பாரத அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும் யந்திர சாதன அமைப்புத் திறனும்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

முன்னேறி வரும் நாடுகளில் முழுத் தொழிற்துறை மயமாகி நமது நாகரீக வாழ்வு தொடர்வதற்கு அணுசக்தி ஓர் எரிசக்தியாக உதவுவது மட்டுமல்லாது, முக்கியமான பூரணத் தேவையுமாகும். 

அணுவியல் மேதை, டாக்டர் ஹோமி ஜெ. பாபா

சுருங்கித் தேயும் சுரங்க நிலக்கரி, குறைந்து போகும் ஹைடிரோ-கார்பன் எரிசக்திச் சேமிப்புகளை எதிர்பார்த்து விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவள வேட்கையை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் எரிசக்தியை முழுமையாகப் பயன்படுத்திப் பேரளவு அணுசக்தியை உற்பத்தி செய்யும் முறை ஒன்றுதான் தற்போது இந்தியாவுக்கு ஏற்றதாக உள்ளது.

டாக்டர் அனில் ககோட்கர் [அதிபதி அணுசக்திப் பேரவை 2003]

தாராப்பூரில் முன்னடி வைக்கும் உன்னத அணுமின் நிலையம்

இந்திய அணுசக்தித் துறையகத்தின் வரலாற்றில், 2005 மார்ச் மாதம் 6 ஆம் தேதி பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட வேண்டிய நாள்! அன்றுதான் மகாராஷ்டிராவில் உள்ள தாராப்பூரில் பூத ஆற்றல் கொண்ட புதிய கனநீர் அணுமின்சக்தி உலையின் ஆரம்ப இயக்கம் ‘பூரணத்துவம் ‘ (Criticality) எய்தியது! அந்த அசுரப் பணியின் மகத்துவம் என்ன வென்றால், ஐந்தாண்டுகளில் முதல் யூனிட் கட்டப்பட்டு ஆய்வு வினைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, முதல் தொடக்க இயக்கம் துவங்கி மாபெரும் சாதனையை நிகழ்த்தி யுள்ளது. பாரத அணுவியல் விஞ்ஞானிகளும், பொறியியல் வல்லுநர்களும் முழுக்க முழுக்க டிசைன் முதல், நிறுவகம் வரைச் செய்து முடித்து, அயராது பணியாற்றி வடிவம் தந்த இரட்டை அணுமின் உலைகள் கொண்ட நிலையம் அது. இதுவரை பாரதம் கட்டி இயக்கிவந்த 220 மெகாவாட் நிலையங்களை விட இரண்டு மடங்கு ஆற்றலுக்கும் மிகைப்பட்ட தகுதி [540 MWe (Each)] பெற்ற நிலையம் அது. அணு உலை பூரணத்துவம் அடைவது, அணு உலை இயக்க முறையில் துவக்க நிலையாகும். அப்போது அணு உலையின் பாதுகாப்பு, அபாயநிலைத் தவிர்ப்பு முறைகள் யாவும் கீழான வெப்ப நிலையில் பலதரம் சோதிக்கப்பட்டு [Low Power Testing] அடுத்து மின்சக்தி ஆற்றலை மிகையாக்க ஆய்வுகள் நடத்தப்படும். இரட்டை அணுமின் உலைகள் ஒவ்வொன்றும் 540 மெகாவாட் ஆற்றல் பெற்றது. 2005 செப்டம்பர் 12 முதல் யூனிட்-4,  அடுத்த 540 மெகாவாட் யூனிட்-3, 2006 ஆகஸ்டு 18 முதல் முழு ஆற்றலை மேற்திக்கு மின்சாரக் கோப்புக்குப் [Western Power Grid] பரிமாறி வருகின்றன. 

 

இந்தியாவின் முக்கட்ட அணுசக்தி உற்பத்தித் திட்டங்கள்

தற்போது அணுசக்தி உற்பத்திக்கு தீர்க்க தெரிசி டாக்டர் ஹோமி பாபா 45 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்ட முக்கட்ட முறையை அணுசக்தித்துறை வல்லுநர்கள் பின்பற்றி வருகிறார்கள். முதற் கட்டத்தில் கனநீர் மிதவாக்கியாகவும், வெப்பக் கடத்தியாகவும் [Heavy Water as Moderator & Heat Transport Fluid] இயற்கை யுரேனியம் எரிக்கோலாகவும் [Natural Uranium as Fuel Rod] பயன்படும் அணுமின் நிலையங்கள் நிறுவப்படும். இரண்டாம் கட்டத்தில் முதற்கட்ட அணுமின் உலைகளில் உண்டாகும் எச்சக் கழிவில் பிரிக்கப்படும் புளுடோனியம் எரிக்கோலாகி, இந்தியாவில் மிகையாகக் கிடைக்கும் தோரியத்தை வேகப் பெருக்கி அணுமின் உலைகளில் இட்டு அணுப்பிளவாகும் யுரேனியம்-233 [Fissile Uranium-233] உண்டாக்கப்படும். பிரித்தெடுக்கப்படும் யுரேனியம்-233 எரிக்கோலாகப் பயன்பட்டு, மூன்றாம் கட்டத்து வேகப் பெருக்கி அணுமின் உலைகள் தோரியம்-232 இடையே இடப்பட்டு, மின்சார உற்பத்தியும் எதிர்கால யுரேனியம்-233 பக்க விளைச்சலும் ஒரே சமயத்தில் உண்டாக்கபடும்.

இந்தியாவின் தற்போதைய யுரேனியம் இருப்பு: 78,000 டன், தோரியம் இருப்பு: 363,000 டன். யுரேனியத்தைப் போல் நாலரை மடங்கு அளவிருக்கும் தோரியத்தைப் பயன்படுத்தும் முக்கட்டத் திட்டத்தின் வெற்றி எதிர்காலத்தில் இயங்கப் போகும் சிக்கலான, அபாயங்கள் ஒளிந்திருக்கும் வேகப் பெருக்கி அணுமின் நிலையங்களின் பாதுகாப்பான இயக்கப் பண்புகளைப் பொருத்தது. முதல் கட்டத்தில் மகத்தான வெற்றி பெற்ற அணுசக்தித் துறையகம் இரண்டாம், மூன்றாம் கட்டங்களில் எவ்விதம் இயக்கி வரும் என்பதை இப்போது ஊகிப்பது கடினமாகும். இதுவரை கல்பாக்கத்தில் 12.5 மெகாவாட் ஆற்றலில் இயங்கி வரும் வேகப் பெருக்கி ஆய்வு அணு உலையில் பெற்ற அனுபவம் போதாது. அடுத்துக் கட்டுமானம் ஆகிவரும் 1200 MWt ஆற்றலில் இயங்கவிருக்கும் வேகப் பெருக்கி அணுமின் உலையின் அனுபவங்கள் முக்கியமானவை. அதன் எதிர்கால இயக்கப் பண்புகளின் சிக்கலான போக்கை இப்போது சிந்திக்க முடியாது.

அணுமின் உலைகளுக்குச் சிக்கன யுரேனிய எருக்கோல்

ஒரு டன் அணுக்கரு யுரேனிய எரு உண்டாக்கும் வெப்பசக்தி, (2-3) மில்லியன் டன் இயல்வள எருக்கள் [நிலக்கரி, எரிவாயு அல்லது எரி ஆயில்] தரும் வெப்பசக்திக்குச் சமம். அணுமின் நிலையம் ஒன்றின் கட்டமைப்புச் செலவு [Capital Cost] 30 அல்லது 40 ஆண்டுகளில் நிதித்தேய்வு [Depreciation] ஆகிறது. அதற்குப் பயன்படும் எருச் செலவு [Fuel Cost] தனிக் கட்டமைப்புச் செலவாக பல வருடங்களில் நிதி தேய்கிறது. நிலையத்தின் இயக்கப் பராமரிப்புச் செலவுகள் [Operation & Maintenance Expenses] நிலையத்தின் ஆண்டுச் செலவுகளுடன் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. சுண்டக்காய் அளவு யுரேனியம் [7 gram Uranium Pellet] 3.5 பீப்பாய் எரி ஆயில் [Barrels of Oil], 17,000 கியூபிக் அடி எரிவாயு [Natural Gas] அல்லது 1780 பவுண்டு நிலக்கரி தரும் வெப்பத்தை உண்டாக்குகிறது.

அணுமின் நிலையத்தின் யூனிட் மின்சார விலையைக் குறைப்பது மலிவான, விலை ஏறி இறங்காத அதன் எருவான யுரேனிய மூலக் கனிவளமே. 2000 ஆண்டுக்கு இடையில் 1 kg யுரேனிய எருக்கோல் தயாரிக்க அமெரிக்காவில் மதிப்பீடான செலவு இதுதான்.

யுரேனியம் ஆக்ஸைடு (U3O8): 8 kg x $30 = $200.

மாற்றல் செலவு [Conversion Cost]: 7 kgU x $5.5 = $38.

செறிவாக்குக் செலவு [Enrichment Cost]: 4.3 SWU x $105 = $452

எருகோல் தயாரிப்புச் செலவு [Fuel Fabrication Cost]: 1 kg = $240

மொத்தச் செலவு: 1 kg = $930

இந்த அளவு யுரேனியம் அளைக்கும் வெப்பசக்தி =3400 gega Joules [315,000 kwh]

ஆகவே எருக்கோல் விலை = 0.30 cents/kwh

இந்திய மதிப்பீடின்படி ஓர் அணுமின் நிலையக் கட்டமைப்புக்குச் செலவு: ரூ 4.25 கோடி/MWe. 1000 MWe அணுமின் நிலயத்தின் கட்டமைப்புக்குச் செலவு: 4250 கோடி ரூபாய்.

மிக மலிவான மின்சக்தி அளிக்கும் கனநீர் அணு உலைகள்

பாரத அணுசக்திப் பேரவையின் முதல் அதிபர், டாக்டர் ஹோமி பாபா 220 MWe ‘காண்டு ‘ அழுத்தக் கனநீர் அணுமின் நிலையத்தைக் [CANDU, Pressurized Heavy Water Reactor] கனடாவிலிருந்து பெறும் போது அணு உலை, அழுத்தக் குழல்கள், அணு உலைச் சாதனங்கள், யுரேனிய எரிக்கட்டுகள் ஆகியவற்றை இந்தியாவிலே பின்னால் தயாரிக்கும் நோக்கத்துடன் டிசைன் நுணுக்க முறைகளையும், விளக்க வரை படங்களையும் வாங்கிக் கொள்ள ஒப்பந்தம் புரிந்து கொண்டார். அம் முறையில் யுரேனியம் டையாக்ஸைடு எரிக்கட்டுகள் [UO2 Fuel Bundles] முதலில் வெற்றிகரமாய் ¨ஹைதராபாத் எரிக்கட்டு தயாரிக்கும் கூடத்தில் [Nuclear Fuel Complex, Hydrabad] 220 MWe அணுமின் உலைகளுக்குத் தயாரிக்கப் பட்டன. அடுத்துச் சிக்கலான அணு உலைக் கலன்கள் [Reactor Vessels] பாம்பாய் ‘லார்ஸன் & டியூப்ரோ ‘ தொழிற் கூடத்தில் உருவாக்கப் பட்டன. பிறகு அணு உலைக்கு வேண்டிய நூற்றுக் கணக்கான ஸிர்கோனியம் கலவை அழுத்தக் குழல்கள் மற்றும் சாதாரண குழல்கள் [Zirconium Alloy Pressure Tubes, Calandria Tubes], சிறப்பாக தயாரிக்கப் பட்டன.

இந்தியாவின் அணுசக்தி உற்பத்தித் திறம் 2000 ஆண்டு முடிவில் ஆற்றல் 2720 MWe ஆகி யிருந்தது. அடுத்து 2010 ஆண்டுக்குள் 8100 MWe ஆற்றலாகப் பெருக்க புதிய 220 MWe, 500 MWe, 1000 MWe ஆற்றல் கொண்ட அணுமின் நிலையங்கள் கட்டப் பட்டு வருகின்றன! அமெரிக்காவின் கொதிநீர் அணு உலைகள் [BWR] மற்றும் ரஷ்யாவின் அழுத்தநீர் அணு உலைகளுக்குச் செலவு மிகையான [VVER-1000] செறிவு உரேனியம் [2%-4% U235] எரிபொருள் தேவைப் படுகிறது. ஆனால் கனநீர் அணு உலைகளுக்கு இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியம் பயன்படுவதால், எரிபொருள் மலிவு. மேலும் யுரேனியம் டையாக்ஸைடு துண்டுகளை [UO2 Pellets] ஸிர்கொலாய் குழல்களில் [Zircaloy Tubes] அடைத்து, எரிக்கோல்களாய் தயாரிப்பதும் எளிதே! சாதாரண நீரில் கிடைக்கும் கனநீரை [Heavy Water] ரசாயன முறையில் பிரித்தெடுப்பது ஒன்றுதான் விலை ஏற்றமானது. கனநீர் மீண்டும் மீண்டும் பயன்படுவதால், முதல் தரம் அணு உலையில் நிரப்பப் பட்டபின், கசிவுகள் மற்றும் சிந்தி ஆவியாகி மறைதல், சிந்தி எடுக்க முடியாமல் இழத்தல் போன்ற விளைவுகளால் குறைந்து போகும் அளவை மட்டும் ஈடு செய்ய வேண்டி வரும்! விலை மதிப்பான கனநீர் ‘திரவப் பொன்னாகக் ‘ [Liquid Gold] கருதப் படுகிறது!

கனநீர் அணு உலைகளுக்கு வேண்டிய யுரேனிய எரிக்கட்டுகள் யாவும் ஹைதராபாத்தில் தயாரிக்கப் படுகின்றன. 1960 ஆண்டுகளில் கனடா பம்பாயில் அமைத்த ஸைரஸ் ஆராய்ச்சி அணு உலையின் [CIRUS Research Reactor] எரிக்கோல்கள் யாவும் பாரதத்தில் முதன் முதல் தயாரிக்கப் பட்டன. அடுத்து ராஜஸ்தானில் கனடா கட்டிய முதல் 220 MWe கனநீர் அணுமின் உலையின் எரிக்கட்டுகள் [Fuel Bundles 3.25″ diameter 19.5″ Long] ஆக்கப் பட்டன. தற்போது அம்முறையப் பின்பற்றிப் புதிய 500 MWe அணுமின் உலைகளுக்கும் அவற்றை விடப் பெரிய எரிக்கட்டுகள் [4″ Diameter, 19.5″ Long] தயாரிக்கப் படுகின்றன. 37 குழல்கள் கொண்ட எரிக்கட்டின் ஒவ்வொரு குழலிலும் சிறு யுரேனியம் டையாக்ஸைடு உருளைத் துண்டுகள் 24 திணிக்கப் பட்டுள்ளன.

500 MWe அணுமின் நிலையத்தின் முக்கிய பாகங்கள்

இரட்டை அணுமின் உலையாக [2X500 MWe] அமைக்கப் பட்ட இந்த நிலையங்களின் அரண், ஆட்சி அறை, கட்டுப்பாட்டுக் கருவி ஏற்பாடுகள், டர்பைன் கட்டடம் யாவும், தனித்தனியாக அமைக்கப் பட்டவை. வெப்ப சக்தியை இழந்த தளர் நீராவியின் மிஞ்சிய வெப்பத்தைக் குளிர்விக்கக் கடல் நீர் தணிப்புக் கலனில் [Condenser] பயன்படுகிறது.  165 அடி உள் விட்டமுள்ள கான்கிரீட் அரணுக்குள் ‘காலான்டிரியா ‘ என்று அழைக்கப்படும் அணு உலை [ Calandria Reactor Vessel] மையத்தில் மற்றுமோர் சிறிய கான்கிரீட் கோட்டைக்குள் மட்ட நிலையில் [Horizontal Reactor] அமைக்கப் பட்டுள்ளது. அணு உலையின் இருபுற முகப்பிலும் உள்ள 392 துளைகளில் ஸிர்கோலாய் காலன்டிரியா குழல்கள் [Zicaloy Calandria Tubes] அழுத்த விசையில் உருட்டி இணைக்கப் பட்டுள்ளன. அவற்றின் ஊடே நடுவில் ஸிர்கோலாய், இருபுறமும் ஸ்டெயின்லஸ் ஸ்டால் முனைப்பு கொண்ட, 392 அழுத்தக் குழல்கள் [Zircaloy (Zr-2.5%Nb) Pressure Tubes with Stainless Steel End Fitting either side] நுழைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு அழுத்தக் குழல் மையத்தில் 12 ‘எரிக்கட்டுகள் ‘ [12 Fuel Bundles in each Pressure Tube], அடுத்து ஒவ்வொரு நுனியிலும் ஒரு ‘கவசத் தடுப்பி ‘ [Shield Plug], ஒரு ‘துளை அடைப்பி ‘ [Closure Plug] அமைக்கப் பட்டுள்ளன.

அணு உலை இயங்கும் போதே எரு ஊட்டும் யந்திரம் [On-power Fuelling Machine], அழுத்தக் குழலில் எரிக்கட்டுகள், கவசத் தடுப்பி, துளை அடைப்பி ஆகியவற்றை நுழைவிக்கவோ அல்லது எடுக்கவோ பயன்படுகிறது. முதல் முறையாக அணு உலைக் குழல்களில் ஏற்றப்படும் எரிக்கட்டுகளின் எண்ணிக்கை: 4704, [392X12=4704]. அணு உலை 500 MWe ஆற்றலில் இயங்கும் போது, நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று குழல்களில் இடத்துக்கு ஏற்ப 4 அல்லது 8 எரிக்கட்டுகள் மாற்றினால் போது மானது!

தனிப்பட்டுச் சுயமாய் இயங்கும் இரட்டைத் தடுப்பு முறைகள் [Two Independent Shutdown Systems] அணு உலையை நிறுத்த ஏற்படுத்தப் பட்டுள்ளன. முதலாவது ஏற்பாடில் 28 கூடான காட்மியம் தடைக் கோல்கள் [Hollow Cadmium Shutdown Rods] தாமாக ஈர்ப்பியல்பால் [Falling under Gravity] உலைக்குள்ளே விழுந்து, நியூட்ரான்களை விழுங்கி அணுக்கரு இயக்கத்தை நிறுத்தும். அணு உலை இயக்கத்தின் போது, தடைக் கோல்கள் மேல் நோக்கி தூக்கப் படும். இரண்டாவது அணு உலை நிறுத்தும் தடை ஏற்பாடு: நியூட்ரான் விழுங்கும் நஞ்சுத் திரவத்தை மிதவாக்கிக் கனநீரில் உட்செலுத்தும் ஆறு மட்டக் குழல்கள் [Horizontal Tubes, Injecting (Gadolinium Nitrate) Poison into the Moderator Heavy Water] நுழைக்கப் பட்டுள்ளன.

அணு உலை மித நியூட்ரான்களைக் கூட்டிக் குறைக்க [அதாவது அணு உலையில் வெப்ப சக்தி வெளியீட்டை ஏற்றி இறக்க] நீர் நிரம்பிய 14 அரங்குக் கட்டுப்பாடு மூலம் [14 Zonal Control System], அணு உலை ஆட்சியைச் சுயமாகவோ அல்லது கையாட்சியாலோ செய்யலாம்.

டர்பைன், தணிகலன், மின்சார ஜனனி, மற்றும் கொதி உலைக்கு நீர் அனுப்பும் பொதுத்துறைச் சாதனங்கள் [Conventional System Equipment] யாவும் டைபைன் கட்டடத்தில் அமைக்கப் பட்டுள்ளன.

அணுவியல் துறைக்கு வேண்டிய நுணுக்க முறைபாடுகள்

அணுமின் சக்தி வளர்ச்சிப் பணியில் டாக்டர் ஹோமி பாபா முன்னோக்குடன் 1960-1965 ஆண்டுகளில் ஆரம்பித்த துறைகளும், அவரது மரணத்துக்குப் பின் உண்டாக்கப் பட்ட நுணுக்க முறைகளும் பாரதத்தில் நிலைநாட்டப் பட்டதால் 500 MWe ஆற்றல் அணுமின் நிலையத்தை தாமே முதலில் உருவாக்க அணுவியல் துறை நிபுணர்களுக்கு ஊக்கம், உறுதி, உற்சாகமும் உண்டாயின!

1. சுரங்கத்திலிருந்து இயற்கை யுரேனியத்தை எடுத்துச் சுத்திகரித்து, யுரேனியம் டையாக்ஸைடு உருளைத் துண்டுகள் [UO2 Fuel Pellets] ஆக்கி, எரிக்கட்டுகள் தயாரிப்பு [Fuel Bundles].

2. ஸிர்கோலாய் அழுத்தக் குழல்கள், காலன்டிரியா குழல்கள் [Zircaloy Pressure Tubes & Calandria Tubes] அணு உலைக்கும், சிறு குழல் உறைகள் [Zircaloy Fuel Sheaths] எரிக்கட்டுகளுக்கும் ஆக்குதல்.

3. அணு உலைகளில் மிதவாக்கியாகவும், வெப்பக் கடத்தியாகவும் பயன்படும் கனநீர் திரவம் ஏராளமான அளவில் ரசாயனத் தொழிற்சாலைகளில் உற்பத்தி.

4. அணுமின் உலைக் கட்டுப்பாட்டுக் கருவிகள், கதிரியக்க மானிகள் [Radiation Monitors], அணு உலை ஆட்சி ஏற்பாடுகள் [Nuclear Power Reactor Instrumentation & Controls] தயாரிப்பு.

5. ஆராய்ச்சி அணு உலைகளில் யுரேனியம், புளுடோனியம் எரிபொருளைப் பயன்படுத்தி, அணு உலை பெளதிகத்தில் நியதி, ஆய்வுப் பணிகள் [Theoretical & Experimental Work in Reactor Physics] ஆகியவற்றை புரிதல்.

6. கதிரியக்க உடல் நலத்துறைப் பொறி நுணுக்க விருத்தியில் [Development Technology in Health Physics] புதிய வழி முறைகளை வகுத்தல்.

7. கழிவு எரிபொருள் மீள் சுத்திகரிப்பு முறைகளில் [Spent Fuel Reprocessing Techniques] முன்னேறி ரசாயனத் தொழிற் சாலைகள் அமைப்பு.

8. அணு உலை உலோகங்களின் உலோகவியல் ஆய்வுத் துறைகளில் வளர்ச்சி [Progress in Nuclear Reactor Materials Metallurgy].

9. சாதனங்கள், உபரிகளைச் சோதிக்கும் தனிப்பட்ட ஆய்வு அமைப்பாடுகள் [Special Test Facilities to test Equipment & Components].

10. கதிர்வீசும் கழிவுகளைக் கையாண்டு, பாதுகாப்பாக வாகனங்களில் போக்கு வரத்து செய்து புதைக்கும் முறைகளை [Waste Management Techniques] தீர்மானித்தல்.

11. அணு உலைப் பாதுகாப்பு ஆய்வுகள், அரண், கட்டமைப்பு உலோகச் சாதன ஆய்வுகள் [Reactor Safety, Containment Model & Structural Analyses] ஆகியவற்றைச் செய்தல்.

அணுவியல் நுணுக்கச் சாதனங்களை உற்பத்தி செய்யும் தொழிற் கூடங்கள்

220 MWe, 500 MWe ஆற்றல் அணுமின் நிலையங்களின் பெரும் பான்மையான சாதனங்களையும், கருவிகளையும் பாரதத்தில் உற்பத்தி செய்யும் அணுவியல் ஆராய்ச்சிக் கூடங்களும், தொழிற்சாலைகளும் கீழே காணப்படுகின்றன. அவை போக சில நுணுக்க சாதனங்கள், சிறப்புக் கருவிகள், கருவிகளின் உளவிகள் [Sensors] வெளிநாடுகளிலிருந்து வாங்கப் படுகின்றன.

1. பம்பாயில் உள்ள பாபா அணுவியல் ஆய்வு மையம். [Bhabha Atomic Research Centre, Bombay]

2. கல்பாக்கத்தில் இருக்கும் இந்திரா காந்தி அணு ஆய்வு மையம் [Indira Gandhi Atomic Reseach Centre, Kalpakkam, Chennai]

3. யுரேனியம் கார்பொரேசன் ஆஃப் இந்தியா [Uranium Corporation of India Ltd]

4. ஹைதராபாத்தில் உள்ள அணுவியல் தாதுக்களின் ஆணையகம் [Atomic Minerals Division, Hydrabad]

5. இந்திய அரிய தாதுக்கள் தொழிற்சாலை [Indian Rare Earths Ltd]

6. ஹைதராபாத்தில் உள்ள அணுவியல் எரிக்கோல் தயாரிப்பு சாலை [Nuclear Fuel Complex, Hydrabad]

7. ஹைதராபாத்தில் உள்ள எலெக்டிரானிக்ஸ் கார்பொரேசன் ஆ·ப் இந்தியா [Electronics Corporation of India Ltd. Hydrabad]

8. பம்பாயில் உள்ள கனநீர் உற்பத்தி ஆணையகம் [Heavy Water Board]

9. கதிர்வீச்சு, கதிர் ஏகமூலகப் பொறித்துறை ஆணையகம் [Board of Radiation & Isotope Technology]

10. பம்பாயில் உள்ள லார்ஸன் & டியூப்ரோ யந்திரத் தொழிற்சாலை [Larson & Tubro, Bombay]

11. போபாலில் அமைந்துள்ள கனமின் யந்திரத் தொழிற்சாலை [Heavy Electricals, Bhopal Ltd]

இந்தியாவில் இயங்கி வரும் பெரும்பான்மையான கனநீர் அணு உலைகளின் சில பொது அமைப்புகள்:

1. இரட்டைக் கான்கிரீட் அரண்கள். உட்புற அரண் முறுக்கப் பட்ட உறுதியான கான்கிரீட் கோட்டை [Prestressed Reinforced Concrete].

2. தனித்தனியான அழுத்தக் குழல்கள் எரிபொருளுடன் நுழைக்கப் பட்ட, மட்ட நிலையில் தொங்கும் அணு உலை [Horizontal Reactor having several independent Pressure Tubes with Fuel Bundles].

2. அணு உலையின் இருபுறமும் நீர் நிரப்பப் பட்ட 304L ஸ்டெயின்லெஸ் ஸ்டால் முன்புறக் கவசங்கள் [Water Filled 304L Stainless Steel End Shields].

3. அணு உலை இயங்கும் போது எரிக்கோல் ஊட்டும் முற்போக்கான யந்திரங்கள் [Improved On-power Fuelling Machines]

4. தானாக இயங்கும், தனிப்பட்ட இரட்டை அணு உலை நிறுத்த ஏற்பாடுகள்.

5. விபத்துக் காலத்தில் அணு உலையைக் கட்டுப் படுத்தவும், கண்காணிக்கவும் தனியாக அமைக்கப் பட்ட அபாய கால அணு உலை ஆட்சி அறை [Emergency Control Room]

6. விபத்து சமயத்தில் அரணில் அடைபட்ட வெப்ப நீராவியின் சக்தியை குளிர்விக்கத் ‘தணிப்புக் குளம் ‘ [Suppression Pool] ஒன்று கீழ்த் தளத்தில் அமைப்பாடு.

7. கதிரிக்கத் திரவ வெளியேற்றத்தைத் தடுக்க, சுற்றி வரும் மீள்சுற்றி வெப்பக் கடத்தி நீர் ஏற்பாடு [Closed Loop Recirculating Cooling Water System].

8. தனித்தனியான ‘மும்முறைக் கூட்டுக் கட்டுப்பாடு ‘ [Triplicated Control Instrumentation] ஏற்பாடு. ஏதாவது இரண்டு முறை ஏற்பாடுகளில் பழுதுகள் ஏற்பட்டால், அணு உலை நிறுத்தப் படும். அது போன்று அணு உலைக் கட்டுப்பாடு, வெப்பசக்தி ஏற்ற, இறக்கம், நிறுத்தம், பாதுகாப்பு ஆகிய எல்லாப் பணிகளுக்கும், மூன்றில் இரண்டு கருவிச் சாதன ஏற்பாடுகள் ஒருங்கே கூடி அறிவிக்க வேண்டும்! அணு உலைக் கட்டுப்பாடு, அணு உலைத் துவக்கம், வெப்பசக்தி ஏற்றம், இறக்கம் யாவும் இரட்டை மின்கணணி ஆட்சியில் [Twin Computer Controls] நிகழ்கின்றன. இவ்வழியில் மூன்றில் ஒரு முறைப்பாட்டில் பழுதை ஆய்வு செய்யவோ, அல்லது செப்பணிடவோ முடிகிறது! மேலும் இரண்டில் ஒரு மின் கணணியின் பழுதை உளவு செய்யவோ, அன்றிச் செப்பணிடவோ முடிகிறது!

இந்திய அணுத்துறை நிறுவகத்தின் மகத்தான சாதனைகள்

இந்திய அணுசக்தித் துறையவகத்தின் அதிபதி எஸ்.கே. ஜெயின் [Nuclear Power Corporation India Ltd (NPCIL) Chairman S.K. Jain] 2004 ஜூலை 8 ஆம் தேதி நடந்த 17 ஆம் ஆண்டுக் கூட்டவையில் கூறியது: ‘நமது கம்பெனியின் கடந்த ஆண்டு [2002] லாபத் தொகை 1509 கோடி ரூபாய். இந்த ஆண்டு [2003] லாபம் 2604 கோடி ரூபாய். கடந்த ஆண்டு மின்சக்தி ஆற்றல் உற்பத்தியானது: 19242 மில்லியன் யூனிட் [kwh]. கடந்த 7 ஆண்டுகளில் (1997-2004) மின்சக்தி ஆற்றல் உற்பத்தி 9619 மில்லியன் யூனிட்டாக இருந்ததை இரட்டிக்க வைத்து 19242 யூனிட்டாக மிகைப்படுத்தியது பாராட்டத் தக்க அணுமின் நிலைய இயக்கமாகும். மேலும் நிலையங்களின் இயக்கத் தகுதி இலக்கம் [Capacity Factor] அதே 7 ஆண்டுகளில் 71% வீதத்திலிருந்து 90% மிகையானதும் மெச்சத் தகுந்த இயக்குநரின் பணிகளே. குஜராத் கக்ரபார் யூனிட்-1 அணுமின் நிலையம் 98% ஆண்டுத் தகுதி இலக்கத்தில் உற்பத்தி செய்து, கனநீர் அணுமின் உலைகளுக்குள் முதலிடத்தைப் பெற்று, அகில அணுசக்திக் கூட்டியக்கப் பேரவையின் [World Association of Nuclear Operations (WANO)] அணுசக்திச் சிறப்புப் பரிசைப் [Nuclear Excellene Award] பெற்றுள்ளது.

