துணைவியின் இறுதிப் பயணம்

அமர கீதங்கள்

துணைவியின் இறுதிப் பயணம்

சி. ஜெயபாரதன், கனடா

என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

[Miss me, But let me go]

++++++++++++++

என்னருமை மனைவி  தசரதி ஜெயபாரதன்

தோற்றம் :  அக்டோபர்  24, 1934

மறைவு : நவம்பர் 18, 2018

++++++++++++++++++

தமிழ்வலை உலக நண்பர்களே,

எண்ணற்ற வலை உலகத் தமிழ் நண்பர்கள் அன்புடன்,  ஆழ்ந்து, கனிவோடு எழுதி அனுப்பிய இரங்கல் மடல்கள் என்னை நெகிழச் செய்தன.

உங்கள் அனைவருக்கும் என் கனிவான நன்றிகள்.

என் அருமை மனைவியின் இறுதிப் பயணத்தை நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

+++++++++++++

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர்,வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.

மனைக்கு விளக்கு மடவாள்.

நெருநல் உள ஒருத்தி இன்றில்லை என்னும்

பெருமை உடைத்திவ் வுலகு.

[வள்ளுவப் பெருமான் என்னை மன்னிப்பாராக]

+++++++++++

[1]

படமாகிப் போனாள்\!

நடமாடும் தீபம் புயலில்
அணைந்து போய்,
சுவரில்
படமாகித் தொங்கும் !
வாழ்வு
இடம் மறந்து போகும்
பூமியில்
தடம்  அழிந்து சோகம் !
விட்டு
விடுதலை யாய் ஏகும் !

+++++++++++

[2]

சொல்லாமல் போனாள்

பூவோடு போனாள் !
நெற்றிப்
பொட்டோடு போனாள் !
மங்கலத்
தாலி யோடு போனாள் !
பொங்கி
தவிக்க விட்டுப் போனாள்.
தங்க ரதம் போனது
திரும்ப வில்லை.
இல்லைத்தை பூட்டி செல்லும் போது
சொல்லாமல் போனாள்.

+++++++++++

[3]

தனிப்பறவை

துணைப் பறவை போனது
துடிப்போடு !
தனிப் பறவை நான்
தனியாய்க் குமுறி
தவிக்க விட்டுப் போனது !
இனி வீட்டில்
காத்திருக்க எனக்கு
எனது இல்லத்தரசி ஏது ?
உணவு ஊட்டும்
வளைக் கரங்கள் ஏது ?
கண்ணோடு
கண் இணை நோக்கிக்
கனிவு கொடுக்கும்
பெண் ஏது ?

+++++++++++

 [4] 

நொடிப் பொழுதில்

துடி துடித்துப் போனதே என்
துணைப் புறா !
என் நெஞ்சில்
அடி அடித்துப் போனதே என்
ஆசைப் புறா !
இடி இடித்துப் போனதே என்
இல்வாழ்வில் !
நொடிப் பொழுதில்
முடிந்து போகும் அவள்
தொடர் கதை !
கண் திறந்து நோக்கி
கடைசியில்
கை பிடித்துப் பிரிந்ததே என்
கவின் புறா !

+++++++++++

[5] 

முடிந்த கதை

இதய வீணை கை தவறி
உடைந்த பிறகு
இணைக்க முடியுமா ?
புதிய கீதம் இனி அதிலே
பொங்கி எழுமா ?
உதய சூரியன் எனக்கினி மேல்
ஒளியும் வீசுமா ?
விதி எழுதி முடித்த கதை
இனியும் தொடருமா ?

+++++++

[6]

நேற்று,

நேற்று
ஒளிகாட்டி, வழிகாட்டி
நடமாடிய தீபம்,
புயல்
காற்றிலே
அணைந்து போய்,
வீட்டுச் சுவரில்
படமாகித் தொங்கும்
இன்று,
மாலை போட்டு !

++++++++

[7]

மெய்க்காட்சி

கண்முன் உலவும்
உண்மைத் திரைக் காட்சி
உன் கண்ணுக்கு
தெரியாது !
உடனுள்ள உயிர்ப் பிறவி
ஒன்று நிலவி
உன்னருகில் உதவி வருவது
உனக்குத் தெரியாது !
அதன்
உன்னதம் புரியாது !
உயிர் பிரிந்து
போன பிறகு தான்
அதன் இழப்பு,
உனது
ஊனை உருக்குது !
உடலை முடக்குது
உயிரைக் கசக்குது !

+++++++++++++

[8]

புனிதவதி

எனக்காகப் பிறந்தாள்,
எனக்காக வளர்ந்தாள்,
எனக்காகப் பூத்தாள்,                                                                                          ஒருமுறை நான் பார்த்து                                                                                         ஒப்பிய திருமணம்.
என்னை ஏற்று மணந்தாள்,
இல்லத் தீபத்தை
ஏற்றினாள்,
ஐம்பத் தாறு ஆண்டுகள்,                                                                                       ஆதவன் உதித்தது ! அத்தமித்தது !
ஆனால் இன்று
நின்றதவள்
கைக் கடிகாரம்.

+++++++++++++++

[9]

ஒருவரி

ஒருவரி எழுதினால்
எழுதென
ஒன்பது வரிகள்
வாசலில்
வரிசையாய் காத்திருக்கும்,
கண்ணீரோடு !
புண்பட்ட வரிகள் !
வரிசை கலைந்து
முதலில்
என்னை எழுது,
என்னை எழுது என்று
கெஞ்சும் !
என் டைரியில்
உன் கையெழுத்தை இடுவென
முந்தும் !
எழுதி, எழுதி, எழுதி
என் மனம் தினம் இப்படி
அழுதால்,
ஆறுதல் கிடைக்கும்
எனக்கு
நூறாண்டுக்குப்
பிறகு !

