அக்கினி புத்திரி

அக்கினி புத்திரி

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

“நான் பணி புரியும் விஞ்ஞானத் தொழிற்துறைகளில் பாலினப் பாகுபாடு (Gender Discrimination) எதுவும் கிடையாது.  ஏனெனில் யார் வேலை செய்கிறார் என்று விஞ்ஞானத்துக்குத் தெரியாது.  நான் வேலை செய்யப் பணித் தளத்தில் கால் வைக்கும் போது ஒரு பெண்ணாக என்னை நினைத்துக் கொள்வதில்லை.  மாறாக நானொரு விஞ்ஞானியாக அப்போது எண்ணிக் கொள்கிறேன்.”

டாக்டர் டெஸ்ஸி தாமஸ் (Agni-V Project Director, Defence Research & Development Organization)

“அக்கினி புத்திரி” என்றும், “ஏவுகணை மாது” (Missile Woman) என்றும் பாராட்டப் படும் பொறியியல் டாக்டர் டெஸ்ஸி தாமஸ் ஓர் அபூர்வ ராக்கெட் விஞ்ஞானி.  நோபெல் பரிசு பெற்று இந்தியாவில் பணி செய்த அன்னை தெரேஸாவின் பெயரே இவருக்கு இடப் பட்டது.  2008 ஆம் ஆண்டில் இந்தியப் பெண் விஞ்ஞானிகளின் கூட்டரங்கம் (The Indian Women Scientists Association) அவருக்குச் சூடிய புகழுரையில்,  “வீட்டுக்கும், விஞ்ஞானப் பொறுப்பு வேலைக்கும் இடையே கட்டிய இறுக்குக் கம்பியில் விழாமல் நடந்து தன்னை முழுமையாய் ஈடுபடுத்திக் கொண்ட பல அன்னையரைப் போன்றவர் என்று சொல்லிப் பாராட்டியது.  இவரது குருநாதரான இந்தியாவுக்கு அசுர வல்லமை ஈந்த ராக்கெட் எஞ்சினியர் டாக்டர் அப்துல் கலாம் அவர்களின் கீழ் பணி செய்தவர்.

1988 ஆண்டு முதல் இந்திய இராணுவ ஆராய்ச்சி விருத்தித் துறையகத்தில் (India’s Defence Research & Development Organization DRDO) வேலை செய்து வருகிறார்.  முதல் அக்கினி (Agni -1) ஏவு கணை 1989 இல் அனுப்பப் பட்டுச் சோதனை செய்யப் பட்டது.  இந்திய இராணுவத்துக்காக டிசைன் செய்து வடிவமைத்து, சோதித்த பெரும்பான்மையான அணு ஆயுதம் ஏந்திச் செல்லும் நீட்சி எல்லைக் கட்டளைத் தாக்கு கணைகள் அனைத்திலும் அவர் பங்கெடுத்தவர்.  சமீபத்தில் (ஏப்ரல் 19, 2012) வெற்றிகரமாக விண்ணில் ஏவி 3500 கி.மீ. பயணம் செய்த அக்கினி -5 ராக்கெட்டும் அவரது ஆளுமையில் நடந்தேறியது என்பது குறிப்பிடத் தக்கது.  தற்போது (2012) டெஸ்ஸி தாமஸ் பல்வேறு போராயுத வெடிகள் தூக்கிச் செல்லும் தனித்துவக் கட்டளை ஏவுகணை மீட்சி வாகனம் (Misson Guidance Systems for Mulitiple Independent Re-entry vehicle that carries multiple warheads) சம்பத்தப் பட்ட ஒரு புதிய ஆய்வு அமைப்புத் துறையில் மூழ்கியுள்ளார்.

ஆடவ நிபுணர் பலர் ஆளுமை செய்யும் ராக்கெட் விஞ்ஞானத்தில் இப்படி அபூர்வப் பிறவியாய் எழுந்துள்ள பெண் எஞ்சினியர் டெஸ்ஸி தாமஸ் தனித்துவத் திறமையுடன் தனியாய் ஆடவர் மத்தியில் முன்னிற்கிறார். “விஞ்ஞானத் தொழிற்துறைகளில் எந்தவிதப் பாலினப் பாகுபாடும் (Gender Discrimination) கிடையாது.  உன் திறமை கூரியதானால், ஆணோ, பெண்ணோ நீ தானாக முன்னுக்கு வருவாய் என்று உறுதியாகக் கூறுகிறார்.  தான் பணி புரியும் இடங்களில் எந்த விதப் பாலினப் பாகுபாட்டையும் எதிர்க்க வேண்டி இருந்த தில்லை என்று பொறுமையாகச் சொல்கிறார்.

