ்.  இந்த நாடகத்தில் காட்டப்படும் சாக்ரடிஸ், முழுக்க முழுக்க பிளாடோ எடுத்துக் கூறிய சாக்ரடிஸ்.  அதாவது சில சமயம் சாக்ரடிஸ் ஓர் அப்பாவியாக இருப்பார் !  சில சமயம் அதிகாரத்தோடு முழக்கும் ஓர் உபதேசியாக இருப்பார் !  பிளாடோ தன் உரையாடல்களில் கையாண்டு சாக்ரடிஸ் பண்பாடுகளைப் பற்றி எழுதிய சொற்றொடர்கள் இந்த நாடகத்திலும் எடுத்தாளப் பட்டுள்ளன.

Fig 3 Socrates Influencing the Youths

சாக்ரடிஸ் விசாரணை, மரண நாடகம்

இந்த மூவங்க நாடகம் சாக்ரடிஸின் முழு வாழ்கை வரலாறைக் கூறுவதில்லை.  அவரைப் பற்றிய கால நிகழ்ச்சிக் குறிப்புக்களும் அல்ல.  அவரது இறுதிக்காலத்தில் நிகழ்ந்த துன்பியல் சம்பவம்.  நிகழ்ச்சிகள் பற்பல சுருக்கப்பட்டு நாடகப் படைப்பு சாக்ரடிஸ் மரணக் காரணத்தை ஓரளவு எடுத்துக் காட்டுகிறது.  சாக்ரடிஸ் மரணச் சம்பவம் முடிவில் ஒன்றாய் இருந்தாலும் அந்த நாடகத்தை எழுதிய பல்வேறு ஆசிரியர்கள் வெவ்வேறு வித வசனங்களில் எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.  இந்தப் பகுதியில் எழுதப்படும் கனடா நாடக மேதை, லிஸ்டர் ஸின்கிளேர் நாடகம்தான் மெய்யானது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. குறிப்பாக நாம் அறிந்து கொள்ளக் கூடியது இதுதான் :  ஏதென்ஸ் நகரவாதிகள் பலர் சாக்ரடிஸின் பகைவர்.  தனித்துவ முறையில் வினாக்களை எழுப்பி மெய்ப்பாடுகளை வாலிப மாணவருக்கு ஞானமாகக் காட்டினார்.  அதனால் ஏதென்ஸ் மக்களின் வெறுப்பைப் பெற்றார்.  அவரைப் பழிக்குற்றம் சாற்றிச் சிறைசெய்து நஞ்சு கொடுத்துக் கொன்றனர் என்னும் வரலாற்றை வலியுறுத்திக் கூறுவதே இந்த நாடகத்தின் குறிக்கோள் !  அவரது வாசகம் இது: “நேர்மை என்பது ஒரு வகை ஞானம்.” (Virtue is a kind of Wisdom). கவிஞர் கதைகளில் அழுத்தமாய்க் கூறிவரும் காட்டுமிராண்டிகளின் தெய்வத்திலிருந்து வேறுபடாதது கடவுள்களின் பிதா ஜீயஸ் (Zeus – The Father of the Gods) என்று சாக்ரடிஸ் குறிப்பிட்டதாகத் தெரிகிறது.

Fig 4 Death of Socrates with Poison

பெர்டிராண்டு ரஸ்ஸல் அவரைப் பற்றிக் குறிப்பிடும் போது “நாம் என்னதான் சாக்ரடிஸைப் பற்றி ஐயுற்றாலும், (அவரைப் பற்றி எழுதிய சீடர்) பிளாடோ உலகத்திலே உன்னத உள்ளமும், உயர்ந்த ஆன்மீக ஞானமும் பெற்றவர்.  பிளாடோவைச் சிறந்த வேதாந்த ஞானியாக ஊக்கியது அவரது குருநாதர் சாக்ரடிஸின் சிந்தனா சக்தியே,” என்று அழுத்தமாகக் கூறுகிறார்.

ஏதென்ஸ் நகரில் ஆரஞ்சுப் பழங்கள் ஆப்பிள் பழங்களாய் இருப்பினும் அவற்றைப் பெரும்பாலும் கிரேக்கர் அந்தக் காலத்தில் தின்பதில்லை.  ஆனால் ஆக்டபஸ் கடல்மீனை (Octopus) ஏதென்ஸ் மக்கள் அதிகம் தின்றதாகத் தெரிகிறது !

******************************

சாக்ரடிஸின் மரணம்
மூவங்க நாடகம்
காட்சி -1 பாகம் -1


இடம் : ஏதென்ஸ் நகரத்தில் ஓர் அங்காடி வீதி

காலம் : கி. மு. 399

பங்கெடுப்போர் :  மீனவன், மெலிடஸ் (Meletus), ஆகாத்தான் (Agathon) அரிஸ்டோபானிஸ் (Aristophanes), மெகில்லஸ் (Megillus), லைகான் (Lycon). சிலரது மனைவியர்.

அமைப்பு : ஏதென்ஸ் நகரத்தின் அங்காடி வீதியில் உயர்ந்த தூண்கள் எழுப்பிய மாளிகைகள்.  ஒரு தூணின் பக்கத்தில் நிற்கிறான் வாலிபன் ஒருவன்.  அவன் பெயர்தான் மெலிடஸ்.  மெலிந்த சரீரம் கொண்டு, தாடி மீசை உள்ளவன்.  அங்காடி வீதியை அங்குமிங்கும் நோக்கிய வண்ணம் வெறுப்போடு அவன் காணப்படுகிறான்.  மீனவன் ஒருவன் ஒரு சாக்கு நிறைய ஆக்டபஸ் மீன் இறைச்சிகளைச் சுமந்து வீதியில் விற்றுக் கொண்டிருக்கிறான்.

***********************

மீனவன்:  (கையில் ஆக்டபஸ் ஒன்றை ஏந்திக் கொண்டு வீதியில் நடப்போரைத் தடுத்து நிறுத்தி)  பாருங்கள் ஐயா !  புத்தம் புதிய ஆக்டபஸ் !  உயிருள்ள ஆக்டபஸ் ! வாலாட்டும் ஆக்டபஸ் !  கடலிலிருந்து இன்று பிடித்த ஆக்டபஸ் !  வாங்கிச் செல்லுங்கள் ! சமைத்துப் பாருங்கள் !  சுவைத்துப் பாருங்கள் !  மலிவாகத் தருகிறேன் !

(வீதியில் போவோர் சிலர் நின்று மீனவனிடம் பணம் கொடுத்து ஆக்டபஸ் வாங்கிச் செல்கிறார்)

மீனவன்:  (மெலிடஸை நெருங்கி)  ஆக்டபஸ் வேண்டுமா ஐயா !

மெலிடஸ்:  (கோபத்தோடு)  நான் ஐயா இல்லை மடையா !  நானொரு வாலிபன் !  இருபத்தியைந்து வயது இளைஞன் !  கிழவன் என்றா நினைத்தாய் ?

மீனவன்:  ஓ வாலிபரே ! ஒரு ஆக்டபஸ் வாங்குவீர் ! வீட்டில் வைத்து ஒரு வாரம் உண்ணலாம் !  (ஆக்டபஸ்ஸை நீட்டுகிறான்)

மெலிடஸ்:  (கோபத்தோடு)  எடுத்துப் போ உன் கடல்மீனை !  அறைந்து விடுவேன் கன்னத்தில் !  மீனவா ! யாரென்று நீ என்னை நினைத்தாய் ?  தேவர்கள் தீர்ப்பு அளிப்பு தினத்தில் (Day of an Oracle) மீன் விற்பது சட்ட விரோதம் !  தெரியமா ?

மீனவன்:  தீர்ப்பு அளிப்பு தினமா ?  யாருக்கு ? தீர்ப்பு யாருக்கு அளித்தால் என்ன ?  வயிறுக்குத் தீனி இல்லாமல் தீர்ப்பளிக்க முடியுமா வாலிபரே !  கும்பியைப் பட்டினி போடச் சொல்லுதா சட்டம் ?  உமக்கு வேண்டா மென்றால் சரி ! ஆனால் வாங்குவோரைத் தடுக்கச் சட்டத்தை ஏன் காட்ட வேண்டும் ?  என் பிழைப்பில் மண்ணைப் போட்டு என் கும்பியைக் காய வைக்குது சட்டம் !

[அப்போது அழகிய ஒரு செல்வந்தன் ஆகாத்தான் (Agathon) வருகிறான்.  அடுத்துக் குண்டான, வயதான, கூத்துக் கவிஞர் அரிஸ்டோஃபானிஸ் (Aristophanes) கூட்டத்திலிருந்து வெளிப்படுகிறார்.  மீனவன் அவரிடம் ஓடிப் போய் ஆக்டபஸ்ஸை வாங்கும்படிக் கேட்கிறான்]

மீனவன்:  ஐயன்மீர் !  ஈதோ குஞ்சு ஆக்டபஸ் !  பிஞ்சாக இருக்குது !  சுட்டுத் தின்னா வெகு ஜோராய் இருக்கும் !  குழம்பு வைத்தால் குடும்பமே சுவைக்கும் !  காலையில் தான் கடலில் பிடித்தது !

அரிஸ்டோஃபானிஸ்:  வாங்குடா ஆகாத்தான் ! இன்றைக்கு உன் வீட்டில் விருந்தல்லவா ?  ஒன்று போதாது.  இரண்டு ஆக்டபஸை வாங்கி இன்று விருந்தாளிக்குப் போடு !

ஆகாத்தான்:  (ஒன்றை வாங்கிப் பணம் கொடுக்கிறான்)  அரிஸ்டோ !  உன் தொந்திக்கே ஆக்டபஸ் ஒன்று போதாது !  (மீனவனைப் பார்த்து)  ஆக்டபஸ்ஸை எங்கே கொண்டு போய்க் கொடுக்க வேண்டும் என்று நான் சொல்கிறேன் !

அரிஸ்டோஃபானிஸ்:  நாமே கொண்டு போகலாம். அவனுக்கு இடம் தெரியாமல் போனால் இந்த ஆக்டபஸ் நம் தொந்திக்குள் செரிக்காது ! யாரோ ஒருவர் தொந்திக்குள் நீந்தும் !  (சிரிக்கிறான்)

ஆகாத்தான்:  தேவர்கள் தீர்ப்பு அளிக்கும் சபையில் ஆக்டபஸை மடியில் வைத்துக் கொள்ள முடியாது !

அரிஸ்டோஃபானிஸ்:  முட்டாள்தனம் !  கொடு என்னிடம் ஆக்டபஸ்ஸை !  நான் பையில் சுருட்டி வைத்துக் கொள்கிறேன்.  எனக்கு அவமானம் இல்லை !  மனைவியர் பலர் காய்கறிகளுடன் கணவருடன் அதோ வருகிறார்.  இதில் என்ன மானம் போகுது ?

[அப்போது விவசாயி மெகில்லஸ் (Megillus) மதுபானம் குடித்துக் கொண்டு தள்ளாடி வருகிறான்]

மெகில்லஸ்:  (நாக்குளறி)  நான் ஓரடி கூட வைக்க முடியாது.  (தள்ளாடிப் படியில் விழுகிறான்)

மெகில்லஸின் மனைவி:  நீ நிரம்பக் குடித்திருக்கிறாய் !  நீ இங்கு உட்கார்ந்து கொள் !  நான் மட்டும் தேவர்கள் தீர்ப்பைக் கேட்கப் போகிறேன்.  உலகில் யார் உன்னத அறிவாளி என்பதை நான் தெரிந்தாக வேண்டும் இன்று தீர்ப்பு தினத்தில் !

[அப்போது ஏதென்ஸின் பெரும் பேச்சாளி, லைகான் (Lycon) வருகிறான்.  மெலிடஸ் ஓடிவந்து லைகானை நிறுத்துகிறான்.]

மெலிடஸ்:  (கோபத்தோடு)  நீ முன்பே வரவேண்டியவன் !  ஏன் இப்படித் தாமதம் ?  உனக்குக் கடிதம் வரவில்லையா ?

லைகான்:  என்ன கடிதம் ?

மெலிடஸ்:  அதுதான் கிழவர் சாக்ரடிஸைப் பற்றி !

லைகான்:  நானதைக் கிழித்துப் போட்டு விட்டேன் !

மெலிடஸ்:  நீ பங்கெடுக்கப் போகிறாயா ?

லைகான்:  எதில் பங்கெடுக்க வேண்டும் ?

மெலிடஸ்:  தெரியாதா உனக்கு ?  இன்றுதான் தீர்ப்பு தினம் !  உலகிலே யார் உன்னத அறிவாளி என்று தேவர் குழு (Oracle) அறிவிக்கப் போகிறது !  அது நிச்சயம் சாக்ரடீஸ் இல்லை !

லைகான்:  மோசடிப் பக்தர் !

மெலிடஸ்:  ஆமாம் அவர் எல்லாரும் மோசடிக் கூட்டம்தான் !  இன்று சாக்ரடிஸ் புகழ் வாழ்வுக்கு முடிவு விழா !

லைகான்:  என்ன சொல்கிறாய் ?  புரிய வில்லையே !  விளக்கமாகச் சொல் !

மெலிடஸ்:  வேடிக்கை பார் !  இன்றோடு சாக்ரடிஸ் பெயர் விழுந்து விடும் !  அவர் ஒன்றும் உன்னத அறிவாளி அல்லர் !  அவரை விடப் பெரிய ஞானிகள் உலகிலே இருக்கிறார் !  அதுதான் அறிவிக்கப்படப் போகிறது !

(தொடரும்)

***************************
தகவல் :

Based on The Plays :

(A)  Plato : The Trial & Death of Socrates Translated By : G. M. A. Grube
Hackett Pulishing Company. Inc. Second Edition 1983, USA.

(B)  Socrates – A Drama in Three Acts By Lister Sinclair,
The Book Society of Canada (July 1966)

++++++++++++++

ஆதாரங்கள் :

1.  Plato’s Symposium Tranlated By : Benjamin Jowett,  The Liberal Arts Press, New York (1956)

2.  Plato : Euthyphro, Apology, Crito (Phaedo The Death Sentence), Translated By : F. J. Church (1956)

3.  Encyclopaedia Britannica (1973 Edition)

4.  The New Hutchinson 20th Century Encyclopedia (1979 Edition)

5.  Britannica Concise Encyclopedia (2003 Edition)

6.  The Oxford Dictionary of Quotations New Edition (1992)

7.  The Great Quotations Compiled By : George Seldes (1967)

8..  The Wordsworth Dictionary of Quotations (1997)

9.  From Socrates to Sartre – The Philosophic Quest By : T. Z. Lavine (Mach 1984)

10.  The Trial of Socrates By : Douglas Linder (2002)

********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com (May 6, 2009)]

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! பூமியும் நிலவும் பூர்வீகத்தில் ஒன்றே என்னும் புதிய நியதி !

The Giant Collision

(கட்டுரை: 57 பாகம் -2)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


பூமியின் உடற் சதையிலிருந்து
சிதைந்தது நிலவு !
சந்ததி யாய்ப் பூமிக்கு
வந்தது நிலவு !
பூமித் தாயிக்குப் பணிந்து
ஒருமுகம் காட்டி வலம்
வருவது நிலவு !
அண்டையில் சுற்றிய
உண்டைக் கோள் “தியா”
பூமி வயிற்றில்
மோதித்
திரண்டது நிலவு !
பூமியும் நிலவும் ஒரே
பிண்டத்திலே
உண்டான
உண்டைக் கட்டிகள் !
வையகமும் வான் நிலவும்
கைகோர்த் தாடும்
பந்துகள் !
பூமியின் நீர் ஊற்று போல்
நிலவுக் குள்ளும்
நீர்க் குளம் இருக்கலாம் !
நீரில் நெளிந்து வாழும்
உயிர்ப் பிறவியும்
உலவலாம் !

Fig 5 Relative Size of Earth & Moon

“நாசாவின் ஸ்டியரியோ இரட்டை விண்ணுளவிகள் பூமிக்கு அருகில் பரிதியைச் சுற்றிய பூர்வீக அண்டக் கோள் ஒன்றின் எச்சத் துணுக்குகளைத் (Remnants of an Ancient Planet) தேடி புதிரான ஓர் அரங்கை நோக்கிச் செல்கின்றன !  அந்த உளவிகள் ஏதாவது அதன் துணுக்குகளைக் கண்டால் நிலவு தோன்றிய ஒரு பெரும் புதிர் தீர்க்கப்படும் !  அந்த அண்டக் கோளின் பெயர்தான் தியா (Theia) என்பது.  அது ஒரு கற்பனைக் கோள்.  அதனை யாரும் இதுவரை மெய்யாகப் பார்த்ததில்லை.  ஆனால் ஆராய்ச்சியாளர் அக்கோள் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததாகவும் அது பூமியுடன் மோதி நிலவு உருவானது என்பதாகவும் நம்புகிறார்கள்.”

மைக்கேல் கெய்ஸர் (NASA STEREO Project Scientist) (ஏப்ரல் 14, 2009)

“பூமியிலிருந்தும் நிலவிலிருந்தும் எடுத்த திரட்டு ஸிலிகேட் (Bulk Silicate) இரண்டும் ஒரே மாதிரி ஏகமூலக் கூட்டுக் கலவை (Isotopic Composition) கொண்டவை.  அண்டக் கோளின் அசுரத் தாக்குதலின் போது பேரளவில் “ஏகமூலச் சமப்பாடு” (Isotopic Equilibration) அவற்றில் நேர்ந்திருக்கிறது என்பது சமீபத்தில் வெளியான அறிக்கைக்கு உடன்பாடு தெரிவிக்கிறது.

இயற்கை விஞ்ஞான வெளியீடு (Nature Science Journal)

Fig 1 The Theia Planet Theory

அண்டக் கோள் தியாவின் அசுர மோதல் நியதி

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே பூமிக்கருகில் பரிதியைச் சுற்றி வந்த பூர்வீகக் கோள் ஒன்று பூமியோடு மோதிச் சிதைவுத் துணுக்குகளே நிலவு துணைக் கோளாகியது என்னும் ஓர் “அசுர மோதல் கோட்பாடு” (The Giant Impact Hypothesis) புதியதாக நிலவி வருகிறது !  அந்தக் கோள் செவ்வாய்க் கோள் அளவான “தியா” (Theia) என்று கூறப்படுகிறது.  இந்தக் கோட்பாடுக்குச் சான்றளிப்பவை : நாசாவின் அபொல்லோ விண்வெளித் தீரர் நிலவிலிருந்து கொண்டு வந்த மாதிரிப் பாறைகள், மண் திரட்டுகள்.  அந்த மாதிரிகள் காட்டுவதென்ன ?  நிலவின் தரைப் பரப்பு ஒருகாலத்தில் உருகி அமைந்தது என்பது.  நிலவின் உட்கரு மிகச் சிறு இரும்பு உண்டை (Relatively Small Iron Core) என்பது.  அடுத்த சான்று.  மற்ற விண்மீன் மண்டலங்களின் கோள்களில் அத்தகைய மோதல்கள் காணப்படுவது.  இப்போது தீர்வு காணப்படாத வினாக்கள் :  ஏன் நிலவின் மாதிரிகள் இரும்பு ஆக்ஸைடு அல்லது தீண்டா மூலகங்கள் போன்றவற்றின் (Iron Oxide or Siderophilic Elements) (Siderophile Elements : Any element that has a weak affinity for oxygen and sulfur and that is readily soluble in molten iron. Siderophile elements include iron itself, nickel, cobalt, platinum, gold, tin, and tantalum.) ஆவியாகும் மூலகங்களின் வீதங்களைக் (Ratio of Volatile Elemets) காட்டவில்லை ? இந்தக் கோட்பாடு வலியுறுத்தும் பூமியின் எரிமலைக் குழம்பு ஏறி வழிந்த தரைப்பகுதி (Magma Ocean) எப்படி பூமியில் தோன்றி யிருக்கக் கூடும் என்னும் ஐயப்பாடு !

Fig 1A Planet Theia's Collision

மோதல் கோட்பாடு தோன்றிய வரலாறு

1898 ஆம் ஆண்டில்தான் ஜார்ஜ் ஹோவேர்டு டார்வின் (George Howard Darwin) (பரிணாமக் கோட்பாடு எழுதிய சார்லஸ் டார்வின் அல்லர்) பூமியும் நிலவும் பூர்வீக காலத்தில் ஒரே உடம்பாக இருந்தவை என்று கூறியவர். ஜார்ஜ் டார்வினின் கோட்பாடு என்ன வென்றல் பூர்வ பிள்ளைப் பூமியின் சுழல்வீச்சு விசையால் (Centrifugal Force) பூமியிலிருந்து உருகித் திரண்ட ஒரு கோள் வெளிப்பட்டு நிலவென்னும் துணைக்கோள் ஆனது.  அவர் நியூட்டனின் யந்திரவியல் கணக்கைப் பயன்படுத்தி நிலவு முதலில் பூமிக்கு வெகு அருலில் சுற்றத் துவங்கிப் பிறகு மெதுவாக விலகிச் சென்றது என்று விளக்கினார்.  அந்த விலக்கு நகர்ச்சியைப் பிறகு நாசாவும், சோவியத் ரஷ்யாவும் லேஸர் ஒளிக்கதிர்களை நிலவுக்கு அனுப்பி உறுதிப்படுத்தின.  ஆனால் டார்வினின் கணித முறைப்படி மீட்சி முறையில் பின்னே சென்று நிலவைத் திருப்பி பூமியோடு இணைத்துக் கணக்கிட முடியவில்லை ! 1946 இல் ஹார்வேர்டு பலகலைக் கழகத்தைச் சேர்ந்த ரெகினால்டு ஆல்ட்வொர்த் டாலி (Reginald Aldworth Daly) ஜார்ஜ் டார்வினின் கோட்பாடை எதிர்த்து, நிலவு சுழல்வீச்சு விசையால் உண்டாக வில்லை என்றும் வேறோர் கோள் மோதித் தோன்றிய தென்றும் சவால் விடுத்தார்.  பிறகு டாலியின் கருத்து பல்லாண்டுகள் கழித்து 1975 இல் மீண்டும் டாக்டர் வில்லியம் ஹார்ட்மன், டாக்டர் டொனால்டு டேவிஸ் இருவரால் வெளியாக்கப் பட்டது.  புதுப்பிக்கப் பட்ட அந்தக் கொள்கையே அசுர மோதல் கோட்பாடாய் இப்போது மெருகிடப் படுகிறது.

Fig 1B The Birth of the Moon

மோதிய பூர்வீகக் கோள் தியாவைப் பற்றி

இதுவரை யாரும் தியா என்னும் கோளைப் பார்த்தில்லை.  தியா என்பது ஒரு கற்பனைக் கோள்.  தியா என்பது ஒரு கிரேக்க தேவதையின் பெயர்.  4.5 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு பரிதி மண்டல் கோள்கள் உண்டான போது தியாவும் தோன்றியதாகத் தெரிகிறது.  மோதுவதற்கு முன்பு தியா பூமியைப் போல், பூமிக்கு அருகிலே பரிதியைச் சுற்றி வந்தது.  தியாவின் கோள் அளவு செவ்வாய்க் கோளை ஒத்தது.  பூர்வீகக் கோள் தியா தோன்றைய போது அது பூமியின் (Lagrangian Points L4 or L5 Relative to Earth) சமகோணப் புள்ளிகளில் ஒன்றில் இருந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.  அதாவது பூமி சுற்றி வரும் பாதையில் பூமிக்கு 60 டிகிரி முன்னோ அல்லது 60 டிகிரி பின்னோ தியாவும் சுற்றி வந்திருக்க வேண்டும்.  ஏதோ ஒரு காரணத்தால் தியாவின் நிறை மீறிப் போனதால் சுற்று வீதி நிலைப்பாடு தவறிப் பாதிப்பானது !  அப்போது பூர்வீகப் பூமியின் மிகையான ஈர்ப்புச் சக்தியால் தியா இழுக்கப்பட்டு பூமியோடு மோதும் நிலை ஏற்பட்டது !

Fig 1C Earth & Moon Axes Tilts

வானியல் வாசகத்தில் அந்த தியா–பூமி மோதல் மிதமான வேகமாயினும், விளைவு அசுரத் தனமானது.  தியா பூமியை ஒரு கோண மூலையில் தாக்கி, அதன் இரும்பு உட்கரு பூமியின் வயிற்றுக்குள் பாய்ந்தது !  தியாவின் மேல்தட்டும் (Mantle) பூமியின் குறிப்பிடத் தக்கப் பகுதி மேல்தட்டும் சிதைந்து வெளியேறிப் பூமியைச் சுற்றத் துவங்கியது !  அந்தச் சிதைவுப் பிண்டமே ஒரு நூற்றாண்டுக்குள் உருண்டு திரண்டு நிலவானது என்று கருதப் படுகிறது.  கணினிப் போலிமாடல் (Computer Simulations) அமைப்பில் கண்டபடி 2% சிதைவுப் பிண்டம் தெறித்துப் போய்ச் சமகோணப் புள்ளியில் ஒரு வளையத்தில் குப்பையாய்ச் சுற்றிக் கொண்டிருக்கும் என்று அறியப் படுகிறது.  சிதைக்கப்பட்ட பாதி நிறைதான் நிலவாக உருவாகும் என்றும் போலிமாடலில் அறியப் படுகிறது.

Fig 1D Lagrangian Points

அப்போது பூமிக்குப் பேரளவு “கோண முடுக்கமும்” (Angular Momentum) நிறையும் (Mass) அளவு கூடுகின்றன என்பது தெரிய வருகிறது.  பூமி எந்த வேகத்தில் சுழன்றாலும், எந்த சாய்வில் சரிந்திருந்தாலும் மோதலுக்குப் பிறகு அதனுடைய நாள் நீட்சி 5 மணி நேரம் மிகையாகும் !  அத்துடன் பூமியின் மத்தியரேகை நிலவின் சுற்றுவீதி மட்டத்தை நோக்கி நெருங்கும் !  அந்த மோதலின் போது குறிப்பிடத் தக்க துண்டுகள் உண்டாகவும், அவை யாவும் சமகோணப் புள்ளிகளில் தங்கிக் கொள்ளும் வாய்ப்புக்கள் நேருகின்றன.  அத்தகைய மோதல் சிதைவுத் துணுக்குகள், மற்ற கோள்களால் சமநிலை தடுமாறிப் பாதிப்பு ஏற்பட வில்லை யென்றால் 100 மில்லியன் ஆண்டுகள் கூட அப்புள்ளிகளில் தங்கிக் கிடக்கும் என்று ஊகிக்கப் படுகிறது !

Fig 1E NASA's STEREO Probes

அப்பொல்லோ பயணத்தில் கிடைத்த ஒப்பில்லா மாதிரிகள்

1969-1970 ஆண்டுகளில் நிலவுக்குப் பயணம் செய்த பல்வேறு அப்பொல்லோ குறிப்பணிகளில் (Apollo Moon Missions) வானியல் விமானிகள் கொண்டுவந்த இரசாயன மாதிரிகள் நமது துணைக்கோள் நிலவைப் பற்றி மகத்தானப் புதுமைகளை வெளியிட்டன.  நிலாப் பாறைகளின் மாதிரிகளில் பூமியில் கிடைக்கும் “ஆக்ஸிஜென் ஏகமூலப் பொருட்கள்” (Oxygen Isotope Materials) போல் காணப் பட்டன.  அதாவது பூமியும், நிலவும் பரிதி மண்டலத்தின் ஒரே அரங்கப் பகுதியில் (Same Region of the Solar System) தோன்றையவை என்று நிரூபித்தன !  அத்துடன் நிலவிலும் பூமியைப் போல் உச்ச உஷ்ணத்தில் உருகும் ஆவியியல் மூலகங்கள் (Volatile Elemets that melt at high Temperatures) எதுவும் கிடையாது !  அவை இரண்டும் ஆதி காலத்தில் அதி உச்சநிலை உஷ்ணத்தில் வடிவானவை என்பது தெரிய வருகின்றன.

Fig 4 STEREO Twin Probes Looking at the Sun

வானியல் விஞ்ஞானிகள் நிலவின் இரசாயன மாதிரிகள் பூகோளத்தின் மேற்தளத் தட்டைப் போல் (Earth’s Mantle) ஒத்திருப்பதைக் கண்டறிந்தார்கள்.  ஆனால் தோன்றிய போது பூமியின் மேற்தளத் தட்டு மிகத் திண்மையான உலோகத்திலிருந்து உண்டானது.  தனித்துத் தோன்றிய நிலாவிலே எப்படி பூமியை ஒத்த உலோகவியல் தட்டுப் பொருட்களைக் கொண்டிருக்க முடியும் என்னும் கேள்வி எழுகிறது !  அப்பொல்லோ-11 வானியல் விமானிகள் கொண்டுவந்த வெள்ளைக் கூழாங்கற்களில் நூதனப் பாறை “அநார்த்தோசைட்” (Anorthosite) இருந்தது.  அப்பாறையில் பூமியில் தென்படும் சோடியம், கால்சியம் அலுமினியம் சிலிகேட் (Sodium & Calcium Aluminiuam Silicates) தாதுக்கள் இருந்தன.

Fig 3 STEREO Probe's Tools

நாசாவின் விண்வெளிக் காலநிலை விண்ணுளவி

நாசாவின் விண்வெளிக் காலநிலை விண்ணுளவி (NASA’s Space Weather Monitoring Spacecraft STEREO) இரட்டை உளவிகளைக் கொண்டு பரிதியின் பாண்பாடுகளை ஆராய 2006 அக்டோபர் மாதம் 25 ஆம் தேதி பூமியைச் சுற்றி வர அனுப்பப் பட்டது.  அது நாசாவின் மூன்றாவது திட்டமான பரிதி மண்டல உளவி (NASA’s Solar Terrestrial Probes) ஆராய்ச்சிகள்.  ஸ்டியரியோ திட்டம் எனக் கூறப்படும் அந்த ஆராய்ச்சியில் முப்பக்கப் பதிவு நோக்கி (3D Probing) சூரியனின் சூறாவளிப் புயல்களை (Anatomy of Solar Storms) உட்புற ஆய்வுகள் செய்யும்.  பரிதியின் தீக்கறைகளை (Sun Spots) ஆராயும் ! அத்துடன் அதன் ஆய்வுப் பணிகள் நிற்கவில்லை.  நாசா ஸ்டியரியோ இரட்டை உளவிகளைத் திசை திருப்பி சமகோணப் புள்ளிகளின் அரங்குகளை (Lagrangian Point Zones L4 & L5) உளவி மோதிச் சிதைந்து போன பூர்வீகக் கோள் தியாவின் சிந்திய 2% துணுக்குகளைத் தேடிச் செல்லும் !  தியாவின் அந்தத் துணுக்குகளை விண்ணுளவி கண்டு பிடித்தால் நிலவு எப்படித் தோன்றியது என்னும் பெரும் புதிர் விடுவிக்கப்படும் !

Fig 2 The Giant Impact Theory

நாசா சமகோணப் புள்ளித் தளங்களை சிதறிய முரண்கோள்களின் (Asteroids) ஈர்ப்புத் துணுக்குகள் இளைப்பாறும் களங்கள் (Gravitaional Parking Lots) என்று குறிப்பிடுகிறது.  முரண்கோள்களில் இருக்கும் பாறைத் துணுக்குகள் பூமி நிலவைப் போல் ஒரே மாதிரி மண்ணைக் கொண்டிருந்தால் தியா மோதல் கோட்பாடை நிரூபிப்பதாக நாங்கள் அறிவிப்போம் என்று கெய்ஸர் கூறுகிறார்.  மேலும் நாசாவின் அபொல்லோ விண்வெளித் தீரர்கள் எடுத்து வந்த பாறைகள் பூமியில் உள்ள பாறைகளைப் போன்ற ஆக்ஸிஜன் ஏகமூலக் கூட்டுக் கலவையை (Oxygen Isotope Compositions) ஒத்திருந்தன என்றும் அறியப்பட்டுள்ளது.

Fig 6 Earth Seen from the Moon

[தொடரும்]
+++++++++++++++++++
தகவல்கள்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. Physics for Poets By :  Robert March (1983)
9. Atlas of the Skies (2005)
10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
11 On the Moon By : Patrick Moore (January 2001)
12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40802271&format=html (நிலவு எப்படித் தோன்றியது ?)
13 Wikipedia – Inner Structure of the Moon [January 31, 2008]
14 Astronomical Society of the Pacific – Whait if the Moon Did not Exist ? By : Neil F. Comins, University of Maine (1996)
15 AstronomyCafe.net What Would Have Happened if the Earth Did not Have the Moon ?
16 Home Page. Natural World . Com – Formation of the Earth & The Moon, Tides & Gravity
17 Earth-Moon Dynamics Page – Would We have Had Evolution Without the Moon ? By : Dan Green B.Sc. (Hons).
18 Tides on Earth – The Recession of the Moon By : Tim Thompson (Matt Rosenberg http://geography.about.com/)
19 Scientific American – Without the Moon, Would There Be Life on Earth ? By : Bruce Dorminey (April 21, 2009)
20 Daily Galaxy -The Theia Hypothesis – New Evidence Emerges that Earth & the Moon Were Once the Same [July 5, 2008]
21 NASA Hunts for Remnants of an Ancient Planet (Theia) Near Earth (April 11, 2009)
22 Science Illustrated : The Lukiest Collision -New Findings The Moon’s Explosive Origins (Nov-Dec 2008]
23 NASA Probes Seeks Remnants of Lost Theia Planet By : Lewis Page (Apr 14, 2009)
24 NASA Report -NASA’s STEREO Spacecraft Reveals Anatomy of Solar Storms By : Laura Layton Heliophysics News Team (April 14, 2009)
25. Giant Impacy Hypothesis From Wikipedia (April 29, 2009)

******************

jayabarat@tnt21.com [May 7, 2009]

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! நிலவின் துணை இல்லாமல் பூமியில் நீடிக்குமா உயிரினம் ?

first-man-on-the-our-moon1

(கட்டுரை: 57)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


பொங்கிவரும் பெருநிலவு
இங்கில்லை என்றால்
பூமி பரிதிக்கு அப்பால்
தங்கி விடும் !
தட்ப, வெப்பம் மாறிவிடும் !
உயிரின மெல்லாம்
மங்கி விடும் !
நிலவில்லை யென்றால்
கடல் வீக்கம் ஏது ?
முடங்கிய
கடல் வெள்ளத்தைக்
குலுக்கிட அலை
ஏற்ற மில்லை ! இறக்க மில்லை !
காற்றின் இறக்கை
முறிந்து விடும் !
கடல் நீர் சுற்றியக்கம்
தடைப்படும் !
கடல் நீட்சியும் மீட்சியும்
நடைபெறா !
கடல் வெப்பம் சீர்ப்படாது
முடங்கும் !
காலநிலை மாறுபடும் !
சூழ்வெளி வேறுபடும் !
பயிரினம் பரிதவிக்கும் !
உயிரினம் பாதிக்கப் படும் !
பூமியின் சுயச்சுற்று தடைப்பட்டு
நாள் மணிக் கணக்கு
நீளமாகும் !
கருநிலவு பூமியை விட்டு
வருடந் தோறும்
அங்குலக் கணக்கில்
அப்பால் நகரும் !

“காலநிலை, காற்று, காரிகை, எதிர்பாராத செல்வீகம் (Fortune) – இவை யாவும் நிலவைப் போல் மாறிப் போய் விடுபவை !

பிரெஞ்ச் பழமொழி.

நம்மால் எட்டிப் பிடிக்க இயலாதபடி அல்லது நாம் கண்டுபிடிக்க முடியாதபடி எந்த ஒரு பொருளும் நம்மிடமிருந்து நீக்கப்பட வில்லை.

டெஸ்கார்டிஸ், பிரெஞ்ச் கணித மேதை (1596-1650)

fig-1-relative-sizes-of-earth-moon

பூகோளம் முதன்முதலில் தோன்றிய போது !

4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றிய போது பூர்வ பூமியானது எப்படி இருந்தது என்பதை அறிந்து கொள்வது கடினம் !  திரண்டு உருவான பூமியின் கனல்கட்டி எந்த வடிவத்தில் காணப் பட்டது என்பது யாருக்கும் தெரியாது !  கண்டங்கள் குளிர்ந்து எப்போது உண்டாயின, கடல் வெள்ளம் எப்போது குழியில் நிரம்பியது என்று எவரும்  அறியமாட்டார் !  படிப்படியாகப் படிந்த வாயு மண்டலம் எப்போது பூமிக்குக் குடை பிடிக்கத் தொடங்கியது என்பதை யார் கணிக்க முடியும் ?  புத்தம் புதியக் குழந்தை பூமியை செவ்வாய்க் கோள் அளவுள்ள ஓரண்டம் தாக்கிச் சிதைத்து முதன்முதல் 6 மணி அளவு நாளாய்த் (6 Hour Day) தன்னச்சில் வெகு வேகமாய்ச் சுற்ற வைத்தது !  சிதைந்த சதைப் பிண்டம் உருகிப் போய் ஒன்றாய்த் திரண்டு துணைக்கோள் நிலவு ஆனது.  சக்தி குன்றிய, நிறை குன்றிய, ஈர்ப்பாற்றல் குறைந்த நிலவு தன்னச்சில் சுழாது ஒருமுகம் காட்டிப் பூமியை வலம்வர ஆரம்பித்தது !  ஒரு சில ஆயிரம் ஆண்டுகள் கடந்து பூமி குளிர்ந்து உருகிய தளத்துடன், ஆவி பறக்கும் சூழ்வெளியில் உருண்டு திரண்டு ஒரு கோளானது.  700 மில்லியன் ஆண்டுகள் கழிந்து அதாவது சுமார் 3.8 பில்லியன் வருடத்துக்கு முன்பு முதன்முதல் உயிரினம் தோன்ற ஆரம்பித்தது.

fig-2-life-without-the-moon2

4 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமி தோன்றிய முதலே நீர்மயம் பூமியில் உண்டாகி விட்டது என்று ஒரு சில விஞ்ஞானிகள் கருதுகிறார்.  நிலவானது பூமியிலிருந்து சிதைக்கப்பட்டு அப்பால் தனியே சுற்ற ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட பெருங்குழியில் நீர் நிரம்பி கடல் உண்டாக ஏதுவானது.  ஆயினும் அப்போது பூமி வெட்ட வெளியாகத்தான் கிடந்தது.  நிலவு முதலில் 7300 மைல் தூரத்தில் சுற்ற ஆரம்பித்தது.  பிறகு நகர்ந்து இப்போதுள்ள தூரத்தில் பாதி அளவு (120,000 மைல்) தொலைவில் இருந்தது.  பூமியில் கடல் அலைகள் அதனால் பேரளவு உயரத்திலும், கொந்தளிப்பிலும் அடித்து வந்திருக்கின்றன.  கடல் நீட்சியால் (Tidal Bulge) பூமியின் “கோண முடுக்கம்” (Angular Momentum) தொடர்ந்து நிலவை ஆண்டுக்கு சுமார் 1.5 அங்குலம் (3.8 செ.மீ) அப்பால் நகர்த்தி வருகிறது !  பூமியின் நாட் கணக்கு நூறாண்டுக்குச் சுமார் 0.002 செகண்ட் நீள்கிறது !  தற்போதைய நிலவின் சராசரித் தூரம் பூமியிலிருந்து 235,000 மைல் (380,000 கி.மீ.).  பூமியின் வேகம் படிப்படியாகக் குறைந்து 6 மணி நாள் நீண்டு 24 மணி நாளாக மாறியது !

fig-5-sea-tides-in-12-hours1

பூமி இழக்கிறது ! நிலவு பெறுகிறது ! பூமி மெதுவாகிறது ! நிலவு விரைகிறது !

பூமியின் ஈர்ப்பியல் வல்லமை நிலவின் ஈர்ப்பியல் வலுவை விட 3000 மடங்கு மிகையானது.  மேலும் பூமியின் திணிவு நிறை நிலவைப் போல் 80 மடங்கு பெரியது.  பூமி சக்தியை இழக்கிறது. நிலவு சக்தியைப் பெறுகிறது !  பூமி கடல் நீட்சியோடு (Tidal Bulge) சுற்றும் போது அந்த வெள்ளம் கண்டங்களின் கரைத் தளம், நதிச் சங்கமம், வளைகுடாக்கள் ஆகியவற்றைச் சூடாக்கும் .  எதிர்ப்படும் இடையூறுகளை தகர்க்கும் !  அத்தகைய கடல் நீட்சியும், மீட்சியும் (Tidal Swelling & Ebbing) சக்தியை இழக்கும் போது பூமியில் “கடல் நீர் உராய்வு” (Tidal Friction) உண்டாகிறது.  அந்தப் பேரளவு நீர் மண்டலம் நீட்சி உண்டாக்கும் போது பூமியின் சுழற்சி சக்திக்குத் தடையாக முட்டுக் கட்டை (Applies Brake to Earth’s Rotational Energy) போடுகிறது !  அதாவது பூமியின் வேகத்தைத் தணிக்கிறது !  அதாவது பூமி ஒரு முறை தன்னச்சில் சுழல அதிக நேரத்தை எடுக்கிறது !  4 பில்லியன் ஆண்டுக்கு முன்பு பூமி தோன்றிய காலத்தில் அதன் நாள் மணிக் கணக்கு 6 மணி நேரமாக இருந்திருக்கிறது என்று விஞ்ஞானிகள் கணிக்கிறார்கள் !  அப்போது நிலவு பூமிக்கு மிக அருகில் சுமார் 7300 மைல் தூரத்தில் இருந்ததாகவும் அறியப் படுகிறது !  இந்தக் குன்றிய தூரத்துக்கும் குறைவாக நிலவு பூமியை நெருங்கி இருக்க முடியாது.  அவ்விதம் தூரம் குன்றினால் பூமி நிலவைத் தன்வசம் இழுத்துத் தகர்த்து விடும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள் !

fig-1a-earth-tides

படிப்படியாக பூமியின் ஈர்ப்புச் சக்தி குறைந்து தன்னச்சில் சுற்றும் அதன் வேகம் தணிகிறது.  பூமியின் ஆறு மணி நேர நாள் 4 பில்லியன் ஆண்டுகளில் நீண்டு இப்போது 24 மணி நேரமாக நீடித்துள்ளது !  இரண்டு பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பரிதி ஆண்டுக்கு 800 நாட்கள் என்று இருந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார் !  பூமி தன்னைத் தானே சுற்று வீதம் ஒரு நிலை இலக்கமில்லை !  பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த சூரிய கிரகணங்களை வானியல் நிபுணர்கள் துல்லியமாகச் சொல்லி இருப்பது வியப்பான கணிப்பே !  2.5 பில்லியன் ஆண்டுகட்கும் 650 மில்லியன் ஆண்டுகட்கும் இடைப்பட்ட காலத்தில் நிலவின் நகர்ச்சி ஆண்டுக்கு அரை அங்குலம் (1.27 செ.மீ.) வீதம் இருந்ததாகக் கணிக்கிடப் படுகிறது.  அந்த யுகங்களில் பூமிக்கு மிக அருகில் இருந்த நிலவு படிப்படியாகத் தள்ளப்பட்டு இதுவரை 235,000 மைல் தூரத்தில் நகர்ந்து பூமியைச் சுற்றி வருகிறது.  1970 ஆண்டுகளில் நாசாவின் அபொல்லோ விண்வெளித் தீரர்கள் நிலவிலே விட்டு வைத்த “மூன்று கோண மூலைக் கண்ணாடிகள்” மீது (Three-Cornered Mirrors Left on the Moon By the Apollo Astronauts) இப்போது லேஸர் ஒளிக்கதிரை அனுப்பித் துல்லியமாகச் சந்திரனின் நகர்ச்சியை [1.5 Inch per Year (3.8 cm per Year)] அளந்து வருகிறார் !

fig-1b-tidal-movements-on-earth

நிலவின் ஈர்ப்புக் கவர்ச்சி பூமியில் என்ன செய்கிறது ?

