உடையும் பாண்டம்

கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா.

அந்திமக் காலமே இன்றி என்னை
ஆக்கியுள்ளாய் நீ!
உவகை அளிப்ப தல்லவா அது உனக்கு?
உடையும் இப்பாண்டத்தை
மீண்டும், மீண்டும்
வெறுமை ஆக்குவாய் நீ!
புத்துயிர் அளித்து,
மறுபடியும் அதை நிரப்புவாய் நீ!
குன்றின் மீதும், பள்ளம் மீதும் நீ 
ஏந்தி வந்த
புல்லின் இலையான
இச்சிறு
புல்லாங்குழல் விடும் மூச்சுக் காற்றில்
கால மெல்லாம்
புதிய கீதங்கள் பொழிய வைப்பாய் நீ!
உந்தன் தெய்வீகக் கரங்கள் என்மேல் படும்போது,
எந்தன் நெஞ்சம்
உவகையின்
எல்லை மீறிச் செல்லும்!
மேலும் அதில்
ஊகிக்க முடியா உரைமொழிகள் உதிக்கும்!
அளவின்றி
அள்ளி அள்ளிப் பெய்த உந்தன்
கொடைப் பரிசுகள் 
எனது இச்சிறு கைகளில் மட்டுமே
கிடைத்துள்ளன!
கடந்து
போயின யுகங்கள்!
ஆயினும்
இன்னும் நீ இப்பாண்டத்தில்
பொழிந்து பொழிந்து கொட்டுகிறாய்!
அங்கே
காலியிடம் உள்ளது இன்னும்,
மேலும் நீ நிரப்பிட!
 
**************

முதல் பெளதிக விஞ்ஞானி காலிலியோ

Fig 1 Image of Galileo

Galileo Galilei

(1564-1642)


சி. ஜெயபாரதன்,B.E (Hons), P.Eng (Nuclear) Canada


விசாரணை மண்டபத்தில் விஞ்ஞான மேதை காலிலியோ!

1600 ஆம் ஆண்டில் புருனோ [Giodarno Bruno] உயிரோடு கம்பத்தில் எரிக்கப் பட்டு முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்து, 69 வயது விஞ்ஞானக் கிழவர் காலிலியோ ரோமாபுரி மதாதிபதிகளால் குற்றம் சாற்றப் பட்டு விசாரணைக்கு இழுத்துவரப் பட்டார்! அவர் செய்த குற்றம், மதத் துரோகம்! போப்பாண்டவர் எச்சரிக்கையை மீறிப் ‘பூமியே மையமாகிச் சூரியன் உள்பட ஏனைய கோளங்களும் அதைச் சுற்றுகின்றன ‘ என்னும் டாலமியின் நியதி [Ptolemy ‘s Theory] பிழையானது என்று வெளிப்படையாகப் பறைசாற்றியது, காலிலியோ புரிந்த குற்றம்! காபர்னிகஸ் [Copernicus] கூறிய பரிதி மைய நியதியே மெய்யானது என்று பகிரங்கமாக வலியுறுத்தியது, காலிலியோ செய்த குற்றம்! அதற்குத் தண்டனை, சாகும்வரை காலிலியோ பிளாரென்ஸ் நகர்க்கருகில் அர்செற்றி [Arcetri] என்னு மிடத்தில் இல்லக் கைதியாய் [House Arrest] அடைபட்டார்! ஒன்பது ஆண்டுகள் சிறையில் தனியே வாடி வதங்கி, கண்கள் குருடாகி, காலிலியோ 1642 இல் காலமானார்! அந்தக் காலத்தில் எழுந்த புது விஞ்ஞானக் கருத்துக்களை ரோமாபுரி மடாதிபதிகள் புறக்கணித்து, விஞ்ஞான மேதைகளைச் சிறையிலிட்டுச் சித்திரவதை செய்தது, உலக வரலாற்றில் வருந்தத் தக்க, அழிக்க முடியாத கறையாகும்!

‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue on the Two Chief World Systems] என்ற காலிலியோவின் நூலைத் தீயிட்டுக் கொளுத்தும்படி ரோமாபுரி மடாதிபதிகள் கட்டளை யிட்டனர்! காலிலியோவின் சிறைத் தண்டனைச் செய்தி எல்லாப் பல்கலைக் கழகங்களிலும் வாசிக்கப் பட வேண்டும் என்றும் கட்டளையில் எழுதி இருந்தது! ஆனால் ‘பழையன கழிதலும், புதியன புகுதலும் ‘ என்னும் முதுமொழிக் கேற்ப, கால வெள்ளத்தில் காபர்னிகஸின் மெய்யான பரிதி மைய நியதியை எவரும் தடைபோட்டு நிறுத்த முடியவில்லை!

Fig 2 The Trials of Galileo-1

விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்த விஞ்ஞானி!

‘கடந்த நூற்றாண்டுகளில் தெரியாமல் மறைந்திருந்த பல மகத்தான காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு அளவற்ற எனது நன்றியைக் கூறுகிறேன் ‘ என்று இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ இறுதியில் ஆனந்தப் படுகிறார்! ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வரிசையில் முன்னணியில் நிற்கும் உன்னத மேதையாகக் கருதப் படுபவர், காலிலியோ! முதன் முதலில் தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்தவர், காலிலியோ! பிறை வெள்ளியைக் கண்டு, அது சூரியனைச் சுற்றி வருவதைத் தொடர்ந்து நோக்கி, காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதி ‘ மெய்யான தென்று நிரூபித்துக் காட்டியவர், காலிலியோ! அடுத்து நிலவை நோக்கி அதன் குழிகளையும் மலைகளையும் காட்டினார்! பரிதியின் தேமல்களை [Sun Spots] முதன் முதலில் கண்டு பிடித்தவரும் காலிலியோவே! பூதக்கோள் வியாழனை சுற்றும் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ! சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான ‘நெப்டியூனை ‘ [Neptune] முதலில் கண்டு, அதன் ஆமைவேக நகர்ச்சியைக் குறித்து வைத்து, தான் ஒரு புதுக்கோளைக் கண்டதைக் கூட அறியாமல் போனவர், காலிலியோ!

ஊசல் ஆட்டத்தில் [Pendulum Swing] ஓர் ஒழுங்கைக் கண்டு பிடித்துக் கடிகார நகர்ச்சிக்கு முதலில் அடிகோலியவர், காலிலியோ! உலகப் புகழ் பெற்ற பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து மாறான எடையுள்ள குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் வந்து விழுவதை எடுத்துக் காட்டினார்! கண்ணோக்குகள், சோதனைகள் ஈன்ற முடிவுகளை [Observations & Experiments] விளக்கிப் படிப்படியாகப் பின்னிய விதிகளைக் கணித்த முதல் பெளதிக விஞ்ஞானி, காலிலியோ! உலக விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காலிலியோவை ‘நவீன பெளதிகத்தின் பிதா ‘ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூடியிருக்கிறார்!

காலிலியோவின் ஏழ்மை வாழ்க்கை வரலாறு

காலிலியோ காலிலி [Galileo Galilei] 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி இத்தாலியில் பைஸா [Pisa] நகர்க்கருகில் ஓரிடத்தில் பிறந்தார்! தந்தையார் வின்ஸென்ஸொ [Vincenzo Galilei] இசைக் கலையின் கோட்பாடு, பயிற்சி முறைகளில் திறமை பெற்றுப் பல படைப்புகளை ஆக்கிய, ஒர் இசை ஞானி. மற்றும் அவர் ஒரு கணித நிபுணர். வலம்பிராஸா [Vallombrosa] மதப் பள்ளியில் காலிலியோவுக்குக் கல்வி புகட்டியவர், கிறிஸ்துவப் பாதிரிமார் [Monks]! 1575 இல் காலிலி குடும்பம் இடம்மாறிப் பிளாரென்ஸில் போய்க் குடி புகுந்தது. பள்ளிப் படிப்பை முடித்து விட்டுக் காலிலியோ 1581 இல் பைஸா பல்கலைக் கழகத்தில் மருத்துவம் பயிலச் சேர்ந்தார். ஆனால் கல்லூரியில் காலிலியோ மருத்துவத்தில் கவனம் செலுத்தாது, கணிதக் கல்வியில் கவர்ச்சியாகி அதில் ஈடுபட்டார்! தந்தையின் சொல்மீறி அவர் சினத்துக்கு ஆளாகி, காலிலியோ கணிதம், வேதாந்தம் ஆகிய பாடங்களைக் கற்றார்! அடுத்து பெளதிகத்திலும் அவரது கவனம் தாவியது! 1583 இல் பைஸா கோயிலில் தொங்கிய ஸாண்டிலியர் விளக்கு ஊசல் வீச்சு [Chandelier Amplitute of Swing] ஆட்டத்தின் காலத்தைத் தன் நாடித் துடிப்புடன் கணக்கிட்டு ஓர் விந்தையைக் கண்டார்! ஊஞ்சல் வீச்சின் அகற்சி [Width] கூடினாலும், குறைந்தாலும் ஊசல் வீச்சின் காலம் மாறாமல் ஒரே எண்ணிக்கையில் இருந்தது!

Fig 3 Confession to the Church

அரிஸ்டாடிலின் [Aristotle] வேதாந்தம் படித்தார். கணிதம் சொல்லிக் கொடுக்கும் அளவுக்குக் கற்றுக் கொண்டு, பட்டம் பெறாமலே பல்கலைக் கழகத்தை விட்டு 1585 இல் வெளியேறினார்! கிரேக்க மேதைகளான யூகிளிட் [Euclid (300 B.C)], ஆர்கிமீடிஸ் [Archemedes (287-212 B.C)] ஆகியோரின் கணிதம், விஞ்ஞானப் படைப்புகளைப் பயின்றார்! அத்துடன் தனியார் புகட்டும் கணிதக் கல்வியையும் பிளாரென்ஸ், ஸியனா நகரங்களில் கற்றார்! 1586 இல் ஆர்கிமீடிஸின் தத்துவத்தை உபயோகித்துக் காலிலியோ சிறிய எடையைக் காண உதவும் புதிதான ஒரு ‘நீரழுத்தத் தராசைச் ‘ [Hydrostatic Balance] செய்து, ‘சிறிய தராசு ‘ [Little Balance] என்னும் கட்டுரையை எழுதினார். 1588-1589 ஆண்டுகளில் தந்தையும் மகனும் சேர்ந்து, இசைக் கருவியின் தொனிப்புக்கும் [Pitch], நாண்களின் இழுப்புக்கும் [Tension of Strings] உள்ள தொடர்பை ஆராய்ச்சி செய்தனர்! அடுத்து இருபது ஆண்டுகள் காலிலியோ ‘அண்டங்களின் நகர்ச்சியைப் ‘ [Motion of Bodies] பற்றி ஆய்வுகள் செய்தார்.

1589 இல் காலிலியோ பைஸா பல்கலைக் கழகத்தில் கணிதப் பேராசிரியராகச் சேர்ந்தார். 1590 இல் காலிலியோ ‘நகர்ச்சியைப் ‘ பற்றிய [On Motion] தனது முன்னோட்டக் கருத்துக்களை எழுதி நூலாக வெளியிட்டார். 1591 இல் அவரது தந்தை காலமாகி, பெருத்த பணமுடை ஏற்பட்டது! ‘விழும் பண்டங்களின் எடைக்கு ஏற்றபடி, பூமியைத் தொடும் காலம் மாறும் ‘ என்று கூறிய அரிஸ்டாடிலின் கோட்பாடைத் தாக்கி, சாய்ந்த பைஸா கோபுர [Pisa Tower] உச்சியிலிருந்து சமமற்ற எடைகளுள்ள [Unequal Weights] இரண்டு பீரங்கிக் குண்டுகளை விழ விட்டு, அவை ஒரே சமயத்தில் பூமியில் விழுவதை எடுத்துக் காட்டினார்! ஆனால் அரிஸ்டாடிலைக் காலிலியோ தாக்கியது அவரது சகபாடிகளுக்குக் கோபத்தை உண்டாக்கியது! அத்துடன் கல்லூரிப் பணி உடன்பாடு [Job Contract] மீண்டும் புதுப்பிக்கப் படாது, பல்கலைக் கழகத்தில் 1592 இல் அவரது வேலையும் நிறுத்த மானது! காலிலியோவின் அன்பர்கள் பாடுவா பல்கலைக் கழகத்தில் [University of Padua] கணிதப் பேராசிரியர் பதவியை அளித்தார்கள். 1592 முதல் 1610 வரை காலிலியோ பதினெட்டு ஆண்டுகள் அங்கே கல்வி புகட்டினார்.

பல்கலைக் கழகச் சம்பளப் பணம் போதாமல் காலிலியோ, தன் இல்லத்தில் செல்வந்த மாணவரை வாடகைக்கு வைத்துக் கொண்டும், அவருக்குத் தனிக்கல்வி புகட்டியும் பணம் சம்பாதிக்க வேண்டியதாயிற்று! அவ்வாறு பணமுடை ஏற்பட்டதால், அவர் காதலித்த வெனிஸ் பேரழகி மரினா கம்பாவைத் [Marina Gamba] திருமணம் செய்து கொள்ள முடியாது, கூட்டுக் குடும்பம் நடத்த வேண்டிய தாயிற்று! காலிலியோவுக்கு இரு பெண்டிரும் ஓர் ஆணும் பிறந்தனர். ஏழ்மை நெருக்கத்திலும் காலிலியோ தனது ‘நகர்ச்சி ‘ [On Motion] கணிதப் படைப்புகளைத் தடையின்றி வளர்த்துக் கொண்டு வந்தார்!

1612 இல் நீரழுத்தவியல் [Hydrostatics] துறையை விருத்தி செய்யும் போது, காலிலியோ அரிஸ்டாடிலைத் தாக்கி ஆர்க்கிமீடியஸைத் தூக்கிப் பேசினார்! அதற்கு அடுத்த ஆண்டு கிறிஸ்துவ மதாதிபதிகளின் சினத்திற்கு அஞ்சாது, காபர்னிகஸின் [Copernicus (1473-1543)] பரிதி மைய நியதியைப் பகிரங்கமாக உயர்த்திப் பேசினார்! அதனால் அவர் மதப் பகையாளி [Heresy] என்று மதாதிபதிகளின் வெறுப்புக்கும், சினத்துக்கும் ஆளாகி, காபர்னிகஸ் கோட்பாடைப் புறக்கணிக்கும்படிக் கிறிஸ்துவ மதக்கோயில் 1616 இல் எச்சரித்தது! எட்டாண்டுகள் காலிலியோ ஆணைக்கு அடங்கி வெளிப்படையாக எதுவும் சொல்லாது, ஆனால் மனத்துக்குள் ஆதரித்து வானியலையும், யந்திரவியலையும் [Astronomy, Mechanics] தொடர்ந்தார்.

Fig 4 The Trials of Galileo-2

‘பூமைய அமைப்பையும் ‘ [Geo-centric System] அதற்கு எதிரான ‘பரிதி மைய அமைப்பையும் ‘ [Sun-centric System] கண்ணோட்ட மின்றி [Impartial Way] எடுத்து விளக்க, 1624 இல் போப்பாண்டவரிடம் [Pope Urban VIII] அனுமதி பெற்றார்! அவர் அனுமதியில் புகழ் பெற்ற நூல் ‘இருபெரும் உலக அமைப்பாடுகள் பற்றிய சொற்போர் ‘ [Dialogue of The Two Chief World Systems] 1632 இல் படைக்கப் பட்டது! ஆனால் காலிலியோ மெய்யாக அந்நூலில் பாரபட்ச மின்றி விவாதிக்க வில்லை! தனது புதிய தொலை நோக்கி மூலம் அவர் அண்டக் கோள் நகர்ச்சிகளைக் கண்டதையும், சோதித்தையும் எடுத்துக் காட்டி, காபர்னிகஸின் பரிதி மைய நியதியே மெய்யானதாக விளக்கி யிருந்தார்! மறுபடியும் அது கிறிஸ்துவக் கோயில் மடாதிபதிகளின் கோபத்தைக் கிளரி விட்டது! உடனே அவரது நூல் தடை செய்யப் பட்டது! காலிலியோ கைதியாகி, ரோமா புரிக்குக் கொண்டு செல்லப் பட்டு, நீதி மன்றத்தில் விசாரணை செய்யப் பட்டார்! விசாரணையின் முடிவில், காலிலியோ தான் கொண்டிருந்த கொள்கைக்கு மாறாக, மனச்சாட்சியை மீறி, ‘பூமி நிலையானது! சூரியன் பூமியைச் சுற்றுவதுதான் உண்மை ‘ என்று வாக்குமூலம் செய்ய வேண்டிய தாயுற்று! ‘ஆயினும் பூமிதான் சுற்றுகிறது ‘ என்று காலிலியோ வாயுக்குள் முணுமுணுத்தாகக் கூறப் படுகிறது!

1614 ஆம் ஆண்டு பிளாரென்ஸ் பாதிரி ஒருவர், ‘பூமி நகர்கிறது, பூமி சுற்றுகிறது என்று காலிலியோக் கூட்டம் புலம்புவது மதத் துரோகம் ‘ என்று அனைவரையும் தூற்றினார்! அதற்கு காலிலியோ ஒரு நீண்ட கடிதம் எழுதினார்! பைபிளில் எங்கெங்கு விஞ்ஞானக் கருத்துக்களுக்கு முரணான கூற்றுகள் உள்ளன என்று அக்கடிதத்தில் எடுத்துக் காட்டி, அறிவு வளர்ச்சி அடைந்து வரும்போது பைபிளில் உள்ள முரண்பாடுகள் திருத்தப்பட வேண்டும் என்றும், ரோமன் காதிலிக் நம்பிக்கையை எந்த விஞ்ஞான மெய்ப்பாடுக்கும் மேற்கோளாக வாதிக்கக் கூடாது என்றும் சுடச் சுடப் பதில் கொடுத்தார்!

காலிலியோ கண்டுபிடித்த கருவிகள், விஞ்ஞான விந்தைகள்

விஞ்ஞான உலகில் பெளதிக [Physics] யுகத்தின் வாசற் கதவை முதன் முதல் திறந்து வைத்தவர் காலிலியோ! அதற்கு விதை யூன்றி, அது ஆல விழுதாகப் பெருக வழி காட்டியவர், காலிலியோ! துல்லிய கருவிகளைக் கையாண்டு அளந்து, தொடர்ச் சோதனைகள் புரிந்து நிரூபித்து, அதுவரை வெறும் பெளதிகச் சித்தாந்தமாக [Metaphysical Principle] இருந்ததைப் பெளதிக விஞ்ஞான [Physical Science] மாக்கிய பெருமை காலிலியோ ஒருவரையே சாரும்! ‘பூர்வீக யந்திரவியல் ‘ [Classical Mechanics] துறைக்கு முதலில் பல அடிப்படைத் தத்துவங்களை ஆக்கி அதைப் பிறப்பித்த விஞ்ஞானத் தந்தை அவரே! காலிலியோதான் தனது தொலை நோக்கியில் அண்டக் கோள்களின் நகர்ச்சியை தொடர்ந்து நோக்கி முதன் முதல் ‘நோக்காய்வு வானியலை [Observational Astronomy] ஆரம்பித்து வைத்தவர்! அவர் எழுதிய ‘விண்மீன்களின் தூதர் ‘ [The Starry Messenger] என்னும் நூல் வானியல் விஞ்ஞானத் துறை வளர வழி வகுத்தது

Fig 5 Galileo Looking at Planets

பைஸா கோபுரத்தின் மேலிருந்து வேறுபட்ட எடைக் குண்டுகள் இரண்டை விழச் செய்து, ஒரே நேரத்தில் அவை தரையில் விழுந்ததைக் காலிலியோ காட்டினார்! அதன்பின் 1604 இல் ‘விழும் அண்டங்களின் விதியை ‘ ஆக்கினார். ‘விழும் அண்டத்தின் உயரம், அது கடக்கும் நேரத்தின் ஈரடுக்கிற்கு நேர் விகிதத்தில் உள்ளது ‘ [The falling height by a body is proportional to the square of the elapsed time] என்பதே அந்த விதி! எறியப்படும் கணைகள் [Projectiles] சீர்வளைவு பாதையில் [Parabolic Path] செல்வதை கணித முறையில் காட்டினார்! காலிலியோ மேலும் கூறியது: ஏவப்படும் ஓர் எறிகணை வேகத்திற்கு இரு திசைப் பிரிவுகள் [Two Components] உள்ளன. ஒன்று மட்டத்தில் செல்லும் சீரான வேகம் [Uniform Horizontal Motion]! மற்றது செங்குத்தில் போகும் வேகம் [Vertical Motion (Acceleration or Deceleration) due to Gravity]! கணை மேல்நோக்கிச் செல்லும் போது, செங்குத்து வேகம் தளர்கிறது! கணை தரை நோக்கி மீளும் போது, செங்குத்து வேகம் வளர்கிறது! அவரது சோதனை மூலம் விளைந்த ‘விழும் அண்டங்களின் விதி ‘ [Law of Falling Bodies], ஸர் ஐஸக் நியூட்டன் ‘நகர்ச்சி விதிகளைப் ‘ [Newton ‘s Laws of Motion] படைக்க வழி காட்டியது!

அடுத்து காலிலியோ ஒப்பியல் வேகத்தைப் [Relative Velocity] பற்றி விளக்கினார்! ‘நகரும் பூமி அல்லது சுழலும் பூமி, தன்னோடு சேர்ந்து மேகத்தையும், பறவை இனத்தையும் தூக்கிச் செல்லாது ‘ என்று காபர்னிகஸ் கூறி யிருந்தார்! ஆனால் காலிலியோ அதை மறுத்துக் கூறி, ‘பூமியின் நகர்ச்சியில் பிரிபடும் மட்ட வேகம் [Horizontal Component of Earth ‘s Motion], பூமியோடு ஒட்டாத மேகம், பறவைகள் அனைத்தையும் எப்போதும் தன்னோடு இழுத்துச் செல்லும் ‘ என்று விளக்கினார்!

1609 இல் ஹாலந்தில் ‘உளவு நோக்கி ‘ [Spyglass] ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளதைக் காலிலியோ கேள்விப் பட்டார். முதன் முதலாக 20 மடங்கு உருப்பெருக்கம் [Magnification] கொண்ட தொலை நோக்கியைத் தன் கையாலே ஆடிகளைத் தேய்த்துத் தயாரித்தார்! அத்தொலை நோக்கி கப்பல் ஓட்டுநருக்கும், கடற்படை ஒற்றரருக்கும் உறுதுணை யானது! காலிலியோ தனது தொலை நோக்கியில் முதலில் நிலவின் மலைகளையும், குழிகளையும் கண்டார்! பால்மய வீதிகள் [Milky Way] கோடான கோடி விண்மீன்கள் கொண்டுள்ளதைக் கண்டார்! பூதக்கோள் வியாழனைச் சுற்றி வரும் நான்கு பெரிய சந்திரன்களைக் கண்டார்! 1610 ஆம் ஆண்டில் சுடரொளி வீசும் வெள்ளியின் வளர்பிறை, தேய்பிறையைக் கண்டு, ‘வெள்ளி சூரியனைச் சுற்றி வருகிறது ‘ என்று முதன் முதலில் சோதனை மூலம் காட்டி, டாலமியின் ‘பூமைய நியதி ‘ பிழையான தென்றும், காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதியே ‘ மெய்யான தென்றும் நிரூபித்தார்! அதுபோல் புதன் கோளின் பிறைகளையும் கண்டார். இத்தாலிய வேதாந்தப் பேராசிரியர்கள் பிறை வெள்ளி இருப்பதை நம்பாமல் காலிலியோவைத் திட்டி, அரிஸ்டாடில் கூற்றுப்படி முழுக் கோளங்களைத் தவிர குறைக் கோள்கள் விண்வெளியில் இருக்க முடியாதென வாதித்தார்கள்!

Fig 6 Galileo's Refractor

விண்வெளியில் தொலை நோக்கி மூலம் தான் கண்ட, வான அற்புதங்கள் யாவற்றையும் ‘விண்மீன் தூதன் ‘ [The Starry Messenger] என்னும் தனது அரிய நூலில் வெளியிட்டுள்ளார்! 1612 ஆம் ஆண்டில் காலிலியோ ஆர்கிமிடிஸ் தத்துவத்தைப் பயன்படுத்தி, ‘மிதக்கும் கலங்கள் ‘ [Floating Bodies] என்னும் நூலை எழுதினார். உடனே அதைப் புறக்கணித்து நான்கு எதிர்ப்பு நூல்கள் பின்வந்தன! சனிக்கோளை முதன் முதலில் தொலை நோக்கியில் பார்த்து, அது முட்டை வடிவத்தில் இருப்பதாகக் கருதினார். ஆனால் அவருக்குப் பின் வந்த கிரிஸ்டியான் ஹூஜென்ஸ் [Christiaan Huygens], அக்கருத்தை திருத்திச் சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதாக விளக்கினார்! 1613 இல் காலிலியோ தன் தொலை நோக்கியில் பரிதியின் தேமல்களைக் [Sunspots] முதன் முதல் கண்டு பிடித்து ஒரு கட்டுரையை வெளியிட்டார்! சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான நெப்டியூனின் [Planet Neptune] நகர்ச்சியைத் தொடர்ந்து [1612-1613] குறித்த காலிலியோ, தான் ஒரு புதுக்கோளைக் கண்டு பிடித்ததை அறியாமலே போய்விட்டார்! பிறகு 230 ஆண்டுகள் தாண்டி நெப்டியூன் 1846 இல் ஜொஹான் கல்லே [Johann Galle] என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டது!

1641 இல் காலிலியோவின் மகன் வின்சென்ஸியோ [Vincenzio] தந்தையின் ஊஞ்சல் கடிகார டிசைனை வரைந்து அதன் முதல் வடிவத்தை உருவாக்கினார். அடுத்து 1655 இல் டச் விஞ்ஞானி கிரிஸ்டியான் ஹியூஜன் அதற்கு முழு வடிவத்தைக் கொடுத்து, ஊசல் கடிகாரத்தை ஆக்கினார்! 1589 இல் உஷ்ணமானி [Thermometer] ஒன்றை ஆக்கினார். அதுவே முதலில் செய்யப் பட்ட சோதனைக் கருவி! 1592 இல் கணிதத் துறையில் கணக்கிட உதவும் கணக்கீடு மானி [Calculating Compass] ஒன்றை அமைத்தார். காலிலியோக்குப் புதிராய் இருந்த பெளதிகப் பிரச்சனைகள் இரண்டு! வால்மீன்களின் [Comets] விபரீதமான போக்கைக் கண்டு, அவை யாவும் ‘ஒளி மாயை ‘ [Optical Illusion] என்று கருதினார்! அடுத்து கடல் அலைகளின் உச்ச, நீச்ச எழுச்சிகள் [High, Low Tides] நிலவின் போக்கால் ஏற்படுகின்றன என்று அவரால் கண்டு பிடிக்க முடியவில்லை!

Fig 7 Galileo's 400th Birthday

திருமணம் ஆகாமல் 1600 இல் தனக்குப் பிறந்த மூத்த புதல்வி வெர்ஜீனியாவைப் [Viginia Galilei] பதிமூன்றாம் வயதில் காலிலியோ, பிளாரென்ஸ் நகருக்கு அருகே இருந்த கிறிஸ்துவக் கன்னிமாடத்தில் [Christian Convent] கன்னியாக விட்டுவிட நேர்ந்தது! வெர்ஜீனியா தந்தையைப் போல் நுணுக்கமான சிந்தையும், கூரிய அறிவும் படைத்தவள். கன்னிமாடத்தில் வெர்ஜீனியாவின் ஞானப் பெயர் மரியா ஸெலஸ்டி [Maria Celeste] என்று மாற்றல் ஆனது! தந்தையுடன் சேர்ந்து தொலை நோக்கியில் அண்டக் கோள்களைக் கண்டு மகிழ்ந்தவள், வெர்ஜீனியா! உன்னத மதிப்பில் வைத்துத் தந்தையை அவள் கடவுளுக்கு இணையாகப் போற்றி வந்திருக்கிறாள்! காலிலியோ தான் கண்ட விஞ்ஞான விந்தைகளைத் தன் புதல்வியிடம் கூறி யிருப்பதைக் கன்னிமாடத்திலிருந்து தந்தைக்கு வெர்ஜீனியா எழுதிய கடிதங்களில் காணலாம்!

அவள் 21 ஆண்டுகளாகக் காலிலியோவுக்கு 124 கடிதங்கள் எழுதி யிருக்கிறாள்! அவளது அரிய கடிதங்களில், காலிலியோவின் பல பெளதிகக் கண்டு பிடிப்புகள் காணப் பட்டு, அத்தொகுப்பு அவரது சரிதைக் காவியமாக இப்போதும் பாதுகாக்கப் பட்டு வருகிறது! ஆனால் மகள் பாதுகாப்பாய் வைத்திருந்த காலிலியோவின் கடிதங்கள் அனைத்தும், வெர்ஜனியா காலமான பின்பு ரோமாபுரிக் கோயிலுக்குப் பயந்து, கன்னிமாடத்தில் எரிக்கப் பட்டதாய் அறியப் படுகிறது! புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளி ‘தேவா ஸோபெல் ‘ [Dava Sobel] எழுதிய ‘காலிலியோவின் புதல்வி ‘ [Galileo ‘s Daughter (1999)] என்னும் அற்புதப் புத்தகம் காலிலியோவின் வரலாற்றை அழகாகக் காட்டுகிறது!

