(Anti-Nuclear Power Activists in India)
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
https://jayabarathan.wordpress.com/2011/11/04/anti-nuclear-power-activities/
முன்னுரை: ‘வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! ‘ என்று முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை நேரு காலத்தில், தமிழகம் புறக்கணிக்கப் படுவதை அடுக்கு மொழியில் முழக்கித் தமிழருக்குச் சுட்டிக் காட்டினார்! இந்தியாவிலே தலைசிறந்த ஆய்வுத் தளங்களில் ஒன்றான, இந்திரா காந்தி அணுவியல் ஆராய்ச்சி மையம், தமிழ்நாடு கல்பாக்கத்தில் பலருக்குப் பணி அளித்துத் திறமை மிக்க விஞ்ஞானி களை, பொறிநுணுக்க வல்லுநர்களை உற்பத்தி செய்து வருகிறது! அணு உலை எதிர்ப்பாளிகள் ஞாநி, டாக்டர் இரமேஷ், புகழேந்தி போன்ற தமிழக அறிவாளிகள் இப்போது கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையங்கள் யாவும் புற்றுநோய் உற்பத்திக் கூடங்கள் என்றும் அவை தமிழகத்துக்குத் தேவை யில்லை என்றும் அவற்றை நிரந்தரமாக நிறுத்தி மூடிவிடப் பறைசாற்றி வருகிறார்கள்!
பாதுகாப்பான பாரத அணு உலைகளின் கதிர்வீச்சால் எந்தப் புற்று நோயும், அல்லது சந்ததி ஊனமும் பணியாளருக்கு இதுவரை உண்டான தில்லை! செர்நோபிள் அணு உலை போன்றோ அல்லது அணு ஆயுதங்கள் போலவோ, பாரத அணுமின் உலைகள் ஒருபோதும் வெடித்து மக்களுக்குப் பேரழிவை உண்டு பண்ண மாட்டா! அச்ச மின்றி பாரத அணு உலைகளில் ஆக்க உணர்வோடு பணி புரியக் கூரிய அறிவும், சீரிய திறனும், ஓங்கிய வல்லமையும் தமிழர் வசம் களஞ்சியம் போல் செழித்துக் கிடக்கிறது!
மூர்க்க யானையைப் பார்க்கப் போன ஆறு குருடர்கள்!
யானையின் பூத வடிவையும், மூர்க்கப் பண்பையும் கண்டு அஞ்சிய ஒருவர் அது எப்படி இருக்கிற தென்று பார்த்து வர ஐந்து குருடர்களை அனுப்பினார்! கால்களை நெருடி மிரண்ட குருடன் கோயில் தூணைப் போலிருக்கிறது யானை என்று கூறினான்! தும்பிக்கையை வருடிய ஒருவன் ‘ஐயோ! மலைப் பாம்பு போலிருக்கிறது யானை என்று அஞ்சி ஓடினான்! மூன்றாவது குருடன் முன்னும் பின்னும் அசையும் காதுகளைத் தடவி, வெஞ்சாமரை விசிறிகளைப் போன்றது யானை என்று வியந்தான்! படுத்துக் கிடந்த போது அதன் பூத உடலைத் தடவிய ஒருவன் பெரிய பாறாங்கல் போல இருக்கிறது யானை என்று மனம் பூரித்தான்! ஐந்தாவது குருடன் நீட்டிக் கொண்டிருக்கும் தந்தங்களை நீவி, யானைக் கூரிய ஈட்டியைப் போன்றது என்று வெகுண்டு ஒதுங்கினான்! யானையின் முழுத் தோற்றத்தையும், குணத்தையும் அவர்களில் ஒருவர் கூடக் கண்டு கொள்ள முடிய வில்லை! அதன் மூர்க்கக் குணத்தை மட்டும் அறிந்து தூரத்தில் நின்று நோக்கிய ஆறாவது நபருக்கு, யானையின் உறுப்புகளைப் பற்றியோ, பயிற்சி மூலம் அதன் வீரிய பண்பைத் திருத்த முடியும் என்ற அறிவோ அல்லது முறையுடன் பழகினால் அதனைப் பணி புரிய வைக்கலாம் என்றோ எதுவும் தெரியாமல் போனது!
அனுப்பிய ஆறாவது நபர் ஐந்து குருடர்கள் கண்டு பிடித்துத் தந்த முரண்பாடான விளக்கங்களில் எதை எடுத்துக் கொள்வது என்று குழப்பம் அடைந்தார்! தனக்கு விருப்பான ஒருதிசைக் கருத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு, தன் கண்ணோட்டத்தில் இவ்விதம் எழுதி வெளியிட்டார்:- ‘மூர்க்கமான யானை மாந்தரை விழுங்கி விடும் மலைப் பாம்பு! அதன் அருகில் எவரும் செல்வது ஆபத்தானது! மனிதரைக் குத்திக் கொன்று விடும் கூரிய ஈட்டிகள் இரண்டு யானை யிடம் உள்ளன! அருகில் நடமிடும் நபர்களைக் கனத்த காலால் மிதித்து நசுக்கி விடும்! ‘ ஆறாவது அறிவாளி அனைத்தையும் சேர்த்து யானையைப் பற்றி வெளியிட்ட விபரங்களில் சில உண்மைகள் இல்லாமல் இல்லை! அதே சமயம் அவரது கூற்றில் பல தவறுகள் இருக்கின்றன!
அணுமின் உலை எதிர்ப்பாளிகளின் குறுகிய பார்வைகள்
அணுமின் உலை எதிர்ப்பாளிகள் கறுப்புக் கண்ணாடி அணிந்து, தூரத்தில் அஞ்சி நின்று கொண்டு பூதக் கண்ணாடி மூலமாகப் பார்த்து அணு உலைகளை ஆராய்ந்து வருகிறார்கள்! அல்லது அணு உலை நிகழ்ச்சிகளைக் காதால் கேட்ட இரண்டாவது நபர் வடிகட்டி எழுதிய சில சக்கைகளை எடுத்துக் காட்டுகிறார்கள்! அல்லது தெளிந்த பாலை விட்டு மேலாக மிதக்கும் மேலாடையை மட்டும் எடுத்துக் கொண்டு, அணுமின் உலைகளை எதிர்க்க வந்து விடுகிறார்கள்!
பூகம்பத்தில் கூடங்குள ரஷ்ய அணு உலை பிளந்து விடும் என்று ஒருவர் கூச்சலிடுகிறார்! கடந்த முப்பது ஆண்டுளாக உலகில் இயங்கி வரும் 438 அணுமின் உலைகளில் எதுவும் பூகம்பத்தில் இதுவரைத் தகர்ந்து போக வில்லை! அடுத்தவர் கல்பாக்கம் அணு உலையில் விபத்தென்றால் சென்னை நகரமே அழிந்துவிடும் என்று அச்ச மூட்டுகிறார்! மற்றொருவர் கல்பாக்கம் அணு உலையில் பணி புரிவோருக்கும் அவரது குடும்பத்தாரும் புற்று நோய் தொற்றிக் கொள்கிறது என்று பயங்காட்டுகிறார்! அணு உலைக் கருகில் வாழ்பவருக்கும் அவரது சந்ததிகளுக்கும் ஆறு விரல்கள் முளைக்கும் என்று இன்னொருவர் வட்டாரப் பட்டியலைக் காட்டுகிறார்! இவை அனைத்தும் அணுமின் உலைகளில் உண்டாகும் கதிர்வீச்சால் ஏற்படும் உடற் தீங்குச் சம்பவங்களா என்பது ஐயப்பாட்டுக்கு உரியன!
ஞாநி தனது ‘கான்சர் கல்பாக்கம் ‘ கட்டுரையில் வட்டாரப் பணியாளிகள் 15,025 பேரைச் சோதித்ததில் 167 நபர்கள் [1%-2%] புற்றுநோய் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்! புற்றுநோய்ப் புள்ளி விபரம் எடுக்கும் புத்திசாலிகள் முக்கியமான ஒரு விபரத்தைக் காட்ட வில்லை! அதை விட்டு விட்டார்கள்; அல்லது மறைத்து விட்டார்கள்; அன்றி அதைச் சேமிக்க மறந்து விட்டார்கள்! கல்பாக்க அணு உலை கட்டுவதற்கு முன்பாக அந்த வட்டாரத்தில் வாழ்ந்த 15,000 மாந்தரில் எத்தனை பேருக்கு அல்லது எத்தனை சதவீதம் புற்றுநோய் வந்திருந்தது என்று காட்டி யிருந்தால், இரண்டு சதவீதங்களின் கழித்தல் எண் கல்பாக்க அணு உலையால் உண்டானது என்று நிரூபித்துக் காட்டலாம்! அதுதான் முறையான, துல்லிய புற்றுநோய்ப் புள்ளி விபரம்! அவ்விதம் அவரது புள்ளி விபரங்கள் ஏனோ காட்டப்பட வில்லை!
வட அமெரிக்க நாடுகளில் வழக்காட விழித்திருக்கும் ஓநாய்க் கூட்டம்
சமீபத்தில் குறிப்பிட்ட சில ஃபயர்ஸ்டோன் டயர்கள் [Firestone Tires] அவற்றைப் பூட்டிய கார் வாகனங்கள் ஓடும் போது வெடித்து, வட அமெரிக்காவில் ஆயிரக் கணக்கான நபர்கள் மரண மடைந்தது வெளியானது. உடனே வாய்ப்புகளைப் பயன் படுத்தி ஓநாய்களைப் போல் தாவிய வழக்கறிஞர்கள் ஃபோர்டு மோட்டர் கம்பெனியின் [Ford Motor Company] மீது வழக்குப் போர் தொடுத்து பல மில்லியன் டாலர் நஷ்ட ஈட்டுத் தொகையைக் கறந்து விட்டனர். அது போல் அணு உலைகளால் புற்று நோய் மரணங்கள் பணியாளிகளுக்கு ஏற்படுவ தாகத் தெரிய வந்தால், அவற்றின் உரிமை யாளர்களை நீதி மன்றத்திற்கு இழுத்துப் போரிட்டு வழக்கறிஞர் கூட்டம் உறிஞ்சிக் குடித்து சக்கை யாக்கிவிடும்!
தற்போது [2015 முடிவு வரை] அமெரிக்க நாட்டில் 100 அணுமின் உலைகள், கனடாவில் 16 அணுமின் உலைகள், பிரான்ஸில் 59 அணுமின் உலைகள், பிரிட்டனில் 35 அணுமின் உலைகள், ஜெர்மனியில் 19 , இந்தியாவில் 20 அணுமின் உலைகள் [50] ஆண்டுகளாக இயங்கி மின்சாரம் பரிமாறி வருகின்றன. மேற்கூறிய மேலை நாடுகளில் பணி செய்வோர் எவருக்கும் அணு உலைக் கதிர்வீச்சால் புற்று நோய்களோ அன்றி வேறெந்த நோய் நொடிகளோ வருமாயின் அங்குள்ள வழக்கறிஞர்கள் உரிமை நிர்வாகத்தின் மீது வழக்குப்போர் தொடுத்து, பல மில்லியன் டாலர் நஷ்ட ஈடுத் தொகையைப் பறித்து விடுவார்கள்! அப்படிப்பட்ட வழக்குப் போர்கள் அமெரிக்காவிலோ, கனடாவிலோ, ஐரோப்பிய நாடுகளிலோ எந்த அணுமின் உலையின் கதிர்வீச்சால் தூண்டப் பட்டதாக இதுவரை அறியப்பட வில்லை!
மரணப் புள்ளி விபரப்படி, அமெரிக்காவில் ஐந்தில் ஒருவர் தற்போது புற்றுநோயில் மாண்டு போகிறார்! 1970 முதல் 2000 ஆண்டு வரை கடந்த முப்பது வருடங்களில் சுமார் 12 மில்லியன் நபர் புற்று நோயில் மடிவார் என்று மதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது! அதாவது ஆண்டு ஒன்றுக்கு 400,000 பேர் புற்று நோயுக்குப் பலியாவார்கள்! அவற்றில் இயற்கை, மற்றும் மானிடச் செயற்கைக் கதிர்வீச்சுப் புற்று நோய்களால் மாள்பவர் மட்டும் [3%] 10,000 பேர்கள்! அந்த 10,000 பேர் மரணத்தில் 104 அணுமின் உலைகளில் பணிபுரிபவரில் 40 பேருக்கு புற்றுநோய் வரலாம் என்று மதிப்பீடு அட்டவணை காட்டுகிறது. இதில் முக்கியமாகத் தெரிய வேண்டியது: ஏற்படும் புற்றுநோய் மரணங்களில் 97% அணு உலைக் கதிர்வீச்சால் உண்டானவை அல்ல!
அணுவியல் துறைகள் வளர்ச்சிக்கு எதிர்ப்பாளிகள் முட்டுக்கட்டை!
‘வடக்கு வளர்கிறது! தெற்கு தேய்கிறது! ‘ என்று முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை நேரு காலத்தில், தமிழகம் புறக்கணிக்கப் படுவதை அடுக்கு மொழியில் தமிழருக்குச் சுட்டிக் காட்டினார்! தற்போது பாரதத்திலே இரண்டாவது பெரிய அணுவியல் ஆராய்ச்சிக் கூடம், இரட்டை அணுமின் நிலையம், வேகப் பெருக்கி சோதனை அணு உலை கல்பாக்கத்தில் இயங்கி வருகின்றன! பாரதத்திலே மிகப் பெரும் 2000 MWe ஆற்றல் கொண்ட இரட்டை அணுமின் நிலையங்கள் கூடங்குளத்தில் உருவாகி வருகின்றன! ஞாநி, டாக்டர் இரமேஷ் போன்ற தமிழக அறிஞர்கள் தற்போது கல்பாக்கம், கூடங்குள அணுமின் நிலையங்கள் யாவும் கான்சர் உற்பத்திக் கூடங்கள் என்றும் அவை தமிழகத்துக்குத் தேவை யற்றவை என்றும் பறைசாற்றி வருகிறார்கள்! கல்பாக்கம், கூடங்குளம் மின்சக்தி அளிப்பதோடு, ஆயிரக் கணக்கான தமிழருக்கும், மற்ற மாநில மாந்தருக்கும் நிரந்த, தற்காலிக வேலைகளை அளித்துக் கொண்டிருக்கின்றன!
பாரதத்தின் அணுவியல் விஞ்ஞானத்தின் முன்னேறத்தையோ, விண்வெளி ஏவுகணை வீச்சுகளையோ பழைமை வாதிகள் யாரும் முட்டுக்கட்டை போட்டு நிறுத்த முடியாது! அணுயுகமும், அண்ட வெளியுகமும் உலகெங்கும் ஓங்கி வளரும் போது, பாரதம் மாந்தரும் அவற்றில் சிறிதளவு பங்கெடுக்காமல் போனால், இந்தியா பின்தங்கிய நாடாக தாழ்ந்து போய்விடும்! அணுமின் உலைகளை எதிர்ப்பாளிகள் புறக்கணித்தாலும், அணுவியல் துறையில் முன்னணியில் நிற்கும் பாரதம், இன்னும் பல்லாண்டுகளுக்கு அணு மின்சக்தியை உற்பத்தி செய்யத்தான் போகிறது!
யந்திர வாகனங்களில் ஏற்றுக் கொள்ளும் அபாய எதிர்பார்ப்புகள்
மனிதர் தயாரித்த எந்த யந்திர சாதனமும், வாகனமும் மக்களுக்கு முழுப் பாதுகாப்பு அளிக்கும் என்று எவரும் உத்திரவாதம் தர முடியாது! கடந்த நூற்றைம்பது ஆண்டுகளில் ஆக்கப்பட்ட நீராவி எஞ்சின் அல்லது டீசல் எஞ்சின் கப்பல்கள், ரயில் வண்டிகள், சுழற் தட்டு அல்லது ஜெட் விமானங்கள், ராக்கெட் எஞ்சின் விண்வெளிக் கப்பல்கள் ஆகியவற்றில் சில வாகனங்கள், எப்போதா வது மனிதத் தவறாலோ அல்லது யந்திரப் பழுதாலோ விபத்துக் குள்ளாக நேரும்! அவைத் தரக் கட்டுப்பாடு முறையில் தயாரிக்கப் பட்ட உறுப்புகளால் அமைக்கப் பட்டாலும் அபாயங்களைக் குறைக்கும் குறிக்கோளில் வடிவாக்கப் பட்டவை! உதாரணமாக அமெரிக்காவில் பெரு வீதிகளில் காரில் பயணம் செய்வோர் அபாய எதிர்பார்ப்பு 3000 இல் 1. கடல் பயணத்தில் கப்பலில் செல்வோர் அபாய எதிர்பார்ப்பு 100,000 இல் 1. தீவிபத்துக்களில் மரணம் அடைபவர் அபாய எதிர்பார்ப்பு 25,000 இல் 1. தொடர் வண்டி ரயில் பயணத்தில் அபாய எதிர்பார்ப்பு 250,000 இல் 1. ஆகாய விமானப் பயணங்களில் ‘ஏற்கும் அபாய எதிர்பார்ப்பு ‘ [Acceptable Risk] 100,000 இல் 1 [1 in 100,000 chance of fatality per year].
அனுதினமும் ஒரு மணி நேரத்தில் நூற்றுக் கணக்கான வாணிபத் துறை விமானங்கள் குறைந்தது (300-400) நபர்களைத் தூக்கிக் கொண்டு வானத்தில் ஐந்து மைல் உயரத்தில் பறக்கின்றன! எப்போதாவது மனிதத் தவறாலோ, யந்திரப் பழுதாலோ அன்றிக் காலநிலை முறிவாலோ விமானம் விழுந்து மாந்தர் பலர் உயிரிழக்கிறார்! ஆனால் அடுத்து விமானங்கள் பறக்காமல் போகின்றனவா ? அல்லது மக்கள் விமானத்தில் ஏறிப் பயணம் செய்ய அஞ்சுகிறார்களா ? இல்லை!
மனிதருக்குப் பயன்படும் அல்லது மனித ஆராய்ச்சிக்குத் தேவைப்படும் ஆகாய விமானம், அண்டவெளிக் கப்பல், அணுமின் உலை ஆகியவை யாவும் ‘பூஜியப் பழுதுகள் ‘ அல்லது ‘ஏற்கும் பழுதுகள் ‘ [Zero or Acceptable Defects] என்னும் தரக் கட்டுப்பாடு நெறியில் [Quality Control & Assurance] தயாரிக்கப் பட்ட சாதனங்களைக் கொண்டு உருவாக்கப் பட்டவை! ஆகவே பணம் கொடுத்துப் பயணம் செய்ய ஒருவர் விமான ஆசனத்தில் அமரும் போது, விமானம் ஆக்கப்பட்ட ‘ஏற்பு அபாய எதிர்பார்ப்புக்கு ‘ [Acceptable Risks] உடன்படுகிறார்! அதே சமயம் விமான ஏற்பு அபாய எதிர்பார்ப்பை நம்பாதவர், ஏற்றுக் கொள்ளாதவர் விமானத்தில் பறக்க வேண்டியதில்லை! பதிலாக மெதுவாக ஊர்ந்து செல்லும் கப்பலில் செல்லலாம்! கப்பல் பயணத்தின் அபாய எதிர்பார்ப்பை நம்பாதவர், கடல் பயணத்துக்கு அஞ்சுபவர் எங்கும் போகாமல் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கலாம்!
பணியாளருக்கு அளிக்கும் உயர்ந்த பயிற்சிகள், பாதுகாப்பு முறைகள்
இந்திய அணுசக்தி நிர்வாகம் முதலில் தேர்ந்தெடுக்கும் போதே சிறந்த விஞ்ஞானிகளையும், உயர்தர எஞ்சினியர்களையும் பாரத மெங்கும் தேடிச் சலித்து எடுக்கிறது. 1957 ஆண்டு முதல் கடந்த 45 ஆண்டு களாக ஒவ்வோர் ஆண்டிலும் குறைந்தது 250 நபர்களைத் [50 எஞ்சினியர், 50 பெளதிக, 50 இரசாயன, 50 உயிரியல், 50 உலோக வியல் விஞ்ஞானிகள்] தேர்ந்தெடுத்து தனித் தனியாக ஓராண்டுக்குப் அணுவியல் விஞ்ஞானம், அணுவியல் இரசாயனம், அணுக்கருப் பொறியியல், கதிரியக்கத்தின் நன்மை தீமைகள், பாதுகாப்பு முறைகளில் கல்வி புகட்டப் படுகிறது. கல்லூரி போல் தேர்வுகளும் வைக்கப்படும். 2002 ஆண்டு வரைப் பயிற்சி பெற்ற 11250 [45×250=11250] வல்லுநர்களைப் ‘பம்பாய் அணுசக்தி பயிற்சிக் கூடம் ‘ [Atomic Energy Training School, Bombay] பாரத அணுவியல் துறைகளில் பணி செய்யத் தயாரித்துள்ளது. அவர்களே அனைத்து அணுவியல் துறைச்சாலைகள், அணு உலைகள், அணுமின் உலைகள், வேகப் பெருக்கி அணு உலை, புளுடோனியம், யுரேனியம் இரசாயனத் தொழிற்சாலைகள் ஆகியவற்றை இப்போது இயக்கி வருகிறார்கள்.
அத்துடன் ஒவ்வொரு அணுமின் உலைகளிலும் தனியாகக் குறிப்பிட்ட பயிற்சிகளைப் பணியாளிகளுக்கு அளித்து மனிதத் திறமைகள் கூர்மை யாக்கப் படுகின்றன. கதிரியக்கத்தைக் கையாள, அணு உலையின் தளங்கள் நான்கு கதிர்வீச்சு அரங்கு களாகப் [Zone-1, Zone-2, Zone-3, Zone-4] பிரிக்கப் பட்டுள்ளன. அரங்கு-1 நிர்வாகத் துறையினர் நடமாடும் தூய தளங்கள்; உணவு அருந்தும் அறைகள். அரங்கு-2 மிதமான கதிர்வீச்சு கொண்ட தளங்கள். ஆட்சி அறை, பராமரிப்புத் தளங்கள் இந்த ரகத்தைச் சேர்ந்தவை. வீரிய கதிர்வீசும் சாதனங்கள் பராமரிக்கப் படும் தளங்கள் அரங்கு-3 நிலையைப் பெறுபவை. அரங்கு-4 இல் அணு உலை, தீய்ந்த எரிக்கோல்கள் சேமிப்புத் தடாகம் [Spent Fuel Storage Pool] ஆகியவை அமைக்கப் பட்டுள்ளன. அரங்குகளின் எல்லைகளில் அழுத்தமான நிறக் கோடுகளில் தரையில் வரையப் பட்டு, அணிய வேண்டிய பாதுகாப்பு உடைகள், கவசங்கள் ஆகியவை அறிக்கைப் பலகையில் குறிக்கப் பட்டு, எச்சரிகை விதிகள் காணப்படும்.
அணுமின் உலை அணுகுண்டைப் போல வெடித்துப் பேரழிவை உண்டாக்குமா ?
ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாக்கி நகரங்களில் வெடித்த அணு குண்டுகளுக்கும், மின்சாரம் பரிமாறும் அணு உலைகளுக்கும் பெருத்த மாறுபாடுகள் உள்ளன! செர்நோபிள் ரஷ்ய அணு உலையில் உண்டான வெடிப்பு அணு குண்டுகள் போல நியூட்ரான் பெருக்கம் மீறி அணுக்கருப் பிளவுகளால் ஏற்பட வில்லை! அணு உலையின் தணிப்பு நீர் மூலக்கூறுகள் கடும் வெப்பத்தால் நீராவி ஆகி, உலோகத்துடன் கலந்து மின்னியல் பிரிவு பட்டு, ஏராளமான ஹைடிரஜன் வாயு கிளம்பி, எப்போதும் தீக்கனலாய்ச் சிவக்கும் கரித்திரள் கட்டியின் உஷ்ணத்தில் ஆக்ஸிஜனுடன் மூர்க்கமாய் இணைந்ததால் பயங்கர வெடிப்பு ஏற்பட்டது! அணுகுண்டு போல அணு உலைகள் வெடித்து வீடுகளையும், கட்டடங்களையும் தகர்த்துப் பேரழிவை உண்டாக்க மாட்டா! அணுகுண்டில் கட்டு மீறிப் பெருகும் அணுக்கரு இயக்கங்கள் வேக நியூட்ரான்களால் தூண்டப் படுபவை! கல்பாக்கம் வேகப் பெருக்கி அணு உலையைத் தவிர, பாரதத்தின் மற்ற எல்லா அணுமின் உலைகளும் மெது வேக நியூட்ரான் இயக்கங்களால் வெப்ப சக்தியை ஆக்குபவை!
அணுகுண்டுகளில் யுரேனியம்235 [Close to 100% purity] அல்லது புளுடோனியம்239 ஆகிய அணுப்பிளவு உலோகங்கள் [Fissionable Materials] உபயோகமாகி, எந்த வித மிதவாக்கியும் [Moderator to reduce Neutron Energy] இல்லாது வேக நியூட்ரான்கள் அவற்றைத் தாக்கிப் பேரளவு வெப்ப சக்தி, வெடிப்பு, கதிரியக்கப் பொழிவுகளும் பொங்கிப் பேரழிவு உண்டாகுகிறது!
ஆனால் வேகப் பெருக்கியைத் [Fast Breeder Reactor] தவிர மற்ற பெரும்பான்மை யான வெப்ப அணு உலைகளில் [Thermal Nuclear Reactor] பயன்படும் எரிபொருள்: [(0.7%-3%) Fissionable Uranium235 or (2%-3%) Plutonium]. எளிய நீர் அல்லது கனநீர் மிதவாக்கியாக [Light Water or Heavy Water Moderator] உபயோகமாகி வேக நியூட்ரான் சக்தி மிதமாக்கப்பட்டு வெப்பப் பிளவு இயக்கத்தில் [Thermal Fission Reaction] மட்டுமே சக்தியை உண்டாக்குகிறது! வேகப் பெருக்கி அணு உலைகளில் மிதவாக்கி இல்லாது வேக நியூட்ரான் இயக்கம் நிகழ்ந்தாலும், எரிபொருளின் செறிவு (2%-3%) புளுடோனியம்239 அல்லது (2%-3%) யுரேனியம்233 மிகக் குறைந்த அளவில்தான் பயன்படுகிறது! ஆதலால் பாரதத்தின் எந்த அணு உலையிலும் அணுகுண்டு போல் நியூட்ரான் இயக்கத்தால் பெரு வெடிப்போ அன்றிக் கதிர்வீச்சுப் பொழிவால் சுற்றுப்புற பேரழிவோ எதுவும் நிகழவே நிகழாது!
இந்திய அணுமின் உலைகளில் பணி செய்யப் பாதுகாப்பு உறுதி
பாரத அணுவியல் துறைகளின் உள்ளே பணிபுரியும் நபர்களுக்குக் கதிர்வீச்சுப் பாதுகாப்பு அளிப்பதுதான் நிர்வாகிகளின் முதல் பணி! முக்கியப் பணி! அடுத்த இரண்டாம் பணி, அணுவியல் துறைகளைச் சுற்றி வாழும் பொது மக்களைக் கதிர்வீச்சு தாக்குதலிலிருந்து காப்பது! சூழ்மண்டலக் காற்று, நீர்வளம், நிலவளம், தாவரங்கள் ஆகிய வற்றைக் கதிர்க் கசிவுகளிலிருந்து காப்பது! இவ்விரண்டு பணிகள் சரிவரச் செய்யப் பட்டு வருகின்றனவா என்று அனுதினம் 24 மணி நேரமும் கண்காணித்து மேற்பார்ப்பது, ‘உடல்நலப் பெளதிக வாதிகள் ‘ [Health Physicists]. உடல்நலப் பெளதிகக் குழுவினர்தான் பிலிம் பாட்ஜ்களை [Film Badges] பணியாளிகளுக்கு அளித்துச் சோதித்து வருபவர். அனுதினமும் சூழ்மண்டலக் காற்று, நீர், நிலத்தின் கதிர்த் தீண்டல்களைச் சோதித்து வருபவர். பணி புரியும் உடல்நலப் பெளதிக வாதிகள் நிலையத்தைச் சேர்ந்தவராயினும், அவரது தலமை அதிகாரிகள் தனிப்பட்ட நிறுவகத்தின் குழுவினர்!
மும்பை, சென்னை, ஹைதராபாத், ராஜஸ்தான், தாராப்பூர், குஜராத், கர்நாடகா, நரோரா போன்ற பல இடங்களில் இயங்கி வரும் அணு உலைகள், அணுமின் உலைகள், அணுவியல் ஆய்வுத் துறைகள் ஆகியவற்றில் அநேக இந்திய ஆடவர், பெண்டிர் பணி புரிந்து வருகிறார்கள்! அவர்களில் 98 சதவீதம் வரையறைக்கு உட்பட்ட கதிரடி பெற்று உடல் நலமோடு வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் சந்ததியில் யாருக்கும் ஆறாவது விரல் முளைக்க வில்லை! அறிந்தோ அறியாமலோ வரையறை அளவோ, அதற்கும் சற்று மிகையான அளவோ கதிர்வீச்சுப் பெற்றவர்களும் புற்று நோயால் தாக்கப் படவில்லை! அவரது பிள்ளைகளுக்கும் ஆறாவது விரல் தோன்ற வில்லை!
பம்பாய் கனடா இந்திய அணு ஆய்வு உலையில் நான் தணிந்த கதிரடிகள் பெற்று ஆறு ஆண்டுகள் பணி செய்த பின், பிறந்த என் இரண்டு புதல்விகளில் யாருக்கும் என் கதிரடியால் எந்த நோயும் உண்டாக வில்லை! கைகளில் ஆறாவது விரலும் முளைக்க வில்லை! தற்போது கனடாவில் யந்திரவியல் எஞ்சினியர்களான என் இரண்டாவது புதல்வியும் அவளது கணவரும் அணுமின் நிலையங் களில் கடந்த நான்கு ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்கள். 4000 MWe [8×500 MWe] ஆற்றல் கொண்ட வட அமெரிக்காவின் மிகப் பெரிய பிக்கரிங் அணுமின் நிலையத்தில் [Pickering Nuclear Generating Station] மகள் பணி செய்கிறாள். எனது மருமகன் வேறொரு அணுமின் உலையில் 3200 MWe [4×800 MWe] ஆற்றலுடைய டார்லிங்டன் அணுமின் நிலையத்தில் [Darlington Nuclear Generating Station] பணி புரிகிறார். அவர்கள் இருவருக்கும் அணு உலைக் கதிரடியால் எந்த வித நோயும் இல்லை! அவர்களுக்கு பிறந்த இரண்டு குழந்தைக்கும் ஆறாவது விரல் முளைக்க வில்லை.
தமிழக மாந்தருக்கு ஓர் வேண்டுகோள்! பாதுகாப்பான அணு உலைக் கதிர்வீச்சால் எந்தப் புற்று நோயும், அல்லது சந்ததி ஊனமும் பணியாளருக்கு உண்டாவ தில்லை! செர்நோபிள் அணு உலை போன்றோ அல்லது அணு ஆயுதம் போலவோ, பாரத அணுமின் உலைகள் ஒருபோதும் வெடித்து மக்களுக்குப் பேரழிவை உண்டு பண்ண மாட்டா! பாரத அணு உலைகளில் ஆடவர், பெண்டிர் யாரும் அஞ்சாமல் நிரந்தரமாகவோ அன்றித் தற்காலிக மாகவோ பணி செய்து அறிவுக்கும், திறனுக்கும், வயிறுக்கும் உணவு அளித்து வரலாம்! ஆக்க உணர்வோடு பணி புரியக் கூரிய அறிவும், சீரிய திறனும், ஓங்கிய வல்லமையும் தமிழர் வசம் களஞ்சியம் போல் செழித்துக் கிடக்கிறது!
++++++++++++++
தகவல்:
1. World Nuclear Status Report, Nuclear Europe WorldScan [July-Aug 2001]
2. Safety of Candu Nuclear Power Stations By: V.G. Snell [Jan 1985]
3. Nuclear Power in Canada, Canadian Nuclear Association Report [1975]
4. Nuclear Risk Prevention & Mitigation, First Civil Protection Forum [Nov 29, 2002]
5. Radiation Protection Qualifications, Access Limits & Working Rights [July 2000]
6. Nuclear Power Safety & Understanding Ionizing Radiation [Aug 1992]
7. Nuclear Power in USA- A Rational Approach By: Robert W. Deutsch [1987]
8. https://en.wikipedia.org/wiki/Nuclear_power_in_the_United_States [February 21, 2016]
9. https://en.wikipedia.org/wiki/Nuclear_power_plant [February 25, 2016]
10. https://en.wikipedia.org/wiki/Nuclear_power_in_Japan [February 20, 2016]
11. https://en.wikipedia.org/wiki/List_of_nuclear_reactors [February 26, 2016]
***************************
S. Jayabarathan [https://jayabarathan.wordpress.com/] February 26, 2016] [R-1]
Category: விஞ்ஞானம்
இந்திய அணு மின்சக்தித் துறையகச் சாதனைகளும், பொறிநுணுக்க யந்திர சாதன அமைப்புத் திறனும்
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
முன்னேறி வரும் நாடுகளில் முழுத் தொழிற்துறை மயமாகி நமது நாகரீக வாழ்வு தொடர்வதற்கு அணுசக்தி ஓர் எரிசக்தியாக உதவுவது மட்டுமல்லாது, முக்கியமான தேவையுமாகும்.
அணுவியல் மேதை, டாக்டர் ஹோமி ஜெ. பாபா
சுருங்கித் தேயும் சுரங்க நிலக்கரி, குறைந்து போகும் ஹைடிரோ-கார்பன் எரிசக்திச் சேமிப்புகளை எதிர்பார்த்து விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவள வேட்கையை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் எரிசக்தியை முழுமையாகப் பயன்படுத்திப் பேரளவு அணுசக்தியை உற்பத்தி செய்யும் முறை ஒன்றுதான் தற்போது இந்தியாவுக்கு ஏற்றதாக உள்ளது.
டாக்டர் அனில் ககோட்கர் [அதிபதி அணுசக்திப் பேரவை 2003]

தாராப்பூரில் முன்னடி வைக்கும் உன்னத அணுமின் நிலையம்
இந்திய அணுசக்தித் துறையகத்தின் வரலாற்றில், 2005 மார்ச் மாதம் 6 ஆம் தேதி பொன்னெழுத்துக் களில் பொறிக்கப்பட வேண்டிய நாள்! அன்றுதான் மகாராஷ்டிராவில் உள்ள தாராப்பூரில் 540 மெகா வாட் பூத ஆற்றல் கொண்ட புதிய கனநீர் அணுமின்சக்தி உலையின் ஆரம்ப இயக்கம் ‘பூரணத்துவம் ‘ (Criticality) எய்தியது! அந்த அசுரப் பணியின் மகத்துவம் என்ன வென்றால், ஐந்தாண்டுகளில் முதல் யூனிட் கட்டப்பட்டு வினைகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, முதல் தொடக்க இயக்கம் துவங்கி மாபெரும் சாதனையை நிகழ்த்தி யுள்ளது. பாரத அணுவியல் விஞ்ஞானிகளும், பொறியியல் வல்லுநர்களும் முழுக்க முழுக்க டிசைன் முதல், நிறுவகம் வரைச் செய்து முடித்து, அயராது பணியாற்றி வடிவம் தந்த இரட்டை அணுமின் உலைகள் கொண்ட நிலையம் அது. இதுவரை பாரதம் கட்டி இயக்கிவந்த 220 மெகாவாட் நிலையங்களை விட இரண்டு மடங்கு ஆற்றலுக்கும் மிகைப்பட்ட தகுதி [540 MWe (Each)] பெற்ற நிலையம் அது. அணு உலை பூரணத்துவம் அடைவது, அணு உலை இயக்க முறையில் துவக்க நிலையாகும். அப்போது அணு உலையின் பாதுகாப்பு, அபாயநிலைத் தவிர்ப்பு முறைகள் யாவும் கீழான வெப்ப நிலையில் பலதரம் சோதிக்கப்பட்டு [Low Power Testing] அடுத்து மின்சக்தி ஆற்றலை மிகையாக்க ஆய்வுகள் நடத்தப்படும். இரட்டை அணுமின் உலைகள் ஒவ்வொன்றும் 540 மெகாவாட் ஆற்றல் பெற்றது. 2005 செப்டம்பர் 12 முதல் யூனிட்-4, அடுத்த 540 மெகாவாட் யூனிட்-3, 2006 ஆகஸ்டு 18 முதல் முழு ஆற்றலை மேற்திக்கு மின்சாரக் கோப்புக்குப் [Western Power Grid] பரிமாறி வருகின்றன. இப்போது கூடங்குள ரஷ்ய அணுமின் உலை முதல் யூனிட் ஓராண்டுக்கு மேல் 1000 மெகாவாட் முழுத்திறனில் இயங்குகிறது. அடுத்து ஓராண்டுக்குள் இரண்டாம் யூனிட்டும் இயங்கி 1000 மெகாவாட் மின்சாரம் பரிமாறும்.