***********************

தகவல்:

1.  http://www.npcil.nic.in/index.asp  [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]

2. http://pib.nic.in/release/release.asp?relid=20878  [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]

3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
[Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]

4.  World Nuclear Association – WNA Radiological Protection Working Group – RPWG (Official List – July 20, 2006)
http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm
5. World Nuclear Association – WNA Waste Management and Decommissioning Working Group – WM&DWG
(Official List – July 25, 2006)  http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

6. http://www.candu.org/npcil.html  [Indian Heavywater Nuclear Power Plants]

7. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

8. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html  Letter By R. Bala (August 9, 2007)

10. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp  [World Association of Nuclear Operation Website]
 
11 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)
 
12  http://www.thinnai.com/module=displaystory&story_id=40504291&format=html (பாரதத்தின் பூத அணு மின்சக்தி நிலையங்கள்)  

13  http://www.thinnai.com/module=displaystory&story_id=40409094&format=html (இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் அணுவிலிருந்து மின்சக்தி)

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] October 11, 2007

கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப் பிணைவு மின்சக்தி நிலையம்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

பிண்டமும் சக்தியும் ஒன்றே
என்று கூறினார்,
ஆக்கமேதை ஐன்ஸ்டைன் !
சக்தி அழியாதது !
பிண்டம் நிலையானது !
சக்தி நிலை மாறுவது !
பிண்டமும் சக்திபோல் உருமாறும் !
இயல்பாகவே
தேய்ந்து மெலியும் ரேடியம்
ஈயமாய் மாறும் !
யுரேனியம் சுயப்பிளவில்
ஈராகப் பிரிந்து
வெப்பசக்தி உண்டாகும் !
பேரளவு உஷ்ணத்தில்
பரிதிக்கனல் பந்துபோல்
எளிய அணுக்களின் உட்கருக்கள்
இணைந்து
கதிரியக்கம் இல்லாமல்
பிணைவு சக்தி
வெளியேறும் !

விஞ்ஞானப் பொறியியல் தொழிற்துறைகள் மட்டுமே, உலக நாடுகளில் செல்வம் செழித்து முன்னேற ஆக்க வினைகள் புரிந்துள்ளன ! அவ்விதமே விஞ்ஞானம், பொறிநுணுக்கத் தொழில்களை விருத்தி செய்து, இந்தியாவும் செல்வீக நாடாக முன்னேற வேண்டும் !

பாரதத்தின் முதல் பிரதம மந்திரி, பண்டிட் ஜவஹர்லால் நேரு. (1948)

பிண்டம், சக்திக்கு [Matter, Energy] உள்ள நெருங்கிய உறவை விளக்கும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியே [Theory of Relativity] இதுவரைப் படைத்த சமன்பாடுகளில் மகத்தானதோர் இணைப்பாகக் கருதப்படுகிறது.

பிரிட்டிஷ் மேதை, பெர்ட்டிரண்டு ரஸ்ஸல் [ஏப்ரல் 19, 1955]

அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடல் அலைகளின் மட்ட ஏற்ற இறக்கத்தில் உண்டாகும் சக்தியைக் கையாண்டு, பரிதிக் கதிரொளி வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி ஆக்குவோம்.

ஆக்கமேதை தாமஸ் ஆல்வா எடிஸன் (ஆகஸ்டு 22, 1921)

முன்னுரை: பரிதியில் எழும் அணுப் பிணைவு சக்தி (Nuclear Fusion Energy) பல்லாண்டுகளுக்கு முன்பே, மாந்தர் கனவில் தோன்றிச் சித்தாந்த நிலை கடந்து, கணித முறையில் வரை வடிவம் பெற்று, பூமியிலே அமைக்கப்பட்டுத் தவழும் பருவத்தைத் தாண்டி, இப்போது நடக்கத் துவங்கி யுள்ளது! கட்டுப்படுத்த முடியாத பேரழிவுச் சக்தி உடைய வெப்ப அணுக்கரு ஆயுதங்கள் பலவற்றைச் சோதித்த பொறியியல் உலக விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள், பிணைவு சக்தியைக் கட்டுப்படுத்திக் கதிரிக்கம் இல்லாது பேரளவு மின்சாரம் உற்பத்தி செய்ய ஆராய்ந்து வருகிறார்கள்.

முப்பது ஆண்டுகளில் [1975-2005] உலக விஞ்ஞானப் பொறியியல் வல்லுநர்கள் டோகாமாக் அணுப்பிணைவு உலையில் [Tokamac Fusion Reactor] 10 watt வெப்பசக்தி ஆக்கத்தில் ஆரம்பித்து, 16 மில்லியன் watt [16 MW] வெப்ப சக்தியை உண்டாக்கிப் பிணைவு சக்திப் படைப்பில் மகத்தான சாதனையை நிலைநாட்டி யுள்ளார்கள்! அந்த வெற்றிகரமான சாதனை வெப்ப அணுக்கரு மின்சக்தி வணிகத்துறை நிலையங்கள் பெருக உலக வாயிலைத் திறந்து விட்டிருக்கிறது! பிணைவு சக்தி ஆராய்ச்சி தற்போது அடிப்படை ஆய்வு நிலையைத் [Research Stage] தாண்டி, ‘முன்னோடி மாடல் சோதனை ‘ [Prototype Model Testing] நிலைக்கு உயர்ந்து முன்னேறியுள்ளது !

சூரியன் ஓர் அணுப் பிணைவுத் தீப்பந்து!

சூரியன் பிணைவுச் சக்தியை [Fusion Energy] உற்பத்தி செய்யும், பிரம்மாண்டமான ஓர் அணுக்கருப் பிழம்பு உலை [Plasma Reactor]! அண்ட வெளியில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள், சுய ஒளி விண்மீன்கள் அணுப் பிணைவுச் சக்தியைத் தான், பிரபஞ்சம் தோன்றியது முதல் வாரி இறைத்து வருகின்றன! 4000 மில்லியன் ஆண்டுகளாக, சூரியன் வினாடிக்கு 40 கோடி பில்லியன் MW வெப்ப சக்தியைத் தொடர்ந்து வெளியாக்கிக் கொண்டிருக்கிறது! தீக்கோளத்தின் நடுப் பகுதி உஷ்ணம் 20 மில்லியன் டிகிரி K! சூரியவாயு அழுத்தம், பூவாயு [Earth ‘s Atmosphere] அழுத்ததை விட 400 மில்லியன் மடங்கு மிகையானது! சூரிய கோள அமைப்பு, வெங்காயத் தோல்கள் போல் அடுக்கடுக்காக இருக்கிறது. வாயுக்களின் அடர்த்தி [Density] ஈயத்தைப் போல் 12 மடங்கு. சூரியன் பேரளவு உஷ்ணத்தில், தன் ஈர்ப்புப் [Gravitation] பேரழுத்தத்தில், வினாடிக்கு 4 மில்லியன் டன் வாயு அணுக்கருத் துகள்களைப் பிணைத்து, அளக்க முடியாத பிணைவு சக்தியை உண்டாக்குகிறது. ஒரு தம்ளர் நீரில் உள்ள ஹைடிஜன் வாயுவைப் பிரித்துப் பிணைக்க முடிந்தால், அதிலிருந்து வெளியாகும் சக்தி 600 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் எரிந்து தரும் சக்திக்குச் சமமாகும்! ஆனால் பூமியில் பிணைவுச் சக்தியைத் தூண்டி வெளிப்படுத்த, உலைகளில் சூரியவாயு போல் பேரழுத்தமும், பெருமளவு உஷ்ணமும், விஞ்ஞானிகளால் உண்டாக்க முடியுமா ?

1952 நவம்பர் முதல் தேதியில் அமெரிக்காவும், 1953 ஆகஸ்டு 20 இல் ரஷ்யாவும் வெப்ப அணுக்கரு ஆயுதமான [Thermo-Nuclear Weapon] ஹைடிரஜன் குண்டைத் [H-Bomb] தயாரித்து முதன் முதல் ஒரு குட்டிச் சூரியனை உண்டாக்கி வெடிக்க வைத்து வெற்றி பெற்றன. ஆனால் அணுப்பிணைவுப் பிழம்பை ஓர் உலை அரணுக்குள் அடக்கி நீடிக்கச் செய்ய எந்த நாட்டு விஞ்ஞானியாலும் இதுவரை முடியவில்லை! அப்பெரும் முயற்சிதான் அகில உலகில் இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கு மிகச் சிக்கலான பொறிநுணக்கப் பிரச்சனையாகவும் திறமைக்குச் சவாலாகவும் ஆகியிருக்கிறது!

மின்சக்திப் பற்றாக் குறை உலக நாடுகளில் மெதுவாகத் தலை தூக்கி யிருக்கிறது! செல்வம் கொழித்த மேலை நாடுகளிலும் பற்றாக் குறையால் பல தொழிற்சாலைகள் பாதிக்கப் பட்டு வருகின்றன! சமீபத்தில் அமெரிக்காவில் மின்சக்திப் பற்றாக் குறை கலிஃபோர்னியாவில் தலை விரித்தாடி வர்த்தகங்களும், வாணிபத் தொழில்களும் கதவுகளை மூடி, பலர் வேலைகள் இழந்ததை யாவரும் அறிவர்! சென்ற நூற்றாண்டில் திரீமைல் தீவு, செர்நோபிள் அணுசக்தி நிலையங் களில் பெரும் விபத்து நேர்ந்து, கதிரியக்கத்தால் தீங்குகள் விளைந்து, புது அணுசக்தி நிலையங்கள் அமெரிக்காவில் கட்டப் படாமல் நிறுத்தப்பட்டன.

ஆயினும் உலகில் பெருமளவு மின்சக்தியை இன்னும் பழைய அணுமின் நிலையங்கள்தான் பரிமாறிக் கொண்டிருக்கின்றன. எதிர் காலத்தில் மின்சக்திப் பற்றாக் குறை வினாவுக்கு முடிவான விடை, பெருமளவில் மின்திறம் வெளியாக்கும் பிணைவுச் சக்தி ஒன்றே ஒன்றுதான்! ஆனால் அந்த நிலையத்தை வர்த்தக முறையில் உருவாக்கி இயக்குவதுதான் உலக எஞ்சினியர்களுக்கு மாபெரும் போராட்டமாகவும், திறமையைச் சோதிப்பதாகவும் இருந்து வருகிறது!

பிளவு சக்தி, பிணைவு சக்தியை ஈன்று அணுயுகம் பிறந்தது!

அகில விஞ்ஞான மேதை, ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் 1905 ஆம் ஆண்டிலேயே, பிண்டத்தைச் [Matter] சக்தியாக மாற்றலாம் என்று முதன் முதல் கணித மூலமாகவே ஒரு மாபெரும் மெய்ப்பாட்டைக் கணித்துக் காட்டினார்! அதுதான் ஐன்ஸ்டைன் ‘பளு சக்தி சமன்பாட்டு ‘ [Mass Energy Equation] நியதி. 40 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் நியூ மெக்ஸிகோ, லாஸ் அலமாஸில் அணுகுண்டு விஞ்ஞானிகள் அதைச் செயற்கை முறையில் செய்து காட்டி நிரூபித்தார்கள்! ஆனால் அண்ட வெளியில், ஆதவனும், எண்ணற்ற சுய ஒளி நட்சத்திரங்களும் அந்த நியதியைக் கோடான கோடி ஆண்டுகளாய் மெய்ப்பித்து வருகின்றன!

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது, 1945 இல் முதல் அணுகுண்டு வெடித்து அணுயுகம் பிறந்தது! லாஸ் அலமாஸில் விஞ்ஞானிகள் பிளவு அணுகுண்டை [Fission Bomb] ஆக்கும் முன்பே, ஹைடிரஜன் குண்டு தயாரிக்கும் முறையையும் உருவாக்கிப் பின்னால் தேவைப்படலாம் என்று ஒதுக்கி வைத்தார்கள். 1952 நவம்பர் முதல் தேதியில் அமெரிக்கா தன் முதல் ஹைடிரஜன் குண்டை வெடித்து, அணுப் பிணைவு சக்திக்கு விதை ஊன்றியது! பிளவுச் சக்தியில் வெடிப்பது, அணுகுண்டு! பிணைவுச் சக்தியில் வெடிப்பது, ஹைடிரஜன் குண்டு! அணுகுண்டு ஆக்கிய பிதா, அமெரிக்க பெளதிக விஞ்ஞானி, ராபர்ட் ஓப்பன்ஹைமர் [Robert Openheimer]. ஹைடிரஜன் குண்டு தயாரித்த பிதா, ஹங்கேரியன் பெளதிக விஞ்ஞானி, எட்வெர்டு டெல்லர் [Edward Teller]. எட்வெர்டு டெல்லர்தான் பிணைவுச் சக்தியை மின்சக்தி ஆக்கத்திற்குப் பயன்படுத்த அடிகோலிய பெளதிக விஞ்ஞானி. அணுப்பிளவு சக்தி, அணுப்பிணைவு சக்தி இரண்டுமே யுத்த ‘அழிவியல் விஞ்ஞானம் ‘ [Science of Destruction] ஈன்றெடுத்த அழிவுச் சக்தி! அழிவுச் சக்தியை ஆக்க சக்தியாக மாற்ற முற்படுவதும் விஞ்ஞானிகள்தான்!

யுரேனியம் [Uranium235], புளுட்டோனியம் [Plutonium239] போன்ற கனமான உலோகங்களின் [Heavy Elements] அணுக்கருவை நியூட்ரான் கணைகள் தாக்கிப் பிளக்கும் போது எழுவது, ‘பிளவு சக்தி ‘. ஹைடிரஜன், டியூட்டிரியம், டிரிடியம், லிதியம் போன்ற எளிய மூலகங்களின் [Light Elements] அணுக்கருவை உஷ்ணத்தில் பிழம்பாக்கிப் பிணைத்தால், வெளிவருவது, ‘பிணைவு சக்தி ‘. பிளவு சக்தியும், பிணைவு சக்தியும் அணுக்கருவைப் [Nucleons] பிளப்பதாலும், இணைப்பதாலும் முறையே வெளியாகின்றன. பிளவு அணுக்கரு இயக்கத்தில் [Nuclear Reactions] கனப் பிண்டம் [Matter] உடைக்கப் பட்டு, முடிவில் சிறிய அணுக்கருப் பண்டங்கள் [Fission Products] விளைகின்றன. பிணைவு அணுக்கரு இயக்கத்தில் எளிய பிண்டங்கள் இணைந்து முடிவில் பெரிய அணுக்கருப் பண்டம் உருவாகிறது. இரண்டு அணுக்கரு இயக்கச் சமன்பாடுகளிலும் இறுதி மொத்தத்தில் ‘பளுஇழப்பு ‘ [Mass Defect] நேர்ந்து, அதற்குச் சமமான சக்தி வெளியாகிறது. இதுதான் ‘இணைப்புச் சக்தி ‘ [Binding Energy] என்று அணுக்கரு பெளதிகத்தில் கூறப் படுகிறது. சில சமயம் சக்தியுடன், நியூட்ரான், புரோட்டான் போன்ற பரமாணுக்களும் [Sub-atomic Particles] தோன்றுகின்றன.

பிண்டத்தைச் சக்தியாக மாற்றலாம்! எதிர்மறையில், சக்தியைப் பிண்டமாக மாற்றலாம்! இப்புதிய விஞ்ஞானத் தத்துவத்தை 1905 ஆம் ஆண்டில் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தனது உலகப் புகழ் பெற்ற ‘பளு சக்தி சமன்பாட்டில் ‘ [Mass Enery Equation] கணித்துக் காட்டினார். பளுஇழப்பு நிறையை ஒளி வேகத்தோடு இரண்டு முறை அடுத்து அடுத்துப் பெருக்கினால் சக்தியின் அளவைக் கணக்கிட்டு விடலாம். இந்தச் சமன்பாட்டின்படி ஒரு பவுண்டு யுரேனியம்235 அணுக்கரு பிளவு பட்டால், சுமார் 11,000 மெகாவாட் வெப்ப சக்தி ஒரு மணி நேரம் வெளியாகும்!

Einstein ‘s Mass Energy Equation

அணுமின் உலை இயக்க அரங்குகளில் சூழ்மண்டலப் பாதுகாப்பு

1973 முதல் 2003 வரை சுமார் 30 ஆண்டுகள் உலகில் நானூறுக்கும் மேற்பட்ட அணுமின் நிலையங்கள் இயங்கி 78.7 மில்லியன் டன் ஸல்·பர் டையாக்ஸைடு வெளிவீச்சையும், 39.7 மில்லியன் டன் நைட்டிரஸ் ஆக்ஸைடு வெளியேற்றத்தையும் தவிர்த்துள்ளன! பாரதம் எரிவாயுவைப் பயன்படுத்தி 1000 MWe வெப்ப மின்சக்தி நிலையம் ஒன்றைக் கட்டினால், அது நாளொன்றுக்கு 5.5 டன் ஸல்·பர் டையாக்ஸைடு வாயு : 21 டன் நைட்டிரஜன் ஆக்ஸைடு வாயு : 1.6 டன்.  கார்பன் டையாக்ஸைடு வாயு போன்ற துர்வாயுக்களைச் சூழ்மண்டலத்தில் பரப்பும் ! ஆனால் அணுமின் உலையில் ஒரு டன் அணுக்கரு யுரேனிய எரு உண்டாக்கும் வெப்பசக்தி, (2-3) மில்லியன் டன் இயல்வள எருக்கள் [நிலக்கரி, எரிவாயு அல்லது எரி ஆயில்] தரும் வெப்பசக்திக்குச் சமம். 1000 MWe ஆற்றல் அளிக்கும் அணு உலை, ஸல்·பர் டையாக்ஸைடு, நைட்டிரஜன் ஆக்ஸைடு, கார்பன் டையாக்ஸைடு போன்ற எந்தவிதப் பசுமை அழிப்பு வாயுக்களை வெளியேற்றுவ தில்லை [No Greenhouse Gas Emission]!

ஓர் ஆண்டுக்கு 30 டன் உயர்நிலைக் கதிரியக்கக் கழிவு (தீய்ந்த எருக்கழிவு) [Spent Fuel: High Level Radioactive Wastes], 800 டன் தணிந்த & இடைநிலை கதிர்வீச்சுக் கழிவுகள் [Low & Intermediate Radiation Wastes] சேருகின்றன. 800 டன் தணிந்த இடைநிலைக் கழிவுகள் அழுத்தப்பட்டு வடிவம் 20 கியூபிக் மீடராகச் சுருக்கப்படுகிறது.  ஓர் அணுமின் நிலையம் சாதாரணமாக ஆண்டுக்கு 20 மெட்டிரிக் டன் கதிரியக்கத் தீய்ந்த எருக்கழிவை [Radioactive Spent Fuel Wastes] உண்டாக்கும். உலக அணு உலைகள் அனைத்தும் ஆண்டுக்கு 2000 மெட்டிரிக் டன் எருக்கழிவை விளைவித்து வருகின்றன. கடந்த 40 ஆண்டுகளாக அகில அணு உலைகள் இதுவரைச் சுமார் 40,000 மெட்டிரிக் டன் எருக்கழிவை உண்டாக்கிப் பாதுகாப்பாகப் புதைத்து வைத்துள்ளன. அவை யாவும் தணிந்த கதிர்வீச்சு நிலைக்குத் தேய்ந்து குறைய 100 முதல் 500 ஆண்டுகள் வரை ஆகலாம்!

இருபதாம் நூற்றாண்டின் முடிவில் பிணைவு சக்தி ஆய்வில் முன்னேற்றம்!

முப்பது ஆண்டுகளில் [1975-2005] உலக விஞ்ஞானப் பொறியியல் வல்லுநர்கள் டோகாமாக் அணுப்பிணைவு உலையில் [Tokamac Fusion Reactor] 10 watt வெப்பசக்தி ஆக்கத்தில் ஆரம்பித்து, 16 மில்லியன் watt [16 MW] வெப்ப சக்தியை உண்டாக்கிப் பிணைவு சக்திப் படைப்பில் மகத்தான சாதனையை நிலை நாட்டி யுள்ளார்கள்! அந்த வெற்றிகரமான சாதனை வெப்ப அணுக்கரு மின்சக்தி வணிகத்துறை நிலையங்கள் பெருக உலக வாயிலைத் திறந்து விட்டிருக்கிறது! பிணைவு சக்தி ஆராய்ச்சி தற்போது அடிப்படை ஆய்வு நிலையைத் [Research Stage] தாண்டி, ‘முன்னோடி மாடல் சோதனை ‘ [Prototype Model Testing] நிலைக்கு உயர்ந்துள்ளது! கடந்த எட்டாண்டுகளாக பிணைவு சக்தி ஆய்வுகளின் சிறப்பான வெற்றியால், பொறியியல் துறை வளர்ச்சி பெற ‘உறுதிச் சான்றிதழ் ‘ [Certified for Engineering Development] அளிக்கப் பட்டுள்ளது! 2001 நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்கா, கனடா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகிய விஞ்ஞான முற்போக்கு நாடுகள் கனடா, டொரான்டோ [Toronto] நகரில் கூடி 5 பில்லியன் டாலர் செலவில் உருவாகப் போகும் மாபெரும் ‘அகில நாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வு உலை ‘ [International Thermonuclear Experimental Reactor, ITER] ஒன்றைப் பற்றி முடிவு செய்தன!

பிரம்மாண்டமான 1000 MW ஆற்றல் கொண்ட அப்பிணைவு அணு உலைக்குத் தேவையான 100 Kg டிரிடியம் [Tritium] எரிவாயுவில், கனடா தனது அழுத்தக் கனநீர் அணு உலைகளில் [Pressurised Heavy Water Reactors] சேமித்துள்ள 55 Kg டிரிடியத்தை அளிக்க முன்வந்துள்ளது! அவ்வணு உலைக்கு இடமளிக்கக் கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளும் தயாராக உள்ளன! கனடாவின் பிளவு அணு உலைகளில் உள்ள மிகையான அளவு கனநீரில் [Heavy Water] இருக்கும் டியூடிரியம், டிரிடியம் [Deuterium, Tritium], பிணைவு அணு உலைகளுக்கு எருவாகப் பயன்படுவதால், ITER நிறுவகமாகக் கனடா தேர்ந்தெடுக்கப்பட காரண முள்ளது! மேலும் புதிய பிணைவு உலையில் உண்டாகும் மின்சக்தி ஆற்றல் 200 MW முதல் 1000 MW வரை இறங்கி ஏறப் போவதால், உறுதியாக இணைந்த வினியோகக் கம்பிகள் [Supply Grid Lines] தேவைப் படுகின்றன! அந்த வசதியும் கனடாவில் அமைந்துள்ளதால், அங்கே அகில உலக எதிர்கால முன்னோடிப் பிணைவு உலை நிறுவகமாக வாய்ப்புள்ளது!

அணுப்பிணைவுச் சக்தி நிலையத்தின் நிறைபாடுகள்!

பிணைவு சக்தி பிளவு சக்தியை [Fission Energy] விட பல முறைகளில் மேன்மை உடையது. அணுப்பிணைவு சக்தியில், அணுப் பிளவு சக்திபோல் உயிரிஇனங்களைத் தாக்கி வதைக்கும் பயங்கரக் கதிரியக்கம் [Radioactivity] இல்லை! பிணைவுச் சக்தியில் கதிர்வீசும் கழிவுகள் இல்லை! அதில் எழும் கதிரியக்கம் மிகச் சிறிதளவே! அமெரிக்காவின் திரீமைல் தீவு, ரஷ்யாவின் செர்நோபிள் அணுப்பிளவு சக்தி நிலையங்களில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தின் போது, உலையின் எரிக்கோல்கள் உருகிப் பெரும் சிக்கலை உண்டாக்கியது! பிணைவு உலைகளில் வெடிப்பு விபத்துகள் ஏற்படா! இயக்கத்தின் போது எரிக்கோல் உருகிப் போகும் அபாயம் எதுவும் இல்லை! அணுப் பிணைவு நிலையங்களிலிருந்து தினம் வெளியேறும் கழிவு வாயுக்கள் மனிதர் மற்றும் இதர உயிரினங்களுக்குத் தீங்கு தருவன அல்ல! அவைச் சூழ்வெளியைச் [Environment] சுத்தமாக வைத்திருக்க உதவி புரிபவை! பிணைவு இயக்கத்தில் ரசாயனத் தீயின் கடும் விளைவுகள் உண்டாவ தில்லை! மேலும் பிணைவு உலைகளில் பயன்படும் எரி ஆவிகள் டியூட்டிரியம், டிரிடியம் இரண்டும் உலகெங்கும் நீரில் அளவற்ற கன அளவு கிடைக்கின்றன. எதிர் கால மின்சக்தி உற்பத்திக்குப் பல நூற்றாண்டுகளுக்கு வேண்டிய, வெப்ப அணுக்கரு எருக்களுக்குப் பஞ்சமே இருக்காது!

மாபெரும் ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு நிலையத்துக்குத் தேவையானது சிறிதளவு எருதான்! உதாரணமாக 1000 MWe நிலையத்தின் ஓராண்டுக்கு வேண்டிய எரு 0.6 மெட்ரிக் டன் [1320 பவுண்டு] டிரிடியம்! அது அணுப்பிளவு நிலையமானால், 30 டன் யுரேனியம் டையாக்கஸைடு [UO2] தேவைப்படும்! அது வெப்ப மின்சக்தி நிலைய மானால், 2.1 மில்லியன் டன் நிலக்கரி வேண்டியதிருக்கும்! இவற்றை ஒப்பு நோக்கினால், ஒரு டன் டியூடிரியம், அணுப்பிணைவு நிலயத்தில் 29 பில்லியன் டன் நிலக்கரி வெளியாக்கும் வெப்ப சக்தியைத் தருகிறது!

பிணைவு சக்தியின் தீப்பிழம்பு மின்கொடைத் துகள்களின் [Plasma charged Particles] வேகங்களைத் தணித்து, நேரடியாக அவற்றை மிகையான மின்சக்தி அழுத்தமாக [High Voltage Electricity] மாற்றிவிடலாம்! அம்முறையில் நீராவி உண்டாக்க கொதிகலம் [Steam Boiler], வெப்பசக்தியை யந்திர சக்தி, மின்சக்தி யாக மாற்ற டர்பைன், தணிகலம், மின்சார ஜனனி [Turbine, Condenser & Generator], மிகை வெப்ப மூட்டிகள் [Super Heaters], அனுப்புநீர் வெப்ப மூட்டிகள் [Feed Water Heaters] போன்ற பொது வெப்பச் சாதனங்கள் வேண்டியதில்லை! வெப்பத்திலிருந்து நேரடி மின்சக்தி! நிலக்கரி, ஆயில், அணுப்பிளவு நிலையங்களில் அடையும் வெப்பத் திறனுக்கும் [Thermal Efficiency 30%-45%] மிக மேலாக நேரடி மின்சக்தி உற்பத்தியில் பிணைவு நிலையங்களில் பெறலாம்!

அணுப்பிணைவு சக்திக்கு வேண்டிய எளிய எருப் பண்டங்கள்

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பியக் குழுவினர் தமது ‘டோகாமாக் ‘ வெப்ப அணுக்கரு ஆய்வு உலையில் [Tokamac, Thermo Nuclerar Fusion Test Reactor] 100-200 மில்லியன் டிகிரி உஷ்ணத்தை உண்டாக்கி எருவாக ஹைடிரஜனின் இரண்டு ஏகமூலகங்களான டியூடிரியம், டிரிடியம் [Hydrogen Isotopes: Deuterium,Tritium] ஆகிய இரண்டையும் பயன்படுத்தி வருகின்றன.

1[டியூடிரியம்]2 + 1[டிரிடியம்]3 –>2[ஹீலியம்]4 + 0[நியூட்ரான்]1 + 17.6 MeV (சக்தி)

பிணைவு சக்தி உற்பத்திக்குத் தேவையான எருக்கள் மூன்று: 1. டியூடிரியம், 2. டிரிடியம், 3. லிதியம் [Lithium]. ஆறு, ஏரி, கடலிலும் கொட்டிக் கிடக்கும் நீரில் 7000 இல் ஒரு பங்கானது டியூடிரியம். 500 லிட்டர் நீரில் 15 கிராம் டியூடிரியம் கிடைக்கிறது! டிரிடியம் இயற்கையில் கிடைப்பதில்லை. கனநீர் மிதவாக்கியாகப் பயன்படும் வெப்ப அணு உலைகளில் உபரியாக விளைகிறது. மேலும் செயற்கையில் லிதியம் உலோகத்தை நியூட்ரான் கணைகளால் தாக்கினால், டிரிடியத்தை உண்டாக்கலாம். அணுப்பிணைவு உலையின் உள்ளே சுற்றுச் சுவரில் லிதிய உலோகம் அமைக்கப் பட்டுள்ளதால், இயக்கத்தின் போது எழும் அதிவேக நியூட்ரான்கள் லிதியத்தைத் தாக்கித் தொடர்ந்து டிரிடியம் யந்திரத்தி னுள்ளே விளைகிறது.

