அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !

Image result for hiroshima japan

சி. ஜெயபாரதன், கனடா

 

பேரழிவுப் போராயுதம் உருவாக்கி
மனித இனத்தின்
வேரறுந்து விழுதற்றுப் போக,
விதையும் பழுதாக
ஹிரோஷிமா எழில்மேனி அழித்து
நிர்மூல மாக்கியது,
முற்போக்கு நாடு!
நாகசாகியும் அணுப் பேரிடியால்
நாசமாகி
மட்டமாக்கப் பட்டது!
திட்ட மின்றி
தென்னாலி ராம
மூடர்கள் அணு உலையைச்
சூடாக்கி
வெடிப்புச் சோதனை அரங்கேறி
நிர்வாண மானது,
செர்நோபில் அணு உலை !

மாய்ந்தனர் மக்கள்,
மடிகிறார் !
மேலும் மரிப்பார் ! மரிப்பார்!
நாடு நகரம்
வீடு வயல்கள் எங்கும்
மூடின வெங்கதிர் வீச்சுகள்!
கட்டாய மாகப் பல்லாயிரம் பேர்,
கடத்தப் பட்டார் வேறூர்,
கைப்பையுடன்
கதிர்மழைப் பொழிவால்!
புற்று நோயும், இரத்த நோயும்
பற்றின பாலரை! படுகிறார் வேதனை!
மன்னிக்க முடியாத,
மாபெரும்
மனிதத் தவறால் நேர்ந்த
இரண்டாம்
அணுயுகப் பிரளய
அரங்கேற்றம்!

+++++++++++++++++++

the-crying-soul

https://youtu.be/3wxWNAM8Cso

[செர்நோபில் விபத்தின் (ஏப்ரல் 26, 1986) 20 ஆண்டுப்
பூர்த்தி நினைவில் எழுதப்பட்டது]

++++++++++++++++++++++

[S. Jayabarathan jayabarathans@gmail.com]  (August 6, 2017)  [R-2]

Published by

Unknown's avatar

S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன். அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா. எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன. எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது. அன்புடன், சி. ஜெயபாரதன், கின்கார்டின், அண்டாரியோ, கனடா.

2 thoughts on “அணுயுகப் பிரளய அரங்கேற்றம் !”

  1. ஹம் அவ்ளோ பெரிய அப்பா டக்கர்களான ரசியக்காரன் சப்பான்காரன். அவனுங்களெல்லாம் சொந்த நாட்டு உலைகளை எவ்ளோ கவனமா கட்டியிருப்பானுங்க. அவனுங்களாலேயே விபத்து தவிர்க்க முடியல. இதில மக்களுக்கு ஒழுங்கா கக்கூசு கூட ஊழலில்லாம கட்டித்தர முடியாத பெருச்சாளிகள் எங்களை அணு உலை பாதுகாப்பு என்று நம்ப வேண்டுமாம். மக்கா. அங்கங்கே காட்டும் புதிய பாலம் கூட இடிந்து இடிந்து விழுகிறது.

    ஆண்டவா கூடங்குளம் எப்போதோ. இதில வெளிநாட்டுக்காரனுக்கு விபத்து நடந்த பொறுப்பில்லை என சட்டம் வேற. போபால் ஆண்டர்சனை அன்று களவாக

    தப்ப வைத்தது. இன்று வெளிப்படையாக சட்டம்.

    நீங்கள் அணுவை புரிந்தது போல் இந்த நாய்களின் அரசியலையும் புரிந்து கொள்ளவேண்டுமென்பதே அடியேன் அவா.
    தங்களின் படிப்புக்கு மதிப்பளிக்கிறேன். தமிழ் பற்றுக்கு மதிப்பளிக்கிறேன்.

    கலாம் ஐயா போல் இந்த நாய்களின் அரசவைக் கோமாளி ரேஞ்சிலே இருக்கவேண்டாமென்பதே என் விருப்பம். ஏனெனில் குவாண்டம் மெக்கானிக்ஸ் புரிந்த உங்களுக்கு இதுவும் புரியும் என்றே நினைக்கிறேன். உங்கள் பக்கத்திலும் எழுதுங்கள். அணு உலை எவ்ளோ ஆபத்து என்று. ஹைட்ரோகார்பன் எடுப்பது எப்படி நிலத்தை மலடாக்கும் என்று. செவ்வாய்க்கு வாணம் விடும் பணத்தை வேறு எதற்குப் பாவிக்கலாம் என்று.

    தங்களின் படிப்புக்கு மதிப்பளிக்கிறேன். தமிழ் பற்றுக்கு மதிப்பளிக்கிறேன்.

    இந்த விண்வெளி திடடம் வேலை வாய்ப்பு கொண்டுவரும் போன்ற நகைச்சுவைகள் வேண்டாமே.

    1. நண்பர் ராஜ்,

      உலகிலே பொறிநுணுக்கத் திறமையுள்ள அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பானில்தான் மெத்த கவனிப்பின்றி பயங்கர மூன்று அணு உலை விபத்துகள் நேர்ந்துள்ளன. இந்தியாவில் டில்லிக்கு அருகில் உள்ள நரோரா அணுமின் உலையில் டர்பைன் முறிவு சுழலியால் தீப்பற்றி வெடிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் அணுமின்சக்தி உலை பாதுகாப்பாக நிறுத்தம் ஆனது. இந்திய அணுமின் உலைகளில் செம்மையான பாதுகாப்புச் சாதனங்கள் உள்ளன. இராப் பகலாய்க் கண்காணிக்கும் நிபுரணர் இருக்கிறார். கூடங்குள அணுமின் நிலையம் பாதுகாப்பாக இயங்க, முப்பக்கக் கண்காணிப்பு நிறுவகங்கள் உள்ளன. இந்திய அணுசக்தி நெறிப்பாடு ஆணையகம் [Atomic Energy Regulatory Board], ரஷ்ய அணுசக்திக் கட்டுப்பாடு நிறுவகம், அகில நாட்டு அணுசக்தி பேரவை [International Atomic Energy Agency (IAEA)].

      போபால் இரசாயன தொழிற்சாலைக்கு உலகில், இந்தியாவில் இத்தகைய பாதுகாப்பு, கண்காணிப்பு, பயிற்சி ஏற்பாடுகள் கிடையா.

      என் வலையில் அணுசக்தி பற்றி, கதிரியக்கம் பற்றி, அபாயங்கள் பற்றி பல கட்டுரைகள் உள்ளன. அணுமின்சக்தி நிறைபாடு, குறைபாடு பற்றி மூன்று நூல்கள் வெளிவந்துள்ளன.

      சி. ஜெயபாரதன்

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.