இந்தியாவின் முக்கட்ட அணுசக்தி உற்பத்தித் திட்டங்கள்
தற்போது அணுசக்தி உற்பத்திக்கு தீர்க்க தெரிசி டாக்டர் ஹோமி பாபா 45 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்ட முக்கட்ட முறையை அணுசக்தித்துறை வல்லுநர்கள் பின்பற்றி வருகிறார்கள். முதற் கட்டத்தில் கனநீர் மிதவாக்கியாகவும், வெப்பக் கடத்தியாகவும் [Heavy Water as Moderator & Heat Transport Fluid] இயற்கை யுரேனியம் எரிக்கோலாகவும் [Natural Uranium as Fuel Rod] பயன்படும் அணுமின் நிலையங்கள் நிறுவப்படும். இரண்டாம் கட்டத்தில் முதற்கட்ட அணுமின் உலைகளில் உண்டாகும் எச்சக் கழிவில் பிரிக்கப்படும் புளுடோனியம் எரிக்கோலாகி, இந்தியாவில் மிகையாகக் கிடைக்கும் தோரியத்தை வேகப் பெருக்கி அணுமின் உலைகளில் இட்டு அணுப்பிளவாகும் யுரேனியம்-233 [Fissile Uranium-233] உண்டாக்கப்படும். பிரித்தெடுக்கப்படும் யுரேனியம்-233 எரிக்கோலாகப் பயன்பட்டு, மூன்றாம் கட்டத்து வேகப் பெருக்கி அணுமின் உலைகள் தோரியம்-232 இடையே இடப்பட்டு, மின்சார உற்பத்தியும் எதிர்கால யுரேனியம்-233 பக்க விளைச்சலும் ஒரே சமயத்தில் உண்டாக்கபடும்.
இந்தியாவின் தற்போதைய யுரேனியம் இருப்பு: 78,000 டன், தோரியம் இருப்பு: 363,000 டன். யுரேனியத்தைப் போல் நாலரை மடங்கு அளவிருக்கும் தோரியத்தைப் பயன்படுத்தும் முக்கட்டத் திட்டத்தின் வெற்றி எதிர்காலத்தில் இயங்கப் போகும் சிக்கலான, அபாயங்கள் ஒளிந்திருக்கும் வேகப் பெருக்கி அணுமின் நிலையங்களின் பாதுகாப்பான இயக்கப் பண்புகளைப் பொருத்தது. முதல் கட்டத்தில் மகத்தான வெற்றி பெற்ற அணுசக்தித் துறையகம் இரண்டாம், மூன்றாம் கட்டங்களில் எவ்விதம் இயக்கி வரும் என்பதை இப்போது ஊகிப்பது கடினமாகும். இதுவரை கல்பாக்கத்தில் 12.5 மெகாவாட் ஆற்றலில் இயங்கி வரும் வேகப் பெருக்கி ஆய்வு அணு உலையில் பெற்ற அனுபவம் போதாது. அடுத்துக் கட்டுமானம் ஆகிவரும் 1200 MWt ஆற்றலில் இயங்கவிருக்கும் வேகப் பெருக்கி அணுமின் உலையின் அனுபவங்கள் முக்கியமானவை. அதன் எதிர்கால இயக்கப் பண்புகளின் சிக்கலான போக்கை இப்போது சிந்திக்க முடியாது.

அணுமின் உலைகளுக்குச் சிக்கன யுரேனிய எருக்கோல்
ஒரு டன் அணுக்கரு யுரேனிய எரு உண்டாக்கும் வெப்பசக்தி, (2-3) மில்லியன் டன் இயல்வள எருக்கள் [நிலக்கரி, எரிவாயு அல்லது எரி ஆயில்] தரும் வெப்பசக்திக்குச் சமம். அணுமின் நிலையம் ஒன்றின் கட்டமைப்புச் செலவு [Capital Cost] 30 அல்லது 40 ஆண்டுகளில் நிதித்தேய்வு [Depreciation] ஆகிறது. அதற்குப் பயன்படும் எருச் செலவு [Fuel Cost] தனிக் கட்டமைப்புச் செலவாக பல வருடங்களில் நிதி தேய்கிறது. நிலையத்தின் இயக்கப் பராமரிப்புச் செலவுகள் [Operation & Maintenance Expenses] நிலை யத்தின் ஆண்டுச் செலவுகளுடன் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. சுண்டக்காய் அளவு யுரேனியம் [7 gram Uranium Pellet] 3.5 பீப்பாய் எரி ஆயில் [Barrels of Oil], 17,000 கியூபிக் அடி எரிவாயு [Natural Gas] அல்லது 1780 பவுண்டு நிலக்கரி தரும் வெப்பத்தை உண்டாக்குகிறது.
அணுமின் நிலையத்தின் யூனிட் மின்சார விலையைக் குறைப்பது மலிவான, விலை ஏறி இறங்காத அதன் எருவான யுரேனிய மூலக் கனிவளமே. 2000 ஆண்டுக்கு இடையில் 1 kg யுரேனிய எருக்கோல் தயாரிக்க அமெரிக்காவில் மதிப்பீடான செலவு இதுதான்.
யுரேனியம் ஆக்ஸைடு (U3O8): 8 kg x $30 = $200.
மாற்றல் செலவு [Conversion Cost]: 7 kgU x $5.5 = $38.
செறிவாக்குக் செலவு [Enrichment Cost]: 4.3 SWU x $105 = $452
எருகோல் தயாரிப்புச் செலவு [Fuel Fabrication Cost]: 1 kg = $240
மொத்தச் செலவு: 1 kg = $930
இந்த அளவு யுரேனியம் அளைக்கும் வெப்பசக்தி =3400 gega Joules [315,000 kwh]
ஆகவே எருக்கோல் விலை = 0.30 cents/kwh
இந்திய மதிப்பீடின்படி ஓர் அணுமின் நிலையக் கட்டமைப்புக்குச் செலவு: ரூ 4.25 கோடி/MWe. 1000 MWe அணுமின் நிலயத்தின் கட்டமைப்புக்குச் செலவு: 4250 கோடி ரூபாய்.

மிக மலிவான மின்சக்தி அளிக்கும் கனநீர் அணு உலைகள்
பாரத அணுசக்திப் பேரவையின் முதல் அதிபர், டாக்டர் ஹோமி பாபா 220 MWe ‘காண்டு ‘ அழுத்தக் கனநீர் அணுமின் நிலையத்தைக் [CANDU, Pressurized Heavy Water Reactor] கனடாவிலிருந்து பெறும் போது அணு உலை, அழுத்தக் குழல்கள், அணு உலைச் சாதனங்கள், யுரேனிய எரிக்கட்டுகள் ஆகியவற்றை இந்தியாவிலே பின்னால் தயாரிக்கும் நோக்கத்துடன் டிசைன் நுணுக்க முறைகளையும், விளக்க வரை படங்களையும் வாங்கிக் கொள்ள ஒப்பந்தம் புரிந்து கொண்டார். அந்த முறையில் யுரேனியம் டையாக்ஸைடு எரிக்கட்டுகள் [UO2 Fuel Bundles] முதலில் வெற்றிகரமாய் ¨ஹைதராபாத் எரிக்கட்டு தயாரிக்கும் கூடத்தில் [Nuclear Fuel Complex, Hydrabad] 220 MWe அணுமின் உலைகளுக்குத் தயாரிக்கப் பட்டன. அடுத்துச் சிக்கலான அணு உலைக் கலன்கள் [Reactor Vessels] பாம்பாய் ‘லார்ஸன் & டியூப்ரோ ‘ தொழிற் கூடத்தில் உருவாக்கப் பட்டன. பிறகு அணு உலைக்கு வேண்டிய நூற்றுக் கணக்கான ஸிர்கோனியம் கலவை அழுத்தக் குழல்கள் மற்றும் சாதாரண குழல்கள் [Zirconium Alloy Pressure Tubes, Calandria Tubes], சிறப்பாக தயாரிக்கப் பட்டன.
இந்தியாவின் அணுசக்தி உற்பத்தித் திறம் 2000 ஆண்டு முடிவில் ஆற்றல் 2720 MWe ஆகி யிருந்தது. அடுத்து 2010 ஆண்டுக்குள் 8100 MWe ஆற்றலாகப் பெருக்க புதிய 220 MWe, 500 MWe, 1000 MWe ஆற்றல் கொண்ட அணுமின் நிலையங்கள் கட்டப் பட்டு வருகின்றன! அமெரிக்காவின் கொதிநீர் அணு உலைகள் [BWR] மற்றும் ரஷ்யாவின் அழுத்தநீர் அணு உலைகளுக்குச் செலவு மிகையான [VVER-1000] செறிவு உரேனியம் [2%-4% U235] எரிபொருள் தேவைப் படுகிறது. ஆனால் கனநீர் அணு உலைகளுக்கு இயற்கையாகக் கிடைக்கும் யுரேனியம் பயன்படுவதால், எரிபொருள் மலிவு.
மேலும் யுரேனியம் டையாக்ஸைடு துண்டுகளை [UO2 Pellets] ஸிர்கொலாய் குழல்களில் [Zircaloy Tubes] அடைத்து, எரிக்கோல்களாய் தயாரிப்பதும் எளிதே! சாதாரண நீரில் கிடைக்கும் கனநீரை [Heavy Water] ரசாயன முறையில் பிரித்தெடுப்பது ஒன்றுதான் விலை ஏற்றமானது. கனநீர் மீண்டும் மீண்டும் பயன்படுவதால், முதல் தரம் அணு உலையில் நிரப்பப் பட்டபின், கசிவுகள் மற்றும் சிந்தி ஆவியாகி மறைதல், சிந்தி எடுக்க முடியாமல் இழத்தல் போன்ற விளைவுகளால் குறைந்து போகும் அளவை மட்டும் ஈடு செய்ய வேண்டி வரும்! விலை மதிப்பான கனநீர் ‘திரவப் பொன்னாகக் ‘ [Liquid Gold] கருதப் படுகிறது!
கனநீர் அணு உலைகளுக்கு வேண்டிய யுரேனிய எரிக்கட்டுகள் யாவும் ஹைதராபாத்தில் தயாரிக்கப் படுகின்றன. 1960 ஆண்டுகளில் கனடா பம்பாயில் அமைத்த ஸைரஸ் ஆராய்ச்சி அணு உலையின் [CIRUS Research Reactor] எரிக்கோல்கள் யாவும் பாரதத்தில் முதன் முதல் தயாரிக்கப் பட்டன. அடுத்து ராஜஸ்தானில் கனடா கட்டிய முதல் 220 MWe கனநீர் அணுமின் உலையின் எரிக்கட்டுகள் [Fuel Bundles 3.25″ diameter 19.5″ Long] ஆக்கப் பட்டன. தற்போது அம்முறையப் பின்பற்றிப் புதிய 500 MWe அணுமின் உலைகளுக்கும் அவற்றை விடப் பெரிய எரிக்கட்டுகள் [4″ Diameter, 19.5″ Long] தயாரிக்கப் படுகின்றன. 37 குழல்கள் கொண்ட எரிக்கட்டின் ஒவ்வொரு குழலிலும் சிறு யுரேனியம் டையாக்ஸைடு உருளைத் துண்டுகள் 24 திணிக்கப் பட்டுள்ளன.

540 MWe அணுமின் நிலையத்தின் முக்கிய பாகங்கள்
இரட்டை அணுமின் உலையாக [2 x 540 MWe] அமைக்கப் பட்ட இந்த நிலையங்களின் அரண், ஆட்சி அறை, கட்டுப்பாட்டுக் கருவி ஏற்பாடுகள், டர்பைன் கட்டடம் யாவும், தனித்தனியாக அமைக்கப் பட்டவை. வெப்ப சக்தியை இழந்த தளர் நீராவியின் மிஞ்சிய வெப்பத்தைக் குளிர்விக்கக் கடல் நீர் தணிப்புக் கலனில் [Condenser] பயன்படுகிறது. 165 அடி உள் விட்டமுள்ள கான்கிரீட் அரணுக்குள் ‘காலான்டிரியா ‘ என்று அழைக்கப்படும் அணு உலை [ Calandria Reactor Vessel] மையத்தில் மற்றுமோர் சிறிய கான்கிரீட் கோட்டைக்குள் மட்ட நிலையில் [Horizontal Reactor] அமைக்கப் பட்டுள்ளது. அணு உலையின் இருபுற முகப்பிலும் உள்ள 392 துளைகளில் ஸிர்கோலாய் காலன்டிரியா குழல்கள் [Zicaloy Calandria Tubes] அழுத்த விசையில் உருட்டி இணைக்கப் பட்டுள்ளன. அவற்றின் ஊடே நடுவில் ஸிர்கோலாய், இருபுறமும் ஸ்டெயின்லஸ் ஸ்டால் முனைப்பு கொண்ட, 392 அழுத்தக் குழல்கள் [Zircaloy (Zr-2.5%Nb) Pressure Tubes with Stainless Steel End Fitting either side] நுழைக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு அழுத்தக் குழல் மையத்தில் 12 ‘எரிக்கட்டுகள் ‘ [12 Fuel Bundles in each Pressure Tube], அடுத்து ஒவ்வொரு நுனியிலும் ஒரு ‘கவசத் தடுப்பி ‘ [Shield Plug], ஒரு ‘துளை அடைப்பி ‘ [Closure Plug] அமைக்கப் பட்டுள்ளன.
அணு உலை இயங்கும் போதே எரு ஊட்டும் யந்திரம் [On-power Fuelling Machine], அழுத்தக் குழலில் எரிக்கட்டுகள், கவசத் தடுப்பி, துளை அடைப்பி ஆகியவற்றை நுழைவிக்கவோ அல்லது எடுக்கவோ பயன்படுகிறது. முதல் முறையாக அணு உலைக் குழல்களில் ஏற்றப்படும் எரிக்கட்டுகளின் எண்ணிக்கை: 4704, [392X12=4704]. அணு உலை 540 MWe ஆற்றலில் இயங்கும் போது, நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று குழல்களில் இடத்துக்கு ஏற்ப 4 அல்லது 8 எரிக்கட்டுகள் மாற்றினால் போது மானது!

தனிப்பட்டுச் சுயமாய் இயங்கும் இரட்டைத் தடுப்பு முறைகள் [Two Independent Shutdown Systems] அணு உலையை நிறுத்த ஏற்படுத்தப் பட்டுள்ளன. முதலாவது ஏற்பாடில் 28 கூடான காட்மியம் தடைக் கோல்கள் [Hollow Cadmium Shutdown Rods] தாமாக ஈர்ப்பியல்பால் [Falling under Gravity] உலைக்குள்ளே விழுந்து, நியூட்ரான்களை விழுங்கி அணுக்கரு இயக்கத்தை நிறுத்தும். அணு உலை இயக்கத்தின் போது, தடைக் கோல்கள் மேல் நோக்கி தூக்கப் படும். இரண்டாவது அணு உலை நிறுத்தும் தடை ஏற்பாடு: நியூட்ரான் விழுங்கும் நஞ்சுத் திரவத்தை மிதவாக்கிக் கனநீரில் உட்செலுத்தும் ஆறு மட்டக் குழல்கள் [Horizontal Tubes, Injecting (Gadolinium Nitrate) Poison into the Moderator Heavy Water] நுழைக்கப் பட்டுள்ளன.
அணு உலை மித நியூட்ரான்களைக் கூட்டிக் குறைக்க [அதாவது அணு உலையில் வெப்ப சக்தி வெளியீட்டை ஏற்றி இறக்க] நீர் நிரம்பிய 14 அரங்குக் கட்டுப்பாடு மூலம் [14 Zonal Control System], அணு உலை ஆட்சியைச் சுயமாகவோ அல்லது கையாட்சியாலோ செய்யலாம்.
டர்பைன், தணிகலன், மின்சார ஜனனி, மற்றும் கொதி உலைக்கு நீர் அனுப்பும் பொதுத்துறைச் சாதனங்கள் [Conventional System Equipment] யாவும் டைபைன் கட்டடத்தில் அமைக்கப் பட்டுள்ளன.

அணுவியல் துறைக்கு வேண்டிய நுணுக்க முறைப்பாடுகள்
அணுமின் சக்தி வளர்ச்சிப் பணியில் டாக்டர் ஹோமி பாபா முன்னோக்குடன் 1960-1965 ஆண்டுகளில் ஆரம்பித்த துறைகளும், அவரது மரணத்துக்குப் பின் உண்டாக்கப் பட்ட நுணுக்க முறைகளும் பாரதத்தில் நிலைநாட்டப் பட்டதால் 500 MWe ஆற்றல் அணுமின் நிலையத்தை தாமே முதலில் உருவாக்க அணுவியல் துறை நிபுணர்களுக்கு ஊக்கம், உறுதி, உற்சாகமும் உண்டாயின!
1. சுரங்கத்திலிருந்து இயற்கை யுரேனியத்தை எடுத்துச் சுத்திகரித்து, யுரேனியம் டையாக்ஸைடு உருளைத் துண்டுகள் [UO2 Fuel Pellets] ஆக்கி, எரிக்கட்டுகள் தயாரிப்பு [Fuel Bundles].
2. ஸிர்கோலாய் அழுத்தக் குழல்கள், காலன்டிரியா குழல்கள் [Zircaloy Pressure Tubes & Calandria Tubes] அணு உலைக்கும், சிறு குழல் உறைகள் [Zircaloy Fuel Sheaths] எரிக்கட்டுகளுக்கும் ஆக்குதல்.
3. அணு உலைகளில் மிதவாக்கியாகவும், வெப்பக் கடத்தியாகவும் பயன்படும் கனநீர் திரவம் ஏராளமான அளவில் ரசாயனத் தொழிற்சாலைகளில் உற்பத்தி.
4. அணுமின் உலைக் கட்டுப்பாட்டுக் கருவிகள், கதிரியக்க மானிகள் [Radiation Monitors], அணு உலை ஆட்சி ஏற்பாடுகள் [Nuclear Power Reactor Instrumentation & Controls] தயாரிப்பு.
5. ஆராய்ச்சி அணு உலைகளில் யுரேனியம், புளுடோனியம் எரிபொருளைப் பயன்படுத்தி, அணு உலை பெளதிகத்தில் நியதி, ஆய்வுப் பணிகள் [Theoretical & Experimental Work in Reactor Physics] ஆகியவற்றை புரிதல்.

6. கதிரியக்க உடல் நலத்துறைப் பொறி நுணுக்க விருத்தியில் [Development Technology in Health Physics] புதிய வழி முறைகளை வகுத்தல்.
7. கழிவு எரிபொருள் மீள் சுத்திகரிப்பு முறைகளில் [Spent Fuel Reprocessing Techniques] முன்னேறி ரசாயனத் தொழிற் சாலைகள் அமைப்பு.
8. அணு உலை உலோகங்களின் உலோகவியல் ஆய்வுத் துறைகளில் வளர்ச்சி [Progress in Nuclear Reactor Materials Metallurgy].
9. சாதனங்கள், உபரிகளைச் சோதிக்கும் தனிப்பட்ட ஆய்வு அமைப்பாடுகள் [Special Test Facilities to test Equipment & Components].
10. கதிர்வீசும் கழிவுகளைக் கையாண்டு, பாதுகாப்பாக வாகனங்களில் போக்கு வரத்து செய்து புதைக்கும் முறைகளை [Waste Management Techniques] தீர்மானித்தல்.
11. அணு உலைப் பாதுகாப்பு ஆய்வுகள், அரண், கட்டமைப்பு உலோகச் சாதன ஆய்வுகள் [Reactor Safety, Containment Model & Structural Analyses] ஆகியவற்றைச் செய்தல்.

அணுவியல் நுணுக்கச் சாதனங்களை உற்பத்தி செய்யும் தொழிற் கூடங்கள்
220 MWe, 500 MWe ஆற்றல் அணுமின் நிலையங்களின் பெரும் பான்மையான சாதனங்களையும், கருவிகளையும் பாரதத்தில் உற்பத்தி செய்யும் அணுவியல் ஆராய்ச்சிக் கூடங்களும், தொழிற்சாலைகளும் கீழே காணப்படுகின்றன. அவை போக சில நுணுக்க சாதனங்கள், சிறப்புக் கருவிகள், கருவிகளின் உளவிகள் [Sensors] வெளிநாடுகளிலிருந்து வாங்கப் படுகின்றன.
1. பம்பாயில் உள்ள பாபா அணுவியல் ஆய்வு மையம். [Bhabha Atomic Research Centre, Bombay]
2. கல்பாக்கத்தில் இருக்கும் இந்திரா காந்தி அணு ஆய்வு மையம் [Indira Gandhi Atomic Reseach Centre, Kalpakkam, Chennai]
3. யுரேனியம் கார்பொரேசன் ஆஃப் இந்தியா [Uranium Corporation of India Ltd]
4. ஹைதராபாத்தில் உள்ள அணுவியல் தாதுக்களின் ஆணையகம் [Atomic Minerals Division, Hydrabad]
5. இந்திய அரிய தாதுக்கள் தொழிற்சாலை [Indian Rare Earths Ltd]

6. ஹைதராபாத்தில் உள்ள அணுவியல் எரிக்கோல் தயாரிப்பு சாலை [Nuclear Fuel Complex, Hydrabad]
7. ஹைதராபாத்தில் உள்ள எலெக்டிரானிக்ஸ் கார்பொரேசன் ஆ·ப் இந்தியா [Electronics Corporation of India Ltd. Hydrabad]
8. பம்பாயில் உள்ள கனநீர் உற்பத்தி ஆணையகம் [Heavy Water Board]
9. கதிர்வீச்சு, கதிர் ஏகமூலகப் பொறித்துறை ஆணையகம் [Board of Radiation & Isotope Technology]
10. பம்பாயில் உள்ள லார்ஸன் & டியூப்ரோ யந்திரத் தொழிற்சாலை [Larson & Tubro, Bombay]
11. போபாலில் அமைந்துள்ள கனமின் யந்திரத் தொழிற்சாலை [Heavy Electricals, Bhopal Ltd]

இந்தியாவில் இயங்கி வரும் பெரும்பான்மையான கனநீர் அணு உலைகளின் சில பொது அமைப்புகள்:
1. இரட்டைக் கான்கிரீட் அரண்கள். உட்புற அரண் முறுக்கப் பட்ட உறுதியான கான்கிரீட் கோட்டை [Prestressed Reinforced Concrete].
2. தனித்தனியான அழுத்தக் குழல்கள் எரிபொருளுடன் நுழைக்கப் பட்ட, மட்ட நிலையில் தொங்கும் அணு உலை [Horizontal Reactor having several independent Pressure Tubes with Fuel Bundles].
2. அணு உலையின் இருபுறமும் நீர் நிரப்பப் பட்ட 304L ஸ்டெயின்லெஸ் ஸ்டால் முன்புறக் கவசங்கள் [Water Filled 304L Stainless Steel End Shields].
3. அணு உலை இயங்கும் போது எரிக்கோல் ஊட்டும் முற்போக்கான யந்திரங்கள் [Improved On-power Fuelling Machines]
4. தானாக இயங்கும், தனிப்பட்ட இரட்டை அணு உலை நிறுத்த ஏற்பாடுகள்.
5. விபத்துக் காலத்தில் அணு உலையைக் கட்டுப் படுத்தவும், கண்காணிக்கவும் தனியாக அமைக்கப் பட்ட அபாய கால அணு உலை ஆட்சி அறை [Emergency Control Room]
6. விபத்து சமயத்தில் அரணில் அடைபட்ட வெப்ப நீராவியின் சக்தியை குளிர்விக்கத் ‘தணிப்புக் குளம் ‘ [Suppression Pool] ஒன்று கீழ்த் தளத்தில் அமைப்பாடு.
7. கதிரிக்கத் திரவ வெளியேற்றத்தைத் தடுக்க, சுற்றி வரும் மீள்சுற்றி வெப்பக் கடத்தி நீர் ஏற்பாடு [Closed Loop Recirculating Cooling Water System].

8. தனித்தனியான ‘மும்முறைக் கூட்டுக் கட்டுப்பாடு ‘ [Triplicated Control Instrumentation] ஏற்பாடு. ஏதாவது இரண்டு முறை ஏற்பாடுகளில் பழுதுகள் ஏற்பட்டால், அணு உலை நிறுத்தப் படும். அது போன்று அணு உலைக் கட்டுப்பாடு, வெப்பசக்தி ஏற்ற, இறக்கம், நிறுத்தம், பாதுகாப்பு ஆகிய எல்லாப் பணிகளுக்கும், மூன்றில் இரண்டு கருவிச் சாதன ஏற்பாடுகள் ஒருங்கே கூடி அறிவிக்க வேண்டும்! அணு உலைக் கட்டுப்பாடு, அணு உலைத் துவக்கம், வெப்பசக்தி ஏற்றம், இறக்கம் யாவும் இரட்டை மின்கணணி ஆட்சியில் [Twin Computer Controls] நிகழ்கின்றன. இவ்வழியில் மூன்றில் ஒரு முறைப்பாட்டில் பழுதை ஆய்வு செய்யவோ, அல்லது செப்பணிடவோ முடிகிறது! மேலும் இரண்டில் ஒரு மின் கணணியின் பழுதை உளவு செய்யவோ, அன்றிச் செப்பணிடவோ முடிகிறது!

இந்திய அணுத்துறை நிறுவகத்தின் மகத்தான சாதனைகள்
இந்திய அணுசக்தித் துறையவகத்தின் அதிபதி எஸ்.கே. ஜெயின் [Nuclear Power Corporation India Ltd (NPCIL) Chairman S.K. Jain] 2004 ஜூலை 8 ஆம் தேதி நடந்த 17 ஆம் ஆண்டுக் கூட்டவையில் கூறியது: ‘நமது கம்பெனியின் கடந்த ஆண்டு [2002] லாபத் தொகை 1509 கோடி ரூபாய். இந்த ஆண்டு [2003] லாபம் 2604 கோடி ரூபாய். கடந்த ஆண்டு மின்சக்தி ஆற்றல் உற்பத்தியானது: 19242 மில்லியன் யூனிட் [kwh]. கடந்த 7 ஆண்டுகளில் (1997-2004) மின்சக்தி ஆற்றல் உற்பத்தி 9619 மில்லியன் யூனிட்டாக இருந்ததை இரட்டிக்க வைத்து 19242 யூனிட்டாக மிகைப் படுத்தியது பாராட்டத் தக்க அணுமின் நிலைய இயக்கமாகும். மேலும் நிலையங்களின் இயக்கத் தகுதி இலக்கம் [Capacity Factor] அதே 7 ஆண்டுகளில் 71% வீதத்திலிருந்து 90% மிகையானதும் மெச்சத் தகுந்த இயக்குநரின் பணிகளே. குஜராத் கக்ரபார் யூனிட்-1 அணுமின் நிலையம் 98% ஆண்டுத் தகுதி இலக்கத்தில் உற்பத்தி செய்து, கனநீர் அணுமின் உலைகளுக்குள் முதலிடத்தைப் பெற்று, அகில அணுசக்திக் கூட்டியக்கப் பேரவையின் [World Association of Nuclear Operations (WANO)] அணுசக்திச் சிறப்புப் பரிசைப் [Nuclear Excellene Award] பெற்றுள்ளது.
***********************
தகவல்:
1. http://www.npcil.nic.in/index.asp [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]
2. http://pib.nic.in/release/release.asp?relid=20878 [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]
3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
[Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]
4. World Nuclear Association – WNA Radiological Protection Working Group – RPWG (Official List – July 20, 2006)
http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm
5. World Nuclear Association – WNA Waste Management and Decommissioning Working Group – WM&DWG
(Official List – July 25, 2006) http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm
6. http://www.candu.org/npcil.html [Indian Heavywater Nuclear Power Plants]
7. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)
8. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)
9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html Letter By R. Bala (August 9, 2007)
10. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp [World Association of Nuclear Operation Website]
11 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)
12. http://www.thinnai.com/module=displaystory&story_id=40504291&format=html(பாரதத்தின் பூத அணு மின்சக்தி நிலையங்கள்)
13 http://www.thinnai.com/module=displaystory&story_id=40409094&format=html(இருபத்தியொன்றாம் நூற்றாண்டில் அணுவிலிருந்து மின்சக்தி)
14 http://www.dae.gov.in/ni/nijul00/nijul00.htm (Nuclear India Report) PUBLISHED BY THE DEPARTMENT OF ATOMIC ENERGY GOVERNMENT OF INDIA VOL. 34/NO.1-2/July-Aug.2000
15. https://jayabarathan.wordpress.com/2014/06/28/kudangulam-full-power/
16. http://npcil.nic.in/main/MOEF_clearance_EIA_KKNPP.aspx [கூடங்குளம் அணுமின் உலைகள் பற்றி முழு விளக்கம்]
S. Jayabarathan [jayabarathans@gmail.com] February 25, 2016 [R-1]
கதிரியக்கம் இல்லாத அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்கள் அதிவிரைவில் விளக்கேற்றும்.
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
பிண்டமும் சக்தியும் ஒன்றெனக்
கண்டு பிடித்தார் ஐன்ஸ்டைன்
சமன்பாட்டு மூலம் !
பிளவு சக்தி யுகம் மாறி
பிணைவு சக்தி வரப் போகுது
கதிரியக்க மின்றி
மின் விளக்கேற்ற !
இயல்பாகவே
தேய்ந்து மெலியும் ரேடியம்
ஈயமாய் மாறும் !
யுரேனியம் சுயப் பிளவில்
ஈராகப் பிரிந்து
வெப்பசக்தி உண்டாகும் !
பேரளவு உஷ்ணத்தில்
சூரியக் கோளத்தின் ஹைடிரஜன்
எரி உலை போல்
எளிய அணுக்கரு எருக்கள்
இணைந்து
பிணைவுச் சக்தி
பேரளவில் வெளியேறும்
கதிரியக்கம் குன்றி !
++++++++++++++++

நாங்கள் செய்யப் போவது இதுதான்: ஒரு கட்டுப்பாட்டு முறையில் எரிக்கரு வில்லைச் சிமிழின் [Deuterium – Tritium Pellet [D-T Pellet] Fuel Capsule] வெளிப்புற கவசத்தை எக்ஸ்ரே கதிர்கள் மூலம் உடைப்பதே எங்கள் முயற்சி. அப்படிச் செய்யும் போது எரிக்கரு வில்லை [D-T Pellet] அழுத்தம் அடைந்து, சரியான கட்டத்தில் அணுப் பிணைவு இயக்கம் தூண்டப்படும்.
ஜான் எட்வேர்ட்ஸ் [Associate Director, NIF National Ignition Facility for Fusion Power]
எக்ஸ்ரே கதிர்கள் தூண்டும் அணுப்பிணைவு முறையில் தீர்க்கப் பட வேண்டிய ஒரு பெரும் இடையூறு : எருக்கருச் சிமிழ் முதிரா நிலையில் முன்னதாய் முறிந்து போய் [Premature Breakdown] விடுவது. ஆற்றல் மிக்க எக்ஸ்ரே கதிர்களின் அடர்த்தி காலிச் சிமிழி குறியில் [Hohlraum –> Hollow Room] தேவையான அழுத்தம் உண்டாக்கி அணுப் பிணைவைத் தூண்டுகிறது.
ஜான் எட்வேர்ட்ஸ் [Associate Director, NIF National Ignition Facility for Fusion Power]
பிண்டம் ! சக்தி !
அணுப்பிணைவுச் சக்தி !
இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்காவில் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்தில் நூற்றுக் கணக்கான ஈரோப்பிய, வட அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு அணுப்பிளவுச் சக்தியைத் தொடரியக்கத்தில் உண்டாக்கிப் பேரழிவுப் போராயுதத்தைத் தயாரித்தனர் ! அதுபோல், அமைதிக் காலத்திலே பன்னாட்டு விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் பிரான்ஸில் கூடி முதன்முதல் அணுப்பிணைவு எரிசக்தியில் பேரளவு மின்சக்தியை உற்பத்தி செய்யப் போகிறார்கள்.
கட்டுரை ஆசிரியர்
“அணுசக்தி ஆற்றல் உற்பத்தியில் அணுப்பிணைவு (Nuclear Fusion) முறைப்பாடு சூழ்வெளிப் பசுமைப் பண்பாடு மின்சாரமாகக் கருதப்படுகிறது. அது அணுப்பிளவு (Nuclear Fission) முறைப்பாடை விட சூழ்வெளித் துர்மாசுக்கள் மிகவும் குறைவானது.”
ஜாப் வாண்டர் லான் – நெதர்லாந்து எரிசக்தி ஆய்வு மையம். (June 28, 2005)
அணுப்பிணைவு மின்சக்தி சோதனையில் செய்த ஒரு பெரும் சாதனை
காலிஃபோர்னியாவின் வாரென்ஸ் லிவர்மோர் தேசீய சோதனைக் கூடத்தில் [Dept of Energy’s Lawrence Livermore National Lab] [National Ignition Facility- NIF] ஆராய்ச்சியாளர்கள் அணுபிணைவு சக்தி வெளியீட்டில் ஒரு நூதனச் சாதனையைச் சோதனையின் போது செய்து காட்டினர். தேசீய அணுப்பிணைவுத் தூண்டல் யந்திரத்தில் [National Ignition Facility – NIF] ஒருமித்த ஆற்றல் மிக்க 192 லேசர் ஒளிக்கதிர்களை உண்டாக்கி [1.8 மெகா ஜூல்ஸ் சக்தியில்] (megajoules of energy) முதன்முதல் 500 டெட்ரா வாட்ஸ் மின்சார ஆற்றலை [tetrawatts power – 10^12 watts] உருவாக்கினர். இந்த அசுர மின்னாற்றல் ஒரு கணத்தில் அமெரிக்கா பயன்படுத்தும் மொத்த மின்சார யூனிட்டுகளை விட 1000 மடங்கு ஆகும். அதாவது பூமியிலே ஒரு குட்டிச் சூரியனை முதன்முதல் உண்டாக்கி விட்டார்.
சூரியன் போல் அணுப்பிணைவு நியதியில் பேரளவு வெப்ப சக்தி வெளியாக்கச் செய்யும் சோதனையில் முதன்முதல் சுயமாய்ப் அணுப்பிணைவுத் தொடரியக்கம் நீடிக்கச் செய்து பேரளவு மின்னாற்றலை உற்பத்தி செய்தனர். இவ்வரிய தகவல் செய்தி, பிளாஸ்மா ஒளிப் பிழம்பு பௌதிக இதழில் [Journal Physics of Plasmas] சமீபத்தில் வெளியிடப் பட்டுள்ளது. ஆயினும் அணுப் பிணைவு மின்சக்தி உற்பத்தி வாணிப நிலைக்கு வர, இன்னும் மூன்று முக்கிய இடையூறுகள் தீர்க்கப்பட வேண்டும்.
சுய நீடிப்பு அணுப்பிணைவு இயக்க சக்திக்கு நேரும் மூன்று இடையூறுகள் :
1. விசைகள் சமநிலைப்பாடு [Equilibrium of Forces] :
பிளாஸ்மா ஒளிப் பிழம்பு மீது இயங்கும் உந்துவிசைகள் சமநிலைப் படவேண்டும். இல்லாவிட்டால் பிளாஸ்மா ஓரினத் தன்மையின்றி முறிந்து போகும். இந்த விசைச் சமன்பாடு இழப்பு முதல் இடையூறு. அதற்கு முடத்துவ அரண் அமைப்பு [Inertial Confinement] ஓர் விதிவிலக்கு. அதனில் பௌதிக இயக்கம் பிளாஸ்மா முறிவதற்குள் விரைவாக நிகழ வேண்டும்.
2. பிளாஸ்மா நீடிப்பு [Plasma Stability] :
பிளாஸ்மா ஒருமைப்பாடு சிறு ஏற்ற இறக்கம், குறைவு நிறைவு செய்யப் பட்டு முதல் வடிவத்துக்கு மீள வேண்டும். இல்லா விட்டால் பிளாஸ்மாவில் தவிர்க்க முடியாத பாதிப்புகள் நேரிடும். பிறகு அந்த தவறு செங்குத்தாக ஏறி பிளாஸ்மா முற்றிலும் அழிந்து போகும்.
3. துகள்கள் போக்கு [Transport of Particles] :
துகள்கள் இழப்பு பாதைகள் பூராவும் மிகவும் குறைய வேண்டும். அதைக் கசிய விடாமல் காப்பது முடத்துவ அரண் அமைப்பு [Inertial Confinement].
அணுப்பிணைவு மின்சக்தி சோதனையில் இந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விரைவில் வாணிப நிலைக்கு விரைவில் வரலாம் அல்லது சற்று நீடிக்கலாம். எப்படியும் 2050 ஆண்டுக்குள் அணுப்பிணைவு மின்சக்தி வர்த்தக ரீதியில் மின் விளக்குகளை ஏற்றிவிடும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