3[லிதியம்]6 + 0[வேக நியூட்ரான்]1 –>1[டிரிடியம்]3 +2[ஹீலியம்]4

3[லிதியம்]7 + 0[வேக நியூட்ரான்]1 –>1[டிரிடியம்]3 +2[ஹீலியம்]4 +0[மெது நியூட்ரான்]1

இயற்கை லிதியத்தில் இரண்டு ஏகமூலங்கள் [92.5% லிதியம்7, 7.5% லிதியம்6] உள்ளன. எல்லா உலோகத்திலும் மிகவும் நலிந்த [Lightest Metal] லிதியம் 30 கிராம், நியூட்ரான் தாக்குதலில் 15 கிராம் டிரிடியம் எருவை உண்டாக்குகிறது.

டோகாமாக் அணு உலையில் பிணைவு சக்தி உற்பத்தி

அணுப்பிளவில் யுரேனியம்235, புளுடோனியம்239 போன்ற கனப் பிண்டங்கள் நியூட்ரான்களால் இரு சிறு கூறாகளாகப் பிளக்கப் பட்டு வெப்ப சக்தி எழுகிறது! அணுப்பிணைவில் ஹைடிரஜன், லிதியம் போன்ற எளிய பிண்டங்கள் பேரளவு அழுத்தம், மிகையான உஷ்ணம் கொண்ட சூழ்நிலையில் இணைந்து பெரிய மூலகமாக மாறி வெப்ப சக்தி உண்டாகிறது! இரண்டு வித அணுசக்திகளும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ‘பளு சக்தி சமன்பாடுக்கு ‘ [Mass Energy Equation] உடன்படுகின்றன! பிளவு, பிணைவு ஆகிய இரண்டு அணுக்கரு இயக்கத்தின் முடிவில் விளையும் பளு இழப்பே [Mass Defect] சக்தியாக மாறுகிறது!

விளையும் சக்தி = [பளு இழப்பு] X [ஒளிவேகம்] X [ஒளிவேகம்]

யுரேனியம்235 மூலக அணுப்பிளவில் 200 MeV சக்தி ஒவ்வொரு தரமும் விளைகிறது! அதே போல் ஹைடிஜரன், ஹீலிய அணுப்பிணைவில் ஒவ்வொரு முறையும் 17.6 MeV சக்தி உண்டாகிறது! ஒவ்வொரு ‘கருத்துகள் ‘ [Nucleaon] அளிக்கும் சக்தியைத் தனியாகக் கணக்கிட்டால், அணுப்பிளவில் 200 MeV/235=0.85 MeV சக்தியும், அணுப்பிணைவில் 17.6 MeV/5=3.5 MeV சுமார் 4 மடங்கு சக்தி கிடைக்கும்.

திடவம், திரவம், வாயு, பிழம்பு [Solid, Liquid, Gas, Plasma] என்னும் நான்கு விதத் தோற்றங்களில் நிலை மாறும் பிண்டத்தின் [Four States of Matter], பிழம்பு நிலையே, பிணைவுச் சக்தி ஆக்குவதற்கு ஏதுவானது. திடப் பிண்டம் ஒன்றை வெப்பத்தில் சூடேற்றும் போது, உருகும் நிலை எய்தவுடன் அது திரவ நிலை அடைகிறது. தொடர்ந்து வெப்பத்தைச் செலுத்தினால், வாயு வாகி இறுதியில் தீப்பிழம்பாகி அதன் வாயுத் துகள்கள் மின்கொடை பெற்று [Electrically Charged Ions] மின்மயமாகின்றன!

1997 ஆம் ஆண்டில் முதன் முதலாக இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள, உலகிலே மிகப் பெரிய JET [Joint European Torus] டோகாமாக் யந்திரத்தில் டியூட்டிரியம், டிரிடியம் வாயுக்களைப் பயன்படுத்தி 200 மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் பிழம்பை சில வினாடிகளுக்கு நீடிக்க வைத்து 10 MW பிணைவுச் சக்தியை உண்டாக்கினார்கள்! உச்ச அளவு 16 MW வரை ஏறியது! இதுவரைச் சாதித்த மிகையான அளவு சக்தி இதுதான்! ஆனால் சில வினாடிகள் நீடித்த அப்பிணைவு சக்தியை மேற்கொண்டு அதிகமாக்கவோ, அல்லது நீடிக்கச் செய்யவோ அதன் வடிவம் போதாது! அணுப்பிணைவு இயக்கம் தொடரக் குறைந்தது பிழம்பு நீடிப்பு 1000 வினாடிகளுக்கு நிகழ்த்த வேண்டும்! அதற்கு அதை விடப் பிரம்மாண்டமான டோகாமாக் அணு உலை ஒன்று நிறுவப் பட வேண்டும்!

2001 ஆம் ஆண்டில் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, கனடா, ஜப்பான் ஆகிய உலக நாடுகள் இகூடி 1000 மெகாவாட் ITER [International Thermonuclear Experimental Reactor] என்னும் மாபெரும் அகில டோகாமாக் யந்திரத்தை நிறுவி ஆராய்ச்சி செய்யத் திட்டங்கள் தயாராகி வருகின்றன. அதைக் கட்டி முடிக்க 6.6 பில்லியன் டாலர் தொகை ஒதுக்கப் பட்டுள்ளது. அந்த ஆய்வு நிலையம் 2005 ஆம் ஆண்டில் இயங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கனடாவின் கான்டு அழுத்தக் கனநீர் அணுமின் நிலையங்களில் [CANDU Pressurised Heavy Water Reactors] பல ஆண்டுகளாக உபரிப் பண்டமாய்ச் சேமிக்கப் பட்ட டிரிடியத்தையும் [Tritium], நீரில் கிடைக்கும் டியூடிரியம் [Deuterium] ஆகிய இரண்டையும் புதிய டோகாமாக் பிணைவு உலையில் பயன்படுத்துவதாக உள்ளது.

அணுப்பிணைவுச் சக்தி நிலையத்தில் ஏற்படும் சிக்கல்கள்!

ஆராய்ச்சி அணுப்பிணைவு உலைகளுக்கு இதுவரை உலக நாடுகள் 2 பில்லியன் டாலர்கள் செலவழித் துள்ளன! கால தாமதம் ஆவதால், இஇன்னும் 50 பில்லியன் டாலர் தொகை செலவாகலாம் என்று ஊகிக்கப்படுகிறது. மேலும் மிகச் சக்தி வாய்ந்த மின்காந்தத் தளம், அணுப்பிணைவு நிலையத்தில் இஇயங்குவதால், அதை ஆட்சி செய்யும் மனிதருக்கு அதனால் விளையும் தீங்குகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது! அடுத்து உலையில் பயன்படும் லிதியம் [Lithium] திரவத்துடன் ரசாயன இஇயக்க உக்கிரம் உடையது! அதன் விளைவுகளையும் அறிய வேண்டும். அனல் பிழம்புக்கு பிணைவு அணு உலை வளையத்தில்

நீடிக்கப்பட வேண்டிய அதி உன்னத சூன்ய நிலை நுணுக்கம் [High Vacuum Technique], மாசு மறுவற்ற தூசிகள் அற்ற எருக்களை ஊட்டும் ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து பராமரிப்பதில் சிரமங்களும் பிரச்சனைகளும் நேர வாய்ப்புள்ளன!

வெப்ப அணுக்கரு சக்தியே எதிர்கால மின்விளக்குகளுக்கு ஒளி ஊட்டும்

கடந்த 50 ஆண்டுகளாக அணுப்பிளவு உலைகளிலும், அணு ஆயுதப் பெருக்கங்களிலும் சேர்ந்த பல மடங்கு கதிரியக்கக் கழிவுகள் இன்னும் பாதுகாப்பான முறையில் புதைக்கப் படாமல் சூழ்மண்டலத்தை மாசு படுத்தித் தொடர்ந்து சேர்ந்து கொண்டே போகின்றன! இயற்கைத் தாது யுரேனியத்தின் பரிமாணம் உலகில் நாளொரு பொழுதும் குறைந்து கொண்டே போகிறது! எருப் பெருக்கும் எண்ணற்ற அணு உலைகள் [Breeder Reactors] யுரேனியம், தோரியம் ஆகிய செழிப்புத் தாதுக்களைப் [Fertile Materials] பயன்படுத்திச் சிறிய அளவு ஆற்றலில் [250 MWe] இயங்கி வந்தாலும், அணுப்பிளவு எரி பொருள் [புளுடோனியம்239, யுரேனியம்233] பெருமளவில் சேர்ந்து இன்னும் 50 ஆண்டுகளுக்கு ஈடு செய்ய முடியும் என்பதை உறுதியாகக் கூற முடியாது!

2001 ஜூலையில் ஐரோப்பியக் குழுவினர், ரஷ்யக் கூட்டரசுகள், கனடா, ஜப்பான் ஆகிய உலக நாடுகள் தமது டிசைனை ஒப்புக் கொண்டு 3.8 பில்லியன் ஈரோ [Euro] நாணயத்தில் ‘அகில நாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வு உலையைக் ‘ [International Themonuclear Experimental Reactor, ITER] கட்ட முடிவு செய்துள்ளன. அது அடுத்து ஆறு, ஏழு ஆண்டுகளில் இயங்க ஆரம்பித்து, வெற்றிகரமாய் மின்சக்தி பரிமாறி, 2030-2040 வருடங்களில் உலகெங்கும் பல புதிய வணிகத்துறை அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்கள் ஓடத் துவங்கி, நமது மின்விளக்குகளுக்கு ஒளி ஊட்டப் போவதை நாம் உறுதியாக நம்பலாம்!

(தொடரும்)

***********************

தகவல்:

1.  http://www.npcil.nic.in/index.asp [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]

2. http://pib.nic.in/release/release.asp?relid=20878 [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]

3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
[Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]

4.  World Nuclear Association – WNA Radiological Protection Working Group – RPWG (Official List – July 20, 2006)
http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

5. World Nuclear Association – WNA Waste Management and Decommissioning Working Group – WM&DWG
(Official List – July 25, 2006)  http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

6. http://www.candu.org/npcil.html [Indian Heavywater Nuclear Power Plants]

7. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

8. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html Letter By R. Bala (August 9, 2007)

10. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp [World Association of Nuclear Operation Website]

11 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)

12. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40409094&format=html (இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் அணுவிலிருந்து மின்சக்தி உற்பத்தி) [Nuclear Energy in the Twenty First Century]

13. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40311202&format=html (ஐம்பதாண்டுகளில் இந்திய அணுசக்தித் துறையின் மகத்தான விஞ்ஞானப் பொறியியற் சாதனைகள்) (1954-2004) )
14.     http://www.thinnai.com/?module=displaystory&story_id=40303172&format=html (முப்பது ஆண்டுகளில் அணுப்பிணைவு சக்தி ஆக்கத்தில் வளர்ச்சி) [Nuclear Fusion Energy]

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] September 27, 2007

அணுமின்சக்தி இயக்க ஏற்பாடுகளின் அனுதினக் கண்காணிப்பும், அபாயப் பாதுகாப்பும்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

பரிதியின் ஒளிக்கதிர் மின்சக்தியாய்ப்
பயன்படும் பகலில்
பல்லாண்டு !
ஓயாத கடல் அலைகளின்
அசுர அடிப்பில்
அளவற்ற மின்சக்தி உள்ளது !
காற்றுள்ள போது விசிறிகள் சுழன்று
மேட்டில் கிடைக்கும் மின்சக்தி !
மாட்டுச் சாணி வாயு
வீட்டு மின்சக்தி ஆக்கும் !
நிலக்கரி மூலம்
நிரம்ப மின்சக்தி பெறலாம்,
கரியமில வாயு வோடு !
அந்த முறைகள் யாவும் ஓர்
அளவுக் குட்பட்டவை !
சிக்கன மானவை சில !
செலவு மிக்கவை சில !
சிறியவை சில !
பேரளவு மின்சக்தி படைக்க
நுணுக்கமான
அணுப்பிளவுச் சக்தி தேவை.
கதிரியக்கம் இல்லா
அணுப்பிணைவுச் சக்தி தேவை.
அவற்றுக்கு
எல்லை இல்லை !
வரையறை ஏதுவு மில்லை !
மின்சக்தி
பற்றாக் குறையைத்
தீர்க்க
அனைத்து ஆற்றலும் தேவை
அகில உலகுக்கு !

“அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடல் மட்ட அலைகளின் ஏற்ற இறக்கத்தில் உண்டாக்கும் சக்தியைக் கையாண்டு, பரிதிக் கதிரொளி வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி ஆக்குவோம்.”

ஆக்கமேதை தாமஸ் ஆல்வா எடிஸன் (ஆகஸ்டு 22, 1921)

“மின்சக்தி உற்பத்தி இல்லாமை போன்று செலவு மிக்க மின்சக்தி எதுவுமில்லை.”  [No Power is so costly as no Power]

டாக்டர் ஹோமி பாபா (1955 ஐக்கிய நாடுகளின் ஆக்கப்பயன்களின் அணுசக்திப் பேரவை ஜெனிவா)

“அடுத்து வரும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியா வைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும்.  இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம். (2003)

முன்னுரை:    இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலே தமிழ்மக்கள் உள்பட உலக மாந்தர் அனைவருக்கும் நாகரீகமாக அனுதினமும் உயிர்வாழக் குடிநீரும், மின்சக்தியும் மிக மிகத் தேவை.  1950 ஆம் ஆண்டு முதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள், ஜப்பானில் புகுஷிமா அணுமின் நிலையங்கள் ஆகிய மூன்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன.  அதற்கு அடுத்தபடி அணுசக்தி இயக்கும் 220 கப்பல்களும், கடலடிக் கப்பல்களும் (Submarines) கடல் மீதும், கீழும் உலாவி வருகின்றன.  ஈழத்தீவில் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய் போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் 39% ஆற்றலைத் தயாரித்து மின்சாரம் அனுப்பி வருகின்றன. இந்தியாவின் அணு மின்சக்திப் பரிமாற்றப் பங்கு 2.6%  இயங்கி வருபவை 17 அணுமின் நிலையங்கள்.  இந்தியாவில் அனைத்து அணுசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள, துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்.

இந்திய அணுசக்தி நிலையங்களின் மின்சார உற்பத்தித் திறனையும், இயக்க விபரங்களையும், புதிய நிலையங்களின் கட்டுமான வேலைகளையும், இந்திய அணுசக்திக் கார்ப்பொரேஷன் வலைத் தளத்தில் << www.npcil.nic.in >> விளக்கமாகக் காணலாம். 1957 ஆம் ஆண்டு முதல் கடந்த 50 வருடங்களாக ஆண்டுக்கு 250 விஞ்ஞானப் பொறியியற் துறைப் பட்டதாரிகள் வீதம் சுமார் 12,000 பேருக்கு மிகையாகப் பயிற்சிக்காகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக் கிறார்கள்.  தற்போது அணுசக்தி நிலையங்களை டிசைன் செய்யவும், கட்டி முடிக்கவும், இயக்கி வரவும், அவற்றில் ஆராய்ச்சி செய்யவும் பட்டதாரிகள் பலர் இருக்கிறார்கள்,  இந்தியாவிலே விஞ்ஞானப் பொறியியற் பட்டதாரிகள் ஆயிரக் கணக்கில் பணிசெய்யும் ஓர் உயர்ந்த தொழில் நுட்பத் துறையாக அணுசக்தி நிர்வாகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.  பாரத நாட்டுப் பாதுகாப்புக்காக அணு ஆயுத உற்பத்தி, அணு ஆயுதச் சோதனை, அணு ஆயுத எரி உலோகச் சேமிப்பு [Nuclear Weapon Grade Materials] ஆகியவற்றை ரகசியமாக இந்திய அரசாங்கம் தன் நேரடிப் பார்வையில் கையாண்டு வருகிறது.  ஆனால் மின்சாரம் பரிமாறி இயங்கி வரும் 17 அணுமின்சக்தி நிலையங்களின் அமைப்பிலோ, நிர்வாகத்திலோ இயக்கத்திலோ, மின்சாரப் பரிமாற்றத்திலோ எதிலும் அரசாங்க அதிகாரிகளின் குறுக்கீடு கிடையாது.

இந்தக் கட்டுரையில் அணுமின்சக்தி நிலைய இயக்குநர்கள் எப்படி அனுதினமும் அணுமின் உலைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு, கண்காணிப்பு முறைகளைப் பின்பற்றி வருகிறார் என்பது விளக்கப் படுகிறது.

அணு மின்சக்தி உலை இயக்கத்துக்குத் தேவையான ஏற்பாடுகள்

அணுமின்சக்தி நிலையத்தில் எத்தனை இயக்க ஏற்பாடுகள் உள்ளன ? 500 மெகா வாட் ஆற்றல் உற்பத்தி செய்வதற்கு நிலையத்தில் குறைந்தது 50 முதல் 80 வரையான அமைப்புகள் கொண்டதாக இருக்கும்.  அவற்றின் விபரங்களைக் காண்போம்:  கீழ்க்காணும் ஏற்பாடுகள் யாவும் 500 மெகா வாட் அழுத்த நீர் அணுமின் நிலையம் [Pressurized Water Reactor (PWR)] ஒன்றின் உதாரண அமைப்புகள் ஆகும்.

1.  அணு உலை, அழுத்த அணு உலைக் கலம் (Atomic Reactor & Reactor Pressure Vessel)

அணு உலைக் கலன் நேராகவோ அல்லது மட்டத்திலோ (Vertical or Horizontal Vessel) அமைக்கப் படலாம்.  நம் விளக்கத்துக்கு செங்குத்து உலைக்கலனை உதாரணமாக எடுத்துக் கொள்வோம். அணு உலையில் உள்ள 300 மேற்பட்ட துளைகளில் யுரேனியம் டையாக்ஸைடு வில்லைகள் அடங்கிய எரிக்கோல்கள் [Fuel Rods with Uranium Dioxide Pellets] புகுத்தப் பட்டுள்ளன.  உலைக்கலனில் எப்போதும் மிதவாக்கி நீர் மட்டம் (Moderator Water Level) எரிக்கோல்களை மூழ்க்கியிருக்கும்.  யுரேனியத்தில் (U-235) நேரும் சுயப்பிளவுகளால் எழும் நியூட்ரான்கள், மேலும், மேலும் யுரேனியம் அணுக்கருவைப் பிளந்து, பிளவு ஒன்றுக்கு 200 மில்லியன் எலெக்டிரான்-வோல்ட் வெப்பசக்தி நீரில் தொடர்ந்து எழுகிறது.  [200 Mev Energy per Fission].  அணு உலை இயங்கினாலும், இயங்கா விட்டாலும் எப்போதும் பிளவுத் துணுக்குகள் தேய்வதாலும் [Fission Product Decay Heat], சுயப்பிளவுக் கனலாலும் தொடர்ந்து வெப்பம் உண்டாகிய வண்ணமிருக்கும்.  உலைக்கலனில் அந்த வெப்பம் தணிக்கப்பட்டு நீரின் உஷ்ணம் ஒரே அளவில் சுயமாகக் கட்டுப்படுத்த வேண்டும்.

1. “நிறுத்த அணு உலை வெப்பத்தணிப்பு ஏற்பாடு” [Shutdow Cooling Water System] : அணு உலை நிறுத்தமான தருணத்தில் எழும் நீரின் வெப்பத்தை நீக்கிச் சீரான கனப்பில் வைத்திருக்கும் ஏற்பாடு இது,  இந்த நீரோட்டச் சுற்றில் பம்புகளும், வெப்பக் கடத்தியும் [Pumps & Heat Exchangers] முக்கியமாக உள்ளன. இந்தச் சுற்றில் நீரோட்டத்தின் வேகமும், அழுத்தமும் மிதமானவை. [Low Flow & Low Pressure System].  இது தானாக இயங்குவது.  இந்தச் சுற்று நீரோட்டத்தை முற்றிலும் இயக்குநர் நிறுத்த முடியாது.

2..  அணு உலைக்குள்ளே உலைக்கலன் வெல்டிங் இணைப்புகளை உளவு செய்யும் போது “பராமரிப்பு தணிப்பு நீரோட்டச் சுற்று” [Maintenance Cooling Water System] இயக்கத்தில் கொண்டு வரப்படும்.  இந்த நீரோட்டம் நிறுத்தமான அணு உலை பலநாட்கள் குளிர்ந்த பின்பு இயக்கப்படும்.  பராமரிப்பு வேலைகள் முடிந்த பிறகு, இந்த நீரோட்டம் நிறுத்தப்பட்டு மேலே கூறப்பட்டுள்ள முதல் தணிப்பு நீரோட்டம் இயங்கி விளையும் வெப்பத்தைச் சீராக வைக்கும்.

3.  அணு உலைப் பணிகள் யாவும் முடிந்து மின்சக்தி உற்பத்திக்குத் தயாராக உள்ள போது “பிரதம வெப்பத் தணிப்பு நீரோட்டம்” [Main or Primary Coolant Sysyem] அழுத்தமாக்கப் பட்டு மிக்க வேகமாக நீரை எரிக்கோல்கள் ஊடே செலுத்தும்.  அணு உலையில் கீழே இறக்கப்பட்டுள்ள நியூட்ரான் விழுங்கி களை மெதுவாக மேலே தூக்கும் போது மிதவேக நியூட்ரான்களின் எண்ணிக்கை பில்லியன் கணக்கில் பெருகி வெப்பசக்தி பன்மடங்கு ஏறுகிறது.  பிரதம நீரோட்டத்தில் நான்கு அல்லது எட்டு பிரதம வெப்பக் கடத்திகளும் [Primary Heat Exchangers], நான்கு அல்லது எட்டு பூதப் பம்புகளும் [Primary Heat Transport Pumps], நீராவி உண்டாக்க இரண்டு கொதிகலன்களும் [Steam Boilers] இணைக்கப் பட்டுள்ளன.

4.  நிலையம் முழு ஆற்றலில் இயங்கி வரும் சமயத்தில் திடீரென அணு உலைச் சாதனங்களுக்கும், வெப்பத் தணிப்புப் பம்புகளுக்கும் மின்சாரப் பரிமாற்றம் நின்று போனால் நிலைய ஏற்பாடுகளில் கொந்தளிப்பு ஏற்பட்டு, ஆட்சி அரங்கில் [Control Room] சிவப்பு விளக்குகள் பல மின்னி எச்சரிக்கை மணிகள் அடிக்கும்.  அவ்விதம் ஏற்பாடுகள் தடுமாறும் போது, முதலில் மேலே காத்திருக்கும் நியூட்ரான் விழுங்கிகள் தானாக் கீழே இறங்கி அணு உலைச் சுயமாக நிறுத்தம் அடையும்.  பிரதம வெப்பத் தணிப்பு நீரோட்டத்தின் அழுத்தம் குறைந்து வேகமும் விரைவாகக் குன்றுகிறது.  அப்போது அணுப்பிளவுகள் ஏற்பட்டு சூடான அணுப்பிளவுத் துணுக்குகளின் வெப்பம் தணிக்கப் படாவிட்டால் யுரேனியக் கோல்கள் கனல் எழுச்சியால் உருகிவிடும் !  இதுவே “நீரிழப்பு விபத்து” [Loss of Coolant Accident (LOCA)] என்று அஞ்சப்படுவது.  1979 இல் அமெரிக்காவின் திரிமைல் அணுமின் நிலையத்தில் அந்த “நீரிழப்பு விபத்து” நேர்ந்துதான் அணு உலையில் எரிக்கோல்கள் பெரும்பான்மையாக உருகி [Fuel Core Melting], மாபெரும் சுத்தீகரிப்பு, மீட்சி வேலைகள் மேற்கொள்ளப் பட்டன !

அவ்வித “நீரிழப்பு விபத்தைத்” தவிர்க்க, நிறுத்தமடையும் அணு உலை எரிகோல்களின் வெப்பத்தைத் தணிக்க, “அபாய தணிப்பு நீர் பாய்ச்சல் ஏற்பாடு” [Emergency Coolant Injection System] அமைக்கப் பட்டிருக்கிறது.

5.  அணு உலையில் நியூட்ரான் பெருக்கம் விழுங்கிகளால் தடைபெற்று மீறும் தொடரியம் நிகழாதவாறு பாதுகாப்பு உண்டாக “அபாய நஞ்சுப் பாய்ச்சல் ஏற்பாடு” [Emergency Poison Injection System] இணைக்கப்படுகிறது.  நியூட்ரான்களை விரைவாக விழுங்கும் கடோலினியம் அந்த திரவ நீரில் கலக்கப்பட்டிருக்கிறது.  கனநீர் அணுமின் உலைகளில் [Indian Heavy Water Reactors] அது தேவையாகும் போது மிதவாக்கி நீரில் பாய்ச்சப் படுகிறது.

அணு உலையை முற்றிலும் நிறுத்த “இரட்டைப் பாதுகாப்பு ஏற்பாடுகள்” இருக்கின்றன.

a)  நியூட்ரான்களை விழுங்கும் தடைக்கோல்கள் சட்டென அணு உலைக்குள் இறங்கும் ஏற்பாடு

b)  நியூட்ரான்களை விரைவாக விழுங்கும் “அபாய நஞ்சுப் பாய்ச்சல் ஏற்பாடு”

6.  தனித்தனியாக ஆட்சிக் கோல்களும், நிறுத்தக் கோல்களும் சுயமாக இயங்கும் மின்சாரக் கட்டுப்பாட்டு ஏற்பாடுகள் [Control Rods & Shut-off Rods Drive Systems].  உதாரணமாக ஆட்சிக் கோல்கள் அணு உலையில் 12 அல்லது 18 இருக்கலாம்.  நிறுத்தக் கோல்கள் 20 அல்லது 30 இருக்கலாம். நிறுத்தமான அணு உலையில் ஆட்சிக் கோல்களும், நிறுத்தக் கோல்களும் முழுவதும் கீழே இறக்கப்பட்டிருக்கும்.  அணு உலை இயங்க ஆரம்பிக்க முதலில் அனைத்து நிறுத்தக் கோல்களும் அணு உலைக்கு மேலே தூக்கப் படவேண்டும்.  ஆனால் மின்சக்தி ஆற்றலை மிகைப்படுத்த ஆட்சிக் கோல்கள் சீராக, முறையாக, மெதுவாக ஒவ்வொன்றாக மேலே தூக்கப் படவேண்டும்.

7.  அணு உலைக்குள்ளே பல வெப்பக் கடத்திகள் அமைக்கப் பட்டிருக்கின்றன.  வெப்பத்தை நீக்க முக்கியப் பிரதம வெப்பக் கடத்திகளில் “தனிமங்கள் அகற்றப்பட்ட தூய நீர்” அல்லது கடல் நீர் சில நிலையங்களில் பயன்படுகிறது. [Demineralised Water System or Sea Water Cooling System for Hear Exchangers]

8.  துவித நீரோட்ட ஏற்பாடு [Secondary Coolant Water System] என்பது கொதிகலனில் வெந்நீர் நீராவியாக மாறி டர்பைன் சுழலிகளைச் சுழற்றி, மின்சார ஜனனியில் மின்சாரம் உற்பத்தி செய்ய வசதி உண்டாக்குகிறது.

9.  டர்பைன் குளிர்ப்புக் கலனைத் தணிப்பு செய்யும் நீரோட்டம் [Condensor Cooling water System or Sea Water Cooling System for the Steam Condensor].

10.  அணு உலையில் எதிர்பாராது மனிதத் தவறோ அல்லது யந்திர சாதனப் பிசகோ நேர்ந்து எல்லா வித நீரோட்டமும் எரிக்கோல் வெப்பத் தணிப்புக்குத் தடைப்பட்டால், இறுதியாகத் “தீயணைப்பு நீரோட்ட ஏற்பாடு” [Emergency Fire Water System] அணு உலை எரிக்கோல்களை உருக விடாமல் செய்ய கடைசி முயற்சியாகக் கையாளப்படுகிறது.

பொது அபாய மின்சாரத் தயாரிப்பு ஏற்பாடுகள்

பொது நிலையத்துக்குப் பயன்படும் மின்சாரம் தடைப்படுமானால், அபாய நிலைத் தேவைக்குப் பயன்பட டீசன் எஞ்சின் இயக்கும் இரட்டை மின்சார ஜனனிகள் [Emergency Diesel Power System]    அமைக்கப் பட்டிருக்கின்றன.  அவற்றில் ஒன்று எப்போதும் மிதப்பு நிலையில் ஓடிக் கொண்டிருக்கும். முதல் யூனிட் நின்றால் மற்றொன்று ஓடத் தயாராய் இருக்கும்.  மின்னல் இடி மழைச் சமயங்களில் நிலைய மின்சார ஆற்றல் தடைப்பட்டுப் போனால், ஓடிக் கொண்டிருக்கும் டீசல் ஜெனரேட்டர் மின்சாரம் நிறுத்தமான அணு உலைச் சாதனங்களுக்கும், கட்டுப்பாடு புரியும் சுற்றுக்களுக்கும் பரிமாறப்படும்.

(தொடரும்)

***********************

தகவல்:
1.  http://www.npcil.nic.in/index.asp  [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]

2. http://pib.nic.in/release/release.asp?relid=20878  [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]

3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
[Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]

4.  World Nuclear Association – WNA
Radiological Protection Working Group – RPWG (Official List – July 20, 2006)
http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

5. World Nuclear Association – WNA
Waste Management and Decommissioning Working Group – WM&DWG (Official List – July 25, 2006)    http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

6. http://www.candu.org/npcil.html  [Indian Heavywater Nuclear Power Plants]

7. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)

8. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html  Letter By R. Bala (August 9, 2007)

10. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp  [World Association of Nuclear Operation Website]

11 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] May 21, 2011 (R-1)

அணுமின் சக்தி நிலையத்தில் வெப்பசக்திக் கட்டுப்பாடும், பாதுகாப்பும்

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

 

பிரபஞ்சப் பெரு வெடிப்பில்
பொரி உருண்டை
சிதறித் துகளாகித்
துண்டமாகித் துணுக்காகிப்
பிண்டமாகி,
பிண்டத்தில் பின்னமாகி
அணுவாகி,
அணுவுக்குள் அணுவாகி
பரமாணு வாகி
அவற்றின்
அடிப்படைத் தூளாகி
மூலமாகி, மூலகமாகித்
மூலக்கூறாகி
அலையாகி ஒளியாகி,
கோளாகி,
அண்டக் கோள்களின் வலையாகி
ஆத்மா வாகி
உயிராகிப் பயிராகி,
உடலாகி
அறுந்த நூலாகி,
இழையாய் புழுபோல் 
நெளிகிறாய் !

