அணு ஆயுதப் போரில் விளையும் பேரழிவுகள் -2

(கட்டுரை: 2)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


பேரழிவுப் போராயுதம்
உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து
விழுதுகள் அற்றுப் போக,
விதைகளும் பழுதாக
ஹிரோஷிமா நகரைத் தாக்கி
நரக மாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
நாச மாக்கப் பட்டது !
இப்போது தோன்றின
புதுயுகத்து நியூட்ரான் குண்டுகள் !
கதிரியக்கம் பொழியும்
புழுதிக் குண்டுகள் !
புத்தர் பிறந்த நாட்டிலே
புனிதர் காந்தி வீட்டிலே
மனித நேயம்
வரண்டு போன
வல்லரசுகள் பின் சென்று
பாரத அன்னைக்குப்
பேரழிவுப்
போரா யுதத்தை
ஆரமாய்
அணிவிக்க லாமா ?

உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !

கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)

“ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம் !”

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

“எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது !  அதை அகில நாடுகள் உணர வேண்டும் !  அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் !  உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம்.  நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை !  உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.

பெர்டிரண்டு ரஸ்ஸல் (ஏப்ரல் 16, 1955)


நியூட்ரான் கணைகள் தாக்கும் புதுயுக அணுக்குண்டுகள்

நியூட்ரான் குண்டு (Neutron Bomb) என்பது “மிகைப்பட்டக் கதிர்வீச்சுக் குண்டு” (Enhanced Radiation Weapon -ERW) என்று அழைக்கப்படுவது.  இந்த அணுவியல் குண்டு பெரும்பான்மையான எரிசக்தியை வெடிப்புச் சக்தியாக வெளிப்படுத்தாமல் சக்தி ஊட்டப் பட்ட நியூட்ரான் கணைகளாக ஏவுகிறது.  இம்முறையில் நியூட்ரான் குண்டு சாதாரண அணுக்குண்டு ஆற்றலில் பத்தில் ஒரு பங்கு வல்லமையே கொண்டுள்ளது.  வெடிப்பும், வெப்ப சக்தியும் முழுமையாகத் தவிர்க்கப் படாமல் மிகையான நியூட்ரான்களின் தீவிரம் உயிரினத் தாக்குதலாய் விளைந்து வீடுகள், மாட மாளிகைகள், பாலங்கங்கள், வாகனங்கள், கட்டடங்கள் எதுவும் தகர்க்கப்படா.  மேலும் நகரின் தொழில்வளத் துறைகள் (Infrastructure) எவையும் அழிக்கப்படா !

1958 இல் முதன்முதலாக அமெரிக்காதான் நியூட்ரான் குண்டுகளைத் தயாரித்தது !  நியூட்ரான் குண்டுகளின் பிதாவாகக் கருதப்படுபவர் :  லாரென்ஸ் லிவர்மோர் தேசீயச் சோதனைக் கூடத்தின் சாமுவேல் கோஹென் (Samuel Cohen – Lawrence Livermore National Laboratory) என்பவர்.  முதல் சோதனை நெவேடா பாலைவன அடித்தளத்தில் 1963 இல் நடத்தப்பட்டது.  1978 இல் ஜனாதிபதி ஜிம்மி கார்டருக்கு ஏற்பட்ட எதிர்ப்புகளால் மேற்கொண்டு நியூட்ரான் குண்டுகள் விருத்தியும் பெருக்கமும் நிறுத்தமாகி, பிறகு ஜனாதிபதி ரோனால்டு ரேகன் காலத்தில் மீண்டும் 1981 இல் தொடரப் பட்டன.

மூன்று விதமான ERW நியூட்ரான் குண்டுகளை அமெரிக்கா விருத்தி செய்தது.  அவை W66, W70 & W79 (Nuclear Warheads) என்னும் இராணுவக் குறி ஆயுதங்களாக அழைக்கப் பட்டன.  W66 ஆயுதங்கள் 1970 ஆண்டுகளின் மத்தியில் தயாரிக்கப்பட்டுப் பின்னர் ஓய்வாகி விட்டன.  W70 ஆயுதங்கள் சிறு தூரக் கட்டளை ஏவுகணைகளிலும் (Short-Range Missile System) W79 பீரங்கிக் குண்டுகளாகவும் (Artillary Shells) உபயோகமாயின.  அவை இரண்டும் ஜனாதிபதி மூத்த ஜார்ஜ் புஷ் காலத்தில் ரஷ்ய அமெரிக்க “ஊமைப் போர்” (Cold War) முடிவில் (1992) ஓய்வாகின.   இறுதி W70 ஆயுதம் 1996 ஆண்டிலும் & W79 ஆயுதம் 2003 ஆண்டிலும் முழுமையாக நீக்கம் அடைந்தன.

1980 இல் பிரான்ஸ் தனது முதல் நியூட்ரான் குண்டை பசிபிக் கடலில் உள்ள முரோரா அடோல் (Mururoa Atoll) தீவில் சோதித்தது !  1980 ஆண்டுகளில் பிரான்ஸ் மேலும் சில நியூட்ரான் குண்டுகளை ஆக்கியதாக அறியப் படுகிறது.  அதற்குப் பிறகு அவற்றை எல்லாம் பிரான்ஸ் முடக்கி முறித்ததாக கூறப்பட்டுள்ளது.  1999 இல் சைனா நியூட்ரான் குண்டுகள் ஆக்கும் திறனைப் பெற்றதாகத் தெரிகிறது.  1997 ஆம் ஆண்டில் நடந்த நேர்முக உரையாடலில் சாமுவேல் கோஹென் “ரஷ்யா, சைனா & இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஏராளமாக நியூட்ரான் குண்டுகள் அடுக்கை (Stockpile of Neutron Bombs) வைத்திருக்க வாய்ப்புள்ளன,” என்று கூறியிருக்கிறார்.

நியூட்ரான் குண்டு ஒருவித பிளவு-பிணைவுக் குண்டுதான் (Fission-Fusion Bomb).  அது ஒரு வெப்ப அணுக்கரு யுத்த ஆயுதமே (Thermonuclear Weapon) !  அதில் வெடித்து மிகையாகி மீறிப் பெருகும் நியூட்ரான்கள் வெளியேறித் தாக்கும்படி ஏவப்படுகின்றன.  நியூட்ரான் குண்டுக்கு ஏராளமான கொள்ளளவு (Volume) டிரிடியம் (ஹைடிரஜன் வாயுவின் ஏகமூலம்) (Tritium – An Isotope of Hydrogen Gas) தேவை.  டிரிடியத்தின் “அரை ஆயுள்” சுமார் 12 ஆண்டுகள் (Half-Life).  அதாவது டிரிடியத்தின் நிறை (Mass) 12 ஆண்டிகளில் பாதியாகத் தேயும்.  அதாவது அடிக்கடி நியூட்ரான் குண்டுகளில் மறையும் டிரிடியம் வாயு நிரப்பப் படவேண்டும்.

கதிரியக்கப் பொழிவுக் குண்டுகள் (புழுதிக் குண்டுகள்)

கதிரியக்கப் பொழிவுகளை வீசும் அணுவியல் குண்டுகள் புழுதிக் குண்டுகள் (Radioactive Dirty Bombs) OR (Radiological Dispersion Bombs) என்று பெயரிடப் பட்டுள்ளன.  இவ்வகை அணுவியல் குண்டுகள் சாதாரண ரசாயன வெடிகளைப் பயன்படுத்திக் கதிரியக்கப் பொழிவுகளைச் சிறிதளவு தரைமீது (200 சதுர மைல்) பரப்பச் செய்யும்.  புழுதிக் குண்டுகளில் பொதுவாக இருப்பவை : ஸ்டிரான்சியம்-90 (Strontium-90), கோபால்ட்-60 (Cobalt-60) அல்லது சீஸியம்-137 (Cesium-137).  புழுதிக் குண்டுகள் வீரிய கதிரியக்கமுள்ள காமாக் கதிர்வீச்சைத் தளமெங்கும் பரப்பும்.  இந்தப் புழுதிக் குண்டுகளை எளிதாக யாரும் தயாரிக்க முடியும்.  தேவையானவை :  சாதாரண வெடி மருந்து அடுத்து கதிரியக்க உலோகம் ஏதாவது ஒன்று : ஸ்டிரான்சியம்-90 (Strontium-90), கோபால்ட்-60 (Cobalt-60) அல்லது சீஸியம்-137 (Cesium-137).  இவற்றைக் காமாக் கதிர்ப் படங்கள் எடுக்கும் (Radio-graphy) தொழிற் கூடங்களில் அல்லது அணு உலைக் கூடங்களில் களவாட வேண்டும்.

2002 மே மாத அறிக்கை ஒன்றில் அகில நாட்டு அணுசக்தி ஆணையகம் (International Atomic Energy Agency -IAEA) வெளியிட்ட புகார்த் தகவல் இது :  ஆண்டுக்கு சராசரி 300 முறை கதிரியக்க உலோகங்கள் கணாமல் போன புகார்கள் ஆணையகத்துக்கு அனுப்பப் படுகின்றனவாம்.  மேலும் 1993 முதல் 2002 வரை IAEA பெற்ற புகார்கள் : 10 ஆண்டுகளில் காணாமல் போனக் கதிரியக்க உலோகங்கள் எண்ணிக்கை சுமார் 400 !  அமெரிக்காவில் மட்டும் 1986 முதல் 2002 வரை 15 ஆண்டுகளாக கதிரியக்க உலோகங்கள் காணாமல் போன 1700 நிகழ்ச்சிகள் நேர்ந்துள்ளன !  இவ்விதம் உலகில் பல நாடுகளில் கதிரியக்கக் களவுப் புகார்கள் குவிந்துள்ளன.

1.  1995 இல் ரஷ்யாவில் செச்சென் தீவிரவாதிகள் களவாடிய 30 பவுண்டு சீஸியம்-137 & டைனமைட் வெடி மருந்து.

2.  1987 இல் ஈராக் ஒரு டன் புழுதிக் குண்டை வெடித்துச் சோதனை செய்தது.

3.  1987 இல் பிரேஸில் 20 கிராம் சீஸியம்-137 யைக் களவாடி வெடிப்பு ஆற்றலைக் காட்டியது.  அந்த சோதனையில் நால்வர் மரித்தனர்.  249 நபர் கதிர்த்தீட்டை (Radioactive Contamination) அடைந்தனர்.

அணு ஆயுதங்கள் உண்டாக்கிய முதல் பிரளயம் !

“உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன், நான் !” என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு அருளிய ஓர் வேத மொழியை, நியூ மெக்ஸிகோ சோதனைத் தளமான டிரினிடியில் [Trinity], 1945 ஜூலை 16 நாள் சரித்திரப் புகழ் பெற்ற முதல் ஆய்வு அணுகுண்டு, பயங்கர வெடிப்பை உண்டாக்கிய போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Oppenheimer] கூறினார்.  அவர்தான் அணுகுண்டின் பிதா ! யுத்த சமயத்தில் பல நாட்டு விஞ்ஞான நிபுணர்களைத் தன்கீழ்  இணைத்து, ஆணையிட்டு, ஆட்டிப் படைத்து, முதன் முதல் அணு ஆயுதங்களை ஆக்கிய தலைமை அதிபதி! ஒப்பற்ற விஞ்ஞான வல்லுநர், ஓப்பன்ஹைமர்! அணுகுண்டு புதுயுக மரண யந்திரம் ! வெடிக்  கோளம் ! விஷக் கோளம்! கதிர்க் கோளம் ! கனல் கோளம் ! ஒளிக் கோளம் ! அழிவுக் கோளம் ! அவற்றின் அசுரப் பிடியில் நசுங்கி மடிவது பாமர மக்கள்! அணுகுண்டு வெடிப்பின் விளைவு, முடிவற்றுத் தொடரும் மரணக் கோலம் !’

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் இறுதியில் 1945 ஆகஸ்டு 6, அடுத்து 9 ஆம் தேதிகளில் ஜப்பானில்  உள்ள ஹிரோஷிமா, நாகசாகியில் முதன் முதல் அமெரிக்கா தீவிரச் சக்தி பெற்ற அணு ஆயுதக் குண்டுகளைப் போட்டு, யுத்த அழிவுச் சரித்திரத்தில் ஒரு மாபெரும் புரட்சியை உண்டாக்கியது! ‘எநோலா  கே’ [Enola Gay] என்னும் B-29 வெடி விமானத்திலிருந்து, காலை 9:14 மணிக்கு ‘லிட்டில் பாய்’ [Little  Boy] என்னும் யுரேனியக் குண்டு [Uranium -235] ஹிரோஷிமாவை நோக்கி விழுந்தது. பத்தரை அடி  நீளமும், இரண்டரை அடி விட்டமுடன், 9700 பவுண்டு எடையுள்ள 15 கிலோ டன் TNT வெடிச்சக்தி கொண்ட அணுக்குண்டு 2000 அடி உயரத்தில் ஹிரோஷிமா நகரின் மையத்திலே வெடித்தது! சில  நிமிடங்கள் கழித்து, பரிதிபோல் ஒரு பேரொளிச் சிவப்புக் கோளம் பொங்கி எழுந்தது! அதைத் தொடர்ந்து  பயங்கர வெடிச் சத்தம் வானைப் பிளந்து, ஒரு பிரளயமே உண்டானது! பதினொன்று மைல் தூரத்தில்  திரும்பிச் சென்ற எநோலா கே வால் புறத்தை வெடி அதிர்ச்சி அலைகள் தாக்கி விமானத்தை  ஆட்டியதாம்! நூறு மைல் தூரம் சென்ற பின்னும், கோள முகில் விமானியின் கண்களுக்குத்  தெரிந்ததாம்! பிரம்மாண்டமான முகில் காளான் [Mushroom Cloud] தோற்றத்தில் பொங்கிக் குமுறி எழும்  புகை மண்டலம்! நடுவே சிவப்பு நிறக் கோளம்! கோளத்தின் உட்கருவில் பொருட்கள் எரியும் கோரமான  அனல் பிழம்பு! எங்கெங்கு பார்க்கினும், குவியல் குவியலாய்த் தீப்பற்றி அழிக்கும் கோரக் காட்சிகள்!

ஹிரோஷிமாவில் மட்டும் 160,000 பேர் உயிர் இழந்தனர்! அதில் 60,000 பேர் பயங்கரமாகத் தீப்பற்றி  எரிந்து கரிந்து போயினர். 130,000 பேர் காய முற்றனர். இதில் 43,500 பேர் படு காயப் பட்டனர். குண்டு  வெடிப்புக்குப் பிறகு ஐந்து வருட மரண எண்ணிக்கை மொத்தம் 200,000 ஆக ஏறியது. மரணக்  கணக்குப்படி, இரண்டு நகரிலும் 20%-30% அனல் வீச்சில் மாண்டனர். 50%-60% மற்ற அபாயத்தால்  செத்தனர். 15%-20% கதிரியக்க நோயால் காலமானார்கள். நான்கு சதுர மைல் பரப்பில் 68% நகரக்  கட்டிடங்கள் மற்றும் 24% பகுதிகள் சில நிமிடங்களில் தூள் தூளாகித் தரை மட்டமாயின!  எண்ணிக்கையில் 70,000 கட்டிடங்கள் இடிந்து வீழ்ந்தன! நகர மாளிகை, தீயணைப்பு நிலையம்,  போலீஸ் நிலையம், தபால் நிலையம், ரயில்வே நிலையம், பள்ளிக் கூடங்கள், மருத்துவக் கூடங்கள்,  தெரு மின்சார வண்டிகள், மின்சக்தி நிலையங்கள் முழுவதும் தரை மட்டமாயின! 13,000 அடித்  தொலைவில் இருந்த தொலை பேசிக் கம்பங்கள் கரிந்து போயின! நகரின் மருத்துவ டாக்டர்கள் 200  பேர் [90%] செத்து மாண்டனர்; அல்லது முடமாகிப் போயினர்! நகரில் இருந்த 1780 நர்ஸ்களில் 1654  பேர் கொல்லப் பட்டார்கள்: அல்லது காய மடைந்தார்கள். இருந்த 45 ஆஸ்பத்திரிகளில் 44  முழுமையாகவோ, அன்றிப் பகுதியாகவோ தகர்க்கப் பட்டன.

‘ஃபாட் மான்’ [Fat Man] என்னும் 22 கிலோ டன் TNT அழிவுச் சக்தி கொண்ட புளுட்டோனியக் குண்டு [Plutonium239] நாகசக்கியில் விழுந்து, 1945 ஆண்டு முடிவு எண்ணிக்கைப்படி 70,000 பேர் செத்து  மடிந்தார்கள்! 33% நகரப் பகுதி தரை மட்டமானது!  வெடி அதிர்விலும், வெடிப்பு அலையிலும், வெப்பக் கனலிலும் அழிந்தவர் போக, மற்றும் ஊடுருவிப் பாய்ந்த அணுக் கதிரியக்கம் தாக்கிப் பல்லாயிரம் பேர் பட்ட தொடர் வேதனைதான் எல்லாவற்றிலும்  மிக முக்கியமானது! மூர்க்கமானது! முடிவில்லாதது! ஹிரோஷிமா, நாகசாகி நகர்களில் வெடியும், வெப்பக் கனலும் தாக்காமல் கடவுள் புண்ணியத்தில் தப்பியவர்கள், கடைசியில் கதிரியக்கம்  தாக்கப்பட்டு, ‘கதிர் எமன்’ கையில் மெதுவாகச் செத்து மடிந்தார்கள்!

ஜப்பானுக்குச் சென்று ‘அமெரிக்க வெடிவீச்சுத் திட்டப் பதிவுக்குழு’ [The United States Strategic Bombing Survey Team] 1946 ஜூன் 30 இல் வெளியிட்ட, ‘ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணுகுண்டுகளின் விளைவுகள்’ [The Effects of Atomic Bombs on Hiroshima & Nagasaki] என்னும் தகவல் கூறுகிறது:  முக்கியமான விளைவு ஒரே சமயத்தில் நிகழும் மித மிஞ்சிய மரண எண்ணிக்கை! அடுத்து மூன்று வித உருவில் அணு ஆயுதம் பேரழிவுச் சக்தியாய் கோரக் கொலை புரிகிறது! முதலில் அளவற்ற வெப்பம்! இரண்டாவது பயங்கர வெடிப்பு அல்லது வாயு அழுத்தம்! மூன்றாவது தீவிரக் கதிரியக்கம்! பாதிக்கப் பட்டவர்களில் (20-30)% தீக்காய மரணங்கள்! அதிர்ச்சி, வெடிப்பு, வேறு விதங்களில் (50-60)% மரணங்கள்! மற்றும் (15-20)% கதிரியக்கக் காய்ச்சலில் பாதிப்பு [Radiation Sickness]! மூன்றிலும் மிக மிகக் கொடியது, கதிரியக்கத் தாக்குதல்! கதிரியக்கம் நொடிப் பொழுதில் சித்திரவதை செய்து மக்களைக் கொல்வதோடு, தொடர்ந்து உயிர் பிழைத்தோரையும், அவரது சந்ததிகளையும் வாழையடி வாழையாகப் பல்லாண்டுகள் [Acute (Lethal) & Long Term Effects] பாதித்துக் கொண்டே இருக்கும்! பிறக்கும் குழந்தைகள் கண்கள் குருடாகி, கால்கள் முடமாகி, கைகள் சிறிதாகி அங்க ஈனமாய் பிறக்கும்! மேலும் பலவிதப் புற்று நோய்கள் தாக்கி மக்கள் மரண எண்ணிக்கை அதிகமாகும்!

மாபெரும் நகரம், நிமிடத்தில் மானிட நரகம் ஆனது !

குண்டு வெடித்தபின் உஷ்ணம் 1 மில்லியன் ஏறும் என்றும், ஒளித் தீக்கோளம் 800 அடி விட்டம்  விரியும் என்றும், ‘முகில் காளான்’ [Mushroom Cloud] 9 மைல் மேலே உயரும் என்றும், பின்பு  உஷ்ணம் 15,000 F ஆகக் குறையும் என்றும், அணுகுண்டு விஞ்ஞானிகள் கணக்கிட்டனர்.  வெடிமையத்தைச் [Hypocenter] சுற்றி 2 மைல் ஆரச் சுற்றளவில் உஷ்ணம் 5400 F ஆகித் தீயில்  எரிந்து கூடான மனிதரும், தீப்புண்களில் கரிந்து போனவர்களும் பலர்! வெடி அலைகள் வினாடிக்கு 2 மைல் வேகத்தில் அடித்து மனிதர்களைக் குப்புறத் தள்ளியது! மானிடரின் முகம் தீய்ந்து கருத்து, தலை மயிர் யாவும் எரிந்து பலர் புத்த பிச்சுக்கள் போல் காணப் பட்டனர்! அவர்கள் மேனியில் தோலுரிந்து,  கரும் பிசாசுகள் நகர்ந்து செல்வது போல் நடமாடி, பாதையில் செத்துக் கிடந்தார்கள்!

பாடிப் பறந்து கொண்டிருந்த பறவை இனங்கள் அந்தரத்திலே எரிந்து சாம்பலாயின! ஓடிய அணில்கள்,  வீட்டுப் பூனைகள், நாய்கள் மாயமாய் மறைந்து போயின! நகர் முழுவதும் ஒளி மயத்தில் பளிச் சென்று  ஒளிர்ந்து, தீக்கோளம் எழுப்பி அணு ஆயுத மரண யந்திரம் வினை விதைத்தது போல் தோன்றியது!  மரங்கள் யாவும் எரிந்து பாலை வனக் கரும் நிழற் படங்களாய் நின்றன! தொலைபேசி, மின்சாரக்  கம்பங்கள் யாவும் கரிந்து வளைந்து போயின! காணும் இடமெல்லாம் மயானக் காடுகள் போல் எரியும்,  மாண்டு மடிந்த மனிதச் சடலங்கள் கணக்கில் அடங்கா!

விமானத்தையும், ஒளிக் கோளத்தையும் உற்று நோக்கியோர் கண்கள் அவிந்து போய்க் குருடாயின!  ஒரு குமரிப் பெண் கூறினாள், ‘ஒரு பெரும் சுத்தியலால் அடிபட்டு, அதிர்ச்சி அடைந்து, கொதிக்கும்  எண்ணையில் தள்ளப் பட்டது போல் உணர்ந்தேன்! எங்கேயோ தூக்கி எறியப்பட்டு திசை யெல்லாம் மாறிப் போனதாய்த் திக்கு முக்காடினேன்!’ ஒரு இளம் பெண்ணின் அவலக் குரல் கேட்டது. அவள்  முதுகு பூராவும் எரிந்து, கூனிப் போய்க் கதறிக் கொண்டிருந்தாள். உதவி ஆட்கள் அவளுடைய தாயைத் தூக்கிக் கொண்டு வந்தனர். தாயின் முகமும், உதடுகளும் வீங்கிப் போய், கண்கள் மூடியபடி இருந்தன!  இரு கைகளிலும் தோல்கள் உரிந்து, ரப்பர் கையுறை போல் தொங்கின! அவள் இடுப்புக்கு மேல் உடம்பில் எல்லா இடங்களும் கோரமாய் எரிந்து போயிருந்தன!

மனிதர்களின் உடம்பு பூதம்போல் பயங்கரமாய் வீங்கிப் போயிருந்தது! ஒரு மனிதன் கண்ணில் ஈட்டி போல் ஏதோ குத்தி, உதிரம் கொட்டி அலறிய வண்ணம் குருடனாய் அங்கு மிங்கும் ஓடிக்  கொண்டிருந்தான்! எரியும் உடம்போடு ஓடி வந்து, ஒருவன் குளத்தில் குதித்தான்! குளத்தின் நீர் சூடாக  இருந்தது. ஏற்கனவே, அந்தக் குளத்தில் எரிந்து போன சடலங்கள் பல மிதந்து கொண்டிருந்தன!  அனலில் கரிந்த மாது ஒருத்தி,  எரிந்த கைப் பிள்ளையை இறுகக் கட்டிய வண்ணம் சாய்ந்து செத்துக் கிடந்தாள்!  ஒரு மின்சார வண்டி எரிந்து போய் வெறும் கூடாரம் போல் நின்று கொண்டிருந்தது! உள்ளிருந்த  மாந்தர் அத்தனை பேரும் உருவம் தெரியாமல் கரிக் கூடுகளாய் உயிரற்றுக் கிடந்தனர்! ஓரிடத்தில்,  கரிந்து போன தாய் முலைக் காம்பிலிருந்து, பால் பருகக் குழந்தை வாய் வைத்துக் கொண்டிருந்தது!  அணு ஆயுதம் ஹிரோஷிமாவில் நடத்திய அவல நாடகக் காட்சிகள் எல்லாவற்றையும் எழுத இங்கே  இடம் போதாது!

வெடி விளைவை நேரில் கண்ட இரு ஜப்பானியரின் நிஜக் கதை!

Dr. மிச்சிஹிகோ ஹசியா [Dr. Michihiko Hachiya]: ‘பொழுது புலர்ந்து எழிலுடன் இலைகள் சலசலக்க,  காலை இளம் பரிதி முகிலற்ற கீழ் வானில் மெதுவாய் எழுந்தது. மருத்துவக் கூடத்திற்குப் போக உடை அணிந்து கொண்டு புறப்படும் சமயம், யுத்த அபாயச் சங்கு ஊதியது! பறக்கும் விமானச் சத்தம்  கேட்டது. திடாரென மாபெரும் மின்னல் ஒளிமயம் வெட்டிக் கண்ணொளியைப் பறித்தது! அடுத்து ஓர்  பேரொளி! தோட்டத்தில் இருந்த லாந்தல் உலோக விளக்கு என்று மில்லாத பிரகாசத்தில் ஓளிர்ந்தது!  வெளிச்ச மயமாய் இருந்த வானத்தில் விரைவில் இருள் கவ்வியது. சட்டென அருகில் நின்ற தூண்  ஒன்று சாய்ந்து, வீட்டுக் கூரை சரிந்து அபாய நிலையில் தொய்ந்தது! வீட்டிலிருந்து தப்பி ஓட முயலும்  போது, மரக் கம்பங்களும், இடிந்த கட்டிடக் குப்பைகளும் வீதியில் நிறைந்து, பாதையில் தடையாயின!  எப்படியோ தாண்டிப் போய் தோட்டத்தினுள் நுழைந்தேன். ஏதோ தாங்க முடியாத ஓர் பெருங் களைப்பு  என்னை ஆட்கொண்டது! திடீரென நான் அமணமாய்ப் போனது எனக்குத் தெரிந்தது! என் கோட்டும்,  சூட்டும் என்ன வாயின ? என்ன நடந்து கொண்டிருக்கிறது ? என்னுடலின் வலது புறம் யாவும் வெட்டுப் பட்டு, உதிரம் பீரிட்டது! கூரிய ஒரு நீண்ட இரும்பு ஆணி என் தொடையைக் குத்தி வலியை உண்டாக்கியது! என் கன்னம் கிழிந்து வாயில் இரத்தக் குளமானது! கழுத்தில் குத்திய ஓர் உடைந்த  கண்ணாடி பீங்கானைக் கையால் எடுக்க, மேனி முழுதும் இரத்தக் குளிப்பில் நான் நடுங்கினேன்! முதல் அணு குண்டால் தாக்கப் பட்ட இந்த டாக்டர்தான், தன் காயத்துடன் காயம் பட்ட நூற்றுக் கணக்கான ஜப்பானியர்களுக்குச் சிகிட்சை செய்திருக்கிறார்!

சுடோமு யமகூச்சி [Tsutomu Yamaguchi]: திடாரென மெக்னீஷியம் தீப்பிழம்பு போல் ஓர் ஒளிமயமான மின்னல் வெட்டியது! தொடர்ந்தது ஒரு பேரிடிச் சத்தம்! பூமிக்கு மேல் 2 அடி தூக்கப் பட்டேன்! அடுத்து  பயங்கரக் காற்று என் மீது வீசிச் சென்றது. பேயடித்தது போல் வீதியில் எவ்வளவு நேரம் கிடந்தேன்  என்று எனக்கே தெரியாது! எழுந்த போது, இருள் சூழ்ந்து, கண்ணுக்கு எதுவும் தென் படவில்லை.  வெக்கை யுள்ள பட்டப் பகல் திடாரென நள்ளிராப் பொழுது போல் ஆனது. என் கண்கள் இருட்டுக்கு  இணங்கிப் போனபின், தூசிக் குப்பைகள் தொடர்ந்து வேகமாய் வீசின! தூசி குறைந்த பின், சூழ்வெளி  தெரிந்தது. எங்கெங்கு நோக்கினும், உடைந்த பொருட்களின் குவியல்! எரியும் தீமயம்! நகர்ப் புறம்  பார்த்தால், பிரம்மாண்டமான ஒரு ராட்சதக் காளான் [Mushroom] தோற்றத்தில் வானுயர்ந்த முகில் பூதம்! அந்த முகில் கோளம் பார்ப்பதற்கு பயமூட்டும் ஒரு பேயுருத் தூணாகத் தோன்றியது! அது சுற்றியுள்ள எல்லா பொருட்களின் நிறத்தையும் மாற்றிக் கொண்டே இருந்தது. மிக்க வலுவில்லாமல், முகத்திலும் கையிலும் பற்றிய நெருப்புடன், தீராத வேதனையோடு அருகே இருந்த உருளைக் கிழங்கு  வயலை நோக்கித் தடுமாறிக் கொண்டு சென்றேன். சில சமயம் என்னால் ஊர்ந்து செல்லத்தான்  முடிந்தது! பிறகு எனக்குப் பயங்கரத் தாகம் உண்டானது. எதிரே ஐந்து வாலிபப் பையன்கள்  அமணமாகக் கிழிந்த துணிகளுடன் இருந்தனர். அருகில் வந்ததும் அவர்கள் யாவரும் வெளுத்துப்  போய், நடுங்கிக் கொண்டிருந்தார்கள். நான் இத்தகையக் கோரக் காட்சியை இதுவரைக் கண்டதில்லை!  மேனி எங்கும் வெட்டுக் காயத்தால் உதிரம் ஆறாக ஓடிக் கொண்டி ருந்தது! கொதிக்கும் எண்ணெயில் வெந்தது போல் சிவந்து, தோலுரிந்து வேர்வை சொட்டச் சொட்ட வேதனையில் துடித்துக்  கொண்டிருந்தார்கள்! வெடி அதிர்வால் தீய்ந்த புண்களில் பச்சைப் புல் கொத்தாய் ஒட்டிக்  கொண்டிருந்தது. முதுகில் எல்லா இடங்களிலும் சாட்டையால் அடித்தபோல் காயங்கள்!

உயிர் பிழைத்தோர் பெற்ற கதிரியக்க நோய்கள்

உயிர் தப்பியவர்கள் பலர் புதுவிதக் கதிர் நோய்கள் [Radiation Sickness] தம்மைத் தாக்குவதை  உணர்ந்தார்கள். தலைச்சுற்று, மயக்கம், வயிற்று வலி, வாந்தி, பசியில்லாமை, வயிற்றாலை, மலத்தில்  இரத்தம், கடுஞ் சுரம், வலுவின்மை, தோலில் சிவப்புப் பொட்டுகள், மேனியில் வீக்கம், வாய் கழுத்து பல்லணை [Gum] இவற்றில் அல்ஸர், இரத்தக் கசிவு, மலத் துவாரம், சிறுநீர்த் துவரங்களில் இரத்தக் கசிவு, தலை மயிர் உதிர்ப்பு போன்ற உடற் பழுது அறிகுறிகள் தோன்றி, நோய் வருகையை முன்னறி  வித்தன! மிகையான கதிரடி [Radiation Dose] வாங்கியோர் உதிரத்தில், வெள்ளை செல் [White Blood  Cells] எண்ணிக்கை, மிகக் கீழாக குறைந்தது! அதிகமான ‘மரண அடிக்’ [Lethal Dose] கதிரியக்கம் தாக்கப் பட்டோர் சில மணி நேரத்தில், அல்லது சில நாட்களுக்குள் செத்து மடிந்தனர். மரண அடிக்கும் குறைந்த அளவு கதிரடி பட்டோர், சிறுகச் சிறுகச் சாவை அண்டி வந்தனர்.

வெடிப்பிளவின் நேரடிக் காமாக் கதிரடி [Direct Gamma Radiation] பட்டோர், பட்ட இடத்தில் தசைகள்  சமைக்கப்பட்டு ஆறாத கதிர்ப் புண்களாகி வேதனையில் துடித்தனர். இவ்விதத் தாக்குதலால், இறுதியில்  ஆழமான தசை அழிவு ஏற்பட்டு, மாபெரும் இரத்தக் கசிவு [Hemorrhage] தொடர்ந்து, அவர்கள் யாவரும் மரணத்தைப் போய்த் தழுவிக் கொண்டார்கள்!  போர் முடிந்த பின்பு, ஹிரோஷிமா, நாகசாகியில் தப்பினோர்களின் மார்பு எக்ஸ்ரேயைச் சோதித்த போது, ஆயிரக் கணக்கான பேர் புற்றுநோயிலும் [Cancer], லுக்கீமியாவிலும் [Leukemia], முலைப்  புற்றுநோயிலும் சாகப் போகி றார்கள் என்று அறியப் பட்டது. டாக்டர் நார்மன் கென்ட்நர் [Dr. Norman  Gentner, Senior Scientist, Health and Environmental Sciences, Atomic Energy of Canada Ltd] விஞ்ஞானி  வெளியிட்ட 1997 கணக்கிதழ் அறிக்கைப்படி, இரண்டு நகரிலும் மொத்தம் 15405 பேர் [1950-1990] புற்றுநோயில் செத்திருக்கிறார்கள். லுக்கீமியாவில் இறந்தவர் எண்ணிகை இதுவரை 249 பேர்.  புற்றுநோய் மரணங்கள் இன்னும் பல்லாண்டுகள் தொடரும்!

கதிரடிக் காயம் [Radiation Injury] பெறும் கர்ப்பிணிப் பெண்களின் கருவைக் காமாக் கதிர்கள் பாதித்துப்  பெருமளவில் முரண்பாடுகளை உண்டு பண்ணுகிறது. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணு ஆயுதக் கதிரியக்கம் தாக்கிய கர்ப்பிணிப் பெண்கள் பெற்ற பிள்ளைகள், நரம்பு அமைப்பாட்டில் பழுதுகள் ஏற்பட்டு, சிறிய தலைவுடன் மூளை சிறுத்துப் போய், கண்கள் குறுகி வளர்ச்சி அடையாது, அங்க ஈனமுடன், மனக் கோளாறுகள் [Mental Retardation] நிரம்பிப் பிறந்ததாக அறியப்படுகிறது!



உலக அணு ஆயுத வல்லரசுகளுக்கு ஓர் வேண்டுகோள்!

அணுகுண்டு ஆயிரம், ஆயிரம் உயிர் இனங்களைத் தாக்கிச் சித்திரவதை செய்து அழிக்கும் ஓர் அபாய ஆயுதம்!  அதன் கோரக் கொடுமைகள் தப்பியோரையும், தப்பினோர் சந்ததிகளையும் விடாது பற்றிக் கொண்டு, பல்லாண்டு காலம் நிழல் போலத் தொடர்ந்து பாதிப்பவை! ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு, 1955 ஏப்ரல் மாதம் பிரிட்டிஷ் மேதை, பெர்டிரண்டு ரஸ்ஸல்  [Bertrand Russell] தயாரித்த ‘அணு ஆயுதப் போர்த் தடுப்பு’ விண்ணப்பத்தில் தானும் கையெழுத்திட்டு மற்ற உலக விஞ்ஞானிகளோடு சேர்ந்து கொண்டு ஒன்றாகக் குரல் எழுப்பினார்! ‘எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ  முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகிறது !  அதை அகில நாடுகள் உணர  வேண்டும் !  பிறகு அபாயங்களை அனைவரும் அறிய வெளிப்படுத்த வேண்டும்! அப்பணியை உடனே  செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை விரைவு படுத்துகிறோம். நாடுகளின் தீராச் சச்சரவுகள் உலகப்  போர்களால் ஒருபோதும் தீரப் போவதில்லை! தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள,  வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்’. அணு ஆயுத வல்லரசுகளே ! உங்கள் அறிவுக் கண்கள் திறக்கட்டும் ! ஜப்பானில் முதன் முதல் போட்ட  அணுகுண்டுகளே, உலகின் இறுதியான அணுகுண்டுகளாக இருக்கட்டும்!

(கட்டுரை தொடரும்)

*****************************

தகவல் :

Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007)  2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)

1.  Scientific American Magazine :  India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)

2 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40210273&format=html  (Robert Oppenheimer)

3 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40203245&format=html (First Atomic Bombs Dropped on Japan)

4. The Making of the Atomic Bomb, By: Richard Rhodes

5. Oppenheimer, By: James Kunetka

6. Hand Book of World War II, Abbeydale Press

7. The Deadly Element, By: Lennard Bickel

8. Canadian Nuclear Society Bulletin, June 1997

9.  Grolier Online :  Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)

10.  Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)

11.  National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)

12.  Scientific American Magazine :  Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads (November 2007)

13.  The Dirty Bombs (Radiological Dispersion Bombs) MSN Broadcasting -Dirty Bombs Biggest Hazard : Panic Experts Say Radiation Would Play on Public Fears (June 10, 2002)

14.  Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)

15.  Neutron Bombs – Wikipedia Report (December 15, 2009)

******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 16, 2009

அணு ஆயுதப் போரில் விளையும் கோரப் பேரழிவுகள் -1

(கட்டுரை: 1)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


பேரழிவுப் போராயுதம்
உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து
விழுதுகள் அற்றுப் போக,
விதைகளும் பழுதாக
ஹிரோஷிமா நகரைத் தாக்கி
நரக மாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
நாச மாக்கப் பட்டது !
புத்தர் பிறந்த நாட்டிலே
புனிதர் காந்தி வீட்டிலே
மனித நேயம்
வரண்டு போன
வல்லரசுகள் பின் சென்று
பாரத அன்னைக்குப்
பேரழிவுப்
போரா யுதத்தை
ஆரமாய்
அணிவிக்க லாமா ?