“சூழ்வெளிக் காலநிலை மாற்றாமல் பேரளவு மின்சக்தி ஆக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு முயற்சியில் அணுப்பிணைவுச் சக்தி விருத்தி அடையப் பிரான்சில் விரைவாகக் கட்டப் போகும் அகில நாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலை (ITER) ஒரு பெரும் வரலாற்று மைல் கல்லாகக் கருதப்படுகிறது.”
பேராசிரியர் கிரிஸ் லிவெல்லின் ஸ்மித் (UK Atomic Energy Agency) (June 28, 2005)
“அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைக் (ITER) கட்டுமான வேலைகள் 2005 ஆண்டு இறுதியில் துவங்கும். திட்டத்தின் பொறித்துறை நுணுக்க விளக்கங்கள் யாவும் இப்போது முடிவாகி விட்டன. அகில நாடுகளின் முழுக் கூட்டுழைப்பில் (ஈரோப்பியன் யூனியன், ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான்) பூரணமாகி இத்திட்டம் முன்னடி வைப்பதில் நாங்கள் பூரிப்படைகிறோம்.”
பையா ஆரன்கில்டே ஹான்ஸன் (European Commission) (June 28, 2005)

“கடந்த 15 ஆண்டுகளாக அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைத் (ITER) திட்ட அமைப்பில் பங்களித்து அது நிறுவனமாகச் சிக்கலான உடன்பாடுகளில் உதவி செய்தது குறித்து, அணுசக்திப் பேரவை (IAEA) பெருமகிழ்ச்சி அடைகிறது. மேலும் பரிதியை இயக்கும் மூலச்சக்தியான அணுப்பிணைவுச் சக்தியை விஞ்ஞானப் பொறியியல் சாதனங்களால் பூமியில் உற்பத்தி செய்யக் கூடுமா என்று ஆராயும் அத்திட்டத்துக்கும் அணுசக்தி பேரவை தொடர்ந்து உதவி புரியும்.”
வெர்னர் புர்கார்ட் (Deputy Director General & Haed IAEA Nuclear Science and Applications) (June 28, 2005)
“அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலை (ITER) கூடிய விரைவில் இயங்க ஆரம்பித்து உலக மாந்தர் அனைவருக்கும் எதிர்காலத்தில் மின்சக்தி அளிக்கும் என்று உறுதியாக நம்புகிறோம்.”
நரியாக்கி நகயாமா (ஜப்பான் விஞ்ஞான அமைச்சர்) (June 28, 2005)
பிரான்சில் புது அணுப்பிணைவு மின்சக்திச் சோதனை நிலையம்
முதல் அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலைக் (ITER) கட்டுமானத் திட்டத்தில் ஜப்பான் தேசம் கடுமையாகப் போட்டி யிட்டாலும் இறுதியில் வெற்றி பெற்றது பிரான்ஸ். அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்கு (International Space Station) அடுத்தபடி வெப்ப அணுக்கருச் சோதனை நிலைய அமைப்பே நிதிச் செலவு மிக்க (12 பில்லியன் டாலர் திட்டம்) ஓர் திட்டமாகக் கருதப் படுகிறது ! வெப்ப அணுக்கருச் சக்தி எனப்படுவது பரிதி ஆக்கும் அணுப்பிணைவுச் சக்தியைக் குறிப்பிடுகிறது. இதுவரைச் சூழ்வெளியை மாசுபடுத்திய அணுப்பிளவு, நிலக்கரி போன்ற பூதள எருக்கள் (Fission & Fossil Fuels) போலின்றி ஒப்புநோக்கினால் பேரளவு தூயதானது அணுப்பிணைவுச் சக்தியே (Fusion Energy) !
பதினெட்டு மாதங்கள் தர்க்கத்துக்கு உள்ளாகி முடிவாக ஜூன் 28 2005 ஆம் தேதி மாஸ்கோவில் ஆறு உறுப்பினர் (ஈரோப்பியன் யூனியன், ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான்) உடன்பட்டு அகிலநாட்டு வெப்ப அணுக்கருச் சோதனை உலையைக் [International Thermonuclear Experimental Reactor (ITER)] கட்டுமிடம் பிரான்ஸாக ஒப்புக் கொள்ளப் பட்டது. ITER திட்டத்தின் முக்கிய பங்காளர்கள் ஈரோப்பியன் யூனியன் (இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின், ஹங்கேரி, டென்மார்க், ஆஸ்டியா, நெதர்லாந்து, போலந்து, ஸ்வீடன். . . ), ரஷ்யா, அமெரிக்கா, கனடா, சைனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா). நிதிப் பங்களிப்பில் ஈரோப்பியன் யூனியன் 50% தொகை அளிப்பை மேற்கொண்டது. பிரான்ஸில் இடத்தேர்வு : மார்சேல்ஸ் நகருக்கு 60 கி.மீ. (37 மைல்) தூரத்தில் இருக்கும் “கடராச்சே அணுவியல் ஆராய்ச்சி மையம்” (Cadarache in France).
அகில நாட்டு அணுப்பிணைவுச் சோதனை நிலையத்தின் விபரங்கள்
வியன்னாவில் இருக்கும் அகில நாட்டு அணுசக்திப் பேரவை தலைமை அகத்தில் நீண்ட காலக் குறிக்கோள் திட்டமான அணுப்பிணைவுச் சக்தி ஆக்கத்தின் முன்னடி வைப்பு 2005 ஜூன் 28 ஆம் தேதியில் ஒரு பெரும் விஞ்ஞானச் சாதனையாக வெற்றிவிழாக் கொண்டாடப் பட்டது ! அன்றுதான் உலகத்திலே மிகப் பெரிய முதல் அகில நாட்டு அணுப்பிணைவுச் சக்தி சோதனை நிலையம் பிரான்சில் கட்டி இயக்கத் திட்டம் துவங்கியது ! அதை டிசைன் செய்து கட்டி இயக்கப் போகிறவர் ஒரு நாட்டை மட்டும் சேர்ந்த சில விஞ்ஞானிகள், பொறியியல் நிபுணர்கள் அல்லர். பன்னாட்டு விஞ்ஞானிகள் ! பன்னாட்டுப் பொறித்துறை வல்லுநர்கள் ! இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த போது அமெரிக்காவில் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்தில் நூற்றுக் கணக்கான ஈரோப்பிய, வட அமெரிக்க விஞ்ஞானிகள் ஈடுபட்டு அணுப்பிளவுச் சக்தியைத் தொடரியக்கத்தில் உண்டாக்கிப் பேரழிவுப் போராயுதத்தைத் தயாரித்தனர் ! அதுபோல், அமைதி காலத்திலே பன்னாட்டு விஞ்ஞானப் பொறியியல் நிபுணர்கள் பிரான்ஸில் கூடி முதன்முதல் அணுப்பிணைவு எரிசக்தியில் பேரளவு மின்சக்தி உற்பத்தி செய்யப் போகிறார்கள் !
அணுப்பிணைவுச் சோதனை நிலையம் 500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும்.
— நிலைய மின்சார உற்பத்தி : 500 MW
— நியூட்ரான் சக்தி : 14 MeV (Million Electron Volt).
— காந்த மதில் ஆற்றல் தகுதி : 0.57 MW/Square meter
— பிளாஸ்மா (கனல் பிழம்பு) பெரு ஆரம் : 6.2 மீடர்.
— பிளாஸ்மா (கனல் பிழம்பு) குறு ஆரம் : 2.0 மீடர்
— பிளாஸ்மா மின்னோட்டம் : 15 MA (Million Amps)
— பிளாஸ்மா கொள்ளளவு : 837 கியூபிக் மீடர்.
— வளையத்தின் காந்த தளம் 6.2 மீடரில் 5.3 T (Toroidal Field)
— நிலைய யந்திரங்கள் இயக்கத் தேவை : 78 MW
— நிலையத் திட்டச் செலவு : 12 பில்லியன் டாலர் (2005 நாணய மதிப்பு)
அணுப்பிணைவுச் சக்தி எப்படி உண்டாகிறது ?
சூரியனிலும் சுயவொளி விண்மீன்களிலும் ஹைடிரஜன் வாயுவை மிகையான ஈர்ப்பு விசை அழுத்தத்தில் 10 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் பிளாஸ்மா நிலையில் (கனல் பிழம்பு) இணைத்து அணுப்பிணைவுத் தொடரியக்கத்தில் ஹீலிய வாயும் வெப்பச் சக்தியும் வெளியாகின்றன. அந்த வெப்ப மோதலின் விளைவில் உயர்சக்தி நியூட்ரான்களும் (High Energy Neutrons) எழுகின்றன ! ஹைடிரன் ஏகமூலங்களான (Isotopes of Hydrogen) டியூடிரியம் & டிரிடியம் (50% Deuterium & 50% Tritium) அணுப்பிணைவு எருக்களாகப் பயன்படுகின்றன. ஹைடிஜன், டியூடிரியம், டிரிடியம் மூன்று வாயுக்களின் அணுக்கருவிலும் ஒரே ஒரு புரோட்டான் உள்ளது. ஆனால் டியூடிரியத்தில் ஒரு புரோட்டான், ஒரு நியூட்ரான் உள்ளன. டிரிடியத்தில் ஒரு புரோட்டானும், இரண்டு நியூட்ரான்களும் இருக்கின்றன. அவை பேரளவு உஷ்ணத்தில் (100 மில்லியன் டிகிரி செல்சியஸ்) பிளாஸ்மாவாகி ஒன்றுடன் ஒன்று இணைந்து ஹீலியமாகின்றன. அந்த உஷ்ணம் பரிதியின் உட்கரு உஷ்ணத்தை விட 10 மடங்கி மிகையானது !
அணுப்பிணைவுக்கு அத்தகைய மிகையான உஷ்ணம் ஏன் தேவைப் படுகிறது ? பரிதியின் வாயுக் கோளத்தில் 10 மில்லியன் டிகிரி செல்சியஸ் உஷ்ணம் உண்டாவதற்கு அதன் அசுர ஈர்ப்புச் சக்தி அழுத்தம் கொடுக்கிறது. அந்த உஷ்ணத்தில் அணுக்கருக்கள் ஒன்றை ஒன்று இழுத்துச் சேர்த்துக் கொள்கின்றன. ஆனால் மனிதர் உண்டாக்கும் அணுப்பிணைவு உலையில் அத்தகைய அழுத்தம் ஏற்படுத்த முடியாததால் அணுப்பிணைவை உண்டாக்கப் பத்து மடங்கு உஷ்ண நிலை தேவைப்படுகிறது. அந்த அழுத்தத்தை எப்படி உண்டாக்குவது ?
1. வாகன எஞ்சின் போல் பிஸ்டன் மூலம் வாயுக்களில் அழுத்தம் உண்டாக்கி வாயுக்களில் உஷ்ணத்தை அதிகமாக்கலாம்.
2. மின்சார ஓட்டத்தை ஏற்படுத்தி வாயுக்களில் உஷ்ணப் படுத்தலாம்.
3. வாயுக்களை ஓர் அரணுக்குள் உயர்சக்தி நியூட்ரான்களால் தாக்கி உஷ்ணத்தை மிகையாக்கலாம்.
4. நுண்ணலைகள் (Microwaves) மூலம் அல்லது லேஸர் கதிர்களால் (Laser Beams) வாயுக்களில் உஷ்ணத்தை மிகைப்படுத்தலாம்.
மூன்று முறைகளில் பிளாஸ்மா கனல் பிழம்பை உண்டாக்கலாம்:
1. பிளாஸ்மா அரண் (Plasma Confinement) (பரிதி, விண்மீன்களில் உள்ளதுபோல்)
2. முடத்துவ முறை (Inertial Method).
3. காந்தத் தளமுறை (Magnetic Method).
சூரியன் ஓர் அணுப் பிணைவுத் தீப்பந்து!
சூரியன் பிணைவுச் சக்தியை [Fusion Energy] உற்பத்தி செய்யும், பிரம்மாண்டமான ஓர் அணுக்கருப் பிழம்பு உலை [Plasma Reactor]! அண்ட வெளியில் ஆயிரம் ஆயிரம் சூரியன்கள், சுய ஒளி விண்மீன்கள் அணுப் பிணைவுச் சக்தியைத் தான், பிரபஞ்சம் தோன்றியது முதல் வாரி இறைத்து வருகின்றன! 4000 மில்லியன் ஆண்டுகளாக, சூரியன் வினாடிக்கு 40 கோடி பில்லியன் MW வெப்ப சக்தியைத் தொடர்ந்து வெளியாக்கிக் கொண்டிருக்கிறது! தீக்கோளத்தின் நடுப் பகுதி உஷ்ணம் 20 மில்லியன் டிகிரி K சூரியவாயு அழுத்தம், பூவாயு [Earth ‘s Atmosphere] அழுத்ததை விட 400 மில்லியன் மடங்கு மிகையானது! சூரிய கோள அமைப்பு, வெங்காயத் தோல்கள் போல் அடுக்கடுக்காக இருக்கிறது. வாயுக்களின் அடர்த்தி [Density] ஈயத்தைப் போல் 12 மடங்கு. சூரியன் பேரளவு உஷ்ணத்தில், தன் ஈர்ப்புப் [Gravitation] பேரழுத்தத்தில், வினாடிக்கு 4 மில்லியன் டன்வாயு அணுக்கருத் துகள்களைப் பிணைத்து, அளக்க முடியாத பிணைவு சக்தியை உண்டாக்குகிறது. ஒரு தம்ளர் நீரில் உள்ள ஹைடிஜன் வாயுவைப் பிரித்துப் பிணைக்க முடிந்தால், அதிலிருந்து வெளியாகும் சக்தி 600 ஆயிரம் லிட்டர் பெட்ரோல் எரிந்து தரும் சக்திக்குச் சமமாகும்! ஆனால் பூமியில் பிணைவுச் சக்தியைத் தூண்டி வெளிப்படுத்த, உலைகளில் சூரியவாயு போல் பேரழுத்தமும், பெருமளவு உஷ்ணமும், விஞ்ஞானிகளால் உண்டாக்க முடியுமா ?
1952 நவம்பர் முதல் தேதியில் அமெரிக்காவும், 1953 ஆகஸ்டு 20 இல் ரஷ்யாவும் வெப்ப அணுக்கரு ஆயுதமான [Thermo-Nuclear Weapon] ஹைடிரஜன் குண்டைத் [H-Bomb] தயாரித்து முதன் முதல் ஒரு குட்டிச் சூரியனை உண்டாக்கி வெடிக்க வைத்து வெற்றி பெற்றன. ஆனால் அணுப்பிணைவுப் பிழம்பை ஓர் உலை அரணுக்குள் அடக்கி நீடிக்கச் செய்ய எந்த நாட்டு விஞ்ஞானியாலும் இதுவரை முடியவில்லை! அப்பெரும் முயற்சிதான் அகில உலகில் இருபதாம் நூற்றாண்டு விஞ்ஞானிகளுக்கு மிகச் சிக்கலான பொறிநுணக்கப் பிரச்சனையாகவும் திறமைக்குச் சவாலாகவும் ஆகியிருக்கிறது! ஆயினும் உலகில் பெருமளவு மின்சக்தியை இன்னும் பழைய அணுமின் நிலையங்கள்தான் பரிமாறிக் கொண்டிருக்கின்றன. எதிர் காலத்தில் மின்சக்திப் பற்றாக் குறை வினாவுக்கு முடிவான விடை, பெருமளவில் மின்திறம் வெளியாக்கும் பிணைவுச் சக்தி ஒன்றே ஒன்றுதான்! ஆனால் அந்த நிலையத்தை வர்த்தக முறையில் உருவாக்கி இயக்குவதுதான் உலக எஞ்சினியர்களுக்கு மாபெரும் போராட்டமாகவும், திறமையைச் சோதிப்பதாகவும் இருந்து வருகிறது!

அணுப்பிணைவை ஆய்வுக் கூடத்தில் எவ்வாறு ஆக்குவது ?
ஹைடிரஜன் வாயுவுக்கு இரண்டு ‘ஏகமூலங்கள்’ [Isotopes] உள்ளன. ஒன்று டியூட்டிரியம் [Deuterium], மற்றொன்று டிரிடியம் [Tritium]. ஏகமூலங்கள் என்பவை, ஒரே புரோட்டான் [Proton] எண்ணிக்கை கொண்டு, வெவ்வேறு நியூட்ரான் [Neutrons] எண்ணிக்கை யுள்ள மூலகங்கள் [Elements]. ஏகமூலங்கள் ஒரே மின்னீர்ப்பு [Electric Charge] மேவி, வெவ்வேறு அணுப்பளுவைக் [Atomic Mass] கொண்டவை. மூலகங்களின் அணிப் பட்டியலில் [Periodic Tables of Elements], ஏகமூலங்கள் யாவும் ஒரே இல்லத்தில் இடம் பெறுபவை. டியூட்டிரியம் மூலஅணு [Molecule] நீரில் 7000 இல் ஒன்றாக இயற்கையில் இருப்பதை, ரசாயன முறையில் பிரித்து எடுக்க வேண்டும். டிரிடியம் கனநீர் யுரேனிய அணு உலைகள் [Heavy Water Uranium Reactors] இயங்கும் போது, கனநீரில் உண்டாகிறது. கனடாவில் இயங்கும் காண்டு [CANDU] அணு உலைகளில் நிறைய கனநீரும், டிரிடியமும் இருப்பதால், பிணைவுச் சக்தி ஆய்வுக்குத் தேவையான எளிய வாயு மூலகங்கள் [Light Elements] கனடாவில் எப்போதும் கிடைக்கின்றன. ஆராய்ச்சி முறையில் பயன் படுத்திய போது, எளிய மூலகங்களான ஹைடிரஜன், டியூட்டிரியம், டிரிடியம், லிதியம் ஆகியவற்றில், [டியூட்டிரியம் + டிரிடியம்] வாயு இணைப்பே அதிக வெப்ப சக்தியை ஈன்றதால், உலகில் பல நாடுகள் அணுப் பிணைவு உலையில், அவ்விரண்டு வாயுக்களையே எரிப் பண்டங்களாய் உபயோகித்து வருகின்றன. இந்த இயக்கம் தூண்டுவதற்கு வேண்டிய உஷ்ணம், 80 மில்லியன் டிகிரி C.
டியூட்டிரியம் +டிரிடியம் –> ஹீலியம் +நியூட்ரான் +17.6 MeV சக்தி Deuterium +Tritium –> Helium +Neutron +17.6 MeV Energy
இருபதாம் நூற்றாண்டில் உருவான மிக மேம்பட்ட ஆய்வுப் பிணைவு உலை [Fusion Reactor] ‘டோகாமாக்’ [Tokamak] என்பது, காந்தக் கம்பிகள் சுற்றப் பட்டு டோனட் [Donut] வளையத்தில் அமைந்த ஒரு பிரம்மாண்ட மான மின்யந்திரம். ‘டோகாமாக் ‘ என்பது ரஷ்யச் சுருக்குப் பெயர். அதன் பொருள்: வளை காந்தக் கலம் [Toroidal Magnetic Chamber]. அதனுள்ளே பேரளவு காந்தத் தளத்தைக் கிளப்பி பல மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் மின்னியல் வாயுப் பிழம்பை [Plasma] உண்டாக்கி வளையச்சுவர் கடும் வெப்பத்தில் உருகிப் போகாமல் உள்ளடக்க வேண்டும்! இத் தேவைக்கு உகந்த உலோகம் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை! பிண்டம் நான்கு வித வடிவுகள் [Four States of Matter] கொண்டது. திடவம், திரவம், வாயு, பிழம்பு [Solid, Liquid, Gas & Plasma]. வாயு அதிக உஷ்ணத்தில் நேர், எதிர் மின்னிகளாய்ப் [Positive, Negative Ions] பிரிந்து பிழம்பு வடிவாக மாறி மின்கடத்தி [Electrical Conductor] யாகிறது. பிணைவுச் சக்தியை மூலமாகக் கொண்டு இயங்கும் மின்சக்தி நிலையத்தில், ஹீலிய வாயு பிழம்பின் வெப்பப் போர்வையாகவும், கடத்தியாகவும் [Helium Blanket for Plasma & Heat Transport Medium] பயன் ஆகலாம். சூடேரிய ஹீலிய வாயு வெப்ப மாற்றியில் [Heat Exchanger] நீராவியை உண்டாக்கி டர்பைன் ஜனனியை [Turbine Generator] ஓட்டச் செய்யலாம். அமெரிக்காவின் மிகப் பெரும் ஆய்வு டோகாமாக், நியூ ஜெர்ஸி பிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தில் 1981 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு இயங்கி வருகிறது.

மூன்று வித முறைகளில் அனல் பிழம்பை அரணிட்டு [Plasma Confinement] அணுப்பிணைவு இயக்கம் நிகழ்த்தலாம். முதலாவது முறை ‘ஈர்ப்பியல் அரண் பிணைப்பு ‘ [Gravitational Confinement Fusion]. இம்முறைக்கு சூரிய, சுடரொளி விண்மீன்களில் இயங்கும் பேரளவு உஷ்ணம், வாயுப் பேரழுத்தம் தேவைப் படுகிறது. மனிதனால் இவற்றைப் பூமியில் சாதிக்க முடியாது! அடுத்தது, ‘காந்தவியல் அரண் பிணைப்பு’ [Magnetic Confinement Fusion]. ஆய்வுக் கூடத்தில் இது சாத்திய மானது. 1950 ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி முறைக்கு உலகெங்கும் பயன் படுகிறது. இம்முறையில் உருவானதுதான் டோகாமாக் [Tokamak] யந்திரம். அனல் பிழம்பு நீடிக்க, மூன்று முக்கிய நிபந்தனைத் தொடர்புகள் பொருந்த வேண்டும்: உஷ்ணம், காலம், அடர்த்தி [Temperature, Time & Density]. 200 மில்லியன் டிகிரி உஷ்ணப் பிழம்பு சில வினாடிகள் நீடிக்க, வாயு அடர்த்தி ஓரளவு தேவை. இந்த உறவை ‘லாசன் நியதி ‘ [Lawson Criterion] என்று கூறுவர். மூன்றாவது முறை: ‘முடவியல் அரண் பிணைப்பு’ [Inertial Confinement Fusion]. இதில் லேசர் வீச்சுக் கதிர்களைப் [Laser Beams] பாய்ச்சி உள்வெடிப்பு [Implosion] நிகழ்த்தி அனல் பிழம்பு உண்டு பண்ணிப் பிணைப்பு சக்தி ஏற்படுத்துவது. இம்முறை பெரும்பாலும் அணு ஆயுதம் [Nuclear Weapons] தயார் செய்ய, யுத்த விஞ்ஞானிகளுக்குப் பயன் படுகிறது.

அணுப்பிணைவுச் சக்தியின் நிறைபாடுகள்! குறைபாடுகள்!
பிணைவுச் சக்தி பிளவுச் சக்தியை விட பல முறைகளில் மேன்மை யுற்றது. அணுப்பிணைவு சக்தியில், அணுப் பிளவு சக்திபோல் உயிர் இனங்களைத் தாக்கி வதைக்கும் பயங்கரக் கதிரியக்கம் [Radioactivity] அதிக அளவு இல்லை! பிணைவுச் சக்தியால் எழும் கதிரியக்கம் மிகச் சிறிதளவே! அமெரிக்காவின் திரீமைல் தீவு, ரஷ்யாவின் செர்நோபிள் அணுப்பிளவுச் சக்தி நிலையங்களில் ஏற்பட்ட பயங்கர விபத்தின் போது, உலையின் எரிக்கோல்கள் பல உருகிப் பெரும் சிக்கலை உண்டாக்கியது! பிணைவு உலைகளில் எரிக்கோல் உருகிப் போகும் அபாயம் எதுவும் இல்லை! அணுப் பிணைவு நிலையங்களிலிருந்து தினம் வெளியேறும் கழிவு வாயுக்கள் மனிதர் மற்றும் இதர உயிரினங் களுக்குத் தீங்கு தருவன அல்ல! அவைச் சூழ்வெளியைச் [Environment] சுத்தமாக வைத்திருக்க உதவி புரிபவை! பிணைவு இயக்கம் ரசாயனத் தீயின் கடும் விளைவுகளை உண்டாக்காது! மேலும் பிணைவு உலைகளில் பயன்படும் எரி வாயுக்கள் ஹைடிரஜன், டியூட்டிரியம் உலகெங்கும் நீரில் அளவற்ற கன அளவு கிடைக்கிறது. எதிர் காலத்தில் பல நூற்றாண்டுகளுக்கு வேண்டிய, வாயு எரி பொருளுக்குப் பஞ்சமே இருக்காது!
ஆராய்ச்சி அணுப்பிணைவு உலைகளுக்கு இதுவரை உலக நாடுகள் 2 பில்லியன் டாலர்கள் செலவழித் துள்ளன! கால தாமதம் ஆவதால், இன்னும் 50 பில்லியன் டாலர் தொகை செலவாகலாம் என்று ஊகிக்கப் படுகிறது. மேலும் மிகச் சக்தி வாய்ந்த மின்காந்தத் தளம், அணுப்பிணைவு நிலையத்தில் இயங்குவதால், அதை ஆட்சி செய்யும் மனிதருக்கு அதனால் விளையும் தீங்குகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது! அடுத்து உலையில் பயன்படும் லிதிய [Lithium] திரவம் ரசாயன இயக்க உக்கிரம் உடையது! அதன் விளைவு களையும் அறிய வேண்டும். அனல் பிழம்புக்கு அதி உன்னத சூன்ய நிலை [High Vacuum] உலை வளையத்தில் நீடிக்கப்பட வேண்டும்! விசை மிக்க மின்காந்த அமுக்கமும், வேறுபாடு மிக்க கடும் உஷ்ண ஏற்ற இறக்கத்தால் நேரும் வெப்ப அழுத்தமும், அதி உக்கிர நியூட்டிரான் கணைத் தாக்குதலால் நிகழும் அடியும், தாங்கிக் கொண்டு நீண்ட காலம் உறுதியாக இயங்கும், நிலையச் சாதனங்களைக் கண்டு பிடிப்பது சிரமான முயற்சி.
அணுப்பிணைவு சக்தி உற்பத்தியின் மேம்பாடுகள்!
அணுப்பிணைவு உலைகளுக்கு வேண்டிய எரு உலக நீர்வளத்தில் எண்ணிக்கை யற்ற அளவு உள்ளது. பேரளவு ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு சக்தி நிலையங்களை அமைப்பது சாத்திய மாகும். மாபெரும் ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு நிலையத்துக்கும் தேவையானது சிறிதளவு எருதான்! உதாரணமாக 1000 MWe நிலையத்துக்கு ஓராண்டு வேண்டிய எரு 0.6 மெட்ரிக் டன் [1320 பவுண்டு] டிரிடியம்! பிணைவு சக்தியின் தீப்பிழம்பு மின்கொடைத் துகள்களின் வேகங்களைத் தணித்து, நேரடியாக அவற்றை மிகையான மின்சக்தி அழுத்தமாக [High Voltage Electricity] மாற்றிவிடலாம்! அம்முறையில் நீராவி உண்டாக்க கொதிகலம், வெப்பசக்தியை யந்திர சக்தியாக மாற்ற டர்பைன், தணிகலம் யந்திர சக்தியை மின்சக்தியாக மாற்ற மின்சார ஜனனி போன்ற பொது வெப்பச் சாதனங்கள் தேவைப்படா! பிணைவு உலைப் பாதுக்காப்பு அத்துடனே இணைந்துள்ளது. இயக்கத்தின் போது சிக்கல் நேர்ந்தால், அணு உலைத் தானாக விரைவில் நின்று விடும். பிளவு அணு உலைகளைப் போன்று, கதிரியக்கமோ, கதிர்வீச்சுக் கழிவுகளோ விளைவதில்லை! பிணைவு அணு உலையில் எழும் நியூட்ரான்கள் விரைவில் தீவிரத்தை இழப்பதால் பாதகம் மிகக் குறைவு. உலையின் மற்ற பாகங்களை நியூட்ரான் தாக்குவதால் எழும் இரண்டாம் தர கதிர்வீச்சுகளைக் கவசங்களால் பாதுகாப்பது எளிது. கதிர்ப் பொழிவுகளால் சூழ்மண்டல நாசம், நுகரும் காற்றில் மாசுகள் விளைவு போன்றவை ஏற்படுவதில்லை!
வெப்ப அணுக்கரு நிலையத்தை எதிர்த்து கிரீன்பீஸ் வாதிகள் கூக்குரல் !
ஒரு கிலோ கிராம் அணுப்பிணைவு எருக்கள் (Fusion Fuel Deuterium +Tritium) 10,000 டன் நிலக்கரிக்குச் (Fossil Fuel) சமமான எரிசக்தி அளிக்கும் ! இத்தகைய பேரளவுப் பயன்பாடு இருப்பதாலும், சிறிதளவு கதிரியக்கம் உள்ளதாலும் அணுப்பிணைவு எரிசக்தி அகில நாட்டு பொறித்துறை நிபுணரின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது ! அணுப்பிளவு மின்சக்தி நிலையங்கள் போன்று அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்களில் நீண்ட கால உயர்நிலைக் கதிரியக்கப் பிளவுக் கழிவுகள் (Long Term High Level Fission Product Wastes) கிடையா ! சில பசுமைக் குழுவாதிகள் 2005 ஜூன் மாத ITER கட்டட அமைப்புத் திட்டத்தை பண விரயத் திட்டமென்று குறை கூறினர் ! அணுப்பிணைவு மின்சக்தி உற்பத்தி செயல் முறைக்கு ஒவ்வாதது என்று தமது நம்பிக்கை இல்லாமையை அவர் தெரிவித்தார். “12 பில்லியன் டாலரில் 10,000 மெகாவாட் கடற்கரைக் காற்றாடிகள் மூலம் தயாரித்து 7.5 மில்லியன் ஐரோப்பிய மக்களுக்கு மின்சாரம் பரிமாறலாம்,” என்று அகில நாட்டு கிரீன்பீஸ் பேரவையைச் சேர்ந்த ஜான் வந்தே புட்டி (Jan Vande Putte) கூறினார். “உலக நாடுகளின் அரசுகள் பணத்தை வீணாக விஞ்ஞான விளையாட்டுச் சாதனங்களில் விரையமாக்கக் கூடாதென்றும், அவை ஒருபோதும் மின்சக்தி அனுப்பப் போவதில்லை என்றும், 2080 ஆம் ஆண்டில் குவிந்து கிடக்கும் “மீள் பிறப்பு எரிசக்தியைப்” (Renewable Energy) பயன்படுத்தாமல் இப்போதே ஆரம்பிக்க வேண்டும் என்றும் பறைசாற்றினர்.

++++++++++++++++++++++++++++++
தகவல்
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.
1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world [1998]
8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
10 Hyperspace By : Michio kaku (1994)
11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
17 The Geographical Atlas of the World, University of London (1993).
18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
19 The Origin of Earth (www.moorlandschool.co.uk/earth/earthorigin.htm)
20 IAEA Report – France to Host ITER International Nuclear Fusion Project (June 28, 2005)
21 IAEA Report Focus on Fusion By : IAEA Staff
22 IAEA Report – Fusion : Energy of the Future By : Ursula Schneider IAEA Physics Section
World Atom Staff Report.
23 BBC News : France Gets Nuclear Fusion (Experimental) Plant.
24 World : France Chosen to Host Experimental Fusion Reactor Project By : Breffni O’Rourke(June 28, 2005).
25 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40203101&format=html (அணுப்பிணைவுச் சக்தி அவனியின் எதிர்கால மின்சக்தி)
26 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40303172&format=html (இருபது ஆண்டுகளில் அணுப்பிணைவுச் சக்தி ஆக்கத்தில் வளர்ச்சி)
27 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40508052&format=html (21 ஆவது நூற்றாண்டின் அணுப்பிணைவுச் சக்தி ஆற்றலுக்கு லேஸர் கதிர்கள்)
28 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40709271&format=html (கதிரியக்கம் இல்லாத எதிர்கால அணுப்பிணைவு மின்சக்தி நிலையம்)
29. http://www.popularmechanics.com/science/energy/next-generation/is-fusion-power-finally-for-real [June 21, 2011]
30. http://world-nuclear.org/info/Current-and-Future-Generation/Nuclear-Fusion-Power/#.UkceJNNza9I [August, 2013]
31. http://www.opli.net/opli_magazine/eo/2013/laser-fusion-experiment-yields-record-energy-at-llnl.aspx [August 26, 2013]
32. http://en.wikipedia.org/wiki/National_Ignition_Facility [September 17, 2013]
33. http://en.wikipedia.org/wiki/Fusion_power [September 27, 2013]
+++++++++++++++
S. Jayabarathan (jayabarathans@gmail.com) September 29, 2013
35 ஆண்டுகளில் சூரிய மண்டலம் கடந்து அண்டைப் பரிதி மண்டலத்துக்குப் பயணம் செய்த நாசாவின் வாயேஜர் விண்கப்பல்கள்.
சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா
முப்பத்தைந் தாண்டுகள் பறந்து
நாசாவின் விண்வெளிக்
கப்பல்கள்
பரிதி மண்ட லத்தின்
விளிம்புக் கோட்டையைக்
கடக்கும் !
பக்கத்து விண்மீன் மண்டலத்தில்
பாதம் வைக்கும் !
நேர்கோட் டமைப்பில் வந்த
சூரியனின்
வெளிப்புறக் கோள்களை
விண்கப்பல்கள்
உளவுகள் செய்யும் !
நெப்டியூனின் நிலவை,
கருந் தேமலை,
பெரும் புயலைக் காணும் !
நாலாண்டு திட்டப் பயணம்
நீள்கிறது
நாற்பது ஆண்டுகளாய் !
அடுத்த பரிதி மண்டலத்தின் எல்லையில்
அன்னிய கோள்களுக்கு
சின்னமாய் எடுத்துப் போகும், நமது
ஞாலக் கதை சொல்லும்
காலச் சின்னத்தை !
+++++++++++++++++
“இப்போது வாயேஜர் -1 எல்லை மாற்ற அரங்கத்தில் பயணம் [Transition Zone] செய்கிறது [2012]. விண்கப்பல் சூரிய விளிம்பு நிறுத்த வரம்பைக் [Heliopause] கடந்து அகில விண்மீன் ஈடுபாட்டு ஊடகத்தில் [Interstellar Medium] புகுந்து இங்குமங்கும் ஊசலாடி இருக்கலாம். ”
ராபர்ட் டெக்கர் [John Hopkins University in Maryland]
சூரிய மண்டலத்தைப் பற்றிய மகத்தான முக்கிய தகவலை வாயேஜர் விண்ணுளவிகள் அறிவித்து வருகின்றன.
ரோஸின் லாலிமென்ட் [பாரிஸ் வானியல் நோக்ககம்]
“வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 35 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது ! ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.”
எட்வேர்டு ஸ்டோன் (வாயேஜர் திட்ட விஞ்ஞானி) (C.I.T. Pasadena)
“பரிதி மண்டலத்தின் வெளிப்புறத்தில் என்ன இருக்கிறது என்று காண நமது கண்களை விழிக்கச் செய்தது வாயேஜர் விண்கப்பல் ! அதைத் தொடர்ந்துதான் கலிலியோ, காஸ்ஸினி விண்கப்பல் பயணத் திட்டங்கள் உருவாக அழுத்தமான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்தன.”
ஜான் கஸானி, (வாயேஜர் விண்கப்பல் திட்ட ஆளுநர்) (1975-1977)
“வாயேஜர் திட்டத்தின் வியப்பான விளைவுகளில் குறிப்பிடத் தக்கது அது பயணம் செய்த காலமே ! 175 ஆண்டுகளுக்கு ஒருமுறை பரிதி மண்டலத்தில் நிகழும் புறக்கோள்களின் நேரமைப்பு (Planetary Alignment of Jupiter, Saturn, Uranus & Neptune) விண்கப்பலை ஏவி அனுப்பும் ஆண்டு களில் ஏற்பட்டது. தொலைத் தொடர்பு, மின்னியல், மின்னாற்றல், விண்கப்பல் நகர்ச்சிக் கட்டுப்பாடுக்கு ஏற்ற கருவிகளின் பொறி நுணுக்கங்கள் அப்போது விருத்தியாகி இருந்தன.
ஹாரிஸ் சூர்மையர் (Harris Schurmeier, Voyager Project Manager) (1970 -1976)
“வாயேஜர் விண்கப்பல் பயணம் எத்தகைய மகத்துவம் பெற்ற திட்டம் ! நமது பரிதி மண்டலத்தின் விரிவான அறிவைப் பெற வழிவகுத்த வாயேஜரின் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் நான் பெருமிதம் அடைகிறேன். ஆழ்ந்த விண்வெளித் தொடர்புக்கும் வாயேஜர் விண்கப்பலுக்கும் உள்ள நீடித்த இணைப்பை வியந்து அந்தக் குழுவினரில் ஒருவராய் இருப்பதில் பூரிப்படைகிறேன்.”
டாக்டர் பீடர் பூன் (தொலைத் தொடர்பு & திட்ட ஏற்பாடு ஆளுநர்) (2004-2010)
நாசாவின் வாயேஜர் 1 & 2 விண்கப்பல்களில் நமது வரலாற்றை, கலாச்சாரத்தைப் படங்களாய், பாடல்களாய்க் கூறும் காலச் சின்னத்தைப் (Time Capsule) பதித்து அனுப்பியுள்ளார்கள். அது 12 அங்குல வட்டத்தில், தங்க முலாம் பூசப்பட்ட ஒரு தாமிரத் தட்டு. அண்டை விண்மீன் மண்டலத்தினர் (Aliens) விண்கப்பலைக் கைப்பற்றினால் அவருக்கு ஒரு நினைவுப் பரிசாய் அளிக்க வைக்கப்பட்டுள்ளது.
நாசா வெளியிட்ட அறிக்கை
புதிய வரலாற்று மைல் கல் நாட்டும் வாயேஜர் விண்கப்பல்கள்
35 ஆண்டுகளாய் சுமார் 10 பில்லியன் மைல் பயணம் செய்து, தற்போது சூரிய மண்டலம் தாண்டிப் பிரபஞ்சக் காலவெளியில் தடம் வைத்துள்ள வாயேஜர் விண்கப்பல்கள் 1 & 2 புதியதோர் சாதனை மைல் கல்லை வரலாற்றில் நாட்டியுள்ளது. இது நாசா விஞ்ஞானி களின் மாபெரும் விண்வெளித் தேடல் சாதனைகளில் ஒன்றாக மதிக்கப் படுகிறது. 10 பில்லியன் மைல்கள் தாண்டிய பிறகும் அவற்றின் மின் கலன்கள் சிதையாமல் இன்னும் பணி புரிந்து வருகின்றன. சூரிய மண்டலத்தின் புறக் கோள்களான பூதக்கோள் வியாழன், வளையங்கள் அணிந்த சனிக்கோள், யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றின் தகவல் அறிவித்து இப்போது சூரிய எல்லை தாண்டி அடுத்த விண்மீன் மண்டலத்தில் அடியெடுத்து வைக்கிறது. இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் மணிக்கு 38,000 மைல் வேகத்தில் பயணம் செய்கின்றன. அவற்றில் தங்க முலாம் பூசிய 12 அங்குல தாமிரப் பதிவுத் தட்டும், அதைப் பேச வைக்கும் பெட்டியும் வைக்கப் பட்டுள்ளன.