அணுசக்தி மின்சார உற்பத்திக்கு இப்போதிருந்து இன்னும் இருபதாண்டுகளில் வெற்றிகரமாகப் பயன்படுத்தப் பட்டால், இந்தியா தனக்குத் தேவையான திறமைசாலிகளைத் தனது இல்லத்திலேயே தோற்றுவித்துக் கொண்டு, அன்னிய நாடுகளில் தேட வேண்டிய திருக்காது.

டாக்டர் ஹோமி பாபா (1944)

சுருங்கித் தேயும் நிலக்கரிச் சுரங்கங்கள், குன்றிடும் ஹைடிரோ-கார்பன் எரிசக்தி சேமிப்புகளைக் கொண்டு, விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவளத்தை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் எரிசக்தியை முழுமையாகப் பயன் படுத்தி அணுசக்தியை உற்பத்தி செய்யும் முறை ஒன்றுதான் தற்போது இந்தியாவுக்கு ஏற்றதாக உள்ளது 

டாக்டர் அனில் ககோட்கர் [அணுசக்திப் பேரவை அதிபர்] (செப்டம்பர் 17, 2003)

முன்னுரை:  “அணு ஆற்றல் தொழில் நுட்பம் என்பது முதிர்ச்சியானதா என்ற கேள்வி ஒருபுறமிருக்கட்டும், அதனை நடைமுறைப் படுத்தும் நம்நாட்டின் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இன்னபிற சம்பந்தப் பட்டவர்களும் இந்த தருணத்தில் முதிர்ச்சியானவர்களா என்ற கோணத்தையும் கவனத்தில் கொண்டு கட்டுரை எழுத வேண்டுகிறேன்.  மாற்று எரிபொருளுக்கான முயற்சிகள் உடனடியாக தேவையென்று எல்லோரும் ஒப்புக்கொள்ளும் அதேவேளையில், கடினமான தொழில்நுட்ப விஷயங்களையும் புள்ளி விபரங்களையும் கொண்டு மட்டுமல்லாது இன்றய இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடுகளையும் கவனத்தில் கொண்டு எழுதிய உங்கள் கட்டுரையைக் காண ஆவலுடன்.” என்று ஆகஸ்டு 9, 2007 திண்ணைக் கடிதம் ஒன்றில் நண்பர் R. பாலா குறிப்பிட்டிருந்தார். 

அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா ?  அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா ?  என்ற அவரது இரண்டு கேள்விகளுக்கும் பதில் கூறவே இந்தக் கட்டுரையை நான் எழுதுகிறேன்.  அணு ஆயுத சம்பந்தமான அணுக்கருப் பிளவு எருக்களைத் [Nuclear Fissile Materials Uranium-235, Uraniuam-233 & Plutonium-239] தயாரிக்கும் அணு உலைகளின் கண்காணிப்புகளை இராணுவமும், அரசாங்கமும் தேசீயப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இரகசியமாக நடத்தி வருவதால் அவற்றைப் பற்றி இந்தக் கட்டுரையில் எதுவும் நான் குறிப்பிட விரும்பவில்லை.   

 

அணுசக்தி உலைகள் இயக்கத்துக்குத் தேவையான பாதுகாப்புகள்

2.  உட்புற, வெளிப்புற மனிதருக்குக் கதிரியக்கப் பாதுகாப்பு

அணுசக்தி நிலைய மின்சார உற்பத்தியில் முக்கியப் பாதுகாப்பு விதி,  கதிரியக்க வெளியேற்றத்தைக் கோட்டை அரணுக்குள்ளே கட்டுப்படுத்தி, கவசமிட்டு குறைவு படுத்தி, உள்ளே பணி செய்வோரையும், வெளியே வாழ்பவரையும் கதிர்வீச்சிலிருந்து காப்பாற்றுவது.  அணு உலைக்குள்ளே எல்லாத் தளங்களிலும், காற்றோற்றம் உள்ள எல்லா அறைகளிலும் வெவ்வேறு அளவுகளில் கதிரியக்கம் சூழ்ந்துள்ளது. மனிதர் நடமாடும் தளமெங்கும் ஒவ்வோர் இடத்திலும் உள்ள கதிர்வீச்சு அளவுகளைக் கருவிகள் காட்டுகின்றன !  திடீரெனக் கதிர்வீச்சு அளவு அதிகமானல் எச்சரிக்கை அறிவிப்பு மணி அடிக்கிறது.  மிகவும் அதிகமானால் அபாயச் சங்கு ஊதிப் பணி செய்வோரைப் புறத்தே செல்ல அறிவிக்கிறது.  அத்துடன் அணு உலை உடல்நலக் குழுவினர் [Health Physics Group] அனுதினமும் தமது தனிப்பட்டக் கதிர்வீச்சுக் கருவிகளில் [Radiation Monitors] தள உளவு, வாயு உளவு செய்து, கால நேரத்தையும் குறிப்பிட்டுப் பலகைகளில் எழுதி யாவரும் காணும்படி வைக்கிறார். 

கதிரியக்க அணு உலை இயக்க வல்லுநர் முதல், தரையைச் சுத்தம் செய்யும் சாதாரணப் பணியாளிகள் வரை அனைவருக்கும் கதிரிக்க எழுச்சி, கதிரிக்கத் தீங்கு, கதிரியக்கக் கவசம், கதிரிக்கப் பாதுகாப்பு பற்றி விளக்கமான பயிற்சிகள் நிலையத்தில் முதலில் அளிக்கப்படுகின்றன.  பாரத அணு உலைகளில் வேலை செய்யும் படிப்பில்லாத நபர்களை மேலாளர் ஒருவர் எப்போதும் அவர்கள் பணி புரியும் போது அருகில் நின்று கண்காணித்து வருகிறார்.  உட்புறம் வேலை செய்யும் அனைவரது கதிர்வீச்சுத் தாக்கலைப் பதிவு செய்ய ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கதிர்ப்பதிவுப் பதக்கம் [Personal Dosimeter Badge] அளிக்கப் படுகிறது.  பணியாட்களும் மற்ற அணு உலை இயக்குநர், எஞ்சினியர், மேலதிகாரிகளும் அணு உலை நிலயத்துள் நுழையும் போது கட்டாயம் கதிர்ப் பதக்கத்தைத் நெஞ்சில் தெரியும்படி அணிய வேண்டும்.  நிலையத்தை விட்டு வெளியே செல்லும் போது அவர்கள் வாயிலில் தொங்கும் பலகையில் வைத்துவிட்டு நீங்க வேண்டும். 

பணியாட்களை நிலைய மேலாளர் [Plant Supervisors] கண்காணிப்பதுடன், தனிப்பட்ட உடல்நலக் குழுவினரும் [Independant Health Physics Unit] அடிக்கடி உளவு செய்து மேற்பார்வை செய்வதால் மனிதத் தவறுகள் பேரளவு குறைகின்றன.  மேலும் நிலைய நபர்களின் கதிர்ப் பதக்கங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு, புதியவை அளிக்கப்படும்.  பழைய பதக்கங்களின் பதிவுக் கதிரடிகள் [Radiation Doses Recorded] ஆய்வு செய்யப்பட்டு அவரவர் பெயருக்கடியில் நிரந்தரமாய் சேமிப்பாகின்றன.  யாராவது மிகையான அளவில் கதிரடி பட்டிருந்தால் விசாரணைக் குழு அதன் காரணத்தை உளவு செய்யும்.  அவ்விதம் கதிரடிப் பதிவு, உளவு, பதக்க மாற்றம் அனைத்துப் பணிகளையும் தனிப்பட்ட உடல்நலக் குழுவினரே நிலையத்தில் கவனமாகச் செய்து வருகிறார்.       

3.  கதிரியக்கம், அரை ஆயுள் என்றால் என்ன ?

நாமறிந்த எளிய ஹைடிரஜன் முதல் கனமான யுரேனியம் வரை உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மூலகங்களில் ரேடியம், பொலோனியம், யுரேனியம், தோரியம், புளுடோனியம் போன்ற கன உலோகங்கள் சுயமாகவே கதிர்வீசுகின்றன.  அவ்விதம் கதிர்வீசி பளு குறைந்து படிப்படியாய் வேறு மூலகங்களாக மாறுகின்றன.  அவற்றின் அணுக்கரு சிதைந்து பொதுவாக வெளியாகுபவை ஆல்ஃபா துகள், பீட்டா துகள், அல்லது காமாக் கதிர்.  மூன்றும் வெளியாகலாம்.  அல்லது மூன்றில் ஒன்று அல்லது இரண்டு வெளியேறலாம்.  இயல் யுரேனியம் [Natural Uranium (U-238+U-235] அணுக்கருவில் சுயப்பிளவுகள் [Spontaneous Fissions] நிகழ்ந்து நியூட்ரான்களும் வெளியேறும். யுரேனியம் ஆஃபா துகள் வீசுவது.  சுயப்பிளவில் விளையும் அணுப்பிளவுத் துணுக்கள் பெரும்பாலும் பீட்டா துகளும், காமாக் கதிர்களும் வெளியிடுகின்றன.  அதைப் போல் செயற்கையாக ஆக்கும் புளுடோனியமும் Pu-239, யுரேனியம் U-233 இரண்டும் சுயப்பிளவாகி வெப்பம் தரும் உலோகங்கள்.  ஆதலால் அணு உலைகளில் பயன்படும் மூன்று முக்கிய கன உலோகங்கள் இயல் யுரேனியம், புளுடோனியம்-239 மற்றும் யுரேனியம் -233.        

ரேடிய உலோகம் ஆல்ஃபா துகள், காமா வீசுவது.  அவ்விதம் அதன் அணுக்கரு சிதையும் போது, அதன் பளு படிப்படியாய்க் குறைவாகி வருகிறது.  ரேடியத்தின் பளு பாதியாகும் காலத்தை அரை ஆயுள் [Half Life] என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள்.  அதாவது ஒரு கன உலோகத்தின் அரை ஆயுள் அது தீவிரமாகத் தேய்கிறதா அல்லது மெதுவாகத் தேய்கிறதா என்பதைக் காட்டுகிறது. 

உதாரணமாக

ரேடியம் அரை ஆயுள் :  1600 ஆண்டுகள்

இயல் யுரேனியத்தின் U-238 அரை ஆயுள் : 4.5×10^9 ஆண்டுகள்

யுரேனியம் U-235 [from Nat Uranium] அரை ஆயுள்: 7.1×10^8 ஆண்டுகள்

யுரேனியம் [U-233 from Thorium] அரை ஆயுள்: 1.6×10^5 ஆண்டுகள்

புளுடோனியம் -239 [from Nat Uranium U-238] அரை ஆயுள் : 2.4×10^4 ஆண்டுகள்
 
தோரியம் -232 அரை ஆயுள் : 1.4×10^10 ஆண்டுகள் 

4.   அணு உலையில் நிகழும் நியூட்ரான்-அணுக்கரு இயக்கங்கள்:  

அணு உலையில் நூற்றுக்கணக்கான துளைகளில் நுழைக்கப்பட்டுள்ள யுரேனியக் கோல்களைச் சுற்றிலும் மூழ்க்கும் திரவமாக நீர் எப்போதும் நிரப்பப் பட்டுள்ளது. அதுவே நியூட்ரான் வேகத்தைத் தணிக்கும் மிதவாக்கி [Neutron Moderator] நீராகச் சீரான உஷ்ண அளவில் அணு உலைக்குள் செலுத்தப்படுகிறது.  அணுக்கருவை நியூட்டிரான்கள் பிளக்கும் போது ஒவ்வோர் பிளவிலும் வெப்பசக்தி உண்டாகிறது.  அந்த வெப்பசக்தியைத் தொடர்ந்து கடத்திக் கொதிகலனுக்கு எடுத்துச் செல்ல தனியாக வேறொரு நீரோட்டம் அழுத்தமாக பூதப் பம்ப்புகளால் சுற்றோட்டம் பெறுகிறது.  அது பிரதமக் கனல்தணிப்பு நீரோட்டம் [Primary Coolant] என்று அழைக்கப் படுகிறது.  அணு உலை இயங்கினாலும் இயங்கா விட்டாலும் அந்த பிரதம நீரோட்டம் தொடர்ந்து யுரேனிய வெப்பத்தைச் சீரான உஷ்ணத்தில் கட்டுப்பாடு செய்ய வேண்டும்.

யுரேனியம் -235 உலோகத்தின் அணுக்கருவில் சுயப்பிளவு எழுவதால் வேக நியூட்ரான்கள் எழுந்த வண்ணம் இருக்கும்.  அந்த நியூட்ரான்களின் வேகத்தைக் குறைக்க நீர்த் தடாகமோ [Water Moderator] அல்லது திரள்கரி [Graphite Moderator] கவசமோ இல்லாவிட்டால் அவை காற்றில் மறைந்து விடும்.  அவ்விதம் மிதவாக்கி இருந்தால் மிதவேக நியூட்ரான்கள் மெதுவாக அடுத்தும் யுரேனிய அணுக்கருவைப் பிளந்து வெப்பசக்தியை வெளியாக்கும்.  நியூட்ரான் கணைகள் யுரேனியத்தைத் தாக்கி உண்டாகும் ஒவ்வொரு அணுப்பிளவிலும், இரண்டு அல்லது மூன்று நியூட்ரான்கள் மற்றும் சிறிய பிளவுத் துணுக்குகள் எரிக்கோல் கவசக் குழல்களில் சேமிப்பாகும்.  நியூட்ரான் பெருக்கத்தை அணு உலைக் கலனில் கட்டுப்படுத்துவது இயக்குநரின் முக்கியப் பணி.  நியூட்ரான் எண்ணிகை அதிகமானால், வெப்பசக்தி ஆக்கம் மிகுதி ஆகும்.  நியூட்ரான் எண்ணிக்கை ஒரே எண்ணிக்கையில் கட்டுப் பாடானால், வெப்பசக்தி ஒரே அளவில் உற்பத்தி ஆகிறது. நியூட்ரான் எண்ணிக்கையைக் குறைத்தால் வெப்பசக்தி ஆற்றல் குன்றுகிறது.  அந்தப் பணிக்கு உதவ மூன்று வித நியூட்ரான் விழுங்கிகள் [Neutron Absorbers] தேவைப்படுகின்றன.             

சிறிதளவு நியூட்ரான் எண்ணிக்கைக் கூட்டிக் குறைக்க கோபால்ட் வில்லைகள் கொண்ட “ஆட்சிக் கோல்கள்” [Adjuster Rods or Control Rods with Cobalt pellets] என்பவை பயன்படும்.  மிகையான எண்ணிக்கையில் விரைவாக விழுங்கி அணு உலையை நிறுத்த காட்மியம் வில்லைகள் கொண்ட “தடுப்புக் கோல்கள்” [Shut-off Rods with Cadmium Pellets] அணு உலைக்குள் நுழைக்கப் பட வேண்டும்.  நியூட்ரான் எண்ணிக்கை மீறிச் செல்லும் போது உடனே நிறுத்தவோ அல்லது அணு உலைப் பராமரிப்பு உத்திரவாதத்துக்கு கடோலினியம் நச்சுத் திரவம் [Gadolinium Poison Injection] மிதவாக்கி நீரில் பாய்ச்சப் படுகிறது.

a)  ஆறும் தொடரியக்கம் (Sub-critical Nuclear Reaction) :

அணு உலைத் தொடரியக்கம் (Chain Reaction) என்பது மிதவேக நியூட்ரான்கள் அணுக்கருப் பிளவால் அடுத்தடுத்து அணுக்கருவைத் தாக்கிச் சீராக வெப்பசக்தி உண்டாகி வருவது.  ஒவ்வோர் அணுப்பிளவிலும் நியூட்ரான் எண்ணிக்கை 2, 4, 8, 16, 32, என்று பெருக்கம் அடைவதால் அந்தப் பெருக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட, குறிப்பிட்ட அளவைத் தவிர தேவையற்றவை விழுங்கப்பட வேண்டும்.  

ஆறும் தொடரியக்கம் என்பது நியூட்ரான் பெருக்கத்தை குறைக்கும் முறை.  நியூட்ரான் விழுங்கிக் கோல்கள் அணு உலைக்குள் இறக்கப்பட்டு வெப்பசக்தி மெதுவாகக் குறைக்கப் படுவது.  இந்த முறை திட்டமிடப் பட்ட பராமரிப்புப் பணிகளுக்காகச் செய்யப் படுவது.

b)  நிறுத்தும் தொடரியக்கம் [Shutdown State]

நியூட்ரான் விழுங்கிகள் ஏறக்குறைய இயக்கம் புரியும் அனைத்து நியூட்ரான்களையும் விரைவாக விழுங்கித் தொடரியக்கம் பேரளவு சீக்கிரம் நிறுத்தமாகி வெப்பசக்தி குன்றச் செய்தல்.  இந்த தடுப்பு இயக்கம் சுயமாகவும் நிகழும்.  கையாட்சி முறையிலும் நிகழும்.  அணு உலைகளில் சுயத்தடுப்பு நிகழ்ச்சியைத் தடை செய்ய இயலாது. 

c)  பூரணத் தொடரியக்கம் : (Criticality)

அணு உலை இயக்கம் ஆரம்பமாகி முதன்முதலில் உண்டாகித் தாக்கும் நியூட்ரான்களும், அணுக்கருவைப் பிளந்து பிறக்கும் நியூட்ரான்களும் ஒரே எண்ணிகையாகச் சீராகி தணிவான வெப்பசக்தி ஆற்றலில் அணு உலை இயங்குவது.  அணு உலையின் வெப்பசக்தி ஆற்றலை மிகையாக்க இதுதான் அணு உலையின் முன்னோடி நிலை.

d)  மிஞ்சும் தொடரியக்கம் : (Diverging Nuclear Reaction) 

அணு உலை “பூரண நிலை” அடைந்த பிறகு ஆட்சிக் கோல்களை மெதுவாக உயர்த்தி சிறிதளவு நியூட்ரான் பெருக்கத்தை ஏற்படுத்தி வெப்ப சக்தி அதிகமாக முனைதல்.  அதைத் தொடர்ந்து அணு உலையை உச்ச ஆற்றலில் இயங்க பின்பற்றப் படும் தொடரிக்கம் அது.

e)  மீறிய தொடரியக்கம் : (Super-critical Nuclear Reaction)

மனிதத் தவறாலோ அல்லது ஆட்சிக் கோல்களின் பழுதாலோ அணு உலையில் நியூட்ரான்களின் எண்ணிக்கை பேரளவில் விரைவில் பெருகி, வெப்ப சக்தி கட்டுக்கு அடங்காமல் மிகையாவது.  சோவியத் ரஷ்ய இயக்குநர்கள் செர்நோபில் அணுமின் நிலையில் செய்த மாபெரும் மனிதத் தவறுகளால் தணிவு நிலையில் சோதிப்பு நடக்கும் போது அவ்வித மீறிய தொடரியக்கமே நிகழ்த்தது. 

முதல் காரணம் ஆட்சிக் கோல்கள் முழுவதும் மேலே கையாட்சியில் தூக்கப்பட்டு நியூட்ரான் பெருக்கம் மிகையானது. 

இரண்டாவது காரணம் நிறுத்தக் கோல்கள் சுயக் கட்டுப்பாட்டில் இல்லாமல் கையாட்சிக்குக் கொண்டுவரப் பட்டது. 

மூன்றாவது தானாக நியூட்ரான் விழுங்கிகள் இறங்க முடியாமல், கையாட்சியில் நுழைக்கப்பட்டு அணு உலை நிறுத்தம் தாமதமானது (Chain Reaction).

(தொடரும்)

***********************

தகவல்:

Picture Credits: 

1.  IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)
2.  Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire
3.  Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007) 
4  Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo 
5.  Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill.
6.  Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)
7.  Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)
8.  Herald Tribune : Earthquake Stokes Fears Over Nuclear Safety in Japan By Martin Facker (July 24, 2007)
9. Earthquake Zone : Earthquakes & Nuclear Safety in Japan [Citizen Nuclear Information Center (CNIC)] By Philip White International Liaison Officer CNIC.
10. Four Categories of Buildings & Equipment for Earhtquake-resitant Design of Nuclear Power Plants. 
11. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)
12. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)
13. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html  Letter By R. Bala (August 9, 2007)
14. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp  [World Association of Nuclear Operation Website]
15. 
16. IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction) 
 

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] September 13, 2007

அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சி யானதா ? அணுவியல் இயக்குநர்கள் முதிர்ச்சி பெற்றவரா ?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
 

முன்னுரை:  “சில வாரங்களுக்குமுன் செல்வி அவர்கள் எழுதியதைப் போல, “மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைக்கு பெயர்போன ஜப்பானில் இப்படி யென்றால்” என்றே நானும் பலகாலம் நினைத்துக் கொண்டிருந்தேன். சமீபகாலமாக இங்கு பத்திரிக்கைகள் மற்றும் பல்வேறு ஊடகங்கள் வாயிலாக வெளிவந்து உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளையும் உறுதிப்படுத்தபடாத ஊகங்களையும் பார்க்கும் போதும் படிக்கும்போதும், இது ஒரு பாதுகாப்பற்ற தொழில்நுட்பம் என்ற உணர்வே மேலோங்குகிறது.

அணுமின் தொழில்நுட்பம் குறித்து திரு சி. ஜெயபாரதன் அவர்கள் எழுதிய பல்வேறு கட்டுரைகளையும், அசுரன் போன்றோருக்கு பதிலிறுத்து எழுதிய கட்டுரைகளையும் வாசித்திருக்கிறேன். அணு ஆற்றல் தொழில் நுட்பம் என்பது முதிர்ச்சியானதா என்ற கேள்வி ஒருபுறமிருக்கட்டும், அதனை நடைமுறைப் படுத்தும் நம்நாட்டின் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இன்னபிற சம்பந்தப் பட்டவர்களும் இந்த தருணத்தில் முதிர்ச்சியானவர்களா என்ற கோணத்தையும் கவனத்தில் கொண்டு கட்டுரை எழுத வேண்டுகிறேன்.

மாற்று எரிபொருளுக்கான முயற்சிகள் உடனடியாக தேவையென்று எல்லோரும் ஒப்புக்கொள்ளும் அதேவேளையில், கடினமான தொழில்நுட்ப விஷயங்களையும் புள்ளிவிபரங்களையும் கொண்டு மட்டுமல்லாது இன்றய இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக நிலைப்பாடுகளையும் கவனித்தில் கொண்டு எழுதிய உங்கள் கட்டுரையைக்காண ஆவலுடன்.” என்று ஆகஸ்டு 9, 2007 திண்ணைக் கடிதம் ஒன்றில் நண்பர் R. பாலா குறிப்பிட்டிருந்தார். 

அணுமின்சக்தித் தொழில் நுட்பம் முதிர்ச்சியானதா ?  அணுவியல் இயக்குநர் முதிர்ச்சி பெற்றவரா ?  என்ற அவரது இரண்டு கேள்விகளுக்கும் பதில் கூறவே இந்தக் கட்டுரையை நான் எழுதுகிறேன்.  அணு ஆயுத சம்பந்தமான அணுக்கருப் பிளவு எருக்களைத் [Nuclear Fissile Materials Uranium-235, Uraniuam-233 & Plutonium-239] தயாரிக்கும் அணு உலைகளின் கண்காணிப்புகளை இராணுவமும், அரசாங்கமும் தேசீயப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இரகசியமாக நடத்தி வருவதால் அவற்றைப் பற்றி இந்தக் கட்டுரையில் எதுவும் நான் குறிப்பிட விரும்பவில்லை.   

fig-iaea-safeguard-program.jpg

யந்திர யுகத்திலே மனிதரின் பயிற்சியும் சாதனங்களின் செம்மைப்பாடும்

யந்திர யுகத்திலே முப்பெரும் தீங்குகளால் விபத்துக்கள் உலகெங்கும் அடிக்கடி யந்திர சாதனங்களில் நேர்கின்றன !  முதலாவது மனிதத் தவறு, இரண்டாவது யந்திரக் கோளாறு, மூன்றாவது புயல், இடிமின்னல், வெள்ளம், சூறாவளி, சுனாமி, பேய்மழை, பூகம்பம், எரிமலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் ! குறையுள்ள மனிதரும், பழுதுள்ள சாதனங்களும் இருக்கும் வரை ஆகாய விமானத்திலும், அண்டவெளிக் கப்பலிலும், இரயில் பயணத்திலும், அணுமின்சக்தி நிலையத்திலும், ஏனைய தொழிற் சாலைகளிலும் “அபாய எதிர்பார்ப்புகளை”  [Risks] உலக மாந்தர் எதிர்நோக்கி இருக்க வேண்டும்.  செம்மையான பயிற்சி முறைகள் மனிதத் தவறுகளைக் குறைத்துவிடும்.  அதுபோல் சீரான சாதனங்களும் விபத்துகளைச் சிறிய எண்ணிக்கை ஆக்கிவிடும்.  ஆனால் கூடியவரை விபத்துக்கள் மனிதராலோ, யந்திரத்தாலோ, இயற்கைச் சீற்றத்தாலோ நேர்ந்தால் யந்திரங்கள் பாதுகாப்பான நிலைக்குச் சுயமாக மாறி, மனிதர் தப்பிக் கொள்ள வழிகள் இருக்க வேண்டும். அதுதான் 21 ஆம் நூற்றாண்டில் யந்திர உலகிலே விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் வல்லுநரின் குறிக்கோளாய் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். 

யந்திர யுகத்திலே தம்மைப் பிணைத்துக் கொண்ட உலக நாடுகள் 21 ஆம் நூற்றாண்டிலே தனித்தியங்க முடியாத நிலையில் ஏதோ ஒரு தொப்புள் கொடி இணைப்பால் மாட்டிக் கொண்டுள்ளன !  செர்நோபில் விபத்தை ரஷ்யா விரும்பியும் ஒளித்து வைக்க முடியவில்லை !  அந்த விபத்தால் வெளியாகிப் பரவிய கதிரியக்கப் பொழிகள் கிழக்கே ஜப்பான் வரையிலும், மேற்கே கனடா வரையிலும் படிந்து விட்டன.  ஆ·பிரிக்காவில் தோன்றிய எயிட்ஸ் காமநோய் பரவிச் சென்று உலகில் தாக்காத நாடெதுவும் இல்லை !  2001 செப்டம்பர் 11 இல் அமெரிக்காவில் மூர்க்கர் பட்டாளம் வாஷிங்டன், நியூ யார்க் நகரங்களைத் தாக்கியதின் எதிரொலி இப்போது உலக நாடுகள் அனைத்தையும் பயத்துள்ளே தள்ளி விட்டிருக்கிறது.  பறக்கும் ஜம்போ ஜெட் விமானம் 737 ஒன்றில் பழுது நேர்ந்து விபத்து ஏற்பட்டு அனைவரும் மரித்தால் அதை வாங்கிப் பயன்படுத்தும் எல்லா உலக நாடுகளும் அதிர்ச்சி அடைகின்றன.  யந்திர யுகம் ஒரு போக்கில், ஒரு திசையில் செல்வது.  அதற்குப் பின்னோக்கிச் செல்லும் உந்து சக்தி கிடையாது !       

தொழிற்புரட்சிக்குப் (1780-1850) பிறகு மின்சக்தி நிலையங்கள் பெருகி அதன் ஆற்றலில் இயங்கும் யந்திரங்கள் ஆயிரக் கணக்கில் ஈசல்கள் போல் தோன்றின.  அவற்றில் முக்கியமாக எரி ஆயிலில் இயங்கும் வாகனங்கள், விமானங்கள், ஏவுகணைகள், அண்ட வெளிக் கப்பல்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை..  கடந்த நூறாண்டுகளாக செம்மையாக இயங்கி வரும் கார் வாகனங்களின் தொழில் நுட்பம் சீராக்கப்பட்டு முதிர்ச்சி நிலை அடைந்துள்ளதை எவரும் மறுக்க முடியாது.  அவற்றைப் போல் கோடிக்கணக்கான பேர் அனுதினமும் பயணம் செய்யும் ஆகாய விமானங்களும் சீராக்கப்பட்டு அவற்றின் தொழில் நுட்பமும் முதிர்ச்சி நிலை பெற்றுள்ளதை யாரும் எதிர்த்துச் சொல்ல முடியாது.  அந்த வழிமுறையில் உலக நாடுகள் கடந்த 50 ஆண்டுகளாக 900 மேற்பட்ட அணு உலைகள், அணு ஆய்வு உலைகள், அணுமின் உலைகள் ஆகியவற்றை நிறுவி அனுபவம் அடைந்து, தற்போது 400 மேற்பட்ட அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக அனுதினமும் மின்சாரத்தை பரிமாறி வருகின்றன. அவற்றின் இயக்கங்களைக் கண்காணிப்பதோடு, அவற்றில் விளையும் அபாய நிகழ்ச்சிகளையும் நேராக உளவிப் பதிவு செய்து மற்ற நாடுகளுக்கும் 1957 ஆண்டு முதல் பகிர்ந்து வருவது, ஆஸ்டிரியாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency (IAEA)].  