நிலவால் கடலில் ஏற்படும் நீர் மட்ட உயர்ச்சி தாழ்ச்சி ஆகிய இரண்டு நிகழ்ச்சிகளும் அனுதினமும் இயற்கையாக நேரும் கடல் வெள்ளத்தின் நீட்சி மீட்சி இயக்கங்கள் ஆகும் !  கடலின் நீட்சி பூமியின் ஒருபுறமும் கடலின் மீட்சி அல்லது தாழ்ச்சி பூமியின் எதிர்ப்புறமும் நிகழ்பவை.  அவை ரப்பர் பந்து போல் இழுப்புத் தன்மை உடையவை.  சந்திரனின் ஈர்ப்பு விசை இல்லை யென்றால் பூமியின் கடல் வெள்ளம் சுழற்சி அடையாமல் முடமாகி வெறும் பூமியோடு சுற்றி வரும்.  ஆனால் நிலவின் ஈர்ப்பு விசை கடலின் நீர் மண்டலத்தைத் தன்வசம் கவர்ந்துப் பிடித்து வைக்கிறது !  அவ்விதக் கடல் வெள்ள நீட்சி அடையும் போது ஒருவித “முறிப்பு நெம்புதலை” (Torque or Twisting Force) பூமி நிலவின் மீது உண்டாக்குகிறது !

பரிதி, நிலவு, பூமி ஆகிய மூன்றும் நேர்கோட்டில் உள்ள போது அவை நேர்முக நோக்கு ஈர்ப்பு விசையை மிகையாக்குகின்றன.  வசந்த காலத்தில் வரும் கடல் நீட்சி (Spring Tides) எல்லாப் பருவக் காலத்தையும் விட மிகையாக இருந்து வருகிறது !  நீள்வட்டத்தில் சுற்றும் நிலவு சிற்றாரத்தில் (Perigee) பூமிக்கு அருகில் உள்ள போது கடல் நீட்சி அதிகம்.  பிறகு பூமிக்கு அப்பால் நீளாரத்தில் (Apogee) நிலவு உள்ள போது கடல் நீட்சி குறைவு.

fig-1c-spring-tides

மேலும் சந்திரனின் ஈர்ப்பு விசை பூகோளத்தின் வாயுச் சூழ்வெளியைப் பாதிக்கிறது.  அது பூமியின் அடித்தட்டு நகற்சி (Plate Tectonics) இணைந்த மேற்தளக் கோளத்தையும் (Lithosphere – Topmost Layer of Earth along with the Crust) மாற்றுகிறது.  நமது பூகோளத்தின் அடித்தட்டு (crust) நிலவை நோக்கி அதன் ஈர்ப்பு விசையால் 12 அங்குலம் (30 செ.மீ) நீட்சி அடைகிறது

துணைக்கோள் நிலவால் பூமிக்கு ஏற்படும் பலாபலன்கள்

நிலவில்லாது போனால் கடலில் நீரோட்டம் முடக்கமாகி கடலியக்கம் தடைப்படும்.  அப்போது பேரளவு ஆக்ஸிஜன் வெளியாக்கும் ஆல்கே (Algae – Seaweeds) போன்ற கடற்களைகள் அழிந்து போகும்.  அதாவது சந்திரன் இல்லாவிட்டால் நாம் உண்ணும் உணவு சங்கிலி (Food Chain) பாதிக்கப்படும்.  நிலவின் அமைப்பு மனிதரைப் போன்ற பூமியின் உயிரினச் செம்மை விருத்திக்குப் பல்வேறு செழிப்பு முறைகளில் பாதிப்பு செய்தற்கே.  அவற்றில் முக்கியமானவை :

fig-1f-the-structure-of-earth

1.  4 பில்லியன் ஆண்டுகட்கு முன்னர் அதிர்ஷ்ட வசமாக செவ்வாய்க் கோள் அளவில் பூமியைத் தாக்கிய ஓரண்டம் சிதைத்து 99% திணிவு மிக்க இயற்கையான உயிரினத் தடை உண்டாக்கும் சூழ்வெளியை (Natural Primordial Life-Prohibiting Dense Atmosphere) அகற்றியது !  அதன் பின்னர் மிக மெல்லிய தெளிவான உயிரின வளர்ச்சிச் சூழ்வெளி (Relatively Thin Translucent-Clear Life-Permitting Atmosphere) தோன்றியது.  அதே சமயத்தில்தான் முதன்முதல் சந்திரன் துணைக்கோளும் பூமிக்கு உண்டானதாகக் கருதப்படுகிறது !

2.  அதே கொந்தளிப்புக் காலத்தில்தான் மிகையான மேற்பட்ட கதிர் வெப்பம் வீசும் யுரேனியம், தோரியம் மூலகங்கள் தோன்றி பூகோள உட்கரு செழிப்பாகத் துவங்கியது !  கதிரியக்க வெப்பம் அடித்தட்டுக் கண்ட நகர்ச்சியால் எழுந்த வாயுத் திடப் பொருட்களை சுற்றியக்கத்தால் (Recycling of Continents due to Plate Tectonics) பூமியிலிருந்து வெளியேற வழி வகுத்தது !  அதாவது அடித்தட்டு நகர்ச்சியில் ஒன்றின் மீது ஒன்று குதிரை ஏறிக் கரி கலந்த பொருட்கள் (Subduction of Carbonacious Materials) வெளியாகிக் காலம் செல்லச் செல்ல “சுக்கிரன் விளைவு” மாதிரி (Venus Effect of Global Warming over Time) பூகோளச் சூடேற்றத்தைப் படிப்படியாகத் தவிர்ப்பது.

fig-1e-earths-lithosphere1

3.  கடல் நீர்மட்டம் ஏறி இறங்கி கடல் வெள்ளத்தின் சுற்றோட்டத்தை அனுதினமும் நிகழ்த்தி கடல்நீர் முடமாவதைத் தடுப்பது.  அதன் விளைவு : மேலான மனித உயிர் வளர்ச்சிக்குத் தடையானவற்றை நீக்குவது.

4.  நிலவின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் கடல் நீட்சி தடை செய்வதால் (Tidal Braking) பூமியின் சுயச் சுழற்சி வேகம் தணிகிறது !  அதனால் பூகோளத்தில் உயிரினம் செம்மையாக விருத்தியாகச் சூழ்வெளி மிதமாகிறது. பூமியின் சுழற்சி வேகம் மிகையானால் உயிரினம் பாதிக்கப்படும் பயங்கரச் சூழ்வெளி உருவாக வழி ஏற்படும்.

5.  மேலும் பூமியின் சுற்றச்சு 23.4 டிகிரி பரிதிக்கு ஒப்பாகச் சரிந்திருக்க நிலவே நிலைப்பாடு செய்ய உதவுகிறது.  அதே சமயத்தில் யுரேனஸ் கோளின் அச்சு கட்டுப்பாடு இல்லாமல் சுற்றச்சு சுமார் 98 டிகிரி சாய்ந்து போய் உள்ளது.  அதாவது மிதமான பருவ நிலைக் காலம் பூமத்திய ரேகைப் பகுதிக்கு மேலும் கீழும் சுற்றியக்கம் பெற உயிரினங்களுக்கு வசதி உண்டாக்குகிறது.

fig-4-spring-tide-neap-tide

6.  உலகம் முழுவதிலும் நிலவின் அமைப்பே கடல் நீட்சிக்கு முக்கிய காரணமாக இருந்து வருகிறது.  நிலவு இல்லாவிட்டால் அலை ஏற்ற இறக்கங்கள் பேரளவில் மெலிந்து போய்விடும் !  நிலவில்லா விட்டால் பூமியின் சுழலச்சு தாறுமாறாக ஊஞ்சல் ஆடும் !  அந்த ஆட்டம் உஷ்ணக் கொந்தளிப்பையும் பெருத்த கால நிலை மாறுதல்களையும் உண்டாக்கும் !  பூமியில் சுமுகமாக வசித்த மனித இனங்கள் வசதியற்ற தட்ப வெப்பச் சூழ்வெளியில் தவிக்க நேரிடும் !

சூரிய மண்டலத்தில் நூதனப் படைப்புக் கோள் பூகோளம்

பிரபஞ்சக் காலாக்ஸிகளில் நாமறிந்த பால்மய வீதியின் பரிதி மண்டலத்தில் நாம் வசிக்கும் ஒரே ஒரு கோளில்தான் நூதனமாகப் பேரளவில் நீர்மயம் திரவ வடிவிலும், திடவ உருவிலும், ஆவியாகவும் (Liquid, Solid & Vapour) பல கோடி ஆண்டுகள் நீடித்து வருகிறது.  அதிலும் விந்தையாகப் பூமியின் பிரம்மாண்டன கடற்குழி எப்படி நீர்மயமாக நிரம்பியது என்பது புதிர்களில் ஒரு புதிராக உள்ளது !  அந்தக் கடல்நீர் எப்படி உப்புக் கலவை நீராகி உயிரினங்கள் எப்படித் தோன்றின என்பது மேலும் புதிராக உள்ளது !  பல மாதிரிச் சான்றுகளில் ஒத்திருக்கும் துணைக்கோள் நிலவு பூமியின் சேயாகக் கருதப்படுகிறது !  ஆனால் வாயு மண்டலமும், நீர் வளமும் தாய்க்கோளில் பெருவாரியாக இருக்கச் சேய்க் கோளில் ஏனப்படி இல்லாமல் போயின என்பதும் வியப்பாக இருக்கிறது !  பூமிக்கு ஒரே முகத்தை மட்டும் மில்லியன் ஆண்டுகளாய்க் காட்டிச் சுற்றிவரும் துணைக்கோள் நிலவு எப்படித் தோன்றியது என்பது உறுதியாக அறியப் பாடாமல் இன்னும் புதிரான ஒரு சிந்தனைக் கோட்பாடாகத்தான் உள்ளது.

fig-6-solar-eclipse-on-the-moon

[தொடரும்]

தகவல்கள்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Moon form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. Physics for Poets By :  Robert March (1983)
9. Atlas of the Skies (2005)
10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
11 On the Moon By : Patrick Moore (January 2001)
12 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40802271&format=html (நிலவு எப்படித் தோன்றியது ?)
13 Wikipedia – Inner Structure of the Moon [January 31, 2008]
14 Astronomical Society of the Pacific – Whait if the Moon Did not Exist ? By : Neil F. Comins, University of Maine (1996)
15 AstronomyCafe.net What Would Have Happened if the Earth Did not Have the Moon ?
16 Home Page. Natural World . Com – Formation of the Earth & The Moon, Tides & Gravity
17 Earth-Moon Dynamics Page – Would We have Had Evolution Without the Moon ? By : Dan Green B.Sc. (Hons).
18 Tides on Earth – The Recession of the Moon By : Tim Thompson (Matt Rosenberg http://geography.about.com/ )
19 Scientific American – Without the Moon, Would There Be Life on Earth ? By : Bruce Dorminey (April 21, 2009)

******************

jayabarat@tnt21.com [April 30, 2009]

அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !

(ஏப்ரல் 26, 1986)

சி. ஜெயபாரதன், கனடா


பேரழிவுப் போராயுதம் உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து விழுதற்றுப் போக,
விதையும் பழுதாக
ஹிரோஷிமா
எழில் நகரம் அழித்து
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும் அணுப் பேரிடியால்
நாசமாகி
மட்டமாக்கப் பட்டது!
திட்ட மின்றி
தென்னாலி ராமர்
சந்ததி
மூடர்கள் அணு உலையைச்
சூடாக்கி
வெடிப்புச் சோதனை
அரங்கேற்றி
நிர்வாண மானது,
செர்நோபில் அணு உலை !
சமாதி யானது
மரணித்த மனிதரோடு !

மாய்ந்தனர் மக்கள்,
மடிகிறார் !
மேலும் மரிப்பார் ! மரிப்பார் !
நாடு நகரம்
வீடு வயல்கள் எங்கும்
மூடின வெங்கதிர் வீச்சுகள்!
கட்டாய மாகப் பல்லாயிரம் பேர்,
கடத்தப் பட்டார்,
கைப்பையுடன்
கதிர்மழைப் பொழிவால்!
புற்று நோயும், இரத்த நோயும்
பற்றின பாலரை !
படுகிறார் வேதனை !
மன்னிக்க முடியாத,
மாபெரும்
மனிதத் தவறால் நேர்ந்த
முதல்
அணுயுகப் பிரளய
அரங்கேற்றம் !

the-boy-1

++++++++++++

[செர்நோபில் விபத்தின் (ஏப்ரல் 26, 1986) 20 ஆண்டுப்
பூர்த்தி நினைவில் எழுதப்பட்டது]

[S. Jayabarathan (April 26, 2010)] (R-1)

கணித மேதை ராமானுஜன்

cover-image-ramanujan.jpg

கணித மேதை ராமானுஜன்
(1887-1920)

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng. (Nuclear) Canada

https://www.youtube.com/watch?v=Haym-VKuvgohttps://www.youtube.com/watch?v=YykgE_z4-38

https://www.youtube.com/watch?v=Vn1UjvytVJI

https://www.youtube.com/watch?v=YykgE_z4-38

சுமார் 85 ஆண்டுகளுக்கு முன் தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒர் இந்தியக் கணித ஞானி, பை [PI] குறியின் மதிப்பைத் துல்லியமாய்க் கணக்கிட, நூதன முறையில் பல வழிகளை வகுத்தார். அவர்தான் கணித மேதை ராமானுஜன். பை [PI] என்பது வட்டத்தின் சுற்றளவை அதன் விட்டத்தால் வகுத்து வரும் ஓர் இலக்கம். அதைப் “பை” [Greek Letter PI] என்று கணிதத்தில் குறிப்பிடுவர். எந்த வட்டத்திலும் பை [PI] என்பது ஒரு நிலை இலக்கம் [Constant Number]. 1987 இல் பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாக 100 மில்லியன் தசமத்தில் கணக்கிடப் பட்டது. ஆனால் அதன் அடித்தள அணுகுமுறை யாவும் ராமானுஜன் 1915 இல் ஆக்கிய கணிதக் கோட்பாடுகள் மூலம் உருவானவை. அவர் அப்போது அணுகிய அந்த நுணுக்க முறைகள், இப்போது மின்கணணிப் பிணைப்பாடுத் தொடரில் [Computer Algorithms] சிக்கலான கணிதச் சிக்கல்களைத் தீர்க்கப் பயன்படுகின்றன.

1917 ஆம் ஆண்டு ராமானுஜத்துக்கு அவரது 30 ஆம் வயதில், இங்கிலாந்து F.R.S. [Fellow of Royal Society] விருதை அளித்தது.  அதே சமயம் ராமானுஜன் இங்கிலாந்தில் டிரினிடி கல்லூரி ஃபெல்லோ [Fellow of Trinity College] என்னும் கௌரவத்தையும் பெற்றார்.  பிரிட்டனுடைய இவ்விரு பெரும் பட்டத்தையும் முதன்முதல் பெற்ற இந்தியர் இவர் ஒருவரே.  உலக மகாக் கணித மேதைகளான லியனார்டு யூளார் [Leonhard Euler], கார்ல் ஜெகொபி [Karl Jacobi], வரிசையில் இணையான தகுதி இடத்தைப் பெறுபவர், இந்திய ராமானுஜன்! அவர் கற்ற எளிய கல்வியின் தரத்தைப் பார்த்தால், கணித மேதை ராமானுஜத்தின் திறனைக் கண்டு எவரும் பிரமித்துபோய் விடுவார்!

fig-3-ramanujans-home

ராமானுஜன் தமிழ் நாட்டில் 1887 டிசம்பர் 22 நாள் ஒர் ஏழை அந்தணர் வகுப்பில் பிறந்தார். பிறந்த ஊர் ஈரோடு. படித்ததும், வளர்ந்ததும் கும்பகோணத்திலே. தந்தையார் ஒரு துணிக்கடையில் கணக்கு எழுதுபவர். கலைமகள் கணித ஞானத்தை அருளியது, ராமானுஜன் சிறுவனாக இருந்த போதே தென்பட்டது. அபூர்வமான தெய்வீக அருள் பெற்ற “ஞானச் சிறுவன்” [Child Prodigy] ராமானுஜன். அவரது அபாரக் கணிதத் திறனைச் சிறு வயதிலேயே பலர் கண்டு வியப்படைந்தார்கள். ஏழு வயதிலே உதவிநிதி பெற்று, ராமானுஜன் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார்! அப்போதே பள்ளித் தோழரிடம் கணித இணைப்பாடு [Formulae] பலவற்றை, மனப்பாடம் செய்து ஒப்பிவித்து அவரை வியக்க வைத்தாராம்! “பை” இன் மதிப்பை [3.14] பல தசமத்தில் மாணவர்களிடம் பள்ளியில் தெளிவாகச் சொல்லி யிருக்கிறார் அந்த இளமை வயதிலே, ராமானுஜன்.

பன்னிரண்டாம் வயதில் “லோனியின் மட்டத் திரிகோணவியல்” கணித நூலில் [Loney’s Plane Trigonometry] கணிதக் கோட்பாடுகளைத் தானே கற்று ராமானுஜன் தேர்ச்சி அடைந்தார். முடிவில்லாச் சீரணியின் தொகுப்பு, அதன் பெருக்கம் [Sum & Products of Infinite Sequences] பற்றிய விளக்கத்தை அறிந்தார். அவரது பிற்காலக் கணிதப் படைப்புகளுக்கு அவை பெரிதும் பயன்பட்டன. முடிவில்லாச் சீரணி என்பது எளிய இணைப்பாடு ஒன்று [Formula], உருவாக்கும் முடிவற்ற தொடர் இலக்கம். அத்தொடரோடு வேறோர் எண்ணைக் கூட்டியோ, பெருக்கியோ, முடிவற்ற சீரணியை முடிவுள்ள சீரணியாக மாற்றி விடலாம்.

பதினைந்தாம் வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கணித வல்லுநர், கார் [G.S.Carr] தொகுத்த “தூய கணித அடிப்படை விளைவுகளின் சுருக்கம்” [Synopsis of Elementary Results in Pure Mathematics] என்னும் நூலைக் கடன் வாங்கி, சுமார் 6000 கணித மெய்ப்பாடுகளை [Theorems] ஆழ்ந்து கற்றுக் கொண்டார்.  இந்த இரண்டு கணித நூல்களின் பயிற்சிதான் ராமானுஜன் முழுமையாகக் கற்றுக் கொண்டது.  அவைகளே அவரது பிற்கால அபாரக் கணிதப் படைப்புகளுக்கு அடிப்படையாய் அமைந்தன.

fig-2-ramanujan-notes

1903 ஆம் ஆண்டில் பதினாறு வயதில் கும்பகோணம் அரசினர் கல்லூரியில் ராமானுஜன் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரது முழு மனதும் கணிதம் ஒன்றிலே ஆழ்ந்து விட்டதால், மற்ற பாடங்களில் கவனம் செல்லாது, அவர் கல்லூரித் தேர்வில் தோல்வியுற்றார். இதே ஒழுங்கில் படித்து, நான்கு வருடங்கள் கழித்துச் சேர்ந்த சென்னைக் கல்லூரியிலும் முடிவில் தோல்வியடைந்தார். 1909 இல் ராமானுஜன் திருமணம் செய்த கொண்டபின், தற்காலியமாய்த் தன் கணிதப் பித்தை ஒதுக்கி வைத்தி விட்டு, வயிற்றுப் பிழைப்புக்காகச் சென்னையில் ஒரு வேலையைத் தேடினார்.

கணிதத்தை ஆதரிக்கும் செல்வந்தர் ஆர்.. ராமச்சந்திர ராவ், அனுதாப முடைய கணித வல்லுநர் பலரது உறுதியான சிபாரிசின் பேரில், 1910 இல் ராமானுஜத்துக்கு கணிதத் துறையில் பணிபுரிய, ஓரளவுத் தொகையை உபகாரச் சம்பளமாக மாதா மாதம் அளிக்க முன்வந்தார். 1911 இல் ராமானுஜத்தின் முதல் பதிவு கணிதப் படைப்புகள், இந்திய கணிதக் குழுவின் வெளியீட்டில் [Journal of the Indian Mathematical Society] வெளிவந்தன.

மேலும் தனியாக வேலை செய்ய விரும்பி 1912 இல், ராமானுஜம் சென்னைத் துறைமுக நிறுனத்தில் எழுத்தராக [Madras Port Trust Clerk] அமைந்தார். நிறுவனத்தின் மேலதிபர் பிரிட்டீஷ் எஞ்சினியர், ஸர் பிரான்ஸிஸ் ஸ்பிரிங். அதை மேற்பார்க்கும் மானேஜர், இந்திய கணிதக் குழுவை [Indian Mathematical Society] நிர்மாணித்த பிரபல வி. ராமசுவாமி ஐயர். இருவரும் ராமானுஜத்தின் கணித ஞானத்தைப் பாராட்டி, அவரது கணிதப் படைப்புக்களை, இங்கிலாந்தில் மூன்று முக்கிய பிரிட்டீஷ் கணித வல்லுநர்களுக்கு அனுப்பித் தொடர்பு கொள்ள ஊக்கம் அளித்தார்கள்.  அவர்களில் இருவர் பதில் போடவில்லை. ஒருவர் மட்டும் பதில் அனுப்பினார்!  அவர்தான், அக்காலத்தில் புகழ்பெற்ற பிரிட்டீஷ் கணித நிபுணர், G.H. ஹார்டி.

fig-1-men-behind-ramanujan

ராமானுஜத்தின் கத்தையான கடிதம் ஹார்டியின் கையில் கிடைத்த 1913 ஜனவரி 16 ஆம் தேதி, ஒரு முக்கிய தினம்!  அன்றுதான் அதிர்ஷ்ட தேவதை தன் அருட் கண்களைத் திறந்து ராமானுஜத்துக்கு ஆசிமழை பொழிந்தாள்! முதலில் மேலாகப் பார்த்து விட்டு, ஏதோ ஒரு பைத்தியம் எழுதியதாக எண்ணிக் கடிதக் கட்டை ஒதுக்கி வைத்தார் ஹார்டி. டின்னருக்குப் பிறகு இரவில் பொறுமையாக அவரும், அவரது நெருங்கிய கணித ஞானி, ஜான் லிட்டில்வுட்டும் [John E. Littlewood],  புதிர்களைப் போல் காணும் ராமானுஜத்தின் நூதனமான 120 கணித இணைப்பாடுகளையும், [Formulae] கணித மெய்ப்பாடுகளையும் [Theorems] மெதுவாகப் புரட்டிப் பார்த்துப் பொறுமையாக ஆழ்ந்து படித்தார்கள்.  சில மணி நேரம் கழித்து, பிரமித்துப் போன இருவரும் ஒரு முடிவான தீர்மானத்துக்கு வந்தனர். நிச்சயம் அவர்கள் காண்பது ஒரு மகா மேதையின் உன்னதக் கணிதப் படைப்புகள்.  ஒரு பைத்தியகாரனின் முறை கெட்ட கிறுக்கல் அல்ல அவை என்று வியப்படைந்தார்கள்!

ஹார்டி உடனே ராமானுஜத்தை கேம்பிரிட்ஜ் வரும்படிக் கடிதம் எழுதி அழைப்பு விடுத்தார். சென்னைப் பல்கலைக் கழகமும் [University of Madras], இங்கிலாந்து கேம்பிரிட்ஜ், டிரினிடிக் கல்லூரியும் அவருக்கு உதவிநிதி கொடுக்க முன்வந்தன. 1914 ம் ஆண்டு மார்ச் மாதம், தாயின் பலத்த எதிர்ப்பைத் தள்ளியும், தன் கொள்கையை விட்டுக் கொடுத்தும், ராமானுஜன் இங்கிலாந்துக்குப் புறப்படக் கப்பலேறினார்.

fig-a-ramanujan-award

அடுத்த ஐந்து ஆண்டுகள் ஹார்டியும், ராமானுஜமும் டிரினிடிக் கல்லூரியில் [Trinity College] ஒன்றாகக் கணிதத் துறை ஆக்கப் பணியில் ஈடுபட்டார்கள். ஹார்டியின் சீரிய பொறி நுணுக்கமும், ராமானுஜத்தின் நூதன கணித ஞானமும் இணையாகப் பொருந்தி, ஒப்பற்ற உடன்பாடு நிலவி, கணித மெய்ப்பாடுகள் பல உருவாகின. இருவரும் கணிதச் சீர்ப்பாடுகள் [Arithmatic Functions] பலவற்றை ஆங்கில, ஈரோப்பிய விஞ்ஞானப் பதிவுகளில் வெளியிட்டார்கள். அவற்றில் ரெய்மன் சீரினம் [Riemann Series], நீள்வட்ட முழு இலக்கங்கள் [Elliptical Integrals], உயர் ஜியாமெட்ரிச் சீரினம் [Hyper Geometric Series], ஜீட்டா சீர்ப்பாடுகளின் இயக்கச் சமன்பாடுகள் [Fuctional Equations of Zeta Functions],  ராமானுஜன் தனியாக ஆக்கிய விரியும் சீரினங்கள் [Divergent Series] ஆகியவை கணிதத் துறையில் குறிப்பிடத் தக்கவை. அவை பின்வரும் வினாக்களுக்குப் பதில் அளிக்க அடிப்படைத் தளமாய் அமைந்தன. எடுத்துக் கொண்ட ஓர் இலக்கம், எத்தனை “பிரதம வகுப்பினம்” [Prime Divisors] கொள்ளலாம் ? எத்தனை முறைகளில் ஓர் எண்ணை, அதற்கும் சிறிய “நேரியல் முழு இலக்கங்கள்” [Positive Integers] பலவற்றின் தொகையாகக் குறிப்பிடலாம் ?

தெய்வீக ஞானசக்தி மூலம் தான் கணித்த மெய்ப்பாடுகள் எதிர்காலத்தில் மின்கணணிகளுக்குப் [Computers] பயன்படப் போகின்றன என்று ராமானுஜன் எதிர்பார்த்திருக்க மாட்டார்! சமீபத்தில் அவரது கணிதக் களஞ்சியங்களிலிருந்து தோண்டி எடுத்ததுதான், பை [PI] இன் மதிப்பீடு காணும் அவரது நூதன அணுகு முறை! ராமானுஜத்தின் கணிதத் தீர்வு முறை மற்றவர் ஆக்கிய முறைகளைப் போல் விரியாமல், அதி விரைவில் குவிந்து, பை [PI] இன் மதிப்பைத் துள்ளியமாய்த் தருகிறது!

ராமானுஜத்தின் படைப்புகள் யாவும் அவரது “குறிப்பு நூலில்” [Notebooks] அடங்கி யுள்ளன. பல மெய்ப்பாடுகள் வழக்கமான நிரூபணம் இல்லாமல் எழுதப்பட்டுள்ளன. மற்றும் அவரது குறிப்பு நூலில் “முழுமைப்பாடுகள்” [Integrals], முடிவில்லாச் சீரினங்கள் [Infinite Series], தொடர்ப் பின்னங்கள் [Continued Fractions] போன்றவை விளக்கப் படுகின்றன. கணிதத் துறையினர் இன்னும் அவரது கணித மேன்மையின் முழுத் தகுதியையும் அறிய வில்லை! அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக் கழகத்தின் [University of Illinois] கணித வல்லுநர், புரூஸ் பெர்ன்ட் [Bruce C. Berndt] ராமானுஜத்தின் கணிதக் குறிப்பு நூலைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பை மேற்கொண்டுள்ளார். அதற்குப் பிறகுதான், ராமானுஜத்தின் நூதனக் கணிதப் பணிகள் யாவும் கணிதத் துறையினர் கையாளப் பயன்படும்.

fig-b-ramanujan-award-for-sujatha-ramdorai

பின்னால் ஒரு முறை ராமானுஜத்தின் கணித மேன்மையை இலக்க ரீதியில் ஒப்பிட்டு ஹார்டி கூறியது; ராமானுஜத்தின் திறனுக்குத் தகுதி மதிப்பு 100 அளித்தால், லிட்டில்வுட்டுக்கு 30, தனக்கு 25 மட்டுமே! அப்போதைய ஜெர்மன் மகா கணித மேதை, டேவிட் ஹில்பெர்டின் [David Hilbert] தகுதி மதிப்பு 80! ராமானுஜன் அனுப்பிய கணித மெய்ப்பாடுகள், அவற்றின் விளைவுகள், அவரது கணிதக் கூட்டுழைப்பு, யாவும் தன் வாழ்க்கையில் நிகழ்ந்த ஓரினிய கவர்ச்சிச் சம்பவமாக எண்ணி ஹார்டி களிப்படைகிறார். ராமானுஜத்துக்கு காஸி மெய்ப்பாடு [Cauchy Theorem], இரட்டை நொடிச் சீர்ப்பாடுகள் [Doubly Periodic Functions] போன்ற மற்ற கணிதத் துறை அறிவில் எந்தவித ஞானமும் இல்லை! “இவற்றை எப்படி அவருக்குக் கற்றுக் கொடுப்பது” என்று மலைப்படைந்தார், ஹார்டி! ராமானுஜத்தின் கணிதப் படைப்புகள் யாவும் மெய்யானவை என்றும், அவரது கணித மெய்ப்பாடுகள் தன்னைப் பிரமிக்க வைத்து முற்றிலும் வென்று விட்டதாகவும், ஹார்டி கருதுகிறார். அவை யாவும் பொய்யானவையாக இருந்தால், ஒரு மேதை தன் கற்பனையில் அவற்றை உருவாக்கி யிருக்க முடியாது, என்றும் கூறுகிறார்!

1917 ஆம் ஆண்டில் ராமானுஜன் லண்டன் F.R.S. [Fellow of Royal Society] விருதையும், டிரினிடி கல்லூரியின்  ஃபெல்லோஷிப் [Fellow of Trinity College] விருதையும் ஒன்றாகப் பெற்றுப் புகழடைந்தார். அரும்பெரும் இந்த இரண்டு கௌரவப் பட்டங்களை முதன்முதலில் முப்பது வயதில் பெற்ற இந்தியன் ராமானுஜன் ஒருவரே!  ஆனால் அவரது சீரும், சிறப்பும் உன்னதம் அடைந்து மேல் நோக்கிப் போகையில், அவரது உடல் ஆரோக்கியம் அவரைக் கீழ் நோக்கித் தள்ளியது! வேனிற் காலநிலைப் பூமியில் வாழ்ந்த ராமானுஜனுக்கு, ஈரம் நிரம்பிய குளிர்ச்சித் தளமான இங்கிலாந்து உடற்கேடைத் தந்தது!  முதல் உலக மகா யுத்தத்தின் நடுவில், இங்கிலாந்து உழன்று கொண்டிருக்கும் தருவாயில், அளவான காய்கறி உணவை மட்டும் கட்டுப்பாடோடு உண்டு வந்ததால், அது வேறு அவர் உடல் பலவீனத்தை அதிக மாக்கியது. ராமானுஜத்தைப் பயங்கரக் காசநோய் [Tuberculosis] பற்றி வீரியமோடு தாக்கியது!  அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் கூட காசநோயிக்குப் போதிய மருந்தில்லை! அடிக்கடி சானடோரியத்துக்கு [Sanatorium] ராமானுஜன் போக வேண்டிய தாயிற்று.  அப்படிப் போய்க் கொண்டிருந்தாலும், அவரது புதியக் கணிதப் படைப்புகள் பேரளவில் பெருகிக் கொண்டுதான் இருந்தன!

sujatha-ramadorai-at-tifr5

1919 ஆம் ஆண்டில் போர் நின்று அமைதி நிலவிய போது, நோய் முற்றி இங்கிலாந்தில் வாழ முடியாது, ராமானுஜன் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. அந்தக் காலத்தில் காசநோயைக் குணப்படுத்தச் சரியான மருந்து கண்டு பிடிக்கப் படவில்லை! நோயின் உக்கிரம் கூட அவரது கணிதப் பணியை எள்ளவும் குறைக்க வில்லை! தனது 32 ம் வயதில், இந்தியக் “கணிதச் சுடர்விழி” [Maths Icon] ராமானுஜன், 1920 ஏப்ரல் 26 ம் நாள் இந்த மண்ணுலகை விட்டு விண்ணுலகுக்கு ஏகினார்.  உயிர் நழுவிச் செல்லும் கடைசி வேளை வரை அவர் கணிதத் துறைக்குப் புத்துயிர் அளித்ததை, இன்றும் அவரது இறுதிக் குறிப்பு நூல்கள் காட்டுகின்றன.

ஆயுள் முழுவதையும் கணிதப் பணிக்கு அர்ப்பணம் செய்து, வாலிப வயதிலே மறைந்த, ராமானுஜத்தின் அரிய சாதனைகளுக்கு ஈடும், இணையும் இல்லை என்று, அவர் பிறந்த தமிழகம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம்! கணிதப் பூங்காவில் அவர் ஊன்றிய விதைகள் பல, ஆல மரமாய் எழுந்து விழுதுகள் பெருகிப் பல்லாண்டு காலம், பயன் அடையப் போகிறது, கணித உலகம்! ராமானுஜன் கற்றது கடுகளவு! கணித்தது உலகளவு! என்று சொன்னால், அப்புகழ்ச்சி சற்றும் அவருக்கு மிகையாகாது!

+++++++++++++++++++++++

1. https://youtu.be/Vn1UjvytVJI

2. https://www.youtube.com/watch?v=yvHrn-41XMU

3. https://www.youtube.com/watch?v=Haym-VKuvgo

4. https://www.youtube.com/watch?v=YykgE_z4-38

5. http://www.nytimes.com/2016/04/29/movies/the-man-who-knew-infinity-review.html?_r=0

6. https://www.insidescience.org/content/mathematicians-and-man-who-knew-infinity/3926

7. http://deadline.com/2016/04/the-man-who-knew-infinity-review-dev-patel-jeremy-irons-video-1201743949/

8. https://youtu.be/p-mYDAN_jL4

++++++++++++++++++

ஆதாரங்கள்

1. Scientific American (1988)

2. http://en.wikipedia.org/wiki/Srinivasa_Ramanujan

3. http://www.gap-system.org/~history/Biographies/Ramanujan.html (Biography of Ramanujan)

*********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com (April 21, 2009)] [Revised R-1]

2 Comments

  1. நான் ரொம்ப காலத்திற்கு முன்னர், இதைப் பற்றி எழுதியது நினைவில் வருகிறது.

    மற்றபடிக்கு இந்தப் பதிவு பற்றி இப்போதைக்குச் சொல்ல எதுவுமில்லை.

  2. 2
    Natkeeran Says:

    Hello Jayabarathan S:

    I have read many of your articles. You deal with technical subjects at depth that is not yet common in Tamil. You are a pioneer in Tamil technical writing.

    I am assuming you are aware of Tamil Wikipedia project and its noble aims. If you can join us and contribute, that would be of tremendous boost to the project. There are many writers who are eager to contribute, but have technical barriers. But, I think you can directly contribute and provide valuable input to the overall project. Please consider the request. Thank you very much.

    Regards,
    Natkeeran

சீதாயணம் (முழு நாடகம்)

சீதாயணம் (முழு நாடகம்)

சி. ஜெயபாரதன், கனடா

அன்புள்ள நண்பர்களே,

“சீதாயணம்” என்னும் எனது ஓரங்க நாடகத்தைத் தமிழ்கூறும் வலை உலகம் படித்தறிந்திடச் சமர்ப்பணம் செய்கிறேன். இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான், சுக்ரீவன் போன்ற அனைவரும் மனிதராகக் காட்டப் படுகிறார்கள். இராம பிரானைத் தேவ அவதாரமாகக் கருதும் அன்பர்கள் என்னை மன்னிக்க வேண்டும். வால்மீகி முனிவருக்கு ஆசிரமத்தில் தன் முழுத் துன்பக் கதையைச் சொல்லி, கணவனால் புறக்கணிக்கப்பட்டு இறுதியில் தன் உயிரைப் போக்கிக் கொண்ட சீதாவின் பரிதாபச் சம்பவம் இது.

அன்புடன்,
ஜெயபாரதன், கனடா

+++++++++++++

தீண்டப்படாத சீதா

~ சீதாயணம் ~


(ஓரங்க நாடகம்)

சி. ஜெயபாரதன், கனடா

முகவுரை: வாசகர்களே! இதை ஒரு கற்பனை நாடகமெனக் கருத வேண்டாம். இராமகதையில் மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளைப் பின்னி நெய்த ஒரு நாடகமிது. நாடகத் தொடுப்புக்காக நிகழ்ச்சிகள் முன்னும் பின்னும் மாற்றப்பட்டு வசனங்கள் புதியதாய்ச் சேர்க்கப்பட்டுள்ளன. மனிதர் நெஞ்சைக் கீறும் சீதையின் இறுதிக் காலப் பேரவலத்தைக் கூறுகிறது எனது சீதாயணம். இராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால், பலரால், பலமுறை மாற்றப்பட்டு, தெய்வீக முலாம் பூசப்பட்டு பொய்க் கதையாய் மங்கிப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச்செருகல் நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் [Corrupted Manuscript] என்று அரசியல் ஆன்மீக மேதை இராஜ கோபாலாச் சாரியார் கூறுகிறார். வால்மீகி இராமாயணத்தை ஒன்பதாம் நூற்றாண்டிலே இந்திய மொழிகளில் முதன்முதலாகத் தமிழில் எழுதிப் பெருமை தந்தவர் கவிச்சக்ரவர்த்தி கம்பன்.

கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று மாற்றியுள்ளதாக இராஜாஜி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் தன் நூலில் இராஜாஜி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன் இராமனின் அவதாரப் பணி முடிந்துவிட்டது என்று சொல்கிறார். அயோத்திய புரியில் பட்டம் சூடிய இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுகிறார். சீதா பெற்ற துயர்களைப் போல இன்றும் நம் நாட்டுப் பெண்டிரில் பலர் இன்னல் அடைந்து வருகிறார்கள்.

உத்தரகாண்டத்தில் நளின மிருந்தாலும், சீதாவின் புனிதத்தை இராமனுக்கு நிரூபிக்க, இராமகதையில் வால்மீகி அக்கினிப் பரீட்சை வைப்பதாகக் காட்டுகிறார். ஆனால் அதுவும் இராமனின் பண்பு நெறிக்கு உடன்பாடாக வில்லை. உத்தர காண்டத்தைப் படிக்கும் போது மனம் மிகவும் வேதனைப் பட்டது என்று பின்னுரையில் [Epilogue] இராஜாஜி மனமுடைகிறார் (1). சீதையை இராமன் காட்டுக்கு அனுப்பும் உத்திர காண்ட அதிர்ச்சிக் காட்சியை நான் இராம கதையின் உச்சக் கட்டமாகக் கருதுகிறேன். தனித்து விடப்பட்ட சீதை குழந்தைகள் பிறந்த பிறகு மீண்டும் ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு மரணம் அடைவது இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் உன்னத துன்பியல் வரலாறு என்பது என் கருத்து! இலங்காபுரியில் போரிட்டு சீதாவை மீட்ட காட்சியை நான் இராமகதையின் உச்சக் கட்டமாக எடுத்துக் கொள்ளவில்லை!

உண்மைக் கதையைத் திரித்து ஒருவனை இறைவன் அவதாரம் என்பதும், மற்றொருவனுக்குப் பத்துத் தலைகளை மாட்டி வைப்பதும், தென்னாட்டு மாந்தரில் சிலரை வானரங்களாகச் சித்தரிப்பதும் 21 ஆம் நூற்றாண்டில் கற்பனைக் கதையாகக் கூட கருதப்படாது! சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்குக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாயிரம் பாடி வணங்கி வருகிறது. காட்டுக்குத் துரத்தப்பட்ட கர்ப்பவதி சீதா, இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்று, வால்மீகி ஆசிரமத்தில் வாழ்ந்து இறுதியில் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் பாரத நாடு இராமனும் சீதாவும் இல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத தம்பதிகளாய்க் காட்டித் தொழுது வருகிறது! தெய்வ அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிடனாக மன்னனாக மீண்டும் மாற்றி என் சீதாயணம் எழுதப்படுகிறது! இது வால்மீகி இராமாயணம் அன்று! இதில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மாய மந்திர வித்தைகள் கிடையா! இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான் யாவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப்படுகிறார்கள்! விஷ்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை! பத்துத் தலை கொண்ட இராட்சதனாக இராவணன் இங்கே கூறப்பட வில்லை! தென்னாட்டுப் பிறவிகளான அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோர் குரங்கு முகமும், வாலும் கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மானிடர்களாக உலவி வருகிறார்கள்.

அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் கருத்து. பின்னால் அவரது சீடர்களோ அல்லது வேறு முனிவர்களோ மூலக் கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் வருடத்துக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்றுப் பேசும் குரங்குகள் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் எந்தச் சான்றுகளும் இல்லை! இராமன் காலத்தில் வாழ்ந்த அசுரர், இராட்சதர் போல் இன்றும் நாம் பயங்கரக் கொலைகாரரைக் காண்கிறோம். ஆறு மில்லியன் யூதர்களைக் கொன்று புதைத்த அடால்ஃப் கிட்லர், விஷ வாயுவிலும் மற்ற வழிகளிலும் பல்லாயிரம் பேரைக் கொன்று குழியில் மூடிய சடாம் ஹுசேன் போன்ற அரக்க வர்க்கத்தினர் உலகில் ஒவ்வொரு யுகத்திலும் பிறந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அந்த அரக்கர் அனைவரும் முழுக்க முழுக்க மனித உருக் கொண்டவரே! யாருக்கும் பத்துத் தலைகளோ, கொடிய தோற்றமோ, வெளியில் நீட்டிய பற்களோ கிடையா! வால்மீகி இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி வித்தைகள், மாய மந்திரங்கள், பத்துத் தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர வால்கள் ஆகியவற்றை வடிகட்டி, முக்கிய கதா நபர்களை மனிதராக கருதிக் கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சிகளாக மாற்றினால் இராம கதை இனியதாய் சுவைக்கக் கூடிய, நம்பக்கூடிய ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று எழுகிறது.

உயிரின மலர்ச்சி விஞ்ஞான மேதை சார்லஸ் டார்வின் நியதியைப் பின்பற்றி, இராமர் காலத்தில் வாழ்ந்திருந்தோரை மனிதப் பிறவிகளாகக் காட்டிச் சீதாவின் இரண்டாம் வனவாச சோக வரலாற்றை ஒரு நாடகமாகத் தமிழ் உலகுக்குக் காட்ட விழைகிறேன். இந்நாடகத்தில் வரும் முக்கிய நிகழ்ச்சிகள் வால்மீகி இராமாயணத்தில் காணப்பட்ட மெய்யான சம்பவங்களே! ஆனால் இந்த நாடகத்தின் கதாநாயகி சீதா! சீதாவின் மரணத்துக்கு முக்கிய காரணமான அவள் கணவன் இராமன் இங்கு கதாநாயகனாகக் கருதப் படவில்லை. வாழையடி வாழையாக இராமனைக் கடவுளாக வழிபட்டு வருபவரைப் புண்படுத்துவது இந்நாடகத்தின் குறிக்கோள் அன்று! இராமனை மனிதனாகக் காட்டியதற்கு, இராம பக்தர்கள் என்னை மன்னிக்க வேண்டும். இராமகதையில் அவதாரக் கடவுளாக இராமனை மாற்றியது சரியா அல்லது தவறா என்னும் வாதப் போருக்கு நான் வரப் போவதில்லை! மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமைபோல், அவனைக் கீழிறக்கி மீண்டும் மனிதனாய்க் கொண்டுவர எனக்கும் உரிமை உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுத ஆரம்பித்தேன்.

