பூரண சுதந்திரம் ?

cover-image-indian-flag.jpg

சி. ஜெயபாரதன், கனடா

 

பாரதம் பெற்றது பாருக்குள்ளே
ஓரளவு சுதந்திரம் !
பூரண விடுதலை வேண்டி நின்றோம் !
பூமி இரண்டாய்ப் பிளந்தது !
மும்மூர்த்தி யானது !
கட்டுப்பாடுள்ள சுதந்திரம்
கண்ணிய மானிடருக்கு !
கட்டவிழ்த் தோடும் சுதந்திரம்,
காட்டு மிராண்டிகளுக்கு !

ராவணன் சீதையைத் தூக்கி
ரதத்தில் போவான் !
பூரண சுதந்திரம் ஒரு போர்க்களம் !
பட்டப் பகலில் பாஞ்சாலி
பட்டுப் புடவையைப்
பலர்முன் இழுப்பான்
துச்சாதனன் !
பூரண சுதந்திரம் ஒரு குருச்சேத்திரம் !
 
 
விட்டு விடுதலை ஆகும் சுதந்திரம் !
விலங்கு போட்டுக் கொள்ளும்
சுதந்திரம் !
மொட்டு அவிழும் சுதந்திரம் !
பட்டு உதிரும் சுதந்திரம் !
ஒட்டு மாங்கனி போல்
நட்டு வளரும் சுதந்திரம் !
சுட்ட கனியா சுதந்திரம் ?
சுடாத கனியா ?
 

எட்டித் தொடாத
உச்சியில்
ஓங்கி உயரும் சுதந்திரம் !
முழு விடுதலை பெற்றவர்
மோகன்தாஸ் காந்தி !
போதி மரத்தடியில்
பூரண விடுதலை வேண்டித் தவமிருக்கிறார்
போலிச் சாமியார் !

++++++++

ஒளியின் நர்த்தனம்!

sunlight-beams.jpg

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா

மின்னொளியே!
என்னரும் ஒளியே!
உள்ளத்துக் கினிய ஒளியே!
விழிகள் முத்தமிடும் ஒளியே!
உலகை மூழ்க்கிடும் ஒளியே!
என் கண்மணியே!
நர்த்தனம் ஆடும் ஒளிக்கதிர்கள்,
வாழ்வின்
வாலிபக் காலத்தில்!
மோதி மீட்டும் ஒளிச் சிதறல்,
காதல் வீணையின்
நாண்களை!
மின்னலிடி திறக்கும் விண்ணை!
மீறிக் கொண்டு
ஏறி அடிக்கும் காற்று!
என் கண்மணியே!
வானத்தின் மின்னல் வெடிச்சிரிப்பு
ஞாலத்துக்கும் அப்பால்
தாவிச் செல்லும்!
தமது
பாய்மரத்தை விரித்துப்
பட்டுப் பூச்சிகள்
படகாய் மிதந்தேகும் ஒளிக்
கடல் மீது!

அல்லி மலர்களும்,
மல்லிகைப் பூக்களும்
ஒளியலைகளின்
சிகரத்தில்
ஊர்திபோல் எழுகின்றன!
ஒவ்வொரு முகிலின்மேல்
முட்டிச் சிதறி
ஒளிக் கதிர்கள்
பொன்னிறம் பூசுகின்றன,
என் கண்மணியே!
விலை மதிப்பில்லா
பளிங்குக் கற்களை மென்மேலும்
பன்னிற ஒளிச் சிதறல்
பண்ணிடும் மேகம்!
பூவிதழ் விட்டுப் பூவிதழ் மேவி
தாவிப் பரவும் எனது
பூரிப்பு!
அளக்க வழி யில்லை உள்ளக்
களிப்பை!
விரைவாக மழை பெய்து
கரைகளை
மூழ்க்கி விட்டது,
ஆகாயக் கங்கை!
வெள்ளமாய்ப் பெருகி,
வெளியேறும்,
எந்தன் உள்ளக்
களிப்பு!

*****************

யாரந்த நீதிபதி ?