1986 இல் நேர்ந்த செர்நோபில் அணுமின் உலை வெடிப்பு உலக நாடுகளைப் பேரளவில் அதிர்ச்சியில் தள்ளியது.  அதனால் உலகெலாம் பரவிய கதிரியக்கப் பொழிகளால் பல நாடுகள் பாதகம் அடைந்தன.  அவ்விதம் கவலைப்பட்ட நாடுகள் ரஷ்யாவின் செர்நோபில் விபத்தைத் தீவிர உளவுகள் செய்து தங்கள் அணுமின் உலைகளிலும் பெருத்த மாற்றத்தையும், பயிற்சி முறைகளையும் செம்மைப்படுத்தின.  அதன் விளைவாக 1989 இல் உலக அணு உலை இயக்குநர்கள் அனைவரும் ஒன்று கூடி “உலக அணுமின் உலை இயக்குநர் ஐக்கியப் பேரவையை” WANO [World Association of Nuclear Operation] நிறுவகத்தை ஏற்படுத்தி அணு உலை இயக்கங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.  அத்துடன் உலக நாடுகளின் WANO குழுவினர் ஓரிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை அணுமின் உலைகளுக்கு விஜயம் செய்து, அதன் பாதுகாப்பான இயக்கங்களை உளவிக் கண்காணிப்பும் செய்து தரப்படுத்தியும் வருகிறார்கள்.

அணுமின் உலைப் பாதுகாப்புகள் எப்படிக் கடைப்பிடிக்கப் படுகின்றன ?       

அணுமின் நிலையப் பாதுகாப்பு நியதி எங்கிருந்து ஆரம்பிக்கிறது ?  முதலில் விஞ்ஞானப் பொறியியற் துறை நிபுணர்கள் பயிற்சியிலிருந்து துவங்குகிறது.  அணு உலைக்கெனத் தனித்தனி டிசைன், கட்டுமானம், இயக்கம், பராமரிப்பு நிபுணர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படுகிறார்.  1957 ஆகஸ்டில் பாம்பே அணுவியல் துறைக்குச் சேர்ந்த என்னைப் போல் 250 விஞ்ஞானி, பொறியியல் பட்டதாரிகளுக்கு ஓராண்டு அணுவியற் பயிற்சி அளிக்கப்பட்டது.  அணு உலை இயக்கத்துக்குச் சேர்க்கப் பட்ட எனக்கு பெங்களூர் இந்திய விஞ்ஞான கழகத்தில் [Indian Institute of Science, Bangalore] ஆறு மாதங்களும், பாம்பே அணுவியற் பயிற்சிப் பள்ளியில் ஆறு மாதங்களும் சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன.  அவ்விதம் ஒவ்வோர் ஆண்டும் 200-250 பட்டதாரிகள் மொம்பை அணுவியல் பள்ளியில் தேர்ந்தெடுக்கப்பட்டு பௌதிகம்., இரசாயனம், மேம்பாட்டுக் கணிதம், மற்றும் அணு உலைகளின் பண்பாடு, இயக்கம், பராமரிப்பு, கதிரியக்கம், அணுக்கழிவுகள் பற்றிக் கல்வி புகட்டப் படுகிறது.  இந்தியாவிலே அணுவியல் சம்பந்தப்பட்ட எந்தப் பணிக்கும் பயிற்சி இல்லாத பட்டதாரிகளோ, அல்லது பணியாட்களோ வேலையில் புகுத்தப் படுவதில்லை !

அணுமின் உலைகள் நிறுவனமாகத் தகுதியுள்ள பல இடங்கள் முதலில் உளவாய்வு செய்யப்பட்டு அவற்றில் தகுதி மிக்கத் தளமே தேர்வாகி முடிவு செய்யப்படுகிறது.  அத்தகைய தேர்வு ஆய்வுகளில் நீர் வசதி, நில அமைப்பு, ஜன நெருக்கம், காலநிலை, மழைப் பொழிவு, சூழ்வெளி, வேளாண்மை விருத்தி, நிலநடுக்கம், வாகனப் போக்குவரது வசதி, கப்பல் வரத் துறைமுக வசதி போன்றவை குறிப்பிடத் தக்கவை.  இந்திய அணுசக்தித் துறையகம் [Indian Dept of Atomic Energy (DAE)], இந்திய அணுசக்தி கார்பொரேஷன் [Nuclear Power Corporation India Ltd (NPCIL)] ஆகிய துறையகங்களில் அனுபவமும், பயிற்சியும் பெற்ற டிசைன், கட்டுமான, இயக்கக் குழுவினர் பலர் இருக்கிறார்கள்.    

அணுசக்தி உலைகள் இயக்கத்துக்குத் தேவையான ஏற்பாடுகள்

அணுமின் நிலையத்தில் இயங்கும் முக்கிய ஏற்பாடுகள் [Plant Operating Systems] எவை ?  அனல் மின்சார நிலையத்தைப் [Thermal Power Station] பல முறைகளில் ஒத்ததே அணுமின் நிலையமும்..  அனல்மின் நிலையத்தில் நிலக்கரி எரிசக்தியாகப் பயன்படுகிறது.  அதன் கனல் நீராவியை உண்டாக்க ஒரு கொதிகலன் [Boiler] உள்ளது.  ஆனால் அணுமின் நிலையத்தில் எரிபொருள் யுரேனியம்.  அதிலிருந்து வரும் வெப்பத்தால் நீராவி உண்டாக்க அணு உலை அமைக்கப் பட்டுள்ளது !  நீராவி அணு உலையில் நேராக உண்டாக்கப் படலாம்.  அல்லது ஒரு வெப்ப மாற்றிக் கொதிகலன் மூலம் [Heat Exchanger & Boiler] நீராவி உற்பத்தி செய்யலாம்.  அவ்விதம் உண்டான அழுத்தமடைந்த நீராவி டர்பைன் சுழலிகளை ஓட வைத்து மின்சார ஜனனி மின்சக்தியை உற்பத்தி செய்து பரிமாறப் படுகிறது.

அணுமின் நிலையத்தின் முக்கிய பாகங்கள், சாதனங்கள்: 

1. வெப்பசக்தியை உண்டாக்கும் யுரேனியக் கோல்கள் நீரில் மூழ்கிய அணு உலை

2. வெப்பத்தைக் கடத்தும் வெப்பமாற்றி நீராவிக் கொதிகலன்.

3. அணு உலை, கொதிகலன் அடங்கிய கோட்டை அரண் (Containment).

4. மின்சாரம் உற்பத்தி செய்யும் டர்பைன் ஜனனி. 

5. மின்சார அழுத்த மாற்றி & பரிமாறும் மின்சக்திக் கோபுர வடங்கள். [Transmission Tower Cables]    


 
அணுசக்தி உலைகள் இயக்கத்துக்குத் தேவையான பாதுகாப்புகள்

1.  அணு உலை இயக்கச் சாதனங்களுக்கு வேண்டிய காப்பு முறைகள்

அணு உலையில் முக்கியமாக யுரேனியக் கோல்கள் நீர் நிரம்பிய அழுத்த உலைக்கலனில் (Pressure Vessel) புகுத்தப்பட்டுள்ளன.  யுரேனியம் அணுக்கருவை ஒரு நியூட்ரான் பிளக்கும் போது, வெப்பசக்தியும் புதிதாக இரண்டு அல்லது மூன்று நியூட்ரான்களும் எழுகின்றன.  பிறகு அவ்விரண்டு நியூட்ரான்கள் யுரேனியத்தைப் பிளந்து அதிக வெப்பமுடன் நான்கு நியூட்ரான்கள் தோன்றுகின்றன.  புதிதாக உண்டான நியூட்ரான்களின் வேகத்தைக் குறைத்தால்தான் அணுக்கருப் பிளவு தொடர்ந்து ஏற்பட வசதி பிறக்கும்.  உலைக்கலனில் உள்ள நீர் நியூட்ரான்களின் வேகத்தை மிதமாக்கும் (Water Moderater]. அவ்விதம் தொடரிக்கம் நிகழ்ந்து வெப்பசக்தி மிகுதியாகவும் நியூட்ரான் எண்ணிக்கை கோடிக்கணக்கில் உலைக்கலனில் பெருக்கம் அடையும்.  நியூட்ரான் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தா விட்டால் அணு உலை வெடித்து விடும்.  யுரேனியத்தில் எழுகின்ற நியூட்ரான்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த “ஆட்சிக் கோல்கள்” (Control Rods) தேவைப் படுகின்றன.  அணு உலை நியூட்ரான்கள் பெருகாமல், வெப்பசக்தி ஆக்கத்தை நிறுத்த வேண்டுமானால், “நியூட்ரான் விழுங்கிகள்” [Neutron Absorbers] அல்லது “தடுப்புக் கோல்கள்” (Shut-off Rods) உலைக்கலனில் நுழைக்கப்பட வேண்டும்.  மிதமிஞ்சி நியூட்ரான் எண்ணிக்கை பெருகி வெப்பசக்தி வேகமாக ஏறும் போது அணு உலையை உடனே நிறுத்த “அபாயப் பாதுகாப்பு ஏற்பாடு” [Emergency Shutdown System] ஒன்று தேவைப்படுகிறது.  அதை நிறைவேற்ற இரண்டு விதமான முறைகள் உள்ளன.  நியூட்ரான் மலை விழுங்கி எனப்படும் “கடோலினியம்” திரவ மூலமாக அணு உலை நீரில் பாய்ச்சப்பட வேண்டும் [Gadolenium Poison Injection System].  அல்லது அதிகமான நியூட்ரான் விழுங்கிக் கோல்கள் உலைக்கலனில் புகுத்தப்பட வேண்டும்.     

 (தொடரும்)

***********************

தகவல்:

Picture Credits: 

1.  IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)
2.  Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire
3.  Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007) 
4  Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo 
5.  Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill.
6.  Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)
7.  Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)
8.  Herald Tribune : Earthquake Stokes Fears Over Nuclear Safety in Japan By Martin Facker (July 24, 2007)
9. Earthquake Zone : Earthquakes & Nuclear Safety in Japan [Citizen Nuclear Information Center (CNIC)] By Philip White International Liaison Officer CNIC.
10. Four Categories of Buildings & Equipment for Earhtquake-resitant Design of Nuclear Power Plants. 
11. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)
12. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)
13. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html  Letter By R. Bala (August 9, 2007)
14. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp  [World Association of Nuclear Operation Website]
15. 
16. IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)
 

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] September 6, 2007
 

ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் பாதுகாப்பு அமைப்பும் -3

 

 

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
 

நெருங்காது நீங்காது தீக்காய்வார் போல
கருஅணுவில் மின்சக்தி ஆக்கு !

 

முன்னுரை:        யந்திர யுகத்திலே முப்பெரும் தீங்குகளால் விபத்துக்கள் உலகெங்கும் அடிக்கடி யந்திர சாதனங்களில் நேர்கின்றன !  முதலாவது மனிதத் தவறு, இரண்டாவது யந்திரக் கோளாறு, மூன்றாவது புயல், இடிமின்னல், வெள்ளம், சூறாவளி, சுனாமி, பேய்மழை, பூகம்பம், எரிமலை போன்ற இயற்கைச் சீற்றங்கள் ! குறையுள்ள மனிதரும், பழுதுள்ள சாதனங்களும் இருக்கும் வரை ஆகாய விமானத்திலும், அண்டவெளிக் கப்பலிலும், இரயில் பயணத்திலும், அணுமின்சக்தி நிலையத்திலும், ஏனைய தொழிற் சாலைகளிலும் “அபாய எதிர்பார்ப்புகளை” [Risks] உலக மாந்தர் எதிர்நோக்கி இருக்க வேண்டும்.  செம்மையான பயிற்சி முறைகள் மனிதத் தவறுகளைக் குறைத்துவிடும்.  அதுபோல் சீரான சாதனங்களும் விபத்துகளைச் சிறிய எண்ணிக்கை ஆக்கிவிடும்.  ஆனால் கூடியவரை விபத்துக்கள் மனிதராலோ, யந்திரத்தாலோ, இயற்கைச் சீற்றத்தாலோ நேர்ந்தால் யந்திரங்கள் பாதுகாப்பான நிலைக்குச் சுயமாக மாறி, மனிதர் தப்பிக் கொள்ள வழிகள் இருக்க வேண்டும். அதுதான் 21 ஆம் நூற்றாண்டில் யந்திர உலகிலே விஞ்ஞானிகள் மற்றும் பொறியியல் வல்லுநரின் குறிக்கோளாய் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.    

(கட்டுரை ஆசிரியர்)

அணு உலைகளில் ஏற்படக் கூடிய அபாயங்கள்

அணு உலைகளில், அணுமின் உலைகளில், அணுக்கழிவு சுத்தீகரிப்புச் சாலைகளில் ஏற்படக் கூடிய மாபெரும் விபத்துக்கள் என்ன ?  அணு உலை இயங்கும் போது மீறும் தொடரியக்கத்தில் [Super Critical Reaction] வெடிப்பது !  அடுத்து கதிரியக்கப் பிளவுத் துணுக்குகளும், [Fission Fragments] திரவக் கழிவுகளும், வாயுக் கழிவுகளும் கோட்டை அரணிலிருந்து [Containment Structure] எப்படியோ கசிந்து சூழ்வெளியில் பரவிக் கதிரியக்கத்தை மக்கள் மீதும், தளங்கள் மீதும் பொழிவது. 

இதுவரையில் கோர விளைவுகளை இரண்டு அணுமின் உலைகள் நிகழ்த்தி இருக்கின்றன.  முதலில் அமெரிக்காவின் திரிமைல் தீவு அணுமின் நிலைய விபத்து (1979).  அடுத்தது சோவித் ரஷ்யாவின் செர்நோபில் அணுமின் நிலைய விபத்து (1986).  அமெரிக்க அணுமின் உலையில் வெப்பத் தணிப்பு நீரிழப்பு விபத்து [Loss of Coolant Accident (LOCA)] நேர்ந்து அணு உலை எரிக்கோல்கள் உருகின.  ஆனால் கதிரியக்கத் துணுக்குகளும், திரவ, வாயுக் கழிவுகளும் கோட்டை அரணில் சேமிப்பாகி வெளியே கசியவில்லை.  ஆனால் செர்நோபில் அணு உலையில் வெப்ப ஆற்றல் மிகையாகி இருமுறை வெடிப்புக்கள் விளைந்து கோட்டை அரண் இல்லாததால் கதிரியக்கத் துணுக்குகள், திரவ, வாயுக் கசிவுகள் சூழ்வெளியில் பரவின.  உலகெங்கும் பல நாடுகளில் மனிதத் தவறாலோ, யந்திரப் பழுதாலோ அணு உலைகளில் சிறிய, சிறிய விபத்துக்களும் நேர்ந்துள்ளன.  

 

கடந்த 50 ஆண்டுகளாக 32 நாடுகளில் இயங்கி வரும் 435 அணுமின் நிலையங்களைப் பாதுகாப்பாக பராமரித்து வந்த அனுபவங்களை 12,700 அணு-உலை-ஆண்டுகள் [Reactor-years] என்னும் எண்ணிக்கையில் IAEA காட்டுகிறது.  யந்திரப் புரட்சி (தொழிற் புரட்சி) ஏற்பட்ட பிறகு எந்த ஒரு தொழிற் துறையும் அணுவியல் துறை உலைகள் போல் உலகெங்கும் தொடர்ந்து கண்காணிக்கப் படவில்லை.  அந்த சிறந்த கண்காணிப்பை 1957 இல் முதலில் துவங்கியது அகில நாட்டு அணுசக்திப் பேரவை எனப்படும் IAEA.  அடுத்து அணுமின் நிலைய இயக்கங்கள், இயக்கத் திறன்கள், பராமரிப்புகள், திறனாய்வுகள், குழு ஆய்வுகள், அபாய விளைவுகள் போன்றவற்றை அடிக்கடி அணு உலை இயக்க உலகக் கூட்டுறவு [World Association of Nuclear Operations (WANO)] நிறுவகம் மேற்பார்வை செய்கிறது.

மூர்க்கர்கள் தாக்காதபடி மேலை நாடுகளில் அணுமின் உலைப் பாதுகாப்பு அமைப்புகள் மிகுதியாக உள்ளன.  அப்படிச் சிலர் தாக்கினாலும் விளையும் அபாயங்கள் சிறிதளவுதான் என்று அறியப்படுகிறது.  இயற்கை நிகழ்ச்சியில் பேரளவு ஆற்றல் கொண்ட பூகம்பத்தின் போது அணுமின் உலைக் கட்டுமானங்கள், சாதனங்கள் நிலநடுக்க ஆட்டத்தைத் தாங்கிக் கொள்ளும் உறுதி படைத்தவையாக அமைக்கப் படுகின்றன. 

அணு உலை இயக்கங்களால் நேர்ந்த மரண விபத்துகள்

செர்நோபில் கோர உயிரிழப்பு, மற்றும் அதன் கதிரியக்கப் பொழிவால் விளைந்த நோய், மரண விபத்தைத் தவிர உலக நாடுகளில் இயங்கும் வேறு எந்த அணுமின் நிலையங்களில் கதிரியக்கத்தால் மனிதர் யாரும் இறக்க வில்லை.  அணு ஆராய்ச்சி உலைகளில் பணிபுரியும் விஞ்ஞானிகள் தவறுதலாக யுரேனிய அல்லது புளுடோனிய எருக்களைக் கையாண்டதால் கதிரியக்கம் பெற்று ஒரு சிலர் சில தினங்களில் உயிரிழந்த தகவல் கிடைத்துள்ளது. ஜப்பானில் யுரேனியச் செறிவுச் சாலை ஒன்றில் ஏற்பட்ட கதிரியக்க விபத்தில் இருவர் மாண்டனர். மேலும் இரண்டு அணுமின் நிலையங்களில் [ஜெர்மனியில் குன்றிமிங்கன் அணுமின் உலை, ஜப்பானில் மிஹாமா அணுமின் உலை] பராமரிப்பு செய்யும் போது கதிரியக்கம் இல்லாத நீராவி பேரளவில் கசிந்து நான்கு பேர் மரித்தார் என்பது அறியப் படுகிறது.       

அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் கண்காணிப்பு   

1957 இல் ஆஸ்டிரியா வியன்னாவில் தோன்றிய அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் சில விதி முறைகள்,

அணுக்கருவியல் பாதுக்காப்பின் கீழ் அணுக்கருப் பண்டப் பயன்பாடு, அணு ஆயுத எருக் கண்காணிப்பு ஆகிய இரண்டும் சேர்க்கப் பட்டுள்ளன.    

அணுக்கருவியல் பாதுகாப்பு [Nuclear Safety]:  அனுமதி பெற்ற அணு உலைக் கூடங்களிலிருந்து மனிதர் தூண்டாத விபத்துகளால் விளையும் கதிரியக்க வெளியேற்றத்தையும், அதன் தீங்குகளையும் பற்றியது. 

அணுக்கருப் பண்டப் பயன்பாடு [Nuclear Security]:  அணுவியல் எரு மற்றும் ஏனைய கதிர்வீசும் பண்டங்களைப் பயன்படுத்துதல் பற்றியது.  அன்னியர் அல்லது புறத்தே உள்ளவர் அணுவியல் பொருட்களை களவு செய்வதைக் கண்காணித்தல் பற்றியது. 

அணு ஆயுத எருக் கண்காணிப்பு [Nuclear Safeguards]:  உலக நாடுகளில் அணு ஆயுத ஆக்கத்தையும் பெருக்கத்தையும் தடுப்பது பற்றியது.  

அகில நாட்டு அணுசக்திப் பேரவை உலக நாடுகளில் அணுக்கருப் பண்டங்கள் சேமிப்பு, பாதுகாப்பு, பயன்பாடு, தீய்ந்த எருக்கள் கைவச இருப்பு [Spent Fuel Storage], புதைப்பு பற்றிய வினைகளில் தணிக்கை ஆற்றல் உரிமை [Auditor of World Nuclear Safety] பெற்றது.  ஒவ்வொரு நாட்டுக்கும் கண்காணிப்பு செய்ய அகில நாட்டு அணுசக்திப் பேரவைப் பிரதிநிதி ஒருவர் அமைக்கப் படுவார். 
 

(தொடரும்)

***********************

தகவல்:

Picture Credits: 

1.  IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)
2.  Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire
3.  Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007) 
4  Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo 
5.  Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill.
6.  Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)
7.  Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)
8.  Herald Tribune : Earthquake Stokes Fears Over Nuclear Safety in Japan By Martin Facker (July 24, 2007)
9. Earthquake Zone : Earthquakes & Nuclear Safety in Japan [Citizen Nuclear Information Center (CNIC)] By Philip White International Liaison Officer CNIC.
10. Four Categories of Buildings & Equipment for Earhtquake-resitant Design of Nuclear Power Plants. 
11. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)
12. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 30, 2007

 

ஜப்பான் நிலநடுக்கமும், அணுமின் நிலையங்களின் கண்காணிப்பும் -2

 

(ஜூலை 17, 2007)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா 

 

பேரழிவுப் போராயுதம் உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து விழுதற்றுப் போக,
விதையும் பழுதாக
ஹிரோஷிமா நகரை நரகமாக்கி
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு !
நாகசாகியும்
மட்ட மாக்கப் பட்டது !
திட்ட மின்றி
மூட நிபுணர்கள் அணு உலையைச்
சூடாக்கிச்
சோதனையில் வெடித்து
நிர்வாண மானது,
செர்நோபில் அணு உலை !
மாய்ந்தனர் மக்கள்,
மடிகிறார்,
மேலும் மரிப்பார், மரிப்பார் !
நாடு, நகரம்,
வீடு, வீதி, வயல்கள் எல்லாம்
மூடின கதிர் வீச்சுகள் !
கட்டாயமாய்ப் பல்லாயிரம் பேர்,
கைப்பையுடன்
புலம்கடத்தப் பட்டார் !
புற்று நோயும், இரத்த நோயும்
பற்றின பாலரை! படுகிறார் வேதனை!
மனிதத் தவறு !
மாபெரும் தவறு !
மன்னிக்க முடியாத தவறு !
ரஷ்யக் கரடிகள் முதன்முதல் 
அரங்கேற்றிய அணுயுகப்
பிரளயம் !

(செர்நோபில் விபத்தின் 20 ஆண்டுப்
பூர்த்தி நினைவாக எழுதப்பட்டது)

++++++

“காஷிவஸாகி-கரிவா அணுமின் நிலையம் ஒரு தீவிர நில அதிர்ச்சி தளத்தட்டின் மீது அமர்ந்திருப்பதை முதலில் கண்டுபிடிக்காமல் போனது எங்களுக்கு ஓர் இழப்புதான்.  ஆயினும் அந்த தவறு எந்த விதத்திலும் ஓர் அபாயப் பேரிழப்பாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதில்லை.”

டோஷியாகி ஸகாயி [Head Engineering Group Tokyo Electric’s Nuclear Plants]  

“காஷிவஸாகி-கரிவா அணுமின் நிலையம் நிலநடுக்கத்தின் போது பாதுகாப்பாக நிறுத்தமாகி, யந்திரச் சாதனங்களும், கட்டடங்களும் பெருத்த சிதைவுகள் அடையாது அதிர்ச்சியைத் தாங்கிக் கொண்டன. ஆனால் அதன் கீழ் வெகு ஆழத்தில் ஒரு தீவிர நில அதிர்ச்சித் தட்டிருந்தது எப்படி நிபுணர்களுக்குத் தெரியாமல் போனது ?”  

மிஸியோ இஷிகாவா [President Japan Nuclear Technology Institute] 

“நிலநடுக்க விளைவுகளை IAEA குழுவினர் உளவ ஜப்பானிய அணுவியற்துறை அதிகாரிகள் வெளிப்படையாக, முழு ஒத்துழைப்பளிப்பதை வரவேற்கிறேன்.  ஜப்பானிய நிபுணர்களின் நிலநடுக்க விளைவு ஆய்வுகளும் IAEA குழுவினர் புரியும் தனிப்பட்ட உளவுகளும் விபத்தால் நேர்ந்த நேர்முறை, எதிர்முறை விளைவுப் பாடங்களைக் [Positive & Negative Lessons] கற்றுக் கொள்ள உதவும்.  அந்த பாடங்கள் மற்ற உலக நாட்டு அணுமின் நிலையங்களின் இயக்கக் கட்டுப்பாடுகளுக்கும் பராமரிப்புக்கும் ஏற்றதாகும்.”
 
மொகமது எல்பராடி [Mohamed ElBaradei, IAEA Director General]

முன்னுரை:  ஜப்பானிலும் மற்ற உலக நாடுகளிலும் உள்ள அணு உலைகள் நிலநடுக்க அதிர்ச்சி ஆட்டங்களைத் தாங்கி நடுக்கம் மீறினால் அணு உலைகள் தானாகவே நிறுத்தம் அடையுமாறு டிசைன் செய்யப்படுகின்றன.  நிலநடுக்கம் எப்போது வருமோ என்று அஞ்சிய நிலையில் விழிப்பாக இருக்கும் ஜப்பானில் 55 அணுமின் நிலையங்கள் இப்போது இயங்கி வருகின்றன.  1995 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மிகப் பெரும் (7.3 ரிக்டர்) கோப்-ஒஸாகா நிலநடுக்கத்தில் கூட [Kobe-Osaka Earthquake] அருகில் இருந்த அணுமின் நிலையங்களுக்குப் பாதிப்புகள் நேரவில்லை.  2004, 2005, 2007 ஆண்டுகளில் ஏற்பட்ட நிலநடுக்கங்களில் “தளத்துடிப்பு வேக வீதம்” [Ground Acceleration] மிகையாக இருந்ததால், அணு உலைகள் தாமாக நிறுத்தம் அடைந்தன !  1999 இல் டெய்வான் நிலநடுக்கத்தில் அருகிலிருந்த மூன்று அணுமின் உலைகள் தாமாக நிறுத்தம் அடைந்தன.   2007 ஜூலை 17 ஆம் தேதி வடமேற்கு ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நிலையம் பாதுகாப்பாக நிறுத்தமாகிப் பெரிய பாதிப்புகள் நேரா விட்டாலும், உலகப் பெரும் காஷிவஸாகி-கரிவா அணுமின் நிலையம் ஒரு தீவிர நில அதிர்ச்சித் தளத்தட்டின் (Active Seismic Fault) மீது அமர்ந்துள்ளது என்று முதன்முதல் நிபுணர்கள் கண்டுபிடித்தது குறிப்பிடத் தக்க ஓர் அதிசயமாகும் !

ஜப்பான் நிலநடுக்கமும் அதிர்ச்சி விளைவுகளும்

2007 ஜூலை 16 ஆம் தேதி ஜப்பானின் வடமேற்குப் பகுதியில், தலைநகர் டோக்கியோவிலிருந்து 250 கி.மீடர் [150 மைல்] தூரத்தில் உள்ள நைகாடா நகரத்தை நடுக்கமைய மாகக் [Epicentre] கொண்டு 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் காலை 10:13 மணிக்கு (01:13 GMT) உண்டாகியது.  அதன் விளைவால் இதுவரை 11 பேர் மரித்தார் என்றும், 1000 பேருக்கு மேல் காயமடந்தார் என்றும் 13,000 பேர் தமது வீட்டை விட்டு ஓடி 100 பாதுகாப்பு இல்லங்களில் தங்கினார் என்றும் அறியப்படுகிறது.  150 மைல் தூரத்தில் இருக்கும் டோக்கியோவின் மாட மாளிகைகள் கூட ஆடினவாம் !  நைகாடா நகரத்துக்கு அருகே உள்ள உலகப் பெரும் காஷிவாஸாகி அணுமின் நிலையத்தின் ஏழு தனிப்பட்ட அணு உலைகள் நில அதிர்ச்சியை உணர்ந்த கணமே தானாகப் பாதுகாப்பாக நிறுத்தம் அடைந்தன என்று அறியப்படுகின்றது ! 

யுரேனிய எரிக்கோல்கள் உள்ள அணு உலைக்கு எந்த இடருமின்றி, அருகில் இருந்த தீய்ந்த எரிக்கோள்கள் சேமித்து வைக்கப் பட்டுள்ள காங்கிரீட் நீர்த் தடாகத்தில் மட்டும் சில பிளவுகள் உண்டானதாகத் தெரிகிறது.  வெளியே உள்ள டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றில் தீப்பற்றி அது உடனே அணைக்கப் பட்டது. மேலும் வெளியே வைக்கப்பட்டுள்ள தணிவுக் கதிரியக்கத் திரவமுள்ள ஒரு இரும்புக் கலம் உடைந்து கழிவுநீர் கசிந்தோடிக் கடலில் கலந்தது என்பது பலரும் அலறும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி.  வியன்னாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency, (IAEA) Vienna Austria] ஜப்பானிய அதிகாரிகளின் வேண்டுகோள்படி ஆறு பேர் அடங்கிய ஆய்வுக் குழுவைச் சமீபத்தில் நிலநடுக்க விளைவுகளை நேரடியாக அறிந்துவர அனுப்பியுள்ளது.  அவரது முக்கியக் கண்டுபிடிப்பு: காஷிவாஸாகி அணுமின்சக்தி யூனிட்டுகள் செய்யப்பட்ட டிசைன் வரை அளவு (6.5 ரிக்டர்) விபத்து அளவைவிடக் (6.8 ரிக்டர்) குறைவானது.  ஆயுனும் தீவிரப் பழுதுகள், பிளவுகள் ஏற்படாததற்குக் காரணம், எல்லா டிசைன் வரைமுறைகளும் 10% மிகையாக வைக்கப்பட்டுள்ளன.  அதாவது மெய்யான டிசைன் நிலநடுக்க வரை அளவு: (6.3 +6.3 X 10/100 = 6.3+0.63 =6.93).  ஆய்வு அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும். 

