இந்திய விஞ்ஞான மேதை ஜெயந்த் நர்லிகர் D.Sc.

 

சி. ஜெயபாரதன், B.E.(Hons),P.Eng (Nuclear), Canada

 

Image result for jayant narlikar

“பிரபஞ்சத்தில் ஒளிந்திருக்கும் மர்மங்கள் ஆழ்ந்த ஆய்வுகளுக்குப் பிறகு சிறிது வெளிப்படக் காலம் வரும்!  வாழ்க்கை முழுவதிலும் மூழ்கி பிரபஞ்சத்தை ஆராய்ந்தாலும், பேரளவு நிகழ்ச்சிகளை ஆய்வு செய்ய ஒருவரின் ஆயுட் காலம் போதாது!  ஆகவே அடுத்தடுத்துத் தொடரும் யுகங்களில்தான் அப்பெரும் மர்மங்களின் புதிர் விடுவிக்கப்பட வேண்டும்!  இயற்கை ஒருபோதும் தன் இரகசியங்களை ஒரே சமயத்தில் விடுவிக்க விடுவதில்லை!”

ஸெனேகா [முதல் நூற்றாண்டு ரோமானிய வேதாந்தி]

அகிலத்தின் புதிர்களை ஆராயப் புகுந்த விஞ்ஞானிகள்

பிரபஞ்சத்தின் மர்மங்களை ஆராயப் புகுந்த காலிலியோ, ஐஸக் நியூட்டன், ஆல்பர்ட் ஐன்ஸ்டைன், ஜார்க் காமாவ், கார்ல் சேகன், சுப்ரமணியன் சந்திரசேகர், ஸ்டீ·பென் ஹாக்கிங் ஆகிய விஞ்ஞான மேதைகளின் அணியில் நின்று, இப்போது இந்தியாவில் விஞ்ஞானப் பணி புரிந்து வருபவர், டாக்டர் ஜெயந்த் நர்லிகர்!  உலகப் புகழ் பெற்ற நர்லிகர், வானோக்கியல், வானவியல் பௌதிகம், அகிலவியல் ஆகிய துறைகளுக்குத் [Astronomy, Astrophysics, Cosmology] பெருமளவு பங்கை அளித்துள்ளவர்.  பிரபஞ்சத் தோற்றத்தின் ஆதி வரலாற்றையும், பிற்பாட்டு விரிவையும் விளக்கும் பெரும்பான்மையோர் ஒப்புக் கொண்ட “பெரு வெடிப்பு அகிலவியல் நியதிக்குச்” [Big Bang Cosmology Theory] சவால்விடும் முறையில், விஞ்ஞானிகள் வேறுபட்ட கோட்பாடுகளில் ஆராய்ச்சிகள் புரிந்திட வழி வகுத்தன, நர்லிகரின் அடிப்படைப் பணிகள்!

ஜெயந்த் நர்லிகர் அகிலவியல் துறையில் ஆய்வுகள் புரியும் ஓர் ஆராய்ச்சி விஞ்ஞானி [Cosmology Researcher].  அகிலவியல் ஆய்வு பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான அமைப்பைப் பற்றியது.  பிரபஞ்சம் எத்துணை அளவு பெருத்த உடம்பை உடையது?  அது எத்தகைய உபரிப் பண்டங்களால் ஆக்கப்பட்டது?  ஒரு பெரும் பிரளயத்தில் இந்தப் பிரபஞ்சம் உண்டானதா?  அந்த முதல் நிகழ்ச்சிக்குப் பிறகு நேர்ந்த தொடர் விளைவுகள் யாவை?  அண்ட வெளியில் உயிர்ஜீவிகள் எவ்விதம், எங்கே தோன்றின?  பிரபஞ்சத்தின் இறுதி முடிவுதான் என்ன?  அகிலாண்டத்தின் மர்மமான, புதிரான, நூதனமான, விந்தையான இந்த வினாக்களுக்குப் பதில் தேடிய முற்கால விஞ்ஞானிகள், தேடிக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான தற்கால விஞ்ஞானிகளின் வரிசையில் வருபவர், ஜெயந்த் நர்லிகர்!

ஜெயந்த் நர்லிகர் செய்த பொது விஞ்ஞானச் சாதனைகள்

நர்லிகர் தன் குருவான பிரிட்டிஷ் விஞ்ஞானி ·பிரெட் ஹாயிலுடன் [Fred Hoyle (1915-2001)] இணைந்து ஆக்கி முடித்த “நெறிக்குட்படும் ஈர்ப்பு நியதியை” [Conformal Theory of Gravity], “ஹாயில்-நர்லிகர் ஈர்ப்பியல் நியதியாக [Hoyle-Narlikar Theory of Gravitation] தற்போது விஞ்ஞானச் சகபாடிகள் ஏற்றுக் கொள்கிறார்கள்.  குவஸார்ஸ் [போலி விண்மீன் கதிரலை எழுப்பிகள்], மிகுசக்தி வானியல் பௌதிகம், குவாண்டம் அகிலவியல், தூர மின்னாட்டம் [Quasars, High Energy Astrophysics, Quantum Cosmology, Distance Electrodynamics] ஆகிய விஞ்ஞானத் துறைகளுக்கு ஜெயந்த் நர்லிகர் பெருமளவில் தன் படைப்புகளை அளித்துள்ளார்.

1983 இல் ஃபிரெட் ஹாயிலுடன் ஈழத்து விஞ்ஞான மேதை சந்திரா விக்கிரமசிங் [Dr. Chandra Wickramasinghe] இணைந்து “உயிர்ஜீவிகளின் விண்வெளித் தோற்ற நவீனக் கோட்பாடை” [Modern Theory of Panspermia (Explained Below)] ஆக்கி வெளியிட்டனர்.  2002 செப்டம்பரில் நர்லிகர் குழுவினர் ஹைதிராபாத் TIFR ஏவுதள விண்வெளியில் பலூன்களை 25 மைல் உயரத்துக்கு ஏவி உயிர்க்கிருமிகள் நடமாடி வருவதைப் பிடித்து, அக்கோட்பாடை மெய்ப்பித்துக் காட்டினர்.

ஜெயந்த் நர்லிகர் 1972 இல் பாம்பே டாடா அடிப்படை ஆய்வுக் கூடத்தின் [Tata Institute of Fundamental Research] பேராசிரியராகப் பணியாற்றியவர்.  அடிக்கடி காலிஃபோர்னியா பொறிநுணுக்கக் கூடத்தின் கெல்லாக் கதிரியல் ஆய்வகத்திற்கும், விஞ்ஞானத் தொழில் ஆய்வுக் குழுவிற்கும் [Kellogg Radiation Lab, Council of Scientific & Industrial Research, CIT], மாரிலாந்து பல்கலைக் கழகத்தின் வானியல் பௌதிகத் துறையகத்திற்கும் [Dept of Physics & Astronomy, University of Maryland] விஜயம் செய்யும் விஞ்ஞானப் பேருரையாளர்.  காலி·போர்னியா, டெக்ஸஸ் பல்கலைக் கழகங்கள், கார்நெல் பல்கலைக் கழகம், கார்டி·ப் பல்கலைக் கழகக் கல்லூரி, பாரிஸில் உள்ள பிரான்ஸ் கல்லூரி ஆகிய விஞ்ஞான நிறுவகங்களின் ஆலோசகராகப் பணிபுரிபவர்.  மேலும் பொதுநபர் புரிந்து கொள்ளும் வகையில் விஞ்ஞான விந்தைகளை எளிய இனிய முறையில் ஆங்கிலம், ஹிந்தி, மராட்டி மொழிகளில் பல நூல்களையும், கட்டுரைகளையும் எழுதி யிருக்கிறார்.

விஞ்ஞான மேதை நர்லிகரின் உன்னத வாழ்க்கை வரலாறு

1938 ஜூலை 19 ஆம் தேதி ஜெயந்த் விஷ்ணு நர்லிகர் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூர் நகரில் பிறந்தார்.  அவரது தந்தை வாசுதேவ நர்லிகர், வாரனாசி பெனாரஸ் இந்துப் பல்கலைக் கழகத்தில் பணி செய்த கணிதப் பேராசிரியர்.  தந்தையார் புகழ் பெற்ற கணித நிபுணராக இருந்ததோடு, பொது ஒப்புமைத் தத்துவத்திலும் [General Relativity] ஞானியாகத் திகழ்ந்தவர்.  தாயார் சுமதி நர்லிகர் ஓர் சமஸ்கிருத வித்துவான்.  ஆதலால் சிறு வயது முதலே ஜெயந்த் நர்லிகர் கணிதம், சமஸ்கிருதம் புரளும் ஒரு கல்விமயக் குடும்பச் சூழ்நிலையில் வளர்ந்தவர்.  பெனாரஸ் பல்கலைக் கழகத்தின் உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் பயின்று இறுதி வகுப்பில் எல்லாப் பாடங்களிலும் முதன்மையாகத் தேர்ச்சி பெற்றார்.  பெனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் 1957 இல் B.Sc பட்டம் பெற்று முதல்தர விஞ்ஞானியாகப் பேரெடுத்தார்.

ஜே. என். டாடாவின் சிறப்புப்பரிசு மாணவனாக அடுத்து மேற்படிப்புக்கு இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.  அங்கே B.A.(1960), M.A.(1964), Ph.D.(1963) பட்டங்களை விரைவில் பெற்றார்.  1960 இல் டைஸன் வானவியல் பதக்கத்தைப் [Tyson Medal for Astronomy] பெற்று, கீர்த்தி வாய்ந்த பேராசிரியர் ·பிரெட் ஹாயிலின் கீழ் [Fred Hoyle] ஆராய்ச்சி மாணவராகச் சேர்ந்தார். அப்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் கவர்ச்சி மிக்க ஸ்மித் பரிசு [Smith Prize (1962)], ஆடம்ஸ் பரிசு [Adams Prize (1967)] ஆகிய இரண்டும் அவருக்குக் கிடைத்தன.  எல்லாவற்றுக்கும் மேலாக தனது 38 ஆவது வயதில், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் மிக உன்னத D.Sc. [Doctor of Science (1976)] பட்டத்தையும் பின்னால் பெற்றார்.

டாக்டர் ஆஃப் ஸயன்ஸ் [D.Sc.] பட்டம் பெறுவதற்கு முன்பாக 1972 இல் பிரிட்டனிலிருந்து இந்தியாவுக்குத் திரும்பினார்.  அவருக்கு டாடா அடிப்படை ஆய்வுக் கூடத்தில் [Tata Institute of Fundamental Research (TIFR)] வானவியல் பௌதிகத்தின் பேராசிரியர் பதவி கிடைத்தது.  1966 இல் ஜெயந்த் நர்லிகர் மங்களா ராஜ்வடே [Mangala Rajwade] என்னும் மாதை மணந்து கொண்டார்.  மங்களா பாம்பே பல்கலைக் கழகத்தில் கணிதத் துறையில் டாக்டர் [Ph.D.] பட்டம் பெற்றவர்.  அவர்களுக்கு கீதா, கிரிஜா, லீலாவதி என்று பெயருள்ள மூன்று புதல்விகள் உள்ளார்கள்.

பிரிட்டிஷ் மேதை ஃபிரெட் ஹாயிலுடன் நர்லிகர் செய்த ஆராய்ச்சிகள்

பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கிய பிரிட்டனின் உன்னத விஞ்ஞானி டாக்டர் ஃபிரெட் ஹாயில்தான் [Dr. Fred Hoyle (1915-2001)] “பொதுநிலை அமைப்புப் பிரபஞ்ச பெரு வெடிப்பு நியதி” [Standard Theory of the Origin of Universe (The Big Bang Theory)] என்னும் பதங்களை முதலில் பறைசாற்றியவர்! ஆனால் அந்த நியதியை ஏற்றுக் கொள்ளாது ஹாயில் புறக்கணித்தவர்!  அதற்கு மாறாக ஃபிரெட் ஹாயில் தனது “நிரந்தர நிலை அமைப்புப் பிரபஞ்சத்தை” [Steady State Theory of the Universe] பிரகடனம் செய்தார்!  ஆனால் தற்போது ஹாயிலின் கோட்பாடை நம்புவோர் எண்ணிக்கை சிறிது சிறிதாய்க் குறிந்து கொண்டே வருகிறது!

ஆயினும் அக்கொள்கையை விடாமல் பிடித்துக் கொண்டு ஃபிரெட் ஹாயில், ஜியோஃபிரி பர்பிட்ஜ், ஜெயந்த் நர்லிகர் ஆகியோருடன் இணைந்து “பிரபஞ்சத் தோற்றத்திற்கு வேறுபட்ட விளக்கம்” [A Different Approach to Cosmology] என்னும் நூலை 2000 இல் வெளியிட்டார்.  அண்டவெளி மீன்களின் அமைப்பு நியதியையும், அவற்றில் இரசாயன மூலகங்களின் தோற்ற மூலத்தையும் [Theory of the Structure and Origin of the Chemical Elements in Stars] பற்றிப் புதிய கருத்துக்களை வழங்கியவர், ஹாயில்.  ஈழத்து விஞ்ஞான மேதை டாக்டர் சந்திரா விக்கிரமசிங்குடன் [Dr. Chandra Wickramasinghe] இணைந்து “உயிர்ஜீவிகளின் விண்வெளித் தோற்ற நவீனக் கோட்பாடை” [Modern Theory of Panspermia (Explained Below)] ஆக்கி வெளியிட்டவர்.

உயிரினமும், கூறப் போனால் எயிட்ஸ் (AIDS) போன்ற நூதன நோய்களும் கூட அண்ட வெளியிலிருந்து உற்பத்தியாகி, பூமண்டலத்துக்கு இறங்கி உள்ளன என்பது ஹாயிலின் அசைக்க முடியாத கருத்து!  விந்தையான அவரது கருத்துக்களை அவர் எழுதிய இரண்டு நூல்களில் “அண்ட வெளியிலிருந்து நோய்கள்” [Diseases from Space (1979)], “விண்வெளிப் பயணிகள்: உயிரினங்களின் உதயம்” [Space Travellers: The Origin of Life (1980)] நாம் காணலாம்!

ஜெயந்த் நர்லிகரும் ஃபிரெட் ஹாயிலும் படைத்த “பிரபஞ்சத் தோற்றத்தின் நிரந்தரநிலை நியதியை” [Steady State Theory of the Universe], நம்பி வருபவர் எண்ணிக்கை மிக மிகக் குறைவு!  ஹாயில் நர்லிகர் இருவரும் பறைசாற்றிய “நிரந்தரநிலை நியதி” ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஆக்கிய “பொது ஒப்புமை நியதியின்” [General Theory of Relativity] அரங்கிற்குள் அடங்கிப், பிண்டம் தொடர்ந்து உருவாகும் [Continuous Creation of Matter] ஒரு நடப்பானக் கோட்பாடை முதன்முதலில் கூறியது.

ஃபிரெட் ஹாயில், நர்லிகர் இருவரும் “தூர நிகழ்ச்சிக் கொள்கையைப்” [Concept of Action at a Distance] பயன்படுத்தி, நுட்ப உலகான குவாண்டம் உருவிலும், பிரம்மாண்ட பிரபஞ்சப் பூத வடிவிலும், மின்னாட்ட இயக்கத்தை [Electrodynamics at Quantum and Classical Levels] விளக்கினார்கள்.  அவரது அரிய மின்னாட்ட இயக்கக் கருத்தே, “நெறிக்குட்படும் ஈர்ப்பு நியதி” [Conformal Theory of Gravity] என்னும் ஒரு புதிய ஈர்ப்பியல் நியதியைப் படைக்க உதவியது.

விண்வெளிச் சூழ்நிலையில் உயிரினங்களின் மூலத் தோற்றம்!

2002 செப்டம்பரில் நர்லிகர் குழுவினர் அண்ட வெளியில் உயிரினத் தோற்றத்தைக் [Extra-terrestial Life] கண்டதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டனர்!  நர்லிகரும் அவருடன் பணிசெய்தோரும், ஈழத்து விஞ்ஞானி சந்திரா விக்கிரமசிங்கும் [Chandra Wickramasinghe] விண்வெளிப் பலூன் சோதனையில் நுண்ணுயிர் ஜீவிகள் [Micro-organisms] இருப்பதைக் கண்டறிந்தவர்கள்.  அந்நுண் ஜீவிகள் நாம் எதிர்பார்க்கும் செவ்வாய்க் கோள் அண்டத்தின் பச்சை நிற மாந்தர் அல்லர்!  ஆனால் அவர்களின் கண்டுபிடிப்பு மிகவும் மகத்தானது!  அந்தக் கண்டுபிடிப்பு “பான்ஸ்பெர்மியா கோட்பாடின்” போக்கில் [Panspermia Theory] பல புதிய சவால்களை எதிர்காலத்தில் தொடுக்க வல்லது!