லவா, குசா சீதைக்குப் பிறந்து இளஞர்களாய் ஆனபின் அரண்மனைக்கு விஜயம் செய்து இராமனுடன் உரையாடியதாக ஒரு வரலாறு உள்ளது! வேறொன்றில் அசுவமேத யாகத்தின் போது லவா, குசா இருவரும் குதிரையைப் பிடித்து இலட்சுமனன், சத்துருகனன், பரதன் ஆகியோரோடு வில் போரிட்டதாக கூறப்படுகிறது. இரண்டு சம்பவங்களும் மெய்யாக நடந்தனவா அல்லது இவற்றில் ஒன்று மட்டும் நிகழ்ந்ததா என்பது தெளிவாகத் தெரியவில்லை. இரண்டு நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நேர்ந்திருந்தால், எது முதலில் நடந்தது, எது பின்னால் நடந்தது என்பதும் இராம கதையில் அறிய முடியவில்லை. அதனால் லவா, குசா முதன்முதலில் இராமனைச் சந்தித்தது அரண்மனையிலா அல்லது அசுமமேதப் போரிலா என்னும் குழப்பம் பல வெளியீடுகளைப் படிக்கும் போது எனக்கு ஏற்பட்டது. இந்த நாடகத்துக்காக அசுவமேத யாகத்தை எடுத்துக் கொண்டு, அரண்மனையில் லவா, குசா இராமனைச் சந்தித்த சம்பவத்தை நான் விட்டுவிட வேண்டியதாயிற்று.

ஆசிரமத்தில் இருந்த சீதா தன் கதையை நேராகச் சொல்லியதாலும், வால்மீகி லவா, குசா காண்டத்தில் தானே ஒரு கதா நபராக இருந்ததாலும், இராமகதைச் சம்பவங்கள் எல்லாம் குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும் தெளிவாகவும் உள்ளன. வாலியை இராமன் மறைந்து கொன்றது, மானைப் பிடிக்கப்போய் இராமன் மனைவியை இழந்தது, இலங்காபுரி செல்லப் பாலம் அமைத்தது, சீதாவைப் பற்றி வண்ணான் அவதூறு கூறியது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளாகத் தோன்றுகின்றன. கண்ணகி சேரநாட்டு மலையிலிருந்து குதித்து உயிர்விட்டதைத் தெரிந்து, இளவரசர் இளங்கோவடிகள் தகவல் திரட்டிச் சிலப்பத்திகாரக் காவியத்தை எழுதியதை நாமறிவோம். இராம கதையில் சீதாவும் இறுதியில் மலைமேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டதுபோல் தெரிகிறது. கண்ணகி ஆருயிர்க் கணவனை இழந்தாள்! சீதா ஆருயிர்க் கணவனால் புறக்கணிக்கப் பட்டாள்! இருவரது கோர மரணங்களும் படிப்போர் கண்களைக் குளமாக்கும் கணவரால் நேர்ந்த துன்பியல் காவிய முடிவுகளே!

++++++++++++

நாடக நபர்கள்: சீதா, இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், வால்மீகி, வசிஸ்டர், விசுவாமித்தர், அனுமான், பத்து அல்லது பன்னிரெண்டு வயதுப் பாலகர்கள்: லவா, குசா மற்றும் வால்மீகியின் ஆண் பெண் சீடர்கள், சேனையாட்கள்….

[துவக்கக் காண்டம்: இலங்கைப் போரில் இராவணனைக் கொன்று சீதாவை மீட்டு இராமன் இலட்சுமணன், அனுமான் படைகளுடன் அயோத்தியா புரிக்கு மீண்டு பட்டத்து அரசனாய் முடி சூட்டப்படுகிறான்]

+++++++++++

முதலாம் காட்சி:

சீதா நாடு கடத்தப்படல்

****

இடம்: அயோத்தியபுரி அரண்மனையில் மாமன்னன் இராமனின் தனி மாளிகை,

நேரம்: பகல் வேளை.

பங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருகனன்.

[காட்சி துவக்கம். இராமன் பரபரப்பாகவும், மிக்க கவலையாகவும் இங்குமங்கும் நடந்து கொண்டிருக்கிறான். இலட்சுமணன், பரதன், சத்துருகனன் மூவரும் ஓடி வருகிறார்கள்]

இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன்: அண்ணா! அழைத்தீர்களாமே! ஏதாவது அவசரப் பணியா ? அல்லது அன்னியப் படையெடுப்பா ?

இராமன்: அவசரப் பணிக்கு உரையாடத்தான் அழைத்தேன். நமது ஒற்றர் தளபதி பத்ரா நேற்றுக் கொண்டு வந்த செய்தி என் வயிற்றைக் கலக்கி விட்டது! கேட்டதும் எனக்கு அவமானமாக இருந்தது. அன்று இராவணன் சீதாவைத் தூக்கிச் சென்ற அதிர்ச்சி விட இச்செய்தி என் நெஞ்சை இருகூறாய்ப் பிளந்து விட்டது! என்ன செய்வது என்று திகைத்தேன். உடனே உங்களை அழைத்து வரச் சொன்னேன். எனக்கும் என் அரச குலத்துக்கும் பெருத்த அவமானம்! என்னுடல் நடுங்குகிறது! இரவு முழுவதும் தூக்க மில்லை! பட்டத்துக்கு வந்ததும் எனக்கு இப்படி ஒரு புகாரா ? இப்போது என்மனம் போராடுகிறது! உங்களிடம் நான் சொல்லத்தான் வேண்டும். … ஆனால் அதை எப்படிச் சொல்வது ?

இலட்சுமணன்: நீங்கள் சொல்வதைப் பார்த்தால் என்குடல் நடுங்குகிறதே! என்ன மனப் போராட்டம் உங்களுக்கு ?

இராமன்: இலட்சுமனா! இந்த மானப்போர் இலங்கை மரணப் போரை விடப் பெரிது! இது அவமானப் போராட்டம்! மயிர் இழந்தால் கவரி மான் உயிரிழக்குமாம்! மானம் இழந்தால் மாந்தரும் உயிரிழப்பராம்! இந்த அவமானத்தைத் தாங்கிக் கொண்டு உங்கள் மன்னர் இன்னும் உயிரோடிருக்கிறார். மறுபடியும் வனவாசம் பற்றிச் சிந்திக்கிறேன்! இரண்டாம் வனவாசம்!

பரதன்: என்ன ? மறுபடியும் கானகம் செல்வதா ? வேண்டாம் அண்ணா ? பதினான்கு ஆண்டுகள் நான் பட்ட மனத்துயர் போதும். அடுத்தும் என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. இரண்டாம் தடவை நாட்டை ஆள நான் தயாராகவும் மில்லை.

இராமன்: பரதா!…. இம்முறை …. காட்டுக்கு … நான் போக வில்லை! ஆனால்… வனவாசம் போக வேண்டியது …. உங்கள் அண்ணி! சீதா மீண்டும் கானகம் செல்ல கதவு திறந்து விட்டது விதி! இது எனக்கு வந்திருக்கும் பரீட்சை! எப்படி அதைச் செய்து முடிப்பேன் ?

பரதன்: [ஆத்திரமோடு] அண்ணா! இது கொடுமை! இது அநீதி! இது அக்கிரமம்! என்ன செய்தி வந்தது ? முதலில் அதைச் சொல்லுங்கள் எங்களுக்கு.

இலட்சுமணன்: அண்ணி மீண்டும் காடு செல்வதை நாங்கள் தடுப்போம்! போன முறை மந்தாரை கிழவி மூட்டி வைத்த தீயைக் கையேந்தி, கைகேயி அன்னை உங்களையும் அண்ணியையும் காட்டுக்குத் துரத்தினார். அத்துயர் தாங்காது நம் தந்தை உயிர் நீத்தார்! காரணம் சொல்லுங்கள்! ஏன் அண்ணி நாடு கடத்தப்பட வேண்டும் ?

இராமன்: நான் பட்டம் சூடிய பிறகு நாட்டு மக்கள் என்னைப் பற்றி என்ன பேசிக் கொள்கிறார் என்று பத்ராவை ஒற்றறியச் சொன்னேன். நாடு முழுவதும் சுற்றி வந்து பத்ரா கூறிய செய்தி என்னைத் திடுக்கிட வைத்தது! குடிமக்கள் நல்லதும் பேசினாராம். பொல்லாங்கும் சொன்னாராம். கடல்மீது பாலமிட்டு நான் இலங்கை சென்று இராவணனைக் கொன்று வெற்றி பெற்றதைப் பாராட்டினாராம்! ஆனால்….!

மூவரும்: [ஆர்வமாய்] ஆனால் … அடுத்து… அவர்கள் என்ன சொன்னார்களாம் ?

இராமன்: ஆனால் … சீதாவை மீட்டு வந்து … அரண்மனையில் நான் வைத்திருப்பது அவருக்குப் பிடிக்கவில்லையாம்! மன்னர் சீதாவைக் கண்டிக்காது மாளிகையில் வைத்துக் கொள்ளலாமா என்று என்னைத் தூற்றினாராம்! வேறொருத்தன் மாளிகையில் பல நாட்கள் இருந்தவளை, மன்னர் ஏற்றுக் கொள்வதா என்று கேலி செய்கிறாராம்!

இலட்சுமணன்: அண்ணியைக் கண்டிக்கச் சொல்ல அவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது ?

இராமன்: இலட்சுமணா! குடிமக்களுக்கு என்னைக் கேட்கப் பூரண உரிமை உள்ளது! நான் அவரது மன்னன். இராவணன் தொட்டுத் தீண்டியதற்கு சீதாவைக் கண்டிக்க வேண்டுமாம்! நான் தண்டிக்க வேண்டுமாம்!

இலட்சுமணன்: அண்ணியைத் தொட்ட இராவணனைத்தான் கொன்று விட்டோமே! அந்த தண்டனை போதாதா ? அண்ணியைத் தொட்டு இராவணன் தூக்கிச் சென்றது, அண்ணியின் தவறில்லையே! எதற்காக அண்ணியைக் கண்டிக்க வேண்டும் ? ஏன் அண்ணியைத் தண்டிக்க வேண்டும் ? உங்கள் தனிப்பட வாழ்க்கையில் தலையிட, குடிமக்களுக்கு உரிமை யில்லை! உங்கள் சொந்த பந்தங்களை எடைபோட இவர்களுக்கு முதிர்ந்த அறிவும் இல்லை! மூடத்தனமான குடிமக்களின் புகாரை ஓதுக்கி விடுங்கள் அண்ணா! இது சிறிய தொல்லை. இதைப் பெரியதாக எடுத்து வேதனைப்பட வேண்டாம்.

இராமன்: இது பெரிய பிரச்சனை, இலட்சுமணா. இராவணனை மட்டும் தண்டித்தது போதாது. சீதாவையும் நான் தண்டிக்க வேண்டும் என்று குடிமக்களின் சிந்தனையில் இருக்கிறது. …. சீதாவின் தலை முடியைப் பிடித்து, அவளை மடியில் வைத்துக் கொண்டு இராவணன் தூக்கிச் சென்றானாம்!

இலட்சுமணன்: அது அண்ணியின் தவறில்லையே! அதனால் அண்ணியின் புனிதம் போனது என்று

நீங்கள் நினைக்கிறீர்களா ? அதைப் பற்றி உங்கள் தனிப்பட்ட கருத்தென்ன ?

இராமன்: நீ போட்ட கோட்டைத் தாண்டியது சீதாவின் தவறுதான்! ஆனால் சீதாவின் புனிதத்தில் எனக்கு எள்ளளவும் ஐயப்பாடு இல்லை! மீட்கும் போது மனதில் சற்று குழப்பம் இருந்தாலும், சீதாவை ஏற்றுக் கொண்டு அயோத்திய புரிக்கு அழைத்து வந்தேன்!

இலட்சுமணன்: அண்ணா! அண்ணிக்குப் போதிய பாதுகாப்பு அளிக்காது, இராவணன் தூக்கிச் செல்ல வழி வைத்தது நமது தவறல்லவா ?

இராமன்: இல்லை இலட்சுமணா! மானை வழியில் ஓடவிட்டுச் சீதைக்கு வலை விரித்தது இராவணன் சூழ்ச்சி. அதில் நம்மையும், அவளையும் இராவணன் ஏமாற்றி விட்டான்! இளங்குமரி போல் ஆசைப்பட்டு மானைப் பிடிக்க என்னை அனுப்பியது, சீதாவின் முதல் தவறு! என் அவலக்குரல் போன்று எழுந்த போலிக்குரல் கேட்டு அஞ்சி உன்னை அனுப்பியது, சீதாவின் இரண்டாவது தவறு! நீ போட்ட கோட்டைத் தாண்டி இராவணனுக்குப் பிச்சை போட்டது, சீதாவின் மூன்றாவது தவறு!

பரதன்: அண்ணா! கள்வன் சூழ்ச்சி செய்து கன்னியைத் திருடிச் சென்றால், கள்வனைத் தண்டிப்பது நியாமானது! கள்வனுடன் சேர்த்துக் கன்னியையும் தண்டிப்பது எப்படி நீதியாகும் ? கள்வன்தான் குற்றவாளி! இராம நீதி மன்றத்தில் பாதிக்கப்பட்ட கன்னியும் குற்றவாளியா ? குடிமக்கள் புகாரை கேட்டும் கேளாதது போல் புறக்கணிப்பதே முறை.

இராமன்: குடிமக்களைப் புறக்கணிப்பது மன்னருக்கு முறையில்லை, பரதா ? சீதாவின் புனித்ததை நம்பினாலும், புகாரைக் கேட்டபின் மனைவியாக ஏற்றுக் கொள்ள மனம் ஏனோ தயங்குகிறது. அரண்மனை முனிவர்கள் அக்கினிப் பரீட்சை வைக்கச் சொன்னார்கள்! அதை எப்படிச் செய்ய முடியும் ? உயிரோடு கொளுத்தி உடலின் புனிதத்தைச் சோதிப்பது எப்படி ? உடன்கட்டை ஏறுவது போன்றது அக்கினிப் பரீட்சை! அது ஓர் தண்டனை! சோதனை என்பது தவறு! சீதாவின் புனிதத்தை எப்படி அறிவது ? நாட்டுக் குடிமக்களுக்கு எப்படி நிரூபிப்பது ? …. நேற்று வண்ணான் ஒருவன் தன் மனைவியைக் கண்டிக்கும் போது, என்னை இகழ்ந்து பேசி யிருக்கிறான். முந்தைய இரவில் வீட்டுக்கு வராத மனைவியைத் திட்டும் சாக்கில், ‘நேற்றிரவு எங்கேடி படுத்துக் கிடந்தாய் தேவடியா சிறுக்கி ? இராவணன் கூட பல வருடம் இருந்த சீதாவை ஏத்துக்கொண்ட ராம ராஜான்னு என்னை நினைக்காதே! ‘ என்று என்னைக் குத்தி அவளை அதட்டி யிருக்கிறான்! இம்மாதிரி அவச் சொற்களைக் கேட்டுக் கொண்டு எப்படி நான் சும்மா இருப்பது ? அதற்கு முதலில் ஆலோசனை சொல்லுங்கள், எனக்கு.

பரதன்: அண்ணா! முதலில் உங்கள் குழப்பத்தை எப்படித் தெளிவாக்குவது என்று தெரியவில்லை! அண்ணியின் வாக்கை நீங்கள் நம்ப வில்லையா ?

இராமன்: என்மனம் நம்புகிறது. ஆனால் குடிமக்கள் அவளை நம்பவில்லை! ஏற்றுக் கொண்ட என் குணத்தை மீறி, தூற்றிவரும் அவரது துணிச்சலே என்னை வேதனைப் படுத்துகிறது.

சத்துருக்கனன்: அண்ணா! நீங்கள் நம்புவது போதாதா ? குடிமக்களைப் பற்றி நாம் ஏன் கவலைப் படவேண்டும் ? அண்ணி ஓர் உத்தமி. அறிவு கெட்ட தெரு மக்கள் என்ன நினைத்தால் நமக்கென்ன ?

இராமன்: ஆத்திரமடையாதே தம்பி! நான் சீதாவுக்குக் கணவன் மட்டுமில்லை! பட்டம் சூடியபின் பின், குடிமக்களின் செங்கோல் வேந்தன் நான்! எனக்கு முதல் பொறுப்பு குடிமக்கள்! இரண்டாவது பொறுப்புதான் மனைவி! பேரசனாகிய நான் குடிமக்களுக்கு ஓர் உதாரண மனிதனாய்க் காட்ட வேண்டும். மன்னன் எவ்வழி, அவ்வழி மாந்தர் என்பதை அறிந்துகொள். சீதாவைப் போல் அன்னியன் இல்லத்தில் இருந்துவிட்டு வந்தவளை என்னைப் போல் ஏற்றுக் கொண்டு, அவள் பதி அவமானப் படவேண்டுமா என்று கேட்டார்களாம், குடிமக்கள்!

இலட்சுமணன்: அண்ணா! என்ன முடிவுக்கு நீங்கள் வந்துள்ளீர்கள் இப்போது ?

இராமன்: என் இதயம் செய்ய விரும்பாததை என் ஞானம் செய்யத் துணிந்து விட்டது! நெஞ்சைப் பிளக்கப் போகும் ஒரு துயர முடிவுக்கு வந்து விட்டேன்! (கண்களில் கண்ணீர் பொங்க) தம்பி இலட்சுமணா! நீதான் இதை நிறைவேற்ற வேண்டும்! நாளை காலை சீதாவை இரதத்தில் ஏற்றிக் கொண்டு நீ மட்டும் புறப்பட வேண்டும்! குகன் படகில் ஏறிச் சென்று கங்கை நதியின் எதிர்க்கரையில் உள்ள காட்டில் விட்டுவிட்டு வர வேண்டும்! (அழுகை பீறிக்கொண்டு வருகிறது). என் கட்டளையை மீறாதே!

இலட்சுமணன்: (குமுறிவரும் அழுகையுடன்) அண்ணா! இது வஞ்சக முடிவு! நியாயமற்ற முடிவு! என்னால் இந்தப் பாபத்தைச் செய்ய முடியாது! உங்கள் ஆணையை நிறைவேற்ற நான் தயங்குகிறேன். அந்த உத்தமிக்கு இந்தக் கொடுமையை நான் எப்படி இழைப்பது ? அண்ணா! இந்தக் கல்நெஞ்சம் எப்படி வந்தது உங்களுக்கு ? ஏழேழு பிறப்புக்கும், வாழையடி வாழையாய் பெண் பாபம் நம்மை விடாது! இன்னும் பல்லாயிரம் ஆண்டுக்கு இந்தப் பாபத்தின் எதிரொலி கோசல நாட்டை அடித்துக் கொண்டே இருக்கும்! எதிர்காலச் சந்ததிகள் உங்களுக்குச் சாபம் போடும்! இந்த வஞ்சகச் செயலுக்கு உங்களைத் தூற்றும்! ‘

இராமன்: நிறுத்து இலட்சுமணா! போதும் உன் சாபம்! நீ பார்க்கத்தான் போகிறாய்! கோசல நாடு என்னைப் போற்றும்! குடிமக்களுக்கு முதலிடம் தந்து முடிவு செய்யும் என்னை எதிர்காலம் கொண்டாடும்! புதிய இராம இராஜியத்தை நான் உருவாக்குகிறேன். இராம இராஜியத்தில் மன்னரின் சொந்தம், பந்தம், சுயநலம் யாவும் பின்னே தள்ளப்படும்! குடிமக்கள் கோரிக்கைதான் நான் முடிமேல் எடுத்துக் கொள்வேன்! இலட்சுமனா! என் ஆணையை நிறைவேற்று! நீதான் சீதாவைக் கானகத்தில் விட்டுவிட்டு வரவேண்டும்.

பரதன்: அண்ணா! நீங்கள் தரும் இந்த கோர தண்டனை சீதா அண்ணிக்குத் தெரியுமா ?

இராமன்: இதைப் பற்றி எதுவும் நான் சீதாவுக்குச் சொல்லவில்லை! அவளுக்குத் தெரியவே கூடாது. நேரில் சொன்னால் என் நெஞ்சம் வெடித்து விடும்! எங்களுக்குள் பெரிய சண்டை மூளும்! அவள் கண்ணீர் வெள்ளத்தில் நான் மூழ்கி விடுவேன். நீங்களும் அவளிடம் இதைப் பற்றி எதுவும் முன்பே சொல்லக் கூடாது! இது பரம இரகசியமாய் முடிக்க வேண்டிய தண்டனை!

இலட்சுமணன்: அண்ணி உங்கள் தர்ம பத்தினி! மிதிலை மன்னரின் மூத்த புத்திரி! ஒரு மனிதப் பிறவியாகக் கருதி நீங்கள் அண்ணியை நடத்தவில்லை! இது முழு மோசடியாகத் தெரிகிறது எனக்கு! தசரத மாமன்னரின் தவப் புதல்வன் தயங்காமல் செய்த நயவஞ்சகச் சதியாகத் தோன்றுகிறது எனக்கு!

இராமன்: போதும் உன் குற்றச்சாட்டு, இலட்சுமணா! குடிமக்களின் புகாரை நான் பொருட்படுத்தா விட்டால், நாளை யாரும் என்னை நாட்டில் மதிக்கப் போவதில்லை! நீ செய்ய மறுத்தால் நான் பரதனை அனுப்புவேன். பரதன் மறுத்தால் சத்துருக்கனனை அனுப்புவேன். அவனும் மறுத்தால், அனுமானை அனுப்புவேன். அன்னியனான அனுமான், என் அடிமையான அனுமான் என் சொல்லைத் தட்ட மாட்டான்! ஆசிரமத்தைப் பார்க்க அழைத்துச் செல்வதாய்க் கூறி சீதா கூட்டிச் செல்! ஆசிரமத்தைப் பார்க்க அவள் ஒருசமயம் ஆசைப்பட்டுக் கூட்டிச் செல்ல என்னைக் கேட்டதுண்டு. இலட்சுமணா! நாளைக் காலை சீதாவை நீ காட்டில் விட்டு வராவிட்டால், உன் முகத்தில் நான் இனி விழிக்க மாட்டேன்! நான் உன் தமையன் இல்லை, நீ என் தம்பி இல்லை என்று நாட்டில் அறிவித்து விடுவேன்.

(இலட்சுமணன் இடிந்துபோய்த் தரையில் சாய்கிறான். பரதன், சத்துருகனன் இருவரும் கண்ணீருடன் சோகமாய்ப் போகிறார்கள். கவலையோடு இராமன் ஆசனத்தில் பொத்தென அமர்கிறான்)

(முதல் காட்சி முற்றும்)

****

(இரண்டாம் காட்சி தொடரும்)

தகவல்:

1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001]

3. The Wonder that was India By: A.L. Basham [1959]

Picture Credits: Kishan Lal Verma

****

காட்சி இரண்டு

வால்மீகி ஆசிரமத்தில் சீதா அடைக்கலம்

[இடம்: கங்கா நதியின் தென்கரை ஓரம்.நேரம்: பகல்.பங்கு கொள்வோர்: சீதா, இலட்சுமணன், குகன், வால்மீகி ஆசிரமத்தின் பெண் சீடர்கள்][அரங்க அமைப்பு: இரத்தில் கங்கையின் வடபுறம் வந்திறங்கிப் பின் குகன் ஓட்டி வந்த படகில் கங்கை நதியைக் கடந்து இலட்சுமணன், சீதா கரையோர தோப்பின் மரநிழலில் தங்குகின்றனர். குகன் சீதாவின் ஆடை, அலங்கார, ஆபரணப் பெட்டியைச் சுமந்து கொண்டு அவர்களுக்குப் பின் தொடர்கிறான்]
இலட்சுமணன்: (சீதாவைக் கும்பிட்டுத் திடீரெனக் காலில் விழுந்து, தழுதழுத்த குரலில் கண்ணீருடன்) அண்ணி! என்னை மன்னிக்க வேண்டும். …. இல்லை! இல்லை! … என்னை மன்னிக்க வேண்டாம். உங்களுக்கு மாபெரும் துரோகத்தைச் செய்து விட்டேன்! துரோகத்துக்கு உடந்தையாக இருந்து, துரோகச் செயலைத் தடுக்க வலுவின்றி, துரோகக் கட்டளைக்கு அடிபணிந்து, பாசமுள்ள உங்களுக்கு வஞ்சகம் செய்து விட்டேன்! … நான் கோழை! … நான் வஞ்சகன்! … என்னை மன்னிக்காதீர்கள்! .. என்னை இறைவன் தண்டிப்பான். செய்யத் தகாத செயலைத் தெரிந்தே செய்து விட்டேன்! சீதா: (புரியாத விழிகளுடன்) நீ என்ன சொல்கிறாய் ? நீ என்ன வஞ்சகம் செய்துவிட்டாய் ? மன்னிக்கச் சொல்லிப் பிறகு மன்னிக்க மேண்டா மென்று ஏன் மன்றாடுகிறாய் ? ஏன் உடம்பு நடுங்குகிறது ?இலட்சுமணன்: (காலைப் பிடித்து கொண்டு, மேலே திரும்பி) அண்ணி! அருமை அண்ணி! எப்படிச் சொல்வேன் உங்களுக்கு ? அண்ணனிட்ட தண்டனையை உங்களுக்கு எப்படிச் சொல்வேன் அண்ணி ?சீதா: உன் அண்ணா, என்ன தண்டனை எனக்கு விதித்திருக்கிறார் ? புரிய வில்லையே. புரியும்படிச் சொல் இலட்சுமணா, சொல்!

இலட்சுமணன்: [நேரே பார்க்காமல் முகத்தைத் திருப்பி தடுமாற்றமுடன்] அண்ணி! உங்களை அண்ணா நாடு கடத்தியுள்ளார்! உங்கள் இதயக் கோயிலில் குடியுள்ள எங்கள் அருமை அண்ணா!

சீதா: [கூர்ந்து நோக்கி] நான் என்ன குற்றம் செய்தேன் ? சுற்றி வளைக்காமல் நேராகப் பேசு!

இலட்சுமணன்: அண்ணி! நீங்கள் எந்தக் குற்றமும் புரிய வில்லை. உங்களை இன்று காட்டில் விட்டுவிட்டு வரவேண்டு மென்று எனக்கு அண்ணாவின் உத்தரவு. கட்டளையை நிறைவேற்றி விட்டேன். போன வனவாசத்தில் நிகழ்ந்த தவறுக்கு, இப்போது புது வனவாசம் உங்களுக்கு! இரண்டாம் வனவாசம்!

சீதா: கட்டளை நிறைவேற்றி விட்டாய்! முதலில் கட்டளை ஏன் பிறந்தது ? ஏதோ நடந்திருக்கிறது. ஏன் மறைத்து மறைத்துப் புதிர் போடுகிறாய் ? மறைக்காமல் நடந்ததைச் சொல் இலட்சுமணா!

இலட்சுமணன்: அன்று கைகேயி சிற்றன்னையின் வரத்தைக் காப்பாற்ற தந்தைக்கு அடிபணிந்து, காடேக ஒப்புக்கொண்டார். இப்போது குடிமக்கள் அவச்சொல்லுக்கு அடிபணிந்து, உங்களைக் காட்டுக்கு அனுப்பத் தண்டனை விதித்திருக்கிறார். அதனால் அண்ணா அவமானப் பட்டாராம்!

சீதா: அவச்சொல்லால் என் பதிக்கு அவமானமா ? குடிமக்கள் என்னைப் பற்றி என்ன அவச்சொல்லை இவருக்குச் சொன்னார்களாம் ? இந்த அவமானத்தை என் பதி எனக்கல்லவா முதலில் சொல்ல வேண்டும் ? நான் சம்பந்தப்பட்ட இந்த அவமானம் எனக்குத் தெரியாமல், முதலில் உங்களுக்குத் தெரிந்திருப்பது இப்போது எனக்கு அவமானமாகத் தோன்றுகிறது. நான் அவரது மனைவியா அல்லது அந்தப்புர பெண்ணடிமையா ? மனைவி அருகில் இருந்தது தெரியாமல் போனது. மதிப்புள்ள மிதிலை நாட்டு மன்னரின் புதல்வி என்பதும் மறந்து போனது. என்னால் ஏற்பட்ட அவமானம் அவரை மட்டுமா தாக்கும்! என்னையும் தாக்கும்! என் தந்தையையும் பாதிக்கும்! என்ன அவமானம் என்னருமைப் பதிக்கு ?

இலட்சுமணன்: அசோக வனத்தில் காலம் தள்ளிய உங்கள் புனிதத்தில் அண்ணாவுக்கு எள்ளளவும் ஐயப்பாடு இல்லை! இலங்கை வேந்தன் சிறையிட்ட உங்களை உத்தமி என்று முற்றிலும் நம்புகிறார். ஆனால் குடிமக்கள் மனதில் உங்கள் மீது தப்பான சந்தேகம் எழுந்துள்ளது. இராவணன் உங்களைத் தொட்டுத் தூக்கிச் சென்றானாம். பல வருடங்கள் அவனது அரண்மனையில் நீங்கள் வைக்கப் பட்டிருந்தீர்களாம்! அண்ணா நம்பித் தன்னுடன் எப்படி அரண்மனையில் வைத்துக் கொள்ளலாம் என்று குடிமக்கள் அண்ணாவைத் தூற்றினார்களாம். இது ஒற்றர் மூலம் அண்ணாவுக்குத் தெரிய வந்தது.

சீதா: [ஆத்திரமாய்] என்ன சொன்னாய் இலட்சுமணா! நான் களங்க மற்றவள். நான் கறை அற்றவள். இராவணன் முரட்டுத்தனமாய்ப் பற்றித் தூக்கிச் சென்றது, ஆத்மாவற்ற இந்த கூடு உடம்பைத்தான். என் ஆத்மா சுத்தமானது. தூய்மையான என் மனக் கோயிலில் இருப்பவர் என் பதி ஒருவர்தான்! இதை நான் எப்படி நிரூபித்துக் காட்டுவது ? இராவணன் பிறர் மனைவியைக் களவாடிய அயோக்கியன்! ஆனால் அவன் கூட என்னைப் பலாத்காரம் செய்யவில்லை! அப்படி ஏதேனும் ஆகியிருந்தால் என்னுயிரை அன்றைக்கே மாய்த்திருப்பேன்! என் ஆத்மா ஏற்றுக் கொண்டு ஒருவரை மணந்தபின், விதியால் பிரிக்கப்பட்டு, மற்றவன் கையால் தீண்டப்பட்டு, அவன் மாளிகையில் வாழ்ந்தேன் என்று ஊரார் ஏசினாலும், உன் அண்ணாவுக்கு என்மேல் நன்னம்பிக்கை இல்லாமல் போனதா ? உண்மையாக உன் அண்ணாவுக்குத்தான் என்மீது நம்பிக்கை யில்லை! அப்படித்தான் எனக்குத் தெரிகிறது. தன் சந்தேகத்தை மறைத்து, ஊரார் புகாரைக் காரணம் காட்டி, அவரது அன்பு மனைவியை ஏன் தண்டிக்கிறார் ? நான் புனிதமானவள் என்பதை நிரூபிக்க முடியாது! நிரபராதி சீதா என்பதை நிரூபிக்கக் கூடிய ஓர் இரக்கமுள்ள அரக்கியனை உன் அண்ணா போர்க்களத்தில் கொன்றுவிட்டார்! நான் புனிதமானவள் என்று முதலில் நம்பினால்தானே, அவர் ஊருக்கு நிரூபிக்க முடியும்! அன்பு மனைவியைத் தண்டித்து, அறிவு கெட்ட குடிமக்களின் அவச்சொற்களை மெய்யென்று காட்டி விட்டார்! தன்மானத்தைக் காப்பதாய்க் காட்டி என் மானத்திற்குப் பங்கம் இழைத்தார்! உன் அண்ணா எனக்குப் பதி! ஆனால் சீதா அவரது மனைவி இல்லை!

இலட்சுமணன்: அப்படி அண்ணாவைத் திட்டாதீர்கள் அண்ணி! ஊர்வாயிக்கு அண்ணா அஞ்சிமனம் நோவது உண்மையே! அதே சமயத்தில் உங்கள் புனிதத்தில் அவருக்குச் சந்தேகமில்லை என்பதும் உண்மையே! அப்படி சந்தேகம் இருந்தால், படை திரட்டிச் சென்று, கடல் கடந்து போரிட்டு உங்களை மீட்க வந்திருப்பாரா ?

சீதா: உடம்பு முழுதும் சந்தேக இரத்தம் ஓடும் உன் அருமை அண்ணா, ஏன் போரிட்டார் தெரியுமா ? சீதாவை மீட்பதற்காகத் தோன்றினாலும் மெய்யாக சீதாவுக்காகப் போரிடவில்லை! கட்டிய மனைவியை மாற்றானிடம் விட்டுவிட்டார் என்று ஏசும் ஊர்வாயை மூடத்தான் போரிட்டார் என்பது இப்போது விளங்குகிறது எனக்கு! அவரது வீர, சூர, விற்தொடுப்பு பராக்கிரமத்தை எடுத்துக் காட்ட ஈழப்போர் ஓர் எதிர்பாராத வாய்ப்பளித்தது! உன் அண்ணாவின் வல்லமைக்குச் சவால்விட்டு இராவணன் என்னைச் சிறை வைத்ததே போருக்கு முக்கிய காரணம்! முதன்முதலாக அசோக வனத்தில் தூதுவன் அனுமானைக் கண்டதும் துள்ளியது என்னுள்ளம்! என்னை மீட்க என்னருமைப் பதி வருகிறார் என்று எல்லையற்ற ஆனந்த மடைந்தேன்! ஆனால் கரை புரண்ட அந்த ஆனந்த வெள்ளம் பின்னால் வரண்டு போனது. இராவணனைக் கொன்று என்னை முதலில் காண வரும்போது, குளமான என் கண்களுடன் அவரை நோக்கி ஓடினேன். என்னைக் கண்டதும் அவர் கால்கள் ஏனோ நின்று முன்னேற வில்லை! எனது நெஞ்சம் பிளந்தது! பெருத்த ஏமாற்றம் எனக்கு! நெருங்கிய என்னை அவர் அணைத்துக் கொள்ளவில்லை! பெருத்த அவமானம் எனக்கு! என் கண்களில் கண்ணீர் வழியும் போது, அவரது கண்களில் வரட்சி எரிந்தது! அந்த வெறுப்பும், புறக்கணிப்பும் அன்றே நான் அவர் கண்களில் கண்டேன்! மனைவியைப் பிரிந்தவர் மீண்டும் கூடும் போது முகத்தில் தெரியும் கனிவும், காதலும், களிப்பும் அவர் கண்களில் நான் காணவில்லை! அந்தப் புறக்கணிப்பை என்னால் மறக்க முடியவில்லை, இலட்சுமணா! அந்த வெறுப்பை என்னால் தாங்க முடியவில்லை ! அன்னியனால் தீண்டப்பட்ட நான் அன்றே அவர் தீண்டத்தகாத மனைவியாகி விட்டேன் ! தீண்டியன் மாளிகையில் பட்ட துயரை விட, தீண்டாமல் காட்டில் புறக்கணிக்கப்பட்ட வேதனை என்னை எரித்துக் கொல்கிறது!

இலட்சுமணன்: இதுவரை இப்படி நீங்கள் பேசக் கேட்டதே யில்லை, அண்ணி! அண்ணாவின் சந்தேகப் பார்வை, உங்கள் மனதில் பச்சை மரத்தாணிபோல் அன்றே ஆழமாய்ப் பதிந்து விட்டதே!

சீதா: உண்மையாக உன் அண்ணா என்னை நேசிக்க வில்லை என்பதை திருமணமான தினத்திலே நான் கண்டு கொண்டேன். என்னைத் திருமணம் செய்து கொள்வதற்காக அவர் மிதிலா புரிக்கு வரவில்லை! வில்லை முறிக்க வந்தார்! தன் கைப்பலத்தைக் காட்டப் போட்டிக்கு வந்தார்! என்மேல் நேசமோ, ஆசையோ கொண்டு மிதிலைக்கு வந்ததாக எனக்குத் தெரியவில்லை! வில்லை முறித்துத் தன் வல்லமையை நிரூபித்தார்! சீதா ஒரு பந்தயப் பரிசு! பந்தயத் பரிசாக என் தங்கையை வைத்திருந்தாலும், அவர் மணந்து அவளை மனைவியாக ஏற்றுக் கொண்டிருப்பார்! சுயம்வர மென்று என் தந்தை எல்லா மன்னரை அழைத்திருந்தாலும் யாரும் எவரைத் தேர்ந்தெடுக்க வில்லை! இதைச் சுயம்வரம் என்று எப்படிச் சொல்வது ? அவரும் என்னைத் தேர்ந்தெடுக்க வில்லை! நானும் அவரைத் தேர்ந்தெடுக்க வில்லை! பந்தயக்காரருக்குப் பரிசின் மேல் கண்ணாகத் தோன்றினாலும், உண்மையில் பந்தயத்தின் மேல்தான் கண்! வெற்றியில் கிடைத்த பரிசு பிறகு வேண்டப்படாமல், தீண்டப்படாமல் கண்ணாடிப் பெட்டியில் அடைபடுகிறது! போட்டிப் பரிசு கறை பிடித்துப்போய் பின்னல் காணாமல் போய்விடுகிறது! பார், என்றைக்காவது உன் அண்ணா, என்னை மனிதப் பிறவியாகக் கருதிக் கலந்து பேசி எந்த முடிவும் இதுவரைச் செய்திருக்கிறாரா ?

இலட்சுமணன்: அது முற்றிலும் உண்மை அண்ணி! உங்களை மனிதப் பிறவியாக அண்ணா கருத வில்லை! இக்கொடும் தண்டனை இடுவதற்கு முன்பு உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லவில்லை! உங்கள் கருத்தைக் கேட்டு உரையாட வாய்ப்பளிக்க வில்லை! அண்ணாவின் நீதி மன்றத்தில் ஒருபோக்கு, ஒருபக்க வாதமே மட்டுமே தலை விரித்தாடுது! இருபோக்கு வாதம் அண்ணாவுக்குப் பிடிக்காது! வனவாசத் தீர்ப்பை நாங்கள் யாவரும் எதிர்த்தும், தடுத்தும் பயனில்லாமல் போனது, அண்ணி! அண்ணா புரியும் போரில் என்றும் தோற்பதே இல்லை! நாங்கள்தான் தோற்றுப் போனோம்.

சீதா: (குமுறிக் கோவென்று அழுகிறாள்) வனவாசத் தண்டனையை உன் அண்ணாதான் நேரடியாக அறிவிக்க வில்லை! இன்று காலை புறப்படுவதற்கு முன் நீ ஏன் சொல்ல வில்லை ? உனக்கு நான் என்ன கெடுதி செய்தேன் ?

இலட்சுமணன்: ஆமாம், இன்று நானும் சொல்லவில்லை. அண்ணா வஞ்சித்தது போல் நானும் உங்களை வஞ்சித்தது உண்மைதான். நாங்கள் இருவருமே உங்களை வஞ்சித்து விட்டோம். முதலில் உங்களுக்கு சொல்ல வேண்டுமென்று நாங்கள் மன்றாடினோம். அனுமதிக்க மறுத்து விட்டார்! நாங்கள் சொல்லப் போனதையும் தடுத்து விட்டார். காலையில் உங்களுக்குச் சொல்ல எனக்கு வாய்ப்பிருந்தது! சொல்லி யிருக்கலாம்! ஆசிரமத்தைக் காட்டப் போவதாய் அண்ணன் சொல்லியபடிச் சொல்லி உங்களை ஏமாற்றியது உண்மை! நான் அறிந்தே செய்த குற்றத்துக்கு அதனால்தான் என்னை மன்னிக்க வேண்டாம் என்று மன்றாடினேன். அன்று வனவாசத்தில் பதியுடன் களிப்போடு இருந்த உங்களைக் கடத்திப்போய்க் கலங்க வைத்துச் சிறையிலிட்டான், அயோக்கியன் இராவணன்! ஆனால் இன்றைய வனவாசம் வேறு! அரண்மனையில் பதியுடன் ஆனந்தமாக இருந்த உங்களைப் புறக்கணித்து நாடு கடத்திக் கதற வைப்பவரே உங்கள் அருமைப் பதிதான்!

சீதா: காலையில் நீ சொல்லி யிருந்தால், கதையே மாறிப் போயிருக்கும்! நான் அவரோடு போராடி இருப்பேன்! நீ யார் பக்கம் சேர்ந்திருக்கிறாய் என்பதே எனக்குத் தெரியவில்லை. பார்த்தால் நீங்கள் எல்லோரும் என்னைப் போல் உங்கள் அண்ணாவின் அடிமை! என் பக்கக் கதையைக் கேட்க உன் அண்ணாவுக்குத்தான் அறிவில்லை! நெறியில்லை! நினைவு மில்லை! பராக்கிரமப் பதிக்கு என்னிடம் பேசப் பயமா ? அல்லது இவளிடம் என்ன பேச்சு என்ற புறக்கணிப்பா ? நீங்கள் எல்லாம் உன் அண்ணாவின் பக்கம். யாராவது ஒருவர் எனக்காகப் போராடி உங்கள் அண்ணாவை எதிர்த்தீர்களா ?

இலட்சுமணன்: நாங்கள் எல்லோரும் உங்களுக்காக வாதாடினோம். ஒரு பலனும் இல்லை. அண்ணனை மாற்ற முடியவில்லை. ஊர்வாயிக்கு அஞ்சி, உங்களை நாடு கடத்துவதில் ஒரே பிடிவாதமாக இருந்தார், அண்ணா.

சீதா: வாழ்க்கை முழுவதும் எனக்கு அடிமை வாழ்வுதான்! காட்டுக்கு வா வென்றால் வர வேண்டும்! போ வென்றால் போக வேண்டும்! வேண்டாம் என்றால் நான் விலக்கப்பட வேண்டும்! இன்று இல்வாழ்வில் நான் விலக்கப்பட்டவள்! எந்த விதத் திருமண ஒப்பந்தமும் இல்லாத சுயம்வரப் போட்டியில் கிடைத்த பரிசு முடிப்புதானே நான்! யாரிடம் போய் முறையிட்டு உன் அண்ணா செய்தது சரியா அல்லது தவறா என்று நான் நீதி கேட்பது ?

இலட்சுமணன்: உங்களுக்கு அண்ணா செய்தது அநீதி! அவரது ஆணையைக் கண்மூடி நிறைவேற்றிய நான் மெய்யாக ஒரு கோழைதான்!

சீதா: வாழ்க்கை முழுதும் நான் துயருற்று மனமுடைய வேண்டுமென்று விதி எழுதி விட்டது! நான் சோகத்தின் வடிவம்! நான் பாபத்தின் பிம்பம்! என்னால் என் பதிக்கு அவமானம் வேண்டாம். என்னால் கோசல நாட்டுக்குக் கெட்ட பெயர் வேண்டாம். நான் கங்கை நதியில் விழுந்து … இப்போதே உயிரை மாய்த்துக் கொள்ளலாம். …. ஆனால் உன் அண்ணாவின் …. குலவிளக்கு என் வயிற்றில் வளரும் போது, …. நான் அப்படிச் சாக மாட்டேன். என் அற்ப உயிரை மாய்த்து, உயிருள்ள என் கர்ப்பச் சிசுவைக் கொல்ல மாட்டேன். … அதுதான் மாபெரும் பாபம்! ஆனால் அறிவுகெட்ட உன் அண்ணாவிடம், எதையும் சந்தேகப்படும் உன் அண்ணாவிடம் என் வயிற்றில் வளரும் சிசுவைப் பற்றி எதுவும் சொல்லாதே! என் சிசுவுக்காக நான் தனியே காட்டில் வாழப் போகிறேன். குடிமக்கள் புகாரிட்டாலும் என் உயிரை அழிக்கமாட்டேன்! என் வயிற்றில் வாழும் சிசு அவரது மானத்தை விட மேலானது! நெறிகெட்ட உன் அண்ணாவிடம் என் கர்ப்பத்தைப் பற்றிச் சொல்லாதே!