அகில நாட்டு அணுசக்திப் பேரவைக் குழிவினர் செய்த உளவுகள்   

அகில நாட்டு அணுசக்திப் பேரவையின் பேரதிபர் மொகமது எல்பராடி ஜப்பானிய அணுவியற் துறை அதிகாரிகளின் வெளிப்படையான ஒத்துழைப்பை வரவேற்று, “ஜப்பானியரின் உளவு ஆய்வுகளும் IAEA குழுவின் தனிப்பட்ட உளவுகளும் நேர்முறை, எதிர்முறை விளைவுப் பாடங்களைக் கற்றுக் கொள்ள உதவும்.  அந்த பாடங்கள் மற்ற உலக நாட்டு அணுமின் நிலையங்களுக்கும்  உகந்ததாகும், என்று எடுத்துக் கூறினார்.     

பேரவைக் குழுவினர் மூன்று நாட்கள் தங்கி ஏழு அணுமின் நிலையங்களின் சிக்கலான கட்டட அமைப்புகளையும், ஏதுவான அணு உலைச் சாதனங்களையும் சோதித்துப் பிளவுகள், பழுதுகள் ஏற்பட்டுள்ளனவா என்று உளவு செய்தார்கள்.  விபத்து நேர்ந்த நாளன்று அணுமின் உலை ஆட்சி அறை அரங்கில் [Control Room Panels] பதிவான அனைத்து பதிவுக் கருவிகளின் பதிவுகளையும், அணுமின் உலைச் சாதனங்கள் இயக்கங்களையும் ஆழ்ந்து நோக்கினார்.  அவரது முதல் உளவு முடிவுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

நிலநடுக்கக் கட்டடச் சோதனை அமைப்பு

1.  அணுமின் நிலையக் கருவிகள், சாதனங்கள் நிலநடுக்கத்தின் போது, டிசைன் வரையறையை மீறாமல் திட்டமிட்டபடிப் பாதுகாப்பாய் இயங்கியுள்ளன.  

2.  ஜப்பானிய நிலைய இயக்குநர் கைப் பதிவுகளின் அறிக்கைப்படி சிறிதளவுக் கதிரியக்க நீரே கசிந்து கடலில் கலந்தது என்பதற்குப் பேரவைக் குழுவினர் ஒப்புதல் அளித்துள்ளார்.  அச்சிறிய அளவுக் கசிவுக் கதிரியக்கத் திரவக் கழிவு பொதுநலச் சூழ்வெளிப் பாதுகாப்பு எல்லையைத் [Limits for Public Health & Environmental Safety] தாண்ட வில்லை என்பது உறுதியாக்கப் பட்டிருக்கிறது.  நிலநடுக்கத்தால் உண்டான கட்டடப் பிளவுகள் எதுவும் அணு உலைப் பாதுக்காப்புக்கு அரணுக்கோ அல்லது சாதன ஏற்பாடுகளுக்கோ நேரவில்லை என்பது தெளிவாகி இருக்கிறது.    

3.  நிலநடுக்க சமயத்தில் நிறுத்தமான அணுமின் நிலையச் சாதனங்கள், பம்ப்புகள், கொதிகலன்கள் சிலவற்றில் பழுதுகள், பிளவுகள் ஏற்பட்டுள்ளனவா என்று கதிரியக்கத் தளங்களில் உடனே சோதிக்கப்பட முடியாது.  திட்டமிட்டுப் பணிபுரியும் அணுமின் நிலையப் பராமரிப்புத் தருணங்களில்தான் அவற்றை உளவு செய்ய முடியும்.  பேரவைக் குழுவினர் கூற்றுப்படி இன்னும் அணு உலைச் சாதனங்கள், அழுத்தக் கலன்கள், எரிக்கோல்கள் அடுத்த உலை நிறுத்த வேளைகளில்தான் உளவு செய்யப்பட வேண்டும்.

4.  நிலநடுக்க அதிர்ச்சியால் உண்டான உலைக்கலச் சாதன அழுத்தங்கள் [Physical Stresses of Pressure Vessel & other Components] சில நிலையங்களின் பாதுகாப்பான இயக்க ஆயுட் காலத்தைக் குறைக்கலாம்.  அதாவது அவ்வித அழுத்தமான சாதனங்கள், எதிர்பார்த்த காலத்துக்கு முன்பே மாற்றப்பட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படலாம்.    

அழுத்த நீர் அணுமின் நிலைய அமைப்பு

5.  குறிப்பிடத் தக்க ஒரு கண்டுபிடிப்பு என்ன வென்றால் 2007 ஜூலை 17 ஆம் தேதி நேர்ந்த நிலநடுக்கம் (6.8 ரிக்டர்) பாதுகாப்புக்காக எஞ்சினியர்கள் முதலில் செய்த அணுமின் நிலைய டிசைன் அளவை விட (6.3 ரிக்டர்) 0.5 ரிக்டர் மிஞ்சி விட்டது !  ஆயினும் பெரும்பான்மையான அணுமின் உலைகளின் பாதுகாப்பு டிசைன் வரையறை எப்போதும் 10% மிகையாக வைத்துக் கட்டப்படுவதால் (6.3 + 0.63 = 6.93), நிலையத்தில் பேரளவுச் சிதைவுகளோ, பிளவுகளோ உண்டாக வில்லை என்று முடிவு செய்யப் பட்டிருக்கிறது.  

6.  அணுமின் நிலையச் சொந்த நிறுவனமான டோக்கியோ மின்சார வாரியம் அதற்குச் சில மாதங்களுக்கு முன்பே “நிலநடுக்கத் தீங்கு மீளாய்வு” (Seismic Hazard Re-evaluation) செய்து 2006 செப்டம்பரில் அதன் அறிக்கையை ஜப்பான் அணுத்துறைப் பாதுகாப்பு தலையகத்துக்கு [Japan Nuclear Safety Commission (JNSC)] அனுப்பியுள்ளது.  2007 ஜூலையில் நேர்ந்த நிலநடுக்கத்தின் விளைவுகளும் எடுத்தாளப்பட்டு இப்போது டிசைன் மேம்பாடு செய்யப்படும். 

7.  ஜப்பான் நிலநடுக்க விளைவுகள் IAEA மூலமாக அனைத்துலக உறுப்பின நாடுகளுக்கும் பரப்பப் படுகின்றன.  அதுபோல் மற்ற நாடுகளின் அணு உலை விபத்துகள், இயக்க விபரங்களை ஜப்பான் அணுத்துறை நிறுவனங்களுக்கு IAEA அனுப்பி வருகிறது.

(தொடரும்)

***********************

தகவல்:

Picture Credits: 

1.  IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)
2.  Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire
3.  Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007) 
4  Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo 
5.  Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill.
6.  Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)
7.  Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)
8.  Herald Tribune : Earthquake Stokes Fears Over Nuclear Safety in Japan By Martin Facker (July 24, 2007)
9. Earthquake Zone : Earthquakes & Nuclear Safety in Japan [Citizen Nuclear Information Center (CNIC)] By Philip White International Liaison Officer CNIC.
10. Four Categories of Buildings & Equipment for Earhtquake-resitant Design of Nuclear Power Plants. 
  
******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 21, 2007

 


 

ஜப்பான் நிலநடுக்கமும், அணுக்கழிவு நீர் வெளியேற்றமும் !

fig-1-earthquake-near-nuclear-plant.jpg

(ஜூலை 16, 2007)

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

அருகாது அகலாது தீக்காய்வார் போல
கருஅணுவில் மின்சக்தி ஆக்கு
 

முன்னுரை: இருபதாம் நூற்றாண்டின் முப்பெரும் பேரழிவு நிகழ்ச்சிகளில் ஜப்பானில் ஹிரோஷிமா, நாகசாக்கி அணுகுண்டுகள் வீழ்ச்சிக்குப் பிறகு அடுத்த இடத்தைப் பெறுவது, போபால் இராசயனக் கூடத்தில் 1984 ஆண்டு வெளியேறிய விஷ வாயுத் தாக்குதலின் கோர விளைவுகளே! நிகழ்ச்சிகளில் மூன்றவது நிலையைப் பெறுவது, சோவியத் ரஷ்யாவின் செர்நோபிள் அணு உலை வெடிப்பு! அணு யுதங்கள் வெடித்து, ஜப்பானில் இறந்தவர் எண்ணிக்கை 300,000 பேரைத் தாண்டி விட்டது! அங்கு காயம் உற்றோர், கதிரடி பெற்றோர், சந்ததி ஊனமுற்றோர் எண்ணிக்கை கணக்கில் அடங்கா!  செர்நோபிள் விபத்தில் உடனே இறந்தவர் 31 நபராயினும், மிகையானக் கதிரடியில் பாதிக்கப் பட்டவர் 600,000 மேல் என்றும் பின்னால் அவர்களில் மரணம் அடைந்தவர் எண்ணிக்கை யிரக் கணக்கில் ஏறிக்கொண்டு போவதாயும் அறியப் படுகிறது!  அண்டை ஊர்களில் பொழிந்த கதிர்த் தீண்டலால், சுமார் 135,000 மக்கள் வேறு ஊர்களில் குடியேற ராணுவப் பஸ்களில் தூக்கிச் செல்லப் பட்டனர்! பல வருடங்கள் கழித்துக் கதிர் ஐயோடினில் [Radioiodine] பாதிக்கப்பட்ட 1800 குழந்தைகள் தைராய்டு புற்றுநோயில் தாக்கப் பட்டதாகவும், அந்தக் குழுவில் பத்துக் குழந்தைகள் இறந்து விட்டதாகவும் இப்போது அறியப் படுகிறது!

உலக வரலாற்றில் ஜப்பானிலிட்ட அணு ஆயுத வீச்சுகளுக்கு அடுத்தபடியாக, ஆனால் அவற்றை விட 400 மடங்கு பேரழிவு மிகையாக விளைவிக்கும் ஒரு கோர கதிரியக்கத் தீங்கு நிகழ்ச்சியாக, செர்நோபில் அணு உலை விபத்து கருதப் படுகிறது!  செர்நோபில் நிலையத்தில் சிதைந்து முறிந்த கட்டடங்களைத் தாண்டிக் கதிரியக்கத் துணுக்குகளும், தூசுகளும், மாசுகளும் காற்றில் பரவி கிழக்கே ஜப்பானிலும், மேற்கே கனடா வரையிலும் பயணம் செய்து கருவிகள் மூலம் பதிவாகின! செர்நோபில் அணு உலை வெடிப்பால் இதுவரை 65 பேர் உயிரிழந்தனர் என்று அறிய வருகிறது! கதிர்த் தீண்டலாகி 20 மைல் சுற்றளவில் வாழ்ந்த பிரிபயாட் நகர மக்கள் [45,000 பேர்] உள்பட மற்ற அண்டை ஊர்களிலும் வசித்த 116,000 நபர்கள் கட்டாயமாகப் புலப்பெயர்ச்சி செய்யப் பட்டனர். னால் வெடித்துச் சிதறிய கதிர்வீச்சுத் துணுக்குகள் பல மைல் சுற்றளவில் பரவிப் படிந்துள்ளதால், அடுத்துச் சுமார் 9000 பேர் பல்லாண்டுகளில் மரணம் அடைவார் என்று ஐக்கிய நாடுகளின் அணுசக்திக் கண்காணிப்புப் பேரவை [UNESCO-IAEA] கணித்துள்ளது!

ஆனால் சமீபத்தில் 2007 ஜூலை 16 ஆம் தேதி நேர்ந்த ஜப்பான் நிலநடுக்கமும், அதனால் தூண்டப்பட்ட காஷிவாஸாகி-கரிவா அணுமின்சக்தி நிலையத் [Kashiwazaki- Kariwa Nuclear Power Plant] தீவிபத்தும், கதிரியக்கக் கழிவுநீர்க் கசிந்து கடலில் சேர்ந்ததும், மற்ற விபத்துக்களோடு ஓப்பு நோக்கினால் மிகச் சிறிய விளைவு என்றுதான் அகில உலக அணுசக்திப் பேரவை (IAEA) முடிவு செய்கிறது !   

ஜப்பான் நிலநடுக்கமும் அதிர்ச்சி விளைவுகளும்

2007 ஜலை 16 ம் தேதி ஜப்பானின் வடமேற்குப் பகுதியில், தலைநகர் டோக்கியோவிலிருந்து 250 கி.மீடர் [150 மைல்] தூரத்தில் உள்ள நைகாடா நகரத்தை நடுக்க மையமாகக் [Epicentre] கொண்டு 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் காலை 10:13 மணிக்கு (01:13 GMT) உண்டாகியது.  அதன் விளைவால் இதுவரை 9 பேர் மரித்தார் என்றும், 1000 பேருக்கு மேல் காயமடந்தார் என்றும் 13,000 பேர் தமது வீட்டை விட்டு ஓடி 100 பாதுகாப்பு இல்லங்களில் தங்கினார் என்றும் அறியப்படுகிறது.  150 மைல் தூரத்தில் இருக்கும் டோக்கியோவின் மாட மாளிகைகள் கூட டினவாம் !  நைகாடா நகரத்துக்கு அருகே உள்ள உலகப் பெரும் காஷிவாஸாகி அணுமின் நிலையத்தின் ஏழு தனிப்பட்ட அணு உலைகள் நில அதிர்ச்சியை உணர்ந்த கணமே தானாகப் பாதுகாப்பாக நிறுத்தம் அடைந்தன என்று அறியப்படுகின்றது ! 

யுரேனிய எரிக்கோல்கள் உள்ள அணு உலைக்கு எந்த இடருமின்றி, அருகில் இருந்த தீய்ந்த எரிக்கோள்கள் சேமித்து வைக்கப் பட்டுள்ள காங்கிரீட் நீர்த் தடாகத்தில் மட்டும் சில பிளவுகள் உண்டானதாகத் தெரிகிறது.  வெளியே உள்ள டிரான்ஸ்ஃபார்மர் ஒன்றில் தீப்பற்றி அது உடனே அணைக்கப் பட்டது. மேலும் வெளியே வைக்கப்பட்டுள்ள தணிவுக் கதிரியக்கத் திரவமுள்ள ஓர் இரும்புக் கலம் உடைந்து கழிவுநீர் கசிந்தோடிக் கடலில் கலந்தது என்பது பலரும் அலறும் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி.  வியன்னாவில் உள்ள அகில நாட்டு அணுசக்திப் பேரவை [International Atomic Energy Agency, (IAEA) Vienna Austria] ஜப்பானிய அதிகாரிகளின் வேண்டுகோள்படி ஆறு பேர் அடங்கிய ஆய்வுக் குழுவைச் சமீபத்தில் நிலநடுக்க விளைவுகளை நேரடியாக அறிந்துவர அனுப்பியுள்ளது.  அவரது ஆய்வு அறிக்கை இன்னும் சில நாட்களில் வெளியிடப்படும்.  அந்த அறிக்கை அகில வலைகளில் வெளியானதும் நான் எனது தொடர்க் கட்டுரையில் எழுதுகிறேன்.      

நிலநடுக்கங்கள் அடிக்கடி குலுக்கும் ஜப்பான் தேசம்

உலக நாடுகளிலே ஜப்பான் தேசம் ஒன்றுதான் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நிலையற்ற கடற்தளம் மீது ஒட்டியும் ஒட்டாத தீவுகளாய்ப் பல்லாயிரம் ஆண்டுகள் நிலைத்து வருகிறது.  ஒவ்வொரு ஐந்து நிமிடமும் எழும் நிலநடுக்க நாட்டில் ஜப்பானியர் மிக விரைவாய்ச் செல்லும் இரயிலில் அனுதினம் பயணம் செய்து கொண்டு, நிலநடுக்கச் சிதைவுகளைச் சகித்திக் கொண்டு வாழ்கிறார்.  புல்லெட் டிரெயின் எனப்படும் வேக வாகனங்கள் நிலநடுக்கம் ஏற்பட்ட சில நிமிடங்களில் தானே நின்று விடுகின்றன.  ஜப்பானில் 30% பங்கு மின்சார ற்றல் பரிமாறிவரும் 55 அணுமின் நிலையங்கள் நிலநடுக்கத்தால் பேரழிவுகள் நேராதவாறு பாதுகாப்பாக நிறுத்தமாகி, நிலைமை சரியான பிறகு இயங்கின்றன.  அதே நைகாடா பகுதியில் 2004 ஆம் ஆண்டு அக்டோபரில் உண்டான 6.8 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தால் 65 பேர் மரித்தனர்.  இதுவரை நிகழ்ந்த நிலநடுக்கத்திலே மிகப் பெரும் நடுக்கம் 7.3 ரிக்டர் அளவில் 1995 ண்டில் கோப் நகரப் பகுதியில் [Kobe City] நேர்ந்தது.  அந்தக் கோர நடுக்கத்தில் 6400 பேர் உயிரிழந்தனர் !

காஷிவாஸாகி அணுமின் நிலையத்தில் நேர்ந்த விளைவுகள்:

டோகியோ மின்சார வாரியம் [Tokyo Electric Power Company (TEPCO)] மேற்பார்வை செய்து நடத்தி வரும் காஷிவாஸாகி அணுமின் நிலையம் ஏழு தனி உலைகளைக் கொண்ட உலகத்திலே மிகப் பெரிய நிலையம் அது !  அது ஜப்பானின் வடமேற்குப் பகுதியில் நைகாடா நகருக்கு அருகில் 4.2 சதுர கி.மீடர் பரப்பில் அமைக்கப் பட்டுள்ளது. அந்த ஏழு அணுமின் யூனிட்டுகளும் கொதிநீர் அணு உலைகள் [Boiling Water Reactors] ஆகும்.  அவை அனைத்தும் இயங்கினால் மொத்தம் 8212 MWe மின்சார ஆற்றல் பரிமாறத் தகுதியுள்ளது.  அந்த தளத்தில் ஏழு அணு உலைகள் உள்ளதோடு ஓர் அணுவியல் பயிற்சிக் கூடம், பொதுநபர் அணுசக்தித் தகவல் கூடம் மற்றும் தணிவு நிலை கதிரியக்கக் கழிவுச் சேமிப்புக் கிடங்கு [Low Level Radioactive Waste Storage Facility] ஒன்றும் அமைக்கப் பட்டுள்ளன.  மேலும் சிறப்பாக கொதிநீர் உலை இயக்குநர் பயிற்சிக்காக இரண்டு போலி அணுமின் உலை அரங்குகள் [Simulators in BWR Operator Training Centre] அங்கே நிறுவகமாகி யுள்ளன.

 

 

நிலநடுக்கமான அன்றைய தினத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் அணுமின் உலைகள் யாவும் சுய இயக்கு நிலநடுக்க உணர்வுக் கருவிகள் மூலம் [Seismic Sensors] நுகரப்பட்டு உடனே நிறுத்தம் யின.  அதாவது அந்த நிலையத்திலிருந்து வெளியாகும் மின்சாரப் பரிமாற்றம் துண்டிக்கப்பட்டு நிலையங்கள் யாவும் பாதுகாப்பான நிலைக்கு கொண்டு வரப்பட்டன.  ஆனால் நிலநடுக்கத்தில் ஏற்பட்ட உலோக உராய்வால் ஒரு மின்னழுத்த மாற்றியில் [Electric Transformer] தீப்பற்றியது.  அதன் மூலம் மின்சாரப் பரிமாற்றம் முன்பே நிறுத்தமானதால் தீங்குகள் எதுவும் நிகழாமல் புகை மட்டும் மூண்டு பரபரப்பான டெலிவிஷன் காட்சியாக உலகைக் கவர்ந்தது.  ஜப்பான் தீயணைப்புப் படையினர் உடனே தீயை அணைத்துப் பரவாமல் தடுத்தனர்.    

(தொடரும்)

***********************
தகவல்:

Picture Credits: 

1.  IAEA Team to Report on Kashiwazaki Kariwa Nuclear Power Plant Examination (Aug 16, 2007)
2.  Japan Earthquake Triggers Nuclear Plant (Transformaer) Fire
3.  Earthquake Spills Radioactive Water at Japanese Nuclear Plant (July 17, 2007) 
4  Nuclear Waste (Water) Leak Fear after Japan Quake By: Justin McCurry (July 18, 2007) Tokyo 
5.  Japan Earthquake Caused Nuclear Waste (Water) Spill.
6.  Japanese Earthquake Sparks Nuclear Plant (Transformer) Fire By: AP (July 16, 2007)
7.  Japan Nuclear Power Plants and Earthquakes (August 2007)
  
******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 16, 2007

கூடங்குளம் அணு உலை, கடலிலிருந்து குடிநீர், அசுரப்படை எதிர்ப்புகள் !

vver-layout

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா


“இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சமும், எரிசக்திப் பற்றாக்குறையும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்த மட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக் கனலைப் பயன்படுத்தியும், அணுசக்தி வெப்பத்தை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும்.  இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும்.”

குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம்.

“2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்.”

டாக்டர் எஸ். கதிரொளி, டைரக்டர், சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடம்.

“25 ஆண்டுகள் கடந்தும் சிதைந்து புதைபட்ட செர்நோபில் கதிரியக்கக் கழிவுகளும், எரிக் கோல்களும் நிரம்பி யுக்ரேன் நாடு உட்பட மற்ற உலக நாடுகளையும் பயமுறுத்தி வருகிறது.  இப்போது அந்த அணு உலைச் சமாதியைச் சுற்றி மாபெரும் ஓர் இரும்புக் கவசக் கோட்டைக் கட்டப்பட்டு வருகிறது.  செர்நோபில் விபத்து நூதன நிகழ்ச்சி. ஆனால் அத்தகைய விபத்து மீண்டும் நிகழ்வது அபூர்வம்.”

இகோர் கிரமாட்கின் [Igor Gramatkin, Manager Chernobyl Nuclear Power Plant, Ukraine (April 1, 2011)

“ஜப்பான் புகுஷிமா அணுமின் உலைகளின் விபத்து நிகழ்ச்சி மிகவும் கோரமானது.   ஆயினும் நிலைய இயக்குநர் கதிரியக்கம் மீறாதபடிக் கட்டுப்பாடு செய்தனர்.   அணு உலைகளில் (நான்கு) எங்கள் மதிப்பீடு : சூடான எருக்கோல்கள் தணிப்பு நீரின்றிச் சிதைந்தன.  ஆனால் இந்த விபத்தால் அணு உலை எருக்கோல்கள்  உருகிப் போய் விடவில்லை என்பது இங்கு குறிப்பிடத் தக்கது.”

அலெக்ஸாண்டர் பிச்கோவ் (Deputy Director General of the IAEA)

செர்நோபில் விபத்து ஒரு விதி விலக்கு ! நிபுணருக்கும், மூடருக்கும் ஒரு மதி விளக்கு !

நெருங்காது நீங்காது தீக்காய்வார் போல
கருஅணுவில் மின்சக்தி ஆக்கு !

சி. ஜெயபாரதன்


இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலே தமிழ்மக்கள் உள்பட உலக மாந்தர் அனைவருக்கும் நாகரீகமாக அனுதினமும் உயிர்வாழக் குடிநீரும், மின்சக்தியும் மிக மிகத் தேவை.  அணுசக்தி நிலையத்தையும், உப்பு நீக்கி இராசயனச் சாலையையும் கூடங்குளத்தில் அமைக்க வேண்டா மென்று நிறுத்தக் கையில் செருப்புடனும், தடியுடனும் முன்கூட்டியே வர அசுரப் பட்டாளத்தை ஏற்பாடு செய்தது, விடுதலைப் பூமியில் ஓர் அநாகரீகப் போராட்டமே ! ஆக்கப்பணி புரியும் அரசாங்கப் பணியாளரை அவமானப் படுத்தி நாச வேலைகள் புரிகின்றன அழிவுப்பணி புரியும் ஆவேச எதிர்க்கட்சிகள்.  அணு உலைகளில் விபத்துக்கள் நேரா என்னும் உத்தரவாதம் அளிக்க வேண்டுமென அவர்கள் கேட்பது வியப்பாக உள்ளது.  அமெரிக்காவில் 9/11 விமானத் தற்கொலைத் தாக்கல்களுக்குப் பிறகு விமானப் பயணம், இரயில் பயணம், கப்பல் பயணம், அணு உலைகள், தொழிற்சாலைகள் அனைத்திலும் மனிதப் பாதுகாப்பு என்பதே கனவாகி, கதையாகி, கற்பனையாகிப் போனது.  மில்லியன் கணக்கில் தினமும் பயணம் செய்யும் மொம்பை மின்சார இரயில்களில் எவரெல்லாம் உத்தரவாதம் வாங்கிக் கொண்டு வண்டியில் ஏறி நிம்மதியாக உட்கார்ந்திருக்கிறார் ?  21 ஆம் நூற்றாண்டில் அணுமின் நிலையங்களை விட, மக்கள் அனுதின ஊதியத்துக்குப் பயன்படுத்தும் இரயில் பயணங்களில் ஆபத்துக்கள் மிகையாகிப் பெருகி விட்டன !

ஹிரோஷிமா, நாகசாகியில் போட்ட அணு ஆயுதங்களால் ஆயிரக் கணக்கான மாந்தர் மாண்டு, கதிர்க்காயங்களால் துன்புற்று வரும் ஜப்பான் பூகம்பத் தீவுகளில் தற்போது 55 அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இயங்கி 43,000 MWe ஆற்றல் மின்சாரத்தைப் (30%) பரிமாறி வருகின்றன.  அவற்றுள் கூடங்குள அணு உலைகள் போல் ஆற்றல் கொண்ட (> 1100 MWe) 14 அசுர அணுமின்சக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன.  அனைத்து நிலையங்களும் கடல்நீரைத் வெப்பத் தணிப்பு நீராகவும், சில நிலையங்கள் கடல்நீரைச் சுத்தீகரித்து உப்பு நீக்கிய நீரையும் பயன்படுத்தி வருகின்றன.  1950 ஆம் ஆண்டுமுதல் 30 உலக நாடுகளில் 435 அணுமின் நிலையங்கள் [அமெரிக்காவில் திரி மைல் தீவு, ரஷ்யாவில் செர்நோபிள் நிலையம், ஜப்பானில் புகுஷிமா அணு உலைகள் ஆகியவற்றைத் தவிர] பாதுகாப்பாக இயங்கி 370,000 MWe (16%) ஆற்றலைப் பரிமாறி வருகின்றன.  மேலும் 56 நாடுகளில் 284 அணு ஆராய்ச்சி உலைகள் ஆய்வுகள் நடத்திக் கொண்டு வருகின்றன.  அதற்கு அடுத்தபடி அணுசக்தி இயக்கும் 220 கப்பல்களும், கடலடிக் கப்பல்களும் (Submarines) கடல் மீதும், கீழும் உலாவி வருகின்றன.  ஈழத்தீவில் பாதிக்கும் குறைவாக அரை மாங்காய் போலிருக்கும் தென் கொரியாவில் 20 அணுமின் நிலையங்கள் 39% ஆற்றலைத் தயாரித்து மின்சாரம் அனுப்பி வருகின்றன.  இந்தியாவின் அணு மின்சக்திப் பரிமாற்றப் பங்கு 2.6%  இயங்கி வருபவை 20 அணுமின் நிலையங்கள்.  இந்தியாவில் அனைத்து அணுசக்தி நிலையங்களைப் பாதுகாப்பாக இயக்கத் திறமையுள்ள, துணிவுள்ள நிபுணர்கள் ஏராளமாய் இருக்கிறார்கள்.  அணுசக்தி நிலையங்கள் தமிழகத்தில் புதிதாக எழாமல், அசுரப் படைகளும், தற்கொலைப் படைகளும் தடுத்துப் பொதுமக்களைப் பீரங்கிகளாக மாற்றித் தாக்கவிடும் அறிவீன யுக்திகளைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

ஆஸ்டிரியா வியன்னாவில் உள்ள அகில அணுசக்தித் துறைப் பேரவையில் [International Atomic Energy Agency (IAEA)] அனைத்து அணுவியல் ஆய்வு நாடுகளும் உறுப்பினராக இருந்து அணு உலைகள் டிசைன், கட்டுமானம், இயக்கம், பாதுகாப்பு, முடக்கம் (Decommissioning) சம்பந்தப் பட்ட அனைத்து விஞ்ஞானப் பொறியியல் நூல்களின் பயன்களைப் பெற்று வருகின்றன.  மற்ற தொழிற்துறைகள் எவற்றிலும் பின்பற்றப்படாமல், அணு உலை டிசைன்களில் மட்டும் வலியுறுத்தப்படும் பாதுகாப்பு விதிமுறையை, அணுசக்தி பற்றித் தர்க்கமிடும் அறிஞர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.  அந்த நிர்ப்பந்த விதி இதுதான்:  பூகம்பம், சூறாவளி, சுனாமி, சைக்குளோன், ஹர்ரிக்கேன், புயல், பேய்மழை, இடி, மின்னல், தீவிபத்து, மனிதத் தவறு, யந்திரத் தவறு போன்றவை தூண்டி எந்த விபத்து நேர்ந்தாலும் அணு உலையின் தடுப்புச் சாதனங்கள் இயங்கிப் பாதுகாப்பாக, சுயமாக [Automatic Shutdown Systems] அணு உலை உடனே நிறுத்தப்பட வேண்டும்.  வெப்பத் தணிப்பு நீரோட்டம் குன்றி யுரேனிய எரிக்கோல்கள் சிதைவுற்றால் அவற்றின் கதிரியக்கமும் பிளவுத் துணுக்களும் வெளியேறாது உள்ளடங்கும் “கோட்டை அரண்” [Containment Structure] கட்டாயம் அமைக்கப் படவேண்டும்.  செர்நோபிள் அணு உலையை டிசைன் செய்த ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் அணுசக்திப் பேரவை நியதிகளைப் பின்பற்றவில்லை.  பேரவை சுட்டிக்காட்டினும் ஏற்றுக் கொள்ளாத ரஷ்யப் பொதுடைமை நிபுணர்கள் செர்நோபிள் விபத்தின் போது பேரளவில் உயிரைப் பறிகொடுத்து, நிதி செலவாகிப் பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டார்கள்.  செர்நோபிள் ஒரு விதிவிலக்கு ! நிபுணருக்கும் மூடருக்கும் ஒரு மதி விளக்கு !

kudankula-twin-units

கடலும், கடற்சார்ந்த பகுதிகளுக்கு நீர் முடக்கம் ஏற்பட்டால், கடல் வெள்ளத்தின் உப்பை நீக்கிக் குடிநீராக்குவது ஒன்றும் புதிய விஞ்ஞான முறை யில்லை.  ஜப்பான் போன்ற தீவுகளிலும் மற்றும் அரேபிய நாடுகளிலும் உப்பு நீக்கி இரசாயனச் சாலைகள் எண்ணற்றவை சிறந்த முறையில் இயங்கி வருகின்றன.  அனுதினமும் ஆயிரக் கணக்கான டன்னளவில் குடிநீர் கடலிலிருந்து சுவைநீராகத் தயாரிக்கப் படுகிறது.  உப்பு கலந்த எச்சநீர் மீண்டும் கடலில்தான் பாய்ச்சப் படுகிறது.  இவற்றிலிருந்து வெளியாகும் இராசயனப் பொருட்களால் மீனினம் சேதாரம் அடையலாம் என்றோர் அச்சம் சிலரிடம் உள்ளது.  ஆனால் நமக்குக் குடிக்க, புழங்க கடற்பகுதிகளில் குடிநீர் பேரளவு தேவைப்படும் போது இந்த வழியைத் தவிர்த்து வேறு வழிகள் ஏதேனும் உள்ளனவா ?  செத்துப்போன மீன்களை விட்டுவிட்டுச் சற்று தூரம் சென்று உயிருள்ள நல்ல மீன்களை பிடித்துக் கொள்ள மீனவருக்குச் சொல்லித் தர வேண்டுமா ?  நமக்கு முதலில் வேண்டியது நீர்வளம்.  அதற்கு அடுத்தபடிதான் மீனினம்.  அப்படி வேறு வழிகள் இருப்பினும் நீர் வெள்ளத்தைக் கொண்டு வரச் சிக்கனச் செலவில் சாதிக்க முடியுமா என்றும் கணக்குப் பார்க்க வேண்டும்.