மெய்யான பிரபஞ்ச அமைப்பை பறைசாற்றிய குற்றத்திற்கு காலிலியோ ஒன்பது ஆண்டுகள் இல்லச் சிறைவாச தண்டனையை அனுபவித்தார்! 1634 இல் கன்னிமாடத்தில் தனித்து வாழும் அவரது அருமை மூத்த மகள் மரியா ஸெலஸ்டி மரண மடைந்த செய்தி, தீராக் கவலையைத் தந்தது! அப்போது அந்த நிலையிலும் காலிலியோ பெளதிகப் படைப்புகளைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தார். சிறையில் கிடந்த காலிலியோவைக் காண, பிரிட்டிஷ் கவியோகி ஜான் மில்டன் [John Milton], பிரிட்டிஷ் வேதாந்தி தாமஸ் ஹாப்பில் [Thomas Hobbes], காலிலியோவின் மாணவர் டாரிசெல்லி [Toricelli] ஆகியோர் வந்தனர்! அவரது பெளதிகப் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து, ‘இரட்டைப் புதிய விஞ்ஞானங்களின் உரையாடல்கள் ‘ [Discourses on Two New Sciences] என்னும் நூல் தயாரானது! அந்நூல் இத்தாலியை விட்டு ஹாலந்துக்கு மறைவாகக் கடத்தப் பட்டு, 1638 இல் அச்சாகி வெளியானது!

Fig 8 Galileo's Tomb

சிறையில் காலிலியோ தனது 74 ஆம் வயதில் கண்கள் குருடாகிப் போனாலும், தொடர்ந்து ஊஞ்சல் கடிகாரத்தை டிசைன் செய்தார். அதுவே அவரது இறுதியான படைப்பு! 1642 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் தேதி உலகின் முதல் பெளதிக விஞ்ஞானியாகக் கருதப் பட்ட காலிலியோ மண்ணுலகை விட்டு உயிர் நீத்தார்!

340 ஆண்டுகளுக்குப் பிறகு 1979 இல் இரண்டாம் போபாண்டவர் ஜான் பால் [Pope John Paul II] மதவாதிகள், அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள் ஆகியோரைத் தூண்டிக் காலிலியோவிற்கு நீதி மன்றம் அளித்த தண்டனை ஏற்றதா என்று மறுபடியும் ஆராய ஆணையிட்டார்! 1982 இல் காலிலியோ தண்டனை ஆய்வுக் குழுக்கள் நான்கு நியமிக்கப் பட்டன! கிறிஸ்துவ விஞ்ஞான நிறுவனம் [Pontifical Academy of Science] 1992 இல் வெளிப்படையாகப் ‘பரிதி மைய நியதிக்கு ‘ ஒப்புதல் தெரிவித்து, இரண்டாம் போப்பாண்டவர் ஜான் பால் மூலம் மாமேதை காலிலியோவைச் சிறையிட்டதற்கு வருந்தி மன்னிப்புக் கேட்டுக் கொண்டது!

‘பெளதிக விஞ்ஞானத்தின் பிதா ‘ என்று போற்றிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், அவரது முன்னோடி ஐஸக் நியூட்டன் ஆகியோர் இருவருக்கும் விஞ்ஞான குருவாய், காலிலியோ விளங்குகிறார்! நியூட்டனின் பூர்வீக யந்திரவியல் [Classical Mechanics], ஈர்ப்பியல் நியதி [Theory of Gravitation], ஆகிய பெளதிகப் படைப்புக் களுக்கு அடிப்படைக் கணித ஆக்கங்களை, அளித்தவர் காலிலியோ ஒருவரே!

1971 இல் அபொல்லோ விண்சிமிழில் [Apollo-15 Spacecraft] பறந்து, சூன்ய மண்டலமான சந்திரனில் நடந்த டேவிட் ஸ்காட் [David Scott] பறவையின் சிறகையும், இரும்பு சுத்தியலையும் மேலிருந்து கீழே விழவிட்டார்! இரண்டும் ஒரே சமயத்தில் தரைத் தொட்டவுடன், ‘இது காலிலியோவின் கருத்தை மெய்யாக்குகிறது ‘ என்று மகிழ்ச்சி அடைந்தார்! நாசா [NASA] 1989 இல் வியாழனை நோக்கிக் ‘காலிலியோ விண்சிமிழை ‘ [Galileo Spacecraft] அனுப்பியது! அது 1995 இல் வியாழனை நெருங்கிக் காலிலியோ தொலை நோக்கியில் 385 ஆண்டுகளுக்கு முன்பு கண்ட, அதன் துணைக் கோள்களைப் [Jupiter ‘s Satellites] படமெடுத்தது!

************************

S. Jayabarathan (jayabarat@tnt21.com) October 8, 2009 (R-2)

இருபது ஆண்டுகளில் அணுப் பிணைவு சக்தி ஆக்கத்தில் வளர்ச்சி

சி. ஜெயபாரதன், கனடா

பரிதியில் எழும் பிணைவு சக்தி பல்லாண்டுகளுக்கு முன்பே, மாந்தர் கனவில் தோன்றிச் சித்தாந்த நிலை கடந்து, கணித முறையில் வரை வடிவம் பெற்று, பூமியிலே அமைக்கப்பட்டுத் தவழும் பருவத்தைத் தாண்டி, இப்போது நடக்கத் துவங்கி யுள்ளது! கட்டுப்படுத்த முடியாத பேரழிவுச் சக்தி உடைய வெப்ப அணுக்கரு ஆயுதங்கள் பலவற்றைச் சோதித்த பொறியியல் விஞ்ஞான நிபுணர்கள், பிணைவு சக்தியைக் கட்டுப்படுத்தித் தொடர்ந்து மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

இருபதாம் நூற்றாண்டின் முடிவில் பிணைவு சக்தி ஆய்வில் முன்னேற்றம்!

இருபது ஆண்டுகளில் [1975-1995] உலக விஞ்ஞானப் பொறியியல் வல்லுநர்கள் டோகாமாக் அணுப்பிணைவு உலையில் [Tokamac Fusion Reactor] 10 watt வெப்பசக்தி ஆக்கத்தில் ஆரம்பித்து, 10 மில்லியன் watt [10 MW] வெப்ப சக்தியை உண்டாக்கிப் பிணைவு சக்திப் படைப்பில் மகத்தான சாதனையை நிலை நாட்டி யுள்ளார்கள்! அந்த வெற்றிகரமான சாதனை வெப்ப அணுக்கரு மின்சக்தி வணிகத்துறை நிலையங்கள் பெருக உலக வாயிலைத் திறந்து விட்டிருக்கிறது! பிணைவு சக்தி ஆராய்ச்சி தற்போது அடிப்படை ஆய்வு நிலையைத் [Research Stage] தாண்டி, ‘முன்னோடி மாடல் சோதனை ‘ [Prototype Model Testing] நிலைக்கு உயர்ந்துள்ளது! கடந்த எட்டாண்டுகளாக பிணைவு சக்தி ஆய்வுகளின் சிறப்பான வெற்றியால், பொறியியல் துறை வளர்ச்சி பெற உறுதிச் சான்றிதழ் ‘ [Certified for Engineering Development] அளிக்கப் பட்டுள்ளது! 2001 நவம்பர் 5 ஆம் தேதி அமெரிக்கா, கனடா, ரஷ்யா, ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகிய விஞ்ஞான முற்போக்கு நாடுகள் கனடா, டொரான்டோ [Toronto] நகரில் கூடி 5 பில்லியன் டாலர் செலவில் உருவாகப் போகும் மாபெரும் அகில நாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வு உலை ‘ [International Thermonuclear Experimental Reactor, ITER] ஒன்றைப் பற்றி முடிவு செய்தன!


பிரம்மாண்டமான 1000 MW ஆற்றல் கொண்ட அப்பிணைவு அணு உலைக்குத் தேவையான 100 Kg டிரிடியம் [Tritium] எரிவாயுவில், கனடா தனது அழுத்தக் கனநீர் அணு உலைகளில் [Pressurised Heavy Water Reactors] சேமித்துள்ள 55 Kg டிரிடியத்தை அளிக்க முன்வந்துள்ளது! அவ்வணு உலைக்கு இடமளிக்கக் கனடா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளும் தயாராக உள்ளன! கனடாவின் பிளவு அணு உலைகளில் உள்ள மிகையான அளவு கனநீரில் [Heavy Water] இருக்கும் டியூடிரியம், டிரிடியம் [Deuterium, Tritium], பிணைவு அணு உலைகளுக்கு எருவாகப் பயன்படுவதால், ITER நிறுவகமாகக் கனடா தேர்ந்தெடுக்கப்பட காரண முள்ளது! மேலும் புதிய பிணைவு உலையில் உண்டாகும் மின்சக்தி ஆற்றல் 200 MW முதல் 1000 MW வரை இறங்கி ஏறப் போவதால், உறுதியாக இணைந்த வினியோகக் கம்பிகள் [Supply Grid Lines] தேவைப் படுகின்றன! அந்த வசதியும் கனடாவில் அமைந்துள்ளதால், அங்கே அகில உலக எதிர்கால முன்னோடிப் பிணைவு உலை நிறுவகமாக வாய்ப்புள்ளது!

அணுப்பிணைவுச் சக்தி நிலையத்தின் நிறைபாடுகள்!

பிணைவு சக்தி பிளவு சக்தியை [Fission Energy] விட பல முறைகளில் மேன்மை உடையது. அணுப்பிணைவு சக்தியில், அணுப் பிளவு சக்திபோல் உயிரிஇனங்களைத் தாக்கி வதைக்கும் பயங்கரக் கதிரியக்கம் [Radioactivity] இல்லை! பிணைவுச் சக்தியில் கதிர்வீசும் கழிவுகள் இல்லை! அதில் எழும் கதிரியக்கம் மிகச் சிறிதளவே! அமெரிக்காவின் திரீமைல் தீவு, ரஷ்யாவின் செர்நோபிள் அணுப்பிளவு சக்தி நிலையங்களில் ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தின் போது, உலையின் எரிக்கோல்கள் உருகிப் பெரும் சிக்கலை உண்டாக்கியது! பிணைவு உலைகளில் வெடிப்பு விபத்துகள் ஏற்படா! இயக்கத்தின் போது எரிக்கோல் உருகிப் போகும் அபாயம் எதுவும் இல்லை! அணுப் பிணைவு நிலையங்களிலிருந்து தினம் வெளியேறும் கழிவு வாயுக்கள் மனிதர் மற்றும் இதர உயிரினங்களுக்குத் தீங்கு தருவன அல்ல! அவைச் சூழ்வெளியைச் [Environment] சுத்தமாக வைத்திருக்க உதவி புரிபவை! பிணைவு இயக்கத்தில் ரசாயனத் தீயின் கடும் விளைவுகள் உண்டாவ தில்லை! மேலும் பிணைவு உலைகளில் பயன்படும் எரி ஆவிகள் டியூட்டிரியம், டிரிடியம் இரண்டும் உலகெங்கும் நீரில் அளவற்ற கன அளவு கிடைக்கின்றன. எதிர் கால மின்சக்தி உற்பத்திக்குப் பல நூற்றாண்டுகளுக்கு வேண்டிய, வெப்ப அணுக்கரு எருக்களுக்குப் பஞ்சமே இருக்காது! மாபெரும் ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு நிலையத்துக்குத் தேவையானது சிறிதளவு எருதான்! உதாரணமாக 1000 MWe நிலையத்தின் ஓராண்டுக்கு வேண்டிய எரு 0.6 மெட்ரிக் டன் [1320 பவுண்டு] டிரிடியம்! அது அணுப்பிளவு நிலையமானால், 30 டன் யுரேனியம் டையாக்கஸைடு [UO2] தேவைப்படும்! அது வெப்ப மின்சக்தி நிலையமானால், 2.1 மில்லியன் டன் நிலக்கரி வேண்டியதிருக்கும்! இவற்றை ஒப்பு நோக்கினால், ஒரு டன் டியூடிரியம், அணுப்பிணைவு நிலயத்தில் 29 பில்லியன் டன் நிலக்கரி வெளியாக்கும் வெப்ப சக்தியைத் தருகிறது! பிணைவு சக்தியின் தீப்பிழம்பு மின்கொடைத் துகள்களின் [Plasma charged Particles] வேகங்களைத் தணித்து, நேரடியாக அவற்றை மிகையான மின்சக்தி அழுத்தமாக [High Voltage Electricity] மாற்றிவிடலாம்! அம்முறையில் நீராவி உண்டாக்க கொதிகலம் [Steam Boiler], வெப்பசக்தியை யந்திர சக்தி, மின்சக்தி யாக மாற்ற டர்பைன், தணிகலம், மின்சார ஜனனி [Turbine, Condenser & Generator], மிகை வெப்ப மூட்டிகள் [Super Heaters], அனுப்புநீர் வெப்ப மூட்டிகள் [Feed Water Heaters] போன்ற பொது வெப்பச் சாதனங்கள் வேண்டியதில்லை! வெப்பத்திலிருந்து நேரடி மின்சக்தி! நிலக்கரி, ஆயில், அணுப்பிளவு நிலையங்களில் அடையும் வெப்பத் திறனுக்கும் [Thermal Efficiency 30%-45%] மிக மேலாக நேரடி மின்சக்தி உற்பத்தியில் பிணைவு நிலையங்களில் பெறலாம்!

அணுப்பிளவு சக்தி நிலையங்களின் குறைபாடுகள்!

வெப்ப அணு உலைகளில் [Thermal Reactors] இயற்கை யுரேனியத்திலிருந்து, மிதவேக நியூட்ரான் கணைகளை ஏவி 1%-2% பங்கு ஆற்றலைத்தான் பெற முடிகிறது! அதே சமயம் எருப்பெருக்கி [Breeder Reactors] அணு உலைகளில் வேக நியூட்ரான் கணைகளால் தாக்கி யுரேனியத்தி லிருந்து 75% ஆற்றலை ஈர்க்க முடிகிறது! ஆனால் அணுப்பிளவு சக்தியின் ஒரே ஒருத் தீவிரக் குறைபாடு கதிர்வீச்சுத் தாக்கல், சூழ்மண்டல நாசம், கதிரியக்கக் கழிவுகள் சேர்க்கை, மற்றும் அவற்றைக் கடத்திச் செல்லும் போக்கு வரத்தில் சிரமம், அவற்றின் நீண்ட காலப் பாதுகாப்புப் புதைப்பில் தடங்கல்கள் போன்றவை பல்லாண்டுகள் மனிதரைப் பயமுறுத்திக் கொண்டு வருபவை! வேக எருப் பெருக்கி அணு உலைகள் [Fast Breeder Reactors] யுரேனியத்திலிருந்து மிகுதியாக ஆற்றலை அளித்தாலும், அவற்றில் அடிக்கடி பழுதுகள் நிகழ்ந்து, உலைக்கருவில் உள்ள புளுடோனியம்239, யுரேனியம்233 அளவு கடந்த உஷ்ணத்தில் உருகி விடலாம்! அடுத்து உலைப் பூரணப் பளு ‘ [Critical Mass] நிலை அடைந்து விரைவில் மீறிய திடீர் தொடரியக்கம் ‘ [Prompt Critical Reaction] எழுந்து அணு உலை வெடித்து, கதிரியக்கப் பொழிவுகள் வெளியேறிக் காற்றில் பரவி மனிதர் நலத்துக்கு அபாயங்கள் நேரச் சந்தர்ப்பங்கள் உள்ளன!

வெப்ப அணுக்கரு வெடிப்பில் உலக நாடுகளின் தீராத வேட்கை

வானத்தில் பறந்து செல்லும் பறவைகளே மனிதன் விமானத்தைப் படைக்க முன்னோக்குத் தூண்டலாக இருந்து வந்துள்ளன! அதுபோல் பரிதியிலும், அண்டவெளி விண்மீன்களிலும் எழும் வெப்ப அணுக்கரு சக்தியே, மனிதன் பேரழிவு செய்யும் தகுதி பெற்ற ஹைடிரஜன் குண்டுகளை ஆக்க வழி வகுத்தது! உலக வல்லரசுகள் வெடிக்கச் செய்த ஒவ்வொரு வெப்ப அணுக்கருச் சோதனையும் [Hydrogen Bomb Testing] ஒரு குட்டிச் சூரியனே! பரிதியில் 15 மில்லியன் டிகிரி C உஷ்ணம், பேரழுத்தம் உள்ள தீப்பிழம்பில் [Hot Plasma] ஹைடிரஜன் வாயு மூலகங்கள் பிணைந்து ஹீலிய வாயுவாக மாறி வெப்பம், ஒளி, கதிர்வீச்சுகள் போன்றவை வெளியேறுகின்றன! கட்டுப்பாடுக்கு அடங்காத வெப்ப அணுக்கரு ஆயுதம் வேறு! கட்டுக்கு அடங்கிய வெப்ப அணுக்கருச் சக்தி உலைகள் வேறு! 1930 ஆரம்ப ஆண்டுகளில் முதன் முதலில் சுழல்விரைவாக்கி யந்திரங்களில் [Cyclotron Accelerators] வேகமாய் முடுக்கி விடப் பட்ட டியூட்ரான் கணைகளை [High Energy Deutron Projectiles] ஏவி, ஹைடிரஜன் மூலகத்தின் ஏகமூலமான டியூடிரியம் [Hydrogen Isotope: Deuterium] குறியைத் தாக்கிடச் செய்து, ஹீலிய வாயு வாக்கி வெப்பத்தை உண்டாக்கினார்கள்! சூடேறிய ஹீலிய வாயுவைத் தவிர, மிஞ்சிப் பயனுள்ள சக்தி எதுவும் கிடைக்க வில்லை! அடுத்து இரண்டாம் உலகப் போரில் 1945 இல் அணு ஆயுதம் ஆக்கிய, லாஸ் அலமாஸ் அமெரிக்க விஞ்ஞானிகள் எட்வெர்டு டெல்லர் தலைமையில் 1952 இல் முதல் அணுப்பிணைவு ஆயுதத்தைத் தயாரித்து, பேரளவுச் சக்தியை வெளியாக்கிக் காட்டினர்! அடுத்து அமெரிக்காவைத் தொடர்ந்து, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சைனா ஆகிய நாடுகளும் கட்டுப்பாடு இல்லாத பிணைவு சக்தி வெளியேற்றத்தை எடுத்துக் காட்டினர்! ஆனால் இவ்விதம் கட்டுப்பாடு இல்லாத குட்டிச் சூரியனை வெடித்துக் காட்டினாலும், அந்த முறையில் வெப்ப அணுக்கரு சக்தியைப் பயன்படுத்தி, உலகில் மின்சக்தியை உண்டாக்க முடியாது!

அணுப்பிணைவு சக்திக்கு வேண்டிய எளிய எருப் பண்டங்கள்

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பியக் குழுவினர் தமது டோகாமாக் வெப்ப அணுக்கரு ஆய்வு உலையில் [Tokamac, Thermo Nuclerar Fusion Test Reactor] 100-200 மில்லியன் டிகிரி உஷ்ணத்தை உண்டாக்கி எருவாக ஹைடிரஜனின் இரண்டு ஏகமூலகங்களான டியூடிரியம், டிரிடியம் [Hydrogen Isotopes: Deuterium,Tritium] ஆகிய இரண்டையும் பயன்படுத்தி வருகின்றன. 1[டியூடிரியம்]2 + 1[டிரிடியம்]3 –>2[ஹீலியம்]4 + 0[நியூட்ரான்]1 + 17.6 MeV (சக்தி) பிணைவு சக்தி உற்பத்திக்குத் தேவையான எருக்கள் மூன்று: 1. டியூடிரியம், 2. டிரிடியம், 3. லிதியம் [Lithium]. ஆறு, ஏரி, கடலிலும் கொட்டிக் கிடக்கும் நீரில் 7000 இல் ஒரு பங்கானது டியூடிரியம். 500 லிட்டர் நீரில் 15 கிராம் டியூடிரியம் கிடைக்கிறது! டிரிடியம் இயற்கையில் கிடைப்பதில்லை. கனநீர் மிதவாக்கியாகப் பயன்படும் வெப்ப அணு உலைகளில் உபரியாக விளைகிறது. மேலும் செயற்கையில் லிதியம் உலோகத்தை நியூட்ரான் கணைகளால் தாக்கினால், டிரிடியத்தை உண்டாக்கலாம். அணுப்பிணைவு உலையின் உள்ளே சுற்றுச் சுவரில் லிதிய உலோகம் அமைக்கப் பட்டுள்ளதால், இயக்கத்தின் போது எழும் அதிவேக நியூட்ரான்கள் லிதியத்தைத் தாக்கித் தொடர்ந்து டிரிடியம் யந்திரத்தி னுள்ளே விளைகிறது. 3[லிதியம்]6 + 0[வேக நியூட்ரான்]1 –>1[டிரிடியம்]3 +2[ஹீலியம்]4 3[லிதியம்]7 + 0[வேக நியூட்ரான்]1 –>1[டிரிடியம்]3 +2[ஹீலியம்]4 +0[மெது நியூட்ரான்]1 இயற்கை லிதியத்தில் இரண்டு ஏகமூலங்கள் [92.5% லிதியம்7, 7.5% லிதியம்6] உள்ளன. எல்லா உலோகத்திலும் மிகவும் நலிந்த [Lightest Metal] லிதியம் 30 கிராம், நியூட்ரான் தாக்குதலில் 15 கிராம் டிரிடியம் எருவை உண்டாக்குகிறது.

டோகாமாக் அணு உலையில் பிணைவு சக்தி உற்பத்தி

அணுப்பிளவில் யுரேனியம்235, புளுடோனியம்239 போன்ற கனப் பிண்டங்கள் நியூட்ரான்களால் இரு சிறு கூறாகளாகப் பிளக்கப் பட்டு வெப்ப சக்தி எழுகிறது! அணுப்பிணைவில் ஹைடிரஜன், லிதியம் போன்ற எளிய பிண்டங்கள் பேரளவு அழுத்தம், மிகையான உஷ்ணம் கொண்ட சூழ்நிலையில் இணைந்து பெரிய மூலகமாக மாறி வெப்ப சக்தி உண்டாகிறது! இரண்டு வித அணுசக்திகளும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் பளு சக்தி சமன்பாடுக்கு ‘ [Mass Energy Equation] உடன்படுகின்றன! பிளவு, பிணைவு ஆகிய இரண்டு அணுக்கரு இயக்கத்தின் முடிவில் விளையும் பளு இழப்பே [Mass Defect] சக்தியாக மாறுகிறது! விளையும் சக்தி = [பளு இழப்பு] X [ஒளிவேகம்] X [ஒளிவேகம்] யுரேனியம்235 மூலக அணுப்பிளவில் 200 MeV சக்தி ஒவ்வொரு தரமும் விளைகிறது! அதே போல் ஹைடிஜரன், ஹீலிய அணுப்பிணைவில் ஒவ்வொரு முறையும் 17.6 MeV சக்தி உண்டாகிறது! ஒவ்வொரு கருத்துகள் ‘ [Nucleaon] அளிக்கும் சக்தியைத் தனியாகக் கணக்கிட்டால், அணுப்பிளவில் 200 MeV/235=0.85 MeV சக்தியும், அணுப்பிணைவில் 17.6 MeV/5=3.5 MeV சுமார் 4 மடங்கு சக்தி கிடைக்கும். திடவம், திரவம், வாயு, பிழம்பு [Solid, Liquid, Gas, Plasma] என்னும் நான்கு விதத் தோற்றங்களில் நிலை மாறும் பிண்டத்தின் [Four States of Matter], பிழம்பு நிலையே, பிணைவுச் சக்தி ஆக்குவதற்கு ஏதுவானது. திடப் பிண்டம் ஒன்றை வெப்பத்தில் சூடேற்றும் போது, உருகும் நிலை எய்தவுடன் அது திரவ நிலை அடைகிறது. தொடர்ந்து வெப்பத்தைச் செலுத்தினால், வாயு வாகி இறுதியில் தீப்பிழம்பாகி அதன் வாயுத் துகள்கள் மின்கொடை பெற்று [Electrically Charged Ions] மின்மயமாகின்றன! மூன்று வித முறைகளில் அனல் பிழம்பை அரணிட்டு [Plasma Confinement] அணுப்பிணைவு இயக்கம் நிகழ்த்தலாம். முதலாவது முறை ஈர்ப்பியல் அரண் பிணைப்பு ‘ [Gravitational Confinement Fusion]. இந்த முறைக்குச் சூரியன், சுய ஒளி விண்மீன்களில் இயங்கும் பேரளவு உஷ்ணம், ஹைடிரஜன் வாயுப் பேரழுத்தம் தேவைப் படுகிறது. இந்த முறையைப் பூமியில் கையாள முடியாது. அடுத்தது, ‘காந்தவியல் அரண் பிணைப்பு ‘ [Magnetic Confinement Fusion]. ஆய்வுக் கூடத்தில் இது சாத்திய மானது. 1950 ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி முறைக்கு உலகெங்கும் பயன் படுகிறது, இம்முறை. இந்த தத்துவத்தில் உருவானதுதான் டோகாமாக் [Tokamak] அணுப்பிணைவு யந்திரம். காந்தவியல் அரண் பிணைப்பில் அனல் பிழம்பு நீடிக்க, மூன்று முக்கிய நிபந்தனைத் தொடர்புகள் ஒன்றை ஒன்று பொருந்த வேண்டும்: அரணுக்குள் ஆக்கும் தூண்டு உஷ்ணம், அது நீடிக்கும் காலம், வாயுவின் அடர்த்தி [Temperature, Time & Density]. 100-200 மில்லியன் டிகிரி உஷ்ணப் பிழம்பு சில வினாடிகள் நீடிக்க, ஓரளவு வாயு அடர்த்தி தேவை. மூன்று பரிமாணங்களின் இந்தப் பிணைவு உறவை லாஸன் உறவுப்பாடு ‘ [Lawson Criterion] என்று பெளதிகத்தில் குறிப்பிடப் படுகிறது. மூன்றாவது முறை: முடவியல் அரண் பிணைப்பு ‘ [Inertial Confinement Fusion]. இதில் லேசர் வீச்சுக் கதிர்களைப் [Laser Beams] பாய்ச்சி உள்வெடிப்பு [Implosion] நிகழ்த்தி, அனல் பிழம்பு உண்டு பண்ணிப் பிணைப்பு சக்தி ஏற்படுத்துவது. இந்த முறை பெரும்பாலும் அணு ஆயுதம் [Nuclear Weapons] தயார் செய்ய, யுத்த விஞ்ஞானிகளுக்குப் பயன் படுகிறது.

1997 ஆம் ஆண்டில் முதன் முதலாக இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டில் உள்ள, உலகிலே மிகப் பெரிய JET [Joint European Torus] டோகாமாக் யந்திரத்தில் டியூட்டிரியம், டிரிடியம் வாயுக்களைப் பயன்படுத்தி 200 மில்லியன் டிகிரி உஷ்ணத்தில் பிழம்பை சில வினாடிகளுக்கு நீடிக்க வைத்து 10 MW பிணைவுச் சக்தியை உண்டாக்கினார்கள்! உச்ச அளவு 16 MW வரை ஏறியது! இதுவரைச் சாதித்த மிகையான அளவு சக்தி இதுதான்! ஆனால் சில வினாடிகள் நீடித்த அப்பிணைவு சக்தியை மேற்கொண்டு அதிக மாக்கவோ, அல்லது நீடிக்கச் செய்யவோ அதன் வடிவம் போதாது! அணுப் பிணைவு இயக்கம் தொடரக் குறைந்தது பிழம்பு நீடிப்பு 1000 வினாடிகளுக்கு நிகழ்த்த வேண்டும்! அதற்கு அதை விடப் பிரம்மாண்டமான டோகாமாக் அணு உலை ஒன்று நிறுவப் பட வேண்டும்! 2001 ஆம் ஆண்டில் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, கனடா, ஜப்பான் ஆகிய உலக நாடுகள் இகூடி 1000 மெகாவாட் ITER [International Thermonuclear Experimental Reactor] என்னும் மாபெரும் அகில டோகாமாக் யந்திரத்தை நிறுவி ஆராய்ச்சி செய்யத் திட்டங்கள் தயாராகி வருகின்றன. அதைக் கட்டி முடிக்க 6.6 பில்லியன் டாலர் தொகை ஒதுக்கப் பட்டுள்ளது. அந்த ஆய்வு நிலையம் 2005 ஆம் ஆண்டில் இயங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கனடாவின் கான்டு அழுத்தக் கனநீர் அணுமின் நிலையங்களில் [CANDU Pressurised Heavy Water Reactors] பல ஆண்டுகளாக உபரிப் பண்டமாய்ச் சேமிக்கப் பட்ட டிரிடியத்தையும் [Tritium], நீரில் கிடைக்கும் டியூடிரியம் [Deuterium] ஆகிய இரண்டையும் புதிய டோகாமாக் பிணைவு உலையில் பயன்படுத்துவதாக உள்ளது.

அணுப்பிணைவு சக்தி உற்பத்தியின் மேம்பாடுகள்!