2012 இல் 49 வயதாகும் டெஸ்ஸி தாமஸ் ரோமன் காத்லிக் மதத்தினரான பெற்றோருக்குத் தென் கேரளாவில் உள்ள ஆலப்புழையில் பிறந்தார்.  தந்தையார் ஒரு சிறு தொழில் நடத்திய வாணிபர். தாயார் கல்வி புகட்டும் தகுதி இருந்தும் வேலை செய்யாது வீட்டைப் பேணியவர். தந்தையார் கணித ஞானம் உள்ளவர். 1991 இல் தந்தை முடக்குவாத மூளை அடிப்பில் (Paralytic Stroke) மரித்தார்.  75 வயதாகும் தாயார் குஞ்சம்மாள் தாமஸ் ஆலப்புழையில் வசித்து வருகிறார்.  அவர்கள் வாழ்ந்து வந்த இடம் தும்பா ராக்கெட் ஏவுகணைகள் சோதிக்கும் தளத்துக்கு அருகில் இருந்தது.  அங்கிருந்து இடி முழக்கி விண்ணில் பாய்ந்து செல்லும் ஏவுகணைகளே அவரது சிந்தனையை ராக்கெட் விஞ்ஞானத்தில் முற்படத் தூண்டியதாகச் சொல்கிறார்.  பள்ளிக்கூடக் கல்லூரிப் படிப்புகளைக் கேரளாவில் முடித்து விட்டு தனது 20 வயதிலே பிறந்த மாநிலத்தை விட்டுவிட்டுக் கட்டளை ஏவு கணைகளில் மேல்நிலைப் பட்டப் படிப்புக்கு பூனாவுக்குச் சென்றார்.  அங்கே ராக்கெட் பொறியலில் டாக்டர் பட்டமும் பெற்றார்.  தனது எதிர்காலக் கணவர் சரோஜ் படேலை அங்குதான் அவர் சந்தித்தார். இந்தியக் கடற்படையில் கம்மோடராக (Commodore in the Indian Navy) சரோஜ் படேல் மும்பையில் வேலை செய்து வருகிறார்.

பேரழிவுப் போராயுதம் ஏந்திச் செல்லும் அக்கினி -5 ராக்கெட் திட்டத்தில் எப்படி நீங்கள் வேலை செய்கிறீர் என்று கேட்டால், “நான் சமாதானம் உண்டாக்கும் ஓர் போராயுதப் பணியில்தான் பங்கெடுக்கிறேன்,” என்று பதில் சொல்கிறார். “அந்த வேலையில் எண்ணற்ற சிக்கல்கள் உள்ளன.  நான் குடும்பத்துக்கும், வேலைக்கும் இடையே மாறி மாறித் தாவிக் கொண்டிருக்கிறேன்,” என்று கூறுகிறார்.  “சில சமயங்களில் தேசீயப் பொறுப்பு ஏவுகணைச் சிரம வேலைக்கும், குடும்பப் பொறுப்புக்கும் இடையே முறிந்து போய் நசுங்கிக் கொண்டிருக்கிறேன்,” என்று மனம் பொருமுகிறார். அதற்குக் கடற்படை வேலையில் பயணம் செய்யும் கணவரின் ஒத்துழைப்பும், வெல்லூரில் பொறியியல் துறையில் படிக்கும் மகன் தேஜஸ் (Tejas) இணக்கமும், ஏற்புடமையும் மிகவும் உதவியாக இருப்பதாகச் சொல்லிப் பெருமைப் படுகிறார்.  “தேஜஸ்” என்பது இந்தியா சுய முயற்சியில் உற்பத்தி செய்த போர் விமானத்தின் பெயர்.

“டெஸ்ஸி தாமஸ் வெற்றிப் பாதையில் தமது கனவுகளைத் தொடர்ந்து முயலும் பல பெண்டிர் இதய உந்தலோடு வேட்கையுடன் பின்பற்ற விரும்பும் பெண் விஞ்ஞானிகளுக்கு ஒரு மாடல்,” என்று கருதப் படுகிறார். இந்தியப் பெண் விஞ்ஞானிகளின் கூட்டரங்கம் அவரைப் பற்றி இப்படி அறிவித்துப் பாராட்டியது.  அவர் சேரும் போது அவரது ராக்கெட் பணியகத்தில் ஒரு சில பெண்டிரே வேலை செய்து வந்தார் என்றும், தற்போது 200 மேற்பட்ட பெண் விஞ்ஞானிகள் பல்வேறு போர்த்துறைப் பணிகளில் வேலை செய்து வருகிறார் என்றும் கூறுகிறார்.  பெண் விஞ்ஞானிகளுக்கு அளிக்கும் இந்திய சிறப்புப் பரிசு (Shanthi Swarup Bhatnagar Award) கடந்த 50 ஆண்டுகளில் (1958-2010) பெற்றவர் 11 பெண்டிர்.  அதே சமயம் 2011 ஆண்டில் மட்டும் பரிசு அளிக்கப் பட்டவர் 3 பேர். டாக்டர் டெஸ்ஸி தாமஸ் அவர்களுக்கு இந்திய சிறப்புப் பரிசோடு எதிர்காலத்தில் பாரத ரத்னா பட்டமும் கிடைக்க வாய்ப்புள்ளது.