2004 ஆண்டிலேயே வாயேஜர் -1 வரம்பு அதிர்ச்சி [ Termination Shock ] தளத்தைக் கடந்து சூரியப் புயலின் துகள்களும், அதனைக் கடந்த விண்வெளி துகள்களும் மோதும் பகுதியில் பயணம் செய்துள்ளது. இதுவே கொந்தளிப்புள்ள அரங்க மென்று [Turbulent Zone, called Heliosheath] கருதப் படுகிறது. இதுவே சரிந்து முடிவில் சூரிய மண்டல நிறுத்த அரங்கம் [Heliopause] என்பதில் இறுதி ஆகிறது. அப்பகுதியி லிருந்து அகிலவெளி விண்மீன் அரங்கம் [Interstellar Space] தொடங்குகிறது.
இரண்டு வாயேஜர்களின் கருவிகள் இயக்கி வருபவை ஆயுள் நீண்டஅணுக்கரு மின் கலன்கள் [Long Life Nuclear Batteries]. அவை 2025 ஆண்டு வரை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. வாயேஜர் -1 விண் கப்பலிலிருந்து பூமிக்குத் தகவல் வர சுமார் 16:30 மணிநேரம் ஆகிறது.
நாசா கண்காணித்து வரும் வாயேஜர் விண்வெளிப் பயணம்
2010 மே மாதம் 17 ஆம் தேதி நாசா ஜெட் உந்துகணை ஏவகத்தின் (NASA’s Jet Propulsion Lab) பொறியியல் நிபுணர்கள் 8.6 பில்லியன் மைல் தூரத்தில் பரிதி மண்டலத்தின் விளிம்பைத் தாண்டிப் பயணம் செய்யும் வாயேஜர் 2 இன் உட்புறக் கணினியை முடுக்கி அதன் பணியை மாற்றம் செய்தார். அதனால் விண்கப்பலின் நலம் மற்றும் நிலைமைத் தகவல் மட்டுமே பூமிக்கு அனுப்பப்படும். மே முதல் தேதி வந்த தகவலில் விண்கப்பல் நலமோடு பயணத்தைத் தொடர்வதாக அறியப் பட்டது.
ஏப்ரல் 22 இல் வாயேஜர் -2 இலக்கத் தகவலில் (Data Packets) மாறுதலைக் கண்டார். திட்ட நிபுணர் விஞ்ஞானத் தகவல் அனுப்புதலைச் செம்மைப் படுத்த உளவு செய்தார். ஏப்ரல் 30 இல் பூமியிலிருந்து வாயேஜருக்கு அனுப்பும் தொடர்பு சீராக்கப் பட்டது. பூமியிலிருந்து வாயேஜருக்குத் தகவல் போக 13 மணி நேரமும், மறுபடிப் பதில் பூமியில் உள்ள நாசாவின் ஆழ்வெளித் தொலைத் தொடர்பு வலைக்கு (NASA’s Deep Space Network on Earth) வந்து சேர 13 மணி நேரமும் ஆயின.
வாயேஜர் 2 விண்கப்பல் முதலாக 1977 ஆகஸ்டு 20 ஆம் தேதி பூதக்கோள் வியாழன், வளையக்கோள் சனி ஆகிய இரண்டையும் துருவி உளவாய்வு செய்ய நான்கு ஆண்டுகள் பயணம் செய்ய ஏவப் பட்டது. அதன் இரட்டை விண்கப்பல் வாயேஜர் 1 இரண்டு வாரங்கள் கடந்து அனுப்பப் பட்டது.
இப்போது அவை இரண்டும் பரிதியின் புறக்கோள்களான வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் உளவிப் பரிதியின் விளிம்புக் குமிழியைத் (Heliosphere) தாண்டி அப்பால் அகில விண்மீன் மந்தை வெளி வாசலில் (Interstellar Space) தடம் வைத்து விட்டன !

“வியாழன், சனிக் கோள்களுக்குச் செல்ல நான்காண்டுத் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட வாயேஜர் -2 விண்கப்பல் பயணம் இப்போது 33 ஆண்டுகள் நீடித்து இன்னும் தகவல் அனுப்பி வருகிறது ! ஏற்கனவே அது நாம் இதுவரை நெருக்கத்தில் காணாத யுரேனஸ், நெப்டியூன் ஆகிய இரண்டு கோள்களின் தெளிவான காட்சிகளைப் படமெடுத்து அனுப்பியுள்ளது.” என்று வாயேஜர் திட்ட விஞ்ஞானி எட்வேர்டு ஸ்டோன் கூறுகிறார்.
வாயேஜர் விண்கப்பல் ஏவப்பட்ட பொன்னான காலம் சிறப்பானது, 175 ஆண்டுகளுக்கு ஒருமுறைப் புறக்கோள்கள் நான்கும் நேர் கோட்டமைப்பில் வருகின்றன. அந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வாயேஜர் விண்கப்பல்கள் நேர் போக்கில் நான்கு பெரும் புறக்கோள்களையும் அவற்றின் சில துணைக் கோள்களையும் ஆராய வசதியானது.
புறக்கோள்களை ஆராய்ந்த வாயேஜர் விண்கப்பல்கள்
1986 இல் வாயேஜர் 2 யுரேனஸ் கோளையும், 1989 இல் நெப்டியூன் கோளையும் கடந்து சென்றது. அப்போது சிறப்பாக விண்கப்பல் நெப்டியுனில் இருக்கும் மிகப் பெரிய கரு வடுவையும் (Great Dark Spot) மணிக்குப் ஆயிரம் மைல் வேகத்தில் அடிக்கும் சூறாவளியையும் எடுத்துக் கட்டியது. செந்நிற நைட்ரஜன் பனிக்கட்டியி லிருந்து பீறிட்டெழும் ஊற்றுகளையும் (Geysers from Pinkish Nitrogen Ice) அவை நெப்டியூன் துணைகோள் டிரைடான் துருவங்களில் (Polar Cap on Triton) பனியாய்ப் படிவதையும் படம் பிடித்து அனுப்பியது. வாயேஜர் 1 பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் “லோ” வில் (Jupiter’s Satellite Lo) தீவிரமாய் எழும்பும் எரிமலை களைப் படமெடுத்தது !
மேலும் சனிக்கோளின் அழகு வளையங்களில் உள்ள நெளிவு, சுழிவுகளையும், மேடு பள்ளங்களையும் காட்டியது ! 2010 மே மாதத்தில் வாயேஜர் 2 பூமியிலிருந்து 8.6 பில்லியன் மைல் (13.8 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் வாயேஜர் 1 பூமியிலிருந்து 10.5 பில்லியன் மைல் (16.9 பில்லியன் கி.மீ.) தூரத்திலும் பயணம் செய்கின்றன !
வாயேஜர் திட்டங்கள் அண்டைக் கோள் ஈர்ப்புச் சுற்று வீச்சு உந்து முறையால் (Flyby Gravity Swing Assist) விரைவாக்கப் பட்டு சிக்கனச் செலவில் (Two Third Cost Reduction) செய்து காட்ட உருவாயின. வாயேஜரின் மகத்தான கண்டுபிடிப்புகள் நிகழ்ந்த முதல் 12 ஆண்டுகளில் நாசாவுக்கு நிதிச் செலவு 865 மில்லியன் டாலர். அந்த உன்னத வெற்றியால் அவற்றின் ஆயுள் இன்னும் 2 ஆண்டுகள் நீடிக்கப்பட்டு மேற்கொண்டு 30 மில்லியன் டாலரே நிதிச் செலவு கூடியது !
பரிதி மண்டலத்தின் எல்லைக் குமிழியைக் கடக்கும் விண்கப்பல்கள் !
வாயேஜரின் அகில விண்மீன் விண்வெளித் திட்டப் பயணம் (Intersteller Mission) துவங்கிய போது பரிதியிலிருந்து வாயேஜர் 1 சுமார் 40 AU தூரத்திலும் (AU -Astronomical Unit) (AU = Distance Between Earth & Sun), வாயேஜர் 2 சுமார் 31 AU தூரத்திலும் இருந்தன. பரிதியை விட்டு நீங்கும் வாயேஜர் 1 இன் வேகம் : ஆண்டுக்கு 3.5 AU தூரம். வாயேஜர் 2 இன் வேகம் : ஆண்டுக்கு 3.1 AU தூரம். இரண்டு விண்கப்பல்களும் இன்னும் பரிதி மண்டலத்தின் எல்லை அதிர்ச்சி அரங்கில்தான் (Termination Shock Phase) நகர்ந்து செல்கின்றன ! அந்த வேலி அரங்கில் பரிதியின் காந்த மண்டலச் சூழ்வெளிக் கட்டுப்பாடுக்குள் இயங்கி வருகின்றன. அதி சீக்கிரம் வாயேஜர் -1 எல்லை அதிர்ச்சியில் ஈடுபட்டு பரிதிக் கவசத்தை (Heliosheath) உளவி ஆராயத் துவங்கும். எல்லை அதிர்ச்சி அரங்கிற்கும், பரிதித் தடுப்பு அரணுக்கும் இடையே இருப்பதுதான் (Between Termination Shock Phase and Heliopause) பரிதிக் கவசம். வாயேஜர் பரிதிக் குமிழியை (Heliosphere) நீங்கும் போதுதான் அகில விண்மீன் வெளி வாசலைத் தொடத் துவங்கும் !
வாயேஜர் விண்வெளித் தேடலின் உன்னதம் என்ன வென்றால் 33 ஆண்டுகள் கடந்த பின்னும் அதன் மின்சக்தி ஆற்றல் சிக்கனமாகச் செலவாகி, நகர்ச்சிக் கட்டுப்பாடு செய்யும் உந்து சாதனம் (Use of Available Electric Power & Attitude Control Propellant) செம்மையாக இயங்கி வருகிறது ! ஏவும் போது வாயேஜர் விண் கப்பலுக்கு மின்சக்தி அளித்தது : கதிரியக்க ஏகமூல வெப்ப-மின்சக்தி ஜனனி (Radioisotope Thermo-electric Generators – RTG). முதலில் அது பரிமாறிய ஆற்றல் : 470 வாட்ஸ். 1997 ஆரம்பத்தில் புளுடோனியத்தின் கதிர்வீச்சுத் தேய்வால் ஆற்றல் 335 வாட்ஸ் ஆகக் குறைந்தது. 2001 இல் ஆற்றல் 315 வாட்ஸ், மின்சக்தி ஆற்றல் இழப்பைக் குறைக்கச் சில சாதனங்கள் நிறுத்தப் பட்டன. இந்த ஆற்றல் இழப்பு நிலையில் நகர்ந்தால் வாயேஜர் 2020 ஆண்டுக்கு மேல் இயங்கிச் செல்ல முடியாது முடங்கிப் போகும் !
கார்ல் சேகன் தயாரித்து வாயேஜரில் அனுப்பிய தங்க வில்லை
இன்னும் சில மாதங்களில் நாசா வாயேஜர் 1 & 2 ஏவிய முப்பதாண்டு நிறைவு விழாவைக் கொண்டாடும். 2010 மே 15 ஆம் தேதிப்படி இரண்டு வாயேஜர் விண்கப்பல்களும் புறக் கோள்களில் ஒன்றாக ஒரு காலத்தில் கருதப்பட்ட புளுடோவின் சுற்று வீதியைக் கடந்து அண்டையில் உள்ள புதிய பரிதி மண்டலத்தின் வாசலுக்கு வந்து விட்டன. மேலும் வாயேஜர் விண்கப்பல்கள் நமது உலக மாந்தரின் வரலாற்றைப் பதித்த காலச் சின்னம் (Time Capsule) ஒன்றைத் தூக்கிச் செல்கின்றன. உலக வரலாற்றுப் பதிவுக்காக அற்புதப் படங்கள், மனிதர் பெயர்கள், இசைப் பாடல்கள் ஆகியவற்றை கார்ல் சேகன் ஆறு மாதங்களாகத் தகவலைச் சேகரித்தார். படங்களில் ஐக்கிய நாடுகளின் தலைமையகம் பற்றியும், இந்தியாவில் கிரீன் ஹௌஸ் வாயுக்கள் சேமிப்பு பற்றியும். ஜார்ஜ் புஷ்ஷின் படமும் இடம் பெற்றுள்ளன. நமது வரலாற்றைக் கூறும் ‘காலச் சின்னம்’ அண்டைக் கோளப் பிறவிகட்கு நமது இளவச நன்கொடையாக இருக்கும்.
———————–
*************************
படங்கள்: BBC News, National Geographic News, NASA
தகவல்:
a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206171&format=html (Jupiter)
b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206102&format=html (Saturn)
c) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206231&format=html (Uranus & Neptune)
1. National Geographic News – Voyager 1 at Solar System Edge By : Stefan Lovgren (June 2, 205)
2. National Geographic News – Voyager Probes Send Surprises from Solar System Edge By : Richard A. Lovett (September 26, 2006)
3. NASA’s Golden Gift to the Aliens : 30 Years Later Voyager 1 & 2 By : Kevin Friedl (May 15, 2010)
4. NASA’s Voyager 2 Spaceship “Hijacked By Aliens’ By : Stephanie Dearing (May 15, 2010)
5. From Wikipedia – Voyager 2 (May 16, 2010)
6. Voyager 2 Journey By NASA (Updated on May 17, 2009)
7. Space Travel : Mankind’s Messenger [Voyager 1 & 2] at the Solar System Frontier [September 5, 2012]
8. http://en.wikipedia.org/wiki/Voyager_1 [September 8, 2012]
9. http://www.history.com/news/6-fascinating-facts-about-space-probe-voyager-1 [September 5, 2012]
10. http://voyager.jpl.nasa.gov/mission/interstellar.html [Interstellar Mission]
11. http://www.nasa.gov/vision/universe/solarsystem/voyager_agu.html
12. https://en.wikipedia.org/wiki/Voyager_program [February 9, 2016]
13. https://en.wikipedia.org/wiki/Voyager_1 [February 19, 2016
********************
S. Jayabarathan (jayabarathans@gmail.com) February 24, 2016 [R-1]
கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் உச்சத்திறனில் இயங்குகிறது

February 22, 2016
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
http://npcil.nic.in/main/MOEF_clearance_EIA_KKNPP.aspx
2014 ஜூன் 7 ஆம் தேதி கூடங்குளம் ரஷ்ய அணுமின்சக்தி நிலையம் முதன்முதல் 1000 MW உச்ச நிலை ஆற்றலில் வெற்றிகரமாக இயங்கி மின்சாரம் தமிழ்நாட்டுக்கு மின்வடங்களில் அனுப்பி வருகிறது. இந்த முதல் அணுமின் உலை ஆரம்பநிலை இயக்கப் பாதுகாப்புத் தேர்வுகள் முடிந்து, பூரணத்துவம் அடைந்த தேதி : 2013 ஜூலை 14. மின்னாற்றல் திறன் ஏற்றமாகி 400 மெகாவாட் மேல்நிலை எட்டிய போது முதன்முதல் மின்வடங்களில் இணைப்பாகி, அனுப்பியது. முதல் யூனிட் அடித்தளம் 2001 இல் போடப்பட்டு, கட்டி முடிந்த பிறகு, கூடங்குள ஊர்ப்புற எதிர்ப்பாளர் போராட்ட நிறுத்தத்தால் அணு உலை இயக்கம் இரண்டு வருடங்கள் தாமதமானது. அடுத்த இரண்டாம் யூனிட் இன்னும் ஓரிரு ஆண்டுக்குள் இயக்கப் பாதுகாப்புத் தேர்வுகள் முடிந்து, மேலும் 1000 MW மின்சக்தி உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கலாம்..
பின்புலம் : அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ? இப்படி மேலோடி இடித்துரைப்பது ஓர் அசுரப் போக்கு. அணு உலை அருகே வாழ்பவருக்கு எல்லாம் ஆறாம் விரல் முளைக்குது, புற்று நோய் தாக்குது என்றெல்லாம் நையாண்டி செய்வது அறிஞர்களின் கோமாளித்தனம். புற்று நோயுடன் மற்ற நோயும் தொற்றுது என்னும் பாட்டி கதைகளைக் கட்டிக் எறிந்து விட்டு சற்று புள்ளி விபரத்தோடு டாக்டர் புகழேந்தி ஆய்ந்து காட்டினால் நாமெல்லாம் நம்பலாம். கல்பாக்கத்தில் அணு உலை கட்டும் முன்பு அத்தகைய நோய்களால் துன்புற்றோர் அல்லது செத்தவர் எத்தனை பேர் ? அப்போது அங்கு வாழும் நபருக்கு எத்தனை விரல்கள் இருந்தன என்று எண்ணிப் பார்த்தவர் யார் ? அணு உலைகள் கட்டிய பின் இயங்கும் போது எத்தனை பேர் புற்று நோயில் செத்தனர், மற்ற நோயில் மடிந்தனர் என்ற எண்ணிக்கைகள் தேவை. அப்படி அதிகமானால் அந்த தொகை கூறப்பட வேண்டும். அந்தப் புற்று நோய்கள், உடல் ஊனங்கள் அணு உலைக் கதிரடியால் உண்டாயின என்பது ஆதாரமோடு நிரூபிக்கப் பட வேண்டும். அப்போதுதான் அணு உலையால் மனிதருக்கு ஆறாவது விரல் முளைத்த விந்தைகளைப் பற்றி மக்களிடம் புகாரிடலாம்.
உலகத்திலே இப்போது இயங்கி வரும் (435+284+220) 939 அணு உலைகளுக்கு அருகில் வாழ்வோர் யாராவது புற்று நோயுற்றுத் செத்தால் அங்குள்ள பராக்கிரம யூனியன் நிலைய அதிகாரிகளைச் சும்மா விட்டுவிடுமா ? அவர்களைச் சிறையிலிட்டு பெருத்த நட்ட ஈடைப் பிடுங்கி விடும். நான் இந்தியாவிலும் கனடாவிலும் 45 ஆண்டுகளுக்கு மேல் யுரேனிய எரிசக்தி ஊட்டும் யந்திரக் கதிரியக்க வேலைகளில் நேரிடையாகத் தொடர்ந்து பணியாற்றி யிருக்கிறேன். இப்போது பொறியியல் படித்த என் புதல்வி கனடாவில் பிக்கரிங் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறாள். அவளது கணவரும் டார்லிங்டன் என்று அழைக்கப்படும் வேறோர் அணுமின் நிலையத்தில் எஞ்சினியராகப் பணி செய்கிறார். எனக்கோ, அவர்களுக்கோ அவரது இரண்டு பிள்ளைகளுக்கோ எவருக்கும் ஆறாவது விரல் முளைக்க வில்லை. ஆகவே உதயகுமார் போன்ற அணுவியல் பொறி நுணுக்கவாதிகள், ஞாநி போன்ற எழுத்தாளர்கள், டாக்டர் புகழேந்தி போன்ற மருத்துவர்கள் ஆதாரமற்ற மூன்றாவது நபர் கருத்துக்களைப் பாமர மக்களுக்கு ஊட்டிப் பயமுறுத்தும் வழக்கத்தைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
பேரறிஞர் ஞாநி கல்பாக்க அணு உலைகள் தூங்கும் எரிமலை மேல் நடனம் ஆடுகின்றன என்று அபாயச் சங்கு ஊதுகிறார். கூடங்குளம் இரட்டை அணு உலைகள் எரிமலைப் பாறைமேல் பள்ளி கொண்டுள்ள தாக பெரிய புராணம் எழுதியுள்ளார் அடுத்தொருவர் ரா ரமேஷ்.. கல்பாக்கத்துக்கும், கூடங்குளத்துக்கும் இப்போது பிரச்சனை அணுமின் உலைகள் அல்ல ! அவற்றின் கீழாகத் தூங்கும் எரிமலைகள் ! எரிமலைக்கும் அணு உலைக்கும் வரும் சடுகுடுப் போட்டியில் அஞ்ச வேண்டியது எரிமலைக்கு, அணு உலை பாதுகாப்பாக புதைபடும். எரிமலைப் பூதங்கள் தூங்கும் சென்னைக் கடற்கரை மக்களும், குமரிக் கடற்கரை மக்களும் கோடிக் கணக்கில் எங்கே, எப்படிப் புலம் பெயரப் போகிறார்கள் ?
2012 மார்ச்சில் ஞாநி கல்பாக்கம் அணுமின் உலைகள் தூங்கும் எரிமலை மேல் படுத்துள்ளது என்றும், அது 1757 ஜனவரி 20 இல் வெடித்ததை பரிணாம வளர்ச்சி மேதை டாக்டர் சார்லஸ் டார்வின் நேராகப் பார்த்ததாக ரா. ரமேஷ் தன் நூலில் எழுதி இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். டார்வின் பிறந்து, இறந்த ஆண்டுகள். (1809-1882). இந்து மாக் கடலில் 1831-1835 ஆண்டுகளில் பயணம் செய்த டார்வின் கப்பல் கல்பாக்கம் அருகில் சென்றதாக அவரது கடல் வரைபடத்தில் இல்லை. அது ஈழத் தீவுக்குத் தெற்கே ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சென்றது. 1757 இல் எரிமலை மூச்சு விட்ட புகைத்தடம் கூட அந்த தூரத்தில் தெரிந்திருக்க முடியாது.

அணு உலை எதிர்ப்பாளி உதயகுமாரின் சில வினாக்களுக்கு என் பதில்
////கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோருவதற்கான காரணங்கள் (கீற்றில் வந்தது) உதயகுமார் திங்கள், 12 செப்டம்பர் 2011 ///
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16513
/////கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 1, 2 உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி கட்டப்படுகின்றன. 1, 2 உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. 1, 2 உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய ரசிய விஞ்ஞானிகளின் ஆதங்கங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (site Evaluation Study) மக்களுக்கு தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (Safety Analysis Report) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இப்படி மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல், உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
kudankulam_323தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) அணுமின் நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் அணுமின் கட்டிடங்களைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது என்றும், 2 முதல் 5 கி.மீ சுற்றளவிலான பகுதி நுண்ம ஒழிப்பு செய்யப்பட்ட பகுதியாக (Sterilization Zone) இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. வீடுகளோ, மனிதர்களோ இருக்கக்கூடாது என்பதை நேரடியாகக் குறிப்பிடாமல், திசை திருப்பும் வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் உண்மைநிலை என்ன என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை.
i) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி 5 கி.மீ. சுற்றளவுக்குள் 20,000 பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. அணுமின் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் 20,000 மக்களும், இடிந்தகரை கிராமத்தில் 12,000 மக்களும், காசா நகரில் 450 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.
ii) 10 கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்த பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.
iii) 30 கி.மீ சுற்றளவுக்குள் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் 2,00,000 மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் 28 கி.மீ தூரத்திற்குள் இருக்கிறது.
iv) 20 கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ, சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும் உலக பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி 15 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.
இப்படி கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 30 கி.மீ சுற்றளவுக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் எங்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, எங்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ கற்பனையில் கூட நடக்காத காரியம். 2004 டிசம்பர் சுனாமியில் மத்திய மாநில அரசினர் கொண்டிருந்த பேரிடர் மேலாண்மையை நாடே அறியும்.////

என் பதில் : அணுமின் உலைகளுக்கு அருகில் வாழும் மக்கள் எண்ணிக்கை கூடிக் குறைந்து மாறுவது. 2001 இல் கூடங்குள அணுமின்னுலை கட்ட ஆரம்பித்துடன் இருந்த ஜனத்தொகை பத்தாண்டுக்குப் பிறகு அதிகமா யிருக்கும். கனடாவில் கடந்த 40 ஆண்டுகளாய்ப் பாதுகாப்பாய் இயங்கி வரும் 12 பெரிய கனநீர் அணுமின் நிலையங்கள் (இந்திய கனநீர் அணுமின் உலைகளை ஒத்தவை). ஜனத்தொகை மிக்க டொரோண்டோ நகருக்கு (மில்லியன் 2011) அருகில் மின்சாரம் அனுப்பி வருகின்றன. மனித நெருக்கம் புலப் பெயர்ச்சிக்கு இடையூறாய் இருக்கும். கட்டி முடித்த அணுமின் உலைகள் பாதுகாப்பாக இயங்க முடியும். அவை யாவும் மனித நெருக்கத்தால் மூடப் பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
///அணுஉலைக் கட்டிடங்களின், குழாய்களின் மோசமான தரம், கட்டிடம் கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதான திருவிளையாடல்கள், உள்ளூர் காண்டிராக்டர்களின் கைங்கரியங்கள், ரசியாவில் இருந்து தாறுமாறாகவும் தலைகீழாகவும் வந்த உதிரிபாகங்கள், நிர்வாக குழப்பங்கள், குளறுபடிகள் என அடிவயிற்றை புரட்டிப் போடும் தகவல்கள், அனுதினமும் வந்து கொண்டே இருக்கின்றன. 26.9.2006 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருகை தந்தார். அணுசக்தித் துறை உயர் அதிகாரிகளோடு அவர் நின்று கொண்டிருந்த போது கூரையில் இருந்து ஊழியர் ஒருவர் ஓரிரு அடி தூரத்தில் பொத்தென்று விழுந்து அனைவரையும் கதி கலங்கச் செய்தார். குடியரசுத் தலைவர் வந்தபோதே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை? /////
என் பதில் : யந்திர யுகத்தில் தொழிற்சாலை விபத்துக்கள் ஏதாவது நேர்வது உண்மை. ஆனால் கடந்த 40 ஆண்டில் அடுத்தடுத்து இயங்கும் 20 இந்திய அணு உலைகளில் ஒருவர் கூட இதுவரை மரிக்க வில்லை என்பதும் உண்மை. கதிரடி பட்டு இதுவரை ஒருவர் கூட நோய்வாய்ப்பட வில்லை என்பதும் உண்மை.
/////உலைகளை குளிர்விக்கும் சூடான கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றி ஆலைகளில் இருந்து வெளிவரும் உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலில் கொட்டி, ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கப் போகிறோம். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீனவர்களின் விவசாயிகளின் வாழ்வுரி மையும், வாழ்வாதார உரிமைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். விபத்துக்களோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும் அணு உலைகளில் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்களை உண்டு, பருகி, சுவாசித்து, தொட்டு அணு அணுவாய் சிதைந்து போவோம்.///
என் பதில் : உலகத்தில் கடந்த 40 ஆண்டுகளால் அடுத்தடுத்து இயங்கி வரும் 430 மேற்பட்ட அணுமின் உலைகளில் பெரும்பான்மையானவை நதிக் கரையிலோ, கடற்கரையிலோ, ஏரிக்கரை மீதோதான் அமைக்கப் பட்டுள்ளன. ஆகவே மேற்கூறிய கருத்து முற்றிலும் மெய்யாகாது. அணு உலைகளில் இருந்து அனுதினமும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்கள் வெளியாவதில்லை. விபத்துக்கள் அனுதினம் நேர்வதில்லை. என்ன ஆதாரம் வைத்து இப்படி வெறுமையாகப் புகார் செய்ய முடியும் ? அனுதினம் வெளியாகும் திரவ, திடக் கழிவுகள், வாயுப் புகை யாவும் சோதிக்கப் படாமல் வெளியே விடப் படுவதில்லை.
////பேரிடர்கள் வராது, நடக்காது, என்று தரப்படும் வெற்று வாக்குறுதிகளை ஏற்க முடியாது. 2003 பிப்ரவரி 9ம் தேதி இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங் கோட்டையில் ஒரு மெலிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19ம் தேதி மாலை 6.50 மணிக்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள கன்னன்குளம், அஞ்சுகிராமம், அழகப்புரம், மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர்களிலும், கூரைகளிலும் கீறல்களும், விரிசல்களும் தோன்றின. இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 21ம் தேதி கரூர் மாவட்டத்தில் அதிகாலை 1.30 மணிக்கும், 5.00 மணிக்கும் நில அதிர்வுகள் உண்டாகின. 2011 ஆகத்து முதல் வாரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் நடந்திருக்கிறது. மார்ச் 11, 2011 அன்று நடந்த புகுசிமா விபத்தினால் அமெரிக்க அணு உலைகள் ஜப்பானின் மேலாண்மை இருந்த பிறகும் வெடித்து கதிர்வீச்சை உமிழ்ந்திருக் கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையம் 2004 டிசம்பர் சுனாமிக்கு முன்பே கட்டப்பட்ட நிலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அணுசக்தித் துறை சொல்லும் வாதங்கள் உண்மைக்கு புறம்பானவை. /////

என் பதில் : 9 ரிக்டர் அளவு பயங்கர நிலநடுக்கத்தில் கூட ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையங்கள் எதுவும் பாதிக்கப் படவில்லை. அத்தனை அணுமின் உலைகளும் நிலம் நடுங்கியதும் பாதுகாப்பாய் நிறுத்தமாயின. நிறுத்தமான அணு உலையில் அபாய வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் சுனாமியில் மூழ்கிப் போனதாலும், இரட்டை அல்லது முப்படி வெப்ப தணிப்பு ஏற்பாடுகள், (Shutdown Cooling Systems) ஓய்வுத் தணிப்பு அமைப்பு (Passive / Gravity Cooling Systems) இல்லாததாலும் எருக்கோல்கள் சில உருகிக் கதிரியக்கம் கசிந்தது. கூடங்குளத்தில் அவ்விதப் பிரச்சனைகள் எழமாட்டா.
1979 இல் நேர்ந்த திரிமைல் தீவு அணுமின் நிலைய விபத்தில் ஹைடிரஜன் வாயுக் கோளம் உருண்டு விபத்து ஏற்படப் பயமுறுத்தினாலும் வெடிப்பு ஏற்பட வில்லை.. அந்த கதிரிக்க விபத்துக்குப் பிறகு உலக நாடுகள் தமது அணுமின் உலைகளில் ஹைடிரஜன் வாயு இணைப்பிகளை (Hydrogen Recombiners) உடனே அமைத்துக் கொண்டன. தனியார் துறை இயக்கும் புகுஷிமா ஜப்பான் அணுமின் உலைகளில் அவ்விதம் ஏன் இல்லாமல் போயின என்பது 2011 ஆம் ஆண்டில் வியப்பாக இருக்கிறது. கூடங்குளத்தில் ஹைடிரஜன் வாயு இணைப்பிகள் இருப்பதால் அந்தப் பிரச்சனை எழாது.
////அணுமின் நிலையங்கள் மீதான தீவிரவாத அச்சுறுத்தல் பற்றி பாரத பிரதமரே அவ்வப்போது எச்சரித்து வருகிறார். ஆகத்து 18, 2011 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் உள்துறை துணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அணுமின் நிலையங்கள் பயங்கரவாத குழுக்களின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன என்கிறார்.////