இலட்சுமணன்: ஆ! என்ன ? … அண்ணி… நீங்கள்…! தாய்மை அடைந்த செய்தி ஆனந்தச் செய்தியல்லவா ? அரண்மணையில் ஆனந்தமாக இதைக் கொண்டாட வேண்டிய வேளையில் உங்களைத் திண்டாட வைத்துக் காட்டில் தனியே விட்டு போகிறேனே! இறைவா! என்ன கொடுமை இது ? அண்ணன் ஒருவரைக் காட்டுக்கு அனுப்புவதாக நினைத்தார்! உண்மையில் இருவரை நாடு கடத்தி இருக்கிறார். வயிற்றில் வளரும் அவரது குலவிளக்கையும் சேர்த்து அனுப்பி விட்டார்! அண்ணி! உங்கள் இருவரையும் தனியே இந்த நடுக்காட்டில் எப்படி விட்டுச் செல்வேன் ? என் மனம் இடங் கொடுக்கவில்லை அண்ணி! நானும் இங்கேயே தங்கி உங்களுக்குப் பாதுகாப்பாய் இருக்க முடிவு செய்து விட்டேன். அன்று வனவாசத்தில் உங்களுக்குத் நான் துணையாக இருந்ததுபோல் இப்போதும் அருகில் இருப்பேன்!

சீதா: வேண்டாம். நீ சிந்தித்ததான் பேசுகிறாயா ? அன்று வனவாசத்தில் என்னருகில் உன்னருமை அண்ணா இருந்தார். இப்போது நீ மட்டும் என்னுடன் தனியாக வசித்தால், அயோத்திபுரிக் குடிமக்கள் என்ன பேசிக் கொள்வார் ? இராவணன் கூட இருந்தவள், இப்போது இலட்சுமணன் கூட வாழ்கிறாள் என்று முத்திரை குத்திவிடும். அது உங்கள் அண்ணாவுக்குக் கொடுக்கும் அடுத்த அதிர்ச்சியாக இருக்கும். நான்தான் அவமானப் படுத்தினேன் உன் அண்ணாவை! நீயுமா அவரை அவமானம் செய்ய வேண்டும்! என் கணவரே என்னைக் கைவிட்ட பிறகு இனி உன் உதவி எனக்கு எதற்கு ? முன்பு வனவாசத்தில் இருந்த போது என்மீது உனக்காசை என்று உன்மீது எனக்கே சந்தேகம் வந்துவிட்டது! அதைச் சொல்லி உன்னை நான் திட்டியும் இருக்கிறேன். போதும் உன் உதவி! எரிச்சலை உண்டாக்காதே. நான் தனியாக இந்தக் காட்டில் பிழைத்துக் கொள்வேன். போ இலட்சுமணா போ, ஒழிந்து போ! என்முன் நில்லாதே! (கத்திக் கொண்டு அலறி மயக்கமுற்றுத் தரையில் விழுகிறாள்).

இலட்சுமணன்: அண்ணி! பக்கத்தில் வால்மீகி முனிவரின் ஆசிரமம் உள்ளது. பெண்சீடர்களின் குரல் கேட்கிறது. தந்தை தசரத மகாராஜாவின் பழைய நண்பர் அவர். அங்கே போய் தங்கிக் கொள்ளுங்கள்.

[சீதாவுக்கு மயக்கமும் வாந்தி வருகிறது. அதைக் கண்ட பெண்சீடர்கள் ஓடி வருகிறார்கள். வயதான ஒருத்தி சீதாவை மடியில் கிடத்தி முகத்தையும், அவள் உடம்பையும் கூர்ந்து நோக்குகிறாள். ஒருத்தி முகத்தில் நீரைத் தெளித்து, வாயில் நீரூற்றிக் கொப்பளிக்க வைக்கிறாள்]

மூத்த சிஷ்யை: (இலட்சுமணனைப் பார்த்து) நீங்கள் இப்பெண்ணின் கணவரா ? உங்கள் மனைவியைப் பார்த்தால் கர்ப்பவதி போல் தெரிகிறதே! எங்கள் வால்மீக முனிவரின் ஆசிரமம் அருகிலேதான் உள்ளது.

சிறிது நேரம் நீங்கள் இருவரும் தங்கிச் செல்லலாம். இந்தப் பெண் இனி பயணம் செய்யக் கூடாது.

இலட்சுமணன்: அவர்கள் எனது அண்ணனின் மனைவி. நீங்கள் என் அண்ணியை மட்டும் கூட்டிச் செல்லுங்கள். நான் இப்போது வரமுடியாத நிலையில் இருக்கிறேன். சூரிய அத்தமனமாவதற்கு முன்பு நான் அவசரமாக அயோத்திய புரிக்கு மீள வேண்டும். கொஞ்ச காலம் அண்ணி மகரிஷி வால்மீகி ஆசிரமத்தில் வாழட்டும். பின்னால் என் அண்ணாவே நேராக வந்து அண்ணியை அழைத்துச் செல்வார்.

[இலட்சுமணன் சீதாவின் காலைத் தொட்டு வணங்கி படகு நோக்கிச் செல்கிறான். குகனும் காலைத் தொட்டு வணங்கிய பின் உடை, அலங்காரப் பெட்டியைப் பெண்சீடர்களிடம் கொடுத்து விட்டுப் பின் தொடர்கிறான்]

+++++++++++++++++++++++++++++++++++

காட்சி மூன்று

ஆசிரமத்தில் லவா, குசா இரட்டையர் பிறப்பு

இடம்: வால்மீகி முனிவரின் ஆசிரமம்.நேரம்: மாலைஅரங்க அமைப்பு: வால்மீகி இராமகதையை எழுத்தாணியால் ஓலைச் சுவடியில் எழுதிக் கொண்டிருக்கிறார். அப்போது பெண்சீடர்கள் சீதாவை மெதுவாகத் தாங்கிக் கொண்டு உள்ளே நுழைகிறார்கள். வால்மீகி எழுதுவதை நிறுத்தி எழுந்து சென்று வரவேற்கப் போகிறார். பெண்சீடர்கள்: மகரிஷி! காட்டில் மயக்கமுற்ற இந்தப் பெண்ணை நாங்கள் அழைத்து வந்தோம். இந்தப் பெண்மணி ஒரு கர்ப்பிணி மாது. பார்த்தால் பெரிய வீட்டைச் சேர்ந்தவர் போல் தெரிகிறது. யாரென்று எங்களுக்குத் தெரியவில்லை. இங்கே சிறிது காலம் தங்க வைக்கலாமா ? அவருக்கு இப்போது யாருமில்லை! ஆனால் அவரது கணவர் சிறிது காலம் கழித்து அழைத்துச் செல்ல இங்கு வருவாராம்.

வால்மீகி: (சற்று உற்று நோக்கி) …. எனக்குத் தெரியும் இந்த மாது யாரென்று! கோசல நாட்டு மகாராணி சீதாதேவி. மாமன்னர் இராமனின் தர்ம பத்தினி. மிதிலை நாட்டு மன்னரின் மூத்த புத்திரி! ஓய்வெடுக்க உள்ளே அழைத்துச் செல்லுங்கள். சீதாதேவியைக் காட்டிலே தனியாகவா கண்டார்கள் ? …. கோசல நாட்டு மகாராணி கானகத்து வரக் காரணம் என்ன ?

சீடர் அனைவரும்: (ஒருங்கே) மதிப்புக்குரிய மகாராணி சீதாதேவியாரா ? (எல்லாரும் கைகூப்பி வணங்குகிறார்கள்). எங்களுக்கு முதலில் தெரியாமல் போனதே! … (சிஷ்யைகளில் ஒருத்தி) மகரிஷி! அவர் கிடந்த நிலையைப் பார்த்தால் எங்களுக்குப் பரிதாபமாக இருந்தது! தாயாகிய மகாராணிக்குப் பணிவிடைகள் செய்ய அரண்மனைச் சேடியர் யாருமில்லை! காட்டில் விடப்பட்டுத் தனியே விழுந்து கிடந்தார். (இருவர் மட்டும் சீதாவை உள்ளே அழைத்துச் செல்கிறார்கள்). (சிஷ்யைகளில் ஒருத்தி) அவர் தனியாக வரவில்லை. உடனிருந்தவர் இரண்டு நபர்கள். மகாராணியாரின் கொழுந்தன் ஒருவர்! மற்றொருவர் படகோட்டி போல் தெரிந்தது. விட்டுச் சென்ற இருவரும், மகாராணியார் காலைத் தொட்டுக் கும்பிடும் போது எங்களுக்கு யாரென்று தெரியாமல் போனது. யாரென்று கேட்கவும் தவறி விட்டோம், மகரிஷி! மகாராணியாரின் கொழுந்தன்தான் எங்களிடம் ஒப்படைத்து விட்டுச் சென்றார். வால்மீகி: சீதாவை அழைத்து வந்த கொழுந்தன் யாரென்று தெரியவில்லை ? பரதனா ? இலட்சுமணனா ? அல்லது சத்துருக்கனனா ? கங்கை நதியில் படகோட்டியவன், குகனாக இருக்க வேண்டும். எதற்காக சீதாதேவியைக் காட்டில் விட்டுச் சென்றார்கள் ?

சீதா: (படுத்திருந்தவள் மயக்கம் மெதுவாக தெளிந்து எழுந்து கொண்டு) …. நான் … இப்போது … எங்கிருக்கிறேன் ?

வால்மீகி: … அஞ்ச வேண்டாம் சீதா! … என் ஆசிரமத்தில்தான் இருக்கிறாய். நான் வால்மீகி முனிவர். இவர்கள் யாவரும் ஆசிரமத்தில் பயிலும் என் சீடர்கள். உன் மாமனர் தசரதச் சக்கரவர்த்தி எனக்கு மிகவும் வேண்டியவர். உன் தந்தை மிதுலை நாட்டு மன்னரும் எனக்குத் தெரிந்தவர். மன்னர் உனக்குச் சுயம்வர நடத்தியது, வில்லை முறித்து இராமன் உன்னைத் திருமணம் செய்தது, நீங்கள் வனவாசம் செல்ல நேர்ந்தது, இலங்காபுரிக்கு உன்னை இராவணன் கடத்திப் போனது, போரில் அவனைக் கொன்று நீ மீட்கப் பட்டது, அயோத்தியா புரியில் இராமன் பட்டம் சூடியது எல்லாம் எனக்குத் தெரியும். …. ஆனால் எனக்குத் தெரியாதது, நீ இப்போது காட்டில் விடப்பட்ட காரணம்! … அதுவும் தாய்மை நிலையில் உன்னைத் தனியாக விட்டுப் போன காரணம்!

சீதா: (மெதுவாக எழுந்து … காலைத் தொட்டு வணங்கி) மகரிஷி! எனக்குப் புகலிடம் அளித்த உங்களுக்குக் கோடி புண்ணியம். என்னைக் கனிவுடன் அழைத்துவந்த உங்கள் சீடர்களுக்கு நான் கடமைப்பட்டவள். ஆசிரமத்தைக் காட்டுவதாக என்னை அழைத்து வந்தவர், கொழுந்தன் இலட்சுமணன். என்னைச் சீடர்கள் வசம் ஒப்படைத்துச் சென்றவரும், அவரே.

வால்மீகி: ஆச்சரியப்படுகிறேன். உனது வருகையை யாரும் எனக்குத் தெரிவிக்க வில்லையே. தெரிந்தால் நானே நேராக உங்களை வரவேற்க வந்திருப்பேன். மாமன்னர் இராமன் உன்னை ஏன் அழைத்து வரவில்லை ? முன் கூட்டியே எனக்கு ஏன் அறிவிக்கவில்லை ? எதற்காக உன்னைத் தனியாக விட்டுச் சென்றார் இலட்சுமணன் ? எனக்கு ஒன்றும் புரியவில்லை.

சீதா: அது ஒரு பெரும் கதை, மகரிஷி! பட்டம் சூடிய என் பதிக்குப் பல அரசாங்கப் பணிகள்! கோசல நாட்டுக் குடிமக்களின் புகார்கள்! தங்களுக்கு அவற்றைத் தனியாகச் சொல்ல விரும்புகிறேன்.

வால்மீகி: சீடர்களே! உங்கள் அறைகளுக்குச் செல்லுங்கள். போகும் போது கதவை மூடிச் செல்லுங்கள். (கதவை மூடிச் சீடர்கள் வெளியேறுகிறார்கள்)

சீதா: (கண்ணீருடன் அழுகை முட்டிக் கொண்டு வர) மகரிஷி! … எப்படிச் சொல்வேன் என் அவல நிலையை! …. என் இல்வாழ்க்கை மீண்டும் முறிந்து போனது! முதல் வனவாசத் தண்டனையின் மனப்புண் ஆறுவதற்குள், இரண்டாம் வனவாசத் தண்டனை எனக்கு! என்னைப் புறக்கணித்து நாடு கடத்தி விட்டார் ..என்னுயிர்ப் பதி! (கதறி அழுகிறாள்).

வால்மீகி: (பேராச்சரியம் அடைந்து) என்ன ? மாமன்னர் உன்னை மணவிலக்கு செய்து விட்டாரா ? அன்று வனவாசத்தில் நீ பட்ட இன்னல் போதாதா ? இப்போது உனக்கு ஏன் இரண்டாம் வனவாசம் ? மீட்டு வந்த உன்னை மீண்டும் காட்டுக்கனுப்ப எப்படி மனம் வந்தது மன்னருக்கு ? உன்மேல் சுமத்திய குற்றம்தான் என்ன சீதா ? எனக்குப் பெரும் புதிராக இருக்கிறது!

சீதா: மகரிஷி! காட்டில் விடப்பட்டதற்கு மெய்யான காரணம் என்ன என்பது எனக்குத் தெரியாது. என் பதி அதைப் பற்றி என்னிடம் எதுவும் சொல்ல வில்லை! வாயிருந்தும் நான் வாதாட முடிய வில்லை! காதிருந்தும் அந்தக் காரணம் என் காதில் விழவில்லை! வைராக்கியம் இருந்தும் நான் போராட வழியில்லை! என் பக்க நியாயத்தைக் கூற ஒரு நீதி மன்றமும் இல்லை! எனக்குத் தெரியாமலே என் பதி செய்த சதி! முதல் வனவாசத்துக்குக் காரணம் என் விதி! ஆனால் இரண்டாம் வனவாசத்துக்குக் காரணம் என் பதி! இன்று இலட்சுமணன் என்னிடம் கூறிய காரண மிது. காட்டில் விட்டுச் சென்ற சில மணி நேரத்துக்கு முன்புதான் எனக்கே காரணம் தெரிந்தது. கடத்திச் செல்லும் போது இராவணன் என் மயிரைப் பிடித்து இழுத்துச் சென்றானாம்! வாகனத்தில் என்னை மடிமீது வைத்து தூக்கிச் சென்றானாம்! பல வருடம் வேறொருவன் இல்லத்தில் இருந்தவளை பதியானவர் எப்படி ஏற்றுக் கொள்ளலாம் ? சகித்துக் கொண்டு என் பதி அரண்மனையில் எப்படி வைத்துக் கொள்ளலாம் என்று குடிமக்கள் கேலி செய்தார்களாம்! என் பதிக்கு அப்புகார் பெருத்த அவமானமாய்ப் போனதாம்! ஆனால் என் கணவருக்கு என்மீது எந்தவிதச் சந்தேகமும் இல்லையாம்!

வால்மீகி: அட ஈஸ்வரா! என்ன கொடுமை இது ? தெருமக்களின் கேலிக்கும், புகாருக்கும் ஓர் மாமன்னன் செவி சாய்ப்பதா ? மன்னனை மக்கள் அவதூறு பேசுவதைத் தவிர்க்க முடியாது! ஆனால் அதுவே சரியென்று தன்னுயிர் தர்ம பத்தினியைக் காட்டுக்கு அனுப்புவதா ? கொடுமை! கொடுமை!! தாங்க முடியாத கொடுமை!!! இராம கதையே திசை மாறிப் போயிற்றே!

சீதா: முதலில் வனவாசம் போவதற்கு முன்பும் அவர் ஒரு வார்த்தை என்னிடம் சொல்லவில்லை! பதினாங்கு வருடம் கானகம் போக வேண்டும் என்றார். ஆட்டுக் குட்டிபோல் அவர் பின்னால் சென்றேன்! தந்தை சொல் தட்டாத தனயன் என்று புகழ் பெற்றார். மனைவியை அடிமைபோல் நடத்துவது ஊரில் யாருக்குத் தெரியும் ? இரண்டாம் தடவை வனவாசம் தள்ளப்பட்டது முன்னைவிட மோசம். காட்டுக்குப் போவென்று கூட எனக்குக் கட்டளை இடவில்லை! சீதாவைக் காட்டில் விட்டுவிட்டு வந்துவிடு என்று தம்பிக்கு இரகசிய உத்தரவு! உருகிடும் உள்ளம் படைத்தவர் என் பதி! எப்படி நேராக மனைவிக்கு இந்தக் கோர தண்டனையைத் தருவது என்று மனம் தாங்காமல், தம்பிமார் காதில் மட்டும் சொல்லி யிருக்கிறார். யாருக்கும் தெரியாமல் நாடு கடத்தி என் மானத்தை ஓரளவு காப்பாற்றி யிருக்கிறார்! உத்தம குணமுடையவர் என் கணவர்! வால்மீகி: அப்படித்தான் நானும் நினைத்துக் கொண்டிருந்தேன் சீதா. என் கருத்தை மாற்றிக் கொள்ளும் வேளை வந்து விட்டது! உத்தம புத்திரனாய்ப் புகழ் பெற்ற மாமன்னர், உத்தம கணவராகவும் இருப்பார் என்று சொல்ல முடியாது போலிருக்கிறது! சீதா: இராவணன் என்னைத் தொட்டுத் தூக்கிச் சென்றது உண்மை! ஆனால் அவன் என்னை பலவந்தப் படுத்தவில்லை! அப்படி ஆகியிருந்தால் நான் அன்றே உயிரைப் போக்கி என் மானத்தைக் காத்திருப்பேன். இப்போது என் மதிப்பை, மானத்தை என் பதி நசுக்கினாலும், உயிரை நான் மாய்த்துக் கொள்ளப் போவதில்லை! காரணம், என் வயிற்றில் வளர்ந்து வரும் என் பிரபுவின் குலவிளக்கு. மகரிஷி! இராவணன் எனக்கிழைத்த தீரா அவமானத்தையும் தாங்கிக் கொண்டு வாழ விரும்புகிறேன் நான். இனியும் குழந்தை பெற்றுக் கணவரோடு மனைவியாய் நெடுங்காலம் வாழ விரும்புகிறேன் நான். அப்படிக் கனவு காண்கிறேன்! ஆனால் அது நடக்கக் கூடியதா ? ஒன்றாய் வாழத் தவம் செய்தவளுக்குப் பதி இரண்டகம் செய்து விட்டார்! பதியிடமிருந்து இராவணன் என்னைத் தற்காலியமாகப் பிரித்தான்! ஆனால் பதியிடமிருந்து இப்போது நிரந்தரமாகப் பிரித்தது யாரென்று நினைக்கும் போது, என் நெஞ்சில் தீப்பற்றி எரிகிறது! (கோவென்று கதறி அழுகிறாள்).

வால்மீகி: …. சீதா! எனக்கொரு யோசனை தோன்றுகிறது. சொல்லட்டுமா ? நானே உன்னை இராமனிடம் அழைத்துச் சென்று, புனிதமானவள் என்று எடுத்துச் சொல்லி மறுபடியும் சேர்த்துவிடவா ? நான் சொன்னால் மன்னர் கேட்பார்! உங்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க வேண்டு மென்று என்மனம் துடிக்கிறது. அப்படிச் செய்வது உனக்கு விருப்பமா ?

சீதா: அது என் விருப்பம்தான், மகரிஷி! ஆனால் அது நடக்காது. வேண்டாம், அந்த முயற்சி! பிறன் கைபட்ட மனைவிக்கு இனி இல்லற மில்லை! வேண்டாத பதியின் வீட்டு நிலை கூட இடிக்கும்! தனியாக, இருப்பதுதான் எனக்கு மதிப்பு! அவமானப் பட்டவள் மாண்டு போவது நிம்மதி. ஆனால் உயிரை மாய்த்துக் கொள்ளும் துணிச்சல் இப்போது எனக்கில்லை. பதியின் புறக்கணிப்புத் தினமும் நெஞ்சைக் கரையான் போல் அரித்து வருகிறது! கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டுவரக் கட்டளை யிட்டபின், கணவர் முகத்தில் நான் இனி எப்படி விழிப்பேன் ? எனக்குத் தன்மானம் இருக்கிறது. அவமானத்தைக் கொடுத்த எனக்கு, அரண்மனைக் கதவுகள் இனிமேல் திறக்கப்பட மாட்டா! தனியாக இந்த வனவாசத்தில் காலம் தள்ளி மன வேதனைப் பட்டே தினமும் சிறிது சிறிதாகச் சாக வேண்டியதுதான்! குழந்தை பிறக்கும்வரை நான் எப்படியும் பிழைத்திருக்க வேண்டும். இந்த வனவாசத்தில் என்னை மீட்க இனி யாரும் வரப் போவதில்லை! … மகரிஷி! எனக்குத் தந்திருப்பது ஆயுள் தண்டனை! இராவணன் கொடுத்த சிறைத் தண்டனையை விடக் கோரமான ஆயுள் தண்டனை! இதிலிருந்து யாரும் என்னை விடுவிக்க முடியாது!

வால்மீகி: தாயாகும் நீ இந்தச் சமயத்தில் அரண்மனை வாசியாக வாழ்வதே மேல். நீ விரும்பினால், உன்னை மிதிலாபுரிக்கு அழைத்துப்போய் உன் தந்தையிடம் சேர்த்து விடுகிறோம்.

சீதா: வேண்டாம் மகரிஷி! நாடு கடத்தப் பட்டு நான் ஆசிரமத்தில் இருப்பது என் தந்தைக்குத் தெரிய வேண்டாம். காரணம் தெரிந்தால் மிகவும் வேதனைப் படுவார்! பதிமீது சீறி எழுவார்! சினங்கொண்டு என் பதியிடம் உடனே சண்டைக்குப் போவார்! கோசலபுரி மீது போர் தொடுக்கவும் தயங்கமாட்டார். மேலும் மிதிலாபுரிக் குடிமக்கள் என்ன சொல்வார்கள் ? மானம் கெட்டுப் போனவள் பதியால் துரத்தப் பட்டு பிறந்த நாட்டுக்கு ஓடி வந்தவள் என்று ஏசுவார்! கோசல நாட்டில்தான் என்னால் என் பதிக்கு அவமானம்! மிதிலா புரியில் என் தந்தைக்கும் என்னால் அவமானம் வர வேண்டுமா ?

வால்மீகி: சீதா! நீ வாழ வேண்டும். மரணத்தைப் பற்றி நினைக்காதே. இளமை பொங்கும் நீ நீண்ட காலம் வாழ வேண்டும். இந்த ஆசிரமத்தில் உனக்கு எப்போதும் இடமுண்டு! உனக்கு எல்லா வசதிகளும் இங்கு இருக்கின்றன. ஆசிரத்தில் பெண் மருத்துவர் இருக்கிறார். உன் உடல் நலத்தையும், சிசுவின் நலத்தையும் கண்காணிப்பார். கவலைப் படாதே! குழந்தையைப் பெற்று அதை ஆளாக்கு. கல்வி புகட்டி குழந்தைக்குப் பயிற்சிகள் அளிப்பது என் பொறுப்பு.

சீதா: மிக்க நன்றி மகரிஷி. அரண்மனை கைவிட்டாலும், ஆசிரமம் ஆதரவளிப்பது எனக்கு மகிழ்ச்சி தருகிறது. உங்களுக்கு நான் என்ன கைம்மாறு செய்வேன் ? இங்கே சும்மா இருக்காமல், உங்கள் ஆசிரமப் பணிகளைச் செய்கிறேன். சிறு பாலர்களுக்குக் கல்வி புகட்டுகிறேன். அத்துடன் நான் இதுவரைப் படிக்காத வேதங்களை உங்களிடம் படிக்க விரும்புகிறேன்.

வால்மீகி: சீதா! பிறவிப் பயனென்று நான் கருதும் என் படைப்பைப் பற்றி உனக்கு நான் சொல்ல வேண்டும். இராம கதையை நான் மாபெரும் காவிய நூலாக எழுதி வருகிறேன். நேராக நீயே ஆசிரமத்தில் புகுந்தது எனக்கு நல்லதாய்ப் போனது. உங்கள் வனவாசக் காண்டத்தை இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். நீ ஆசிரம வாசியாக வந்திருப்பதால், என் இராமகதை மெய்யான வரலாற்றுக் காவியமாக உயிர்த்தெழப் போகிறது. உயிரற்ற என் நூலுக்கு உண்மையான உனது திருவாய் மொழி ஆத்மாவை ஊட்டப் போகிறது. இராமாயணம் என்னும் பெயரை அதற்கு வைத்திருக்கிறேன். என் காவிய நூலுக்கு இன்னும் பல விபரங்கள், விளக்கங்கள் வேண்டும். எனக்குத் தெரியாத தகவலை நீ சொல்ல வேண்டும். ஏழு அல்லது எட்டுக் காண்டங்களில் இராம கதை முடியும் என்று நினைக்கிறேன். அயோத்தியா காண்டம், வனவாசக் காண்டம், இலங்கைக் காண்டம் ஆகியவற்றில் பல பகுதிகள் இன்னும் நிரப்பப்பட வேண்டும். பதி உன்னைக் காட்டுக்கு அனுப்பியது இராமாயணக் காவியம் பூர்த்தியாகவோ என்று நான் நினைக்கிறேன்! மெய்யான நிகழ்ச்சிகளைத் துல்லியமாகக் கூற, உன்னை இங்கே அனுப்பியது விதி என்று சொல்வேன்! எல்லாம் ஆண்டவன் செயல். இராமாயணத்தில் இதுவரை நான் எழுதிய ஓலைகளை நேரமுள்ள போது, நீ சரிபார்க்க வேண்டும். தவறுகள் இருப்பின் தயங்காமல் கூறு! நான் அவற்றைத் திருத்திக் கொள்வேன். மேலும் ஆசிரமத்தில் புதியதாகச் சேரும் சீடர்களுக்கு நீ கல்வி புகட்டலாம். நீ விரும்பும் வேதங்களைச் சொல்லிக் கொடுப்பது என் பொறுப்பு.

சீதா: உங்கள் பணியை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொள்கிறேன், மகரிஷி. உங்கள் வரலாற்றுப் படைப்பான இராம கதைக்கு என் கசந்த வாழ்க்கையும், நேரடிப் பங்களிப்பும் உதவி செய்ய முடியும் என்று கனவிலும் நான் கருதவில்லை. இரண்டாம் வனவாசத்தில் என் குழந்தை பிறக்கவும், மகரிஷி மூலம் நான் வேதக் கல்வி பயிலவும், இராம காவியத்தை முடிக்கவும் வாய்ப்புக் கிடைக்கப் போவது அறிந்து ஒரு வகையில் எனக்கு மகிழ்ச்சியே!

வால்மீகி: சீதா! நீ இன்று ஓய்வெடுத்துக் கொள். நாளை முதல் இராமகதை எழுதும் கூட்டுப் பணியைத் துவங்குவோம். இராமகதை வரலாற்றுக் காவியமாக அமைய இறைவன் எனக்களித்த வாய்ப்பை என்ன வென்று சொல்வது! (வால்மீகி மகிழ்ச்சியுடன் வெளியே செல்கிறார்)

[சில மாதங்கள் கழித்து ஆசிரமத்தில் சீதாவுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறக்கின்றன. வால்மீகி முனிவர் முதலில் பிறந்த பையனுக்கு குசா என்றும், இரண்டாவது பிறந்த பையனுக்கு லவா என்றும் சூட்டுகிறார். லவா, குசா இருவரும் குருகுலவாசப் பாடசாலையில் குரு வால்மீகியின் நேர்பார்வையில் கல்வி, ஒழுக்க நெறி, யோகா உடற்பயிற்சி, மனப்பயிற்சி, வில்பயிற்சி, வாள்பயிற்சி, சூலாயுதப் பயிற்சி, குதிரை ஏற்றம் போன்றவற்றைக் கற்றுக் கொள்கிறார்கள். இறுதியில் இரட்டை இளைஞர் வில்பயிற்சியில் மேதமை அடைந்து, வயது வந்தோரையும் வீழ்த்திடும் திறமை பெறுகிறார்கள். அன்னை சீதா சிறுவர் மீது தீராத அன்பைக் பொழிந்து, அவளது வாழ்க்கையிலும் புது மலர்ச்சி பொங்கி எழுகிறது. இடையிடையே தன் சோக வாழ்க்கையைப் பற்றிப் பிள்ளைகளிடம் சிறிது சிறிதாகக் கூறுகிறாள். லவா, குசா இருவருக்கும் தந்தை இராமனைப் பற்றியும், தான் பிரிக்கப் பட்டதையும் வேதனையோடு பலமுறை சொல்லியிருக்கிறாள்.]

***********

காட்சி நான்கு

அயோத்திய புரியில் ஆரம்பித்த அசுவமேத யாகம்

இடம்: அயோத்திய புரி அரண்மணைநேரம்: மாலைபங்கு கொள்வோர்: இராமன், இலட்சுமணன், பரதன், சத்துருக்கனன், மகரிஷி வசிஸ்டர், விசுவாமித்திரர், மன்னர்கள், பத்து அல்லது பன்னிரெண்டு வயதுப் பாலகர்கள்: லவா, குசா. அனுமான், அங்கதன், சுக்ரீவன்.[அமைப்பு: மாமன்னன் இராமன் அசுவமேத யாகம் செய்வதற்குத் திட்டமிட்டுகிறான். மகரிஷி வசிஸ்டர் பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் ஆகியோர் மூவரையும் அழைத்து யாகத்திற்கு ஒரு குதிரையைத் தியாகம் செய்யத் தயாரிக்கச் சொல்கிறார். அநேக மன்னர்கள், பெரியோர்கள், முனிவர்கள் ஆகியோருக்கு இராமன் ஓலை அனுப்பி அசுவமேத யாகத்தில் பங்கு கொள்ள வேண்டுகிறான். விசுவாமித்திர முனிவர் அவரது சீடர் படையுடன் வருகை தந்தார். சீதாவின் தந்தை ஜனக மாமன்னர் கூடக் கலந்து கொண்டார். இராமனுடைய பக்கத்து ஆசனத்தில் சீதாவுக்குப் பதிலாக முழுவடிவத் தங்கச்சிலை ஒன்று செய்யப்பட்டு வைக்கப் பட்டிருந்தது. ஜனக மன்னர் சீதாவின் சிலையைப் பார்த்ததும் திகைப் படைந்து அவர் மனதில் ஏதோ ஓர் ஐயப்பாடு எழுகிறது. இலங்கா புரியிலிருந்து மீண்டு பட்டத்து அரசியான சீதாவைப் பார்க்கப் போன ஜனக மன்னர், அவள் நாடு கடத்தப் பட்டிருப்பதும், வால்மீகி ரிஷியின் ஆசிரமத்தில் அடைக்கலமாகி இருப்பதும் தெரியவந்து மிகவும் மனமுடைந்து போகிறார்.
அணிகலன்கள் பூட்டப் பட்ட அழகிய வெள்ளைக் குதிரை ஒன்று அரண்மனை வாயிலில் நின்றது. ஆட்டுத் தோலில் எழுதப்பட்டுக் குதிரையின் கழுத்தில் தொங்கிய ஓர் அறிக்கையில் எச்சரிக்கை காணப்பட்டது. ‘பகைவரை ஒழித்துக்கட்டும் கோசலச் சக்கரவர்த்தி மேன்மை மிகு இராம வேந்தருக்கு இக்குதிரை சொந்தமானது. குதிரையை மதித்து வரவேற்போர் அனைவரும் அவரது ஆணைக்குக் கீழ்ப்படிந்து அவர் கேட்கும் வரிப்பணத்தை காலாகாலத்தில் கட்டி விடவேண்டும். குதிரையை வழிமறித்துக் கட்டிப் போடுவோர் மாமன்னர் இராமரது பகைவராகக் கருதப்படுவர்! அத்துடன் குதிரையைப் பிடிப்போர் இராமச் சக்கரவர்த்தியை எதிர்த்துப் போரிடவும் தயாராக வேண்டும் ‘.போர்த்துறைக்குத் தளபதியாக நியமிக்கப் பட்டுள்ள சத்துருகனன், குதிரை முன்னே செல்ல பின்னே பலத்த படையினருடன் வழிநடத்திச் சென்றான். குதிரையும், சத்துருகனன் பட்டாளமும் பிறகு பல படகுகளில் ஏறிக் கங்கை நதியைத் தாண்டி அப்பால் வால்மீகி ஆசிரமம் வழியாகச் சென்றன. காட்டில் விளையாடிக் கொண்டிருந்த லவா, குசா இரட்டையர், ஒப்பனை செய்யப்பட்டு வெள்ளைக் குதிரை கம்பீரமாகச் செல்வதைக் கண்டு பூரிப்படைந்து, அறிக்கையை வாசித்து அதைப் பிடித்து நிறுத்தினர்! அஞ்சாமல் குதிரையை மரத்தில் கட்டிப் போட்டு, அவர்களைத் தாக்க யார் வருகிறார்கள் என்று வேடிக்கை பார்த்தனர்.] சத்துருக்கனன்: [குதிரை கட்டப்படுவதைப் பார்த்துக் கேவலச் சிரிப்புடன்] பாலர்களே! இது விளையாட்டுப் பொம்மை இல்லை! உங்களுக்குப் படிக்கத் தெரியுமா ? வெள்ளைக் குதிரை கழுத்திலே தொங்குவதைப் படித்தீர்களா ? இல்லை. படிக்கத் தெரியாத பட்டிக் காட்டுப் பாலகர் என்றால் மன்னித்து விடுகிறேன்.

லவா, குசா: [ஆத்திரமுடன்] நாங்கள் படிக்கத் தெரியாத பட்டிக்காட்டுப் பாலகர் என்றா நினைத்தீர் ? அறிக்கைப் படித்துத்தான் யாம், குதிரையைப் பிடித்துக் கட்டினோம்! குதிரை வேண்டு மென்றால் கூறியபடி எங்களுடன் போரிடு! அல்லது குதிரையை எங்களிடம் விட்டுவிட்டுப் போய்விடு!

சத்துருகனன்: [அவர்களது வில்லைப் பார்த்து இறுமாப்புடன்] தோளிலே வில் தொங்குதே! வில்லை உங்களால் வளைக்க முடியுமா ? வில்லை வளைத்து அம்பைக் குறிவைத்து ஏவத் தெரியமா ?

லவா, குசா: ஏன் தெரியாது ? பாய்ந்தோடும் மானின் கண்ணை அடிப்போம்! பறக்கும் பறவையின் மூக்கை உடைப்போம்! பதுங்கித் தாவும் முயலின் காதைக் கிழிப்போம். எதிர்த்தால் உங்கள் நெஞ்சையும் இரண்டாய்ப் பிளப்போம்! குதிரையை எங்களிடம் விட்டுப் போவீர்! அல்லது உதிரத்தைக் கொட்டி உயிரை விட்டுப் போவீர்! முதலில் எடுங்கள் உங்கள் வில்லை! [இருவரும் தமது வில்லைக் கையில் ஏந்தி அம்பைத் தொடுக்கிறார்கள்].

சத்துருக்கனன்: (கோபம் மிகுந்து) அடே பொடிப் பயல்களே! என்னை மானென்று நினைத்தீரா ? அல்லது முயலென்று நினைத்தீரா ? இராமச் சக்கரவர்த்தியின் போர்த் தளபதி நான்! நொடிப் பொழுதில் உங்களை அம்பால் அடித்துத் துடிக்க வைப்பேன்! ஓடுங்கள் உயிரைப் பிடித்துக் கொண்டு! இதோ! என் எச்சரிக்கை அம்பு! [எச்சரிக்கை அம்பைக் கவனாக விடுகிறான். லவா, குசா இருவருக்கும் இடையே அம்பு உரசிக் கொண்டு போகிறது].

லவா, குசா: எங்களிடம் போரிட அஞ்சுகிறீர்! எச்சரிக்கை அம்பு எதற்கு ? இதோ! எங்கள் மெய்யான அம்புகள்! அவற்றின் வேகத்தைப் பார்! குறிவைக்கும் எங்கள் திறமையைப் பார்! [லவா, குசா இருவரும் அம்பு தொடுத்தெய்ய, சத்துருகனன் வலது கையை உரசிக் கொண்டு ஒன்றும், இடது கையை உரசிக் கொண்டு அடுத்ததும் பாய்கின்றன!]

சத்துருகனன் சினத்துடன் தன் வில்லை வளைத்து அடுத்து, அடுத்து அம்புகளைத் தொடுக்கிறான். ஓரம்புக்கு இரட்டை அம்புகள் எதிர்த்து வரவே, குழம்பி திகைத்துப்போய் கையில் காயம்பட்டுக் கீழே விழுந்து மயக்கம் அடைகிறான். மற்ற போர் வீரர்களும் அடிபட்டு விழுகிறார்கள். உயிர் பிழைத்த ஒற்றர் சிலர் அயோத்திக்கு மீண்டு சத்துருக்கனன் தோற்றுப் போய் விழுந்து விட்டதை இராமனிடம் கூறுகிறார்கள். அயோத்திய புரியில் சத்துருகனன் படைக்கு நேர்ந்த தோல்வியைக் கேட்டு இராமன் அதிர்ச்சி யடைந்து அடுத்து இலட்சுமணனை அனுப்புகிறான். சிறுவர் இருவரையும் கொல்லாது உயிருடன் கைப்பற்றி வருமாறு கட்டளை யிடுகிறான். இலட்சுமணன் காட்டுப் போர்க்களத்தில் லவா, குசா இருவரையும் பார்த்து, குதிரையை அவிழ்த்து விடும்படிக் கெஞ்சுகிறான். குசா வேடிக்கைக்காகக் குறிவைத்து அம்பை ஏவிஇலட்சுமணன் கீரீடத்தில் அடித்து வீழ்த்துகிறான். இலட்சுமணன் அவமானம் அடைந்து போரிடத் தொடங்குகிறான். இறுதியில் இலட்சுமணனும் கையில் அடிபட்டு வீழ்கிறான். செய்தியை அறிந்த இராமன் பரதனை அனுப்பத் தீர்மானித்து பிறகு மனதை மாற்றித் திரும்புமாறு ஆணையிடுகிறான். இலட்சுமணனை வென்று வீழ்த்தும் வீரர்களும் காட்டுப் புறத்தில் வாழ்கிறார்களா என்று இராமன் பெருங்கவலை அடைகிறான். உடனே அனுமனைக் கூப்பிட்டு இராவணனைக் கலக்கி யடித்த தென்முனைப் படையைத் திரட்டக் கட்டளை யிடுகிறான். பரதன் தலைமையில் அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோரும், அவரது தென்னகப் படையினரும் கானகப் போர்க்களத்துக்கு வருகிறார்கள்.

************

காட்சி ஐந்து

லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு

இடம்: காட்டுப் போர்க்களம்.நேரம்: மாலைபங்குகொள்வோர்: இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், லவா, குசா, இராமன், சீதா. ஆசிரம மருத்துவர், சீடர்கள்.அரங்க அமைப்பு: பரதன் ஏவிய ஓரம்பில் லவாவின் கரம் காயமானது! [வில்லைக் கீழே போட்டுவிட்டுக் குசா லவா கையிக்குக் கட்டுப் போடுகிறான்] அடுத்துப் போரில் குசா பரதைனைக் காயப்படுத்தி முடமாக்கினான். கலங்கமற்ற சிறுவரைக் கண்டு பராக்கிரமமுள்ள அனுமான் படையினர் போரிடத் தயங்கி நின்றனர். அனுமான் ஏதோ சந்தேகப்பட்டுத் தன் ஒற்றன் ஒருவனை அனுப்பி ஆசிரமத்தில் சீதா இருப்பதை அறிந்து கொண்டான். அனுமான் சிறுவர்களின் கண்கள் இராமப் பிரபுவின் கண்களை ஒத்திருப்பதையும், முகச்சாயல் சீதாவின் முகத்தைப்போல் இருப்பதையும் கண்டு பேரதிர்ச்சி அடைந்தான்! அனுமானின் உடம்பு நடுங்க ஆரம்பித்துக் கைகள் தளர்ந்தன! இராமப் பிரபுவின் கண்மணிகளுடன் எப்படிப் போரிட்டு நான் சிறைப் படுத்துவேன் என்று மனமொடிந்தான் அனுமான்! அனுமான் படையினர் போரிடாமல் சும்மா நிற்பதைக் கண்டு, பரதன் பெருங் கோபம் அடைந்தான்! பரதன் சினத்தைக் கண்டு அனுமான் தயங்கிப் போரிட வந்தபோது லவா, குவா இருவரும் நடுங்கிக் கொண்டிருக்கும் அனுமானை எளிதாகப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப் போட்டனர். அப்போது இராமன் தேரில் வந்திறங்கிக் கோபத்துடன் நேராக இரட்டையர்களை நோக்கி நடந்தான்.

இராமன்: (லவா, குசா இருவரது வல்லமையை மனதிற்குள் வியந்தபடி, ஆங்காரத்தைக் கட்டுப்படுத்தி) அருமைச் சிறுவர்களே! யார் நீங்கள் ? யார் உங்கள் பெற்றோர் ? எங்கிருந்து வந்தவர் நீங்கள் ?லவா, குசா: (போரை நிறுத்தி) நீங்கள் யார் ? எங்கிருந்து வருகிறீர்கள் ? நீங்கள் கூறுங்கள் முதலில்.இராமன்: என் பெயர் இராமன். கோசல நாட்டு மன்னன் நான். அயோத்திய புரியிலிருந்து வருகிறேன். அந்த குதிரையை அனுப்பியன் நான்தான்!

லவா, குசா: (இருவரும்) ஓ! அப்படியா ? அந்த குதிரைப் பிடித்தவர் நாங்கள்தான்! எங்கள் அன்னை மிதி நாட்டு இளவரசி! பெயர் சீதா! எங்கள் தந்தையார் பெயரும் இராமன்தான்! ஆனால் நாங்கள் அவரை இதுவரைக் கண்டதில்லை!லசா: என் பெயர் லசா! இவன் பெயர் குசா! நாங்கள் இரட்டையர்! அன்னை ஆசிரமத்தில் இருக்கிறார். தந்தை கோசல நாட்டில் எங்கிருக்கிறார் என்று தெரியாது.

இராமன்: [அதிர்ச்சி அடைந்து, தளர்ச்சியுற்று வில்லைக் கீழே போடுகிறான். சிறுவர்களை நெருங்கிக் கனிவுடன் உற்று நோக்குகிறான்] சமர்த்தான உங்களுக்கு லவா, குசா என்ற அழகான பெயர்களை இட்டவர் யார் ? உங்களுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்தவர் யார் ?

லவா, குசா: எங்கள் குரு வேத மகரிஷி வால்மீகி! … ஏன் வில்லைக் கீழே போடுகிறீர் ? [அவர்களும் வில்லைக் கீழே போடுகிறார்கள்]. ஒன்று எங்களிடம் போரிடுங்கள்; அல்லது குதிரை எங்களிடம் விட்டுவிட்டு ஓடுங்கள். ஓடுபவரின் மீது யாம் அம்பு தொடுப்பதில்லை! ஆயுதமற்ற மனிதருடன் யாம் போரிடுவதில்லை! அது அறமற்றது என்று எங்கள் குருநாதர் சொல்லியிருக்கிறார்! இராமன்: [சிரித்துக் கொண்டு] உங்கள் யுத்த தர்மத்தை மெச்சுகிறேன். ஆயுதமற்ற நபருடன் நானும் போரிடுவதில்லை! அஞ்சாத சிறுவருடரும் நான் போரிடுவதில்லை! ஆமாம், வல்லமை மிக்க வில்லம்பு வித்தையை, நீங்கள் கற்றுக் கொள்ள எத்தனை மாதங்கள் ஆயின ?

லவா, குசா: எத்தனை மாதங்களா ? எத்தனை வருடங்கள் என்று கேளுங்கள்! ஆமாம், ஏன் நீங்கள் சிறுவருடன் போரிடுவதில்லை ? அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் எங்களிடம் போரிட்டார். நீங்கள் ஏன் போரிட அஞ்சுகிறீர் ? சிறுவருடன் போரிடக் கூடாது எந்த வேதம் சொல்லுகிறது ? உங்கள் குருநாதர் யார் ?