சி. ஜெயபாரதன், கனடா

cover-saddams-death.jpg

எவன் உங்களில் தூயவன்,
அவன் மட்டும்
முன்வந்து
இந்தக் கல்லை எடுத்து
வேசியின் மீது
வீசட்டும் என்று
ஏசு பெருமான்
வேண்டிக் கொண்டார்!
வெள்ளை மாளிகை வேந்தர்
பேரழிவுப் போராயுதம்
வேராக உருவாக்கி விழுதாக்கி
விற்றுப் பணமாக்கி
நேராகப் பிணமாக்கும்
பேராற்றல் பிதா,
ஆயிரம், ஆயிரம்
பிரளயக் கணை பெருக்கி
பிறருக்குப்
பாதை காட்டிய
பார்த்த சாரதி!
ஹிரோஷிமா, நாகசாகி மீது
கோரக்
குண்டுகள் வீசியப்
பூதப் பேரரசு!
துச்சக் காசுக்கு
நச்சு வாயுப்
பிச்சு வாக்களை
சதாமுக்கு விற்ற நண்பன்!
வியட்நாம் மாந்தர் மேல்
விஷ வாயு
வில்லைகளை
விமானத்தின் மூலம் கொட்டிய
விடுதலைக் காப்பாளிகள்!
இந்த அரக்க வம்சம்
எப்படிக்
கட்டளை இடலாம்,
கயிற்றைக் கொடுத்துச்
சதாம்
கழுத்தை நசுக்க?

***********

இறைவன் எங்குள்ளான் ?

cover-image-tagore-r-1.jpg

கீதாஞ்சலி (11)

மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
தமிழாக்கம்: சி. ஜெயபாரதன், கனடா


சுதியுடன் சுலோகங்கள் உச்சரித்து,
துதி பாடி, தோத்திரம் பாடி,
கையால்
ஜெபமாலை உருட்டி
உத்திராட்சக் கொட்டை எண்ணுவதை
நிறுத்தி விடு!
கோயில் தனி மூலையில்,
கதவுகளை மூடி,
கண்களை மூடிக் கொண்டு
காரிருளில் நீ
யாரைப் பூஜிக்கின்றாய்?
கண்களைத் திறந்துபார்,
உன் இறைவன்
முன்னில்லை என்பதை!
மெய்வருந்தி
இறுகிப் போன வயலை
உழவன் எங்கே
உழுது கொண்டு இருக்கிறானோ,
வேர்வை சிந்தி
நடைபாதை போடுபவன்
எங்கே கல்லுடைத்து வருகிறானோ
அங்கே உள்ளான் இறைவன்!
வெட்ட வெயிலிலும்
கொட்டும் மழையிலும்
தூசி படிந்த ஆடையுடன்,
உழைப்பாளி
உடன் குடியுள்ளான் இறைவன்!
புனிதமான
உன் காவி மேலங்கி
உடையை எறிந்து விட்டு
புழுதி நிரம்பிய
பூமிக்கு இறங்கி
உழவரைப் போல்
உன் தடங்களைப் பதித்திடு!

குடும்பப் பந்தங்களி லிருந்து உனக்கு
விடுதலையா?
எங்கே காணப் போகிறாய்
அந்த விடுவிப்பை?
படைக்கும் போதே
நமை ஆளும் அதிபன்,
பந்த பாசப் பிணைப்புகளைச்
சொந்தமாய் மேற்கொண்டு
களிப்புடன்
அளித்து வந்திருக்கிறான்,
உயிர்களுக்கு!
நிரந்தரமாய் நம் எல்லோரையும்
தன்னுடன்
இரண்டறப் பிணைத்துள்ளான்
இறைவன்!
தியானத்தை நிறுத்தி விட்டு
வெளியே வா!
தீபாராதனை, மலர்கள், சாம்பிராணி,
அகர் பத்திகளின்
நறுமணப் புகை அனைத்தையும்
புறக்கணித்து விடு!
உன் ஆடைகள்
கறைபட்டுக் கந்தலானால் என்ன?
தீங்கென்ன நேரும் உனக்கு?
மெய்வருந்திப் பணிசெய்யும்
உழைப்பாளியைச்
சந்தித்து
நில் அவனருகே,
நெற்றி வேர்வை
நிலத்தில் சிந்தி!

*****************

குப்பைத் தொட்டியில் ஓர் அனார்க்கலி .. !