“பான்ஸ்பெர்மியா” என்றால் என்ன?  பிரபஞ்ச மெங்கும், தகுந்த சூழ்நிலையில் விருத்தி யடையும் உயிரின நுண்கிருமிகள் அல்லது ஏகச்செல் ஜீவிகள் உருவில் [Germs or Spores] பரந்து பரவி யுள்ளன!  மேலும் பூமியில் தோன்றிய மனித இனம், விண்வெளியிலிருந்து பூமிக்குப் புகுந்தது என்றும் பான்ஸ்பெர்மியா என்பதற்கு அர்த்தம் கொள்ளலாம்.  ஒரு காலத்தில் [1965-1985] அமெரிக்க உயிரியல் விஞ்ஞான மேதை, கார்ல் சேகன் செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழ்ந்த தடமிருக்கலாம் என்று அண்டவெளிப் பயணங்களில் ஆழ்ந்து முற்பட்டுத் தோல்வி யடைந்தார். “அண்டக் கோள்களில் உயிரின இருப்பை அழுத்தமாகப் பறைசாற்றும் விஞ்ஞானிகள், அதற்கு அழுத்தமான சான்றுகளைக் காட்ட வேண்டும்” என்று கார்ல் சேகன் அப்போது அடித்துப் பேசினார்!

அவ்விதம் அழுத்தமான சான்றுகளைக் கேட்ட சமயத்தில், ஜெயந்த் நர்லிகர் பின்வருமாறு கூறினார்: “2001 ஜனவரியில் ஹைதிராபாத்தில் உள்ள டாடா அடிப்படை ஆய்வுக் கூடத்தின் [TIFR] பலூன் ஏவுதளத்திலிருந்து பலூன் “பணிப்பளு” [Payload] ஒன்று விண்ணோக்கி ஏவப்பட்டது.  அப்போது 41 கிலோ மீட்டர் [24 மைல்] உயரத்தில்தான் நுண்ணுயிர் ஜீவிகள் இருப்பது அறியப்பட்டது!  அவ்வுயிர்க் கிருமிகள் பூமியிலிருந்து ஒரு வேளை வந்ததாக யூகித்தாலும், எவ்விதம் அந்த உயரத்தில் ஏறியன என்று கணிப்பது மிகவும் கடினமானது!  எரிமலைச் சாம்பல் கூட [Volcanic Ash] 25 கிலோ மீட்டருக்கு [15 மைல்] மேல் ஏறுவதில்லை!  அவ்விதம் ஏறினாலும் ஒரு சில வாரங்களுக்கு மேல், அங்கே தங்க முடிவதில்லை! நாங்கள் சோதனைக்குத் தேர்ந்தெடுத்த இடமோ, எந்த வித எரிமலைச் சீறல்கள் பல மாதங்கள் பொழிவுகள் செய்யாத ஒரு தூயச் சூழ்வெளி மண்டலம்”.

“பூமியைச் சுற்றிவரும் இயக்கமற்ற செயற்கைத் துணைக்கோள் [Dead Satellites] அல்லது விண்வெளி ராக்கெட்டுகள் வெளியேற்றும் அண்டவெளிப் பயணக் குப்பைகளைக் கணித்ததில், எங்கள் சேமிப்பு அளவுக்கு மாதிரியை இணையாகக் கணக்கிட்டுச் சொல்ல முடியாது!  மாதிரியைச் சேமிப்பதில் நாங்கள் எடுத்துக் கொண்ட கவனம், எச்சரிக்கைகள் மிகையானவை.  எங்களுக்குக் கிட்டிய கிருமி மாதிரி, ஆய்வுக் கூடத்தின் தீண்டலுக்கு அப்பாற் பட்டது!  சாதாரணப் பொது ஊடகங்கள் மூலமாகப் பொரித்து விளைவிக்க முடியாத [Not Cultured with common media] நூதனமான அரிய ஒருவகைக் கிருமிகள் அவை!  சான்றுக் கலன்கள் யாவும் “கிரையோ ஸாம்பிளர்” [Cryosampler] பக்குவத்தில், பூமித் தீட்டுப் படாத [Earth Contamination] முறையில் தூய்மைப் படுத்தப்பட்டவை”.

விண்வெளியில் எந்த விதமான உயிரின வகைகள் நர்லிகர் குழுவினரால் கண்டுபிடிக்கப் பட்டன?  இரண்டு விதமான நுண்ணுயிர் ஜீவிகளுக்குச் சான்றுகள் கிடைத்தன.  முதலாவது: மாதிரியுடன் நேர்த்துருவச் சாயங்களைக் [Cationic Dyes] கலந்த போது, வளரும் உயிருள்ள செல்கள் [Living Viable Cells] காணப் பட்டன.  இரண்டாவது: நுண்ணுயிர்க் கிருமிகள் குச்சிகள் போல் தோன்றும் பெஸிலஸ், ·பங்கஸ் [Staphylococcus Pasteuri (Rod-like Bacillus and Fungus)].  முதல் மாதிரியை நிரூபித்தது, பிரிட்டனில் உள்ள கார்டி·ப் கல்லூரியின் மூலக்கூறு உயிரியல் ஆய்வுக்கூடம் [Molecular Biology Labs of David Lloyd].  இரண்டாவது மாதிரியைச் சோதித்தது, பிரிட்டனில் உள்ள ஷெ·ப்பீல்டு ஆய்வுக்கூடம் [Labs in Sheffield by Milton Wainwright].

“அந்த அரிய நூதனக் கிருமிகள் எறிக்கற்கள் [Meteorites], அண்டப் பாறைகள் [Celestial Rocks], அண்டங்கள் [Other Bodies], வால்மீன்கள் [Comets] அல்லது சூரிய மண்டல எல்லையைக் கடந்து அமைந்துள்ள ஓர்ட் முகில்கள் [Oort Clouds] போன்ற எவற்றிலிருந்தும் வீழ்ந்ததாக நிச்சயம் இப்போது கூற முடியாது” என்று நர்லிகர் அழுத்தமாகக் கூறினார். “அவை இரண்டும் பூமியிலிருந்து போனவை யல்ல, விண்வெளியிலிருந்து வீழ்ந்தவை என்று மட்டும் உறுதியாகக் கூறலாம்” என்றார். “இன்னும் ஆய்வுகள் தொடர வேண்டும் என்றும், எங்கிருந்து விழுந்தன என்பதை முதலில் அறிய முடிந்தால்தான் அவற்றின் தற்போதைய பௌதிக நிலையை விளக்க இயலும்” என்றும் நர்லிகர் கூறினார்.  விண்வெளிச் சோதனையில் நர்லிகர் குழுவினர் ஆராய்ந்து வெளியிட்ட “பான்ஸ்பெர்மியா கோட்பாடு” [Panspermia Theory], உலக அரங்கில் உயிரியல் விஞ்ஞானிகளால் முழுவதும் ஒப்புக் கொள்ளப் படாமல், இப்போது கேள்விக்குட்பட்டே இருந்து வருகிறது!

ஜெயந்த் நர்லிகரின் சிறப்பான விஞ்ஞானப் பணிகள்

இந்தியாவுக்குத் திரும்பிய நர்லிகர் அகிலவியல் பற்றியும், வானிவியல் பௌதிகத் துறையிலும் தொடர்ந்து பணியாற்றினார். “நெறிக்குட்படும் ஈர்ப்பு நியதியைப்” பயன்படுத்தி, அவர் டாக்டர் பி.கே. தாஸ¤டன் [Dr.P.K. Das of Indian Institute of Astrophysics] உழைத்து “குவசார்ஸின் ஒழுங்கற்ற சிவப்புப் பிறழ்ச்சி” பற்றி [Anomalous Redshifts of Quasars] விளக்கம் தந்தார்.  பேராசிரியர் அப்பாராவ் [K.M.V. Apparao of TIFR], டாக்டர் என். தாதியிச் [Dr.N. Dadhich of Pune University] ஆகியோருடன் பணி செய்து, பிரபஞ்சத்தின் பிரளயப் போக்கிற்குச் [Violent Phenomena in the Universe] சிறிது காரணியான வெடிப்புச் சக்தியின் களஞ்சியங்களை [Explosive Sources of Energy] “வெண் குழிகள்” [White Holes] என்னும் கோட்பாட்டில் விளக்கம் செய்தார்.

1978 இல் பேராசிரியர் சித்ரேயுடன் [S.M. Chitre of TIFR] வேலை செய்து காலாக்ஸிகள் இடையூறாக உள்ள போது, அவற்றின் ஈர்ப்பியல் ஆற்றல், ரேடியோ அலைகளை வளைப்பதை எடுத்துக் கூறினார்.  பிரபஞ்சத் தோற்ற சமயத்தில் கால-வெளி ஒற்றைப்பாடுகளின் அருகே [In the Vicinity of Space-Time Singularities], குவாண்டம் கொந்தளிப்புகள் [Quantum Fluctuations] நிகழ்வதைப் பற்றி 1977-1985 ஆண்டுகளில் ஆராய முற்பட்டார்.

புனே நகரில் “வானோக்கியல், வானவியல் பௌதிக அகிலப் பல்கலைக் கழக மையம்” [Inter-University Centre for Astronomy and Astrophysics (IUCAA) at Pune] ஒன்றை 1988 இல் பல்கலைக் கழகக் கொடைக் குழு [University Grant Commission (UGC)] நிறுவகம் செய்தது.  UGC அதிபதி பேராசிரியர் யஷ் பால் [Professor Yash Pal] ஜெயந்த் நர்லிகரை அழைத்து அதன் ஆணையாளராக [Director] ஆக்கினார்.

ஜெயந்த் நர்லிகர் தான் எழுதிய நூல் ஒன்றில் காலக்ஸிகளும், காலக்ஸி மந்தைகளும் [Galaxies and Clusters of Galaxies] பிரபஞ்சத்தில் எப்படி உண்டாகின்றன என்று விளக்குகிறார்.  நர்லிகரும் அவரது விஞ்ஞான சகாக்களும் இணைந்து பிரபஞ்சத்தின் விரிவைக் காண, மின்கணனியில் முப்புற “போலியுரு மாடல்” [Computer Simulator 3D Model] ஒன்றை நிறுவி ஆராய்ச்சி செய்து வருகிறார்கள்.  அந்தப் போலி வடிவில் ஏதாவது சில இடங்களில் புள்ளிகளைக் குறித்து, அவையே தனிதனிச் “சிறு படைப்பு மையமாக” [Mini-Creation Centre] எடுத்துக் கொள்ளப் படுகின்றன.  அதுவே பிறகு அண்டையில் ஓர் அகிலவியல் நிகழ்ச்சியால் [Cosmic Event] ஒரு புதிய காலக்ஸியை உண்டாக்குகிறது!  அம்முறையில் அந்தப் போலியுரு மாடலை அண்ட வெளியில் விரித்துக் கொண்டே போகலாம்.  ஏனெனில் பிரபஞ்சம் நிலையானதன்று.  அது பலூன் போல உப்பிக் கொண்டே விரியும் ஓர் ஒழுங்கற்ற பொரி உருண்டை.

“பிரபஞ்சம் ஒரு பெரு வெடிப்பில் மட்டுமே உருவானதாக [No Single Big Bang] எங்களது போலியுரு மின் கணனி மாடலில் அமைக்கப்பட வில்லை” என்று கூறுகிறார் நர்லிகர்.  எல்லோரும் உடன்படும் “பொதுவான பெரு வெடிப்பு நியதியை” [Standard Theory] ஏற்காது, மாறுபட்ட “நிரந்தநிலை நியதியைப்” [Steady State Theory] பின்பற்றி வருபவர் நர்லிகர். “அண்டங்களும், பிண்டங்களும் [Planets and Matter], சிறுபடைப்பு நிகழ்ச்சிகளில் [Mini-Creation Events] சிறு சிறு வெடிப்புகளில் [Mini Bangs] உண்டானவை” என்று கூறுகிறார்.
Narlikar, Dadhich, Wikramasinghe

“கனமான ஒரு பேரண்டம் சுழலும் போது, அது சுழலும் ஒரு கருங்குழி போல் [Black Hole] இயங்கி வருகிறது.  அவ்விதம் சுழலும் ஓர் அண்டத்துக்கு அருகில், பிண்டம் [Matter] உருவாக்கப்படலாம் என்றும், அது சுழலும் அச்சின் திசையில் வீசி எறியப்படலாம் என்றும் மின்கணனி போலியுரு மாடலில் காட்டுகிறோம்.  ஆகவே நாமொரு நேர்கோட்டு அமைப்பை [Linear Structure] அங்கே காண்கிறோம்.  ரேடியோ-காலக்ஸிகளில் காணப்படும் பல ஜெட் வீச்சுகள் இந்த நேர்கோட்டு அமைப்புகளையே வலியுறுத்தும்” என்றும் நர்லிகர் கூறுகிறார்.

நர்லிகர் காட்டும் பிரபஞ்சத்தின் ஏழு அற்புதங்கள்!

ஜெயந்த் நர்லிகர் பிரபஞ்சத்தின் மகத்தான ஆய்வுப் பயணத்தில் கண்ட ஏழு அற்புதங்களைத் தான் எழுதிய ஒரு நூலில் [Seven Wonders of the Cosmos] கூறுகிறார்.  அது பூமண்டலத்தில் துவங்கி, சூரிய மண்டலக் கோள்களைச் சுற்றி வந்து, அண்டையில் உள்ள காலக்ஸியைக் கண்டு, முடிவில் பிரபஞ்சத்தின் தொடுவான எல்லையைத் தொடுகிறது!  ஒவ்வோர் அற்புதப் படைப்பிலும் பிரபஞ்சத்தின் நூதனக் காட்சி ஒன்று அல்லது புதிரான நிகழ்ச்சி ஒன்று சிறப்புத் தோரணமாக எழுந்து நிற்கிறது!  அந்நூல் அகிலத் தோற்றத்தின் எழிலைக் காட்டி, அதன் விந்தைத் தொழிலை விளக்கி, படிப்போர் நெஞ்சில் துடிப்பை உண்டாக்குகிறது!

முதல் அற்புதம்:  பூமியை விட்டுச் செல்லும் போது, முதல் அற்புத வினா எழுகிறது! “மேற்கிலிருந்து பரிதி மேலே எழுவது நிகழக் கூடிய சம்பவமா?  ஒளிவீசும் சூரியன் உள்ள போதே, வானம் இருண்டு போய்விடுமா?” இவற்றுக்கு நர்லிகர் பதில் தருகிறார்!

இரண்டாம் அற்புதம்:  விண்வெளியில் காணும் குள்ளி விண்மீன்களையும், பூத விண்மீன்களையும் [Giants & Dwarves of the Star World] பற்றியது.  விண்மீன் பிறப்பு, வளர்ச்சி, இறப்பு ஆகியவற்றைப் பற்றியது.

மூன்றாவது அற்புதம்:  ஓர் திரட்சியான விண்மீன் [Solid Star] வெடித்துப் பிரளயப் புரட்சி உண்டாவது.

நான்காவது அற்புதம்:  துடிக்கும் விண்மீன்கள் [Pulsars] என்னும் நியூட்ரான் விண்மீன்களைப் [Neutron Stars] பற்றியது.  அவை சுழலும் போது, கதிர்த் துடிப்புகளை [Emitting Pulses of Radiation] உமிழ்பவை.

ஐந்தாவது அற்புதம்: ஈர்ப்பியல் ஆற்றலால், பிரபஞ்சத்தில் நேரும் நூதன நிகழ்ச்சிகளைப் பற்றியது.

ஆறாவது அற்புதம்:  ஈர்ப்பியல் அழுத்தம் புரியும் சூழ்வெளியில் நடக்கும் மாயையான தோற்றங்கள்.