+++++++++++++++

தகவல் :

1.  https://jayabarathan.wordpress.com/2012/04/21/akkini-5-rocket/

2.  No Gender Bias in Science Says Missile Scientist Tessy Thomas By Mohammsd Shafeeq (April 23, 2012)

3.  The Rocket Science : The Missile Woman Behind Indian Test Launch (April 24, 2012)

4.  BBC News : The Missile woman Behind India’s New ICBM By Pallava Bagla (April 20, 2012)

+++++++++++++++++++
S. Jayabarathan [jayabarat@tnt21.com] April 28, 2012
https://jayabarathan.wordpress.com/

Published by

Unknown's avatar

S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன். அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா. எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன. எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது. அன்புடன், சி. ஜெயபாரதன், கின்கார்டின், அண்டாரியோ, கனடா.

4 thoughts on “அக்கினி புத்திரி”

  1. தன் வாழ்வினை சராசரி பெண் போல் தொலைக் காட்சி சீரியல் கண்டு தொலைந்துவிடாமல் தொலைநோக்கு பார்வையுடன் சீரிய பணியை மேற்கொண்டு தாய் மண்ணிற்கு சேவை ஆற்றும் விஞ்ஞானி. டெய்ஸி தாமஸ் அவர்கள், இந்தியப் பெண்களுக்கு ஒரு முன்னோடியாய் இருக்கின்றார் என்பதில் ஐயமில்லை. இவரின் சிறந்த பணிக்கு ’பாரத இரத்னா விருது’ இவருக்கு கிடைக்க வாழ்த்துக்கள். இது போன்ற சாதனைபுரிபவர்களை ஊடகம் வெளியுலகிற்கு இயன்ற அளவிற்கு வெளிக்கொணருமேயானால் சராசரி மனிதர்களும் சரித்திரம் படைக்க விழைவர்.

  2. jayashree shankar says:
    April 30, 2012

    அன்பின் திரு.சி.ஜெயபாரதன் அவர்களுக்கு,
    வணக்கம்…

    ”அக்னி புத்திரி”….தங்களது கட்டுரையைப் படித்ததும்…ஒரு சக வயது பெண்மணியின் சாதனையைக் கண்டு வியப்பு மாறவில்லை… தொலைக் காட்சியில் காண்பித்தார்கள் ..ஆனால் இவ்வளவு தெளிவாக உங்களது பாராட்டுக் கட்டுரை…. ”மாதவம் செய்த அம்மையாரின்,” திறமையும்… சாதனையும் எங்களுக்குத் தெரியப் படுத்தியதற்கு மிக்க நன்றி. தங்களது இந்த சேவை போற்றப் பட வேண்டியது..

    நமது இந்தியா…விற்குப் பெருமை சேர்த்த டாக்டர்.டெஸ்ஸி தாமஸ்…இனி வரும் இளம் பெண்களுக்கு விஞ்ஞானத்தில் ஆர்வமும் விழிப்புணர்வும் ஏற்படுத்திக் கொடுத்த ஒரு வழிகாட்டியாக விளங்கியது பெருமைப் பட வைக்கும் விஷயம்.

    அவர்களுக்குத் தங்களின் பாராட்டுக் கடிதமே…உயர்ந்த கேடயம். இனி பெண் விஞ்ஞானிகள் பெருகி வர முன்னோடியாகத் திகழ்ந்து வரவேற்கும் டாக்டர் டெஸ்ஸி தாமஸ்..இன்னும் நிறைய சாதனை படைக்க வேண்டும் என்ற வாழ்த்துகிறேன்.

    வணக்கம்.