+++++++++++++

[10]

கால வெடி
[Time Bomb]

காத்திருந்தான் காலன் !
வேர்த்து நின்றான்
கதவருகில் !
கயிறை மாட்ட வந்தான்
எமதர்மன் !
பற்ற வைத்துப் புகையும்
கால வெடி
பட்டென வெடித்தது !
காலவெளியில்
நேர்ந்த
பெரு வெடிப்பு அது !
இரத்தக் குழல்
குமிழ் உப்பிக் கிழிந்து                                                                                குருதி கொட்டும் !                                                                                    நில்லாது
குருதி கொட்டும் !
கொட்டி
ஆறாய் ஓடும் !
மருத்துவர்
இரத்தம் கொடுத்தார்
பை, பையாக
கை கடுக்க, கால் கடுக்க
மெய் கடுக்க !
தெய்வீக மருத்துவப் பெருமக்கள்
செய்யும் விடா முயற்சி                                                                     கண்டேன் !                                                                                                                 வாழ்க ! வாழ்க !
நீடு வாழ்க அவரினம் !
அபாய அறுவை முறை
வெற்றியே !
ஆனால்                                                                                                              இறுதியிலே
அவள் கைக் கடிகார
முள் அசைவு
நின்றது !

+++++++++++++

[11]

எழுதப் பட்டிருக்கிறது !

எப்படித் துவங்கும் அவள்                                                                     இறுதிப் பயணம் ?
எப்போது
எச்சரிக்கை மணி
அடிக்கும் ?
எப்படி அவள் கதை முடியும்
என்றெனக்குத்
தெரியாது !
ஆனால்
அது முன்பே
எழுதப் பட்டுள்ளது !  முன்பே                                                                                 திட்டமிடப் பட்டது !
காலன் விடும்
ஓலம் வரும் முன்னே !
எமன் சவுக்கடி
மின்னல் வரும் பின்னே !
அவள் ஆத்மா
இப்படித் தான் பிரியும்,
தனித்து நான்
இப்படித் தான் குமுறிக் குமுறித்
தவிப்பேன் என்று,
எழுதப் பட்டுள்ளது !

++++++++++++++++

[12]

கண்ணீர்த் துளிகள்

எனது கண்ணீர்
உமது கண்ணீர் ஆனது !
உங்கள் கண்கள்
சிந்தும்
வெந்நீர்த் துளிகள்
என் கண்ணீர்
ஆனது !
எங்கள் வீட்டுக் குழாயும்
கசிந்து
கண்ணீர் சொட்டும்
எனக்கு !
ஓருயிரின் இழப்பு பெரும்
பாரமாய்க் கனத்து,                                                                                            பாரெங்கும் பரவி
காலவெளி,
மதம், இனம், தேசம்
கடக்கிறது !

+++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்.

தமிழுக்கு விடுதலை தா !

Hands tied
சி. ஜெயபாரதன், கனடா.

 

தமிழைச் சங்கச் சிறையில்
தள்ளாதே !
தங்கச் சிறை வேண்டாம் !
​கை கால்களில்​
​பொன் விலங்கு பூட்டாதே !​
விதிகள் இட்டால்
விதி விலக்கும் இடு !
தமிழுக்கு வல்லமை தேவை
மூச்சு விடட்டும்;
முன்னுக்கு வரட்டும் !
நுண்ணோக்கி மூலம் ஆய்ந்து நீ,
பின்னோக்கிச் செல்லாது,
முன்னோக்கிச் செல்
தொலை நோக்கி மூலம் !
வேரூன்றிக் கிளைகள் விட்டு
விழுதுகள்
வைய மெங்கும் பரவட்டும்;
கழுத்தை நெரிக்காதே !
காற்றில் நீந்தட்டும் !
காலுக்கு ஏற்றபடி செருப்பை மாற்று !
தமிழைத் தவழ விடு !
நடைத் தமிழில்
நடக்க விடு !
​நடக்க நடக்கக் குருதி ஓடும் !
​முடக்காதே தமிழை !
தவறி விழுந்தால்
எழுந்து நடக்கக் கைகொடு !
தோள் கொடு, தூக்கி விடு !
தனித்தமிழ் தேடி, தூய தமிழ் நாடி
வடிகட்டி ஏந்தி
வலை உலகில் மேயாதே
பழமை பேசிப் பேசி
கிழவி ஆகாதே !
ஆறிய கஞ்சியை மீண்டும், மீண்டும்
சூடாக்கிக் குடிக்காதே !
அழுக்குச் சட்டை
​தூய நீரில்​
துவைத்து துவைத்துக்
கிழிந்து போனது !
தமிழில் இல்லாததை, தமிழால் இயலாததைத்
தத்தெடுத்துக் கொள்
யுக்தியுடன்;
புத்தாடை அணிய விடு !
புத்துயிர் பெற்றுப் பைந்தமிழ்
இத்தரணி ஆளவிடு !

 

+++++++++++++++++++

 

S. Jayabarathan [jayabarathans@gmail.com]  August 8, 2018  [R-2]

 

பெண்ணுக்கோர் ஆயுதம்

பெண்ணுக்கோர் ஆயுதம் !

மூலம்: ஜெஃப்ரி விட்னி

[Geffrey Whitney]

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

++++++++++

உயிரினம் தோன்றிய போதே

இயற்கை விதிகள் ஈந்து விட்டன !

காளைக்குக் கொம்புகள்,

குதிரைக்கு ஓடும் கால்கள்,

சிங்கத்துக்குப் பற்கள்,

வலுத்த பாதங்கள்,

முயலுக்கு துரிதப் பாய்ச்சல்,

மீனுக்கு நீச்சல் திறமை,

பறவைகட்கு இறக்கைகள்,

ஆயினும்

பாதித் தொகை யான

பெண் இனத்துக்குப்

பாதுகாப்பு ஆயுத மில்லை !

அவசியத் தேவைக்கு  

இயற்கை அளித்தது என்ன ?

உடற் கவர்ச்சி !

ஞானிகள், வீரர், தீரர் மயங்கி

வலுவிழக்கும்

மேனித் தோற்றம் !

அழகு பாவைக்கு ஆயுதமா ?

அல்லது

கழுகுக்கு இரையா ?

உனக்கோர் ஆயுதம் தேவை,

* மிளகுத் தண்ணியை

முகத்திலே வீசு !

** மின்னதிர்ச்சி மின்னலையை

மேனியிலே பாய்ச்சு !