ஏழாவது அற்புதம்:  இறுதியான அற்புதம் பிரபஞ்சத்தின் முழுமையான, மகத்தான, முடிவற்ற பெருவிரிவு!   நர்லிகர் இவ்விதம் விந்தையான பிரபஞ்சத்தின் மர்மங்களையும், புதிர்களையும் இனிதாக எடுத்துக் காட்டுவதில் பெரும் வெற்றி பெறுகிறார்.  இத்தனை பக்கங்களையும் படித்து விட்டு, இன்னும் பிரபஞ்சம் புரியாத புதிராகத் தெரிந்தால், அதற்குக் காரணம் மர்மமான பிரபஞ்சமே! அந்நூலை எழுதிய ஆசிரியர், நர்லிகர் அன்று!

நர்லிகர் எழுதிய நூல்கள், பெற்ற வெகுமதிகள்

ஜெயந்த் நர்லிகர் நியதிப் பௌதிகம் [Theoretical Physics], வானவியல் பௌதிகம் [Astrophysics], அகிலவியல் [Cosmology] ஆகிய துறைகளுக்குத் தனது உன்னத படைப்புகளை அளித்துள்ளார். சிறப்பு மிக்க நுணுக்கமான விஞ்ஞானப் படைப்புகளை ஆக்கிய நர்லிகர், விஞ்ஞானத்தைப் பரப்பும் மேடைப் பேச்சாளராகவும், எழுத்து மூலம் பகிர்ந்து கொள்ளும் சிறந்த எழுத்தாளராகவும் திகழ்ந்தார். நர்லிகர் 55 நூல்களும், 200 மேற்பட்ட முழு நுணுக்கக் கட்டுரைகளும், 300 அரை நுணுக்கக் கட்டுரைகளும், விஞ்ஞானப் புனை நாவல்களும் இதுவரை எழுதியுள்ளார்.

அவருக்குக் கிடைத்த மதிப்புப் பதக்கங்களும், பட்டங்களும், பரிசுகளும் அநேகம்:  பட்நாகர் பரிசு [Bhatnagar Award for Physical Sciences (1978)], ராஷ்டிர பூஷண் மதிப்பு [FIE Foundation’s Rashtrabhusan Award (1981)], பிர்லா பரிசு [B.M. Birla Award (1993)], இந்திய விஞ்ஞானக் கழகத்தின் ·பெல்லோ [Fellow of the Indian Academy of Sciences], கேம்பிரிட்ஜ் வேதாந்தக் குழுவின் ·பெல்லோ [Fellow of the Cambridge Philosophical Society], இந்திய ஜனாதிபதியின் பத்ம பூஷண் மதிப்பு [Padmabhusan by the President of India (1965)]. இந்திரா காந்தி இந்திய விஞ்ஞானக் கழகத்தின் பரிசு [Indira Gandhi Award of the Indian National Science Academy (1990)], ஐக்கிய நாடுகளின் விஞ்ஞானப் பண்பாட்டுப் பரிசு [UNESCO Kalinga Award (1996)].

2003 ஜூன் 20-22 இல் பாபா அணுசக்தி ஆய்வுக் கூடம் [BARC] புனே IUCAA நிறுவகத்திலிருந்து ஜெயந்த் நர்லிகர் ஓய்வெடுக்கும் சமயம், “மனிதனும், பிரபஞ்சமும்” [Man and the Universe] என்னும் ஓர் விஞ்ஞானச் சொற்பொழிவுப் பேரரங்கை பாம்பேயில் அமைத்து அவருக்கு ஓய்வு மதிப்புவிழா நிகழ்த்தியது. அந்த விழாவில் முன்னாள் பல்கலைக் கழகக் கொடைக் குழுவின் [UGC] அதிபதி பேராசிரியர் யஷ் பால்,  IUCAA இன் விஞ்ஞானி டாக்டர் அஜித் கெம்பாவி போன்றோர் நர்லிகரைப் பற்றி உரையாற்றினர்கள். அறுபத்தியைந்து வயதாகும் [2003] ஜெயந்த் நர்லிகர் இன்னும் பல்லாண்டுகள் வாழ்ந்து, பாரதத்தில் மாந்தரிடையே விஞ்ஞானச் சிந்தனா விதைகளைப் பரப்பி, மகத்தான விஞ்ஞானப் பணிகளைச் செய்து வருவார் என்பதை நாம் உறுதியாகச் சொல்லலாம்.

*******************

Dr. Jayanth Narlikar’s Books:

1. An Introduction to Cosmology
2. From Black Clouds to Black Holes
3. Seven Wonders of the Cosmos
4. The Lighter Side of Gravity
5. The Primeval Universe
6. The Structure of the Universe
7. Violent Phenomena in the Universe

தகவல்கள்:

1. The Seven Miracles of the Universe By: Dr. Jayanth Narlikar [German By Helmut Mennichan (June 2001)]
2. If the Big Bang were one Fable [After the passing of Fred Hoyle] Italian Web (August 21, 2001)
3. Biography of Dr. Jayanth Narlikar, Comcom Magazine [www.vigyanprasar.com/comcom/jvn-bio.htm]
4. The Rediff Interview /Jayanth Narlikar [www.rediff.com/news/2002/nov/16inter1.htm] (Nov 2002)
5. Recommendation for the Award of Doctor of Science: Prof Jayanth Narlikar
6. Goa Web News: Astronomer Dr. Fred Hoyle By: Nandakumar Kamat [Aug 2001]
7. Dr. Fred Hoyle, Cadiff University [www.cf.ac.uk/maths/Wickramasinghe/hoyle.html]
8. Micro-organisms in Space -The Vindication of Panspermia Paper I & II, SEM Imaging of Stratospheric Particles of Non-terrestrial Origin By: Walls, Al-Mufti, Wickramasinghe, Rajaratnam and Narlikar [www.astrobiology.cf.ac.uk/cultured.html] [September 10, 2002]

******************

jayabarat@tnt21.com

பாரத விண்வெளி மேதை டாக்டர் விக்ரம் சாராபாய்

vikram-sarabhai-image.jpg

Dr. Vikram Sarabhai 

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng. (Nuclear) Canada.

“முன்னேறி வரும் ஓர் நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினா எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்சிமிழ்ப் பயணத்திற்கோ முற்படும், செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை!”

டாக்டர் விக்ரம் சாராபாய்.

இந்தியாவில் எழுந்த விண்வெளி ஆய்வுப் புரட்சி

1963 இல் முதன் முதல் ரஷ்யாவும், அமெரிக்காவும் மனிதர் இயக்கும் விண்சிமிழ்களில் [Spacecrafts] அமர்ந்து அண்டவெளியில் சுற்றி வந்த போது, இந்தியாவின் விண்வெளிப் புரட்சி சிறிய அளவிலே ஆரம்பம் ஆனது!  அந்த ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி பாரதத்தின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை, நைக்-அபாச்சி [Two Stage Sounding Rocket, Nike-Apache], திருவனந்தபுரம் தும்பா ஏவு தளத்திலிருந்து, இடிக்கனலுடன் உறுமிக் கொண்டு, வானைக் கிழித்துக் கொண்டு, புவியீர்ப்பை எதிர்த்துக் கொண்டு உயரத்தில் எழுந்தது!  அது 50 பவுண்டு எடையுள்ள சோடியம் ஆவி வீசு கலனைச் [Sodium Vapour Release Payload] சுமந்து கொண்டு, 125 மைல் உயரத்தை எட்டி இந்தியா விண்வெளிப் படையெடுப்பில் தனது முன்னடியை வைத்தது!  தேர்ந்தெடுக்கப்பட்ட தும்பா ஏவுகணை மையம், ராக்கெட் ஏவிடச் சாதகமானப் பூகோளத்தின் காந்தசக்தி பூமத்திய ரேகையில் [Earth’s Magnetic Equator] அமைந்துள்ளது!

“முன்னேறி வரும் ஓர் நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினா எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்சிமிழ்ப் பயணத்திற்கோ முற்படும், செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை!  ஆனால் மனித, சமூகப் பிரச்சனைகளைத் தீர்க்க முற்போக்கான விஞ்ஞானப் பொறியியல் நுணுக்கங்களைப் பயன்படுத்துவதில், உலக சமூகத்தின் முன்பாக நாங்கள் இரண்டாம் தரத்தில் இருக்க மாட்டோம்!  தேசீய ரீதியாக அர்த்தமுள்ள ஓர் பணியை மேற்கொள்கிறோம் என்னும் உறுதியில் இருக்கிறோம்!” என்று இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் குறிக்கோளை ஆணித்தரமாக அறிவித்தவர், விஞ்ஞான மேதை டாக்டர் விக்ரம் சாராபாய்.

Related image

புதிய பாரதத்தைச் செதுக்கிய பொற்காலச் சிற்பி

சுதந்திர சூரியன் பாரத தேசத்திலே உதித்ததும், மேதைகளிடம் அடங்கிக் கிடந்த ஆக்க வெள்ளத்தை மடைதிறந்து விட்டவர், பிரதமர் ஜவஹர்லால் நேரு!  விண்வெளி ஆராய்ச்சியைத் துவங்க, விக்ரம் சாராபாயைக் கண்டு பிடித்து, இந்திய விண்வெளி ஆராய்ச்சிப் பேரவையை [Indian National Committee for Space Research] நிறுவி, அவரை அதிபர் ஆக்கியவர், நேரு.  இப்போது இந்தியா ஆசியாவிலே அண்டவெளி ஏவுகணை விடுவதில் முன்னணியில் நிற்கிறது.  அண்டவெளி ஏவுகணைகள், துணைக் கோள்கள் முழுக்க முழுக்க இந்தியப் படைப்பு.  அப்பெரும் விஞ்ஞானச் சாதனைகள் நிகழ்ந்த, இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைப் இந்திய விஞ்ஞானத் தொழிற்துறையின் பொற்காலம் என்று வரலாற்றில் அழுத்தமாக எழுதி வைக்கலாம்!

பொற்காலத்தைப் பாரதத்தில் உருவாக்கிய ஒப்பிலாச் சிற்பிகளான அரசியல் மேதை ஜவஹர்லால் நேரு, அணுவியல் மேதை டாக்டர் ஹோமி பாபா ஆகியோர் வரிசையில் டாக்டர் விக்ரம் சாராபாய் ஒருவராகக் கருதப்படுகிறார்.  பாரதத்தின் விண்வெளிப் படையெடுப்பு, விக்ரம் சாராபாயின் குறிப்பணியோடு அடி எடுத்து வைத்து ஓங்கி வளர்ந்தது!  இந்திய விண்வெளி யுகத்தின் தந்தை என்று போற்றப்படும், விக்ரம் சாராபாய் அண்டவெளிப் பௌதிக நிபுணர்.  அதில் அகிலக்கதிர் [Cosmic Rays] விஞ்ஞானத்தில் சிறப்பறிவு பெற்றவர்.  விக்ரம் சாராபாய் பல்துறைப் பகுதிகளில் திறமை யுள்ள ஓர் தொழிற் துறைஞர்.  விஞ்ஞானப் பொறியியல் தொழிற்துறைக் கூடங்களை நிர்மாணிக்கும் அமைப்பாளர்.  நிர்வாக வல்லமை மிக்க திறமைசாளி.  பயிற்சிப் பணியில் கருமமே கண்ணான கல்வி ஆசிரியர்.

விஞ்ஞானி விக்ரம் சாராபாயின் வாழ்க்கை வரலாறு

1919 ஆம் ஆண்டு ஆகஸ்டு 12 ஆம் தேதி விக்ரம் அம்பலால் சாராபாய் [Vikram Ambalal Sarabhai] குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் நகரில் பிறந்தார்.  ஆரம்பத்தில் தாயார் சரலாதேவி நடத்திய தனியார் பள்ளிக்கூடத்தில் படித்துப், பிறகு குஜராத் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை முடித்தார்.  அதன்பின் மேற்படிப்புக்கு 1939 இல் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் ஸெயின்ட் ஜான் கல்லூரியில் சேர்ந்து, இயற்கை விஞ்ஞானத்தை [Natural Science] எடுத்துப் படித்தார். அப்போது இரண்டாம் உலகப் போர் மூண்டதால், அவர் உடனே இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய தாயிற்று.

இந்தியாவுக்கு மீண்டதும் விக்ரம் சாராபாய் நேராகப் பெங்களூர் சென்று இந்திய விஞ்ஞானக் கழகத்தில் [Indian Institute of Science] சேர்ந்தார்.  நோபெல் பரிசு பெற்ற விஞ்ஞான மேதை ஸர் சி.வி. ராமன் வழிகாட்ட அகிலக்கதிர் விளைவுகளின் [Cosmic Ray Effects] ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.  அங்கே அதே சமயத்தில் அகிலக்கதிர், மேஸான் [Meson] ஆராய்ச்சியில் ஆழ்ந்திருந்தவர் டாக்டர் ஹோமி ஜெ. பாபா. பாரதத்தின் எதிர்கால உன்னத விஞ்ஞான மேதைகள் இருவர் சி.வி. ராமனின் சிஷ்யர்கள்!  அவரது அடுத்த ஆய்வு, அகிலக்கதிர் வேறுபாடுகளின் புதிய சூரிய உறவுகள் [New Solar Relationships of Cosmic Ray Variations].  உலகப் போர் முடிந்த பிறகு, விக்ரம் சாராபாய் மறுபடியும் இங்கிலாந்துக்குச் சென்று மேற்படிப்பைத் தொடர்ந்தார். 1947 இல் சமர்ப்பித்த, “வேனில் வரம்பு மட்டங்களில் அகிலக்கதிர் ஆய்வுகள் [Cosmic Ray Investigations in Tropical Latitudes]” என்னும் ஆராய்ச்சிக் கோட்பாடுக்கு, கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டத்தை [Ph.D] விக்ரம் சாராபாயிக்கு அளித்தது.

விக்ரம் சாராபாய் ஓர் உன்னதக் கலை ஞானி.  கலைமேல் இருந்த மோகத்தால், அவர் கேரள நாட்டிய அரசி மிரிநாளினி சுவாமிநாதனைக் கலப்புமணம் புரிந்து, பாரத மக்கள் ஒருமைப்பாட்டுக்கு ஓர் வழிகாட்டியாக விளங்கினார்.  அவருக்குக் கார்த்திகேயன் என்ற புதல்வனும் மல்லிகா என்ற புத்திரியும் உள்ளார்கள்.  அவரது மனைவி மிரிநாளினி சாராபாய் [Mrinalini Sarabhai], அருமை மகள் மல்லிகா சாராபாய் [Mallika Sarabhai] இருவரும் புகழ் பெற்ற இந்திய நாட்டியக் கலா மேதைகள்.  கலைத்துவக் கலாச்சாரத்தில் மிகவும் ஈடுபாடுள்ள அவரும் அவரது மனைவி மிரிநாளினியும் சேர்ந்து தர்பனா கலைக்கூடத்தை [Darpana Academy] அமைத்து பாரத நாட்டின் பூர்வீகக் கலைகள் புத்துயிர் பெற நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார்கள்.

விக்ரம் சாராபாய் தோற்றுவித்த தொழிற்துறைக் கூடங்கள்

டாக்டர் பட்டம் பெற்று சாராபாய் இந்தியாவுக்கு மீண்டதும், அகமதாபாத்தில் 1947 நவம்பர் மாதம் பௌதிக ஆய்வுக் கூடத்தை [Physical Research Laboratory (PRL)] நிறுவனம் செய்து அங்கே தனியாகத் தனது விஞ்ஞான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்.  அடுத்து அகமதாபாத் நெசவுத் தொழில் ஆராய்ச்சிக் கூட்டகத்தை [Ahmedabad Textile Industries’ Research Association] அதே ஆண்டு நிறுவனம் செய்து 1956 வரை அவரே அதன் ஆணையாளராய்க் கண்காணித்து வந்தார்.  தொழில் நிர்வாகத் துறையில் சாராபாயிக்கு மிகுந்த வேட்கை இருந்தது.  அந்த ஆர்வத்தை நிறைவேற்ற 1957 ஆம் ஆண்டு அகமதாபாத் நிர்வாகக் கூட்டகத்தைத் [Ahmedabad Management Association] துவக்கம் செய்தார். 1950 முதல் 1966 வரை பரோடாவில் சாராபாய் கெமிகல்ஸ், சாராபாய் கிளாஸ், சாராபாய் எஞ்சினியரிங் போன்ற பல தொழிற் சாலைகள் நிறுவ சாராபாய் காரண கர்த்தா வாகினார். இந்தியாவில் ஓர் ஒழுங்கான நிர்வாகத் துறைக் கல்வி வளர 1962 இல் இந்திய நிர்வாகக் கூடத்தை [Indian Institute of Management] நிறுவி, 1965 வரை சாராபாய் அதன் ஆணையாளராக இருந்தார்.