++++++++++++++

உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான் !

கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)

“ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம் !”

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

“எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது !  அதை அகில நாடுகள் உணர வேண்டும் !  அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும் !  உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம்.  நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை !  உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.

பெர்டிரண்டு ரஸ்ஸல் (ஏப்ரல் 16, 1955)

அணு ஆயுதப் பெருக்கத்தை ஆரம்பித்த உலக விஞ்ஞானிகள் !

அணு ஆயுதப் படைப்புக்கு ஐம்பது ஆண்டுகளாக நேரிடையாகவோ அன்றி மறைமுக மாகவோ வழி வகுத்தவர்கள், முக்கியமாக ஐந்து விஞ்ஞான மேதைகள்! முதலில் கதிரியக்கம் [Radioactivity] கண்டு பிடித்த மேரி கியூரி! அடுத்து செயற்கைக் கதிரியக்கம் [Artificial Radioactivity] உண்டாக்கிய அவரது புதல்வி ஐரீன் கியூரி! அதன்பின் அணுவைப் பிளந்து, முதல் தொடரியக்கம் [Nuclear Chain Reaction] புரிந்த என்ரிகோ ஃபெரிமி! இரண்டாம் உலகப் போரின் போது, ஹிட்லர் தயாரிக்கும் முன்னே, அமெரிக்க ஜனாதிபதியை அணு ஆயுதம் ஆக்கத் தூண்டிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்! முடிவில் போர் முடியும் தறுவாயில் பன்னாட்டு விஞ்ஞானிகளைப் பணி செய்ய வைத்து வெற்றிகரமாய் அணுகுண்டை உருவாக்கிச் சோதனை செய்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் !

ஜப்பான் ஹிரோஷிமா நாகசாகியில் அணுகுண்டுகள் விழுந்து கோர விளைவுகள் நிகழ்ந்த பின் உலகின் வல்லரசுகளும், மெல்லரசுகளும் உடனே அணு ஆயுதங்களை ரகசியமாய் உற்பத்தி செய்ய முற்பட்டன ! 1945 இல் அமெரிக்கா ஆக்கியதை, ஒற்று மூலம் பிரதி அடித்து, 1949 இல் ரஷ்யா தனது முதல் அணுகுண்டைச் சோதித்தது ! அதன் பிறகு 1952 இல் பிரிட்டன், 1960 இல் பிரான்ஸ், 1964 இல் சைனா, 1974 இல் இந்தியா, 1998 இல் பாகிஸ்தான் போன்ற நாடுகள் அணு ஆயுதப் பந்தயத்தில் பின் தொடர்ந்தன !  இப்போது இஸ்ரேல், வட கொரியா ஈரான் ஆகிய நாடுகளும் அணு ஆயுத வல்லமை பெற்றுக் கொண்டு உலகைப் பயமுறுத்தி வருகின்றன ! உலக நாடுகளில் 115 தேசங்கள் முன்வந்து அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு [Non Proliferation Treaty, NPT] உடன்படிக்கையை மதித்துக் கையெழுத்துப் போட்டுள்ளன! ஆனால் அர்ஜென்டைனா, பிரேஸில், சைனா, பிரான்ஸ், இந்தியா, இஸ்ரேல், பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஸ்பெயின் ஆகிய பல நாடுகள் அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பில் கையெழுத்திட ஒருங்கே மறுத்து விட்டன !

Image result for albert einstein

அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஐன்ஸ்டைன்

இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த அணு ஆயுதத்தை உருவாக்கும்படி 1939 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்கலின் ரூஸவெல்ட்டுக்கு ஆலோசனைக் கடிதம் எழுதி அனுப்பியவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்!  அதுமுதல் அணு ஆயுத அரக்கன் உலகில் தோன்றி அவன் வமிசாவளி பெருகிக் கொண்டே போகிறது!  அணுசக்தி யுகத்தைத் துவக்கி, உலக சரித்திரத்தில் ஒப்பிலாப் பெயர் பெற்ற ஐன்ஸ்டைன் அணுகுண்டுகளின் பெருக்கத்தையும், அணு ஆயுத வெடிப்புச் சோதனைகளின் அபாயத்தையும், தடுக்க முடியாமல் கடைசிக் காலத்தில் மனப் போராட்டத்தில் தவித்தார்.

ஐன்ஸ்டைன் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 1955 ஏப்ரல் 16 இல் வேதாந்த மேதை, பெர்டிரண்டு ரஸ்ஸல் (Bertrand Russell) தயாரித்த “அணு ஆயுதப் போர்த் தடுப்பு” விண்ணப்பத்தில் ஒன்பது விஞ்ஞானிகளுடன் தானும் கையெழுத்திட்டு ஒன்றாகக் கூக்குரல் எழுப்பினார்!  “எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது!  அதை அகில நாடுகள் உணர வேண்டும் !  அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும்!  உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம்.  நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை !  உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு விஞ்ஞானிகளில் அமைதி மயவாதிகள் ஒருபுறம் அணு ஆயுதங்களை நிறுத்தம் செய்ய முற்படுகையில், அழிவு மயவாதிகள் மறுபுறம் ரகசியமாய் அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டு வந்தார்கள் !

ஆக்கப் போவது அணு குண்டா ? அல்லது ஹைடிரஜன் குண்டா ?

1942 ஆம் ஆண்டு அமெரிக்க மன்ஹாட்டன் திட்டத்தில் மறைமுகமாகப் பணிசெய்த விஞ்ஞானிகள் முதலில் அணுப்பிளவுக் குண்டை [Fission Bomb] ஆக்குவதற்கு முயன்ற சமயத்தில் அணுப்பிணைவுக் குண்டையும் [Fusion Bomb] உண்டாக்க ஒரு சிலருக்கு ஆர்வம் எழுந்தது! அந்தப் பயங்கரப் படைப்பை மிக்க வெறியோடு நிறைவேற்றப் பல்லாண்டுகள் காத்துக் கொண்டிருந்த விஞ்ஞான மேதை, எட்வர்டு டெல்லர் [Edward Teller]! தீவிர அந்த வேட்கையை எட்வெர்டு டெல்லருக்கு முதலில் தூண்டி விட்டவர், என்ரிகோ ஃபெர்மி [Enrico Fermi]! சிகாகோப் பல்கலைக் கழகத்தில் முதல் ஆராய்ச்சி அணு உலையை அமைத்து அணுக்கருத் தொடரியக்கம் புரிய ஃபெர்மியின் கீழ் டெல்லர் பணி செய்யும் போது அவர்களுக்கு ஹைடிரஜன் குண்டைப் பற்றி ஓர் எண்ணம் உதயமானது! ஆனால் ஆரம்பத்திலேயிருந்து எட்வெர்டு டெல்லரை அதைரியப் படுத்தி, முதலில் ஆக்கப் போவது அணுப்பிளவுக் குண்டு, வெப்ப அணுக்கருக் குண்டு [Thermo Nuclear Bomb] அல்ல என்று அதிருப்தி உண்டாக்கியவர், மன்ஹாட்டன் திட்ட அதிபதி ராபர்ட் ஓப்பன்ஹைமர்!  ஹைடிரஜன் குண்டுக்கு மறு பெயர் வெப்ப அணுக்கருக் குண்டு! சூப்பர் பாம் [Super Bomb], ஹெச் பாம் [H Bomb] எல்லாம் ஒன்றுதான்! அடுத்து 1947-1952 ஆண்டுகளில் ராபர்ட் ஓப்பன்ஹைமர் அமெரிக்க அணுசக்திப் பேரவைக்கு அதிபதியாக [Chairman, Atomic Energy Commission] இருந்த சமயத்திலும் டெல்லர் மறுமுறை உயிர்ப்பித்த ஹைடிரஜன் குண்டு திட்டத்தை அங்கீகரிக்காது ஒதுக்கித் தள்ளினார்!

இரண்டாம் உலகப் போர் முடிந்தபின் அமெரிக்கா, சோவியத் ரஷ்யா இரு நாடுகளுக்கும் இடையே ஊமைப் போர் [Cold War] மூண்டு பெரும் அளவில் வலுத்தது ! 1949 செப்டம்பரில் ரஷ்யா தனது முதல் புளுடோனிய அணுகுண்டைச் சோதனை செய்ததைக் கேட்டு, அதை எதிர்பாராத அமெரிக்கா அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தது! அமெரிக்காவின் மித மிஞ்சிய அணு ஆயுதப் பேராற்றல் சமமாகிப் போனதால், உடனே ஜனாதிபதி ட்ரூமன் மறைமுகமாய் வெப்ப அணுக்கரு ஆயுதம் உருவாக, எட்வெர்டு டெல்லருக்குப் பச்சைக் கொடி காட்டினார்! அதற்காகக் காத்துக் கொண்டிருந்த எட்வெர்டு டெல்லர், ரஷ்யாவுக்குப் பயம் உண்டாக்க ஓர் ராட்சத குண்டை உருவாக்கி, அமெரிக்காவை உலக நாடுகளில் உச்ச வலுத் தேசமாக ஆக்க உறுதி எடுத்துக் கொண்டார்! அந்த முயற்சியில் வெற்றி பெற்று 1952 நவம்பர் முதல் நாள் பசிபிக் கடலில் உள்ள எனிவெடாக் அடோல் [Enewetak Atoll] என்னும் தீவில் முதல் ஹைடிரஜன் குண்டு வெடித்துச் சோதிக்கப் பட்டது! ஏட்டிக்குப் போட்டியாக அடுத்து சோவித் ரஷ்யாவும் எட்டு மாதங்களுக்குள், 1953 ஆகஸ்டு 12 ஆம் தேதி ரஷ்ய விஞ்ஞானி பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] மூலம் உருவாக்கி, முதல் வெப்ப அணுக்கரு ஆயுத வெடிப்பச் சோதனையை வெற்றிகரமாகச் செய்து காட்டியது ! அந்த அணு ஆயுதப் பந்தயத்தைத் தொடர்ந்து 1957 இல் பிரிட்டன், 1967 இல் சைனா, 1968 இல் பிரான்ஸ் தமது முதல் ஹைடிரஜன் குண்டுகளைச் சோதனை செய்து, அமெரிக்கா, ரஷ்யாவுடன் சேர்ந்து ஐம்பெரும் வல்லரசுகள் என்று பெயர் பெற்றன !  இப்போது அமெரிக்கா, ரஷ்யா, (யுக்ரேய்ன்), பிரிட்டன், பிரான்ஸ், சைனா, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய ஏழு நாடுகளும் சோதனைகளை நடத்தி உலகத்துக்கு அணு ஆயுத நாடுகளாய்த் தம்மை உறுதிப்படுத்தி உள்ளன.


அணு ஆயுதப் போர் மூன்றாவது உலகப் போராய் நிகழுமா ?

1945 இல் அமெரிக்கா ஜப்பானில் முதன்முதலாகப் போட்ட இரண்டு அணுக்குண்டுகளை ஒருபோக்குத் தாக்குதலாகத்தான் கருத வேண்டும்.  பதிலுக்குத் தாக்க ஜப்பானிடம் அப்போது அணு ஆயுதங்கள் கிடையா.  இதுவரை உலகம் இருதரப்பு அணு ஆயுத யுத்தத்தைக் கண்டதில்லை ! ஆனால் இப்போது அணு ஆயுதமுள்ள ஏழு நாடுகள் இரண்டுக்குள் நட்புறவு குன்றி அப்படி ஓர் இருபுற யுத்தம் நிகழ்ந்து அணு ஆயுதங்கள் பயன்பட்டால் பயங்கரச் சிதைவுகள், அழிவுகள், கதிரியக்கப் பொழிவுகள் ஏற்படும்.  அவ்விரு நாடுகளுக்குச் சேதங்கள் நேருவதோடு அண்டை நாடுகளும் பாதிப்படையும்.  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் மூண்டால் இரண்டு நாடுகளும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த மாட்டா என்பது கட்டுரை ஆசிரியர் கருத்து.  காரணம் இரண்டு நாடுகள் வேறானாலும் எலும்பும் சதையும் போல் நிலத்தாலும், நீராலும், இனத்தாலும், மதத்தாலும் ஒன்றாகச் சேர்ந்துள்ளன.  போர் மூண்டாலும் இரண்டு நாடுகளும் அணுவியல் தொழிற்கூடங்களை ஒன்றை ஒன்று தாக்கக் கூடாதென்று வாக்கு மொழிகள் எழுத்து மூலம் கூறியுள்ளன !  ஆனால் பாகிஸ்தானில் தற்போதுள்ள கொந்தளிப்பு நிலையில் எந்த மூர்க்கர் குழு நாட்டைப் பிடித்து ஆட்டப் போகிறது என்பது பெரும் ஐயப்பாட்டில் இருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்று யூகிப்பது கடினம்.

எத்தனை விதமான அணு ஆயுதங்கள் உள்ளன ?

இரண்டு விதமான அணு ஆயுதங்கள் இதுவரைச் சோதனைக்குள்ளாகி ஆக்கப் பட்டுள்ளன.  நியூட்ரான் குண்டுகள் (Neutron Bombs) ஒருவித அணு ஆயுதமாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.  அணுப்பிளவு ஆயுதங்கள் (Fission Weapons), அணுப்பிணைவு ஆயுதங்கள் (Fusion Weapons) என்று இருபெரும் பிரிவில் பல்வேறு ஆற்றலைக் கொண்ட அணு ஆயுதங்கள் தயாரிக்கப் பட்டு பதுக்கி வைக்கப் பட்டுள்ளன !  கடந்த அறுபது ஆண்டுகளாக உருவான அணு ஆயுதங்கள் யாவும் ஓய்வாகத் தூங்கிக் கொண்டிருப்பதால் துருப்பிடித்து இப்போது முடக்கத்தில் தளர்ந்து போய்க் கிடக்கின்றன !  அவை யாவும் தூசி துடைக்கப் பட்டுப் புதுப்பிக்கப் படவேண்டும் !  அல்லது தற்போதைய கணினி யுகத் தொழில்நுட்பம் புகுத்துப்பட்டு புது விதமாக மாற்றப் பட வேண்டும்.
பல பில்லியன் டாலர் மதிப்பில் படைப்பான பழைய அணு ஆயுதங்களை இப்போது ஏவினால் அவை பகைவரை நோக்கித் தாக்குமா அல்லது சண்டி மாடுபோல் படுத்துக் கொள்ளுமா என்று எழுப்பி விட்டால்தான் தெரியும் !

அணுப்பிளவு ஆயுதங்களில் (அணுக்குண்டு) எரிசக்தியாக யுரேனியம் -235, புளுடோனியம் -239 ஆகிய கன உலோகங்கள் பயன்படுகின்றன.  மாறாக அணுப்பிணைவு ஆயுதங்களில் (ஹைடிரஜன் குண்டு) எளிய வாயுக்களான டியூடிரியம், டிரிடியம் (ஹைடிரஜன் ஏகமூலங்கள் ) (Deuterium & Tritium -Hydrogen Isotopes) உபயோகம் ஆகின்றன.  டியூடிரியமும் டிரிடியமும் பிணைந்து சக்தி உண்டாக்குவதற்குச் சூரியன் போல் பல மில்லியன் டிகிரி உஷ்ணம் தேவைப் படுகிறது.  அந்த உஷ்ணத்தை உண்டாக்க ஒரு சிறு அணுப்பிளவு இயக்கம் முதலில் ஹைடிரஜன் குண்டில் தூண்டப் படுகிறது.  அவ்விதம் முதல் உந்து யுரேனிய வெடிப்பில் உண்டாகும் பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் டியூடிரியமும் டிரிடியமும் பிணைந்து வெடிப்பு சக்தியை வெளியேற்றுகிறது.  பொதுவாக அணுப்பிணைவு ஆயுதம் அணு ஆயுதத்தை விட சுமார் ஆயிரம் மடங்கு அழிவு சக்தியை வெளியாக்கும் !  நியூட்ரான் குண்டு அணுக்குண்டு ஆற்றலில் பத்தில் ஒரு பங்கு பாதகம் விளைவிக்க வல்லது.

பல்வேறு டன் டியென்டி ஆற்றல் கொண்ட அணு ஆயுதங்கள்.

அமெரிக்கா ஹிரோஷிமாவில் போட்ட யுரேனியம் அணுக்குண்டு 15 கிலோ டன் டியென்டி ஆற்றலும், நாகசாக்கியில் போட்ட புளுடோனியம் அணுக்குண்டு 21 கிலோ டன் டியென்டி ஆற்றலும் கொண்டவை.  அணு ஆயுதங்களின் வெடிப்புப் பரிமாணம் டியென்டி அளவீட்டில் [(TNT) -Trinitrotoluene -CH3C6H2(NO2)3  (A Powerful High Explosive)] கிலோ டன் அல்லது மெகா டன் எண்ணிக்கையில் குறிப்பிடப் படுகிறது !  கிலோ டன், மெகா டன் டியென்டி என்று அளவீடு செய்யும் போது அணு ஆயுதங்களின் எடையைக் குறிப்பிடாது அவற்றின் வெடி ஆற்றலை ஒரு டியென்டி இராசயன வெடிக்கு ஒப்பிடப் படுகிறது.  ஒரு கிலோ டன் அணு ஆயுதம் 1000 டன் டியென்டி ஆற்றல் வெடிக்குச் சமம்.  ஒரு மெகா டன் அணு ஆயுதம் ஒரு மில்லியன் டன் டியென்டி ஆற்றல் வெடிக்கு இணையாகும்.  தற்போது வெப்ப அணுக்கரு ஆயுதம் (Thermonuclear Weapon OR Hydrogen Bomb) ஒன்று 25 மெகா டன் டியென்டி வெடி ஆற்றல் கொண்டதாக உள்ளது.  மேலும் இப்போது 50 மெகா டன் டியென்டி வெடியாற்றல் உள்ள அணு ஆயுதங்கள் தயாரிக்கப் படுகின்றன.  தற்போது பாதி உலகைக் கடந்து செல்லும் கட்டளை ஏவு கணைகளில் (Guided Missiles) அணுத்தாக்கு ஆயுதங்களை (Nuclear Strategic Weapons) ஏந்திக் கொண்டோ அல்லது ஆகாய விமானங்களிலிருந்து விடுவித்தோ நகரங்கள், தொழிற்துறை மையங்கள், இராணுவத் தளங்கள் ஆகியவை தகர்க்கப்படத் திட்டமிடப் படுகின்றன.

Target Hiroshima Nagasaki Tokyo Fire Raid Average of 93
Attacks on Cities
Dead/Missing 70,000-80,000 35,000-40,000 83,000 1,850
Wounded 70,000 40,000 102,000 1,830
Population Density 35,000 per sq mile 65,000 per sq mile 130,000 per sq mile ?
Total Casualties 140,000-150,000 75,000-80,000 185,000 3,680
Area Destroyed 4.7 sq mile 1.8 sq mile 15.8 sq mile 1.8 sq mile
Attacking Platform 1 B-29 1 B-29 334 B-29s B-29s
Weapon(s) ‘Little Boy’ 15 kT

(15,000 tons of TNT)’Fat Man’ 21 kT

(21,000 tons of TNT)1,667 tons1,129 tons

அணு ஆயுத வெடிப்புகளில் நேரும் அகோர விளைவுகள்

1945 இல் அமெரிக்க போட்ட “லிட்டில் பாய்” அணுக்குண்டு ஹிரோஷிமா நகரை முற்றிலும் தகர்த்தது.  அடுத்துப் போட்ட “·பாட் மான்” அணுக்குண்டில் நாகசாக்கி நகரம் தரைமட்டம் ஆனது.  இவ்விரு நகரங்களில் ஏற்பட்ட விளைவுகளும், கதிர்வீச்சுக் காயங்கள், மரணங்கள், கதிரியக்க பொழிவுகளின் தீவிரம், நீண்ட கால விளைவுகள் அனைத்தும் மாதிரிப் பாடங்களாய் உலக நாடுகளுக்கு அறிவைப் புகட்டுகின்றன.  ஆயுதங்களின் கிலோ டன் டியென்டி, மெகா டன் டியென்டி வெடிப்பு ஆற்றலுக்கு ஏற்ப விளைவுகளின் தீவிரம் குறையவோ கூடவோ செய்கிறது.

1.  அணுக்குண்டு வெடிப்பு அலைகள் (Bomb Blast):

அணு ஆயுத வெடிப்பின் போது வெளியேறும் ஏராளமான வெப்ப அலைச்சக்தி சூழ்வெளிக் காற்றை அதிவிரைவில் சூடாக்குகிறது.  வெப்ப வாயு விரைவாக விரிவாகிப் பாய்ந்து பரவும் அதிர்ச்சி அலையாகத் தாக்குகிறது.  இவ்விதம் வெளியாவது பாதி அளவு வெடிப்புச் சக்தி.  அந்த விளைவில் குண்டு வீழ்ந்த இடத்துக்கு நெருங்கிய கட்டடங்கள் தரை மட்டமாக்கப் பட்டுப் பல மைல் தூரம் வீடுகள் தகர்ந்து பொடியாகும் !  அத்துடன் போட்ட இடத்தில் பெருங்குழி ஒன்றுதோண்டப்படும்.

2.  வெப்ப சக்தி வெளியேற்றம் (Heat Wave Spread):

அணு ஆயுத வெடிப்பால் ஒரு மில்லியன் டிகிரி உஷ்ணமுடைய ஒரு பெரும் தீக்கோளம் உண்டாகும்.  அந்தத் தீப்பிழம்பில் தகர்க்கப் படாத வீடுகள், கட்டங்கள் பற்றிக் கொண்டெரியும்.  வெப்ப வெளியேற்றம் முழு ஆற்றலில் மூன்றில் ஒரு பங்காக கணிக்கப் படுகிறது.  இந்த பயங்கரத் தீப்பிழம்பே ஒரு பெரு குடைக் காளான் முகில்போல் (Huge Mushroom Cloud) உயரே விரிந்து செல்கிறது.

3.  கதிர்வீச்சு & கதிரடிப்பு (Direct Radiation Dose):

வெப்ப வெடிப்போடு அதிதீவிரக் கதிர்வீச்சு எல்லாத் திசைகளிலும் பாய்ந்து உயிரனங்களைத் தாக்குகிறது.  அதில் முதலாக மோதும் நியூட்ரான்கள், காமாக் கதிர்களைத் “துரிதக் கதிர்வீச்சு”  (Prompt Radiation – Mostly Neutrons & Gamma Rays) என்று குறிப்பிடப் படுகிறது.  அதிதீவிரக் கதிரடிகள் (High Amount of Radiation Dose)  மனிதரையும், விலங்குகளையும் உடனே அல்லது சில தினங்களில் கொன்றுவிடும் !  குறைந்த அளவு கதிரடிப்புகள் கதிர் நோய்களை உண்டாக்கி மெதுவாகக் கொல்லும்.  பேரளவு கதிர்வீச்சுக் கதிரடி புற்றுநோய்களை (Cancer) உண்டாக்கும்.

4.  தாமதக் கதிரெழுச்சி விளைவுகள் (Delayed Radiation Effects) :

அணுப்பிளவு விளைவுகளால் பின்னெழும் கதிரியக்கப் பாதிப்புகள் மாந்தருக்கு நீண்ட காலம் கேடு தருபவை.  அக்கொடிய பாதிப்புகள் அணுப்பிளவு மூலகங்களின் “அரை ஆயுளைப்” (Half Life) பொருத்தவை.  அரை ஆயுள் என்பது கதிரியக்கத் தேய்வு முறையில் நிலையற்ற மூலகம் (Unstable Elements due to Radioactive Decay) படிப்படியாகத் தேய்ந்து நிறை பாதியாகும் காலத்தைக் குறிப்பது.  சீக்கிரமாகத் தேயும் நிலையற்ற மூலகம் சிறிது காலம் உயிரினத்தைப் பாதிக்கும்.  மெதுவாகத் தேயும் நிலையற்ற மூலகந்தான் நீண்ட காலம் உயிரினத்துக்குத் தொல்லை கொடுப்பது.  இந்த கதிர்வீச்சு வாயு மூலகங்கள் சூழ்வெளிக் காற்றில் பல நாடுகளுக்கு பயணம் செய்து மக்களைப் பாதிக்கின்றன.

5.  கதிரியக்கப் பொழிவுகள் (Radioactive Fallouts):

இறுதியாக நூற்றுக் கணக்கான மைல் காற்றில் கொண்டு செல்லப்பட்டு இந்த கதிரியக்கத் துணுக்குகள்தான் பொழிவுகளாகப் பூமியில் நிரந்தரமாகப் படிந்து விடுகின்றன.  நீண்ட அரை ஆயுள் உடைய மூலகத் துணுக்குகள் பூமியில் தங்கி நெடுங்காலம் மனித இனத்துக்குத் தொல்லைகள் அளிக்கின்றன.  அவையே நிலவளம், நீர்வளம், சூழ்வெளியைத் தீண்டி பல ஆண்டுகளுக்கு நாசம் புரிகின்றன.

6.  விண்வெளிப் பாதிப்புகள் (Effects in Space):

அணு ஆயுதச் சூழ்வெளிப் பாதிப்புகள் குண்டு போடும் போது எந்த உயரத்தில் வெடிக்கிறது என்னும் மேல்மட்டத்தைப் பொருத்தது.  அதிர்ச்சி அலைகளைப் பரப்பப் போதிய வாயு இல்லாமல் வெறும் கதிர்வீச்சுத் தாக்குதலே பெரும்பான்மையாக விளைந்திடும்.  வெப்ப சக்தி பரவிச் சென்று தீ மூட்டும் நிகழ்ச்சிகள் குன்றும்.  பொதுவாக நியூட்ரான், காமாக் கதிர்களின் தீங்கு மிகைப்படும்.

7.  மின்காந்த அதிர்வு விளைவுகள் (Electromagnetic Pulse Burst):

அணு ஆயுத வெடிப்பிலே மிகவும் விந்தையான விளைவு :  ஒரு பெரும் மின்காந்தத் துடிப்பு (Production of an Electromagnetic Pulse – A Powerful Burst of Electric Current) உண்டாவது !  கதிர்வீச்சில் பாய்ந்து செல்லும் காமாக் கதிர்கள் சூழ்வெளி வாயுவோடுச் சேரும் போது அவ்வித மின்காந்தத் துடிப்பு ஏற்படுகிறது !  அந்த மின்னோட்டம் மின்சார, மின்னியல் சாதனங்களை – கணினிகள், மின்சக்தி நிலையங்கள், தொலைக் கட்சி நிலையங்கள், ரேடியோ தொடர்புகள் போன்றவற்றைப் பெரும் அளவில் பாதிக்கும்.

(கட்டுரை தொடரும்)

*****************************

தகவல் :

Picture Credit : 1. Scientific American (December 2001) & (November 2007)  2. Time Magazine (Feb 14, 2005) 3. National Geographic (August 2005)

1.  Scientific American Magazine :  India, Pakistan & the Bomb By : M.V. Ramana & A. H. Nayyar (December 2001)

2.  Grolier Online :  Nuclear Weapons From Grolier’s The New Book of Knowledge By : Benoit Morel Garnegie Melton University (2003)

3.  Time Magazine : The Merchant of Menace – A. Q. Khan Became the World’s Most Dangerous Nuclear Trafficker By : Bill Powell & Tim McGrirk (February 14, 2005)

4.  National Geographic Magazine : Living With the Bomb By : Richard Rhodes (August 2005)

5.  Scientific American Magazine :  Do We Need New Nukes ? A Special Report on the Nuclear Arsenals & Replacing Warheads (November 2007)

6.  Nuclear Weapons – Wikipedia Report (December 6, 2009)

7.  Neutron Bombs – Wikipedia Report (December 9, 2009)

******************
S. Jayabarathan (jayabarat@tnt21.com) December 10, 2009

உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரத்தில் மீண்டும் சோதனை துவங்குகிறது !

Fig 6 CERN Particle Smasher

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


பூத விரைவாக்கி யந்திரம்
மீண்டும் உயிர்த் தெழுந்தது !
மோத வைத்து உடைக்கும்
புரட்டானை !
கரு வெடிப்பில்
உருவாக்கப் போகிறது
கடவுள் துகளை !
பிரபஞ்சப் பெருவெடிப்புக் காட்சி
ஆய்வ கத்தில்
அரங்கேற்றம் !
கருந்துளை உண்டாக்கி நமது
காசினியை விழுங்காது !
சிகாகோவில் ஃபெர்மி முதலாய்ச்
செய்து வைத்த
அணுப்பிளவுத் தொடரியக்க
ஆய்வு போன்றது !
பரமாணுவுக் குள்ளேயும்
கரகமாடிச் சுற்று மோர்
நுட்ப அகிலம் !
பராமணுக்கள் முட்டை யிட்டுக்
குஞ்சுகள் பொறிக்கும்
கோடான கோடி
குளுவான்கள் ! குவார்க்குகள் !
லிப்டான்கள் !
ஃபெர்மி யான்கள் !
இதுவரை யூகித்திருந்த
கடவுள் துகள்
நுட்பமான ஹிக்ஸ் போஸானை
சுட்டுப் படைத்திடுமா
வட்ட விரைவாக்கி
யந்திரம் ?

+++++++

Fig 1E Particle Detectors

மனித இனம் தொடுவானுக்கு அப்பால் விண்வெளியை நோக்கி அங்கே என்ன உள்ள தென்று எப்போதுமே அறிய விரும்பியுள்ளது ! 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்த பிரபஞ்சப் பெருவெடிப்பு நிகழ்ச்சி ஓர் வரையறைக் குட்பட்ட காலத்தில்தான் எழுந்திருக்கிறது !  அதாவது 15 பில்லியன் ஆண்டுக்கு முந்தி உண்டான வடிவுகளை (Objects) நாம் காண முடியாது !  காரணம் அதுவரைப் பயணம் செய்யும் கால வரம்பு ஒளிக்குப் போதாது !  ஆதலால் இன்னும் ஆழமாய் நோக்கி உளவச் சக்தி வாய்ந்த மிகக் நுண்ணிய மின்னலைகளை (Short Waves) நாம் பயன்படுத்த வேண்டி யுள்ளது.  ஆகவேதான் (செர்ன் போன்ற) பூத விரைவாக்கி யந்திரங்கள் பரமாணுக்களை மிகச் சக்தியூட்டிச் சோதிக்கத் தேவைப்படுகின்றன !

விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டிஃபென் ஹாக்கிங் (பிப்ரவரி 3, 1994)

“புரோட்டான் ஒளிக்கற்றைச் சோதனை துகள் உடைப்புச் சோதனைச் சாதனங்கள் செம்மையாக இயங்குவதைக் காட்டுகிறது.  இந்தச் சாதனை இயக்கம் சீரிணைப்புச் செம்மை வினை (Work of Synchronization).  துரிதக் காந்தங்கள் முதலில் சீரிணைப்பாகி ஒளிக்கற்றை வேகத்தை வளர வைத்து ஒரு விரைவாக்கியிலிருந்து மறு விரைவாக்கிக்கு மாற்றி முடிவில் பெரு உடைப்பு யந்திரத்துக்குத் திருப்ப வேண்டும்.  அப்போது யந்திரத்தின்  சீரிணைப்பும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.  அத்தகைய நிகழ்ச்சி 100 பிக்கோ வினாடிக்குள் (Pico-sceconds) நேர்ந்து விடும்.” (One Picosecond = 1 /10^12 Sec)

கியான்லுயிகி அர்துயினி (Gianluigi Arduini) (LHC Deputy Head of Hardware Commissioning)

Fig 7 Underground Tunnel

மாபெரும் சக்தி வாய்ந்த மிக நுண்ணிய துகள்கள்தான் பிரபஞ்சத்தின் பெரும்பான்மைச் சக்தி இயக்கங்கள் பற்றிய வினாக்களுக்கு விடை அளிக்கின்றன.

ஸ்காட் வேக்லி, (Scott Wakely) துணைப் பேராசியர், சிகாகோ பல்கலைக் கழகம். (2006)

ஓர் எலெக்டிரானின் உள்ளே பயணம் செய்ய முடிந்தால், ஒளிந்திருக்கும் அதற்குரிய ஓர் அகிலத்தைப் பார்க்க முடியும் !  மேலும் அதற்குள்ளே காலாக்ஸிகளுக்கு ஒப்பான ஒளிமந்தைகளும் சிறிய அண்டங்களும், எண்ணற்ற நுண் துகள்களும் அடுத்த அகிலங்களாக இருக்கலாம் !  பரமாணுக் குள்ளேயும் அவ்விதம் முடிவில்லாமல் அடுத்தடுத்துப் பிரபஞ்சத்தில் பிரபஞ்சங்களாய் விண்வெளியில் உள்ளன போல் இருக்கலாம் !

ஒன்றுக்குச் சான்றுகள் இல்லாமை என்பது அது இல்லாமைக்குச் சான்றில்லை !

கார்ல் ஸேகன் (Carl Sagan) வானியல் துறை மேதை

CERN Fig. 5

மனதைக் துள்ள வைக்கும் உச்ச சக்தி வானியல் பௌதிகம் (High Energy Astrophysics) நுட்பத் துகளை பிரமாண்டத்துடன் பிணைக்கிறது.  இத்துறையில் எழுந்த முன்னேற்றக் கோட்பாடுகள் பிரபஞ்சத் துவக்கத்தின் நிகழ்ச்சிகளையும், அப்போது தோன்றிய பேரளவுச் சக்தி வாய்ந்த இயக்கங்களையும் உளவு செய்ய விஞ்ஞானிகளுக்கு உதவுகிறது.  அத்துடன் அடுத்த சில ஆண்டுகளுக்கு மேலும் புதுக் கண்டுபிடிப்புகள் தோன்றுவதற்கு உறுதி அளிக்கின்றன.

கெல்லி ஜாகர், (Kellie Jaeger, Astronomy Magazine)

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலே புரோட்டான்களும், நியூட்ரான்களும்தான் முதன்முதல் கண்டுபிடிக்கப்பட்ட மூலாதாரப் பரமாணுக்கள் (Subatomic Particles).  அவை கண்டுபிடிக்கப்பட்ட சமயத்தில் அவைதான் அணுவின் பிளக்க முடியாத மூலப் பரமாணுக்களாய்க் கருதப்பட்டன.  1960 ஆண்டுகளில் அவற்றுக்கும் நுட்பமான துகள்களால் பரமாணுக்கள் உருவாகியுள்ளன என்று அறியப் பட்டது.  புதுமுறைச் சோதனைகள் மூலம் புரோட்டான், நியூட்ரான் ஆகிய பரமாணுக்களின் உறுதியற்ற உள்ளமைப்பை இப்போது அழுத்தமாய்ச் சொல்ல முடிகிறது.

கிளாஸ் ரித் & ஆன்டிரியா சேஃபர் (Klaus Rith & Andreas Schafer)

Fig 1C CERN Atom Smasherமீண்டும் உயிர்த்தெழுந்த பரமாணு உடைப்பு யந்திரம்

2009 அக்போடர் 23 & 25 ஆம் தேதிகளில் பிரான்சில் உள்ள உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் (LHC -Large Hadron Collider) பழுதுகள் நீக்கப்பட்டு மேலும் புதுமையாக்கப் பட்டு மறுபடியும் இயங்க ஆரம்பித்து தணிவு சக்தி ஒளிக்கற்றைக் கதிர்த் துகள்களை (Low Energy Beams of Particle) இரண்டு பகுதிகளில் சோதனை செய்யப் புகுத்தியுள்ளது.  சென்ற ஆண்டு செப்டம்பரில் திடீரென குளிர் வாயு ஹீலியம் பழுதான இணைப்பு ஒன்றில் கசிந்து யந்திரத்துக்குப் பெருஞ் சிதைவு உண்டாக்கியது !  அந்த நிதி விழுங்கிய விபத்திற்குப் பிறகு இப்போதுதான் விஞ்ஞானிகள் மறுபடியும் மிகத் தணிவுக் குளிர் நிலையை [1.9 கெல்வின் (-271 C) (-456 F)] யந்திரத்தில் நிலவிச் சோதனையைத் துவங்கியுள்ளார்.  அந்தக் கடுங்குளிர் நிலை விண்வெளியில் ஆழ்ந்த பகுதியை விடத் தணிவுக் குளிரானது !  2009 நவம்பரில் 27 கி.மீடர் (16 மைல்) முழுக் குகைக் குழலில் ஒளிக்கற்றைக் கதிரை அனுப்பத் திட்டமிட்டு உள்ளார்.  சோதனையில் பங்கெடுத்த இரண்டு குகைப் பகுதிகள் ஒவ்வொன்றும் 3.5 கி.மீடர் (2.1 மைல்) நீளமுள்ளது.  இப்போது முதலாக அனுப்பப்படும் சோதனை ஒளிக்கற்றை பின்ன அளவில் 450 பில்லியன் எலெக்டிரான்-வோல்ட் (eV -Electron Volt) சக்தி மட்டுமே !  எதிர்காலக் குறிக்கோள் ஒளிக்கற்றைச் சுற்றி வந்து முடிவில் 3.5 டிரில்லியன் எலெக்டிரான்-வோல்ட் (3.5 Trillion eV -3.5 X 10^18 eV) சக்தி அளவாகும் !  2011 ஆண்டுகளில் 7 டிரில்லியன் எலெக்டிரான்-வோல்ட் சக்தி வரை போகும் திட்டம் உள்ளது !