Garbage Bin

சி. ஜெயபாரதன், கனடா

சத்திரம், சாவடி எங்கள் இனம்!
எப்போதும்
வற்றாது
என் கிணறு!
வாசல்
திறந்தே கிடக்கும்
வரவேற்க!
வாயை
மூடிக் கொள்ள
கதவுகள் இல்லை!
வாளேந்தி நிற்கும் வன்முறைக்
காவலர் இல்லை,
கண்காணிக்க!
எதையும் போடலாம்! யாரும் போடலாம்!
காதல் கடிதம்!
காயிதம், கந்தைத் துணிகள்!
ஆபாச வார, மாத இதழ்கள்
வீசி எறிந்த
மாசிலாக் கதை, கவிதை, கட்டுரை!
உயர்ந்த மதிப்பெண்
பெற்று
வேலைக்கோ, மேற் படிப்புக்கோ
மேலினத்தார்
வீணாய்ப் போட்ட
விண்ணப்பத் தாள்கள்!
வேண்டியவற்றை
யாரும்
தோண்டிக் கொள்ளலாம்!

எடுக்க எடுக்க
அடுக்காய் வரும்,
அமுத சுரபி
எமது
புதையல் களஞ்சியம்!
திருமணப் பந்தியில்
தின்ன முடியாமல்
வயிறு முட்டி
வாழையில் பலவகை உணவை
வாரிக் கொட்டி
எனது
வயிற்றை நிரப்பும்
குபேரர் கூட்டம் ஒரு புறம்!
பட்டினியால்
பரிதபித்தெனை
நாடி வந்து
நாய்களுடன் போட்டி யிட்டு
பசியாறிக் கொள்ளும்
குசேலர் கூட்டம் மறு புறம்!

அதோ பார்!
அப்பன்! அரக்கன்! கல்நெஞ்சன்!
நொடிப் பொழுதில் தோண்டி
நள்ளிரவில்
எனது
அடி வயிற்றில் போட்டு மூடும்
பெண்சிசு!
மழலை
பேசும் பிஞ்சு!
பாசமலர் விழிகள்
மூடும் முன்பு
காத்திட முடியாமல் கனல் பற்றி
இதயம்
பொங்குது!
குழலினிய, யாழினியக் குரலில்
இங்கா ? இங்கா ? எனும்
சங்க நாதம்
எழுந்து
அனார்க்கலி போல்
மோனமாய்
அடங்கித்
தாஜ் மஹாலாய்
ஆகும்!

******************

கலைஞன் ! காதலன் ! கணவன் !

image

சி. ஜெயபாரதன், கனடா

உடலை மெழுகாக்கி உன்னை
ஓவியமாய் உருவாக்கிச்
சிற்பமாய்ச் செதுக்கி,
ஒப்பனை செய்து
உலகுக்குக் காட்டுபவன்,
கற்பனைக் கலைஞன் !
உள்ளத்தின் மேல் படையெடுத்து,
வெள்ளைப் புறாவைத் தூதுவிட்டு,
இதயத்தைத் துணைக்கோள்
ஈர்ப்பில் சுற்றுபவன்
ஈசல் காதலன் !

உரிமைச் சிறையி லிட்டு, உன்னை
உயிருள்ள மட்டும் மூடி,
உள்ளமற்ற உடலாய்,
உடமைப் பண்டமாய்,
உரிமைப் பிண்டமாய்,
பம்பரமாய்,
பசும் பொன்னாய்ப் பேணுவோன்
அசுரக் கணவன் !
காதலனுக்கு வேட்கை
உன் துடிப்பு !
கலைஞனுக்கு தேவை
உன் நடிப்பு !
கணவனுக்கு வேண்டும்
உன் முடிப்பு !
கலைஞன், காதலன், கணவன் என்ற
முப்பெரும் அவதாரம்
ஒப்புடன் நிற்கலாம்
ஓருடலில் !

ஒருநாள் விருந்து நீ
ஓவியக் கலைத் தூரிகைக்கு !
சிலநாள் கனவு நீ
சிந்தை நுழை காதலனுக்கு !
பலநாள் அமுத சுரபி நீ
பசும்பொன் தரும் கணவனுக்கு !
வீணையாய் உன்னை மீட்டுபவன்
கலைஞன் !
தேனிசை நாதமாய்த் தீட்டுபவன்,
கலைஞன் !
மாங்குயிலாய் உன்னைக் காட்டுபவன்,
கலைஞன் !
நடன மயிலாய், நடிகைச் சுடராய்ப்
படமெடுத் துன்னை
மதுவாய் மாற்றுபவன் கலைஞன் !
ஊதியம் தந்து
நாடக மாடும் கலைஞன்
வாடகை வர்த்தகன் !