அணுப்பிணைவு உலைகளுக்கு வேண்டிய எரு உலக நீர்வளத்தில் எண்ணிக்கை யற்ற அளவு உள்ளது. பேரளவு ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு சக்தி நிலையங்களை அமைப்பது சாத்திய மாகும். மாபெரும் ஆற்றல் கொண்ட அணுப்பிணைவு நிலையத்துக்கும் தேவையானது சிறிதளவு எருதான்! உதாரணமாக 1000 MWe நிலையத்துக்கு ஓராண்டு வேண்டிய எரு 0.6 மெட்ரிக் டன் [1320 பவுண்டு] டிரிடியம்! பிணைவு சக்தியின் தீப்பிழம்பு மின்கொடைத் துகள்களின் வேகங்களைத் தணித்து, நேரடியாக அவற்றை மிகையான மின்சக்தி அழுத்தமாக [High Voltage Electricity] மாற்றிவிடலாம்! அம்முறையில் நீராவி உண்டாக்க கொதிகலம், வெப்பசக்தியை யந்திர சக்தியாக மாற்ற டர்பைன், தணிகலம் யந்திர சக்தியை மின்சக்தியாக மாற்ற மின்சார ஜனனி போன்ற பொது வெப்பச் சாதனங்கள் தேவைப்படா! பிணைவு உலைப் பாதுக்காப்பு அத்துடனே இணைந்துள்ளது. இயக்கத்தின் போது சிக்கல் நேர்ந்தால், அணு உலைத் தானாக விரைவில் நின்றுவிடும். பிளவு அணு உலைகளைப் போன்று, கதிரியக்கமோ, கதிர்வீச்சுக் கழிவுகளோ விளைவதில்லை! பிணைவு அணு உலையில் எழும் நியூட்ரான்கள் விரைவில் தீவிரத்தை இழப்பதால் பாதகம் மிகக் குறைவு. உலையின் மற்ற பாகங்களை நியூட்ரான் தாக்குவதால் எழும் இரண்டாம் தர கதிர்வீச்சுகளைக் கவசங்களால் பாதுகாப்பது எளிது. கதிர்ப் பொழிவுகளால் சூழ்மண்டல நாசம், நுகரும் காற்றில் மாசுகள் விளைவு போன்றவை ஏற்படுவதில்லை!

அணுப்பிணைவுச் சக்தி நிலையத்தில் ஏற்படும் சிக்கல்கள்!

ஆராய்ச்சி அணுப்பிணைவு உலைகளுக்கு இதுவரை உலக நாடுகள் 2 பில்லியன் டாலர்கள் செலவழித் துள்ளன! கால தாமதம் ஆவதால், இஇன்னும் 50 பில்லியன் டாலர் தொகை செலவாகலாம் என்று ஊகிக்கப்படுகிறது. மேலும் மிகச் சக்தி வாய்ந்த மின்காந்தத் தளம், அணுப்பிணைவு நிலையத்தில் இஇயங்குவதால், அதை ஆட்சி செய்யும் மனிதருக்கு அதனால் விளையும் தீங்குகள் என்ன என்பது யாருக்கும் தெரியாது! அடுத்து உலையில் பயன்படும் லிதியம் [Lithium] திரவத்துடன் ரசாயன இஇயக்க உக்கிரம் உடையது! அதன் விளைவுகளையும் அறிய வேண்டும். அனல் பிழம்புக்கு பிணைவு அணு உலை வளையத்தில் நீடிக்கப்பட வேண்டிய அதி உன்னத சூன்ய நிலை நுணுக்கம் [High Vacuum Technique], மாசு மறுவற்ற தூசிகள் அற்ற எருக்களை ஊட்டும் ஏற்பாடுகள் ஆகியவற்றைத் தொடர்ந்து பராமரிப்பதில் சிரமங்களும் பிரச்சனைகளும் நேர வாய்ப்புள்ளன!

வெப்ப அணுக்கரு சக்தியே எதிர்கால மின்விளக்குகளுக்கு ஒளி ஊட்டும்

கடந்த 50 ஆண்டுகளாக அணுப்பிளவு உலைகளிலும், அணு ஆயுதப் பெருக்கங்களிலும் சேர்ந்த பல மடங்கு கதிரியக்கக் கழிவுகள் இன்னும் பாதுகாப்பான முறையில் புதைக்கப் படாமல் சூழ்மண்டலத்தை மாசு படுத்தித் தொடர்ந்து சேர்ந்து கொண்டே போகின்றன! இயற்கைத் தாது யுரேனியத்தின் பரிமாணம் உலகில் நாளொரு பொழுதும் குறைந்து கொண்டே போகிறது! எருப் பெருக்கும் எண்ணற்ற அணு உலைகள் [Breeder Reactors] யுரேனியம், தோரியம் ஆகிய செழிப்புத் தாதுக்களைப் [Fertile Materials] பயன்படுத்திச் சிறிய அளவு ஆற்றலில் [250 MWe] இயங்கி வந்தாலும், அணுப்பிளவு எரி பொருள் [புளுடோனியம்239, யுரேனியம்233] பெருமளவில் சேர்ந்து இன்னும் 50 ஆண்டுகளுக்கு ஈடு செய்ய முடியும் என்பதை உறுதியாகக் கூற முடியாது! 2001 ஜூலையில் ஐரோப்பியக் குழுவினர், ரஷ்யக் கூட்டரசுகள், கனடா, ஜப்பான் ஆகிய உலக நாடுகள் தமது டிசைனை ஒப்புக் கொண்டு 3.8 பில்லியன் ஈரோ [Euro] நாணயத்தில் அகில நாட்டு வெப்ப அணுக்கரு ஆய்வு உலையைக் ‘ [International Themonuclear Experimental Reactor, ITER] கட்ட முடிவு செய்துள்ளன. அது அடுத்து ஆறு, ஏழு ஆண்டுகளில் இயங்க ஆரம்பித்து, வெற்றிகரமாய் மின்சக்தி பரிமாறி, 2030-2040 வருடங்களில் உலகெங்கும் பல புதிய வணிகத்துறை அணுப்பிணைவு மின்சக்தி நிலையங்கள் ஓடத் துவங்கி, நமது மின்விளக்குகளுக்கு ஒளி ஊட்டப் போவதை நாம் உறுதியாக நம்பலாம்!

தகவல்:

1. Nuclear News (Publication of The American Nuclear Society) [July 2002]

2. Nuclear  Canada Year Book [June 1995]

3. Fusion Energy ‘One Energy Option for the Future ‘

4. Atom, AEA Technology, United Kingdom [March-April 1993]

5. Fusion Energy & Canada ‘s Role

***************************

குப்பைத் தொட்டியில் ஓர் அனார்க்கலி .. !

Garbage Bin

சி. ஜெயபாரதன், கனடா

சத்திரம், சாவடி எங்கள் இனம்!
எப்போதும்
வற்றாது
என் கிணறு!
வாசல்
திறந்தே கிடக்கும்
வரவேற்க!
வாயை
மூடிக் கொள்ள
கதவுகள் இல்லை!
வாளேந்தி நிற்கும் வன்முறைக்
காவலர் இல்லை,
கண்காணிக்க!
எதையும் போடலாம்! யாரும் போடலாம்!
காதல் கடிதம்!
காயிதம், கந்தைத் துணிகள்!
ஆபாச வார, மாத இதழ்கள்
வீசி எறிந்த
மாசிலாக் கதை, கவிதை, கட்டுரை!
உயர்ந்த மதிப்பெண்
பெற்று
வேலைக்கோ, மேற் படிப்புக்கோ
மேலினத்தார்
வீணாய்ப் போட்ட
விண்ணப்பத் தாள்கள்!
வேண்டியவற்றை
யாரும்
தோண்டிக் கொள்ளலாம்!

எடுக்க எடுக்க
அடுக்காய் வரும்,
அமுத சுரபி
எமது
புதையல் களஞ்சியம்!
திருமணப் பந்தியில்
தின்ன முடியாமல்
வயிறு முட்டி
வாழையில் பலவகை உணவை
வாரிக் கொட்டி
எனது
வயிற்றை நிரப்பும்
குபேரர் கூட்டம் ஒரு புறம்!
பட்டினியால்
பரிதபித்தெனை
நாடி வந்து
நாய்களுடன் போட்டி யிட்டு
பசியாறிக் கொள்ளும்
குசேலர் கூட்டம் மறு புறம்!

அதோ பார்!
அப்பன்! அரக்கன்! கல்நெஞ்சன்!
நொடிப் பொழுதில் தோண்டி
நள்ளிரவில்
எனது
அடி வயிற்றில் போட்டு மூடும்
பெண்சிசு!
மழலை
பேசும் பிஞ்சு!
பாசமலர் விழிகள்
மூடும் முன்பு
காத்திட முடியாமல் கனல் பற்றி
இதயம்
பொங்குது!
குழலினிய, யாழினியக் குரலில்
இங்கா ? இங்கா ? எனும்
சங்க நாதம்
எழுந்து
அனார்க்கலி போல்
மோனமாய்
அடங்கித்
தாஜ் மஹாலாய்
ஆகும்!

******************

கலைஞன் ! காதலன் ! கணவன் !

image

சி. ஜெயபாரதன், கனடா

உடலை மெழுகாக்கி உன்னை
ஓவியமாய் உருவாக்கிச்
சிற்பமாய்ச் செதுக்கி,
ஒப்பனை செய்து
உலகுக்குக் காட்டுபவன்,
கற்பனைக் கலைஞன் !
உள்ளத்தின் மேல் படையெடுத்து,
வெள்ளைப் புறாவைத் தூதுவிட்டு,
இதயத்தைத் துணைக்கோள்
ஈர்ப்பில் சுற்றுபவன்
ஈசல் காதலன் !

உரிமைச் சிறையி லிட்டு, உன்னை
உயிருள்ள மட்டும் மூடி,
உள்ளமற்ற உடலாய்,
உடமைப் பண்டமாய்,
உரிமைப் பிண்டமாய்,
பம்பரமாய்,
பசும் பொன்னாய்ப் பேணுவோன்
அசுரக் கணவன் !
காதலனுக்கு வேட்கை
உன் துடிப்பு !
கலைஞனுக்கு தேவை
உன் நடிப்பு !
கணவனுக்கு வேண்டும்
உன் முடிப்பு !
கலைஞன், காதலன், கணவன் என்ற
முப்பெரும் அவதாரம்
ஒப்புடன் நிற்கலாம்
ஓருடலில் !

ஒருநாள் விருந்து நீ
ஓவியக் கலைத் தூரிகைக்கு !
சிலநாள் கனவு நீ
சிந்தை நுழை காதலனுக்கு !
பலநாள் அமுத சுரபி நீ
பசும்பொன் தரும் கணவனுக்கு !
வீணையாய் உன்னை மீட்டுபவன்
கலைஞன் !
தேனிசை நாதமாய்த் தீட்டுபவன்,
கலைஞன் !
மாங்குயிலாய் உன்னைக் காட்டுபவன்,
கலைஞன் !
நடன மயிலாய், நடிகைச் சுடராய்ப்
படமெடுத் துன்னை
மதுவாய் மாற்றுபவன் கலைஞன் !
ஊதியம் தந்து
நாடக மாடும் கலைஞன்
வாடகை வர்த்தகன் !

கள்வெறிக் கவிதையில் புரட்டிக்
காவியக் கருவாக்கி
கனவிலே தேடி ஏங்குபவன்
உன்னாசைக் காதலன் !
பொன்னுடல் மீது
போக மது ஊற்றுபவன் !
வலையிட்டுத் தலையிட்டுப்
பூவாக்கி, தேனாக்கி
தேவ மாதாக்கித்
தினமும் பூசிப்பவன்
உன் காதலன் !
உள்ளத்தைக் கொள்ளை இட்டு
உடலை மென்று விட்டு
ஓடி மறைபவன்
உன்னிச்சைக் காதலன் !

உன் காதலன் ஒரு
கணவ னில்லை !
உன் கணவன் ஒரு
காதல னில்லை !
உன் காதலன் ஒரு
கலைஞ னில்லை !
உன் கலைஞன் ஒரு
கணவ னில்லை !
உன் கணவனும் ஒரு
கலைஞ னில்லை !
உன் கலைஞன்
ஒரு காதல னில்லை !

காதலன் கணவ னாதும்
காதல் தேய்பிறை
ஆகுது !
கணவன் காதல னாகின்
காதல் மதிலைத்
தாண்டுது !
கலைஞன் கணவ னாதும்
கலைக்கண் பிறரை
நாடுது !
கணவன் கலைஞ னாகின்
கவர்ச்சி வேறிடம்
தேடுது !

கவர்ச்சிப் பெண்ணே ! உன்
காந்த உடல் கணவனுக்கு !
அலைமோதும் உள்ளம்
காதலனுக்கு !
ஆணிவே ரான ஆத்மா
கலைஞனுக்கு !
முப்பெரும் பொறிகளையும்
ஒருவனுக்கு அளித்திடாய் !
மும்மூர்த்திகள்
வேண்டும் உனக்கு !

++++++++++++++++++

திருத்தமானது (R-2) Nov 16, 2008

தேய்பிறைக் கோலம்!

third-day-moon1

சி. ஜெயபாரதன், கனடா

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
முற்றுப் பெறாத தேனாறுமேல்
சுற்றி வந்தோம்
சொர்க்கப் படகில்!
வளர்பிறைக் காலம்!
வசந்த காலம்!
எமக்குள் முளைத்த
ஒற்றுமை வேர்களைக்
கற்றுக் கொண்டு
கதைகள் பேசினோம்!
வெண்திரைப் படம் பார்த்து
கண்ணால் கவி பாடி,
மண்ணில் கால் படாது,
விண்ணில் மிதந்தோம் !
தாகம் மிகுந்து
மோகத் தீயில் மூழ்கினோம்!
விதியின் ஆசியால் முடிந்ததெம்,
அதிசயத் திருமணம்!
தேனிலவில் தடம்வைத்து,
சொர்க்க புரியின் உச்சியில் ஏறி
தர்க்க புரியில் இறங்கினோம்!
கரு நிலவின் வால்
காலைச் சுற்றிக் கொண்டது!
எமக்குள் உறங்கிய
வேற்றுமைத் தேனீக்கள்
சீறிக் கொண்டு போரிடக் கிளம்பின!
தேய்பிறை நேயம்!
சேயி ழைக்கும் காயம்!
நாய கனுக்கும் காயம்!
முறிந்து போகும் எமது பாலம்!
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
முற்றுப் புள்ளி உதயம்!
அத்த மிக்கும் கருவானில்
தொத்தி வரும் புதுநிலவு!

++++++++++++

முக்கோணக் கிளிகள் !

triple-parrots

சி. ஜெயபாரதன், கனடா

[முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாக இருக்க முடியும் என்று சிவாவின் கணக்காசிரியர் பத்தாம் வகுப்பிலே நிரூபித்துக் காட்டினார்! அந்த மெய்யுரை அவனுக்குப் பச்சை மரத்தில் அடித்த ஆணிபோல் இன்னும் நினைவில் இருக்கிறது. எதிர்பாராது அந்த வீட்டில் சந்திக்க நேரிடும் மூவர் தமது புதிய உறவைத் தம்தம் கோணங்களில் திருப்பப் பார்க்கிறார்கள். பிற கோணங்களைப் புறக்கணித்து நேர் கோணப் பாதையில் மலை ஏறும் போது, முள்ளும் கல்லும் குத்தும்! எதிர்த்துப் பனிப்புயல் அடிக்கும்! முடிவில் சிகரத்தை எட்டிப் பிடிக்கும் போது தாக்கும் இமாலயத் தடைகளைத் தாங்க முடியுமா? ஒரு சிக்கல் அவிழ்ந்தால் அதன் வயிற்றிலிருந்து இன்னொரு சிக்கல் பிறக்கிறது!]

காயிலே இனிப்ப தென்ன! கனியானால் புளிப்ப தென்ன!

தட்டிய கதவைத் திறந்த புனிதா அதிர்ச்சி அடைந்து கண்ணிமை கொட்டாமல் சிலையாய் நின்றாள். வாசற் படியில் மகள் சித்ராவுடன் இணையாக நின்ற கவர்ச்சியான வாலிபனைக் கண்டதும், அவள் நெஞ்சில் குப்பென ஓர் ஊற்று பொங்கி எழுந்தது! அவன் கண்ணொளி பட்டதும் வெற்றிடமாய் சப்பிக் கிடந்த அவள் இதயம் உப்பி விரிந்தது!

“அம்மா இவர்தான் மிஸ்டர் குருநாதன்! புதிதாகக் கல்லூரியில் சேர்ந்துள்ள எங்க மாத்ஸ் லெக்சரர். நமது மாடி வீட்டுக் காலி அறையில் தங்க விரும்புகிறார். முழுப் பெயர் சிவ குருநாதன், எங்க குரு!”  உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் சமாளித்துக் கொண்டு பேசினாள் புனிதா, “நான் கொடுத்த விளம்பரத்தில் கல்லூரிப் பெண்களுக்கு மட்டுமே வாடகைக்கு விடப்படும் என்று அழுத்தமாகச் சொல்லி யிருக்கேனே”.

“நான்தான் அவரை அழைத்து வந்தேன், அம்மா. விளம்பரத்தைப் படித்த பிறகு அவருக்கும் இஷ்ட மில்லைதான்”

“மாடி அறையில் ஆடவர் குடி வருவதை நான் விரும்பவில்லை. சித்ரா! உள்ளே வா! சொல்றேன்” சித்ரா உள்ளே சென்றதும் கதவை மூடிப் புனிதா ஏதோ மராட்டிய மொழியில் அவளுடன் பேசுவது சிவாவின் காதில் மெதுவாக விழுந்தது. பதினைந்து நிமிடங்கள் கழித்து, கதவு திறந்தது. சித்ரா மட்டும் தொங்கிய முகத்துடன் வெளியே வந்தாள்.

“வெரி ஸாரி ஸார்! எங்கம்மாவுக்கு விருப்பம் இல்லை. நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்”

“நான் மராட்டிக்காரன் இல்லை என்பது காரணமாக இருக்கலாம்”

“அப்படி ஒன்றும் இல்லை”

“ஒரு வருடம் தராவிட்டாலும், ஆறு மாதமாவது தங்கலாமா”

“அம்மா ஆறு மாதத்துக்கு அவர் தங்கட்டுமே” என்று தாயிடம் கனிந்து கேட்டாள் சித்ரா.

“ஒரு வருடத்துக்கு குறைஞ்சி வாடகைக்கு விடுவதாய் இல்லை. அதுவும் ஆண்களுக்கு கொடுப்பதாய் இல்லை” என்று உள்ளே இருந்து புனிதாவின் குரல் வந்தது.

“மூன்று மாதங்களுக்குத் தங்க விடுங்கள். அதற்குள் வேறு இடம் பார்த்துக் கொள்கிறேன்”

“இது பெண்களுக்குத் தரப்படும் ரூம்! ஆண்களை வைப்பதாக இல்லை” என்று அழுத்தமாகப் பேசினாள், புனிதா.

“ஒரு மாதமாவது கொடுங்களேன். அதற்குள் வேறு ஒரு இடத்தைப் பார்த்துக் கொள்கிறேன். வேண்டுமானால் உங்களுக்கு ஓய்வு நேரத்தில் என்னால் முடிந்த வேலையைச் செய்து கொடுக்கிறேன்” என்று சிவா அவர்களைப் பரிதாபமாக நோக்கினான். புனிதாவிடமிருந்து உடனே பதில் வராமல் சற்று அமைதி நிலவியது.

“எங்களுக்கு ஆடவர் உதவி எதுவும் தேவையில்லை!”

“அம்மா நான் டியூஷனுக்கு வெளியே போக வேண்டியதில்லை, ஸார் எனக்கு கணக்கு, பிசிக்ஸ் சொல்லிக் கொடுத்தால்”

“நான் பணம் வாங்காமலே சித்ராவுக்குச் சொல்லிக் கொடுக்கிறேன்”

“அம்மா நமக்கு டியூஷன் பணம் மிச்சம், குரு நம்ம மாடியிலே வாடகைக்கு வந்தால்”

“சித்ரா! உனக்கு யாரும் இலவசமா சொல்லித் தர வேண்டாம்” … போட்டாள் ஒரு போடு, புனிதா.

“அப்போ சரி! குருவுக்கு டியூஷன் பணத்தைக் கொடுத்திடலாம். ஆனால் ஒரு மாதத்திலே நான் என்ன கணக்கைக் கற்றுக் கொள்வது? அல்ஜீப்ராவுக்கே மூணு மாசம் ஆகும்! அப்புறம் ஜியாமெட்ரி இருக்கு. அனலிடிகல் ஜியாமெட்ரி இருக்கு. அப்புறம் பிசிக்ஸ் படிக்க வேணும்! ஒரு வருசத்துக்கும் குறைஞ்சா அரை குறையாகத்தான் என் டியூஷன் முடியும்”

“நான் அதுக்கு இப்போ பதில் தர முடியாது. கல்லூரி மீட்டிங் போக நேரமாச்சு! யோசித்து இரண்டு நாளிலே சொல்றேன்” என்று கூறி புனிதா உள்ளே போய் விட்டாள்.

சித்ரா சிவாவைக் கண்டு புன்னகை புரிந்தாள். அழகிய அவளது மீன் விழிகள் இன்னும் விரிந்தன.

கதவுக்குப் பின்னால் மறைந்த புனிதாவின் பேச்சில் காரம் இருந்தாலும், அவளது குரல் இனிமை சிவாவைப் பாகாய் உருக்கியது.

“சித்ரா! நீ சாமர்த்தியக்காரி. உன் அம்மாவை மடக்கிப் போட்டு விட்டாயே. நன்றி சித்ரா நன்றி! நான் வருகிறேன் என்று நடக்க ஆரம்பித்தான்.

“குருவே! ஹோட்டல் அறையில் தூங்கி விழாமல், சற்று தியானம் செய்யுங்க, மாடி அறை கிடைக்க வேணும் என்று. அம்மா மனதை மாத்துவது மிகக் கஷ்டம். இன்னும் நாற்பத்தி எட்டு மணி நேரம்! எண்ணிக் கொண்டே இருங்க” என்று சிரித்துக் கொண்டு கதவைச் சாத்தினாள், சித்ரா.

ஞான ஒளி வீசுதடி, மோன விழிச் சுடர்முகத்தில்!

கோயமுத்தூர் எஞ்சனியரிங் கல்லூரியில் இடம் கிடைத்து முதலாண்டு சேர்ந்த சித்ரா, மாத்ஸ் லெக்சரர் சிவநாதனை வகுப்பில் அன்று காலையில்தான் சந்தித்தாள். அப்போது சிவாவுக்கு தங்க அறை இல்லாதது, தன் வீட்டு மாடி காலியாக இருப்பது இரண்டையும் ஒன்றாய் இணைக்க ஒரு கணிதச் சமன்பாடு போட்டுப் பார்த்தாள். அன்று கணக்கு வகுப்பைத் தொடங்கிய சிவநாதன் பள்ளியில் போதித்த பழைய ஜியாமெட்ரியில் முக்கோணத்தின் பண்புகளை மாணவருக்கு நினைவூட்டினான். பித்த கோரஸ் தேற்றத்தை விளக்க வரும் போது அவன் கூறியதை சித்ரா மனதில் அசை போட்டுக் கொண்டிருந்தாள். முக்கோணத்தில் ஒரு கோணம்தான் நேர்கோணமாக இருக்க முடியும்! கணக்கில் அவள் ஒன்றும் பலவீனமானவள் அல்ல! கடைசி நேரத்தில் எப்படியாவது உருட்டிப் புரட்டி அறுபது மார்க்கு வாங்கி விடுவாள்! எப்படியோ படித்து, எப்படியோ தேர்ச்சி பெற்று, எப்படியோ இடம் வாங்கி, அவள் இப்போது எஞ்சனியரிங் கல்லூரி முதலாண்டு மாணவி என்ற பெருமிதத்தில் இருந்தாள்!

பதினெட்டு வயது பொங்கித் ததும்பும் சித்ரா ஊர்வசியா அல்லது மேனகாவா? இரண்டில் ஒருத்தி. முதல் நாளே சிவநாதனின் நடை, உடை, பாவனை அனைத்தும் சித்ராவை மயக்கி விட்டன! சித்ராவுக்குப் பேசும் விழிகள்! அவள் தாய் புனிதாவுக்குப் பேசா விழிகள்! பேசும் விழிகளை விடப் பேசாத விழிகளே சிவாவுக்குக் காவியங்களைக் கூறின! புனிதாவையும், சித்ராவையும் அருகே நிற்க வைத்துப் பார்த்தால் தாய், மகள் மாதிரி தெரியாது. இருவரையும் அக்காள், தங்கை என்றுதான் சொல்ல வேண்டும்!

சித்ராவின் தாய் புனிதவதி நாற்பது வயதைத் தாண்டி விட்டவள்! இருபது வயது வனிதா மணிபோல் புனிதா இருந்தாள்! சித்ராவை விட எடுப்பாகவும், உடல் கட்டு குலையாமல் செதுக்கி வைத்த சிலை போல இருந்தாள். அவளது கணவர் காப்டன் ஆனந்த் குல்கர்னி இறந்து பத்தாண்டுகள் ஓடி விட்டன! ராணுவ அதிகாரியாக ஜம்மு காஷ்மீரில் சில வருடங்கள் பணி புரிந்தவர். கடைசியில் காஷ்மீர் மூர்க்கர்களின் தாக்குதலில் உயிரைப் பலி கொடுத்தவர். கோயமுத்தூர் ராணுப் பயிற்சி முகாமில் மூன்று வருடங்கள் ஆனந்த் குல்கர்னி அதிபதியாக இருந்தவர். கணவனை இழந்த புனிதா இப்போது தனிமையில் மகளுடன் வாழும் தனிமரம்!

பூனேயில் மராட்டியக் குடும்பத்தில் பிறந்த அவர்கள் கோவையில் இருபது ஆண்டுகளாக இருந்ததால் மூவருக்கும் நன்றாகத் தமிழ் பேசவும், எழுதவும் தெரியும். அதிலும் சித்ரா கோவையிலே பிறந்தவள். வீட்டில் மராட்டிய மொழி பேசினாலும் அவளுக்குத் தமிழ்தான் நன்கு எழுதப் பேசத் தெரியும். புனிதா எம்.ஏ. பட்டதாரி. நாகரீக மராட்டியக் குடும்பத்திலே பிறந்த புனிதா, கணவனை இழந்த பின்னும் நெற்றியில் பொட்டு வைத்துக் கொண்டாள்! கூந்தலில் பூ வைத்துக் கொண்டாள்! வண்ணச் சேலைகளைக் கட்டிக் கெண்டாள்! கணவனை இழந்தவள் என்று புனிதா வெளியில் விளம்பரம் செய்து கொள்வதில்லை! கோவை நிர்மலா பெண்டிர் கல்லூரியில் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியையாக புனிதா வேலை பார்த்து வந்தாள். கல்லூரியில் பாதிப்பகல் கழிந்து விடுவதால், அவளைத் தனிமை கொடுமைப் படுத்துவது மீதிப் பாதி இரவு நேரம்தான்!

சிவநாதன் நாற்பது வயதை எட்டியவன்! தங்கையின் திருமணம் தள்ளிக் கொண்டே போனதால், தனிமையில் அவன் வயதும் ஏறிக் கொண்டே போனது! தன் வயது ஏறுவதைப் பற்றி அவன் கவலைப் படவில்லை! ஆனால் மணமாகாமல் தங்கையின் வயது ஏறுவதை அவனால் தாங்க முடிய வில்லை! மதுரைக் கல்லூரியில் பற்றாத குறைந்த சம்பளத்தில் பத்தாண்டுகள் கணக்குச் சொல்லிக் கொடுத்தான். அந்த வருடம்தான் கணக்கு லெக்சரர் வேலை கிடைத்து, கூடிய சம்பளத்தில் கோவை எஞ்சினியரிங் கல்லூரியில் சேர்ந்திருக்கிறான். அவனும் தங்கையும் இரண்டே நபர்கள். தகப்பனார் காந்தியின் விடுதலைப் போராட்டத்தில் கலந்து இரண்டு வருடம் பெல்லாரி சிறையில் கிடந்தவர். இப்போது தியாகிகள் பென்ஷசன் பெற்று ஓய்வில் இருக்கிறார்! தாய் இருக்கிறாள். சிவாதான் குடும்ப கோபுரத்தைத் தாங்கும் தூண்! பணம் சேர்த்து தங்கையின் கல்யாணத்தை முடித்து வைக்க வேண்டியது அவன் கடமை! ஹோட்டல் அறையில் தங்கி தினமும் அவனது சேமிப்புப் பணம் கரைந்து போவதை எண்ணி சிவநாதன் கவலை அடைந்தான்! குறைந்த வாடகையில் அறை எடுத்து எப்போது ஹோட்டலை விட்டு ஓடுவது என்று சிவா அலை மோதிக் கொண்டிருந்தான். வசதியாக சித்ரா, அவனை அன்று மாலை தன் அம்மாவிடம் இழுத்துச் சென்றாள்.

இனம் தெரியவில்லை எவனோ என் அகம் தொட்டு விட்டான்!