என் பதில் : அமெரிக்காவில் 9/11 மூர்க்கரின் வரலாற்று முக்கிய தாக்குதலில் ஓரிரு நாட்களில் 5000 பேர் ஜெட் விமான மோதலில் மாண்டனர். அதன் பிறகு உலகின் 430 மேற்பட்ட அனைத்து அணுமின் உலைகளும் இராணுவப் பாதுகாப்பில் இயங்கத் துவங்கின. மூர்க்கர் அணு உலைகள் அருகில் வராமல் பாதுகாக்க வேண்டுமே தவிர பயந்து போய் அவற்றை மூடிவிடக் கூடாது.
////2007 பிப்ரவரி மாதம் அப்போதைய தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி வசிப்பவர்களுக்கு இலவச குழுக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். சுமார் 1 வருடத்திற்கு முன்னால் இந்திய அணுமின் கழகமும், இந்தியாவுக்கு அணு உலைகள் வழங்கும் ஆட்டம் ஸ்டராய் எக்ஸ்போர்ட் என்னும் ரசிய நிறுவனமும் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரசியா வழங்கும் உலைகளில் ஏதேனும் விபத்துக்கள் நிகழ்ந்தால், இழப்பீடு வழங்க வேண்டும் என இந்தியா கேட்க, அந்த மாதிரியான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ள முடியாது, உலைகளை இயக்கு கின்ற இந்திய அணுமின் கழகமே முழுப் பொறுப்பு ஏற்க வேணுடும் என ரசியா கையை விரித்தது. 2 008ம் ஆண்டு ரகசியமாக கையெழுத்திடப்பட்ட இரு நாட்டு உடன்படிக்கை ஒன்றின் 13-வது சரத்து இதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்று சொல்கிறது ரசியா. போபால் நச்சுவாயுக் கசிவில் பாதிக்கப்பட்ட மக்கள் 25 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இழப்பீடுகள் பெறாமல், எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல் வதைப்பட்டுக் கொண்டிருப்பது மொத்த இந்தியாவுக்கே, உலகத்திற்கே தெரியும்.////
என் பதில் : போபால் விஷவாயு விபத்துக் கசிவில் பல்லாயிரம் இந்தியர் மரித்தனர். பல்லாயிரம் இந்தியர் கண்ணிழந்தார். அங்கயீனப் பிறப்புகள் உண்டாயின. அவருக்கு முறையான காப்பீடு இழப்பு நிதி சரியான தருணத்தில் அளிக்கப் படவில்லை என்பது உண்மை. இரசாயனத் தொழிற்துறை நிறுவகங்களில் இந்திய அணுசக்திச் சட்டம் போல் (Atomic Energy Act) தெளிவாகக் காப்பீடு முறைகள்/பொறுப்புகள் விளக்கமாக எழுதப் படவில்லை. ரஷ்ய அணு உலைச் சாதனங்கள் ஆரம்பத்தில் பழுதானல் அவற்றைச் செம்மைப் படுத்தும் பொறுப்பு & செலவு ரஷ்யாவைச் சேர்ந்தது. அணு உலை இயங்க ஆரம்பித்து மனிதத் தவறாலோ, யந்திரப் பிசகாலோ விபத்து உண்டானால் அந்த நிதி இழப்பை நியூகிளியர் பவர் கம்பெனி (NPCIL) ஏற்றுக் கொள்ளும். செலவு குறிப்பிட்ட வரம்பு மாறினால், இந்திய அரசாங்கம் ஈடு செய்யும்.
////அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சனை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரசியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவித்தனர். கூடங்குளம் அணு உலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தை பயன்படுத்தும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்த கொடிய நச்சை 24,000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக்குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அபாயகரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்ப தாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப்படும். நமது விளை நிலங்களும், பயிர்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும்.///
என் பதில் : கூடங்குள அணு உலைத் தீய்ந்த எருக்கோல்களை மீண்டும் ரஷ்யாவுக்கு அனுப்பலாம். அல்லது சுத்தீகரித்து எஞ்சிய எருக்கருவை மீட்கலாம். இவற்றில் முதல் பொறுப்பு இந்தியாவுக்கு நிதி விழுங்குவது. கப்பலில் கனத்த கவசமோடு நீண்ட தூரம் அனுப்பவதில் சிரமங்கள் அதிகம். தீய்ந்த எருக்கருச் சுத்தீகரிப்பு முறைகள் இந்திய அணுவியல் நிபுணருக்குப் பழக்கமானவை. மேலும் சேமிப்புச் சுரங்கங்களில் கதிரியக்கக் கசிவுகள் நேர்வதில்லை. இரண்டாம் வழியைப் பின்பற்றுவதில் பாதுகாப்பு உள்ளது.
///அவற்றில் இருந்து பெறப்படுகின்ற பால், காய்கறிகள், பழங்கள் நச்சு உணவுகளாக மாறும். அணு உலைகளை குளிர்விக்கும் கதிர்வீச்சு கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து கதிர்வீச்சால் நச்சாக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படுவார்கள். மீனவ மக்களின் மற்றும் உள்ளூர் மக்களின் கடல் உணவு நச்சாகும் போது நமது உணவு பாதுகாப்பு அழிக்கப்படும். அணு உலையின் புகை போக்கிகளில் இருந்து வருகின்ற நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131, 132, 133, சீசியம் 134, 136, 137 அய்சோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடிதண்ணீரில், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக வதைப்படுவோம். நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் இந்த நச்சை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய், தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மணவளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள்.////
என் பதில் : அணு உலை எருக்கோல்கள் வெப்பத் தணிப்பின்றிச் சிதைவடையும் வாய்ப்புக்கள் கூடங்குளத்தில் மிக மிக அபூர்வம். சிதைவடையா அணு உலையில் ஐயோடின் 131, 132, 133, சீசியம் 134, 136, 137 ஐசோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் வெளியேறு வதில்லை.
////1988ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு (முதல் இரண்டு உலைகளுக்கு) 6,000 கோடி ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் 1997 ஏப்ரல் மாதம் இந்த திட்ட்த்தின் துவக்க மதிப்பீடே 17,000 கோடி ரூபாயாகும் என்று சொன்னார்கள். 1998 நவம்பர் மாதம் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 2006ம் ஆண்டு இயங்கும் என்றும், 15,500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் விளக்கமளித்தார்கள். 2001ம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் குழு இந்தத் திட்ட்த்தின் மொத்தச் செலவு 13,171 கோடி எனவும், இந்திய அரசு 6,755 கோடி முதலீடு செய்ய, ரசியா மீதமிருக்கும் தொகையை 4% வட்டியில் வழங்கும் என்று சொன்னார்கள். முதன் முறையாக எரிபொருள் வாங்குவதற்கும், அடுத்தடுத்த 5 முறை எரிபொருள் வாங்குவதற்கும் 2,129 கோடி ரூபாயில் ஒதுக்கப்பட்டது. இந்த தொகை கிட்டத்தட்ட ரசிய அரசின் கடனுதவியாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ள முடியும். நமது குழந்தைகளை கடனாளிகளாக ஆக்கும் திட்டம் நமக்கு வேண்டாம்.///
என் பதில் : கட்டி முடிக்கப் பட்ட 15,000 கோடி கூடங்குள இரட்டை அணுமின் உலை முடக்கத்தால் இந்திய அரசுக்கும், இந்தியர் வரி நிதிக்கும் குறைந்த அளவு வருவாய் இழப்பு தினமொன்றுக்கு சுமார் 100,000 டாலர் (50 லட்சம் ரூ). ஆதலால் முதல் இழப்பு, வட்டி இழப்பு, கடன் அடைப்புப் பிரச்சனைகள் அணு உலை முடக்கத்தால் குறையப் போவதில்லை. கடல் அருகே இருக்கும் அணு உலைச் சாதனங்கள் துருப்பிடித்துப் பயனற்றுப் போகவும் வாய்ப்புள்ளது.
//நமது நாட்டை விட எத்தனையோ மடங்கு வளர்ச்சி அடைந்த, தொழில் வளமிக்க ஜெர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட முடிவெடுத்திருக்கிறது. நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் புற்று நோய் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படும் திருமதி.சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாடான இத்தாலியில் அண்மையில் நட்த்தப்பட்ட வாக்கெடுப்பில் 90% மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். சுவிச்சர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவெடுத்தி ருக்கின்றன. புகுசிமா விபத்து நடந்த சப்பான் நாட்டிலே கட்டப்பட்டு கொண்டிருக்கும் 10 அணு உலைகளை நிறுத்தி விட்டனர். 28 பழைய உலைகளையும் மூடிவிட்டனர்////.
என் பதில் : புகுஷிமா அணுமின் உலைகள் விபத்தால் ஜப்பானில் உள்ள சுமார் 50 அணுமின் நிலையங்கள் தற்காலிய மாக நிறுத்தம் அடைந்துள்ளன. சில அணுமின் நிலையங்கள் செம்மைப் படுத்தப் படுகின்றன. அவை மீண்டும் ஒரு சில மாதங்கள் இயங்க ஆரம்பிக்கும். மற்ற ஆசிய நாடுகளில் (சைனா, இந்தியா, தென் கொரியா) அணுமின் உலைகள் நிறுத்தப் பட வில்லை. ஐரோப்பா, கனடா, அமெரிக்க நாடுகளில் எந்த ஓர் அணுமின் உலையும் நிறுத்தம் அடைய வில்லை. ஹிரோஷிமா, நாகசாக்கியைச் சுத்தம் செய்து புதுபித்த ஜப்பான் மீண்டும் அணுமின் நிலையங்களைச் செம்மைப் படுத்தி இயக்கும். அனைத்தும் மூடப்படும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.

///நமது நாட்டிலேயே மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய மம்தா பானர்சி அவர்களின் அரசு கரிப்பூர் என்னும் இடத்தில் ரசிய உதவியுடன் கட்டப்படவிருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்து விட்டு, மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அணு உலைகள் அமைக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று அனைத்து கட்சிகளும் ஒருங்கே நின்று எதிர்க்கின்றன.////
என் பதில் : கூடங்குளத்தை வர்வேற்றது கருணாநிதி திமுக. இப்போது எதிர்ப்பது ஜெயலலிதா திமுக. மாநில அரசியல் கட்சிகள் மாறுவதால் இம்மாதிரி ஏற்படும் ஆதரவு / எதிர்ப்பு முடிவுகள் நிரந்தரம் அல்ல.
///ரசியா, அமெரிக்கா, பிரஞ்சு நாட்டு நிறுவனங்களின் லாபம் முதன்மையானதா அல்லது இந்திய மக்களின் உயிர்களும், எதிர்காலமுமா ?////
என் பதில் : 21 ஆம் நூற்றாண்டில் ஒரிஜினல் 1000 மெகா வாட் அணு உலை டிசைன்கள் செய்து விற்பனை செய்பவை அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, கனடா ஆகிய அந்நிய நாடுகளே. ஆசிய நாடுகள் சைனா, தென் கொரியா, இந்தியா, ஜப்பான் உட்பட அனைத்தும் இந்த நான்கு நாடுகளிடம்தான் பேரளவு மெகா வாட் உற்பத்தி செய்யும் அணு உலைகளைக் கடனுக்கோ, காசுக்கோ வாங்கி கடந்த 50 ஆண்டுகளாய்க் கட்டி நிறுவகம் செய்கின்றன.
++++++++++++++
++++++++++++++
தகவல்:
1. http://www.npcil.nic.in/index.asp [Nuclear Power Corporation of India Ltd Website for Nuclear Power Updates]
2. http://pib.nic.in/release/release.asp?relid=20878 [President Dr. Abdul Kalam Speech on Kudungulam (Sep 22, 2006)]
3. http://www.stratmag.com/issue2Nov-15/page03.htm
[Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]
4. World Nuclear Association – WNA
Radiological Protection Working Group – RPWG (Official List – July 20, 2006)
http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm
5. World Nuclear Association – WNA
Waste Management and Decommissioning Working Group – WM&DWG (Official List – July 25, 2006) http://www.world-nuclear.org/sym/2006/st_pierre.htm
6. http://www.candu.org/npcil.html [Indian Heavywater Nuclear Power Plants]
7. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)
8. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)
9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=80708091&format=html Letter By R. Bala (August 9, 2007)
10. http://www.wano.org.uk/WANO_Documents/What_is_Wano.asp [World Association of Nuclear Operation Website]
11 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)
12. http://www.world-nuclear.org/info/inf53.html (World Nuclear Association Report on Indian Nuclear Power) (February 2012)
13. https://jayabarathan.wordpress.com/kudankulam-vver-reactor/
14. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40303233&format=html
[கூடங்குளம் அணுமின் உலைப் பாதுகாப்பு ஆய்வுகள்]
15. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40607071&format=html
[செர்நோபிள் விபத்துபோல் கூடங்குளத்து அணுமின் உலையில் நிகழுமா ? ]
16. http://npcil.nic.in/main/MOEF_clearance_EIA_KKNPP.aspx [February 22, 2016]
******************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] February 22, 2016 [R-1]
பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். பூமியின் காந்தத் துருவங்கள் அடுத்து எப்போது திசைமாறப் போகின்றன ?

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
பூமியின் காந்த துருவங்கள்
புதிராய்த் திசை மாறும் !
ஆமை வேகத்தில் வட துருவம்
தென் துருவ மாகும் !
பூமியின் சுழற்சி நின்று
எதிர்த் திசையில் ஓடுமா ?
பரிதியின் உதய திசை அப்போது
கிழக்கா ? மேற்கா ?
உயிரினம், மனித இனம் என்ன வாகும் ?
மணிக்கு ஆயிரம் மைல் வேகத்தில்
மனிதன் விண்ணில் எறியப் படுவானா ?
சூழ்வெளி மண்டலம் முறிந்து
பாழ்வெளி ஆகுமா ?
நீர் மண்டலம் ஆவியாகி
நிலம் பாலை ஆகுமா ? சூடேறி
உயிரினங்கள் தவிக்குமா ?
பயிரினங்கள்
பசுமை இழக்குமா ?
அரை மில்லியன் ஆண்டுகட்கு
ஒருமுறை நேர்ந்திடும்
துருவத் திருப்பம்,
பிறகு மீளும் !
இயற்கை விதி முறையின்
திருவிளை யாடல் !
பருவ காலம் தாறுமாறாகி
வாழ்க்கைப் போக்கு
பாழாகுமா ?
பிரளய நர்த்தனப் பயிற்சி
அரங்கேற்றமா ?
+++++++++++++
“பூர்வ எரிமலைப் பாறை மாதிரிகளைப் புதிதாக ஆராய்ந்த போது இரண்டாவது காந்த மூலச் சேமிப்பு (Secondary Magnetic Source) பிரதம காந்த முனைத் திருப்பம் ஏற்படுத்துமா அல்லது எப்படி நிகழ்த்துகிறது என்று கண்டுபிடிக்க உதவி செய்யும். வடதென் துருவங்களை நோக்கும் பிரதமக் காந்தத் தளம் தளர்ச்சியுறும் போது, பூமியின் ஆழமற்ற உட்கருவில் அடித்தட்டுப் பாறைக்குக் கீழாகத் தோன்றிவரும் இரண்டாவது காந்தத் தளம் முக்கியத்துவம் அடைகிறது !”
பிராடு ஸிங்கர், பூதளவியல் பேராசிரியர் விஸ்கான்சின்-மாடிஸன் பல்கலைக் கழகம்
பூகாந்த தளம் திருப்பிக் கொள்ள [Earth’s Magnetic Pole Reversal] 1000 முதல் 10,000 ஆண்டுகள் எடுக்கலாம். அந்த திருப்ப இயக்கத்தில் நேரிணைப்பாகும் [Realignment] முன்பு, காந்த சக்தி மிகவும் தளர்ச்சி அடைகிறது. அது திடீர்த் திருப்பம் ஆகினும், மெதுவாகவே [Sudden Flip; but a Slow Process] அது நிகழ்கிறது. அத்தருணத்தில் பூகாந்த சக்தியின் ஆற்றல் பலவீனம் அடைகிறது. காந்த தளம் சிக்கலாகிச் சில சமயம் இரு துருவங்களுக்கு மேலாகவும் காணப் பட்டு, மீண்டும் காந்த சக்தி வலுவேற்றிக் கொள்கிறது. அந்த நிலையில் துருவங்கள் எதிராக மாற்றமாகி நேரிணைப்பு [Realigns in the Opposite Direction] செய்து கொள்ளும்
மோனிகா கோர்ட்டே [Scientific Director, Niemegk Geomagnetic Observatory, Germany]

கடந்த வரலாற்றுப் பதிவுகள் பூமியின் அடுத்த துருவத் திருப்பம் வரப் போவதை வழிமொழிகின்றன. சராசரியாக 400,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூதளக் காந்த துருவ மாற்றம் நிகழ்கிறது. அந்தக் கால எண்ணிக்கைத் தாறுமாறாகவும் வேறுபடுகின்றது. பூமியின் சென்ற துருவத் திருப்பம் சுமார் 800,000 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்திருப்ப தாகப் பூதளவியல் வரலாற்றுப் பதிப்புகள் கூறுகின்றன. துருவத் திருப்பங்கள் எதிர்பாராத கால வேறுபாடுகளில் தோன்றுபவை. அந்தத் துருவ மாற்றம் இன்னும் சில நூற்றாண்டுகளில் வரலாம். அல்லது சில மில்லியன் ஆண்டுகள் கழிந்தும் ஆகலாம்.”
ஆன்ரு பிக்கின், நெதர்லாந்து உட்ரெக் (Utrecht) பல்கலைக் கழகம்
பூமி அடுத்து எப்போது துருவங்களை மாற்றிக் கொள்ளும் ?
நமது பூகோளத்தின் ஆயுட் காலத்திற்குள் பன்முறைத் துருவ மாற்றங்கள் நேர்ந்துள்ளதாகப் பூதள விஞ்ஞானிகள் கருதுகிறார். அப்படிக் கூறுவதற்கு எரிமலை அடுக்குப் பாறைப் பதிவுகளே தக்க நிரூபணம் தருகின்றன. முந்தைய பூகாந்த மாற்றம் சுமார் 780,000 ஆண்டுகட்கு முன்பு நிகழ்ந்த தாகப் பாறைப் பதிவுகள் மூலம் அறியப் படுகின்றது. அப்போது தான் கற்கால மனிதன் சிக்கி முக்கிக் கற்களைத் தட்டி அக்கினி உண்டாக்கும் “கனல் சக்தி” [Fire Power] திறன் கண்டுபிடிக்கப் பட்டது.
அமெரிக்காவின் மேரிலாண்டு பல்கலைக் கழகத்தில் பூகோள உள்ளமைப்பைக் காட்டும், உலகிலேயே பெரிய சுழற்சி கோளம் அமைக்கப் பட்டுள்ளது. துருப்பிடிக்கா இரும்பில் 10 அடி விட்டத்தில் வடிக்கப் பட்டிருக்கிறது. அதற்குள் சிறு கோளம் ஒன்றும் உள்ளது. இரு கோளங்களுக்கும் இடையில் 250 டிகிரி F உஷ்ணத்தில் சூடாக்கப் பட்ட , 12 டன் திரவ சோடியம் நிரப்பப் பட்டுள்ளது. அதுவே திரவ உலோகமுள்ள பூமியின் உள்ளே இருக்கும் மேல் உட்கருவாகக் [Liquid Iron Outer Core] கருதப் படுகிறது. மிக வேகமாய்ச் சுழலக் கூடிய அந்தக் கோளத்தில் பல்வேறு பூதளப் பௌதிகச் சோதனைகள் செய்து காட்ட முடியும். அச்சோதனைகளில் ஒன்றுதான் பூதளப் பௌதிக விஞ்ஞானி, டானியல் லாத்திரப் [Geophysicist Daniel Lathrop] முன்னறி விக்க முயலும், அடுத்து எப்போது பூகோளத் துருவமாற்றம் நிகழப் போகிறது எனப்படுவது. இந்த முன்னறிப்பை வெளியிட்டது ரஷ்யக் குரல் எனப்படும் “வாய்ஸ் ஆஃப் ரஷ்யா” [Voice of Russia]. அறிவித்த நாள் : ஏப்ரல் 29, 2014.
பூகோளத் துருவ மாற்றத்தால் என்ன கேடுகள் விளையும் என்பது யாருக்கும் தெரியாது. அடுத்த துருவ மாற்றத்தில் மனித இனத்துக்கு தீங்கு எதுவும் நேராது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார். சென்ற துருவ மாற்றம் 780,000 ஆண்டுக்கு முன்னர் நேர்ந்திருக்கிறது. துருவ மாற்றம் மிகவும் மெதுவாக நிகழ்கிறது. அது முடிய ஆயிரக் கணக்கான ஆண்டுகள் [1000 முதல் 10,000 வரை] ஆகலாம். துருவ மாற்றம் நிகழ்ந்தால் பூமியின் சுழற்சி நின்று எதிர்ப்புறம் சுற்றுமா ? பரிதி உதயமாகும் கிழக்குத் திசை வேறுபடுமா ? எதிர்ர்பாராத இந்த மாறுபாட்டுகளால் பருவ மாற்றங்கள் நேருமா ? இவை போன்ற கேள்விகள் எழுகின்றன ! ஆனால் இவற்றுக்குச் செம்மையான பதில் இதுவரை கிடைக்க வில்லை. அடுத்த பூகோளத் துருவ மாற்றம் 400,000 வருடங்கள் கடந்து நிகழும் என்று அனுமானிக்கப் படுகிறது.

“பூமியின் காந்தத் தளம் நமக்கும், நமது சூழ்வெளிக்கும் பரிதியின் தீவிரப் புயலிலிருந்து (Solar Wind) கேடுகள் விளையாதபடிக் கவசமாய்ப் பாதுகாப்பாக இருக்கும் ஓர் இயற்கை ஆற்றல். பறவை இனத்துக்கும், மனித இனத்துக்கும் கடற் பயண முறைக்குத் திசைகாட்டும் (Navigational Direction) ஓர் அரிய ஆற்றல் அது ! பரிதிப் புயல்கள் தீவிரமாய் அடிக்கும் போது மின்சாரப் பரிமாற்றமும், தொலைத் தொடர்புச் சாதனங்களும் பழுதடைந்து போகும்.”
ஆன்ரு பிக்கின், நெதர்லாந்து உட்ரெக் (Utrecht) பல்கலைக் கழகம்
“கடந்த ஆண்டுகளில் சில பறவை இனங்கள் துருவத் திருப்பக் காலங்களில் கடற் பயணம் புரிந்த போது திசை தடுமாறிப் போயுள்ளன ! ஒற்றைச் செல் உயிர் ஜந்துகள் (Single-celled Organisms) சில மேல், கீழ் நிலை அறிய முடியாதபடி அழிந்து போயிருக்கின்றன ! கடந்த காந்த முனை மாற்ற காலங்களில் மனித இனம் பிழைத்து எழுந்திருப்பதாகத் தெரிகிறது. ஆகவே அடுத்து வரப் போகும் புதியத் துருவத் திருப்பத்தில் மனித இனம் பாதகம் அடையாமல் மீட்சி பெறலாம் !”
டேவிட் குப்பின்ஸ், லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து.

“பூமியின் காந்த தளத்தின் மீது எரிமலைக் குழம்பு குளிர்ந்து படிந்ததும் அப்போதுள்ள புதிய காந்த தளத்தின் பதிவு நினைவு பற்றிக் கொள்கிறது. அவ்விதம் உண்டான எரிமலைக் குழம்பின் நினைவை அழிப்பது மிகக் கடினம். அதுவே பூகாந்தத்தின் பூர்வத் திசை அமைப்பின் (Paleomagnetic Direction) பதிவாகி விடுகிறது.”
பேராசிரியர் பிராடு ஸிங்கர்.
பூகோள வரலாற்றில் நேர்ந்துள்ள வடதென் துருவ மாற்றங்கள் !
பூமியின் வடதென் காந்தத் துருவங்கள் எப்போதும் ஒரே திசை நோக்கி இருப்பவை அல்ல ! அவை சிறுகச் சிறுக கோணம் மாறி பல்லாயிரம் [1000 – 10,000] ஆண்டுகள் படிப்படியாக நகர்ந்து பிறகு வடதுருவம் தென் துருவமாகவும், தென் துருவம் வடதுருவமாகவும் மாறிவிடுகின்றன ! பூகோளத்தின் துருவங்கள் கடந்த 65 மில்லியன் ஆண்டுகளாக 130 தடவைகள் மாறி வந்துள்ளன என்று பூதளவியல் விஞ்ஞானிகள் (Geologists) கணித்துள்ளார்கள் ! அதாவது சராசரி அரை மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுத் துருவ மாற்றம் நேர்ந்திருக்கிறது ! பூமியில் முதன்முதல் பாறைகள் உருவான போது அவை யாவும் வியப்பூட்டும் வண்ணம் அப்போதையப் பூகாந்தத் திசை அமைப்பைப் (Orientation of Earth’s Magnetic Field) பதிவு செய்துள்ளன !

பூதளவியல் விஞ்ஞானிகள் பல்வேறு யுகத்தில் பல்வேறு இடங்களில் உண்டான பாறை மாதிரிகளைச் சேகரித்து அவ்விதத் துருவ மாற்றங்கள் நிகழ்ந்திருப் பதைக் காட்டியிருப்பது ஆச்சரியமாக உள்ளது ! பூமியில் இப்போதிருக்கும் வடதென் துருவத் திசை அமைப்பு “நேர் அமைப்பு” (Normal Direction) என்றும் அதற்கு எதிரான திசை அமைப்பு “திருப்ப அமைப்பு” (Reversal Direction) என்றும் விஞ்ஞானிகளால் குறிப்பிடப் படுகின்றன ! கடந்த 150 ஆண்டுகளாக (1985 Factual) பூகாந்தத் திசைக் கோணம் ஒரே மட்டக் கோட்டில் (Latitude) (79 டிகிரி) இருந்திருக்கிறது ! அதே சமயத்தில் அதன் நேரியல் கோடு (Longitude) ஆண்டுக்கு 0. 042 டிகிரி கோண வீதத்தில் மாறி வந்துள்ளது ! மேலும் இதற்கு முன்பு பூகாந்தத் துருவத் திசை நீடிப்புக் குறைந்தது 2.6 பில்லியன் ஆண்டுகள் கூட இருந்துள்ளது என்று அறிப் படுகின்றது !

2004 டிசம்பர் 26 ஆம் தேதி தென்னாசியக் கடற்கரையில் படையெடுத்த அசுரச் சுனாமியை எழச் செய்த கடற் பூகம்பம் எவ்விதம் உண்டானது என்பதற்குப் பூமி அடித்தட்டின் (Earth’s Tectonic Plate Crust) நிலையற்ற தன்மையே என்று ஊகிக்கப் படுகிறது. அத்தகைய நிலையற்ற கொந்தளிப்புக்குப் பூகாந்தத் திசை மாற்ற நகர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது. சூரியன் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறைத் தவறாது அதன் “பரிதித் தழும்பு மீட்சி” உச்சத்தில் (Peak Sunspot Cycle) தனது துருவத் திசையை மாற்றுகிறது ! அவ்விதப் “பரிதித் துருவத் திருப்பம்” அடுத்து 2012 ஆம் ஆண்டில் நேரப் போகிறது ! தென்திசை நோக்கிய காந்தத் திரட்சி (Magnetic Flux) மைய ரேகையில் (Solar Equator) செழித்த பரிதித் தழும்புகளிலிருந்து நகர்ந்து வடப்புறம் திரும்புகிறது. ஆனால் பூமியின் துருவ மாற்றம் பரிதியில் நேர்வது போல் ஒரு சில குறுகிய ஆண்டுகளில் நிகழ்வதில்லை !

பூமியின் துருவ மாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன ?
பூகோளத்தின் துருவ மாற்றங்கள் தாறுமாறான கால இடைவெளிகளில் இதுவரை நேர்ந்துள்ளன. சமீபத்தில் உண்டான துருவ மாற்றம் 780,000 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்திருக்கிறது. ஆயினும் ஏன் அவ்விதம் நேர்கிறது என்று விஞ்ஞானிகள் வியப்புறுகிறார்கள். வெப்பக்கனல் திரவ இரும்புள்ள உட்கருவில் கொந்தளிக்கும் மின்னோட்டம் (Electric Current) உண்டாக்கும் பூமியின் பிரதமக் காந்தத் தளம் துருவ முனைத் திசையைத் திருப்புகிறது ! அப்போது ஒரு காந்தத் திசைகாட்டி முள் (Needle of the Magnetic Compass) வட திசைக்குப் பதிலாகத் தென் திசையைக் காட்டும் ! பூமியின் வரலாற்றில் முரணான கால இடை வெளிகளில் அவ்விதத் துருவத் திருப்பம் 100 மேலான தடவைகளில் நிகழ்ந்துள்ளன. “பூர்வ எரிமலைப் பாறை மாதிரிகளைப் புதிதாக ஆராய்ந்த போது இரண்டாவது காந்த மூலச் சேமிப்பு (Secondary Magnetic Source) பிரதம காந்த முனைத் திருப்பம் ஏற்படுத்துமா அல்லது எப்படி நிகழ்த்துகிறது என்று கண்டுபிடிக்க உதவி செய்யும். வடதென் துருவங்களை நோக்கும் பிரதமக் காந்தத் தளம் தளர்ச்சியுறும் போது, பூமியின் ஆழமற்ற உட்கருவில் அடித்தட்டுப் பாறைக்குக் கீழாகத் தோன்றி வரும் இரண்டாவது காந்தத் தளம் முக்கியத்துவம் அடைகிறது !” என்று விஸ்கான்சின்-மாடிஸன் பல்கலைக் கழகப் பூதளவியல் பேராசிரியர், பிராடு ஸிங்கர் கூறுகிறார்.

பிராடு ஸிங்கரும் மேற்கு ஜெர்மனியில் ஆய்வு செய்யும் கென்னத் ஹா·ப்மனும் (Kenneth Hoffman) சேர்ந்து ஹவாயிக்கு அருகில் தாஹிதியின் (Tahiti) பூர்வீக எரிமலைக் குழம்பை 30 ஆண்டுகளாகச் சோதனை செய்து பூமியின் காந்த முனைத் திருப்பின் வழிமுறை களைக் (Patterns) கண்டறிந்தனர். வெப்பக் கனலில் திரவமான இரும்பு செழிப்பான உலோகங்களின் காந்த சக்தி திரவம் குளிர்ந்து திடமாகிக் கடினமானதும் உட்கருவில் அடைபட்டு விடுகிறது ! “பூமியின் காந்த தளத்தின் மீது எரிமலைக் குழம்பு குளிர்ந்து படிந்ததும் அப்போதுள்ள புதிய காந்த தளத்தின் பதிவு நினைவு பற்றிக் கொள்கிறது. அவ்விதம் உண்டான எரிமலைக் குழம்பின் நினைவை அழிப்பது மிகக் கடினம். அதுவே பூகாந்தத்தின் பூர்வத் திசை அமைப்பின் (Paleomagnetic Direction) பதிவாகி விடுகிறது.” என்று பிராடு ஸிங்கர் கூறுகிறார்.

பரிதிக் காந்த முனைத் திருப்பத்தால் ஏற்படும் இயற்கைக் கேடுகள்
2012 டிசம்பர் 21 ஆம் தேதியை ஒரு பயங்கர தினமாக விஞ்ஞானிகள் மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறார் ! சூரியனில் 11 ஆண்டுகள் கடந்து மீண்டும் வரும் துருவ முனை மாற்றுச் சுற்றியக்கத்தில் வடதென் துருவங்கள் மாற்றம் அடையப் போகின்றன ! பரிதியில் இப்படித் திடீரென்று துருவ நகர்ச்சியும், மாற்றமும் ஏற்படுவது இயற்கை ! அவ்விதத் துருவ மாற்றங்கள் பரிதியின் காந்தத் தளங்களில் நேரிடும் “சீரமைப்பு மீளியக்கங்கள்” (Harmonic Cycles). துருவ முனைத் திருப்பங்கள் “சூரிய வடுக்கள் அல்லது தழும்புகள்” (Sun Spots or Sun Acnes) காரணமாக இருப்பதால் நிகழ்கின்றன. அல்லது பரிதியின் காந்த சக்தியால் நேரிடுகின்றன.
11,500 ஆண்டுகளில் மீண்டும் வரப் போகும் பயங்கரப் பனியுகக் காலத்தின் மையத்தில் புவி மாந்தர் இருப்பதாகப் பூதளவியல் விஞ்ஞானிகள் நினைவூட்டி வருகிறார். அந்தச் சுழல் நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது துருவத் திருப்பமும், பூத எரிமலை வெடிப்புகளும், அசுரப் பூகம்பங்களும், சுனாமிகளும், தீவிர ஹர்ரிக்கேன்களும் மக்களைப் பாடுபடுத்திக் கொந்தளிப்பில் தவிக்க வைக்கலாம் ! 2008 ஆம் ஆண்டில் மட்டும் கடந்த 200 ஆண்டுகளில் நேராத மூன்று அசுரப் பூகம்பங்கள் ஏற்பட்டு மக்களைப் பாதித்துள்ளன ! அவற்றைத் தூண்டும் மூல காரணங்களில் ஒன்றாகப் பூகாந்த முனை நகர்ச்சிகள் பங்கு பெறுமா என்பதைப் பூதள விஞ்ஞானிகள்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.
[தொடரும்]
+++++++++++++++++++
தகவல்:
Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.
1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)
3. Astronomy Facts File Dictionary (1986)
4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
6. Cosmos By Carl Sagan (1980)
7. Dictionary of Science – Webster’s New world (1998)
8. Physics for Poets By : Robert March (1983)
9. Atlas of the Skies (2005)
10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
11 Universe By : Roger Freedman & William Kaufmann III (2002)
11 (a) Earth Science & The Environment By : Graham Thompson & Jonathan Turk (1993)
11 Hutchison The Encyclopedia of Earth : Magnetism, Gravity & Heat (1985)
12 Science Daily : Magnetic Field Reversals Illuminated By Lava Flows Study [September 26, 2008]
13 Pure Energy System News : Earth’s Magnetic Field Reversal By : Mary-Sue Haliburton
14 Magnetic Storm Home Page What Drives Earth’s Magnetic Field (Oct 2003)
15 BBC News : Is The Earth Preparing to Flip ? By : David Whitehouse (March 27, 2003)
16 Scientific American Magazine – Our Ever Changing Earth – Probing the Geodynamo By : Gary Glatzmaier & Peter Olson (September 26, 2005)
17 Solar Pole Shift & Pole Reversal in 2012 -2013 (http://newsvote.bbc.co.uk/mpapps/pagetools ) By : Patrich Geryl (May 19, 2009)
18.http://worldlywise.pbworks.com/w/page/26834992/The%20causes%20and%20effects%20of%20earthquakes%20and%20how%20people%20respond%20to%20them
19. http://www.livescience.com/18426-earth-magnetic-poles-flip.html [February 10, 2012]
20. http://en.wikipedia.org/wiki/Geomagnetic_reversal [June 21, 2015]
21.http://www.spacedaily.com/reports/When_next_Earths_magnetic_field_reverse_begins_and_what_consequences_for_mankind_will_it_have_999.html [April 29, 2014]
22. http://www.sciencedaily.com/releases/2015/07/150707101952.htm [July 7, 2015]
23. http://www.spacedaily.com/reports/Improved_age_for_Earths_latest_magnetic_field_reversal_using_radiometric_dating_999.html [July 8, 2015]
24. https://www.ngdc.noaa.gov/geomag/faqgeom.shtml [Frequently Asked Questions]
******************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] July 9, 2015
பூகோள அச்சின் சாய்வு மாறுதல் சூடேற்ற நிலைப் பாதிப்பை உண்டாக்குகிறது
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
பூகோளம் மின்வலை யுகத்தில்
பொரி உருண்டை ஆனது !
ஓகோ வென்றிருந்த உலக மின்று
உருமாறிப் போனது !
பூகோள மஸ்லீன் வாயுப் போர்வை
பூச்சரித்துக் கந்தை ஆனது !
மூச்சடைத்து விழி பிதுக்க
சூட்டு யுகப்போர் மூளுது !
நோய் தொத்தும் பூமியைக்
குணமாக்க மருத்துவம் தேவை !
காலநிலை மாறுத லுக்குக்
காரணிகள் வேறு வேறு !
கரங் கோத்து பூமி காக்க
வருவீ ர் எனக் கூறு கூறு !
ஓரிடத்தில் எரிமலை கக்கி
உலகெலாம் பரவும்
கரும்புகை மூட்டம் !
துருவப் பனிமலைகள்
உருகி, உருகி
உப்பு நீர்க் கடல்தான் உயரும்!
பருவக் கால நிலை சீறி
தாளம் தடுமாறி
வேளை தவறிக் கால மாறாட்டம்,
கோடை காலம் நீடிக்கும்,
குளிர்காலம் குறுகிப் பனிமலைகள்
வளராமல்
சிறுத்துப் போகும்
துருவ முனைகளில் !
நிலப்பகுதி நீர்மய மாகும் !
நீர்ப்பகுதி நிலமாகிப் போகும் !
உணவுப் பயிர்கள் சேத மாகும் !
மனித நாகரீகம் நாசமாகி
புனித வாழ்வு மோசமாகி
வெறிபிடித் தாடும்
வெப்ப யுகப் பிரளயம் !
+++++++++++++++++++++++++
பூதளவியல் சீர்குலைப்பு, பருவச் சுழற்சி, காலநிலைப் பாதிப்புகளை விளைவிப்பதால், அது அனைத்துப் பூகோள மாந்தரின் பிரச்சனையாக ஆகிவிட்டது. அதைத் தீர்வு செய்ய முற்படும் போது, மனித இனத்தில் சில பிரிவினர் நிச்சயம் பாதிக்கப் படுவதைத் தவிர்க்க முடியாது. உலக சமூக மாந்தர் முன்வந்து, பூதள மாந்தர் உரிமை, தேவைகளை நோக்கி, அதைப் பயின்று ஆய்வு செய்து, முழுக் கவனமுடன் சீர்ப்படுத்த இப்போது எடுத்து நடத்த முற்பட வேண்டும்.
ஜான் கார்ல்சன் [சட்டப் பேராசிரியர், ஐயோவா பல்கலைக் கழகம்]
2013 மே மாதம் நவீன வரலாற்றில் முதன்முறையாக கரியமில வாயுத் திரட்சி 400 ppm [parts per million] என்று ஹவாயியில் உள்ள மௌனா லோவா நோக்ககக் கருவிகள் [Mauna Loa Observatory] காட்டி ஓர் எச்சரிக்கை அறிவிப்பாக நிபுணர் வெளியிட்டுள்ளார்கள். சென்ற முறை பூதளவியல் நிபுணர் இம்மாதிரி 400 ppm அளவு கரியமில வாயுத் திரட்சி [Concentration] இருந்தது முன்பு மூன்று – ஐந்து மில்லியன் ஆண்டுகளுக்கு இடையே “பிளியோசீன்” காலத்தில் [Pliocene Epoch] இருந்ததாக தற்போது நம்புகிறார்கள். அப்போது பூகோளத்தின் உஷ்ணம் : 3.5 முதல் 9 டிகிரி F [ 2 to 5 டிகிரி C ] இப்போது உள்ளதை விட மிகையாக இருந்திருக்கிறது. அந்தப் பிளியோசீன் யுகத்தில் மரங்கள் ஆர்க்டிக் கடல் வரை [Arctic Tundra] வளர்ந்திருந்தன. கடல் மட்டம் உயர்ந்து 65 அடி முதல் 80 அடி வரை பொங்கி எழுதிருந்தது !
ஜேம்ஸ் ஒயிட் [Director, CU-Boulder’s Institute of Arctic and Alpine Research]
அடிப்படை விதிப்படி ஆர்க்டிக் பனித் தளங்கள் உருகும் போது, ஆர்க்டிக் கடல் ஒரு பெரும் நீர்மை ஆவிப் போர்வை, முகிலை [Blanket of water vapour and clouds] உண்டாக்கி, ஆர்க்டிக் துருவப் பகுதியைச் சூடாக வைத்துக் கொண்டு வருகிறது.
ஜேம்ஸ் ஒயிட்.
“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது! அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்! அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும். சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன! அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின! அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன! நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது! வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்? அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”
அமெரிக்கன் முன்னாள் செனட்டர் அல் கோர் [Al Gore, American Former Senator/Vice President (June 5, 2005)]