கள்வெறிக் கவிதையில் புரட்டிக்
காவியக் கருவாக்கி
கனவிலே தேடி ஏங்குபவன்
உன்னாசைக் காதலன் !
பொன்னுடல் மீது
போக மது ஊற்றுபவன் !
வலையிட்டுத் தலையிட்டுப்
பூவாக்கி, தேனாக்கி
தேவ மாதாக்கித்
தினமும் பூசிப்பவன்
உன் காதலன் !
உள்ளத்தைக் கொள்ளை இட்டு
உடலை மென்று விட்டு
ஓடி மறைபவன்
உன்னிச்சைக் காதலன் !

உன் காதலன் ஒரு
கணவ னில்லை !
உன் கணவன் ஒரு
காதல னில்லை !
உன் காதலன் ஒரு
கலைஞ னில்லை !
உன் கலைஞன் ஒரு
கணவ னில்லை !
உன் கணவனும் ஒரு
கலைஞ னில்லை !
உன் கலைஞன்
ஒரு காதல னில்லை !

காதலன் கணவ னாதும்
காதல் தேய்பிறை
ஆகுது !
கணவன் காதல னாகின்
காதல் மதிலைத்
தாண்டுது !
கலைஞன் கணவ னாதும்
கலைக்கண் பிறரை
நாடுது !
கணவன் கலைஞ னாகின்
கவர்ச்சி வேறிடம்
தேடுது !

கவர்ச்சிப் பெண்ணே ! உன்
காந்த உடல் கணவனுக்கு !
அலைமோதும் உள்ளம்
காதலனுக்கு !
ஆணிவே ரான ஆத்மா
கலைஞனுக்கு !
முப்பெரும் பொறிகளையும்
ஒருவனுக்கு அளித்திடாய் !
மும்மூர்த்திகள்
வேண்டும் உனக்கு !

++++++++++++++++++

திருத்தமானது (R-2) Nov 16, 2008

தேய்பிறைக் கோலம்!

third-day-moon1

சி. ஜெயபாரதன், கனடா

அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
முற்றுப் பெறாத தேனாறுமேல்
சுற்றி வந்தோம்
சொர்க்கப் படகில்!
வளர்பிறைக் காலம்!
வசந்த காலம்!
எமக்குள் முளைத்த
ஒற்றுமை வேர்களைக்
கற்றுக் கொண்டு
கதைகள் பேசினோம்!
வெண்திரைப் படம் பார்த்து
கண்ணால் கவி பாடி,
மண்ணில் கால் படாது,
விண்ணில் மிதந்தோம் !
தாகம் மிகுந்து
மோகத் தீயில் மூழ்கினோம்!
விதியின் ஆசியால் முடிந்ததெம்,
அதிசயத் திருமணம்!
தேனிலவில் தடம்வைத்து,
சொர்க்க புரியின் உச்சியில் ஏறி
தர்க்க புரியில் இறங்கினோம்!
கரு நிலவின் வால்
காலைச் சுற்றிக் கொண்டது!
எமக்குள் உறங்கிய
வேற்றுமைத் தேனீக்கள்
சீறிக் கொண்டு போரிடக் கிளம்பின!
தேய்பிறை நேயம்!
சேயி ழைக்கும் காயம்!
நாய கனுக்கும் காயம்!
முறிந்து போகும் எமது பாலம்!
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
முற்றுப் புள்ளி உதயம்!
அத்த மிக்கும் கருவானில்
தொத்தி வரும் புதுநிலவு!

++++++++++++

காம சக்தி

kama-sakthi

சி. ஜெயபாரதன், கனடா

பூக்கும் மலரில் பொங்கும் தேனது !
ஆக்கும் சக்தி ! ஆத்மாவின் சிறகு !
அளவில் மிஞ்சின் அழிக்கும் சக்தி !
கவரும் சக்தி காந்தம் போல !
துருவம் இரண்டு ஆண்மை, பெண்மை !
ஆண்மை பாதி ! பெண்மை மீதி !
ஆண்பால் இன்றேல் பெண்பால் தேயும் !
பெண்பால் இன்றேல் ஆண்பால் மாயும் !