Fig 1B CERN Huge Magnet

பரமாணு உடைப்பு யந்திரம் ஹைடிரஜன் புரோட்டானை விரைவாக்கம் செய்து அதன் அயனிகளை (Hydrogen Ions) ஒளிவேகத்துக்கு ஒட்டிய வேகத்தில் (99.999 % Speed of Light) துரிதப் படுத்தி 27 கி.மீடர் (17 மைல்) நீளமுள்ள ஒரு வட்டக் குகையில் எதிர்த் திசையில் அனுப்பி மோத விட்டு உடைக்கிறது.  அந்த வட்டக் குகை பூமியிலிருந்து 175 மீடர் (580 அடி) ஆழத்தில் பிரான்சுக்கும் ஸ்விட்ஸர்லாந்துக்கும் இடையே நீண்டு கட்டப் பட்டிருக்கிறது.  புரோட்டான் ஒளிக்கற்றைகள் இணையாக எதிர்த் திசைகளில் பாய்ந்து சென்று மோதும்.  மிகச் சக்தி வாய்ந்த மின் கடத்திக் காந்த வளையங்கள் (Powerfull Super-conducting Magnets) ஊடே ஒளிக்கற்றை அயான்கள் செல்லும் போது அவற்றின் வேகம் படிப்படியாக வளர்ச்சி (Particle Acceleration) அடைகிறது.  27 கி.மீடர் குகைக் குழாய்களில் மிகத் தணிந்த குளிர்நிலை (-271 C) திரவ ஹீலியம் நிரப்பி நிறுவப் படுவதால் மின் கடப்புக்கு ஏதுவாகிறது.  ஒளிக்கற்றை காந்தங்களால் வளைக்கப் பட்டு முடிவில் நான்கு பெரும் வெடிப்பரங்கில் (Four Large Chambers) மோதுகின்றன.  அவ்விதம் மோதும் போது பேரளவு வெப்பசக்தி உண்டாகி உஷ்ணம் பரிதியை விட 100,000 மடங்கு பெருகிப் பிரபஞ்சம் 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னிருந்த பெரு வெடிப்பு நிலைக்கு (Big Bang State) ஒப்பாக நிலவ விடுகிறது !  முடிவாக மோதலில் என்ன நிகழும் என்று ஆர்வமோடு விஞ்ஞானிகள் எதிர்நோக்கி உள்ள போது, பிரபஞ்சப் பெரு வெடிப்பில் எழுந்திருக்கலாம் என்று ஐயப்படும் “ஹிக்ஸ் போஸான்” (Higgs Boson) எனப்படும் ஓர் அடிப்படைத் துகள் உண்டாகுமா என்பதைக் காணக் காத்துள்ளார்கள் !

Fig 1F Fundamental Particles

மோதும் புரோட்டான்களில் நேரும் விந்தை விளைவுகள்

மோதல் அரங்குகளில் உள்ள முப்புற வடிவுப் படமெடுக்கும் உளவுக் கருவிகள் (3-D Image Detectors) புரோட்டான் மோதல் சிதைவுகளைப் பதிவு செய்து புதிய அடிப்படைத் துகள்கள் எழுகின்றனவா வென்று நுட்பமாக ஆராய்ச்சி செய்யும்.  பரமாணு உடைப்பு யந்திரம் தன் உச்சத் திறனில் ஒரு வினாடிக்குப் பில்லியன் மோதல்களை உண்டாக்கும் வல்லமை கொண்டது.  தரை மட்டத்தில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு அரங்கில் 3000 மின்கணினிகள் உடனே அவற்றை 100 மோதல்களாகச் சுருக்கி விளக்கமாக ஆராய்ச்சி செய்ய உதவும்.  அவற்றின் விளைவுகள் உலகில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பட்டு விளக்கமாக ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப் படும்.

அட்லாஸ் என அழைக்கப்படும் நான்கு வெடிப்பு அரங்குகள் (Atlas Collision Chambers) 46 மீடர் நீளம், 25 மீடர் உயரம் உடையவை.  அவற்றின் எடை 7000 டன் (ஏறக் குறைய ஐ·பெல் கோபுரத்தின் எடை Eiffel Tower) !  அவற்றில் உள்ளவை 3000 கி.மீடர் மின்சார வடங்கள் (Cables) !  50,000 டன் காங்கிரீட் ஊற்றிக் கட்டிய அரண் கோட்டை அவை !

Fig 1H God's Particle Higgs Boson

10 மணி நேரம் சோதனை செய்தால் ஒளிக்கற்றை அயான்கள் 10 பில்லியன் கி. மீடர் தூரம் (நெப்டியூன் கோளுக்குப் போய் மீளும் தூரம்) பயணம் செய்யும்.  உலகப் பெரும் பரமாணு உடைப்பு யந்திரம் 120 மெகாவாட் மின்னாற்றல் உபயோகிக்கும் !  அதைக் கட்டி முடிக்க ஆன செலவு 6 பில்லியன் டாலர் (2008 டாலர் மதிப்பு) !

2008 செப்டம்பரில் யந்திரத்துக்கு நேர்ந்த பெரும் விபத்து !

வெற்றிகரமாக முதல் சோதனையைச் செய்து காட்டிய செர்ன் பூத விரைவாக்கி யந்திரத்தில் 2008 செப்டெம்பர் 19 ஆம் தேதி நீடித்த கால நிறுத்தத்தை உண்டாக்கும் ஒரு பழுது ஏற்பட்டு உலக விஞ்ஞானிகளைப் பெருத்த ஏமாற்றத்தில் மூழ்க்கி விட்டது ! ஒரு மின்சார இணைப்பு துண்டிப்பால் பிணைப்பு உருகிக் குளிர்ச்சித் திரவ ஹீலியம் கசிந்து “பேரளவு காந்தத் தணிப்பு” (Massive Magnetic Quench) நிகழ்ந்ததால், குளிர்ச்சியில் இருந்த 100 மின்காந்தக் கடத்திகளில் (Superconductor Magnets) உஷ்ணம் உடனே 100 டிகிரி C ஏறிச் சிதைந்து விட்டன !  செர்ன் குகையில் ஒரு டன் ஹீலியம் கசிந்த உடனே தீயணைப்புப் படை வரவழைக்கப் பட்டது.  உஷ்ணம் தணிந்த நிலையில் சோதனையின் போது கண்காணிக்கப்பட்ட 16 மைல் அடித்தளக் குகை சூடாகத் தாமதமானதால் ஆய்வாளரும், தீயணைப்பாளரும் சீக்கிரம் உள்ளே நுழைய முடியவில்லை !  அதற்குள் நூறு காந்தக் கடத்திகள் உஷ்ணப் பெருக்கால் எரிந்து கரிந்து பெருஞ் சேதத்தை விளைவித்து விட்டன !

Fig 1G ATLAS Collision Chamber

எரிந்த காந்தச் சாதனங்களை வெளியில் எடுத்துப் புதிய காந்தங்களை இடுவதற்கும் அபாயம் மீண்டும் நேராதிருக்க மாற்றங்கள் செய்வதற்கும் ஓராண்டு காலம் கடந்து விட்டது !  16 மைல் வட்டச் சுற்றின் எட்டுப் பகுதிகளில் மொத்தம் 1600 மின்காந்தக் கடத்திகள் (Superconducting Magnets) அமைப்பாகி இருந்தன !  அவற்றில் ஒரு பகுதிக் காந்தக் கடத்திகள் (எண்ணிக்கை : 100) அனைத்தும் சிதைந்து விட்டன !  LHC பரமாணு உடைப்பு யந்திரம் முழு வேகத்தில் பறக்கும் ஒரு விமானத்துக்குத் (737 போன்ற) தேவையான ஆற்றலைப் பயன்படுத்துகிறது. திடீரென அத்தகைய அளவு ஆற்றல் கசிந்து வெளியேறினால் பெருத்த சேதாரம் விளைந்தது !  தீயணைப்புப் படையினர் பாய்ந்து சென்று கட்டுப்படுத்த முன் வந்தாலும், வெடிப்பு ஏற்பட்டு உலோகமும், கரித்தூசியும் பரவின ! யாரும் உள்ளே புகுந்து விபத்தின் முழுக் கோர விளைவுகளை அறியவே வெகு நாட்கள் ஆயின !  1.5 பில்லியன் டாலர் அமைப்புச் சாதனத்தில் 400 மீடர் பகுதி சிதைந்து போனது !  குளிர்ப் பிரதேசத்தில் அமைக்கப் பட்ட செர்ன் பூத விரைவாக்கியைக் குளிர்காலத்தில் இயக்கும் திட்ட மில்லாததால் குளிர்காலம் போய் 2009 ஆண்டு ஏப்ரலில் மீண்டும் செர்ன் இயங்கத் துவங்கும் என்று அறிவிக்கப் பட்டாலும் மேலும் 6 மாதம் கடந்து போனது.

Fig 1A CERN Starts its First Experiment

பூத விரைவாக்கி யந்திரத்தின் வெற்றிகரமான முதல் சோதனை

2008 செப்டம்பர் 10 ஆம் தேதி ஜெனிவாவுக்கு அருகில் அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ள பூதகரமான செர்ன் வட்ட விரைவாக்கி அரணில் முதன்முதல் புரோட்டான் கணைகளை ஒட்டிய ஒளிவேகத்தில் எதிர்த்திசையில் முட்ட வைத்துத் துகள் பௌதிக விஞ்ஞானிகள் (Particle Physicists) வெற்றிகரமாக முதற்படிச் சோதனையைச் செய்து காட்டினார்கள். அந்த ஆராய்ச்சி மூலம் இதுவரைக் காணாத பிரபஞ்சத்தின் மூலாதாரத் துகள், “ஹிக்ஸ் போஸான்” (Higgs Boson) என்பது விளைந்திடுமா என்று விஞ்ஞானிகள் தேடினர். அப்போது சோதனையில் எழும் பேரளவு உஷ்ணத்தில் பெருஞ் சிதைவு ஏற்பட்டு வெடித்துக் கருந்துளை ஒன்று உருவாகிப் பூமி விழுங்கப்பட்டு விடும் என்று சில விஞ்ஞானிகள் எச்சரிக்கை செய்து ஆராய்ச்சியைத் தடை செய்ய முயன்றார்கள் ! ஆனால் அப்படி ஒரு கருந்துளை உருவாகா தென்று பிரிட்டீஷ் விஞ்ஞான மேதை ஸ்டீ·பென் ஹாக்கிங் ஊக்கம் அளித்தார் !  மேலும் விஞ்ஞானிகள் பெரிதும் எதிர்பார்க்கும் ஹிக்ஸ் போஸான் அந்தச் சோதனையில் எழாது என்றும் ஸ்டீ·பென் ஹாக்கிங் நூறு டாலர் பந்தயம் வைத்தார் !  செர்ன் முதல் சோதனையில் ஹிக்ஸ் போஸான் துகள் எழாமல் போவதே நல்லதென்றும், அதனால் மற்ற விந்தையான விளைவுகளை உண்டாக்க வழிவகுக்கும் என்று ஹாக்கிங் விளக்கினார். இறுதியில் வெற்றி பெற்றவர் ஹாக்கிங்தான் !  புரோட்டான் ஒளிக்கணைகள் மோதிக் கொள்ளும் முதல் சோதனையில் ஹிக்ஸ் போஸான் மூலாதாரத் துகள் ஏனோ விளைய வில்லை !

Fig 2 CERN Control Room -1

முதல் சோதனையில் நல்ல செய்தி என்ன ? பூதப் பரமாணு உடைப்பி எனப்படும் [Large Hadron Collider (LHC)] செர்ன் (CERN) விரைவாக்கிச் சோதனையில் சிக்கலில்லை ! பிரச்சனை யில்லை ! தவறுகள் எதுவும் முதலில் நேரவில்லை !  அசுரக் கருந்துளை உருவாகி நமது அருமைப் பூமியை விழுங்க வில்லை ! அத்துடன் ஹாக்கிங் எதிர்பார்த்தபடி ஹிக்ஸ் போஸான் துகளும் காணப்பட வில்லை !  உலகத்திலே திறமையுள்ள விஞ்ஞானிகள் 20 ஆண்டுகளாய்க் காத்திருந்து செர்ன் இப்போது மீண்டும் 2009 செப்டம்பரில் ஆரம்பிக்கப் பட்டுத் துவங்கியுள்ளது.  இந்த அசுர யந்திரம் பிரபஞ்சப் பெருவெடிப்பைப் போல் குகைஅரங்கத்தில் உருவாக்கி நுட்ப வினாடியில் வெளியாகுபவை எத்தகைய நுண்துகள்கள் (Tiniest Particles) என்று கருவிகள் மூலம் உளவப் படும்,  புரோட்டான் கணைகளை ஒளிவேகத்துக்கு ஒட்டிய வேகத்தில் எதிர்த் திசையில் மோத வைத்துப் பரமாணுக்களின் (Sub-Atomic Particles) வயிற்றை உடைத்து இன்னும் புலப்படாமல் ஒளிந்துள்ள பிரபஞ்சத்தின் நுண்துகள்கள் எவையென்று தெளிவாய் அறியப்படும் !

(தொடரும்)

தகவல்:

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Many Planets are in the Solar System ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 CERN Large Hadron Collider – Particle Physics – A Giant Takes on Physics’ Biggest Question By : The New York Times (May 15, 2007)
13 CERN Fires up the New Atom Smasher to Near Big Bang By : Alexander Higgins [Sep 7, 2008]
14 World’s Largest Atom Smasher (CERN) Completion [March 26, 2008]
15. Time Magazine Report – The Moment [September 10, 2008] Geneva [Sep 22, 2008]
16 CERN Atom Smasher – Latest Wikipedia Report.
17 BBC News What Happened to the Big Bang Machine (Sep 20, 2008)
18 BBC News LHC Gets Colder than Deep Space By Paul Rincon (Oct 16, 2009)
19 BBC News Particle Beams Injected into LHC (Oct 26, 2009)
20 Rebirth of the LHC : The Search for the God Particle Resumes (Nov 2, 2009)
21 Second Chance of Large Hadron Collider To Deliver Universe’s Secrets By : Robin McKie, Geneva (Nov 1, 2009)

******************
jayabarat@tnt21.com [November 20, 2009]

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் அணுவிலிருந்து மின்சக்தி உற்பத்தி

Kudankula Twin Units

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

‘அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடலலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம் ‘

அமெரிக்க ஆக்கமேதை, தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]

‘பிண்டம், சக்திக்கு [Matter, Energy] உள்ள நெருங்கிய உறவை விளக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியே [Theory of Relativity] இதுவரைப் படைத்த சமன்பாடுகளில் மகத்தானதோர் இணைப்பாகக் கருதப்படுகிறது ‘

பிரிட்டிஷ் மேதை, பெர்ட்டிரண்டு ரஸ்ஸல் [ஏப்ரல் 19, 1955]


‘இந்தியா மின்சக்தி உற்பத்தி செய்ய, அணுசக்தியை இப்போதிருந்து [1944] இன்னும் இருபதாண்டுகள் வெற்றிகரமாகப் பயன்படுத்தி வந்தால், தனக்குத் தேவையான நிபுணர்களைத் தன் நாட்டிலேயே தோற்றுவித்துக் கொண்டு, அன்னிய நாடுகளில் தேட வேண்டிய நிலை ஏற்படாது ‘

டாக்டர் ஹோமி பாபா [1944]

Location of Indian Nuclear Plants

முன்னுரை: ‘யுத்தம் என்பது அழிவியல் விஞ்ஞானம் ‘ என்று போர்த்துறை நிபுணர் ஒருவர் குறிப்பிடுகிறார். இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் குமுறி எழுந்த இரண்டாம் உலக யுத்தத்தின் போது படைத்துப் பயன்படுத்தப்பட்ட அண்டவெளி யுகத்தைத் துவக்கிய ராக்கெட் நுணுக்கமும், அணுசக்தி யுகத்தைத் திறந்து வைத்த அணுப்பிளவு இயக்கமும் இருபெரும் விளைவுகள்! பத்தொன்பதாம் நூற்றாண்டில் காலூன்றிய தொழிற்புரட்சி அண்டவெளிப் பயண விருத்தியாலும், அணுப்பிளவு சக்தி நிலைய வளர்ச்சியாலும் பூத ஆலமரம் போல் பெருகியது! மனிதன் ஆக்கிய அணுசக்திக்கு இரண்டு கரங்கள் உண்டு! ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களை வெடிப்பாலும், கதிர்வீச்சாலும் நாசமாக்கிய அணு ஆயுதம் ஏந்திய ‘அழிக்கும் கரம் ‘ ஒன்று! பில்லியன் கணக்கான மின்விளக்குகளை உலகமெங்கும் ஏற்றி, மில்லியன் கணக்கான யந்திரங்களை ஓட்டும் ‘ஆக்கும் கரம் ‘ மற்றோன்று. 1944 இல் அணுவைப் பிளந்து பயிற்சி செய்த ஏழாண்டுகளில் [டிசம்பர் 1951] முதல் ஆய்வு அணு உலை மின்சக்தி உண்டாக்கி நான்கு மின்குமிழிகளுக்கு ஒளி ஊட்டியது! அமெரிக்காவின் கடற்படைக் கப்பல் ஒன்று 1953 இல் அணுசக்தியால் முதன்முதலில் இயக்கப் பட்டது! 1955 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் இல்லங்களுக்கு முதன்முதலில் அணுமின்சக்தி பரிமாறப் பட்டது!

Rajasthan Units 1 and 2

விஞ்ஞான மேதை டாக்டர் ஹோமி பாபா ஜவாஹர்லால் நேருவின் தலைமையில் 1953 ஆம் ஆண்டில் பாரதத்தில் அணுசக்தி யுகம் வேரூன்ற அடித்தளம் அமைத்தார். ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இயங்கும் 14 அணுமின் நிலையங்களையும், தானே டிசைன் செய்து உள்நாட்டுச் சாதனங்களுடன் கட்டப்படும் 9 நிலையங்களையும் பெருமையுடன் இந்தியா மேற்பார்வை செய்து வருகிறது. அடுத்து 2020 ஆண்டு முடிவதற்குள் 2700 MWe ஆற்றலிருந்து 20,000 MWe ஆற்றல் அணுசக்தி மின்சாரம் பரிமாறத் திட்டமிட்டு ஆக்க வேலைகள் நடந்து வருகின்றன. நிலக்கரி குன்றிய, எரிவாயும், எரி ஆயிலும் இல்லாத இந்தியாவுக்கு எரிசக்தியாக அணுசக்தி ஒன்றே இன்னும் 20 அல்லது இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு உதவப் போகிறது. மில்லியன் கணக்கான டன் ஸல்ஃபர் டையாக்ஸைடு, நைடிரஜன் ஆக்ஸைடு, கார்பன் டையாக்ஸைடு போன்ற துர்வாயுக்களை வெளியேற்றாத அணுமின் நிலையங்களே, இன்னும் பல்லாண்டுகளுக்குப் பேரளவு மின்சார ஆற்றலை உற்பத்தி செய்யப் போகின்றன!

Rajasthan Units 3 and 4

எரிசக்தி பற்றாக்குறை பற்றி டாக்டர் அப்துல் கலாம்

இந்திய அணுசக்தித் துறையின் 50 ஆண்டு நிறைவுப் பொன்விழாக் கொண்டாடும் ஆண்டில் [1953-2003] 2003 டிசம்பர் 17 ஆம் தேதி கல்பாக்கத்தில் நிகழ்ந்த இந்திய அணுவியல் குழுவின் 14 ஆவது ஆண்டு நிறைவு விழாவின் போது, உலோகவியல் வல்லுநரான பேராசிரியர் சி.வி. சுந்தரம் அவர்களுக்குப் பாராட்டு விருது அளித்தார், ஜனாதிபதி மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம். அந்த விழாத் துவக்கவுரையில் ஜனாதிபதி கூறியது: ‘இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் பெரும் பிரச்சனைகளாக எரிசக்திப் பற்றாக்குறையும், நீர்வளப் பஞ்சமும் மனிதரை மிகவும் பாதிக்கப் போகின்றன!

Tarapur Unit 4

Nuclear Power Cost

கடந்த 50 ஆண்டுகளாக அணுசக்தி நுணுக்க வளர்ச்சி விரிவடைந்து, நமது அணுமின் நிலையங்கள் சீராக இயங்கி, பாதுகாப்பாகக் கவனிக்கப்பட்டு, உறுதி அளிக்கும் முறையில் 90% தகுதி இலக்க [Capacity Factor] நிலையை அடைந்துள்ளன. நமது மின்சக்தி தேவை இப்போதுள்ள 100,000 MWe தகுதியிலிருந்து, 2020 ஆம் ஆண்டில் 300,000 MWe ஆற்றல் நிலைக்குக் கொண்டு போகத் திட்டங்கள் உருவாகி வருகின்றன. அதில் 2020 ஆண்டு அணுசக்தியின் பங்கு 20,000 MWe ஆற்றலாக எடுத்துக் கொள்ளப்படும். யுரேனியத்தின் இடைப்பட்ட இருப்புக்கள் தீர்ந்தவுடன், புளுடோனியம்239 எருவை உலைகளில் பயன்படுத்தித் தோரியத்தை யுரேனியம்233 எருவாக ஆக்கி, வேகப் பெருக்கி அணுமின் நிலையங்கள் மின்சாரம் பரிமாறும் ‘.

Indian Reactors

இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் அணுசக்தி நிலையங்களின் தேவை

2004 ஜூலை 26 ஆம் தேதித் தகவலின்படி இப்போது அகில உலகில் 30 நாடுகளில் 437 அணு மின்சக்தி நிலையங்கள் இயங்கி 362,939 MWe மின்சார ஆற்றல் தகுதியில் 2525 பில்லியன் யூனிட்டுகள் [kwh] பரிமாறி வருகின்றன. அடுத்துப் புதிதாக 24,000 MWe தகுதியுள்ள 30 அணுமின் நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் 34,000 MWe உற்பத்தி செய்ய வல்ல 32 அணுமின்சக்தித் திட்டங்கள் அடுத்து உருவாகப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு நிகழ்ந்து வருகின்றன. அத்துடன் 55,000 MWe பரிமாறும் 72 மேல்நுணுக்க அணுமின் நிலையங்கள் [Advanced Nuclear Power Plants] முன்மொழியப்பட்டு அரசாங்கத் திட்ட நிபுணர் கைவசம் உள்ளன. இப்போது இந்தியாவில் 14 அணுசக்தி நிலையங்கள் 2700 MWe மின்னாற்றலை உற்பத்தி செய்து 3.3% அளவில் பங்கேற்று வருகின்றன. அடுத்து 4128 MWe தகுதியுள்ள 9 அணுமின் நிலையங்கள் கட்டப்பட்டு, இன்னும் 13,160 MWe ஆற்றல் கொண்ட 24 அணுசக்தி நிலையங்கள் திட்டமிடப்பட்டு வரைபட வடிவத்தில் உள்ளன.

American Twin Units

உலக அணுமின்சக்தி உற்பத்தி அணியில் அமெரிக்கா முதலிலும் அடுத்து பிரான்ஸ், ஜப்பான், ரஷ்யா பின்னால் அந்த ஒழுங்கில் தொடர்கின்றன. அமெரிக்காவில் 103 அணுமின் நிலையங்கள் 97,485 MWe ஆற்றலில் 20% பங்கு மின்சாரத்தைப் பரிமாறுகின்றன. அடுத்து 1000 MWe உற்பத்தி செய்யும் பூத நிலையம் ஒன்று அமெரிக்காவில் கட்டப்படுகிறது. 1979 இல் நேர்ந்த திரிமைல் தீவு அணுமின் நிலைய விபத்திற்குப் பிறகு திட்டமிடப்பட்ட பல அணுமின் நிலையங்கள் கட்டப்பாடாமல் நிறுத்தமாயின! 1974 ஆம் ஆண்டிற்குப் பிறகு அமெரிக்கன் அணுத்துறை நியம ஆணைக்குழு [Nuclear Regulatory Commission (NRC)] அனுமதி அளித்த அணுசக்தி நிலையங்கள் கூட தலைதூக்காமல் நின்று போயின! 2004 ஆண்டில் இப்போது 30 வருடங்கள் கழித்து, ஜெனரல் எலெக்டிரிக், வெஸ்டிங்ஹவுஸ் [General Electric Co, Westinghouse Electric Co] போன்ற ஏழுபெரும் நிறுவகங்கள் அமெரிக்காவில் புதுப்பிறவி அணுமின் நிலையங்களை [New Generation Nuclear Power Plants] உருவாக்க முன்வந்துள்ளன.

Coal & Nuclear Plants

கனடாவில் 30 வயது கடந்த பழைய இரண்டு 750 MWe நிலையங்கள், தனியார் மின் உற்பத்தி நிறுவகத்தால் புதுப்பிக்கப்பட்டு 2003 இல் மீண்டும் இயங்கித் துவங்கியுள்ளன. காலிஃபோர்னியா மின்சக்தி இரட்டடிப்பு அவதியைக் கண்ட அமெரிக்காவின் மின்சார வாரியங்கள் சில, ஓய்ந்து போன பழைய அணுமின் நிலையங்களை வாங்கிப் புதுப்பிக்கும் முயற்சியில் இப்போது இறங்கியுள்ளன! அமெரிக்கன் அணுத்துறை நியம ஆணைக்குழு (NRC), குறிப்பிட்ட சில மேம்பாடுகளைச் செய்தால் 40 வருட ஆயுள் இயக்க உரிமை அனுமதியை [Operating Licence] 60 வருடங்களுக்கு நீட்ட முன்வந்தது! அந்த மாறுதலால் அணுமின் நிலையங்களின் பயன்பாடுத் தகுதிப் பெருகி, மின்சார உற்பத்தி நிதிச் சிக்கனம் மிகையாகி, நிலையப் பரிமாற்றப் போட்டியில் அவை முன்னேறின. 2020 ஆண்டுக்குள் புதிய அணுசக்தி நிலையங்களை நிறுவி, மின்னாற்றல் பரிமாற்றத்தை 50,000 MWe மிகையாக்கத் தொழிற்துறை வல்லுநர்கள் திட்டம் தீட்டியுள்ளார்கள்.

Boiling Water Reactors

மூன்றுவித மாடல்களில் இந்திய அணுமின்சக்தி நிலையங்கள்

பாரதத்தில் பன்மடங்கு பெருகி வரும் அணுமின் நிலையங்கள் கனடாவின் ‘கான்டு ‘ கனநீர் அழுத்த உலை மாடலைப் பின்பற்றுபவை. 220 MWe ஆற்றலில் முதலிரு நிலையங்கள் ராஜஸ்தான் ராவட்பாடாவில் கனடாவின் உதவியில் கட்டப்பட்டு இயங்கின. பின்னர் சென்னைக்கு அருகில் கல்பாக்கம், டெல்லிக்கருகில் நரோரா, குஜராத்தில் கக்கரபார், கர்நாடகாவில் கைகா ஆகிய இடங்களில் 220 MWe இரட்டை அணுமின் நிலையங்கள் ராஜஸ்தான் மாடலை மேம்படுத்தி, முழுக்க முழுக்க இந்தியப் பொறியியல் விஞ்ஞானிகளால் அமைக்கப் பட்டன. இப்போது ராஜஸ்தானில் அடுத்து இரண்டு கனநீர் அணுமின் நிலையங்கள் நிறுவகமாகி அவையும் மின்சாரம் பரிமாறுகின்றன. ஆக மொத்தம் 14 அணுமின் நிலையங்கள் 2720 MWe உற்பத்தித் தகுதியில் இயங்கி வருகின்றன. இவை அனைத்தும் இயல்வள யுரேனிய எருக்கோலைப் [Natural Uranium Fuel Bundle] பயன்படுத்தி, கனநீர் மிதவாக்கி யாகவும், வெப்பக் கடத்தியாகவும் [Heavy Water as Moderator & Heat Transport Medium] அணு உலைக்குள் சுற்றி வருகிறது.

Canadian Reactors

டாக்டர் ஹோமி பாபா முதலில் திட்டமிட்டுத் துவங்கிய இரட்டை அணுமின் நிலையங்கள் 200 MWe ஆற்றல் அளிக்க வல்ல அமெரிக்க ஜெனரல் எலக்டிரிக் கம்பெனியின் கொதிநீர் அணுமின் உலை [Boiling Water Reactor] நிலையமாகும். இந்த அணு உலைகள் சிறிது செறிவு [2%] பெற்ற யுரேனிய எருக்கோலை உபயோகித்து, சாதாரண நீரே மிதவாக்கி யாகவும், வெப்பக் கடத்தியாகவும் பயன்படுத்தப் படுகிறது. கொதிநீர் உலைகளில் விலைமிக்கச் செறிவு எருக்கோல்கள் பயன்படுவதாலும், கதிரிக்கத் தீண்டல் டர்பைன் சுற்றுச் சாதனங்களில் மேவிப் பராமரிப்புப் பணிகள் தாமதப் படுவதாலும், பணியாட்கள் அதிகமாகக் கதிரடி பெறுவதாலும் அம்மாதிரி அணுமின் உலைகள் மீண்டும் இந்தியாவில் கட்டப்பட வில்லை. கொதிநீர் அணுமின் உலை நிலையங்கள் முதற்பிறவி மாடலாய், நிதிச்சிக்கனக் குறிக்கோள் ஒன்றையே கருதி டிசைன் செய்யப்பட்டதால், கதிர்த் தீண்டல் பிரச்சனைகளைத் தவிர்ப்பது சிரமான வேலை ஆகிவிட்டது!

Uraniuam Fue Pelletsl

2020 ஆண்டுக்குள் 20,000 MWe மின்னாற்றல் மேம்படுத்தும் குறிக்கோளில் 220 MWe நிலையிலிருந்து அடுத்து 540 MWe இரட்டை கனநீர் அணுமின் நிலையங்களை இந்திய அணுசக்தி துறையகம் டிசைன் செய்து, இப்போது தாராப்பூரில் கட்டமைப்புப் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. முதல் 540 MWe நிலையத்தில் 95% கட்டுமானப் பணிகள் முடிந்து, 2005 அக்டோபரில் ‘பூரணம் ‘ எய்தும் [Reach Criticality] என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டாவது நிலையம் 2006 ஜூலையில் பூரணம் அடையும் என்று அறியப்படுகிறது. அடுத்துப் பூத வடிவில் 1000 MWe ஆற்றல் மிக்க இரட்டை அழுத்த எளியநீர் அணுமின் உலைகள் [Pressurized Light Water Reactors (VVER)] ரஷ்ய உடன்படிக்கையில் கூடங்குளத்தில் இப்போது உருவாகி வருகின்றன. இந்த அணுமின் உலைகளுக்கு 2%-3% செறிவு யுரேனியம் தேவைப்படும். VVER போன்ற அழுத்தநீர் அணுமின் உலைகளில் கொதிநீர் உலைகள் போல் நீராவி உலைக்கலனில் [Reactor Vessel] உண்டாகாமல் வெப்ப மாற்றிகளில் எழுவதால், கதிர்த் தீண்டல் பிரச்சனைகள் மிக மிகக் குறைவு.

Larger Canadian Units

இந்திய அணுத்துறை நிறுவகத்தின் மகத்தான சாதனைகள்

இந்திய அணுசக்தித் துறையவகத்தின் அதிபதி எஸ்.கே. ஜெயின் [Nuclear Power Corporation India Ltd (NPCIL) Chairman S.K. Jain] 2004 ஜூலை 8 ஆம் தேதி நடந்த 17 ஆம் ஆண்டுக் கூட்டவையில் கூறியது: ‘நமது கம்பெனியின் கடந்த ஆண்டு [2002] லாபத் தொகை 1509 கோடி ரூபாய். இந்த ஆண்டு [2003] லாபம் 2604 கோடி ரூபாய். கடந்த ஆண்டு மின்சக்தி ஆற்றல் உற்பத்தியானது: 19242 மில்லியன் யூனிட் [kwh]. கடந்த 7 ஆண்டுகளில் (1997-2004) மின்சக்தி ஆற்றல் உற்பத்தி 9619 மில்லியன் யூனிட்டாக இருந்ததை இரட்டிக்க வைத்து 19242 யூனிட்டாக மிகைப்படுத்தியது பாராட்டத் தக்க அணுமின் நிலைய இயக்கமாகும். மேலும் நிலையங்களின் இயக்கத் தகுதி இலக்கம் [Capacity Factor] அதே 7 ஆண்டுகளில் 71% வீதத்திலிருந்து 90% மிகையானதும் மெச்சத் தகுந்த இயக்குநரின் பணிகளே. குஜராத் கக்ரபார் யூனிட்-1 அணுமின் நிலையம் 98% ஆண்டுத் தகுதி இலக்கத்தில் உற்பத்தி செய்து, கன்நீர் அணுமின் உலைகளுக்குள் முதலிடத்தைப் பெற்று, அகில அணுசக்திக் கூட்டியக்கப் பேரவையின் [World Association of Nuclear Operations (WANO)] அணுசக்திச் சிறப்புப் பரிசைப் [Nuclear Excellene Award] பெற்றுள்ளது.

Boiling Water Reactor Schematics

கல்பாக்கம் வேகப் பெருக்கி ஆய்வு அணு உலையில் [Fast Breeder Test Reactor (FBTR)] எந்தவித எருக்கோல் பழுதும் ஏற்படாமல் ‘எருத்தீய்ப்பு ‘ [Fuel Burnup] டன் எருவுக்குத் தினம் 72,000 MW [72,000 MWd/ton] ஆற்றல் கிடைத்துள்ளது. ராஜஸ்தான், கல்பாக்கத்தின் பழைய அணு உலைகளில் அனைத்து அழுத்தக் குழல்களை அகற்றிப் புதுக்குழல்களை மாட்டி அவற்றின் மின்சக்தி ஆற்றல் தகுதி மிகுதியாக்கப் பட்டுள்ளன. முதன்முதலில் ராஜஸ்தான் யூனிட்-2 இன் 306 அழுத்தக் குழல்களை நீக்கிப் புதுப்பிக்க 47 மாதங்கள் பிடித்தன. அடுத்து கல்பாக்கம் யூனிட்-2 இன் 306 அழுத்தக் குழல்கள் மிகக் குறைவான காலத்தில் [19 மாதங்களில்] புதுப்பிக்கப் பட்டன! கல்பாக்கத்தில் 170 MWe அணுமின் நிலையத்தின் நீராவி வெப்பத்தில் கடல்நீரில் உப்பை நீக்கி 6.3 மில்லியன் லிட்டர் புதுநீர் உற்பத்தி செய்யப் போகிறது. அந்தத் தொழிற்சாலையில் உப்புநீக்கித் தூயதாகும் நீரின் விலை 1000 லிட்டர் 45 ரூபாயாக மதிப்பீடு செய்யப்படுகிறது.

RAPP Units 3 & 4

Nuclear Fuel Processing

அணுமின் உலைகளுக்குச் சிக்கன யுரேனிய எருக்கோல்

ஒரு டன் அணுக்கரு யுரேனிய எரு உண்டாக்கும் வெப்பசக்தி, (2-3) மில்லியன் டன் இயல்வள எருக்கள் [நிலக்கரி, எரிவாயு அல்லது எரி ஆயில்] தரும் வெப்பசக்திக்குச் சமம். அணுமின் நிலையம் ஒன்றின் கட்டமைப்புச் செலவு [Capital Cost] 30 அல்லது 40 ஆண்டுகளில் நிதித்தேய்வு [Depreciation] ஆகிறது. அதற்குப் பயன்படும் எருச் செலவு [Fuel Cost] தனிக் கட்டமைப்புச் செலவாக பல வருடங்களில் நிதி தேய்கிறது. நிலையத்தின் இயக்கப் பராமரிப்புச் செலவுகள் [Operation & Maintenance Expenses] நிலையத்தின் ஆண்டுச் செலவுகளுடன் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. சுண்டக்காய் அளவு யுரேனியம் [7 gram Uranium Pellet] 3.5 பீப்பாய் எரி ஆயில் [Barrels of Oil], 17,000 கியூபிக் அடி எரிவாயு [Natural Gas] அல்லது 1780 பவுண்டு நிலக்கரி தரும் வெப்பத்தை உண்டாக்குகிறது.

அணுமின் நிலையத்தின் யூனிட் மின்சார விலையைக் குறைப்பது மலிவான, விலை ஏறி இறங்காத அதன் எருவான யுரேனிய மூலக் கனிவளமே. 2000 ஆண்டுக்கு இடையில் 1 kg யுரேனிய எருக்கோல் தயாரிக்க அமெரிக்காவில் மதிப்பீடான செலவு இதுதான்.

World Nuclear Resources

யுரேனியம் ஆக்ஸைடு (U3O8): 8 kg x $30 = $200.

மாற்றல் செலவு [Conversion Cost]: 7 kgU x $5.5 = $38.