விக்ரம் சாராபாய் நேரு, டாக்டர் ஹோமி பாபா போல் ஓர் தீர்க்க தரிசி!   இந்தியாவில் பிரம்மாண்டமான அணுசக்தியைப் பயன்படுத்தி, செழிப்புள்ள கங்கை நதி வளத்தைத் திருப்பி விட்டு தெற்கே உள்ள வரட்சிப் பிரதேசங்களுக்குப் பாய்ச்ச வேண்டும் என்ற பெரிய திட்டங்களை வகுத்தவர்!  1965 இல் அகமதாபாத்தில் பள்ளிச் சிறுவர்களுக்கு விஞ்ஞானத்தைப் பரப்ப சமூக விஞ்ஞான மையத்தை [Community Science Centre] நிறுவினார்.

இந்தியாவின் முதல் ராக்கெட் ஏவு மையம் அமைப்பு

பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு 1962 இல் இந்திய விண்வெளி ஆராய்ச்சிப் பேரவையை [Indian National Committee for Space Research (INCOSPAR)] நிறுவனம் செய்து, அதன் அதிபராக டாக்டர் விக்ரம் சாராபாய் அவர்களை நியமித்தார்.  அதன் திட்டப்படி முதலில் தும்பா பூமத்திய ராக்கெட் ஏவு நிலையத்தை [Thumba Equatorial Rocket Launching Station (TELRS)], விக்ரம் சாராபாய் திருவனந்த புரத்தில் அமைக்க ஏற்பாடு செய்தார்.  தேர்ந்தெடுக்கப்பட்ட தும்பா ஏவுகணை மையம், ராக்கெட் ஏவிடச் சாதகமானப் பூகோளத்தின் காந்தசக்தி பூமத்திய ரேகையில் [Earth’s Magnetic Equator] அமைந்துள்ளது! இந்தியாவில் முதன் முதலாக ராக்கெட் டிசைன் செய்து, பல்வேறு அங்கங்களை இணைத்து, அதனைச் சோதனை செய்யத் திட்டங்கள் வகுத்தார்.  அடுத்து செயற்கைத் துணைக்கோள் [Artificial Satellite] ஏவும் திட்டத்தை வகுத்தார்.  அப்பணிகளில் அவருடன் உழைத்தவர் தற்போதைய இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்.  துணைக் கோள்களின் வழியாகக் கல்வியைத் தொலைக்காட்சிச் சாதனங்களின் மூலம் [Satellite Instructional Television Experiment (SITE)] பரப்பிக் கிராமங்களில் பாமர மக்களும் பயில வசதி செய்தார்.

1966 ஜனவரி 24 ஆம் தேதி வியன்னாவில் அகில நாட்டு அணுவியல் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளச் செல்லும் போது, ஆல்·ப்ஸ் மலைத்தொடரில் விமானம் மோதி, இந்திய அணுசக்தித் துறையகத்தின் அதிபர், டாக்டர் ஹோமி பாபா அகால மரணம் எய்தினார்.  அப்போது பிரதமரான இந்திரா காந்தி பாபாவின் இடத்தை நிரப்ப விக்ரம் சாராபாயை அழைத்து, இந்திய அணுசக்தித் துறையகத்தின் அதிபராக 1966 ஆம் ஆண்டில் நியமித்தார்.  விண்வெளி ஆராய்ச்சித் துறைகளின் பொறுப்பையும் மேற்கொண்டு, விக்ரம் சாராபாய் புதிய அணுசக்தி துறையகப் பணிகளையும் கண்காணித்து வந்தார்.

இந்திய விண்வெளி ஆய்வுத் துறையின் சாதனைகள்

சுதந்திரம் பெற்று 25 ஆம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் போது, 1972 இல் பொதுவான முறையில் ஆரம்பிக்கப் பட்டு, இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் சீராக அமுலாக்கப் பட்டன.  முக்கியமாகப் பாரதத்தின் விண்வெளிப் பேரவை [Space Commission (SC)], விண்வெளித் துறையகம் [Dept of Space (DOS)] இரண்டும் முதலில் நிறுவனம் ஆயின.

இந்திய விண்வெளித் திட்டத்தில் வானியல் பௌதிகம், கோட்பாடு பௌதிகம் [Theoretical Physics], பூகோளத்தின் விஞ்ஞானம், விண்கோள்களின் சூழ்நிலை, சூரிய குடும்பத்தின் ஆராய்ச்சி ஆகியவற்றை நுணுக்கமாய் அறிந்து கொள்ள வழிமுறைகள் வகுக்கப் பட்டுள்ளன.  அவற்றைத் திட்டமிட்டு நிறைவேற்ற நான்கு ஆய்வு நிலையங்கள் பணி புரிந்து வருகின்றன.  அகமதாபாத்தில் பௌதிக ஆராய்ச்சிக் கூடம், விண்வெளிப் பயன்பாடு மையம் [Physical Reseach Laboratory & Space Application Centre], திருவனந்தபுரத்தில் விண்வெளிப் பௌதிக ஆய்வகம் [Space Physics Laboratory], பெங்களூரில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பகம் [Indian Space Research Organization].  அந்த மையங்களில் செயற்கைத் துணைக் கோள்கள் [Satellites], ஏவிடும் வாகனங்கள் [Launch Vehicles], உளவு ராக்கெட்டுகள் [Sounding Rockets] ஆகிய விண்வெளிச் சாதனங்களின் ஆராய்ச்சி, வளர்ச்சி முயற்சிகள் நிகழ்ந்து வருகின்றன.

முதல் துணைக்கோள் ஆரியபட்டா 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் தேதி ரஷ்ய ராக்கெட் மூலம் சுமக்கப் பட்டுச் சுழல் வீதியில் விடப் பட்டது.  அடுத்து மூன்று துணைக் கோள்களும் [பாஸ்கரா-I, பாஸ்கரா-II, ஆப்பிள்] ரஷ்ய ராக்கெட் மூலமே [1979-1981] எடுத்துச் செல்லப் பட்டன.  ஐந்தாவது துணைக்கோள் ரோகினி முதன் முதல் இந்திய ராக்கெட் SLV-3 மூக்கில் அமர்ந்து கொண்டு விண்வெளியில் விடப்பட்டது.

இதுவரை 32 துணைக் கோள்களை இந்தியா அண்டவெளியில் ஏவி இருக்கிறது. அவற்றில் 16 துணைக் கோள்களை இந்தியாவில் அமைக்கப் பட்ட நான்கு வித ராக்கெட்டுகள் SLV-3 [Satellite Launch Vehicle-3], ASLV [Augmented Satellite Launch Vehicle], PSLV [Polar Satellite Launch Vehicle], GSLV [Geo-Synchronous Satellite Launch Vehicle] வெற்றிகரமாக விண்வெளியில் தூக்கிச் சென்றுள்ளன.  மற்ற 16 துணைக் கோள்களை, ரஷ்ய, அமெரிக்க, ஈரோப்பியன் ராக்கெட்டுகள் சுமந்து சுழல்வீதிகளில் எறிந்துள்ளன.  1993 இல் ஏவப்பட்ட ஒரே ஒரு துணைக்கோள் [Indian Remote Sensing Satellite (IRS-1E)] மட்டும் சுழல்வீதியைத் தொட முடியாது தவறி இழக்க நேரிட்டது!

செயற்கைத் துணைக் கோள்கள் செய்துவரும் பணிகள்

1983 ஆகஸ்டு 30 ஆம் தேதி அமெரிக்க விண்வெளி மீள்கப்பல் [Space Shuttle] இன்சாட் [INSAT-1B] இந்தியத் துணைக் கோளை சுழல்வீதியில் ஏவி விட்டது.  ஏவப்பட்ட பல இன்சாட் இணைப்பணித் துணைக் கோள்களில் [INSAT Network Satellites] அதுவும் ஒன்று.  இந்திய தேசியத் துணைக்கோள் கூட்டு ஏற்பாடு [Indian National Satellite System] உள்நாட்டுத் தொடர்பு, சூழகக் காலநிலைக் கண்காணிப்பு [Meteorology], நேரடித் துணைக்கோள் தொலைக்காட்சி ஒளிபரப்பி [Direct Satellite Television Broadcasting] ஆகியவற்றுக்குப் பயன்படுகிறது.  இன்சாட் இணைப்பணியில் [INSAT Network] 167 தொலைத் தொடர்பு முனைகள் [Telecommunication Terminals], ஏறக்குறைய 4172 இருவழிப் பேச்சு இணைப்புகளை [Two-Way Speech Circuits] ஏற்படுத்த முடியும்.  இன்சாட் இணைப்பு இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் கிராமியத் தொலைவரைவை [Rural Telegraphy] ஏற்கனவே நிலை நாட்டியுள்ளது.  இன்சாட் துணைக்கோள் இணைப்பு, சமிக்கைகளை 650 தொலைக்காட்சி அலை அனுப்பிகளுக்குப் [TV Transmitters] பரிமாறி, 80 சதவீத இந்திய மக்களுக்குக் கலைக் காட்சிகளையும், செய்திகளையும் அனுதினமும் அளித்து வருகிறது.

குறிப்பாக துணைக்கோள் மூலம் தொடர்பு [Communication through Satellite], காலநிலை முன்னறிவிப்பு செய்ய பூகோளச் சூழக ஆய்வு [Meteorology] ஆகியவற்றைச் செய்ய செயற்கைத் துணைக்கோள்கள் உதவுகின்றன.  சூறாவளி, கடல் கொந்தளிப்பு [Cyclone] போன்றவை ஊர்களைத் தாக்கும் முன்பே, துணைக்கோள் மூலம் பேரழிவு எச்சரிக்கை விடும் அபாய அறிவிப்பிகள், கிழக்குக் கடலோர ஊர்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடத்தில் அமைக்கப் பட்டுள்ளன. அவை சரியான சமயத்தில் எச்சரிக்கை செய்து, பெரும்பான்மையான மக்களையும், ஆடு மாடுகளையும் காப்பாற்றி யுள்ளன.  அத்துடன் விண்வெளித் தூர உளவு [Remote Space Sensing] வேளாண்மை, நீர்வளம், நிலவளம், தாதுக்கள் [Minerals], வனவியல் [Forestry], சூழக நிலை [Environment], கடல்துறை வளர்ச்சி [Ocean Development], வெள்ளத்தால் சேதங்கள், மழையற்ற பஞ்சத்தின் விளைவுகள் போன்றவற்றையும் கண்காணிக்க உதவுகிறது.

2002 செப்டம்பர் 12 இல் ஏவப்பட்ட மெட்சாட் [METSAT] துணைக்கோள் முதன் முதல் பூகோள இணைவு மாற்றுச் சுழல்வீதியில் [Geo-synchronous Transfer Orbit] வெற்றிகரமாக எறியப்பட்டது.  அது 22,000 மைல் உயரத்தில் சுற்றிவரும் போது பூமியின் ஒரே முகத்தை நோக்கிக் கொண்டு தேவையான வானலைச் சமிக்கைகளை அனுப்பும்!  மெட்சாட் மிக்க உயரத்தில் பறந்து, பூகோளம் முழுவதையும் படமெடுத்துப் பூமிக்கு அனுப்பியுள்ளது!

தும்பாவில் டாக்டர் விக்ரம் சாராபாயின் மர்மான மரணம்

1962 இல் பௌதிகச் சாதனைகளுக்கு விக்ரம் சாராபாய் சாந்தி ஸ¥வரூப் பட்நாகர் பரிசைப் [Shanti Swaroop Bhatnagar Award] பெற்றார்.  பாரத அரசு 1966 இல் பத்ம பூஷண் [Padma Bhushan] கௌரவப் பெயரையும், அவர் காலமான பிறகு பத்ம விபூஷண் [Padma Vibhushan] கௌரவப் பெயரையும் விக்ரம் சாராபாயிக்கு அளித்தது.  1968 இல் ஆக்க வினைகளுக்கு அண்டவெளி ஆய்வு ஐக்கியக் கூட்டத்தின் [United Nation Conference on the Exploration & Peaceful Uses of Outer Space] அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1970 இல் உலக நாடுகளின் அணுசக்திக் கூட்டக [International Atomic Energy Agency, Vienna] ஐக்கிய பேரவையின் தலைவராகவும், ஆக்க வினைகளுக்கு அணுசக்தி ஐக்கியக் கூட்டத்தின் [United Nation Conference on the Peaceful Uses of Atomic Energy] துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

டாக்டர் விக்ரம் சாராபாய் 1971 டிசம்பர் 30 இல் தும்பா ராக்கெட் ஏவுதளத்தைப் பார்வை யிடச் சென்ற சமயம், திருவனந்தபுரம் தங்குமிடத்தில் இரவில் தூங்கச் சென்றவர் தூங்கிக் காலையில் எழுந்திருக்கவே வில்லை!  சாராபாய் குடும்பத்தினர் மரணச் சோதனை [Autopsy] எதுவும் செய்ய வேண்டாம் என்று தடை செய்து உடம்பை நேரே அகமதாபாத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்!  ஆதலால் அவரது அகால மரணம் எப்படி உண்டானது என்று அறிய முடியாமல் மர்மமாகவே போய் விட்டது!

இந்திய விண்வெளி யுகத்தின் தந்தை என்று போற்றப்படும், விக்ரம் சாராபாய் அண்டவெளிப் பணிகளுக்கு அடிகோலி, வளரும்படிச் செய்து, பெருகும்படி வழிகாட்டி, ஆசியாவிலே சிறந்த நிறுவனத்தைத் திறமையுடன் உருவாக்கிய விஞ்ஞான மேதை.  ஐம்பத்திரண்டு வயதிலே மறைந்த அந்த அரிய விஞ்ஞானியின் இடத்தை நிரப்ப இந்தியாவில் யாருமில்லை!  அவர் காலமான பின்பு தும்பா ராக்கெட் ஏவுதள நிலையம், விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் [Vikram Sarabhai Space Centre] எனப் பெயரிடப்பட்டு யாவரது நினைவிலும் அவரது பெயரை நிலைநாட்டி யிருக்கிறது.

************************
S. Jayabarathan [Sep 2002]

பாரதத்தின் அணுவியல் துறை மேதை டாக்டர் ஹோமி பாபா

Dr. Homi J. Bhabha

(1909 – 1966)

சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng.(Nuclear) கனடா

“அணுவைப் பிளந்து சக்தியை வெளியாக்குவதுடன், கடல் அலைகளின் ஏற்ற இறக்கத்தில் எழும் சக்தியைக் கையாண்டு, பரிதிக்கதிர் வெப்பத்தையும் கைப்பற்றி ஒருநாள் மின்சக்தி படைப்போம்”

தாமஸ் ஆல்வா எடிஸன் [ஆகஸ்டு 22, 1921]

“இன்னும் 20 ஆண்டுகளுக்குள் உலக நாடுகளின் தொழிற்துறை அரங்குகளிலும், இந்தியாவின் தொழில்வள நிதிப்போக்கிலும் அணுசக்திப் பெருமளவு பங்கேற்றுப் புரளப் போகிறது!  முற்போக்கு நாடுகளின் கண்முன் தொழிற் துறைகளில் பிற்போக்கு அடைவதை வேண்டாதிருந்தால், பாரதம் அணுவியற் துறைகளை விருத்தி செய்வதில் முழுச்சக்தியுடன் முற்பட வேண்டும்”.