அன்று காலை முதல் பீரியட் கணக்கு வகுப்பில் ஏகப்பட்ட கலவரம். அப்போது தென்னக மாநிலங்கள் தனியாகப் பிரியாத காலம் அது! நூறு பேர் கொண்ட முதல் வகுப்பில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழி மாணவர்களும் கலந்திருந்தனர். அவர்களில் பெண்கள் மட்டும் பத்துப் பேர். முதல் வகுப்பு மலையாள மாணவர்களுக்கு சிவநாதனை ஏனோ பிடிக்கவில்லை! பின் பெஞ்சிகளில் அமர்ந்த மலையாளிகள் பலர் கணக்குப் பாடத்தில் கவனம் செலுத்தாமல் வேண்டு மென்றே கலாட்டா செய்தனர். பொறுமையையிழந்த சிவா, கணக்குப் போதிப்பதை நிறுத்தி, இராமாயணத்தைப் பற்றி ஆங்கிலத்திலே உரையாட ஆரம்பித்தார்.

“கவியோகி வால்மீகி தான் எழுதிய இராம காவியத்தில் தென் கோடியில் வாழ்பவரை வானரங்களாய் காட்டியிருக்கிறார்! நான் அதை நம்புவதில்லை! வடக்கே அயோத்தியா புரியில் நாகரீக மனிதர் வாழும் சமயத்தில், தெற்கே மட்டும் எப்படி வானரங்கள் வாழ்ந்தன? வால்மீகி சொல்லியிருப்பது டார்வின் நியதிக்கு முரணாக இருக்கிறது! இதுவரை நம்பாத நான் வால்மீகி சொல்லி யிருப்பது உண்மை என இப்போது நம்புகிறேன்” என்று சிவா சொல்லி முடித்த போது, வகுப்பில் சிரிப்பு வெடிகள் வெடித்தன! மலையாள மாணவர்களுக்குக் கோபம் பொத்துக் கொண்டு வந்தது! சிவா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் ஒன்றும் நடக்க வில்லை! உடனே அனைவரும் வகுப்பறையை விட்டு வெளியேறினர்! பிறகு வகுப்பில் கணக்குப் பாடம் ஒழுங்காக நடந்து முடிந்தது.

சிவா வெளியே வந்ததும் காத்துக் கொண்டிருந்த சித்ரா புன்னகை மலர, “கணக்கு வகுப்பில் அனுமார் கதையைச் சொல்லி எல்லாரையும் வயிறு வலிக்கச் சிரிக்க வைத்து விட்டீர்களே! ஸார் உங்களுக்காக மாடி அறைக் காத்துக் கொண்டிருக்கு! இன்று மாலை வரலாம். சிவப்புக் கம்பளம் விரிக்கவா? அல்லது பச்சைக் கம்பளம் விரிக்கவா? அறையில் ஏர் கன்டிஷன் இல்லை. வேண்டுமானால் மாட்டித் தருகிறோம். ஆனால் வீட்டு டியூஷனில் ராமர் கதா காலட்சேபத்தை ஆரம்பித்து விடாதீர்கள்” என்று நக்கல் புரிந்தாள்.

“உங்க அம்மா ஒரு மாதத்துக்குச் சம்மதம் தெரிவித்தார்களா?”

“ஒரு மாதமா? இல்லை. ஆறு மாதங்கள் வாங்கி விட்டேன், அம்மாவிடம் சண்டை போட்டு! எனக்கு மட்டும் நன்றி சொல்லுங்கள், முதலில்” என்றாள்.

“உனக்கு நூறு நன்றி! உன் அம்மாவுக்குக் கோடி நன்றி”

“எனக்கு ஒரு நன்றி போதும்! அம்மாவின் நன்றியை என்வழியாக அனுப்பாமல், நேராகச் சொல்லிக் கொள்ளுங்க” என்று கூறி விட்டு அடுத்து கெமிஸ்டிரி கூடத்துக்குள் நுழைந்தாள். சிவா அடுத்த கணக்கு வகுப்புக்கு நேரமாகவே சென்றான்.

பொங்கிவரும் பெருநிலவு போன்ற ஒளி முகத்தாள்!

அன்று மாலை சிவா, சித்ரா வீட்டு முன் அறையில் வந்து அமர்ந்தான். சுவரில் ஜனாதிபதி பதக்கத்தை அளிக்கும் ஒரு பெரிய படம் தொங்கியது! கம்பீரமான தோற்றமுடன் இராணுவ உடையில் நின்றார், ஆனந்த் குல்கர்னி. சித்ரா சிவாவுக்கு மாடி அறைகளைக் காட்டி விட்டு, அம்மாவிடம் கீழே அழைத்து வந்தாள். புனிதா சிறிது கடுமையான முகத்துடன் சிவாவை வரவேற்றாள். காபி கொண்டு வந்த சித்ராவுக்கு சிவா நன்றி சொன்னதும், வாடகையைப் பற்றி புனிதா பேச ஆரம்பித்தாள். அறைக்கு மாத வாடகை 400 ரூபாய். இரண்டு மாதங்களுக்கு முன்பணம் தர வேண்டும். ஆக முதலில் 1200 ரூபாய் வேண்டும். ஆறு மாதத்திற்குள் அவன் வேறோரு இடம் பார்த்து அறையைக் காலி செய்ய வேண்டும்.

கல்லூரி நாட்களில் மாலை ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் சித்ராவுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தால் மாதம் 100 ரூபாய் தருவதாகச் சொன்னாள். சிவா உடனே ஒப்புக் கொண்டான். ஆனால் முன்பணமும், முதல் மாத வாடகையும் தற்போது தன்னால் தர இயலா தென்றும், முதல் மாதச் சம்பளம் கையில் கிடைத்ததும், சேர்த்துத் தருவதாக சிவா சற்று பரிதாபமாகக் கூறினான். அதற்குப் புனிதா ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. அவனது நிலை புனிதாவுக்குப் புரிந்தது. ஹோட்டல்காரன் பணமில்லாத சிவாவை ஒருநாள் கூடத் தங்க விடமாட்டான்! கனிவாக சிவாவைப் பார்த்தாள், புனிதா. அவளது பாசமலர்க் கண்களில் சிவாவின் இதயம் சிக்கிக் கொண்டது. சிவா புறப்பட எழுந்தான்.

“சில நிபந்தனைகள், மிஸ்டர் சிவா! மாடி அறையில் எந்தக் கேளிக்கைப் பார்டிக்கும் அனுமதியில்லை! குடிச்சுக் கூத்தடிக்க அனுமதியில்லை! புகை பிடிக்க அனுமதி இல்லை! உங்க பெற்றோர், உறவினர் வரலாம். குடிப் பழக்கம் இருக்கும் நண்பர்களை இங்கு அழைத்து வர வேண்டாம்! இரவில் பின் வழியாக மாடியில் ஏறிச் செல்லும் போதும், இறங்கும் போதும் சத்தமோ சந்தடியோ உண்டாக்கி வீட்டில் தூங்குபவரை எழுப்பி விடக் கூடாது”

“நான் குடிப்பதில்லை” என்றான் சிவா. நிபந்தனைகளுக்கு உடன்படாக சிவா தலையை ஆட்டினான். பிறகு தன் பெட்டி, படுகையைக் கொண்டு வர ஆட்டோ ரிக் ஷாவைத் தேடிச் சென்றான். போகும் போது புனிதாவின் மிடுக்கான கண்களும், எடுப்பான தோற்றமும் சிவாவின் நெஞ்சையே வட்டமிட்டுக் கொண்டிருந்தன!

கண்ணில் தெரியுதொரு தோற்றம், அதை
வண்ணப் படமெடுக்கும் நெஞ்சம்!

அன்று தீபாவளி. கல்லூரியில் கிடைத்த ஒரு நாள் விடுமுறையில் மதுரைக்குச் சென்று வர சிவா விரும்பவில்லை. காலையில் புத்தாடை கட்டி இனிப்புப் பலகாரம் தின்ன அமரும் போது, மாடியில் நடமாடும் காலடிச் சத்தம் கேட்கவே, சிவாவை அழைத்து வரும்படி புனிதா சித்ராவை அனுப்பினாள். கீழே வந்த சிவா புத்தாடை புனைந்து, பூவும் பொட்டும் இட்டுப் புது மணப்பெண் போல் காட்சி அளித்த புனிதாவைக் கண்டதும் அவளது அழகில் மயங்கினான். அவன் நெஞ்சில் கனல் பற்றி இதயத் துடிப்பு அதிகமானது! இளமை பொங்கும் சித்ராவும் அழகாய் அணிந்து அன்று பூத்த மலர் போல் தோன்றினாள். அவளது வாலைமீன் கண்கள் சிவாவைக் கவர வலை விரித்தன! அவள் தன் அழகிய சிரிப்பிலே அவனை மயக்கினாள். சிவாவின் கண்கள் சித்ராவின் சிலந்தி வலையிலிருந்து தப்பி, புனிதா விரிக்காத வலையில் சிக்கிக் கொண்டன!

புனிதா புன்னகை மலர சிவாவை நாற்காலியில் அமரச் சொன்னாள். கைப் பொன் வளையல்கள் ஆட தாமரை அரும்புகள் போன்ற பளிங்கு விரல்கள் பலகாரங்களைப் பரிமாறும் அழகைச் சிவா ரசித்தான்! தின்னும் பலகாரங்களின் சுவையை ரசிக்காது சித்ராவின் கண்ணிமைகள் சிவாவின் முகத்தைப் பார்த்தும், பார்க்காமலும் விட்டு விட்டுப் படமெடுத்துக் கொண்டிருந்தன! புனிதா தயாரித்த தீபாவளிப் பலகாரங்கள் எல்லாம் சுவையாய் இருந்தன. அதைவிடப் புனிதாவின் குரல் சிவாவின் காதில் தேனாய் இனித்தது! வருடத்தில் தீபாவளி இப்படி ஒரு தடவைதான் வர வேண்டுமா என்று சிவாவின் மனம் கேட்டது! தேவலோக ரம்பை போன்ற புனிதா அன்று அன்புடன் தீபாவளித் தின்பண்டங்களைப் பரிமாற அவன் கொடுத்து வைத்தவன்! பல முறைத் தடுமாறி நன்றி சொல்லி சிவா இதயத்தை அவர்களிடம் விட்டு விட்டு மாடிக்குச் சென்றான். சித்ரா, புனிதா இருவரும் அவர்களது இதயத்தை அவன் பறித்துச் செல்ல சிலையாய் நின்றனர்!

தோயும் மது நீ எனக்கு! தும்பியடி நான் உனக்கு!

நாட்கள் சென்றன! டியூஷன் பாடங்கள் தினமும் நடந்தன! சித்ரா தினமும் டியூஷனில் கற்றுக் கொள்வது குறைவு! தனக்கு நன்றாகத் தெரிந்த விபரங்களையும் தனக்குத் தெரியாதது போல் திருப்பித் திருப்பி கேள்வி கேட்டு சித்ரா காலத்தைக் கடத்தினாள்! அவன் கவனத்தை கவர்ந்தாள்! தினமும் தரிசனம் தந்து சிவா தன்னையே நினைக்கும்படி செய்ய பல உபாயங்களைக் கையாண்டாள். நெருங்கி ஒட்டிக் கொள்ளத் துடிக்கும் சித்ராவை வெட்டி விட முடியாமல் தன்னைக் கட்டுப்படுத்த சிவா மிகவும் சிரமப் பட்டான்! காந்தக் கனல் வீசும் அவளது வாலிப மேனியைப் பற்றிக் கொள்ள எழும் இச்சையைக் கட்டுப் படுத்த சிவாவின் மனம் படாத பாடு பட்டது! என்னதான் கற்றாலும், எதற்குத்தான் கட்டுப் பட்டாலும் ஐம்புலன்கள் ஆட்சி செய்யும் தோல் போர்த்திய உடம்பு வேறு! அகத்தே உறங்கிக் கிடக்கும் உள்ளம் வேறுதான்! உடற்பசி வேறு! உள்ளப்பசி வேறு! உடல் வேண்டுவதை உள்ளம் தடுக்கும்! உள்ளம் வேண்டியதை உடல் தடுக்கும்! உடலும், உள்ளமும் ஒன்றுக்கொன்று பகையாளி! கண்ணிருந்தும் உடல் குருடானது! கண்ணில்லா உள்ளம் ஒளி கொண்டது! சித்ராவை அணைத்துக் கொள்ள உடல் விரைந்தது! ஆனால் சிவாவுக்கு உள்ளம் தடை உத்தரவு போட்டது!

அன்று சித்ராவுக்குப் புரியாத பிஸிக்ஸ் கணக்குளைச் சொல்லிக் கொடுக்க தியரியை விளக்கப் போய் இரவு பத்து மணி ஆகிவிட்டது! சாப்பிடும் ஹோட்டலில் இரவு ஒன்பது மணிக்கு மேல் உணவு கிடைக்காது! சித்ரா மட்டும் சாப்பிட உட்கார்ந்தவள், அம்மாவைக் கெஞ்சினாள்! “அம்மா! என்னால் இன்றைக்கு அவரது இரவுச் சாப்பாடு போச்சு! நம் வீட்டில் சாப்பிட அழைக்கலாமா” என்று கேட்டாள் சித்ரா. தாயும் சம்மதம் தரவே, சித்ரா ஓடிப் போய் சிவாவை அழைத்து வந்தாள். நாற்காலியில் அமரச் சொல்லி அவனைச் சிரித்த முகத்துடன் வரவேற்றாள், புனிதா. மேஜை மேல் பாதிப் பக்கங்கள் திறந்தபடிக் கிடந்த வி.ஸ. காண்டேகரின் நாவல் “கிரௌஞ்ச வதம்” அவன் கவனத்தைக் கவர்ந்தது. தள்ளி உட்கார்ந்த சிவாவை, அம்மா பரிமாற வசதியாக இருக்கும் என்று பக்கத்தில் அமரச் சொன்னாள் சித்ரா. அவன் கேளாமல் போகவே சித்ரா போய் அவன் அருகில் உட்கார்ந்தாள். இடது புறத்தில் சித்ரா! வலது புறத்தில் நின்று, தட்டில் பரிமாறியவள் புனிதா! இரண்டு அணங்குகளின் கவர்ச்சியான மேனியில் எழுந்த காந்த மண்டலத்தில் அகப்பட்டுக் கொண்டு இருபுறமும் சிவா ஈர்க்கப் பட்டுத் திண்டாடினான்!

“காண்டேகரின் கிரௌஞ்ச வதம் நாவலை நான் படித்திருக்கிறேன். உணர்ச்சி பொங்கும் உயர்ந்த நாவல்! அவர் உன்னதக் காவியப் படைப்பாளர்” என்று மௌனத்தைக் கலைத்தான் சிவா.

“ஏற்கனவே “கிரௌஞ்ச வதம்” நாவலை நான் மராட்டியில் படித்ததுதான்! இப்போது அந்த நாவலைத் தமிழில் சுவைக்கிறேன். அழகிய தமிழ் நடையில் கா.ஸ்ரீ.ஸ்ரீ காண்டேகரின் மனத்தை அப்படியே எடுத்துக் காட்டியிருக்கிறார்” என்று தனது தமிழ்ப் பற்றைக் காட்டினாள் புனிதா.

“பாவம்! கடைசிக் காலத்தில் மராட்டியக் காவிய மேதை காண்டேகரின் கண்கள் ஒளியிழந்து குருடாகிப் போயின”

“ஆங்கிலக் கவி மேதை ஜான் மில்டன் போல” என்றாள் புனிதா.
“உயர்ந்த மேதைகளுக்கு ஒன்று ஆயுள் குறுகிப் போவுது! அல்லது கண்கள் குருடாகிப் போவுது!”
அப்போது புனிதாவின் எழிற் கண்கள் வீசிய ஒளிவீச்சு சிவாவின் நெஞ்சில் மின்னலைப் பாய்ச்சின! அந்த மின் அதிர்ச்சியிலிருந்து மீண்டு அவன் விழிப்படைய சில கணங்கள் எடுத்தன!

சப்பாத்தி, குருமா, பருப்புக் குழம்பு, அப்பளத்துடன் மராட்டிய முறையில் தயாரித்த உணவு சிவாவுக்கு அமுதமாய் இருந்தது! அதை விட அவளது கனிவுக்குரல் இனித்தது! இனிதாக அவள் பேசுவதைத் திரும்பத் திரும்ப கேட்க வேணும் போல அவனுக்கு ஆசை எழுந்தது. அத்தனை அன்புடன் அவனை யாரும் இதுவரை உபசரித்ததில்லை.

அன்றைய தினத்தில் நடந்த சிவாவின் முதல் விருந்து புது விதமான உணர்ச்சிகளை மூவரிடமும் எழுப்பியது! சிவாவை வீட்டுக்கு வந்த மருமகனாக எண்ணிச் சித்ரா கற்பனைக் கனவில் மிதந்தாள்! பத்தாண்டுகளுக்கு முன்பு அதே இடத்தில் புருசனுக்கு உணவு பரிமாறிய நினைவு புனிதாவுக்கு வந்தது! கண்ணான கணவனுக்குத் தனது கையால் உணவு பரிமாறுவது போல் எண்ணிப் புனிதா மனதில் இன்புற்றாள்! சிவாவுக்கு வயிறு மட்டும் நிறைந்தது. ஆனால் இதயம் காலியாகிப் பசி உண்டானது! அவனது உள்ளம் புனிதா ஒருத்தியை மையமாக வைத்து அவளையே சுற்றிச் சுற்றி வந்தது!

சாப்பிட்டதும் நன்றி கூற வந்த சிவா, தான் இரண்டு மாத வாடகை தர முடியாமல் போனதற்குப் புனிதாவிடம் வருத்தம் தெரிவித்தான். அவன் கையில் பணம் சேர்ந்தாலும், சேர்ந்த பணத்தை விட செலவுப் பணம் அதிகமானது! தகப்பனாரின் கடிதம் இரண்டு வாரத்துக்கு ஒரு முறை வந்துவிடும். மாதம் ஒரு முறை மொத்தமாக அனுப்பினாலும், அவருக்குத் தொகை பற்றவில்லை. தங்கை திருமணச் சீட்டுக்குச் செலுத்தும் பணம்! மின்சார வாரியத்துக்குப் பணம்! அரிசி, பருப்பு காய்கறிகளுக்குப் பணம்! பால் வாங்க தனியாகப் பணம்! சிவா கல்லூரிக்குக் கடன் வாங்கிப் படித்ததுக்கு மாதா மாதம் பணம் அடைப்பு! அதனால் பெரிய பணமுடை உண்டாகிக் கடைசி இரண்டு மாத வாடகை புனிதாவுக்குத் தர முடியாமல் போனது!

தங்கையின் திருமணத்துக்குச் சீட்டுப் பணம் செலுத்துவது, தன் படிப்புக் கடனை அடைப்பது, நோய்வாய்ப் பட்ட தந்தையின் மருந்துக்குத் தருவது, அத்துடன் வீட்டுச் செலவுக்கு அனுப்புவது இவைகளுக்கே தன் வருவாய் பற்றாமல் போவதைப் புனிதாவிடம் இப்போது சொல்லி விடுவதுதான் நல்லது என்று நினைத்து தனது பண முடையை விபரமாகக் கூறினான். கண்ணிமைகள் கொட்டாது கூர்ந்து கேட்ட புனிதாவுக்கு என்ன சொல்வ தென்றே தெரியாமல் பரிதாபமாக அவனைப் பார்த்தாள்.

தன்னால் வாடகை தர முடியாமல் போவதால், ஆறு மாதத் தவணைக்கும் முன்பாகவே தான் அறையைக் காலி செய்வதாய் வருத்தமுடன் கூறினான் சிவா!

“என் டியூஷன் என்ன ஆவது? பாதியிலே விட்டு விட்டுப் போவது சரியா” என்று அலறினாள் சித்ரா. புனிதா பெருந்தன்மையுடன் பேசினாள்.

“மிஸ்டர் சிவா! திடீரென்று எங்கும் போக வேண்டாம்! பணம் மிஞ்சும் போது கொடுக்கலாம். போய் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள். கல்லூரியிலிருந்து வந்ததும் மாலையில் பேசிக் கொள்ளலாம்” என்று கனிவாகப் பேசி சிவாவை அனுப்பி வைத்தாள். சித்ராவின் முகத்தில் முழு நிலவு தென்பட்டது. புனிதாவுக்கு நன்றி கூறி அவள் முகத்தை நெஞ்சில் படமெடுத்துக் கொண்டு, பெரு மூச்சுடன் மாடிக்குச் சென்றான், சிவா.

தூண்டிற் புழுவினைப் போல், எரியும் சுடர் விளக்கினைப் போல்
நீண்ட பொழுதாக எந்தன் நெஞ்சம் துடித்தடி!

அன்று மூன்று பேருக்கும் தூக்கம் இல்லை! ஒவ்வொருவருக்கும் ஒருவித ஏக்கம்! சிவாவுக்கு வாடகைப் பணம் தர முடியவில்லையே என்னும் குற்றமுள்ள நெஞ்சு! புனிதாவின் அன்ன மிட்ட கைகள், புன்னகை தழுவிய முகம், கனிவு பொங்கும் இனிய குரல் அனைத்தும் கனவாகப் போகுமா என்ற பயம்! படுக்கையில் புரண்டு புரண்டு படுத்தான்! இதயத்தைக் கவர்ந்த ஒருத்தியை விட்டு விட்டு அவனால் போக முடியுமா? வாடகை தர முடியாத சிவாவை இன்னும் மாடி அறையில் தங்க அனுமதித்த, புனிதாவுக்கு சிவா என்ன கைம்மாறு செய்யப் போகிறான்?

புனிதாவுக்கும் அன்று உறக்கம் வரவில்லை. பத்தாண்டுகளாக கணவன் காஷ்மீரில் மரணமடைந்த பின் ஆடவர் வாடையே இல்லாமல் தனியாகக் காலம் கழித்தவள் புனிதா. இப்போது பாலை வனத்தில் கண்ட பசுஞ் சோலையாக சிவா அவளது தலை வாசலில் கால் வைத்தான். தங்கையின் திருமணத்துக்கு அவன் பணம் சேர்ப்பதும், குடும்பமே கண்ணாக அவன் உழைப்பதும் புனிதாவுக்கு அவன் மேல் பற்றையும், கவர்ச்சியையும் உண்டாக்கியது. அவன் வாடகை தராமல் பணம் தாமதமாகி விட்டாலும் பரவாயில்லை. அறையை விட்டு அவன் போய் விட்டால், அவளது நெஞ்சில் ஒரு பெரும் குழி உண்டாகி விடும் என்று அஞ்சினாள். கல்லூரியிலிருந்து மாலையில் சிவா வீடு திரும்பி மாடியில் நடக்கும் ஓசையைக் கேட்கும் போதெல்லாம் அவளது இதயத்தில் ஏதோ ஒரு துடிப்பும், அதைத் தொடர்ந்து ஒரு கனலும் எழுந்தது. கல்லூரியில் அவள் பீ.ஏ. வகுப்பில் ஷேக்ஸ்பியரின் நாடகம் “அண்டணி & கியோபாட்ரா” நடத்தும் போது, சிவா அண்டணியாகவும் தான் கிளியோபாத்ராவாகவும் எண்ணிக் கற்பனை செய்து கொள்வாள்! அவனையே இராப்பகலாக நினைக்கும் அவள் மனம் அவன் போய் விட்டால் என்ன பாடு படும்?

சித்ராவும் தூங்க வில்லை! முந்திய நாள் அவனுக்குத் தெரியாமல் அறையில் எடுத்த அவன் படத்தை பார்த்துப் படுக்கையில் ரசித்துக் கொண்டிருந்தாள். கல்லூரி வகுப்பில் சந்தித்த முதல் நாளே, சித்ரா மயங்கி, தன் இதயத்தை சிவாவிடம் பறி கொடுத்தாள்! அப்புறம் சாமர்த்தியமாகத் தன் வீட்டு மாடி அறையில் அவனை அடைத்து விட ஒரு வாய்ப்புக் கிடைத்தது! கணிதப் பாடத்தைச் சொல்லிக் கொடுக்க வைத்துத் தினமும் அவனைத் தரிசிக்க, சித்ரா வழி வகுத்து அதிலும் அவளுக்குப் பூரண வெற்றி!

அன்று சனிக்கிழமை! முகத்தைக் கழுவி விட்டுத் துண்டில் மூடித் துடைத்து கொண்டு கண்ணாடி முன் நின்ற சிவா தன் தோள் மீது மெத்தென்ற ஒரு கரம் பட்டதும் திடுக்கிட்டான்! கவர்ச்சி பொங்க சிரித்துக் கொண்டு பின்னால் நின்றவள் சித்ரா! சிவாவின் இதயம் ஆடியது! மெதுவாக அவளது கைகளை விலக்கினான்! சித்ரா மறுபடியும் அவனது தோளில் கையை வைத்தாள்! சிவநாதனுக்குப் கோபம் வந்தது!

“சித்ரா! இது தப்பு! நீ என்னைத் தொடுவது தகாத செயல்” என்று அலறினான்.

“நீங்க என்ன கீழ் ஜாதியா? இதிலே என்ன தப்பு இருக்கு?”

“நீ வயசுப் பெண். என்னை நீ தொடக் கூடாது! நான் எந்த ஜாதியா இருந்தா என்ன? உங்க அம்மாவுக்குத் தெரிந்தால் என்ன ஆகும்? என்னை வெளியே துரத்திடுவாங்க”

“துரத்த மாட்டாங்க! என்ன ஆகும் தெரியுமா? எனக்கும் உங்களுக்கும் கல்யாணம் ஆகும்! எங்க அம்மாவுக்கு அவ்வளவு பயமா?”

“இப்போ உன்னைக் கண்டால்தான் எனக்குப் பயமாயிருக்கு! பிளீஸ் கையை எடு”

“நான் உங்களைத் தொடுவது தப்புன்னு என் கையை உதறித் தள்ளினால் என் கையைப் பிடிச்சு இழுத்தீங்க நான் அம்மாவிடம் புகார் செய்வேன்! அப்போ என்ன செய்வீங்க?” என்று அவனை மடக்கினாள். சிவாவுக்குத் தர்ம சங்கடமாய்ப் போனது!

“அப்படி உன் அம்மாவிடம் நீ பொய் சொல்வாயா? எதற்காக இங்கு வந்தாய்? இன்று டியூஷன் கூட இல்லை”

“சினிமாவுக்குக் கிளம்பினேன். உங்களுடன் போகலாம் என்று அழைக்கத்தான் வந்தேன்”.

“நான் சினிமாவுக்குப் போவதில்லை. அப்படிப் போனாலும், உன்னுடன் போவதாக இல்லை”

“இப்போ நான் தீண்டத் தகாதவளாக ஆயிவிட்டேனா? நான் பணம் தருகிறேன், சினிமாவுக்கு”

“சித்ரா, உன் பணத்தில் நான் சினிமா பார்க்க விரும்பவில்லை”

“நீங்க இந்தப் பணத்தை எனக்குத் திரும்பித் தர வேண்டாம்”

“நான் உன்னுடைய கிளாஸ் லெக்சரர். வாலிபப் பெண் உன்னுடன் நான் படம் பார்க்கப் போவதை யாராவது பார்த்தால் என்ன நினைப்பார்கள்?”

“பாய் பிரண்டு என்னு நினைப்பாங்க! வீட்டிலே நீங்க லெக்சரர் இல்லே! அந்தப் பட்டமெல்லாம் கல்லூரியிலே!”

“நான் உனது பாய் பிரண்டு இல்லே! சினிமா தியேட்டரில் நம்ம கல்லூரிப் பசங்கள் வருவாங்க”

“நம்ம இரண்டு பேரையும் ஒன்னாக் காட்டுறதுக்குத்தானே படத்துக்குப் போலாம் என்கிறேன்”

“அந்தக் காட்சியைக் காண எனக்கே பிடிக்கலே”

“வரப் போறீங்களா? இல்லையா? எங்க வீட்டு விருந்தாளி நீங்க! தெருவிலே போற அன்னியன் இல்லே!” சித்ராவின் குரலில் அதிகாரம் தொனித்தது.

“உன்னோடு சினிமாவுக்கு அவர் வர மாட்டார்! நீ மட்டும் போ!” என்ற குரல் கேட்டு சிவா நடுங்கினான்.

கண்களில் கனல் பறக்க மாடிக்கு வந்த புனிதாவைக் கண்டு சிவாவுக்குத் தலை சுற்றியது. சித்ரா ஒன்றும் பேசாமல் தடதட வெனப் படியில் இறங்கி ஓடினாள். சிவாவின் கண்கள் தரையை நோக்கப் பேசினான்.

“மன்னிக்க வேணும் மேடம். உங்களிடம் என்ன சொல்றதின்னு எனக்குத் தெரியலே!”

“எல்லா வாதங்களையும் நான் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன். நான் தோட்டத்தில் இருந்தது சித்ராவுக்குத் தெரியாது. நீங்க வருத்தப் பட இதிலே ஒண்ணும் இல்லே!” புனிதா நாற்காலியில் பெரு மூச்சுடன் அமர்ந்தாள்.

“நான்தான் சித்ராவுக்காக வருத்தப் படுறேன். என் கணவர் காஷ்மீர் கலவரத்தில் இறந்த போது, சித்ராவுக்கு வயது ஆறு! போன அப்பா திரும்பாமல் போகவே அவள் மனதில் எழுந்த துடிப்பு இன்னும் இருக்கு! தந்தையை இழந்து போனதால் அவளுக்கு ஆடவர் மீது வாஞ்சை அதிகம்”

“நான்தான் என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு முக்காடினேன்!” என்றான் சிவா.

நீயே எனக்கு என்றும் நிகரானவள்!