செறிவாக்குக் செலவு [Enrichment Cost]: 4.3 SWU x $105 = $452

எருகோல் தயாரிப்புச் செலவு [Fuel Fabrication Cost]: 1 kg = $240

மொத்தச் செலவு: 1 kg = $930

இந்த அளவு யுரேனியம் அளைக்கும் வெப்பசக்தி =3400 gega Joules [315,000 kwh]

ஆகவே எருக்கோல் விலை = 0.30 cents/kwh

இந்திய மதிப்பீடின்படி ஓர் அணுமின் நிலையக் கட்டமைப்புக்குச் செலவு: ரூ 4.25 கோடி/MWe. 1000 MWe அணுமின் நிலயத்தின் கட்டமைப்புக்குச் செலவு: 4250 கோடி ரூபாய்.

Nuclear Fission Power

உலக அணுமின் நிலையங்களின் உயரிய இயக்க நிலை

அமெரிக்காவில் நூற்றுக்கு மேற்பட்ட அணுமின் நிலையங்கள் இயங்கி 20% மின்னாற்றலைப் பங்கிட்டுக் கொள்கின்றன. நிலையங்கள் செம்மைப் படுத்தப்பட்டு, அவற்றின் ஆயுட்காலம் 40 ஆண்டிலிருந்து 60 ஆண்டுவரை நீடிக்க அனுமதி பெற்றதால் சிக்கன நிதிச் செலவில் மிக்க லாபம் அடைந்தன. அமெரிக்காவில் புதிதாக 30 நிலையங்கள் 24,000 MWe ஆற்றலைப் பரிமாறக் கட்டப்பட்டு வருகின்றன. இன்னும் அடுத்து 55,000 MWe அளிக்கவல்ல 72 அணுமின் நிலையங்கள் திட்டநிலையில் உருவாகிக் கொண்டுள்ளன. அமெரிக்கா 2020 ஆண்டுக்குள் புதிதாக 50,000 MWe மின்சக்தி ஆற்றலை உற்பத்தி செய்யும் தகுதியைப் பெறப் போகிறது. அமெரிக்க அணுமின் நிலையங்களின் இயக்கம் செம்மைப் படுத்தப்பட்டு, 1990 இல் இருந்த அவற்றின் தகுதி 65% இலக்கத்திலிருந்து, 2004 இல் 90% ஆக ஏறியது. முதல் 23 எண்ணிக்கையில் அமெரிக்காவின் 13 நிலையங்கள் முதன்மையாக 98% தகுதி இலக்கத்தில் இருந்தன. உலகத்தில் இயங்கிவரும் அணுமின் உலைகளில் 2004 ஆம் ஆண்டு மூன்றில் இரண்டு 80% தகுதி இலக்கத்தில் இயங்கி வந்தன. ஸ்பெயின், பெல்ஜியம், ஃபின்லாந்து, சுவிட்ஜர்லாந்து, தென் கொரியா ஆகிய நாடுகளின் அணுமின் நிலையங்கள் 90% தகுதி இலக்கத்தில் இயங்கி மிஞ்சிக் காட்டின. பிரென்ச், ஜப்பானிய நிலையங்களின் இயக்கங்கள் சராசரி 77% தகுதி நிலையில் காணப்பட்டன.

Nuclear Power in Japan

அணுமின் உலை இயக்க அரங்குகளில் சூழ்மண்டலப் பாதுகாப்பு

1973 முதல் 2003 வரை சுமார் 30 ஆண்டுகள் உலகில் நானூறுக்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்கள் இயங்கி 78.7 மில்லியன் டன் ஸல்ஃபர் டையாக்ஸைடு வெளிவீச்சையும், 39.7 மில்லியன் டன் நைட்டிரஸ் ஆக்ஸைடு வெளியேற்றத்தையும் தவிர்த்துள்ளன! பாரதம் எரிவாயுவைப் பயன்படுத்தி 1000 MWe வெப்ப மின்சக்தி நிலையம் ஒன்றைக் கட்டினால், அது நாளொன்றுக்கு 5.5 டன் ஸல்ஃபர் டையாக்ஸைடு வாயு, 21 டன் நைட்டிரஜன் ஆக்ஸைடு வாயு, 1.6 டன் கார்பன் டையாக்ஸைடு வாயு போன்ற துர்வாயுக்களைச் சூழ்மண்டலத்தில் பரப்பும்! ஆனால் அணுமின் உலையில் ஒரு டன் அணுக்கரு யுரேனிய எரு உண்டாக்கும் வெப்பசக்தி, (2-3) மில்லியன் டன் இயல்வள எருக்கள் [நிலக்கரி, எரிவாயு அல்லது எரி ஆயில்] தரும் வெப்பசக்திக்குச் சமம். 1000 MWe ஆற்றல் அளிக்கும் அணு உலை, ஸல்ஃபர் டையாக்ஸைடு, நைட்டிரஜன் ஆக்ஸைடு, கார்பன் டையாக்ஸைடு போன்ற எந்தவிதப் பசுமை அழிப்பு வாயுக்களை வெளியேற்றுவதில்லை [No Greenhouse Gas Emission]!

Pressurized Water Reactor

ஓர் ஆண்டுக்கு 30 டன் உயர்நிலைக் கதிரியக்கக் கழிவு (தீய்ந்த எருக்கழிவு) [Spent Fuel: High Level Radioactive Wastes], 800 டன் தணிந்த & இடைநிலை கதிர்வீச்சுக் கழிவுகள் [Low & Intermediate Radiation Wastes] சேருகின்றன. 800 டன் தணிந்த இடைநிலைக் கழிவுகள் அழுத்தப்பட்டு வடிவம் 20 கியூபிக் மீடராகச் சுருக்கப்படுகிறது.

ஓர் அணுமின் நிலையம் சாதாரணமாக ஆண்டுக்கு 20 மெட்டிரிக் டன் கதிரியக்கத் தீய்ந்த எருக்கழிவை [Radioactive Spent Fuel Wastes] உண்டாக்கும். உலக அணு உலைகள் அனைத்தும் ஆண்டுக்கு 2000 மெட்டிரிக் டன் எருக்கழிவை விளைவித்து வருகின்றன. கடந்த 40 ஆண்டுகளாக அகில அணு உலைகள் இதுவரைச் சுமார் 40,000 மெட்டிரிக் டன் எருக்கழிவை உண்டாக்கிப் பாதுகாப்பாகப் புதைத்து வைத்துள்ளன. அவை யாவும் தணிந்த கதிர்வீச்சு நிலைக்குத் தேய்ந்து குறைய 100 முதல் 500 ஆண்டுகள் வரை ஆகலாம்!

Indian Reactors under Construction

பாரதத்தின் எதிர்கால அணுமின்சக்தி உற்பத்தித் திட்டங்கள்

இந்திய அணுசக்தி துறையகம் 2020 ஆண்டுக்குள் 20,000 MWe ஆற்றல் அளிக்கும் அணுமின்சக்தி நிலையங்களை நிறுவகம் செய்யும் மாபெரும் திட்டங்களுடன் முற்பட்டு வருவது பாராட்டுதற்குரிய பணியாகும். அணுசக்தி துறையகத்தின் பொறிநுணுக்க ஆணையாளர் எஸ்.ஏ. போஹ்ரா, பிரான்ஸ் அணுவியல் துறைக் குழுவினருடன் உரையாடி, ஆறு 1000 MWe ஆற்றலுடைய ஓர் கூட்டு நிலையத்தை அமைக்க ‘உளவு ஆய்வுகள் ‘ [Feasibilty Studies] நடப்பதாகக் கூறியுள்ளார். இப்போது அணுமின் நிலையக் கட்டமைப்புக் காலம் [Gestation Period] 8-9 மாதங்கள் குறைந்து, முன்னதாகவே 60 மாதங்களில் முடிக்க முடிகிறது என்று தீர்மானமாகி உள்ளது. ரஷ்ய அணுத்துறைக் குழுவினரிடம் உரையாடித் தற்போது தமிழ்நாட்டின் தென்கோடி முனையில் உள்ள கூடங்குளத்தில் உருவாகும் இரட்டை யூனிட் 1000 MWe ஆற்றல் நிலையங்களுடன், இன்னும் நான்கு புது ரஷ்ய 1000 MWe நிலையங்கள் நிறுவத் திட்டங்கள் தயாராகி விட்டன என்று போஹ்ரா அறிவிக்கிறார். 2020 ஆண்டுக்குப் பிறகு ஒவ்வோர் ஆண்டிலும் 1000 MWe ஆற்றல் பரிமாறும் வேகப் பெருக்கி அணுமின் நிலையத்தை [Fast Breeder Reactor] நிறுவத் திட்டமிடப் பட்டுள்ளது

Nuclear Power in USA

இந்தியாவில் இயங்கிவரும் 14 அணுமின் உலைகளில் கிளை உலோகமாகக் கிடைக்கும் புளுடோனியம்239 எதிர்கால வேகப் பெருக்கி முன்னோடி அணு உலைக்குப் [Prototype Fast Breeder Reactor (PFBR)] போதுமானது என்று போஹ்ரா கூறுகிறார். எதிர்கால வேகப் பெருக்கி அணு உலைகளைக் கட்டத் தனிப்பட்ட ஆணைக்குழு ஒன்று நியமனமாகி யுள்ளது என்று கூறுகிறார். 2000 ஆண்டில் மட்டும் 220 MWe ஆற்றல் கொண்ட நான்கு நிலையங்கள் வாணிபத் துறையில் இயங்க ஆரம்பித்து 880 MWe பரிமாற்றத்தைக் கூட்டியுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது 800 MWe ஆற்றலைக் கூட்டி, 2011 ஆண்டுக்குள் தற்போதுள்ள 2700 MWe ஆற்றலிலிருந்து 10,000 MWe ஆக முயற்சி செய்து வருகிறது. இப்போது இந்திய அணுசக்தித் துறையகம் 700 MWe கனநீர் மேம்ப்பாட்டு அணுமின் நிலையத்தை [Advanced Heavy Water Reactor] டிசைன் செய்து நிலையக் கட்டமைப்பு நிதிச் செலவைக் குறைத்து, உற்பத்தியாகும் யூனிட் ஆற்றலின் விலையைக் குறைக்கப் பெருமுயற்சி செய்து வருகிறது.

Nuclear Power in the World 2004

Nuclear Power plants under operation

 

Unit-Location Type Capacity (MWe) Date of Commercial Operation
TAPS-1 Tarapur, Maharashtra BWR 160 28-Oct-1969
TAPS-2 Tarapur, Maharashtra BWR 160 28-Oct-1969
TAPS-3 Tarapur, Maharashtra PHWR 540 18-Aug- 2006
TAPS -4 Tarapur, Maharashtra PHWR 540 12- Sept- 2005
RAPS-1 Rawatbhata, Rajasthan PHWR 100 16-Dec-1973
RAPS-2 Rawatbhata, Rajasthan PHWR 200 01-Apr-1981
MAPS-1 Kalpakkam, Tamilnadu PHWR 220 27-Jan-1984
MAPS-2 Kalpakkam, Tamilnadu PHWR 220 21-Mar-1986
NAPS-1 Narora, Uttar Pradesh PHWR 220 01-Jan-1991
NAPS-2 Narora, Uttar Pradesh PHWR 220 01-Jul-1992
KAPS-1 Kakrapar, Gujarat PHWR 220 06-May-1993
KAPS-2 Kakrapar, Gujarat PHWR 220 01-Sep-1995
KAIGA-1 Kaiga, Karnataka PHWR 220 16-Nov-2000
KAIGA-2 Kaiga, Karnataka PHWR 220 16-Mar-2000
KAIGA-3 Kaiga, Karnataka PHWR 220 06-May-2007
RAPS-3 Rawatbhata, Rajasthan PHWR 220 01-Jun-2000
RAPS-4 Rawatbhata, Rajasthan PHWR 220 23-Dec-2000
Total 4120

Nuclear Power plants under construction

Project Capacity MWe Scheduled Commercial Operation
Kaiga- 4 1 X 220 U4 – Sep 07
KK – 1 & 2 2 X 1000 U1 – Dec 07
U2 – Dec 08
RAPP – 5 & 6 2 X 220 U5 – Aug 07
U6 – Feb 08
MAPS 1 x 500 MAR 2011

++++++++++++

தகவல்கள்:

1. The Economics of Nuclear Power, Briefing Paper:8 [March 2004]

2. Built-in Safety Systems in a Nuclear Power Plant

3. World Nuclear Association, US Nuclear Power Industry [August 2004]

4. Inaugural Address By Dr. Abdul Kalam, President of India at the Indian Nuclear Society, Kalpakkam [Dec 17, 2003]

5. Indian Nuclear Power Programme (PHWR) NPCIL (DAE) Report [2003]

6. Frequently Asked Questions about Nuclear Energy By: John McCarthy.

7. NEI Nuclear Facts, Nuclear Power Plants http://www.nei.org/doc.asp ? [April 1, 2004]

8. Nuclear The Clean Air Energy, Environmental Preservation

9. Benefits of Nuclear Energy, Reliable Economic Energy, Safety & Security, Nuclear Waste Disposal

10 Nuclear Power Generation in USA

11 India ‘s Nuclear Power Capacity Set for a Leap -The Times of India

12 Power Revolution in Bharat: A Blue-print for Action

13 Statement by Dr. Anil Kakodkar, Chairman Atomic Energy Commission, India at the 45th Conference of International Atomic Energy Agency, Vienna [September 19, 2001]

14 Kudankulam to have 4 more Reactors -The Hindu Business Line [December 6, 2003]

15. The Future of Nuclear Energy -A Fuel-importing Developing Country Perspective (India) By: Sudha Mahalingam.

16. http://www-pub.iaea.org/MTCD/publications/PDF/cnpp2007/countryprofiles/India/India2006.htm (Indian Nuclear Program, IAEA Report)

17. http://www.barc.ernet.in/rcaindia/4_5.html  (DAE Success Story)

18. http://www.dae.gov.in/publ/doc11/page%202.htm (Nuclear Power Highlights)

**************

jayabarat@tnt21.com [S. Jayabarathan]

பாரதத்தில் பேரழிவுப் போராயுதம் படைத்த விஞ்ஞானி ராஜா ராமண்ணா

Cover Image Raja Ramanna(1925-2004)


சி. ஜெயபாரதன், B.E.(Hons),P.Eng (Nuclear), Canada

பேரழிவுப் போராயுதம்
உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து
விழுதுகள் அற்றுப் போக,
விதைகளும் பழுதாக
ஹிரோஷிமா நகரைத் தாக்கி
நரக மாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
நாச மாக்கப் பட்டது !
புத்தர் பிறந்த நாட்டிலே
புனிதர் காந்தி வீட்டிலே
மனித நேயம்
வரண்டு போன
வல்லரசுகள் பின்னே சென்று
பாரத அன்னைக்குப்
பேரழிவுப்
போரா யுதத்தை
ஆரமாய்
அணிவிக்க லாமா ?

Fig 1 Albert Einstein

உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான்!

கிருஷ்ண பரமாத்மா (பகவத் கீதை)

“விஞ்ஞானமும், பொறியியல்துறை மட்டுமே உலக நாடுகள் செல்வம் கொழித்து முன்னேற ஆக்கவினை செய்துள்ளன!  அதுபோல் இந்தியாவும் விஞ்ஞானம், பொறித்துறை இவற்றை விருத்தி செய்தே செல்வீக நாடாக முன்னேற வேண்டும் !”

ஜவஹர்லால் நேரு.

“இப்போது நிகழ்ந்தது போல் (1945 இரண்டாம் உலகப் போர்) நீண்ட காலம் உலக நாடுகள் போரிடுமே யானால், ஒவ்வொரு தேசமும் தன்னைக் காத்துக் கொள்ளவே நவீன விஞ்ஞான ஆயுதங்களைப் படைக்கவோ அன்றிப் பயன்படுத்தவோ செய்யும் !  இந்தியா தனது விஞ்ஞான ஆராய்ச்சிகளை ஆரம்பித்து விருத்தி செய்ய முற்படும் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயம் இல்லை !  அணுசக்தியை இந்திய விஞ்ஞானிகள் ஆக்க வினைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.  ஆனால் இந்தியப் பாதுகாப்புக்குப் பங்கம் நேரும்படி, அது பயமுறுத்தப் பட்டால், தன்னிடம் இருக்கும் எல்லா விதமான ஆயுதங்களையும் இந்தியா தயங்காமல் பயன்படுத்தி எதிர்த்துப் போராடும் !”

ஜவஹர்லால் நேரு.

“அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்.”

டாக்டர் ஹோமி ஜெ. பாபா (அணுசக்திப் பேரவை முதல் அதிபர்) (1964)

“டாக்டர் ராமண்ணா மெய்யாகச் சொன்னால் எனது குரு. அவருக்கு மிகவும் நான் கடமைப் பட்டவன். இந்தியாவின் உன்னத விஞ்ஞான மேதைகளில் அவர் ஒருவர்.”

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம்.

“ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம் !”

ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

Fig 1A Two Great Architects of Indiaபோதி சத்துவ புத்தரும், அகிம்சா நெறி வகுத்த மகாத்மா காந்தியும் அவதரித்த நாட்டிலே அணு ஆயுதம் உதிக்கும் என்று உலக மாந்தர் எவரும் எதிர்பார்க்க வில்லை ! அணு ஆயுதப் பந்தயத்தில் முன்னடி வைத்து வல்லரசுகளின் பின்னே செல்லும் பாரதத்தை இப்போது யாராலும் நிறுத்திக் கட்டுப்படுத்த முடியவில்லை ! விஞ்ஞானிகளில் அமைதி மயவாதிகள் ஒருபுறம் அணு ஆயுதப் பெருக்கத்தை உலகில் நிறுத்த முற்படுகையில், அழிவு மயவாதிகள் மறுபுறம் இரகசியமாய் அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டு வருகிறார்கள் !

கட்டுரை ஆசிரியர்.

அணு ஆயுத யுகத்திற்கு அடிகோலிய ஐன்ஸ்டைன்

இரண்டாம் உலகப் போரை விரைவில் நிறுத்த அணு ஆயுதத்தை உருவாக்கும்படி 1939 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஃபிராங்கலின் ரூஸவெல்ட்டுக்கு ஆலோசனைக் கடிதம் எழுதி அனுப்பியவர், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்!  அதுமுதல் அணு ஆயுத அரக்கன் உலகில் தோன்றி அவன் வமிசாவளி பெருகிக் கொண்டே போகிறது!  அணுசக்தி யுகத்தைத் துவக்கி, உலக சரித்திரத்தில் ஒப்பிலாப் பெயர் பெற்ற ஐன்ஸ்டைன் அணுகுண்டுகளின் பெருக்கத்தையும், அணு ஆயுத வெடிப்புச் சோதனைகளின் அபாயத்தையும், தடுக்க முடியாமல் கடைசிக் காலத்தில் மனப் போராட்டத்தில் தவித்தார்.

ஐன்ஸ்டைன் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன் 1955 ஏப்ரல் 16 இல் வேதாந்த மேதை, பெர்டிரண்டு ரஸ்ஸல் (Bertrand Russell) தயாரித்த “அணு ஆயுதப் போர்த் தடுப்பு” விண்ணப்பத்தில் ஒன்பது விஞ்ஞானிகளுடன் தானும் கையெழுத்திட்டு ஒன்றாகக் கூக்குரல் எழுப்பினார்!  “எதிர்கால உலக யுத்தத்தில் இன்னும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் பட்டால், மனித இனம் தொடர்ந்து வாழ முடியாதபடி, பல்லாண்டு காலம் அபாயம் விளையப் போகின்றது!  அதை அகில நாடுகள் உணர வேண்டும் !  அபாயங்களை அனைவரும் அறியப் பிறகு உலக நாடுகள் வெளிப்படுத்த வேண்டும்!  உடனே அப்பணியைச் செய்யுமாறு, நாங்கள் உலக அரசுகளை வலியுறுத்தி விரைவு படுத்துகிறோம்.  நாடுகள் இடையே எழும் தீராச் சச்சரவுகள் போரிடுவதால் ஒருபோதும் தீரப் போவதில்லை !  உலக நாடுகள் தமக்குள் இருக்கும் பிரச்சனைகளை நீக்கிக் கொள்ள, வேறு சாமாதான வழிகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.

Fig 1B Einstein & Nehru

இவ்வாறு விஞ்ஞானிகளில் அமைதி மயவாதிகள் ஒருபுறம் அணு ஆயுதங்களை நிறுத்தம் செய்ய முற்படுகையில், அழிவு மயவாதிகள் மறுபுறம் ரகசியமாய் அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டு வந்தார்கள் !

பாரதத்தில் அணுசக்தி ஆராய்ச்சியின் ஆரம்ப காலம்

1945 ஆகஸ்டு 6 & 9 தேதிகளில் ஜப்பானில் அணுகுண்டுகள் போடப் பட்டு ஏறக் குறைய ஓராண்டுக்குப் பின்பு, 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு ஓராண்டுக்கு முன்பு, 1946 ஜூன் 26 ஆம் தேதி மும்பைப் பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய நேரு, “இப்போது நிகழ்ந்தது போல் நீண்ட காலம் உலக நாடுகள் போரிடுமே யானால், ஒவ்வொரு தேசமும் தன்னைக் காத்துக் கொள்ளவே நவீன விஞ்ஞான ஆயுதங்களைப் படைக்கவோ அன்றிப் பயன்படுத்தவோ செய்யும்!  இந்தியா தனது விஞ்ஞான ஆராய்ச்சிகளை ஆரம்பித்து விருத்தி செய்ய முற்படும் என்பதில் எனக்குச் சிறிதும் ஐயம் இல்லை !  அணுசக்தியை இந்திய விஞ்ஞானிகள் ஆக்க வினைகளுக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன்.  ஆனால் இந்தியப் பாதுகாப்புக்குப் பங்கம் நேரும்படி, அது பயமுறுத்தப் பட்டால், தன்னிடம் இருக்கும் எல்லா விதமான ஆயுதங்களையும் இந்தியா தயங்காமல் பயன்படுத்தி எதிர்த்துப் போராடும்!” என்று இந்தியாவின் அணு ஆயுதக் கொள்கையை முதன் முதலில் வெளிப்படையாகப் பறை சாற்றினார்.

ஐரோப்பிய அமெரிக்க விஞ்ஞானிகள் இரண்டாம் உலகப் போர் நிகழும் போது, அமெரிக்காவில் அணு ஆயுத ஆய்வுகள் நடத்தி வரும் சமயத்தில், 1944 ஆம் ஆண்டு மார்ச் 12 இல் டாக்டர் ஹோமி பாபா இந்திய அணுவியல் ஆராய்ச்சிக்கு நிதி உதவி அளிக்குமாறு, ஸர் டொராப்ஜி டாடா பீடத்திற்கு [Sir Dorabji Tata Trust] எழுதினார்.  1945 இல் டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கூடம் (Tata Institute of Fundamental Research, TIFR) பம்பாயில் டாடா தொழிற்துறைப் பேரரசால் (Tata Industrial Empire) நிறுவனம் ஆகி டாக்டர் பாபா அதன் முதல் ஆணையாளர் ஆனார்.  சுதந்திர இந்தியாவில் பண்டித நேரு 1948 இல் அணுசக்திச் சட்டத்தை (Atomic Energy Act) அமுலாக்கி, இந்திய அணுசக்திப் பேரவை (Atomic Energy Commission) நிர்மாணிக்கப் பட்டது.  டாக்டர் ஹோமி பாபா அணுசக்திப் பேரவையின் முதல் அதிபர் ஆக்கப் பட்டார்.

Fig 1C CIRUS Research Reactor

அணு ஆயுதச் சோதனையில் புத்தர் புன்னகை செய்வாரா ?

“உலகத்தைத் தூள் தூளாகத் தகர்க்கும் மரண உருவெடுத்து விட்டேன் நான்!” என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையில் பார்த்திபனுக்கு ஓதிய ஒரு வேத மொழியை, நியூ மெக்ஸிகோ டிரினிடி (Trinity) பாலை வனத்தில் சரித்திரப் புகழ் பெற்ற முதல் சோதனை அணுகுண்டை 1945 ஜூலை 16 ஆம் தேதி வெடித்த போது, ராபர்ட் ஓப்பன்ஹைமர் (Robert Oppenheimer) உதாரணம் காட்டினார் !  அவர்தான் “ஓப்பி” (Oppie) என்று அழைக்கப்பட்டு அணுகுண்டு ஆக்கத் திட்டதுக்குத் தலைமை வகித்த ஒப்பற்ற விஞ்ஞான மேதை !  1964 அக்டோபர் 21 இல் சைனாவின் முதல் அணு ஆயுதச் சோதனைக்குப் பின்பு, டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது (சைனா) போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்” என்று வெளிப்படையாகவே அறிவித்தார்!

1974 மே மாதம் 18 ஆம் தேதி இந்தியாவில் மாபெரும் ரயில்வே வேலை நிறுத்தம் உச்ச நிலையில் நாட்டை அமர்க்களப் படுத்திக் கொண்டிருந்த போது, விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா இந்தியப் பிரதம மந்திரி இந்திரா காந்திக்கு, “புத்தர் புன்னகை செய்கிறார்” (The Buddha is Smiling) என்னும் குறிமொழியில் (Code Language) ஓர் அவசரத் தந்தியை அனுப்பினார்!  அதன் உட்பொருள், பாரதம் தனது முதல் அணு ஆயுதச் சோதனையை ராஜஸ்தானின் பொக்ரான் பாலை வனத்தில் அடித்தள வெடிப்பாகச் செய்து வெற்றிகரமாக முடித்துள்ளது !  அந்த இனிய சொற்றொடர் அதன் பின் வந்த பல வெளியீடுகளின் தலைப்பாக எழுதப் பட்டு புகழ் பெற்றது !  இந்திய முதல் அணுகுண்டு சுமார் 8-12 கிலோ டன் டியென்டி (TNT) வெடிப்பு ஆற்றல் பெற்று, ஜப்பான் ஹிரோஷிமாவில் போட்ட முதல் அணு குண்டை விடச் சிறிதளவு ஆற்றல் குன்றியதாக இருந்தது!  அந்த அணு ஆயுதச் சோதனையை வெறும் “சாமாதான அணுகுண்டு வெடிப்பு” (Peaceful Nuclear Explosion) என்று இந்தியா பறை சாற்றினாலும், உலகில் எந்த நாடும் அதை ஒப்புக்கொள்ள வில்லை ! அழிவு சக்தியின் தீவிரத்தைச் சோதிக்கப் பயன்படும் அணுகுண்டு எங்கே, எப்படி அமைதியைப் பரப்பிட முடியும் ?

Fig 1D Bombs Dropped on Japan

இந்திய அணுகுண்டை ஆக்கிய அணுக்கரு ஆய்வுக் குழுவின் தலைமை விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணா !  இரண்டாம் உலகப் போரின் சமயம் அணு ஆயுத மன்ஹாட்டன் திட்டத்தின் (Manhattan Project) விஞ்ஞான அதிபதியாய்ப் பணிசெய்து முதல் அணுகுண்டு படைத்த ராபர்ட் ஓப்பன்ஹைமர் (Robert Oppenheimer), ரஷ்யாவின் முதல் அணு ஆயுதங்களைத் தோற்றுவித்த பீட்டர் கபிட்ஸா [Peter Kapitsa] ஆகியோர் வரிசையில், பாரதத்தின் அணுவியல் விஞ்ஞானி ராஜா ராமண்ணாவையும் அணு ஆயுதப் படைப்பு மேதையாய் நிற்க வைக்கலாம் !

இந்தியா பன்முகக் கலாச்சார நாடாக, பல்வேறு மதச் சார்பான தேசமாக, எண்ணற்ற இனங்களின் சங்கமமாக இருந்து, வகுப்புக் கலவரங்கள் அடிக்கடி எழும்போது கட்டுப்படுத்த இயலாத கூட்டரசினர் கைவசம் இருப்பதாலும், பாகிஸ்தான், சைனா போன்ற பகை நாடுகளுக்கு இடையே பாரதம் நெருக்கப் படுவதாலும் என்றாவது ஒருநாள், யாராவது ஒரு பிரதமர், எந்த நாட்டின் மீதாவது அணு ஆயுதத்தை வீசிக் கதிரியக்கப் பொழிவுகளை உலகில் பரப்பப் போகும் பயங்கரக் காலம் வரலாம் ! அந்த காட்டுப் பாதைக்குப் பாரதத்தில் சிவப்புக் கம்பளம் விரித்த விஞ்ஞானி, டாக்டர் ராஜா ராமண்ணா என்னும் ஓர் வன்மொழி வாசகம் கால வெள்ளம் அழிக்க முடியாதபடி, உலக வரலாற்றில் கல்வெட்டு போல் எழுதப்பட்டு விட்டது !

ராஜா ராமண்ணாவின் வாழ்க்கை வரலாறு

ராஜா ராமண்ணா 1925 ஜனவரி 28 ஆம் தேதி கர்நாடகா மாநிலத்தில் தும்கூரில் (Tumkur) பிறந்தார்.  தந்தையார் பெயர் பி. ராமண்ணா. தாயார் ருக்மணியம்மா. சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் விஞ்ஞானப் பட்டம் பெற்ற பின், இங்கிலாந்து சென்று லண்டன் பல்கலைக் கழகத்தில் பௌதிக விஞ்ஞானத்தை எடுத்து, அணுக்கரு பௌதிகம் (Nuclear Physics), அணுஉலைப் பௌதிகம் (Reactor Physics), டிசைன், ஈரோப்பியன் இசை, வேதாந்தம் ஆகியவற்றைச் சிறப்புப் பாடங்களாகப் பயின்றார்.  இறுதியில் லண்டன் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டத்தையும் (Ph.D.), ராஜீய இசைப் பள்ளியின் L.R.S.M டிபோளாமாவையும் (Licentiate in Royal School of Music) பெற்றுக் கொண்டு இந்தியா வந்து சேர்ந்தார்.  அவரது மனைவியார் பெயர் மாலதி ராமண்ணா.  அவருக்கு ஒரு மகனும், இரு புதல்விகளும் உள்ளனர்.  ராஜா ராமண்ணாவுக்கு இசை, நாடகம், வேதாந்தம், இலக்கியம், அணுக்கரு & துகள் பௌதிகம் (சோதனை & கோட்பாடு) [Nuclear & Particle Physics (Experimental & Theoretical)] ஆகியவற்றில் வேட்கை மிகுதி.

Fig 2 Cerenkov Radiation

ராமண்ணா பாரத அணுசக்தித் துறையில் பல பெரும் பதவிகளில் பணியாற்றியவர்.  முக்கியமாக மொம்பை, பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையத்தின் ஆணையாளராக (Director, Bhabha Atomic Research Centre, Mumbai) எட்டாண்டுகள் (1972-1978, 1981-1983) பணியாற்றினார். முதல் ஆறாண்டுகளை ராமண்ணாவின் அணுக்கரு விஞ்ஞானச் சாதனைகளின் பொற்காலம் என்று கூறலாம்!  அப்போதுதான் குறிமொழிப் பெயர் பூண்ட “புன்னகை புத்தர்” (Code Name, Smiling Buddha) என்னும் முதல் அணுகுண்டு, ரகசிய அணு ஆயுதத் திட்டம் அவரது நேரடிக் கண்காணிப்பில் உருவானது !  1974 மே மாதம் 18 ஆம் தேதி ராஜஸ்தான் பொக்ரான் பாலை வனத்தில் அடித்தள வெடிப்பை இந்தியா நிகழ்த்தி உலக நாடுகளை பேரதிர்ச்சியிலும், பெரு வியப்பிலும் ஆழ்த்தியது.  டாக்டர் ஹோமி ஜெ. பாபா, டாக்டர் விக்ரம் சாராபாய், டாக்டர் ஹோமி என். சேத்னா ஆகியோருக்குப் பின்பு 1983 இல் அதிபராக டாக்டர் ராஜா ராமண்ணா அணுசக்திப் பேரவைக்குத் [Chairman, Atomic Energy Commission] தேர்ந்தெடுக்கப் பட்டு நான்கு ஆண்டுகள் பணி யாற்றினார்.

பெங்களூர் இந்திய விஞ்ஞானக் கழகத்தின் (Indian Institute of Science), ஆணைக் குழுத் தலைவர் ஆகவும், ஜவஹர்லால் நேரு முற்போக்கு விஞ்ஞான ஆய்வு மையம் (Jawaharlal Nehru Centre for Advanced Scientific Research), இந்திய விஞ்ஞானப் பள்ளித் துறை (Indian Academy of Sciences 1977), மற்றும் இந்தியப் பொறியியல் துறைக்கூடம் (Indian Institute of Technology, Mumbai 1972) ஆகியவற்றின் அதிபராகவும் ராமண்ணா பணியாற்றினார். 1990 இல் பாரத அரசாங்கத்தில் பாதுகாப்புத் துறை மாநில மந்திரி (Minister of State for Defence) 1997 முதல் ராஜா ராமண்ணா அரசியல் மேல் சபையில் (Rajya Sabha) அங்கத்தினாராக நியமிக்கப் பட்டார்.

இந்தியாவிலும், வெளிநாட்டிலும் ராமண்ணாவின் பல விஞ்ஞான வெளியீடுகள் பதிவாகி யுள்ளன. அத்துடன் அவரது சுயசரிதையான, “யாத்திரை ஆண்டுகள்” (Years of Pilgrimage 1991), மேற்கிசை, ராகத்தின் இசை அமைப்பு (The Structure of Music in Raga & Western Systems 1993) என்னும் இரண்டு நூல்களை எழுதியுள்ளார்.

Fig 3 Thorium Based Reactor

டாக்டர் ராஜா ராமண்ணா பல பரிசுகளும், கௌரவ மதிப்புகளும் பெற்றவர்.  பல பல்கலைக் கழகங்கள் ராமண்ணாவுக்கு D.Sc. (Doctor of Science) பட்டம் அளித்துள்ளன.  சாந்தி ஸ¤வரூப் பட்நாகர் நினைவுப் பரிசு (1963), பாரத அரசின் பத்ம விபூஷண் (1975), நேரு பொறியியல், பொறித்துறைப் பரிசு (Nehru Award for Engineering & Technology 1983),  விஷ்வ பாரதி பல்கலைக் கழகத்தின் கௌரவ இலக்கிய டாக்டர் பட்டம் (1993) போன்றவை சில குறிப்பிடத் தக்கவை.  வியன்னாவில் அகில நாடுகளின் அணுசக்திப் பேரவையின் (International Atomic Energy Agency 1986) அதிபராகச் சில காலம் பணியாற்றி யுள்ளார்.  30 ஆவது அகில நாடுகளின் அணுசக்திப் பேரவைப் (IAEA) பொதுக் கூட்டத்திற்குத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார்.

இந்திய அணு ஆயுதப் பிதாவுமான டாக்டர் ராஜா ராமண்ணா வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 24, 2004) அதிகாலையில் மொம்பை நகர மருத்துவ மனையில் காலமானர்.  அவருக்கு வயது 79. உட்புறக் குடல் இரத்தக் கசிவில் உடல்நிலை மிகவும் சீர்கேடாகி மரணம் அடைந்ததாக, மருத்துவ மனையின் அதிபர் டாக்டர் பி.கே. கோயல் நிருபர்களிடம் அறிவித்தார். டாக்டர் ராமண்ணாவுக்கு கடந்த 15 ஆண்டுகளாகவே இருதயப் பிரச்சனைகள் இருந்து, ஒருமுறை ஆஞ்சியோ பிலாஸ்டி கடப்பு அறுவைச் சிகிட்சையும் செய்யப்பட்டதாக அறியப்படுகிறது. பாம்பே வொர்லியில் வசிக்கும் மகனைக் காண வந்தவர், சென்ற திங்கட் கிழமை யன்று சற்று தலை சுற்றுவதாகவும், வேர்ப்பதாகவும் குறிப்பிடவே, மொம்பை நகர மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டதாக, அவரது மருமகள் சீமா ராமண்ணா கூறினார். வியாழக் கிழமை மாலை 7:30 மணிக்கே அவரது முடிவு நெருங்கி விட்டாலும், மருத்துவ நியமப்படி உயிருடன் இருந்ததால் சுவாசப் பாதுகாப்புச் சாதனங்களுடன் அவர் கண்காணிக்கப் பட்டார். செய்தியை ஒளரங்காபாத்தில் கேள்விப்பட்டு ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் டாக்டர் ராமண்ணாவைக் காண மருத்துவ மனைக்கு வந்ததாக, டாக்டர் கோயல் அறிவித்தார். வெள்ளிக்கிழமை அதிகாலை 3:15 ராமண்ணாவின் ஆத்மா பிரிந்தது.

மொம்பை சிவாஜிப் பூங்கா மின்சார எரிப்பகத்தில் டாக்டர் ராமண்ணாவின் உடம்பு வெள்ளிக்கிழமை மாலை 3:45 மணிக்குத் தகனம் செய்யப்பட்டு, ஈமச் சடங்கள் நடத்தப் பட்டன. அதில் கலந்து கொண்டவர், முந்தைய அணுசக்திப் பேரவை அதிபதி ஹோமி சேத்னா, டாக்டர் பி.கே. ஐயங்கார், தற்போதைய அதிபதி டாக்டர் அனில் ககோட்கர், இந்திய அணுமின்சக்தி அதிபர், எஸ். கே. ஜெயின், கனநீர் ஆணைக்குழு அதிபர், எஸ். சி. ஹயர்மத் ஆகியோர். “டாக்டர் ராமண்ணா மெய்யாகச் சொன்னால் எனது குரு. அவருக்கு மிகவும் நான் கடமைப் பட்டிருக்கிறேன். இந்தியாவின் உன்னத விஞ்ஞான மேதைகளில் அவர் ஒருவர்” என்று மருத்துவ மனையில் டாக்டர் கோயலிடம் கூறினார் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம். ‘அணுக்கரு விஞ்ஞானத்தில் செய்முறைத் திறமிக்க நிபுணர் என்றும், இந்தியாவை உலக அணுக்கரு விஞ்ஞான அரங்கில் அமரச் செய்தவர் டாக்டர் ராமண்ணா’ என்றும் பெருமைப் படுத்தினார் பி.கே. ஐயங்கார்.