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலே தமிழகத்தில் பலரிடம் பீடக் கணினிகளும், மடிக் கணினிகளும், காதில் செல்பேசிகளும் நம்முடன் அனுதினம் சல்லாபித்துக் கொண்டுள்ள போது மின்சக்தி குன்றிப் போனால் என்னவாகும் என்று நான் விளக்க வேண்டியதில்லை.  சூழ்வெளி, உயிரினப் பாதுகாப்பளிக்கும் எந்த மின்சக்தி உற்பத்தியும் நமக்குக் கொடைதான்.  அணுசக்தி நிலையங்களிலிருந்து கிரீன் ஹௌஸ் வாயுக்கள் [CO2, SO2, & Nitrous Gases] வெளியாவ தில்லை.  அவை கூடங்குளத்தில் தேவையில்லை என்று பாமர மக்களின் கைகளில் செருப்பை மாட்டி, சுற்றுச் சூழல் ஆய்வலசல் பற்றி உரையாட வந்த விஞ்ஞானிகளின் வாயை மூடியது நாகரீகச் செயலில்லை.  அரசியல் மூர்க்க வர்க்க எதேச்சவாதிகளின் பிற்போக்குத் தன்மை அது.

அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ?  இப்படி மேலோடி இடித்துரைப்பது ஓர் அசுரப் போக்கு.  அணு உலை அருகே வாழ்பவருக்கு எல்லாம் வால் முளைக்குது,  ஏழாம் விரல் முளைக்குது என்றெல்லாம் நையாண்டி செய்வது அறிஞர்களின் கோமாளித்தனம்.  புற்று நோயுடன் மற்ற நோயும் தொற்றுது என்னும் பாட்டி கதைகளைக் கட்டிக் எறிந்து விட்டு சற்று புள்ளி விபரத்தோடு டாக்டர் புகழேந்தி ஆய்ந்து காட்டினால் நாமெல்லாம் நம்பலாம்.  கல்பாக்கத்தில் அணு உலை கட்டும் முன்பு அத்தகைய நோய்களால் துன்புற்றோர் அல்லது செத்தவர் எத்தனை பேர் ?  அப்போது அங்கு வாழும் நபருக்கு எத்தனை விரல்கள் இருந்தன என்று எண்ணிப் பார்த்தவர் யார் ?  அணு உலைகள் கட்டிய பின் இயங்கும் போது எத்தனை பேர் புற்று நோயில் செத்தனர்,  மற்ற நோயில் மடிந்தனர் என்ற எண்ணிக்கைகள் தேவை.  அப்படி அதிகமானால் அந்த தொகை கூறப்பட வேண்டும்.  அப்போதுதான் அணு உலையால் மனிதருக்கு ஏழாம் விரல் முளைத்த விந்தைகளைப் பற்றிப் புகாரிடலாம்.   உலகத்திலே இயங்கி வரும் (435+284+220) 939 அணு உலைகளுக்கு அருகில் வாழ்வோர் யாராவது புற்று நோயுற்றுத் செத்தால் அங்குள்ள பராக்கிரம யூனியன் நிலைய அதிகாரிகளைச் சும்மா விட்டுவிடுமா ? அவர்களைச் சிறையிலிட்டு பெருத்த நட்ட ஈடைப் பிடுங்கி விடும்.  நான் இந்தியாவிலும் கனடாவிலும் 45 ஆண்டுகளுக்கு மேல் யுரேனிய எரிசக்தி ஊட்டும் யந்திரக் கதிரியக்க வேலைகளில் நேரிடையாகத் தொடர்ந்து பணியாற்றி யிருக்கிறேன்.  இப்போது பொறியியல் படித்த என் புதல்வி கனடாவில் பிக்கரிங் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறாள்.  அவளது கணவரும் டார்லிங்டன் என்று அழைக்கப்படும் வேறோர் அணுமின் நிலையத்தில் எஞ்சினியராகப் பணி செய்கிறார்.  எனக்கோ, அவர்களுக்கோ அவரது இரண்டு பிள்ளைகளுக்கோ எவருக்கும் ஏழாவது விரல் முளைக்க வில்லை.  ஆகவே அசுரன் போன்ற அணுசக்திப் பொறிநுணுக்கவாதிகள், ஞாநி போன்ற எழுத்தாளர்கள், டாக்டர் புகழேந்தி போன்ற மருத்துவர்கள் ஆதாரமற்ற மூன்றாவது நபர் கருத்துக்களைப் பாமர மக்களுக்கு ஊட்டிப் பயமுறுத்தும் வழக்கத்தைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

பாரதத்தில் அணுசக்தி எச்சக் கழிவுகள் மீளியக்க முறையில் பயன்படுத்தப்பட்டு புளுடோனியம் பிரித்தெடுக்கப் படுகிறது.  அந்தப் புளுடோனியம் அணு ஆயுதங்களுக்கும், வேகப்பெருக்கி அணு உலைகளுக்கும் பயன்படுத்தப் படுவதால் அரசாங்கம் கதிர்க்கழிவு புதைப்பு விபரங்களை << தேசீயப் பாதுகாப்பு இரகசியமாக >> [National Security Secret] வைத்துள்ளது.  தெருவில் போவோனுக்குத் << தேசீயப் பாதுகாப்பு >> என்று சொன்னால் என்ன புரியும் ? ஆனால் எப்படி கதிரியக்கக் கழிவுகள் பாதுகாப்பாக புதைபட வேண்டும் என்ற விஞ்ஞானப் பொறி நுணுக்கங்கள் இந்திய அணுசக்தித் துறையகத்திடம் உள்ளன.  பொதுநபருக்கு வெளிப்படையாக அறிவிக்கா விட்டாலும் அரசியல் அமைச்சர்களின் மூலமாக முயன்றால் விபரங்கள் கிடைக்கலாம் என்பது என் கருத்து.  பிரம்மாண்டமான அணு உலைகள் கட்டும் போது, பாதுகாப்பாக வேலை செய்தாலும் மனித அல்லது யந்திரத் தவறுகளால் மனிதருக்கோ, கட்டுமானச் சாதனங்களுக்கோ விபத்துகள் நேர பல வாய்ப்புகள் உள்ளன.  அவற்றால் விளையும் விளைவுகளால் மரணம் ஏற்படாத வரை அவற்றை அரசு மறைத்து வைப்பது மன்னிக்க முடியாத குற்றமில்லை.  அரசியல் கட்சிகளுக்குள் அனுதினமும் நிகழும் கைச் சண்டைகள், வாய்ச்சண்டைகள் எல்லாம் வெளிப்படையாக எவரெல்லாம் முரசடித்து வருகிறார்கள்?

(http://www.thinnai.com/?module=displaystory&story_id=20706073&format=html அசுரனின் அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ?  கூடங்குளம் அணுமின் திட்டம்.)

மேற்காணும் கட்டுரையில் உள்ள சில அநாகரீகத் தற்கொலை மிரட்டல்கள், தாக்கல்கள்

+++++++++

<< கோட்டாறைச் சேர்ந்த பரமார்த்தலிங்கம் பேசுகையில், “அணுமின் திட்டத்தை நிறுத்தாவிட்டால் தினமும் 3 பேர் வீதம் தீக்குளிப்போம்!” என்றார். உடனே “அணு உலை வேண்டாம்’, “அணு உலை வேண்டாம்’ என அங்கிருந்தவர்கள் முழக்கமிட்டனர். இதனால் ஏற்பட்ட அமளிக்கு இடையே திட்டத்தை ஆதரித்து இந்திய கலாசார நட்புறவுக் கழகத் தலைவர் ராமையா பேசுகையில், அணு உலையால் ஆபத்து வராது என்றும் இதனால் பல நன்மைகள் உண்டும் என்றும் தெரிவித்தார். ஆதரவாகப் பேசிய இராமையாவை அடிக்க பெண்கள் செருப்புகளுடன் பாய்ந்தனர். >>

<< இடிந்தகரையைச் சேர்ந்த என். சுரேஷ் என்பவர் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பேசினார். அவரது கருத்துகளுக்கு எதிர்ப்புக் குழுக்களின் ஒருங்கிணைப்பாளரான ஆன்டன் கோமஸ் ஆட்சேபம் தெரிவித்தார். உடனே, அரங்கிற்குள் இருந்தவர்கள் மீண்டும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். இதனிடையே திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கருத்துத் தெரிவித்துப் பேசியவர்களிடம் அதற்கான காரணத்தை கேட்டு குறிப்பெடுத்த இளைஞர் ஒருவருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. அப்போது சிலர் அந்த இளைஞரைத் தாக்கினர். போலீஸார் அந்த இளைஞரை மீட்டு வெளியே அனுப்பி வைத்தனர். ஆதரவாகப் பேசிய இளைஞருக்கு பெண்களின் செருப்படியும் அடி, உதைகளும தாராளமாகக் கிடைத்ததன. >>

<< இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் விஞ்ஞானி லால்மோகன் பேசுகையில், மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்றார். பத்திரிகையாளர் பிரபுல் பித்வாய் பேசுகையில், “அணு உலைக் கழிவுகளால் ஆபத்து ஏற்படும் என்றும், விபத்து நடக்காது என்பதற்கான உத்தரவாதம் இல்லை!” என்றும் தெரிவித்தார். >>

<< அதற்குப் பதிலளித்து இந்திய அணுமின் கழகத் திட்ட இயக்குநர் (மும்பை) எஸ்.கே. அகர்வால் பேசுகையில், கழிவுப் பொருள்கள் மீண்டும் பயன்படுத்தப்படும் என்றார். அப்போது எதிர்ப்பாளர்கள் மீண்டும் எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பினர். இவ்வாறு அவ்வப்போது எதிர்ப்பாளர்கள் முழக்கமிட்டுக் கொண்டே இருந்ததால் அரங்கில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. அப்போது மாவட்ட ஆட்சியர் திடீரென்று கூட்டம் முடிந்துவிட்டது என்று அறிவித்தார். இவ்வாறு பலத்த எதிர்ப்புகளுக்கிடையே அரைகுறையாக நடந்து முடிந்தது.  இப்படியாக பல இலட்சம் மக்களின் எதிர்காலம் குறித்த இந்த மக்கள் கருத்தாய்வானது வெறும் ஒன்றே முக்கால் மணி நேரத்தில் நடந்து முடிந்தது >>

+++++++++

நீர்ப் பற்றாக்குறை பற்றிக் கல்பாக்கத்தில் டாக்டர் அப்துல் கலாம்

2003 டிசம்பர் 17 ஆம் தேதி கல்பாக்கத்தில் நிகழ்ந்த இந்திய அணுவியல் குழுவின் 14 ஆவது ஆண்டு நிறைவு விழாவில், உலோகவியல் வல்லுநரான பேராசிரியர் சி.வி. சுந்தரம் அவர்களுக்குப் பாராட்டு விருது அளித்த குடியரசுத் தலைவர் மாண்புமிகு டாக்டர் அப்துல் கலாம் விழாத் துவக்கவுரையில் கூறியது: “இன்னும் சில பத்தாண்டுகளுக்கு நமது பூகோளத்தின் முக்கியப் பெரும் பிரச்சனைகளாக நீர்வளப் பஞ்சம், எரிசக்திப் பற்றாக்குறை இரண்டும் மனிதரைப் பாதிக்கப் போகின்றன!  இந்தியாவைப் பொருத்தமட்டில் அடுத்த இருபது ஆண்டுகளுக்கு நமக்குப் போதிய நீர்வளமும், எரிசக்தியும் மிக மிகத் தேவை! பரிதிக்கனலைப் பயன்படுத்தியும், அணுக்கனல் சக்தியை உபயோகித்தும் உப்புநீக்கி நிலையங்கள் பல உண்டாக்கப்பட வேண்டும். இப்போது இயங்கிவரும் அணு மின்சக்தி நிலையங்களுக்கு அருகே, உப்புநீக்கி நிலையங்கள் உடனே உருவாக்கப்பட வேண்டும். பாபா அணுசக்தி ஆய்வு மையம், அணுசக்தி ஆற்றல் நிறுவனம், பாரத கனமின் யந்திர நிறுவனம் [BARC, NPCIL, BHEL] ஆகிய மூன்றும் இணைந்து தொழிற்துறைக் கூட்டணி அமைத்து, உப்பு நீக்கி துறையகங்கள், மின்சக்தி நிலையங்கள் [Water & Energy Production through Consortium] உண்டாக்குவதை ஓர் குறிப்பணியாய் [Mission] மேற்கொள்ள வேண்டும்”.

“இன்றுள்ள [2004] உலக ஜனத்தொகை 6 பில்லியனில் 3 பில்லியன் மக்கள் கட்டுப்பாடுள்ள அல்லது பற்றியும் பற்றாத நீர் வசதியுடன் வாழ்கின்றனர்!  உலக மக்கள் தொகையில் 33% போதிய சுகாதாரப் புழக்க நீரின்றியும், 17% மாசுக்கள் மண்டிய நீரைப் பயன்படுத்தியும் வருகிறார்! 2025 ஆண்டுக்குள் ஜனப்பெருக்கு 8 பில்லியனாக ஏறி, அவர்களில் ஒரு பில்லியனுக்கு மட்டுமே போதிய நீர் வசதி இருக்கப் போகிறது!  இரண்டு பில்லியனுக்கு மாசு மறுவற்ற நீர் வசதி வாய்க்கப் போவதிலை!  ஐந்து பில்லியன் மக்களுக்குச் சுகாதார நலனுக்குப் பயன்படும் புழக்கநீர் கிடைக்கப் போவதில்லை! இந்த பிரச்சனைகளுக்குத் தீர்வு வழிகளைக் காண நாம் யாவரும் ஒன்று சேர்ந்து பணிபுரிய வேண்டும்”.

நீர்ப் பற்றாக்குறையை நிவிர்த்திக்க வழிமுறைகள்

ஜனாதிபதி மேலும் கூறியது: “நீர்வசதிப் பற்றாக்குறையை நிவிர்த்தி செய்ய நமக்கு உள்ளவை, சில வழிகளே! ஏரிகளில் மழைக் காலத்தில் மழைநீர் சேகரிப்பு, நகர்ப் புறங்களில் புழக்கநீரை மீள் பயன்பாடு செய்வது, நீர் வசதி வீணாக்கப் படுவதைத் தடுப்பது போன்றவை நாம் அவசியம் கடைப்பிடிக்க வேண்டியவை. பெரிய திட்டங்கள் இரண்டு. ஒன்று: மத்திய அரசாங்கம் எண்ணிக் கொண்டிருக்கும் நதிகள் இணைப்பு! அடுத்த பெருந் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம். அதிர்ஷ்ட வசமாக நமக்குள்ள மூல நீர்வளம், அகில மெங்கும் 97% பேரளவில் பரவி இருக்கும் கடல்நீர்.  கடல்நீரைப் புதுநீராக்கும் உப்புநீக்கி நிலையங்கள் உலகில் 7500 இப்போது இயங்கி வருகின்றன!  பிரச்சனைகள் அதிகமின்றி நீடித்து இயங்கிவரும் உப்புநீக்கி நிலையங்கள் பல உள்ளன. அவற்றில் 60% மையக் கிழக்கு நாடுகளில் எரிவாயு, எரி ஆயில் தரும் வெப்பசக்தியில் கடல்நீர் புதுநீராக ஆக்கப்பட்டு வருகிறது.  அநேக நாடுகள் நீர்ப்பற்றாக் குறையை நிவிர்த்தி செய்யக் கடல்நீரில் உப்பை அகற்றும் வழிகளைத்தான் பின்பற்றுகின்றன”.

இந்தியாவில் அணுசக்தியின் கனல் மட்டும் பயன்பாடாமல், மற்ற வெப்ப முறைகளைக் கையாண்டு பல உப்புநீக்கி நிலையங்கள் இயங்கி வருகின்றன. ராஜஸ்தான், குஜராத், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தினம் 30,000 லிட்டர் ஆக்கும் சிறிய உப்புநீக்கி நிலையங்கள் உள்ளன. மேலும் ஏழு தொழிற்சாலைகள் அனுமதி அளிக்கப்பட்டு, 16 சிறிய உப்புநீக்கித் துறைக்கூடங்கள் இயங்கி கனியிழந்த நீர் [Demin Water] தயாரிக்கப் படுகிறது. கல்பாக்கம் அணுவியல் ஆய்வுக் கூடத்தில் மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு [Reverse Osmosis] முறையில் நாளொன்றுக்கு 1,8 மில்லியன் லிட்டர் புதுநீர் தயாரிக்கப்படுகிறது. 40 கோடி ரூபாய்ச் செலவில் பாபா அணுசக்தி ஆய்வு மையம் டிசைன் செய்து, அணுக் கனல்சக்தியைப் பயன்படுத்திப் பல்லடுக்கு நீராவி வீச்சு [Multi Stage Flash] முறையில் கடல்நீரை ஆவியாக்கிப் புதுநீர் உண்டாக்கும் நிலையம் ஒன்று பாம்பே டிராம்பேயில் நிறுவப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பாரத கனமின் யந்திர நிறுவகம் [BHEL] மீள்தடுப்புச் சுத்தீகரிப்பு முறையில் இயக்கிவரும் 12 உப்புநீக்கி நிலையங்கள் இராமநாதபுரம் மாவட்டத்தில் கடல்நீரைக் குடிநீராக மாற்றி வருகின்றன.

2004 ஜூலை 13 இல் இந்திய அணுசக்தி ஆணைக்குழுவின் அதிபதி [Chairman, Indian Atomic Energy Commission] டாக்டர் அனில் ககோட்கர் கல்பாக்கம் உப்புநீக்கி நிலையத்தைக் காணச் சென்ற போது கூறியது, “பாபா அணுசக்தி ஆய்வு மையம் [Bhabha Atomic Energy Centre (BARC)] டிசைன் செய்து கல்பாக்கத்தில் கட்டியுள்ள உப்புநீக்கி மாதிரிக் கூடம் கடந்த இரண்டு வருடங்களாக [2002-2004] நாளொன்றுக்கு 1.8 மில்லியன் லிட்டர் [480,000 gallon/day] புதியநீரைக் கடல்நீரிலிருந்து உற்பத்தி செய்து வருகிறது. அடுத்து இயக்க வினைகள் பயிற்சிக்கப்படும், கல்பாக்கத்தின் உப்பு நீக்கிப் பெருநிலையம் இன்னும் ஆறு மாதங்களில் முன்னைவிட இரண்டரை மடங்கு அளவில் 4.8 மில்லியன் லிட்டர் [தினம் 1.27 மில்லியன் காலன்] நாளொன்றுப் புதியநீரைப் பரிமாறப் போகிறது. இரண்டும் சேர்ந்தால் நாளொன்றுக்கு 6.3 மில்லியன் லிட்டர் [தினம் 1.66 மில்லியன் காலன்] புதியநீர் உற்பத்தியாகும்.”

கல்பாக்கத்தில் கலப்பு முறை உப்புநீக்கம் [Hybrid Desalination] செயல்பட்டு வருகிறது. பல்லடுக்கு நீராவி [Multi Stage Flash (MSF)] முறையில் உப்புநீக்கம் புரிய அச்சாதன ஏற்பாடுகள் 170 MWe மின்சக்தி ஆற்றல் கொண்ட ஓர் அணுமின் உலையுடன் இணைக்கப் பட்டுள்ளன. கல்பாக்கம் உப்பு நீக்கியில் வெளிவரும் புது நீர் தினம் 1.8 மில்லியன் லிட்டர் கொள்ளளவாகும். அத்துணை அளவு புதுநீரை உற்பத்தி செய்ய, கல்பாக்கம் அணு உலையில் புகும் கடல்நீரின் கொள்ளளவு அதைவிட ஏழு அல்லது எட்டு மடங்காகும் [12-14 மில்லியன் litre/day]! இரட்டை நுணுக்கச் சுத்தீகரிப்பில் கடல்நீரி லிருந்து வெளிவரும் புதுநீரின் உப்பளவைக் கட்டுப்படுத்து எளிது. ஆதலால் அம்முறையில் குடிநீரும், தொழிற்துறை நீரும் ஒருங்கே பெற்றுக் கொள்ள முடிகிறது.

2025 ஆண்டில் நீர்ப் பற்றாக்குறைப் பிரச்சனை அசுர வடிவ மடைந்து, 50 மேற்பட்ட உலக நாடுகளில் நீர்ப் பஞ்சம் உண்டாகி 2.8 பில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார் என்று சென்னைத் தேசீய கடற்துறைப் பொறியியல் கூடத்தின் டைரக்டர், டாக்டர் எஸ். கதிரொளி குறிப்பிடு கிறார்! இந்தியாவின் நான்காவது பெருநகர் சென்னையில் 2003 ஆண்டு இறுதியிலே குடிநீர்ப் பஞ்சம் துவங்கி விட்டது என்று கோ. ஜோதி ‘தீருமா சென்னையின் தாகம் ‘ என்னும் தனது திண்ணைக் கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்!  சென்னைப் நீர்ப்பஞ்சத்தைத் தீர்க்கத் தற்போது இந்தியாவின் கைவசம் இருக்கும் ஒரே ஒரு வழி, கடல் வெள்ளத்தில் கனல்சக்தி மூலம் உப்பை நீக்கிச் சுவை நீராக்கும் முறை ஒன்றுதான்! பரிதிக்கனல் வெப்பத்தைப் பயன்படுத்தியோ, கனல் மின்சார நிலையம் அல்லது அணு மின்சார நிலையத்தின் டர்பைன் வெளிக்கழிவு வெப்பத்தை உபயோகித்தோ, கடல்நீரைக் குடிநீராக்கும் மாபெரும் உப்புநீக்கி நிலையங்கள் மூன்று அல்லது நான்கு சென்னையின் நீண்ட கடற்கரையில் உடனே நிறுவப்பட வேண்டும்.

பாரதத்தில் நீர்ப் பற்றாக்குறை, நீர்ப் பஞ்சத்தைக் குறைக்க ஜீவ நதிகள் செத்த நதிகளுடன் சேர்க்கப் பட வேண்டும். ஒரு மாநிலத்தில் ஓடும் நதிகளின் நீரை, அண்டை மாநிலத்தில் ஓடாத நதிகளுக்குப் பங்கீடு செய்ய மாநில அரசுகள் முன்வர வேண்டும்.  கடற்கரைப் பகுதிகளில் உப்புநீக்கி துறையகங்கள் அணுமின்சக்தி நிலையங்களுடனும், அனல் மின்சக்தி நிலையங் களுடன் கூடவே கட்டப்பட வேண்டும். இந்த இமாலயத் திட்டங்கள் நிறைவேற மத்திய அரசும், மாநில அரசுகளும் மெய்வருந்திப் பணிபுரிய முன்வர வேண்டும்.

தகவல்:

Picture Credits : NPCIL, India, The Hindu, Russian VVER-1000 Websites

(http://www.thinnai.com/?module=displaystory&story_id=20706073&format=html அசுரனின் அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ?  கூடங்குளம் அணுமின் திட்டம்.)

1.  http://www.npcil.nic.in/index.asp [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]

2. http://pib.nic.in/release/release.asp?relid=20878 [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]

3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
[Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]

4.  World Nuclear Association – WNA
Radiological Protection Working Group – RPWG
(Official List – July 20, 2006)
http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

5. World Nuclear Association – WNA
Waste Management and Decommissioning Working Group – WM&DWG
(Official List – July 25, 2006)
http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm

6. http://www.candu.org/npcil.html [Indian Heavywater Nuclear Power Plants]

7. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40409022&format=html [ உப்பு நீக்கி நிலையங்கள் Desalination Plants – கடல் நீரிலிருந்து குடிநீர் – திண்ணைக் கட்டுரை]

8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40303233&format=html

[கூடங்குளம் அணுமின் உலைப் பாதுகாப்பு ஆய்வுகள்]

9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40607071&format=html

[செர்நோபிள் விபத்துபோல் கூடங்குளத்து அணுமின் உலையில் நிகழுமா ? ]

10 Picture Credit: The Hindu

11  http://en.wikipedia.org/wiki/VVER  (Russian VVER-1000 Reactor)

12.  http://www.barc.ernet.in/publications/eb/golden/reactor/toc/chapter6/6_1.pdf  (Kudungulam VVER-1000 Reactor Analysis)

13.  Nuclear Power in Japan (March 30, 2011)

******************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (April 10, 2011) (Revised)

பாரதத்தின் அணுவியல் துறை மேதை டாக்டர் ஹோமி பாபா

Dr. Homi J. Bhabha

(1909 – 1966)

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng.(Nuclear) கனடா

“அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடல் அலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம்”

தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]

“இன்னும் 20 ஆண்டுகளுக்குள் உலக நாடுகளின் தொழிற்துறை அரங்குகளிலும், இந்தியாவின் தொழில்வள நிதிப்போக்கிலும் அணுசக்திப் பெருமளவு பங்கேற்றுப் புரளப் போகிறது!  முற்போக்கு நாடுகளின் கண்முன் தொழிற் துறைகளில் பிற்போக்கு அடைவதை வேண்டாதிருந்தால், பாரதம் அணுவியற் துறைகளை விருத்தி செய்வதில் முழுச்சக்தியுடன் முற்பட வேண்டும்”.

டாக்டர் ஹோமி பாபா [1948]

“சுருங்கித் தேயும் சுரங்க நிலக்கரி, குறைந்து போகும் ஹைடிரோ-கார்பன் எரிசக்திச் சேமிப்புகளை எதிர்பார்த்து விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவள வேட்கையை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் எரிசக்தியை முழுமையாகப் பயன்படுத்திப் பேரளவு அணுசக்தியை உற்பத்தி செய்யும் முறை ஒன்றுதான் தற்போது இந்தியாவுக்கு ஏற்றதாக உள்ளது”

டாக்டர் அனில் ககோட்கர் [அதிபதி அணுசக்திப் பேரவை 2003]


இந்திய விஞ்ஞானத் தொழிற்துறையின் பொற்காலச் சிற்பிகள்

பாரத கண்டத்தைச் சாணி யுகத்திலிருந்து [Cow Dung Age] அணுசக்தி யுகத்திற்கும், அண்டவெளி யுகத்திற்கும் இழுத்து வந்த அரசியல் மேதை, பண்டித ஜவாஹர்லால் நேரு.  இந்தியா சுதந்திரம் அடைந்த பின், மேலை நாடுகள் போல் முன்னேறத் தொழிற் சாலைகள், மின்சக்தி நிலையங்கள், அணுசக்தி ஆராய்ச்சி, அண்டவெளித் தேர்வு போன்ற துறைகள் தோன்ற அடிகோலியவர் நேரு. 1945 ஆம் ஆண்டில் ஜப்பானில் அணுகுண்டுகள் விழுந்த பிறகு அமெரிக்கா, கனடா, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் சில ஈரோப்பிய நாடுகளிலும் அணுவியல் ஆராய்ச்சி உலைகள் [Atomic Research Reactors] முளைத் தெழுந்தன.  மேலை நாடுகளில் அதற்குப் பிறகு 1950-1960 ஆண்டுகளில் அணுசக்தியை ஆக்க வினைகளுக்குப் பயன்படுத்தச், சோதனை அணு மின்சக்தி உலைகள் [Test Atomic Power Reactors] கட்டப் பட்டன.  அவை வெற்றிகரமாய் இயங்கி, வாணிபத்துறை அணுசக்தி நிலையங்கள் [Commercial Atomic Power Stations] தலை தூக்கத் தொடங்கின.