இராமன்: எமது குருநாதர் வசிஸ்ட மகரிஷி. நீங்கள் இருவரும் சிறுவர். நான் வயது முற்றிய வாலிபன். நான் உங்கள் இருவருடன் போரிடுவது முறையன்று.

லவா, குசா: அது சரி மாமன்னரே! எங்களில் ஒருவருடன் போரிடுங்கள்! உங்கள் யுத்த தர்மத்தின்படி அதுதான் தர்ம மென்றால், எங்களில் ஒருவருடன் போரிடுங்கள்! ஆமாம், உங்கள் குரு வசிஸ்டர், எங்கள் குரு வால்மீகியை விட வல்லவரா ?

இராமன்: ஆம் பாலர்களே! வசிஸ்ட மகரிஷி, வால்மீகி மகரிஷியை விட சற்று வல்லவர்தான்! … ஆனால் நான் சிறுவன் ஒருவனுடன் எப்படிப் போரிடுவது ? உங்கள் வயதைப் போல் எனக்கு மூன்று மடங்கு வயது! அதுவும் தர்மமாகாது! உங்களில் எவருடனும் நான் போரிடப் போவதில்லை …. நான் உங்களுடன் போரிட்டால் உங்கள் அன்னைக்குப் பிடிக்காது!

லவா, குசா: ஏன் அப்படிச் சொல்லி போர் செய்ய பயப்படுகிறீர் ? முதலில் குதிரையை நாங்கள் கட்டிப் போட்டதே, எங்கள் அன்னைக்குத் தெரியாது. ஆசிரமத்தில் இருக்கும் எங்கள் அன்னை இதைப் பற்றிக் கவலைப்படார். எதற்காக எங்கள் தாயின் எதிர்ப்புக்குப் பயப்படுகிறீர் ? எங்களுடன் போரிட, எங்கள் அன்னையின் அனுமதியை ஏன் நாடுகிறீர் ? நமக்குள் நடக்கும் அசுவமேத யாகப் போரில், எங்கள் அன்னையைக் கொண்டு வராதீர்கள். … ஆமாம், எங்கள் குரு வால்மீகியை விட, உங்கள் குரு வசிஸ்டர் வல்லவர் என்பது உண்மை என்றால், எங்களுடன் போரிட்டு அதை நிரூபித்துக் காட்டுங்கள்!

இராமன்: அதில் ஒரு சிக்கல் உள்ளது! நீங்கள் சிறுவரானதால், உங்களிடம் போரிட உங்கள் அன்னையின் அனுமதி தேவை. அவசியம் தேவை. அதுதான் தர்மம். ஆமாம், நீங்கள் ஏன் உங்கள் தந்தையை இதுவரைப் பார்க்க வில்லை ?

லவா, குசா: தர்மத்தைக் குறிப்பிட்டு ஏன் இப்படித் குதர்க்கம் பேசுகிறீர் ? தந்தை இருக்குமிடம் எங்களுக்குத் தெரியாது! தெரிந்தாலும் எங்களுக்கு வழி தெரியாது! வழி தெரிந்தாலும் அன்னையின் அனுமதி கிடைக்காது! எங்கள் தந்தைதான் எங்களைக் காண வரவில்லை! எங்களைக் காண விருப்பமு மில்லை! அவருக்கு நேரமுமில்லை! அவர் மிக்கப் பிடிவாதம் கொண்டவராம். அவர் பெரிய பராக்கிரமசாலியாம்! அவரைக் கண்டால் அசுரர்கள் ஓடிப்போய் விடுவார்களாம்! … ஆனால் எங்கள் தாயை அவர்தான் காட்டுக்குத் துரத்தி விட்டாராம்! கடும் கல்நெஞ்சக்கார மனிதர்! அவர் எங்கள் தாயைக் காட்டுக்குத் தனியே அனுப்பியது தர்மமாகாது.

இராமன்: [யோசனையுடன்] ஒருபுறம் பார்த்தால் அது அதர்மம்தான்….! ஆனால் வேறு கோணத்தில் பார்த்தால் அது அதர்மமாகத் தோன்றாது! …. அது தர்மமா அல்லது அதர்மமா என்பது வாதத்துக்கு உரியது! … ஆமாம், அவரைக் காண நேரிட்டால் என்ன தண்டனை கொடுப்பீர்கள் ?

லவா, குசா: [தரையில் கிடந்த வில்லை எடுத்து] இந்த அம்புகளால் அவரது நெஞ்சைப் பிளப்போம்! …. [சிறுவர்களின் வில்போரைப் பற்றி ஆசிரமத்தில் கேள்வியுற்று அப்போது சீதை ஓடி வருகிறாள். காவி நிறப் புடவை உடுத்திய சீதா ஆசிரமத்தின் மற்ற சீடர்களுடன் போர்த்தளத்துக்கு வருகிறாள்] …. அதோ எங்கள் அன்னை! எங்களை நோக்கி வருகிறார். …. [சீதா இராமனைக் கண்டும் காணாது, முதலில் அனுமானைக் கட்டிப் போட்டுள்ள அந்த மரத்தடிக்குப் பதறிக் கொண்டு செல்கிறாள். இராமன் சீதாவை நேராக நோக்க மனமின்றி அவளைத் தவிர்த்துக் குதிரை கட்டப்பட்டுள்ள வேறு மரத்தடிக்கு நகர்கிறான். லவா, குசா தாயைத் தொடர்கிறார்கள்]

சீதா: கண்மணிகளே! என்ன அலங்கோலம் இது ? உடனே அனுமானை அவிழ்த்து விடுங்கள்! [லவா, குசா இருவரும் ஓடிப்போய் அனுமானின் கட்டை அவிழ்த்து விடுகிறார்கள். ஆசிரமச் சீடர்கள் பரதனுக்கும் மற்ற படையினருக்கும் சிகிட்சை அளிக்கிறார்கள். அனுமான் சோக மடைந்து சீதாவைக் கும்பிடுகிறான்]

அனுமான்: [கண்ணீர் பொங்கி சீதாவின் காலில் விழுந்து வணங்கி] மகாராணி! இந்த காட்டிலா, இந்தக் கோலத்திலா, இந்த நிலையிலா உங்களை நான் காண வேண்டும் ? உங்களைக் காட்டிலே காணும் துர்பாக்கியம்தான் அடியேனுக்கு எழுதப்பட்டுள்ள விதியா ? அன்று இலங்காபுரி அசோக வனத்தில் உங்களை முதலில் கண்டு பிடித்தபோது எத்தகைய ஆனந்தம் அடைந்தேன் இன்று உங்களைக் கண்டபின் எதிர்மறையாக என் நெஞ்சம் பற்றி எரிகின்றது மகாராணி! சீரும் செல்வத்திலும் வளர்ந்த மிதிலாபுரி மன்னரின் செல்வி மாளிகையில் வாழாது, இந்த வனாந்திரக் காட்டில் சிறுவர்களுடன் எப்படி காலந் தள்ளுகிறீர்கள் ?

சீதா: [கண்ணீருடன்] எழுந்திடு! மாளிகையை விட மகரிஷி ஆசிரமத்தில் நான் மகிழ்ச்சியாக வாழ்கிறேன். யாரென்று உன்னைத் தெரியாமல் கட்டிப் போட்டு விட்டார்களே எம காதகர்கள்! … கண்மணிகளே! அனுமான்தான் அசோக வனத்தில் சிறைப்பட்ட என்னை முதலில் கண்டுபிடித்து மீட்பதற்கு உதவி புரிந்தவர். அவரிடம் மன்னிப்புக் கேளுங்கள்! … அயோத்திய புரியில் அசுவமேத யாகம் புரிவதைப் பற்றி மகரிஷி எனக்குச் சொன்னார்! ஆனால் அந்தக் குதிரையைக் கட்டிப் போட்டவர் என் கண்மணிகள் என்பது இன்றுதான் எனக்குத் தெரிந்தது.

லவா, குசா: [அனுமானின் காலில் விழுந்து வணங்கி] நாங்கள் தவறு செய்து விட்டோம். எங்கள் அறியாமைக்கு மன்னிக்க வேண்டும் ஐயனே!

அனுமான்: [எழுந்திடுங்கள்] ஒன்றும் அறியாத பாலர் நீங்கள்! … தாயே! உங்கள் வீர புத்திரர்களை நான் அடையாளம் கண்டு கொண்டேன். கண்களைப் பார்த்தால் இராமப் பிரபுவின் கண்கள்! முகத்தைப் பார்த்தால் அன்னையின் முகம்! சிறுவர்கள் யாரென்று தெரிந்தபின் என் கைகள் வலுவற்றுப் போயின! போரிட முடியாமல் தயங்கினேன், பின்வாங்கினேன்! எளிதாக இருவரும் என்னைப் பற்றி மரத்தில் கட்டிப் போடுவதை நான் வேடிக்கை பார்த்தேன்! … இளவரசர் பரதனுக்கு என்மேல் மிகவும் கோபம்! .. யாரென்று தெரியாமல் சிறுவர்கள் பரதன், இலட்சுமணன், சத்துருகனன் மூவரையும் கூடக் காயப்படுத்தி விட்டார்கள்! வில்லம்பு வித்தகர் இராமப் பிரபுவின் புதல்வராக இருக்க வேண்டுமே தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது என்று மனதில் அழுத்தமானது.

சீதா: அட பாவமே! அவர்கள் எங்கே காயப்பட்டுக் கிடக்கிறார்கள் ?

அனுமான்: அது நேற்றைய நிகழ்ச்சி! படையினர் அவர்களைத் தூக்கி வந்தபின் அரண்மனை மருத்துவர் காயத்துக்குக் கட்டுப் போட்டார்கள். …. அதோ அவர்களும் உங்களைக் காண இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள். பரதனுக்கு ஆசிரம மருத்துவர் கட்டுப் போடுகிறார். [கைக்கட்டுடன் இலட்சுமணன், சத்துருகனன் சீதாவின் முன்வந்து வணங்கிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.]

சீதா: [பொங்கி வரும் கண்ணீருடன்] என் கண்மணிகள் உங்களை யாரென்று தெரியாமல், காயப்படுத்தி விட்டார்களே! ஒரு தவறு நடந்த பின், அடுத்தடுத்துப் பல தவறுகள் நிகழ்ந்து விட்டன! லவா, குசா இவருக்கும் உங்கள் பெயரைச் சொல்லிக் கொடுத்தேனே தவிர, உங்கள் முகத்தைக் காட்ட முடியாமல் போனதே மனம் என்று நோகிறது! (லவா, குசாவைப் பார்த்து) இவர்கள் உனது தந்தையின் தம்பிமார்கள், இலட்சுமணன், சத்துருகனன். அதோ! அங்கே கட்டு போடப்படுபவரும் ஒரு தம்பியே. அவர் பெயர் பரதன். அவர்கள் யாவரும் உன் சித்தப்பபன்மார்.

லவா, குசா: [இருவரும் காலில் விழுந்து] ஐயம்மீர்! எங்களை மன்னிக்க வேண்டும். நாங்கள் தெரியாமல் உங்ளைக் காயப்படுத்தி விட்டோம். [லவா, குசா இருவரும் தாயை விட்டு, குதிரை கட்டப்பட்டிருக்கும் மரத்தடிக்குச் செல்கிறார்கள்]

இலட்சுமணன்: [கண்ணீரைத் துடைத்துக் கொண்டு] இருவரும் வில்லாதி வீரர்கள்! சூராதி சூரர்கள்! பெரியவராகிய நாங்கள் சிறுவர் என்று அஞ்சிச் சற்று தயக்கமுடன்தான் போரிட்டோம்! ஆனால் சிறுவர்களுக்கு அப்படி ஓர் அச்சமில்லை! …. அதோ அண்ணா வந்திருக்கார்! …. உங்களிடம் அண்ணா பேசினாரா ? நீங்கள் அவரிடம் பேசினீர்களா ? … லவா, குசா உங்களையும், அயோத்தியபுரிக்கு அழைத்துச் செல்ல அண்ணாவிடம் கேட்கப் போகிறேன்.

சீதா: [முகத்தை திருப்பிக் கொண்டு] வேண்டாம் இலட்சுமணா. உங்கள் அண்ணா என்னைப் பார்க்கவா இங்கு வந்திருக்கார் ? குதிரையைப் பிடித்துப் போக வந்திருக்கார்! அயோத்திய புரிக்கு குதிரையை அழைத்துப் போவார்! என்னை மீண்டும் அழைத்துப் போவார் என்று எனக்கு நம்பிக்கை யில்லை! நீயும் அதை எதிர்பார்க்காதே! அவருடைய முதல் வேலை, அடைபட்டுள்ள குதிரைக்கு விடுதலை! அபலை சீதாவுக்கு விடுதலை என்று நினைக்காதே! வேண்டாம் இலட்சுமணா! அவரைக் கேட்காதே! என்னைக் கூட்டிச் செல்ல அவருக்கல்லவா தெரிய வேண்டும் ? நீ கேட்டு அவர் என்னை அழைத்துச் செல்வதா ? முதலில் நீ கேட்பதே எனக்கு அவமானம்! நான் எப்போதே தேவை யற்றவளாகி வெளியே தள்ளப் பட்டவள். இப்போது எப்படி ஒரு தேவையை நீ உண்டாக்கப் போகிறாய் ? பாலை வனமான என் வாழ்க்கை இனி சோலை மயமாக மீளாது. அது எனக்குத் தெரியும். அவர் வந்து அழைத்துச் செல்வார் என்று அன்று நீதான் சொன்னாய். இதுவரை இங்கு வராதவர், இன்று ஏன் வந்தார் என்பது எனக்கும் தெரியும். உனக்கும் தெரியும். பத்துப் பனிரெண்டு வருடமாக அவர் என்னைக் காண இங்கு வந்தது கிடையாது! இருக்காளா அல்லது இறந்து விட்டாளா என்று கேட்டது கூடக் கிடையாது! என்னை மறந்து போனவருக்கு நீ மீண்டும் நினைவூட்ட வேண்டுமா ? வேடிக்கையாய் இருக்கிறது! இப்போதும் என்னைத் தேடியோ, என்னுடன் பேசவோ, என்னுடன் உறவு கொண்டாவோ உன் அண்ணா வரவில்லை! என்னைக் காண வந்திருந்தால், என்னோடு கனிவாகப் பேசினால், நான் அவரை மதிப்பேன்! உபசரித்து ஆசிரமத்து வரும்படி அவரை அழைப்பேன்!

சத்துருகனன்: அப்படிச் சொல்லாதீர்கள் அண்ணி. அண்ணாவின் உள்ளக் கோயிலில் உங்களைத் தவிர வேறு யாருமில்லை. அண்ணாவின் மனது தங்க மனது! அசுவமேத யாகத்திடலுக்கு முன்னால் யாவரும் காணும்படி உங்கள் முழுவடிவத் தங்கச் சிலையை வார்த்து அமர வைத்துத் தினமும் தரிசித்து வருகிறார்!

சீதா: உன் அண்ணாவுக்கு என்மேல் இத்தனை பாசமா ? எனக்கு இது தெரியாதே! அவரது உள்ளக் கோயிலில் எனக்கு இன்னும் இடமுள்ளதா ? ஆச்சரியமாக இருக்கிறது! உயிர்ச் சிலையை அகற்றிவிட்டுத் தங்கச் சிலைக்குச் சாம்பிராணி போடுகிறார். ஊர்க் கண்களுக்குத் தங்கச் சிலையாய் நானிருப்பது, என் நெஞ்சில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுகிறது. உயிருள்ள மனைவி காட்டில் தவிக்கும் போது, உயிரற்ற தங்கச்சிலை சுகவாசியாக மாளிகையில் இருப்பது நியாயமா ? இலட்சுமணா! அந்த உயிரற்ற சிலை, உயிர்ச்சிலை போல் உடனே அகற்றப் படவேண்டும். நான் சொன்னதாக உன் அண்ணாவிடம் சொல். என் உருவம், ஓவியம் எதுவும் அரண்மனையில் இருக்கக் கூடாது! நான் ஒன்றும் உயிரற்ற சிலையோ, வண்ண ஓவியமோ அல்லது போட்டிப் பரிசோ இல்லை! செத்தவருக்குதான் சிலை வைப்பார்கள்! உன் அண்ணாவின் ஏட்டில் உண்மையாக, நான் செத்துவிட்டவள்தான்! ஒரு பந்தயப் போட்டி வீரர் உன் அண்ணா!. பந்தயத்தில் வென்ற பரிசைக் காட்சி மாளிகையில் வைப்பவர். அன்று கானகத்தில் நான் கடத்தப் பட்டதும் அவர் தனியாகவே வாழ்ந்தார்! இன்றும் நானில்லாமல் அவர் தனியாக வாழ்கிறார். மனைவி என்னும் ஒரு பெண்பிறவி அவருக்குத் தேவை யில்லை! அவருக்கு வேண்டியது குடிமக்கள் பாராட்டு! குடிமக்களைத் தலைமேல் வைத்துக் கொண்டதற்கு நான் பலியானேன்! தன் பராக்கிரமத்தை நிலைநாட்ட, அவர் அசுவமேத யாகம் செய்தார்! அறியாத என் புதல்வர் குதிரையைக் கட்டிப் போட்டு அசுவமேத யாகப்போரில் அவரது தம்பிமார், காயம் அடைந்தார்கள். எல்லாத் துயருக்கும் அவரே காரண கர்த்தா!

சத்துருக்கனன்: அண்ணி! அண்ணா அசுவமேத யாகம் செய்ததால்தானே லவா, குசாவை அண்ணாவும், நாங்களும் கண்டு கொள்ள முடிந்தது!

சீதா: இல்லையப்பா! என்னைப் பிரித்த உங்கள் அண்ணா அசுவமேத யாகம் செய்து, என் கண்மணிகளைப் பிரிக்கப் போகிறார்! என் புதல்வரைக் கண்ட உன் அண்ணாவின் கண்கள் என்னை ஏன் காணவில்லை ? குதிரையைக் காண வந்தவ என்னருமைப் பதி, ‘நீ எப்படி இருக்கிறாய் ‘ என்று என்னிடம் ஏன் ஒரு வார்த்தை கூட பேசவில்லை ? தீண்டப்படாத அபலை மனைவியை ஒருமுறைக் கனிவுடன் கூட ஏன் பார்க்கவில்லை ?

இலட்சுமணன்: அண்ணி! அப்படிச் சொல்லாதீர்கள். இம்முறை நாங்கள் அண்ணாவை மீறி, உங்களை அரண்மனைக்கு அழைத்துச் செல்லப் போகிறோம்.

சீதா: நான் விரும்பி வந்தால்தானே! நான் என்ன குதிரையா இழுத்துக் கொண்டு போக ? உன் அண்ணா அழைத்தாலும், நான் வர மறுப்பேன்! அப்படி அவர் அழைத்தாலும், முதல் தடவையாக அவரை எதிர்க்கப் போகிறேன்! நான் என்ன அரண்மனை அந்தப்புர அடிமையா ? வா வென்றால் வணங்கி வருவதும், போ வென்றால் பணிந்து போவதும் மிதிலை நாட்டு இளவரசியிடம் இனி நடக்காது. முன்னாளில் சீதா அடியாளாக பதியின் பாத மலர்களைக் கழுவிக் கொண்டிருந்தாள். சீதாவின் அடிமைக் காண்டம் என்றோ முடிந்து விட்டது, இலட்சுமணா!

+++++++++++++++

காட்சி ஆறு

முடிவை நோக்கிச் சீதா

இடம்: வால்மீகியின் ஆசிரமத்துக்கு அருகில் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள காடு.நேரம்: மாலை வேளைபங்குகொள்வோர்: வால்மீகி, இராமன், சீதா, இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், லவா, குசா, ஆசிரமச் சீடர்கள். மலை மேட்டுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அசுவமேத யாகத்தின் வெள்ளைக் குதிரை கட்டப்பட்டுள்ளது.(இராமன் மரத்தில் கட்டுண்ட குதிரையை அவிழ்க்கச் சென்றபோது, லவா, குசா இருவரும் குதித்தோடிச் சென்று மறிக்கின்றனர்)லவா, குசா: [தரையில் கிடந்த வில்லைக் கையில் எடுத்து] நிறுத்துங்கள் கோசல மன்னரே! முதலில் எடுங்கள் உங்கள் வில்லை! குதிரையைக் கட்டியவர் நாங்கள்! முதலில் எங்களுடன் போரிட்டு வென்ற பின்தான் நீங்கள் குதிரையை விடுவிக்கலாம்.இராமன்: [கனிவுடன்] அருமைப் பாலர்களே! உங்களுடன் நான் போரிடப் போவதில்லை! நீங்களும் என்னுடன் போரிடத் தேவை யில்லை! இந்தக் குதிரை எப்படி எனக்கு சொந்தமோ, அதே போல் அது உங்களுக்கும் சொந்தமே! நாமெல்லாரும் இப்போது ஒருபக்கம்! நான் உங்கள் எதிரியும் அல்லன்! நீங்கள் எமக்குப் பகைவரும் அல்லர்!

லவா, குசா: கோசல மன்னரே! என்ன புதிர் போடுகிறீர்! சொந்தம் கொண்டாடி எங்களை ஏமாற்ற முடியாது! நீங்கள் வில்லை எடுக்கப் போகிறீர்களா ? இல்லையா ? ஆயுதமற்ற எதிரியோடு யாம் வில்போர் தொடுப்பதில்லை என்றது நினைவிருக்கிறதா ? போரிடாமல் நீங்கள் குதிரையை அவிழ்ப்பது தவறு. எங்கள் முதல் எச்சரிக்கை இது! எடுங்கள் உங்கள் வில்லை!இராமன்: போருக்கு முதலில் உங்கள் அன்னையிடம் அனுமதி பெற்று வாருங்கள். அப்போது நான் யாரென்றும் உங்கள் அன்னையிடம் கேளுங்கள். அதன் பிறகு நீங்கள் என்னுடன் போரிடலாம்.

லவா, குசா: [ஆச்சரியமோடு] மறுபடியும் எங்கள் அன்னையை ஏன் இழுத்து வருகிறீர் ? எங்களை யாரும் நிறுத்த முடியாது. ஆமாம் … நீங்களே சொல்லுங்கள் யாரென்று ?

[அப்போது வேகமாய் வால்மீகி முனிவர் வருகிறார். லவா, குசா இருவரும் தலை குனிந்து கைகூப்பி வணங்குகின்றனர்.]

வால்மீகி: பாலர்களே! நிறுத்துங்கள் போரை! கீழே போடுங்கள் வில்லை!

லவா, குசா: (இருவரும் ஒருங்கே) வணக்கம் குருதேவா! (வில்லை இருவரும் கீழே போடுகிறார்கள்)

இராமன்: (இராமனும் தன் கிரீடத்தை எடுத்துவிட்டுக் குனிந்து வணங்குகிறான்.) வணக்கம் மகரிஷி!

வால்மீகி: அருமைச் சிறுவர்களே! யாரென்றா கேட்கிறீர்கள் ? இவர்தான் உங்கள் அருமைப் பிதா! …(இராமனைப் பார்த்து) மாமன்னா! உங்கள் குதிரையைச் சிறுவர்கள் கட்டிப் போட்டது அறியாமற் செய்த தவறே! பலரைக் காயப்படுத்தியதும் அவர்கள் அறியாமற் செய்த தவறே! எனக்குத் தெரியாமல் போனது. முதலில் தெரிந்திருந்தால், தேவையற்ற இந்தப் போரை நிறுத்தி யிருப்பேன். இத்தனை பேர் காயப் பட்டதையும் தவிர்த்திருப்பேன்!

லவா, குசா: [அலறிக் கொண்டு] கோசல மன்னர் எங்கள் தந்தையா ? எங்கள் அருமைத் தந்தையா ? … (லவா மட்டும்) நாங்கள் போரிடப் போன இவர் எங்கள் பிதாவா ? எங்களுடன் ஆரம்பத்திலிருந்தே போரிட மறுத்த இவர் எங்கள் தந்தையா ? தான் யாரென்று கூறினாலும், தந்தை என்று சொல்லாது, மறைத்துக் கொண்ட இவர் எங்கள் பிதாவா ?

இராமன்: அருமைப் பாலர்களே! மெய்யாக நீங்கள் யாரென்று முதலில் எனக்குத் தெரியாது. உங்கள் அன்னையின் பெயரைக் கேட்டதும் நான் போர் தொடுக்க வந்ததை நிறுத்தினேன். உங்களுடன் போரிடவும் மறுத்தேன்.

குசா: எங்கள் அன்னையப் பற்றித் தெரிந்ததும், தந்தை நான் என்று நீங்கள் ஏன் எங்களுக்குக் கூறவில்லை ? எங்கள் அன்னையைக் கனிவின்றி, கண்ணிய மின்றிக் காரண மின்றிக் கானக விலங்குபோல் காட்டுக்குத் துரத்திய கோசல மன்னர் நீங்கள் தானா ? பிதாவாக இருந்து, எங்களை இதுவரைக் காண வராத கோசல மன்னர் நீங்கள் தானா ? இன்று இவரைக் கண்டும் காணாமல் போனது எங்கள் நல்ல காலந்தான்! [இராமனைக் கூர்ந்து நோக்கி] எங்கள் தந்தை என்று சொல்லக் கூட உங்களுக்குத் தயக்கமா ? உங்கள் புதல்வர் என்று சொல்வதில் கூட அத்தனை வெறுப்பா ? அல்லது வெட்கமா ? [இராமன் வேதனை தாங்காமல் தலையைத் தொங்க விடுகிறான்.]

வால்மீகி: மாமன்னா! ஆசிரமத்தில் சீதாவுக்கு பிறந்த இந்த இரட்டைச் சிறுவர் உன்னருமைப் புத்திரர்! அதில் சந்தேகம் வேண்டாம்! [லவா, குசா இருவரையும் பார்த்து] பாலர்களே! சந்தேக மின்றி இவர் உங்கள் தந்தைதான்!

இராமன்: [ஆச்சரியமோடு] மகரிஷி! சீதாவுக்குப் பிறந்த இருவரும் மெய்யாக என் புதல்வர்களா ?

லவா, குசா: வந்தனம், வந்தனம் பிதாவே! [வணங்குகிறார்கள்]. [ஆத்திரமோடு] சந்தேகம் தீராத் தந்தை! சந்தேகம்! சந்தேகம்!! சந்தேகம்!!! சந்தேகக் குணம் இன்னும் தந்தைக்குக் குறைய வில்லையே!

வால்மீகி: ஆமாம் மாமன்னா! இவர்கள் உன் அருமைப் புதல்வரே! பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவர் சாட்சியாகச் சொல்கிறேன். இவர்கள் உன் அருமைப் புதல்வரே! அன்றைக்கு இலட்சுமணன் காட்டில் விட்டு சென்ற கர்ப்பவதி சீதாவுக்கு என் ஆச்சிரமத்தில் தங்க இடமளித்தேன். சீதாவுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தார்கள். லவா, குசா வென்று பெயர் வைத்தவன் நானே! பிறந்ததும் அவர்களது ஜோதிடத்தைக் கணித்து, கிரகங்களின் அமைப்பையும், எதிர்காலத்தையும் சோதித்தேன். இராஜ அம்சங்கள் படைத்த அவர் இருவரும், மாமான்னரின் பரம்பரை வாரிசுப் பட்டமேறும் இளவரசர்கள். அதில் எந்த ஐயமும் இல்லை, மாமன்னா!

[அச்சமயத்தில் பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் மூவரும் கையில் கட்டுகளுடன் முன்வந்து வால்மீகி மகரிஷியை வணங்குகிறார்கள். சீதா தனியாகத் தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கிறாள். அனுமான் சீதாவின் அருகில் நிற்கிறான்.]

மூவரும்: வணக்கம் மகரிஷி! (பரதன் மட்டும்) யாரென்று கேட்டுக் கொள்ளாமல், சிறுவருடன் நாங்கள் போரிட்டதும், எங்கள் தவறே! அசுவமேத யாகம் புரிந்ததின் எதிர்பாராத பலன், சீதா அண்ணி, சிறுவர்கள் அண்ணாவுடன் சந்திப்பு! அவர்களுடன் எங்கள் சந்திப்பு!

இலட்சுமணன்: மகரிஷி! வீர புத்திரரான லவா, குசா இருவருக்கும் நீங்கள் அளித்த வில் பயிற்சியைப் பாராட்டுகிறோம்! பாருங்கள் சிறுவர்கள் எமக்களித்த அழியாத நினைவுச் சின்னங்களை! [மூவரும் தங்கள் கட்டுகளைக் காட்டிச் சிரிக்கிறார்கள்]. அனுமார் ஒருவர்தான் வில்லடிக்குத் தப்பியவர்! இராம பரம்பரைப் பாலர்களைக் கண்டதும் எங்கள் கைகளும் ஏனோ அம்புகளை ஏவக் கூசின! வில்லை முழுவதும் வளைக்க எங்கள் மனம் விழைய வில்லை! நாங்கள் விடும் அம்புகள் சிறுவர் மேல் பட்டுவிடக் கூடாது என்று அஞ்சினோம்! கண்கள் குறி வைத்தாலும் கைகள் தடுமாறி அம்புகள் அவர்கள்மேல் படாது அப்பால் சென்றன. ஆயினும் ஓரிரு அம்புகள் எப்படியோ சிறுவர்களைக் காயப்படுத்தி விட்டன!

வால்மீகி: அருமைச் சிறுவர்களே! உன் தந்தைக்கு மூன்று தம்பியர். மூத்தவர் பரதன், அடுத்தவர் சத்துருகனன், இளையவர் இலட்சுமணன். எல்லாருக்கும் மூத்தவர்தான் உன் பிதா. அதோ சீதாவின் பக்கத்தில் நிற்பவர்தான் அனுமான்! உன் பிதாவின் வலது கை போன்றவர்! அவர் இந்தக் கண்டத்தின் தென்முனை வாசி. சீதாவை இலங்காபுரியிலிருந்து மீட்கக் கடலில் கற்பாலம் அமைத்தவர் அவர். சீதாவின் இருப்பிடத்தை முதலில் கண்டவரும் அவரே! இராவணன் வயிற்றைக் கலக்கி இலங்காபுரிக்குத் தீயிட்டவர் அவர்! தென்னக வீரர் அனுமாரின் உதவி கிடைத்திரா விட்டால், உன் அன்னையை, உன் தந்தை மீட்டிருக்க முடியாது!

லவா, குசா: (இருவரும் அனுமான், பரதன், சத்துருகனன், இலட்சுமணன் அனைவரையும் மீண்டும் வணங்குகிறார்கள்) மகரிஷி! சிறிது நேரத்துக்கு முன் அன்னையும் அவர்களை அறிமுகப் படுத்தினார்கள்.

வால்மீகி: [லவா, குசா இருவரையும் பார்த்து] பாலர்களே! குதிரையை அவிழ்த்து விடுங்கள். இனிமேல் குதிரைக்காகப் போர் வேண்டாம்.

லவா, குசா: குருதேவா! அப்படியே செய்கிறோம். [அனுமான் சென்று குதிரையை அவிழ்த்துக் கயிற்றைக் கையில் பிடித்துக் கொள்கிறான்]. [இருவரும் அடுத்து இராமனின் பக்கத்தில் போய் நிற்கிறார்கள். இராமன் இருவரையும் அன்புடன் தழுவிக் கொள்கிறான்] பிதாவே! ஏன் எங்கள் தாயைக் கண்டும் காணாதது போல் நிற்கிறீர்கள் ? தாயுடன் பேச ஏன் தயங்குகிறீர்கள் ?

இராமன்: கண்மணிகளே! உங்கள் அன்னைக்குத் தண்டனையிட்ட நான், முன்னின்று பேசச் சக்தியற்று நிற்கிறேன். பேசிட நாக்கு கூசுகிறது!

லவா, குசா: நாங்கள் அன்னையிடம் அழைத்துச் செல்கிறோம், வாருங்கள். (தந்தையின் கரங்களைப் பற்றி இருவரும் தாயிடம் அழைத்துச் செல்கிறார்கள். வால்மீகி, பரதன், இலட்சுமணன், சத்துருகனன் அனைவரும் தொடர்ந்து பின்னே செல்கிறார்கள்.)

வால்மீகி: [கீழே குனிந்திருக்கும் சீதாவைப் பார்த்து] சீதா! உன் துயர்கள் எல்லாம் முடியும் நேரம் வந்து விட்டது. நீ இராப்பகலாய் நினைத்துக் கொண்டிருக்கும் உன் பதி இதோ உன்னெதிரில் வந்து நிற்கிறார். அரண்மனைக்கு உன்னை அழைத்துச் செல்ல வந்திருக்கிறார். நீயும் உன் சிறுவர்களும் அயோத்திய புரிக்கு உன் பதியோடு செல்ல வேண்டுகிறேன். என் பணி இன்றுடன் முடிந்து விட்டது.

சீதா: மகரிஷி! செய்யாமல் செய்த உங்கள் உதவிக்கு வையகமும், வானகமும் கூட ஈடாகாது! உங்கள் உதவிக்கு எங்கள் நன்றி. மகரிஷி! நான் பாலகருடன் பதியோடு வாழ விரும்புகிறேன். ஆனால் உத்தரவு எங்கிருந்து வர வேண்டுமோ, அந்த உதடுகள் ஊமையாக உள்ளனவே! இன்று அவரது ஓரக்கண் கூட என்னைக் கண்டு கொள்ள வில்லையே! என்னை அழைத்துப் போக என் பதி விரும்புகிறாரா ? கேளுங்கள் மகரிஷி!

வால்மீகி: மாமன்னா! அரண்மனை மாளிகையில் வசிக்க வேண்டிய மிதிலை நாட்டு அரச குமாரி இந்த மண் குடிசையில் வாழக் கூடாது! உன் பட்டத்துச் சிங்கக் குட்டிகள் உன் மடிமீது விளையாட வேண்டியவர், இப்புழுதி மண்ணில் விளையாடிக் கொண்டிருக்கலாமா ? சீதாவையும், இரட்டைச் சிறுவர்களையும் அயோத்திய புரிக்கு அழைத்துச் செல்ல வேண்டியது உன் கடமை! என் ஆழ்ந்த வேண்டுகோளும் அது!

இலட்சுமணன்: அண்ணா! அண்ணி போனபின் அரண்மனை ஒளியற்று இருண்டு போய் உள்ளது! மனைக்கு வேண்டும் விளக்கு! உங்களுக்கு வேண்டும் துணைக்கு! அரண்மனை கலகலப்பாக இருக்க இரட்டைக் கண்மணிகள் நம்மோடு வர வேண்டும். இன்னும் எத்தனை வருடம் வனவாசத்தில் அண்ணி தனிமையாகத் துயர்ப்பட வேண்டும் ? எத்தனை வருடம் நீங்களும் தனியாக வாழ வேண்டும் ? இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்.

சத்துருகனன்: அண்ணியை நாடு கடத்திய அநீதி நம்மை அலங்கோல நிலைக்குத் தள்ளி யிருக்கிறது! ஒருவராகக் கடத்தப்பட்ட அண்ணி, இப்போது மூவராய்த் திரும்பட்டும்.

பரதன்: அண்ணா! வாய் திறந்து பேசுங்கள்! அழைத்திடுங்கள் அண்ணியை! இம்முறை கூட்டிச் செல்லா விட்டால், இனி நான் அரண்மனையில் கால் வைக்க மாட்டேன்.

இராமன்: [சீதாவை நேராக நோக்காமல்] மகரிஷி! லவா, குசா இருவரையும் நிச்சயம் கூட்டிச் செல்கிறேன்.

இலட்சுமணன்: அண்ணியை அழைத்திடுங்கள் அண்ணா! உங்கள் கனிவு, கண்ணியம், கடமை எங்கே போயிற்று ? அண்ணியைப் புறக்கணிக்காது மீண்டும் ஏற்றுக் கொள்வது உங்கள் கடமை. உங்கள் இல்லற நியதி. அண்ணியை மணந்தபோது ஜனக மாமன்னருக்கு நீங்கள் அளித்த வாக்கு. இதுவரை நடந்ததை மறப்போம். இனிமேலும் அறத்துடன் நடப்போம்.

லவா, குசா: அருமைப் பிதாவே! அன்னையை ஏன் அழைக்க வில்லை ? … எங்களால் அன்னையைப் பிரிந்து வாழ முடியாது! … அன்னை வராமல் நாங்களும் வரப் போவதில்லை. இதுவரை தந்தைக் காணமால் காட்டில் வாழ்ந்தோம்! இனி தாயைக் காணாமல் மாளிகையில் வாழ்வதா ? … என்ன முரண்பாடான வாழ்க்கை இது ? தந்தையைத் தெரியாமல் இருந்தோம், எந்தப் பிரச்சனையும் இல்லை! பிறந்தது முதல் என்றும் நாங்கள் அன்னையைப் பிரிந்தது கிடையாது. தந்தையின் ஆடம்பர மாளிகை வேண்டாம்! எங்கள் தாய் வாழும் ஆசிரமக் குடிசையே போதும். தந்தை யின்றி வாழ்ந்தோம்! தாயின்றி வாழ முடியாது! அருமைப் பிதாவே! அன்னையிடமிருந்து எங்களைப் பிரிக்காதீர்! வேரில்லாத விழுதுகளாகப் போய்விடுவோம்!

இராமன்: அருமைச் செல்வர்களே! நீங்கள் அரண்மனைக்கு உரியவர்கள்! கோசல நாட்டை எதிர்காலத்தில் ஆளப்போகும் என் பட்டத்து இளவரசர்கள்! அங்குதான் நீங்கள் வளர வேண்டும். ஆனால் உங்கள் அன்னையின் நிலமை வேறு!

லவா: ஆம் பிதாவே! அந்தப் பட்டத்து இளவரசர்களைக் உங்களுக்குப் பெற்றுத் தந்தவர் எங்கள் தாய்! நீங்கள்தான் கைவீட்டார்கள். தாயைக் காப்பது எங்கள் பொறுப்பு! எங்கள் கடமை! ஆனால் நாங்கள் தாயைக் கைவிட மாட்டோம்.

வால்மீகி: மாமன்னா! சீதாவின் புனிதத்தில் இனியும் சந்தேகம் வேண்டாம். இதுவரை சீதா உயிருடன் இருந்து உன்னருமைச் சிறுவரைப் பெற்றுத் தனியாக உன்னுதவி இல்லாமல் வளர்த்து ஆளாக்கி விட்டதே, அவளது புனிதத்தை நிரூபிக்கிறது.

இராமன்: மகரிஷி! எனக்குச் சீதாவின் புனிதத்தில் எள்ளளவு சந்தேகமும் இல்லை! ஆனால் கோசல நாட்டுக் குடிமக்களுக்கு நான் என்ன காரணம் சொல்வேன் ? அவரது ஐயப்பாட்டை எப்படித் தீர்ப்பேன் ? என்ன செய்வதென்று தெரியாத குழப்ப நிலை எனக்கு! சீதாவை அயோத்திய புரிக்கு அழைத்து வந்தால், குடிமக்களின் புகாருக்கு நான் மீண்டும் ஆளாவேன்! மக்கள் என்னை மறுபடியும் ஏசுவார்! அவமானப் படுத்தி என்னைப் பேசுவார்! என் புத்திரர் இருவரையும் ஏளனம் செய்வார்! கோசல மன்னரும் அவரது சந்ததிகளும் ஏசப்பட்டு நகைப்புக்கிடமாக வேண்டுமா ? காட்டு ராணியை பனிரெண்டு வருடங் கழித்து அழைத்து வந்து, மீண்டும் நாட்டு ராணி ஆக்கிக் கொண்டான் இராமன் என்று வீதிக்கு வீதி குடிமக்கள் முரசடிக்கப்பட வேண்டுமா ?

சீதா: [சீற்றத்துடன்] மகரிஷி! தயவு செய்து அவரைக் கெஞ்சாதீர்கள்! நான் என்றோ தீண்டப்படாதவள் ஆகிவிட்டேன்!  அயோத்திபுரி நரகத்தில் ஆடம்பரமாகச் சாவதை விட, வனவாச ஆசிரமத்தில் அபலையாக வாழ்வதில் ஆனந்தம் அடைகிறேன்! ஆத்மா நீங்கிய எனது வெற்றுடலை இராவணன் தீண்டியதைவிட, ஆத்மா தாங்கிய மனைவியை ஏற்க மறுக்கும், பதியின் புறக்கணிப்பு என் நெஞ்சைப் பிளக்கிறது. அன்று அசோக வனத்தில் சிறைப்பட்ட போது, என்னை மீட்க என் கணவர் வருவார் என்று நம்பி உயிரை வைத்திருந்தேன். இன்றைய வனவாசத்தில் என்னை மீட்டுச் செல்ல எவரும் வரப் போவதில்லை! எனக்கு முடிவு இனி இங்குதான்! நான் தீண்டப்படாத சாபம் பெற்றவள்! நிரந்தரமாகத் தள்ளப் பட்டவள்! பாழாய்ப் போன குடிமக்கள் பதியைத்தான் பிரித்தார்கள்! இப்போது என் கண்மணிகளையும் பிரிக்கப் போகிறார்கள்! (கோவென்று அழுகிறாள்)

லவா, குசா: (தாயின் கண்ணீரைத் துடைத்து) அம்மா! அழாதீர்கள்! நாங்கள் உங்களை விட்டுப் பிரிய மாட்டோம்! தந்தை வேண்டாத தாயிக்குப் பிறந்தவர்கள் நாங்கள்! சந்தேகப் பிதாவுக்குப் பிறந்தவர்கள் நாங்கள்! (இராமனைப் பார்த்து) குடிமக்கள் எங்கள் பிறப்பைப் பற்றியும் புகார் செய்தால், எங்களையும் நீங்கள் ஒருநாள் காட்டுக்கு துரத்தி விடுவீர்களா ? அன்னியப் பெண்டிர் கரம் எங்கள் மீது பட்டுவிட்டால், நாளைக்கு குடிமக்கள் எங்களையும் புகார் செய்வார்களா ? அவ்விதம் உங்கள் காதில் பட்டால் உடனே நாங்களும் நாடு கடத்தப் படுவோமா ? அன்னிய ஆடவன் தொட்டால் பெண் தீண்டப்படாதவள் ஆகிறாள்! அதைப்போல் அன்னியப் பெண் தொட்டால் ஆணும் தீண்டப்படாதன் ஆகிவிடுவானா ?

சீதா: அருமைக் குமாரர்களே! உங்கள் பிதா குடிமக்களின் குரலுக்கு முதல் மதிப்பளித்தாலும், அதிலும் ஏற்றம் இறக்கம் உண்டு. ஆடவர் மேல் வகுப்பு! பெண்டிர் கீழ் வகுப்பு! குடிமக்களில் பாதித் தொகையான பெண்டிருக்கு வாக்குரிமை யில்லை! நாக்குரிமையும் இல்லை! முதலில் தந்தை சொல்படிந்து என்னைக் கலந்து பேசாமல், அவரே ஒப்புக்கொண்டு வாக்கைக் காப்பாற்றப் பதினாங்கு வருடம் வனவாசத்தில் இன்னல் பட்டோம். நான் காட்டில் தூக்கிச் செல்லப்பட்டு சிறையில் பட்ட துயருக்கும், என் பெயர் கறை பட்டதற்கும் அவரே மூல காரணம். இப்போது குடிமக்கள் சொல்படிந்து என்னைக் கலந்து உரையாடாமல், காட்டுக்குத் துரத்தியதற்கும் அவரே காரண கர்த்தா. தனது பட்டத்து அரசியை இதுவரை அவர் மனிதப் பிறவியாகக் கருதி மதித்தே இல்லை! என் இதயக் கோயிலில் அவரது உருவம் ஒன்றுதான் உள்ளது! ஆனால் அவரது நெஞ்சில் யாரில்லாத பாலை வனம்தான் உள்ளது. ஊர் மக்களுக்கு ஏக பத்தினி விரதியெனக் காட்டிக் கொண்டு, ஒப்புக்காக என்னுருவில் ஒரு தங்கச் சிலையைப் பக்கத்தில் வைத்திருகிறார்! உயிருள்ள மனைவி தனியே காட்டில் தவிக்கும் போது, உயிரற்ற சிலையை சிம்மாசனத்தில் வைத்து பூஜித்து வருவதுபோல் காட்டுவது தர்மமா ? மகரிஷி! என் சிலையை உடனே அவர் அகற்ற வேண்டும். என் சிலைகூட அவரை ஒட்டி இருக்கக் கூடாது! என் உருவம், ஓவியம் எதுவும் அலங்காரப் பொருளாக அரண்மனையில் காட்சி தரக் கூடாது!