+++++++++++++++

* Pepper Spray

** Electroshock Weapon 

தங்கத் தமிழ்நாடு

valluvar-statue

தங்கத் தமிழ்நாடு

சி. ஜெயபாரதன் & இராம. மேகலா

 

தங்கத் தமிழ்நாடு எங்கள் தாய்நாடு 

சங்கத் தமிழ்வளர்த்த பண்டைத் திருநாடு!

சிங்கத் தமிழர் உதித்த செந்நாடு!

மங்காப் புகழ் மங்கையர் திகழ்நாடு  

எந்தையும் தாயும் சிந்தை மகிழ்ந்திட

முந்தை குலாவியச் செந்தமிழ் நாடு!

வங்கக் கடலெழு செங்கதிர் ஒளியூட்ட 

தென்குமரி முனைதிகழ் வள்ளுவர் வழிகாட்ட

ஆத்திசூடி ஓளவைசூடிக்கொடுத்த ஆண்டாள் 

வான்புகழ் வள்ளுவர்தேன்கவி இளங்கோ,

கவிச்செல்வர் கம்பர்கவிக்கோ சேக்கிழார்

புது யுகக்கவி பாரதிபுரட்சிக்கவி பாரதிதாசன்,

கடவுளை உணர்த்திய திரைக்கவி கண்ணதாசன்,

அப்பர், சுந்தரர், சம்பந்தர், வாசகர் அணியில்  

தமிழிசைப் பாவலர்  இசைக்கவி ரமணன் 

யாவரும் உனது  மாதவ  மக்கள்!

யாதும் நாடே யாவரும் கேளிர்!

மேதினியில்  உனையாம் பாதுகாத் திடுவோம்!

காசினி மீதில் நேசமாய்த் திகழும்

மாசிலா நாடேமைந்தர்கள்  ஒன்றாய் 

வாழ்த்துவம் உனையேஉயர்த்துவம் உனையே! 

பாரதத் தாயின் தவத்திரு நாடே!

பங்கமோ பிரிவோ உனக்கு நேர்ந்திடின்

பொங்கி எழுந்திடு மெங்கள் உதிரம்!

++++++++++++++++

S.Jayabarathan [jayabarathans@gmail.com] January 15, 2020 [R-2]

தங்கத் தமிழ்நாடு

 Thiruvalluvar statue
தங்கத் தமிழ்நாடு 
 
சி. ஜெயபாரதன், இராம. மேகலா
 
 
தங்கத் தமிழ்நாடு!  எங்கள் தாய்நாடு!  
சங்கத் தமிழ்வளர்த்த பண்டைத் திருநாடு!
சிங்கத் தமிழர் உதித்த செந்நாடு!
மங்காப் புகழ் மங்கையர் திகழ்நாடு!   
எந்தையும் தாயும் சிந்தை மகிழ்ந்திட
முந்தை குலாவியச் செந்தமிழ் நாடு!
வங்கக் கடலெழு செங்கதிர் ஒளியூட்ட 
தென்குமரி முனைதிகழ் வள்ளுவர் வழிகாட்ட
ஆத்திசூடி ஓளவை, சூடிக்கொடுத்த ஆண்டாள்,  
வான்புகழ் வள்ளுவர், தேன்கவி இளங்கோ,
கவிச்செல்வர் கம்பர், கவிக்கோ சேக்கிழார்
புதுமைக்கவி பாரதி, புரட்சிக்கவி பாரதிதாசன்,
யாவரும் உனது  மாதவ  மக்கள்!
யாதும் நாடே யாவரும் கேளிர்!
தீதிலா துனையாம் பாதுகாத் திடுவோம்!
காசினி மீதில் நேசமாய்த் திகழும்
மாசிலா நாடே! மைந்தர்கள்  ஒன்றாய் 
வாழ்த்துவம் உனையே! உயர்த்துவம் உனையே! 
பாரதத் தாயின் தவத்திரு நாடே!
பங்கமோ பிரிவோ உனக்கு நேர்ந்திடின்
பொங்கி எழுந்திடு மெங்கள் உதிரம்!
 
++++++++++++++++
S. Jayabarathan [jayabarathans@gmail.com] October 25, 2016 [R-1]

சிற்றருவி ! பேரருவி !

kutralam-niagara1

சி. ஜெயபாரதன், கனடா

இறை வணக்கம்

அண்டத் தலைவனை, ஆதி முதல்வனைத்
தொண்டன் வணங்கித் துணிகின்றேன் ! – பண்டைமுதல்
குற்றாலத் தேனருவி கொட்டுவதை நானெழுத
வற்றாத் தமிழூட்ட வா !

***********

கற்றேன் கடுகளவு ! கற்க உலகளவு !
ஒற்றைப் பிறப்பெனக்கு ஒவ்வாது ! – முற்றிலும்
தாரணியைக் காணத் தருணம் கிடைப்பதில்லை !
ஓரளவு காட்டிடவே ஓது !

***********

குற்றால அருவி எப்படி உள்ளது என்றொரு பெருங் கவிதை புனைவதை விட, அது எப்படி இருக்க வில்லை என்றும் நான் சொல்ல விழைகிறேன். அப்போதுதான் அதன் முழுத் தோற்றத்தை நாம் விழுமையுடன் காண முடிகிறது.

+++++++++++++++++

ஒரு கல்லில் அடிப்பேன்
இரு மாங்காய் !
இரு நீர்வீழ்ச்சி வடிப்பேன்
ஒரு மூச்சில் !

******************

குற்றால அருவி !

குற்றாலச் சிற்றருவி !
குதித்தோடும் தேனருவி !
வற்றி விடும் நீரருவி !
வான்தொடும் கானருவி !

குற்றாலம் வெண்ணருவி !
கொட்டுகின்ற தண்ணருவி!
சிற்றாறுக் குன்றருவி !
சிரித்தோடும் பொன்னருவி !

நயாகரா அருவி !

புவியிலே பேரருவி !
பூத உடல் நீரருவி !
கவிழ்ந்து விழும் கீழருவி !
கழுத்தொடிக்கும் பேயருவி !

முற்றிலும் மண்ணருவி !
முதலிரவுப் பெண்ணருவி !
குற்றாலம் விண்ணருவி !
குறைவாகும் சின்னருவி !