டாக்டர் ஹோமி பாபா [1948]

“சுருங்கித் தேயும் சுரங்க நிலக்கரி, குறைந்து போகும் ஹைடிரோ-கார்பன் எரிசக்திச் சேமிப்புகளை எதிர்பார்த்து விரிந்து பெருகும் இந்தியாவின் நிதிவள வேட்கையை நோக்கினால், நூறு கோடியைத் தாண்டிவிட்ட மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய யுரேனியம், தோரியம் ஆகியவற்றின் எரிசக்தியை முழுமையாகப் பயன்படுத்திப் பேரளவு அணுசக்தியை உற்பத்தி செய்யும் முறை ஒன்றுதான் தற்போது இந்தியாவுக்கு ஏற்றதாக உள்ளது”

டாக்டர் அனில் ககோட்கர் [அதிபதி அணுசக்திப் பேரவை 2003]


இந்திய விஞ்ஞானத் தொழிற்துறையின் பொற்காலச் சிற்பிகள்

பாரத கண்டத்தைச் சாணி யுகத்திலிருந்து [Cow Dung Age] அணுசக்தி யுகத்திற்கும், அண்டவெளி யுகத்திற்கும் இழுத்து வந்த அரசியல் மேதை, பண்டித ஜவாஹர்லால் நேரு.  இந்தியா சுதந்திரம் அடைந்த பின், மேலை நாடுகள் போல் முன்னேறத் தொழிற் சாலைகள், மின்சக்தி நிலையங்கள், அணுசக்தி ஆராய்ச்சி, அண்டவெளித் தேர்வு போன்ற துறைகள் தோன்ற அடிகோலியவர் நேரு. 1945 ஆம் ஆண்டில் ஜப்பானில் அணுகுண்டுகள் விழுந்த பிறகு அமெரிக்கா, கனடா, ரஷ்யா, இங்கிலாந்து மற்றும் சில ஈரோப்பிய நாடுகளிலும் அணுவியல் ஆராய்ச்சி உலைகள் [Atomic Research Reactors] முளைத் தெழுந்தன.  மேலை நாடுகளில் அதற்குப் பிறகு 1950-1960 ஆண்டுகளில் அணுசக்தியை ஆக்க வினைகளுக்குப் பயன்படுத்தச், சோதனை அணு மின்சக்தி உலைகள் [Test Atomic Power Reactors] கட்டப் பட்டன.  அவை வெற்றிகரமாய் இயங்கி, வாணிபத்துறை அணுசக்தி நிலையங்கள் [Commercial Atomic Power Stations] தலை தூக்கத் தொடங்கின.

இந்தியாவில் அணுவியல் துறை ஆராய்ச்சியைத் துவக்கவும், ஆக்க வினைகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்தவும் பண்டித நேரு வேட்கை கொண்டு அப்பணிகளைச் செய்ய ஓர் உன்னத விஞ்ஞானியைத் தேடினார்.  அப்போதுதான் டாக்டர் ஹோமி ஜெஹாங்கீர் பாபாவைக் [Dr. Homi Jehangir Bhabha] கண்டு பிடித்து, நேரு 1954 இல் மொம்பையில் அணுசக்தி நிலைப்பகத்தைத் [Atomic Energy Establishment, Trombay] துவக்கச் செய்தார்.  1958 மார்ச் 14 இல் நேரு இந்திய அணுசக்தி ஆணையகத்தை [Indian Atomic Energy Commission] நிறுவனம் செய்து ஹோமி பாபாவுக்குத் தலைவர் [Chairman] பதவியை அளித்தார்.  நேருவைப் போன்று டாக்டர் ஹோமி பாபாவும் ஓர் தீர்க்க தரிசியே.

நேரு விண்வெளி ஆராய்ச்சியைத் துவங்க, விஞ்ஞானி டாக்டர் விக்ரம் சாராபாயைக் [Dr Vikram Sarabai] கண்டு பிடித்து, தும்பா ஏவுகணை மையத்தை [Thumba Rocket Launching Centre] நிறுவி, அவரைத் தலைவர் ஆக்கினார்.  இப்போது இந்தியா ஆசியாவிலே அணுவியல் ஆராய்ச்சியிலும், அண்டவெளி ஏவுகணை விடுவதிலும் முன்னணியில் நிற்கிறது.  அணுசக்தி நிலையத்தை நிறுவனம் செய்ய ஏறக் குறைய எல்லாச் சாதனங்களும் இந்தியாவிலே இப்போது உற்பத்தி யாகின்றன!  அதுபோல் அண்டவெளி ஏவுகணைகள் முழுக்க முழுக்க இந்தியப் படைப்பு.  1974 இல் பாரதம் தனது முதல் அடித்தள அணுகுண்டு வெடிப்பைச் [Underground Atomic Implosion] செய்து, உலகில் அணுகுண்டு வல்லமை யுள்ள ஆறாவது நாடாகப் பெயர் பெற்றது!  அப்பெரும் விஞ்ஞானச் சாதனைகளை மற்ற நாடுகளுடன் ஒப்பு நோக்கினால், இருபதாம் நூற்றாண்டின் பிற்பகுதியைப் இந்திய விஞ்ஞானத் தொழிற்துறையின் பொற்காலம் என்று வரலாற்றில் அழுத்தமாகச் செதுக்கி வைக்கலாம்! அப்புதிய பொற்காலத்தைப் பாரதத்தில் உருவாக்கிய சிற்பிகளுள் ஒருவராகக் கருதப்படுபவர், டாக்டர் பாபா.

பாரத நாட்டு அணுவியல் துறைகளின் பிதா

டாக்டர் பாபா ஓர் உயர்ந்த நியதிப் பௌதிக விஞ்ஞானி [Theoretical Physicist].  விஞ்ஞான மேதமையுடன் தொழில் நுட்பப் பொறியியல் திறமும் [Engineering Skill] பெற்றவர்.  மேலும் அவர் ஓர் கட்டடக் கலைஞர் [Architect].  கலைத்துவ ஞானமும், இசையில் ஈடுபாடும் உள்ளவர்.  பம்பாயில் பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தை [Bhabha Atomic Research Centre] நேரில் பார்ப்பவர், பாபாவின் கலைத்துவக் கட்டட ஞானத்தை அறிந்து கொள்வர்.  விஞ்ஞானத்தில் அகிலக் கதிர்களைப் [Cosmic Rays] பற்றி ஆய்வுகள் செய்தவர்.  பரமாணுக்களின் இயக்க ஒழுக்கங்களை [Behaviour of Sub-atomic Particles] நுணுக்கமாக ஆராய்ந்து, அவற்றுக்கு அநேக விஞ்ஞான விளக்கங்கள் அளித்துத் தெளிவாக்கியவர்.  இந்தியாவில் முற்போக்குப் பௌதிகக் [Advanced Physics] கல்விக்கு விதையிட்டு, அதன் விருத்திக்கும், ஆராய்ச்சிக்கும் ஆய்வுக் கூடங்கள் அமைத்தவர்.  பாரதத்தில் அணுவியல் விஞ்ஞான ஆய்வுக்கும், அணுசக்தி நிலையங்கள் அமைப்புக்கும் திட்டங்கள் வகுத்து அவற்றை நிறைவேற்ற ஆராய்ச்சிக் கூடங்கள், இரசாயனத் தொழிற் சாலைகள் ஆகியவற்றைப் பக்க பலமாக நிறுவனம் செய்தவர். அவரது விஞ்ஞான ஆக்கத்திற்கும், நிறுவன ஆட்சித் திறமைக்கும், அகில நாட்டு விஞ்ஞானிகளின் மதிப்பைப் பெற்றவர்.  இந்தியாவிலும் வெளிநாட்டிலும் விஞ்ஞானப் பேரவைகளில் பொறுப்பான பெரிய பதவிகள் ஏற்றவர்.  குறிப்பாக ஆக்க வினைகளுக்கு அணுசக்தியைப் பயன்படுத்தும் அகிலச் சபைகளில் [Organizations for the Peaceful Uses of Atomic Energy] உயர்ந்த பதவி வகித்தவர்.  இந்தியாவின் பாரத ரத்னா விருதையும், இங்கிலாந்தின் ஃபெல்லோ ஆஃப் ராயல் சொசைடி [Fellow of Royal Society] கௌரவ அங்கிகரிப்பையும் பெற்றவர்.  எந்த ஆசிய நாட்டிலும் இல்லாத மாபெரும் அணுசக்தித் துறைகளை இந்தியாவில் நிறுவி, பாரத நாட்டை முன்னணியில் நிறுத்திய டாக்டர் பாபா, பாரதத்தின் அணுவியல் துறைப் பிதாவாகப் போற்றப் படுகிறார்.

ஹோமி பாபாவின் ஆரம்ப வாழ்க்கை வரலாறு

ஹோமி பாபா ஓர் பார்ஸி குடும்பத்தில் 1909 ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதி மொம்பையில் [Bombay] பிறந்தார்.  அங்கே பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு, யந்திரப் பொறியியல் [Mechanical Engineering] பட்டம் பெற, 1927 இல் இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் கான்வில் கையஸ் கல்லூரியில் [Gonville & Caius College, Cambridge] சேர்ந்தார்.  அங்கே அவரது கணித ஆசிரியர், பால் டிராக் [Paul Dirac (1902-1984)].  பால் டிராக் கணிதத்திலும் நியதிப் பௌதிகத்திலும் [Theoretical Physics] வல்லுநர்.  அவர்தான் முதன் முதலில் ஒப்புமை மின்னியல் நியதியைப் [Relativistic Electron Theory] படைத்தவர்.  அந்த நியதி எதிர்த்-துகள்களின் [Anti-Particles] இருப்பை முன்னறிவித்துப் பின்னால் பாஸிடிரான் [Positron] கண்டு பிடிக்க உதவியது. 1933 இல் அலை யந்திரவியல் [Wave Mechanics] துறைக்கு ஆக்கம் அளித்தற்கு இன்னொரு விஞ்ஞானியுடன், டிராக் நோபெல் பரிசைப் பகிர்ந்து கொண்டார்.  அவரது கல்விப் பயிற்சி பாபாவைக் கணிதத்திலும், நியதிப் பௌதிகத்திலும் தள்ளி, விஞ்ஞானத்தில் வேட்கை மிகுந்திடச் செய்தது.

1930 இல் யந்திரப் பொறியியலில் முதல் வகுப்பு ஹானர்ஸ் பட்டம் பெற்ற பிறகு, கேம்பிரிடிஜ் காவென்டிஷ் ஆய்வகத்தில் [Cavendish Laboratories] ஆராய்ச்சி செய்யப் புகுந்தார்.  அப்போது ஈரோப்புக்கு விஜயம் செய்து, உல்ஃப்காங் பாலி [Wolfgang Pauli], அணுவியல் ஆராய்ச்சி விஞ்ஞானி என்ரிகோ ·பெர்மி [Enrico Fermi], அணுவின் அமைப்பை விளக்கிய நீல்ஸ் போஹ்ர் [Neils Bohr], பளு சக்திச் சமன்பாடு [Mass Energy Equation] படைத்த ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் [Albert Einstein] போன்ற ஒப்பற்ற விஞ்ஞான மேதைகளைக் கண்டு உரையாடி, அவர்களது நட்பைத் தேடிக் கொண்டார்.  பாலி, ஃபெர்மி, போஹ்ர், ஐன்ஸ்டைன் அத்தனை பேரும் பௌதிகப் படைப்புகளுக்காக நோபெல் பரிசு பெற்றவர்.

1935 ஆம் ஆண்டு பௌதிக விஞ்ஞானத்தில் டாக்டர் ஆஃப் ஃபிளாஸ்ஃபி [Ph.D.] பட்டம் பெற்று, 1939 ஆண்டு வரை கேம்பிரிட்ஜில் விஞ்ஞான ஆராய்ச்சிகள் செய்து வந்தார்.  அப்போது இங்கிலாந்தின் ஃபெல்லோ ஆஃப் ராயல் சொசைடி [Fellow of Royal Society] அங்கிகரிப்பும் பாபா பெற்றார்.  அதே சமயத்தில் F.R.S. பெற்ற கனடாவின் அணுவியல் மேதை, டாக்டர் W.B. லூயிஸ் [Dr. W. B. Lewis], பாபாவின் நெருங்கிய நண்பர்.  1957 இல் கனடா இந்திய அணு உலை, சைரஸ் [Canada India Reactor, CIRUS] பம்பாயில் நிறுவனம் செய்யவும், ராஜஸ்தான் கோட்டா, சென்னைக் கல்பாக்கம் ஆகிய இடங்களில் கான்டு [CANDU] அணுசக்தி மின்சார நிலையங்கள் தோன்றுவதற்கும், பாபா-லூயிஸ் கல்லூரி நட்பு அடிகோலியது.

அகிலக்கதிர் பற்றிய அடிப்படை விஞ்ஞானச் சாதனைகள்

உயர் சக்தி பௌதிகத்தின் [High Energy Physics] பாகமான குவாண்டம் மின்னியல் கொந்தளிப்பின் [Quantum Electrodynamics] ஆரம்ப விருத்திக்கு, டாக்டர் பாபா மிகுந்த படைப்புகளை அளித்துள்ளார்.  அவரது முதல் விஞ்ஞான வெளியீடு, பிண்டத்தில் உயர் சக்திக் காமாக்கதிர்கள் விழுங்கப் படுவதைப் [Absorption of High Energy Gamma Rays in Matter] பற்றியது.  ஒரு பிரதமக் காமாக்கதிர் எலக்டிரான் பொழிவாக [Electron Showers] மாறித் தன் சக்தியை வெளியேற்றுகிறது.  பாஸிடிரானைச் [Positron] சிதறும் எலக்டிரானின் முகப் பரப்பை [Cross Section], 1935 இல் முதன் முதல் கணக்கிட்ட விஞ்ஞானி, டாக்டர் பாபா.  [முகப் பரப்பு என்பது மிகச் சிறிய அணுக்கருப் பரப்பளவு. அந்தப் பரப்பளவு ஓர் அணுக்கரு இயக்கம் நிகழக் கூடும் எதிர்பார்ப்பைக் (Probabilty) கணிக்கிறது].  அந்த நிகழ்ச்சி எதிர்பார்ப்பு “பாபாச் சிதறல்” [Bhabha Scattering] என்று இப்போது பௌதிக விஞ்ஞானத்தில் அழைக்கப் படுகிறது.

டாக்டர் பாபா அகிலக் கதிர்களைப் பற்றி ஆராய்ச்சிகள் செய்தார். பூமியின் மட்டத்திலும், தரைக்குக் கீழும் காணப்படும் ஆழத்தில் ஊடுறுவும் துகள்கள் [Highly Penetrating Particles] எலக்டிரான்கள் அல்ல, என்று 1937 இல் பாபா எடுத்துக் கூறினார்.  ஒன்பது ஆண்டுகள் கழித்து, 1946 இல் அக்கூற்று மெய்யானது என்று நிரூபிக்கப் பட்டது.  ஆழமாய் ஊடுறுவும் அந்தத் துகள்கள் மியூ-மேஸான் [Mu-Meson] என்று பின்னால் கண்டு பிடிக்கப் பட்டன.  வெக்டர் மேஸான் [Vector Meson] இருப்பதை, டாக்டர் பாபா ஒரு நியதி மூலம் எடுத்துரைத்தார். 1938 இல் பூமியின் வாயு மண்டலத்தை அதி வேகமாய்த் தாக்கும், அகிலக் கதிர்களின் ஆயுளைக் கணித்து ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் தொகுத்த “சிறப்பு ஒப்புமை நியதியின்” [Special Theory of Relativity] காலக் கொள்ளளவு மாறுபாட்டை [Time Dilation Effect] உறுதிப் படுத்தினார். அந்த முறைக்கு ஒரு பூர்வீக வழியையும் வகுத்தார்.  ஒப்புமை நியதி உரைத்தது போல் அதே துள்ளிய அளவு அகிலக் கதிர்களின் ஆயுட் காலம் நீடிப்பதாகக் காணப் பட்டது.

பாரத தேசத்தில் பாபா தோற்றுவித்த விஞ்ஞான ஆய்வகங்கள்

1939 இல் இரண்டாம் உலகப் போர் மூண்டது.  விடுமுறையில் இந்தியாவுக்கு வந்த பாபா, யுத்தம் நடந்த காரணத்தால், மீண்டும் இங்கிலாந்துக்குப் போக முடியவில்லை.  டாக்டர் பாபாவுக்குப் பெங்களூர், இந்திய விஞ்ஞானக் கழகத்தில் [Bangalore, Indian Institute of Science] அகிலக்கதிர் [Cosmic Rays] ஆய்வுத் துறைப் பகுதியில் ஓரிடம் காத்திருந்தது.  அப்போது அதன் ஆணையாளர், நோபெல் பரிசு பெற்ற பாரத விஞ்ஞான மேதை, டாக்டர் சி. வி. ராமன் [Director Dr. C.V. Raman (1888-1970)].  டாக்டர் ராமன் மீது டாக்டர் பாபாவுக்கு அளவு கடந்த மதிப்பு.  அவரது விஞ்ஞான மேதமை, ஆழ்ந்த முறையில் பாபாவை ஊக்கியது.  பாபா பாரதத்திலே தங்க முடிவு செய்து விஞ்ஞான முற்போக்கிற்கும், பொறியியல் தொழில் விருத்திக்கும் பணிசெய்ய முற்பட்டார்.