“கடந்த பனியுகத்துக்கும் முன்பு உலகெங்கும் கடல் மட்டம் இன்றைக்கு உள்ளதை விட 20 அடி உயரத்தில் இருந்தது. சூடேறும் பூகோளம் மெல்ல மெல்லச் சூடேறி 129,000 ஆண்டுகளுக்கு முன்னிருந்த அந்தக் கடல் மட்ட நிலைக்கு அடுத்த நூற்றாண்டிலே மீண்டும் கொண்டு வந்துவிடும்.”
ரிச்சேர்டு ஹாரிஸ் [Richard Harris National Public Radio (March 26, 2006)]
“கிரீன்லாந்தின் பனிமலைகள் உருகிச் சரிந்தால் சில சமயம் பூகம்பங்களை உண்டாக்கிவிடும். கடந்த 5 ஆண்டுகளாக பூகம்ப எண்ணிக்கை உலகில் இரட்டித்திருக்கிறது. அவ்விதம் விரைவாக ஆர்க்டிக் பகுதிகள் சேமித்து வைத்துள்ள நீர் வெள்ளம் வெளியேறுவது பூகோளச் சூடேற்றத்தைக் காட்டும் மற்றுமோர் அடையாளம் என்று விஞ்ஞானிகள் எண்ணுகிறார் ! எதிர்பார்த்தை விட பனிமலைகள் உருகி வேகமாக நகர்ந்து வருகின்றன.”
கிரிஸ்டொஃபர் ஜாய்ஸ் [Christopher Joyce, National Public Radio (March 24, 2006)]
“55 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூகோளத்தில் தீவிரச் சூடேற்றம் உண்டாகி மீதேன் வாயு பேரளவில் வெளியேறி பல ஆழ்கடல் உயிரினம் அழிந்து போயின என்றும், அதே சமயத்தில் தளவியல் விலங்கினங்கள் பெருகி வளர்ச்சி அடைந்தன என்றும் இன்றைய (நவம்பர் 19, 1999) விஞ்ஞான இதழ் ஒன்று கூறுகிறது. அந்த மாதிரி வெப்ப யுகம் “சமீபத்திய பாலியோசீன் உச்ச வெப்பம்” (Latest Paleocene Thermal Maximum) என்று குறிக்கப்படுகிறது. அது 10,000 – 20,000 ஆண்டுகளுக்கு இடையே ஒருமுறை வருகிறது.”
ஜான் ரோச் [John Roach, Environmental News Network (Nov 19, 1999)]
“மீதேன் வாயு வெளியேற்றத்துக்கும், வெப்பச் சூடு ஏற்றத்துக்கும் உள்ள உறவு கடற்தளப் படிகைகளை [Ocean Floor Sediments] ஆராய்ந்து கண்ட விளைவுகளை வைத்துத் தீர்மானிக்கப் பட்டது. அதுவே வெப்ப ஏற்ற விதிக்கு முதல்தர ஆதாரச் சான்று. வெப்ப ஏற்றம் கடற்படிகையைச் சூடாக்கி திட மீதேனை நீர்த்திடச் செய்து [Hydrated Soild Methane (CH4)] வாயுக் குமிழ்களாய்க் கொப்பளிக்க வைக்கிறது. மீதேன் வாயு நீரில் கலந்துள்ள ஆக்ஸிஜெனுடன் சேர்ந்து ஏரிகளில் கரிமம் [Carbon] பிரிந்து கரிமச் சுற்றியக்கம் [ Global Exogenic Carbon Cycle] தொடர்கிறது.”
டோரோதி பாக், ஆய்வாளர், கலி·போர்னியா பல்கலைக் கழகம்
“உலகத்தின் ஜனத்தொகைப் பெருக்கம் 2050 ஆம் ஆண்டில் 9.1 பில்லியனாக ஏறப் போகிறது! அதனால் எரிசக்தி, நீர்வளம், நிலவளம், உணவுத் தேவைகள் பன்மடங்கு பெருகிப் பூகோளச் சூடேற்றத்தை மிகையாக்கப் போகின்றன. 15 ஆண்டுகளில் கிலிமன்ஞாரோ சிகரத்தில் [Mount Kilimanjaro, Tanzania, Africa] பனிச்சரிவுகள் எதுவு மில்லாமல் காணாமல் போய்விடும்! அமெரிக்காவில் உள்ள மான்டானா தேசியப் பூங்காவின் பனிச்சரிவுகள் தெரியாமல் போய் 20 ஆண்டுகளில் வெறும் பூங்காவாக நிற்கும். சுவிட்ஸர்லாந்தில் உள்ள ரோன் பனிச்சரிவுகள் ஏறக்குறைய மறைந்து விட்டன! அண்டார்க்டிகாவின் மேற்குப் பகுதியில் பாதியளவு பனிப்பாறைகள் உருகிப் போயின! அதுபோல் கிரீன்லாந்தில் அரைப் பகுதி பனிக் குன்றுகள் உருகிக் கரைந்து விட்டன! நியூ ஆர்லியன்ஸ் நகரை ஏறக்குறைய கடல்நீரும், நதிநீரும் மூழ்க்கி நாசமாக்கி நகர மாந்தரைப் புலப்பெயர்ச்சி செய்து விட்டது! வன்முறை மூர்க்கருக்கு மட்டுமா அமெரிக்கர் கவலைப் பட வேண்டும்? அந்தப் பயமுறுத்தல் ஒன்றுதானா நமது கவனத்தைக் கவர வேண்டும்? நமது நாகரீக வாழ்வும், பூகோள மாசுகளும் மோதிக் கொண்டிருப்பதை மெய்யெனக் கண்டு நாம் சாட்சியம் கூறி நிற்கிறோம்.”
அமெரிக்கன் முன்னாள் துணை ஜனாதிபதி அல் கோர் [Al Gore, American Former Vice President (June 5, 2005)]
பல்லாண்டுகள் பொய்யென ஒதுக்கணிக்கப்பட்ட பூகோளச் சூடேற்றமும், சூழ்வெளி ஓஸோன் வாயுக் குடையில் இழப்பும் தற்போது அகில நாடுகளின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது! ஓஸோன் பிரச்சனையைத் தீர்க்க அகில நாடுகள் கூட்டு ஒப்பந்தம் செய்து பெருத்த மாறுதல்கள் புரிய முனையும் போது, அமெரிக்கா தீவிரப் பங்கு எடுத்துக் கொள்ளாமல் வாளா விருக்கிறது! ஓஸோன் குறைபடுகளால் தீங்கு நேர்வதைக் காட்டும் போது மக்கள் புனைகதையாகப் புறக்கணிக்காமல் காதுகொடுத்துக் கேட்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளாக (1979-1989) நம்மைப் பாதித்த மாபெரும் அந்த ஓஸோன் சிக்கலுக்கு தீர்வு பெறுவது, மானிடருக்குப் பெரும் சவாலாகப் போகிறது! அமெரிக்காவில் ஓஸோன் பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண, சில ரசாயனப் பண்டங்களை உற்பத்தி செய்யக் கூடாதென்று கருத காங்கிரஸ் பேரவை முன் வந்திருப்பது வரவேற்கத் தக்கது. அவை ஓஸோனை விழுங்கும் “குளோரோ புளோரோ கார்பன்ஸ்” [Chloro Fluro Carbons (CFC)]
சூடேறும் பூகோளம் பற்றி அல் கோர்
பூகோளம் சூடேறும் என்றால் எதைக் குறிப்பிடுகிறோம் ?
பூகோளம் என்று நாம் சொல்லும் போது, மண் தளத்துடன் பூமியைச் சுற்றி ஐந்து அல்லது பத்துமைல் உயரத்தில் வாயுக்கோளக் குடையாக நிலவி பூமியின் தட்ப, வெப்பம் நிலையாகப் பருவ காலங்களில் குறிப்பிட்ட உஷ்ண நீட்சியில் [Temperature Range] வைத்துக் கொள்ளும் வாயு மண்டலத்தையும் சேர்த்துக் கொள்கிறோம். அந்த மெல்லிய வாயு மண்டலத்தில் நச்சு வாயுக்கள் கலந்து நாசமாக்கினாலும், ஓஸோன் துளைகள் ஏற்பட்டுக் கந்தையானாலும், பூமியின் ஈர்ப்பாற்றல் மாறி வாயுக்கள் மறைந்து போனாலும் பூமியின் காலநிலை மாறி சூட்டுப் பிரளயம் நேர்ந்துவிடும். வாயு மண்டலம் மறைந்து போனால் நீர்வளம், நிலவளம், உயிர்வளம் யாவும் சிதைந்து, சீர்குலைந்து பூகோளம் செவ்வாய்க் கோள்போல் நீர்மை, ஆக்ஸிஜென், ஹைடிரஜன் இல்லாமல் பாலைவனமாய் வரண்டு போய்விடும் ! சூழ்வெளியில் சேமிப்பாகும் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் (கார்பன் டையாக்ஸைடு, மீதேன் போன்ற வாயுக்கள்) பரிதியின் வெப்பத்தை விழுங்கிப் பூகோளத்தின் உஷ்ணத்தை மிகையாக்குகின்றன. ஓரளவு வெப்ப ஏற்றம் உயிரன வளர்ச்சிக்குத் தேவையே. ஆயினும் நிலக்கரி, இயற்கை வாயு, ஆயில் போன்ற “புதைவு எருக்கள்” [Fossil Fuel] வன மரங்கள் எரிப்புகளால் கிரீன்ஹவுஸ் வாயுக்கள் பேரளவில் சேமிப்பாகிப் பூகோள உஷ்ணம் விரைவாக ஏறுகிறது.
சமீபத்தில் வெளியான ஒரு விஞ்ஞான அறிக்கையில் மண்ணிலிருந்தும், 40,000 ஆண்டுகளாய்ச் சேமிப்பான பனிக்குவிப்பிலிருந்தும் மீதேன் வாயு பேரளவுக் கொள்ளளவில் வெளியேறுவதாகச் சூடேறும் பூகோள எச்சரிப்பாளர் எடுத்துக் கூறியுள்ளார். மீதேன் வாயுக் கசிவுகள் நிலக்கரி எரிசக்திப் புகைகளை விட 100 மடங்கு மிகையானவை என்று அறியப்படுகிறது. பூகோளச் சூடேற்ற விளைவுகளை ஒப்பிட்டால் மீதேன் வாயுவின் தீமை கார்பன் டையாக்ஸைடை விட 23 மடங்கு பெரியது. உலகில் பெரும்பான்மையான விஞ்ஞானிகள் சூடேறும் பூகோளத்தை மெய்யாகக் கருதி ஏற்றுக் கொண்டாலும், அம்மாறுதலை ஒப்புக்கொள்ளாத அறிஞரும், நாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் சூடேறிய பூகோளத்தால் மாறிப் போகும் காலநிலைகளும், அதனால் ஏற்படும் திடீர் விளைவுகளும் மெய்யாக உலக மக்களைப் பாதித்துக் கொண்டு வருவதை நாம் அடிக்கடிக் கேட்டு வருகிறோம்.

சூடேறும் பூகோள எச்சரிக்கைகள், மாறுதல்கள், இன்னல்கள் !
பூகோளம் சூடேறுவதால் ஒவ்வோர் ஆண்டும் காலநிலைக் கோர விளைவுகள் மாறி மாறி விளைந்து வியப்புக்குள் நம்மை ஆழ்த்துகின்றன. துருவப் பனிமலைகள் உருகிக் கடல் மட்டம் ஏறுவதைக் காண்கிறோம். கடல் வெள்ளம் சூடேறி சூறாவளிகளும், சைக்குலோன்களும், ஹரிக்கேன்களும் எண்ணிக்கையில் அதிகமாகி, பலத்தில் அசுரத்தனமாகிக் கோடான கோடி உலக மக்களுக்குப் பேரின்னல்களை விளைவித்து வருகின்றன. நீர்வளப் பகுதிகளின் நிலவளங்கள் தேய்ந்து வரட்சியாகிப் பாலையாகிப் போய்விடுமா என்னும் பயம் வந்துவிட்டது. மேலும் கீழ்க்காணும் நூதனக் காலநிலைக் கோர விளைவுகள் உலக மக்களைத் துன்புறுத்தி வருகின்றன !
1. கடந்த 30 ஆண்டுகளாய் உச்சக் கணிப்பு நிலை 4 & 5 ஹரிக்கேன்களின் [Hurricane Category: 4 & 5] எண்ணிக்கை இரட்டித்துள்ளது.
2. கடந்த 10 ஆண்டுகளில் கிரீன்லாந்து பனிப்பாறைகள் உருகிச் சரியும் நிகழ்ச்சிகள் இரட்டிப்பாக மாறி இருக்கின்றன.
3. குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன.
4. 7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.
3. குறைந்த பட்சம் 279 தாவர, விலங்கின ஜீவிகள் [Species of Plants & Animals] பூகோளச் சூடேற்றத்தால் பாதிக்கப்பட்டுத் துருவப் பகுதிகளை நோக்கிப் புலப்பெயர்ச்சி ஆகியுள்ளன.
4. 7000 அடி உயரத்தில் உள்ள தென் அமெரிக்காவின் கொலம்பியன் ஆன்டீஸ் மலைகளைப் போன்ற உயர்மட்டத் தளங்களில் கூட மலேரியா நோய் பரவி விட்டது.
மேலும் தொடர்ந்து சூடேற்றம் மிகையாகச் ஏறிச் சென்றால், கீழ்க்காணும் பெருங் கேடுகள் பரவ வாய்ப்புகள் உண்டாகும்.
1. அடுத்த 25 ஆண்டுகளில் பூகோளச் சூடேற்றத்தால் விளையும் மக்களின் மரண எண்ணிக்கை இரட்டிப்பாகி ஆண்டுக்கு 300,000 நபராக விரிவடையும்.
2. கிரீன்லாந்து, அண்டார்க்டிகாவின் பனிக்குன்றுகள் உருகி பூகோளக் கடல் மட்டம் 20 அடிக்கும் மேலாக உயர்ந்து, கடற்கரை நிலப்பகுதிகள் உலகெங்கும் பேரளவில் பாதகம் அடையலாம்.
3. 2050 ஆண்டு வேனிற் காலத்தில் வடதுருவத்தின் ஆர்க்டிக் கடல் பனித்தளம் இல்லாமல் நீர்த்தளமாகி விடலாம்.
Earth’s Axis Wobbles
4. 2050 ஆண்டுக்குள் உலகெங்கும் வாழும் மில்லியன் கணக்கான உயிர் ஜீவிகள் [Species] பரம்பரையின்றி முற்றிலும் மரித்துப் போய்விடலாம்.
5. வெப்பக்கனற் புயலடிப்புகள் [Intensive Heat Waves] உக்கிரமுடன் மிக்க அளவில் அடிக்கடித் தாக்கலாம்.
6. நீர்ப் பஞ்சம் ஏற்பட்டு, நிலவளம் சீர்குலைந்து வரட்சிகளும், காட்டுத் தீக்களும் அடிக்கடி உண்டாகலாம்.
சூடேறும் பூகோளத்தில் எழுகின்ற இந்த பிரச்சனைகளை ஐயமின்றி நாம் ஒன்று கூடித் தீர்க்க முடியும். அவற்றைத் தீர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் நமக்கோர் கடமை நெறியாக உள்ளது. நாம் தடுத்திடச் செய்யும் தனிப் பணிகள் சிறிதாயினும், மொத்தமாக ஒத்துழைத்து முடிக்கும் சாதனைகள் முடிவில் மிகப் பெரும் ஆக்க வினைகள் ஆகும். அவ்விதம் அனைவரும் ஒருங்கு கூடிப் பூகோளச் சூடேற்றத்தைத் தடுக்க முனையும் தருணம் எப்போது என்று நினைக்கிறீர்கள் ? இப்போதுதான் !
(தொடரும்)
தகவல்:
1. Time Article – The Global Warming Survival Guide [51 Things You Can Do to Make a Difference] (April 9, 2007)
2. An Inconvenient Truth “The Planet Emergency of Global Warming & What We can Do about it” By Al Core (2006)
2(a) The Assault on Reason By Al Gore (July 2007)
3. BBC News “China Unveils Climate Change Plan” [June 4, 2007)
4. BBC News “China Builds More (Coal Fired) Power Plants (June 20, 2007)
5. BBC News “Humans Blamed for Climate Change.” (June 1, 2007)
6. The Big Thaw, Ice on the Run, Seas on the Rise << National Geographic >> By Tim Appenzeller (June 2007)
7. Climate Change A Guide for the Perplexed << New Scientist >> (May 19 2007)
8. Historic Global Warming Linked to Methane Release, Environmental News Network By: John Roach (Nov 19 1999)
9. http://www.terradaily.com/reports/Ice_free_Arctic_winters_could_explain_amplified_warming_during_Pliocene_999.html [July 31, 2013]
10. http://www.livescience.com/topics/global-warming/ [August 6, 2013]
11. http://www.nrdc.org/globalwarming/ [August 14, 2013]
12. http://en.wikipedia.org/wiki/Global_warming [August 15, 2013]
13. http://www.answers.com/topic/global-warming
14. http://en.wikipedia.org/wiki/Effects_of_global_warming [August 9, 2013]
15. http://www.terradaily.com/reports/Seasonal_CO2_range_expanding_as_more_is_added_to_Earths_atmosphere_999.html [August 14, 2013]
16. http://www.terradaily.com/reports/Greenland_ice_is_melting_also_from_below_999.html [August 14, 2013]
++++++++++++++++++++
S. Jayabarathan [jayabarat@tnt21.com] August 16 28 2013)
உலகிலே பிரமிக்கத் தக்க ஜப்பானின் மிகப்பெரும் ஊஞ்சல் பாலம்

(1998)
[Japan ‘s Akashi Kaikyo Suspension Bridge]
சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா
பூர்த்தி அடைந்தது பூதப் பெரும்பணி!
பொன்முலாம் பூசும் மேற்கினில் பரிதி!
ஓங்கி உயர்ந்தது கோபுரப் பொன்பாலம்!
ஊஞ்சற் தட்டில் ஒய்யார மாக
பவனி வரும் அணி அணியாக
தரணியின் வாகனப் படைகள்!
பிரதம எஞ்சினியர்: ஜோஸஃப் ஸ்டிராவ்ஸ் (1937)
[Joseph Strauss, Chief Engineer, Golden Gate Bridge, San Francisco]
ஜப்பானில் பூர்த்தி அடைந்தது பூதப் பெரும்பணி!
1937 மே 27 ஆம் தேதி தங்கத்தில் வார்த்த இறுதித் தட்டாணியை [Golden Rivet] பொன்வாயில் பாலத்தில் புகுத்திய போது ‘பூர்த்தி அடைந்தது பூதப் பெரும்பணி ‘ [The Mighty Task is Done] என்று புகழ் பெறும் கவிதையை எழுதிப் பெரு மூச்சு விட்டார், தலைமை எஞ்சினியர் ஜோஸஃப் ஸ்டிராவ்ஸ்! உலகெங்கும் சுமார் 400 பாலங்கள் கட்டி அனுபவம் பெற்ற ஸ்டிராவ்ஸ் தனது முதல் சவாலாக பொன்வாயில் தொங்கு பாலத்தை அமைக்கும் இமாலயப் பணியை மேற்கொண்டார்! அலை வெள்ளமும், புயல் அடிப்புகளும், பூகம்ப ஆட்டங்களும் இன்னல் தரும் பசிபிக் வளைகுடாவில், பாலம் கட்ட முடியாது என்று பல்லாண்டுகள் பல எதிர்ப்பாளிகள் விட்ட சொல்லடிகளை மீறி, ஓர் அசுரத் தோற்றமுடைய கவின்மிகு பாலத்தைக் கட்டி முடித்தார், ஜோஸஃப் ஸ்டிராவ்ஸ்!
ஸ்டிராவ்ஸ் ஓர் உன்னத கட்டிடத் தளவாட எஞ்சினியர் [Structural Engineer] மட்டும் அல்லர். அவர் ஒரு கவிஞர், தீர்க்க தரிசி. கனவுகளுக்கு வடிவமும் இயங்கு சக்தியும் அளிக்கும் ஓர் ஆக்கவியல் துறைஞர். தொங்கு பாலத்தைப் பல நாட்களாய்க் கனவு கண்ட ஸ்டிராவ்ஸ், நாலரை ஆண்டுகளில் சிறப்பாகக் கட்டி முடித்து, உலகப் பெருஞ் சாதனைகளில் ஒன்றாக ஸான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாவில் பொன்வாயில் பாலத்தை அமைத்துக் காட்டினார். அமெரிக்காவின் கட்டிடப் பொறியியற் துறைக் குழுவினர் பொன்வாயில் பாலம் நவீன உலகின் ஏழு விந்தைகளில் ஒன்று என்று பறைசாற்றுகிறார்கள். அமெரிக்கா 1937 இல் வெற்றிகரமாக பசிபிக் வளைகுடாவில் முதல் நீண்ட ஊஞ்சல் பாலத்தைக் கட்டியது, உலகில் பலரது வல்லமைகளைத் தூண்டி விட்டு அதைவிடப் பெரிய தொங்கு பாலங்களைத் தோற்றுவிக்க வழி வகுத்தது!

ஜப்பானின் ஒப்பற்ற உலகப் பெரும் தொங்கு பாலம்!
அமெரிக்காவின் உன்னதப் பொன்வாயில் பாலத்தை விட, பிரமிக்கத் தக்க முறையில் பால அகற்சி [Span] அதிக முடைய உலகத்திலே மிகப் பெரிய பாலத்தை ஆகாஷி நீர்ச்சந்தியில் [Akashi Strait], ஜப்பான் கட்டி முடித்து 1998 ஏப்ரல் 5 ஆம் தேதி, வாகனப் பயணங்களுக்குத் திறந்து விட்டது! அப்பாலம் ஜப்பானின் அவாஜி தீவைக் [Awaji Island] கோபி நகருடன் [Kobe City] இணைக்கிறது. ஆகாஷி கைகியோ என்று அழைக்கப்படும் அப்பெரும் பால இணைப்பு, ஜப்பான் உள்நாட்டு வணிகத்துறை விருத்திக்கும், அன்னிய தொழிற்துறைக் கம்பெனிகள் நிதிநடவுக்கும் [Foreign Investments] வழி வகுத்துத் தொடர்புகள் ஏற்பட விதை யிட்டது.

1995 ஜனவரி 17 இல் 7.2 ரிக்டர் அளவில் ஆட்டிய ஹான்ஷின் பெரிய பூகம்பத்தில் [Great Hanshin Earthquake] கட்டிக் கொண்டிருந்த ஆகாஷி பாலத்தின் கோபுர அடித்தளக் கடற்தூண்களையும் [Caisson Foundations], ஆழமான ஆப்பு மேடைகளையும் [Anchorages] நிலநடுக்கம் அசைத்துப் பெரும் அச்சத்தை உண்டாக்கி விட்டது! நிலநடுக்கம் ஓய்ந்தபின் பாதக விளைவுகளைக் கருவிகள் மூலம் அளந்து பார்த்ததில், பூகம்பம் இரு கோபுர அகற்சி [Span] தூரத்தைச் சுமார் ஒரு மீடர் அதிகரித்து விட்டது! கோபுரத்தின் கடற்தூணுக்கும் அவாஜித் தீவுப் பக்க [Awaji Island] ஆப்பு மேடைக்கும் இடைப்பட்ட தூரத்தை 30 செ.மீ. மிகைப்படுத்தி விட்டது! ஆயினும் அச் சேதாரங்கள் யாவும் குறைந்த நிலை விளைவுகளே!

நிலநடுக்க உலுக்கு மையம் [Epicenter] 150 கி.மீ. தூரத்தில் தோன்றி உச்சமாக 8.5 ரிக்டர் அளவுக்குத் தாக்கினாலும், ஆகாஷிப் பாலம் தாங்கிக் கொள்ள அமைக்கப் பட்டது, ஜப்பானிய எஞ்சினியர்களின் கூரிய டிசைன் யூகங்களை, உலகப் பாராட்டுக்கு உரியனவாய் ஆக்கின. ஆகாஷிப் பாலத்தைக் கட்டி முடிக்க பத்தாண்டுகளும், 4.3 பில்லியன் டாலர் செலவும் ஆயின. பிரம்மாண்டமான அப்பாலத்தை கட்டிய நபர்களின் கூட்டு எண்ணிக்கை இரண்டு மில்லியன் என்று அறியப்படுகிறது! அத்தனை பேர்களில் பலர் பத்தாண்டுகள் கடற் பாலத்தில் நேரிடையாகப் பயங்கர வேலை செய்தாலும் ஒரு நபர் கூட உயிரிழக்க வில்லை என்னும் பாதுகாப்பு பணியாற்றல் ஒழுக்கம் அடுத்த பெரும் உலகப் பாராட்டுக்கு உரியது.
பிரளய இன்னல்கள் நிகழும் ஜப்பானில் பிரமிக்கத் தக்கப் பாலம்!
ஆகாஷி நீர்ச்சந்தியின் போக்குவரத்துச் சந்தடி மிக்கத் துறைமுகத்துக்கு நீந்திவரும் கப்பல்களின் எண்ணிக்கை, நாளொன்றுக்கு சராசரி 1400 என்று அறியப்படுகிறது! கோபி நகருக்கு மேற்கே 6 மைல் தூரத்தில் ஆகாஷி நீர்ச்சந்தி உள்ளது. நீர்ச்சந்தியின் அகலம் 2.5 மைல். அங்கே பாலம் ஏற்படுத்த வேண்டுமானால், கப்பல் நகர்ச்சிகளுக்கு எந்தவித இடையூறும் நேராதவாறு அமைக்க வேண்டும். பூகோள அமைப்பில் மிகக் கொடூரக் காலநிலை அபாயங்களைச் சூழ்ந்தது, ஜப்பான்! ஆகாஷி நீர்ச்சந்தியை அடிக்கடிக் கலக்கி அடிக்கும் அசுர சூறாவளிப் புயல்கள்! ஆண்டுக்குத் தவறாது சராசரி 57 அங்குல அளவில் கொட் டிப் பெய்யும் பேய் மழைகள்! சுனாமிகள் [Tsunamis] என்னும் ஹரிக்கேன்கள், நிலநடுக்கங்கள், எரிமலைகள் என்று அடுத்தடுத்துத் தாக்கும் இயற்கையின் திருவிளையாடல்களால் ஏற்படும் இடர்கள், இன்னல்கள், உயிரிழப்புகள், நிதி விரையங்கள் ஜப்பானில் கொஞ்சமல்ல!

அவ்விதப் பிரச்சனைகள் எல்லாவற்றையும் தாங்கிப் பிழைத்துக் கொள்ளும் ஓர் உறுதியான ஊஞ்சல் பாலத்தை [Suspension Bridge] உருவாக்க எஞ்சினியர்கள் எவ்விதச் சிக்கலான டிசைன்களைக் கையாண்டனர் என்பது நாம் அனைவரும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள். பாலத்தின் முழுநீளப் பாதைத் தட்டின் கீழ்ப்புறமும் கோணமுட்டு இரும்புச் சட்டங்கள் [Triangular Braces] கூடிய ஒரு கட்டமைப்பைப் [Truss] பிணைத்திருந்தனர். அந்தச் இரும்புச் சட்டங்கள் புயல் காற்றடிக்கும் சமயத்தில், பாலத்தட்டுத் திருகிச் சுருண்டு விடாதபடிப் பாதுகாப்பவை! மேலும் கோண விட்டக் கூட்டிணைப்புகள் பாலத்துக்கு உறுதி அளிப்பதோடு, காற்றடிக்கும் போது பாலத்தைக் குப்புறத் தள்ளும் பளுவைக் குறைத்து, எளிதாய்ப் புகுந்து வெளியேற வழி வகுக்கின்றன!
அடுத்து பாலத்தைத் தாங்கும் கோபுரத்தில் ஒவ்வொன்றும் 10 டன் எடையுள்ள 20 ‘இணங்கும் பளு முடக்கிகள் ‘ [Tuned Mass Dampers (TMD)] மாட்டப் பட்டன. கோபுரத்தின் மீது மோதும் காற்றுப் பளுவால் ‘நெளிவுகள் ‘ [Deflections], திருகு அதிர்வுகள் [Torsional Vibration] ஏற்படாதபடி பளு முடக்கிகள் பாதுகாக்கின்றன. காற்றடித்துக் கம்பம் ஒருபுறம் சாயும் போது, ஊஞ்சல் போன்ற [Swinging Pendulum] பளு முடக்கிகள் சுயமாக எதிர்ப்புறம் உருண்டு, செங்குத்து நிலை மீட்கப் படுகிறது. இவ்வித டிசைன் ஏற்பாட்டில் சூறாவளிப் புயல் மணிக்கு 180 மைல் வேகத்தில் அடித்தாலும், கோபுரங்கள் நிமிர்ந்த நிலைக்கு எப்போதும் கொண்டு வரப்படுகின்றன. உச்ச ரிக்டர் அளவு 8.5 பூகம்ப நிலநடுக்கம் ஆட்டம் ஏற்பட்டாலும், கோபுரங்கள் சாய்ந்து விடாமல் நிமிர்ந்த நிலையிலே நிற்க, பளு முடக்கிகள் துணை புரிகின்றன!

ஆகாஷி கைகியோ தொங்கு பாலத்தின் பொது அமைப்பு
ஆகாஷி கைகியோ பாலம், ‘முத்துப் பாலம் ‘ [Pearl Bridge] என்றும் அழைக்கப் படுகிறது. கைகியோ என்றால் நீர்ச்சந்தி [Strait] என்று அர்த்தம். ஆகாஷி நீர்ச்சந்தியில் 12828 அடி [3913 மீடர் (2.4 மைல்)] நீளம் கொண்ட ஆகாஷி பாலம் கோபி நகரை அவாஜி-ஷிமா தீவுடன் இணைக்கிறது. நீர்ச்சந்தியின் அகலம்: 2.4 மைல் [4 கி.மீ]. கடலில் நாட்டப்பட்ட இரண்டு கடற்தூண் மேடைகளின் கோபுரத்தின் மீது மாலை போல் தொங்கும் இரும்பு வடத்தில் [Cable] கட்டப்பட்ட செங்குத்து முறுக்கு நாண்கள் [Twisted Wire Ropes] காங்கிரீட் பாலத்தைத் தாங்கிக் கொண்டுள்ளன. இரண்டு முட்டுத் தூண்கள், மூன்று அகற்சி ஊஞ்சல் தட்டுகள் கொண்டு, பாலத் தட்டுகள் மூன்றும் முழு நீள இரும்புச் சட்ட உத்திரங்களால் உறுதியாக்கப் பட்டவை [3 Span, 2 Hinged Suspension Bridge with Steel Truss Stiffening Girder]. கடற்தூண் மேடைகளின் இடைவெளித் தூரம்: 6527 அடி [1990 மீடர் (1.2 மைல்)]. கோபுரத்தின் உயரம்: 928 அடி (283 மீடர்).
மூன்று பாலத் தட்டுகளில், மையத் தட்டின் அகற்சியே மிகையானது [1991 மீடர்]. மையத் தட்டின் இரு புறமுள்ள பக்கத் தட்டுகள் ஒவ்வொன்றின் நீளம்: 960 மீடர். கப்பல்கள் புகும் மையப் பாதையின் அகலம்: 1911 மீடர். டிசைனுக்கு உட்பட்டக் கடற்புயல் வேகம்: 100 mph. உச்ச சூறாவளிப் புயலின் வேகம் 180 mph வரை அடித்தாலும் பாலத்தின் தட்டுகளும், கோபுரங்களும் பளுவைத் தாங்கிக் கொள்ள டிசைன் செய்யப் பட்டுள்ளன. பூகம்ப நிலநடுக்கத்தால் 8.5 ரிக்டர் அளவு ஆட்டத்தையும் தாங்கிக் கொள்ளும் உறுதி படைத்தது, ஆகாஷிப் பாலம்.

கோபுரங்கள், இரும்பு வடங்கள், நாண்கள், சரக் கம்பிகள்
பாலத்தையும், இரு வடங்களையும் தாங்கும் கோபுரத்தின் எடை ஏற்கும் தகுதி: 23,000 டன். எடை தாங்கும் உச்சத் தகுதி: 50,000 டன்! தூரி வடங்கள் தூக்கிப் பிடிக்கும் பாலத்தின் 100,000 டன் பாரத்தைக் கோபுரம், சவாரி முதுகு [Saddles] மூலமாகத் தனது அடித்தளத் தூணுக்கு இறக்குகிறது! கோபுரத்தின் உயரம் கடல் மட்டத்துக்கு மேல் 990 அடி [297 மீடர்]. உலகத்திலே எல்லாவற்றையும் விட உயரமானவை, இந்தக் கோபுரங்கள்! அவற்றின் அகலம் 118-155 அடி [35.4-46.5 மீடர்]. கோபுரத்தின் உடம்பு, ஒவ்வொன்றும் 33 அடி உயரமுள்ள 30 அடுக்குச் சட்டங்களால் [30 Tier Frames] பிணைக்கப் பட்டுள்ளது. கடற் காற்றும், புயல் காற்றும் கோபுரத்தைச் சாய்க்கும் போது, அதை எதிர்ப்புறம் இழுக்கும் ‘இணங்கும் பளு முடக்கிகள் ‘ [Tuned Mass Dampers (TMD)] கோபுரத்தில் 20 பகுதிகளில் சேர்க்கப் பட்டுள்ளன. பளு முடக்கியில் நகரும் ‘ஊஞ்சல் உருளை ‘ [Pendulum] இருபுறமும் ஆடி, கோபுரச் சாய்வை ஈடு செய்கிறது. கடல் மட்டத்தில் இருதூண்களின் இடையே உள்ள அகற்சி 1.24 மைல் இருப்பதாலும், பூமியின் மேனி கோளமாக வளைவதாலும், கோபுர உச்சிகளுக்கு இடையே உள்ள தூரம், கடல் மட்டநிலை தூரத்தை விட 9.3 செ.மீ. மிகையாக இருக்கிறது!

கோபுரத்தைத் தாங்கும் கடற்தூண் மேடை 30,000 டன் எடை கொண்டு, 60 கடற்தூண் நங்கூரச் சுருள் தண்டுகளால் [Anchor Bolts] பிணக்கப் பட்டுள்ளது. பாலத்தின் கீழ்ச்சட்டம் கடல் மட்டத்திலிருந்து 215 அடி [65 மீடர்] உயரத்தில் அமைந்துள்ளது. பாலத்தின் அடியில் புகுந்து செல்லும் கப்பலின் உயரத்தை, இந்த வரை அளவு கட்டுப் படுத்துகிறது. மலைப் பாம்புபோல் தொங்கும் வடத்தின் விட்டம்: 4 அடி [1.22 மீடர்]! முறுக்கிய கம்பிகளைக் கொண்ட 290 நாண்களை [Strands] உள்ளடக்கியது, ஒரு வடம் [Cable]. ஒவ்வொரு நாணிலும் 127 சரக் கம்பிகள் [Wires] சடைபோல் பின்னப் பட்டுள்ளன. முறுக்குச் சர நாணின் விட்டம்: 2.7 அங்குலம் [6.8 செ.மீ.]. சரக் கம்பியின் விட்டம்: 5.23 மில்லி மீடர். வடக் கம்பிகளின் மொத்த முழு நீளம்: 180,000 மைல் [300,000 கி.மீ]! இந்த நீளத்தைப் பூமியின் மத்திம சுற்றளவில் சுற்றினால் 7.5 முறைச் சுற்றலாம்!