தோற்றம் கீழுனக்கு ! வானத்
தோரணம் ஏதுனக்கு ?
போற்றிப் புகழ்ந்தாலும் சேரும்
நாற்றச் சாக்கடைதான் !

குற்றால அருவி !

குற்றாலம் குளியருவி !
குடிமக்கள் தேனருவி !
நெற்றி நிமிர் மேலருவி !
நெளிதோடும் கானருவி !

குரங்காடும் நீரருவி !
கூடு கட்டும் ஊர்க்குருவி !
மரமாடும் சீரருவி !
மானோடும் ஓரருவி !

குற்றாலம் சிற்றருவி ! மழைக்
குன்றின் வெற்றருவி !
நயாகரா பேரருவி !
நல்வணிகர் பேருதவி !

குற்றால அருவி !

எளியவர் கண்டு களிக்கலாம் !
எல்லாரும் இனிதாய்க் குளிக்கலாம் !
துர்நாற்றம் இல்லா நீரது !
தூய்மை யான மழையது !

குற்றாலச் சூழ் வெளியே
குலவி வரும் பூவாடை !
நயாகரா நதி வழியே
நாகரீகச் சாக்கடையே !

நயாகரா அருவி !

ஆறாக ஓடி வரும் !
ஆத்திரமாய்ப் பாய்ந்து விழும் !
மாறாகத் தவ்வுது !
மண்ணைப் போய்க் கவ்வுது !

குரங்கில்லை ! குன்றில்லை !
மரமில்லை ! மானில்லை !
இயற்கை வனப்பழியும் ! எங்கும்
செயற்கை மினுக்குயரும் !

ஒருநதி இடையில் பிரியுது !
இருநீர் வீழ்ச்சியாய்த் தெரியுது !
பிரமிப் பான காட்சிதான் !
பேரிடி கேட்கும் மூச்சிதான் !

குற்றால அருவி !

வெள்ளிக் கதிர் எழுமருவி !
வேகமாய் விழுமருவி !
துள்ளி வரும் நீரருவி !
தூங்கி விடும் ஓரருவி !

ஆன்மீக நாட்டருவி !
ஆடிவரும் காட்டருவி !
நான் விழையும் நீரருவி
நாதம் எழும் சீரருவி !

குற்றாலத் தேனருவி
மேலிருந்து  குதிக்குது !
குபேரப் பேரருவி நழுவிக்
கீழிருந்து  கொட்டுது.

நயாகரா அருவி !

வாணிபச் சந்தை அது !
வஞ்சிப்போர் மந்தை அது !
தோணியிலே சென்றாலும்
துட்டுத்தான் கரையுதடா !

காசிருந்தால் நீர்வீழ்ச்சி !
காசுரிக்க ஓர்சூழ்ச்சி !
காசிருந்தால் சூதாட்டம் !
காசிழந்தால் போராட்டம் !

பகலிரவாய் நீர் பாயும் !
பார்த்தாலே குடல் சாயும் !
மகத்தான நீர்வீழ்ச்சி !
மாறான கண்காட்சி !

மின்சக்தி உருவாக்கும் !
மின்வெளிச்சம் நிற மூட்டும் !
வானூர்தி வட்டமிட்டு
வானிருந்து நதி காட்டும் !

குற்றால அருவி !

பசுமை மரமுண்டு !
பாடும் குயிலுண்டு !
அசையும் இலையுண்டு !
அத்தனைக்கும் உயிருண்டு !

பட்டப் பகலில் பரிதி ஒளி !
பறவை பாடும் பண்ணின் ஒலி !
எட்டும் இரவில் நிலவின் வெளி !
என்றும் மாறா வண்ண ஒளி !

நயாகரா அருவி !

நயாகரா நீர்வீழ்ச்சி
நாணயப் படக்காட்சி !
உயிரில்லை ! உணர்வில்லை !
ஒப்பனையாய்க் கவர்ந்தாலும் !

வான வில்லாய் நீர்வீழ்ச்சி
இரவில் மாறும் நிறக்காட்சி
பகலில் வெள்ளி நீர்க் காட்சி !
ஆயின் வீணே மின்சக்தி  !
வேடம் போடும்  ஒளியுக்தி !

நயாகரா காதலர்க்கு !
நாடிவரும் வாணிபர்க்கு !
வயாகரா மானிடர்க்கு !
வாடிக்கை மாதருக்கு !

சிற்றருவியா ? பேரருவியா ?

குயில் இல்லை பாட,
குரங்கில்லை தாவ,
மயில் இல்லை ஆட
மானில்லை காண !

டாலர் வாழும் நயாகாரா !
டாலர் ஆளும் நயாகரா !
டாலர் கூடும் நயாகரா !
டாலர் நாடும் நயாகரா !

குபேரச் சாக்கடை முங்கிக்
குளிப்பது யார் தற்காலம் ?
குசேலக் குற்றாலம் பொங்கிக்
குளிப்பது நம் பொற்காலம் !

***********

வால்ட் விட்மன் வசன கவிதைகள்

Walt Whitman

(1819-1892)

(புல்லின்  இலைகள்)

மூலம் : வால்ட்  விட்மன்

தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

 

வால்ட்  விட்மன்  வாழ்க்கை வரலாறு:

அமெரிக்காவின் உன்னதக் கவிஞருள் ஒருவரான வால்டயர் விட்மன்1819 ஆம் ஆண்டில் வெஸ்ட் ஹில்ஸ், லாங் ஐலண்டு, நியூயார்க்கில் பிறந்தார். தனது 12 வயது வரை புரூக்லினில் வசித்து வந்தார். அவர் 11 வயதினராய் உள்ளபோது வீட்டில் வருவாயின்றி வேலை செய்து பணம் சம்பாதிக்கப் பள்ளி யிலிருந்து தந்தையால் நிறுத்தப் பட்டார். ஆகவே அவர் சிறு வயதிலேயே ஓர் அச்சகத்தில் பணிசெய்ய வேண்டிதாயிற்று. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு நாளிதழ்களுக்கு எழுதியும், அவற்றுக்குப் பிறகு தொகுக்கும் ஆசிரியராகவும் பணியாற்றினார். அவரது 17 வயதில் பள்ளி ஆசிரியராகச் சில காலம் வேலை செய்தார். 27 ஆவது வயதில் புரூக்லின் தின இதழின் ஆசிரியரானார்.