இராமன்: அப்படியே ஆகட்டும்! அரண்மனைக்குச் சென்றதும் சீதாவின் தங்கச் சிலையை அகற்றி விடுகிறேன்.

வால்மீகி: சீதா! அரண்மனைக்கு மீளுவது பற்றி உன் இறுதியான முடிவென்ன ?

சீதா: (அழுகையுடன்) மகரிஷி! தனிமை என்னைக் கொல்கிறது! நான் பதியுடன் வாழ விரும்புகிறேன். என் கண்மணிகளைப் பிரிய எனக்கு விருப்ப மில்லை! ஆனால் அவர் விரும்பி என்னை வா வென்று கனிவோடு இதுவரை அழைக்க வில்லையே! வேண்டாத பதியோடு நான் எப்படி வாழ முடியும் ? அசோக வனத்தில் முதன்முதல் அவர் என்னைப் பார்த்த அதே வெறுப்புப் பார்வையை இன்றும் அவர் முகத்தில் காண்கிறேன். நாங்கள் ஒருவரை ஒருவர் நேசித்து மணந்து கொள்ளவில்லை! நாங்கள் ஒருவரை ஒருவர் எக்காலத்திலும் பிரிய மாட்டோம் என்று வாக்களித்து மாலை இடவில்லை! அவர் ஜனகா புரிக்கு வந்தது என்னைத் திருமணம் புரியவா ? இல்லை, பந்தயப் போட்டியில் பங்கு கொள்ள! சுயவரப் போட்டியில் அவர் வில்லை முறித்து ஜெயித்த பந்தயப் பரிசு நான். பந்தயக்காரருக்கு பரிசு முக்கிய மில்லை. பந்தய வெற்றிதான் முக்கியம். பந்தயத்தில் பரிசாக என் தங்கை இருந்தாலும் அவர் ஏற்றுக் கொண்டு மாலை யிட்டிருப்பார்! அதே போல்தான் இலங்கைப் போரும் நடந்தது! இலங்கைக்கு அவர் வந்தது, என்னை மீட்பதுபோல் தோன்றியது! ஆனால் இராவணன் பாராக்கிரமம் அவரது ஆற்றலுக்குச் சவால் விட்டதுதான் மெய்யான காரணம்! இலங்கா புரியில் போரிட்டார்! வென்றார்! புகழ்பெற்றார்! என்னை மீட்ட பிறகு அவர் முகத்தில் நான் கண்டது என்ன ? அருவருப்பான ஒரு துச்சப் பார்வை! கரிந்த புண்ணைப் பார்ப்பதுபோல், அவரது கண்கள் என்னைப் பார்த்தன! பல மாதம் பிரிந்திருந்த பதி என்னை ஆசையோடு அணைத்துக் கொள்ளவில்லை! பல நாட்கள் எனக்கு முத்தமிடவு மில்லை! அன்றைக்கே நான் தீண்டத்தகாதவள் ஆகி விட்டேன். நான் தேவை யில்லாதவள்! அவரது இதயத்தில் எனக்கு இடம் கிடையாது. அவர் ஓர் உத்தம பதி! கோடியில் ஒருவர்! என்னால் புண்பட்ட அவரது பாலை நெஞ்சில் எந்தப் பெண்ணும் இடம்பெற முடியவில்லை!

வால்மீகி: மாமன்னா! சீதாவை அழைத்துப் போவது பற்றி இறுதியான உன் முடிவு என்ன ? இன்றில்லை என்றால், என்றைக்கு அழைத்துப் போவாய் ?

இராமன்: [மேலே பார்த்தபடி] என் முடிவு என்றோ தீர்மானிக்கப் பட்டது! மகரிஷி! மன்னித்து விடுங்கள் என்னை! அன்று நான் எடுத்த முடிவே, இன்று நான் எடுக்கப் போகும் முடிவு! மன்னனாகத்தான் இப்போது என்னால் வாழ முடியும். இல்லற மனிதனாக நான் ஆள முடியாது! மனைவியை ஏற்றுக் கொண்டால், நான் மகுடத்தைத் துறக்க வேண்டியதிருக்கும்! குடிமக்கள் புகார்கள் என் செவியில் விழுந்த போது இந்த வினா எழுந்தது. மகுடமா அல்லது மனைவியா என்ற கேள்வி என்னைப் பல நாட்கள் வாட்டியது! தந்தைக்குக் கொடுத்த வாக்குப்படி நான் மகுடத்தை ஏற்றுக் கொண்டேன். மகுடத்தைக் காப்பாற்ற வேண்டுமானால், நான் மனைவியை இழக்கத்தான் வேண்டும்! .. ஆம்! நிரந்தரமாக நான் சீதாவைத் தியாகம் செய்யத்தான் வேண்டும்! ..[பரதனைப் பார்த்து] பரதா! நான் வனவாசம் புகும் முன்பு, உனக்களித்த வாக்கு நினைவில் இருக்கிறதா ? பதினான்கு வருடம் வனவாசம் கழித்து, கோசல நாட்டு ஆட்சியை ஏற்றுக் கொண்டு, உன்னை விடுவிப்பதாக உறுதி கூறியதை மறந்துவிட்டாயா ? நாட்டுக்காக நான் சீதாவைத் தியாகம் செய்வதைத் தவிர, வேறு எதுவும் எனக்கு தெரியவில்லை. ஆனால் லவா, குசாவை நான் அழைத்துச் செல்கிறேன், மகரிஷி!

வால்மீகி: ஈஸ்வரா! இராமகதை இப்படித் திசைமாறிப் போகும் என்று கனவு கூடக் காணவில்லை! நான் எழுதும் நூலுக்கு இராமாயணம் என்று தவறாகப் பெயரிட்டு விட்டேன். அதை மாற்றிச் சீதாயணம் என்று தலைப்பிடப் போகிறேன். இராமன் பட்ட அவமானத்தை விடச் சீதா பட்ட கொடுமை மிகையானது! இராம கதையே சீதாவைப் பற்றியது! இராம கதையே சீதாவால் கூறப்பட்டது! சீதாவைச் சிறைத் தண்டனை, பதியின் புறக்கணிப்பு, அவள் பட்ட துயரங்கள் கூறும் பக்கங்கள்தான் இராம கதையில் அதிகம்!

சீதா: வேண்டாம் மகரிஷி! என் கொடி இராம கதையில் பறக்க வேண்டாம்! அசோகவன மீட்பிலே, அன்று என் கொடி நூலறுந்து பறக்க முடியாமல் போனது! இராமகதையில் என் கொடி பறக்க வேண்டாம்! நீங்கள் படைக்கும் இராம காவியத்தில் அவர் கொடியே வானோங்கிப் பறக்கட்டும். என் சோக வரலாறு, தெரிந்தும் தெரியாமல் அதில் மறைந்தே இருக்கட்டும்.

பரதன்: அண்ணா! உங்களுக்கு கிடைத்த ஓர் அரிய வாய்ப்பை இழந்து விட்டார்கள்! அண்ணிக்கு மீண்டும் நீங்கள் தண்டனை அளிப்பது அநீதி! அக்கிரம்! அதர்மம்! மகரிஷி வேண்டியும் நீங்கள் கேட்கவில்லை! நாங்கள் மன்றாடியும் நீங்கள் புறக்கணித்தீர்! ஒரே பிடிவாதமாக அண்ணியை ஒதுக்கத் துணிந்தீர்! பாலர்களைப் பிரிக்க முனைந்தீர்! உங்களுக்குப் பணி செய்ய நான் இனி விரும்ப வில்லை! பதவியிலிருந்து நான் விலகிக் கொள்கிறேன்.

இலட்சுமணன்: [வில்லைக் கீழே எறிந்து] அண்ணா! அண்ணியை மறுபடியும் புறக்கணித்தற்கு நானும் அரசாங்கப் பதவியிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

சத்துருகனன்: அண்ணா! இத்தனைப் பிடிவாதக்காரர் நீங்கள் என்று நான் நினைக்க வில்லை! போர்த் தளபதி பதவியிலிருந்து நானும் விலகிக் கொள்கிறேன்.

அனுமான்: இராம் பிரபு! மெய்யாக நீங்கள் மகாராணியாரைக் கைவிட்ட காரணம் இப்போதுதான் புரிகிறது, எனக்கு! இரண்டாவது முறை கண்டுபிடித்த பின்பு, இங்கே விட்டுப் போவது எனக்கு நியாயமாகத் தெரியவில்லை! இந்த வேதனையை என்னால் தாங்க முடியாது! நானும் உங்களுக்குப் பணி செய்வதை விட்டு தென்னாட்டுக்குத் திரும்பப் போகிறேன்.

லவா, குசா: (கடுமையாக) அருமைப் பிதாவே! அன்னையைப் பிரிந்து எங்களால் உங்களுடன் வாழ முடியாது. அன்னையை வரவேற்காத அயோத்தியா புரிக்கு நாங்களும் வரப் போவதில்லை! இங்கே அன்னையுடன் தங்கிக் கொள்கிறோம்.

வால்மீகி: [வேதனையுடன்] போதும் இந்த சத்தியாகிரகம்! சீதாவை மன்னர் புறக்கணிக்க அத்தனை பேரும் ஒருங்கே மன்னரைத் தண்டிக்கிறார்கள்! இந்த ஒத்துழையாமைப் போராட்டம் என்ன முடிவைத் தரப் போகிற தென்று எனக்குத் தெரியவில்லை! என்ன இக்கட்டான கட்டத்திற்கு சீதாவின் நிலை வந்து விட்டது ? மாமன்னரே! குடிமக்கள் புகாரை ஒதுக்கி, நீங்கள் சீதாவைக் கூட்டிச் செல்வதுதான் முறை. எல்லாப் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும். வாய் திறந்து ‘வாராய் ‘ என்று அழைத்துச் செல்லுங்கள்.

சீதா: [கண்ணீர் பொங்க] மகரிஷி! என்னை வைத்து துவங்கிய இப்போராட்டம் என்னால்தான் தீர்வு பெற வேண்டும்! என் கதையை நான்தான் முடிக்க வேண்டும்! அப்போது எல்லாரது பிரச்சனைகளும் தீரும்! உங்கள் இராம கதைக்கு நானே முடிவை எழுதுகிறேன்! எனது கதைக்கு வேறு முடிவே கிடையாது! (லதா, குசாவைப் பார்த்து) …. அருமைக் குமார்களே! உங்களைத் தாய் பிரியும் தருணம் வந்து விட்டது! வேறு வழியில்லை. நீங்கள் பட்டத்து வாரிசுகள். உங்கள் இடம் அரண்மனை! உங்களை வளர்ப்பது இனி உங்கள் தந்தையின் பொறுப்பு! என் பொறுப்பு இன்றோடு முடிந்து விட்டது! என் முடிவே இறுதி முடிவு! எல்லோரது பிரச்சனைகளுக்கும் தீர்வு காணும்….நான் வாழ்வதில் யாருக்கும் இனிப் பயனில்லை! … நான் தீண்டப் படாதவள்!.. நான் தேவைப் படாதவள்! … தனியாகத் தினமும் செத்துக் கொண்டிருப்பதை விட, ஒரே நொடியில் உலகை விட்டுச் செல்வது சுகமானது! நானினி வாழ்வதில் உங்களுக்குப் பலனில்லை! …. எனக்கும் பலனில்லை! … எல்லோரது பிரச்சனையும் என்னால்தான் தீர்க்க முடியும்! … நான் போகிறேன்! … [வேகமாய் ஓடி யாவரையும் கும்பிட்டுக் குன்றின் உச்சியிலிருந்து கீழே குதிக்கிறாள். அனைவரும் அவளைத் தடுக்க ஓடுகிறார்கள். ஆனால் தாமதமாகி விடுகிறது. சீதாவின் தலை பாறையில் அடிபட்டு அவளது ஆத்மா பிரிகிறது].

லவா, குசா: [ஓடிச் சென்று அழுகிறார்கள்] அம்மா! அம்மா! எங்களை விட்டுப் போக வேண்டாம். உங்களைப் பிரிந்து எப்படி இருப்போம் ?

வால்மீகி: [கண்ணீர் சிந்தி] சீதா! உனது ஆயுள் இப்படிக் கோரமாக முடியுமென்று நான் நினைக்க வில்லை! காட்டில் அபயம் அளித்த எனது ஆசிரமத்துக்கு அருகிலா, உனது ஆயுளும் இறுதியாக வேண்டும். … ஈஸ்வாரா! … என்ன பயங்கர முடிவு ? … இராம கதை இவ்விதம் சோகக் கதையாக முடிய வேண்டுமா ? [மரத்தடிக் குன்றில் தலை சாய்கிறார்].

[இராமன் தலையில் கையை வைத்துக் கொண்டு பாறையில் அமர்கிறான். இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன் யாவரும் குன்றின் அருகில் நின்று கதறி அழுகிறார்கள்]

இலட்சுமணன்: [கண்ணீருடன்] அன்று வனவாசத்தில் உங்களை இராப் பகலாய்ப் பாதுகாத்துக் கொண்டு நின்றேன்! இன்று உங்களைப் பாதுகாக்க முடியாது நீங்கள் உயிர் துறப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றேன்! வனவாசத்தில் நிரந்தரமாகப் பிரிய உங்களை அழைத்து வந்து மோசடி செய்த வஞ்சகன் நான். சாக வேண்டியன் நான்! வாழப் பிறந்தவர் நீங்கள்!

பரதன்: [கலக்கமுடன், ஆங்காரமாக] அண்ணி! உயிர் நீங்கிப் பாதாளத்தில் கிடக்கும் உங்கள் உடலுக்கு தகுந்த அடக்க மரியாதை கூடச் செய்ய முடியாமல் நாங்கள் நிற்கிறோம்! உங்கள் மரணத்துக்கு காரண கர்த்தாவான இராமச் சக்கரவர்த்தியை வரலாறு வாழையடி வாழையாகப் பழி சுமத்தும்! மனைவியைக் கொன்ற உத்தமன் என்று வருங்காலம் பறைசாற்றும்! மிதிலை நாட்டு அபலை முடிவுக்குக் கோசல நாட்டு மன்னன் மூல கர்த்தா என்பது எதிர்காலத்தில் தெரியாமலும் போகலாம்.

அனுமான்: [கதறி அழுகிறான்] பட்டத்து மகாராணி பட்ட துயர் போதாமல் இப்படி ஒரு பயங்கர முடிவா ? இதை எப்படித் தாங்குவேன் ? நீங்கள் இப்படிக் காட்டில் உயிர் துறக்கவா, நாங்கள் இலங்கையில் போரிட்டு உங்களைக் காப்பாற்றினோம் ?

[சீதாவின் உடல் பாதாளப் பள்ளத்தில் கிடக்க இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன் யாவரும் கைகூப்பி வணங்குகிறார்கள்].

வால்மீகி: இறைவா! மிதிலை மன்னரின் புதல்வி, கோசல மன்னரின் பத்தினி சீதாதேவின் ஆத்மா சாந்தியடைய நாங்கள் வேண்டுகிறோம். அபலை சீதாவின் துயர்க்கதை ஊரெல்லாம் பரவட்டும்! நாட்டு மாந்தருக்கு ஒரு பாடம் கற்பிக்கட்டும்.

[அனைவரும் அயோத்திய புரிக்குப் புறப்படுகிறார்கள். அழுது கொண்டிருக்கும் லவா, குசா இருவரையும் கையைப் பிடித்து இராமன் அழைத்துச் செல்கிறான். வால்மீகியும்
சீடர்களும் ஆசிரமத்துக்கு மீள்கிறார்]

********

சீதாயணம்

ஓரங்க நாடகத்தின் பின்னுரை

பின்னுரை: பன்முகமுடைய, பல இனங்கள் கொண்ட, பல மதங்கள் உடைய, பல மொழிகள் பேசும், பல மாநிலங்கள் ஒட்டிய பாரத நாட்டில் விடுதலைக்குப் பிறகு மதச் சண்டைகளும், இனச் சண்டைகளும், குழுச் சண்டைகளும், கட்சிச் சண்டைகளும் பெருகிக் கட்டுப்படுத்த முடியாமல் நிலைத்துப் போவது வருந்தத்தக்க வரலாற்று மைல் கற்களாகும். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக, இந்தியப் பிரிவினைக்குப் பிறகு மதப்போரை மறுபடியும் துவக்கி மும்மரமாக நடத்தி வருவது, அவதாரத் தேவனாகத் தவறாகக் கருதப்படும் இராமன் பெயரால் அயோத்தியில் கட்டப் போகும் புதுக்கோயில் என்பதை யாவரும் அறிவோம்! இராமன் பிறந்த புனித பூமியான அயோத்தியாவில் பாப்ரி மசூதி யிடிப்பும், அதே இடத்தில் ஓரடி பிசாகாமல் கோயில் எடுக்கும் யுத்தமும் ஆயிர வருடப் போராக ஆகும் போக்கு தென்படுகிறது! அரசியல் மேதைகளும், ஆன்மீக ஞானிகளும், ஆட்சி வர்க்கமும் இராமன் அவதார தேவன் அல்லன் என்று பலமுறைகள் பறைசாற்றி, உரையாற்றி, எழுதியும் வந்தால், இந்த தலைமுறையில் முடியா விட்டாலும், அடுத்து வரும் புதிய தலைமுறைகளில் மதப் போராட்டம் படிப்படியாய் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது!

இராமனைத் தெய்வீக நாயகனாகப் போற்றுவதற்குரிய எந்த சிறப்பான அம்சமும் அவன் வரலாற்றில் குறிப்பிடுவதற் கில்லை!புத்தரைப் போல, மகா வீரர் போல, இராமன் இந்து மதத்தையோ அல்லது வேறு எந்த மதத்தையோ பரப்பவில்லை! அசோக மாமன்னர் புத்த மதத்தை உலகெங்கும் பரப்பியது போல், இந்துக்கள் தேவனாய் வணங்கிடும் இராமன் இந்து மதத்தை எங்கும் பரப்பவு மில்லை, வளர்க்கவு மில்லை! அவனது வரலாற்றில் எந்த சமயத்திலும் சிந்திக்கத் தக்க, பொறிக்கத் தகுந்த எந்தப் பொன்மொழிகளோ அல்லது செம்மொழிகளோ பேசியதில்லை! தரணியைக் காக்க வந்த தார்மீக இந்துவென்று இராமன் என்றும் தன்னைக் கருதவில்லை! இராவணன் உள்பட அக்கிரமம் செய்த அரக்கர்களைக் கொன்றதைத் தவிர, வரலாற்று முக்கியத்துவம் பெற்ற எந்த மகத்தான பணிகளையும் இராமன் செய்திருப்பதாகத் தெரியவில்லை. கிருஷ்ண பகவான் இசைத்ததாகக் கூறும் பகவத் கீதை போல இராமன் இந்துமத வேத நூலெதுவும் எழுதவில்லை! மெய்யாக கிருஷ்ண பரமாத்மா பூமியில் அவதரித்துப் பகவத் கீதையைப் படைத்தார் என்பதும் தர்க்கத்துக்குரிய ஒரு வரலாற்றுத் தகவலே!

உலகிலே மாபெரும் மகாபாரதக் காவியத்தை எழுதிய வியாச முனிவர்தான் அற்புத வேதநூல் பகவத் கீதையை ஆக்கினார் என்பது என் அழுத்தமான கருத்து. பூமியில் அவதரித்து யுத்த களத்தில் பகவத் கீதை படைக்கும் கிருஷ்ண பரமாத்மா, பஞ்ச பாண்டவரில் அர்ச்சுனனுக்கு மட்டும் ஏன் தேரோட்டியாக வர வேண்டும் என்பதும் தர்க்கத்துக் குரியது. வியாச முனிவர் படைத்த உன்னத நூல் பகவத் கீதையைப் பின்னால் வந்தவர், கிருஷ்ண பரமாத்மா எழுதியதாக மாற்றி அந்நூல் பேரும் புகழும் பெற தெய்வீக முலாம் பூசி விட்டர்கள்.எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு, எப்பொருள் எத்தன்மைத் தாயினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று நமக்கு வள்ளுவர் கூறி இருக்கிறார்.

சுமார் மூவாயிரம் ஆண்டுக்கு முன்பு வால்மீகி முனிவர் தன் மூலநூல் இராமாயணத்தில் இராம கதையை முதலில் எப்படி எழுதி யிருந்தார் என்பதை அறிந்து கொள்ள முடியாது! மூலநூல் இராமாயணம் பின்னால் பலரால், பலமுறை மாற்றமாகித் தெய்வீக முலாம் பூசப்பட்டுப் புராணப் பொய்க் கதையாய், உணர்ச்சி ஊட்டாத, உயிரற்ற காவியமாய்ப் போனது. பனை ஓலையில் எழுதப்பட்ட இராமாயணம் இடைச் செருகல் நுழைந்து கலப்பட மாக்கட்ட ஓரு காப்பியம் என்று அரசியல் ஆன்மீக மேதை இராஜகோபாலாச்சாரியார் தானெழுதிய இராமாயண நூலில் கூறுகிறார்.தெய்வத்தைத் தொழாமல், கணவனைத் தினமும் தொழுது எழுகின்ற மனைவி பெய்யென்று சொன்னவுடன் மழை பெய்துவிடும் என்று வள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே எழுதி யிருப்பது, அக்கால இல்லங்களில் ஆட்சி செய்து வந்த ஆணாதிக்க வர்க்கத்தின் நியதியையும், வரலாற்றையும் காட்டுகிறது! எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்றும் அவரே சொல்லி யிருக்கிறார்.

வீட்டில் வாயைப் பூட்டி வைத்துக் கணவனால் சித்திரவதை செய்யப்படும் மனைவி, கணவன் எப்போது சாவான் என்று கடவுளைத் தினமும் வேண்டிக் கொள்வதில் எந்தத் தவறுமில்லை! முதற் குறளின் உட்பொருள் என்ன வென்றால், அக்காலத்திலும் பெண்டிர் தனித்துவ உணர்ச்சியும், விடுதலை முதிர்ச்சியும், குடும்பத் தலைவனை எதிர்த்திடும் துணிச்சலும் கொண்டிருந்தனர் என்பதே. அந்தக் காலத்துப் பெண்டிரின் அத்தகைய விடுதலை உணர்ச்சியை, தனித்துவத் துணிச்சலைக் கட்டுப்படுத்தவே, வள்ளுவர் ஒரு பெரும் பரிசுக் கொடையை உயர்வு நவிற்சியாக எடுத்துக் காட்டி யிருக்கிறார்! கணவனைத் தினமும் தொழுகின்ற பெண், பெய்யென்றால் மழை மெய்யாகப் பெய்யாதென்று மேதை வள்ளுவருக்குத் தெரியாதா என்ன ?

இராமாயணம், மகாபாரதம் போன்ற நமது புராண கதைகள் அனைத்தும் ஆணாதிக்க வழிபாடுகளையே, பல்லாயிரம் ஆண்டுகளாகப் பறைசாற்றி வருகின்றன! பஞ்ச பாண்டவர் மனைவி திரெளபதியைச் சூதாட்டத்தில் பகடைப் பனையமாக வைத்து இழந்தார்கள்! துரியோதனன் அடிமையான திரெளபதியின் துகிலைத் துச்சாதனன் சபை நடுவே உரித்து அவமானம் செய்ய, ஆனந்தம் அடைகிறான். எல்லாம் இழந்த காலத்தில் நளச் சக்கரவர்த்தி நள்ளிரவில் தூங்கும் மனைவியை விட்டு நழுவிச் செல்கிறான். பொய்யே பேசாத சத்தியவான், மனைவியை நடுத்தெருவில் நிற்க வைத்து விற்கிறான். இந்தியாவில் இன்றைக்கும் கணவன் இறந்ததும், மனைவி மறுமணம் செய்யக் கூடாதென்பதும், கணவன் இறந்தவுடன் மனைவியை உடன்கட்டை ஏற்றி உயிருடன் எரிப்பதும் ஆணாதிக்கப் பரம்பரையின் அடாத செயல்களே!

மனைவி இறந்து சுடுகாட்டுத் தீ அணைவதற்கு முன்பே, புதுப் பெண்ணை மணம் செய்யக் கணவன் திட்டமிடுவதும் ஆணாதிக்க நீதியின் அடாத செயலே! இப்போதும் பெரும்பான்மையான இல்லங்களில் ஆணாதிக்க வர்க்கம் ஆண்டு வந்தாலும், சிறுபான்மை இல்லங்களில் பெண்ணாதிக்கமும் கையோங்கி யுள்ளது! ஆணாதிக்கமோ அல்லது பெண்ணாதிக்கமோ இரண்டில் ஒன்றில்லாத இல்லங்கள் கலியுகத்தில் மிகமிகக் குறைவே.

இராமன் ஆண்ட காலத்தில் வாழ்ந்து, இராம வரலாற்றை அறிந்த வஷிஸ்டர், விஸ்வாமித்திரர், வால்மீகி ஆகிய முப்பெரும் முனிவர்களில் வால்மீகி மட்டும் இராம கதையை ஏன் எழுதினார் என்பது கேட்கத் தக்க ஒரு கேள்வி. மூன்று முனிவர்களில் யார் மூத்தவர், யார் இளையவர், யார் இடைப்பட்டவர் என்பது தெரியவில்லை. அவர்களில் முக்கியமாக வஷிஸ்ட முனிவரே இராமன், பரதன், சத்துருகனன், இலடசுமணன் ஆகிய நான்கு இளவரசர்களுக்கும் குருகுல ஆசிரமத்தில் ஆரம்பக் கல்வி முதல் வேத ஞானக் கல்வியும் புகட்டி, வில்வித்தை, வாள்வீச்சு போன்ற போர்த்துறை திறமைகளைப் பெறவும் பயிற்சி அளித்தவர். அதைப் போன்று ஆசிரமத்தில் சீதாவின் புதல்வர் லவா, குசா இருவருக்கும் ஆரம்பக் கல்வி, வில், வாள் போர்ப் பயிற்சி அளித்தவர், வால்மீகி. இராமனது வயது, லவா, குசா இரட்டையர் வயது வேறுபாடுகளைப் பார்க்கும் போது, வால்மீகி முனியே மூவரிலும் இளையவர் என்பதை ஒருவாறு ஊகிக்கலாம். இராம கதையை வால்மீகி முதலில் தானாகவே எழுத ஆரம்பித்தாரா அல்லது சீதா ஆசிரமத்தில் வந்த பிறகு எழுத ஆரம்பித்தாரா என்பதும் தெரியவில்லை. சீதா ஆசிரமத்தில் இருந்து தன் அவலக் கதை முழுவதையும் கூறிய பின், வால்மீகி இராம கதையில் கவர்ச்சி அடைந்து எழுதத் துவங்கி யிருக்கலாம் என்று கருதவும் இடமிருக்கிறது.

இராமகதை உண்மையாக நிகழ்ந்தது என்பது என் உறுதியான கருத்து. கம்பரும் பின்னால் இந்தி மொழியில் எழுதிய துளசிதாசரும் மூலக் கதையை சற்று மாற்றியுள்ளதாக இராஜாஜி கூறுகிறார். வால்மீகி இராமனைக் கடவுளின் அவதாரமாகச் சித்திரிக்கவில்லை என்றும், இராமன் தன்னை ஓர் அவதார தேவனாகக் கருதவில்லை என்றும் இராஜாஜி எழுதியுள்ளார். இராவணன் அழிக்கப் பட்டவுடன், இராமனின் அவதாரப் பணி முடிந்துவிட்டது என்றும், அயோத்திய புரியில் பட்டம் சூடிய பிறகு இராமன் சீதைக்கு இழைத்த இன்னல்களை நோக்கும் போது, அவன் வெறும் மானிட வேந்தனாகவே வாழ்ந்தான் என்றும் இராஜாஜி கூறுகிறார். முன்பாதிக் காலத்தில் இராமன் அவதாரத் தேவனாகத் தோன்றிப் பல மாய வித்தைகள் புரிந்து, பின்பாதிக் காலத்தில் மனிதனாக மாறி வாழ்ந்தான் என்று இராஜாஜி கூறுவது முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது! முழுக்க முழுக்க இராமன் மனிதாகப் பிறந்து, மனிதனாக வளர்ந்து, மனிதனாகவே வாழ்ந்தான் என்பது எனது அழுத்தமான கருத்து!

கர்ப்பிணி சீதா இரண்டாம் முறை காட்டில் விடப்பட்டு, வால்மீகியின் ஆசிரமத்தில் இரட்டையர் பிறந்து இளைஞரான சமயத்தில் தந்தை இராமனைச் சந்திக்கிறார்கள். பாலர்களை மட்டும் ஏற்றுக் கொண்ட இராமன் சீதையைக் கூட்டிச் செல்ல மறுத்ததும், சீதா மனமுடைந்து மலைக் குன்றிலிருந்து குதித்துத் தன்னுயிரை மாய்த்துக் கொள்கிறாள். சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்கு முழுக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று போற்றி இந்துக்களில் பலர் பல்லாயிரம் ஆண்டுகளாக சீதாவையும் இராமனையும் ஒன்றாக வைத்து வணங்கி வருகிறார்கள். கடவுள் அவதாரமாக வேடம் பெற்ற இராமனை மானிட மன்னனாக மீண்டும் மாற்றி எனது சீதாயண நாடகம் எழுதப்பட்டது! இந்த நாடகத்தில் வரும் இராமன், இராவணன், அனுமான் அனைவரும் மனிதப் பிறவிகளாகக் காட்டப் படுகிறார்கள்! விஷ்ணுவின் அவதாரமாக இராமர் இங்கே கருதப்பட வில்லை!

பத்துத் தலை கொண்ட அரக்கனாக இராவணன் இங்கே கருதப்பட வில்லை! தென்னவரான அனுமான், அங்கதன், சுக்ரீவன் ஆகியோர் குரங்கு முகமும், வாலும் கொண்ட வானரங்களாகத் தோன்றாமல் மனித முகம் கொண்ட மானிடர்களாக சீதாயண நாடகத்தில் வருகிறார்கள். சீதையைக் காட்டுக்கு அனுப்பும் இறுதிக் காண்டத்தில் நேர்ந்த அதிர்ச்சிக் காட்சியை இராம கதையின் உச்சக் கட்டமாக நான் கருதுகிறேன். காட்டில் தனித்து விடப்பட்ட சீதா, வால்மீகி ஆசிரமத்தில் குழந்தைகள் பெற்று, வளர்த்த பிறகு ஏற்றுக் கொள்ளப்படாது புறக்கணிக்கப்பட்டு உயிரை மாய்த்துக் கொள்வது, இந்திய இதிகாசத்தில் தெரிந்தும், தெரியாமல் போன ஓர் துன்பியல் காவிய வரலாறு என்பது என் கருத்து!

அனுமான் படையினரை நேராகப் பார்த்திருந்த வால்மீகி முனிவர், மூலக் கதையில் வால் முளைத்த வானரங்களாகக் காட்டி யிருக்க முடியாது என்பது என் கருத்து. பின்னால் அவரது சீடர்களோ அல்லது பின்னால் பெருகிய இராம பக்தர்களோ மூலக் கதையைத் திரித்துள்ளதாகக் கருத இடமிருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அனுமான் போல ஆறறிவு பெற்று பேசும் குரங்குகள் எந்தப் பகுதியிலும் வாழ்ந்ததற்கு உலக வரலாறுகளில் சான்றுகள் இல்லை! மானிட இராமனைத் தேவனாய் உயர்த்தி மாற்றியவருக்கு இருந்த உரிமை போல், அவனை மீண்டும் கீழிறக்கி மனிதாய்க் கொண்டு வர எனக்கும் உள்ளது என்ற துணிச்சலில் இந்த நாடகத்தை எழுதி முடித்தேன். வால்மீகி இராமாயணத்தில் தெய்வீகத் தோரணங்கள், உயர்வு நவிற்சி வித்தைகள், பத்துத் தலைகள், வெளியே நீட்டிய பற்கள், குரங்கு வாய்கள், வானர வால்கள் ஆகியவற்றை வடிகட்டி நீக்கி முக்கிய கதா நபர்களை மனிதராக மாற்றிக் கதை ஓட்டத்தை மானிட நிகழ்ச்சிகளாக படைத்தால் இராம கதை இனியதாய், எளியதாய், நம்பக்கூடிய மகத்தான ஓர் இதிகாசக் காவியமாகப் புத்துயிர் பெற்று எழுகிறது.

ஆசிரமத்தில் இருந்த சீதா தன் கதையை வால்மீகிக்கு நேராகச் சொல்லியதாலும், வால்மீகி லவா, குசா வளர்ப்புக் காண்டத்தில் தானே ஒரு முக்கிய நபராக இருந்ததாலும், இராமகதைச் சம்பவங்கள் பல குறிப்பிட்டதாகவும், அழுத்தமாகவும், தெளிவாகவும், மெய்யானதாகவும் நம்பக் கூடியதாகவும் உள்ளன. வில்லை முறித்துச் சீதாவை இராமன் மணந்தது, மூத்தவன் இராமன் இருக்க பரதன் இளையவனை அரசனாக்கத் தாய் விழைந்தது, தசரத மன்னன் கைகேயிக்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற இராமனைப் பதினாங்கு வருடம் காட்டுக்கு அனுப்பியது, அதன்பின் தந்தை தசரதன் மனமுடைந்து இறந்தது, காட்டில் மானைப் பிடிக்கப்போய் இராமன் மனைவியை இழந்தது, வாலியை இராமன் மறைந்து நின்று கொன்றது, அனுமார் படையினர் இலங்காபுரி செல்லக் கற்பாலம் அமைத்தது, சீதாவைப் பற்றி வண்ணான் அவதூறு கூறியது, மனம் விண்டு சீதா இறுதியில் குன்றிலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டது போன்றவை மெய்யாக நடந்த நிகழ்ச்சிகளாகத் தோன்றுகின்றன. கண்ணகி மதுரையில் கணவன் கொல்லப்பட்டபின், சேர நாட்டுக்குச் சென்று மலை மேலிருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்டாள். கண்ணகி ஆருயிர்க் கணவனை இழந்தவள்! சீதா ஆருயிர்க் கணவனால் நிரந்தரமாகப் புறக்கணிக்கப் பட்டவள்! காவியத்தில் அக்கோர முடிவுகள் இரண்டும் படிப்போர் நெஞ்சைப் பிழிந்து, கண்களைக் குளமாக்கும் கோரத் தன்மை படைத்தவை!

சீதாயண நாடகம் போதிக்கும் முக்கிய பாடம், இராமன் ஓர் அவதாரத் தேவன் அல்லன்; அவன் முழுக்க முழுக்க ஒரு மனிதன் என்பதே! பல்லாயிரம் ஆண்டுகளாக மாந்தர் பலர் புரியாத ஏதோ ஒரு காரணத்தில் அவனைத் தேவ மகனாக்கி வந்ததால், அயோத்திய புரியில் இப்போது பாப்ரி மசூதி இருந்த இடத்தில் கோயில் எழுப்புவது வட நாட்டில் மதப்போரைத் துவக்கிப் பத்துப் பதினைந்து ஆண்டுகளாக நூற்றுக் கணக்கில் மக்கள் கொலை செய்யப்பட்டு வருகிறார்கள். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமன் எந்த இடத்தில் பிறந்தான் என்று நிச்சயமாய் யாரும் நிரூபிக்க முடியாத போது, பிரச்சனையான பாப்ரி மசூதி இருந்த இடத்துக்கு ஆயிரம் அடி அப்பால், இராம பக்தர்கள் புதிய கோயில் கட்டினால் என்ன குறைவாகும் என்பதே எனது முடிவான கேள்வி!

**********

தகவல்

1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit   to Kishan Lal Verma

3.  Mahabharatha By: Rosetta William [2000]

4. The Wonder that was India By: A.L. Basham [1959]

****

jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 11, 2005)]

4 Comments

  1. 1
    சீனிவாசன் Says:

    சீதாயணம் அற்புதமான கதை பாராட்டுகள் இதுபோல் பல உங்களிடம் எதிர்பார்க்கிறோம்

  2. 2

    பாராட்டுக்கு நன்றி நண்பர் சீனிவாசன்.

    நமது இந்திய புராணக் கதைகள் உள்ளே உன்னத கலைக் களஞ்சியம் ஒளிந்திருக்கிறது. அவற்றின் மீது படிந்துள்ள தூசியைத் துடைத்தால் அவை புத்துயிர் பெற்று மீண்டும் எழுகின்றன.

    சி. ஜெயபாரதன்

  3. 3
    dharumi Says:

    இதையும் வாசித்துப் பாருங்களேன்.

    http://directorram.blogspot.com/2008/06/blog-post_22.html

  4. 4
    dharumi Says:

    //அக்காலத்திலும் பெண்டிர் தனித்துவ உணர்ச்சியும், விடுதலை முதிர்ச்சியும், குடும்பத் தலைவனை எதிர்த்திடும் துணிச்சலும் கொண்டிருந்தனர் என்பதே. //

    அந்தக் குறளிலிருந்து எப்படி இந்த விவாதத்தை வைக்கிறீர்கள் என்பது புரியவில்லையே…

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! நாசா செவ்வாய்க் கோள் காலநிலை அறியும் விண்ணுளவித் தேர்ந்தெடுப்பு !

fig-1-mars-climate-orbiter-1

(கட்டுரை -56 பாகம் -3)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா


“செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்புத் தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளைக் கொண்டுள்ளது.”

டக்ளஸ் மெக்குயிஸ்டியான் (Douglas McCuistion, Director of Mars Exploration Program NASA Headquarters)

“நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுறுவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

ஜொஹானஸ் கெப்ளர் (German Astronomer Johannes Kepler) (1571-1630)

“நீரைத் தேடிச் செல்” என்பது கடந்த பத்தாண்டுகளாய் சொல்லப்படும் நாசாவின் செவ்வாய் மந்திரம் !  செவ்வாய்க் கோளின் எதிர்காலத் தேடல் திட்டங்களுக்கு ·பீனிக்ஸ் பயணம் முதற்படித் தடவைப்பு.

“ஃபீனிக்ஸ் திட்டக் குறிப்பணியில் தளவுளவி செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனித் தளத்தில் புதியதோர் பகுதியை ஆராயத் தேர்தெடுத்து இறங்கியுள்ளது.  உண்மையாக நாங்கள் கண்டறியப் போவது அந்த பனித்தள நீர் உருகிய சமயம், மண்ணில் கலந்து அந்தக் கலவையில் உயிர் ஜந்துகள் வளரத் தகுதி இருக்கிறதா என்று கண்டறிவது.  ஏனெனில் உயிரின விருத்திக்குத் தேவை திரவ நீர், நமது உடம்பில் உள்ள புரோடீன் அமினோ அமிலம் போன்ற சிக்கலான கார்பன் அடிப்படை ஆர்கானிக் மூலக்கூறுகளே,”

பீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

fig-1b-mars-climate-orbiter-1-lift-off

“ரோவர் ஊர்திகளின் ஆயுட் காலம் நீடிப்பாகி ஈராண்டுகளாய்ச் செவ்வாய்த் தளத்தை உளவி வருகின்றன. ஒவ்வொரு நாளாய் அவை பூமியிலிருந்து தூண்டப் பட்டு, செப்பணிடப் பட்டு மகத்தான பணிகளைப் புரிந்து வருகின்றன!”

ஸ்டாவன் ஸ்குயர்ஸ், செவ்வாய்க் குறிப்பணி பிரதம ஆய்வாளி, கார்நெல் பல்கலைக் கழகம்.

“ஆர்க்டிக் கடலில் உள்ள ஸ்வால்பார்டு தீவில் [Svalbard Island] காணப்படும் நீலப் பனிக்கட்டியின் இயற்கைத் துளைகளில் ‘நுணுக்க உயிரியல் ஊறணி ‘ [Microbiological Oasis] ஒன்றைக் கண்டுபிடித்துள்ளோம். அசாத்தியமான அந்த உச்சக் குளிர்ப் பகுதிகளில் அவ்வித உயிரியல் ஆதாரங்கள் கிடத்திருப்பதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. 1996 ஆம் ஆண்டு அண்டார்க்டிக்கில் கண்டெடுத்த செவ்வாய்க் கோளின் விண்கல்லைப் [Meteorite] போன்று, அந்த ஒரே தீவின் எரிமலையில் தோண்டி எடுத்த காந்த உலோகப் பாறைப் பளிங்கு [Magnetite Crystals] மாதிரிகள் உள்ளன.”

ஹான்ஸ் அமுட்ஸன், ஆய்வாள அதிபதி, ஆஸ்லோ பலகலைக் கழகம்

“பாறை அடுக்குகள் செவ்வாய்க் கோளின் வரலாற்றைக் கூறும் பட்டைக் குறிப்பதிப்புகள் [Barcodes]. புதிதாய்க் காணும் ஒவ்வோர் அடுக்கும் மற்றுமோர் புதிரை விடுவிக்கும் பிணைப்புத் துண்டாக உள்ளது. ‘

ஜான் கிராட்ஸிங்கர் [John Grotzinger, Science Team Member நாசா M.I.T.]

fig-1d-mars-climate-orbiter-1-failureநாசாவின் செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி தேர்ந்தெடுப்பு

2014 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் சூழ்வெளிக் காலநிலை வரலாற்றை விளக்கமாகப் பதிவு செய்ய இறக்கப் போகும் “மேவன்” காலநிலை அறிவிப்பு விண்ணுளவியை (Mars Climate Mission -2) ஏவுதற்கு அனுமதி கிடைத்து விட்டது என்று நாசா முதன்முறையாக அறிவித்தது !  அந்த செவ்வாய் விண்ணுளவி எட்டுக் கருவிகளை ஏற்றிக் கொண்டு தணிந்த உயரத்தில் (90 – 3870) மைல் நீள்வட்ட வீதியில் சுற்றி வந்து சூழ்வெளி வாயு மண்டலத்தை ஆராயும்.  மூன்று ஆண்டுகள் விண்ணுளவி புரியும் அந்தக் குறிப்பணித் திட்டத்துக்கு ஆகும் நிதிச் செலவு 485 மில்லியன் டாலர் (2009 நாணய மதிப்பு) என்று மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது.  நாசாவின் மிதச் செலவுத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது “மேவன்” (Maven – Mars Atmosphere & Volatile Environment Probe) விண்வெளி ஆய்வுத் திட்டம்.  1998 ஆம் ஆண்டில் 327 மில்லியன் டாலர் செலவில் முதன்முதல் காலநிலை உளவ ஏவப்பட்ட விண்ணுளவி -1 (Mars Climate Orbiter -1) செவ்வாய்க் கோளை நெருங்கினாலும், மனிதத் தவறால் (மெட்டிரிக் அளவியலைப் பயன்படுத்தாது பிரிட்டீஷ் அளவியலைப் புகுத்தியதால்) உந்துசக்தி மிகையாகிச் செவ்வாய்க் கோளில் முறிந்து விழுந்து விட்டது !

fig-1-maven-mars-new-climate-mission

செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்பு தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளின் பதிவுகளை வெளிப்படுத்தும்,  இப்போது விஞ்ஞானிகள் காணும் செவ்வாய்க் கோள் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய செவ்வாய்க் கோளைப் போல் இருக்கவில்லை !  ஆரம்பத்தில் செவ்வாய்க் கோள் அடர்ந்த வாயுச் சூழ்வெளியைக் கொண்டிருந்த தென்றும், அந்த பாதுக்காப்புக் குடைத் தளத்திலே நீரைத் திரவமாக வைத்திருந்த தென்றும் ஊகிக்கப் படுகிறது.  திடீரென ஒரு திரிபு ஏற்பட்டுக் காலநிலை மாறுபட்டுப் பெரும்பான்மையான வாயு மண்டலம் மறைந்து போய் நீர் வளம் எல்லாம் பாலைவனம் போல் வெறுமையானது !