செங்குத்தாகத் தொங்கும் நாணின் விட்டம்: 4.25 அங்குலம் [8.5 செ.மீ.]. ஒவ்வொரு நாணிலும் 85 சரக் கம்பிகள் சடைபோல் பின்னப் பட்டுள்ளன. சரக் கம்பியின் விட்டம்: 7 மில்லி மீடர். மூன்று பாலத் தட்டுகளையும் தாங்கிக் கொண்டிருக்கும் செங்குத்து நாண்களின் மொத்த எண்ணிக்கை: 1068. வடக் கம்பிகளில் துருப் பிடிக்காமல் இருக்க, ஒப்பு நீர்மைத் திணிப்பு [Relative Humidity] 60% உச்ச அளவைத் தாண்டாமல் [பொதுவாக 40% வரட்சியில்] கட்டுப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப் படுகிறது!
கோபுரங்களின் அடித்தளக் கடற்தூண், ஆப்பு மேடைகள்
கடலின் ஆழத்தில் காங்கிரீட் தூண்களை [Caisson Foundation] நட்டு அவற்றைச் சுற்றி இணைத்த காங்கிரீட் மேடையின் பரிமாணம்: விட்டம் 262 அடி [80 மீ], உயரம்: 230 அடி [70 மீ] [கடலுக்குக் கீழே 60 மீடர், கடலுக்கு மேலே 10 மீடர்]. கோபுரங்கள் இரும்பு உத்திரங்களால் இணைக்கப் பட்டவை! இரும்புக் கோபுரத்தைத் தாங்கும் காங்கிரீட் மேடை [Concrete Pier] 115 அடி அகலம் [35.5 மீ], 45 அடி ஆழம் [14 மீ]. அடித்தள கடற்தூண் மேடை 100,000 டன் எடையைத் தாங்க வல்லது!

மேல்நிற்கும் 120,000 டன் எடையைத் [கோபுரம் +மேடை] தாங்க, கடல் அடித் தளத்தைத் தோண்டிப் பண்பட்ட பாறைத் திட்டுகள் மீது குழியிடப் பட்டு, காங்கிரீட் கடற் தூண்கள் பல ஊன்றப் பட்டுள்ளன. அவற்றை எல்லாம் இணைக்கும் வட்டக் கிணற்றில் சிறப்பான காங்கிரீட் [Underwater Non-disintegration Concrete] ஊற்றி உலர வைக்கப்படும். அந்த சிறப்புக் காங்கிரீட் கடல் நீரிலும் உலர்ந்து இறுகும் தன்மை பெற்றது!
ஆகாஷி பாலத்தின் வடக்கிலும், தெற்கிலும் முனைமுகப்பில் பூமியை ஆழமாகத் தோண்டி, 24 மீடர் கீழாகப் பாறைகள் காணப்பட்டுக் குழி தோண்டி 350,000 டன் காங்கிரீட் கொட்டப்பட்டு, ஆப்பு மேடைகள் இரண்டு அமைக்கப் பட்டுள்ளன. விட்டம் 280 அடி [85 மீ.], உயரம் 215 அடி [65 மீ.] அளவு கொண்ட ஆப்பு மேடைகளே பாலத் தட்டுகளைத் தாங்கும், தூரி வடங்களை இழுத்துப் பிடித்துக் கொள்கின்றன. வடங்களில் அதனால் ஏற்படும் இறுக்கம் [Tension] கோபுரங்களின் செங்குத்து நிலையை எப்போதும் நிரந்தரப் படுத்துகின்றன. ஆப்பு காங்கிரீட் இரும்பு மேடை ஒன்றின் எடை மட்டும் 1200,000 டன்!
Tuned Mass Dampers [மீட்டிய பளு தணிப்பிகள்]

1995 இல் ஏற்பட்ட ஹான்ஷின் பூகம்பச் சோதனை விளைவுகள்
ஆகாஷி கைகியோ பாலம் கட்டி வரும் போது, கோபி நகரில் 1995 ஜனவரி 17 ஆம் தேதி எதிர்பாராதவாறு, இயற்கை தனது பயங்கர பூகம்பச் சோதனையைச் செய்து, நில ஆட்டத்தில் தேர்ச்சி பெற்ற பாலத்தின் முக்கியக் கடற்தூண் மேடைகளுக்கும், ஆப்பு மேடைகளுக்கும் [Caisson Foundations & Side Anchorages] சான்றிதழ் அளித்தது! ஹான்ஷின் பூகம்பம் 7.2 ரிக்டர் அளவில் பூமியை ஆட்டியது! கோபி நகர்ப் புறத்தே 6000 மக்கள் மாண்டனர்! ஆகாஷி பாலத்துக்கு 30 மைல் ஆரத்தில் கட்டிடங்கள், மற்ற பாலங்கள் தகர்ந்தன! நிலநடுக்கத்தின் ‘உலுக்கு மையம் ‘ [Epicenter] கோபி நகருக்கு அப்பால் ஆகாஷி பாலத்தின் தென்திசை முனைக்கு அருகே தோன்றியது! பூகம்பம் ஏற்பட்ட சமயத்தில் பாலத்தில் கட்டி முடிந்தவை: கோபுரங்களைத் தாங்கும் இரு கடற்தூண் மேடைகள், வடத்தின் முனைகளை இழுத்துக் கட்டும் இரு ஆப்பு மேடைகள், கோபுரங்கள், கோபுரச் சவாரி முதுகில் [Saddle] தூரிபோல் தொங்கும் நீண்ட வடங்கள்! வடங்களின் மீது பாலத்தட்டு [Bridge Deck] கட்டத் துவங்கிய போதுதான் நிலநடுக்கம் ஆரம்பித்தது!

நல்ல வேளையாக ஆகாஷிப் பால மேடைகளுக்குச் சிறிய சிதைவுகளே ஏற்பட்டன! முக்கிய காரணம்: முழு நீள வடம் கோபுரம் மீது இருபுறமும் தொங்க விடப்பட்டு, இறுக்கம் [Tension] சீர்ப்படுத்தப் பட்டு முனைகள் இழுத்துக் கட்டப் பட்டிருந்தன. அதனால் கோபுரங் களுக்கு நல்ல பாதுகாப்புத் துணை முட்டுகள் கிடைத்தன. ரிக்டர் அளவு 8.5, சூறாவளிப் புயல் மணிக்கு 180 மைல் வேகம் உச்சமாகத் தாங்கும் ஒரு உன்னத டிசைனில் உருவான ஆகாஷி பாலத்தின் பாகங்களை, ஹான்ஷின் பூகம்பம் பெருமளவு சிதைக்க முடிய வில்லை!
நிலநடுக்கம் ஓய்ந்த பின்பு, எஞ்சினியர்கள் சோதனை செய்ததில் கண்ட பழுதுகள் பின்வருமாறு:
- நிலநடுக்க ஆட்டத்தின் முடிவில் நிலநகர்ச்சி ஏற்பட்டதால், பாலத்தின் தென்திசைக் கோபுர கடற்தூண் மேடை 80 செ.மீ. தென்புறம் நகர்ந்தது! அதாவது பாலத்தின் முக்கிய அகற்சி [Main Span (1991 மீ)] 80 செ.மீ. மிகையானது!

2. கோபுரத்தின் சிகரம் 10 செ.மீ. தெற்கே சாய்ந்து விட்டது!
3. பக்கவாட்டுப் பாலத்தட்டு [Bridge Deck] தென்திசையில் 30 செ.மீ. மிகையானது!
4. ஊஞ்சல் பாலத்தின் மொத்த நீளம் 110 செ.மீ. [>1 மீடர்] அதிகமானது!
5. மேற்கூறிய பழுதுகளால் தூரி வடத்தின் தொங்கல் [Main Cable Sag] 130 மீடர் மிகையாக்க வேண்டிய தாயிற்று!
ஜப்பான் எஞ்சியர்கள் செய்த ஆகாஷி பாலத்தின் அபாரப் பாதுகாப்பு டிசைன் திறமையை, ஹான்ஷின் பூகம்பம் நிரூபித்துக் காட்டியது! நிலநடுக்க விளைவுகளால் பாலத்தில் மாற்றுத் திட்டங்கள், பராமரிப்பு வேலைகள் செய்ய நேரிட்டாலும், கால தாமதம் எதுவுமின்றி பாலம் உறுதி யளித்த நாளில் [1998 வசந்த காலம்] பூர்த்தி யானது!

இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் உருவாகும் சைனாவின் மிக நீண்ட பாலம்
சைனாவின் ஜியாங்சு மாநிலத்தில் உள்ள யாங்ஸி ஆற்றைக் கடக்க இரட்டைப் பாலத் தொடர்பை [Bridge Complex] அமைக்க 2000 அக்டோபரில் ஆரம்பப் பணிகள் துவங்கின. அப்பாலத் தொடர்பில் முக்கியமாக 1490 மீடர் நீளமுள்ள ஊஞ்சல் பாலமும் [Suspension Bridge], 406 மீடர் நீளமுள்ள நாண் இழுப்புப் பாலமும் [Cable-Stayed Bridge] கட்டத் திட்டமிடப் பட்டுள்ளன. ‘ரூனியாங் பாலம் ‘ [Runyang Bridge] எனப் பெயர் பெற்ற அப்பாலப் பாதையின் மொத்த நீளம்: சுமார் 14 மைல் [23 கி.மீடர்.]. பால நீளத்தில் முதன்மை இடத்தைப் பெற்றாலும், ஊஞ்சல் அகற்சி [Suspension Span] 4967 அடி [1490 மீடர்] உடைய ரூனியாங் பாலம் உலகத்தில் ஜப்பான் [Akashi Kaikyo (1991 மீடர்)], டென்மார்க் [Great Belt East (1624 மீடர்)] ஆகியவற்றுக்கு அடுத்த மூன்றாவது இடத்தைப் பெறுகிறது. ஜப்பான் ‘ஆகாஷி கைக்கோ பாலம் ‘ 1998 ஏப்ரல் 5 ஆம் தேதி ஆரம்ப விழாவைக் கொண்டாடியது. டென்மார்க் ‘கீழ்த்திசைப் பெருவளையப் பாலம் ‘ 1998 ஜூன் 14 ஆம் நாள் துவக்க விழாவை நிகழ்த்தியது.

சைனாவில் ஜப்பானின் ஆகாஷி கைகியோ நீளத்தையும் கீழாக்கும் உலகப் பெரும் பாலங்கள் ஜியாவோஸுவான் [Jiaozhouwan (1652-1800 மீடர்)], கியாங்ஸோ [Qiongzhou (2000-2500 மீடர்)] ஆகியவை திட்டமிடப் பட்டுள்ளன! இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் உலகத் தொழில் வளர்ச்சி நாடுகளுடன் போட்டியிட்டுச் சைனா நாளுக்கு நாள் முன்னேறி வருவது, இப்புதிய திட்டங்கள் மூலம் நமக்கு வெள்ளிடை மலைபோல் பளிச்செனத் தெரிகிறது!
தகவல்:
1. Akashi Kaikyo Bridge -A 10 Year Project.
2. World ‘s Longest Suspension Bridge Opens in Japan By: James D. Cooper [Aug 1998]
3. Structure of Akashi Kaikyo Bridge [www.structurae.de/en/structures/data/str0001.php]
4. Akashi Kaikyo Bridge Opens [www.dec.ctu.edu.vn/ebooks/jetro/98_06.html]
5. History of Akashi Kaikyo Bridge Dates & Events
6. Akashi Kaikyo Bridge -Outline, Basic Design & Construction.
7. Two Millennia – Two Long-Span Suspension Bridges By: Eur Ing Juhani Virola [Dec 2002]
8. http://www.pbs.org/wgbh/buildingbig/wonder/structure/akashi_kaikyo.html
9. http://www.jb-honshi.co.jp/english/bridgeworld/bridge.html
10. http://www.bing.com/videos/search?q=akashi+kaikyo+bridge&qpvt=Akashi+Kaikyo+Bridge&FORM=VDRE
11. https://en.wikipedia.org/wiki/Hangzhou_Bay_Bridge [July 23, 2015]
12. https://en.wikipedia.org/wiki/Akashi_Kaiky%C5%8D_Bridge [January 27, 2016]
+++++++++++++++
S. Jayabarathan [jayabarathans@gmail.com] February 14, 2016 [R-1]
எரிமலை, பூகம்பத்தை எழுப்பிடும் பூமியின் உட்கருப் பூத அணு உலை (Geo-Reactor)
சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா
+++++++++++++
காலக் குயவன் ஆழியில் படைத்த
ஞாலத்தின் நடுக் கருவில்
அசுர வடிவில்
அணுப்பிளவு உலை ஒன்று
கணப்பளித்து வருகுது
பில்லியன் ஆண்டுகளாய் !
எருப் பொருளை இடையே
பெருக்கும்
வேகப் பெருக்கி அணு உலை !
உட்கரு உள்ளே
கட்டுப் பாடுடன் இயங்கியும்
நிறுத்தம் அடைந்தும்
விட்டு விட்டு வேலை செய்வது !
வெளிக் கருவிலே
கனல் குழம்பைச் சமைத்துக்
கொதிக்க வைக்குது !
குவல யத்தைக்
குத்தூசி போல் குடைந்து
பீறிடும் எரிமலைகள் !
தாறு மாறாய்
ஊர்ந்து நெளியும்
தாரணியின் குடல் தட்டுகள் !
அங்கிங் கெனாதபடி
பொங்கிப் பீறிடும்
பூதக் கனல் எரிமலைகள் !
நர்த்தனம் புரியும் நில நடுக்கம் !
அணு உலை வெப்ப மீறலைத்
தணிப்பவை அவை !
உட்கருவின்
பூத அணு உலையே
பூமியின்
அச்சைச் சுழற்றி
ஆட்டி வைக்கும் மின்ஜனனி !
++++++++++
புதிய உமர் கயாம்
“பூமியின் மையத்து வரை ஒரு துளையைத் தோண்டிச் சென்றால் நாம் எதைக் காண்போம் ? உட்கருவின் நடுவில் இயற்கை அணு உலையாய் இயங்கி வரும் 5 மைல் விட்டமுள்ள யுரேனியக் கோளம் ஒன்றிருப்பதை ஊகித்து உடன்பட வைக்க ஆதாரம் உள்ளது. அதை நான் ‘புவி அணு உலை’ (Geo-Reactor) என்று குறிப்பிடுகிறேன்.”
“பிரபஞ்சம், பூகோளம் ஆகியவற்றின் மெய்யான இயற்கை அமைப்பைக் கண்டுபிடிப்பதும், அந்த அறிவை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதும் விஞ்ஞானத்தின் முக்கிய குறிக்கோளாகும். அந்தப் பணியைத்தான் நான் இப்போது செய்து வருகிறேன்.”
மர்வின் ஹெர்ன்டன் Ph.D., (Marvin Herndon, President Transdyne Corpn, San Diego, California)
“ஐஸ்லாந்தின் எரிசாம்பல் முகில் (Plume) விஞ்ஞானத்துக்குக் கிடைத்த ஓர் இயற்கைக் கொடை (Boon to Science).”
பிரையன் ஹான்ட்வெர்க் (Brian Handwerk, National Geographic News)
பூகோளத்தின் மையத்தில் இயங்கும் வேகப் பெருக்கி அணு உலை
உலக நாகரீகக் குடிமக்களுக்குப் பெருந்தீங்கு விளைவிப்பது பூமியின் உட்கரு வெப்ப மீறலே தவிர மெதுவாக மாறிவரும் சூழ்வெளிப் பருவ நிலை மாற்றங்கள் அல்ல ! கலிலியோ பூமி நகர்கிறது என்று கண்டுபிடித்தார். காப்பர்னிக்கஸ் பூமி பரிதியைச் சுற்றி வருகிறது என்று கண்டுபிடித்தார். டெஸ்மார்க்கின் வெளியீட்டில் கவரப்பட்ட ‘டாம் சாக்கோ’ (Tom Chalko, inspired by Desmarquet’s Report) நமது பூமிக் கோளின் திண்ணிய உட்கரு (Earth’s Solid Inner Core) உண்மையில் ஓர் அணு உலை என்று 2000 ஆண்டில் கண்டுபிடித்தார். அணு உலையின் வெப்ப ஆற்றலே வெளிக்கருவில் உள்ள உலோகங்களைக் கொதிக்கும் குழம்பாக மாற்றி வைத்துள்ளது. அந்த அணுக்கரு உலை மையத் திரிவாக (Eccentric) அமைந்திருக்கிறது. தானாக இயங்கியும் இடையிடையே தானாக நிறுத்தம் அடைந்தும் வரும் மைய அணு உலையே பூமியின் மேற்தளத்தில் அடுத்தடுத்து நில நடுக்கங்களை உண்டாக்கியும், எரிமலைகளை எழுப்பியும் வருகிறது !
பூமியின் துருவப் பனிப்பாறை முகப்புகள் உருகிப் போவதற்கு முக்கியக் காரணம் பூஜிய டிகிரி செல்ஸியஸ் உஷ்ணத்துக்கு மேல் சூடேறும் காற்றென நாம் கருதக் கூடாது ! துருவங்களின் பனிப் பாறைகளைச் சூடாக்கி உருக்குவது பூமியின் உட்கருவிலிருந்து வெளியாகும் வெப்பமே (Overheating of the Earth’s Core) தவிர பூகோளச் சூடேற்ற மில்லை என்பது இப்போது விஞ்ஞானிகள் கருதும் புதிய கருத்து ! எரிமலைகள் மீண்டும் பீறிட்டெழுவதும், நில நடுக்கம் திடீரெனத் தாக்கித் தகர்ப்பதும் சூடேறிய பூமியின் மைய அணுப்பிளவு உலை குளிர்ந்து போகத் தேவைப் படுவதால் தவிர உட்கரு ‘படிமச் சுருக்கம்’ அடைவதால் (Crystallization) அல்ல ! இயங்கும் எந்த அணுப்பிளவு உலையும் வெப்ப மீறல் ஆபத்தில் (Danger of Over-heating) சிக்கிக் கொண்டு சிதைவு அடையக் கூடாது !
ஆர்டிக், அண்டார்க்டிக் துருவப் பனிக்குன்றுகளில் பெருமளவுப் பகுதிகள் ஏற்கனவே உருகி நீராகிக் கடல் உயரத்தை மிகையாக்கி விட்டன ! 2000 – 2003 ஆண்டுகளுக் கிடையில் மட்டும் அண்டார்க்டிக் பனிக்குன்றுகளின் உருகுதல் 8 மடங்கு அதிகரித் துள்ளது ! சரிந்த பனிக்குன்றுகள் நழுவிக் கடலில் மூழ்கும் போது சுனாமியைத் தூண்டுவதோடு கடற்கரைப் பகுதிகளைக் கடல் வெள்ளம் மூழ்க்கி விடுகிறது ! எரிமலைகள் கண்விழித்து ஆர்டிக் கடலடியிலும் அண்டார்க்டிக் ஆழப் பகுதிலும் எழும்புகின்றன ! அண்டார்க்டிக்கைச் சுற்றியிருக்கும் கடலில் 5 கி.மீ. (3 மைல்) ஆழத்தில் உள்ள நீர், திணிவு குன்றி உப்பளவும் குறைந்து (Less Dense & Less Salty) அண்டார்க்டிக்கின் அடித்தளம் உருகிப் போகிறது என்பதை உறுதிப் படுத்துகிறது ! தூயப் புதுநீர் உப்புக் கடல்நீரை விட திணிவு குறைந்து மேலே மிதக்க வேண்டுமல்லவா ? அவ்விதம் நிகழ்வதில்லை. அதாவது அண்டார்க்டிக்கின் மேற்தளம் உருகாமல் பேரளவில் அடித்தளக் குன்றுகள் மட்டும் இளகிக் கீழே தூய நீராகத் தங்கி விடுகின்றன !
பூகம்ப எண்ணிக்கையும், தகர்ப்பாற்றலும் மிகையாகி வருகின்றன
கடந்த நாற்பது ஆண்டுகளாக நில நடுக்கத்தின் எண்ணிக்கை, தீவிரம், வலுவாற்றல் யாவும் ஏறிக் கொண்டே போகின்றன. 1973 இல் அமெரிக்கப் பூதளவியல் ஆய்வு நோக்ககம் (USGS -US Geological Survey) 7.0 ரிக்டர் அளவுக்கு மீறிய பூகம்பங்களின் தகர்ப்பாற்றல் 6 மடங்கு அதிகரித்து உள்ளதாக வெளியிட்டிருக்கிறது. மெல்ல மெல்ல காலநிலை உஷ்ணம் ஏறும் போது ஒரு டிகிரிக்குக் குன்றிய தசமத்தில் கூடினாலும் நிலநடுக்கங்கள் 5 மடங்கு பெருகிய ஆற்றலில் தகர்க்கின்றன ! நாசா விஞ்ஞானிகள் கூறுவது : பூமியானது தான் வெப்ப சக்தியை எதிரனுப்ப முடிவதைப் போல் பரிதியி லிருந்து பெறும் சக்தியைப் பேரளவில் (0.85 MegaWatt per Sq km) உறிஞ்சிக் கொள்கிறது. சூழ்வெளி மாசுக்கள் இப்போது பெருகி வருகின்றன. பூமியைத் தாக்கும் சூரியக் கதிர்வீச்சு இயக்கங்கள் பரிதித் தேமல்களால் (Sun Spots) 2012 ஆண்டு வரை மிகையாகி வரும். 2000 -2003 இந்த மூன்று ஆண்டுகளில் ஏன் அண்டார்க்டிக் அடித்தளப் பனிக் குன்றுகளின் உருகல் 8 மடங்கு அதிகரித்திருக்கிறது ? அந்தக் கால இடை வெளியில் பரிதியின் வெப்ப வீச்சு அண்டார்க்டிக் பகுதியில் எட்டு மடங்கு மிகையாகப் பொழிய வில்லை ! பூகோளச் சூடேற்றமும் அந்த அளவுக்கு திடீரென ஏறவும் இல்லை. ஆதலால் அண்டார்க்டிக் பனிக் பாறைகள் உருகக் காரணம் பூமியின் உட்கருவில் உள்ள அணுப்பிளவு இயக்கம் பெருகி வெப்ப சக்தி உள்ளிருந்து மேலெழுந்துள்ளதையே காட்டியுள்ளது.
பூகோளச் சூடேற்றம் அண்டார்க்டிக் கடற் பகுதி ஆழத்தில் பனி உருகி உப்பு சிறுத்த, தணிவும் குறைந்த நீர் சேமிப்புக்குக் காரணமாக இருக்க முடியாது ! புவி மையத்தில் இயங்கி வரும் அணுக்கரு உலை வெப்பம் மீறி எழுந்து அப்படிச் செய்திருக்க முடியும் என்று ஒப்புக் கொள்ளலாம். அதாவது புவி மையத்தில் உள்ள அணு உலையின் கனல் எழுச்சியைத் தணிக்க, “வெப்பத் தணிப்பியாக” (Heat-Sink) அண்டார்க்டிக் பனிக் கண்டம் ஒன்று மட்டும்தான் உதவ முடிகிறது ! அதாவது பூமியின் உட்கரு அணு உலைக்கு நேர் மேலே இருப்பது அண்டார்க்டிக் பனிப் பாறைகள் என்று நாம் ஊகிக்கலாம் !
பூமி மையத்தில் உள்ள பூத அணுக்கருப் பிளவு உலை
ஆதிகாலப் பிள்ளைப் பூமியானது (Baby Earth) பரிதியிலிருந்து பிரிந்து உட்கரு உலோகக் கோளமான ஓர் நீர் அண்டம் என்பதை அறிவோம். சூடான திரவக் குழம்பில் திரண்டு பரிதியை மூலத் தட்டு வடைபோல் (Primordial Disc) சுற்றிக் குளிர்ந்த ஓர் உருண்டையே நமது பூர்வ பூமி ! திணிவு மிக்க திரவ உலோகங்கள் (Densest Metals) ஈர்ப்பாற்றலால் கீழாகப் படிந்தும், நிறை மெலிந்த கனிமங்கள் மேலே மிதந்தும் பூமியின் மேற்தளம் மட்டும் குளிர்ந்தது. யுரேனியம், தோரியம் போன்ற உலோகங்கள் மிகத் திணிவு பெற்றவை.
உதாரணமாக யுரேனியத்தின் திணிவு (Density) : 19 கிராம் /கியூபிக் செ.மீ. (19 gram per cubic cm). யுரேனியம் ஈயத்தை விட 1.6 மடங்கு திணிவு உள்ளது. தோரியத்தின் திணிவு : 11.7 கிராம் /கியூபிக் செ.மீ. புளுடோனியத்தின் திணிவு : 19.7 கிராம் /கியூபிக் செ.மீ. இம்மூன்று கன உலோகங்களும் மற்ற கன உலோகங்களோடு சேர்ந்து பூமியின் மையக் கருவில் படிந்திருக்கலாம் என்று அழுத்தமாக ஊகிக்க இடமிடுக்கிறது.
தானாக நியூட்ரான்கள் தாக்கும் போது அணுப்பிளவில் அணுசக்தி உண்டாக்கும் மூன்று கன உலோகங்கள் : யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239. யுரேனியம் 238 உலோகத்தை வேக நியூட்ரான் தாக்கும் போது, யுரேனியம் -238 புளுடோனியம் -239 ஆக மாறுகிறது. அதுபோல் தோரியம் -232 உலோகத்தை நியூட்ரான் தாக்கும் போது, தோரியம் -232 யுரேனியம் -233 ஆக மாறுகிறது.
யுரேனியம் -235, யுரேனியம் -233, புளுடோனியம் -239 ஆகிய மூன்றும் சுயமாக நியூட்ரான்களை வெளியேற்றி அவை அந்தக் கன உலோகங்களைத் தாக்கிப் பிளக்கும் போது அணுசக்தியை உண்டாக்குகின்றன. பெரும்பான்மையாகப் பூமியில் கிடக்கும் யுரேனியம் -238 இல் சிறிதளவு யுரேனியம் -235 உள்ளது. ஆகவே முதலில் நிகழும் யுரேனியம் -235 நியூட்ரான் சேர்க்கையில் சக்தி உண்டாவதுடன், பிளவுக் கழிவுகளோடு மூன்று நியூட்ரான்கள் பிறக்கின்றன. அந்த நியூட்ரான்கள் மீண்டும் யுரேனியம் -235 உலோகத்தைத் தாக்கி சக்தியும், கழிவும், 3 நியூட்ரான் களும் உண்டாகும். அணுப்பிளவுக் கழிவுகளில் இரண்டு பாதி சிறு நிறை தனிமங்கள் காணப்படும். திரவ நிலையில் சிறு நிறைத் தனிமங்கள் பிரிந்து மேலே மிதக்கும்.
வேக நியூட்ரான்கள் யுரேனியம் -238 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும் புளுடோனியம் -239 உலோகத்தையும் முடிவில் தோற்றுவிக்கும். மேலும் வேக நியூட்ரான்கள் தோரியம் -232 உலோகத்தைத் தாக்கிச் சக்தியை உண்டாக்கும். யுரேனியம் -233 உலோகத்தையும் தோற்றுவிக்கும். இம்மாதிரி தொடர்ந்து வேகப் பெருக்கி அணு உலைகள் போல் (Fast Breeder Reactor) தொடர்ந்து அணுசக்தியும், எரிசக்தி எருவும் பூமியின் மையத்தில் உண்டாகி வருகின்றன. அப்படி இயங்கும் அணுப்பிளவு அணு உலைகளில் கழிவுக் தனிமங்கள் உண்டாகித் தானாக அணு உலை நிறுத்தம் அடையும். காரணம் கழிவுப் பொருட்கள் நியூட்ரான் விழுங்கிகள். நிறை சிறுத்த கழிவுப் பொருட்கள் கனற் குழம்பில் மேலே ஏறி மிதக்க மறுபடியும் அணு உலை இயங்க ஆரம்பிக்கிறது. இத்தகைய வேகப் பெருக்கி அணு உலைதான் பூமியின் மையத்தில் தொடர்ந்து இயங்கியும் இடையிடையே நிறுத்தம் அடைந்தும் பிரம்மாண்ட மான வெப்ப சக்தியை உற்பத்தி செய்து வருகிறது என்று 1993 ஆம் ஆண்டில் டாக்டர் மர்வின் ஹெர்ன்டன் புதியதோர் பூமி உட்கரு நியதியை அறிவித்தார் !
விஞ்ஞானி மர்வின் ஹெர்ன்டான் அறிவித்த புவி அணு உலை
பூமியில் அணுசக்தி ஆற்றல் பெறும் யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் இருப்பு பல இடங்களில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. வானியல் விஞ்ஞானி டாக்டர் மர்வின் ஹெர்ன்டான் முதன்முதல் அணுப்பிளவுத் தொடரியக்கம் செய்து காட்டிய இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ·பெர்மியைப் பின்பற்றி பூமிக்குள்ளே மாபெரும் ஓர் இயற்கை அணுப்பிளவு உலை (Natural Nuclear Fission Geo-Reactor) இயங்கியும் அடுத்து நிறுத்தம் அடைந்தும் வருகிறது என்னும் புதியதோர் கோட்பாட்டை வெளியிட்டார். அந்த அணுப்பிளவு உலை வேக நியூட்ரான்கள் யுரேனியத்தைத் தாக்கி சக்தியும், எரிசக்தி எருவும் ஈனுகின்ற ஒரு வேகப் பெருக்கி அணு உலை (Fast Breeder Reactor). அதற்கு ஹைடிரஜன் போன்ற மிதவாக்கி (Moderator) தேவையில்லை. மற்ற மின்சக்தி நிலையங்கள் போலின்றி, புவி அணு உலை (Georeactor) தானாக இயங்கும். தானாக நிறுத்தம் அடையும். அதன் வெப்ப சக்தி ஆற்றலைக் கூட்டிக் குறைக்கும் சுயக் கட்டுப்பாடும் கொண்டது. இயக்கத்தில் விளைந்து சேமிப்பாகும் அணுப்பிளவுக் கழிவுகள் நிரம்பி நியூட்ரான்களை விழுங்கி அணு உலை அடுத்து நிறுத்தம் அடையும். நிறை குன்றிய அணுவியல் கழிவுகள் கனற் குழம்பில் மேலேறி மிதக்கும். பிறகு தனிப்பட்டுக் கீழே யுரேனியம் -235 சேரும் போது அணு உலை தானாக இயங்கத் துவங்கும் ! இந்தக் கோட்பாடை மர்வின் ஹெர்ன்டான் 1993 இல் முதன்முதல் வெளியிட்ட போது அக்கருத்தைப் பலர் கூர்ந்து நோக்க வில்லை.
பூமியின் உட்கரு வெப்பம் மிகுந்த கோளம் ! அதைச் சுற்றி வெளிக்கருவில் உலோகத்தால் ஆன கனற் குழம்பு ! உட்கருவின் அணு உலை வெப்ப சக்தியே திரவக் குழம்பை மணிக்கு 1000 மைல் வேகத்தில் சுற்ற வைத்திருக்கும். அந்த அணுப்பிளவு சக்தியே பூகோளக் காந்த சக்திக்கும் (Geomagnetism) மூலமாக இருக்கக் கூடும் என்பதும் அறியப் படுகிறது. செவ்வாய்க் கோள் மின் காந்த மின்றி ஈர்ப்பியல் குன்றி செத்துக் கிடக்கிறது. செவ்வாய்க் கோளின் உட்கரு அணு உலை இயக்கம் நிரந்தராக நிறுத்தம் அடைந்து அதன் காந்த சக்தி இழந்து போனது ! செவ்வாய்க் கோளின் அணு உலை சக்தியற்றுச் செத்து விட்டதால் செவ்வாயின் காந்த சக்தி மறைந்து, ஈர்ப்பாற்றல் குறைந்து போய் அதன் சூழ்வெளி வாயு மண்டலம் நிரந்தரமாய் இழக்கப் பட்டு நீர்வளம் எல்லாம் முற்றிலும் வரண்டு விட்டது. ஆனால் செவ்வாயின் உட்கரு ஒருகாலத்தில் சூடாக இருந்து அதில் இயங்கிய எரிமலை பரிதி மண்டலத்தின் மிகப் பெரிய எரிமலையாக எழுந்திருக்கிறது !
4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய நமது பூமி தன் உட்கருவில் அணுவியல் எருக்களான யுரேனியம் -235, யுரேனியம் -238, அணுப்பிளவு இயக்கத்தால் உண்டான புளுடோனியம் -239 ஆகியவற்றைப் பயன்படுத்தி வரும் 5 மைல் (10 கி.மீ.) விட்டமுள்ள வேகப் பெருக்கி அணு உலைக் கோளம் ஒன்றைக் கொண்டுள்ளது என்று கூறுகிறார் மர்வின் ஹெர்ன்டான். அது வெளியாக்கும் வெப்ப சக்தி 4 டெரா வாட்ஸ் (4000 பில்லியன் வாட்ஸ்), (4 மில்லியன் மெகாவாட்ஸ்) [4 terawatts (4X10^12 watts)] என்று கணினி மாடல் மூலம் கணக்கிடப் படுகிறது. இப்பேரளவு வெப்ப சக்தி தொடர்ந்து வெளியேறாது விட்டு விட்டு எழுவதால், அங்குமிங்கும் எரிமலையும், பூகம்பமும் உலக நாடுகளில் தலைதூக்கி குடிமக்களுக்கு அடிக்கடி இன்னல் கொடுத்து வருகின்றன !
(தொடரும்)
+++++++++++++++++
Images : BBC News, National Geographic, The Times UK, & CTV Global Media
Information :
1. Volcanoes & Earthquakes By: Reader ‘s Digest [1992]
2. Time & Life Books Volcanoes & Earthquakes [1995]
3. Hutchinson Encyclopedia of the Earth Edited By: Peter Smith [1985]
4. Encyclopedia Britannica 15 Edition [1978]
5. Reader ‘s Digest Marvels & Mysteries of the World Around Us [1977]
6. National Geographic Frontiers of Science [1982]
7. The Vesuvius Volcano at the Bay of Naples.
8. The Eruptive History of Mt.Vesuvius in Italy & Mt.Etna in Sicily.
9. Krakatoa Volcano near Java & Sumatra of Indonesian Islands
10. Inside the Volcano, National Geographic [November 2000].
11 (a) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402051&format=html (Italian Volcano))
11 (b) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40402121&format=html (Hawaii Volcano)
12. Hot Theories on the Center of the Earth National Geographic [January 1996].
13. Hawaii ‘s Volcanic Cradle of Life, National Geographic [July 1990].
14. Hawaii, Island of Fire & Flowers, National Geographic [March 1975].
15. Volcano Monitoring Techniques, U.S. Geological Survey (USGS) Report [October 11, 1991]
16. Kilauea, Hawaii ‘s Most Active Volcano.
17. Volcanic & Seismic Hazards, USGS Publication [1997].
18. Volcanic Toxic Gases By: Bill Harby [April 7, 1999]
19. The Hawaii Center for Volcanology [HCV-1992]
20. Icland Volcano’s Fountain of Fire (March 20, 2010)
21 National Geographic News – Harmful Effcts of Volacanic Smoke By Brian Handwerk (April 16, 2010)
22 BBC News Why Iceland Volcano Has Grounded UK Flights By : Victoria Gill (April 15, 2010)
23 BBC News How Volcanoes Shaped History (April 15, 2010)
24 BBC News Experts Update Ash Health Advice (April 16, 2010)
26 BBC News Volcanic Ash Cloud (April 17, 2010)
27 BBC News Ash Deepens Europe Travel Chaos (April 17, 2010)
28 BBC News Ash Imperils Bone Morrow Patients (April 18, 2010)
29 BBC News Half of European Flights to Fly (April 20, 2010)
30 Scientific American – How Much Volcanic Ash is Too Much for a Jet Engine ? By John Matson (April 21, 2010)
31 (a) Daily Galaxy -Are the Planets Volcanoes Being Triggered by Global Warming ? (April 16, 2010)
31 (b) Scientific American -A Warming World Could Trigger Earthquakes, Landslides & Volcanoes By James Watson (April 21, 2010)
32 NASA Report : What are (Volcanic) Aerosols ?
33. Volcanoes & Climate Change ByJason Wolfe (September 5, 2000)
34 18 Most Dangerous US Volcanoes Include Erupting Alaska Peak (Jan 20, 2006)
35 NASA Report : Historic Volcanic Eruption Shrunk the Mighty Nile River (Nov 21, 2006)
36 NuclearPlanet.com : Science About thre True Nature of Earth & Universe
37 The Nuclear Heart of the Earth : The Science Behind “The Core” – An Interview with Marvin Herndon Ph.D. By : Wayne Smith (Mar 31, 2003)
38 Encyclopedia.com : Radioactive Heat Production in the Earth By : David A. Rothery (1993)
39 Can Climate Change Explode ? By : Ridhima (Jan 3, 2010)
40. http://understandearth.com/Georeactor.htm
41. https://en.wikipedia.org/wiki/Natural_nuclear_fission_reactor [February 7, 2016.
42. http://nuclearplanet.com/Herndon’s%20Nuclear%20Georeactor.html
********************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] February 9, 2016
பொறியியல் அற்புதச் சாதனை காலிஃபோர்னியா பொன்வாசல் தொங்குபாலம்
(San Francisco Golden Gate Suspension Bridge)
சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்!
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்!
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்!
பாரதியார் (பாரத தேசம்)
++++++++++++
முன்னுரை: கி.மு. 2015 இல் ( ?) சீதா தேவியை மீட்க பாரத நாட்டுக்கும் இலங்கா புரிக்கும் அனுமார் படையினர் கட்டிய முதல் புராதனப் பாலத்தைப் பற்றி வால்மீகியின் இராம காவியம் கூறுகிறது. பதினெட்டு மைல் தூரம் நீண்ட பாறாங்கல் பாலத்தைச் சமீபத்தில் (அக்டோபர் 2002) துணைக்கோள் மூலம் விண்வெளிப் படமெடுத்த நாஸா [NASA] ‘இராம பாலம் ‘ [Adam ‘s Bridge] என்று அறிவித்து அகிலவலை முகப்புகளில் வெளியிட்டுள்ளது! பாக் நீர்ச்சந்தியில் [Palk Strait] (இராமேஸ்வரம்) தனுஷ்கோடி, தலைமன்னாரை இணைக்கும் இந்தப் பாறாங்கல் திட்டுகள் உச்ச அலை [High Tide] ஏறும் சமயத்தில் நாலடிக் கடல்நீரில் மூழ்கி விடுபவை! இவ்வூர்களுக்கு இடையில் பிரிட்டிஷ் இந்தியா முன்பு சிறிது தூரம் கட்டிய பாம்பன் பாலம், [Bamban Bridge] பலமுறைச் சூறாவளிப் புயல்களால் தகர்க்கப்பட்டுச் சாய்ந்து போனது!
NASA’s Picture Rama’s Bridge

இருபதாம் நூற்றாண்டில் பாரதியார் இலங்கா புரிக்கும் இந்தியா வுக்கும் பாலம் அமைக்க வேண்டும் என்று கண்ட கனவு மெய்ப்பிக்க வில்லை! அயோத்தியா புரியில் நமது இஸ்லாமிய சகோதரர்களை அடித்துக் கொல்லும் இராம பக்தர்கள், பிறந்த பூமியில் இராமர் கோயில் கட்டும் போர்த் திட்டத்தைக் கிழித்துப் போட்டு விட்டு, மெய்யாக இராமரின் பொற் பாதங்களைத் தொட்ட ஈழத் தீவிற்கு ஓர் பாலத்தைக் கட்டலாம்! பக்த கோடிகள் புனித பூமிக்குப் பாத யாத்திரை செய்து புண்ணியம் பெற வசதியாக இருக்கும்! இராமரின் திருப்பாதங்கள் மட்டுமல்ல சீதா தேவி, இலட்சுமணன், அனுமான் ஆகியோர் அனைவரது பாதங்களும் பட்ட புண்ணிய பூமி, இலங்கை! அண்ட வெளியில் கட்டளை ஏவுகணை களை அனுப்பி, அணுவைப் பிளந்து ஆராய்ச்சிகள் புரியும் பாரத நாட்டுக்கு, பதினெட்டு மைல் தூரப் பாலத்தைக் கட்டும் திறமை இல்லாமலா போய்விட்டது! இந்தியாவுக்கும், ஈழத்துக்கும் இணைப்பு ஏற்பட்டு வணிகம், தொழிற்துறை, கலாச்சாரம் பெருகும்!
பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டுகளில் உலகெங்கும் பாலம் கட்டும் பணி துவங்கி ஓர் விஞ்ஞான மாயிற்று! தரணி விஞ்ஞானிகள் முதல் விஞ்ஞானி எனக் கருதும் காலிலியோ (1564-1642) தன் காலத்திலேயே கட்டிடக் கலைக்கு உத்திரங்கள், கூட்டுத் தளவாடங்கள் [Beams & Framed Structures] ஆகியற்றைப் பற்றி ஆராய்ந்து எழுதி வைத்துள்ளார். பதினேழாம் நூற்றாண்டின் இறுதியிலே பாலம் கட்டும் பணியாளர் பலர், கூட்டிணைப்பு உத்திரங்களைத் தயாரிக்கப் பொறியியல் கணிப்புகளைப் பயன்படுத்தத் துவங்கினர். அமெரிக்காவில் 1916 ஆண்டு முதல் 17 ஆண்டுகளாகப் போராடி இறுதியில் கலிஃபோர்னியாவின் ஆறு மாவட்டங்கள் சேர்ந்து கட்ட முடிவு செய்து, 35 மில்லியன் டாலர் நிதி ஏற்பாட்டில் 1933 ஜனவரி 5 ஆம் தேதி, ஸான் ஃபிரான்சிஸ்கோ பொன்வாயில் பாலத்தின் அமைப்பு வேலைகள் ஆரம்பமாயின.