புரட்சி கரமான அவரது கவிதைப் படைப்புகள் மிகவும் தனித்துவ முறையில் பாலுறவு உட்பட ஆவேச உணர்ச்சியில் எழுதப் பட்டவை. அவர் அமெரிக்கக் குடியாட்சியை பேரளவு மதிப்புடன் கொண்டாடி யவர். படைப்புகளில் குறிப்பாக அவர் முதலில் வெளியிட்ட சிறிய கவிதைத் தொகுப்பு “புல்லின் இலைகள்” [Leaves of Grass] அவராலே பன்முறைத் திருத்தமாகிப் பின்னால் விரிவு செய்யப் பட்டது. வால்ட் விட்மன் தனது கவிதைகளில் ஒளிமறைவின்றி எதையும் வெளிப் படையாக வெளியிட்டதால், அவரது படைப்புகள் ஆபாசமானவை, வெறுக்கத் தக்கவை என்று முதலில் பலரால் ஒதுக்கப் பட்டன ! அவரது கவிதைகள் அனைத்தும் எதுகை, மோனைத் தளை அசையின்றி இலக்கண விதிக்கு அப்பாற்பட்ட வசன நடைக் கவிதைகளாய்[Free Verse] எழுதப் பட்டவை. அவரது கவிதைகளை உயர்வாகப் பாராட்டி யவருள் ஒருவர் கவிஞர் எமர்ஸன் [Ralph Waldo Emerson].

1855 இல் 12 பாடல்களுடன் முதற்பதிப்பு “புல்லின் இலைகள்” புத்தகத்தை வெளியிட்டார். பின்னால் அது 300 கவிதைகளுடன் விரிவானது. அதற்கு ஆரம்பத்தில் அமெரிக்கர் ஆதரவு கிடைக்க வில்லை. 1848 இல் வால்ட் விட்மன் நியூயார்க்கிலிருந்து நியூ ஆர்லியன்ஸ் சென்றார். அவர் அங்கேதான் முதன் முதலில் அடிமைகள் நடுத்தெருவில் ஏலம் விடப் படும் அருவருப்பு வாணிபத்தையும்,அடிமைக் கறுப்பர் படும் கொடுமை களையும் கண்டு மனவேதனை அடைந்தார். ஆர்வமாய்ப் படிக்கும் வேட்கை மிகுந்த வால்ட் விட்மன் 1848 இல் தனது சொந்தச் செய்தித்தாள் “உரிமைப் பூமி“ [Free Soil] என்பதை வெளியிட்டு அதற்கு அதிபதி ஆனார். மின்சார உடல் பற்றி என் பாடல் [I Sing the Body Electric] & என்னைப் பற்றிய எனது பாடல்[Song of Myself] ஆகிய இரண்டு நூல்களும் மனித உடம்பைப் பற்றியும், உடல் நலம்,பாலுறவு பற்றியும் எழுதப் பட்டவை.

தென்னக மாநிலங்களில் கொடுமைப் படுத்தப்படும் அடிமைகளை விடுவிக்க ஆப்ரஹான் லிங்கன் கடுமை யான போர் நடவடிக்கை எடுக்க வேண்டிய தாயிற்று. அதுவே சகிக்க முடியாத “சிவில் போர்” [Civil War] எனப்படும் உள்நாட்டுப் போரானது. அரசாங்க ஐக்கியப் படைக்கும், “கூட்டு மாநிலங்கள்” என்னும் கன்ஃபெடரேஷன் படைக்கும் யுத்தம் உண்டானது. இறுதியில் இருபுறமும் சமப்போர் புரிந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 30,000 மேற்பட்டது. அப்போது ஐக்கியப் படைகளுடன் போர் புரிந்த வால்ட் விட்மன் சகோதரன் ஜார்ஜ் விட்மன் காய முற்றதால் அவரைக் குணப்படுத்த வால்டயர் வாஷிங்டன். D.C. வர வேண்டிய தாயிற்று. அவர் சுயப்பணி யாளராய்ச் சேர்ந்து காயமுற்ற சுமார் 100,000 நபர்களுக்கு உதவும் வாய்ப்பு கிடைத்தது.  தலைநகர் வாஷிங்டன் D.C., மருத்துவ மனைக்கு பணிபுரிய வால்ட் விட்மன் 600 தடவை வந்ததாக அறியப் படுகிறது. சிவில் போர் வெற்றியில் முடிந்து, ஆப்ரஹாம் லிங்கன் இரண்டாம் முறை யாக நின்று, ஜனாதிபதி தேர்வு வெற்றி பெற்ற விழாவில் வால்ட் விட்மன் கலந்து கொண்டவர் என்று அறியப் படுகிறது. போர் முடிந்து சட்ட மூலமாக அடிமை வைப்பு முறை அமெரிக்காவில் நீக்கப் பட்டது. போர் நின்ற ஐந்தாம் நாள், அதற்கு ஆப்ரஹாம் லிங்கன் பலியானார். லிங்கன் சுடப்பட்டு மரித்ததைப்  பற்றி வால்டர் விட்மன் எழுதிய இரங்கற்பா “ஓ காப்டன், என் காப்டன்”  படிப்போரை உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவது.