சித்ரா தனியாகச் சினிமாவுக்குப் போய் விட்டாள். சிறிது நேரம் மௌனமாய் இருந்து, புனிதா சிவாவை சாப்பிடக் கீழே அழைத்துச் சென்றாள். சாப்பிட்டுக் கொண்டே புனிதா பேசினாள்.

“உங்களைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க. எங்கே பிறந்தது, எங்கே படித்தது, பெற்றோர்கள் என்ன செய்கிறாங்க இதெல்லாம் தெரிஞ்சு கொள்ள விருப்பம்”

“பிறந்தது மதுரையில். எம்.எஸ்சி. சயன்ஸ் பட்டம் பெற்றது, மதுரைக் கல்லூரியில். பெற்றோர்கள் இருவரும் அங்குதான் சொந்த வீட்டில் இருக்காங்க. காந்தியைப் பின்பற்றி அப்பா 1942 இல் சிறை சென்று, இப்போ தியாகிகள் பென்ஷன் பெற்று ஓய்வில் இருக்கார். அப்பாவுக்கு எழுபது வயது. அம்மாவுக்கு அறுபத்தி ஐந்தைத் தாண்டி விட்டது. நானும் தங்கையும் இரண்டே பேர்கள்தான்”

“உங்க அப்பா சுதந்திரக்குப் போராடிய ஒரு தியாகின்னு பெருமைப் படுறேன். நீங்க ஏன் எஞ்சினியரிங் கல்லூரிக்குப் போகலே?”

“அப்பாவாலே சப்போர்ட் பண்ண முடிய வில்லை. எனக்கும் ஆசைதான். என்ன செய்வது? எம்.எஸ்சி. முடிச்சு வேலைக்குப் போய் சம்பாதிக்கும்படி அப்பாவின் உத்தரவு”

“உங்களுக்குக் கணிதத்திலே எப்படி ஆர்வம் அதிகமாச்சு?”

“மதுரைக் கல்லூரி பிராமணர் நடத்தும் கல்லூரி. மாத்ஸ் பரீட்சையில் நூற்றுக்கு நூறு வாங்கிய சில மாணவரில் பிராமணர் அல்லாதவன் நான் ஒருவன் மட்டுமே. வைஸ் பிரின்சிபால் சுப்ரமணிய ஐயர் தனியாக என்னை அவரது ஆபீஸ¤க்கு அழைத்துச் சென்று முதுகில் தட்டிக் கொடுத்து, கணக்கில் நூற்றுக்கு நூறு நான் வாங்கியதற்குத் தன் மகிழ்ச்சியைத் தெரிவிப்பார்”

“கணித மேதை ராமானுஜனுக்கு அடுத்த படியா?”

“ராமானுஜன் தெய்வ அருள் பெற்ற ஞானச் சிறுவன்! நான் அவரது கால் தூசிக்குச் சமம்! ஏழு வயதிலேயே அவரது கணித ஞானம் பளிச்சென வெளிப்பட்டது! பன்னிரெண்டு வயதில் கடினமான லோனியின் டிரிகினாமெற்றியைக் கரைத்துக் குடித்தார். பாவம் அந்த கணிதச் சுடர் முப்பத்தி ரெண்டு வயசிலே காச நோயில் அணைந்து போனது! ….. உங்களைப் பற்றி எனக்குச் சொல்லுங்க” என்றான் சிவா.

“பூனேயில்தான் பிறந்தது, வளர்ந்தது, படித்தது, விவாகம் புரிந்து கொண்டது எல்லாம். எம்.ஏ. லிட்ரேச்சர் பட்டம் வாங்கியது பூனே யுனிவர்ஸிட்டியில். என் பெற்றோரும், கல்யாணமான தங்கையும் அங்கே இருக்கிறார்கள். ஆனந்த், என் கணவர் மிலிடரி கல்லூரியில் படித்து எஞ்சினியரானவர். திருமணம் ஆனதுமே, ஆனந்துக்கு முதல் பணி கோவை ராணுவ பயிற்சி முகாமில் கிடைத்தது. சித்ரா பிறந்தது, இந்தக் கோயமுத்தூரில்தான். காஷ்மீருக்கு மூணு மாசம், ஆறு மாத விஷேச டியூட்டி அடிக்கடி ஆனந்துக்கு வரும். அதில் ஒரு முறைப் பங்கு கொள்ளப் போனவர் திரும்பி ….வரவில்லை” புனிதாவின் தொண்டை சட்டென அடைத்துக் கொண்டது. கண்கள் இரண்டும் மூடின. கண்ணீர் மடை திறந்தது.

சற்று அங்கு மௌனம் நிலவியது. கண்களைச் சேலையில் துடைத்துக் கொண்டாள், புனிதா.

“தமிழில் எப்படி அழகாக உங்களால் பேச முடிகிறது?” என்று கேட்டான் சிவா.

“நானும் ஆனந்தும் மாலை வேளைகளில் தனியாகத் தமிழ் கற்றோம். கோவை ராணுவப் பயிற்சி முகாமல் இருப்பவர் அநேகர் தமிழ்ப் படையாட்கள். தமிழ் தெரியாமல் அவர்களுக்கு எப்படி பயிற்சி அளிப்பது? கணவர் தமிழ் படிக்கும் போது, நானும் சேர்ந்து கொண்டேன். சித்ரா படித்ததே தமிழ்ப் பள்ளியில்தான். உங்களுக்கு யார் எழுதிய புத்தகங்கள் பிடிக்கும்?” என்று கேட்டாள் புனிதா

“தமிழில் பாரதியாரின் பாக்கள், டாக்டர் மு.வரதராசனார், அகிலன், பார்த்தசாரதி, காண்டேகர் நாவல்கள் என்னைக் கவர்ந்தவை. ஆங்கிலத்தில் ஷேக்ஸ்பியர், பெர்னாட்ஸாவின் நாடகங்கள், ஸோமர்செட் மாகம், பேர்ல் எஸ் பெக், டால்ஸ்டாய் நாவல்கள், எமிலி டிக்கின்ஸன் கவிதைகள் எனக்குப் பிடிக்கும். உங்களுக்கு யாரெல்லாம் பிடிக்கும்?”

“எனக்கும் உங்களைப் போல் பேர்ல் எஸ். பெக், டெயிலர் கால்டுவெல் மற்றும் பெர்னாட்ஸா, ஷேக்ஸ்பியர் நாடகங்கள் பிடிக்கும். எங்க நிர்மாலா கல்லூரியில் ஒவ்வோர் ஆண்டு விழாவிலும் நான் டைரக் செய்யும் நாடகங்கள் அவை. தமிழ் எளிய மொழி! இனிய மொழி! ஒற்றை வரி ஒளவையாரைப் போல, இரட்டை வரி திருக்குறளைப் போல, நால்வரி நாலடியாரைப் போல ஒழுக்க நெறிகள் மராட்டியில் இல்லை! தெள்ளு தமிழில் இனிமையாக ஆண்டாள் எழுதிய திருப்பாவை போல மராட்டியில் எவரும் எழுதவில்லை!”

சற்று மௌனம் நிலவியது. சிவா எதிர்பார்க்காத போது புனிதா சட்டென ஒரு கேள்வியை வீசி, அவனைத் திடுக்கிடச் செய்து, அவனது கண்களை நோக்கினாள்.

வெண்ணிலவு நீ எனக்கு! வீசும் ஒளி நான் உனக்கு!

“ஒரு மராட்டியப் பெண்ணை விவாகம் செய்து கொள்ள .. உங்க அம்மா, அப்பா ஒப்புக் கொள்வார்களா?” … சிவா பதில் கூற முடியாது நெஞ்சடைத்துக் குரல் விக்கிக் கொண்டது.

“என் அப்பாவும், அம்மாவும் சம்மதம் தர மாட்டார்கள். சுற்றத்தாரின் அவதூறான பேச்சுக்கு அவர்கள் அஞ்சுவார்கள். இந்த விவாகத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டார்கள்!” என்று சிவா சொல்லியதும் புனிதாவின் நெற்றியில் சுருக்கங்கள் விழுந்தன.

“ஆனால் நான் முழு மனதாய் மணம் செய்து கொள்வேன்” என்று சிவா தொடர்ந்ததும் புனிதாவின் முகத்தில் ஒளி பெருகியது.

“உங்க பெற்றோர் ஒத்துக் கொள்வார்களா?” என்று கேட்டான் சிவா.

“மனப்பூர்வமாய் ஆசீர்வதிப்பாங்க. இதற்கு முன்பு இப்படி நான் இருமுறை முயன்று திருமணம் நின்று போயிருக்கு” புனிதாவின் கண்களில் ஈரத் துளிகள் மிதந்தன.

“அந்தத் தோல்வி உங்களை வருத்துது! ஆனால் எனக்கு எல்லையில்லா ஆனந்தம் அளிக்குது! புனிதாவின் கைகளை நான் பற்றிக் கொள்ள வேணுமென விதி எழுதி யிருந்தால், யார் அதை மாற்ற முடியும்?” என்று சிவா சொல்லியதும் புனிதா மனம் விட்டுச் சிரித்தாள். அப்போது ஆனந்தக் கண்ணீர் துளிர்த்தன!

“நான் கணவனை இழந்தவள் என்று என்மேல் வெறுப்பு இல்லையா?”

“இல்லை. நீங்க மறுமணம் புரிய விரும்புவது, எனக்கு ஊக்கம் அளிக்குது! முதல் நாள் பார்த்த போதே, என் மனம் உங்களை நாடியது. அப்போது நீங்க யார் என்றோ, உங்க தனியான வாழ்க்கை பற்றியோ எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் ரூம் ஆண்களுக்கில்லை என்று என்னை விரட்டிய அன்றைய தினமே, என் நெஞ்சில் உங்கள் உருவம் பதிந்து விட்டது. என்னை நீங்க விரட்ட விரட்ட, ஏனோ என் மனம் உங்களைத்தான் விரும்பியது! அன்று திரும்பிப் போகவே மனமில்லை, எனக்கு! போகப் போக என் இதயம் உங்க வசப்பட்டு உறுதியாகி, எப்படி இதைக் கேட்பது என்று தெரியாமல் அலை மோதினேன்”.

அப்போது புனிதாவின் கண்களில் நீரருவி பொங்கியது.

“எனக்குப் பதினெட்டு வயது வயசுக் குமரிப் பெண்ணிருப்பது உங்களுக்கு கஷ்டமாக இல்லையா?”

“மனக் கஷ்டம் இருக்கு. ஆனால் சித்ரா, உங்க அருமை மகள்! இன்னும் சில வருசங்களில் அவள் கல்யாணமாகிப் போய் விடுவாள். சித்ரா நம் இல்வாழ்வுக்கு இடராகத் தோணவில்லை! அந்த மனத்தாங்கலை நான் தாங்கிக் கொள்ள முடியும்”.

“சித்ரா இப்போ என்னுடன் இந்த வீட்டில் இருப்பது உங்களுக்கு எப்படி தோணுது?”

“அவளுக்கு என்மேல் விரும்பம் இருக்கு. நம்ம விவாகத்தால் சிக்கல் ஏற்படலாம்! முதலில் நம் விவாகத்துக்கு சித்ரா ஒப்புக் கொள்வாளா?”

“அவள் ஒப்புக் கொள்ள மாட்டாள்! அது போகட்டும், சித்ராவை நீங்க விரும்புகிறீர்களா?”

“சித்ரா மீது எனக்கு விருப்பம் இல்லை! எந்த விதத்திலும் அவள் எனக்குப் பொருத்தம் இல்லை”

“சித்ரா நமது விவாகத்தை ஒருபோதும் ஒப்புக் கொள்ள மாட்டாள். ஆனால் அவள் மராட்டிய வாலிபன் ஒருவனை மணம் புரிய வேண்டுமென நினைக்கிறேன். அவள் மனதில் எந்த நிழல் ஆடுகிறதோ?”

“எனக்கு இந்த விவாகத்தில் முழு விருப்பம். கொஞ்சம் அவகாசம் கொடுங்க. தங்கையின் திருமணம் முடிஞ்சதும் என் பெற்றோரிடம் இதைப் பற்றி நான் பேச வேண்டும்”

“உங்கள் தங்கையை பற்றிச் சில விபரம் அறிந்து கொள்ள ஆவல். என்ன படித்திருக்கிறாள்?”

“ஹைஸ்கூல் முடித்து விட்டு, மதுரைத் தபால் ஆபீஸில் சாதாரண வேலை செய்து வருகிறாள். வயது முப்பதைக் கடந்து விட்டது. உணவைக் கட்டுப் படுத்தி உடல் பெருக்காமல் பார்த்துக் கொள்கிறாள். கடந்த பத்து வருசங்களாக தங்கை கல்யாணத்தை முடிக்க முடியாது, இன்னும் தள்ளிக் கொண்டே போவுது.

பானமடி நீ எனக்கு! பாண்டமடி நான் உனக்கு!

புனிதா சிந்தனையில் சற்று ஆழ்ந்தாள்.

“உங்களுக்கு கொஞ்சப் பண உதவி செய்யலாம் என நினைக்கிறேன், நீங்க ஏத்துக் கொண்டால்”

“வாடகை தர முடியாத நான் எப்படி உங்களிடம் இன்னும் கடன் வாங்குவது?

“என் கணவர் இறந்த பிறகு, ஆயுள் இன்சூரன்ஸ் தொகை பெரு மளவில் கிடைத்தது. பூனேயில் இருந்த அவருடைய பூர்வீக வீட்டை விற்று இன்னும் சேமிப்பு உயர்ந்தது. கல்லூரிச் சம்பளப் பணமே மாதா மாதம் எனக்கு மிஞ்சுகிறது. சித்ராவின் திருமணத்துக்கு வேண்டிய பொன்னும் பொருளும் நிறைவாகவே இருக்கிறது”

“பேர் மட்டும் தெரிந்த என்னை நம்பி பெரிய தொகையைத் தர எப்படி முடிவு செய்தீங்க? எதற்காக உதவி செய்றீங்க?” புனிதா பதில் சொல்ல முடியாமல் சற்று திண்டாடினாள். சொல்ல நினைத்தது மனதுக் குள்ளே சிக்கிக் கொண்டது. புனிதாவின் கண்கள் சிவநாதனின் கண்களை நோக்கின! சிவநாதனின் கண்கள் புனிதாவின் இதயத்தை ஊடுறுவின.

“என்னிடம் சும்மா இருக்கும் பணம் உங்கள் தங்கைக்கு வாழ்வளிக்க உதவட்டும் என்று நினைத்தேன்”

“நான் எப்படி இந்தக் கடனை அடைப்பது? எப்படி வட்டி கொடுப்பது?”

“இந்தப் பணத்துக்கு நான் வட்டி வாங்கவும் விரும்ப வில்லை. முதல் வாங்கவும் விரும்பவில்லை” சிவநாதன் திடுக்கிட்டு அதிர்ச்சி அடைந்தான்.

“நீங்க என்ன சொல்றீங்க?” என்று தழுதழுத்த குரலில் கேட்டான்.

“தயவு செய்து நான் தரும் பணத்தை வரதட்சணையாய் எண்ண வேண்டாம். நம் விவாகம் நடக்காமல் போனாலும், உங்க தங்கையின் திருமணத்துக்குத் தருகிறேன்” அதிர்ச்சி அடைந்த சிவாவின் கண்களில் கண்ணீர்த் துளிகள் அரும்பின.

“இந்த உதவியை நான் மறக்க முடியாது, மிஸ் புனிதா?” எழுந்து போகக் கிளம்பினான் சிவா.
புனிதா முகமலர, “இனிமேல் நீங்க மாடி அறைக்கு வாடகை தர வேண்டாம்! வெளியே ஹோட்டலுக்குப் போக வேண்டாம். எங்க வீட்டிலே தினம் சாப்பிடலாம். சொல்ல மறந்து விட்டேன் சிவா. என்னை மேடம் என்றோ, மிஸ். புனிதா வென்றோ அழைக்க வேண்டாம்” என்று அழுத்திச் சொன்னாள்.

வண்ண மயில் நீ எனக்கு! வான மழை நான் உனக்கு!

சிவநாதனின் தங்கை திருமணம் சிறப்பாக, சிக்கனமாக மதுரையில் நடந்தேறியது. புனிதா குல்கர்னியும், சித்ரா குல்கர்னியும் திருமண விழாவுக்கு வந்தது சிவாவுக்கு மன மகிழ்ச்சியையும், திருப்தி யையும் தந்தது. கல்யாணக் கூட்டத்தில், பால் போன்ற மராட்டிய பளிங்குச் சிலைகள் இரண்டும் அத்தனை பேர் கண்களையும் கவனத்தையும் கவர்ந்தன! சித்ராவையும், புனிதாவையும் சிவா தனது தாய், தந்தையார் மற்றும் திருமணத் தம்பதிகள் இருவருக்கும் அறிமுகம் செய்து வைத்தான். குறிப்பாகப் பெற்றோர், தங்கைக்கு மட்டும் அவர்கள் யாரென்று விளக்கமாகக் கூறினான். பெருந்தன்மையாக புனிதா தங்கையின் கல்யாணத்துக்குப் பண உதவி செய்ததை அவர்களது காதில் மெல்லக் கூறினான். மூவரும் அன்பு மிகுந்து புனிதாவுக்கு நன்றி கூறினார்கள்.

சித்ரா வான மேகங்களில் மிதந்தாள். சிவாவின் தங்கையோடு மிகவும் ஒட்டிப் பழகினாள். அவளது கல்யாணத்துக்கு ஒரு தடை நீங்கி வழி திறந்ததாக ஆனந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டாள். சித்ராவை விட பெரு மகிழ்ச்சியில் இருந்தவள் புனிதா. திருமணம் ஆன பிறகும் அவள் தனிமையில் வாடிய நாட்களே அதிகம். கணவனுடன் அவள் ஆனந்தமாய்க் களித்த நாட்கள் மிகக் கொஞ்சம். இருபத்தியோர் வயதிலே கல்யாணமாகி கணவருடன் ஒன்பது வருசங்கள் வாழ்ந்தாலும் பாதிக் காலம் பாதுகாப்பு ராணுவ அதிகாரியாய்க் காஷ்மீருக்கு பயணம் போய்விடுவார்.  தனிமையில் தவிக்கும் அவள் சிவாவோடு எதிர்காலத்தில் வாழப் போவதாய்க் காணும் காட்சி மெய்யாக நிகழுமா அல்லது கனவாய்ப் பழங் கதையாய்ப் போகுமா என்பது இன்னும் நிச்சயமில்லை!

நினைப்ப தெல்லாம் நடப்ப தில்லை! நடப்ப தெல்லாம் நினைப்ப தில்லை!

அன்று மாலை நிர்மலாக் கல்லூரில் வருடாந்திர விழாவில் பங்கு கொள்ள புனிதா சென்று விட்டாள். ஆங்கில நாடகம் ஒன்றை இயக்கி அரங்கேற்ற வேண்டிய பொறுப்பு அவள் மீது விழுந்தது. சித்ராவும், சிவாவும் நாடகத்தைக் காண 9 மணிக்கு வருவதாய்ப் புனிதாவிடம் சொல்லியிருந்தார்கள். அவளது நாடகமே கடைசி நிகழ்ச்சியாக இருந்தது. சித்ரா மாடிக்குச் சென்று சிவாவைப் பார்க்கச் சென்றாள். சோபாவில் அமர்ந்த சிவாவிடம் அவள் ஒட்டி அமர்ந்து அவனது தலை மயிரைக் கோதி விட்டாள். சற்று தள்ளி அமர்ந்த சிவாவை மறுபடியும் நெருங்கி உட்கார்ந்தாள். சோபாவின் முனைக்குப் போகவே சிவா எழுந்து நின்றான்! உடனே சித்ரா அவன் கையைப் பற்றி இழுத்து சோபாவில் உட்கார வைத்து உரசிக் கொண்டு அமர்ந்தாள். அவன் முகத்தை அவளது மலர்க் கரங்களால் தடவினாள்!

“இந்த முகத்தை இப்படித் தடவ வேண்டுமென, நான் எத்தனை நாள் காத்திருக்கேன்” சித்ராவின் மொட்டு விழிகள் சிவாவின் மூடும் விழிகளை விழுங்கிவிட விரிந்து மலர்ந்தன! சிவாவுக்கு தர்ம சங்கட மானது.

“நாம் உன் அம்மாவின் நாடகத்தைப் பார்க்க நிர்மலாக் கல்லூரிக்குப் போகணும்”

“நம்ம நிஜ நாடகம் இங்கு நடக்கும் போது, அம்மாவின் நாடகத்தை அங்கு போய்ப் பார்க்கணுமா? இப்படி நமக்கு ஒரு வாய்ப்புக் கிடைக்குமா? ஏன் பயந்து நடுங்குறீங்க? உங்க தங்கையின் கல்யாணம் முடிஞ்சி நமக்குக் காலம் வந்தாச்சி. கதவும் திறந்தாச்சி! இனிமேல் நம்ம கல்யாணத்தைப் பத்தி நாம் பேச வேண்டும்! நானே அம்மாவிடம் சொல்றதா இருக்கேன். எங்க அம்மாவிடம் என்னைக் கேட்க உங்களுக்கு தைரியம் உண்டா?”

“சித்ரா! உனக்கும் எனக்கும் கல்யாணம் என்று கனவு காணாதே! அது நடக்காத கல்யாணம். குமரிப் பெண் நீ. பாதி ஆயுளைக் கடந்தவன் நான். உன்னை விட இரு மடங்கு வயது எனக்கு”.

“போதும் உபதேசம். ஒருவரை நேசித்து அவரையே மணக்க நான் விரும்புறேன். எனக்கு உங்க வயதைப் பற்றிக் கவலை இல்லை”

“மோகம் உன் கண்களைக் குருடாக்குது! என் வயதைப் பற்றி இப்போது நீ கவலைப்பட மாட்டாய்.  அறுபது வயது முதியவனாய் நான் முடங்கும் போது, நீ நாற்பது வயது வாலிப மங்கையாய் தாம்பத்ய உறவை நாடுவாய்! அப்போ என் எலும்பு கூட்டைப் பார்த்து வேதனைப் படுவாய். வீட்டில் கிடைக்காத இன்பத்தைத் தேடி நீ…. வெளியே கூடப் போவாய்”

“சீ என்ன ஆபாசப் பேச்சு இது? நம்மிருவருக்கும் ஜோடிப் பொருத்தம் இருக்கு”.

“ஆனால் நமக்கு இனப் பொருத்தம் இல்லை! மனப் பொருத்தம், வயதுப்  பொருத்தம் இல்லவே இல்லை!”

“பூனேயில் பிறந்தாலும் தமிழ் நாட்டிலே பதினைந்து வருசமா இருக்கோம். எனக்கு மராட்டியன், தமிழன் என்றெல்லாம் இன வேறுபாடு கிடையாது. மராட்டியன் தமிழனை விட உயர்ந்தவனும் இல்லே! தமிழன் மராட்டியனை விட எந்த விதத்தில் தாழ்ந்தவனும் இல்லே! இரண்டு பேரும் சமமாய் ஒரு தாய் தந்தைக்குப் பிறந்தவரே”.

“உன்னை எனக்குப் பிடிக்கவில்லை!” என்றான், சிவா.

“பொய் சொல்றீங்க! எனக்கு என்ன குறைச்சல்? அழகில்லையா? அறிவில்லையா? அந்தஸ்தில்லையா?”

“நீ அழகிதான்! அறிவாளிதான்! நல்ல குடும்பத்தில் பிறந்தவள்தான்! ஆனால் இதயத்தில் கள்ளும், முள்ளும் உள்ளன! நெஞ்சி இருக்கு! ஆனால் உள்ளம் இல்லை! மூளை இருக்கு! ஆனால் முதிர்ச்சி யில்லை! மணக்கப் போகும் பெண்ணை, நான் ஏற்கனவே முடிவு செய்துவிட்டேன்”

“யார் அந்த அதிர்ஷ்டக்காரி? அன்று கல்லூரியில் சிரித்துச் சிரித்துப் பேசினாளே, அந்த பைனல் இயர் பியூட்டி மஞ்சுளாவா?”

“இல்லை. உனக்குத் தெரிந்த ஒரு மாது”

“யார் அந்த மாது? என் கிளாஸ்மேட் மேனகாவா?”

“இல்லை.  அது உன் அம்மா என்று சொன்னால் உனக்கு மயக்கம் வருமா?”

“சீ என் அம்மாவா? அம்மாவையா விவாகம் செய்யப் போறீங்க? ஏற்கனவே திருமணமாகிய ஒருத்தியா உங்க எதிர்கால மணப்பெண்? பதினெட்டு வயசுக் குமரிப் பெண்ணை மகளாகக் கொண்ட ஒரு மாமியா உங்க மணப்பெண்? கணவனை இழந்த ஓர் அபாக்கிய வதியா உங்க வருங்கால மனைவி?”

“ஆம் அந்தப் புனிதவதிதான் என் வருங்கால மனைவி”

“என் தந்தையின் இடத்தை நீங்க நிரப்ப முடியாது. கணவனாய்க் கருதிய ஒருவரை என் உள்ளம் ஒருபோதும் தந்தையாக ஏற்றுக் கொள்ளாது. தெரியுமா ? ஏற்கனவே இது போல் அம்மா முயன்று, இரண்டு தரம் நிச்சயமாகிக் கடைசியில் திருமணம் நின்று போயிருக்கு. அவைபோல் இந்தக் கல்யாணமும் நடக்காது”

“எனக்கும்தான் நிச்சயமாகி கல்யாணம் நின்னு போயிருக்கு”

“நான் இந்த கல்யாணத்தை நடக்க விட மாட்டேன். வாலிபக் குமரி நான் காத்திருக்கும் போது, வயதான விதவையை நீங்க நாடுவது முட்டாள்தனம்”

“பெற்ற தாயை விதவை என்று கேலி செய்கிறாயே”

“பெற்ற தாயானாலும் விதவை, விதவைதான்!  என் அப்பா இறந்து போனதை எப்படி மறைக்க முடியும்? விதவை என்று நான் சொல்லா விட்டாலும், உங்க அப்பா சொல்வார்! உங்க அம்மா சொல்வாள்! உங்க தங்கை சொல்வாள்!  உங்க ஊரார், உற்றார் எல்லாரும் சொல்வார்!  அப்படிப் பழிப்பதை உங்களால் தாங்கிக் கொள்ள முடியுமா?”

“தாங்கிக் கொள்ள முடியும். நான் உன் தாயை மணக்க வாக்குக் கொடுத்து விட்டேன்”

“தாயை மணந்து, மகளைப் பிரிக்க முடிவு செய்து விட்டீங்க! உண்ட வீட்டுக்கு இரண்டகமா?”

“நான் அப்படி வஞ்சகம் செய்ய நினைக்க வில்லை!”

“தம்பதிகளாய் என் தாயும், என்னைக் கவர்ந்தவனும் அடுத்த அறையில் ஒன்றாய் இருப்பதை எப்படி என்னால் தாங்கிக் கொள்ள முடியும்?”

“தாங்கிக் கொள்ள முடியாதுதான். தனியாக இருக்கும் உன் தாய் மறுபடியும் குடும்ப மாதாய் வாழப் போவதில் உனக்கு அக்கறை இல்லையா?”

“அக்கறை இருக்கு. ஆனால் நீங்க அம்மாவுக்குச் சொந்தம் இல்லே! எனக்குத்தான் சொந்தம்! முதலில் உங்களைக் கண்டு பிடித்தவளே நான்தான்!  தாயிடம் சண்டை போட்டு நீங்க இருக்க இடம் பிடித்தவளே நான்தான்.   என் தாய், என்னிடமிருந்து உங்களைக் களவாடி விட்டாள்!”

“இல்லை! பார்த்த முதல் நாளே நான்தான் புனிதாவை நாடியவன்! போகப் போக புனிதாவுக்கும் என்னைப் பிடித்து விட்டது!”

“ஒரு பெரிய கைம்மாறை எதிர்பார்த்துத்தான், உங்க தங்கை திருமணத்துக்கு என் தாய், முன்வந்து பண முடிப்பைக் கொடுத்தது கூட உங்களுக்குத் தெரியவில்லையா?”

“பண முடிப்பைத் தருவதற்கு முன்பே, எனக்கு புனிதா மேல் விருப்பம் இருந்தது. பண முடிப்பைத் தராமல் போயிருந்தாலும், புனிதாவை மணக்க நான் தயாராக இருந்தேன்”

“பாருங்க, நான் உங்கள் கலியாணம் நடக்காமல் முன்னின்று தடுப்பேன்,”  என்று தடாலென்று  அருகிலிருந்த கண்ணாடி ஜக்கை தூக்கி உடைத்தாள் சித்ரா !

அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டு, சித்ரா வாயடங்கிப் போனாள். புனிதா விரைவாக மாடிக்கு ஏறி வந்தாள்.

“நீங்க இரண்டு பேரும் போடுற சத்தம் வீதியிலே கேட்குது. என்ன ஆச்சு? ஏன் சண்டை போடுறீங்க?”

“அம்மா! இவர் இந்த வீட்டுலே இனிமேல் இருந்தால் நான் கண்ணியமா வாழ முடியாது. வாடகை ஒப்பந்தத்தை முறிச்சி, இவரை வெளியே அனுப்புங்க. உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்யும் வஞ்சக மனிதர் இவர். இவர் இன்னும் இங்கே இருந்தா, நாம் நிம்மதியா வாழ முடியாது”

“சித்ரா! ஏன் அப்படிச் சொல்றே? என்னாச்சு?”