1944 இல் தொழிற்துறை வளர்ச்சி அடைய விஞ்ஞானிகளுக்கு முற்போக்கான பௌதிகப் பயிற்சி அளிக்க ஓர் அரிய திட்டத்தை வெளியிட்டார்.  அதைப் பின்பற்றி டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கூடம் [The Tata Institute of Fundamental Research] பம்பாயில் 1945 இல் நிறுவப்பட்டு, சாகும் நாள் வரை டாக்டர் பாபா அதன் ஆணையாளராகப் [Director] பணியாற்றி வந்தார்.  ஆசியாவிலே அதி உன்னத விஞ்ஞான ஆராய்ச்சிகள் செய்துவரும் ஓர் உயர்ந்த ஆய்வுக் கூடம் அது.  1952 ஆம் ஆண்டில் அடிப்படைத் துகள் மேஸான்களில் [Fundamental Particle, Mason] ஒன்றைக் கண்டு பிடித்து “மேனன் மேஸான்” [Menon Mason] என்று பெயரிட்ட பேராசிரியர் எம்.ஜி.கே. மேனன், இந்தியப் படைத்துறை ஆலோசகர், டாக்டர் ராஜா ராமண்ணா ஆகிய விஞ்ஞான மேதைகளை உருவாக்கியது, டாடா அடிப்படை ஆராய்ச்சிக் கூடம்.

இந்தியாவில் அணுவியல் விஞ்ஞானத் துறைகள் வளர்ச்சி

டாக்டர் பாபாவின் உன்னதப் படைப்பு, பாரத தேசத்தில் நிலையாக வளர்ச்சி பெறும், உயர்ந்த ஓர் அணுவியல் துறைத்தொழில் அமைப்பு.  அணு ஆய்வுக் கூடங்கள், அணுசக்தி மின்சார நிலையங்கள், அவற்றுக்கு ஒழுங்காக எரிப்பண்டங்கள் ஊட்டும் யுரேனியம், தோரியத் தொழிற்சாலைகள் [Indian Rare Earths], கான்டு அணு உலைகளுக்கு வேண்டிய மிதவாக்கி [Moderator] கனநீர் உற்பத்திச் சாலைகள் [Heavy Water Plants], கதிரியக்கப் பிளவுக் கழிவுகளைச் [Radioactive Fission Products] சுத்தீகரித்துப் புளுடோனியத்தைப் பிரிக்கும் ரசாயனத் தொழிற்சாலை [Spent Fuel Reprocessing Plant], தாதுப் பண்டத்தை மாற்றி அணு உலைக்கேற்ற எரிக்கோல் கட்டுகள் தயாரிப்பு [Nuclear Fuel Bundle Fabrication], அணுசக்தி நிலையங்களை ஆட்சி செய்ய மின்னியல் கருவிகள், மானிடர் உடல் நிலையைக் கண்காணிக்கக் கதிரியக்க மானிகள் [Control System Instrumentations, Radiation Monitors], மின்சாரச் சாதனங்கள், கன யந்திரங்கள், கொதி உலைகள், பூதப் பம்புகள், வெப்ப மாற்றிகள் போன்று ஏறக் குறைய எல்லா வித பாகங்களும் பாரத நாட்டிலே தயாராகின்றன.  அணு உலைகளை இயக்கும் இளைஞர் பயிற்சி பெற அணுவியல் துறைக் கல்வி, மற்றும் பயிற்சிப் பள்ளிகள் பாரதத்தில் உள்ளன.

இந்தியா கீழ்த்தள அணுகுண்டை 1974 மே மாதம் 18 இல் வெடித்தற்கு முன் அணுவியல் சாதனங்கள் பல, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து ஆகிய மேலை நாடுகளிலிருந்து வந்தன.  அணுகுண்டு வெடிப்பிற்குப் பிறகு, அம்மூன்று நாடுகளும் வெகுண்டு அணுவியல் சாதனங்களை இந்தியாவுக்கு அனுப்புவதில்லை.  1974 ஆண்டுக்குப் பிறகு அணுசக்தித் துறை விருத்தியில் பாரத நாடு தன் காலிலே நிற்கிறது!  சில குறிப்பிட சாதனங்களை மட்டும் ஈரோப்பில் வாங்கிக் கொள்கிறது, இந்தியா.  இவ்வாறு பல்துறைகள் இணைந்து முழுமை பெற்றுச் சீராய் இயங்கும் மாபெரும் அணுவியல் துறை அமைப்பகம், இந்தியாவைப் போல் வேறு எந்த ஆசிய நாட்டிலும் இல்லை!

பாரதத்தில் அணுசக்தி மின்சார நிலையங்கள் அமைப்பு

டாக்டர் பாபா முதலில் ஆராய்ச்சிகள் புரிய ஆய்வு அணு உலைகளை [Research Reactors] நிறுவினார்.  இந்திய விஞ்ஞானிகள் அமைத்த “அப்ஸரா” நீச்சல் தொட்டி அணு உலையும் [Swimming Pool Reactor, Apsara], கனடா இந்தியக் கூட்டுறவில் கட்டப் பட்ட “ஸைரஸ்” வெப்ப அணு உலையும் [Canada India Reactor Utility & Service, Cirus] டிராம்பே அணுசக்திக் கூடத்தில் [Atomic Energy Establishment, Trombay, Now Bhabha Atomic Research Centre] அமைக்கப் பட்டன.  ஸைரஸ் ஆராய்ச்சி அணு உலையை இயக்க 1957 இல் பல எஞ்சினியர்கள், விஞ்ஞானிகள் கனடாவில் உள்ள NRX ஆய்வு உலையில் பயிற்சி பெற அனுப்பட்டார்கள்.  1960 இல் இயங்க ஆரம்பித்த ஸைரஸ் அணு உலையை, பிரதமர் நேரு திறந்து வைத்தார். துவக்க விழாவிற்கு அகில நாட்டு விஞ்ஞானிகள் பலர் வந்திருந்தனர்.

அடுத்து சென்னைக் கல்பாக்கத்தில் இரண்டாவது அணுவியல் ஆய்வுக் கூடம் [Indira Gandhi Atomic Research Centre] தோன்றியது.  அங்கு வேகப் பெருக்கிச் சோதனை அணு உலையும் [Fast Breeder Test Reactor], காமினி அணு உலையும் [Kamini Reactor], இரட்டை அணுசக்தி மின்சார நிலையமும் [CANDU Model] உள்ளன.  அணுசக்தி ஆராய்ச்சிக் கூடங்கள், மற்றும் அணுவியல் துணைத் தொழிற்சாலைகள் எல்லாம் அணுசக்தித் துறையகத்தின் [Dept of Atomic Energy] கீழ்ப் பணி புரிகின்றன.

அடுத்து பாபா அணுமின் சக்தி நிலையங்களை [Atomic Power Station] அமைக்க அடிகோலினார்.  முதலில் அமெரிக்காவின் ஆதரவில், தாராப்பூரில் கொதிநீர் அணுசக்தி மின்சார நிலையம் [Boiling Water Reactor, BWR] இரண்டை, ஜெனரல் எலக்டிரிக் கம்பெனி கட்டியது.  ஒப்பந்தப்படி இதற்கு வேண்டிய செழிப்பு யுரேனிய [Enriched Uranium] மூலத் தாது, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு, ஹைதராபாத் எரிக்கோல் தயாரிப்புத் தொழிற்சாலையில் [Fuel Fabrication Plant] உருவானது.  கொதிநீர் அணுஉலை இயக்கத்தில் தீவிரக் கதிரியக்கத் தீண்டல்கள் [Radioactive Contaminations] உண்டாவதால், அம்மாடல்கள் பிறகு இந்தியாவில் பெருகவில்லை.  கொதிநீர் அணுஉலை இயக்கத்தில் பயிற்சி பெற பல எஞ்சினியர்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப் பட்டார்கள்.

அடுத்து கனடாவின் கூட்டுறவில், கனடாவின் கான்டு [Canadian Deuterium Uranium, CANDU] மாடலில் இரட்டை அணுசக்தி மின்சார நிலையங்கள் ராஜஸ்தானில் கோட்டாவுக்கு அருகிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  அவற்றுக்குத் தேவையான இயற்கை யுரேனியம் [Natural Uranium] பாரதத்தில், மிஞ்சிய அளவில் கிடைக்கிறது. கனடா இந்திய ஒப்பந்தத்தின் போது, டாக்டர் பாபா இந்தியாவிலே கான்டு எரிக்கோல் [CANDU Fuel Bundles] தயாரிக்கவும், கான்டு அணுஉலைக் கலன்களைப் புதிதாய் உற்பத்தி செய்யவும், அந்த மாடல் நிலையங்களைப் பெருக்கும் உரிமைகளையும் கனடாவிட மிருந்து முதலிலேயே வாங்கிக் கொண்டார்.

அணுமின் சக்தி உற்பத்திக்கு ஆதரவான தொழிற்சாலைகள்

2002 இல் தற்போது புதிதாக எட்டு கான்டு அணுசக்தி நிலையங்கள் இந்தியரால் கட்டப் பட்டு, அவை இயங்க ஆரம்பித்து மின்சாரத்தை பரிமாறிக் கொண்டு வருகின்றன.  மேலும் புதிதாக ஆறு கான்டு அணுசக்தி நிலையங்கள் நிறுவனமாகிக் கொண்டிருக்கின்றன.  மொத்தம் 13 அணுசக்தி நிலையங்கள் இயங்கி வருகின்றன.  முதல் ராஜஸ்தான் கான்டு நிலையத்தில் பக்கப் பாதுகாப்புறை [End Shields] ஒன்றில் கதிரியக்க நீர் தொடர்ந்து கசிவதால், அணுஉலை இயக்கம் நிரந்தரகாக நிறுத்தப் பட்டுள்ளது.

அணு உலைகளுக்குத் தேவையான மூலத் தாதுக்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் [Indian Rare Earths], [Uranium Corporation of India Ltd], எரிக்கோல் தயாரிக்கும் கூடங்கள் [Nuclear Fuel Complex], கழிவு எருக்களைச் சுத்தீகரிக்கும் தொழிற்சாலைகள் [Fuel Reprocessing Plants], கனநீர் உற்பத்திச் சாலைகள் [Heavy Water Plants, Several], உலைக்கலன், உலைச் சாதனங்கள் உற்பத்திக்கு கன மின்சாரச் சாதனத் தொழிற்கூடம் [Bharath Heavy Electricals, Bhopal], [Larson & Tubro], [KSP Poona], அணுஉலை இயக்கக் கருவிகள், கதிரியக்க மானிகள் தயாரிக்கும் கூடங்கள் [Electronic Corporation of India Ltd] போன்றவை சில குறிப்பிடத் தக்கவை.

1955 இல் ஜெனிவாவில் நிகழ்ந்த ஐக்கிய நாடுகளின் ஆக்கவினை அணுசக்திப் பேரவைக்கு [United Nations Conferrence on the Peaceful Uses of Atomic Energy] டாக்டர் பாபா தலைவராகத் தேர்ந் தெடுக்கப் பட்டார்.  1960 முதல் 1963 வரை அகில நாடுகளின் தூய & பயன்படும் பௌதிக ஐக்கிய அவைக்குத் [International Union of Pure & Applied Physics] தலைவராகப் பணியாற்றினார்.  1964 இல் நடந்த ஐக்கிய நாடுகளின் ஆக்கவினை அணுசக்திப் பேரவையில், முன்னேறும் நாடுகளைப் பார்த்து, “மின்சக்தி இல்லாமைப் போல் செலவு மிக்க எந்த மின்சக்தியும் இல்லை” [No power is as costly as no power] என்று பாபா கூறிய ஒரு பொன்மொழியை உலக நாடுகள் எடுத்துப் பறைசாற்றின.

பாரதத்தின் அணுவியல் மேதை பாபாவின் மரணம்

1962 அக்டோபர் 26 இல் சைனா இந்தியாவின் மீது படையெடுத்து வடக்கே சில பகுதிகளைப் பிடுங்கிக் கொண்டு போனது.  பாரதம் எதிர்க்க வலுவற்றுத் தோல்வியுற்றுக் தலை குனிய நேரிட்டது!  பண்டித நேரு 1964 மே 27 இல் காலமாகி, லால் பகதூர் சாஸ்திரி பிரதமரானார்.  அடுத்து சைனா 1964 அக்டோபர் 21 இல் தனது முதல் அணுகுண்டு வெடிப்புச் சோதனையைச் செய்து, அண்டை நாடான இந்தியாவைப் பயமுறுத்தியது!  டாக்டர் பாபா, பாரதம் வலுவடைய பிரதமரை ஒப்ப வைத்து, அணு ஆயுதம் உண்டாக்க அடிகோலினார்.  பின்னால் ஹோமி சேத்னா [Homi Sethna] காலத்தில் அணுகுண்டு தயாரிக்கப் பட்டு கீழ்த்தள வெடிப்புச் [Underground Implosion] சோதனை 1974 மே மாதம் 18 இல் ராஜஸ்தான் பொக்ரான் பாலை வனத்தில் நிறைவேறியது.

1966 ஜனவரி 24 ஆம் தேதி வியன்னாவில் அகில நாட்டு அணுவியல் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளச் செல்லும் போது, ஆல்·ப்ஸ் மலைத்தொடர் மான்ட் பிளாங்கில் [Mont Blanc] விமானம் மோதி, டாக்டர் பாபா தனது 57 ஆம் வயதில் அகால மரணம் எய்தினார்.  பாரதம் ஓர் அரிய விஞ்ஞான மேதையை இழந்தது.  அவர் விதையிட்டுச் சென்ற அரும்பெரும் அணுவியல் திட்டங்களை, அவருக்குப் பின்வந்த ஹோமி N. சேத்னா, டாக்டர் ராஜா ராமண்ணா, டாக்டர் M.R. சீனிவாசன் ஆகியோர் நிறைவேற்றி, அவை யாவும் பன்மடங்கு இப்போது பெருகி ஆல விழுதுகள் போல் விரிந்து கொண்டே போகின்றன. 2005 ஆம் ஆண்டு மார்ச்சு 6 ஆம் தேதி இந்திய அணுசக்தித் துறையின் மாபெரும் புதிய காண்டு 540 MWe அணுமின் நிலையம் தாராப்பூரில் “பூரணம்” [Criticality] அடைந்துள்ளது, மகத்தான சாதனையாகக் கருதப்படுகிறது. தற்போது 15 அணுமின் நிலையங்கள் இந்தியாவில் இயங்கி வருகின்றன.  தாராப்பூரின் இரட்டைப் புதிய நிலையங்கள் மின்னாற்றல் இன்னும் சில மாதங்களில் பரிமாறும் போது, மொத்தம் 3960 MWe மின்சாரம் அனுப்பப்படும்.  அடுத்து 8 அணுமின் நிலையங்கள் பாரதத்தில் கட்டுமானமாகி வருகின்றன.  அவை எதிர்பார்க்கும் 2008 ஆம் ஆண்டில் மின்சக்தி உற்பத்தி செய்யும் போது மொத்த ஆற்றல் 6780 MWe ஆகப் பெருகி, கி.பி. 2020 இல் 20,000 MWe மின்சார ஆற்றலை அடையும் குறிக்கோள் நிறைவேறும்.

டாக்டர் பாபா திருமணம் செய்து கொள்ள வில்லை.  அவரது அன்பு இல்லத்தரசி விஞ்ஞானம் ஒன்றுதான்!  நேரடிப் பார்வையில் அவர் பம்பாயில் உருவாக்கிய டிராம்பே அணுசக்தி நிலைப்பகம் [Atomic Energy Establishment, Trombay], பாபா அணுவியல் ஆராய்ச்சி மையம் [Bhabha Atomic Research Centre] எனப் பெயர் பெற்று, அவரது நினைவை நிரந்தரமாக்கி விட்டது.  இந்திய அணுவியல் தொழிற் துறைகளின் பொற்காலத்திற்கு, டாக்டர் பாபாவின் பணிகள் பேரொளி அளித்துள்ளன என்பதில் சிறிதேனும் ஐயமில்லை.