19 ஆம் நூற்றாண்டில் கவிதைப் படைப்புகள் எழுதிய வால்ட் விட்மனுக்கு 20 ஆம் நூற்றாண்டில்தான் அவரது படைப்புகளின் உன்னதம் வெளியாகிப் பரவியது. அவருடைய படைப்புகளின் செல்வாக்கு,மேன்மை புகழ் பெற்ற கவிஞர்கள் பாப்லோ நெரூடா, அல்லன் கின்ஸ்பெர்க், [அமெரிக்கா] ஃபெர்னான்டோ பெஸ்ஸோவா [போர்ச்சுகல்] ஆகியோர் ஆக்கங்களில் தெரிகிறது. வால்ட் விட்மன் கவிதைப் படைப்புகள் சில : அடிமை ஒழிப்புப் போர் பற்றி “டிரம் டாப்ஸ்”, “பீட் பீட் டிரம்ஸ்”, “இரங்கற்பா ஆப்ரஹாம் லிங்கனுக்கு”, குடியாட்சித் திறப்புகள்,” “இந்தியா நோக்கிப் பாதை.” [Drum-Taps, Beat ! Beat ! Drums !” “When Lilacs Last in the Dooryard Boom’d”, Democratic Vistas,” “A Passage to India.”]. 1873 இல் மூளை அடிப்பில் [Stroke] அவர் பாதிக்கப் பட்டு ஒரு பகுதி உடலுறுப்புகள் பயன்படுத்த இயலாது போயின. அதோடு ஒன்பது ஆண்டுகள் காலந் தள்ளி 1892இல் அமெரிக்கக் கவிதை மேதை வால்ட் விட்மன் தனது 73 ஆம் வயதில் காலமானார்.

+++++++++++++++++++++++++++++

வாவென அழைத்த தென் ஆத்மா

(Come, Said My Soul)

[வால்ட்  விட்மன்]

தன்னைப் பற்றி

வாவென அழைத்த தென் ஆத்மா

எழுதுவோம் அவ்விதப் பாக்கள்

எனது உடல் நலத்துக்கு.

(ஏனெனில் நாம் இருவரும் ஒருவரே)

மரணத் துக்குப் பின் நானிங்கு

மறைவாய், அல்லது வேறு அண்டங்களில்

நீண்ட காலம் வாழ

வேண்டி வந்தால், அங்கே சில

தோழர் குழுவுக்கு இவை

சுலோகங் களாய் மீண்டும் கேட்கும்

(இப்பூமி, மரங்கள், காற்றும் கொந்தளிக்கும்

அலைகளுக் கேற்ப)

எனதினிய புன்னகையில் நான்

எப்போதும் நீடிக்கலாம்

அடுத்தடுத்து

எனது சொந்தப் பாக்கள் மூலம் !

இப்போது முதலில் நான்,

இங்கு இடுகிறேன்

எனது கையொப்பம்

என் உடலுக்கும், ஆத்மா வுக்கும்

என் பெயரை இட்டு !

++++++++++++++++++++

ஒருவர் சுயத்தனம் பற்றி

எனது பாடல்    

ஒருவன் சுயத்தனம் பற்றி

ஒரு பாட்டு பாடுகிறேன்.

எளிய தனி மனிதன் ஒருவன் பற்றி

எனினும் உரைப்பேன் ஒரு வார்த்தை

அது குடியாட்சி !

ஒருமித்து ஓங்கிச் சொல்லும்

ஒரு வார்த்தை.

தலை முதல் கால் வரை

உடலியல் பற்றிப் பாடுவேன் !

உறுப்பமைப்பு, மூளை மட்டுமல்ல

என் வழிகாட்டி

குருவாய்த் தகுதி பெற !

கூறுவேன் நான் :

பூரணத் தோற்றம் பெறுவது

நேர்மை உடையது !

ஆண்பால், பெண்பால் இரண்டுக்கும்

நான் பாடுவேன்

ஒரே சமத்துவ முறையில் !

உணர்ச்சி யோடு துடிப்போடு,

உன்னத சக்தி யோடு, உற்சாக மோடு

உரிமை இயக்கத்தை

உருவ மாக்கும் தெய்வீக விதியில்.

நான் பாடுவேன்

நவீன மனிதன் பற்றி !

+++++++++++++

என் பாடத் துவக்கம்

(Beginning My Studies)

[வால்ட் விட்மன்]

படிக்கத் துவங்கிய போது

பரவசம் அளித்தது

எனக்குப் பேரளவில் :

எனது முதல் எட்டு நடை,

கற்கும் தன்னுணர்வு,

கற்கும் வடிவங்கள்,

விளை யாட்டின் மேன்மை,

சின்னஞ் சிறு பூச்சி, விலங்கு,

கண்ணோக்கு, நட்பு, ஐம்புல உணர்வு !

முதல் எட்டு அச்சம் தரினும்,

மிகையாய் மகிழ்ச்சி அளித்தது

எனக்கு !

நடந்த தூரம் சிறிது !

நடை மேலும்

தொடர விருப் பில்லை !

நிறுத்தினேன், திரிந்தேன் எந்நாளும்,

பள்ளியில் கற்றதைப்

பரவசப் பாக்களில்

பாடுதற்கு !

+++++++++++++++++

அவனுக்கு ஒரு பாடல்

(To Him I Sing)

[வால்ட்  விட்மன்]

 

அவனுக்காக நான் பாடுகிறேன்

முற்காலத்தின்

மேலிருந்து எழுப்புகிறேன்

தற்காலத்தை நான் !

என்றும் நிலைத்த மரம்

வேரிலிருந்து இழுப்பது போல்

இறந்த காலத்தின்

மேலிருந்து எடுத்து வருகிறேன்

இந்த நிகழ் காலத்தை !

காலவெளி நீட்சியில் நான்

அவனை

மேலாக்கி வருகிறேன்.

தனக்கென விதிகள் படைத்து

அந்த முறைகளால்

தன்னையே தான்

ஆக்கிக் கொள்ள

பின்னிப் பிணைக்கிறேன்

காலம் அழிக்கா

விதிகளை !

++++++++++++++

மாநிலங்களுக்கு எச்சரிக்கை

[To the States]

 

ஒரு மாநிலத் துக்கு

அல்லது

எந்த ஒரு மாநிலத் துக்கும்

அல்லது மாநிலத்தில் உள்ள

எந்நகரத் துக்கும்

என்னுரை இதுவே :

எதிர்த்து நில் தீவிரமாய் !

எதற்கும் சிறிது கூட

அடிபணி யாதே !

ஏனென்று எந்த வினா யின்றி

அடி பணிந்து நீ ஓர்

அடிமை யாக

ஆக்கப் பட்டால்,

முழு அடிமை யாக ஆக்கப் படின்,

இந்த பூமியிலே

எந்த நாட்டுக்கும்,

எந்த நகரத் துக்கும்,

எந்த மாநிலத் துக்கும்

இழந்த சுதந்திரம் மீளாது

என்றென்றும் !