இந்தியாவில் அணுவியல் துறை ஆராய்ச்சியைத் துவக்கவும், ஆக்க வினைகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்தவும் பண்டித நேரு வேட்கை கொண்டு அப்பணிகளைச் செய்ய ஓர் உன்னத விஞ்ஞானியைத் தேடினார்.  அப்போதுதான் டாக்டர் ஹோமி ஜெஹாங்கீர் பாபாவைக் [Dr. Homi Jehangir Bhabha] கண்டு பிடித்து, நேரு 1954 இல் மொம்பையில் அணுசக்தி நிலைப்பகத்தைத் [Atomic Energy Establishment, Trombay] துவக்கச் செய்தார்.  1958 மார்ச் 14 இல் நேரு இந்திய அணுசக்தி ஆணையகத்தை [Indian Atomic Energy Commission] நிறுவனம் செய்து ஹோமி பாபாவுக்குத் தலைவர் [Chairman] பதவியை அளித்தார்.  நேருவைப் போன்று டாக்டர் ஹோமி பாபாவும் ஓர் தீர்க்க தரிசியே.

நேரு விண்வெளி ஆராய்ச்சியைத் துவங்க, விஞ்ஞானி டாக்டர் விக்ரம் சாராபாயைக் [Dr Vikram Sarabai] கண்டு பிடித்து, தும்பா ஏவுகணை மையத்தை [Thumba Rocket Launching Centre] நிறுவி, அவரைத் தலைவர் ஆக்கினார்.  இப்போது இந்தியா ஆசியாவிலே அணுவியல் ஆராய்ச்சியிலும், அண்டவெளி ஏவுகணை விடுவதிலும் முன்னணியில் நிற்கிறது.  அணுசக்தி நிலையத்தை நிறுவனம் செய்ய ஏறக் குறைய எல்லாச் சாதனங்களும் இந்தியாவிலே இப்போது உற்பத்தி யாகின்றன!  அதுபோல் அண்டவெளி ஏவுகணைகள் முழுக்க முழுக்க இந்தியப் படைப்பு.  1974 இல் பாரதம் தனது முதல் அடித்தள அணுகுண்டு வெடிப்பைச் [Underground Atomic Implosion] செய்து, உலகில் அணுகுண்டு வல்லமை யுள்ள ஆறாவது நாடாகப் பெயர் பெற்றது!  அப்பெரும் விஞ்ஞானச் சாதனைகளை மற்ற நாடுகளுடன் ஒப்பு நோக்கினால், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைப் இந்திய விஞ்ஞானத் தொழிற்துறையின் பொற்காலம் என்று வரலாற்றில் அழுத்தமாகச் செதுக்கி வைக்கலாம்! அப்புதிய பொற்காலத்தைப் பாரதத்தில் உருவாக்கிய சிற்பிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர், டாக்டர் பாபா.

பாரத நாட்டு அணுவியல் துறைகளின் பிதா

டாக்டர் பாபா ஓர் உயர்ந்த நியதிப் பௌதிக விஞ்ஞானி [Theoretical Physicist].  விஞ்ஞான மேதமையுடன் தொழில் நுட்பப் பொறியியல் திறமும் [Engineering Skill] பெற்றவர்.  மேலும் அவர் ஓர் கட்டடக் கலைஞர் [Architect].  கலைத்துவ ஞானமும், இசையில் ஈடுபாடும் உள்ளவர்.  பம்பாயில் பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தை [Bhabha Atomic Research Centre] நேரில் பார்ப்பவர், பாபாவின் கலைத்துவக் கட்டட ஞானத்தை அறிந்து கொள்வர்.  விஞ்ஞானத்தில் அகிலக் கதிர்களைப் [Cosmic Rays] பற்றி ஆய்வுகள் செய்தவர்.  பரமாணுக்களின் இயக்க ஒழுக்கங்களை [Behaviour of Sub-atomic Particles] நுணுக்கமாக ஆராய்ந்து, அவற்றுக்கு அநேக விஞ்ஞான விளக்கங்கள் அளித்துத் தெளிவாக்கியவர்.  இந்தியாவில் முற்போக்குப் பௌதிகக் [Advanced Physics] கல்விக்கு விதையிட்டு, அதன் விருத்திக்கும், ஆராய்ச்சிக்கும் ஆய்வுக் கூடங்கள் அமைத்தவர்.  பாரதத்தில் அணுவியல் விஞ்ஞான ஆய்வுக்கும், அணுசக்தி நிலையங்கள் அமைப்புக்கும் திட்டங்கள் வகுத்து அவற்றை நிறைவேற்ற ஆராய்ச்சிக் கூடங்கள், இரசாயனத் தொழிற் சாலைகள் ஆகியவற்றைப் பக்க பலமாக நிறுவனம் செய்தவர். அவரது விஞ்ஞான ஆக்கத்திற்கும், நிறுவன ஆட்சித் திறமைக்கும், அகில நாட்டு விஞ்ஞானிகளின் மதிப்பைப் பெற்றவர்.  இந்தியாவிலும் வெளிநாட்டிலும் விஞ்ஞானப் பேரவைகளில் பொறுப்பான பெரிய பதவிகள் ஏற்றவர்.  குறிப்பாக ஆக்க வினைகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்தும் அகிலச் சபைகளில் [Organizations for the Peaceful Uses of Atomic Energy] உயர்ந்த பதவி வகித்தவர்.  இந்தியாவின் பாரத ரத்னா விருதையும், இங்கிலாந்தின் ஃபெல்லோ ஆஃப் ராயல் சொசைடி [Fellow of Royal Society] கௌரவ அங்கிகரிப்பையும் பெற்றவர்.  எந்த ஆசிய நாட்டிலும் இல்லாத மாபெரும் அணுசக்தித் துறைகளை இந்தியாவில் நிறுவி, பாரத நாட்டை முன்னணியில் நிறுத்திய டாக்டர் பாபா, பாரதத்தின் அணுவியல் துறைப் பிதாவாகப் போற்றப் படுகிறார்.

ஹோமி பாபாவின் ஆரம்ப வாழ்க்கை வரலாறு

ஹோமி பாபா ஓர் பார்ஸி குடும்பத்தில் 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி மொம்பையில் [Bombay] பிறந்தார்.  அங்கே பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு, யந்திரப் பொறியியல் [Mechanical Engineering] பட்டம் பெற, 1927 இல் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் கான்வில் கையஸ் கல்லூரியில் [Gonville & Caius College, Cambridge] சேர்ந்தார்.  அங்கே அவரது கணித ஆசிரியர், பால் டிராக் [Paul Dirac (1902-1984)].  பால் டிராக் கணிதத்திலும் நியதிப் பௌதிகத்திலும் [Theoretical Physics] வல்லுநர்.  அவர்தான் முதன் முதலில் ஒப்புமை மின்னியல் நியதியைப் [Relativistic Electron Theory] படைத்தவர்.  அந்த நியதி எதிர்த்-துகள்களின் [Anti-Particles] இருப்பை முன்னறிவித்துப் பின்னால் பாஸிடிரான் [Positron] கண்டு பிடிக்க உதவியது. 1933 இல் அலை யந்திரவியல் [Wave Mechanics] துறைக்கு ஆக்கம் அளித்தற்கு இன்னொரு விஞ்ஞானியுடன், டிராக் நோபெல் பரிசைப் பகிர்ந்து கொண்டார்.  அவரது கல்விப் பயிற்சி பாபாவைக் கணிதத்திலும், நியதிப் பௌதிகத்திலும் தள்ளி, விஞ்ஞானத்தில் வேட்கை மிகுந்திடச் செய்தது.

1930 இல் யந்திரப் பொறியியலில் முதல் வகுப்பு ஹானர்ஸ் பட்டம் பெற்ற பிறகு, கேம்பிரிடிஜ் காவென்டிஷ் ஆய்வகத்தில் [Cavendish Laboratories] ஆராய்ச்சி செய்யப் புகுந்தார்.  அப்போது ஈரோப்புக்கு விஜயம் செய்து, உல்ஃப்காங் பாலி [Wolfgang Pauli], அணுவியல் ஆராய்ச்சி விஞ்ஞானி என்ரிகோ ·பெர்மி [Enrico Fermi], அணுவின் அமைப்பை விளக்கிய நீல்ஸ் போஹ்ர் [Neils Bohr], பளு சக்திச் சமன்பாடு [Mass Energy Equation] படைத்த ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் [Albert Einstein] போன்ற ஒப்பற்ற விஞ்ஞான மேதைகளைக் கண்டு உரையாடி, அவர்களது நட்பைத் தேடிக் கொண்டார்.  பாலி, ஃபெர்மி, போஹ்ர், ஐன்ஸ்டைன் அத்தனை பேரும் பௌதிகப் படைப்புகளுக்காக நோபெல் பரிசு பெற்றவர்.

1935 ஆம் ஆண்டு பௌதிக விஞ்ஞானத்தில் டாக்டர் ஆஃப் ஃபிளாஸ்ஃபி [Ph.D.] பட்டம் பெற்று, 1939 ஆண்டு வரை கேம்பிரிட்ஜில் விஞ்ஞான ஆராய்ச்சிகள் செய்து வந்தார்.  அப்போது இங்கிலாந்தின் ஃபெல்லோ ஆஃப் ராயல் சொசைடி [Fellow of Royal Society] அங்கிகரிப்பும் பாபா பெற்றார்.  அதே சமயத்தில் F.R.S. பெற்ற கனடாவின் அணுவியல் மேதை, டாக்டர் W.B. லூயிஸ் [Dr. W. B. Lewis], பாபாவின் நெருங்கிய நண்பர்.  1957 இல் கனடா இந்திய அணு உலை, சைரஸ் [Canada India Reactor, CIRUS] பம்பாயில் நிறுவனம் செய்யவும், ராஜஸ்தான் கோட்டா, சென்னைக் கல்பாக்கம் ஆகிய இடங்களில் கான்டு [CANDU] அணுசக்தி மின்சார நிலையங்கள் தோன்றுவதற்கும், பாபா-லூயிஸ் கல்லூரி நட்பு அடிகோலியது.

அகிலக்கதிர் பற்றிய அடிப்படை விஞ்ஞானச் சாதனைகள்

உயர் சக்தி பௌதிகத்தின் [High Energy Physics] பாகமான குவாண்டம் மின்னியல் கொந்தளிப்பின் [Quantum Electrodynamics] ஆரம்ப விருத்திக்கு, டாக்டர் பாபா மிகுந்த படைப்புகளை அளித்துள்ளார்.  அவரது முதல் விஞ்ஞான வெளியீடு, பிண்டத்தில் உயர் சக்திக் காமாக்கதிர்கள் விழுங்கப் படுவதைப் [Absorption of High Energy Gamma Rays in Matter] பற்றியது.  ஒரு பிரதமக் காமாக்கதிர் எலக்டிரான் பொழிவாக [Electron Showers] மாறித் தன் சக்தியை வெளியேற்றுகிறது.  பாஸிடிரானைச் [Positron] சிதறும் எலக்டிரானின் முகப் பரப்பை [Cross Section], 1935 இல் முதன் முதல் கணக்கிட்ட விஞ்ஞானி, டாக்டர் பாபா.  [முகப் பரப்பு என்பது மிகச் சிறிய அணுக்கருப் பரப்பளவு. அந்தப் பரப்பளவு ஓர் அணுக்கரு இயக்கம் நிகழக் கூடும் எதிர்பார்ப்பைக் (Probabilty) கணிக்கிறது].  அந்த நிகழ்ச்சி எதிர்பார்ப்பு “பாபாச் சிதறல்” [Bhabha Scattering] என்று இப்போது பௌதிக விஞ்ஞானத்தில் அழைக்கப் படுகிறது.

டாக்டர் பாபா அகிலக் கதிர்களைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்தார். பூமியின் மட்டத்திலும், தரைக்குக் கீழும் காணப்படும் ஆழத்தில் ஊடுறுவும் துகள்கள் [Highly Penetrating Particles] எலக்டிரான்கள் அல்ல, என்று 1937 இல் பாபா எடுத்துக் கூறினார்.  ஒன்பது ஆண்டுகள் கழித்து, 1946 இல் அக்கூற்று மெய்யானது என்று நிரூபிக்கப் பட்டது.  ஆழமாய் ஊடுறுவும் அந்தத் துகள்கள் மியூ-மேஸான் [Mu-Meson] என்று பின்னால் கண்டு பிடிக்கப் பட்டன.  வெக்டர் மேஸான் [Vector Meson] இருப்பதை, டாக்டர் பாபா ஒரு நியதி மூலம் எடுத்துரைத்தார். 1938 இல் பூமியின் வாயு மண்டலத்தை அதி வேகமாய்த் தாக்கும், அகிலக் கதிர்களின் ஆயுளைக் கணித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தொகுத்த “சிறப்பு ஒப்புமை நியதியின்” [Special Theory of Relativity] காலக் கொள்ளளவு மாறுபாட்டை [Time Dilation Effect] உறுதிப் படுத்தினார். அந்த முறைக்கு ஒரு பூர்வீக வழியையும் வகுத்தார்.  ஒப்புமை நியதி உரைத்தது போல் அதே துள்ளிய அளவு அகிலக் கதிர்களின் ஆயுட் காலம் நீடிப்பதாகக் காணப் பட்டது.

பாரத தேசத்தில் பாபா தோற்றுவித்த விஞ்ஞான ஆய்வகங்கள்

1939 இல் இரண்டாம் உலகப் போர் மூண்டது.  விடுமுறையில் இந்தியாவுக்கு வந்த பாபா, யுத்தம் நடந்த காரணத்தால், மீண்டும் இங்கிலாந்துக்குப் போக முடியவில்லை.  டாக்டர் பாபாவுக்குப் பெங்களூர், இந்திய விஞ்ஞானக் கழகத்தில் [Bangalore, Indian Institute of Science] அகிலக்கதிர் [Cosmic Rays] ஆய்வுத் துறைப் பகுதியில் ஓரிடம் காத்திருந்தது.  அப்போது அதன் ஆணையாளர், நோபெல் பரிசு பெற்ற பாரத விஞ்ஞான மேதை, டாக்டர் சி. வி. ராமன் [Director Dr. C.V. Raman (1888-1970)].  டாக்டர் ராமன் மீது டாக்டர் பாபாவுக்கு அளவு கடந்த மதிப்பு.  அவரது விஞ்ஞான மேதமை, ஆழ்ந்த முறையில் பாபாவை ஊக்கியது.  பாபா பாரதத்திலே தங்க முடிவு செய்து விஞ்ஞான முற்போக்கிற்கும், பொறியியல் தொழில் விருத்திக்கும் பணிசெய்ய முற்பட்டார்.

1944 இல் தொழிற்துறை வளர்ச்சி அடைய விஞ்ஞானிகளுக்கு முற்போக்கான பௌதிகப் பயிற்சி அளிக்க ஓர் அரிய திட்டத்தை வெளியிட்டார்.  அதைப் பின்பற்றி டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கூடம் [The Tata Institute of Fundamental Research] பம்பாயில் 1945 இல் நிறுவப்பட்டு, சாகும் நாள் வரை டாக்டர் பாபா அதன் ஆணையாளராகப் [Director] பணியாற்றி வந்தார்.  ஆசியாவிலே அதி உன்னத விஞ்ஞான ஆராய்ச்சிகள் செய்துவரும் ஓர் உயர்ந்த ஆய்வுக் கூடம் அது.  1952 ஆம் ஆண்டில் அடிப்படைத் துகள் மேஸான்களில் [Fundamental Particle, Mason] ஒன்றைக் கண்டு பிடித்து “மேனன் மேஸான்” [Menon Mason] என்று பெயரிட்ட பேராசிரியர் எம்.ஜி.கே. மேனன், இந்தியப் படைத்துறை ஆலோசகர், டாக்டர் ராஜா ராமண்ணா ஆகிய விஞ்ஞான மேதைகளை உருவாக்கியது, டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கூடம்.

இந்தியாவில் அணுவியல் விஞ்ஞானத் துறைகள் வளர்ச்சி

டாக்டர் பாபாவின் உன்னதப் படைப்பு, பாரத தேசத்தில் நிலையாக வளர்ச்சி பெறும், உயர்ந்த ஓர் அணுவியல் துறைத்தொழில் அமைப்பு.  அணு ஆய்வுக் கூடங்கள், அணுசக்தி மின்சார நிலையங்கள், அவற்றுக்கு ஒழுங்காக எரிப்பண்டங்கள் ஊட்டும் யுரேனியம், தோரியத் தொழிற்சாலைகள் [Indian Rare Earths], கான்டு அணு உலைகளுக்கு வேண்டிய மிதவாக்கி [Moderator] கனநீர் உற்பத்திச் சாலைகள் [Heavy Water Plants], கதிரியக்கப் பிளவுக் கழிவுகளைச் [Radioactive Fission Products] சுத்தீகரித்துப் புளுடோனியத்தைப் பிரிக்கும் ரசாயனத் தொழிற்சாலை [Spent Fuel Reprocessing Plant], தாதுப் பண்டத்தை மாற்றி அணு உலைக்கேற்ற எரிக்கோல் கட்டுகள் தயாரிப்பு [Nuclear Fuel Bundle Fabrication], அணுசக்தி நிலையங்களை ஆட்சி செய்ய மின்னியல் கருவிகள், மானிடர் உடல் நிலையைக் கண்காணிக்கக் கதிரியக்க மானிகள் [Control System Instrumentations, Radiation Monitors], மின்சாரச் சாதனங்கள், கன யந்திரங்கள், கொதி உலைகள், பூதப் பம்புகள், வெப்ப மாற்றிகள் போன்று ஏறக் குறைய எல்லா வித பாகங்களும் பாரத நாட்டிலே தயாராகின்றன.  அணு உலைகளை இயக்கும் இளைஞர் பயிற்சி பெற அணுவியல் துறைக் கல்வி, மற்றும் பயிற்சிப் பள்ளிகள் பாரதத்தில் உள்ளன.

இந்தியா கீழ்த்தள அணுகுண்டை 1974 மே மாதம் 18 இல் வெடித்தற்கு முன் அணுவியல் சாதனங்கள் பல, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய மேலை நாடுகளிலிருந்து வந்தன.  அணுகுண்டு வெடிப்பிற்குப் பிறகு, அம்மூன்று நாடுகளும் வெகுண்டு அணுவியல் சாதனங்களை இந்தியாவுக்கு அனுப்புவதில்லை.  1974 ஆண்டுக்குப் பிறகு அணுசக்தித் துறை விருத்தியில் பாரத நாடு தன் காலிலே நிற்கிறது!  சில குறிப்பிட சாதனங்களை மட்டும் ஈரோப்பில் வாங்கிக் கொள்கிறது, இந்தியா.  இவ்வாறு பல்துறைகள் இணைந்து முழுமை பெற்றுச் சீராய் இயங்கும் மாபெரும் அணுவியல் துறை அமைப்பகம், இந்தியாவைப் போல் வேறு எந்த ஆசிய நாட்டிலும் இல்லை!

பாரதத்தில் அணுசக்தி மின்சார நிலையங்கள் அமைப்பு

டாக்டர் பாபா முதலில் ஆராய்ச்சிகள் புரிய ஆய்வு அணு உலைகளை [Research Reactors] நிறுவினார்.  இந்திய விஞ்ஞானிகள் அமைத்த “அப்ஸரா” நீச்சல் தொட்டி அணு உலையும் [Swimming Pool Reactor, Apsara], கனடா இந்தியக் கூட்டுறவில் கட்டப் பட்ட “ஸைரஸ்” வெப்ப அணு உலையும் [Canada India Reactor Utility & Service, Cirus] டிராம்பே அணுசக்திக் கூடத்தில் [Atomic Energy Establishment, Trombay, Now Bhabha Atomic Research Centre] அமைக்கப் பட்டன.  ஸைரஸ் ஆராய்ச்சி அணு உலையை இயக்க 1957 இல் பல எஞ்சினியர்கள், விஞ்ஞானிகள் கனடாவில் உள்ள NRX ஆய்வு உலையில் பயிற்சி பெற அனுப்பட்டார்கள்.  1960 இல் இயங்க ஆரம்பித்த ஸைரஸ் அணு உலையை, பிரதமர் நேரு திறந்து வைத்தார். துவக்க விழாவிற்கு அகில நாட்டு விஞ்ஞானிகள் பலர் வந்திருந்தனர்.

அடுத்து சென்னைக் கல்பாக்கத்தில் இரண்டாவது அணுவியல் ஆய்வுக் கூடம் [Indira Gandhi Atomic Research Centre] தோன்றியது.  அங்கு வேகப் பெருக்கிச் சோதனை அணு உலையும் [Fast Breeder Test Reactor], காமினி அணு உலையும் [Kamini Reactor], இரட்டை அணுசக்தி மின்சார நிலையமும் [CANDU Model] உள்ளன.  அணுசக்தி ஆராய்ச்சிக் கூடங்கள், மற்றும் அணுவியல் துணைத் தொழிற்சாலைகள் எல்லாம் அணுசக்தித் துறையகத்தின் [Dept of Atomic Energy] கீழ்ப் பணி புரிகின்றன.

அடுத்து பாபா அணுமின் சக்தி நிலையங்களை [Atomic Power Station] அமைக்க அடிகோலினார்.  முதலில் அமெரிக்காவின் ஆதரவில், தாராப்பூரில் கொதிநீர் அணுசக்தி மின்சார நிலையம் [Boiling Water Reactor, BWR] இரண்டை, ஜெனரல் எலக்டிரிக் கம்பெனி கட்டியது.  ஒப்பந்தப்படி இதற்கு வேண்டிய செழிப்பு யுரேனிய [Enriched Uranium] மூலத் தாது, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, ஹைதராபாத் எரிக்கோல் தயாரிப்புத் தொழிற்சாலையில் [Fuel Fabrication Plant] உருவானது.  கொதிநீர் அணுஉலை இயக்கத்தில் தீவிரக் கதிரியக்கத் தீண்டல்கள் [Radioactive Contaminations] உண்டாவதால், அம்மாடல்கள் பிறகு இந்தியாவில் பெருகவில்லை.  கொதிநீர் அணுஉலை இயக்கத்தில் பயிற்சி பெற பல எஞ்சினியர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப் பட்டார்கள்.

அடுத்து கனடாவின் கூட்டுறவில், கனடாவின் கான்டு [Canadian Deuterium Uranium, CANDU] மாடலில் இரட்டை அணுசக்தி மின்சார நிலையங்கள் ராஜஸ்தானில் கோட்டாவுக்கு அருகிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  அவற்றுக்குத் தேவையான இயற்கை யுரேனியம் [Natural Uranium] பாரதத்தில், மிஞ்சிய அளவில் கிடைக்கிறது. கனடா இந்திய ஒப்பந்தத்தின் போது, டாக்டர் பாபா இந்தியாவிலே கான்டு எரிக்கோல் [CANDU Fuel Bundles] தயாரிக்கவும், கான்டு அணுஉலைக் கலன்களைப் புதிதாய் உற்பத்தி செய்யவும், அந்த மாடல் நிலையங்களைப் பெருக்கும் உரிமைகளையும் கனடாவிட மிருந்து முதலிலேயே வாங்கிக் கொண்டார்.

அணுமின் சக்தி உற்பத்திக்கு ஆதரவான தொழிற்சாலைகள்

2002 இல் தற்போது புதிதாக எட்டு கான்டு அணுசக்தி நிலையங்கள் இந்தியரால் கட்டப் பட்டு, அவை இயங்க ஆரம்பித்து மின்சாரத்தை பரிமாறிக் கொண்டு வருகின்றன.  மேலும் புதிதாக ஆறு கான்டு அணுசக்தி நிலையங்கள் நிறுவனமாகிக் கொண்டிருக்கின்றன.  மொத்தம் 13 அணுசக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன.  முதல் ராஜஸ்தான் கான்டு நிலையத்தில் பக்கப் பாதுகாப்புறை [End Shields] ஒன்றில் கதிரியக்க நீர் தொடர்ந்து கசிவதால், அணுஉலை இயக்கம் நிரந்தரகாக நிறுத்தப் பட்டுள்ளது.

அணு உலைகளுக்குத் தேவையான மூலத் தாதுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் [Indian Rare Earths], [Uranium Corporation of India Ltd], எரிக்கோல் தயாரிக்கும் கூடங்கள் [Nuclear Fuel Complex], கழிவு எருக்களைச் சுத்தீகரிக்கும் தொழிற்சாலைகள் [Fuel Reprocessing Plants], கனநீர் உற்பத்திச் சாலைகள் [Heavy Water Plants, Several], உலைக்கலன், உலைச் சாதனங்கள் உற்பத்திக்கு கன மின்சாரச் சாதனத் தொழிற்கூடம் [Bharath Heavy Electricals, Bhopal], [Larson & Tubro], [KSP Poona], அணுஉலை இயக்கக் கருவிகள், கதிரியக்க மானிகள் தயாரிக்கும் கூடங்கள் [Electronic Corporation of India Ltd] போன்றவை சில குறிப்பிடத் தக்கவை.

1955 இல் ஜெனிவாவில் நிகழ்ந்த ஐக்கிய நாடுகளின் ஆக்கவினை அணுசக்திப் பேரவைக்கு [United Nations Conferrence on the Peaceful Uses of Atomic Energy] டாக்டர் பாபா தலைவராகத் தேர்ந் தெடுக்கப் பட்டார்.  1960 முதல் 1963 வரை அகில நாடுகளின் தூய & பயன்படும் பௌதிக ஐக்கிய அவைக்குத் [International Union of Pure & Applied Physics] தலைவராகப் பணியாற்றினார்.  1964 இல் நடந்த ஐக்கிய நாடுகளின் ஆக்கவினை அணுசக்திப் பேரவையில், முன்னேறும் நாடுகளைப் பார்த்து, “மின்சக்தி இல்லாமைப் போல் செலவு மிக்க எந்த மின்சக்தியும் இல்லை” [No power is as costly as no power] என்று பாபா கூறிய ஒரு பொன்மொழியை உலக நாடுகள் எடுத்துப் பறைசாற்றின.

பாரதத்தின் அணுவியல் மேதை பாபாவின் மரணம்

1962 அக்டோபர் 26 இல் சைனா இந்தியாவின் மீது படையெடுத்து வடக்கே சில பகுதிகளைப் பிடுங்கிக் கொண்டு போனது.  பாரதம் எதிர்க்க வலுவற்றுத் தோல்வியுற்றுக் தலை குனிய நேரிட்டது!  பண்டித நேரு 1964 மே 27 இல் காலமாகி, லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானார்.  அடுத்து சைனா 1964 அக்டோபர் 21 இல் தனது முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனையைச் செய்து, அண்டை நாடான இந்தியாவைப் பயமுறுத்தியது!  டாக்டர் பாபா, பாரதம் வலுவடைய பிரதமரை ஒப்ப வைத்து, அணு ஆயுதம் உண்டாக்க அடிகோலினார்.  பின்னால் ஹோமி சேத்னா [Homi Sethna] காலத்தில் அணுகுண்டு தயாரிக்கப் பட்டு கீழ்த்தள வெடிப்புச் [Underground Implosion] சோதனை 1974 மே மாதம் 18 இல் ராஜஸ்தான் பொக்ரான் பாலை வனத்தில் நிறைவேறியது.

1966 ஜனவரி 24 ஆம் தேதி வியன்னாவில் அகில நாட்டு அணுவியல் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளச் செல்லும் போது, ஆல்·ப்ஸ் மலைத்தொடர் மான்ட் பிளாங்கில் [Mont Blanc] விமானம் மோதி, டாக்டர் பாபா தனது 57 ஆம் வயதில் அகால மரணம் எய்தினார்.  பாரதம் ஓர் அரிய விஞ்ஞான மேதையை இழந்தது.  அவர் விதையிட்டுச் சென்ற அரும்பெரும் அணுவியல் திட்டங்களை, அவருக்குப் பின்வந்த ஹோமி N. சேத்னா, டாக்டர் ராஜா ராமண்ணா, டாக்டர் M.R. சீனிவாசன் ஆகியோர் நிறைவேற்றி, அவை யாவும் பன்மடங்கு இப்போது பெருகி ஆல விழுதுகள் போல் விரிந்து கொண்டே போகின்றன. 2005 ஆம் ஆண்டு மார்ச்சு 6 ஆம் தேதி இந்திய அணுசக்தித் துறையின் மாபெரும் புதிய காண்டு 540 MWe அணுமின் நிலையம் தாராப்பூரில் “பூரணம்” [Criticality] அடைந்துள்ளது, மகத்தான சாதனையாகக் கருதப்படுகிறது. தற்போது 15 அணுமின் நிலையங்கள் இந்தியாவில் இயங்கி வருகின்றன.  தாராப்பூரின் இரட்டைப் புதிய நிலையங்கள் மின்னாற்றல் இன்னும் சில மாதங்களில் பரிமாறும் போது, மொத்தம் 3960 MWe மின்சாரம் அனுப்பப்படும்.  அடுத்து 8 அணுமின் நிலையங்கள் பாரதத்தில் கட்டுமானமாகி வருகின்றன.  அவை எதிர்பார்க்கும் 2008 ஆம் ஆண்டில் மின்சக்தி உற்பத்தி செய்யும் போது மொத்த ஆற்றல் 6780 MWe ஆகப் பெருகி, கி.பி. 2020 இல் 20,000 MWe மின்சார ஆற்றலை அடையும் குறிக்கோள் நிறைவேறும்.

டாக்டர் பாபா திருமணம் செய்து கொள்ள வில்லை.  அவரது அன்பு இல்லத்தரசி விஞ்ஞானம் ஒன்றுதான்!  நேரடிப் பார்வையில் அவர் பம்பாயில் உருவாக்கிய டிராம்பே அணுசக்தி நிலைப்பகம் [Atomic Energy Establishment, Trombay], பாபா அணுவியல் ஆராய்ச்சி மையம் [Bhabha Atomic Research Centre] எனப் பெயர் பெற்று, அவரது நினைவை நிரந்தரமாக்கி விட்டது.  இந்திய அணுவியல் தொழிற் துறைகளின் பொற்காலத்திற்கு, டாக்டர் பாபாவின் பணிகள் பேரொளி அளித்துள்ளன என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 2, 2005)