Fig 4 Dhruva Research Reactor

இந்திய அணு ஆயுதங்களின் அடித்தள வெடிப்பு ஆராய்ச்சி

1957 இல் அணு ஆயுதப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வியன்னாவில் அகில நாட்டு அணுசக்திப் பேரவை (International Atomic Energy Agency, IAEA) அமைக்கப் பட்டு, உலக நாடுகளின் ஆராய்ச்சி அணு உலைகள், அணுசக்தி நிலையங்கள் உற்பத்தி செய்யும் அணுப்பிளவு எருக்களின் (Fissile Material) பெருக்கத்தைக் கண்காணித்து வருகிறது !  1974 மே மாதம் 18 ஆம் தேதி பாரதத்தின் “புன்னகை புத்தர்” என்னும் குறிச்சொல் பெயரில் முதல் அணுப்பிளவுக் குண்டு (Fission Atomic Bomb) ராஜஸ்தான் பொக்ரான் பாலை நிலத்தின் அடித்தளத்தில் வெடிக்கப் பட்டது !

1998 புத்த மகான் பிறந்த நாளான மே 11 இல், ராஜஸ்தான் பொக்ரான் பாலை வனத்தில் இந்தியா மூன்று அணு ஆயுத வெடிப்புகளை அடித்தளத்தில் உண்டாக்கி ஆராய்ச்சிகள் செய்தது ! இரண்டு நாட்கள் கழித்து மே 13 இல் மறுபடியும் இரண்டு அடித்தள அணுகுண்டு வெடிப்புகளை ஏற்படுத்தியது ! பிரதம மந்திரி அடல் பெஹாரி பாஜ்பாயி செய்திக் கூட்டத்தார் முன்பு, மூன்று வெடிப்பில் ஒன்று 12 கிலோ டன் பிளவுச் சாதனம் (Fission Device), ஒன்று 43 கிலோ டன் வெப்ப அணுக்கருச் சாதனம் (Thermonuclear Device), மூன்றாம் சாதனம் 1 கிலோ டன்னுக்கும் சிறியது! இரண்டாம் நாள் வெடித்த சாதனங்கள் ஒரு கிலோ டன்னுக்குச் சிறியவை! உலகின் பூவதிர்ச்சி உளவிகள் (Seismic Probes) பல இரண்டாம் நாள் வெடிப்புகளை நுகர முடிய வில்லை ! இந்தியா ஒரு சிறு ஹைடிரஜன் குண்டைச் சோதித்துள்ளது என்பதைப் பல நாடுகள் அப்போது நம்பவில்லை !  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே கூறியது, ‘ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம்! ‘

1998 மே மாதம் இரண்டாம் தடவை அடித்தள வெடிப்புச் செய்த போது பிரதமர் பாஜ்பாயி வெளிப்படையாகப் பறை சாற்றினார்: ‘இந்தியா இப்போது ஓர் அணு ஆயுத நாடு (Nuclear Weapon State) ! உலக மானிட ஜனத்தொகையில் ஆறில் ஒரு பங்கான பாரத மக்களின் உரிமை ஆயுதங்கள் அவை! அணு ஆயுதங்கள் இந்தியச் சுயப் பாதுகாப்புக்கு (Self Defence) மட்டும் பயன்படும் ஆயுதங்களே தவிர முன்னடியாக யாரையும் தாக்குவதற்கு முதலில் பயன்படுத்தப்பட மாட்டா! ‘ அவ்விதம் அழுத்தமாகப் பேசி பாகிஸ்தான், சைனா போன்ற பக்கத்து நாடுகளைப் பயமுறுத்தப் பாரதம் அணு ஆயுதங்களைக் காட்சிக் கண்ணாடி மாளிகையில் வைத்திருக்கிறது!

Fig 5 Pokran First Test

இந்தியா அணு ஆயுத ஆக்கத்தில் இறங்கக் காரணங்கள் என்ன?

ஐந்து காரணங்களைக் கூறலாம்!  முதல் காரணம், 1962 இல் சைனா இந்தியாவுடன் போரிட்டு வடகிழக்குப் பகுதியில் சில பரப்பு மலைப் பிரதேசங்களைப் பிடுங்கிக் கொண்டு போய் விட்டது!  இரண்டாவது, பிரதமர் நேரு 1964 மே 27 இல் காலமானது !  நேரு ஆக்க வினைகளுக்கு அணுசக்தி வளர வாய்ப்புக்களை ஏற்படுத்தினாலும், பாரதம் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடுவதை அறவே எதிர்த்தார்.  மூன்றாவது காரணம், சைரஸ் அணு ஆராய்ச்சி உலை (CIRUS Research Reactor) 1960 முதல் இயங்க ஆரம்பித்து, அணு ஆயுத எரு புளுடோனியம் உண்டானது !  அடுத்து பிளவு விளைவுகளில் புளுடோனியத்தைப் (Plutonium in Fission Products) பிரித்தெடுக்கும் தொழிற்சாலை (Nuclear Spent Fuel Reprocessing Plant) ஓட ஆரம்பித்து, அணுகுண்டுக்கு வேண்டிய புளுடோனியம் திரளாகச் சேகரித்தது !  நான்காவது காரணம், சைனா 1964 அக்டோபர் 21 இல் தனது முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனையைச் செய்து, அண்டை நாடான இந்தியாவின் நெஞ்சைத் துடிக்க வைத்தது !  ஐந்தாவது காரணம், அப்போது டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால் இந்தியாவும் 18 மாதங்களில் இது போன்று அணு ஆயுத சோதனை செய்ய முடியும்” என்று வெளிப்படையாகவே அறிவித்தது !

ஐந்து காரணங்களிலும் முக்கியமானது, ஐந்தாவது காரணம் !  டாக்டர் ஹோமி ஜெ. பாபா, “அரசாங்கம் ஆணையிட்டால், இந்தியாவும் 18 மாதங்களில் இது போன்று அணு ஆயுத சோதனைச் செய்ய முடியும்” என்று அரசாங்கத்தைத் தூண்டியது !  நேருவுக்குப் பின் வந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி இதை அவ்வளவாக வரவேற்க வில்லை.  1966 ஜனவரியில் அடுத்துப் பிரதமராய் வந்த இந்திரா காந்தி காலத்தில் ஹோமி பாபாவின் எண்ணம் தொடரப் பட்டிருக்கலாம்!  அதே சமயம் டாக்டர் ஹோமி பாபா அகால மரணம் அடைந்து, அடுத்து டாக்டர் விக்ரம் சாராபாய் அணுசக்தித் துறையின் அதிபர் ஆனார்.  சாராபாயும் அணு ஆயுத ஆக்கத்தை ஆதரிக்க வில்லை !  இறுதியில் அவரது மர்ம மரணத்திற்குப் (1971 டிசம்பர் 30) பின், ஹோமி சேத்னா அதிபரானார்.  இந்திரா காந்தி, ஹோமி சேத்னா கண்காணிப்பின் கீழ், திறமை மிக்க அணுக்கரு பௌதிக (Nuclear Physicist) விஞ்ஞானி டாக்டர் ராஜா ராமண்ணாவின் நேரடிப் படைப்பில் இந்திய அணு ஆயுதங்கள் உருவாகின!

அணுகுண்டு ஆக்குவதற்கு வேண்டிய புளுடோனியம், வேக நியூட்ரான் இயக்க (Fast Neutron Reactions) விளக்கங்களை அறிந்து கொள்வதற்குப் பூர்ணிமா-I (Purnima-I) ஆராய்ச்சி அணு உலை நிறுவப் பட்டு 1972 மே மாதம் 18 இல் இயங்க ஆரம்பித்தது !  இந்த அணு உலையின் எரு 43 பவுண்டு புளுடோனியம் !  வெளிவரும் வெப்ப சக்தி 1 watt.  ஸைரஸ் ஆராய்ச்சி அணு உலை [CIRUS] 40 mw & துருவா ஆய்வு அணு உலை [Duruva] 100 mw வெப்ப சக்தியும் உண்டாக்கி அணு ஆயுத எரு புளுடோனியத்தைத் தொடர்ந்து உற்பத்தி செய்கின்றன !  துருவா 1985 ஆகஸ்டு 8 இல் இயங்கத் துவங்கியது !  ஆய்வு அணு உலை 1 mwd (One Mega Watt in one Day] வெப்ப சக்தி ஈன்று இயங்கினால், பிளவு விளைவுகளில் (Fission Products) 1 கிராம் புளுடோனியம் சேரும் !  100 மெகாவாட் ஆற்றல் உடைய துருவ அணு உலை ஒரு நாள் இயங்கினால் (100 mwd), 100 கிராம் புளுடோனியம் கிடைக்கும் !

Fig 6 Pokran Test Site

அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லும் ஏவுகணைத் திட்டம்

1983 இல் ஒருங்கிணைந்த கட்டளை ஏவுகணை வளர்ச்சித் திட்டம் (Integrated Guided Missile Development Program) உருவாகி, அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் கட்டளை ஏவுகணைகள் விருத்தி செய்யப் பட்டன !  அத்திட்டப்படி, ஐந்து வித ஏவுகணைகள் இந்தியாவில் அமைக்கப் பட்டன!  சிறு தூர பிருதிவி (Short Range Prithvi), இடைத் தூர அக்னி (Intermediate Range Agni), தளத்திலிருந்து வானுக்குத் தாவும் ஆகாஷ் & திரிசூல் (Surface to Air Missiles, Akash & Trishul), கட்டளைப் பணியில் டாங்க்கைத் தாக்கும் நாகம் (The Guided Anti-Tank Nag).  முதல் ஏவுகணை பிருதிவி, அணு ஆயுத மாடல் குண்டைச் சுமந்து 1988 பிப்ரவரி 25 இல் ஏவப்பட்டு, சோதனை வெற்றி கரமாக முடிந்தது !

இந்திய ஏவுகணைத் திட்டத்தின் அமைப்பாளி (Architect of the Indian Missile Program) டாக்டர் அப்துல் கலாம் (2002 இல் இந்திய ஜனாதிபதி),  இந்தியப் பாதுகாப்பு, ஆய்வு வளர்ச்சி நிறுவகத்தின் (Indian Defence & Research Development Organization) தலைவர்.  அவர் கூறியது: “கட்டளை ஏவுகணை ஆயுத மயமாக்கல் (Weaponization) முழுமையாக முடிக்கப் பட்டது.  பிருதிவி, அக்னி ஆகிய ஏவுகணைகள் தூக்கிச் செல்ல இருக்கும் அணு ஆயுதப் போர்க் குண்டுகளின் (Nuclear Warheads) அளவு, எடை, தூண்டும் முறை, இயங்கும் ஒழுங்கு, அதிர்வுகள் (Performance, Vibrations) யாவும் சோதிக்கப் பட்டு விட்டன!”

1998 மே மாதம் பிரதமர் பாஜ்பாயி வெளிப்படையாகப் பறை சாற்றினார்: “இந்தியா இப்போது ஓர் அணு ஆயுத நாடு (Nuclear Weapon State) ! மனித இனத்தின் ஆறில் ஒரு பங்கான பாரத மக்களின் உரிமைக்  குரிய ஆயுதங்கள்!  இவை யாவும் சுயப் பாதுகாப்புக்கு (Self Defence) மட்டுமே பயன்படும் ஆயுதங்களே தவிர முன்னடியாக யாரையும் தாக்குவதற்குப் பயன்படுத்தப் பட மாட்டா !”

Indian Missile Launch

அணு ஆயுதச் சோதனைகளைப் பற்றி ராமண்ணாவின் கருத்துக்கள்

“பொக்ரான் பாலை வனத்தில் 1998 மே மாதம் பாரதம் இரண்டாம் தடவை செய்த, ஐந்து அடித்தள அணு ஆயுதச் சோதனைகள் இந்திய துணைக் கண்டத்தின் பொருளாதாரம், சூழ்வெளி, பாதுகாப்பு, அரசியல், பொறியல் துறை போன்றவற்றை, ஏன் வாழ்க்கையைப் பற்றிய நமது எண்ணத்தைக் கூட மிகவும் பாதித்துள்ளது !  பல நாடுகள் இதற்கு முன் பல தடவைச் சோதனைகள் செய்து, உலகப் பெரு நகரங்கள் யாவற்றையும் அழிக்க வல்ல பேரளவில் அணு ஆயுதங்களை சேமித்து வைத்துள்ளன !

இந்த ஐந்து சோதனைகளால் உலக வல்லரசுகள் அதிர்ச்சி அடைந்து, அவை இந்தியாவுக்கு தீவிர எச்சரிக்கை விடுத்து, பயமுறுத்தியும் இருக்கின்றன!  இந்தியா நீண்ட காலப் போராட்டத்திற்குப் பின்பு எழுந்து நிற்கும் தனிச் சுதந்திர நாடு.  இந்த நாள்வரை இந்தியா எந்த விதியையும் மீறியதும் இல்லை!  அகில நாட்டு உடன்படிக்கை எதையும் முறித்ததும் இல்லை!  உலக நாடுகள் தயாரித்த அணு ஆயுதப் பெருக்கத் தடுப்பு உடன்படிக்கை (Non-Proliferation Treaty NPT), அணு ஆயுதத் தகர்ப்பு (Nuclear Disarmament) ஆகியவற்றில் இந்தியாவுக்கு நம்பிக்கை இருக்கிறது.

இந்த உடன்படிக்கையைத் தயாரித்த நாடுகள்தான் தமக்குச் சாதகமாகத், தமக்குப் பாதுகாப்பாக அணு ஆயுதங்களைப் பெருக்கிக் கொண்டும், அவற்றைச் சோதித்துக் கொண்டும் அதன் விதி முறைகளை முறித்துள்ளன!  இந்தியா ஒரு நாடு மட்டுந்தான் அம்மாதிரிச் செயல்களை எதிர்த்து நிமிர்ந்து நிற்கிறது!

பழைய வரலாற்றை நினைவில் வைத்திருப்பவர்கள், இப்போது ஐக்கிய நாடுகளின் பேரவை (United Nations Organization) ஒரு பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருப்பதை நன்கு அறிவர்!  அதை ஐம்பெரும் வல்லரசுகள் ஆட்டி படைத்து, ஆக்கிரமித்துக் கைப்பிடிக்குள் வைத்துள்ளன!  நல்வினைகள் புரிந்துள்ள அகில நாடுகளின் அணுசக்திப் பேரவையும் (International Atomic Energy Agency) இப்போது உலக நாடுகளின் அணுஉலை எருக்கள் உளவுகளைச் (Fissile Material Inspections) செய்வதிலும், அணுப்பிளவு எருக்கள் (Fissile Material Safeguards) பாதுகாப்பிலும் சிரமப் பட்டு வருகிறது!”

Indian Rockets

உலக விஞ்ஞானிகளுக்கும், அரசுகளுக்கும் ஓர் வேண்டுகோள்!

1945 ஜூன் 11 ஆம் தேதி மன்ஹாட்டன் முதல் அணுகுண்டு திட்டத்தில் பணி செய்த நோபெல் பரிசு விஞ்ஞானி, ஜேம்ஸ் பிராங்க் (James Frank) தலைமையில் சிகாகோவின் பல விஞ்ஞானிகள் ஜப்பான் மீது போட விருக்கும் அணுகுண்டால் நேரப் போகும் கோர விளவுகளை முதலிலே தடுக்க முயற்சி செய்தனர்.  அணுகுண்டுக்குப் பதிலாக வேறு ஒரு குண்டைத் தயாரித்துப் போட, அந்த விஞ்ஞானிகள் அமெரிக்க யுத்தச் செயலாளருக்குக் (Secretary of War) கடிதம் எழுதினார்கள் !  இறுதியில் ஜப்பானில் அமெரிக்கா என்ன செய்தது என்று நாமெல்லாம் அறிவோம்!

1945 ஜூலை 17 ஆம் தேதி டாக்டர் லியோ ஸிலார்டு (Dr. Leo Szilard) தலைமையில் 63 விஞ்ஞானிகள் கையெழுத்திட்ட ஓர் விண்ணப்பத்தை அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் (President Truman) அவர்களுக்கு அனுப்பினர்.  ஜப்பான் மீது அமெரிக்கப் போர்ப்படை போட விருக்கும் அணு ஆயுதங்களால் விளையப் போகும் கதிரியக்கப் பொழிவுகளின் கோர அழிவுகள் போர் ஒழுக்கத்திற்கு முற்றிலும் எதிரானவை என்று அழுத்தமாய் எழுதி யிருந்தார்கள் !  லியோ ஸிலார்டுதான் முதன் முதலில் அணுகுண்டு ஆக்க, அமெரிக்க ஜனாதிபதிக்குக் கடிதம் எழுத, ஐன்ஸ்டைனைத் தூண்டியவர் !

1955 ஆகஸ்டு 25 ஆம் தேதி பிரிட்டிஷ் விஞ்ஞானி, டாக்டர் ஜெ. பிரனோஸ்கி (Dr. J. Bronowski) அகில நாடுகளின் அமைதி நிலைநாட்டுப் பேரவையில் பேசும் போது, “எனது ஆணித்தரமான கொள்கை இது!  ஒவ்வொரு விஞ்ஞானியும் தனது தனித்துவ மனச்சாட்சியைப் பின்பற்ற வேண்டும். அது அவரது கடமை.  இதில் அரசாங்கத்தின் கடமை என்ன?  ஒரு விஞ்ஞானி தன் மனச்சாட்சிக்கு எதிராகப் பணி செய்ய மறுத்தால், அவரை அரசாங்கம் தண்டிக்கக் கூடாது!  விஞ்ஞானிகள் தமக்கு விருப்பம் இல்லா ஆராய்ச்சில் இறங்க மாட்டோம் என்று மறுத்தால் விட்டுவிடும் ஒரு சூழ்நிலையை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் !” என்று பறை சாற்றினார்.

Indian Missile Warhead

1957 மே மாதம் நோபெல் பரிசு விஞ்ஞானி லினஸ் பாலிங் (Linus Pauling) அமெரிக்க விஞ்ஞானிகளின் ஒரு கோரிக்கையில் உலக அரசுகளையும், நாட்டு மக்களையும் வலியுறுத்தி ஓர் உடன்படிக்கை மூலம், எல்லா அணு ஆயுதச் சோதனைகளையும் உடனே நிறுத்தும்படி விரைவு படுத்தினார். 1957 ஜூன் மாதத்திற்குள் 2000 அமெரிக்க விஞ்ஞானிகள் சேர்ந்து கையெழுத்திட்டு ஓர் விண்ணப்பத்தை ஜனாதிபதி ஐஸன்ஹோவருக்கு அனுப்பினார்கள்! “ஒவ்வோர் அணுகுண்டுச் சோதனையும் உலகின் எல்லா மூலை முடுக்கிலும் கதிரியக்கப் பொழிவுகளை அடுக்கிக் கொண்டே போகிறது!  அதிமாகும் ஒவ்வோர் அளவு கதிர்வீச்சும் மனித இனத்திற்கு ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்கிக் கொண்டே போகிறது!  முடிவில் அங்க ஈனமான குழந்தைகள் எதிர்காலத்தில் பிறந்து, பிறந்து அவர்களின் எண்ணிக்கை பெருகப் போகிறது!”

அத்தனைக் கூக்குரல் அறிவிப்புகள் உலக விஞ்ஞானிகளுக்கும், அரசாங்கத்திற்கும் முறையிடுவது என்ன ?  அழுத்தமான இந்த உபதேசம்தான் !  போதும் நிறுத்துவீர், அணு ஆயுதச் சோதனைகளை!  போதும் நிறுத்துவீர், அணு ஆயுத உற்பத்திகளை!  போதும் தகர்த்து ஒழிப்பீர், கைவசமுள்ள அணு ஆயுதக் குண்டுகளை !  உலக ஒலிம்பிக்கில் அணு ஆயுதப் பெருக்குப் பந்தயம் இனிமேல் தொடரக் கூடாது.

the-president.jpg

டாக்டர் அப்துல் கலாம்

++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) August 6, 2009 (R-3)

அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !

(ஏப்ரல் 26, 1986)

சி. ஜெயபாரதன், கனடா


பேரழிவுப் போராயுதம் உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து விழுதற்றுப் போக,
விதையும் பழுதாக
ஹிரோஷிமா
எழில் நகரம் அழித்து
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும் அணுப் பேரிடியால்
நாசமாகி
மட்டமாக்கப் பட்டது!
திட்ட மின்றி
தென்னாலி ராமர்
சந்ததி
மூடர்கள் அணு உலையைச்
சூடாக்கி
வெடிப்புச் சோதனை
அரங்கேற்றி
நிர்வாண மானது,
செர்நோபில் அணு உலை !
சமாதி யானது
மரணித்த மனிதரோடு !

மாய்ந்தனர் மக்கள்,
மடிகிறார் !
மேலும் மரிப்பார் ! மரிப்பார் !
நாடு நகரம்
வீடு வயல்கள் எங்கும்
மூடின வெங்கதிர் வீச்சுகள்!
கட்டாய மாகப் பல்லாயிரம் பேர்,
கடத்தப் பட்டார்,
கைப்பையுடன்
கதிர்மழைப் பொழிவால்!
புற்று நோயும், இரத்த நோயும்
பற்றின பாலரை !
படுகிறார் வேதனை !
மன்னிக்க முடியாத,
மாபெரும்
மனிதத் தவறால் நேர்ந்த
முதல்
அணுயுகப் பிரளய
அரங்கேற்றம் !

the-boy-1

++++++++++++

[செர்நோபில் விபத்தின் (ஏப்ரல் 26, 1986) 20 ஆண்டுப்
பூர்த்தி நினைவில் எழுதப்பட்டது]

[S. Jayabarathan (April 26, 2010)] (R-1)

முடிவை நோக்கி !

atomic-explosion

சி. ஜெயபாரதன், கனடா

டெலிபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  யார் இந்த நடுநிசியில் ஃபோன் பண்ணுவது ? தான் லாஸ் அலமாஸ் ரகசிய ஆய்வுக் களத்திற்கு வந்திருப்பது யாருக்குத் தெரிந்தது ? இந்த யுத்த சமயத்தில் ஏதாவது அபாய முன்னறிவிப்பா ? பேசியவள் லாரா ஃபெர்மி தான் ! பேச்சில் நடுக்கமும், தடுமாற்றமும், கலக்கமும் எதிரொலித்தன !

“ஆல்பர்ட் ! ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சியாளர் ஹாரி டக்லியானுக்குப் பெரிய விபத்தாம். ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திக்குக் கொண்டு செல்கிறார்கள். வருகிறீர்களா பார்ப்பதற்கு ? நண்பர் ஜேம்ஸ் ஃபிராங்க்கும் உடன் வருவதாய்ச் சொல்கிறார்”. அவள் விடும் பெரு மூச்சு ஃபோனிலேயே தெளிவாய்க் கேட்டது.

“அப்படியா லாரா? வீட்டு வாசலின் முன் காத்திரு. பத்து நிமிஷத்தில் தயாராகிக் காரில் வருகிறேன்”, என்று ஃபோனை வைத்தார், ஐன்ஸ்டைன்.

இரண்டாம் உலக மகா யுத்தம் முடியும் தருவாய். அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டைப் போட்டு ஹிரோஷிமாவைத் தரை மட்டமாக்கி அன்றோடு பதினைந்தாம் நாள்!  அந்த நாளைத் தனது “இருண்ட நாள்” என்று நொந்த ஐன்ஸ்டைனின் இதயம், இன்னும் துடிப்பு அடங்காமல் ஆலய மணிபோல் அடித்துக் கொண்டிருந்தது !  முதன் முதலாக அணுக் கதிரியக்கம் லட்சக் கணக்கான அப்பாவி மக்களைத் தாக்கி அழித்திருந்தது.  உயிர் பிழைத்தோரையும் வாதிக்கும் !  பிறக்கப் போகும் பிந்தைய சந்ததிகளையும் பாதிக்கும் !  விபரீதமான, வேதனையான அந்த அழிவுச் சக்தியை ஆக்கிய மூல கர்த்தாக்கள் யார் ? அணுக்கருவினுள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் அந்த அபார சக்தியைக் கணித்தவர் யார் ? தன்னைப் போன்ற விஞ்ஞானிகள் ! அவர்களது விஞ்ஞான அறிவு மனித இனத்தை நொடிப் பொழுதில் அழிக்கத்தான் பயன்பட வேண்டுமா ?

அணுப்பிளவுச் சோதனையில் ஆய்வகத்தில் என்ரிகோ ஃபெர்மிக்கு உதவியாய் இருந்த பெளதிக விஞ்ஞானி, ஹாரி டக்லியானுக்கு என்னதான் நேர்ந்திருக்க முடியும் ?

ஐன்ஸ்டைனின் கார் பத்து நிமிஷத்தில் லாராவின் வீட்டருகில் வந்து நின்றது.  லாராவும், ஜேம்ஸ் ஃபிராங்க்கும் ஏறிக்கொள்ள, கார் லாஸ் அலமாஸ் ரகசியக் கோட்டத்தின் மருத்துவ மனையை நோக்கிப் பாய்ந்து சென்றது.

யுத்த காலமாகியதால், அந்த மயானப் பாதையில் மின்சார விளக்குகள் எதுவும் எரிய வில்லை. கார் விளக்குகளுக்கும் நிறம் பூசி மங்கலான வெளிச்சம்தான் தெரியும்.  வீட்டு மின் விளக்குகளும் மறைக்கப் பட்டிருந்தன.  அந்த பயங்கரக் பாலை வனத்தில் காட்டு ஜந்துக்களின் கூட்டு ஓலங்கள் பயத்தை அதிகமாக்கின !

“பாவம் ஹாரி ! அவரது மனைவி ஊரில் இல்லாத நேரம் பார்த்தா இந்த பயங்கர விபத்து நிகழ வேண்டும் ? அவள் கேட்டால் துடித்துப் போய்விடுவாள். என் கணவருக்குத் (என்ரிக்கோ ஃபெர்மி) தெரிந்தால் இதயமே நின்றுவிடும்.  ஹாரி என் கணவரின் வலதுகை அல்லவா!” என்று கவலைப் பட்டாள் லாரா.

“உன் கணவர் எங்கே போயிருக்கிறார், லாரா ?” என்று கேட்டார், ஐன்ஸ்டைன்.

“வாஷிங்டன் போயிருக்கிறார். ஜனாதிபதி ட்ருமன் வெள்ளை மாளிகைக்கு ராபர்ட் ஓப்பன்ஹைமரையும், என் கணவரையும் உடனே வரும்படி அழைத்திருந்தார்.  ஹிரோஷிமா, நாகசாக்கியில் போட்ட அணுகுண்டுகளின் அழிவுக் காட்சிகளைக் கண்டு ஆராய வேண்டுமாம்.  விமானத்திலிருந்து எடுத்த போட்டோ படங்களைக் கொண்டு போயிருக்கிறார்கள். நாளைதான் திரும்புவார்” என்றாள் லாரா.

“இந்தக் கோரச் சம்பவத்திற்கு மூல காரணமே, உன் கணவர்தான், லாரா!  என்ரிக்கோ ஃபெர்மி முதன்முதல் அணுக்கருத் தொடரியக்கத்தைச் சிகாகோவில் வெற்றிகரமாக நடத்திக் காட்டாதிருந்தால், இந்த அணுசக்தி யுகமே விழித்து எழுந்திருக்காது ! அணுகுண்டே இன்று பிறந்திருக்காது ! ஹிரோஷிமாவும், நாகசாகியும் நாசமாகி யிருக்காது ! ஹாரிக்கும் இப்படி விபத்து நேர்ந்திருக்காது !” என்று வெடித்துப் பேசினார் ஜேம்ஸ் ஃபிராங்க்.

ஃபெர்மியின் மீது மட்டும் பழியைப் போடாதே, ஃபிராங்க். முதலில் இந்த அழிவுச்சக்திக்கு விதை போட்டவனே நான்தான் ! முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் !  யுத்தம் சீக்கிரம் முடிவடைய அணு ஆயுதம் தேவை, என்று காலம் சென்ற ஜனாதிபதி ரூஸ்வெல்டுக்குக் கடிதம் எழுதினேன் அன்று ! ஏன் அப்படி எழுதினேன் என்று கவலைப் படுகிறேன் இன்று !” என்று கண் கலங்கினார் ஐன்ஸ்டைன்.  லாரா இருவரையும் பார்த்து திகைப் படைந்தாள். அவளுக்குத் தலை சுற்றியது!

“என்ன, ஆல்பர்ட் ! நீங்களா இந்த நாசகுண்டு தயாரிக்கத் தூண்டியவர் ? நம்ப முடிய வில்லையே ! விபரீதமான விஷப் பரீட்சை ! உலக சரித்திரத்தில் யாரும் உங்களை மன்னிக்க முடியாது ! மறக்கவும் முடியாது! ” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார், ஜேம்ஸ் ஃபிராங்க்.

கார் லாஸ் அலமாஸ் ரகசியத் தளத்தின் சோதிப்பு வாயிலை வந்தடைந்தது. துப்பாக்கியுடன் ராணுவக் காவலர் இருவர் சூழ்ந்து, காரையும், மூவரின் அடையாளத் தகடைச் சோதித்தபின், கார் நுழைய அனுமதி கிடைத்தது.  ஐந்து நிமிடத்தில் ஆஸ்பத்திரி வரவே, மூவரும் இறங்கி உள்ளே நுழைந்தனர்.  ஹாரி இருந்த அறையிலிருந்து டாக்டர் வில்ஸன் வெளியே வந்தார்.

“ஹாரி எப்படி இருக்கிறார், டாக்டர்?” என்று ஒருங்கே கேட்டார்கள் மூவரும்.

“மிகவும் மோசமான நிலை ஜேம்ஸ் ! ஹாரிக்கு விபத்து நேர்ந்த போது அவருடன் வேறு யாரும் இருந்தார்களா ?” என்று வினாவினார் டாக்டர் வில்ஸன்.

“இல்லை டாக்டர் ! ஹாரி தனியாகத்தான் ஆய்வுக் கூடத்தில் இருந்திருக்கிறார். நல்ல வேளை ! வேறு யாரும் அருகில் இல்லை !” என்று பதில் அளித்தார், ஜேம்ஸ்.

“அணுக்கருத் தொடரியக்கம் அங்கே எப்படி ஏற்பட்டது ?  எந்த அணுக்கரு உலோகத்தால் உண்டானது ?  இருந்த எரிபொருள் யுரேனியமா? அல்லது புளுடோனியமா ?” பதட்டத்துடன் கேட்டார், டாக்டர் வில்ஸன்.

“புளுடோனியம் என்பது என் நினைவு !” என்று பதில் அளித்தார், ஜேம்ஸ்.

“கெட்ட வேளைதான் ! அது புளுட்டோனியமாக இருந்ததால் ஹாரி உயிர் பிழைப்பது கடினம்.  அதி உக்கிரக் கதிரியக்கம் அவரைச் சுட்டெரித்துத் துன்புறுத்தும் !” என்றார் வில்ஸன்.

“ஹாரி பிழைக்க மாட்டாரா ?” என்று கண்ணீர் பொங்க வினாவினாள், லாரா ஃபெர்மி.

டாக்டர் வில்ஸன் தலை குனிந்த வண்ணம், “என்னால் எதுவும் சொல்ல முடியாது இப்போது !” என்றார்.

“இந்த நிலையில் ஹாரியை நாங்கள் பார்க்கலாமா ?” என்று கேட்டார், ஐன்ஸ்டைன்.

“பயங்கர அதிர்ச்சி யடைந்து மிகவும் மனமுடைந்து போயிருக்கிறார், ஹாரி.  ஆயினும் இப்போது நீங்கள் பார்க்கலாம்” என்று அவருடன் நடந்து சென்றார், டாக்டர் வில்ஸன்.

பெரு மூச்சோடு அறைக்குள் நுழைந்தார்கள் மூவரும். பேயரைந்ததுபோல் படுக்கையில் துவண்டு கண்மூடிக் கிடந்த ஹாரியைக் கண்டதும் லாராவின் மூச்சே நின்று போயிற்று ! கண்களில் கண்ணீர் பொங்கிப் பெருகியது !

எத்தகைய நுட்ப ஆய்வு விஞ்ஞானி இந்த ஹாரி ! எத்தனை மகத்தான ஆராய்ச்சிகளை அணுத் துறையில் கண்டு பிடித்திருப்பவன் இந்த ஹாரி !  இவனுக்கா விபத்து நேர வேண்டும் ? இனி யார் வரப் போகிறார், இவனுக்கு ஈடாக ?

“எப்படி இருக்கிறாய் ஹாரி ?” என்ற கேட்டாள் லாரா, அருகில் அமர்ந்து கொண்டே. ஹாரி சற்று நேரம் பேசாமல் லாராவையே உற்று நோக்கினான். தனது கைகளைத் தூக்கி, “லாரா பார்த்தாயா ? இந்த விரல்களிலே எந்த வித உணர்ச்சியும் இல்லை இப்போது ! யானை மிதித்துப் போட்டது போல் நொய்ந்து கிடக்கிறேன்!. இதுபோல் தானே அந்த அப்பாவி ஜப்பானியர்களின் கை, கால், எலும்பு, சதை, தோல் எல்லாம் படாத பாடு பட்டிருக்கும் ?” என்று வருத்தப்பட்டான் ஹாரி.

விபத்து நேர்ந்த அரைமணி நேரத்தில் உணர்ச்சியே இழந்து விட்டனவா விரல்கள் ? அப்படி என்றால் ஹாரியைத் தாக்கிய கதிரியக்கத்தின் உக்கிரம்தான் என்ன! ஜேம்ஸ் ஃபிராங்க் தன் மனதில் கணக்குப் போட்டுப் பார்க்கலானார்.

“ஆல்பர்ட் ! ஆயிரமாயிரம் ஊசிகள் இப்போது என்னுடம்பைக் குத்தித் துளைகள் போடுகின்றன !” என்றான் ஹாரி.  அணு குண்டின் கோடான கோடி கதிரியக்க ஊசிகள் இப்படித்தானே ஜப்பானிய மக்களைச் சித்திரவதை செய்திருக்க வேண்டும் ! அவர்களின் மரண ஓலங்கள் வானையே பிளந்திருக்கும் அல்லவா !”

‘ஆவென’ அலறினான் ஹாரி.  அந்த ஓசை மலைச் சிகரத்தில் அடித்தது போல் எதிரொலித்தது ! நர்ஸ் சைகை செய்யவே மூவரும் அறையை விட்டு அகன்றார்கள்.

வெளியே பிரமாண்டமான காரிருட் போர்வை !  இரகசிய லாஸ் அலமாஸ் வானத்தின் மீது கோடான கோடி விண்மீன்கள் கண் சிமிட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன ! சக்தி இழந்து போய் தடுமாற்றமுடன் மூவரும் வெளியே மருத்துவ மனை நாற்காலில் அமர்ந்தனர்.

“எப்படி நேர்ந்தது இந்த கோர விபத்து ?  கொஞ்சம் விளங்கும்படி சொல்வீர்களா, ஜேம்ஸ்” என்று கன்னத்தில் கைவைத்துக் கொண்டு பரிவாகக் கேட்டாள், லாரா.

ஜேம்ஸ் சொல்லத் தயங்கினார். இது ரகசியச் சம்பவமல்லவா ? எப்படிச் சொல்வது ?

“பயப்படாதீர்கள் ஜேம்ஸ் ! யாரிடமும் நான் இதைச் சொல்லப் போவதில்லை ! கடந்த ஐந்து ஆண்டுகளாக, லாஸ் அலமாஸின் பல ரகசியங்களை, இதுவரை நான் என் மனப் பெட்டிக்குள் பூட்டி வைத்திருக்கிறேன். இது எனக்குப் பழக்கப்பட்டதுதான் ! என் கணவர் சொல்லாத ரகசியங்களா ? சும்மா சொல்லுங்கள், ஜேம்ஸ்” என்று வற்புறுத்திக் கேட்டாள் லாரா ·பெர்மி.

அக்கம் பக்கம் பார்த்து, மெல்லிய குரலில் பேசினார், ஜேம்ஸ். “வளர்த்த கடா மார்பிலே பாயும் என்று கேள்விப் பட்டிருப்பாயே, லாரா.  அதுதான் இந்தக் கதை ! இதுவரை நிகழாத சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது, இன்று ! பேரதிர்ச்சி அடைந்தோம் எல்லோரும் ! இன்று ஹாரிக்கு ! நாளை நமக்கு !  அணுகுண்டு வெடிக்குமுன் என்ன மாதிரித் தொடரியக்கம் நிகழுமோ, அது போல் அனைத்தும் நடந்துள்ளது, லாரா.  யாரும் இதை எதிர்பார்க்க வழியே இல்லை ! பூரணத் தொடரியக்கம் பளிச்செனத் துவங்கி, பல்லாயிரக் கணக்கான ராஞ்சன் கதிரியக்கம் உண்டாகிக், கண்ணிமைப் பொழுதில் ஹாரியைத் தாக்கி யிருக்கின்றன !”