உலகின் ஒப்பற்ற நீண்ட தூரக் கடப்புப் பாலம்!
உலகத்திலே கம்பீரமான தோற்றமுடன் கவின் மிகுந்த கடற்பாலமாகப் போற்றப்படுவது, ஸான் ஃபிரான்சிஸ்கோவின் பொன்வாயில் பாலம் [Golden Gate Bridge]. நீளத்தில் இரண்டாவது தொங்கு பாலம் [Suspension Bridge] எனக் கருதப்படும் இச்செந்நிறப் பாலம் ஸான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் உள்ள பொன்வாயில் நீர்ச்சந்தியில் [Golden Gate Strait] அமைக்கப் பட்டுள்ளது. மூன்று மைல் நீளமும், ஒரு மைல் அகலமும் கொண்ட அந்த நீர்ச்சந்திக்கு ‘பொன்வாயில் நீர்ச்சந்தி ‘ என்று 1846 இல் பெயரிட்டவர், அமெரிக்க இராணுவக் காப்டன் ஜான் ஃபிரிமான்ட் [John Fremont]. கிரைஸோசெராஸ் அல்லது பொன் கொம்பு [Chrysoceras or Golden Horn] என்னும் பெயருடைய துருக்கி இஸ்தான்புல் துறைமுகம் ஒன்றை ஒத்திருப்பதாகக் கருதிய, காப்டன் ஃபிரிமான்ட் நீர்ச்சந்திக்கு கிரைஸோபைலே அல்லது பொன்வாயில் நீர்ச்சந்தி எனப் பெயரிட்டார். பரந்த பசிபிக் கடலுக்குப் பாதை காட்டும் அந்த நீர்ச்சந்தியின் நாமமே, பிறகு அதன் மீது கட்டப்பட்ட தொங்கு பாலத்திற்கும் இடப்பட்டது!
பாலங்களின் பணிகள் பலவிதம். நதிப்பாலம், மலைப்பாலம், கடற்பாலம், வீதிப்பாலம், குழிப்பாலம், நடைப்பாலம் எனப் பிரிவுபடும் பாலங்களின் தோற்ற மூலங்களைக் காண முற்படுவது சற்று சிரமமான முயற்சி! பாலங்கள் மீது கடந்து செல்பவை, வாகனங்கள், ரயில்தொடர் வண்டிகள், ஆயில் பைப்புகள், நீரனுப்புப் பைப்புகள், கழிவு திரவப் பைப்புகள் போன்றவை.
பாலத்தின் வடிவங்களும் பலவிதம். அவற்றை முக்கியமாக ஐந்து பெரும் இனங்களாகப் பிரிவுக்கலாம். 1. உத்திரப் பாலம் [Beam Bridge] 2. நீள்வட்ட வளைவுப் பாலம் [Arch Bridge] 3. ஊஞ்சல் அல்லது தொங்கு பாலம் [Suspension] 4. ஒற்றைப்பிடி நெம்பு பாலம் [Cantilever Bridge] 5. முறுக்கு நாண் பாலம் [Cable Stayed Bridge].
இக்கட்டுரை இருபதாம் நூற்றாண்டின் உன்னதப் பாலம் கட்டும் சாதனைகளில் ஒன்றான உலகின் இரண்டாவது நீட்சி ஊஞ்சல் பாலமான கலிஃபோர்னியாவின் பொன்வாயில் பாலத்தைப் பற்றிய விபரங்களைக் கூறுகிறது.
உலகத்தில் எல்லாவற்றுக்கும் நீளமான தொங்கு பாலம், ஜப்பானில் 1998 இல் கட்டி முடிக்கப்பட்ட ஆகாஷி கைகியோ பாலம் [Akashi Kaikyo Bridge]. அதன் நீளம் 2.5 மைல் [(13037 அடி) 3911 மீடர்]. கடற் கோபுரங்களுக்கு இடையே உள்ள மைய அகற்சி 1.25 மைல் [Center Span (6637 அடி) 1991 மீடர்]. எல்லாவித மாதிரிப் பாலங்களிலும் தொங்கு பாலமே [Suspension Bridge] அதிக அகற்சி தரத் தகுதி பெற்றது. கடலின் அடித்தளத்தில் ஆழத்தில் ஊன்றப்பட்ட இரண்டு கோபுரங்களின் மீது தொங்கும் இரும்புச்சர முறுக்கு நாண்களே [Twisted Wire Cables] பாலத்தின் நீளப்பாதை முழுவதையும் தாங்குகின்றன.
பல்லாயிரம் அடி ஆழமுடைய பசிபிக் கடலில், மணிக்கு 5-10 மைல் வேக அலைக் கொந்தளிப்பும், புயற்காற்றும், பூகம்பமும் விளையாடும் பகுதிகளில் 8981 அடி நீளத்தில் பாலம் அமைப்பது, இமாலய இடர்களில் நீந்திச் சாதிக்கும் ஓர் அசுர சாதனை! சிக்கலான, சிரமமான அப்பாலத்தை முதலில் டிசைன் செய்த எஞ்சினியரிங் நிபுணரின் பெயர் ஜோஸஃப் ஸ்டிராவ்ஸ் [Joseph Strauss]. ஸ்டிராவ்ஸ் ஒரு மில்லயன் டன்னுக்கும் மேற்பட்ட காங்கிரீட்டைக் கொட்டி, மலைப் பாம்புகள் போன்ற இரண்டு கம்பி வடங்களை வலுவாகப் பற்றிக் கொள்ள உறுதியான ‘பிணைப்பு ஆப்புகளைக் ‘ [Anchorages] கடற்கரையில் கட்டினார். பாலத்தை 1937 இல் 27 மில்லியன் டாலர் செலவில், வாக்குத் தேதிக்கு ஐந்து மாதங்கள் பிந்தி, ஆனால் 1.3 மில்லியன் டாலர் மதிப்பீடுச் செலவுக்குக் குறைந்து, ஜோஸஃப் ஸ்டிராவ்ஸ் கட்டி முடித்து ஒரு மில்லியன் டாலர் வெகுமதியும், பாலத்தைக் கடந்து செல்ல ஆயுள் அனுமதியும் பெற்றார்! பிற்கால இணைப்புகளின் நிதிச் செலவையும் சேர்த்துக் கொண்டால், பாலத்தின் மொத்தச் செலவு 35 மில்லியன் டாலர் மதிப்பாகிறது. பிரதம எஞ்சினியராகப் பணியாற்றிய ஸ்டிராவ்ஸுக்கு உதவி செய்தவர், கட்டிடக்கலை நிபுணர் இர்விங் மாரோ.

பொன்னூஞ்சல் வாயில் பாலத்தின் பிறப்பும், அமைப்பும்
ஸான் ஃபிரான்சிஸ்கோவின் முதல் பாலம் 1844 இல் வில்லியம் ஸ்டர்கிஸ் ஹிங்கிலி [William Sturgis Hinkley] என்பவரின் ஆணைக்குக் கீழ் கட்டப்பட்டது. லகூனா ஸலாடாவை வளைகுடாவுடன் இணைக்கும் ஒரு சிற்றாறைக் கடக்கும் பாலம் அது. 450 சதுர மைல் பரவிய ஸான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாத் துறைமுகத்தின் சுற்றியுள்ள தளப்பரப்புகளை எட்டு முக்கிய பெருவீதிப் பாலங்களும் [Highway Bridges] இரண்டு ரயில்பாதைப் பாலங்களும் இணைக்கின்றன. அவற்றில் நான்கு பெரும் பாலங்கள் ஓக்லண்டு பாலம், பொன்வாயில் பாலம், ரிச்மண்டு -ஸான் ரஃபயால் பாலம், கார்குயினெஸ் பாலம் ஆகியவை உலகத் தொங்கு பாலங்களில் உன்னத மானவை! மற்ற பாலங்கள்: ஸான் மெட்டியோ-ஹேவேர்டு பாலம், டம்பார்ட்டோ பாலம், ஸூயிஸன் வளைகுடாப் பாலம் ஆகியவை. இவற்றில் 1936, 1937 இல் முடிவு பெற்ற இரண்டு பாலங்கள் சிறப்பானவை. பொன்வாயில் பாலம் ஸான் ஃபிரான்சிஸ்கோவையும் வடக்கே உள்ள மாரின் மாவட்டத்தையும் [Marin County] இணைக்கிறது.
1916 ஆண்டு முதல் 17 ஆண்டுகளாகப் போராடி, இறுதியில் கலிஃபோர்னியாவின் ஆறு மாவட்டங்கள் சேர்ந்து பல ஆண்டுகளாகக் கட்ட முடிவு செய்து, 35 மில்லியன் டாலர் மொத்த நிதி ஏற்பாடு செய்து [1933 நாணய மதிப்பு] முடிவில் 1933 ஜனவரி 5 ஆம் தேதி வேலைகள் ஆரம்பமாயின. பொன்வாயில் பாலத்துக்கு மிகவும் உயர்ந்த கோபுரங்கள் [>850 அடி] தேவைபட்டன! கொந்தளிக்கும் கடலுக்குக் கீழே ஆழமான, அகண்ட தாங்கும் கடற்தூண் மேடைகள் [Piers] தேவைபட்டன! தடிப்பு மிக்க முறுக்குக் கம்பி நாண்கள், பெரும் வடங்கள் [Cables] அதிக நீளத்தில் தேவைப்பட்டன! மன உறுதி, பொறியியல் நுணுக்கத் திறம் உடைய எஞ்சினியர் ஜோஸஃப் பேயர்மன் ஸ்டிராவ்ஸ் [Joseph Baerman Strauss (1870-1938)] ஒருவர்தான், ஏறக்குறைய இரண்டு மைல் ஆழக்கடலைக் கடக்கும் ஓர் அரிய தொங்கு பாலத்தை டிசைன் செய்து, கட்டி முடிக்கும் இமாலயப் பணியைச் செய்ய முன்வந்தார்!
ஸ்டிராவ்ஸ் ஓர் உன்னத கட்டிடத் தளவாட எஞ்சினியர் [Structural Engineer] மட்டும் அல்லர். அவர் ஒரு கவிஞர், தீர்க்க தரிசி. தாண்டிச் செல்ல முடியாத பெருந் தடைகளும், பிரச்சனைகளும், அபாய இடர்களும் மிகுந்த ஸான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடா புகுவாசலில், பொன்வாயில் தொங்கு பாலத்தை ஸ்டிராவ்ஸ் கட்ட முடியாது என்று பல எதிர்மறைவாதிகள் எதிர்த்து வாதம் புரிந்தனர். தொங்கு பாலத்தைப் பல்லாண்டுகள் கனவு கண்ட ஸ்டிராவ்ஸ், நாலரை ஆண்டுகளில் அதைக் கட்டி முடித்து, உலகப் பெருஞ் சாதனைகளில் ஒன்றாக ஸான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாவில் அமைத்துக் காட்டினார்.

தொங்கு பாலத்தின் சுமைதாங்கும் நியதி வெகு எளிமையானது! மிகப் புராதன மானது! அது கலியுகத்தின் புதிய கண்டுபிடிப்பு அன்று! வலுவான கயிற்றை இருமுனைகளிலும் கட்டியோ அல்லது இரு கம்பங்களில் முடிச்சிகளிட்டோ தொங்கவிட்டு, துணிகளைக் காயப் போடுகிறோம். அதே நியதிதான் தொங்கு பாலத்தின் அமைப்பில் கையாளப்படுகிறது. ஆழமாய் ஊன்றிய அடிவாரக் காங்கிரீட் கடற்தூண் மேடை [Pier] மீது இணைக்கப் பட்டவை, இரண்டு உயர்ந்த இரும்புக் கோபுரங்கள். அவற்றின் தோள் மீது மலைப்பாம்பு மாலை போல் தொங்கும் இரு முறுக்குக் கம்பி வடங்கள். அவற்றில் செங்குத்தாய் இணைந்த இரும்புக் கம்பி நாண்கள்தான் பாலத்தைச் சுமக்கின்றன. இருபுறத்திலும் வடத்தின் முனைகள் பூமியில் ஊன்றிய உறுதி மிக்க ஆப்புமேடையில் [Anchorage] கட்டப் பட்டுள்ளன. கோபுரங்களின் தோள்மீது தொங்கும் அந்த நீள்வடங்கள் நன்கு இழுத்து விடப்பட்டு, பூகவர்ச்சி விசையால் [Gravitational Force] இயற்கையாக ‘விரிவளைவு வடிவில் ‘ [Parabolic Shape] ஆரம்போல் அமைகின்றன. கோபுரத்தின் இருபுறத்திலும் புகுத்தப்பட்ட பாலத்தட்டை [Bridge Deck] வடத்திலிருந்து தொங்கும் செங்குத்து முறுக்குக் கம்பி நாண்கள் தாங்கிக் கொள்கின்றன. கோபுரத்தின் பக்கத் தட்டுகளின் [Side Decks] எடையும், நகரும் பளுக்களும் [Live Loads], அவற்றின் நெம்பு இழுப்புகளும் [Bending Moments], நீண்ட மையத் தட்டின் பூர்வீக மேல்வளைவு வடிவை [Originally Kept Upper Curvature] அடிக்கடி மேலும், கீழும் ஏற்றி இறக்கி மாற்றம் செய்யும்.
பொன்வாயில் பாலத்தின் முக்கிய பரிமாணங்கள்
பொன்வாயில் பாலத்தின் மொத்த நீளம் 6450 அடி. ஒவ்வொரு பக்கத் தட்டின் நீளம் 1125 அடி. பாலத்தின் மையத் தட்டு [Deck] 4200 அடி நீளத்துடன் கடல் மட்டத்துக்கு 220 அடி உயரத்தில் அமைக்கப் பட்டது. பாலத்தை நெருங்கும் பாதையின் நீளத்தையும் சேர்த்தால், பாலத்தின் மொத்த நீளம்: 8981 அடி [1.7 மைல்]. அகன்ற கடல் நடுவே இரண்டு கோபுரத் தாங்கிகள் முழு நீளப் பாலத்தின் தட்டை ஏந்திக் கொள்ளக் கட்டப் பட்டன. வடதிசைக் கோபுரத்தின் அடித்தளத்துக்கு உறுதியான பாறைத் திடல், கடல் அருகே வாய்த்தது. தென்திசைக் கோபுரந்தான் கரையிலிரிருந்து 1125 அடி தூரத்தில், மிகச் சிரமமோடு கடலில் அமைக்க வேண்டிய தாயிற்று. இரண்டு கோபுரங்களுக்கும் இடையே கடந்து, இரு முறுக்குக் கம்பி வடங்கள் [Twisted Wire Cables] தாங்கும் பாலத் தட்டின் தூரம் 4200 அடி! வடத்திலிருந்து தொங்கும் செங்குத்து முறுக்குக் கம்பிகள் பாலத் தட்டின் முழு எடையைத் தாங்கிப் பங்கிட்டுக் கொள்கின்றன. கோபுரத்தின் உயரம்: கடல் மட்டத்துக்கு மேல் 746 அடி! கோபுரத்தின் எடை: 4000 டன்!

தென்திசைக் கோபுரம் அமர்ந்துள்ள கடற்தூண் மேடை [Pier] நீருக்குக் கீழ் 100 அடி ஆழத்தில் அமைந்துள்ளது! கடற்தூண் மேடை ஒன்றின் முகப்பு அளவு: நீளம் 185 அடி, அகலம் 90 அடி. உயரம் 144 அடி! ஒவ்வொரு கோபுரத்துக்கும் 64,000 டன் எடையுள்ள ஒரு கடற்தூண் மேடை. மையத் தட்டுக்கு வலது புறத்திலும், இடது புறத்திலும் கோபுரங்களுக்கு அப்பால் பக்க அகற்சி பாலத் தட்டுகள் [Side Spans] 1125 அடி நீளத்தில் உள்ளன. மையத் தட்டின் எடையும், ஓடும் வாகனங்களின் இயக்க எடைகளும், மையப் பகுதியில் உச்சமாகி ‘நெகிழ்வை ‘ [Deflection] உண்டாக்கும். கோபுரத்தின் இரண்டு வெளித் தொங்கு தட்டுகளும் [Overhang Deck Spans] மையப் பாலத் தட்டின் நடு நெகிழ்வைக் குறைக்க [To Reduce the Central Deflection], எதிர்வினை புரியும் நெம்புகோல் தட்டுகளாய் [Anti-Deflection Leverage Decks] பயன்படுகின்றன!
நீண்ட மலைப் போன்ற வடம் ஒன்றின் நீளம்: 7660 அடி! வடத்தின் குறுக்கு விட்டம்: சுமார் 3 அடி (36ண அங்குலம்). அந்த மூன்றடி வடத்தின் உள்ளே இணையாகச் செல்லும், 61 நாண்கள் [Strands] கொண்ட 27,572 முறுக்குக் கம்பிகள் நுழைக்கப் பட்டுள்ளன! ஒவ்வொரு நாணிலும் 452 கம்பிகள் முறுக்கப் பட்டுள்ளன! அந்தக் கம்பிகளை ஒன்றாகக் கோர்த்தால் 80,000 மைல் நீளமாகி, அவற்றைக் கொண்டு பூமியின் மத்திமச் சுற்றளவை மூன்று தரத்துக்கு மேல் சுற்றி விடலாம்! இரண்டு வடங்களின் இடைத்தூரம்: 90 அடி! கோபுரத்தின் மீது வடங்கள் இழுக்கும் பளுவின் எடை: 55,350 டன்! வடத்தின் இழுப்பு அளவு கோபுரத்தின் இருபுறமும் ஏறக்குறைய தராசு போல், சமமாக இருக்க டிசைன் செய்யப் பட்டுள்ளதால், கோபுரம் ஏறக்குறைய செங்குத்தாக நிமிர்ந்து நிற்கிறது! கோபுரத்தின் தூரி வடங்கள், தூரியில் தொங்கும் செங்குத்து நாண்கள் மற்ற உபரிகளின் மொத்த எடை: 24,500 டன்!
வடங்களை இறுகப் பற்றிக் கொள்ளும் ‘ஆப்பு மேடைகளை ‘ [Anchorage Blocks] பாலத்தின் இருபுறமும் கட்ட உறுதியான பாறைத் தளங்கள் வாய்த்தன. ஒவ்வொரு ஆப்பு மேடையும் 30,000 கியூபிக் கஜம் காங்கிரீட் ஊற்றப்பட்டு, இரும்புக் கம்பிகளால் உறுதியாக்கப் பட்டுள்ளது! ஊஞ்சலில் தொங்கும் செங்குத்து முறுக்குக் கம்பி நாண்களையும், அவை தாங்கும் நீள் பாலத் தட்டையும் இழுத்துத் தூக்கிக் கொண்டிருக்கும் இரண்டு மலைப்பாம்பு வடங்களையும், அழுத்தமாக வெகு ஆழத்தில் பதிக்கப் பட்ட ஆப்பு மேடைகளே பற்றிக் கொள்கின்றன!
பொன்வாயில் பாலத்தின் மொத்த அகலம் 90 அடி. வாகனங்கள் செல்லும் வீதியின் அகலம்: 62 அடி. பக்க நடைபாதை: 10 அடி. தென்புறக் கோபுரத்தின் அடித்தளம் நீச்சக் கடல்மட்டத்துக்கு [Low Tide] 110 அடி ஆழத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
பொன்வாயில் பாலத்தின் நெகிழ்ச்சியும், நெம்பு இழுப்புகளும்
பாலத்தின் 6450 அடி நீண்ட பாதைத்தட்டு [இரண்டு பக்கத் தட்டுகள், ஒரு மையத் தட்டு] வெப்ப தட்ப உஷ்ண நிலை மாறுபாடுகளால் முறுக்குக் கம்பிகள், வடங்கள், இரும்புத் தளவாடங்கள், காங்கிரீட் வீதி ஆகியவற்றின் நீட்சிகள் [Elongations] கூடிக் குறைகின்றன. ஓடும் வாகனங்களால் நெம்பு இழுப்புகள் [Bending Moments] தொடர்ந்து வேறுபடும். கடற்புறக் காற்றடிப்பால் பாலத்தின் அனைத்து அங்கங்களும் அடிக்கடி அசைக்கப் படும்.
பொன்வாயில் பாலத்தின் மீது செல்லும் வாகன நகர்ச்சி பளுக்கள் [Live Loads], புயல் காற்று தள்ளு விசை [Wind Loads], பூகம்ப நிலநடுக்க ஆட்டம் [Seismic Movements] போன்ற அபாயங்கள் உண்டாக்கும் நெகிழ்ச்சிகள் [Deflections], நெம்பு இழுப்புகள் ஆகியவற்றைக் கணித்து [புயல் வேகம்: மணிக்கு 100 மைல்] அதிக பட்ச எதிர்பார்ப்புக்குப் [Maximum Risk] பாலத்தின் அங்கங்களில் பாதுகாப்புகள் இணைக்கப் பட்டுள்ளன. வாகன நகர்ச்சிப் பளு [Live Load 4000 lbs per foot] உச்சமாக அடிக்கு 4000 பவுண்டு எல்லையில் டிசைன் செய்யப் பட்டுள்ளது.
கோபுரம் சாயும் போது பக்கவாட்டில் 12.5 அங்குலம், கடற்புறம் நோக்கி 18 அங்குலம், நிலப்புறம் நோக்கி 22 அங்குலம் நெகிழ்ச்சி அடைய டிசைன் செய்யப்பட்டுள்ளது. மணிக்கு நூறு மைல் வேகப் புயல் பாலத்தை நோக்கி அடிக்குமே யாகில், தள்ளப்படும் பாலத்தின் தட்டு பக்கவாட்டில் உச்சமாக 27 அடி ஆடும் என்று கணிக்கப் பட்டுள்ளது! அதே போன்று பூகம்ப ஏற்படும் சமயம் நிலநடுக்கத்தில், பாலத்தின் தட்டுப் பக்கவாட்டில் உச்சமாக 27.7 அடி ஊஞ்சல் ஆடினாலும், பழுது ஏற்படாதவாறு டிசைன் செய்யப் பட்டுள்ளது! பாலத்தின் இரண்டு பக்கத் தட்டுகள், மையத்தட்டு மீது ஓடும், வாகன நகர்ச்சி எடைகள் மாறுவதாலும், கோபுரத் தாங்கு முனைகளில் நெம்பு இழுப்புகள் மாறி ஏறி இறங்குவதாலும், மையத்தட்டின் நெகிழ்ச்சி உச்சமாக கீழ்நோக்கி 10.8 அடி, மேல்நோக்கி 5.8 அடி வரை நெகிழ்ச்சி அடைய டிசைன் செய்யப் பட்டுள்ளது!
பொறியியல் நிபுணர் ஸ்டிராவ்ஸின் உன்னத சாதனை
நூறாண்டுகளுக்கு முன்பிருந்த பொறியியல் திறமையில் முடியாத, பொன்வாயில் பாலம் போன்று நீண்ட பாலம் ஒன்றை 1937 இல் கட்டியது, நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஓர் அசுர சாதனை! பசிபிக் வளை குடாவில் அமைக்கப்படும் ஒரு பாலம் பெரும் புயல் காற்றையும், பேரலை அடிப்புகளையும், மூடுபனி மந்தாரங்களைத் தாண்டி பிழத்துக் கொள்ள வேண்டும்! பூகம்பப் பிரளய விளைவுகள் நிகழும் உள்மையத்திற்கு [Epicenter] எட்டுமைல் தூரத்தில் அமையும் அப்பாலம், நிலநடுக்க முறிவிலிருந்து தப்பிக் கொள்ள வேண்டும். அத்தகைய அபாய எதிர்பார்ப்பு இடர்கள் இருந்தாலும், அவை அனைத்தையும் தாங்கிப் பிழைத்துக் கொள்ளும் ஓர் உறுதியான பாலத்தை அமைத்திட முன்வந்தவர், பொறி நுணுக்க நிபுணர் ஜோஸஃப் ஸ்டிராவ்ஸ்.
அமெரிக்கக் கட்டிடப் பொறியியற் துறைக் குழுவினர் பொன்வாயில் பாலம் நவீன உலகின் ஏழு விந்தைகளில் ஒன்று என்று பறைசாற்றுகிறார்கள். மற்ற ஆறு விந்தைக் கட்டிட அமைப்புகள்: 1. அமெரிக்காவின் ஹூவர் அணை [Hoover Dam] 2. கென்னடி விண்வெளி ஆய்வுக் கூடம் [Kennedy Space Center] 3. பனாமாக் கால்வாய் [Panama Canal] 4. அலாஸ்கா இடைப்புகு பைப் இணைப்பு [Trans-Alaska Pipeline] 5. மாநில இணைப்புத் தொடர்பாதைகள் [Interstate Highway System] 6. உலக வாணிப மையம் [World Trade Center] [2001 செப்டம்பர் 11 இல் தகர்ந்து போன இரட்டைக் கோபுரங்கள்]

பொன்வாயில் பாலத்தின் நூதன டிசைனுக்கும், துணிச்சலான பணிக்கும் 1993 ஆம் ஆண்டில் அமெரிக்கக் கட்டிடக்கலைக் குழுவினர் [Society of American Registered Architects (SARA)] மகத்தான கட்டிடப் பரிசை [Distinguished Building Award] வழங்கினார்கள். அப்பரிசளிப்பு விழாவில் பிரதம எஞ்சினியர் ஜோஸஃப் ஸ்டிராவ்ஸ், கட்டிட டிசைன் நிபுணர் இர்விங் மாரோ ஆகியோர் இருவரும் பாராட்டப் பட்டனர்.
பொன்வாயில் பாலத்தில் [1953-2001] புதுப்பித்த பணிகள்
ஆரம்பமான 1938 ஆம் ஆண்டில் மட்டும் 3.5 மில்லியன் வாகனங்கள் பொன்வாயில் பாலத்தின் மீது பயணம் செய்துள்ளன! 1969-1993 ஆண்டுகளில் வருடத்திற்கு 32 மில்லியன் முதல் 39 மில்லியன் வாகனங்கள் வரை பாலத்தைக் கடந்திருக்கின்றன! ஸான் ஃபிரான்சிஸ்கோ பொன்வாயில் பாலத்தைக் காண வருவோர் தொகை, ஒவ்வொர் ஆண்டிலும் சராசரி 9 மில்லியன் என்று கூறப்படுகிறது!
1951 இல் ஒரு பெரும் புயல் அடித்து, பாலத்தட்டின் நிலைநெறிக்குப் [Integrity] பங்கம் விளைத்திடப் பயமுறுத்தியது! புயல் காற்றில் அசுரத் தாக்குதலால், பாலம் புரண்டு சுருண்டு விடுமோ என்ற அச்சத்தை உண்டாக்கி விட்டது! உடனே பாதுகாப்புக் குழுவினர் எச்சரிக்கை செய்ய, மாவட்டங்கள் 3.5 மில்லியன் டாலர் செலவழித்து, 1953 இல் முழு நீளத்திற்கு (6450 அடி) பாலத்தின் கீழே பக்கவாட்டில் இரும்புச் சட்ட ஏற்பாட்டை [Lower Lateral Bracing System] இணைத்து, பாலத்தட்டுக்கு உறுதியான நிலை வடிவை அளிக்கப் பட்டது.
1967-1969 ஆண்டுகளில் பொறியியல் குழுவினர் ஒரு பெரும் பராமரிப்பு சோதிப்புச் செய்தனர். உப்புக் கடல் சூழ்வெளியில் உள்ள செங்குத்து இரும்பு நாண்களில் துரு அரிப்பு [Corrosion in Suspender Ropes] இருப்பது அறியப்பட்டது. 9 மில்லியன் டாலர் செலவழித்து, அந்த நாண்கள் யாவும் நீக்கப்பட்டுப் புது நாண்கள் பிணைக்கப் பட்டன. (1980-1982) (1997-2001) ஆண்டுகளில் மூன்று முறை நிலநடுக்கக் காப்பு இணைப்புகள் [Seismic Retrofit Construction] பாலத்தின் அங்கங்களுக்குச் சேர்க்கப் பட்டன.
பொன்வாயில் பாலத்தைத் தாக்கிய அசுரப் புயற்காற்றுகள்
1937 மே 27 இல் பொன்வாயில் பாலம் ஆரம்ப தினம் கொண்டாடி, அடுத்த நாள் முதல் வாகனங்கள் இருபுறமும் கடந்து சென்றன. துவக்க நாளன்று சுமார் 200,000 பேர் விஜயம் செய்தார்கள். பொன்வாயில் பாலத்தைக் கட்டி முடித்த நாலரை ஆண்டுகளில் விபத்துகள் நேர்ந்து 11 பேர் உயிரிழந்தனர்! அதே சமயத்தில் கட்டமைப்பு வேலைகள் நடந்து வந்த போது, தவறி விழுந்த 19 பணியாளிகளைப் பாலத்துக்கு அடியில் கட்டி யிருந்த ‘பாதுகாப்பு வலை ‘ [Safety Net] காப்பாற்றியது குறிப்பிடத் தக்கது. அந்த 19 நபர்களின் பெயர்கள் ‘பாதி வழி நரகம் சென்றவர் குழு ‘ [Halfway-to-Hell Club] என்னும் பட்டியலில் பதிவாகி யுள்ளன!

1951 டிசம்பர் முதல் தேதி மூன்று மணி நேரங்கள் வாகனப் பயணங்கள் நிறுத்தமாகிப் பாலத்தின் நுழை வாசற்கள் மூடப்பட்டன! காரணம் மணிக்கு 70 மைல் வேகத்தில் சூறாவளிப் புயல் ஒன்று அடிக்கப் போவதாய்க் காலநிலை அறிவிப்புகள் எச்சரிக்கைகள் விடுத்தன. 1937 இல் கட்டப்பட்ட ஊஞ்சல் பாலத்துக்கு அன்றைய தினம், இயற்கை மெய்யாகவே செய்த ஒரு சோதிப்புத் தேர்வாய் அது ஆகிவிட்டது! அன்று தாக்கிய பயங்கர புயல், மையப் பாலத் தட்டைப் பக்க வாட்டில் தள்ளி இங்குமங்கும் 24 அடி ஊஞ்சலாக ஆட்டியது [டிசைன் வரையரை 27.7 அடி]! பாலத்தின் மையத்தில் செங்குத்தாக 5 அடி மேலும், கீழும் ஏறி யிறங்கியது! நல்ல வேளையாக சிறிய பழுதுகள் மட்டும் நேர்ந்து, பாலத்துக்குத் தீவிர முறிவுகள் எதுவும் ஏற்பட வில்லை!
1982 ஆம் ஆண்டு பொன்வாயில் பாலத்தின் மீது அடித்த குளிர்காலப் புயலில் [Winter Storm] மைய அகற்சிப் பாலத்தட்டு 6-7 அடி தணிந்தது! பொறியியல் மகத்துவமான பொன்வாயில் பாலம் மனிதரின் உன்னதச் சாதனையாக இருந்தாலும் புயல்களும், அலைகளும், பூகம்பங்களும் ஸான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதிகளை அடிக்கடித் தாக்குவதால், எஞ்சினியர்களும், பராமரிப்புப் பணியாளர் களும் அசுர வடிவான பாலத்தை அல்லும் பகலும் கண்காணித்துப் பழுதுகளை எப்போதும் செப்பணிட்டு வர வேண்டும்!
தகவல்:
1. Marvels of Engineering -The Builders By: National Geographic Society [1992]
2. Inventing the Modern World Technology Since 1750, Science Museum [2000]
3. Encyclopaedia Britannica, History & Construction of Bridges [1978]
4. Golden Gate Bridge, Key Dates, History & Information.
5. Structure of Golden Gate Bridge [www.structure.net/en/structures/data/str00029.php]
6. Building Big Databank -Golden Gate Bridge, Details, Size, Construction Data etc
7. The True Story of Design & Construction -Golden Gate Bridge
8. Suspension Bridge Improvements, Operation & Maintenance.
9. Suspension Bridges By Matsuo Bridge Company Ltd [1999]
10. http://www.aviewoncities.com/sf/goldengatebridge.htm
11. http://www.inetours.com/Pages/SFNbrhds/Golden_Gate_Bridge.html
12. https://en.wikipedia.org/wiki/Golden_Gate_Bridge [February 4, 2016]
****
S. Jayabarathan [jayabarathans@gmail.com] February 6, 2016]
















































































