********************

S. Jayabarathan [jayabarat@tnt21.com] (December 2, 2005)

ஒளியின் நர்த்தனம்!

sunlight-beams.jpg

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

மின்னொளியே!
என்னரும் ஒளியே!
உள்ளத்துக் கினிய ஒளியே!
விழிகள் முத்தமிடும் ஒளியே!
உலகை மூழ்க்கிடும் ஒளியே!
என் கண்மணியே!
நர்த்தனம் ஆடும் ஒளிக்கதிர்கள்,
வாழ்வின்
வாலிபக் காலத்தில்!
மோதி மீட்டும் ஒளிச் சிதறல்,
காதல் வீணையின்
நாண்களை!
மின்னலிடி திறக்கும் விண்ணை!
மீறிக் கொண்டு
ஏறி அடிக்கும் காற்று!
என் கண்மணியே!
வானத்தின் மின்னல் வெடிச்சிரிப்பு
ஞாலத்துக்கும் அப்பால்
தாவிச் செல்லும்!
தமது
பாய்மரத்தை விரித்துப்
பட்டுப் பூச்சிகள்
படகாய் மிதந்தேகும் ஒளிக்
கடல் மீது!

அல்லி மலர்களும்,
மல்லிகைப் பூக்களும்
ஒளியலைகளின்
சிகரத்தில்
ஊர்திபோல் எழுகின்றன!
ஒவ்வொரு முகிலின்மேல்
முட்டிச் சிதறி
ஒளிக் கதிர்கள்
பொன்னிறம் பூசுகின்றன,
என் கண்மணியே!
விலை மதிப்பில்லா
பளிங்குக் கற்களை மென்மேலும்
பன்னிற ஒளிச் சிதறல்
பண்ணிடும் மேகம்!
பூவிதழ் விட்டுப் பூவிதழ் மேவி
தாவிப் பரவும் எனது
பூரிப்பு!
அளக்க வழி யில்லை உள்ளக்
களிப்பை!
விரைவாக மழை பெய்து
கரைகளை
மூழ்க்கி விட்டது,
ஆகாயக் கங்கை!
வெள்ளமாய்ப் பெருகி,
வெளியேறும்,
எந்தன் உள்ளக்
களிப்பு!

*****************

யாரந்த நீதிபதி ?

சி. ஜெயபாரதன், கனடா

cover-saddams-death.jpg

எவன் உங்களில் தூயவன்,
அவன் மட்டும்
முன்வந்து
இந்தக் கல்லை எடுத்து
வேசியின் மீது
வீசட்டும் என்று
ஏசு பெருமான்
வேண்டிக் கொண்டார்!
வெள்ளை மாளிகை வேந்தர்
பேரழிவுப் போராயுதம்
வேராக உருவாக்கி விழுதாக்கி
விற்றுப் பணமாக்கி
நேராகப் பிணமாக்கும்
பேராற்றல் பிதா,
ஆயிரம், ஆயிரம்
பிரளயக் கணை பெருக்கி
பிறருக்குப்
பாதை காட்டிய
பார்த்த சாரதி!
ஹிரோஷிமா, நாகசாகி மீது
கோரக்
குண்டுகள் வீசியப்
பூதப் பேரரசு!
துச்சக் காசுக்கு
நச்சு வாயுப்
பிச்சு வாக்களை
சதாமுக்கு விற்ற நண்பன்!
வியட்நாம் மாந்தர் மேல்
விஷ வாயு
வில்லைகளை
விமானத்தின் மூலம் கொட்டிய
விடுதலைக் காப்பாளிகள்!
இந்த அரக்க வம்சம்
எப்படிக்
கட்டளை இடலாம்,
கயிற்றைக் கொடுத்துச்
சதாம்
கழுத்தை நசுக்க?

***********

இறைவன் எங்குள்ளான் ?

cover-image-tagore-r-1.jpg

கீதாஞ்சலி (11)

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


சுதியுடன் சுலோகங்கள் உச்சரித்து,
துதி பாடி, தோத்திரம் பாடி,
கையால்
ஜெபமாலை உருட்டி
உத்திராட்சக் கொட்டை எண்ணுவதை
நிறுத்தி விடு!
கோயில் தனி மூலையில்,
கதவுகளை மூடி,
கண்களை மூடிக் கொண்டு
காரிருளில் நீ
யாரைப் பூஜிக்கின்றாய்?
கண்களைத் திறந்துபார்,
உன் இறைவன்
முன்னில்லை என்பதை!
மெய்வருந்தி
இறுகிப் போன வயலை
உழவன் எங்கே
உழுது கொண்டு இருக்கிறானோ,
வேர்வை சிந்தி
நடைபாதை போடுபவன்
எங்கே கல்லுடைத்து வருகிறானோ
அங்கே உள்ளான் இறைவன்!
வெட்ட வெயிலிலும்
கொட்டும் மழையிலும்
தூசி படிந்த ஆடையுடன்,
உழைப்பாளி
உடன் குடியுள்ளான் இறைவன்!
புனிதமான
உன் காவி மேலங்கி
உடையை எறிந்து விட்டு
புழுதி நிரம்பிய
பூமிக்கு இறங்கி
உழவரைப் போல்
உன் தடங்களைப் பதித்திடு!

குடும்பப் பந்தங்களி லிருந்து உனக்கு
விடுதலையா?
எங்கே காணப் போகிறாய்
அந்த விடுவிப்பை?
படைக்கும் போதே
நமை ஆளும் அதிபன்,
பந்த பாசப் பிணைப்புகளைச்
சொந்தமாய் மேற்கொண்டு
களிப்புடன்
அளித்து வந்திருக்கிறான்,
உயிர்களுக்கு!
நிரந்தரமாய் நம் எல்லோரையும்
தன்னுடன்
இரண்டறப் பிணைத்துள்ளான்
இறைவன்!
தியானத்தை நிறுத்தி விட்டு
வெளியே வா!
தீபாராதனை, மலர்கள், சாம்பிராணி,
அகர் பத்திகளின்
நறுமணப் புகை அனைத்தையும்
புறக்கணித்து விடு!
உன் ஆடைகள்
கறைபட்டுக் கந்தலானால் என்ன?
தீங்கென்ன நேரும் உனக்கு?
மெய்வருந்திப் பணிசெய்யும்
உழைப்பாளியைச்
சந்தித்து
நில் அவனருகே,
நெற்றி வேர்வை
நிலத்தில் சிந்தி!

*****************

விண்ணோக்கிக் கண்ணோக்கும் ஹப்பிள் தொலை நோக்கி

cover-image-hubble.jpg 

 சி.ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng (Nuclear) Canada

பூமியின் சுழல்வீதியில் சுற்றிவரும் விண்வெளித் தொலை நோக்கி 

பூமியில் உள்ள தொலை நோக்கிகளுக்கு [Telescopes] விண்வெளி அண்டங்களை ஆராயும் போது, வாயு மண்டலமும், மேகக் கூட்டங்களும் இடையூறாக இருப்பதால், அண்டவெளித் தொலை நோக்கிகளை ஏவித் தெளிவாகக் காண மேலை நாடுகள் ஆர்வம் கொண்டன. அமெரிக்காவில் நாசா அடுத்தடுத்துப் பூமியின் சுழவீதியில் [Earth Orbits] சுற்றிவரும், வானியல் விண்ணோக்குக் கூடங்களை [Orbiting Astronomical Observatories] ஏவியது. 1972 ஆம் ஆண்டு முதலில் அமெரிக்கா அனுப்பிய விண்நோக்கி, போலந்து வானியல் மேதை, காபர்னிகஸ் [Copernicus (1473-1543)] பெயருடன் ஏவப் பட்டது. காபர்னிகஸ் விண்ணோக்கி 2.7 அடி விட்டத் துளையுள்ள மிகச் சிறிய தொலை நோக்கி!

பூமியைச் சுற்றிவரும் முற்போக்குச் சுழல்வீதித் தொலைநோக்கி [Advanced Orbiting Telescope] அமெரிக்க அண்டவெளி விஞ்ஞான மேதை, எட்வின் ஹப்பிள் [Edwin Hubble (1889-1953)] நினைவாக ஹப்பிள் தொலைநோக்கி என்று பெயரிடப் பட்டது. அமெரிக்கக் காங்கிரஸ் 1977 இல் கை ஒப்பமிட்டதும் ஹப்பிள் அமைப்பு வேலைகள் ஆரம்பமாகி, நாசாவின் நேரடிக் கண்காணிப்பில் உருவாகி வளர்ந்தது. இருபதாம் நூற்றாண்டின் மிகவும் முற்பட்ட நுணுக்க முள்ள விண்ணோக்கி ஆய்வகம் [Optical Observatory] ஹப்பிள் தொலைநோக்கி. 1990 ஏப்ரல் 24 ஆம் தேதி விண்வெளி மீள்கப்பல், டிஸ்கவரி [Space Shuttle, Discovery], ஹப்பிளைத் தன் முதுகுச் சுமையாகத் தாங்கிக் கொண்டு, பூமியின் 370 மைல் உயரச் சுழல்வீதியில் [Earth Orbit] சுற்றிவர ஏவி விட்டது. தரைத் தொலைநோக்கிகள் மூலமாய் விண்வெளிக் கோளங்களைக் காணும் போது, பூமியின் அடர்த்தியான வாயு மண்டலம் அவற்றின் ஓளியைக் குறைத்துப் படம் மங்கி விடுகிறது. புவியின் வாயு மண்டலத்தைத் தாண்டிச் சென்று, அப்பால் அண்டவெளியில் ஒரு தொலைநோக்கி நிரந்தரமாய்ச் சுற்றி வந்தால், விண்மீன்கள் பளிங்குபோல் மிகத் தெளிவாகவும், மிக்க ஒளிவுடனும் தெரியும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

ஹப்பிள் தொலை நோக்கியின் துணை அங்கங்கள்

ஹப்பிள் மிகப் பெரிய ஓர் எதிரொளிப்புத் தொலைநோக்கி [Reflecting Telescope]. தொலை நோக்கியின் பிரதம பிம்பக் கண்ணாடி [Primary Mirror] 8 அடி விட்ட முள்ளது! தரைத் தொலை நோக்கிகளை விட 300-400 மடங்கு மிகையானக் கொள்ளளவைக் [Volume] காணும் விரிந்த கண்களை உடையது, ஹப்பிள்! அகில கோளத்தில் கோடான கோடி விண்மீன்களையும், பால்வீதி [Milky Way] ஒளிமய

மீன்களையும் நோக்கிப் படமெடுக்க இரட்டைக் காமிராக் கண்கள், மூலப் பொருட்களை ஆராய இரட்டை ஒளிநிறப்பட்டை வரைமானிகள் [Spectrographs] ஹப்பிளில் அமைக்கப் பட்டுள்ளன. விண்வெளி அண்டங்கள் உமிழும் ஒளியை ஹப்பிளின் கண்ணாடி பிரதிபலித்து [Mirror Optics] இரட்டைக் காமிராக் கண்களின் மீது படும் போது நிழற்படம் உருவாகிறது. பிறகு படம் வானலை [Radio Waves] மூலம் பூமிக்கு அனுப்பப் படுகிறது. ஒவ்வொரு மூலகத்திற்கும் [Element], இரசாயன மூலக்கூறுக்கும் [Molecule] தனித்துவ ஒளிநிறப் பட்டை [Spectrum] உள்ளதால், அதனை ஆராய்ந்து, விண்மீனில் இருக்கும் மூலப் பொருட்களை அறிந்து கொள்ளலாம்.

ஐந்து வித நுணுக்கமான விஞ்ஞானக் கருவிகளைக் கொண்டது, ஹப்பிள்: 1) அகண்ட தள அண்டக் காமிரா [A Wide-field Planetary Camera], 2) மங்கிய அண்டக் காமிரா [A Faint Object Camera], 3) மிக நுணுக்க ஒளிநிறப்பட்டை வரைமானி [A High Resolution Spectrograph], 4) மங்கிய அண்ட ஒளிநிறப்பட்டை வரைமானி [A Faint Object Spectrograph], 5) அதி வேக ஒளித்திரள் ஒப்புமானி [A High Speed Photometer].

சிறிய துணைக் கண்ணாடி, கண்ணுக்குப் புலப்படும் புறவூதா, கீழ்ச்சிவப்பு [Ultraviolet, Infrared] ஒளியைப் பதிவு செய்யும் பலவிதக் கருவிகள் ஹப்பிள் தொலை நோக்கியில் அமைக்கப் பட்டுள்ளன. அனைத்திலும் முக்கியக் கருவி, ஒளிக்கதிர்வீசி [Galaxy] அதற்கும் அப்பாலுள்ள அண்டங்களைப் [Extragalactic Objects] படமெடுக்கும் அகண்ட தள அண்டக் காமிரா, விரிவான வெளியைக் காணும் திற முள்ளது. மேலும் மிக நுணுக்க மான பிம்பங்களை [High Resolution Images] ஆக்கும். தரையில் உள்ள திறமை மிக்க மாபெரும் தொலைநோக்கியின் நுணுக்கத்தை விடப் பத்து மடங்கு கூர்மை பெற்ற நிழற்படத்தைப் படைக்கும் சக்தி பெற்றது, ஹப்பிள். 50 மடங்கு மங்கலான ஓர் அண்டம் பூமியில் உள்ள தொலை நோக்கியின் கண்களுக்குத் தெரிவதில்லை! ஆனால் ஹப்பிளின் கூரிய கண்கள் அதனைத் தெளிவாகப் படமெடுத்து விடும்! அது போன்று மிக்க நுணுக்கமான ஒளிநிறப்பட்டை வரைமானி [High Resolution Spectrograph] பல கோடி மைல் தூரத்தில் உள்ள ஓர் அண்டத்தின் இரசாயன மூலப் பொருட்களைச் சீராக ஆராய்ந்து கண்டு பிடித்து விடும். மேகம் சூழ்ந்துள்ளதால், தரை மீதுள்ள கருவிகள், ஹப்பிளைப் போல் மூலப் பொருட்களைக் கண்டு ஆராய முடியாது! பூமியிலிருந்து விண்மீன்களின் தூரத்தையும், அவை தங்கும் இடத்தையும் துள்ளியமாய்க் கணிக்க ஹப்பிளின் முப்புற நுணுக்கக் கட்டளை உணர்விகள் [Three Fine Guidance Sensors] பயன் படுகின்றன.

ஹப்பிள் விண்ணோக்கியின் பழுதுகளைச் செப்பனிட்ட மீள்கப்பல்கள்

ஹப்பிள் ஏவப்பட்டு ஒரு மாதத்திற்குப் பிறகு, உற்பத்தியாளர் தொழிற் கூடத்தில் பிரதமக் கண்ணாடியை தவறான முறையில் செதுக்கிய பழுது, அண்ட வெளியில் பூமியைச் சுற்றும் போது, ஹப்பிள் அனுப்பிய திரிவுப் படங்கள் [Distorted Images] மூலம் அறியப் பட்டது! உற்பத்திப் பிழையால் விளைந்த வட்ட வளைவுத் திரிபுக் காட்சிப் பழுதால் [Spherical Aberration Optical Defect] குவிமையத் திறன் குன்றி [Impaired Focusing Capability] படங்கள் கூர்மையாக இல்லாமல் மங்கலாகத் தெரிந்தன. மேலும் சூரிய சக்தி இதழ்கள் [Solar Power Arrays], மிதப்புமானி [Gyroscope] இரண்டிலும் சிக்கல்கள் ஏற்பட்டன. 1993 டிசம்பரில் நாசா விண்வெளி மீள்கப்பல் எண்டவரை [Space Shuttle, Endeavour] ஏவி, ஹப்பிள் பிரச்சனை களைத் தீர்த்து முதலில் செப்பனிட்டது. மீள்கப்பலின் விமானிகள் ஐந்து முறை அண்டவெளி நீச்சல்கள் [Space Walks] புரிந்து, பிரதமக் கண்ணாடியை மாற்றினார்கள். மற்றும் பத்துக் குட்டிக் கண்ணாடிகள் கொண்ட ஓர் புதிய சாதனத்தைப் பிரதமக் கண்ணாடி, கருவிகளுக்கு அனுப்பும் ஒளிப்பாதையில் நிறுவி, சமிக்கையைச் [Signals] சீராக்கினர். அவ்வாறு முதலில் வெற்றிகரமாகச் செப்பனிட்ட பிறகு, ஹப்பிள் சிறப்பாக வேலை செய்யத் தொடங்கி, பிரபஞ்சத்தின் எழில்மிகும் ஒளிமய விண்மீன்களின் கண் கொள்ளாக் காட்சியை எடுத்துக் காட்டியது!