பல அண்டக் கோள் விஞ்ஞானிகள் செவ்வாய்க் கோளின் பூர்வீக காந்தக் களம் மறைந்து போனது மிக முக்கிய மாறுதல் என்று நம்புகிறார்கள்.  மேவன் விண்ணுளவி பரிதி உமிழ்ந்திடும் மின்னேறிய துகள்களின் (Solar Charged Particles) பாதிப்புச் செவ்வாய்க் கோளின் தற்போதைய வாயு மண்டலக் கசிவுக்குக் காரணமாக இருக்குமா என்று ஆய்ந்து கண்டுபிடிக்கும்.  செவ்வாய்க் கோளின் சக்தி வாய்ந்த காந்தத் தள இழப்பால் பரிதியின் தீவிரப் புயல் (Solar Wind) வாயு மண்டலத்தைத் தாக்கி விடுவிப்பு செய்திருக்கலாம் என்று ஊகிக்கிறார்கள் !

fig-1c-climate-orbiter-equipment

மேவன் விண்ணுளவியின் திட்டப்பணிகள் என்ன ?

2013 ஆம் ஆண்டில் பயணம் செய்யப் போகும் மேவன் விண்ணுளவி மூன்றாண்டுகள் செவ்வாய்க் கோளைச் சுற்றி வரும்.  மேவன் விண்ணுளவி செவ்வாயின் வாயு மண்டலம், காலநிலை வரலாறு,  உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான அமைப்பு போன்ற விஞ்ஞான விளக்கங்களைத் தெளிவாகக் கண்டறியும்.  மேலும்

1.  செவ்வாய்ச் சூழ்வெளியிலிருந்து விண்வெளிக்கு வெளியேறிய “ஆவிக் கிளம்பிகள்” (Volatiles) இழப்பால் நேர்ந்த கால நெடுப் பாதிப்புகள்.  அது செவ்வாயின் சூழ்வெளி வரலாற்றையும், காலநிலை, திரவ நீர், கோளின் குடிவசிப்புத் தன்மை (Planetary Habitability) ஆகியவற்றை விளக்கமாக அறிவது.

2. செவ்வாய்க் கோளின் மேல் மண்டல வாயுச் சூழ்வெளியின் (Upper Atmosphere) தற்போதைய நிலமை, மின்னியல் கோளம் (Ionosphere), மற்றும் பரிதிப் புயலுடன் அவற்றின் இயக்கப்பாட்டு மோதல் விளைவுகளை (Interactions with Solar Wind) உளவிக் காண்பது.

3. விண்வெளிக்குக் கசியும் அயனிகள் (Ions) மற்றும் முடக்குகள் (Neutrals) ஆகியவை தப்பிச் செல்வதைக் கண்டறிவது.

4. கால நெடுவே இழப்பு வரலாற்றைச் சொல்லும் வாயுக்களின் நிலையான ஏகமூலங்களின் வீதத்தைக் (Ratio of Stable Isotopes) காண்பது.

fig-1b-maven-spacecraft-instruments

மேவன் விண்ணுளவியில் அமைப்பாகும் தொடர்புத் தகுதிகள்

செவ்வாய்க் கோளை அண்டிய மேவன் விண்ணுளவி தனது உந்துக் கணைகளை (Thruster Boosters) இயக்கிச் செவ்வாயின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி முதலில் நீள்வட்ட வீதியில் சுற்ற ஆரம்பிக்கும்.  அவ்விதம் சுற்றும் போது நீள்வட்ட ஆரங்கள் 90 மைல் (குட்டை ஆரம்) 3870 மைல் (நெட்டை ஆரம்) அளவில் கட்டுபாடாகி ஆய்வுத் திட்டங்களை நிகழ்த்த ஆரம்பிக்கும். (வட்ட வீதியில் நெட்டை ஆரமும், குட்டை ஆரமும் சமமானவை).  அப்போது மேவன் விண்ணுளவி செவ்வாய்த் தளத்துக்கு 80 மைல் உயரத்தில் தணிந்து சுற்றி மேற்தள வாய் மாதிரிகளைச் சோதிக்கும்.  அத்துடன் செவ்வாய்த் தளத்தில் ஊர்ந்து செல்லும் தள வாகங்களுடன் தொடர்பு கொள்ளவும் வசதி செய்யப்படும்.

நாசா முன்னேவிய இரண்டு விண்ணுளவிகள் (Mars Reconnaissance Orbiter & Mars Odyssey Spacecraft) தொடர்ந்து சுற்றி வருகின்றன !  அவை இரண்டும் இன்னும் தொடர்ந்து பணி செய்து செந்நிறக் கோளின் “தளவியல் இரசாயனத்தை” (Geochemistry) ஆராய்ந்து கொண்டு வருகின்றன.  தளங்களில் ஊர்ந்து செல்லும் வயதான இரண்டு “தளவுளவிகள்” மற்றும் சமீபத்தில் இறங்கிய ·பீனிக்ஸ் தளவுளவி (Land Rovers : Spirit & Opportunity, Later Phoenix Lander) ஆக மூன்று தளச் சாதனங்கள் பணிபுரிந்து வருகின்றன.

fig-1c-mars-probe-spacecrafts

புதியதாக “செவ்வாய் விஞ்ஞானத் தள ஆய்வி” (Mars Science Laboratory MSL) எனப்படும் அடுத்தொரு தளவுளவி இதுவரை இல்லாத பத்து மடங்கு நுட்பக் கருவிகளுடன் உலவிடப் போகிறது !  அவற்றில் செவ்வாய்க் கோளில் நுண்ணுயிர் ஜந்துகள் வாழத் தகுதியுள்ள  சூழ்வெளி நிலை இன்னும் இருக்கிறதா வென்று ஆழமாய் உளவும் கருவிகளும் அமைக்கப் படும்.  அத்துடன் மேவன் விண்ணுளவி அடுத்து ஈசா அனுப்பப் போகும் “எக்ஸோ-மார்ஸ் வாகனத்துடன்” (ExoMars Rover) தொடர்பு கொள்ளும் வசதியும் பெற்றிருக்கும்.

மேவன் விண்ணுளவியில் உள்ள கருவிகள்

மேவன் செவ்வாய்க் கோளின் மேற்தள வாயுச் சூழ்நிலை பற்றியும் பரிதிம் வீசும் புயல் அதனைத் தாக்கும் பாதிப்புகளையும் ஆராயும்.  அதன் கருவிகள் செவ்வாயின் வாயு மண்டலத்தின் வாயுக்கள், பரிதியின் புயல் வீச்சு, அயனிக் கோளம் (Ionosphere) ஆகியவற்றை அளந்தறிவிக்கும்.  மேவன் விண்ணுளவியில் உள்ள முக்கிய கருவிகள் :

1. (Particles & Field Package PAF) – துகள்கள், காந்தத் தளம் அளப்பது.

2. (Solar Wind Electron Analyser SWEA) – பரிதியின் புயல் அயனிக் கோளம் எலெக்டிரான்களை அளப்பது.

3. (Solar Wind Ion Analyser SWIA) – பரிதியின் புயல், காந்தத் தளக் கவசம், அயான்களின் திரட்சி, வேகத்தை அளப்பது.

4. (Suprathermal & Thermal Ion Composition STATIC) – தப்பிச் செல்லும் மித சக்தி வெப்ப சக்தி அயான்களை அளப்பது.

5. (Solar Energetic Particle SEP) – பரிதியின் தீவிர சக்தித் துகள்கள் செவ்வாய்க் கோள் மேற்தள வாயு மண்டலத்தைத் தாக்கி விளையும் பாதிப்புக்களை அளப்பது.

fig-1f-climate-probe

6. (Lagmuir Probe & Waves LPW) – அயனிக் கோளத்தின் பண்பாட்டைத் தீர்மானிக்கும்.  தப்பிச் செல்லும் அயனிகளின் அலைச் சூடாக்கம், வாயு மண்டலத்தில் பரிதியின் தீவிர புறவூதா திணிப்பு.  (Solar EUV Input to Atmosphere)

7. (Magetometer MAG) – அகிலாண்டப் பரிதிப் புயல் & அயனிக் கோள காந்தத் தளத்தை அளப்பது.

8. (Remote Sensing Package RS) – தொலை உணர்வுக் கருவித் தொகுப்பு.

9. (Imaging Ultraviolet Spectrometer IUVS) – மேற்தள & அயனிக் கோள பொதுப் பண்பாடு அளப்பது.

10. (Natural Gas & Ion Mass Spectrometer NGIMS) – அயனிகள், வெப்ப முடக்கிகள் ஆகியற்றின் ஏகமூங்கள் மற்றும் அவற்றின் உள்ளடக்கத் தனிமங்களை அளப்பது. (Measures the Composition & Isotopes of Thermal Neutrals & Ions).

fig-1g-climate-orbiter-details

முதன்முதல் செவ்வாய்க் கோளின் காலநிலை அறிவிப்பு !

பீனிக்ஸ் தளவுளவியில் அமைக்கப்பட்டுள்ள கனடாவின் காலநிலை அறிவிக்கும் சாதனம் தனது முதல் அறிவிப்பை வெளியிட்டது.  தளவுளவி தடம்வைத்த ஒரு மணி நேரத்திற்குள் அந்த உபகரணங்கள் இயங்க பூமியின் விண்கப்பல் ஆட்சி அரங்கிலிருந்து ஆணை அனுப்பப்பட்டது.  தற்போது தொடர்ந்து காலநிலை அறிவிப்புகள் பதிவாகி வருகின்றன.  முதல் 18 மணி நேரக் காலத்தின் அறிவிப்பில் :

. . . வானம் வெறுமையாக இருந்தது.  அடுத்துக் காற்று நீர்மை (Humidity) சோதிக்கபடும்.

. . . குறைந்த நிலை உஷ்ணம் : -80 டிகிரி செல்ஸியஸ் (-112 F)

. . . பகல் தாண்டி உச்ச நிலை உஷ்ணம் : -30 டிகிரி செல்ஸியஸ் (-22 F)

. . . சராசரி வாயு அழுத்தம் 8.55 மில்லிபார். (பூமியின் கடற்தள அழுத்தத்தில் 100 இல் 1 பாகம்)

. . . காற்று வேகம் : 13 mph (20 km/h) வட மேற்குத் திசைநோக்கி.

fig-2-mars-earth-atmospheres

ஃபீனிக்ஸ் செவ்வாய்ப் பயணம் ஒரு மீள் எழுச்சித் திட்டம் !

செவ்வாய்க் கோளில் விண்ணுளவிகளை நுணுக்கமாக இறக்குவது என்பது இமாலயச் சிரமங்கள் அளிப்பது !  இதற்கு முன்பு அனுப்பிய பல செவ்வாய் விண்ணுளவிகள் பயணத்தின் இடையிலே பழுதாகித் திட்டங்கள் நாசாவுக்கு பெருத்த நிதி விரையத்தை ஏற்படுத்தின ! 1960 இல் ரஷ்யா முதன்முதல் துவக்கி மற்றும் நாசா தொடர்ந்த செவ்வாய்க் கோள் பயணங்கள் 50% தோல்வி முறிவில் (50% Failure Rate) பாதிக்கப் பட்டிருக்கின்றன.  துல்லியமாகச் சொன்னால் 15 செவ்வாய்க் கோள் பயணத் திட்டங்களில் 5 திட்டங்களே இதுவரை வெற்றி அடைந்துள்ளன !  தற்போதைய வெற்றிகரமான ·பீனிக்ஸ் தளவுளவித் திட்டம் இதற்கு முன்பு ஏற்பட்ட இரண்டு தோல்விகளிலிருந்து மீண்டெழுந்து புத்துயிர் பெற்ற பழைய திட்டமே !

fig-5-mars-climate-orbiter-1-assembly

1999 ஆம் ஆண்டில் அடியெடுத்த “செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி” (Mars Climate Orbiter) பொறியியக்குநர் ஆங்கில/மெட்ரிக் அளவைகளில் குழப்பமாகி விண்கப்பல் நகர்ச்சி ஏற்பாட்டுப் பிழையால் (Spaceship Navigational Error due to British-Metric Units Mix up) செவ்வாய்க் கோளில் மோதி முறிந்து போனது ! அடுத்துச் சில மாதங்களில் அனுப்பிய “செவ்வாய்த் துருவ உளவி” (Mars Polar Lander) செவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் காணாமல் போனது !  அடுத்த அனுப்பத் தயாராக இருந்த “செவ்வாய் 2001 தளவுளவித்” (Mars Surveyor 2001 Lander) திட்டம் முன்பு ஏற்பட்ட முறிவுகளால் கைவிடப் பட்டது !  இப்போது செவ்வாய்க் கோளில் தடம் வைத்துள்ள ·பீனிக்ஸ் தளவுளவி முன்பு இழந்து போன செவ்வாய்த் துருவ உளவியை ஒத்த இரட்டை விண்ணுளவியின் சாதனங்களையும், நிறுத்தப்பட்ட செவ்வாய் 2001 தளவுளவிச் சாதனங்களையும் பயன்படுத்தி இப்போது இயங்குகிறது.  அவ்விதம் முந்தி முடக்கிய சாதனங்களை மீண்டும் அமைத்து உண்டாக்கப் பட்டத்தால் “·பீனிக்ஸ்” (Phoenix) என்று இத்திட்டம் பெயரிடப்பட்டது !

fig-6-mars-exploration

(தொடரும்)

++++++++++++++++++++++++++
தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – Why Did Mars Dry out ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition -Exploring the Early Universe By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
20 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602032&format=html (Mars Probe Spacecrafts)
20 (A) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40803131&format=html (செவ்வாய்க் கோளில் நீர் வரண்டது எப்போது ?)
21 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602032&format=html (செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)
22 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602101&format=html (செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)
23 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703221&format=html (செவ்வாய்த் துருவப் பனித் தொப்பிகள்)
24 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40708091&format=html (செவ்வாய்க் கோளுக்கு ·பீனிக்ஸ் தளவுளவி)
25 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40903261&format=html (செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு, பெர்குலரேட் உப்பு கண்டுபிடிப்பு)
26 NASA’s Reconnaissance Orbiter [May 15, 2008]
27 BBC News : NASA Selects Mars Climate Mission -(2) (September 16, 2008)
28 Mars Climate Orbiter -(1) Update By Wikipedia (March 22, 2009)
29 Space Flight Now : Mars Story Spawns Kudos & Controversy By Craig Covault (Mar 24, 2009)
30 BBC News : Q & A Liquid Water on Mars (Mar 22, 2009)
31 BBC News : New Light on Mars Methane Mystery (Jan 15, 2009)
32 BBC News : Briny Pools May Exist on Mars By Paul Rincon (March 24, 2009)
33 The Mars Climate Orbiter Mission (Internet Sources)
34 BBC News – NASA Selects Mars Climate Mission (Sep 16, 2008)
35 BBC News New Light on Mars Methane Mystery (Jan 15, 2009)
36 FoxNews.com Space Center – NASA Space Probe Projects Cost Overruns (Apr 10, 2009)
37 The Future of Things – Maven New NASA (Climate) Mission to Mars By : Shalhevet Bar-Asher  [Oct 13, 2008]
38 Wikimedia Source – Maven Mars Program Overview (Jan 29, 2009)

(தொடரும்)

++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) April 16, 2009

மத்திய இத்தாலிய மலைச் சரிவுகளில் எழுந்த அசுரப் பூகம்பம்!

fig-1-italy-earthquake-disaster

(2009)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா


பூமா தேவி குலுக்கித்
தோள சைத்தாள் ! இடிந்து
தாமாக வீழ்ந்தன
மாளிகைகள் !
தரை மட்ட மாகின
கட்டடங்கள் !
சட்டென மக்கள்
சடலமாய்ப்  புதைந்தார் !
கடற்தட்டு கால் உதைத்தால்
படை யெடுக்கும் சுனாமி அலைகள்  !
அடித்தட்டு தொடை அசைந்தால்
இடித்திடும் அதிர்வுகள் !
நிலம்நடுங்கி
நடனமிடும்  பூகோளம் !
குடற் தட்டு கூத்தாடி
குப்பென எழுந்திடும்
எரிமலைகள் !

எங்கெங்கு வாழினும்
இன்ன லப்பா !
ஏழு பிறப்பிலும்
தொல்லை யப்பா !
மனிதப் பிறவிக்குப்
பாதுகாப் புலகம்
ஏதுவும்
இல்லை யப்பா  !
சூழ்வெளி மட்டும் புவியில்
மாசோடு இல்லை !
ஆழ்ந்த பூமிக் குள்ளும்
ஊழல் மண்டி
ஊர்ந்து பரவும்
புற்று நோய்கள் !
ஊழிக் கூத்தின்
பிரளயக் கோரம் உலகெங்கும்
அரங்கே றுதப்பா !

+++++++++

உலுக்கிச் செல்லும் ஊழியின் கை
உலுக்கி உலுக்கி மேற்செல்லும் !
அழுதாலும், தொழுதாலும் அயராதவன் கை !
உலுக்கிய பின் மீண்டும் உலுக்க வரும் !

புதிய உமர் கையாம்

fig-1c-earthquake-death-zones1

“பூமியின் நிலப்பரப்புப் பகுதிகள் அனைத்தும் பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஒருங்கிணைந்த மாபெரும் ஒற்றைக் கண்டமாக இருந்தது !  பல மில்லியன் ஆண்டுகள் கழித்து, எப்படியோ அப்பெருங் கண்டம் பிளவுபட்டு வெவ்வேறு பகுதிகளாகப் பிரிந்து, தற்போதுள்ள இடங்களுக்கு அவை நிலப்பெயர்ச்சி ஆகியுள்ளன!  பூகோளத்தின் அடித்தட்டுகள் [Crusts] பூமியின் உட்கருக் கனல் குழம்பில் [Liquid Core] மிதந்து மெதுவாக நிலப் பெயர்ச்சி அடைகின்றன!  கண்டங்களின் நிலப் பெயர்ச்சிக்கும், அடித்தட்டுப் பிறழ்ச்சிக்கும் [Continental Drift & Plate Tectonics] பூர்வப்படிவப் பதிவுகள் [Fossil Records] சான்றுகள் காட்டி நிரூபணமும் அளிக்கின்றன”.

டாக்டர் ஆல்ஃபிரெட் வெஜினர், ஜெர்மன் பூதளவாதி [Dr. Alfred Wegener (1880-1930)]

இத்தாலிய நாட்டின் மத்தியப் பகுதியில் மாபெரும் பூகம்பம்

2009 ஏப்ரல் 6 ஆம் தேதி மத்திய இத்தாலியில் ரோமாபுரிக்கு 60 மைல் (100 கி.மீ) தூரத்தில் உள்ள லாகுயிலா (L’Aquila) என்னும் நகரில் (5.8 – 6.3) ரிக்டர் அளவுப் பூகம்ப அதிர்ச்சிகள் நள்ளிரவில் ஏற்பட்டுக் கட்டடங்கள் தகர்ந்து தூங்கிக் கொண்டிருத்த மக்கள் பலர் மீண்டும் எழ முடியாமல் மாண்டு போயினர் !  இல்லங்களை இழந்தோர் 28,000 (?) பேர் என்றும் 18,000 பேர் தற்காலியக் கூடாரங்களில் குடியுள்ளார் என்றும் சுமார் 10,000 பேர் கடற்புற விடுதிகளில் தங்கி இருக்கிறார் என்று அறியப்படுகிறது.  இறந்தவர் எண்ணிக்கை 280 (ஏப்ரல் 9) என்றும், காண இயலாமல் இன்னும் தகர்ந்த கட்டடங் களுக்குள் புதைந்து போனர் எத்தனை பேர் என்றும் யூகிக்க முடியாத நிலையில் தர்ம சங்கடமாய் இருந்து வருகிறது !  மாண்டவரில் பெரும்பாலோர் 13 ஆம் நூற்றாண்டு மலைச்சிகர நகரமான லாகுயிலா பகுதியைச் (ஜனத்தொகை : 70,000) சேர்ந்தவர்கள்.

fig-1-italian-earthquake-scenes

இடிந்த இல்லங்களின் எண்ணிக்கை 3000 முதல் 10,000 வரை இருக்கலாம்  ! காயமடைந்தோர் எண்ணிக்கைச் சுமார் 1500 என்று கணிக்கப் படுகிறது.  முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தாக்கிய இந்த பூகம்பத்தால் பல்வேறு இல்லங்கள், மாளிகைகள், சரித்திரப் புகழ் பெற்ற கிறித்துவ ஆலயங்கள் பல இடிந்து வீழ்ந்தன.  இத்தாலியப் பிரதம மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி (Sivio Berlusconi) 2009 நிதிமுடக்கக் காலத்து நெருக்கடியால் அபாயத் தேவைக்குப் பணக்கடன் தேடி அலைந்தார் !  இத்தாலியின் மற்ற இடங்களில் பணிபுரியும் மருத்துவ டாக்டர்களும் பணிப்பெண் நர்ஸ்களும் லாகுயிலா நகர்ப் பகுதிக்கு அழைக்கப் பட்டார் !  அதே சமயம் அவரது அரசாங்கம் பெயர்ச்சி அடைந்த மக்கள் நிவாரணப் பணிகளுக்கு 30 மில்லியன் ஈரோ உதவி நிதியை (40.6 மில்லியன் டாலர்) அளிக்கும் என்றும் அறிவித்தார்.  அத்தோடு பாதிக்கப்பட்ட பகுதிகளில் உதவிப் பணிகள் புரிய 1000 இராணுவப் படையினரை அனுப்ப ஏற்பாடு செய்தார்.

fig-1b-the-faulty-tectonic-plates-under-italy

இத்தாலியின் பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்புகள்

1980 இல் இதற்கு முன் ஏற்பட்ட இத்தாலியின் 6.5 ரிக்டர் அளவு பூகம்பத்தில் 2735 பேர் கொல்லப் பட்டார் !  2009 ஏப்ரலில் தாக்கிய பூகம்ப ஆட்டத்திலும் அதற்குப் பிறகு நேர்ந்த பின் அதிர்ச்சிகளில் (Aftershocks) இடிந்து போன கட்டடங்கள் அநேகம்.  காரணம் அவற்றில் பெரும்பான்மையான வீடுகளின் ஆயுட் காலம் நூறாண்டுகளைத் தாண்டியவை !  இத்தாலியின் மத்தியில் சுமார் 26 நகரங்கள் மற்றும் பக்கத்து ஊர்களில் உள்ள இல்லங்கள் பல இடிந்து வீழ்ந்தன !  லாகுயிலா நகரைச் சுற்றியிருந்த பல கிராமங்கள் தகர்ந்து ஏறக்குறைய தரை மட்டமாயின !  லாகுயிலா நகரில் மூன்றில் இரு பங்கு கட்டடங்கள் முறிந்து பிளந்தன !  அவற்றில் பொதுவாக மருத்துவ மனைகள், பல்கலைக் கழகத்தின் விடுதிகள், பெரிய ஹோட்டல் ஒன்றும் அடங்குகின்றன.

நிவாரண உதவிப் பணிகள் செய்ய சுமார் 7000 இத்தாலியர் உழைத்தாக அறியப்படுகிறது.  பூகம்பத்தால் நேர்ந்த பொருட் சேதாரங்களின் மதிப்பீடு சுமார் 2 முதல் 3 பில்லியன் ஈரா (1.5-2.2 பில்லியன் டாலர்) என்று யூகிக்கப்படுகிறது.  இத்தாலியின் உற்பத்தி விற்பனை நிதி சுமார் 1.5 டிரில்லியன் ஈரோ (1 டிரில்லியன் =1000 பில்லியன்).  முதல் பேரிடிப் பூகம்பத்திற்குப் பிறகு ஏற்பட்ட பின்னதிர்ச்சிகளில் பிழைத்த கட்டடங்களும் அடுத்துப் பிளந்து போயின.  அந்த அதிர்ச்சி ஆட்டங்கள் 60 மைலுக்கு அப்பாலிருந்த ரோமாபுரியிலும் எதிரொலித்தன !  அதில் தீவிர நில அதிர்ச்சி 5.6 ரிக்டர் அளவானது.

fig-2-earthquake-force-in-tnt

காப்பாற்றப்பட்டோர் விபரங்களில் சில விந்தையானவை !

1.  முப்பது மணி நேரங்கள் அடைப்பட்டுப் பிழைத்துக் கொண்ட 98 வயதான ஒரு கிழவி லகுயிலாவில் காப்பாற்றப்பட்டு வெளியே கொண்டுவரப் பட்டார்.

2.  நான்கு மாணவர் தகர்ந்து போன பல்கலைக் கழக விடுதிகளில் ஒன்றில் அடைபட்டுக் கிடந்ததை தீயணைப்புப் படையினர் கண்டுபிடித்தார்.  ஆனால் அவர்கள் உயிருடன் மீட்கப் பட்டாரே அல்லது மாண்டு போனாரா என்பது தெரியவில்லை.

3.  22 மணி நேரங்கள் இடிந்த கட்டடத்தில் முடங்கிப் போன 23 வயது மாணவன் ஒருவன் உயிருடன் மீட்கப் பட்டான் !

4.  லாகுயிலா மற்றும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளில் நீர் வசதி முழுவதும் நிறுத்த மடைந்தது !

fig-1e-italian-zone-tectonic-plates-movements

இத்தாலியில் பூகம்பம் எழுப்பும் அடித்தட்டு நகர்ச்சிக் கோளாறுகள்

(Plate Tectonics Faults)

அசுரப் பூகம்பம் ஒன்று வரப் போகிறது என்று அபாய முன்னறிவிப்பு செய்யும் சாதனம் ஒன்று இன்னும் 21 ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட வில்லை !  எரிமலை வெடிப்பு ஏற்படுவதற்கு முன்பு எரிமலை வாயிலில் புகை மண்டலம் எழுகிறது !  சுனாமி ஊர்ந்து கடற்கரை நோக்கி வருவதற்குள் பூதள ஆட்டத்தையோ அல்லது அலைகள் பொங்கி எழுவதையோ உளவுக் கருவிகள் மூலம் ஒருவாறு உணர்ந்து முன்னெச்சரிக்கை  இப்போது செய்ய முடிகிறது ! ஆனல் பூகம்பக் ஏற்படுவதற்குச் சற்று முன்னால் குடிமக்களுக்கு முன்னறிப்பு செய்யும் அபாய அறிவிப்புச் சாதனம் ஒன்று இன்னும் உருவாக்கப் படவில்லை என்பதை விஞ்ஞானிகள் தெரிந்து கொள்ள வேண்டும் !

fig-1e-seismic-sensors

மாபெரும் அட்லாண்டிக் கடலின் விளிம்பில் அடித்தட்டுகள் ஒன்றின் கீழ் ஒன்று புகுந்து அழிக்கப் பட்டதால் (Subduction) மேற்கு மத்திய தரைக்கடல் அடித்தட்டு நகர்ச்சிக் கோளாறுகள் (Plate Tectonics Faults) மிகவும் சிக்கலாகப் போய் விட்டன !  ஆ·பிரிக்கா ஐரோப்பா ஆகிய இரண்டின் அடித்தட்டுகள் ஒருபோக்கில் ஒருங்கே நகர்வது அதற்கொரு காரணம் !  கடந்த 40 மில்லியன் ஆண்டுகளாக அப்பகுதியின் கடல் அடித்தட்டு யாவும் “பின் வளைவுப் பரவலில்” (Back-Arc Spreading) உண்டானவை !  காரணம் படத்தில் செந்நிறத்தில் காணப்படும் கோடு ஸிசிலி மூலமாகச் சென்று வட ஆ·பிரிக்காவில் முடிந்து மோதிக் கொள்ளும் அரங்கம் (Collision Zone) ஐரோப்பாவுக்கு அப்பால் தென்புறம் நோக்கிச் செல்கிறது !  ஆதலால் அந்த அடுத்தட்டுகள் அகண்ட அரங்குகளில் மோதுவதாகத் தோன்றினாலும் பொதுவாக அவை இத்தாலியின் உட்புற நிகழ்ச்சியாகவே பாதிக்கின்றன.

fig-3-plate-tectonics-in-north-america

இத்தாலியின் “அப்பெனைன் மலைத் தொடரை” ஆக்கிய அடித்தட்டு நகர்ச்சியே (The Crustal Plates that formed Italy’s Apennine Mountains) அம்மலைத் தொடரின் ஒரு பகுதியைச் சரித்ததாகவும் தெரிகிறது.  மஞ்சள் நிற ஆ·ப்பிரிகன் அடித்தட்டும் செந்நிற அனடோலின் அடித்தட்டும் ஒன்றை ஒன்று நெருக்கி கிரே வண்ணத்தில் உள்ள யுரேசியா அடித்தட்டைக் காற்று வெளியில் தள்ளுகிறது.  அதாவது மரப்பலகைத் தளம் ஒன்றில் ஒரு கார்ப்பெட்டைப் பக்கவாட்டிலிருந்து தள்ளுவது போன்றது.  மேற்குப் பக்கத்தில் மலைகள், ஈர்ப்பியல் விசை கீழ் இழுத்து அடித்தட்டு நகர்ந்து நழுவிச் செல்கின்றன.  பூகம்பத்தால் நேரும் இந்த மலைகளின் மோதல்கள் பூதள ஆட்டங்களை உண்டாக்கிப் பின்னதிர்ச்சிகள் தொடர்ந்து நேப்பிள்ஸ் வரையும் செல்கின்றன !

fig-4-the-himalayan-fault-line

இமாலய மலைச் சரிவுகளை ஆட்டிய நில அதிர்ச்சிகள்

விடுதலை அடைந்த பிறகு 2005 அக்டோபர் 8 ஆம் தேதி முதன்முதல் வரலாற்றில் மிகக் கோரமான ஓர் அசுரப் பூகம்பம் பாகிஸ்தான் வடகிழக்குப் பகுதியை 7.6 ரிக்டர் உச்ச அளவில் குறைந்தது 140 தடவைகள் குலுக்கி ஆட்டி பெரும் காங்கிரீட் கட்டிடங்களைக் கூட கீழே தள்ளிச் சிதைத்து விட்டது!  பாகிஸ்தான் பற்றிக் கொண்ட காஷ்மீரில் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 54,000 ஆக அக்டோபர் 16 இல் கணிக்கப் பட்டது, இப்போது 79,000 [அக்டோபர் 20, 2005] ஆக ஏறி யிருப்பதாக அறிவிக்கப் பட்டது.  குளிர்காலம் விரட்டிக் கொண்டு வரும் இந்த தருணத்தில் குறைந்தது 2 மில்லியன் மக்களுக்குத் தங்க வீடுகள் இல்லாமல், தகர்ந்து போன தளங்களில் நின்று தவிக்கிறார்கள்!  இந்தியக் காஷ்மீர்ப் பகுதியில் 2000 பேர் மரணம் அடைந்ததாகத் தெரிகிறது.  2005 செப்டம்பர் மாதம் அமெரிக்காவில் அடித்த சூறாவளி கேட்ரினாவின் ஆற்றலை விட 20 மடங்கு மிகையான பேராற்றல் கொண்டது, காஷ்மீர் பூகம்பம் என்று அமெரிக்காவின் நாளிதழ் வாஷிங்டன் போஸ்ட் கூறுகிறது!  2004 ஆண்டு இறுதியில் இந்தோனேசியா கடற்தட்டில் ஆட்டம் நேர்ந்து உலகப் பெரும் சுனாமிப் பேரலைகள் தாக்கித் தென்னாசியக் கடற்கரைப் பகுதிகளில் 230,000 பேர்கள் மாண்டு போயினர்!  அரை மில்லியனுக்கு மேற்பட்டவர் தமது இல்லங்களை இழந்தனர். 1991 ஆம் ஆண்டு அடித்த சூறாவளிப் பேய்மழையில் பங்களா தேசப் பகுதிகளில் மட்டும் சுமார் 140,000 மக்கள் மடிந்தனர் என்று அறியப்படுகிறது.

fig-5-the-indian-plate-monitoring-satellite

நிலையற்று நடுங்கும் இமய மலைத் தொடர்ச்சிகள்

பூகோளத்தில் உள்ள நீர்ப் பரப்பில் அட்லாண்டிக் கடலின் அகற்சி நீளமாகி வருகிறது!  பசிபிக் பெருகடலின் இடைவெளிச் சிறுகச் சிறுகச் சிறுத்துக் கொண்டு வருகிறது!  நிலப் பகுதிகளை எடுத்துக் கொண்டால் ஈரோப்பில் ஆல்ப்ஸ் மலைத்தொடர் வளர்ச்சியாகி உயரம் இன்னும் அதிகமாகிக் கொண்டே போகிறது! பூதக் கண்டம் ஆ·ப்பிரிக்கா ஒட்டிக் கொண்டிருக்கும் செங்கடல் வடமுனையில் அறுந்து பிளக்கப் போகிறது!  ஹவாயி தீவுகள் வடமேற்குத் திசையில் மெதுவாகப் பெயர்ந்து ஜப்பான் தீவுகளை நோக்கிச் செல்கின்றன!  வட அமெரிக்காவும், ஐரோப்பாவும் எதிர்ப்புறம் நகர்ந்து விலகி இடைவெளியை அகற்சி யாக்கி வருகின்றன!  அமெரிக்காவில் காலி·போர்னியா கடற்கரையில் உள்ள லாஸ் ஏஞ்சலஸ் நகரம் நகர்ந்து, வடபுறமாகச் சரிந்து கொண்டிருக்கிறது!  இமாலயச் சிகரங்களை இந்தியாவின் கனத்த உபகண்டத் தட்டு வடபுறம் அழுத்தி, அழுத்தி அவற்றின் உயரத்தை மிகையாக்கிய வண்ணமா யிருக்கின்றன!  தென்புறத்தில் உள்ள இந்தியக் கடற்தட்டும், வடக்கில் இருக்கும் யுரேசியத் தட்டுடன் முட்டி மோதிக் குதிரை ஏறி, நிலநடுக்கம் உண்டாவது அடிக்கடி நேர்ந்து வரும் இயற்கையின் அபாயத் திருவிளையாடல்கள்!

fig-5-indo-eurasian-plate-movements

அந்த நகர்ச்சி நியதியில் இந்திய உபகண்டம் ஆண்டுக்கு 1.6 அங்குலம் [40 மில்லி மீடர்] வடபுறம் நோக்கித் தள்ளப்படுகிறது!  இவ்விரு தட்டுகளும் முட்டி மோதும் போது, கீழிருக்கும் அடித்தட்டு [Crust] புடைத்து மேல் எழுகிறது!  அப்போது மலை உச்சிகள் இன்னும் உயர மாகின்றன.  இந்தியத் தட்டு வடக்குத் திசையில் நகரும் போது, அடித்தட்டு தணிந்து யுரேசியத் தட்டை மேலே உயர்த்திக் கீழே நுழைகிறது!  இந்த நியதிதான் “தட்டுக் கீழ்நுழைவு” [Plate Subduction] என்று சொல்லப்படுகிறது. இரண்டு தட்டுகளுக்கு இடையே நிகழும் இந்த குவியழுத்த நகர்ச்சியால் [Compressive Motion] இடை நழுவல் [Slip] ஏற்பட்டுப் பூகம்பங்கள் உண்டாக்கும் புவித்தட்டு உந்துப் பழுதுகள் [Thrust Faults] அமைகின்றன. அவற்றில் நமக்கு நன்கு அறிமுகமான முப்பெரும் பழுதுகள்: 2004 இல் சுனாமி உண்டாக்கிய இந்தோனேசியா கடற்தட்டுப் பழுது, கலி·போர்னியாவின் ஆண்டிரியா பழுது,  இமயமலைத் தொடரின் இமயப் பழுது ஆகியவை முக்கியமானவை.

major-earthquakes-1

தகவல்:

1. Time Magazine Article, “Nightmare in the Mountains,” By: Tim McGrik (Oct 24, 2005)
2. The Kashmir Earthquake By Washington Post (Oct 12, 2005)
3. Himalayan Tectonic Setting Earthquake Program.
4. Earthquake History & Scismicity in the Northwest Region of Indian Sub-continent. [http://asc-india.org/scismic/pakistan.htm]
5. New York Times -As Pakistan Reels, Musharraf Pleads for International Aid By: Somini Sengupta
(Oct 8, 2005)
6. Quake Homeless in Urgent Need of Tents By: Martin Regg Cohn, Asia Bureau (Oct 17, 2005)
7. (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40401222&format=html (Earthquake in Gujarat)
7 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40401292&format=html (Earthquake in Mexico City)
7 (d) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40401082&format=html (Major Earthquake in Iran)
7 (e) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40510211&format=html (Earthquake in Himalayan Zone) (October 21, 2005)
8. Techtonics in Italian Earthquake By Chris Rowan Geologist (April 6 2009)
9.  Italian Earthquake Death Toll Rises to 260 & 28,000 Homeless By Reuters Alertnet (Apr 8, 2009)
10. BBC News Aftershock Hits Italy Quake Zone (April 7, 2009)
11. Rescue Workers Preparing for Surgical Operation on Buildings (April 7, 2009)
12 News Desk – Italy Earthquake 2009 -Worst Quake Since 1980 (April 7 2009)
13 Guardian UK : Italy Earthquake : Stricken L’Quila Suffers Again as Aftershocks Hit By John Hooper (April 7, 2009)

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan (April 9 , 2009)]

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! சூரிய மண்டலத்திலே மிகப் பெரிய தாக்குப் பள்ளம் (Impact Crater) செவ்வாய்க் கோளில் கண்டுபிடிப்பு !

fig-1-asteroid-impact

(கட்டுரை 56 பாகம் -2)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா


பரிதி மண்டலத்தின்
பெரிய தாக்குக் குழி இருப்பது
செவ்வாய்க் கோளிலே !
முரண்கோள்கள் மோதிப் பற்பல
அரண்குழிகள் ஆக்கி யுள்ளன !
கடல் ஒன்று நிலவிக்
காய்ந்து போனது
வாயு மண்டலம் வற்றிப் போய் !
துருவத்தில் ஈரம் குளிர்ந்து
பனி மண்டலமாய்ப்
படிந்தது !
வற்றிய நதிகள் ஒரு காலத்தில்
சுற்றிய தடங்கள் ஆங்கே
தெரியுது !
முரண் கோளொன்று தாக்கி
மேற்தளப் பூகம்பமாய்
மேதினி தகர்த்து
டைனோ சார்ஸ் பிராணிகள் போல்
கணப் பொழுதில் மடிந்து
மனித இனங்கள்
புதைந்து போகலாம் !
புதுப் புது இனங்கள்
புவியிலே பிறகு
விதவிதமாய்த் தோன்றலாம் !

fig-2-asteroid-imapact

நாங்கள் இன்னும் “அசுரத் தாக்குக் கோட்பாடை” (Giant-Impact Hypothesis) நிரூபிக்க வில்லை.  ஆனால் அந்த விதியை விளக்கும் நிலையை நெருங்கி வந்து விட்டோம்.  செவ்வாய்க் கோளின் வட பகுதியில் சுமார் 40% பரப்பளவைத் தழுவும் “பொரியாலிஸ்” பள்ளத்தாக்கு (Borealis Basin) சூரிய மண்டலம் உருவாகும் போது ஒரு பெரும் தாக்குதலில் உண்டாகி மிஞ்சியுள்ளது ! பள்ளத்தின் விட்டம் 5300 மைல் (8500 கி.மீ) . . . இப்போது அதன் அளவைக் கணக்கிட்ட போது அப்பகுதியைத் தாக்கிய அண்டத்தின் விட்டம் சுமார் 1200 மைல் என்பது தெரிகிறது !  தாக்கிய அந்த அண்டம் புளுடோவின் விட்டத்தை ஒத்தது !

ஜெஃபிரி ஆன்டிரூஸ் ஹன்னா (Jeffrey Andrews-Hanna, MIT Researcher, Cambridge, USA)

“செவ்வாயின் வட பகுதி அசுரப் பள்ளம் கண்டுபிடிப்பு மகத்தானதோர் விளைவு !  அதன் ஆராய்ச்சி விளைவுகள் செவ்வாய்க் கோளின் ஆரம்ப கால உருவாக்க மூலத்திற்கு மட்டுமல்லாது பூமியின் ஆதிகாலத் தோற்றத்த்தையும் விளக்க உதவி செய்யும்.”

மெக்கேல் மேயர், நாசாவின் செவ்வாய்த் திட்டத்தின் தலைமை விஞ்ஞானி.

“நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுறுவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

ஜொஹானஸ் கெப்ளர் (German Astronomer Johannes Kepler) (1571-1630)

fig-2-maunder-crater-in-marsமனிதனின் சீரிய பண்ணமைப்புக் குரல்களில் (Symphony of Voices) கால நெடித்துவத்தை (Eternity of Time) ஒரு மணி அளவுக்கும் குறைவாகப் பாடிவிட முடியும் !  அப்போது உன்னதக் கலைஞனான கடவுளின் கைப்பிடிக் களிப்பை நாம் சுவைத்துவிட முடியும்.

ஜொஹானஸ் கெப்ளர்.

“நீரைத் தேடிச் செல்” என்பது கடந்த பத்தாண்டுகளாய் சொல்லப்படும் நாசாவின் செவ்வாய் மந்திரம் !  செவ்வாய்க் கோளின் எதிர்காலத் தேடல் திட்டங்களுக்கு ·பீனிக்ஸ் பயணம் முதற்படித் தடவைப்பு.

“ஃபீனிக்ஸ் திட்டக் குறிப்பணியில் தளவுளவி செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனித் தளத்தில் புதியதோர் பகுதியை ஆராயத் தேர்தெடுத்து இறங்கியுள்ளது.  உண்மையாக நாங்கள் கண்டறியப் போவது அந்த பனித்தள நீர் உருகிய சமயம், மண்ணில் கலந்து அந்தக் கலவையில் உயிர் ஜந்துகள் வளரத் தகுதி இருக்கிறதா என்று கண்டறிவது.  ஏனெனில் உயிரின விருத்திக்குத் தேவை திரவ நீர், நமது உடம்பில் உள்ள புரோடீன் அமினோ அமிலம் போன்ற சிக்கலான கார்பன் அடிப்படை ஆர்கானிக் மூலக்கூறுகளே,”

பீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

fig-3-mars-imaginery-appearance1“1970 இல் நாசா அனுப்பிய வைக்கிங் விண்ணூர்தி ஏன் செவ்வாய்த் தளத்தில் ஆர்கானிக் மூலக்கூறுகளைக் காணவில்லை என்ற வினா எழுந்துள்ளது.  ஆர்கானிக் மூலக்கூறுகளைச் சிதைக்கும் ஓர் இயக்கப்பாடுச் செவ்வாய்க் கோளில் உள்ளது என்று நாங்கள் எண்ணுகிறோம்.  ஆனால் அந்த இயக்கப்பாடு துருவப் பகுதியில் இருக்காது என்பது எங்கள் யூகம்.  ஏனெனில் நீரும் பனிக்கட்டியும் ஆர்கானி மூலக்கூறுகளைச் சிதைக்கும் “பிரிப்பான்களைத்” (Oxidants) துண்டித்துவிடும்.  செவ்வாய்த் தள மண்ணில் உயிர் ஜந்துகள் இருந்தன என்று அறிவது கடினம்.  ஆனால் அந்த மண்ணில் உயிரினம் வாழ்ந்திருக்க முடியுமா என்று விஞ்ஞானிகள் ஆய்ந்தறியலாம்.”

