சி. ஜெயபாரதன், கனடா
++++++++++++++++
இந்த பூமி நமது
இந்த வானம் நமது
இந்த நீர்வளம் நமது
முப்பெரும் சூழ்வளத்தை
துப்புரவாய் வைப்பது நமது
ஒப்பிலாக் கடமை.
கல்தோன்றி மண் வளமாகிப்
புல்தோன்றிப் பூ மலர
புழுக்கள் நெளிய நீர்வளம்
எழுந்த தெப்படி ?
நானூறு கோடி ஆண்டுக்கு முன்
தானாக நீர் வெள்ளம்
மீன்வளம் பெருகிய தெப்படி ?
மீனினம் மானுடம்
ஆனதெப்படி ?
வெப்ப அழுத்த வாயுக்கள்
வெடித் தெரிந்து
நீர்த் திரவம் சேர்ந்ததா ?
சூரியக் கதிரொளி மின்னலில்
வாயுக்கள் சேர்ந்தனவா ?
வால்மீன் மோதி நீர் வெள்ளம்
வாரி இறைத்ததா ?
விண்கற்கள் வீழ்ந்து பனிப்பாறை
தண்ணீர் ஆனதா ?
சுவைநீர் உப்புநீர் ஆன தெப்படி ?
கடல்நீரைக் குடிநீர் ஆக்கு !
மழைநீரை ஏரியில் சேமித்திடு !
நீர்மயம் எப்புறம் இருப்பினும்
தூய நீர் அருந்தப் பூமியில்
துளி நீரிலை !
மண்டினி ஞாலத்தில்
உண்டி உயிர் கொடுத் தாலும்
குடிநீர் இல்லையேல்
முடிந்திடும் ஆயுள் !
++++++++++++
S. Jayabarathan [jayabarathans@gmail.com] June 4, 2018 (R-4)