“அம்மா! இவர் ஒழுக்கம் கெட்ட மனிதர். இவரை நம்ம வீட்டறையில் வச்சதே தப்பு. முன்பே எனக்கு இவரைப் பத்தி தெரியாம போச்சு!”.

“என்ன நடந்ததென்னு சொல்லு, சித்ரா” புனிதாவின் உடம்பு நடுங்கியது!  சிவாவின் கண்களில் தீப் பறந்தது !

“என்னை மாடிக்கு அழைத்து வந்து தொடக்கூடாத இடத்தில் தொட்டு வசப்படுத்த முனைந்தார்.”

சிவாவின் நெஞ்சில் சம்மட்டி அடி விழுந்தது!

புனிதா பேரதிர்ச்சி அடைந்தாள்! சிவாவின் தலை சுற்றியது! புனிதா தடதட வென்று படிகளில் இறங்கிக் கீழே தன் அறைக்கு ஓடினாள். படுக்கைக் கீழே ஓடிக் கொண்டிருந்த டேப் ரெக்காடரை நிறுத்தி, ரிவைண்டு செய்து, மாடியில் நடந்த உரையாடல்களை எல்லாம் துடிப்போடு கேட்டாள். அவளுக்கு உண்மை பளிச்சென்று தெரிந்தது.

தாயும் மகளும் மராட்டிய மொழியில் நள்ளிரவு வரைச் சண்டை போட்ட சத்தம் மட்டும் சிவாவுக்குக் கேட்டது. பிறகு சட்டென எல்லாம் அடங்கி விட்டது. அன்று இரவு மூவரும் தூங்கவே இல்லை.

காயிலே புளிப்ப தென்ன! கனியானால் இனிப்ப தென்ன!

மறுநாள் காலையில் சாப்பிட வந்த சிவா புனிதாவை அடுப்பறையில் சந்தித்தான். அவன் புனிதாவின் கண்களை நேராகக் காண முடிய வில்லை.

“மிஸ் புனிதா! நான் இனியும் இந்த வீட்டு மாடியில் குடியிருப்பது எனக்கு சரியாகத் தோன்றவில்லை. என்னால் உங்கள் இருவருக்கும் தீராப் பகைமை உண்டாகி விட்டது!  இந்த வீட்டில் எப்போது என்ன நடக்கும் என்பதை என்னால் ஊகிக்க முடியவில்லை. தாயும் மகளும் என் பொருட்டு சண்டை யிடுவதை என்னால் தாங்க முடியாது! வேறொரு இடத்துக்கு போவதாக நான் முடிவு செய்து விட்டேன்”

 

“நீங்க எதற்காக வேறிடம் பார்க்கணும்? எங்கும் போக வேண்டாம். நேற்று மாடியில் என்ன பேச்சுக்கள் நடந்தன என்பதெல்லாம் எனக்குத் தெரியும். உங்களை இழந்து என்னால் இனி வாழ முடியாது. மன்னிக்க வேணும் என்னை. உங்களுக்கும் சித்ராவுக்கும் தெரியாமல், மாடி உரையாடல்களை எல்லாம், கீழே என் அறைப் டேப் ரெக்காடரில் பதிவு செய்து வந்தேன். நான் அப்படிச் செய்தது தப்புதான். முன்னும் பின்னும் தெரியாத ஆண் லெக்சரரை சித்ரா வாடகை அறைக்கு அழைத்து வந்தது, முதல் காரணம். மாடி அறையில் ஒரு வாலிபர் வசிக்க, வயசுப் பெண் வீட்டில் வாழ்ந்து கொண்டு வருவது அடுத்த காரணம். கல்லூரியில் சித்ராவுக்கு லெக்சரராக இருந்து, வீட்டில் அவளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்தது மூன்றாவது காரணம். பஞ்சையும், நெருப்பையும் எப்படி நாள் முழுவதும் கண்காணித்து வருவது? நாம் மூவரும் கல்லூரிக்குத் தினம் போய் வந்தாலும், மூவரும் வீடு திரும்பும் நேரம் வேறாவது அடுத்த காரணம். முற்றிலும் அன்னியன் நீங்கள்! சித்ரா பருவ மொட்டு விடும் புதிய பறவை!”

“மிஸ் புனிதா! தாயான நீங்க டேப் ரெக்காடரில் பதிவு செய்ததைத் தப்பென்று நான் சொல்ல மாட்டேன்”

“போன ஒரு சமயம் நடந்த சினிமா சண்டையில் உங்க உத்தம குணத்தைக் கண்டேன். நேற்றைய உரையாடல்களைக் கேட்ட பின்பு, பெண்களிடம் ஒழுக்கமுள்ள இப்படிப்பட்ட ஓர் ஆடவனைக் கணவனாக ஏற்கப் போகிறோம் எனப் பேரானந்தம் அடைந்தேன். நான் பண்ணியது சரியோ, தப்போ உண்மையில் இந்த டேப் ரெக்காடர்தான் ஓர் உத்தமனைக் கண்டு பிடித்துத் தந்தது. இல்லா விட்டால் சித்ரா குற்றச் சாட்டை நம்பி, ஒரு அப்பாவி மனிதனை வீட்டை விட்டுத் துரத்தி இருப்பேன்!”

“மிஸ் புனிதா, உங்களுக்கு நான் எப்படி நன்றி சொல்வது?”

“மாடியில் நீங்க பெட்டி படுக்கைகளை மூட்டை கட்டுவது, கீழே என் காதில் விழுந்தது. நீங்க பயப்படாமல் நிம்மதியாக மாடியில் தங்கலாம்…… முதலில் உட்கார்ந்து இந்த காபியைக் குடியுங்க, இட்லி தயாராகிறது” என்று குழைந்தாள், புனிதா. அப்போது உள்ளே நுழைந்தாள் சித்ரா.

“அம்மா! வீட்டை விட்டு இவரை நான் போகச் சொல்லும் போது, நீங்க காபி கொடுத்து உபசரிப்பதா?”

“சித்ரா! வாயை மூடு! சிவா மாடியைக் காலி செய்ய வேண்டியதில்லை. அவர் இந்த வீட்டில்தான் நிரந்தரமாகத் தங்கப் போகிறார்”

“சிவா சொன்ன தெல்லாம் உண்மைதானா? அம்மா வாலிபக் குமரி நான் வீட்டில் இருக்கும் போது, இந்த வயசிலே இன்னொரு விவாகம் நீங்க செய்யப் போறீங்களா?”

“ஆம் சித்ரா. நாற்பது வயதில் நான் மூப்பு அடையவில்லை. நான் இரண்டாம் விவாகம் செய்யப் போறது உண்மை”

“அம்மா! அவரை நான் திருமணம் செய்ய விரும்புறேன். நீங்க எனக்குப் போட்டியாக வருவது சரியா! கல்லூரியில் அவரை முதலில் சந்தித்த போதே நான் செய்த முடிவு அது”

“சித்ரா! நீ ஒரு மராட்டிய வாலிபனை மணம் புரிவதையே நான் விரும்புறேன். நீ சின்னஞ் சிறியவள். உன் வயதை விட சிவாவின் வயசு இரண்டு மடங்கு! வயதுப் பொருத்தம் இல்லாததால் மனப் பொருத்தம் ஏற்படாது. உன் வயசுக்குத் தகுந்த வாலிபனை நீ மணம் புரிவதுதான் ஏற்றது”.

“வீட்டில் நான் இருக்கும் போது, நீங்க இவருடன் வாழ விரும்புவது சரியா? இவரை மணம் புரியக் கனவு கண்ட பின் அப்பா இடத்தில் அமர்த்திப் பார்க்க என்னால் முடிய வில்லை!”

“சித்ரா! உன் மனப் போராட்டம் எனக்குப் புரியுது. உனக்குத் திருமணம் ஆகும் நேரம் இன்னும் வரவில்லை. அதுவரை வாழாமல் நான் தனிமையில் சாக வேண்டுமா? வாழ விரும்புறேன் நான். உனது திருமணத்தை நல்ல முறையில் நடத்தி வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு. நீ சிவாவை மறந்து விடு”

“உங்க லாஜிக் எனக்குப் புரியவில்லை. உங்க இரண்டு பேரையும் சேர்த்துப் பார்க்க என்னால் முடியாது” என்று கூறி அழுகையுடன் வெளியே போய் விட்டாள், சித்ரா.

முக்கோணத்தில் ஒன்றுதான் நேர்கோணமாய் இருக்க முடியும்!

சற்று மௌனமாக இருந்த பிறகு புனிதா சிவாவிடம் பேச ஆரம்பித்தாள்.

“சித்ராவை உடன்படச் செய்வது சிரமான காரியம்தான். அதைக் கையாளுவது என் பொறுப்பு. உங்க அப்பா, அம்மாவை எப்படிக் கையாளப் போறீங்க” என்று புனிதா கேட்டாள். சிவா பையிலிருந்து தன் தந்தை கடிதத்தையும், தான் அதற்கு எழுதிய பதில் கடிதத்தின் நகலையும் படிக்க அவளிடம் கொடுத்தான்.

சிரஞ்சீவிச் செல்வன் சிவகுருநாதனுக்கு,

தங்கையின் திருமணத்துக்குப் பிறகு இப்படி ஒரு புரட்சி செய்வாய் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்த மராட்டியம்மா பண முடிப்பை நமக்குத் தந்ததே ஒரு பெரு வெகுமதியைத் தனக்கு நாடித்தான் என்பது எங்களுக்குத் தெரியாமல் போனது. நாற்பது வயதுவரைப் பொறுத்து, நாங்கள் கொண்டு வந்த நல்ல பெண்களை எல்லாம் உதறித் தள்ளி, போயும் போயும் வாலிப பெண்ணிருக்கும் ஒரு விதவைத் தாயை, நீ விவாகம் செய்ய விரும்புவது கேலிக் கூத்தாக தெரிகிறது. மேலும் அது எங்களுக்கு அவமானமாகவும் இருக்கிறது.

இந்தத் திருமணம் நடந்தால் நானும் உன் அம்மாவும் அதில் பங்கு கொள்ள மாட்டோம். எங்களுக்கு கல்யாண அழைப்பிதழ் அனுப்ப வேண்டாம். ஆசீர்வாதத்தை வேண்டி நீங்கள் இந்த வீட்டு வாசலில் கால் எடுத்து வைப்பதையும் நாங்கள் விரும்பவில்லை. அது போல் நாங்களும் அங்கு வந்து உங்கள் இருவரது முகத்தில் விழிக்கப் போவதில்லை.

தங்கை திருமணம் முடியப் பணம் கொடுத்து உதவிய மராட்டியம்மாவுக்கு எங்கள் உளங்கனிந்த நன்றி.

அன்பு மறவாத அப்பா,
வேலுச்சாமி

கடிதத்தைப் படித்த புனிதாவின் கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது.

“உங்க அப்பா நல்ல மனதுடையவர். ஊருக்கும், உற்றாருக்கும் அவர் பயப்படுவது எனக்குப் புரிகிறது. நான் செய்த பண உதவிக்கு அவர் நன்றி தெரிவிப்பது, என் உள்ளத்தைத் தொடுகிறது. அடுத்து அவன் எழுதிய பதிலைப் படிக்கத் தொடங்கினாள்.

அன்புள்ள அப்பாவுக்கு,

வணக்கமுடன் சிவா எழுதியது. மிஸ். புனிதாவின் கனிவான அன்பும், மேலான பண்பும் முதல் சந்திப்பிலே என்னைக் கவர்ந்து விட்டது உண்மைதான்! பண முடிப்பு தருவதற்கு முன்பே நாளுக்கு நாள் புனிதாவின் மேல் பற்றும் நாட்டமும் எனக்கு மிகுந்தது. எப்படி என் விருப்பத்தை மிஸ். புனிதாவிடம் தெரிவிப்பது என்று தெரியாமல் திண்டாடி இருக்கிறேன்! அதற்கு ஒரு நல்ல வழி பிறந்தது. இப்படிப் பட்ட மாதர் குல மாணிக்கம் எனக்கு இனி கிடைக்குமா என்பது சந்தேகமே!

எங்கள் இருவரது விவாகத்தை நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பதே எங்கள் மனமார்ந்த ஆசை. உங்கள் இருவரது அன்பான ஆசிகள் எங்கள் இல்வாழ்வுக்கு ஆணிவேர் போன்றது.

உங்கள் நலம் நாடும்,
சிவகுரு நாதன்.

“உங்க பதிலை படித்த பிறகு எனக்கு அச்சம் குறைந்து ஊக்கம் அதிகமாகுது”

“இந்த வரவேற்பை நான் எதிர்பார்த்ததுதான்! வருத்தமாகத்தான் இருக்கிறது! யாரும் பின்பற்றாத புதுப் பாதையில் போகும் போது, முள்ளும், கல்லும் குத்தும். தாங்கிக் கொள்ள வேண்டியதுதான். இந்த எதிர்ப்புக்குப் பரிகாரம் நாம் திருமணம் செய்து கொள்வதே! அவர்கள் வாழப் போவது இன்னும் கொஞ்ச காலம்! அதற்காக நமது நீண்ட பயணத்தை நிறுத்த வேண்டாம்! அலைகளுக்குப் பயந்தால் வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியாது! அஞ்சிக் கொண்டு கரையிலே வாழ்நாள் முழுவதும் நின்று கொண்டிருக்கலாம்! நமது தனிமையின் கொடுமை நீங்கட்டும்! இந்த நல்ல காரியத்தைச் செய்ய என் மனம் துடிக்குது!”

“துணிச்சலான ஆண்பிள்ளை நீங்க! நோய்வாய்ப் பட்ட பெற்றோர்களை எப்படி கண்காணிக்கப் போறீங்க?”

“தங்கை இருக்கிறாள். நான் பணத்தை அனுப்பி அவள் மூலமாகக் கவனித்துக் கொள்வேன்”.

“சித்ராவின் பிரச்சனையை எப்படிச் சமாளிப்பது என்று தெரியவில்லை எனக்கு”

“எளிய முறையில் நாம் பதிவுத் திருமணம் செய்து கொள்ளுவோமா”

“அதைத்தான் நானும் விரும்புகிறேன்” என்றாள் புனிதா.

“நாம் தேதியைக் குறித்ததும், அப்பாவுக்கு அடுத்த கடிதம் போடுறேன்” என்று கூறி எழுந்து சென்றான் சிவா.

பூணும் அணி நீ எனக்கு! புது வயிரம் நான் உனக்கு!

அடுத்த பத்து தினங்களில் கோயமுத்தூர் பதிவுத் திருமண செயலகத்தில் புனிதா குல்கர்னி, சிவகுருநாதன் இருவரும் தம்பதிகள் ஆனார்கள். பதிவுப் புத்தகத்தில் எழுதும் போது புனிதா குல்கர்னி சிவகுருநாதன் என்று கையெழுத்திட்டாள் புனிதா. அங்கே வருகை தந்தவரை எண்ணி விடலாம். சிவாவின் தங்கை, தங்கையின் கணவர் இருவர் மட்டும் சிவா வழியில் வந்தனர். புனிதா வழியில் வருவதாக இருந்த சித்ரா வரவில்லை. புனிதாவின் பெற்றோர் ஆசிகள் மட்டும் தந்தியில் வந்தது. புனிதாவின் தங்கை வர வில்லை. நிர்மலாக் கல்லூரியின் பிரின்சிபால் உஷா நாயர், மற்றும் சில ஆசிரியைகள் வந்திருந்தனர். மகளை எதிர்பார்த்து வழிமேல் விழி வைத்திருந்த புனிதா அவள் வராமல் போகவே, மிக்க ஏமாற்றமும், வருத்தமும் அடைந்தாள்.

தம்பதிகளாய் கதவைத் திறந்து வீட்டுக்குள் இருவரும் நுழைந்ததும் சிவாவின் கண்களில் பட்டது, முன் அறையில் பளிச்செனத் தொங்கிய காப்டன் ஆனந்த் குல்கர்னியின் படம் நீக்கப் பட்டு, அந்த இடத்தில் ரவிவர்மாவின் கலைமகள், திருமகள் ஓவியங்கள் அலங்கரித்தன! புனிதாவின் கண்ணில் பட்டவை, தரையில் கிடந்த இரண்டு கடிதங்கள்! ஒரு கடிதம் புனிதாவுக்கு. அடுத்து ஒரு கடிதம் சிவாவுக்கு. இருவரும் உடனே வேகமாக உறையைக் கிழித்துப் படித்தார்கள்.

அன்புள்ள அம்மா,

நான் முட்டாள்தனமாக கண் காணாத ஓர் இடத்துக்கு ஓடிப் போக வில்லை. பூனேயில் இருக்கும் சித்தி வீட்டுக்குப் போகிறேன். சில வருசங்கள் தங்கி அங்கிருந்து என் படிப்பைத் தொடர்வேன்.

உங்கள் இரண்டாம் கல்யாணத்தில் முன்னின்று பங்கு கொள்ள என் மனம் இடம் தரவில்லை. அப்பா இருந்த இடத்தை, நான் விரும்பிய ஒருவர் எடுத்துக் கொள்வதை என் மனம் ஒப்ப வில்லை. நீங்கள் இருவரும் உண்டாக்கிய இந்த ஆறாப் புண் எப்போது ஆறுமோ எனக்குத் தெரியாது. என்றாவது ஒரு நாள் புண் ஆறினால், அன்று உங்களைக் காண வருவேன். சில வருசங்களுக்கு உங்கள் இருவரது முகத்திலும், நான் விழிக்கப் போவதில்லை.

பிரளயம் ஏற்பட்ட பிறகு அந்த வீட்டில் யாராவது இருவர்தான் வாழலாம்! நாம் மூவரும் இனிமேல் அங்கு நிம்மதியாக வசிக்க முடியாது!

அன்பு மகள்,
சித்ரா

அன்புணராத குருவே,

உங்களைப் பற்றி அம்மாவிடம் அசிங்கமாகப் பேசி அவமானப் படுத்தியதுக்கு மன்னிக்கவும். அப்படி எல்லாம் அவதூறாய்ப் பேசி அம்மாவிடமிருந்து உங்களைப் பிரித்து விடலாம் என்று நான் முயன்றது பலிக்காமல் போனது. நீங்களும் நானும் இணைந்து வாழும் பாக்கியத்தை என் தாய் பறித்துக் கொண்டாள் என்பதை என்னால் தாங்க முடிய வில்லை. ஆண்களில் உயர்ந்த ரகம் நீங்கள். உண்மையாக என் அம்மா ஓர் அதிர்ஷ்டசாலி.

அபாக்கியவதி,
சித்ரா

பாயும் ஒளி நீ எனக்கு! பார்க்கும் விழி நான் உனக்கு!

கடிதத்தைப் படித்ததும் புனிதாவின் கண்களில் கண்ணீர் பெருகிக் கொண்டு வந்தது. அவளது உள்ளத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு முழு நிறைவு உதய மானது. புனிதா சிவாவின் அருகில் நெருங்கி வந்தாள்.

“கண்ணே! உன் வாழ்வில் ஒரு கதவு மூடி, இன்னொரு கதவு திறந்திருக்கிறது! ஒரு உறவு கிடைத்து, இன்னொரு உறவு பிரிந்து போகிறது! கடவுள் நமக்கு ஒன்றைக் கொடுக்கும் போது, இன்னொன்றை ஏனோ எடுத்துக் கொள்கிறார்! ஆகவே ஒன்றை நாம் அடைந்தால், இன்னொன்றை இழக்க நாம் தயாராக இருக்க வேண்டும்! புனிதா! நமது புதிய உறவைப் பிரிக்கப் பிரச்சனைகள் கிளம்புகின்றன! நாமிருவரும் இப்போதான் இணைந்து போராட வேணும்” என்று சொல்லிக் கொண்டே புனிதாவின் கண்ணீரைத் துடைத்து அவளைத் தன் மார்போடு இறுக அணைத்துக் கொண்டான் சிவா.

++++++++++++++++

S. Jayabarathan (jayabarat@tnt21.com) [Dec 3, 2008]

முடிவை நோக்கி !


atomic-explosion

சி. ஜெயபாரதன், கனடா

டெலிபோன் மணி அகால நேரத்தில் அலறியதும், அதிர்ச்சியோடுதான் அதை எடுத்தார் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்.  யார் இந்த நடுநிசியில் ஃபோன் பண்ணுவது ? தான் லாஸ் அலமாஸ் ரகசிய ஆய்வுக் களத்திற்கு வந்திருப்பது யாருக்குத் தெரிந்தது ? இந்த யுத்த சமயத்தில் ஏதாவது அபாய முன்னறிவிப்பா ? பேசியவள் லாரா ஃபெர்மி தான் ! பேச்சில் நடுக்கமும், தடுமாற்றமும், கலக்கமும் எதிரொலித்தன !

“ஆல்பர்ட் ! ஆய்வுக் கூடத்தில் ஆராய்ச்சியாளர் ஹாரி டக்லியானுக்குப் பெரிய விபத்தாம். ஆம்புலன்ஸில் ஆஸ்பத்திக்குக் கொண்டு செல்கிறார்கள். வருகிறீர்களா பார்ப்பதற்கு ? நண்பர் ஜேம்ஸ் ஃபிராங்க்கும் உடன் வருவதாய்ச் சொல்கிறார்”. அவள் விடும் பெரு மூச்சு ஃபோனிலேயே தெளிவாய்க் கேட்டது.

“அப்படியா லாரா? வீட்டு வாசலின் முன் காத்திரு. பத்து நிமிஷத்தில் தயாராகிக் காரில் வருகிறேன்”, என்று ·போனை வைத்தார், ஐன்ஸ்டைன்.

இரண்டாம் உலக மகா யுத்தம் முடியும் தருவாய். அமெரிக்கா ஜப்பானில் அணுகுண்டைப் போட்டு ஹிரோஷிமாவைத் தரை மட்டமாக்கி அன்றோடு பதினைந்தாம் நாள்!  அந்த நாளைத் தனது “இருண்ட நாள்” என்று நொந்த ஐன்ஸ்டைனின் இதயம், இன்னும் துடிப்பு அடங்காமல் ஆலய மணிபோல் அடித்துக் கொண்டிருந்தது !  முதன் முதலாக அணுக் கதிரியக்கம் லட்சக் கணக்கான அப்பாவி மக்களைத் தாக்கி அழித்திருந்தது.  உயிர் பிழைத்தோரையும் வாதிக்கும் !  பிறக்கப் போகும் பிந்தைய சந்ததிகளையும் பாதிக்கும் !  விபரீதமான, வேதனையான அந்த அழிவுச் சக்தியை ஆக்கிய மூல கர்த்தாக்கள் யார் ? அணுக்கருவினுள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் அந்த அபார சக்தியைக் கணித்தவர் யார் ? தன்னைப் போன்ற விஞ்ஞானிகள் ! அவர்களது விஞ்ஞான அறிவு மனித இனத்தை நொடிப் பொழுதில் அழிக்கத்தான் பயன்பட வேண்டுமா ?

அணுப்பிளவுச் சோதனையில் ஆய்வகத்தில் என்ரிகோ ·பெர்மிக்கு உதவியாய் இருந்த பெளதிக விஞ்ஞானி, ஹாரி டக்லியானுக்கு என்னதான் நேர்ந்திருக்க முடியும் ?

ஐன்ஸ்டைனின் கார் பத்து நிமிஷத்தில் லாராவின் வீட்டருகில் வந்து நின்றது.  லாராவும், ஜேம்ஸ் ஃபிராங்க்கும் ஏறிக்கொள்ள, கார் லாஸ் அலமாஸ் ரகசியக் கோட்டத்தின் மருத்துவ மனையை நோக்கிப் பாய்ந்து சென்றது.

யுத்த காலமாகியதால், அந்த மயானப் பாதையில் மின்சார விளக்குகள் எதுவும் எரிய வில்லை. கார் விளக்குகளுக்கும் நிறம் பூசி மங்கலான வெளிச்சம்தான் தெரியும்.  வீட்டு மின் விளக்குகளும் மறைக்கப் பட்டிருந்தன.  அந்த பயங்கரக் பாலை வனத்தில் காட்டு ஜந்துக்களின் கூட்டு ஓலங்கள் பயத்தை அதிகமாக்கின !

“பாவம் ஹாரி ! அவரது மனைவி ஊரில் இல்லாத நேரம் பார்த்தா இந்த பயங்கர விபத்து நிகழ வேண்டும் ? அவள் கேட்டால் துடித்துப் போய்விடுவாள். என் கணவருக்குத் (என்ரிக்கோ ·பெர்மி) தெரிந்தால் இதயமே நின்றுவிடும்.  ஹாரி என் கணவரின் வலதுகை அல்லவா!” என்று கவலைப் பட்டாள் லாரா.

“உன் கணவர் எங்கே போயிருக்கிறார், லாரா ?” என்று கேட்டார், ஐன்ஸ்டைன்.

“வாஷிங்டன் போயிருக்கிறார். ஜனாதிபதி ட்ருமன் வெள்ளை மாளிகைக்கு ராபர்ட் ஓப்பன்ஹைமரையும், என் கணவரையும் உடனே வரும்படி அழைத்திருந்தார்.  ஹிரோஷிமா, நாகசாக்கியில் போட்ட அணுகுண்டுகளின் அழிவுக் காட்சிகளைக் கண்டு ஆராய வேண்டுமாம்.  விமானத்திலிருந்து எடுத்த போட்டோ படங்களைக் கொண்டு போயிருக்கிறார்கள். நாளைதான் திரும்புவார்” என்றாள் லாரா.

“இந்தக் கோரச் சம்பவத்திற்கு மூல காரணமே, உன் கணவர்தான், லாரா!  என்ரிக்கோ ஃபெர்மி முதன்முதல் அணுக்கருத் தொடரியக்கத்தைச் சிகாகோவில் வெற்றிகரமாக நடத்திக் காட்டாதிருந்தால், இந்த அணுசக்தி யுகமே விழித்து எழுந்திருக்காது ! அணுகுண்டே இன்று பிறந்திருக்காது ! ஹிரோஷிமாவும், நாகசாகியும் நாசமாகி யிருக்காது ! ஹாரிக்கும் இப்படி விபத்து நேர்ந்திருக்காது !” என்று வெடித்துப் பேசினார் ஜேம்ஸ் ஃபிராங்க்.

ஃபெர்மியின் மீது மட்டும் பழியைப் போடாதே, ஃபிராங்க். முதலில் இந்த அழிவுச்சக்திக்கு விதை போட்டவனே நான்தான் ! முழுப் பொறுப்பையும் நான் ஏற்றுக் கொள்கிறேன் !  யுத்தம் சீக்கிரம் முடிவடைய அணு ஆயுதம் தேவை, என்று காலம் சென்ற ஜனாதிபதி ரூஸ்வெல்டுக்குக் கடிதம் எழுதினேன் அன்று ! ஏன் அப்படி எழுதினேன் என்று கவலைப் படுகிறேன் இன்று !” என்று கண் கலங்கினார் ஐன்ஸ்டைன்.  லாரா இருவரையும் பார்த்து திகைப் படைந்தாள். அவளுக்குத் தலை சுற்றியது!

“என்ன, ஆல்பர்ட் ! நீங்களா இந்த நாசகுண்டு தயாரிக்கத் தூண்டியவர் ? நம்ப முடிய வில்லையே ! விபரீதமான விஷப் பரீட்சை ! உலக சரித்திரத்தில் யாரும் உங்களை மன்னிக்க முடியாது ! மறக்கவும் முடியாது! ” என்று முகத்தைத் திருப்பிக் கொண்டார், ஜேம்ஸ் ஃபிராங்க்.

கார் லாஸ் அலமாஸ் ரகசியத் தளத்தின் சோதிப்பு வாயிலை வந்தடைந்தது. துப்பாக்கியுடன் ராணுவக் காவலர் இருவர் சூழ்ந்து, காரையும், மூவரின் அடையாளத் தகடைச் சோதித்தபின், கார் நுழைய அனுமதி கிடைத்தது.  ஐந்து நிமிடத்தில் ஆஸ்பத்திரி வரவே, மூவரும் இறங்கி உள்ளே நுழைந்தனர்.  ஹாரி இருந்த அறையிலிருந்து டாக்டர் வில்ஸன் வெளியே வந்தார்.

“ஹாரி எப்படி இருக்கிறார், டாக்டர்?” என்று ஒருங்கே கேட்டார்கள் மூவரும்.

“மிகவும் மோசமான நிலை ஜேம்ஸ் ! ஹாரிக்கு விபத்து நேர்ந்த போது அவருடன் வேறு யாரும் இருந்தார்களா ?” என்று வினாவினார் டாக்டர் வில்ஸன்.

“இல்லை டாக்டர் ! ஹாரி தனியாகத்தான் ஆய்வுக் கூடத்தில் இருந்திருக்கிறார். நல்ல வேளை ! வேறு யாரும் அருகில் இல்லை !” என்று பதில் அளித்தார், ஜேம்ஸ்.

“அணுக்கருத் தொடரியக்கம் அங்கே எப்படி ஏற்பட்டது ?  எந்த அணுக்கரு உலோகத்தால் உண்டானது ?  இருந்த எரிபொருள் யுரேனியமா? அல்லது புளுடோனியமா ?” பதட்டத்துடன் கேட்டார், டாக்டர் வில்ஸன்.

“புளுடோனியம் என்பது என் நினைவு !” என்று பதில் அளித்தார், ஜேம்ஸ்.