வயிறுக்கு உணவு ! உடலுக்கு உறவு !
ஈரினம் இணைந்து பூரணம் அடைவது
மனித நியதி ! மானிட வளர்ச்சி !
காமம் உடற்கு கவின்தர வல்லது !
மேனி மினுக்கும், மீன்விழி ஒளிர்க்கும்,
முகக்களை ஈர்க்கும், மூளை தளிர்க்கும்,
காமக் கதிர்ஒளி பூமழை பெய்தால் !

பைரன், பாரதி, ஷெல்லி, ஷேக்ஸ்பியர்
பாரதி தாசன், கண்ண தாசன்,
வள்ளுவர், வால்மிகி, வியாச முனிவர்
பாடகி மீரா, லதாமங் கேஷ்கர்,
ஆடகி மேனகை, மாதவி, ஊர்வசி,
வைஜயந்தி மாலா, கமலா, பத்மினி,
காளிதாஸ், கம்பன், கவிக்குயில் ஆண்டாள்,
காமக் கடலில் நீந்தாக் கலைஞர்
பூமியில் ஏது ? காம சுரப்பிகள்
கலைத்துவ வேர்,உரம், நீரும் ஆகும் !

காம மிகுதி கலைசெயத் தகுதி !
காம சக்தியைக் கட்டுப் படுத்தி,
காவியம் படைப்போர் காலனை வெல்பவர் !
ஓவியம் தீட்டுவோர் உயர்தனி மனிதர் !
நாடகம், நாட்டியம், மேடையில் படைப்போர்,
சிற்பம் செதுக்கும் அற்புதச் சிற்பி,
ஆய்வுகள் புரிவோர், அறிவியல் ஞானி !
நுண்கலை வடிப்போர் மண்புகழ் பெறுவர் !

வறுமையும் நோயும் சுரப்பியின் நஞ்சு !
காமம் மீறுதல் தீமையின் விதைகள் !
பாமர மூடன் காமச் சுரப்பியைக்
காலால் நசுக்கிக் கவினை அழிப்பான் !
காம சுரப்பிகள் காய்ந்து போனால்
அகஒளி மாயும் ! முகஎழில் தேயும் !
முதுமையின் கருநிழல் முழுஉடற் பாயும் !
காவியம், கலைகள், ஓவியம் ஏது ?
நுண்கலை யாவும் கண்களை மூடும் !
நடனம் ஏது ? நல்லிசை ஏது ?
முடமாய்ப் போகும் நடமிடும் ஆத்மா !
*********************
S. Jayabarathan [(jayabarat@tnt21.com) November 10, 2008 (R-2)]

காதல் வாய்ப்பாடு

Lovers


காதல் ஆத்திசூடி !

சி. ஜெயபாரதன், கனடா
 
******************
 

காதலனே ! கேளாய் !
மாதவம் செய்து நெஞ்சுருகி
கனவுக் கன்னி
மனதில் இடம் பிடிக்க
உண்ணாமல், உறங்காமல்
ஊமையாய்
இராப் பகலாய்க்
கடும்தவம் புரியாதே !
காதல் இலக்கணம் இது !

கண்வழிப் போகாதே
காலரைத் தூக்கி விட்டு !
செவிவழிப் புகாதே
சினிமாப் பாடல் முணுமுணுத்து !
கண்ணீரைச் சிந்தி
வெந்நீரால்
காவிரியை நிரப்பாதே !

உடலை முறுக்கி
உன் தசையைக் காட்டாதே !
கதையைக் கட்டிக்
கன்னிக்கு
களிப்பூட்ட முயலாதே !
கவிபாடிக் கனவில்
காட்சிக்கு மேல் காணாதே !

கிரிகெட் விளையாடினால்
அரிவை உனை நாடி
வருவாள் என்று
தெரு நோக்கி நில்லாதே !
நெஞ்சைப் பிளந்துன்
எலும்பு எண்ணச் சொல்லாதே !
புறாவைத் தூது விட்டுத்
தொலைநோக்கி ஆகாதே !

