துணைவியின் இறுதிப் பயணம் – 6

சி. ஜெயபாரதன், கனடா
என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !
[Miss me, But let me go]
++++++++++++++
[36]
என் கதை
எழுதி, எழுதி
எழுதிக் கொண்டே எழுதி,
எழுதிய பின்னும்
எழுதி,
இன்னும் உருகி எழுதி
என்றும் எழுதி
இப்பிறவி பூராவும் நான் எழுதி
எழுதி வந்தாலும்,
ஆயுள் தேய்ந்து மாய வாழ்வு
அத்தமனம் ஆனாலும்,
என் எழுத்தாணி அழுது
முறிந்தாலும்,
என் துயரம் தீராது !
என்னிதயப் புண் ஆறாது !
என் பிணைப்பு
பாசப் பிடிப்பு மாறாது !
என் மனப்புண்,
உன் மனப்புண் போல் தெரியலாம் !
என் அதிர்ச்சி போல்
உன் அதிர்ச்சியும் நேரலாம் !
என் கண்ணீர்த் துளிகளில்
உன் துயர்ப் பிம்பம் காணலாம் !
என் சோகக் கதை
உன் கதையைக் கூறலாம் !
அப்போது,
உன் கண்ணீர்
என் கண்ணீர் ஆகிவிடும் !
++++++++++++++++++++
[37]
இரவில் ஓர் அலறல் !
“அம்மா வுக்கு என்ன
ஆனது ?”
இப்படி ஓர் அலறல்
எழுந்து,
நள்ளிரவில் கேட்டு மேல்
மாடியில் தூங்கும்
என் மூத்த மகள்
துள்ளி எழுந்து விட்டாள்.
என் பேத்தியும்
விழித்துக் கொண்டாள் !
என் வாயில் எழுந்த
அக்குரல்
கீழ் அறையில் தூங்கும்
எனக்கு மட்டும்
என் காதில்
ஏன் கேட்க வில்லை !
+++++++++
[38]
உருகி, உருகி
ஊனுருகி உள்ள மெல்லாம்
வெந்து சாம்பலாக,
தானுருகி வாழ்வில்
தனக்கெனப் பிறந்தவளை
வானுலகுக் கென்கையால்
மின்கனலில் அனுப்பி,
நானுருகித் தனியனாக
நான்முகன் எழுதி வைத்தான்.
++++++++++++++
[39]
அணையாத கனல்
ஏற்றி வைத்த உன்
மெழுகுவர்த்தி ஒருநாள்
காற்றடிப்பில்
பட்டென அணைந்து விடும் !
எரியும் விளக்குகள்
எல்லாமே
ஒருநாள் அணைந்து போகும் !
உன் உடம்பும்
ஒரு மெழுகு வர்த்தியே !
அதிலே ஆட்சி புரியும்
ஆத்ம உயிரும் ஓர்
தீக்கனல் சக்தியே !
என் வீட்டில் வாழ
ஏற்றி வைத்த
ஓர் கலங்கரை விளக்கு
என் துணைவி !
அவள் நடமாடும் தீபம் !
குப்பெனப் புயலில் அணைந்து
எங்கும் இருள் மயம் !
என் நெங்சில் அப்போது
பற்றிய தீ மட்டும் ஏன்
இன்னும் அணைய வில்லை ?
துணைவிக்கு
அன்று நான் இட்ட தீ
அணைந்தது,
ஆனால் அதனால்
எனது நெஞ்சில் பற்றிய தீ
இதுவரை
அணைய வில்லை ! அது
அணையுமா ? அணையுமா ? என்றும்
அணையுமா ?
+++++++++++++++
[40]
அறுந்த தொப்புள் கொடி
பிறந்த சிசுவுக்கு இருப்பது
ஒன்றில்லை !
தொப்புள் கொடிகள்
இரண்டு !
பெற்ற தாயுடன்
இணைந்தது ஒன்று !
தெரிவது
மனித கண்ணுக்கு !
சேயிக்குத் தெரியாமல்
இயங்கி வருவது
இரண்டாவது தொப்புள் கொடி !
படைப்பாளியுடன்
பிணைந்தது !
ஆத்மப் பிணைப்பு அது !
உயிர்ப் பிணைப்பு !
தெரியும் தொப்புள் கொடி
அறுத்தால்
சேய் தானாய் இயங்கும் !
தெரியாத
தொப்புள் கொடி அறுந்தால்
செத்துவிடும் சேய் !
துணைவிக்கு அறுந்து போனது
பிணைப்புக் கொடி !
+++++++++++++++++
பிரார்த்தனை தொடர்கிறது.