“கெட்ட வேளைதான் ! அது புளுட்டோனியமாக இருந்ததால் ஹாரி உயிர் பிழைப்பது கடினம்.  அதி உக்கிரக் கதிரியக்கம் அவரைச் சுட்டெரித்துத் துன்புறுத்தும் !” என்றார் வில்ஸன்.

“ஹாரி பிழைக்க மாட்டாரா ?” என்று கண்ணீர் பொங்க வினாவினாள், லாரா ஃபெர்மி.

டாக்டர் வில்ஸன் தலை குனிந்த வண்ணம், “என்னால் எதுவும் சொல்ல முடியாது இப்போது !” என்றார்.

“இந்த நிலையில் ஹாரியை நாங்கள் பார்க்கலாமா ?” என்று கேட்டார், ஐன்ஸ்டைன்.

“பயங்கர அதிர்ச்சி யடைந்து மிகவும் மனமுடைந்து போயிருக்கிறார், ஹாரி.  ஆயினும் இப்போது நீங்கள் பார்க்கலாம்” என்று அவருடன் நடந்து சென்றார், டாக்டர் வில்ஸன்.

பெரு மூச்சோடு அறைக்குள் நுழைந்தார்கள் மூவரும். பேயரைந்ததுபோல் படுக்கையில் துவண்டு கண்மூடிக் கிடந்த ஹாரியைக் கண்டதும் லாராவின் மூச்சே நின்று போயிற்று ! கண்களில் கண்ணீர் பொங்கிப் பெருகியது !

எத்தகைய நுட்ப ஆய்வு விஞ்ஞானி இந்த ஹாரி ! எத்தனை மகத்தான ஆராய்ச்சிகளை அணுத் துறையில் கண்டு பிடித்திருப்பவன் இந்த ஹாரி !  இவனுக்கா விபத்து நேர வேண்டும் ? இனி யார் வரப் போகிறார், இவனுக்கு ஈடாக ?

“எப்படி இருக்கிறாய் ஹாரி ?” என்ற கேட்டாள் லாரா, அருகில் அமர்ந்து கொண்டே. ஹாரி சற்று நேரம் பேசாமல் லாராவையே உற்று நோக்கினான். தனது கைகளைத் தூக்கி, “லாரா பார்த்தாயா ? இந்த விரல்களிலே எந்த வித உணர்ச்சியும் இல்லை இப்போது ! யானை மிதித்துப் போட்டது போல் நொய்ந்து கிடக்கிறேன்!. இதுபோல் தானே அந்த அப்பாவி ஜப்பானியர்களின் கை, கால், எலும்பு, சதை, தோல் எல்லாம் படாத பாடு பட்டிருக்கும் ?” என்று வருத்தப்பட்டான் ஹாரி.

விபத்து நேர்ந்த அரைமணி நேரத்தில் உணர்ச்சியே இழந்து விட்டனவா விரல்கள் ? அப்படி என்றால் ஹாரியைத் தாக்கிய கதிரியக்கத்தின் உக்கிரம்தான் என்ன! ஜேம்ஸ் ஃபிராங்க் தன் மனதில் கணக்குப் போட்டுப் பார்க்கலானார்.

“ஆல்பர்ட் ! ஆயிரமாயிரம் ஊசிகள் இப்போது என்னுடம்பைக் குத்தித் துளைகள் போடுகின்றன !” என்றான் ஹாரி.  அணு குண்டின் கோடான கோடி கதிரியக்க ஊசிகள் இப்படித்தானே ஜப்பானிய மக்களைச் சித்திரவதை செய்திருக்க வேண்டும் ! அவர்களின் மரண ஓலங்கள் வானையே பிளந்திருக்கும் அல்லவா !”

‘ஆவென’ அலறினான் ஹாரி.  அந்த ஓசை மலைச் சிகரத்தில் அடித்தது போல் எதிரொலித்தது ! நர்ஸ் சைகை செய்யவே மூவரும் அறையை விட்டு அகன்றார்கள்.

வெளியே பிரமாண்டமான காரிருட் போர்வை !  இரகசிய லாஸ் அலமாஸ் வானத்தின் மீது கோடான கோடி விண்மீன்கள் கண் சிமிட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தன ! சக்தி இழந்து போய் தடுமாற்றமுடன் மூவரும் வெளியே மருத்துவ மனை நாற்காலில் அமர்ந்தனர்.

“எப்படி நேர்ந்தது இந்த கோர விபத்து ?  கொஞ்சம் விளங்கும்படி சொல்வீர்களா, ஜேம்ஸ்” என்று கன்னத்தில் கைவைத்துக் கொண்டு பரிவாகக் கேட்டாள், லாரா.

ஜேம்ஸ் சொல்லத் தயங்கினார். இது ரகசியச் சம்பவமல்லவா ? எப்படிச் சொல்வது ?

“பயப்படாதீர்கள் ஜேம்ஸ் ! யாரிடமும் நான் இதைச் சொல்லப் போவதில்லை ! கடந்த ஐந்து ஆண்டுகளாக, லாஸ் அலமாஸின் பல ரகசியங்களை, இதுவரை நான் என் மனப் பெட்டிக்குள் பூட்டி வைத்திருக்கிறேன். இது எனக்குப் பழக்கப்பட்டதுதான் ! என் கணவர் சொல்லாத ரகசியங்களா ? சும்மா சொல்லுங்கள், ஜேம்ஸ்” என்று வற்புறுத்திக் கேட்டாள் லாரா ·பெர்மி.

அக்கம் பக்கம் பார்த்து, மெல்லிய குரலில் பேசினார், ஜேம்ஸ். “வளர்த்த கடா மார்பிலே பாயும் என்று கேள்விப் பட்டிருப்பாயே, லாரா.  அதுதான் இந்தக் கதை ! இதுவரை நிகழாத சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது, இன்று ! பேரதிர்ச்சி அடைந்தோம் எல்லோரும் ! இன்று ஹாரிக்கு ! நாளை நமக்கு !  அணுகுண்டு வெடிக்குமுன் என்ன மாதிரித் தொடரியக்கம் நிகழுமோ, அது போல் அனைத்தும் நடந்துள்ளது, லாரா.  யாரும் இதை எதிர்பார்க்க வழியே இல்லை ! பூரணத் தொடரியக்கம் பளிச்செனத் துவங்கி, பல்லாயிரக் கணக்கான ராஞ்சன் கதிரியக்கம் உண்டாகிக், கண்ணிமைப் பொழுதில் ஹாரியைத் தாக்கி யிருக்கின்றன !”

சற்று மூச்செடுத்துக் கொண்டு தொடர்ந்தார், ஜேம்ஸ். “இது எப்படி ஆரம்பித்தது தெரியுமா ? அடுத்த நாள் ஆராய்ச்சிக்கு முந்தைய இரவில் தயார்செய்து கொண்டிருந்த ஹாரி, ஒரே ஒரு சிறு தவறு செய்தான் ! அவன் தெரியாமல் செய்தது !  அணு ஆய்வுச் சிற்றுலையில் புளுடோனிய கோள உலோகத்தை இட்டு, நியூட்ரான் நழுவாது காத்திடச் சுற்றிலும் மிதவாக்கியாகக் கட்டிகளை அமைத்து வந்த ஹாரி, கை தவறிக் கட்டி ஒன்றை நழுவ விட்டான். உடனே, சீறி எழுந்தது, பூரணத் தொடரியக்கம் ! திடீரென நியூட்ரான்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி, புளுடோனிய   அணுக்கருவைத் தாக்கி, ‘நீல ஒளிக் கோளம்’ சுடர்விட்டுப் பிரகாசித்தது !  அருகில் இருந்த எச்சரிக்கை அறிவிப்பு மணி அலறியது !  கதிர்வீச்சைக் காட்டும் கருவிகள் எல்லை மீறிய அளவைக் காட்டின ! பொங்கி எழுந்த கதிரியக்கம் உந்துகணை ஊசிகளாய் எல்லாத் திசைகளையும் எல்லாப் பொருட்களையும் தாக்கின. ஹாரியையும் தாக்கின !”

“நீல ஒளியைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான் ஹாரி,  நடந்து விட்ட அபாயத்தை உடனே அறிந்தான் ஹாரி !  சமத்தாக கரிக்கட்டி ஒன்றை நீக்கிச் சரிசெய்யவே தொடரியக்கம் உடனே அடங்கி நின்றது !  ஆனால் என்ன பயன் ? ஒரு நொடிப் பொழுதில் எல்லாம் நிகழ்ந்து விட்டது !  பல்லாயிரம் ராஞ்சன் வீரிய முடைய தீக்கதிர்களை ஹாரி சில வினாடிக்குள் ஏற்றுக் கொண்டு விட்டான்.  அது அவனுக்குத் தெரியும் !  அதன் விளைவுகளும் அவனுக்குத் தெரியும் !”

“நல்ல வேளை! அணுகுண்டு போல் அது வெடிப்பதற்குள் நியூட்ரான் பெருக்கத்தை விரைவில் நிறுத்தி விட்டான், ஹாரி.  இல்லாவிட்டால் லாஸ் அலமாஸிலும் ஓர் அணுகுண்டு வெடித்து நீயும், நானும், ஏன் இந்த இரகசியத் தளமே எரிந்து சாம்பலாகி யிருக்கும் !”

“அமெரிக்க ஆய்வுக் கூடத்தில் மூன்றாவது அணுகுண்டு ! எதிர்பாராத விதமாக வெடித்தது என்று எல்லா உலகப் பத்திரிக்கையிலும் உடனே வெளியாகும் !”

“லாரா!  அமெரிக்கா துவக்கி வைத்த இந்த அணு ஆயுத யுகத்திற்கு, நாம் அளிக்கும் முதல் உயிர்ப்பலி, இந்த அப்பாவி ஹாரி !” என்று ஆவேசத்துடன் வார்த்தைகளைக் கொட்டினார்,  ஜேம்ஸ் ·பிராங்க்.

“அப்படிச் சொல்லாதீர்கள், ஜேம்ஸ். கதிரியக்க மருத்துவ நிபுணர்களை அழைத்து வந்து எப்படி யாவது ஹாரியைக் காப்பாற்றியாக வேண்டும்.  வாஷிங்டன் ராணுவ மருத்துக் கூடத்திற்கு
·போன் பண்ணி அதற்கு ஏற்பாடு செய்யுங்கள்” என்று கெஞ்சினாள் லாரா.

நெற்றியில் கைவைத்த வண்ணம் மெளனத்தில் எழுந்தார், ஜேம்ஸ்.  மூவரும் வீட்டுக்குக் கிளம்பினார்கள். “கடவுளே ! ஹாரியைக் காப்பாற்று ! எங்கள் ஹாரியைக் காப்பாற்று !” என்று மனதில் பிரார்த்தனை செய்து கொண்டே நடந்தாள், லாரா.

கார்ச் சாவியைத் திருக்கிக் காரை இயக்கினார், ஐன்ஸ்டைன். அவர் மனம் அங்கில்லை ! பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் உயிரோடு போராடிக் கொண்டிருக்கும் ஆயிரமாயிரம் ஹாரி டக்லியான்களைப் பற்றி நொந்து, அது அசைபோட்டுக் கொண்டிருந்தது!

மறுநாள் ஜேம்ஸ் ஃபிராங்க் லாஸ் அலமாஸ் ஆய்வுக் கூடத்தில் ஹாரியின் அறையில் நிகழ்ந்த விபத்தின் கதிரியக்க விளைவுகளையும், கருவிகளில் பதிவான குறிப்புக்களையும் எழுதிக் கொண்டு, வாஷிங்டன் ராணுவ மருத்துவ மனைக்குப் போன் செய்தார்.  விபரங்களுக்கு ஏற்ப சிகிட்சை சாதனங்களை ஏற்றிக் கொண்டு, கதிரியக்க மருத்துவ நிபுணர்கள் விமானத்தில் லாஸ் அலமாஸ் நோக்கிப் புறப்பட்டார்கள். ·போன் மூலம் ஹாரியின் நிலையை அவ்வப் போது தெரிந்து கொண்டார்.

நாலைந்து நாட்கள் கழித்து ஹாரியைப் பார்க்க ஜேம்ஸ் ஆஸ்பத்திரிக்குச் சென்றார்.  அறையில் ஹாரியைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்து அப்படியே நின்றுவிட்டார்.

“யார் ஹாரிக்கு இப்படி மொட்டை அடித்தது ?” என்று நர்ஸ்களைப் பார்த்துக் கேட்டார், ஜேம்ஸ். நர்ஸ் யாரும் அதற்குப் பதில் கூறவில்லை.

ஹாரி புத்த தேவன் போல் காட்சி அளித்தான் ! தலை மயிர் எல்லாம் உதிர்ந்து போயின ! முகம் வீங்கிக் கண்களை மூடிவிட்டது ! உடம்பெல்லாம் வீங்கி, தோலுரிந்து மேனி யெல்லாம் சிவந்து விட்டது ! அவை யாவும் தீக்கதிர்கள் வரைந்த கோலங்கள்! கோரங்கள் !! குஷ்ட ரோகி போல் காணப் பட்டான் ஹாரி !

“தலை மயிர் யாவும் தாமாகவே உதிர்ந்து விட்டன” என்றார் ஒரு கதிரியக்க நிபுணர். அருகில் ஹாரியின் மனைவி, லாரா, லாராவின் கணவர் என்ரிக்கோ ஃபெர்மி, ஐன்ஸ்டைன், லியோ ஸிலார்டு யாவரும் கூடி யிருந்தனர்.  வெளியே ஓப்பன்ஹைமர், லெஸ்லி குருவ்ஸ் இருவரும் நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

ஹாரி கை அசைத்து லாராவைக் கூப்பிட்டான். “நான் ஆசிய ஜோதியாகி விட்டேன், லாரா ! பார் ! இப்போது நானொரு புத்த பிச்சு ! போர், இம்சை, பழி, பாபம், நாசம், அழிவு இவைகளை எதிர்த்து நிற்கும் போதி சத்துவன் !  உயிர்களின் துணைவன் ! அணு ஆயுத எதிரி ! அணு ஆயுதப் பலிகடா !

அப்போது ஓப்பன்ஹைமர், லெஸ்லி குரூவ்ஸ் இருவரும் வெளியே ஒரு மூலையில் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார்கள்.  லெஸ்லி முணுமுணுத்தார், “இன்னும் பத்து அணு குண்டுகளைத் தயாரிக்கக் கட்டளை வந்திருக்கிறது, ஓப்பி ! நேற்றுதான் பிரஸிடெண்ட் ட்ரூமன் என்னிடம் நேரில் பேசினார்.  அடுத்து ஹைடிரஜன் குண்டு ஆக்கும் திட்டத்திற்குப் பச்சைக் கொடி ! எட்வர்ட் டெல்லரை இன்று பார்க்கப் போகிறேன்.” லெஸ்லி குரூவ்ஸ்தான் மன்ஹாட்டன் அணு குண்டுத் திட்டத்தை மேற்பார்க்கும் ராணுவத் தளபதி !  இரண்டாம் உலக மகா யுத்த முடிவில், திட்டப்படி அணு குண்டுகள் இரண்டைத் தயாரித்து ஹிரோஷிமா, நாகசாகியில் போட்டுப் புகழ் பெற்ற போர் ஹீரோ!

ஓப்பன்ஹைமர் உதட்டில் ஒரு புன்சிரிப்பு மின்னியது ! “எல்லாம் தயார்! அதற்கு வேண்டிய அளவு யுரேனியமும், புளுடோனியமும் நம் கைவசம் உள்ளது ! ஆனால் ஹைடிரஜன் குண்டுக்கு அதிகக் கன அளவு ஹைடிரஜன் ஐசோடோப் டியூடிரியம் தேவை !  அது நம்மிடம் இல்லை !  கனடாவை அணுக வேண்டும்.  அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு அழிவுசக்தி கொண்ட தல்லவா ஹைடிரஜன் குண்டு !” எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் பதில் அளித்தார், ஓப்பன்ஹைமர் ! அவர்தான் அணுகுண்டின் பிதா ! இருபதாம் நூற்றாண்டில் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் பல நாட்டு விஞ்ஞான நிபுணர்களைத் தன்கீழ் இணைத்து, ஆணை யிட்டு, ஆட்டிப் படைத்து, முதன் முதல் அணு யுதங்களை ஆக்கிய தலைமை அதிபதி ! ஒப்பற்ற விஞ்ஞான மேதை ஓப்பி !

இந்த இரகசியப் பேச்சை ஒட்டுக் கேட்ட ஜேம்ஸ் ஃபிராங்க் சீறினார். “இன்னும் பத்து அணு குண்டுகளா ?  அடுத்து ஹைடிரஜன் குண்டு வேறா ? எந்த அப்பாவி மக்கள் தலையில் போடவாம் ? யுத்த விஞ்ஞான அறிவு உலகின் முடிவை நோக்கித்தான் போக வேண்டுமா ? யுத்தம் என்பது அழிவியல் விஞ்ஞானமா ?” என்று கடிந்தார், ஜேம்ஸ் !

ஓப்பி, குருவ்ஸ் இருவரும் பதில் பேசாமல் அங்கிருந்து அகன்றார்கள். அமைதி சூழ்ந்தது.  அந்த பயங்கர அமைதியைக் கலைத்தாற் போல் ‘ஓ வென’ ஓர் அலறல் சப்தம் ஹாரி அறையிலிருந்து எழுந்தது ! எல்லா விஞ்ஞானிகளும் ஓடிப்போய் பார்த்தார்கள்.

ஹாரி பைத்தியம் பிடித்தவன் போல் படுக்கையிலிருந்து எழுந்து, கண்களை உருட்டிக் கொண்டு ஓலமிட்டு கத்தினான் !  டாக்டர் வில்ஸனும், நர்ஸ்களும் ஓடா வண்ணம் அவரைப் பிடித்துக் கொண்டார்கள்.

“டாம் ஓப்பி ! லிட்டில்பாய் ஓப்பி ! டாம் குருவ்ஸ் ! ஃபாட்மான் குருவ்ஸ் ! யு போத் கெட் அவுட் ! கெட் அவுட் !” என்று ஆர்ப்பாட்டமுடன் கத்தினான், ஹாரி !

ஓப்பன்ஹைமர், குருவ்ஸ் இருவரும் உடனே வெளியேறினர். லாராவுக்கு எதுவும் புரியவில்லை.

“என்ன இது ? லிட்டில்பாய் ! ஃபாட்மான் !” என்று ஜேம்ஸைக் கூர்ந்து நோக்கினாள், லாரா.

“லிட்டில்பாய் (Little Boy) என்பது ஹிரோஷிமாவில் போட்ட அணுகுண்டு ! ஃபாட்மான் (Fatman) என்பது நாகசாகியில் போட்ட அணுகுண்டு ! இரண்டும் மன்ஹாட்டன் அணு ஆயுதத் திட்டத்தின் (Manhatten Project) ராணுவ ரகசியக் குறிச்சொற்கள் ” என்று லாராவின் காதுக்குள் குசுகுசுத்தார், ஜேம்ஸ்.

மறுபடியும் புலம்பினான் ஹாரி. “அதோ ! குடைக் காளான் ! ஓராயிரம் சூரியனைவிட ஒளிமயமான முஷ்ரூம் கிளவ்டு ! அதில் நான் மிதக்கிறேன் ! அதோ ! அணுக் கோளம் ! அனல் கோளம் ! கதிர்க் கோளம் ! கனல் கோளம் ! ஒளிக் கோளம் ! வெடிக் கோளம் ! விஷக் கோளம் ! அழிவுக் கோளம் ! அவற்றின் அசுரப் பிடியில் நசுங்கும் ஜப்பானிய மக்கள் ! முடிவில் எல்லாருக்கும் மரணக் கோலம் !”

பிதற்றல்களை நிறுத்த ஹாரிக்கு ஓர் ஊசியைக் குத்தினார், டாக்டர் வில்ஸன். மெய் மறந்து தூங்குகினான் ஹாரி.

ஹாரியின் முடிவு நேரம் நெருங்கியது.  விபத்து நடந்து இன்றோட இருபத்தி நான்காம் நாள் ! வெள்ளை ஆடை அணிந்த கிறிஸ்துவப் பாதிரியார் ஒருவர், மெள்ள அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தார்.  வெளியே செய்யும் வேலையை அப்படியே நிறுத்தி விட்டுப் பலர் மெளனமாகக் கூடி நின்றார்கள்.  லாரா கண்ணீர் சொரிய ஹாரி அருகி நின்றாள். படுக்கையின் இருபுறமும் ஏற்றி வைக்கப்பட்ட மெழுகு வர்த்திகள் சூடான திரவத்தைச் சிந்தி அழுது கொண்டிருந்தன !

ஹாரிக்கு மூச்சு மேலும் கீழும் ஏறி இறங்கியது. மெதுவாக பைபிள் நூலைத் திறந்து பாதிரியார் பிரார்த்தனை செய்தார். “பேரண்ட பிரபஞ்சத்தின் பிதாவே !  இங்கே துடித்துக் கொண்டிருக்கும், அணு போன்ற இந்த ஆத்மாவின் பாபங்களை மன்னித்து, இனிமேலும் வதைக்காமல், நீர் ஏற்றுக் கொண்டு ஆசீர்வதியும் !”

கண்களைத் திறக்க முடியாமல், ஹாரி கையை அசைத்து, “ஆல்பர்ட் !” என்று தடுமாறி அழைத்தான்.  பின்புறம் மறைந்து கொண்டிருந்த ஐன்ஸ்டைன் முன்புறம் வந்து நின்றார்.  அணையப் போகும் மெழுகுவர்த்திகள் இரண்டும் சுடர் விட்டுப் பிரகாசித்தன !

உயிர் பிரியும் தருணத்தில் ஹாரி தடுமாறிக் கொண்டு பேசினான்.  “ஆல்பர்ட் ! எனது இறுதி வேண்டுகோள் இது ! முதலில் எட்வெர்ட் டெல்லரை அணுகி, அவரது மனத்தை மாற்றி, அடுத்து பேய் உருவெடுக்கும் ஹைடிரஜன் குண்டுத் திட்டத்தை நிறுத்த உடனே முயற்சி செய்யுங்கள் ! உலக வல்லரசுகள் தொடரப் போகும் அணு ஆயுதப் போட்டியை நிறுத்த விஞ்ஞானிகளை ஒன்று திரட்டுங்கள் ! ஏன் ?  ஐரோப்பிய ஆசிய நாடுகளும் கூட இனி அணு ஆயுதம் ஆக்க முற்படலாம் !  அதற்கு விஞ்ஞானிகள் இனிமேல் ஒத்துழைக்கக் கூடாது ! அணு ஆயுத முடிவை நோக்கிப் போராடுங்கள் ! அணுசக்தியை மனித இனத்தின் ஆக்க வழிகளுக்குப் பயன்பட உழைப்பீர்களா ?  உங்கள் ‘இருண்ட நாள்’ மீண்டும் உதயமாக வேண்டாம் !” என்று கூறினான்.  ஹாரி கண்களில் நீர் பொங்கி எழுந்தது.  சிறிது நேரத்திற்குள் ஹாரியின் ஆத்மா பிரிந்தது.

ஐன்ஸ்டைன் கண்களில் நீர் திரளச் சிலையாய் நின்றார்.  ஜேம்ஸ் ஃபிரங்க்கின் இதயத்தில் சிறிது நிறைவு ஊறியது.  லாரா சிரம் தாழ்த்தி ஒரு மலர் வளையத்தை ஹாரியின் காலடியில் வைத்தாள்.  லாஸ் அலமாஸ் விஞ்ஞானிகள் யாவரும் தலை கவிழ்ந்து ஹாரிக்கு அஞ்சலி செய்தார்கள்.

***********************

[ஜப்பானில் அணுகுண்டு வீச்சுக்குப்பின், லாஸ் அலமாஸில் ஆய்வக உதவி விஞ்ஞானி ஹாரி டக்லியானுக்கு (Harry Daghlian) நேர்ந்த ஓர் உண்மை சோக விபத்தை (ஆகஸ்டு 21, 1945) அடிப்படையாகக் கொண்டு எழுதிய புனைக்கதை. ராபர்ட் ஓப்பன்ஹைமர், என்ரிகோ ஃபெர்மி, ஜேம்ஸ் ஃபிராங்க், எட்வேர்டு டெல்லர் (Robert Oppenheimer, Enrico Fermi & James Frank, Edward Teller) ஆகியோர் லாஸ் அலமாஸ் அணுவியல் ஆய்வு விஞ்ஞானிகள்.  எட்வேர்டு டெல்லர் ஹைடிரஜன் குண்டின் பிதா.  லெஸ்லி குருவ்ஸ் (Leslie Groves) மன்ஹாட்டன் திட்ட இராணுவ அதிபதி.  ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் லாஸ் அலமாஸ் இரகசிய தளத்துக்கு விஜயம் செய்ததாகக் காட்டியது புனைக்கதை]

harry-daghlians-nuclear-experiment

1982 ஆம் ஆண்டில் ஆனந்த விகடன் வார இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் புறக்கணிக்கப்பட்டது.)

தகவல்:

http://en.wikipedia.org/wiki/Harry_K._Daghlian,_Jr.

S. Jayabarathan <jayabarat@tnt21.com> November 22, 2008

என் விழியில் நீ இருந்தாய்!

Madurai Temple

சி. ஜெயபாரதன், கனடா

“என்னப்பா! டிப் டாப்பா டிரஸ் பண்ணிக் கொண்டு யாரைப் பார்க்கப் போகிறாய்? புதிதாக வந்திருக்கும் மாடல் அழகி, கோகிலாவைத் தானே?” என்று கேலிச் சிரிப்புடன், டாக்ஸியில் ஏறப் போன அசோகனை நிறுத்தினான், மோகன். திடுக்கிட்டுத் திரும்பிய அசோக் ஒரு அசட்டுப் புன்னகையை உதிர்த்து விட்டு பதில் பேசாமல், காரை நோக்கி விரைந்தான்.

அன்று பௌர்ணமி! அந்திப் பொழுது மங்கி, பொங்கி வரும் பெருநிலவு மேகங்களுக்கிடையே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது! இளந்தென்றல் மேனியைத் தழுவி மெய் சிலிர்க்க வைத்தது! முதன் முதலாக அவன் கோகிலாவைச் சந்திக்கப் போகிறான். அந்த நினைவே அவன் நெஞ்சில் இன்பத் தேனைச் சுரந்தது. வெள்ளித் திரையில் பார்த்தது! காதல் காவியங்களில் படித்தது! கனவுகளில் அவன் கண்டது! அதை ஓர் எழில் மங்கையுடன் பகிர்ந்து கொள்ளப் போகிறான்! புதிய அனுபவம்! அதுவும் முதல் அனுபவம்! ஆனாலும் நெஞ்சு ஏனோ ‘பக் பக்கென்று’ விடாமல் அடித்துக் கொண்டது! டாக்ஸியில் ஏறி பின் ஸீட்டில் அமர்ந்த பின், கோகிலா இருக்கும் தெருப் பெயரை டிரைவருக்குக் கூறினான்.

ஓடிவந்த மோகன் “நானும் வருகிறேன்” என்று கதவைத் திறந்து கொண்டு காரில் ஏறி உட்கார்ந்து கொண்டான். அசோக்கின் கண்கள் இரண்டும் வியப்புடன் விரிந்து அவனை நோக்கின!

“நீ போகும் இடத்திற்கு நான் போகவில்லை! கோயிலுக்குப் போகிறேன், தேவியைத் தரிசிக்க! மீனாட்சி அம்மன் கோயிற் தலைவாசலில் இறங்கிக் கொள்கிறேன்”. என்று சற்று பணிவோடு சொன்னான் மோகன். அவனது நெற்றியில் திருநீறும் குங்குமப் பொட்டும் பளிச்செனத் தெரிந்தது! அசோக்கின் நெற்றியில் முத்து முத்தாய் வேர்வைகள் தான் தென்பட்டன!

அசோக்கும் மோகனும் இணைபிரியா நண்பர்கள். மதுரை மாநகரில் ஒன்றாகப் படித்தவர்கள். ஒன்றாக வளர்ந்தவர்கள். ஒரே சமயத்தில் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்று, மதுரையில் உத்தியோகம் பார்ப்பவர்கள். ஆனால் கொள்கை வேறுபாடு கொண்டவர்கள். அசோக் வட துருவம்! மோகன் தென் துருவம்! அடிக்கடி அவர்களுக்குள் தர்க்கம், சச்சரவு, வாய்ச் சண்டை வராமல் போகாது. தர்க்கம் ஓய்ந்த பின் இருவரும் சேர்ந்து கொள்வார்கள். எதிர்த் துருவங்கள் ஒன்றை ஒன்று ஈர்த்துக் கொள்ளும் அல்லவா!

மோகன் தெய்வ நம்பிக்கை கொண்டவன். தவறாது கோயிலுக்குச் செல்பவன். அசோகனுக்குக் கடவுளைப் பற்றி நினைக்க நேரமில்லை! தெய்வம் உண்டா, இல்லையா என்று பிறரிடம் தர்க்கம் செய்தாலும், மனதை அலட்டிக் கொள்ளாதவன். முப்பது வயதாகியும் அசோக் தனி மரம்! மோகன் திருமணமாகி இரு குழந்தைகளுக்குத் தந்தை! ஆனாலும் கோயிலுக்குப் போகும் போது மட்டும் தனியாகத்தான் போவான். தெருவில் அவனுடன் மனைவி நெருங்கி நடப்பது, அவனுக்குப் பிடிக்காத ஒன்று! கடைக்கோ, சினிமாவுக்கோ, கோயிலுக்கோ அவள் செல்ல வேண்டு மென்றால், தனியாக அல்லது மற்றவருடன் சேர்ந்துதான் போக வேண்டும்!