+++++++++++++

வரலாற்றுஆசான்ஒருவனுக்கு

(To The Historian)

[வால்ட்விட்மன்]

இறந்த காலத்தைக்

கொண்டாடுவாய் நீ !

புற உலகை ஆராயச் சென்று,

மானிட இனத்தின்

வாழ்வுக் களத்தை,

காட்டிக் கொள்ளும்

சுய வாழ்வைத்

தேடப் போனாய் நீ !

 

மதாதிபதி களையும்,
மன்னரையும்
ஒருமைப் படுத்தி
மானிடனை

அரசியல் பிறவியாய்க்

காண்பவன் நீ !
நான் அல்லிகனி* மலைவாசி !
தானெனும் சுயநல உரிமையில்
இருப்பதாய்
நானவனை நடத்துவேன்.
தன்னை அபூர்வமாய்
வெளிப்படுத்தும்
வாழ்வுத் துடிப்பை அழுத்தும்

மானிடச் சுயமதிப்பு

பெரு மகத்துவம் உடைத்து !

எப்படி இருக்குமென

வரம்பிட்டு

வெளிப்புறத் தோற்றத்தைத்

துதிபாடி

வேண்டுபவன் !
வருங்கால வரலாற்றைத்
திரையிடுவேன்
பழங்காலக்
காரணத் துக்கு !
+++++++++++++

அல்லிகனி மலைவாசி  à  Alleghenies Inhabitant.

+++++++++++++

மௌனத்தில் ஆழ்ந்த சிந்தனை

(As I Ponder in Silence)

[வால்ட் விட்மன்]

ஆழ்ந்த மௌன சிந்தனையில்

மூழ்கித் தீரமாய்

நீண்ட கற்பனை மீண்டது

என் கவிதைகள் மீது !

மதிப்பில்லா முறையில்

அகோர வனப்பில், வயதில்,

வல்லமையில்

மாய வடிவம் ஒன்று

தோன்றும் என்முன் !

பூர்வ மண்ணின்

மேன்மைக் கவிஞர்கள்

விழிகளில்

தீப்பொறி போல் எனக்கு

வழிகாட்டுவார்,

உன்னதப் பாடல்களை

அவரது விரல் சுட்டிக் காட்டும் !

அச்ச மூட்டும் குரல் கேட்கும் :

என்ன பாடுகிறாய் நீ ?

உனக்குத் தெரியாதா

பொறுமை மிக்க

பாடகருக்கு குறிக்கோள்

ஒன்றைத் தவிர

பிறிதொன் றில்லை என்று ?

அச்சொல்லே போருக்கு அடிப்படை !

உருவாக்கும் அதுவே

உன்னதப் படை வீரர்களை !

அப்படியே இருக்கட்டும் பிறகு

அதைச் செப்புவேன்.

போரைப் பற்றியும்

கடிந்து நான்

நீண்டதாய் பாடுவேன்

அனைத்தையும் விடப் பெரிதாய் !

என் நூலில் பதித்திருக்கும்

போரின் பற்பல வெகுமதி

விளைவுகள்

புற முதுகு காட்டி ஓடல்,

பின்வாங்கல்,

முன்னேறல்

வெற்றித் தளர்ச்சி, வீழ்ச்சி,

போரில் விட்டுக் கொடுத்தல்,

[அவற்றில் உறுதியாய் உள்ளேன்]

உலகப் போர்த் தளங்களில்

உயிர்காப்பு, உயிரிழப்பு

இரண்டும் உடலுக்கு நேரும்

அழிவில்லா ஆத்மா வுக்கு !

நடை அணியில் வருகிறேன்

போர்ச் சுலோகம் சொல்லிக் கொண்டு,

பாராட்டுவேன் மேலாக நான்

படைவீரரை !

+++++++++++++

தொடங்குபவர்கள்

(Beginners)

வால்ட் விட்மன்

வையத்தில் தொடங்குவோர்க்

கெல்லாம்

வசதிகள் எவ்விதம்

வழங்கப் படும் படிப் படியாய் ?

எவ்விதம் அவை அரிதானவை

எவ்விதம் உலகுக்கு அச்சம் அளிக்கும் ?

எவ்விதம் தமக்கேற் றளவில்

ஏற்றுக் கொள்கிறார் ?

தமக்குத் தாமே எவ்விதம் அவர்

தாங்கிக் கொள்கிறார்

இன வெறுப்பை எல்லாம்

பிறரையும் முன் னிறுத்தி !

தோன்றும் அவர் முரண்பாடு

எத்தகையது அவரது வயதுக் கேற்ப !

எப்படி அதை எதிர் கொள்வர்

மக்கள் ஆயினும்

அதை அறியாமல் ?

எப்படி அவரது விதியில்

ஏதோ ஒன்று நிலையாக உள்ளது எந்நாளும் ?

எப்படி அவர் எப்போதும்

தப்பாகத் தேர்ந் தெடுக்கிறார்

தாம் மேலாய்ப் போற்றும்

தமது வெகுமதிப் பரிசுகளை ?

எவ்விதம் மாறாத

ஒரே விலை கொடுத் தின்னும்

வாங்கிக் கொள்கிறார்

மாபெரும் அதே

வாணிபச் சரக்கை ?

+++++++++++++

தகவல்:

1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley  [First 1855 Edition] [ 1986]

3. Britannica Concise Encyclopedia [2003]

4. Encyclopedia Britannica [1978] 5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman   [November 19, 2012] 6. https://jayabarathan.wordpress.com/abraham-lincoln/ [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

********************

jayabarathans@gmail.com [S. Jayabarathan] (January 1, 2013)

https://jayabarathan.wordpress.com/

தாகூரின் கீதப் பாமாலை – 6 துயரம் போதும் எனக்கு

தாகூரின் கீதப் பாமாலை – 6
துயரம் போதும் எனக்கு

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

போகட்டும் என் கண்மணி !
போகட்டும் !
காதல் என்பது புளுகு மூட்டை
இனிக்கும் வேதனை !
வலிக்கும் ஆலிங்கனம் !
புரிய வில்லை அது புகல்வது !
பூக்களின் கோர்ப்பை
ஊக்கிடும் என் விழிகள்
பொழியும் கண்ணீர் துளிகள் !
சுயச் சமர்ப்பணத் துக்கு
முயலும் இதயம்
வேறொன்றை வணங்கிட :
‘ஏற்றுக் கொள் என்னை
ஏற்றுக் கொள் என்னை’
என்று யாசிக்கும் மாற்றான்
முன் மண்டியிட்டு !