    ஜெயஸ்ரீ ஷங்கர்.
    jayashree48cdm@gmail.com

  3. பவள சங்கரி. says:
    April 30, 2012

    அன்பின் திரு ஜெயபாரதன்,

    வணக்கம். உண்மைதான், விஞ்ஞானத்திற்கு ஆண்,பெண் என்ற பாலின பேதம் இல்லை. தொழிலையும், குடும்பத்தையும் ஒரு சேர திறமையாக நடத்திச் செல்லும் வல்லமை பெற்றவள்தான் பெண் என்றாலும், இது போன்ற மிகப் பொறுப்பான, கடினமான, மூளைக்கு வேலை கொடுக்கக் கூடிய ஒரு உன்னதமான பணியில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு சாதனை படைத்து பெண் குலத்திற்கே பெருமை தேடித்தந்திருக்கும் டெஸ்ஸி தாமஸ் அவர்களை மனதார வாழ்த்துவோம். அவர் பாரத ரத்னா விருது பெற்று மேலும் சாதனை படைக்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்பதும், தங்களுடைய தெளிவான இடுகை மூலம் அறிந்து கொண்டோம். பகிர்விற்கு மிக்க நன்றி. டெஸ்ஸி தாமஸ் போன்ற விஞ்ஞானிகள் மூலமாக உலக அரங்கில் நம் இந்திய நாடு ஒரு தனி இடத்தைப் பிடிப்பதோடு, அப்துல் கலாம் அவர்களின் கனவின்படி நம் இந்தியா வல்லரசு ஆகும் நாள் வெகு தொலைவில் இல்லை என்ற நம்பிக்கையும் உற்சாகத்தை அளிப்பதாக உள்ளது.

    நன்றி.
    அன்புடன்
    பவள சங்கரி.

  4. ruthraa says:
    April 30, 2012

    அக்கினிப் புத்ரிக்கு ஒரு பாராட்டு மட‌ல்
    ===========================================ருத்ரா

    டாக்டர் டெஸ்ஸா தாமஸ் அவர்களே!

    அறிவியல் என்றால்
    பெண்களுக்கு
    அடுப்பங்கரையே பிரபஞ்சம்
    குழம்பு வைப்பதே
    குவாண்டம் மெகானிக்ஸ்
    என்ற நிலையை
    மாற்றிவைத்த‌
    விஞ்ஞானத்தின் வீரங்கனையே

    இந்திய‌த்துணைக்க‌ண்டத்தின்
    இத‌ய‌ பூர்வ‌மான‌ பாராட்டுக‌ள்
    உங்க‌ளுக்கு.

    பெண்க‌ள் என்றால் வெறும்
    ம‌ல‌ர்க்க‌ணை ப‌ற்றி
    க‌விதைக‌ள் பாடும்
    வ‌ர‌ட்டு உல‌க‌ம் இன்று
    த‌விடு பொடி ஆன‌து.

    ஏவுக‌ணைக‌ளின்
    எந்திர‌விய‌ல் உங்க‌ள்
    ம‌ந்திர‌ப்புன்ன‌கை
    ஆன‌து க‌ண்டோம்.

    “அக்கினி”யின் ஆற்ற‌ல் குழ‌ம்பை
    உங்க‌ள் அறிவின் அக‌ப்பையில்
    அள்ளி எடுத்து அற்புத‌ ச‌மைய‌ல்
    ஆக்கி வைத்தீர்.

    உல‌க‌மே வியக்குது
    அமைதிக்கு ம‌ட்டுமே ம‌ண‌க்கும்
    இந்த‌ ஆயுத‌ம் செய்த‌ உங்க‌ள்
    அருமைத்”தாளித‌ம்” கண்டு
    அட‌ர்புகை பாரீர் விண்மீது
    அடுப்பின் புகை அது அல்ல‌
    அடு போர்ப் ப‌கைத‌னை
    அழித்தொழிக்கும்
    அழ‌கிய‌ ர‌ங்கோலித்திருக்கோல‌ம்.

    தீ எனும் ஆற்றல் ஒரு
    தீந்தமிழ்க் கவிதையாய்
    விண்ணையும் சாடி
    விஞ்ஞானம் சொல்லும்
    விந்தை சாதனை புரிந்திட்ட‌
    இந்திய நாட்டின் திருமகளே!

    இமயம் இன்று
    இமைகள் விரித்து
    அண்ணாந்து பார்த்தது!

    பறப்பது அங்கே என்ன‌?
    புகைவிடும்
    பட்டாம்பூச்சியா அது?
    பகை த‌விர்க்க‌
    பார‌த‌ம் ந‌ட‌த்தும் வேள்வியே அது!

    அதற்குள்ளும் ஒரு
    வ‌ளையொலி கேட்டால்
    அந்த‌ மாணிக்க‌ வாச‌க‌ரும்
    திருவெம்பாவை பாட‌
    ம‌ற‌ந்திடுவார்.

    அது உங்க‌ள்
    “க‌வுண்ட் ட‌வுன்” ஒலிக்கும்
    ஒலிய‌ல்ல‌வா!

    புதிதாய் ஒரு
    “பூபாள‌”ப்பாட‌ல் பாடிடுவார்..இந்த‌
    பூகோள‌ம் விழிக்க‌ப்பாடிடுவார்.

    “புவி ஈர்ப்பையும் வெல்ல
    புறப்பட்டாய் பூங்கோதாய்!
    “விஞ்ஞான‌ம் விழித்த‌துவே
    அது போதும் எம்பாவாய்”

    =======================================
    “Epsi Van” ,

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.