சற்று மூச்செடுத்துக் கொண்டு தொடர்ந்தார், ஜேம்ஸ். “இது எப்படி ஆரம்பித்தது தெரியுமா ? அடுத்த நாள் ஆராய்ச்சிக்கு முந்தைய இரவில் தயார்செய்து கொண்டிருந்த ஹாரி, ஒரே ஒரு சிறு தவறு செய்தான் ! அவன் தெரியாமல் செய்தது !  அணு ஆய்வுச் சிற்றுலையில் புளுடோனிய கோள உலோகத்தை இட்டு, நியூட்ரான் நழுவாது காத்திடச் சுற்றிலும் மிதவாக்கியாகக் கட்டிகளை அமைத்து வந்த ஹாரி, கை தவறிக் கட்டி ஒன்றை நழுவ விட்டான். உடனே, சீறி எழுந்தது, பூரணத் தொடரியக்கம் ! திடீரென நியூட்ரான்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி,  புளுடோனிய  அணுக்கருவைத் தாக்கி, ‘நீல ஒளிக் கோளம்’ சுடர்விட்டுப் பிரகாசித்தது !  அருகில் இருந்த எச்சரிக்கை அறிவிப்பு மணி அலறியது !  கதிர்வீச்சைக் காட்டும் கருவிகள் எல்லை மீறிய அளவைக் காட்டின ! பொங்கி எழுந்த கதிரியக்கம் உந்துகணை ஊசிகளாய் எல்லாத் திசைகளையும் எல்லாப் பொருட்களையும் தாக்கின. ஹாரியையும் தாக்கின !”

“நீல ஒளியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான் ஹாரி,  நடந்து விட்ட அபாயத்தை உடனே அறிந்தான் ஹாரி !  சமத்தாக கரிக்கட்டி ஒன்றை நீக்கிச் சரிசெய்யவே தொடரியக்கம் உடனே அடங்கி நின்றது !  ஆனால் என்ன பயன் ? ஒரு நொடிப் பொழுதில் எல்லாம் நிகழ்ந்து விட்டது !  பல்லாயிரம் ராஞ்சன் வீரிய முடைய தீக்கதிர்களை ஹாரி சில வினாடிக்குள் ஏற்றுக் கொண்டு விட்டான்.  அது அவனுக்குத் தெரியும் !  அதன் விளைவுகளும் அவனுக்குத் தெரியும் !”

“நல்ல வேளை! அணுகுண்டு போல் அது வெடிப்பதற்குள் நியூட்ரான் பெருக்கத்தை விரைவில் நிறுத்தி விட்டான், ஹாரி.  இல்லாவிட்டால் லாஸ் அலமாஸிலும் ஓர் அணுகுண்டு வெடித்து நீயும், நானும், ஏன் இந்த இரகசியத் தளமே எரிந்து சாம்பலாகி யிருக்கும் !”

“அமெரிக்க ஆய்வுக் கூடத்தில் மூன்றாவது அணுகுண்டு ! எதிர்பாராத விதமாக வெடித்தது என்று எல்லா உலகப் பத்திரிக்கையிலும் உடனே வெளியாகும் !”

“லாரா!  அமெரிக்கா துவக்கி வைத்த இந்த அணு ஆயுத யுகத்திற்கு, நாம் அளிக்கும் முதல் உயிர்ப்பலி, இந்த அப்பாவி ஹாரி !” என்று ஆவேசத்துடன் வார்த்தைகளைக் கொட்டினார்,  ஜேம்ஸ் ·பிராங்க்.

“அப்படிச் சொல்லாதீர்கள், ஜேம்ஸ். கதிரியக்க மருத்துவ நிபுணர்களை அழைத்து வந்து எப்படி யாவது ஹாரியைக் காப்பாற்றியாக வேண்டும்.  வாஷிங்டன் ராணுவ மருத்துக் கூடத்திற்கு
·போன் பண்ணி அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கெஞ்சினாள் லாரா.

நெற்றியில் கைவைத்த வண்ணம் மெளனத்தில் எழுந்தார், ஜேம்ஸ்.  மூவரும் வீட்டுக்குக் கிளம்பினார்கள். “கடவுளே ! ஹாரியைக் காப்பாற்று ! எங்கள் ஹாரியைக் காப்பாற்று !” என்று மனதில் பிரார்த்தனை செய்து கொண்டே நடந்தாள், லாரா.

கார்ச் சாவியைத் திருக்கிக் காரை இயக்கினார், ஐன்ஸ்டைன். அவர் மனம் அங்கில்லை ! பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் ஹாரி டக்லியான்களைப் பற்றி நொந்து, அது அசைபோட்டுக் கொண்டிருந்தது!

மறுநாள் ஜேம்ஸ் ஃபிராங்க் லாஸ் அலமாஸ் ஆய்வுக் கூடத்தில் ஹாரியின் அறையில் நிகழ்ந்த விபத்தின் கதிரியக்க விளைவுகளையும், கருவிகளில் பதிவான குறிப்புக்களையும் எழுதிக் கொண்டு, வாஷிங்டன் ராணுவ மருத்துவ மனைக்குப் போன் செய்தார்.  விபரங்களுக்கு ஏற்ப சிகிட்சை சாதனங்களை ஏற்றிக் கொண்டு, கதிரியக்க மருத்துவ நிபுணர்கள் விமானத்தில் லாஸ் அலமாஸ் நோக்கிப் புறப்பட்டார்கள். ·போன் மூலம் ஹாரியின் நிலையை அவ்வப் போது தெரிந்து கொண்டார்.

நாலைந்து நாட்கள் கழித்து ஹாரியைப் பார்க்க ஜேம்ஸ் ஆஸ்பத்திரிக்குச் சென்றார்.  அறையில் ஹாரியைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்து அப்படியே நின்றுவிட்டார்.

“யார் ஹாரிக்கு இப்படி மொட்டை அடித்தது ?” என்று நர்ஸ்களைப் பார்த்துக் கேட்டார், ஜேம்ஸ். நர்ஸ் யாரும் அதற்குப் பதில் கூறவில்லை.

ஹாரி புத்த தேவன் போல் காட்சி அளித்தான் ! தலை மயிர் எல்லாம் உதிர்ந்து போயின ! முகம் வீங்கிக் கண்களை மூடிவிட்டது ! உடம்பெல்லாம் வீங்கி, தோலுரிந்து மேனி யெல்லாம் சிவந்து விட்டது ! அவை யாவும் தீக்கதிர்கள் வரைந்த கோலங்கள்! கோரங்கள் !! குஷ்ட ரோகி போல் காணப் பட்டான் ஹாரி !

“தலை மயிர் யாவும் தாமாகவே உதிர்ந்து விட்டன” என்றார் ஒரு கதிரியக்க நிபுணர். அருகில் ஹாரியின் மனைவி, லாரா, லாராவின் கணவர் என்ரிக்கோ ஃபெர்மி, ஐன்ஸ்டைன், லியோ ஸிலார்டு யாவரும் கூடி யிருந்தனர்.  வெளியே ஓப்பன்ஹைமர், லெஸ்லி குருவ்ஸ் இருவரும் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

ஹாரி கை அசைத்து லாராவைக் கூப்பிட்டான். “நான் ஆசிய ஜோதியாகி விட்டேன், லாரா ! பார் ! இப்போது நானொரு புத்த பிச்சு ! போர், இம்சை, பழி, பாபம், நாசம், அழிவு இவைகளை எதிர்த்து நிற்கும் போதி சத்துவன் !  உயிர்களின் துணைவன் ! அணு ஆயுத எதிரி ! அணு ஆயுதப் பலிகடா !

அப்போது ஓப்பன்ஹைமர், லெஸ்லி குரூவ்ஸ் இருவரும் வெளியே ஒரு மூலையில் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.  லெஸ்லி முணுமுணுத்தார், “இன்னும் பத்து அணு குண்டுகளைத் தயாரிக்கக் கட்டளை வந்திருக்கிறது, ஓப்பி ! நேற்றுதான் பிரஸிடெண்ட் ட்ரூமன் என்னிடம் நேரில் பேசினார்.  அடுத்து ஹைடிரஜன் குண்டு ஆக்கும் திட்டத்திற்குப் பச்சைக் கொடி ! எட்வர்ட் டெல்லரை இன்று பார்க்கப் போகிறேன்.” லெஸ்லி குரூவ்ஸ்தான் மன்ஹாட்டன் அணு குண்டுத் திட்டத்தை மேற்பார்க்கும் ராணுவத் தளபதி !  இரண்டாம் உலக மகா யுத்த முடிவில், திட்டப்படி அணு குண்டுகள் இரண்டைத் தயாரித்து ஹிரோஷிமா, நாகசாகியில் போட்டுப் புகழ் பெற்ற போர் ஹீரோ!

ஓப்பன்ஹைமர் உதட்டில் ஒரு புன்சிரிப்பு மின்னியது ! “எல்லாம் தயார்! அதற்கு வேண்டிய அளவு யுரேனியமும், புளுடோனியமும் நம் கைவசம் உள்ளது ! ஆனால் ஹைடிரஜன் குண்டுக்கு அதிகக் கன அளவு ஹைடிரஜன் ஐசோடோப் டியூடிரியம் தேவை !  அது நம்மிடம் இல்லை !  கனடாவை அணுக வேண்டும்.  அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு அழிவுசக்தி கொண்ட தல்லவா ஹைடிரஜன் குண்டு !” எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் பதில் அளித்தார், ஓப்பன்ஹைமர் ! அவர்தான் அணுகுண்டின் பிதா ! இருபதாம் நூற்றாண்டில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பல நாட்டு விஞ்ஞான நிபுணர்களைத் தன்கீழ் இணைத்து, ஆணை யிட்டு, ஆட்டிப் படைத்து, முதன் முதல் அணு யுதங்களை ஆக்கிய தலைமை அதிபதி ! ஒப்பற்ற விஞ்ஞான மேதை ஓப்பி !

இந்த இரகசியப் பேச்சை ஒட்டுக் கேட்ட ஜேம்ஸ் ஃபிராங்க் சீறினார். “இன்னும் பத்து அணு குண்டுகளா ?  அடுத்து ஹைடிரஜன் குண்டு வேறா ? எந்த அப்பாவி மக்கள் தலையில் போடவாம் ? யுத்த விஞ்ஞான அறிவு உலகின் முடிவை நோக்கித்தான் போக வேண்டுமா ? யுத்தம் என்பது அழிவியல் விஞ்ஞானமா ?” என்று கடிந்தார், ஜேம்ஸ் !

ஓப்பி, குருவ்ஸ் இருவரும் பதில் பேசாமல் அங்கிருந்து அகன்றார்கள். அமைதி சூழ்ந்தது.  அந்த பயங்கர அமைதியைக் கலைத்தாற் போல் ‘ஓ வென’ ஓர் அலறல் சப்தம் ஹாரி அறையிலிருந்து எழுந்தது ! எல்லா விஞ்ஞானிகளும் ஓடிப்போய் பார்த்தார்கள்.

ஹாரி பைத்தியம் பிடித்தவன் போல் படுக்கையிலிருந்து எழுந்து, கண்களை உருட்டிக் கொண்டு ஓலமிட்டு கத்தினான் !  டாக்டர் வில்ஸனும், நர்ஸ்களும் ஓடா வண்ணம் அவரைப் பிடித்துக் கொண்டார்கள்.

“டாம் ஓப்பி ! லிட்டில்பாய் ஓப்பி ! டாம் குருவ்ஸ் ! ஃபாட்மான் குருவ்ஸ் ! யு போத் கெட் அவுட் ! கெட் அவுட் !” என்று ஆர்ப்பாட்டமுடன் கத்தினான், ஹாரி !

ஓப்பன்ஹைமர், குருவ்ஸ் இருவரும் உடனே வெளியேறினர். லாராவுக்கு எதுவும் புரியவில்லை.

“என்ன இது ? லிட்டில்பாய் ! ஃபாட்மான் !” என்று ஜேம்ஸைக் கூர்ந்து நோக்கினாள், லாரா.

“லிட்டில்பாய் (Little Boy) என்பது ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டு ! ஃபாட்மான் (Fatman) என்பது நாகசாகியில் போட்ட அணுகுண்டு ! இரண்டும் மன்ஹாட்டன் அணு ஆயுதத் திட்டத்தின் (Manhatten Project) ராணுவ ரகசியக் குறிச்சொற்கள் ” என்று லாராவின் காதுக்குள் குசுகுசுத்தார், ஜேம்ஸ்.

மறுபடியும் புலம்பினான் ஹாரி. “அதோ ! குடைக் காளான் ! ஓராயிரம் சூரியனைவிட ஒளிமயமான முஷ்ரூம் கிளவ்டு ! அதில் நான் மிதக்கிறேன் ! அதோ ! அணுக் கோளம் ! அனல் கோளம் ! கதிர்க் கோளம் ! கனல் கோளம் ! ஒளிக் கோளம் ! வெடிக் கோளம் ! விஷக் கோளம் ! அழிவுக் கோளம் ! அவற்றின் அசுரப் பிடியில் நசுங்கும் ஜப்பானிய மக்கள் ! முடிவில் எல்லாருக்கும் மரணக் கோலம் !”

பிதற்றல்களை நிறுத்த ஹாரிக்கு ஓர் ஊசியைக் குத்தினார், டாக்டர் வில்ஸன். மெய் மறந்து தூங்குகினான் ஹாரி.

ஹாரியின் முடிவு நேரம் நெருங்கியது.  விபத்து நடந்து இன்றோட இருபத்தி நான்காம் நாள் ! வெள்ளை ஆடை அணிந்த கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர், மெள்ள அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.  வெளியே செய்யும் வேலையை அப்படியே நிறுத்தி விட்டுப் பலர் மெளனமாகக் கூடி நின்றார்கள்.  லாரா கண்ணீர் சொரிய ஹாரி அருகி நின்றாள். படுக்கையின் இருபுறமும் ஏற்றி வைக்கப்பட்ட மெழுகு வர்த்திகள் சூடான திரவத்தைச் சிந்தி அழுது கொண்டிருந்தன !

ஹாரிக்கு மூச்சு மேலும் கீழும் ஏறி இறங்கியது. மெதுவாக பைபிள் நூலைத் திறந்து பாதிரியார் பிரார்த்தனை செய்தார். “பேரண்ட பிரபஞ்சத்தின் பிதாவே !  இங்கே துடித்துக் கொண்டிருக்கும், அணு போன்ற இந்த ஆத்மாவின் பாபங்களை மன்னித்து, இனிமேலும் வதைக்காமல், நீர் ஏற்றுக் கொண்டு ஆசீர்வதியும் !”

கண்களைத் திறக்க முடியாமல், ஹாரி கையை அசைத்து, “ஆல்பர்ட் !” என்று தடுமாறி அழைத்தான்.  பின்புறம் மறைந்து கொண்டிருந்த ஐன்ஸ்டைன் முன்புறம் வந்து நின்றார்.  அணையப் போகும் மெழுகுவர்த்திகள் இரண்டும் சுடர் விட்டுப் பிரகாசித்தன !

உயிர் பிரியும் தருணத்தில் ஹாரி தடுமாறிக் கொண்டு பேசினான்.  “ஆல்பர்ட் ! எனது இறுதி வேண்டுகோள் இது ! முதலில் எட்வெர்ட் டெல்லரை அணுகி, அவரது மனத்தை மாற்றி, அடுத்து பேய் உருவெடுக்கும் ஹைடிரஜன் குண்டுத் திட்டத்தை நிறுத்த உடனே முயற்சி செய்யுங்கள் ! உலக வல்லரசுகள் தொடரப் போகும் அணு ஆயுதப் போட்டியை நிறுத்த விஞ்ஞானிகளை ஒன்று திரட்டுங்கள் ! ஏன் ?  ஐரோப்பிய ஆசிய நாடுகளும் கூட இனி அணு ஆயுதம் ஆக்க முற்படலாம் !  அதற்கு விஞ்ஞானிகள் இனிமேல் ஒத்துழைக்கக் கூடாது ! அணு ஆயுத முடிவை நோக்கிப் போராடுங்கள் ! அணுசக்தியை மனித இனத்தின் ஆக்க வழிகளுக்குப் பயன்பட உழைப்பீர்களா ?  உங்கள் ‘இருண்ட நாள்’ மீண்டும் உதயமாக வேண்டாம் !” என்று கூறினான்.  ஹாரி கண்களில் நீர் பொங்கி எழுந்தது.  சிறிது நேரத்திற்குள் ஹாரியின் ஆத்மா பிரிந்தது.

ஐன்ஸ்டைன் கண்களில் நீர் திரளச் சிலையாய் நின்றார்.  ஜேம்ஸ் ஃபிரங்க்கின் இதயத்தில் சிறிது நிறைவு ஊறியது.  லாரா சிரம் தாழ்த்தி ஒரு மலர் வளையத்தை ஹாரியின் காலடியில் வைத்தாள்.  லாஸ் அலமாஸ் விஞ்ஞானிகள் யாவரும் தலை கவிழ்ந்து ஹாரிக்கு அஞ்சலி செய்தார்கள்.

***********************

[ஜப்பானில் அணுகுண்டு வீச்சுக்குப்பின், லாஸ் அலமாஸில் ஆய்வக உதவி விஞ்ஞானி ஹாரி டக்லியானுக்கு (Harry Daghlian) நேர்ந்த ஓர் உண்மை சோக விபத்தை (ஆகஸ்டு 21, 1945) அடிப்படையாகக் கொண்டு எழுதிய புனைக்கதை. ராபர்ட் ஓப்பன்ஹைமர், என்ரிகோ ஃபெர்மி, ஜேம்ஸ் ஃபிராங்க், எட்வேர்டு டெல்லர் (Robert Oppenheimer, Enrico Fermi & James Frank, Edward Teller) ஆகியோர் லாஸ் அலமாஸ் அணுவியல் ஆய்வு விஞ்ஞானிகள்.  எட்வேர்டு டெல்லர் ஹைடிரஜன் குண்டின் பிதா.  லெஸ்லி குருவ்ஸ் (Leslie Groves) மன்ஹாட்டன் திட்ட இராணுவ அதிபதி.  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்துக்கு விஜயம் செய்ததாகக் காட்டியது புனைக்கதை]

(1980 ஆம் ஆண்டில் ஆனந்த விகடன் வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் புறக்கணிக்கப்பட்டது.)

Harry Dughlian's Expt

தகவல்:

http://en.wikipedia.org/wiki/Harry_K._Daghlian,_Jr.

S. Jayabarathan <jayabarat@tnt21.com> November 22, 2008

பிரான்சில் அமைக்கும் முதல் அகில நாட்டு அணுப்பிணைவு ஆய்வு நிலையம்

fusion-reaction

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா



பிண்டமும் சக்தியும் ஒன்றே
என்று கணித்தார் ஐன்ஸ்டைன்
நூறாண்டுக்கு முன்னே !
சக்தி அழியாதது !
பிண்டம் நிலையானது !
சக்தி நிலை மாறுவது !
பிண்டமும் சக்திபோல் உருமாறும் !
இயல்பாகவே
தேய்ந்து மெலியும் ரேடியம்
ஈயமாய் மாறும் !
யுரேனியம் சுயப் பிளவில்
ஈராகப் பிரிந்து
வெப்பசக்தி உண்டாகும் !
பேரளவு உஷ்ணத்தில்
பரிதி வாயுக் கோளத்தில்
எரியும் உலை போல்
எளிய அணுக்களின் உட்கருக்கள்
இணைந்து
பிணைவுச் சக்தி
பேரளவு வெளியேறும்
கதிரியக்கம் குன்றி !

பிண்டம் ! சக்தி !

அணுப்பிணைவுச் சக்தி !

இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்காவில் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்தில் நூற்றுக் கணக்கான ஈரோப்பிய, வட அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு அணுப்பிளவுச் சக்தியைத் தொடரியக்கத்தில் உண்டாக்கிப் பேரழிவுப் போராயுதத்தைத் தயாரித்தனர் !  அதுபோல், அமைதிக் காலத்திலே பன்னாட்டு விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் பிரான்ஸில் கூடி முதன்முதல் அணுப்பிணைவு எரிசக்தியில் பேரளவு மின்சக்தியை உற்பத்தி செய்யப் போகிறார்கள்.

கட்டுரை ஆசிரியர்

“அணுசக்தி ஆற்றல் உற்பத்தியில் அணுப்பிணைவு (Nuclear Fusion) முறைப்பாடு சூழ்வெளிப் பசுமைப் பண்பாடு மின்சாரமாகக் கருதப்படுகிறது. அது அணுப்பிளவு (Nuclear Fission) முறைப்பாடை விட சூழ்வெளித் துர்மாசுக்கள் மிகவும் குறைவானது.”

ஜாப் வாண்டர் லான் – நெதர்லாந்து எரிசக்தி ஆய்வு மையம். (June 28, 2005)

“சூழ்வெளிக் காலநிலை மாற்றாமல் பேரளவு மின்சக்தி ஆக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு முயற்சியில் அணுப்பிணைவுச் சக்தி விருத்தி அடையப் பிரான்சில் விரைவாகக் கட்டப் போகும் அகில நாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலை (ITER) ஒரு பெரும் வரலாற்று மைல் கல்லாகக் கருதப்படுகிறது.”

பேராசிரியர் கிரிஸ் லிவெல்லின் ஸ்மித் (UK Atomic Energy Agency) (June 28, 2005)

“அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைக் (ITER) கட்டுமான வேலைகள் 2005 ஆண்டு இறுதியில் துவங்கும். திட்டத்தின் பொறித்துறை நுணுக்க விளக்கங்கள் யாவும் இப்போது முடிவாகி விட்டன. அகில நாடுகளின் முழுக் கூட்டுழைப்பில் (ஈரோப்பியன் யூனியன், ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான்) பூரணமாகி இத்திட்டம் முன்னடி வைப்பதில் நாங்கள் பூரிப்படைகிறோம்.”

பையா ஆரன்கில்டே ஹான்ஸன் (European Commission) (June 28, 2005)

“கடந்த 15 ஆண்டுகளாக அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைத் (ITER) திட்ட அமைப்பில் பங்களித்து அது நிறுவனமாகச் சிக்கலான உடன்பாடுகளில் உதவி செய்தது குறித்து, அணுசக்திப் பேரவை (IAEA) பெருமகிழ்ச்சி அடைகிறது. மேலும் பரிதியை இயக்கும் மூலச்சக்தியான அணுப்பிணைவுச் சக்தியை விஞ்ஞானப் பொறியியல் சாதனங்களால் பூமியில் உற்பத்தி செய்யக் கூடுமா என்று ஆராயும் அத்திட்டத்துக்கும் அணுசக்தி பேரவை தொடர்ந்து உதவி புரியும்.”

வெர்னர் புர்கார்ட் (Deputy Director General & Haed IAEA Nuclear Science and Applications) (June 28, 2005)

“அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலை (ITER) கூடிய விரைவில் இயங்க ஆரம்பித்து உலக மாந்தர் அனைவருக்கும் எதிர்காலத்தில் மின்சக்தி அளிக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.”

நரியாக்கி நகயாமா (ஜப்பான் விஞ்ஞான அமைச்சர்) (June 28, 2005)

பிரான்சில் புது அணுப்பிணைவு மின்சக்திச் சோதனை நிலையம்

முதல் அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைக் (ITER) கட்டுமானத் திட்டத்தில் ஜப்பான் தேசம் கடுமையாகப் போட்டியிட்டாலும் இறுதியில் வெற்றி பெற்றது பிரான்ஸ். அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்கு (International Space Station) அடுத்தபடி வெப்ப அணுக்கருச் சோதனை நிலைய அமைப்பே நிதிச் செலவு மிக்க (12 பில்லியன் டாலர் திட்டம்) ஓர் திட்டமாகக் கருதப் படுகிறது ! வெப்ப அணுக்கருச் சக்தி எனப்படுவது பரிதி ஆக்கும் அணுப்பிணைவுச் சக்தியைக் குறிப்பிடுகிறது. இதுவரைச் சூழ்வெளியை மாசுபடுத்திய அணுப்பிளவு, நிலக்கரி போன்ற பூதள எருக்கள் (Fission & Fossil Fuels) போலின்றி ஒப்புநோக்கினால் பேரளவு தூயதானது அணுப்பிணைவுச் சக்தியே (Fusion Energy) !

பதினெட்டு மாதங்கள் தர்க்கத்துக்கு உள்ளாகி முடிவாக ஜூன் 28 2005 ஆம் தேதி மாஸ்கோவில் ஆறு உறுப்பினர் (ஈரோப்பியன் யூனியன், ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான்) உடன்பட்டு அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலையைக் [International Thermonuclear Experimental Reactor (ITER)] கட்டுமிடம் பிரான்ஸாக ஒப்புக் கொள்ளப் பட்டது. ITER திட்டத்தின் முக்கிய பங்காளர்கள் ஈரோப்பியன் யூனியன் (இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஹங்கேரி, டென்மார்க், ஆஸ்டியா, நெதர்லாந்து, போலந்து, ஸ்வீடன். . . ), ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா). நிதிப் பங்களிப்பில் ஈரோப்பியன் யூனியன் 50% தொகை அளிப்பை மேற்கொண்டது. பிரான்ஸில் இடத்தேர்வு : மார்சேல்ஸ் நகருக்கு 60 கி.மீ. (37 மைல்) தூரத்தில் இருக்கும் “கடராச்சே அணுவியல் ஆராய்ச்சி மையம்” (Cadarache in France).

அகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையத்தின் விபரங்கள்

வியன்னாவில் இருக்கும் அகில நாட்டு அணுசக்திப் பேரவை தலைமை அகத்தில் நீண்ட காலக் குறிக்கோள் திட்டமான அணுப்பிணைவுச் சக்தி ஆக்கத்தின் முன்னடி வைப்பு 2005 ஜூன் 28 ஆம் தேதியில் ஒரு பெரும் விஞ்ஞானச் சாதனையாக வெற்றிவிழாக் கொண்டாடப் பட்டது ! அன்றுதான் உலகத்திலே மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சக்தி சோதனை நிலையம் பிரான்சில் கட்டி இயக்கத் திட்டம் துவங்கியது ! அதை டிசைன் செய்து கட்டி இயக்கப் போகிறவர் ஒரு நாட்டை மட்டும் சேர்ந்த சில விஞ்ஞானிகள், பொறியியல் நிபுணர்கள் அல்லர். பன்னாட்டு விஞ்ஞானிகள் ! பன்னாட்டுப் பொறித்துறை வல்லுநர்கள் ! இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்காவில் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்தில் நூற்றுக் கணக்கான ஈரோப்பிய, வட அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு அணுப்பிளவுச் சக்தியைத் தொடரியக்கத்தில் உண்டாக்கிப் பேரழிவுப் போராயுதத்தைத் தயாரித்தனர் ! அதுபோல், அமைதி காலத்திலே பன்னாட்டு விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் பிரான்ஸில் கூடி முதன்முதல் அணுப்பிணைவு எரிசக்தியில் பேரளவு மின்சக்தி உற்பத்தி செய்யப் போகிறார்கள் !

அணுப்பிணைவுச் சோதனை நிலையம் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்.

— நிலைய மின்சார உற்பத்தி : 500 MW
— நியூட்ரான் சக்தி : 14 MeV (Million Electron Volt).
— காந்த மதில் ஆற்றல் தகுதி : 0.57 MW/Square meter
— பிளாஸ்மா (கனல் பிழம்பு) பெரு ஆரம் : 6.2 மீடர்.
— பிளாஸ்மா (கனல் பிழம்பு) குறு ஆரம் : 2.0 மீடர்
— பிளாஸ்மா மின்னோட்டம் : 15 MA (Million Amps)
— பிளாஸ்மா கொள்ளளவு : 837 கியூபிக் மீடர்.
— வளையத்தின் காந்த தளம் 6.2 மீடரில் 5.3 T (Toroidal Field)
— நிலைய யந்திரங்கள் இயக்கத் தேவை : 78 MW
— நிலையத் திட்டச் செலவு : 12 பில்லியன் டாலர் (2005 நாணய மதிப்பு)

அணுப்பிணைவுச் சக்தி எப்படி உண்டாகிறது ?

சூரியனிலும் சுயவொளி விண்மீன்களிலும் ஹைடிரஜன் வாயுவை மிகையான ஈர்ப்பு விசை அழுத்தத்தில் 10 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் பிளாஸ்மா நிலையில் (கனல் பிழம்பு) இணைத்து அணுப்பிணைவுத் தொடரியக்கத்தில் ஹீலிய வாயும் வெப்பச் சக்தியும் வெளியாகின்றன. அந்த வெப்ப மோதலின் விளைவில் உயர்சக்தி நியூட்ரான்களும் (High Energy Neutrons) எழுகின்றன ! ஹைடிரன் ஏகமூலங்களான (Isotopes of Hydrogen) டியூடிரியம் & டிரிடியம் (50% Deuterium & 50% Tritium) அணுப்பிணைவு எருக்களாகப் பயன்படுகின்றன. ஹைடிஜன், டியூடிரியம், டிரிடியம் மூன்று வாயுக்களின் அணுக்கருவிலும் ஒரே ஒரு புரோட்டான் உள்ளது. ஆனால் டியூடிரியத்தில் ஒரு புரோட்டான், ஒரு நியூட்ரான் உள்ளன. டிரிடியத்தில் ஒரு புரோட்டானும், இரண்டு நியூட்ரான்களும் இருக்கின்றன. அவை பேரளவு உஷ்ணத்தில் (100 மில்லியன் டிகிரி செல்சியஸ்) பிளாஸ்மாவாகி ஒன்றுடன் ஒன்று இணைந்து ஹீலியமாகின்றன. அந்த உஷ்ணம் பரிதியின் உட்கரு உஷ்ணத்தை விட 10 மடங்கி மிகையானது !

அணுப்பிணைவுக்கு அத்தகைய மிகையான உஷ்ணம் ஏன் தேவைப் படுகிறது ? பரிதியின் வாயுக் கோளத்தில் 10 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணம் உண்டாவதற்கு அதன் அசுர ஈர்ப்புச் சக்தி அழுத்தம் கொடுக்கிறது. அந்த உஷ்ணத்தில் அணுக்கருக்கள் ஒன்றை ஒன்று இழுத்துச் சேர்த்துக் கொள்கின்றன. ஆனால் மனிதர் உண்டாக்கும் அணுப்பிணைவு உலையில் அத்தகைய அழுத்தம் ஏற்படுத்த முடியாததால் அணுப்பிணைவை உண்டாக்கப் பத்து மடங்கு உஷ்ண நிலை தேவைப்படுகிறது. அந்த அழுத்தத்தை எப்படி உண்டாக்குவது ?

1. வாகன எஞ்சின் போல் பிஸ்டன் மூலம் வாயுக்களில் அழுத்தம் உண்டாக்கி வாயுக்களில் உஷ்ணத்தை அதிகமாக்கலாம்.

2. மின்சார ஓட்டத்தை ஏற்படுத்தி வாயுக்களில் உஷ்ணப் படுத்தலாம்.

3. வாயுக்களை ஓர் அரணுக்குள் உயர்சக்தி நியூட்ரான்களால் தாக்கி உஷ்ணத்தை மிகையாக்கலாம்.

4. நுண்ணலைகள் (Microwaves) மூலம் அல்லது லேஸர் கதிர்களால் (Laser Beams) வாயுக்களில் உஷ்ணத்தை மிகைப்படுத்தலாம்.

மூன்று முறைகளில் பிளாஸ்மா கனல் பிழம்பை உண்டாக்கலாம்:

1. பிளாஸ்மா அரண் (Plasma Confinement) (பரிதி, விண்மீன்களில் உள்ளதுபோல்)

2. முடத்துவ முறை (Inertial Method).

3. காந்தத் தளமுறை (Magnetic Method).

சூரியன் ஓர் அணுப் பிணைவுத் தீப்பந்து!

சூரியன் பிணைவுச் சக்தியை [Fusion Energy] உற்பத்தி செய்யும், பிரம்மாண்டமான ஓர் அணுக்கருப் பிழம்பு உலை [Plasma Reactor]! அண்ட வெளியில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள், சுய ஒளி விண்மீன்கள் அணுப் பிணைவுச் சக்தியைத் தான், பிரபஞ்சம் தோன்றியது முதல் வாரி இறைத்து வருகின்றன! 4000 மில்லியன் ஆண்டுகளாக, சூரியன் வினாடிக்கு 40 கோடி பில்லியன் MW வெப்ப சக்தியைத் தொடர்ந்து வெளியாக்கிக் கொண்டிருக்கிறது! தீக்கோளத்தின் நடுப் பகுதி உஷ்ணம் 20 மில்லியன் டிகிரி K! சூரியவாயு அழுத்தம், பூவாயு [Earth ‘s Atmosphere] அழுத்ததை விட 400 மில்லியன் மடங்கு மிகையானது! சூரிய கோள அமைப்பு, வெங்காயத் தோல்கள் போல் அடுக்கடுக்காக இருக்கிறது. வாயுக்களின் அடர்த்தி [Density] ஈயத்தைப் போல் 12 மடங்கு. சூரியன் பேரளவு உஷ்ணத்தில், தன் ஈர்ப்புப் [Gravitation] பேரழுத்தத்தில், வினாடிக்கு 4 மில்லியன் டன்வாயு அணுக்கருத் துகள்களைப் பிணைத்து, அளக்க முடியாத பிணைவு சக்தியை உண்டாக்குகிறது. ஒரு தம்ளர் நீரில் உள்ள ஹைடிஜன் வாயுவைப் பிரித்துப் பிணைக்க முடிந்தால், அதிலிருந்து வெளியாகும் சக்தி 600 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் எரிந்து தரும் சக்திக்குச் சமமாகும்! ஆனால் பூமியில் பிணைவுச் சக்தியைத் தூண்டி வெளிப்படுத்த, உலைகளில் சூரியவாயு போல் பேரழுத்தமும், பெருமளவு உஷ்ணமும், விஞ்ஞானிகளால் உண்டாக்க முடியுமா ?

1952 நவம்பர் முதல் தேதியில் அமெரிக்காவும், 1953 ஆகஸ்டு 20 இல் ரஷ்யாவும் வெப்ப அணுக்கரு ஆயுதமான [Thermo-Nuclear Weapon] ஹைடிரஜன் குண்டைத் [H-Bomb] தயாரித்து முதன் முதல் ஒரு குட்டிச் சூரியனை உண்டாக்கி வெடிக்க வைத்து வெற்றி பெற்றன. ஆனால் அணுப்பிணைவுப் பிழம்பை ஓர் உலை அரணுக்குள் அடக்கி நீடிக்கச் செய்ய எந்த நாட்டு விஞ்ஞானியாலும் இதுவரை முடியவில்லை! அப்பெரும் முயற்சிதான் அகில உலகில் இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கு மிகச் சிக்கலான பொறிநுணக்கப் பிரச்சனையாகவும் திறமைக்குச் சவாலாகவும் ஆகியிருக்கிறது! ஆயினும் உலகில் பெருமளவு மின்சக்தியை இன்னும் பழைய அணுமின் நிலையங்கள்தான் பரிமாறிக் கொண்டிருக்கின்றன. எதிர் காலத்தில் மின்சக்திப் பற்றாக் குறை வினாவுக்கு முடிவான விடை, பெருமளவில் மின்திறம் வெளியாக்கும் பிணைவுச் சக்தி ஒன்றே ஒன்றுதான்! ஆனால் அந்த நிலையத்தை வர்த்தக முறையில் உருவாக்கி இயக்குவதுதான் உலக எஞ்சினியர்களுக்கு மாபெரும் போராட்டமாகவும், திறமையைச் சோதிப்பதாகவும் இருந்து வருகிறது!

அணுப்பிணைவை ஆய்வுக் கூடத்தில் எவ்வாறு ஆக்குவது ?

ஹைடிரஜன் வாயுவுக்கு இரண்டு ‘ஏகமூலங்கள்’ [Isotopes] உள்ளன. ஒன்று டியூட்டிரியம் [Deuterium], மற்றொன்று டிரிடியம் [Tritium]. ஏகமூலங்கள் என்பவை, ஒரே புரோட்டான் [Proton] எண்ணிக்கை கொண்டு, வெவ்வேறு நியூட்ரான் [Neutrons] எண்ணிக்கை யுள்ள மூலகங்கள் [Elements]. ஏகமூலங்கள் ஒரே மின்னீர்ப்பு [Electric Charge] மேவி, வெவ்வேறு அணுப்பளுவைக் [Atomic Mass] கொண்டவை. மூலகங்களின் அணிப் பட்டியலில் [Periodic Tables of Elements], ஏகமூலங்கள் யாவும் ஒரே இல்லத்தில் இடம் பெறுபவை. டியூட்டிரியம் மூலஅணு [Molecule] நீரில் 7000 இல் ஒன்றாக இயற்கையில் இருப்பதை, ரசாயன முறையில் பிரித்து எடுக்க வேண்டும். டிரிடியம் கனநீர் யுரேனிய அணு உலைகள் [Heavy Water Uranium Reactors] இயங்கும் போது, கனநீரில் உண்டாகிறது. கனடாவில் இயங்கும் காண்டு [CANDU] அணு உலைகளில் நிறைய கனநீரும், டிரிடியமும் இருப்பதால், பிணைவுச் சக்தி ஆய்வுக்குத் தேவையான எளிய வாயு மூலகங்கள் [Light Elements] கனடாவில் எப்போதும் கிடைக்கின்றன. ஆராய்ச்சி முறையில் பயன் படுத்திய போது, எளிய மூலகங்களான ஹைடிரஜன், டியூட்டிரியம், டிரிடியம், லிதியம் ஆகியவற்றில், [டியூட்டிரியம் + டிரிடியம்] வாயு இணைப்பே அதிக வெப்ப சக்தியை ஈன்றதால், உலகில் பல நாடுகள் அணுப் பிணைவு உலையில், அவ்விரண்டு வாயுக்களையே எரிப் பண்டங்களாய் உபயோகித்து வருகின்றன. இந்த இயக்கம் தூண்டுவதற்கு வேண்டிய உஷ்ணம், 80 மில்லியன் டிகிரி C.