ஆண்டாண்டு தோறும் நாம்
துயரம் அடைவது —
எப்போ தாவது நின்று
ஒருகணம்
ஒருவரை ஒருவர்
கண்டு களிப்பது, இருவரும்
கட்டிப் பிடிப்பது —
கண்ணீர்க் கடலில் மிதப்பது
மற்றவருக் காகப் புன்சிரிப்புகள்
இவை எல்லாம் ஏற்புடைத்தா ?
வாழ்க்கை ஆனந்தமே
குறிக்கோளாய்த் தேடுவ தெல்லாம்
ஒருவன் வாழ்வுப் பூரிப்பை
அடியோடு
கெடுத்து விடுவது !

+++++++++++++++++++
பாட்டு : 313 தாகூர் தன் 27 ஆம் வயதில் எழுதியது (1888). கவர்ச்சிக் கானங்கள். காதலிக்கத் தேடிக் கிடைக்காத பெண்கள்
+++++++++++++++++++

Source

1.  Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated

from Bengali & Introduced By : Kalpana Bardhan

2.  A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] March 27, 2012
*********************

நேபாளத்தில் கோர பூபாளம்

Inline image 1

நேபாளத்தில் கோர பூபாளம் ! 

சி. ஜெயபாரதன், கனடா

 

இமயத் தொட்டிலில் ஆட்டமடா !

இயற்கை அன்னை சீற்றமடா  !

பூமாதேவி சற்று தோள சைத்தாள் !

பொத்தென வீழ்ந்தன மாளிகைகள்

பொடித்தூள் ஆயின குடி வீடுகள் !

செத்து மாண்டவர் எத்தனை பேர் ?

பெற்றோர் இழந்தவர் எத்தனை  பேர் ?

கைகால் முறிந்தோர் எத்தனை பேர் ?

இமைப் பொழுதில்

எல்லாம் இழந்தவர் எத்தனை  பேர் ?

கட்டிய இல்லம், சேமித்த செல்வம்

பெட்டி, படுக்கை, உடுப்பு,

உணவெல்லாம் மண்ணாச்சு !

அந்தோ !

வசந்த கால வாடைக் காற்றில்,

அழுதிடும் சேய்க ளோடு

புழுதி மேடையில் தூங்குகிறார் !

வானந்தான் கூரை !

பாழ்வெளி தான் இல்லம் !  

சுவரில்லை ! கதவில்லை

போர்த்திக் கொள்ள எவர்க்கும்

துணி யில்லை !

மானம் போனது, மதிப்பு போனது !

தானம், தர்மம் நாடி

வானம் நோக்கித் துதிக்கிறார் !

கடவுளுக்கு

கண்ணில்லை ; காதில்லை !

கருணையும் இல்லை

கொடுத்த தெல்லாம் பறித்துக் கொண்டாள்

கோபத்தாய் !

எண்ணிலா மாந்தர் புதைபட்டார்

உயிரொடு !

இடிந்த வீடுகள் புதை காடாயின ! 

எங்கெங்கு வாழினும் 

இன்னலடா !

ஏழு பிறப்பிலும் தொல்லையடா !

சூழ்வெளி மட்டும் 

பாழாக வில்லை யடா!

ஆழ்பூமிக் குள்ளும் 

புற்று நோய் தொற்றுமடா !

++++++++++++++

S. Jaybarathan [jayabarathans@gmail.com]  April 25, 2015

தாகூரின் கீதப் பாமாலை

தாகூரின் கீதப் பாமாலை – 6
துயரம் போதும் எனக்கு

மூலம் : இரவீந்தரநாத் தாகூர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

போகட்டும் என் கண்மணி !
போகட்டும் !
காதல் என்பது புளுகு மூட்டை
இனிக்கும் வேதனை !
வலிக்கும் ஆலிங்கனம் !
புரிய வில்லை அது புகல்வது !
பூக்களின் கோர்ப்பை
ஊக்கிடும் என் விழிகள்
பொழியும் கண்ணீர் துளிகள் !
சுயச் சமர்ப்பணத் துக்கு
முயலும் இதயம்
வேறொன்றை வணங்கிட :
‘ஏற்றுக் கொள் என்னை
ஏற்றுக் கொள் என்னை’
என்று யாசிக்கும் மாற்றான்
முன் மண்டியிட்டு !

ஆண்டாண்டு தோறும் நாம்
துயரம் அடைவது —
எப்போ தாவது நின்று
ஒருகணம்
ஒருவரை ஒருவர்
கண்டு களிப்பது, இருவரும்
கட்டிப் பிடிப்பது —
கண்ணீர்க் கடலில் மிதப்பது
மற்றவருக் காகப் புன்சிரிப்புகள்
இவை எல்லாம் ஏற்புடைத்தா ?
வாழ்க்கை ஆனந்தமே
குறிக்கோளாய்த் தேடுவ தெல்லாம்
ஒருவன் வாழ்வுப் பூரிப்பை
அடியோடு
கெடுத்து விடுவது !

+++++++++++++++++++
பாட்டு : 313 தாகூர் தன் 27 ஆம் வயதில் எழுதியது (1888). கவர்ச்சிக் கானங்கள். காதலிக்கத் தேடிக் கிடைக்காத பெண்கள்
+++++++++++++++++++

Source

1.  Of Love, Nature and Devotion Selected Songs of Rabindranath Tagore Oxford University Press, Translated

from Bengali & Introduced By : Kalpana Bardhan

2.  A Tagore Testament,
Translated From Bengali By Indu Dutt
Jaico Publishing House (1989)
121 Mahatma Gandhi Road,
Mombai : 400023

*********************
S. Jayabarathan [jayabarat@tnt21.com] March 27, 2012
*********************