டாக்ஸி கிழக்கு வெளிவீதியிலிருந்து கிளம்பி கிழக்குக் கோபுர வாசலை நெருங்கியது. அன்று வெள்ளிக் கிழமை. எங்கு பார்த்தாலும் ஜனக்கடல்! அந்தக் கடலில் அநேகர் பெண்டிர். அதில் கோயிலுக்குப் போவோர் பலர்! கோயிலுக்குப் போகும் பெண்டிரை வேடிக்கை பார்ப்போர் சிலர்! டாக்ஸி வீதியில் நின்று நின்று மெதுவாய் போனது. ஆனால் டாக்ஸி மைலா மீட்டர் மெதுவாகப் போகவில்லை! வேகமாய் ஓடியது! பணத்தொகை ஏறிக் கொண்டே போவதைப் பார்த்த அசோக்கின் இதயமும், ‘டக் டக்கென்று’ மீட்டருடன் ஒன்றாய்ச் சேர்ந்து ஓசை யிட்டது!

‘சிற்றின்பம் நாடிக் கோகிலாவிடம் போகிறான், அசோக்’ என்று பொறாமைப் பட்டான் மோகன்! ‘பேரின்பம் கிட்ட கோவிலுக்குப் போகிறான், மோகன்’ என்று விரக்தி அடைந்தான், அசோக்.

“முப்பது வயதாகிறதே! கண்ணியமாக ஓர் அழகுப் பதுமையைத் திருமணம் செய்து கொண்டு, புண்ணியம் அடைவதை விட்டு, இப்படி ஒரு மாடல் அழகியைத் தேடிப் போகிறாயே! இது உனக்கு சரியாகத் தெரிகிறதா, அசோக்?” என்று சட்டெனக் கேட்டான், மோகன்.

“எப்படித் திருமணம் செய்து கொள்வது? நான்தான் கோபுரத்தைத் தாங்கிக் கொண்டிருக்கிறேனே! என் சம்பாத்தியத்தில், என்னிரு தங்கைகளுக்கும் முதலில் திருமணம் முடிய வேண்டும். அது இந்தப் பிறவியில் நடக்காது! கேட்ட வரதட்சணையைக் கொடுக்க முடியாமல் தங்கைகளின் வயது ஏறிக் கொண்டும், வனப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டும் போகிறது! மேலும் எனக்கு இல்வாழ்க்கையில் விருப்பம் இல்லை! அந்தச் சிறைச்சாலையில் அடைபட்டுக் கொண்டு, பெற்ற பிள்ளைகளோடு போராடி, உன்னைப் போல் வாழ எனக்கு ஆசை இல்லை! நான் என்றும் சுதந்திரப் பறவையாகவே வாழப் போகிறேன்.

“கோகிலாவுக்கு அடிமையாக இருப்பதா சுதந்திர வாழ்வு? இது நிலையற்ற இன்பம்! இல்லறம் அல்லது நல்லறம் இல்லை! உனக்கென ஒருத்தி வேண்டாமா? மனைவியே வேண்டாம் என்பதும் ஒரு மாதிரித் துறவறம் தான்!”

“நான் துறவி இல்லை! இல்லறம், துறவறம் இரண்டுக்கும் இடைப்பட்ட ஒரு வாழ்வைத் தேடுகிறேன்! இதைச் சுயவறம் என்று சொல்வேன்! இதில் ஆண், பெண் இருவருக்கும் பூரண சுதந்திரம்! சம உரிமை! விருப்பமுள்ள ஆண்பெண் இருவர் சேர்ந்து வாழும் ஒரு கூட்டகம்! அதுதான் இணையறம்! மனப்பிளவு ஏற்பட்டால், யாரும் எப்போது வேண்டுமானாலும் உறவை வெட்டிக் கொள்ளலாம்! பிடித்த வேறு யாருடனும் ஒட்டிக் கொள்ளலாம்! இதில் யாருக்கும் கைவிலங்கு, கால்விலங்கு போடுவதில்லை! பிடிக்காதருடன் வாழும் மன வேதனை, சண்டை, சச்சரவு, விவாகரத்து, வரதட்சணை விவகாரம் எதுவும் இல்லை!

“அப்படி என்றால், கோகிலாவோடு நீ கூட்டகம் வைத்துக் குடித்தனம் நடத்துவாயா?”

“கோகிலா எனக்கு நிகரானவள்! நான் தயார், அவள் உடன்பட்டால்! மனைவி ஒரு போதும் மாதவி போல் கவர மாட்டாள்! குடும்ப வலையில் மாட்டிக் கொண்ட பின், கணவனைக் கவர வேண்டுமென்ற கடமை, மனைவிக்குத் தேய்பிறைபோல் குறைந்து, கடைசியில் அமாவாசையாகி விடுகிறது!”

“உனக்குத் தேவை, மாதவி! மனைவி அல்ல! என்று சொல்கிறாய். பெண்ணைக் கவர்ச்சிப் பண்ட மாகத்தான் நீ கருதுகிறாயா? மனைவி எப்போதும் கவர்ச்சிப் பதுமையாக இருக்கத் தேவையில்லை!”

“காரிகையை ஆண்டவன், கவர்ச்சிப் பிறவியாகத் தான் படைத்திருக்கிறான்! ஆடவரை மயக்கி ஆளத்தான் மங்கைக்கு மான்விழி, மதிமுகம், எழில் இடை, மயில் நடை, பொங்கியெழும் கொங்கை போன்றவற்றை அளித்திருக்கிறான்! ஆண்மை பெண்மை என்பது காமசக்தியின் இரு துருவங்கள்! மின்சக்தி, காந்தசக்தி போல், காம சக்தியும் ஓர் இயற்கைச் சக்தியே! அதன் கவர்ச்சி வலையில் சிக்காதவர் யார்?” கவிமுனி வால்மீகி! மாமுனிவர் விசுவாமித்திரர்! ஆண்டாள்! மகாகவி காளிதாஸ்! ஷேக்ஸ்பியர்! கவிஞர் ஷெல்லி! பைரன்! … வள்ளுவர் காமத்துப் பாலைக் காவியமாக வடித்துள்ளார்! ‘மோகத்தைக் கொன்றுவிடு! – இல்லால் எந்தன், மூச்சை நிறுத்திவிடு!’ என்று பாரதியார் கூட மோகத் தீயில் படாத பாடு பட்டிருக்கிறார்!”

“காமசக்தி தான் கன்னிப் பெண்ணுக்கு எழிலையும், இனிய குரலையும், நளின மேனியையும் தருகிறது. ஆணுக்கு கம்பீரத் தோற்றத்தை அளிக்கிறது! வயிற்றுக்கு உணவுபோல், உடலுக்கு உறவு! உறவு இல்லையேல் உடல்நலம் சிதைகிறது! காமசக்தி ஓர் ஆக்க சக்தி! காமசக்தி இல்லையேல் இனவிருத்தி இல்லை! கவிஞனின் கற்பனைச் சுரங்கம் வரண்டு போகும்! எழுத்தாளன் மூளை பாலைவனம் ஆகிவிடும்! சிற்பியின் கைகள் செதுக்க முடியா ! இசைக்குயில் பாட முடியாது! நர்த்தகி நளினமாய் ஆட முடியாது! ஓவியன் சித்திரத்தைத் தீட்ட இயலாது! கலையோ, காவியமோ எந்தவிதப் படைப்புமே உருவாக்க முடியாது! காம சுரப்பிகள் சுருங்கிக் காய்ந்து போகும் போது, மனிதனை முதுமை கவர்ந்து கொள்கிறது!

“இல்லை, அசோக்! காமம் கண்ணைக் குருடாக்குகிறது! காமம் சிற்றின்பம்! காமவெறி ஓர் அழிவுசக்தி! காமசக்தியில் குளித்தவர் எல்லாம் கடைசியில் கரையேற, கடவுளைத் தான் தேடினர்! நமக்குத் தேவை ஆன்மீக சக்தி! அதுதான் உயர்ந்தது! உறுதியானது! முடிவில்லாப் பேரின்பம்! மனிதப் பிறவியின் இறுதிப் பீடம்! ஆன்மீக சக்திதான் ஆக்கசக்தி!

டாக்ஸி கிழக்குக் கோபுர வாசலை வந்தடைந்தது. பூக்கடைகளிலிருந்து மல்லிகை மணமும், ரோஜாவின் மணமும் நாசியில் நுழைந்து மோகனைக் கிறங்க வைத்தன! “இறங்கிக் கொள்கிறேன், இங்கு” என்று காரை நிறுத்தச் சொன்னான், மோகன். “நான் தேங்காய், பழம், பூ, சூடம் எல்லாம் வாங்க வேண்டும்”.

“கோயில் முன், பார் மோகன்! எங்கெங்கு நோக்கினும் மங்கையர் கூட்டம்! இப்படிப் பெண்டிர் பலர் அலங்காரமாய் கண்முன் நிற்கும் போது, தேவியை நோக்கி எப்படிப் பூஜிப்பாய் நீ? இந்தச் சூழ்நிலையில் கண்ணை மூடிக் கொண்டு, மனதைக் கட்டுப் படுத்தி, சிந்தையில் தெய்வத்தை தியானிக்க முடியாது!”

“அசோக்! நீ கோகிலாவைப் பூஜிக்கப் போகிறாய்! உன் கண்ணில் தெய்வமே தெரியப் போவதிலை! அந்த மாயக்காரி தரும் மதுவை அருந்தப் போகிறாய்! உடலையும் ஆத்மாவையும் பாழாக்கி உன்னைப் போல் என்னால் வாழ முடியாது! பிறவிப் பெருங்கடல் நீந்த, ஒரு நேரமாவது தெய்வத்தை வழிபடு! அதைச் செய்யாமல், சிற்றின்பத்தைத் தேடிப் போகிறாய், நீ! நினைவில் இதை வைத்துக் கொள்! நிச்சயம் உனக்கு மோட்சம் இல்லை! .. நரகம் தான்! …. நன்றி, வருகிறேன்”, என்று சாபம் போட்டு விட்டுப் பூக்கடை நோக்கி விரைந்தான், மோகன்.

டாக்ஸி தெற்கு வெளிவீதி நோக்கித் திரும்பியது. கோகிலாவைப் பற்றிய அவன் கற்பனை சற்று சிதைந்து போனது! “ஒரு நேரமாவது தெய்வத்தை வழிபடு! உனக்கு மோட்சம் இல்லை! நரகம் தான்!” என்று மோகன் சொல்லி விட்டுப் போனது நெஞ்சில் முள்ளாய்க் குத்தியது! பையிலிருந்த வண்ணப் படத்தைக் கையில் எடுத்துப் பார்த்தான். கோகிலா அதில் சிரித்துக் கொண்டிருந்தாள். காமன் அவளது புருவங்களை வில்லாய் வளைத்து, அவன் நெஞ்சைக் குறி வைத்து, கனல் அம்புகளை ஏவி விட்டான்! ….. எது முதல்? … எது தேவை? …… அவன் மூளை குழம்பியது! ….. கைக் கடிகாரத்தைப் பார்த்தான். ….. டாக்ஸி ஏன் இப்படி மெதுவாய்ச் செல்கிறது?

தேங்காய், பழம், பூக்களைத் தட்டில் ஏந்திக் கொண்டு, கோயில் உள்ளே நுழைந்தான், மோகன். மீனாட்சி அம்மன் சன்னதி நோக்கி நடந்தாலும், அவன் மனக்கண் முன் கோகிலாவின் அழகுதான் வந்து விளையாடியது! சந்தேகமில்லாமல் அவள் பேரழகி! நேரிலேயே பார்த்திருக்கிறான், மோகன். கலா மன்றத்தில் முந்திய வாரம் நாடகம் பார்க்கப் போன போது, முன் நாற்காலியில் எந்த நேரமும் சிரித்துக் கொண்டு, அவள் ஜம்மென அமர்ந்திருந்தாள். அசோக் ஒரு வகையில் கொடுத்து வைத்தவன்! அழகை ரசிக்கவும் ஒரு யோகம் வேண்டும்! மோகனுடைய மனைவி சுந்தரி, அப்படி யொன்றும் அழகி இல்லை! ஆறரை அடி உயரத்தில், எடுப்பான தோற்றமுள்ள மோகனுக்கு, அழகற்ற ஐந்தடிப் பெண் சுந்தரியின் ஜாதகம் தான் முழுமையாகப் பொருந்தியது!

அங்கு இங்கு எனாதபடி எங்கும் கூட்டமாய், மங்கையர் கோவிலை நோக்கிப் போய்க் கொண்டிருந் தார்கள். ஜரிகைச் சேலைகளின் சல சலப்பும், ஜவ்வாதுப் பொட்டின் பள பளப்பும், மல்லிகைப் பூக்களின் மண மணப்பும், அன்று ஏனோ மோகனின் மனத்தை நிலை தடுமாறச் செய்தன! நேராகப் பார்த்து நடக்கும் கால்கள் திசை கோணி நெளிந்தன! முன்னோக்கி வழி காட்டும் விழிகள், முப்புறமும் தலையை திருப்ப விட்டு, அழகை ரசிக்கத் தூண்டின! மரத்துக்கு மரம் தாவும், மனக் குரங்கு மாதரை விட்டு மாதர்மேல் தாவி, அழகை ஒப்பிட்டுப் பார்த்தது! …ஆண்டவா! இது என்ன சோதனை?

பொற்றாமரைக் குளத்தில் தன் பிம்பத்தைப் பார்த்து, பொங்கி வரும் பெருநிலவு நடனமாடிக் கொண்டிருந்தது! கோயிற் தூண்களில் எல்லாம் ஒய்யாரமாய் நிற்கும், பெண் சிற்பங்கள் உயிர் பெற்று எழுந்தன! அவன் மதி மயங்கியது! ஏனிந்த கற்சிலைகள் கூட அவனைச் சித்திரவதை செய்கின்றன? தெய்வ சன்னதியில் காமச் சிலைகளை ஏனிந்தச் சிற்பி செதுக்கினான்? தேவியைத் தொழப் போகும் ஆடவனைத் திக்கு முக்காடச் செய்யும் கவர்ச்சிச் சிலைகளுக்குச் சேலைகட்டி மார்பை மறைக்க வேண்டும்! …… ஆண்டவா! இது என்ன தர்ம சங்கடம்?

கோகிலாவின் வீட்டு வாசலில் டாக்ஸி நின்றதும், டிரைவருக்குப் பணத்தைக் கொடுத்து விட்டுப் படியேறி வந்தான், அசோக். கதவு சற்று திறந்திருந்தது. திறந்த இடைவெளியி லிருந்து, மனத்தைக் கவரும் நறுமணப் பத்தியின் வாசம், மெதுவாய் நாசியின் வழி புகுந்து அவனை வரவேற்றது! செவியைக் குளிரச் செய்யும் சினிமா இசை அடுத்து விருந்தளித்தது!

வாராய்! நீ வாராய்!

போகு மிடம், வெகு தூர மில்லை!

வாராய்! நீ வாராய்!

‘மந்திரி குமாரி’ சினிமாவில் வில்லன், மலை உச்சியில் தன் மனைவியை அழைத்துக் கொண்டு போய்க் கீழே படு பாதாளத்தில், தள்ளுவதற்கு முன்னால் பாடுகிற பாட்டு! இனிமையான, ஆனால் கோரமான அந்தப் பாட்டை ரசித்த அசோகனுக்கு… இதயத்தில் திக்கென்றது! என்ன! கோகிலா தன்னைக் கீழே படு பாதாளத்தில் தள்ளப் போகிறாளா? … நரகத்தில் விழப் போகிறானா அசோக்? …… ‘நரகம் தான் உனக்கு!’ … என்று பாவிப் பயல் மோகன் ஆசீர்வதித்துப் போனானே! …. கதவைத் திறந்து கொண்டு உள்ளே மெதுவாக நுழைந்தான், அசோக்.

வீடு பளிச்சென சுத்தமாக இருந்தது. பார்க்கும் இடமெல்லாம் நீச்சலுடைப் பெண்டிர் காட்சி! தலைக்கு மேல் மின்விசிறி மெதுவாகச் சுழன்று கொண்டிருந்தது. உள்ளே இருந்து, மான்போல் விழித்து, மயில்போல் நெளிந்து, மோனாலிஸா முறுவலுடன் வந்த, வனிதா மணியைக் கண்டு சிலையாய் நின்றான், அசோக்! பார்த்ததும் நெஞ்சில் கனமாக ஏதோ அடைத்தது! சோஃபாவில் வந்து அவனை அமரச் சொன்னாள், கோகிலா. தானும் நெருங்கி உட்கார்ந்து, அவனது கையைப் பற்றினாள்.

நீல நிற ஸில்க் ஸாரியைக் கண்ணியமாக, கவர்ச்சியாக அணிந்திருந்தாள். மேனியிலிருந்து எழுந்த செண்டின் மணம், அவனை அவள் பால் இழுத்தது! இளநுங்கு போன்ற கரங்கள் தொட்டவுடன், அவன் உடலில் மின்சக்தி பாய்ந்தது! முதன்முதல் பெண்ணுடல் பட்டவுடன் மெய் சிலிர்த்தது! அசோக் அவளது காந்த மண்டலத்தில் சக்தியற்றுச் சாய்ந்து கிடந்தான்! நெஞ்சடுப்பு பற்றி எரிந்து, உடம்பெல்லாம் நெருப்பை வெளியாக்கியது! வேர்த்துக் கொட்டியது! கைகளும் கால்களும் நடுங்கின!

மெதுவாகப் பையில் கையைவிட்டு, ஒரு கவரை எடுத்துக் கோகிலாவிடம் கொடுத்தான். அவள் எண்ணிப் பார்த்து, மேஜை டிராயருக்குள் வைத்து விட்டு, ஆயிரம் ரூபாய் சரியாக இருப்பதாகச் சொன்னாள். புன்முறுவலோடு அவனுக்கு நன்றி கூறினாள்.

கோகிலாவின் காந்த உடம்பு அவனை நெருங்கியது! கைகள் அவனது தலை மயிரை மெதுவாகக் கோதி விட்டன! புல்லரித்துப் போன அசோக், சொர்க்க லோகத்தில் மிதந்து கொண்டிருந்தான்!

மோகன் கூட்டத்தில் நெருக்கிக் கொண்டு அம்மன் சன்னதிக்குள் இறுதியில் வந்து சேர்ந்தான். அசோக் சொன்னது சரியாய்ப் போயிற்று. அப்பப்பா! என்ன கூட்டம்? என்ன சத்தம்! காற்றோட்டம் இல்லாத இடம்! சாம்பிராணிப் புகை! சூடம் எரிந்து எழும் கரி வாய்வு! மனிதரின் வேர்வை நாற்றம் வேறு! எல்லாம் சேர்ந்து மோகனுக்கு மூச்சு முட்டிக் கொண்டு வந்தது! காதைப் பிளந்தது, ஆலயமணிச் சத்தம்! சந்தைக் கடைபோல் இருந்தது, சன்னதி! மூலையில் ஒதுங்கி நின்ற போலீஸ்காரன் ஒரு பெண்ணின் பின் புறத்தைத் தடவிக் கொண்டிருந்தான். அவள் சட்டெனக் கையைத் தட்டித் திரும்பியதும், தன் கையை எடுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றான்.

முண்டி இடித்துக் கொண்டு மோகன் நுழையும் போது, யாரோ ஒருவன் தட்டிவிட, தட்டு தரையில் குப்புற விழுந்தது! கீழே குனிந்து எடுப்பதற்குள், பூச்சரம் முன்னே போனவரின் காலைச் சுற்றிக் கொண்டது! வாழைப் பழங்கள் யாவும் பாதம் பட்டு நசுங்கிப் போயின! தேங்காய் காலில் விழுந்து கிழவி ஒருத்தி, ‘ஆ வென’ அலறினாள். வாழைப் பழத்தோல் வழுக்கி விழுந்த இளம்பெண் ஒருத்தி, குனிந்து கிடந்த மோகன் மேல் சாய, அவன் சட்டென அவளைக் கட்டிப் பிடித்துக் கொள்ள நேரிட்டது! பழம் நழுவிப் பாலில் விழுந்தது போலிருந்தது, மோகனுக்கு! அந்தப் பெண்ணுக்குத் தர்ம சங்கடமாய்ப் போனது. சேலையைச் சரிசெய்து எழுவதற்கு, அவளுக்கு சற்று நேரம் எடுத்தது!

மோகன் விடுவித்து எழுவதற்குள், கன்னத்தில் ‘பளாரென்று’ ஓர் அறை விழுந்தது! அறைந்தவன் பின்னால் நின்று கொண்டிருந்த யோக்கியமான போலீஸ்காரன்! “அயோக்கிய பயலே! எங்கேடா தொடுறே! கன்னிப் பெண்ணைக் கட்டியா பிடிக்கிறே? அறிவு கெட்டவனே! கூட்டத்திலே தெரியாமல் போயிடுமேன்னு பார்க்கிறாயா?” என்று முதுகில் பிரம்பால் நான்கு தரம் விலாசினான். மோகனுக்கு அவமானமாய்ப் போய்விட்டது! சுற்றிலும் கூட்டம் கூடி விட்டது! பட்டர் கூட தீப ஆராதனையை மறந்து விட்டு, வேடிக்கை பார்க்க வந்து விட்டார்! மீனாட்சி அம்மை இமை தட்டாமல் தன் மீன் விழிகளால் இந்த தெருக் கூத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்! கை கட்டி நடுங்கிக் கொண்டிருந்த மோகன், சுவாமி தெரிசனத்தையே மறந்து போனான்!

கோகிலா மெதுவாக முன் கதவைத் தாழிட்டு மூடினாள். அசோகனின் கையைப் பற்றி படுக்கை அறைக்கு அழைத்துச் சென்றாள். புடவையை நீக்கி பாவாடையில் தன் அழகைக் காட்டினாள்! அசோக்கின் கண்கள், அவளது மார்பின் அழகைப் பார்க்க வில்லை! தலைக்கு மேல் எதிரே, அவனைத் துளைத்து நோக்கிக் கொண்டிருந்த, திருப்பதி வெங்கடா ஜலபதியின் கண்களைப் பார்த்தன! அவன் நெஞ்சில் ஒரு பயம் எழுந்தது! அப்போது கோகிலாவின் கத்தி விழிகள் அவன் நெஞ்சைக் குத்திடத் தாவின!

அசோக்கின் தோளின் மேல் கைகளை வைத்து அணைக்க முனைந்த போது, ‘ஓ வென’ அலறும் ஒரு குழந்தையின் குரல் கேட்டது! .. திடுக்கிட்டான், அசோக்! .. திகைத்தான் அசோக்! .. தடுமாறினாள், கோகிலா! …. அவன் சொர்க்க லோகத்திலிருந்து பூலோகத்துக்கு வந்தான்! .. எங்கே குழந்தை அழுகிறது? .. யாருடைய குழந்தை அது? … திரும்பினான் அசோக்! ….கோகிலா அவனைப் பிடித்திழுத்தாள்! … குழந்தையின் அலறல் அதிகமானது! … அவளைத் தீண்டாமல், அலறல் வரும் திசையை நோக்கி விரைந்தான், அசோக் !

பிள்ளையின் அழுகையைப் பொருட்படுத்தாது காரியத்தை சீக்கிரம் முடித்திட முனைந்தாள் கோகிலா! அசோக் திமிறிக் கொண்டு, அவளை உதறித் தள்ளி விட்டு அடுத்த அறைக்கு ஓடினான். அங்கே அவன் கண்ட காட்சி! ஐந்தாறு மாதப் பச்சிளம் குழந்தை! அழுது அழுது தொய்ந்து போயிருந்தது! நெற்றியில் கையை வைத்தான். நெருப்பாய் காய்ந்தது, உடம்பு! … ஒரு நிமிடம் தான் சிந்தித்தான்! … உடனே, கிடந்த போர்வைத் துணியைப் பிள்ளைமேல் சுற்றித் தூக்கிக் கொண்டு, கதவைத் திறந்து தெருவை நோக்கி ஓடினான், அசோக்!

அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த கோகிலா, புடவையைக் கட்டிக் கொண்டு, பிள்ளைப் பையையும், மேஜை டிராயரில் இருந்த தன் கைப்பையையும் எடுத்துக் கொண்டு, அவன் பின்னால் ஓடினாள். வீதியில் ஓடிய ரிக்ஸாவை நிறுத்தி இருவரும் ஏறிக் கொள்ள, ஆஸ்பத்திரியை நோக்கி ஆட்டோ பறந்தது!

குழந்தையை அட்மிட் செய்து வெளி வருவதற்குள் இரண்டு மணி நேரம் ஆகிவிட்டது. உயிரில்லாமல் வீதிக்கு வந்தான் அசோக்! ஓடிக் கொண்டிருந்த ஆட்டோ ரிக்ஸாவுக்குக் கையைக் காட்டினான். உடம்பெல்லாம் வலித்தது! பெரு மூச்சோடு வண்டியில் ஏறி அமர்ந்ததும், கோகிலா கவரைக் கையில் ஏந்திக் கொண்டு ஓடி வந்தாள். அசோக் அதை வாங்கிக் கொள்ளவில்லை!

ரிக்ஸா வீடு நோக்கிக் கிளம்பியது. நன்றி பொழியும் கண்களுடன் வழி அனுப்பினாள், கோகிலா! …. ஆட்டோ போகும் வழியில், ஒரு பிள்ளையார் கோயில் பளிச்சென வெளிச்சத்தில் தெரிந்தது. அவன் கைகள் தானாகவே சேர்ந்து கும்பிடத் தொடங்கின! ‘பிள்ளையாரப்பா! அந்த பச்சிளம் பிள்ளை உயிரைக் காப்பாத்து’ என்று அவன் வாய் முணு முணுத்தது! … எதிரே போலீஸ் ஜீப்பில் கை விலங்குடன் மோகன், தலை குனிந்து போய்க் கொண்டிருந்தான்!

காம சக்தி

kama-sakthi

சி. ஜெயபாரதன், கனடா

பூக்கும் மலரில் பொங்கும் தேனது !
ஆக்கும் சக்தி ! ஆத்மாவின் சிறகு !
அளவில் மிஞ்சின் அழிக்கும் சக்தி !
கவரும் சக்தி காந்தம் போல !
துருவம் இரண்டு ஆண்மை, பெண்மை !
ஆண்மை பாதி ! பெண்மை மீதி !
ஆண்பால் இன்றேல் பெண்பால் தேயும் !
பெண்பால் இன்றேல் ஆண்பால் மாயும் !

வயிறுக்கு உணவு ! உடலுக்கு உறவு !
ஈரினம் இணைந்து பூரணம் அடைவது
மனித நியதி ! மானிட வளர்ச்சி !
காமம் உடற்கு கவின்தர வல்லது !
மேனி மினுக்கும், மீன்விழி ஒளிர்க்கும்,
முகக்களை ஈர்க்கும், மூளை தளிர்க்கும்,
காமக் கதிர்ஒளி பூமழை பெய்தால் !

பைரன், பாரதி, ஷெல்லி, ஷேக்ஸ்பியர்
பாரதி தாசன், கண்ண தாசன்,
வள்ளுவர், வால்மிகி, வியாச முனிவர்
பாடகி மீரா, லதாமங் கேஷ்கர்,
ஆடகி மேனகை, மாதவி, ஊர்வசி,
வைஜயந்தி மாலா, கமலா, பத்மினி,
காளிதாஸ், கம்பன், கவிக்குயில் ஆண்டாள்,
காமக் கடலில் நீந்தாக் கலைஞர்
பூமியில் ஏது ? காம சுரப்பிகள்
கலைத்துவ வேர்,உரம், நீரும் ஆகும் !

காம மிகுதி கலைசெயத் தகுதி !
காம சக்தியைக் கட்டுப் படுத்தி,
காவியம் படைப்போர் காலனை வெல்பவர் !
ஓவியம் தீட்டுவோர் உயர்தனி மனிதர் !
நாடகம், நாட்டியம், மேடையில் படைப்போர்,
சிற்பம் செதுக்கும் அற்புதச் சிற்பி,
ஆய்வுகள் புரிவோர், அறிவியல் ஞானி !
நுண்கலை வடிப்போர் மண்புகழ் பெறுவர் !

வறுமையும் நோயும் சுரப்பியின் நஞ்சு !
காமம் மீறுதல் தீமையின் விதைகள் !
பாமர மூடன் காமச் சுரப்பியைக்
காலால் நசுக்கிக் கவினை அழிப்பான் !
காம சுரப்பிகள் காய்ந்து போனால்
அகஒளி மாயும் ! முகஎழில் தேயும் !
முதுமையின் கருநிழல் முழுஉடற் பாயும் !
காவியம், கலைகள், ஓவியம் ஏது ?
நுண்கலை யாவும் கண்களை மூடும் !
நடனம் ஏது ? நல்லிசை ஏது ?
முடமாய்ப் போகும் நடமிடும் ஆத்மா !
*********************
S. Jayabarathan [(jayabarat@tnt21.com) November 10, 2008 (R-2)]