டியூட்டிரியம் +டிரிடியம் –> ஹீலியம் +நியூட்ரான் +17.6 MeV சக்தி

Deuterium +Tritium –> Helium +Neutron +17.6 MeV Energy

இருபதாம் நூற்றாண்டில் உருவான மிக மேம்பட்ட ஆய்வுப் பிணைவு உலை [Fusion Reactor] ‘டோகாமாக்’ [Tokamak] என்பது, காந்தக் கம்பிகள் சுற்றப் பட்டு டோனட் [Donut] வளையத்தில் அமைந்த ஒரு பிரம்மாண்டமான மின்யந்திரம். ‘டோகாமாக் ‘ என்பது ரஷ்யச் சுருக்குப் பெயர். அதன் பொருள்: வளை காந்தக் கலம் [Toroidal Magnetic Chamber]. அதனுள்ளே பேரளவு காந்தத் தளத்தைக் கிளப்பி பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் மின்னியல் வாயுப் பிழம்பை [Plasma] உண்டாக்கி வளையச்சுவர் கடும் வெப்பத்தில் உருகிப் போகாமல் உள்ளடக்க வேண்டும்! இத் தேவைக்கு உகந்த உலோகம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை!

பிண்டம் நான்கு வித வடிவுகள் [Four States of Matter] கொண்டது. திடவம், திரவம், வாயு, பிழம்பு [Solid, Liquid, Gas & Plasma]. வாயு அதிக உஷ்ணத்தில் நேர், எதிர் மின்னிகளாய்ப் [Positive, Negative Ions] பிரிந்து பிழம்பு வடிவாக மாறி மின்கடத்தி [Electrical Conductor] யாகிறது. பிணைவுச் சக்தியை மூலமாகக் கொண்டு இயங்கும் மின்சக்தி நிலையத்தில், ஹீலிய வாயு பிழம்பின் வெப்பப் போர்வையாகவும், கடத்தியாகவும் [Helium Blanket for Plasma & Heat Transport Medium] பயன் ஆகலாம். சூடேரிய ஹீலிய வாயு வெப்ப மாற்றியில் [Heat Exchanger] நீராவியை உண்டாக்கி டர்பைன் ஜனனியை [Turbine Generator] ஓட்டச் செய்யலாம். அமெரிக்காவின் மிகப் பெரும் ஆய்வு டோகாமாக், நியூ ஜெர்ஸி பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு இயங்கி வருகிறது.

மூன்று வித முறைகளில் அனல் பிழம்பை அரணிட்டு [Plasma Confinement] அணுப்பிணைவு இயக்கம் நிகழ்த்தலாம். முதலாவது முறை ‘ஈர்ப்பியல் அரண் பிணைப்பு ‘ [Gravitational Confinement Fusion]. இம்முறைக்கு சூரிய, சுடரொளி விண்மீன்களில் இயங்கும் பேரளவு உஷ்ணம், வாயுப் பேரழுத்தம் தேவைப் படுகிறது. மனிதனால் இவற்றைப் பூமியில் சாதிக்க முடியாது!

அடுத்தது, ‘காந்தவியல் அரண் பிணைப்பு’ [Magnetic Confinement Fusion]. ஆய்வுக் கூடத்தில் இது சாத்திய மானது. 1950 ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி முறைக்கு உலகெங்கும் பயன் படுகிறது. இம்முறையில் உருவானதுதான் டோகாமாக் [Tokamak] யந்திரம். அனல் பிழம்பு நீடிக்க, மூன்று முக்கிய நிபந்தனைத் தொடர்புகள் பொருந்த வேண்டும்: உஷ்ணம், காலம், அடர்த்தி [Temperature, Time & Density]. 200 மில்லியன் டிகிரி உஷ்ணப் பிழம்பு சில வினாடிகள் நீடிக்க, வாயு அடர்த்தி ஓரளவு தேவை. இந்த உறவை ‘லாசன் நியதி ‘ [Lawson Criterion] என்று கூறுவர்.

மூன்றாவது முறை: ‘முடவியல் அரண் பிணைப்பு’ [Inertial Confinement Fusion]. இதில் லேசர் வீச்சுக் கதிர்களைப் [Laser Beams] பாய்ச்சி உள்வெடிப்பு [Implosion] நிகழ்த்தி அனல் பிழம்பு உண்டு பண்ணிப் பிணைப்பு சக்தி ஏற்படுத்துவது. இம்முறை பெரும்பாலும் அணு ஆயுதம் [Nuclear Weapons] தயார் செய்ய, யுத்த விஞ்ஞானிகளுக்குப் பயன் படுகிறது.

அணுப்பிணைவுச் சக்தியின் நிறைபாடுகள்! குறைபாடுகள்!

பிணைவுச் சக்தி பிளவுச் சக்தியை விட பல முறைகளில் மேன்மை யுற்றது. அணுப்பிணைவு சக்தியில், அணுப் பிளவு சக்திபோல் உயிர் இனங்களைத் தாக்கி வதைக்கும் பயங்கரக் கதிரியக்கம் [Radioactivity] அதிக அளவு இல்லை! பிணைவுச் சக்தியால் எழும் கதிரியக்கம் மிகச் சிறிதளவே! அமெரிக்காவின் திரீமைல் தீவு, ரஷ்யாவின் செர்நோபிள் அணுப்பிளவுச் சக்தி நிலையங்களில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் போது, உலையின் எரிக்கோல்கள் பல உருகிப் பெரும் சிக்கலை உண்டாக்கியது! பிணைவு உலைகளில் எரிக்கோல் உருகிப் போகும் அபாயம் எதுவும் இல்லை! அணுப் பிணைவு நிலையங்களிலிருந்து தினம் வெளியேறும் கழிவு வாயுக்கள் மனிதர் மற்றும் இதர உயிரினங்களுக்குத் தீங்கு தருவன அல்ல! அவைச் சூழ்வெளியைச் [Environment] சுத்தமாக வைத்திருக்க உதவி புரிபவை! பிணைவு இயக்கம் ரசாயனத் தீயின் கடும் விளைவுகளை உண்டாக்காது! மேலும் பிணைவு உலைகளில் பயன்படும் எரி வாயுக்கள் ஹைடிரஜன், டியூட்டிரியம் உலகெங்கும் நீரில் அளவற்ற கன அளவு கிடைக்கிறது. எதிர் காலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு வேண்டிய, வாயு எரி பொருளுக்குப் பஞ்சமே இருக்காது!

ஆராய்ச்சி அணுப்பிணைவு உலைகளுக்கு இதுவரை உலக நாடுகள் 2 பில்லியன் டாலர்கள் செலவழித் துள்ளன! கால தாமதம் ஆவதால், இன்னும் 50 பில்லியன் டாலர் தொகை செலவாகலாம் என்று ஊகிக்கப்படுகிறது. மேலும் மிகச் சக்தி வாய்ந்த மின்காந்தத் தளம், அணுப்பிணைவு நிலையத்தில் இயங்குவதால், அதை ஆட்சி செய்யும் மனிதருக்கு அதனால் விளையும் தீங்குகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது! அடுத்து உலையில் பயன்படும் லிதிய [Lithium] திரவம் ரசாயன இயக்க உக்கிரம் உடையது! அதன் விளைவுகளையும் அறிய வேண்டும். அனல் பிழம்புக்கு அதி உன்னத சூன்ய நிலை [High Vacuum] உலை வளையத்தில் நீடிக்கப்பட வேண்டும்! விசை மிக்க மின்காந்த அமுக்கமும், வேறுபாடு மிக்க கடும் உஷ்ண ஏற்ற இறக்கத்தால் நேரும் வெப்ப அழுத்தமும், அதி உக்கிர நியூட்டிரான் கணைத் தாக்குதலால் நிகழும் அடியும், தாங்கிக் கொண்டு நீண்ட காலம் உறுதியாக இயங்கும், நிலையச் சாதனங்களைக் கண்டு பிடிப்பது சிரமான முயற்சி.

அணுப்பிணைவு சக்தி உற்பத்தியின் மேம்பாடுகள்!

அணுப்பிணைவு உலைகளுக்கு வேண்டிய எரு உலக நீர்வளத்தில் எண்ணிக்கை யற்ற அளவு உள்ளது. பேரளவு ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு சக்தி நிலையங்களை அமைப்பது சாத்திய மாகும். மாபெரும் ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு நிலையத்துக்கும் தேவையானது சிறிதளவு எருதான்! உதாரணமாக 1000 MWe நிலையத்துக்கு ஓராண்டு வேண்டிய எரு 0.6 மெட்ரிக் டன் [1320 பவுண்டு] டிரிடியம்!

பிணைவு சக்தியின் தீப்பிழம்பு மின்கொடைத் துகள்களின் வேகங்களைத் தணித்து, நேரடியாக அவற்றை மிகையான மின்சக்தி அழுத்தமாக [High Voltage Electricity] மாற்றிவிடலாம்! அம்முறையில் நீராவி உண்டாக்க கொதிகலம், வெப்பசக்தியை யந்திர சக்தியாக மாற்ற டர்பைன், தணிகலம் யந்திர சக்தியை மின்சக்தியாக மாற்ற மின்சார ஜனனி போன்ற பொது வெப்பச் சாதனங்கள் தேவைப்படா! பிணைவு உலைப் பாதுக்காப்பு அத்துடனேஇணைந்துள்ளது. இயக்கத்தின் போது சிக்கல் நேர்ந்தால், அணு உலைத் தானாக விரைவில் நன்றுவிடும்.பிளவு அணு உலைகளைப் போன்று, கதிரியக்கமோ, கதிர்வீச்சுக் கழிவுகளோ விளைவதில்லை! பிணைவு அணு உலையில் எழும் நியூட்ரான்கள் விரைவில் தீவிரத்தை இழப்பதால் பாதகம் மிகக் குறைவு. உலையின் மற்ற பாகங்களை நியூட்ரான் தாக்குவதால் எழும் இரண்டாம் தர கதிர்வீச்சுகளைக் கவசங்களால் பாதுகாப்பது எளிது. கதிர்ப் பொழிவுகளால் சூழ்மண்டல நாசம், நுகரும் காற்றில் மாசுகள் விளைவு போன்றவை ஏற்படுவதில்லை!

வெப்ப அணுக்கரு நிலையத்தை எதிர்த்து கிரீன்பீஸ் வாதிகள் கூக்குரல் !

ஒரு கிலோ கிராம் அணுப்பிணைவு எருக்கள் (Fusion Fuel Deuterium +Tritium) 10,000 டன் நிலக்கரிக்குச் (Fossil Fuel) சமமான எரிசக்தி அளிக்கும் ! இத்தகைய பேரளவுப் பயன்பாடு இருப்பதாலும், சிறிதளவு கதிரியக்கம் உள்ளதாலும் அணுப்பிணைவு எரிசக்தி அகில நாட்டு பொறித்துறை நிபுணரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது ! அணுப்பிளவு மின்சக்தி நிலையங்கள் போன்று அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்களில் நீண்ட கால உயர்நிலைக் கதிரியக்கப் பிளவுக் கழிவுகள் (Long Term High Level Fission Product Wastes) கிடையா ! சில பசுமைக் குழுவாதிகள் 2005 ஜூன் மாத ITER கட்டட அமைப்புத் திட்டத்தை பண விரயத் திட்டமென்று குறை கூறினர் ! அணுப்பிணைவு மின்சக்தி உற்பத்தி செயல் முறைக்கு ஒவ்வாதது என்று தமது நம்பிக்கை இல்லாமையை அவர் தெரிவித்தார். “12 பில்லியன் டாலரில் 10,000 மெகாவாட் கடற்கரைக் காற்றாடிகள் மூலம் தயாரித்து 7.5 மில்லியன் ஐரோப்பிய மக்களுக்கு மின்சாரம் பரிமாறலாம்,” என்று அகில நாட்டு கிரீன்பீஸ் பேரவையைச் சேர்ந்த ஜான் வந்தே புட்டி (Jan Vande Putte) கூறினார். “உலக நாடுகளின் அரசுகள் பணத்தை வீணாக விஞ்ஞான விளையாட்டுச் சாதனங்களில் விரையமாக்கக் கூடாதென்றும், அவை ஒருபோதும் மின்சக்தி அனுப்பப் போவதில்லை என்றும், 2080 ஆம் ஆண்டில் குவிந்து கிடக்கும் “மீள் பிறப்பு எரிசக்தியைப்” (Renewable Energy) பயன்படுத்தாமல் இப்போதே ஆரம்பிக்க வேண்டும் என்றும் பறைசாற்றினர்.

++++++++++++++++++++++++++++++
தகவல்

Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 The Origin of Earth (www.moorlandschool.co.uk/earth/earthorigin.htm)
20 IAEA Report – France to Host ITER International Nuclear Fusion Project (June 28, 2005)
21 IAEA Report Focus on Fusion By : IAEA Staff
22 IAEA Report – Fusion : Energy of the Future By : Ursula Schneider IAEA Physics Section
World Atom Staff Report.
23 BBC News : France Gets Nuclear Fusion (Experimental) Plant.
24 World : France Chosen to Host Experimental Fusion Reactor Project By : Breffni O’Rourke(June 28, 2005).
25 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40203101&format=html (அணுப்பிணைவுச் சக்தி அவனியின் எதிர்கால மின்சக்தி)
26 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40303172&format=html (இருபது ஆண்டுகளில் அணுப்பிணைவுச் சக்தி ஆக்கத்தில் வளர்ச்சி)
27 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40508052&format=html (21 ஆவது நூற்றாண்டின் அணுப்பிணைவுச் சக்தி ஆற்றலுக்கு லேஸர் கதிர்கள்)
28 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40709271&format=html (கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப்பிணைவு மின்சக்தி நிலையம்)

+++++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) May 22, 2008

கதிரியக்கக் கழிவுகள் கண்காணிப்பும், நீண்டகாலப் புதைப்பும்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

நாம் எல்லோரும் புரிந்து கொள்ள முடியாத, மிகவும் சிக்கலான இந்தப் பூகோளத்தில் புகுத்தப்பட்டு இருக்கிறோம். மாபெரும் முழுவடிவக் கூண்டின் ஒரு சிறு பகுதியாக மனித இனத்தை எடுத்துக் கொண்டால், சூழ்வெளிக்கு என்ன என்ன தீங்கெல்லாம் நாம் விளைவிக்கிறோமோ, அவை யாவும் நம்மீதே மீண்டும் விழுகின்றன என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது ! ஏனென்றால் நாம் சூழ்வெளியின் இறுகிய பிடியிலிருந்து நம்மை என்றும் பிரித்துக் கொள்ளவே முடியாது !  கலியுகத்தில் உலக நாடுகள், தமது தொழிற்துறை உற்பத்திக் கழிவுகளைத் தம் குடிமக்கள் மீதே தெளித்துக் கொண்டு வருகின்றன.

டாக்டர் டேவிட் சுஸூக்கி (Dr. David Suzuki, Scientist & Environmentalist May 2005)

இருபதாம் நூற்றாண்டில் கதிரியக்கக் கழிவுகளுக்குப் புதைப்பிடம் அமைக்கும் முறைகள்  ஒருவித விஞ்ஞான உளவு ஆய்வில் கண்டு முடிவு செய்யும் நெறிகளாய் ஆகிவிட்டன.  பூமியில் வாழும் உயிரினங்களை விருத்தி செய்யும் நீர்வள, நிலவள, வாயுச் சூழ்வெளிக்கு இப்போதும் அல்லது எப்போதும் கேடு விளையக் கூடாது என்பதை விஞ்ஞான ஆராய்ச்சிகள்  மூலமாக முதலில் உறுதிப்படுத்திக் கொள்வது ஒரு முக்கியக் குறிக்கோளாகி  விட்டது !

body {margin:8px} .tr-field {font:normal x-small arial}கனேடிய டிசைன் குழுவினர் (Atomic Energy of Canada Ltd)

முன்னுரை: கடவுளால் படைக்கப்பட்ட மனித இனங்களும், உயிரினங்களும், பயிரினங்களும் எத்தனை, எத்தனை விதமான கழிவுகளைத் தினமும் உற்பத்தி செய்து வருகின்றன!  மனிதர் படைக்கும் தொழிற்துறைகள் மூலமாக எந்தப் பண்டத்தை உற்பத்தி செய்தாலும், எவ்வித முறையில் மின்சக்தி படைத்துப் பரிமாறி வந்தாலும் ஓரளவு அல்லது பேரளவுக் கழிவுகள் எச்சமாவதை யாவரும் தவிர்க்க முடியாது!  இருபதாம் நூற்றாண்டில் யந்திர, இராசயன, மின்சாரத் தொழிற் சாலைகள் உலகில் பலமடங்கு பெருகி, இரண்டாம் தொழிற்புரட்சி பூத வடிவெடுத்தது ! இரண்டாம் உலகப் போருக்குப் பின், அணு ஆயுதப் பந்தயப் போட்டி உலகெங்கும் மறைவாக நிகழ்ந்து, அணு ஆயுத வெடிப்புகளால் கதிரியக்கப் பொழிவுகளைப் பூகோள மெங்கும் பரப்பி விட்டன ! ஆனால் இனிவரும் எதிர்பாராத போரில் அபாயகரமான அணு ஆயுதங்களைக் கொண்டு போரிடும் இரு நாடுகளும் ஒன்றின் மீது ஒன்று வீசி விளையாடலாம் ! அல்லது மறைவாக உதவி புரியும் வல்லரசு நாடுகள் அணு ஆயுதங்களை விலைக்குக் கொடுத்து, வீசவிட்டு வேடிக்கை பார்க்கலாம் ! விடுதலையை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யும் வல்லரசுகள், தமது புதிய ஆயுதங்களைப் பிறர்மேல் சோதிக்கப் போர் தொடுத்துத், தாமே தமது வலையில் சிக்கிக் கொள்ளலாம் !

தொழிற்துறை கழிவுகளை முற்றிலும் நீக்கச் சபதம் பூண்டு மனித சமுதாயம் முன்வந்தால், அணுமின்சக்தி நிலையங்கள் நிரந்தரமாய் மூடப்பட வேண்டும் ! நிலக்கரி மின்சார நிலையங்கள் அனைத்தும் இழுத்து மூடப்பட வேண்டும். அநேக தொழிற் சாலைகளின் கதவுகளில் பூட்டுப் போட வேண்டும் ! ஆனால் அணு ஆயுத வல்லரசுகள் அவற்றின் பெருக்கத்தையும், சோதனைகளையும் உலகத்தில் முற்றிலும் நிறுத்தலாம் ! கைவசம் பதுக்கப் பட்டிருக்கும் அணு ஆயுதங்களின் தூண்டு விசையைத் துண்டித்துக் குண்டுகளை முடமாக்கலாம் ! மேலும் தொழிற்சாலைகளின் எச்சக் கழிவுகளைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும், வீரியத்தை வடிகட்டவும் நாம் முயலலாம் ! புகைபோக்கிகள் மூலம் வெளியேறும் விஷ வாயுக்களை வடிகட்டிச் சுத்தீகரிப்பு செய்யலாம் ! ஆற்றிலும், அணைகளிலும், கால்வாய்களிலும், ஏரிகளிலும், தடாகங்களிலும் கழிவுத் துணுக்குகள் புகாவண்ணம் நாம் கண்காணித்து வர முடியும் ! இவை அனைத்தையும் யார் தொடர்ந்து செய்ய வேண்டும் ? ஒவ்வொரு நாடும், நகரமும், ஊரும், கிராமமும், வாழும் குடிமக்களும் பொறுப்புடன், பொறுமையுடன் புரிய வேண்டிய அறப்போர் இது ! அப்பணிகளைக் கடைப்பிடிக்க அரசாங்கம் குடிமக்களுக்கு அறிவித்து, பயிற்சி அளித்து, சட்டமிட்டுக், கண்காணித்து, நெறியுடன் கண்டித்து வருவதைத் தவிர, மனித இனங்கள் தொழில்யுகத்தில் முன்னேறுவதற்கு வேறு வழியே யில்லை!

அணுமின்சக்தி உற்பத்தி விலை மலிவானதன்று !

அணுமின்சக்திபோல் விலை மிக்க மின்சக்தி எதுவும் இல்லை (No Power is as costly as Nuclear Power) என்றோர் புதுமொழி பழக்கத்தில் வந்திருக்கிறது !  அந்த கூற்றில் உண்மை இருப்பினும் அணுசக்தி உற்பத்தி செய்து பரிமாறி வருவதில் கிடைக்கும் பலாபலன்களும் ஒப்புநோக்கப்பட வேண்டும்.  முதலில் பேரளவு மின்சக்தியை அதன்மூலம் ஏராளமாக உற்பத்தி செய்ய முடிகிறது.  இரண்டாவது ஹிரீன்ஹவுஸ் வாயுக்கள் வெளியேற்றம் அணுமின் நிலையங்களில் முற்றிலும் கிடையாது.  அணுசக்தி உற்பத்தியும், பராமரிப்பும் செய்யும் போது, பணி புரிவோருக்கும், அண்டையில் வாழும் குடிமக்களுக்கும் கதிரடி படாது கதிரியக்கக் கண்காணிப்பும், பாதுகாப்பும் செய்ய நிதிச் செலவு மற்ற மின்சக்தி நிலையங்களை விட மிகையானது.  மேலும் 40 அல்லது 50 ஆண்டுகள் அணுமின் நிலையங்கள் இயங்கிய பிறகு அவை நிரந்தர நிறுத்தமாகி அடக்கமாகும் போதும் (Decommissioning Stage), அணுக்கழிவுகள் நிரந்தரமாகப் புதைக்கப்படும் போதும் அதிகப் பணம் செலவாகிறது !

ஆயினும் அணுமின் நிலையங்களால் ஏற்படும் பிற தொழில்வள விருத்திகள், மனிதருக்கு வேலை வாய்ப்புகள் ஆகியவை ஒப்புநோக்க சிந்திக்கப்பட வேண்டும்.  தமிழகத்தில் கூடங்குளம் இரட்டை அணுமின்சக்தி நிலையங்கள் 8000 மெகாவாட் மின்சாரம் பரிமாறும்.  கனடா டிரென்ட் பல்கலைக் கழகத்தின் பொருளாதரப் பேராசிரியர் டாக்டர் ஹாரி கிட்சென் 2007 ஆம் ஆண்டில் அமைக்கப் போகும் 4000 மெகாவாட் அணுமின் நிலையத்தின் பலன்களை எடுத்துக் காட்டுகிறார்:

1.  19,000 மானிட ஆண்டுகள் (person years) அணுமின் நிலையக் கட்டுமான வேலைகள்.  அதாவது 2000 நபர்கள் எட்டரை ஆண்டுகள் கட்டுமான வேலையில் ஈடுபடுவார்.

2.  116,000 மானிட ஆண்டுகள் அணுமின் நிலைய இயக்க வேலைகள். அதாவது  சுமார் 3000 நபருக்கு 40 ஆண்டுகள் இயக்க வேலைகள் அமையும்.

3.  நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆண்டுக்கு 200 மில்லியன் டாலர் பிராந்திய நிதிவள விருத்தி உண்டாகும்.  அணுமின் நிலையத்தின் ஆயுள் நீடிக்கப்பட்டு 60 ஆண்டுகள் வரை இயங்கலாம்.

4.  சொத்துக்கள் மூலம் முனிசிபல் வருமானம் ஆண்டுக்கு 3 மில்லியன் டாலர்.

5.  அணுமின் நிலையச் சாதனங்கள் உற்பத்தி, உபரிகள் தயாரிப்புத் தொழிற்துறைகள் விருத்தி, வேலை வாய்ப்புகள்.

இங்கிலாந்தில் அனுமானிக்கப்படும் கதிரியக்கக் கழிவுகள் (2007)

அணு உலைகளில் உண்டாகும் கழிவுகளின் மதிப்பீடை ஒப்பிடக் கீழ்க்காணும் மாதிரி அளவுகள் பிரிட்டன் அணுசக்தி நிறுவகங்களிலிருந்து எடுக்கப்பட்டது:

1.  உயர்நிலைக் கழிவுகள் : 2000 கி.மீடர்.

2. இடைநிலைக் கழிவுகள் : 350,000 கி.மீடர்.

3. தணிவுநிலைக் கழிவுகள் :  30,000 கி.மீடர்.

4. தீய்ந்த எரிக்கோல்கள் : 10,000 கி.மீடர்.

5. புளுடோனியம் : 4,300 கி.மீடர்.

6. யுரேனியம் : 75,000 கி.மீடர்.

கனடாவில் உண்டாகும் கதிரியக்கக் கழிவுகள்

கனடாவில் இயக்கத் தகுதி பெற்ற 22 வணிகத்துறை அணுமின் நிலயங்கள் கடந்த 30 ஆண்டுகளாக 2003 ஆண்டு முடிவு வரை 1.7 மில்லியன் தீய்ந்த எருக் கட்டுகளை [Spent Fuel Bundles] வெளியாக்கி யுள்ளன. ஒவ்வோர் ஆண்டும் அந்த அணுமின் உலைகள் சுமார் 85,000 தீய்ந்த எருக்கட்டுகளை உற்பத்தி செய்யும். இயக்க ஆயுள் எல்லை கடந்து அவை யாவும் காலாவதியாகும் போது, மொத்தம் 3.6 மில்லியன் எரிக்கழிவுக் கட்டுகள் சேரும் என்று மதிப்பிடப் படுகிறது. அணுமின் உலைத் தளங்களில் கதிரியக்கக் கழிவுகளைப் பாதுகாப்பாய்ச் சேர்த்து வைக்க, நீர்த் தடாகங்கள் எனப்படும் ‘நீர்நிலைச் சேமிப்பு’ [Wet Storage], காங்கீரிட் இரும்புக்கலன் எனப்படும் ‘வரண்ட சேமிப்பு ‘ [Dry Storage]  ஆகியவை தற்காலிகச் சேமிப்புக்கு அமைக்கப் பட்டுள்ளன. முதல் சேமிப்புத் தடாகத்தில் [Primary Storage Bay] தீய்ந்த எருக்கட்டுகள் 6 அல்லது 9 மாதங்கள் தங்கியும், அதற்குப் பிறகு இரண்டாம் சேமிப்புத் தடாகத்தில் [Secondary Storage Bay] 2 அல்லது 3 வருடங்கள் தங்கியும், தொடர்ந்து நீரோட்டத்தால் வெப்பசக்தி நீக்கப்பட்டு கண்காணிக்கப்படும். நீண்ட கால வரண்ட சேமிப்புக்கு 50 முதல்-100 ஆண்டுகள் வரை காங்கிரீட் கலன்களில் சேமிக்கப்பட வேண்டும். 2002 ஆண்டு கனடாவில் நிறைவேறிய அணுவியல் கழிவு புதைப்புச் சட்டப்படி [Nuclear Fuel Waste Act], அணுவியல் கழிவு மேற்பார்வை துறையகம்
[Nuclear Waste Management Organization (NWMO)] தோன்றி பணி செய்ய ஆரம்பித்தது.

வெளிவரும் தீய்ந்த கழிவுகளை நீர்த் தடாகத்தில் சேமித்து வைக்க, இரண்டு நீக்க முறைகளில் அவை பாதுகாக்கப்பட வேண்டும். முதலாவது: வெப்ப நீக்கம் [Heat Removal]. இரண்டாவது: கதிர்வீச்சு குறைப்பு [Radiation Reduction]. கழிவுகள் முதலில் சேமிக்கப்படும் நீர்த் தடாகம் அவ்விரு தேவைகளையும் பூர்த்தி செய்கிறது. அணு உலையிலிருந்து உடனே நீக்கப்படும் சூடான எருக்கட்டு சுமார் 10% வெப்பசக்தி உண்டாக்குகிறது. அந்த வெப்பத்தைத் தணிப்பது நீர்த் தடாகத்தில் இயங்கிவரும் நீரோட்டமாகும். அவ்விதச் சுற்று நீரோட்டம் வெப்பக் கடத்தி [Heat Exchangers] மூலமாக அனுப்பப்பட்டு, வடிகட்டுச் சாதனங்கள் [Filter Equipment] வழியாக ஓடி, பிளவுக் கழிவுகளின் வெப்பத்தையும் [Fission Product Delay Heat], கதிரிக்க வீரியத்தையும், துணுக்குகளையும் குறைக்கிறது. ஒரே நாள் தேக்கத்தில் 10% வெப்பசக்தி, 1% வெப்பசக்தியாக எருக்கட்டுகளில் தணிகிறது. ஓராண்டில் 0.1% ஆக வெப்பசக்தி குன்றுகிறது. அதாவது சராசரி 100 W வெப்பத்தை தீய்ந்த ஒரு காண்டு எருக்கட்டு [One CANDU Spent Fuel Bundle] ஓராண்டுக்குப் பிறகு வெளியாக்குகிறது! கழிவுகளின் கதிர்வீச்சுக்குப் போதிய கவசம் அளித்துக் கதிரியக்கத்தைத் தணிக்க, குறைந்தது 10 அடி [3 மீடர்] ஆழமுள்ள நீர்த்தடாகம் தேவைப்படும். நீர்க் கவச மில்லாத கதிரியக்கக் கழிவு முதலில் வீசும் கதிரடி [5000-6000 Rem/Hr (50-60 Sv/Hr)], சில நிமிடத் தாக்குதலில் ஒருவருக்கு மரண அளவு [Lethal Dose] தருகிறது! 50 ஆண்டுக்குப் பிறகு 1 Sv/Hr ஆகவும், 100 ஆண்டுக்குப் பிறகு 0.3 Sv/Hr ஆகவும், 500 ஆண்டுக்குப் பிறகு 0.001 Sv/Hr (100 mRem/Hr) ஆகவும் மிக மெதுவாகக் குறைகிறது! [Sv means Sievert Radiation Dose, 1 Sv=100 Rem]

1978 ஆம் ஆண்டில் கனடா அரசாங்கம், அண்டாரியோ மாநில அரசுக் குழுவினருடன் இணைந்து, நீண்டகால நிரந்தரப் புதைப்புக்கு, அணுவியல் கழிவுக் கண்காணிப்புத் திட்டத்தைச் [Nuclear Waste Management Program] சீராய் நிறைவேற்றியது. கனடா அணுவியல் துறையகம் [Atomic Energy Canada Ltd (AECL)] அதன் ஆய்வு, விருத்திப் பணிகளின் [Research & Development Tasks] பொறுப்பை ஏற்றுக் கொண்டது. AECL அம்முறையில் டிசைன் செய்து முடிவு செய்த அமைப்பு இதுதான்: 1600 முதல் 3600 அடி [500 முதல் 1000 மீடர்] ஆழமுள்ள கடினப் பாறைச் சுரங்களின் குகைப் பாதைகளில் காங்கீரிட் அரண்கள் அமைக்கப் பட்டு, கதிரியக்கக் கழிவுகள் நிரந்தரமாக நீண்ட காலச் சேமிப்பு செய்யப்படும். அத்திட்டம் 1994 அக்டோபரில் தயாரிக்கப்பட்டு, 1998 மார்ச்சில் கனடாவின் சூழ்வெளிக் காப்பகம் மக்களுடன் உரையாடி 2002 ஆம் ஆண்டில் திட்டத்திற்கு அனுமதி அளித்தது. அணுவியல் கழிவு அரண் அமைப்புத் துறையகம்  [Nuclear Waste Management Organization (NWMO)] அமைப்பாகி இயங்க ஆரம்பித்தது. கனடாவின் நிதி ஒதுக்கமான (8-11) பில்லியன் அமெரிக்கன் டாலர் தொகை (60-90) ஆண்டுகளுக்குப் பகுக்கப்பட்டு அளிக்கப்படும். அப்பணியில் உச்ச வேலை நடக்கும் போது சுமார் 1000 பேர் பணி செய்வார்கள்.

மூன்று விதமான கதிரியக்கக் கழிவுகள்

அணுமின்சக்தி உலைகள் இயங்கிவரும் போது, தொடர்ந்து கதிரியக்கக் கழிவுகள் விளைந்து வருகின்றன. கதிரியக்கத்தால் மனிதருக்கு தீங்குகள் விளைவதால் அவற்றைக் கவனமுடனும், பாதுகாப்புடனும், கண்காணிப்புடனும் கையாள வேண்டும். முதலில் கழிவுகளை வெளிவர வைத்து நீர்த் தடாகத்தில் முடக்கும் பணியாளிகள் பாதுகாக்கப் படவேண்டும். அடுத்து நிலையத்தைச் சுற்றி வாழும் பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும். மேலும் கதிரியக்க வாயுக்கள் அரணை விட்டு வெளியேறாமல், சூழ்வெளி சுத்தமாக இருக்க பாதுகாக்கப்பட வேண்டும். அதனால் அணுவியல் கழிவுகள் அனைத்தும் வெகு கவனமாகக் கட்டுப்பாட்டு நெறி முறைகளில் கையாளப்பட்டு, நிரந்தரச் சுரங்கங்களில் புதைக்கப்பட வேண்டும். அணு உலைகள் மூலமாக வெளியேறும் கதிரியக்கக் கழிவுகள் மூன்று தரத்தில் பிரிக்கப்படுகின்றன. வீரிய நிலை, இடைநிலை, கீழ்நிலை [High Level, Intermediate Level, Low Level] என்று மூன்று வகுப்பில் தனித்திடப்பட்டு சேமிக்கப் படுகின்றன. இக்கட்டுரையில் வீரிய நிலைக் கழிவுகளைப் பற்றி விளக்கம் தரப்படுகிறது. மற்ற இடைநிலை, கீழ்நிலைக் கழிவு சேமிப்பு முறைகளை நான் முன்பு திண்ணையில் எழுதிய கட்டுரைகளில் காணலாம் [கீழ்த் தகவல் குறிப்புகள்: 12, 13].

இருபதாம் நூற்றாண்டில் கதிரியக்கக் கழிவுகளுக்குப் புதைப்பிடம் அமைக்கும் முறைகள் ஒருவித விஞ்ஞான உளவு ஆய்வில் கண்டறியும் நியதிகளாய் ஆகி விட்டன. பூமியில் வாழும் உயிரினங்களுக்கு, செழிப்பான நீர்வள, நிலவளச் சூழ்வெளிக்கு இப்போதும் அல்லது எப்போதும் கேடு விளையக் கூடாது என்பதை விஞ்ஞான ஆராய்ச்சிகள் மூலமாக முதலில் உறுதிப்படுத்திக் கொள்வது ஒரு முக்கியப் பணியாகி விட்டது! அந்த முயற்சிகளில் ஈடுபடும் போது புதைப்பிடத்தில் நீண்ட கால பூதள-இரசாயன, அடித்தள நீரோட்ட இயக்கங்களால் [Geochemical & Hydrologic Behaviour] சூழ்மண்டலம் பாதிக்கப்படுமா என்று ஆழ்ந்து நோக்க வேண்டும். அவற்றைச் சோதனை செய்ய AECL ஓர் அடித்தள ஆய்வுக் கூடத்தை [Underground Research Laboratory] மானிடோபா மாநிலத்தின் தலைநகரான வின்னிபெக்கில் வெகு ஆழத்தில் உள்ள ஒரு சுரங்கக் குகையில் நிறுவகம் செய்துள்ளது..

நிரந்தர புதைப்பிடம் தேர்ந்தெடுப்பும், முடிவு அறிவிப்பும்

1998 ஆம் ஆண்டில் அணுவியல் கழிவுப் புதைப்புக் குழுவிற்கு [Nuclear Waste Management Organization] மூன்று வித சேமிப்பு முறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க, மூன்றாண்டுகள் தரப்பட்டன. புதைப்பிட முடிவு 2005 நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது.

1. கனடாவில் மூடப் பட்டிருக்கும் பாதாளச் சுரங்கக் கிடங்குகள் [Deep Underground in the Canadian Mines]

2. அணுமின் உலைத் தளங்களில் மேற்தள அமைப்புகள் [Disposal Sites Above-ground at Reactor Locations]

கனடா நாட்டு நடுவில் அமைக்கப்படும் பொதுவான புதைப்பிடம் [Common Centralized Disposal Area].

AECL கம்பெனி, மற்றும் அணுமின் சக்தி உற்பத்தியாளர்கள் முதலில் தரவேண்டிய மொத்த பணம்: 424 மில்லியன் அமெரிக்க டாலர். (அண்டாரியோ பவர் கம்பெனி: 400 மில்லியன்; குவெபெக் பவர் கம்பெனி: 16 மில்லியன்; AECL கம்பெனி: 8 மில்லியன்). மேலும் ஒவ்வோர் ஆண்டிலும் அந்தக் கம்பெனிகள் 2-100 மில்லியன் டாலர் தொகையும் அளிக்க வேண்டும்.

புரூஸ் தளத்தில் கீழ்நிலை, இடைநிலைக் கழிவுகளுக்குப் புதைப்பிடம்

அண்டாரியோ பவர் கம்பெனி [Ontario Power Generation (OPG)] புரூஸ் அணுமின்சக்தித் தளத்தில் தற்போது அமைந்துள்ள கழிவுச் சேமிப்புக் கூடத்தின் கீழே 2150 அடி [660 மீடர்] ஆழத்தில் பூதளக் குழிக் குகையில் [Geologic Repository] கீழ்நிலை, இடைநிலைக் கழிவுகளைச் சேமிக்கத் திட்டமிட்டுச் சுற்றுப்புற நகர மாந்தரிடம் உரையாடி விளக்கம் தந்து வருகிறது.