சி. ஜெயபாரதன்
+++++++++++++++
Published by
S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் பிறந்து, மதுரைக் கல்லூரியில் படித்து, 1956 இல் சென்னைப் பல்கலைக் கழகத்தில் மெக்கானிகல் எஞ்சியரிங் பட்டம் பெற்றேன். பாம்பே பாபா அணுவியல் ஆய்வுக் கூடத்தில் 1957 ஆம் ஆண்டு சேர்ந்து, பாரதத்தின் முதல் பேராற்றல் கொண்ட (40 MWt) ஆராய்ச்சி அணு உலையான ஸைரஸ் (CIRUS) ஆய்வு உலையை இயக்கும் எஞ்சினியர்களில் ஒருவராக 1960 முதல் 1966 ஆண்டு வரை பணி புரிந்தேன். அதன் பிறகு கோட்டா, ராஜஸ்தானில் கனடா உதவியுடன் கட்டப் பட்ட முதல் கான்டு அணுமின் சக்தி நிலையத்தை இயக்க மூன்றரை ஆண்டுகள் (1966-1970) கனடாவில் உள்ள டக்ளஸ் பாயின்ட் அணு மின்சக்தி நிலையத்தில் பயிற்சி பெற அனுப்பப் பட்டேன். பயிற்சி முடிந்த பின்பு 8 ஆண்டுகள் [1970-1978] ராஜஸ்தானிலும், 4 ஆண்டுகள் (1978-1982) சென்னை கல்பாக்கத்திலும் பாரத அணுமின் சக்தி நிலையங்களில் பெரிய பதவிகளில் பணியாற்றினேன். எனது சிறப்புப் பயிற்சி அணுமின் உலைக்குச் சுயமாக யுரேனிய எரிக்கோல் ஊட்டும் சிக்கலான யந்திரத்தை இயக்குவது, பராமரிப்பது, அதை இயக்க மற்றவருக்குப் பயிற்சி தருவது. 25 ஆண்டுகள் இந்திய அணுசக்தித் துறையகத்தில் வேலை செய்து, முன்னோய்வு எடுத்துக் கொண்டு 1982 முதல் 2001 வரை கனடாவில் இயங்கும் பேராற்றல் கொண்ட கான்டு புரூஸ் அணுமின் நிலையத்தில் பணியாற்றி இப்போது முழு ஓய்வில் இருக்கிறேன்.
அணுசக்தி ஆக்கப் பணியில் பொறியியற் துறைகளில் 45 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவம் பெற்று, இப்போது தமிழ் இலக்கியப் படைப்புப் பணியில் முழு நேரமும் ஈடுபட்டிருக்கிறேன். 1960 ஆண்டு முதல் எனது விஞ்ஞானக் கட்டுரைகள், கதைகள், கட்டுரைகள் பல கலைமகள், மஞ்சரி, தினமணிக் கதிர், இதயம் பேசுகிறது, மயன், தாய், காலம் இதழ்களில் வெளிவந்துள்ளன. கணனித் தமிழ்வலைக் கூடங்கள் பின்னிப் பிணைக்கும் புதிய உலகிலே, கடந்த ஏழு ஆண்டுகளாக 1000 மேற்பட்ட கட்டுரைகள், கவிதைகள், கதைகள், நாடகங்கள் அம்பலம், திண்ணை, பதிவுகள், அந்திமழை, நதியலை போன்ற வலைத் தளங்களில் வந்துள்ளன. எனது நீண்ட தமிழ் நாடகங்கள் மொம்பையிலும், சென்னைக் கல்பாக்கத்திலும் அரங்கேறி யுள்ளன. இதுவரை 27 நூல்கள் வெளிவந்துள்ளன : அணுசக்தி, வானியல் விஞ்ஞானிகள், கீதாஞ்சலி. [இரண்டாம் பதிப்பு அச்சில் உள்ளது]: விண்வெளிப் பயணங்கள், கிளியோபாத்ரா.
எனது தந்தையார் உயர்திரு. சி. சிங்காரவேல் பாண்டியன் அவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பல ஆண்டுகள் மகாத்மா காந்தியின் கீழ் பணியாற்றிப் பங்கெடுத்துச் சிறை சென்றவர். ஐந்து வயது முதலே காலை ஆறு மணிக்கு நீராடிப் பாரதியின் தேசீய, பக்திப் பாடல்களை அனுதினமும் காலைப் பிரார்த்தனையில் தந்தையுடன் கலந்து பல ஆண்டுகள் பாடி வந்ததால் பாரத நாட்டுப் பற்றும், பைந்தமிழ் மொழிப் பற்றும் என்னுடைய குருதி, எலும்பு, சதை அனைத்திலும் பதிந்து விட்டன.
எனது குறிக்கோள் தமிழில் புதிதாக விஞ்ஞானப் படைப்புகள், நாடகக் காவியங்கள் பெருக வேண்டும் என்பதே. “மகத்தான பணிகளைப் புரிய நீ பிறந்திருக்கிறாய்” என்று விவேகானந்தர் கூறிய பொன்மொழியே என் ஆக்கப் பணிகளுக்கு ஆணிவேராக நின்று ஒரு மந்திர உரையாக நெஞ்சில் அலைகளைப் பரப்பி வருகிறது.
அன்புடன்,
சி. ஜெயபாரதன்,
கின்கார்டின்,
அண்டாரியோ, கனடா.
View all posts by S. Jayabarathan, Canada / சி. ஜெயபாரதன், கனடா