ஆற்றில் குதித்து உயிரைப்
போக்கிட முனையாதே !
தோட்டத்துக் கொடி வழியே
தொத்தி நீ ஏறாதே !
காதல் நோய் பீடித்துக்
கடிதத்தை நனைக்காதே !
இலக்கணம் முற்றியது !

என்னதான் செய்வது ?
அத்தனையும் செய்யப்பா ! ஆம்
அத்தனையும் செய் !
பொத்தென விழாது
ஓரடியில்
வித்துள்ள பலாக்கனி !

********************

jayabarat@tnt21.com [S. Jayabarathan]  May 10, 2011 [R-2]

பிரம்மனிடம் கேட்ட வரம்!

ஆதவன்
கதிர் அம்புகள் புகுந்திட அஞ்சும்
திக்குத்
தெரியாத காட்டில், என்
ஆத்மாவின்
பிரதி
பிம்பத்தைத்
தேடித் தேடி அலைந்தேன்!
தொப்பென
தோள் மேல்
குதித்தமர்ந்தது, ஓர்
குயில்!
காவியக் குயில்!
தாவிப் பிடித்து என்
இதயக் கூண்டில் இணைத்து வைத்தேன்!

அப்பாவிப் பறவை
ஆத்மாவின் இரட்டை யென
எப்படி அறிவது ?
சட்டெனக்
கூண்டைத் திறந்து விட்டேன்!
குயில்
பாடிக் கொண்டே நன்றி சொல்லிப்
பறந்து போனது!
பல நாள் கழித்து
கூடு விட்டுக் கூடு பாயும்
குயில் தன்
பிரதி
பிம்பத்தின் இருப்பிடம் மறவாது
பூட்டிக் கிடந்த என்
வீட்டுக்குள்ளே
மீண்டும்
குடி
புகுந்து கொண்டது!

நீ யார்,
நான் யாரென்று
ஆத்மாக்கள் இரண்டும்
இதயத்தின்
பக்கங்களை எல்லாம் புரட்டிப்
புரிந்து கொள்ளவே
இப்பிறப்பின்
ஆயுள் காலம்
தேய்பிறை யானது!
கண்ணாடிப் பேழைக் குள்ளிருந்து நீ
காவியம்
படைப்பதை நானும்
வேலிக்குள் இருந்துதான்
வேடிக்கை
பார்க்கிறேன்!

அந்து போகாத
இனத் தோரணங்கள் தொங்கும்
பந்தலின் கீழ்
வாசிக்கும்
நாதஸ்வரக் குழலின் நாக்குகள்
அறுபட்டுப்
போகின்றன!
ஓரிசை பாடும்
ஆத்மாக்கள்
அடுத்த பிறப்பிலாவது
ஜோடிப் புறாக்களாய்
கூடிக் குலாவ
இறைவன் கை எழுதிச் செல்லுமா ?
அந்தரங்க சுத்த
ஆசைகள் யாவும்
விந்தையாய் முடியும்
என்ற
வேத நெறி மெய்யாகுமா ?
அடுத்த ஜென்மம்
தப்பினால்
இன்னும்
ஐந்து ஜென்மங்கள்!

நரைத்து
உதிரப் போகும் இப்பிறப்பு
எப்போது
அத்தமிக்கும் தோழீ!
பிரளயத்தில்
புரட்சி வெள்ளம் துடைத்துச் சென்றாலும்
புத்துயிர் பெற்று,
விழுதுகள் விடும் ஆலமரங்கள்
குலம், கோத்திரம்,
சாத்திரங்கள்!
அவற்றின்
யானைக் கால்கள்
ஆத்மாவின் கோலங்களை
அழிப்பதற்கு முன்
பிரம்மா!
ஒரு வரம் தா!
அவள் ஆத்மா
என் குலத்தில் வந்து உதிக்கட்டும்!
அன்றி
என் ஆத்மா
அவள் குலத்தில் போய்
அவதரிக்கட்டும்!
பிரம்மா!
இரண்டு வரம் வேண்டாம்!
ஏதாவது
ஒரு பிறவியில்
ஒரு வரம்
தா!

*******
 
திண்ணையில் சி. ஜெயபாரதன், கனடா