வில்லியம் பாயின்டன், [William Boynton] ·பீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, பேராசிரியர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

“ஃபீனிக்ஸ் தளவுளவியை அனுப்பியுள்ளதின் குறிநோக்கம் இதுதான் : நீருள்ளது என்று ஏறக்குறைய உறுதியில் அறிந்திருக்கும் செவ்வாய்க் கீழ்த் தளத்தைத் தோண்டி அறிவது.  தற்போது செவ்வாய்க் கோளை சுற்றிவரும் விண்ணுளவிகள் மூலமாக இறங்க வேண்டிய தளத்தை நுணுக்கமாக, விளக்கமாகக் காட்டி பத்து செ.மீ. அல்லது அதற்கும் குறைந்த ஆழத்தில் பனிக்கட்டிகள் புதைந்துள்ளன என்பதற்குச் சமிக்கை வந்துள்ளது.  ஏனெனில் உயிரனத் தோற்றத்துக்கும் குடியிருப்புக்கும் நீர்வள அமைப்பு மிக்க இன்றியமையாதது என்பது பலரது கருத்து.”

டாக்டர் டாம் பைக் [Dr. Tom Pike] ஃபீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, [Imperial College, London, UK]

fig-1-mars-largest-impact-craterபரிதி மண்டலத்திலே மிகப் பெரிய அசுரப் பள்ளம் கண்டுபிடிப்பு !

நாசாவின் விண்கப்பல்களான “செவ்வாய் விண்ணுளவி சுற்றியும்”, “அகிலவெளித் தளவுளவியும்” (Mars Reconnaissance Orbiter & Global Surveyor) சமீபத்தில் புரிந்த தள ஆய்வுகளின் போது சூரிய மண்டலத்திலே இதுவரை காணாத ஒரு மிகப் பெரிய “தாக்குக் குழியைப்” (The Largest Impact Crater) பற்றிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது !  1970 ஆம் ஆண்டுகளில் நாசாவின் “வைக்கிங் விண்சுற்றிகள்” (Viking Orbiters) செவ்வாய்த் தளத்தின் கீழ்ப்பகுதி மூன்றில் இருபங்கு மைல் உயரத்தில் மேற்பகுதியை விடத் தாழ்ந்து போயிருந்ததைப் படமெடுத்து அனுப்பின ! அண்டவெளி விஞ்ஞானிகள் இதற்கு இரண்டு காரணங்களை ஊகித்தார்கள் : (1)  தென்புறத்தில் ஏதோ செவ்வாயின் ஓர் உட்தள இயக்க விளைவால் உயர்ந்த பீடமாக எழுந்திருக்கலாம்.  அல்லது (2)  வடபுறத்தில் பேரளவுத் தாக்குதல் ஒன்று நேர்ந்து சிதறிப்போய் பள்ளம் விழுந்திருக்கலாம்.  மேற்கூறிய செவ்வாய்க் கோள் விண்ணுளவிகளும் வடகோளத் தென்கோளப் பகுதிகள் இரண்டின் தளமட்ட உயரங்களையும், ஈர்ப்பியலையும் (Elevations & Gravity), ஒப்புநோக்கிப் பதிவு செய்தன.  இந்த விபரங்களைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் ஒரு புதிய ஆய்வு புரிந்து சூரிய மண்டலத்தின் ஒரு பெரும் புதிரைத் தீர்க்கப் போகிறார் !  புதிர்க் கேள்வி என்ன ?  செவ்வாய்க் கோளில் பெரிதாய்த் தெரியும்படி வேறுபட்ட தளவியல் பண்பாடுகளுடன் ஏன் வடபுறம் தாழ்ந்தும் தென்புறம் உயர்ந்தும் உள்ளன என்பதுதான்.

fig-1a-mars-imapact-crater

1970 ஆண்டுகளில் நாசாவின் வைக்கிங் விண்சுற்றிகள் அனுப்பிய பல்வேறு இரட்டை முகம் கொண்ட செவ்வாய்த் தளப் படங்கள் நாசா விஞ்ஞானிகளைக் குழப்பி வந்தது உண்மை !  செவ்வாய்க் கோளின் பேரளவு அண்டத் தாக்குதலால் குறிப்பாக 40% வடப்பகுதி பெரும் பள்ளமாகக் தணிந்து விட்டது என்று புது ஆய்வுகள் முடிவு செய்கின்றன.  அந்த வடபகுதிக் குழியின் அகலம் 5300 மைல் (8500 கி.மீ) !  அந்த அசுரக் குழியை உண்டாக்கிய அண்டத்தின் அகற்சி சுமார் 1200 மைல் (2000 கி.மீ) இருந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் முதலில் கணித்துள்ளார் !  தாக்கிய அண்டம் புளுடோவின் விட்ட அளவை ஒத்தது.  பள்ளத்தின் அசுரப் பரப்பு யுரேசியா கண்டம் ஆஸ்திரேலியா கண்டம் இரண்டையும் சேர்த்த அளவு பெரியது என்று ஒப்பாக நோக்கப்படுகிறது ! செவ்வாய்க் கோளத்தில் வாயு மண்டலம் இருந்த காலத்தில் நீர்மயம் பாதுகாக்கப் பட்டு படுபாதாளக் குழியில் ஒரு காலத்தில் கடல் வெள்ளம் நிரப்பி யிருந்ததாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.  சூழ்வாயு மண்டலம் இழக்கப்பட்ட பிறகு கடல் வெள்ளம் ஆவியாகவோ அல்லது பள்ளத்தடியில் பனி மண்டலமாய் உறைந்தோ போய் இருக்கலாம் என்றும் ஊகிக்கப்படுகிறது !

fig-1b-mars-largest-crater-formation

செவ்வாய்ப் பாதாளப் பள்ளத்தின் பண்பாடுகள் !

பரிதி மண்டலத்திலே மிகவும் வழவழப்பான தளங்களில் ஒன்றாய் செவ்வாய்க் கோளின் வடப்பகுதிக் கோளம் காட்சி அளிக்கிறது.  அதே சமயத்தில் தென்பகுதிக் கோளம் மேடு பள்ளமாய்க் கரடு முரடாய் வடபகுதிக் குழித்தளத்தை விட இரண்டரை அல்லது 5 மைல் உயரத்தில் (4-8 கி.மீ) பீடங்கள் நிரம்பியுள்ளன.  செவ்வாயில் காணப்பட்ட மற்ற தாக்கு அசுரப் பள்ளங்களும், பொரியாலிஸ் பள்ளத்தைப் போலவே நீள்வட்ட வடிவத்தில் (Elliptical Shape) அமைந்துள்ளன.  அவ்வித நீள்வட்ட அசுரக் குழிகளின் ஒற்றைச் சிக்கல் தன்மை இது : 3.9 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அண்டத் துண்டுகள் செவ்வாய்க் கோளைத் தாக்கிய காலத்துக்குப் பிறகு ராட்சத பூகம்பங்கள் குழியின் அடிமட்டத் தளமான “தர்சிஸ் அரங்கில்” (Tharsis Region) உருவாயின என்று அறியப் படுகிறது ! அந்த அரங்கம் செவ்வாய்க் கோள் உருவாகி 2 மில்லியன் ஆண்டுகளில் தோன்றின என்றும், அது 19 ஆம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கும் தெரிந்தது என்றும் தெளிவாகிறது.

fig-1c-arizona-crater-usa2

செவ்வாய்த் தளங்களின் கரடு முரடான பீடப் படங்களும், தளப் பகுதிகளின் ஈர்ப்பியல் தன்மைகளும் அசுரப் பள்ளங்களின் அடித்தளக் கட்டமைப்பை (Underlying Structure of the Giant Basins) அறிய உதவி செய்தன.  அசுரப் பள்ளங்களின் நீள்வட்ட விளிம்புகளுக்கு அடுத்து புறவெளியில் இரண்டாவது வளைவாக (Secondary Outer Ring for the Giant Basins) ஒன்றும் ஒருங்கே இருப்பது தனித்துவப் பண்பாடாகக் காணப்பட்டது. இரண்டாவது  வெளியீட்டு விஞ்ஞான அறிக்கையில் மார்கரிதா மாரினோவா (Margarita Marinova, CIT) என்பவர் “முப்பக்கப் போலித் தாக்கு மாடலை” (Three-Dimentional Simulations of Impact ) உண்டாக்கி அசுரப் பள்ளங்களைக் கணினி மூலம் ஆக்கிக் காட்டினார்.

“அண்டம் தாக்கும் சமயத்தில் செவ்வாய்க் கோளின் பாதியளவு உட்தள அடித்தட்டு (Half of Planet’s Crust) தகர்க்கப் பட்டுக் கொந்தளிக்கும் போது எல்லாம் வெப்பக் கிளர்ச்சியில் உருகிப் போவதில்லை,” என்று காலி·போர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ·பிரான்சிஸ் நிம்மோ (Francis Nimmo) கூறுகிறார்.  அந்த தாக்கக் கொந்தளிப்பில் அதிர்ச்சி அலைகள் கோள் ஊடே பயணம் செய்து, கோளத்தின் அடுத்த பக்க உட்தள அடித்தட்டை உடைத்து அப்பகுதிக் காந்த களத்தைப் பாதிக்கிறது !  மூன்றாவது வெளியான விஞ்ஞான வெளியீட்டில் ·பிரான்சிஸ் நிம்மோ செவ்வாய்க் கோளில் அத்தகைய அடுத்த பக்க காந்தக் கள முரண்பாடுகளை தென்கோளப் பகுதிகளில் அளந்திருப்பதாகக் கூறினார் !

fig-1e-mexico-crater-chicxulub

விண்பாறை தாக்கி மெக்ஸிகோவில் உண்டான அசுரப் பள்ளம் !

65 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே 6 மைல் அகலமுள்ள முரண்கோள் (Asteroid) ஒன்று மெக்ஸிகோ நாட்டின் யுகாடன் தீவகற்பத்தின் (Yucatan Peninsula) முனையைத் தாக்கிக் காணப்படும் “சிக்குலப் பெரும் பள்ளம்” (Chicxulub Crater) சுமார் 100 மைல் விட்டமுள்ளது !  அதை நமது பூமியின் மிகப் பெரிய தாக்குப் பள்ளமாய்க் (Asteroid Impact Crater) கூறலாம் !  நாசாவின் அண்டக் கோள் பூதள விஞ்ஞானி (Planetary Geologist) அட்ரியானா ஒகாம்போ (Adriana Ocampo) என்பவர் யுகாடன் தீவகற்பத்தின் முனையில் வெகு ஆழத்தில் புதைந்து கிடக்கும் அசுரப் பள்ளத்தைத் துருவிப் பல்லாண்டுகளாய் ஆராய்ந்து வருகிறார்.  அசுரத் தாக்கு விளைவுகளில் ஏற்பட்ட பெரும் பள்ளங்கள் நமது அண்டக் கோள் பூமி எவ்விதம் தோன்றியது என்பதற்கு ஏதாவது அடிப்படைக் கோட்பாடுகளைக் காட்டுமா என்று ஆய்வுகள் செய்கிறார்.  அத்துடன் அந்த மாது செய்யும் மெக்ஸிகோப் பள்ளத்தின் ஆராய்ச்சிகள் தற்போது செவ்வாயில் தெளிவாக அறியப்பட்டுள்ள அசுரக் குழிக்கு ஏதாவது ஆதாரக் கருத்துக்கள் தெரிவிக்குமா என்பதை நாசா விஞ்ஞானிகள் ஆழ்ந்து நோக்குகிறார்.

fig-1d-the-north-polar-basin

செவ்வாய்க் கோளின் அசுரப் பள்ளம் புதிய கணிப்பின்படி 2100 மைல் விட்டமுள்ள நிலவு போன்ற ஒரு பெரும் அண்டம் தாக்கியே அத்தகைய பள்ளம் உண்டாகி இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.  65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே ஒரு முரண்கோள் தாக்கி மெக்ஸிகோ பெருங்குழி உண்டான போது நமது பூமியின் 70%  உயிரினங்கள் ஏறக்குறைய அழிந்து போயின !  அதே சமயத்தில் ஆயிரக் கணக்கான டைனோஸார்ஸ் அனைத்தும் மாண்டு புதைந்து போயின என்றும் கருதலாம் !  “மெக்ஸிகோ பெரும் பள்ளம் இயற்கையின் ஓர் ஆய்வுக் கூடம் !  மனிதர் நுழைய முடியாத செவ்வாய்க் கோள் போன்ற அண்டக் கோள்களில் பெரும் பள்ளங்கள் எப்படித் தோன்றியிருக்கலாம் என்பதை அறிய மெக்ஸிகோ பெருங்குழியின் ஒப்புமை விளைவுகள் நிச்சயம் உதவி செய்யும்,” என்று ஒகாம்போ கூறினார்.  மெக்ஸிகோவின் பெரும் பள்ளம் 100 மைல் விட்டமும் அரை மைல் ஆழமும் உள்ளது.  குழியின் அடிமட்டத்தில் மில்லியன் ஆண்டுகளாய் அநேக பாறைகள் புதைந்து போய்க் கிடக்கின்றன !  65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னே ஒரு பெரும் முரண்கோள் கரிபியன் வளைகுடாவில் (Caribbean Sea or Gulf of Mexico) விழுந்து ஓர் அசுரச் சுனாமியை (Huge Tsunamai) உண்டாக்கி இருக்க வேண்டும் என்று விண்வெளி விஞ்ஞானிகள் கருதுகிறார்.

fig-1f-mars-reconnaissance-orbiter

பூமியைத் தாக்கும் முரண்கோளால் பாதிப்புக்கள் நேருமா ?

பரிதி மண்டல வரலாற்றில் புதிராகக் கோள்களைக் தாக்கிய விண்கற்களின் தடங்கள் கோடிக் கணக்கில் நமக்கு விஞ்ஞானக் கதை சொல்கின்றன !  சாதாரண ஒரு சிறு தொலைநோக்கி மூலமாக நிலவைப் பார்த்தால் தாக்குக் குழிகள் நிரம்பி யிருப்பதைக் காணலாம்.  வாயு மண்டலம் இல்லாத நிலவின் மடியில் குழித் தடங்கள் அழியாமல் வரலாற்றைக் கூறும் போது, பூமியில் பட்ட தடங்கள் யாவும் காற்று, வெப்பம், மழை, நீரோட்டம், பனி ஆகியவை கால வெள்ளத்தில் உராயப்பட்டு சிதைவு செய்யப் பட்டன !  பரிதி மண்டல ஆரம்ப காலத்தில் பேரளவு வடிவமுள்ள விண்கற்கள் அண்டக் கோள்களைத் தாக்கிச் சிதைவுகள் செய்தன.  பிரமஞ்சத்தின் காலவெளிப் பயணத்தில் சில தாக்குதல்கள் பூமிக்குப் பேரதிர்ச்சிகளைக் கொடுத்துள்ளன.

fig-4-craters-in-mars1

65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 6 மைல் அகலமுள்ள K-T என்று பெயரிடப்பட்ட ஒரு முரண் கோள் (Asteroid) மெக்ஸ்கோவின் யுகடான் தீவகற்பத்தில் (Yucatan Peninsula) விழுந்தது.  அந்த அதிர்ச்சி ஆட்டத்தில் “கனற்புயல்” (Firestorm) எழுந்து தீமயக் குப்பைகள் பேரளவில் உண்டாயின.  அவை மீண்டும் பூதளத்தைத் தொட்டு தீக்காடுகளில் பெரும் புகை மண்டலம் கிளம்பி பல உயிரினங்கள் மூச்சு முட்டிச் செத்தன !  உதாரணமாக 1908 இல் சைபீரியாவில் ஏற்பட்ட புயல் வெடிப்பில் 1300 சதுர மைல்களில் உள்ள 60 மில்லியன் மரங்கள் விழுந்தன !  ஆறு மைல் அகலமுள்ள ஒரு விண்பாறை மாபெரும் நகர மையத்திலே விழுந்தால் என்ன நிகழும் என்பதைக் கற்பனை செய்ய இயலாது !

அரிஸோனாவில் முரண்கோள் ஒன்று உண்டாக்கிய பெருங்குழி !

50,000 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவின் அரிஸோனாப் பகுதியில் ஓர் அகிலக் குண்டு வீழ்ந்து ஒரு பெருங்குழியை உண்டாக்கி இயற்கை தன் ஏகாதிபத்திய அசுர வல்லமையைக் காட்டியிருக்கிறது !  அசுர விண்கல்லின் எடை 300,000 டன் என்றும், அது விழுந்த போது வேகம் 28,600 mph என்றும் கணிக்கப் பட்டுள்ளது !  பெருங்குழியின் விட்டம் 4000 அடி (1200 மீடர்), ஆழம் 570 அடி (750 அடி ?) (170 – 225 ? மீடர்) என்றும் தெறித்த பாறைகள் தரைக்கு மேல் 150 அடி உயரம் குவிந்துள்ளன என்றும் அறியப்படுகிறது !  குழிமையத்தில் 700-800 அடி உயரத்தில் கற்பாறைத் துண்டுகள் நிரம்பியுள்ளன !  விண்கல் விழுந்த தாக்க அதிர்ச்சி இரண்டரை (2.5) மெகாடன் டியென்டி ஹைடிஜன் அணுகுண்டு வெடிப்பு சக்தி கொண்டது என்று கணக்கிடப் பட்டுள்ளது !  அதாவது ஹிரோஷிமா நாகசாக்கியில் போட்ட அணுகுண்டுகளை விட 150 மடங்கு தீவிர வெடிப்பு சக்தி கொண்டது.  அதற்கு மேல் சூழ்வெளி மீது தாக்கிய அதிர்ச்சி ஆற்றல் 6.5 மெகாடன் வலுகொண்டது என்றும் கணக்கிடப் பட்டிருக்கிறது !

fig-5-hubble-images-of-mars

(தொடரும்)

++++++++++++++++++++++++++
தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – Why Did Mars Dry out ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition -Exploring the Early Universe By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
20 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40803131&format=html (செவ்வாய்க் கோளில் நீர் வரண்டது எப்போது ?)
21 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602032&format=html (செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)
22 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602101&format=html (செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)
23 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703221&format=html (செவ்வாய்த் துருவப் பனித் தொப்பிகள்)
24 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40708091&format=html (செவ்வாய்க் கோளுக்கு ·பீனிக்ஸ் தளவுளவி)
25 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40903261&format=html (செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு, பெர்குலரேட் உப்பு கண்டுபிடிப்பு)
26 NASA’s Reconnaissance Orbiter [May 15, 2008]
27 BBC News : NASA Selects Mars Climate Mission -(2) (September 16, 2008)
28 Mars Climate Orbiter -(1) Update By Wikipedia (March 22, 2009)
29 Space Flight Now : Mars Story Spawns Kudos & Controversy By Craig Covault (Mar 24, 2009)
30 BBC News : Q & A Liquid Water on Mars (Mar 22, 2009)
31 BBC News : New Light on Mars Methane Mystery (Jan 15, 2009)
32 BBC News : Briny Pools May Exist on Mars By Paul Rincon (March 24, 2009)
33 Daily Galaxy : Will Mexico’s Crater Chicxulub Give Clues to Ancient Mars ? (Apr 1, 2009)
34 Science Daily : Largest Crater in Solar System Revealed by NASA Spacecraft [June 8, 2008]
35 Daily Galaxy : Marts Imapct Crater : The Largest in the Solar System Sparks Intense Scientific Interest (Mar 30, 2009)

(தொடரும்)

++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) April 2, 2009

பிரபஞ்சத்தின் மகத்தான அறுபது புதிர்கள் ! செவ்வாய்க் கோளில் உப்புநீர்க் குளம் பெர்குலரேட் உப்பு & மீதேன் வாயு கண்டுபிடிப்பு !

fig-1d-ice-fall-on-phoenix-leg

(கட்டுரை 56 பாகம் -1)

சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா


செவ்வாயில் இனிப்புச் செய்தி !
செந்நிறத் தளத்தடியில்
உப்பு நீர்க் குளங்கள்
உறங்குதாம் !
அப்படி அங்கே
உப்பிருந்தால் கடலிருந்ததா ?
கடலிருந்தால் உயிரினத்
தடமிருந்ததா ?
மேலும் மீதேன் வாயு
பேரளவு !
எல்லா வற்றுக்கும் மேலாய்
ஏவுகணைகள் உந்தும்
எரிசக்தி ஆக்கும்
“பெர்குலரேட்”
உப்புக்கள் உள்ளதையும்
கண்டு விட்டது
தளவுளவி !
நிலவில் இருப்பது
டியூடிரியம் எரிசக்தி !
செவ்வாயில் உள்ளது
ராக்கெட் எரிசக்தி
ரசாயன உப்பு !
செந்நிற ஒளிக்கோளில்
தங்குமிடம் அமைக்க
இனி என்னதான் வேண்டும்
மனிதருக்கு ?

fig-1-mars-phoenix-lander

“நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுறுவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

ஜொஹானஸ் கெப்ளர் [German Astronomer Johannes Kepler]

“(செவ்வாயில்) இந்த உப்புக் குளங்கள் (Briny Pools) இருக்கலாம் என்பதை நான் நம்புகிறேன்.  கிடைத்த பெர்குலரேட் உப்புத் திரவங்களின் ஆவி அழுத்தம் போன்ற (Vapour Pressure) பண்பாடுகளை நாம் தெளிவாக அறிய வேண்டும். (தளவுளவி ஃபீனிக்ஸ் இறங்கும் போது இயக்கிய உந்துகணைகள் கீழிருக்கும் மண்தூசிகளை அகற்றியதால் அடித்தளப் பனிக்கட்டிகள் அம்பலமாயின.)  தளவுளவியின் கால்களுக்கு அடியில் சில செ.மீ. ஆழத்தில் பெர்குலரேட் உப்புக்கள் பனிக் கட்டிகளாய்க் காணப் பட்டன !  இந்த இரண்டும் தானாகச் சேர்ந்து கொள்பவை என்று சொல்வதற்குப் பெரும் கற்பனா சக்தி எதுவும் தேவை யில்லை !  ஈரடிப்பு இருந்தால் பெர்குலரேட் உடனே ஈரத்துடன் சேர்ந்து நகரும் தன்மை அடைகிறது.”

டாக்டர் மைக்கேல் ஹெக்ட் (Dr. Mike Hecht NASA JPL California)

“(செவ்வாய்க் கோளில்) இயக்கமுடன் உள்ள மீதேன் வாயு அரங்குகள் பல இருப்பதை நாங்கள் எடுத்துக் காட்டியிருக்கிறோம்.  அவ்விதம் மீதேன் வாயு வெளியாக்கும் மூன்று விதத் தனித்துவ அரங்குகள் இருப்பதைத் தெரிந்திருப்பதற்கு அடித்தளச் சேமிப்பு முறை ஒரு மூலக் காரணம்.  இருவித வாய்ப்பு முறைகளில் இது உதிக்கலாம் : ஒன்று தளரசாயனவியல் (Geochemistry), இரண்டாவது முறை உயிரியல் முறை (Biological Process). ”

மைக்கேல் மும்மா நாசா (Michael Mumma, Senior Scientist NASA Goddard Spaceflight Center)

fig-1a-mars-exploration

“நீரைத் தேடிச் செல்” என்பது கடந்த பத்தாண்டுகளாய் சொல்லப்படும் நாசாவின் செவ்வாய் மந்திரம் !  செவ்வாய்க் கோளின் எதிர்காலத் தேடல் திட்டங்களுக்கு ஃபீனிக்ஸ் பயணம் முதற்படித் தடவைப்பு.

“ஃபீனிக்ஸ் திட்டக் குறிப்பணியில் தளவுளவி செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனித் தளத்தில் புதியதோர் பகுதியை ஆராயத் தேர்தெடுத்து இறங்கியுள்ளது.  உண்மையாக நாங்கள் கண்டறியப் போவது அந்த பனித்தள நீர் உருகிய சமயம், மண்ணில் கலந்து அந்தக் கலவையில் உயிர் ஜந்துகள் வளரத் தகுதி இருக்கிறதா என்று கண்டறிவது.  ஏனெனில் உயிரின விருத்திக்குத் தேவை திரவ நீர், நமது உடம்பில் உள்ள புரோடீன் அமினோ அமிலம் போன்ற சிக்கலான கார்பன் அடிப்படை ஆர்கானிக் மூலக்கூறுகளே,”

பீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

fig-4-mars-earth-comparision

“1970 இல் நாசா அனுப்பிய வைக்கிங் விண்ணூர்தி ஏன் செவ்வாய்த் தளத்தில் ஆர்கானிக் மூலக்கூறுகளைக் காணவில்லை என்ற வினா எழுந்துள்ளது.  ஆர்கானிக் மூலக்கூறுகளைச் சிதைக்கும் ஓர் இயக்கப்பாடுச் செவ்வாய்க் கோளில் உள்ளது என்று நாங்கள் எண்ணுகிறோம்.  ஆனால் அந்த இயக்கப்பாடு துருவப் பகுதியில் இருக்காது என்பது எங்கள் யூகம்.  ஏனெனில் நீரும் பனிக்கட்டியும் ஆர்கானி மூலக்கூறுகளைச் சிதைக்கும் “பிரிப்பான்களைத்” (Oxidants) துண்டித்துவிடும்.  செவ்வாய்த் தள மண்ணில் உயிர் ஜந்துகள் இருந்தன என்று அறிவது கடினம்.  ஆனால் அந்த மண்ணில் உயிரினம் வாழ்ந்திருக்க முடியுமா என்று விஞ்ஞானிகள் ஆய்ந்தறியலாம்.”

வில்லியம் பாயின்டன், [William Boynton] ஃபீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, பேராசிரியர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

fig-1e-buried-glaciers-in-mars“ஃபீனிக்ஸ் தளவுளவியை அனுப்பியுள்ளதின் குறிநோக்கம் இதுதான் : நீருள்ளது என்று ஏறக்குறைய உறுதியில் அறிந்திருக்கும் செவ்வாய்க் கீழ்த் தளத்தைத் தோண்டி அறிவது.  தற்போது செவ்வாய்க் கோளை சுற்றிவரும் விண்ணுளவிகள் மூலமாக இறங்க வேண்டிய தளத்தை நுணுக்கமாக, விளக்கமாகக் காட்டி பத்து செ.மீ. அல்லது அதற்கும் குறைந்த ஆழத்தில் பனிக்கட்டிகள் புதைந்துள்ளன என்பதற்குச் சமிக்கை வந்துள்ளது.  ஏனெனில் உயிரனத் தோற்றத்துக்கும் குடியிருப்புக்கும் நீர்வள அமைப்பு மிக்க இன்றியமையாதது என்பது பலரது கருத்து.”

டாக்டர் டாம் பைக் [Dr. Tom Pike] ஃபீனிக்ஸ் குறிப்பணி விஞ்ஞானி, [Imperial College, London, UK]

“செவ்வாய்க் கோள் மணற் படுகையில் [Sand Dunes] பனித்திரட்டு பரவிக் கிடக்கும் சான்று கிடைத்திருக்கின்றது. மணற் கட்டிகளைச் சேர்த்து வைத்திருப்பது நீர் என்பது எனது யூகம்.  எதிர்காலச் செவ்வாய்ப் பயண மாந்தர் பிழைப்பதற்கு அதை உதவவும், எரிசக்திக்குப் பயன்படுத்தவும் முடியுமென நினைக்கிறேன்.  அசுரக் குவியலான சில மணற் படுகையில் 50% நீர்மை இருப்பதாக செவ்வாய்த் தளப்பண்பியல் சான்றைக் [Topgraphical Evidence] காண்கிறேன்.  செவ்வாயில் பெருவாரியான நீர் வெள்ளம் கிடைக்கலாம் என்று நான் சொல்லவில்லை!  முன்பு காணப்படாத ஓரிடத்தில் புதிதாக நீரிருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறேன்.”

மேரி போர்க், அரிஸோனா அண்டக்கோள் விஞ்ஞான ஆய்வுக்கூடம் [Mary Bourke (Sep 2005)]

fig-1b-mars-samplesசெவ்வாய்த் தளத்தடியில் உப்புநீர்க் குளங்கள் இருக்கலாம் !

செவ்வாய்த் தளத்தடியில் உப்பு நீர்க் குளங்கள் (Briny Pools of Salty Water) ஒளிந்து கொண்டிருக்கலாம் என்று நாசா அண்டக்கோள் விஞ்ஞானிகள் அழுத்தமாக நம்புகிறார்கள் !  செவ்வாய்க் கோளின் தணிந்த உஷ்ணத்தாலும் தாழ்ந்த வாயு அழுத்தத்தாலும் நீர் வெள்ளம் பெருவாரியாக பனிக்கட்டி வடிவிலோ அல்லது ஆவியாகவோ (Watery Ice or Water Vapour) பரவி இருந்தது !  2008 மே மாதம் 25 ஆம் தேதி செவ்வாய்த் தளத்தில் தடம்வைத்த  ஃபீனிக்ஸ் தளவுளவியின் ஆய்வகம் (Mars Lander Phoenix Laboratory) செவ்வாய்த் தளமண்ணில் பெர்குலரேட் உப்புக்கள் இருப்பதை (Perchlorate Salts) நிரூபித்தது !  அந்த பெர்குலரேட் உப்புக்கள்தான் (-70 டிகிரி C) உஷ்ணத்தில் நீரைத் திரவமாக வைத்துள்ளது.  அதாவது நீரின் பனிக்குளிர் உஷ்ணத்தைத் (Freezing Temperature) தணிவாக்கியது பெர்குலரேட் உப்பு என்பது தெளிவாக அறியப்பட்டது !  தளமண் கட்டிகள் பனிக் கட்டியுடன் சேரும் போது உப்புக் கட்டிகள் (Pockets of Brine) உண்டாகலாம்.  இந்த வாரம் உட்லாண்டிஸ், டெக்ஸஸில் நிகழும் 40 ஆவது “நிலவு அண்டக்கோள் விஞ்ஞானப் பேரவையில்” கூடியுள்ள விஞ்ஞானிகள் (40th Lunar & Planetary Science Conference LPSC) இந்தக் கண்டுபிடிப்புகளைப் பற்றித்தான் தர்க்கம் செய்து வருகிறார்கள்.

fig-2-perchlorate-found-in-mars

பெர்குலரேட் உப்பைப் பற்றிக் கருத்தாடல்கள்

“செவ்வாயில் இந்த உப்புக் குளங்கள் (Briny Pools) இருக்கலாம் என்பதை நான் நம்புகிறேன்.  கிடைத்த பெர்குலரேட் உப்புத் திரவங்களின் ஆவி அழுத்தம் போன்ற (Vapour Pressure) பண்பாடுகளை நாம் தெளிவாக அறிய வேண்டும். தளவுளவி ஃபீனிக்ஸ் இறங்கும் போது இயக்கிய உந்து கணைகள் கீழிருக்கும் மண்தூசிகளை அகற்றியதால் அடித்தளப் பனிக்கட்டிகள் அம்பலமாயின.  தளவுளவியின் கால்களுக்கு அடியில் சில செ.மீ. ஆழத்தில் பெர்குலரேட் உப்புக்கள் பனிக் கட்டிகளாய்க் காணப் பட்டன !  இந்த இரண்டும் தானாகச் சேர்ந்து கொள்பவை என்று சொல்வதற்குப் பெரும் கற்பனா சக்தி எதுவும் தேவை யில்லை !  ஈரடிப்பு இருந்தால் பெர்குலரேட் உடனே ஈரத்துடன் சேர்ந்து நகரும் தன்மை அடைகிறது.” என்று நாசா ஜெட் உந்துகணை ஆய்வகத்தின் டாக்டர் மைக்கேல் ஹெக்ட் கூறுகிறார்.  செவ்வாய்க் கோளின் பகல் சூழ்வெளி வாயு அழுத்தத்தில் உள்ள ஆவி நீரைக் (Water Vapour) கட்டுப்படுத்துவது பெர்குலரேட் உப்புக்களின் அளவாக இருக்கலாம் என்று ஜெட் உந்துகணை ஆய்வகத்தைச் சேர்ந்த டாக்டர் டிராய் ஹட்ஸன் கூறுகிறார் !  அந்த பெர்குலேட் உப்புக்களின் இருக்கையால்தான் ஃபீனிக்ஸ் தளவுளவியும் 1970 இல் பயணம் செய்த வைக்கிங் தளவுளவிகளும் (Viking Landers) கார்பன் உள்ள ஆர்கானிக் மூலக்கூறுக் கலவைகளைக் (Organic Molecular Compounds) அழுத்தமாகக் காண முடியவில்லை என்று தெரிகிறது.

fig-3-methane-in-mars

நமது பூமியில் பெர்குலரிக் அமிலத்திலிருந்து பெர்குலரேட் உப்புக்கள் தயாரிக்கப் படுகின்றன.  அந்த பெர்குலரோ உப்புக்கள் ராக்கெட் எஞ்சினுக்கு “திடவ எரிசக்தியாகப்” (Solid Rocket Fuel) பயன்படுகிறது.  மேலும் அவை வான வேடிக்கை வெடிப்புகளுக்கும், பாதுகாப்பு வாயுப் பையிக்கும் (Fire Works & Airbags) உபயோகம் ஆகின்றன.  டாக்டர் மைக்கேல் ஹெக்ட் மேலும் பெர்குலரேட் பற்றிக் கூறுவது :  “செவ்வாயில் திரவநீர்க் குளங்கள் நிலைப்பட ஏதுவாக இருக்க சரியான அளவு பெர்குலரேட் உப்புக்கள் இருப்பு தேவைப்படும்.  நாங்கள் கண்ட தளத்தில் சிறிதளவு பெர்குலரேட் உப்புத்தான் பெருமளவு பனிக்கட்டில் இருந்தது !  அதாவது அந்த இடத்தில் நீ வெள்ளம் மிகை யாகவும், பெர்குலரேட் சிறிதாகவும் இருந்திருக்க வேண்டும். அதாவது இரண்டும் போதுமான அளவிருந்து சேர்ந்து கொண்டால், தணிந்த உஷ்ணத்தில் பெர்குல்ரேட் உப்புக் குளம் (Pool of Low Temperature Brine) அங்கே இருக்க வசதியுள்ளது !  அதே சமயத்தில் சில ஆராய்ச்சியாளர் ஃபீனிக்ஸ் மூலம் காணப்பட்ட பெர்குலரேட் உப்பு சிறிதளவாக இருப்பதால் தள இரசாயனம் பெருத்த பரப்பளவில் செய்து காட்ட வேண்டும் என்று எடுத்துரைத்தார்.  ஆயினும் இந்தக் கண்டுபிடிப்புகள் செவ்வாய்க் கோளானது பல்வேறு முறைகளில் நமது பூமியைப் போல் ஒத்திருப்பதைக் காட்டுகின்றன என்று டாக்டர் மைக்கேல் ஹெக்ட் அழுத்தமாக வலுவுறுத்துகிறார் .

fig-1c-martian-clouds-sent-by-phoenix-lander

பெர்குலரேட் உப்புக்களைச் சோதித்த ஃபீனிக்ஸ் தளவுளவி

ஃபீனிக்ஸ் தளவுளவியின் ஆய்வுக்கருவி பெர்குலெரேட் உப்பைச் சூடாக்கியதும் ஆக்ஸிஜன் வெளியாகி ஆர்கானிக் பொருள் எரிந்து கார்பன் டையாக்ஸைடு வாயு (CO2 Gas) உண்டானது.  ஆனால் வெளியான CO2 வாயு ஆர்கானிக்கிலிருந்து வந்ததா இல்லையா வென்று தெரியவில்லை என்று ஃபீனிக்ஸ் திட்டத் தலைமை விஞ்ஞானி பீடர் ஸ்மித் கூறினார்.  செவ்வாய்க் கோளின் வடதளத்தில் திரவ நீர் இருந்ததற்கு ஃபீனிக்ஸ் பலமுறைகளில் சான்றுகளை எடுத்துக் காட்டியதைக் கூறினார்.  அவற்றில் சில ஈரக் கனிமங்கள், ஈரமண் கட்டிகள், தனிப்பட்டு உருகிய பனித் திட்டுகள் (Aqueous Minerals, Cloddy Cemented Soil & Segregated Ice, as if Melted).  செவ்வாய்க் கோளின் வட-தென் துருவ அச்சு சாயும் போது கோளின் உஷ்ணம் சூடேறி ஈரக் காலநிலை உண்டாகித் திரவ நீர் காணப்படலாம்.  ஆனால் அது ஒரு குளமாக இருக்கும் என்று சொல்ல முடியாது.  அது ஈர மண்ணாக இருக்கும் என்று சொல்கிறார் பேராசிரியர் பீடர் ஸ்மித்.  செவ்வாய்த் தளத்தில் கால்சியம் கார்பொனேட் இருப்பதையும் ஃபீனிக்ஸ் கண்டுள்ளது முந்தைய காலத்தில் திரவநீர் உள்ளதைக் காட்டுகிறது.  டாக்டர் மைக்கேல் ஹெக்ட், டாக்டர் டாம் பைக், டாக்டர் நில்டன் ரென்னோ மூவரும் நீர்த் துளிகள் குளிர்ந்து ஃபீனிக்ஸ் தளவுளவியின் கால்களில் ஒட்டி யிருப்பதைப் படத்தில் கண்டிருக்கிறார்கள்.

fig-5-mars-exploration

செவ்வாய்க் கோளில் பெருமளவு மீதேன் வாயு கண்டுபிடிப்பு !

பூதளவியல் முறையிலும் உயிரினம் மூலமாகவும் (Geological or Biological Process) நமது பூமியில் உற்பத்தியாகும் மீதேன் வாயு பெருமளவில் செவ்வாய்க் கோளில் இருப்பதை நாசா விஞ்ஞானிகள் விஞ்ஞான வெளியீடு ஒன்றில் அறிவித்துள்ளார்கள்.  ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே (2004) செவ்வாய்ச் சூழ்வெளியில் மீதேன் வாயு இருப்பது அறியப்பட்டாலும், இப்போது பேரளவில் மீதேன் வாயு பெருகியுள்ள தனித்தனி அரங்குகள் கண்டுபிடிக்கப் பட்டிருக்கின்றன.  சூரிய ஒளிபட்டுச் சிதைந்து போகும் மீதேன் வாயுவின் ஆயுள் சிறிதாயினும் அது மீண்டும் புத்துயிர் பெற்று வருவதற்கு இயற்கையில் ஏதோ ஒரு சுரப்பி இருக்கிறது ! அதாவது செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு சிதைவதும் உதிப்பதும் தொடர்ந்து நேரும் ஓர் இயற்கை நிகழ்ச்சியாக இருக்கிறது ! முடிவான சுரப்பியாக பூர்வக் கால முறைகள் ஆகவோ அல்லது சமீபத்திய ஒரு முறையாகவோ இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர் கருத்துகிறார்.

fig-6-mars-atmosphere

நாசாவின் கோடார்டு விண்வெளி மையத்தின் மூத்த விஞ்ஞானி மைக்கேல் மும்மா (Michael Mumma, Senior Scientist NASA Goddard Spaceflight Center) மீதேன் வாயு கண்டுபிடிப்பைப் பற்றிச் சொல்கிறார் : செவ்வாய்க் கோளில் இயக்கமோடுள்ள மீதேன் வாயு அரங்குகள் பல இருப்பதை நாங்கள் எடுத்துக் காட்டியிருக்கிறோம்.  அவ்விதம் மீதேன் வாயு வெளியாக்கும் மூன்று விதத் தனித்துவ அரங்குகள் இருப்பதை தெரிந்திருப்பதற்கு அடித்தளச் சேமிப்பு முறை ஒரு மூலத் தோற்றம்.  இருவித வாய்ப்பு முறைகளில் ஒன்று : தளரசாயனவியல் (Geochemistry), இரண்டாவது முறை : உயிரினவியல் (Biological Process).  பூதளவியல் முறையில் மீதேன் வெளியாகிறது என்றால் அது அடித்தளத்தில் நேரும் எரிமலைக் கொந்தளிப்பால் நிகழ்வது என்று கருதலாம்.  அம்முறைக்கு “பாம்புப் பாறை தோன்றும் முறை” (Serpentinization) என்று பெயர்.

(Serpentinization) :  (Serpentinite is a rock) composed of one or more serpentine minerals. Minerals in this group are formed by serpentinization, a hydration and metamorphic transformation of ultramafic rock from the Earth’s mantle. The alteration is particularly important at the sea floor at tectonic plate boundaries. It is the state rock of California, USA.  இப்போதைய கணிப்புப்படி (2003 கணிப்பு) செவ்வாய்ப் பிரதான அரங்கில் உள்ள மீதேன் வாயு முகில் அளவு (Methane Gas Plume) 19,000 டன் !  2011 இல் நாசா செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப் போகும் “செவ்வாய் விஞ்ஞான விண்ணாய்வி” (Mars Science Laboratory) (MSL) நூதனக் கருவிகளை ஏற்றிக் கொண்டு கார்பன் பூதளவியல் அல்லது உயிரியல் முறைபாட்டில் வெளியாகுதா வென்று கண்டறியும் !

fig-7-science-conference-texas

செவ்வாய்த் தளத்தில் ஃபீனிக்ஸ் தளவுளவி கண்ட முதல் பனித்திரட்டு !

2008 மே மாதம் 30 ஆம் தேதி செவ்வாய்க் கோளில் தடம்வைத்த ஃபீனிக்ஸ் தளவுளவி புதியதோர் விந்தைத் தகவலைப் பூமிக்கு அனுப்பியிள்ளது ! “செவ்வாய்த் தளத்தில் பனிக்கட்டியைக் காமிராவின் கண்கள் நேராகக் காண முடிகிறது” என்பதே அந்தச் செய்தி ! மெய்யாக ஃபீனிக்ஸின் 12 எதிர்த்தள்ளி உந்துகள் (12 Retro Thrusters) இயங்கித் தளம் சுத்தமாக்கப்பட்ட போது தளவுளவியின் கீழே வெண்ணிறத் தரைப் பளிச்செனக் காணப்பட்டது.  அதாவது விஞ்ஞானிகள் திட்டமிட்டபடி ஃபீனிக்ஸ் தளவுளவி பனித்தரை மீதுதான் தனது மூன்று பாதங்களைப் பரப்பியிள்ளது !  மேலும் மூன்று கால்களில் ஒரு பாதம் மூன்றடி விட்டமுள்ள ஒரு பனித்தட்டின் மீது அமர்ந்திருந்தது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.  அடுத்து ஃபீனிக்ஸின் சுயமாய் இயங்கும் யந்திரக் கரம் (Robotic Arm) சோதிக்கப்பட்டு முதல் மாதிரிச் செம்மண் எடுக்கப்பட்டது.  அந்த மண்ணில் வைரம் போல் பளிச்செனக் காமிராவின் கண்ணில் பட்டது ஒரு வெண்ணிறப் பனிக்கட்டி !  அதனுடைய வடிவத்தைக் கண்டு, அது காணப்பட்ட காலநேர உஷ்ண நிலையை [-300 C (-220 F)] ஒப்பிட்டுப் பார்த்தால் அந்த மாதிரிப் பனிக்கட்டி நீராக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் ஊகிக்கிறார்கள்.

fig-8-future-mars-resthouse

கட்டுரை : 56 பாகம் -2 (அடுத்த வாரம்)

(தொடரும்)

++++++++++++++++++++++++++
தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – Why Did Mars Dry out ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition -Exploring the Early Universe By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)
20 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40803131&format=html (செவ்வாய்க் கோளில் நீர் வரண்டது எப்போது ?)
21 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602032&format=html (செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)
22 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602101&format=html (செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)
23 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703221&format=html (செவ்வாய்த் துருவப் பனித் தொப்பிகள்)
24 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40708091&format=html (செவ்வாய்க் கோளுக்கு ஃபீனிக்ஸ் தளவுளவி)
25 NASA’s Reconnaissance Orbiter [May 15, 2008]
26 BBC News : NASA Selects Mars Climate Mission -(2) (September 16, 2008)
27 Mars Climate Orbiter -(1) Update By Wikipedia (March 22, 2009)
28 Space Flight Now : Mars Story Spawns Kudos & Controversy By Craig Covault (Mar 24, 2009)
29 BBC News : Q & A Liquid Water on Mars (Mar 22, 2009)
30 BBC News : New Light on Mars Methane Mystery (Jan 15, 2009)
31 BBC News : Briny Pools May Exist on Mars By Paul Rincon (March 24, 2009)

++++++++++++
S. Jayabarathan (jayabarat@tnt21.com) March 26, 2009