1997 இல் அடுத்து விண்வெளி மீள்கப்பல், டிஸ்கவரி [Space Shuttle, Discovery] ஏவப்பட்டுப் பணிக்குழு சில கருவிகளை மாற்றியது. அமைப்பின் போது இணைக்கப் பட்ட இரண்டு ஒளிநிறப்பட்டை வரைமானிகளும் [Faint Object & High Resolution Spectrographs] நீக்கப் பட்டு, விண்காட்சி ஒளிநிறப்பட்டை வரைமானி [Imaging Spectrograph] என்னும் புதிய பொறி நுணுக்கக் கருவி பிணைக்கப் பட்டது. மற்றும் கீழ்ச்சிவப்பு நெருங்கும் காமிரா, பல்வேறு அண்ட ஒளிநிறைப் பட்டைமானி [Near-Infrared Camera, Multi-Object Spectrometer, NICMOS], ஆகியவற்றைக் கொண்ட ஓர் புதிய கீழ்ச்சிவப்புத் தொலைநோக்கி [Infrared Telescope] மாட்டப் பட்டது. சுருக்கமாக அது நிக்மாஸ் என்று அழைக்க படுகிறது. புதுக் கருவி விண்ணோக்கியின் மின்னலை அகற்சியை [Range of Wavelength] அதிக மாக்கியது. மீள்கப்பலின் பணிக்குழு, தொலை நோக்கியில் சிதைந்து போன வெப்பக்குளிர் காப்புறைகளைச் [Insulations] செப்பனிட்டது.

1998 ஆம் ஆண்டு இறுதியில் நிக்மாஸின் தணிப்புத் திரவம் [Coolant] வற்றிப் போய், அது நிறுத்தப் பட்டது! 1999 ஏப்ரலில் தொலைநோக்கியைக் கட்டுப் படுத்திச் செலுத்தும், ஹப்பிளின் ஆறு மிதப்புமானிகள் [Navigational Gyroscopes] பழுதுற்று நின்று போயின! அந்த ஆண்டு டிசம்பரில் நாசா நோயுற்ற மிதப்புமானி களை மாற்றவும், மற்ற சில பணிகள் புரியவும், விண்வெளி மீள்கப்பல் பணிக்குழு [Space Shuttle Service Mission] ஒன்றை அனுப்பியது. அச்சமயம் பணிக்குழு ஓர் முற்போக்கான புதிய மின்கணனியை, ஹப்பிள் தொலை நோக்கியில் நிறுவனம் செய்தது. அடுத்து நாசா 2001 ஆண்டில் மற்றும் ஓர் மீள்கப்பல் பணிவினைத் திட்டத்தை மேற்கொண்டு, ஹப்பிளை விருத்தி செய்தது.

ஹப்பிள் காமிராக் கண்கள் எடுத்தனுப்பிய கண்கவர்க் காட்சிகள்

ஹப்பிள் தொலைநோக்கி பிரபஞ்சத்தின் எழில்மிகு விண்மீன்கள், வால்மீன்கள், சுருள்மீன்கள் மற்றும் பல ஒளிமயக் கதிர் கூட்டங்களைத் தெளிவாகப் படமெடுத்து பூமிக்கு அனுப்பி யுள்ளது. அவற்றுள் சுருள் ஒளிக்கதிர் வீசி [Spiral Galaxy M51] ஒன்றில் புதிரான கரிய வடிவுகள் [Dark Structures] இருப்பதை, ஹப்பிள் கண்டு பிடித்துப் படமெடுத்துக் காட்டி யுள்ளது. பால்மய வீதியிலிருந்து [Milky Way] பின்னகரும் [Receding] ஒளிக்கதிர் வீசிகளின் வேகத்தை, அவற்றின் தூர மாறுபாட்டின் சார்பாகக் கணித்து விடலாம். அந்த விபரங்களைப் பயன் படுத்திக் கொண்டு, பிரபஞ்சத்தின் வயதை விஞ்ஞானிகள் கணக்கிடலாம். 1994 ஜூன் மாதத்தில் ஓர் அமெரிக்க விஞ்ஞானக் குழு, அகிலத்தில் ஓர் கரிய துளை [Black Hole] இருப்பதற்கு, ஹப்பிள் அழுத்தமான சான்று காட்டி யுள்ளதாக வெளியிட்டார்கள்.

15 ஆயிரம் ஒளியாண்டு [Light-years] தூரத்தில் சிதறிய முத்துக்கள் போல தென்படும் துகானே கதிர் முத்துக் கொத்துக்களை [Globular Clusters, Tucanae] ஹப்பிள் 2001 இல் படமெடுத்துள்ளது. [ஒளியாண்டு என்பது தூர அளவு. அதாவது ஒளியானது வினாடிக்கு 186,000 மைல் வேகத்தில் ஓராண்டு காலம் செல்லும் தூரம்]. கதிர் முத்துக்கள் 12 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியவை! அண்டவெளி ஒளிமய மீன்கள் அனைத்திற்கும் முற்பட்டவை! ஹப்பிள் கண்கொள்ளாக் காட்சியாய் பல நிபுளா [Nebula] ஒளிமய நிறமீன்களைப் படமெடுத்துக் காட்டியுள்ளது.

அடுத்து பூதக்கோள் வியாழன் [Giant Planet, Jupiter] வடிவத்தை மிகச் சிறந்த முறையில் ஹப்பிள் படம் பிடித்துள்ளது. 1994 ஜூலை மாதம் சூமேக்கர் வால்மீன் [Comet, Shoemaker-Levy9] வியாழக் கோளின் தீவிர ஈர்ப்புப் [Gravity] பிடியில் சிக்கிச் சிதறி, அதன் துணுக்குகள் யாவும் பூதக்கோளைத் தாக்கி எரிந்து போன ஓர் அரிய காட்சியை ஹப்பிள், பூமிக்குப் படமெடுத்து அனுப்பியது! ஹப்பிள் விளக்கமுடன் தந்த அந்த மோதல் காட்சிகளை விஞ்ஞானிகள் உபயோகித்து, வியாழக் கோளின் சூழ்நிலையில் உள்ள பொருட்கள், வாயுக்கள் ஆகியவற்றை இரசாயன ஒளிநிறப்பட்டை ஆய்வு [Spectral Analysis] மூலம் அறிந்து கொள்ளலாம்.

செப்பனிட்ட ஹப்பிள் செய்து முடித்த சாதனைகள்

ஹப்பிளின் புதிய கருவி நிக்மாஸ் [NICMOS] அண்ட வெளியில் பல புதிய கண்டு பிடிப்புகளைப் பதிவு செய்தது. 1998 இல் ஒளிக்கதிர் வீசிகள் [Galaxies] பல தம்முள் மோதிக் கொள்ளும் காட்சியை, ஹப்பிள் படமெடுத்து அனுப்பியது. மேலும் பல பில்லியன் மைல்களுக்கு அப்பால் பேரொளி வீசிக் கொண்டிருக்கும் ஒளிக்கதிர் வீசிக் கூட்டங்கள் [Host Galaxies of Quasars] பலவற்றைத் தெளிவாகக் காட்டி யிருக்கிறது. 12 பில்லியன் ஒளியாண்டு [Light-years] தூரத்தில் விண்வெளியில் ஒளிமயமாய் மின்னிக் கொண்டிருக்கும் ஒளிக்கதிர் வீசிகள், ஹப்பிளின் கூரிய கண்களில் தென்பட்டுள்ளன. அந்த ஒளிக்கதிர் வீசிகள் வெகு, வெகு தூரத்தில் அண்ட வெளியில் நகர்ந்து செல்பவை! ஹப்பிளின் கண்களில் பட்ட அவற்றின் ஒளிக்கதிர் மிக, மிகப் பழையது! அந்த விபரங்களை வானியல் நிபுணர்கள் பயன் படுத்தி, விரியும் பிரபஞ்சத்தின் ஒளிக்கதிர் வீசிகள் சுமார் 125 பில்லியன் என்று கணக்கிட்டிருக் கிறார்கள். ஹப்பிள் அனுப்பிய தகவல்களுக்கு முன், ஒளிக்கதிர் வீசிகள் சுமார் 80 பில்லியன் என்று அனுமானிக்கப் பட்டிருந்தது.

ஹப்பிள் மூலம் அறிந்த ஒளிக்கதிர் வீசி [Galaxy M87] ஒன்றின் மையத்தைச் சுற்றியுள்ள வாயுக்களின் வளர்வேகம் [Acceleration of Gases], நமது சூரியனை விட மூன்று பில்லியன் மடங்கு பிரம்மாண்டமான எடை கொண்ட ஓர் அண்டம் இருப்பதைக் காட்டியுள்ளது! 2.8 பில்லியன் மைல் தூரத்தில் பரிதியை வலம் வரும் புறக்கோள் நெப்டியூனைச் [Neptune] சுற்றும் அதன் துணைக்கோள் டிரிடான் [Triton], 1989 இல் வாயேஜர் விண்வெளிச்சிமிழ் [Voyager Spacecraft] பதிவு செய்ததை விட, 2 டிகிரி உஷ்ணம் கூடிச் சூடேறி விட்டதாக ஹப்பிள் 1998 இல் காட்டியுள்ளது! அத்துணை நுணுக்கமான தகவல் தரும் கருவிகளையும், கூரிய கண்களையும் ஹப்பிள் தொலை நோக்கி பெற்றுள்ளது! இவ்வாறு விண்வெளியில் இமை கொட்டாக் கண்களுடன், இன்னும் பல்லாண்டுகள் ஹப்பிள் மகத்தான விந்தைகள் புரியப் போவதை மாநில மாந்தர் கண்டு களிக்கப் போகிறார்கள்!

***********************************

ஆத்மாவின் விழிப்பு!

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

cover-bangla-desh1

காத்திருந்து இராப் பொழுதும்
வீணாக  அவனைக்
காணாமல் கழிந்து போனது!
களைத்து போய்
தூங்கி விழுந்த பின்பு
திடுமென
விடியும் வேளையில்
வெளியே நிற்பான் கதவருகில் என
அஞ்சும் என் நெஞ்சு!
நண்பர்களே!
நடந்து வரும் பாதையில் நிற்காமல்,
வருகை புரிய அவனுக்கு
வரவேற் பளிப்பீர்!
நடந்துவரும் அவன்
தட அரவத்தில் நான்
எழும்பா விட்டால் எனை விட்டுக்
கடந்து செல்வீர்!
எழுப்பாமல்
விட்டுச் செல்ல உம்மை
வேண்டிக் கொள்வேன்
பணிவாக!

பறவைக் கூட்டம் ஒருங்கே கூடி
உறக்கம்
கலைக்க வேண்டாம்,
அரவம் எழுப்பி!
வானம் வெளுத்து
பளிச்சிடும் விளக்கொளி விழாவில்
கலக்கிடும் காற்று
எழுப்பிட வேண்டாம் என்னை!
திடுமென
வாசல் அருகே என் கோமான்
வந்து நின்றாலும்,
கலையக் கூடாதென்
தூக்கம்!
அவன் கரம் தொட்டதும்
ஆழ்ந்த தூக்கம்,
என்னரும் தூக்கம்
கலைந்திடு மென்றுதான்,
கண்மூடி யுள்ளேன்!
உன் புன்னகை மின்னொளி
பட்டால் மட்டும்
திறக்குமென்
உறக்க விழிகள்,
காரிருள் தூக்கத்தில்
கண்முன் தோன்றும் கனவுக்
காட்சி போல்!
கண் விழித்ததும் முதற் காட்சியாய்க்
காண வேண்டும்,
என் கோமானை!
அனைத்துக்கும் முன்னுதித்த
ஆதி ஒளிச்சக்தி போல்,
அனைத்து வடிவங் கட்கும்
மூலமான உருவில்
முதலாகக் காண வேண்டும் அவனை!
விழித்தி ருக்குமென்
ஆத்மா வுக்கு
அவன் ஓரக்கண் பார்வை
அள்ளிக் கொடுத்திடும்,
மெய் சிலிர்த்த
பூரிப்பை!
என்னை நான் அறிந்திடும்
தன்னுணர்வு,
என்னை விட்டு நீங்கி
மீண்டும் அவனைச்
சேர்ந்து கொள்ளட்டும்,
சீக்கிரம்!

*****************

எனது இறுதிக் கானம்

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

 

எப்படிப் படைக்கலாம்
எனது இறுதிக் கானத்தை?
மெய்வருந்திப் பெற்ற
மனதின்
மகிழ்ச்சிகள் அனைத்தும்
எனது கானத்தில்
பின்னிக் கொள்ளட்டும்!
புல்லினம் காடாய் அடர்ந்து
புதர்கள் பெருகிப்
புவித்தளம் நீட்சி யாகும்
மகத்துவம் எடுத்துச் சொல்லட்டும்!
அகண்ட உலக னைத்தும்
ஆனந்த நடனமிடும்,
பிறப்பு, இறப்பெனும் இரட்டைச்
சகோதரர்
பிணைத்துக் கொண்ட
பிறவி
உறவினை எடுத்துக் கூறட்டும்!
மொட்டிதழ் விரிந்த செந்தாமரை போல்
மட்டிலாத் துயர்கள்
நிலைத்துக்
கண்ணீர் குவிக்க வைக்கும்
சூறாவளி அடிப்புகள்,
கோர தாண்டவம் ஆடி
ஆரவார மூட்டிப்
பெருகும்
வேதனை சிரிப்பு
எனது
கீதத்தில் மலரட்டும்!
தம்மிட முள்ள
பொருள் அனைத்தையும்
தெருப் புழுதியில் வாரி யிறைத்து,
ஒரு வார்த்தை உதிராத
உவகைப் பண்பு
என்னிறுதிப் பாடலில்
ஒலிக்கட்டும்!

*****************

நெஞ்சில் மின்னிய கீதம்

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

நெஞ்சில் பளிச்சிட்டு நான் பாட
நினைத்த கீதம்
இன்றுவரை
வெளியில் வராமலே
ஒளிந்து கொண்டுள்ளது!
எனது இசைக் கருவியின்
நாண் கம்பிகளை
நான் முறுக்கியும், தளர்த்தியும்
நாட்கள்தான் கழிந்தன!
அந்த கீதம்
வெளிவரும் வேளை
மெய்யாக 
வரவில்லை இன்னும்!
சொற்களை
செம்மையாகக் கோர்க்க முடியவில்லை!
வேட்கை மீறிக் கீதம்
வெளிவரத் துடிக்கும்
வேதனையே வாட்டும் என் நெஞ்சை!
பூரண மாகக் கீதம்
பூத்து விரிய வில்லைச்
சீராக இன்னும்!
அருகில்
பெருமூச்சு விடுகிறது
காற்று மட்டும்!

அவனது முகத்தை நான்
பார்த்திலேன்!
அவனது குரலை நான்
கேட்டிலேன்!
என்வாசல்
முன்னுள்ள முற்றப் பாதையில்
மெதுவாகப் படும்
அவனது
பாத  ஓசைகள் மட்டும் எனது 
காதில் பட்டுள்ளது!
தரைமீது அமர்ந்திட அவனுக்கு
ஆசனம் விரிப்பதற்கே
நாள் முழுதும் கழிந்து
இருட்டி விட்டது
இப்போது!
விளக்கேற்ற வில்லை
இன்னும்!
வாராய் வீட்டின் உள்ளே என
வரவேற்க முடியாத
அவதியில் உள்ளேன்!
ஒருநாள் அவனைச்
சந்திப்போம் என்னும்
நம்பிக்கையில் வாழ்கிறேன்!
ஆனால்
சந்திப்பு ஏற்பட வில்லை
இதுவரை!

  
*****************