1. அருகில் ஹூரான் ஏரி [Huron Lake] உள்ளதால், நீரோட்டச் சீர்கேடுகள் நேராதவாறு இருக்க 2150 அடி ஆழத்தைத் தேர்ந்தெடுக்க நேரிட்டது.

2. மேலும் ஹூரான் ஏரியின் நீர் அடித்தள உயரம் குகைக்கு மேல் குறைந்தது 1300 அடி [400 மீடர்] உயரத்தில் இருக்கும்.

3. தேர்ந்தெடுத்த ஆழக்குகை அருகே உள்ள நிலத்து நீரின் உப்பளவு [Ground-water Salinity] கடல் நீரின் உப்பளவை விட மூன்று மடங்காக உளவு செய்யப் பட்டுள்ளது. அதாவது கடந்த ஒரு மில்லியன் ஆண்டுகளாக ஹூரான் ஏரிச் சுவைநீரும், குகை அடித்தள உப்புநீரும் கலந்திட வில்லை என்று அறியப் பட்டுள்ளது. அதனால் குகையில் புதைபடும் கதிரியக்கக் கழிவுகள் ஹூரான் ஏரியின் சுவைநீரில் கலக்க முடியாது என்பது உறுதியான சான்றாக கருதப்படுகிறது.

4. குகைப் பகுதியில் 450 மில்லியன் ஆண்டு வயதுடைய சுண்ணாம்புக் கல் மாதிரிகள் [ Lime-stone Samples] எடுக்கப்பட்டுச் சோதிக்கப்பட்ட போது நிலநடுக்க அமைதி நிலை பெற்றவை [Seismically Stable Condition] என்று காணப்பட்டன.

5. 450 மில்லியன் ஆண்டுகளாக ஏற்பட்ட பெருத்த காலநிலை மாறுதல்கள், பனியுகம் தாக்கிப் பரவியது, நில நடுக்கங்கள் போன்ற எவையும் பாறைகளின் ஒருமைப் பாட்டைச் சிதைக்க வில்லை.

6. அங்கிருக்கும் சுண்ணாம்புக் கல் ஆண்டுக்கு ஒரு மில்லி மீடர் நகர்ச்சி அடைந்து ‘தணிந்த நீர்க்கசிவுத் திரட்சி’ [Low Permeability] உள்ளதாக அறியப்பட்டது. அதாவது நீர்க்கசிவு நகர்ச்சி 1000 ஆண்டுகளில் ஒரு மீடர் நீளம் இருக்கும் என்று கணிக்கப்பட்டது! கழிவுகளுக்கு இது ஒரு முக்கிய கவசம். ஏனென்றால் புதைபடும் கழிவுகளின் நகர்ச்சி ஒடுக்கம் இதனால் உறுதிப் படுகின்றது.

7. 200 மீடர் உயரமுள்ள தணிந்த நீர்க்கசிவு திரட்சி உள்ள களிமண் தட்டின் [Shale] மீது சுண்ணாம்புக் கல் மேலடுக்கு இருப்பது, கதிரியக்கக் கழிவுகளுக்கு கூடுமான அரணாக அமைந்திருக்கிறது.

இந்தியாவில் அணுவியல் கழிவுகளின் நீண்ட காலப் புதைப்பு ?

இந்தியாவில் இயங்கிவரும் பல அணுமின் நிலையங்களும், அணுவியல் ஆய்வு உலைகளும், வேகப் பெருக்கி உலைகளும், அணு ஆயுதங்களுக்காகப் பயன்படும் தீய்ந்த எருக்கோல் சுத்தீகரிப்பு இரசாயனத் தொழிற்சாலைகளும் இராப்பகலாய் டன் கணக்கில் கதிரியக்கக் கழிவுகளைப் பெருக்கி வருகின்றன. அவற்றை எல்லாம் பாரதம் பாதுகாப்பாக அடக்கம் செய்ய, நீண்ட காலப் புதைப்பிடத்தை எங்கே, எப்படி, எப்போது நிறுவப் போகிறது என்பதை வெளிப்படையாக மக்களுக்கு அறிவிக்காமலே இருக்கிறது.  அவற்றின் எண்ணிக்கையை அரசாங்கம் ஒவ்வோர் ஆண்டும் பொதுமக்களுக்கு அறிவிக்க வேண்டும்.

இந்தியா கனடாவின் காண்டு கனநீர் அணுமின் உலை டிசைன்களை வாங்கிப் பன்மடங்கு அணுமின்சக்தி உற்பத்தியைப் பெருக்கினாலும், கனடாவின் கதிரியக்கக் கழிவுப் புதைப்பு விதி முறைகளை ஏனோ பின்பற்ற வில்லை ! 2003 நவம்பரில் கனடாவின் அணுவியல் கழிவுப் புதைப்புக் குழுவினர், அனைத்து அணு உலைகளின் தீய்ந்த எருக்கட்டுகளின் மொத்த எண்ணிக்கையை வெளிப்படையாக அறிவித்து எப்போது, எங்கே, எவ்விதம், யார் பொறுப்பில் நிறைவேறப் போகிறது என்று அச்சிட்டு, பதிப்புகளை இலவசமாக அளித்து, ஊர் மக்களிடம் விவாத மன்றங்களில் வாதித்து உடன்பாடைப் பெற்றுக் கொண்டது.  ஆனால் உலகப் பெரும் குடியரசான பாரத தேசம், அணுவியல் கழிவுப் புதைப்பு விதி முறைகளில் அவ்விதம் இதுவரை நடந்து கொள்ளவில்லை என்பது வருந்தத் தக்க வரலாறு !

***************

தகவல்:

1. Bruce A Restart, Bruce County Environmental Assessment, Bruce Power Report [Dec

2004]

2. Bruce Power Community Update [March 2004]

3. President & CEO Report, Bruce Power [www.brucepower.com (2004)]

4. Cameco (Uranium) Corporation Report [March 31 2005]

5. New Fuel Project, Bruce County Environmental Assessment Report [July 2004]

6. The Future Management of Canada ‘s Used Nuclear Fuel [Nuclear Waste Management

Organization (Report Nov. 2003)]

7. Deep Geologic Repository Proposal, Long-term Management of Low & Intermediate

Waste at Western Waste Management Facility [Fall 2004]

8. Update on Ontario Power Generation ‘s Proposed Deep Geologic Repository

[Kincardine News (May 4, 2005)]

9. Ontario Power Generation Western Waste Management Facility (April 2005)

10 Summary of the Environmental Impact Statement on the Concept of Disposal of

Canada ‘s Nuclear Fuel Waste By: Atomic Energy of Canada Ltd (AECL Report, 1994)

11 Canadian Geographic Nuclear Reactor, Environmental Issue: Nuclear Resurrection Article

By: Elaine Dewar (May 2005).

12 http://www.thinnai.com/science/sc0724031.html [திண்ணைக் கட்டுரை (ஜூலை 24, 2003)]

13 http://www.thinnai.com/science/sc0802032.html [திண்ணைக் கட்டுரை (ஆகஸ்டு 1, 2003)]

14.  http://www.npcil.nic.in/index.asp [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]

15. http://pib.nic.in/release/release.asp?relid=20878 [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]

16. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
[Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]

17.  World Nuclear Association – WNA Radiological Protection Working Group – RPWG (Official List – July 20, 2006)
http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm
18. World Nuclear Association – WNA Waste Management and Decommissioning Working Group – WM&DWG
(Official List – July 25, 2006)  http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

19. http://www.candu.org/npcil.html [Indian Heavywater Nuclear Power Plants]

20. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

21. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

22. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html Letter By R. Bala (August 9, 2007)

23. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp [World Association of Nuclear Operation Website]

24 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)

25  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40504291&format=html (பாரதத்தின் பூத அணு
மின்சக்தி நிலையங்கள்)
26  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40409094&format=html (இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் அணுவிலிருந்து மின்சக்தி)

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] October 25, 2007

கதிரியக்கம், கதிரியக்க விளைவுகள், கதிரியக்கப் பாதுகாப்பு முறைகள்

cover-image-radioactivity.jpg

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

“அகலாது அணுகாது தீக்காய்வார் போல”
நுகராது வாழ்தல் அறிவு.

அணுவின் உட்கருப் பரமாணுக்களைப் புலன்கள் உணராது போயினும் அவை புரிந்திடும் வினைத் திரிபுப் பலன்களைக் காண முடிகிறது!  அண்ட வெளியில் விண்மீன்களின் வடிவ மாற்றங்களைத் தூண்டி விடுபவை, பரமாணுக்கள்!  பூ மண்டலத்தின் சூழ்நிலையைப் பாதித்து மாற்றி விடுபவை, பரமாணுக்கள்!  நாம் உட்பட வாழும் உயிரினங்கள் அனைத்தும் இயற்கைக் கதிரியக்கத்தால் எப்போதும் தாக்கப் படுகின்றன!

விக்டர் கில்லிமின் [Victor Guillemin]

கதிரியக்கம் தாக்காது மாந்தரைக் காக்க முடியுமா?

உலகில் கதிரியக்கமே படாத, கதிர்ப் பொழிவுகளை இதுவரை நுகராத, மருத்துவச் சாலைகளில் கதிர்வீச்சில் உடல்நலம் ஆராயப் படாத, புற்று நோயிக்குக் கதிரூட்டிக் குணப்படுத்தப் படாத, இயற்கைக் கதிரியக்கத்தில் என்றுமே தாக்கப்படாத மாந்தர்கள் எங்கேயாவது வாழ்ந்து வருகிறார்களா ?  நாம் எல்லோருமே ஏதாவது ஒரு வழியில் கதிரியக்கத்தின் பாசக்கயிற்று வலையில் கட்டப் பட்டு அறிந்தோ, அறியாமலோ மாட்டிக் கொண்டிருக்கிறோம்!  கதிரியக்கத்தின் கைவசப் படாமலே காலம் தள்ளி விடலாம் என்று கனவு காண்பவர், அதற்கு அஞ்சி ஒளிபவர் கண்களைத் திறந்து மெய்யுலகுக்கு வாருங்கள் !

கதிரியக்கத்தைக் கண்களால் காண முடியாது!  மூக்கால் நுகர முடியாது!  உடம்புத் தோலால் உணரவும் முடியாது!  அறிந்தோ, அறியாமலோ உடம்புக்குள் நுழைந்து, அது கரையான் போல் உறுப்புகளைச் சிதைக்கும் போதுதான், அதன் தாக்குதலைப் புரிந்து கொள்ள முடியும்!  கற்கால மனிதன் முதன் முதலில் தீயின் கோரக் குணங்களை அறிந்து கொண்டது போல், நமக்கு உதவும் கதிரிக்கத்தின் தீவிரப் பண்புகளை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும் !

இயற்கைக் கதிரியக்கம் கண்டு பிடித்து நோபெல் பரிசு பெற்ற மேரி கியூரியும், செயற்கைக் கதிரியக்கம் உண்டாக்கி நோபெல் பரிசு பெற்ற அவரது புதல்வி ஐரீன் கியூரியும் தீவிரக் கதிரடி வாங்கி புற்று நோய் தூண்டிய இரத்த நோயில் [Leukemia] முதன் முதல் கதிரியக்க தீங்குக்குப் பலி யானவர்கள்!  அது போல் நூறாண்டுகளுக்கு முன்பு சுரங்கங்களில் வேலை பார்த்த தொழிலாளிகள் பலர் புற்று நோயில் மரண மடைந்ததற்கு, தாதுக்களில் வெளியேறிய கதிர்வீச்சுகளே காரணம் !

பலனும், பாதகமும் ஒருங்கே கொண்ட கதிரியக்க ஏகமூலங்கள் கடந்த 50 ஆண்டுகளாக உலகெங்கும் மருத்துவச் சாலைகள், தொழிற் கூடங்கள், விஞ்ஞானப் பொறியியல் ஆய்வுத் துறைகள், மின்கலன்கள் [Batteries] உற்பத்தி, வேளாண்மை ஆய்வுச் சாலைகள், அணு உலைகள் போன்ற இடங்களில் பயன் பட்டு வருகின்றன!  கோடான கோடி ஆண்டுகளாய் மலைப் பிரதேசங்களில் வாழையடி வாழையாக வாழ்ந்து வரும் மலை யினத்தவர், பலவிதப் பின்புல இயற்கைக் கதிர்வீச்சால் [Background Natural Radiation], பல ஆண்டுகள் சிறுகச் சிறுகத் தாக்கப் பட்ட போதிலும், அவர்களுக்கு எவ்வித நோயும் வந்ததாகத் தெரிய வில்லை!  “அகலாது அணுகாது தீக்காய்வார் போல”, கவசங்களை அணிந்து கொண்டு, நமக்குப் பயன் அளிக்கும் கதிரியகத்தைக் கட்டுப் படுத்திக் கையாளுவதைத் தவிர வேறு வழியில்லை !

கதிரியக்கம் தாக்கும் உலோகத் தனிமங்கள் எங்குள்ளன ?

இயற்கையாகவே நம்மைச் சுற்றி வாழும் இடத்திற்கு ஏற்றபடி, எல்லாத் திசைகளிலும் உலவி உள்ள “பின்புலக் கதிரியக்கம்” [Background Radiation] ஓரளவு எப்போதும் நம்மைத் தாக்கி வருகிறது!  விண்வெளியிலிருந்து விண்மீன்கள் உமிழும் அண்டவெளிக் கதிர்கள் [Cosmic Rays] நம்மை எப்போதும் தாக்குகின்றன!  நாமுண்ணும் உணவு, குடிக்கும் நீர், நுகரும் காற்று, விளையும் பயிர்கள், நடமிடும் தளங்கள், உல்லாச மலைச் சிகரங்கள், சுரங்கப் பண்டங்கள் ஆகிய எல்லாவற்றிலும் மிகச் சிறிய அளவு கதிர்வீச்சு இருக்கவே செய்கிறது!  பூமியில் கிடைக்கும் யுரேனியம், தோரியம், ரேடியம், போலோனியம் போன்ற நிலையற்ற மூலகங்கள் [Unstable Elements], அணு உலைகளில், விரைவாக்கி யந்திரங்களில் ஆக்கப்படும் புளுடோனியம்-239, யுரேனியம்-233 போன்ற செயற்கை மூலகங்கள், ஏகமூலங்கள் கதிரியக்கம் எழுப்புபவை.

பொது நபர்கள் வாங்கும் கதிர்வீச்சில் 80% பின்புலக் கதிரியக்கமே மிகுதிப் பங்கு பெறுகிறது!  வீட்டின் கீழ்த்தளப் பிளவுகளிலிருந்து கசிந்து எழும் ரேடான் வாயு [Radon Gas] தீவிரக் கதிர்வீச்சை உண்டாக்குகிறது!  ரேடான் வாயுவைக் காண முடியாது! அதை உணர முடியாது !  நுகரவும் முடியாது!  வட அமெரிக்க வீடுகள் எல்லாம் குளிரைத் தடுக்கக் காற்றடைப்பு இல்லங்களாய்க் கட்டப் படுவதால், கசியும் ரேடான் வாயு வெளியேறாமல் வீட்டுக் குள்ளே சுற்றிக் கொண்டிருக்கிறது!  ரேடான் தேய்வில் வெளிவிடும் ஆல்·பா துகள்கள், அதைச் சுவாசித்து உட்கொள்ளும் வீட்டு நபர்கள் செல்களைச் சிதைத்துப் புப்புசங்களில் புற்று நோயை உண்டாக்கும் !

இருபதாம் நூற்றாண்டில் எண்ணற்ற புதிய கதிர்வீச்சு சுரப்பிகள் [Radiation Sources] தோன்றின!  எக்ஸ்ரே ஆய்வுச் சாதனம், கதிர்ப்படவியல் [Radiography], அணு உலைகள், விரைவாக்கி யந்திரங்கள், அணு உலை விபத்துகள், அணு ஆயுத வெடிப்புகள் சோதனைகள், அணு உலை எரிக்கோல்கள் தயாரிக்கும் யுரேனியம், தோரியம், புளுடோனிய தொழிற்சாலைகள், அணு ஆயுதத் தயாரிப்புக் கூடங்கள் போன்ற ஏராளமான துறைகள் உலகெங்கும் காளான்கள் போல் தோன்றிச் சூழ் மண்டலத்தில் கதிரிக்கத் தீங்குகளும், நோய்களும் பெருகிக் கொண்டே போகின்றன!  மனிதன் செயற்கையாக உண்டாக்கும் கதிர்வீச்சால் 18% பங்கு கதிரியக்கத்தை உயிரினங்கள் பெறுகின்றன!

கதிர்வீச்சு, கதிரியக்கம் என்றால் என்ன ?

ஜெர்மன் விஞ்ஞானி வில்லியம் ராஞ்சன் 1895 ஆம் ஆண்டு ஊடுறுவும் எக்ஸ்ரே கதிர்களைக் கண்டு பிடித்தார்!  அவரைப் பின் தொடர்ந்து, 1896 ஆம் ஆண்டில் ·பிரென்ச் விஞ்ஞானி ஹென்ரி பெக்குவரல் பூமியில் கிடைக்கும் தாது யுரேனியம் கதிர் வீசுவதைக் கண்டு அதற்குக் “கதிர்வீச்சு” [Radiation] என்று பெயரிட்டார்.  அடுத்து அவரைப் பின் தொடர்ந்த மேரி, பியரி கியூரி தம்பதிகள் ரேடியம், போலோனியம் ஆகியவை யுரேனியத்தை விடத் தீவிரக் கதிர் வீசுவதைக் கண்டு பிடித்து, “கதிரியக்கம்” [Radioactivity] என்று பெயரிட்டனர்!  அணுவியல் விஞ்ஞானத்தில் புரட்சி செய்த மகத்தான அந்த கண்டு பிடிப்புக்கு, அம்மூவரும் 1903 இல் நோபெல் பரிசு பெற்றார்கள்!  1934 இல் பெற்றோரைப் பின்பற்றிச் செயற்கைக் கதிர் ஏகமூலங்களை [Artificial Radioisotopes] உண்டாக்கி, அவரது புதல்வி ஐரீன் கியூரி அவையும் தேய்ந்து கதிர் வீசுவதைக் கண்டு பிடித்தார்!  அதற்குப் பிறகு பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் சாட்விக் 1932 ஆம் ஆண்டு அணுக்கருவினுள் இருக்கும் நியூட்ரான் பரமாணுவைக் கண்டு பிடித்து மற்றும் ஓர் புரட்சியை உண்டாக்கினார்!  ஐரீன் கியூரியும், ஜேம்ஸ் சாட்விக்கும் அவரது அரிய சாதனைகளுக்கு நோபெல் பரிசு அளிக்கப் பட்டனர்!

இயற்கையில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட மூலகங்கள், அவற்றின் ஏகமூலங்கள் [Elements & Isotopes] கதிர்வீசிப் பளு குறைந்து, குறைந்து தேய்வடைகின்றன.  அத்துடன் அணு உலைகளிலும், விரைவாக்கி யந்திரங்களிலும் [Accelerators] செயற்கையாக 200 மேற்பட்ட மூலகங்களும், ஏகமூலங்களும் உண்டாக்கப் பட்டு, அவ்விதமே அவையும் தேய்ந்து கதிர் வீசுகின்றன.  கதிர் மூலகங்களும், ஏகமூலங்களும் உமிழும் கதிர்வீச்சில் ஆல்·பாத் துகள், பீட்டாத் துகள், காமாக் கதிர்கள் [Alpha Particle, Beta Particle, Gamma Rays] என்பவைச் சேர்ந்தோ, அன்றித் தனித்தோ எழுகின்றன!  அவற்றுடன் அணுக்கருவின் உள்ளே இருக்கும் நியூட்ரான் பரமாணுவும், செயற்கையாக உண்டாக்கப் படும் எக்ஸ்ரே கதிர்களும் கதிரியக்கம் புரிபவை!  அவற்றில் ஊடுறுவும் திற முடைய எக்ஸ்ரேயும், தீவிர சக்தி கொண்ட காமாக் கதிர்களும் மின்காந்த அலைகள் [Electro magnetic Waves] என்று அறியப் பட்டன.  ஆல்·பா, பீட்டா, நியூட்ரான் ஆகிய மூன்றும் வெறும் துகள்கள் [Particles].  இங்கு விளக்கப் படும் துகள்கள், கதிர்கள் யாவும் மின்னிகளை ஆக்கும் கதிர்வீச்சுகள் [Ionizing Radiations].  மேலும் அவை யாவும் உயர் சக்திக் கதிர்வீச்சுகள் [High-energy Radiations] எனப்படுபவை.  சூழ் மண்டலத்தில் நிரம்பியுள்ள காற்றையும், நீரையும், மண்ணையும் நாச மாக்குவது, கதிரியக்கம்!  முளைக்கும் பயிரினங்களைச் சிதைப்பது, கதிரியக்கம் !  வாழும் மாந்தருக்கும், உயிரினங்களுக்கும் தீங்குகளை விளைவிப்பது கதிரியக்கம்!

கதிர்வீச்சுகளின் போக்கும், தடுப்புக் கவசங்களும்

நேர் மின்கொடையுள்ள [Positive Charge] ஆல்ஃபா அணுக்கரு இரு புரோட்டான், இரு நியூட்ரான் கொண்டு, மிகையான பளுக் கொண்டதால், மனிதத் தோலைக் கடக்க முடியாது.  ஒரு தாள் காகிதம் அதைத் தடுத்து நிறுத்தி விடும்!  ஆனால் மூக்கின் வழியாகவோ, வாய் மூலமாகவோ ஆல்ஃபாத் துகள், மனித உடம்புக்குள் நுழைந்து விட்டால், அது பெருந் தீங்கிழைக்கும் !

வேகமாய்ப் பாய்ந்து செல்லும் பீட்டாத் துகள், அணுக்கருவைச் சுற்றி வரும் எதிர் மின்கொடை யுள்ள [Negative Charge] ஓர் எலக்டிரான்!  அவை மனிதத் தோலுக்குள் நுழைந்து விடும் சக்தி பெற்றவை!  தாளைக் கடந்து செல்லும் பீட்டாவை, ஒரு தகடோ, பலகையோ தடுத்தி நிறுத்தி விடும் !  பீட்டாத் துகள்கள் வாய், மூக்கு வழியாக மனித உடம்பை அண்டி விட்டால், தீங்குகள் உண்டாக்கும் !

ஊடுறுவும் சக்தி மிகுந்த காமாக் கதிர்களைத் தடுக்க ஈயத் தகடோ அல்லது தடித்த காங்கிரீட் சுவரோ தேவைப் படுகிறது!  எல்லாக் கதிர்வீச்சுகளிலுல் காமாக் கதிர்களே தீவிரத் தீங்குகளை மனித இனத்துக்கும், உயிரினத்துக்கும் விளைவிக்கின்றன!  கதிர்வீச்சுத் துணுக்குகள் மூக்கு, வாய் வழியாகச் சென்று உடம்பினுள் ஒட்டிக் கொண்டால், செல்கள் சிதைக்கப் பட்டு புற்று நோய் உண்டாகக் காரண மாகிறது !

எக்ஸ்ரே கதிர்கள், மருத்துவச் சாலைகளில் செயற்கை முறையில் உண்டாக்க படும் மின்காந்த அலைகள். பொதுவாக அவற்றை நிபுணர்கள் அளவாகக் கையாளுவதால், தவறுகள் ஏற்பட்டு உடம்பில் அளவு மீறிச் செலுத்துதல் என்பது குறைந்த எண்ணிக்கைச் சம்பவங்களே !

நியூட்ரான்கள் அணு உலைகளிலும், அணுப்பிளவு விளைவுகளிலும், அணு ஆயுத வெடிப்புகளிலும் வெளியேறும் துகள்கள்.  நியூட்ரான் மின்கொடை யில்லாத [Neutral Charge] பரமாணு !  அவை உடம்பை ஊடுறுவும் போது, உடம்பிலுள்ள ரசாயனப் பொருட்கள் தாக்கப் பட்டுக் கதிரியக்கத்தை எழுப்பி, அடுத்துக் கேடுகள் விளையலாம் !

பாதுகாப்பு அளவுக்கு மீறிய கதிரடியால் விளையும் தீங்குகள்:

முதன் முதல் இயற்கைக் கதிரியக்கம் கண்டு பிடித்து நோபெல் பரிசு பெற்ற மேரி கியூரியும், செயற்கைக் கதிரியக்கம் உண்டாக்கி நோபெல் பரிசு பெற்ற அவரது புதல்வி ஐரீன் கியூரியும் தீவிரக் கதிரடி வாங்கி புற்று நோய் தூண்டிய இரத்த நோயில் [Leukemia] முதன் முதல் கதிரியக்க தீங்குக்குப் பலி யானவர்கள்!  நூறாண்டுகளுக்கு முன்பு சுரங்கங்களில் வேலை பார்த்த தொழிலாளிகள் பலர் புற்று நோயில் மரண மடைந்ததற்கு, தாதுக்களில் வெளியேறிய கதிர்வீச்சுகளே காரணம்!

அண்டவெளிக் கதிர்கள், பொட்டாஸியம்40, ரேடான் வாயு ஆகியவற்றால் இயற்கையாகப் பெறும் கதிரியக்கம்: 200-300 m.rem. [milli rem. 100 rem = 1 sievert].

அணு ஆயுதச் சோதனை கதிர்ப் பொழிவுகள்: 1.0 m.rem.

உடல் நல மருத்துவ ஆய்வுகள்: 50 m.rem.

வீட்டுச் சாதனங்கள் [புகை உளவிகள், ஒளிக் கடிகாரங்கள்]: 2.0 m.rem.

அணு உலைத் தொழிலாளி: ஆண்டுக்கு 200-300 m.rem.

பொதுவான இயற்கைப் பின்புலக் கதிர்வீச்சால் பெறும் 200-300 m.rem கதிரடியால், 10,000 பேரில் ஒரு நபருக்குப் புற்று நோய் வரலாம்!

ஒரு நபரை 10 rem கதிரடி ஒரே சமயம் தாக்கினால், 1000 இல் 1 நபருக்குப் புற்று நோய் வரலாம்! [மற்ற நச்சுப் பொருள்களால் புற்று நோயில் தாக்கப் படுபவர், 1000 இல் 160-200 பேர்கள்].
100 rem கதிரடி வாங்கும் நபர்கள் வாந்தி மயக்கம் அடைவர்.  அவர்கள் 1000 பேரில் 10 பேர் அடுத்த ஆண்டே புற்று நோயில் தாக்கப் படுவார்!
300-600 rem கதிரடி பெறுவோர் சில மணி நேரத்திலே வாந்தி மயக்க மடைந்து, இரத்த செல்கள் பாதிப்பை அடைவர்!  ஓரிரு வாரங்களில் சிலர் மரண மடைவர்!  மருத்துவச் சிகிட்சை மரண எண்ணிக்கையைக் குறைக்கலாம். 450 rem கதிரடி பெற்றவர்களில் 50% நபர்கள் இறந்து போவார்!
1000 rem வாங்கிய நபர்கள் உடனே நோய்வாய்ப் பட்டு, மருத்துவச் சிகிட்சை அளிப்பினும் சில வாரங்களில் இறந்து போவார்!
5000-10,000 rem கதிரடி வாங்குவோர் உடனே மாண்டு போவார்!

கதிரியக்க தாக்குதலால் மனிதருக்கு விளையும் தீங்குகள்!

கதிர்வீச்சுகளால் நேரும் தீங்குகளை இரு வகையாகப் பிரிக்கலாம்!  ஒன்று உடல் விளைவு [Somatic Effect]; மற்றொன்று சந்ததி மூலவிகள் விளைவு [Genetic Effect].  உடல் விளைவுகளில் சோர்வு, வாந்தி, மயக்கம், தலை மயிர் உதிர்தல், புற்று நோய், அல்லது மரணம் ஆகியவை 1000 rem கதிரடி வாங்கிய மாந்தருக்கு நேர்ந்திடலாம்!

கதிர்வீச்சுத் துணுக்குகள் மனித உடலுக்குள் நுழைந்து செல்களை மின்னிகளாக்கி [Ionizing Body Cells] பாதிக்கின்றன.  சில சமயம் உடம்பே பழுதைச் சரிப்படுத்துகிறது!  பழுதுகள் தீவிர மானால் உயிரியல் தீங்குகள் [Biological Damages] பெருகும்!  கதிரியக்கத் துணுக்குகளின் அரை ஆயுளுக்கு [Half Life (Time taken to become half by Decay Process)] ஏற்ப, அவை நீண்ட காலங்கள் தீங்கு விளவிக்கலாம்!  அல்லது குன்றிய காலம் வரைத் துன்புறுத்தலாம்!

அணு உலைகளிலும், அணு ஆயுத வெடிப்புகளிலும் வெளிவரும் ஐயோடின்-131 ஏகமூலத்தின் [Isotopes] அரை ஆயுள்: 8 நாட்கள்!  ஸ்டிரான்சியம்-90 இன் அரை ஆயுள்: 29 ஆண்டுகள்!  சீஸியம்-137 இன் அரை ஆயுள்: 30 ஆண்டுகள்!  இவற்றில் ஸ்டிரான்சியம்90 உடம்பின் எலும்பைத் தேடி அங்கு போய் குடி கொண்டு  அதைச் சிதைக்கிறது!  ஐயோடின்-131 தொண்டையில் உள்ள தைராய்டு சுரப்பியைப் பற்றிக் கொண்டு பாதிக்கிறது!  சீஸியம்-137 உடம்பில் பல்லாண்டு காலம் ஒட்டிக் கொண்டு புற்று நோய் உண்டாக்குகிறது! இவற்றை உடம்பிலிருந்து அகற்றுவது மிகவும் கடினமான செயல்!

ஆனால் இதற்கு முரணாகக் கதிர்களால் மூலவிகள் துண்டிக்கப்படும் [Genes Mutations] போது, தாக்கப் பட்டோருக்குப் பிறக்கும் சந்ததிகள் பாதகம் அடைகின்றன!  ஹிரோஷிமா, நாகசாகியில் மிகையான கதிரடி வாங்கியோர் சந்ததிகள் பாதிக்கப் படவில்லை!  ஆனால் குறைவான அளவில் கதிரடி பட்டோரின் சந்ததிகள் அங்க ஈனமுடன் பிறந்துள்ளன!  புற்று நோய் வருவதும், சந்ததிப் பாதிப்புகளும் அங்கு மிங்கும் எங்கோ நிகழும், ஒழுங்கற்ற [Random] விளைவுகளே!  கதிரடி அளவுகள் அதிக மாகும் போது, அவ்விளைவுகளின் எண்ணிக்கையும் மிகைப்படுகிறது!

செர்நோபிள் அணு உலை விபத்தில் பரவிய கதிரியக்கப் பொழிவுகள்

1986 ஏப்ரல் 26 ஆம் தேதி சோதனையின் போது விபத்தில் வெடித்த செர்நோபிள் ரஷ்ய அணு உலை வெளியாக்கிய கதிர்ப் பொழிவுகள் நார்வே, சுவீடன், பிரிட்டன் நாடுகளில் பரவி, மற்றும் பல்லாயிரம் மைல் கடல் கடந்து, கனடாவிலும் அதன் கதிரியக்கம் உளவின் போது அறியப்பட்டது!  நார்வேயில் வாழும் ரெயின்டியர் மான்கள், கனடாவில் சுற்றும் கரிபு மான்கள் ஆகியவற்றின் இறைச்சியைத் தின்றவர் உடம்பில் கதிரியக்கம் முதன் முதலில் கண்டு பிடிக்கப் பட்டது!  அணு உலை விபத்தில் யுரேனியம் எரிக்கோல்கள் எரிந்து உருகி, ஏராளமான அளவு கதிர்வீச்சு உலகெங்கும் பரவி விட்டது!  மூன்று மைல் உயரத்தில் எழும்பிய கதிரியக்க முகில், காற்றில் கலந்து சூழ் மண்டலத்தில் நஞ்சைப் பரப்பி விட்டது!  20 மைல் சுற்றளவில் வாழ்ந்த 135,000 மக்கள் ராணுவ பஸ்களில் ஏற்றப் பட்டு வேறோர் ஊரில் குடிபுக ஏற்பாடானது!  ஓரிரு நாட்களில் 31 மாந்தர் மாண்டனர்!  அணு உலைக் கருகில் வாழ்ந்த 700,000 மக்கள் கதிரியக்கத்தால் தாக்கப் பட்டு, அடிக்கடி ஒழுங்காகச் சோதிக்கப் பட்டு வருகிறார்கள்! அவர்களில் மூன்றில் ஒரு பங்கு சிறு குழந்தைகள்!

கதிர்வீச்சுக் குறைப்பு! கதிர்வீச்சுப் பாதுகாப்பு!

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய உயிரினங்கள், மனித இனங்கள் இயற்கையில் பரவிய கதிர்வீச்சுக் கடலில் வாழையடி வாழையாய் நீந்தி வந்து, இன்னும் அவற்றின் சந்ததிகள் தொடர்கின்றன!  கதிரியக்கம் என்பது, இயற்கையாகவே மனித வாழ்க்கையுடன் பின்னிக் கொண்ட, தவிர்க்க முடியாத சூழ்நிலை  நிகழ்ச்சி யாகும்!  மனிதர் படைத்த அணு உலைகளும், அணு ஆயுதங்களும் நம் அருகில் இருந்து கொண்டு பல்லாண்டுகள் பயமுறுத்தி வருவதை யாராலும் தடுக்க முடியாது!  ஆனால் மனித இனம், உயிரினம், பயிரினம் கதிரியக்கத் தீங்குகளிலிருந்து உறுதியாகப் பாதுகாக்கப் பட வேண்டும்!  அவை நுகரும் காற்றில் கதிர்வீச்சுத் துணுக்குகள் கலக்காமல் தூயதாக அமைந்திட யாவரும் ஒருங்கே பாடுபட வேண்டும்!

அதற்குக் கட்டுப்பாடுகள், வழி முறைகள் உண்டா?  ஆம், அகில நாட்டு அணுசக்திப் பேரவை [I.A.E.A International Atomic Energy Agency, Vienna, Austria] தயாரித்துள்ள கட்டுப்பாடுகள் பல உள்ளன!  அவற்றைக் கடைப் பிடிக்க வழி முறைகள் உள்ளன! ஆனால் அவை போதா!  கதிர்வீச்சுக் கழிவுகளைக் காங்கிரீட் சமாதிகளில் புதைக்கலாம்!  கதிர்வீச்சு உயிரினங்களைச் சிதைக்கா திருக்க கவசங்களை [Radiation Shieldings] அணிந்து கொள்ளலாம்!  சிறுவர், சிறுமியர், கர்ப்பக் கரு கதிர்வீச்சுப் படாமல் மறைந்து நிற்கலாம்!  “அகலாமல், அணுகாமல் தீக்காய்வார் போல” என்று திருவள்ளுவர் கூறியது போல், மாந்தர் நெருப்புடன் பழகுவது போன்று கதிர்வீச்சுடனும் தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் நேரிடுகிறது!  மனிதர் ஆக்கிய கதிரியக்க விளைவுகளின் தீங்குகளைக் கட்டுப் படுத்திப் பொது மக்களைப் பாதுகாக்க மத்திய அரசாங்கம், மாநில அரசாங்கம், நகர ஆட்சி நிறுவனம், அணுவியல் துறையகம், கல்லூரிகள், பள்ளிக் கூடங்கள், கோயில் நிர்வாகங்கள் போன்றவை பொது மக்கள் அறிய வேண்டியவற்றை அடிக்கடி உபதேசித்து, பயிற்சி அளித்துப் பாதுகாப்பு முறைகளைக் கையாள உதவ வேண்டும் !

(தொடரும்)

***********************

தகவல்:

1.  http://www.npcil.nic.in/index.asp [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]

2. http://pib.nic.in/release/release.asp?relid=20878 [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]

3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
[Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]

4.  World Nuclear Association – WNA Radiological Protection Working Group – RPWG (Official List – July 20, 2006)
http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm
5. World Nuclear Association – WNA Waste Management and Decommissioning Working Group – WM&DWG
(Official List – July 25, 2006)  http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

6. http://www.candu.org/npcil.html [Indian Heavywater Nuclear Power Plants]

7. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

8. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html Letter By R. Bala (August 9, 2007)

10. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp [World Association of Nuclear Operation Website]

11 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)

12  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40504291&format=html (பாரதத்தின் பூத அணு
மின்சக்தி நிலையங்கள்)
13  http://www.thinnai.com/?module=displaystory&story_id=40409094&format=html (இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் அணுவிலிருந்து மின்சக்தி)
14 National Geographic Magazine Radiation Effects [April 1989]
15 Facts About Radiation by Ontario Hydro Nuclear Division
16 Ascent Magazine By Atomic Energy of Canada Ltd. [Summer 1989]
17 Understanding Ionizing Radiation [August 1992]
18 Radiation is Part of Life [March 1985]
19. <http://www.thinnai.com/?module=displaystory&story_id=203041912&format=html> (கல்பாக்கம் அணு உலை பற்றி ஞாநி)
20. <http://www.thinnai.com/?module=displaystory&story_id=20305046&format=html> (கல்பாக்கம் அணு உலை பற்றி எனது கட்டுரை)
21. <http://www.thinnai.com/?module=displaystory&story_id=20309252&format=html> (கல்பாக்கம் அணு உலை பற்றி இரண்டாம் கட்டுரை)

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] October 18, 2007